2000-ம் ஆண்டு மார்ச் மாதம். மறக்க முடியாத சில நிகழ்வுகளை உள்ளடக்கிய மாதம் அது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த மாதமும் கூட. துணைக்கண்ட பிரதேசத்தில் பனிப்போர் காலத்திய புவிசார் அரசியல் கூட்டுகளில் ஏற்பட்டிருந்த பாரிய மாற்றங்களை வெளிப்படையாக அறிவித்தது அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனின் இந்திய வருகை. பின்னர் ஏற்படவிருக்கும் அணுவுலை ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல்வேறு இந்திய – அமெரிக்க அடிமை ஒப்பந்தங்களுக்கு இந்த வருகை கட்டியம் கூறியது.
இந்திய அடிமைகளுக்கு அருள் பாலிக்க வந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்
கிளிண்டனின் இந்திய வருகை பாகிஸ்தானுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் ராஜதந்திர ரீதியிலான தோல்வி என்று இந்தியா தரப்பில் படாடோபமாக கொண்டாடப்பட்டது. உலக வல்லரசின் கருணைப் பார்வையை வென்றெடுப்பதில் துணைக்கண்டப் பிரதேசத்தில் தனக்கிருந்த போட்டியாளனை வீழ்த்தி விட்ட பெருமிதத்தை இந்திய ஆளும் வர்க்கம் பட்டவர்த்தனமாகவும் வெட்கமின்றியும் உரக்கப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. முதலாளித்துவ ஊடகங்களின் மகிழ்ச்சிப் பெருக்கிற்கு ஒரு எல்லையே இல்லை.
இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், மார்ச் 20-ம் தேதி மாலை வேளையில் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட சத்திசிங்கபுரா கிராமத்திற்கு இந்திய இராணுவச் சீருடையணிந்த 17 பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சீக்கியர்களை குருத்வாராவிற்குள் கூடுமாறு அந்தக் கும்பல் உத்தரவிடுகிறது. சீக்கிய ஆண்களும் சிறுவர்களும் அந்த கிராமத்திலிருந்த குருத்வாராவில் கூடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுதமற்ற அந்த அப்பாவிச் சிவிலியன்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது இந்திய இராணுவ சீருடையில் இருந்த கும்பல். 34 பேர் பலியாகிறார்கள்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீறுகொண்டெழும் இந்திய ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் இது பாகிஸ்தானின் சதி என்று குற்றம் சுமத்துகிறார்கள். கிளிண்டன் இந்தியா வருவதை விரும்பாததால் பாகிஸ்தான் இப்படிக் கோழைத்தனமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். இதற்கு உடனடியாக பழிவாங்கப்படும் என்று அரசு தரப்பிலிருந்து சூளுரைக்கப்பட்டது.
மார்ச் 25-ம் தேதி. அனந்த் நாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிபால் கிராமத்திற்குள் இந்திய இராணுவம் நுழைந்து அங்கிருந்த குடிசை ஒன்றைச் சுற்றி வளைக்கிறது. அந்தக் குடிசையினுள் ‘பதுங்கியிருந்த’ ஐவரை சுட்டுக் கொல்லும் இந்திய ராணுவம், சத்திசிங்கபுராவில் சீக்கியர்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாத படையைச் சேர்ந்தவர்களோடு நடந்த மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர் என்று ஆரவாரமாக அறிவித்துக் கொண்டது.
சத்திசிங்கபுராவில் இந்திய இராணுவ சீருடையில் இருந்த கும்பல் அப்பாவிச் சிவிலியன்கள் மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலியாகிறார்கள்.
இந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த கூடுதல் தகவல் ஒன்று – சத்திசிங்கபுரா தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, அந்த தாக்குதல் ‘அடையாளம் தெரியாத’ கும்பலால் நடத்தப்பட்டதாகவே தெரிவித்திருந்தது. பின்னர் 2004-ல் “என் வாழ்க்கை” எனும் பெயரில் தனது சுயசரிதையை எழுதும் கிளிண்டன், அதிலும் ‘அடையாளம் தெரியாத’ கும்பல் என்றே குறிப்பிட்டிருந்தார். அதே ஆண்டில் கிளிண்டனின் நெருங்கிய சகாவான ஸ்ட்ரோப் டேல்பாட் எழுதிய நூலில் சத்திசிங்கபுராவில் நடந்த தாக்குதல் பாகிஸ்தானின் பின்புலத்தில் நடந்ததாக கிளிண்டன் நம்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
நிற்க.
பத்ரிபால் தாக்குதல் சம்பவம் நடந்த உடனேயே அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் அல்லவென்றும், அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி சிவிலியன்கள் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், மார்ச் 21-லிருந்து 24-ம் தேதிக்குள் சுமார் 17 பேர்கள் வரை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போய் விட்டதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். பத்ரிபால் கொலைகளைக் கண்டித்து காஷ்மீர் முழுவதும் மெல்ல மெல்ல போராட்டங்கள் அதிகரித்தவாறே இருந்தன.
கிளிண்டனின் இந்திய வருகை மார்ச் மாத இறுதியில் நடந்து முடிகிறது. மக்கள் போராட்டங்கள் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் பத்ரிபால் கொலைகளைக் குறித்து விசாரிக்க உத்தரவிடுகிறார் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் பெறப்பட்டு கொல்கொத்தா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள நவீன தடயவியல் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பபடுகின்றது. ஆய்வுகள் மற்றும் விசாரணைகளின் முடிவில் 2002 ஏப்ரலில் கொல்லப்பட்டவர்களும் காணாமல் போனவர்களும் இந்திய இராணுவம் கதை கட்டியதைப் போல் அந்நிய தீவிரவாதிகள் அல்லவென்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகள் தானென்பதும் நிரூபணமானது. அதைத் தொடர்ந்து பத்ரிபால் போலி மோதல் கொலைகளை விசாரிக்க 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் சி.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, சத்திசிங்கபுராவில் நடந்த சீக்கியப் படுகொலைகள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் அதன் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் வேலை என்பதை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க மறுத்து வந்தது. இந்நிலையில் கதையில் எதிர்பாராத திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. 2000-மாவது ஆண்டு ஆகஸ்டு மாதம் சத்திசிங்கபுரா படுகொலையில் ஈடுபட்ட லஷ்கர் – இ – தொய்பாவைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவிக்கிறது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான மொஹம்மத் சுஹேய்ல் மாலிக், அதே ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளிக்கிறார். இந்திய வரலாற்றிலேயே கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அமெரிக்க பத்திரிகையிடம் ‘பேட்டியளித்த’ அதிசயம் நடந்தது.
அந்தப் பேட்டியில், தான் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியைச் சேர்ந்தவனென்றும் லஷ்கர் அமைப்பு தன்னை நாசகார வேலைகள் செய்ய பயிற்சியளித்தது என்றும், தனது சகாக்களோடு இந்திய பகுதிக்குள் ஊடுருவியதாகவும், தனது சகாக்களோடு சேர்ந்து சத்திசிங்கபுராவில் சீக்கியர்களைத் தான் கொன்றதாகவும் அவர் ’ஒப்புதல் வாக்குமூலம்’ அளித்துள்ளார்.
சத்திசிங்கபுராவின் கதை இத்தோடு முடியவில்லை – இறுதி திருப்பம் பத்தாண்டுகள் கழித்து வந்தது. சத்திசிங்கபுரா படுகொலைகளை விசாரித்து வந்த தில்லி நீதிமன்றம், 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி நடந்த படுகொலைகளுக்கும் மொஹம்மத் சுஹேய்ல் மாலிக் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட வாஸிம் அஹம்மது ஆகியோருக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
பத்ரிபாலில் இந்திய ராணுவம் நடத்திய போலி மோதல் கொலைகளுக்கு நீதி இல்லை.
இதற்கிடையே பத்ரிபால் படுகொலைகள் குறித்து நடந்து வந்த விசாரணைகளின் முடிவில் நடந்தது போலி மோதல் கொலைகள் தான் என்பதை உறுதி செய்த சி.பி.ஐ, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி சிவிலியன்கள் தான் என்பதையும் உறுதி செய்தது. ஏழாவது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த பிரிகேடியர் அஜய் சக்சேனா, லெப்டினெண்ட் கலோனல் ப்ரஹேந்த்ர ப்ரதாப் சிங், மேஜர் சௌரப் ஷர்மா, மேஜர் அமித் சக்சேனா, சுபேதார் இத்ரீஸ் கான் ஆகியோரே இந்தப் படுகொலைகளுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள் என்று சி.பி.ஐ அறிவித்தது.
நாடெங்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் ஜனநாயக சக்திகளையும் இந்த உண்மைகள் கொதித்தெழ வைத்தன. உச்சநீதிமன்ற அமர்வு முன்னர் நடந்த விசாரணைகளின் போதும் சி.பி.ஐ தனது விசாரணை முடிவுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைத்து வாதாடியது. பத்ரிபால் கிராமத்தில் நடந்தது பச்சை இரத்தப் படுகொலைகள் என்பதை நீதிமன்றத்தில் நிறுவியது. இந்த விசாரணைகள் இராணுவத்துக்கு வெளியே நடந்தால் அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை முன்னுணர்ந்த இராணுவம் ஜூன் 2012-ல், மேற்கொண்டு விசாரணைகளைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட இராணுவ நீதிமன்றத்திலேயே விசாரித்துக் கொள்வதாக நீதிமன்றத்திடம் முன்வந்து அறிவித்தது.
இராணுவம் தனது குற்றத்தை தானே விசாரித்துக் கொள்ளும் அநீதியான முடிவை ஏற்ற உச்சநீதிமன்ற அமர்வில்ல் இருந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர், தற்போது பாலியல் புகாரில் சிக்கிக் கொண்ட ஸ்வாதந்திர குமார் என்பது இந்தக் கட்டுரைக்கு அவசியமில்லாத தகவல். அதைத் தொடர்ந்து இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு தற்போது ஒட்டு மொத்தமாக ஊத்தி மூடப்பட்டுள்ளது. போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடந்த 23-ம் தேதி தீர்ப்பெழுதியுள்ளனர் இராணுவ நீதிமன்ற நீதிபதிகள்.
”சி.பி.ஐயின் வாதங்களை மறுத்து இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு வழக்கை உச்ச நீதிமன்றம் மாற்றிய அந்த நாளிலேயே எங்கள் நம்பிக்கைகள் தகர்ந்து போனது. இருந்தாலும் சாட்சிகள் வரவில்லை என்கிற காரணத்தைச் சொல்லி வழக்கை இழுத்து மூடிவிடக் கூடாது என்பதற்காகவே இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்கு சென்று வந்தோம். முதலிலேயே எங்களுக்கு இது முடிவு இன்னதென்று நிச்சயிக்கப்பட்ட ஆட்டம் என்பது தெரிந்திருந்தது” என்கிறார் அப்துல் ரஷீத் கான். இவரது தந்தையார் ஜூமா கானும் போலி மோதலில் கொல்லப்பட்டவர்.
நடந்த சம்பவங்களை நேர்மையோடு பரிசீலிப்பவர்கள் யாரும் இந்திய இராணுவத்தின் பச்சைப் படுகொலையை மறைக்கும் அநீதியையும், அயோக்கியத்தனத்தையும் உணர முடியும். இப்படி அப்பாவி மக்களை பறிகொடுக்கும் காஷ்மீர் சமூகத்தில் இருந்துதான் கோபத்துடனும், விரக்தியுடனும் ‘தீவிரவாதிகள்’ உருவாகின்றார்கள். இதற்கு பாகிஸ்தான் தூண்டுதலை விட இந்திய அரசின் அடக்குமுறையே பிராதன காரணம்.
இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது என்பதை காஷ்மீர் மக்கள் இரத்தமும் சதையுமாய் உணர்ந்திருக்கிறார்கள். கொழுந்து விட்டு எரியும் அந்த கோபத்திலிருந்து இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் என்றைக்கும் தப்பிக்க முடியாது.
ராஜஸ்தான் மாநிலம் கலதீரா கிராமம் ஜெய்ப்பூரிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஓரளவுக்கு மண்வளமிக்க பகுதி. அங்கு விவசாயத்தை சார்ந்து 5,000 குடும்பங்கள், அதாவது 12,000 முதல் 13,000 மக்கள் ( 2004 கணக்கின்படி) வாழ்ந்து வருகின்றனர். ஜாட் மற்றும் யாதவா சாதியினரை நிலவுடைமையாளர்களாகவும் தலித்துகளை கூலிகளாகவும் கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. நிலக்கடலை, கோதுமை, முந்திரி முதலியவை அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீர் மட்ட வீழ்ச்சியினால் பாழாகிப் போன கிணறு.
இந்தப் பகுதியில் அணைக்கட்டுகளோ, கால்வாய்களோ இல்லாத நிலையில் இருக்கிற ஒரு ஆறான பங்கோ ஆறும் வறண்டு விட்டதால் நிலத்தடி நீரையும், மழையையும் நம்பிதான் விவசாயமும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் நிறைவேறி வருகிறது. அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருக்கிறது. அதைக் கொண்டு தான் தங்கள் தேவையை பூர்த்தி செய்கின்றனர். 90 களின் இறுதி வரை நிலைமை அவ்வளவு மோசமில்லை, கோக் சாத்தான் இங்கு நுழையும் வரை.
பன்சி ஆஹீரை பொறுத்தவரை அப்போதெல்லாம் அவரின் கிணற்றில் 40 அடியிலேயே தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்தது. அஹீர் மட்டுமல்ல ராஜஸ்தான் மாநில நிலத்தடி நீர் துறையின் அறிக்கை கூட 2000-மாவது ஆண்டில் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் 42 அடியாக இருந்ததாக கூறுகிறது.
இந்நிலையில் 90 களில் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, 1977 முதல் இந்தியாவில் Foreign Exchange Regulation Act (FERA) படி தடை செய்யப்பட்டிருந்த கோகோ கோலா நிறுவனம் 1993-ல் மீண்டும் சட்டபூர்வமாக இந்தியாவுக்குள் நுழைந்தது. ராஜஸ்தான் மாநில அரசு, அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது என்ற பெயரில் கலதீரா பகுதிக்கு அருகாமையிலுள்ள RIICO தொழிசாலை பகுதியில் கோகோ கோலா நிறுவனத்தின் பாட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவ அனுமதித்தது. இந்த ஆலையிலிருந்து கோக், ஃபாண்டா உள்ளிட்ட குளிர்பானங்களும், கின்லே தண்ணீரும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த பகுதியின் நிலத்தடி நீரிலிருந்து, தன் கணக்குப் படியே ஆண்டுக்கு 8.94 கோடி லிட்டர் எடுப்பதாக கோகோ கோலா நிறுவனம் கூறுகிறது, ஆனால் ஆண்டுக்கு 17.43 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சியிருப்பதை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். இந்த தண்ணீருக்கு என கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீர் வாரியத்துக்கு 2002-ல் ரூ 5,000 கட்டணம் கட்டியுள்ளதாக 2004-ல் இந்து பத்திரிகையின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அதாவது 8.94 கோடி லிட்டர் தண்ணீரை ரூ 5000-த்திற்கு அரசு தாரை வார்த்து இருக்கிறது. இப்படி முதலாளிகளுக்கு தண்ணீர் முதல் அலைக்கற்றை, சுரங்கம என அனைத்தையும் சகாய விலையில் கொடுக்கும் அரசின் குடியரசுத் தலைவர் தான் மக்களை நோக்கி சொல்கிறார் ‘அரசு என்பது தொண்டு நிறுவனம் அல்ல’ என்று.
பன்சி ஆஹீரும் சக விவசாயிகளும்
மழை குறைவு, தானிய உற்பத்தியிலிருந்து பணப்பயிர் உற்பத்திக்கு மாறியது, விவசாயத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு ஆகிய காரணங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த விவசாயம், 2000-ஆண்டில் செயல்பட ஆரம்பித்த இந்த கோகோ கோலா ஆலையினால் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் மிக சக்தி வாய்ந்த மோட்டார்களை கொண்டு 24 மணி நேரமும் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்ததால், மக்களும் தங்கள் கிணற்றை மேலும் ஆழமாக தோண்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
2003-க்குள் கிட்டத்தட்ட அனைத்து விவசாயிகளுமே போர்வெல் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். முதலில் 120-140 அடியில் கிடைத்த தண்ணீர் கோக்கோ கோலா உறிஞ்ச உறிஞ்ச 200 அடியை தாண்டி செல்ல ஆரம்பித்தது. இப்போது அதுவும் கிடைப்பதில்லை. ராஜஸ்தான் மாநில நிலத்தடி நீர் துறையின் கணக்குப்படி, 2000-த்தில் 42 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2011-ல் 131 அடியாக குறைந்தது. அதாவது கோக் ஆலை செயல்பட ஆரம்பித்த பிறகு வருடத்திற்கு 8.9 அடி வீதம் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கோகோ கோலா ஆலை திறக்கப்படுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் நீர்மட்டம் குறையும் வீதம் வருடத்திற்கு 1.81 அடியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது.
இந்த வீழ்ச்சிக்குக் காரணம் விவசாயிகள் தான் என்று குற்றம் சொல்கிறார்கள் மெத்த படித்த அதிகாரிகள். “விவசாயத்தால் தான் நீலத்தடி நீர்மட்டம் குறைகிறது, தொழிற்துறையால் அல்ல” என்று திமிராக கூறுகிறார் மத்திய நிலத்தடிநீர் வாரியத்தின் பகுதி தலைவர் பர்சூரி. கோகோ கோலாவை ஏதோ அத்தியாவசிய தொழிற்துறைபோலவும், கோகோ கோலாவால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இவர் கூறுவது பச்சை பொய் என்பதை இதே மத்திய நிலத்தடி நீர் வாரியம் 2004-ல் கோகோ கோலா ஆலையில் செய்த விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அப்போதைய மத்திய நீர்வள அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி, ஆலையில் ஆய்வு செய்து கோகோ கோலா நிலத்தடி நீரை சூறையாடுவதாக கண்டறிந்தது.
துறை சார்ந்த அந்த நிபுணர்களின் கணக்குப்படி கோகோ கோலா பயன்படுத்தும் அதே அளவு நீரைக் கொண்டு 6,250 ஏக்கர் விவசாய நிலத்தை வளப்படுத்தலாம்; அதன் மூலம் 5,000 குடும்பங்கள் பயனடையும்; கோகோ கோலா ஆலையினால் அந்தப் பகுதியின் நீர்வளம் குறைந்து ,மண் வளம் குன்றி விட்டது. ஆனால் இப்பொழுது அதிகாரிகள் ஏன் மாற்றி பேசுகிறார்கள்? மறுகாலனியாக்கத்தின் எச்சில் பணம் சகல மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிறது என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்கமுடியாது.
கலதீராவில் உள்ள கோகோ கோலா ஆலை
இன்று நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விவசாயமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதியின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைக்குக் கூட தண்ணீர் கிடைப்பது சிரமமாகி இருக்கிறது. “நாங்கள் இந்த நாட்டிற்கு உணவளிக்கிறோம். கோகோ கோலா எதை உற்பத்தி செய்கிறது? அது உணவைவிட முக்கியமானதா?” என மக்களை கோபம் கொள்ளச் செய்திருக்கிறது இந்த நிலைமை.
இந்த நாட்டுக்காகவும் , தங்கள வாழ்வாதாரத்திற்காகவும் அந்த மக்கள் கோகோ கோலாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். பிப்.2003-ல் 22 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூடி தங்கள் போராட்ட கமிட்டியை அமைத்த நாள் முதற்கொண்டு அவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜூன் 2004-ல் அந்த வட்டாரத்தை சேர்ந்த 32 கிராமப் பஞ்சாயத்துக்கள் கோகோ கோலா ஆலையை மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
மறுகணமே அரசு போலீசு படையை குவித்து அந்த வட்டாரம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பிததது. கூடங்குளத்தை நினைவுபடுத்தும் இந்த செயல் மூலம், இவர்கள் சொல்லிக் கொள்ளும் ஜனநாயகம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு மட்டும் தான் என்பதை நிரூபித்தார்கள். மனுகொடுத்தல், ஊர்வலம் போதல் என மக்கள் இன்று வரை தங்கள் எதிர்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கோகோ கோலா எதிர்ப்பு என்ற பெயரில் அதை மட்டும் பேசி, மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஊடுருவி போர்க்குணத்தை மழுங்கடிக்கும் தன்னார்வ நிறுவனங்கள் இங்கும் ஊடுருவி இருப்பது மக்களுக்கு ஒரு பின்னடைவு தான்.
அரசின் ஆணவம், தன்னார்வ குழுக்களின் துரோகம் இரண்டையும் மக்கள் உணர்ந்து, போர்க் குணமிக்க வழிகளில் போராடி கோக்கை வீழ்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. பெப்சி-கோக் பாட்டில்கள் ஒவ்வொன்றிலும் இந்திய மக்களின் இரத்தம் கலந்திருக்கிறது. நமது மண்ணையும், மக்களையும் சூறையாடும் கோக் இந்தியா அடிமைப்படுவதின் ஒரு சின்னம். அடிமைகளாக தொடர்வோமா, விடுதலைக்காக போராடுவோமா?
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியின் கட்டண எதிராக மனித உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடத்தி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த டிசம்பர் 2013 அன்று, “நீதியரசர் சிங்காரவேலு கமிட்டி தங்கள் பள்ளிக்கு புதிதாக கட்டணம் நிர்ணயித்துள்ளது. பெற்றோர்கள் உடனே அந்த கட்டணத்தை செலுத்தா விட்டால் மாணவர்களின் பெயர் வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்படும்” என காமராஜ் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இந்த கட்டணம் முன்பு இந்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை போல் பலமடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.
உயர்த்தப்பட்ட கட்டண விபரம் பின்வருமாறு :
வகுப்பு
2013-2014-க்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட
தொகை ரூ
மீண்டும் 21-11-2013-ல் பலமடங்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.
கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ
K.G.
6500/-
11,250/-
4750/-
I – V
8500/-
15,600/-
7100/-
VI-VIII
10,000/-
18,300/-
8300/-
IX-X
12,000/-
19,800/-
7800/-
XI-XII
15,000/-
22,000/-
7000/-
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிதம்பரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த கல்வி ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்டு விட்ட நிலையில், “மீண்டும் 90 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த சொல்லும் கமிட்டியின் உத்தரவு முறைகேடானது. இந்த உத்தரவின் மீது அரசு விசாரணை நடத்தி முடிவு தெரிவிக்கும் வரை கூடுதல் கட்டணம் செலுத்தமாட்டோம். அதுவரை மாணவர்களையும் பெற்றோர்களையும் துன்புறுத்தக் கூடாது” என அனைத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கையெழுத்திட்டு மனு அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு பள்ளியின் கூடுதல் கட்டண கொள்ளைக்கு எதிராக பெற்றோர்கள் ஆதாரங்களுடன் சிங்காரவேலு கமிட்டியிடம் முறையிட்ட போதே கூடுதல் கட்டணத்தை திருப்பி தர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் சமரசமாக செல்லுங்கள் என்று மட்டும் கூறி அனுப்பியது. இப்பொழுது கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள இந்நிலையில் சிதம்பரம் வடக்கு வீதி போஸ்ட் ஆபிஸ் அருகில் சிங்காரவேலு கமிட்டியின் பல மடங்கு கட்டண உத்தரவை ஏற்கமுடியாது கமிட்டியின் கட்டண நிர்ணயம் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 24-1-2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் பகுதி மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் வை.வெங்கடேசன், நிர்வாகிகள்முஜிபுர், பெரியண்ணன் சீனுவாசன், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் இணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில், கதிர், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் கமிட்டிகள், விசாரணை, நீதிமன்றங்கள் அரசியல் கட்சிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளுக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளுக்கான வீதியில் இறங்கி போராடாமல் வெற்றி பெறமுடியாது என்று கருத்தை முன்வைத்தனர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீதியரசர் சிங்காரவேலுவின் உருவ பொம்மையை எரிக்க பெற்றோர்கள் முயன்றனர் ஆனால் காவல் துறையினர் அதனை தடுத்துவிட்டனர்
முஜிபுர்
3 ஆண்டுக்கு ஒருமுறை கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்போம் என்று கூறி அமைக்கப்பட்ட கட்டண நிர்ணய கமிட்டி ஆண்டுக்கு மூன்று முறை கட்டணத்தை உயர்த்துகின்றனர்.
ஜெயச்சந்திரன் பெற்றோர்
கோவிந்தராஜன் கமிட்டி முதல் ஒவ்வொரு கமிட்டியும் நிர்ணயிக்கும் கட்டணத்தை 15 சதவீதம் என படிப்படியாக உயர்த்தி தற்போது 90 சதவீதம் வரை சிங்காரவேலு கமிட்டி உயர்த்தி நிர்ணயித்திருப்பது முறைகேடானது இதனை ஏற்க முடியாது.
செல்வக்குமார்
கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை எந்த அதிகாரியும் கண்காணிப்பதில்லை, உத்தரவு பிறப்பிப்பதில்லை. ஆனால் தனியார் பள்ளி முதலாளி கேட்டவுடன் பலமடங்கு கட்டணம் உயர்த்தி கொடுக்கிறார்கள். இந்த உத்தரவை திரும்பபெறவில்லை யெனில் கமிட்டியின் தலைமை அலுவலகத்தை சென்னையில் முற்றுகையிட்டும் போராட்டம் நடத்துவோம்.
கதிர்
தனியார் மய சூழலில் அரசு நிர்ணயிக்கும் எந்த அமைப்பும் மக்களுக்கு சாதகமாக செயல்படாது, தனியாருக்கு சாதகமாகவே செயல்படும். தனியார் மையத்தை எதிர்த்து போராடி வெற்றி பெறாமல் இதனை முறியடிக்க முடியாது.
வை.வெங்கடேசன்
தனியார் பள்ளிகளின் மின்சார செலவு ஆசிரியர் சம்பளம் போன்ற செலவினங்களை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சொல்கின்றனர். ஒரே வருடத்தில் செலவு 90 சதவீதம் உயர்ந்து விட்டதா? இந்த கட்டண உயர்வு மிகவும் மோசடியானது. இதனை விசாரணை செய்து அறிக்கை வரும்வரை கட்டணம் செலுத்த மாட்டோம்.
காமராஜ் பள்ளி நிர்வாகம் சொல்வது போல் குழந்தைகளை துன்புறுத்தி, பரீட்சை எழுத அனுமதி மறுப்பது சட்டப்படி குற்றம் என நீதிமன்றங்கள் பல வழக்குகளில் அறிவத்துள்ளன.
செந்தில் வழக்கறிஞர்
இந்த கமிட்டியின் உத்தரவு மட்டும் நிறுத்தி விட்டால் இந்த பிரச்சனை தீராது. எங்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம், “கல்வியை அரசே வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்” என்றும் அந்த நிலை வரும் பொழுதுதான் இதுபோன்ற முறைகேடுகளும், தனியார் பள்ளி பிள்ளைகளை பணய கைதிகளாக வைத்து பணம் பறிப்பதும், பணம் செலுத்தாத பெற்றோரை பள்ளி வளாகத்திலேயே அடிப்பதும், பிள்ளைகளை உணவியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற ரௌடித்தனமான செயல்கள் நிற்கும். கமிட்டிகளும் நீதிமன்றங்களும் மக்களுக்கு சேவை செய்யாது.
சிதம்பரம் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகின்றது, இங்கே கமிட்டி 100 சதவீதம் கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடுகிறது. மத்திய அரசு ஆதார் அட்டை என்ற பெயரிலேயே தன் நாட்டு குடிமக்களின் கருவிழி முதல் கைரேகை வரை குற்றவாளிகளை போல் பதிவு செய்து நிலை மானியத்திற்காக என நாடகமாடுகிறது.
இந்த நிலைமாறும் என மக்கள் நினைத்தால் அது நடக்காது. மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே நமக்கு உரிமைகள் கிடைக்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் பெற்றோர் 5,000 பேராக மாறும் போது அனைத்து சட்டங்களையும் மக்கள் தீர்மானிக்கலாம்” என கூறினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
“மக்க முகம் பாத்தா மனசு பாரம் கொறையும், கொழந்த முகம் பார்த்தால் கோடி சஞ்சலம் தீரும்”ன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும். அப்படி மக்களையும் குழந்தைகளையும் ஒரு சேர அதிக நேரம் பாக்குற ஒரு பாக்கியம் எனக்கு கெடச்சது. ஒரு குழந்தைய பாத்தாலே சந்தோசத்துல முகமெல்லாம் பல்லாயிரும் எனக்கு, மூணு, நாலு வராந்தா முழுவதுமா குழந்தைங்க குட்டி குட்டி கை, கால ஆட்டிகிட்டு பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடிக்கும் விதமா இருந்தத பாத்ததும் ஒரு வட்டி கருப்பட்டிய ஒன்னா சாப்புட்ட சந்தோசம். இந்த அற்புதத்துக்கு நடுவுல நானும் ஒரு வார காலம் அதிக நேரம் இருக்க முடிந்ததை நெனச்சு மனசெல்லாம் பரவசம் எனக்கு.
சமீபத்துல என்னோட சொந்தக்கார பொண்ணு பானுவுக்கு பிரசவ வலி வந்து அரசு மருத்துவ மனையில் சேர்ந்திருந்தோம். நீண்ட பிரசவ வலி போராட்டத்துக்கு பிறகு சுகப்பிரசவமா குழந்தை பிறந்துச்சு. குழந்தைக்கு சில பிரச்சனை இருக்குன்னு பிறந்தது முதல் ஆறு நாட்களுக்கு மேல அவசர பிரிவில் வச்சுருந்தாங்க. நான் ரெண்டு நாள் அவள் கூட உதவி ஒத்தாசைக்கு தங்கியிருந்தேன்.
அங்கு பிரசவம் ஆயிருந்தவங்க பெரும்பாலும் சாதாரண எளிய மக்கள்தான். அவங்க வாழ்க்கையில் இருக்கும் வறுமையும் உழைப்பின் சோர்வும் அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் ரோஜாப் பூவாய் கட்டிலில் கிடக்கும் குழந்தையை பார்த்து முகமெல்லாம் பரவசமாக பேசி சிரிந்து கொஞ்சி மகிழந்தார்கள். ஒரு சில பேரோட குழந்தைக்கி பிரச்சனைன்னு அவசர பிரிவில் வச்சிருந்ததால தாய் மட்டும் தனியாக பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை ஏக்கத்தோடு பார்ப்பதும், தன் குழந்தைக்காக கண்ணீரோடு காத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்படி காத்துக் கொண்டிருந்தவர்களில் என் சொந்தக்கார பொண்ணு பானுவும் ஒருத்தி.
பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை உத்து உத்து பாத்துகிட்டு இருந்த என்னை நர்சு கூப்பிட்டாங்க “நீங்கதானே மூணாவது கட்டில்ல இருக்கவங்களுக்கு உதவிக்கி வந்துருக்கவங்க. ஐ.சி.யூ-வ்ல இருக்க உங்க குழந்தை பாலுக்கு அழுவுதாம். இந்தாங்க டப்பா இதுல தாய்ப் பால் வாங்கிட்டு குழந்தைகள் வாடுல உள்ள நர்சுகிட்ட கொடுத்துட்டு வாங்க. போங்க” என்றார்.
பெத்தவகிட்ட பிள்ள மொதல்ல பால் குடிக்காம பால் எப்புடி வரும், கை வச்சு எடுக்கதான் முடியுமா வலி உயிர் போகுமேன்னு யோசிச்சுகிட்டே விசயத்த பானுகிட்ட சொன்னேன் “புள்ள அழுவும்போது வலியாவது ஒண்ணாவது எப்புடியாவது எடுத்து தர்ரேன்னு” சொல்லி புள்ள பாசத்துல முயற்சி பண்ணினா முடியல.
“பசிக்குது, கொஞ்சம் சோறு போடுங்க”ன்னு கூட தயங்காம கேட்றலாம். “தாய்ப் பால் எரவல் குடுங்கன்னு யார்கிட்ட போய் கேக்க முடியும், என்ன சொல்வாங்களோ”ன்னு தயக்கத்தோடவே பக்கத்துல உள்ள அம்மாகிட்ட “எங்க கொழந்தய, பிரச்சனைன்னு ஐ.சி.யூ.-ல வச்சுருக்காங்க. பாலுக்கு அழுவுது. எங்க பொண்ணுக்கு பாலு வரமாட்டேங்குது அதா…”ன்னு மெதுவா இழுத்தேன்.
“ஏங்கொழந்தைக்கே பாலு பத்தலைங்க, கத்திகிட்டே இருக்கு. வேற யார்கிட்டையாவது போய்க் கேளுங்க” என்றார்.
அந்த பொண்ணு பாலு இல்லன்னு சொன்னதும் பானு மொகம் சுருங்கிப் போச்சு. அவ சங்கடப் படுவாளோன்னு மீண்டும் அதே அறையில கேட்காம அடுத்த அறைக்குப் போனேன். கையில டப்பாவோடு ஒவ்வொரு கட்டிலாய் தயங்கி தயங்கி நின்றதை பார்த்த ஒரு அம்மா “இங்க வாம்மா” என்று கூப்பிட்டார்.
“என்ன பாலு வேணுமா? என் பேரப்பிள்ளையும் பத்து நாளா ஐ.சி.யூ.ல தாம்மா வச்சுருக்கோம். என்ன ஏதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க. மண்ணுல போட்ட கல்லுக்கணக்கா குந்திகிட்டு இருக்கோம். மாசம் முடியறதுக்குள்ள கொறப் பெறசவமா போச்சு. ஆப்ரேசன் பண்ணிதான் கொழந்தைய எடுத்தாங்க. நாங்களும் பால எடுத்துதான் குடுக்குறோம். பச்ச பிள்ள கத்துதுன்னு பாலு வாங்க வந்த ஒன்னோட அவசரம் புரியாம பேசிகிட்டே இருக்கேம்பாரு. இங்க கொண்டா டப்பாவ, என் பொண்ணுகிட்ட வாங்கி தர்ரேன்”னு சொல்லி ஒரு ஸ்பூன் அளவு பால கொடுத்து “இதாம்மா வந்துச்சு, தொண்ட காயாம ஊத்துங்க. அடுத்த தடவ வா இன்னம் கொஞ்சம் கூட வருதான்னு பாப்போம். இல்லாட்டி எதுத்த கட்டில்ல உள்ள பொண்ணு குடுக்கும், வந்து வாங்கிக்க” என்றார்.
ஒரு மணிநேரம் கழித்து மறுமுறையும் தயங்கியபடி வந்தேன். ஆனா அந்த அம்மாவோ பலமுறை பழகியது போல் சிரிந்த முகத்துடன் என் கையில இருந்த டப்பாவ வாங்கி அந்தம்மா பொண்ணு மட்டும் இல்லாது, பக்கத்துல உள்ள இன்னும் மூணுபேருகிட்ட பால வாங்கி ஒண்ணுசேத்து அரைமணி நேரம் போராட்டத்துக்கு பிறகு 20 மில்லி பாலு இருக்கும் குடுத்தாங்க. ஆப்ரேசன் செய்த ஒடம்போட அந்த வலிய தாங்கிக்கிட்டு அவங்க பால எடுத்து கொடுத்தத பாத்த அந்த நிமிசம் இவங்களை விட உலகத்துல உயர்ந்த மனிதர்கள் யாரும் இல்லன்னு தான் தோணுச்சு.
கைய அறுத்துகிட்டாலும் சுண்ணாம்பு தராத இந்த காலத்துல இல்லாத பட்டவங்களா இருந்தாலும் இருக்குறதை பகுந்து கொடுக்கும் குணம் மட்டும் மாறல என்பதை நடைமுறையில் உணர்ந்தேன். ஏதேதோ யோசனையோடு வந்த என்னை மெல்லிய குரலோடும் சைகையோடும் அழைத்தாள் கமலா என்ற பெண். “உங்க குழந்தைக்கி பால் கெடைக்கலையா. எனக்கு பால் அதிகமா இருக்கு. ஆனா பிள்ள வாய வச்சு குடிக்க முடியாம மார்பு அமைஞ்சிருக்கு. எம்பிள்ளைக்கும் எடுத்துதான் குடுக்குறேன். அதிகமா வீணாதான் போகுது. நான் வேணுன்னா ஒங்க பிள்ளைக்கி பால் எடுத்து தர்ரேன்” சொல்லிகிட்டே தானாகவே கட்டிலை சரிசெய்யவும் பாத்திரத்தை ஒதுங்க வைப்பதுமாக வேலையும் செய்தாள்.
ஒவ்வொரு முறையும் இப்படி தாய் பால் இரவல் வாங்குவதை பார்த்த பானு மனசு கலங்கி “நான் கனவுலயும் நெனச்சு பாக்கல, என் பிள்ளைக்கு யார் யார் பாலையோ வாங்கி கொடுப்பேன்னு. எனக்கு பாலு கட்டிக்கிட்டு நெஞ்செல்லாம் வலிக்குது. ஆனா ஏம்பிள்ளைக்கி இந்த நெலமையா” என்று அழுதாள்.
“இது ஒம்பிள்ளைக்கி கெடச்ச வரம்னு சொல்லணும், எத்தன கொழந்தைக்கு கொடுப்புன இருக்கு இதுபோல பால் குடிக்க. ஒரு தாயோட சீம்பால் குடிச்சாவே ஆரோக்கியம், ஆனா இதுவரைக்குமே பத்து பதினஞ்சு பேரேட பால குடிச்சுருப்பா ஒம்மக. எப்பிடி பலசாலியா வரப்போரான்னு பாரு. பெத்த பிள்ளைக்கி பால் குடுத்தாலே அழகு கெட்டுடும்னு பால் குடுக்க மாட்டாங்க பல பேரு, பிள்ளைய விட அழகுதான் முக்கியம்ங்கறத தாண்டி ‘தான்’ங்கற சுயநலமான எண்ணம் தான் அவங்கட்ட இருக்கும். அனா இவங்கல்லாம் பாரு, அன்னன்னைக்கி ஒழச்சு சாப்புட்ற சனங்க. கறி, மீனு பழமுன்னு திண்ண வசதியில்லாம ஒடம்புல சத்தே இல்லாம அவங்களுக்கு பாலு வடியல, ரெத்தத்த புழிஞ்சு தர்றாங்க. தன்னலம் பாக்காத நல்ல கொணம் இவங்க்கிட்ட இருக்கு. இப்பேர்ப்பட்ட மனுசங்களோட பால ஒம்புள்ளக் குடிக்கிறதுக்கு நீதான் புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்றேன்.
“எங்கம்மா பொறந்த அன்னைக்கே அவங்க அம்மா எறந்துட்டாங்களாம். துக்கத்துக்கு வந்த புள்ளைக்காரங்க எல்லாரும் கொழந்தைய தூக்கி பால் கொடுத்தாங்களாம். பின்நாள்ளையும் சாதி மதமுன்னு பாக்காம யாரெல்லாம் பிள்ளைக் காரங்களோ அவங்கள்ளாம் எங்கம்மா வீட்டை கடந்து போகயில பிள்ளைய தூக்கி பால் கொடுக்காம போக மாட்டாங்களாம். ரெண்டு வயசு வரைக்கும் குடிச்சிருக்கு எங்கம்மா. இந்த மாதிரி ஒணுமண்ணா பழகற எதார்த்தம் கிராமத்து சனங்க மனசுல இருக்கும். இது நடந்து 55 அஞ்சு வருசமாச்சு ஆனா நகரத்துல இன்னைக்கும் ஏழ்மையிலயும் தாய்மை மனசு மாறாம நடந்துக்குற இந்த மனுசங்கள பாக்கும் போது சந்தோசமா இருக்கு…” என எங்கம்மா கதையையும் பானுவிடம் சொன்னேன்.
“இந்தாம்மா கொழந்த பெத்த பொண்ண கொஞ்சம் ஓய்வு எடுக்க விடும்மா. அந்தம்மா கிட்ட என்ன நொய் நொய்ன்னு கத பேசிகிட்டே இருக்கீங்க. டாக்டர் ரவுண்ட்ஸ் வராங்க வெளியில போங்க” என்று நர்சு சத்தம் போட்டதும் டீ குடிச்சுட்டு வரலாம்னு நகர்ந்தேன்.
தேய்ந்து இத்துப் போயி பெரும்பாலும் நோய் வாய்ப் பட்டிருந்த அனேக செருப்பு கூட்டத்தில், பரவாயில்லை என்ற கண்டிசனுடன் இருந்த என் செருப்பை காணவில்லை. பிரசவ வார்டில் நாப்கீன், பேம்பர்ஸ் போல செருப்பும் திருட்டு போய் விட்டது என்ற முடிவுடன் வெறுங்காலுடன் நடந்தேன். அரசு மருத்துவமனையில ஒரு இத்துப் போன செருப்புக்கு கூட திருடுற மதிப்பு இருக்குன்னா பாத்துக்கங்களேன். டீக் கடையில் நின்ற கமலாவின் கணவன் “என்ன உங்க செருப்பும் காணலையா, வெறும் காலோட வர்றீங்க, காலையில எதுத்த பெட்டுக்காரம்மா செருப்ப காணல, பேம்பர்ஸ காணலன்னு ஒரே கத்துக் கத்திச்சு. இங்க வந்தா இதெல்லாம் சகசம்ங்க” என்றவர் மேலும் கோபத்தோடு தொடர்ந்தார்.
“நாப்கீன், பேம்பர்ஸ், குழந்தைக்கு சட்டை, சொட்டர், கொசுவலையின்னு எல்லா பொருளுமே வார்டு உள்ளேயே விக்கிது. தனியார் ஆஸ்பத்திரி போலவே எதுக்கும் வெளிய போக வேண்டாம். எல்லா வசதியும் கெவுருமெண்டு ஆஸ்பத்திரியிலேயும் இருக்குது. காசுதான் இல்ல. ஆனா இந்த பொருள் கூட வாங்க வசதி இல்லாம இங்க கொண்டு வந்து சேக்க வேண்டிய நெலம நமக்கு. ஆனா பெத்தவளுக்கும் பிள்ளைக்கும் நாப்கீன் கூட கொடுக்க முடியாத நெலம அரசாங்கத்துக்கு. இவங்கள சொல்லி குத்தமில்லங்க. ஓட்டுப் போட்ட நம்மள சொல்லணும்.” அவர் பேச்சில் நியாயமான கோபம் தெரித்தது.
வெளிய வந்து ஒரு மணி நேரமாச்சே. இன்னேரம் குழந்தைக்கி பால் வேணுன்னு நர்சு கேட்ருப்பாங்களே, பானு என்ன செஞ்சாளோ என்ற பதட்டத்தோடு கிளம்பினேன். “வார்டுக்கா போறீங்க. இந்த காப்பிய கமலாகிட்ட கொடுத்துடுங்க. ஆம்பிளைகள இந்த நேரம் உள்ள விடமாட்டாங்க” என்ற கமலாவின் கணவர் கையில் இருந்த பாட்டிலை வாங்கிக் கொண்டு உள்ள வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. கமலா குழந்தையை மார்போடு அணைத்து சந்தோசமாக தாய்மையை அனுபவித்து பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் பானு. அவ குழந்தை பால் குடிக்க வழியில்லாம ஐசியுவுல இருக்கு. கமலாவுக்கு புள்ள பக்கத்துல இருந்தும் பால் கொடுக்குற மாதிரி மார்பு அமையல. பானுவுக்கு ஏதாவது குழந்தைங்க குடிச்சாதான் பால் ஊரும். எல்லாத்தையும் சேத்து நினைச்சு பாத்தேன். ஏழைங்கிட்டதான் சோசலிசம் இயல்பா இருக்குங்கிறதுக்கு இத விட என்ன வேணும்?
அமெரிக்காவுல குழந்தை பெற்ற தாய் ஒருத்தி உலகத்திலேயே அதிகமா தாய்ப் பால தானமாக தந்தவர்ன்னு கின்னஸ் புத்தகத்துல இடம் புடிச்சுருக்காராம். ஏழ்மை நிலையில், உடலில் வலிமையற்ற போதும் குழந்தைக்கு தாய்ப் பாலை தானமாக தரும் பொது நல மனம் படைத்த இவர்கள் முன் கின்னஸ் சாதனை பெரிதாக தெரியவில்லை.
வால் வீதியும், நிதித்துறை நிறுவனங்களும், பங்குச் சந்தைகளும் கொடி கட்டிப் பறப்பது அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நியூயார்க் மாநகரில் என்றால், 19-ம் நூற்றாண்டு தங்க வேட்டையினால் வளர்ச்சியடைந்து, கடந்த 20 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உலகத் தலைநகராக உருவாகியிருப்பது மேற்குக் கடற்கரையில் இருக்கும் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரம்.
சான்பிரான்சிஸ்கோ மாநகராட்சி முன்பு ஜனவரி 21 அன்று நடந்த ஆர்ப்பாட்டம்.
சான்பிரான்சிஸ்கோ மாநகராட்சியில் கடந்த 21-ம் தேதி இது வரை கேள்விப்பட்டிராத புது பிரச்சனை தொடர்பாக பொது கருத்துக் கேட்பு ஒன்று நடைபெற்றது. மாநகரின் பொதுப் போக்குவரத்து பேருந்து நிறுத்தங்களில், சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊழியர்களை அள்ளிச் செல்லும் தனியார் பேருந்துகளை தொடர்ந்து அவ்வாறு பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலித்து அனுமதிக்கலாமா, அல்லது அவற்றை தடை செய்ய வேண்டுமா என்பது மீதான கருத்துக் கேட்புதான் அது.
சான்பிரான்சிஸ்கோ மாநகரின் பேருந்து நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் பொதுப்போக்குவரத்து பேருந்துகளை காத்திருக்க வைத்து விட்டு அதிக உயரத்தில் வெண்ணிற உடம்பு, கருப்பாக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களுடனான வெளிப்புறமும் குளிரூட்டப்பட்ட, சொகுசு இருக்கைகளுடன் கூடிய, மடிக்கணினியை வைத்து வேலை செய்ய மடிப்பு மேசையும், மின் இணைப்புகளும் பொருத்தப்பட்ட, கம்பியில்லா இணைய இணைப்புடன் கூடிய உட்புறமும் கொண்ட பேருந்துகள் வந்து நிற்கின்றன. அவற்றை இயக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் பெயர் கூட எங்கும் எழுதப்படாமல், முன் பக்கக் கண்ணாடியில் சிறு பலகையில் தலைமை அலுவலகத்தின் பெயர் மட்டும் குறிப்பிட்டு வெளிக்கிரகத்திலிருந்து வந்திறங்கிய அதிகார வர்க்கத்தினர் நகர்வலம் வருவதைப் போல சான்பிரான்சிஸ்கோ வீதிகளில் கோலோச்சுகின்றனர். இந்தக் காட்சிகள் சென்னையின் சோழிங்கநல்லூர் அல்லது வடபழனி அல்லது சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தங்களை நினைவூட்டினாலும் தவறில்லைதான்.
கூகிள் வளாகத்துக்கு போகும் பேருந்தில் ஏறும் பயணிகள்.
சாதாரண பேருந்துகளைப் போல இரண்டு வாசல்கள் இல்லாமல் முன்பக்கம் ஒரே ஒரு கதவு மட்டும் உள்ளதால், அவற்றில் ஆள் ஏறி, இறங்குவதற்கு இரண்டு மடங்கு நேரம் பிடிக்கிறது. அவை தம் வேலையை முடித்து விட்டு நகரும் வரை மற்ற ‘சாதாரண’ நகர மக்களுக்கான பேருந்துகள் பணிவாக காத்திருக்க வேண்டியதுதான்.
இதே பேருந்து நிறுத்துமிடங்களில் தனியார் வாடகை கார்கள் நின்று பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ செய்தால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் இந்த பேருந்துகள் தம் விருப்பப்படி கட்டணம் இல்லாமல் பொது வசதியை பயன்படுத்தி வந்திருக்கின்றன.
“இது எல்லாம் ஒரு விஷயமா? மாநகரிலிருந்து சுமார் 60 முதல் 80 கிலோமீட்டர் தொலைவில் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களுக்கு ஒவ்வொருவரும் சொந்தக் காரில் போனால் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்? எவ்வளவு எரிபொருள் வீணாகும்? அந்த வீணடித்தல்களை தவிர்த்து இப்படிப்பட்ட பேருந்துகளை இயக்குவது சமூகப் பொறுப்புள்ள நடவடிக்கை என்று பாராட்டாமல் எங்களை கரித்துக் கொட்டுகிறீர்களே” என்று நொந்து கொள்கின்றன கூகிள், ஆப்பிள் முதலான அந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்.
அவர்கள் சொல்லாத இன்னொரு விஷயம், 80 கிலோமீட்டர் தூரத்திற்கு தமது சொந்த காரை ஓட்டிக் கொண்டு அலுவலகத்துக்கு வருவதை விட, வீட்டிற்கு அருகிலேயே நிறுவன பேருந்தில் ஏறி அலுங்காமல் குலுங்காமல் கொண்டு வந்து சேர்த்தால் ஊழியர் வேலை செய்யத் தயாராக இருப்பார். கூடுதல் போனசாக, பேருந்திலேயே மடிக்கணினி, இணைய இணைப்பு வசதி செய்து கொடுத்து அலுவலகத்துக்கு வரும் முன்பாகவே அவர்கள் வேலையை தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொள்ள முடிகிறது.
இப்படி ஊழியர்களின் கடைசி நிமிடத் துளி வரை வேலை வாங்கும் சாத்தியங்களை ஆய்வு செய்வதில் கூகிள் முதலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரசித்தி பெற்றவை. 20 வயதுகளில் இளைஞர்களை உள்ளிழுத்து தேவைப்பட்டால் குட்டித் தூக்கம் போட படுக்கைகள், ஐந்து நட்சத்திர தரத்திலான இலவச உணவு, துணி துவைக்கும் சேவை முதல் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வாரத்துக்கு 60 அல்லது 74 மணி நேரம் வேலை வாங்குவதில் கில்லாடிகள் இந்நிறுவனங்கள். இந்தியாவிலும் ஆரம்பத்தில் இது போன்ற சலுகைகளை கொடுத்து பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அவற்றை படிப்படியாக ஒழித்துக் கட்டியிருக்கின்றன தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்.
நோக்கம் என்னவாக இருந்தாலும், சான்பிரான்சிஸ்கோ நகரினுள் பொலிகாளைகள் போல சுற்றிக் கொண்டிருந்த இந்த பேருந்துகளும், அவற்றில் பயணிக்கும் வேற்று கிரகத்தவர்களை போல தோன்றும் கார்ப்பரேட் ஊழியர்களும் பல ‘பொறாமை’ பிடித்த நகரவாசிகளின் கண்களை உறுத்தியிருக்கின்றன.
இந்த பேருந்துகளிலிருந்து இறங்கிப் போகும் மிடுக்காக உடை உடுத்திய நபர்கள், பேருந்திலிருந்து வெளிச்சத்துக்கு வந்து கண்கள் கூச, ஏதோ தெரியாத இடத்துக்கு வந்தவர்களைப் போல நடந்து தத்தமது வீடுகளை நோக்கி போகிறார்கள். அவர்களில் பலர் இந்தப் பகுதிக்குப் புதியவர்கள். பெரும்பாலும் இந்தியா, சீனாவைச் சேர்ந்த இளைஞர்கள், 40-50 வயதுகளில் யாரையும் இவர்கள் மத்தியில் பார்ப்பது அரிது. இந்தத் துறையில் 50 வயதுக்கு மேல் ஒருவர் புராதன சின்னமாகி விடுகிறார்.
ஆப்பிள் ஊழியர்கள் நிரம்பிய பேருந்தை மறித்து ஆர்ப்பாட்டம் (டிசம்பர் 20, 2013)
கடந்த டிசம்பர் 10-ம் தேதி “பொதுப் பணம், தனியார் லாபம்”, “பொது வசதிகளை சட்ட விரோதமாக பயன்படுத்துவதை நிறுத்து” “வீடு பறித்தல்களை உடனே நிறுத்து” என்ற அட்டைகளைப் பிடித்த போராட்டக்காரர்கள் கூகிள் ஊழியர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தை வழி மறித்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 20-ம் தேதி 70 முதல் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் பேருந்தை மறித்து போராட்டம் நடத்தினர். “கட்டுப்படியாகும் வீட்டு வசதிக்கு இறுதி அஞ்சலி” என்று எழுதப்பட்ட கல்லறைகளில் பொருத்தும் நினைவுக் கல் ஒன்றையும் தூக்கிப் பிடித்திருந்தனர்.
சான்பிரான்சிஸ்கோவை அடுத்த ஓக்லாந்தில் கூகிள் பேருந்தின் பின் பக்கக் கதவில் கல் எறியப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது; டயர் கிழிக்கப்பட்டது. “பேருந்திலிருந்து வெளியில் வந்து எங்களுடன் சேர்ந்து போராடுங்கள்” என்று பேருந்தில் பயணம் செய்யும் கார்ப்பரேட் ஊழியர்களை பார்த்து கூச்சலிட்டனர் போராட்டக்காரர்கள்.
பேருந்துகளில் உட்கார்ந்திருந்த ஊழியர்கள் நாம் என்ன தவறு செய்து விட்டோம் என்று திகைத்துப் போனார்கள்; என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தார்கள்.
பொதுப் பேருந்துகள் ஓரிரு நிமிடங்கள் காத்திருக்க நேர்வது மட்டும் பிரச்சனையில்லை. அதை விட பல மடங்கு தீவிரமான பிரச்சனைகளின் விளிம்புதான் இந்த சொகுசு பேருந்து சேவைகளும், அவை பேருந்து நிறுத்தங்களை இலவசமாக தற்காலிகமாக ஆக்கிரமித்துக் கொள்வதும்.
சிறிய எழுத்துக்களில் நிறுவனத்தின் அலுவலக அடையாளத்தை காட்டும் பேருந்து முகப்பு.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தொடங்கிய கடந்த 25 ஆண்டுகளில் சான்பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே அமைந்திருக்கும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உருவாகியுள்ள 1,700-க்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்களில் 44,000 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சலித்து எடுக்கப்பட்ட தொழில்நுட்ப பட்டதாரிகள்.
இந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சான்பிரான்சிஸ்கோ நகரில் குடியேற ஆரம்பித்தது முதல் வீட்டு வசதி சந்தை வெகுவாக புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் கூட வாடகைக்கு வீடு தேடும் போது, விளம்பரங்களை பார்த்து சில மணி நேரங்களுக்குள் உரிமையாளரை தொடர்பு கொண்டால்தான் வீட்டைப் பார்க்கக் கூட வாய்ப்பு கிடைக்கிறது. பெரும்பாலான வாடகை அல்லது விற்பனை வீட்டு விளம்பரங்களில் கூகிள் அல்லது ஆப்பிள் பேருந்து நிறுத்தங்கள் அருகில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வீடு பார்க்கப் போகும் போது, மாணவர்கள் போல தோற்றமளிக்கும் இளைஞர்கள் திருவிழாக் கூட்டம் போல வந்திருங்கியிருக்கின்றனர். “வீட்டு வாடகை எவ்வளவு வேண்டும்? கூடுதலா 10% வச்சுக்கோங்க, அட்வான்ஸ் ஒரு வருட வாடகை கூட கொடுத்து விடுகிறேன், நோ பிராப்ளம்” என்று காசோலையை கிழித்துக் கொடுத்து இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர்.
நகரில் பணி புரியும், சாதாரண சம்பளம் ஈட்டும் காவல் துறையினர், நகர சபை ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், உணவக ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், கடைக்காரர்கள், சிறு நிறுவன ஊழியர்கள் யாரும் லட்சக்கணக்கான டாலர்கள் சம்பாதிக்கும் இந்த ‘வெளிகிரகத்து’ மேட்டுக்குடியினருடன் போட்டியிட முடியாமல் போகும் நிலைமை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அவர்களில் பலர் ‘சந்தை சக்திகளால்’, தமது வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு வருகின்றனர்.
கூகிள் ஊழியர்கள் பேருந்தை அரை மணி நேரம் தடுத்து நிறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் (டிசம்பர் 9, 2013)
ஐ-போன் விற்பனையும், ஜி-மெயில் பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க, கூகுளும், ஆப்பிளும் வளர வளர, சான்பிரான்சிஸ்கோவின் மீது அழுத்தம் கூடிக் கொண்டே வருகிறது. 20-ம் நூற்றாண்டில் மக்களின் உரிமைப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட மக்கள் நலத்துக்கான சான்பிரான்சிஸ்கோ நகர லவாடகை சட்டங்களின்படி, குடியிருப்பவர்களின் வசிப்பிட உரிமையை வாடகைக்கு விடுபவர் அங்கீகரிக்க வேண்டும். நினைத்த நேரத்தில், ஓரிரு மாதங்கள் அறிவிப்பு கொடுத்து விட்டு வெளியே போகச் சொல்ல முடியாது. நிதித்துறை மேலாதிக்கம் கோலோச்ச ஆரம்பித்த கடந்த 20 ஆண்டுகளில் இந்த சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு பல பத்தாண்டுகள் வாடகைக்குக் குடியிருந்தவர்களை பணக் குவியல்கள் வீட்டை விட்டு துரத்த ஆரம்பித்தன.
வீட்டுச் சொந்தக்காரர் தானே குடியிருப்பதற்காக குடியிருப்பவரை வெளியேற்றலாம் என்ற விதியின்படி, “எத்தனை லட்சம் ஆனாலும் சரி, வாங்கிக் கொள்கிறேன்” என்று கட்டிடத்தையே வாங்கி, அதில் தானே குடி வரப் போவதாக வாடகைக்கு குடியிருப்பவர்களை வெளியேற்றுவது அதிகரித்து வருகிறது. சராசரி சான்பிரான்சிஸ்கோ உழைக்கும் மக்கள் நகருக்குள் குடியிருப்பது கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஜனவரி 21 அன்று நடத்தப்பட்ட பேருந்து மறியல்.
வீட்டு உரிமையாளர்கள் கட்டிடத்தில் குடியிருக்கும் அனைத்து குடும்பங்களையும் வெளியேற்றி விட்டு, அந்த கட்டிடத்தை விற்பதற்கு எல்லிஸ் சட்டம் என்ற மாநில சட்டம் அனுமதிக்கிறது. இதனைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக வசித்து வரும் பலர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சான்பிரான்சிஸ்கோ நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 1 ஆண்டில் வாடகைகள் 10 முதல் 135% அதிகரித்திருக்கின்றன. கூகிள் பேருந்து நிறுத்தும் இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வாடகை பிற பகுதிகளை விட 20% அதிகரித்திருக்கிறது என்று பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
ஒரு பக்கம், பெரும்பான்மை மக்களது வருமானமும் வாழ்க்கைத் தரமும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதற்கு காரணமாக ‘நல்ல சம்பளம் கிடைக்கும் துறைகளில் வேலை செய்யும் அளவுக்கு அறிவில்லாத முட்டாள்கள் நீங்கள்’ என்று சொல்லப்பட்டு, அத்தகைய வேலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஊழியர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அவர்களிடம் உள்ளூர் மக்கள் தமது வீடுகளையும் பறி கொடுக்கிறார்கள். ஒருவருக்கு, இருவருக்கு என்று ஆரம்பித்து இது நூற்றுக் கணக்கானவர்களை, ஆயிரக் கணக்கானவர்களை பாதித்ததும் இந்தப் போக்குக்கு எதிராக, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன.
வெளியேற்றப்பட்டேன்!
“1%-க்கு எதிராக 99% என்ற முழக்கத்தோடு வெற்றிகரமான அமெரிக்க பணக்காரர்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய போராட்டங்கள், 1930-களில் ஜெர்மனியில் பாசிச நாஜிக்கள் பணக்காரர்களாக இருந்த 1% யூதர்கள் மீது நடத்திய அச்சுறுத்தல், தனிமைப்படுத்தல், வதை முகாம்களில் அடைத்தல், கூட்டமாக படுகொலை செய்தல் போன்ற நடவடிக்கைகளை ஒத்திருக்கிறது. ஏறி வரும் வாடகை, விலையை கொடுத்து வீடு பிடிக்கும் அளவுக்கு திறமையாக பணம் ஈட்டியிருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் மீது அவ்வளவு பணம் ஈட்ட இயலாத நாம் நமது ஆத்திரத்தை காட்டுகிறோம். அமெரிக்க சிந்தனையில் இது ஒரு அபாயகரமான திருப்பம்” என்று சொந்தமாக கலிஃபோர்னிய வீடு, இங்கிலாந்து மாளிகை, சான்பிரான்சிஸ்கோ அடுக்குமாடி குடியிருப்பின் உச்ச தள சொகுசு வீடு இவற்றை வைத்திருக்கும், உலகத்திலேயே மிகப்பெரிய தனியார் சொகுசுக் கப்பலை வைத்திருந்த (2009-ல் 6 கோடி பவுண்டு விலைக்கு விற்றார்) டாம் பெர்கின்ஸ் என்ற நிதிமூலதன பண மூட்டை கருத்து தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் இந்த போராட்டங்கள் 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக மக்கள் நடத்திய கிளர்ச்சியை ஒத்திருக்கின்றன. ஜெர்மனியில் அதிகாரத்தில் இருந்த நாஜிக்க்கள் சிறுபான்மை யூதர்கள் மீது ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து விட்டார்கள். இன்றைய அமெரிக்காவிலோ, அதிகாரத்தில் இருக்கும் சிறுபான்மை பணக்காரர்கள், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது பொருளாதார அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். புரட்சிக்கு முந்தைய பிரான்சில் அரச குடும்பங்கள், பிரபுக்கள், மத குருக்கள் ஆகியோரின் ஆடம்பர வாழ்க்கைச் சுமையை சுமந்து முதுகு உடைக்கப்பட்ட பிரெஞ்சு விவசாயிகளைப் போல இன்றைய அமெரிக்காவின் நிதிமூலதன 1 சதவீதத்தினராலும், அவர்களுக்கு சேவை செய்யும் தரப்பினராலும் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
எச்சரிக்கை : பொது வசதிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறார்கள்
“நாங்களும் உங்களைப் போலத்தான், வீட்டுக் கடன், குழந்தைகளின் படிப்பு, மருத்துவ காப்பீடு, எதிர்கால சேமிப்பு இதற்காக ஒரு நாளைக்கு 12-14 மணி நேரம் உழைத்து ஓடாய்த் தேய்கிறோம். எங்களை மிரட்டுவதற்குப் பதிலாக, பேருந்தில் வர வேண்டிய அவசியமே இல்லாத கூகிள் முதலாளி செர்ஜி பின் போன்றவர்களின் சொந்த ஜெட் விமானங்களை மறித்து போராடுங்கள்” என்கிறார்கள் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள்.
அப்படி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. ஏழ்மையும், வீடு இல்லாமையும், தற்கொலைகளும் சூழ்ந்திருக்கையில் அந்த சீரழிவுகளுக்குக் காரணமான அமைப்புக்கு சேவை செய்து தமக்கு வசதியான வாழ்க்கையை ஈட்டுவதிலும், பணம் குவிப்பதிலும், வெற்றியடைவதிலும் மூழ்கியிருப்பவர்கள் தமது செயல்களுக்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
“நீங்கள் நகருக்குள்ளேயேதான் வாழ வேண்டுமா, எங்களால் கொடுக்க முடிகிற விலையை உங்களால் கொடுக்க முடியவில்லை என்றால் குறைந்த விலை வீடுகள் கிடைக்கும் புறநகர் அல்லது வெளியூர் பகுதிகளில் இடம் பார்த்து போக வேண்டியதுதானே?” என்று அவர்கள் போராடுபவர்களை கேட்கிறார்கள். அதாவது, சாப்பிட ரொட்டி இல்லை என்று புகார் சொல்கிறீர்களே, கேக் சாப்பிட வேண்டியதுதானே என்று பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு அரசி திமிருடன் கேட்கிறார்கள்.
“எங்களைச் சுரண்டும் 1 சதவீதத்தினருக்கு சேவை செய்யும் நீங்கள் வெளியில் வந்து அவர்களை எதிர்த்து போராடுங்கள். உங்கள் கைகளால்தான் எங்களை அவர்கள் ஒடுக்குகிறார்கள்” என்று பதில் சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
கூகிள் பேருந்துகள் நிறுத்தப்படும் அதே பேருந்து நிறுத்தத்தில் தங்குவதற்கு வீடு, உத்தரவாதமான வேலை என்று எந்த வித பாதுகாப்பும் இல்லாத இன்னொரு குடியேறிகள் கூட்டமும் நிற்கிறது. கட்டிட மேஸ்திரிகள் வந்து வேலைக்கு கூப்பிடுவார்களா அல்லது கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவோமா என்று தவித்தபடி நிற்கும் அவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்களும் அமெரிக்க முதலாளித்துவ சமூக அமைப்பால் உருவாக்கப்பட்டு தூக்கி ஏறியப்பட்டவர்கள்தான். நாளைய கூட கூகிள் ஊழியர்களுக்கும் இந்நிலை வரலாம். ஆனால் அதை புரிந்து கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு அதிக ஊதியம், சேவைகள் கொடுக்கப்படுகின்றன.
ஆப்பிளும், கூகுளும் தகவல் தொழில் நுட்ப புரட்சியின் ஆதாயத்தை சுருட்டிக் கொள்வது என்பது அமெரிக்க மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டது என்பதோடு இணைந்தது. இன்று பேருந்து நிறுத்தங்களில் துவங்கியிருக்கும் போராட்டம் நாளை கூகிள் தலைமையகத்தை முற்றுகையிடுவது வரை வளர்ந்தே தீரும். இந்த உலகில் முதலாளித்துவ சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வான அநீதியை சகித்துக் கொள்ளும் காலம் இனியும் இல்லை.
இந்தியாவில் இன்று அந்நிய முதலீடு நுழைய முடியாத தொழில் துறையோ, நிதி-சேவைத் துறைகளோ ஏறத்தாழ இல்லை என்றே கூறிவிடலாம். அந்நிய முதலீடுதான் வளர்ச்சியின் அறிகுறி என்றவாறு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீடைக் கவருவதற்காக ஏராளமான சலுகைகள் – வரிச் சலுகைகள், குறைவான வட்டியில் கடன், அடிமாட்டு விலைக்கு நிலம் உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகள் என வாரியிறைக்கப்படுகின்றன. அந்நிய முதலீடின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அமலில் உள்ள சட்டங்கள் செல்லுபடியாகாத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தச் சலுகைகளை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என வாய்ப்பூட்டுச் சட்டம் போடாத குறையாக, அந்நிய முதலீட்டிற்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது.
அந்நிய முதலீடு வருவது அதிகரித்தால் நாட்டின் ஏற்றுமதி பெருகி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் என்றார்கள். ஆனால், நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்து, அதனால் ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்ததைக் கண்டோம். தனியார்மயம் உருவாக்கும் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அந்நிய முதலீடு உருவாக்கியிருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசுவதில் பொருள் கிடையாது. அந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ வேலை உத்திரவாதம் இன்றி, அடிமாட்டுக் கூலிக்குக் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை மாருதி தொழிலாளர்களின் போராட்டம் நாடெங்கும் அம்பலப்படுத்தியது.
அமெரிக்காவின் என்ரான் நிறுவனம் திவாலான பொழுது அந்நிறுவனம் இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கித்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்திருப்பது அம்பலமானது. தமிழகத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் நுழைந்த நோக்கியாவிற்கு, அந்நிறுவனம் கொண்டுவந்த மூலதனத்தைவிடப் பல மடங்கு பெறுமான சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்நிய முதலீடு நாட்டை வளமாக்கவில்லை; நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறது; அந்நிய முதலாளிகள் அரசாங்கம் அளித்துள்ள அத்துணை சலுகைகளையும் அனுபவிப்பதோடு, அதற்கு மேலும் சட்டவிரோதமான வழிகளில் நாட்டின் வளங்களைத் திருடிச் செல்கிறார்கள் என்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, நோக்கியா விவகாரத்தைக் கொண்டே விளங்கிக் கொள்ளலாம்.
நோக்கியாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே சிறீபெரும்புதூரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏப்ரல், 2005-இல் அ.தி.மு.க. ஆட்சியில் கையெழுத்தானது. 2006-இல் பதவிக்கு வந்த தி.மு.க. ஆட்சி இந்த ஒப்பந்தத்தைப் பொதுமக்களின் பார்வையே படாதவாறு, காத்து வந்தது. சென்னையைச் சேர்ந்த ‘சிட்டிசன்ஸ் ரிசர்ச் கலெக்டிவ்’ என்ற தன்னார்வ நிறுவனம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் போராடி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகுதான், தமிழகம் நோக்கியா என்ற பூதத்தின் வாயில் சிக்கியிருக்கும் உண்மை அம்பலமானது.
நோக்கியாவின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்படுகிறார். (கோப்புப் படம்)
இந்த ஒப்பந்தத்தின்படி ஏக்கருக்கு 4.5 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் சிப்காட்டுக்குச் சோந்தமான 210.87 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதனால் சிப்காட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மட்டும் ஏறத்தாழ 7.4 கோடி ரூபாய். இந்தக் குத்தகையைப் பதிவு செய்வதற்கான 4% முத்திரைத்தாள் கட்டணத்தையும் தள்ளுபடி செய்ததுடன், தனது தேவைக்குப் போக மீதமுள்ள நிலத்தைப் பிற நிறுவனங்களுக்குக் கூடுதல் விலைக்குக் குத்தகைக்கு விடுவதற்கான உரிமையையும் நோக்கியாவுக்கு வழங்கியது, தமிழக அரசு.
நோக்கியா தனது கைபேசியை உள்நாட்டில் விற்பனை செய்வதன் மூலம் செலுத்தும் “வாட்” வரியையும் மத்திய விற்பனை வரியையும் தமிழக அரசு திருப்பிச் செலுத்தும் என்பது ஒப்பந்தத்திலுள்ள முக்கியமான சலுகை. கைபேசி வாங்கும் குடிமக்கள் செலுத்தும் வரி அரசின் கஜானாவுக்குப் போகாமல், நோக்கியாவிற்குத் திருப்பி விடப்பட்டிருக்கிறது. இச்சலுகையை ஒரே வரியில் சொன்னால், இது நோக்கியா சட்டபூர்வமாக நடத்தியிருக்கும் வரிச் சுருட்டல். இச்சலுகையின் கீழ் 2005-ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு நோக்கியாவுக்குத் தூக்கிக் கொடுத்துள்ள தொகை ஏறத்தாழ 650 கோடி ரூபாய். இதோடு, தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கிய மற்ற சலுகைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், நோக்கியா வெண்ணலையாக அடைந்த ஆதாயம் மட்டும் 1,020.4 கோடி ரூபாய்.
தமிழக அரசின் சலுகைகள் ஒருபுறமிருக்க, நோக்கியா நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலமாகச் செயல்பட்டு வருவதால் மைய அரசு அந்நிறுவனத்திற்கு சுங்க வரி, உற்பத்தி வரி விலக்குகளை அளித்திருக்கிறது. இந்த இரண்டு வரி விலக்குகள் காரணமாக நோக்கியா 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் அடைந்துள்ள மறைமுக இலாபம் 681.38 கோடி ரூபாய். இவை தவிர, வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிச் சலுகைகள், ஏற்றுமதி வரிச் சலுகைகளால் நோக்கியா தனது முதல் மூன்று ஆண்டுகளில் அடைந்த மறைமுக இலாபம் தோராயமாக 8,000 கோடி ரூபா.
நோக்கியா சிறீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையைத் தொடங்க போட்ட முதலீடே 650 கோடி ரூபாய்தான் என்பதனை இச்சலுகைகளோடு ஒப்பிட்டால்தான் நோக்கியா அடித்திருக்கும் பகற்கொள்ளையின் பரிணாமம் பிடிபடும். இந்த இலாபக்கணக்கில் நோக்கியா தனது தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியைச் சுரண்டியதன் மூலம் அடைந்துள்ள அதிரடி இலாபம் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியாவில் 10,000 தொழிலாளர்களும், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களில் ஏறத்தாழ 15,000 தொழிலாளர்களும் வேலைபார்த்து வருகின்றனர். நோக்கியாவைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுள் வெறும் 3,800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதியுள்ளவர்களைப் பயிற்சித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனப் பிரித்து வைத்து வேலை வாங்கி வருகிறது, நோக்கியா. நிரந்தரத் தொழிலாளர்களும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குறைந்த கூலி கொடுப்பதற்காக மட்டுமின்றி, தொழிலாளர்கள் ஒன்றாக அணிதிரண்டு விடக் கூடாது என்ற தீய நோக்கத்திலும் இந்தப் பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது, நோக்கியா.
ஃபாக்ஸ்கான் ஆலையில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் நேர்ந்த விஷவாயுக் கசிவைக் கண்டித்து அவ்வாலையின் முன் நடந்த தொழிலாளர்களின் போராட்டம். (கோப்புப் படம்)
நோக்கியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் மாதாந்திர சராசரி சம்பளம் 2.5 இலட்ச ரூபாய். அதேசமயம் அதனின் சிறீபெரும்புதூர் ஆலையைச் சேர்ந்த நிரந்தரத் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட சராசரி மாதச் சம்பளம் வெறும் 7,000 ரூபாய். பயிற்சித் தொழிலாளிகள், ஒப்பந்தத் தொழிலாளிகள், துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாதக் கூலியோ ஏழாயிரத்துக்கும் கீழே. கூலியில் காணப்படும் இந்த பிரம்மாண்டமான வேறுபாடு எவ்வளவு கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றால், ஃபாக்ஸ்கான் ஆலையில் அம்பிகா என்ற பெண் தொழிலாளியின் கழுத்து ஒரு இயந்திரத்தில் சிக்கி, அவ்வியந்திரத்தால் கரகரவென்று அறுத்துக் கொல்லப்பட்ட பயங்கரம் ஆலையினுள் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டதை அம்பலப்படுத்தியது.
சிறீபெரும்புதூர் ஆலையில் நாளொன்றுக்கு 4.5 இலட்சம் கைபேசிகள் தயாரிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி இலக்கு, பின் படிப்படியாக 6.8 இலட்சமாக உயர்த்தப்பட்டதாம். இந்த அதிகரித்த உற்பத்தி இலக்கு தொழிலாளர்களைத் தமது உயிரைப் பணயம் வைத்து இயந்திரங்களோடு போட்டியிட்டு வேலை செய்யக் கூடிய “ரோபோ”க்களாக மாற்றியிருக்கிறது. இந்த அராஜகமான உற்பத்தி இலக்கும், அதன் பின்னுள்ள முதலாளித்துவ இலாபவெறியும்தாம் அம்பிகாவின் உயிரைப் பறித்தது.
அம்பிகா ஆலையின் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு இறப்பதற்கு ஒரு மாதம் முன்னதாக அவ்வாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 260-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கிச் சரிந்தனர். சில தொழிலாளர்கள் இரத்த வாந்தி எடுக்கும் அபாய கட்டத்திற்குப் போனார்கள். ஆனால், ஆலை நிர்வாகமோ, “பசி மயக்கம், மத்தபடி ஒண்ணுமில்ல” எனப் பூசிமெழுகி இந்த விபத்தை அப்படியே அமுக்கிவிட்டது.
நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கையகப்படுத்தியதையடுத்து, 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சிறீபெரும்புதூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
கொடூரமான உழைப்புச் சுரண்டல், எந்தவிதமான உரிமைகளும் அற்ற கொத்தடிமைத்தனம் என்ற இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் கூலி உயர்வு, சங்கம் வைக்கும் உரிமை கேட்டுத் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் குதித்த போதெல்லாம், போராட்டத்தில் முன்னணியில் நின்ற தொழிலாளர்களை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்து, அப்போராட்டங்களை ஒடுக்கியது ஆலை நிர்வாகம். நோக்கியா ஆலையில் வேலைநிறுத்தம் நடைபெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த ஆலையைப் பொதுச் சேவைக்கானது என அறிவித்து, நோக்கியாவின் பயங்கரவாதத்துக்கு பாதுகாப்பு அளித்தது, தமிழக அரசு.
நோக்கியாவின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு ஒருபுறமிருக்க, அந்நிறுவனத்திடம் சாதாரண வியாபாரிகளிடம் காணப்படும் வர்த்தக நேர்மைகூட இருந்தது கிடையாது. சிறீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகளில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்யப் போவதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கும் நோக்கியா, உற்பத்தியில் 70 சதவீதத்தைச் சட்டவிரோதமான முறையில் உள்நாட்டுச் சந்தையிலேயே விற்று கல்லா கட்டியிருக்கிறது. இந்த வர்த்தகப் பித்தலாட்டத்தனத்தால் மைய அரசிற்கு ஏற்பட்டுள்ள சுங்க வரி இழப்பு மட்டும் 681.36 கோடி ரூபாய்.
இந்தத் திருட்டுத்தனங்கள் ஒருபுறமிருக்க, நோக்கியா 21,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. வடதமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள சிறீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா ஆலையில் தயாரிக்கப்படும் கைபேசிகளுக்கான மென்பொருளை பின்லாந்திலுள்ள தனது தாய் நிறுவனமான நோக்கியா கார்ப்பரேஷனிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது, நோக்கியா இந்தியா. இப்படி வாங்கப்படும் மென்பொருளுக்கு அதற்கான விலையோடு, ராயல்டி தொகையும் செலுத்தி வருவதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இந்த ராயல்டி தொகை மட்டும் சுமார் 25,000 கோடி. இதில் பத்து சதவீதம் வரியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக இந்தவரியை நோக்கியா செலுத்தவும் இல்லை. அதனை வசூலிக்க இந்திய அரசு இந்த 8 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. ராயல்டிக்கான வரி மட்டுமின்றி வெவ்வேறு இனங்களில் கீழ் இந்திய அரசுக்குச் சேர வேண்டிய 21,000 கோடி ரூபாய் வரிப்பணம் பின்லாந்திற்குக் கடத்தப்பட்டுவிட்டது.
இந்த வரிஏய்ப்பு விவகாரம் தொடர்பாக இந்திய அரசிற்கும் நோக்கியா கார்ப்பரேஷனுக்கும் இடையே சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நோக்கியா கார்ப்பரேஷன் தனது ஆலைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, கம்பி நீட்டுவதற்குத் தயாரானது. டிச.12, 2013-க்குள் நோக்கியாவின் சிறீபெரும்புதூர் ஆலையை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குக் கைமாற்றிவிட வேண்டும் என முடிவாகியிருந்த நிலையில் வருமானவரித் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு நோக்கியா இந்தியா நிறுவனச் சொத்துக்களை முடக்கியது.
இதற்குப் பின்னரும் வரிபாக்கியைக் கட்ட நோக்கியா தயாராக இல்லை. ஒரு சொத்து என்ற முறையில் சென்னை ஆலைக்கு எந்த மதிப்பும் கிடையாது. நாங்கள் அந்த ஆலையின் பயன்பாட்டு உரிமையை மட்டுமே மைக்ரோசாப்டுக்கு விற்கிறோம். அதனைப் பயன்படுத்துவதோ, கைவிடுவதோ மைக்ரோசாப்டின் விருப்பம். எங்கள் சொத்துகளை முடக்கும் உத்தரவைத் திரும்பப் பெற்றால்தான் நாங்கள் எங்களது நிறுவனத்தை மைக்ரோசாப்டிற்கு விற்க முடியும். அவ்வாறு திரும்பப் பெறமுடியாதென்றால், சரியாக ஒரு ஆண்டிற்குள் சென்னை ஆலை முழுவதையும் மூடிவிடுவோம் என்று மிரட்டியது நோக்கியா. காரணம், சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். 8 ஆண்டு தேய்மானத்துக்கான மதிப்பைக் கழித்து விட்டால், அந்த ஆலையின் எந்திரங்களுக்கு அவ்வளவுதான் – காயலான் கடை மதிப்புதான். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய். ஆலையை மூடினால் தெருவுக்கு வரக்கூடிய தொழிலாளர்கள் 25,000 பேர். இவர்களைப் பிணையக்கைதிகளாக வைத்து பேரம் நடத்தியது நோக்கியா. தீர்ப்பு அதற்குச் சாதகமாகவே அமைந்தது.
முடக்கப்பட்ட நோக்கியா இந்தியாவின் சொத்துக்களை விடுவித்தும்; “நோக்கியா இடைக்காலத் தொகையாக 2,250 கோடி ரூபாயை அரசுக்குச் செலுத்துவதோடு, முழுத் தொகையைச் செலுத்துவதற்கான வாக்குறுதியை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டும் டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்படியொரு சமரச ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் தொழிலாளர்களின் வாழ்க்கை பறிபோய்விடும் என இத்தீர்ப்புக்கு ஒரு நொண்டிச்சாக்கும் முன்வைக்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு, வியாபாரப் பித்தலாட்டம், சுரண்டல், கொத்தடிமைத்தனம், கொலை, விபத்து – எனப் பலவிதமான கிரிமினல் குற்றங்களைச் செய்திருக்கும் நோக்கியா, ஏய்த்த வரியைக் கட்டச் சொன்னவுடன், இந்தியாவில் தனக்கு நீதி மறுக்கப்படுவதாகக் கூப்பாடு போட்டு வருகிறது. இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த வரியை இந்தியாவில் கட்டத் தேவையில்லை என வாதாடி வருகிறது.
பன்னாட்டுத் தொழிற்கழகங்களையும், அந்நிய முதலீட்டையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்காக இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம், இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் எனப் பல்வேறு பெயர்களில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஏறத்தாழ 80 நாடுகளோடு இந்தியா போட்டு வைத்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியச் சட்டங்களுக்கு மேலானவையாக, அந்நிய முதலாளிகள் இந்தியாவைக் கொள்ளையடித்துச் செல்வதற்கு வழங்கப்பட்ட லைசென்சாக உள்ளன.
நோக்கியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தைக் காட்டி வரி கட்ட முடியாது எனக் கூறினால், ரசியாவைச் சேர்ந்த சீஸ்டெமா நிறுவனம், இந்தியா-ரசியா இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி தனது 2ஜி உரிமங்களை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது தவறு என வாதாடுவதோடு, இந்திய அரசிற்கு எதிராக வழக்கு தொடருவோம் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனம் இந்தியா-சிங்கப்பூர் பொருளாதார கூட்டு ஒப்பந்தப்படி, 2ஜி உரிமங்களில் தான் போட்டுள்ள முதலீட்டிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோருகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வோடோஃபோன் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட 11,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட போதும், அந்நிறுவனம் “இந்திய அரசு வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை வருங்காலத்தில் கொண்டு வந்தாலும் கூட, இந்தியா-டச்சு இருதரப்பு ஒப்பந்தத்தின்படி தன் மீது சுமத்தப்பட்டுள்ள 11,000 கோடி ரூபாய் வரியைக் கட்ட முடியாது” என வாதிட்டு வருகிறது.
கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டன் ஏகாதிபத்தியமும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற கடந்த காலம் காலனி ஆதிக்கம் என்றால், நிகழ்காலத்தில் பல ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் செல்வங்களைச் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடித்துச் செல்வதை மறுகாலனியாதிக்கம் என்றுதான் சோல்ல முடியும். ஆனால், ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் இம்மறுகாலனியாதிக்கத்தை “வளர்ச்சி”, “வல்லரசு” என்ற வாய்ஜால மோசடிகளால் மூடிமறைக்கின்றன.
– செல்வம் _____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014
_____________________________________________
நேபாளத்தில் 2008-இல் நடந்த முதலாவது அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் 229 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த ஐக்கிய நேபாள பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்) [UCPN (Maoist)], கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவது அரசியல் நிர்ணயசபையை அமைப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் பெருத்த தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அக்கட்சி இந்தத் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு மற்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டையும் சேர்த்து வெறும் 80 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான பிரசண்டாவும், பாபுராம் பட்டாராயும் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே, அதுவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர். அக்கட்சியின் வேட்பாளர்கள் பலர் காப்புத் தொகையைக்கூட இழக்கும் அளவிற்குத் தோல்வியடைந்து, அக்கட்சி மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) – யை நாடாளுமன்ற சரணடைவுப் பாதைக்குத் தள்ளிய துரோகத் தலைமை : பிரசண்டா (இடது) மற்றும் பாபுராம் பட்டாராய்.
இதற்கு மாறாக, 2008-இல் நடந்த தேர்தலில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த நேபாள காங்கிரசு கட்சியும் (NC) போலி கம்யூனிஸ்ட் கட்சியான ஐக்கிய மார்க்சிய-லெனினியக் கட்சியும் [CPN (UML)] இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளன. மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட நிலையில் நடந்த முதல் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தலும் அதில் ஐக்கிய மாவோயிஸ்ட் கட்சி அடைந்த வெற்றியும் ஒரு புதிய நேபாளம் உருவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது என்றால், இரண்டாவது அரசியல் நிர்ணயசபை தேர்தல் முடிவுகள் நேபாளத்தை ஓர் இருண்ட எதிர்காலத்திற்குள் தள்ளியிருக்கின்றன. “கம்யூனிசம் தோற்றுப்போவிட்டது” என ஏகாதிபத்தியவாதிகள் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த வேளையில் புரட்சிகர சக்திகளுக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய வகையில் நடந்த நேபாள புரட்சி, இங்ஙனம் பின்னுக்குப் போயிருப்பது வருத்தமளிக்கக்கூடியதென்றாலும், இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கான உண்மைக் காரணத்தை ஆராய்ந்து, இப்பின்னடைவை மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
“தேர்தல் முறைகேடுகளால்தான் தமது கட்சி தோல்வியடைந்துவிட்டதாக” ஐக்கிய நேபாள மாவோயிசக் கட்சி கூறியிருக்கிறது. முதலாளித்துவ நாடாளுமன்றத் தேர்தல்களும் முறைகேடுகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற போதும், இந்த விளக்கம், தான் செய்த தவறுகளை அக்கட்சி மிகவும் மலிவான முறையில் மூடிமறைக்க எத்தனிக்கும் நொண்டிச்சாக்கு தவிர வேறில்லை. மாறாக, மன்னராட்சியைத் தூக்கியெறிந்த நேபாளப் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் அக்கட்சி செய்த தவறுகள்தான் இத்தோல்விக்கான அடிப்படையாக அமைந்தன.
நாம் இப்படிக் கூறும் அதேசமயம், இந்தத் தோல்விக்கு வேறொரு எளிதான காரணத்தை இந்திய மாவோயிஸ்டுகள் முன்வைக்க வாய்ப்புண்டு. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மன்னராட்சிக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த எழுச்சியினையடுத்து நேபாள மாவோயிசக் கட்சி மன்னராட்சியைத் தூக்கியெறிந்து அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் திட்டத்தை முன்வைத்து ஏழு கட்சி கூட்டணியோடு அமைதி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது. மாவோயிசக் கட்சியினரின் அந்நடவடிக்கையை வலது சந்தர்ப்பவாத சரணடைவு எனக் குற்றஞ்சுமத்திய இந்திய மாவோயிஸ்டுகள், தற்போதைய இத்தோல்விக்கு அதையே காரணமாக கூறக்கூடும். இது மட்டுமின்றி, இப்படியெல்லாம் நடக்கும் என்று அன்றே சொன்னோம் என்று இன்றைய பின்னடைவுக்கு வியாக்கியானம் அளிக்கவும் கூடும்.
ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)-க்குள் ஆதிக்கம் செலுத்திய முதலாளித்துவப் பாதையாளர்களை எதிர்த்து வெளிவந்து, நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்) [NCP(Maoist)] என்ற புதிய புரட்சிகரக் கட்சியைத் தொடங்கியுள்ள தோழர்கள் கிரண், பசந்தா மற்றும் கஜூரேல்.நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு – ஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்கும் நோக்கத்தோடு நேபாள மாவோயிசக் கட்சி 1996 தொடங்கி மக்கள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், அப்புரட்சி 2005-06 ஆம் ஆண்டுகளில் ஒரு புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்தது. இற்றுவிழுந்து கொண்டிருந்த மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை அமைக்க வேண்டிய உடனடி அரசியல் கடமை முன்வந்தது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் விடுதலைப் படையின் கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டம் என்பதிலிருந்து நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சி என்ற அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான காலம் கனிந்திருந்தது. அச்சமயத்தில் நேபாள மாவோயிஸ்டுகள் இப்பேரெழுச்சியைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டு, தொடர்ந்து கிராமப்புற ஆயுத போராட்டங்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியிருந்தால், அக்கட்சி தனிமைப்பட்டுப் போயிருக்கும் என்பது மட்டுமல்ல; அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அந்நிய சக்திகளால் மன்னராட்சி காப்பாற்றப்பட்டு, நேபாளப் புரட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும்.
நேபாள மாவோயிசக் கட்சி இந்த இடைக்கட்டத்திற்கேற்ப, “அரசியல் நிர்ணய சபையை நிறுவு; அதற்கான தேர்தலை உடனே நடத்து” என்ற முழக்கங்களை முன்வைத்து இந்தப் பேரெழுச்சிக்குத் தலைமையேற்றதோடு, மன்னராட்சியை அகற்ற முன்வந்த ஏழுகட்சி கூட்டணியோடும் அமைதி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது. இதன் விளைவாக நேபாளத்தில் இந்து மன்னராட்சி அகற்றப்பட்டதோடு, அந்நாடு மதச்சார்பற்ற குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இது, புதிய ஜனநாயகப் புரட்சி என்ற போர்த்தந்திரத்தை நிறைவேற்றும் வளர்ச்சிப் போக்கில் செயல்தந்திரரீதியாக மாவோயிஸ்டுகள் அடைந்த வெற்றியாகும்.
இதனையொத்த இடைக்கட்ட நிலைமை ரசியாவில் 1905-லும், சீனாவில் 1924-27 மற்றும் 1945-47 காலக் கட்டங்களிலும் எழுந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி 1924-27 காலக்கட்டத்தில் கோமிங்டாங் கட்சியோடு கூட்டணி அரசில் பங்கெடுத்திருந்தது; 1946 ஜனவரியில் தேசிய ஜனநாயக சட்டப்பேரவையை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியும் கோமிங்டாங் கட்சியும் கையெழுத்திட்டன.
1917 பிப்ரவரியில் ரசியாவில் ஜாராட்சி தூக்கியெறியப்பட்டாலும், அரசுக் கட்டமைவு முழுவதும் வீழ்த்தப்படவில்லை. குறிப்பாக, ஜாராட்சியில் இருந்த இராணுவம் கலைக்கப்படாததோடு, முதல் உலகப் போரிலும் அது ஈடுபட்டு வந்தது. ஜார் தூக்கியெறியப்பட்டதைப் புரட்சி என ஏற்றுக்கொள்ளும்பொழுது, நேபாளத்தில் பழைய இராணுவமும் அரசுக் கட்டமைவும் இன்னும் நீடித்திருப்பதைக் காட்டி, நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து மாவோயிஸ்டுகள் அடைந்த செயல்தந்திர வெற்றியை அங்கீகரிக்க மறுப்பது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல; புரட்சி நெளிவுசுளிவின்றி நேர்கோட்டுப் பாதையில்தான் பயணிக்கும் என்று கருதும் வறட்டுத்தனமுமாகும்.
****
சர்வதேச கம்யூனிச இயக்க வரலாற்றில் மேலிருந்து (அரசிலிருந்து) செயல்புரிவது என்னும் போராட்ட வடிவம் மற்றும் தற்காலிகப் புரட்சிகர அரசாங்கம் என்னும் அமைப்பு வடிவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னிபந்தனைகளை லெனின், “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்” என்ற நூலில் வகுத்து முன்வைத்துள்ளார்.
“தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கேற்றாலோ, இல்லாவிட்டாலோ, எப்படி இருந்தபோதிலும் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் மீது நாம் கீழிருந்து நிர்ப்பந்தம் கொண்டுவர வேண்டும். கீழிருந்து இந்த நிர்ப்பந்தத்தைச் செயல்படுத்த முடிவதற்குப் பாட்டாளி வர்க்கம் ஆயுதமேந்தியிருக்க வேண்டும். ….. அது ஆயுதமேந்திச் செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம் புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவுபடுத்துவது – அதாவது, பாட்டாளி வர்க்க நலன்களின் நிலையிலிருந்து பார்க்கும்போது அந்த ஆதாயங்கள் நம் குறைந்தபட்ச வேலைத்திட்டம் முழுவதையும் நிறைவேற்றுவதாக அமைந்திருக்க வேண்டும்” என்று லெனின் கூறியிருக்கிறார். நக்சல்பாரி புரட்சிகர கட்சியான இ.பொ.க. (மா-லெ) மாநில அமைப்பு கமிட்டி 1981-இல் நிறைவேற்றிய “இந்தியப் புரட்சிக்கான அரசியல் பாதையும் இராணுவப் பாதையும்” என்ற தனது ஆவணத்தில் இக்கோட்டுபாடுகளை விரிவாக விளக்கி முன்வைத்திருக்கிறது.
இரண்டாவது அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) [NCP (Maoist)]-யைச் சேர்ந்த தேசிய இளைஞர் மக்கள் தொண்டர் படை காவ்ரே என்ற ஊரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.2008-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நேபாள ஐக்கிய மாவோயிசக் கட்சி தனது தலைமையில் இரு கூட்டணி அரசுகளை அமைத்த போதும் சரி, அக்கட்சி எதிர்க்கட்சியாகச் செயலாற்றியபோதும் சரி இந்த மா-லெ நிபந்தனைகளை பற்றுறுதியோடு கடைப்பிடிக்காமல் உதாசீனப்படுத்தியது. நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா இருந்தபொழுது, நேபாள இராணுவம் குடிமக்களின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என அவரது அரசு கோரியதோடு, அதற்குக் கட்டுப்பட மறுத்த நேபாள இராணுவத்தின் தலைமைத் தளபதி ருக்மாங்கத் கடுவாலைப் பதவி நீக்கம் செய்யவும் முடிவெடுத்தது. இம்முடிவை ஆதரிப்பதாகக் கூறிய போலி கம்யூனிஸ்டுகளான ஐக்கிய மார்க்சிய-லெனினிய கம்யூனிசக் கட்சி, பிரசண்டாவின் மந்திரிசபை இந்த முடிவை அறிவித்தவுடன் அதனைத் துரோகத்தனமாக எதிர்த்ததோடு, தனது கட்சியைச் சேர்ந்த அதிபர் ராம் பரண் யாதவ் மூலம் மந்திரிசபை முடிவை ரத்தும் செய்தது. அதிபரின் இந்த முடிவை எதிர்த்து பிரசண்டா மே 2009-இல் பதவி விலகினார். இதன் பின் நேபாள காங்கிரசின் ஆதரவோடு பிரதமர் பதவியில் அமர்ந்த போலி மார்க்சிய-லெனினிய கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த மாதவ் குமார் நேபாள் சமாதான ஒப்பந்த விதிகளை மீறி இராணுவம் ஆளெடுப்பதற்கு அனுமதி வழங்கினார்.
நேபாள மாவோயிசக் கட்சி இதனை எதிர்த்துத் தெருப் போராட்டங்களை நடத்தியதையடுத்து, அந்த நிர்பந்தத்தால் மாதவ் குமார் நேபாள் அரசு 2010 ஜூனில் பதவி விலகும்படி நேர்ந்தது. எனினும், நேபாள ஐக்கிய மாவோயிசக் கட்சி கீழிருந்து நடத்திய இப்போராட்டத்தை இறுதிவரை கொண்டு செல்லவில்லை. மாறாக, தனது போராட்டத்தால் பதவி விலகிய போலி மார்க்சிய-லெனினியக் கம்யூனிஸ்டு கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்தது. நேபாள காங்கிரசையும் போலி மார்க்சிய-லெனினிய கம்யூனிசக் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரி பிரிவையும் தனிமைப்படுத்தும் தந்திரோபாயம் இதுவெனக் கூறி இக்கூட்டணிக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியதோடு, அக்கட்சியைச் சேர்ந்த ஜல்நாத் கனாலை பிப். 2011-இல் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் ஆதரவளித்தது. அடுத்த ஆறே மாதத்தில் கனால் அரசைக் கவிழ்த்துவிட்டு, மாதேசி ஜன் அதிகார் கட்சியோடு கூட்டுச் சேர்ந்த நேபாள மாவோயிசக் கட்சி, பாபுராம் பட்டாராயை பிரதமராக்கியது.
மக்கள் விடுதலைப் படை கலைக்கப்பட்டதைக் கண்டித்து, சுர்கேத் என்ற நகரில் அமைந்துள்ள ஐக்கிய நேபாள மாவோயிசக் கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அலுவலகங்களை அப்படையைச் சேர்ந்த போராளிகள் முற்றுகையிட்டுப் போராடிய பொழுது, நேபாள இராணுவத்தால் கைது செய்யப்படும் செம்படை வீரர். (கோப்புப் படம்).
இந்திய மார்க்சிஸ்டுகள் நாறி அம்பலப்பட்டுப் போன இந்திய நாடாளுமன்றத்தைத் தமது தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் போல, நேபாள மாவோயிசக் கட்சி முதலாவது அரசியல் நிர்ணய சபைக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் நேபாள ஓட்டுக்கட்சிகளோடு மாறிமாறிக் கூட்டணி அமைத்தும், பேச்சுவார்த்தை நடத்தி விட்டுக்கொடுத்து நாடாளுமன்ற நாற்காலி அரசியலின் வரம்புக்குட்பட்டு தீர்வு காண முயன்றதேயொழிய, அரசியல் நிர்ணய சபையின் கையாலாகத்தனத்தை வெளியிலிருந்து அம்பலப்படுத்தி, புரட்சியின் அடுத்த கட்டத்திற்கு மக்களை அணிதிரட்டத் தவறியது. குறிப்பாக, நேபாள மாவோயிசக் கட்சியின் பிரசண்டா-பட்டாராய் கும்பல், “பல கட்சி போட்டியின் மூலம்தான் எதிர்ப்புரட்சியை வீழ்த்த முடியும்; அரசியல் நிர்ணய சபை, தேர்தல்கள், அரசியல் சாசனம் என்ற மூன்றின் மூலம் புதிய நேபாளத்தை உருவாக்க முடியும்” என்ற சட்டவாதப் பாதையை உயர்த்திப் பிடித்து, தமது சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை நியாயப்படுத்தியது. “அடுத்துவரும் தேர்தல்களில் நாம் பெரும்பான்மை பெற்றுவிட்டால் அரசே நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்” எனக் கூறி, கீழிருந்து போராட்டங்கள் எடுக்க வேண்டிய அவசியத்தை முற்றிலுமாக நிராகரித்தது.
***
ஒரு புரட்சிகரக் கட்சி எவ்வளவு சிறியதாக இருப்பினும் தனது செயல்தந்திர வழியை அமல்படுத்தும்பொழுது, சமரச சக்திகளைத் தனிமைப்படுத்தி எதிரிக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கு மக்களைச் சார்ந்து நின்று, அவர்களது அரசியல் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிடும் துணிவையும் நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும். இதனைப் புரிந்துகொள்வதற்கு 1917 பிப்ரவரிக்கும் 1917 அக்டோபருக்கும் இடைபட்ட காலத்தில் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் அனுபவங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.
ரசியாவில் ஜார் ஆட்சிக்கு எதிரான 1917 பிப்ரவரி புரட்சி வெற்றிகரமாக நிறைவுற்று சோசலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் கடமை முன்நின்றபோது, மென்ஷ்விக்குகள் ரசியாவின் பின்தங்கிய நிலைமையைக் காரணம் காட்டி, “முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் இன்னும் வளரவில்லை; சோசலிசப் புரட்சிக்கான காலம் இன்னும் கனிந்து விடவில்லை” எனக் கூறி, கெரன்ஸ்கி தலைமையில் இருந்த முதலாளித்துவ அரசிற்கு வால்பிடிக்கும் வேலையைச் செய்தார்கள். ஆனால், போல்ஷ்விக் கட்சி அத்தகைய பாரதூரமான நிலைமையிலும் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும் திட்டத்தோடு நிலம், உணவு, சமாதானம் என்ற முழக்கங்களை முன்வைத்தது. இம்முழக்கங்கள் பெருவாரியான மக்களை மட்டுமின்றி, ஜாரின் இராணுவத்திலும் ஒரு பிரிவை ஈர்த்தன. போல்ஷ்விக்குகள் சோவியத்துகளில் சிறுபான்மையினராக இருந்த நிலையிலும் அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புகளைத் துணிந்து செய்து வெற்றியும் ஈட்டினர்.
நேபாளத்தில் செய்யப்பட்டுள்ள இந்திய முதலீடுகளைப் பாதுகாக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னாள் நேபாள பிரதமர் பாபுராம் பட்டாராய் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். (கோப்புப் படம்)
ஆனால், நேபாள மாவோயிசக் கட்சி மன்னராட்சியைத் தூக்கியெறிந்த பிறகு மக்களைச் சார்ந்து நின்று புரட்சியை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்குரிய பொருத்தமான அரசியல் துணிவைக் காட்டவில்லை. நேபாளத்தில் 1996 தொடங்கி 2006 முடிய நடந்த பத்தாண்டு கால மக்கள் யுத்தத்தின் பொழுது, மாவோயிசக் கட்சியினர் கிராமப்புறங்களில் உள்ளூர் அளவிலான மக்கள் அரசு மற்றும் நிர்வாக அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். நிலப்பிரபுக்கள் மற்றும் புரட்சிக்கு எதிரான வர்க்கங்களின் நிலங்களையும், சொத்துக்களையும் பறிமுதல் செய்து மறுவிநியோகம் செய்திருந்தனர். இவ்வாறான புதிய ஜனநாயகப் புரட்சிக்குரிய அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திசைவழியில் செல்வதற்குப் பதிலாக, மக்கள் யுத்தத்தில் கிடைத்த பலன்களைத் தக்கவைத்துக் கொண்டு, கெட்டிப்படுத்தி, நகரத்திலும் விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, அவற்றை ஒவ்வொன்றாகக் கைகழுவினர்.
குறிப்பாக, பட்டாராய் பிரதமராகப் பதவியேற்றவுடனேயே மக்கள் யுத்தத்தின்பொழுது கைப்பற்றப்பட்ட நிலங்களும் சோத்துக்களும் மீண்டும் புரட்சியின் எதிரிகளிடமே திருப்பி ஒப்படைக்கும் துரோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். செம்படை ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் பாசறையில் அடைபட்டிருந்த நிலையில், கம்யூனிச இளைஞர் கழகத்தை ஒரு குடிமக்கள் படையாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்கம் மற்றும் அவற்றின் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இளைஞர் கழகத்தை வெறும் சமூக சீர்திருத்த அமைப்பாக மாற்றி அமைத்தார். 1950-க்குப் பின் இந்தியாவுடன் செய்துகொண்ட சமனற்ற ஒப்பந்தங்கள் அனைத்தையும் துணிந்து ரத்து செய்து நாட்டுப்பற்று கொண்ட சக்திகளைத் தம்பக்கம் அணிதிரட்டுவதற்குப் பதிலாக, இந்தியாவின் முதலீடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் துரோகமிழைத்தார். இவற்றைவிடக் கேவலமாக, ஆளும் வர்க்கம் மற்றும் கட்சிகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செம்படையைக் கலைத்து, கட்சியையும் உழைக்கும் மக்களையும் நிராயுதபாணியாக்கியது, பட்டாராய் அரசு.
“ஒரு கூட்டணி அரசில் பங்கு பெறுவதற்கு முன்னிபந்தனையாக மக்கள் படை இருப்பது அவசியம்; இம்மக்கள் படையை ஒரு புதிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் உருவான பிறகுதான் கையளிக்க முடியும்” எனத் தனது “கூட்டரசாங்கம் பற்றி” நூலில் குறிப்பிடுகிறார், மாவோ. ஆனால், நேபாளப் பிரதமராக இருந்த பாபுராம் பட்டாராய் மாவோவின் இந்தப் போதனைகளை உதாசீனப்படுத்திவிட்டு, புதிய அரசியல் சாசனமும் புதிய அரசும் உருவாவதற்கு முன்பே, அப்படி உருவாகும் அரசு எந்த வர்க்கத்தின் நலனைக் கொண்டிருக்கும் எனத் தெரியும் முன்பே செம்படையின் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்தார். அதுவும் புரட்சிக்கும் மக்களுக்கும் எதிராகப் போரிட்டப் பிற்போக்கு இராணுவத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுக் கலைத்தார்.
இந்தச் சரணடைவுக்கு எதிராக செம்படை பாசறைகளில் கலகங்கள் நடந்தன. ஆனால், அப்போராட்டங்கள் செம்படையைக் கலைக்கக்கூடாது என்ற புரட்சிகர அரசியல் முழக்கத்தின் அடிப்படையில் அல்லாமல், “சமாதான ஒப்பந்தத்தின்படி அனைத்துப் போராளிகளையும் நேபாள இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இந்த இணைப்பு கௌரவமிக்க வழிகளில் நடைபெற வேண்டும்” என்ற வரம்பிற்கு உட்பட்டே நடந்தது. ஆனால், இந்தப் போராட்டத்தைக்கூடப் பொறுத்துக் கொள்ளாத பிரசண்டா-பட்டாராய் கும்பல் நேபாள இராணுவத்தை அனுப்பி, இந்தப் போராட்டத்தை ஒடுக்கியது
முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகள் மற்றும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளின் நிர்ப்பந்தம், மிரட்டல்களுக்கு அடிபணிந்து, அவர்களிடம் சமரசமாக நடந்துகொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைத் தாம் பெற்றுவிட முடியும் என நம்பியது, பிரசண்டா-பட்டாராய் கும்பல். ஆனால், முதலாளித்துவக் கட்சிகளோ மன்னராட்சியைத் தூக்கியெறிந்த பிறகு, மாவோயிசக் கட்சி நாடாளுமன்ற அரசியல் சூதாட்டத்தில் தம்மிடம் தோற்றுப் போனதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் முதலாவது அரசியல் நிர்ணய சபையைக் கலைப்பதிலும் வெற்றி பெற்றனர். இன்னொருபுறம், செம்படையைக் கலைத்தது, ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் மக்களிடமிருந்து பறித்து மீண்டும் புரட்சியின் எதிரிகளுக்குக் கொடுத்ததன் காரணமாக மாவோயிசக் கட்சி கிராமப்புற மக்களின் ஆதரவை இழந்து நின்றது.
***
பாட்டாளி வர்க்கக் கட்சி பிளவுபடாத தலைமையைப் பெற்றிருப்பதும் அதன் கீழ் மக்கள்திரள் அரசியல் படையைக் கட்டியமைப்பதும் போர்த்தந்திர ரீதியிலும் செயல்தந்திர ரீதியிலும் வெற்றி பெறுவதற்கான முன்தேவையாகும் என மார்க்சியம்-லெனினியம் போதிக்கிறது. ஆனால், புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரத்தில் நேபாள மாவோயிசக் கட்சித் தலைமை மூன்று அணிகளாக – பிரசண்டா, பாபுராம் பட்டாராய், கிரண் – எனப் பிளவுபட்டுக் கிடந்தது. இம்மூன்று அணிகளுள் பிரசண்டா மற்றும் பட்டாராய் கோஷ்டிகள் சமரச சரணடைவுவாதத்தை உயர்த்திப் பிடித்ததோடு, கட்சிக்குள் பெரும்பான்மை பலத்தையும் கொண்டிருந்தனர்.
2007-ஆம் ஆண்டு பாலாஜு எனுமிடத்தில் நடந்த கட்சியின் பிளீனத்திலும், 2008-ஆம் ஆண்டு காரிபாட்டி என்னுமிடத்தில் நடந்த கட்சி மாநாட்டிலும், 2010-ஆம் ஆண்டு பலுங்டர் என்னுமிடத்தில் நடந்த கட்சி பிளீனத்திலும், அதே ஆண்டு பாரிஸ்தண்டா என்னுமிடத்தில் நடந்த மத்திய கமிட்டி கூட்டத்திலும் கிரண் குழுவைச் சேர்ந்த தோழர்கள், பிரசண்டா மற்றும் பட்டாராய் கும்பலின் சமரச சரணடைவுக்கு எதிராகப் போராடினாலும், அக்கும்பலைத் தனிமைப்படுத்தும் வகையில் அரசியல் நடத்தை வழி, முழக்கங்கள், போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்களை முன்வைத்து அப்போராட்டங்களை நடத்தவில்லை. ஒருபுறம் நகர்ப்புற எழுச்சிக்கான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும் என கிரண் குழு கோரிக்கை வைத்துக்கொண்டே, இன்னொருபுறம் இத்துரோகிகளைக் கட்சியிலிருந்து அப்புறப்படுத்துவதற்குத் தேவையான அரசியல்-அமைப்பு பலமின்றியும், கட்சியைப் பிளவுபடுத்தக் கூடாது என்ற நல்லெண்ணத்திற்கு ஆட்பட்டும் சமரசம் செய்து கொண்டது. பாரிஸ்தண்டா மத்தியக் கமிட்டி கூட்டத்திலும், ஏப்ரல் 2011-இல் நடந்த மற்றொரு மத்தியக் கமிட்டிக் கூட்டத்திலும் இச்சமரசம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
கட்சிக்குள் கிரண் அணியோடு சமரசம் செய்து கொள்வதும், அரசு விவகாரங்களில் பட்டாராயுடன் சேர்ந்துகொண்டு கட்சி முடிவுகளுக்கு எதிராக நடந்துகொள்வதுமென இரட்டை வேடமிட்டு பிரசண்டா துரோகமிழைத்தார். இத்தகைய பிளவுகளும், துரோகங்களும், சமரசங்களும் மக்களுக்குக் கட்சியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. மேலும், மன்னராட்சி தூக்கியெறியப்பட்டதற்குப் பிந்தைய காலங்களில் புரட்சியின் எதிரிகள் மற்றும் கட்சிக்குள்ளிருந்த சமரச, துரோகக் கும்பலுக்கு எதிராக மக்கள் அரசியல்ரீதியில் அணிதிரட்டப்படாமல் வெறும் பார்வையாளர்களாக வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது அரசியல் நிர்ணய சபைத் தேர்தலை எதிர்கொண்ட நேபாள மக்கள், ஒரு கட்சிக்கு மாற்றாக வேறொரு கட்சி என்ற விதத்தில் அம்பலப்பட்டுப் போன துரோகிகளுக்கும் பிற்போக்காளர்களுக்கும் வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய மாவோயிசக் கட்சியின் செல்வாக்கு வீழ்ந்து, அவர்கள் தேர்தலில் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டதன் பின்னணி இதுதான். ஒரு கட்சி ஆயுதப் படையைக் கொண்டிருந்தாலும், மக்கள் யுத்தத்தை நடத்தித் தளப்பிரதேசங்களை அமைத்திருந்தாலும், புரட்சியின் ஒவ்வொரு இடைக்கட்டத்திலும் கட்சிக்குள் எழக்கூடிய எதிர்ப்புரட்சிகர சக்திகளையும் முதலாளித்துவப் பாதையாளர்களையும் எதிர்த்து முறியடிக்கக்கூடிய மார்க்சிய-லெனினிய பற்றுறுதி, மாற்று வழியை முன்வைக்கக்கூடிய தெளிவு, மக்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை அணிதிரட்டும் அரசியல் துணிவு ஆகியவற்றைக் கொண்டிராவிடில், அக்கட்சி வீழ்வது தவிர்க்க முடியாதது என்ற பாடத்தைத்தான் நேபாள அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
”ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதமொன்றுக்கு 700லிட்டர் தண்ணீர் இலவசம். நவம்பர் 2013 வரையிலான திருப்பிச் செலுத்தவியலாத தண்ணீர் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும்” என்பது ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டமன்ற தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதி.
ஆட்சிக்கு வந்ததும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இந்த முடிவை செயல்படுத்துவது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு கேஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.
“நாங்கள் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை.”
“நாங்கள் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை. நாங்கள் சொன்னதெல்லாம் தண்ணீர் இணைப்பு உள்ளவர்களுக்கு 700 லிட்டர் தண்ணீரை இலவசமாக அளிப்போம் என்று தான். இதெல்லாம் வெறும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கை மட்டும் தான்” என்று சொன்னவர், “குறிப்பிட்ட சில இடங்களில் தண்ணீர் வழங்குவதற்கான அடிப்படைக் கட்டுமானங்கள் ஏற்கனவே இருக்கின்றன, வெறுமனே நீர்தேக்கத்திலிருந்து வரும் முக்கிய குழாயோடு அவற்றை இணைக்கும் வேலை மட்டும் தான் பாக்கி” என்றும் தெரிவித்துள்ளார். “இவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது தண்ணீர் மாஃபியாக்கள் தான்” என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். அதாவது, ஒரு பக்கம் தில்லியின் குடிநீர் வினியோகத்தை தனியார் மயமாக்கும் கொள்கையில் அடிப்படை மாற்றம் எதுவும் இல்லை என்று முதலாளிகளை சமாதானப்படுத்தி விட்டு, அனைவருக்கும் தண்ணீர் வினியோகம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு நாமம் போட்டிருப்பதை விளக்கியிருக்கிறார்.
மேற்கண்ட அறிவிப்புகள் வெளியானதும், இது தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் தேசியளவிலான ஊடகங்களிலும் இணையவெளியிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
மிகப் பெரும்பான்மையான முதலாளித்துவ ஊடகங்கள் கூட ஆம் ஆத்மி கட்சி காங்கிரசின் வழியில் செல்லத் துவங்கி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றன. மக்களுக்கு இலவசத் திட்டங்களை வழங்குவது அரசின் செலவினங்களை அதிகரித்து விடுமென்றும், ஏற்கனவே பற்றாக்குறையில் தள்ளாடி வரும் தில்லியின் நிதிநிலை இது போன்ற கவர்ச்சிகரத் திட்டங்களினால் நிலைகுலைந்து போய் விடுமென்றும் சாமியாடி வருகிறார்கள். என்றாலும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இணைய பீரங்கிகளோ, இவை மக்கள் நல நடவடிக்கைகள் என்பதால் ஆதரித்தே தீர வேண்டுமென்றும், இது போன்ற திட்டங்களைக் குறை கூறுவோருக்கு மக்கள் மேல் எந்த அக்கறையும் இல்லையென்றும் எதிர் தாக்குதலைத் தொடுத்து வருகிறார்கள்.
இவ்விரு கூச்சல்களுக்கு இடையில் சில உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படைத் தகவல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தில்லி தண்ணீர் பிரச்சனைகள்
தில்லியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 25 சதவீதம் குடிநீர்க் குழாய்களால் இணைக்கப்படவில்லை. மொத்தமுள்ள 14,000 கிலோ மீட்டர் குழாய் இணைப்புகளில் 80 சதவீதத்திற்கும் மேலானவை சுமார் 40 அல்லது 50 ஆண்டுகள் பழமையானவை. இதன் மூலம் 45 சதவீத நீர் வீணாகிறது. இந்த அடிப்படைக் கட்டுமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான எந்தத் திட்டமும் ஆம் ஆத்மி கட்சியினரால் இது வரை முன்வைக்கப்படவில்லை. இலாபம் என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு செய்யப்பட வேண்டிய இந்த அடிப்படை வேலைகள் குறித்து முதலாளிகள் மட்டுமல்ல, ஆம் ஆத்மியாலும் கூட முன் வைக்க முடியாது.
சொந்தமாக குடிநீர் தயாரிப்பதற்கு தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1994-ல் ஆரம்பிக்கப்பட்ட யமுனா நதியில் அணை கட்டும் திட்டம் ரூ 214 கோடி செலவழித்த பிறகு கைவிடப்பட்டுள்ளது என்று சமீபத்திய தலைமை தணிக்கை அலுவலக அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தில்லியின் பிரதான நீராதாரமான யமுனை மற்றும் கங்கையின் நீரோட்டம் தொடர்ந்து மாசுபட்டு பயன்படுத்தவியலாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனைச் சரி செய்வது குறித்தும் இதுவரை எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை. வைக்கவும் முடியாது. மீறி வைத்தால் ஆட்சி மட்டுமல்ல, கட்சியே நடத்த முடியாது.
அரசு புள்ளிவிபரங்களின்படி 2.2 கோடி தில்லி வாழ் மக்களில் 30 சதவீதம் பேர் நகர்ப்புற கிராமங்களிலும், அங்கீகரிக்கப்படாத சேரிகளிலும் வசிக்கின்றனர். தில்லியின் மொத்த குடும்பங்களில் சுமார் 32 சதவீத வீடுகளுக்கு (சுமார் 7 லட்சம் குடும்பங்கள்) குடிநீர் இணைப்பே கொடுக்கப்படவில்லை. 68 சதவீத வீடுகள் மட்டுமே குடிநீர் விநியோக கட்டுமானத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ள வீடுகளிலும், சுமார் 20 சதவீத இணைப்புகளுக்கு குடிநீர் பயன்பாட்டு அளவைக் கணக்கிடும் மீட்டர் பொருத்தப்படவில்லை. மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இணைப்புகளில் சரிபாதி சதவீதம் பேர் இலவச நிர்ணய அளவான 700 (தற்போது 667 லிட்டர்கள் என்கிறார்கள்) லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்துவோர். ஆக, ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் பேருக்கும் குறைவானவர்களே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இந்த இலவச அறிவிப்பு ஆரவாரமாக அறிவிக்கப் பட்ட போது இதோடு சேர்த்து குடிநீருக்கான கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தும் அறிவிப்பும் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தேசிய மாதிரி சர்வே ரிப்போர்ட்டின் படி, மீட்டர் பொருத்தப்பட்டுள்ள தில்லியின் மாநகரப் பகுதி குடும்பங்களில் 15.6 சதவீத குடும்பங்களுக்கும் புறநகர் பகுதியில் 29.7 சதவீத குடும்பங்களுக்கும் வருடம் முழுவதும் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. இது தவிர, குடிநீர் பகிர்தலும் சமனற்ற முறையிலேயே உள்ளது. சமீபத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் நடத்திய சர்வே ஒன்றின் படி சுமார் 24.8 சதவீத மக்களின் தனிநபர் தண்ணீர் வழங்கல் ஒரு நாளைக்கு வெறும் 3.82 லிட்டர் தான். அதே நேரம் தில்லியின் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதியிலோ தனிநபர் குடிநீர் வழங்கல் சராசரியாக 220 லிட்டராக உள்ளது. பணக்கார மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதியிலோ ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 509 லிட்டர் அளவு குடிநீர் நுகரப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வான விநியோகத்தையும், நுகர்வையும் சமப்படுத்தும் தைரியம் ஆம் ஆத்மிக்கு கிடையாது.
அறிவிக்கப்பட்டுள்ள இலவச அறிவிப்பின் கீழ் ‘நிபந்தனைகளுக்குட்பட்டது’ என்ற சிறிய ஸ்டார் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது, எவர் ஒருவர் இலவசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 700 லிட்டரை (அல்லது தற்போது சொல்லப்படும் 667 லிட்டரை) தாண்டி ஒரு சொட்டு நீராவது பயன்படுத்தி விடுகிறார்களோ, அவர் எடுத்துக் கொண்ட மொத்த நீருக்குமான விலையையும் கொடுத்து விடவேண்டும்.
ஆக, கூட்டுக் குடும்பமாக வசித்து அதிக நீர் பயன்படுத்துவோரும் குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தாதவர்களுமே இலவச நீருக்கான கூடுதல் செலவில் ஒரு கணிசமான பகுதியைச் சுமக்கவிருக்கிறார்கள். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் வேறு ஒரு கணக்கைச் சொல்கிறார். அதையும் பார்க்கலாம்.
தலைநகரின் கோவிந்த்புரி சேரிப்பகுதியில் தில்லி நீர் வாரிய டேங்கரில் வரும் தண்ணீருக்காக போராடும் பெண்கள். இந்த சேரிப் பகுதியில் தினசரி குடிநீர் வினியோகமோ, சுகாதார சேவைகளோ இல்லை.
இந்த வாக்குறுதியை கேஜ்ரிவால் கொடுப்பதற்கு முன், இலவசமாக தண்ணீர் வழங்குவது குறித்த சாத்தியப்பாடுகளை ஆராயும் பொறுப்பை என்.ஜி.ஓ ஒன்றிடம் ஒப்படைத்துள்ளார். “தண்ணீர் ஜனநாயகத்துக்கான மக்கள் முன்னணி” என்கிற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், தில்லி குடிநீர் வாரியத்தின் வருவாயை ஆராய்ந்தார்களாம். அந்த ஆராய்ச்சியின் படி, ஆண்டொன்றுக்கு தில்லி குடிநீர் வடிகால் வாரியம் சுமார் ரூ 2,000 கோடி சம்பாதிப்பதாகவும், இதில் ரூ 1,500 கோடி நீர் வழங்கலுக்காக செலவாகி விடுகிறதென்றும், மீதமுள்ள ரூ 500 கோடி லாபமாக கிடைக்கிறது என்றும் தெரிய வந்ததாம்.
இந்த ரூ 1,500 கோடி பல்வேறு தனியார்-பொதுத்துறை கூட்டு மாதிரியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து தண்ணீர் வாங்குவதற்காக செலவிடப்படுகிறது. அத்தகைய ஒரு நிறுவனம்தான் வயோலியா
நாளொன்றுக்கு 700 லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான ஓராண்டு செலவு ரூ 469 கோடி மட்டும்தான் என்றும், எனவே இலவச நீர் வழங்குவது (மேலே சொன்னதுபடி தில்லி மக்கள் தொகையில் 27% பேருக்கு மட்டும்) சும்மா ஜூஜூபி மேட்டர் என்றும் தெரிய வந்ததாகவும் அந்த என்.ஜி.ஓவைச் சேர்ந்த ‘விஞ்ஞானி’ சஞ்சய் சர்மா ஏசியன் ஏஜ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
“நாலும் மூணும் ஏழு” என்கிற அரிய உண்மையைக் கண்டுபிடிக்க இப்பேர்ப்பட்ட விஞ்ஞானிகளெல்லாம் ஆம் ஆத்மி கட்சிக்குத் தேவைப்படுகிறார்கள் என்பது ஆச்சரரியமாக இருக்கிறது. இத்தகைய கட்சியில்தான் ஐ.ஐ.டி மற்றும் என் ஆர் ஐ அறிவாளிகள் போட்டி போட்டுக் கொண்டு சேர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக, அறிவிக்கப்படவுள்ள திட்டம் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் கொண்டது, அது வெறும் வாய் வார்த்தையோடு நின்று போகுமா அல்லது பயனாளிகளைச் சென்றடையுமா, அதற்காக செய்யப்பட வேண்டிய உள்கட்டுமான வசதிகள் என்ன என்று பல்வேறு அம்சங்களையும் பருண்மையாக ஆராயாமல் இப்படி அடித்து விடுவதற்கு என்ன காரணம்? அறிவிப்பை வெளியிட்டு பின் அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் யோக்கியதை பற்றிக் கொஞ்சமும் அக்கறையின்றி வார்த்தைகளை மாத்திரம் வைத்து விளம்பரம் தேடிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டி வருகின்றனர் ஆம் ஆத்மி. அதாவது தனியார் மயம், உலகமயக் கொள்கைக்கு கேடு வராமல் மக்களை ஏமாற்றும் தந்திரமே ஆம் ஆத்மியின் மக்கள் நல புரட்டுத் திட்டங்கள்.
இரண்டாவதாக, நீராதாரங்களை மேம்படுத்துவது, நீர் வழங்கலுக்கான உள்கட்டுமானத்தை சீரமைப்பது, அனைத்து மக்களுக்கும் சரி சமமாக நீர் விநியோகம் நடைபெறுவதை உத்திரவாதப் படுத்துவது, குடிநீர் சுத்திகரிப்பு கட்டுமானங்களை உருவாக்குவது போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளைப் புறக்கணித்து விட்டு தனியார் மயத்தை பெருக்கி விட்டு இலவசத் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்துக் கொண்டே செல்வது என்பது மேலோட்டமாக மக்களிடம் ஒரு நற்பெயரைத் தரலாம். ஆனால் சற்று ஆழமாக பார்த்தால் எப்படி தமிழக அரசு காப்பீட்டுத் திட்டம் மக்கள் பணத்தை காப்பீடு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, சிகிச்சை என்றால் காசு இருந்தால்தான் முடியும் என்று மாற்றிவிட்டார்கள் அல்லவா? இதில் பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அந்த வகையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் முன் கேஜ்ரிவால் வெறும் சுண்டெலி தான்.
மூன்றாவதாக, இவர்கள் போடும் ”நாலும் மூணும் ஏழு” என்கிற கணக்கும் அதனடிப்படையில் வந்தடைந்திருக்கிற முடிவுகளுமே அடிப்படையில் சில சிக்கல்களைக் கொண்டிருக்கின்றன. இலவச நீர் வழங்குவதற்குப் போதுமான நிதி ஆதாரம் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தான் தில்லி குடிநீர் வாரியத்திடம் இருப்பாக இருக்கிறது. ஏனெனில், ஏற்கனவே ’சம்பாதித்த’ லாபமெல்லாம் பணக்கட்டுகளாக மஞ்சப்பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்காது. அவை அரசு கருவூலத்திற்குச் சென்று வேறு பல திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டிருக்கும். ஏப்ரலுக்குப் பின்னரான புதிய கட்டணத்தின் மூலம் ஒரு பகுதி பயனாளிகளிடமிருந்து கிடைக்கவுள்ள கூடுதல் வருமானம், இன்னொரு பகுதி பயனாளிகளுக்கு வழங்கும் இலவசத்தின் சுமையை ஒரு பகுதியளவிற்கே சுமக்கும். ஆக, ஏப்ரல் மாதத்திற்குப் பின் இந்த் கூடுதல் தொகையை அரசு மானியமாக வழங்க வேண்டியிருக்கும் என்கிறார் தில்லி குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
இதே அரவிந்த் கேஜ்ரிவால் 2005-ல் தண்ணீர் வினியோகத்தில் தனியார் மயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகு குடிநீர் சுத்திகரிப்பில் தனியார் மயத்தைக் குறித்து அவர் மௌனம் சாதிக்கிறார். அதன் மூலம் தனது தனியார் மய ஆதரவை பணிவுடன் தெரிவிக்கிறாராம்.
மொத்தத்தில், இருபது சதவீத மக்களுக்கு இலவச நீரையும் எண்பது சதவீத மக்களுக்கு கானல் நீரையும் வழங்குவது தான் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள கவர்ச்சிகரமான அறிவிப்பின் பின்னே உள்ள சூட்சுமம். மறுகாலனியாக்கத்தையும், உலக மயத்தையும் ஆதரிக்கின்ற ஆளும் வர்க்க கட்சிகளின் புதிய வரவு ஆம் ஆத்மி என்பதைத் தாண்டி இது குதிரை அல்ல, பெருச்சாளிதான் என்பதை மக்கள் உணர்வார்களா?
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் ரத்து செய்!
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!
தாதுமணல் குவாரிகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடு!
அன்பார்ந்த மக்களே!
அணு உலைக்கு எதிராகவும் தாது மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
தாது மணல் கொள்ளை, கூடங்குளம் அணு உலை ஆகிய இரு பிரச்சனைகளும் தூத்துக்குடி, நெல்லை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நேரடியாக எதிர் கொண்டு வரும் மிகப்பெரும் அபாயங்கள். இவ்வபாயங்களை ஒற்றுமையோடு எதிர்கொண்டு, முறியடிக்கா விட்டால் கடற்கரை மக்களும், சந்ததிகளும் காலம், காலமாய் வாழ்ந்து வரும் கடற்கரையை விட்டு அகதிகள் போல் விரைவில் வெளியேற நேரிடும்.
அணு உலைக்கு எதிராகவும் தாது மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அப்போராட்டம் நியாயமானது. மக்களுடைய வாழ்வை, வாழ்வாதாரங்களை அழித்து வருகிறது. இவற்றை எல்லாம் நன்றாகத் தெரிந்து இருந்தும் மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனைப் புறக்கணித்துப் பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்குத் துணை போகின்றன.
அணு உலைக்கு எதிராகப் போராடி வருகிற மக்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகளை போட்டுள்ளது அரசு.
அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அனைத்து தாது மணல் குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளுக்கு ஒரு துளி கூட அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. மக்களை துச்சமாக நினைத்து செயல்படுகிறது.
இவ்வாறான சூழலில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. வழக்கம் போல் அனைத்துக் கட்சிகளும் ஓட்டுப் பிச்சை கேட்க மக்கள் காவலனாய் அவதாரம் எடுத்து வர இருக்கிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தேர்தல் களத்தில் தாதுமணல், அணு உலைப் பிரச்சனைகளை முன்னிறுத்திப் பேச, செயல்பட மாட்டார்கள் அல்லது பொய்யான வாக்குறுதிகளை அளித்து நம்மை நம்பச் சொல்வார்கள் என்பது நிச்சயமான நிலையில், கடந்த காலங்களில் ஏமாந்தது போல் இத்திருடர்களிடம் மீண்டும் ஏமாறப் போகிறோமா? அல்லது விழிப்புடன் இருந்து இத்திருடர்களை விரட்டியடித்து, போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கப் போகிறோமா? என்பதே நம்முன் உள்ள கேள்வி.
சீட், பணத்தை மையப்படுத்தும் கேவலமான கூட்டணிகள்
இந்து மதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பி.ஜே.பி.யுடன் கூட்டணிப்பேச்சு நடத்தி வருகிறார் இடிந்தகரையில் ஆவேச முழக்கமிட்ட கோபால்சாமி.
மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஆயிரக்கணக்கில் இருக்க, தேர்தல் வருவதற்கு எட்டு மாதங்கள் முன்பாகவே ஓட்டுச் சீட்டுக் கட்சிகள் நடத்தி வரும் பிரச்சாரங்கள், ஊடக விளம்பரங்கள், கூட்டணி பேரங்கள், கருத்துக் கணிப்புகள் அருவெறுக்கத்தக்கதாக உள்ளன. எங்கள் கொள்கைக்கு வாக்களியுங்கள் என்று கோராமல், கொள்கை தொடர்பான விவாதங்கள் நடத்தாமல், மோடி அலை, ராகுல் கோபம், விஜயகாந்தின் மனைவி-மச்சான் சொல்வதென்ன? எத்தனை கோடி, எத்தனை சீட், நடிகர் விஜய், விஷால் ஆம் ஆத்மியில் இணைவார்களா? என்று தேர்தல் கிசுகிசுக்களே கொள்கை தொடர்பான விவாதங்கள் போல் நடந்து மக்களை முட்டாளாக்கும் வகையில் கூத்துகளாக அரங்கேறி வருகின்றன.
காங்கிரசு, பாரதீய ஜனதா, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தாது மணல் கொள்ளையின் கைக்கூலிகள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அணு உலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற கட்சிகளாவது தேர்தல் கூட்டணிக்கு கடலோர மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்துமா? என்றால் அதுவும் இல்லை, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், கிருஸ்துவ, இசுலாமிய, தலித் மக்களையும் அகதிகளாக்குவதையே தமது கொள்கையாக வைத்திருக்கும் இந்து மதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பி.ஜே.பி.யுடன் கூட்டணிப்பேச்சு நடத்தி வருகிறார் இடிந்தகரையில் ஆவேச முழக்கமிட்ட கோபால்சாமி. வைகோவைப் பின் தொடர்கிறார் வன்னிய சாதி வெறியர் இராமதாசு.”கொள்கைக் குன்று” விஜயகாந்திடம், கருணாநிதிக்காத் தூது போகிறார் திருமா. இடிந்தகரையில் மறுவீட்டு விருந்து சாப்பிட்ட சீமானோ, மறுநாளே வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்தில் கூச்ச நாச்சமின்றி விருந்து உண்கிறார்.
அணு உலைக்கு எதிராகப் பேசும் இவர்கள் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்தே இவர்களின் இரட்டை வேடத்தை அறியலாம்.
நமக்கெல்லாம் அருவெறுப்பாய் தோன்றும் இச்செயல்கள், இவர்களுக்கு இயல்பாய் உள்ளது. மக்கள் விரோதிகளோடு கைகோர்த்துள்ள இவர்கள் மக்களுக்காக எப்படி போராடுவார்கள்? அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் திரண்ட மக்களைப் பயன்படுத்தி தங்களுக்கு சுய விளம்பரம் தேடிக் கொண்ட சாமர்த்தியசாலிகள் என்று இவர்களைச் சொல்லலாம். அணு உலைக்கு எதிராகப் பேசும் இவர்கள் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்தே இவர்களின் இரட்டை வேடத்தை அறியலாம். தேர்தல் கூட்டணியில் அதிக சீட்கள் பெற பல கோடி செலவில் மாநாடு நடத்தும் வைகோ, இராமதாசு, திருமா போன்றோர், ஈழப் பிரச்சனைக்கோ, அணு உலைப் பிரச்சனைக்கோ மாநாடு நடத்தி லட்சக்கணக்கானோரைத் திரட்டிப் போராடியதில்லை.
சீரழிந்த ஓட்டுச் சீட்டு அரசியலை சீர் செய்யும் அவதாரமா ஆம் ஆத்மி?
ஊழல் ஓட்டுக் கட்சிகளுக்கு எதிரான மாற்றாக அரவிந்த் கேஜ்ரிவால் “ஆம் ஆத்மி கட்சி” முன்னிறுத்தப்படுகிறது. உண்மையில் வடிவேலு வார்த்தைகளில் சொன்னால் ஆம் ஆத்மி கட்சியை “டம்மி பீசு” என்று சொல்லலாம்.
நிலக்கரி இரும்புத் தாது, தாதுமணல் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் இலாப வெறியோடு அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு சூறையாடி பலகோடி மக்களைத் தற்கொலைக்குள் தள்ளிய இரக்கமற்ற கார்ப்பரேட் முதலாளிகளைப் பார்த்து “ஊழலுக்குப் பலியானவர்கள்” என்கிறார் கேஜ்ரிவால். “காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து இராணுவத்தை அங்கு நிறுத்துவது குறித்துத் தீர்மானிக்க வேண்டும்” என்று பிரசாந்த் பூசண் சொன்ன சாதாரண கருத்தைக் கூட மறுத்தவர்தான் “ஜனநாயகப் போராளி” அரவிந்த் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சியை “டம்மி பீசு” என்று சொல்லலாம்.
பதவியேற்ற 15 நாட்களில் 700 லிட்டர் தண்ணீர், மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக சொல்லும் ஆம் ஆத்மியின் கட்சிக்குள்ளே குழாயடிச் சண்டை நடக்கிறது. கிறிஸ்டினா சாமி என்ற ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதியை முறைகேடு செய்திருக்கிறார் என்பது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் கிறிஸ்டினா சாமி ஓர் ஏகாதிபத்திய கைக்கூலி தொண்டு நிறுவனம் நடத்த வருபவர். இவரைப் போன்று நாடு முழுவதும் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்களின் பணி உண்மையான, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் ஊடுருவி அப்போராட்டங்களை கட்டுக்குள் வைத்திருப்பதும், திசை திருப்புவதும்தான்.
ஊழல் எதிர்ப்பு சவடால் அடித்து வரும் கேஜ்ரிவால் ஊழல் பெருச்சாளி காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பதும், ஊழல் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பதுமே கேஜ்ரிவாலின் யோக்கியதைக்குச் சான்று. காங்கிரசின் தொடர் ஊழல்களால், வெறுப்படைந்திருந்த மக்கள் வேறு வழியின்றி பி.ஜே.பி.க்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலில், மூன்றாவது வாய்ப்பாக கேஜ்ரிவால் முன்னிறுத்தப்படுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வரை, இந்நாடகங்கள் ஊதிப் பெருக்கப்படும்.
ஒருவேளை ஆம் ஆத்மியிலிருந்து 20,30 எம்.பி.க்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றாலும், அணு உலையை மூடுவதோ, தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளக் கொள்ளையைத் தடுப்பதோ இயலாது. இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவது சட்டவிரோதம் என்று இருந்த நிலையை இன்று சட்டபூர்வமாக்கியதில் அனைத்து ஓட்டுக் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. உடன்பாடும் உண்டு. இந்தியாவின் இறையாண்மை பன்னாட்டு முதலாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டபின் நாடாளுமன்றம் செல்லாக்காசாகி விட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருமே அதிகாரமற்ற பொம்மைகள்தான். இந்தச் சூழ்நிலையில் சிலர் மீனவர் தனித் தொகுதி என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் தனித் தொகுதி படும்பாட்டை நாடே அறியும். சில புதுப்பணக்காரர்கள் உருவாவதைத் தவிர இதில் வேறு பயனில்லை.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
நமது நோக்கம் தாது மணல் கொள்ளையைத் தடுப்பது, அணு உலையை மூடுவது. இதற்கு இத்தேர்தலில் வாக்களிப்பது எவ்வகையிலும் பயன்படப் போவதில்லை. எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சியையும் நம்பி நம் போராட்டத்தை அடமானம் வைக்க முடியாது. நமது சொந்த பலத்தை நாம் நம்ப வேண்டும். ஒட்டு மொத்த கடற்கரை சமூகமும் எழுந்து நின்று போராடினால் வைகுண்டராஜனால் மணல் அள்ள முடியுமா? வி.வி.யின் லாரி ஊரைத் தாண்டி சென்று விடுமா? ஆனால் தாது மணல் கொள்ளைக்கெதிராக ஒன்றுபட்ட வலுவான போராட்டம் நடைபெறவில்லை என்பதே உண்மை. அதனால்தான் அரசாங்கம் பேடி குழு ஆய்வறிக்கையைக் கூட வெளியிட மறுக்கிறது. இப்படிப்பட்ட அரசாங்கத்தை மண்டியிட வைக்க ஒட்டுமொத்த கடற்கரை சமூகமும் உள்நாட்டு மக்களுடன் இணைந்து இயற்கை வளங்களை கொள்ளையிடுவதற்கு எதிராகக் கைகோர்த்துப் போராட வேண்டும்.
மாறாக கட்சிகள் பின் சென்றால் மக்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டு, ஏமாறுவது நிச்சயம். ஓட்டுக் கட்சிகளையும், தேர்தலையும் ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்தால், அப்போது ஓட்டுக் கேட்கும் கட்சிகளின் உண்மை முகம் தெரிய வரும். மக்கள் நலன் காப்பதற்குத்தான் ஓட்டு கேட்கிறோம் என்று சொல்லுகின்ற அரசியல் கட்சிகள் மக்கள் வாக்கைப் பெற அணு உலையை மூடி, தாது மணல் கொள்ளையை நிறுத்தட்டுமே! அதை செய்வார்களா? இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை. ஆகவே,
மக்கள் பலத்தில் நம்பிக்கை வைப்போம்!
ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
ஊருக்கு ஊர் போராட்டக் குழு அமைப்போம்!
லட்சம் மக்களைத் திரட்டி தாதுமணல் கொள்ளையைத் தடுப்போம்!
அணு உலையை மூடுவோம்!
தமிழக அரசே,
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் ரத்து செய்!
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!
தாதுமணல் குவாரிகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடு!
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள்
9443527613, 9442339260, 9486643116
“மாடா, சீனு சார் வரலியாடே” மெய்கண்ட மூர்த்தியின் குரல் திணறலாக வெளிப்பட்டது.
அப்படியொரு நிலையில் இப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.
ஏனெனில் மெய்கண்டன் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான். ஆடைகள் களையப்பட்டு மேலிருந்து கீழ் வரை ஒன்று போலத் தைக்கப்பட்டிருந்த தொள தொளப்பான அங்கி ஒன்றை அணிவித்திருந்தனர். கொஞ்சம் பருத்த உடல் அந்த அங்கியினுள் அடங்கி பெரும் துணி மூட்டை போலக் கிடந்தான். கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அது விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைகளுக்குப் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை.
மெய்கண்டன் மிக மோசமான விபத்தில் சிக்கியிருந்தான். மதியம் மூன்று மணிக்கு விபத்து நடந்திருக்கிறது. மூன்றரை மணிக்கு சுடலைமுத்து ஓடிச் சென்று மெய்கண்டனை மருத்துவமனைக்குத் தூக்கி வந்திருக்கிறான். ஐந்தரை மணி நேரங்களாக இந்த அங்கியை அணிவித்ததைத் தவிர வேறு மருத்துவம் ஏதும் நடந்திருக்கவில்லை. நானும் சுடலையும் அந்த மருத்துவமனையின் எல்லாக் கதவுகளையும் தட்டித் தீர்த்து விட்டோம். கடைசியாக அப்போது தான் வந்திருந்த தலைமை மருத்துவரின் காலையாவது பிடித்து கெஞ்சிப் பார்த்து விடலாம் என்று கிளம்பிய போது தான் மெய்கண்டன் மேற்படிக் கேள்வியைக் கேட்டான்.
”மெய்கண்டா, முதல்ல வைத்தியம் பாத்துக்கிடுவோம்டே. எவம் வந்தான் வரலைன்னு பொறவு கணக்கெடுப்போம்” முடிந்த வரை ஆத்திரம் தலை காட்டாமல் பதில் சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் மருத்துவரின் அறைக்கு நானும் சுடலையும் விரைந்தோம்.
”சார், இது மெடிக்கல் இன்சுரன்ஸ் கேசுங்க. டி.டி.கே காரன் இன்னும் எக்ஸ்பெண்டிச்சர் அப்ரூவல் கொடுக்கல்லே. நாங்க என்னா செய்ய முடியும் சொல்லுங்க? நீங்க எங்க கிட்ட கோபப்படறதிலே அர்த்தமே இல்ல சார்” நாற்பத்தைந்து வயது வெள்ளைப் பூசணிக்காய் ஸ்டெத்தஸ் கோப்பை நிரடிக் கொண்டே சாவகாசமாய் பதில் சொன்னது. மருத்துவமனையின் மற்ற துணைக் கிரகங்கள் இந்த காரணத்தை இதுவரை சொல்லாமலே காலம் கடத்தியிருக்கிறார்கள்.
காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கத் தேவையில்லையென்றும், மருத்துவ செலவுகளுக்கு கையிலிருந்தே பணம் கட்டி விடுவோமென்றும் சொல்லி அவர்களை ஏற்கச் செய்வதற்கு ஒரு மணி நேரம் கோபம், கெஞ்சல், இறைஞ்சல், வேண்டல் என்று நவரசங்களையும் பிரயோகிக்க வேண்டியிருந்தது. இறுதியாக ஒப்புக் கொண்டனர். முன்பணத்தையும் கறாராக பெற்றுக் கொண்டனர். எக்ஸ்ரே அறைக்குள் எடுத்துச் செல்லும் முன் மெய்கண்டன் மீண்டும் ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான்.
“மாடா, சீனு சார் வரலியாடே” நாங்கள் பதில் சொல்லவில்லை.
ஒரு மணி நேரம் கழித்து ஸ்கேன் முடிவுகள் வந்தது. மெய்கண்ட மூர்த்தியின் உடலில் மொத்தம் மூன்று எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. கெண்டைக்கால் எலும்பில் முழங்காலின் வெளி எலும்பு பொருந்தும் இடம் நொறுங்கியிருந்தது. முழங்காலின் முன்னெலும்பு நடு மையத்தில் உடைந்திருந்தது. இவை இரண்டும் போக கை மணிக்கட்டில் ஒரு மயிரளவு கீறல் ஏற்பட்டிருந்தது. கையிலும் முழங்காலிலும் மாவுக் காட்டுப் போடப் போவதாகவும், கெண்டைக்காலில் உலோகத் தகடு பொருத்த வேண்டுமென்றும் மருத்துவர் விளக்கினார். அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மீண்டும் ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான்.
“மாடா, சீனு சார் வரலியாடே” அறைக்குள் மெய்கண்டன் எடுத்துச் செல்லப்படும் வரை அடக்கிக் கொண்டிருந்த சுடலை வெடித்து விட்டான்,
’சீனு சார்’ என்று மெய்கண்டனால் பயபக்தியோடு அழைக்கப்பட்டவர் எங்கள் நிறுவனத்தின் கிளை மேலாளர். சுடலையும் மெய்கண்டனும் எனது பால்ய கால நண்பர்கள். இத்தனை வருடங்களாக ஒன்றாகப் பழகியும் மெய்கண்டனின் குணத்தை சுடலையால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மெய்கண்டன் கட்டுப் போட்டு வரும் வரை பழைய கதைகள் சிலவற்றைச் சொல்கிறேன், உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா பாருங்கள்.
அப்போது நாங்கள் திசையன்விளை செயின்ட் சேவியர்சில் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு நெல்லை அரசு பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் பிரிவில் சேர்ந்தோம். நான் கண்டித்தான் குளத்திலிருந்த பாட்டி வீட்டிலும், மெய்கண்டன் பேட்டையில் இருந்த அவன் அத்தை வீட்டிலும் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தோம். மெய்கண்ட மூர்த்தி நல்லவன் என்பதால் நண்பர்கள் குறைவு. அவனும் அனாவசியமாக யாரோடும் பேச்சு வழக்கு வைத்துக் கொள்ள மாட்டான். என்னோடு மட்டுமே அவனுக்குப் பழக்கம் இருந்தது. அதுவும் படிப்பு சம்பந்தமாகவும், படித்த பின் பார்க்கப் போகும் வேலை சம்பந்தமாகவுமே இருக்கும். பள்ளியைப் போன்றே கல்லூரியிலும் அவன் வாத்தியார்களுக்குப் பிடித்த மாணவனாய் இருந்தான்.
அப்போது வரதராஜ பெருமாள் என்று ஒரு விரிவுரையாளர் இருந்தார். அவருக்கு மட்டுமே விளங்கும் வகையில் ஆங்கிலம் பேசக் கூடியவர். வகுப்பின் பெரும்பான்மை மாணவர்கள் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள். அவர் பேசும் ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்கே புரியாத போது எங்களுக்கு மட்டும் எப்படிப் புரியும் சொல்லுங்கள்? அதனால் தான் அவரை மாற்ற வேண்டும் என்று கோரி நாங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட முடிவு செய்தோம். மொத்தம் நாற்பது பேரில் 25 மாணவர்கள் 15 மாணவிகள். மாணவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை நானும், மாணவிகளிடம் பேசி சம்மதிக்க வைக்கும் வேலையை சுடலை முத்துவும் எடுத்துக் கொண்டோம். மெக்கானிக்கலும் சிவிலும் எங்களுக்கு ஆதரவாக வந்து நின்றனர். நாற்பதில் முப்பத்தொன்பது பேர் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. நீங்கள் நினைத்தது சரி தான்; மெய்கண்ட மூர்த்தி மட்டும் தவறாமல் வகுப்புகளுக்குச் சென்றான்.
போராட்டத்தின் மூன்றாம் நாள் கல்லூரி முதல்வர் மாணவர்களிடையே பேச முன்வந்தார்.
“படிக்கிற காலத்திலேயே ஆர்பாட்டம், போராட்டம்னு நீங்க எல்லாம் எங்க உருப்படப் போறீங்க? வரது சார் பேசறது புரியலைன்னு இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லே. வெட்டியா கிளாஸை கட் அடிச்சிட்டு ஊர் சுத்த உங்களுக்கு இந்த காரணம் தான் கிடைச்சதா?”
“சார்.. அவெம் வாக்குள்ளே என்னத்தையோ போட்டு மென்னுகிட்டே பேசுதான் சார்” “சார், வரது ஐய்யரு பான்பராக் திங்காரு சார்” “குடிச்சிட்டு வாரான் சார்” “மூப்பனாரு கெணங்கா பேசுதாம் சார்” அமைதியாய் இருந்த கூட்டத்தில் இருந்து மர்மக் குரல்கள் திடீரெனக் கிளம்பின.
“எவம்லே அது.. சண்டியரு. வாலே முன்னாடி. நான் ரவுடிக்கு ரவுடி தெரியுமாலே” வேறு வழியின்றி முதல்வரும் எங்கள் தரத்துக்கு இறங்கி விட்டார்.
“யேலேய்.. வெளியே வாடே சொட்ட தலையா” இன்னொரு முனையிலிருந்து இன்னொரு மர்மக் குரல். முதல்வர் பதிலுக்கு ஏதோ கத்த, மாணவர்களிடையே இருந்து கூச்சல் கிளம்பியது. ‘சொட்ட மண்ட பிரின்ஸி டவுன் டவுன்’ ‘பனை மரத்துல வவ்வாலா எலக்ஸுக்கே* சவ்வாலா’ – பேச்சுவார்த்தைக் கூட்டத்தின் வெப்பம் கட்டுப்படுத்தவியலாத படிக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது. (*எலக்ஸ் – எலக்ட்ரானிஸ்/ மின்னணுவியல் துறை)
துறைத் தலைவர் குறுக்கிட்டார். அவர் கொஞ்சம் குயுக்தியானவர்.
“யேய் சைலன்ட்டா இருங்கப்பா.. வரது சார் கிளாஸ் எடுக்கது புரியலையா, நீங்க படிக்க லாயக்கில்லாத சல்லிப் பயலுவலான்னி இப்ப தெரியும் பாருங்க. தம்பி மெய்கண்ட மூர்த்தி, நீ இவங்களோட சேராம வகுப்பு வந்திட்டு இருக்கியே, உனக்கு வரது சார் பேசறது புரியுதா?” மெய்கண்டன் வாத்தியார்களுக்குப் பின்னிருந்து உதயமானான்.
“யெஸ் சார்…”
“வரது சாரை கண்டிப்பா மாத்தணுமோடே?”
“நோ சார்…” அவ்வளவு பவ்யமான குரல்.
மெய்கண்டனைத் தொடர்ந்து மாணவர் கூட்டத்திலிருந்த கோகிலா மருண்டபடியே சுடலையைப் பார்த்துக் கொண்டு எழுந்தாள் “சார் எனக்கும் புரியுது சார்…”. கோகிலாவைத் தொடர்ந்து சண்முகப்பிரியா; சண்முகப்பிரியாவைத் தொடர்ந்து வசந்தி. துறைத்தலைவரின் முகத்தில் ஒரு வில்லங்கப் புன்னகை வந்து அமர்ந்தது.
“யாருக்கெல்லாம் வரது சார் க்ளாஸ் புரியுதோ அவங்க எல்லாம் வகுப்புக்குப் போகலாம். ஸ்ட்ரைக் நடத்தினதுக்காக நடவடிக்கை எடுக்க மாட்டோம்” நாங்கள் நண்பர்கள் பதினைந்து பேர் மட்டும் தனியே நின்றோம்.
“தெரியும்லெ உங்க பவுசு.. உங்களுக்குள்ளேயே ஒத்துமை இல்லே. சுத்த தயிர் வடை பயலுவோ” மெக்கானிக்கலும் சிவிலும் கலைந்து சென்றனர். அன்று மாலை இரண்டு வார இடை நீக்க உத்தரவோடு நாயர் டீ கடை மறைவில் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்.
‘சவத்த மென்னியத் திருவி கொன்னு போடலாம்டே அந்த துரோகிய’ – சுடலைமுத்து நிலையாய் நின்றான். மெய்கண்டனை வெளுத்து விடுவது என்பதில் எல்லோருக்கும் ஒத்த கருத்து இருந்தது. சில பில்டர் கோல்டுகள் புகையான பின் அமைதியாயினர்.
“ஏம்ல கால வாரி விட்ட?” பிரச்சினை ஓய்ந்து ஒருவாரம் கழித்து மெய்கண்டனிடம் கேட்டேன்.
அவனும் தமிழ்வழியில் படித்தவன் தான். அவனுக்கும் புரியவில்லை தான். என்றாலும், வகுப்பில் விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே தமிழில் எழுதி வைத்து மனப்பாடம் செய்வதாக சொன்னான். அந்த நோட்டுகளையும் காட்டினான். ‘டையோடு வில் அல்லோவ் எலக்ட்ரிக் கரன்ட் டு பாஸ் இன் ஒன் டைரக்சன். டையோடு வில் ப்லாக் எலக்ட்ரிக் கரன்ட் டு பாஸ் இன் ஆப்போசிட் டைரக்சன்…’ – இந்த பாணியில் அந்த நோட்டு முழுக்க தமிங்கிலத்தில் குறிப்புகள்!
மெய்கண்ட மூர்த்தி அவன் தந்தையால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவன். மெய்கண்டனின் அப்பா திருநீலகண்டர் போஸ்ட்மேனாக இருந்தார். மூன்று வயதில் நாங்கள் துள்ளுப் புட்டான்களைப் பிடித்து ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொண்டிருந்த போது மெய்கண்டன் தன் அப்பாவோடு சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தான். நாங்கள் தெருவில் பிள்ளைகளோடு ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த போது மெய்கண்டன் நெற்றி நிறைய நீறு பூசி “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே” என்று சுந்தரமூர்த்தி நாயனாரோடு உறவாடிக் கொண்டிருப்பான்
திருநீலகண்டர் தன் பிள்ளைகளை நல்ல விசுவாசம் மிக்கவர்களாகவும் கீழ்படிதல் குணம் கொண்டவர்களாகவும் வளர்த்தார்; என்றாலும் அவர்களுக்கு வெளியிலிருந்து திணிக்கப்பட்ட குணங்களை வரித்துக் கொண்டதற்கு தம்மளவிலேயே காரியவாத நோக்கங்கள் இருந்தன. ’நல்லவனாக’ இருந்ததன் பலனாக மெய்கண்டனின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் தொண்ணூறுகளில் இருக்கும்; நாங்களோ நாற்பது மதிப்பெண்கள் எடுக்கவே திணறினோம். படிப்பு முடித்ததும் வளாகத் தேர்வில் எங்கள் மூவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
“ஒன்னோட விசுவாசத்தை நாங்க பாராட்டாம இல்லை…”
சென்னையில் இயங்கி வந்த மேசைக் கணினிகள் தயாரித்து விற்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் வேலை. அந்தப் பிரிவில் எங்களையும் சேர்த்து மொத்தம் பத்து பேர். தினசரி வாடிக்கையாளர்களிடம் இருந்து கணினியில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் குறித்த புகார்கள் தொலைபேசி வழியே வரும். நாங்கள் நேரில் சென்று திருத்திக் கொடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரக்கூடும். கணினியில் ஏற்பட்டுள்ள கோளாறின் தன்மையைப் பொறுத்து சில நாட்கள் இரவில் கூட பணிபுரிய நேரிடும். அலுவலகத்தைக் கோயிலாகவும், மேலாளரை பூசாரியாகவும், முதலாளியைத் தெய்வமாகவும் பாவித்தான் மெய்கண்டன். மற்றவர்கள் ஒரு நாளைக்கு ஆறு வாடிக்கையாளர்களைச் சந்தித்தார்கள் என்றால் மெய்கண்டன் பத்து பேரைச் சந்தித்தான்.
ஒரு வாடிக்கையாளரைச் நேரில் சந்திக்க சென்னை நகரத்தின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் பத்து கிலோ மீட்டர்களாவது பைக்கில் பயணிக்க வேண்டியிருக்கும். மெய்கண்டன் சராசரியாக ஒவ்வொரு நாளும் நூற்றி இருபது கிலோமீட்டர்கள் சென்னை நகரத்துக்குள் அலைந்தான்.
இரவு வேலை செய்தால் தொடர்ந்து வரும் பகலில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வார இறுதியில் வேலை பார்த்தால் அதற்கு ஈடாக வார நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளவும் சலுகைகள் இருந்தன. வேலை தொடர்பான இரவு நேர பயணங்களுக்கும், நகரத்துக்கு வெளியே நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க வேண்டும் என்றாலும் கம்பெனி செலவில் வாடகை கார் அமர்த்திக் கொள்ளலாம் என்று விதிகள் இருந்தன. இவையெதையும் அவன் பயன்படுத்திக் கொள்ள மாட்டான்.
முதலாளியின் மனம் கோணாமல் நடப்பது என்று மெய்கண்டன் விரதம் பூண்டிருந்தான். அவன் விசுவாசத்தின் பாரத்தை நாங்கள் சுமந்தோம். சலுகைகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்ட போது மெய்கண்டனை முன்னுதாரணமாகக் காட்டினர். இன்று சிரீபெரும்புதூருக்கு பைக்கிலேயே வாடிக்கையாளரைச் சந்திக்க சென்று கொண்டிருந்த வழியில் தான் விபத்தில் சிக்கிக் கொண்டான்.
“மாடா, சீனு சார் வரலியாடே” – மெய்கண்டனின் குரல் எனது நினைவுகளைக் கலைத்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. அன்று சீனு சார் வரவேயில்லை. அன்று மட்டுமல்ல, தொடர்ந்த நாட்களிலும் அவர் நேரில் வந்து விசாரிக்கவேயில்லை. மெய்கண்டன் மிகவும் வருத்தப்பட்டான். ஒரு வாரம் கழித்து தொலைபேசிய சீனு சார், மீண்டும் எப்போது வேலைக்குத் திரும்புவாய் என்று கேட்டு விட்டு வேறு விசாரணைகள் இன்றி கத்தரித்து விட்டாராம்.
மெய்கண்டன் சீக்கிரமே வேலைக்குத் திரும்பி விட்டான். ஒன்றரை மாதங்களாவது படுக்கையில் ஓய்வாக இருக்க வேண்டுமென்றும், தொடர்ந்து ஒரு மாதங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்து பழக வேண்டுமென்றும் அப்புறம் தான் வழக்கமான வேலைகளில் ஈடுபட வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், இரண்டே மாதத்தில் வேலைக்குத் திரும்பி விட்டான்.
”மெடிக்கல் லீவுல இருந்து கம்பேனி காச திங்க மனசு ஒப்பல்லெ மக்கா” ‘சீனு சாரின்’ காதில் விழும்படிக்கு எங்களிடம் சொல்லிக் கொண்டான்.
மெய்கண்டனுக்கு இயல்பிலேயே பருத்த உடல். அதிலும் இரண்டு மாதங்கள் நடமாட்டம் இன்றி போஷாக்கான உணவுகளைத் தின்றதில் இன்னும் கொஞ்சம் பருத்திருந்தான். திடீரென்று கூடிய எடையை உடைந்த கால்களால் சுமந்து நடக்க மிகவும் சிரமப்பட்டான்.
”மெய்கண்டா, நீ நேர்ல போயி சர்வீஸ் செய்யாண்டாம்லே, ஆபீஸ்ல இருந்து கிட்டு போன்ல பேசி சரி செய்யக் கூடிய வேலைய மட்டும் பார்த்துகிடு. மற்றத நாங்க பார்த்துகிடுதோம்” சுடலை கொஞ்சம் முன்கோபக்காரன் என்றாலும் மற்றவர்களுக்காக கவலைப்படுபவன். மெய்கண்டனின் மேலான உண்மையான பரிவில் தான் இதைச் சொன்னான். எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சீனு சார் உள்ளே நுழைந்தார்
“வாட் மெய், ஆர் யூ கோயிங் டு சிட் சிம்ப்ளி இன் ஆபீஸ்? உன்னாலே வேலை பார்க்காம இருக்க முடியாதேப்பா”
”நோ சார். கால் வலி அவ்வளவா இல்ல சார். நான் பீல்டுக்கு போய் வேலை பார்க்க முடியும் சார்” மெய்கண்டன் ஒரு பாராட்டுதலை எதிர்பார்த்தான்.
“அப்ப, நீ என்ன செய்யிறே எண்ணூர் அசோக் லேலண்ட்ல ஒரு ப்ராப்ளம் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க போய் என்னான்னு பார்த்துட்டு வந்துடு” என்ற சீனு சார், சுடலையைப் பார்த்து “உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று சொல்லி விட்டு நறுக்கென்று திரும்பிக் கொண்டார்.
சுடலை ஆத்திரத்தோடு என்னைப் பார்க்கத் திரும்பினான். ஒரே தெருக்காரன் என்பதால் எல்லா நேரமும் நானே அணை போட வேண்டியிருப்பது ஒரு கொடுமை, “சரி சுடலை, அவனைப் பத்தித் தான் தெரியும்லா. நீ சும்மா ஆவுதாலி சொல்லிட்டு கிடக்காம விடு” முகம் பார்க்காமல் கிசுகிசுத்து விட்டு அகன்றேன்.
சரியாக ஒரே மாதம். மெய்கண்டனின் காலில் லேசாக வலி கூட ஆரம்பித்தது. நன்றாக நடந்தவன் கொஞ்சம் தாங்கித் தாங்கி நடக்க ஆரம்பித்தான். படிக்கட்டுகளில் நின்று நின்று ஏறினான். நாளாக நாளாக அவனது கெண்டைக் கால் உடைந்த இடத்தில் ஒரு வீக்கம் தோன்ற ஆரம்பித்தது. என்றாலும் அனைத்தையும் சமாளித்துக் கொண்டு பழையபடி ஓடியாடி வேலைபார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தச் சமயம் ஆவடி டாங்கி தொழிற்சாலைக்கு இருநூறு கணினிகள் சப்ளை செய்திருந்தோம். அவைகளை கூரியர் நிறுவனத்திற்கு வழக்கமாக கொடுக்கும் தொகையை எங்கள் நிறுவனம் இந்த முறை குறைத்துக் கொடுத்ததால் அவர்கள் கடுப்பில் தொழிற்சாலையின் முன்பாக கணினிகளை இறக்கி வைத்து விட்டுச் சென்று விட்டனர். இருநூறு கணினிகளுக்கு நானூறு பெட்டிகள். சில பாரம் சுமக்கும் தொழிலாளிகளோடு நாங்கள் இருவர் நேரடியாகச் சென்று எல்லா பெட்டிகளையும் உள்ளே எடுத்துச் செல்லக் கிளம்பினோம். மெய்கண்டனும் எங்களோடு ஒட்டிக் கொண்டான்.
”இன்னும் தாங்கித் தாங்கி தானே நடந்திட்டிருக்கா, நீ வராண்டாம் நாங்களே பாத்துக்கிடுதோம்” சுடலைக்கு மீண்டும் அவன் மேல் பரிவு பிறந்திருந்தது.
“இல்ல நானும் வாரேன், ஒரு லோடு மேனை நிப்பாடிக்கிடுவோம். ஓராளு கூலி மிச்சம் தானே” வழக்கம் போல சீனு சாரின் காதில் படும் படிக்கு எங்களிடம் சொன்னான்.
”யேல கோட்டிப் பயலே, முன்னயே ஆளு சொல்லியாச்சிடே. இப்பம் கூப்பிட்டு ஓராளை மட்டும் நிப்பாட்ட முடியுமா. கம்பேனி காசு தானேலெ உன் கைக்காசா போவுது. நீ சும்மா கெட, நாங்க பாத்துகிடுவோம்” சுடலையின் பதிலுக்கு உள்ளிருந்து சீனு சாரின் குரல் வந்தது.
“ஹலோ, இந்த ஆர்டர்ல ஏற்கனவே நமக்கு மார்ஜின் கம்மி. இதுல லோட் மேனுக்கு வேற தனியா அழணுமா. பேசாம லோடு மேன்களை மொத்தமா வேணாம்னு சொல்லிடுங்க. நம்ம என்ஜினியர்ஸ் எல்லாரும் போய் கன்சைன்மெண்டை உள்ளே சேர்த்துட்டு வாங்க. மெய்கண்டனைத் தவிர வேற யாருக்கும் காஸ்ட் எபக்டிவா யோசிக்கவே தெரியாதா?”
சுடலை கொலை வெறியாகி விட்டான். அவன் மட்டுமல்ல, மற்ற பொறியாளர்களும் தான். அன்று மதியம் வரை குறைவான நொண்டல்களோடு பெட்டிகளை சுமந்து கொண்டிருந்த மெய்கண்டன், உணவு வேளைக்கு சற்று முன்பாக திடீரென்று சரிந்து விழுந்தான். நானும் சுடலையும் ஓடிச் சென்று பார்த்தோம்; அவனது உடைந்த கெண்டைக் கால் எழும்பு ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு வீங்கியிருந்தது. பக்கத்திலேயே ஒரு வாடகைக் காரை அமர்த்தி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம்; அதே மருத்துவமனை தான்.
“உங்க வீட்டுக்காரர் நிறைய லாபம் சம்பாதிச்சதோட இல்லாம, போனசும், ஓய்வூதியமும் கொடுக்கறதையும் மிச்சப்படுத்திட்டார்”
“உங்களை மூணு மாசம் வரைக்கும் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருந்தேனே. யார் வேலைக்குப் போகச் சொன்னது? படிச்சிருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்ப பாருங்க, உள்ளே வச்ச ப்ளேட் வளைஞ்சி நகர்ந்திருக்கு. இப்ப உடனே ஆப்பரேட் பண்ணியாகனும். இல்லேன்னா பர்மனெண்டா காலை எடுக்க வேண்டியிருக்கும். ஒரு நாலஞ்சி மாசத்துக்கு வேலை கீலைக்கு எதையும் யோசிக்க கூடாது” தலைமை மருத்துவர் கொஞ்சம் கோபமாகவே பேசினார். தொடர்ந்து,
“லாஸ்ட் டைம் மெடிக்கல் இன்சுரன்ஸ் க்ளெய்ம் பண்ணி வாங்கிட்டீங்க இல்ல. உங்க லிமிட் எவ்ளோ வச்சிருக்கீங்க” என்று ஒரு கொக்கியும் போட்டு வைத்துக் கொண்டார்.
“சார் நான் இப்பவே அட்மிட் ஆகிக்கறேன்” என்று மருத்துவரிடம் சொன்ன மெய்கண்டன், திரும்பி எங்களிடம் “சீனு சாருக்கு விஷயத்தை சொல்லிடறீங்களா” என்றான்.
சுடலை மறுத்து விடவே, நான் தான் கூப்பிட்டுச் சொன்னேன், “ஓ, அப்படியா” என்பதோடு முடித்துக் கொண்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து மெய்கண்டனின் அறைக்கு ஆரஞ்சுப் பழங்களோடு சீனு வந்தார்.
“மெய், நீங்க ரெக்கவர் ஆக இன்னும் மூணு மாசம் ஆகுமாமே. அதுக்கு அப்புறமும் உங்களால பழையபடி பீல்டுல வேலை செய்ய முடியாதாமே?” கொஞ்சம் தயக்கமாகவே ஆரம்பித்தார்.
“யெஸ் சார்”
“நீங்க ஏற்கனவே ரெண்டு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்திருந்தீங்க. இப்ப திரும்ப மூணு மாசம்….” ஏதோ சொல்ல வந்து இழுத்தார், பின் தொடர்ந்தார்.
“மூணு மாசத்துக்கு அப்புறமும் உங்களால பீல்ட் ஒர்க் பார்க்க முடியாது.. உங்களுக்கே தெரியும் நம்ம கம்பெனி இப்ப முன்ன மாதிரி லாபகரமா நடக்கலை. நிறைய காம்பெடிஷன். உங்களுக்கு ஆபீஸ்லயும் எந்த மாதிரி வேலை குடுக்க முடியும்னு தெரியலை…”
“இல்ல, சார். நான் பீல்டுக்கே திரும்பவும்….” மெய்கண்டன் வரப்போவதை உணர்ந்து விட்டான். அவசரமாக குறுக்கிட முயற்சித்தான் – தொண்டை அடைத்துக் கொண்டது.
”நோ நோ.. நாங்க அந்தளவுக்கு கொடுமையானவங்க இல்லப்பா. எம்.டி கிட்டே இது பத்தி ஏற்கனவே பேசிட்டு தான் வர்றேன். உன்னை திரும்பவும் பீல்டுக்கு அனுப்பி இன்னும் சீரியஸா எதுனா பிரச்சினை வந்துட்டா கம்பனிக்கு தானே கெட்ட பேரு?”
“இல்ல சார்…” மெய்கண்டன் மீண்டும் குறுக்கிட முயற்சித்தான், சீனு அதைக் கத்தரித்தார்.
“இல்ல, அப்படி வந்துடும்னு சொல்லலை, பட் வந்துட்டா சிக்கல் தானே. பெஸ்ட் என்னான்னா, நீங்களே ரெசிக்னேஷன் குடுத்துடுங்க. மூணு மாதம் பேசிக் சாலரியை தந்துடறோம். நீங்க வேறு கம்பெனில கொஞ்சம் ஒக்காந்து வேலை பார்க்கிறா மாதிரி தேடிக்கங்களேன். புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்”
“…..” மெய்கண்டனிடம் மேற்கொண்டு பேச பதில் ஏதும் இல்லை.
“சரி நான் வர்றேன்” ஆரஞ்சுப் பழங்களை வைத்து விட்டு சீனு கிளம்பினார்
மெய்கண்டன் மிகுந்த தயக்கத்தோடு சுடலையின் பக்கமாகத் திரும்பினான், ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்துக் கொண்டே “எவ்வளவோ சின்சியரா இருந்ததுக்கு கடேசில இவ்வளவு தானாடே?” குரல் அடைத்துக் கொண்டு வந்தது.
“அவ்வளவு தாண்டே” சுடலை உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் பதில் சொல்லி விட்டு அகன்றான்.
அந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே சங்கொலி ஒலிக்கிறது. டமருகத்தின் சப்தமும் தம்புராவின் மீட்டலும் கேட்கிறது. தொலைக்காட்சித் திரையில் இதழ் விரிக்கும் தாமரை ஒன்றின் மத்தியில் நிகழ்ச்சியின் பெயர் மலர்கிறது. தொடர்ந்து துவக்கக் காட்சி. கோயில் பிராகரம் போன்ற அரங்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெர்மாகூலில் தங்க நிற காகிதங்களை ஒட்டி கோயிலின் தூண்கள் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மையமாக கருவறை போன்ற ஒரு ஏற்பாடும், அதன் இரு புறத்திலும் யாழியைத் தாங்கி நிற்கும் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கருவறை போன்ற அமைப்பினுள் இருந்து கடவுளைப் போல் அவர் வெளிப்பட்டு வருகிறார். தர்பார் மண்டபங்களில் இருக்கும் சிம்மாசனம் போல் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்கிறார். மந்தகாசமான புன்னகையொன்றை வீசி ஆசி வழங்குகிறார். அந்த மண்டப அமைப்பின் வலது பக்கவாட்டுப் பகுதியிலிருந்து அழுது வீங்கிய கண்களோடும் சோகம் அப்பிய முகத்தோடும் அந்தப் பெண்மணி பிரவேசிக்கிறார்,
“எம் புருசன் வீட்டைக் கவனிக்கறதில்லீங்கைய்யா. அந்தப் பொம்பளையே கதின்னு கெடக்கறாருங்க. மூணு பொம்பளைப் புள்ளைங்கள வச்சிகிட்டு நான் அல்லாடறனுங்க. நீங்க தானுங்க எம் புருசனை மீட்டுத் தரோனும்”
அந்தப் பெண்ணின் புலம்பலைத் தொடர்ந்து சமூகம், குடும்பம், பாசம், நட்பு, உறவு, நம்பிக்கை, காதல், பரிவு போன்ற விசயங்களை உள்ளடக்கி ஒரு சிறிய பிரசங்கத்தை ‘அவர்’ நிகழ்த்துகிறார். அது முடிவுற்றதும், அப்பெண்ணின் கனவர் அழைக்கப்படுகிறார்.
“ஐயா, எம் மேல தப்பே இல்லீங்க. எம் பொண்டாட்டி வேணுமின்னே சந்தேகப் படறாளுங்க. எனக்கும் அவிங்களுக்கும் வெறும் நட்பு தானுங்கைய்யா இருக்கு. வேற தப்பு தண்டா எதுக்கும் நாங்க போகலீங்கைய்யா”
அந்த இளைஞரின் இறைஞ்சலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சிறிய பிரசங்கம். தொடர்ந்து மூன்றாவதாக இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்மணி அழைக்கப்படுகிறார்.
”ஐயா, நான் ஒரு தப்பு தண்டாவும் செய்யலீங்கைய்யா. எங்க அப்பாரு நெலத்த வித்த காசுல இருந்து ஒன்ற லச்ச ரூவா கடங் குடுத்து இருக்கனுங்க. அத திருப்பிக் கேட்டதுக்குத் தான் அவ இந்த டிராமா செய்யறாளுங்க”
அந்தப் பெண்மணியின் பதில் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மீண்டும் பிரசங்கம். தொடர்ந்து இந்த சிக்கலுக்கு தீர்வு ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் ‘அவர்’. தீர்வுக்கான தேடலின் இடையிடையே குடும்ப உறவுகள் பற்றியும், நட்பு, சமூகம் பற்றியும் பல அறிய தத்துவங்களை உதிர்த்துக் கொண்டே இருக்கிறார். ஒழுக்கமாக வாழ்வது எப்படியென்று நிறைய சொல்கிறார். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்த கோட்பாடுகளை முன்வைக்கிறார்.
“இரண்டு தனி நபர்களுக்கிடையே இருக்கும் பிரச்சினையை அவர்களுக்கு பேசி தீர்க்க வேண்டும். அவர்கள் தீர்க்க வில்லையென்றால், அந்தக் குடும்பங்கள் அதைக் கையிலெடுக்கும். அவர்கள் தீர்க்கவில்லையென்றால், அவர்களின் நட்பு வட்டம் கையிலெடுக்கும். அவர்கள் தீர்க்கவில்லையென்றால், அந்த ஊர் அதைக் கையிலெடுக்கும். அவர்கள் தீர்க்கவில்லையென்றால், அந்த நாடு அதைக் கையிலெடுக்கும். அந்த நாடும் அதைத் தீர்க்கவில்லையென்றால், உலகமே அதைக் கையிலெடுக்கும்” – (உலகம் தீர்க்கவில்லையென்றால் யார் கையிலெடுப்பது என்று ‘அவர்’ சொல்லவில்லை. உலகமே கைவிட்டதை இவர் தீர்த்து முடிப்பார் என்று நேயர்களே முன்வந்து புரிந்து கொள்ளுமாறு பெருந்தன்மையாக விட்டுள்ளார்)
அந்த ’அவர்’, ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா. அந்த நிகழ்ச்சி, தந்தி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் ’நித்திய தர்மம்’. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அறியாத தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லை. குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் மற்றும் உறவுச் சிக்கல்கள் கள்ளக்காதல்கள் போன்றவற்றை மலிவான ரசனையாக விரிவாக விவரித்து ‘தீர்வு’ காண்பது எனும் போர்வையில் நடந்து வரும் மோசடி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியின் மலிவான வடிவம் தான் நித்தியானந்தாவின் ‘நித்ய தர்மம்’.
நித்தியானந்தாவுக்குத் தனியே அறிமுகம் தேவையில்லை. ஒரே சிடியின் மூலம் ஒரே இரவில் அகில உலகப் புகழ் பெற்றவர். சுடுகாட்டு ஆண்டியும் மண்டையோடுகளை அணிந்தவனுமான அந்த சிவனே மதுரை ஆதீனத்தின் கனவில் வந்து நித்தியானந்தாவுக்கு ரெக்கமண்டேசன் கடிதம் கொடுத்திருக்கிறார் என்றால் நிறைய பேரை சுடுகாட்டுக்கு அனுப்பி வைத்து மண்டையோடுகளோடு அரசியல் நடத்தும் மோடியெல்லாம் எம்மாத்திரம். ஆம், பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மண்டியிட்டு வணங்க வைத்த மோடியே தலை தாழ்த்தி வணங்கிய சிறப்பு பெற்றவர் தான் நித்தியானந்தா.
நித்யானந்தாவின் சிறப்பை உலகறியச் செய்த பெருமை தமிழ் ஊடகங்களையே சாரும் – நேர்மறையிலும் எதிர்மறையிலும். அந்த வகையில் தமிழர்களுக்கு நித்தியானந்தாவின் முதல் அறிமுகம் கிடைத்தது குமுதத்தின் வாயிலாகத் தான். குமுதம் பத்திரிகையில் நித்தியானந்தா எழுதிய ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்கிற தொடரைத் தொடர்ந்து அவரது திறந்து கிடந்த கதவின் வழியாக சாரு நிவேதிதா போன்ற இலக்கிய நித்தியானந்தாக்கள் ஆசிபெற்று சென்றது போல, அசிங்கங்களால் வெறுப்புற்ற சில கேமராக்கள் உள்ளே நுழைந்தன.
நித்தியானந்தாவின் திடீரென்று ‘தோன்றி மறையும்’ யோக வித்தையை சாரு நிவேதிதா சிலாகித்து எழுதிக் கொண்டிருந்த வேளையில் தான் அவரோடு திறந்த கதவுகளின் வழி உள்நுழைந்த கேமராக்கள் அவரது ‘மறைந்து தோன்றும்’ வித்தையை சன் டீ.வி வழியே தமிழர்களிடம் கொண்டு சேர்த்தன. அதைத் தொடர்ந்து நக்கீரன் பத்திரிகை எதிர்மறை அறிமுகத்தைப் பார்த்துக் கொண்டதும் இணையத்தில் ‘சாமி வீடியோக்களை’ காண கட்டணம் வசூலித்ததெல்லாம் சமகாலச் சரித்திரங்கள்!
கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சிக்கு அடுத்த இடத்தில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்தது தினத்தந்தி. யார் ’உல்லாசமாக’ இருந்ததன் விளைவாக எவர் ‘சதக் சதக்’ ஆனார்கள் என்கிற உலகப் பொது அறிவைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியே தீர்வது என்கிற லட்சிய தாகத்தில் அரை நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுவருகிறது. தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த செய்தித் தொலைக்காட்சி சேனல் தான் தந்தி தொலைக்காட்சி.
தந்தி தொலைக்காட்சியில் பல்வேறு ஆங்கில, தமிழ் செய்திச் சேனல்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், டி.ஆர்.பி ரேட்டிங்கை குறி வைத்து பல விவாத நிகழ்வுகளும் நடத்தி வருகின்றனர். இதில் சீமானின் உடல் முறுக்கல்கள் மற்றும் உடற்பயிற்சி அசைவுகள் போன்ற ஆக்சன் காட்சிகள் கொண்ட ’மக்கள் முன்னால்’ நிகழ்ச்சியும் ஒன்று. டி.ஆர்.பி ரேட்டிங்கை அள்ள வேண்டுமானால் இது போன்ற சவ சவ நிகழ்ச்சிகள் மற்றும் போதாதே, எனவே தான் தமது செய்தித்தாளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட வியாபார வெற்றி பார்முலாவான கள்ளக்காதல் கதைகளை தொலைக்காட்சியிலும் கடைவிரித்து விற்க முடிவு செய்து, அதற்குப் பொருத்தமான ஆளைத் தேடி நித்தியிடம் முக்தியடைந்துள்ளனர்.
ஏற்கனவே சன் தொலைக்காட்சி மற்றும் நக்கீரனின் புண்ணியத்தால் ரஞ்சிதாவின் வழியே ’சிறப்பான’ அறிமுகத்தைப் பெற்றிருந்த நித்தியானந்தாவுக்கு சமீப காலமாக யோக வகுப்புகளுக்கு ஆட்கள் வருவதில்லை. வரும் சொற்ப ஆட்களும் அவரது ஆன்மீக ஆராய்ச்சிகளுக்கு தங்களை சந்தேகத்துக்கிடமின்றி உட்படுத்திக் கொள்ள ஒரு முறைக்குப் பல முறைகள் யோசித்திருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அவரது கடையில் யாவாரம் சுத்தமாக படுத்து விட்டது. எனவே, தனது ’திறமையை’ நிரூபித்துக் காட்ட பொருத்தமான ஊடகத்தை அவரும் தேடி வந்திருக்கிறார். தந்தி தொலைக்காட்சியின் பொருளாதாயத் தேடலும் நித்தியின் அருளாதாயத் தேடலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்து கொண்டது.
இந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை மற்றும் அந்தக்கால நடிகை லட்சுமியின் நிஜம் போன்றவைகளின் பிரதி என்றாலும் நித்தியானந்தாவுக்கென்றே சில சிறப்பியல்புகள் இருக்கின்றன. தன்னிடம் வரும் வழக்குகளை அத்தனை துல்லியமாக விசாரிக்கிறார். சரியான இடங்களில் தலையிட்டு கிடுக்கிப் பிடி கேள்விகளால் துளைக்கிறார்
“அது எப்படிம்மா உங்களுக்கு அந்த இடத்துல இந்த சந்தேகம் வந்தது?”
“அய்யா, நீங்க ஏன் இதைப் பற்றி இதற்கு முன்னால் சொல்லவே இல்லை?”
“அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் அடைந்த உணர்வு என்ன?”
“எந்த சந்தர்ப்பத்தில் இருந்து தவறு செய்யத் துவங்கியதை உணர்ந்தீர்கள்”
ஒரு கிரிமினலால் தானே இன்னொரு கிரிமினலின் மனதைப் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நித்தியானந்தாவின் நிகழ்ச்சியான ’நித்திய தர்மம்’ அதன் முன்னோடி நிகழ்ச்சிகளையெல்லாம் விஞ்சி நிற்கிறது. இதில் பல சிறப்புகள் இருக்கின்றன. ஒரு கிரிமினலே குற்றங்களை விசாரித்து நீதிபதி ஸ்தானத்திலிருந்து தீர்ப்பளிக்கிறான் என்பது முதன்மைச் சிறப்பு. அயோக்கியத்தனத்தில் கரைகண்டவன் என்பதால் நேயர்களை நடந்த சம்பவத்தின் இண்டு இடுக்குகள் வரை தவறவிடாமல் அழைத்துச் சென்று காட்டும் வல்லமை நித்திக்கு உண்டு என்பது அடுத்த சிறப்பு.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ’ஆன்மீக ஆராய்ச்சி’ போன்ற தகிடுதத்தங்களின் பின்னே மறைந்து தப்பித்து ஓடுபவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது நித்தியைத் தவிர வேறு யாருக்கு நன்றாகத் தெரிந்திருக்க முடியும். இதோ, தன் மேல் சாட்டப்பட்ட குற்றத்தை மறைக்க முயற்சிக்கும் நபரை நித்தி கிடுக்கிப் பிடி போடும் அழகைப் பாருங்கள்,
பாவம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர். கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்ட பின் நடந்தது ஆன்மீக ஆராய்ச்சி தான் என்று சொல்லும் திறமை அவரிடம் இல்லையென்பதால் நிகழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
அடுத்தவர் வீட்டில் நடக்கும் அசிங்கங்களை கண்டு ரசிக்கும் மனோபாவத்தை தினத்தந்தியின் மூலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்களிடம் விதைத்து வந்த பெருந்தமிழர் ஆதித்தனாரின் வாரிசுகள் இப்போது தாங்கள் விதைத்ததை ஜீ தமிழும் வேறு சேனல்களும் அறுவடை செய்து போவதைப் பார்த்துக் கொண்டு எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? அது தான் நித்தியானந்தாவைக் களமிறக்கியுள்ளனர்.
இதில் நித்தியானந்தாவைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. பாம்பு என்றால் விஷம் – சாமியார் என்றாலே பொறுக்கி என்பதை நித்தியானந்தா மட்டுமின்றி அகில இந்திய அளவில் பலரும் தற்போது நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால், தங்களது லாப வேட்டைக்காக ஊரறிந்த அயோக்கியனுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவும் தயங்காத தந்தி தொலைக்காட்சியின் ஊடக தர்மம் தான் நமது கவனத்துக்குரியது.
ஜோசிய, ஜாதக, ராசிக்கல், மாந்ரீக சமாச்சாரங்களை கடைபரப்பும் அதே ஊடகங்கள் தான் இதன் விளைவாக எங்காவது நரபலி நடந்தால் அதையும் கடைவிரித்துக் கல்லாக்கட்டுகின்றன. சில்லறை லாபத்துக்காகவும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும் தந்தி தொலைக்காட்சி சாக்கடையை தாம்பாளத்தில் பரிமாறத் துணிந்துள்ளதை அதன் பிற விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பூமிப் பரப்பின் மேலும் வான மண்டலத்தின் கீழும் உள்ள சகல விசயங்கள் குறித்தும் தயங்காமல் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் கம்பெனிக் கருத்தாளர் குழாமிலிருந்து எவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
அவர்கள் கண்டுகொள்ளவும் போவதில்லை. இது பிழைப்புவாதியும் கொள்ளைக்காரனும் சந்தித்துக் கொள்வதைப் போன்ற தருணம். தந்தியின் அயோக்கியத்தனத்தை விமர்சிக்காமல் கள்ள மௌனம் காக்கும் வரை ஊருக்கு உபதேசம் செய்வதற்கான வாய்ப்பை தந்தி கருத்து கந்தசாமிகளுக்கு தாராளமாக வழங்கும். நித்தியானந்தாவின் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டே கூட ஊருக்கு உபதேசம் வழங்கலாம்.
நித்தியானந்தாவின் நிகழ்ச்சி தந்தி தொலைக்காட்சியின் லாபவெறியை அம்பலப்படுத்தவில்லை; அதன் மேல் விமர்சனமற்ற “கருத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களையே” அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள் விமர்சிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மலிவான ரசனையிலிருந்து தங்களைக் கத்தரித்துக் கொண்டு பெருவாரியான மக்கள் எதிர்க்கத் துவங்கும் போது தான் ஊடக வியாபாரிகள் வழிக்கு வருவார்கள்.
ஊரறிந்த பொறுக்கி என்பதை நிரூபித்து விட்ட நித்தியானந்தாவிற்கு நீதிபதி இடம் அளித்து அழகையும், செல்வத்தையும் பார்க்கும் தந்தி டிவியின் அயோக்கியத்தனம்தான் இங்கு காறித் துப்பப்பட வேண்டியது.
வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மளிகைக் கடைக்காரர் விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து தனது பஜாஜ் எம்-80 யில் கோயம்பேட்டுக்குப் போய் விடுவார். ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி வரும் போது வண்டியின் இருபக்கமும் காய்கறிகள், கீரை வகைகள், அந்தந்த பருவத்தில் வரும் பழங்கள், பண்டிகை நாட்களில் பூக்கள் என்று நிறைமாத கர்ப்பிணி போன்ற வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து சேருவார்.
கோயம்பேடு மார்க்கெட் என்ற பெரும் நீர்த்தேக்கம்.
அடுத்த 1 மணி நேரத்தில் அந்தப் பகுதியில் இருக்கும் பலர் காய் வாங்க வருவார்கள். பசுமையான காய்கறிகள் நியாயமான விலைக்கு கிடைப்பதாக பலருக்கும் அனுபவம். அந்த நேரத்தில் கடையே கலகலப்பாக இருக்கும்.
இத்தகைய காட்சிகள் சென்னை முழுவதிலும் ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகளில், அதிகாலையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சென்னை மாநகரத்திலும் புற நகர்ப் பகுதிகளிலும் வசிக்கும் கிட்டத்தட்ட 1 கோடி மக்களின் காய்கறி தேவைகள் தினமும் இப்படி நிறைவு அடைகின்றன.
பஜாஜ் எம்-80 களில் பறக்கும் மளிகைக் கடை அண்ணாச்சிகளோடு, காய்கறிகளோடு ஆட்களும் உட்கார்ந்து வரும் லோட் ஆட்டோக்கள், 407 வேன்கள், குடும்பத்துக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குத் தேவையான காய்கறிகளை குறைந்த விலையில் வாங்கிக் கொண்டு வரும் நடுத்தர வர்க்க மக்கள் என்று ஆயிரக்கணக்கான சிறு கிளைகளுக்குள் காய்கறிகளை பாய்ச்சுகிறது கோயம்பேடு மார்க்கெட் என்ற பெரும் நீர்த்தேக்கம்.
அந்த சந்தை எப்படி இயங்குகிறது. இத்தனை ஆயிரம் டன் காய்களும், பழங்களும் எப்படி வந்து சேருகின்றன, தரம் பிரிக்கப்படுகின்றன, விற்கப்படுகின்றன இவற்றை அறிவதற்கு பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு நள்ளிரவு கோயம்பேடு போய் சேர்ந்தோம். 12.30-க்கு தொடங்கி காலை சுமார் 5.30 வரை சந்தைக்குள் நடந்து, பலருடன் பேசி இந்த சிறுநகரம் இயங்கும் விதத்தை புரிந்து கொள்ள முயற்சித்தோம்.
திருட்டு போலீஸ்
ஆம், இது ஒரு சிறுநகரம்தான். காலை 3 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் இந்த மார்க்கெட் கடை வீதிகளுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் வருகையை எதிர்பார்த்து 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது கோயம்பேடு மார்க்கெட்.
ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேர் வந்து போகும் இந்த இடத்த்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, சட்ட ஒழுங்கை பராமரிக்க போலீஸ்காரர்களும் அனுப்பப்படுகிறார்கள். ஆனால், அந்த வேலையை அவர்கள் செய்வதாக எங்கும் தென்படவில்லை. இருப்பினும், இந்த டூட்டிக்கு வருவதற்கு பலத்த போட்டியாம். பல லட்சம் லஞ்சம் கொடுத்து வருகிறார்கள் என்கிறார்கள். ஒரு காவலர் ஒவ்வொரு நாளும் ரூ 30,000 வரை லஞ்சமாக சம்பாதிக்கிறாராம். ஒரு டீக்கடைக்கு ரூ 200 என்று ஆரம்பித்து, சரக்கு இறக்கும் இடத்தில், கடைகளில், கூறு வைத்து விற்பவர்களிடம், வண்டிக்காரர்களிடம் என்று மாமூலாக வசூலித்து இந்த தொகையை சுருட்டுகிறார்கள்.
அதிகாலை 1 மணிக்கு கீரை இறக்கி கமிஷன் வியாபாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இடத்துக்கு இரண்டு பைக்குகள் வருகின்றன. வெள்ளை சட்டை, காக்கி பேன்டுடன் ஒரு போக்குவரத்துக் காவலர், காக்கி-காக்கியில் ஒரு சட்ட ஒழுங்கு காவலர். இருவரது பைக்கிலும் ஏற்கனவே பொங்கலுக்கான பச்சை மஞ்சள், கரும்புத் துண்டுகள், காய்கறிகள் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. கீரை பகுதிக்கு வந்து வண்டியை நிறுத்தியவர்கள், “ஆளுக்கு இரண்டு கட்டு கீரை கொடுங்கப்பா” என்று ‘செல்லமாக’ உத்தரவிட்டதும், கமிஷன் வியாபாரி இரண்டிரண்டு கட்டுகளை எடுத்து அவர்கள் பைகளில் சொருகுகிறார். “ரொம்ப தேங்க்ஸ்” என்று பண்புடன் சொல்லி விட்டு நகர்ந்து போகின்றன பைக்குகள்.
பொங்கலுக்கு மஞ்சள்
கீரைகள் இறங்கும் இடம் மார்க்கெட்டின் ஒரு கடைக்கோடி, இங்கிருந்து ஆரம்பித்து மேற்புறமாக நடக்க ஆரம்பிப்போம். முதலில் வருவது காய்கறி மார்க்கெட். லாரிகள் வரும் பாதையில் இன்னமும் நெருக்கடி ஆரம்பிக்கவில்லை. பொங்கல் சிறப்பாக மஞ்சள் டன் டன்னாக வந்து இறங்குகின்றது. 3 மணிக்கு மேல் லாரிகளின் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் சீக்கிரமாக வந்திருக்கிறார்கள். பெரும்பாலான கடைகளில் விளக்கு நிறுத்தப்பட்டு பல உருவங்கள் திண்ணைகளில் மூடிக் கொண்டு படுத்திருக்கின்றன. ஒரு சில கடைகளில் விளக்கு எரிகிறது.
இதைத் தாண்டி பழ மார்க்கெட்டுக்குள் நுழைந்தால் அங்கும் பொங்கல் சிறப்பாக செங்கரும்பு கட்டுகள் வந்து இறங்குகின்றன. அந்த நேரத்தில் கரும்பு வரவு குறைச்சலாம், ஒரு கரும்பு விலை கேட்ட கடை ஊழியர் ஒருவருக்கு ரூ 30-க்கு விற்றிருக்கிறார்கள். போகப் போக இன்னும் அதிகமாக வந்தால் விலை குறையலாம். இதைத் தவிர பழக்கடையும் இன்னும் விழித்திருக்கவில்லை. மேல் மார்பில் சட்டை இல்லாமல், கையில் மூட்டையை குத்தும் கொக்கியுடன் உருண்டு திரண்ட மார்பும், புஜங்களுமாக மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். சிலர் மூட்டைகளை தூக்கவும் ஆரம்பித்திருக்கின்றனர்.
பழ மார்க்கெட்டைக் கடந்து பூ மார்க்கெட்டுக்கு வருகிறோம். பூக்கள் இறங்கிக் கொண்டிருக்கின்றன. டீக்கடையில் டீக்கு சொல்லும் இருவரை அணுகி, பேச்சு கொடுக்கிறோம். தெலுங்கில் விபரம் சொல்கிறார்கள். கடப்பாவிலிருந்து வருகிறார்களாம். பூ விவசாயிகளாம். அந்தப் பகுதியில் 10-15 விவசாயிகள் சேர்ந்து தமது விளைச்சலை ஒரு லாரியில் ஏற்றி கொண்டு வருகிறார்கள். 300 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து வருகிறார்களாம். சாந்தினிப் பூ, பேப்பர் வெள்ளை, சாமந்திப் பூ மூட்டை மூட்டையாக இறங்குகின்றன. இங்கு பூக்களை கொடுத்து விட்டு புறப்பட்டு ஊருக்குத் திரும்புவார்களாம். அடுத்த லோடை எடுத்துக் கொண்டு திரும்ப வர வேண்டும்.
இறக்கப்படும் கரும்பு
லாரிகளிலிருந்து இறக்குவதற்கு ஒரு டீம் மும்முரமாக இருக்கிறது. பூக்களை விலைக்கு வாங்கும் கமிஷன் முதலாளியின் கடை ஊழியர்களுக்கு இப்போதே பொழுது விடிந்து விட்டது. பூக்கள் கொண்டு வரப்படுவதை மேற்பார்வை பார்த்து கடைக்குள் வைத்து விற்பனை ஆரம்பிக்க வேண்டும்.
இந்தப் பூக்கள் கார்த்திகை முதல் பங்குனி வரை 5 மாதங்கள் வரைதான் வருகின்றன. அந்த சமயங்களில் வாரத்துக்கு ஒரு முறை பூப்பறித்து வந்து விடுகிறார்கள். சேலத்துக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து ஜெயதேவ் என்ற விவசாயியும் வந்திருக்கிறார். அவர் 4 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கரில் நெல் போட்டு அதை வருடம் முழுவதும் குடும்பத்துக்கு சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு மீதி நிலத்தில் நிலக்கடலை, பூ பயிர் போடுகிறார். பூக்களை விற்று வரும் காசுதான் மற்ற செலவுகளுக்கு பயன்படுகிறது.
வானம் பார்த்த பூமிதான், போர்வெல் போட்டு தண்ணீர் இறைத்து பாசனம் செய்கிறார். உரம் போட்டு, பூச்சிக் கொல்லி அடித்து, கொத்தி, செடிகளை பராமரித்தால், ஆறு மாதம் பூக்கின்றன. வாரா வாரம் பூப்பறிக்க ஆட்கள் வைத்து (அரை நாள் கூலியென்றால் ரூ 130, முழு நாள் என்றால் ரூ 220, சாப்பாடு போட வேண்டும்) பூக்களை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வருகிறார்.
இங்கு வந்து போட்டு விட்டால், கமிஷன் கடைக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டால் விற்று 15% கமிஷன் எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம். விலை நிர்ணயிப்பது சந்தையின் போக்கில்தான் நடக்கிறது. முந்தைய நாள் அனுபவத்தை வைத்து விலை வைத்து விற்றுப் பார்த்து விற்பனையைப் பொறுத்து குறைத்தோ, கூட்டியோ விற்கிறார்கள். ஒரு நாளைக்கு வந்து சேரும் பூவின் அளவும், தேவையும் விலையை தீர்மானிக்கின்றன.
பெங்களூர், ஒசூரிலிருந்து ரோஜாப் பூக்கள் வருகின்றன.
முதலுக்கேற்ற லாபம் வியாபாரிக்கு.
3 மணிக்குப் பிறகு சந்தை விழித்துக் கொண்டு விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சந்தைகளின் குறுகலான ‘தெருக்களில்’ நடமாடுகின்றனர். எதிரும் புதிருமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் “விலகு விலகு” என்று கத்திக் கொண்டே சுமை தூக்கும் தொழிலாளிகளின் வளைந்து நெளிந்த ஓட்டம் நடக்கிறது. 110 கிலோ அல்லது 120 கிலோ மூட்டையை கொக்கியால் குத்தி சரித்து குனிந்து முதுகில் இருத்திக் கொள்கின்றனர். மறுமுனையை இன்னொரு கையால் பற்றிக் கொண்டு ஓட்டமாக சுமையை தூக்கிக் கொண்டு நகர்கின்றனர். மனித உடலில் சிவப்பணு ஆக்சிஜனை சுமந்து கொண்டு போய் உறுப்புகளை இயங்க வைப்பது போல, வந்து இறங்கும் காய்கறிகளை இறக்கி வைப்பது, அங்கிருந்து கடைகளுக்கு சுமந்து வருவது, வாங்கப்பட்ட காய்கறிகளை வண்டியில் கொண்டு ஏற்றுவது என்று மனித எறும்புகளாக சுற்றிச் சுழல்கின்றனர். வண்டியிலிருந்து இறக்குபவர்களுக்கு மூட்டைக்கு ரூ 1, சுமந்து கடைக்கு கொண்டு வருபவர்களுக்கு மூட்டைக்கு ரூ 20 என்று கூலி கொடுக்கப்படுகிறது.
“எத்தனை லட்சம் முதல் போடுறோமோ, அவ்வளவு வியாபாரம் செய்யலாம். கமிஷனுக்கும் வாங்குவோம், நேராகவும் வாங்கியும் விற்போம். எங்க கடைச் சரக்கை சுமந்து வருவதற்குன்னு சுமை தூக்கும் தொழிலாளர்களை வச்சிருக்கோம். அவங்களுக்கான கூலியை சரக்கு கொண்டு வருபவர்களிடமே அவங்க வாங்கிப்பாங்க. காலையில 3 மணிக்கு கடை திறந்தா மதியம் 4 மணி வரை விற்பனை முடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவோம.. கடனுக்கு கொடுத்தவங்ககிட்ட வசூலிப்பதற்கு சாயங்காலம் அலைய வேண்டியிருக்கும்”. இது மார்க்கெட்டில் கடை வாங்கி கடந்த 15 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் ஒரு கமிஷன் வியாபாரியின் வாழ்க்கை.
அவரது தந்தை 55 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறாராம். மகன், 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயலில் உள்ள எஞ்சினியரிங் காலேஜூக்கு அட்மிஷனுக்கு போயிருந்தாராம். சில லட்சங்கள் கட்டணமாக கேட்டிருக்கிறார்கள், அவ்வளவு பணத்தைக் கொட்டி அதைப் படிப்பானேன் என்று வியாபாரத்தில் இறங்கி விட்டிருக்கிறார். “என்ன, ஒரு பண்டிகை, விசேஷம்னு வீட்டில இருக்க முடியாது. விசேஷ நாட்கள்ளதான் வியாபாரம் சுறுசுறுப்பா இருக்கும். அத குடும்பத்தில எல்லாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. நம்ம வியாபாரம் இப்படித்தான் ஓடுது” என்கிறார்.
விற்ற பிறகுதான் வீட்டுக்கு
49 வயதான செல்வம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள வண்டலச்சேரியிலிருந்து பச்சை மஞ்சள் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். ஆறு மாதப் பயிராம். பொங்கலுக்கு மட்டும்தான் விற்குமாம். அரை ஏக்கரில் விளைந்தது, உரம், உழைப்பு, போக்குவரத்து, சந்தைக் கட்டணம், சாலைக் கட்டணம் எல்லாம் சேர்த்து இது வரை ஆறு மாதங்களில் அவரது உழைப்பை சேர்க்காமல் ரூ 80,000 செலவாகியிருக்கிறது. விற்பனையில் ரூ 1 லட்சம் வரை சம்பாதித்தால் செய்த வேலைக்கு கூலி கிடைத்ததாக இருக்கும். அடுத்த 3 நாட்களும் விற்று தீர்ப்பது வரை இங்கேயே தங்கி, மஞ்சளுக்கு பக்கத்திலேயே படுத்து உறங்க வேண்டியதுதான்.
பேசிக் கொண்டிருக்கும் போதே கடந்து செல்லும் ஒரு வியாபாரி, “என்ன விலை?” என்று கேட்கிறார், “கிலோ ரூ 100-ன்னு கொடுக்கிறேன்” என்று பதில் சொல்ல, கடந்து போய் விடுகிறார். அடுத்து வருபவரும் விலை கேட்டு நகர்ந்து விடுகிறார். மூன்றாவதாக வருபவரிடம் ரூ 80 என்று சொல்லிப் பார்க்கிறார், அவரும் வாங்காமல் போகிறார். “இப்படியே கூட்டிக் குறைத்து விற்று முடித்து விட்டு போக வேண்டியதுதான்” என்று சிரிக்கிறார்.
“3-ம் கிளாஸ் வரைதான் படிச்சேன். அன்னையிலேர்ந்து 8 வயசு முதல் உழைக்கிறேன். விவசாயத்தில எந்த நேரத்தில என்ன ஒரம், போடணும், எந்தப் பயிர் எப்படி வளரும்னு எல்லா சுளுவும் தெரியும். விவசாயம் செஞ்சுதான் 3 பசங்களை படிக்க வெச்சேன். நானும் ஒரு ஆள் வேலை செய்வேன். ஒரு நாளைக்கு ரூ 500 சம்பளம் கொடுக்க வேண்டிய அளவு வேலை செய்வேன்.”
உழைப்பின் கொடுக்கலும் வாங்கலும்
“வீட்டுக்காரம்மா காலையில 10 மணிக்கு மேலத்தான் ஏதாவது உதவி செய்ய வருவாங்க. நாம ஒரு மண்வெட்டிய கையில பிடிச்சிட்டு மண்ண வெட்டிட்டு போயிர்றோம், அவங்க பாவம் துணி துவைக்கணும், பாத்திரம் கழுவணும், வீடு துடைக்கணும், சமைக்கணும் அதனால அவங்களை தொந்தரவு செய்யறதில்லை” என்று மனைவியின் வீட்டு உழைப்பை அங்கீகரிக்கும் சக உழைப்பாளியாக பேசுகிறார்.
சந்தை விலை நிர்ணயிக்கும் முறையை, “பேரு மேரின்னு வச்சுக்கோங்களேன்” என்று சொன்ன நடுத்தர வயது பெண்ணின் வியாபாரத்திலும் பார்க்கிறோம். அவர் ஊர் பெரியபாளையத்துக்கு அருகில். மாலை 6 மணி பேருந்தைப் பிடித்து போய் வில்வ இலை பறித்துக் கொண்டு 8 மணிக்குத் பெரியபாளையம் வரலாம். அதை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு இரவு 1 மணிக்கு வேன் ஏறினால் அதிகாலை 3 மணிக்கு கோயம்பேடு. கோயம்பேடு சந்தையின் ஒரு விளிம்பில் உட்கார்ந்து கொண்டு வில்வ இலைகளை மாலைகளாக தொடுத்துக் கொண்டே விற்பனை செய்கிறார். பிரதோஷத்துக்கு சிவனுக்கு சார்த்த அதிகமாக விற்குமாம். மற்றபடி நகரெங்கும் உள்ள கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை நடக்க என்று தினமும் வியாபாரம் ஆகுமாம்.
காலை 8 மணி வரை விற்பனை பார்த்து விட்டு புறப்பட்டு விடுகிறார். எஞ்சியதை கமிஷன் கடையில் கொடுத்து விட்டு போகிறார். 10 மணிக்கு ஊருக்குப் போனால், வீட்டு வேலைகளை பார்த்து விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டு மாலையில் மறுபடியும் புறப்படலாம். சில பத்து ரூபாய்களை கொடுத்து வாங்கி ‘வில்வ இலையினால் சிவபெருமானை குளிர்விக்கும்’ உரிமையை சம்பாதித்து விடும் பக்திமான்களுக்கு இந்த வில்வ இலைகளின் பின் இருக்கும் மேரிக்களின் உழைப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் சிவனுக்கு வில்வ இலையை அனுப்புவது கர்த்தரின் ஆசிபெற்ற மேரிதான்.
அவரது கணவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர் போய் இலை கொண்டு வந்து விட இவர் கோயம்பேடு வருவாராம். அப்போது இரண்டு பேருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ 500 வரை கிடைக்குமாம். இப்போது அவர் குடியால் உடல் பாழாகி படுக்கையாகி விட, இவர் 8 மணிக்குப் போய் இலை பறித்து வருபவர்களிடம் விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு ரூ 100-ரூ 150 கிடைத்தால் பெரிய விஷயம். நல்ல விற்பனை ஆனால் ரூ 200 வரை கிடக்கலாம். ஒரு மகள், மகன், இரண்டு பேரும் அத்தை வீட்டில் தங்கி பள்ளிக்கு போய் வருகிறார்கள்.
காய்களுக்கு நடுவில் இளைப்பாறல்.
பேசும் போதே, ஒரு அம்மா விலை விசாரிக்கிறார், “அம்பது ரூபா” என்று சொன்னதும், “நாப்பதுக்கு தர்றியா” என்று பேரம் பேசுகிறார். “அம்பதுக்குத்தான் விக்கிறோம். இலை வாங்கினது, கட்டுன கூலி எல்லாம் சேர்த்தா அதுக்கு கீழ கட்டுப்படியாகாது” என்கிறார் மேரி. “அப்பன்னா வேண்டாம்” என்று நகர்கிறார். “போணி பண்ணும்மா, வாங்கிக்கோ” என்று வற்புறுத்துகிறார். “ஆனா அம்பதுக்கு கொறையாது”. வாங்காமலேயே போய் விடுகிறார் வாடிக்கையாளர். முகத்தில் பொங்கிய ஆர்வம் வடிந்து ஏமாற்றம் படர கைகள் கட்டும் வேலையை தொடர்கின்றன.
குழந்தைகளை படிக்க வைக்கும் இன்னொரு தாய் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 27 ஆண்டுகளாக காய்கறி மார்கெட்டில் வியாபாரம் செய்கிறார். பக்கத்தில்தான் வசிக்கிறார். காய்கறிகளை ஏற்றி இறக்கும் போது, மூட்டை பிரித்து கொட்டும் போது சிதறும், காய்களை கோணியில் திரட்டிக் கொள்கிறார். கடைக்காரருக்கு குறைந்த விலை போட்டு ஒரு தொகை கொடுத்து விட வேண்டுமாம். அவற்றை மார்க்கெட்டுக்கு வெளியில் கொண்டு வந்து கொட்டி தரம் பிரித்து கூறுகளாக வைத்து விற்கிறார். காலையில் 1.30 மணிக்கு அலார்ம் வைத்து எழுந்து 2.30, 3.00 மணிக்கு வந்து விடுகிறார். கிடைத்த காய்கறிகளை எல்லாம் விற்று விட்டு வீட்டுக்குப் போக சில நாட்கள் இரவு 8 கூட ஆகி விடலாம். சில நாட்கள் ஓரிரு மணி நேரம் சீக்கிரம் போய் விடலாம்.
ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 200 கிடைக்கும். நல்ல விற்பனை ஆனால், கூட ரூ 100 கிடைக்கலாம். கணவர் மேஸ்திரியாக இருக்கிறார். மூத்த பையன் +2 வரைதான் படித்தான், அப்புறம் சிங்கப்பூருக்கு வேலை செய்ய போய் விட்டான். இரண்டாவது பையன் மரைன் படித்து கப்பல் வேலைக்குப் போகிறான். பெண் +2 படிக்கிறாள். மூன்றாவது பையனுக்கு எஞ்சினியரிங் ஃபீஸ் வருஷத்துக்கு ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய் கட்ட வேண்டுமாம். மூன்று தவணையாக கட்டுவதாக சொல்லியிருக்கிறாராம்.
உழைத்துத் தேய்ந்த வாழ்க்கைகள்
முதல் தவணை கட்ட ரூ 30,000 கடன் வாங்கியிருக்கிறார். ரூ 3,000 கழித்து விட்டு கொடுத்தார்களாம், 3 மாதங்களில் முழுத் தொகையையும் கட்டி விட வேண்டும். “எங்களுக்கு வேறு யாருப்பா கடன் தருவாங்க” என்கிறார். இது போல ஆண்டுக்கு மூன்று தடவை கடன் வாங்கி மகனை படிக்க வைக்கப் போகிறார். இதுதான் ஏழைகள் படித்து முன்னேறுவதற்கு காட்டப்படும் வழி.
தனது வாழ்க்கைக்காகவும், குழந்தைகளின் வளர்ப்புக்காகவும் 27 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு சராசரியாக 15 மணி நேரம் உழைக்கிறார். அது போக வீட்டு வேலை, சமையல், குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் இதையெல்லாம் ஒரு நாளுக்குள் எப்படி அடக்குகிறார்? தலை சுற்றுகிறது. பொங்கலுக்கு பையன்கள் வந்திருக்காங்களாம். “நமக்கு எங்க பண்டிகையும், காட்சியும்” என்று சலிப்பாக சொல்கிறார். “தினமும் வேலை பார்த்தாத்தான் சோறு”.
“என் பேரைப் போட்டு எழுதிடாதீங்கப்பா, பிச்சைக்காரி போல வேலை செய்றான்னு ஊர் சனங்க நினைச்சிட போகுது.” என்று பெருமைப்படத்தக்க அவரது உழைப்பை அவமானப்படுத்தும் சமூகத்தை நினைத்து கூசுகிறார். “கஷ்டமாத்தான் இருக்கு, ஒவ்வொரு நாளும் 1.30 மணிக்கு அலார்ம் அடிச்சா எழுந்திருக்க வேண்டாமேன்னுதான் தோணும். ஆனா வேற வழி, வேலை செஞ்சாதான பொழைக்க முடியும்” என்கிறார். சனி, ஞாயிறு கிடையாது, ஆண்டு விடுமுறை கிடையாது, பண்டிகை, திருநாள் கிடையாது. 27 ஆண்டுகளாக நள்ளிரவு எழுந்து உழைத்து ஓடாகிப் போன ஒரு வாழ்க்கை.
பூ விற்கும் வாழ்க்கைக்கும் நறுமணம் இல்லை
இதற்குள் சந்தையின் உச்சசெயல்பாட்டு நேரம் வந்து விட்டிருக்கிறது. இன்னும் விடிந்திருக்கவில்லை. ஒவ்வொரு கடைத்தெருவிலும் உழைக்கும் மக்கள் கூட்டம் நெரிகிறது. கைகளில் பைகளோடு பூ, காய், விற்பனைக்கு பழம் வாங்க வந்திருக்கும் வயதான, நடுத்தர வயது பெண்கள், முதுகில் மூட்டைகளோடு சுமை தூக்கும் தொழிலாளிகள், கடை முகப்பில் அமர்ந்து கொண்டு எடை போட்டு வாடிக்கையாளர்களின் பைகளில் கொட்டும் கமிஷன் வியாபாரிகள் என்று பரபரக்க ஆரம்பித்திருக்கிறது. யாரையும் நிறுத்தி பேச்சுக் கொடுக்கக் கூட தோன்ற முடியாத பரபரப்பு. ஒரு நிமிடம் கூட வீணாக்க முடியாத ஓட்டம்.
பூ வாங்கிக் கொண்டு போகும் வியாபாரிகள் யாரிடமாவது பேசலாமா என்று தேடினால் ஒரு முற்றத்தின் மையத்தில் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். 60 வயது ஆகிறதாம். 25 வருடங்களுக்கு முன்பு டிவிஎஸ்சில் வேலை செய்து கொண்டிருந்தாராம். ஒரு தொழில் தகராறில் இவரை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள். அன்று முதல் உழைப்புதான். காலை 3 மணிக்கு மதுரவாயலில் இருந்து புறப்பட்டு வந்து பூ வாங்கி கட்டி, பையில் எடுத்துக் கொண்டு அரும்பாக்கம் பகுதியில் விற்கிறார். விற்றுத் தீருவது வரை சுற்ற வேண்டும். காலை 10, 11 மணி வரை ஆகி விடலாம். ஒரே பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விட்டார். பெண்ணை சார்ந்து இருக்க முடியாது. மனைவிக்கும் தனக்கும் வாழத் தேவையான பொருட்களுக்காக உழைக்கிறார். சலிப்பாக பேசுகிறார். “என் கூட வேலை பார்த்தவன் எல்லாம் நிறைய காசு சம்பாதிச்சு ரிட்டயர் ஆகிட்டான். சொந்த வீடு வாங்கிட்டானுங்க, நான்தான் இப்படி ஆகிட்டேன்” என்கிறார்.
மலிவு விலை மட்டும்தானா கோயம்பேடு
அப்படி சலிப்பதற்கு நேரமில்லை அந்த இரண்டு பெண்களுக்கும். வாங்குவதை முடித்துக் கொண்டு தலையில் ஒரு மூட்டை, தோளில் ஒரு பை, கைகளில் இரண்டு பைகள் என்று விறுவிறு என்று நடக்கிறார்கள். “பேச எல்லாம் நேரமில்லப்பா, ரெண்டு நாள் முன்ன டிராஃபிக்ல மாட்டி போய்ச் சேர ஆறரை மணி தாண்டிருச்சி. வாக்கிங் வந்தவங்க எல்லாம் போய்ட்டாங்க, விக்காம நின்னுடுச்சு” என்கிறார்கள். அசோக் நகர் பகுதியிலிருந்து காலையில் 2 மணிக்கு புறப்பட்டு வந்து அருகம் புல், கீரை வகைகள் வாங்கிக் கொண்டு விரைகிறார்கள். 5.30 மணிக்கெல்லாம் கடை விரித்து காலையில் நடைப்பயிற்சி முடித்து விட்டு அருகம் புல் ஜூசும், வல்லாரைக் கீரை ஜூசும் குடிப்பவர்களின் உடல்நலனை பேணுவதற்காக இவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 100 – ரூ 200 வரை கிடைத்து விடுமாம். விற்காமல் தேங்கிப் போனால் நட்டம்தான். அடுத்த நாள் பாதிக்குப் பாதி கூட தேறாது.
இவ்வளவுக்கும் நடுவில் ஒரு கணவன், மனைவி, ஏழெட்டு வயது பையனுடன் ‘கோயம்பேட்டுக்கு காலையில போயிட்டா மலிவா காய்கறி வாங்கிட்டு போயிடலாம்’ என்று சுறுசுறுப்பாக வந்திருக்கிறார்கள். ‘எந்த கடையில் எந்த காய்கறி கிடைக்கும், எவ்வளவு குறைந்த விலைக்கு கிடைக்கும்’ என்று கணக்கு போட்டு இன்றைய ஷாப்பிங்கில், ‘பக்கத்து மளிகைக் கடையில் வாங்குவதை விட இத்தனை ரூபாய் சேவ் பண்ணி விட்டோம்’ என்று திருப்தி அடையும் சாமர்த்தியத்துடன் வந்திருக்கிறார்கள். நாம் பணம் கொடுத்து வாங்கி விடுவதாலேயே இந்த காய்கறிகளுக்கு பின் இருக்கும் உழைப்பு நமக்கு சொந்தமாகி விடுவதாக நினைக்கிறோம். உண்மையில் ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
“கோயம்பேட்டில கீரைய 5 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து இங்க 8 ரூபான்னு விக்கிறாங்க, என்னா லாபம் பாருங்க” என்று கணக்கு போடும் புத்திக்கு இந்த இரவு பகல் பாராத ஓட்டமும், ஏற்றும் கூலி, இறக்கும் கூலி, போக்குவரத்து செலவு, டீச்செலவு, சாப்பாட்டுச் செலவு எல்லாம் கண்ணில் படப்போவதில்லை.
லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகும் இந்த இடத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் இந்த சந்தையில் கழிப்பறை, குடிநீர் வசதி கூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை. 60-70 மாநகராட்சி கட்டண கழிப்பறைகளின் குத்தகைதாரர் அவற்றை பராமரிக்க மாதச் சம்பளம் ரூ 1,200-க்கு பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறார். ஒவ்வொரு கழிப்பறைக்கும் கட்டணம் மூலம் சில நூறு ரூபாய்கள் தினமும் கிடைக்கின்றதாம்.
“கக்கூஸ் போறதுக்கும், குளிக்கிறதுக்குமே ஒரு நாளைக்கு 50 ரூபாய் செலவழிக்கிறேம்பா. நேரம் கிடைக்கும் போது இங்கேயே ஓரமா படுத்து தூங்கிக்கிறேன். இரண்டு மாசம், மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போய்ட்டு வர்றேன்” இதுதான் இங்கு தங்கி உழைக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமை.
ஒன்று மட்டும் நிச்சயம். மென்பொருள், வங்கித் துறை, பங்குச் சந்தை, விளம்பர நிறுவனங்கள் எல்லாம் இல்லாமல் போய் விட்டாலும், இந்த விவசாயிகளும், உழைக்கும் மக்களும் தொடர்ந்து வாழ முடியும். இந்த விவசாயிகளும் உழைக்கும் மக்களும் இல்லாமல் வெள்ளை சட்டை போட்ட நடுத்தர வர்க்கமும் மேட்டுக் குடி வர்க்கமும் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம்.
சென்னை மக்களின் உணவு தேவைகளுக்காக கோயம்பேடு சந்தை தன்னை தாரை வார்த்திருக்கிறது. மற்றவருக்கு இருக்கும் ஓய்வு பொழுது போக்கு இதர வாழ்க்கையெல்லாம் இங்கு இல்லை. மிகக் குறைந்த கூலிக்கும், வருமானத்திற்கும் தயாராய் இங்கே ஒரு பெருங்கூட்டம் வேலை செய்கிறது. உழைப்பின் அழகையும், ஏழைகளின் துயரத்தையும் அறிய வேண்டுமென்றால் ஒரு முறை கோயம்பேடு சென்று ஓரிரவு தங்குங்கள்.
ஆம் ஆத்மி : சீரழிந்த நாடாளுமன்ற அரசியலைச் சிங்காரிக்க புதிய துடைப்பம் !
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியும் அமைத்துள்ளது. 2004 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பா.ஜ.க. வின் முழக்கத்துக்கு எதிராகத் தாங்கள் முன்வைத்த “ஆம் ஆத்மி” (எளிய மனிதன்) என்ற முழக்கத்தைத் திருடி விட்டதாக கேஜ்ரிவாலைக் குற்றம் சாட்டியிருந்தார் திக்விஜய் சிங். தற்போது காங்கிரசு ஆட்சிக்கெதிரான மக்களின் அதிருப்தியை அறுவடை செய்யக் காத்திருந்த டெல்லி மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியதிகாரக் கனவைத் திருடிவிட்டது ஆம் ஆத்மி கட்சி. அது மட்டுமின்றி, மோடியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட டில்லியின் ஐந்து தொகுதிகளில் நான்கில், பாரதிய ஜனதா வேட்பாளரை மண்ணைக் கவ்வ வைத்து, “மோடி அலை” என்ற மோசடியின் முகத்திலும் மக்கள் காறி உமிழ்ந்துவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் பல மாநிலங்களில் போட்டியிடவிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருப்பதால், காங்கிரசு ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யக் காத்திருந்த பாரதிய ஜனதாவின் ஆசையிலும் மண் விழுந்திருக்கிறது.
டெல்லி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் (இடது) மற்றும் அவரது “எளிமையான” அமைச்சரவை சகாக்கள்.
கட்சி தொடங்கிய 14 மாதங்களில் பணபலமும் அதிகார பலமும் கொண்ட காங்கிரசு, பாரதிய ஜனதா என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பதாக ஊடகங்கள் அதிசயிக்கின்றன; இது ஓரளவிற்கு உண்மையே எனினும், இந்த வெற்றி விளங்கிக் கொள்ள முடியாத புதிர் அல்ல. ஆம் ஆத்மி கட்சிக்கான ஆரம்ப கட்ட விளம்பரத்தை ஆளும் வர்க்கங்கள்தான் முழுவீச்சில் செய்தன. லோக்பாலுக்காக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் எனும் கோமாளிக்கூத்து ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகத் திட்டமிட்டே ஊடகங்களால் ஊதிப்பெருக்க வைக்கப்பட்டது.
மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, படிப்படியாகச் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையை மறைப்பதற்காகவும், அதற்கெதிராகத் திரண்டுவரும் பொதுக்கருத்தையும் போராட்டங்களையும் மடை மாற்றுவதற்காகவும்தான் அன்னா ஹசாரே அவதார புருசனாக்கப்பட்டார். சிறந்த அரசாளுமை – ஊழல் ஒழிப்பு என்ற முழக்கத்தின் அடிப்படையிலான இயக்கங்களைப் பின்தங்கிய நாடுகளில் கட்டியமைக்கின்ற உலகவங்கியின் திட்டத்துக்கும், உலக வங்கியின் விருது பெற்ற ஹசாரேவுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு, புலனாய்வு செய்து கண்டுபிடிக்குமளவுக்குச் சூட்சுமமானதல்ல.
மின்வாரியத்தால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் இணைக்கும் கேஜ்ரிவாலின் ‘துணிகர’ நடவடிக்கை.
அன்னா ஹசாரேயின் தளபதியாக அன்று ஊடக வெளிச்சத்தில் மிதந்த அரவிந்த் கேஜ்ரிவால், “வளர்ந்து வரும் புதிய தலைமை” என்று போற்றப்பட்டு, ராக்பெல்லர் பவுன்டேசனால் வழங்கப்படும் மகசேசே விருதைப் பெற்றவர் என்பதும் இங்கே நினைவிற்கொள்ளத்தக்கது. “நான் அன்னா ஹசாரே” என்று நாடு முழுவதும் அன்று பிரபலப்படுத்தப்பட்ட முழக்கத்தையே “நான் எளிய மனிதன்” என்று மாற்றிக் கட்சி தொடங்கி விட்டார் கேஜ்ரிவால். ஆக, ஆம் ஆத்மி கட்சிக்கு மோடியை விஞ்சுமளவு விளம்பரம் செய்து, சாதகமான பொதுக்கருத்தை உருவாக்கும் பணியையும் ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏற்கெனவே செய்து கொடுத்து விட்டன என்பதையும் இந்த வெற்றியைக் கண்டு அதிசயிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
டெல்லியில் மின்சாரம் மற்றும் தண்ணீரின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதனால் தூண்டிவிடப்பட்ட மக்களின் கோபம் ஆம் ஆத்மி கட்சிக்குச் சாதகமாக அமைந்தது. இக்கட்டண உயர்வைத் “தனியார்மயத்தின் விளைவு” என்று அம்பலப்படுத்தாமல், “ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவு” என்று சித்தரித்ததுடன், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படுமென்றும், ஒரு குடும்பத்துக்கு 667 லிட்டர் தண்ணீர் கட்டணமின்றி வழங்கப்படுமென்றும் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இது மட்டுமின்றி, மாதம் ரூ.4000, 5000 என விதிக்கப்பட்ட அடாத மின் கட்டணத்தைக் கட்டமுடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்குவது போன்ற போராட்டங்களை நடத்தியதும், குடிசைப்பகுதிகள் அகற்றப்படாது என்ற வாக்குறுதியும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் ஆதரவை ஆம் ஆத்மிக்குப் பெற்றுக் கொடுத்திருந்தன.
மக்களின் இத்தகைய பருண்மையான பிரச்சினைகளைப் பற்றி எதுவுமே பேசாமல், மேடைக்கு மேடை பஞ்ச் டயலாக்குகளைப் பொழிந்து கொண்டிருந்த மோடியின் பிரச்சாரம் தோல்வியுற்றதற்கும், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்குமான பின்புலம் இதுதான். குறிப்பாக, பெரும்பாலான குடிசைப்பகுதி மக்கள் தங்களது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறிய காரணத்தினாலேயே ஆம் ஆத்மிக்கு வாக்களித்திருக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த சூழல் இதுதான்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து அரவிந்த் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களோடு டெல்லி ஜந்தர்-மந்தர் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுப் பின்புலம் கலவையானது. ஐ.ஐ.டி. பட்டதாரிகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களின் உயர் பதவி வகித்தவர்கள், ஐ.ஏ.எஸ். ஆக முயற்சிப்பவர்கள், பலவிதமான தன்னார்வக் குழுக்களை இயக்குபவர்கள் – என இக்கட்சியின் முன்னணியாளர்கள் அனைவரும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் என்பதுடன், இவர்களில் பலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தால் “அரசியல் உணர்வு” பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழலின்றி முறையாக அமல்படுத்துவதுதான் நாட்டு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று கருதும் உயர் நடுத்தர வர்க்கம், மின் கட்டண, தண்ணீர் கட்டண உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளால் தனியார்மயக் கொள்கைகளின் மீதும், ஊழல் அரசியல்வாதிகளின் மீதும் வெறுப்பு கொண்ட நடுத்தர வர்க்கம், தனியார்மயக் கொள்கைகளால் கல்வி, மருத்துவ வசதியிழந்து, விலைவாசி உயர்வால் வாழ்க்கைத் தரம் மென்மேலும் வீழ்ச்சி அடைந்து அன்றாடத் தேவைகளுக்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அடிப்படை வர்க்கம் – என்று முரண்பட்ட கருத்துகளையும் நலன்களையும் கொண்ட வர்க்கங்கள் ஆம் ஆத்மியை ஆதரித்திருக்கிறார்கள்.
மேற்கண்ட பிரச்சினைகள் குறித்த ஆம் ஆத்மி கட்சியின் நிலை என்ன என்பதை கேஜ்ரிவால் இப்படிக் கூறுகிறார்: “நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலாவதாக நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ள வில்லை. இரண்டாவதாக, தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று “ஓபன் மாகசினுக்கு” அளித்துள்ள பேட்டியில் கூறுகிறார் கேஜ்ரிவால். ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் முதலாளிகளை, “ஊழலுக்குப் பலியானவர்கள்” என்று கூறுவதிலிருந்தே, கேஜ்ரிவால் எந்த சித்தாந்தத்துக்குத் தாலி கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகி விடுகிறது.
இதே ஆம் ஆத்மி கட்சியின் இன்னொரு தலைவரான பிரசாந்த் பூஷண், “நாட்டின் அதிகார அமைப்பு முழுவதையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு கார்ப்பரேட் மாஃபியா உருவாகியிருப்பதுதான் ஊழல் என்பதன் கொடிய விளைவு” என்று கேஜ்ரிவாலின் கூற்றுக்கு நேர்எதிராக கருத்துரைத்திருக்கிறார்.
“நாங்கள் வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் நடுவிலான கொள்கையை உடையவர்கள் அல்ல. வலது, இடது என்ற இந்த இருமை எதிர்வைக் கடந்து செல்ல விரும்புகிறவர்கள்; இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர சித்தாந்தங்களின் மீது, குறிப்பாக இடதுசாரி சித்தாந்தத்தின் மீது ஆழ்ந்த ஐயம் கொண்டவர்கள். எங்களது விழுமியம் என்பது கடைசி மனிதன் மீதும் நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை. அந்த விழுமியத்தை நான் விட்டுக் கொடுக்க முடியாது. இதேபோல பொதுத்துறையையும், மானியங்களையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஒருவர் சொல்வாரேயானால் அவர் இலட்சியத்தை வழிமுறையோடு போட்டுக் குழப்புகிறார் என்று பொருள். மேதா பட்கர், அருணா ராய் உள்ளிட்டுப் பொதுவாழ்வில் உள்ள சிறந்தவர்கள் அனைவரையும் சேர்த்த ஒரு கூட்டணியாக ஆம் ஆத்மி கட்சியை நாங்கள் மாற்ற விரும்புகிறோம்” என்று கொள்கை விளக்கமளிக்கிறார், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரான யோகேந்திர யாதவ்.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரே உள்ளிட்டோர் ஊழலைத் தவிர பிற சமூகப் பிரச்சினைகளைக் கொண்டு கொள்வதில்லை என அம்பலப்படுத்தும் கேலிச் சித்திரம் (கோப்புப் படம்).
எளிய மனிதனின் நலனைத் தனியார்மயக் கொள்கையின் கீழ் பெற முடியும் என்ற கேஜ்ரிவாலின் கருத்தைத்தான் தனது வார்த்தை ஜாலங்கள் மூலம் மழுப்பிச் சோல்கிறார் யாதவ். எந்தத் தனியார்மயக் கொள்கைகள் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட எல்லா வகையான கொள்ளைகளுக்கும் வழிவகுத்திருக்கிறதோ, அந்தத் தனியார்மயம் எளிய மனிதனின் நலனைக் காக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி.
அது மட்டுமல்ல, பொதுச்சொத்துக்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சொந்தமாக்குவதும், அவர்களது கொள்ளைக்கு நாட்டையே திறந்துவிடுவதும் சட்டபூர்மாகவே நிறைவேறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மறுகாலனியாக்க அடிமைத்தனமே சட்டபூர்வமாக்கப்பட்டு, அதற்கெதிராகக் குரல் கொடுப்பது தேசத்துரோக நடவடிக்கை என்று தண்டிக்கப்படும் இக்காலத்தில், நிலப்பறிப்பும், வாழ்வுரிமைப் பறிப்பும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமை பறிப்பும், கல்வி-மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முதலாளிகள் அடிக்கும் கொள்ளையும் தலைவிரித்து ஆடும் இந்தக் காலத்தில், இவை எதைப் பற்றியும் பேசாமல், ஊழல் ஒழிப்பு மட்டுமே முக்கியப் பிரச்சினையென்று கூறுகிறது ஆம் ஆத்மி கட்சி.
அதுமட்டுமல்ல, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு, ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் அதிகார வர்க்கமும், தரகு முதலாளி வர்க்கமும் அரசு அதிகாரத்தை நேரடியாகவே கைப்பற்றிக் கொண்டு, வேண்டியவாறு கொள்கைகளை வகுத்துக் கொள்ளும் இன்றைய சூழலில், அவற்றைப் பற்றிக் கருத்து ஏதும் சொல்லாமல் குடியிருப்போர் கமிட்டிகளுக்கு அதிகாரம் வழங்குதல், அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயர்களில் மையமான பிரச்சினையை ஆம் ஆத்மி வேண்டுமென்றே திசை திருப்புகிறது.
காஷ்மீர் பிரச்சினை, தலித் மக்கள் மீதான அடக்குமுறை, இந்து மதவெறி, பாக். எதிர்ப்பு அரசியல் என்பன போன்று, ஒரு கொள்கை நிலை எடுத்துத் தெளிவாகப் பேசவேண்டிய பிரச்சினைகளில் கருத்தே கூறாமல் மவுனம் சாதிக்கிறார் கேஜ்ரிவால். மோடியைப் பற்றிக் கருத்து கேட்டால், “தனிநபர்களைப் பற்றிக் கருத்து கூறுவதில்லை” என்றொரு அபத்தமான பதிலைக் கூறி நழுவுகிறார். அதே நேரத்தில் தனது கூட்டங்களில் “வந்தேமாதரம், பாரத் மாதா கி ஜெ” என்று முழங்குகிறார். ஆம் ஆத்மிக்கு வாக்களித்தவர்களில் பாதிப்பேர் பிரதமர் பதவிக்கு மோடியை ஆதரிக்கிறார்கள் என்றும், பாக்.எதிர்ப்பு தேசவெறியை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் டில்லியில் நடத்தப்பட்ட ஒரு மாதிரி சர்வே கூறுகிறது.
கேஜ்ரிவாலுடைய மவுனத்தின் பொருள் என்ன? மோதிக் கொள்ளும் சித்தாந்தங்கள், வர்க்க நலன்கள் இவற்றில் எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் சாதிப்பவர்களும், தனக்கு ஒரு கொள்கை கிடையாது என்று கூறும் நபர்களும் ஆபத்தானவர்கள். டெல்லியில் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது அந்த கேள்விக்கு விடை காண வேண்டிய ஆம் ஆத்மி கட்சி, தனது முடிவுக்கான தார்மீகப் பொறுப்பிலிருந்து மிகவும் தந்திரமாக நழுவிக்கொண்டது. மக்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பதாகக் கூறி, பரவலாக ஊர்க்கூட்டங்களை நடத்திக் கருத்துக் கேட்டு, தனது இந்தச்செயலையே மாபெரும் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையாகவும் காட்டிக் கொண்டது.
பதவியேற்றவுடன் குடிதண்ணீர், மின்சாரம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதுடன், நட்டக்கணக்கு காட்டிவரும் டாடா மற்றும் அம்பானிக்குச் சொந்தமான மின் விநியோக நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யுமாறு, கணக்கு- தணிக்கை அதிகாரியை ஆம் ஆத்மி அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி ஆளும் வர்க்க ஊடகங்கள் கொதிப்படைந்து சாமியாடுகின்றன. இலவசக் குடிநீராகட்டும், மின்கட்டணக் குறைப்பாகட்டும் அவற்றுக்கான நிதியை அரசு தனது வரி வருவாயிலிருந்துதான் கொடுக்க வேண்டுமென்பதால் அரசின் நிதிச்சுமை நிச்சயம் அதிகரிக்கும்.
எல்லோருக்கும் நல்லவராகவும், எல்லோருக்கும் எல்லாமாகவும் இருக்க ஆம் ஆத்மி அரசு விரும்புவதென்னவோ உண்மைதான். ஆனால், ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் இன்னொரு வர்க்கத்துக்குக் கொடுக்க முடியாது. டாடா, அம்பானி போன்றோருடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தால்தான் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எதையும் இலவசமாக மக்களுக்கு வழங்க முடியும். அதைச் செய்வதற்கான முயற்சியில் கேஜ்ரிவாலின் அரசு இறங்குமா? அவ்வாறு இறங்கும் என்று கற்பனை செய்துகொண்டால், ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், நீதித்துறை, சர்வதேச நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த அரசமைப்பையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சீரழிக்கும் ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால், சிறந்த அரசாளுமையை வழங்கிவிடலாம் என்று அவர் பரப்பி வரும் புனைகதையும், கேஜ்ரிவாலின் அரசும் அவர் கண் முன்னாலேயே நொறுங்கி விழும். முதற்பெரும் ஊழலே இந்த அரசமைப்பும் மறுகாலனியாக்க கொள்கையும்தான் என்ற உண்மை அம்பலமாகும்.
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014
_____________________________________________
டிசம்பர் மாதம் 22-ம் தேதி அன்று திருச்சிமாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில், ஆதார் அட்டை, பள்ளி கல்லூரி அனுமதி மற்றும் எரிவாயு உருளை பெற அவசியமில்லை என தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பெற்ற தடையாணை பற்றி விளக்கி வீடு வீடாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தோம், இப்பிரச்சாரத்தில் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் ஈடுபட்டு வந்தனர். பிரச்சாரம் தொடங்கி சுமார் 2 மணி நேரம் கடந்த பிறகு அடுத்தடுத்த தெருக்களுக்கு சென்று கொண்டிருந்தோம்.
கருவாட்டுக்காரம்மா (அடைமொழி) என்ற நீலாவதி எனும் கந்து வட்டி தாதாவகையறாவினர் குடியிருக்கும் பகுதியில் பிரச்சாரம் துவங்கியதும் நா கூசும் அளவிற்க்கு அசிங்கமாக பேசத் துவங்கினார் நீலாவதி, விவரம் புரியாத மற்ற தோழர்கள், “ஏம்மா இப்படி பேசறீங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை” என கேட்டதும், நீலாவதி சாமியாடுவது மேலும் அதிகரித்தது.
அப்பகுதி பெண் தோழர் அருகே வந்ததும், “வாங்கின பணத்தை குடுக்காம என்னடி கொடி புடிக்கிற” என ஏக வசனத்தில் பேசிக் கொண்டே இருந்தார். நீலாவதியுடன் இவர்களது உறவினர்களான மகள், பேத்தி, மருமகள் என பத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் கூடி ஆங்காங்கு ஊளையிட்டுக் கொண்டு இருந்தனர்.
பொறுமை இழந்த பெண் தோழர் ஒருவர் சம்பந்தப்பட்ட பஜாரிகளில் ஒருத்தியை ஓங்கி ஒரு அறை விட்டார். ஏற்கனவே தெருமக்கள் கூடியதாலும் அந்த பகுதி தாதாவாக செயல்பட்ட நம்மை ஒருத்தி கைநீட்டி அடித்து விட்டாள் என்றதும் பத்துக்கும் மேற்பட்ட கும்பல் சூழ்ந்து கொண்டு சம்பந்தப்பட்ட தோழரை சேலையை பிடித்து இழுத்தும் முடியைப் பிடித்து இழுத்தும் அடித்து உதைத்து அலங்கோலம் செய்தனர். குழந்தைகளுடன் சென்ற தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் அடி உதை விழுந்தது. அக்கம் பக்கத்தினர் ஒரு சிலர் வந்து தடுத்து நம்மை மீட்டதும் ஒரு சில நிமிடங்களில் நடந்தேறியது.
யார் இந்த நீலாவதி?
கருவாடு மீனான கதை!
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர் தான் கருவாட்டுக்காரம்மா நீலாவதி, ஆரம்பத்தில் இப்பகுதியில் கருவாடு விற்று காசு சம்பாதித்தார், பின்னர் உழைக்காமல் காசு சேர்க்க எண்ணி வட்டிக்கு விடும் தொழிலுக்கு மாறினார். மருத்துவம், கல்யாணம், கருமாதி என ஆத்திர அவசரத்துக்கு இவரிடம் கடன் வாங்கினால் சொன்ன தேதியில் திருப்பித் தர வேண்டும, முடியா விட்டால் தாலியை விற்றாவது வட்டி கட்டியாக வேண்டும். இவரின் ஆபாச பேச்சு, அடாவடித்தனத்தை எதிர் கொள்ளத் தயங்குகிற தன்மானமும், சுயமரியாதையும் உள்ளவர்கள் கடனை வட்டியோடு வீசியெறிந்தால் பொறுக்கிக் கொண்டு போய் விடுவாள். கந்துவட்டி, மீட்டர்வட்டி, ராக்கெட் வட்டி என பல பெயர்களில் வசூல் வேட்டை நடத்தும் இந்த கும்பல் வட்டியும் முதலும் பேசிய தேதியில் ஒப்படைக்க வேண்டும், தவறும் போது தவணை தர மாட்டார்கள். இருக்கிற சொத்துக்களை எழுதி வாங்குவது மூலம் லாரி உட்பட பல சொத்துக்களை கைப்பற்றி உள்ளனர், இவர்கள் குடியிருக்கும் வீடு இப்போது இவர்களுக்கு சொந்தமாகி விட்டது.
குறுகிய காலத்திலேயே இப்பகுதியில் குட்டி பெண் தாதாக்களாக வலுபெற்றுள்ளனர். இக்கும்பல் வட்டி வசூலிப்பதற்காகவே ஒரு குண்டர் படையை தீனி போட்டு தனியே வளர்த்து வருகிறது, இது மட்டுமே இவரின் பலம் அல்ல, உள்ளூர் போலீசும் தான், “என் கடையில் எச்சி சோறு திங்காத, கை நீட்டி காசு வாங்காத போலீசுகாரன் எவன் இருக்கான்” என்று கருவாட்டுக்காரம்மா கூறுவதிலும் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. நமது தோழர்களை மருத்துவமனையில் சேர்த்த பிறகு துவாக்குடி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ரமேஷ்குமார், “நான் ரொம்ப நேர்மையானவன்! இரண்டு தரப்பை விசாரித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என தேனொழுக பேசினார். அடுத்தநாள் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து இருப்பதாக கூறினார். கந்துவட்டி கும்பல் அடித்ததாக வழக்கு, எங்கள் மீது அவர்களின் 2 பவுன் சங்கிலியை திருடிக்கொண்டு சென்றதாக வழக்கு பதிவு செய்தார். நீலாவதி வீசிய எலும்புத்துண்டு வேலை செய்வதை புரிந்து கொண்ட நாம் இதனை அம்பலப்படுத்தி சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டினோம்.
மறுநாள் பெண்கள், குழந்தைகள் உட்பட தோழர்கள் திரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் SP, DSP யை சந்தித்து முறையிட்டோம்.
எமது அமைப்பையும் அதன் நேர்மையான செயல்பாட்டையும் எதிரிகள் கூட புரிந்துள்ளனர், அதனடிப்படையில் நம் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டன, சம்பந்தப்பட்ட கும்பல் மீது ஒப்புக்கு சில வழக்குகளை போட்டு நிறுத்திக் கொண்டது காவல்துறை. கந்துவட்டி தடைச்சட்டம் உட்பட பல முக்கிய பிரிவுகளில் இருந்து அவர்களை பாதுகாத்தது. போடப்பட்ட வழக்குகள் அடிப்படையில் கூட கைது செய்து சிறையில் அடைக்காமல் வேடிக்கை பார்த்து வந்தனர் போலீசார். இதனைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டினோம்.
அதனைத் தொடர்ந்து பெண் தோழர்களை ஒருங்கிணைத்து பிரசுரம் அடித்து வீடு வீடாக பிரச்சாரம் செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்தோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கமாக சென்றபோது பலரும் பல்வேறு கருத்துக்களை கூறினர்.
“இந்த பஜாரிகளால் பல குடும்பங்கள் நிம்மதியிழந்து உள்ளனர். இவர்களுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்” என்றும் “இந்த போலீசை நம்பி பலன் இல்லை, இவனுங்களே அவளிடம் கடன்வாங்கி உள்ளனர்” என்றும் “இவளுக பெரிய ஆளெல்லாம் கிடையாது, ஆனா வாயை திறந்தா வெறும் சாக்கடையாத்தான் வரும், கடனை வாங்கி மீள முடியாம தவிக்கிறேன்” என கொட்டி தீர்த்தனர்.
3 நாள் பிரச்சார இயக்கத்தின் போது மக்கள் பெருமளவு நிதி கொடுத்தனர்.
20.01.2014 காலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தோம். மாலை 6.30 மணி அளவில் துவாக்குடி அண்ணாவளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட அனுமதிக்காக ஒரு வாரம் முன்னதாக அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் முதல் நாள் இரவு, “வேறு தேதி மாற்றிக் கொள்ளுங்கள்” என போலீசார் கூறினர்.
“எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது, மாற்ற முடியாது, திட்டமிட்டபடி நடைபெறும்” என அறிவித்து ஆர்ப்பாட்ட வேலைகள் துவங்கப்பட்டது.
தோழர்கள், தோழமை அரங்கு தோழர்கள் , பெண்கள், குழந்தைகள் என பரவலாக பொதுமக்கள் கூடிநின்று கவனித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
பெண்கள் விடுதலை முன்னணி தலைவர் நிர்மலா தலைமை உரையில் பேசும் போது, “இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கல் உடைத்து வாழ்க்கை நடத்திய தொழிலாளிகள் இருந்தனர். பிறகு முதலாளிகள் லாபத்தை கொண்டு சென்றவுடன் மக்களுக்கு மிஞ்சியது 200, 350 அடி ஆழம் உள்ள பாறைக் குழிகளே. இன்றைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வு, மறுகாலனிய பாதிப்புகள் அனைத்தும் நகரத்தில் ஏதாவது வேலை செய்து பிழைக்க வேண்டிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் வட்டிக்கு வாங்குவதென்பது தொடர் விசயமாகி உள்ளது, வீட்டில் விசேசம் ஏதும் நடந்தால் அதுக்கும் தேவைப்படுகிறது, மக்களின் வறிய நிலை இயலாமையை பயன்படுத்தி அவர்களின் ரத்தத்தை பிழியும் இந்தக் கும்பல் தமது அடாவடி ரெளடி தனத்தின் மூலம் மக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்து வருகின்றனர்.
இவர்களை மக்களை திரட்டி மோதி வீழ்த்தும் போதுதான் இந்த கிரிமினல்களை அடக்க முடியும்” என பேசினார்.
கண்டன உரை
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஓவியா, “தோழர்களை தாக்கி ஆபாசமாக பேசி அராஜகமாக நடந்து கொண்ட இந்த கந்துவட்டி கூட்டத்தை கேசு போட்டு சிறையிலடைக்காமல் பாதிக்கப்பட்ட தோழர்கள் மீது செயினை பறித்ததாக வழக்கு போட்டு அவமானப்படுத்தியுள்ளது போலீசு. இதே காவல்துறை, முதலமைச்சர் ஜெயலலிதா பறித்தார் என புகார் குடுத்தால் விசாரிக்காமல் வழக்கு போடுமா? இன்று மக்கள் வட்டிக்கு வாங்கும் நிலையில் இருப்பதற்க்கு காரணம் விலைவாசி உயர்வு, வாங்கும் வருமானத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. நக்சல்பாரி அமைப்பின் பாரம்பரியம் எதிரிகளுக்கு பதிலடி கொடுத்து மக்களை காப்பதே. இந்தக் கந்து வட்டி கூட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அமைப்பாய் திரண்டால் எதிரியை எதிர்த்து விடலாம்” என்றார்.
திருச்சி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் தோழர் தண்டபாணி பேசும் போது, “இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கின்றனர். கந்துவட்டிக்கு எதிராக 25 வருடமாக போராட்டம் நடைபெறுகிறது . இந்தியாவில் 70 கோடி மக்கள் வறிய நிலையில் உள்ளனர், 30 கோடி பேர் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை உள்ளது. துவாக்குடி பகுதியில் 200 கம்பெனிகள் இருந்த நிலைமாறி இன்று அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தம் தேவைக்கு வட்டிக்கு வாங்குகின்றனர், அரசியல் வாதிகள், அதிகாரிகள் உயர்பதவியில் இருப்பவர்கள் கந்துவட்டி மூலமே சம்பாதித்து பதவிக்கு வந்தவர்கள். ஆக அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரை மக்களுக்கு எதிரானவர்களே. மனித உரிமைகள் எல்லாம் இந்த அரசிடமும், காவல் துறையிடமும் எதிர்பார்ப்பது வீண்செயல்” என்றும், “வீதியில் இறங்கி போராடுவதே இன்றைய உடனடி தேவை” என உணர்த்தினார்.
அண்ணா வளைவு பெ.வி.மு உட்கிளை இணைச்செயலர் தோழர் லட்சுமி, “பகுதியில் நடந்த சம்பவத்தை விளக்கினார். இந்த கந்துவட்டி கும்பலுக்கு அடியாளாக துவாக்குடி காவல்துறை செயல்படுகிறது” என்றும் “எதிர்க்கத் தயங்கும் மக்கள் அமைப்பாக திரள்வதே தேவை” என்றார்.
ம.க.இ.க வின் மையக்கலைக்குழு தோழர்.கோவன் சிறப்புரையாற்றினார்.
“அண்ணா வளைவு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கந்துவட்டி கொடுமை உள்ளது. தமிழகத்தில் 2003-ல் ஜெயலலிதா கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டு வந்தார். கூடுதலான வட்டி வாங்குபவருக்கு 3 ஆண்டு சிறை, 30ஆயிரம் அபராதம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. திருப்பூரில் கந்து வட்டி கொடுமை அதிகமாய் இருக்கு. விவசாயம் பொய்த்துப் போய் திருப்பூரை நோக்கி செல்கின்றனர். சட்டம் இருந்தும் புகார் கொடுக்க தயங்குகின்றனர். 2006-ல் 42பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். பாதிப்பு அதிகமாயிருந்தாலும் பயமே காரணம். காவல்துறையும் கந்துவட்டிக் கும்பலுடன் கை கோர்த்துள்ளது, ஆனால் காவல்துறையில் சேருவதற்கே வட்டிக்கு பணம் வாங்கியே பெற்றோர் சேர்க்கின்றனர், ஆனா அந்தக் கொடுமையை இவர்கள் உணர்வதில்லை. கந்துவட்டி கும்பல் போலீசு இரண்டுக்கும் எதிராக போராட வேண்டி உள்ளது.
BHEL மிகப்பெரிய கம்பெனி, இங்க ஆர்டர் இருந்தால் வேலை நிறைய இருக்கும். ஆனா இப்ப சீனாவில் இருந்து கொதி கலன்கள் இறக்குமதியாகிறது. அதனால் இங்குள்ள சிறு கம்பெனிகள் இழுத்து மூடப்படுவதால் கந்துவட்டியை நோக்கி செல்லும் நிலை உள்ளது.
நெல்லை மாவட்டம் தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டத்தின் அச்சுறுத்தலாக இருந்த திமிங்கிலம் வைகுண்டராஜனுக் கெதிராக போராடி வெற்றியை சாதித்த எமக்கு இந்த கருவாட்டு கூட்டம் எம்மாத்திரம்” என உணர்வூட்டினார்.
ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கந்துவட்டி, காவல்துறையை திரை கிழிக்கும் பாடல்களை எழுச்சியுடன் பாடினார்கள்.
அந்த நாட்டின் மொத்த ஆண்டு வருமானம் $2.68 லட்சம் கோடி (ரூ 53 லட்சம் கோடி). அதாவது நாட்டு மக்கள் தொகையான 5 கோடி பேருக்கும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக $50,000 (ரூ 12 லட்சம்) வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளலாம். அதாவது, அந்த நாடு உலகிலேயே 7-வது பணக்கார நாடு.
அந்த ஊரில் டிசம்பர் மாதம் குளிர் -7 டிகிரி வரை சென்று நடுங்க வைத்து விடும். வீடு ஒன்று இருந்தால், அந்த நடுக்கும் குளிரில் வீட்டை சூடுபடுத்தும் கணப்புகள் இருந்தே தீர வேண்டும்.
அந்நாட்டு மக்களுக்கு அது பெரிய கவலையாக இருக்க வேண்டியதில்லைதான். வயிற்றுக்கு உணவிடும் கவலையை விட குளிர் மோசமில்லை. மிகவும் முன்னேறிய நாடு; முதலாளித்துவத்தின் பிறப்பிடம்; 400 ஆண்டுகளாக முதலாளித்துவத்தை பயின்று, வளர்த்து; உலகெங்கும் பரப்பிய நாடு. தன் சொந்த நாட்டில் ஒரு 5 கோடி மக்களுக்கு சோறு போடுவதும், தங்க இடம் கொடுப்பதுமா பிரச்சனை!
16 வயதானதும் சுயசார்புடன், “மேல்படிப்பு படிக்க வேண்டுமா, வேலைக்குப் போக வேண்டுமா” என்று தாமே முடிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் சமூகம். வயிற்றுக்குச் சோறும், குளிர் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வீடும், நண்பர்களுடன் வெளியில் போகும் போது செலவை பகிர்ந்து கொள்ளவும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்.
ஜேக் மன்ரோ
இத்தகைய சிறப்புடைய இங்கிலாந்து நாட்டில் ஒரு தீயணைப்பு வீரருக்கு மகளாக பிறந்தார் மெலிசா மன்ரோ. சமீபத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மெலிசா (தேனீ) என்ற பெயருக்கும் தனது வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போய் விட அந்தப் பெயரை துறந்து ஜேக் மன்ரோ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
மெலிசா உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று படிக்கப் போனாலும் படிப்பை முடிக்க முடியாமல் 16 வயதிலேயே வேலைக்குப் போகிறார். உணவு விடுதிகளிலும், கடைகளிலும் பணியாளராக வேலை செய்த பிறகு அவசர உதவித் துறையின் (தீயணைப்பு, விபத்து, மருத்துவம்) ஒருங்கிணைப்பாளராக அவருக்கு வேலை கிடைக்கிறது. ஆண்டுக்கு $44,000 சம்பளத்தில் நடுத்தர வாழ்க்கையின் பாதுகாப்பை அடைந்திருந்தார்.
மேற்கத்திய நடுத்தர வாழ்க்கையின் வசதிகள் அனைத்தும் அவரிடம் இருந்தன. இரண்டு அறை கொண்ட வாடகை வீடு, ஆப்பிள் ஐ-போன் தொலைபேசி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி பெட்டி என்று நவீன வாழ்க்கையை வரையறுக்கும் பொருட்கள் அனைத்தும் குவிந்திருந்தன.
நவம்பர் 2011-ல் குழந்தை பேறுக்கான விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய அவர், சிறு குழந்தையை பராமரிக்க வேண்டியிருப்பதால் இரவு நேர பணியில் இருந்து விலக்கு கோரினார். அது நிராகரிக்கப்பட்டதால், வேறு வழியின்றி அந்த வேலையை விட்டு விலகி வேறு பகல் நேர வேலை தேடத் தொடங்கினார்.
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை 2012-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அவர் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.
========
இன்றைக்கு 14 வேலை விண்ணப்பங்களை அனுப்பி வைத்தேன். வீட்டு வேலைக்கு, கடை வேலைக்கு, தொழிற்சாலை வேலைக்கு என்று எதுவாக இருந்தாலும் ஒரு ஜூராசிக் கால புராதன மொபைல் போனில் விண்ணப்பங்களை டைப் செய்து அனுப்பி வைத்தேன். குறைந்தபட்ச ஊதியம்தான் கிடைக்கிறதா, எந்த வகை வேலை என்றெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றுக்கும் அனுப்பி வைத்தேன். ஏனென்றால், இப்போதைய நிலைமையில் இப்படியே தொடர்வது வேலைக்கு ஆகப் போவதில்லை.
ஜேக் மன்ரோ மகனுடன்
புரியாத ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த மாத வீட்டு வசதி உதவித் தொகை 100 பவுண்டுகள் குறைக்கப்பட்டிருந்தது. இது குறித்து எந்த கடிதமும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், மார்ச்சிலிருந்து மே வரை மூன்று மாதங்களுக்கு நான் தற்காலிகமாக கிடைத்த வேலைக்குப் போனதை ஒட்டி நிவாரண உதவி வழங்கும் பல அலுவலகங்களில் ஏதோ ஒன்றில் நடந்த குளறுபடியாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் 438 பவுண்டு வீட்டு உதவித் தொகையிலிருந்து 670 பவுண்ட் வாடகை கொடுக்க முடியாதுதான். அதனால், ஒரு வாரம் வாடகை பாக்கி. வியாழக்கிழமை வந்தால் அடுத்த வார வாடகை 167.31 பவுண்டு கொடுக்க வேண்டிய கெடுவும் வந்து விடும். ஆனால் பணம் வர வேண்டியது ஒன்றும் இல்லை.
வேலை இல்லாதோர் வருமான உதவித் தொகை சிறிது காலத்துக்கு வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது, குழந்தை வளர்ப்புக்கான உதவித் தொகையும் உதவுகிறது.
இப்போது பிரச்சினை வாடகை பாக்கி மட்டுமில்லை. நேற்று இரவு ஃபிரிட்ஜை திறந்தால் முந்தைய நாள் செய்த கொஞ்சம் தக்காளி பாஸ்தாவும், ஒரு வெங்காயமும், ஒரு துண்டு இஞ்சியும் மட்டும்தான் மீந்திருந்தன. மகனுக்கு பாஸ்தாவைக் கொடுத்து விட்டு, பசி வதையை மறப்பதற்கு இஞ்சி டீ குடித்து விட்டு தூங்கப் போனேன். .
இன்று காலை, குட்டிப் பையனுக்கு சாப்பிட வீட்டாபிக்சின் கடைசித் துண்டை தண்ணீரில் கரைத்து கொடுத்து குடிக்க ஒரு டம்ளரில் வைத்தேன். ‘மம்மிக்கு சாப்பாடு எங்கே?” என்று தன பெரிய நீல நிறக் கண்களை உயர்த்தி இரண்டு வயது குழந்தையின் கரிசனத்தோடு அவன் கேட்கிறான். “பசியில்லை” என்று நான் சொல்லும் பொய்யை வயிற்றிலிருந்து கேட்கும் கட முடா சத்தம் காட்டிக் கொடுக்கிறது. ஆனால், இது போன்ற பொய்களை சொல்லத்தான் நாம் பழகியிருக்கிறோம்.
உணவு மேசையில் உட்கார்ந்து, பேப்பரும் பென்சிலும் வைத்து பட்டியல் போட ஆரம்பிக்கிறேன். இப்போது இருப்பவை எல்லாமே, ஆண்டுக்கு 27,000 பவுண்டுகள் ($42,000) சம்பாதித்த போது, செலவழிப்பதற்கு கையில் காசு இருந்ததாக நினைவில் எஞ்சியிருக்கும் காலத்தில் வாங்கியவை அல்லது அதற்குப் பிறகு கருணை உள்ளமும் தாராள மனமும் படைத்த நண்பர்களால் தரப்பட்டவை. அவற்றில் பெரும்பகுதி ஏற்கனவே மறைந்து விட்டிருக்கின்றன. தீயணைப்புத் துறை வேலையை விட்டு நின்ற பிறகு முதலில் கையை விட்டுப் போனது 21-வது பிறந்த நாள் பரிசான ஒமேகா கைக்கடிகாரம். ‘கையில் ஒமேகா கடிகாரம் கட்டிக் கொண்டு ஏழ்மை பற்றி பேச முடியாது’ என்று அப்போது நினைத்தது இப்போது கைவசம் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் பொருந்துகிறது.
கடைசியில் 2 தட்டுகள், 2 கிண்ணங்கள், 2 டம்ளர்கள், 2 கப்புகள், 2 கத்திகள், 2 முள் கரண்டிகள், 2 கரண்டிகள் மட்டும் மிஞ்சுகின்றன.
ஒருவரை அவரது பணியைச் சொல்லி (இது சூசன், அவர் ஒரு வழக்கறிஞர், இவர் மேக்ஸ், ஒரு கட்டிட வடிவமைப்பாளர்) அல்லது அவரது கார் எண் அல்லது கார் பிராண்ட் அல்லது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியின் திரை அளவு அல்லது அது 3Dயா அல்லது எச்டியா அல்லது ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி உள்ளதா என்பதன் அடிப்படையில் மதிப்பிடும் இந்த உலகில் நான் நண்பர்களின் அன்பினாலும், தாராள மனத்தினாலும் மதிப்பிடப்படுகிறேன். யாரோ கொடுத்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு யாரோ கொடுத்த பியானோவை பார்த்துக் கொண்டே, யாரோ கொடுத்த ரேடியோவை கேட்டுக் கொண்டு, யாரோ கொடுத்த அலமாரியில் சார்ந்து கொண்டிருக்கிறேன்.
எந்த நேரத்திலும், காரணம் எதுவும் சொல்லாமல் கூட வீட்டை காலி செய்யச் சொல்லலாம் என்பதுதான் ஒப்பந்தம் என்று வாடகைக்கு வீடு கொடுத்த ஏஜென்ட் கவனமாக நினைவூட்டியிருக்கிறார். ஐ-போனை வாங்கிய விலையில் நான்கில் ஒரு பங்கு தொகைக்கு விற்று விட்டு, மேசை டிராயரிலிருந்து ஒதுக்கிப் போட்டிருந்த இந்த ஜூராசிக் காலத்து நோக்கியாவில் சிம் அட்டையை போட்டுக் கொண்டேன்.
நாளை முதல் எனது குட்டிப் பையன் அடகுக் கடை உலகத்தைப் பார்க்கப் போகிறான். அவனது அம்மா அற்பமான விலைக்கு தொலைக்காட்சிப் பெட்டியையும், கிதாரையும் தூக்கிக் கொடுப்பதை பார்க்கப் போகிறான். வீட்டை இழந்து தெருவில் நிற்கும் நிலையை தள்ளிப் போடுவதற்கு, ஓரிரு வாரம் தாக்குப் பிடிப்பதற்கு அதுதான் வழி. கடன் பாக்கிகளை ஒன்று திரட்டுவது, கடன் வசூலிக்கும் ஓலைகளாக சிவப்பு முனை கடிதங்கள், கடன் வசூலிக்க நேரில் வரும் ஈட்டிக்காரர்கள் போன்றவை தினசரி நிகழ்வுகளாகியிருக்கின்றன.
“பசியில்லை” என்று நான் சொல்லும் பொய்யை வயிற்றிலிருந்து கேட்கும் கட முடா சத்தம் காட்டிக் கொடுக்கிறது.
எனக்குச் சொந்தமானது என்று சொல்லக் கூடியவை ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மைக்ரோவேவ் உண்மையிலேயே தேவைதானா? தொலைக்காட்சி பெட்டி உண்மையிலேயே தேவைதானா? ஃபிரிட்ஜை ஆன் செய்து வைப்பது உண்மையிலேயே தேவைதானா? குடியிருக்க ஒரு வீடு தேவை என்பதற்கு மேலாக இவை எதுவுமே தேவையில்லை. முக்கியமாக என்னுடைய 2 வயது குட்டிப் பையனுக்கு தலைக்கு மேல் ஒரு கூரை வேண்டும் என்பதற்கு முன்பு இவை எதுவுமே தேவையில்லை.
என்னால் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்க முடிகிறது என்று பலர் கேட்கிறார்கள். என்னுடைய மன உறுதியை பாராட்டுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம் என்று புரியாமல் எனது மகனின் சிறு படுக்கையில் உறைந்து போய் உட்கார்ந்திருக்கும் போது எனக்கு எந்த மன உறுதியும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
முதலில் வீட்டை சூடுபடுத்தலை நிறுத்திக் கொண்டேன். அது டிசம்பரில். சூடுபடுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அவற்றை ஓட்டும் சபலம் வந்து விடாமல் தவிர்க்க அவற்றுக்கு முன்பு நாற்காலிகளையும், அலமாரிகளையும் போட்டு மறைத்திருக்கிறேன். எல்லாக் கருவிகளையும் இணைத்திருக்கும் புள்ளியிலேயே அணைத்து வைக்கப் பழகுகிறேன். மின்சார அடுப்பின் எல்சிடி மின்னுவதற்குக் கூட சிறிதளவு மின்சாரத்தையும் வீணாக்கி விடக் கூடாது.
அதன் பிறகு முடி வெட்டுவதை நிறுத்தினேன். மாதாந்திர அடிப்படைத் தேவையாக இருந்த அது இப்போது ஒரு ஆடம்பர நடவடிக்கையாக மாறி விட்டிருக்கிறது. ஒரு ரப்பர் பேண்டில் முடியை முடிந்து கொண்டு, “முடி வெட்டக் காசில்லை” என்று சொல்லாமல் “முடியை நீளமாக வளர்க்கப் போகிறேன்” என்று நண்பர்களிடம் சொல்கிறேன். தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் சூப்பர்மார்க்கெட்டின் மலிவான பிராண்ட் வெள்ளையும், ஆரஞ்சும் கலந்த நிறத்திலானவையாக மாற்றிக் கொள்கிறேன். எதையும் சுத்தம் செய்வதற்கு 24 பென்ஸ் விலையிலான பிளீச்சை பழைய பாட்டில்களில் ஊற்றி வைத்து பயன்படுத்துகிறேன்.
இங்கிலாந்தில் தொண்டு நிறுவனங்கள் ஏழைகள் வசிக்க ஏற்பாடு செய்யும் கன்டெய்னர் வீடுகள்.
பலவற்றை தியாகம் செய்யக் கற்றுக் கொண்டேன். நண்பர்கள் யாராவது வெளியில் அழைத்தால், எனது பங்கு செலவை கொடுக்க முடியாத நிலையில் சுயகௌரவத்தை எல்லாம் ஒதுக்கி வைக்கக் கற்றுக் கொண்டேன். எனக்கு ஒரு வேலை கிடைத்ததும் எல்லோருக்கும் ஒரு சுற்று டிரீட் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிரந்தர ஜோக் நண்பர்கள் வட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற நண்பர்கள் இருப்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
அதன் பிறகு லைட் பல்புகளை கழற்றி வைத்தேன். மாட்டி இருந்தால்தானே அவற்றைப் போட முடியும், மின்சாரம் செலவாகும்! வராந்தா, தூங்கும் அறை, குட்டிப் பையனின் அறை, அங்கெல்லாம் வெளிச்சம் தேவையில்லை என்று முடிவு செய்தேன். இவ்வளவு சிக்கனம் பிடிக்கும் திட்டத்துக்கு மத்தியில் குரூரமான நகைச்சுவையாக மின்சார நிறுவன ஆள் அழைப்பு மணியை அழுத்தி (மின்சாரத்தை செலவழித்து), 390 பவுண்டுகள் கட்டண பாக்கி இருப்பதால், கீ மீட்டரை (பிரீ பெய்ட் மின்சார சேவை) பொருத்துவதாக சொல்கிறார். இனிமேல் மின்சாரக் கட்டணம் அதிகமாகப் போகிறது. சுடு தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டேன். முன்பு இருந்த வீட்டில் குளிர்ந்த நீர் குளியல்தான், அதே நடைமுறைக்குத் திரும்பிப் போனேன்.
சொற்ப அளவு டிவிடி தொகுப்பை அதை விட சொற்ப தொகைக்கு விற்றேன். அடுத்து நெட்புக், கேமரா விலை போகின்றன. சருமத்தை அரிக்கும் மலிவான சோப்பில் துணிகளை துவைக்க ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் குறைத்து குறைத்து கடைசியில் 2 தட்டுகள், 2 கிண்ணங்கள், 2 டம்ளர்கள், 2 கப்புகள், 2 கத்திகள், 2 முள் கரண்டிகள், 2 கரண்டிகள் மட்டும் மிஞ்சுகின்றன. மற்ற எல்லாமே ஆடம்பரங்கள் போல தோன்றுகின்றன. வாடகை பாக்கிக்கு முன்பு ஆடம்பரங்கள் எல்லாம் போக வேண்டியதுதான்.
ஏழ்மை என்பது வீட்டுக்குள் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பது மட்டுமில்லை, சாப்பிட போதுமான உணவு இல்லாதது மட்டுமில்லை, ஃபிரிட்ஜை அணைத்து வைப்பதோ அல்லது சுடுநீர் இல்லாமல் இருப்பதோ மட்டும் இல்லை. அது ஒரு சுற்றுலா பயணம் இல்லை, அது பெருமைப் படக் கூடிய ஒன்று இல்லை, ஆண்டுக்கு 65,000 பவுண்டுகள் சம்பளமும் கூடுதலாக படிகளும் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரியக் கூடியது இல்லை அது. “நாம் எல்லோரும் இதில் ஒரு சேர சிக்கியிருக்கிறோம்” என்று சொல்லும் நம் நாட்டு பிரதமர் டேவிட் காமரூனுக்கு அது நிச்சயமாக புரியப் போவதில்லை.
எனது 2 வயது மகன் ஒரு வீட்டாபிக்சை சாப்பிட்டு முடித்த பிறகு, “இன்னும் வேணும் மம்மி, பிரெட்டும் ஜாமும் தா மம்மி” என்று கேட்கும் போது நான் வயிற்றில் உணரும் கலக்கம்தான் ஏழ்மை. அடகுக் கடைக்கு அடுத்ததாக தொலைக்காட்சியை எடுத்துச் செல்வதா அல்லது கித்தாரை எடுத்துச் செல்வதா என்று குழம்பிக் கொண்டிருக்கும் நிலையில் பிரெட்-ஜாம் இல்லை என்று அவனிடம் சொல்ல முடியாமல் தவிப்பதுதான் ஏழ்மை.
– செல்வி ஜேக் மன்ரோ, சௌத்என்ட் ஆன் சீ.
=====================
2008-09ல் ஏற்பட்ட முதலாளித்துவ நிதிச் சந்தை நெருக்கடியை சமாளிக்க முதலாளிகளுக்கு $850 பில்லியன் நிதி உதவி கொடுத்து கை தூக்கி விட்டது அப்போது இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்த லேபர் கட்சி.
உணவு வங்கிகள் (கஞ்சித் தொட்டிகள்)
2010-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டேவிட் காமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி கூட்டணி அரசாங்கம், மக்களுக்கான உதவித் தொகைகளை வெட்டும் பணியை ஆரம்பித்து வைத்தது. இதுவரை $100 பில்லியன் மதிப்பிலான உதவித் திட்டங்களை வெட்டி பெரும் எண்ணிக்கையிலான மக்களை நிர்க்கதியாய் விட்ட பிறகும் தாகம் அடங்கமல் நிதி நிறுவனங்களுக்கு இரை போட இன்னும் கூடுதல் வெட்டுகளை திட்டமிட்டிருக்கிறார் டேவிட் காமரூன்.
2013-ன் கடைசி 8 மாதங்களில் இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் உணவுக்காக தரும நிறுவனங்களைச் சார்ந்திருந்தார்கள் என்று டிரசஸ் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. இது 2012-ஐ விட மூன்று மடங்கு அதிகம். அந்தப் பட்டியலில் தானும் குழந்தையும் சேர்ந்து விடுவதை தவிர்க்கும் போராட்டம்தான் மேலே சொன்ன ஜேக் மன்ரோவின் கடந்த 2 ஆண்டுகள் வாழ்க்கை.
வேலையின்மைக்கும், ஏழ்மைக்கும் எதிரான தனது போராட்டத்தைப் பற்றி அவரது வலைப்பதிவில் எழுதிய பிறகு ஜேக் மன்ரோவின் வறுமையை விளம்பரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடத் தொடங்கியது எதிர்க்கட்சியான லேபர் கட்சி. ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் அவரை தான்சானியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு தான் செய்யும் பணியை பார்வையிட வைத்தது. ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை விட தனது நிலைமை பரவாயில்லை என்று ஜேக் சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டுமோ என்னவோ.
கிருஸ்துமசில் மீந்து போன உணவுகளை பயன்படுத்தி சமைப்பது எப்படி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவதற்கு அவரை சேன்ஸ்பரி என்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது. எதையும் வணிகமாக்குவது, வறுமையையும் வேடிக்கையாக்கினால்தான் சோறு என்பதுதான் முதலாளித்துவத்தின் அறம். இத்தகைய சந்தை ‘செயல்திறனால்’, தனது பரிதாப நிலையிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கிறார் ஜேக். தனது குழந்தைக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடும் அளவுக்கு வசதி அடைந்திருக்கிறார் அவர்.
ஆனால், மூன்று வயதாகும் ஜேக்கின் மகன் இப்போது உணவை பதுக்க ஆரம்பித்திருக்கிறான். சென்ற வாரம் மதிய உணவுக்கு அவன் அம்மா செய்து கொடுத்த மீன் கேக்கை பாதி சாப்பிட்டு விட்டு, மீதியை இரவு உணவுக்கு வைத்திருக்கச் சொல்லியிருக்கிறான். “இப்போதே முழுசையும் சாப்பிடலாம்” என்று அம்மா சொன்னாலும், அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அம்மாவுக்கு சாப்பிடுவதற்கு போதுமான உணவு இருக்கிறது என்று அவனை நம்ப வைக்க, அவனோடு சேர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கியிருக்கிறார் ஜேக்.