சரியாக ஓராண்டுக்கு முன்பு 25 ஆயிரம் ஊழியர்களை, தொழிலாளர் சட்டங்கள் எதையும் மதிக்காமல், சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்தது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டி.சி.எஸ் மென்பொருள் நிறுவனம். பல்லாயிரம் கோடியை ஊழியர்களின் கடுமையான உழைப்பின் மூலம் சுரண்டிக் கொழுத்த டி.சி.எஸ், அரசிடம் இருந்து அடிமாட்டு விலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நிலத்தையும் கோடிக்கணக்கில் வரி விலக்குகளையும் மலிவு விலையில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளையும் பெற்றுக் கொண்டு அரசின் சட்டங்களை மயிருக்கு சமமாகக் கருதிக் கொண்டு கொத்தாக 25 ஆயிரம் ஊழியர்களை வீதியில் தள்ளியது.
இந்த கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு டி.சி.எஸ்-ன் அடாவடியைக் கண்டித்து தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அனைத்து ஐ.டி. ஊழியர்களையும் அமைப்பாகத் திரட்ட தீவிர முயற்சி செய்து இந்தியாவின் முதல் ஐ.டி. ஊழியர்கள் சங்கத்தை உருவாக்கியது. இந்த சங்கத்தின் மூலம் டி.சி.எஸ் உள்ளிட்ட தமிழகத்தில் செயல்படும் ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் குறிப்பாக தொழில் தாவா சட்டம் 1947 பொருந்தும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் அரசு உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவினை ஓராண்டாக நடைமுறைக்கு கொண்டுவரவில்லை தமிழக அரசு. பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் சங்கத்தின் விடாப்பிடியான போராட்டம், நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு இவற்றின் விளைவாக டி சி எஸ் தனது வேலை நீக்க உத்தரவுகளை நிறுத்திக் கொண்டது.
டி.சி.எஸ் செய்த வேலை நீக்கமாவது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. ஆனால் சென்ற மே மாதம் சிண்டெல் நிறுவனமோ வேலை நீக்கத்தை செய்தியாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் ஊழியர்களையே மிரட்டி பணிவிலகல் கடிதம் பெற்றுக் கொண்டு சட்டப்படி பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டது. ஆனால் இந்த நயவஞ்சகமான வேலைப் பறிப்பினை அம்பலப்படுத்திய பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர் சங்கம், பாதிக்கப்பட்ட ஊழியர்களை சட்ட பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க உதவி செய்தது. இதை அடுத்து சிண்டெல் தனது ஆட்குறைப்பை நிறுத்திவைத்தது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வெஸ்டாஸ் நிறுவனம்
இப்போது சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் டென்மார்க் நாட்டை சேர்ந்த வெஸ்டாஸ் என்ற நிறுவனம் தனது ஊழியர்களில் பத்துப் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
டி.சி.எஸ் மற்றும் சிண்டெல் நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு ஊழியர்களின் பணித்தரம் சரியில்லை எனப் பொய்யாகவாவது காரணம் கூறின.
ஆனால் வெஸ்டாஸ் கூறியுள்ள காரணமோ எவ்வித நியாயத்துக்குள்ளும் அடங்காது. ஆம், உங்கள் பணித் திறனுக்கு எங்களால் வேலை தர இயலாது எனக் காரணம் காட்டியுள்ளது. இதே ஊழியர்களின் திறன்களைத்தான் வெஸ்டாஸ் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்திப் பல கோடிகளை லாபமாக ஈட்டியிருந்தது. வெஸ்டாஸ் மட்டுமல்ல பன்னாட்டு, தரகு கார்ப்பரேட்கள் அனைத்தும் தங்களது லாபத்தில் துளியளவு குறையும் அறிகுறி தெரிந்தாலே உடனே ஊழியர்களைக் குறைப்பதைத்தான் செய்கின்றன. ஆட்குறைப்பு சம்பந்தப்பட்ட எந்த சட்டங்களையும் பின்பற்றுவதில்லை. இவர்களின் சட்டவிரோத ஆட்குறைப்புக்கு பக்கபலமாக இருப்பது அரசின் தொழிலாளர் துறைதான்.
மோடி அரசு பதவிக்கு வந்தபின் பெயரளவுக்காவது இருந்த தொழிலாளர் சட்டங்களை ஒழித்து விட தீவிரமாக வேலை செய்து வருகிறது.
வெஸ்டாஸ் மட்டுமல்ல தகவலே வெளிவராமல் பல கார்ப்பரேட் கம்பெனிகளில் கொத்து கொத்தாக ஐ.டி. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். உலகெங்கும் 30 சதவீத ஐ.டி. ஊழியர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் உள்ளன பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள்.
நாம் என்ன செய்யப் போகிறோம்? வேலை உரிமையை எவ்வாறு காப்பது? பற்றி எரியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர்கள் பிரிவு அறை கூட்டம் நடத்த உள்ளது. அனைவரும் வாருங்கள்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஐ.டி ஊழியர் பிரிவு
combatlayoff@gmail.com தொடர்பு கொள்ள 9003198576
Dear IT friends,
None of us have forgotten the audacious move by TCS last year to layoff 25,000 employees. Many in the IT industry were angered by that unjust and inhuman action. We organized ourselves as a trade union and protested strongly against those mass dismissals by TCS. NDLF IT Employees wing approached Madras High Court and obtained an order calling for enforcement of Labour laws in all IT companies. Due to our combined efforts and nationwide opposition TCS was forced to put the layoffs on hold.
Even when the wounds of TCS layoff were fresh in our minds, another corporate behemoth SYNTEL resorted to still more diabolical measures to dismiss 3,000 of its employees. The sacked employees were humiliated and asked to leave the premises within 15 minutes of handing over all company property in their possession. Moreover, Syntel tried hard to keep this news under wraps. But, NDLF IT Wing took the issue nationally and provided legal help to affected employees in Chennai, Pune and Mumbai. Alarmed by this development, Syntel aborted its layoff move.
The latest to join this bandwagon is Vestas, an ITES multinational from Denmark. On January 5 this year, Vestas dismissed 10 employees. While TCS and Syntel cited alleged lack of performance as reason for illegal layoff of their employees, Vestas is more arrogant, saying that the sacked employees have “extra-ordinary” skills and hence can not be employed.
Not many in IT/ITES industry know about this dismissal of Vestas employees. Not only in Vestas, many other companies are sending out hundreds or thousands of employees with short notice. Multinational and Indian corporates operating in India refuse to comply with labour laws and terminate services of employees for maximizing profits.
Still worse is to come. Globally, IT employers plan to make 30% of employees redundant in 2016. How are we going to face all these? How to put an end to Layoff and Forced Resignations?
Do take part in the special hall meeting to discuss all these in detail and share your views.
New Democratic Labour Front, IT Employees Wing
combatlayoff@gmail.com
Call – 9003198576
1. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பி கும்பலை நாட்டை விட்டு துரத்தியடிப்போம்! – சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்.
ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோகித்தை போன்று இன்னொரு மாணவரை இழக்கக்கூடாது என்றால் ஆ.எஸ்.எஸ் பார்ப்பன பயங்கரவாத கும்பலை நாட்டு விட்டு விரட்டியடிக்கவேண்டும் என பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் மாணவர் தற்கொலையை கண்டித்து இன்று பகல் 12 மணி அளவில் சென்னை அண்ணாசாலை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டனர் பு.மா.இ.மு.வினர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், திரளான ஊடக நண்பர்களும் திரண்டு பரபரப்பான அண்ணா சாலைக்கு மேலும் பரபப்பூட்டியிருந்தனர். இந்நிலையில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் முழக்கமிட்டவாறே வந்த பு.மா.இ.மு.வினரை கண்ணும் கருத்துமாக காத்து போராட்ட இடத்திற்கு அழைத்துவந்தது போலீசு. வழக்கம்போல் போராட்டம் பெரிய அளவில் வெடித்து சிதறிவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கும்பலுக்கெதிரான ஆவேசமான முழக்கங்களால் அண்ணா சாலை அதிர்ந்தது. தொடர்ச்சியாக சுற்றியிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் பு.மா.இ.மு.வினர் பிரச்சார நோட்டிசை வினியோகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர் கணேசன், “தலித் மாணவர் ரோகித் வெமுலா ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பி காலிகளால் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, டார்ச்சர் செய்யப்பட்டுதான் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தற்கொலை அல்ல, இது திட்டமிட்ட படுகொலை என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் அந்த பல்கலைகழகத்தினுடைய துணைவேந்தரான அப்பாராவ், மத்திய இணை அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிரிதி ராணி. இவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்துதான் அம்பேத்கர் பெயரில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் அமைப்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தொடர்ந்து சித்திரவதைகள் செய்து அவர்களுடைய உரிமைகளை மறுத்து தற்கொலைக்கு தள்ளியிருக்கிறார்கள். இதனால்தான் நாங்கள் இதை திட்டமிட்ட படுகொலை என்கிறோம்.
இதற்கு நாடு முழுக்க கண்டனம் தெரிவித்து ரோகித்தின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது. இதற்கு சரியான தீர்வை இந்த் போலிசும், நீதிமன்றமும் வழங்கமுடியாது என்று நாங்கள் கருதுகின்றோம். ஏனெனில் ஹைதரபாத் பல்கலைகழகத்தில் மட்டும் இதுவரை 18 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.யில் APSC அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டது. அதற்கு முன்னால் ஏறக்குறைய 25 மாணவர்கள் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் தடை நீங்கியதற்கு காரணம் பத்திரிக்கை நண்பர்களும், எங்களை போன்ற புரட்சிகர அமைப்புகளும் பல்வேறு ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் போராடியதன் விளைவே அங்கு தடை நீங்கியது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி தற்காலிகமாக பின்வாங்கியது. ஹைதராபாத்தில் அப்படியொரு நிலை இல்லாததால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாணவர் ரோகித்தை படுகொலை செய்துள்ளது. இன்றைக்கு கல்லூரி மாணவர்களை திரட்டவிடாமல் போலீசார் இன்னொரு ரோகித்தை உருவாக்கும் வகையில் மாணவர்களை வெளியில் விட அனுமதிக்கவில்லை. பிறகெப்படி மாணவர்களுக்கு நீதி கிடைக்கும்? இதை முறியடிக்க தமிழகம் முழுதும் RSYF தொடர்ந்து போராடும். இன்னொரு ரோகித்தை இழக்கக்கூடாது என்றால் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பல் இந்தியாவில் இருக்கக்கூடாது. அதனை வேரறுப்போம்” என பேசினார்.
மேலும் பகிரங்கமாக, “ஆர்.எஸ்.எஸ் பர்ப்பன பயங்கரவாத கும்பலின் முதன்மை எதிரி எங்களை போன்ற புரட்சிகர அமைப்புகளும், கம்யூனிஸ்டு, கடவுள் எதிர்ப்பு அமைப்புகளும்தான்” என தெரிவித்தார். தோழர்கள் எழுப்பிய தொடர்ச்சியான முழக்கங்களுக்கிடையே சுமார் 40க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.
முழக்கங்கள்:
தற்கொலையல்ல! தற்கொலையல்ல!
ரோகித் மரணம் தற்கொலையல்ல!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி
ஏ.பி.வி.பி கும்பலின்
திட்டமிட்ட படுகொலையே!
2. விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பு.மா.இ.மு கண்டன பிரச்சாரம்
ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை
மாணவர் தற்கொலைக்கு காரணமான துணைவேந்தர் அப்பாராவ், மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இராணி உள்ளிட்டவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடை!
வட இந்திய மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளில் தலித்துகளின் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் பல மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஹரியானாவைச் சுற்றியுள்ள ஜாட், ரஜபுத், தாக்கூர் சாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சமீப வருடங்களாக தலித்துகளின் மீதான தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கின்றது. ஆகஸ்டு 2014-ம் ஆண்டு தேசிய குற்றப் பதிவுத் துறையின் தரவுகளை, தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு (National Confederation of Dalit Organizations) ஆய்வு செய்திருக்கிறது.
ஆய்வின்படி 1994-2003 காலட்டத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றச் சம்பவங்களை 2004-2013 காலகட்டத்தில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு சுமார் 250 சதவீதம் அதிகரித்திருப்பதை பதிவு செய்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாத நிலவரத்தின் படி, தேசிய குற்றப் பதிவுத் துறையின் (National Crime Records Bureau) தரவுகளின் அடிப்படையில் 2000-மாவது ஆண்டிலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளில் தலித்துகளின் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் ஏழு மடங்காக அதிகரித்துள்ளன. 2000-மாவது ஆண்டில் சுமார் 117 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – இது படிப்படியாக அதிகரித்து, 2014-ம் ஆண்டில் 830 தாக்குதல் சம்பவங்களாக அதிகரித்துள்ளது.
தலித்துகளின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள அதே வேளையில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரங்களும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. சில பத்தாயிரக்கணக்கான இசுலாமியர்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடித்த முசாபர்நகர் கலவரத்தைத் தொடர்ந்து இந்தி பேசும் மாநிலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து அங்கும் இங்குமாக சிறிய அளவிலான கலவரங்கள் மற்றும் தனிநபர் கொலைகள் நடந்து வருகின்றன. இச்சம்பவங்கள் தொடர்வது இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஆழமான ஒரு கசப்புணர்வைத் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்துள்ளது. அதன் உச்சமாக நடந்தது தான் தாத்ரி சம்பவம்.
தலித்துகள் மற்றும் இசுலாமியர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சமீப காலங்களில் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?
பார்ப்பனிய சாதிக் கொழுப்பேறிய வட இந்திய மாநிலங்களில் தலித்துகளின் வாழ்நிலை இன்னமும் மத்திய காலக் கொடுங்கோன்மையை நினைவுபடுத்துகிறது. தலித் ஒடுக்குமுறை என்பது வட இந்திய சமூக உளவியலில் மிக இயல்பான அன்றாட சமூக வாழ்வியல் கூறு. இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி என்பது ஏற்கனவே கிறுக்குப் பிடித்த சாதி மத வெறி பிடித்த இந்துத்துவ குரங்கு, சாராயம் குடித்த நிலையை அடைந்துள்ளது. தலித்துகளின் கோவில் நுழைவு உரிமை, திருமண உரிமை மற்றும் பிற ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தற்போது ஒரு புதிய வேகத்தில் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.
இசுலாமியர்களையும் தலித்துகளையும் குறிவைக்க ஒவ்வொரு காலத்திலும் விதவிதமான பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் இந்துத்துவ அரசியல் தற்போது மாட்டுக்கறி விவகாரத்தை வாளாக ஏந்திச் சுழற்றுகிறது. கல்லறைக்குள் ஆழ்ந்து போன அயோத்தி கோயிலும், பொது சிவில் சட்டமும் உயிர்த்தெழ மறுப்பதால் தற்போதைய இந்துத்துவ அரசியலின் நிகழ்ச்சி நிரலில் கோமாதாவே முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.
சமீப காலமாக மாட்டுக்கறி விவகாரம் அகில இந்திய பார்ப்பன ஊடகங்களின் முக்கியமான பேசு பொருளாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருந்த பீகாரை மையமாக வைத்து இந்த விவாதம் நடத்தப்பட்டது. முதலாளிய மற்றும் பார்ப்பன ஊடகங்கள் இந்த விவாதங்களை தேர்தலை மட்டும் கருப்பொருளாக கொண்டு விவாதித்து வந்த நிலையில், இந்துத்துவ ’கோமாதா’ அரசியலின் நோக்கமோ தேர்தலையும் தாண்டிய நலன்களை தன்னுள் கொண்டிந்தது.
தாத்ரி கொலை குறித்து அகில உலகமும் காறி உமிழ்ந்த போதும் அதைக் குறித்து வாயைத் திறக்க மறுத்து விட்ட நரேந்திர மோடி, மிகச் சரியாக பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதற்கொரு விளக்கத்தை அளித்தார். மேற்படி விளக்கத்தில் கொலைக்கான அடிப்படைக் காரணத்தை ஆதரித்திருந்த மோடி, அதையே தனது பீகார் பிரச்சாரங்களின் முக்கிய கருப்பொருளாக மாற்றினார். தேர்தல் முடிவுகள் காவி பயங்கரவாதிகளின் பகற் கனவில் மண்ணள்ளிப் போட்டு விட்டாலும், இந்துமதவெறியின் ஒடுக்குமுறை முடிவுக்கு வந்ததாக பொருளில்லை.
“தேசத்தை எதிர் கொண்டிருக்கும் இசுலாமிய தீவிரவாதம்” என்கிற பூச்சாண்டியை பதவியேற்று ஒரு வருடத்திற்குப் பின்னும் ஓட்ட முடியாத நிலையில் இந்துத்துவ அரசியல் தேவைகளுக்கு கடந்த நூற்றாண்டில் பெரும் சேவையாற்றிய ராமர் கோயில் பிரச்சினை அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே சற்று பலவீனமடைந்து விழுந்து விட்டது. இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற மோடி, அவரது முதல் இரண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பீகாரிகள் குறித்து உளறிக் கொட்டியதை லாலுவும், நிதிஷ் குமாரும் பீகாரிகளின் தன்மானத்திற்கே விடப்பட்ட சவாலாக முன்வைத்து அசிங்கப்படுத்தினர்.
பிரச்சார கூட்டங்களை மோடியின் அடுக்குமொழி சவடால் வசனங்களாலேயே ஊதித் தள்ளி விடலாம் என்ற மிதப்பிலிருந்த இந்துத்துவ கும்பலுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியமளித்தார் லாலு. தாம் ராகுல் காந்தியைப் போன்ற அமுல் பேபிகள் இல்லை என்பதையும் வாய்வீச்சில் தாங்களும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தான் என்பதையும் லாலுவும் நிதிஷும் முகத்திலறைந்தாற் போல் உணர்த்தினர். இந்தப் பின்னணியில் தான் சொல்லி வைத்தாற் போல் தாத்ரி சம்பவமும் அதைத் தொடர்ந்து பார்ப்பன மற்றும் முதலாளிய பத்திரிகைளில் நடக்கும் “விவாதங்களும்” அரங்கேறின.
தனது முந்தைய பிரச்சாரக் கூட்டமொன்றில் மாட்டுக்கறி தின்றார் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து முகமது அக்லாக்கை இந்துத்துவ கும்பல் அடித்தே கொன்றதைக் கண்டித்துப் பேசிய லாலுபிரசாத் யாதவ், மாட்டுக்கறி இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல சில இந்துக்களுக்கும் கூட உணவு தான் என்று பேசியிருந்தார். இதை அப்படியே மடைமாற்றிய மோடி, நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட யதுகுலத்தவர்கள் மாடு தின்பவர்கள் என்று லாலு பேசியதாக திரித்தார்.
லாலுவின் தலை மயிரிலிருந்து மோடி பிடித்துக் கொடுத்த ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் வேலையை பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் செவ்வனே செய்து முடித்தனர். மத்திய அமைச்சர் கிரிராஜ், ”நித்திஷிடம் மாட்டுக்கறி உள்ளதாம்” என்றும் “யது குலத்தவர்களே… லாலு உங்களைப் பார்த்து துர்க்கா மாதா கோவிலில் மாட்டுக்கறியை வீசச் சொல்கிறார்” என்றும் பேசியிருக்கிறார்.
இசுலாமியர்களை இந்துக்களின் விரோதிகளாக காட்டுவது, அதனடிப்படையில் இந்து ஓட்டுக்களை அறுவடை செய்வது என்கிற இந்துத்துவ அரசியல் தந்திரத்திற்கு பீகார் தேர்தல் முடிவுகள் ஆப்பறைந்துள்ளன. எனினும், மாட்டுக்கறி அரசியலைத் தாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்துத்துவ கும்பல் அடைந்துள்ளது. பீகார் தேர்தல் தோல்விக்கு அப்பால், தமது நச்சுப்பிரச்சாரங்களின் மூலம் வட இந்திய பார்ப்பன இந்துப் பொது புத்தியில் மாட்டின் புனிதத்தை பதிய வைத்துள்ளதோடு, இசுலாமியர்கள் இந்துக்களின் புனித நம்பிக்கைகளுக்கு விரோதமானவர்கள் என்பதையும் பதிவு செய்துள்ளனர்.
கோமாதா அரசியலின் அரசியல் உள்நோக்கம் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் இராம இராஜ்ஜியத்தின் பார்ப்பன கலாச்சார விழுமியங்களை ஒட்டு மொத்த சமூகத்தின் பொதுக்கலாச்சாரமாக நிறுவும் நரித்தனம். இதற்காகவே இந்து மதத்தின் பல்வேறு சாதிப் பிரிவினர் மாட்டுக்கறி தின்பவர்கள் என்பதை மறைக்கிறார்கள். இன்றும் சில பகுதிகளில் இந்துக்கள் மாட்டை கோயிலில் பலியிட்டு விருந்துண்கிறார்கள் . மட்டுமின்றி மாட்டுக்கறி கசாப்புத் தொழிலில் பல்வேறு ’உயர்சாதி’ பனியா முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது பற்றியும் இந்துத்துவ கும்பல் வாய்திறக்க மறுக்கிறது.
அமெரிக்க விவசாயத் துறை நடத்திய ஆய்வு ஒன்றிபடி, 2012-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மாட்டுக்கறி உற்பத்தி 36.43 லட்சம் டன்கள். இதில் 19.63 லட்சம் டன்களை இந்தியர்களே உட்கொள்கின்றனர். இந்தியா உலகிலேயே ஐந்தாவது பெரிய மாட்டுக்கறி உற்பத்தி செய்யும் நாடு என்பதோடு, உலகின் மாட்டுக்கறி உட்கொள்ளும் அளவைப் பொறுத்தவரை உலகில் 7-வது இடத்திலும் இருக்கிறோம். மேலும் மாட்டுக்கறி ஏற்றுமதியைப் பொறுத்த வரை இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்று.
ஃபிக்கி (Federation of Indian Chambers of Commerce and Industry) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலம் ஒன்றிலிருந்து 2001-2002 காலகட்டத்தில் 20,600 டன்களாக இருந்த மாட்டுக்கறி ஏற்றுமதி பத்தே ஆண்டுகளில் இரண்டு மடங்காகி 2010-2011 காலகட்டத்தில் 22,000 டன்களாக உயர்ந்துள்ளது. இந்த இமாலய சாதனையைப் புரிந்த மாநிலம் குஜராத் – அதுவும் கோமாதாவின் புதல்வன் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
மாட்டுக்கறி வெட்டும் கூடங்கள் அதிகமிருக்கும் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத்தில் மட்டும் சுமார் 39 மாடு வெட்டும் கூடங்களில் நாளொன்றுக்கு சுமார் 1000 கோமாதாக்கள் கொல்லப்படுகின்றன. இதே காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த மாட்டுக்கறி உற்பத்தி 18,59,430 டன்களில் இருந்து 48,69,000 டன்களாக – அதாவது சுமார் 163 சதவீத உயர்வை அடைந்துள்ளது.
புனித கோமாதாவை கூறு கூறாக பிளந்து அவளின் புனிதமான இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முதலாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். முசாபர்நகரில் மாட்டுக்கறியை வைத்து பெரும் கலவரத்தை ஏற்படுத்தியதற்குப் பின் இருந்த மூளையான பாரதிய ஜனதா எம்.எல்.ஏ சங்கீத் சோம், மாட்டுக்கறி ஏற்றுமதியில் சக்கை போடு போட்டு வரும் அல்-துவா மற்றும் அல்-அனாம் என்ற இரண்டு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து கோமாதா கறியை ஏற்றுமதி செய்யும் ஆறு முன்னணி நிறுவனங்களில் நான்கு நிறுவன்ங்கள் (அல்-கபீர், அல்-அரேபியா, எம்.கே.ஆர், பி.எம்.எல்) இந்து முதலாளிகளுடையது. இவை தவிர சிறிதும் பெரிதுமாக மாட்டுக்கறி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்து முதலாளிகளுடைய நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் இசுலாமிய சாயலில் இருக்கின்றன.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் இந்துக் கோயில்களில் மாட்டை பலியிட்டு விருந்து வைப்பது இன்றும் சாதாரணமாக நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் பீற்றிக் கொண்ட உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் கதிமாயி பண்டிகையின் போது மட்டும் சுமார் இரண்டரை லட்சம் மாடுகள் பலியிடப்படுகின்றன. ஆக, மாட்டுக்கறி உணவாக இசுலாமியர்களும் சூத்திர இந்துக்களும் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், அதன் ஏற்றுமதியில் கொள்ளை லாபம் அடிப்பவர்களோ உயர்சாதி இந்துக்கள்.
தேசத்தை பூசிக்கும் கடவுளாகவும், அதன் குறுக்கே ஓடும் நதிகளைப் புண்ணிய தீர்த்தங்களாகவும் பீற்றிக் கொள்ளும் பாரதிய ஜனதா தான் தேசத்தின் பொதுச் சொத்துக்களையும் அதன் ஆறு குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களைத் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் ’மிலேச்ச’ பன்னாட்டுக் கம்பேனிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கிறது. எவற்றையெல்லாம் புனிதம் என்று சொல்லி சிவில் சமூகத்தைப் பிளப்பதற்குப் பயன்படுத்துகிறார்களோ, அவற்றின் புனிதத்தை அவர்களே கெண்டைக்கால் மயிரளவுக்கும் மதிப்பதில்லை.
நேற்று அயோத்தியையும் பொது சிவில் சட்டத்தையும் பற்றிக் கொண்டிருந்தார்கள், இன்று கோமாதாவையும் லவ் ஜிஹாத்தையும் கையிலெடுத்துள்ளார்கள், நாளை புதிதாக வேறொன்றை இறக்குவார்கள் – ஆனால், என்றென்றைக்கும் அவர்கள் எடுக்கும் ஆயுதங்களுக்குப் பலியாகப் போவது உழைக்கும் மக்கள் தான். வளர்ச்சி, முன்னேற்றம், முதலீடு என்கிற ஒப்பனைகளை அவர்கள் எப்போதோ கலைத்து விட்டார்கள், உண்மை நமக்கு எதிரே தான் நிற்கிறது. நாம் உணர்ந்து கொள்வதும் எதிர்வினையாற்றுவம் மட்டும் தான் பாக்கியிருக்கிறது.
நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த திருநாள் கொண்டச்சேரியிலும், மேலத்தெரு, வடக்குத் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இருநூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தாய் திட்டம் போன்ற அரசின் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ள வழுவூர் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிச்சுடுகாடு கூட கிடையாது. மக்கள் வாழும் பகுதியிலிருந்து மூன்றரை கி.மீ தொலைவில் உள்ள மகிமலை ஆற்றில்கரையில்தான் பிணங்களை அடக்கம் செய்ய வேண்டும். காலனி வீட்டின் அகலம் கூட இல்லாத ஆற்றின் கரையில் ஒற்றையடிப் பாதையில் சிறு வாய்க்கால்களைக் கடந்து சென்று பிணங்களை நல்லடக்கம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சேற்றில்தான் நடந்து செல்ல வேண்டும்.
சுடுகாட்டுக்குச் செல்ல ஒற்றையடிப்பாதை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் “அருகாமையில் இடுகாடு வேண்டும். இடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை வேண்டும்” என்று கோரிக்கை வைத்து நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். 2002-ல் வழுவூர் வீரட்டேஸ்வரர், கோயில் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை விலைக்கு வாங்கி ஊராட்சியிடம் கொடுத்த பின்னும் இதுவரை முறையான சாலை அமைக்கப்படவில்லை. ஊருக்கு அருகில் வீரட்டேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான களத்துமேட்டுப் பகுதியில் இடுகாடு வேண்டும் என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்க நாதி இல்லை. பாதைக்காக விலைக்கு வாங்கப்பட்ட இடத்தை ஆதிக்க சாதி நில உடமையாளர்கள் ஆக்ரமித்துப் பயிர்செய்து சிறு வரப்பாக்கியுள்ளனர்.
முதலமைச்சர் ‘அம்மா’வின் அறிவிப்புகளைப் போலவே 2 இலட்சம் ரூபாயில் சாலை என்ற கிரமப்புற மேம்பாட்டு அறிவிப்பும் காகிதத்திலும், கணிப்பொறியிலும்தான் உள்ளது.
பு.மா.இ.மு கண்டன சுவரொட்டி
பன்னெடுங்காலமாய் அடிமைப்பட்டு வாழ்ந்த மக்கள் மத்தியில் காலம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இளைஞர்களால் தொடங்கப்பட்ட கபாடி விளையாட்டுக் குழு, ஆதிக்க சாதியினரின் கண்களை உறுத்தி அச்சுறுத்தலுக்கு உள்ளானது. தவிர்க்க இயலாத சிறு சிறு மோதல்களுடன் தொடங்கிய போராட்டம் தன் இயல்பில் வளர்ந்து வழிபாட்டுரிமை போராட்டமாக முதிர்ச்சி பெற்றது.
தாழ்த்தப்பட்ட மக்களின் குல தெய்வமான பொன்னம்மா காளியை மக்கள் சூலம் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். 2012-ல் கோயில் கட்டுவது என முடிவெடுத்து, ஐம்பதாயிரம் ரூபாய் வசூல் செய்து நல்லப்பன் நீலகண்ட சிவா என்பவரிடம் கொடுத்துக் கோயில் கட்டியுள்ளனர். கோயில் கட்டித் தந்தவருக்கு நன்றி கல்வெட்டும் பதித்துள்ளனர். ஊர்ப் பொது வழக்கப்படி வீரட்டேஸ்வரர் கோயில் குளத்திலிருந்து கரகம் எடுத்துவரச் சென்றபோது ஆதிக்க சாதியினர் எதிர்த்து தடுத்தனர். சட்டவாத நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு பலன் இன்றி சுற்றுவட்டார பகுதி மக்கள் 1000 பேருக்கு மேல் அணிதிரட்டப்பட்டு கரகம் எடுக்கப்பட்டது. தொடர் போராட்டங்களின் மூலம் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூசை செய்யும் உரிமையையும் நிலைநாட்டினர்.
மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மதமாற்றம் தீர்வல்ல என்பதை நன்கு உணர்ந்திருந்தாலும் உரிமைகளை நிலைநாட்ட மதம் மாறுவதை ஒரு போராட்டமாகத் தற்போது கருதுகின்றனர். அம்பேத்கர் கூறியது போல பவுத்தமதத்தைத் தேர்வு செய்தால் இந்து மதத்தின் உட்பிரிவாக்கிக் கொண்டு ஒடுக்குவார்கள். எனவே கிறித்தவத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மாறலாம் என்ற கருத்தை இளைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர். இஸ்லாமிய, கிருத்தவ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் படையெடுப்புக்குத் திருநாள் கொண்டச்சேரியும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இலக்காகி உள்ளது. என்ன இருந்தாலும் ‘தாய்மத’த்தை விட்டுச்செல்லக்கூடாது என்றாவது ஒருநாள் மனமிறங்கி இராமகோபாலர்களும், இல.கணேசன்களும் வருவார்கள் என்று ஏக்கத்தில் சிலர் உள்ளனர்.
பொன்னம்மா காளியிடம் வேண்டிக்கொண்ட பிறகு பிறந்தவர் வன்னியர் சாதியைச் சார்ந்த குமார். குமார் குடும்பம் இப்போதும் பொன்னம்மா காளிக்கு நேர்த்திக்கடன் செலுத்திவருகிறது. வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தவிர வெள்ளாளர்கள், செட்டியார்கள், கோனார்கள், இசைவேளார்கள் சமூகத்தைச் சார்ந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நெருக்கமாகவே உள்ளனர் என்றாலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அஞ்சியே வாழ்கின்றனர். பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இவ்வூரைச் சேர்ந்தவர். இசைக் கலைஞரான தனது தந்தை இராமையா பிள்ளைக்கு நினைவு இல்லம் கட்ட முயற்சித்து ஆதிக்க சாதி வெறியர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஒதுங்கிக் கொண்டதாக மக்கள் கூறுகின்றனர்.
வன்னியர்கள் உட்பட அனைவரும் வன்னிய சமூகத்தைச் சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப் படுகிறான். அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல்கள் கொலைகள் மக்களுக்கு அச்சத்தையூட்டியுள்ளது. கலியபெருமாள் மகன்கள் வி.ஜி.கே மணி வன்னியர் சங்கத்திலும் செந்தில் அ.தி.மு.க.விலும் இருந்து கொண்டு ஆட்டம் போடுகின்றனர். சாதி அபிமானத்தை சுயநலத்திற்குப் பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்துகின்றனர். குத்தாலம் ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன், பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் என்ற வலைப்பின்னலில் சாதி ஆதிக்கம் பகுதியில் கொடிகட்டிப் பறக்கிறது.
தொடக்கத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒ.எஸ்.மணியனும் தொடர்ந்து அமைச்சர் ஜெயபாலும் வன்னியசாதி வெறிக்கு உரமிட்டு வளர்த்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வன்னியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். அமைச்சர் ஜெயபாலுக்கு நேர்முக உதவியாளராகப் பணியாற்றுபவர் என்று நாகை மாவட்ட மக்கள் கருதுகின்றனர். 17-01-2015 அன்று நடைபெற்ற திருவாடுதுறை மோதல் சம்பவத்தைப் போல மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான சம்பவங்களைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலிட்டுச் சொல்லுகின்றனர். பா.ம.க.வும் வன்னிய சாதி வெறியர்களும், தேர்தலுக்காகத் திட்டமிட்டு சாதிக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் மயிலாடுதுறை பகுதி சமூக ஆர்வலர்களிடம் வலுவாக உள்ளது.
அடக்கம் செய்யப்பட்ட இடம் (இளநீர் வைக்கப்பட்டுள்ள இடம் செல்லமுத்து அடக்கம் செய்யப்பட்ட இடம்)
இனி நாம் திருநாள் கொண்டச்சேரி சம்பவத்திற்கு வருவோம். 26-11-2015 அன்று குஞ்சம்மாள் என்ற என்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தியுள்ளார். ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல முயற்சிக்கின்றனர், ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் “சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில் 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.
செல்லமுத்து சடலம் இருந்த வீடு
அடுத்த ஒரு மாதத்தில் 90 வயதைக் கடந்த குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்தி இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்தி உள்ளனர். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைத்துள்ளனர். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லமுத்து சடலம் வைத்துள்ள வீட்டில் ஒன்று குவிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மண்மூட்டை ரோடு
இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.
குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வயல் வழியே செல்லமுத்துவின் சடலத்தை எடுத்துச் செல்லும் காவல்துறை
நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்து சம்பவத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர். மயிலாடுதுறையிலும், திருவாரூலும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நிலவிய கள்ள மௌனத்தைக் கலைத்துப் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைத் தலைவர் பி.எல்.புனியா திருநாள் கொண்டச்சேரிக்கு வந்து விசாரித்து “பெரியார் பிறந்த, சமூகநீதி கருத்துகள் பிரச்சாரமாகியுள்ள மண்ணில் இத்தகைய சம்பவம் துரதிரஷ்டவசமானது” என்று கருத்து வெளியிட்டு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் புறக்கணிப்பு வரை பலவகையான போராட்டங்களைத் திருநாள் கொண்டச்சேரி மக்கள் நடத்தியுள்ளனர். இந்த அரசு கட்டமைப்பு தங்களுக்கானதல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். அதனைத் தகர்ப்பதற்கான போராட்டத்தில்தான் சாதிக்கு சவக்குழி வெட்டிப் புதைக்கவும், பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டவும் முடியும் என்பது அவர்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை: ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!
“ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!” என்பதை வலியுறுத்தியும், அதற்கு காரணமான மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி மற்றும் துணைவேந்தர் அப்பாராவை கைது செய்யக் கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக 21-01-2016 அன்று காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலை அஞ்சல் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பார்ப்பனிய பாசிசத்திற்கெதிராய் ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அறைகூவி அழைக்கிறோம்!
ரோகித் வெமுலா தற்கொலை: RSS, BJP, ABVP யின் பச்சைப்படுகொலையே!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 21-01-2016 இடம்: அண்ணா சாலை அஞ்சல்நிலையம் எதிரில்
தமிழகத்தில் ‘திடீர் சாம்பார், திடீர் புளியோதரை’ கணக்கில் பிரபலமாகும் சினிமா நடிகர்களுக்கு போட்டியாக திடீர் கோவில்களும் உண்டு. அப்படித்தான் காஞ்சிபுரத்தில் வழக்கு தீர்த்த ஈசன் என்றழைக்கப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தமிழக பக்தர்களின் திடீர் புன்ணியஸ்தலமாகிவிட்டது. பொறுக்கி பாடல் பாடிய நடிகர் சிம்பு தனது பொறுக்கித்தனத்தை மெயின்டைன் செய்ய உதவி கேட்டது மேற்படி புண்ணியஸ்தலத்தல்தான். ஆம் இங்கேதான் எல்லா பக்தர்களின் பிரச்சினைகளும் அவர்கள் கிரிமினல்களாகவே இருந்தாலும் தீர்க்கப்படுகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
திருமுறைப் பாடல் பெற்ற சைவ திருக்கோவில்கள் 1028, மங்கள சாசனம் பெற்ற வைணவ 168 கோவில்கள் நிறைந்துள்ள காஞ்சியில் பீப் பாடலால் புகழ் பெற்று தன்னிகரற்ற ஸ்தலமாக திகழ்கிறது இந்த புண்ணியஸ்தலம்.
தமிழகத்தின் வரலாறு காணாத வெள்ளத்தை அடித்து சென்ற இந்த பொறுக்கி பாடலின் நாயகனை பெற்றெடுத்த டி.ராஜேந்தரின் காலடி பட்டு தமிழகத்தின் திடீர் கதாநாயகானாக வலம் வருகிறார் வழக்கறுத்தீஸ்வரர்.
அந்த புன்ணிய ஸ்தலத்திற்குள் நாமும் காலடி எடுத்து வைத்தோம். அந்த முகூர்த்த நேரத்தில் கண்டு கேட்ட காட்சிகளை வினவு வாசகர்களுக்கு தருகிறோம்.
காஞ்சிபுரம் நகரின் மையத்தில் மூங்கில் மண்டபத்திற்கு அருகில் பிரதான காந்தி சாலையின் தென்புறத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இப்போது புதிதாக கோபுரம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. அக்கோவிலின் அமைப்பை பொறுத்தவரை காஞ்சிபுரத்தின் தொன்மை மிக்க கோவில்களின் தோற்றத்திற்கு எவ்விதத்திலும் ஈடுகொடுக்காமல் வழிப்போக்கர்களின் பழங்கால சத்திரம் போல் பராமரிப்பின்றி உள்ளது.
அதில் கருவறை என்ற 10 அடி அறையில் லிங்கமும், வேலைப்பாடற்ற சில சிலைகளும் உள்ளன. கோவிலின் ஒரு பிரதான இடத்தில் பக்தர்களுக்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தோம்.
எல்லம்மாள் – விளக்கு தயாரிப்பவர்
70 வயதுக்கு மேற்பட்ட எல்லம்மாள், “ காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் தாமல் தான் சொந்த ஊர். புருசன் இல்லை . பசங்க கூலி வேலை செய்கிறார்கள். என்னை கவனிக்கவில்லை. வீட்டைவிட்டு துரத்தி விட்டார்கள். ஐந்து வருடமாக இந்த வேலையை செய்கிறேன். சரியாக கண் தெரியவில்லை. படுக்க இடம் இல்லை. போக வர பஸ்சுக்கு 30 ரூபாய் ஆகிறது. என்ன செய்வது. கோவில் வேலை செய்கிறோம் தினமும் குளித்து சுத்தபத்தமாக இருக்கனுமில்லையா. அதனால் தினமும் ஊருக்கு சென்று வருவேன். காலையில் 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு வீட்டிற்கு செல்வதற்கு 9 மணி ஆகிரும். உடம்பு முடியல. வயிறு இருக்குதுல். தினமும் கூலியாக 130 ரூபாய் தருகிறார்கள். டீ க்காசு 20 ரூபாய் தருவார்கள். அதில் தான் காலையில் இட்லி வாங்கி சாப்பிடுவேன். மதியம் கோவில் அன்னதானம் தான் சாப்பாடு. இப்படி தான் என் பொழப்பு தினமும் போகுது” என்றார் சலிப்புடன்.
இங்கு பக்தர்கள் காசு கொடுத்து வாங்கி தீபம் போட்ட அகல் விளக்குகளை திரும்பவும் எடுத்து கழுவி எண்ணெய் ஊற்றி விற்கிறார்கள். ஒரு அகல் 5 ரூபாய். நெய்விளக்கு, பூ, பழம், முறுக்கு, அடை, பிரசாதம் அனைத்தையும் பார்ப்பனர்களே காண்டிராக்ட் எடுத்து நிர்வகிக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 100 அகல் விளக்குகளை கொண்டு பத்து டிரேக்களை தினமும் தயாரிக்கிறார் இமூதாட்டி. பணக்கார முதலாளிகள் – நடிகர்கள் – கிரிமினல்களின் கஷ்டங்களை அதாவது தில்லு முல்லுக்களை தீர்க்கும் வழக்கு ஈஸ்வரன் இத்தகைய ஏழை மூதாட்டிகளின் துன்பங்களை போக்குவதில்லை போலும். போக்காவிட்டாலும் பரவாயில்லை, போக்க வரும் பக்தர்களின் சடங்கிற்காக விளக்கு குவளையை கழுவி கழுவியே அவரது கைகள் புண்ணாகிவிட்டன.
அக்கோவிலின் சாமந்திபூ வில்வ இலைகள், மற்றும் பக்தர்களின் கோரிக்கை விண்ணப்பங்களை விற்கும் 50 வயது முனிரத்தினம் ” பட்டு நெசவு நொடிந்து போனதால் இங்கு ஐந்து வருசத்திற்கு மேல வேலை செய்கிறேன். எனக்கு தினமும் 150 ரூபாய் கூலி கொடுக்கிறார்கள். எங்கேயோ இருந்து வருபர்களுக்கு பிரச்சனை தீருகிறது என்கிறாரக்ள் என் பிரச்சனையை தான் ஆண்டவன் கண்டு கொள்ளவில்லை. இரண்டு பசங்களை எப்படி கரையேத்த போறேனு தெரியலை” என்று வியாபாரத்தில் மூழ்கினார். விண்ணப்பங்களை விற்கும் குமாஸ்தாவிற்கே நீதிபதியின் மேல் கடுகளவும் மரியாதை இல்லை என்பது வழக்கறுத்தீஸ்வரரை நாடி வரும் பக்தர்களுக்கு தெரியுமா?
லோகநாதன்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தினமும் தவறாமல் கோவிலுக்கு வரும் லோகநாதன் ” ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். அவரிடம் பேசினோம்.
“இக்கோவிலின் தரிசித்து படியிறங்கிய மறுகணமே பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். இப்போது டி.ஆர் சிம்பு பாடல் வழக்கிலும் இப்படிதான் விமோசனம கிடைத்ததாக சொல்கிறார்கள்.”
நீங்கள் மட்டும் 20 ஆண்டுகளாக தினமும் வருகிறீர்களே. உங்கள் கோரிக்கை அதைவிட பெரிதா?”
“சார். தினமும் நான் சாமியை கையெடுத்து கும்பிடுவது போல தான் தெரியும். ஆனா தெனமும் நான் சாமியை திட்டிவிட்டுதான் போவேன். திருட்டு தொழில் பன்றவன், குறுக்கு வழியில் போகிறவன் எல்லோரும் நம்பிக்கையா கும்பிட்டுவிட்டு போகிறானே அவர்களை தண்டிக்க மாட்டியா என்று திட்டுவேன் சார். ஒ.பி. பன்னீர் செல்வம், நளினி சிதம்பரம், நடிகை மஞ்சுளா, திமுக ராஜாத்திஅம்மாள், செல்வி, முதல்வர் ஜெயலலிதா, மியூசிக் டைரக்டர் அனிருதோட அப்பா அம்மா, இது இல்லாத தெலுங்கு, கன்னடம் என பல வி.ஐ.பிகள் அவ்ளோ பேரும் இங்க வந்த பிறகுதான் தண்டனையிலிருந்து மீண்டதாக சொல்கிறார்கள். நாட்டில் தான் என்னமோ நடக்குதுனு பாத்தா கோவில்லயும் அதுதான் நடக்குது. பக்தர்களை யார் சார் மதிக்குறாங்க. அர்ச்சகர்கிட்ட நீங்க வெறும் கைய நீட்டுங்க. வேண்டா வெறுப்ப திருநீரை கையில் தூக்கி போடுவார். தட்டில் தட்சணை வைப்பவர்களுக்கு மட்டும் ஒரு பூவை சேர்த்து போடுவார். தட்சணை பெருசா கொடுத்தா பூவும் பெருசா வரும். ஆயிரக்கணக்கில் தட்சணை போட்ட சாமி கழுத்திலிருக்கு மாலை உங்க கழுத்திற்கு வந்துரும். இது பொய்யில்ல சார். எல்லார் கண் முன்னேயும் தான் நடக்கிறது” என்று பெருமூச்சு விட்டார்.
அடுத்து நாம் அர்ச்சகர் முன் பவ்வியமாக நின்றோம். என்ன என்று கண்ணாலேயே கேட்டார்.
“சென்னையிலிருந்து வருகிறோம். இக்கோவிலை பற்றி அங்கு பெரும் பேச்சாக இருக்கிறது. எங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது. அதற்கு நீங்கள் தான் பரிகாரம் செய்ய வேண்டும்”என்று கையிலிருந்த 100 ரூபாயை கொடுத்து கப்பித்தனமாக (வேறு வழியில்லை) 50 ரூபாய் திருப்பி தரும்படி கூறினோம். அவரும் மூலவருக்கு அருகே இருந்த கல்லாப் பெட்டியிலிருந்து 50 ரூபாயைத் திருப்பி கொடுத்தார்.
“குறைந்த பட்சம் யாகத்திற்கு ரூபாய் 8000 செலவாகும். பிரச்சனைக்கேற்ப யாக சாமான்கள் மாறும். எங்களுக்கு தரும் தட்சணை அதில் சேராது. அது உங்கள் விருப்பம்” என்றார். கடந்த காலத்தில் அங்கு வந்த வி.ஐ.பிகள் பற்றியும் அவர்கள் யாகத்தை முடித்துவிட்டு கோவில் படி இறங்கும் முன்னரே பிரச்சனைகள் பனி போல் விலகியது பற்றி பரவசமாக கூறினார்.
“இதை பார்த்து என்னுடைய ஆட்களே(சக பார்ப்பனர்கள்) எங்களுக்கு தெரியாத எந்த மந்திரம்டா ஆண்டவனிடம் சொல்கிறாய் என்று நச்சரிக்கிறார்கள். அதெப்படி நான் சொல்லுவேன். அது அவருக்கும் நமக்கு இருக்கும் பந்தம். அவருடைய கருவி மட்டும்தான் நான். என்னக்கென்று எந்த பெருமையும் இல்லை. வாங்கோ கண்டிப்பா கஷ்டங்கள் தீரும் ” என்று நம்மை வழியனுப்ப பார்த்தார். நாம் மீண்டும் எங்கள் நண்பர்கள் கோவிலுக்கு வராமலேயே பிரச்சனையை தீர்க்க வழியிருக்கிறதா என்று அடக்கமாக வினவினோம்.
” பேஷா. பணம் அனுப்பி பிரச்சனயை அப்பிளிகேசனா எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கவர் கொடுத்துட்டா முறையா கூரியர்ல பிரசாதம் அனுப்பிவிடுவோம்” என்றார்.
சரி ஒரே வழக்கில் தொடர்புடைய வாதி, பிரதிவாதி இருவரும் வந்தால் ஈஸ்வரன் யாருக்கு உதவுவார்? ஒருவேளை தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்துக்களை கமிஷன் அடிப்படையில் ‘நியாயமாக’ தீர்க்கும் தாதாக்களை போன்று கூட ஈஸ்வரன் மாறியிருக்கலாம்.
முனிரத்தினம்
கோவிலுக்கு வெளியே கோவில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபரம் செய்யும் கடைக்காரகளிடம் பேச்சு கொடுத்தோம். “உங்களுக்கு என்ன. வியாபரம் பிச்சிகினு போகும்” என்ற போது, பதிலுக்கு நீங்கள் யார் என்று விசித்திரமாக பார்த்துவிட்டு ” ஊருக்கு புதுசா நீங்க. வாங்க தண்டலை(தின கடன்) தவறாம கட்டமுடியல. ஒரு வியாபாரமும் இல்ல. நெய் விளக்கு மட்டுமில்ல பூ பழமும் அவனே உள்ள வித்துறான். இங்க கடவுள பாக்க வர்றவனெல்லாம காரில சர் புர்னு வந்துட்டு போயிறான். அவங்கள பாத்து ஈ ஒட்டினு இருக்கிறோம் என்றார்கள்” சோகமாக.
“டி.ஆர் வந்தார் அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருப்பார்கள். பெரிய ஆளுங்கனா படையோடு தானே வருவார்கள்” என்றோம். அவர் நம்மை முறைத்து விட்டு “அவனுங்க திருடன் மாதிரி வந்துட்டு திருடன் மாதிரி போயிறாங்க. அவனுங்க வரப்போறேனு போஸ்டர் ஒட்டிட்டா வர்ரானுங்க. ஏதோ திருட்டுதனம் பண்ணிட்டுதான் இங்க தீர்த்துக்கிறதுக்கு வரரான்னுங்க. இங்க இருக்குற ஐயரும் மானங்கெட்டவனுங்க. நீ பதினாறு வாட்டி வா . நீ முப்பத்திரண்டு வாட்டி வானு பீதியூட்டி பணத்தை புடுங்குறாங்க. அந்த வி.ஐ.பி வந்தான் இவன் வந்தான் என இவர்கள் வாயாலேயே போஸ்டர் ஒட்டி திருடர்களை ஒரே இடத்தில் சேர்த்துவைத்து அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆனா… இந்த வருடத்திற்கு முன்னாடி இந்த கோயில் சீந்துவாரில்லாமல் இருந்தது. அப்போ வருசத்திற்கு ஒரு திருவிழா நடக்கும். டிசம்பர் மாத ஆருத்திர திருவிழா.
திருட்டு போன உண்டியல்
அதற்கு இங்கிருக்கும் சாமியை தூக்கி வலம் வரக்கூட ஒருத்தன் இருக்கமாட்டான். நீ தூக்கு நான் தூக்கு என்று ஏலம் போடுவார்கள். இப்போ வி.ஐ.பி- கள் மொய்ப்பதை பார்த்துவிட்டு கோவில் குளத்தை கட்டுகிறேன், கோபுரத்தை கட்டுகிறேன் என்று கோடி கோடியாக வசூலை ஆரம்பித்துவிட்டார்கள். எங்கே போய் நிற்குமினு தெரியல். ஏற்கனவே 2012-ல் இந்த கோயில் உண்டியலை உடைத்துவிட்டார்கள். யாரு உடைச்சாங்கனு அந்த கேசே இன்னும் தீரலை. இந்த லட்சணத்தில் ஊருல இருக்கிற கேசை எல்லாம் இவரு தீர்த்துவைக்கிறாருனு சொல்றானுங்க என்று கூறினார்” விரக்தியாக.
தமிழகத்தில் இத்தகைய மூட நம்பிக்கைகளை முன்வைத்து கிளம்பும் கோவில்களை பெரும் பணக்காரர்களே புதிது புதிதாக உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கும் போக்கில் அதற்கென்ற புராண கட்டுக்கதைகள் இட்டு நிரப்பப்படுகின்றன. ஜெயா – சசி கும்பல் ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த பெரும் யாகங்கள் மூலம் பல கோவில்களின் சக்தி கிசுகிசுவாக உருவாக்கப்பட்டது. மேட்டுக்குடி குற்றவாளிகள் தமது திருட்டுத்தனத்தை சட்டப்படியே சரிக்கட்டினாலும் ஒன்றிரண்டு தப்பிவிட்டால் என்ன செய்வதென்று இத்தகைய சடங்கு சம்பிரதயாங்களுக்கு இலட்சக் கணக்கில் செலவழிக்கிறார்கள். தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த டி.ஆர்.ராஜேந்தர் போன்ற முட்டாள்களே இங்கு வந்து சென்றால் பிரச்சினைகள் தீரும் என்று நினைக்கிறார்கள். அதற்கு மக்களை முட்டாள்களாக கருதி தமது இமேஜை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற புத்திசாலித்தனம்தான் காரணம்.
மக்கள் புத்திசாலிகளாக மாறும் போது வழக்கறுத்தீஸ்வரன்களின் பார்ப்பன பவர் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவன் ரோகித் வெமுலா!- நாம் செய்ய வேண்டியது என்ன?
ரோகித் வெமுலா
ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்துத்துவக் காலிகளுக்கு எதிராக போராடியதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடி தலையீட்டின் கீழ், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் இப்பல்கலையைச் சேர்ந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து தலித் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதி, நூலகம், வகுப்பறை மற்றும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி-ஆல் வெளியேற்றப்பட்ட அம்பேத்கர் கூட்டமைப்பு மாணவர்கள்.
பல்கலைக்கழகத்தின் பாரபட்சமான இந்த பார்ப்பன பாசிச நடவடிக்கையை எதிர்த்தும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கொட்டகை அமைத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர். இந்நிலையில் தான் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் நாடெங்கிலும் ஜனநாயக சக்திகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறது.
தலித் மாணவனின் மரணத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த மத்திய மோடி அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை கைது செய்யுமாறும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்யுமாறும் போராடி வருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவனின் தற்கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் பகிரங்க தலையீட்டுக்கான காரணம் என்ன?
முசாபர் நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் திட்டமிட்ட சதிச்செயலை அம்பலப்படுத்தும் “முசாபர்நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட்டிருக்கின்றனர்.
முசாபர்நகர் பாக்கி ஹை ஆவணப்படத்தின் டீசர்
முன்னதாக, இந்த ஆவணப்படம் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் திரையிடப்படுவது இந்துத்துவக் கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக முற்போக்கு மாணவர் அமைப்புகள் இந்துத்துவ பாசிசத்தை தனிமைப்படுத்தி வேரறுக்கும் விதமாக முசாபர்நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிச்செயலை அம்பலப்படுத்துவதில் முனைப்பு காட்டினர். இதன் ஒரு பகுதியாகவே ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு “முசாபர்நகர் பாக்கி ஹை” ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், யாகூப் மேமன் துக்கிலிடப்பட்டதில் அரசின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் விதத்திலும் இம்மாணவர் கூட்டமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது.
இதனால் காவிக்கூட்டம் மாணவர்கள் மத்தியில் முழுக்கவும் அம்பலப்பட்டு போனது. பார்ப்பனிய இந்து மதத்தின் சேவகனாக தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று சொன்ன சாவர்க்கரின் ஆணையை தலித்துகள் மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக்கும்பல் இம்மாணவர் கூட்டமைப்பு மீது தாக்குதலில் இறங்கியிருக்கிறது. அது தொடர்பான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் இம்மாணவர் கூட்டமைப்பிடம் மன்னிப்புக் கோர வைக்கப்பட்டனர்.
ஆனால், அரசு அடக்கு இயந்திரத்தை தன் கைகளில் வைத்திருக்கிற காவிக்கூட்டம் தனக்கே உரித்தான நைச்சிய பாணியில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை பல்கலையில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் தாங்கள் தாக்கப்பட்டதாக பொய்வழக்கை புனைந்தது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பண்டாரு தத்தாத்ரேயா, “ஹைதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக-சாதிய-பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ரோகித் வெமுலாவின் தற்கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்
இப்படித்தான் காவி வானரங்கள் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் ‘மோடிக்கு எதிராக பேசுகிறது’; ‘இந்துமதத்தை கொடூரங்களின் கூடாரம் என்று சொல்கிறது’ (அம்பேத்கர் சொன்னது!!); ‘தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுகிறது’ என்று ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடுதாசி போட்டனர். அ.பெ.ப.வ முன்னணி மாணவர்களும் ரோகித் வெமுலா உள்ளாக்கப்பட்ட இதே உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் ஜனநாயக சக்திகளின் வீச்சான போராட்டமும் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுமும் புரட்சிகர இயக்கங்களின் இடையறாத தாக்குதலும் இந்தியாவெங்கும் மோடி கும்பலின் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்தி காவிக்கும்பலை பின்வாங்க வைத்தது.
ஆனால், தெலுங்கானாவிலோ தலித் மாணவனை காவுவாங்கி இந்துத்துவம் தன் கோரப்பற்களைக் காட்டியிருக்கிறது. ஸ்மிருதி இரானியின் தலையீடு; அதற்குப் பிந்தைய துணைவேந்தரின் ஒருதலைபட்சமான நடவடிக்கை; தலித் பேராசிரியர்கள் என்று கூறிக்கொண்டவர்களே ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக மாறிப்போய் மவுனம் சாதித்தது என டிசம்பர் 21 அன்று அம்பேத்கர் மாணவர் அமைப்பின் ஐந்து முன்னணியாளர்களும் பல்கலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
ரோகித் வெமுலாவின் ஆராய்ச்சி உதவித்தொகை கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில், அவர் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மத்திய, மாநில, பல்கலைக்கழக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை கருவிகள் ஒரு சேர இம்மாணவர்களின் மீது ஏவப்பட்டிருக்கிறது. இறுதியில் பார்ப்பனியம் நிலைநாட்டப்பட்டு மாணவர் ரோகித் வெமுலா தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்.
சென்னைப் பல்கலைக்கழகத்திலும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துத்துவத்தின் ஊதுகுழலாக இருக்கும் அ.தி.மு.க கட்சியின் அம்மா அடிவருடி துணைவேந்தர் தாண்டவனும் சென்னை மாணவர்களுக்கு ரோகித் வெமுலா அனுபவித்த அத்துணை கொடுமைகளையும் ஏவத்தான் செய்தார். இதனாலயே சென்னை மாணவர்கள் ஒருகட்டத்தில் பல்கலைக்கழக கட்டிடத்தில் ஏறி ‘பல்கலைக்கழகம் தங்களை மீண்டும் அனுமதிக்காவிட்டால் உயிர் துறப்பதாக’ பகிரங்கமாக அறிவித்தனர்.
சென்னைப் பல்கலையில் நடக்கவிருந்த படுகொலை ஹைதாராபாத் பல்கலையில் நடந்தேறியிருக்கிறது என்பதில் இருந்து என்ன தெரிகிறது?
மாணவர்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் பணியில் தங்களை சமரசத்திற்கு இடமின்றி ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இது எதைவிடவும் ஆபத்து என்பதை பாசிஸ்டுகள் உணர்ந்திருக்கின்றனர். மாணவர்களை மூர்க்கமாக ஒடுக்காவிட்டால், போராட்டத்தின் திசைவழி ஆளும்வர்க்க கும்பலை அச்சுறுத்தும் என்பதில் மரண பீதியுற்றிருக்கின்றனர்.
ஆகையால் தான், பொதுவெளியில் தலித் மாணவர்கள் அடையாள அரசியல் என்ற எல்லைக்குள் நின்று பேசுவதை அனுமதிக்கிற ஆளும் வர்க்கம், அதே மாணவர்கள் முசபார்நகர் தாக்குதலை அம்பலப்படுத்துவதில் நிற்கிற பொழுது என்ன செய்கிறது என்பதற்கு ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு வகைமாதிரியாக வந்து நிற்கிறது.
அது மட்டுமல்ல. இசுலாமியர்களுக்கு எதிராக தலித்துகளைத் திரட்டிவிட முடியும் என்று கனவு கண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டத்தை சுக்கு நூறாக ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் மாணவர்கள் நடைமுறையில் உடைத்துக் காட்டியிருக்கின்றனர். இதை ஆளும் இந்துத்துவக் கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதும் ரோகித் வெமுலாவின் கொலையிலிருந்து தெரியவருகிறது.
ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் வெமுலாவின் பலி நாடெங்கும் கோப அலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.
ஊர், சேரி என்று பிரித்து வைத்து தலித்துக்களை அடக்கி வைத்து அடிமையாக நடத்திய பார்ப்பனிய மதம் நவீன காலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மூலம் அதை தொடர்கிறது. அம்பேத்கர் துதி, தலித்துக்களின் மீதான ஓநாய் இரக்கம் போன்ற ஊசிப்போன ‘கருணை’யால் மோடி அரசின் உண்மை முகம் தெரியாமல் போய்விடவில்லை. நாடெங்கும் கிளம்பும் மாணவர் போராட்டங்கள் மோடி அரசுக்கு வெறும் தலைவலியாக மட்டும் இருக்காமல் மரண அடியாக மாறவேண்டும்.
கடந்த டிசம்பர் 14 அன்று நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டு என்ன பேசியது என்பது இன்று வரை வெளியிடப்படவில்லை.
ஆனால் மாநாட்டு உறுப்பினர்களின் ஒப்பந்தம் டிசம்பர் 19-ம் தேதி கையெழுத்திடப் பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், உறுப்பு நாடுகளின் விவசாயத்தை முற்றாக உலகச் சந்தைக்கு திறந்துவிடும் அம்சங்களை முன்வைத்திருக்கிறது.
இதன் படி, இனி WTO-ல் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள்
விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
எந்தவொரு நாடும் பொதுவில் தானியங்களைக் சேகரித்து வைக்கக் கூடாது. மாறாக அவை சந்தைக்கு திறந்து விடப்படவேண்டும்.
ஏற்றுமதி தொடர்பான அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும். இதை வளர்ந்த நாடுகள் உடனே அமலுக்கு கொண்டு வரவும் வளரும் நாடுகள் 2018-க்குள் செய்து முடிக்க வேண்டும்.
எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, நாட்டின் சேவைத்துறைகளான தண்ணீர், மின்சாரம், பொது சுகாதாரம், காப்பீடு, கல்வித்துறையை முற்றிலும் வணிகமயமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் இது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
காட்ஸ், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தங்கள் குறித்து பொதுவெளியில் குறைந்தபட்ச விபரங்களை மட்டுமே பேசுகிற பத்திரிகைகள் இதற்கு இணையாக முன்வைக்கப்படும் மற்றொரு பேரழிவுத் திட்டமான TISA (Trade In Services Agreement) குறித்து வாய்திறக்க மறுக்கின்றன. வாய் திறக்கவும் முடியாது!
TISA ஒப்பந்தத்தின்படி WTO-GATS திட்டங்களை உறுப்பு நாடுகள் எதிர்த்தால், அதற்கு மாற்றாக அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளைத் திரட்டி அவற்றி்ன் மீதான பொருளாதாரச் சங்கிலியை இறுக்கிப் பிணைக்கும். இந்த வகையில் TISA முன்வைக்கும் செயல்திட்டம், உலகப் பொருளாதாரத்தை மேலும் அமெரிக்கக் கரடியின் பிடியில் தள்ளும் வகையில் WTO-GATS ஆபத்தை விட படுபயங்கரமானதாக இருக்கப்போகிறது. TISA-ல் பங்கேற்கும் நாடுகள் அது குறித்து பாராளுமன்றங்களிலோ, பத்திரிகைகளிலோ, நீதி சட்ட அமைப்புகளிலோ TISA குறித்து விவாதிக்கக் கூடாதென விதிகள் போட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஏகாதிபத்திய அமெரிக்காவைப் பொறுத்தவரை WTO-GATS மற்றும் TISA மட்டுமே திட்டமல்ல. இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலகநாடுகளை அடிமைப்படுத்தி சுரண்டுவதற்கு மேலும் பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மோடி கும்பல் நைரோபி மாநாட்டிற்கு செல்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் பில்கேட்சும் ரத்தன் டாடாவும், “இந்தியாவில் 4.4 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” என டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதினார்கள்.
கருணையாளர்கள் பில்கேட்சும் ரத்தன் டாடாவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மண்டகப்படிக்கே கட்டுரையாளர்களாக காட்சி தந்திருக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் கனமும் பரிமாணமும் எத்தகையதாக இருக்கும்?
“இந்தியாவின் மனிதவளம் மிகப்பெரிய சொத்து” என்று வரையறுக்கிற டாடவும் பில்கேட்சும் “பத்தில் நான்கு இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்” என்று கவலையுற்றிருக்கின்றனர்.
கவலையுற்ற கையோடு சும்மா இருந்துவிடாமல், “புதிய ஊட்டச்சத்து அறிக்கை இந்தியாவில் குறை வளர்ச்சியை எதிர்நோக்குவதில் தலைமையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறது (New nutrition report underscores the importance of leadership in addressing stunting in India)” எனும் தலைப்பில் மூன்று விசயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
1. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தரவுகள் முழுமையின்றி குறைபாட்டுடன் இருப்பதுடன், அவை காலவதியாகிப் போய்விட்டன. புதிய தரவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
2. ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்கு விலைமலிவான திட்டங்கள் (cost-effective solution) எங்களிடம் இருக்கின்றன. அவை தாய்மார்கள் பிரசவித்த காலத்திலிருந்து குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை அதாவது 1000 நாட்களுக்கு மேம்பட்ட ஊட்டச்சத்தும் உடல்நலமும் கிடைக்க வழிவகை செய்யும்.
3. எங்களது திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் (prioritizing programmes) மத்தியிலும் மாநிலத்திலும் அரசுகள் தங்களது கடமையுணர்வை புரிந்துகொள்ளும் வகையிலும் (shared sense of responsibility) செயலாற்ற அரசியல் தலைமை (political leadership) தேவைப்படுகிறது.
மேற்கண்ட இம்மூன்றும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் கீழ் இறுதியாக மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது பற்றிய விளக்கக் கட்டுரை உலக வர்த்தகக் கழக மாநாடு நடைபெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே பிசினஸ் டைம்ஸில் வந்திருக்கிறது. இதன்படி, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில் ஊட்டச் சத்து குறைப்பாட்டை ஆய்வு செய்வதற்கு நான்குவருட நிதி நல்கையாக 1.34 கோடி டாலர்களை (சுமார் ரூ 87 கோடி) டாடாவின் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறது.
இந்த அமைப்பு, இந்திய விவசாயக் கொள்கையை ஊட்டச்சத்திற்கு ஏற்ப முற்றிலும் மாற்றிமைக்கும் TARINA (Technical Assistance and Research for Indian Nutrition and Agriculture) எனும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது.
TARINAவிற்குத் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகமும், டாட்டா அறக்கட்டளையும் சேர்ந்து Tata-Cornell Agricultural and Nutrition Initiative (TCI) அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.
TARINAவின் நோக்கங்கள் உலக வர்த்தக் கழகத்தின் குரலாக அப்படியே ஒலித்திருக்கிறது. நைரோபியில் நடைபெற்ற WTO மாநாடு “இந்தியா இனி எந்தவொரு தானியத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடாது; அவற்றை சந்தைக்கு திறந்துவிட வேண்டும்” என்று சொல்கிற பொழுது TARINAவோ “ஊட்டச்சத்துக் மிகுந்த உணவு தானியங்கள் அனைவருக்கும் கிடைக்கும் படி திட்டம் வகுக்க வேண்டும்” என்று சொல்கிறது.
இரண்டாவதாக, “WTO விற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” என்று நைரோபி மாநாடு சொல்கிற பொழுது “ஊட்டச்சத்திற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” (to redesign agricultural projects with a focus on nutrition) என்று TARINA சொல்கிறது.
இந்த மாற்றியமைத்தல் திட்டம் இந்தியாவின் சகல விவசாயத்துறைகளையும் உள்ளடக்கும் விதமாக, தற்பொழுதும், வருங்காலத்திலும் விவசாயக் கொள்கைகள் பழங்கள், காய்கறிகள், கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பருப்பு வகைகள், உயர் புரதச் சத்து கொண்ட பயிர்களான பட்டாணி வகைத் தாவரங்கள் கிராமப்புற ஏழைகளுக்கு வருடம் முழுவதும் போய்ச்சேரும்படி அமைய வேண்டுமென வலியுறுத்துகிறது.
பில்கேட்ஸ்-டாடா முன்வைத்த இந்த டாரினா திட்டத்தைச் செயல்படுத்துபவர்களாக
புரவலர் என்ற பெயரில் மெலிண்டா-கேட்ஸ் அறக்கட்டளை,
தரகு வேலை பார்த்து தருபவன் என்ற பெயரில் டாடா சமூக அறிவியல் ஆய்வுக்கழகம்,
ஆராய்ச்சி செய்துகொடுக்க எமிராய் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம் (வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியா வந்தால் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்),
பழங்குடியினரிடையேயும் ஒடுக்கப்பட்டவர்களிடையேயும் உள்ளே புகுந்து கனஜோராக வேலை செய்து தரவுகள் எடுக்க என்.ஜி.ஓ.க்களான BAIF மற்றும் CARE,
ஏகாதிபத்தியங்கள் மேற்பார்வையிட அகில உலக உணவுக்கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute)
என ஏகாதிபத்தியம் மற்றும் தரகுமுதலாளிகளின் வலுவான வலைப்பின்னல் இந்தியாவின் விவசாயத்தைச் சுற்றி இறுக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி இன்னும் மேம்பட்ட சிக்கலான வடிவில் திரும்ப இந்திய அரசியல் அரங்கிற்கு வந்திருப்பதை நாம் தவறவிடாது கண்டுகொள்ள வேண்டும்.
இப்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு என்பதன் பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பில்கேட்ஸ் அறக்கட்டளை வடிவில் விவசாயத்தை மறுகட்டமைக்க முனைகிற பொழுது 1950-களில் இதே அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபோர்டு பவுண்டேசன் மூலமாக இந்திய விவசாயத்தை மறுகட்டமைக்கிறோம் என்று “இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை” என்பதன் பெயரில் அறிக்கை தாக்கல் செய்தனர். இவ்வறிக்கையில் “இந்தியாவில் உணவு இலக்குகள் எட்டப்பட வேண்டுமானால் உரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்று இந்திய விவசாயத்தை பன்னாட்டுக் உரக் கம்பெனிகளின் இலக்காக மாற்றியமைத்தது.
இப்பொழுது எப்படி நாடு கடந்த கூட்டிணையக் குழுமங்களான பில்கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து டாடா டிரஸ் வரை ஊட்டச்சத்து, உலகவர்த்தகக் கழகம் என்ற பெயரில் ஜல்லியடிக்கிறார்களோ அன்றைக்கு ஃபோர்டு பவுண்டசனோடு சேர்ந்து உரங்களிலும் (ESSO) எண்ணெய் நிறுவனங்களிலும் பெரும் பங்கை வைத்திருந்த ராக்பெல்லர் பவுண்டேசன் உரம் தான் இந்திய விவசாயத்திற்கு முதன்மையானது என்று கூறி இந்திய விவசாய நிலங்களை மலடாக்கினர்.
இரண்டாவதாக, இப்பொழுது எப்படி உலகவர்த்தகக் கழகத்தின் நைரோபி மாநாடும் பில்கேட்ஸ்-டாடாவின் TARINA பரிந்துரைகளும் ஒரே நேரத்தில் வந்திருக்கிறதோ அதே போன்று 1960-களில் போர்டு பவுண்டேசன் முன்வைத்த அறிக்கைக்கு இணையாக 1964இல் பெர்னார்டு. ஆர். பெல் தலைமையிலான உலக வங்கிக்குழு, ஒட்டுமொத்த முதலீட்டு முன்னுரிமைகள் விவசாயத்தை நோக்கி ஒருங்கிணைக்கும்படி பரிந்துரைத்திருந்தது.
60-களில் ஏற்பட்ட பஞ்சம், பசி, பட்டினி ஆகியவற்றைக் காரணம் காட்டிய அமெரிக்க பன்னாட்டு உரக் கம்பெனிகளின் இலக்காக இந்தியா இருக்க சம்மதிக்கவும் இந்திய விவசாயத்தின் மூல உத்தி போர்டு பவுண்டேசன் முன் வைக்கும் பசுமைப் புரட்சியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நிபந்தனைகளாக வைக்கவில்லை. மேலும் சரிந்து நிற்கும் உலகப் பொருளாதாரத்தில் தங்கு தடையற்ற மூலதன பாய்ச்சலுக்காக இந்தியா தனது பணமதிப்பில் 36.5% குறைத்துக் கொள்ளவும் ஆணையிட்டது (இன்றைக்கு மேக்-இன்-இந்தியா, எப்.டி.ஐ என்று சொல்கிற பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு என்னவாக இருக்கிறது என்று யோசியுங்கள்).
1968 ஏப்ரல் 28 நியூயார்க் டைம்ஸ் இதுபற்றி எழுதும் பொழுது, “இவற்றைக் கண்ணிகள் என்று அழையுங்கள், அவற்றை ‘நிபந்தனைகள்’ என்று அழையுங்கள் அல்லது விருப்பத்திற்கேற்ப அழைத்துக் கொள்ளுங்கள், அமெரிக்கா தான் வழங்கும் உதவிக்காக உலகவங்கி மூலம் விதிக்கும் நிபந்தனைகளில் பலவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வாய்ப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவிற்கு செல்வதற்கு வேறு இடம் எதுவுமில்லை” என்று கொக்கரித்தது.
இன்றைக்கு இதே நிகழ்ச்சி நிரல் தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பு நெருக்கடிக்குள் ஊட்டச்சத்து எனும் பெயரில் மறுகாலனியாதிக்கத்தை துரிதப்படுத்த வந்திருக்கிறது.
நியூயார்க் டைம்ஸிற்கு பதிலாக, எகானமிக் டைம்ஸில், TARINA திட்டத்தை நடத்திக் கொடுக்கும் கார்னல் பல்கலைக் கழகம் பின்வறுமாறு கூறுகிறது.
“The Tata Trusts, India’s leading philanthropy, will support the consortium through their convening power and influence with policymakers at the national and state levels.”
இதன் அர்த்தம் “இந்தியாவின் முன்னணிப் புரவலராக இருக்கும் டாடா-சேவை அமைப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் கொள்கை உருவாக்குபவர்களை பணிய வைப்பதிலும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவைப்பதன் மூலமாக இக்கூட்டமைப்பிற்கு பங்களிக்கவிருக்கிறது” என்று கூறுகிறது.
இந்த வாக்கியத்தின் மூலம் 1960-களைப்போன்று இந்திய இறையாண்மை, அல்லது இந்தியா அல்லது பாராளுமன்றம் என்றெல்லாம் பேசவேண்டிய தேவை கார்னல் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடவில்லை.
டாடாவிடம் சொல்லிவிட்டால் மற்றதை அவர் பார்த்துக்கொள்வார் என்று நேரடியாக இந்தியா எப்படி அமெரிக்காவின் காலனியாக இருக்கிறது என்பதை வெளிக் காட்டியிருக்கிறது.
அதாவது இனிமேலும் பாராளுமன்றம் என்றோ, மேக்-இன்-இந்தியா என்றோ , இறையாண்மை என்றோ பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்பது இதில் தெளிவாகியிருக்கிறது.
இவ்விதம் இந்திய விவசாயம் ஏகாதிபத்தியங்களின் நிரந்தரப்பிடியில் மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக முழுநிகழ்ச்சி நிரலும் WTO, GATS, TISA மற்றும் TARINAவாக வந்துவிட்ட பிறகு, இது யாருக்கான அரசு என்பது தெரிந்துவிட்ட பிறகு, மக்கள் செய்ய வேண்டிய வேலை என்னவாக இருக்க முடியும்?
இதை தூக்கியெறிந்துவிட்டு தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக்கொள்வது என்பதைத் தவிர வேறு நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவில் இடமில்லை.
– இளங்கோ
செய்தித் தரவுகள்
1. $13.4 million Bill Gates grant to help combat India malnutrition, http://articles.economictimes.indiatimes.com/2015-12-04/news/68771293_1_nutrition-initiative-nutrient-rich-food-malnutrition
2. New nutrition report underscores the importance of leadership in addressing stunting in India, http://blogs.timesofindia.indiatimes.com/toi-editorials/new-nutrition-report-underscores-the-importance-of-leadership-in-addressing-stunting-in-india/
3. Will the GATS close on higher education? http://www.thehindu.com/opinion/columns/will-the-gats-close-on-higher-education/article8042337.ece
4. ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய விவசாயம்- ch-5: இந்தியாவின் விவசாய முறையை ஏகாதிபத்தியம் மறுகட்டமைப்பு செய்தல்- பக்:41-53, ஆசிரியர்-சுனிதி குமார் கோஷ் (விடியல் பதிப்பகம்).
கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வேல்முருகன் திரையரங்க வணிக வளாகத்தை அகற்றுவோம்! கடலூர் ஆர்ப்பாட்டம்.
கடந்த ஆண்டு இறுதி மாதம் நவம்பர், டிசம்பரில் பெய்த கனமழையால் கடலூர் மாடட்டம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த பாதிப்புகளுக்கு கெடிலம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் உட்பட தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளியதும், வீராணம் ஏரியை அறிவிப்பின்றி திறந்ததும் தான் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு முக்கிய காரணங்கள் என்பதை ஆதார பூர்வமாக வினவில் எழுதியிருந்தோம்.
கனமழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களில் பேசிய அறிவுஜீவிகளும் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்றும் அதனை அகற்றுவது தான் தீர்வு என்றும் பேசினர். உயர்நீதி மன்றமும் ஆறு, ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் , சென்னையில் மட்டும் ஏழை மக்கள் வசிக்க கூடிய குடிசைகளை மட்டும் தீவிரமாக அகற்றியது, அரசு. ஆனால் ஏரி, குளம் ஆறுகள் என அனைத்தையும் வரைமுறை இல்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கார்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனம், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் இவற்றை அகற்றாததோடு மட்டுமல்லாமல் அவற்றை பாதுகாத்தும் வருகிறது.
இந்த அரசு ஆக்கிரமிப்பை அகற்றாது மக்களாகிய நாமே ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் போராடங்களை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக, “கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வேல்முருகன் திரையரங்க வணிக வளாகத்தை அகற்றுவோம்” என்ற முழக்கத்தின் கீழ் 11-01-2016 அன்று போராட்டம் அறிவித்து 7 நாட்களுக்கும் மேலாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பேருந்து, ரயில், குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
பிரச்சாரத்தின் போது மக்களின் மனங்களில் குமுறிக் கொண்டிருந்த எரிமலைக் கனல் வெடிப்பதை பார்க்க முடிந்தது. தங்கள் கோபங்களை கொட்டி தீர்த்து நமது பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தனர்.
11-01-2016 அன்று காலை 8 எட்டு மணி முதல் வேல்முருகன் திரையரங்கத்தின் முன் நூற்றுக்கணக்கான போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்கள் குவிந்து காத்திருந்தனர். திரையரங்கை கடந்து செல்லும் எவரும் என்ன நடக்கிறது என்று நின்று கேட்காமல் போகவில்லை. திரையரங்கை சுற்றியுள்ள சந்து பொந்து என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போட்டிருந்தனர். டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி என அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் திரையரங்கை பாதுகாக்க வந்திருந்தனர். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது தமிழக காவல்துறை.
சரியாக 11.30 மணியளவில் “கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வணிகவளாகத்தை அகற்றிடுவோம்” என்று விண்ணதிரும் முழக்கங்கள் போட்டவாறு பேரணியாக வந்த தோழர்களை பாதியிலேயே கைது செய்து வேனில் அடைத்தது, போலீஸ்.
மக்கள் மத்தியில் தோழர்களை தாக்க திராணியற்ற போலிசு வேனில் வைத்து தோழர்களை தாக்கியது . இந்த தாக்குதலை நடத்தியது காக்கி உடை அணியாத பொறுக்கிகளான “கியூ பிரிவு” போலிசு தான்.
தொடர்ந்து, உழவர் சந்தை அருகே உள்ள தெரு வழியாக முழக்கமிட்டவாறு தோழர்கள் வந்ததை சற்றும் எதிர்பார்காத போலிசு திகைத்து போனதோடு மட்டுமல்லாமல் கோபத்தில் சக கீழ்நிலை காவலர்களை கீழ்த்தரமாக திட்டினார் இன்ஸ்பெக்டர். பிறகு தோழர்களை கைது செய்து மற்றொரு வேனில் ஏற்றியது, போலீஸ்.
அடுத்தடுத்து பரபரப்பாக காட்சியளித்தது கடலூர் நகரம்; அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் படபடப்பாகவே இருந்தது காவல் துறை. அவ்வழியாக வருகிற போகிற அனைத்து மக்களையும் மிரட்டி விரட்டியது.
பிறகு உழவர் சந்தைக்கு எதிரே உள்ள தெருவில் இருந்து முழக்கமிட்டவாறே வந்த தோழர்களை பாதியிலேயே கைது செய்து வேறொரு வேனில் ஏற்றி பெரிய நாயகி திருமண மண்டபத்தில் வைத்து மாலை 5 மணிக்கு விடுவித்தது. தொடர்ந்து மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டம் மக்கள் மத்தியில் போராட வேண்டும் என்ற சிந்தனையை விதித்துள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய போலிசு, அரசு அதனை செய்யாமல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று போராடியவர்களை கைது செய்து ஆக்கிரமிப்பை பாதுகாத்து வருகிறது. தாங்கள் ஆள்வதற்கு தகுதி இல்லாதவர்கள் தான் என்பதை நடைமுறையில் நிருபித்து காட்டியுள்ளது. இனியும் இந்த அரசு ஆக்கிரமிப்பை அகற்றும் என நம்பிகொண்டிருப்பவர்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டும்.
மாடு பிடிப்பது
தமிழர் கலாச்சாரமென்று
ஊரே புழுதி பறக்குது!
மணி பிடிக்க
கோயில் கருவறைக்குள்
போனால்
சாதி கொம்பு முட்டுது
மனுதர்மம் அடக்க
முடியாதவன் ‘வீரத்தை’
மாடு
ஏற இறங்கப் பார்க்குது
மூன்று பேருந்துகள், இரண்டு வேன்கள், ஆறு ஜீப்கள் இன்னும் தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து ACS கல்லூரி கொள்ளையர்களின் யூனிஃபார்ம் போட்ட அடியாட்கள் கூட்டம் சென்னை மதுரவாயில் பகுதியினை பயமுறுத்தி கொண்டிருந்தன. சுமார் 100 அடியாட்கள் இரு பிரிவாக பிரிந்து மதுரவாயிலை சலிக்கத் தொடங்கினர். சுமார் 50 பேர், கல்லூரி வாசலில் அட்டென்சனில் நின்று கொண்டிருந்தனர். இன்னும் சுமார் இரண்டு, மூன்று கிலோமீட்டர்கள் சுற்றளவில் அகன்று விரிந்திருக்கும் ஆக்கிரமிப்பு கல்லூரியின் காம்பவுண்டு சுவரை அடியாட்கள் கூட்டம் பாதுகாத்து வந்தது.. இது போதாதென்று ஏ.சி.சண்முகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் அடியாட்கள் குவிந்திருந்தனர்.
எதுக்குப்பா இவ்வளவு போலிசு நிக்குது? என அப்பாவியாக கேட்ட வயதான ஒருவரிடம் ஏ.சி.சண்முகத்தின் கல்லூரியை ஆக்கிரமிப்பு என ‘பொய்’ சொல்லி சிலர் இடிக்க வருவதால் காவலுக்கு போலிசு நிற்கிறது என்ற ‘உண்மை’யை சொன்னதற்கு, இது எம்ஜிஆர் காலத்திலே ஆக்கிரமித்ததாச்சே! இதெப்படி பொய்யாகும்? என எதிர்கேள்வி கேட்டுவிட்டு சென்று விட்டார். அவர் பதில் கேட்காமல் போய் விட்டாலும் இந்த ‘பொய் – உண்மை’யை நாமாக சொல்லவில்லை; அந்த கல்லூரியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது. காலையில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த ‘வண்ணக் கடுதாசி’யும் அதையே சொல்லிக் கொண்டிருந்தது. இன்னும் போராட்டத்தை டிவியில் ஒலிபரப்பிய சில செய்தி நிறுவனங்களும் கூட அதை சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் உண்மை என்னவென்பதை வெள்ளத்தின்போது ஆறு சொல்லிவிட்டு சென்றிருந்தது.
ஏ.சி.சண்முகத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக அறிவித்திதலிருந்தே கல்லூரிக்கு ஆதரவாக போலிசின் புரோக்கர் வேலை துவங்கிவிட்டது. நம் தோழர்களை அழைத்து ஏ.சி.சண்முகத்தின் கல்லூரி ஆக்கிரமிக்கப்பட்டதல்ல, அதற்கான பட்டா உள்ளது. உங்களுக்கு வேண்டுமானால் தருகிறேன் என பலரும் அணுகினர். அதுமட்டுமன்றி மதுரவாயில் பகுதியில் உள்ள தோழர்களின் வீடுகளை நோட்டம் விடுவது, அவர்கள் வெளியே வரும் பகுதியில் ஆள் போடுவது என அவர்கள் அடியாள் வேலைகளை விசுவாசமாக செய்தனர்.. மற்றபடி போராட்டத்தின் முதல் நாளிலே ஆற்றிய ‘கடமை’ விசுவாசத்தை மேலே பார்த்தோம். போராட்டம் நடைபெற்ற அன்று காலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பு.மா.இ.மு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ராஜாவை பிடித்து வைத்துக் கொண்டிருந்தது.
10.01.2016 அன்று காலை முதலே மதுரவாயில் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக போராட்டம் பற்றி பேசப்பட்டது. பூந்தமல்லி சாலையை கடந்த எவரும் போலீசாரின் எண்ணிக்கையை கண்டு காரணம் கேட்காமலோ இல்லை தாங்களாகவே ஒரு காரணத்தை நினைத்துக் கொள்ளாமலோ செல்லவில்லை.
எனினும் கல்லரி தரப்பு மற்றும் அவர்களை காக்க அணிதிரண்ட போலிசைப் போன்று சதி வேலைகள் ஏதுமில்லாமல் பகிரங்கமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்து தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை துவங்கினர். ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள் வெடிக்கட்டும் என்ற அறைகூவலுடன் ‘கூவம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ACS கல்லூரியை அகற்றுவோம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து சரியாக மணி 11க்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தினரும் அவர்களின் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரும் பொதுமக்களுமாகிய சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கல்லூரிக்கு சுமார் 100 மீட்டர் தொலைவிலே மோப்பம் பிடித்து கல்லூரி வாசலிலிருந்து ஓடிய தமிழக போலிசு, போராட்டக்காரர்களை மடக்கிப் பிடித்தது. பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் வந்திருந்த தோழர்கள் ஆக்கிரமிப்புகளுக்கெதிரான முழக்கங்களை தொடர்ச்சியாக முழங்கிக் கொண்டு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவுடன் அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துகிறீர்கள் என சட்டம்’ பேசியது போலிசு. சாலை ஸ்தம்பிக்க, அருகில் பொதுமக்கள் கூட்டம் கூட, “போராடுவதற்கு எங்கே பர்மிசன் கொடுக்கிறீங்க? இந்த நாட்டிலே ஜனநாயகமே இல்ல” என அரசை அம்பலப்படுத்தத் தொடங்கினார் தோழர் கணேசன்.
“அதெல்லாம் முடியாது” நீங்கள் வண்டியில் ஏறுங்கள் என போராட்டத்தை முடக்கப் பார்த்தது போலிசு. கூவம் ஆத்தை ஆக்கிரமிச்சு காலேஜ் கட்டியிருக்கான் ஏ.சி.சண்முகம். அந்த ஆக்கிரமிப்பை அகற்றத்தான் நாங்க போய்க்கிட்டு இருக்கோம். நீர்நிலைகளை எவனாவது ஆக்கிரமிச்சிருந்தா அவங்கள பொதுமக்கள்தான் தட்டிக்கேட்கணும்னு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சொல்லியிருக்காரு, காஞ்சிபுரத்துல ஆக்கிரமிப்புகளை அகற்றுன ஐ.ஏ.எஸ் அமுதா சொல்லியிருக்காங்க, அப்படின்னா நீதிபதி, கலெக்டர் சொல்றது தப்புனு நீங்க சொல்றீங்களா? என போலிசை பார்த்து கேள்வி எழுப்பினார் தோழர் கணேசன். மேலும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டியது போலிசான உங்களோட வேலை, உங்க வேலைய நாங்க செய்ய வந்தா, நீங்க எங்களையே தடுக்கிறீங்களா? என தீவிரமாக தோழர் கணேசன் கேட்க, பேச்சு வார்த்தை நடத்துவது என்பதே ஒரு பேச்சுக்குத்தான், அடியாட்களின் உண்மையான வேலை ஆளும் வர்க்கத்தை பாதுகாப்பதுதான் என களத்தில் இறங்கியது போலிசு.
தொடர்ந்து தோழர்களுக்கும், போலிசுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தோழர்களை கொலைவெறிக் கொண்டு தாக்கத் துவங்கியது போலிசு. கூவம் ஆற்றினை ஆக்கிரமித்துள்ள ஏ.சி.சண்முகத்தின் கல்லூரியை பாதுகாக்க வேண்டி போராடும் மக்களை கொல்வதற்கு திட்டம் போடுகிறது பாசிச ஜெயா அரசு என போலிசை அம்பலப்படுத்தி சுற்றியிருந்த ஊடகம், பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார் தோழர் கணேசன். மற்ற தோழர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்க, ஒவ்வொருவரையும் குண்டுக் கட்டாக தூக்கி வண்டிக்குள் ஏற்றத் துவங்கியது போலிசு. குறிப்பாக பெண் தோழர்களை தாக்கி, தரதரவென இழுத்துக் கொண்டு வண்டியில் ஏற்றினர்.
இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர்கள் காக்கிச் சட்டை அணியாத உளவு போலீசார். ஆனால், போலீசாரின் அடி, உதையை துச்சமென கருதி தோழர்கள் நடத்திய போராட்டத்தில் அப்பகுதி மக்களும் இணைந்தது போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது. கிட்டதட்ட ஒரு மணி நேரம் வரை பூந்தமல்லி சாலை போர்க்குணமான போராட்டத்தால் கிளர்ச்சியுடன் காணப்பட்டது.
போராடிய தோழர்களை மட்டுமல்லாது சுற்றி நின்றுக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலரையும் சிவப்பு சட்டை போட்டிருந்த ஒரே காரணத்தால் கைது செய்தது போலிசு. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதல் எதிரி போலிசுதான் என்பதையும், தாங்கள் யூனிஃபார்ம் போட்ட அடியாட்கள்தான் என்பதையும் ஒருங்கே நிரூபித்துக்காட்டியது இந்த போராட்டம்.
போலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் போலிசு தாக்குதல் தொடுத்தது. போராட்டக்காரர்களை கைது செய்த போலிசு அருகிலுள்ள லஷ்மி திருமண மண்டபத்தில் அடைத்து விட்டு பின்னர் இரவில் விடுதலை செய்தனர்.
நேற்றைய தினம் ‘நீர்நிலைகளை பாதுகாப்போம்! சென்னையை மீட்போம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து SBOA மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் பேரணி நடத்தினர். அந்த பேரணிக்கு அனுமதியும் கொடுத்து அதற்கு முழுக்க, முழுக்க பாதுகாப்பும் கொடுத்திருக்கிறது இதே போலீசு. இப்படி பொதுவாக நீர்நிலைகளை காப்போம் என அமைதி ஊர்வலமோ, இல்லை பாகுதகாப்பான சுற்றுச் சூழல் முழக்கங்களை எழுப்பி போகும் ஊர்வலமோ போனால் அது இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் இவர்கள் எந்த நாளும் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதில்லை. ஆனால் இதே முழக்கத்தை குறிப்பாக வைத்து செயல்பாட்டில் நீங்கள் இறங்கினால் அப்போதுதான் போலீசு தனது அரிதாரத்தை கலைத்துவிட்டு களத்திற்கு வரும்.
மழை பெய்து, வெள்ளம் வந்து வாழ்வாதாரம் முற்றிலும் பறிக்கப்பட்டு, சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ஏரியாக்களில் தண்ணீர் தேங்கி நின்று நோய்களை நிதமும் பரப்பிக் கொண்டிருந்தாலும் அந்த வெள்ளத்திற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கூட அரசை எதிர்த்து வீழ்த்தாமல் சாத்தியமில்லை என்பதை உணர்த்துகிறது இந்த போராட்டம். உங்கள் பகுதியில் வெள்ளத்தை உருவாக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போகிறீர்களா? போலிசு குறுக்கே வந்து நிற்கும், அதை என்ன செய்யப் போகிறீர்கள்? போலிசைத் தாண்டினால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி உங்கள் உயிரை காத்துக் கொள்ள முடியும். போலீசை களத்தில் எதிர்கொள்ள தயாராவதுதான் ஒரே வழி.
(படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்)
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
******
வெள்ளச் சேதம்: இது இயற்கையின் சீற்றமல்ல!
லாபவெறி பிடித்த கார்ப்பரேட் முதலாளிகள், ரியல் எஸ்டேட் கும்பல்கள், அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி!
தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி – சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் முன்பு கடந்த 08-01-2016 அன்று காலை 11.00 மணியளவில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.வி.மு. கோவில்பட்டி வட்டார அமைப்பாளர் வி. சக்திவேல் தலைமை தாங்க விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அவர் தனது தலைமையுரையில் “புறம்போக்கு நிலங்களையும், விவசாய நிலங்களையும் எப்படி ரியல் எஸ்டேட் கும்பல்கள் VAO, RI, தாசில்தார், மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிக்கின்றனர்” என்பதை அம்பலப்படுத்தினார்.
அடுத்து ம.உ.பா.மைய உறுப்பினரும், ஆதித்தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளருமான வழக்கறிஞர் பால்முருகன் கண்டன உரையாற்றினார். “இங்கிலாந்தில் வெள்ளசேதத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் நேரில் சென்று மக்களிடையே பணியாற்றினார். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதவோ நேரில்கூட செல்லாமல் விமானத்திலேயே பார்வையிட்டு முடித்துக்கொண்டார்” என்பதை அம்பலப்படுத்தினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைச்செயலாளர் பொன் தனகரன் தனது கண்டன உரையில் “நான் இந்த அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இவர்கள் எடுக்கும் போராட்டங்கள் மிகவும் சரியாக இருக்கும்; அதுபோலவே இந்த கண்டண ஆர்ப்பாட்டமும் உள்ளது. உண்மையிலேயே மழை வெள்ளத்துக்கு காரணம் அரசும் அதிகாரிகளுமே. 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோரம்பள்ளம் கண்மாய் இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு தீர்வு உழைக்கும் மக்களின் கைக்கு அதிகாரம் வரவேண்டும்” என்று பதிய வைத்தார்.
ம.உ.பா.மைய தூத்துக்குடி மாவட்ட செ.கு. உறுப்பினர் தோழர் ராமர்கண்டன உரையாற்றினார். “தூத்துக்குடியில் கோக்கூர் கண்மாய், அக்கரைக்கண்மாய், புலிப்பாஞ்சாங்குளம் போன்ற என்னற்ற நீர்நிலைகள் ரியல் எஸ்டேட் மாபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டுக்கொள்ளையை – அவை பிளாட்டுகளாக விற்கப்பட்டன” என்பதை தோலுரித்தார். “நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து காற்றாலை முதலாளிகள் கட்டிடம் கட்டியுள்ளனர். இதுதான் வெள்ளம் குடியிருப்புக்குள் வரக்காரணம்” என்று அம்பலப்படுத்தினார். “ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலை முதலாளிகளால்தான் புவி வெப்படைகிறது. ஓசோனில் ஓட்டை விழுந்து இயற்கை தட்பவெப்பம் மாறி கனமழை பெய்துள்ளது. நேற்று இமய மலையில் வெள்ளம், இன்று தமிழகத்திலும் இங்கிலாந்திலும் வெள்ளம். தனியார்மயத்தின் விளைவாக கார்ப்பரேட்டுகள் லாபவேட்டையும், இயற்கைவளங்கள் சூறையாடப்பட்டும் நாடு நாசத்தை அனுபவிக்கிறது” என்று பதியவைத்தார்.
அடுத்ததாக, மக்கள் அதிகாரம் – உசிலை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர். குருசாமி உரையாற்றினார். “மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது அரசோ, அரசியல்வாதிகளோ அல்ல; மக்கள்தான் தன்னார்வலர்களாக, இளைஞர் குழுக்களாக, புரட்சிகர இயக்கங்களாக ஒன்றிணைந்து நிவாரணப் பணியாற்றினர். இதுதான் மக்கள் அதிகாரம். மக்களுக்காக என்று கூறப்பட்ட அரசுத்துறைகள் மக்களை கைவிட்டுவிட்டன. சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் வந்தாலும் இதை மாற்ற முடியாது. மாறாக கொல்லப்படுவார்கள் என்பதற்கு DSP விஷ்ணுபிரியா, வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, தூத்துக்குடி சிவில் சப்ளை அதிகாரி முருகன் போன்று கண்முன்னே உதாரணங்கள் உள்ளன. நீதிமன்றங்களும் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. அங்கு ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்காது. என்வே மக்கள் தங்களின் உயிரையும், வாழ்வாதாரங்களையும் தக்கவைத்துக்கொள்ள அமைப்பாக ஒன்றிணைய வேண்டும். நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் கும்பல்களிடமிருந்து பறித்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு மக்கள் தங்களது அதிகாரத்தை நிறுவுவதன் மூலமே முடியும்” என்றார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கோவில்பட்டியைச் சேர்ந்த தோழர் ஆதி நன்றியுரையாற்றினார்.
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தூத்துக்குடி
உரிமை கேட்டால் இரட்டை ஆயுள் தண்டனை!
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்குத் துணை போகும்
நீதிமன்ற சர்வாதிகாரம்!
அன்பார்ந்த தொழிலாளர்களே உழைக்கும் மக்களே!
கடந்த டிசம்பர் 2, 2015 அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரையும் உடைமையையும் காப்பாற்றிக்கொள்ள நாம் போராடியதை எண்ணிப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது. எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரக்கூடாது என அனைவரும் விரும்பினோம். அந்த நேரத்தில் அதாவது, டிசம்பர் 3-ம் தேதி அன்று, கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் தொழிற்சங்க முன்னணியாளர்கள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
கோவை பிரிக்கால் நிறுவனத் தொழிலாளர்களது போராட்டம் குறித்து பலருக்கு நினைவிருக்கும். 2009-ம் ஆண்டு பிரிக்காலில் எச்.ஆர். அதிகாரியாக பணிபுரிந்த ராய் ஜார்ஜ் என்பவர் தொழிலாளர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டார். இதனைத் தட்டிக்கேட்ட தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறு சதித்தனங்களை செய்தது, ஆலை நிர்வாகம். அது மட்டுமல்லாமல் கடுமையான உழைப்புச் சுரண்டல், உரிமை கேட்கும் தொழிலாளர்கள் பொய் காரணங்களை கூறி பணிநீக்கம், பணியிடைநீக்கம், ஊதிய வெட்டு, நேரடி உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளிகளை ஈடுபடுத்துதல் என அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது பிரிக்கால் நிர்வாகம்.
இந்த அடக்குமுறைக்கு எதிராகத்தான் தொழிலாளர்கள் போராடி வந்தனர். போராடிய 42 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய உணர்வு பூர்வமான போராட்டத்தை ஒடுக்குவதற்கு கூலிப்படையை ஏவியது நிர்வாகம். தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் எச்.ஆர். அதிகாரி சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து போனார்.
இதனைத் தொடர்ந்து முதலாளிகளின் ஏவல் படையான போலிசு, தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று வேட்டையாடியது. முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து சட்டபூர்வமாகக் கூட தொழிலாளர்கள் போராட முடியவில்லை. சுவரொட்டி ஒட்டக்கூட போலிசிடம் அனுமதி பெற வேண்டும். ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் நடத்த முடியாது.
இரட்டை ஆயுள்தண்டை தீர்ப்பை எதிர்த்து முழக்கமிடும். தொழிலாளர்களும், உறவினர்களும் (படம் : நன்றி thehindu.com)
பிரிக்கால் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் பிரச்சனைகளை சுமுகமாகவே பேசித் தீர்க்க முயற்சித்தனர். ஆனால், அவர்கள் அடாவடியாகவும், கேவலமாகவும் நடத்தப்பட்டனர், ராய் ஜார்ஜ் தாக்கப்பட்டதாக சொன்ன நேரத்துக்கும், மருத்தவமனையில் சேர்க்கப்பட்டதாக சொல்லப்பட்ட முரண்பாடு இருந்தது. இப்போது, சட்டப்படி நிரூபிக்கப்படாமலேயே தொழிற்சங்க முன்னோடிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம்.
முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளையும், கொடூரமான சுரண்டலையும் எதிர்த்து போராடும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இதன் மூலம் அரசு நமக்கு சொல்கின்ற பாடம், முதலாளிகளை எதிர்த்து யார் போராடினாலும் அவர்கள் ‘பயங்கரவாதிகள்தான்’
யார் பயங்கரவாதி?
அதிக உற்பத்தி இலக்கு வைக்கப்பட்டு தொழிலாளர்கள் கசக்கி பிழியப்படுவதும், உரிமைகளை பறிக்கப்பட்டு அவர்கள் அடக்கப்படுவதும், தொழிலாளர்கள் தாம் விரும்பிய சங்கத்தில் சேரக் கூடாது என மிரட்டப்படுவது, அடியாட்களால் தாக்கப்படுவது, கருங்காலிகள் மூலம் தொழிலாளர் ஒற்றுமை சீர்குலைக்கப்படுவது, வேலை பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் வறுமைக்குள் தள்ளப்படுவது என்று பல்வேறு செயல்களில் ஈடுபடும் ஈனப்பிறவிகளான இந்த முதலாளிகள்தான் பயங்கரவாதிகள். தினந்தோறும் சுரண்டலைத் தீவிரப்படுத்தி தன் லாபத்தைப் பெருக்குக் கொள்வதற்கு பிணம் தின்னிக் கழுகைப் போல தொழிலாளர்களைக் கொல்லுவது, இந்த முதலாளித்துவம் தான்.
கோவை பிரிக்காலில் மட்டும் இந்த அடக்குமுறைகள் நிகழவில்லை, இதன் சமகாலத்திலேயே நாட்டின் பல பகுதிகளில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களின் மூலம் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளனர். நொய்டாவிலுள்ள இத்தாலிய கிராசியானோ எனும் கார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம்; ஒரிசாவில் கிராஃப்ட் ஆலை போராட்டம்; ஏனத்தில் ரீஜண்ட் ஆலை போராட்டம்; கும்மிடிப்பூண்டியில் எஸ்.ஆர்.எஃப் என பல ஆலைகளில் தொழிலாளிகள் போராடியுள்ளனர்.
தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதம்
கோவை சி.ஆர்.ஐ. பம்ப் முதலாளியின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் சங்கம் துவங்கியதனாலேயே ஊதிய உயர்வு அளிக்க முடியாது என திமிரோடு அறிவித்து, சங்கம் வைத்த தொழிலாளர்களை வீதியில் தள்ளி “எந்தச் சட்டமும் எதுவும் என்னைப் புடுங்க முடியாது” என கொக்கரிக்கிறான், சி.ஆர்.ஐ பம்ப் முதலாளி சவுந்திரராஜன்.
ஆமாம், சட்டம் அவரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக அவரின் மகளின் திருவணத்திற்கு காவல் காத்து தன் விசுவாசத்தைக் காட்டியது போலிசு! ஓசுரில் வெக் இண்டியாவிலும் இதே நிலைமைதான். பெரிய கார்ப்பரேட் நிறுவனம் என மார்தட்டிக் கொள்ளும் டி.வி.எஸ், லேலண்ட், கார்போரேண்டம் போன்ற ஆலைகளில் எந்தவித சட்டபூர்வ உரிமைகளும் இல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நிரந்தர தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளை முதலாளிகள் மேற்கொள்கின்றனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற கொலைக் களங்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஜி.எஸ்.எச். என்கிற பன்னாட்டு நிறுவனம், சங்கம் துவங்கியதற்காகவே தொழிலாளர்களை காவு கேட்கிறது. நாடெங்கிலும் இதே நிலைமை தான்!
சங்கமாய் திரளு! வர்க்கமாய் எழு!
சங்கத்தை அங்கீகரிக்க முதலாளி மறுக்கிறான். ஆனால் தொழிலாளிக்கோ உரிமையைப் பெற சங்கம் தான் ஒரே வழி. முதலாளி மறுக்க மறுக்க வீறுகொண்டு சங்கமாய் எழுகிறது தொழிலாளி வர்க்கம்.
ஆம், தமக்கு எதிராக சங்கம் அமைத்தார்கள் என்பதாலேயே சதித்திட்டத்தில் தொழிலாளர்களைச் சிக்க வைத்து எச். ஆர் அதிகாரியை எரித்தார்கள் என்கிற பொய் வழக்கில் மாருதி தொழிலாளர்களைச் சிறையில் தள்ளியது மாருதி நிர்வாகம். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக சிறையில் வாடும் 147 தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுக்கிறது அரியானா நீதிமன்றம், எஞ்சிய 32 பேருக்கு தண்டனை உறுதி என எச்சரித்துள்ளது. இதே அரியானா நீதிமன்றம் தான் இரட்டை கொலை செய்த குற்றவாளிக்கு 15 நாட்களில் ஜாமீன் தந்திருக்கிறது. தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கு நீதிபதிகளுக்கு தடையாக உள்ள அம்சம் எது?
இதற்கு பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. முதலாளிகள் மீதான வர்க்கப் பாசம்தான் தடையாக உள்ளது! பிரிக்காலும் மாருதியும் நமக்குத் தரும் பாடம் இதுதான். முதலாளிகளுக்கு எதிராகப் போராடுகிற தொழிலாளிகள் ஒடுக்கப்படுவார்கள். இத்தனை அடக்குமுறைகளையும் மீறி, மாருதி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுடன் இணைந்து நிர்வாகத்தின் அடியாள் சங்கத்தை முறியடித்து வெற்றி பெற்றது மாருதி தொழிலாளர் சங்கம். பிரிக்காலிலும் தொழிலாளர் சங்கம் உறுதியாக முன்னேறுகிறது. அந்த வகையில் நெருப்பாற்றையே தன் உழைப்பால் மாற்றியமைக்க வல்லமை படைத்தது தொழிலாளி வர்க்கம் என்பதை உணர்வோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை தீக்கிரையாக்குவோம்!
தேவை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்
தொழிலாளர்கள் மட்டுமல்ல, மொத்த உழைக்கும் மக்களும் வாழ்வுரிமையை இழந்து நிற்கின்றனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தச் சட்டங்கள் நீக்கப்படுகின்றன. விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு கூலிகளாக துரத்தியடிக்கப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகிய அனைத்தும் பண்டமாக மாற்றப்பட்டு பணம் இருப்பவனுக்கே இந்த உலகம் என்கின்ற ‘நீதி’யை முதலாளித்துவம் நிறுவ முயற்சி செய்கிறது.
ஆனாலும், முதலாளித்துவம் தோன்றியதிலிருந்து இன்று வரை தம் சொந்த மக்களைக் கூட காப்பாற்ற வக்கற்றதாக உள்ளது. இதனை ஏன் நாம் நம் தலையில் சுமந்து கொண்டு திரிய வேண்டும்? முதலாளித்துவத்துக்கு துணை போகின்ற – அதன் சொத்துக்களை பாதுகாக்கின்ற இந்த அரசும், அதன் கட்டமைப்புகளான போலிசும், நீதிமன்றமும் ஊடகங்களும், நமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காது என்பது தெளிவாகத் தெரியவில்லையா?
உழைக்கும் மக்களுக்கும் எதிராக உள்ள இந்த ஆளத்தகுதியிழந்த அரசமைப்பை தூக்கியெறிவோம்! அதிகாரத்தை உழைக்கும் மக்களுக்கு வழங்கும் அரசை நிறுவுவோம்.
கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!
தொழிற்சங்க முன்னோடிகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை முறியடிப்போம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு துணைபோகும் நீதிமன்ற சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!
உழைக்கும் மக்களுக்கான அரசை புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் நிறுவுவோம்!
கோவை பிரிக்கால் முதலாளிக்கு துணை போகும் நீதிமன்றம் – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்!
கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களின் சார்பில்
கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் முதலாளித்துவ பயங்கரவாததுக்கு துணை போகும் நீதிமன்ற சர்வாதிகாரத்தை முறியடிப்போம்
என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டத்தின் தலைவர் தோழர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் நாகராஜ் கண்டன உரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில், ஆவடி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட பு.ஜ.தொ,மு சார்பாக திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 500 மேற்பட்ட தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள் தொடர்புக்கு: 8807532859, 9445389536, 9445368009, 9994386941
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்களுக்கு அக்டோபர் 2009 மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தலையங்கக் கட்டுரையை கீழே தருகிறோம்.
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் யார்?
கடந்த செப்டம்பர் 21-ம் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராஜ் ஜே. ஜார்ஜ் தொழிலாளர்களால் தாக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாண்டு போயுள்ளான். அதைக்கண்டு முதலாளிகள் சங்கம் ‘வன்முறை’, ‘பேராபத்து’ என்று அலறுகிறது. தொழிலாளர்களை வன்முறையாளர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அமைச்சர்களோ, தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்களைப் போல பேசுகின்றனர். வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக பிரிக்கால் தொழிற்சங்க முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டுள்ளனர். கோவை நகரமே கலவர பூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பிரிக்கால் ஆலையைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனமாக விரிவாக்கி வளர்க்கும் நோக்கத்தோடு, அதீத உற்பத்தி இலக்கு வைத்து தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். இந்த ஆலையில் ஏற்கனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும், அவரை துரோகத்தனத்தில் இறங்கி, முதலாளி விஜய் மோகனின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து போயின. எனவே, கடந்த 2007-ம் ஆண்டில் பெரும்பான்மை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தைத் தொடங்கினர். அன்று முதல் தொழிலாளர்க்ள மீது அதிகரித்து வரும் கொடுமைகள்-அடக்குமுறைகள்-பழி வாங்கும் நடவடிக்கைகள் கொஞ்சநஞ்சமல்ல. கொத்துக் கொத்தாக வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தொழிலாளர்களின் புதிய தொழிற்சங்கத்தை கடந்த மூன்றாண்டுகளாக அங்கீகரிக்க மறுத்ததோடு, தொழிலாளர் ஆணையர் முதல் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் போட்ட எல்லா உத்தரவுகளையும் ஆலை நிர்வாகம் குப்பைக் கூடையில் வீசியெறிந்தது.
தொழிலாளர்களையும், சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது; அடியாட்களை வைத்துத் தாக்குவது; கருங்காலிகளை உருவாக்கி, தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைப்பது; வேலைநீக்கம் செய்தும் சம்பளத்தை மறுத்தும் தொழிலாளர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பது; உற்பத்தியைப் பெருக்க பெண் தொழிலாளிகளை மிரட்டி கட்டாயமாக ஓவர்டைம் செய்ய வைப்பது; 14 ஆண்டுகளாக இந்த ஆலையில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக் கூலிகளாக வைத்துச் சுரண்டுவது; தொழிலாளர் ஆணையர் உத்தரவுகளை அலட்சியப்படுத்திவிட்டு அடக்குமுறைகளைத் தொடருவது – எனக் கணக்கற்ற அட்டூழியங்களைச் செய்து வந்த பிரிக்கால் நிர்வாகத்தின் கொடூரங்களைத் தாங்க முடியாமல் தொழிலாளர்கள் திருப்பித் தாக்கி விட்டனர். இதில் முதலாளியின் அடியாளாகச் செயல்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராய் ஜே ஜார்ஜ் மாண்டு போயுள்ளான். இதற்காக வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதுமில்லை.
பிரிக்கால் நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக, அவ்வாலை வாயிலின் முன் பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் (கோப்புப் படம்)
தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதும், தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதும் பிரிக்கால் ஆலையில் மட்டும் நடக்கும் அதிசயம் அல்ல. தொழிலாளர்களுக்குக்க் குறைந்தபட்ச ஊதியம் தரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் கூடாது என்பதிலிருந்து தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது உலகமயமாக்கம். இதற்கு ஏற்றாற்போல தொழிலாளர் நலச்சட்டங்கள் திருதப்படுகின்றன. தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
உலகமயமாக்கம் என்ற பெயரில், நாட்டின் தொழிலையும் வர்த்தகத்தையும் வளர்ப்பது என்ற பெயரில் எல்லா ஓட்டுக் கட்சிகளின் ஆதரவோடு இத்தகைய முதலாளித்துவ பயங்கரவாதம் கோர தாண்டவமாடுகிறது.
கடந்த மாதத்தில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக இரு விமானிகளை வேலைநீக்கம் செய்ததை எதிர்த்து ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர். அந்நிறுவனத்தின் முதலாளியான நரேஷ் கோயல், மேலும் சில ஊழியர்களை வேலைநீக்கம் செய்து எச்சரித்ததோடு, தொழிலாளர்களை “பயங்கரவாதிகள்” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினான்.
தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 188 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்தது, ஹூண்டால் நிறுவனம்.
சென்னை அருகே. நெல்காஸ்ட் ஆலையில் விபத்தில் மாண்டுபோன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப் பிணமாக தெருவில் வீசியெறிந்ததை எதிர்த்துப் போராடிய குற்றத்திற்காக 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து மிரட்டியது ஆலை நிர்வாகம்.
பொன்னேரியிலுள்ள கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலையில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது, அந்த ஆலை நிர்வாகம்.
கோவையில் உள்ள சிறீராம் கோகுல் டெக்ஸ்டைல்ஸ் ஆலையில் பீகாரைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் எவ்வித உரிமையுமின்றி கொத்தடிமைகளாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட கொடுமை, கடந்த செப்.28-ம் தேதி வெளிவந்து நாடே அதிர்ச்சி அடைந்தது.
தமிழகம் மட்டுமல்ல, நாடெங்கும் உலகெங்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம் தொழிலாளர் வர்க்கத்தை கசக்கிப் பிழிவதும், பொருளாதாரச் சரிவைக் காரணம் காட்டி பல்லாயிரக்கணக்கானோரை வேலைநீக்கம் செய்து பட்டினிச் சாவுக்குத் தள்ளுவதும் கேள்விமுறையின்றி தொடர்கின்றன. இவற்றுக்கெதிரான தொழிலாளர் போராட்டங்கள், குர்கான் வழியில் மிருகத்தனமாக ஒடுக்கப்படுகின்றன. பாசிச அடக்குமுறைச் சட்டங்கள் ஏவிவிடப்படுகின்றன. உலகமயமாக்கத்தின்கீழ் எங்கெல்லாம் தொழிலாளர்களி அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் ஏவப்படுகின்றனவோ, அங்கெலாம் குமுறும் தொழிலாளர்கள், சட்டரீதியான வாய்ப்புகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் தன்னெழுச்சியாக எதிர்த்தாக்குதல்களை நடத்துகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதியன்று நொய்டாவிலுள்ள இத்தாலியைச் சேர்ந்த கிராசியானோ எனும் ஆர் உதிரி பாக உற்பத்திக் கூடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான்.
உலகின் மிகப்பெரிய இரும்பு-எஃகு நிறுவனமான அர்சிலர் மித்தல் நிறுவனத்தின் லக்சம்பர்கள் தலைமை நிர்வாக அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு கடந்த மே 12-ம் தேதியன்று அடித்து நொறுக்கி நாசப்படுத்தினர்.
பிரான்சு நாட்டின் டவுலோசிலுள மோலெக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் அதன் தலைமை நிர்வாக இயக்குனரை நடுத்தெருவில் ஓட ஓட அடித்துத் துவைத்துள்ளனர்.
கடந்த ஜூலை 28-ம் தேதியன்று சீனாவின் ஜிலின் நகரிலுள்ள டோங்குவா இரும்பு-எஃகு ஆலையின் நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான்.
அன்றாடம் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ பயங்கரவாதம் ஏவிவரும் கொடூரங்களின் எதிர்விளைவுகள்தாம் இவை.
பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து சென்னை-அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 01-10-2009 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய தெருமுனைக்கூட்டம்.
இந்நிலையில் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் ஒடுக்கப்பட்டால், இனி வரும் நாட்களில் எந்தவொரு தொழிலாளர் போராட்டமும் மிருகத்தனமாக நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பது தொழிலாளர்களின் – உழைக்கும் மக்களின் உடனடிக் கடமை.
ஆனால், போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்களோ, முதலாளி வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு பிரிக்கால் தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதலை “வன்முறை” என்று ஊளையிடுகின்றன. தர்ணா, மறியல், மொட்டையடித்து நாமம் போட்டு ஊர்வலம் என்று வழக்கமான தொழிற்சங்க செக்குமாட்டுப் பாதையில், ‘அமைதியான-ஜனநாயக வழியில்’ போராடச் சொல்லி தொழிலாளர்களுக்கு உபதேசம் செய்கின்றன. இத்தகைய துரோக தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், முதலாளித்துவ பயங்கத்தை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற புதிய, புரட்சிகரமான சங்கத்தை கட்டியமைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் முடியாது.
இன்றைய உலகமயமாக்கச் சூழலில், முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடும் சூழலில், வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர் ஓரணியில் திரண்டு போராடினால்தான், இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டுப் போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் தடுத்து நிறுத்த முடியும். உலகமயச் சூழலில் இத்தகைய தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையும், மாறிய சூழலுக்கு ஏற்ப புதிய போராட்ட முறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். குறுகிய தொழிற்சங்கவாத வட்டத்திற்குள் முடங்கி விடாமல், இத்தகைய அடக்குமுறை-உரிமை பறிப்புகளுக்கு அடிப்படையாக உள்ள மறுகாலனியாக்கத்தை எதிர்த்து அரசியல் போராட்டங்களைக் கட்டியமைப்பதே இன்று தொழிலாளர் இயக்கத்தின் முன்னுள்ள உடனடிப்பணி.
______________________________________ தலையங்கம் புதிய ஜனநாயகம், அக்டோபர் 2009 ___________________________________
“வாழை பயிரிட்டால் வாழ்க்கை சிறக்கும்”என்ற நம்பிக்கையோடு பயிரிட்ட தேனி மாவட்ட விவசாயிகள், நடவு செய்த தங்கள் கைகளாலேயே இன்று வாழைமரங்களை வெட்டி வீசுகிறார்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விளைந்த வாழைகள் தாரிலேயே பழுத்து அழுகி வீணாகிக் கிடக்கிறது! சகிக்கமுடியாத ஒரு விவசாயி தானே அறுவடைசெய்து, வண்டியில் ஏற்றிச்சென்று பக்கத்து கிராம மக்களுக்கு பழங்களை இலவசமாக கொடுக்கிறார்! ஒரு வருடத்திற்கு முன்பு ஒருகிலோ 12-17 ரூபாய்க்கு விற்ற வாழையை, இன்று கிலோ 2 ரூபாய்க்கு வாங்க ஆளில்லை! “ஒரு ஏக்கருக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஒரு வாழை மரத்தை 11மாதம் வளர்ப்பதற்கு 150 ரூபாய்வரை செலவாகிறது. 3 ஏக்கரில் பயிரிட்டு 4.50 லட்சம் செலவு செய்துவிட்டு, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன். மீதி 2.50 லட்சம் கடனை கூலிவேலை செய்து அடைத்து வருகிறேன்” என்று கதறுகிறார் குத்தகை விவசாயி மணிகண்டன்! இதே அவலக்குரல்தான் கம்பம், கூடலூர், கேகே.பட்டி உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை என தேனிமாவட்டம் முழுக்க எதிரொலிக்கிறது! காரணம் என்ன? கடந்த ஒரு வருடமாகத் தொடரும் விலைவீழ்ச்சி!
ஏன் இந்த விலைவீழ்ச்சி?
“அதிகமாக விற்பனையாகும் சென்னை, கடலூர்,பாண்டிச்சேரியில் ஏற்பட்ட கடுமையான மழைவெள்ளப் பாதிப்புதான் முக்கிய காரணம். மேலும், விவாசாயிகளின் பேராசையால் தேவைக்கு அதிகமாக பயிரிட்டு விட்டார்கள். இதனால் ஏற்பட்ட விளைச்சல் அதிகரிப்பும் காரணம்” என தோட்டக்கலை அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். பணக்கார விவசாயிகளும் இதே கருத்தை பரவலாக சொல்கிறார்கள்!
ஆனால், இவர்களின் பதிலை கே.கே.பட்டி கிராம சிறுவிவசாயிகள் மறுக்கின்றனர். ”மழைவெள்ளம் வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. விலைவீழ்ச்சி என்பது ஒரு வருடமாக தொடர்ந்து சரிந்து கொண்டுதான் இருக்கிறது. எக்ஸ்போர்ட் ஆர்டர் இல்லை என்று சொல்கிறார்கள்.அதுதான் உண்மையான காரணம்” என்கிறார்கள்! “ஏற்றுமதிக் கம்பெனிகள் ஏதாவது நேரடியாக கொள்முதல் செய்கிறதா?” என்று கேட்டதற்கு, அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி ”அப்படி யாரும் வருவதில்லை. பக்கத்து ஊரிலிருக்கும் பெரிய வியாபாரிகள்தான் கொள்முதல் செய்கின்றனர்” என்றார்.
தொடர் விசாரனையில், A.P.K- என்ற A.P.கருப்பையா மற்றும், பூமலைக்குண்டு பாண்டி ஆகிய இருவரும்தான் அந்த வியாபாரிகள் என்பது தெரிந்தது. இருவரும் சின்னமனூரில் குளிருட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு சொந்தமாக வைத்துள்ளனர்! இதில், A.P.கருப்பையா என்பவர் தமிழக வாழை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார்! மேலும் தமிழகத்தின் ‘முன்னோடி’ வாழை விவசாயி என்று A.P.கருப்பையாவின் வீடியோ பேட்டியை தேசிய தோட்டக்கலைத் துறையின் இணையத்தளம் பதிவிட்டுள்ளது!
மணிகண்டன் – கிருஷ்ணமூர்த்தி
உள்ளூர் வியாபாரிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் என்ன தொடர்பு? ஏற்றுமதிக் கம்பெனிகள் ஏன் நேரடிக் கொள்முதல் செய்யவில்லை? வாழை ஏற்றுமதிக்கும்,வாழை விவசாயிகளின் அழிவுக்கும் என்ன தொடர்பு? மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் வாழை விவசாயம் நசிந்துபோன பிறகும்கூட அரசும்-அரசு அதிகாரிகளும் வாய்மூடிக் கிடப்பதற்கு என்ன காரணம்? விவசாயிகள் பேராசை பிடித்தவர்கள் என்பது உண்மையா? விடை தெரிய வேண்டுமானால், சில விசயங்களை பின்னோக்கி பார்க்க வேண்டும்!
ஒற்றைப் பயிர் மண்டலங்கள் ( MONOCULTURE)!
பிராண்டட் வாழைப் பழம்
கடந்த 2005-களில், மத்திய வேளாண்மை அமைச்சகம் வெளியிட்ட வேளாண்மை கொள்கையின் ஒரு பகுதியாக, ”நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழல்களுக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஓரிரு பயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பயிரிடுவதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பது” என்ற திட்டத்தை வலியுறுத்தியது! அதன்படி தமிழகத்தில், தஞ்சை திருவாரூர்—நெல் மண்டலம், கோவை,ஈரோடு—காய்கறி, தென்னை மண்டலம், தருமபுரி,ஓசூர்- மா, மலர்வகைகள் மண்டலம் என்றும், தேனியில் வாழைமண்டலம் என்றும் வகைப்படுத்தியது அரசு.
இம்மண்டலங்களில், நிர்ணயித்த பயிர்களுக்கு புதிய வீரியரக விதைகள்,மற்றும் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை புகுத்துவது, சிறப்பு மானியத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதோடு, தோட்டக்கலைத் துறை மூலம் தொடர் விளம்பரங்கள்-கருத்தரங்குகள்-நடத்தி விவசாயிகளிடம் விரிவான பிரச்சாரமும் செய்தது அரசு! (இந்த ஒற்றைப்பயிர் மண்டலம் என்பதே வேளாண் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்கு சாதகமானது என்பது தனிக் கதை!)
வீரிய ரக வாழை
கடந்த 2007 அக்டோபரில், திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த, அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,“உலகின் மிகப்பெரிய வாழை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். ஆண்டிற்கு 2 கோடி டன் வாழை உற்பத்தி செய்யும் நாம், வெறும் 0.5 சதவீதம்தான் ஏற்றுமதி செய்கிறோம். அடுத்த 5 ஆண்டிற்குள் இதை 5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்று அறிவித்தார்!
அரசின் நோக்கத்தை அறிந்த தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (NBRC ), இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்பட கிராண்ட்நைன் (GRANDNAINE-G9) என்ற வீரிய ரகவாழையை ஏற்றுமதிக்கு உகந்த ரகமாக பரிந்துரைத்தது. இதற்காகவே காத்திருந்தது போல ஜெயின், கோத்ரேஜ், ஸ்பிக், ரிலையன்ஸ், ஏஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் G-9 ரகத்தின் திசுவளர்ப்புக் கன்றுகளுடன் தேனிமாவட்டத்தை முற்றுகையிட்டு விட்டன!
விலை வீழ்ச்சியின் குற்றவாளிகள் யார்?
இதுவரை, நாட்டுபச்சை (ரோபஸ்டா), ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன், மொந்தன் ஆகிய உள்நாட்டு வாழைகளை மட்டுமே பயிரிட்டுவந்த விவசாயிகளிடம் கிரான்ட்நைன் வாழையை புகுத்தியது அரசும்-தோட்டக்கலைத் துறையும்! “ஒரு தாரில் 16 சீப்புகள், 250 வாழைக்காய்கள், ஏக்கருக்கு 45 டன் விளைச்சல், சொட்டுநீர் போட்டால் கூலியாள் செலவு மிச்சம், ஏற்றுமதிக்கு கிராக்கி இருப்பதால் கூடுதல் லாபம்” என்று சுரண்டல் லாட்டரிக்காரனைப் போல பிரச்சாரம் செய்து விவசாயிகளை சுண்டி இழுத்தது தோட்டக்கலைத் துறை!
மேலும், தங்களின் செல்லப்பிள்ளைகளான ஏ.பி.கருப்பையா மற்றும் பாண்டி போன்ற பணக்கார விவசாயிகள் சிலருக்கு அனைத்தையும் மானியமாகவும்-இலவசமாகவும் கொடுத்து G-9, ஐ பயிரிட வைத்து, “இதோ ஒரு ஏக்கரில் இரண்டு லட்சம் லாபம் பார்த்த விவசாயி! வீரியரகத்தின் அபார விளைச்சலைப் பாரீர்” எனப் பாராட்டி விருதுகள் கொடுத்து விளம்பரம் செய்தனர்! அடுத்து பல லட்சங்களை மானியமாகக் கொடுத்து இவர்களையே குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளையும் கட்டவைத்தனர்!
அன்றைய வேளாண் உற்பத்தித் துறை கமிசனர் (இன்றைய தமிழக தேர்தல் கமிசனர்) சந்தீப் சக்சேனா
கடந்த 2013 டிசம்பரில் தேனி வந்த அன்றைய வேளாண் உற்பத்தித்துறை கமிசனர், (இன்றைய தமிழக தேர்தல் கமிசனர்) சந்தீப் சக்சேனா, ”தற்போது தேனி மாவட்டத்தில் திசுவளர்ப்புக் கன்றுகள் பயிரிட்டுள்ள 6,000 ஹெக்டேர் பரப்பளவை 10,000 ஹெக்டேர் அளவுக்கு உயர்த்தவேண்டும்” என வலியுறுத்தினார்! முன்பு, ”ஒரு கன்றின் விலை 12 ரூபாய்- ஒரு ஏக்கருக்கு 1.50 லட்சம் செலவு” என்பதால் தயங்கி நின்ற சிறுவிவசாயிகள், இதற்குப் பின்தான் நம்பிக்கையுடன் கடன்வாங்கி வாழையை நடவு செய்தனர்.
இவ்வாறு அனைத்து வகையிலும் விவசாயிகளை ஆசைகாட்டி G-9 வாழைக்கு தூண்டிவிட்ட அரசும் அதிகாரிகளும்தான் இன்று,”பேராசை பிடித்த விவசாயிகள்” என்றும், “விளைச்சல் அதிகரிப்புத்தான் விலைவீழ்ச்சிக்குக் காரணம்“ என்றும் விவசாயிகள் மீது பழிபோடுகிறார்கள்! தாங்கள் கூறிய அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைப்பிடித்து உற்பத்தி செய்த விளைச்சலை,வீணாகாமல் பாதுகாப்பதற்கும்,அதை விற்பதற்கான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித்தர முடியாமல் திராணியற்று-தோற்றுப்போய்- விவசாயிகளுக்கே எமனாக நிற்கும் இந்த அரசும்-தோட்டக்கலை அதிகாரிகளும்தான் உண்மையான குற்றவாளிகள்!
G-9 வாழையின் பலன் யாருக்கு?
சிக்யுட்டா வாழை
சர்வதேச சந்தையில் கிரான்ட்நைன் வாழை ‘சிக்யுட்டா வாழை’ என்று பிரலமாக அழைக்கப்படுகிறது. சிக்யுட்டா (CHIQUITA) என்பது உலக வாழைப்பழ வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க நிறுவனம்! 70 நாடுகளில், 20,000 ஊழியர்கள், 20 சொந்த சரக்குக் கப்பல்களுடன் இயங்கும் இந்நிறுவனம் உலகின் 50 சதவீத வாழை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகிறது! இதன் ஒருவருட லாபம் 15,000 கோடி ரூபாய்!
கவர்ச்சிகரமான பொன்மஞ்சள் நிறம், அமெரிக்க-ஐரோப்பியர்களின் விருப்பத்திற்கேற்ற இனிப்பு, நறுமணம், துணைத் தொழில்களான ஜாம், ஜூஸ், ஒயின், பிராந்தி, சாலட், ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு ஏற்ற இறுக்கமான மாவுசத்து ஆகிய, சர்வதேச சந்தை நலனுக்குப் பொருத்தமாக இருப்பதால்தான் G-9 ரக வாழைக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்தைப்படுத்துகிறது சிக்யுட்டா நிறுவனம்! இதனாலேயே “சிக்யுட்டா வாழை” என்ற பெயர் பிரபலமானது!
சிக்யுட்டா நிறுவனத்தின் கப்பல்
திருச்சியிலுள்ள நம் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் G-9 வாழையை பரிந்துரைப்பதும் ஏற்றுமதி நோக்கத்தில்தான்! ஆனால், விவசாயிகளுக்கு லாபம் பெற்றுத்தந்து அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காகவே இதைப் பரிந்துரைப்பது போல அரசும் அதிகாரிகளும், விவசாயிகளை மோசடி செய்து வருகின்றனர்!
சர்வதேச சந்தையின் நிலவரம் என்ன?
டெல் மொன்டி வாழை
உலகில் 120 நாடுகளிலிருந்து சுமார் 9 கோடிடன் வாழை உற்பத்தியாகிறது! இதன் வர்த்தமதிப்பு 7 பில்லியன் டாலர்! இந்திய மதிப்பில் சுமார் 45,000 கோடி ரூபாய்! மதிப்புக் கூட்டிய பொருள்களையும் உள்ளடக்கிய இதன் சில்லறை வர்த்தக மதிப்போ 1.25 லட்சம் கோடி என்கிறது புள்ளிவிவரம்!
இம்மாபெரும் உலகச்சந்தையின் 80 சதவீதத்தை சிக்யுட்டா, டோலே (DOLE), டெல்மொன்டி(DEL-DMONT), ஃபெபீஷ்(FEFFES) நோபா(NOBOA) ஆகிய ஐந்தே பன்னாட்டுக் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன! இந்நிறுவனங்கள் தாங்கள் செயல்படும், நிகாரகுவா, கொலம்பியா, ஹோண்டுராஸ், கோஸ்ட்டரிகா, காமரூன், பெரு முதலிய நாடுகளில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் நேரடியாக G-9 வாழையை பயிரிட்டுள்ளன. உதாரணமாக நோபா நிறுவனம் ஈகுவடாரில் மட்டும் 18,000 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளது!
இந்தியா வாழைப்பழத்தை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகள்
மேலும், இங்கு விளைவதை சந்தை நாடுகளுக்கு கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட சரக்குக்கப்பல், மற்றும் வாகனங்கள், பதப்படுத்தும் கிடங்குகள், சங்கிலித்தொடர் விற்பனை நிலையங்களையும் சொந்தமாகக் கொண்டவை இப்பகாசுரக் கம்பெனிகள்! உள்ளூர் வெள்ளை வேட்டி வியாபாரிகளையே சமாளிக்க முடியாத விவசாயிகளை, இந்தப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் போய் வியாபாரம் செய்து சம்பாதிக்கச் சொல்கிறது அரசு!
உலக வாழைச் சந்தையின் நெருக்கடி!
தொழிலாளர் வேலை நிறுத்தம்
சிடாக் – பெரு வேலை நிறுத்தம்
கடந்த சில வருடங்களாக உலக வாழைச்சந்தையில் கடும் நெருக்கடி நிலவுகிறது.
1) பன்னாட்டுக் கம்பெனிகள் நேரடியாக விவசாயம் செய்துவரும் நாடுகளில், தொழிற்சங்கங்கள் வலுப்பெற்று சம்பள உயர்வு மற்றும் பணிப்பாதுகாப்பு கோரி போராடி வருகின்றன. இதனால் பெருநிறுவனங்கள் தொழிலாளிகளுக்கு அதிக சம்பளம் சலுகை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.
ஒற்றைப் பயிர் வாழை நோய்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
2) ஒற்றைப்பயிர் மண்டலங்களில் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதால் பனாமா வைரஸ் (TR4) மற்றும் கரும்புள்ளி நோய் (BLACK SIGATOKA) ஆகியவற்றின் தீவிரத் தாக்குதலால் உலகச்சந்தையின் தேவையை ஈடுகட்ட முடியாத அளவுக்கு G-9 வாழை உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது! ஒழிக்கவே முடியாத இந்நோய்களை “வாழையின் எய்ட்ஸ்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்!
3) வால்மார்ட் போன்ற சங்கிலித்தொடர் விற்பனை நிலையங்களின் விற்பனைப் போட்டியால், தங்களின் கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பன்னாட்டு வாழைக் கம்பெனிகள் தள்ளப்பட்டுள்ளன.
பன்னாட்டு பிராண்டுகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இக்காரணங்களால், தங்களின் நேரடி விவசாய முறைகளை கைவிட்டுவிட்ட நிறுவனங்கள், உள்ளூர் இடைத்தரகர்கள் மூலமே அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்வதன் மூலம், தங்களின் நெருக்கடியை தீர்த்துக்கொண்டு வருகின்றன. மேலும் நோய் தாக்குதல் குறைவான புதிய விளைச்சல் பரப்பைத் தேடியலைந்து வரும் இந்நிறுவனங்களுக்கு, இந்தியாவும், இலங்கையும் பொருத்தமாக இருக்கும் என்று 2013 ஆண்டின் ஒரு சந்தை ஆய்வு கூறுகிறது.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இந்தியாவின் வாழை ஏற்றுமதிக் கனவு… !
இந்தியாவின் வாழை ஏற்றுமதிக்கு முக்கிய சந்தை ஈரான், ஓமன், துருக்கி, அரபு நாடுகள் மட்டும்தான். பெரிய சந்தையான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக இன்றுவரை ஏற்றுமதி செய்யவில்லை! தகுதியுள்ள பெரிய நிறுவனங்களும் கூட அத்தகைய முயற்சிக்கு தயாராக இல்லை. ஏன் ரிலையன்ஸ் நிறுவனம் வாழை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபவில்லை? என்ற கேள்விக்கு,“நம் நாட்டில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு விவசாயிகள்தான் அதிகம். சந்தையில் உள்ளூர் வியாபாரிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. இதனால்தான் பன்னாட்டுக் கம்பெனிகளே இந்தியாவில் வர்த்தகம் செய்யத் தயங்குகின்றன” என்கிறார் ரிலையன்சின் வாழை வர்த்தகப்பிரிவின் தலைமை அதிகாரி M.ராம்சுவாமி! (அதனால்தான் தனது ரிலையன்ஸ் ஃபிரஷ்-க்காக 2000 வாழை விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்!)
டெல் மொன்டி – பார்தி என்டர்பிரைசஸ் கூட்டு
அதாவது, இந்தியாவில் பன்னாட்டுக் கம்பெனிகள் செயல்பாட்டுக்கும், ஏற்றுமதிக்கும் தடையாக உள்ள சிறு விவசாயிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்! பன்னாட்டுக் கம்பெனிகள் சிரமமே இல்லாமல் இங்குவந்து வர்த்தகச் சூதாட்டத்தைத் தொடர களம் அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை! இதற்காக அரசு கண்டுபிடித்த புதிய வழிமுறைதான் ‘விவசாயிகள் கூட்டமைப்பு’!
கம்பம் பகுதியில் 256 விவசாயிகளை இணைத்து ஜான் பென்னிகுயிக் விவசாயிகள் டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கி, இவர்களிடம் உள்ள 1,500 ஏக்கரில் வாழையை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் வழிகாட்டி இயக்கி வருகிறது! இதுபோன்ற கூட்டமைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், பன்னாட்டுக்கம்பனிகள் எளிதாக இவர்களை அணுகி மொத்தமாக கொள்முதல் செய்யமுடியும் என்பதுதான் அரசின் திட்டம்!
ஏற்கனவே, அமெரிக்க நிறுவனமான டோலே (dole), மகராஷ்டிராவில் உள்ள வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்போடு வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது!
உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவே இந்திய அரசின் வேளாண் கொள்கை!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
“உள்நாட்டு உற்பத்திக்கு அரசு தரும் மானியம்-சலுகைகளை ரத்துசெய்! ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடு! அரசு தலையிடு இல்லாமல், சந்தையை சுதந்திரமாக இயங்க விடவேண்டும்!” என்கிறது ‘காட்’ ஒப்பந்தவிதி! இதற்கேற்ப உள்நாட்டுச் சட்டங்களை மாறியமைக்க உத்தரவிடுகிறது உலகவர்த்தகக் கழகம்! எஜமானர்களின் விருப்பத்தையே தனது கொள்கையாக அறிவித்து அமுல்படுத்துகிறது இந்திய அரசு! இதனால்தான், நம் விவசாயிகள் கண்முன்னே அழிவதைக்கூட கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறார்கள்! காட்டாமணக்கு, கொக்கோ, எண்ணெய் பனை என புதுப்புது ஏற்றுமதி விவசாயங்களை கொண்டுவந்து நம்மீது திணிக்கிறார்கள்! நாம் ஒவ்வொரு முறையும் நட்டப்பட்டு வீதியில் நிற்கும்போது, நம்மீதே குற்றம் சுமத்திவிட்டு ஓடிஒளிந்து கொள்கிறார்கள்! எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இதே நிலைமைதான் தொடர்கிறது!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
எனவே,
ஏற்றுமதி விவசாயம் என்பதே விவசாயிகளை விவசாயத்தைவிட்டு, நிலத்தைவிட்டு விரட்டியடிக்கும் மாபெரும்சதி!
பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்கு நம்மை பலிகடாவாக்கும் ஏற்றுமதி விவசாயத்தைப் புறக்கணிப்போம்!
உள்நாட்டு சந்தைக்கான உணவுப்பொருள் உற்பத்திக்கு மாறுவோம்!
நமது உற்பத்திப் பொருளுக்கான விலையை நாமே தீர்மானிக்கும் உரிமையைப் பெறுவதற்கு, மக்கள் அதிகாரம் நிறுவப் போராடுவோம்!
மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து, கூடலூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
“எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்கிறது குறள்.
ஆனால், மோடி அரசு முன் வைக்கும் புதிய கல்விக் கொள்கை – 2015 சமூகத்தின் கண்களாக இருக்கும் கல்வியை நோண்டி விற்றுத் தீர்க்கப் பார்க்கிறது. இந்தியக் கல்விக் கட்டமைப்பை நிர்மூலமாக்கி, மனிதவளச் சுரண்டலுக்கு உலகளாவிய அளவில் சட்டபூர்வ வடிவம் கொடுக்கவிருக்கிறது.
1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1990-களில் புகுத்தப்பட்ட காட் ஒப்பந்தம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 15, 2015 அன்று நைரோபியில் நடந்த உலக வர்த்தகக் கழக மாநாட்டில் காட்ஸ் (GATS – General Agreement on Trade in Services) ஒப்பந்தத்தில் கையெழுத்திட விவாதம் நடத்தியதை மூடிமறைத்து வருகிறது மோடி அரசு. இதனைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை – 2015 நாட்டை முற்றாக அடிமைப்படுத்தி காலனியாக்குவதற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக மத்தியில் வீற்றிருக்கும் இந்துத்துவக் கும்பல், தன் பங்கிற்கு புதிய கல்விக் கொள்கையில் கலாச்சார பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டு, பார்ப்பனிய மேலாண்மையை நிறுவத் துடிக்கிறது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள நான்கு பேர் குழுவில் மூன்று பேர் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொருவர் ஆர்.எஸ்.எஸ் இந்து வெறியரான தீனாநாத் பத்ரா. இதிலிருந்து இந்தக் கல்விக் கொள்கையின் உண்மை முகத்தை அறியலாம்.
1990-களில் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கை, உற்பத்தித் துறையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று கூவி இந்திய விவசாயத்தையும், சிறு-குறுந்தொழில்களையும் நாசமாக்கி வருகின்றது. இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். பல இலட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்து உதிரிகளாகினர். இன்றைக்கு மறுகாலனியாக்கத்தின் கோரப்பற்கள் உற்பத்தி துறையிலிருந்து சேவைத் துறையையும் கவ்விக் கொண்டு நாட்டின் அடிப்படை ஆதாரங்களான தண்ணீர், உணவு, நிலம், கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து என அனைத்தையும் கபளீகரம் செய்யக் காத்திருக்கின்றன. இந்நிலையில் கல்வியை முற்றிலும் விற்றுத் தீர்க்கும் பண்டமாக உலகளாவிய அளவில் சட்ட பூர்வமாக முன்வைக்கும் காட்ஸ்-ன் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கை வந்து நிற்கிறது.
உழைப்புச் சந்தைக்கேற்ற (Labour Market) திறன் படைத்த மனித மூலதனத்தை (கூலிகளை) உருவாக்கும் பொருட்டு இந்தியக் கல்வி அமைப்பு இருக்க வேண்டுமென புதிய கல்விக் கொள்கை பிரகடனப்படுத்துகிறது. இதன் பொருட்டு இந்திக் கல்வி கட்டமைப்பை கட்டம் கட்டமாக அழித்தொழிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் புகுத்தியிருக்கிறது. இதன்படி சீர்திருத்தம் எனும் பெயரில் பாடத் திட்டம் மற்றும் கற்பிக்குள் முறைகளை மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்து பிடுங்கி மத்தியத்துவப்படுத்துவது, பல்கலைக் கழக ஆட்சி மன்றங்களைக் கலைப்பது, பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளைத் துண்டித்து சமுதாயக் கல்லூரிகளாக மாற்றுவது, பல்கலைக் கழக மானியக் குழுவின் கீழ் செயல்படும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைப்பது, ஆராய்ச்சி நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என மீதமுள்ள மக்களின் கல்விக்கான கட்டமைப்புகளை அழித்தொழிக்க முடிவு செய்திருக்கிறது.
இலவசக் கல்வியை தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் தலா ஒரு சதவீதமாகச் சுருக்குவது, வெளிநாட்டு கல்வி நிறுனவனங்கள் இந்தியாவிற்குள் பட்டங்கள் வழங்குவதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, கல்விசார் வலைப்பின்னல்களுக்கான உலகளாவிய முன்முயற்சி (GIAN – Global Initiative of Academic Networks), “டீச் இன் இந்தியா” (இந்தியாவில் கற்பித்தல்) போன்ற திட்டங்களின் மூலம், வெளிநாட்டு கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்களை இறக்குவது, இவர்களைக் கொண்டு மாபெரும் திறந்தவெறி இணைய பாடத்த்திட்டங்கள் MOOCs (Massive Online Open Course) போன்ற இணையவழி தகவல் களஞ்சியங்களுக்கு உள்ளடக்கங்களை உருவாக்கிக் கொடுத்து உள்நாட்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை ஒழிப்பது, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களின் மூலம் கல்வி நிலையங்களை இணைத்து, கல்லூரிக்குச் செல்லாமல் கல்வி கற்பிக்கும் முறையை உருவாக்குவது, கல்வித் துறையில் மாணவர்களும் ஒரு அங்கம் என்ற முறையில் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் புறக்கணிக்கப்படுவது, இவைகளின் மூலம் ஒட்டுமொத்த கல்வித்துறையுமே வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், தனியார், கார்ப்பரேட்டுகளுக்கானதாக மாற்ற முனைவது; இறுதியாக தேசியக் கல்விக் கட்டமைப்பையே தகர்த்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மூக்ஸ் (MOOCs) போன்ற இணையவழி நிறுவனங்களின் கையில் உயர்கல்வியை ஒப்படைப்பது, சர்வதேச வணிகச் சட்டங்களுக்கு ஏற்ப இந்திய கல்விக் கொள்கையை மாற்றியமைப்பது என கல்வியை முறைப்படுத்தும் அரசின் அதிகாரத்தை உலக வர்த்தகக் கழகத்தின் காலடியில் சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.
காட்ஸ் ஒப்பந்தத்தின்படி, இனி கல்வி குறித்து முடிவெடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு எவ்வித சட்ட உரிமையும் கிடையாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அடியாளான வணிகம்சார் ஒழுங்குமுறை ஆணையங்களின் (Trade Tribunals) கட்டப் பஞ்சாயத்துகள் மட்டுமே அங்கீகரிக்கப்படும். இந்த ஒழுங்குமுறை ஆணையங்களில் தொழிலாளர்களோ, மாணவர்களோ, தன்னார்வக் குழுக்களோ, தொழிற்சங்கங்களோ தங்களது தரப்பு நியாயத்தை முறையிட முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே தங்களது தரப்புக்காக முறையிட முடியும்.
மாணவர்களுக்கான உதவித் தொகைகளை இரத்து செய்ய முனைவது, மாணவர்களை அரசியலற்ற தக்கைகளாக்கும் ‘லிங்டோ கமிட்டி’ பரிந்துரைகளை அமுல்படுத்தியது, கல்வி வளாகங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி கோரிய யூ.ஜி.சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் (DST – Department of Science and Technology) பேராசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவது, ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது, ஐ.ஐ.டி, சி.எஸ்.ஐ.ஆர் (CSIR – Council for Scientific and Industrial Research) போன்ற அரசுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை நிதித் தன்னாட்சி நிறுவனங்களாக மாற்றுவது, உயர்கல்வியைக் கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளை நியமித்தது என அரசு இதுவரை செய்து கொண்டிருப்பவை எல்லாம் வரவிருக்கும் பேரழிவில் சிறுதுளி மட்டுமே.
மனிதர்களை ‘மனித மூலதனமாகவும்’ அறிவை ‘அறிவுச் சந்தையாகவும்’ பார்க்கும் காட்ஸ் ஒப்பந்தம், ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நலன்களை முன்னிறுத்துகிறது. மேலும், உழைக்கும் மக்களின் உரிமையைப் பறித்து அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்கும் மறுகாலனியாக்கச் சதியின் ஒரு அங்கமாகவே புதிய கல்விக் கொள்கை எனும் சிலந்திவலை நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. உலக வர்த்தகக் கழகத்தையும், காட்ஸ் ஒப்பந்தத்தையும் மேலிருந்து ஆட்டுவிக்கும் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கைப்பாவையாக இருந்து அதனை பிரச்சனையின்றி முடித்து வைக்க இந்துத்துவ கும்பல் வேலை செய்கிறது. இதன்மூலம் நமது நாட்டின் பெயரளவு இறையாண்மைக்கு சாவுமணி அடிக்கத் துடிக்கின்றது.
இது மட்டுமின்றி திறமையை வளர்ப்பது என்ற பெயரில் 8-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் சிறுவர்களை முதலில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் பின்னர் சர்வதேச உழைப்புச் சந்தைக்கும் மலிவான உற்பத்தி சக்திகளாக்கும் சதியை அரங்கேற்றவுள்ளனர். அதிகாரத்தில் உள்ள பார்ப்பனக் கும்பலோ இதனைப் பயன்படுத்தி குலக்கல்வி முறையை உயிர்ப்பிக்கத் துடிக்கிறது. இதற்காக 14 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோரின் பாரம்பரியத் தொழிலைச் செய்யலாம் என குழந்தைத் தொழிலாளர் சட்டத்தைத் திருத்தியுள்ளது.
குலக்கல்வி முறையை உயிர்ப்பித்து சாதிய ஏற்றத் தாழ்வை நிலைத்திருக்கச் செய்வது மட்டுமின்றி, மாநிலங்களின் அதிகாரத்தைப் பிடுங்குவது, இடஒதுக்கீட்டை ஒழிப்பது, மாணவிகளை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறையைக் கொண்டுவந்து அவர்களை வீட்டுக்குள் பூட்டிவைக்கும் ஆணாதிக்க பார்ப்பனிய அடக்குமுறையை ஏவுவது, செத்துப் போன சமஸ்கிருத மொழியை நாடு முழுவதும் பரப்பவும், பார்ப்பனியக் கலாச்சாரத்தை இந்தியக் கலாச்சாரமாக நிலைநிறுத்தவும் இந்தியவியல் (Indology) ஆய்வுகள் மற்றும் இலந்த மொழிகளுக்கான துறையை (Department of Dead Languages) உருவாக்குவது உள்ளிட்ட இந்துத்துவக் கொள்கைகளை நிறைவேற்றும் விதமாகப் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளனர்.
ஏகாதிபத்திய நலனையும், பார்ப்பனிய மேலாதிக்க நலனையும் பிரதிபலிக்கும் புதிய கல்விக் கொள்கை 2015-ஐ வீழ்த்தி, மக்களின் நலனுக்கான உண்மையான தேசப் பற்றாளர்களை உருவாக்கும் சுயசார்புள்ள புதிய கல்விக் கொள்கையைப் படைக்க அணி திரள்வோம்!
காட்ஸ் ஒப்பந்ததைக் கிழித்தெறிவோம்! நாடு மறுகாலனியாவதை முறியடிப்போம்!
புதிய கல்விக் கொள்கை 2015
பல்கலைக் கழகங்கள் இறக்குமதி! மாணவர்கள் ஏற்றுமதி!
மறுகாலனியாக்கத்திற்கான சுருக்குக் கண்ணி! இந்துத்துவத்தின் கள்ளக் குழந்தை
அரங்கு கூட்டம்
8-1-2016 வெள்ளி, மாலை 3 மணி
காவேரி திருமண மண்டபம் (இரயில் நிலையம் அருகில்), சிதம்பரம்
தலைமை தோழர் கதிர்வேல், செயலர்
பு.மா.இ.மு, விருத்தாசலம் வட்டம்
சிறப்புரை திரு.க.ரமேஷ், APSC
(அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்), ஐ.ஐ.டி, சென்னை
முனைவர் ப. கலைச்செல்வன், உதவி பேராசிரியர்,
வரலாற்றுத்துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்.
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாசலம், கடலூர் மாவட்டம் தொடர்புக்கு 96006 32017
பேரழிவு வெள்ளத்திற்கு மூலக்காரணம் நீர்நிலைகள் மீது கார்ப்பரேட் கம்பெனிகளும் மருத்துவக் கல்விக் கொள்ளையர்களும் செய்துள்ள ஆக்கிரமிப்புகள்தான்! செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு படுநாசத்தை ஏற்படுத்திய பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல், மற்றவர்கள் கொண்டுவந்த நிவாரணப்பொருட்களை வழிப்பறி செய்து தன்படத்தை ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்த பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல், இன்று ஏழைகளின் ஒண்டுக்குடித்தன குடிசைகளை குறிவைத்து அகற்றி வருகிறது. இந்தக் கொடுமைகள் போதாதென்று அந்த இடங்களில் புதிதாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சைதாப்பேட்டை சின்னமலை பேருந்துநிலையம் அடுத்து உள்ள நீர்பிடிப்பு இடத்தை அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பினாமி கம்பெனி என்று சொல்லப்படும் காசா கிராண்டா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது, இதற்கொரு எடுத்துக்காட்டு!
”…. இப்போது நீர் செல்லும் இடங்களில் எல்லாம் கல்விச்சாலைகள் நிற்கின்றன. ஏரி நிறைந்த மாவட்டமாக இருந்த செங்கல்பட்டு இப்போது பொறியியல் கல்லூரிகள் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இருக்க வேண்டிய இடத்தில் அந்த கல்லூரிகள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், நீர் வரும் பாதையில், ஆறுகள், ஏரிகள் இருந்த பகுதிகளில்தான் பெரும்பாலான கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன…..” ”……சுயநலம் மிக்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் பேராசையின் காரணமாகவே இப்படிப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது……” “…..இதற்கெல்லாம் நாம் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. எங்கே தவறுகள் நடக்கிறதோ அங்கே மக்கள் சக்தி மூலம் தட்டிக்கேட்டு தவறுகளை திருத்த வேண்டும்……”. இவ்வாறு சொல்லியிருக்கிறார் – உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன். (ஆதாரம்; தி இந்து – தமிழ் 4.1.2016)
”……காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1200 க்குமேல் ஏரிகள் இருந்துள்ளன,. அதேபோல் கடந்த 20, 30 ஆண்டுகளில் ஏரிகளை திட்டமிட்டு அழித்துவிட்டோம். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன…..” ‘’…. ஒரு ஏரியில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் போதோ அல்லது வீடு கட்டும்போதோ தட்டிக் கேட்க வேண்டும். நமக்கு சொந்தமான ஏரி வாய்க்கால் நீர்நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்…….” என சொல்லியிருக்கிறார் மழை வெள்ள மீட்புப் பனிக்கான அதிகாரி அமுதா, ஐ.ஏ.எஸ். (ஆதாரம்; தி இந்து- தமிழ். 4.1.2016)
நேற்றுவரை, கார்ப்பரேட் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தி பாதுகாத்து வந்த நீதிமான்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இன்று இவ்வாறு பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். காரணம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள்தான். இனி எரிமலைகள் வெடிக்கட்டும்.