Thursday, July 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 55

நெதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலிய மக்கள் போராட்டம்

டந்த மார்ச் 31 அன்று பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமின் வீதிகளில் திரண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காசாவில் சிறைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த பின்பு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தால் நெதன்யாகுவுக்கு உள் நாட்டிலேயே நெருக்கடி அதிகரித்துள்ளது.

“எங்களுடைய குடும்பத்தினரை மீட்டு கொண்டுவரும் வரை இந்த வாரம் முழுவதும்  ஒவ்வொரு இரவிலும் தெருக்களில் இறங்குவோம்” என்று போராடும் மக்கள் கூறியுள்ளனர்.

நெத்தன்யாகுவின் முகத்தில் இரத்தம் இருக்கக்கூடிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். மேலும் “நீதான் பொறுப்பு, நீதான் குற்றவாளி” என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர். எங்களுக்கு “இப்போதே தேர்தல் வேண்டும்!” எனவும் போராட்டக்காரர்கள் முழங்கினர்.

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நெதன்யாகுவுக்கு எதிராக பல மாதங்களாக இஸ்ரேல் தெருக்களில் போராட்டங்கள் நடைபெற்றது நினைவு கொள்ளத்தக்கது.

இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 32,782-க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது.

போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

 

 

 

 

 

 

 


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாடி, குருநாதபுரம், குரும்பூர், விச்சூர், சித்தம்பல்,  மருதாவூர், பத்தபாலூர் என ஏழு கிராம மக்கள் பல ஆண்டுகளாகப் போராடியும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரபடாததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கிராமங்களில் சாலைகள் சீரமைக்கபடாமல் மண் சாலை குண்டும் குழியாகவும், மின்கம்பிகள் பழுதடைந்து சரி செய்யப்படாமலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன.  இதன் காரணமாக மழை வரும் போது சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மழைக் காலங்களில் பள்ளிக்கு  செல்லமுடியாத நிலையில் உள்ளனர் என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 3 கிலோமீட்டர் வரை மண் சாலையாக உள்ளதால் மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு  நகர்புறங்களுக்கு செல்வது சிரமமாக இருக்கிறது. சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க   வேண்டும் என்ற  எங்களின் குரல்கள் கேட்கபடாமல் ஏர்வாடி ஊராட்சி மட்டும்  தனித்து விடப்பட்டதாக இருக்கிறது.

இதையொட்டி பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை நேரடியாக சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினரும் ஒருமுறை கூட தங்கள் கிராமத்திற்கு வந்து தங்களின் அவலநிலையைப் பார்கவில்லை என  வேதனைப்படுகின்றனர் கிராம மக்கள்.


படிக்க: கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது


இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள் “எங்களுக்கான அடிப்படை வசதிகளை துளியும் செய்து தராத இந்த தேர்தல் முறையில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அடிப்படை வசதிகளை செய்து தந்தபிறகே நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்” என ஏழு கிராம மக்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்தியா கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைத் தங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு பின்னடைவாகவே அமையும்.

தேர்தல் சமயத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே தங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால், தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக மேற்கொள்ள துணிந்துவிட்டனர்.


தமிழ் பிரியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச பி.ஜே.பி கும்பல் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கோவையில் பாசிச பி.ஜே.பி கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட்டு
இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!

02.04.2024

டந்த வெள்ளிகிழமை (29.3.2024) அன்று கோவை சங்கனூர் பகுதி சண்முகா நகரில் வசித்துவரும் ஜீனத் என்பவரின் மகனான நவ்ஷாத் என்பவரை 30 பேரை கொண்ட பி.ஜே.பி.யின் குண்டர்படை தாக்கியுள்ளது. இப்பகுதியில் பி.ஜே.பி தேர்தல் பிரச்சாரம் செய்த போது, ஜீனத் குடும்பத்தினர் வீட்டிற்குள் நோன்பு தொழுகை செய்துகொண்டிருந்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக பி.ஜே.பி கும்பல் வீட்டின் கதவைத் தட்டியுள்ளது. அதன்பின் அவரது இளைய மகன் கதவைத் திறந்து என்னவென்று கேட்டுள்ளார். அதற்க்கு பி.ஜே.பி குண்டர்படையினர் “உள்ளே இருப்பவர்களை வெளியே வர சொல்” என்று மிரட்டியுள்ளனர். பேசிக்கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டுக்கொண்டும் ”உன் பெயர் என்னடா” என்று கேட்ட பின் ”துலுக்கனுக நீங்க எல்லாரும் இப்படி தான் இருப்பீங்களா” என்று கூறிய படி அவரை தாக்கியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஜீனத்தின் இளைய மகன் மீது போலீசால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதோடு பினை கிடைக்காதபடி செய்துள்ளது கவுண்டம்பாளையம் போலீசு. இந்த விவகாரத்தில் பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரின் மதவெறி தாக்குதலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ள போலீசு அதிகாரிகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகரை ஏற்க மறுத்த போலீசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாக்குதலை நடத்திய பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதோடு, அப்பகுதியை சேர்ந்த பி.ஜே.பி பிரமுகர் சங்கர் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

இதேபோல், கடந்த 27.03.2024 அன்று நேசனல் ஜனசக்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் “NO MODI, NO GUARANTEE” என்று சுவரொட்டிகள் ஒட்டிய, அக்கட்சியின் தலைவரான ரஹ்மான் கே மூப்பனார் என்பவரை பி.ஜே.பியின் குண்டர்படையினர் “யாரு டா நீ தீவிரவாதியா உன்ன எவன்டா போஸ்டர் ஒட்ட சொன்னது அவன இங்க வர சொல்லு இல்ல உனக்கு அவ்வளவு தான்” என்று மிரட்டியதோடு 30க்கும் மேற்பட்ட பி.ஜே.பி குண்டர்படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது.


படிக்க: மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இதுபோன்று, பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரின் தாக்குதல் தொடர்ந்துக்கொண்டிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு சவால் விடுவதாகும். களத்தில் இக்கும்பலுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் எதுவும் பதிலடி கொடுக்காமல் இருப்பது இக்கும்பலுக்கு இன்னும் துணிச்சலை கொடுக்கிறது. இந்த பாசிச கும்பலுக்கு எதிராக களத்தில் இன்னும் தீவிரமாக பிரச்சாரம் செய்வதும், இக்கும்பலை எதிர்கொண்டு களத்தில் தக்க பதிலடி கொடுத்து முறியடிப்பதும் அவசியமாகும்.

பி.ஜே.பி குண்டர்படையினரால் தாக்குலுக்குள்ளான குடும்பத்தினர் பேசும் போது “இது தமிழ்நாடு தானா, இல்லை வட மாநிலமா” என்ற கேள்வியை எழுப்புயுள்ளனர். தமிழ்நாடு அரசே, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷ்மிட்ட தாக்குதல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை, உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உத்தரபிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற வட மாநிலங்களின் நிலை இங்கும் வருவதை யாராலும் தடுக்க முடியாது.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலைக்கு தமிழ்நாடு பதிலடி கொடுக்கும்!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

31.03.2024

சில நாட்களுக்கு முன்பு திருப்பெரும்புதூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட பாசிச பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ‘மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல் 1980-இல் பேசிய அதையே இப்போதும் பேசுகிறார். இந்தி, சமஸ்கிருதம் இது அது என்கிறார். இன்னும் இந்த பிஞ்சு போன சப்பலை அவர்கள் தூக்கி எறியவில்லை’’ என்று கூறி தமிழ்நாட்டில் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

1965 ஆம் ஆண்டு இந்தி தேசிய மொழியாகும் என்று ஒன்றை அரசு அறிவித்ததற்கு எதிராக நஞ்சருந்தியும் தீக்குளித்தும் போலீசாலும் இராணுவத்தாலும் குண்டடி பட்டும் உயிர் நீத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்ற அந்த மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகத்தான், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தி தேசிய மொழியாக இருக்காது என்ற அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு.

மதுரையில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வீடுகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த நெருப்பில் தான் ஒன்றிய அரசின் ஆணவம் பொசுங்கியது.


படிக்க: ரவுடிசம் செய்த அண்ணாமலை | தோழர் மருது


இந்தியை பல்வேறு வழிகளில் திணித்து வரும் மோடி – அமித்ஷா கும்பல், தமிழ் மீது பாசம் இருப்பது போல பல இடங்களில் பேசினாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடவில்லை. எனக்கு தமிழ் தெரியவில்லை என்று நீலிக் கண்ணீரை வடிக்கும் மோடியும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்பு என்று வர்ணிக்கும் அண்ணாமலையும் பாசிச பாஜகவின் முகங்கள் தான் என்பதை அறியாதது அல்ல தமிழ்நாடு.

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அதற்கான உரிய பதிலை, உரிய முறையில் தமிழ்நாடு அளிக்கும், அளிக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஊழல்: அம்பலப்பட்ட பாசிச பா.ஜ.க அரசு!

0

2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், 143 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் எதேச்சதிகார முறையில் தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 18 அன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு டிசம்பர் 20 அன்று நிறைவேற்றப்படுகிறது; டிசம்பர் 21 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுகிறது; டிசம்பர் 24 அன்று குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாசிச மோடி அரசு காட்டிய அதீத அக்கறைக்கான காரணத்தை தற்போது தேர்தல் நிதிப் பத்திரம் தொடர்பான விவரங்கள் வெளிவந்த பின்னர் தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இச்சட்டமானது, போட்டி ஏலங்கள் இல்லாமல் செயற்கைக்கோள் அலைக்கற்றை (satellite spectrum) ஒதுக்கீட்டை நிர்வாக உத்தரவு மூலம் மேற்கொள்ள வழிவகை செய்கிறது. மேலும், ஏலம் விடும் முறையைப் பின்பற்றாமல் இருப்பதற்கான ஒப்புதலை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மன்மோகன் சிங் அரசாங்கத்தில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) உரிமங்கள் உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2012-ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டன. அவ்வழக்கில் அலைக்கற்றை உரிமங்கள் ஏலம் வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு “ஊழலுக்கு எதிரான சம்மட்டி அடி” என்று ஊடகங்களால் அப்போது கொண்டாடப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடும் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.


படிக்க: “ஊழல் நாயகன்” மோடி!


2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை புறந்தள்ளி விட்டுத்தான் தற்போது பாசிச மோடி அரசு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை மேற்கொள்ள இருக்கிறது.

புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கு, ஒரு நிறுவனம் இரண்டு அனுமதிகளைப் பெற வேண்டும். முதலாவது, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து GMPCS உரிமத்தை (Global Mobile Personal Communications by Satellite licence) பெற வேண்டும். இரண்டாவது, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையதின் (Indian National Space Promotion and Authorization Centre IN-SPACe) அனுமதியைப் பெற வேண்டும்.

ஒன்வெப் இந்தியா (OneWeb India) என்ற நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் யூடெல்சாட் ஒன்வெப் (Eutelsat OneWeb) என்ற சர்வதேச செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் இந்திய கிளையாகும். ஒன்வெப் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பது தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல்-இன் (Airtel) தாய் நிறுவனமான பார்தி எண்டர்பிரைசஸ் (Bharti Enterprises) ஆகும்.

ஒன்வெப் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 24, 2021 அன்று தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து GMPCS உரிமத்தைப் பெற்றுவிட்டது. இந்தியாவில் இந்த உரிமத்தைப் பெற்ற முதல் நிறுவனம் இதுதான்.


படிக்க: அம்பலப்பட்டுப்போன பாசிச மோடி அரசின் ’ஊழல் ஒழிப்பு’ நாடகம்


அடுத்ததாக நவம்பர் 9, 2023 அன்று பா.ஜ.க-விற்கு 100 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பார்தி குழுமம் அளிக்கிறது. இதை நவம்பர் 13 அன்று பணமாக மாற்றி கொள்ளும் பாஜக, நவம்பர் 21 அன்று IN-SPACe இன் அனுமதியை இந்நிறுவனத்திற்கு வழங்குகிறது.

இதனைத்தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் புதிய தொலைத்தொடர்பு மசோதா அதிவிரைவாக மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலையும் பெற்று சட்டமாகிறது. ஜனவரியில் பார்தி குழுமம் மீண்டும் 50 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க-வுக்கு அளிக்கிறது. ஜனவரி 12, 2024 அன்று பா.ஜ.க அதையும் பணமாக மாற்றிக் கொள்கிறது.

இந்த 150 கோடி ரூபாய் மட்டுமல்ல, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பார்தி குழும நிறுவனங்கள் 247 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இதில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமான நிதி பா.ஜ.க-வுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரங்கள் அல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து தேர்தல் நிதி அளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக அமைப்பு தேர்தல் அறக்கட்டளை (Electoral Trusts) எனப்படுகிறது. 2013-ஆம் ஆண்டு முதல் இந்த அறக்கட்டளைகள் கார்ப்பரேட்களால் அமைக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 18 தேர்தல் அறக்கட்டளைகளில் முதன்மையானது புரூடெண்ட் தேர்தல் டிரஸ்ட் (Prudent Electoral Trust) நிறுவனம். 2013 ஆம் ஆண்டில் பாரதி குழுமத்தால் முன்கையெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க-வுக்கு 218 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது. இதில் பார்தி குழுமத்தால் மட்டும் 27.25 கோடி ரூபாய் நேரடியாக இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.


படிக்க: கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !


இவ்வாறு பார்தி நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலம் / டெண்டர் முறை இல்லாமல் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் வழங்க சட்ட வழிவகையை உருவாக்கியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு. ’ஊழல் ஒழிப்பு நாயகன்’ என்று பாசிச கும்பலால் கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் தற்போது சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.

தற்போது மோடி அரசு கையாண்டுள்ளதைப் போன்றதொரு வழிமுறையைப் பயன்படுத்தி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்ட போது கூச்சலிட்ட மோடி ஆதரவு ஊடகங்களும், அண்ணா ஹசாரே, கிரண் பேடி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் நண்பர்களும் தற்போது தங்களின் நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு அமைதிகாத்து வருகின்றனர்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக
தில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்படும்
ஆர்ப்பாட்டத்தை
மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!

31.03.2024

துபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் பழிவாங்கும் நோக்கில் டெல்லியின் முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க் கட்சிகள் மீது தொடர்ச்சியான பல்வேறு தாக்குதல்களை ஏவி விடுகிறது பாசிச பா.ஜ.க.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டையே மிகப் பெரிய பேரழிவுக்குள் தள்ளியுள்ள மோடி – அமித் ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களைப் பார்த்து அஞ்சுகிறது. விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டங்கள் மோடி – அமித்ஷா பாசிசக்கும்பலின் வயிற்றில் புளியை கரைப்பதால் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தோல்வி பயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக வெறிபிடித்த மிருகமாய் அனைத்து எதிர்கட்சிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. தனக்கு கட்டுப்படாத கட்சிகளை ஒழித்துக் கட்டுவது, பிளவுபடுத்துவது போன்ற செயல்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூலம் மேற்கொண்டு வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்வது, அமலாக்கத்துறை சோதனைகள், வருமானவரித்துறை சோதனைகள் என்று தினமும் நடந்தேறி வருகின்றன. அண்மையில் கூட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கையே முடக்கி அதன் பொருளாதாரத்தையே முடக்கி வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்படும் போராட்டம் மிகவும் சரியானதாகும். அதனை மக்கள் அதிகாரம் வரவேற்பதுடன் பாசிச மோடி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்று களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை

ஊழிக்காலம்
(காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்)

இப்புத்தகம் மிக எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. சிக்கலான காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் பார்வையை மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றே சொல்லலாம்.

இந்நூல் சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைகளை எழுதி வரும் “நாராயணி சுப்ரமணியன்” அவர்களால் விகடன்.காம்-ல் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும். Nomad Fairy Tales & Hope Emoji Publications வெளியீடு.

இந்நூல் கூறும் விஷயங்கள் நமக்கு ஒரு ரெட் அலர்ட்

ஆம். ரெட் அலர்ட் என்ற சொல் சமீப காலங்களில் சகஜமாகி வருவதை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். சில ஹாலிவுட் படங்களில் வருவதுபோல கற்பனையான, பூமிப்பந்தின் சிதைந்த எதிர்காலம் பற்றியதாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக நமது எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக இருக்கப்போவதாக எச்சரிக்கிறது இந்நூல்.


படிக்க: மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா


காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை இந்த இந்நூல் மையப்படுத்தியிருக்கிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படப்போகிற 181 நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடத்தில் இருக்கிறது என்கிற செய்தி நம்மை காலநிலை மாற்றத்தை கூர்ந்து கவனிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

“மிக கன மழை” “அதி கன மழை” என்கிற சொல்லாடல்களெல்லாம் சமீப காலங்களில் நமக்கு அறிமுகமாகவை. சமீபத்தில் யாருமே கணிக்க முடியாத வகையில் நெல்லை சுற்றவட்டாரப் பகுதிகளில் “அதி கனமழை” பெய்து பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதை நாம் பார்த்தோம். இப்படி பேரழிவுகள் அடிக்கடி நடக்கிற நிகழ்வுகளாகி வருகின்றன என்ற எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன?

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் “புவி வெப்பமடைதல்” என்பதுதான். புவி வெப்பமடைவதற்கு அடிப்படைக் காரணம் என்ன? அதிகப்படியான பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் தான் புவி வெப்பமடைவதற்கு அடிப்படைக் காரணம் என்பதை எளிமையாக விளக்கியிருக்கிறது இந்நூல்.

வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள், காடுகள் அழிக்கப்படுவது, செயற்கை உரங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் ஆகியவை அதிகமான பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றுவதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிப்பதைப் பட்டியலிடுகிறது இந்நூல். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை 1 மில்லியன் டன் பசுமைக்குடில் வாயுக்கள் காற்றில் கலக்கிறதாம். பசுமைக்குடில் வாயுக்களிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது CO2 என்கிற கரியமில வாயு தான்.


படிக்க: ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்) | நூல் அனுபவம்


இந்த சூழலியல் பிரச்சினையை முன்பு ’புவி வெப்பமடைதல்’ என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பிரச்சினையின் பரிணாமத்தின் அடிப்படையில் ”காலநிலை மாற்றம்” என்று பெயர் மாற்றியுள்ளனர்.

வளிமண்டத்தில் கலந்துள்ள இந்தக் கரியமிலவாயு உமிழ்வை மீண்டும் திரும்ப உறிஞ்சுக்கொள்ள முடியுமா என்பது குறித்தெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளது இந்நூல். ஆனால் அதற்கான தொழில்நுட்பம் அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் விளக்குகிறது.

புவி சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2.0 டிகிரி வரை மட்டும் அதிகரிக்கலாம் என்பதே “காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழுவின்” (IPCC) பரிந்துரை என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். அதற்கு காற்றில் கரியமிலவாயுவின் அளவு 450 PPM (parts per million) ஆக இருக்க வேண்டும் என்கிறது.

காலநிலை மாற்றத்தால் எதுவெல்லாம் பாதிக்கப்படும்?

நம் அன்றாட உணவு, அதிலுள்ள சத்துக்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மனிதர்களின் வாழிடம், மனிதர்களின் உளவியல் என இதனால் பாதிக்கப்படாத விஷயமே இல்லை எனும் அளவிற்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக மோசமானது என்பதை என்பதை உணர முடிகிறது.

முக்கியமாக காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது விளிம்புநிலை மக்கள் தான். காலநிலை அகதிகள் உருவாகும் அவலத்தையும் அப்படியான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு, கடல்மட்டம் உயர்தல் என பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டிவரும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வால் உலகின் பல்வேறு கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். இதனால் அங்கு வசிக்கும் விளிம்புநிலை மக்களின் வாழிடம் முற்றிலும் மூழ்கும் அபாயத்தை எச்சரிக்கிறது இந்நூல்.

இன்னும் அச்சுறுத்தலான விஷயம் குடிநீர் தட்டுப்பாடு. 2018 ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்க நகரம் கேப்டவுனில் ஜீரோ டே (ZERO DAY) கடைபிடிக்கப்பட்டதே அதைப்போல உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள மொத்த நீர்வளம் 2050-ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்ற உலக வங்கியின் எச்சரிக்கையை கோடிட்டுக் காட்டி நம்மை சிந்திக்க வைக்கிறது இந்நூல்.

இன்னும் “காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச ஒப்பந்தங்கள்”, மரங்களை நடுவதால் காலநிலைப் பேரிடர்களைத் தடுக்க முடியுமா? அளவுக்கதிகமாக வெப்சீரியஸ் பார்த்தால் காலநிலைக்கு ஆபத்தா? CARBON FOOTPRINT என்றால் என்ன? நிலக்கரி, பெட்ரோல், டீசலைத் தடை செய்தால் காலநிலை மாற்றம் தடுக்கப்படுமா? காலநிலை மாற்றத்தைத் தடுக்க கற்கால வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமா? என பல்வேறு தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் காலநிலை மாற்றம் குறித்த அறிவியல்பூர்வமான புரிதலை ஏற்படுத்துகின்றன.

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்வைக்கிறதா இந்நூல்?

காலநிலைத் தீர்வுகளின் சில முக்கிய அம்சங்களை இந்நூல் பேசுகிறது. தனிநபர் தீர்வுகள், தனிநபர் உந்துதலால் சுற்றமும் நண்பர்களும் தீர்வு செயல்பாடுகளில் இணைந்துகொள்ளுதல், சமூகமாக முன்னெடுக்கப்படும் தீர்வுகள், அரசு அளவிலான தீர்வுகள், சர்வதேச அளவிலான தீர்வுகள் என பல கோணங்களில் தீர்வுகளை அணுக வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது இந்நூல்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலும் அரசு அளவிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் முக்கியமானவையாகவும் முதன்மையானவையாகவும் இருக்கின்றன என்கிறது இந்நூல்.

காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தான் என்பதை நிறுவுகிறது இந்நூல். வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, ஏழை நாடுகள் நூறில் ஒருபங்கு உமிழ்வுகளை மட்டுமே வெளியிடுகின்றன; ஆனால் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையப் போவது ஏழை நாடுகள் தான் என்பதையும் பேசுகிறது இந்நூல்.

‘காலநிலை மாற்றம் எல்லாம் வெறும் புனைவு; அது ஒரு பேய்க்கதை’ என்பன போன்ற கருத்துக்களைப் பரப்ப பெருநிறுவனங்கள் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுப்பதை அடையாளம் காட்டுகிறது இந்நூல். ஏனெனில் 1988 முதல் வெளியிடப்பட்ட கரிம உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 71% உமிழ்வுகளுக்கு வெறும் 100 பெருநிறுவனங்களே காரணமாம்.

கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன என்கிற தகவலையும் முன்வைக்கிறது இந்நூல்.


படிக்க: நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!


முதலாளித்துவ அரசுகள் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்னெடுக்குமா என்பதை இந்நூல் வலுவாக முன்வைக்கவில்லை.

இன்றைய அரசுகளைப் பொறுத்தவரையில் அனைத்து நாடுகளின் அரசுகளும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

உதாரணமாக இந்தியாவில் இவ்வளவு பேரிடர்களுக்கு மத்தியிலும் கார்பரேட் பகாசுர கம்பெனிகளின் பேரழிவுத் திட்டங்களுக்காக, கார்பரேட் கம்பெனிகள் இயற்கை வளங்களை சூறையாட ஏதுவாக ”சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” ”உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா-2021” ”வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023” உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பிரேசிலை எடுத்துக்கொண்டால், உலகின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காடுகளை அழித்து பெருநிறுவனங்களுக்கு வனத்தை திறந்துவிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பிரேசில் முன்னாள் அதிபர் பொல்சனரோ மேற்கொண்டதைப் பார்த்தோம்.

இப்படி பூமியே அழிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனது எஜமானர்களான கார்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக இயற்கை வளங்களை சூறையாடுவதை இலக்காகக் கொண்டு வேலை செய்து வருகின்றன அரசுகள் என்ற நிதர்சன உண்மையை புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

அந்த அரசுகள் ஒருபோதும் காலநிலை மாற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்னெடுக்கப்போவதில்லை. பல்வேறு பேரழிவுத் திட்டங்களால் பாதிக்கப்படும் உழைக்கின்ற மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் இந்த பூமிப்பந்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த முதலாளித்துவ அரசுகளை நோக்கி நமது கரங்களை உயர்த்த வேண்டியிருக்கிறது. அந்தவகையில் உலக அளவில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி நடைபெறும் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டங்கள் நம்பிக்கையளிக்கின்றன என்பதை பகிர்கிறது இந்நூல்.

சமூக மாற்றத்தை விரும்பும், இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றம் குறித்து படித்து விவாதிப்பதோடு மட்டுமல்லாமல் களச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.

அதனால் தான் இந்நூல் கீழ்கண்ட வார்த்தைகளோடு முடிவடைகிறது. ”இந்த நூல் மட்டுமே முடிவடைந்திருக்கிறது, செயல்பாடுகள் இல்லாவிட்டால் ஊழிக்காலம் தொடரும்” வாருங்கள் நம் பூமிப்பந்தைக் காக்க செயல்பாடுகளில் இறங்குவோம்.


நூலின் பெயர்: ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்)

ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன்

விலை: ₹ 170

பதிப்பகம்: Nomad fairy tales and Hope Emoji Publications

 


 


அஜய்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இளையராஜா | கம்யூனிசம் முதல் மோடி வரை

இளையராஜா |கம்யூனிசம் முதல் மோடி வரை

https://youtu.be/WT61S5f1_MU


காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? | சிறுநூல் அறிமுக உரை | தோழர் குருசாமி

பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி?
| சிறுநூல் அறிமுக உரை | தோழர் குருசாமி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்!
கோவையில் அதிகரித்து வரும் பி.ஜே.பி குண்டர்படையின் அடாவடித்தனம்!

கோவை மக்கள் அதிகாரம் கண்டனம்!

29.03.2024

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் நேசனல் ஜனசக்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் “NO MODI, NO GUARANTEE” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த, சுவரொட்டியில் பாசிச மோடி மற்றும் பி.ஜே.பி-க்கு எதிராகவும், இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றும் எழுதப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு (27-03-2024), அக்கட்சியின் தலைவரான ரஹ்மான் கே மூப்பனார் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்த போது, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பியின் குண்டர்படையினர் அவரை சுற்றிவளைத்து மிரட்டியுள்ளனர். மேலும், சுவரொட்டி ஒட்ட வைத்திருந்தப் பசையை அவர் மீது ஊற்றியும், “யாரு டா நீ தீவிரவாதியா உன்ன எவன்டா போஸ்டர் ஒட்டச் சொன்னது அவன இங்க வர சொல்லு இல்ல உனக்கு அவ்வளவு தான்” என்றும் மிரட்டினர், அவர்தான் அக்கட்சியின் தலைவர் என்று கூறியுள்ளார். எனினும், அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட பி.ஜே.பி குண்டர்படையினர் அவரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதோடு, பி.ஜே.பி குண்டர்படையினர் ஒருவர் பின் ஒருவராக வந்து மிரட்டுவதும் தாக்குவதுமாக நடந்து கொண்டனர். பின்னர், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


படிக்க: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்


எந்தவொரு கட்சியையும் விமர்சித்து சுவரொட்டி ஒட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமையுண்டு. எனினும், தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பின் ஒருவர் சுவரொட்டி ஒட்டுவது சாதாரணமான நிகழ்வு தான். ஆனால், கோவையிலுள்ள பி.ஜே.பி குண்டர்படையினர் மோடிக்கும், பி.ஜே.பிக்கும் எதிராக ஏதேனும் சுவரொட்டி இருந்தால் கிழிப்பது, சுவரெழுத்தை அழிப்பது, ஒட்டுபவரை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாசிச பி.ஜே.பி கும்பலுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

கோவையில், இனிவரும் காலங்களில் மோடிக்கு எதிராக பொதுவெளியில் பேசவும், பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முயற்சித்து வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி குண்டர்படையினருக்கு எதிரான களப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சுவரொட்டி ஒட்டிய நபரை மனிதாபிமானமற்ற நடத்தியதோடு தாக்குதல் நடத்திய பி.ஜே.பி குண்டர்படையின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு இச்சம்பவத்தை விசாரணை செய்து, உடனடியாக பி.ஜே.பி குண்டர்படையினரை கைது செய்ய வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் இனிவரும் காலங்களில் உத்தரப்பிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற நிலை கோவைக்கும் வர நேரிடும்.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு!
பாசிச பாஜகவின் கருவியே தேர்தல் ஆணையம்!

மக்கள் அதிகாரம் கண்டனம்

27.03.2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே போட்டியிட்ட சின்னங்களை மீண்டும் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பம்பரம் சின்னத்தை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் வழங்க முடியும் என்று கூறியது.

பானை சின்னத்தை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியானது தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகள் உட்பட ஏறத்தாழ 6 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்காமல் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ஆனால் பாசிச பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கு மட்டும் தனிச்சின்னத்தை வாரி வழங்குகிறது தேர்தல் ஆணையம்.


படிக்க: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்


வாசன் தலைமையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி மேற்கூறிய மூன்று கட்சிகள் வாங்கிய அளவில் ஓட்டில் குறிப்பிட்ட பங்கைக் கூட வாங்கவில்லை. எனினும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே 1996 இல் வழங்கப்பட்ட அதே சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ஆக பாசிச பாஜகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு மட்டும் தான் தேர்தல் ஆணையம் தனிச் சின்னத்தை ஒதுக்கும் என்ற இழிவான நிலையை ‘தேர்தல் ஜனநாயகம்’ எட்டியுள்ளது.

கடந்த வருடம் ஏதேதோ சில காரணங்களை கூறி சுமார் 540-க்கும் மேற்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். சிறிய கட்சிகளை ஒழித்துக் கட்டி பெரிய கட்சிகள், கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்துமா?

பாசிச பாஜகவின் கருவியான தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. விசிக, மதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தொடர்புடைய பிரச்சினை அல்ல என்றும் இது மக்களின் தெரிவு செய்வதற்கான ஜனநாயகம் தொடர்பான பிரச்சனை என உணர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!

டந்த மார்ச் 18 அன்று, காசாவின் வடக்கு பகுதியான அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலைத் தொடங்கியது பாசிச இஸ்ரேல் ராணுவம். அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் தஞ்சமடைந்திருந்த மக்கள், முதலுதவியாளர்கள் மீது விவரிக்க இயலாத வகையில் கடுமையான தாக்குதலையும், சித்திரவதைகளையும் செய்து வருகிறது பாசிச இஸ்ரேல். சுற்றியுள்ள குடியிருப்புகளையும் காலி செய்ய நிர்ப்பந்தித்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

மருத்துவ வளாகத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய இராணுவப் படையினர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்து வருகின்றனர். இத்தாக்குதலை நேரில் கண்ட பெண்ணான ஜமீலா அல்-ஹிசி கூறுகையில் “பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பசி, பட்டினி, சித்திரவதை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை கொடுக்கப்படுகிறது” என்கிறார்.

மேலும், சித்திரவதைக்குள்ளான ஒருவர் கூறுகையில் “எங்களுக்கு ஆறு நாட்களாக உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்காவது தண்ணீர் வழங்க கேட்கிறோம். ஆனால் இஸ்ரேல் இராணுவம், அழுக்கு நீரையும், அழுகிய உணவையும் சாப்பிட கட்டாயப்படுத்துகிறது” என்று கூறுகிறார்.

இஸ்ரேல் இராணுவம் மருத்துவ வளாகத்தை சுற்றியுள்ள 65 குடும்பங்களை வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவ வளாகத்தை சுற்றியுள்ள பல வீடுகளை எரித்தும், குடும்பங்களை படுகொலை செய்தும், அந்த இடத்தை விட்டு துரத்தியடித்தும் வருகிறது. இதனை வேதனையோடு கூறிய ஒருவர்  “எங்கள் வீடுகளை அழித்துவிட்டு துரத்துகிறீர்கள், எங்களது உணவு பசியைப் போக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நாங்கள் எங்கே செல்வதன்று தெரியவில்லை” என்கிறார்.


படிக்க: காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!


இதுவரை, அல்-ஷிஃபா மருத்துவமனையில் உதவியாளர்கள், நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் என 140 பேருக்கு மரணதண்டனையை நிறைவேறியுள்ளதாக இஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்கிற காரணத்தை கூறிக்கொண்டு அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக துன்புறுத்தி இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றனர். மருத்துவமனையை சுற்றியுள்ளப் பகுதிகளை பார்க்கும் போது முற்றிலுமாக அழிந்தது போல் காட்சியளிக்கின்றன.

மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது  இஸ்ரேல் இராணுவம். அதற்கு பல மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர்களை சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றும் வருகின்றனர். அவ்வாறு மறுப்பு தெரிவித்ததற்காக, மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது மருத்துவர் முகமது ஜாஹிர் அல்-நோனோவை நோயாளி முன்பே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

போரினால் இடம்பெயர்ந்து, மருத்துவமனையை சுற்றி 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களை தெற்கு காசாவை நோக்கி கட்டாயப்படுத்தி துரத்தியடித்து வருகிறது இஸ்ரேல் இராணுவம். ஆனால், அங்குள்ள மக்கள் தங்களுக்கு நடந்து செல்லக் கூட உடம்பில் தெம்பில்லை எனக் கூறுகின்றனர். மேலும், “நாங்கள் சோர்வாகவும், பசியிலும், பணம் எதுவும் இல்லாமலும் இருக்கிறோம். எங்கும் எங்களால் செல்ல முடியாது. தயவு செய்து இந்த போரை யாராவது நிறுத்துங்கள்” என்று அங்குள்ள பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறுகையில் “ஷிஃபா மற்றும் போரினால் இடம்பெயர்ந்த மக்களை பார்க்க உலகை அழைக்கிறேன். அங்கே யாரும் இல்லை, எல்லோரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்” என்கிறார். மேலும், அவர் கூறுகையில் ”குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களுக்கு முன்னால் தூக்கிலிடப்படுகிறார்கள். அவர்களின் உடன்பிறப்புகள் மற்றும் தாய்மார்களுக்கு முன்னால் வெளிப்படையாக மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது” என்கிறார்.


படிக்க: காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!


மருத்துவமனைக்கு அருகாமை வீட்டிலிருந்து தப்பிய முதியவர் கூறுகையில் “நாங்கள் மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் வசிக்கிறோம். நாங்கள் பார்த்ததும், கேட்டதும் துப்பாக்கி சூடும் குண்டு மழையும் தான்” என்கிறார். மேலும், இராணுவப் படையினர் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளின் கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்து நாயை ஏவி மக்களை துன்புறுத்தி வருவதாக அவர் கூறுகிறார்.

துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில் “இராணுவத்தினர் நாயை என் கணவர் மீது கடிக்க விட்டனர். அவரது மார்பு, வயிறு மற்றும் அவரது காலை மோசமாக கடித்து, அவரை முழுவதுமாக கடித்துக் குதறியது. இதனால் அதிகமான இரத்தம் வெளியேறியது. ஒரு கிலோவுக்கும் அதிகமான இரத்தத்தை இழந்தார்”. இஸ்ரேல் இராணுவப் படையினரின் அட்டூழியங்களை எவராலும் சகிக்க முடியாதவையாக இருந்து வருகின்றன.

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களையும் புல்டோசர்களால் இடித்தும், மீண்டும் அங்கே வர இயலாதபடி தீ வைத்து எரித்தும் வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

மருத்துவமனையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்து வருவதை பல நாடுகளும், அமைப்புகளும் கண்டித்தாலும் இனவெறிபிடித்த நெதன்யாகு போரை நிறுத்த முன்வருவதில்லை. தொடர்ச்சியாக, ரஃபா எல்லை பகுதியைத் தாக்கி அழிக்க முனைப்புக் காட்டி வருகிறார். ரஃபா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது இஸ்ரேல். இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் மிக அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர்.


படிக்க: காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு


மார்ச் 23 அன்று ரஃபா எல்லையை பார்வையிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ போர் நிறுத்தத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் கூறுகையில் “7,000 உதவி ட்ரக்குகள் காசாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேலின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. பாலஸ்தீனியர்கள் பட்டினியில் வாடி வருகின்றனர். இது, தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை” என அறிவித்துள்ளார். உலக சுகாதர அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் கூறுகையில், “நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்கிறார்.

இன்று மனிதாபிமானம் காப்பாற்றப்பட வேண்டும் என கூறிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் ஜோ பைடனையும் நெதன்யாகுவையும் போர் குற்றவாளியாக அறிவிக்க தயங்குகின்றனர். மார்ச் 25 அன்று ”உடனடி போர் நிறுத்தம்” செய்யப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேல் இனப்படுகொலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது; ஐ.நா-வும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. போரை துவங்கியதிலிருந்தே சிறுசிறு கண்டனங்களை தெரிவித்துவிட்டு வேடிக்கை பார்த்த அமெரிக்க அடிவருடிகளான இவர்களா உலக மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பினர், கண்டிப்பாக இல்லை. ஏகாதிபத்தியங்களின் கொள்ளை லாப வெறிக்கு மக்களை பலியிட உதவுபவர்கள் தான் இவர்கள்.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் பல நாடுகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா இந்த இன அழிப்பு போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. எனவே, இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய கும்பலின் போர்வெறிக்கு எதிராகவும் சர்வதேச உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்தாக வேண்டும்.

செய்தி ஆதாரம்: Countercurrents


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பா.ஜ.க-வை எதிர்க்கிறதா அ.தி.மு.க? | தோழர் மருது

பா.ஜ.க-வை எதிர்க்கிறதா அ.தி.மு.க? | தோழர் மருது

https://youtu.be/2OiVrFWACtw

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



JNU பல்கலைக்கழக தேர்தல்: வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் | தோழர் தீரன்

JNU பல்கலைக்கழக தேர்தல்:
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் | தோழர் தீரன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழ்நாடு மீனவர்கள் கைது: தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம்

டந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 32 பேர் 5 விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, சுமார் 60 மீனவர்கள் இலங்கை சிறையில் தவித்துவரும் நிலையில், கடந்த ஓரிரு வாரங்களில் 4 முறை வெவ்வேறு இடங்களில் மேலும் பல தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது போல தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் சுமார் அரை நூற்றாண்டு காலமாக தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். மார்ச் 26-ஆம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்துவது எனவும், ஏப்ரல் 8-ஆம் தேதி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ராமேஸ்வரம் தாசில்தாரிடம் ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்வது எனவும் முடிவு செய்து இருந்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்காலிகமாக இப்போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் மீனவர்கள் என அறிவித்துள்ளனர்.


படிக்க: நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!


இதற்கிடையே, தமிழ்நாடு மீனவர்களின் கைதுக்கு இலங்கைக் கடற்படையும் இந்திய ஊடகங்களும் சொல்லும் ஒற்றைக் காரணம், “தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர்” என்பதுதான். இதே பல்லவியை இந்திய மைய ஊடகங்களும் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த பிரச்சாரத்திற்கு பலியான இலங்கைத் தமிழ் மீனவர்கள் சிலர், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகவும், இழுவைமடி வலைகளைப் பயன்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுத்து நிறுத்த இலங்கை அரசு எந்த முயற்சியும் செய்வதில்லை என்று கூறி இலங்கை அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கின்றனர் என்பதே அப்பட்டமான பொய் பிரச்சாரமாகும்.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கின்றனரா?

1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக் நீரிணைப்பு வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அவ்வுடன்படிக்கையில் உள்ள 5-வது, 6-வது சரத்துகள், கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றன.

உடன்படிக்கையின் சரத்து 5, “மேற்குறிப்பிட்டவற்றுக்கு உட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெற வேண்டுமென தேவைப்படுத்த முடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனையும் விதிக்க முடியாது” என்கிறது. சரத்து 6, “இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்” என்கிறது.

இவ்வாறு இரு நாடுகளிடையே கடல் பரப்பு எல்லைகள் வரையறுக்கப்பட்ட போதும், இருநாட்டு மீனவர்களும் தங்களது பாரம்பரிய உரிமையைக் கச்சத்தீவு பகுதியிலும் இருநாடுகளின் கடற்பரப்பிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அவ்வுடன்படிக்கையில் ஏற்கொள்ளப்பட்ட அம்சங்களாகும். ஆனால் 1983-க்கு பிறகு தமிழ்நாடு மீனவர்கள் மீது படிப்படியாக அதிகரித்த இலங்கை கடற்படையின் அட்டகாசம் 1990-களில் தீவிரமடைந்தது. ஆண்டொன்றுக்கு சராசரியாக ஐம்பது தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

இதுவரை காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என கணக்கெடுத்தால், அந்த எண்ணிக்கை பல நூறு பேரைத் தாண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள். நிரந்தரமாக உடலுறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கையோ இதைவிட பல மடங்கு அதிகம் என்கிறார்கள்.

எனவே கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களின் உயிர்வாழ்தலுக்கான பிரதேசம் என்பதோடு, அங்கு தமிழ், சிங்கள மீனவர்களின் சுதந்திரமான உழைப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இலங்கைக் கடற்படை மேற்கண்ட ஒப்பந்தத்தை மீறி தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்தும் தாக்கியும் வருகிறது.

ஏன் இந்திய அரசு கண்டுகொள்ள மறுக்கிறது?

மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. அரசானது மீனவர்களை, மீன்பிடித் தொழிலிருந்தும் கடல்பரப்பிலிருந்தும் வெளியேற்றும் வகையில் சாகர் மாலா திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தும், இந்திய கடல் மீன் வளச் சட்டம் 2021, இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 என அடுத்தடுத்த புதிய சட்டங்களை நிறைவேற்றியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மூன்று விவசாயச் சட்டங்களின் வாயிலாக விவசாயத்தை முழுக்க கார்ப்பரேட் பகாசுர கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல முயற்சி செய்ததைப் போல, கடல்சார் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் மீன்பிடித் தொழிலை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்ப்பது; கடற்பரப்பை கார்ப்பரேட் பகாசுரக் கம்பெனிகளின் கனிமவளக் கொள்ளைக்கும் சுற்றுலா கேளிக்கை விடுதிகளுக்கும் திறந்துவிடுவது என்ற நாசகர திட்டம் தீட்டி காத்திருக்கிறது பாசிச மோடி அரசு.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒக்கி புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்படும்போது கூட எந்தவித உதவிகளையும் செய்யாமல் தனக்கே உரிய பாசிச திமிரோடு நடந்து கொள்வது என்ற திட்டமிட்டு செயல்படுகிறது மோடி அரசு.


படிக்க: மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !


இயற்கைச் சீற்றங்கள் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியாமல், மீன்பிடித் தொழிலை விட்டு மீனவர்கள் தாமாகவே வெளியேற வேண்டும் என்று பாசிச மோடி அரசு பிணந்தின்னிக் கழுகு போலக் காத்திருக்கிறது. அதற்கேற்ப சரியான தருணங்களைப் பயன்படுத்தி மீனவர்களை வஞ்சித்து வருகிறது.

மாநிலத்தை ஆண்ட, ஆளும் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளுக்கும் கார்ப்பரேட் நலனே கொள்கையாக உள்ளது. எனவே மீனவர்கள் பாதிக்கப்படும்போது அறிக்கை விடுவது கடிதம் எழுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடுகிறது. கடந்த மார்ச் 10-ஆம் தேதி 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டபோதும் கூட ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு முதல்வர் ஸ்டாலின் அவரது வேலையை முடித்துக் கொண்டார்.

களப் போராட்டங்களே மீனவர்களைக் காக்கும்

அரசுகள் நடைமுறைப்படுத்தும் கார்ப்பரேட் நலத் திட்டங்களால் பாதிக்கப்படும் மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் என அனைவரும் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க அமைப்பாகிப் போராடுவது மட்டுமே தீர்வாக அமையும்.

வீரம்செறிந்த விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இதற்கான சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அப்போராட்டம்தான் மூன்று விவசாயச் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைத்தது. இப்போது, “உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறு” என்ற முழக்கத்தோடு இரண்டாம்கட்டப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்தத் தேர்தல் சமயத்தில் டெல்லி விவசாயிகளின் பாதையில், மீனவர்கள் அமைப்பாவதும் தன் வாழ்வுரிமையைக் காக்கப் போராடுவதும்தான் இந்திய அரசைப் பணியவைக்கும். பிற கட்சிகளையும் இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்த வைக்கும்.


முகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube