Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 470

அத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் !

3

அத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் !

#Sterlite #BanSterlite #SterliteProtest #SterliteProtestMay22nd2018 #Thoothukudi
#SaveThoothukkudi #PoliceAtrocities #ThoothukudiMassacre #StateTerrorism

கார்ட்டூன்: சர்தார்

ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! வீடியோ

0

ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு !

#Sterlite #BanSterlite #SterliteProtest #SterliteProtestMay22nd2018 #Thoothukudi
#SaveThoothukkudi #PoliceAtrocities #ThoothukudiMassacre #StateTerrorism

குருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்

1

குருதியில் நீந்தும் காலம்

சுடுடா சுடு
நிராயுதபாணிகளை
நெஞ்சுக்கு நேராகச் சுடு
குண்டுகள் வீணாக்காமல் சுடு
பத்துக்குண்டுகளுக்கு
பத்துப்பேர் விழவேண்டும்

முதலில் ஆகாயத்திற்கு நேரே சுடவேண்டியதில்லை
முதலில் முட்டுக்கு கீழே சுடவேண்டியதில்லை
கண்ணீர் புகைக் குண்டுகள் வேண்டியதில்லை
வீண் செலவுகளை தவிர்க்கவேண்டும்
துப்பாக்கியை நெஞ்சுக்கு நேரே உயர்த்து
நாங்கள் சாகப்பிறந்தவர்கள்
மக்கள் வாழ்வதற்காக சாகப்பிறந்தவர்கள்

சுடுடா மறுபடி சுடு
குருவிகளை சுடுவதென்றால்கூட
குறிபார்க்கவேண்டும்
மிருகங்களை சுடுவதென்றால்கூட
மறைந்து காத்திருந்து சுடவேண்டும்
மக்களைச்சுட எதுவுமே தேவை இல்லை
எதிர்த்து நிற்பவர்கள் நெஞ்சில்
ஈய ரவைகளை செலுத்து
அவர்கள் அதை புரிந்துகொள்வதற்குள்
தம் நெஞ்சில் வழியும் குருதியைக்கண்டு
அவர்கள் வியக்கும்படி
அத்தனை விரைவாய் சுடு

மக்கள் நச்சுக்காற்றை எதிர்த்துப்போராடினார்கள்
கேன்ஸரை எதிர்த்துப்போராடினார்கள்
கருவிலிருக்கும் தம் குழந்தைகள்
ஊனமடைவதை எதிர்த்துப்போராடினார்கள்
எளிய மக்கள் தாங்கள் நஞ்சாகக்கப்படுகிறோம்
என்று அறிந்த நாளில் தெருவுக்கு வந்தார்கள்
பின்னர் அவர்கள் வீடு திரும்பவே இல்லை
இப்போது துப்பாக்கிக்குண்டுகளால்
அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது

ஒரு பதினேழு வயது சிறுமி
ஒரு அறுபட்ட புறாவைபோல
ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள்
இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள்
எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன

திறந்த கண்களுடன்
ஒரு இளைஞன் கைகளை விரித்தபடி
வீழ்ந்துகிடக்கிறான்
அவன் மனைவி மார்பில் விழுந்து கதறுகிறாள்
அவள் நெற்றியில் துப்பாகிக் குருதி
குங்குமம் போல பரவுகிறது
இப்படித்தான் நீதி கேட்கப்படுகிறது

இந்த அந்தியின் வெளிச்சம்
குருதிவண்ணத்தில் இருக்கிறது
இந்த அந்தியின் காற்றில்
குருதியின் உப்புக் கரிக்கிறது

பத்துப்பேர் இறந்துவிட்டார்கள்
இன்றைய இலக்கு நிறைவடைந்ததா?
திரும்பிச்செல்லுங்கள்
உங்கள் முதலாளிகள்
இன்றிரவு நிம்மதியாகக் குடிப்பார்கள்
உங்களுக்கு ஆணை பிறப்பித்தவர்கள்
இன்றிரவு நிம்மதியாக புணர்வார்கள்

ஊரில் பத்துவீடுகளில்
சாவின் அதிகாரம் நிரம்பியிருக்கிறது
பத்து சவ ஊர்வலங்கள் ஒரே நேரத்தில்
கிளம்புகின்றன
மக்கள் மனம் சிதறி அழுகிறார்கள்
இயலாமையுடன் சாலைகளை மறித்து
லத்தியால் அடிவாங்கி ஓடுகிறார்கள்

மக்களை இன்னும் எப்படி அச்சுறுத்துவதெனெ
வேட்டை நாய்கள்
ரகசியமாக கூடிப்பேசுகின்றன
பத்துப்பேரை கொல்லும் அளவு
தனக்கு அதிகாரம் இருப்பதைக் கண்ட தலைவன்
அந்தரங்க கிளுகிளுப்புடன்
நீலிக்கண்ணீர் வடிக்கிறான்

நமது காலம் நெருப்பில் நீந்துகிறது
நமது காலம் கண்ணீரில் நீந்துகிறது
நமது காலம் குருதியில் நீந்துகிறது

அடுத்த வெடியோசைக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.
தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்.

எதற்கு என்று கேட்காதீர்கள்.
மக்கள் தங்களை வன்மத்துடன் ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்.

22.5.2018
மாலை 6.16
மனுஷ்ய புத்திரன்

ஸ்டெர்லைட்டை மூடு ! பற்றி எரிகிறது தூத்துக்குடி ! போராட்ட பதிவுகள் !

0

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மற்றும் மாநகர மக்கள் ஒன்றிணைந்து  ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர். பல்வேறு மனுக்கள் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இறுதியில் 22.05.2018 அன்று கூட்டமைப்பின் சார்பில் மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

போராட்டம் அறிவித்த நாள் தொடங்கி பல முன்னணியாளர்களை தேடித் தேடி கைது செய்தது போலீசு. மேலும் பல்வேறு வகைகளில் போராட்டத்தை முடக்க முயற்சித்தது.

இதைத் தொடர்ந்து 22-ம் தேதி போலீசு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டது. மக்கள் போராட்டம் அறிவித்திருந்த வேளையில் 144 தடையுத்திரவை பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர்.

இந்த தடைகள் அனைத்தயும் மீறி பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என அனைவரும் கூட ஆரம்பித்தனர். இது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. வீட்டிற்கு ஒருவர் கேன்சருக்கும் இன்னும் பல நோய்களுக்கும் ஆளாகியுள்ள துயரம் அவர்களை ரோட்டுக்கு இழுத்து வந்ததுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், முத்துநகர், தாளமுத்துநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முத்துநகர் மாதா கோவிலில் கூடி வருகின்றனர். இங்கு ஒன்று கூடி பின்னர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று அறிவித்திருக்கின்றனர்.

முத்துநகர் மாதா கோவில் நோக்கி மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் விதமாக போலீசு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

போலீசின் தடையை மீறி மக்கள், பல்வேறு வழிகளில் மாதா திடலில் குவிந்து வருகின்றனர். இதுவரையில் ஆயிரத்துக்குமேற்பட்ட மக்கள் அங்கே திரண்டிருக்கின்றனர்.

மக்கள் பேரணி புறப்பட்டது.

முத்துநகர் மாதா கோவிலில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்ட மக்களை தடுக்கும் விதமாக போலீசு வேனை குறுக்கே நிறுத்தியிருந்தது. தடையைத் தகர்த்து முன்னேறும் மக்கள் வெள்ளம்.

காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா?

போலீசு தடுத்தால் என்ன? ஸ்டெர்லைட்டை மூடும் வரை ஓயமாட்டோம்! வருமானம் உங்களுக்கு ! 144 எங்களுக்கா தேவர்புரம் சாலையில் தடுப்பரண்களைத் தகர்த்து முன்னேறும் மக்கள். தடை பல தாண்டி அலைகடலாய் திரண்டு வந்த மக்கள் வெள்ளம்!

பேரணிக்குள் போலீசு மாட்டை அவிழ்த்துவிட்டது. மாடு முட்டியதால் பாதிக்கபட்ட மக்களுக்கு முதலுதவி செய்யும் பகுதி மக்கள்.

மாட்டை அவிழ்த்துவிட்டால், முடங்கிவிடுமா மக்களின் எழுச்சி?

போலீசு வீசிய கண்ணீர் புகை குண்டு வீச்சு ! போர்க்களமானது தூத்துக்குடி.

வாயில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியான 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்ட்டா வாயில் இருந்து கடைசியாக வெளியே வந்த வார்த்தைகள் “எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு”

ஸ்டெர்லைட்டை மூடச் சொன்னதுக்கா நெஞ்சைப் பார்த்து சுட்டார்கள்?

– வினவு செய்தியாளர்கள், தூத்துக்குடியிலிருந்து.

ஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் !

1

 

ட்சம் மக்கள் கூடுவோம்
ஸ்டெர்லைட்டை மூடுவோம்
புற்றுநோயில் சாவதா?
போராடி வாழ்வதா?
இனி ஏமாற்ற முடியாது,
உன் இறுதி முடிவு நெருங்குது
விடமாட்டோம் விடமாட்டோம்
விரட்டாமல் விடமாட்டோம்
கைது சிறைக்கு அஞ்சமாட்டோம்
காசுக்கு விலை போகமாட்டோம்
எங்கள் உயிர் தந்தும்
சந்ததிகளை வாழவைப்போம்
தூத்துக்குடி இன்று
பாஞ்சாலக்குறிச்சி அன்று
இது மண்ணைக் காக்கும் போராட்டம்
வெல்லும் தமிழகமே எழுந்து நின்று!

ஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் !

1

பத்திரிகைச் செய்தி!

22.5.2018

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தை பிளவுபடுத்தி, சீர்குலைத்து ஒடுக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்!

“இலட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்று தூத்துக்குடி நகர மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கமிட்டிகள் இணைந்து இன்று (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்ற போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

எத்தனை முறை மனு கொடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. தூத்துக்குடி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மொத்தம் 13 இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், பெண்டு பிள்ளைகளுடன் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாக அமர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசுவதற்குக்கூட மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தார்கள் மக்கள்.

போராட்டம் அறிவித்த பின்னரும், மக்களை அழைத்துப் பேசாமல், போராட்டத்தை முறியடிப்பதற்கான சதி வேலைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஒரு குழுவினரை வைத்து இரண்டு நாட்கள் முன்பு அறிவிக்கச் செய்தது. இதனை போராடும் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். முற்றுகைப் போராட்டம் நடந்தே தீரும் என்று 13 மக்கள் கமிட்டிகளும் உறுதியாக அறிவித்தனர். இதன் காரணமாக கடுமையான அடக்குமுறையை ஏவத்தொடங்கியிருக்கிறது அரசு.

நேற்று இரவு தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. முன்னணியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். கிராமப்புற சாலைகள், தூத்துக்குடி தெருக்கள், தேவாலயங்கள் என போராடும் மக்கள் இருக்கின்ற பகுதிகள் எல்லாம் தடுப்புவேலி அமைக்கிறது காவல்துறை. இவற்றை மீறி கிராமப்புறங்களிலிருந்து மக்கள் வந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, வேன் உரிமையாளர்கள் போலீசால் மிரட்டப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஸ்டெர்லைட் என்ற பன்னாட்டு கம்பெனிக்காக உள்ளூர் மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது போலீசு. சில ஆண்டுகளுக்கு முன் கூடங்குளத்தில் என்ன நடந்ததோ அதுதான் தற்போது தூத்துக்குடியிலும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அணு உலைக்கு எதிராக ஆண்டுக்கணக்கில் அமைதி வழிப் போராட்டம் நடந்தது. எல்லா கட்சியினரும் வந்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இறுதியில் கடுமையான அடக்குமுறையும் துப்பாக்கிச் சூடும் மக்கள் மீது நடத்தப்பட்டது. போராட்டம் நசுக்கப்பட்டது. அன்று தமிழகத்தின் கட்சிகள் அனைவரும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அவ்வாறு போராடியிருந்தால், இன்று 3,4,5 என்று அடுக்கடுக்காக அணு உலைகளைத் திணித்திருக்க முடியாது.

இன்று, ஸ்டெர்லைட் பிரச்சினையிலும் எல்லா கட்சியினரும் போராடும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.  இந்த நச்சு ஆலையை அகற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர். அவர்களெல்லாம் அரசு அடக்குமுறையை ஏவுகின்ற இந்த தருணத்தில் பேசவேண்டும். கூடங்குளம் மக்களுக்கு நேர்ந்த கதி தூத்துக்குடி மக்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.

இதோ, தம் குழந்தைகளை புற்றுநோய்க்கு பலி கொடுத்த மக்கள் பிள்ளை குட்டிகளுடன் கத்திரி வெயிலில் வீதியில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் நமது ஆதரவு அந்த மக்களுக்கு தேவைப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி தூத்துக்குடி மக்களின் வெற்றியாக மட்டும் இருக்காது. இந்த வெற்றி நியூட்ரினோ முதல் ரசாயன மண்டலம் வரையிலான அனைத்து பிரச்சினைகளிலும் வெற்றி காணும் வரை போராடுவதற்கான உற்சாகத்தை மக்களுக்கு கொடுக்கும்.

எனவேதான் இந்த போராட்டத்தை நசுக்குவதற்கு வெறித்தனமாக முயற்சி செய்கிறது அரசு. இந்தப் போராட்டத்தை ஒடுக்கிவிட்டால், மற்ற எல்லா மக்களும் தானே அடங்கி விடுவார்கள் என்பதுதான் அரசின் அணுகுமுறை. எனவே இன்று ஸ்டெரிலைட் எதிர்ப்புக்கு நாம் கொடுக்கும் குரல்தான், நாளை நியூட்ரினோ முதல் ஹைட்ரோ கார்பன் வரையிலான எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவான குரலாக பல்கிப் பெருகும்.

இது எந்த ஒரு புதிய கோரிக்கையையும் வைத்து நடத்தப்படும் போராட்டம் அல்ல. எங்களை வாழ விடு என்று இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்துகின்ற போராட்டம். தங்களுடைய உயிரையும், தம் பிள்ளைகளின் உயிரையும், இந்த மண்ணையும், நீரையும், காற்றையும் காப்பாற்றுவதற்காக மக்கள் நடத்துகின்ற போராட்டம். இதனை ஆதரித்து குரல் கொடுக்குமாறு எல்லா கட்சிகளையும் இயக்கங்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

போராடும் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகின்ற இந்த தருணத்தில் நாம் யாரும் மவுனம் சாதிக்கலாகாது. அனைவரும் வீதிக்கு வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நேரம் இது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழகமே வீதிக்கு வர வேண்டும். நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீதேன், ரசாயன மண்டலம் போன்ற வாழ்வாதாரங்களை நாசமாக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடுகின்ற மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

இன்று மாலை 3 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வாயிலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், தூத்துக்குடி மக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதேபோல தமிழகம் முழுவதும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக எல்லா கட்சியினரையும் இணைத்துக் கொண்டு மக்கள் அதிகாரம் போராட்டம் நடத்தும்.

தமிழக அரசே,
போராடும் தூத்துக்குடி மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து!
144 தடை உத்தரவை ரத்து செய்!
ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு!

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி ! முன்னணியாளர்கள் கைது !!

3

தூத்துக்குடியிலிருந்து வழக்குரைஞர் அரிராகவன் பேசுகிறேன். ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறேன். இதன் மூலம் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் முன்வைக்கக்கூடிய மிக முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால், நாளைய தினம் கூட்டமைப்பின் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்களுடைய முடிவை நயவஞ்சகமாக தடுப்பதற்காக காவல்துறையை தமிழக அரசு ஏவிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில், இன்று காலை புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்ற சமூக ஆர்வலரை புதுக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினர், கைது செய்துள்ளனர். நாளைய போராட்டத்தை ஒடுக்கும் விதமாக முன்னணியாக உள்ளவர்களை கைது செய்து இந்தப்போராட்டத்தை நீர்த்து போக செய்ய தமிழக அரசு காவல்துறை மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளது. எனது வீட்டிற்கும் இன்று காலை சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் அவர்கள் தலைமையில் சுமார் ஐந்து ஆறு போலீசார் சென்றுள்ளனர். எனது மனைவியிடம் என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். என் மனைவி நான் வெளியூர் சென்றுள்ளதாக சொல்லியதால், காவல்துறையினர் சென்றுள்ளார்கள். என் மனைவியை விசாரணை செய்யும்பொழுது, அவர்களை காவல்துறையினர் போட்டோ எடுத்துள்ளனர். எனது மனைவி அதனை தட்டிக் கேட்டுள்ளார். காவல்துறையினர் மிரட்டி சென்றுள்ளனர்.

இந்த போக்கு என்பது, மக்களுடைய 22 ஆண்டுகாலம் ஸ்டெர்லைட்டினால் பாதிக்கப்பட்டு ஒரு முடிவை எட்டும் நிலையில், தமிழக அரசு காவல்துறையை வைத்து முன்னணியாளர்களை கைது செய்வது சட்டப்படி தவறு. ஒரு ஜனநாயக நாட்டில், மக்களை பாதிக்கக்கூடிய தொழிற்சாலையை மூட வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தால், அதை அரசு செவிமடுத்து, அதை பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவதுதான் சிறந்தது ஆகும். அதைவிட்டுவிட்டு முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் போராட்டத்தை ஒடுக்க அரசு முயல்கிறது.

நாளைய தினம் நடக்க இருக்கின்ற இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என்பது தூத்துக்குடி மக்கள் காவல்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி செல்லவிடாமல், காவல்துறை முயற்சி மேற்கொண்டிருப்பதால், தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் அரசியல் கட்சியினரும் இயக்கத்தினரும் சங்கங்களும் அமைப்புகளும் காவல்துறையினுடைய இந்த கைதுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுகிறோம். தூத்துக்குடி மக்களுக்கு பாதுகாப்பாக அரணாக விளங்கினால்தான் இந்தக் கைதை கண்டித்தால்தான் நாளைய போராட்டம் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மக்கள் ஒன்றுசேரும் ஒரு போராட்டமாக அமையும்.

இல்லாவிட்டால், இந்தப் போராட்டம் என்பது காவல்துறையால் அடக்கி ஒடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இதை உணர்ந்து தமிழக மக்கள் எங்களுக்கு அரணாக இருந்து நாளைய போராட்டத்தை நாங்கள் நடத்தி செல்ல உறுதுணையாக இருக்கும்படி எங்களது ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

 

ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ? மு.வி.நந்தினி

ஹை ஹீல்ஸ் – கண்ணுக்குத் தெரியாத ஆணாதிக்க சங்கிலி !

2018 – ஆம் ஆண்டு கேன்ஸ் பட விழா பாலியல் சமத்துவத்துக்கான ஆண்டாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. #meetoo என்ற ஹேஷ் டாக்குடன் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் சுரண்டல், பாலியல் அத்துமீறல், பாலியல் வன்கொடுமைகளை ஹாலிவுட் பெண்கள் ஊடகங்களில் பேசினார்கள். பல திடுக்கிடும் உண்மைகளை ஊடகங்கள் துப்பறிந்து எழுதின. பல முன்னணி நாயகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தில் மாட்டிக்கொண்டனர். அவர்களுடைய மரியாதை பறிபோனது. இதுவே இங்கே நடந்திருந்தால் தொடர்புடைய பெண்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, வீதிக்கு வந்திருப்பார்கள். இந்தியா போன்ற பிற்போக்கு சமூகத்தில் வன்முறையை எதிர்கொண்டவரே குற்றவாளி ஆக்கப்படுவார்.

வளர்ந்த நாடுகள் பெண்கள் மீதான பிற்போக்குத்தனத்தை கைவிட்டுவிடவில்லை என்ற போதும், பாலியல் குற்றம்சாட்ட ஆண்களை குற்றவாளிகளாக பார்க்கும் பார்வையை அங்கே காணமுடிகிறது. ஹாலிவுட்டில் தொடங்கிய #meetoo பிரச்சாரம் மற்ற துறைகளில் நடந்த பெண் மீதான சுரண்டல்களை வெளிக்கொண்டுவந்து கொண்டிருக்கிறது. இதை எதிரொலிக்கும் விதமாக கேன்ஸ் திரைப்பட விழா 2018-இல் திரைப்பட தேர்வு குழுவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாலியல் சமத்துவத்தை பேணும் நடவடிக்கையின் தொடக்கமாக இது அமையும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

கிறிஸ்டன் ஸ்டூவர்ட், சிவப்பு கம்பள வரவேற்பின் போது தனது குதிகால் உயர்த்தப்பட்ட இரண்டு காலணிகளை கழற்றினார்.

சற்று பின்நோக்கிப் போவோம்… 2015-ஆம் ஆண்டு கேன்ஸ் பட விழா திரையிடலுக்கு ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளை அணிந்து வராத பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹாலிவுட் நடிகர்கள் ஜூலியா ராபர்ட்ஸ், எமிலி பிளண்ட் போன்றோர் இதை எதிர்த்து குரல்கொடுத்தனர். கேன்ஸ் நிர்வாகிகள் அப்படியேதும் விதி இல்லை என சொன்னபோது, மருத்துவ காரணங்களுக்காக ஹை ஹீல்ஸ் அணிய முடியாத பல பெண்கள், திரையிடலுக்குச் சென்று அனுமதி மறுக்கப்பட்டதை ஊடகங்களில் பதிவு செய்தனர்.

இந்த ஆண்டு நடிகர் கிறிஸ்டன் ஸ்டூவர்ட், சிவப்பு கம்பள வரவேற்பின் போது தனது குதிகால் உயர்த்தப்பட்ட இரண்டு காலணிகளை கழற்றினார். நடிகர்கள் விதவிதமான உடைகளையும் அவர்கள் அணிந்திருக்கும் நகை, செருப்பு உள்ளிட்டவைகளை அலசி ஆராயும் பல முன்னணி ஊடகங்கள் கிறிஸ்டனின் இந்தச் செயலை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவை பெண் உடலின் ‘கவர்ச்சி’தானே தவிர, அதை எதிர்க்கும் செயல்பாட்டை எப்படி அவர்களால் பரப்ப முடியும்.

கிறிஸ்டனின் செயல்பாடு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? நுகர்வை பெண்ணின் மீது ஏற்றி நுகரும் முதலாளித்துவ உலகில் ஹை ஹீல்ஸ் அணியாத பெண், ‘தகுதி’ குறைவானவரே. தகுதி என்பது அவரை பெண்ணாக ஏற்றுக் கொள்வதிலிருந்து ஆரம்பித்து, அவருடைய பொருளாதார சூழலைக்காட்டும் அளவுகோலாக உள்ளது. ஹை ஹீல்ஸ் ஏன் திணிக்கப்படுகிறது? ஏனெனில் அது பெண்களின் உருவத்தை வளைவு, நெளிவுகளுடன் காட்டுகிறது. நேரடியாகச் சொல்லப்போனால் ஆணின் இச்சையைத் தூண்டும் விதமாக நெளிந்து, வளைந்து செல்லும் நீரலைபோல காட்டுகிறது. (ஆண் கவிகளின் வர்ணனைப் போல் இல்லைதான், என்னால் அப்படி வர்ணிக்க முடியாது).

பல முன்னணி ஊடகங்கள் கிறிஸ்டனின் இந்தச் செயலை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

பிரெஞ்சு மன்னராட்சி காலத்தில் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் அணியும் விதி இருந்திருக்கிறது. அந்த காலத்தில் ஆண்கள் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை இன்ச் உயர்த்தப்பட்ட செருப்புகளையும் அரச மரபினர் இரண்டரை இன்ச் உயர்த்தப்பட்ட காலணிகளை அணிய வேண்டும் என விதிகள் போடப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் ‘பெண் தன்மை’ இருப்பதை கண்டுபிடித்த சிலர், அதை பெண்களுக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு, ஐரோப்பா முழுவதும் சுவீகரிக்கப்பட்டு, மேட்டுக்குடி சீமாட்டிகளின் அந்தஸ்தை காட்டும் ஒரு வஸ்துவாகிப் போனது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கட்டவிழ்க்கப்பட்ட தாராளமய நுகர்வில் ‘ஹை ஹீல்ஸ்’ நடுத்தர பெண்களை சென்றடைந்தது. இன்று பணிபுரியும் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவது கட்டாய விதியாகிவிட்டது.

சீனாவில் பத்தாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையான மன்னராட்சியின்போது பாதங்களை மடிக்கும் (கொஞ்சம் கொஞ்சமாக ஊனமாக்குதல்) வழக்கம் மேட்டுக்குடி பெண்களிடையே இருந்தது. அழகுக்காகவும் அந்தஸ்தின் அடையாளமாகவும் முன்பாதங்களை தாமரை இதழ் போல சுருக்கிக் கொள்ளும் பழக்கம், பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்தது. கால்பாதங்களை சிறு வயது முதலே இறுக்கமாகக் கட்டி, பாதங்களின் இயல்பான தன்மையை மாற்றி விடும் கொடூர பழக்கம் அது. அந்தப் பெண்களின் கால்கள் இப்போதிருக்கும் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளைப் போல மாற்றப்பட்டிருக்கும். இரண்டுக்குமான ஒற்றுமையான குணாம்சம் ஒன்றே ஒன்றுதான், அது பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கும் ஆணாதிக்க பார்வையால் விளைந்தது.

கால்பாதங்களை சிறு வயது முதலே இறுக்கமாகக் கட்டி, பாதங்களின் இயல்பான தன்மையை மாற்றி விடும் கொடூர பழக்கம் அது.

குடும்பம் என்கிற சமூக சிறைக்குள் பெண்களை தள்ளி, அவர்களை அடக்கி ஆள்வதற்கு அழகு என்கிற கற்பிதம் தேவைப்பட்டது. அதன் மூலம் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட, வெற்று அதிகாரங்களை போதையாக்கி பெண்களை அடிமையாக்க வேண்டிய கட்டாயம் ஆண் அதிகார மையத்துக்கு இருந்தது. புனிதமாக்கப்பட்ட காதல், திருமணம், குழந்தைகள், குடும்பம் போன்றவற்றின் ஊடாக ஆண் அதிகார மையத்தின் கட்டளைகள் பெண்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்பட்டன.

“பெண்களை படுகொலைகளிலிருந்து தப்பித்து ஓட விடாமல் ஹை ஹீல்ஸ் செருப்புகள் தடுக்கின்றன” என்கிறார் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான கெய்திலின் மோரன். சங்கிலியால் கட்டிப்போட முடியாது; ஆனால், அழகு என்கிற சங்கிலியால் கட்டிப்போடலாம் என்பதன் உள்ளர்த்தத்தை அதில் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டில், பணியிடத்தில், பொது சமூகத்தில் சம உரிமையைக் கோரும் பெண்களும் ஆணாதிக்க கூறுகளிலிருந்து மேற்குலக பெண்களால் விடுபடமுடியவில்லை. ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதை கட்டாயமாக்கியிருக்கும் சமூகத்துக்கு எதிராக அந்தப் பெண்கள் போராடத் தயாராகிவிட்டார்கள். பிரபலமாக உள்ள கிறிஸ்டனின் இந்தச் செயல்பாடு சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்தும்.

செருப்பு அணியும் உரிமையே அரை நூற்றாண்டுகளாகத்தான் இந்திய பொதுச் சமூகம் பெற்றிருக்கிறது. திறந்துவிடப்பட்ட நுகர்வின் தீவிர தாக்குதலால், பத்து வயது நிரம்பாத சிறுமிகள்கூட ஹை ஹீல்ஸ் அணிவதைக் காண முடிகிறது. கடை வீதிகளெங்கும் ஹை ஹீல்ஸ் செருப்புகள் நிறைந்து கிடக்கின்றன. பாலியல் பண்டமாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆணாதிக்க நுகர்வு கலாச்சாரத்துக்கு தம்மை அறியாமல் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் நமது பெண்கள்.

– மு. வி. நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார்.

சென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி ! படக்கட்டுரை

சென்னை ஐ.சி.எப். ரயில்பெட்டி சர்வதேச கண்காட்சி !

ர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி மே, 17 முதல் 19 வரை சென்னை ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய ரயில்வே மற்றும் பல்வேறு மாநில நகர்ப்புற போக்குவரத்து கழகங்கள் ஒன்று சேர்ந்து “புதிய தொழில்நுட்பங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களை அடையாளம் காண, நெருக்கமாக தொடர்புகொள்ள ஒரு சிறந்த தருணம்” என்று (IRCE-2018) இந்தக் கண்காட்சிக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்திய மக்களின் முதுகெலும்பு போலத் திகழும் பொதுத்துறையான ரயில்வே சிறிது சிறிதாக தனியார்மயப்படுத்தப்படும் சூழலில் இந்தக் கண்காட்சியின் பயன் என்ன?

மது வாழ்வில் பயணங்கள் எப்போதும், என்றும் குதுகலத்தை தரக்கூடியது, அது எந்த வயதாக இருந்தாலும் சரி. அதிலும் ரயில் பயணங்கள் உற்சாகத்துடன் உலக அனுபவத்தையும் தருவதுண்டு.

ஒவ்வொரு பெட்டியும் ஒரு அனுபவத்தை தரக்கூடியது. வெள்ளை காலர் அதிகாரிகள், சுற்றத்தை பார்க்க செல்லும் உறவினர்கள், அவசர வேலையாக செல்பவர்கள், பால்காரர், தினசரி சில நூறு கிலோ மீட்டர் கடந்து வேலைக்கு வந்து செல்பவர் என ரயிலில் பல அடுக்கு மக்களை பார்க்க முடியும். அதிலும் ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் பல வண்ண வாழ்க்கையை பார்க்க முடியும்.

இப்படி பலரின் வாழ்வை சுமந்து செல்லும் ரயில்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது இந்த கண்காட்சி.

இந்த கண்காட்சி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ரயில் குறித்த விளக்கங்களை மட்டுமல்ல இன்று ரயில் தயாரிப்பில் தனியாரின் ஆதிக்கம் எவ்வாறு உள்ளது என்பதையும் காட்டுகிறது.

சத்யநாராயணன், ஆதித்யன், சத்யா: ஐ.சி.எப்.-ல் தொழில் பழகுனர் பயிற்சி மாணவர்கள்.

சத்யநாராயணன், ஆதித்யன் மற்றும் சத்யா.

கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகளை பார்த்தோம். நாங்கள் வெல்டர், பிட்டர், எலக்டிரீசியன் என்பதால் ஒவ்வொரு துறையிலும் இவ்வளவு மாற்றங்களா என வியந்தோம்.

குறிப்பாக கிரைண்டிங் (கடைசல்) தொழில்நுட்பம் நம்ப முடியாத அளவு துல்லியமாக உள்ளது. ரயில் பெட்டியின் ஒவ்வொரு பாகமும் கண்ணாடி மாதிரி கண்ணை பறிக்கிறது. ஆனால் ஒருகுறை இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் பெரும் நிறுவனங்களின் தொழில் நிபுணர்களின் மொழி, தோற்றம் எங்களை அணுக விடாமல் தடுத்தது.

மாணவர்களாகிய எங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தவோ அவர்களின் கண்டுபிடிப்புகளை எங்களுக்கு விளக்கவோ நிர்வாகம் எந்த ஏற்படும் செய்யவில்லை. பொது மக்களும் இப்படித்தான் மிட்டாய் கடையை வெறித்து பார்ப்பது மாதிரி பார்த்து திரும்புகின்றனர்.

தினேஷ்பாபு மற்றும் சுந்தரம்

தினேஷ்பாபு , சுந்தரம்

ஐ.சி.எப். என்பது வெறும் பெயரில் மட்டும்தான். ஆனால் அதை இயக்குவது இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவங்கள் தான். இங்கு வந்திருக்கும் கம்பனிகள் அனைத்தும் ஐ.சி.எப்.-பின் ஆர்டர்களை வாங்கி சப்ளை செய்யும் நிறுவனங்கள்.

ரயில் பெட்டிக்கு தேவையான போல்ட் நட்டிலிருந்து பேஃன்கள், வீல், எஞ்சின் வரை ஏன் கழிப்பறையில் முகம் கழுவும் சில்வர் பேசின் வரை வெளி நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

இங்கு வெளிக் கம்பனி பொருட்களை அசம்பிள் செய்யும் வேலையை மட்டும் தான் செய்கிறார்கள். நாங்களே குறிப்பிட்ட கம்பனியின் சைட் இன்ஜார்சாக பணிபுரிவர்கள்தான். ஐ.சி.எப்.-பில் ஆர்டர் எடுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களோடு சில இந்திய கம்பனிகளும் உள்ளன. அவ்வளவுதான்.

கதிரவன், ஹர்பன்சிங், நிர்மல்குமார்: தொழில்நுட்ப மேலாளர்கள் ஆர்யன் நிறுவனம்.

கதிரவன், ஹர்பன்சிங் மற்றும் நிர்மல்குமார், தொழில்நுட்ப மேலாளர்கள் ஆர்யன் நிறுவனம்

எங்கள் நிறுவனம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. எங்களைப் போன்ற ஒரு சில இந்தியக் கம்பனிகள் தான் ரயில்வே ஆர்டர் பெறுவதில் இன்னமும் போட்டியில் நிற்கிறது. பராக், போனி போன்ற கம்பனிகள் அதில் சில.

உள்ளரங்கத்தில் பார்வையாளர்கள்

புதிதாக தயாரிக்கப்பட்டிருக்கும் பாகங்களை வியப்புடன் பார்க்கும் பார்வையாளர்கள்.

கவுதம், சுதின், பாஸ்கர ராவ்: பொறியியல் மாணவர்கள்.

கவுதம், சுதின் மற்றும் பாஸ்கர ராவ்

“இதுநாள் வரையில் ட்ரெயினில் வருவோம் போவோம். ஏறுவோம் இறங்குவோம். இப்பதான் ட்ரெயின் எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொண்டோம். அதன் பாகங்கள் எந்தெந்த பொருட்களால் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் எப்படி பிரமாண்டமாக நவீனமாகி வருகிறது என்று பிரமித்துப் போனோம். கண்ணை பறிக்கும் நேர்த்தியுடன் ரயில் பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவதாக உள்ளது.”

வெங்கட், கோவிந்தன், ஜெயசங்கர்: ஐசிஎஃப்பில் பணியாற்றும் பல்துறை அதிகாரிகள்.

“நம் நாட்டின் வளர்ச்சி பற்றியும் நவீனமாகி வரும் ரயில்வே துறையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் இம்மாதிரியான கண்காட்சிகள் நடக்கிறது. இன்னும் சில மாதங்களில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ட்ரெயினில் நாம் பயணிக்கலாம்.

ஐ.சி.எப்.-பில் முன்பு மாதிரி உற்பத்தியோ தயாரிப்போ இல்லை. வெறுமனே வெளியில் இருந்து பொருட்களை வாங்கி இங்கு அசம்பிள் செய்யும் வேலைதான் நடக்கிறது, என்று சொல்வது உண்மைதான். ஆனால் வளர்ச்சியில் இதை தவிர்க்க முடியாது என்பது இன்னொரு உண்மை.

அமெரிக்காவிலும் இப்படிதான் வளர்ச்சி இருக்கிறது. அவர்களும் அவுட் சோர்சிங் தான் செய்கிறார்கள். அவ்வளவு ஏன் நம் வீட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நம் தாத்தா காலத்தில் வீட்டுக்கு ஐம்பது விருந்தாளிகள் வந்தாலும் வீட்டிலேயே சமைத்து போடுவார்கள். இப்போது நாம் என்ன செய்கிறோம்? ஐந்து பேர் வந்தாலே கேட்டரிங் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொடுக்கிறோம். உணவையே அவுட் சோர்ஸ் செய்கிறோம். இது நியாயமா?”

சர்வதேச கண்காட்சியில் பங்கேற்றிருக்கும் நிறுவனங்களின் பெயர் பட்டியல்.

கண்காட்சியின் பிரம்மாண்டமான அரங்கத்திற்குள்ளே அணிவகுத்து வரும் பார்வையாளர்கள்.

கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் மாதிரி மெட்ரோ ரயிலில் அமர்ந்து பார்த்து, செல்ஃபி எடுத்து மகிழும் பார்வையாளர்கள்.

வைஷ்ணவி, கனகா, அமிர்தா, குழந்தை தமிழ்மாறன்.

“கண்காட்சியில் டி.வி. இருக்கிற ட்ரெயின் பார்த்தோம். இரண்டு சீட்டு மட்டும் இருக்கிற ட்ரெயின், மெட்ரோ ட்ரெயின் எல்லாம் பார்த்தோம். இஞ்சின் முன்னே செல்ஃபி எடுத்தோம். பாக்கிறதுக்கு ஜாலியா இருந்தது.”

சென்னை மெட்ரோ ரயிலின் மாதிரிக்காக அமைக்கப்பட்டிருந்த ரயில் ஏறி அமர்ந்துவிட்டு இறங்கிய பார்வையாளர்கள்.

பூங்கோதை, தமிழரசி, ஆனந்தி, லட்சுமி: துப்புரவு பணியாளர்கள்.

“காலை ஏழு மணிக்கு வேலைக்கு வந்தோம். சாயங்காலம் ஆறு மணிக்குதான் போவோம். 350 ரூபா கூலி. கண்காட்சி மூணு நாள் இருக்கும். அதுவரைக்கும் வேலை கொடுப்பாங்க. இங்க வர்ற ஜனங்க சின்ன காகிதம் போட்டாலும் உடனே நாங்க பாத்து எடுக்கணும், இல்லனா திட்டுதான். ஸ்டாப்ளர்-பின் மாதிரி எதனா சின்னதா தரையில இருந்தாலும் உன்னிப்பா பார்த்து எடுக்கணும்.

எல்லாக் குழந்தைகளும் இங்க வர்றத பாக்கும்போது எங்க குழந்தைகளையும் இங்க இட்டுனு வந்து காட்ட ஆசையா இருக்கு. குழந்தைகளை நாங்க கூட்டி வந்தா எங்க வேலைய யாரு பாக்கிறது? நீங்க எங்கள போட்டோ எடுக்கிறது, பேசறது இதெல்லாம் ரொம்ப சந்தோசம்.”

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !

0
ஜாலியன் வாலாபாக் படுகொலை – சித்திரம்.

தொண்ணூற்றி ஒன்பது வருடங்களுக்கு முன், 1919 ஏப்ரல் மாதத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அந்தப் படுகொலையின் விவரங்களை நமக்கு பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். பின்னாட்களில் பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற கர்னல் டயர் என்பவன் தனது கட்டளைக்குட்பட்ட பலோச் படையணியைச் சேர்ந்த 90 வீரர்களுக்கு போராட்டக்காரர்களைச் சுடுமாறு உத்தரவிட்டான். அந்த தொண்ணூறு வீரர்களில் 65 பேர் கூர்க்காக்கள் மற்றும் 25 பேர் பஞ்சாபிகள்.

கர்னல் டயர் .

அந்த வீரர்கள் தாம் சுமந்து கொண்டிருந்த லீ என்ஃபீல்ட்303 துப்பாக்கிகளால் போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டார்கள். இடையில் தோட்டாக்களை நிரப்பிக் கொள்ள எடுத்துக் கொண்ட அவகாசம் தவிர சுடுவதை நிறுத்தவே இல்லை. வெறும் பத்தே நிமிடத்தில் நிராயுதபாணிகளாய் நின்ற அந்த மக்களை நோக்கி 1600-க்கும் மேலான தோட்டாக்கள் சுடப்பட்டன. சுட்டவர்கள் அத்தனை பேரும் இந்திய வீரர்கள் தாம்.

அங்கே கூடிய போராட்டக்காரர்கள் அனைவரும் தனது உத்தரவுக்கு எதிராக கூடியிருந்ததாக அரசு அறிவித்தது. 379 பேர் கொல்லப்பட்டு 1100 பேர் காயமடைந்தார்கள் என தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கை அரசு வெளியிட்டது. ஆனால், ஆயிரம் பேருக்கும் மேல் கொல்லப்பட்டதாக காங்கிரசு கட்சி அறிவித்தது. உண்மையான எண்ணிக்கை என்னவென்பது எப்போதுமே நமக்குத் தெரியப் போவதில்லை. மரணித்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை குறைவாக இருப்பதை பல்வேறு காரணங்களுக்காக என்னால் நம்ப முடியவில்லை. எப்படியிருந்தாலும், இந்தச் சம்பவம் உலகத்தை உலுக்கியது. ரவீந்தரநாத் தாகூர் வெள்ளை அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்ட வீரத்திருமகன் (Knighthood) பட்டத்தை துறந்தார்.

காலனிய ஆட்சியில் நடைபெற்ற அன்னிய பொருட்கள் எரிப்புப் போராட்டம்.

நம்மில் பலருக்கும் அந்தப் போராட்டக்காரர்கள் ரவுலட் சட்டத்தை எதிர்த்துப் போராடினர் என்பது தெரிந்திருக்கும். ரவுலட் சட்டத்தில் என்னதான் பிரச்சினை? அந்தச் சட்டம் எந்த ஒரு இந்தியரையும் விசாரணையின்றி சிறையிலடைக்க முடியும் என்றது. அதாவது முன்னெச்சரிக்கை கைது. எந்த ஒரு குடிமகனையும் அவன் குற்றமிழைக்காத நிலையிலும் கைது செய்து சிறையில் அடைக்கமுடியும். அதாவது அரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும். இந்தியர்கள் அந்தக் கொடுமையான அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து கிளர்ந்தார்கள். லாகூரைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று “வாதமும் இல்லை, வக்கீலும் இல்லை, மேல் முறையீடு இல்லை” என ரவுலட் சட்டத்தை விவரித்தது. முன்னெச்சரிக்கை கைது என்றால் என்னவென்பதற்கு அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஜாலியன் வாலாபாக் போராட்டத்திற்கான பின்னணி இது தான். அந்தக் கொடுமையான சட்டத்தை எதிர்த்து நமது மக்கள் அன்றைக்குப் போராடி மாண்டனர். குற்றப்பத்திரிகையோ, விசாரணையோ இன்றி சக இந்தியன் ஒருவனை வெள்ளை அரசாங்கம் கைது செய்வது அநீதியானது என்று அன்றைய மக்கள் கருதினர். அந்தப் போராட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. ஜாலியன்வாலாபாக் போராட்டத்திற்குப் பின் ரவுலட் சட்டம் சில திருத்தங்களோடு அமல்படுத்தப்பட்டது. இது 99 ஆண்டுகளுக்கு முந்தைய காலனிய இந்தியாவின் வரலாறு. நாம் சமகாலத்திற்கு வருவோம்.

சந்திரசேகர் ஆசாத் ராவன், (தோளில் நீல நிற துண்டு அணிந்திருப்பவர்).

உத்திரபிரதேச அரசாங்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசேகர் ஆசாத் ராவன் என்கிற தலித் தலைவரை எந்த வழக்கும் இன்றிக் கைது செய்தது. அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட ஆசாதுக்கு மற்ற சாதாரண கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படும் கைதிகளுக்கு கிடைக்கும் எந்த விதமான மனித உரிமைப் பாதுகாப்போ விசாரணை நடைமுறைகளோ பொருந்தாது. எந்தவிதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், விசாரணையும் நடத்தாமல் 12 மாதங்கள் வரை அவரைச் சிறையில் அடைக்க முடியும். ஒருவேளை அவர் விடுதலை செய்யப்பட்டால் வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மீண்டும் அவரைக் கைது செய்யவும் முடியும்.

கடந்த மே 2-ஆம் தேதியன்று ஆசாத்தின் நிர்வாக ரீதியிலான சிறைக் காலம் முடிவுற்றது. அதே நாளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ‘ஆலோசனைக் குழு’ அவரது சிறைக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்புச் செய்து அறிவித்தது. தலித்துகளின் வீடுகளில் உணவருந்துவதாக வாக்குறுதி அளிப்பதை விட, தலித் மக்களை சமமாக நடத்தவும், அவர்களுக்கு அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள சட்ட ரீதியான உரிமைகளை மதிக்கவும் நமது தலைவர்கள் முன்வர வேண்டும்.

சந்திரசேகர் ஆசாத் ராவனை விடுவிக்கக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

உயர்நீதிமன்றமும் கூட ஆசாத்தை விடுவிக்க மறுத்து விட்டது. அவர் மேல் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இத்தனைக்கும் இது முன்னெச்சரிக்கை கைது தான்; முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றமே முன்னெச்சரிக்கை கைது சட்டங்களை “அநீதியான சட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் போல எண்ணற்ற சட்டங்களைப் பயன்படுத்தி மைய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குப் பிடிக்காதவர்களை கைது செய்கின்றன.

காலனிய அரசே கூடச் செய்யத் தயங்கியதை நாமே நமது மக்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளோம். சக இந்தியர்களின் மீது இவ்வாறான அநீதியை நிகழ்த்தும் நீதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இங்கே பஞ்சமே இல்லை. ஜாலியன்வாலாபாக் படுகொலையை நான் விரிவாக விவரித்ததற்கு ஒரு காரணமிருக்கிறது. அன்றைக்கு அந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்கள் இந்தியர்களான கூர்க்காக்களும், பஞ்சாபிகளும் தான். இந்திய வீரர்கள் தான் அன்றைக்கு அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த சக இந்தியர்களை நோக்கி துப்பாக்கிகளை உயர்த்திக் குறிபார்த்துச் சுட்டனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது கேட்பதற்கு ஏதோ ஆபத்தில் இருந்து தேசத்தைப் பாதுகாக்கும் சட்டம் போல் இருக்கலாம். ஆனால், எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கையின் விளைவாகவும் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்படவில்லை. சொல்லப் போனால், பெரும்பாலான முன்னெச்சரிக்கை கைதுச் சட்டங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

குஜராத் அரசு தன்னுடைய சமூக விரோத தடைச் சட்டத்தின் கீழ் தனது சொந்த மக்களைக் கைது செய்ய முடியும். குண்டாஸ் சட்டம் என பிரபலமாக குறிப்பிடப்படும் அபாயகர நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கர்நாடகாவுடையது. மாநிலங்களில் உள்ள தடுப்புச் சட்டங்களின் கீழ் ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரை ஒருவரை சிறையில் அடைக்க முடியும். சாராயக் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகிறவர்களின் மீது தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்க முடியும்.

2016-ஆம் ஆண்டுக் கணக்கின் படி தமிழ்நாட்டுச் சிறைகளில் சுமார் 1,268 பேர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேர் உயர்கலைப் பட்டம் பெற்றவர்கள்; 21 பேர் பெண்கள் என்கிறது இந்து பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு ஒன்று. தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்களின் படி, 2015-ஆம் ஆண்டு தெலுங்கானாவில் 339 பேரும், கர்நாடகத்தில் 232 பேரும் குஜராத்தில் 219 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய வியாபாரிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், வனக் குற்றங்களில் ஈடுபடுவோர், குண்டர்கள், கடத்தல்காரர்கள், சேரி நிலத்தை அபகரிப்பவர்கள் மற்றும் திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் உள்ளிட்டோரின் அபாயகர நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள சட்டத்தின் பெயர்.

இவ்வாறு தெளிவற்றும், குழப்பமாகவும் சட்டத்திற்குப் பெயரிட்டிருப்பதே உள்நோக்கம் கொண்டதாகும். காலனிய ஆட்சியாளர்களைப் போலவே, இந்திய ஜனநாயக அரசும் தனது குடிமக்களை தொல்லையாக கருதுகின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் இந்த அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே எந்தக் குற்றமும் செய்யாத குடிமக்களை தான் விரும்பியபடி கைது செய்வதற்கு ஏற்ப சட்டங்களை வகுத்துள்ளது. சமகாலத்தில் நமது சக இந்தியர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் அநீதியைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே பாட புத்தகங்களில் 1919-இல் நடந்த படுகொலைகளைப் பற்றிப் படித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர் – போலித்தனம்.

நன்றி: Aakar patel – outlook
தமிழாக்கம்: சாக்கியன்
மூலக்கட்டுரை
How’s Rowlatt Act That Led To Jallianwala Different From NSA That Holds Dalit Leader Azad In Jail Sans Trial?

கருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் !

0

ட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த கர்நாடக மாநிலத்தின் அரசியல் நிலவரம் மணிக்கொரு ‘திடுக்கிடும்’ திருப்பங்களைச் சந்தித்து வருகின்றது.

எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது காங்கிரசு கட்சி. அன்று 17-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ‘ஜனநாயகத்தைக் காக்கும்’ முனைப்போடு பஞ்சாயத்தைக் கூட்டிய நீதிபதிகள், சுமார் மூன்றரை மணி நேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் ஜனநாயகத்தின் கழுத்தில் பா.ஜ.க மாட்டிய சுருக்கின் கண்ணியை இறுக்குமாறு உத்தரவிட்டது.

ஆளுநரின் முடிவெடுக்கும் உரிமையில் தலையிட முடியாதெனவும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவர் வழங்கியுள்ள கால அவகாசம் குறித்து 18-ம் தேதி முடிவெடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும், 18-ம் தேதி இரு தரப்பினரும் தங்களது ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலையும், அவர்களின் ஒப்புதல் கடிதங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, 18-ம் தேதி இரு தரப்பினரும் தங்களது ஆதரவு உறுப்பினர்களின் பட்டியலைச் சமர்ப்பித்தனர். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதரவுக் கடிதங்களின் படியே பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை. ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் படியும், பொம்மை வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் தீர்ப்பின் படியும், முதலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் பெரும்பான்மை எண்ணிக்கையும், அதற்கடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியின் பெரும்பான்மை எண்ணிக்கையும், அதற்கடுத்ததாகவே தனிப்பெரும் கட்சியையும் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்க வேண்டும்.

ஆனால், உச்சநீதிமன்றமோ பா.ஜ.க ஆளுநரின் அதே முடிவை கொஞ்சம் மாறுதலோடு தனது உத்தரவாக அறிவித்தது. அதாவது, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்களுக்குப் பதில் 2 நாட்கள் (19-ம் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது. இருபத்து நான்கு மணி நேர அவகாசமே இருந்த நிலையில் பாரதிய ஜனதா தனது புரோக்கர்களை களமிறக்கியது.

கனிம மாஃபியா ஜனார்தன் ரெட்டியும், முரளிதர் ராவும் நேரடியாக காங்கிரசு மற்றும் ம.ஜ.த உறுப்பினர்களிடம் பேரம் பேசினர். இதை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த காங்கிரசு, தனது தரப்பில் இருந்து பெரு முதலாளியும் கர்நாடக காங்கிரசு தலைவரும், எம்.எல்.ஏ கடத்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வல்லவரான டி.கே. சிவகுமாரை களமிறக்கி விட்டது.

அனைத்து காங்கிரசு உறுப்பினர்களின் கைபேசிகளிலும் உரையாடலைப் பதிவு செய்யும் செயலியை நிறுவிய டி.கே.சிவகுமார், பா.ஜ.க நடத்திய பேரங்களை நேரலையாக ஒலிபரப்ப ஏற்பாடு செய்து விட்டார். கர்நாடகத் தேர்தலும், அதைத் தொடர்ந்து நடந்து வரும் கூத்துகளும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ மேல் ஒப்புக்காவது ஒட்டிக் கொண்டிருந்த கிழிந்த ஆடைகளை மொத்தமாக உருவி தனது நிர்வாண நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக குத்தாட்டத்தில் சுவாரசியமான சில துளிகளை மட்டும் பார்க்கலாம்.

  • தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் பெரும்பான்மைக்குப் போதுமான உறுப்பினர் எண்ணிக்கையை பாரதிய ஜனதா பெற முடியாது என்பது தெளிவானது. டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் விவாதம். அதில் பாரதிய ஜனதாவின் பொதுச் செயலாளர் ராம் மாதவிடம், “பெரும்பான்மைக்கு குறைவான தொகுதிகளே வென்றுள்ளீர்களே, அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?” எனக் கேட்கிறார் நெறியாளர் நாவிகா குமார்.
    “ஹஹ்ஹஹ்ஹா… நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், எங்களிடம் அமித்ஷா இருக்கிறார்…” என ராம் மாதவ் பதில் சொல்கிறார். பதிலைக் கேட்டு நாவிகாவும் வெடித்துச் சிரிக்கிறார்.

  • தமிழ் செய்தித் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாரதிய ஜனதா சார்பில் கலந்து கொண்ட நபரை நோக்கி, ”உங்களிடம் தான் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை இல்லையே, வாக்கெடுப்பின் போது 8 உறுப்பினர்களின் ஆதரவை எப்படி பெறப் போகிறீர்கள்?” என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. தோள்களைக் குலுக்கிக் கொண்டே, “இதென்ன கேள்வி, காங்கிரஸ் அல்லது ஜனதா தளம் கட்சிகளிடம் இருந்து தான் பெறுவோம்” என்கிறார்.
  • நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டார் பா.ஜ.க.-வின் கே.டி.ராகவன். கோவாவில் பின்பற்றப்பட்ட அதே முறையை ஏன் கர்நாடகாவில் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ராகவன், கவர்னருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும், கோவாவில் எடுத்த முடிவும் சட்டரீதியானது, அதற்கும் முன் உதாரணங்கள் இருக்கிறது என்றும், கர்நாடகாவில் எடுத்த முடிவும் சட்டரீதியானது, அதற்கும் முன் உதாரணங்கள் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். பூ விழுந்தால் தோல்வி உனக்கு, தலை விழுந்தால் வெற்றி எனக்கு என்கிற இந்த விளக்கத்தைக் கேட்டு மற்ற பங்கேற்பாளர்கள் விழித்தனர்.

    பூ விழுந்தால் தோல்வி உனக்கு, தலை விழுந்தால் வெற்றி எனக்கு கேடி ராகவனின் லாஜிக்.
  • பல்வேறு விவாதங்களில் காங்கிரசு கட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதே பா.ஜ.கவினர் முன்வைக்கும் வாதம். ஆனால், பாரதிய ஜனதாவை ஏன் தெரிவு செய்யவில்லை என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அதே போல் காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டு வைப்பதை சந்தர்பவாதம் என்பது வாதம். ஆனால், அதே மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் நீங்கள் கூட்டு வைப்பது சந்தர்பவாதமில்லையா எனக் கேட்டால் பதில் இல்லை.
  • பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் கோரினார் எடியூரப்பா – ஆளுநருக்கு எடியூரப்பாவின் வியாபார நுணுக்கங்களில் நம்பிக்கை இல்லாததாலோ என்னவோ 15 நாட்கள் அவகாசம் வழங்கினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது காங்கிரசு கட்சி. ஆனால், அமித்ஷாவின் தொழில் திறமைகளை நன்கு அறிந்திருந்த நீதியரசர்கள் ஒரே நாள் அவகாசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளனர்.
  • உச்சநீதிமன்றத்தில் அரசின் சார்பில் வாதாடினார் அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால். பா.ஜ.கவிடம் 104 உறுப்பினர் ஆதரவு மட்டும் தானே இருக்கிறது, மற்ற கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயுமே என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த கே.கே. வேணுகோபால், உறுப்பினர்கள் பதவி ஏற்றதற்குப் பின் கட்சி மாறினால் தான் அந்தச் சட்டம் பாயுமென்றும், உறுப்பினராக பதவி ஏற்பதற்கு முன்பே கட்சி தாவினால் மேற்படி சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஒரு விளக்கத்தை முன்வைத்தார்.
  • எடியூரப்பா 19-ம் தேதி பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்கிற உத்தரவை 18-ம் தேதி பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாதாடிய முகுல் ரோத்தகி, வாக்கெடுப்பில் நாங்கள் வெல்லப் போவது உறுதி ஆனால் அந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறார். ஏற்கனவே ஜனநாயகம் நிர்வாணமடைந்துள்ள நிலையில் அதற்கு மேலும் உரித்தெடுக்க தோலைத் தவிர வேறில்லை என்பதால் அந்தக் கோரிக்கையை நிராகரித்து ஜனநாகத்தின் ‘மாண்பை’க் காப்பாற்றுகின்றனர் நீதியரசர்கள்.
  • பாரதிய ஜனதாக் கட்சியினர் காங்கிரசு மற்றும் ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 கோடி வரை விலை பேசுகின்றனர். ஜனார்தன் ரெட்டி நேரடியாக காங்கிரசு உறுப்பினர் ஒருவரிடம் அமைச்சர் பதவியும் 150 கோடியும் பேசிய ஆடியோ வெளியானது. இதற்கு பதிலடியாக “அவர்கள் எங்களிடம் இருந்து ஒருவரைத் தூக்கினால், பதிலுக்கு அவர்களிடமிருந்து இரண்டு பேரைத் தூக்குவேன்” என சவால் விட்டார் குமாரசாமி.
  • எடியூரப்பா முதல்வராக பதவியேற்று விட்டார். பெங்களூருவில் கேளிக்கை விடுதி ஒன்றில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அப்படியே கொத்தோடு கேரளாவுக்கு விமானம் மூலம் ஓட்டிச் செல்வது திட்டம். இதற்காக இரண்டு தனியார் விமானங்களையும் வாடகைக்குப் பிடித்தாகி விட்டது. இறுதி நேரத்தில் அந்த விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை வழங்க மறுக்கிறது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம். அவர்கள் விடாக்கண்டர்கள் என்றால், இவர்களும் கொடாக்கண்டர்கள் ஆயிற்றே – கடைசியில் உறுப்பினர்கள் அத்தனை பேரையும் 18-ம் தேதி வால்வோ சொகுசுப் பேருந்தில் அள்ளி அடைத்து ஆந்திராவுக்கு தூக்கிச் சென்றன எதிர்க்கட்சிகள்.
  • நம்பிக்கை வாக்கெடுப்பை 19-ம் தேதி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்ற வேகத்திலேயே வால்வோ பேருந்துகள் திரும்பின. புலனாய்வுப் புலிகளான ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள், சம்பந்தப்பட்ட வால்வோ பேருந்துகள் “ஷர்மா” எனும் நிறுவனத்திற்கு சொந்தமானதென்றும், அவற்றின் முதலாளி காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவரென்றும் ‘கண்டுபிடித்து’ வருவாய்த்துறைக்கு குறிப்பால் உணர்த்திக் கொண்டிருந்தன. இதே சமயத்தில் கர்நாடக உள்ளூர் செய்தித் தொலைக்காட்சிகளில் பா.ஜ.க நடத்திய பேரங்கள் குறித்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
  • இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க-வைச் சேர்ந்த போப்பையா நியமிக்கப்படுகிறார். பொதுவாக சபையின் மூத்த உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்கிற விதியை மீறுகிறது பா.ஜ.க. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற காங்கிரசின் மனுவை நிராகரித்து மீண்டும் ஒருமுறை ஜனநாயகத்தின் புட்டத்தில் எட்டி உதைக்கிறது உச்சநீதிமன்றம்.
  • நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த 19-ம் தேதியன்று காலையே பாரதிய ஜனதாவுக்கு முடிவு தெரிந்து விட்டது. எப்படியும் எடியூரப்பா வெல்ல மாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட பா.ஜ.க, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்ய அனுமதியளிக்கிறது. அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பாவை உணர்ச்சிகரமாக பேச வைத்து (அதை மக்கள் பார்த்த பின்) இராஜினாமா செய்ய வைப்பது திட்டம். இதன் மூலம் லிங்காயத்து சாதி மக்களின் அனுதாபத்தையாவது பெற்று விடலாம் என்பது கணக்கு.

எடியூரப்பா பதவி விலகி விட்டார். பா.ஜ.கவின் அனைத்து இராஜதந்திரங்களும் தோற்றுப் போய் விட்டதாக பத்திரிகையாளர்கள் சிலர் சொல்கின்றனர். ஆனால், குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு சில நாட்கள் இருப்பதால் அதற்குள் மீண்டும் ஏதாவது சித்து வேலைகள் செய்ய பா.ஜ.க முயலக்கூடும் என்று வேறு சிலர் சொல்கின்றனர். எடியூரப்பா பதவி விலகியதால் கிடைத்த அனுதாபம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கைகொடுக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர் – பேரம் பேசிய ஆடியோக்கள் வெளியானதால் அனுதாபம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை என சிலர் மறுக்கின்றனர்.

ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கைக்கெட்டும் தூரத்தில் நழுவிப் போனதால், பா.ஜ.க.-வின் பதவி வெறி முன்னெப்போதைக் காட்டிலும் தீவிரமாக இருக்கும். ஆகவே காங்கிரசு – குமாரசாமி ஆட்சியைக் கலைப்பதற்கும், கட்சிகளை உடைப்பதற்கும், எம்.எல்.ஏக்களை வாங்குவதற்கும் பா.ஜ.க தீவிரமாக சதி செய்யும்.

முடிவு என்னவாக இருந்தாலும், ஜனநாயகத்தின் ’மாண்பு’ ஆறடிக் குழிக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

கருத்துக் கணிப்பு :
  • பா.ஜ.க. 20 மணி நேர முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமாவை அடுத்து என்ன நடக்கும் ?
  • பதவிவெறி பிடித்த பா.ஜ.க. மீண்டும் முறைகேடான வழியில் முயலும்.
  • காங்கிரசு, மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்து உறுதியாக நீடிக்கும்.
  • என்ன நடக்குமென்று தெரியவில்லை.

யூடியூப்பில் வாக்களிக்க : https://www.youtube.com/channel/UCECxTVipw2fCQ10ROo6vbsA/community?lb=Ugw5tgMaDde7rFZo6cJ4AaABCQ

– சாக்கியன்.

மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !!

1

மே-22 பொதுவேலைநிறுத்தம் – ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மற்றும் மாநகர மக்கள் ஒன்றிணைந்து  “ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை” ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

குறிப்பாக குமரட்டியபுரம் பகுதி மக்களின் போராட்டம், 100-வது நாளை எட்டியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் முன்முயற்சியில் ஐந்து நபர்களை கொண்ட பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அம்மக்கள் மத்தியில் பிரசுரம் விநியோகித்தும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தியும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். சாதி, மதம், அரசியல் கட்சி இவற்றுக்கு அப்பாற்பட்டு, ‘’நாசகார ஸ்டெர்லைட்டை மூடு’’ என்ற பொதுக் கோரிக்கையின் கீழ் அம்மக்களை அணிதிரட்டி வருகின்றனர்.

இப்போராட்டத்தின் 100-வது நாளையொட்டி, வருகின்ற மே-22 அன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது இக்கூட்டமைப்பு. மேலும், பொதுவேலைநிறுத்தம் என்ற அறிவிப்போடு வீட்டில் முடங்கிவிடாமல், பெருந்திரளான மக்கள் பங்கேற்கக்கூடிய போராட்டமாகவும் அமைய வேண்டுமென்ற நோக்கில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

கூட்டமைப்பின் பொதுவேலைநிறுத்த அழைப்பை ஏற்று, வியாபாரிகள் சங்கம் , விவசாயிகள் சங்கம் , உப்பள தொழிலாளர் சங்கம், கட்டிட தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு சங்கங்களும் பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. மேலும், தமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பும் விடுத்துள்ளன.  

மே – 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுவேலை நிறுத்தம் மற்றும் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் என்பது ஏதோ தூத்துக்குடி மாவட்ட மக்களின் உள்ளூர் பிரச்சினைக்கான போராட்டம் அல்ல. டெல்டா விவசாய வயல்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பு, தேனியில் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைப்பு போன்ற நாசாகரத் திட்டங்களுள் இதுவும் ஒன்று என்ற அடிப்படையில், இது அனைத்து மக்களுக்குமான பிரச்சினை.

நூறுநாட்களைக் கடந்து மனஉறுதியோடு போராடும் அம்மக்களின் முன்னுதாரணமானப் போராட்டத்தை ஆதரிப்பதும்; அம்மக்களின்  போராட்ட உணர்வை வரித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா?

தகவல்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.

 

 

கர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு !

4

ர்நாடகாவில் இன்று மாலை என்ன நடக்கும் என்ற ஆர்வம், “இந்த வருசம் அழகர் என்ன கலர் பட்டு உடுத்திக்கொண்டு வருவார்” என்ற ஆர்வத்துக்கு சமமானது.  “மழை பெய்யுமா பெய்யாதா” என்பதை காரண காரியங்களுடன் ஆயிரம் அறிவியல் ஆய்வுகள் விளக்கிச் சொல்கின்றன. இருந்தாலும் அழகர் உடுத்தி வரும் வஸ்திரத்தின் நிறம் அந்த அறிவியல் ஆய்வையெல்லாம் பொய்யாக்கிவிடும் என்று பக்தர்களுக்கு ஒரு நம்பிக்கை.

முந்தாநாள் இரவு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சிக்கலான தத்துவஞான விவாதத்தின் மையப்பொருள் இதுதான்.

“104 ஐ விட 117 தான் பெரியது என்பது கணிதம். அவ்வாறிருக்க ஆளுநர் 104 தான் பெரியது என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பை எடியூரப்பாவுக்கு எப்படி வழங்க முடியும்?” என்பதுதான் காங் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம்.

“104 பெரிதா 117 பெரிதா என்று நிரூபிக்க 15 நாள் அவகாசம் தரமுடியாது. சனிக்கிழமை 4 மணி வரை அவகாசம் எடுத்துக் கொண்டு நிரூபித்துக் காட்டுங்கள்” என்பது மாட்சிமை தங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பு.

“சரி நிரூபிக்கிறோம்” என்று சவாலை எற்றுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா. ஒரு காங்கிரசு எம்.எல்.ஏ வை நூறு கோடி ரூபாய்க்கு விலை பேசுகிறார் பெல்லாரி ஜனார்த்தன் ரெட்டி. ஆடியோ டேப் வெளியாகியிருக்கிறது. “எங்க ஆட்கள் 2 பேரைக் காணவில்லை” என்கிறார் குமாரசாமி.

ஐதராபாத்திலிருந்து விமானத்தில் வருவது ஆபத்து என்று பேருந்தில் வருகிறார்கள் காங், குமாரசாமி கட்சி எம்.எல்.ஏக்கள்.  “வரும் வழியில் விபத்து எதுவும் நடக்காமல் இருக்கவேண்டும். பத்து கொலை செய்து கூட பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு போகிறார்கள்” என்று என்.டி.டிவி சானலில் புலம்புகிறார் காங் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி.

இன்று காலை தற்காலிக சபாநாயகர் போப்பையாவை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. “அவை நடவடிக்கைகளை லைவ் டெலிகாஸ்ட் செய்யச் சொல்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வெளிப்படைத்தன்மையை நாங்கள் வழங்க முடியும்?” என்று ஜோக் அடித்து சிரிக்கிறார்கள் நீதிபதிகள்.

“பலான இடத்தில் பலான டைமுக்கு உன்னை கொலை செய்கிறேன்” என்று சொல்லி போலீஸ் படையின் கண்ணில் மண்ணைத்தூவி, சொன்னபடி செய்து காட்டும் ஹீரோவை நாம் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். இன்று மாலை 4 மணிக்கு அந்த ஹீரோ பாத்திரம் போப்பையாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

போப்பையா

“போப்பையா இந்தக் கொலையை எப்படி செய்யப்போகிறார்? என்ன விதமான புதிய கிரிமினல் உத்தியைக் கையாண்டு பாஜக வெற்றி பெறப்போகிறது? அதை குமாரசாமி காங்கிரசு கூட்டணி எப்படி எதிர் கொள்ளப்போகிறது?” என்பதைத்தான் மீடியாக்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

சபாநாயகர் எதை வேண்டுமானாலும் செய்து எடியூரப்பாவுக்கு வெற்றி என்று அறிவிக்கலாம். ஒருவேளை யாரையுமே விலை பேச முடியவில்லை என்றால், 104 பேரில் எட்டு பேரை இரண்டு கையையும் தூக்கச் சொல்லி மொத்தம் 112 பேர் கை உயர்த்தியதாக அறிவிக்கலாம். அல்லது சட்ட வல்லுநர்கள் முகுல் ரோத்கியும் கே.கே.வேணுகோபாலும் மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்ய வேறு ஏதேனும் வழி சொல்லிக் கொடுத்திருக்கலாம். எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றத் தெரிந்த மோடிக்கு எடியூரப்பாவை காப்பாற்றத் தெரியாதா என்ன?

ஒருவேளை 4 மணிக்கு பாஜக தோற்று விடுவதாகவே வைத்துக் கொள்வோம். கதை அப்படியே முடிந்துவிடுமா என்ன? ரெய்டு, கடத்தல், விலை, கொலை என்ற எல்லா ஆயுதங்களும் அடுத்தடுத்து ஏவப்படும்.

கொஞ்சம் வேறு விதமாக சிந்தித்து பாருங்கள்

சுமார் 65% மக்கள் பாஜக வுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். காங்கிரசு மட்டுமே பாஜக வை விட 2% வாக்கு அதிகம் பெற்றிருக்கிறது. அங்கே மீறப்படும் ஜனநாயகம் நேரடியாக வாக்காளர்களின் உரிமையைத்தான் கேலிப்பொருளாக்குகிறது.

எனினும், தங்கள் அதிகாரம் பறி போய்விட்டதாக குமாரசாமியும், காங்கிரசும்தான் கொதிக்கின்றனரேயன்றி, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கொதிக்கவில்லை. தங்கள் அதிகாரம் பறி போய்விட்டதாகவும் மக்கள் பதறவில்லை.

இதற்குப் பொருள் மக்கள் கோபப்படவில்லை என்பதல்ல. மக்கள் மனம் கொதிக்கிறார்கள். என்ன சார் இது அக்கிரமம் என்கிறார் ஒரு டீ மாஸ்டர். ஹிட்லரை விட மோசம் சார் என்கிறார் ஒரு சிறு வணிகர். எனினும் இந்தக் கொதிப்பு எதுவும் வீதிக்கு வரவில்லை. அப்படி கொண்டு வருவதற்கான முயற்சியிலும் சம்மந்தப்பட்ட கட்சிகள் இறங்கவில்லை.

அவ்வாறு மக்கள் வீதியில் இறங்கி நீதியையும், தங்களது அதிகாரத்தையும் நிலைநாட்டிக்கொள்வது அராஜகமென்றும் நீதிமன்றத்தில் முறையிடுவதுதான் ஜனநாயக வழிமுறை என்றும் கட்சிகள் உபதேசிக்கிறார்கள். அதிகாரத்தை மக்கள் தமது சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்வதை மட்டும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, நீதிமன்றம், அதிகார வர்க்கம், போலீசு ஆகிய யாரும் விரும்புவதில்லை. அனுமதிப்பதுமில்லை.

நீதிமன்றமோ அராஜகத்தை அரங்கேற்ற பாசிஸ்டுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. பின்னர் அராஜகத்துக்கே சட்ட அங்கீகாரமும் வழங்குகிறது.

கரசேவை – அன்று பாபர் மசூதியில் இன்று விதான் சவுதாவில்

இந்த ஒப்பீட்டைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

1992 டிசம்பர் 6 ஆம் தேதியன்று இந்து மதவெறி பாசிஸ்டுகள், பாபர் மசூதிக்கு எதிரே, அமைதியான முறையில் பஜனை செய்வதற்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம். அந்த “பக்தர்கள்” கையில் கடப்பாரையுடன் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தேதான் அந்த அனுமதி வழங்கப்பட்டது.

காமெராக்கள், நீதிமன்றப் பார்வையாளர்கள் அனைவரும் பார்த்து நிற்க பாபர் மசூதி தரை மட்டமாக்கப்பட்டது. இன்றும் உச்ச நீதிமன்றத்தின் காமெராக்கள் தயாராக இருக்கின்றன. பாஜக வின் கடப்பாரைகளும் தயாராக இருக்கின்றன.

பெங்களூரு விதான் சவுதாவை உள்ளிருந்தே தகர்க்கப் போகிறார்கள் கரசேவகர்கள். மாலை 4 மணிக்கு தொடங்குகிறது கரசேவை.

– மருதையன்
(மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !

29

லூன் கடை ஒன்றில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதுவும் குறளுக்கு உரை தந்த கலைஞர் டி.வியில். “யப்பா அந்த சத்தத்தை குறைப்பா. முடியல!”, சலிப்புடன் ஒருவர் சொல்ல ஒலியை மியூட் செய்தார் கடைக்காரார். சிறிது நேரத்திற்கு அந்த இடமே மயான அமைதியுடன் ஒடுங்கியது. உடனே “எழவு வீடு மாதிரி இருக்கு. சத்தத்த கூட்டு” என்றபடியே மீண்டும் தமிழ் வர்ணனை கேட்க ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட தமிழ் வர்ணனையில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்களின் மனநிலை இதுதான். அந்த மொழியோடு ஒட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு பார்க்கிறார்கள்.

மொழியே தெரியாமல் இருந்தாலும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சிறு ஒட்டுதல் கூட தமிழில் ஏன் இல்லை என பலரும் கேட்கிறார்கள். காரணம் தமிழ் கிரிக்கெட் வருணணையில் இருப்பது ஆங்கிலம் கலந்த பார்ப்பன மொழி.

“அரவுண்ட த விக்கெட்ல(around the wicket) போட்டுண்டுருக்காரு, அல்ட்ரா எட்ஜ்(ultra edge) நன்னா காமிக்கர்து, சிக்சர் போயிடுத்து, 4 வந்துடுத்து, பிரண்ட் ஃபூட்(front foot) வந்து ஆடுறச்சே நன்னா…., அவா ஜெயிச்சிருவானு கிளியரா தெரிஞ்சுண்டுருக்கு..”

ஹேமங் பதானி, கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், பத்ரிநாத், லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் என முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் என்ற பெயரில் ஒரு அக்கிரஹாரத்தையே களமிறக்கியிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவனம். வர்ணனை என்ற பெயரில் பார்பனத் தமிழைக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின் காதுகளை கர்ண கொடூரமாக பதம் பார்க்கிறது மேற்படி கூட்டணி. ஆர்.ஜே.பாலாஜியே பரவாயில்லை எனும் நினைக்கும் அளவுக்கு நம்மை தாக்குகிறார்கள்.

“என்ன மாமா ஆத்துல அத்திம்பேர் சௌக்கியமா இருக்காளா?” என்று ஐ.பி.எல் வர்ணனையில் இன்னும் பேசப்படவில்லை. அதையும் கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாம். இதை தவிர பந்து உஸ்ஸ்ஸ்-னு போகுது, மூக்கு மேல ராஜா என இவர்கள் அடிக்கும் மொக்கை வர்ணனைகள் கேட்பவர்களை எரிச்சலூட்டுகின்றன.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

பொதுவில் நாம் எந்த வட்டார வழக்கு பேசினாலும் ஒரு மேடையில் பலர் முன்னிலையில் பேசும்போது நாம் அனைவருக்குமான பொதுத் தமிழ் மொழியில் தான் பேச ஆரம்பிப்போம். அது இயல்பு. ஆனால் பல லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் அக்கிரஹாரத்து மொழியை எந்த கூச்சமும் இன்றி பயன்படுத்துகிறார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் முதல் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரை அனைவரும் ‘அவா’- க்களாக இருப்பதால் கிரிக்கெட் சங்க தாழ்வாரங்கள் இயல்பாக அக்கிரஹாரங்களாகவே அவர்களுக்கு காட்சியளிக்கின்றன. அதனால் அக்கிரஹாரத்து மொழியும் அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது.

சிவராமகிருஷ்ண ‘ஐயர்’

இப்பார்ப்பன மாமக்களின் வர்ணனைகளைவிட சிறுநகரங்களில் ஊள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனை சிறப்பானதாக இருக்கிறது. “முன் சென்று தடுத்து ஆடினார் (front foot defence)” “மட்டையாளரை ஏமாற்றி காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது”. “பந்து எல்லைகோட்டை தாண்டியது. நான்கு ஓட்டங்கள்” என இவ் வர்ணனைகள் சிறப்பானதாக இருக்கும். இவை சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் போன்றவர்களின் வானொலி கிரிக்கெட் வர்ணனைகளை பிரதியெடுத்து பேசப்படுபவை. நீங்கள் தஞ்சை, திருநெல்வேலி என வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றாலும் ஒரே மாதிரியான வர்ணனைகளை பார்க்க முடியும்.

பார்ப்பன மொழி என்பதையும் தாண்டி கடந்த 10-ஆம்(10-5-2018) தேதி நடைபெற்ற டெல்லி vs  ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள் இப்பார்ப்பன முன்னாள் வீரர்கள். காரணம் டெல்லி அணியில் விளையாடும் ஸ்ரேயஸ் ஐயர் என்ற வீரர். அவர் பெயரின் பின்னொட்டை பார்த்ததும் வர்ணனையில் இருந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

“……ஸ்ரேயஸ் ஐயர்…..நானும் ஐயர் தான். என் பெயர் சிவராமகிருஷ்ண ஐயர்” என்ற பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேரடி வர்ணனையில் தன் சாதியை தெரிவிக்கிறார்.

அபினவ் முகுந்த்.

நேற்று(17-05-2018) நடைபெற்ற ஹைதராபாத் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தான் ஒரு மாத்வா பிராமின் என வர்ணனையில் தெரிவித்தார் அபினவ் முகுந்த என்ற கிரிக்கெட் வீரர்.

சக வர்ணனையாளரான முத்து என்பவர் ” எந்த அணி ஜெயிக்கப் போகிறது. ஹைதராபாத்தா இல்லை பெங்களூரா? பிரியாணியா இல்லை பிசிபெல்லா பாத்தா?  என்ற கேட்டபோது  “பிசிபெல்லாபாத்துதான், அக்சுவலி நான் மாத்வா பிராமின்” என்று சம்பந்தமில்லாமல் தனது சாதியை குறிப்பிட்டார் அந்த கிரிக்கெட் வீரர்/வர்ணனையாளர்.

சாதி வெறியனாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் சாதி பெயர் கேட்பது நாகரிகமற்றதாக கருதப்படுகிறது. ஆனால் எந்த நாகரிகமும் இல்லாமல் ஐயர் என்பதை ஏதோ முனைவர் பட்டம் போல பெருமைமிகு அடையாளமாக கூறி அற்ப சந்தோசமடைவதை பார்ப்பனத் திமிர் என்று தான் அழைக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டி ஒன்றில் ஒரு வீரர்  பந்து பிடிப்பதை தவற விட்டுவிட்டார். அப்போது ஶ்ரீகாந்தின் வர்ணனை.“ விட்டுடான்… ஐயோ…நாராயணா,வாசுதேவா…” என்று பார்த்தசாரதி கோவில் தெரு மாமாக்களை நினைவுபடுத்தினார்.” ஓ மை காட்” என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாராயணா வாசுதேவா என்று தமிழ்படுத்தியிருக்கிறார் திருவாளர் ஶ்ரீகாந்த். விட்டால் ஆங்கில வழக்கை சுதேசிப்படுத்தியிருப்பதாக நம்மிடம் படுத்தினாலும் படுத்துவார்கள். சிவராமகிருஷ்ண ‘ஐயரி’-ன் மேற்படி கூற்றுக்கு ஒரு ‘ஐயங்காரரி’-ன் எதிர்வினையாகவும் இதை பார்க்கலாம். சைவ-வைணவ, ஐயர்-ஐயங்கார் சண்டை அங்கேயும் தொடர்கிறது போலும்.

ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் சாதி வெறியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். சாதி வெறிக்கு இடமளித்ததற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்பதோடு இப்பார்ப்பன வெறியர்களை தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

பொதுவில் தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துகொள்வது இழிவானது நாகரிகமற்றது என்று கருதப்படுகிறது. அதனால் தான் சாதிவெறி கட்சி நடத்தினாலும் கொங்கு ஈஸ்வரனுக்கும், ராமதாஸ்களும் தமது பெயரில் சாதி பின்னொட்டை சேர்க்காமல் இருக்கிறார்கள். இந்த சூழலில் சாதி வெறியர்களோ – சாதி அபிமானம் கொண்டவர்களோ, பொது இடங்களில் தமது சாதியை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கப்பதற்கு சிரமப்படுகிறார்கள்.

ஆடுறதுக்கு அமெரிக்கா, பாடுறதுக்கு பார்த்தசாரதி தெருவா?

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் சாதி பெயரை இன்னும் பயன்படுத்துகிறார்கள். (ஸ்ரேயஸ் ஐயரும் தமிழக கிரிக்கெட் வீரர் அல்ல). தமிழகத்தில் மதிக்கப்பட வேண்டுமானால் சாதி பெயரை துறக்க வேண்டியிருக்கிறது. இவர்களைப் பொறுத்த வரை இது எவ்வளவு பெரிய அநீதி! இச்சூழலில் அமித் மிஸ்ராக்கள், இசாந்த் சர்மாக்களை மட்டுமே பார்த்த இடத்தில் ஐயர் என்ற பெயரை பார்த்தால்? தன்னை அறியாமல் குதூகலம் அடைகிறார்       லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன ஐயர். இந்த குதூகலத்தை அபபடியே திருப்பிப் போட்டால் அது தான் பார்ப்பனர்கள் தமிழகத்தின் மீதும் திராவிட இயக்கத்தின் மீது காட்டும் வெறுப்பு. அவாளது சாதி பெருமிதத்தை அவர்களே மறைக்கும்படி பெரியாரின் மண் செய்து விட்டதைத்தான் கலிகாலம் முத்திடுத்து என்று புலம்புகிறார்களோ என்னமோ!

இதுவே தம்மை நட்டநடு சென்டராகவும், தாராளமயத்தை ஆதரிக்கும் லிபரலாகவும் இருக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? உள்ளூர இருக்கும் திராவிட இயக்கத்தின் மீதான் காழ்ப்பு இன்னும் பலமடங்காக துள்ளி எழுகிறது. அதற்கு சரியான சான்று சமீபத்திய ந.ந.சென்டரும், ஆல்பர்ப்பஸ் அங்கிளுமான எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் என்பவர். இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன், திராவிடம் – பெரியாரையும் எதிர்க்கிறேன் என்று இந்த பெரியவாள் அடித்து விடும் வார்த்தைகளால் தமிழ் ஃபேஸ்புக்கே வெட்கித் தலை குனிகிறது. காலஞ்சென்ற சுந்தர ராமசாமியின் தயவால் காலச்சுவடில் கருத்துபதேசம் பண்ணின பெரியவாள் இன்றைக்கு டி.வி.விவாதம் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரையும் படுத்தி எடுக்கிறார். அவாள் யாராக இருந்தாலும் விவாதத்திற்கு கூப்பிட்டே ஆக வேண்டும் என்று தமிழ் சேனல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்திரவு போட்டிருப்பதால் இந்த அடிமுட்டாள் பிரைம் டைம்மில் மனுதர்மத்தையே  மாத்திப் போட்டு பேசுகிறார்.

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஐ.பி.எல் வர்ணனையில் சாதி பெயரை தெரிவித்தது ஒரு உதாரணம் தான். சாதி பெயர் கேட்கப்படாத ஐ.டி அலுவலகங்களிலும் இதை பார்க்க முடியும். அங்கு ஒரு தேவர் மற்றொரு தேவரையோ, நாடார் நாடாரையோ கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு அக்கவலையில்லை.காரணம் அவர்களின் பார்ப்பன மொழி, பண்பாடு. அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

பார்ப்பன மொழியை மீறி வேறு சில உபாயங்களையும் வைத்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அணு குண்டு வெடித்தவர்களாயிற்றே!  ஐ.டி நிறுவன டீமில் புதிதாக சேருபவர்களில் ‘அவா’க்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கு ஒரு கையேடே வைத்திருக்கிறார்கள்.

பொதுவாக பேசிகொண்டிருக்கும் இடத்தில் “கொஞ்ச நாளா நான் சந்தியாவந்தனமே பண்றதில்லை”

“என்ன பாஸ் இன்னிக்கு லேட்.”

“வீட்டுல ஆவணி அவிட்டம்”

“உங்களுக்குமா எங்களுக்கும் ஆவணி அவிட்டம்”…… புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள், புதிய மனுதர்மக் கூட்டணிகள் உருவாகி விடும். இல்லையென்றால் கட்டிப்பிடிக்கும் “ஹக்” கலையின் மூலம் உள்ளே நெளியும் பூணூலை பாசத்தோடு அடையாளம் காண்பார்கள். பிறகு என்ன, அவா, இவா, ஆத்துல, காயத்ரி மந்திரம், தோப்பனார், அத்திம்பேர் என்று அவாளது கலைக்களஞ்சியம் கொஞ்சி விளையாடும். இந்த அவாள் மொழி பேசினால்தான் நாகரிகம் என்று சிலபல சூத்திரர்களும், பஞ்சமர்களும் முயற்சி செய்யும் சோகம் தனிக் கதை. தொலைக்காட்சிகளிலும், சினிமா உலகிலும் கூட இந்த பார்ப்பனியமயமாகும் தமிழின் அவலத்தைக் கேட்கலாம்.

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். என்ற 20-20 வடிவம் ஒரு நவீன வடிவம் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல ஐ.டி. வேலையும் அதன் வாழ்க்கையும் நவீனம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு நவீனத்திலும் தொடர்பு மொழி என்னவோ பழைய பார்ப்பன பஞ்சாங்கங்கள்தான்.

****

சில நாட்களுக்கு முன்னர் வினவு தளத்தில் வெளிவந்த “காஷ்மீர் மன்னர்கள் ஆய் போன கதை” என்ற கட்டுரையில் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமல் காஷ்மீர் மன்னர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய கதை குறிப்பிடப்பட்டிருந்தது. அது மன்னர் காலம். அதே போன்ற ஒரு கதை நாம் வாழும் காலத்திலும் நடந்திருக்கிறது. அந்த சம்பவத்தை கீழே படியுங்கள்.

நவம்பர்-23,2000-ஆம் ஆண்டில் ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தான் அந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்தது.

ஆனால் இங்கு மன்னர் ஆடவில்லை. மன்னரின் புதல்வரான இளவரசர் கிரிக்கெட் ஆடினார். ஏழு நிமிடங்கள் களத்தில் நின்று ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகினார். இளவரசருக்கு அன்று மூட் சரியில்லாததால் அவுட் ஆனதை ஏற்றுக் கொண்டு பெவிலியனுக்கு நடையை கட்டினார். இல்லையெனில் காஷ்மீர் மன்னரின் நிலை தான். எதிர் அணியின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அந்த இளவரசர் வேறு யாரும் இல்லை. ஹிமாச்சல் பிரதேச பா.ஜ.க. எம்.பி. மற்றும் முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தான். மன்னர் அன்றைய ஹிமாச்சல் பிரதேச முதல்வர் பிரேம் குமார் துமால்.

இப்போட்டி நடைபெற்றதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இளவரசர் அனுராக் தாகூர் ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பின்னர் தேர்வு குழுவின் தலைவராகவும் ஆனார்.

பிறகு என்ன? இதுவரை ரோட்டு ஓரத்தில் ‘ஒன்பிச் கேட்ச்’ கில்லி கிரிக்கெட் கூட விளையாடியிராத தன்னை ஹிமாச்சல் பிரதேச ரஞ்சி அணிக்கு தானே தேர்வு செய்து கொண்டார். பிறகு தன்னை கேப்டனாகவும் அறிவித்துக் கொண்டார். விளையாடவும் செய்திருக்கிறார். அந்த ஆட்டம் எப்படி நடந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். நிச்சயமாக காஷ்மீர் மன்னரைவிட மட்டமாக இருந்திருக்கும்.

மாநில முதல்வரின் மகன் கிரிக்கெட் சங்க தலைவராகி, பின்னர் தேர்வுக் குழுவில் தன்னைத்தானே நியமித்துக் கொண்டு,  தன்னைத் தானே தேர்வு செய்து அதுவும் கேப்டனாகி கிரிக்கெட் விளையாடி டக் அவுட் ஆகியிருக்கிறார்.

விசயம் அதோடு முடியவில்லை. அந்த ஒரு மேட்சில் டக் ஆவுட் ஆனதை தகுதியாக கொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அந்தஸ்தில் தேசிய அளவில் ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவரானார். கிரிக்கெட்டின் தேர்வுக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தான் இடம்பெற முடியும் என்பது விதி. இளவரசர் கிரிக்கெட் விளையாடியதன் நோக்கமே இதற்குதான். பின்னர் அதை கொண்டு படிப்படியாக பி.சி.சி.ஐ. தலைவராகவும் உயர்ந்தார்.

தன் மீதான வழக்கை தானே விசாரிக்கும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி; தன் மீதான குற்றத்திற்கு தானே விசாரணை கமிசன் அமைக்கும் தமிழக ஆளுநர்; தன்னை தானே ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.பி.

மேற்கண்ட மூவரும் பா.ஜ.க-வினர் அல்லது பா.ஜ.க. எடுபிடிகள் என்பது ஒரு யதேச்சையான ஒற்றுமை இல்லை. மேற்கண்ட செயலுக்காக இவர்கள் கடுகளவுக்கேணும் கூச்சமோ நாணமோ அடைவதில்லை. பா.ஜ.க.வினரின் டிசைனே அப்படித்தான்.

வேத காலத்தில் இணையம் இருந்தது, சேது பாலத்தில் குரங்கு போட்ட பாலம் இருக்கிறது, ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் அந்தக் காலத்து லைவ் ஒளிபரப்பு, அர்ஜுனன் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் நைட்ரஜன் குண்டுக்கு இணையானது, பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்ட ஜோசியம் குறித்த படிப்பு அறிவியல் துறையின் கீழ் வருவது………… இன்னபிற கூத்துக்கள் நடைபெறும் நாட்டில் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட்டா இருக்கும்!

மற்ற நாடுகளில் ஆடப்படும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டது. ஆம். இதன் பெயர் மனுதர்ம கிரிக்கெட்!

  • ரவி

Anurag Thakur, former Himachal CM’s son, turned HPCA into a company after benefitting from state largesse

 

இந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு !

0

ரு வார விடுமுறையோட காலை நேரத்துல பெசன்ட் நகர் கடற்கரைக்கி போயிருந்தேன். எங்குழந்த கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு மீன் பிடிக்கப் போகும் தொழிலாளிகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்ருந்தேன். அப்படியே ஒரு கூறு நெத்திலியும் வாங்கிகிட்டு  அதை சுத்தம் செய்ய குடுக்க மீனவ தொழிலாளிங்க குடியிருப்பு பக்கம் வந்தேன். அங்கத்தான் சுமன (பெண்) பாத்தேன்.

சுமனோட வீட்டு வாசல்லதான் எதிர் வீடடு மீன் காரம்மா சுத்தம் செய்ய ஆரம்பிச்சாங்க.

“ரெம்பவும் பொடி மீனு ஆய நேரமெடுக்கும் பிள்ளைய வச்சுகினு நின்னுகினே இருக்காமே நெழலுக்கா கொஞ்சம் ஒதுங்கு”ன்னு சொன்னாங்க மீன்காரம்மா.

எதித்தாப்புல இருக்கும் குடிசக்குள்ள போகலான்னு குனிஞ்சு பாத்தப்பதான் ஒரு குழந்தைய ஆசை தீர கொஞ்சிட்டிருந்தா அந்த பொண்ணு. அதப் பாத்ததுமே எம்மனசுக்கு பரவசமா இருந்துச்சு. நானும் கொஞ்ச நேரம் என்ன மறந்து பாத்துட்டே நின்னே. சுமன் கொஞ்சுன ஹிந்தி மொழி புரியலதான் அனா அதை உணர முடிஞ்சது.

எத்தன கொழந்த பெத்தாலும் இதுபோல சமயங்கல்ல மனசு மயங்காதவங்க கெடையாது. அப்ப எனக்கு ஒரு தாயா மனசுல வாஞ்சையும், குற்ற உணர்வும் ஒரு சேர வந்துச்சு.

சரி விசயத்துக்கு வருவோம்.

“உள்ள வா அக்கா”னு சொல்லிட்டு அவசர அவசரமா முக்காலிய எடுத்து தொடச்சு போட்டா சுமன்.

நாலு பேரு தாராளமா படுக்க முடியாத ஒண்டு குடுத்தன ஓலை குடிசை அது. திரும்பத் திரும்ப எண்ணுனாலும் பதினஞ்சு பாத்திரத்துக்கு மேல அங்க இல்ல. வீட்டோட மூலையில ரெண்டு பெட்டி. வீட்ட பாதி அடச்சாப்போல கீழையும் மேலையும் பேப்பரால செஞ்ச உருளை. இதுதான் சுமனோட வீடு.

இது என்னம்மா உருள உருளையா? இத வச்சு என்ன செய்வீங்க?

இது டோலக் செய்றது அக்கா. எங்க வீட்டுக்காரு இந்த தொழில்தான் செய்து.

அதுக்கு பிறகுதான் கூரை மேல டோலக் செஞ்சு தொங்க விட்டுருந்தத பாத்தேன்.

டோலக் செய்றதுக்கான உருளைங்க அழுத்தமான பேப்பர் அட்டையா இருந்துச்சு. வெறும் அட்டையா இருக்குற அந்த குழாயில பிளாஸ்டிக் அட்டையோ, தோலோ பொருத்தி கயிரால இருக்க கட்டி வர்ணம் பூசி டோலக் மேளங்கள உருவாக்கி இவங்களே அதை விக்கவும் செய்றாங்க.

மீனவ குப்பத்துல டோலக்கா! வடிவேலு சொல்றாப்போல என்னடா நடக்குது இங்க. இசையும் கவுச்சியும் ஒரே எடத்துல சங்கமமான்னு கேட்டா சரிகம பாடுற கர்நாடக சங்கீத வித்வான்கள் ஒத்துக்க மாட்டாங்களே. ஏதோ ஒரு குழப்பம் எனக்குள்ள.

யாரம்மா நீங்க? இங்க எப்படி வந்தீங்க? என்னோட ஆச்சர்யம் கேள்வியா வந்துருச்சு.

எங்களுக்கு சொந்த ஊரு உத்தரபிரதேசம் லக்னோ மாவட்டம். காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு சென்னைக்கி வந்து அஞ்சு வருசமாச்சக்கா. இந்தத் தொழில்தான் எங்க வீட்டுக்காருக்கு தெரியும். இந்த தொழில் செஞ்சு லக்னோல வருமானம் கிடையாது. சென்னையில பானிபூரி வியாபாரம் செய்யும் எங்க ஆளுங்க சொல்லிதான் இங்க வந்தோம்.

இங்க எப்படி குடிவந்திங்க.?

எங்க பக்கத்து ஆளுங்க இங்க இருக்காங்க. மீனவங்களும் அவங்கள்ள ஒருத்தரா எங்கள பாத்துப்பாங்க. எந்த பயமும் இருக்காது.

நாங்க பேசும் போது பக்கத்துலேயே ரெண்டு குழந்தைங்க சப்பாத்தி சாப்டாங்க. தெருவுலேருந்து ஓடி வந்த மத்த ரெண்டு குழந்தைங்களும் அத பிச்சு திண்ணாங்க. பிள்ளைங்களுக்குள்ள சண்ட வந்துருச்சு.

ஏய் பையா பையா சண்ட போடாதிங்க. இந்தா வீட்டுல போயி சாப்புடுன்னு சொல்லி நாலஞ்சு சப்பாத்திய குடுத்து அனுச்சாங்க. குடுத்தது போக மீதியே அப்பளக் கட்டு போல குண்டா நெறைய இருந்துச்சு.

பாத்தரக் குண்டான மூடப்போன சுமன், “அக்கா சாப்புடக்கா”, என்றாள். “எல்லாருக்கும் சேத்தே செஞ்சிங்களா? என்றேன்.

அப்புடி இல்லக்கா. காலையிலேயே செஞ்சு வச்சுருவேன் குழந்தைங்க பசின்னு கேக்கும் போதெல்லாம் எடுத்து குடுப்பேன். இத்தோட நைட்டு சமைப்பேன்.

எனக்குங்கூட ஊருல இருக்கும் போது காலையிலேயே பானை நிறைய சோறு வடிச்ச பழைய ஞாபகம் வந்துருச்சு.

மீனவ குப்பத்துல டோலக்கா! வடிவேலு சொல்றாப்போல என்னடா நடக்குது இங்க. இசையும் கவுச்சியும் ஒரே எடத்துல சங்கமமா ஒத்துக்க மாட்டானுகளே.

சுமனுக்கு எத்தன குழந்தைங்க?

மூனு இருக்கே அக்கா.

22 ரெண்டு வயசுல மூனு குழந்தைங்களா?

“போங்கக்கா” என வெக்கப்பட்டு சிரிச்சா.

நீங்களும் டோலக்கு வேலை செய்வீங்களா?

“மூனு பிள்ளையக்கா.” எப்படி சாத்தியம் என்பது போல் சிரித்தவள், இவங்களுக்கு சப்பாத்தி சுடவும் தண்ணி எடுக்கவும் துணி துவைக்கவுமே நேரம் சரியாருக்கு. டாய்லெட் கூட போக முடியலக்கா.

டாய்லட் போக மூனு ரூவா (கட்டண கழிப்பிடம்) தரனுமக்கா. உள்ள போயி வரதுக்குள்ள பசங்க அடிச்சுகிட்டு ஒருத்தர் முகத்துல ஒருத்தர் மண்ண வாரி போட்டுக்குவாங்க. பாதியிலேயே ஓடியாரனும். திரும்பவும் மூன ரூவா குடுத்து போகனும்.

மூனடி எடம். ரெண்டு அஷ்பெட்டாஷ் சீட்டும் ஓல கீத்தும் பக்கவாட்டு சுவர். மேல ப்ளக்ஸ் பேனர் கூறை. இதுதான் சுமன் சொன்ன பாத்ரூம்.

நாம யார்டயாவது பேசிக்கிட்டு இருக்கும் போதுதான் தன் காரியத்த குழந்தைங்க  சமத்தா சாதிச்சுப்பாங்க. சுமனோட 4 வயசு மகனும் அதே போல வீட்டு கூறையில தொங்குன மேரி பிஸ்கெட்ட எடுத்து சாப்புடவான்னு கேட்டான்.

பதறிட்டாங்க சுமன். “பாருங்கக்கா கொழந்தைக்கி உள்ளத எடுக்குது! அது பாப்பாவுக்கு வேணும் இங்க தா” என்றதும் ஒரு வயசே ஆகாத தன் தங்கச்சிக்கி விட்டு குடுத்துட்டு வெளிய ஓடிட்டான் அந்த குழந்தை.

பத்து ரூபா பிஸ்கெட்டே பெரும் பொருளாதார பிரச்சனையா இருக்குற குடும்பத்துல அதுவும் குழந்ததானேன்னு என்னாலயும் நினைக்க முடியல.

அந்த பையன பாக்கவே பரிதாபமா இருந்துச்சு. பைக்குள்ள வச்சுருந்த சிப்சு பாக்கெட்ட குடுப்போன்னு எடுக்கும் போது சாப்பாத்திய பங்கு போட்ட அத்தன குழந்தைங்களும் ஓடி வந்துட்டாங்க.

“ஐயோ அக்கா அவங்க அப்படிதான் செய்வாங்க. நீங்க பாப்பாவுக்கு குடுக்காமெ இப்புடி பண்றிங்க. பசியோட இருக்க போகுது” என்றவர் ரெண்டு டம்ளர்ல டீயை ஊத்தி “சாப்பிடக்கா” என்றார்.

இந்த வீட்டுக்கு வாடகை எவ்வளவு சுமன்?

மூணாயிரம். தனி பாத்ரூம் இருக்குக்கா. என்றார்.

மூணடி எடம். ரெண்டு அஸ்பெஸ்ட்டாஸ் சீட்டும் ஓல கீத்தும் பக்கவாட்டு சுவர். மேல ப்ளக்ஸ் பேனர் கூரை. இதுதான் சுமன் சொன்ன பாத்ரூம்.

செய்யிற டோலக்க கடைகளுக்கு குடுப்பீங்களா?

இல்லையக்கா. தி.நகர் ரோட்டோரம். பெசன்ட் நகர் பீச்சோரம் வியாபாரம் செய்வோம்.

வண்டி வச்சு எடுத்துட்டு போவீங்களா?

பையில வச்சு எடுத்துட்டு போவாரு. கழுத்துல மாட்டிக்கிட்டு விப்பாரு. பத்துது எடுத்துட்டு போனா நாலு, மூனு விக்கும்.

ஒரு டோலக்கு என்ன ரேட்டுக்கு குடுப்பீங்க.?

சின்னது பெரிசுக்கு தகுந்த விலையக்கா. 300 இருந்து 600 வரைக்கும் குடுப்பாரு. பைசாவே இல்லாதப்போ வந்த விலைக்கி குடுத்துருவாரு.

தொல்லன்னு ஒன்னுமில்ல. ஆனா மூட்ட மூட்டயா கோதும வாங்கி குடுக்க சொல்றா. என சிரித்தார் மீன்காரம்மா.

வர்ர வருமானத்துல ஏதாவது மிச்சம் பன்னுவீங்களா?

சோறு திங்கற அளவு வருமானம் வருமான்னு கேளு. தப்பு தப்பு. சப்பாத்தி திங்கற அளவு வருமானம் வருமான்னு கேளு. என்றார் வாசல்ல இருந்த மீன்காரம்மா.

வெளியூர்லேருந்து பொழப்பு தேடி நம்மூருக்கு வந்துருக்காங்களே அதனால கேட்டேன். என்றேன்.

அவங்க ஊருல உயிர் வாழ முடியாமெ இங்க வந்தாங்க. இங்க உயிர் வாழ்ற அளவு வருமானம் வருது அவ்வளவுதான். அதுக்கு மேல என்னா கெடச்சுறப் போகுது சொல்லு. ராத்திரியான இவங்கள வந்து பாரு. இந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணலுல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு. நம்மளப்போல உள்ளவங்களுக்கு அது மட்டும் கடைசி வரைக்கும் இருந்தா போதும்மா.

பழக்க வழக்கத்துல உங்களுக்கும் அவங்களுக்கும் ஒத்து போகுமாம்மா?

கொஞ்சம் சுத்தமா இருக்க மாட்டா. தெருவுல இப்படி குப்ப சேக்காதே பெருக்கு அப்புடி ஏதாவது சொன்னா மாட்டேன்னு சொல்லாமெ செய்வா.

அவங்களால எந்த தொல்லையும் இல்லன்னு சொல்றீங்க. சரிதானம்மா.

தொல்லன்னு ஒன்னுமில்ல. ஆனா மூட்ட மூட்டயா கோதும வாங்கி குடுக்க சொல்றா. என சிரித்தார் மீன்காரம்மா.

மீன்காரம்மா தொடந்து பேசரதுக்குள்ள மீனு சுத்தம் செய்ய வேற ஒரு வாடிக்கையாளர் வரவும் கவனம் அவங்க பக்கம் திரும்பிருச்சு.

உ.பி-க்கு அம்மா அப்பாவ பாக்க சுமன் எப்ப போறீங்க.

எப்ப போவோன்னு சொல்ல முடியலையக்கா. போகனுன்னு ஆசை இருக்கு. போகனும் பாப்போம்…….

ஊருக்கு போயி எத்தன வருசமாச்சு.

மூனு வருசமாகப் போகுது.

போன வருசம் தேர்தல் வந்துச்சே ஓட்டு போட ஊருக்கு போகலையா?

ஊருலேயே இருந்தா ஓட்டு போடலாம். இங்கேருந்து உ.பி. போயி ஓட்டு போட்றது அப்புடி ஒன்னும் ஈசி கிடையாது. போக வர செலவுக்கு காசு வேணுமேக்கா என்ன செய்றது.

நீங்க சொல்றத யோகி ஆதித்யநாத் கேட்டா நீங்க நாட்டுக்கு துரோகம் செய்றீங்க சுமன்னு சொல்லிருவாரு.

யோகி ஆதித்யநாத்னா யாரக்கா என்றார்.

முதலமைச்சர் என்றேன். முதலமைசர்னா? என்றார். ஜெயலலிதா தெரியுமா என்றேன். தெரியும் என்றார். அது போல யோகி ஆதித்யநாத் என்றேன்.

ஓ! அப்படியா எனக்கு தெரியாது.

  • சரசம்மா