குழந்தையில்லா பெண்கள் குறித்து நிறைய பேசுகிறோம். குழந்தையில்லா ஆண்களின் நிலை குறித்து நாம் பேசியதுண்டா? தாத்தாவாகும் வயதில் ஆண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலையில், ஆண்களின் குழந்தையின்மை குறித்து பொதுவெளியில் பேசுவதில்லை.
டாக்டர் ராபின் ஹாட்லி
அது தவறான முடிவு. டாக்டர் ராபின் ஹாட்லி(58), தன்னளவில் குழந்தையில்லாதவர். வயதானதன் காரணமாக தாமாக குழந்தை வேண்டாம் என முடிவெடுத்தவர்கள் குறித்து சமீபத்தில் ஆய்வொன்றை செய்திருக்கிறார்.
“பெற்றோராகும் விருப்பத்தில் குழந்தையில்லா ஆண்களும் பெண்களும் சிறிய அளவில் வேறுபடுகிறார்கள். மேலும், இந்த ஆய்வில் குழந்தையில்லா ஆண்களுக்கு வேறு சில எதிர்மறை விளைவுகள் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் இங்கே குழந்தையில்லா ஆண்கள் குறித்து எவரும் பேசுவதில்லை” என தனது ஆய்வு குறித்து பேசுகிறார் ராபின் ஹாட்லி.
குழந்தையில்லா பெண்கள் குறித்து சமூகம் மிக மோசமான பார்வையை வைத்திருக்கிறது. இந்தப் பார்வையும் கூட மாறிவருகிறது. குழந்தையில்லா பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை மாற வேண்டும் என பேசியும் எழுதியும் வருகிறோம். ஆனால் ஆண்கள் குறித்து?
“ஒரு ஆண் தன்னை மலட்டுத்தன்மை உடையவர் என சொல்லிக் கொண்டால், அது மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய விசயமாக பார்க்கப்படும். அவர் தன்னை கீழ்மை படுத்திக் கொள்வதாகவோ அல்லது கீழ்மையான பார்வையில் அடுத்தவர்களால் பார்க்கப்படுவார்” என்கிறார் ஹாட்லி.
ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்களாக பார்க்கப்படுகிறார்களா? “இல்லை. ஆனால், மக்கள் என்னை வித்தியாசமாக பார்க்கிறார்கள்” என்கிறார் 43 வயதான வடிவமைப்பாளர் பணி புரியும் கெல்சே. சந்தர்ப்பவசத்தால் குழந்தையின்மைக்கு ஆளானவர் இவர்.
“43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை; குடும்பம் இல்லை… இதை மக்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள். 43 வயதான பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை, அவருக்கு குடும்பம் இல்லை எனில் அவரை இப்படி பார்ப்பேனா என்பது தெரியாது. சினிமாக்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் கூச்ச சுபாவம் உள்ள, அமைதியான பெண் குறித்து பதிவு செய்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் அது குறித்து பேசுகிறது. ஆனால், 43 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் அமைதியான குணத்தை எவரும் பேசுவதில்லை. அவர் அனைத்திலும் தோற்றவர். அம்மாவின் உதவியுடன் வாழ்பவர் என்பதாகத்தான் காட்டப்படுவார்.
பெண்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்கிறார்கள். ஆனால், அவர்களுடைய புறக்கணிப்பு காதுகொடுத்து கேட்கப்படுகிறது. அதுகுறித்து விவாதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்களைக் காட்டிலும் அவர்களுடைய குரல் கேட்கப்படுகிறது. உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், என்னைக் காட்டிலும் குழந்தையில்லா பெண்கள் அதிகமாக கவலை கொள்கிறார்கள். ஆனால், ஆணுக்கு ஓர் உயிரியல் ரீதியான உணர்வு இருக்கிறது. நான் எப்போதும் ஒரு குழந்தை வேண்டுமென விரும்பியதுண்டு. நீங்கள் செய்யக்கூடிய ஆகச்சிறந்த செயல்களில் அது ஒன்று” என்கிறார் கெல்சே.
உடல்ரீதியாக ஆண்களுக்கு குழந்தை வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுமா? ஹாட்லி சொல்கிறார், “எனக்கு அந்த உணர்வு இருந்த காரணத்தாலேயே குழந்தையில்லா ஆண்கள் குறித்து ஆராயும் ஆர்வம் உண்டானது. பெண்களுக்கு அவர்களுடைய சுழற்சியின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்துக்கு குழந்தை வேண்டும் என்கிற உணர்வு இருக்கும். அப்போது அவர்களுக்கு பாலுறவு கொள்வதற்கு விருப்பம் இருக்கும். ஆண்களுக்கு அப்படிப்பட்ட உணர்வு நிலையில் பாலுறவு விருப்பம் தோன்றுவதில்லை எனினும், உயிரியல் அடிப்படையில் குழந்தை வேண்டும் என்கிற உணர்வு பைத்தியக்காரத்தனமாக இருக்கும். எப்படியாயினும் குழந்தை எனக்கு வேண்டும் என்பதாக அந்த உணர்வு இருக்கும்”.
“குழந்தை வேண்டும் என என்னுடைய இருபது வயதுகளின் தொடக்கத்தில் நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய குழந்தைப் பருவத்தின் காரணமாக எனக்கு மகன் வேண்டும் என விரும்பினேன். எனக்கு மகள் வேண்டுமென நான் ஒருபோதும் விரும்பியதில்லை. வலிகள் நிறைந்த குழந்தை பருவத்தை அது மாற்றிவிடாது என்றபோதிலும், நான் பெறாத ஒரு குழந்தைப் பருவத்தை என்னுடைய மகனுக்கு அளிக்க விரும்பினேன். நான் நல்ல தகப்பனாக இருப்பேன் என நினைத்தேன்” குழந்தை வேண்டும் என்கிற ஏக்கம் தனக்கும் இருந்ததாக ஒப்புக்கொள்கிறார் கெல்சே.
“நான் 30 வயதை நெருங்கியபோது, எனக்கு குழந்தை பிறக்காது என தெரிந்து கொண்டேன். நான் வருத்தமுற்றேன். ‘இது நடக்கும், கவலைப்படாதே’ என நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். ஆனால், இது நடக்காது என்கிற உணர்வு எனக்கிருந்தது. 40 வயதை எட்டியபோது உணர்வு நிலையில் நான் இன்னும் கீழிறங்கிப் போனேன். ‘இது நடக்கப்போவதே இல்லை’ என்கிற உணர்வு வந்தது” என்கிறார்.
குழந்தையில்லா பெண்களுக்கான அரவணைப்பு அமைப்பை நடத்திவரும் ஜோடி டே, “குழந்தையில்லா ஆண்கள் தனக்கென ஒரு துணையை தேடிக்கொள்வது அவசியம். அவர் அந்த ஆணைப் பற்றி புரிந்தவராய் இருக்க வேண்டும். குழந்தையில்லா ஆண்கள் துணையில்லாமல் எப்படி சமாளிக்க முடியும்?” என்கிறார்.
நடிகரும் எழுத்தாளருமான ராட் சில்வர்ஸ்
நடிகரும் எழுத்தாளருமான ராட் சில்வர்ஸ் (52), அவரும் அவருடைய முன்னாள் மனைவியுடன் சேர்ந்து ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை கரூவுட்டல் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முயற்சியை இரண்டு முறை செய்தவர். ஆண்கள் எந்த வழியிலும் தங்களுடைய உணர்வுகளை சொல்ல ஒரு இடம் இல்லை என்கிறார் இவர். “நீங்களாகவே உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு உங்களை தேற்றிக் கொள்ள வேண்டும். இளம் ஆண்கள் இப்போது வெளிப்படையாக இருக்கிறார்கள். ஆனால், பணியாற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள், தங்களுடைய உணர்வுகள் குறித்து பேசமுடியாது. வலி? காயம்? இந்த வார்த்தைகளை நான் அங்கீகரிக்கவேயில்லை” என குழந்தையில்லா ஆண்கள் சமூகத்தில் எதிர் கொள்கிற பிரச்சினைகளை பேசிகிறார் சில்வர்ஸ்.
சில்வர்ஸ், குழந்தையில்லா வயதான இரண்டு ஆண்களின் வாழ்க்கை குறித்து ஒரு நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார். தன்னுடைய ஐவிஎஃப் (IVF) அனுபவத்தை வைத்து குறும்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார். அவர் ஏன் இவற்றை படைக்கிறார்? “எழுதுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. சிலர் பேசுவார்கள். நான் எழுதுகிறேன். நினைப்பதைக் காட்டிலும் செயல்படுத்துவதை விரும்புகிறது. நான் முன்பு எப்போதும் இதுகுறித்து பேசியதில்லை. அந்த நேரத்தில் என்னுடைய பெண்ணின் வலிக்கு ஆதரவாக நின்றேன்” என்கிறார்.
குழந்தையில்லாவர்களுக்கு அது ஏற்படுத்தும் வலி, இழப்பு, துக்கம், மன அழுத்தம் போன்றவை சமூகத்தின் பார்வையால் ஏற்படுகின்றன. ஹாட்லியின் ஆய்வில் தங்களுடைய அனுபவத்தை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“பலர் தங்களுடைய குழந்தையின்மை பிரச்சினைக்கு மன அழுத்தமே காரணம் என்றார்கள். பொருளாதார ரீதியில் எப்படி இருக்கிறேன்? சமூக ரீதியாக எப்படி இருக்கிறேன்? என சிந்திக்கத் தொடங்கும்போது, நான் அவற்றில் சிறக்கவில்லை என்றால், நான் உயிரியல் அடிப்படையில் மறு உற்பத்தி செய்ய முடியாதவனாகிறேன் – எனில் ஆணாக நான் யார்?
30 வயதுகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் உணர்வு இருந்த போது, நான் இவை பற்றியெல்லாம் சிந்தித்து விரக்தியடைந்திருந்தேன். ஆனால், நான் அவற்றையெல்லாம் எனக்குள்ளே வைத்துக் கொண்டேன். விரக்தியடைவது, மீள்வது என போய்க் கொண்டிருந்தேன். வேலையில் கவனம் செலுத்தினேன்; குடிப்பதில் கவனம் திருப்பினேன். இப்போது, என்னுடைய ஆய்வு காரணமாக, நான் அவமானம் கொள்ளவில்லை” என்கிறார் ஹாட்லி.
மேலும் “உங்களுக்கு ஒன்று தெரியுமா? குழந்தையில்லா பெண்களைக் காட்டிலும் குழந்தையில்லா ஆண்களே அதிகம். இது குறித்து சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை என்றாலும், பிரிட்டனில் குழந்தையில்லா ஆண்கள் 25 சதவீதமும் குழந்தையில்லா பெண்கள் 20 சதவீதமும் உள்ளனர்” என்கிற தகவலை பகிர்கிறார்.
இழப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார் சில்வர்ஸ், “குழந்தை, திருமணம் குறித்த துக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? அதை ஏற்றுக் கொண்டு, நேர்மறையாக எதையாவது செய்யத்தானே வேண்டும். அதனால்தான் நான் குறும்படம் எடுத்தேன். நாடகம் எழுதினேன். என்னைபோல குழந்தையில்லா சக ஆண்கள், தான் மட்டும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதற்காக அதைச் செய்தேன்” என்கிறார்.
70 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்களே? என்கிற கேள்விக்கு, ஹாட்லியின் சூடான பதில், “வயதானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனமானது. அறத்தின் அடிப்படையில் அது தவறானதும்கூட. எல்லாவற்றுக்கும் ஒரு வரையறை இருக்கிறது” என்கிறார்.
“குழந்தையில்லையே என கவலைப் பட்ட காலம் கடந்து விட்டது. ஆனால், குழந்தைகளைப் பார்க்கும்போது நமக்கு இதுபோன்றதொரு குழந்தை இல்லையே என்கிற உணர்வு வருவது உண்மைதான். உங்களைப் போன்று தோற்றமளிக்கும் உங்கள் குழந்தையை பார்ப்பது என்ன மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தும் என என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.” குழந்தையின்மை குறித்த ஏக்கம் ஹாட்லிக்குள் அவ்வப்போது வெளிப்படுவதை உணர முடிகிறது.
ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி குழந்தையின்மை என்பது குழந்தை பிறப்பை போன்ற இயல்பான உயிரியல் நிகழ்வாக இருக்கிறது என்பதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, ஆண்களுக்கும் ஏக்கங்கள், இழப்புகள், வலிகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவும் வேண்டும்.
சுருக்கப்பட்ட தமிழாக்கம்: அனிதா நன்றி : தி கார்டியன்
கடந்த 6 நாட்களாக நடந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 29.12.2018 அன்று இரவு பேச்சுவார்த்தையின் போது தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்கள் “ஊதிய முரண்பாடுகளை நீக்குவதற்கான ஒருநபர் குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது, எனவே, கோரிக்கைக் குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.” இதைத் தொடர்ந்துதான் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
போராட்டக்களத்தில் ஆசிரியர்கள்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கப் பொது செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள், “உறுதி கூறியபடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், மீண்டும் எங்களை போராட்டத்துக்கு தள்ளாது என்றும் நம்புகிறேன்” என கூறி போராட்டத்தை தற்காலிகமாக முடித்து வைப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், அரசு உறுதி கூறுவதும், அதை ஊத்தி மூடுவதும் புது விஷயமா என்றால் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக இப்படித்தான் அரசு உறுதிகூறி ஏமாற்றி வருகிறதென்பது ஆசிரியர்கள் அறிந்ததே.
பத்தாண்டுகளாகஎன்னநடந்தது ?
6-வது ஊதியக்குழுவில்தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியைக் குறைத்து, மே 31, 2009 -க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370/- ரூபாயாக இருந்த அடிப்படை சம்பளத்தை, அதற்கு பின் சேர்ந்தவர்களுக்கு 5,200/- ரூபாயாக குறைத்து அறிவித்தது தமிழக அரசு.
அப்போதே, இடைநிலை ஆசிரியர்கள் இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு ஆயிரக்கணக்கில் பதிவுத்தபால்களும், இ-மெயில்களும் அனுப்பியுள்ளனர். இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து,
ஜாக்டோ- ஜியோ, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைப்பது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைத் தொடங்கி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனியாக போராடத் தொடங்கியுள்ளனர்.
2016-ஆம் ஆண்டில் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
7-வது ஊதியக் குழு அமைக்கப்படும்போது, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம்.
2018 ஏப்ரலில் 4 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம்.
தற்போது கடந்த 2018 டிசம்பர் 23 -ஆம் தேதி டி.பி.ஐ-யில் போராட வந்த ஆசிரியர்களை தாம்பரம், மடிப்பாக்கம், பல்லாவரம் என மண்டபங்களில் அடைத்து வைத்து, அலைய வைத்தபின், கலைந்துபோக சொல்லி மிரட்டியது போலீசு.
போராட்டக்களத்தில் மயக்கமடைந்த ஆசிரியர் ஒருவர் மருத்துவ உதவிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.
ஆனால், ஆசிரியர்கள் போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் டிபிஐ-யை முற்றுகையிட்டு போராட முயற்சித்தபோது, ராஜரத்னம் விளையாட்டு மைதானத்தில் அடைத்து வைத்தது. மீண்டும் ஆசிரியர்கள் விடாப்பிடியாகப் போராடித்தான் டி.பி.ஐ.-வளாகத்துக்குள் வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதுமட்டுமின்றி, முதல்வருடன் பேச்சுவார்த்தை என ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டதோடு, “ஜனவரி 7-ஆம் தேதி வரை காத்திருங்கள், ஒரு நபர் கமிசன் அறிக்கை வந்துவிடும் கலைந்துபோங்கள்” என கல்வி செயலர் பிரதீப் யாவ் மூலமாக மிரட்டப்பட்டனர்.
ஊடகங்களில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஊதிய முரண்பாடு களையப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், போராட்டக்குழுவினர் நேரில் சென்று, அதுபற்றி பேசியபோது, “தொலைக்காட்சிக்காக சொன்னா நம்பிட்டு வந்துருவீங்களா?” என திமிராகப் பேசியுள்ளார். இப்படி வெளிப்படையாக அறிவித்த வாக்குறுதியையே மதிக்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டு, தற்போது 4 சுவருக்குள், ‘பரிசீலிக்கிறேன்’ என உறுதி கூறியிருப்பதை மட்டும் நிறைவேற்றிவிடுவார்களா?
இப்படி ஒவ்வொரு முறையும் வாக்குறுதிக் கொடுத்து ஏமாற்றி, கிடப்பில் போட்ட அரசுதான் இப்போதும் பரிசீலிக்கிறேன் என உறுதி கொடுத்துள்ளது.
போராட்டத்தின்போது, ஆசிரியர் ஒருவர் சொன்னார், “எங்கள் கோரிக்கை இழவு வீட்டிலுள்ள பிணம் போல கிடக்கிறது”. எடுத்துப்போட வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், வருத்தம் தெரிவிப்பதோடு சென்றுவிடுகின்றனர் என்றார்.
அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என யாருக்குமே ஆசிரியர்களின் வலியும், வேதனையும், தீர்வும் பொருட்டல்ல என்பதுதான் உண்மை. அந்த ஆசிரியர் குறிப்பிட்டதுபோல, ஆதரவு தெரிவுக்கும் கட்சிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாதா?
ஊடகங்களால் போராட்டத்தின் நியாயத்தை மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்க முடியாதா? தனது சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகத்தான் போட்டியும், பேட்டியும். ஆனால், கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் எப்படி அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற போராடும்?
உதாரணத்துக்கு, பச்சமுத்துவின் புதிய தலைமுறை, நியூஸ் 7 வைகுண்ட ராஜன், சன் டிவி கலாநிதிமாறன், மற்றும் ஏனைய ஊடகங்களின் முதலாளிக்கோ அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவதா நோக்கம்? இனியும் அரசையும், ஊடகங்களையும் நம்புவது முட்டாள்தனம்.
அரசின்நோக்கம்தான்என்ன?
இந்தப்போராட்டத்தை சீர்குலைப்பதும், ஆசிரியர்களின் மனவலிமையைக் குறைத்து “இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை” என்ற விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளி மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தடுப்பதும்தான் அரசின் நோக்கம். அரசு ஏன் இதை செய்ய வேண்டும்?
சற்று யோசித்துப் பாருங்கள். அரசின் செலவுகளை குறைப்பதற்காகத்தான் தகுதி குறைக்கப்பட்டு, சம்பளம் குறைக்கப்படுகிறது என 6-வது ஊதியக்குழுவில் சொன்னது. இப்போதும் இதை சொல்லித்தான் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைத்து தனியாரிடம் தாரைவார்க்க தயாராகிறது.
அதானால்தான் சத்துணவு மையங்களை மூடுவது, குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடுவது, பள்ளிகளை இணைப்பது என அரசுப்பள்ளிகளுக்கு பூட்டு போட்டுவிட்டு போகத் துடிக்கிறது. சம்பளத்தைக் குறைத்து இலாபத்தை பெருக்க நினைக்கும் முதலாளியைப் போலத்தான், அரசும் இன்று திட்டமிடுகிறது. அதனால்தான், ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து வழங்கி, அவர்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ளது.
ஆனால், மறுபுறம் மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு, பதவியேற்றவுடனே அமைச்சர்களுக்கு புதிய கார்கள், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆயிரக்கணக்கான கோடி செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என வீணாக்குகிறது.
தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு என சொல்லி கல்விக் கொள்ளையர்களுக்கு கொட்டிக் கொடுக்கிறது. ஆனால். ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான நிதியில் 1/3 பங்கு மட்டுமே ஒதுக்குகிறது.
ஆனால், மறைமுகமாக தனியாரை ஊக்குவித்து, வளர்த்துவிடும் அரசின் நோக்கமே அரசுப்பள்ளிகளை கைகழுவிவிட வேண்டுமென்பதுதான். பள்ளிகளை மட்டுமல்ல சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்தையும் தனியாரின் இலாபத்தை அதிகரிக்கக் கொடுத்து முதலாளிகளை வாழவைக்க நினைக்கிறது.
இதன் ஒரு பகுதிதான், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளத்தையும், மன அழுத்தத்தையும் கொடுத்து விரட்ட நினைப்பது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இந்த அரசிடமே மன்றாடி நம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியுமா? வேறு என்ன செய்வது என கேட்கிறீர்களா?
என்ன செய்வது?
6 நாட்களாக உணவருந்தாமல் தன்னை வதைத்துக் கொண்டும், 200-க்கும் மேற்பட்ட சக ஆசிரியர்கள் மயங்கி விழுந்தபோதும், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, பூரான் கடியிலும், தேள்கடியிலும், கொட்டும் பனியிலும், வெயிலிலும் கைக்குழந்தைகளுடனும் தீரத்துடன் போராடிய ஆசிரியர்கள் இன்று வெறுங்கையுடனும், மனக்கொதிப்புடனும், கோபத்துடனும்தான் வீடு திரும்பியுள்ளனர்.
இதை போராட்டத் தலைமை உணர்வதோடு, இதற்கேற்ப அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என கருதுகிறோம்.
தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும், மெரினா போராட்டமும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் மட்டும் வெற்றி பெற்றதற்கு காரணம் அது உலக அளவில் பேசப்பட்டதும், அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்றதும்தான். மக்கள் சக்திக்கு மட்டுமே அரசையே அச்சுறுத்தும், அசைத்துப் பார்க்கும் வலிமை உள்ளது என மீண்டும் மீண்டும் வரலாறு நிரூபித்துள்ளது.
சீனாவிலும், ரஷ்யாவிலும் நடந்த மக்கள் புரட்சியாகட்டும், அமெரிக்காவின் வால்வீதி போராட்டம், தற்போது பிரான்சின் வீதிகளில் இறங்கி பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான போராட்டம் என வெற்றி பெற்ற அனைத்து போராட்டங்களும் மக்கள் ஆதரவும் அவர்களது பங்களிப்பும் இருந்ததால்தான். இது எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கோரிக்கைகளுக்கும் பொருந்தும்.
தற்போதுகூட, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் போராடுவதும், மக்களுக்கு இப்போராட்டம் பற்றியோ, அதிலுள்ள நியாயமோ தெரியாததும்தான் அரசின் பலம், போராடியவர்களின் பலவீனம். அதனால்தான் இந்த அரசு போராட்டத்தைப் பற்றியே வாய்திறக்காமல் இருந்ததோடு, உளவுப்பிரிவு போலீசை போராட்டத்திற்குள் கலக்கவிட்டு போராடும் ஆசிரியர்களின் மனவலிமையை குலைக்க முயற்சித்து தோற்றது.
எனவே, போராட்டத்தின் நியாயம் என்ன என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகவுள்ளது. சில ஆசிரியர்கள் மட்டும் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து கொண்டு, மற்ற ஆசிரியர்கள் தங்களது கோரிக்கையின் நியாயத்தை சிறு பிரசுரமாக, சுவரொட்டிகளாக, தட்டிகளாக, பதாகைகளாக அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லலாம். இதன்மூலம் மக்களும், தம் பிள்ளைகளின் நலனுக்காக அரசுப்பள்ளிகளை காப்பாற்ற களம் இறங்குவர்.
இதுவே, இந்த அரசுக்கு அச்சுறுத்தலாக அமையும், தீர்வை நோக்கி முன்னேற முடியும். மேலும், அரசுப் பள்ளிமேல் அக்கறையுள்ள முன்னாள், இன்னாள் பள்ளி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்கும்பட்சத்தில் இந்த இயக்கத்தை மிக எளிதாக தமிழகம் முழுவதும் பரப்ப இயலும்.
மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் விடுமுறை நாட்களில் மட்டும் போராடும் ஆசிரியர்களின் உணர்வை மதிக்கிறோம். ஆனால், அதேசமயம், படிப்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் ஆசிரியர்கள்தான் போராட்ட உணர்வையும் மாணவர்களுக்கு கற்றுத்தர முடியுமென நினைக்கிறோம்.
அதுமட்டுமின்றி, ஆசியர்களின் சம்பள உரிமைக்காகவும், மாணவர்களின் கல்வி பெறும் உரிமைக்கானதுமான இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் கூட்டணியே சரியானதும், வெற்றியடையச் செய்யக்கூடியதுமாகும்,
ஆசிரியர் நலனுக்கான-மாணவர் நலனுக்கான- எதிர்கால சமூகத்தினரின் நலனுக்கான- அரசுப் பள்ளிகளின் நலனுக்கான இந்தப் போராட்டத்தில் அதனால் பயன்பெறப்போகும் அனைவரும் கைகோர்ப்பதுதான் நியாயம் என நம்புகிறோம்.
இது எங்களது ஆலோசனை மட்டுமே. இதை செயல்படுத்துவது பற்றி முடிவெடுக்க வேண்டியது போராடும் ஆசிரியர்களும், அவர்களை வழிநடத்தும் போராட்டத் தலைமையும்தான்.
இருப்பினும் கடந்த ஆறு நாட்களாக போலீசின் அச்சுறுத்தலையும், அலைக்கழிப்பையும் மீறி உறுதியுடன் போராடிய ஆசிரியர்களுக்கு வினவு இணையதளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், போராடும் ஆசிரியர்கள் இதுபற்றிய தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாமல் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். முற்போக்கு இயக்கங்கள் அனைவரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து கணினிகளும் அரசு நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவது மோடி அரசால் சட்டப் பூர்வமாக்கப்பட்டுள்ளது. கணினியால் சேகரிக்கப்படும், உருவாக்கப்படும், உள்வாங்கப்படும் அல்லது அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தையும் இடைமறிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் நீக்குவதற்கும் மத்திய உளவுத்துறை, அமலாக்க இயக்குனரகம், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட 10 மைய அரசு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து உள்துறை அமைச்சகம் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
சந்தாதாரர், சேவை வழங்குபவர் அல்லது கணினி வைத்துள்ள நபர் என்று யாராயினும் மேற்சொன்ன நிறுவனங்கள் ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்ய வேண்டும். மீறினால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் மேலும் தண்டத்தொகையும் செலுத்த வேண்டியிருக்கும் என்று அந்த ஆணை கூறுகிறது.
மைய அரசுக்கு இதற்கான அங்கீகாரத்தை 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69(1) வழங்கியிருக்கிறது. “இந்திய இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு, வெளிநாட்டு அரசுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது மேற்கூறியவற்றிற்கு எதிரான எந்தவொரு குற்றத்தினையும் தடுத்தல் அல்லது அத்தகைய குற்றங்கள் மீதான விசாரணை நடத்துதல்” என்ற அடிப்படையில் செயல்பட எந்த ஒரு நிறுவனத்திற்கும் மைய அரசு வழிகாட்டலாம் என்று அந்த சட்டப் பிரிவு கூறுகிறது.
இந்த ஆணை இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு தேவையானது, மேலும் காங்கிரசு தலைமையிலான அரசு 2009-ம் ஆண்டு கொண்டுவந்த கொள்கையின் விரிவாக்கம்தான் இது என்றும் பல்வேறு அரசு அதிகாரிகளும் பா.ஜ.க நிர்வாகிகளும் முட்டுக் கொடுக்கின்றனர்.
சட்டப்பிரிவு 69 (1)-ன் கீழ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து அங்கீகார ஆணைகளும் நியாயமானதாகவும் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் நடைமுறையின்படி இருக்க வேண்டும். இந்திய தந்தி விதிகள், 1951-ன் விதிமுறை 419A-ன் கீழ் மைய அல்லது மாநில அரசினால் உருவாக்கப்பட்ட ஆய்வுக்குழுவினால் அத்தகைய ஆணைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் விதி 419A-ன் கீழ் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்களின் உறுப்பினர்களாக அரசாங்கத்தின் செயலர்களே உள்ளனர். அதாவது, தன்னுடைய முடிவுகளுக்கு தீர்ப்பெழுத தன்னையே நீதிபதியாக்கி கொண்டுள்ளது இந்த அரசு நிர்வாகம். தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று கூறிக்கொள்ளும் ஒரு அரசு இதை விட இங்கே வேறு என்ன கேலிக்கூத்தை அரங்கேற்ற முடியும்?
இது வெளிப்படையான நீதி என்ற கருத்தாக்கத்துக்கே எதிரானது: அதாவது எந்த மனிதரும் தன்னுடைய வழக்குக்கு தானே நீதிபதியாக முடியாது.
அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தல்:
அரசாங்கத்தின் கண்காணிப்பு தனிநபரின் அந்தரங்கத்தை அச்சுறுத்துகிறது மேலும் அது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தரங்கம் ஒரு அடிப்படை உரிமை என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. மேலும் ஏனைய தனிநபர் உரிமை போலவே சட்டபூர்வமான நடவடிக்கைகள், சட்டப்படியான அரசின் நோக்கம் மற்றும் சமநிலை கட்டுப்பாடு (proportionate) என்ற மூன்று நிபந்தனைகளுக்கு இது கட்டுப்படக்கூடியது.
இதன் விளைவாக 69(1) -ன் படி போடப்பட்ட இந்த ஆணையானது மேற்சொன்ன மூன்று சோதனைகளையும் கடக்க வேண்டும். சட்டமன்ற மற்றும் நீதித்துறை மேற்பார்வை இல்லாமல் தான்தோன்றித்தனமான மைய அரசின் இந்த ஆணை தனி நபர் அடிப்படை உரிமை மீது சமனற்ற கட்டுப்பாட்டை விதிப்பது அரசியலமைப்பிற்கே எதிரானது.
மேலும் தகவல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க மைய அரசு உருவாக்கிய ஸ்ரீகிருஷ்ணா குழு ஜெர்மனி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்டங்களை ஒப்பிட்டு தன்னுடைய அறிக்கையின் 125-ம் பக்கத்தில் “ஜனநாயக நாடுகளில் செயல்பாட்டுப் பரிசீலனை என்பது சட்டமன்ற மேற்பார்வை அல்லது நீதித்துறை அனுமதி அல்லது இரண்டுமாக சேர்ந்தேதான் இருக்கின்றன. ஆனால் இங்கு அதுமட்டும் அவ்வாறாக இல்லை” என்று கூறுகிறது.
இந்திய அரசாங்கம் தம் மக்களை கண்காணிக்க கொண்டுள்ள பல வழிகளில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளும் ஒன்றாகும். இந்திய தந்தி சட்டம்-1885, தந்தி விதிகள்-1951 மற்றும் இந்திய அஞ்சல் அலுவலக சட்டம் – 1898 ஆகிய சட்டங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் உள்ளன. இந்த சட்டங்கள் காலனியாதிக்க காலத்தில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் விரிவாக்கமே ஆகும். மேலும் ஏமாற்றமளிக்கும் வகையில் இந்த தகவல் தொழில்நுட்ப சட்ட கண்காணிப்பு என்பதும் கூட ஒரு காலனியாதிக்க நீட்டிப்பாகவே இருக்கிறது.
பல்தேசிய இன மக்களின் ஒருமைப்பாட்டிலும், தன்னுடைய சொந்த மதிப்பீடுகளின் மூலமாக உருவாக்கப்படும் சுயேச்சையான அரசியலைமைப்பாலும் மட்டுமே தன்னுடைய இறையாண்மையை இந்தியா கட்டியெழுப்ப முடியும். ஆனால் தன்னுடைய சொந்த மக்களை கண்காணிப்பதன் மூலம் ஆங்கிலேய அரசு என்ன செய்ததோ அதையே தான் இந்திய அரசும் இன்று செய்கிறது. இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. ஏகாதிபத்தியங்களால் கைமாற்றி கொடுக்கப்பட்ட போலி சுதந்திரம் அடைந்த அனைத்து நாடுகளுக்குமான பிரச்சினை.
இந்த ஆணையை எதிர்த்து The Hindu பத்திரிகையில் வாசகர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:
DR. SESHADRI KANNAN : ஏஜெண்டுகள் என்று கூறிக்கொண்டு தனிப்பட்ட கணினிகளுக்குள் நுழைவது கேலிக்குரியது. ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி ஒன்றுமே சாதிக்காத அரசாங்கம் புதிதாக எதாவது சாதிப்பார்கள் என்று அதே நிறுவனங்களுக்கு கூடுதலான அதிகாரங்களை அறிமுகப்படுத்துகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கை உண்மையிலேயே நேர்மையற்றது. மேலும், காங்கிரஸ் அறிமுகப்படுத்திய போது எதிர்த்தவர்கள் இப்போது திடீரென்று அறிமுகப்படுத்துவது நியாயமற்றது. இது மோசமாக தோல்வியடைந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை போல மற்றுமொரு நடவடிக்கையே. இது முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயகத்தையும் அப்பாவி மக்களையும் காப்பாற்ற ஆட்சியாளர்களை மாற்ற இதுதான் சரியான நேரம். இதை அறிமுகப்படுத்தியதற்கு ஏதேனும் ஒரு நல்ல காரணம் இருக்கிறதா? தற்போதுள்ள அனைத்து சட்டங்களும் தோல்வியடைந்து விட்டதற்கு ஏதேனும் சான்றுகள் இருந்ததா?
Mel : ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு அஞ்சுகிறார்கள். கணினிக்குள்ளும் ஸ்மார்ட்போன்களுக்குள்ளும் நுழைந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை காண விரும்புகிறார்கள். இது ஜனநாயகத்தை ஆட்சியாளர்களுக்கு தோதாக வளைப்பதாகும். ஒரு கட்சி மற்றொன்றை புறம் சொல்லுகிறது ஆனால் இருவரும் ஒன்று போலவே நடக்கிறார்கள்.
Naresh Chand : அனைத்து கணினிகளையும் புலானாய்வு நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் ஒப்படைப்பதில் ‘தி ஹிந்து’ மகிழ்ச்சி கொள்கிறதா? ‘தி இந்து’வுக்கு இது சரியான வழியாக சரியான நடவடிக்கையாக தெரிகிறதா? பொதுவாக எப்போதும் போல மோடிக்கும் அவரது அரசுக்கும் பின்னால் ‘தி ஹிந்து’ இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இப்போது எந்த பக்கம் இது நிற்கிறது?
Anupam Rae : நாம் இப்போது போலிசு இராஜ்ஜியத்தை நோக்கியா செல்கிறோம்? பெரியண்ணன் நம்மை எப்போதும் கண்காணிக்கிறார். இந்த மீம்பெரும் தகவல்களை கையாளும் திறமை படைத்தவையா இந்நிறுவனங்கள்? இந்நிறுவனங்கள் வைக்கோலிலிருந்து கோதுமையை தனியாக பிரிக்குமா? ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறன்.
Dr. Sayar : இது கண்டிப்பாக மோடியின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை தான்….. ஒவ்வொரு குடிமக்களின் காதுகளாகவும் கண்களாகவும் மாற முயல்கிறது மேலும் ஒவ்வொரு குடிமக்களையும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. இந்நடவடிக்கை என்பது 2019 தேர்தலுக்கான தகவல்களை திரட்டவே அன்றி தேசிய பாதுகாப்பு என்பதெல்லாம் சும்மா சாக்குபோக்கு.
Arvind : இது அடிமைத்தனம் அன்றி வேறென்ன?அவர்கள் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் கணினிகளையும் நோட்டம் விடுவார்களா? மேன்மைதாங்கிய உச்சநீதிமன்றத்தின் அந்தரங்கம் தொடர்பான தீர்ப்பு எங்கே? இது கொடூரமானதன்றி வேறென்ன?புலனாய்வு செய்யும் திறமையில் அல்ல சிக்கல் என்னவெனில், புலானாய்வு நிறுவனங்களை நடத்துபவர்கள் மனிதர்கள். அவர்கள் பக்கச் சார்பு கொண்டவர்கள். பல்வேறு வகுப்புகள், சாதிகள், மதங்கள் மற்றும் வர்க்க பிரதிநிதிதத்துவம் இல்லாததால் பக்கசார்பே இருக்கும். புலனாய்வுக்கு பதிலாக சித்தரவதைகள், ஊழல், மனித துன்புறுத்தல்கள் ஆகியவையே இருக்கும். மேலும் பயம் மற்றும் சுதந்திரமின்மைதான் இருக்கும்.
புலனாய்வு இயந்திரம் சார்பற்றதாக இருந்தால், அமலாக்க நிறுவனம் சார்பற்றதாக இருந்தால், நீதித்துறை செயல்முறை சார்பற்றதாக இருந்தால் பின்னர் தானாகவே குற்றங்கள் தீவிரமாக குறைந்து விடும்.
அரசாங்கத்தின் இந்த ஆணையை நான் ஏற்கவில்லை. ஏனெனில் ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு எதிராக இது பயன்படுத்தப்படுமே ஒழிய ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் பணக்கார “அழுகிய உருளைக் கிழங்குகளுக்கு” எதிராக அல்ல என்பதை நான் அறிவேன். ஜெய்ஹிந்த்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கோவிலின் அறங்காவலரான ஆர்.எஸ். நாயுடு. சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servents of the Goddess புத்தகத்தில் ஆலயப் பிரவேசத்தில் இவரது பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அவரைப் பற்றி தனிப்பட்ட விவரங்கள் அதிகமாக இல்லை.
ஆர்.எஸ். நாயுடுவின் வழித்தோன்றல்கள் இப்போதும் மதுரை நகரில் வசிக்கிறார்கள். ஆர்.எஸ். நாயுடுவின் பேரன்கள் வழக்கறிஞர் ஆர். கோபிநாத் மற்றும் சேக்ஸ்ஃபியர் ஆகிய இரண்டு பேரையும் நான் சந்தித்தேன். இவர்களிடம் தங்கள் தாத்தா குறித்த தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால், நாயுடுவின் பல புகைப்படங்களை அவர்களிடமிருந்து பெற முடிந்தது.
சென்னையில் பாரி அண்ட் கம்பனியில் ஆடிட்டிங் பிரிவில் பணியாற்றியவர் ரெங்கமன்னார் நாயுடு. அந்த காலத்திலேயே ஆயிரக் கணக்கில் மாத ஊதியம் பெற்றவர். இவருக்கு இரு மகன்கள். ஒருவர் ஆர். சேஷாச்சலம் நாயுடு. மற்றொருவர் ஆர். நெம்பெருமாள் நாயுடு. இவர்களில் சேஷாச்சலம் நாயுடு தன் பெயரை ஆர்.எஸ். நாயுடு என கெஸட்டிலேயே மாற்றிக்கொண்டார், நெம்பெருமாள் நாயுடு ஆர்.என். நாயுடு என மாற்றிக்கொண்டார். நெம்பெருமாள் நாயுடு மருத்துவர். ஆர்.எஸ். நாயுடு இங்கிலாந்தில் பார் அட் லா முடித்தவர்.
இதற்குப் பிறகு மதுரை திரும்பிய ஆர்.எஸ். நாயுடு, நீதிக் கட்சியில் பெரும் ஈடுபாடு காட்டினார். அந்தக் கட்சியின் சார்பில் மதுரை நகர சபைக்குப் போட்டியிட்டு நகர சபைத் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவர் நகரசபைத் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் சைமன் கமிஷன் என பரவலாக அழைக்கப்பட் சர் ஜான் சைமன் தலைமையிலான The Indian Statutory Commission மதுரைக்கு விஜயம் செய்தது.
காங்கிரசும் ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீகும் இந்த கமிஷனை புறக்கணித்த நிலையில், இந்த கமிஷன் சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு நிலவியது. ஆனால், இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகள் இந்த கமிஷனை ஆதரித்தன. ஒன்று முகமது ஷாஃபி தலைமையிலான முஸ்லீம் லீக். இரண்டாவது நீதிக் கட்சி.
ஆகவே, மதுரைக்கு வந்த சைமன் கமிஷனை நீதிக் கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு வரவேற்றார். அந்த கமிஷனில் இடம்பெற்றிருந்த, பின்னாளில் பிரிட்டனின் பிரதமரான லேபர் பார்ட்டியைச் சேர்ந்த கிளமன்ட் அட்லி, ஆர்.எஸ். நாயுடுவின் வீட்டிற்கும்கூட வந்தார். (கிளமன்ட் அட்லியும் ஆர்.எஸ். நாயுடுவும் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். இதை உறுதி செய்ய முடியவில்லை).
12 ஆண்டுகள் மதுரை நகர சபையின் தலைவராகப் பணியாற்றிய பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக 1937-ல் நியமிக்கப்பட்டார் ஆர்.எஸ். நாயுடு. நீதிக் கட்சி ஆட்சியின் இறுதிக் காலத்தில் மதுரையில் செல்வாக்குடன் விளங்கிய நீதிக் கட்சித் தலைவர் பி.டி. ராஜனால், நாயுடு நியமிக்கப்பட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக ஆர்.எஸ். நாயுடு செய்த மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பாரதூரமானவை. அவர் நிர்வாக அதிகாரியாக இருக்கும்போதுதான் ஆலய நுழைவு நடந்தது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தில் அவர் செய்த மாற்றங்களும் மேம்பாடுகளும் போற்றத்தக்கவை.
ஆலயப் பிரவேசத்தை ஒட்டிய காலத்தில், ஆர்.எஸ். நாயுடு மிக கண்டிப்பாக நடந்து கொண்டார். அதனாலேயே, பட்டர்களின் கலகத்தை மீறியும் ஆலயப் பிரவேசம் நிலைத்து நின்றது. ஆலயப் பிரவேசத்திற்கு அடுத்த நாள் சந்நிதானக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சாவியைத் தர மறுத்த முத்து சுப்ப பட்டரையும் மேலும் இரண்டு பேரையும் இடைநீக்கம் செய்தார். அதற்குப் பிறகு, அன்றைக்கு பூசை உரிமை உள்ளவர்கள் கோவிலுக்கு வராமல் போனால், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.
சில வாரங்களில் சாந்து பட்டரைத் தவிர எல்லா பட்டர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பூசைகளைத் தொடர்ந்து செய்ய திருநெல்வேலியிலிருந்து 12 ஆதி சிவாச்சாரியார்களை வரவழைத்தார் நாயுடு.
1939 ஜூலை 29-ஆம் தேதி கோவிலுக்குள் சென்று சுத்தீகரண சடங்குகளைச் செய்ய வேண்டும் என சில பட்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, கோவில் கதவுகளை மூடியதோடு சஸ்பென்ட் ஆன பட்டர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று விதித்தார். சுத்தீகரணச் சடங்கையும் அனுமதிக்க மறுத்தார்.
ஆகஸ்ட் மாதம் ஆவணி மூலத் திருவிழாவின்போது வேத பாராயணம் செய்யும் பாடகர்கள் கோவிலை விட்டு வெளியேறியபோது, வேறு கோவில்களில் இருந்து வேத பாராயணம் செய்யவைத்தார். முடிவில் 1945 செப்டம்பர் மாதத்தில், சுத்தீகரணச் சடங்கு ஏதும் செய்யாமல், ஆர்.எஸ். நாயுடுவுடன் சமரசம் செய்துகொண்டுதான் பட்டர்கள் மீண்டும் கோவிலுக்குள் நுழைய முடிந்தது.
இந்த அர்ச்சகர்கள் கோவிலில் இல்லாத காலகட்டத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களை அவர் முன்னெடுத்தார்.
1. 1939 ஆகஸ்டில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் சீட்டு வாங்க வேண்டும். பட்டர்களிடம் நேரடியாக காசு கொடுக்கக்கூடாது. சீட்டின் விலை 3 அணா. இதில் 1 அணா பட்டருக்கு. 2 அணா கோவிலுக்கு.
2. நாயுடு வருவதற்கு முன்பாக கோவிலில் 2 உண்டியல்கள் மட்டுமே இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.
3. முக்கியப் பிரமுகர்கள் வரும்போது அவர்களை பட்டர்கள் வரவேற்றனர். அதை மாற்றிய நாயுடு, கோவில் நிர்வாக அதிகாரிகளே இனி முக்கியப் பிரமுகர்களை வரவேற்பார்கள் என செயல்படுத்தினார். இப்போதுவரை அந்த முறையே நீடிக்கிறது.
4. மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடக்கும் போது அவர்கள் செங்கோல்களை முதன்மை பட்டர்தான் எடுத்துச் சென்றார். ஆனால், 1940-ல் இந்தப் பழக்கத்தை நாயுடு மாற்றினார். சாந்து பட்டர்தான் கடைசியாக இப்படி செங்கோலைக் கொண்டுசென்ற பட்டர். அதற்குப் பிறகு, நிர்வாக அதிகாரியோ, அறங்காவலரோதான் செங்கோலைப் பெறுகின்றனர்.
5. கோவில் பேஷ்காராக அதுவரை பிராமணர்களே நியமிக்கப்பட்டனர். ஆனால், முதல் முறையாக பிராமணரல்லாத ஒருவரை 1945 பிப்ரவரியில் நாயுடு நியமித்தார்.
6. எந்தெந்த நேரத்தில் வழிபாடு நடக்கிறது என்பது பலகைகளில் எழுதி வைக்கப்பட்டது. அந்தந்த நேரத்தில் பூஜை நடக்கிறதா என்பதை பேஷ்கார் கண்காணிக்கும் முறை வந்தது.
7. புதிய பட்டர்கள் தீட்சை பெறும் அதிகாரம் பட்டர்கள் கையிலிருந்து கோவில் நிர்வாகத்தின் கைக்கு வந்தது.
1945-ல் ஆர்.எஸ். நாயுடு கோவில் நிர்வாகத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.
ஆர்.எஸ். நாயுடுவுக்கு மூன்று மகன்கள். ராஜேந்திரன், எஸ்டி ராய், கிருஷ்ணமோகன். இவர்களில் ராஜேந்திரனும் வெளிநாட்டில் சட்டம் படித்தவர். ஆனால், படிப்பை முடிக்கவில்லை. தந்தையின் சொத்தை குதிரைப் பந்தையத்தில் செலவழித்தார். மதுரையிலிருந்து செயல்பட்ட சித்ராலயா ஸ்டுடியோவில் சில காலம் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இவரது மகன்கள் கோபிநாத், ஷேக்ஸ்பியர் ஆகியோரைத்தான் நான் சந்தித்தேன். ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்ததால், ஷேக்ஸ்பியர் என தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிறார் ராஜேந்திரன்.
கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஆர்.எஸ். நாயுடுவுக்கு பக்கபலமாக நின்ற சாந்து பட்டரின் மகன் சுப்பிரமணியன், ஆர்.எஸ். நாயுடு மிக உறுதியான, அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிர்வாகி என நினைவுகூர்கிறார்.
ஆர்.எஸ். நாயுடுவுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த கடிதங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டதாக ஷேக்ஸ்பியர் சொல்கிறார். ஆர்.எஸ். நாயுடு மதுரை நகர சபை தலைவராக இருந்தபோது செய்த பணிகள் என்ன என்பது இன்னொரு ஆய்வுக்குரியது.
தள்ளுவண்டி
தள்ளும் பெண்ணின்
பித்த வெடிப்பு
கால்பட்டு
கிழக்கு சிவக்கிறது.
விசை கொண்டு
தள்ளு வண்டியை
நகர்த்தும் வேகத்தில்
சூரியன் நகர்கிறது.
வண்டியை
ஏற்றத்தில்
உந்தித் தள்ளி,
இறக்கத்தில்
இழுத்துப் பிடித்து,
பள்ளிப் பிள்ளைகள்
சைக்கிள்கள்
பைக்குகளின் சீண்டல்கள்
படாமல்… விலகி
பக்குவமாய்
கட்டுக்குள் நிறுத்தும்
பெண்ணின்
தொண்டைக்குழி தசையில்
வியர்வை உருளும்.
தள்ளுவண்டி
நிறுத்துமிடத்தை
குனிந்து நிமிர்ந்து கூட்ட
சில
பார்வை குப்பைகள்
படுத்தும்.
உடலையே சமைத்துப்போடுவது போல் களமாட வேண்டும்
பார்சல் பேப்பர்
பார்சல் கவர்
குடம்
தண்ணீர் கேன்.. என
வந்து சேரும்
இருசக்கர வாகனத்தில்
அவள்
கணவனைத் தவிர
அனைத்தும்
வசதியாய் அமர்ந்திருக்கும்.
எரிக்கும் சிகரெட்டெ
எரிபொருள்.
சேர்ந்து இருமும்
சைக்கிளின் மேல் மாமனார்.
அந்த
தள்ளுவண்டி வியாபாரத்தை
தாங்கிப் பிடிக்கும்
துருபிடித்த சக்கரத்தில்
அவர்
விலா எலும்பும் அடக்கம்.
கை கழுவி
உறக்கம் தொலைத்த
விழிகளால் தீ மூட்டி
ஓங்கி… தோசைக்கல்லில்
உயிர் தண்ணீர் தெளிக்க
அங்கே
ஒட்டு மொத்த குடும்பத்தின்
ஆவி
பறக்கும்.
வாழ்வின்
சுமை கொள்ளா
வாகனமாய்
தள்ளு வண்டி
காட்சி தரும்.
பள்ளிக்குப் போனாளோ…
பத்திரமாய் வருவாளோ..
பிள்ளையை நினைக்கையில்
மணக்கும் இட்டிலியோடு
அவள் மனதும் வேகும்.
அடுத்த ஈடு ஊத்துவதில்
தோசையை புரட்டுவதில்
சட்டினி.. சாம்பார் – என
குரல்கள் நெருக்குவதில்
நினைவுகள் தொலையும்
தன் பசி மறக்கும்.
குடும்பமே பணியாற்றும் தள்ளு வண்டிக் கடை
குறிப்பிட்ட நேரத்திற்குள்
மொத்த உடலின் சத்தும்
பிழியப்படும்.
தசைகளின்
அசைவுகளில்
ஆட்டம் கண்டு
தள்ளுவண்டி
உயிர் உறையும்.
உடலையே
சமைத்துப்போடுவது போல்
களமாட வேண்டும்.
பசியின் வேகத்திற்கு
பரிமாற வேண்டும்
மனித எந்திரமாய்
உருமாற வேண்டும்.
நாலு இட்லி.. ரெண்டுவடை
பொங்கல் ஒண்ணு…
பூரி ஒண்ணு
ரெண்டு கல்தோசை
ஒரு வடகறி….
வித விதமாய் வரும்
கட்டளைக்கு
காது முளைக்க வேண்டும்
விடுபடாமல்
வேகமாய் பார்சல் கட்ட
விரல்களின் நகக் கண்
விழிக்க வேண்டும்.
நிலைகுத்தி
நின்ற இடத்தில்
உடல் வளைந்து
பொருள் எடுக்க
வலி பிடுங்கும்
தொடை நரம்பு.
கைவிடப்பட்ட
முதியவர்கள்
பசித்ததை
சொல்லத் தெரியாமல்
பார்த்து நிற்கும்
மனநோயாளிகள்
இவர்க்கும்
சுரக்கும்
தள்ளுவண்டிக் கடையின்
பாசப் பரிமாற்றம்.
பாக்கி வைக்கும்
பழக்கமில்லா முகங்களுக்கும்
தள்ளுவண்டி
இடம் கொடுக்கும்.
முதுமையில் வளைந்த
தந்தையின் கை நரம்புகள்
சட்னி, சாம்பார்
பொட்டலம் கட்ட தடுமாறும்.
பார்த்து.. பார்த்து.. என
பார்வையில்
முடிச்சு போட்ட படியே
பையன்,
பல விதமாய்
உண்டவர் கணக்கை
ஒன்று விடாமல்
ஒரு விதமாய்
கூட்டிச் சொல்லும் அழகு
வலியின் பிரசவம்.
கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.
இன்னும் சகஜநிலைக்கு திரும்பாத பகுதிதான் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளப்பள்ளம். இப்பகுதியில் இன்னமும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கடல்நீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. மேலும் சேதமான மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்கவில்லை.
கடல் நீர் வெளியேற்றப்படாத குடியிறுப்புப் பகுதி
புயலில் வீழ்ந்த மரங்கள், மற்றும் கூரைகள் அகற்றப்படவில்லை. இந்த நிலைமையை சீர் செய்ய எந்த அதிகாரிகளும் முயற்சி செய்யாத நிலையில், அப்பகுதி மக்களும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளும் தான் நிலமையை சீர் செய்ய தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர். இச்சூழலில்தான் நுண்கடன் நிறுவனங்களின் கோரத்தாண்டவம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
வாழ்வை இழந்து ஏதிலிகளாக நிற்கும் மக்களின் கழுத்தை இறுக்குகிறது நுண்கடன் நிறுவனங்கள். சாதாரண நாட்களில் “மடிவற்றிய நிலையில் பால் கறக்கும் இக்கயவர்கள் தற்போது மடியறுக்கவும் தயங்க மாட்டோம்” என்பது போல் செயல்படுகின்றனர். வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்பவர்களை இது போன்ற ஒட்டுண்ணி கும்பல் நிர்பந்திப்பதன் மூலம் சாவை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.
சீரமைக்கப்படாத படகுகள்
ஆம். கஜாவின் கோரத்தாண்டவத்திற்கு பின்னர் அப்பகுதிகளில் இருந்து வெளியாகும் தற்கொலை செய்திகள் பலவும் அம்மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த நிலையில் அப்பகுதி மக்கள், மக்கள் அதிகாரம் தோழர்களை அணுகியுள்ளனர்.
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் பின்னரும் நுண்கடன் கும்பல் அடங்கவில்லை. எனவே கடந்த 24-12-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் ஆயக்காரன்புலம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் அங்கு வந்த வட்டாட்சியர் இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு நீங்கள் உங்கள் கடன்களைச் செலுத்துங்கள் என கூறியுள்ளார். அதனடிப்படையில் மக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த தகவலானது ஆயக்காரன்புலம் பகுதி முழுக்க மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரமாக கொண்டு செல்லப்பட்டது.
1 of 3
மரங்களை அகற்றச் செல்லும் மக்கள் அதிகாரம் தோழர்.
நுண்கடன் 6 மாதங்களுக்கு கட்டத்தேவையில்லை. தகவலைப் பிரச்சாரம் செய்யும் தோழர்கள்.
நுண்கடன் 6 மாதங்களுக்கு கட்டத்தேவையில்லை. தகவலைப் பிரச்சாரம் செய்யும் தோழர்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், வேதாரண்யம், தொடர்புக்கு : 90944 98693.
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 44 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கி”அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.
அவள் மிகுந்த கவனத்தோடு இருந்தாள். அந்த முகப்பு வாசலில் அவள் நின்ற இடத்திலிருந்தே மிகயீல் இவானவிச்சின் கரிய வதங்கிப்போன முகத்தைப் பார்க்க முடியும். அவனது கண்களிலிருந்து பிரகாசத்தையும் அவள் காண முடியும். என்றாலும் அவனும் அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பியதால், அவள் தன் முன் கால்விரல்களை ஊன்றிக் கழுத்தை நீட்டிப் பார்த்தாள்.
மக்கள் முகஞ் சுழித்து அவநம்பிக்கையோடு அவனைப் பார்த்தார்கள். மெளனமாயிருந்தார்கள். கூட்டத்துக்குப் பின்னால் மட்டும் அமுங்கிப்போன குரலில் ஏதோ கசமுசப்பு எழுந்தது.
“விவசாயிகளே!’’ என்று சிரமப்பட்டு உரக்கப் பேசினான் ரீபின் . “அந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை நம்புங்கள். இதற்காக நான் உயிரையும்கூட இழக்க நேரிடலாம்; அவர்கள் என்னை அடித்தார்கள், சித்திரவதை செய்தார்கள். அவற்றை நான் எங்கிருந்து பெற்றேன் என்பதை என் வாயிலிருந்து கக்க வைக்க முயன்றார்கள். மீண்டும் அடிப்பார்கள். ஆனால், நான் அதையும் தாங்கிக் கொள்ளத் தயார். ஏனெனில் அந்தப் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளவை உண்மை – அந்த உண்மைதான் நமக்கு நம்முடைய அன்றாட உணவைவிட – அதி முக்கியமானதாக, அருமையானதாக இருக்க வேண்டும். அதுதான் சங்கதி!’’
“அவன் இதையெல்லாம் ஏன் சொல்லுகிறான்” என்று முகப்பு வாசலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த முஜீக்குகளில் ஒருவன் கேட்டான்.
“எதைச் சொன்னால் என்ன? இப்போது எல்லாம் ஒன்றுதான்” என்று அந்த நீலக் கண்ணன் சொன்னான். “மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும்.”
அந்த ஜனங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாது அங்கேயே நின்று தங்களது புருவங்களுக்குக் கீழாக உம்மென்று பார்த்தார்கள். கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒரு பார உணர்ச்சி அவர்களைக் கீழ்நோக்கி அழுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட அந்தக் கட்டிடத்துக்குள்ளிருந்து தட்டு தடுமாறிக்கொண்டே முகப்பு வாசலுக்கு வந்து சேர்ந்தான்.
“யாரங்கே பேசுகிறது” என்று அவன் குடிகாரனைப் போலக் கத்தினான்.
திடீரென்று அவன் விடுவிடென்று படிகளை விட்டிறங்கி ரீபினிடம் போய் அவனுடைய தலைமயிரைப் பற்றிப் பிடித்து தலையை முன்னும் பின்னும் இழுத்துக் குலுக்கிவிட்டான்.
“டேய்! நீதானா பேசினாய்? நாய்க்குப் பிறந்த பயலே’’ என்று அவன் கூச்சலிட்டான்.
ஜனக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முணுமுணுப்பு அலைபாய்ந்து பரவியது. நிராதரவான வேதனையுணர்ச்சியோடு தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். மீண்டும் ரீபினின் குரல் ஓங்கி ஓலித்தது.
”பாருங்கள், நல்லவர்களே!…..”
”சத்தம் போடாதே!” அந்த ஜார்ஜெண்ட் அவன் காதோடு ஓங்கியறைந்தான். ரீபின் தடுமாறிச் சாய்ந்து, கீழே விழாமல் சுதாரித்து நின்றான்.
“ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள்.”
”போலீஸ்! இவனைக் கொண்டு போங்கள். ஏ, ஜனங்களே, சீக்கிரம் கலைந்து போங்கள்!” வாயிலே கறித்துண்டைக் கவ்விக் கொண்டு தாவுகின்ற நாய் மாதிரி அந்த ஸார்ஜெண்ட் ரீபினுக்கு முன்னால் பாய்ந்து சென்று அவனது முகத்திலும், நெஞ்சிலும், வயிற்றிலும் தன் முஷ்டியால் ஓங்கி ஓங்கிக் குத்தினான்.
“அடிப்பதை நிறுத்து” என்று யாரோ கூட்டத்தினரிடையேயிருந்து கத்தினார்கள்.
”நீ ஏன் அவனை அடிக்கிறாய்?” என்று மற்றொரு குரல் அதை ஆமோதித்து ஒலித்தது.
“நாம் போய்விடுவோம்” என்று அந்த நீலக்கண் முஜீக் தலையை அசைத்துக்கொண்டே தன் தோழனிடம் சொன்னான். பிறகு அவர்கள் இருவரும் அந்தச் சாவடியை நோக்கி மெதுவாக நடந்தார்கள். அவர்கள் போகும்போது தாய் அவர்களை அன்பு நிறைந்த கண்களோடு பார்த்தாள். அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட் மீண்டும் சாவடியின் முகப்பை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும் தாய்க்கு நிம்மதி நிறைந்த பெருமூச்சு வெளிப்பட்டது. அங்கு வந்து நின்று வெறிபிடித்த குரலில் அவன் கத்தினான்.
“கொண்டு வாருங்கள் அவனை! நான் பார்த்துக் கொள்கிறேன்……”
“அப்படிச் செய்யாதே” என்று கூட்டத்திலிருந்து ஒரு பதைத்த குரல் எழுந்தது. அந்தக் குரல் அந்த நீலக்கண் முஜீக்கின் குரல்தான் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். ”பயல்களா, அவர்களை விடாதீர்கள். அவனை உள்ளே கொண்டு போனால் அவர்கள் உதைத்தே கொன்றுவிடுவார்கள். அப்புறம் அந்தக் கொலையை நாம்தான் செய்தோமென்று நம்மீது பழியும் காட்டிவிடுவார்கள். விடாதீர்கள் அவர்களை!”
“விவசாயிகளே!” என்று கத்தினான் ரீபின். “உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நீங்கள் இன்னும் காணவில்லையா? உங்களை எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள், எப்படி ஏமாற்றுகிறார்கள். எப்படி உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள் என்று உங்களுக்குப் புரியவில்லையா? எல்லாம் உங்கள் சக்தியால்தான் இயங்குகின்றன. நீங்கள்தான் இந்தப் பூலோகத்திலேயே சிறந்த மகோன்னத சக்தியாக விளங்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றன? பட்டினி கிடந்து சாவதற்குத்தான் உங்களுக்கு உரிமை இருக்கிறது!”
திடீரென்று அந்த முஜீக்குகள் ஒருவருக்கொருவர் குறுக்கிட்டுச் சத்தம் போட ஆரம்பித்தார்கள்.
“அவன் உண்மையைத்தான் சொல்கிறான்!”
”போலீஸ் தலைவனைக் கூப்பிடு. எங்கே அவன்”
”போலீஸ் ஸார்ஜெண்ட் அவனைத் தேடிப் போயிருக்கிறாள்.”
“யார், அந்தக் குடிகாரனா?”
“அதிகாரிகளைக் கூப்பிட்டு வருவது நம் வேலையல்ல.’’
அந்தக் கூச்சல் அதிகரித்துக்கொண்டிருந்தது.
“முன்னாலே போய்ப் பேசு, உன்னை அடிக்கும்படி நாங்கள் விட்டுக்கொண்டிருக்க மாட்டோம்”
“அவன் கைகளை அவிழ்த்துவிடு!”
”நீ அகப்படாமல் பார்த்துக்கொள்!”
”இந்தக் கயிறு என் கைகளை உறுத்துகிறது” என்று அமைதியாகச் சொன்னான் ரீபின். என்றாலும் அவனது குரல் மற்றவர்களின் குரல்களுக்கு மேலாக மேலோங்கித் தெளிவோடு ஒலித்தது. ”நான் ஓடிப்போக மாட்டேன். முஜீக்குகளே நான் இந்த உண்மையிலிருந்து ஒளிந்து மறைய முடியாது. அது என் இதயத்திலேயே வாழ்கிறது.”
சில மனிதர்கள் மட்டும் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று ஒருபுறமாக ஒதுங்கி நின்று ஏதேதோ சொல்லிக்கொண்டும் தலையையாட்டிக் கொண்டும் இருந்தார்கள். கந்தலும் கிழிசலுமாய் உடையணிந்த எத்தனை எத்தனையோ மக்கள் உணர்ச்சி வெறியோடு ஓடோடியும் வந்து குழும ஆரம்பித்தார்கள். அவர்கள் ரீபினைச் சுற்றி கொதிக்கும் கறுத்த நுரை போன்று சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு காட்டுக்கோழி மாதிரி நிமிர்ந்து நின்று தன் கைகளைத் தலைக்கு மேல் ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான் ரீபின்.
“நல்லவர்களே! உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?”
அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக்கொண்டு ரத்தம் தோய்ந்த தனது ஒரு கரத்தை உயர்த்திக் காட்டினான்.
“இதோ என் ரத்தம் – சத்தியத்தைக் காப்பதற்காகச் சிந்திய ரத்தம்!”
“நல்லவர்களே! உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?”
தாயும் படியிறங்கி அந்த முகப்புக்குச் சென்றாள். ஆனால் கூட்டத்தின் மத்தியில் நின்ற ரீபினை அவளால் பார்க்க முடியவில்லை. எனவே மீண்டும் அவள் படிகளின் மீது ஏறி நின்றுகொண்டாள். ஏதோ ஒரு மங்கிய ஆனந்தம் அவளது இதயத்தில் படபடத்தது.
”விவசாயி மக்களே அந்தப் பத்திரிகைகளை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருங்கள், அவற்றைப் படியுங்கள்.
கோயில் குருக்களும், அதிகாரிகளும் உண்மையைச் சொல்லும் எங்களை மாபாவிகள் என்றும், கலகக்காரர்கள் என்றும் உங்களிடம் சொல்வார்கள். அதை நம்பாதீர்கள். உண்மை இந்த உலகத்தில் எங்கும் ரகசியமாகவே உலவுகிறது. மக்களது இதயத்திலே குடிபுகுவதற்காகத் திரிந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளுக்கே சத்தியம் நெருப்பைப் போன்றது. உயிர் பறிக்கும் உடைவாளைப் போன்றது. அவர்கள் சத்தியத்தை ஏற்க முடியாது. ஏற்றால் சத்தியம் அவர்களை வெட்டித் தள்ளிவிடும்; சுட்டுப் பொசுக்கிவிடும்! உங்களுக்கோ சத்திய தேவதை உண்மையான நல்ல தோழியாக விளங்குவாள். அவர்களுக்கோ அவள் பரம விரோதியாக விளங்குவாள். எனவேதான் அவள் இந்தப் பூமியில் ரகசியமாக உலவித் திரிகிறாள்!”
மீண்டும் அந்த ஜனக்கூட்டத்திலிருந்து கூச்சல்கள் கிளம்பின.
“கேளுங்கள், விசுவாசிகளே!”
“ஆ. சகோதரா! அவர்கள் இதற்காக உன்னைத் தண்டிப்பார்களே!’’
“உன்னைக் காட்டிக் கொடுத்தது யார்?”
“தேவாலய மத குரு!” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.
இரண்டு முஜீக்குகள் வெஞ்சினத்தோடு கருவினார்கள்.
“அங்கே பாருங்கடா, பயல்களா!” என்று யாரோ எச்சரிப்பது, காதில் விழுந்தது.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
ஸ்டெர்லைட் குற்றவாளிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பச்சைக் கொடி !
நாடகமாடும் எடப்பாடி- மோடி அரசுகள் !
நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான காற்று, நீர், நோயற்ற வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டுமானால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 22.05.2018 அன்று 14 அப்பாவிகளைப் படுகொலை செய்தது எடப்பாடி அரசு. இந்தப் படுகொலையை மூடி மறைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உப்பு சப்பற்ற அரசாணை ஒன்றை வெளியிட்டு ஆலையை மூடியது எடப்பாடி அரசு.
இந்த அரசாணை வலுவற்றது. எனவே ஜல்லிக்கட்டுக்கு செய்தததைப் போல ஸ்டெர்லைட்டுக்கும் அரசு கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூட வேண்டும் என பலரும் எச்சரித்த போது, உலக நீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசாணை செல்லும் என பிதற்றியது எடப்பாடி அரசு. ஆனால் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளிவந்த நாளிலிருந்து தூத்துக்குடி மக்கள் மீது கட்டற்ற அடக்குமுறையை ஏவி வருகிறது எடப்பாடி அரசு.
ஸ்டெர்லைட் போராட்டம் என்பது தூத்துக்குடி மக்கள் போராட்டம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டம். மீண்டும் ஸ்டெர்லைட்டைத் திறப்பது என்பது தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். தமிழக மக்களை அவமதிப்பது. உயிர்துறந்த 14 போராளிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது. எனவே இழப்புகள், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும். ஒட்டு மொத்த தமிழகமும் எழுந்து நிற்காவிட்டால், தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து சொல்லொனாத் துயரங்களுக்கு ஆட்படுவர்.
திருவண்ணாமலை ம.உ.பா.மை. ஆர்ப்பாட்டம்
1 of 7
ஆர்ப்பாட்டம்
பாபு
ஜோதி
கந்தன்
கண்ணன்
கார்த்திகேயன்
ஞானவேல்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்!
நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம்!
தமிழக அரசே!
ஜல்லிக்கட்டுக்கு செய்ததைப் போல, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடுவதற்கு உடனடியாக சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடு! சிறப்பு சட்டம் இயற்று!
மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்ப்பில் 29.12.2018 அன்று மாலை திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரத்தயங்கிய காவல்துறை, வழக்கறிஞர்களின் தொடர் முயற்சியால் இறுதியில் அனுமதி அளித்தது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை அமைப்பாளர் வழக்கறிஞர் சு.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழுச்சியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.சீனி.கார்த்திகேயன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பாசறை பாபு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் கு.ஜோதி, நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் தோழர் ம.பி.கந்தன், நாம் தமிழர் கட்சியின் தோழர்.ஜெயச்சந்திரன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகி வழக்கறிஞர் பொன்.சேகர் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர்.ஞானவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வழச்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்று போராடும் தூத்துக்குடி மக்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை
வினவில் ‘ஆட்டோ இலக்கியம்’ பற்றிய வாசகர் புகைப்படஙகளை கோரும் அறிவிப்பு வந்த போதே, மனதில் பல மலரும் நினைவுகள் வந்து போயின.
எங்கள் மதுரையை பொறுத்தவரை நக்கலுக்கும், தமிழுக்கும் பஞ்சமே இருந்ததில்லை.
“பிரசவத்துக்கு இலவசம்” என சென்னை போன்ற நகரஙகளில் எழுதி வந்த காலங்களிலேயே, “கையை நம்பு! கண்ணை நம்பாதே!” (உழைப்பை நம்பு, பெண்கள் பின்னால் சுற்றாதே என கூறுகிறாராம்) என்பது முதல், “சிரித்தால் சிரிப்போம்! முறைத்தால் அடிப்போம்!!” போன்ற டெரர் பீஸ்கள் வரை பலதரப்பட்ட வாகனங்களில், பலதரப்பட்ட வாசகங்கள் அப்போது இருந்தன.
இன்னும், “மாமனாரிடம் காசு வாங்க, உனக்கு கையும் காலும் எதற்கு?” போன்ற வரதட்சணை எதிர்ப்பு வாசகங்கள், “ஆப்பரேசன் செய்யும் போது A,B,AB,O+, – ரத்தம் கேப்பியா? இல்ல ஓன் சாதி ரத்தம் கேப்பியா?” போன்ற சாதி வெறி எதிர்ப்பு வாசகங்கள் என பலவும் இருந்தன.
ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், “என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்” என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.
ஒரு காரின் பின்னே, “என்ன எழுதுறதுன்னு தெரியல” என ஒருவர் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்.
வித்தியாசமானதொரு வாகன வாசகத்தை பார்த்தது, 1997 நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில், அது நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்து. நெல்லை கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் அந்தப் பேருந்து முழுவதும் தூசி அப்பிக் கிடந்தது. அந்தப் பேருந்தின் பின் புற கண்ணாடியில், “நாசகர ஸ்டெர்லைட் ஆலையை தகற்போம்! நாடு மீண்டும் அடிமையாவதை தடுப்போம்!!” என அந்த தூசுகளிடையே விரல்களால் யாரோ எழுதி இருந்தார்கள்.
அதெல்லாம், மொபைல்போன்கள் எல்லாம் இல்லாததொரு காலம்…
மாதிரிப்படம்
ஆண்டிராய்டு மொபைல் வந்த பிறகு என்னை ஈர்த்தது ஒரு ஆட்டோ வாசகம்.
அது ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் போராடி வந்த காலம், நான் தமுக்கம் சென்று கொண்டு இருக்கிறேன். என் முன்னே செல்லும் ஆட்டோவின் பின்புறம் ஒரு வெள்ளை சார்ட் பேப்பரில் ஸ்கெட்ச் பேனாவால் பெரிதாக எழுதப்பட்டு இருந்தது. “தமுக்கம் செல்லும் தாய்மார்க்ளுக்கு இலவசம்” . அதை ஏனோ, அன்று போட்டோ பிடிக்க தோன்றவில்லை. இப்போது வருந்துகிறேன்.
சரி, இப்போது என்ன பிரச்சினை? ஆட்டோ இலக்கியத்திற்காக படமெடுக்கலாம் என மொபலை தூக்கிக் கொண்டு இப்போது கிளம்பினால், ஆட்டோக்களின் பின்புறமெங்கும், பெருவணிக நிறுவனங்களின் விளம்பரங்கள்!
ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். சிறந்த நடிகர்கள், சிறந்த மனிதர்கள், சிறந்த முன்னோடிகள், சிறந்த ஆளுமைகள் என ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விருதுகள் வழங்கி வருகின்றன. மக்களுக்கு விருது வழங்கும் ஊடகங்களுக்கு விருது கொடுக்கும் முகமாக பாஜகவிற்கு நம்பர் ஒன் இடத்தில் சொம்படிக்கும் செய்தி சானல், மற்றும் நாளிதழ்களின் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தோம்.
இன்று கமலாலயத்திற்கு பிடில் வாசிக்கும் தமிழ் நடிகர்களை எடுத்துக் கொள்வோம். இன்னும் பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் என்று விருது பட்டியல் தொடர்கிறது. இத்தலைப்புகளுக்குரிய ஆளுமைகளை நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.
இன்றைய கணிப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட நடிகர்கள் ரஜினி, கமல், விசால், சூர்யா மற்றும் நீங்கள் புதிதாக சேர்க்க விரும்பும் ஒரு நடிகர்.
புத்தாண்டின் துவக்கத்தில் கருத்துக் கணிப்பில் வெல்லும் ஆளுமைகளுக்கு அட்டகாசமாக விருதுகள் வழங்கப்படும். காத்திருங்கள்!
மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார்?
♦ ரஜினி
♦ கமல்
♦ விஷால்
♦ சூர்யா
(பதில்களில் இருவரைத் தெரிவு செய்யலாம்)
டிவிட்டரில் வாக்களிக்க :
மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார்?
மார்க்ஸ் பிறந்தார் – 24 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
மார்க்சியத்தின் உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கெல்சும் ஆற்றிய வரலாற்றுப் பணிகளை கூர்மையோடும் உணர்ச்சிகரமாகவும் எடுத்து வைக்கிறது இப்பகுதி. இரு மகத்தான மனிதர்களும் ஒருவருக்கொருவர் இணைந்தும், ஆதரவளித்தும், பகிர்ந்தும் எப்படி மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்தார்கள் என்பதை அறிய உதவுகிறார் நூலாசிரியர். ஏங்கெல்சின் பல்துறைத் திறமைகள், பல மொழிகளை அறிந்திருந்தது, தனது நண்பருக்காக சலீப்பூட்டும் வர்த்தகப் பணிகளை ஏற்றது, புரட்சியின் எதிர்காலத்தை மேதாவிலாசத்துடன் கணித்தது அனைத்தையும் சுருக்கமாக அறியத் தருகிறார் நூலாசிரியர். இறுதியில் இரண்டு மாபெரும் மனிதர்களின் வரலாற்றுப் பயணத்தை வியப்போடும், தோழமையோடும் அறிந்து கொண்ட உற்சாகத்தை பெறுகிறோம். – வினவு
10. மேதையின் அருகில் மற்றொரு மேதை – 1
நான் மார்க்சையும் எங்கெல்சையும் இன்னும் “நேசிக்கிறேன்”, அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. இல்லை, அவர்கள் உண்மையான மனிதர்கள்! நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக் கூடாது. வி. இ. லெனின்(1)
1880-களின் தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பா பாரிஸ் கம்யூன்வாதிகள் ஏற்படுத்திய புரட்சிகரமான கொந்தளிப்புக்களின் தாக்கத்தில் இன்னும் குமுறிக் கொண்டிருந்தது. ருஷ்யப் பேரரசு மிதவாதத்துடன் சல்லாபித்த பிறகு அதன் வாழ்க்கையிலேயே மிகக் கடுமையான, பிற்போக்குவாதப் பத்தாண்டுகளில் ஒன்றில் நுழைந்து விட்டது.
அங்கே “கலகம் செய்பவர்களையும்” “மிதவாதிகளையும்” களையெடுக்க வேண்டும், பண்ணையடிமை முறையை மறுபடியும் ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் ஆரம்பமாயின; ருஷ்யாவின் முற்போக்கான அறிவுப் பகுதியினருடைய இதயங்களில் நம்பிக்கை முறிவும் ஆதரவற்ற நிலைமையும் குடியேறின.
புரட்சிகர இயக்கத்தின் மையம் ருஷ்யாவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது, புரட்சிகர இயக்கத்தில் புதிய எழுச்சி மற்றும் சோஷலிஸச் சீரமைப்புக்குரிய எல்லா நம்பிக்கைகளுமே இனி ருஷ்யாவுடன்தான் இணைக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தக் காலகட்டத்தில் சில ஐரோப்பிய அறிஞர்கள் கூறினார்கள். அவர்களில் பிரெடெரிக் எங்கெல்சும் ஒருவர். எங்கெல்ஸ் ருஷ்யப் புரட்சிக்காரரும் சோஷலிஸ்டுமான ஹேர்மன் லபாதினை 1883 மார்ச்சில் லண்டனில் சந்தித்த பொழுது பின்வருமாறு கூறினார்:
“பீட்டர்ஸ்பர்கில் அண்மை எதிர்காலத்தில் என்ன செய்யப்படும் என்பதைப் பொறுத்தே இப்பொழுது எல்லாம் இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள சிந்திக்கின்ற, தொலைநோக்குடைய, நுண்ணறிவுடைய மனிதர்கள் அனைவருடைய கண்களும் அதையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.”
பின்னர் அவர் இன்னும் அதிகத் திட்டவட்டமாகக் கூறினார்:
“ருஷ்யாதான் இந்த நூற்றாண்டின் பிரான்ஸ். ஒரு புதிய சோஷலிசப் புனரமைப்புக்கான புரட்சிகர முன்முயற்சி நியாயமாகவும் சட்ட ரீதியாகவும் ருஷ்யாவுக்கு உரியது.”(2)
ருஷ்யாவின் கடைசி ஜாரான இரண்டாவது நிக்கலாயைப் பற்றியும் அவருடைய ஆட்சியின் முடிவைப் பற்றியும் எங்கெல்சின் வர்ணனை மதிநுட்பம் நிறைந்தது:
“அவர் அறிவிலும் உடலிலும் பலவீனமான அரை முட்டாள். ஒருவருக்கொருவர் எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றவர்களிடம் வெறும் விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருக்கின்ற ஒரு நபருடைய தீர்மானமில்லாத ஆட்சிக்கு இதுதான் காரணம்: ருஷ்யாவின் எதேச்சாதிகார அமைப்பை வேரோடு ஒழித்துக் கட்டுவதற்கு இது அவசியமானதே.”(3)
எங்கெல்சின் இந்த முன்னறிவிப்பு சிறப்பானது என்றபோதிலும் அதில் எங்கெல்சின் அசாதாரணமான அறிவுக் கூர்மையைத் தவிர வேறு தெய்விகமான ஆரூடம் ஏதுமில்லை.
எங்கெல்சின் மதிநுட்பம் அவருடைய நண்பர்களைக் கூட அடிக்கடி ஆச்சரியப்படச் செய்வதுண்டு. 1848-ம் வருடப் புரட்சியின் போது மார்க்ஸ் வெளியிட்ட Neue Rheinische Zeitung, ஹங்கேரியில் நடைபெற்று வந்த புரட்சிகர யுத்தத்தைப் பற்றி சில சமயங்களில் கட்டுரைகளை வெளியிட்டது. அக்கட்டுரைகள் வளமான விவர ஞானத்தையும் இராணுவ நடவடிக்கைகளின் வளர்ச்சியைப் பற்றித் துல்லியமான முன்னறிவிப்பையும் கொண்டிருந்தபடியால் அவற்றை ஹங்கேரிய இராணுவத் தலைவர்களில் ஒருவர்தான் எழுதியிருக்க முடியும் என்று நம்பப்பட்டது. ஆனால் ஹங்கேரிக்கு ஒரு முறை கூடப் போகாத ஒரு இளைஞர் ஜெர்மனியில் இருந்து கொண்டு இக்கட்டுரைகளை எழுதினார். அந்த இளைஞருடைய பெயர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.
1870-ம் வருடத்தில் பிரெஞ்சு-பிரஷ்ய யுத்தத்தின் போது எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன; ஏனென்றால் அவர் ஸெடான் சண்டையையும் பிரெஞ்சு இராணுவத்தின் தோல்வியையும் முன்னரே அறிவித்திருந்தார். அன்று முதல் மார்க்ஸ் குடும்பத்தினர் அவருக்கு “ஜெனரல்” என்ற பட்டப்பெயரைக் கொடுத்தார்கள்.
எங்கெல்சின் கம்பீரமான இராணுவத் தோற்றமும் இதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். முதிர்ந்த வயதிலும் எங்கெல்சின் மிடுக்கான தோற்றம் அவருடைய நண்பர்களை பிரமிக்க வைத்தது. பிரெடெரிக் லெஸ்னர் அவரைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “எங்கெல்ஸ்…. ஒல்லியாக, உயரமாக இருந்தார், அவர் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கினார், அவர் பேச்சு சுருக்கமாகவும் உறுதியாகவும் இருக்கும், அவர் படைவீரரைப் போல விறைப்பாக நடப்பார்.”(4)
இராணுவப் போர்த்திற நுட்பங்களைப் பற்றி எங்கெல்சின் ஆராய்ச்சிகள் ஆழமானவை என்றாலும் அவை அவருடைய பல அக்கறைகளில் ஒன்றாக மட்டுமே இருந்தன. அவருடைய வளமான ஆளுமை அத்தகைய பல அக்கறைகளை வெற்றிகரமாக நிறைவேற்றக் கூடிய தகுதியைக் கொண்டிருந்தது.
மார்க்ஸ் குடும்பத்தாருடன் எங்கெல்ஸ்
எங்கெல்சின் பல்வகையான அக்கறைகளும் பரந்த அறிவும் திறமைகளும் அவருடைய தனியான குணாம்சங்களாகும். 19-ம் நூற்றாண்டு பண்பாட்டின் எல்லாத் துறைகளிலும் தலைசிறந்த மேதைகளை உருவாக்கியது. ஆனால் இந்தப் பின்னணியில் கூட எங்கெல்சின் கலைக்களஞ்சிய அறிவு (மார்க்சைப் போல) ஒப்புவமை இல்லாததாகும். இந்த அம்சத்தில் அவரை அரிஸ்டாட்டில், லியனார்டோ டாவீன்சி, கேதே, ஹெகல் ஆகியோருடன் ஒப்பிட முடியும். எங்கெல்ஸ் தத்துவஞானியாக, அரசியல் பொருளியலாளராக, வரலாற்றாசிரியராக, மொழியியலாளராக, இலக்கிய விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, அரசியல் கட்டுரையாளராக இருந்தாரென்றல் இதைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் ஸ்தூலமான சமூகவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் என்று எங்கெல்சைக் குறிப்பிட முடியும்.
அவர் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் அதற்குச் சிறந்த உதாரணமாகும். அவர் பெளதிகம், இயந்திரவியல், இரசாயனம், உயிரியல், கணிதம், வானியல் மற்றும் சில தொழில்நுட்பத் துறைகளில் ஆழமான புலமையைக் கொண்டிருந்தார். அதன் பலனாகத்தான் இயற்கையின் இயக்க இயல் என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் இயற்கை விஞ்ஞானங்களின் மொத்த வளர்ச்சியையுமே தத்துவஞான ரீதியில் பொதுமைப்படுத்துவதற்கு அவரால் முடிந்தது. அவர் பல மொழிகளில் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார்; அவற்றின் கிளை மொழிகளைக் கூட அவர் நன்றாகப் பேசக் கூடியவர்.
“எங்கெல்ஸ் இருபது மொழிகளில் திக்குகிறார்” என்று ஒரு சோஷலிஸ்ட் வேடிக்கையாகக் கூறியதுண்டு (உணர்ச்சி வசப்படுகின்ற பொழுது எங்கெல்ஸ் சிறிதளவு திக்குவதுண்டு). அதே சமயத்தில் அவர் தந்தக் கோபுரத்தில் உட்கார்ந்திருக்கும் படிப்பாளி அல்ல, புத்தகப் புழுவும் அல்ல. அவர் விளையாட்டுக்கள் குதிரையேற்றம், வேட்டையாடுதல் ஆகியவற்றில் பங்கெடுப்பார்; அவர் கடை உதவியாளராக, வர்த்தகராக, வர்த்தகப் பயணியாக, தொழிலதிபராக, நிதியதிபராகவும் இருக்க வேண்டுமென்பது விதியின் முடிவு. அவர் அறிவின் எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்-பிரசவ மருத்துவமும் அதில் அடங்கியிருந்தது.
இளமைப் பருவத்தில் எங்கெல்ஸ் கவிதைகளை எழுதுவதில் ஆர்வத்தோடு முயற்சி செய்தார், எதிர்காலத்தில் இலக்கியம் அல்லது கலைத் துறையில் சேவை புரிய வேண்டும் என்றும் தீவிரமாக நினைத்தார். அவர் கணிசமான கவிதை நூல்களை எழுதினார். இவை அக்காலத்திய பத்திரிகைகளில் வெளிவந்தன. அவற்றின் நகைச்சுவையையும் அங்கதத் திறமையையும் விமரிசகர்கள் பாராட்டினார்கள்.
1840-களின் தொடக்கத்தில் எங்கெல்ஸ் ஒரு ரெஜிமெண்டில் இராணுவ சேவை செய்தார். பிறகு பாடேன் எழுச்சியில் பங்கெடுத்தார். மூன்று சண்டைகளில் போராடினார். போர்க்களத்தில் அவரைப் பார்த்தவர்கள் அனைவரும் அவருடைய வீரத்தையும் நிதானத்தையும் நெடுங்காலம் வரை நினைவில் வைத்திருந்தார்கள்.
1830-களின் முடிவுக்குள்ளாகவே பிரெடெரிக் எங்கெல்ஸ் தன்னுடைய எதிர்கால நண்பருடைய சிறப்புமிக்க திறமை, வெல்ல முடியாத ஆற்றல், அஞ்சா நெஞ்சம் ஆகியவற்றைப் பற்றி ஏராளமாகக் கேள்விப்பட்டிருந்தார். அவர்களுடைய முதல் சந்திப்பு 1842 நவம்பரில் கொலோனில் நடைபெற்றது. எங்கெல்ஸ் இங்கிலாந்துக்குப் போகும் வழியில் கொலோனில் Rhenische Zeitung அலுவலகத்துக்கு வந்தார். அப்பொழுது மார்க்ஸ் அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அச்சந்திப்பு அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தவில்லை. காரணங்கள் சாதாரணமானவையே. ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் பாரிசில் மீண்டும் சந்தித்த பொழுது தாங்களிருவரும் சமூக வளர்ச்சியைப் பற்றி அடிப்படையில் ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு வெவ்வேறு பாதைகளின் மூலமாக வந்திருப்பதைக் கண்டனர்; அது அவர்களுக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது.
ஒரு முறை சந்தித்துவிட்ட பிறகு இருவருடைய பாதைகளும் மார்க்ஸ் மரணமடையும் வரை இணைந்தே சென்றன. மார்க்சியம் ஒரு மனிதருடைய பெயரைத் தாங்கியிருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்ஸ் ஒரு முறை எங்கெல்சைத் தன்னுடைய “alter ego” (“இரண்டாவது நான்”) என்று அறிமுகம் செய்தார்.
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்று லெனின் ஒரு சமயத்தில் கூறினார்.
மார்க்சும் எங்கெல்சும் அறிவிலும் குணாம்சத்திலும் ஒத்த தன்மையுடையவர்கள் அல்ல; ஆனால் அதனால்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகச் சிறப்பாகப் பொருந்தி உதவி செய்ய முடிந்தது.
நான் எப்பொழுதும் மார்க்சுக்குப் “பக்க வாத்தியமாகவே” இருந்தேன் என்று எங்கெல்ஸ் கூறிய சொற்களை எல்லோரும் வழக்கமாக மேற்கோள் காட்டுகிறார்கள். அது உண்மை தான். ஆனால் மார்க்ஸ் ஒரு சமயத்தில் தன் நண்பருக்குப் பின்வருமாறு எழுதினார்: “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.”(5) மார்க்ஸ் எழுதியிருக்கும் சாட்சியத்தை நாம் மறக்கக் கூடாது.
எங்கெல்ஸ் அசாதாரணமான திறமைகளைக் கொண்டவரே என்றாலும் அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில் அவரை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்பது உண்மையே. ஆனால் சில விஷயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது அவருக்குச் சுலபம், ஒரே பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் நெடுங்காலம் மூழ்கிப் போய்விட மாட்டார், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான துறைகளின் விவரங்களை அவர் மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடியவர்.
குறைவான ஆயுதங்களை வைத்திருந்த போர் வீரராகிய எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் அதிகமான வேகத்தோடு சென்றார், சூழ்ச்சி முறைத் திறத்தில் அதிகச் சுதந்திரமாக இயங்கினார், எதிரியின் கோட்டைகளை முன்னேறித் தாக்கினர் என்று எங்கெல்சைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்திருக்கும் சோவியத் அறிஞர் எம். செரெப்ரியக்கோவ் கூறியிருப்பது பொருத்தமானதே. விஞ்ஞான கம்யூனிச மூலவர்களின் ஆன்மிக வளர்ச்சியின் தொடக்கக் கட்டங்களில் கூட இது தெளிவாகத் தெரிந்தது.
எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் இரண்டு வயது இளையவர் என்றாலும் அவரைக் காட்டிலும் முன்பே பத்திரிகைகளில் – முதலில் கவிதையும் பிறகு கட்டுரைகளும் – எழுதத் தொடங்கினார். அன்றைக்கிருந்த சமூக அமைப்பை எதிர்ப்பதிலும் அவர் முந்தினார், மார்க்சுக்கு முன்பே அவர் புரட்சிகர ஜனநாயகவாதியாகவும் குடியரசுவாதியாகவும் மாறினார். அவர்களிருவரில் அவர்தான் முதலில் கற்பனாவாத சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் – அதன் அன்றைய வடிவத்தில் – மாறினார்; அரசியல் பொருளாதாரத்தை முதலில் விமர்சனம் செய்ததும் அவரே. அவருடைய முதல் “அடிச்சுவடுகளைப்” பின்தொடர்ந்தே மார்க்ஸ் இயற்கை விஞ்ஞானத்தின் சாதனைகளில் அக்கறை எடுத்துக் கொண்டார்.
ஆனால் எங்கெல்ஸ் மேதாவிலாசம் நிறைந்த உருவரைகளை எழுதிய அதே துறையில் மார்க்ஸ் சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களை எழுதினார். ஒவ்வொருவரும் தனித்துவம் நிறைந்த நடை, திறமைகள் மற்றும் தமக்கே உரிய விஞ்ஞான விருப்பார்வங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவர் மீதொருவர் கொண்டிருந்த ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கு இது உதவியது. எங்கெல்ஸ் ஒரு கலைக்களஞ்சியத்தைப் போன்றவர் என்று மார்க்ஸ் கருதினார். பகல் அல்லது இரவில் எந்த நேரத்திலும் வேலை செய்யக் கூடிய அவருடைய திறமையை, அவருடைய வேகமான எழுத்தை, அவர் “அரக்கத்தனமான” அறிவுக் கூர்மையைக் கொண்டிருந்ததை மார்க்ஸ் வியந்து போற்றினார்.
அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி அவர்களுடைய ஆராய்ச்சிகளை இன்னும் நுணுக்கமாக விவாதிப்பது அவசியம். அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு உருவரைகள் என்ற தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை 1844-இல் Deutsch-Französische Jahrbücherஇல் வெளியாயிற்று. அதன் ஆசிரியருக்கு அப்பொழுது இருபத்துநான்கு வயதே ஆகியிருந்தது. ஆனால் அக்கட்டுரை நவீன சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றி அடிப்படையான கேள்விகளை மிகத் துணிவாகவும் ஆணித்தரமாகவும் எழுப்பியபடியால், அதுவரை யாரும் சந்தேகிக்கத் துணியாத மூலச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தின் வறட்டுக் கோட்பாடுகளை முழுமையாக விமர்சித்தபடியால் எங்கெல்ஸ் அந்தத் துறையில் அறிஞர் என்று உடனடியாக அங்கீகரிக்கப்பட்டார்.
அந்தக் கட்டுரை அடிப்படையில் புதுமையான பல கருத்துக்களைக் கொண்டிருந்தது, மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்தில் இவற்றை வளர்த்துக் கூறினார். அதுதான் விஞ்ஞான சோஷலிசத்தின் முதல் பொருளாதாரக் கட்டுரை என்பது உண்மை. மார்க்ஸ் மூலதனத்தில் இக்கட்டுரையை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.
இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்கத்தின் நிலைமை என்ற நூலை எங்கெல்ஸ் வெளியிட்டார். அந்தப் புத்தகம் ஏராளமான மெய்விவரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது, பாட்டாளி வர்க்கம் துன்பப்பட்டு நலிகின்ற வர்க்கம் மட்டுமல்ல, சமூகத்தில் புரட்சிகரமான பாத்திரத்தைக் கொண்டிருக்கின்ற வர்க்கம் என்ற முடிவுக்கு எங்கெல்ஸ் வருவதற்கு அவை ஆதாரமாக இருந்தன.
இப்புத்தகம் எவ்வளவு புதுமையான முறையில், உணர்ச்சி வேகத்தோடு எழுதப்பட்டிருந்தது என்று மார்க்ஸ் பிற்காலத்தில் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். அதன் துணிவான முன்னறிவை, கல்வி ரீதியான அல்லது விஞ்ஞான ரீதியான சந்தேகங்கள் இல்லாதிருத்தலை மார்க்ஸ் போற்றினார். லெனினும் இப்புத்தகத்தை மிகவும் உயர்வாகக் கருதினார். தொழிலாளி வர்க்கத்தின் துன்ப நிலையைப் பற்றி இவ்வளவு ஆணித்தரமான, உண்மையான சித்திரம் 1845-க்கு முன்னரோ அல்லது பின்னரோ எழுதப்படவில்லை என்பது அவருடைய கருத்தாகும்.
இவ்வளவு சிறப்பான அரங்கேற்றத்துக்குப் பிறகு அவருடைய அடுத்த பெரிய நூல் 1878-இல் வெளியாயிற்று. இந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடைவெளி முப்பத்துமூன்று வருடங்கள். ஆனால் இந்த நீண்ட காலத்தின் போது அவர் முற்றிலும் எழுதாமலிருந்து விடவில்லை. எங்கெல்ஸ் பத்திரிகைகளிலும் பிரசுரங்களிலும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் பெரிய அளவில் ஒரு நூலை எழுத முடியவில்லை. இது அவருடைய வாழ்க்கையில் மிகவும் வருத்தமளிக்கின்ற அம்சங்களில் ஒன்றாகும்.
மார்க்சும் எங்கெல்சும் ஜெர்மனியின் புரட்சிகரமான சம்பவங்களில் மிகச் சுறுசுறுப்பான, நேரடியான பாத்திரத்தை வகித்த பிறகு 1849-இல் ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு வந்தனர். மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் வாழ்க்கை நடத்துவதற்கு எந்த வழியும் இல்லாமலிருந்தபடியால் எங்கெல்ஸ் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். எனவே மாஞ்செஸ்டரில் அவருடைய தகப்பனார் பங்கு தாரராக இருந்த நெசவாலையில் எழுத்தராக வேலை செய்தார். இந்த “வர்த்தக அடிமைத் தனத்துக்கு” அவர் இருபது வருடங்களே தியாகம் செய்தார்!
இந்தக் காலம் முழுவதும் மார்க்சும் எங்கெல்சும் உற்சாகமான கடிதத் தொடர்பு வைத்திருந்தார்கள். எங்கெல்ஸ் மிகவும் வசதியான நிலைமையில் இருந்ததாகச் சொல்ல முடியாது, ஆனால் அநேகமாக ஒவ்வொரு கடிதத்திலும் மார்க்சுக்கு ஏதாவதொரு சிறு தொகைக்கு செக் வைத்திருப்பதாக அவர் எழுதுவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்வதும் அதை ஏற்றுக் கொள்வதும் மிகவும் மேன்மையான மனிதர்களால் தான் முடியும் என்று ஃப்ரான்ஸ் மேரிங் எழுதியிருப்பது முற்றிலும் சரியே. அது வெறும் பொருளாயத உதவியைப் பற்றிய பிரச்சினை அல்ல.
New-York Daily Tribune stairs என்ற பத்திரிக்கை மார்க்சைக் கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக் கொண்ட பொழுது அவர் எழுதிய கட்டுரைகளை எங்கெல்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஏனென்றால் அவருடைய நண்பர் ஆங்கிலத்தில் இன்னும் போதிய சொல்வளம் பெற்றிருக்கவில்லை.
மார்க்ஸ் மூலதனம் நூலை எழுதிக் கொண்டிருந்த பொழுது தோன்றிய கடினமான எல்லாப் பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மேலும் எங்கெல்சினுடைய கருத்து மார்க்சுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. மார்க்ஸ் தன்னுடைய லண்டன் வாழ்க்கைக் காலகட்டத்தில் எங்கெல்சைக் கலந்து கொள்ளாமல் ஒரு நடவடிக்கை கூடச் செய்யவில்லை, ஒரு புத்தகம் கூட வெளியிடவில்லை.
அவர்கள் புனிதக் குடும்பம், ஜெர்மன் சித்தாந்தம் ஆகிய நூல்களைக் கூட்டாக எழுதினார்கள். அந்தப் படைப்பாற்றல் கொண்ட ஒத்துழைப்பில் தொடங்கிய நட்பு அவர்களுடைய புரட்சிகர நடவடிக்கையினால் பலமடைந்து காலப் போக்கில் மேலும் வலுப்பெற்றது. அவர்களுடைய ஆன்மிக உறவு மிகவும் பலமாக இருந்தபடியால் ஒருவரின்றி அடுத்தவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
குறிப்புகள்:
(1)V. I. Lenin, Collected Works, vol. 35, p. 281.
(2) Reminiscences of Marx and Engels, p. 205.
(3) Marx, Engels, Werke, Bd, 39, Berlin, 1968, S.313.
(4) Reminiscences of Marx and Engels, p. 174.
(5) Marx, Engels, Werke, Bd. 30, S. 418.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளின் வாழ்வுக்குமான போராட்டம்! இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள்கொடுப்போம் !
இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலை போராட்டம் கடந்த 5 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலர், 40,000/- ரூபாய் அல்லது 50,000 சம்பாதிக்கிற ஆசிரியர்கள் ஏன் போராடணும்? கொழுப்பெடுத்து உண்ணா விரதம் இருக்காங்க-என்று நினைக்கிறார்கள். அதனாலேயே இந்த போராட்டத்தையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.
உண்மை நிலை என்ன ?
2009-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்குப்பின் சேர்ந்த ஆசிரியர்கள் அடிப்படை ஊதியமாக வெறும் ரூபாய் 5,200 மட்டுமே பெறுகின்றனர். 10 ஆண்டுகளாக வேலை செய்யும் ஆசிரியர்களே இப்போதுதான் 23,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதற்கும் குறைவான வருடங்கள் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், இதைவிடக் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். இவர்களின் ஊதியம் மத்திய அரசு துப்புரவு தொழிலாளிகளின் ஊதியத்துக்கு இணையானது மட்டுமே.
ஏன் இந்த நிலை ?
ஒரே வேலை செய்யும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே சம்பளம் தராமல், 2009-க்கு முன், 2009-க்குப் பின் என பிரிப்பதற்கு என்ன காரணம்?
2009-இல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியை 10-ஆம் வகுப்பு என கெசட்டில் வெளியிட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம் 8,370-லிருந்து, 5,200 ஆக குறைக்கப்பட்டதுதான் பிரச்சினைக்கு காரணம்.
ஆனால், இந்த ஆசிரியர்களின் தகுதியோ, MA/MSC, B.Ed/ M.Ed வரை படித்துள்ளனர். மிகுந்த சிரமப்பட்டு TET தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியமும் கிடையாது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைக்கு இணையாகத் தான் இவர்களும் உள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள மாவட்டங்களில்தான் வேலை பார்க்கின்றனர். செலவுகளை குறைக்க, குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டுவிட்டு, வேலை பார்க்கும் இடத்தில் வீடெடுத்து தங்கி, சமைத்து சாப்பிட்டு வேலைக்கு சென்று வருகின்றனர்.
ஊருக்கு சென்றால், 2,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால், மாதம் ஒரு முறை அல்லது 2 – 3 மாதங்களுக்கொரு முறைதான் வீட்டிற்கு செல்கின்றனர்.
சில ஆசிரியர்கள் வேலை செய்யும் ஊருக்கு போக்குவரத்து வசதி அதிகம் இல்லாதிருப்பதால், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதற்கு பெட்ரோல் செலவே மாதம் 3,000 ரூபாய் வரை ஆகிறது.
போராட்ட கோரிக்கைகலைத் திரித்து தினகரன் நாளிதழில் வந்த செய்தி.
“பள்ளியில் கடன் வாங்கியதற்காக மாதம் 4,000 ரூபாய் வரை பிடித்தம் செய்துவிட்டு 17,000 ரூபாய்தான் கையில் வாங்குகிறோம். ஏறுகிற விலைவாசியில் இதைக் கொண்டு எப்படி வாழ்வது? குடும்ப செலவுகள், மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாமல் கந்துவட்டிக்கும்கூட கடன் வாங்குகின்றனர்.” என்று உண்மை நிலவரத்தை எடுத்துரைக்கிறார்கள் ஆசிரியர்கள்.
இவர்கள் கேட்பது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் அல்ல;
ஊதிய உயர்வும் அல்ல; நிலுவைத் தொகையும் அல்ல “சக ஊழியருக்கு இணையான, சம வேலைக்கு சம ஊதிய உரிமை மட்டுமே!!” ஆனால், இதைக் கூட பத்திரிக்கைகள் சரியாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.
போராட்ட சூழல்
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற, குப்பைகளும், சாம்பலும் நிறைந்த இடம்தான் போராடும் இடம். அதை இவர்களே சுத்தம் செய்து அமர்ந்திருக்கின்றனர். பூரான், தேள், நட்டுவாக்கிளிகளால் கடிபட்டுக் கொண்டு, பாம்புகளின் நடமாட்டத்தினூடே, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடுகின்றனர்.
4 நாட்களாக உணவு, தண்ணீர் ஏதும் அருந்தாமல் நடந்த போராட்டத்தில், வயிற்று வலி, வயிற்றுக்கு பின்புறம் ஏற்படும் வலி தாளமுடியாமல் நேற்றிலிருந்து (27.12.2018) தண்ணீர் மட்டும் குடித்து வருகின்றனர். 5 நிமிடங்களுக்கு ஒருவர் மயக்கமடைந்து விழுகிறார். மயக்கமடைபவர்களின் அருகில் இருப்பவர்கள் கைதட்டி மருத்துவ உதவியைக் கேட்கின்றனர். 108-லிருந்து வந்துள்ள மருத்துவ பயிற்சியாளர்கள் முதலுதவி செய்து, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மகிழ்ச்சியின் குறியீடான “கைதட்டல்” இங்கே மயக்கத்தின் குறியீடாக மாறியிருக்கிறது.
கர்ப்பிணிப்பெண்கள், கைக்குழந்தைகள், குழந்தைகளுடன் பெண் ஆசிரியர்களும், பால் பேதமின்றி கொட்டும் பனியிலும், அடிக்கும் வெயிலிலும் திறந்த வெளியில் பாதி மயக்க நிலையில் கிடக்கின்றனர். பகல் வேளையில் ஊடகங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வருகையால் உற்சாகமூட்டப்படும் இவர்கள், இரவில் மனவேதனையுடன் கண்ணீர் சிந்துகின்றனர்.
சிறுநீரகத் தொற்றாலும், பசி மயக்கம், மன உளைச்சலும் உள்ள ஆசிரியர்கள் சொல்வது, “நாங்கள் சொகுசு வாழ்க்கைக்கான சம்பளத்தைக் கேட்கவில்லை; வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான சம்பளத்தைத் தான் கேட்கிறோம்.” இவ்வளவு சிரமப்படுவது வறுமையிலிருந்து மீள்வதற்கு என்பதைத்தான் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பணிச் சூழல்
மூலைக்கு மூலை பள்ளிகளைத் திறந்து, தனியாரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் கல்வித் துறையில், தனியார் மோகம் மக்களிடம் கவிழ்ந்திருக்கும் சமூக சூழலில் அரசுப் பள்ளிக்கு வருவது யார்?
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சூழல் உள்ள மாணவர்கள்தாம். டாஸ்மாக்கால் குடிநோயாளியாகிப்போன தந்தை அல்லது தாய் மட்டுமே வளர்க்கும் குழந்தைகள், குடும்பச் சூழல் சிதைவுற்று தாத்தா- பாட்டியிடம் வளரும் குழந்தைகள், பெற்றோர் கண்காணித்து வளர்க்கும் குடும்ப சூழல் இல்லாத மாணவர்களுக்குதாம் இவர்கள் அறிவூட்டுகின்றனர்.
400-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு 100% தேர்ச்சி பெறும் மாணவர்கள் மத்தியில், அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகித்ததை அதிகரிக்க செய்வது இந்த ஆசிரியர்களின் முயற்சியும், உழைப்பும்தான்.
பசியுடன் வரும் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவது, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களைக் கூட சில ஆசிரியர்கள் தம் சொந்த செலவில் வாங்கித் தருகின்றனர். அரசுப்பள்ளிகளை ஒழித்துக் கட்டி, தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கும் இந்த அரசு, பள்ளிகளுக்கு போதுமான நிதி ஒதுக்காமல் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் நிதி தருகிறது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனிநபர்கள், தொண்டு நிறுவனங்களிடம் நன்கொடை வாங்கிதான் பள்ளியின் இதர நிர்வாக செலவுகளை நடத்துகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இல்லையென்றால், அரசுப்பள்ளிகளே இல்லை என்பதுதான் உண்மை.
இவர்களால்தான் இப்பள்ளிகள் இயங்குகின்றன. ஆசிரியர்களின் முயற்சி இல்லையென்றால் எல்லா அரசுப் பள்ளிகளும் எப்போதோ பூட்டப்பட்டிருக்கும்.
அந்த வகையில், இப்போராட்டம் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளின் வாழ்வுக்குமான போராட்டம்!
ஆசிரியர்கள் கூறுவது என்ன ?
ஆறு ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர் செந்தில்ராஜன் (பல்லடம்) கூறுவதாவது; “ஒரு டீச்சரா நா டிப்டாப்பா போகனும்… இந்த சம்பளத்துல நாங்க சொங்கி மாதிரி போய் உக்கார வேண்டியிருக்கு. பசங்க எப்டி எங்கள மதிப்பாங்க? நாங்களும் இதே போஸ்டிங்குக்கு எக்ஸாம் எழுதி தான வர்றோம். நெறைய பேரு நாங்க வெளியூருல தங்கி வேல செய்யுறோம். இதனால எங்களுக்கு ரெண்டு வீட்டுக்கு வாடக செலவு வருது.
எங்க உடம்ப வருத்திக்கிட்டு தான் நாங்க இந்த போராட்டத்த பண்றோம். கொழந்தைங்க எங்களோட பசியில இருக்காங்க. அவங்களுக்கு மறச்சு மறச்சு சோறு ஊட்டவேண்டிதாயிருக்கு. இதை வச்சிகூட மீடியா எங்க போராட்டத்த கொச்சப்படுத்தீருமோ என்னமோன்னு பயமா இருக்கு. இந்த போராட்டத்துல எங்க உடல்வலி மரத்துப்போயிருச்சு, ஆனா எங்களுக்கு வேற வழியில்ல.
நான் இந்த கல்வி சிஸ்டத்தையே மாத்தணும்னு தா.. இந்த டீச்சர் வேலைக்கு வந்தேன். இதுக்கு முன்னாடி நா.. டையிங் கம்பனில மாசம் 35,000 சம்பளத்துல இருந்தேன். அத விட்டுட்டு இப்டி வந்து உக்காந்துருக்கேன். எங்க போரட்டத்துல ஒருத்தர் செத்தாதான் பெரிய பிரச்சனையா மாரும்னா அதுக்கு நாங்க தயார். அடுத்த தலைமுறையாவது நல்லபடியா வாழனும்.”
மற்றொரு ஆசிரியை, “ பத்து வருஷமா இந்த பிரச்சன இருக்கு, இப்போ நாங்க அத போய் கேட்டா, என்ன பிரச்சனனு திரும்ப எங்ககிட்டையே கேட்டா எவ்ளோ கடுப்பா இருக்கும்? ‘என்னா கையபுடிச்சி இழுத்தயா’-ன்ற கதையா இருக்கு. இவங்க குடுக்குற சம்பளத்துல எங்களையே பாத்துக்க முடில, நாங்களே சத்துணவு சாப்பாடுதான் சாப்புடுறோம். இத நாங்க கேவலமா சொல்லல எங்க நெலம அவ்ளோ மோசமா இருக்கு. எங்க போராட்டத்துக்கு யார் வந்தாலும் சந்தோசம். வராட்டி நாங்களே தான் நடத்தனும். வலி எங்களுக்கு தானே.. ” என்றார்.
இன்னொருவரோ, “எங்கள் சொந்தக்காரங்க எல்லாம் நாங்க ஏதோ நெறய சம்பாதிக்கிற மாதிரி நினைக்கிறாங்க. அவங்ககிட்ட அவசரத்துக்கு கடன் கேட்டாக் கூட நம்பமாட்றாங்க. உண்மைய சொல்லணும்னா, உடம்பு சரியில்லன பக்கத்துல இருக்க ஜி.எச்-சுக்குத்தான் போறோம். இதை வெளியில சொன்னா யாரும் நம்பமாட்றாங்க. நீங்களாவது இதை வெளியில சொல்லுங்க” என்றார்.
போராட்டத்தை பார்வையிட வருகின்ற பிரபலங்களை மட்டும் காட்டும் ஊடகங்கள்.
எங்களோட சேர்ந்து வேலை பார்க்கும் ஆசிரியர்களே எங்களை ஒண்ணா நினைக்காம, 2009-க்குப் பின் வந்தவங்கனு நெனைக்கிறது கஷ்டமாக இருக்கு. ஆசிரியர்கள் அனைவரும் இதில் ஒன்றுபட்டு நின்றால் எளிதில் தீர்வு கிடைக்கும் என்கின்றனர் போராடும் ஆசிரியர்கள்
அரசுக்கு, “நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர்.
ஆசிரியர்களின் அப்பாவித்தனமான கோரிக்கையைக் கேட்டு அரசு கள்ளச் சிரிப்பு சிரிக்கலாம். ஸ்டெர்லைட்டில் 14 பேரைக் கொன்ற இந்த இரக்கமற்ற அரசு கொக்கரித்தும் சிரிக்கலாம். ஆனால், நாம் மவுனம் காக்கலாமா?
சமூகத்திற்கான சேவையைப் போல், ஏழை மாணவர்களை வடிவமைக்கும் சிற்பிகள், அனிதாக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் செத்துக் கொண்டிருப்பதை கண்முன் கண்டுகொண்டு கைகட்டி நிற்கலாமா?
பள்ளி, கல்லூரி மாணவர்களே, முன்னாள் மாணவர்களே, அரசுப் பள்ளி ஆசிரியர்களே, பெற்றோர்களே, சமூக அக்கறையுள்ள இளைஞர்களே, போராடும் ஆசிரியர்களுடன் இணைந்து போராடுவோம். அலட்சியம் காட்டும் அரசின் செவிப்பறையைக் கிழிப்போம்.
கேள்வி : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனில் தமிழகம் முழுதும் ஆர்.கே நகர் தானே, அப்போ தேர்தல் புறக்கணிப்பு ஒன்று தானே வழி ?
– ஆர் ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ராதாகிருஷ்ணன்,
காசு வாங்கி ஓட்டுப்போடும் மக்களை திட்டுவதில் கமலஹாசன் போன்றோர் கூட ’தைரியமாக’ திட்டுகிறார்கள். முன்னதை விட பின்னதுதான் பிரச்சினை.
ஒரு தோராயமான மதிப்பீட்டின் படி 2 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட தமிழக சட்டமன்ற தொகுதி ஒன்றில் 65 முதல் 70% வாக்குகள் பதிவாகின்றன. அதில் வெற்றி பெறும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குகளைப் பெறுகிறார். இதன்படி தொகுதி மக்களில் 56,000 பேர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த 56,000 பேர்களில் அதீத ஏழைகள், உதிரிப்பாட்டாளிகள் பத்து சதவீதம் என்றால் சுமார் 5,600-ம் பேர் இருப்பார்கள். என்றால் இவர்களுக்கு மட்டும்தான் அந்த வேட்பாளர் பணம் கொடுக்க வேண்டும். 5,600 பேர்களுக்கு ரூ 500 கொடுத்தாலே மொத்தம் 28 இலட்ச ரூபாய் வருகிறது. சரி 10,000 பேர்களுக்கு கொடுப்பது என்றால் 50 இலட்சம் வருகிறது. 234 தொகுதிகள் என்றால் 117 கோடி ரூபாய் வருகிறது. அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் போன்று பில்லியனர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த சராசரி கூடலாம்.
எல்லா தொகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. அது சாத்தியமும் இல்லை. நலிந்த பிரிவினரில் நமக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என்பதை உறுதி செய்தே பணம் கொடுக்கிறார்கள். இரண்டு இலட்சம் மக்கள் தொகையில் 5000 பேர்கள் பணம் வாங்குவதால் முழு மக்களும் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில ஊர்கள், பகுதிகளில் ஊர்க் கமிட்டி மூலம் மொத்தமாகவும் பணம் வாங்குகிறார்கள். அல்லது கோவில் கொடை, திருப்பணி என்றும் வாங்குகிறார்கள். எனவே பணம் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது உண்மைதான்.
பணம் வாங்குவது மூலமாக சமீப ஆண்டுகளில் மக்களின் நேர்மை வீழ்ச்சியடைந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த வீழ்ச்சி எந்த அளவுக்கு சரிந்திருக்கிறது என்றால் இரு கட்சிகளிடம் காசு வாங்குவது, எல்லா கட்சிகளிலும் காசு வாங்கி காசுக்கேற்ற மாதிரி குடும்பத்தின் வாக்குகளை பங்கு வைப்பது, அதிக வாக்காளர்கள் இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு பத்தாயிரம், ஐயாயிரம் ரூபாய் பெறுவது என்று இந்த ஏற்பாடுகளுக்கு முடிவே இல்லை.
பணம் வாங்கினாலும், வாங்கா விட்டாலும் மக்களுக்கு இந்த தேர்தல் அரசியல் மூலம் தம் வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. மேற்கண்ட நேர்மையின்மைக்கு இதுவும் ஒரு காரணம். எவனோ எவளோ ஜெயிக்கட்டும், அவனால் அவளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாலும் சில நூறு ரூபாய் பணம் வருவதை ஏன் இழக்க வேண்டும் என்று மக்கள் ‘பொதுநலம் கலந்த காரியவாதமாக’ எண்ணுகிறார்கள். தமது அரசியல் அமைப்புக்கள் சரியில்லை எனக் கருதும் மக்கள் அதை மாற்றுவதற்கு தாமும் போராட வேண்டும் எனக் கருதுவதில்லை. யாராவது ஒரு தேவதூதன், சூப்பர் ஸ்டார் வந்து அபயமளிப்பாரா என எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய எதிர்பார்ப்பில்தான் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் துணிந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
இந்த அனாமதேயங்களும் சரி இந்த அரசியல் அமைப்புகளை ஜனநாயகம் என்று கருதுவோரும் சரி, வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாகவும், காசு வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம். காசு வாங்குவது மட்டுமே பிரச்சினை அல்ல.
நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம்.
அரசியல் உலகை சாக்கடை என பொதுப்புத்தியில் ஒரு அரசியலற்ற கருத்தியலை உருவாக்கும் ஊடகங்களே, மற்றொரு புறம் வாக்களிப்பதில் நேர்மையை வேண்டும் என கூறிகின்றன. அரசியலில் மக்கள் இறங்குவது என்பத தேர்தல் அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், ஊடகங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மல்லுக் கட்டும் போது அதை எதிர்த்து நிற்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கருதுகிறார்கள் அல்லவா அவர்கள் யாரும் ஸ்டெர்லைட்டின் பிரச்சினையை தேர்தலோடு தொடர்புடையதாக கருதுவதில்லை. மேலும் தேர்தல் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் கையாலாகதவர்கள், கைவிட்டவர்கள் என்பதை அவர்களுடைய அனுபவமே கற்றுத் தந்திருக்கிறது. கூடவே அரசின் நீதிமன்றம், அதிகாவர்க்கம் போன்ற அமைப்புக்களும்தான்.
ஊடகங்கள் உருவாக்கும் அரசியலற்ற கருத்துருவாக்கத்திற்கு லஞ்சம் பற்றிய சித்தரிப்பு மற்றொரு சான்று. அன்றாட அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையை மாபெரும் ஊழலாக சித்தரித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடைய மாபெரும் ஊழலை ஏதோ புரியாத புள்ளிவிவரமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு முறைகேடாக காரியங்களை சாதித்து தொழில் நடத்தும் நாட்டில் அரசு அலுவலகங்களில் ஒரு சாதி சான்றிதழ் வாங்குவது பணம் கொடுக்காமலா கிடைக்கும்? காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லும் போலீசை தண்டிக்க முடியாத நாட்டில் போலீசால் நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? அல்லது ஒரு ரவுடியை எதிர்த்து எப்படி மக்கள் சண்டையிட முடியும்? நாட்டில் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் மேல் மட்டங்கள் அத்தனையும் முறைகேடு செய்வதோடு அதை மறைப்பதை சட்டப்படி செய்யும் போது கீழ்மட்ட நிர்வாக செயல்பாட்டில் என்ன தரம் வந்து விடும்? மேல அடிக்காமல் கீழே என்ன மாற்றம் வந்து விடும்? ஆனால் ஊடகங்கள் அனைத்தும் கீழே அடித்தால் நாடே உருப்பட்டுவிடும் என்று உளறுகிறார்கள்.
தேர்தல் புறக்கணிப்பு என்பது காசு வாங்குவதோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது நமது உரிமைகளை பெறுவதற்காக மாற்று அரசியலை யோசிப்பதோடும் தொடர்புடையது.
ஆகவே தமிழகம் முழுவதும் தூத்துக்குடி மக்கள் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போல மக்கள் தமது கோரிக்கைகளை உரிமைகளை புரிந்து கொள்ளத் துவங்கினால், பிறகு ஆர்.கே.நகர் மட்டுமல்ல, தேர்தல் மூலமாக மட்டுமே மாற்றம் வரும் என்ற அறியாமைகளும் அலகத் துவங்கும்.
இறுதியில் மக்கள் தமது அதிகாரத்தை தாமே கையிலெடுத்தால்தான் சமூகத்தில் பரந்து பட்ட ஜனநாயகம் அமலுக்கு வரும். இதை மக்கள் புரிந்து கொள்வதற்கு காலம் எடுக்கும். அந்த காலத்தை துரிதப்படுத்துவது எப்படி என்பதே நம் முன் உள்ள பிரச்சினை! ♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
பாஜக-வின் கட்சிப் பத்திரிகையாக செயல்படுவதில் நம்பர் 1 தமிழ் நாளிதழ் எது? கருத்துக் கணிப்பு
ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். சிறந்த மனிதர்கள், சிறந்த முன்னோடிகள், சிறந்த ஆளுமைகள் என ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விருதுகள் வழங்கி வருகின்றன. மக்களுக்கு விருது வழங்கும் ஊடகங்களுக்கு விருது கொடுத்தால் என்ன? அதன்படி நேற்று பாஜகவிற்கு நம்பர் ஒன் இடத்தில் சொம்படிக்கும் செய்தி சானல் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தோம். இன்று நாளிதழ்களைப் பார்ப்போம். புத்தாண்டில் கருத்துக் கணிப்பு முடிவு அடிப்படையில் விருதுகளை வழங்க இருக்கிறோம்.
இன்றைய கணிப்பிற்காக நாம் தெரிவு செய்த நாளிதழ்கள் தினத்தந்தி, தினமலர், தினமணி, தி இந்து (இந்து தமிழ் திசை).
அன்றாடம் கூகுள் செய்திப் பக்கம் சென்று அதில் தமிழ் பிரிவில் பார்த்தால் பாஜக மற்றும் மோடி அரசின் குற்றச் செய்திகள் ஒன்று கூட இருக்காது. மாநில அளவில் உள்ள சமூக ரீதியிலான குற்றச் செய்திகள், எடப்பாடி அரசின் சில்லறைச் செய்திகள், முக்கிய பிரச்சினைகள் குறித்த நீதிமன்ற சால்ஜாப்புகள் இவைதான் இப்பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இருக்கும். தலையங்க பக்கத்திலும் இதுவே நிலைமை.
கடந்த நான்கு நாட்கள் தலையங்க செய்திகளை மட்டும் பாருங்கள்:
தினத்தந்தி: கம்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு (இதில் மோடி அரசு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை), இயற்கை சீற்றத்தில் இந்தோனேசியா – இலங்கை (பிரச்சினையே இல்லை), சிமெண்டுக்கு வரியை குறைக்க வேண்டும் ( இதில் ஜி.எஸ்.டி வரி குறைப்பிற்காக பாஜகவிற்கு பாராட்டு, பின்பு சிமெண்டு வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை), அரசு மருத்துவமனையிலேயே இந்த கொடுமையா ( பிரச்சினையே இல்லை), இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கவில்லை (பிரச்சினையே இல்லை)
தினமலர்: மீண்டும் மீண்டும் பழைய பல்லவி ஏன்? (இதில் ஐந்து மாநில தேர்தல் முடிவகளுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் திட்டம் மறைமுகமாக பழைய பல்லவியாக விமர்சிக்கப்படுகிறது. இந்த பழைய பல்லவிக்கு எதிராக பாஜக புது திட்டங்கள் என்ன முன்வைக்கும்? என்ற ஆவலைக் கேட்கிறது), ஏதோ நடக்கிறது…(இலங்கை பாராளுமன்ற குழப்பம், பிரச்சினையே இல்லை), தனிநபர் உரிமைகள் பாதிப்பு ஏற்படுமா? (இதில் மத்திய அரசின் கணினி கண்காணிப்பு குறித்து எழுதியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தை விலியுறுத்தி விட்டு, மக்களுக்கு பாதிப்பு இருக்குமா, என விவாதம் நடத்தி சில திருத்தங்களை கொண்டு வரலாமாம்), நல்ல துவக்கம் வரட்டும் (இதில் தமிழகத்தில் தொழில் முதலீட்டிற்கு நல்ல அறிகுறைகள் தென்படுதாம்)
தி இந்து (இந்து தமிழ் திசை):
பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு! (பிரச்சினையே இல்லை), வெண்மணியிலிருந்து என்ன கற்க வேண்டும்? (பிரச்சினையே இல்லை), மணிப்பூர் பத்திரிகையாளர் கைது: ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்து! (இதில் மணிப்பூர் அரசு தவறாக பயன்படுத்தியிருப்பதாக சொல்லிவிட்டு, மாநில அரசுகள் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரே போடாக போட்டு விட்டார்கள். மணிப்பூர் பத்திரிகையாளர் மோடி, பாஜகவை எதிர்த்து எழுதியதற்காக கைது என்பதால் அம்பை ஏவியவர் குறித்து எதுவுமில்லை), சிரியாவலிருந்து வெளியேறும் துருப்புகள்: டிரம்பின் பிடிவாதம் ஆபத்தானது! (பிரச்சினையே இல்லை)
தினமணி:
உறைகிறோம்..உருகுகிறோம்…! (வட இந்திய மாநிலங்களில் பனிப்பொழிவாம், பிரச்சினையே இல்லை), பாலமல்ல பாதுகாப்பு அரண்! (அஸ்ஸாம் பாலத்தை திறந்து வைத்த மோடிக்கு பாராட்டு), தடையரே கல்லாதவர்!( கல்வி குறித்து ஒரு சர்வே, அப்துல் கலாம் டைப் அட்வைசுகள், பிரச்சினையே இல்லை) கண் கெட்ட பின்னால் (இதில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தாமதமான முடிவு என்கிறார்கள். பாஜகவை மெல்லியதாக விமரிசித்து விட்டு காங்கிரசின் செயல்பாடும் மெச்சும்படியாக இல்லை என்கிறார்கள்.)
நான்கு நாட்கள் தலையங்கத்திலேயே இந்தனை வில்லங்கம் என்றால் நான்கு வருடத்தில் எப்படியெல்லாம் மானே தேனே போட்டு எழுதியிருப்பார்கள். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த மான் தேன் இன்னும் அமில அருவியாக கொட்டும்.
இன்றைய கேள்வி:
பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது?
தினத்தந்தி
தினமலர்
தமிழ் இந்து திசை
தினமணி
(தெரிவு செய்யக் குழப்பமா? விடுங்கள், இரண்டு பதில்களை தெரிவு செய்யுங்கள்)
காக்கிநாடாவின் பலுசுதிப்பா – பிரம்மசமேத்யம் கிராமம். பெரும்பாலும் மீனவர்கள் வாழும் பகுதி. புயலுக்கு முந்தைய நாள் வீசிய காற்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 22 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. வீட்டில் இருந்த எந்தப் பொருட்களும் மிஞ்சவில்லை.
தீப்பிடித்து எரிந்த குடிசையை அணைக்க பகுதி இளைஞர்கள் முயற்சி செய்தனர். ஆனால் சுழண்டு அடித்த காற்றில் தீ எங்கும் பரவியது. எரிந்து கொண்டிருந்த எல்லா வீட்டிலும் கேஸ் இருந்தது. எந்நேரமும் வெடித்து விடும் அபாயம் இருந்ததால் வீடு செல்வதை தவிர்த்துவிட்டு திரும்ப வந்து விட்டதாக கூறுகிறார்கள். அத்துடன் காலை வீசிய புயலும்-மழையும் அவர்களை உலுக்கி எடுத்து விட்டது.
இப்படி அடுத்தடுத்து இரட்டை தக்குதலுக்குள்ளான இந்த ஊர்தான் காக்கிநாடாவின் கடைக்கோடி கிராமம். கோதாவரி ஆற்றின் கடைமடைப் பகுதியும்கூட. கடற்பகுதியில் இருந்து வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சரியாக சொன்னால் புயல் கரையை கடந்த முக்கியப் பகுதியாகும்.
இங்கு மொத்தம் 2,000 குடும்பங்கள் உள்ளன. அனைவரும் மீனவர்கள். அதில் 30 குடும்பங்கள் தலித் சாதியினையும் இருபது குடும்பங்கள் பிற்படுத்தபட்ட சாதியினைச் சார்ந்தவர்கள். மீனவர்களில் பாதிக்கும் மேல் மீன்பிடி தொழிலில் இல்லை. மீன் கடைகள், இதர தொழில்கள் செய்து பிழைத்து வருகிறார்கள்.
கடைமடை கால்வாயில் மீன் பிடித்தல்தான் இவர்களுக்கு வாழ்வளிக்கிறது
இக்கிராமத்தின் நடுவே செல்லும் கோதாவரி ஆற்றின் கிளைக்கால்வாயில்தான் ஃபைபர் மற்றும் கைத்துடுப்பு படகைக் கொண்டு பெரும்பாலனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
மேற்கே கால்வாயும், வட-தெற்கில் “மடாக் காடும்” உள்ளது. இம்மக்களுக்கு மீன்களை அள்ளிக் கொடுத்து வாழவைக்கும் இக்கால்வாயில், வெள்ளம் வந்தால் ஊருக்குள் சென்று அழிவையும் ஏற்படுத்தும்.
இந்த “மடாக் காடு” ஒவ்வொரு முறையும் வரும் பெரும் புயலின் பாதிப்பிலிருந்து மீனவ மக்களை காப்பாற்றுவதில் கணிசமான பங்கும் வகிக்கிறது. இதுதான் இயற்கை இந்த கிராமத்திற்கு வழங்கியிருக்கும் விசித்திரமான சிறப்பு.
பலுசுதிப்பா ஊருக்குள் செல்ல ஒரே சாலைதான். அதுவும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதில் பயணம் செய்யும் எவரும் கடும் முதுகு வலியை சுமக்க நேரிடும். சாலைகளில் போதிய மின்விளக்குகள் இல்லாத பாதுகாப்பற்ற ஒரு பகுதியாக இருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து பார்த்தாலே புயல் பாதிப்பில் அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது தெரிந்து விடும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கிறார்கள், “நாங்க சம்பாதிச்ச பணத்தை வங்கியில சேர்த்து வைப்பதோ, வேற செலவு செய்வதோ இல்லை. வரக்கூடிய பணத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்வோம். இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் பணம், நகை அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன. குறிப்பாக எரிந்த ஐந்து வீடுகளில் மட்டும் பணம், நகை என ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் மூன்று முதல் ஐந்து லட்சம் வரை மொத்தமும் பறிகொடுத்து விட்டோம்.
இனி எதையும் உபயோகிக்க முடியாத நிலையில் அனைத்து தீக்கிரையாகிவிட்ட்ன
இந்த இருபத்தி இரண்டு வீட்டில் இருந்து எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை. வெளியில் இருந்த பொருட்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ஓடினோம். அவ்வளவுதான். உடுத்த துணி கூட இல்லாமல் பத்து நட்களாக கட்டிய துணியோடும், உறவினர்களிடம் இருந்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
இங்கே ஓரளவிற்கு படித்தவர்கள் உண்டு. உயர்நிலைக் கல்வி மற்றும் கல்லூரி படிக்க ஆமலாபுரம் மற்றும் கட்ரேனிகோனா ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த மாணவர்களின் கல்விச் சான்றிதழ் முதற்கொண்டு அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது” என்கிறார்கள்.
கூடியிருந்தவர்களில் புயல் மற்றும் தீ விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒருவரான சங்காயினி தர்மராவ் கூறும்போது. “எனக்கு 48 வயசு ஆகிறது. நான் படிக்கவில்லை. மனைவி பார்வதி. இரண்டு மகன், இரண்டு பொண்ணு. என் மூத்தப் பொண்ணு டிகிரி படிக்கிறார். இன்னொரு பொண்ணு மற்றும் பசங்க பள்ளியில் படிக்கிறாங்க.… இவங்களுடையை படிப்பு சம்மந்தப்பட்ட எதுவும் இல்லை.
சங்காயினி தர்மராவ்
வீட்டில் இருந்த ரேசன் கார்டு, ஆதார் கார்டெல்லாம் போயிடுச்சி. இதுபோக வீட்ல வச்சிருந்த நகை, பணம் எல்லாம் சேர்த்து 3 லட்சம் மொத்தமும் போய் விட்டது. நகை இருந்தாலாவது அடமானம் வைத்து தேவையை சமாளித்து விடலாம். இப்ப என்ன செய்யிறதுன்னு தெரியல.
கைத்துடுப்பு போட்டு ஆற்றிலும், எப்போதாவது கடலுக்குள், அதுவும் குறைந்த ஆழத்திற்கு மட்டும் சென்று பிடித்து வந்த மீன்களை எல்லாம் உள்ளூரிலேயே விற்று விடுவேன். ஒருநாளைக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். என்னிடம் இருந்து வாங்கி சென்று நகரம் மற்றும் சிறு நகரங்களில் விற்பனை செய்வார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகு இன்று வரை நான் உட்பட யாரும் கடலுக்கு செல்லவில்லை. எல்லோரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்” என்று கலங்குகிறார்.
“அரசாங்கத்துல இருந்து யாராவது வந்து பார்த்தாங்களா..?”
“ம்…………. பிரபுத்துவத்துல (அரசாங்கத்தில்) இருந்து எம்.எல்.ஏ முதல் எல்லோரும் வந்து பார்த்துட்டு நிவாரணம் தருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை அதுக்கான அறிவிப்பு வந்த மாதிரி தெரியவில்லை” ஆனா, பள்ளிக்கூடத்துல புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை வச்சிருக்காங்க.
“சரி….தமிழ்நாட்ல ஒக்கிப் புயல், கஜா புயல் பாதிப்பு பத்தி தெரியுமா?”.
“ம்..ஹும்… செய்தி எதுவும் பாக்குறதில்ல. வயசான நாங்க பொழுதுபோக்கு மாதிரி தான் பார்ப்போம். வெளியூர்ல இருக்க மற்ற மீனவர்களுடன் எந்த தொடர்பும் இல்ல. ஏன்னா நாங்க ஆழ்கடலுக்கு போயிட்டு மீன் பிடிக்கிறதில்லை” என்கிறார் கவலையுடன்.
இறைந்து கிடக்கும் அரிசி
ஊரில் இருந்து சற்று தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்த பள்ளிக்கு சென்று பார்த்தபோது, கன்னாபின்னாவென்று அரசி எங்கும் கொட்டிக்கிடந்தது. அந்த அரிசியும் மக்கள் சாப்பிடக்கூடிய அளவிற்கு இல்லை. இன்னொரு பக்கம் உருளைக்கிழங்கு அழுகிப்போயி இருந்தது. முறையான விநியோகம் இல்லை. பொருட்களும் போதுமானதாகவும் இல்லை, தரமாகவும் இல்லை. அதனைப் பெறுவதற்கே மக்களுக்குள் ஒரு பெரும் போட்டி நிலவிக்கொண்டிருந்தது.
விளம்பரத்திற்கு எந்தக் குறைச்சலும் இல்லை
புயல் நிவாரணமாக, அரிசி 50 கிலோ, சர்க்கரை அரை கிலோ, ஆயில் 1 லிட்டர், வெங்காயம் ஒரு கிலோ, உருளை ஒரு கிலோ, பருப்பு ஒரு கிலோ என்றார்கள். அதேபோல் பொங்கல் மற்றும் கிறுஸ்துமஸ்-க்காக சமையல் எண்ணெய் அரை லிட்டர், வெல்லம் அரை கிலோ, கோதுமை ஒரு கிலோ, நெய் 100 கிராம், சிறுபருப்பு ஒரு கிலோ, உளுந்து ஒரு கிலோ என்று வழங்குவதற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி வழங்கும் பையில் மட்டும் சந்திரபாபுவின் படம் பெரிதாக சிரித்த முகத்துடன் பளிச்சென்று இருந்தது.
புயல் நிவாரணம்
1 of 3
அழுகிப் போன உருளைக் கிழங்குதான் நிவாரணம்
சமைக்கத் தகுதியற்ற அரிசி
நிவாரணம் வழங்குவதற்கான வளாகம்
இதுதான் புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச நடவடிக்கை. மொத்தத்தில் இவர்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தின் காவிரி டெல்டாவில் ஊருக்கே சோறு போட்ட விவசாயிகளையும், பல்வேறு புயல் மழை பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றிய மீனவர்களையும் எடப்பாடி அரசு எப்படி அலட்சியப்படுத்தியதோ, அதேமாதிரிதான் ஆந்திராவின் கோதாவரி டெல்டாவிலும் நடக்கிறது…! ஆந்திராவில் புயல் பாதிப்பு அதிகமில்லை என்பதால் இந்த அலட்சியம் பெரிய செய்தியாகவில்லை, அவ்வளவுதான்! எளிய மக்களை எந்த அரசும் கண் கொண்டு பார்ப்பதில்லை!