Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 692

கல்வி உரிமை வேண்டுமா – தேர்தலுக்கு கட் அடி !

5

கல்லூரி மாணவர்களுக்காக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வெளியிட்டிருக்கும் துண்டறிக்கை:

ன்பார்ந்த மாணவ நண்பர்களே,

வரும் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என நினைக்கிறோம். கல்லூரித் தேர்வுக்கு இடையில் இதெல்லாம் தேவையில்லாத விசயம் என்று நீங்கள் கருதாமல் இந்த நோட்டீசை சற்று படிக்குமாறு உங்களை உரிமையோடு கோருகிறோம்.

’’வாக்களிப்பது நமது கடமை, கடமையை செய்யத் தவறக்கூடாது’’ என தேர்தல் கமிசன் மூச்சுக்கு 300 தடவை நமக்கு சொல்லி வருகிறது. ஆனால், ’’குடிமக்கள் அனைவருக்கும் தரமானக் கல்வியை இலவசமாகக் கொடுப்பது அரசின் கடமை’’ என்று எப்போதாவது இந்த தேர்தல் கமிசன் சொல்லி இருக்கிறதா? இதுவரை நமக்காக பேசாத தேர்தல் கமிசன் இப்போது மட்டும் ஏன் பேசுகிறது என சற்று சிந்தித்துப் பாருங்கள்.

வாக்குரிமையை நாம் யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாதாம்? அது நமக்கு கிடைத்த பொக்கிசமாம். அதனால் ’’புதிய வாக்காளர்களான மாணவர்கள் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’’ என்று வீடு தேடி வந்து சொல்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.

ஆனால்,

  • அரசு – அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குடிநீர், கழிவறை, போதிய வகுப்பறை, போதிய ஆசிரியர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. கலாச்சார விழாக்களோ, மாணவனுக்கு என்று இருக்கும் ஒரே விழாவான “பஸ் டே” வோ நடத்த முடியவில்லை. இதெல்லாம் மாணவர்களுக்கு கட்டாயம் வேண்டும் என்று எப்போதாவது ஓட்டுப் பொறுக்கிகள் சொல்லியிருக்கிறார்களா?
  • தன் கல்லூரிப் பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கான மாணவர் பேரவைத் தேர்தலை ஜனநாயக உரிமை என்று அங்கீகரிக்காதவர்கள்தான் அழுகி நாறும் இந்தத் தேர்தலில் ஓட்டும் போடுவது நமது உரிமை வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் பேசி ஓட்டுப் பொறுக்கும் இவர்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்த பின்னால் நமக்கான உரிமைகளை வழங்குகிறார்களா?

  • போராடும் மாணவர்களை ரவுடிகள் பொறுக்கிகளாக சித்தரிக்கிறார்கள்;
  • போலீசை ஏவி கல்லூரிக்குள் புகுந்து தாக்குகிறார்கள்;
  • பொய் வழக்கு போட்டு சிறையிலடைக்கிறார்கள்;
  • கல்லூரியிலிருந்து நீக்கம் செய்து மாணவர்களின் படிப்பையே பாழாக்குகிறார்கள்.

மொத்தத்தில் கல்லூரிகளை கல்விச்சாலைகள் போலவா நடத்துகிறார்கள், சிறைச்சாலையைப் போலல்லவா நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்?

’’எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் உங்கள் காலுக்கு செருப்பாகத் தேய்வோம்’’ என்று 16-வது முறையாக ஓட்டுக்கேட்டு வருகிறார்களே? இதுவரை இவர்கள் மாணவர்களுக்கு செய்தது என்ன? பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் உயரவே இல்லை. தனியார் கலை/ அறிவியல், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி கட்டணம் என்ற பெயரில் மாணவர்களையும், பெற்றோர்களையும் கசக்கிப் பிழிகின்றனவே, இதைத் தடுத்து நிறுத்த எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாவது, எப்போதாவது போராட்டக் களத்திற்கு வந்ததுண்டா? இல்லையே? எஸ்.சி/ எம்.பி.சி மாணவர்கள் தங்கும் விடுதிகள் சிறைச்சாலைகளைவிடக் கொடுமையானது யாருக்கும் தெரியாததா? இந்த ’மக்கள் பிரதிநிதிகள்’ அங்கு ஒரு நாளாவது வந்திருக்கிறார்களா? அந்த கொடுமைகளைத் தீர்க்க வழி செய்திருக்கிறார்களா? வேறு யாருக்குதான் இவர்கள் சேவை செய்கிறார்கள்? நாய் வாலாட்டுவது எஜமானுக்குத்தானே! ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் சேவை செய்வது தனியார் கல்வி கொள்ளையர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்தான்.

சமீபத்தில்,வேல்டெக் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி  போராடிய போது நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்தது யார் தெரியுமா? காங்கிரசின் அகில இந்திய தொழிற்சங்க தலைவரும், அதிமுக அமைச்சரும்தான். அவர்களால் புமாஇமு தோழர்களை பணிய வைக்க முடியவில்லை. அடுத்து போலீசை ஏவுகிறார்கள். திவ்யா எனும் மாணவியின் ’படுகொலை’க்கு நியாயம் கேட்டதற்காக எமது தோழர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தார்கள். இதுதான் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடக்கிறது. இப்படி கல்விக்கொள்ளையர்கள் வீசி எறியும் எச்சில் காசுக்கு காவல் ’தெய்வமாக’ சேவை செய்பவர்கள் இந்த ஓட்டுக் கட்சிகள்தான். இன்னும் சொல்லப் போனால் கல்விக் கொள்ளையர்களில் பெரும்பாலானோர் ஓட்டுகட்சி அரசியல்வாதிகள்தான் எனும் போது இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சேவை செய்வார்கள்?

இது மட்டுமல்ல, கடந்த காலத்தையும் சற்று திரும்பிப் பாருங்கள். மாணவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியை, ஏழை மாணவர்களின் கல்விபெறும் உரிமையை, அன்றாடம் பாதிக்கின்ற பிரச்சனைக்கு இதுவரை நடந்த 15 தேர்தல்கள் என்ன தீர்வைத் தேடித் தந்துள்ளன? எதுவும் இல்லையே. மாறாக ஒவ்வொரு ஆண்டும் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளும், கொடுமைகளும்தான் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அரசு புகுத்தி வரும் தனியார்மயம், தராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையால் கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து அரசு படிப்படியாக விலகி வருகிறது. கல்வித் துறையையே ஒட்டுமொத்தமாக தனியாருக்குத் தாரைவார்த்து வருகிறது. ’காசு உள்ளவனுக்கே கல்வி’ எனும் உலக வங்கியின் உத்தரவால் நாட்டின் பெரும்பான்மை ஏழை மாணவர்கள் தற்குறியாகும் அபாயம் நெருங்கி வருகிறது. இப்படி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்காத இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்?

அரசியல்வாதிகள் மட்டுமா? அரசின் துறைகள் என்ன நமக்காகவா இருக்கின்றன?

  • கல்வியை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்காத அரசியலமைப்புச் சட்டம்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தி கொள்ளையடிப்பது முதலாளிகளின் உரிமை என்கிறது.
  • மாணவர்களின் பஸ் டே விழாவை அராஜகம் என்று தடை செய்த நீதிமன்றம்தான் தனியார்கல்வி நிறுவனங்களின் கொள்ளையை, அவர்கள் செய்யும் சித்திரவதைகளை, கொலைகளை, முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியாது என்கிறது.
  • கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் பெயர்போன காக்கிச்சட்டை ரவுடிகளான போலீசு, நியாயத்திற்காக போராடும் மாணவர்களை ரவுடிகள் பொறுக்கிகளாக சித்தரித்து சிறையிலடைக்கிறது.
  • சட்டத்தையும், விதிமுறைகளையும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் கறாராக நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அதை மதிப்பதே இல்லை.அதிகாரிகளில் கீழ்மட்டம் மட்டுமல்ல மேல்மட்டம் முழுவதும் லஞ்ச – ஊழலில் மலிந்து கிடப்பது நாடே நாறுகிறது.

இப்படி மொத்த அரசின் துறைகளும் அழுகி நாறுகின்றன. இனியும் இதை வைத்துக்கொள்ள முடியாது, தூக்கியெறிய வேண்டும். ஆனால், செண்ட் அடிச்சா சரியாகிடும் என நம்மை நம்ப வைத்து கழுத்தறுக்கத்தான் இந்த தேர்தல் நாடகம்.

’’எல்லாம் சரி பாஸ்….. நமக்கும் இந்த தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லாதபோது, இத ஏன் நாம கண்டுக்கணும்’’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஓட்டுக்கட்சிகள் மாணவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, தலைக்கு ரூபாய் 200, வேட்பு மனுத் தாக்கல, வேட்பாளர் பிரச்சாரம், ‘மாப் காட்ட’, ‘டோர் அடிக்க’, தேவைப்பட்டால் ‘எதிர்கட்சிக்காரன அடிக்க’ என அடியாளாக பயன்படுத்துகின்றனரே. இது நமக்கு அவமானமில்லையா? இதை துடைத்தெறிய களமிறங்க வேண்டாமா?

நம் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல்தான். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல்தான் உங்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டுமா? கூடாதா? எப்படிப்பட்ட கல்வியை கொடுக்க வேண்டும்? என்பதையெல்லாம் தீர்மானிக்கிறது. அரசுக் கல்வியை ஒழித்து தனியார் கல்வியை வாழவைப்பதையும், போர்க்குணமான மாணவர்களை டாஸ்மாக் போதையிலும், நுகர்வுவெறி கலாச்சாரத்திலும் சிக்கி சீரழிய வைப்பதையும் செய்வது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசியல்தான். இந்த கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான லைசன்ஸ் வாங்குவதற்குதான் தேர்தல். இப்போது சொல்லுங்கள் அரசியலுக்கும் மாணவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிவிட முடியுமா? முடியாது.

நம்மை மட்டுமல்ல, நம் பெற்றோர்கள், சகோதர சகோதரிகளான விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளிகள், பெண்கள் என கோடானு கோடி உழைக்கின்ற மக்கள் அனைவரும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாகி வருகிறார்கள்; இந்த தேர்தல் பாதையால் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்; இப்படி பாதிக்கப்டும் உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரள்வோம். இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். நம்மை கொடுமைபடுத்தி வரும் இந்த அரசை தூக்கியெறிவோம். உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!

_____________________

பள்ளி மாணவர்களுக்காக வெளியடப்பட்ட துண்டறிக்கை:

பள்ளி மாணவர்களே, தேர்தலில் வாக்களிப்பது கடமை அல்ல –
மடமை என்பதை பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்வோம்!

ன்பார்ந்த மாணவர்களே,

இறுதித் தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் படிப்பிற்கிடையே குறுக்கிடுவதற்கு வருந்துகிறோம். ஒரு அவசரமான விசயத்தை பேச வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. 18 வயது நிரம்பியவர்கள்தான் ஓட்டு போட முடியும். ஆனால், 18 வயது நிரம்பாத நம்மையும் தேர்தல் வேலைகளில் இழுத்து விடுகிறது தேர்தல்கள்.

ஒரு பக்கம் ஓட்டுக்கட்சிகளின் புரோக்கராக செயல்படும் தேர்தல் கமிசன் உறுதிமொழி படிவம் ஒன்றை நம் கையில் திணித்து ஓட்டுப் போட ஆள் பிடிக்கச் சொல்கிறது. மறு பக்கம் ஓட்டுக் கட்சிகள் முதலாளிகளிடம் வாங்கிய எச்சில் காசை வீசியெறிந்து கூட்டத்திற்கு ஆள் சேர்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேர்தல் களத்திற்கு வந்து விட்டோம். எனவே, பள்ளி மாணவர்களாகிய நாம் தேர்தலை எப்படி பார்ப்பது என தெளிவுபடுத்திக்கொள்வோம்.

இதற்கு நாம் படிக்கும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவைகள் எப்படி உள்ளன? காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத வகுப்பறைகள். குடிக்க தண்னீர் இல்லை. சிறு நீர் கழிக்க, மலம் கழிக்க கழிவறை இல்லை. ஆய்வுக்கூடமில்லை. விளையாட்டு இல்லை. கலைவிழா இல்லை. இடியும் நிலையில் கட்டிடங்கள். அழியும் நிலையில் அரசுப்பள்ளிகள்.

பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளைக்காரனாக தனியார் பள்ளிகள். பணம் கறக்க முடியாதபோது மாணவர்களின் உயிரைப் பறிக்கின்றன தனியார் பள்ளிகள். மொத்தத்தில் கல்வி கற்கும் சூழல் இல்லை. உரிமைகள் இல்லை. ஆனால் சித்திரவதைகள் உண்டு. இதைப் பற்றி இந்தத் தேர்தல் கமிசனோ, ஓட்டுக் கட்சிகளோ கவலைப்பட்டதுண்டா? இப்போது மட்டும் உறுதிமொழி படிவத்தை தருகிறது தேர்தல் கமிசன்.

அன்று தன்னந்தனியாக நாம் தானே கல்வி கற்கும் உரிமைக்காக போராடினோம். புமாஇமு தலைமையில் போராடினோம். எத்தனை எத்தனை போராட்டங்கள்.

  • தமிழ் வழிக் கல்வி கேட்டு ஆர்ப்பாட்டம்.
  • கழிவறை கேட்டு கல்வித்துறை அலுவலகம் முற்றுகை.
  • பள்ளிக்கூடம் இடிந்தபோது ரிப்பன் மாளிகை முற்றுகை.

எத்தனை சுவரொட்டிகள்,எத்தனை பிரசுரங்கள், மாவட்டம் முழுக்க எத்தனை பிரச்சாரம் இவையெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் வரவில்லை. வரமாட்டார்கள்.

காரணம் இவர்கள் அனைவரும் அதாவது, இந்த அரசும், அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் இலவச – கட்டாயக் கல்வியை தரமாக, தாய்மொழியில் அறிவியல் பூர்வமான கல்வியை விரும்பவில்லை. தனியார் கல்விக் கொள்ளையர்களை வளர்க்கவே வெறிகொண்டு அலைகிறார்கள். தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க தடையாக உள்ள அரசுப் பள்ளிகளை இழுத்து மூட முயலுகின்றன. கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுக்கவும் அவர்கள் சேமிப்பை கொள்ளையடிக்கவும் தனியார் முதலாளிகளுக்கு பாதை போட்டு தருகிறது. இதற்காக அரசுப்பள்ளிகளை திட்டமிட்டே சீரழிக்கின்றன. இந்தக் கொள்ளைக்கு ( கொள்கைக்கு) பெயர் கல்விதனியார்மயம். இதை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்ததும் இந்த ஓட்டுக் கட்சிகள்தான். இவைகளை ஒழித்துக்கட்டாமல் கல்வி கிடையாது. உரிமை கிடையாது. இதுதானே இந்த ஓராண்டுப் போராட்டத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.

ஆனால், ரத்தம் குடிக்கும் இந்த கல்வி தனியார்மய காட்டேரியை யார் வளர்ப்பது என்ற போட்டியில் தானே கட்சிகள் குதித்துள்ளன. இதற்கு பெயர் தானே நாடாளுமன்றத் தேர்தல்.

கல்வி உரிமையை மட்டுமல்ல, வேலை உரிமை, தண்ணீர் உரிமை, இலவச மருத்துவ உரிமை என, மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்து பணக்கார கும்பல்களை (கார்ப்பரேட் முதலாளிகளை) வளர்க்கத்தானே நாய்களைப் போல சண்டையிடுகின்றன ஓட்டுச் சீட்டு கட்சிகள். வெளிநாட்டு முதலாளிகளுக்கும் , உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் நம் பெற்றோர்களை கூலி அடிமைகளாக்கி ஒட்டச் சுரண்டுவதற்கு எந்த கட்சிக்கு வாய்ப்பளிப்பது என்பதை முடிவு செய்வது தானே இந்தத் தேர்தல். உண்மை இப்படி இருக்கும் போது இந்தத் தேர்தலில் வாக்களிப்பது கடமை அல்ல. மடமை என்பதை நம் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்வோம்.

இந்த ஓராண்டு அனுபவம் நமக்கு சொல்வதென்ன? போராட்டம் ஒன்றுதான் அரசை பணிய வைக்கும் என்பதே. இதை உரக்கச் சொல்லுவோம். மற்றவர்களுக்கு உறைக்கச் செய்வோம். தாய், தந்தை, உற்றார், உறவினர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் பிரச்சாரம் செய்வோம்.

நாட்டையும், நம்மையும் அடிமைப்படுத்துவதை தீவிரப்படுத்தி வரும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்வோம். போலி ஜனநாயக செட்டப்பை உடைத்து எறிய பெற்றோர்களோடு களம் இறங்குவோம். புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்.

இவண்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு

தமிழில் பேச முடியாத நீதிமன்றம் எதற்கு ?

5

நீதிபதிகளாகிய நீங்கள் சட்டத்தை மீறலாம்! பொதுமக்களாகிய நாங்கள் மீறக்கூடாதா? இது எந்த ஊர் நியாயமடா?

ன்பார்ந்த பொதுமக்களே!

“தமிழை நீதிமன்ற மொழியாக்கு” என்ற வழக்குரைஞர்களின் முழக்கம் சென்னை-மதுரை உயர்நீதி மன்றங்களில் எதிரொலிக்கின்றன. இது அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. நம்முடையதும் தான்.

நாம் என்ன அன்றாடம் ஆங்கிலமா பேசுகிறோம்? தமிழில் தானே பேசுகிறோம். குடும்பங்களிலும், நண்பர்களிடமும், அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும், நம் சொந்த பந்தங்களிடமும், பழகும் இடங்களிலும், வேலைகளிலும் சரி, தாய்மொழி தமிழில் தானே பேசுகிறோம். உதாரணத்திற்கு ஒரு விசயத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது, நம் வேலை செய்யும் இடங்களில் இடை நீக்க உத்தரவையோ, விசாரணையையோ ஆங்கிலத்தில் தான் அச்சடித்து தருகிறது நிர்வாகம். ஆனால், அதை நாம் ஏற்க மறுத்து, தமிழில் மொழி பெயர்த்து கொடுங்கள் என்று கேட்கிறோமா இல்லையா? உண்மை இப்படி இருக்கும் பட்சத்தில் உயர்நீதி மன்றங்களில் புரியாத மொழி ஆங்கிலம் எதற்கு?

நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடும் உரிமை இருந்தால் தான், வழக்குரைஞர்கள் என்ன பேசுகிறார்கள், அதற்கு நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கும் புரியும். வழக்குரைஞர்களுக்கும் புரியும். வழக்குரைஞர்களும் சரியாக வாதாடுகிறார்களா? நீதிபதிகளும் அதை சரியாகப் புரிந்துக் கொண்டு தீர்ப்பளிக்கிறார்களா? என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் புரியாத மொழியில் படம் பார்ப்பதைப் போல இவர்கள் வாயை அசைப்பதைத் தான் வேடிக்கை பார்க்க முடியுமே தவிர, அவர்கள் விவாதிப்பதிலிருந்து ஒரு எழவையும் புரிந்துகொள்ளமுடியாது. வேண்டுமானால் நமது வழக்குரைஞர்கள் இங்கிலீசிலே நல்ல வெளுத்து வாங்கினார்கள் என்று பெருமை பீத்தி கொள்ளலாம்.

இதில் நமக்கு என்ன பலன்? பணத்தையும், நேரத்தையும் இழந்தது தான் மிச்சம். வழக்குரைஞர்கள் வேண்டுமானால் வழக்காட வரும்பொழுது மக்களிடம் எதையாவது சொல்லி ஏமாற்றலாம். “நான் நல்லாத்தான் வாதாடினேன். ஆனால் நீதிபதி தான் சரியா தீர்ப்பு சொல்லல” என்றும் வழக்குரைஞர்கள் சொல்லலாம். தமிழில் வாதாடும் உரிமை இருக்கும் பட்சத்தில் வழக்குரைஞர்கள் வாதாடுவதை வைத்துக் கொண்டு சந்தேகங்களை அவர்களிடம் எழுப்பித் தெளிவுபெற முடியும். அவர் சரியாக வாதாடினாரா இல்லையா என்பதை நேரிலேயே பார்த்து புரிந்துக் கொண்டு நமது வழக்கில் யார் தவறு செய்துள்ளார்கள், வழக்குரைஞர்களா? நீதிபதிகளா என்பதை புரிந்து கொள்ளவும் முடியும்.

உதாரணத்திற்கு, கோயில்களில் சமஸ்கிருதம் என்ற புரியாத ’தவளை’ பாஷையில் அர்ச்சகர் அர்ச்சனை செய்யும் பொழுது, அவர் நமக்காக கடவுளிடம் என்ன கேட்கிறார், அதாவது நமக்காக என்ன ‘சிபாரிசு’ செய்கிறார் என்று தெரியாமல், புரியாமல் அவர் வாயைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இதில் ஒன்றை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது அவர் நம்மிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ’குலம்-கோத்திரங்களை’ கடவுளிடம் ஒப்பிக்கும் பொழுது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி என்ன சுலோகம் சொல்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் – அது நமக்கு புரியாத-தெரியாத பாஷை. நமக்கு தெரிந்த-புரிந்த தாய் மொழியில் சொல்லும் பொழுது புரிந்து கொள்ள இயலும் இல்லையா?

இப்பொழுது சொல்லுங்கள், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களின் வாயையும், கோயில்களில் அர்ச்சகர்களின் வாயையும் தானே பார்க்கிறோம். என்றைக்காவது இதைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறோமா? இதை என்னவென்று சொல்வது? அடிமைப் புத்தி என்பதா? சொரணை இல்லை என்பதா?

அதனால் தான், 1956-ம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது, தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டப்படி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்நாடு ஆட்சி மொழியான தமிழை வழக்காடும் மொழியாக்கப்பட்டதோ, 20 ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து, வழக்குரைஞர்களின் பல போராட்டங்களுக்கு பிறகு குற்றவியல் நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டும், உரிமையியல் நீதிமன்றங்களில் 1982-ம் ஆண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதோ நமக்குத் தெரியவில்லை.

தமிழ் தெரியாத ஒன்றிரண்டு நீதிபதிகளின் நலனுக்காக, பெரும்பான்மை தமிழக மக்களின் ஜனநாயக உரிமையையும், உணர்வையும் காலில் மிதித்து, 1994-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி, தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை ஆழக் குழிதோண்டி அதில் போட்டு புதைத்து விட்டதையும் தெரியாமல்- புரியாமல் இருக்கிறோம்.

1996-ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாக்க தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த்து. உ.பி. உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்க அனுமதித்த மத்திய அரசு, தமிழை ஓரவஞ்சனையுடனும், மொழித் தீண்டாமையுடனும் அனுமதி தர மறுத்து வருகிறது என்பதையும் அறியாமல் இருக்கிறோம்.

சிறிது யோசித்துப் பாருங்கள், இதன் விளைவாக பாதிக்கப்படுவது யார்? பொதுமக்களாகிய நாம்தான். வழக்கு விபரங்கள் எதுவுமே தெரியாமல், மந்தைகளைப் போல நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் சொல்வதையே ‘உண்மை’ எனவும், நீதிபதிகள் எழுதும் தீர்ப்பையும் கேள்வி எழுப்ப முடியாமல் தவிக்கிறோம்.

சட்டத்தை மீறக்கூடாது, சட்டத்தை மீறக்கூடாது என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் ’மகா கனம் பொருந்திய’ நீதிபதிகள் தான் ஆட்சி மொழிச் சட்டத்தை ஒரு தீர்மானத்தின் மூலம் செல்லாக்காசாக்கி விட்டார்கள்.

  • பொதுமக்களாகிய நாம் சட்டத்தை இம்மியளவு மீறினாலும், போலீசும், நீதித்துறையும் காட்டுக் கூச்சல் போட்டு வழக்கைப் போட்டு, உள்ளே தள்ளுகிறது. ஆனால், நீதிபதிகள் மட்டும் மீறுவார்கள். யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. இது எப்படி இருக்கிறது என்றால் “இராஜா மட்டும் ’குசு’ விடலாம்!” என்பதை தான் நினைவூட்டுகிறது.

இது கேவலம் இல்லையா? இந்தி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழகம், பிறகு மெல்ல மெல்ல அடங்கி போனதால், இன்று பள்ளிகளில் ஆங்கிலம்; கோயில்களில் சமஸ்கிருதம்; நீதிமன்றங்களில் ஆங்கிலம் என எங்கும் அடிமை மோகம் பெருகியதன் விளைவு தாய்த் தமிழை இழந்து நிற்கிறோம். இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்களுக்கு தோள் கொடுப்போம். உயர்நீதி மன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழைக் கொண்டு வந்து பொதுமக்களாகிய நாம் சட்டத்தை மீறமால் இருக்க நீதிபதிகள் வழிவகுப்பார்களா?

மத்திய அரசே!

  • உ.பி. உள்ளிட்ட நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்கியது போல தமிழ்நாடு உயர்நீதி மன்றங்களிலும் தமிழை வழக்காடும் மொழியாக்கு!

சென்னை உயர்நீதி மன்றமே!

  • தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை முடக்கி கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாவதை தடுத்து நிறுத்தி உள்ள உயர்நீதி மன்ற தீர்மானத்தை உடனே திரும்ப பெறு!

உழைக்கும் மக்களே!

  • தமிழை வழக்காடும் உயர்நீதி மன்றங்களில், கீழமை நீதிமன்றங்களில் மொழியாக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்கள் மீது கிளிக் செய்யவும்]

மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை கிளை
தொடர்புக்கு : வழக்கறிஞர் மில்டன், 9842812062

தேர்தல்: கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !

7

“ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது தேர்தல்கள்தான்; தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுகிறார்கள்; நாடாளுமன்றம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ந்த நிறுவனம்” என்றவாறு தேர்தல்கள், நாடாளுமன்றம் பற்றிய நம்பிக்கையை முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் பொதுமக்களிடம் உருவாக்கி வைத்துள்ளனர். ஓட்டுக்கட்சிகள் கிரிமினல்மயமாகியிருப்பது; ஓட்டுச் சீட்டு அரசியலே பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்கான எளிதான வழியாக, பிழைப்புவாதமாக மாறியிருப்பது; எங்கும் இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள் பெருத்துப் போயிருப்பது என இந்த அமைப்புமுறை அழுகிப் போயிருப்பதைக் காணும் மக்கள், இந்த தேர்தல்கள், ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்துவரும் நிலையிலும், தேர்தல்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட இந்த அமைப்பு முறையை விட்டால் வேறு மாற்று இல்லை என்றே இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

உங்கள் ஓட்டு, அவர்கள் சீட்டு
உங்கள் ஓட்டு, அவர்கள் சீட்டு

நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் சீரழிந்து போயிருப்பதற்கு ஓட்டுக்கட்சிகள், அதனின் தலைவர்கள், தனிப்பட்ட அதிகாரிகள் ஆகியோரின் மீது பழிபோட்டுவிட்டு, இந்த அமைப்பு முறைக்கும் அக்கேடுகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என இவர்கள் வாதிடுகிறார்கள். ஓட்டுக்குப் பணம் வாங்காமல், கட்சிகளைப் பாராமல், சாதி – மதச்சார்பு இல்லாமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் போல மக்களுக்குச் சேவை செயக்கூடிய அமைப்பு வேறு எதுவும் கிடையாது என இவர்கள் உபதேசிக்கிறார்கள். ஊழல், அதிகாரமுறைகேடுகள் உள்ளிட்ட கேடுகள் அனைத்தையும் தானாகவே திருத்திக் கொள்ளும் வாய்ப்புகள் (ஜன் லோக்பால் போன்றவை) இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் கொட்டிக் கிடப்பதாகக் கூறி இவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்.

“நாடாளுமன்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடிமறைக்கும் திரைச்சீலை” என்ற லெனினின் வரையறுப்புக்கு முற்றிலும் எதிராக, “மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதில் நாடாளுமன்றம் உயர்ந்த அமைப்பு வடிவமாகும். எனவே, இந்திய நாடாளுமன்றம் முடமாகிப் போனால், இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்” என எச்சரிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா. அரசனை விஞ்சிய ராஜ விசுவாசி!

“மாற்றம் வேண்டும்” என்ற அடிப்படையில் வாக்களிப்பதாகக் கூறும் படித்த நடுத்தர வர்க்கத்தினர்கூட, தேர்தல்கள் மூலம் ஒரு கட்சிக்குப் பதிலாக இன்னொரு கட்சியைப் பதவியில் அமர்த்தினால் மாற்றம் வந்துவிடும் எனப் பாமரத்தனமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைப் புரிந்து வைத்துள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்தான் நாட்டை ஆளுவதாகக் கூறப்படுவதே ஒரு வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்திற்குச் சட்டமியற்றும் அதிகாரம்தான் உண்டே தவிர, அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அப்பால் தனித்து இயங்கிவரும் அதிகார வர்க்கத்திற்குத்தான் உண்டு. மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களையும் இந்த அதிகார வர்க்கம்தான் வடிவமைத்துத் தருகிறது. இந்த அதிகார வர்க்கம் நாடாளுமன்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுயேச்சையாக இயங்கக் கூடியது. இந்த அதிகார வர்க்கத்தை நியமிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது.

இதுவொருபுறமிருக்க, தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு இந்திய நாடாளுமன்றத் தின் நடவடிக்கைகளை ஒருமுறை அலசிப் பாருங்கள். இந்திய மக்களின் மீது மானிய வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு எனப் பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கிய அதேசமயம், ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை அளித்து, அதன் மூலம் அக்கும்பல் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் அதிரடி இலாபம் அடையவும் ஏற்பாடு செய்து கொடுக்கும் கருவியாக நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் உண்மை தெரிய வரும்.

இந்திய நாடாளுமன்றம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் நலன்களைப் பாது காக்கும் கருவியாக இருப்பதை ஓட்டுக் கட்சிகளின் சொந்த விருப்பு வெறுப்பாக, ஓட்டுக்கட்சிகள் மக்கள் மீது அக்கறையற்று இருப்பதன் வெளிப்பாடாகவோ சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. 1990- களில் புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு ஏற்ப அரசின் கட்டுமானங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடு இது.

நாடாளுமன்றம்: ஏகபோக நிதியாதிக்க கும்பலின் ரப்பர் ஸ்டாம்ப்!

உலக வர்த்தகக் கழகம்1947-க்குப் பிந்தைய இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைத் தனியார்மயத்திற்கு முன், தனியார்மயத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். தனியார்மயத்தின் முன்பு இந்திய நாடாளுமன்றம் டாடா, பிர்லா, டி.வி.எஸ்., உள்ளிட்ட சில குறிப்பிட்ட தரகு முதலாளித்துவ குடும்பங்களுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவந்த போதும் நாட்டின் சுதேசித் தொழில்களையும், இயற்கை வளங்களையும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களிடமிருந்து காக்கும் அரைகுறையான சுதேசி பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை நிலவியது. இதனால் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பெயரளவிலான அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டிருந்தது. மேலும், மக்கள் நல அரசு எனத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவே ஒப்புக்குச் சப்பாணியாகச் சில நடவடிக்கைகளை – கல்வி, மருத்துவம், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசியமான சேவைகளை அரசின் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருப்பது – எடுத்து வந்தது.

1991-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நரசிம்ம ராவ் அரசு, உலக வங்கியின் கட்டளைகளை ஏற்று இந்தியப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கத் தொடங்கிய பின், இந்திய நாடாளுமன்றத்தின் பெயரளவிலான அதிகாரமும் சுயேச்சைத் தன்மையும் முற்றிலும் பறிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, மக்கள் நல அரசு என்ற முகமூடியையும் கழட்டிவிட்டது. அதனைத் தொடர்ந்து “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த நாள் தொடங்கி, இந்திய நாடாளுமன்றமும், அரசின் பிற உறுப்புகளும் அந்நிய நிதி மூலதனத்தின் கட்டளைகளை நிறைேவற்றும் ரப்பர் ஸ்டாம்பாகவே மாறிவிட்டன.

நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுகூட, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே, அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே நடந்து முடிந்தது. இந்தச் சம்பவம் ஒன்றே இந்திய நாடாளுமன்றம் இனி சோளக்காட்டு பொம்மை போன்றது என்பதை எடுத்துக் காட்டியது.

“காட்” ஒப்பந்தம் கொல்லைப்புற வழியில் நாட்டின் மீது திணிக்கப்பட்டபோதும், நரசிம்ம ராவ் அரசிற்குப் பின் பதவிக்கு வந்த, போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணி அரசும், அதற்குப் பின் பதவிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் முந்தையதைவிட விசுவாசமாக நடந்து கொள்வதிலேயே குறியாக இருந்தன. குறிப்பாக, வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு அப்பாலும் சென்று, 640 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய-அமெரிக்க இராணுவக் கூட்டு ஒப்பந்தமும்கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல்தான் மன்மோகன் சிங் அரசால் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் சிவில் அணுஉலைகளைக் கண் காணிக்கும் அதிகாரத்தை ஏகாதிபத்திய நாடுகளுக்கு அளித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனங்களை தாஜா செய்வதற்காகவே, அணுசக்தி கடப்பாடு மசோதா நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வோடோஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏப்பு செய்த விவகாரம் அம்பலமான பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, பொது வரி தவிர்ப்பு விதிமுறைகளை நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தது, காங்கிரசு கூட்டணி அரசு. பன்னாட்டு நிறுவனங்கள் இப்புதிய விதி முறைகளைத் தீவிரமாக எதிர்த்தவுடனேயே, அதனை அமலுக்குக் கொண்டுவருவது கிடப்பில் போடப்பட்டது. “மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர்” என மேற்கத்திய ஊடகங்கள் அபாயச் சங்கை ஊதியவுடனேயே சில்லறை வர்த்தகம் தொடங்கி ஆயுதத் தளவாட தயாரிப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாகத் தன்னிச்சையாக அறிவித்தார், மன்மோகன் சிங்.

உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள், குறிப்பாக அறிவுசார் சொத்துரிமை விதிகள் (TRIPS) மற்றும் நிதி முதலீட்டு விதிகளுக்கு (TRIMS) மாறாக, இந்திய நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிவிட முடியாது. இந்தியா எந்தெந்த பொருட்களை எவ்வளவு இறக்குமதி செய்ய வேண்டும்; எந்தெந்த பொருட்களை எந்த அளவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் உலக வர்த்தகக் கழகம்தான் தற்பொழுது தீர்மானிக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், உலக வங்கியின் நிபந்தனைப்படி இயற்றப்பட்ட ஒன்றாகும். 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ரசியாவின் சீஸ்டெமா நிறுவனமும், நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்திய அரசிற்கு மேலான சூப்பர் அரசாங்கமாக ஏகாதிபத்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.

இந்திய அரசு: கார்ப்பரேட் முதலாளிகளின் சேவகன்

அரசு கார்ப்பரேட்டுகளின் சேவகன்
அரசு : கார்ப்பரேட்டுகளின் சேவகன்

1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின், அதுகாறும் அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்துவந்த துறைகள் சிலவற்றுள் இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய தொழில் கழகங்களும் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன. இப்படி நுழைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிரடி இலாபம் அடைவதற்கு வசதியாக அத்துறையில் இருந்துவரும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நட்டத்தில் தள்ளப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களையும் இலாபத்தையும் கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் படலம் ஆரம்பமானது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி, அதற்குத் தரகு முதலாளிகளின் நம்பகமான விசுவாசியான அருண் ஷோரி அமைச்சராக்கப்பட்டார். இலாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை என்ன விலைக்கு விற்கலாம் என்பதைக்கூட நாடாளுமன்றத்திற்குப் பதிலாக ஏகாதிபத்தியவாதிகள்தான் முடிவு செய்தனர். 2100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மாடர்ன் புட்ஸ் 104 கோடி ரூபாய்க்கும், 5,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பால்கோ 551 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதிலிருந்தே இரண்டாவது கட்டத்தில் நடந்த பகற்கொள்ளையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு அடுத்து, கண்ணுக்குத் தெரியும் ஆற்றுத் தண்ணீர், இரும்பு, நிலக்கரி, இயற்கை எரிவாயு, மீத்தேன் தொடங்கி கண்ணுக்குத் தெரியாக அலைக்கற்றைகள் ஈறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் எந்த வரைமுறையும் இன்றி இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழங்களுக்கும் ஒதுக்கீடு செயும் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் பாதைகள் கட்டும் காண்டிராக்டுகள் மட்டுமின்றி, அவற்றைப் பராமரிப்பது தொடங்கி குப்பை வாருவது வரையுள்ள அனைத்துப் பொதுப் பணிகளையும் தனியாரிடம் அயல்பணியாக ஒப்படைப்பது; அரசும்-தனியாரும் கூட்டுச் சேர்ந்து (Public Private partnership projects) அடிக்கட்டுமான திட்டங்களை உருவாக்குவது; சிறப்புப் பொருளாதார மண்டல வளையங்களை உருவாக்குவது; உள்நாட்டு தொழில்களில் குறிப்பாக பங்குச் சந்தை உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவது; அவற்றுக்கு வரிச் சலுகைகளும் வரித் தள்ளுபடிகளும் அளிப்பது என அடுத்தடுத்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன.

இந்தத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசே விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்து கொடுத்தது; கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்கு வசதியாக பழங்குடியின மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக பொதுத்துறை வங்கிகளின் கடன் விதிகள் தளர்த்தப்பட்டன; வட்டி வீதம் குறைக்கப்பட்டது. முதலீடுகளைக் கவர்வது என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரித் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன. இப்படியான சலுகைகளை அளிப்பதன் மூலம்தான் நாட்டில் தொழில் பெருகும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும், அந்நியச் செலாவணி கிடைக்கும் என அரசு வாக்குறுதிகளை அள்ளிவிட்டது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பல்லிளித்துப் போவிட்டதை இப்பொழுது அரசே ஒப்புக் கொண்டு விட்டது.

நாடு போண்டியாகி நிற்கும் அதேசமயம் அரசின் செல்லப்பிள் ளைகளான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அசிம் பிரேம்ஜி, அடானி, மித்தல் உள்ளிட்ட ஒரு சில இந்தியத் தரகு முதலாளிகளோ உலகின் சூப்பர் பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றனர். விலங்குகளின் இரத்தத்தைக் குடிக்கும் ஒட்டுண்ணி போல, மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் முட்டைப் பூச்சி போல, இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் நாட்டின் பொதுச் சொத்துக்களை, இயற்கை வளங்களை, பொதுமக்களின் சேமிப்புகளை, உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணிகளாக அரசின் ஆதரவு அரவணைப்போடு உருவாகியுள்ளனர்.

ஏகாதிபத்திய விசுவாசிகளே அமைச்சர்களாக, அதிகாரிகளாக…

நாடாளுமன்றம் இந்த ஒட்டுண்ணித்தனம் நிறைந்த கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் பார்த்து வருகிறது. இதைச் செய்து கொடுக்கும் நம்பகமான விசுவாசிகள்தான் அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த ராஜாவைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிப்பதற்கு மட்டும தானா லாபியிங் நடந்திருக்கிறது? பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி தூக்கி கடாசப்பட்டு, அவரிடத்தில் வீரப்ப மொய்லி உட்கார வைக்கப்பட்டதன் பின்னே முகேஷ் அம்பானியின் கரங்கள் இருந்தன. வீரப்ப மொய்லி இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்து, அம்பானியின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.

வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
அரசுத்துறை வங்கிகளை மேன்மேலும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

நிதி மந்திரி ப.சிதம்பரம், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் எனத் திரும்பும் பக்கமெல்லாம் ஏகாதிபத்திய விசுவாசிகளால் இந்திய அரசாங்கம் நிரம்பி வழிவதை யாரும் கண்கூடாகப் பார்க்கலாம். மாண்டேக்சிங் அலுவாலியா உலக வங்கியிலும், ரகுராம் ராஜன் சர்வதேச நாணய நிதியத்திலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிவிட்டு இறக்குமதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன், உலக வங்கியில் குப்பை கொட்டியவர், ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் நம்பகமான ஏஜெண்ட் என்பதால்தான் மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதிமந்திரியாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதம மந்திரியாகவும் முடி சூட்டப்பட்டார்.

இதுவொருபுறமிருக்க இந்தியத் தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனங்களைச் சேர்ந்த விசுவாசமான அதிகாரிகளும் கொல்லைப்புற வழியாக மேலவை உறுப்பினராக நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவது இன்று ஒரு போக்காக வளர்ந்து வருகிறது. மேலும், அரசு அமைக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் தரகு முதலாளிகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக அரசின் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்களைத் தரகு முதலாளிகளும், அதிகார வர்க்க கமிட்டிகளும், ஏகபோக நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களும்தான் வகுத்துக் கொடுக்கிறார்கள்.

இதன் அடிப்படையில்தான் இன்று சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவன அதிகார வர்க்கத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோல தொலைபேசிக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அதிகார வர்க்க கமிட்டிகள் தீர்மானிக்கின்றன. இவற்றுக்கு அப்பால், வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்யவும், சர்க்கரை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாராளமயத்தைப் புகுத்தவும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் கமிட்டி; சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியங்கள் தொடர்பாக அரசுக்கு அறிவுரை வழங்க இன்ஃபோசிஸ் இயக்குநர் நந்தன் நிலகேனி கமிட்டி; தரகு முதலாளித்துவ நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க தரகு முதலாளி குமாரமங்கலம் பிர்லா கமிட்டி; வங்கித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர நரசிம்மன் கமிட்டி என்றவாறு அனைத்து நிலைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கு ஏற்றவாறு அதிகார வர்க்க கமிட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக மைய அரசு அமைத்து வருகிறது. இந்த கமிட்டிகள் தான் உண்மையான அரசாங்கமாகவும், அவை தரும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தலையாட்டி பொம்மையாக நாடாளுமன்றமும் இன்று செயல்பட்டு வருகின்றன.

அரசியல்வாதிகளிடம் காணப்படும் சுயநலம், ஊழல் ஆகிய ஒழுங்கீனங்களைக் காட்டி, தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் நிறைந்த அதிகார வர்க்கத்தின், துறை சார்ந்த நிபுணர்களின் கைகளில் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அளித்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என இந்த மாற்றத்தைப் புதிய தாராளவாதக் கொள்கை நியாயப்படுத் துகிறது.

கார்ப்பரேட் நிபுணர்கள்
உண்மையான அரசாங்கம் இவர்களைப் போன்ற நிபுணர்களின் கைகளில்: வங்கித்துறை சீர்திருத்தக் கமிட்டியின் தலைவர் நரசிம்மன்; வறுமைக்கோடை நிர்ணயிக்கும் கமிட்டியின் தலைவர் ரங்கராஜன்; எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவது குறித்த கமிட்டியின் தலைவர் நந்தன் நிலகேனி; வரி தவிர்ப்பு விதிமுறைகள் கமிட்டியின் தலைவர் பார்த்தசாரதி ஷோமே.

அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் சமூக பொறுப்புகள், கடப்பாடுகள் அனைத்தும் களையப்பட்டு, அவை மேலும் மேலும் ஆழமாக இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செயும்படி மாற்றப்பட்டிருப்பதைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன. அரசியல் கிரிமினல்மயமாகியிருப்பதைவிட கொடிய அபாயம் நிறைந்தது இந்த மாற்றம். எனினும், முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் ஊழல் இல்லாத நல்லாட்சி, சிறந்த அரசாளுமை ஆகிய மயக்கு வார்த்தைகளைக் கொண்டு இந்த பேரபாயத்தை நியாயப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல்கள்: மறுகாலனியாதிக்கத்தின் மூகமூடி

கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரசு கூட்டணி ஆட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட் சி, ஐக்கிய முன்னணி ஆட்சி எனப் பல வண்ண கூட்டணிகள் மாறிமாறி ஆண்டபோதும், தனியார் மய-தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கூட்டணிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. சொல்லப்போனால், இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தங்களுக்கிடையே யார் முந்தி என்ற போட்டிதான் அக்கூட்டணி ஆட்சிகளுக்கிடையே நிலவி வந்தது. இப்படி தனியார்மயக் கொள்கைகளுக்கு எந்தவிதப் பாதிப்புமின்றி ஆட்சி நடத்துவதைத்தான் ஆளுங்கும்பல் நிலையான ஆட்சி என வரையறுக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. தேர்தலுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது பற்றி இந்திய மக்களைவிட, ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகள்தான் அதிகம் கவலை கொள்கின்றனர். தங்கள் விருப்பத்துக்கு மாறான கூட்டணி ஆட்சி அமைந்தால், அதனைக் கவிழ்த்து விடவும் தயாராக இருக்கிறது அக்கும்பல். “சிறிய மற்றும் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொண்டு, ஒரு பொதுவான பொருளாதாரத் திட்டமின்றி ஆட்சியமைக்க முற்பட்டால், அது நிதி முதலீட்டாளர்களை வெளியேறத் தூண்டுவதாக அமைந்துவிடும். அப்படிபட்ட நிலை இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செயும்; வெளிநாடுகளிலிருந்து பெறும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும்; இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுவதைத் தாமதப்படுத்தும்” என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறது, மூடி (Moody) என்ற ஏகாதிபத்திய ரேட்டிங் நிறுவனம்.

எனவே, தேர்தல்களுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அது ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகளின், இந்தியத் தரகு முதலாளித்துவக் கும்பலின் ஆட்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இருக்க முடியாது. அதனால் நடைபெறவுள்ள தேர்தல் என்பது இந்தத் தீவட்டிக் கொள்ளையர்களின் ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ நியாயத்தைக் கற்பிக்கும் மோசடி தவிர வேறெதுவும் கிடையாது என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டும். ஓட்டுக்கட்சி களும் ஊடகங்களும் முதலாளித்துவ அறிவுத்துறையினரும் முன்வைக்கும் “தேர்தலின் மூலம் மாற்றம்” என்ற மோசடிக்கு மாறாக, நக்சல்பாரி புரட்சியாளர்கள் முன்வைக்கும் “தேர்தலைப் புறக்கணிப்போம்; மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் அணி திரண்டு, தனியார்மயம்-தாராளமயத்தையும் அதனைப் பாதுகாக்கும் இந்த அரசியல் அமைப்பு முறையையும் வேரடி மண்ணோடு வீழ்த்தக்கூடிய புரட்சிகரப் போராட்டங்களைக் கட்டியமைக்க முன்வர வேண்டும்.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்

265

முன்னுரை:

emc21905-ம் ஆண்டு இன்றைய தேதியான ஏப்ரல் 11 அன்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற சிறப்பு சார்பியல் தத்துவத்தை வெளியிடுகிறார். அதை நினைவு கூர்ந்து இந்த ஆவணப்பட விளக்க கட்டுரையை வெளியிடுகிறோம். நெடிய இந்த கட்டுரை ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளை வரலாற்றுப் பார்வையோடு விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, கூடவே அதன் நெடிய பாதையில் அரசியலும், மக்கள் புரட்சிகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் எப்படி பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதையும் இங்கே புரிந்து கொள்ள முடியும். மதங்களையும், கடவுள்களையும் அருங்காட்சியகத்திற்கு மட்டும் அனுப்ப வேண்டிய அடையாளங்கள் என்பதை ஐன்ஸ்டீனது கண்டுபிடிப்புகள் நமக்கு வலியுறுத்துகின்றன. அறிவியலை கற்பது என்பது அரசியல் போராட்டம், மனித குல வரலாறு கற்பதோடு பிரிக்க முடியாத ஒன்று என இந்த ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. படியுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்!

வினவு

___________

வீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? உண்மையில் இச்சமன்பாட்டின் பொருள் என்ன? அது எப்படி உருவானது? அது மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மில் வெகுசிலரே அறிந்திருக்கிறோம்.

நோவாவின் “ஐன்ஸ்டீனின் பெரும் சிந்தனை” என்ற ஆவணப்படம் பார்ப்பதற்கு எளியதாக தோன்றும் இந்த சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், கருதுகோள்கள் ஒரு வெற்றிடத்திலோ அல்லது ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள்ளிருந்து மட்டும்  உருவாக்கப்படுவதில்லை. மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாக திரட்டிய அறிவுச் செல்வத்தின் மீது நின்று கொண்டு அறிவியலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் அவை கட்டியெழுப்பபடுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இளம் ஐன்ஸ்டீன்
இளம் ஐன்ஸ்டீன்

E=mc2 என்ற சமன்பாட்டை நினைக்கும் போது ஐன்ஸ்டீனை வெள்ளை முடியும் சுருக்கம் விழுந்த வயதான மனிதராக பலர் உருவகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இச்சமன்பாட்டை உருவாக்கிய போது ஐன்ஸ்டீன் வயோதிகர் இல்லை; துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

அவருக்கு முன் இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கப் போராடிய, பலருடைய வேலையை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கொண்டு ஒரு கோட்பாட்டு பாய்ச்சலை செய்ததுதான் ஐன்ஸ்டீனின் மேதைமை. இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பின்னாலும் சாதனை, தோல்வி, சண்டை, பகை, காதல், போட்டி, அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகள் உள்ளன.

E = mc2 சமன்பாட்டின் கதை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆற்றல் மாறும் கோட்பாடு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.

E – ஆற்றல்

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகள் ஆற்றலை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை. அவர்கள் காற்றின் சக்தி, கதவு மூடப்படும் விசை, மின்னலின் சக்தி இப்படி ஒவ்வொன்றையும் விசைகளாகவும், சக்திகளாகவும் தனித்தனித் தீவாக ஆய்ந்து வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை  ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிமுதலானவை, தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை.

அக்காலகட்டத்தில் அறிவியல் என்பது மேன்மக்களுக்கான துறையாகவே இருந்தது. அவர்களுக்கே அறிவியல் கல்வி கற்கவும், ஆய்வுகள் நடத்தவும் வாய்ப்புகள் கிடைத்தது. ஒவ்வொரு சக்தி அல்லது விசையின் பின்னிருந்து இயக்கக் கூடிய, அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் இன்னும் அந்த மேன்மக்களிடையே உருவாகவில்லை. இது அறிவியலின் அன்றைய வரம்பு என்பதோடு கனவான்களின் புத்தார்வ தடைகளும் சேர்ந்த ஒன்று. கல்விக்கும், அறிவியலுக்கும் பிறப்பு காரணமாக அனுமதி மறுப்பில்லை என்ற மேலை நாடுகளிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் அவை வளராமல் சிக்குண்டிருந்தன எனலாம். இந்த பின்னணியில்தான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் இயற்கையின் புதிர்களை புரிந்துகொள்ளும் உந்துதல், ஆற்றல் குறித்த அறிவியல் கோட்பாட்டை மாற்றியமைப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.

மைக்கேல் ஃபாரடே - 1842ல்
மைக்கேல் ஃபாரடே – 1842ல்

ஒரு இரும்புக் கொல்லரின் மகனான மைக்கேல் ஃபாரடே, புத்தகம் பைண்டிங் செய்யுமிடத்தில் பழகுநராக வேலை செய்து வருகிறார். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில் புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில் உழைக்கும் மக்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் சிறுபட்டறைகளிலும், தொழிற்கூடங்களிலும் தொழில் பழகுனராக சேர்ந்து தொழில் கற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. ஃபாரடே பைண்டிங் தொழிலின் திறனை கற்றுக் கொண்டதோடு நில்லாமல், அவர் கைகளுக்கு வரும் எல்லா புத்தகங்களையும் படித்து சுயமாக கல்வி கற்கிறார்.

தனது வேலையை விட அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் அதிகம் கொண்டிருந்த ஃபாரடே, தனது சொற்ப வருமானம், ஓய்வு நேரம் அனைத்தையும் சுயகல்வி கற்பதிலும், இயற்கை விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதிலும் செலவிட்டார். அன்றைய சமூகத்தில் விஞ்ஞானிகள் நட்சத்திர அந்தஸ்து உடையவர்களாக மதிக்கப்பட்டதுடன் அவர்களை சந்திப்பதோ, அவர்களுடைய விரிவுரைகளுக்கு செல்வதோ சாதாரண மக்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்பாகவே இருந்தது. இளம் ஃபாரடேயின் உற்சாகத்தையும், பேரார்வத்தையும் கண்ட வாடிக்கையாளர் ஒருவர், பிரபுகுலத்தை சேர்ந்தவரும் அக்காலத்தைய மிகப்பிரபலமான வேதியியலாளருமான சர் ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்பதற்கு ஃபாரடேவுக்கு அனுமதிச்சீட்டு பெற்றுத் தருகிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்ட ஃபாரடே உற்சாகமடைந்து அவரை தனது ஆதர்ச நாயகனாக மதிக்க ஆரம்பிக்கிறார். ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளில் தான் எடுத்த குறிப்புகளை புத்தகமாக தொகுத்து அதை அவரை நேரில் சந்தித்து பரிசளிக்கிறார். கட்டுப்பாடுகள் மிகுந்த, அறிவுத் தேடலை முடக்கிப் போடும் மற்றும் சுயநலம் மிகுந்த வர்த்தக உலகிலிருந்து தான் விடுபட விரும்புவதாகவும், சுதந்திரமும், முற்போக்கானதும் தனது மனதிற்கினியதுமான அறிவியலுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும் கோரி டேவியின் உதவியாளராக சேர விண்ணப்பிக்கிறார். டேவி ஆரம்பத்தில் ஃபாரடேவை அவமானப்படுத்தி அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். பின்னர் ஆய்வகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமுற்ற பிறகே தனது ஆய்வுகளில் உதவி செய்ய ஃபாரடேயை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

சர் ஹம்ப்ரி டேவி
சர் ஹம்ப்ரி டேவி

அக்காலத்தின் கவர்ச்சிகரமான அதிசயிக்கத்தக்க ஒன்றான மின்கலமும் மின்சக்தியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. விசித்திரமான மின்சக்தியை குறித்து அறிந்து கொள்ள அனைத்து விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு வந்த போதிலும் அதைப் பற்றி இன்னும் சரியாக மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.

1821-ல் டேனிஷ் (டென்மார்க்) ஆய்வாளர் மின்சாரம் பாயும் மின் கடத்தியின் அருகில் காந்த திசைகாட்டியை கொண்டு செல்லும் போது அதன் ஊசி செங்கோணத்தில் விலக்கப்படுவதை கண்டறிந்தார். மின்கடத்தியின் எந்த பக்கத்தில் வைத்தாலும் ஊசி செங்கோணத்தில் விலக்கப்பட்டது.

உயர்கல்வி கற்ற மேன்மக்களான அப்போதைய அறிவியலாளர்கள் மத்தியில், குழாயினுள் நீர் பாய்வதைப்போல் மின்கடத்தியினுள் மின்சாரம் பாய்வதாக கருத்து நிலவி வந்தது. அப்படித்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது என்று அவர்கள் ஃபாரடே போன்ற ‘தற்குறி’களுக்கு இடித்துரைக்கவும் செய்கின்றனர். ஆனால், ஃபாரடே மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது அதை சுற்றிலும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது எனும் கருத்தை முன்வைத்தார். அக்காந்தப்புலமே காந்த திசைகாட்டியின் ஊசியை விலக்குகிறது என்றும் விளக்கினார்.

அத்துடன், நிலை காந்தத்தின் அருகில் வைக்கப்படும் மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது, கடத்தியை சுற்றி உருவாகும் காந்தப்புலத்திற்கும், நிலை காந்தப்புலத்திற்கும் இடையேயான எதிர் வினை விலக்குவிசையை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார். இதுவே அந்நூற்றாண்டின் மிகப்பெரும் கண்டுபிடிப்பான மின் மோட்டார் ஆகும். இவ்வாய்வே எல்லா இயக்க சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பற்றிய கோட்பாடு உருவாக காரணமாக அமைந்தது.

பிரிட்டனின் உயர் அறிவியல் அமைப்பான ராயல் சொசைட்டியில் – அவ்வமைப்பின் தலைவராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹம்ஃப்ரி டேவி, ஃபாரடேவை கருத்து திருடர் என குற்றம் சுமத்தி ஆய்வறிக்கையை திரும்பப் பெறுமாறு நிர்பந்தித்ததையும் மீறி – ஃபாரடே தனது ஆய்வை சமர்ப்பிக்கிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பின் ஃபாரடே தனது பணிகளுக்கான அங்கீகாரத்தை பெற்றதோடு தனது புகழ்பெற்ற அடுத்த கண்டுபிடிப்பான மின்காந்த தூண்டல் விதிகளை கண்டறிந்தார். அதாவது, மின்கடத்தியை சுற்றியுள்ள காந்தப்புலம் மாறுதலடையும் போது கடத்தியுள் மின்சாரத்தை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார்.

இவ்விரு கண்டுபிடிப்புகளும், மின்சக்தியும், காந்தசக்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தியங்குகின்றன என்பதையும் ஒன்று மற்றொன்றை தூண்டுகிறது என்பதையும் வெளிக்கொணர்ந்ததுடன், ஆற்றல் அழிவின்மை விதி உருவாக காரணமாக அமைந்தன.

ஃபாரடேவின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தைத் தொடர்ந்து ஐன்ஸ்டீன் ஆற்றல் பற்றிய இயற்பியலில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதை இந்தப் படம் விவரிக்கிறது.

குழந்தை ஐன்ஸ்டீன்
குழந்தை ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் குழந்தைப்பருவத்திலிருந்தே அவருக்கு நம் கண்களுக்கு தெரியாத மின்சக்தி, காந்தசக்தி போன்றவற்றின் மீது கவர்ச்சி ஏற்பட்டது. அவரது பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் இயற்பியல், கணிதம், தத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவரது பள்ளி, கல்லூரி பேராசிரியர்களை பொருத்தமட்டில் உலகின் எல்லா ஆற்றலும் – சக்தியும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஐன்ஸ்டீன் பின்னாட்களில், ஒரு புதிய, கண்டறியப்படாத மீப்பெருமளவிலான ஆற்றலை பொருட்களின் இதயமான அணுவில் கண்டறிந்து அவர்களுடைய கருத்து தவறென்பதை நிருபிக்கப்போகிறார்.

E=mc2 சமன்பாட்டில் M என்பது Mass – நிறையை குறிக்கிறது. இதை பற்றி அறிந்து கொள்ள ஐன்ஸ்டீன் பிறந்ததற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலபிரபுத்துவ அரசு அல்லது எதேச்சதிகார முடியாட்சியை எதிர்த்த மக்கள் புரட்சி (முதலாளித்துவ புரட்சி) காலகட்டத்திலான பிரான்சுக்கு செல்லவேண்டும். அதுவரை திருச்சபைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவியலை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு துறையையும் பகுத்தறிவின் மூலம் பிரித்தாய்ந்து வளர்த்தெடுத்த காலம் அது. இந்தியாவில் அத்தகைய அரசியல் புரட்சி நடப்பதற்கு பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை மட்டுமின்றி காலனி ஆதிக்கமும் சடுதியில் நிலைநாட்டப்பட்டது.

பிரான்சில் பிரபுகுலத்தை சேர்ந்த அன்டோன் லவாய்சியர், பிரபலமான வேதியலாளரும், மன்னர் பதினாறாம் லூயி-யின் வரிவசூலிக்கும் அதிகாரியும் ஆவார். வரி வசூலை பெருக்குவதற்கு பாரிஸ் நகரத்தைச் சுற்றி சுவரெழுப்பி நகரத்தினுள் நுழையும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி வசூலிக்கும் முறையை கொண்டு வந்து மக்கள் மத்தியில் ‘இழி’புகழ் ஈட்டிய பணியை செய்தவர். ஆனால், அவரது முக்கிய பங்களிப்பு வேதியல் துறையில், வேதி வினைகளில் பொருட்களின் நிறை மாறாமல் இருக்கும் கோட்பாட்டை நிரூபிப்பதில் இருந்தது.

அவர் மொத்த இயற்கையும் மூடிய அமைப்பாக இருப்பதையும், வேதியல் நிலைமாற்றங்கள் அனைத்திலும், எந்தப் பொருளின் நிறையும் அழிவதுமில்லை, புதிதாக உருவாவதுமில்லை என்பதை ஆய்வுக்கூடத்தில் நிருபித்துக் காட்டினார். அவருடைய ஆய்வுக்கூடத்தில் செஞ்சூட்டிலிருக்கும் இரும்புக் குழாயின் வழியாக நீராவியை செலுத்தி மறுபுறம் அதை சேகரித்து குளிர்வித்தார். (அதாவது இரும்புக் குழாயை துருப்பிடிக்க வைக்கும் வேதி வினையை நிகழ்த்தினார்).

சூடேற்ற பயன்படுத்திய நீரின் நிறைக்கும், இறுதியில் குளிர்வித்து பெறப்பட்ட நீரின் நிறைக்கும் இருந்த வித்தியாசம் வேதி வினையின் போது வெளியான வாயுவின் நிறை மற்றும் இரும்பு குழாயின் அதிகரித்த நிறையின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருந்தது. இச்செயல் முறையை பின்னோக்கி – தலைகீழாக – செய்து காட்டி தனது கோட்பாட்டை நிரூபிக்க அவர் முயன்றார்.

லவாய்சியர்
அன்டோன் லவாய்சியர்

லவாய்சியரின் சிறப்பு துல்லியமான அளவீடுகளிலும், தரவுகள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து ஆய்வு செய்யும் நேர்த்தியுமாகும். லவாய்சியர் வரிவசூல் அதிகாரியாக ஈட்டிய செல்வம் அனைத்தையும் தனது அதிதுல்லியமான ஆய்வுக்கூடத்தை மேம்படுத்துவதற்கே செலவிட்டுக் கொண்டிருந்தார். லவாய்சியரின் ஆய்விலிருந்து எந்த பொருளும் தப்பவில்லை.

அவருடைய கோட்பாடு பொருள் முதல்வாதத்திற்கு நிரூபணமாகவும், எல்லாப் பொருளும் எல்லா வகையான நிலைமாற்றங்களிலும் வேறொன்றாக மாறுவதாகவும், அவற்றின் அடிப்படை துகள் (பருப்பொருள்) அழிவதில்லை என்ற நிறைமாறாக் கொள்கை (நிறை அழிவின்மை கொள்கை) உருவாகவும் காரணமாக அமைந்தது.

அவருடைய பங்களிப்பு விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனினும், அப்போதைய சமூக சூழலில் உயர் பிரபுகுலத்தோர் சமூகத்தின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரம் வகித்ததுடன் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வாய்ப்புகளை ஏகபோகமாக ஒதுக்கிக் கொண்டனர். ஆனால், இந்த ஆதிக்கத்தை எதிர்த்த பரந்து பட்ட மக்களின் போராட்டமும் வலுப்பெற்று வந்தது.

ஜோன் பால் மாரட் என்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அறிவியல் ஆர்வலர் நெருப்பின் துகள்களை திரையில் படம்பிடிக்கும் கருவியை தாம் கண்டறிந்துள்ளதாக லவாய்சியரிடம் வருகிறார். மாரட்டின் சோதனைச்சாலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத வர்க்க பின்னணியையும், அறிவியல் ஆர்வத்தையும் கணக்கில் கொள்ளாத லவாய்சியர், நெருப்பின் துகளை பிடித்து அதை துல்லியமாக அளவிட்டிருந்தால் மட்டுமே மாரட்டின் கண்டுபிடிப்பை தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று அவரை அலட்சியப்படுத்தி அனுப்பி விடுகிறார்.

1789-ல் மகத்தான பிரஞ்சு புரட்சி நடக்கிறது. எதேச்சாதிகாரத்தின் தலைகளை மக்களும் புரட்சியாளர்களும் கில்லட்டினால் வெட்டியெறிகின்றனர். இப்போது ஜேகோபின் புரட்சியாளர்களில் ஒருவராக இருக்கும் ஜோன் மாரட், வரி வசூலிக்கும் அதிகாரியாக மக்களை ஒடுக்கிய லவாய்சியருக்கு சம்மன் அனுப்ப, லவாய்சியரும் கில்லடினுக்கு தப்பமுடியவில்லை.

சமூக அலைவீச்சில் அடித்துச் செல்லப்பட்டு குறுக்கப்பட்ட லவாய்சியேவின் வாழ்வைத் தொடர்ந்து ஐன்ஸ்டீனை ஒளியைப் பற்றி சிந்திக்க வைத்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.

பேராசிரியர் ஃபாரடே
பேராசிரியர் ஃபாரடே (முதிய வயதில்)

ஐன்ஸ்டீனின் இளம்பருவத்தில் அவரை அதிகம் கவர்ந்த, அவர் அதிகம் சிந்தித்து கொண்டிருந்த விசயம் ‘ஒளி’யைப் பற்றியது. கல்லூரி நாட்களில் அவர் தனது நண்பர்களுடன் மட்டுமின்றி தனது காதலியான மிலெவா மாரிக்குடனும் ஒளியைப் பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் விவாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறார். ஐன்ஸ்டீனின் ஒளியை பற்றிய பேரார்வம், பின்னர் ஆற்றலையும், பருப்பொருளையும் (நிறை) ஒருங்கிணைத்து மனிதகுலத்தின் பிரபஞ் பார்வையையே மாற்றியமைத்தது.

E=mc2 சமன்பாட்டின் அடுத்த பகுதி c என்பது ஒளியின் திசைவேகத்தைக் குறிக்கிறது. 19-ம் நூற்றாண்டிற்கு வெகுகாலத்திற்கு முன்னரே அறிவியலாளர்கள் ஒளியின் திசைவேகத்தை செயல்முறை அளவீடுகள் மூலம் கணக்கிட்டிருந்தனர். உலகின் அறியப்பட்ட அனைத்திலும் அதிவேகமாக பாய்வது ஒளி. அதன் வேகம் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பிறகு ஃபாரடே, பேராசிரியர் ஃபாரடேவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மின்சக்தியும், காந்தசக்தியும் மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் இரு வடிவங்கள்தான் என்ற அவரது கருதுகோளையும், ஒளியும் அதே மின்காந்த அலையின் ஒரு வடிவம்தான் என்பதையும் அறிவியல் உலகம் ஏற்க மறுத்தது. தன்னுடைய கருதுகோளை நிரூபிக்கத் தேவையான உயர்கணித புலமை ஃபாரடேவிடம் இருக்கவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வயது முதிர்ந்த ஃபாரடேவின் உதவிக்கு வருகிறார் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். உயர்கணிதம் கற்ற இளம் பேராசிரியர் மேக்ஸ்வெலும் ஃபாரடேவும் வயது வரம்பைத் தாண்டிய நண்பர்களாயினர். மேக்ஸ்வெலின் புதிய உயர்கணித சமன்பாடுகள் மின்விசையும் காந்தவிசையும் ஒன்றையொன்று சார்ந்தும் ஒன்று மற்றொன்றை தூண்டுவதாகவும், அவை மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் கூறுகள் என்பதை உறுதி செய்தன. அம்மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் ஒன்றையொன்று தூண்டி பரவுவதாக அச்சமன்பாடுகள் உறுதிசெய்தன. அவ்வேகம் ஒளியின் திசைவேகமான வினாடிக்கு 3லட்சம் கிலோமீட்டர் என்பதை மேக்ஸ்வெலின் சமன்பாடுகள் நிரூபித்தன. இவ்வகையில் ஃபாரடேயின் மின்காந்த அலை என்ற கருது கோளும், ஒளியும் மின்காந்த அலையின் ஒரு வடிவமென்பது கணிதவியலால் உறுதி செய்யப்பட்டது. மேலும், மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் ஒளியின் வேகம் அளக்கப்படும் ஆதாரத்தைப் பொறுத்தும், நிலைமத்தொகுதிகளை (Inertial Frame) பொறுத்தும் வேறுபடா மாறிலி என்று முன் வைத்தது.

இப்போது ஒளியின் வேகம் எந்த நிலையிலும் மாறுவதில்லை என்ற மேக்ஸ்வெல் கோட்பாட்டை சார்பியல் தத்துவமாக வளர்த்தெடுக்கும் நிகழ்முறை ஐன்ஸ்டீனின் வாழ்வில் எப்படி உருவாகிறது என்பதை பார்க்கலாம்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

ன்ஸ்டீன் தான் பார்க்கக்கூடிய அனைத்தையுமே ஒளியின் பண்புகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முற்பட்டார். உதாரணமாக ஆற்றில் படகு நீரைக் கிழிப்பதால் ஏற்படும் அலைகள். படகும் அலைகளும் ஒரே வேகத்தில் செல்வதால் படகில் அமர்ந்திருகும் பயணியைப் பொறுத்தமட்டில் நீரலைகள் நிலையாக இருக்கிறது. கரையிலிருந்து பார்க்கும் பார்வையாளரோ அலைகள் படகின் வேகத்தில் நகர்வதாக காண்பார். ஒளியுடன் இதை ஒப்பிட்டால், நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது நம் முன் இருக்கும் கண்ணாடிக்குப் போய்ச் சேரும் ஒளி திரும்பி நம்மை வந்து அடையாமலே போய் விட, கண்ணாடியில் நமது உருவம் தெரியாமல் இருக்கும். இது எப்படி சாத்தியம்?

மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின்படி படி ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தாலும் ஒளியின் c என்ற அளவை விட குறையாத வேகத்தில் நம்மை விட்டு விலகிச் சொல்லும். மற்ற அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த கோட்பாட்டை அங்கீகரிப்பதன் மூலம் ஐன்ஸ்டீன், பருப்பொருள் (நிறை), ஆற்றல், ஒளியின் வேகம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் மிகை யதார்த்த (Surreal) அண்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

E=mc2 என்ற சமன்பாட்டில் அடுத்து பார்க்க வேண்டியது கணிதக்கூறான நிறையை வேகத்தின் வர்க்கத்தால் (c Squared) பெருக்குவதை பற்றி. பிரெஞ்சு புரட்சி ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், அறிவியலாளர்கள் பொருட்களின் இயக்கத்தை அளவிடவும் வரையறுத்துக் கூறவும் முயன்று வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ பிரான்சில் உயர்குலத்தைச் சேர்ந்த எமிலி டு சாட்லே என்ற பெண் அடுத்த 150 ஆண்டுகளில் கூட பெரும்பாலான பெண்களுக்கு வழங்கப்படாத சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றார். சிறுவயது முதலே அறிவு தேடலில் நாட்டம் கொண்டிருந்த எமிலி, அறிவியல், உயர்கணிதம், தத்துவத்துறைகளில் சிறப்பான பயிற்சியை பெற்றார். பிரான்சின் பிரபல கணிதவியலாளரும், நியூட்டன் இயற்பியல் வல்லுனருமான பியர் டி மாபெர்டசிடம் (Pierre de Maupertuis) உயர்கணிதம் கற்கிறார்.

பிரஞ்சு இராணுவ அதிகாரி ஒருவரை மணந்த எமிலியைச் சுற்றி அப்போதைய அறிவுஜீவிகள் கூட்டம் நண்பர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்தனர். பிரஞ்சு புரட்சியின் வித்தகர்களில் ஒருவரும் கவிஞருமான வால்டருடன் எமிலிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. முடியரசையும், திருச்சபையையும் கடுமையாக விமர்சித்ததால் வால்டர் இரு முறை சிறை தண்டனைக்குள்ளாகிறார். ஒரு முறை இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுகிறார். நாடு திரும்பும் வால்டருக்கு எமிலியும் அவரது கணவரும் அடைக்கலம் தருகின்றனர். அன்றைக்கு அறிவியலாளர்களும் அரசியல் புரட்சி ஆர்வமும் பிரிக்க முடியாத படி இருந்ததை இது காட்டுகிறது.

எமிலி டூ சாட்லே
எமிலி டூ சாட்லே

நியூட்டனின் இயக்கம் பற்றிய பிரபலமான கட்டுரையான பிரின்சிபா (Principia) வை எமிலி பிரஞ்சு மொழியாக்கம் செய்கிறார். இன்று வரை பிரான்சின் கல்வி நிலையங்களில் எமிலியின் மொழி பெயர்ப்பே பாடப்புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நியூட்டனின் கோட்பாட்டின்படி, ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளினது நிறையின் மடங்கு திசைவேக அளவு (E=mv) இருக்கும். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த கோட்ஃபிரைட் லெப்னிஸ் (Gottfried Leibniz) ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளின் நிறையின் திசைவேகத்தின் இருபடி மடங்காக (E = mv2) இருக்கும் என்று முன்மொழிந்தார். அதை பெரும்பாலான அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கோட்ஃபிரைடின் கோட்பாட்டின் மீது ஈர்ப்படைந்த எமிலி, நியூட்டனின் விதியை சந்தேகிக்க ஆரம்பித்தது, அவருடைய வழிகாட்டிகளான மேதைகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உண்மை என்பது நடைமுறையில் சோதித்தறியப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று எனும் அறிவியல் அணுகுமுறையின்படி எமிலி கோட்ஃபிரைடின் கோட்பாட்டை பரிசோதனை மூலம் உறுதி செய்கிறார். 1740-ம் ஆண்டு மிகப் பிரபலமானதும், சர்ச்சையைக் கிளப்பியதுமான இயற்பியலின் நிறுவன விதிகள் (Institutions of Physics) என்ற கட்டுரையை வெளியிடுகிறார்.

“பெண்ணாகப் பிறந்த மிகச்சிறந்த ஆண்மகனென்று” எமிலியைப் பற்றி வால்டர் வருணித்தார். எமிலி அவருடைய 43-ம் வயதில் கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த பின் நோய்தொற்றினால் உயிரிழந்தார். தன் காலத்தின் தளைகளை உடைத்துக் கொண்டு அறிவியல் தேடலில் ஈடுபட்டு அறிவியலுக்கு அழியா பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவராக எமிலி தூ சாட்டலே விளங்குகிறார்.

இப்போது, ஐன்ஸ்டீன் எப்படி ஆற்றலையும், நிறையையும் இணைத்து 20-ம் நூற்றாண்டின் நவீன அறிவியலுக்கு அடித்தளம் இடுகிறார் என்று பார்க்கலாம்.

1903-ம் ஆண்டு தன்னுடன் பயின்ற மிலெவா மாரிக்கை மணந்து கொண்ட ஐன்ஸ்டீன் பல்கலைக் கழகங்களில் வேலை தேடுவதற்கு தேவையான பரிந்துரைகளை அவரது பேராசிரியர்கள் யாரும் தரத் தயாராக இல்லாத நிலையில் சுவிட்சர்லாந்தில் வடிவுரிமை அலுவலகத்தில் ஒரு கீழ்நிலை எழுத்தராக வேலை செய்து பொருள் ஈட்டுகிறார். மரபுகளை உடைத்துக் கொண்டு ஒரு துறையின் இயற்பியல் விதியை இன்னொரு துறைக்கு பொருத்தி இயற்கையின் அடிப்படை இயக்க விதிகளை, அதாவது இப்பிரபஞ்சத்தை படைத்த கடவுளின் சிந்தனையை அறியும் தேடலில் இருக்கும் ஐன்ஸ்டீனுக்கு பதவி உயர்வு, கூடுதல் ஊதியம், குடும்ப வாழ்க்கை, துணைவியின் குறிக்கோள்கள் அனைத்துமே அற்ப விசயங்களாகப்படுகின்றன. எழுத்தர் வேலையில் கவனத்தை செலுத்தாததால் பதவி உயர்வு மறுக்கப்படுகிறார். குடும்பச் சுமை தன்னுடைய சுயத்தையும் மேல் கல்வி கற்கும் வாய்ப்பையும் முடக்கிப் போடுவதை உணரும் மிலெவா, ஐன்ஸ்டீனுக்கு ஊதிய உயர்வு கிடைக்காமல் போனதைக் கேட்டு ஆத்திரப்படுகிறார். அவர்களுடைய திருமண வாழ்க்கை முரண்பட ஆரம்பிக்கிறது.

Albert_Einstein_(Nobel)ஐன்ஸ்டீன் தன்னுடைய நெருங்கிய நண்பரான மிக்கேல் பெஸ்ஸொவுடன் நகரில் உலாவச் செல்லும் போது வெவ்வேறு தொலைவிலிருக்கும் கோபுர கடிகாரங்களிலிருந்து வரும் ஒளி தங்களை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது மிக முக்கியமான நுண்ணறிவுப் புரிதலை அடைந்தார்.

மேக்ஸ்வெலின் சமன்பாடு முன்னறிவித்து ஒளியின் வேகம் மாறாதது என்பதை ஏற்றுக் கொண்டு நாமறிந்த மற்ற எல்லா நிகழ்வுகளையும் அத்துடன் பொருத்த முயன்றார். அப்படி பொருத்துவதற்கு இயங்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க நேரம் குறுக்கப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.

அது வரை காலம் என்பதை தனிமுதலான ஒன்றாக அதாவது காலம் என்பது கடவுளின் கையிலிருக்கும் கடிகாரத்திலிருப்பதை போல் எல்லா இடங்களுக்கும் மாறாத நிலையான ஒன்றாக அறிவியலாளர்கள் கருதி வந்தனர்.

ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அப்பொருளின் காலம் சுருங்கிக் கொண்டே போவதால்தான் ஒளிஅலை அதனின்று வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்ற மாறா வேகத்தில் விலகிச் செல்கிறது என்று ஐன்ஸ்டீனின் முன் வைத்தார். 1905-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் ஐந்து மிக முக்கியமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். அவற்றுள் நான்காவது ஆய்வறிக்கையில் விளக்கப்பட்ட ‘சிறப்பு சார்பியல் தத்துவத்தின்’ (Special Relativity) படி ஐன்ஸ்டீனின் பிரபஞ்சத்தில் தனிமுதலான மாறிலி (constant) காலமோ, வெளியோ அல்ல. ஒளியும், அதன் வேகமும் தான் மாறிலியாகும்.

வேகமாக செல்லும் ரயில் வண்டியை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் வேகத்தை கூட்ட ஆற்றலை அதாவது மேலும் மேலும் கூடுதல் எரிபொருளை போட்டுக் கொண்டே செல்கிறோம். அதன் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க ஒளி அதை விட்டு மாறா வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டரில் விலகிச் செல்லும், ரயில் வண்டியினுள் காலம் சுருங்கும் எனில் நாம் உயர்த்திக்கொண்டே செல்லும் ஆற்றல் எங்கே செல்கிறது?

E = mc2

அது நிறையாக மாறுகிறது. ஆம் ஆற்றல் பருப்பொருளாக மாறுகிறது. ஆற்றலும் பொருளும் ஒன்றை ஒன்று சாராத தனிமுதலானவை அல்ல. ஆற்றல் பொருளாக மாறும், பொருள் ஆற்றலாக மாறும், பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

ஒரு பொருளில் உறைந்திருக்கும் ஆற்றலை கணக்கிட அதன் நிறையுடன் ஒளியின் வேகமான 3 லட்சம் மீட்டர் என்பதன் “வர்க்க”த்தை (அதாவது 9 ஆயிரம் கோடியை) பெருக்க வேண்டும். அவ்விதத்தில் பருப்பொருள் (அணு) ஒவ்வொன்றும் உறைந்திருக்கும் ஆற்றலின் சேமக்கலனாக உள்ளது. ஒரு பேனாவின் நிறை முழுவதையும் ஆற்றலாக மாற்றினால் அது அணுகுண்டு வெடிப்பதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரே ஆண்டில் இயற்பியல் உலகைக் குலுக்கிப் போடக் கூடிய 5 ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ஐன்ஸ்டீனின் சாதனைக்கு எதிர்வினையாக என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் பதில். ஐன்ஸ்டீனின் சராசரி, காப்புரிமை அலுவலக எழுத்தர் வேலையும், சச்சரவுகள் நிறைந்த திருமண வாழ்வும் தொடர்ந்தன. அடுத்த 4 ஆண்டுகளில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் குறித்து ஒவ்வொன்றாக கடிதங்கள் வர ஆரம்பித்தன. அவை அனைத்துக்கும் ஐன்ஸ்டீனை பொறுமையாக பதில் எழுதினார். இறுதியில் மேக்ஸ் பிளாங்க் என்ற முக்கியமான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ரசிகர் மன்றத்தின் ஒரே உறுப்பினராக சேர்கிறார். அவரது உதவியால் ஐன்ஸ்டீன் ஜூரிக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவி நியமனம் பெறுகிறார்.

ஐன்ஸ்டீனின் வெற்றி அவரது திருமண வாழ்க்கையின் தோல்வியாக முடிந்தது. 1919-ம் ஆண்டில் ஐன்ஸ்டீன், மிலேவாவை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டார்.

E=mc2 இயற்பியல் உலகின் புனிதக் கோட்பாடாக மாறியது. அணுக்களில் பூட்டப்பட்டிருக்கும் ஆற்றலை விடுவிப்பதற்கு குறைந்தது 100 ஆண்டுகள் பிடிக்கும் என்று ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால், அவர் இரண்டாம் உலகப் போரையும், ஹிட்லரின் ஜெர்மனியில் பணியாற்றிய ஒரு யூதப் பெண்ணின் மேதமையையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.

1907-ம் ஆண்டு ஆஸ்திரியவைச் சேர்ந்த 28 வயதான யூதப் பெண் லிசா மைட்னர் கதிரியக்கத் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்காக பெர்லின் நகருக்கு வருகிறார். அன்றைய ஜெர்மனியில் பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் பெண் ஆய்வாளர்களை பணிக்கமர்த்துவதில்லை.

ஆட்டோ ஹான்
ஆட்டோ ஹான்

ஜெர்மானிய வேதியலாளர் ஆட்டோ ஹான், லிசாவுக்கு உதவ முன்வருகிறார்.  கதிரியக்கம் பற்றிய தனது ஆய்வில் லிசாவை சககூட்டாளியாக சேர்த்துக் கொள்கிறார். 1912ல் அவ்விருவரும் கைசர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm) ஆய்வு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். பல்கலைக் கழகத்தின் பிற பேராசிரியர்கள் லிசா மைட்னரை தொடர்ந்து புறக்கணித்து அவமதிக்கின்றனர். ஆனால் ஆட்டோ ஹானுடனான நட்பும் இயற்பியல் மீதான வேட்கையும் அவரை தாக்குப்பிடிக்க வைக்கிறது.

லிசா மைட்னர் ஜெர்மனியின் முதல் பெண் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார்.

1930-களில் பருப்பொருளின் அடிப்படைத் துகளான அணுவின் அணுக்கரு புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்பது கண்டறியப்பட்டிருந்தது. அந்த ஆண்டுகள் அணுக்கரு ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தன. அன்றைக்கு அறியப்பட்ட தனிமங்களில் மிகப்பெரிய உட்கருவைக் கொண்டிருந்த தனிமம் யுரேனியம். 238 புரோட்டான்களும் நியூட்டான்களும் கொண்ட யுரேனியத்தின் உட்கருவுக்குள் நியூட்ரான்களை செலுத்தி புதிய தனிமங்களை உருவாக்கும் ஆய்வில் லிசாவும் ஆட்டோவும் ஈடுபட்டிருந்தனர். ஆய்வின் வேதியல் செயல்முறைகளை ஆட்டோவும், இயற்பியல் கோட்பாடுகளை லிசாவும் பங்களித்து வந்தனர்.

1930-களில் ஆட்சிக்கு வந்த நாஜிக்கள், இனவெறி காரணமாக யூதர்களை அறிவுத்துறையில் இருந்து வெளியேற்றத் துவங்கினர். அதனால் 1933-ல் ஐன்ஸ்டீன் நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆய்வுகளில் தீவிரமாக இருந்த லிசாவுக்கு எதிராகவும் நாஜிக்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். நாஜி எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட ஹான், லிசாவை பாதுக்காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆயினும், சூழ்நிலை மோசமடைந்து லிசா ஜெர்மனியில் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவரைக் காப்பாற்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் அமைப்புகளிலிருந்தும் அறிவியல் உரையாற்ற அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. ஆனால், நாஜிக்கள் அவரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. ஆட்டோ ஹானும், லிசாவுக்கு சார்பான தனது போராட்டங்களை கைவிடுகிறார்.

1938-ம் ஆண்டு சூழ்நிலை மிகவும் மோசமடைய, டச்சு நண்பர் ஒருவரின் உதவியுடன், தனது வாழ்நாள் முழுவதும் ஈட்டிய பொருட்கள், ஆய்வுப் பணிகள் அனைத்தையும் விட்டு விட்டு ஒரு பெட்டியுடன் அகதியாக ஹாலந்துக்கு தப்பிச் செல்கிறார் லிசா. பெர்லினில், நடந்து வரும் ஆய்வு விபரங்களை கடிதம் மூலம் பெற்று ஆட்டோ ஹானுக்கு தனது வழிகாட்டல்களை அளித்து வருகிறார்.

யுரேனியம் அணுக்கருவில் நியூட்ரானை உட்செலுத்திய சோதனையில் பேரியம் உருவாக்கப்படுவதாக ஆட்டோ ஹான் தகவல் அனுப்புகிறார். எதிர்பார்த்தபடி பெரிய தனிமத்தை உருவாக்காமல் சிறிய தனிமம் எப்படி உருவானது என்பதை ஆட்டோ ஹான் புரிந்து கொள்ள முடியவில்லை. லிசா, அதைப்பற்றி தனது மருமகனும் அறிவியலாளருமான ஒட்டோ ராபர்ட் ஃபிரிட்சுடன் விவாதிக்கிறார். ஒரு பெரிய நீர்க் குமிழி  எந்த நேரமும் உடைந்து சிதறும் நிலையில் இருப்பதைப் போல பெரிய உட்கருவான யுரேனியத்துக்குள் நியூட்ரானை செலுத்தும் போது, அது ஆட்டோ ஹான் மற்றும் பிற அறிவியலாளர்கள் நினைத்தது போல பெரிய தனிமத்தை உருவாக்காமல், சிறிய தனிமங்களாக உடைகிறது என்று லிசா உணர்கிறார்.

லிசா மைட்னர்
லிசா மைட்னர்

ஆனால், உட்கரு பிளவுபட்டால் இரண்டு பகுதிகளும் உயர் ஆற்றலுடன் (இரு அணுக் கருக்களுக்கிடையிலான எதிர்விசை சுமார் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் இருக்க வேண்டும்) ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து விலக வேண்டும். அவ்வாற்றல் எங்கிருந்து  பெறப்படுகிறது என்று இருவரும் ஹானின் ஆய்வு முடிவுகளை சரிபார்க்கிறார்கள். பிளக்கப்பட்ட அணுக்களின் நிறைகளின் கூட்டுத்தொகையானது யுரேனியம் அணுவின் நிறையை விட, புரோட்டானின் நிறையில் ஆறில் ஒரு பங்கு குறைவாக இருந்தது. அந்நிறையை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டில் பொருத்திப்பார்க்கும் போது அது கிடைக்கும் ஆற்றல் அவர்கள் பரிசீலிக்கும் அணுப்பிளவில் எதிர்பார்க்கும் அளவிலானது என்பதை லிசா மெய்ட்னர் கணக்கிடுகிறார்.

“அவர் (ஆட்டோ ஹான்) அணுவை பிளந்து விட்டார்” என்கிறார் லிசா. அவரது மருமகனோ, “இல்லை! இல்லை! நீங்கள் அணுக்கருவை பிளந்திருக்கிறீர்கள்!” என்கிறார்.

ஐன்ஸ்டீன் சொன்னது மிகச்சரியென நிரூபிக்கப்பட்டாகி விட்டது. யுரேனியம், ரேடியம் போன்ற தனிமங்கள் கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை வெளியிடுவதை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டின் மூலம் விளக்க முடிந்தது.

லிசா மைட்னரும் பிரிட்சும் தங்களது கண்டுபிடிப்பான அணுக்கரு பிளப்பை பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிடுகிறார்கள். ஆனால், ஜெர்மனியில் ஓட்டோ ஹான் தனது ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்கும் போது நாஜிக்களின் நெருக்குதலால் அதில் யூதரான லிசாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிடுகிறார். அணுக்கரு பிளப்பிற்கு 1944-ம் ஆண்டில் ஹானுக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரும் கூட ஹான், லிசா மெய்ட்னரின் பங்களிப்பை அங்கீகரிக்காமல் தாமே அணுப்பிளவை கண்டறிந்ததாக கூறுகிறார். ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் காரணங்கள் கூட ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை கண்டு கொள்ளாமல் செய்து விடும்.

1942-ம் ஆண்டில் அமெரிக்காவில் “மான்ஹட்டன் திட்டம்” என்ற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவந்தன. அத்திட்டத்தில் பணிபுரிய லிசாவுக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்து விடுகிறார். அவருடைய மருமகன் ராபர்ட் பிரிட்ஸ் நாஜி ஜெர்மனை தோற்கடிக்க அணு ஆயுதம் தேவை என நம்பி அத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உணர்ச்சி சார்ந்த உத்வேகத்தை மக்கள் போராட்டங்களும், ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுமே வழங்குகின்றன.

அமெரிக்காவின் மான்ஹட்டன் திட்டத்தில் செய்யப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று 1945 ஆகஸ்டு 6ம் நாள் ஜப்பானின் ஹிரோசிமாவிலும் மற்றொன்று மூன்று நாட்களுக்கு பின் நாகசாகியிலும் போடப்பட்டு, மனித குலம் இதுவரை கண்டிராத பேரழிவு நிகழ்த்திக் காட்டப்பட்டது. நூற்றாண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பும், தியாகமும் முதலாளிகளின் கையில் பேரழிவுக்கு பயன்படுத்தப்படுவது அதற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து நடக்கின்றன.

ன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாடு நமது சூரியனின் இயக்கத்தைப் பற்றியும், அதனுள் நடக்கும் அணுக்கரு பிணைப்பில் நிறை உருமாறி வெளிப்படும் பேரளவு ஆற்றலை விளக்க உதவுகிறது. நட்சத்திரங்களின் தோற்றத்தையும், வாழ்வையும், மறைவையும், பிரபஞ்சம் தோன்றியதையும், இயங்குவதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

முதலில் பெரும் அழுத்தத்தில் இருந்த பேரளவு ஆற்றல், பெருவெடிப்பாக வெடித்து சிதறியது. அப்போது ஆற்றல், நிறையாக – பருப்பொருளாக மாறி இப்போது நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கிறது.

இன்று அறிவியலாளர்கள், அணுத்துகள் முடுக்கிகளில் அணுத்துகள்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பெருவெடிப்பை ஆய்வக அளவில் செய்து பார்க்கின்றனர். சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு சில நேரங்களில் மகிழ்ச்சியானதாகவும், சில நேரங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இயற்கையை புரிந்து கொள்ள முனையும் மனிதனின் பேரார்வம் எப்போதும் முடிவுறுவதில்லை.

இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதன் எண்ணிலடங்கா இயக்கங்களையும், விசித்திரங்களையும் கடவுள்கள் தோற்றுவித்திருப்பதாக மதங்கள் இன்றைக்கும் ஊளையிடுகின்றன. கீதையிலும், குர்ரானிலும், பைபிளிலும் அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.

ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் கடமையை மனித குலம் தனது கூட்டுழைப்பு சமூகப் போராட்டத்தால் சாதித்து அதை அறிவியலாளர்கள் மூலம் நிரூபித்திருக்கிறது.

இன்றைக்கு முதலாளித்துவம் அறிவியலை பிடித்து வைத்துக் கொண்டு அறிவுக்கு எதிராகவும், சந்தைக்கு ஆதரவாகவும் நடந்து வருவதால் நாம் மதங்களை முறியடித்து அறிவியலை அதன் பீடத்தில் வைத்து மரியாதை செய்ய முடியாமல் இருக்கிறது.

ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.

–    மார்ட்டின்.

தடை முறித்து கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

10

“தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது – மக்கள் போராட்டமே தீர்வு” -என்ற தலைப்பில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் ஏப்ரல் 14 அன்று திங்கள் கிழமை கூடங்குளம் அற்புதம் சாமுவேல் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமும்-கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உத்தரவு பெறப்பட்ட கதையைச் சொன்னால்,நம் நாட்டில் காவல் துறையின் அதிகாரத்துக்கு முன்னால் அரசியல் சட்டம், கருத்துரிமை, ஜனநாயகம்,காவல் சட்டங்கள் படும் பாட்டை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

அரசியல் சட்டப்படி, ஆயுதங்களின்றி கூட்டமாகக் கூடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. இது மக்களின் அடிப்படை உரிமையென வரையறுக்கப் பட்டுள்ளது. காவல் சட்டங்களின்படி பொது இடங்களில், சாலைகளில் கூடுவதற்கு-ஒலிபெருக்கி வைத்துக் கொள்வதற்க்கு அனுமதி பெறவேண்டும். இவ்வாறு கூட்டம் நடத்த அனுமதி கோரும் பட்சத்தில் காவல்துறை அதை மறுக்கக் கூடாது-வரைமுறைப்படுத்தலாம் என்பதே மாவட்ட, மாநகர காவல் சட்டங்களாகும்.

மேற்கண்ட எந்த சட்டமும் ஓர் உள்அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்குப் பொருந்தாது. உதாரணத்திற்க்கு திருமண மண்டபத்தில், சமுதாயக் கூடங்களில், விடுதிகளில், கல்வி நிலையங்களில் நடைபெறும் கருத்தரங்குகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி தேவை இல்லை என்பது உலகறிந்த சட்டநிலை. சட்ட அறிவே இல்லாத சாமானிய மக்களுக்கும் இது தெரியும். எல்லோருக்கும் தெரிந்த இச்சட்ட நடைமுறையை அரசியல் சட்டத்தின் காவலர்களான உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், அரசு வழக்கறிகளுக்கும் தெரிய வைக்க பத்து நாட்கள் போராட வேண்டிருந்தது என்பதை உங்களால் நம்ப முடியுமா?

கூடங்குளம் மக்கள் கேட்டுக் கொண்டதன்படி கடந்த மார்ச் 30 அன்று அணு உலைப் பிரச்சனை தொடர்பாக அரங்கக் கூட்டம் நடத்தத் தீர்மானித்து, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்து, துண்டறிக்கை விநியோகம் செய்தோம். உடனே திருமண மண்டபத்தின் உரிமையாளரையும், பொதுமக்களையும் காவல்துறை மிரட்டிய நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சிவராச பூபதி மூலம், கூடங்குளம் காவல் துறை அரங்கக் கூட்டத்திற்க்கு தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரி மார்ச் 24-அன்று மனுத்தாக்கல் செய்தோம். விசாரணைக்கு வந்த மார்ச் 25 அன்றே முடிய வேண்டிய எளிய வழக்கை நீதிமன்றமும்,காவல் துறையும் படுத்திய பாடு வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாதது.

மார்ச் 25-ல் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு மார்ச் 27-ம் தேதி அரசு தரப்பு பதில் மனுவுக்காக வாய்தா போடப்பட்டது. 27-ம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்த கூடங்குளம் காவல்துறை பல பக்கங்களுக்கு பழைய போராட்டத்தை, வழக்குகளைப் பற்றி எழுதி, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் துண்டறிக்கை கொடுத்ததற்காக வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், கூட்டம் நடத்தினால் போராட்டம் வெடிக்கும், காவலர்கள் தேர்தல் பணிக்குச் சென்று விட்டதால் பாதுகாப்பு வழங்க முடியாது, மேலும் மக்கள் இரு பிரிவாக இருப்பதால் கலவரம் வெடிக்கும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே அனுமதி வழங்கக் கூடாது எனச் சொன்னது.

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் “நாங்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்கவில்லை. அரங்கக் கூட்டத்திற்க்கு அனுமதி தேவையில்லை. காவல் துறை சட்டவிரோதமாக தொந்தரவு செய்கிறது. அதைத் தடுக்கக் கோருகிறோம் எனச் சொல்லி, அரங்கக் கூட்டத்திற்க்கு அனுமதி வேண்டும் என எந்தச் சட்டத்தில் உள்ளது?” எனக் கேட்க மவுனமான அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர் நாளை இவ்வழக்கில் வாதிடுவார் என்றார்.

மறுநாள் வழக்குப் பட்டியலில் வழக்கே இல்லை. உடனே நீதிபதியிடம் காலை 10.30 மணிக்கு முறையிட்டு மதியம் 2.15 மணிக்கு வழக்கை எடுக்கக் கோரினோம். அதன் பின் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மண்டபத்தில் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமென்றார். விதியைக் காட்டுங்கள் எனக் கேட்டபோது கையில் இல்லை என்றார். உடனே நாம் தேர்தல் நடத்தை விதிகளைக் கொடுத்து-விதிகளில் எங்கும் அவ்வாறு குறிப்பிடவில்லை எனச் சொல்ல, அதைப் பார்த்த நீதிபதி இல்லைதான்,  இருந்தாலும் அரசு தரப்பு சொல்லட்டும், வேறு ஏதாவது பாயிண்ட் இருந்தாலும் சொல்லுங்கள் எனச் சொல்லி வழக்கை ஏப்ரல்1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஏப்ரல் 1-ம் தேதி மறுபடியும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுநாள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு கேட்க, நாம் சட்டம் தெளிவாக இருக்கும்போது வாய்தா தேவையில்லை எனச் சொன்னபோது அதை ஏற்க மறுத்த நீதிபதி ஏப்ரல் 2-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். ஏப்ரல் 2 அன்று கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்த கூடங்குளம் காவல்துறை “அரங்கக் கூட்டம் நடக்கும் மண்டபம் அணு உலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. அணு உலை இயங்கத் தொடங்கியபின் கடந்த ஆறு மாதங்களாகப் போராட்டம் இல்லை, 26.11.2013-ல் கூத்தன்குழி கிராமத்தில் அணு உலை ஆதரவு-எதிர்ப்பு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு 8 நபர்கள் இறந்து விட்டனர், வள்ளியூர் சப்-டிவிசனில் காவல் சட்டம் அமலில் உள்ளது. எனவே கூட்டம் நடத்தினால் போராட்டம் வெடிக்கும், நடத்தக் கூடாது” என்றனர்.

உடனே நாம் “வழக்கின் மையப் பொருள்-‘அரங்கக் கூட்டத்திற்க்கு காவல்துறை அனுமதி தேவையா?’ என்பதே. காவல் சட்டம் பொது இடங்களில் கூடுவதற்கு மட்டுமே பொருந்தும். கூத்தன்குழிப் பிரச்சனை தாதுமணல் கொள்ளை தொடர்பானது, காவல்துறை தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தருகிறது. சட்டம் என்ன என்பதைப் பேச வேண்டும். வழக்கை திசைதிருப்பக் கூடாது, நீங்கள் சட்டப்படி என்ன வேண்டுமானாலும் முடிவெடுங்கள்” என நீதிபதியிடம் சொல்லி, ஏற்கனவே உள்ள சில முன்தீர்ப்புகளைக் கொடுத்தோம். பின்பு தேர்தல் விதிகள் உள்ளது எனச் சொன்னீர்களே என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டபோது “எஸ்.பி.இருப்பதாகச் சொல்கிறார், ஆனால் இதுவரை என்னிடம் கொடுக்கவில்லை” என்றார்.

பின்பு, “கூட்ட இடத்தை மாற்றச் சொல்லுங்கள், மாலையில் பாதுகாப்பு வழங்க முடியாது-பகலில் நடத்தச் சொல்லுங்கள், கூட்டம் நடக்கும் தினத்தில் வேறு போராட்டம் நடத்தக் கூடாது, அணு உலைப் பக்கம் செல்லக் கூடாது, கூட்ட அரங்கிற்க்கு வெளியே ஸ்பீக்கர் வைக்கக் கூடாது, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது” என்றார். உடனே நீதிபதி, “நீங்கள் இடத்தை மாற்றி, மற்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

உடனே நாம் “காவல் துறை அரங்கக் கூட்டத்திற்க்கு நிபந்தனை விதிப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இடத்தை மாற்ற முடியாது. துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது என்று காசுமீரில் கூடச் சொல்ல மாட்டார்கள்” என்று சொல்லி நீங்கள் “சட்டப்படி முடிவெடுங்கள்” எனச் சொன்னோம். “நீங்கள் கூடங்குளம் மக்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். நாளை வாய்தா போடுகிறேன்” என்றார்.

மறுநாளோ, வழக்குப் பட்டியலில் வழக்கே இல்லை. ஏப்ரல் 3 அன்று காலை 10.30 மணிக்கு நீதிபதியிடம் முறையிட்டு மதியம் 2.15 மணிக்கு வழக்கை எடுக்கக் கோரினோம். மாலை 4.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “இடத்தை மாற்றினால் கூட்டம் நடத்தவே தேவை இல்லை, துண்டறிக்கை விநியோகித்தே தீருவோம், மற்ற நிபந்தனைகள் பெரிய பிரச்சனை இல்லை” என்று சொல்லி கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம். அதன் பின்பும் உத்தரவு பிறப்பிக்க மனமில்லாத நீதிபதி ஏப்ரல்4-க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

ஏப்ரல் 4-ம் தேதி காலை இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில் அரசு வழக்கறிஞரிடம், “இனி போராட வேண்டிய இடம் கூடங்குளம் அல்ல, இன்று இவ்வழக்கு முடியாவிட்டால் திங்கட்கிழமை இதே நீதிமன்றத்தின் உள்ளாக உண்ணாவிரதம் இருப்போம். வரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்” எனச் சொன்னபின்பு மதியம் 1.30 மணிக்கு, “வழக்கை இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கலாம்” என்று சொன்னார்.

அப்போதும் நீதிபதி, “இடத்தை மாற்றுகிறீர்களா? துண்டறிக்கை வேண்டாமே?” என்றார். முடியாது என்ற பின்பு மாலை 4.00 மணிக்கு மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்து இவ்வழக்கில் ஆஜரான மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் “நீங்கள்தான் கூட்டத்திற்க்கு தலமையேற்று நடத்துகிறீர்களா?” என்று கேட்டு ஆமாம் என்று சொன்ன பின்பு உத்தரவு பிறப்பிக்கிறேன் என்றார். அதன்பின் ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவு கையில் கிடைத்தது.

நெல்லை அரங்கக் கூட்டம்
அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக 2012 ஏப்ரல் மாதம் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டம் – 2 வருடங்கள் கழித்து 2014-லிலும் கூடங்குளம் போராட்டத்திற்கு இந்த ஜனநாயகம் அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகே கூட்டம் நடத்த அனுமதி தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

இனியும் சொல்வீர்களா? இந்த நாடு ஜனநாயக நாடு என்று?

இனியும் சொல்வீர்களா? இந்த நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதென்று?

இனியும் சொல்வீர்களா?

இந்த நாட்டில் எல்லோருக்கும் கருத்துரிமை உண்டென்று?

அரசாங்கத்தின் சட்டங்களை நீதிமன்றமும்-காவல் துறையுமே ஒப்புக் கொள்ள மறுக்கும் நிலையில் இந்த அரசமைப்பு முறை தோற்றுப் போய் விட்டதென்பதே அதன் பொருள். அரசமைப்பு முறை மட்டுமல்ல கூடங்குளம் அணு உலையும் தோற்றுப் போனதுதான்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டத்தோடு ஆரம்பம் முதலே இணைந்து போராடி வருகிறது. இடிந்தகரை-கூடங்குளம் பகுதியில் இருந்து இப்போராட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது. மார்ச் 19 தடியடி,முற்றுகை, செப்டம்பர் 10 துப்பாக்கி சூடு நடந்த போது மக்களோடு மக்களாக இருந்து போராடியது மனித உரிமை பாதுகாப்பு மையமும்,அதன் வழக்கறிஞர்களும்தான். இப்போதும் அணு உலை, தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில்  உங்களுடன் இணைந்து நிற்பதும் மனித உரிமை பாதுகாப்பு மையம்தான்.ஆகவே வாருங்கள் இணைந்து போராடுவோம். அணு உலையை மூடுவோம். நம் மண்ணை, மக்களை, தலைமுறைகளைப் பாதுகாப்போம்.

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது !
மக்கள் போராட்டமே தீர்வு !

தடைகள் பல தகர்த்து மதுரை உயர்நீதிமன்ற அனுமதியுடன் நடைபெறும்

அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி

நாள் 14.04.2014 திங்கள்
நேரம்
: 2.00 – 6.00 மணி
இடம்
: அற்புதம் சாமுவேல் கல்யாண மண்டபம், பைபாஸ்ரோடு, காந்திநகர், கூடங்குளம்

தலைமை
வழக்கறிஞர் – சே. வாஞ்சிநாதன், மதுரை உயர்நீதிமன்றம்,
துணைச் செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

உரையாற்றுவோர்
திரு எஸ்.ஏ.ஜோசப், தலைவர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு
திரு எஸ்.வி அந்தோணி
, முன்னாள் ஊராட்சித் தலைவர், உவரி
வழக்கறிஞர் க. சிவராசபூபதி, குமரி மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
வழக்கறிஞர் சே தங்கப்பாண்டி, அமைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நெல்லை

சிறப்புரை
வழக்கறிஞர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மற்றும் வழக்கறிஞர்கள், உள்ளூர் தலைவர்கள்

அன்பார்ந்த மக்களே!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் மகள் ஆதரவைப் பெற்றுள்ளது. அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தேச துரோகம், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் உள்பட ஆயிரக்கணக்காக பொய் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகள் அங்கேயே நிலை கொண்டுள்ளன. அந்த வட்டாரமே கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அணு உலைகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே போலீசுப்படை அங்கே நிரந்தரமாக வைக்கப்படும், காஷ்மீர் போல கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும். மக்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும். சொந்த ஊரிலேயே அகதிகளைப் போல நாம் வாழ வேண்டும்.

இடிந்தகரை மக்கள்
போராடும் இடிந்தகரை மக்கள்

ஓட்டுக்காக அப்போதைக்கு அணு உலை எதிர்ப்பு நாடகம் ஆடிவந்த ஓட்டுக் கட்சிகள் எல்லாம் தேர்தல் வந்து விட்ட நிலையில் வாய்மூடி மவுனிகளாகி விட்டனர். அணு உலை பற்றி எதுவுமே பேச மறுக்கின்றனர். அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (தமிழ்நாட்டில் ஏழை மக்கள் கட்சி) கூட அணுஉலையை மூட வேண்டும் என்றச் சொல்லவில்லை பொத்தம் பொதுவான கருத்தையே சொல்லி வருகின்றனர். மக்கள் ஓட்டுப் போடுவதனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அணு உலை, தாது மணல் மற்றும் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, பாராளுமன்ற, சட்டமன்றங்களில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுத்தான் நடைமுறைக்கு வருகிறது. நீதிமன்றங்களும் அதை ஆதரிக்கின்றன. இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து நமது வாழ்வாதாரங்களை அழிப்பதே இன்றைய உலக மயமாக்கக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இவற்றைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாது. அணு உலையை மூடுவது என்பது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் இதற்கு தீர்வு இருக்கிறது.

ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சியும் தேர்தல் சமயத்தில் கூட அணு உலைக்கு எதிராகப் பேசவில்லை. கூடங்குளம் பகுதி மக்கள் என்ன நிலையெடுப்பது? ஒரு புறம் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டு போல அணு உலை, மறுபுறம் எந்நேரமும் கைது, சித்ரவதைக்கு ஆளாகலாம் என்ற நிலையில் நூற்றுக் கணக்கான பொய் வழக்குகள், எப்போதும் ஊரில் போலீசு, உளவுத் துறை கண்காணிப்பு, நான்கு பேர் கூட சேர்ந்து போக முடியாது. மீறினால் காவல்துறை மிரட்டல் என்ற ஒரு பதட்டமான சூழல்., நீண்ட நாட்களாகப் போராடி ஒன்றும் நடக்கவில்லை. ஊரை விட்டுச் சென்று விடலாமா? என்ற சிந்தனையில் சிலர்.

கூடங்குளம் அணுஉலை இயக்கப்பட்டு, மின்சாரம் வருவதாக அரசு அறிவித்தாலும் உண்மை நிலை நமக்குத் தெரியும். தினமும் 17 லாரிகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் அணு உலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, அதுதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு சிறிதளவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. யுரேனியத்தால் அணு உலை இயக்கப்படவில்லை. அணுஉலை, மின் உற்பத்திக்காகவும் இல்லை, அது ராணுவ நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் அம்பலப்பட்டுப் போன நிலையில் வேறுவழியின்றி அணு உலை நிர்வாகம் மின்உற்பத்தி தொடங்கி விட்டதாக உலகை ஏமாற்றுகிறது. ஆனாலும், அணு உலையும், வழக்குகளும் இருக்கும் வரை நமக்கு நிம்மதியில்லை. இந்த சூழலை நாம் மாற்றியாக வேண்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாகப் போராட்டம், ஏராளமான இழப்புகள் என்றாலும், குறிப்பிடத்தக்க வெற்றியைக் கூடங்குளம்-இடிந்தகரை மக்கள் சாதி-மதம் கடந்து பெற்றுள்ளோம் என்பதே உண்மை. கூடங்குளம் அணு உலைக்கும் தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும் ஒரு தொடர்புமில்லை என ஒட்டுமொத்த தமிழகமும் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவில் தமிழகம்தான் மக்கள் போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது அரசே தரும் ஒரு புள்ளி விவரம். தமிழகம் இவ்வாறு முன்னிலை பெற கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராட்டம் ஓர் முன்மாதிரியாக இருந்துள்ளது. காரணம் நாம் நமது சொந்த பலத்தில் போராடினோம் என்பதே. இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் இதுவே. எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியும் நமக்கு உதவப் போவதில்லை. நம்மைப் பயன்படுத்த மட்டுமே செய்வார்கள். நாம் ஒற்றுமையோடு கடற்கரை மக்கள், உள்நாட்டு மக்களையும் போராட்டத்தில் இணைத்து ஒரு நீண்ட காலத் திட்டத்தில் போராடினால் முழு வெற்றி சாத்தியமே.

மனித உரிமை பாதுகாப்பு மையம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டத்தோடு ஆரம்பம் முதலே இணைந்து போராடி வருகிறது. இடிந்தகரை பகுதியில் மட்டும் இருந்த இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது. மார்ச் 19 போராட்டத்தின் போதும் செப்டம்பர் 10 துப்பாக்கி சூடு நடைபெற்ற போதும் மக்களோடு மக்களாக இருந்து போராடியது மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்கறிஞர்களும். இப்போதும் அணு உலை, தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் இணைந்து நிற்பதும் மனித உரிமை பாதுகாப்பு மையம்தான்.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதென்பது அமெரிக்கா, ரசியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும், பன்னாட்டு பகாசுர-இந்திய முதலாளிகளையும் முதலாளிகளின் அடிவருடியான இந்திய அரசையும் எதிர்ப்பது என்பதைப் புரிந்து போராட தயாராவோம். மனச் சோர்வு, விரக்தியைக் களைவோம், இந்திய சுதந்திரப் போராட்டம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. தோள்சீலைப் போராட்டம் 65 ஆண்டுகள் நடந்தது. இதே நெல்லை மண்ணில் கட்டபொம்மனும், ஊமைத் துரையும் வெள்ளையத் தேவனும், சுந்தரலிங்கமும், பின்னர் எப்போதோ கிடைக்கவுள்ள மக்கள் விடுதலைக்காக, பிற்கால சந்ததியின் நலனுக்காக உயிர் துறந்தனர். இன்று கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கு அன்று காந்தி, வ.உ.சி, பகத்சிங் மீதும் போடப்பட்டது. மீண்டும் ஓர் விடுதலைப் போரை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

அணு உலைக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையிடுவது சுற்றுச் சூழலை மாசு படுத்தும் நாசகாரத் தொழிற்சாலைகளை அனுமதிப்பது உழைக்கும் மக்களின் வாழ்வை துச்சமாக மதிப்பது போன்ற ஆட்சியாளர்களின் வன்முறைக்கு எதிராக விடாப்பிடியாக போராடி எதிரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வரும் நந்திகிராம், சிங்கூர், நியம்கிரி மலைவாழ் மக்களின் போர்குணம் மிக்க போராட்டத்தைப் போல நாமும் நடத்துவதன் மூலமாக நாம் மக்களின் ஆதரவைப் பெறலாம். அணு உலைக்கு எதிரான போராட்டம் தலைமுறைகளைக் காக்கும் போராட்டம். வழக்குகள், காவல்துறை மிரட்டலை மக்களின் ஒற்றுமையோடு மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், இணைந்து முறியடிக்க வேண்டும். மக்கள் பலத்தில் நாம் நம்பிக்கை வைப்போம். அஞ்சி, அஞ்சி வாழ நம்மால் முடியாது. நாம் ஊரை விட்டுச் செல்லாமல், அணு உலையை விரட்டுவோம். எந்த தேர்தல் அரசியல் கட்சிகளையும் நம்பாது நாமே அமைப்பாவோம். இளைஞர்களும், பெண்களும் போராட்டத்தில் முன் நிற்போம். பொறுமையாக விடாப்பிடியாகப் போராடி இறுதி வெற்றி காண்போம். அணு உலையை மூடுவோம். நம் மண்ணை, மக்களை, தலைமுறைகளை பாதுகாப்போம்.

poster

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
ஊர் பொதுமக்கள் – கூடங்குளம்
க. சிவராஜ பூபதி 94866 43116 (நாகர்கோவில்)

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம்

5

அரசு பள்ளிகள் தரமானது என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு போகாமல் தடுப்பது,
தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்களை கொண்டு வருவது

என்ற நோக்கத்திற்காக மாணவர்கள் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கம்  சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறோம்.

“தாய்மொழிக்கல்வி தாய்ப்பால் போன்றது. ஆங்கிலவழி தனியார் கல்வி புட்டிப்பால் போன்றது. கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்” என பிளக்ஸ் பேனர் அச்சடித்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.

விருத்தாசலம் தாலுக்காவிற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் சில ஊர்களில் பெற்றோர்களை சந்தித்து வகுப்பறையில் கூட்டம் நடத்தினோம். அதில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது எதிர் காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க உதவும் என நம்புகிறோம்.

1. 2-3-2014 மாலை 5 மணிக்கு விருத்தாசலம் நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் தொட்டிக்குப்பம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூட்டம் நடத்தினோம். சுமார் 100 பெண்கள் 50 ஆண்கள் மற்றும் அந்த பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் எ. கீதா , சக பள்ளி ஆசிரியர்கள், பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி, வார்டு ஊறுப்பினர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. வீரபாண்டியன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் தலைவர் திரு.வை. வெங்கடேசன், அன்பழகன், பொருளாளர் வீரகாந்தி, குமார், வேலுமணி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் அருந்தவம், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அனைவருக்கும் தேநீர் பிஸ்கட் வழங்கப்பட்டது. நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

கூட்டம் நடைபெற இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெற்றோர் சங்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து பள்ளி மாணவர்களிடம் கொடுத்து தங்கள் பெற்றோர்களிடம் கொடுத்து கூட்டத்திற்கு அழைத்து வரவேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரால் வலியுறுத்தப்பட்டது. நமது உறுப்பினர்களும் ஊர் பொது மக்களிடம் சென்று பிரசுரத்தை விநியோகித்து அரசு பள்ளியின் அருமை பற்றியும், தனியார் பள்ளியின் கொடுமை பற்றியும் தெரிந்து கொள்ள வாரீர் என விநியோகித்தோம்.

தாய்மார்களை விழிப்புணர்வு அடைய சிறப்பு கவனம் கொடுத்து அழைத்தோம்.

பிரசுரத்தில் . . .

பெற்றோர்களே தாய்மார்களே

லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் மாணவர்களை பணம் சம்பாதிக்கும் மெசினாக மாற்றுகிறது. அடிமைத்தனத்தை போதிப்பதுடன் நமது பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக வளர்க்கிறது.

அரசு பள்ளிகளில் தாய் மொழியில் படித்தவர்களே அறிவாளிகளாகவும், சிந்தனையாளனாகவும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று உடையவனவாகவும், சிறந்த மனிதனாகவும் வளரமுடியும்.

கல்வி உரிமை பற்றி விழிப்புணர்வு பெற வாரீர்!

என அச்சடித்து விநியோகித்தோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும் வரவேற்பு அளித்தனர்.

ஆரம்ப கல்விக்காக தனியார் பள்ளிகளுக்கு பிள்ளைகள் சென்று விட்டால் அரசு உயர் நிலைப்பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் வரத்து குறைந்து பல பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும். ஆசிரியர்கள் வேறு ஊர்களுக்கு தூக்கி அடிக்கப்படுவதுடன், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இச்சூழலில் அரசு தொடக்க பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதன் அவசியத்தை மக்களிடம் சொல்லும்போது புரிந்து கொள்கிறார்கள். ஆங்கில வழி தனியார் மெட்ரிக் பள்ளியின் மீது உள்ள மோகம், மாயை தகர்கிறது. ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் அரசு பள்ளியின் கல்வி முறை பற்றி, தரம் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் போது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் வீரபாண்டியன், மாணவர்கள், கிராமத்து ஏழை பெண்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக எளிமையாக பேசினார். தனியார் பள்ளி வாகனங்களை பிள்ளை பிடிக்கும் வேன் என்றார். “என்ன படிக்கிறோம் என்ற அர்த்தம் தெரியாமல் படிக்கிறார்கள், அங்கு ஆசிரியர்களும் மனப்பாடம் செய்ய மட்டுமே சொல்லி கொடுக்கிறார்கள். செரிக்காத உணவு வாந்தி எடுப்பது போல் படித்ததை வாந்தி எடுக்க சொல்லுகிறார்கள். யாருக்கு எப்படி சொல்லி கொடுக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடையாது. அனைத்திற்கும் காசு கேட்பார்கள், அதுதான் தனியார் பள்ளியின் தரம். அரசு பள்ளியில் அனைத்தும் இலவசம். அரசு பள்ளி மாணவனிடம் காசு கொடுத்து தனியாக பொருள் வாங்க அனுப்பினால் சரியாக பயப்படாமல் சென்று காரியத்தை முடித்து விடுவான். ஆங்கிலவழி தனியார் பள்ளி மாணவன் காசை தொலைத்து விடுவான். கீழா நெல்லி வேரை பற்றி படிக்கும் அரசு பள்ளி மாணவன் அதை பயன் படுத்த முனைவான். அதன் பயன் தெரிந்து படிக்கிறான். ஆங்கிலத்தில் படிப்பவன் பொருள் தெரியாமல் படிக்கிறான். சிந்திக்கும் ஆற்றலை மொழி தடுக்கிறது. நாங்கள் எல்லாம் அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்தவர்கள்” என்று ஆதாரமாக விளக்கி பேசினார். மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தன்னலம் பாராமல் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வருவதை வாழ்த்தி ஆதரித்து பேசினார்.

தலைவர் வெங்கடேசன் அவர்கள் பேசும் போது பெற்றோர் சங்கம் கடந்து வந்த பாதையை விளக்கமாக பேசினார். “அரசு பள்ளி நமது பள்ளி தரமான கல்வி நமது பிள்ளைகளுக்கு கிடைக்க நாம் தான் போராட வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமான ஆசிரியர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதானோம்” என்பதை குறிப்பிட்டு பேசினார்.  “தனியார் பள்ளிகள் காசை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. வாங்கும் பணத்திற்கு ரசீதுகூட கொடுப்பதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பலமடங்கு பெற்றோர்களை அச்சுறுத்தி பிள்ளைகளை பணயக்கைதியாக்கி கட்டணக் கொள்ளை அடிப்பதை நாங்கள் தான் போராடி தடுத்து நிறுத்தியிருக்கிறோம். தனியார் பள்ளி தாளாளர்கள் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும், தங்கள் பள்ளி அடுத்த ஆண்டில் அதிக லாபம் ஈட்ட கட்டணத்தை உயர்த்த வேண்டும். அதற்காக தனியார் பள்ளிகள் மாணவர்களை இரவு பகல் பாராமல் படிக்க சொல்லி துன்புறுத்தியதால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்” என்பதை பத்திரிக்கை ஆதாரங்களை காட்டி பேசினார். “அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறும், உரிய அனுபவம் உள்ளவர்கள். நமது பிள்ளைகள் சரியாக படிக்க வில்லையென்றால் நாம் சென்று ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கலாம். நமக்கு சொந்தமான பள்ளிகளை விட்டு தனியார் பள்ளி மோகத்தில் பெற்றோர்கள் பலியாககூடாது. அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும். அதுதான் சரியானது என தாய்மார்கள் நினைக்க வேண்டும்” என பேசினார்.

ஆசிரியர்கள் பேசும்போது, “தாய்மார்கள் பிள்ளைகளை நன்றாக குளிப்பாட்டி, தலை சீவி குறித்த நேரத்திற்கு அனுப்ப வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு எப்படி மெனக்கிட்றீங்க! இங்க மட்டும் மூக்கில் சளி ஒழுக அப்படியே அனுப்புறீங்க, கையில் ஒரு கர்சிப் கொடுத்து அனுப்ப வேண்டாமா?. பையன் சன்னல் வழியாக புத்தகபையை தூக்கி போட்டுட்டு ஒன்னுக்க விடப்போறேன் என சொல்லி வீட்டுக்கு வந்து விடுகின்றனர். நீங்கதான் கண்டித்து மீண்டும் கொண்டு வந்து விடவேண்டும்” என மாணவர்கள் சேட்டையை பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டினார்.

“10,11 மணிக்கு பிள்ளைகள் வந்தால் எப்படி அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்?. கணவன் மனைவி சண்டை போட்டுக் கொண்டு அம்மா பிள்ளையை கூட்டி கொண்டு போய் விடுகிறார். உங்கள் சண்டையால் பிள்ளைகள் படிப்பு பாழாகிறதே என்ற கவலை வேண்டாமா? ராத்திரி பிள்ளைங்க தூங்கியவுடன் வெளியே போய் உங்க சண்டைய வச்சிக்கங்க. நாங்க சொல்லி கொடுப்பது போல் தனியார் பள்ளிகளில் சொல்லி கொடுக்க முடியாது என்பதை அடித்து சொல்ல முடியும். மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கிறோம். இங்கே கம்பியில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும் அனைத்து ஓவியங்களும் உங்கள் பிள்ளைகள் தானாக வரைந்தவை பாருங்கள்” என பெற்ற தாய்மார்களில் ஒருவராக அந்த ஆசிரியர் கொட்டி தீர்த்தார்.

பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு இனிமேல் சரியாக தங்கள் பிள்ளைகளை அனுப்புவதாக கூறிச் சென்றனர்.

வழக்கறிஞர் ராஜு பேசும்போது,

“அரசு பள்ளிகளை மூடுவதற்காக புற்றீசல்களாய் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் சம்பந்தம் இல்லை. அது போல் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் என கொண்டு வந்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு கொண்டு வந்தனர். அங்கு செல்லும் நமது குழந்தைகளை தீண்டப்படாதவர்களாக பள்ளி தாளாளர் நடத்துகிறார்கள். அதற்கான கட்டணத்தை கோடிக்கணக்கில் தனியார் பள்ளிக்கு அரசு வழங்குமாம். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தாமல் தனியார் பள்ளிகளை வாழ வைப்பதன் நோக்கம், அரசு பள்ளிகளை காலப்போக்கில் இழுத்து மூடவேண்டும் என்ற அரசின் திட்டம் தான் காரணம். இதற்கு அய்யா ஆட்சி, அம்மா ஆட்சி என்பதல்ல. மத்திய மாநில அரசின் தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைதான் காரணம்.”

“கார் உற்பத்தி செய்தால் வாங்குபவர்கள் குறைவு அனைவரும் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கல்வி என சேவைத் துறைகளை தனியாருக்கு திறந்து விட்டால் ஆயிரக்கணக்கான கோடிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க முடியும். அதன் விளைவு தான் இன்று எல்.கே.ஜிக்கு 20,000 ரூபாய் கொடுத்து படிக்க வேண்டிய நிலை, 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டிய அவலம். ஜூரத்திற்கு கூட 300 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அரசு அனைவருக்கும் தரமான கல்வியை, மருத்துவத்தை இலவசமாக வழங்கினால், தனியார் மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் எப்படி கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க முடியும். தனியார் பள்ளி இல்லாத அரசியல் வாதிகள் உண்டா? தனியார் கல்லூரிகள் இல்லாத அமைச்சர்கள் உண்டா? அரசு பள்ளிகள் ஏன் புறக்கணிக்கபடுகின்றது என யோசித்து பாருங்கள்.”

“ரசியா, ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளில் எல்லாம் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் அரசுதான் அனைவருக்கும் கல்வி கொடுக்கிறது. யார் வேண்டுமானாலும் திறமையாளனாக வரமுடியும். இங்குதான் 5,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம், 10,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம், 25,000 ரூபாய்க்கு ஒரு பள்ளிக்கூடம் என மாணவர்களை தனியார் பள்ளிகள் கூறு போட்டு வைக்கிறது. சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் பண்ணையார் வீட்டு பையனும், கூலி விவசாயி மகனும் ஒரே சீருடையில் ஏற்ற தாழ்வில்லாமல் படிப்பதுதான் நாட்டுக்கு சமுதாய மேன்மைக்கு உகந்தது.”

“பணம் சம்பாதிக்கவே கல்வி, மார்க் எடுப்பதே லட்சியம் அதற்கு எந்த வரை முறையும், நேர்மையும் இல்லாமல் எப்படியாவது மாணவர்களை மார்க் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவதுடன் மாணவர்களை கசக்கி பிழிகிறது. அதிக சூட்டில் குடிக்கப்படும் காப்பியின் ருசி தெரியாது. அதுபோல் படிப்பின் பலன், சிந்திக்கும் ஆற்றல் அதனை மொட்டுக்களிலியே முடக்குவதுதான் தனியார் பள்ளி ஆங்கிலவழி கல்வியின் தரம்.”

“பன்னாட்டு கம்பெனிக்கு தேவையான உதிரி பாகங்களாக நமது மாணவர்களை எந்த வித உரிமைகளும் அற்ற கூலி அடிமைகளாக பணியாற்ற பழக்கப்படுத்துவதே தனியார் கல்வியின் சாதனை. வேலை வாய்ப்பு இல்லாமையை ஒழிக்க அரசுதான் அதற்குரிய கொள்கையை வகுக்க வேண்டும். பொறியாளர்களும், ஐ.டி. துறையினரும், மருத்துவர்களும் லட்சக்கணக்கில் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்த நிலைக்கு யார் காரணம்?”

“அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டால் தனியார் மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளையடிக்க முடியாது. அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு மக்கள் போக மாட்டார்கள், வருமானம் பாதிக்கும். நகராட்சி, சுத்தமான தண்ணீர் கொடுத்தால் தனியார் தண்ணீர் கம்பெனி நஷ்டம் அடையும், என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”

“அரசு பள்ளி நமது பள்ளி, பள்ளி மேலாண்மை குழு மூலமாக பெற்றோர்களே நிர்வகிக்கலாம். ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதை கண்காணிக்கலாம். பள்ளியின் தரத்தை அடிப்படை வசதிகளை நாமே உயர்த்த முடியும். நமக்கு சொந்தமான வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டில் குடியேற நினைப்பது மடைமையில்லையா?.அது நிரந்தரமானதா? என்பதை தாய்மார்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அரசு பள்ளிகளை பல தலைமுறைகள் பயன்படுத்த, இன்னும் பல ஆசிரியர்கள் இதே பள்ளியில் பணிபுரிய அரசு பள்ளி இருப்பது அவசியம். அதற்கு நமது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.”

“ஷு,டை,கலர் யுனிபார்ம்,டாடி,மம்மி என்ற ஆங்கில மோகத்திற்கு அடிமையாகாமல், சொந்தமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இன்றைக்கு பதவியில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் அரசு பள்ளியில், தாய் மொழியில் படித்தவர்களே. படிப்பு பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, எதிர்கால சமுதாயம். நேர்மை பண்புகள், ஒழுக்கம் பொறுப்புணர்வு, பெற்றோர்களை பராமரிப்பது, சமூகத்தை நேசிப்பது, இயற்கையை நேசிப்பது, மனிதனின் ஆளுமையை வளர்ப்பது, என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் இல்லாமல் பணத்துக்காக மட்டுமே வாழ்க்கை, அதற்காக படிப்பு என கல்வியை வியாபாரமாக, மாணவர்களை பண்டமாக மாற்றும் தனியார்மய கல்வியை புறக்கணிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதுதான் சரியான முடிவு.”

கூட்டம் முடிந்தவுடன் வந்திருந்த பெற்றோர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். ஆசிரியர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் பெரிதும் வரவேற்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

2. 9-3-2014 அன்று பெரிய வடவாடி, நடுநிலைப்பள்ளியில் மாலை 5-00 மணிக்கு கூட்டம் நடந்தது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் திரு.வை.வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். தலைமை ஆசிரியர் திரு.சுப்பிரமணியன், சங்கத்தின் செ.கு.உறுப்பினர் ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் திரு.அன்பழகன், பஞ்சாயத்து தலைவர் திரு.முருகவேல், வழக்கறிஞர் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் புஷ்பதேவன், பு.மா.இ.மு. கதிர்வேல் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆகியோர் உரையாற்றினர்.

தலைமை ஆசிரியர் பேசும்போது, “என் பிள்ளைகள் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள் இன்று டி.இ.டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். என் உறவினர் பிள்ளைகள் ஆங்கில வழியில் படித்தவர்கள் தோல்வியுற்றனர். நாங்கள் முழு ஈடுபாட்டுடன் மாணவர்களை எங்கள் பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் பாடம் சொல்லி கொடுக்கிறோம். பெற்றோர் பிள்ளை உறவை தாண்டி அதிக பொறுப்புடன் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழக வேண்டும். தனியார் கல்வி வெறும் பண உறவாக மாற்றுகிறது. பஞ்சாயத்து தலைவரிடம் மாணவர்களுக்கு மன்ற போட்டி நடத்த வேண்டும், மைக் செட் வேண்டும் என கேட்டோம், பள்ளிக்கு சொந்தமாக மைக் செட் உள்ளது. பெற்றோர்கள் இன்னும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் சிறந்த கல்வியை கொடுப்பதுடன், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர் செய்ய வேண்டிய பணியை இன்று மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் செய்கிறது. அவர்களை மனமார பாராட்டுகின்றேன். கல்வி உரிமைக்காக மாநாடு நடத்துவதும் போராட்டம் நடத்தி சிறை செல்வதும் நாங்கள் பத்திரிகை வாயிலாக படித்து தெரிந்து வைத்திருக்கிறோம். அவர்களின் இத்தகைய பணியை பாராட்டுவதுடன் ஆசிரியர்களாக நாங்கள் ஆதரவு தருகிறோம்” என பேசினார். 100-க்கும் மேற்பட்ட தாய்மார்கள், மாணவர்கள் இரவு 7 மணிக்கு கூட்டம் முடியும் வரை அமைதியாக இருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

3. 15-3-2014 சத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 4-30 மணிக்கு கூட்டம் நடை பெற்றது.

ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் பெரியநாயகி, ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி, மா.க.உ.பெ.ச. செ.க. உறுப்பினர். திரு.அன்பழகன், செல்வக்குமார், தீபக்குமார், குமார், ம.உ.பா.மையத்தின் மாவட்ட தலைவர் திரு. குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

100-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். சில மாணவர்களை ஆசிரியர்கள் ஆங்கிலம் படிக்க வைத்து தனியார் பள்ளி கல்வி முறைக்கு சவால் விட்டனர். “மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று சிறப்பு பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் எங்கள் சத்தியவாடி பள்ளியை சேர்ந்தவர்கள். விரைவில் இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஊரில் நாள் ஒன்றுக்கு பல தனியார் பள்ளி வேன்கள் வருகின்றன. பிள்ளைகளை மூட்டைகளை திணிப்பது போல் திணித்து மாலை கொண்டு வந்து தள்ளுகின்றனர். பெற்றோர்களும் படிக்க வேண்டும். அரசு பள்ளியில் நாங்கள் சொல்லி கொடுக்கிறோம். சரியில்லையென்றால் எங்களிடம் கேளுங்கள், நன்றாக சொல்லி கொடுத்தால் ஊக்கப்படுத்துங்கள். அரசு அனைத்தும் இலவசமாக கொடுக்கிறது. அதை பயன்படுத்தி கொண்டு உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்” என ஆசிரியர்களே பேசியது பெற்றோர்களை உற்சாக படுத்தியது.

பெற்றோர் சங்கம் கொடுத்த துண்டறிக்கையை மாணவர்கள் பெற்றோர்களிடம் காட்டி கையொப்பம் பெற்று வரவேண்டும் என ஆசிரியர்கள் சொன்னதும். பெற்றோர்கள் அதிக அளவில் திரண்டனர். நாங்கள் பல முறை பெற்றோர் சங்க கூட்டத்திற்கு கூப்பிடுவோம் ஆர்வம் காட்டாத பெற்றோர்கள் உங்கள் பிரசுரத்தை பார்த்து வந்திருக்கின்றனர். எங்களுக்கும் உற்சாகமாக இருக்கிறது. வெளியூரிலிருந்து வந்திருந்த அனைத்து பெண் ஆசிரியர்களும் கூட்டம் முடியும் வரை இருந்தனர்.

4. 21-3-2014 அன்று சாத்துக்கூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 4-00 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு. வெங்கடேசன், தலைமை ஆசிரியர் அல்போன்ஸ், ஆசிரியை மீனாட்சி, ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தலிங்கம், பு.மா.இ.மு. தோழர்.கதிர்வேல் ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பெற்றோர்கள் குறிப்பாக பெண்களிடம் சிக்கலான பிரச்சினைக்கு தீர்வு பெற்றது போல் சங்க நிர்வாகிகளிடம் பேசியதுடன் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தனர். சில இளைஞர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் எங்களுக்கு தகவல் சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம் என்றனர்.

5.  28-3-14 அன்று மாலை 4-00 மணிக்கு செம்பளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு.வெங்கடேசன் தலைமை ஏற்க தலைமை ஆசிரியர் திருமதி.வே.வனஜா மற்றும் பிற ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூமாலை கூட்ட ஏற்பாடுகளை கவனித்தார். எச்.ஆர்.பி.சி.மாவட்ட பொருளாளர். செந்தாமரைக்கந்தன், செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன், செ.கு.உறுப்பினர். குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரும் திரளாக பெற்றோர்கள் வருகை தந்தது. ஆசிரியர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. “இன்னும் சிறப்பாக நாங்கள் பணியாற்றுகிறோம்” என உறுதி அளித்தனர். தனியார் பள்ளியில் நமது பிள்ளை படிக்க வேண்டும் என்ற ஏக்கம் தவறானது. இங்கு படிப்பதே சரியானது என்ற தெளிவுடன் சென்றனர். மத்திய மாநில அரசுகளின் தனியார்மயகொள்கைதான் இதற்கெல்லாம் காரணம். தரமானது என்று தனியாரை நாம் ஆதரிக்க கூடாது. காசிருந்தால்தான் தனியார் கல்வி கொடுப்பார்கள் இல்லாத ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காமல் போகும் என்பதை புரிந்து கொண்டனர். சுமார் 35 பேர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர்.

s.kurichi

6. 5-4-14 அன்று மாலை 3-30 மணியளவில், கோமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூட்டம் நடை பெற்றது. மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 32 , இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நாள் ஒன்றுக்கு 7 தனியார் பள்ளி வேன் ஊருக்குள் வருகிறது என மக்கள் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர் திருமதி.வேல்விழி, விவசாய சங்கத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் உரையாற்றினர். தலைவர் திரு. வெங்கடேசன், வழக்கறிஞர் ராஜு, வீரகாந்தி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. 25 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சில பெரியவர்கள் மேல் சட்டை போடாமல் விவசாய வேலையோடு அப்படியே வந்திருந்தனர். 20 நபர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர்.

தலைமையாசிரியர் பேசும் போது, “இந்த பள்ளி உங்களுடையது. இரவில் குடிப்பது, விடுமுறை நாளில் சீட்டாடுவது என்பதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. நமது வீட்டை விட பள்ளிக்கூடம் புனிதமானது. சாக்கடை நீர் பள்ளி கூடம் பக்கம் வருகிறது. அதை தடுக்க வேண்டும். நாங்கள் மனு மட்டும் தான் கொடுக்க முடியும். பள்ளி நலன்களை, சுகாதாரத்தை பெற்றோர்கள் உதவி செய்தால்தான் செய்ய முடியும்” என்று கூறியதுடன், “தரமான கல்வி என்றால் என்ன” என்பதை விளக்கினார். “அரசு பள்ளி ஆசிரியர்கள் உளவியல் படிக்கிறோம், வருடம் வருடம் மாணவர்களுக்கு எப்படி சிறப்பாக சொல்லி கொடுக்க வேண்டும் என்பதை பயிற்சி எடுத்து வருகிறோம். மிகுந்த அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் இந்த பள்ளியில் சேர்க்காமல் தனியார்பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்க்கிறீர்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.

துண்டறிக்கை

பெற்றோர்களே, தாய்மார்களே வணக்கம்.

ஆங்கிலவழியில் படித்தால்தான் அறிவு வளருமா? தனியார் பள்ளி கல்வி தரமானதா?

உங்கள் பிள்ளைகள் சிந்தனையாற்றலுடைய மனிதனாக வேண்டுமா? அல்லது பணம் சம்பாதிக்கும் மெஷினாக வேண்டுமா?

ரூபாய்.30,000 சம்பளத்தில் பயிற்சிபெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளியில் கற்பிக்கும் கல்வி தரமானதா? அல்லது

லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வியை காசாக்கும் வியாபாரிகள், குறைந்த சம்பளம் கொடுத்து தகுதியற்ற ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் கல்வி தரமானதா?

வல்லரசு நாடுகளிலெல்லாம் தாய்மொழியில் அரசுதான் கல்வி கொடுக்கிறது.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலி அடிமைகளை உருவாக்குவதே தனியார் பள்ளி ஆங்கில வழி கல்வியின் சாதனை

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், புகழ்பெற்ற மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,பொறியாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் பல கட்சிகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தாய் மொழியில் அரசுப்பள்ளியில் படித்தவர்களே.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்.தரமான கல்வி வழங்குவதை கண்காணிப்பது உங்கள் கடமை.

அரசுப்பள்ளி நமது பள்ளி . அரசு பள்ளி நமது சொத்து.

கலர் யூனிபார்ம், ஷு, டை, வேன் புரியாத ஆங்கிலம் ஆகிய விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள்

கல்வி உரிமை பற்றி விழிப்புணர்வு பெற அனைவரும் வாரீர்.

இடம் : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், கோமங்கலம்.

பெற்றோர் சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள்.,

மாணவர்கள் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கம்
பதிவு எண்36/2011
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம் – 606001
தொடர்புக்கு 93450 67646, 94432 64315

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

யாருக்கு வேண்டும் தேர்தல்?

6

ந்திய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்த அரசமைப்பு, உண்மையில் தரகு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சர்வாதிகாரம் என்றும், இதனை அகற்றிவிட்டு அதனிடத்தில் ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை நிறுவ வேண்டும் என்றும் நாம் கூறிவருகிறோம். பெரும்பான்மையான மக்கள் இத்தகையதொரு அரசியல் மாற்று குறித்து புரிந்திருக்கவில்லை என்ற போதிலும், நிலவுகின்ற இந்த அரசமைப்பின் மீது தமது சொந்த அனுபவங்களின் வழியாகவே நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தல் அரசியலில் மக்கள் காட்டும் ஈடுபாடு என்பது, இந்த அரசமைப்பின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான சான்று அல்ல. மாறாக, கிரிக்கெட் ஆட்டத்தில் ரசிகன் காட்டும் ஈடுபாட்டுக்கும் மக்களின் தேர்தல் ஈடுபாட்டுக்கும் அதிக வேறுபாடில்லை என்பதே உண்மை.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்இந்த அரசமைப்பு தோல்வியடைந்து விட்டது. மன்மோகன் தலைமையிலான காங்கிரசு அரசு தோற்றுவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றும் இதுவும் ஒன்றல்ல; காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளின் அரசாங்கங்களும், நிர்வாகம், போலீசு, இராணுவம், நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமும் உள்ளடங்கிய இந்த அரசமைப்பு தோற்று விட்டது என்று நாம் கூறுகிறோம். இதனை மக்கள் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ, ஆளும் வர்க்கம் புரிந்திருக்கிறது. தாங்கள் வரையறுத்த சட்டங்கள், தாங்களே கூறி வந்த புனித அரசியல் மரபுகள், நெறிகள் ஆகியவற்றைத் தங்களது வழித்தோன்றல்களே மீறுவதையும், காலில் போட்டு மிதிப்பதையும் மறுக்கவோ, மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாமல் ஆளும் வர்க்கம் தடுமாறுகிறது. இவற்றைச் சீர் திருத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் தோல்வியைத் தழுவுகின்றன.

செயலிழந்துவரும் அரசு, அதிகரித்து வரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்து வரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை… என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது என்பதையும், பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக்கொடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும் சொல்லி ஆளும் வர்க்க அறிவுத்துறையினரே புலம்புகின்றனர். மொத்தத்தில் ஆள்வதற்கான தகுதியை இழந்து விட்டது இந்திய ஆளும் வர்க்கம்.

எனினும், ஆளப்படும் வர்க்கமாகிய உழைக்கும் வர்க்கம் ஒரு மாற்று அரசியல் சக்தியாக எழுந்து ஆளும் வர்க்கத்தை வீழ்த்துவதற்குத் தயாராக இல்லை என்ற ஒரேயொரு காரணத்தி னால், சவக்குழிக்கு சென்றிருக்க வேண்டிய இந்த அரசமைப்பு, நாற்காலியில் அமர்த்தப்பட்ட பிணத்தைப் போலத் தொடர்ந்து அரியணையில் நீடிக்கிறது. ஜனநாயகம் என்று அழைக்கப்படும் இந்த அரசமைப்புதான் இதுகாறும் மனிதகுலம் கண்டறிந்த உன்னதமென்றும், இதை விஞ்சிய வேறு அரசியல், சமூக அமைப்பு சாத்தியமில்லையென்பதால், எவ்வாறேனும் இதனைப் பிழைக்க வைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றும் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர் இதற்குத் தத்துவ விளக்கம் சொல்கிறார்கள். இந்த அரசமைப்பின் தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் நிலவுவதால், அதற்கான பழி முழுவதையும் அரசியல் கட்சிகள் என்ற சோளக் கொல்லை பொம்மைகள் மீது போட்டு, அக்கட்சிகளின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், ஊழல் போன்றவைதான் இன்று நாம் காணும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் காரணம் என்று சாதிக்கிறார்கள்.

பொதுச்சொத்து கொள்ளை

இதன் மூலம் இரண்டு நோக்கங்களை ஆளும் வர்க்கம் நிறைவேற்றிக் கொள்கிற து. முதலாவதாக, காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., ஆம் ஆத்மி போன்ற எந்தக் கட்சியின் அரசாங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆளும் வர்க்க நலனைப் பாதுகாக்கும்படி வடிவமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற – அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள், சமூகப் பண்பாட்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கிய அரசமைப்பையும், அதன் தோல்வியையும் தந்திரமாக மக்களின் கண்களிலிருந்து மறைக்கிறது.

இரண்டாவதாக, சீரழிவுக்குக் காரணம் கட்சிகள்தான் என்ற பொதுக்கருத்தைப் பயன்படுத்தி மோடி, கேஜ்ரிவால் போன்ற மாற்றுகளைக் காட்டி, மோடியின் துணிச்சலும் நிர்வாகத் திறனும், கேஜ்ரிவால் போன்றோரின் நேர்மையும் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிவிடும் என்ற மாயையை மீண்டும் மீண்டும் பரப்புகிறது. எனவே, இந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவிப்பதே நம் முதற்பணியாக இருக்கிறது.

ஆளும் வர்க்கம் தோல்வியடைந்து விட்டது என்று நாம் கூறுவதன் பொருள், உழைக்கும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் அதனைத் தோற்கடித்து விட்டது என்பதல்ல. மாறாக, சுரண்டுவதற்கும் ஆள்வதற்கும் உகந்த வகையில் ஆளும் வர்க்கம் தானே வடிவமைத்திருக்கும் அரசமைப்பு, அனைவருக்கும் பொதுவானவை என்றும் நாட்டு மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை என்றும் அது வலியுறுத்தும் சட்டங்கள், மரபுகள் ஆகியவற்றைக் கால்தூசாகக் கருதி ஆளும் வர்க்கத்தினரே அவற்றை மீறுகின்றனர், மதிப்பிழக்கச் செய்கின்றனர் என்கிறோம். இந்த அரசமைப்பு காலாவதியாகி விட்டதைத் தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் அவர்களே நிரூபிக்கின்றனர் என்றும் கூறுகிறோம்.

இந்த அரசமைப்பு என்னதான் கெட்டுச் சீரழிந்தாலும், ஆளும் வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. 1991-ல் மன்மோகன்-நரசிம்மராவ் கூட்டணி புதிய பொருளாதாரக் கொள்கைகளை அதிகாரபூர்வமாக அமல்படுத்தத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, ஊழல்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் அலைக்கற்றை, நிலக்கரி, ஆதர்ஷ், காமன் வெல்த், எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளில் இந்த நாடு பறிகொடுத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு ரூ.73 இலட்சம் கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தக் கொள்ளை என்பது நெறி பிறழ்ந்த சில கள்வர்களால் நடத்தப்பட்ட சங்கிலிப் பறிப்போ, வழிப்பறியோ அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகார வர்க்கம், அமைச்சரவை, போலீசு – இராணுவ அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஊடகத்துறையினர், கிரிமினல் மஃபியா கும்பல்கள் அடங்கிய வலைப்பின்னல் இக்கொள்ளைகள் அனைத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

மோடி - அம்பானி

எனினும் ராஜா, லாலு, கல்மாடி போன்ற சில அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டுமே குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் மொத்த அமைப்பும் சீர்கெட்டு விடவில்லையென்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குற்றவாளிகள் மட்டுமே இருப்பதாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. கண்டிப்பான நீதித்துறையும் நேர்மையான புலனாய்வு அதிகாரிகளும் விழிப்புணர்வு கொண்ட பத்திரிகைகளும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளும் இருந்தால் இத்தகைய பேர்வழிகளைக் களையெடுத்து அமைப்பைச் சீர்திருத்திவிட முடியும் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். ஆனால், களைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இல்லை. அவைதான் அரசாங்கம், அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன; அவைதான் ஆட்சி செலுத்துகின்றன என்பதே உண்மை.

மன்மோகன் அமைச்சரவையை எடுத்துக் கொள்வோம். அமைச்சரவையைத் தீர்மானிப்பதில் தொடங்கி அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பா.ஜ.க. வைச் சரிக்கட்டுவது வரை அனைத்திலும் அமெரிக்க அரசு நேரடிப் பங்காற்றியிருப்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. தரகு முதலாளிகளின் விருப்பப்படிதான் அமைச்சர்கள் நியமனம் நடந்தது என்பதை ராடியா டேப்புகள் வெளிக்கொணர்ந்தன. நிலக்கரி ஊழல் வழக்கில் பிர்லாவின் பெயர் சேர்க்கப்பட்டவுடனே ஆனந்த் சர்மாவும், சச்சின் பைலட்டும் கொதித்தெழுந்து மத்திய புலனாய்வுக் குழுவைக் கண்டித்தனர். கோதாவரி எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அம்பானிக்கு வக்காலத்து வாங்கின. சுரங்க முதலாளிகளைத் தொல்லைக்குள்ளாக்குவதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் அதன் சட்டங்களையும் மன்மோகன் சிங் பகிரங்கமாகச் சாடினார்.

இங்ஙனம் மக்கள் பிரதிநிதிகள் என்ற பொறுப்புணர்ச்சியே இல்லாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் தரகர்களாகவும், லாபியிஸ்டுகளாகவும் அமைச்சர்கள் கூச்சமேயில்லாமல் நடந்து கொள்கிறார்களே, இது விதிவிலக்கான நிகழ்வா என்றால், இல்லை. சமூகத்திற்கு மேலே நிற்கும் அதிகாரமாகவும் எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவான நாட்டாமையாகவும் தோற்றம் காட்டிக் கொண்டிருந்த அரசு, மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலம் முதல், முதலாளி வர்க்கத்தின் முகவராக வெளிப்படையாகவே தன்னை இனம் காட்டிக் கொள்ளத் தொடங்கி விட்டது. மக்களிடம் நியாயவுரிமை பெறுவதைக் காட்டிலும், மூலதனத்தை ஈர்ப்பதும் பன்னாட்டு முதலாளிகளிடம் நற்பெயர் ஈட்டுவதுமே அரசுகளின் நோக்கமாகி விட்டது.

எந்த மக்களின் பெயரால் ஆள்வதற்கான நியாயவுரிமையை அரசாங்கம் பெறுகிறதோ, அந்த விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பழங்குடி மக்கள், தொழிலாளிகள் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் தொழிலையும் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை காங்கிரசு, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்த அரசாங்கமும் வகுப்பதில்லை. மாறாக, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கொள்ளை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு தீட்டப்படும் ஆறுவழிச் சாலைகள் முதல் மீதேன் வரையிலான திட்டங்களுக்காக மக்களுடைய வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொடுப்பதுதான் செயல்படும் அரசு என்பதற்கான அங்க இலட்சணமாகியிருக்கிறது.

நாடாளுமன்றம் - ஊழல்எனவே ஆலைகள், சுரங்க நிறுவனங்கள், கல்விக் கொள்ளையர்கள், தண்ணீர் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் மஃபியாக்களுக்கு நிலம், காடு, மலை, நீர்நிலைகள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை மக்களிடம் நைச்சியமாகப் பேசிக் கவர்ந்து கொடுப்பதும், எதிர்த்துப் போராடினால் மிரட்டி வெளியேற்றுவதுமே, தலைமைச் செயலர் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரையிலான அதிகார வர்க்கமும், போலீசும் ஆற்றிவரும் வளர்ச்சிப் பணியாகவும், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பாகவும் இருந்து வருகிறது. இவர்கள் அனைவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமலாக்குபவர்களாக மட்டுமின்றி, அதன் மூலம் பல வழிகளில் ஆதாயமடைகின்ற பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ஜனநாயகத்தின் இதர தூண்களான நீதித்துறையும் ஊடகங்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

தனியார்மயம்-தாராளமயம் என்பது வெறும் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல; அது கட்டற்ற முதலாளித்துவச் சூறையாடலுக்கு உகந்த அரசியல், சித்தாந்தச் சூழலை சமூகத்தில் உருவாக்குவது மட்டுமின்றி, நீதித்துறையின் வன்முறை உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ப நிலவுகின்ற இந்த அரசமைப்பை வளைத்து மாற்றியமைக்கிறது. இதன் காரணமாக சட்டமீறல்கள் சகஜமாகின்றன. எந்தச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்களோ, அந்தச் சட்டங்களை முதலீட்டுக்கான இடை யூறுகள் (bottlenecks) என்று முதலாளிகள் நிராகரிக்கிறார்கள். உடனே அந்த இடையூறுகள் சட்டவிரோதமான முறையில் அதிகாரவர்க்கத்தால் அகற்றப்படுகின்றன; பின்னர் மேற்படி சட்டவிரோத நடவடிக்கை அரசால் சட்டபூர்வமாக்கப்படுகின்றன. சென்னை தியாகராயநகரில் அங்கீகாரமின்றி பலமாடிக் கடைகள் கட்டப்பட்டதும், சட்டவிரோதமான அக்கட்டிடங்கள் அவசரச் சட்டங்கள் மூலம் சட்டபூர்வமாக்கப்பட்டதும் விதிவிலக்கான நிகழ்வு அல்ல; சட்டவிரோத கனிமவளக் கொள்ளை முதல் வரி ஏய்ப்புகள் வரையிலான எல்லா விசயங்களிலும் நடந்து வருவது இது தான்.

ஏற்கெனவே ரேசன் அட்டை, சாதிச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, மின்னிணைப்பு முதலான மக்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கே விலை நிர்ணயம் செய்து வசூலித்துக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்தின் இலஞ்சப் பசிக்கு தனியார்மயக் கொள்கை புதிய வேட்டைக்காடுகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்பதே உண்மை.

அரசியல்வாதிகளின் ஊழலை விட மிகப்பெரியது அதிகாரவர்க்கத்தின் ஊழல். ஏனென்றால், இவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்று முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிசனர் விட்டல் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் ஆளும் வர்க்கச் சேவைக்காகவே வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு மட்டுமே கடமைப்பட்டது. மறுகாலனியாக்கக் கொள்கைகள் அதிகார வர்க்கத்தின் இந்த முதலாளித்துவ விசுவாசத்துக்கு மேலும் வெறியூட்டியிருக்கின்றன. தனியார்மயக் கொள்கையின் சித்தாந்தத் தாக்கமோ, இந்த அரசமைப்பின் சீர்குலைவை மேலும் துரிதப்படுத்தி அதனைத் தார்மீக ரீதியில் மதிப்பிழக்கச் செய்திருக்கிறது; அதன் தோல்வியைப் பட்டவர்த்தனமாக்கியி ருக்கிறது.

அனைத்தும் தழுவிய சீரழிவுதலைமை விஜிலென்ஸ் கமிசனர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றத்தினை, நீதிபதிகள் நியமனத்திலேயே அப்படிப்பட்ட அளவுகோலைப் பயன்படுத்த முடிவதில்லையே மைலார்டு எனக்கூறி எள்ளி நகையாடினார் சொலிசிட்டர் ஜெனரல் வாகனவதி. அலகாபாத் நீதிமன்றத்தில் தந்தைகள் நீதிபதியாக அமர்ந்திருக்க, தனயர்கள் வக்கீல்களாக இருந்து வழக்கு நடத்திப் பணத்தைக் குவிக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டுகிறார் வழக்குரைஞர் சாந்தி பூஷண். தலைமறைவுக் குற்றவாளி என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நபர் இந்தூர் நகரின் செசன்சு நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். டில்லி பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கிறது நீதிமன்றம்; ஆனால் அலைக்கற்றை தீர்ப்பு புகழ் நீதிபதி கங்குலி, தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு உறுதியான பின்னரும், மனித உரிமைக் கமிசன் பதவியிலிருந்து விலக மறுக்கிறார். தன் மீதான ஊழல் வழக்கை 20 ஆண்டுகள் இழுத்தடித்த ஜெயலலிதா வுக்கு, அவர் விரும்பும் அரசு வக்கீலையும் நீதிபதியையும் அமர்த்தித் தரவேண்டும் என்று கூசாமல் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். அதேநேரம், பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்குக் குரல் கொடுத்த மருத்துவர் பினாயக் சென் தேசத்துரோக குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார்.

போலீசின் யோக்கியதையைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை. வழிப்பறி, வல்லுறவு, சிட்பண்டு மோசடி, ஆள் மாறாட்டம், கொலை, போலி மோதல் கொலை, கூலிக்குக் கொலை என்று கிரிமினல் குற்ற நடவடிக்கைகளின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது போலீசு. பாலியல் வல்லுறவுக் குற்றவழக்கில் கைது செய்யப்பட வேண்டிய மதுகர் டான்டன் என்ற ராஜஸ்தான் டி.ஐ.ஜி. 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் ஏ.கே.ஜெயின் என்ற கூடுதல் டி.ஜி.பி.யை பிடித்துத் தருபவர்களுக்கு பத்து லட்சம் சன்மானம் அறிவித்திருக்கிறது சி.பி.ஐ.

பங்குச் சந்தையைக் கண்காணிப்பதற்கான செபி மீது சி.பி.ஐ. விசாரணை, தலைமை விஜிலென்சு கமிசனர் மீது சி.பி.ஐ விசாரண, ஐ.பி. மீது சி.பி.ஐ. விசாரணை என எல்லாக் கண்காணிப்பு அமைப்புகளும் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் வந்து கொண்டிருக்க, சி.பி.ஐ. அதிகாரிகளின் முறைகேடுகளை விசாரிப்பது யார்? என்பது விடையில்லாக் கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய அதிகார வர்க்கம்தான் ஆசியாவிலேயே மிக மோசமான அதிகாரவர்க்கம் (அதாவது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைக் காட்டிலும் மோசமானது) என்று பொலிடிகல் அண்டு எகனாமிக் ரிஸ்க் கன்சல்டன்சி என்ற நிறுவனம் சமீபத்தில் மதிப்பிட்டிருக்கிறது. இப்படி அதிகாரவர்க்கத்தின் பெருமை சந்தி சிரித்து விட்ட போதிலும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி மறுப்பதன் மூலம் அவர்களுடைய கற்பைக் காப்பாற்றி வருகிறது மத்திய அரசு. அலைக்கற்றை, ஆதர்ஷ், நிலக்கரி வயல் உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் அந்தந்தத் துறை அதிகாரிகள் தவிர்க்கவியலாமல் சிக்கியிருப்பதால், அவர்கள் குற்றங்களின் பிதாமகனான பிரதமரையும் கூண்டிலேற்றுமாறு கோருகிறார்கள். பிரதமரும் கூண்டிலேற்றப்பட வேண்டியவரே என்று தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வழிமொழிவதால், பிரதமர் நாற்காலியின் கவுரவம் பல்லிளிக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் கருத்துரிமையின் காவலன் என்றும் சிலாகிக்கப்படும் ஊடகத்துறையோ கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படையாக அம்பலமாகி நிற்கிறது. பத்திரிகையாளர்கள் அதிகாரத் தாழ்வாரங்களில் அரசியல் தரகர்களாக வலம் வந்து பிடிபடுகிறார்கள். 2009 தேர்தலின்போது ஒரு முறைகேடாக அம்பலப்படுத்தப்பட்ட காசுக்கு செய்தி (paid news) என்ற கயமைத்தனம், தற்போது பத்திரிகை உலகின் தொழில் தருமமாக அங்கீகாரம் பெற்று விட்டது.

சீரழிவிலிருந்து இந்தத் துறை தப்பி விட்டது என்று விரல் நீட்ட முடியாவண்ணம் சமூகத்தின் எல்லாக் கணுக்களிலிருந்தும் சீழ் வடிகிறது. நல்லொழுக்கத்தின் வழிகாட்டிகளாக அறியப்படும் மதகுருமார்கள் வக்கிரங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். உயிர் காக்கும் மருத்துவர்கள் எனப்படுவோர் உறுப்புகளைத் திருடும் கொலைகாரர்களாகப் பிடிபடுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் கொள்ளைக் கூடங்களாகத்தான் இருக்கும் என்பது சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவை அரசு அங்கீகாரம் பெற்ற கொள்ளைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே பெற்றோரின் கோரிக்கையாக எஞ்சியிருக்கிறது. ஜனநாயகத்தின் எதிரியான சாதி, ஜனநாயக உரிமையின் பெயரால் புதுப்பிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது.

மறுகாலனியாக்கப் பண்பாட்டு வளர்ச்சியின் வேகம் பெண்களைச் சூறையாடுகிறது. தலைநகர் டில்லியில் பணியாற்றும் பெண்கள் வேறு பாதுகாப்பான நகரத்துக்குத் தப்பியோடத் தவிக்கிறார்கள். சூறையாடப்பட்ட விவசாயிகள் கிராமப் புறங்களிலிருந்து தப்பிவந்து நகர்ப்புறக் கொத்தடிமைகளாக உழல்கிறார்கள். தப்பிக்க முடியாதவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொள்கிறார்கள். சூறையாடப்பட்ட இயற்கை, மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் வாழ்விடத்தை விட்டு விரட்டுகிறது. தண்ணீர்ப் பஞ்சமோ வரவிருக்கும் பேரழிவுக்குக் கட்டியம் கூறுகிறது. மணற்கொள்ளை, வனக்கொள்ளை, தண்ணீர்க் கொள்ளைகளைத் தடுக்கும் சமூக உணர்வுள்ள குடி மக்கள், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடன் மஃபியா கும்பல்களால் வேட்டையாடிக் கொல்லப்படுகிறர்கள்.

அரசியல், சமூக, பண்பாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமக்குரிய நெறிகளைக் காலில் போட்டு மிதித்து வரும் சூழலில், தமக்குரிய நெறிகளைப் பற்றியொழுகும் நிறுவனங் களாகச் சூதாட்ட விடுதிகள் மட்டுமே இந்த நாட்டில் எஞ்சியிருக்கின்றன. அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் நொறுங்கிச் சரிந்து வரும் நிலையில், மக்கள் மீது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அரசின் குண்டாந்தடி மட்டும் தனது கொள்கையில் சற்றும் வளைந்து கொடுக்காமல் நிற்கிறது.

வளர்ச்சியின் பலிபீடத்தில் தமது வாழ்விடங்களையும், நீர்நிலைகளையும், விளைநிலங்களையும், வாழ்வுரிமையையும் காவு கொடுக்கச் சம்மதிக்காத மக்கள் நாடெங்கும் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஓட்டுக்கட்சிகள் அனைத்தையும் ஒதுக்கி நிறுத்தியிருக்கும் இந்தப் போராட்டங்களை நிறுவனமயப்படுத்துவதற்கும், நீர்த்துப் போக வைப்பதற்குமான வழிமுறைகளை ஆளும் வர்க்கம் தொடர்ந்து யோசிக்கிறது.

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் பிளவையும், அதிருப்தியையும் சரிக்கட்டி, ஆளும் வர்க்கத்துக்கும் ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை அமைதிப்படுத்தவும், மதிப்பிழந்து தோற்றுப்போன இந்த அரசமைப்பைச் சீர்திருத்த முடியும் என்று நம்பிக்கையூட்டி, மக்கள் மத்தியில் இந்த அரசமைப்பின் நியாயவுரிமையைப் புதுப்பிக்கவும், ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களால் வழிநடத்தப்படும் ஆம் ஆத்மி கட்சி அரசியல் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகளின் வேகமான அமலாக்கத்திற்காகப் பொறுமையிழந்து துடித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளின் பிரதிநிதியான நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் சிறந்த அரசாளுமையின் சின்னமாக ஆளும் வர்க்கத்தால் முன்நிறுத்தப்படுகிறார். ஜனநாயக வடிவிலான அரசமைப்பைப் பயன்படுத்தியே பாசிசத்தை நிலைநாட்டும் கலையை குஜராத்தில் சோதித்துப் பார்த்திருக்கும் மோடி, அதனை இந்தியா முழுமைக்கும் பிரயோகிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

தோல்வியுற்று நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் சமூக அமைப்போ, தனது இறுதிச் சடங்குகளை நடத்தி வைக்க வேண்டிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

– சூரியன்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்

3

“இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதை செய்து முடிப்பதற்கான தலைவர் மோடிதான்”.

முசாஃபர் நகரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்
முசாஃபர் நகரில் மோடிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்

“இன்றைய நிலைமையில் இந்துக்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று பாருங்கள். நாம ஏதாவது செய்யணும். இந்துக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மோடியை ஜெயிக்க வைக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்டு மோடியை பிரதமர் ஆக்க வேண்டும்”

“ராமர் கோயில் பிரச்சனையை நாங்கள் மறந்து விடவில்லை. இந்த நாட்டில் ஒரு தேசியவாத அரசு வரும் போது ராமர் கோயில் கட்டப்படும். ராமர் கோயில் மட்டுமில்லை, காசி விஸ்வநாதர் கோயில், மதுரா மூன்று இடங்களிலும் கோயில்கள் கட்டப்படும். இது எல்லாம் எங்கள் திட்டத்தில் இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு ஒரு தேசிய வாத அரசாங்கத்தை ஏற்படுத்துவதுதான் நோக்கம்”

“முஸ்லீம்கள் பகுதிகளில் நாங்க பிரச்சாரம் செய்ய மாட்டோம். அவங்க எப்பவுமே பாஜகவை தோற்கடிக்கும் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பாங்க. அவங்க பகுதிக்குள் எங்களை அனுமதிப்பதேயில்லை”

உத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் குறித்து என்.டி.டி.வி தொலைக்காட்சியின் சீனிவாசன் ஜெயின் தயாரித்த நிகழ்ச்சியில் மோடியின் பா.ஜ.க சார்பாக களம் இறங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் சொல்லும் சில கருத்துக்கள்தான் இவை.

“வளர்ச்சி நாயகன் மோடி, 10 ஆண்டுகளாக மதக் கலவரமே இல்லாமல் ஆட்சி செய்து வரும் முன்னோடி மாநிலம் குஜராத்” என்றெல்லாம் நாட்டின் பிற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது பா.ஜ.க; அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ஒழித்தல் போன்ற மதவாத நோக்கங்களை பா.ஜ.க மறந்து விட்டதாக அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்திருக்கும் வை.கோ., சந்திரபாபு நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். ‘சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அணைத்துச் செல்வதுதான் மோடியின் கொள்கை; இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பார்க்காமல் 6 கோடி குஜராத்திகளுக்கும் சேவை செய்பவர் மோடி’ என்று பா.ஜ.கவுக்கு ஆதரவாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் தெருத் தெருவாக பா.ஜ.கவின் மதவெறி பிரச்சாரம் பகிரங்கமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனிவாசன் ஜெயின்
சீனிவாசன் ஜெயின்

கடந்த ஆண்டு மேற்கு உ.பியின் முசாஃபர் நகர் மாவட்டத்தில் ‘முஸ்லீம்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்று பிரச்சாரம் செய்து ஜாட் ஆதிக்க சாதியினரை திரட்டி முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் அவர்களது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

முசாஃபர் நகர் பகுதியில் 18 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்திய அளவில் கரும்பு விவசாய உற்பத்தி நன்றாக நடக்கும் பகுதிகளில் முசாஃபர் நகரும் ஒன்று. ஜாட் சாதியினர் பெரும்பாலும் விவசாயிகளாக இருக்கின்றனர். இந்த பகுதியினரின் சாதி வெறியைத் தூண்டி விட்டு தேர்தலில் ஆதாயம் காண முயற்சிக்கும் பா.ஜ.க, முசாஃபர் நகர் தொகுதியில் ஜாட் சாதி பிரமுகர் சஞ்சீவ் பாலியானை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.

முசாஃபர் நகரின் பட்டேல் நகர் பகுதியில் காலையில் ஷாகா முடித்து விட்டு தமது காக்கி டவுசர்களைக் கூட மாற்றாமல் “பாரேத் மாதா கீ ஜெய்” என்ற முழக்கத்துடன் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். வழக்கமாக ‘ஆர்.எஸ்.எஸ் வேறு, பா.ஜ.க வேறு, இரண்டுக்கும் சித்தாந்த தொடர்பு இருந்தாலும் இயக்க ரீதியான தலையீடு தொடர்பு இல்லை, பாஜகவை ஆர்.எஸ்.எஸ் இயக்குவதில்லை, ஆர்.எஸ்.எஸ் அரசியலில் ஈடுபடுவதில்லை’ என்றெல்லாம் பசப்பும் சங்க பரிவாரம் இங்கு தன் முகமூடிகளை கழற்றி வீசி விட்டு நரேந்திர மோடிக்கும் பாஜக வேட்பாளருக்கும் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.

“தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்சின் முக்கியமான பங்களிப்பு அதன் அடிமட்ட சுவயம் சேவக்குகள் கட்டமைப்பை பா.ஜ.கவின் தேர்தல் நிர்வாகப் பணிகளுக்காக களம் இறக்கி விட்டிருப்பதுதான்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு பிராந்த் (வட்டார) பொறுப்பாளர், அவர்களுக்குக் கீழே ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர், அந்தத் தொகுதியில் அடங்கிய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர். அவருக்குக் கீழ் 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் என ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா என்று யாராவது ஆச்சரியப்பட்டால், ஒரு நபர் தன் வாழ்நாளில் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை எட்டிப் பார்த்திருந்தாலே அவர் சுவயம் சேவக் தகுதியை பெற்று விடுகிறார். மேலும் ஷாகாவிற்கு டிமிக்கி கொடுக்கும் முன்னாள் சுவயம் சேவக்குகள் கூட தேர்தல் அரசியலின் ஆதாயங்களை பெறுவதற்கு படை திரண்டு வருவார்கள் என்பதால் இந்த திட்டம் அசாத்தியமானதல்ல.

"ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா?"
“ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா?”

பா.ஜ.கவின் சிந்தனையாளர் சுதீந்த்ர குல்கர்னி, “பா.ஜ.கவில் மத்தியிலிருந்து கீழ் மட்டங்கள் வரை ஒரு தலைமுறை மாற்றம் நிகழும் போது ஆர்.எஸ்.எஸ் தனது அழுத்தமான முத்திரையை பதிக்க விரும்புகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது” என்கிறார்.

உட்கட்சி அமைப்பில் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ்., பெண்களை தனது இயக்கத்தில் இன்று வரை சேர்க்கக் கூடாது என்று விதி வைத்திருக்கும் இவர்கள் இந்த தேர்தல் அரசியலில் என்ன ஜனநாயகத்தை பிரச்சாரம் செய்வார்கள்? வேறு என்ன, இந்துமதவெறி, அகண்ட பாரதக் கனவு, சிறுபான்மையினர் வெறுப்பு, கம்யூனிச கடுப்பு, தேசிய இன ஒழிப்பு, பாலின ஒடுக்குமுறை, சாதி ரீதியான துவேசம், மாட்டுக்கறி புனிதம், மதமாற்றத் தடை சட்டம்…..இவைதான் இவர்களது முக்கிய பிரச்சாரங்கள்.

முசாஃபர் நகரில் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்தியிருக்கிறது. “உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து விட்டால் ஒரு குறுஞ்செய்தி வரும். அதைத் தொடர்ந்து நீங்கள் இப்போது ஒரு மோடி ஆதரவாளர் என்று மோடியின் குரலில் ஒரு அழைப்பு வரும்.” என்கிறார் ஒரு  ஆர்.எஸ்.எஸ் தொண்டர்.

இந்த அடிமட்ட பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்-சும் மோடி பிரச்சாரக் குழுவும் இணைந்து bharatvijay.com என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்-சின் கோரிக்கைப் படி மும்பையைச் சேர்ந்த நெட்கோர் சொல்யூசன்ஸ் என்ற மென்பொருள் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் ஜெயின் இந்த தளத்தை வடிவமைத்திருக்கிறார். 200 ஊழியர்களை கொண்ட அவரது நிறுவனம் பல ஆண்டுகளாகவே மோடியின் இணைய பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அவர்கள் நாடெங்கிலும் உள்ள 400 தொகுதிகளில் கடந்த நான்கு மக்களவை தேர்தல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டி களத்தில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு உதவியாக இருக்கும்படி தயாரித்துள்ளனர்.

ஆர்.எஸ்.தொண்டர்கள் தமது கடவுச்சொல்லை பயன்படுத்தி கிராம மட்டம் வரையிலான வாக்காளர் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக எந்த கிராமத்தில் வெற்றி நிச்சயம், எந்த கிராமத்தில் வெற்றி இன்னும் உறுதியாகவில்லை, எந்த கிராமத்தில் வாய்ப்பு இல்லை என்று பார்த்துக் கொள்ள முடியும்.

“ஒரு தொகுதியை பற்றி புரிந்து கொள்ள எங்களுக்கு இது உதவுகிறது” என்கிறார் ராம் மாதவ். “மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்” என்கிறார் அவர்.

ராம் மாதவ்
“மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்”

ஆனால், ஆர்.எஸ்.எஸ் இத்தகைய புள்ளிவிபரங்களை தேர்தல் திட்டமிடலுக்கு பயன்படுத்துகிறதோ இல்லையோ வேறு எதற்கு பயன்படுத்தும் என்பது குஜராத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக வேலை செய்து முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருப்பதை, வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணி திரட்டியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், ஆதார் போன்ற திட்டங்களின் மூலம் குடிமக்கள் பற்றிய அடிப்படை விபரங்கள் அனைத்தும் இத்தகைய பாசிஸ்டுகளின் கையில் கிடைக்கும் போது அவற்றை தமது பாசிச பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு நடத்த பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

“முசாஃபர் நகரில் இந்துக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பல முறை சண்டை போட (கலவரங்கள் நடத்த) வேண்டியிருந்தது. மத்திய மாநில அரசுகள் ஒரு தரப்பாக நடந்து கொண்டன. அதனால இந்துக்கள் அனைவரும் கோபமாக உள்ளனர். ஒவ்வொரு இந்துவும், இந்து குடும்பமும் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்காக தமது குரலை எழுப்பி வருகின்றது.” என்கிறார் முசாஃபர் நகரின் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் மகேஸ்வரி.

ஆதிக்க சாதி அடையாளம் மற்றும் ஆதிக்கத்தை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி முசாஃபர் நகரில் கலவரத்தை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். பா.ம.க. ராமதாசு நாடகக் காதல் என்ற கதையை ஊதிப்பெருக்கி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டதைப் போல, லவ் ஜிகாத் என்பதை ஊதிப் பெருக்கி, அதன் மூலம் தன் கள்ளப் பிள்ளை பா.ஜ.க.வுக்கு ஜாட் சாதி ஓட்டுக்களைக் கவர திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ்.

இந்த மதவெறியூட்டப்பட்ட சாதிவெறி கும்பல்களால் துரத்தியடிக்கப்பட்ட 50,000 முஸ்லீம்கள் கடும் குளிர் காலத்தில் திறந்த வெளி முகாம்களில் வைத்து சாகடித்தன மத்திய மாநில அரசுகள். அவர்களை கிராமங்களுக்கு திரும்பி வர அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரித்த ஜாட் சாதி அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விஸ்வ இந்து பரிசத்தைச் சேர்ந்த விஜய் சவுத்ரி “நாங்க சனாதன தருமத்தின்படி ஓம்கார், விஷ்ணு, பிரம்மா, மகேஷ் என்று பல கடவுள்களை வழிபடுகிறோம். எந்த மனிதனையும் கடவுளாக கருத முடியாது என்றாலும், நாங்கள் விக்கிரகங்களை கடவுள் என்று நம்பி வழிபடுவது போல மோடியின் பிம்பம் எங்கள் பிரச்சாரத்தில் உதவியாக இருக்கிறது” என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலித் கொள்கை
சில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.

தமிழ்நாட்டில் வன்னிய சாதி வெறியைத் தூண்டி மக்களை பிளந்து போடும் பா.ம.கவைப் போலவே, முசாஃபர் நகரில் ஜாட் சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்கிறது பா.ஜ.க. சென்ற ஆண்டு நடந்த கலவரத்தின்பொழுது, “நரேந்திர மோடி ஒருவரால்தான் முசுலீம்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்” எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இப்போது மோடி குறித்த பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தி வருகிறது.

ஆனால், பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்தப்பட்ட பிரச்சாரங்கள் மூலமாகவும், ஊடகங்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பிம்பத்துக்கேற்ப உள்ளூர் அரசியலில்  தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், உ.பியிலும் பா.ஜ.கவுக்கு பிடி இல்லை.  “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்” என்ற இந்த நிலைமையை மனதில் வைத்து தமிழ்நாட்டில் இல.கணேசன் பிரச்சாரம் செய்வது போலவே “இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மோடியை பிரதமராக்குவதற்கான தேர்தல். மாநில அரசியலை மனதில் வைத்துக் கொண்டு சமாஜ்வாதி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநில கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும், முசாஃபர் நகரின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% முஸ்லீம்களும், தலித்துகளும் உள்ளனர். 40% முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை ஒன்று திரட்ட பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ், தலித் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது. மோடி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்யும் போது “மாநிலத்தில் மம்தா, மத்தியில் மோடி” என்று நைஸ் செய்தது போல தலித் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்.

பார்ப்பன சமூக அமைப்பில் “சமத்துவம் (சமதா) இருக்க முடியாது ஆனால், அனைத்து சாதி மக்களும் சகோதர உணர்வுடன் வாழ முயற்சிக்கிறோம்” என்கிறார் 92 வயதான ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் எம்.ஜி வைத்யா. இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான கொள்கை என்பதை புரிந்து கொள்ளாத சில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.

பா.ஜ.க பலவீனமாக இருக்கும் கிராமப்புறங்களில் மதவாத பிரச்சாரத்தை நடத்துவதற்கு விஸ்வ இந்து பரிசத் ஹரித்வாரிலிருந்தும் மீரட்டிலிருந்தும் பண்டாரம், பரதேசிகளை இறக்குமதி செய்திருக்கிறது. “இந்து சமூகத்தை பாதுகாக்கவும், நாட்டை முன்னேற்றவும், இந்துக்கள் அனைவரும் பா.ஜ.கவுக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்று அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். முதலாளிகள் கூட்டங்களில் “ஏற்றுமதி வளரணும், இறக்குமதி குறையணும்…” என்று மோடி பேசுவதற்கு மாறாக இந்த பண்டாரம், பரதேசிகளின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது.

அனைத்து மதத்தவரையும் அணைத்துச் செல்வதுதான் எங்கள் கொள்கை என்று மோசடி செய்யும் பா.ஜ.க முசாபர் நகரில் உள்ள 40% முஸ்லீம்கள் பகுதியில் பிரச்சாரம் செய்வதில்லை என்பதோடு எட்டிக் கூட பார்க்காமல் ஒதுக்கி வைத்து விட்டது.

“நாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து விடுவிக்கத்தான் பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். “பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி,  ஊழல் ஒழிப்பு, இவற்றுடன் சாதி, வட்டாரம், மதம், சிறுபான்மை, பெரும்பான்மை இவற்றின் பெயரில் சமூக நல்லிணக்கும் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்” என்கிறார் அவர். அவரைப் பொறுத்த வரையில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடுவதும், இந்துத்துவா வெறியர்களின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மை மதத்தினர் போராடுவதும்தான் சமூக அமைதியை பாதிக்கும் விஷயங்கள். கூடவே, மோடி பாணி வளர்ச்சியில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களை தாரை வார்ப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடுவதையும், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தமது உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுவதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாபா ராம்தேவ்
மோடியின் பெயரை சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம் பாபா ராம்தேவ்.

பா.ஜ.க இடத்துக்கு ஏற்றபடி தனது பிரச்சார உத்திகளை மாற்றிக் கொள்கிறது. உதாரணமாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா வோட் 272 என்ற குழு இளைஞர்களை ஈர்ப்பதற்காக தெருமுனை பாட்டுக் கச்சேரி நடத்துகிறது. இங்கே அல்ட்ரா மாடர்னாக தங்களது பிரச்சாரத்தை காட்டிக் கொள்வார்கள். அதையும் மீறி குடுமி வெளியே தெரியுமென்பது வேறு விசயம்.

பாபா ராம்தேவின் பக்தர்களையும் கவர் செய்திருக்கிறது மோடி பிரச்சாரக் குழு. யோகா மூலம் இந்தியர்களை ஆரோக்கியமாக்குவதற்கு 75% நேரம் செலவழிப்பதாகவும், இந்தியர்கள் பணக்காரர்கள் ஆவதற்கு மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார் ராம்தேவ். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடியின் பெயரை  சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம்.

‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க என்னும் ஆள் தின்னும் புலி தனது கோடுகளை அழித்து விட்டு சைவப் புலியாகி விட்டது’ என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் அதன் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, தே.மு.தி.க, தமிழருவி மணியன் மற்றும் இணையத்தில் கொடி பிடிக்கும் பத்ரி வகையறாக்கள், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க வெளிப்படுத்தும் அதன உண்மை முகம் தொடர்பாக எப்படி சப்பைகட்டு கட்டுவார்கள் ?

– பண்பரசு

மேலும் படிக்க

போங்கடா… நீங்களும் உங்க ஜனநாயகமும் !

16

தேர்தல் புறக்கணிப்பு

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

  • காசிருந்தால்தான் கல்வி!
    காசிருந்தால்தான் மருத்துவம்!
    காசுக்குத்தான் தண்ணீர்!
    காசுக்குத்தான்சாலை!
    காசுக்குத்தான் கக்கூசு!
  • எல்லாவற்றையும்
    காசாக்குவது அரசின் உரிமையாம்!
    இதை ஒப்புக்கொண்டு
    ஓட்டுப்போடுவது மக்களின் கடமையாம்!
    போங்கடா… நீங்களும்
    உங்க ஜனநாயகமும்!
  • சைகோ, டூப்டன், சாதிதாசு
    மூணும் பஸ் ஸ்டாண்டு கக்கூசு!
    கொள்கையெல்லாம் தமாசு
    மூணும் மோடிக்கு பெர்முடாசு!
  • ஜெயாவும் கருணாநிதியும் வர்றாங்க
    சொம்பெடுத்து உள்ளே வை!
    காவிவெறியர்களும் சாதிவெறியர்களும் வர்றாங்க
    கம்பெடுத்து வெளியில் வை!
  • பெரியார் மண்ணை மோடிக்குக் கூட்டிக் கொடுக்கும் எட்டப்பனே வைகோ!
  • போயசு தோட்டத்தில் புல் பிடுங்கிய போலி கம்யூனிஸ்டுகளே!
    நீங்கள் தேர்தலில் நிற்பது எதைப் பிடுங்க?
  • உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப். போடும்
    உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன?
    இதற்குத் தேர்தல் ஒரு கேடா?
  • கோக், பெப்சி, பா.ம.க, மிராண்டா…
    காங்கிரசு, பி.ஜே.பி, ம.தி.மு.க, லிம்கா…
    தி.மு.க, அ.தி.மு.க, தெலுங்குதேசம், ஃபாண்டா…
    எல்லாமே ஏகாதிபத்திய பிராண்டுதான்டா!
  • அரசு கொள்கை முடிவின்படி சட்டபூர்வமாகவே
    கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு வழிவகுப்பதுதான்
    தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்!
    இதற்குப் பாதை வகுத்துக் கொடுக்கும்
    அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு வீசப்படும்
    எலும்புத்துண்டே இலஞ்சஊழல்!
    தனியார்மயத்தையும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தையும்
    ஒழிக்காமல் ஊழல் ஒழிப்பு என்று பேசுவது பித்தலாட்டம்!
  • கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான
    தேர்தலைப் புறக்கணிப்போம்!
  • புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
  • நிலம், தண்ணீர், வேலை வேண்டும்!
    கல்வி, மருத்துவம், சாலை வேண்டும்!
    போராட்டம் வேண்டும்…புரட்சி வேண்டும்!
    ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!
  • கோடீசுவரர்கள், கிரிமினல்களின் கூடாரமாய் நாடாளுமன்றம்!
    பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு கங்காணிகளாய்
    கலெக்டர்கள், அதிகாரிகள்!
    நீதிக்கு விலைபேசும் நீதிபதிகள்!
    நாலும் உதிர்த்துவிட்ட ஊடக விலைமாந்தர்கள்!
    வல்லுறவு – கொலை -வழிப்பறிக்கு வழிகாட்டியாய் போலீசு!
    அரசும் சமூகமும் அழுகி நாறுது!
    அதுக்கு அத்தர் பூசத்தான் தேர்தல் வருகுது!
    போலி ஜனநாயகத்தை அடித்து நொறுக்கு!
    புதிய ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பு!
  • பன்னாட்டுக் கம்பெனிகள், அம்பானி – டாடா போன்ற
    தரகு அதிகார வர்க்க முதலாளிகளின்
    சொத்துக்களைப் பறிமுதல் செய்து
    அரசுடைமையாக்குவோம்!
  • பகற்கொள்ளையடித்த
    ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைப்
    பறித்தெடுத்து அரசுடைமையாக்குவோம்!
  • கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட
    அனைத்து சேவைத்துறைகளிலும்
    தனியார்மயத்தை ஒழித்து பொது உடைமையாக்குவோம்!
  • வளர்ச்சி எனும் பெயரில்
    நீர், நிலம், காற்று உள்ளிட்ட
    சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும்
    முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவோம்!
  • தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலமுதலைகள்,
    கல்வி,  மருத்துவ, ரியல் எஸ்டேட், தண்ணீர்க் கொள்ளையர் கூட்டத்தின்
    சொத்துரிமை, வாக்குரிமையைப் பறிப்போம்!
  • உழைப்போர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும்
    மக்கள் அதிகாரத்தைப் படைப்போம்!
  • அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின்
    அதிகாரத்தைப் பறித்தெடுப்போம்!
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ்
    அவர்களைக் கொண்டு வருவோம்!
  • சட்டம் இயற்றவும் அதனை அமல்படுத்தவும் அதிகாரம்
    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்கே!
    தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும்,
    தண்டிக்கவும்  அதிகாரம் வாக்களித்த மக்களுக்கே!

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
தமிழ்நாடு

தொடர்புக்கு

அ.முகுந்தன்,
110, இரண்டாம்தளம்,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

அலைபேசி: 94448 34519

ஓட்டுப் போட்ட அப்பன் காலி, நீ போட்டா வம்சமே காலி

4

வா தல ! புறக்கணி தேர்தல!

நாம ரூட் அடிச்சா
தப்பாம் தல!
இவங்க ஓட்டடிக்கத்தான் –
தேர்தலே!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

செட்டு சேர்ந்து
வெட்டு குத்து
நம்மில் சிலர் தப்புதான்,
செட்டு செட்டா
ரவுடி வர்றான்
கேட்டா நாடாளுமன்ற தேர்தலாம்!

கம்பிக்கு பின்னால
இருக்குறவனெல்லாம்
எம்.பி. எம்பி குதிக்குறான்,
தம்பி எனக்கொரு ஓட்டுண்ணு
நம்மையும்
ரவுடி லிஸ்ட்டுல சேர்க்குறான்.

புட் போர்டு
நீயும் நானும் அடிச்சா தப்பு,
அதையே
அம்மா வண்டியில அடிச்சா
பாதுகாப்பு!

படிக்கிற வயசுல
அரசியல் கூடாதுன்னு
நம்பள,
அமைப்பா சேரவிடாமல்
தடுக்குறான்,
இளைஞர்கள் ஓட்டு
எங்க கட்சிக்கேன்னு
எல்லா மொக்கையும்
பேஃஸ்புக்குல சொடுக்குறான்!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

லட்சம் லட்சமா
பணத்தை வாங்கிட்டுத்தான்
கல்லூரி சீட்டே
கொடுக்குறான்,
இவன் லட்சியமே
இளைஞர்களை வாழ வைப்பதுன்னு
மச்சான்!
என்னமா ஊத்துறான்!

கல்லூரி விடுதிக்கு
ஒரு கக்கூசு கேட்டா
‘மாமாவ’ விட்டு அடிக்கிறான்,
நாம ஓட்டு போட்டா
நாட்டையே வல்லரசாக்குவேன்னு
மைக்கு வழியா
கழியுறான்!

பஸ் பாஸ் இல்லை
கல்ச்சுரல்ஸ் இல்லை
பட்டியில் ஆடாய்
அடைக்கிறான்,
இதுக்கு எந்தக் கட்சியும்
எட்டிப் பார்க்கல
இப்ப ஓட்டுக்கு வந்து
அரிக்கிறான்!

கல்வி, வேலைவாய்ப்பில்
இடஒதுக்கீட்டை எதிர்க்கிறான்,
இந்து, இந்துன்னு
ஒண்ணாயிருக்கும் மாணவர்கிட்ட
பார்ப்பன வெறியை பரப்புறான்!

நம்ம இளவரசன் – திவ்யா
காதலிச்சா
சாதியைச் சொல்லி எரிக்கிறான்!

இந்த கேடிங்க எல்லாம்
ஒண்ணா சேர்ந்து
மோடி வளர்ச்சியின் நாயகன்னு
மூலைக்கு மூலை திரியுறான்,
மச்சான்! உஷாரு
கூட்டத்தில் பாக்கெட் அடிக்கிறான்!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

கேம்பஸ் இண்டர்வியூன்னு
அடிமாட்டு விலைக்கு
மாணவர்களை
மாட்டுச்சந்தையா மடக்குறான்,

ஃபோர்டும், ஹீண்டாயும்
போட்டு பிழியுறான்,
உரிமை கேட்டு
சங்கம் வைத்தால்
உள்ளூர் கட்சிக்கும்பலும்
சேர்ந்து தடுக்குறான்,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புன்னு
நம்ம தோலை உரிக்கவே
தேர்தல் நாளை பாக்குறான்!

இந்தியாவை முன்னேற்றுவோம்னு
இளைஞர்கள்கிட்ட,
ஓட்டை கேக்குறான்,
எவன் வந்தாலும்
அமெரிக்காவுக்கு வேலை பார்க்க
ஐ.டி. அவுட் சோர்சிங்னு
நம்பள ராக்கோழியா அறுக்குறான்,

படிக்காதவன் பெட்டிக்கடை வச்சா
அதிலும்
பன்னாட்டு கம்பெனியை விட்டு
கருக்குறான்!

ஓட்டு வாங்குனவன்
உலகப் பணக்காரன் லிஸ்டில்,
ஓட்டு போட்டவன்
உள்ளூர் கடன்காரன் லிஸ்டில்,
இந்த ஓட்ட தூக்கி
போடு மச்சான் வேஸ்ட்டில்!

போராடும் மாணவர்கள்
போராடும் மாணவர்கள் (கோப்புப் படம்)

தல!
நாம பழைய கடனை
அடைக்க முடியாமல்
பரிதவிக்கிறோம் ரோட்டில்,
நம்பள
புதிய தலைமுறை வாக்காளரா
புடிச்சுப்போட
பொறி வைக்கிறான் ஓட்டில்,

என்னதான் நடக்குது நாட்டில்?

விவசாயமின்றி விரட்டப்படும் இளைஞன்
திருப்பூர் எக்ஸ்போர்ட்டில் கிழியுறான்,

சிறுதொழில், நெசவின்றி
விரட்டப்படும் இளைஞன்
போய் கல் குவாரியில் உடைகிறான்,

வைகை மண்ணை இழந்த இளைஞன்
போய் ஆந்திரா முறுக்கில் நெளிகிறான்,
வாலிபத்தை இழந்த இளைஞன்
போய் மலேசியாவில் ஒழிகிறான்,

வடக்கிருந்து வரும்
இளைஞனின் ரத்தம்
மேம்பாலம், கட்டிட பூச்சில்
உறையுது!

நாடு முழுக்க நாடோடியாகி
இளைஞனின் கண்களில்
இந்தியா இருண்டு மறையுது!

பீட்சா, பர்கர்
எவனோ திங்க
நம்ம தலைங்க உயிர்
பாஸ்ட்புட் பைக்கில் பறக்குது,

கூரியர், மார்க்கெட்டிங்,
பெட்ரோல் பங்க், கூலிக்கு லோடு தூக்கி
நம்ம
‘கேரியரே’ நிச்சயமில்லாமல் தவிக்குது!

பிடிச்ச லவ்வரு
பிடிச்ச வேலை
பிடிச்ச சம்பளம்
உரிய மரியாதை
இப்படி எதுவுமே கிடைக்காமல்
வாழ்க்கையே தெருவில் கிடக்குது!

ஒரு வாக்கை மட்டும்
போடுவது கடமையின்னு
தேர்தல் வந்து மடக்குது!

வாக்களிப்பு எந்திரம்
புறக்கணி தேர்தல! அப்புறம் மொத்த பொத்தானும் உன் காலுல!

போட்ட ஓட்டுக்கு
நம்ப அப்பன் காலி,
இனியும் போட்டோம்னா
நம்ப வம்சமே காலி!

ஓட்டுப் போட்டாலே
ஒட்டிக் கொள்ளும்
எய்ட்ஸ் ஜனநாயகத்துக்கு
நாமளா ஆளு?

என்ன இருந்தாலும்
அந்தப் பொத்தானை
ஒரே ஒரு முறை
அழுத்திப் பார்க்க ஆசையாயிருந்தால்,
வா தல!
புறக்கணி தேர்தல!
அப்புறம்
மொத்த பொத்தானும் உன் காலுல!

– துரை.சண்முகம்

சிதம்பரத்தில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு – போராட்டத்தால் முறியடிப்பு

3

kamaraj-school-protest-2சிதம்பரம் காமராஜ் மெட்ரிக்பள்ளி தாளாளரின் நடவடிக்கை காவல் துறையின் அடக்குமுறையை காட்டிலும் கொடூரமானது என்பதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்து. தனியார் பள்ளி முதலாளிகள் தங்கள் லாபத்திற்காக எதையும் செய்வார்கள் என்பதற்கு சிறு உதாரணம்தான் காமராஜ் பள்ளி. கல்வி சேவை என்பதெல்லாம் டாஸ்மாக் சரக்குக்கு கொடுக்கும் இலவச ஊறுகாய் போன்றது.

8-4-14 அன்று நடந்த பொதுத் தேர்வில் சுமார் 650 மாணவர்களை தேர்வு எழுதாமல் தடுத்ததுடன் விளையாட்டு அரங்கில் அவர்களை தனியே அமர வைத்துள்ளனர். காரணம் என்ன? இவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டவில்லை என்பதுதான். இதற்காக நாம் கடந்த இரு வருடங்களாக போராடி வருகிறோம். பல்வேறு பெற்றோர்களும் இப்போராட்டத்தை ஆதரிப்பதால் இந்த தனியார் பள்ளி கொலை வெறியில் உள்ளது. தாளாளர் லட்சுமிகாந்தன், முதல்வர் சக்தி மேடம் ஆகியோர் “உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனவே அனுமதிக்க முடியாது” என திட்டவட்டமாக பெற்றோர்களிடம் தெரிவித்தனர். தனியே அமர வைக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைமையில் பள்ளி வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். காலை 10-மணிக்கு தொடங்கி போராட்டம் இரவு 9-00 மணிக்கு முடிந்தது. பெற்றோர்கள் இட்ட முழக்கம் பொது மக்களையும் ஏனைய பெற்றோர்களை திரும்பி பார்க்க வைத்தது.

பள்ளிக்கு இரவு வந்த மாவட்ட முதன்மை கல்விதுறை அதிகாரி பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு ”இன்று நடந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். இன்று மாணவர்கள் பொது தேர்வு எழுத விட மறுத்ததற்கு பள்ளி நிர்வாகம் உரிய விளக்கத்தை 24 மணி நேரத்திற்குள் மெட்ரிக் இயக்கநருக்கு தெரிவிக்க வேணடும்” என அங்கேயே பள்ளி நிர்வாகத்திடம் உத்திரவை வழங்கியதுடன் நமது சங்கத்தினருக்கும் நகல் வழங்கினார். அதன்பிறகுதான் பள்ளியிலிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

பள்ளியில் போராட்டம் தொடங்கியவுடன் சிதம்பரம் காவல் ஆய்வாளர் முருகானந்தம் காவலர்களுடன் வந்தார். போராட்டம் நடத்திய பெற்றோர்களை பள்ளி வளாகத்திலிருந்து போக சொன்னார். “8-ம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாயம் பாஸ் போட்டு விடுவார்கள் கவலை வேண்டாம் குழந்தைகளை அழைத்து வீட்டுக்கு போங்கள்” என அறிவுரை சொன்னார். காவல் துறை அதிகாரி இவ்வளவு கேனத்தனமாக பேசுகிறாரே என்று பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் ஏளனமாக பார்த்தனர்.

டி.எஸ்.பி.ராஜாராம் வந்தார். “பெற்றோர்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள், நான் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமளவிற்கு தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்” என பேசினார். மேலும், “பள்ளி தாளாளர் கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதியரசர் சிங்காரவேலு கட்டண கமிட்டியிடம் உத்திரவு பெற்றுள்ளார். நீங்கள் பள்ளி வளாகத்திலிருந்து கலைந்து செல்லுங்கள், துணை ஆட்சியர் அவர்களிடம் சென்று முறையிடுங்கள்” என நயவஞ்சகமாக அறிவுரை சொன்னார். பெற்றோர்கள், “எங்கள் வழக்கறிஞர் சொல்லாமல் நாங்கள் கலைய மாட்டோம்,எங்களை வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள்” என பதிலளித்தனர்.

kamaraj-school-protest-1மனித உரிமை பாதுகாப்பு மைய மா.துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில் காவல் துறையினரிடம் பேசினார்.  “நீங்கள் எப்படி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வீர்கள்? உங்கள் அதிகாரம் என்ன என்று உங்களுக்கும் எங்களுக்கும் நன்றாக தெரியும். சட்டம் ஒழுங்கு ஏற்படாமல் தடுப்பதே உங்கள் வேலை.பெற்றோர்கள் கல்வி துறை அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து கலைய மாட்டார்கள். மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்தது சரிதான் என கல்வி துறையினர் எழுதி கொடுக்கட்டும். நாங்கள் செல்கிறோம். அதுவரை காவல் துறை பாதுகாப்பு கொடுத்தால் மட்டும் போதுமானது. பெற்றோர்களை தாக்கியதற்கு தாளாளர் மீது நடவடிக்கை எடுக்காத நீங்களா இதற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள். தாளாளர் லட்சுமி காந்தன் உங்களை எல்லாம் மதிக்க மாட்டார்” என பேசினார். காவல் துறை அதிகாரிகள், “பழைய பிரச்சினை பற்றி பேசவேண்டாம். இன்றைய பிரச்சினை பற்றி மட்டும் பேசுங்கள்” என பதில் கூறிய திருப்தியில் அமைதியாக சென்றனர்.

தாசில்தார் வந்தார். டி.இ.ஓ வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் பேசினார்கள். துணை ஆட்சியர் அரவிந்தன் போனில் பேசினார். பள்ளி தாளாளர், “எனக்கு சிங்காரவேலு கமிட்டி பணம் கூட வாங்கி கொள்ளலாம் என உத்திரவு கொடுத்துள்ளது. பணம் கட்டாத யாரையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது” என அனைவருக்கும் ஒரே பதிலை சொன்னார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்சங்கம், “தீர்வு ஏற்படும் வரை பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற முடியாது” என தெரிவித்து உறுதியாக இருந்தனர். வேறு வழியில்லாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.இ.ஓ.மற்றம் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அவர்களை மாலையில் அனுப்பி வைத்தார். கல்வி துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம், பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து உண்மையை உறுதிசெய்து உத்திரவு வழங்கினர்.

இந்த போராட்டத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் முஜுபூர் ரகமான், பொருளாளர் சீனிவாசன் ஆகியோரும்  ரவிசந்திரன், ராம்குமார்,  பேராசிரியர்.இளங்கோ, வேல்முருகன், நடராசன், ஜோதி, சோழன், அன்வர்தீன், ரகீம் பாய், உட்பட நூற்றுக்கணக்கான  பெற்றோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். லலிதா,ரூபா,மசூதா   மற்றும்  இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காமராஜ் பள்ளியின் கட்டண முறையின் பின்னணியை புரிந்து கொள்வதற்கு சில குறிப்புகளை தருகிறோம். ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பெற்றோர்களிடம் பல மடங்கு வசூலித்த காமராஜ் பள்ளி நிர்வாகம் 2013-2014 ஆண்டுக்கான கல்வி கட்டணம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதுடன் பெற்றோர்கள் டி.டியாக அல்லது காசோலையாக அல்லது பணமாக எப்படி கொடுத்தாலும் வாங்கி கொள்கிறோம் என அறிவித்தது. இந்த நிலைக்கு காமராஜ் பள்ளி தாளாளர் வருவதற்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் உறுதியான போராட்டம்தான் காரணம்.

ஆனால் பள்ளி தாளாளர் கூடுதல் கட்டணத்தையே அரசு கட்டணமாக வாங்கி கொண்டு வந்து விட்டார். இந்த கல்வி ஆண்டின் இறுதியில் ஜனவரி மாதம் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன் பெற்றோர்களுக்கு அறிவிப்பு அனுப்பினார். “நீதியரசர் சிங்காரவேலு அவர்களிடம் கல்வி கட்டணம் போதவில்லை என்று முறையீடு செய்து அதில் 100 சதவீதம் உயர்த்தி கொடுத்துள்ளார். எனவே பெற்றோர்கள் உடனே பாக்கி தொகையை கட்டவேண்டும் இல்லை என்றால் மாணவர்கள் பெயரை வருகை பதிவேட்டிலிருந்து நீக்கிவிடுவேன்” என எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பினார். உயர்த்தப்பட்ட கட்டண உத்திரவை அறிவிப்பு பலகையில் போடவில்லை. பெற்றோர்களுக்கும் காட்டவில்லை. “உயர்நீதிமன்ற உத்திரவின்படி 15 சதவீதம் உயர்த்தி வாங்கிய பிறகு மீண்டும் இவ்வளவு உயர்வாக கல்வி கட்டணத்தை செலுத்த முடியாது. கட்டண நிர்ணயத்தில் முறைகேடு நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பள்ளி பெற்றோர்களின் கருத்தை அறிந்து நியாயமான அளவில் நிர்ணயிக்க படவேண்டும். 100 சதவீத கல்வி கட்டண உயர்வை ஏற்கமுடியாது” என பெற்றோர்கள் மறுத்தனர்.

“நேர்மையான திறமையான கல்வி துறை அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்திய பிறகே நாங்கள் உயர்த்தபட்ட கட்டணத்தை ஏற்பதா? என்பதை முடிவு செய்ய முடியும்” என பெற்றோர்கள் அனைத்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார்மனு அனுப்பியுள்ளனர். வழக்கம் போல் கல்வித் துறை எருமைமாட்டு மேல் தண்ணி தெளிச்சது போல் அமைதியாக இருக்கும், இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். புகார் மனு, வழக்கு, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென்றால் பெற்றோர்கள் சமரசமின்றி கல்வி தனியார்மயத்திற்கு எதிராக போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும். கல்விக் கட்டணம் குறைப்பு என சலுகை கேட்டு போராடினால் பெற்றோர்கள் அவமானபட வேண்டும் என்பதுதான் அனுபவம், வரலாறு.

தலைமை கல்வி அலுவலர் உத்தரவு
முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. கமிட்டி உத்தரவு இல்லாமல் கட்டண நிர்ணயத்தை கேள்விகேட்க முடியாது என்றும் வழக்கை தள்ளுப்படி செய்யப் போவதாகவும் கூறியபோது,

  • கமிட்டி பெற்றோர் மாணவா் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் கட்டணம் நிர்ணயித்ததால் அதன் உத்தரவு நகல் எங்களுக்கு கிடைக்க வில்லை என்றும்,
  • 650 மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள், இடைக்காலமாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும்,
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன் கீழ் 14 வயது வரை கல்வி அளிப்பது அரசின் கடமை என்றும்
  • மேலும் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16 எக்காரணம் கொண்டும் 14 வயது வரை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை எடுத்துக்கூறியும்,
  • அரசியலமைப்புச் சட்டத்தையும், கல்விக்கான சிறப்புச் சட்டத்தையும் நீதிமன்றமே அமுல்படுத்த தயாராக இல்லாத நீதிமன்றம் எதற்காக இருக்கிறது

என்று கேள்வி எழுப்பிய பிறகு வாய்மொழியாக முதன்மை கல்வி அலுவலா் உத்தரவை உடனடியாக நடைமுறை படுத்த உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்
சிதம்பரம்.

வளர்ச்சியை கொண்டு வருவோம், அனைவருக்கும் கல்வியை கொடுப்போம் என அனைத்து ஓட்டுக் கட்சிகளும் வாய் கிழிய இந்த தேர்தல் பரப்புரையில் கத்தி வருகின்றன. ஆனால் இந்த வளர்ச்சி முதலாளிகளுக்கானது, கல்வி காசு உள்ளவனுக்கு மட்டுமே என்பதை இந்த பள்ளி நிரூபித்துள்ளது. ஆனால் மக்கள் போராட்டமே தீர்வு,தேர்தல் அரசியல் அல்ல என்பதை இந்த போராட்டம் நிரூபித்துள்ளது. கல்வி உரிமை வேண்டுவோர் போராட வேண்டிய பாதை இதுதான்.

– வினவு

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை

50

செய்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அரசியலமைப்பு சட்ட வரையறைக்கு உள்பட்டு ராமர் கோயில் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீதி: அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை மறுத்தால் வரலாற்றுத் துறை ஒழிக்கப்படுவது வரலாறாயிருக்கும். பாபர் மசூதியை இடிப்பதற்கு சட்டபூர்வமாகவே அனுமதிக்கவில்லை என்பதாலேயே அரசு நிர்வாகம் கரசேவகர்களால் முடக்கப்பட்டது. இதற்கு மேல் ராமர் கோவில் கட்டுவதை மறுத்து விடுவதற்கு அரசியலமைப்பு சட்டம் என்ன அடிமுட்டாளா? ஓம் கடப்பாறை கரசேவை ஷாந்தி!
_________

பா.ஜ.க தேர்தல் அறிக்கைசெய்தி: அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவில், பொது சிவில் சட்டம் அரசின் முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பாஜக ஆட்சிக்கு வந்ததும், பொது சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: அப்போது பொதுசிவில் சட்டப்படி அக்ரகாரங்களில் மட்டுமே அரசு அலுவலகங்கள் இருக்கும். வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு வருண தர்ம ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்படும். கிறித்தவ சீரழிவான விவாகரத்து ஒழிக்கப்பட்டு, கல்லானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் எனும் இல்லற நீதி வல்லறமாக நிலை நிறுத்தப்படும். பெண்களுக்கு சம சொத்துரிமை எனும் இசுலாமிய சீரழிவு அகற்றப்பட்டு பாரதப் பண்பாட்டின் படி அடுப்பங்கரையிலேயே மாதர் தம் வாழ்க்கை முடிய வேண்டும் என்பது நிலைநாட்டப்படும். ஓம் முசல்மான் – கிறித்தவ – ஒழிப்பு ஷாந்தி!
________

செய்தி: ராமர் சேது பாலம் நமது நாட்டின் கலாசார பாரம்பரிய சின்னமாகும். மேலும் தோரியம் அதிக அளவு கிடைக்கும் பகுதியாக அப்பகுதி திகழ்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு  சேது சமுத்திர திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

நீதி: தசரதனது அறுபதினாயிரம் மனைவியர் வாழ்ந்த வடக்கு உபி மாநிலத்தில் மக்களை வெளியேற்றி, கிருஷ்ணன் கோபியர் உடைகளை ஒளித்த நதியில் நீரெடுக்கும் விவசாயிகளை தடை செய்து, பீமன் புசித்த காய், கனி, கிழங்குகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு, இந்திரன் கள்ள உறவு கொண்ட ரிஷி பத்தினிகள் வசித்த காடுகளில் இருக்கும் விலங்குகளை கொன்று, புராணங்களில் வரும் அனைத்து பாரம்பரிய சின்னங்களும் எச்சரிக்கையாக பாதுகாக்கப்படும். ஓம் புண்ணிய ஷேத்ர மாத்ரு பூமி ஷாந்தி!
_________

செய்தி: ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்து அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்படும். காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகள் முழு மரியாதை மற்றும் பாதுகாப்புடன் அவர்களின் பூர்விக இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்.

நீதி: ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தின் அனைத்து பரிவாரங்களோடும் கலந்து பேசி, காஷ்மீர் விடுதலைக் கட்சிகளை இராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கி ஜனநாயக முறைப்படி 370-வது பிரிவை ரத்து செய்வோம். பண்டிட்டுகள் கௌரவத்துடன் குடியேற்றப்படும் நாளில் ‘காணாமல் போன’ காஷ்மீர் மக்களின் பட்டியல்கள், புகார்கள், விசாரணைகள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்படும். ஓம் காஷ்மீர் ஸ்வாஹா!
________

செய்தி: 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், நாடு நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாற்றியமைக்கப்படும்.

நீதி: அந்த நிலை மாற்றம் இப்படித்தான். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் வெளியே தெரியாத வண்ணம் இரகசியம் பேணப்பட்டு, ஊடகங்களும் கவனிக்கப்பட்டு ‘வளர்ச்சியை’ உறுதி செய்வோம். வேலையின்மையை போக்காவிட்டாலும் வேலையற்ற இளைஞர்களை அமைதிப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு நகரத்திலும் கதாகலேட்சேபம், உபந்நியாசம், ஆன்மீக உரைகள், முதலியவை ஜக்கி, நித்தி, ஆஸ்ரம் பாபு, ஜயேந்திரர், மதுரை ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் முதலான ஆன்றோர்களை கொண்டு நடத்தப்படும். ஓம் ஸ்வாமிஜி காயகல்பம் ஷாந்தி!
___________

மோடி - ஆர்.எஸ்.எஸ்
“தேர்தல் வந்தாச்சு.. வழக்கம் போல இத எடுத்துக் கிட்டுப் போய் வேலைய காட்டு”

செய்தி: நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும். நிர்வாகம், காவல்துறை, தேர்தல் துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

நீதி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேவர்களுக்கு அம்மா வழியில் கட்டற்ற அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் மூலதன கோமான்களுக்கு சுபீட்சத்தையும், புகார் கொடுத்தாலே பரலோகம் எனும் சாஸ்வத யதார்த்தம் மூலமாக நாட்டு மக்கள் குறைபட்டுக் கொள்ளாத சூழலையும் உருவாக்கி ந(வ)ல்லாட்சி வழங்குவோம். ஓம் கடாயுதம் ஷாந்தி!
________

செய்தி: வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படும். அதேசமயம் சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை விதிக்கப்படும்.

நீதி: பாரத மாதாவை பிளாட்டு போட்டும், ரூட்டு போட்டும் சம்ஹாரம் செய்ய அந்நிய முதலீடுகள் வரவேற்கப்படும். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை என்பது மறைமுக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்று புரிந்து கொள்க. ஓம் அமெரிக்க பகவான் ஷாந்தி.
_________

செய்தி: வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும்.

நீதி: வெளிநாட்டு இந்தியர்களின் கருப்பு பணத்தை யாராவது அனாமதேயங்கள் அடித்துக் கொண்டு போவதை தடுக்கும் வண்ணம், எவரும் அறியாத படி பாதுகாப்பாக வேறு இடங்களில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கான லட்சுமி கடாட்ச நடவடிக்கை குழு, நிதீன் கட்காரிஜி, எடியூரப்பாஜி, ரெட்டி சகோதரர்கள்ஜி பங்கேற்புடன் அமைக்கப்படும். ஓம் ஸ்விஸ் வங்கி நமஹா!
_________

செய்தி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

நீதி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வங்கி மற்றும் இதர அரசு வங்கிகளில் மாதந்தோறும் லட்சுமி கடாட்ச நிதி ஸ்தல ஜீவாமிருத யாகம் தலா ஐந்து கோடி செலவில் நடத்தப்படும். விலைவாசியைக் கட்டுப்படுத்த அன்னதானம், துணிதானம், காய்தானம், அரிசி தானம், கோதுமை தானம், பருப்பு தானம், எண்ணெய் தானம் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும். அதற்கான செலவை அரசே கொடுக்கும். ஓம் மக்கள் காசில் பிச்சா தர்மம் ஸ்வாஹா!
_________

செய்தி: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியா – வங்கதேசம், இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும்.

நீதி: வடகிழக்கு மாநிலங்கள் பாதுகாப்புடன் வளர இப்போது இருக்கும் இராணுவப் படைகள் இருமடங்காக்கப்படும். இராணுவச் சட்டங்களின் விதிமுறைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். தடுப்பு வேலிக்கு தரமான கம்பிகள் வாங்குவதற்கான தர கட்டுப்பாடு நான்கு மடங்கு அதிகரிக்கப்படும். ஓம் நார்த் ஈஸ்ட் குளோஸ் பண்ணு ஷாந்தி!
_________

செய்தி: பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இணையதளம் மூலம் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் வரி விதிப்பில் எளிய முறையை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஊழலுக்கு முடிவு கட்டப்படும்.

நீதி: விழிப்புணர்வு – லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்கவில்லையா என்ற எச்சரிக்கை, இணைய தள நிர்வாக நடவடிக்கை – லஞ்சத்திற்கு பேரம் பேசாமல் ஒரே ரேட்டில் நெட்டில் மாற்றிக் கொள்ளும் வசதி, வரி விதிப்பில் எளிய முறை – காசு இல்லாதவனுக்கு அதிக வரி, இருக்கிறவனுக்கு கம்மி வரி போட்டால் பணக்காரர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபடாமலும், ஏழைகள் தலையெழுத்தே என நொந்து கொண்டு வரி கட்டியும் வருவார்கள் – ஓம் கரப்ஷன் கன்வர்ஷன் ஷாந்தி!
__________

பார்ப்பன பாசிஸ்ட் மோடி
பார்ப்பன பாசிஸ்ட் மோடி

செய்தி: அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், அதேசமயம் அச்சுறுத்தும் வகையில் அந்நாடுகளின் நடவடிக்கைகள் இருந்தால், அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: முதலாளிகளின் நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு நடக்கும் ஏற்றுமதி இறக்குமதியில் நட்புறவு இருக்கும். கட்சி நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு சிண்டு முடியும் நோக்கத்தில் அறிக்கைகளில் மட்டும் ஆவேசம் காட்டப்படும். போர் வந்தால் பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்பதால், மோடியின் அமைச்சரவை மட்டும் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல கடலுக்கடியில் புல்லட்டின் சுரங்க ரயில் பாதை அமைக்கப்படும். ஓம் தேசபக்தாய சவடால் ஷாந்தி!
________

செய்தி: தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி அரசால் ரத்து செய்யப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் மீது நேர்மையான மற்றும் துரிதமான விசாரணை நடத்தப்படும். அரசியல் தலையீடு இன்றி புலனாய்வு அமைப்புகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீதி: அசீமானந்தா மூலம் தியாகத்துடன் ஆர்.எஸ்.எஸ் செய்து வந்த பணிகள் இனி தேவையில்லை என்பதை அரசு மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் நிரூபிக்கும். பொடா, தடாவை விஞ்சும் கடுமையான சட்டங்கள் சடுதியில் வரும். அதன்படி குல்லா, தாடி, கைலிகள் கூட தீவிரவாதிகளை கொல்வதற்கு போதுமான ஆதரங்களாக இருக்கும். அமீத் ஷா தலைமையில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் நடக்கும் என்பதால் ஹமாம் நேர்மையை விஞ்சும் அமீத் நேர்மையோடு அரிசி, கோதுமை தலையீடு எதுவும் இருக்காது. ஓம் சிறுபான்மை இனி இல்லை ஸ்வாஹா!
__________

செய்தி: நாட்டின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஒ. வலுப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்புத் துறைகளில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் தனியார் மற்றும் நேரடி அன்னிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.

நீதி: பயில்வான்தான் பஞ்சாயத்து பண்ண முடியும் எனும் ஆர்எஸ்எஸ் நிறுவனம் ஹெட்கேவாரின் பொன்மொழிப்படி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்கு வரம்பில்லாத நிதி ஒதுக்கப்படும். அந்த நிதி மூலம் பாரத மாதாவை பாதுகாக்கும் பணியினை அமெரிக்க விமானங்களும், ரசிய கப்பல்களும், பிரான்ஸ் துப்பாக்கிகளும், இங்கிலாந்து ஹெலிகாப்டர்களும், இசுரேல் ரேடார்களும் இங்கே தயாரிக்கப்பட அனுமதிக்கப்படும். ஓம் சுதேசி ரக்ஷா விதேசி கரக்ஷா ஷாந்தி!
__________

செய்தி: சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் பங்களிப்புடன் நாட்டில் உள்ள நதிகளை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், விவசாயப் பகுதிகளுக்கும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர முன்னுரிமை அளிக்கப்படும்.

நீதி: ஆகாய கங்கை, அண்டர் கிரவுண்ட் சரஸ்வதி போன்ற இகலோக கண்களுக்கு தெரியாத நதிகள் ஓடும் நாட்டில், இருக்கும் நதிகளை மானசீகமாக இணைத்து “ஏகாத்மதா ஸ்தோத்திரம்” பாடுவது மூலம் திட்டம் நிறைவேற்றப்படும். கங்கையில் வீசப்படும் நீத்தார் உடல்களை தின்று சீரணிக்க முதலைகள் தருமாறு முதலாளிகளிடமும், கும்பமேளாவில் அழுக்குடன் வரும் நாகா ஸ்வாமிகளை வாசனை சோப்பு போட்டு குளிக்க வைக்க சோப்பு கம்பெனிகளிடமும், உதவி கோரப்படும். கிராமங்களில் மழை பெய்ய, குளம் நிரம்ப வாயு பகவான் கோவில் அமைத்து வாரந்தோறும் மழை வேண்டி சிவரஞ்சனி ராகம் இசைத்து வேண்டப்படும். ஓம் கங்கா ஸ்னாநம் நாத்தம் போக ஷாந்தி!
_________

செய்தி: அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம் உள்பட புதிய தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்படும். மருத்துவமனைகள் நவீனபடுத்தப்படும்.

நீதி: புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் ஏபிவிபியால் கொண்டு செல்லப்பட்டு இந்துக்களிடையே இருக்கும் ஷாதிய பிரிவினை வாதம் குறைக்கப்படும். காப்பீட்டு திட்டம் மூலம் கார்ப்பரேட் பகவான்களை கவனிக்கும் கொள்கை உருவாக்கப்படும். ஓம் சமூகநீதி லேது ஷாந்தி!
_________

செய்தி: தேசிய கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். யுஜிஸி அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு, உயர்கல்வி ஆணையமாக மாற்றப்படும்.

நீதி: ஜோசியம், ஜாதகம், நாடி-சோடி-பறவை-எண்-ஜோசியம் முதலான அறிவியல் துறைகள், புராணங்கள் அனைத்தையும் கொண்ட வரலாறு, இந்து மன்னர்களின் பொற்காலம், முசுலீம் மன்னர்களின் இருண்ட காலம், தேவபாஷையின் கீர்த்தி, அனைத்தும் கொண்ட புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்படும். பாரிவேந்தர் பச்சமுத்துஜி, நீதிவேந்தர் ஏசி சண்முகம்  மேற்பார்வையில் உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். குருகுலங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். ஓம் கல்வியைக் கொல் ஷாந்தி!
_________

செய்தி: கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். அதற்கான கொள்கை பொது மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

நீதி: நாடெங்கும் கப் பஞ்சாயத்து கட்டாயமாக்கப்பட்டு, உயர்சாதி மக்களின் கருணையுடன், அரிஜன மக்கள் பணிவுடன் கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். ஓம் சூத்திர பஞ்சமன் பஞ்சர் ஷாந்தி!
________

செய்தி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் உள்பட அனைத்து சமுகத்தினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு எந்த வேறுபாடுமின்றி வாய்ப்புகள் வழங்கப்படும். முஸ்லிம்களின் பாடசாலைகளாக திகழும் மதரஸாக்கள், கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்களை கொண்டதாக நவீனப்படுத்தப்படும்.

நீதி: நாட்டின் வளர்ச்சிக்காக சிறைகளில் அதிகம் இருந்து சிறுபான்மை மக்கள் பங்களிப்பு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். சமவாய்ப்பு என்று சொல்வதால் இட ஒதுக்கீட்டு கேட்டு வரும் இசுலாமிய வாய்கள் பூட்டப்படும். மதரஸாக்கள் தீவிரவாதத்தின் ஊற்றாக இருப்பதால் கல்வியிலும் கண்காணிப்பிலும் தீவிர நடவடிக்கை எடுப்போம். ஓம் முசல்மான் முடக்கிப் போடு ஸ்வாஹா!
_________

செய்தி: நாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை கருத்தில் கொண்டு, அணுக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு எழும் அச்சுறுத்தல்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நீதி: போர் வந்தால் பாரதமே முதலில் அணுகுண்டு போடும் நாடாக இருக்கும் என்பதை கொள்கையாக அறிவிப்போம். இரண்டாவதாக பாகிஸ்தான் போடுவதற்கு முன் மோடி அமைச்சரவை கடலடி புல்லட்டின் சுரங்க பாதை மூலம் அமெரிக்கா சென்று விடும். ஓம் எல்லாம் ஷாவுங்கடா ஷாந்தி!
________

செய்தி: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அந்த அறிக்கையை, மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற திங்கள்கிழமையன்று, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தில்லியில் வெளியிட்டனர்.

நீதி: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பேயே அறிக்கை விட்டிருந்தால் கூட்டணிக்கு வரும் கூமுட்டைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு சிக்கல் வந்திருக்கும். தற்போது கூட்டணிக்கும் பிரச்சினை இல்லை. இந்துமதவெறி பாசிசத்தின் திட்டத்திற்கும் மட்டறுத்தல் இல்லை. ஓம் சாணக்கிய சாதுர்யம் நமஹா!

______________________________

சுருங்கக் கூறின் பாஜக தேர்தல் அறிக்கை பச்சையான பார்ப்பனிய பாசிசத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிக்கிறது. பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளுக்கு நாட்டின் வளங்களையும், தொழிலையும் விரைந்து கொடுப்பது, அதிகார வர்க்கத்தின் காட்டுதர்பாரை சட்டபூர்வமாகவே நிறுவுவது, பிரச்சினைக்குரிய இடங்களில் இராணுவம்- போலீசின் ஆட்சியை ஊக்குவிப்பது, தீவிரவாதத்தின் பெயரில் சிறுபான்மை மக்களை மட்டுமல்ல புரட்சிகர – ஜனநாயக சக்திகளையம், தேசிய இன போராட்டங்களையும் ஒடுக்குவது,  ராமர் கோவிலை கட்டும் வாக்குறுதி, 370ரத்து, ராமர் பாலம் அங்கீகரிப்பு மூலம் இந்து வாக்கு வங்கியை குறிவைப்பது, கூடவே மதக்கலவரம் நடக்காமலேயே பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, கொடிய அடக்குமுறை சட்டங்களை கொண்டு வருவது என்று பாசிசத்தை முன்வைக்கிறது காவி பயங்கரவாதக் கும்பலின் தேர்தல் அறிக்கை. பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க, அதன் பாதந்தாங்கிகளை அம்பலப்படுத்த நாமும் தயாராவோம்.

காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு !!

2

காங்கிரசின் ஆதரவோடு தில்லியில் அமைந்த ஆம்-ஆத்மி அரசு பதவி விலகிய பின், காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆட்சியமைக்க உரிமை கோர மறுத்துவிட்ட நிலையில் உச்ச நீதி மன்ற நீதிபதி ஒருவர், “காங்கிரசும் பா.ஜ.க.வும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க முடியுமென்றால், இருவரும் ஏன் கூட்டுச் சேர்ந்து ஓர் அரசை அமைக்க முடியாது?” என்றொரு கேள்வியை எழுப்பினார். இக்கேள்வி வெளிப்பார்வைக்கு விசித்திரமானதாக, வியப்பை ஏற்படுத்துவதாகத் தோன்றினாலும், அதனுள்ளே உண்மை பொதிந்தேயிருக்கிறது. கூட்டுச் சேர இயலாத அளவிற்கு அவ்விரு கட்சிகளின் கொள்கை, நடைமுறைகளில் வேறுபாடு உள்ளதா என்ற கோணத்திலிருந்து இந்தக் கேள்வியைப் பரிசீலித்தால், அவ்விரு கட்சிகளும் இயற்கையான கூட்டாளிகள்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஜஸ்வந்த் சிங்-ஸ்ட்ரோப் டால்போட்
அணு ஆயுத பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (வலது); அமெரிக்காவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட் (கோப்புப் படம்)

பொருளாதாரச் சீர்திருத்தம்; அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்டு நாடுகளுடனான உறவு; உள்நாட்டில் தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் அணுகும்முறை; மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவு; ஈழப் பிரச்சினை; காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை; தமிழக மீனவர் பிரச்சினை – என எந்தவொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும், அதில் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாடு, அணுகுமுறை, நடைமுறை ஆகியவற்றில் கடுகளவுகூட வேறுபாடு இருப்பதைக் காணமுடியாது.

1990-களின் தொடக்கத்தில் காங்கிரசு கட்சி தனியார்மயம்-தாராளமயத்தை வரித்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தொடங்கியபொழுது, “தனது கட்சியின் கொள்கையை காங்கிரசு திருடிக் கொண்டுவிட்டதாக”ப் புலம்பியது, பா.ஜ.க. அந்தச் சமயத்தில் லேவா தேவிக்காரர்கள், வியாபாரிகள், பதவி பறிக்கப்பட்ட சமஸ்தான ராஜாக்கள் ஆகியோரின் கட்சியாக அறியப்பட்டிருந்த பா.ஜ.க.விடமிருந்து இதனைத் தவிர வேறு புலம்பல் வந்திருக்க முடியாது. எனினும், 1990-களில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு சுதேசி சவடால் அடித்துவந்த அக்கட்சி, 1998-ல் ஆட்சியில் அமர்ந்தவுடன் தனியார்மயம்-தாராளமயத்தை காங்கிரசைவிட மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு காங்கிரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என மேடைதோறும் முழங்கி வருகிறாரே மோடி, அவரிடமும் மருந்துக்குக்கூட வேறு மாற்றுப் பொருளாதாரக் கொள்கை கிடையாது.

காங்கிரசு அரசு படுத்துக்கிட்டு போத்திக்கலாம் என்றால், மோடி போத்திக்கிட்டு படுத்துக்கலாம் என்கிறார். இதுதான் இவர்களுக்கிடையேயான கொள்கை வேறுபாடு! “தனியார் மயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் நாட்டை வல்லரசாக்கிவிடலாம்” என்ற பழைய பாட்டைத்தான் புது மெட்டு போட்டுப் பாடி வருகிறார், மோடி. காங்கிரசை ஊழல் மலிந்த அரசு எனக் குற்றஞ்சுமத்தி வரும் அவர், மன்மோகன் சிங் அரசால் முகேஷ் அம்பானிக்குக் குத்தகைக்கு விடப்பட்ட கே.ஜி. எண்ணெய் வயல் ஊழல் குறித்துப் பேச மறுக்கிறார். காங்கிரசோ குஜராத்தில் மோடி அரசால் அடானி குழுமத்திற்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத சலுகைகள் குறித்துப் பேச மறுக்கிறது. காங்கிரசிற்கும் பா.ஜ.க.விற்கும் இடையேயுள்ள பிணைப்பு இது தான். இவ்விரு கட்சிகளிடையே பொருளாதாரக் கொள்கையில் இப்படிபட்ட ஒற்றுமை காணப்படுவது மட்டுமின்றி, அதனை நடைமுறைப்படுத்துவதில்கூட இவை “தூக்கிடவிடப்பா, ஏத்திவிடப்பா” என்ற பாணியில் இரட்டைக் குழல் துப்பாக்கி போலவே செயல்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார்மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய ஓய்வூதிய நிதி மசோதாவை கடந்த மார்ச் 2011-ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குக் கொண்டு வந்தது, காங்கிரசு அரசு. அன்று அவைக்கு வந்திருந்த 159 உறுப்பினர்களுள் பெரும்பாலோர் பா.ஜ.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள். எனினும், அம்மசோதா பா.ஜ.க. உறுப்பினர்களின் ஆதரவோடு, 115 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று நிறை வேற்றப்பட்டது.

இம்மசோதா நிறைவேற்றப்பட்டதில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. இம்மசோதா மன்மோகன் சிங் அரசால் தயாரிக்கப்பட்டதல்ல. அதற்கு முன்பு வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தயாரித்த சரக்கு இது. அம்மசோதா காங்கிரசு கூட்டணி ஆட்சியில், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தனியார்மயம் என்ற சரடு ‘எதிரெதிர்’ கட்சிகளான காங்கிரசையும் பா.ஜ.க.வையும் ஒன்றாகக் கட்டிப் போட்டிருப் பதற்கு இன்னும் பல உதாரணங்கள் உள்ளன.

பிரணாப் முகர்ஜி - கண்டலீசா ரைஸ்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அறிவிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இடது), அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ். (கோப்புப்படம்).

சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை பா.ஜ.க. எதிர்த்து வருகிறது. ஆனால், அக்கட்சி இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தின் கீழ் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டபொழுது, தனது தேர்தல் அறிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்கும் நோக்கத்தோடு சில்லறை வர்த்தகத் தில் அந்நிய முதலீடை அனுமதிக்கத் தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்தது. இது மட்டுமல்ல, வாஜ்பாயி ஆட்சியில்தான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடை அனுமதிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அன்று வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மூலம் விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, பா.ஜ.க. தொடங்கி வைத்ததை காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது என்றுதான் இதனைக் கூறமுடியும்.

இப்படி பா.ஜ.க. கூட்டணி அரசு தொடங்கி வைத்ததை அதனை அடுத்துவந்த காங்கிரசு அரசு முடித்து வைத்ததற்கு இன்னொரு உதாரணம் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போக்ரான்-2 அணுகுண்டு சோதனை நடத்திய கைே யாடு ஐ.நா. மன்றத்திற்கு உரையாற்றச் சென்ற பிரதமர் வாஜ்பாயி, “இனி இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தாது” எனத் தன்னிச்சையாக அறிவித்தார். இதனையடுத்துதான் அணுசக்தி தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையே இரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்பந்த வடிவம் கொடுத்ததோடு, அதனைத் தனது பதவியையே பணயம் வைத்து நிறைவேற்றினார், மன்மோகன் சிங்.

இது போன்று, காங்கிரசு தொடங்கி வைத்ததை பா.ஜ.க. தீவிரமாக நடைமுறைப்படுத்தியதற்கும் அநேக உதாரணங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் கொள்கை நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1998-ல் பதவிக்கு வந்த வாஜ்பாயி அரசும் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கொள்கையை அச்சுப் பிசகாமல் நடைமுறைப்படுத்தியதோடு, இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கும் முடிவையும் எடுத்தது. மேலும், அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற் பதற்காகவே ஒரு தனி அமைச்சகத்தையே உருவாக்கிச் சாதனையும் படைத்தது.

நிலக்கரிச் சுரங்கங்களை ஏல முறைகூட இல்லாமல், தன் விருப்பப்படித் தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் கொள்கையை மன்மோகன் சிங் அரசு மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்த வாஜ்பாயி அரசும் செயல்படுத்தியது. தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி 39 சுரங்க வயல்களை விதிமுறைகளை மீறி ஒதுக்கீடு செய்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, சி.பி.ஐ.

தொலைபேசித் துறையில் நுழைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியத் தரகு முதலாளிகளும் தமது வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்குக் கட்டணமாகச் செலுத்திவந்த நிலையில், வாஜ்பாயி அரசு அதனைக் கைவிட்டுத் தனியார் நிறுவனங்கள் அதிரடி இலாபம் அடையும் வண்ணம் புதிய தொலைதொடர்புக் கொள்கையை அறிவித்தது. அதற்குப் பின் வந்த காங்கிரசு அரசும் அதே கொள்கையைக் கடைப்பிடித்தது மட்டுமல்ல, 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உருவாக்கிய கொள்கைதான் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

மன்மோகன் சிங் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட கொள்ளை நடந்தது என்றால், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மாடர்ன் பிரட், பால்கோ, வீ.எஸ்.என்.எல். உள்ளிட்டு இலாபத்தில் இயங்கிவந்த பல பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் என்றால், பா.ஜ.க.விற்கு கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி சகோதரர்கள் நடத்திய இரும்புக் கனிம ஊழல். ஊழல் குற்றச்சாட்டுக்களில் இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருப்பதை எடுத்துக் காட்டும் உதாரணங்கள் இவை.

காங்கிரசின் மதச்சார்பின்மை, இந்துயிசம் என்பது ஈரத்துணியைப் போட்டு சிறு பான்மை மக்களின் கழுத்தறுப்பதுதான் என்பதை அயோத்தி விவகாரம், மும்பய் கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. ராஜீவ் காந்தி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் தடா சட்டத்தைக் கொண்டு வந்தாரென்றால், பா.ஜ.க. பொடா சட்டத்தைக் கொண்டு வந்த து. இந்த இரண்டு சட்டங்களுமே அப்பாவி முசுலீம்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக சக்திகள் மீதும் தான் ஏவிவிடப்பட்டன. இதன் காரணமாகவே இந்த இரண்டு சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஆளுங்கும்பலுக்கு ஏற்பட்டது. அதேசமயம், காங்கிரசும், பா.ஜ.க.வும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இப்பாசிச சட்டங்களை வேறு பெயர்களில் உருவாக்கி, சிறுபான்மையினருக்கு எதிராக ஏவிவிடுவதில் ஒரேமாதிரியாக நடந்து வருகின்றன.

இந்தியா அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

காஷ்மீரிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை இராணுவத்தையும் பாசிச கருப்புச் சட்டங்களையும் ஏவி ஒடுக்கு வது; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற மறுப்பது; இந்து தேசியவெறிையத் தூண்டிவிடுவதற்காகவே பாக்.எதிர்ப்பு, சீன எதிர்ப்பு அரசியலைக் கிளறிவிடுவது; முசுலீம் தீவிரவாதமும் மாவோயிஸ்ட் பயங்கரவாதமும்தான் நாட்டை அச்சுறுத்தி வரும் அபாயங்களாக ஊதிப் பெருக்கி பயங்கரவாதப் பீதியூட்டுவது; ஒருபுறம் வல்லரசு, வளர்ச்சி என்ற மயக்கு வார்த்தைகளை முன்வைத்து அமெரிக்காவின் காலை நக்குவதை நியாயப்படுத்துவது; இன்னொருபுறம் தேவயானி விவகாரம் போன்றவற்றை முன்வைத்து அமெரிக்க எதிர்ப்புச் சவடால் அடிப்பது ஆகியவற்றிலெல்லாம் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகவே செயல்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் முற்றுகையில் சிக்கிக் கொண்ட சிங்களப் படையினரைக் காப்பாற்ற வாஜ்பாயி அரசு இலங்கை அரசிற்கு செய்த உதவிகளே, ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க. இன்னொரு காங்கிரசு என்பதை எடுத்துக் காட்டுவதற்குப் போதுமானது. மோடி பிரதமரானால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிட்டும் என வை.கோ. சவடால் அடித்துவரும் அதேசமயத்தில், பா.ஜ.க.வோ ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வைத் தேட வேண்டும் என காங்கிரசின் குரலை எதிரொலிக்கிறது.

இவையும், இவை போன்று இங்கு சொல்லாமல் விடுபட்டுள்ள ஒற்றுமைகளையும் வைத்துப் பார்க்கும்பொழுது, பா.ஜ.க.வும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமே என உச்சநீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டது விசித்திரமானதாகத் தோன்றாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த சத்ருகன் சின்ஹாவும் அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் கடந்த ஆண்டு நடந்த கூட்டமொன்றில், “காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புத்துறை, பொருளாதார சீர்திருத்தம் போன்றவற்றில் ஒரே கொள்கைதான். இரு கட்சிகளும் பொதுவேலைத் திட்டம் ஒன்றைவைத்துக் கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டும். கூட்டணி அரசுகளில் சிறிய, மாநிலக் கட்சிகளின் மிரட்டல் போக்குகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” எனப் பேசியிருக்கிறார். நாடாளுமன்ற நெருக்கடிகள் முற்றும் வேகத்தைப் பார்க்கும்பொழுது, இவர்களின் ஆசை நிறைவேறும் வாய்ப்பிருப்பதை மறுத்து விடவும் முடியாது தானே!

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசத்துரோகம்?”

5

ங்கிலேயக் காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகக் குற்றஞ்சாட்டி, விடுதலைப் போராளிகளைத் தண்டிக்க 1860-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் 124-ஏ தேசதுரோகச் சட்டம். 154 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை ஏவி, அரசு எதிர்ப்புப் போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் காராகிருகத்தில் தள்ளப் பயன்படுத்தி வருகிறது, “சுதந்திர இந்தியஅரசு”.

“பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாதப் பீதியூட்டி, தேசிய வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது” என்பதை நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் பார்ப்பன பாசிசத்தின் தயார்நிலை சட்ட ஆயுதமாக உள்ளது, இந்த 124-ஏ தேசத்துரோகச் சட்டம். இதற்கு உச்சபட்ச சான்றானதொரு காரியத்தை உ.பி.யின் மீரட் நகரில் அவர்கள் செய்துள்ளார்கள்.

மாணவர்கள் தாக்குதல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கு முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்களைத் தாக்கும் இந்து மாணவர்கள்.

ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்தன. அவற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றின் போது சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிதியைப் பாராட்டி ஆரவாரம் செய்துவிட்டார்கள், உ.பி.யின் மீரட் நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான சுவாமி விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்தில் பயிலும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் சிலர். இந்தக் “குற்றத்துக்காக” அவர்கள் மீது பல்கலைக் கழகப் பதிவாளர் புகார் கொடுக்கவே, 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கும் போட்டுள்ளனர்.

இதனால் வகுப்புக் கலவரம் வெடித்துவிடும் என்றஞ்சியதாகப் புளுகும் பல்கலைக் கழக நிர்வாகம், அதனால் மாணவர்களை ஜம்மு-காஷ்மீருக்கே திருப்பியனுப்பி விட்டதாகச் சொல்கிறது. ஜம்மு-காஷ்மீர் முதல்வரின் முறையீடு காரணமாக, தேர்தல் நேரத்தில் “இசுலாமிய எதிர்ப்பு பழி” வந்துவிடும் என்றஞ்சிய சமாஜவாதி அரசு 124-ஏ தேசத்துரோக குற்றப்பிரிவை மட்டும் விலக்கிக் கொண்டது. 153-ஏ பிரிவின் கீழ் வெவ்வேறு இன மக்களிடையே பகைமையைத் தூண்டுவதாக வழக்கு, 427 பிரிவின் கீழ் சீர்குலைவு ஏற்படுத்துவாக வழக்கு ஆகியவை இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

மீரட் சம்பவம் பற்றி அதிச்சியடைந்தாற்போன்று தலையங்கம் தீட்டியுள்ள “தி இந்து” நாளேடு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. “இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறியாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா? சமீபத்தில் ஜம்முவில் தங்கியிருந்த ஜம்மு-காஷ்மீர் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அணியினரின் அறை நள்ளிரவில் சோதனையிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இப்போது காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகள் மனத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தியப் பொதுசமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?” இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் “தி இந்து”க்கள் மட்டுமல்ல, காஷ்மீரிகளும் அறியாததல்ல!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசியக் கிரிக்கெட் போட்டி துவங்கும் முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் 12 காஷ்மீரி மாணவர்கள் இந்து மாணவர்களால் ஒரு காரணமுமின்றித் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

சட்ட நியாயப்படி இல்லாவிட்டாலும், “இந்தியப் பொதுசமூகத்தின்” மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துவதாகச் சொல்லித்தான் காஷ்மீரி அப்சல் குருவை கோழைத்தனமாகவும், வக்கிரமாகவும், சட்ட விரோதமாகவும் தாய்க்கும் மனைவிக்கும் தெரிவிக்காமல் தூக்கிலிட்டு கொலைசெய்து, அவரது பிள்ளைக்கும் உடலைக் காட்டாமல் இரகசியமாக சிறைவளாகத்திலேயே புதைத்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு, இந்திய அரசு நடந்து கொண்டது சட்டம், நியாயப்படியானதா, இல்லையா என்று ‘அக்கிரகாரத் திண்ணை’யில் உட்கார்ந்து அலசினார்கள்.

“இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள் போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்” என்று அங்கலாய்க்கிறது, “தி இந்து”. இது ஏதோ இந்தியாவில் சட்டங்கள் கேடாகப் பயன்படுத்தப் படுவதற்கு எதிரான “அவா”க்களின் ஆட்சேபனை என்று எண்ணிவிட வேண்டாம்.

124-ஏ மட்டுமல்ல, அப்சா, தடா, பொடா, மிசா, மினி மிசா, அந்தந்த மாநில தடுப்புக் காவல் சட்டங்கள் என்று எவ்வளவோ சட்டங்களை சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் மீது அற்பக் காரணங்கள் கூறி இப்படித்தான் பலமுறை ஏவிவிடப்படுகின்றன. தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் மகாராஷ்டிரா, குஜராத் உழைப்பாளர்கள் மீதும், “எங்கள் ஊரில் அணு உலைவேண்டாம்” என்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும், “எங்கள் காடுகளின் கனிம வளங்களைச் சூறையாடாதீர்கள் – எங்கள் வாழ்வுரிமைகளைப் பறிக்காதீர்கள்” என்று மறிக்கும் சோடாநாகபுரி மலைவாழ் பழங்குடி மக்கள் மீதும் இந்தத் தேசத்துரோகச் சட்டத்தைக் காட்டி இந்திய ஆயுதப் படைகளின் கொலைகாரத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சுபார்தி பல்கலை மாணவர்கள்
ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் ஆட்டக்காரரை பாராட்டிய குற்றத்திற்காக பொய்வழக்கு சோடிக்கப்பட்டு உ.பி.யின் மீரட் நகரிலுள்ள விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி மாணவர்கள்.

காஷ்மீரையும் வடகிழக்கு இந்திய மாநிலங்களையும் இந்தியாவில் இருத்திக் கொள்வதற்காகவும் அம்மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கி வைப்பதற்கும் இந்திய ஆட்சியாளர்களின் தயார்நிலை ஆயுதந்தான் தேசத்துரோகத் தடுப்புச் சட்டம் என்ற பாசிச அரசியல். ஆனால், இந்திய ஆட்சியாளர்களின் இந்த வகையான தேசத் துரோகத் தடுப்புகளைக் கண்டுகொள்ளாத “தி இந்து”க்கள் கிரிக்கெட் விவகாரத்தில் ரசிகர்களின் நாடு கடந்த ஜனநாயக உரிமைக்காகக் கோஷம்போடக் கிளம்பிவிட்டார்களே, ஏன்? கிரிக்கெட் தங்களின் ஆங்கிலேயப் பிரபுக்குல விளையாட்டு என்பதாலா? அல்லது இப்போதும் கோடிகோடியாகக் கொட்டும் உலகமகா சூதாட்டம், ஆகவே அதை அரசியலுக்கு அப்பால் வைக்கவேண்டும் என்பதாலா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது “தேசத்துரோகம்”, “தேசபக்தி”, “நாட்டுப்பற்று” ஆகிய சொல்லாடல்கள் நாடுகளின், தேசங்களின் என்ற எல்லைகளைக் கடந்த உலகமய அரசியல் என்றாகி விட்டது என்பதாலா?

இந்திய ஆளும் தரகு முதலாளிகள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் ஏராளமான வியாபார, தொழில் ஒப்பந்தங்களும் உறவுகளும் கொண்டுள்ளனர். அந்நாடுகளுடன் பல்வேறு வகையில் அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூக உறவுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அதேசமயம் இந்திய அரசும் அரசியல்வாதிகளும் அரசியல் ஆதாயம் கருதியே அந்நாடுகள் மீது பகைமை உணர்வு பாராட்டும்படியான பொதுக்கருத்தை இந்தியச் சமூகத்தாரிடையே நிரந்தரமாகப் பராமரித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக நிரந்தரமானதொரு ஆத்திரமும் வெறியும் தொடர்ந்து ஊடகங்களால் கிளறிவிடப்படுகிறது.

இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் அரசியல்வாதிகளும்”தேசபக்தி”, “நாட்டுப்பற்று” ஆகியவற்றுக்கான உள்ளடக்கத்தையும் பொருளையும் ஆன்மாவையும் உருவியெடுத்து விட்டார்கள். அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்களுக்கும் நாட்டையே கூறுபோட்டு விற்கும், நாட்டு மக்களைப் புதைகுழியில் தள்ளும் பல துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இறால் பண்ணைகளை அமைத்து, மீத்தேன் வாயுவை உறிஞ்சி, உயிரி விதைகளையும் இரசாயனங்களையும் புகுத்தி நமது வளம்மிக்க வயல்வெளிகளைப் பொட்டல் காடுகளாக்குகிறார்கள். காடு-மலைகளைப் புரட்டிப்போட்டு, கனிம வளங்களைச் சூறையாடிக் கற்குவியல்களாக்குகிறார்கள். அணுஉலைகள், நச்சு ஆலைகளை இறக்குமதி செய்கிறார்கள். பெரும் பெரும் பெட்டகங்களில் அணுக்கழிவுகள், இரசாயன, மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் கொள்ளைக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை மருத்துவ ஆய்வுகள் என்ற பெயரில் சிறு பச்சிளங் குழந்தைகள் முதல் நமது மக்கள் மீது சோதனைகள் நடத்திப் படுகொலைகள் புரிகிறார்கள். மொத்தத்தில், இப்படிப் பலவாறும் நமது நாட்டையே மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றும் தேசத்துரோகஞ் செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் அரசியல்வாதிகளும் “தேசபக்தி”, “நாட்டுப்பற்று” என்பதையெல்லாம் இந்தியாவின் கிரிக்கெட் வெற்றியைப் போற்றுவது, இந்து மதச் சின்னங்களின் புனித்தைப் பேணுவது, அமெரிக்காவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், “தேவயானி”கள் மீதான நிர்வாணச் சோதனைகளைத் தடுப்பது போன்ற அடையாளப் பிரச்சனைகளாக்கி விட்டார்கள். ஆகவே, இதை “இந்து தேசபக்தி” “இந்துஸ்தானிய நாட்டுப்பற்று” என்றுதான் சொல்ல வேண்டும்.

இனி, உண்மையான தேசபக்தர்களாகிய நாம் இப்போதுசெய்யவேண்டியது, வெறும் அடையாளப் பிரச்சனையாக்கப்பட்டுள்ள தேசபக்திக்கு மாற்றாக, எதிராகத் “தேசத்துரோகம்”தான்! இதிலும் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்.

1954-ம் ஆண்டு மே 29 அன்று, உத்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு குக்கிரமத்தின் சுமார் 200 விவசாயிகளிடையே பேசினார் ராம் நந்தன். அதன் சாரம் இதுதான். “தாய்மார்களும் சகோதரிகளும் தாங்கள் வாழ்க்கை நடத்தும் பொருட்டு தங்கள் மானத்தையே விற்க வேண்டியிருக்கிறது. உழைக்கும் மக்கள் பிச்சையெடுக்க வேண்டியுள்ளது. விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் சோறில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். காங்கிரசு ஆட்சியில் ஆயிரக்கணக்கான சீதைகள் கடத்தப்படுகிறார்கள்; உணவுக்கும் உடுப்புக்கும் வேண்டி பெண்கள் விபச்சாரிகளாகிறார்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் வரிகள் விதிக்கப்படுகின்றன. விவசாயிகளின், கூலித் தொழிலாளர்களின் ரத்தம் அந்நிய முதலாளிகளிகள் மூலம் உறிஞ்சப்படுகிறது. உ.பி. தொழிலாளர்கள் தாங்களே அமைப்பாகத் திரண்டுள்ளார்கள். இனி அவர்கள் தங்கள் மீது அனுதாபப்படுமாறு கெஞ்ச மாட்டார்கள். மாறாக, கம்புகளைக் கையிலெடுப்பார்கள்; அமைச்சகத்தைச் சூழ்ந்துகொண்டு தமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அது தூக்கியெறியப்படும் என்று எச்சரிப்பார்கள்.”

“விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினால், ஒவ்வொரு இளைஞரும் வாள்களையும் துப்பாக்கிகளையும், குண்டாந்தடிகளையும் எரிசாராயப் பாட்டில்களையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு போரில்லாமல் இந்த அரசு சரணடையாது. குண்டாந்தடிகளைப் பயன்படுத் தாமல் தூக்கியெறியப்பட்டதில்லை. விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் சங்கங்கள் அமைத்து இராணுவத்தைக் கட்டியெழுப்பவேண்டும்.”

“சீனத்து அரசைப் போன்றதொரு அரசைப் பெறவெண்டுமானால், தன்னார்வத் தொண்டர்களின் படையொன்றைக் கட்டியெழுப்பி, துப்பாக்கிகளையும் கைத்துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். தைமூர்லுங், ஔரங்கசீப், சேர்ஷா மற்றும் பிற கொடுங்கோலர்கள் நமது நாட்டைப் பிளக்கவில்லை; நேருதான் துரோகியாகி நாட்டை இரண்டாகப் பிளந்தார்.”

இப்படிப் பேசியதற்காக ராம் நந்தன் மீது உ.பி. அரசு 124-ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றஞ்சாட்டியது. கீழமை நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது. அவருடன் சேர்த்துக் குற்றஞ்சாட்டப்பட்ட இசக் இலாமியையும் பரஸ்நாத் திரிபாதியையும் விடுவித்தது. இவர்களையும் தண்டிக்கச் சொல்லி உ.பி. அரசும், தன்னை விடுவிக்கச் சொல்லி ராம் நந்தனும் மேல்முறையீடு செய்தனர். அலகாபாத் உயர்நீதி மன்றம் மூவரையும் விடுதலை செய்தது.

தேசத்துரோகக் குற்ற வழக்குகளில் நியாயப்படியோ, சட்டப்படியோ வாதாடுவதற்கான அடிப்படை ஆதாரங்கள் எதையும் மக்கள் எதிரிகளால் உண்மையில் முன்வைக்கவே முடியாது. இது பல வழக்குகளில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது. என்றாலும் அரசியல் பழிவாங்குவதற்காகவே தேசத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட பினாயக் சென், நாராயண் சன்யால் போன்ற சிலர், பாசிச “நீதியரசர்”களுடன் கூட்டுச்சதி செய்து தண்டிக்கப்படுகிறார்கள். மற்றபடி தேசத்துரோகப் பொய்வழக்குப் போடப்படும் நூற்றுகணக்கானவர்கள் குற்றப் பத்திரிக்கைகள்கூடத் தாக்கல் செய்யப்படாமல், விசாரணையின்றி, கேள்வி முறையின்றி பல ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

– ஆர்.கே.
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

சுயமரியாதை வேண்டுமா பெண்ணே ? ஓட்டு போடாதே !

8

த்துக் கூலிக்கு பெண்களை அழைத்து வந்து, பொட்டல் வெயிலில் வாட்டி வதக்கி அம்மா தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் பறக்கிறார்.

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக பெண்களை கூட்டிக்கொண்டு தெருத்தெருவாய் டூ வீலரில் கிளம்பி விட்டார், கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.

சுமங்கலித் திட்டம்
இளம் பெண்கள் கொத்தடிமையாக வேலை செய்ய சுமங்கலித் திட்டம்.
  • கோவை மாவட்டத்தின் பஞ்சாலைகளிலும், சிறு தொழில்களிலும் வரம்புமீறி சுரண்டலுக்கு உள்ளாகும் உழைக்கும் பெண்களை என்ன பிரச்சனை? என்று பத்தடி எழுந்து வந்து எட்டிப் பார்க்காத இந்த அம்மணி, பெண்களின் எந்த உரிமைகள் எப்படி போனால் என்ன ஓட்டுரிமைதான் ரொம்ப முக்கியம் என்று பெண்களையே விழிப்புணர்வு விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார். என்ன ஒரு கடமை உணர்வு?!
  • கோவை, திருப்பூர் பகுதிகளில் ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்களில் கொத்தடிமைகளாக வேலைசெய்ய, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை முப்பதாயிரம், நாற்பதாயிரத்துக்கு விலைபேசி “சுமங்கலித் திட்டம்” என்ற பெயரில் சிறைபிடித்து அடைத்து வைத்து ரத்தம் குடிக்கும் கொடுமைகளுக்கு எதிராக தனது வண்டியை ஸ்டார்ட் செய்யாத இந்த கலெக்டர் அம்மாதான் தேர்தல் கவுன்ட் டவுனுக்கு போஸ் கொடுக்கிறார்!

வேலைநேரம், வேலைநிரந்தரம், அரசாலேயே நிரணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம், இ.எஸ்.ஐ, என உழைக்கும் பெண்களுக்கான எந்த உரிமைக்காகவும் தெருவில் இறங்காத இந்த அதிகாரவர்க்கம், நமது ஓட்டுரிமைக்காக நாயாய் தெருவில் சுற்ற வேண்டிய அவசியம் என்ன?

முக்கியமாக, இந்த தேர்தல் போதை இறங்கி, மக்கள் சுயநினைவுக்கு வந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டால்? ஓட்டு போட்டு, போட்டு என்னத்தக் கண்டோம் என்று ‘ரூட்டு’ மாறிவிட்டால்? என்ற தொலைநோக்கிலான, சிந்தனை தான்! மக்களின் மீதான தங்களது அதிகாரத்தை மறுபடியும், மறுபடியும் நிறுவிக் கொள்ளத்தான் தாய்குலத்தை தேடி எல்லா அதிகாரவர்க்க பேய்க்குலமும், நமது உச்சி முடியை பிடித்து ஓட்டு போட தெருவில் இறங்கி ஆளைத்தூக்குகிறது.

பாலியல்-வன்முறை

  • பஸ்ஸில் தொடங்கி பணியிடம் வரை பெண்களுக்கு பாலியல் தொந்திரவு!
  • வேலைக்குப் போகும் பெண்கள் அவர்கள் நடவாளோ, ஐ.டி. ஆளோ பத்திரமாக வீடு வந்துசேர உத்திரவாதமில்லை!
  •  நகரத்து கம்பெனிகளில் ஒண்ணுக்குப் போகவும் ஒரு டோக்கன், ரெண்டுக்கு போக இன்னொரு டோக்கன் என்று அடக்குமுறை….

இப்படி, பொதுவான விசயங்களிலேயே பெண்களின் பாதுகாப்புக்கும், அடிப்படையான உயிர்வாழும் உரிமைக்கே உத்திரவாதம் இல்லாத இந்த ‘ஓட்டுரிமை’ யோடு, ஆணவம் பிடித்த அதிகாரவர்க்கத்தையும் பெண்கள் சேர்த்து புறக்கணிப்பதுதான் சரி!

அடித்தட்டு உழைக்கும் பெண்கள் அன்றாடம் தெருவில் இறங்கி போராடி குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூடச்சொல்கிறார்கள், பெண்களின் போராட்ட உணர்வை மதித்து சாராயக்கடைக்கு பூட்டு போடாத இந்த கும்பலுக்கு நாம் ஓட்டு போடவேண்டுமாம்!

பெண்களிடம் ஓட்டு வாங்குவதற்காக நான் வந்தால் மதுவை ஒழிப்பேன்! என்று சவடால் அடிக்கும் எல்லா கட்சிகளுமே தண்ணி பார்டிகள் தான்!

காலிக்குடங்களோடு எங்களை தெருவுக்கு தெரு அலைய விட்டு விட்டு வாக்கு பெட்டியை தூக்கி வந்து ஓட்டாய் கேட்கிறாய் என்று ஆளும் வர்க்க கும்பலைப் பார்த்து காறித்துப்ப வேண்டும்! இத்தனை முறை உனக்கு ஓட்டுப் போட்டு எனக்கு ஒரு குடம் தண்ணீருக்கு வழி உண்டா? குழாயடிச் சண்டையில் நம்மை தள்ளிய கும்பலை தேர்தல் புறக்கணிப்புச் சண்டையில் திட்டி விரட்டவேண்டும்.

போலி ஜனநாயகத்தின் வண்ட வாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும்!

வருசம் 365 நாள் வேலைக்கும் மூடு விழா நடத்தி விட்டு யாருக்கு வேண்டும் உன் நூறு நாள் வேலைத்திட்டம்?

  • விவசாயம், அதை ஒட்டிய கால் நடை வளர்ப்பு, கறவைமாடுகள், சிறு தொழில்கள் என பெண்களின் சிறுவாட்டு காசுக்கும், சுயமரியாதை உணர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்த சுய தொழில்களும் அழிந்து சூன்யமாகி விட்டது. உன் சுயஉதவிக் குழுவின் கடன் தான் பெண்களின் முன்னேற்றமா? முதலில் எங்க சுயதொழில்களை வாழவிடு! என்று வாக்குரிமை பேசும் அதிகார வர்க்கத்திடம் வாழ்வுரிமை கேட்டு, மூஞ்சியில் மொத்த வேண்டும் பெண்கள்!
  • கூலிக்கு பெண்களின் கிட்னிகள், க ரு முட்டை முதலான அங்கங்களை திருடிவிட்டு , தாலிக்குத் தங்கம் திட்டமாம்!
  • குடும்பத்தின் கருவான தொழிலையே கலைத்து விட்டு கர்ப்பிணிக்கு உதவித்தொகையாம்!
  • பெண்களின் நலவாழ்வுக்கான அனைத்தையும் பிடுங்கி தனியார் முதலாளிகளின் கையில் தந்து காசாக்கிவிட்டு, போடுங்கம்மா ஓட்டு! என்பவனை தெருவில் நாலு போட வேண்டியதுதான்!

ஓட்டுப்போடுவது குடும்பக்கடமை என்பது போல பெண்களிடம் நச்சரிக்கும் இந்தத் தேர்தலால் பெண்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன ?

இருபத்திநாலாயிரம் கோடி வரிபாக்கி வைத்திருக்கிறாயே, அதை கட்டுடா என்றவுடன், இவர்கள் அழைத்து வந்த நோக்கியா இருபதாயிரம் தொழிலாளர்களை (நோக்கியா மற்றும் அதன் துணைத் தொழில் நிறுவனங்கள்), பெண்களையும் வேலையிலிருந்து விரட்டி, தெருவில் நிறுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறான்!

நோக்கியா
நோக்கியா பயங்கரவாதத்தில் சிக்கிய பெண் தொழிலாளர்கள்.

பல நூறு பெண்களுக்கும் நேர்முக, மறைமுக வேலைவாய்ப்பு என்றும், வளர்ச்சித் திட்டம் என்றும் நோக்கியாவை கொண்டு வந்தது நான்தான், நான்தான் என்று போட்டிபோட்டு பெருமைக்கு சொந்தம் கொண்டாடிய கட்சிகளும், அதிகாரிகளும், இப்போது எங்கே? வரிபாக்கியை முதலாளியிடமிருந்து வசூலிக்க வக்குண்டா உன் தேர்தலுக்கு? வஞ்சிக்கப்படும் தொழிலாளிப் பெண்களின் துயர் துடைக்க உதவுமா? ஓட்டு சீட்டு ஜனநாயகம்?

ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள், ஓட்டு ஜனநாயக் கடமை என்று எங்களிடம் வந்து உபதேசிக்கும் நாய்களா? நோக்கியாவிடம் நீங்கள் வாங்கிய காசு எவ்வளவு? அதே நோக்கியாவின் துணை நிறுவனம் பாக்ஸ்கானில் அம்பிகா என்ற தொழிலாளி, கட்டிங் மிஷினில் மாட்டிக் கொண்டபோது, மிஷினை உடைத்தால் பொருள் நஷ்டம், என்று அந்தப் பெண்ணை தெரிந்தே துடிக்க துடிக்க கழுத்தை வெட்டிய பன்னாட்டு முதலாளிகளுக்கு காவலிருக்கும் ஏவல் நாய்களுக்கு ஏன் பெண்கள் ஓட்டு போட வேண்டும்! நம்மைப் போலவே கனவுகளுடன் வாழ்ந்த அம்பிகாவைக் கொன்ற கொலைகார ஜனநாயகத்துக்கா ஓட்டு? இந்தப்போலி ஜனநாயகத்தை பெண்களின் கைகளாலேயே, அடக்கம் செய்வதுதான் அம்பிகாவுக்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலி!

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது நம் கடமை அல்லவா? என்று பொறுப்பாக வந்து நம்மிடம் ஓட்டு கேட்கும் இந்த அரசு, அரசியல்கட்சிகள், அதிகாரவர்க்க சிலந்திக்கூட்டம், என்றைக்காவது பெண்களை காப்பாற்றும் பொறுப்பை நிறைவேற்றியதுண்டா?

  • சென்னை ஐ.டி. கம்பெனியில் பணிமுடிந்து திரும்பிய பெண் உமாமகேஸ்வரி பாலியல் வல்லுறவு வன்முறையால் படுகொலை செய்யப்பட்டார். பணியிடம் உள்ள இடத்திற்கான பாதுகாப்பை கூட உத்திரவாதம் செய்வது என் வேலையல்ல, என்று திமிராக நடந்துகொண்டான் டாடா கம்பெனி! பெண்கள் இரவு ஷிப்ட்டுகளில் பணிக்கு அமர்த்தப்படக் கூடாது, அமர்த்தினால் உரிய பாதுகாப்புகள் செய்யப்படவேண்டும் என்று சட்டமிருந்தாலும், அது பன்னாட்டு மூலதனத்துக்கும், ஐ.டி. போன்ற நாட்டை முன்னேற்ற வந்த ‘கம்பெனிகளும் பொருந்தாது, எங்களை கட்டுபடுத்த முடியாது என்கிறார்கள் திமிராக’! உள்ளே வந்தால் நான் பெண் ஊழியரின் உழைப்பை சுரண்டுவேன்,  வெளியே போனால் வேறு ஒருவன் பாலியல் ரீதியாக சுரண்டுவான், நான் கண்டு கொள்ளமாட்டேன், பெண்ணின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது? என்ற சமூக விரோத முதலாளிகளை வாழவைக்கும் இந்த குரூர ஜனநாயகத்துக்கு ஓட்டு ஒரு கேடா?
  • அமைப்பு சாரா வேலை என்ற பெயரில் கட்டிட வேலை, வீட்டு பணிப்பெண்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பங்குகள், என பார்க்கும் இடமெங்கும் பெண்களின் கைத்தோல் குறைந்த கூலியிலும், அதிக பணி நேரத்திலும் உறிக்கப்படுகிறது, இதில் இந்த தேர்தல் மாற்றத்தைக் கொண்டு வருமா?
  • நூல் பிரித்து, நூல் பிரித்து பிள்ளைகளுக்கு பால் கொடுப்பதையே மறந்துபோன நெசவாளிப் பெண்ணை விலைவாசி உயர்வால் கடும் உழைப்புக்குள்ளாக்கும் கொடூரமான வாழ்க்கையை இந்த நாடாளுமன்றத் தேர்தல் மாற்றிவிடுமா?
  • கடல் சார்ந்த வளத்தை மீனவப் பெண்களின் கைகளிலிருந்து தட்டிப்பறிக்கும் தனியார்மய கார்ப்பரேட், கும்பலை இந்த தேர்தல் வந்து விரட்டிடுமா?
  • ஆபாசக் கலாச்சாரத்தை பரப்பி, இணையம், செல்போன், பத்திரிகைகள், டி.வி.சீரியல்கள், என பெண்களை இழிவுபடுத்தி காசு பார்க்கும் முதலாளிகளை உங்கள் ஓட்டால் தண்டிக்க முடியுமா?
  • சமூகத்தையே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நரகமாக்கி, மதவெறித் தாக்குதலில் பெண்களை முதல் பலியாக்கி பாலியல் வல்லுறவு செய்யும் காலிகளை, இந்த பாராளுமன்றத்தால் தண்டிக்க முடியுமா? பாராளுமன்றத்திலேயே செல்லில் ஆபாச படம் பார்க்கும் எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க த் தூ ஓட்டு ஒரு கேடா?

    பெண்கள் வாக்களித்தல்
    ஈவு இரக்கமின்றி பெண்களைச் சிதைக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்காக நம்மை துரத்தி வந்து கையை பிடித்து இழுக்கும் இந்த தேர்தலும் ஒரு ஈவ் டீசிங்தான்!
  • ஒவ்வொரு ஆதிக்கசாதி வெறியர்களும், சாதி மறுக்கும் காதலர்களை பிரித்து கொன்று, பெண்களை கூட்டு வன்புணர்ச்சி செய்வது வரை கட்டை பஞ்சாயத்து அராஜகம் செய்கிறார்கள். இந்த சமூக அநீதிகளை தேர்தல் பாதை தடுத்திடுமா?

பட்டவர்த்தனமாக பெண்கள் மீது கொடுமை இழைப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ள ஆணாதிக்க, சாதி, மதவெறி அரசமைப்பிற்கான இந்த தேர்தலைப் புறக்கணிப்பதே சரி!

உரிமைகளை கேட்டு பெண்கள் சாலைக்கு வந்து போராடினால், போலீசை விட்டு அடித்து விரட்டும் அதிகாரவர்க்கம், ஓட்டுக்கு மட்டும் கொஞ்சம் வந்துட்டு போ? என்பது எவ்வளவு கொழுப்பு?

ஈவு இரக்கமின்றி பெண்களைச் சிதைக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்காக நம்மை துரத்தி வந்து கையை பிடித்து இழுக்கும் இந்த தேர்தலும் ஒரு ஈவ் டீசிங்தான்!

பெண்ணே போடாதே ஓட்டு! இனி புரட்சிதான் உன் ரூட்டு!

– துரை.சண்முகம்