Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 48

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்க! | பு.ஜ.தொ.மு

18.09.2024

பத்திரிகை செய்தி

திருபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகின்ற தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் தொழிலாளர்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறையையும், தொழிலாளர் நலத்துறையின் கையாலாகாத்தனத்தையும், மாவட்ட நிர்வாகம் – போலீசு இணைந்து போராடும் தொழிலாளர்கள் மீது ஏவி விட்டுள்ள அடக்குமுறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்திய நாட்டில் பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பல இலட்சம் கோடிகளை இலாபமாக ஈட்டும் சாங்சங் நிறுவனம் இந்த நாட்டின் தொழிலாளர் சட்டங்களையோ, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வகுத்துள்ள விதிமுறைகளையோ சற்றும் மதிக்கவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் பிறப்புரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை ஆகியவற்றை மறுக்கிறது. 90% தொழிலாளர்களை உறுப்பினராகக் கொண்ட தொழிற்சங்கத்துடன் பேச மறுப்பதுடன், தானே ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தனது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறது.

இந்த அடாவடித்தனத்தையும், சட்டவிரோத / தொழிலாளர் விரோதப் போக்கையும் கண்டித்துக் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத போக்கினை நிறுத்திக்கொள்ளாத சாம்சங் நிர்வாகம் தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என போலீசு துணை கொண்டு கொக்கரிக்கிறது.

போராட்டத்தின் முன்னோடிகளாக இருக்கும் சி.ஐ.டி.யு அமைப்பின் மாநிலச்செயலாளர் தோழர் முத்துக்குமார் அவர்களையும், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் கைது செய்து தடுப்புக்காவல் சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஆனாலும், சாம்சங் தொழிலாளர்கள் சோர்வடையாமல் தமது உரிமைகளுக்காக உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் – குறிப்பாக திருப்பெரும்புதூர், ஒரகடம் தொழிற்பூங்கா தொழிற்சங்கங்கள் – சாம்சங் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கின்றனர்.

சாம்சங் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாகவும், சாம்சங் நிர்வாகம் – போலீசு – மாவட்ட நிர்வாகம் என்று கட்டமைக்கப்பட்டுள்ள ஆளும் வர்க்க கூட்டணிக்கு எதிராகவும், பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையிலும் பாராமுகமாக இருக்கும் ‘சமூகநீதி’ அரசின் அலட்சியத்துக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (18.09.2024) நடத்துகின்ற போராட்டங்களுக்கு எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்க!
தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!


இவண்,
ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ஏ.ஜி.நூரானி: பாசிசத்தை தோலுரித்துக் காட்டிய ஆய்வாளர்!

டந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஏ.ஜி.நூரானி என்னும் அப்தும் கஃபூர் நூரானி தனது 93 ஆவது வயதில் மரணமடைந்தார். வழக்கறிஞர், அரசியல் கட்டுரையாளர், வரலாற்றாளர், ஆய்வாளர் (Scholar) போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான அவரது இறப்பை ஒட்டி பல பத்திரிகைகள் நினைவஞ்சலிகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் அவரது பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகள் பற்றிய குறிப்புகள் இருந்தன.

அதிகாரப்பூர்வ அறிக்கைகள், அரசிதழ்கள் போன்ற கோப்புகளையும், காஷ்மீர் பிரச்சனை மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய செய்தித்தாள்களின் குறிப்புகள் ஆகியவற்றையும் சேகரித்து வைப்பதில் தளராத ஊக்கமுடையவராக அவர் இருந்தார். இந்த பழக்கம்தான் கணினி, இணையம் ஆகியவை இல்லாமலே அவரது கட்டுரைகளுக்குத் தேவையான விவரங்களை அளித்து உதவியிருக்கிறது. இது ஒரு ஆளுமை சுய ஒழுங்கமைப்புடன் இயங்குவதன் முக்கியத்துவத்தை எடுப்பாகப் புரியவைக்கிறது.

மேலும் அவர் அரசியல் கருத்துகளைக் கவித்துவமாக முன்வைப்பதில் புகழ்பெற்றவர். இந்து முஸ்லீம் மோதல்களை பா.ஜ.க எப்படி வளர்க்கிறது, அதனால் எப்படி அரசியல் ஆதாயம் அடைகிறது, முஸ்லீம்களின் சமூக பங்களிப்புகள் மற்றும் வரலாற்றை எப்படி மறுத்துரைக்கிறது என்பதை விளக்கும் அத்தியாயத்தை “தோட்டத்திற்கு இரத்தம் தேவைப்பட்ட போது, எங்களின் கழுத்துகள்தாம் முதலில் வெட்டப்பட்டன. இருந்தாலும் இந்த தோட்டம் எங்களுடையது, உங்களுடையது அல்ல என்று தோட்டத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்” என்ற கவிதையை மேற்கோள் காட்டி தொடங்குகிறார் என்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் “காஷ்மீர் பிரச்சனைகளின் வேர்கள் (Roots of the Kashmir dipute)” என்ற தலைப்பில் ஏ.ஜி.நூரானி எழுதிய கட்டுரையை Frontline பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் வாழ்வில் நான் படித்த முதல் அரசியல் கட்டுரை அதுதான். அப்போது ஏ.ஜி.நூரானி யாரென்றே தெரியாது. காஷ்மீர் பிரச்சனை சிக்கலாக இருப்பது போலவே அதைப்பற்றிய அந்த கட்டுரையையும் சிக்கலாக, நுணுக்கமாக இருந்தது. ஒரு ஆரம்பகட்ட வாசகருக்கு என்ன புரியுமோ அதை மட்டும்தான் நான் புரிந்துகொண்டேன். ஆனால், அந்த கட்டுரை என் மீது செலுத்திய தாக்கம் அளப்பரியது.


படிக்க: ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்


இன்று இந்திய நடுத்தர வர்க்கத்தால் அறிவுஜீவியாகக் கொண்டாடப்படும் நேரு காஷ்மீர் மக்களை எப்படி ஏமாற்றினார், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகக் காஷ்மீர் எப்படி இந்திய பெருந்தேசியத்தோடு வலுக்காட்டியமாக இணைக்கப்பட்டது என்பதை விரிவாக அந்த கட்டுரையில் எழுதியிருந்தார். “காஷ்மீர் மக்கள் விரும்பாவிட்டால் இந்திய இராணுவம் ஒரு நிமிடம் கூட அங்கே இருக்காது”, “காஷ்மிர் இந்தியாவோடு இணைவதா? பாக்கிஸ்தானுடன் இணைவதா? அல்லது தனித்தேசியமாக தொடர்வதா? என்பது பற்றி மக்களின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பு தான் காஷ்மிரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்று நேருவும் பட்லேலும் நாடாளுமன்றத்தில் சொன்ன பொய் வாக்குறுதிகளை அந்த கட்டுரையில் அம்பலப்படுத்தியிருப்பார்.

காஷ்மீரின் “அஷாதி” என்ற சொல்லின் பொருளையும், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது நடத்திய கொடுமைகளையும் புரியவைத்தது, மேலும் இந்திய பெருந்தேசியம் பற்றிச் சொல்லப்படும் மரபான மிகைப்படுத்திய மாயைகளை உதறித்தள்ள உதவியது அந்த கட்டுரைதான்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மசூதி இடிக்கப்பட்டதை பற்றி ஒன்றும் சொல்லாமல், அந்த இடத்தில் கோவில் கட்டிக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அவர் கூர்மையாக விமர்சித்தார். அவரது விமர்சனம், அந்த தனித்த வழக்கு பற்றியோ தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பற்றியதாகவோ குறுகிக்கொள்ளாமல், பாசிசம் அரங்கேறி வரும் சூழலில் நீதித்துறை இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்துவரும் ஒரு நிகழ்வுப்போக்கை பற்றியதாக இருந்தது.

மேலும், அரசியல் சூழ்நிலைகள் மாறுவதைக் குறிப்பதாக புதிய அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும் போது நீதித்துறை அதனைக் கணக்கில் கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறது என்பதை 1980ஆம் ஆண்டில் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்த காலத்தில் நீதித்துறையின் தீர்ப்புகள் தலைகீழாக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு விமர்சிக்கிறார். அரசியல் அழுத்தங்களை அனுசரித்துப் போவதுதான் இந்திய நீதித்துறையின் உள்ளார்ந்த இயல்பு என்பதை அவர் இங்கே குறிப்பிடுகிறார். இது அவரது சமகால அறிவுஜீவிகளிலிருந்து ஏ.ஜி.நூரானியை தனித்துக் காட்டுவதாக இருக்கிறது.


படிக்க: ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி


அவரது ஆதரவாளர்களால் சிறந்த அரசியல் அமைப்புவாதி (Constitutionalist) என்று புகழப்பட்டாலும் இந்திய அரசியலமைப்பின் பலவீனங்களை நேர்மையாக முன்வைத்தவர் ஏ.ஜி.நூரானி.

“ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்” என்னும் தனது புத்தகத்தில், பாசிசம் ஏறித்தாக்குவதை, நிலவும் இந்த அரசியல் அமைப்பால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை ”மதப்பெரும்பான்மை பாராளுமன்றத்தில் அரசியல் பெரும்பான்மை பெற்று கட்டுக்கடங்காத அரசு அதிகாரத்தைச் செலுத்தி வருகிறது. அரசியலமைப்புச் சட்டமும் நீதிமன்றத் தலையீடும் ஓரளவுக்குத்தான் இதைத் தடுக்க முடியும்” என்ற வரிகளின் மூலமாகத் தெளிவாக விளக்குகிறார்.

மேலும் இந்த அரசியல் அமைப்பின் பலவீனத்தையும் பாசிச போக்குகளைத் தடுக்கமுடியாமல் அது விழி பிதுங்கி நிற்பதை “இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஓர் இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை (அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும்) செய்ய வேண்டிய தேவை இல்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால் போதும். இதைத்தான் நரேந்திர மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார்” என்று நேரடியாகவே முன்வைக்கிறார்.

இவைதான், வறட்டுத்தனமான அரசியலமைப்பு ஆதரவாளர்களிடம் இருந்து அவரை தனித்துக் காட்டுவதாக இருக்கிறது.

தேர்தல் அரசியலின் ஓட்டு வங்கிக்காகவும், நிலவும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் அதிகாரத்தைப் பிடிக்கவும் மட்டுமே பா.ஜ.க மதவெறியைத் தூண்டிவிடுகிறது என்ற தப்பெண்ணங்களை நூரானி கொண்டிருக்கவில்லை. மாறாக, ஆட்சி அதிகாரத்திற்கும் மேலான “இந்து ராஷ்டிரம்” என்னும் கனவை நோக்கி பா.ஜ.க நடைபோடுவதை, “ஒரு மதச் சார்பற்ற நாடாக, இந்தியா” என்னும் புத்தகத்தில், பேராசிரியர். டொனால்ட் யூஜின் ஸ்மித் கூறுவதை எடுத்துக்காட்டி துல்லியமாக்க விளக்குகிறார்.


படிக்க: நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி


“உண்மையில், அரசு அதிகாரத்தின் மூலம் தன்னுடைய குறிக்கோள்களை அடைய முடியும் என்கிற கருத்தை அது (ஆர்.எஸ்.எஸ்) வெளிப்படையாக நிராகரிக்கிறது. இந்து சமுதாயத்தை மறுகட்டுமானம் செய்வதுதான் அதன் குறிக்கோள், அது அந்த சமுதாயத்திற்கு உள்ளிருந்துதான் வரவேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ்-இன் முன்னோர்கள் நம்புவதாக டொனால்ட் யூஜின் ஸ்மித், தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதனை எடுத்துக்காட்டி மோடி அமித்ஷா கும்பலால் வழிநடத்தப்படும் பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் “வெளியுறவுக் கொள்கை” இந்து ராஷ்ட்ர கனவிற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்கப்பட்டிருப்பதை நூரானி எடுத்துக்காட்டுகிறார்.

பாசிச பா.ஜ.க-வின் தாக்குதல்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்காகச் சரியான அரசியல் செயல் தந்திரங்களை வகுக்கவேண்டியது இன்றியமையாத கடமையாகும். ஆனால் பெரும்பாலான ஜனநாயக இயக்கங்கள் இந்த விஷயத்தில் கோட்டை விடுவதற்கான காரணம் “அரசியல் அமைப்பு சட்டம்” பற்றிய மாயைகள்தான். ஆனால், நூரானி அரசியல் அமைப்பை நிராகரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக உயர்த்திப்பிடிக்கவும் இல்லை. அதன் பலவீனங்களைச் சரியாக அடையாளம் காட்டுகிறார். அவர் அதனைச் சரிசெய்யும் மாற்றுகளை முன்வைக்கவில்லை. எனினும் அவரது எழுத்துகள் சமகால பாசிச சூழலை அதன் உண்மையான நிறத்தில் புரிந்துகொள்ள அடிப்படையாக அமைகிறது.

1930 ஆம் ஆண்டு பிறந்த அவர், ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி மாற்றம், இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினை, வங்கதேச பிரிவினை, இந்திராவின் அவசரநிலை காலம், பாபர் மசூதி இடிப்பு, மோடியின் தற்போதைய பாசிச ஆட்சிக் காலம் என பல்வேறு அரசியல் சூழல்களை அவர் கண்ணுற்றிருக்கிறார். அவற்றைப் பற்றி தனது எழுத்துகளில் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், அவரது கடைசி பத்தாண்டு எழுத்துகள் முக்கியத்துவம் பெறுவது மேற்கூறிய காரணத்தால்தான். ஏனெனில், கடந்த பத்தாண்டுக் கால பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியின் கீழ் பல அறிவுஜீவிகளும் பெரும்பான்மை ஊடகங்களும் விலைபோய் ஊழல் மலிந்துவிட்ட போதிலும் சமரசமில்லாமல் தான் கண்ணுற்ற உண்மைகளை எழுதியவர் ஏ.ஜி.நூரானி.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



கைத்தடி வீரனின் காலடி தொடர்வோம் | பெரியார் 146 | ம.க.இ.க “சிவப்பு அலை” பாடல்

கைத்தடி வீரனின் காலடி தொடர்வோம் | பெரியார் 146
ம.க.இ.க “சிவப்பு அலை” பாடல்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!

னது இந்துராஷ்டிர கொடுங்கனவிற்காக இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கத்துடன் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பாசிச மோடி கும்பல், அதன் ஒரு அங்கமாக ‘‘வக்ஃப் வாரிய திருத்த மசோதா 2024-ஐ’‘ கொண்டுவந்துள்ளது.

ஆகஸ்ட் 8 அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்’‘ (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என்ற பெயரில் இம்மசோதாவை தாக்கல் செய்துள்ள பா.ஜ.க. கும்பல், வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய அமைப்புகள், கல்வியாளர்கள் என யாருடனும் கலந்தாலோசிக்காமல் தனக்கே உரிய பாசிச வழிமுறையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக, சட்டத்திருத்தங்களை செய்யும்போது ஏற்கெனவே உள்ள சட்டத்தில் ஒன்று முதல் பத்து திருத்தங்கள் வரை மேற்கொள்ளப்படும் நிலையில், பாசிச மோடி அரசோ இம்மசோதாவில் 44 திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இத்திருத்தங்கள் அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத உரிமைகளை பறித்து வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையிலேயே முன்மொழியப்பட்டுள்ளன.

இதனையடுத்து இம்மசோதாவிற்கு நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்மசோதா இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையில் உள்ளதையும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 15, 25, 26, 30-களுக்கு எதிராக உள்ளதையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் லோக் ஜனசக்தியின் எம்.பி-க்களும் வக்ஃப் மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றனர். இதனையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்திற்கு பின்னாலிருக்கும் பாசிஸ்ட்டுகளின் சதித் திட்டம்

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்கள் இறையருளை நாடி நன்கொடையாக வழங்கப்படும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சொத்துகளை நிர்வகிப்பதற்காக 1913-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நேரு ஆட்சியில் வக்ஃப் வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு 2013-ஆம் ஆண்டில் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதற்கு நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் உள்ளன. இவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள வக்ஃப் நிறுவனங்களிடம் 7.8 லட்சத்திற்கும் மேற்பட்ட அசையா சொத்துகளும் ஒன்பது லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும் உள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் இரயில்வே துறைகளுக்கு அடுத்ததாக வக்ஃப் வாரியங்களிடமே அதிக சொத்துகள் இருக்கின்றன. இச்சொத்துகள் மூலம் கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளை இஸ்லாமிய மக்கள் பூர்த்தி செய்துகொள்வதோடு தங்களை தாங்களே சுயேட்சையாக நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இதனை சகித்துக்கொள்ள முடியாமல்தான் வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம், வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை பறித்து, பாசிசக் கும்பல் கட்டுப்படுத்தும் வகையில் அதன் நிர்வாகமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதாவில் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


படிக்க: இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!


சான்றாக, வக்ஃப் சொத்துகளின் மீது அரசு அல்லது தனிநபர் உரிமை கோரினாலோ; அரசு அல்லது தனிநபர் சொத்துகளின் மீது வக்ஃப் உரிமை கோரினாலோ, அந்த கோரிக்கைகளின் மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கே உள்ளது என திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுநாள்வரை வக்ஃப் வாரியத்திடம் உள்ள இந்த உச்சபட்ச அதிகாரத்தை வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் எந்த தொடர்பும் இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவதன் மூலம் வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை முற்றிலுமாக பறித்து அதனை வெறுமனே அலங்கார அமைப்பாக்கத் துடிக்கிறது, பாசிசக் கும்பல். மேலும், வக்ஃப் வாரியம் உரிமை கோரும் சொத்துகளை கணக்கெடுக்கும் ஆணையருக்கு உள்ள அதிகாரத்தையும் பறித்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்குகிறது.

ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவு 40-இன் படி, ஒரு சொத்து வக்ஃபுக்கு சொந்தமானதா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பதில் “மாநில வக்ஃப் வாரியம்” தவறான தீர்ப்பு கொடுத்தால் வக்ஃப் வாரிய தீர்ப்பாணையத்திலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் எந்தவொரு நபரும் மேல்முறையீடு செய்வதற்கான வழிகள் உள்ளன. அப்படியிருக்கையில், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குவது என்பது மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.

அதேபோல், வக்ஃப் பத்திரம் இல்லாத சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்ற திருத்தம் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 1900-களின் முற்பகுதியிலிருந்தே வக்ஃப் சொத்துகளை நிர்வகித்துவரும் வக்ஃப் வாரியத்திடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு முறையான சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படையில்லை. இதனை மோப்பம் பிடித்தே அச்சொத்துகளை அபகரிப்பதற்காக இத்திருத்தத்தை முன்மொழிந்துள்ளது பாசிசக் கும்பல்.

மேலும், ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களுக்குள் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் மசோதாவில் மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், இஸ்லாமியர் அல்லாதோர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருங்காலிகளை வக்ஃப் வாரியத்திற்குள் நியமிப்பதன் மூலம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து வக்ஃப் வாரிய சொத்துகளை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப் பார்க்கிறது, காவிக் கும்பல்.

ஒருபுறம், வக்ஃப் வாரியங்களிடம் ஏற்கெனவே உள்ள சொத்துகளை அபகரிக்க திட்டம் தீட்டும் பாசிசக் கும்பல் இன்னொருபுறம் வருங்காலங்களில் வக்ஃப் வாரியத்திற்கு சொத்து சேரவிடாமலும் ஒடுக்குகிறது. சான்றாக, எந்தவொரு நிலத்தையும் வக்ஃபுக்கு சொந்தமானது என்று அறிவிக்கும் முன், வருவாய், கிராம நிர்வாகம் போன்ற அரசுத்துறைகளுக்கு ஆட்சேபணைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே அந்த நிலங்களை வஃக்புக்கு வழங்கவேண்டும் என்ற திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், பாசிசமயமாகியுள்ள அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி வருங்காலங்களில் வக்ஃபுகளுக்கு வழங்கப்படும் நிலங்களையும் அபகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாசிச நோக்கத்திலிருந்துதான் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு சொத்துகளை வழங்க முடியும் என்றும் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.

இத்தகைய இஸ்லாமிய விரோத மசோதாவை தாக்கல் செய்துவிட்டு, மறுபுறம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமிய பெண்கள் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்ற திருத்தத்தையும் மேற்கொண்டு, இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காக போராடுவதாக நாடகமாடுகிறது காவிக் கும்பல். ஆனால், வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர்களாகவும் உயர் பொறுப்புகளிலும் இஸ்லாமிய பெண்கள் ஏற்கெனவே இருப்பதை சுட்டிக்காட்டி, காவிக் கும்பலின் வெறுப்பு பிரச்சாரத்தை பலரும் முறியடித்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள இஸ்லாமிய மக்களிடமுள்ள வக்ஃப் சொத்துகளை அவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் இஸ்லாமிய மக்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிப்பதுடன் அச்சொத்துக்களை கார்ப்பரேட் கும்பலுக்கு படையலாக்கவும் பாசிசக் கும்பல் திட்டமிட்டுள்ளது.

வக்ஃப் சொத்துகளை சூறையாடத் துடிக்கும் காவிகார்ப்பரேட் கும்பல்

நடைமுறையிலுள்ள வக்ஃப் வாரிய சட்டத்தின்படி, வக்ஃப் சொத்துகளை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. மாறாக, வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோதான் கொடுக்க முடியும். ஆனால் மோடி-அமித்ஷா கும்பலானது, ‘‘வக்ஃப் திருத்த மசோதாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் வக்ஃப் சொத்துகளை வைத்திருந்தால் அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராக முடியும்’‘ என்ற திருத்தத்தை கொண்டுவந்துள்ளதன் மூலம் தனது நோக்கத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல், கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என பல கிரிமினல் கும்பல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. சான்றாக, அம்பானியின் அண்டிலியா வீட்டின் நிலமும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டு உள்ளது.

ஆகவே, அரசு சொத்துகள் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் துணையுடன் அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.


படிக்க: பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!


இன்னொருபுறம், பல ஆண்டுகளாகவே வக்ஃப் வாரியத்தின் மீது பொய்-வெறுப்பு பிரச்சாரங்களை பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ்-விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலின் பாசிச நோக்கமும் இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. வக்ஃப் வாரியத்தால் வெறுமனே நிலங்கள் மட்டுமின்றி மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள் என பல்வேறு அமைப்புகளும் நிர்வகிக்கப்படுகின்றன. ஒருவேளை வக்ஃப் வாரிய திருத்த மசோதா சட்டமானால் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும், மாவட்ட ஆட்சியரின் துணையுடனும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படுவது நடந்தேறும்.

ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களிலும் பசுவளைய மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாதம் தினந்தோறும் அரங்கேறிவரும் நிலையில் இச்சட்டத்தால் அது புதிய உச்சநிலைக்கு செல்லும். எனவே, பாபர் மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது இச்சட்டத்திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இனக்கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த இந்துமுனைவாக்க நோக்கத்திலிருந்தே மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்திருத்தமானது, மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.

இத்தகைய பாசிச நோக்கத்துடன் கொண்டுவரப்படும் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்பது இந்தியாவில் உள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாகும். ஆனால், கடும் எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. இம்மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பியதனாலேயே பாசிசக் கும்பல் பயந்துவிட்டது, பணிந்துவிட்டது, சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றெல்லாம் இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் பாசிச எதிர்ப்பாளர்கள் சிலரும் கருதுகின்றனர்.

ஆனால், கூட்டு குழுவால் மசோதாவின் மீது பரிந்துரைகள் வழங்க முடியுமே ஒழிய திருத்த முடியாது. எனவே, வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு துளியும் ஜனநாயகம் வழங்காத நாடாளுமன்ற மரபுகளை மதிக்காத பாசிசக் கும்பலுக்கு எதிராக இஸ்லாமிய மக்களுடன் இணைந்து களத்தில் போரட்டத்தை கட்டியமைப்பதன் மூலமே நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க முடியும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



பொட்டலூரணி மக்கள் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தொடர்ந்து துணை நிற்கும்

பொட்டலூரணி மக்கள் போராட்டத்திற்கு
மக்கள் அதிகாரம் தொடர்ந்து துணை நிற்கும்

மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன்
நேரில் சென்று ஆதரவு

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, துர்நாற்றம் வீசுகின்ற, மூன்று கழிவு மீன் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஒட்டு மொத்த பொட்டலூரணி மக்களும் 19.04.2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக முறையாகத் தொடர்புடைய அலுவலர்கள் அனைவருக்கும் அறிவிக்கை செய்தனர்.

முறையான பேச்சுவார்த்தைக்கு உரிய அலுவலர்கள் முன்வராமல் போலீசை வைத்தே மிரட்டி வந்தனர். தேர்தல் புறக்கணிப்பை அறிவித்த பொதுமக்களே, தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர், பொதுமக்களோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக அழைப்புவிடுத்தும் முன்வரவில்லை. தேர்தலன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பொதுமக்களைத் தாக்கிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் போலீசின் துணையோடு, கூலிப்படையினரை அனுப்பினார். பொதுமக்கள் அதைக் கவனமாகக் கையாண்டு அமைதியை நிலை நாட்டினர். ஆளும் கட்சியினர், அரசு அதிகாரிகள், போலீசுத்துறையினர், கழிவு மீன் நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டுச் சதியால் தொடர்ந்து பொதுமக்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து பொட்டலூரணிப் பொதுமக்கள், கழிவு மீன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற இரட்டைக் கோரிக்கைகளுடன், தேர்தல் முதல் பொதுமக்கள் பந்தல் அமைத்து நாள்தோறும் உணவுக் கூடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் 5 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி, நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் செல்வம் ஆகியோர் பொட்டலூரணிப் போராட்டப் பந்தலுக்கு வருகைதந்து, போராட்டக்குழுவினரிடம் மக்கள் அதிகாரம் அமைப்பு கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரை மக்களின் போராட்டத்திற்குத் தொடர்ந்து துணை நிற்கும் என்று கூறி ஆதரவு தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



சாதிவெறிக் கொட்டமும் தியாகி இமானுவேல் சேகரனின் அவசியமும்

இன்று (செப்டம்பர் 11) சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரன் தேவர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்.

தனது கல்லூரி வாழ்க்கையில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற இவர் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1950 ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவர், தனது சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு இராணுவ வேலையைத் துறந்தார். “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் துவங்கினார்.

அக்காலகட்டத்தில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். 1957-களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்கச் சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த அவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.

இமானுவேல் சேகரன் தலைமையில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த பள்ளர் மக்களிடையே, “தேவேந்திர குல வேளாளர்” என்ற பெயரில் ஆதிக்க சாதிவெறியை ஊட்டும் வேலையை ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் செய்து வருகிறது.

எனவே, இந்த பாசிசக் கும்பலைப் புறக்கணித்து சாதியத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுடன் பள்ளர் சமூக மக்கள் இணையவேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக கீழ்க்கண்ட கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி:
பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!

ண்மைக்காலமாக, தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் ஒரு புதிய போக்கை வெளிப்படுத்துகின்றன. 90-களில் நடைபெற்றதைப் போல, மீண்டும் இப்பகுதிகளில் சாதிய மோதல்களை தூண்டிவிட்டு, அதன் மூலம் சாதி முனைவாக்கத்தை ஏற்படுத்துவதற்கும்; அதை தனது இந்துத்துவ பாசிச நிகழ்ச்சிநிரலுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சித்துவருகிறது.

இச்சாதிவெறித் தாக்குதல்களில் பெரும்பாலானவை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெற்றவை. கடந்த ஆகஸ்டு மாதத்தில், நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 14 சாதியப் படுகொலைகள் பதிவாகியுள்ளன. ஆனால், ஆளும் வர்க்க ஊடகங்கள் இவற்றில் பெரும்பாலானவற்றை, சாதியத் தாக்குதல்களாக பதிவு செய்யாமல் முன்விரோதம், தனிநபர் மோதல் என்ற வகைகளில் சித்தரித்தன.

இந்த சாதியத் தாக்குதல்கள் மீது தி.மு.க. அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கும் ஊடகங்களின் பாராமுகமும் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழலை பொது விவாதத்திற்கு கொண்டுவந்துவிடாமல் தடுத்து வந்தன. ஆனால், அதையும்  மீறி இப்பிரச்சினை குறித்து பேசியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளும் வகையில், சாதிவெறிப் படுகொலைகள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நெல்லை மணிமுத்தீஸ்வரத்தில், ஆறு பேர் கொண்ட கும்பல் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மனோஜ், மாரியப்பன் என்ற இரண்டு இளைஞர்களை வழிமறித்து, அவர்களைத் தாக்கி, நகைகள், செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது. மேலும், அவர்களது சாதியை விசாரித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறிந்தவுடன், வெறிகொண்டு மீண்டும் அந்த இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளது; அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

இதே மணிமுத்தீஸ்வரத்தில், தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள், ஆதிக்கச் சாதிவெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.


படிக்க: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்? | சிறுநூல்


கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள மணக்கரையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க, மணி என்ற முதியவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அருகிலுள்ள வேப்பமரத்து அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரை, எவ்வித முன்விரோதமும் இல்லாத நிலையில், இருசக்கர வாகனத்தில் திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றது.

தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் இதுபோன்ற தாக்குதல்கள், பெரும்பாலும் தேவர் சாதிவெறியர்களால், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் கூட அவ்வாறானவையே.

தென்மாவட்டங்களில் தற்போதுள்ள சமூகச் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, இந்துமதவெறிக் கும்பல், தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக மேற்கொள்ளும் சதிச் செயல்களுக்கு பலிகடாவாக்கப்படும் முக்கியமான சமூகமாக, தேவேந்திர குல வேளாளர் சமூகம் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் இப்பிரச்சினையில், ஒருபக்கம் நிற்பது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது தாக்குதல்களை ஏவிவரும், சில ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு – தேவர் சாதிவெறி அமைப்புகள்; மறுபக்கம் நிற்பது, இம்மக்களின் ‘காவலர்களாக’ தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், அதே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏஜெண்டுகளாக செயல்படக்கூடிய ஜான் பாண்டியனும் கிருஷ்ணசாமியும். இந்த இருமுனைக் கத்தியால் குத்துப்பட்டுக் கொண்டிருப்பது, தேவேந்திர குல வேளாளர் மக்கள்தான்.

சாதிவெறி இல்லையாம்! கஞ்சா போதையாம்!

தென்மாவட்டங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் சாதிவெறித் தாக்குதல்களை, ஆரம்பத்தில் கண்டும் காணாமல் விட்டுவந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும், தற்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல ஜனநாயகச் சக்திகளும் இப்பிரச்சினை தொடர்பாக எச்சரித்து ஆர்ப்பாட்டங்களையும் பிரச்சாரங்களையும் தொடர்ச்சியாக செய்துவருகின்றன. இந்நிலையில் இனிமேலும், இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்காமல் இருந்தால், தன் சாதி மக்களிடமே தாம் அம்பலப்பட்டு போய்விடுவோம் என்பதால், சம்மந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளே களமிறங்கியுள்ளார்கள்.

“தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற கட்சியை நடத்திவரக்கூடிய ஜான் பாண்டியன், தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து, நவம்பர் 20-ஆம் தேதி நெல்லை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்.

இவ்வன்முறைகள், ஆர்.எஸ்.எஸ்-ஆல் கட்டுப்படுத்தப்படும் ஒருசில தேவர் சாதிவெறி அமைப்புகளால், திட்டமிட்டே நடத்தப்படுபவை என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜான் பாண்டியன் கடந்த மாதம் 15-ஆம் தேதி இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா?

“பட்டியலின மக்களைக் குழப்புவதற்காக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை மட்டும் குறிவைத்து, இளம் அப்பாவிகளை கொலை செய்வதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது”.

“தேவரும் தேவேந்திரரும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கொலை செய்தவர்களுக்கும் இடையே ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா என்றால் அப்படி இல்லை; அப்போ எப்படி இது சாதியாகும்?

கஞ்சா அதிகமாக நடமாடுகிறது; … .. கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். நத்தத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; மணிமுத்தீஸ்வரத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; இப்போ நடந்த மணக்கரை மணி, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். கஞ்சா போதையில் அதிகமாக கொல செஞ்சிருக்கான். அவ்வளவுதான்”

ஒரு பத்திரிகையாளர் இடைமறித்து கேட்கிறார்: “அப்போ ஏன் எல்லா இடங்களிலும் தேவேந்திரர்களே வெட்டப்படுகிறார்கள்?”

அதற்கு ஜான் பாண்டியன் அளித்த பதில்: “அந்தப் பகுதிகளில் தேவரும் தேவேந்திரரும் மட்டும்தான் இருக்காங்க; வேற சாதி கிடையாது. வடகரை, கீழநத்தம், ஒவ்வொரு பகுதியிலயும் நீங்க ஆராய்ஞ்சு பார்த்தீங்கன்னா, அப்படித்தான் இருக்காங்க… எதார்த்தம் என்னவோ அத பார்க்கனும்; சும்மா சித்தரிக்கக் கூடாது!”

“தேவேந்திர குல வேளார்களின் குலதெய்வமே”, “எங்களின் இதயமே” என்று ஜான் பாண்டியனுக்கு போஸ்டர் ஒட்டும் அச்சமுதாய மக்களுக்கு ஜான் பாண்டியன் அளிக்கும் பதில் இதுதான்!

இதனை சாதிவெறிப் படுகொலை என்று சித்தரிக்கக் கூடாது, வழக்கமாக நடக்கும் கஞ்சா போதைக் கொலைகள்தான் என்றால், பிறகு எதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்; அதில் எதற்கு, “தேவேந்திர குல வேளாளர்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள்” என்று தலைப்பு. இந்த சுயமுரண்பாட்டை எவன் கேள்வி எழுப்பப் போகிறான் என்ற திமிர்தானே!

கஞ்சா அதிகமாக நடமாடுகிறது என்கிறாரே, ஜான் பாண்டியன். அதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. அந்த கஞ்சாவை சப்ளை செய்வது யார்; கஞ்சாவுக்கும் சாதிவெறிக்கும், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட படுகொலைக்கும் யார் காரணம் என்று ஜான் பாண்டியனுக்கு தெரியாதா? தெரியாதெனில், நாமே விளக்குகிறோம்; ஆனால், அதற்கு ஜான் பாண்டியனோ, அவரது த.ம.மு.க. கட்சியினரோ நடவடிக்கை எடுப்பார்களா?

நேராகப் போய், தேசிய அளவில் கஞ்சா ஒழிப்புப் போராட்டத்தை நடத்துவதாக இருந்தால், டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். தமிழ்நாடு அளவோடு போராட்டத்தை வரம்பிட்டுக் கொள்வதாக இருந்தால், கமலாலயத்தை முற்றுகையிடுங்கள்; உங்கள் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பா.ஜ.க.காரனையும் தூக்கிப்போட்டு மிதியுங்கள், கஞ்சா ஒழிந்துவிடும்!

உண்மையைத்தான் சொல்கிறோம்! கஞ்சா அனைத்துக் கட்சி கிரிமினல்களின் ‘பொதுத்தொழிலாக’ இருந்தது, பழைய காலம். இப்போது அது மாறிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால், இளைஞர்களை சீரழிப்பதற்கென்றே, கிராமங்களில் சாதிவெறி மோதல்களைத் தூண்டிவிடுவதற்கென்றே மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, கஞ்சா மாறிப்போய் இருக்கின்றது.

மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, நவம்பர் 13,14-ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மூன்று முக்கியமான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அவை, ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர், ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடமும் வெளிநாட்டு தரகர் ஒருவரிடமும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா தொழிலில் முதலீடு செய்வது தொடர்பாக, பேரத்தில் ஈடுபடுவது போன்ற உரையாடல்களுடனான வாட்சப் கால் வீடியோக்கள்.

இந்த உலக மகா மாஃபியா தொழில் வெளியே கசிந்தவுடன், அது போலி வீடியோ என்று தேவேந்திர சிங் தோமர் போலீசில் புகாரளித்தார். ஆனால், கனடாவில் உள்ள ஜெகம்தீப் சிங் என்ற நபர், தன்னிடம் முழு காணொளியும் உள்ளதாகவும், தேவேந்திர சிங் தோமரிடம் பேசியது நான்தான் என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், இது 500 கோடி விவகாரம் கிடையாது; 10,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழில் என்றும்; நரேந்திர சிங் தோமர் குடும்பத்திற்கு தான் பினாமியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் அம்பலமாகி, பா.ஜ.க.வின் மாஃபியா வலைப்பின்னல் வெளியே வந்தது.

இந்த கஞ்சா தொழிலைப் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? சரி, கனடா, டெல்லி என்று தூரமாக போக வேண்டாம் என்றுகூட கருதலாம். ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பாக, ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில், ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டு கார்களில் கஞ்சா கடத்தி வந்த ‘லோக்கல் செய்தி’யையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா! அதில் ஈடுபட்ட, தூத்துக்குடி பா.ம.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? கஞ்சா வியாபாரிகளும், கொலைகாரர்களும், ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க.வை தங்களது பாதுகாப்பான சரணாலயமாகக் கருதி தஞ்சம் புகுகிறார்களே; அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறதே தமிழ்நாடு பா.ஜ.க – அதைப் பற்றியேனும் ஏதாவது வாய்திறந்திருக்கிறாரா, இனிமேலாவது திறப்பாரா; ஒன்றுமில்லை!

‘இந்துக்களின் போர்வாள்’ குத்துவது யாரை?

அடுத்து இந்துக்களின் போர்வாள் கிருஷ்ணாசாமியைப் பார்க்க வேண்டும். “இந்து ஒற்றுமைக்காக பாடுபடுவதே என் வாழ்நாள் கடப்பாடு” என்று அறிவித்துக் கொண்ட இவர், இன்று “ஐயோ, தென் மாவட்டங்களில் தேவேந்திரர்களைக் குறிவைத்து ஒரு இனப்படுகொலையே நடத்தப்படுகிறது” என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்: அதிகரித்துவரும் இப்படுகொலைகள் ஏதேச்சையானவை அல்ல என்றும்; ஒரு பயங்கரவாதக் கும்பல் இச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும்; இஸ்ரேலில் யூதர்கள் எப்படி பாலஸ்தீன மக்களின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பதற்காக, அவர்கள் மீது இன அழிப்பை நடத்திவருகிறார்களோ, அதே போல தேவேந்திர குல வேளாளர்கள் மக்களுக்கு நடக்கின்றது என்றும் பேசியுள்ளார்.

நெல்லையில், தேவேந்திர குல வேளாளர் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி பேரணி ஒன்றையும் தனது கட்சி சார்பில் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.

இதைச் சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக கருதக்கூடாது; இதற்கு பின்னால் மிகப்பெரிய வலைப்பின்னலே உள்ளது. போலீசு அதிகாரிகள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இவ்விசயத்தில் கூட்டணியாக உள்ளார்கள். இதை உடைக்க வேண்டும் – என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சி, பல்வேறு லோக்கல் சேனல்கள், யூடியூப் சேனல்கள், பி.டி.ஐ. ஆங்கில ஊடகம் ஆகியவற்றுக்கெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு பேட்டிகொடுத்துள்ளார்.

களத்திலோ, தூத்துக்குடி மணக்கரை கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளார். இப்பிரச்சினையை பேசுபொருளாக்குகிறாராம்; தேவேந்திர குல மக்களின் ‘காவலர்’ அல்லவா, அம்மக்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா.

“மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்”; “தென் மாவட்டங்களை சாதிரீதியாக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக முன்வைத்துள்ளார், கிருஷ்ணசாமி.

கிருஷ்ணசாமி ஜான் பாண்டியனைப் போலல்ல; இல்லையா!

ஆமாம், ஜான் பாண்டியனைவிட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு மிகமிக ஆபத்தான கோடாரிக் காம்பு!

சரி, இந்த சாதிவெறிக் கிரிமினல்களை ஏவுவது யாராய்யா கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டால், தி.மு.க-வாம்! தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்துதான் இப்படியெல்லாம் நடக்கிறதாம். மேலும், தி.மு.க.தான் எல்லா ரவுடிகளும் கிரிமினல்களும் குடிபுகும் இடமாக இருக்கிறதாம். இவ்வாறு புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ளார்.

ஆனால், களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும்; தங்களது எதிரி யார் என்று! குறிப்பாக, கிருஷ்ணசாமியே கூட, பல்வேறு பேட்டிகளில் சூசகமாகவும் இலைமறை காய்மறையாகவும் மறவர் சாதியைச் சேர்ந்த ‘சில கூலிப்படை கும்பல்’தான் இதைச் செய்துள்ளது என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

14-11-2023 தேதியிட்டு, அவர் கட்சியின் சார்பாக விடுத்த அறிக்கையில், “மணக்கரை கிராமத்தைச் சார்ந்த சிலரது வன்முறைப் பின்புல வரலாறுகள் அனைத்தும் காவல்துறையினருக்குத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வல்லநாடு வனக் காவலரையே வெட்டிக் கொன்றவர்களும் அந்த வட்டாரத்தைச் சார்ந்தவர்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் அந்த ‘சிலர்’, ‘அவர்களுக்கும் தி.மு.க-வுக்கும் என்ன உறவு?’ கிருஷ்ணசாமிக்கு பெயரைச் சொல்ல தொடைநடுக்கம் என்றால், நாம் சொல்கிறோம்!


படிக்க: தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?


நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வட்டாரங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் டிரோஜன் அமைப்புகளாக பல்வேறு ஆதிக்கச்சாதிவெறி அமைப்புகள் செயல்படுகின்றன. அதில் முக்கியமான ஒரு அமைப்பு, “இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம்”. இந்த இயக்கத்தின் தலைவரும், அடிக்கடி தனது ‘சமூகத்துக்காக’ ஏதாவது கொலைசெய்துவிட்டு உள்ளே போகும் ‘முக்குலத்தோர் குல பாதுகாவலருமான’ “பேச்சிமுத்து தேவர்”, அவரது பட்டப் பெயர் “மணக்கரை பாயாசம்”.  பச்சையான ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு! இவர்களைப் போல ஆதிக்கச் சாதி வெறியர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர்.

சனாதனம் நமது வாழ்வியல் என்றும்; இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்தப் போவதாகவும் சொல்லும் அய்யா கிருஷ்ணசாமி அவர்களே, உங்கள் ‘இந்து’ உறவின் முறையுடன் அன்பாகப் போய் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியதுதானே. ‘இந்து ஒற்றுமை’யை உயர்த்திப் பிடிக்க வேண்டியதுதானே! என்ன தயக்கம்; ‘லஷ்மண ரேகை’யைத் தாண்டிப் பேசினால், சாயம்போய்விடுமா!

நெல்லையில் நடைபெற்ற புதிய தமிழகக் கட்சியின் பேரணியில், கிருஷ்ணசாமியின் மகன், ஷியாம் கிருஷ்ணசாமி நெஞ்சு புடைக்கப் பேசுகிறார். “அடித்துக் கொள்ளும் இரண்டும் திராவிட இனம்தானே! எந்த திராவிடக் கட்சி வந்தது, இந்த ஐம்பது ஆண்டுகளில்; “தமிழ்தேசியம்” என்று புதிதாக கிளம்பியுள்ளார்களே, தமிழ் சாதிகள் அடித்துக் கொள்வதை ஏன் தடுக்கவில்லை; இந்து, இந்தியன் என்று மட்டும் நம்மை சொல்லிக்கொள்ள வேண்டும். ஆனால், ஓட்டுக்காக வருபவர்கள், தேவேந்திரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வருவதில்லை” என்று சீறியிருக்கிறார்.

இந்த வாதம், நூற்றுக்கு நூறு சரி என்கிறோம். முதல் இரண்டு கூற்றுகளில் நாமும் உடன்படுகிறோம். இக்கேள்விகளை ‘திராவிடம்’ பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளையும், தமிழ்தேசியம் பேசுபவர்களையும் பார்த்து நாமும் எழுப்புகிறோம். ஆனால், இந்துத்துவம் பற்றி பேசும் முன், அவரும் அவரது தகப்பனாரும் தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டு, பின்னர் பேச வேண்டும்.

“நாங்கள் இந்துத்துவம் பேசியது தவறுதான்; சனாதனத்தை ஏற்றுக் கொண்டது தவறுதான்; இந்துத்துவம் நமக்கு எதிரி” என்று தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்பாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், அது வெறும் நடிப்புதான்!

“நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது! கொஞ்சம் இப்படியெல்லாம் பேசினால், தென் மாவட்டத்தில் பா.ஜ.க. நமக்கு ஒரு சீட்டாவது தருமா… இல்லை பேரம் படியாவிட்டால் சாதி கெத்தைக் காட்டி, அ.தி.மு.க.விடம் கேட்டுப்பார்க்கலாமா” என்ற கணக்கோடுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையினால்தான், ஜான் பாண்டியனைவிட, கிருஷ்ணசாமி அபாயமிக்க கோடாரிக்காம்பு என்கிறோம்.

இவர்களைப் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள்தான் தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு உறுதுணையாக உள்ளார்கள். தங்களை தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவர்களாக காட்டிக்கொண்டே அவர்கள் மீதான தாக்குதல்களுக்கான காரணங்களை மூடிமறைக்கும் வேலையை செய்து வருகின்றனர். ஆதிக்கச் சாதி வெறியர்கள் நேரடியாக இம்மக்களை கொல்கிறார்கள் என்றால், இவர்கள் கூடவே இருந்து கழுத்தறுக்கின்றனர்.

“பள்ளர்”, “ஒடுக்கப்பட்ட மக்கள்”, “தலித்” என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; “இந்துக்களாக இணைய வேண்டும்” என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் இன்னொருபக்கம், தேவர் சாதிவெறியர்களால் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தாக்கப்படுவதும் தனித்த நிகழ்வல்ல; அதுவும் இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல்தான்!

எனவே, இந்த இருமுனை கத்திக்கு தேவேந்திர மக்கள் பலியாவதைத் தடுப்பதற்கு ஒரே வழி, இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக, புரட்சிகர சக்திகளோடு இணைந்து களமிறங்குவதே! அது ஒன்றுதான் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சாதி ஆதிக்க எதிர்ப்பு மரபின் இன்றைய வடிவம்.


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!

கடந்த ஆண்டு மே மாதத்தில் பற்றி எரியத் தொடங்கிய மணிப்பூர் தற்போது வரை அணையவில்லை. வன்முறைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்த மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி முரளீதரனின் நீர்ப்பு திரும்பப்பெறப் பட்டிருந்தாலும், வன்முறை சம்பவங்களும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களும் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.

ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் வன்முறையால், அரசின் புள்ளிவிவரப்படி இதுவரை 226 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள் இன்றளவும் தங்களது வீடுகளுக்கு திரும்பவில்லை. சிறுவர். சிறுமிகள் பள்ளி படிப்பை இழந்து நிற்கின்றனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் குக்கி இன மக்களே. கல்லூரிக்கு செல்ல வேண்டிய குக்கி இன இளைஞர்கள் தங்களது நிலங்களை பாதுகாப்பதற்காக ஆயுதமேந்தியுள்ளனர். இந்த பேரழிவிலிருந்து எப்போது இயல்புநிலைக்கு திரும்புவோம் என்பதே ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களின் மனநிலையாக உள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடங்கியபோதே. இது மணிப்பூர் காடுகளை அம்பானி – அதானிகளுக்கு தாரைவார்ப்பதற்காகவும் மெய்தி இன மக்களை தங்களது அடித்தளமாக மாற்றிகொள்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் குக்கி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட இன அழிப்பு கலவரம் என்பதை “எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!” என்ற கட்டுரையில் புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் “மணிப்பூரில் குக்கி இனமக்கள் மீதான இனஅழிப்பை தொடங்கியது நான்தான்” என மணிப்பூர் மாநில பா.ஜ.க. முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஆடியோ (Audio) ஒன்று மணிப்பூர் மக்களிடையே பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, மெய்திலோன் ஆகிய இரு மொழிகளிலும் கலந்து பேசப்படும் 48 நிமிட முழு ஆடியோவையும் “தி வயர்” (The Wire) செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து காணொளியாகவும் தொடர் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளது.

அந்த ஆடியோவில் பைரன் சிங், குக்கி இன மக்களை அழித்தொழிப்பதற்காக செய்த அக்கிரமங்களையும் அட்டூழியங்களை யும் ‘பெருமையாக’ எடுத்துரைக்கிறார்.

பைரன் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபோது, பைரன் சிங் ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தருவதால் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால், 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் அமித்ஷா மூன்று நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றிருந்தபோது, “பைரன் இனி குண்டுகளை உபயோகிக்கக் கூடாது” என உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர் வெளியேறிய பின் பைரன் சிங் அதிகாரிகளை அழைத்து “குண்டுகளை வெளிப்படையாக உபயோகிக்கக் கூடாது. ரகசியமாக உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. இதனை பைரன் சிங் சொல்லும்போது பின்னால் சிரிப்பு சத்தமும் கேட்கின்றன.

அதேபோல். “தற்போதுவரை 4000-5000 துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன. ஆனால், யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா? கைது செய்ய வேண்டுமெனில் அவர்கள் முதலில் முதல்வரைத்தான் கைது செய்ய வேண்டும். ஆனால், முதல்வரை கைது செய்ய முடியாது” என்று போலீசு நிலையங்களிலிருந்து மெய்தி இனவெறியர்கள் ஆயுதங்களை சூறையாடியதற்கு தான்தான் காரணம் என்பதை திமிர்த்தனமாக கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் விட, இந்தியாவையே கொந்தளிக்க வைத்த, இரண்டு குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை எப்படி திட்டமிட்டு மறைத்திருக்கலாம் என பைரன் சிங் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. “இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் நாம் எவ்வளவு மோசமாக கேவலப்படுத்தப்பட்டோம். நாம்தான் அந்த பெண்களை காப்பாற்றினோம் என்று கூறியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் அண்ணனும் மாமாவும் கொல்லப்பட்டுவிட்டனர். அதனால், அவர்களால் உண்மையை நிரூபிக்க முடியாது. காணொளியில், பெண்கள் மீது கைகள் அங்கும் இங்கும் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அதை உண்மையில்லை என்று மறுத்திருக்க முடியும்” என்று துளியும் மனிதத்தன்மையே இல்லாத இனவெறிப்பிடித்த பைரன் சிங் பேசியிருப்பது கேட்போரின் ரத்தத்தை கொதிப்படையச் செய்கிறது.

மேலும், இவ்விவகாரத்தை மூடி மறைப்பதற்காக ஜூலை மாதத்தில் தொலைந்துபோன இரண்டு மெய்தி சிறுவன் சிறுமியின் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பியதும், அதற்காகவே செப்டம்பர் மாதத்தில் தற்காலிகமாக இணைய சேவை வழங்கப்பட்டதும் இந்த ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் அந்த ஆடியோவில், “குக்கி இன மக்கள் அதிக நிலம் வைத்துள்ளனர், அதிகளவில் படிக்கின்றனர், ஒதுக்கீட்டினால் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். பணிகளில் உள்ளனர். இவை அனைத்தையும் நான் பார்த்தேன், பார்த்ததும் செயல்பாடுகளைத் தொடங்கினேன். குக்கி இன மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வன நிலத்தில் அரசு நிலத்தை தேட ஆரம்பித்தேன்” என இந்த இன அழிப்பு கலவரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்ததை பைரன் சிங் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப் பட்டார்கள் எனில், மணிப்பூரில் பைரன் சிங்கின் தலைமையில் குக்கி இன மக்கள் அழித்தொழிக்கப் படுகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோ பைரன் சிங்கின் வீட்டில் நடந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் விசாரித்து, இதனை பேசியது பைரன் சிங்தான் என்பதையும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்த ஆணையத்திடம் இந்த முழு ஆடியோ சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையும் “தி வயர்” இணைய தளம் உறுதி செய்துள்ளது. ஆனால், தற்போதுவரை பைரன் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பதே இந்த ஆணையம் வெறும் கண் துடைப்புதான் என்பதைக் காட்டுகிறது.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப் பட்டார்கள் எனில், மணிப்பூரில் பைரன் சிங்கின் தலைமையில் குக்கி இன மக்கள் அழித்தொழிக்கப் படுகின்றனர். அதற்கு மோடி-அமித்ஷா தலைமை யிலான ஒன்றிய பாசிச அரசு துணை நிற்கிறது. எதிர்க்கட்சிகளும் இவ்வளவு பெரிய உண்மை வெளி வந்தும் அதுகுறித்து வாய்திறக்காமல் மணிப்பூர் மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.

எனவே, மணிப்பூர் மக்கள் வாழ்க்கையை நரவேட்டையாடிய, இக்கலவரத்தை முன்னின்று நடத்திய பைரன் சிங்கிற்கும் அதற்கு பக்கபலமாக நிற்கும் மோடி அமித்ஷா கும்பலுக்கும் எதிராக மணிப்பூர் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதேபோல் இந்தியாவில் ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் மணிப்பூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி

06.09.2024

காலாவதியான சட்டவிரோத – சுங்கச் சாவடிகளை உடனே மூடு!
அதன் உரிமையாளர்களைக் கைது செய்!

பத்திரிகைச் செய்தி

மிழ்நாட்டில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் கூடுதலாக மூன்று சுங்கச்சாவடிகளைத் திறக்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து இருப்பதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகப்படியான அளவில் அதாவது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. நேற்றைய(05.09.2024) அறிவிப்பின்படி, இனி தமிழ்நாட்டில் 70 சுங்கச்சாவடிகள் செயல்படும்.

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டதாகவும் பரனூர் உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகள் உடனே அகற்றப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

படிக்க : தோழர் மாவோ நினைவை நெஞ்சிலேந்துவோம்!

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டதாக மாநில அமைச்சர் அறிவிக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடி உரிமையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

சட்ட விரோதமாகச் செயல்பட்ட 30-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும் .

நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்கு 10 கிலோ மீட்டர் அப்பால் சுங்கச்சாவடி, நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள்.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி, திருமங்கலம் நகராட்சி எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

அப்பகுதி மக்கள் போராடும்போது மட்டும் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிப்பது, அடுத்த சில நாட்களில் அதை நீக்கி மீண்டும் உள்ளூர்ப் பகுதி மக்களிடம் கட்டணம் வசூல் செய்வது என்ற கொள்ளைக்கார வேலையைச் செய்து வருகிறது கிரிமினல் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம்.

சுங்கச் சாவடிகள் என்பவை தேசிய நெடுஞ்சாலைகளைத் தனியார் உதவியுடன் அமைப்பதும் உரியக் காலத்தில் செய்த செலவினை சுங்கக் கட்டணத்தை ஈடு கட்டிவிட்டு, மீண்டும் அரசிடம் அளிப்பதுமே ஆகும்.

படிக்க : பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எதுவும் மேற்கண்ட விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எப்போது நிறுவப்பட்டன அவை செய்த செலவினத்தில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளன போன்ற தகவல்கள் எதுவும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ஒன்றிய அரசும் சுங்கச்சாவடி நிர்வாகமும் சேர்ந்துகொண்டு கூட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

நான்குவழிச் சாலைகளை எட்டு வழிச்சாலையாக மாற்றி முடிக்கும் வரை பழைய கட்டணத்தையே பெற வேண்டும் என்ற விதியையும் தகர்த்து எட்டு வழிச் சாலைக்கான சுங்க கட்டணத்தைச் சட்டவிரோதமாகப் பெற்று வருகின்றன சுங்கச்சாவடிகள்.

பரனூர் சுங்கச்சாவடி ஆனது காலாவதியான பின்னரும் கூட சட்டவிரோதமாகக் கூடுதலாக ரூ.28 கோடி வசூல் செய்திருப்பதாக ஒன்றிய அரசின் தலைமை கணக்காயர் அறிக்கையை வெளியிட்டு ஓராண்டு ஆன பின்னரும் கூட அந்த சுங்கச்சாவடி அகற்றப்படவும் இல்லை. சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடியின் உரிமையாளரும் அது தொடர்பான அதிகாரிகளும் கைது செய்யப்படவும் இல்லை.

இப்படிப்பட்ட அநியாயமான- சட்டவிரோதமான- காலாவதியான சுங்கச்சாவடிகளுக்கு எதிராக மக்கள் போராடும் பொழுது, அவர்களை ஒடுக்குவதற்குத்தான் தமிழ்நாடு அரசின் போலீஸ் வேலை செய்கிறது.

மேலும், தனியார் பாதுகாவலர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் ரவுடிகளை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள். இந்த நிலையில்தான் செப்டம்பர் 2, 2024-ஆம் தேதி முதல் 36 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் கூடுதல் கட்டண உயர்வை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

படிக்க : மணிப்பூரில் தொடரும் வன்முறை!

காலாவதியான மற்றும் சட்டவிரோதமாகச் செயல்படும் பரனூர், கப்பலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை உடனடியாக ஒன்றிய அரசு அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் புதியதாகச் சுங்கச்சாவடிகளையும் அமைக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான வெள்ளை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு:-9962366321
மெயில்:-ppchennaimu@gmail.com

தோழர் மாவோ நினைவை நெஞ்சிலேந்துவோம்!

0

செப்டம்பர் 9, 2024 – தோழர் மாவோவின் 48-வது நினைவு தினம்.

மார்க்சியத்தின் அடிப்படைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் – சுயவிமர்சனம் ஆகிய பெரும் ஆயுதங்களைக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி புரட்சியைச் சாதிக்கவல்ல எஃகுறுதிமிக்க ஒரு கட்சியைக் கட்டியமைத்தார் லெனின். விளைவு – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்தது.

உலகின் முதல் சோசலிச நாடான ரசியா, தோழர் ஸ்டாலினின் தலைமையில் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுக தாக்குதல்களை ஒருபக்கம் எதிர்கொண்டு, மறுபுறத்தில் கட்சிக்குள் எழுந்த திருத்தல்வாத, வலது சந்தர்ப்பவாத சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடியது.

இந்தப் போராட்டங்களின் அனுபவங்களையும், மார்க்சிய லெனினிய சிந்தனைகளையும் வரித்துக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியை போல்ஷ்விக் மயமாகக் கட்டியமைத்தார் தோழர் மாவோ.

படிக்க : மாவோ 130 | தோழர் மாவோவிடமிருந்து படிப்பினை பெறுவோம்! | பு.மா.இ.மு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே புரட்சி பணிகளைச் செய்துவந்தார் தோழர் மாவோ. சீன புரட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்தினார். நீண்ட கால மக்கள் யுத்தப்பாதை எனும் கோட்பாட்டு முடிவிற்கு வந்து, பிற்போக்கு அம்சங்கள் நிறைந்த சீனாவில் ஓர் சோசலிச புரட்சியை நடத்தி முடித்தார்.

சீனாவின் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், சீன மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கட்சி நிறுவனத்தில் வரும் பிரச்சினைகள், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகள், ஊழியர்களுக்கும்  தலைவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை பகுத்தாய்ந்து அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளைத் தோழர் மாவோ முன் வைத்தார்.

தோழர் மாவோ சிந்தனைகளை அவரது நினைவு தினத்தின் நினைவு கூர்வோம். நம் நாட்டில் பரவி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடித்து ஓர் புரட்சியைச் சாதிக்கச் சபதமேற்போம்!

சந்துரு

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!
  • அட்டைப்படக் கட்டுரை – கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!
  • மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய – இலங்கை அரசுகளின் கார்ப்பரேட் சேவையே மூலக்காரணம்!
  • உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?
  • காவி – கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!
  • வங்கதேச மாணவர் எழுச்சி: மாற்றுக் கட்டமைப்பே தீர்வு
  • வயநாடு நிலச்சரிவு: பேரழிவை உருவாக்கும் சுற்றுலா பொருளாதாரம்
  • வினேஷ் போகத்: பாசிசக் கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மீள்பதிவு

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும்
வ.உ.சி வாழ்ந்த காலம் 1872 முதல் 1936 வரை; இறக்கும்போது அவர் வயது 64.
இந்தியாவின் இயல்பான, சுயமான வளர்ச்சிக்கான சுதேசிக் கொள்கைக்காக முன்னோடிச் செயல்பாட்டை ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதற்கான அடித்தளத்தை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் கால் ஊன்றாத 1900-களின் தொடக்கத்திலேயே இட்டவர், விதை ஊன்றியவர், அன்றைக்கு யாராலும் கற்பனை செய்தும் இயலாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொருளாதார அடித்தளத்தை அசைத்துக் காட்டியவர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு பொருளாதார தளத்தில் பெரும் சவாலாக விளங்கி அச்சுறுத்தியவர் வ.உ.சி.
வ.உ.சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே, வணிகக் காரணங்களுக்காக அல்ல. அவர் அன்றைய நாளில் புகழ்பெற்ற வழக்கறிஞர், வருவாய்க்கு குறைவில்லை. வருவாயில் பெரும்பகுதியை பிறர்க்கு தானமாக கொடுத்த வள்ளல், எளிய மக்களிடம் கட்டணம் பெறாமல் அவர்களின் வழக்குகளுக்கு வாதாடிய பெருந்தகை. காசுபணம் அவருக்கு ஒரு பொருட்டாக இருந்தது இல்லை.
வழக்கறிஞர் ஆன அவர், உயர்ந்த அந்தஸ்து பொருந்திய இரண்டாம் நிலை ப்ளீடர் பதவியை துச்சமாக மதித்து வெளியேறினார்.
படிக்க : அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்
1906 அக்டோபர் 4 அன்று கப்பல் வாங்கப்பட்டது, 16 அன்று சுதேசி ஸ்டீமர் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் வயது 34 மட்டுமே!
அவருக்கு முன் சுமார் 20 கப்பல் கம்பெனிகள் இயங்கத்தான் செய்தன. ஆனால் அவை அனைத்தும் வணிக நோக்கில் ஆனவை. அரசியல் சார்பு இல்லாதவை. இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி ஒழித்துக்கட்டியது.
சுதேசி கப்பல் கம்பெனியின் இலட்சியங்கள் : தற்சார்பு, சுயதொழில் வளர்ச்சி, அந்நிய பொருட்களையும் வணிகத்தையும் புறக்கணிப்பது ஆகிய இலக்குகளை அடைவது ஆகியவை மட்டுமே.
1906 அக்டோபர் 4 அன்று  விவேகபானுவில் அவர் எழுதினார் : “நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொண்டதற்கு எதுவாக இருந்ததும், நமது சுதேசத்து பொருட்களை எல்லாம் அந்நிய நாட்டார் கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், நமக்கு மிக்க லாபத்தை தரக்கூடிய கைத்தொழில் வியாபாரங்களை எல்லாம் அந்நிய நாடுகளுக்கு கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், அந்நிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாக கைக்கொண்டு இருந்த கப்பல் தொழிலை நம்மிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது ஒன்றே ஆதலால், நாம் அதி சீக்கிரமாகவும் அத்தியாவசியமாகவும் கைக்கொள்ளதக்கதும் கைக்கொள்ள வேண்டுவதும் ஆன தொழில் கப்பல்கள் நடத்துவது மட்டுமே என்பது நம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததே…”
அன்றைய நிலையில் 2 கப்பல்கள், 2 லாஞ்சுகள், வேலைக்கு மூலதனம் ஆகிய மூலதன செலவு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய். கம்பெனியின் ஒரு பங்கு ரூபாய் 25 வீதம் 40,000 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
எஸ்.எஸ். லாவோ கப்பல் 1907 ஜூன் 11 அன்றும், எஸ்.எஸ். காலியா 1907 மே 16 அன்றும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன.
கப்பல்கள் வந்து சேர்ந்த பின் தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் “சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிவிட்டோம், பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. …அடுத்து பருத்தி வணிகம், அதை நாம் கைப்பற்றுவது மிக எளிது…” என்று தனது அடுத்த திட்டத்தையும் அறிவித்துள்ளார் வ.உ.சி!
பிரிட்டிஷாரின் ஒரே கொள்கை இந்தியாவில் உள்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதும் இலாபத்தை கடல் கடந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் என இருந்தபோது, அதே இலாபத்துக்கு வ.உ.சி.யால் பேராபத்து விளைகின்றது, அவரை அகற்றாமல் தமது காலனியாதிக்க வணிகத்தை ஓரடியும் நகர்த்த முடியாது என்ற மிகப்பெரிய எச்சரிக்கை உணர்வுதான் அவருக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான கொடுமைகள், தடங்கலுக்கும், பின் தொடர்ந்த சிறைக்கொடுமைகளுக்கும் காரணம்.
1908-இல் அவர் பேசினார் : “அயல்நாட்டவரால் நடத்தப்படுகின்ற நிர்வாகம் சுதேசிகளின் பயன்கருதிச் செயல்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. நீண்ட காலத்திற்கு அரசாங்கம் ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்தால், இந்நாடு கட்டாயமாகப் பாதிக்கப்படும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கின்றது. அதன் உண்மையான வளங்களை மீட்பதற்கு மூன்று வழிகள் உள்ளன : 1. சுதேசியம் 2. புறக்கணிப்பு 3. தொழிற்சாலை”.
அன்றைய திருநெல்வேலி கலெக்டர் எம்.எம். வின்ச், வ.உ.சி.யின் இப்பேச்சை “பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மானப்பிரச்சினை” என்று பதிவு செய்தார்.
1908 பிப்ரவரி 27 கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தொடங்குகிறது. மார்ச் 6 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் முழு வேலைநிறுத்தம் நடந்தது. மக்களிடம் இருந்து திரட்டிய நிதி, தன் சொந்த பணம், மனைவி மீனாட்சியம்மாளின் நகையை அடகு வைத்து கிடைத்த பணம், கடனாக பெற்ற பணம் ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு உணவு அளித்தவர் வ.உ.சி.
அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியை மூடிவிடுமாறு வ.உ.சி.க்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.
அவரது கம்பெனியின் கூட்டாளிகள் பலர் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைப்பட்டு விலைபோனது, பிரிட்டிஷ் நிர்வாகம் தன் மிருகபல அதிகாரத்தைப் பயன்படுத்தி சுதேசி கப்பல் கம்பெனிக்கு நட்டத்தை விளைவித்தது. கடன், ஊழியர்கள் செய்த ஊழல் ஆகியவை ஒன்றிணைந்து வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தை ஒழித்தன.
கொண்ட கொள்கையில் உறுதியும் நாட்டின் நலன் குறித்தே சிந்தித்தும் வந்த வ.உ.சி., தன்  வாழ்நாளில் 57 மாதங்கள், 22 நாட்கள் கொடுஞ்சிறையில் வாழ்ந்தார். அது கம்பீரம் மிக்க வீர வரலாறு.
40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் வ.உ.சி மட்டுமே. “மிக ஆபத்தான மனிதன்” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் ஆவணங்களில் இவரை குறித்து வைத்தது.
***
இவை யாவும் நடந்த காலம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்துகொண்டு இருந்த காலம் என்பதை புரிந்து கொண்டால்தான் வ.உ.சி.யின் சிந்தனை முதிர்ச்சி, துணிச்சல், முன்னெடுப்பு, போராட்ட குணம் ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும். 1915-ம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு திரும்புகின்றார். அதற்கு முன்பாகவே 12.3.1908 முதல் 24.12.1912 வரை 57 மாதங்கள், 22 நாட்கள், அதாவது நான்கே முக்கால் வருடங்கள் பிரிட்டிஷாரின் சிறையில் கற்பனைக்கு எட்டாத கொடுமைகளை அனுபவித்தார். முப்பத்து ஐந்தரை வயதில் சிறைக்கு சென்றவர் நாற்பதேகால் வயதில் விடுதலை ஆகின்றார்.
வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை:
பாளையங்கோட்டை சிறையில் 3 மாதங்கள் விசாரணைக்கைதியாக
கோயம்புத்தூர் சிறையில் 30 மாதங்கள் : கடுங்காவல் / நாடுகடத்தல் தண்டனைக் கைதியாக 9.7.1908 முதல் 12.12.1910 வரை.
கேரளா கண்ணனூர் சிறையில் 24 மாதங்கள், 22 நாட்கள் கடுங்காவல் / தண்டனைக் கைதியாக. இங்கிருந்துதான் விடுதலை ஆனார்.
தனது 35-வது வயதில் சிறை செல்கின்றார், 40-வது வயதில் வெளியே வருகின்றார்.
(தகவல்கள் உதவி : கப்பலோட்டிய கதை, குருசாமி மயில்வாகனன், நீந்தும் மீன்கள் வெளியீடு)
***
வ.உ.சி அவர்களின் வாழ்க்கையை ஒப்பீடு செய்தால்
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டது 1885இல்.
வ உ சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது 1907இல்.
காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். 1915இல்தான் இந்தியாவுக்கு வருகின்றார். 1921இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகின்றார்.
ஜவஹர்லால் நேரு பிறப்பு 1889. 1905-07 காலகட்டத்தில் அவர் இங்கிலாந்தில் படித்துக்கொண்டு இருந்தார். 1912இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக பதிவு செய்கின்றார். 1912இல்தான் முதல்முறையாக பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
ராஜாஜி பிறப்பு 1878. 1906இல் அவர் வயது 28. 1906இல் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றார், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துகொள்கின்றார்.
வல்லபாய் படேல் : 1911இல் 36 வயது இவருக்கு. லண்டன் சென்று படிக்கின்றார். திரும்பி வந்து அஹமதாபாத்தில் வக்கீல் தொழில்தான் செய்து கொண்டு இருந்தார். ன்ற காந்தியை இவர் முதல் முறையாக சந்தித்தது 1917இல் தான்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்: 1905,6, 7 காலகட்டத்தில் அவர் படித்துக்கொண்டு இருந்தார்.
சுபாஷ் சந்திர போஸ்: பிறப்பு 1897. 1906இல் படித்துக்கொண்டு இருந்தார்.
காமராஜர் பிறந்தது1903இல்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் (1888-1975): 1906இல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்.
பிற்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதி ஆன ஆர் வெங்கட்ராமன் பிறந்ததது 1910இல்.
***
படிக்க : ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி
கோழைகள், துரோகிகளின் வரலாறு என்ன சொல்கின்றது?
காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்ட வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளான நாதுராம் கோட்சே உள்ளிட்டவர்களின் சித்தாந்த தந்தை தாமோதர் சாவர்க்கர்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பின் அங்கிருvந்து கொண்டு, “மாட்சிமைதங்கிய பிரிட்டிஷ் மகாராணி தன்னை விடுதலை செய்தால் சகல அரசியல் செயல்பாடுகளில் இருந்தும் தான் விலகி விடுவதாகவும், தன்னைப்போல ஒரு விசுவாசமான ஒரு ஊழியனை பார்க்க முடியாது என்ற அளவுக்கு தான் நடந்து கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும்” பிரிட்டிஷ் அரசிக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதிக்கொண்டு மண்டியிட்டு கிடந்த கேவலமிகு வரலாறுதான் சாவர்க்கரின் வரலாறு.
1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்திமிக்க வீரர்கள் இரண்டு பேரை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்து காட்டிக்கொடுத்த அவமானமிக்க வரலாற்றுக்கு சொந்தமானவர் அடல் பிகாரி வாஜ்பேய்.
ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் கைக்கூலிகளாக, அடிமையாக வாழ்வதே ஆனந்தம் என்று முடிவு செய்த கோழைகளுக்கும், இல்லாத ரயில் நிலையத்தில் டீ ஆற்றிக்கொண்டு இருந்ததாகவும், டிஜிட்டல் கேமரா இல்லாத காலத்தில் டிஜிட்டல் காமிராவில் படம் எடுத்ததாகவும், இமெயில் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இமெயில் அனுப்பியதாகவும் அள்ளிவிடும் அண்டப்புளுகர்களுக்கும், தன்னிகரில்லா விடுதலை போரராட்ட வீரரும் சுதேசிப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தன் சொத்துக்களை இழந்து கப்பல் கம்பெனியை நிறுவியவரும் வேறு எவரும் சந்தித்திடாத வெஞ்சிறைக் கொடுமைகளை அனுபவித்த தியாகியும் ஆன வ.உ.சி.யின், அவரைப் போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?
உதவிய நூல்:  கப்பலோட்டிய கதை (குருசாமி மயில்வாகனன்)
***

முகநூலில் : மு இக்பால் அகமதுdisclaimer

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!
  • அட்டைப்படக் கட்டுரை – கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!
  • மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய – இலங்கை அரசுகளின் கார்ப்பரேட் சேவையே மூலக்காரணம்!
  • உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?
  • காவி – கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!
  • வங்கதேச மாணவர் எழுச்சி: மாற்றுக் கட்டமைப்பே தீர்வு
  • வயநாடு நிலச்சரிவு: பேரழிவை உருவாக்கும் சுற்றுலா பொருளாதாரம்
  • வினேஷ் போகத்: பாசிசக் கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



திருவாரூர்: சிப்காட் அமைவதை எதிர்க்கும் மக்கள்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கரையாபாலையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டளை, கல்லுக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் விவசாய விளை நிலங்களில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ ஆகியோர் சிப்காட் அமையவிருக்கும் இடத்தைப் பார்வையிடச் சென்ற போதும் அவர்களின் வாகனத்தை வழிமறித்து கிராம மக்கள் சிப்காட் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம் என்று கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் சிப்காட் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சரை அங்குள்ள மக்கள் கேள்வி கேட்ட போது மக்களைச் சமாளிப்பதற்காக தற்போது இந்த இடத்தில் சிப்காட் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் அதன் பிறகும் சிப்காட் அமைப்பதற்கான வேலைகளை அரசு அதிகாரிகள் மறைமுகமாகச் செய்து வந்ததை அறிந்து கொண்ட ஊர் பொதுமக்கள், வியாழக்கிழமை (29-08-2024) அன்று அனைவரும் தங்கள் ஊருக்கு சிப்காட் தொழிற்சாலை வேண்டாம் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

சிப்காட் அமைய இருக்கும் இடமானது திருவாரூர் தியாகராஜ கோயில் மற்றும் தருமபுரம் ஆதீனம் ஆகிய இரு கோவில்களுக்கும் சொந்தமான இடமாகும். அந்த நிலத்தில் தான் 75 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து நேரடியாக ஆதினத்திற்கு வரி செலுத்தி வருகின்றனர்.

ஆனால் எந்தவொரு அறிவிப்புமின்றியும், கிராமத்து மக்களிடம்  கருத்துக் கேட்காமலும் திடீரென சிப்காட் வரப்போவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறுவதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.


தோழர் லெனின்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



சிக்கலான தருணம்தான்; எனினும் போர் முடிவுக்கு வரும்

சென்ற மூன்று நாட்களுக்கு முன்னதாக, மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையின் மீது தொடுத்துள்ளது. இசுரேலின் இந்தத் தாக்குதலானது 10 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி தேடுதல் வேட்டையைத் தொடங்கியது முதலாக அன்றாடம் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்து வருகிறது. தேடுதலைத் தொடங்கிய அன்றே 10-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றது. ஒரு பள்ளியின் மீது தாக்குதலைத் தொடுத்து எட்டு பேரைக் கொன்றது.

ஜெட்டுகள், ட்ரோன்கள், டாங்கிகள் கொண்டு இந்தத் தக்குதலை நடத்தியது. ஒரே நேரத்தில் அருகருகே பல இடங்களில் இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் மக்கள் எங்குமே தப்பித்துச் செல்ல இயலாத வகையில் இந்தத் தாக்குதல்கள் கொடூரமானவையாக இருந்தன.

மேற்குக் கரையின் ஜெனின், துல்கரெம், டுபாஸ் அருகில் இருக்கும் ஃபாரா அகதிகள் முகாம் ஆகியவற்றின் மீதான இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், “பாதுகாப்புப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை”க் குறிவைப்பதாகக் கூறி இஸ்ரேலால் நடத்தப்பட்டு வருகிறது.


படிக்க: காசா: அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்! | படக்கட்டுரை


அக்டோபர் 7-ஆம் தேதி முதல் தற்போதுவரை, காஸாவில் 40,534-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துள்ளது, இசுரேல். இஸ்ரேலின் தாக்குதலினால், 93,778 பாலஸ்தீனியர்கள் பலத்த காயங்களை அடைந்துள்ளனர்; உடலுறுப்புகளை இழந்துள்ளனர். இதே காலத்தில், மேற்குக் கரையில், 662 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 5,400 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ஆனால், இஸ்ரேலின் இந்த கோழைத்தனமான போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸை ஒழித்துக் கட்டுவதற்காக இசுரேல் நடத்துவதாகப் கூறப்படும் இந்தப் போர் ஓராண்டை நெருங்கப் போகிறது. இஸ்ரேல் குறிப்பிட்டது போல இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை.

முடிவுறாத இந்தப் போரின் இன்றைய தருணம் நமக்கு உணர்த்துவதென்ன?

ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்த ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். கடந்த மே மாதம் 19-ஆம் தேதி விமான விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட இரானின் அதிபர் இம்ராஹிம் ரைசிக்குப் பிறகு புதிய அதிபராக மசூத் பெசஸ்கியனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.

ஏறக்குறைய அதே நாளில்தான் லெபானான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஃபாக் ஷுக்ரியைப் படுகொலை செய்தது இஸ்ரேல்.

அதாவது, தற்போது நேரடியாக களத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஹமாஸின் தலைவரைக் கொன்றுவிட்டது; அதற்கு உதவியாக இருக்கும் ஹிஸ்புல்லாவின் முக்கிய இராணுவத் தளபதியைக் கொன்றுவிட்டது. இனி, வேகமான ஒரு தேடுதல் வேட்டையை நடத்துவதன் மூலம், ஹமாஸுக்கு இறுதி நெருக்கடியைக் கொடுத்துவிடலாம் என்பதற்காகத்தான் இஸ்ரேலின் ஆகஸ்டு 27-க்குப் பிந்தைய தாக்குதலா?

இல்லை, அப்படி நேர்க்கோட்டில் இந்தத் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியாது.


படிக்க: காசா பள்ளியின் மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த இஸ்ரேல்


பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரானது, கடந்த 9 மாதங்களில் பல சிக்கலான வழியில் தான் நடந்து வந்துள்ளது. இன்று, இப்போரானது, மேலும் சிக்கலான, நெருக்கடியான தருணத்தை அடைந்துள்ளது.

ஜூலை மாத இறுதில் நடந்த மேற்கண்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் உடையவை. போராளிக் குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டது, ஈரானின் அதிபரின் மரணம் போன்றவை, விடுதலைப் போராட்டத்திற்கு இழப்புகளை ஏற்படுத்துபவைதான். எனினும், இது பிரச்சினையின் ஒரு கூறு மற்றும் ஒரு கோணம் மட்டும்தான்.

உண்மையில், ஆகஸ்டு 19-ஆம் தேதி இஸ்ரேலின் தலைநகர் டெல்-அவிவ்-வில் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தப்பட்டதானது இஸ்ரேலின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. இச்சம்பவம் வேறு கோணத்தில் பிரச்சினையைப் பார்க்க வலியுறுத்துகிறது.

இது குறித்து இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் ஒமரின் மொழிகளிலேயே பார்ப்போம்.

”இது, மேற்குக் கரையில் உள்ள பாஸ்தீனிய விடுதலைக் குழுக்கள் இரகசிய செல்களில் அதிக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கி நகர்வதற்கான வெளிப்பாடு” என்று ஒமர் குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாலஸ்தீனத்தின் அதிகாரமானது, “சமூக வர்க்கங்களின் ஆதரவை இழந்து வந்தாலும், குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு கரையில் புதிய தலைமுறை பாலஸ்தீனர்களின் எழுச்சியுடன் இணைந்து போராட்டத்தை தங்களது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னெடுத்து வருகிறது” என்கிறார்.

மேலும், ஈரானில் இருந்த ஹமாஸ் தலைவர் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது. இதனால், ஈரான் ஆதரவுக் குழுக்களுக்கும் ஹமாஸும் இணைந்து கொள்ளும் என இஸ்ரேல் அஞ்சுகிறது என்கிறார்.

இவ்வாய்வாளர் குறிப்பிடும் இந்தக் கூறின் பொருள் என்ன?

இஸ்ரேல் நினைப்பது போல ஈரான் ஆதரவு குழுக்களுடன் ஹமாஸுக்கு தொடர்பு ஏற்படுகிறது என்பது உண்மையாக இருந்தால், அந்த அளவிற்கு ஹமாஸ் இன்னும் பலமாக இருப்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பார்வை மிகவும் முக்கியமானதும் நம்பிக்கையளிப்பதுமாகும்.

எனினும், ஈரான் குழுக்களும் ஹமாஸும் இணைந்து கொள்ளும் என்ற இஸ்ரேலின் எதிர்ப்பார்ப்பானது அடிப்படையற்றது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பீதியில் இருப்பவன் சிறு அசைவுகளையும் பார்த்து மேலும் பீதியடைவதைப் போலத்தான் இஸ்ரேலின் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது.


படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்


உண்மையில், பாலஸ்தீனத்தின் இளந்தலைமுறையினர் தங்களது உறவினர்கள் அன்றாடம் இறப்பதைப் பார்த்தும், பாலஸ்தீனத்தின் விடுதலையை சாதிக்கவும் எந்தவித தியாகத்திற்கும் அஞ்சாமல் விடுதலைப்போரில் மேலும் மேலும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதற்கு ஹமாஸ் மட்டுமே காரணமல்ல. பல்வேறு இயக்கங்கள் இணைந்ததுதான் இன்றைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டமாகும்.

மேலும், பாலஸ்தீனர்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதானது பாலஸ்தீனியர்களை மேலும் போராட்டக் களத்திற்கு தள்ளியுள்ளது.

மற்றொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிவந்த துருக்கி போன்ற நாடுகள் தமது உதவிகளை நிறுத்திவிட்டன. இது இஸ்ரேல் மட்டுமல்ல, அதற்கு ஆயுத உதவிகளைச் செய்து, காஸா முனையில் இரத்தைத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அமெரிக்காவையும் அச்சங்கொள்ளச் செய்கிறது.

ஜூலை மாதம் 19-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம், பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் மேற்கு கரை மற்றும் ஜெருசெலேமில் இருக்கும் அனைத்துக் குடியிருப்புகளையும் இஸ்ரேல் காலி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடக்கும் ஆகஸ்டு 19-22 தேதிகளில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதற்கு முன்னதாக, ஏப்ரல்-மே மாதங்களில் கலிஃபோர்னியா மாணவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியதை நாம் அறிவோம்.

மிகக் கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கு கரையில் தொடுத்திருக்கும் இன்றைய தருணத்தில், ஹமாஸ் தலைவர், உலகம் முழுவதும் இருக்கின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக போராட்டங்களை நடத்துமாறு அறைகூவல் விடுத்திருப்பது இதன் தொடர்ச்சியாகும். இதுவும் உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் அறைகூவலாகும்.

இன்னொரு பக்கம், இஸ்ரேலுக்கு இன்னொரு போர் முனை உருவாகியுள்ளது. கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 25) அன்று, ஹெஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களின் மீது 340 ராக்கேட்டுகளை ஏவி தாக்குதல்களை நடத்தியது.

இவற்றையும், இஸ்ரேலில் உள்ள தீவிர வலதுசாரிகளின் நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு, நெத்தன்யாகு கும்பல் போரைத் தீவிரப்படுத்தும் மேலும் சிக்கலான வழியையே தேர்ந்தெடுக்கிறது.

தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம் பாலஸ்தீனர்கள் அனைவரையும் வெளியேற்றி, முழு பாலஸ்தீனத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடலாம் என இஸ்ரேல் ஆளும் வர்க்கங்கள் கனவு காண்கின்றன. ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்திக் கொண்டே இன்னொரு பக்கம் போரைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.

மொத்தத்தில், இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரப் போவதில்லை. இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைவதும், இந்தியா போன்ற இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு எதிராக சொந்த நாட்டில் மக்கள் போராட்டங்கள் வளர்வதும்தான் பாலஸ்தீன மக்களுக்கு விடுதலை வாங்கித் தரும்.

கோழைகள் என்றைக்குமே தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை; வீரர்கள் என்றைக்குமே பணிந்து பின்வாங்கப் போவதுமில்லை.

தேச விடுதலை வேட்கை வீரர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். உலகெங்கும் அளிக்கப்படும் ஆதரவுகள், அவர்களுக்கு உந்துதலைக் கொடுத்தே தீரும்.

சிக்கலான தருணம்தான், எனினும் போர் முடிவுக்கு வரும்!

சுதந்திர பாலஸ்தீனம் மலரும்!


மகேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: அன்று குஜராத் இன்று நாடே சோதனை சாலை! | தோழர் மருது

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்:
அன்று குஜராத் இன்று நாடே சோதனை சாலை!

தோழர் மருது,
மாநில செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
99623 66321.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!