Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 380

சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !

3

பரிமலை கோவிலுக்குள் இரண்டு பெண்கள் சென்று வழிபட்டதன் மூலம் அக்கோவிலில் பெண்களின் உரிமையை நிலைநாட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து கோவில் நடையை மூடி தீட்டுக் கழிக்கும் சடங்கை மேற்கொண்டுள்ளனர் சபரிமலை தந்திரிகள். கேரளா முழுவதும் பல இடங்களில் சங்க பரிவார காலிகள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

சபரிமலைக் கோவிலுக்குள் நுழைந்து தமது உரிமையை நிலைநாட்டிய இரண்டு பெண்களுக்கும் ஆதரவு தெரிவித்து, வாழ்த்தும் விதமாகவும், பெண்களின் நுழைவை தீட்டு எனக் கூறி பரிகார பூஜை செய்த தந்திரிகளைக் கண்டித்தும், கேரளாவில் மதக்கலவரத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ், பிஜேபி ௧ாலி௧ளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பந்தளம் மன்னர் குடும்பத்தையும், கோவில் தந்திரிகளையும், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக சிதம்பரம் கஞ்சித் தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.

பேரணியின் வழி நெடுகிலும் RSS, BJP, காவி கும்பலுக்கு எதிராகவும், தந்திரியின் தீண்டாமை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பேரணியின் இறுதியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்விற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மா.மணியரசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – கடலூர்
தொடர்புக்கு – 97888 08110

பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?

கேள்வி: ஆகப் பிற்போக்கான பார்ப்பனியமும்; பெண் கல்வி, கருத்து சுதந்திரம், தொழில் அமைதி ஆகியவற்றை வேண்டும் முதலாளியமும் இப்படியே முரண்பாடில்லாமல் இந்தியாவில் நீடிக்க முடியுமா?

–  மதியழகு

அன்புள்ள மதியழகு,

நிலவுடமை சமூகத்தினை அழித்து விட்டுத் தோன்றிய முதலாளித்துவ சமூகம் ஆரம்பத்தில்தான் முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது. பின்னர் மதம், இதர நிலவுடமை சமூக பிற்போக்குகளை எதிர்க்காமல், அவை அப்படியே நீடித்து இருந்தால் நல்லதென்று  முடிவு செய்தது. புரட்சிகரமாய் எழுந்து வரும் பாட்டாளி வர்க்கத்தை, மட்டுப்படுத்தி பிற்போக்காய் வைத்திருப்பதற்கு மதம் உதவும் என முதலாளித்துவ சமூக அமைப்பு தன்னை தகவமைத்துக் கொண்டது. பிரெஞ்சுப் புரட்சியின் போது திருச்சபையின் அனைத்து அதிகாரங்களும் பிடுங்கப்பட்டன. கல்வி, திருமணம் இதரவற்றில் கத்தோலிக்க மதம் கொண்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு மதச்சார்பற்ற அரசிடம் கொடுக்கப்பட்டன. சிவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. நெப்போலியனது ஐரோப்பியப் படையெடுப்பின் போது இந்த விசயங்கள் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப் படுத்தப் பட்டன.

பிரெஞ்சு புரட்சி

இதில் இருந்து விழித்துக் கொண்ட முதலாளித்துவம் உடனடியாக தனது முற்போக்கு முகத்தைக் ஆங்காங்கே சில நாடுகளில் கை கழுவத் துவங்கியது. இங்கிலாந்தில் வாட்டிகனின் கத்தோலிக்க மதம் மறுக்கப்பட்டாலும், நாட்டளவில் ஒரு புரட்டஸ்டண்ட் கிறித்தவ மதம் இங்கிலாந்து அரச வம்சத்தை தலைமையாக்கி நிலைநிறுத்தப்பட்டது. பெண்களுக்கான கல்வி, வாக்குரிமை எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் முதலாளித்துவ நாடுகளில் அமல்படுத்தப்பட்டன. அதிலும் சோவியத் நாடுதான் பாலியல் சமத்துவத்தில் முன்னுதாரணமாக இருந்தது. மற்ற நாடுகள் அதன் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டன.

1917 ரசியப் புரட்சிக்குப் பிறகே முதலாளித்துவ சமூகம் தனது முற்போக்கு அம்சங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கைகழுவியது எனலாம். இல்லையென்றால் இவை வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம் மற்றும் உலக சோசலிச முகாமிற்கு வலு சேர்க்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

தற்போதைய முதலாளித்துவம், சமூக வெளியில் பெண்களுக்கு இடம் கொடுப்பது எப்படி நடக்கிறது?

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலாளித்துவ வளர்ச்சிக்கேற்ப பணிபுரியும் தொழிலாளர்களில் மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் தேர்ந்த திறமை கோரும் வேலைகளில் காலம் செல்லச் செல்ல தேர்ச்சியற்ற மற்றவரும் சேர்க்கப்படுவர். அதற்கு ஏற்றாற் போல உற்பத்தி கருவிகளில் நவீன கண்டுபிடிப்புகள் சேர்க்கப்படும். அப்போது தேர்ந்த திறமை கொண்ட தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை தேர்ச்சியற்ற தொழிலாளிக்கு கொடுக்கலாம். இதனால் ஒவ்வொரு வேலையாக அதில் குறைவான சம்பளம் கொடுக்கப்படும் நிலை வரும்போது சமூகத்தில் இருக்கும் நலிந்த பிரிவினருக்கு தேவை எழுகிறது.

இதை ஒரு இந்திய நிலைமையோடு பார்ப்போம். தமிழக நகர்ப்புறங்களில் பெண்களும், வட இந்திய இளைஞர்களும் அதிகம் வேலை பார்க்கும் துறைகளைக் கவனியுங்கள்.

பதினாறு வயதுக்குட்பட்ட சிறாரை பணியில் அமர்த்தக் கூடாது என குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு உணவகங்களில் பாத்திரங்கள், மேசை துடைக்கும் வேலைகளுக்கு பெண்கள் அதிகம் எடுக்கப்பட்டார்கள். குழந்தைத் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் அதே குறைவான சம்பளத்தை பெண்களுக்கும் கொடுக்கலாம் என்பதால்தான் இந்த மாற்றம். மேலும் குறைவான சம்பளத்தைக் கொண்டிருக்கும் வேலைக்கு தேர்ச்சியுடைய ஆண் தொழிலாளிகள் வரமாட்டார்க்ள் என்பதாலும் இந்த மாற்றம் நடைபெற்றது. பிறகு வட இந்திய தொழிலாளிகள் அதிகம் வரத் துவங்கியதும் அதே வேலையில் அவர்களும் இடம் பெறுகிறார்கள்.

மட்டுமல்ல, கட்டுமானத்துறை, உணவகங்கள், தேநீர்க்கடைகள், சிறு தொழில்கள், சேவைத் தொழில்கள் அனைத்திலும் இன்று வட இந்திய தொழிலாளிகள் இருக்கின்றனர். ஒரு தமிழகத் தொழிலாளிக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் பாதியோ அதற்கும் குறைவாகவோதான் இவர்களுக்கு தரப்படுகிறது. அதே போன்று இன்று பெண்கள் பணி புரியும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சூப்பர் மார்கெட்டுகள், கடைகள் அனைத்தும் குறைவான ஊதியம் காரணமாகவே பெண்களை எடுக்கின்றன. திருப்பூரில் ஊதியம் குறைந்த ஆயத்த ஆடை வேலைப் பிரிவுகளில் பெண்களே அதிகம் இருப்பார்கள். இப்படித்தான் வங்கதேசத்திலும் நடக்கிறது. இதனால் தேசிய இனங்களுக்கிடையே உள்ள பேதங்களை முதலாளித்துவம் ஒழிக்கிறது என்பதல்ல.

முதலாளித்துவம் அமல்படுத்தும் இந்த மாற்றங்கள் அனைத்தும் சுரண்டலோடு தொடர்புடையவை. அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் இத்தகைய சாதி – மத – இன பேதங்களை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். மேற்குலகில் தற்போது புதிய புதிய நாஜிக் கட்சிகள் தோன்றி இனவெறியைத் தூண்டி அரசியல் பேசுகின்றன. இவர்களுக்கு கணிசமான பன்னாட்டு நிறுவனங்களும் புரவலர்களாக இருக்கின்றனர். காரணம் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் அகதிகளோடு உள்ளூரில் வெள்ளையரிடையே அதிகரித்து வரும் வேலையின்மையும் சேர்ந்து தொழிலாளிகளிடையே சமூக பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. தொழிலாளிகளை பிரித்து சண்டையிடச் செய்வதற்கு புதிய நாசிக் கட்சிகள் முயல்கின்றன. அதை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதே போன்று இந்தியாவிலும் பிற்போக்கான பார்ப்பனியத்தின் இருப்பை முதலாளித்துவமும் விரும்புகிறது. இது குறித்து முன்னர் வந்த கேள்வி பதில் கட்டுரையை பார்க்கவும்.

படிக்க:
♦ பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
♦ பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

எப்படி பிற்போக்கான கத்தோலிக்கம் மற்றும் இசுலாமை மேலை நாடுகளிலும், அரபுலகிலும் வைத்துக் கொண்டாடுகிறார்களோ அதே போன்று இங்கே பார்ப்பனியத்தையும் கொண்டாடுகிறார்கள். சவுதி ஷேக்குகளின் பிற்போக்கான சட்டங்கள், அடக்குமுறையை ஏற்றுக் கொண்டுதான் அவர்களது எண்ணெய் துரப்பண பணிகளையும், முதலீடுகளையும் மேற்குலகில் முதலாளித்துவம் பயன்படுத்தி இலாபம் சம்பாதிக்கிறது. சமூகத்தில் எழும் சின்னச் சின்ன கோரிக்கைகளுக்கு ஒரு தேவை உருவாகும்போது பெண்கள் கார் ஓட்டலாம் என்று பெரிய மனதுடன் ஷேக்குகள் இறங்கி வருகிறார்களே அன்றி வேறு அல்ல. அதே போன்று தொட்டதுக்கெல்லாம் அமெரிக்க அதிபர்கள் ‘கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்’ என்று கூறுகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவிற்கும் பொருந்தும்.

தாலியும் நகைகளும் பெண்களின் அடிமைத்தனத்தை பண்புரீதியாக நிலைநிறுத்துகிறது என்றால் முதலாளித்துவம் அதை அக்‌ஷய த்ரிதியை என்று சந்தைப்படுத்துகிறது. சலவை எந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் விளம்பரங்களில் பெண்களே குடும்பத்தின் மகிமையை எந்திரங்களின் உதவியோடு காக்கிறார்கள். இத்தனை நாளாக காஃபி விளம்பரங்களில் கூட தலைவலியோடு வரும் கணவனுக்கு மனைவிதான் காஃபி போடுகிறாள். தொண்டையை இதமாக்கும் ஹால்ஸ் விளம்பரங்களிலும் அசத்தலான ஆண்களுக்கு அடிபணியும் விட்டில் பூச்சிகளாகத்தான் பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். பிறகு சமூகத்தில் சில போல எதிர்ப்புகள் வரும் போது கணவன் காஃபி போடுகிறான், அவ்வளவே !

கருத்துரிமையைப் பொறுத்தவரை தமக்கு ஆபத்தில்லாத பட்சத்தில் முதலாளிகள் அதை ஆதரிப்பார்கள். இல்லையென்றால் தடை செய்வதோடு சிறையிலும் அடைப்பார்கள். சவுதி அரச குடும்பத்தின் ஏற்பாட்டில் ஒரு சவுதி பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார். அதற்காக அமெரிக்கா சவுதி அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனெனில் பத்திரிகையளாரின் உயிரை விட ஷேக்குகளின் முதலீடு அமெரிக்காவிற்கு முக்கியம். இன்றும் அமெரிக்காவில் வெளிப்படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்குவது சிரமம்.

இந்தியாவிலோ இந்த கருத்துச் சுதந்திரத்தின் அவலத்தை சொல்லவே வேண்டியதில்லை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் அவர்களின் ஊடகங்களே அதை சாதாரண நிகழ்வாக கடந்து போகின்றன. வெண்டி டோனிகரின் “இந்துத்துவம் ஒரு மாற்று வரலாறு” நூல் தடை செய்யப்படுகிறது. இதை எதிர்த்து சில எழுத்தாளர்கள், அமைப்புகள்  பேசுவதைத் தாண்டி முதலாளித்துவ வர்க்கம் இதை கருத்துச் சுதந்திரத்திற்கு கேடு என்று பேசவில்லை. சுரண்டலுக்கு பாஜக அரசின் தயவு தேவை என்பதால் அவர்கள் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

இதே முதலாளித்துவ வர்க்கம் சீனாவிலோ, வட கொரியாவிலோ கருத்துச் சுதந்திரம் பாதித்துவிட்டது என கூப்பாடு போடுவார்கள். பொருளாதார அரங்கில் சீனா முன்னேறி வருவதும், அங்கே பெயரளவுக்கு ஒரு கம்யூனிசக் கட்சி இருப்பதும் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. வட கொரியாவின் ஆயுத பலத்தோடு கூடிய இறையாண்மையை ஒரு ஏகாதிபத்தியம் என்ற முறையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் அங்கும் ஜனநாயகம் இல்லை, கருத்துச் சுதந்திரம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அதே அளவு கோலை வளைகுடா ஷேக்குகளுக்கு கொடுப்பதில்லை. அரபுலகம் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு இருப்பதால் பிர்ச்சினையில்லை. கட்டுப்படவில்லை என்பதால் ஈரானையும் கருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

ஆகவே முற்போக்கு கருத்துக்கள் எவையும் முதலாளித்துவத்தோடு தொடர்புடைய ஒன்றல்ல. அந்த வகையில் முதலாளித்துவம் முற்போக்கு கருத்துக்களை ஒழிக்கவே விரும்பிகிறது. அதனால் பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒத்த கருத்துடைய சக்திகளே அன்றி முரண்படுபவை அல்ல!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன் ? மருத்துவர் ஃபருக் அப்துல்லா

1. தவறான உணவு முறை ( மிக அதிக மாவுச்சத்து உணவு முறை)

ஜங்க் ஃபுட் , ஃபாஸ்ட் ஃபுட் , குளிர்பானங்கள், பொறித்த உணவுகள் போன்றவற்றை அளவின்றி உண்பது. தெருக்குத் தெரு முளைத்திருக்கும் வடை பஜ்ஜி கடைகள் , பேக்கரிகளில் கிடைக்கும் கேக், பப்ஸ்கள், எண்ணெயில் பொறித்த பரோட்டாக்கள்.
ஒருகாலத்தில் பண்டிகை நாட்களில் மட்டுமே சாப்பிட்ட இட்லி இப்போது தமிழனின் தேசிய உணவானது. இப்படி நாளுக்கு நாள் வருமானம் கூடக்கூட தீனியும் கூடிக்கொண்டே செல்கிறது.

ஒருகாலத்தில் சரியான எடையில் இல்லாமல் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் அதிகம் பார்த்து வந்தது போய் இப்போது குழந்தைகள் அனைத்தும் குண்டாகி வருகின்றன. childhood obesity மேற்கத்திய நாடுகளை விட இங்கு அதிகமாகி வருகிறது.

ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர். தவறான உணவு – பல தொற்று நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது.

2. உணவுக்கேற்ற உடலுழைப்பு இல்லை

உணவு உண்பது அதிகமாகிக்கொண்டே வர வர .. உடலுழைப்பு மிக மிக குறைந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட அனைவருக்குமே டேபிள் சேர் உத்தியோகம் தான். வெயில் தோலில் படுவதே அரிதென்று ஆகிவிட்டது. சிறு நடை கூட பாரதூரமாகிவிட்டது. ஆனால் உணவு , ஸ்நாக்ஸ் மட்டும் வேளைக்கு உள்ளே சென்று விடுகிறது. இதனால் உடல் கனக்கிறது. வயிற்றின் சுற்றளவு மெல்ல மெல்ல கூடுகிறது.

3. பெருகிவரும் குடிப்பழக்கம்

புகை மற்றும் குடி போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். நட்பு வட்டாரங்களில் இருந்து வரும் அளவு கடந்த அழுத்தத்துக்கு ஆளாகி தினமும் குடிக்கு அடிமையாகும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.

ஒருகாலத்தில் குடி பழக்கம் என்பது சமூகத்தால் வெறுக்கப்பட்டு வந்த நிலை போய் இப்போது ஃபேஸ்புக் , வாட்சப்பில் கூட தான் குடித்து கும்மாளமடிப்பதை வெளிப்படையாக இளைஞர்கள் பகிர்ந்து வருவதை பார்க்கிறோம்.

“சோசியல் ட்ரிங்கிங்” என்ற பெயரில் தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இளைஞர்கள் இன்று மிக அதிகம்.

4. அதிவேக ஊர்திகளும் அதனால் வரும் விபத்துகளும்

தனது மகனுக்கு 18 வயது ஆகிவிட்டதா என்பதைக் கூட முழுதாக கவனிக்காத தந்தைமார்கள் தங்களது பிள்ளைகளுக்கு அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகளை வாங்கிக்கொடுக்கின்றனர்.

அதற்குரிய லைசன்சும் இல்லாமல் , தலைக்கவசமும் இல்லாமல், சைடு மிரர் கூட இல்லாமல் வண்டியை சர்ர் சர்ர் என்று நெடுஞ்சாலையில் கூட ரூல்ஸ் தெரியாமல் ஓட்டும் பல டீனேஜ் மாணவர்கள் ஒருநாள் மார்ச்சுவரியில் பிணங்களாக பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

5. பணம் மட்டுமே குறிக்கோளாய் மாறிப்போன சமுதாயம்

ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்ய அத்தியாவசியத்தேவை என்ன ? பையன் பொறுப்பானவனாக இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது.
கலகலப்பாக இருக்க வேண்டும். ஒரு டீசண்ட்டான வேலை அல்லது தொழிலில் இருக்க வேண்டும். அவனது குடும்பம் நல்லதாக இருக்க வேண்டும். இது தான் இதற்கு முந்தைய தலைமுறை வரை ஒரு திருமணத்திற்கு தேவையானதாக இருந்தது.

ஆனால் இப்போது என்னென்ன பார்க்கிறோம் ? பையன் எத்தனை இலக்க சம்பளம் வாங்குகிறான். அவன் பேரில் லோன் கடன் ஏதும் இருக்கிறதா? சொந்த வீடு இருக்கிறதா? வீட்டில் ஏசி இருக்கிறதா? கார் இருக்கிறதா?
என்று நமது லிஸ்ட் பெரிதாக பெரிதாக அவன் மேல் விழும் ஸ்ட்ரெஸ் மிக அதிகமாகிறது. ஸ்ட்ரெஸ் ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். அதை சரிவர கவனிக்காமல் விட்டால் உயிரை எடுத்து விடும்.

6. இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ஆபத்தான மருத்துவம் தொடர்பான போலி பரப்புரைகள்

ஒரு பக்கம் ரத்த கொதிப்பு , இளவயது இதய நோய் , இளவயது ஸ்ட்ரோக், நீரிழிவு போன்ற நோய்கள் சமூகத்தில் பெருகி வருகின்றன. ஆனால் அதற்கு ஈடாக இளைஞர்கள் சமுதாயத்தில் போலி மருத்துவப் பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அவற்றுள் பிரபலமான சில. பின்வருமாறு சுகர் ஒரு நோயே அல்ல. டயாபடிஸ் என்பது மருந்து மாபியா கண்டுபிடித்த நோய். எவ்வளவு ரத்த சர்க்கரை இருந்தாலும் சரி.. சிறுநீரில் சர்க்கரை வெளியானாலும் சரி. கவலைபடத்தேவையில்லை.

வெள்ளை சர்க்கரை தான் கெட்டது. நாட்டு சக்கரை நல்லது . நாட்டு சக்கரை போட்டு சாப்பிட்டால் சுகர் ஏறாது. ரத்த கொதிப்பு என்பது நோயே அல்ல. உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள ரத்த கொதிப்பை வரவழைக்கிறது.

காய்ச்சலுக்கு சிகிச்சை தேவையில்லை. வீட்டில் பிரசவம் பார்ப்பது சிறந்தது. சிசேரியன் என்பது பணம் பறிக்கும் நாடகம் என்று மருத்துவம் சார்ந்த பல போலி பரப்புரைகளை உண்மை என்று நம்பி அதனால் உயிர் விடும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

பல இளைஞர்கள் தங்களுக்கு வரும் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை துச்சமென ஒதுக்கி விட்டு நோய் முற்றியதும் மருத்துவமனைக்கு வரும் நிலை அதிகமாகி வருகிறது. இங்கே இளைஞர்கள் என்று மட்டும் குறிப்பிடக்காரணம்.

இளைஞிகளுக்கு இயற்கை தரும் கொடை யாதெனில் அவர்களின் இனப்பெருக்க காலமான 15 வயது முதல் 50 வயது வரை இது போன்ற ஸ்ட்ரெஸ், உணவு முறை மாற்றம், உடலுழைப்பின்மை, தூக்கமின்மை என்று அனைத்து ரிஸ்க் ஃபேக்டர்களும் இருந்தாலும் இளைஞர்களைப் போல இளைஞிகள் இளம் வயதில் அதிகமாக இறப்பதில்லை.

அவர்களை இயற்கையானது, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்றவற்றில் இருந்து காக்கிறது. இது இயற்கையாக மனித இனம் தொன்றுதொட்டு தளைக்க உருவான ஏற்பாடு. 50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்குமான ரிஸ்க் சரிசமமாகிவிடுகிறது.

பெண்ணின் உடலில் இனப்பெருக்க காலம் முழுவதும் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் இந்த முக்கிய ஹார்மோன் அவளை பல இதயம் மற்றும் மூளை சார்ந்த ஆபத்துகளில் இருந்து காக்கிறது. இந்த பாதுகாப்பு ஆண்களுக்கு இல்லை.பெண்கள் ஆண்கள் போல அதிகம் குடிப்பதில்லை. புகைப்பதில்லை. (குறைந்தபட்சம் தமிழகத்திலாவது அப்படி இல்லை) யுவதிகள் யுவன்களைப்போல வாகனங்களில் எல்லை மீறி பறப்பதில்லை. இந்த காரணங்களும் இளைஞிகள் மரணிப்பதை குறைக்கிறது.

மேலும், தற்கொலை செய்து உயிர் நீப்பதிலும் ஆண்கள் தான் பெண்களை விட முந்துகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் செய்யும் தற்கொலை முயற்சி என்பது எதிர் இருப்பவரை மிரட்டுவதற்காகவே இருக்கிறது அல்லது பெண்கள் தற்கொலை முடிவுக்கு அத்தனை எளிதாக செல்வதில்லை. ஆனால் ஆண்கள் செய்யும் தற்கொலை முடிவானது. பெரும்பாலும் வெற்றிகரமானதாகிவிடுகிறது.

இளைஞர்கள் தற்கொலை செய்யுமுன் அதில் வெற்றி பெற பல ஹோம்வொர்க்குகள் கூட செய்யத் தவறுவதில்லை. எந்த பாய்சனை சாப்பிட்டால் காப்பாற்றவே முடியாது என்றெல்லாம் படித்து விட்டு வேளையில் இறங்குகிறார்கள்.

ஆகவே, அதிகமான சூசைடு அட்டம்ப்ட்களை பெண்களும் அதிகமான வெற்றிகரமான சூசைடுகளை இளைஞர்களும் புரிகிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் அது ஆண்களுக்கு எளிதில் பிரச்சனைக்குள்ளாகும் ஒன்று.

அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய மாற்றத்தைக் கூட ஆண்களின் சிஸ்டம் அவ்வளவு எளிதில் ஏற்காது. ஆனால் பெண்களின் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பெரிய மாற்றங்களைக்கூட எளிதில் ஏற்கும் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தான் இளைஞர்களை விட இறப்பில் இளைஞர்கள் முந்துகிறார்கள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

என் மகனை சைபீரியாவுக்கு நாடு கடத்தினாலும் தப்பி வந்து மீண்டும் வேலை செய்வான்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 46

மாக்சிம் கார்க்கி
போதாய் வாசலருகே சென்று தன் கையைக் கண்களுக்கு அருகே உயர்த்திப் பிடித்துக் குடிசைக்குள் கூர்ந்து பார்த்தாள். அந்தக் குடிசையில் கொஞ்சம்தான் இடம் இருந்தது. என்றாலும் கண்ணைக் கவரும் சுத்தத்துடன் இருந்தது. ஓர் இளம் பெண் அடுப்பு மூலையிலிருந்து திரும்பி அவளைப் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டாள். ஆனால் ஒன்றும் பேசாமலே மீண்டும் திரும்பிவிட்டாள். மேசைமீது ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

வீட்டுச் சொந்தக்காரனான அந்த முஜீக் மேஜையருகே உட்கார்ந்து தனது கை விரல்களால் மேஜை மீது தாளம் போட்டுக் கொண்டிருந்தான். தாயின் கண்களையே அவன் வெறித்துப் பார்த்தான்.

“உள்ளே வாருங்கள்” என்று சிறிது நேரம் கழித்துச் சொன்னான் அவன். “தத்யானா, போய் பியோத்தரை வரச் சொல்லு. சீக்கிரம் போ.”

அந்தப் பெண் தாயை ஏறிட்டுப் பார்க்காமல் வெளியே சென்றாள். தாய் அந்த முஜீக்குக்கு எதிராக ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சுற்றுமுற்றும் கண்ணைத் திருப்பினாள். அவளது டிரங்குப் பெட்டியை அங்கு எங்கும் காணவில்லை. அந்த அறை முழுவதிலும் ஒரு பயங்கர அமைதி நிலவியது. இடையிடையே விளக்குத் திரி பொரிந்து விழுவதைத் தவிர வேறு சத்தமே இல்லை. ஒருவித அக்கறையோடு நெரித்து நோக்கும் அந்த முஜீக்கின் முகம் தாயின் கண் முன்னால் மங்கலாக நிழலாடியது. அவளது மனத்தில் அதே கணத்தில் ஒரு பெருங் குழப்பவுணர்ச்சி லேசாக முளைவிட்டது.

”என் பெட்டி எங்கே?’ என்று திடீரென்று உரத்த குரலில் கேட்டாள். அந்தக் கேள்வி அவளுக்கே திடுமென்று ஒலித்தது.

அந்த முஜீக் தன் தோள்களைக் குலுக்கினான்.

”அது ஒன்றும் தொலைந்து போகாது” என்று அவன் கூறினான். பிறகு தணிந்த குரலில் பேசினான்: “கடையிலேயேதான் அது காலியாயிருக்கிறது என்று அந்தப் பெண்ணின் காதில் விழும்படி நான் வேண்டுமென்றுதான் சொன்னேன். அது காலியாய் ஒன்றுமில்லை. ரொம்பக் கனமாக இருக்கிறது.”

”சரி, அதனால் என்ன?’’ என்று கேட்டாள் தாய்.

அவன் எழுந்து தாயிடம் வந்து குனிந்து நின்று ரகசியமாகக் கேட்டான்.

”அந்த மனிதனை உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?”

”ஆமாம்” அந்தக் கேள்வி அவளை வியப்புறச் செய்தது. எனினும் அவள் உறுதியான குரலில்தான் பதில் சொன்னாள். அந்தச் சிறு வார்த்தை அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கி, இதயத்தில் மூண்டிருந்த இருளையும் போக்கியது. பெஞ்சின் மீது அசையாது உறுதியோடு உட்கார்ந்தாள்.

அந்த முஜீக் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தான்.

”நீங்கள் அங்கே இருந்து அவனுக்குச் சைகை காட்டியதைப் பார்த்ததுமே நான் ஊகித்துக்கொண்டேன். அவனும் பதிலுக்குச் சைகை காட்டினான். அவனிடம் நான் ரகசியமாகக் கேட்டேன். ‘அதோ வாசல் முகப்பில் நிற்கிறாளே, அவளை உனக்குத் தெரியுமா’ என்று கேட்டேன்.’’

“அதற்கு அவன் என்ன பதில் சொன்னான்?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் தாய்.

‘’அவனா? ‘எங்கள் கோஷ்டியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்’ என்றான் அவன்.”

அந்த முஜீக் எதையோ கேட்கும் பாவனையில் அவளது கண்களையே கூர்ந்து நோக்கினான். மீண்டும் புன்னகை புரிந்துவிட்டுப் பேசத்தொடங்கினான்:

”ஒரு பலசாலியான தைரியமான ஆசாமி கிடைத்திருக்கிறான். ‘நான்தான்’ என்று அவன் எவ்வளவு தைரியமாகச் சொல்கிறான். அவர்கள் அவனை எவ்வளவுதான் அடிக்கட்டுமே தான் சொல்ல விரும்பியதை அவன் சொல்லியே தீர்க்கிறான்.”

அவனது குரலைக் கேட்டுத் தாய்க்கு வரவர மனப்பாரம் குறைந்து வந்தது. அவனது குரல் பலமற்றும் நிச்சயமற்றும் அவனது கள்ளமற்ற கண்களின் பார்வையால் அவளுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது. அவளது பயபீதியும் கலக்கமும் மறைந்து அவளது மனத்தில் ரீபினின் மீது ஓர் ஆழ்ந்த பரிவுணர்ச்சி இடம் பெற்றது.

“மோசக்காரர்கள்! மிருகங்கள்!’’ என்று கசப்பு நிறைந்த ஆக்ரோஷத்தோடு கத்தினாள், உடனே அழ ஆரம்பித்துவிட்டாள்.

அந்த முஜீக் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்று சென்றான்.

“இதோ, அதிகாரிகள், தமக்கு நல்ல நண்பர்களைத் தயாரித்துக்கொண்டார்கள்!”

அவன் மீண்டும் தாயை நோக்கித் திரும்பி அமைதியாகச் சொன்னான்.

“அந்த டிரங்குப் பெட்டியிலே பத்திரிகைகள்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. என் ஊகம் சரிதானே?”

“ஆமாம்” என்று தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னாள் தாய். “நான்தான் அவனுக்குக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தேன்.”

அந்த முஜீக் தன் முகத்தைச் சுழித்தான். தாடியைக் கையில் இறுகப் பற்றிப் பிடித்தவாறு ஒரு மூலையையே வெறித்து நோக்கினான். கடைசியாகப் பேசத் தொடங்கினான்.

”அவை எங்களுக்கும் கிடைத்து வந்தன. புத்தகங்களும் கிடைத்து வந்தன. அந்த மனிதனை எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவனைப் பார்த்திருக்கிறோம்.”

அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஒரு கணம் சிந்தித்தான்.

“அதை வைத்துக் கொண்டு – அந்த டிரங்குப் பெட்டியை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.

”உங்கள் வசம் ஒப்புவித்துவிட்டுப் போகிறேன்” என்று அவனை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னாள் தாய்.

அவன் மறுதலிக்கவில்லை; வியப்புணர்ச்சியையும் காட்டவில்லை.

”எங்களிடம்?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

சொன்னதை ஏற்றுக்கொண்ட பாவனையில் அவன் தலையை அசைத்தான். மேஜையருகே உட்கார்ந்து, தனது தாடியைக் கைவிரல்களால் சிக்கெடுக்க ஆரம்பித்தான்.

படிக்க:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !
இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?

ரீபினுக்கு இழைக்கப்பட்ட மிருகத்தனமான கொடுமையைக் கண்ட காட்சி தாயின் மனத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிந்து நினைவிலெழுந்து அவளைப் பயமுறுத்தியது. அந்த உருவம் அவளது மனத்தில் குடிகொண்டிருந்த எண்ணங்கள் யாவற்றையும் விரட்டியோட்டியது. அந்த மனிதனுக்காக வேதனையும் மனத்தாங்கலும் அவள் இதயத்தை நிரப்பின. எனவே அவள் டிரங்குப் பெட்டியைப் பற்றியோ வேறு எதையும் பற்றியோ சிந்திக்கச் சக்தியற்றுப் போனாள். அவளது கண்ணீர் தாரை தாரையாகத் தங்கு தடையற்று வழிந்திறங்கியது. அவளது முகம் சுண்டிக் கறுத்தது. ஆனால் தடுமாறாத குரலிலேயே அவள் பேசினாள்:

”மனிதப் பிறவிகளை இப்படி மண்ணோடு மண்ணாய் இழுத்து உதைத்துக் கொள்ளையிடும் பாவத்துக்கு அவர்கள் என்றென்றும் நாசமாய்ப் போகட்டும்!”

”அவர்கள் பலசாலிகளாயிற்றே’’ என்று அமைதியாகச் சொன்னான் அந்த முஜீக். “அவர்கள் மிகுந்த பலசாலிகள்!”

“அவர்களுக்கு அந்தப் பலம் எங்கிருந்து வருகிறது?” என்று கலங்கிய குரலில் சொன்னாள் தாய். “நம்மிடமிருந்துதான், பொதுமக்களிடமிருந்துதான் அவர்கள் பலத்தைப் பெறுகிறார்கள். பலத்தை மட்டுமல்ல, எல்லாவற்றையுமே நம்மிடமிருந்துதான் பெறுகிறார்கள்!”

”அந்த முஜீக்கின் பிரகாசமான, ஆனால் புதிர்போடும் முகத்தைக் கண்டு, தாய்க்கு எரிச்சல் வந்தது.

“ஆமாம்” என்று இழுத்தான் அவன்: ”இது ஒரு சக்கரம்தான்…”

திடீரென அவன் உஷாராகி நிமிர்ந்து, வாசல் பக்கமாகச் செவியைச் சாய்த்துக் கேட்டான். அவர்கள் வருகிறார்கள்” என்றான்.

‘யார்?”

”நண்பர்கள்…”

அவனது மனைவி உள்ளே வந்தாள். அவளுக்குப் பின்னால் இன்னொரு முஜீக் வந்தான். அந்த முஜீக் தன்னுடைய தொப்பியை ஒரு மூலையில் விசிறியெறிந்துவிட்டு அந்த வீட்டுக்காரனிடம் அவசர அவசரமாக வந்து நின்றான்.

“சரிதானே?” என்று கேட்டான் அவன்.

வீட்டுக்காரன் தலையை அசைத்தான்.

”ஸ்திபான்!” என்ற அடுப்பு முன்னாலிருந்தவாறே கூப்பிட்டாள் அவன் மனைவி. ”விருந்தாளிக்குச் சாப்பிட ஏதாவது வேண்டுமா?”

“ஒன்றும் வேண்டாம். மிகுந்த நன்றி, அம்மா” என்றாள் தாய்.

இரண்டாவதாக வந்த முஜீக் தாயிடம் வந்து உடைந்த குரலில் பரபரப்போடு பேசினான்.

“என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். என் பெயர் பியோத்தர் இகோரவிச் ரியபீனின். பட்டப் பெயர் ‘தமர் உளி.’ உங்கள் வேலையைப் பற்றி எனக்கும் ஒன்றிரண்டு விஷயங்கள் தெரியும். எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். சொல்லப்போனால் நான் முட்டாளல்ல……..”

தாய் அவனை நோக்கி நீட்டிய கரத்தை அவன் பற்றிப் பிடித்துக்கொண்டே வீட்டுக்காரன் பக்கம் திரும்பிப் பேசினான்:

”நீயே பார்த்துக்கொள், ஸ்திபான்” என்றான் அவன். “வர்வாரா நிகலாயவ்னா ஓரளவுக்கு நல்லவள்தான். இருந்தாலும், இந்தக் காரியத்தை முட்டாள்தனமென்றும் ஆபத்தானதென்றும் அவள் கருதுகிறாள். என்னவோ இளைஞர்கள், மாணவர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு, மக்களது மூளையில் முட்டாள்தனத்தையே புகுத்தி வருவதாக அவள் கருதுகிறாள். ஆனால், நீயும் நானும் இன்று கைதான அந்த முஜீக்கை அறிவோம். அவன் முழுக்க முழுக்க நல்லவன். முஜீக்குக்கே அவன்தான் சரியான உதாரணம். ஆனால், இதோ பார், இந்த அம்மாள் ஒன்றும் இளவயதானவள் இல்லை; மத்திம வயதுதான். எப்படிப் பார்த்தாலும் இவள் அந்தச் சீமாட்டி வர்க்கத்தவரைச் சேர்ந்தவளல்ல. நான் கேட்கிறேன் என்று வித்தியாசமாய் நினைக்காதீர்கள். நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா?”

அவன் விரைவாகவும் தெளிவாகவும் மூச்சுவிடவே அவகாசம் பெறாமலும் பேசினான். அவனது தாடி நடுங்கியது. கண்கள் தாயின் முகத்தையும் உருவத்தையும் கண்டு கொண்டிருந்தன. அவனது துணிமணிகள் கிழிந்து கந்தலாய்ப் போயிருந்தன. தலைமயிர் உலைந்து போயிருந்தது. அவன் இப்போதுதான் ஏதோ கைச் சண்டையில் கலந்து, தன் எதிரியை மண்ணைக் கவ்வச் செய்த உற்சாகத்தோடு திரும்பி வந்து நிற்கிற மாதிரி இருந்தான். அவனது ஆர்வத்தைக் கண்டவுடனேயே தாய்க்கு அவனைப் பிடித்துப்போய்விட்டது. மேலும் அவன் கள்ளங் கபடமற்று எளிமையோடு பேசினான். அவனது கேள்விக்குப் பதில் சொல்லும்போது அவள் அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள். அதன் பின்னர் அவன் மீண்டும் ஒருமுறை அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டுக் கலகலவென்று சிரித்தான்.

”இது ஒரு புனித காரியம் ஸ்திபான்!” என்றான் அவன். “இது ஓர் அருமையான காரியம். இந்தக் காரியம் மக்களிடமிருந்தேதான் தோன்றுகிறது என்று நான் சொல்லவில்லையா? ஆனால் அந்தச் சீமாட்டி – அவள் உனக்கு உண்மையைச் சொல்லவில்லை. அவள் உண்மையை உன்னிடம் சொல்லிவிட்டால், தனக்கே தீங்கு செய்து கொள்வாள், அவளை நான் மதிக்கத்தான் செய்கிறேன். அது உனக்கு நான் சொல்லாமலே தெரியும். அவள் நல்லவள். நமக்கெல்லாம் உதவி செய்ய எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய நிலைமைக்குக் குந்தகம் விளையாமல் உதவி செய்ய நினைக்கிறாள். ஆனால், சாதாரணமான பொதுமக்களோ? அவர்கள் நேராகச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் ஆபத்தையோ கொடுமையையோ எண்ணி அஞ்சி ஒதுங்கவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்ததா? அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமே துன்பத்தைத்தான் பெறுகிறார்கள். என்ன செய்தாலும், அவர்கள் மனம் புண்படத்தான் செய்கிறது. அவர்களுக்கு திரும்பிச் செல்லுவதற்கு வேறு மார்க்கமே இல்லை. எந்தெந்தத் திசையிலே திரும்பினாலும் ‘நில்!’ என்ற குரல்தான் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.”

“எனக்குத் தெரிகிறது” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் ஸ்திபான். உடனேயே, “இவள் தனது டிரங்குப் பெட்டியை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறாள்” என்றான்.

பியோத்தர் தாயை நோக்கி எதையோ புரிந்துகொண்ட பாவனையில் கண்ணைக் காட்டினான்.

”கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதலான குரலில் சொன்னான் அவன். “எல்லாம் நல்லபடி நடக்கும், அம்மா. டிரங்குப் பெட்டி என் வீட்டில்தான் இருக்கிறது. நீங்களும் இந்த இயக்கத்தில் பங்கெடுக்கிறவள்தான் என்றும், அந்த அடிபட்ட மனிதனை உங்களுக்குத் தெரியும் என்றும் இன்று இவன் வந்து என்னிடம் சொன்னபோது நான் சொன்னேன்: ‘ஸ்திபான், நன்றாகக் கவனி’ என்றேன். இந்த மாதிரி விஷயங்களில் தவறிவிடக்கூடாது பார்.’ நாங்கள் இருவரும் உங்கள் பக்கத்திலே நின்று கொண்டிருந்தபோது நீங்களும் எங்களைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தீர்கள். நேர்மை குணமுள்ளவர்களை எந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால், அப்படிப்பட்டவர்கள் அநேகம் பேர் உலகில் இருக்க முடியாதல்லவா? சரி, நீங்கள் டிரங்குப் பெட்டியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்………”

படிக்க:
இந்தோனேசியா : 2012-ம் ஆண்டிலிருந்து செயல்படாத சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் புத்தாண்டு நேர்காணல் !

அவன் அவளுக்கு அருகில் உட்கார்ந்து கேட்கும் குறியுடன் அவளையே பார்த்தான். பிறகு கேட்டான்:

“அதற்குள் உள்ள பொருள்களை யாரிடமாவது தள்ளிவிட்டால் நல்லது என்று தோன்றினால், அந்த விஷயத்தில் நாங்கள் மனமகிழ்ச்சியோடு ஒத்துழைக்கத் தயார். அந்தப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே.”

”அவள் எல்லாவற்றையுமே நம்மிடம்தான் விட்டுச் செல்ல விரும்புகிறாள்” என்றான் ஸ்திபான்.

”அம்மா, அப்படியா? ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. நாங்கள் அதற்கு ஒரு சரியான இடம் பார்க்கிறோம்.”

அவன் ஒரு சிரிப்போடு தன்னிடத்தை விட்டுத் துள்ளியெழுந்து அங்கும் இங்கும் அவசர அவசரமாக உலாவினான்.

“சாதாரணமானதென்றாலும் இது ஓர் அபூர்வமான விஷயம். எனினும் ஒருபுறத்திலே தொடர்பு அற்றுப்போகும்போது, இன்னொரு புறத்திலே தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அது ரொம்ப சரி. அந்தப் பத்திரிகை ரொம்ப நல்ல பத்திரிகை, அம்மா. அது நல்ல சேவை செய்கிறது. மக்களின் கண்களைத் திறக்கிறது. அதைப் பற்றிச் சீமான்கள் ஒன்றும் பிரமாதமாக எண்ணவில்லை. இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சீமாட்டியிடம் தச்சு வேலை பார்த்து வருகிறேன். அவள் கண்ணியமானவள்தான். அவள் எனக்கு எத்தனையோ தடவை தன் புத்தகங்களைத் தந்து உதவியிருக்கிறாள். சமயத்தில் ஏதாவதொன்றைப் படிக்கும்போது திடீரென்று நமது அறியாமையை அது நீக்கிவிடுகிறது. பொதுவாகச் சொன்னால் அவளுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். ஒரு தடவை அவளிடம் நான் இந்தப் பத்திரிகையைக் கொண்டு கொடுத்தேன். உடனே அவளது மனம் புண்பட்டுப்போயிற்று. ‘பியோத்தர்’ இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் படிக்காதே. ஏதோ சில உதவாக்கரை பள்ளிக்கூடத்துப் பையன்கள்தான் இப்படி எழுதித் தள்ளுகிறார்கள். இதைப் படிப்பதால் உனக்குத் தொல்லைகள்தான் மிஞ்சும். சைபீரியாவுக்கோ, சிறைக்கோ உன்னை இவை அனுப்பிவைத்துவிடும்!” என்றாள் அவள்……..

மீண்டும் அவன் ஒரு கணநேரம் மௌனமாயிருந்தான். பிறகு கேட்டான்.

“அம்மா. அந்த அடிபட்ட மனிதன் இருக்கிறானே – அவன் உங்கள் சொந்தக்காரனா?”

“இல்லை” என்றாள் தாய்.

பியோத்தர் சத்தமின்றி சிரித்தான். எதையோ கேட்டுத் திருப்தியுற்றவன்போல தலையை அசைத்துக்கொண்டான். ஆனால் மறு நிமிஷத்திலேயே ரீபினுக்கும் தனக்கும் சொந்தமில்லை என்று கூறிய வார்த்தையால், ரீபினையே புண்படுத்திவிட்டதாகத் தாய் உணர்ந்து கொண்டாள். எனவே உடனே சொன்னாள்:

“அவன் எனக்குச் சொந்தக்காரனில்லைதான். இருந்தாலும் அவனை நான் வெகு காலமாக அறிவேன். அவனை என் சகோதரனாகவே — அண்ணன் போலவே மதிக்கிறேன்.”

அவளது உணர்ச்சியை வெளியிட அவளுக்குச் சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. இதைக் கண்டதும் அவளுக்கு ஆற்றொணாத் துயரம் நெஞ்சில் பெருகியது. மீண்டும் அவள் அமைதியாகக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள். அழுத்தமும் ஆர்வமும் நிறைந்த அமைதி அந்தக் குடிசையில் நிலவியது. பியோத்தர் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் குனிந்து நின்றான். ஸ்திபான் தன் முழங்கைகளை மேஜை மீது ஊன்றியவாறே உட்கார்ந்து மேஜையைப் படபடவென்று கொட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய மனைவி அடுப்பின் முன்னால் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் பார்வை தன் முகத்தின் மீதே நடமாடுகிறது என்பதைத் தாய் உணர்ந்துதானிருந்தாள். தாயும் சமயங்களில் அவளை ஒரு பார்வை பார்த்தாள். அவளது நீள் வட்டக் கரிய முகத்தின் நேரிய மூக்கும், கூர்மையான மோவாயும் அவள் கண்ணில் பதிந்தன. அவளது பசிய கண்களில் கூர்மையும் கவனமும் மிகுந்திருந்தன.

“அப்படியானால் அவன் உங்கள் நண்பன்தான்” என்று மெதுவாகச் சொன்னான் பியோத்தர். “அவன் தனக்கென ஒரு தனிக்குணம் படைத்த ஆசாமி. தன்னைப் பற்றி மிகவும் சரியாகவும் உயர்வாகவும் நினைக்கிறான். ஏ, தத்யானா, எப்படிப்பட்டவன் அவன்?”

“அவனுக்குக் கல்யாணமாகியிருக்கிறதா?” என்று தனது சிறிய வாயின் உதடுகளை இறுக மூடியவாறே குறுக்கிட்டுக் கேட்டாள் தத்யானா.

“அவன் மனைவி இறந்துவிட்டாள்” என்று துக்கத்தோடு சொன்னாள் தாய்.

”அதனால்தான் அவன் அத்தனை தைரியமாயிருக்கிறான்” என்று செழுமை நிறைந்த ஆழ்ந்த குரலில் சொன்னாள் தத்யானா: ”குடும்பஸ்தன் என்றால் இந்த மாதிரி மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கவே மாட்டான், பயப்படுவான்.”

“ஏன், நானில்லையா?” என்று கத்தினான் பியோத்தர்: ‘நான் கிரகஸ்தன் இல்லையா?”

”அடடா…” என்று அவனது கண்களைப் பார்க்காமலே உதட்டைக் கோணிச் சிரித்துக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். “நீ என்ன செய்கிறாய்? என்னவோ பேசுகிறாய். சமயங்களில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கிறாய். நீயும் ஸ்திபானும் ஓர் இருண்ட மூலையில் இருந்து கொண்டு ரகசியமாக வாசிப்பதும் போவதும் ஜனங்களுக்கு என்ன நன்மையை உண்டாக்கிவிடப் போகிறது? ஒன்றுமில்லை.”

”என்னுடைய பேச்சை எவ்வளவு பேர் கேட்கிறார்கள் தெரியுமா?” என்று அவளது ஏளனத்தால் மனம் புண்பட்டு, அவள் கூற்றை அமைதியான குரலில் எதிர்த்தான் அந்த முஜீக். “நான் இங்கே என்னவோ ஈஸ்ட்* மாதிரி வேலை பார்ப்பதாக சொல்லலாம். நீ அப்படி நினைக்கக் கூடாது ……….”

* ஈஸ்ட் (yeast) — உணவுப் பண்டங்களைப் புளிக்க வைக்க உதவும் பொருள். – மொ-ர்.

ஸ்திபான் வாய் பேசாது தன் மனைவியைப் பார்த்தான்; தலையைத் தொங்கவிட்டுக்கொண்டான்.

”ஒரு முஜீக் எதற்காகக் கல்யாணம் செய்து கொள்கிறான்?” என்று கேட்டாள் தத்யானா, “அவனுக்காக வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் என்று கூறுகிறார்கள். வேலை நல்ல வேலைதான்.”

”உனக்கு இருக்கிற வேலை காணாதா?” என்று சோர்வுடன் கேட்டான் ஸ்திபான்.

”இந்த வேலையைப் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நாளுக்கு நாள் அரைப்பட்டினி கால் பட்டினியாய்க் கிடந்து வாழ வேண்டியதுதான் என் வேலை. தன் வயிற்றைக் கழுவ வசதி தராத இந்த உழைப்பு. பிறக்கும் குழந்தைகளைக் கவனிக்கவும் விடுவதில்லை.”

அந்தப் பெண் எழுந்து வந்து தாயின் அருகே உட்கார்ந்து மூச்சுவிடாமல் பேசினாள். எனினும் அவளது பேச்சில் தன் குறைபாடுகளையோ துக்கத்தையோ காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை இரண்டு வயசாயிருந்தபோது தன்மீது கொதிக்கிற வெந்நீரை இழுத்துக் கொட்டிக் கொண்டு செத்தது. இன்னொன்று குறைமாதப் பிறவியாக, பிறக்கும்போதே செத்துப் பிறந்தது. எல்லாம் இந்த நாசமாய்ப் போகிற வேலையால்தான். இந்த வேலையினால் எனக்கு எதாவது மகிழ்ச்சி உண்டா? முஜீக்குகள் கல்யாணம் பண்ணுவதில் அர்த்தமே இல்லையென்றுதான் நான் சொல்வேன். எந்தவித இடைஞ்சலுமின்றி, நல் வாழ்வுக்காகத் தனிமையாக இருந்து போராடுவதை விட்டுவிட்டு, தங்கள் கைகளைத் தாங்களே கட்டிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவர்கள் தனியாக இருந்தால், அந்த மனிதன் மாதிரி சத்தியத்தை நாடி நேராக முன்னேறிச் செல்ல முடியும். நான் சொல்வது சரிதானே, அம்மா?”

“சரிதான்” என்றாள் தாய். “நீ சொன்னது சரிதான், கண்ணே. இல்லையென்றால் வாழ்க்கை இப்படியேதான் போய்க்கொண்டிருக்கும். மாறுதலிருக்காது………”

‘உங்களுக்குக் கணவர் இருக்கிறானா?”

“இல்லை. செத்துப்போனான், ஒரு மகன் இருக்கிறான்.”

”அவன் உங்களோடு வாழவில்லையா?”

”அவன் சிறையிலிருக்கிறான்’’ என்றாள் தாய்.

இந்த வார்த்தைகளைக் கூறியதுமே, அந்த வார்த்தைகள் அவள் மனத்தில் எழுப்பும் வழக்கமான துயர உணர்ச்சியோடு ஒரு பெருமித உணர்ச்சியும் தோன்றுவதைத் தாய் உணர்ந்தாள்.

”அவனைச் சிறையில் போட்டது இது இரண்டாவது தடவை. கடவுளின் சத்தியத்தை மக்களிடம் பரப்பியதுதான் அவன் சிறை சென்றதற்குக் காரணம். அவன் இளைஞன், அழகன், புத்திசாலி. அவன்தான் உங்களுக்காகப் பத்திரிகை போட வேண்டும் என்று முதன் முதல் நினைத்தவன்; மிகயீல் இவானவிச் அவனைவிட வயதில் இரண்டு மடங்கு மூத்தவன்தான். என்றாலும் மிகயீலை இந்த உண்மையான பாதையில் இழுத்துவிட்டவன் என் மகன்தான். சீக்கிரமே என் மகனுக்குத் தண்டனை கொடுத்து அவனைச் சைபீரியாவுக்கு நாடு கடத்திவிடுவார்கள். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி, திரும்பவும் இங்கு வந்து தன் வேலையைத் தொடர்ந்து நடத்துவான்…”

அவள் பேசும்போது அவளது உள்ளத்தில் பெருமை உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வளர்ந்தது. அவளது மனத்தில் எழுந்த வீர சொரூபத்தை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் பொங்கி வந்தன. தொண்டை அடைத்தது. அன்றைய தினத்தில் அவள் கண்ணால் கண்ட இருண்ட சம்பவத்தை — அந்த இருளின் அர்த்தமற்ற பயங்கரமும், வெட்ககரமான கொடுமையும் அவளது மூளைக்குள்ளே துடிதுடித்துக்கொண்டிருக்கும் தவிப்பை — சமனப்படுத்துவதற்கு, அவளுக்கு வேறொரு ஒளி மிகுந்த நல்ல விஷயம் தேவைப்பட்டது. எனவே அவள் அப்படிப் பேசினாள். தனது ஆரோக்கியமான ஆத்மாவின் தூண்டுதல்களுக்கெல்லாம் தன்னையுமறியாமல் பணிந்து கொடுத்து தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அந்த விஷயங்களெல்லாம் ஒன்றுகலந்து புனிதமும், பிரகாசமும் நிறைந்த ஒரு பெருந் தீப ஒளியாகத் திரண்டெழுந்து, தனது அக்கினி வேகத்தால் அவள் கண்களையே குருடாக்குவது மாதிரி ஒளி வீசிப் பிரகாசித்தன.

படிக்க:
ஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை !
குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?

“அவன் மாதிரி இப்போது எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நாளுக்கு நாள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அந்திம தினம் வரையிலும் சத்தியத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடிக்கொண்டே இருப்பார்கள்………”

அவள் எச்சரிக்கையற்றுப் பேசினாள். எனினும் அவள் யாருடைய பெயரையும் வாய்விட்டுச் சொல்லிவிடவில்லை. மக்கள் சமூகத்தை பேராசையென்னும் பெருவிலங்கிலிருந்து விடுதலை பெறச் செய்வதற்காக நடைபெறும் ரகசிய நடவடிக்கைகளைப் பற்றித் தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவள் சொல்லித் தீர்த்தாள். தனது பிரியத்துக்குப் பாத்திரமான நபர்களைப் பற்றி வருணிக்கும்போது அவள் தான் பேசும் வார்த்தைகளில் தனது பலத்தையெல்லாம் பெய்து பேசினாள். இத்தனை காலத்துக்குப் பிறகு அவளது மனத்திலே வாழ்க்கை அனுபவங்கள் மலரத் தொடங்கிய அபரிமிதமான அன்பையெல்லாம் அந்தப் பேச்சில் சொரிந்தாள். தனது மனக்கண் முன்னால் ஒளிப் பிழம்பாய் எழுந்து தனது உணர்ச்சியால் கெளரவிக்கப்பட்டு விளங்கும் அந்த மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கே ஆனந்தம் கரைபுரண்டு விம்மியது.

”இதே காரியம் உலகம் எங்கிலும், சகல நகரங்களிலும், சகல ஊர்களிலுமுள்ள நல்லவர்களால் ஒரே ரீதியில் நடத்தப்பெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவில்லை, அளவில்லை. நாளுக்கு நாள் இந்த இயக்கம் வளர்கிறது. நமக்கு வெற்றி கிட்டுகின்ற நிமிஷம் வரையிலும் இது வளர்ந்துகொண்டுதான் போகும்…”

அவளது குரல் நிதானமாகப் பொழிந்து வந்தது. இப்போது அவள் வார்த்தைகளுக்காகச் சிரமப்படவில்லை. அன்றைய சம்பவத்தின் ரத்தமும் புழுதியும் படிந்த கறையைத் தன் இதயத்தை விட்டுக் கழுவிப் போக்க வேண்டும் என்ற ஆசையெனும் பலத்த நூலிலே, அவளது வாய் வார்த்தைகள் வர்ணஜாலம் வீசும் பாசிமணிச் சரம் போல் வரிசை வரிசையாக வந்து விழுந்து கோத்துக்கொண்டிருந்தன. தான் சொன்ன விஷயங்களைக் கேட்டு அந்த முஜீக்குகள் இருந்த இடத்திலேயே முளை அறைந்தாற்போல் அசையாதிருப்பதை அவள் கண்டுகொண்டாள். அவர்கள் ஆடாமல் அசையாமல், அவளை இமை தட்டாமல் பார்த்தவாறே இருந்தார்கள். தனக்கு அருகிலிருந்த பெண் சிரமப்பட்டு மூச்சு வாங்குவதையும் அவளால் கேட்க முடிந்தது. இவையனைத்தும் தான் சொல்லும் விஷயத்திலும், தான் அந்த மக்களுக்கு உறதியளிக்கும் விஷயத்திலும் அவள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியது…

”கஷ்ட வாழ்க்கைக்கு ஆளானவர்கள் அனைவரும், அடக்கு முறையாலும் தேவையாலும் அலைக்கழிக்கப்பட்டு நைந்துபோன மக்கள் அனைவரும் பணக்காரர்களாலும் பணக்காரரின் கைக் கூலிகளாலும் தரையோடு தரையாய் நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும் – மக்களின் நலத்துக்காகப் படுமோசமான சித்திரவதைக்கு ஆளாகி சிறைக்குள்ளே கிடந்து அழிந்து கொண்டிருக்கும் அந்த மக்களோடு, ஒன்றுசேர வேண்டும். தங்களைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிது கூட இல்லாமல் அவர்கள் சகல மக்களுக்கும் சுபிட்சப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்கள் எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், ‘இந்தப் பாதை கரடு முரடானதுதான்’ என்று கூறுகிறார்கள். இந்தப் பாதையில் வரும்படி எவரையும் அவர்கள் நிர்ப்பந்திப்பதில்லை. ஆனால், ஒரு மனிதன் அவர்களோடு போய்ச் சேர்ந்துகொண்டால் அவனே அவர்களை விட்டுப் பிரிந்து செல்லமாட்டான். ஏனெனில், அதுவே சரியான பாதையென்பதையும், அதைத் தவிர வேறு மார்க்கமே கிடையாது என்பதையும் அவன் கண்டு கொள்வான்!’’

அவனது மனத்தில் நீண்ட நாளாக இருந்துவந்த ஆசையை – அதாவது அவளே மக்களுக்கு உண்மையைப் போதிக்க வேண்டும் என்னும் அவளது விருப்பை – அன்று நிறைவேற்றிக்கொண்டபோது அவளுக்கு ஒரே ஆனந்தமாயிருந்தது.

“அம்மாதிரி மனிதர்களோடு சேர்ந்து செல்வதைப் பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படவே தேவையில்லை. அந்த மனிதர்கள் அற்பசொற்ப வெற்றியோடு திருப்தியடைய மாட்டார்கள். சகல ஏமாற்றுக்களையும், சகல பேராசைகளையும், சகல தீமைகளையும் ஒழித்துக் கட்டினாலன்றி அவர்கள் தமது இயக்கத்தை நிறுத்தமாட்டார்கள். அனைத்து மக்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரே குரலில், நான்தான் அதிகாரி, நான்தான் சகல மக்களுக்கும் சமமான பொதுவான சட்டதிட்டங்களை உண்டாக்குவேன்’ என்ற கோஷத்தைக் கிளப்புகிறவரையிலும், அவர்கள் ஓய்வு கொள்ள மாட்டார்கள்!”

களைப்புணர்ச்சி தோன்றவே, அவள் பேச்சை நிறுத்திக் சுற்றுமுற்றும் பார்த்தாள். தான் பேசியது வீண் போகவில்லை என்ற அமைதியான நம்பிக்கையுணர்ச்சி அவள் உள்ளத்தில் நிரம்பி நின்றது. அந்த முஜீக்குகள் இன்னும் எதையோ எதிர்நோக்கி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். பியோத்தர் மார்பின்மீது கைகளைக் கட்டியவாறு, கண்களைச் சுருக்கி விழித்தான். அவனது உதடுகளில் ஒரு புன்னகை உருவாகி அசைந்தது. ஸ்திபான் முழங்கையொன்றை மேஜை மீது ஊன்றி, தனது உடம்பு முழுவதையுமே முன்னோக்கித் தள்ளி, இன்னும் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் இருந்தான். அவனது முகம் இருண்ட பக்கமாக இருந்தது. எனவே அது ஒரு பரிபூரண உருவம் பெற்றதுபோல் தெரிந்தது. அவனது மனைவி தாய்க்கு அடுத்தாற்போல் உட்கார்ந்து முழங்காலின் மீது முழங்கைகளை ஊன்றிக் குனிந்து, தரையையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“இப்படித்தான் இருக்கிறது” என்று அடி மூச்சுக் குரலில் கூறிக்கொண்டே பியோத்தர் மெதுவாகப் பெஞ்சின் மீது உட்கார்ந்தான்.

ஸ்திபான் நிமிர்ந்து உட்கார்ந்து, தன் மனைவியைப் பார்த்தான். அங்குள்ளவர்கள் அனைவரையுமே அணைத்துக்கொள்ளப் போகிறவன் மாதிரி கைகளை அகல நீட்டினான்.

“இந்த மாதிரி விஷயத்தில் ஒருமுறை தலையைக் கொடுத்துவிட்டால், அப்புறம் அதற்காகவே தன் முழு ஆத்மாவையும் அர்ப்பணித்து, முழு மூச்சுடன் ஈடுபடத்தான் நேரும்……” என்று ஏதோ நினைவிலாழ்ந்தபடி கூறத்தொடங்கினான் அவன்.

”ஆமாம், உண்மைதான் திரும்பிப் பார்க்கிற வழக்கமே கூடாது” என்று வெட்கத்தோடு கூறிக்கொண்டான் பியோத்தர்.

”இந்த இயக்கம் பேரளவில் வளர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது” என்றான் ஸ்திபான்.

“உலகளவில்” என்றான் பியோத்தர்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு

0

தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்திற்காக (National Tobacco Control Programme) 2016-ம் ஆண்டு இறுதிவரை 400 முழுநேர ஊழியர்களை இந்திய அரசு நியமித்துள்ளது. மேலும் 2015-ம் ஆண்டு அவர்களுக்காக ரூ.40 கோடி செலவிட்டிருக்கிறது.

பீடி புகைப்பதால் ஏற்பட்ட அகால மரணங்களாலும் உடல்நல குறைபாட்டினாலும் இந்தியா கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் ரூ.80,000 கோடியை இழந்திருக்கிறது என்பதை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள். கொச்சியில் இயங்கும் ‘பொது கொள்கைக்கான ஆராய்ச்சி மைய’த்தைச் (Centre for Public Policy Research) சேர்ந்த ரிஜோ எம்.ஜான் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை புகையிலை கட்டுப்பாடு (Tobacco Control) எனும் சஞ்சிகையில் வெளி வந்துள்ளது.

“பீடி புகைப்பது பொதுநலத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தல்” என்கிறார் ஜான். வரி விதிப்பு நடவடிக்கை, பீடி புகைப்பதை கட்டுப்படுத்தும் பயனுள்ள வழிமுறை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருந்தும் இதுவரையில் இந்தியாவில் பெரிதாக இதை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

பீடிக்கு அதிக வரி போடாமல் இருப்பதற்கு பின்னணியில் அரசியல் காரணிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. “இதற்கு பின்னால் கண்டிப்பாக ஒரு அரசியல் காரணி இருக்கிறது. பீடி அதிகம் புகைப்பதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை தாங்க வேண்டிய நிலை ஏழைகளுக்கு ஏற்படுகிறது.  இதை அனுமதிப்பது அவர்களின் வருமானத்தின் ஒரு பெரிய பங்கை இழப்பதற்கு வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

எனவே ஏற்கனவே உள்ள 22% வரியிலிருந்து உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 75% அளவிற்கு வரியை உயர்த்த வேண்டும் எனக் கூறுகிறார் ரிஜோ.

பீடி புகைப்பதற்கு தரப்படும் விலையை தேசிய மற்றும் சர்வதேசிய புள்ளி விவரங்களை கொண்டு அவர் கணக்கிட்டுள்ளார். இந்த ஆய்வு 2017-ம் ஆண்டில் புகைப்பதால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளையும் 30-69 வயதிலேயே ஏற்பட்ட அகால மரணங்களையும் அறுதியிட்டு கணக்கிட்டுள்ளது. நோய்க்கான நேரடி சிகிச்சை செலவுகள், மறைமுக நோய்கள் மற்றும் அகால மரணங்களால் ஏற்படும் செலவுகள் உள்ளிட்டவை ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

படிக்க:
♦ அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
♦ பீடித் தொழில் – ஒரு பார்வை

நோய் கண்டறியும் சோதனைகள், மருந்துகள், மருத்துவர்கள், மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை நேரடி செலவுகளில் அடங்கும். மொத்த செலவில் இவை 20.9% (16,870 கோடி ரூபாய்) பிடித்துக் கொள்கின்றன. மீதமுள்ள ~ 79% – மறைமுக செலவுகள் – உறவினர்கள் மற்றும் கவனிப்பாளர்களுக்கான விடுதி செலவு மற்றும் குடும்ப வருவாய் இழப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

“பீடி புகைப்பதனால் ஏற்படும் மொத்த பொருளாதார செலவு (இழப்பு) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் அரை விழுக்காடு ஆகும். அதே நேரத்தில் அதனால் கிடைக்கும் வரி வருவாய் அதன் பொருளாதார இழப்பில் அரை விழுக்காடு மட்டுமே ஆகும்” என்று ஜான் கூறினார். பீடி குடிப்பதனால் ஏற்படும் செலவானது இந்தியாவின் மொத்த சுகாதார செலவில் 2.24 விழுக்காடாக இருக்கிறது.

ஏனெனில் ஏழைகள் மட்டுமே பீடி குடிக்கிறார்கள். இது அவர்களது ஏழ்மையை மேலும் அதிகரிக்கிறது. மொத்த புகையிலை பயன்பாட்டில் பீடி 81 விழுக்காடு என்கிறது அதிகாரப்பூர்வ விவரம் ஒன்று. கிட்டத்தட்ட 15 வயதில் வழக்கமாக பீடி குடிப்பவர்கள் 7.2 கோடி பேர் இருக்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் பீடி- சிகரெட்

“புதிய உலகளாவிய வயது வந்தவர் புகையிலை ஆய்வின் (Global Adult Tobacco Survey) படி பீடி விற்பனையானது 4.3:1 என்ற விகிதத்தில் சிகரெட்டை விட முன்னிலையில் இருக்கிறது” என்று ஜான் கூறுகிறார். “பெரும்பாலான மாநிலங்களில் பீடி குடிப்பது சிகரெட் குடிப்பதை விட அதிகமாக இருக்கிறது. மாறாக கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் சிகரெட் பிடிப்பது அதிகமாக உள்ளது” என்று மேலும் கூறினார்.

சிகரெட்டை விட பீடி அதிகம் தீமை தராது என்று பலர் நினைக்கிறார்கள். பீடி குடிப்பது வாய், குரல்வளை, உணவுக்குழாய் மற்றும் நுரையீரல்களில் புற்றுநோய் ஏற்படுத்தும். மேலும் நாள்பட்ட மூச்சுகுழாய் ஒவ்வாமை, காசநோய் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்களையும் அதிகரிக்கும்.

ஜானுடைய ஆய்வு அதிகம் தெரிந்திராத பின்வரும் சிக்கல்களையும் அழுந்தக்கூறுகிறது,

  • பீடியில் சிகரெட்டை விட புகையிலை குறைவாக இருக்கும். ஆனால் நிக்கோட்டீன் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகம் இருக்கும்.
  • பீடியின் குறைவான புகையால் புகைப்பாளர்களை அது மிக ஆழமாக இழுக்க வைக்கிறது. விளைவாக சிகரெட்டை விட அதிகமான கார்பன் மோனாக்சைடு, நிக்கோட்டீன் மற்றும் ஏனைய புகையிலை மூலக்கூறுகளை சுவாசிக்கிறார்கள்.
  • ஒவ்வொரு நான்கு ஆண்களில் (30-69 வயது) ஒருவர் பீடி புகைப்பதால் இந்த பழக்கம் மொத்த ஆண் தொழிலாளர்களில் ஒரு பங்கினை குறைக்கிறது.
  • இந்தியாவில் ஐந்தில் ஒரு குடும்பம் சுகாதார செலவுகள் காரணமாக பொருளாதார பேரழிவை சந்திக்கின்றன.
  • கூடுதலாக, பீடி புகைப்பதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மக்களை அதிகம் ஏழ்மையில் தள்ளுகின்றன.

விளைவாக, 1.5 கோடி இந்திய மக்கள் புகையிலை மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏழ்மையை சந்திக்கின்றனர். இத்தகைய செலவினங்கள் உணவு மற்றும் கல்விக்காக ஏழை மக்களிடம் உள்ள செலவில் பெருஞ்சுமையை ஏற்றி விடுகின்றன.

படிக்க:
♦ தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்
♦ மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்

கேரளா அரசு போதுமான புகையிலை கட்டுப்பாடு திட்டங்களை தொடங்கியிருக்கிறதா? என்றால், COTPA சட்டம் கேரளாவில் போதுமான அளவில் இல்லை தான்.  ஆனால் ஏனைய இந்திய மாநிலங்களை விட கேரளாவில் இதன் நடைமுறை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கிறது என்று என்னால் கூற முடியும்” என்கிறார் ஜான்.

இந்த அதிக வரி விதிப்பு தொடர்பான பேச்சுக்கள், பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை மைய அரசு 2017-ம் ஆண்டு ஜூலையில் கொண்டுவந்த பிறகு மாறி விட்டது. தற்போது மாநில அரசுகள் வரிகளை கட்டுப்படுத்துவது கிடையாது. விளைவாக, “தற்போது மாநில மட்டத்திலான புகையிலை கட்டுப்பாட்டு செயல்திட்டங்களை எடுப்பது முடியாத காரியமாகும். அதிக எழுத்தறிவு உள்ளதால் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கேரளாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்

COTPA விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு மற்ற நடவடிக்கைகளுக்கிடையே விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்தி குடிமை சமூக பணிகளை மாநில அரசுகள் முடுக்கி விட வேண்டும்.

சென்ற மாதத்தில் “புகையிலை கட்டுப்பாடு” சஞ்சிகையில் வேறு ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வறிக்கை ஒன்றும் வெளியானது. அதில் 1999-2000 முதல் 2011-12 ஆண்டுகளுக்கிடையே பீடி மற்றும் சிகரெட் பிடிப்பது ஒட்டுமொத்தமாக குறைந்திருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இலண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியை (Imperial College London) சேர்ந்த கியாரா சி.எம். சாங் தலைமையிலான இக்குழு 2007-2009 ஆண்டுகளுக்கிடையில் 42 மாவட்டங்களில் பீடி-சிகரெட் பிடிக்கும் குடும்பத்தினரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டது.

NTCP நடைமுறைபடுத்தப்படாத மாவட்டங்களின் விவரங்களை மேற்சொன்ன மாவட்டங்களின் விவரங்களோடு இவர்கள் ஒப்பிட்டு பார்த்தபோது நிலைமைகள் மோசமாகவே இருந்தன. கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்களை ஒப்பிடும் போது NTCP மாவட்டங்களில் சிகரெட்-பீடி பழக்கம் கொண்ட குடும்பங்களின் விகிதாச்சாரம் குறைந்திருக்கவில்லை.

அவர்களது ஆய்வில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்கள்.

“முன்னதாக NTCP-யின் செயல்பாடுகள், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் எந்த முன்னேற்றத்தையும் காட்டியிருக்காது. இந்தியாவின் புகையிலை கட்டுப்பாட்டு நோக்கங்களுக்கான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு (Framework Convention for Tobacco Control objectives in India) நேரெதிராக மோசமான செயல்திறனைக் கொண்டிருப்பதையே காட்டியிருக்கிறது என்பதை எங்களின் ஆய்வு சுட்டுகிறது.

இந்தியா இந்த கூட்டமைப்பை 2004-ல் தொடங்கியது. ஆய்வாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது,

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தேசிய மற்றும் சர்வதேச சிறுவர் நலன் மற்றும் நோய் தொற்றில்லா அகால மரணங்களை குறைக்கும் இலக்குகளை அடைவதற்கு புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமல்படுத்துவது மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் இன்றியமையாமையையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்த கண்டுப்பிடிப்புகள் முற்றிலும் புதியன அல்ல. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலுள்ள ஆண் மாணவர்களிடம் புகையிலை பொருட்கள் பயன்பாடு 50.4 – 74.4% வரை இருப்பதாகவும் பெண் மாணவர்களிடம் 32 – 56.4% வரை இருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை (Indian Council of Medical Research) சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் கூறினர்.

நொய்டாவை சேர்ந்த 7-12 வகுப்புகளை சேர்ந்த 4,786 மாணவர்களில் 537 (11.2%)  மாணவர்களிடம் புகையிலை பழக்கம் இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சஞ்சிகையின் வெளியீடு (Indian Journal of Medical Research) ஒன்றின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பயங்கரமான உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. எனவே NTCP உண்மையிலேயே எவ்வளவு வேலை செய்கிறது? என்ற கேள்வியை கேட்பது அவசியமாகிறது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் நாம் அடைகிறோமா?

இந்த ஆய்வு கவனிக்கத் தவறும் விடயம் என்ன? பீடி பிடிக்கும் தொழிலாளிகள்தான் இந்தியாவில் ஆகப்பெரும்பான முறைப்படுத்தப்படாத தொழில்களில் பணி புரிகிறார்கள். கடுமையான உழைப்பு, குறைவான கூலி, குறைந்த பட்ச வாழ்க்கைத் தரம் கூட இல்லாமை, குடும்பத்தை நடத்துமளவு பொருளாதாரம் இல்லாமை போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. 8 மணி நேர வேலை, அதற்குரிய கூலி, ஓய்வு நேரம், குடியிருப்பு வசதிகள் என்று எவையும் இவர்களுக்கு இல்லை. பீடியை விடுங்கள், அதிக உழைப்பிற்கும், தொடர்ந்து கண் விழித்து பணியாற்றும் சீசன் நேரங்களின் போதும் இத்தொழிலாளிகள் பான்பராக் இன்னபிற கூடுதல் புகையிலை பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பிறகு இருக்கவே இருக்கிறது, மது. பணியின் போது புகையிலை, பணி முடிந்த பிறகு மது. இப்படித்தான் நமது முறைசாராத் தொழிலாளிகள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பீடிக்கு வரி போடச் சொல்லும் கனவான்கள் இத்தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. அதை மாற்றாமல் அது குறித்து ஆயாமல் பீடி மீது மட்டும் குறைபட்டு என்ன பயன்?

கட்டுரையாளர் : கே.எஸ். பார்த்தசாரதி
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்

ஆதித் தாய் | அ.முத்துலிங்கம்

ன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். பிறந்தநாள்போல, சோதனையில் சித்தியடைந்த நாள் போல, வேலை கிடைத்த நாள்போல, திருமண நாள் போல, முதல் பிள்ளை பிறந்த நாள்போல முக்கியமானது. என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன். அதாவது 1,60,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த ஒரு தாய்தான் என்னுடைய வம்சத்தின் ஆரம்பம்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
என்னுடைய வம்ச வழியை அப்படியே பின்னோக்கி 5000 தலைமுறைகள் தள்ளிக்கொண்டே போனால் அந்த தேடல் இந்த தாயாரில் கொண்டுபோய் சேர்க்கும். விஞ்ஞானிகள் இந்த தாயை ஆதித்தாய் Mitochondrial Eve என்று சொல்கிறார்கள்.

National Geographic நடத்தும் genographic project ல் பங்குபெற விரும்பி நான் அவர்களுடன் தொடர்புகொண்டேன். இந்த புரோஜெக்ட் என்னவென்றால் அது உங்கள் மரபணுவை சோதித்து உங்கள் மூதாதையர் எங்கே, எப்பொழுது தோன்றினார்கள், எந்தக் காலகட்டத்தில் இடம்பெயர்ந்தார்கள், அந்தப் பயணம் அவர்களை எங்கே எங்கேயெல்லாம் இட்டுச் சென்றது என்பதை விஞ்ஞானமுறைப்படி ஆராய்ந்து விவரங்களை வரைபடமாகத் தருவார்கள்.

அவர்கள் கேட்டுக்கொண்டபடி என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து, 99 டொலர் காசோலையுடன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பரிசோதனை முடிய ஆறு வார காலம் எடுக்கும். நான் பொறுத்திருந்தேன். முடிவுகள் கிடைத்தது இன்றுதான். சோதனையில் இரண்டு வழித்தேடல் உள்ளது. ஒன்று தாய்வழித் தேடல், மற்றது தந்தைவழித் தேடல். தாய்வழித் தேடல் உங்கள் தாயில் ஆரம்பித்து உங்கள் வம்சவழியின் ஊற்றுக்கண்ணை தேடிக்கொண்டே போகும். தந்தைவழித் தேடல் உங்கள் அப்பா, அப்பாவின் அப்பா என்று பின்னோக்கி நகர்ந்து உங்கள் ஆகக்கடைசி தலைமுறையைச் சேர்ந்த தந்தையில் நிற்கும். நான் விண்ணப்பத்தில் கேட்டது தாய்வழித் தேடல்.

மாதிரிப் படம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் 3.6 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் பெற்ற முதல் மனிதன் நடமாடியதற்கான சான்றுகள் உள்ளன. தன்சேனியாவில் உள்ள லேரோலி என்ற இடத்தில் நிமிர்ந்து நடந்த இரண்டு மனித காலடித் தடங்களை இன்றைக்கும் பாதுகாக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றது பெண். அவர்கள் பக்கத்து பக்கத்தில் நடந்து போயிருக்கிறார்கள். பெண்ணின் கால் தடம் கொஞ்சம் ஆழ்ந்து போய் இருப்பதால் அவள் ஒரு குழந்தையை காவினாள் என்பது விஞ்ஞானிகள் ஊகம்.

200,000 வருடங்களுக்கு முன்னர் அதே கிழக்கு ஆப்பிரிக்காவில் அதே ஆதி மனிதர்களிலிருந்து முதல் நவீன மனிதன் Homo sapiens தோன்றினான். இன்றைய மனிதனின் குணாம்சங்கள் கொண்ட முதல் மனிதன் இவன். 40,000 ஆண்டுகள் கழித்து, அதாவது 160,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதே இடத்தில் ஓர் ஆதித்தாய் தோன்றினாள். இன்று உலகில் வாழும் அத்தனை மனித உயிரும் இந்த ஆதித்தாயில் இருந்தே தோன்றினர். மற்ற தாய்களுக்கு என்ன நடந்தது? இவர்களில் இருந்து தொடங்கிய சந்ததி சங்கிலி இயற்கை உற்பாதத்தில் அழிந்தோ, சந்ததி இல்லாமல் அறுந்தோ போய்விட ஒரேயொரு தாய் மட்டும் எஞ்சினாள். அவளிலிருந்து தொடங்கிய சந்ததிச் சங்கிலி இன்றுவரை தொடர்ந்தது இயற்கையில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

விஞ்ஞானிகள் எப்படி இந்த தாயை கண்டுபிடித்தார்கள்? ஒரு கதை. நாலாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சோதனை எழுதும்போது ஒரு மாணவன் ‘சைபீரியா’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘கைபீரியா’ என்று தவறுதலாக எழுதிவிட்டான். அவனைப் பார்த்து கொப்பியடித்த இன்னொரு மாணவனும் ‘கைபீரியா’ என்றே எழுதினான். அடுத்த மாணவனும். அதற்கு அடுத்தவனும். இப்படியாக நாலு மாணவர்கள் ‘கைபீரியா’ என்று எழுதியதை வைத்து ஆசிரியர் முதல் பிழையை யார் எழுதினார் என்பதை கண்டுபிடித்தார். அதே போல ஆதிமனித மரபணுவில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு வழிவழியாகத் தொடர்ந்தது. அதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டு போனபோது எல்லா வழிகளின் ஆரம்பமும் ஒரு தாய் என்பதைக் கண்டுபிடித்தனர்.

எனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த இந்த தாயிடமிருந்து ஆரம்பத்தில் இரண்டு குழுக்கள் பிரிந்தன. L0, L1 ஆகிய இருகுழுக்களும் ஆப்பிரிக்காவில் பரவின. பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் உருவான L2 குழு மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பரவியது. 80,000 வருடங்களுக்கு முன்னர் L3 குழு தோன்றியது. இது ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகளுக்கு பரவியது. 60,000 வருடங்களுக்கு முன்னர் L3 ல் இருந்து இரண்டு  குழுக்கள் பிரிந்தன. இதில் ஒன்று N குழு. இது வடக்கு பக்கமாக விரிந்து பரவி ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. அடுத்த குழுவான M குழு முதல் முறையாக கடல் தாண்டிய சாகசமான குழு. இது செங்கடலைத் தாண்டி, அரேபியாவைத் தாண்டி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளம், பர்மா, மலேயா, அவுஸ்திரேலியா ஆகிய தூர இடங்களுக்கு பரவியது. என்னுடைய மூதாதையர் இந்த M குழுவைச் சார்ந்தவர்கள் என்று என்னுடைய மரபணு ஆராய்ச்சி சொல்லியது. இதன் பெயர் Haplogroup M.

இந்த குழுவைச் சார்ந்தவர்கள் அதிகமாக அங்க தேசத்திலும் (Bihar) கலிங்க தேசத்திலும் (Orissa) வங்கதேசத்திலும் ( Bengal ) மற்றும் இந்தியாவின் வடபகுதிகளிலும் காணப்படுகிறார்கள். தமிழ் நாட்டிலோ, கேரளத்திலோ, இலங்கையிலோ இருப்பவர்கள் இதன் உபகுழுக்களில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. உதாரணமாக உபகுழு M2 தமிழ்நாட்டிலும், உபகுழு M6 கேரளத்திலும், உபகுழு M69 இலங்கையிலும்.

வரலாற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன், தென் இந்தியாவிலோ இலங்கையிலோ Haplogroup M ஏன் காணப்படவில்லையென்று. அவர் விடை மகாவம்சத்தில் இருக்கிறது என்றார். மகாவம்சம் அரைவாசி கட்டுக்கதை அல்லவா என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். ‘வங்கதேசத்து அரசன் கலிங்க அரசகுமாரியை மணமுடிக்கிறான். அவர்களுக்கு பிறந்த மகள் காட்டுக்குச் சென்று சிங்கத்துடன் கூடி ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுக்கிறாள்.

படிக்க:
♦ அணு மரபணுவான கதை !
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

அவர்கள் பெயர் சிங்கபாகு, சிங்கசிவலி. சிங்கபாகு தகப்பனாகிய சிங்கத்தை கொன்று தன் சகோதரியான சிங்கசிவலியை மணமுடித்து ராச்சியத்தை ஆள்கிறான். அவர்களுக்கு பிறந்த அரசகுமாரனான விஜயனையும் அவனுடைய கூட்டாளிகள் 700 பேரையும் அரசன் ஒரு கப்பலில் நாடு கடத்துகிறான். அவன் இலங்கையில் வந்து இறங்கி அதைக் கைப்பற்றி அரசாண்டான். அவனுடைய வம்சவழி ரத்தத்தில் வங்கமும் கலிங்கமும் இருக்கிறது. உங்களுடையதிலும் இருக்கிறது.’

‘வங்கமும், கலிங்கமும் என்றால் பரவாயில்லை. சிங்கமும் அல்லவா இருக்கிறது?’ என்றேன். என் எதுகையையோ, கேள்வியை அவர் ரசிக்வில்லை. விடையையும் கூறவில்லை.

சரித்திர புத்தகங்களையே வாழ்நாள் முழுக்கப் படித்துவரும் நண்பர் ஒருவர், 1215ல் கலிங்கத்திலிருந்து படையெடுத்து பொலநறுவையை பிடித்து ஆண்ட செகராஜசேகர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக நான் இருக்கலாம் என்று சொல்கிறார். கலிங்க ரத்தம் மட்டுமல்ல, ராச ரத்தமும் என் உடம்பில் ஓடுகிறது. அதை நம்புவதற்கும் ஆசை கூடுகிறது. யாராவது இந்த துறை விற்பன்னர் இதை ஆராய்ந்தால் எனக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

*****

நான் முன்னரே கூறியமாதிரி என் விண்ணப்பத்தில் தாய்வழி தேடல் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு விடையாகத்தான் மேற்கூறிய வரைபடம் வந்தது. தகப்பன் வழி தேடலையும் நான் கேட்டிருக்கலாம். அது என்னுடைய தகப்பன், தகப்பனின் தகப்பனென்று தேடிக்கொண்டு போய் ஆதித் தகப்பனில் சேர்க்கும். விஞ்ஞானிகள் ஆதித்தாய் இருப்பதுபோல ஓர் ஆதி ஆண் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் ஓர் ஆதி ஆணிலிருந்து உருவானவர்தான்.

ஒரு மனித உடம்பில் 23 சோடி குரோமசோம்கள் உள்ளன. இதில் ஒரு சோடியில் இரண்டு x குரோமசோம்கள் இருந்தால் அது பெண்; ஒரு சோடி குரோமசோமில் ஒரு  x குரோமசோமும், ஒரு y குரோமசோமும் இருந்தால் அது ஆண். பெண் குழந்தை உற்பத்தியாகும்போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து x ம் பெறும். இரண்டும் சேர்ந்தது பெண். ஆண் குழந்தை உற்பத்தியாகும்போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து ஒரு y ம் பெறும். இரண்டும்  சேர்ந்தது ஆண். y குரோமசோம் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படும். மகளுக்கு கடத்தப்படுவதில்லை. அதனால்தான் பழைய காலத்து அரசர்கள் வம்சம் தழைக்க மகன் வேண்டும் என்று தவம் கிடந்தார்கள்.

ஆதி ஆணிலிருந்துதான் இன்று உலகத்திலிருக்கும் ஆண்கள் எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் அவனுக்கு இட்ட பெயர் Y chromosomal Adam. இவன்  வாழ்ந்த காலம் 60,000 வருடங்களுக்கு முன்னர் என்று  கணக்கிட்டிருக்கிறார்கள். என்னுடைய அப்பா, அப்பாவின் அப்பா,  அவரின் அப்பா, அவரின் அப்பா என்று 2000 தலைமுறைகள் தேடிக்கொண்டே பின்னோக்கி போனால் அது என்னை இந்த ஒரேயொரு ஆதி ஆணில் கொண்டுபோய் சேர்க்கும். மற்ற ஆண்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கலாம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுடைய சந்ததிச் சங்கிலி அறுந்துவிட்டது. எஞ்சியது இது ஒன்றுதான்.

இன்னொரு முக்கியமான கேள்வி உண்டு. ஆதித்தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாள். ஆதி ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான். இடையே 100,000 ஆண்டுகள் ஆண்களே இல்லையா? அப்படியானால் சந்ததி எப்படி பரவியது? ஆணும் பெண்ணும் ஒரே சமயத்தில் வாழ்ந்தார்கள். விஞ்ஞானிகள் தேடிய ஆகப் பிந்திய தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள். ஆகப் பிந்திய ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அதற்கு முந்தைய தொடர்ச்சிகள் எல்லாம் எப்படியோ அழிந்துபோயின.

ஆதி ஆணில் ஆரம்பித்து எனக்கு முன் வந்த தலைமுறையினர் எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்று அறியவேண்டுமானால் நான் மறுபடியும் என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து Genographic Project க்கு அனுப்பிவைக்கவேண்டும். அப்படி அனுப்பும்போது ‘தந்தை வழி புலம்பெயர்வு’ என்று மறக்காமல் குறிப்பிட்டு 99 டொலர் காசோலையையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் சோதனையை முடித்துவிட்டு என்னுடைய தப்பன் வழி முன்னோர் எங்கே தொடங்கி எங்கேயெங்கே எல்லாம் நகர்ந்தார்கள் என்ற வரைபடத்தை எனக்கு அனுப்பிவைப்பார்கள். என்னுடைய தகப்பன் பாதையும் தாயின் பாதையும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்திருக்கும். கட்டாயம் கண்டுபிடிக்கவேண்டிய சங்கதிதான். முதலில் என் கைக்கு 99 டொலர் வந்து சேரட்டும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் புத்தாண்டு நேர்காணல் !

0

பிரதமராக பதவி ஏற்று ஐந்தாண்டுகள் முடியவிருக்கிற நிலையில் ஒரே ஒரு முறைகூட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாத மோடி, தேர்தல் நெருங்க உள்ளதையொட்டி ஊடகங்களுக்கு ‘எக்ஸ்க்ளூசிவ்’ பேட்டி அளிக்கத் தயாராகி வருகிறார்.  புத்தாண்டு தினத்தன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பல புளுகு மூட்டைகள், சில திரித்தல்கள், சில முரண்பாடுகள் என பலவற்றை ’கலவையாக’ பேசியிருக்கிறார். மோடியின் நேர்காணல் ஒரு புறத்தில் கடும் எதிர்வினைக்கும் மற்றொரு புறத்தில் கேலி-கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

இச்செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விவசாய கடன் தள்ளுபடி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துவரும் கூட்டணி, ராமர் கோயில் விவகாரம், முத்தலாக் மசோதா, சபரிமலையில் பெண்கள் நுழைவு உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.  காங்கிரசின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை ‘லாலிபாப்’ என்கிறார்; உச்சநீதிமன்ற தீர்ப்பு இல்லாமல் ராமர் கோயில் கட்ட சட்ட இயற்றுவது  இயலாது என்கிறார்; ஒரே ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் பாகிஸ்தான் மாறிவிடாது என்கிறார்; எதிர்க்கட்சிகளின் கூட்டணி தன்னை எதிர்த்தே என்கிறார்.

படிக்க:
♦ சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !
♦ மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

காங்கிரசு கட்சி மோடியின் பேட்டியை ‘நான், எனது, என்னால், எனக்காக’ என பகடி செய்திருக்கிறது. வேலை வாய்ப்பு, கருப்புப் பணம், பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை குறித்து 10 கேள்விகளை தயாரித்துள்ள காங்கிரஸ், இந்தக் கேள்விக்கு பிரதமர் பதிலளிப்பாரா என வினவுகிறது.

மோடியின் நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள மக்கள், தன்னுடைய பிம்பம் சரிந்து வருவதை சீர்செய்ய வேண்டிய சூழ்நிலையில் மோடி ஊடகங்களிடம் பேசுவதாக தெரிவித்துள்ளனர்.  மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணலில் புதிதாக எதுவும் இல்லை என்றும் பலர் கருத்து சொல்லியிடுக்கின்றனர்.

சங்பரிவாரங்கள் வழக்கம்போல, மோடியின் நேர்காணலை ஏகத்துக்கு புகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் எரிச்சலடைந்திருக்கும் பலர் ட்விட்டரில் பகடி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மிருணாள் பாண்டே

மோடி தன்னுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேர்காணலில் எத்தனை முறை ‘நான்’ என்கிற சொல்லை பயன்படுத்திருக்கிறார் என்பதை யாரேனும் எண்ணியிருக்கிறார்களா? எனக் கேட்கிறார் மிருணாள் பாண்டே.

துருவ் ரதீ

“கேள்வி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பதில்கள் அனைத்தும் மன் கி பாத் ரகம். எழுதி தருகிறவர்கள் சிறப்பான கதைகள் எழுத வேண்டும். நேர்கண்டவர் பதிலிலிருந்து கேள்வி கேட்பதை பழக வேண்டும்” என்கிறார் துருவ் ரதீ.

அதுல் கட்ரி

#Modi2019Interview என்ற ஹேஷ்டாகை பார்த்தபோது இறுதியாக நீரவ் மோடிதான் பேட்டியளித்திருக்கிறார் என நினைத்தேன் என்கிறார் எழுத்தாளர் அதுல் கட்ரி.

ஜாய்

ஏ.என்.ஐ எடுத்த நரேந்திர மோடியின் பதில்/கேள்வி நேர்காணலை மிகவும் விரும்புகிறேன். மோடி முதல் எழுதிய பதில்களை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ஏ.என்.ஐ. கேள்வி அமைத்திருக்கிறது என்கிறது இந்தப் பதிவு.

ஆகாஷ் பானர்ஜி

நல்லதோ கெட்டதோ மோடி நேர்காணல், ஒன்றை உணர்த்தியிருக்கிறது. அதாவது, மோடி நேர்காணல் அளிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதே அது. பிரதமரின் மிகப் பெரிய மக்கள் தொடர்பு சாதனங்களான, ஒருதலைபட்சமான டிவிட்டுகளும், மன் கி பாத் சொற்பொழிவுகளும், அனல் பறக்கும் பேச்சுகளும் தோற்றுவிட்ட நிலையில் மோடி இறங்கி வந்திருக்கிறார் என்கிறார் நகைச்சுவையாளர் ஆகாஷ் பானர்ஜி.

மொயின் நஸ்

மேகாலயாவில் 15 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதை தேசிய ஊடகங்கள் மறந்துவிட்டதை சுட்டிக்காட்டும் ஒரு பதிவர், 2014-ஆம் ஆண்டிலிருந்து மனித உயிர்களுக்கு நம் நாட்டில் மதிப்பிருக்கிறதா? மோடி பேரழிவுகளை ஏற்படுத்தியவர் என சுட்டிக்காட்டுகிறார் அந்தப் பதிவர்.

கேள்வியும் நானே பதிலும் நானே மோடியை பகடி செய்கிறது இந்த ட்விட்டர் பதிவு.

முத்தலாக் தடை சட்ட விசயத்தில் அது முசுலீம் பெண்களுக்கு சம உரிமை தருவதாக பேட்டியளித்திருக்கும் மோடி, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்கிற நீதிமன்ற தீர்ப்பை, பாரம்பரியம் தொடர்பானது என்கிறார். மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்வதைத்தான் எதிர்ப்பதாகவும் அது சபரிமலையின் பாரம்பரியத்துக்கு எதிரானது எனவும் பேசுகிறார் மோடி. இத்தனை வெளிப்படையான பிற்போக்குத்தனத்தை பேசும் முதல் இந்திய பிரதமர் மோடியாகத்தான் இருப்பார். மோடியின் இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் ட்விட்டரில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

“முசுலீம் நாடுகள்கூட முத்தலாக்-ஐ தடை செய்திருக்கின்றன. பாகிஸ்தானிலும்கூட அது தடை செய்யப்பட்டிருக்கிறது.” என்கிற மோடி, பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாதிகளிடம் உள்ள சிந்தனைகூட தன்னிடம் (சங்பரிவார் அடிப்படைவாதிகளிடம்) சபரிமலை விசயத்தில் இல்லை என்கிறார். சபரிமலை தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் இருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் வேறுபட்ட பார்வை (மத கட்டுப்பாடுகளில் தலையிடக்கூடாது என சொன்னார்) குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி “ஒரு பெண்ணாக அவர் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார்” என்கிறார்.  அவருடைய கருத்தை எந்தக் கட்சியோடு முடிச்சு போடக்கூடாது எனவும் விளக்கம் தருகிறார்.

மோடியின் இரட்டை வேடம் குறித்து கருத்து தெரிவித்துள்ளா அசாசுதீன் ஓவைசி, “மோடி அனைத்து விசயத்திலும் பாகிஸ்தானை பின்பற்ற நினைக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஒன்று முசுலீம்கள் தொடர்பானது. இன்னொன்று அப்படியல்ல. அதனால்தான் தன்னுடைய அரசு முரண்பட்ட பார்வைகளுக்கு மோடி விளக்கமளித்துக்கொண்டிருக்கிறார் என எதிர்வினையாற்றியிருக்கிறார்.

டிவிட்டரில் ஒரு பதிவர், “முசுலீம் பெண்களுக்கு மட்டும் பாலின சமத்துவமா? முத்தலாக் சொன்ன கணவர், மனைவியை கைவிட்டால், உச்சநீதிமன்றத்தின் முன் அந்த முத்தலாக் செல்லாது. முசுலீம் பெண்களுக்கு மட்டும் தன்னை கைவிட்ட கணவனை சிறைக்கும் அனுப்புவது நீதி என்றால், அதை வைத்து இந்துப் பெண்களை கைவிடும் கணவர்களையும் சிறைக்கு அனுப்பலாம் இல்லையா? எனக் கேட்கிறார்.

“இந்தியாவில் இந்து கணவர்களால் கைவிடப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள்.  முத்தலாக் செய்யப்பட்டு கைவிடப்பட்ட பெண்கள் சில ஆயிரங்களில் இருப்பார்கள். எனில், முசுலீம் பெண்களுக்குக் கிடைத்த நீதி, இந்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?” என கேட்கிறார் மற்றொரு டிவிட்டர்வாசி.

’ஹிட்’டடிப்பதற்காக எடுக்கப்பட்ட மோடியின் நேர்காணல் ஊத்திக்கொண்டுள்ளதையே சமூக ஊடக எதிர்வினைகள் காட்டுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாது அதனால் என்னவென்று துடைத்து போட்டுவிட்டு, அடுத்த செயல்திட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மோடி கும்பல்.

அனிதா

நன்றி: ஸ்கரால்

ஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை !

ந்திரா மாநிலம்-காக்கிநாடா நகரம் சார்ந்த் பகுதிகள்தான் கோதாவரி நதியின் கடைமடைப்பகுதி. காக்கிநாடவை சுற்றியுள்ள பகுதி கோதாவரியின் டெல்டா என்றழைக்கப்படுகிறது. காக்கிநாடா நகரை விட்டு வெளியே சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள், குறுக்கும் நெடுக்குமாக வாய்க்கால்கள், கால்வாய்கள் என நீர் ஆதாரம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

இங்கு விவசாய நிலங்கள் பெரும்பாலும் பண்ணையார்கள் வசம்தான் உள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இரண்டு ஏக்கருக்கும் குறைவாகவே நிலமுள்ளது; அல்லது அதுவும்கூட இல்லாமல் இருக்கிறது. அதில் ஒரு கிராமம்தான் அயனவள்ளி-லங்கா மண்டலத்தைச் சேர்ந்த வீரனவள்ளிபாலேம்.

கோட்டிப்பள்ளி

இந்த கிராமத்திற்கு  செல்ல கொட்டிப்பள்ளியில் இருந்து கோதாவரி ஆற்றின் குறுக்கே கடந்துதான் செல்ல வேண்டும். ஆறு என்றதும் நம் ஊர்போல வறண்ட பாலைவனம் போல் இருக்கும், மணல் கொள்ளையடிக்கப்பட்டு ஆறு என்பதற்கான தடமே அழிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

எங்களை ஆட்டோவில் அழைத்து சென்ற நண்பர் ஒருவர், “நாம் ஆற்றை கடக்க படகில் செல்லப் போகிறோம்” என்றார். ஆற்றை  கடந்ததும் எதில் செல்வோம் என்றோம்.  அப்போழுது அவர் “ஆட்டோவையும் படகில் ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும்” என்றதும் திகைப்பு தான் ஏற்பட்டது. உண்மையில் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாண்டமாக இருந்தது கோதாவரி.

கோதாவரி ஆறு

ஆற்றின் கரையில் இருந்த பெரிய படகில் மக்கள் ஏறிக்கொண்டு இருந்தனர். முன்னதாக அந்த படகில் ஒரு காரை ஏற்றி வைத்திருந்தார்கள். ஆட்டோவை படகில் ஏற்றியதும் கிளம்பியது. எதிர் கரையில் இருந்து இன்னொரு படகு மக்களை சுமந்துக் கொண்டு கொட்டிப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆற்றை கடக்கும் தூரம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். படகில் பயணித்த மக்களுக்கு அது புதிதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் பயணிக்கும்போது புதிதாகவே உணர்கிறார்கள் என்பதை அவர்கள் வளைத்து வளைத்து எடுத்துக்கொண்ட செல்ஃபி நமக்கு உணர்த்தியது.

கோதாவரி படகு பயணம்

“எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த தண்ணியின் வரத்து கொஞ்சம் கொறஞ்சி இருக்கு. இதோட முழு அளவுல பார்த்தா இன்னும் பிரமாண்டமா இருக்கும்” என்று அதன் பெருமை மெய்சிலிர்த்தவாறு சொன்னார் அழைத்துச் சென்ற நண்பர். அவர் சொல்லும்போதே இப்பகுதி பாசனத்தின் வளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஆறு இல்லையென்றால் ஆந்திராவில் இருந்து மாபெரும் குடிபெயர்வு மூலம் மக்கள் சென்றிருப்பார்கள் என்பது மிகையல்ல.

கோதாவரி படகு

“பரந்து விரிந்த தென்னை விவசாயம், வாழை விவசாயம், அதற்கிடையில் ஊடுபயிராக சிறுதானிய பயிர் வகைகள், கத்தரி-பூசணிக்காய் என்று காணும் இடமெல்லாம் பசுமை. நிலம் அனைத்தும் பண்ணையாரின் வசம். இந்த பசுமையை கொஞ்சம் அசைத்துப் பார்த்துள்ளது கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி வீசிய பெய்ட்டி புயல்.

பெய்ட்டி புயல் பாதிப்புகள்

இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தன. வெளியில் இருந்து பார்க்கும் போது அதன் பாதிப்பு தெரியவில்லை. உள்ளே செல்ல செல்ல தான் புயலின் பாதிப்பை முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே இவ்விடங்களுக்கு ஊடகங்களோ, அதிகாரிகளோ சென்றிருக்க வாய்ப்பேயில்லை.

ஆற்றை கடந்து குண்டும் குழியுமான சாலையில் ஊர்ந்து செல்லும்போது சாய்ந்து கிடந்த வாழைத்தோப்பின் அருகே இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார் 49 வயதான விவசாயி நாகேஸ்வரராவ். கோதாவரி ஆற்றுப் படுகையோரம் 40 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.

விவசாயி நாகேஸ்வரராவ்
விவசாயி நாகேஸ்வரராவ்

அவரிடம் புயல் பாதிப்பு குறித்து கேட்டபோது….

“இந்தமாதிரி சேதாரம் எத்தனையோ பார்த்துட்டோம். இந்த தடவை மொத்த வாழையும் போயிடுச்சி. பூம்பழம், ரஸ்தாளி, கதளி, பழவாழைன்னு நாற்பது ஏக்கரிலும் இதான் போட்டிருக்கேன்.  இந்த வாழையில ஊடுபயிரா பப்பாளி போட்டிருக்கேன். ஆனா இந்த வாழையே தென்னையின் ஊடுபயிராகத்தான் இருக்குது. தென்னையை தவிர மொத்தமும் அழிஞ்சிடுச்சி” என்று சொல்லிக்கொண்டே தோப்பின் உள்ளே கூட்டிச் சென்று காட்டினார். சாய்ந்து கிடந்த மரங்கள் எல்லாம் பாதி குலைதள்ளிய நிலையில் இருந்தது.

சேதமடைந்த காக்கிநாடா வாழை விவசாயம்

“இது உங்களுக்கு சொந்த நிலமா?”…  எனக்கேட்டதும் ….சிரிக்கிறார்.  “இல்லை. இங்க இருக்க மொத்த நிலமும் விஜயநகர ஜமீந்தாருக்குத்தான் சொந்தம். அவங்களுக்கு கோதாவரி படுகையில சொந்தமா ஆயிரக்கணக்கான ஏக்கர் இருக்கு. ஆத்தோட நடுவுல பல மணல்திட்டுகள் இருக்கு. அந்த மணல் திட்டுகளும் ஜமீனுக்குத்தான் சொந்தம். இந்த மணல் திட்டுலயும் விவசாயம் பண்றாங்க. அங்கயும் வாழைதான்” என்கிறார்.

பெய்ட்டி புயல் சேதம்

இன்று சமவெளியில் விவசாயம் செய்வதே இயலாத நிலையில் ஆற்றின் நடுவில் விவசாயம் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. ஆனால், இது அப்பகுதியில் இயல்பாக நடக்கும் ஒன்று.

கோதாவரி மணல் திட்டு விவசாயம்

“சமவெளியில இருக்கறவங்களாவது பரவாயில்ல. கோதாவரி ஆத்து திட்டுல விவசாயம் செய்யிறவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். அவங்க சொந்தமா சின்னதா படகு வச்சிருக்காங்க. அவங்களால தெனைக்கும் வந்து போக முடியாது. அதனால  இரண்டு நாள் நிலத்துலயே தங்கி பயிர் பச்சிலய பார்த்துட்டு போயிடுவாங்க. அறுவடை சமயத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.  பயிரை கொண்டு வந்து படகுல தான் ஏத்திட்டு கொண்டு போறதுக்குள்ள போதும்னு ஆயிடும். ஆத்துல வெள்ளம் போனா அவங்க நெலம இன்னும் மோசமாயிடும்.

இப்ப அதெல்லாம்கூட பாதிக்கப்பட்டிருக்கு. இந்த நிலம் ஜமீனோட ட்ரஸ்டுக்கு சொந்தமானது. கொட்டிபள்ளியில தான் ட்ரஸ்ட் ஆபிஸ் இருக்கு. அங்கதான் போயிட்டு குத்தகை பணம் கட்டிட்டு வருவோம்” என்று அவர் சொல்லி முடிக்கும்போது கூட இருந்த நண்பர் குறுக்கிட்டு……….

“இந்த நிலங்கள் எப்படி அறக்கட்டளையாக மாறியதுன்னா…. 1950-60 களில் வினோபாவின் பூமிதான இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீவிர நிலப்பறி போராட்டம். அதைத் தொடர்ந்து  நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தாங்க. அந்த சமயத்துல மீப்பெரும் நிலச்சுவாந்தாரர்கள் தங்கள் பெயரில் இருக்கும் நிலத்தை பிரித்து தங்களது ரத்த உறவுகளின் பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் எழுதியது போக மீதி நிலத்தை அறக்கட்டளை பெயரிலும் எழுதிக் கொண்டார்கள்.

நிலத்தின் அனுபவஸ்தர்களாக அவர்களே இருப்பார்கள். எல்லா உரிமையும் அவர்களுக்கே இருக்கும்படி செய்து கொண்டார்கள். இதன் காரணமாகவே பெரும்பான்மை மக்களுக்கு நிலம் மறுக்கப்பட்டு காலம் காலமாக குத்தகை விவசாயிகளாகவே இருந்து வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து நாகேஸ்வரராவிடம் “இந்த நிலத்துல நீங்க எவ்ளோ வருஷமா பயிர் வக்கிறீங்க? எவ்ளோ குத்தகை கட்டுறீங்க?

“எங்க தாத்தா-அப்பா, இப்ப நான் என்று வழிவழியா குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் பன்றோம். இதை விட்டு வெளியில போக முடியாது. ஒருவேளை போயிட்டா  யார்கிட்டயாவது கொடுத்துடுவாங்க. திரும்ப நம்மள நெனச்சிக்கூட  பாக்க முடியாது. இதனாலயே நாங்க யாரும் பள்ளிக்கூடம்கூட போகல.  ஒரு ஏக்கருக்கு வருசத்துக்கு ரூ.25,000 கட்டிடனும். இதுல பயிர் வக்கிற உரிமை மட்டும்தான் நமக்கு இருக்கு.  தென்னைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்ல. அதுல விளையிர காயை எல்லாம்  குத்தகைக்கு விட்டுடுவாங்க. குத்தகை எடுக்கிறவங்க எஸ்டேட்ல காச கட்டிடுவாங்க. நாங்க ஒரு மட்டையக்கூட அதுல இருந்து எடுக்க கூடாது. நிலத்துல இருந்து ஒரு பிடி மண்ண எடுத்தாலும் எனக்கு குத்தகை கேன்சல் ஆயிடும்.”

புயலால் சரிந்து கிடக்கும் பப்பாளி

அப்படின்னா…. தென்னைக்கு தண்ணி பாய்ச்சிறது, பராமரிப்பு வேலையெல்லாம் யார் செய்வாங்க?

“வாழைக்கு பாய்ச்சும்போதே தென்னைக்கும் நீர் போயிடும். அதுக்குன்னு தனியா ஆள் வைக்க மாட்டாங்க. எல்லாத்தையும் நாமளே பார்த்துக்க வேண்டியதுதான். கூலி எதுவும் கொடுகிறதில்ல” என்று நிலப்புரபுத்துவ விவசாயத்தின் சுரண்டலை எந்த சலனமுமின்றி இயல்பாக சொல்கிறார்.

உங்களுக்கு மொத்தமா எவ்ளோ இழப்பு? நிவாரணம் எதாவது தர்றதா சொன்னாங்களா?

சந்திரபாபு நாயுடு ஆட்சியில இந்த நாலு வருஷமா 3-4 தடவை வெள்ளம்-புயல் வந்துடுச்சி… இதே மாதிரிதான் டேமேஜ் ஆனது. ஆனா எந்த நிவாரணமும் தரல. இதுக்கு முன்னாடி இருந்த காங்கிரசு அரசாவது எதாவது நிவாரணம் கொடுத்துச்சி. இப்ப அதுவும் வரதில்ல.

இழப்பு எவ்ளோ?

ஏக்கருக்கு 800 கண்ணு, ஒரு கண்ணு ரூ.12 மேனிக்கு ரூ 9600. வாழைக்கு பக்கபலமா முட்டுக்கு சவுக்கு கழி வாங்கனும். ஒரு கழி ரூ.49 மேனிக்கு 800 மரத்துக்கு ரூ.39,200 ரூபா. உரம் 6,000 ஆகும். மொத்தம் 54,800 ரூபா செலவாகும். கூட குறைவா பூச்சி தாக்குனா செலவாகும். நல்லா வெளஞ்சி வியாபாரிகிட்ட விற்கும்போது ஒரு தார் வாழை  150 ரூபாய் (விளைச்சல்-சந்தையின் தேவைக்கு ஏற்ப தாரில் விலை அதிகரிக்கும்) போகும். 800 தார் என்று கணக்கு போட்டால் 1,20,000 வரும். இதுல செலவுக்கான கழிவு போக, குத்தகை 25,000 கட்டனும், மீண்டும் இதை அடுத்த வெட்டுக்கு பராமரிக்க ரூ.15,000 ஆகும். அதெல்லாம் போக மிஞ்சுறதுலதான் குடும்பத்த காப்பாத்தனும். இதுல என்னோட உழைப்ப இல்லாம சொல்லியிருக்கேன்.

விற்பனைக்கு உதவாத வாழைகள்

சாஞ்ச  மரத்தில தேறும் காய் அடிபட்ட காய்னு குறைவான விலைக்குத்தான் வாங்குவாங்க. அதனால ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ஏற்கனவே இந்த செலவை எல்லாம் வெளியில 3, 4 பைசா வட்டிக்கு வாங்கித்தான் செஞ்சிருக்கேன். இதுல இந்த பாதிப்ப எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல…

வங்கியில விவசாய கடன் தரதில்லையா?

நமக்கெல்லாம் எப்படி தருவான்..?. இந்த நிலம் குத்தகை நிலம். கடன் வாங்கனும்னா, நிலத்தோட உரிமைப் பத்திரம் வேணும். அது எங்ககிட்ட இருக்காது. குத்தகை அக்ரீமெண்ட் பத்திரமாவது தரனும்…. அதுவும் கிடையாது.

அரசாங்கம் குத்தகை விவசாயின்னு ஒரு ஐ.டி கார்டு கொடுப்பாங்க. அதுவும் தரதில்ல. அப்புறம் எப்படி வாங்க முடியும்? நாங்க பயிர் வச்சிருந்தாலும் நிலத்துக்கு சொந்தாகரங்கன்னு சொல்லி ஜமீன்கள் வாங்கிப்பாங்க.

ஒருவேளை சொந்த நிலம் வச்சிருக்கிறவங்களுக்கு பேங்குல லோன் கொடுத்தாலும் ஏக்கருக்கு ரூ.15000 தான் கொடுப்பாங்க. அதுவும் அவ்ளோ சீக்கிரத்துல வாங்கிட முடியாது.

அரசு நிவாரணமும் கிடைக்காது

வியாபாரிகிட்ட இருந்து முன்பணம் எதாவது வாங்கி இருக்கிங்களா?

“ஆமா, ஏக்கருக்கு ரூ.20,000 வாங்கி இருக்கோம். அந்த வகையில ஒரு கடன் இருக்கு. இதை எப்படி அடைக்கிறது, வியாபாரிகிட்ட என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல” என்கிறார் சோகமாக.

இத்தன வருசமா விவசாயம் செய்யுறீங்க.. ஏன் சொந்தமா நிலம் வாங்கல?

நமக்கு யார் கொடுப்பாங்க…..? அதோட இங்க ஏக்கருக்கு 25 லட்சத்துல இருந்து 50 லட்சம் வரைக்கும் விலை போவுது… அது எந்த மாதிரியான நிலமா இருந்தாலும் இதான் விலை. அப்புறம் எப்படி வாங்க முடியும்?

கோதாவரி

இவ்ளோ பாதிப்பு இருக்க இடத்துல விவசாயம் செய்யிறீங்களே வேற எங்கயாவது போயிட்டு குத்தகை எடுத்து விவசாயம் செய்யிறதுதானே?

சொல்றது சரிதான். ஆனா வேற எங்க போனாலும் லீசு அதிகம். இத விட்டுட்டு போனா திரும்ப இந்த நிலம் கிடைக்காது. இத வாங்க காத்திட்டு கெடக்காங்க. கோதாவரி பக்கமா இருந்தாலும் அந்த தண்ணிய பயன்படுத்துவது இல்லை. பக்கத்துலயே கடல் இருக்கதால உப்புத்தண்ணி கலந்துடுது.  மழை அப்படி  இல்லனா போர் தண்ணி பஞ்சமில்லாம கெடைக்கும்.

திரும்பவும் நீங்க வாழை வைப்பிங்களா? என்ன பண்ண போறீங்க?

அப்படி ஒரு எண்ணம் இல்ல. இதை எல்லாம் கிளீயர் பன்றதுக்கே கொறஞ்சது 15,000 ஆகும். அதுக்கே என்ன பன்றதுன்னு தெரியல. திரும்ப வைக்கணும்னாலும் நேரம் இல்ல. பருவம் தவறி போயிடுச்சி. இப்ப வச்சா மரம் வளர்ந்து நிக்கும்போது திரும்பவும் காத்து, புயல் அடிக்குற காலம் வந்துடும். அப்புறம் எல்லாமும் நாசமாயிடும்.

சவுக்கு கழி
சவுக்கு கழி

உங்களுக்கு பசங்க இருக்காங்களா-என்ன பன்றாங்க?

ரெண்டு பசங்க. ஒரு பொண்ணு ஒரு பையன் . இப்பதான் அரசுப்பள்ளியில  படிக்கிறாங்க.

அவங்கள எதிர்காலத்துல என்ன படிக்க வக்க போறீங்க?

என்ன படிக்க வக்கிறது..! அப்படியே இந்த வேலைதான். இதுதான் எங்க ஊர்ல இருக்க எல்லோருக்கும். ஒரு சிலர் தான் காலேஜ் வரைக்கும் போயிட்டு படிக்கிறாங்க. கடன் வாங்குறது- விவசாயம் செய்யிறது- அதனை அடைக்கிறது- மீண்டும் கடன் வாங்கி விவசாயம் செய்யிறதுன்னு இப்படியே சுத்தி சுத்தி வரணும்.. இதுல புயல்- மழை வந்தா அதையும் சரி கட்டனும். அப்புறம் எங்க படிக்க வைக்கிறது? என்னால படிக்க வக்கிறதெல்லாம் முடியாத காரியம்.

நான் காலையில ஆறு மணிக்கு வீட்டவிட்டு வந்தா நைட்டு பத்து மணிக்குத்தான் நிலத்த விட்டு போவேன். நகரத்துக்கு எப்பவாது ஒருமுறை தான் போவேன். அதுவும் உரம் வாங்க போவேன். அதுக்கு மேல எங்களுக்கு அங்க வேலை இல்ல. நிலந்தான் எங்களுக்கு வாழ்க்கை..! இத காப்பாத்திக்கிட்டாலே போதும்..!

படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

2400 வருடங்களாக நடைபெறும் விவாதம் : பண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது ?

1

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 6

பொருளாதாரத்தின் கடைசி அலகு பண்டம். சரக்கு அல்லது பண்டத்தின் மதிப்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது? இதில் மார்க்சிய அரசியல் பொருளாதாரமும், முதலாளித்துவ அரசியல் பொருளுதாரமும் எப்படி வேறுபடுகின்றன? இந்த மதிப்பு குறித்த விவாதத்தில் முதலாளித்துவக் கல்வி ஒதுக்கும் அம்சங்கள் என்ன? அடிமை உடமை சமூகத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் பண்டத்தின் மதிப்பு குறித்து என்ன சொல்கிறார்? படியுங்கள். கட்டுரையின் இறுதியில் கேள்விகள் இருக்கின்றன – விடையளிக்க முயலுங்கள்!
-வினவு

*****

முதல் தொடக்கம் : அரிஸ்டாட்டில் (தொடர்ச்சி)

மார்க்சியப் பொருளாதாரப் போதனையில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

அ.அனிக்கின்
மார்க்ஸ் முதலாளித்துவ மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிச் செய்த விமர்சன ஆராய்ச்சியின் மூலம் இந்தத் தத்துவத்தை உருவாக்கினார். எல்லாப் பண்டங்களும் ஒரு அடிப்படையான குணாம்சத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே மனிதனுடைய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள். இந்த உழைப்பின் அளவுதான் அந்தப் பண்டத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது.

ECONOMICஒரு கோடரியைச் செய்வதற்கு ஐந்து உழைப்பு மணி நேரமும், ஒரு மண்பானையைச் செய்வதற்கு ஒரு மணி நேரமும் செலவிடப்பட்டால், மற்றவை எல்லாம் சமமாக இருக்கும் பொழுது, கோடரியின் மதிப்பு பானையின் மதிப்பைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு கோடரிக்குப் பரிவர்த்தனையாக ஐந்து பானைகள் கொடுக்கப்படுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ள முடியும். இது பானைகளின் மூலமாகச் சொல்லப்படும் கோடரியின் பரிவர்த்தனை மதிப்பு.

இதை இறைச்சி, துணி, அல்லது வேறு எந்தப் பண்டத்தின் மூலமாகவும் சொல்ல முடியும்; அல்லது கடைசியில் பணத்தின் மூலமாகவும், அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு வெள்ளி அல்லது தங்கத்தின் மூலமாகச் சொல்ல முடியும். ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு பணத்தின் மூலமாக எடுத்துரைக்கப்படும் பொழுது அது அதன் விலை எனப்படும்.

உழைப்பு என்பது மதிப்பைப் படைக்கின்ற ஒன்று என்ற பொருள் விளக்கம் மிக முக்கியமானது. கோடரிகளைத் தயாரிப்பவரின் உழைப்பை பானைகளைச் செய்பவரின் உழைப்போடு ஒப்பிட வேண்டுமென்றால், அதை ஒரு குறிப்பிட்ட தொழிலின் ஸ்தூலமான வகையைச் சேர்ந்த உழைப்பாகக் கருதக் கூடாது; ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு நபரின் கருத்துச் சக்தியையும் உடற்சக்தியையும் செலவு செய்வதாக மட்டுமே கருத வேண்டும்; அதாவது ஸ்தூலமான வடிவத்துக்குச் சம்பந்தம் இல்லாத சூக்குமமான உழைப்பாக மட்டுமே கருத வேண்டும். ஒரு பண்டத்தின் பயன் மதிப்பு (உபயோகம்) அதனுடைய மதிப்பைக் காட்டும் அவசியமான நிபந்தனை; ஆனால் அந்த மதிப்புக்கு அது தோற்றுவாயாக இருக்க முடியாது.

எனவே மதிப்பு புறவயமானதாக இருக்கிறது. அது ஒரு நபரின் உணர்ச்சிகளிலிருந்து சுதந்திரமானதாக, அந்தப் பண்டத்தின் உபயோகத்தை அவர் தன்னுடைய மனதில் எப்படி மதிக்கிறார் என்பதற்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கிறது. மேலும் மதிப்புக்கு ஒரு சமூகத் தன்மை இருக்கிறது. ஒரு நபருக்கும் ஒரு பண்டம், பொருளுக்கும் இடையே உள்ள உறவின் மூலம் அது நிர்ணயக்கப்படுவதில்லை; தங்களுடைய உழைப்பின் மூலம் பண்டங்களை உருவாக்கி அந்தப் பண்டங்களைத் தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்கின்ற மக்களுக்கிடையே உள்ள உறவின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தக் கொள்கைக்கு மாறாக, நவீன முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பண்டங்களின் அகவய உபயோகமே மதிப்பின் ஆதாரம், அடிப்படை என்று கருதுகிறது. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு அந்தப் பண்டத்தை நுகர்வோனின் விருப்பத்தின் தீவிரத்திலிருந்தும் அந்தக் குறிப்பிட்ட பண்டம் சந்தையில் கிடைக்கின்ற அளிப்பு நிலையிலிருந்தும் ஏற்படுகிறது. எனவே அது தற்செயலானதாக, ”சந்தை” மதிப்பு எனவாகிறது. மதிப்புப் பிரச்சினை தனிப்பட்ட மிகு விருப்பத் துறைக்கு ஒதுக்கப்படுவதால், இங்கே மதிப்பு அதன் சமூகத் தன்மையை இழந்து விடுகிறது; அது மக்களுக்கிடையே உள்ள உறவு என்பது போய்விடுகிறது.

மதிப்புத் தத்துவம் அதனளவில் மட்டும் முக்கியமானதென்று நினைக்கக் கூடாது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்திலிருந்து நாம் அடைகின்ற முக்கியமான முடிவு உபரி மதிப்புத் தத்துவமாகும். முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுகின்ற செயல் முறையை இந்தத் தத்துவம் விளக்குகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பில் கூலி உழைப்பாளியால் உருவாக்கப்பட்டு ஆனால் முதலாளியினால் கூலி கொடுக்கப்படாதிருக்கும் பகுதியின் மதிப்பு உபரி மதிப்பு எனப்படும். முதலாளி அந்தப் பகுதிக்குக் கூலி கொடுக்காமலே தனக்கென ஒதுக்கிக் கொள்கிறார்; முதலாளி வர்க்கத்தின் லாப வேட்டையின் ஆதாரம் இதுவே. முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் உபரி மதிப்பைப் படைப்பதே. இதை உற்பத்தி செய்வதே முதலாளித்துவத்தின் பொதுப் பொருளாதார விதி. உபரி மதிப்பில்தான் பொருளாதார முரணியலின், முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள வர்க்கப் போராட்டத்தின் மூல வேர்கள் இருக்கின்றன.

Economic-politc-Surplusமார்க்சியப் பொருளாதாரப் போதனையின் அடிப்படை என்ற முறையில் உபரி மதிப்புத் தத்துவம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதையும் ஆழமடைவதையும் கடைசியில் அதன் வீழ்ச்சியையும் நிரூபிக்கிறது. மார்க்சியத்துக்கு எதிராக முதலாளித்துவ அறிஞர்களின் தாக்குதல்கள் பிரதானமாக உபரி மதிப்புத் தத்துவத்தை நோக்கியே திருப்பப்படுகின்றன. மதிப்பைப் பற்றிய அகவயத் தத்துவமும் அதனோடு தொடர்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மற்ற கருத்துக்களும் சுரண்டலையும் வர்க்க முரண்பாடுகளையும் கோட்பாட்டளவில் ஒதுக்குகின்றன.

கடந்த 2,400 வருடங்களாக நடைபெற்றுவரும் ஒரு விவாதத்தை இது விளக்கிக் காட்டுகிறது. அரிஸ்டாட்டில் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தொலைவில் நின்று கொண்டாவது ஆதரித்தாரா? அல்லது ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பை அதன் உபயோகத்தைக் கொண்டு கணக்கிடுகிற கொள்கைகளுக்கு அவர் முன்னோடியா? அரிஸ்டாட்டில் மதிப்புத் தத்துவம் ஒன்றை முழுமையாக உருவாக்கவில்லை என்பதனால்தான் இந்த விவாதம் ஏற்படுகிறது; அத்தகைய தத்துவத்தை அவர் உருவாக்கியிருக்கவும் முடியாது.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

அவர் பரிவர்த்தனையில் பண்ட மதிப்புக்களின் சமன்பாட்டைக் கண்டார்; அந்த சமன்பாட்டுக்குப் பொது அடிப்படை எது என்று தீவிரமாகத் தேடினார். அவருடைய சிறப்பான சிந்தனையின் ஆழத்தைக் காட்டுவதற்கு இது மட்டுமே போதும்; அவருக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பொருளாதார ஆராய்ச்சியின் திருப்புமுனையாக இது இருந்தது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் மிகமிக ஆரம்ப வடிவத்தைப் போன்ற சில கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.

மேலே தரப்பட்ட பகுதியில் பொலியான்ஸ்கி குறிப்பிடுவது இந்தக் கருத்துக்களாகவே இருக்க வேண்டும். ஆனால் அவர் மதிப்புப் பிரச்சினையை அறிந்திருந்தார் என்பது இதைக் காட்டிலும் முக்கியமானதாகும். நிக்கமாகஸிய அறவியல் என்ற புத்தகத்திலுள்ள பின்வரும் பகுதியில் இதைக் காணலாம்:

நிக்கமாகஸிய அறவியல் நூல்

”ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கிடையில் உதாரணமாக இரண்டு மருத்துவர்களுக்கிடையே – எந்த வியாபாரமும் நடப்பதில்லை; ஆனால் ஒரு மருத்துவருக்கும் விவசாயிக்கும் இடையே நடைபெறுகிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் வெவ்வேறானவர்கள், சமமாக இல்லாதவர்களுக்கிடையில் அது நடைபெறுகிறது; ஆனால் பரிவர்த்தனை ஏற்படுவதற்கு முன்பாக இவர்கள் சமப்படுத்தப்பட வேண்டும்… அதனால்தான் எல்லாவற்றுக்கும் ஒரே அளவுகோல் அவசியமாகிறது… அப்படியானால், இனங்கள் சமப்படுத்தப்பட்ட பிறகு சரிசமமாகத் திருப்பிக் கொடுப்பது சாத்தியமாகும். அது பின்வரும் அளவு விகிதத்தில் இருக்கும்:

விவசாயி : செருப்புத் தயாரிப்பவன் = செருப்புத் தயாரிப்பவனின் உற்பத்திப் பொருள் : விவசாயியின் உற்பத்திப் பொருள்.”(1)

இங்கே மதிப்பு என்பது வெவ்வேறான பயன் மதிப்புக்களைக் கொண்டிருக்கும் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர்களுக்கிடையே உள்ள சமூக உறவு என்ற பொருள் விளக்கம் கரு வடிவத்தில் இருக்கிறது. இதிலிருந்து விவசாயியும் செருப்புத் தயாரிப்பவரும் ஒருவருக்கொருவர் ஒரு மூட்டை தானியத்தையும் ஒரு ஜோடி செருப்பையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரத்தை, உழைப்பின் அளவைக் கொண்டு உறவு கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு ஒரே ஒரு காலடி எடுத்து வைத்தால் போதும் என்று தோன்றும். ஆனால் அரிஸ்டாட்டில் இந்த முடிவுக்கு வரவில்லை.

அவரால் ஏன் இந்த முடிவுக்கு வரமுடியவில்லை என்றால் அவர் பண்டைக் காலத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகத்தில் வாழ்ந்தார். அந்த சமூகத்தின் இயல்பே சமத்துவம் என்ற கருத்துக்குப் புறம்பானது, எல்லா வகையான உழைப்புகளும் சமமான மதிப்புடையவை என்ற கருத்துக்குப் புறம்பானது. உடல் உழைப்பு அடிமைகள் செய்ய வேண்டிய உழைப்பு என்று இழிவாகக் கருதப்பட்டது. கிரீஸில் சுதந்திரமான கைவினைஞர்களும் விவசாயிகளும் இருந்தபோதிலும், சமூக, உழைப்புக்குப் பொருள் விளக்கம் தரும் பொழுது அரிஸ்டாட்டில் அவர்களைப் “பார்க்கத் தவறியது” விசித்திரமானதே.

எனினும் மதிப்பை (பரிவர்த்தனை மதிப்பை) மூடியிருக்கும் துணியை அகற்றத் தவறிவிட்ட அரிஸ்டாட்டில் வேதனைப் பெருமூச்சு விட்டபடி இந்த மர்மத்துக்கு விளக்கத்தைத் தேடி பண்டங்களின் உபயோகத்தில் இருக்கின்ற குணவேறுபாடு என்ற மேலெழுந்தவாரியான உண்மைக்கு வந்து சேருகிறார். இந்தக் கருத்தின் (”எனக்கு உன்னிடமிருக்கும் பண்டம் வேண்டும்; உனக்கு என்னிடமிருக்கும் பண்டம் வேண்டும். எனவே நாம் பரிவர்த்தனை செய்து கொள்கிறோம்” என்று அதைக் கொச்சையாகச் சொல்லலாம்) அற்பமான தன்மை , அளவு ரீதியில் அது தெளிவில்லாமல் இருப்பது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும். எனவே பணம் பண்டங்களை ஒப்பிடக் கூடியவைகளாக்குகிறது என்கிறார்.

“எனவே எல்லாப் பொருள்களையும் ஒப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்று தேவைப்படுகிறது …. இப்பொழுது அவற்றுக்கு உண்மையாகவே தேவை ஏற்படுவது இதனால்தான். இந்த வியாபாரங்களின் பொதுவான இணைப்பு இதுதான்…… பொதுவான உடன்பாட்டின் மூலம் பணம் தேவையின் பிரதிநிதியாகிறது.”(2)

இது அடிப்படையாகவே மாறுபட்ட நிலையாகும். அதனால்தான் நாம் மேலே மேற்கோள் காட்டிய பேராசிரியர் பெல் கருத்துக்கள் போன்றவை சாத்தியமாகின்றன.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : பொருளாதாரமும் செல்வ இயலும்

அடிக்குறிப்பு:
(1) Aristotle, The Nicomachean Ethics, London, Toronto, N.-Y., 1920, p. 113.
(2) Aristotle, op. cit., p. 113.

கேள்விகள்:

  1. மார்க்சியப் பொருளாதாரக் கல்வியில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் என்றால் என்ன?
  2. உற்பத்தியின் அலகான பண்டத்தின் மதிப்பை படைப்பது எது? ஏன்?
  3. பண்டத்தின் மதிப்பு – “தங்களுடைய உழைப்பின் மூலம் பண்டங்களை உருவாக்கி அந்தப் பண்டங்களைத் தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்கின்ற மக்களுக்கிடையே உள்ள உறவின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.” ஏன்?
  4. பண்டத்தின் மதிப்பு குறித்து முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் எவ்வாறு மதிப்பிடுகிறது? அது சரியா? ஏன்?
  5. உபரி மதிப்பு என்றால் என்ன?
  6. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் சுரண்டலையும் வர்க்க முரண்பாடுகளையும் பேசாமல் ஒதுக்கி வைப்பது ஏன்?
  7. பண்டத்தின் மதிப்பு குறித்த பிரச்சினையில் அரிஸ்டாட்டிலின் பங்கு என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால் ….

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 45

மாக்சிம் கார்க்கி
”நாய்க்குப் பிறந்த பயல்களா! நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களிலெல்லாம் நீங்கள் தலை கொடுக்கிறீர்கள். இது ஓர் அரசாங்கக் காரியம் தெரியுமா? நீங்கள் எனக்கு நன்றிதான் செலுத்த வேண்டும். நான் உங்களிடம் இவ்வளவு நல்லபடியாய் நடந்து கொண்டதற்காக, நீங்கள் என் முன் மண்டியிட்டு உங்கள் நன்றி விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உங்கள் அனைவரையும் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாக்க வேண்டுமென்று நான் நினைத்தால், அப்படியே செய்து முடிக்க எனக்குத் தைரியம் உண்டு.”

தலைகளிலே தொப்பியே வைக்காத சில முஜீக்குகள் மட்டும் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டார்கள். மேகக்கூட்டங்கள் தணிந்து இறங்கிக் கவிந்த உடனேயே இருள் பரவ ஆரம்பித்தது. அந்த நீலக்கண் முஜீக், தாய் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி வந்து சேர்ந்தான்.

“என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா?”

“ஆமாம்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

“நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?” என்று அவளது கண்களையே பார்த்துக்கொண்டு கேட்டான் அவன்.

”நான் விவசாயிப் பெண்களிடமிருந்து லேஸ்களும், துணிகளும் விலைக்கு வாங்க வந்தேன்.”

அந்த முஜீக் தன் தாடியை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

“எங்கள் பெண்கள் அந்தச் சாமான்களையே நெய்வதில்லையே!” என்று மெல்லக் கூறிக்கொண்டே அந்தக் கட்டிடத்தை ஒரு பார்வை பார்த்தான் அவன்.

தாய் தனது கண்ணால் அவனை ஒருமுறை அளந்து பார்த்தாள். உள்ளே போவதற்கு வசதியான நேரத்தை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தாள். அந்த முஜீக்கின் முகம் அழகாகவும் சிந்தனை நிரம்பியதாகவும் இருந்தது. அவனது கண்களில் சோக பாவம் ததும்பியது. அவன் நெடிய உருவமும் அகன்ற தோள்களும் உடையவனாயிருந்தான்; ஒரு சுத்தமான துணிச் சட்டையும் சட்டைக்கு மேல் ஏகப்பட்ட ஒட்டுக்களுடன் கூடிய ஒரு கோட்டும், கபில நிறமான முரட்டுக் கால்சராயும், வெறும் கால்களில் செருப்புக்களும் அணிந்திருந்தான்.

இனந்தெரியாத காரணத்தால் தாய் நிம்மதியோடு ஆழ்ந்து பெருமூச்செறிந்தாள். தட்டுத் தடுமாறும் தனது சிந்தனைகளையும் முந்திக் கொண்டு உந்திவரும் ஓர் உணர்ச்சியால் அவள் திடீரெனப் பேசினாள்:

”இன்றிரவு நான் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பாயா?”

அந்தக் கேள்வி அவளுக்கே எதிர்பாராத சொல்லாக ஒலித்தது. அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே அவளது உடல் முழுவதும் திடீரென இறுகுவது போல் இருந்தது. அவள் நிமிர்ந்து நின்று அந்த மனிதனை உறுதியோடு அசைவற்றுப் பார்த்தாள். என்றாலும் பின்னி முடியும் சிந்தனைகள் அவளது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தன.

“நான்தான் நிகலாய் இவானவிச்சின் அழிவுக்குக் காரணமாயிருப்பேன். பாவெலையும் நான் ரொம்ப காலத்துக்குப் பார்க்கவே முடியாது. அவர்கள் என்னை அடிக்கத்தான் போகிறார்கள்!”

அந்த முஜீக் அவசரம் ஏதுமில்லாமல், தரையை நோக்கியவாறே தனது கோட்டை இழுத்துவிட்டுக் கொண்டு நிதானமாகப் பதில் சொன்னான்:

“இரவு தங்குவதற்கா? ஏன் தரமாட்டான்? என் வீடு ஒரு சின்ன ஏழைக் குடில். அவ்வளவுதான்.”

”நல்ல வீடுகளில் இருந்து எனக்குப் பழக்கமேயில்லை” என்றாள் தாய்.

“அப்படியென்றால் சரி” என்று கூறிக்கொண்டே அந்த முஜீத் தலையை உயர்த்தி மீண்டும் தன் கண்களால் அவளை அளந்து நோக்கினான். ஏற்கெனவே இருண்டு விட்டது. அவனது தோற்றத்தில் இருளின் சாயை படிந்திருந்தது. அவனது கண்கள் மங்கிப் பிரகாசித்தன; முகம் அந்தி மயக்க மஞ்சள் வெயிலால் வெளிறித் தோன்றியது.

”சரி, நான் இப்போதே வருகிறேன். தயைசெய்து என்னுடைய டிரங்குப் பெட்டியை கொஞ்சம் தூக்கி வருவாயா?” என்று மெதுவாகச் சொன்னாள் தாய். அப்படிச் சொல்லும்போது அவள் மலை மீதிருந்து சரிந்து விழுவது போல் உணர்ந்தாள்.

”சரி.”

“அவன் தோள்களை உயர்த்தி மீண்டும் தன் கோட்டைச் சரி செய்து கொண்டான்.”

”இதோ வண்டி வந்துவிட்டது” என்றான் அவன்.

ரீபின் அந்த அரசாங்கக் கட்டிடத்தின் முகப்பில் தோன்றினான். அவனது தலையிலும் முகத்திலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன; அவனது கைகளும் மீண்டும் கட்டப்பட்டிருந்தன.

”போய் வருகிறேன். நல்லவர்களே” என்ற குரல் அந்த குளிரில் அந்தி மயக்க ஒளியினூடே ஒலித்தது. உண்மையை நாடுங்கள், அதைப் பேணிப் பாதுகாருங்கள். உங்களிடம் தூய்மையான பேச்சுப் பேசும் மனிதனை நம்புங்கள். சத்தியத்தைக் காப்பதற்காக போராடத் தயங்காதீர்கள்!”

”உன் வாயை மூடும்” என்று போலீஸ் அதிகாரி கத்தினான். “ஏ, போலீஸ்கார மூடமே குதிரையைத் தட்டி விடு!”

“நீங்கள் எதை இழக்கப் போகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள்.”

வண்டி புறப்பட்டுச் சென்றது. இரு போலீஸ்காரர்களுக்கிடையில் ரீபின் உட்கார்ந்திருந்தான். அங்கிருந்தவாறே அவன் சத்தமிட்டான்.

“நீங்கள் ஏன் பட்டினியால் செத்துக் கொண்டேயிருக்க வேண்டும்? உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டால், உங்களுக்கு உணவும் கிடைக்கும், நியாயமும் கிட்டும். போய் வருகிறேன், நல்லவர்களே!’’

வண்டிச் சக்கரங்களின் பலத்த ஒசையாலும், குதிரைகளின் காலடியோசையாலும், போலீஸ் தலைவனின் குரலாலும் ரீபினுடைய குரல் ஆழ்ந்து அமிழ்ந்து போய்விட்டது.

”எல்லாம் முடிந்தது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் அந்த முஜீக். பிறகு தாயின் பக்கம் திரும்பித் தணிந்த குரலில் பேசினான். “எனக்காகக் கடையில் கொஞ்ச நேரம் காத்திருங்கள், நான் இதோ வந்துவிடுகிறேன்.”

தாய் அறைக்குள் சென்று, அந்தக் கடையின் அடுப்புக்கு எதிராக இருந்த மேஜையருகில் உட்கார்ந்தாள். அவள் ஒரு துண்டு ரொட்டியை எடுத்துப் பார்த்துவிட்டு அதைத் தட்டிலேயே வைத்துவிட்டாள். மீண்டும் அவளுக்கு அந்தக் கிறக்க உணர்ச்சி ஏற்பட்டது. அவளால் சாப்பிடக்கூட முடியவில்லை. அவளது உடம்பு குதுகுதுத்துக் காய்ந்து உடலை பலவீனப்படுத்தியது. அந்தக் காய்ச்சல் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை இழுத்து நிறுத்தி, அவளைக் கிறக்கச் செய்தது. அவளுக்கு முன்னால், அந்த நீலக்கண் முஜீக்கின் முகம் தெரிந்தது. ஆனால் அந்த முகம் பரிபூரணமாகத் தோன்றவில்லை. அதைக் கண்டவுடன் அவநம்பிக்கை உணர்ச்சி மேலிட்டது. அவன் தன்னைக் கைவிட்டுவிடுவான் என்று எண்ணிப் பார்க்க அவள் விரும்பவில்லை. இருந்தாலும் அந்த எண்ணம் அவள் மனத்தில் எப்போதோ குடி புகுந்துவிட்டது. அவளது இதயத்தை ஒரு பளு அழுத்தியது.

“அவன் என்னைக் கவனித்தானே. கவனித்துப் பார்த்து ஊகித்துக் கொண்டானே” என்று அவள் லேசாகச் சிந்தித்தாள்.

அந்த எண்ணம் வளரவில்லை. கிறக்க உணர்ச்சியிலும் குழப்ப உணர்ச்சியிலும் அந்த எண்ணம் முங்கி மூழ்கிப் போய்விட்டது. ஜன்னலுக்கு வெளியே முன்னிருந்த இரைச்சலுக்குப்பதில் இப்போது ஆழ்ந்த அமைதி நிலவியது. அந்த அமைதி அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றி வட்டமிடும் பயவுணர்ச்சியையும் பாரவுணர்ச்சியையும் பிரதிபலித்துக் காட்டியது. தனிமை உணர்ச்சி பெருகியது. சாம்பலைப் போல் நிறம் கறுத்த ஒர் அந்தி மயக்கத்தை இதயம் முற்றிலும் பரப்பியது.

மீண்டும் அந்த யுவதி வாசல் நடையில் தோன்றினாள்.

”நான் உங்களுக்குப் பொரித்த முட்டை கொண்டுவரட்டுமா?” என்று கேட்டாள்.

”சிரமப்படாதே. எனக்குச் சாப்பிடவே மனமில்லை. அவர்களுடைய கூச்சலும் கும்மாளமும் என்னைப் பயமுறுத்தி விட்டுவிட்டன.

அந்தப் பெண் மேஜையருகே வந்து ரகசியமாக உத்வேகம் நிறைந்த குரலில் பேசினாள்.

”அந்தப் போலீஸ் தலைவன் அவனை எப்படி அடித்தான் தெரியுமா? நீங்கள் அதைப் பார்த்திருக்க வேண்டும். நான் பக்கத்தில்தான் நின்றேன். கன்னத்தில் கொடுத்த அறையில் அவன் பற்கள் உதிர்ந்துவிட்டன. அவன் குபுக்கென்று ரத்தம் கக்கினான். கரிய சிவந்த கட்டியான ரத்தம் அவனது கண்கள் வீங்கிப்போய் மூடிவிட்டன. அவன் ஒரு தார் எண்ணெய்த் தொழிலாளி. அந்தப் போலீஸ் ஸார்ஜெண்டோ மாடி மேலே போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகக் குடித்து மயங்கிக் கிடந்தான். இன்னும் குடிக்கக் கேட்டான். ஒரு பெரிய சதிக் கூட்டமே இருக்கிறதாம். அவர்களுக்கெல்லாம் இந்தத் தாடிக்கார மனுஷன்தான் தலைவனாம். மூன்று பேர்களைப் பிடித்தார்களாம். ஒருவன் தப்பியோடிவிட்டானாம். இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயரையும் அவர்கள் பிடித்திருக்கிறார்களாம். இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதாம்; தேவாலயங்களைக் கொள்ளையடிக்கும்படி மற்றவர்களைத் தூண்டி விடுகிறார்களாம். இவர்கள் இப்படிப்பட்ட ஆசாமிகள்தானாம். எங்கள் கிராமத்து முஜீக்குகள் சிலர் இவர்களுக்காக வருத்தப்பட்டார்கள். சிலர் இவர்களுக்கு இத்தோடு சமாதி கட்டிவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த மாதிரியான கேவல புத்தி படைத்த முஜீக்குகள் இங்கே அதிகம் பேர் இருக்கிறார்கள்!”

அந்தப் பெண்ணின் தொடர்பிழந்த படபடக்கும் பேச்சைத் தாய் கவனமாகக் கேட்டாள். அதைக் கேட்டு தனது பயத்தையும் பீதியையும் போக்கி வெற்றி காண முனைந்தாள். தனது பேச்சைக் கேட்பதற்கும் ஓர் ஆள் இருக்கிறது என்ற உற்சாகத்தில் அந்தப் பெண் உத்வேகமும் உவகையும் பொங்கித் ததும்ப, ரகசியமான குரலிலேயே பேசத் தொடங்கினாள்.

”இதெல்லாம் வெள்ளாமை விளைச்சல் சரியாக இல்லாததால்தான் ஏற்படுகிறது என்று எங்கள் அப்பா சொல்கிறார். இரண்டு வருஷ காலமாய் இங்கே நிலத்திலே எந்த விளைச்சலும் கிடையாது. இதனால்தான் இத்தகைய முஜீக்குகள் தோன்றுகிறார்கள். கிராமக் கூட்டங்களில் அவர்கள் சண்டைப் பிடிக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள். ஒரு நாள் வசுகோவ் என்பவன் பொருள்களை, அவன் வரி கட்டவில்லை என்பதற்காக ஏலம் போட்டார்கள். அவனோ ”இதோ உன் வரி” என்று சொல்லிக் கொண்டே நாட்டாண்மைக்காரரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறான்.”

வெளியே பலத்த காலடியோசை கேட்டது. தாய் மேஜையைப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

அந்த நீலக்கண் முஜீக் தனது தொப்பியை எடுக்காமலே உள்ளே வந்தான்.

“உன் பெட்டி எங்கே?”

அவன் அதை லேசாகத் தூக்கி ஆட்டிப் பார்த்தான்.

“காலிப் பெட்டிதான். சரி, மார்க்கா! இவளை என் குடிசைவரை கூட்டிக்கொண்டு போ.”

அவன் திரும்பிப் பார்க்காமலே சென்றான்.

“இன்றிரவு நீங்கள் இந்த ஊரிலா தங்குகிறீர்கள்?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமாம். பின்னால் லேஸ் வாங்க வந்தேன்………”

“இங்கே யாரும் பின்னுவதில்லையே, தின்கோவாவிலும், தாரினாவிலும்தான் நெய்கிறார்கள். இங்கே கிடையாது” என்று விளக்கினாள் அந்த யுவதி.

”நான் நாளைக்கு அங்கே போவேன்…”

“தேநீருக்குக் காசு கொடுத்து முடிந்ததும், தாய் அந்தப் பெண்ணுக்கு, மூன்று கோபெக்குகளை இனாமாகக் கொடுத்தாள். இனாம் கொடுத்ததில் அவளுக்கு ஓர் ஆனந்தம். அவர்கள் வெளியே வந்தார்கள். ஈரம் படிந்த அந்த ரோட்டில் அந்தப் பெண் வெறும் கால்களோடு விடுவிடென்று நடந்து சென்றாள்.

படிக்க:
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

“நீங்கள் விரும்பினால், நான் தாரினாவுக்குச் சென்று அங்குள்ள பெண்களை, அவர்கள் பின்னிய லேஸ்களை எடுத்துக்கொண்டு இங்கு வரச் சொல்கிறேன்” என்றாள் அந்தப் பெண், ”அவர்களே இங்கு வந்துவிடுவார்கள். நீங்கள் அங்கே போக வேண்டியதில்லை. இங்கிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம்தான் இருக்கிறது…….”

“நீ ஒன்றும் கவலைப்படாதே, கண்ணு” என்று கூறிக்கொண்டே அவளோடு சேர்ந்து நடக்க முயன்றாள் தாய். குளிர்ந்த காற்று அவளுக்கு இதம் அளித்தது. ஏதோ ஒரு மங்கிய தீர்மானம் அவளது மனத்துக்குள்ளே வடிவாகி உருபெறுவதாகத் தோன்றியது. அந்த உருவம் மெதுவாக வளர்ந்து வந்தது. அதன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையால், அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருந்தாள்.

”நான் என்ன செய்ய வேண்டும்? நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால்…”

பொழுது ஒரே இருளாகவும் குளிராகவும் ஈரமாகவும் இருந்தது. குடிசைகளின் ஜன்னல்களில் செக்கர் ஒளி மினுமினுத்தது. சிறு சிறு அழுகைக் குரல்களும், கால்நடைகளின் கனைப்பும் அந்த அமைதியினூடே கேட்டன. அந்தக் கிராமம் முழுவதுமே ஏதோ ஓர் இருண்ட பாரவுணர்ச்சியைச் சுமந்து கவலையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது.

“இதோ” என்று காட்டினாள் அந்தப் பெண்; ”இரவைக் கழிப்பதற்கு மிகவும் மோசமான இடத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். இவன் மிகவும் ஏழையான முஜீக்.”

அவள் கதவைத் தட்டினாள். கதவு திறந்தவுடன் அவள் தன் தலையை உள்ளே நீட்டிச் சத்தமிட்டாள்.

“தத்யானா அத்தை!”

பிறகு அவள் ஓடிப்போய்விட்டாள்.

“போய்வருகிறேன்” என்ற அவளது குரல் இருளினூடே ஒலித்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்

Slider-gaja-cyclone-microfinance-company-atrocities-delta-farmers-protest-(5)
தமிழக அரசே ! உடனடியாக நிவாரணம் வழங்கு ! 100 நாள் வேலையை முறைப்படுத்தி கொடு! விளார் கிராம மக்கள் குமுறல் !

ஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீண்டு வராமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தஞ்சை மாநகரத்தையொட்டி உள்ள விளார் ஊராட்சி.

Tanjavour-People-100-day-work-protest (2)அரசு மற்ற கிராமங்களுக்கு பெயரளவுக்கு செய்த நிவாரணத்தைக் கூட இந்த ஊராட்சியில் மேற்கொள்ளவில்லை. அத்துடன் 100 நாள் வேலையிலும் மக்களை ஏமாற்றி அதிகாரிகள் பகல் கொள்ளையடித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த பெண்களும் மக்கள் அதிகார அமைப்பு தோழர்களிடம் ஒன்று திரண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆகவே முதல் கட்டமாக மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கலாம், பிறகு அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்கலாம் என முடிவுசெய்து 75-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பச்சையப்பன் தலைமையில் 31.12.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்களை மனுவாக கொடுத்தனர்.

Tanjavour-People-100-day-work-protest (1)
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்துவிட்டு வெளியே வந்த மக்கள்

ஆட்சியரும் கோரிக்களை உடனடியாக தீர்த்துக் கொடுப்பதாக உறுதி கொடுத்தார். அந்த உ றுதி நிறைவேறாத பட்சத்தில் மக்கள் தங்களது அடுத்த கட்ட போரட்டத்தை எப்படி நடத்தலாம் என்று தயாராகி வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

*****

தமிழக அரசே! நுண்கடனை கட்ட மக்களை மிரட்டும் வங்கிகள் மீது நடவடிக்கை எடு! முழு கடனையும் அரசே பொறுப்பேற்றுக்கொள்! திருவாரூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு!

ஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்து இன்னும் சகஜநிலைமைக்கு திரும்ப இயலாமல் உள்ளது டெல்டா மாவட்டங்கள். அரசின் நிவாரணமோ கண்துடைப்பு நாடகமாக நடந்தது. இந்த நிலையில் நுண்கடனை கட்டியே ஆக வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் மக்களை மிரட்டி வருகின்றன.

gaja cyclone microfinance company atrocities delta farmers protest (7)
நுண்கடன் நிறுவனங்களின் அட்டூழியத்தை ஊடகங்களிடம் முன்வைக்கும் மக்கள்.

நிவாரணத் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, 100 நாள் ஊதியம் ஆகிவற்றை மக்களிடம் அனுமதி கேட்காமல் சட்ட விரோதமாக பிடித்துக் கொள்கின்றன. கந்துவட்டியை மிஞ்சும் இந்த கொடூரம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளியுள்ளது. இதை எதிர்த்தும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

அதனடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் “நுண்கடன் வசூலை 6 மாதம் தள்ளி வைக்க” வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அதையும் மீறி இந்த நிறுவனங்கள் மக்களை மிரட்டி வந்தன.

இதை அறிந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் “நுண்கடனை யாரும் கட்ட வேண்டாம்! மீறி கட்டாயப்படுத்தினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” என்று சுவரொட்டி அடித்து பரவலாக ஒட்டினர். இந்த சுவரொட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. மாவட்டம் முழுக்க இருந்து தொலைபேசி அழைப்புகள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பல பெண்கள் தங்களது நிலையை சொல்லி கதறி அழுவதையே காணமுடிந்தது.

gaja cyclone microfinance company atrocities delta farmers protest (2)
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க செல்லும் மக்கள்.

இவர்களை அழைத்து முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க திட்டமிடப்பட்டது. நேற்று (31.12.2018) இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திருவாரூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் தலைமையில் திரண்டனர். ஒவ்வொருவரும் தனிதனியாக மனுவாக எழுதி தங்களது கோபங்களால் மாவட்ட ஆட்சியரை கேள்வி கணைகளாய் துளைத்தெடுத்தனர்.

உடனடியாக வங்கிகளை அழைத்து கண்டிப்பதாகவும், இனி இவ்வாறு நடக்காது என உறுதியளித்தார். ஆனால் மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலமாகவே இதெல்லாம் நடக்காது என்பதை உணர்ந்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைப்பு விட்டுள்ளனர், நுண்கடனை தமிழக அரசே முழுவதுமாக ஏற்கவைக்கும் வரை விடமாட்டோம் என எச்சரித்துச் சென்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர். தொடர்புக்கு : 96263 52829

ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு வினவு நேரலையில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் இறுதிப் பகுதி !

அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்காது

* “பாசிச பா.ஜ.க ஒழிக” என சோஃபியா முழக்கமிட்டு கைதானபோது ஒன்றுபட்டு நின்ற தமிழகம், இன்று பாராமுகமாக இருப்பது ஏன்? சோஃபியாவின் தியாகம் வீண் போனதா?
* ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக மக்கள் ஈடுபாடு காட்டுவதில்லையே? இதை எப்படி பார்ப்பது?
* எல்லா மீடியாவும் வேதாந்தா வென்றது என கூறுகின்றன. காசு வாங்கிக் கொண்டு செய்திகள் போடுகின்றன. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
* போராட்ட கமிட்டி, போலீசு, நிர்வாகம், அரசு, நீதிமன்றம் பற்றி பாத்திமா பாபு வெளியிட்ட அறிக்கைக்கு உங்கள் பதில் என்ன?

பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !

 

***

மக்கள் போராட்டம்தான் ஸ்டெர்லைட்டை விரட்டும்

* தூத்துக்குடியில் வீட்டில் கருப்பு கொடி கட்டுகிறார்கள். வெளியூரில் இருந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டால், போலீசு கைதுசெய்கிறார்கள். இதை எப்படி எதிர்கொள்வது?
* பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குறிப்பிட்ட பகுதி மக்களால் போராடி வெற்றி பெற முடியுமா?
* மக்கள் அதிகாரம் ஸ்டெர்லைட் பிரச்சினையை வைத்து கட்சியை வளர்க்கப் பார்க்கிறது என மற்றவர்கள் கேட்பதற்கு உங்கள் பதில் என்ன?
* இப்போது தூத்துக்குடி மக்களின் போராட்டம் எப்படி இருக்கு? அடுத்தக்கட்ட போராட்டம் எப்படி இருக்கும்?
* மக்கள் அதிகாரம் மக்களுக்கு வைக்கும் வேண்டுகோள் என்ன?

பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !

 

***

மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவிற்கு பாசிச பாஜக அனுமதி! தமிழகத்தை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தோடு ஓசூர் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. நாள் 30.12.2018.

ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளான தோழர் இராமு, தோழர் சங்கர், தோழர் செல்வி மற்றும் தருமபுரி மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் சென்னப்பன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகளும், நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகளையும் தயாரித்து கொண்டு நாட்றாம்பாளயம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, மற்றும் ஒசூர் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்திருந்தனர்.

தோழர் கோபிநாத் தனது கண்டன உரையில், “மேகதாதுவில் அணைக் கட்டுவதை ஆதரித்து கர்நாடக அமைச்சர் சிவக்குமார் முழங்குகிறார். ஆனால், மத்தியிலே இருக்கிற பிரதமர் மோடி, அமைச்சர் நிதின் கட்கரி இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? நிதின்கட்கரி எதிர்க்கட்சியினருக்கு விடுத்த அறிக்கையில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் என்ன சொன்னாரோ அதையேச் சொல்லி காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டம் என்பது தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டம். அதனால நீங்கள் பாராளுமன்றத்தை முடக்காதீர்கள், மக்கள் நலத்திட்டங்கள் விவாதிக்கப்படாமல் போய்விடும் என்று நிதின் கட்கரி பேசுகிறார்.

தமிழ்நாடு என்றாலே எப்பவுமே பி.ஜே.பி-க்கு பிடிக்காது. இது பெரியார் பிறந்த மண், பார்ப்பன எதிர்ப்பு கொண்ட மண். ஆக, தமிழ்நாட்டை எப்போதுமே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் பி.ஜே.பி தமிழ் நாட்டின் மீது கரிசனை கொள்ளுமா? இங்கே நம்ம தமிழ்நாட்டில ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது. ஆனால், கர்நாடகாவில் ஓட்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பாக இந்தப் பிரச்சினையை பார்க்கிறது. கர்நாடகாவில் இருக்கிற பி.ஜே.பி என்ன சொல்லுது? சுப்ரீம் கோர்ட்டு சொல்றதெல்லாம் இருக்கட்டும், எங்களுடைய மோடி கோர்ட்டு என்ன சொல்லுது? கார்ப்பரேட் கோர்ட் என்ன சொல்லுது என்று மட்டும்தான் அவன் பார்க்கிறான்.

மேகதாதுவில் 65 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைத்தால்… கர்நாடகாவிற்கு மின்சாரம் கிடைக்கும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ன சொல்ற என்று கேட்கிறான்? இதனை மேலோட்டமாக பார்க்கும்போது சரிதான் என்று தெரிகிறது. ஆனால் இது உண்மையா?

கர்நாடகாவில் உள்ள சமூக ஆர்வலர்களில் பலரும் இது தவறான திட்டம் என்று பேசுகிறார்கள். எதிர்க்கிறார்கள்.  ஆனால் இவர்களோ, இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று வெறித்தனமாக துடிக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? இதன்பின்னே மிகப்பெரிய சதித்திட்டம் இருக்கிறது. இந்த அணையை கட்டுவதன் மூலமாக இரண்டு விதமான லாபம் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கனிமவளங்கள் மற்றொன்று கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கு எல்லாம் தாராள தண்ணீர் சப்ளை. இந்த சதித்திட்டங்களை மறைத்துக்கொண்டு மொக்கையான காரணம் சொல்லி அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். இதனை சென்று பார்வையிடுகிறேன் என்று சொல்லி முன்னாள் பிரதமர் தேவகவுடா போய் பார்வையிட்ட பிறகு, ஆமாம் இந்த அணை அவசியமானது. இருமாநிலத்திற்குமே நன்மை பயப்பது என்று பேசுகிறார்.

megathathu dam issue pp protest (2)
தோழர் கோபிநாத்

காவிரியை தடுத்து நிறுத்தி வைப்பது என்பது கர்நாடகாவில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களை பாலைவனமாக்கி அந்த பகுதியை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதற்காத்தான்.

இந்த நீதிமன்றங்களோ, இந்த மத்திய அரசோ அல்லது இவர்கள் அமைத்த காவிரி மேலாண்மை ஆணையமோ நமக்கு எதுவும் செய்யாது. இந்நிலையில் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற ஆட்சியாளர்கள் நமக்கு தண்ணீரைப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா? அமைச்சர் ஜெயக்குமார் சொல்லுகிறார், நாங்க சட்டப்போராட்டம் நடத்தி உங்களுக்கு தண்ணீரைப் பெற்றுத்தருகிறோம் என்று மேடையிலே சவால் விடுகிறார். இவரது சட்டப் போராட்டத்தை கடுகளவும் கூட எவனும் மதிக்க மாட்டான்.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

உன் சட்டப் போராட்டத்தின் யோக்கியதையை நாங்க தூத்துக்குடியில பாத்தோமே. தூத்துக்குடியில் மக்கள் என்ன கேட்டார்கள்? ஸ்டெர்லைட் ஆலையை மூடு. எனக்கு சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று வேணும் என்று தூத்துக்குடி மக்கள் சொல்கிறார்கள். ஆனால், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் போட்டிருக்கற தடையை எல்லாம் யாரும் மீறமுடியாது. வலுவான இந்த ஆளும் அரசாங்கத்தை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள். இவர்களை நாம் இந்த மேகதாது விசயத்திலும் நம்பத்தான் முடியுமா? இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள்? ஒருவர் குட்கா புகழ், ஒருவர் தெர்மாகூல் புகழ், கேவலம் முன்னால் முதலமைச்சர் முதன்மை குற்றவாளி ஜெயாவை அப்பல்லோவில் கிடத்திவிட்டு இரண்டு இட்லி சாப்பிட்டு ஒருகோடியே பதினேழு லட்சம் செலவாகியிருக்கிறதாக கணக்கு காட்டி கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் இவர்களை நாம் நம்பத்தான் முடியுமா?

கஜா புயலால் தங்களது 30 ஆண்டுகால உழைப்பு எல்லாமே வீணாகிப்போய் விட்டதே, இனி  சாப்பிடுவதற்குகூட ஒன்னும் இல்ல, அரிசி இல்லைன்னு தட்டேந்தி நிற்கிறார்கள் நமது விவசாயிகள். இந்த நிலையில் ஓ எஸ் மணியன் போன்றவர்கள் அவர்களிடம் சென்று திமிர்த்தனமாக பேசுகிறார்கள். மக்களே ஆத்திரப்பட்டு துரத்தி செருப்பைத்தூக்கி அடித்தார்கள். திருடன் சுவரேறி குதித்து ஓடுவதுபோல ஓடிச்சென்றார். இவர்களைப் பொறுத்தவரை இவர்களுக்கு வந்தாதான் ரத்தம், மற்றவர்களுக்கு அப்படி அல்ல என்று கருதுபவர்கள். எனவே,  அணையைக் கட்டினால் தான் நாம கமிஷன் வாங்கமுடியும், 8 வழி சாலை போட்டால்தான் ஓபிஎஸ் – ஈபிஎஸ் போன்றோர் காண்ட்ராக்ட் எடுத்து, மணல் கொள்ளையடித்து கமிசன் பெற்று கொள்ளையிடமுடியும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படித்தான் மேகதாது அணை கட்டினால் என்ன கமிஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காவிரிப் படுகையில் தாதுப்பொருட்கள் இருக்கிறது, வாயுப்பொருட்கள் இருக்கிறது. இவைகளை கொள்ளையிடவே காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற முதலாளிகளின் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரிகளின் கூட்டம் தான் இந்த அதிகாரிகள் அமைச்சர்கள் எல்லாம். இன்னைக்கு மீத்தேன் எடுக்காதே ஹைட்ரோகார்பன் எடுக்காதே என்று பல நாட்களாக கிராமங்களில் மக்கள் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தை இவர்கள் துளியாவது மதிக்கிறார்களா ?

என் ஊர்ல என்னுடைய விவசாயத்தை அழிக்காதே! என்னுடைய வாழ்வாதாரத்தை பறிக்காதே என்று பேச முடியல. அப்படியே பேசினால் உடனே வரிசை வரிசையாக போலீசை குவிக்கிறார்கள். நீ அத பேசாத இத பேசாத என தடை விதிக்கிறார்கள். இப்ப இங்க அசோக் லேலண்ட் நிறுவனம் தண்ணி எடுத்து விற்பதற்கு நாட்றம்பள்ளிக்கு வருது. வந்து என்ன பன்ன போறான். ராட்சத போர்வெல் போட்டு இந்த காடுகளில் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பசுமையும் இந்த கார்ப்பரேட் முதலாளிக்கு பொறுக்க முடியல. இப்ப சேசுராஜபுரத்துல வந்து அடிக்கல் நாட்டிருக்கிறான். ஆக, இன்றைக்கே மேகதாது விஷயம் ஆகட்டும் அல்லது எட்டு வழி சாலை ஆகட்டும் எந்த பிரச்சனையும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு லாயக்கற்று இந்த அரசமைப்பு தோற்றுப்போய் இருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த மேகதாது அணை கட்டும் திட்டம்.

ஆர்ப்பாட்டத்தை நின்று கவனித்து செல்லும் மக்கள்

மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மட்டும் பாதிக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது தமிழகம் முழுவதும் பாலைவனமாக, சுடுகாடாக மாறிவிடும். தமிழ்நாட்டுல இருக்கிற 22 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், உயிர், நாடி, நரம்பு எல்லாம் ரத்தமும் சதையுமாக மக்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். மத்திய அரசாகட்டும், மாநில அரசாகட்டும் இவர்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது என்பது இவங்க போடுகிற பிச்சை இல்லை. அது தமிழ்நாட்டினுடைய உரிமை.

உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டால் என்ன நடக்கும்? அந்த வாழ்க்கை மீண்டும் ஒரு நாற்பது வருஷம் இழுத்துச் செல்லும். அதனால இனி நீதிமன்றங்களோ. மத்திய மாநில அரசோ, அதிகாரிகளோ, இந்த அமைப்பு முறைகளில் உள்ள யாருடைய வாக்குறுதிகளையும் பாதிக்கப்படும் மக்களாகிய நாம் நம்பி ஏமாறமுடியாது. மக்கள் தாங்களே அணிதிரண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது கையிலெடுப்பது ஒன்றுதான் தீர்வு. நீதிமன்றமோ, சட்டமன்றமோ நீங்க யாரும் எந்த ஆணியையும் பிடுங்கத்தேவையில்லை. நீங்க இயங்காமல் சும்மா இருந்தாலே போதும். மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எளிய உழைக்கின்ற மக்களுடைய போராட்டம் மட்டும்தான் காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடிய இந்த சதித் திட்டத்தை தடுக்கும், என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம். தொடர்புக்கு : 97901 38614.

உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 45

மாக்சிம் கார்க்கி
போலீசாரின் தலைவன் வந்து கொண்டிருந்தான். உருண்டை முகமும், கனத்த சரீரமும், நெடிய உருவமும் கொண்டவனாக இருந்தான் அவன். அவன் அணிந்திருந்த தொப்பி காது பக்கமாக நீண்டு கொண்டிருந்தது. மீசையின் ஒருபுறம் மேல்நோக்கித் திருகி நின்றது, மறுமுனை கீழ்நோக்கி வளைந்திருந்தது. எனவே அவனது தோற்றமே என்னவோ கோணங்கித்தனமாகத் தோன்றியது. மேலும் அவனது உதட்டில் பிறந்த உயிரற்ற புன்னகையால் அவனது முகமே கோரமாகத் தெரிந்தது. அவனது இடது கையில் ஒரு வாள் இருந்தது. வலது கையால் வீசி விளாசிச் சைகை காட்டிக்கொண்டே அவன் வந்தான். அவனது வருகையின் கனத்த காலடியோசையை எல்லோரும் கேட்டனர். கூட்டம் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கியது. அவர்களது முகங்களிலெல்லாம் ஒரு சோர்வு நிறைந்த அழுத்த உணர்ச்சி குடியேறியது. அவர்களது குரல்கள் எல்லாம் பூமிக்குள்ளே மூழகுவது போல் உள்வாங்கிச் செத்து மடிந்தன. தாய்க்கு தன் கண்கள் எரிந்து கனல்வதாகத் தோன்றியது. நெற்றித் தசை நடுங்கிச் சிலிர்த்தது. மீண்டும் அவளுக்கு அந்தக் கூட்டத்தாரோடு கலந்து கொள்ளும் ஆசை உந்தியெழுந்தது. அவள் முன்னே செல்வதற்காக முண்டிப் பார்த்தாள். பிறகு அசைவற்று ஸ்திரமாக நின்று போனாள்.

“இதென்ன இது?” என்று ரீபினின் முன்னால் வந்து நின்று கொண்டே கேட்டான் அந்தத் தலைவன். ரீபினை ஏற இறங்க நோக்கி அளந்து பார்த்தான். ”இவன் கைகளை ஏன் கட்டவில்லை? போலீஸ்! இவன் கையைக் கட்டுங்கள்!”

அவனது குரல் உச்ச ஸ்தாயியில் கணீரென்று ஒலித்தது. என்றாலும் அதில் உணர்ச்சியில்லை.

‘’கட்டித்தான் இருந்தோம். ஜனங்கள் அவிழ்த்துவிட்டு விட்டார்கள்” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

“என்ன ஜனங்களா? எந்த ஜனங்கள்?”

அந்தப் போலீஸ் தலைவன் தன்னைச் சுற்றிப் பிறை வடிவமாகச் சூழ்ந்து நிற்கும் ஜனக்கூட்டத்தைச் சுற்று முற்றும் பார்த்தான்.

“யார் இந்த ஜனங்கள்?” என்று அவனது உணர்ச்சியற்ற வெளிறிய குரலை உயர்த்தாமலும் தாழ்த்தாமலும் கேட்டான். அவன் வாளின் கைப்பிடியால் அந்த நீலக்கண் முஜீக்கைத் தொட்டான்.

“அந்த ஜனங்கள் யார்? நீயா சுமகோவ்? வேறு யார்? நீயா, மீஷன்?”

அவன் அவர்களில் ஒருவனது தாடியை வலது கையால் பற்றிப் பிடித்தான்.

“இங்கிருந்து உடனே கலைந்து போய்விடுங்கள்! அயோக்கியப் பயல்களா! இல்லையென்றால் உங்களுக்கு வேண்டுமட்டும் உதை கொடுத்தனுப்புவேன். நான் யாரென்பதைக் காட்டிவிடுவேன்!”

அவன் முகத்தில் கோபமோ பயமுறுத்தலோ காணப்படவில்லை. அவன் அமைதியாகப் பேசினான். தனது நெடிய கரங்களால் ஜனங்களை வழக்கம்போல் ஓங்கியறைந்தான். ஜனங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டும் தலையைக் குனிந்து கொண்டும், பின்வாங்கத் தொடங்கினர்.

”சரி, நீங்கள் இங்கு எதற்கு நிற்கிறீர்கள்?” என்று போலீசாரைப் பார்த்துச் சொன்னான். ”நான் சொல்கிறேன். கட்டுங்கள் அவனை!”

அவன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு ரீபினை நோக்கினான்.

“உன் கையைப் பின்னால் கட்டு” என்று உரத்த குரலில் சொன்னான் அவன்.

“இவர்கள் என் கையை கட்ட வேண்டியதில்லை” என்றான் ரீபின்; “நான் ஒன்றும் ஓடிப்போக நினைக்கவில்லை. சண்டை போடவும் விரும்பவில்லை . பின் ஏன் கைகளைக் கட்டுகிறீர்கள்?”

“என்ன சொன்னாய்” என்று கேட்டுக்கொண்டே அவனை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்தப் போலீஸ் தலைவன்.

”ஏ . மிருகங்களா! நீங்கள் மக்களைச் சித்திரவதை செய்தது போதும்” என்று தன் குரலை உயர்த்திக்கொண்டு சொன்னான் ரீபின். “உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கிவிட்டது!

துடிதுடிக்கும் மீசையோடு ரீபினின் முகத்தையே வெறித்துப் பார்த்தான் அந்தத் தலைவன். பிறகு ஒரு அடி பின் வாங்கி வெறிபிடித்த குரலில் கத்தினான்.

”நாய்க்குப் பிறந்த பயலே! என்னடா சொன்னாய்!” திடீரென்று அவன் ரீபினின் முகத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான்.

“உன்னுடைய முஷ்டியால், நீ உண்மையைக் கொன்றுவிட முடியாது!” என்று அவனை நோக்கி முன்னேறிக்கொண்டே சத்தமிட்டான் ரீபின். “அட்டுப் பிடித்த நாயே! என்னை அடிப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

“எனக்கு உரிமை கிடையாதா? கிடையாதா?” என்று ஊளையிட்டுக் கத்தினான் அந்தத் தலைவன்.

மீண்டும் அவன் ரீபினின் தலையைக் குறிபார்த்துத் தன் கையை ஓங்கினான். பின் குனிந்து கொடுத்ததால் அந்த அடி தவறிப் போய், அந்தப் போலீஸ் தலைவனே நிலை தவறித் தடுமாறிப் போய்விட்டான். கூட்டத்தில் யாரோ கனைத்தார்கள். மீண்டும் ரீபினின் ஆக்ரோஷமான குரல் ஓங்கி ஒலித்தது:

“ஏ, பிசாசே! என்னை அடிக்க மட்டும் துணியாதே. ஆமாம் சொல்லிவிட்டேன்.”

அந்தப் போலீஸ் தலைவன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஜனங்கள் ஒன்றுகூடி இருண்ட வளையமாக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

“நிகீதா! ஏ நிக்தா!’’ என்று கத்தினான் அந்தத் தலைவன்.

கம்பளிக்கோட்டு அணிந்து குட்டையும் குண்டுமாயிருந்த ஒரு முஜிக் கூட்டத்திலிருந்து வெளிவந்தான். அவனது கலைந்துபோன பெரிய தலை கவிழ்ந்து குனிந்திருந்தது.

”நிகீதா!’ என்று தன் மீசையை நிதானமாகத் திருகிக்கொண்டே சொன்னான் அந்தப் போலீஸ் தலைவன். அவன் செவிட்டில், ஓங்கி ஒரு சரியான குத்து விடு.”

அந்த முஜீக் ரீபினின் முன்னால் வந்து நின்று தலையை நிமிர்த்தினான். உடனே ரீபின் அவன் முன் கடுகடுத்த வார்த்தைகளை வீசியபடி உரத்த உறுதி வாய்ந்த குரலில் சொன்னான்.

அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார்? அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

”ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்!”

அந்த முஜீக் தன் கையை மெதுவாக உயர்த்தி ரீபினின் தலையில் லேசாக ஒரு குத்துவிட்டான்.

”ஏ, நாய்க்குப் பிறந்த பயலே! இப்படித்தான் அடிக்கிறதோ?” என்று அவனை நோக்கி அழுது விடிந்தான் அந்தத் தலைவன்.

“ஏய், நிகீதா!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. ”கடவுளை மறந்து காரியம் செய்யாதே!”

”நான் சொல்கிறேன், அவனை அடி” என்று முஜீக்கின் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே கத்தினான் தலைவன். ஆனால் அந்த முஜீக்கோ தன் தலையைக் குனிந்தவாறே ஒருபுறமாக ஒதுங்கிச் சென்றான்.

‘’என்னால் முடிந்தவரை அடித்தாயிற்று” என்று முனகினான்.

“என்ன?”

”அந்தப் போலீஸ் தலைவனின் முகத்தில் ஒரு நடுக்கம் பரவிப் பாய்ந்தது. அவன் தரையை எட்டி உதைத்தான். ஏதேதோ திட்டிக்கொண்டு ரீபினை நோக்கிப் பாய்ந்தான். திடீரென ஓங்கியறையும் சத்தம் கேட்டது. பின் கிறுகிறுத்துச் சுழன்றான். தன் கையை உயர்த்தினான். ஆனால் இரண்டாவதாக விழுந்த அறை அவனைக் கீழே தள்ளி வீழ்த்தியது. அந்தப் போலீஸ் அதிகாரி கீழே விழுந்த ரீபினின் நெஞ்சிலும் விலாவிலும் தலையிலும் உதைத்தான், மிதித்தான்.

கூட்டத்தினரிடையே கோபக் குமுறல் முரமுரத்து வெளிப்பட்டது. ஜனங்கள் அந்த அதிகாரியை நோக்கிச் சூழ ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ இதைக் கண்டுகொண்டான். பின்னால் துள்ளிப் பாய்ந்து, தன் வாளின் கைப்பிடியைப் பற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான்:

“என்ன இது? கலவரம் உண்டாக்கவா பார்க்கிறீர்கள்? ஆ ஹா ஹா! அப்படியா சேதி?”

அவனது குரல் உடைந்து கரகரத்து நடுங்கியது. திராணியற்ற சிறு கூச்சலைத்தான் அவனால் வெளியிட முடிந்தது. திடீரென்று அவனது குரலோடு அவனது பலமும் பறந்தோடிப் போய்விட்டது. தலையைத் தோள் மீது தொங்கவிட்டபடி அவன் தடுமாறி நிலைகுலைந்து கால்களாலேயே வழியை உணர்ந்து உயிரற்ற கண்களால் வெறித்துப் பார்த்தவாறே பின்வாங்கினான்.

”ரொம்ப நல்லது” என்று அவன் கரகரத்த குரலில் சத்தமிட்டான். ”அவனைக் கொண்டு போங்கள் – நான் அவனை விட்டுவிடுகிறேன். வாருங்கள். ஆனால் அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார்? அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

தாய் கொஞ்சங்கூட அசையாமல் நின்றாள். அவளது கண்கள்கூட இமைக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கும் சக்தியையும் பலத்தையும் இழந்துபோய் பயமும் அனுதாபமும் பிடித்த மனதோடு அவள் ஒரு கனவு நிலையில் நின்று கொண்டிருந்தாள். முறைப்பும் கோபமும் புண்பட்ட மக்களின் குரல்கள், கலைக்கப்பட்ட தேனீக்களின் மூர்க்க ரீங்காரத்தைப் போல் கும்மென்று அவள் காதுகளில் இரைந்தன. அந்த அதிகாரியின் குழறிய குரல் அவள் காதில் ஒலித்தது. அத்துடன் யாரோ குசுகுசுவெனப் பேசும் குரலும் சேர்ந்தது.

”அவன் குற்றவாளியென்றால், அவனை நீதிமன்றத்திற்குக் கொண்டு போ…”

”எஜமான்! அவன் மீது கருணை கொள்ளுங்கள்……”

”இதுதான் உண்மை. இந்த மாதிரி நடத்துவதற்கு எந்தச் சட்டமும் இடங்கொடுக்காது.”

”இது என்ன நியாயமா? இப்படி எல்லோரும் அடிக்கத் தொடங்கி விட்டால், அப்புறம் என்ன நடக்கும்?”

ஜனங்கள் இரு பிரிவினராகப் பிரிந்து நின்றார்கள். ஒருசிலர் அந்த அதிகாரியைச் சுற்றி நின்று அவனோடு சேர்ந்து கத்திக்கொண்டும் இரங்கிக் கேட்டுக்கொண்டுமிருந்தனர். அந்தப் பிரிவினரில் சிறுபான்மையோர் கீழே விழுந்து கிடக்கும் ரீபினின் பக்கமாக நின்று ஏதேதோ வன்மம் கூறினர். அவர்களில் சிலர் ரீபினைத் தரையிலிருந்து தூக்கி நிறுத்தினர். போலீஸ்காரர்கள் அவனது கைகளைக் கட்ட முன்வந்தபோது அவர்கள் கூச்சலிட்டார்கள்:

”ஏ, பிசாசுகளே! அவசரப்படாதீர்கள்!”

ரீபின் தனது முகத்திலும் தாடியிலும் படிந்திருந்த ரத்தத்தையும் புழுதியையும் துடைத்தான். வாய் பேசாது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனது பார்வை தாயின் மீது விழுந்தது. அவள் நடுங்கியபடி அவனை நோக்கித் தன்னையுமறியாமல் கையை ஆட்டிக்கொண்டே முன்வரக் குனிந்தாள். ஆனால் அவன் சட்டென்று அவள் பார்வையினின்றும் கண்களைத் திருப்பிக்கொண்டான். சில நிமிஷ நேரம் கழித்து அவனது கண்கள் மீண்டும் அவள் பக்கம் திரும்பின. அவன் நிமிர்ந்து நின்று தலையை உயர்த்திப் பார்ப்பதாகவும் ரத்தக்கறை படிந்த அவனது கன்னங்கள் நடுங்குவதாகவும் அவளுக்குத் தோன்றியது.

“அவன் என்னைக் கண்டு கொண்டான் – உண்மையிலேயே என்னை அவன் அடையாளம் கண்டுகொண்டானா?”

அவள் அவனை நோக்கி உடம்பெல்லாம் நடுங்க, அடக்கமுடியாத வருத்தம் நிறைந்த மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். மறுகணமே அந்த நீலக்கண் முஜீக் அருகே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டாள். அவனது பார்வை தாயின் உள்ளத்தில் ஆபத்துக்கான எச்சரிக்கையுணர்வைக் கிளப்பிவிட்டது.

“நான் என்ன செய்கிறேன்? இப்படிச் செய்தால் என்னையும் அவர்கள் கொண்டு போய்விடுவார்கள்!”

அந்த முஜீக் ரீபினிடம் ஏதோ சொன்னான். பின் பதிலுக்கு ஏதோ கூறியவாறே தலையை அசைத்தான்.

“அது சரிதான்” என்றான் அவன். நடுக்கம் ஒருபுறமிருந்தாலும், அவனது குரல் தெளிவாகவும் துணிவாகவும் ஒலித்தது. ”இந்தப் பூமியில் நான் ஒருவன் மட்டும் அல்ல, உண்மை முழுவதையும் அவர்களால் அடக்கிப் பிடித்துவிட முடியாது. நான் எங்கெங்கு இருந்தேனோ அங்கெல்லாம் என்னைப் பற்றிய நினைவு நிலைத்திருக்கும். அவர்கள் எங்களது இருப்பிடங்களையெல்லாம் குலைத்து, எல்லாத் தோழர்களையும் கொண்டு போய்விட்டாலும்கூட…”

”அவன் இதை எனக்காகத்தான் சொல்லுகிறான்” என்று ஊகித்துக் கொண்டாள் தாய்.

“பறவைகள் சிறைவிட்டுப் பறக்கும். மக்கள் தளைவிட்டு நீங்கும் காலம் வரத்தான் போகிறது!”

படிக்க:
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

ஒரு பெண்பிள்ளை ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து ரீபினின் முகத்தைக் கழுவினாள். கழுவும்போது ‘ஆ — ஓ’ என்று புலம்பினாள். அவளது இரங்கிய கீச்சுக்குரல் மிகயீல் பேசிய பேச்சோடு சிக்கி முரணியது. எனவே அவன் பேச்சைத் தாயால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. போலீஸ் தலைவன் முன்னால் வர, ஒருசில முஜீக்குகள் முன்னேறி வந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவன் கத்தினான்:

“இந்தக் கைதியை ஒரு வண்டியில் போட்டுக் கொண்டு போவோம். சரி, இந்தத் தடவை யாருடைய முறைக்கட்டு?”

பிறகு அந்தப் போலீஸ் அதிகாரி தனக்கே புதிதான குரலில், புண்பட்டவனின் முனகல் குரலில் பேசினான்.

“ஏ, நாயே! நான் உன்னை அடிக்கலாம். ஆனால் நீ என்னை அடிக்க முடியாது!”

“அப்படியா? நீ உன்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் – கடவுள் என்றா?” என்று கத்தினான் ரீபின்.

உள்ளடங்கிப்போய்க் குழம்பிய கசமுசப்பு. அவனது குரலை மூழ்கடித்து விழுங்கிற்று.

“தம்பி, அவரோடு வம்பு பண்ணாதே. அவர் ஓர் அரசாங்க அதிகாரி.”

”நீங்கள் அவன் மீது கோபப்படக்கூடாது. எசமான் அவன் தன் நிலையிலேயே இல்லை.”

“ஏ புத்திசாலி! சும்மா கிட.”

”அவர்கள் உன்னை இப்போது நகருக்குக் கொண்டு போகப் போகிறார்கள்.”

“அங்கு, இங்கிருப்பதைவிட ஒழுங்கு முறை அதிகம்.”

ஜனங்களுடைய குரல்கள் கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தன. அந்தக் குரல்கள் ஒரு சிறு நம்பிக்கையோடு முழங்கிக் கலந்து மங்கி ஒலித்தன. போலீஸ்காரர்கள் ரீபின் கையைப் பற்றி, அந்தக் கிராமச் சாவடியின் முகப்பை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார்கள். அங்கு சென்றவுடன் அவர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று மறைந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கூடி நின்ற முஜீக்குகள் கலைந்து சென்றார்கள். அந்த நீலக்கண் முஜீக் மட்டும் புருவத்துக்குக் கீழாகத் தன்னை உர்ரென்று பார்த்தவாறே தன்னை நோக்கி வருவதைக் கண்டாள் தாய். அவளது முழங்காலுக்குக் கீழே பலமிழந்து சுழலாடுவதுபோல் தோன்றியது. திகைப்பும் பயமும் அவளது இதயத்தை ஆட்கொண்டு, அவளுக்குக் குமட்டல் உணர்ச்சியைத் தந்தன.

“நான் போகக்கூடாது. போகவே கூடாது” என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

அவள் பக்கத்திலிருந்த கம்பியைப் பலமாக பிடித்தவாறே நின்றாள்.

அந்தப் போலீஸ் தலைவன் கட்டிடத்தின் முகப்பிலேயே நின்று கைகளை வீசி . கண்டிக்கும் குரலில் பேசினான். அவனது குரலில் மீண்டும் பழைய வறட்சியும் உணர்ச்சியின்மையும் குடிபுகுந்துவிட்டன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கருத்துக் கணிப்பு : தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

2018-ம் ஆண்டின் சிறப்பு விருதுகளை தெரிவு செய்யும் முகமாக நடத்தப்படும் கருத்துக் கணிப்பில் இது கடைசி. அர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. சங்கிகளுக்கு சவுண்டு கொடுப்பதிலும், சங்கிகளை அம்பலப்படுத்துபவர்களை சதித் திட்டங்களைத் தீட்டி தேச விரோதிகளாக சித்தரிப்பதிலும் அர்னாப்புக்கு நிகர் கோஸ்வாமிதான்.

தமிழகத்தில் சந்தேகமில்லாமல் இந்த திருப்பணியை ரங்கராஜ் பாண்டேதான் செய்து வருகிறார். தந்தி டிவியிலிருந்து விலகிய பிறகு தற்போது பாண்டே மார்க்கெட்டிங் வேலைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக அவர் பச்சையாகவே பாஜக-வை ஆதரித்துப் பேசியது வரை அனைவரும் அறிந்த ஒன்றுதான். பாண்டே தனி டிவி ஆரம்பிப்பாரா, ரஜினி டிவி பொறுப்பேற்பாரா, இல்லை பாஜகவின் தமிழ் டிவி நடத்துவாரா ? அனைத்தும் வரும் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பாஜக முடிவு செய்து விட்டது. இதற்கு மேலாக மேலவை எம்பி போன்றவையும் கூட டீலாக பேசப்பட்டிருக்கலாம்.

எனினும் பாண்டே பரந்துபட்ட மக்கள் திரளிடம் செய்யும் காவிக் கதை செய்திகளை இலக்கியம், நாளிதழ், பத்திரிகை என பல ஊடக வடிவங்களில் செய்யும் முக்கியமானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பாண்டே அளவுக்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் பாண்டே செய்யும் வேலையை தத்தமது துறைகளில் திறம்படச் செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

தினமணி வைத்தியநாதன், அனைவருக்கும் சீனியர். ஆண்டாள் பிரச்சினையில் அவர் அவாளிடம் காலில் விழுந்தது முதல் தினமணி தலையங்க கட்டுரைகள் வரை பாஜகவின் அவாள் அணி போற்றும் நம்பர் ஒன் மூத்த பத்திரிகையாளர்.

புதிய தலைமுறை மாலனும் மூத்த பத்திரிகையாளர்தான். பத்திரிகை, டிவி விவாதங்கள், பேஸ்புக்கில் விவாதிப்பது மூலம் கமலாலயம் கவனிக்கும் நிலைக்கு வந்தவர். பாண்டே பொய்யை ஓங்கிச் சொல்வார். வைத்தியநாதன் அதை ஒழுக்கமாக மொழிபெயர்ப்பார். மாலன் அதை புள்ளி விவரங்களுடன் உண்மையாக மாற்றிச் சொல்வார். சரி இவர்களோடு ஜெயமோகன் என்ன சொல்வார்?

படிக்க:
♦ பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது ? கருத்துக் கணிப்பு
♦ மோடிக்கு ஜால்ரா போடும் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 எது ? கருத்துக் கணிப்பு

ஜெயமோகனைப் பொறுத்த வரை மேற்கண்ட நால்வரின் திறமைகளையும் இணைத்து பிணைத்து நுட்பமாகவும், நூதனமாகவும், நூலாகவும் காவிகளுக்கு பரிந்துரை செய்வார். அடுத்த முறை அன்னாருக்கு சாகித்ய அகாடமி நிச்சயம் என்பதாலும், இயல்பிலேயே இந்துத்துவத்தின் பண்பாட்டை பாரதப் பண்பாடு என உள்ளார்ந்து ஏற்றிருப்பதாலும் ஜெயமோகன் இலக்கிய உலகில் பாஜக-வின் பிராண்டு அம்பாசிடராக செயல்படுகிறார். இங்கே பாண்டே போல நேரடியாக இருக்க வேண்டியதில்லை. இந்து முன்னணி சொல்லும் இந்துமதம் வேறு என்று ஆரம்பித்து இந்து மதத்தை உயர்த்தி அதுதான் ஆர்.எஸ்.எஸ் சொல்லும் இந்துமதம் என்று முடிப்பார்.

இறுதியாக இவர்களோடு இணைகிறார் தி இந்து தமிழ் பத்திரிகையின் பத்திரிகையாளர் சமஸ் அவர்கள். சமஸுக்கு தினமணி வைத்தியநாதன் குரு. தி இந்து தமிழ் பதிப்பு ஆரம்பித்த முதல் நாளிலேயே ஜெயமோகனை நடுப்பக்கத்தில் எழுத வைத்தார். மோடி பதவியேற்ற பிறகு ஏகப்பட்ட கட்டுரைகள் மோடியை நேரடியாக ஆதரித்தும், மறைமுகமாக நியாயப்படுத்தியும் எழுதியிருக்கிறார். என்ன, மேற்கண்ட கோஸ்வாமிகளை விட கூடுதலான ஒரு பண்பு சமஸிடம் இருக்கிறது எனலாம். மோடியை ஆதரித்தாலும் மோடிக்கு என சில அட்வைசுகள் சொல்லித்தான் சமஸ் எழுதுவார்.

கேள்வி:

தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

♥ ரங்கராஜ் பாண்டே
♥ புதியதலைமுறை மாலன்
♥ பத்திரிகையாளர் சமஸ்
♥ தினமணி வைத்தியநாதன்
♥ எழுத்தாளர் ஜெயமோகன்

(அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு பாண்டேவை தெரிவு செய்வீர்கள். மற்றவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதற்காக மூன்று தெரிவுகள் எடுக்கலாம்)

நாளை வெற்றி பெற்றவர்கள், விருது பெறுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community