ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் டி.வி.எஸ் (ஹரிதா) சுந்தரம் ஆட்டோ காம்பொனன்ட்ஸ் ரப்பர் ஆலையில் 64 நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். மேற்படி ஆலையை கடந்த ஆண்டு 2013 மார்ச் 31-ல் மும்பையை சேர்ந்த மெகா ரப்பர் ஆலைக்கு விற்று விட்டனர். இதில் வேலை செய்த தொழிலாளர்கள் சர்வீஸ் தொடர்ச்சியுடன் வேலை வழங்கக் கோரியதின் பேரில் 12 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்தனர். மற்ற தொழிலாளர்களை மிரட்டி பல வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று, அவர்கள் புதிய தொழிலாளர்களாக மெகா ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். இதுவரை அந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கான ஆணை வழங்கவில்லை. இந்த இரண்டு நிர்வாகத்தையும் எதிர்த்து வழக்கு நடந்து வருகிறது.
எனவே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக 11.03.2014 அன்று மாலை 5 மணிக்கு பேளகொண்டப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் பாஸ்கர் தலைமை தாங்கினார். திருமதி அனிதா, பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிசந்திரன், மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக தோழர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார். நிர்வாகிகள் இரா சங்கர், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மார்ச் 8 உலகப் பெண்கள் தினம். சென்னை – குரோம்பேட்டை வீதிகளெங்கும் சுவர்களில், பெண்கள் விடுதலை முன்னணியின் (பெவிமு)சிவப்பு சுவரொட்டிகள். அவற்றில் காட்சியளித்த, ”சமைப்பதும், பிள்ளைப்பெறுவதும் மட்டும் பெண்களின் வேலையல்ல! பெண் விடுதலையையும் நமது வேலையாக்குவோம்!” என்ற முழக்கங்கள் பொதுமக்களை அரங்கக் கூட்டத்திற்கு அழைத்தன!
அரங்கத்தில் நுழைந்ததும், ஓவியர் முகிலனின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காட்சி பார்வையாளர்களை வரவேற்றது. கிளாரா ஜெட்கின் படமும், பெண்கள் இன்றைய காலகட்டத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும் குறிப்பாக, குடும்ப சிலுவையில், முதலாளித்துவ ஆணிகளால் பெண் அறையப்பட்டிருந்த ஓவியம் பெண்களின் இன்றைய நிலையை பளிச்சென காட்டியது. வந்தவர்களை வெகுவாக ஈர்த்தது.
ஓவியக் கண்காட்சி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
பெண்கள், தொழிலாளர்கள், தோழர்கள்,குழந்தைகள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொள்ள துவங்கியது கூட்டம். தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். தன் உரையில், பெண்கள் இதுநாள்வரை பெற்ற உரிமைகள் அனைத்தும் போராட்டத்தின் மூலம் தான் கிடைத்தது என்றும், பெண்கள் தினத்தை கோல போட்டி, அழகி போட்டி என கொண்டாட்ட நாள் போல மலின படுத்தியுள்ளனர். மே தினத்தைப் போலவே இது உரிமைகளை மீட்பதற்கான நாள்! இது கொண்டாட்ட நாள் அல்ல என்பதை விளக்கி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த, எழுத்தாளர் பிரியா தம்பி, ”ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும், பெண்விடுதலைக்கு தடை!” என்ற தலைப்பில் பேசினார். அன்றாட வேலைகளிலும், தன் சொந்த அனுபவத்திலிருந்தும் ஆணாதிக்கத்தை விளக்கினார். பெண்கள் தனியாக அலுவலக வேலைக்காக கூட பயணம் செய்ய முடியவில்லை என்பதை தனக்கு பேருந்தில் நடந்த சம்பவத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். வெளிவட்டத்தில், நல்ல நண்பராக பழகுபவர்கள், கணவராக மாறும்போது ”நான் ஆம்பிளை” என்ற ஒற்றை குறியீடுடன் தனது ஆணாதிக்கத்தை நிறுவுவதை அம்பலப்படுத்தினார். வேலைக்கு செல்லும் பெண்கள், பணரீதியில் வளர்ந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால் குடும்பம் என்ற முறையிலோ வாழ்நாள் அடிமைகளாகவே சுழல்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டினார். பெண் எல்லா வலிமையும் பெற்றவளாக இருக்கிறாள் ஆனால் அவர்களின் வலிமையை அவர்களே உணர்வதில்லை என்று பெண்ணடிமைத்தனத்தையும் இடித்துரைத்தார் மேலும் கிராம பெண்களுக்கு இருக்கும் துணிச்சல், படித்த பெண்களுக்கு இல்லை என்பதை நடைமுறை உதாரணங்களுடன் எளிமையாக விளக்கி பேசினார்.
பெவிமு சென்னை மாவட்ட செயலர் தோழர். உஷா ”போராளி கிளாரா ஜெட்கின் வாரிசுகளாக….” என்ற தலைப்பில் உரையாற்றினார். இன்றைய காலக்கட்டங்களில் பெண்கள் போராட வரமுடியாத நிலைக்கு தள்ளி வைத்திருக்கும் முதலாளித்துவ சூட்சமங்களை வெட்ட வெளிச்சமாக்கினார். அதிலிருந்து, மீள விவசாயிகள், தொழிலாளர்கள், மற்றும் மாணவர்கள் பிரச்சனைகளோடு உழைக்கும் பெண்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே பெண்கள் தங்களை விடுதலையை சாதிக்கமுடியும் என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும், பெண்களை தொலைகாட்சி மூலம் சிறைப்பிடித்திருக்கும் சீரியல்களின் லட்சணங்களை, மக்கள் மொழியில் பேசி கூட்டத்தினை ஈர்த்தார். சீரியல்களில் மனைவியே தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணை கூட்டிக் கொடுக்கும் அசிங்கத்தை காறித் துப்பினார்.
உரையாற்றியவர்களுக்கு இணையாக மேடையேறிய, பெண்கள் விடுதலை முன்னணித் தோழர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும்,புரட்சிகர பாடல்கள் பாடினர். குறிப்பாக, ”….கிணத்துல தொங்கிறது வாளி! பெண்கள் கழுத்துல தொங்குறது தாலி….! ” என்ற பாடல் பலத்த கரகோஷத்தைப் பெற்றது.
சிறப்புரை ஆற்றிய தோழர் துரை சண்முகம் தனது உரையில் , பெண்கள் வீட்டில் சும்மா தான் இருக்காங்க என்று சில ஆண்கள் கூறுவதை இடித்துரைத்தார். பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் அங்கீகரிக்கபடுவதில்லை, வீட்டில் வேலை செய்தால் இழிவாக கருதும் ஆண்கள் முதலாளிக்கு போய் அடிமை வேலை செய்வது மட்டும் பெருமையா? என்றும் உழைக்கும் பெண்கள் வேலை செய்து கைகள் காப்பு காய்த்து போய் அவள் கைப்பட்டால் அவளின் கைக்குழந்தை அழுகிறது, அவள் தலைப்பாகை எடுத்து தன் கை மேல் வைத்து பால் கொடுக்கிறாள் என்று பெண்களின் உழைப்பின் மகிமையை விளக்கினார். ஆணாதிக்கம் மக்கள் கும்பிடும் கடவுள் வரையிலும் பிரதிபலிப்பதை பளிச்சென கூறினார். பிடாரி, காளி போன்ற சவால்களை எதிர்க்கொள்ளும் வீர பெண் கடவுள்களை பற்றியும் இப்போது லட்சுமி, பார்வதி என்று கணவன்களின் காலை அமுக்கும் கடவுளாக இருப்பதை விளக்கி பெண் அடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்தி பேசினார்.
மறுபுறம், பெவிமு வின் தொண்டர் தோழர்கள் குழந்தைகளை கவனித்துக்கொண்டும், வயதானவர்களுக்கு உதவியும், தண்ணீர், டீ, பிஸ்கட்கொடுத்தும் கூட்டத்தினை முறையாக ஒழுங்குப்படுத்தியது, கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக இருந்தது.
கூட்டத்திற்கு வந்திருந்த பல புதிய பெண்களிடம் கூட்டம் பற்றி கருத்து கேட்கும் பொழுது, தாங்கள் பெண் விடுதலை பற்றிய குழப்பத்தில் இருந்ததாகவும், இந்த கூட்டம் பல விசயங்களை தெளிவுப்படுத்தியதாகவும், போராட்டமில்லாமல் எதையும் பெறமுடியாது என்பதை உணர வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதத்தில் இல்லாமல் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும்,மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கூட்டநிகழ்ச்சியின் மூலம் பெண்களின் போராட்ட மரபுகளை நெஞ்சில் ஏந்தி சென்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
அம்பாலா மத்திய சிறையில் வாழ்ந்து வந்த அசீமானந்தாவிடம் ஜனவரி 10, 2012, ஜூன் 22, 2013, ஜனவரி 9, 2014, ஜனவரி 17, 2014 என அடுத்த 2 ஆண்டுகளில் நான்கு முறை பேட்டி எடுத்திருக்கிறார். இந்த உரையாடல்களின் பதிவு செய்யப்பட்ட கால அளவு 9 மணி, 26 நிமிடங்கள்.
அசீமானந்தா நேரில் கூறிய விபரங்களுடன் அசீமானந்தாவின் சொந்த ஊரான கமர்புக்கூர், அசீமானந்தா தனது குற்றச் செயல்களை நடத்தி வந்த குஜராத்தின் டாங் மாவட்டம், பிரக்யாசிங் சிகிச்சை பெற்று வரும் போபால், தேசிய புலனாய்வு ஆணையத்தின் டெல்லி அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் அலுவலகம் என்று இந்த வழக்குடன் தொடர்புள்ள நபர்களை சந்தித்து தகவல்கள் திரட்டியிருக்கிறார், கட்டுரையாளர். மேலும் சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்கு, அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகள், மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கு இவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகைகள், பத்திரிகை செய்திகள் இவற்றையும் இணைத்து, ஒரு விரிவான குற்றப் புலனாய்வு செய்திருக்கிறார் கட்டுரையாளர் லீனா கீதா ரெகுநாத்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளான பா.ஜ.க, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்வற்றின் வன்முறை வெறிச்செயல்களை ஆதாரத்துடன் நிரூபிக்கும் இந்தக் கட்டுரை இந்திய ஊடகவியல் வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனை.
கேரவன் மேகசின்
கட்டுரையின் இறுதிப் பகுதியின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்
புது டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு ஆணையத்தின் கண்ணைப் பறிக்கும் தலைமை அலுவலகத்தில் ஒரு அடக்கமான தடுப்பறைதான் போலீஸ் கண்காணிப்பாளர் விஷால் கர்கின் அலுவலகம். அலுவலகத்தின் கண்ணாடி சுவரை ஒட்டியிருக்கும் கோப்பு அலமாரியில் “அஜ்மீர் குண்டுவெடிப்பு”, “சம்ஜவுதா குண்டு வெடிப்பு”, “சுனில் ஜோஷி கொலை” “எழுதுபொருட்கள்” என்று பெயரிடப்பட்ட நான்கு இழுப்பறைகள் தெரிகின்றன. கர்கின் மேசைக்கு பின்னால் உள்ள வெள்ளைப் பலகையில் அவர் புலன்விசாரணை அதிகாரியாக உள்ள சம்ஜவுதா மற்றும் அஜ்மீர் வழக்குகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை தேதிகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு சுவரில், சம்ஜவுதா வழக்கில் இன்னும் தலைமறைவாக இருக்கும் சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா, மற்றும் அசோக் என்பவரின் படங்கள் அச்சிடப்பட்ட “தேடப்படுபவர்கள்” போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. டாங்கே, மற்றும் கல்சங்கராவின் கைதுக்கு வழி வகுக்கும் துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் வெகுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய புலனாய்வு ஆணையம்
விமான ஓட்டி குளிர் கண்ணாடி அணிந்த கர்க் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு பயங்கரவாத தடுப்பு ஐ.பி.எஸ் அதிகாரியாகவே காட்சியளிக்கிறார். நான் அவரை சென்ற ஆண்டு சந்தித்த போது, “இங்கு நாங்கள் ஆருஷி வழக்கைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். அந்த வழக்கில் குற்றம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு விசாரணை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகுதான் அவர்கள் குற்றம் நடந்த இடத்துக்கு போனார்கள். அதற்குள் முக்கியமான தடயங்கள் எல்லாம் தொலைந்து போனதால் புலன் விசாரணையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன என்பது பரவலாக பேசப்பட்டது. ஆனால், சம்ஜவுதா வழக்கை விசாரிக்கும் பொறுப்பு எங்களிடம் வந்த போது மூன்று ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த வழக்கு விசாரணை எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.”
“இந்த குண்டு வெடிப்புகளுக்காக கொடுக்கப்பட்ட பணத் தடத்தை இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. நடைபெற்ற பண பரிமாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்ட வங்கி பரிமாற்றங்கள் இல்லையே! இந்த விசாரணையின் வரம்பாக இதை எடுத்துக் கொண்டு மற்ற ஆதாரங்களை திரட்டுகிறோம். அசீமானந்தா சுனில் ஜோஷிக்கு பணம் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தார் என்று எந்த தகவலும் இல்லை.” குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன என்பதும் இன்னமும் விசாரணையில்தான் உள்ளது. “தேடப்படுபவர்கள்” போஸ்டரை சுட்டிக் காட்டிய கர்க், “ரூ 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட இவர்கள்தான் இந்த குற்றத்தின் முக்கிய மூளைகளும், முக்கிய செயல்வீரர்களும். இவர்களை பிடித்தால்தான் இன்னும் தெளிவான பிம்பத்தை பெற முடியும்.” என்றார்.
வழக்கை விசாரிப்பதில் தேசிய புலனாய்வு ஆணையம் பல முட்டுக்கட்டைகளை சந்தித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரிப்பதில் தேசிய புலனாய்வு ஆணையம் பல முட்டுக்கட்டைகளை சந்தித்து வருகிறது. ‘தேசிய புலனாய்வு ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது’ என்ற சட்ட நுணுக்கத்தை காரணமாகக் காட்டி சுனில் ஜோஷி கொலை வழக்கு தொடர்பாக பிரக்யா சிங்கை அவர்கள் விசாரிப்பதை, 2012 ஜூலை மாதம் நீதிமன்றங்கள் தடை செய்தன.
லெப் கர்னல் சிறீகாந்த் புரோகித்தையும் இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவரையும் விசாரிப்பதையும் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. தேசிய புலனாய்வு ஆணையத்தின் வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான அகமது கான், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே நீதிமன்றத்தில் நடத்துமாறு பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் இந்த திசையில் மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இன்னும் பிற சதிகாரர்களின் பெயர்களை சேர்த்து கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய புலனாய்வு ஆணையம் கூறுகிறது. தான் கடினமாக உழைப்பதாக கர்க் சொல்கிறார். “சென்ற வாரம் லிஃப்டில் என்னை பார்த்த என் அலுவலக சகாக்களில் ஒருவர், ‘சாப் நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க’ என்றார். ‘தூக்கத்தை துறந்து விட்டால் நீங்களும் ஸ்மார்ட்டாகி விடலாம்’ என்று நான் பதில் சொன்னேன். “நீ தூங்கும் போது, உன்னால் தேடிப்பிடிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் எவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என்பது கனவில் வர வேண்டும்” என்று தன்னுடைய மேலதிகாரி கூறியதாக கர்க் நினைவு கூர்கிறார்.
தேசிய புலனாய்வு ஆணையம் இந்திரேஷ் குமாரை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்று கேட்ட போது, அது துறையின் உள்விவகாரம் என்றும் அதைக் குறித்து தான் பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறி விட்டார்.
“தமக்கு தேவைப்படும்போது பிரக்யா சிங்கை பயன்படுத்திக் கொண்டு இப்போது கை கழுவி விடுகிறார்கள்” – மூத்த பா.ஜ.க தலைவர் உமா பாரதி.
2008-ல் பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு ப.சிதம்பரம், திக்விஜய சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் “காவி பயங்கரவாதம்” என்று அழைத்ததை வன்மையாக கண்டனம் செய்தார்கள் இந்துத்துவா அமைப்பினர். தமது அமைப்புகள் மீது குற்றக் கறை படிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.கவும் பதறினர். ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டனம் செய்த அந்த அமைப்பினர், பின்னர் ஒரு கட்டத்தில் குற்றம் சாட்டப்படவர்களுக்கு ஆதரவாக வாதாடி தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
பிரக்யா சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து “பா.ஜ.க மற்றும் அவர் சார்ந்திருந்த பிற சங்க அமைப்புகள் அவரை கை விட்டது கேவலமான செயல். அதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். தமக்கு தேவைப்படும்போது அவரை பயன்படுத்திக் கொண்டு இப்போது கை கழுவி விடுகிறார்கள்” என்று மூத்த பா.ஜ.க தலைவர் உமா பாரதி குற்றம் சாட்டினார். “பிரக்யா சிங்கின் செயல்களை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் 1995-96லேயே ஏ.பி.வி.பியை விட்டு விலகி விட்டார்.” என்றார் பா.ஜ.க பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத். ஆனால், சமீபத்தில் பா.ஜக. தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருடன் பிரக்யா சிங் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கட்சியை சங்கடத்துக்குள்ளாக்கின. குஜராத் கலவரங்களுக்குப் பிறகான தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடியுடன் பிரக்யா சிங் மேடையில் தோன்றிய இன்னொரு புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.
பிரக்யா சிங் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியானதும் பா.ஜ.க தன் தாளத்தை மாற்றிக் கொண்டது. அவர், “காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை” எல்.கே. அத்வானி கண்டனம் செய்தார். விசாரணை அமைப்பு “அரசியல் நோக்கங்களுடன் நேர்மையற்று நடப்பது தெளிவாகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார். (“சென்ற தேர்தலுக்கு முன்பு பிரக்யா சிங்குக்கு ஆதரவாக அவர் நடத்திய மொக்கையான, உணர்ச்சிபூர்வமான, ஆதாரமற்ற வாதங்களைப் போல வேறு எதுவும் அத்வானியை சிறுமைப்படுத்தவில்லை” என்கிறார் அரசியல் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா.)
பெங்களூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம்
ஆனால், ஆர்.எஸ்.எஸ் அசீமானந்தா கைதாவதற்கு ஒன்றரை வாரங்களுக்கு முன்பு அதன் வரலாற்றில் அதுவரை இல்லாத மிகவும் தீவிரமான, பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இந்திரேஷ் குமார் விசாரிக்கப்படலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருந்தன. சங்கத்தின் தலைவர்கள் இந்திரேஷ் குமாருக்கு ஆதரவாக நாடுதழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நவம்பர் 2010-ல் நடத்தினர். ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை ஆர்கனைசரில் வெளியான தகவலின்படி நாடு முழுவதிலும் நடந்த 700 ஆர்ப்பாடங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பியின் தலைமை பொறுப்பில் இருந்த கிட்டத்தட்ட அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட மேடைகளில் தோன்றினார்கள். லக்னோவில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத், தானே இந்திரேஷ் குமாருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். “அமைப்பின் வரலாற்றிலேயே முதன் முறையாக சர்சங்சாலக் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவதோடு மட்டுமில்லாமல், கூட்டத்தில் பேசவும் செய்கிறேன். ஏனென்றால் இப்போது ஆர்.எஸ்.எஸ்சுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் சதி நடந்து வருகிறது” என்று அவர் பேசினார். மோகன்தாஸ் காந்தியின் படம் போடப்பட்ட ஒரு போஸ்டரால் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. “ஹிந்து சமாஜ், காவி நிறம், ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங்கம் இந்த பதங்கள் அனைத்தும் பயங்கரம் என்பதற்கு நேர் எதிர் அர்த்தம் கொண்டவை” என்று அவர் தொடர்ந்தார்.
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”
சி.பி.ஐ மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அமைப்புகளின் புலன் விசாரணைகளில் திரட்டப்பட்ட மதிப்பு வாய்ந்த தடயங்களும், சாட்சி வாக்குமூலங்களும் இந்திரேஷ் குமார் குண்டு வெடிப்புகளில் பங்கேற்றதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. சதித்திட்டத்தின் முக்கிய நபர்கள் பலருக்கும் (குறிப்பாக சுனில் ஜோஷிக்கு) அவர் வழிகாட்டி என்று தேசிய புலனாய்வு ஆணையம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையே குறிப்பிடுகிறது. சி.பி.ஐ அவரை விசாரித்திருக்கிறது. 2011 ஜூலை இறுதியில் தேசிய புலனாய்வு ஆணையமும் இந்திரேஷ் குமாரை விசாரிக்க இருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகின. ஆனால், “பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?” என்று அவர் அந்த அமைப்பை ஊடகங்களில் பரிகாசிக்க ஆரம்பித்திருந்தார். தானும், அசீமானந்தாவும், பிரக்யா சிங்கும் இந்த வழக்குகளில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தேசிய புலனாய்வு ஆணையம் அவரை இது வரை விசாரிக்கவில்லை.
தற்போது நடந்து வரும் விசாரணைகள் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பழி வாங்கும் நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.கவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குற்றம் சாட்டுகின்றன. அது உண்மையானால், இந்த வழக்குகள் அரை மனதோடு நடத்தப்படுவதை பார்க்கும் போது, அரசாங்கம் உண்மையிலேயே இந்த அமைப்புகள் மீது எத்தகைய அதிகாரத்தை கொண்டிருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறது.
நான் சென்ற ஆண்டு இந்திரேஷ் குமாரை பேட்டி கண்ட போது, “பத்திரிகையாளர்கள் எப்போதும் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் குறித்துதான் கேள்வி கேட்கிறார்கள், அமைப்பின் சமூக நடவடிக்கைகள் குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. பின்னர் அந்த கேள்விகளை மட்டும் வெளியிட்டு எங்கள் பணிகள் பற்றிய தகவல்களை கொன்று புதைத்து விடுகிறார்கள். இத்தகைய பன்முகப்பட்ட அமைப்பான சங்கத்தை புறக்கணித்து வந்தது தவறு என்று ஊடகங்கள் மெதுவாக உணர்ந்து வருகின்றன” என்றார். குண்டு வெடிப்புகளில் அவரது பங்களிப்பு பற்றி பேச்சு திரும்பியதும், “என்னைப் பற்றி எழுதும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எல்லோரையும் நான் எச்சரிப்பது வழக்கம்” என்றார் அவர். அவர் பேசியது மிரட்டும் தொனியில் இருந்தது. பின்னர், அவருக்கு தொலைபேசி, அவரும் பாகவத்தும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தமது ஆசீர்வாதத்தை வழங்கிய சந்திப்பை பற்றி கேட்டதும் அவர் வாயடைத்துப் போனார். இது தொடர்பாக மோகன் பாகவத்தின் கருத்தை அறிய முயற்சித்த போது கேள்வியை மின்னஞ்சலில் அனுப்புமாறு அவருடைய அலுவலகத்தினர் கூறினார்கள். ஆனால், இந்த கட்டுரை அச்சுக்குப் போகும் வரை அவர்கள் பதில் அனுப்பவில்லை.
அரச விருந்தாளி அசீமானந்தா
ஜனவரி 24-ம் தேதி வெள்ளிக்கிழமை, ஹரியானாவில் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம், சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. அம்பாலா சிறையில் மூன்று ஆண்டுகள் இருந்த பிறகு, 31 மாதங்கள் சட்ட வாதங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணை மேலே நகர ஆரம்பித்திருக்கிறது. ஆஜ்மீரில் உள்ள தேசிய புலனாய்வு ஆணைய நீதிமன்றத்தில் அவர் செப்டம்பர் 2013 முதல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார். மெக்கா மசூதி வழக்கு விசாரணை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற நவம்பரில் அவர் வழக்கை விசாரிக்கும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான பிரக்யா சிங், தேசிய புலனாய்வு ஆணையம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக சொல்லி, இப்போது போபாலில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிணையில் வெளிவருவதற்காக அவர் தாக்கல் செய்துள்ள பல விண்ணப்பங்களை தேசிய புலனாய்வு ஆணையம் எதிர்த்து வருகிறது.
வழக்குகள் இன்னும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும் என்று தெரிகிறது. நீதிமன்ற நடைமுறைகளை தாமதப்படுத்துவதாக இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு நான் போய் வந்த ஒன்றரை ஆண்டுகளாக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது வரை குறிப்பிடத்தக்க புதிய நிகழ்வுகள் எதுவும் நடந்து விடவில்லை.
அம்பாலாவில் அசீமானந்தா இப்போது ஒரு சிறப்பு பி வகுப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராம்குமார் சவுத்ரி என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அவருடன் அறையை பகிர்ந்து கொள்கிறார். ராம்குமார் சவுத்ரி 2012 நவம்பரில் 24 வயது பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் பொதுவாக தரப்பட்டுள்ள சமையல் செய்யும் நபர் அவர்கள் விருப்பத்துக்கேற்ப சமைத்துப் போடுகிறார். இரவில் மட்டுமே அவர்கள் அறையில் பூட்டப்படுகின்றனர்.
ஜனவரி 2014-ல் நடந்த எங்கள் கடைசி சந்திப்பில், தேநீர் வேண்டுமா என்று அசீமானந்தா என்னிடம் விசாரித்தார். நான் பதில் சொல்வதற்கு முன்பே, சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ள ஒரு ஒல்லியான பதின்ம வயது சிறுவன் இனிப்பான தேநீர் நிரம்பிய ஒரு பிளாஸ்டிக் கப்பை என் கையில் திணித்தான். அசீமானந்தா அவனை தனக்கு அருகில் இழுத்து, “இவன் என் ஆள். விரைவில் இவன் வெளியில் போய் விடுவான்” என்றார். அந்த சிறுவனின் முகத்தை பார்த்து சிரித்த அவர், “இந்த டீக்கடைக்காரனும் வளர்ந்து ஒரு நரேந்திர மோடியாகலாம்” என்றார்.
எங்கள் உரையாடல்களின் போது அந்த வழியாகச் சென்ற சிறை அதிகாரிகள் நின்று அசீமானந்தா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தனர். “என்ன நடந்ததோ நன்றாகவே நடந்தது என்று அவர்கள் அனைவரும் சொல்கிறார்கள். நான் அவற்றை செய்தேனா இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் யார் செய்திருந்தாலும், சரியானதை செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்” என்றார் அசீமானந்தா.
நான் மேற்கு வங்கத்தில் உள்ள அசீமானந்தாவின் கிராமமான கமர்புக்கூருக்குப் போயிருந்த போது, அவரது குடும்பத்தினர் என்னுடன் பேசுவதற்கு பெரிதும் தயங்கினார்கள். நான் புறப்படும் போது அவரது தம்பி சுஷாந்த், “சில மாதங்கள் பொறுத்திருங்கள். மோடிஜி அதிகாரத்துக்கு வந்த பிறகு, கிராமத்தின் நடுவில் ஒரு மேடை போட்டு அசீமானந்தா செய்தவற்றை எல்லாம் ஒரு லவுட் ஸ்பீக்கரில் அலற விடுவேன்” என்றார்.
எங்களது ஒரு சந்திப்பில் அசீமானந்தா, நாதுராம் கோட்சேவின் இறுதி வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி சொன்னார் : “சிந்து நதி இந்தியாவில் பாய்வது வரை என்னுடைய எலும்புகளை கடலில் கலக்காதீர்கள்.” வழக்கு விசாரணை முடிவதற்கு நீண்ட காலம் பிடித்தாலும் தான் நிச்சயமாக விடுதலை செய்யப்படப் போவதாக அவர் பூல்சந்த் பாப்லூவிடம் உறுதியாக கூறியிருக்கிறார். தனது மற்றும் பிரக்யாசிங், சுனில் ஜோஷி போன்றவர்களுடைய பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். “அது நடக்கும். சரியான நேரத்தில் நடந்தே தீரும்”.
– முற்றும்
நன்றி : லீனா கீதா ரகுநாத்,கேரவான் (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு
பாலியல் பொறுக்கிகள் இருக்கவேண்டிய இடம் தமிழ்த்துறை அல்ல! புழல் சிறை!
சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் ஜோஸ்பின் ஜெயசாந்தி. 2008-ம் ஆண்டு அவர் பணி புரிந்து வந்த தமிழ்த்துறையில், தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் எஸ்.ஏ. ராஜராஜன். இவர் துறை தலைவர் எனும் முறையில் அதிகாரத் திமிரில், ஜெயசாந்திக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். துறைத் தலைவரான தன்னுடன் வெளியூர்களில் நடக்கும் கல்வித்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைப்பதும், தங்குவதற்கு ஹோட்டலில் அறை எடுப்பதாக கூறுவதும் அவரது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ராஜராஜனுடைய நோக்கத்தை புரிந்து கொண்ட ஜெயசாந்தி அவரது அழைப்புகளை உறுதியாக மறுத்து வந்திருக்கிறார்.
இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார் ராஜராஜன். விடுமுறை ஒப்புதல் கேட்டு போகும்போது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு முகத்தில் லெட்டரை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். இந்த தொல்லைகளை பொறுக்க முடியாமல் பதவி விலகல் கடிதம் கொடுத்த ஜெயசாந்தியை அப்போதைய கல்லூரி முதல்வர் சமாதானப்படுத்தி பணியில் தொடர வைத்திருக்கிறார். ஆனால் ஜெயசாந்திக்கு அநீதி இழைத்த ராஜராஜன் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ராஜராஜனோ, ஜெயசாந்தியின் பதவி உறுதி செய்யப்படுவதை அற்ப காரணங்கள் சொல்லி தள்ளிப் போடுவது, அவரை தன் கீழ் ஆய்வு மாணவராக சேரும்படி வலியுறுத்துவது, வெளியூர் பயணங்களில் தன்னுடன் வரும்படி வற்புறுத்துவது என்று பாலியல் வக்கிர நோக்கத்துடன் தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார். ஜெயசாந்தியின் இருக்கையை தனது அறைக்கு மாற்றி அங்கு வந்து உட்காரும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். மற்றவர்களின் எதிரிலேயே, ஜெயசாந்தியை பாலியல் ரீதியாக திட்டுவதையும், ஆபாசமாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
தமிழ் துறையின் உதவி பேராசிரியராக இருந்த பிரின்ஸ் என்பவரும் ராஜராஜனுடன் சேர்ந்து இருவருமாக ஜெயசாந்தியை அச்சுறுத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து வரும் இந்த கொடுமைகளை தாங்க முடியாத ஜெயசாந்தி 13.12.2012 அன்று கல்லூரியின் பாலியல் வன்முறைக்கு எதிரான குழுவில் புகார் கொடுத்தார். புகாரை விசாரிப்பதில் கல்லூரி நிர்வாகம் அக்கறை காட்டாத நிலையில், ஜெயசாந்தி பல முறை நினைவுபடுத்திய பிறகு ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
புகாரை விசாரித்த குழு தனது விசாரணை அறிக்கையை 23.4.2013 அன்று கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் ராஜராஜனுக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுத்த கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு மேற்சொன்ன ஆவண நகலை ஒப்படைக்கவில்லை. மேலும் தொடர்ந்து ஆவண நகல் ஒப்படைக்க பேராசிரியர் ஜெயசாந்தி நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கல்லூரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானமாக போகச் சொல்லி வலியுறுத்தியது.
ஆனால் பாலியல் வன்முறை செய்த ராஜராஜனோ தொடர்ந்து கீழ்தரமான வகையில் வசை பாடுவது, பிரின்ஸ் உடன் இணைந்து புகாரை திரும்பப்பெறுமாறு கொலை மிரட்டல் விடுவது, பாலியல் புகார் விசாரணையில் சாட்சி சொன்னவர்களை அச்சுறுத்துவது என்று தனது கொடுமைகளை தொடர்ந்திருக்கிறார்.
அதனால் 31.12.2013 அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து கிரிமினல் புகார் வழங்கப்பட்டது. 2 மாதம் புகார் பதிவு செய்யப்படாததால் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நீதிமன்றத்தை அணுகி (Crl.O.P.No.4427|14) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பெறப்பட்டது. (6.3.2014)
மேலும் பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் (W.P.34958|13) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்த 2 வழக்குகள் மூலம் வெளிவந்த ஊடக செய்திகள் கல்லூரி நிர்வாகத்தை நெருக்கடியில் தள்ளவே, நியாயமான முடிவை எடுக்காமல் அயோக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்து கடந்த 28.2.2014 அன்று பேரா.ஜெயசாந்தியை கல்லூரியை விட்டு நீக்கியது.
வேலையிடங்களில் பாலியல் தொல்லைத் தடை சட்டம் 2013-ன்படி பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் விசாகா வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டல்களும் கல்லூரி நிர்வாகத்தால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
மேற்கூறிய சட்டத்தின்படி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிரிமினல் புகார் வழங்க உதவ வேண்டும், அனுசரணையாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக கிரிமினல் பேர்வழிகளான பேராசிரியர் ராஜராஜன் மற்றும் பிரின்ஸ்-ன் கைக்கூலிகளாக லயோலா கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.
லயோலா நிர்வாகமே!
பாலியல் வன்முறை செய்த பேராசிரியர் ராஜராஜன் மற்றும் கொலை மிரட்டல் கொடுத்த பேராசிரியர் பிரின்ஸை உடனே பணிநீக்கம் செய
பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் ஜோஸ்பின் ஜெயசாந்தியை பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்பட்ட பணி நீக்கத்தை உடனே ரத்து செய்.
தமிழக அரசே! காவல்துறையே!
கிரிமினல் பேராசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்! கைது செய்து சிறையில் அடை
என்ற கோரிக்கையை முன்வைத்துபாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், ‘மாமா’ பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மார்ச் 10, 2014 அன்றுமாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
____________________
பின் குறிப்பு: சென்னையின் மேட்டுக்குடியினர் அதிகம் படிக்கும் லயோலா கல்லூரியில்தான் அதிகார வர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரது வாரிசுகளும் படிக்கின்றனர். ஒப்புக்கு இரண்டு ஏழை மாணவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு அதை ஒரு பெரிய சேவை போல காட்டி விட்டு ஆளும் வர்க்க இளவரசர்களை உருவாக்கி வருகிறது இந்தக் கல்லூரி. ஏசு சபை நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் இந்தக் கல்லூரியின் ஒழுக்கம் எப்பேற்ப்பட்டது என்பதை இந்த சம்பவம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஒருபுறம் மைய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், அப்துல் கலாம் போன்றவர்கள் அடிக்கடி வந்து பேசும் கல்லூரியாக லயோலா திகழ்கிறது. மறுபுறம் தன்னார்வக் குழுக்கள், தலித் அமைப்புகள், தமிழினவாதிகள் அனைவருக்கும் இடமோ இல்லை பேசவோ வாய்ப்பு கொடுத்து கொஞ்சம் முற்போக்கு சாயலையும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் இப்பேற்ப்பட்ட ஒளிவட்டத்துடன் இருக்கும் இந்தக் கல்லூரியும் அதன் நிர்வாகமும் எப்படி ஒரு பெண்ணை அயோக்கியத்தனமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். லயோலா கல்லூரியின் கூட்டங்களில் கலந்து கொண்டோரும், பேசுபவர்களும் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியருக்கு குரல் கொடுப்பார்களா, இல்லை லயோலாவை பகைக்க முடியாது என அமைதி காப்பார்களா?
– வினவு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை
தொடர்புக்கு : 98428 12062
கும்மிடிப்பூண்டி பகுதியில் கடந்த 08.03.2014 அன்று, “தொழிற்சங்க உரிமைக்காக போராடிய 13 தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் SRF மற்றும் போலீசின் கூட்டுச் சதியினை முறியடிப்போம்” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (புஜதொமு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தை தெரிந்துக்கொள்ள நாம் அந்நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்ற வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளார் சங்கம் புஜதொமு அமைப்பின் இணைப்பு சங்கமாக கடந்த 2005-லிருந்து செயல்பட்டு வருகிறது. சங்கம் துவக்குவதற்கு முக்கிய காரணங்கள் : என்.டி.டி.எஃப் என்கிற கொத்தடிமைக்கூடாரத்தில் மெக்காலே கல்வி அளித்து SRF-ன் லாபத்திற்காக இளம் தொழிலாளர்களை அடிமைகளாக உருவாக்கி, “ஓய்வில்லா வேலை நேரம்” (தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட் ஏன், மூன்று ஷிப்ட் கூட பார்க்க வைத்தது), ஈ.எஸ்.ஐ வசதி இல்லை, முதுகு எலும்பு ஒடிய வேலை செய்தாலும் சமமான ஊதிய உயர்வு இல்லை, அவனுடைய தாரக மந்திரமான அப்ரைசல் சிஸ்டத்தின்படி (APPRAISAL SYSTEM) யார் சிறந்த அடிமையாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்ற அடிமைகளுக்கு குறைவான சம்பள உயர்வு! என்கிற திமிரோடு நிர்வாகம் தொழிலாளர்களை ஒடுக்கிவந்தது.
இந்த அடக்குமுறையை எதிர்த்து செயல்பட சங்கம் அவசியமானது என உணர்ந்து, புஜதொமு-வை நாடினர். மற்ற சங்கங்கள் இருக்கும்போது, ஏன் புஜதொமு சங்கத்தினை நாட வேண்டும் என கேள்வி எழலாம், காரணம் இருக்கிறது. 2004-ல் ரெட் ஹில்ஸ் பகுதியில் நடைப்பெற்ற புஜதொமு தெருமுனைக் கூட்டத்தினை சில SRF தொழிலாளிகள் பார்த்தனர். “அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் தொடங்கி முதலாளிகள் வரை செய்கிற கொடுமைகளை தைரியமாக பேசுகின்றனர்! இவர்கள் கூறுகின்ற தீர்வு சரியானதாக உள்ளதே! இவர்களிடம் சென்றால் நமது பிரச்சினைக்கு வழி கிடைக்கும்!” என உணர்ந்தனர்.
தொழிலாளர்கள் 2005-ல் சங்கம் தொடங்கினர். நிர்வாகம் வெற்றிலைப்பாக்கு வைத்து சங்கத்தை ஆராதிக்கவில்லை. சங்கத்தினை உடைக்க, முன்னணியாளர்களை வெளிமாநிலங்களுக்கு பயிற்சிக்கு அனுப்புவது, தொழிலாளர்கள் மனதை சங்கம் கெடுத்து விட்டது என்று அவர்களை மறுபடியும் NTTF கொத்தடிமை கூடாரத்திற்கு அனுப்புவது, புதிதாக திருமணம் ஆனவர்கள், ஆகப்போகிறவர்கள், மனைவி பிரசவ நிலையில் இருந்த தொழிலாளர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் வெளி மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்வது என்ற பல முயற்சிகளாலும் சங்கத்தினை உடைத்தெறிய முடியவில்லை.
இறுதியாக தனது பிரம்மாஸ்திரத்தினை பயன்படுத்தியது நிர்வாகம். ஆம்! சங்க நிர்வாக குழு உறுப்பினர்களை ஆலை வாயிலிலேயே வைத்து சஸ்பெண்ட் ஆர்டரை கொடுத்து, ஒழிந்தது சங்கம் என கொக்கரித்தது. நிர்வாகத்தின் செயல்பாட்டினை கண்ட தொழிலாளர்கள் 2008-ல் சங்கமாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தினை நடத்தினர். ‘விசுவாசி’ போலீசு கலவர (தடுப்புப்) படை ஆலையினுள் நுழைந்தது. தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது.
‘தங்களை தொழிலாளர்கள் சிலர் தாக்கினார்கள், கம்பெனியின் ’பொது’ சொத்தை சேதப்படுத்தினார்கள்’ என பொய்ப் புகார் கொடுத்தது நிர்வாகம். இந்த புகாரினை வைத்துக் கொண்டு நிர்வாகம் அடையாளம் காட்டிய தோழர்களை, தொழிலாளிகள் முன்பே அடித்து துன்புறுத்தியது போலிசு. ஏன் இப்படி நடந்துக் கொள்கிறீரகள்! என கேள்விகேட்ட தொழிலாளர்களையும் அடித்து துன்புறுத்தியது. 13 தொழிலாளர்களை இரவு 12 மணியளவில் நீதிபதியின் வீட்டிற்கு சென்று ஆர்டர் வாங்கி, கிரிமினல்களாக சித்தரித்து, இரவு 1 மணிக்கு புழல் சிறையில் அடைத்தது போலிசு. முதலாளிக்கு ஆதரவாக என்னவொரு வேகம் ? (ஆனால் இந்த வேகம் ஏன் மணற்கொள்ளையன் வைகுண்டராஜன், மலைத் திருடன் பி.ஆர்.பி யிடமும் காட்டமுடியவில்லை?)
இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஜாமீன் கொடுப்பதில் நீதிபதி கூறியது தான் ஹைலைட்! “ஏண்டா, கம்பெனியில பத்தாயிரம் சம்பளம் வாங்குறீங்களாமே! என்ன திமிரு இருந்தா அதிகாரிகள போட்டு அடிப்பீங்க!” என தன் வர்க்கப் பாசத்தைக் காட்டி ஜாமீன் தரமறுத்துவிட்டார். இந்த அதிகார வர்க்கத்திடம் 40 நாட்கள் போராடி அந்த தொழிலாளர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. (இதே சம்பவம், மறுகாலனியாக்க கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழலில் நடந்திருக்குமானால், முதலாளிகள் மீதான ஆளும் வர்க்கத்தின் விசுவாசத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டு வதைபடும் மாருதி தொழிலாளிகள் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!)
ஆலையில் தொழிற்சங்கம் ஓரளவு பலமானது. தனது வழக்குகளை சட்டரீதியாக நடத்தி வந்தது. 2011-ல் சம்பள பிரச்சினை (COD) தொடர்பான வழக்கில் வெற்றியடையும் தருவாயில் இருந்தது. ஆனால் நிர்வாகம் “சங்கத்தினை அங்கீகரிக்கிறோம், எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என தொழிற்சங்கத்திடம் கூறியது. நிபந்தனையாக நிர்வாகத்திற்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்குகளை சங்கம் வாபஸ் வாங்க வேண்டும் என்றது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டது. சம்பள பிரச்சினை சில சரிசெய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் விவகாரம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்த்தின் செயல்பாடுகளை நடைமுறையில் வளர விடாமல் தடுத்தது நிர்வாகம். அதேவேளையில், தொழிற்சங்கம் வழக்குகளை எதிர்கொண்டும் வந்தது.
தற்போது நடைபெற்று வரும் கிரிமினல் பொய் வழக்கு கடந்த 2009-லிருந்து நடைப்பெற்று வருகிறது. தற்போது வழக்கு நடத்துவது (போலீசு தரப்பில்) அரசு வழக்குரைஞர். 5 ஆண்டுகளாக வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்தது. 13 தொழிலாளிகளும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை தவறாமல் வழக்கிற்கு வந்தனர். போலீசு தரப்பு சாட்சி 3 ஆண்டிற்கு பிறகு தற்போது தான் ஆஜர் செய்துள்ளனர். அதில் 24 பொய் சாட்சியங்களை ஜோடனை செய்துள்ளது.
“நிர்வாகத்திற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை! போலிசு தான் இந்த வழக்கு நடத்துகிறது!” என ஒவ்வொருமுறையும் நிர்வாக அதிகாரிகள் சங்கத்திடம் கூறிவந்தனர். இந்த வழக்கு நடத்துவது அரசு தரப்பு மட்டுமல்ல நிர்வாகமும் தான் என்ற உண்மை தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது. ஆம்! இந்த வழக்கில் 13 பேர் தண்டனைபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு தரப்பு வழக்குரைஞருக்கு ஆதரவாக மூன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்துள்ளது நிர்வாகம். ஒரு பக்கம் சங்கத்தை அங்கீகரித்து பேசிக்கொண்டு பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, மறுபக்கம் 13 பேரையும் எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் புகைச்சல் தற்போது எரியத் தொடங்கியுள்ளது. வடிவேல் பாணியில் சொல்வதென்றால் “நானும் எவ்வளவு நாளுதான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது!” என்று கூறி தற்போது தனது சுயரூபத்தை காட்டியுள்ளது நிர்வாகம்.
இந்த சுயரூபத்தினை முறியடிக்க புஜதொமு சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட புஜதொமு-வின் தலைவர் தோழர். விகேந்தர் தலைமை தாங்கினார். கண்டன உரையாக புஜதொமு மாநில இணைச்செயலாளர் தோழர். சுதேஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளிகள் கலந்துகொண்டு நிர்வாகத்திற்கும், போலீசுக்கும் தமது கண்டனத்தினை உரைக்குமாறு விண்ணதிர முழக்கமிட்டனர். மக்களிடத்தில் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பரவலாக சென்றடைந்தது.
11.03.2014 அன்று கிரிமினல் வழக்கில் பொய் சாட்சி சொல்ல வந்த நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்தவுடன் மிரண்டு போயினர். காரணம், 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கோர்ட்டிற்கு வந்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர் நிர்வாக அதிகாரிகள். நீதிமன்றத்தின் வெளியில் வழக்கின் தன்மை பற்றி சங்க முன்னணியாளர்கள் தொழிலாளிகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். நிர்வாக தரப்பில் சாட்சி சொல்ல வந்தவர்கள் நீதிபதியிடம் சென்று, “நாங்கள் வெளியே சென்றால் தொழிலாளிகள் எங்களை மிரட்டவும், அடிக்கவும் செய்வார்கள்! எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை!” என சென்டிமென்டாக பேசி நாடகத்தை நிறைவேற்றினர். கூடியிருந்த எங்களை நீதிபதி அழைத்து, “இங்கெல்லாம் கூட்டம் கூடக் கூடாது, எல்லாரும் கலைந்து போங்க” என்றார். அதன் பின்பு நிர்வாகம் வேனில் ஏறி பறந்து சென்றது.
தற்போது நிர்வாகம் சங்க செயல்பாட்டின் மீது அதிருப்தியாக உள்ளது என எச்.ஆர் மேனேஜர் சங்க தலைவரிடம் போனில் ஒப்பாரி வைத்தார். எங்களின் கோரிக்கை என்னவோ, அதற்காக சட்ட பூர்வமாகவும், சங்க ரீதியாகவும் போராடினோம். தீர்வு எட்டப்படவில்லை. காரணம் இந்த அரசமைப்புக்குள் எவ்வளவுதான் போராடினாலும் தற்காலிக தீர்வு மட்டுமே கிடைக்கிறது. நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கமாய் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடியே தீர வேண்டும் என்கிற கட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டம் ஏதோ 13 பேர் மீதான கிரிமினல் வழக்கு பிரச்சனைக்காக நடைபெற்றது என்று சுருக்கி பார்த்து விடமுடியாது. உரிமைக்காக போராடுகின்ற தொழிலாளார்கள் மீது இந்த ஆளும்வர்க்கங்களும், முதலாளிகளும் எப்படி நடந்து கொள்கின்றன என்பதற்கு இன்னுமொரு உதாரணம் மாருதி தொழிலாளர் போராட்டம். இவ்வாறு ஒவ்வொரு ஆலையிலும் இதே நிலைமைதான், இன்றைய மறுகாலனியாக்க சூழ்நிலையில் நடந்தேறிய வண்ணமிருக்கிறது. ஒவ்வொரு ஆலைகளிலும் முதலாளித்துவத்தின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம்! ஆனால் அதன் சா(கோ)ரம் மாறாது!
மதுரை பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினத்திற்காக தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு காவல் துறையின் அனுமதியும் பெறப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டத்தை ரத்து செய்வதாக காவல் துறை கடிதம் வழங்கியது. மாவட்ட தேர்தல் அதிகாரிக்குத்தான் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் இருக்கிறது, எனவே அவரை பார்த்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்று காவல்துறை தனது பெறுப்பிலிருந்து கழண்டு கொண்டது.
ஆனால் மாவட்ட ஆட்சியரை பார்த்து அனுமதி பெறச்சென்றால், ஆட்சியர் அலுவலகத்தில் உங்களுடைய பகுதி தாசில்தாரை பாருங்கள், அவர்தான் அனுமதி தருவார் என்றனர். ஆனால் தாசில்தாரோ எனக்கு அதிகாரம் இல்லை ஆட்சியர்தான் தரவேண்டும் என்று அவரும் கழண்டு கொண்டார். புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தாலும் உடனடியாக ஒரு தனியார் இடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு தோழர் இராணி தலைமை தாங்கினார். இதில் பெ.வி.மு தோழர்கள் ஷீலா, சுகுணா, ஆகியோர் கலந்து கொண்டனர். பெ.வி.மு, மாநில அமைப்பாளர் தோழர் நிர்மலா “ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பை அம்பலப்படுத்தியும் பண்பாட்டு விசயங்களில் பெண்களின் நிலையை பற்றியும்” உரையாற்றினார்.
அடுத்து பெ.வி.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் அஜிதா “பெண்கள் உரிமைகளைப் பெற பாராளுமன்றத் தேர்தல் பாதை பயன்படாது என்பதையும், நாடு மறுகாலனியாகி வருகிற சூழலில் நமது குடும்பம் மட்டும் தனியாக சந்தோசமாக வாழமுடியாது என்பதையும் விளக்கி போராட்டம் மட்டுமே தீர்வு” என்று எழுச்சியுரை ஆற்றினார்.
இறுதியில் ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் “பெண் தொழிலாளர்களின் அவலநிலைமையை உணர்ச்சிபூர்வமாக” எடுத்துரைத்தார்.
உரைகளுக்கிடையில் புரட்சிகர பாடல்களும், டாஸ்மாக் சாராய கடைகளால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் நாடகமும் நடத்தப்பட்டது. தோழர் லதா நன்றியுரை வழங்கினார்.
கூட்டம் சுற்று வட்டார மக்களிடம் நல்ல தாக்கத்தையும் உணர்வெழுச்சிகளையும் ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.
[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்]
சென்னை நகரில் இருக்கும் ஆயிரக்கணக்கான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றாவது உங்களுக்கு நிச்சயம் பரிச்சயமுடையதாக இருக்கும். இப்பொழுதெல்லாம் காலை நாலரை மணிக்கும், இரவு பதினோரு மணிக்கும் கூட சென்னையின் பல்வேறு பகுதிகளின் சிக்னல்களில் பச்சை விளக்குக்காக வண்டிகள் காத்திருக்கின்றன.
காலை ஏழு மணி முதல் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், கூலித் தொழிலாளர்கள், வேலை தேடிச் செல்பவர்கள் என்று பல்வேறு வேலைகளுக்காக பயணிப்பவர்கள் சிறிது சிறிதாக நூற்றுக்கணக்கில் கூடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்து நிற்கும் பேருந்துகள் அனைத்தும், இரண்டாம் உலகப்போரின் போது நிரம்பி வழிந்தபடியே புகையைக் கக்கிக்கொண்டு வரும் ரயிலைப் போல, உள்ளே நுழைய வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் பிதுங்கி வழிந்தபடியே வந்து நிற்கும்.
ஏழு மணி முதல் பத்து மணி வரை இதே நிலை தான் தொடரும். இந்த நேரங்களில் வண்டிக்குள் நடத்துனர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது. குளிர் காலங்களில் கூட வியர்வையால் குளித்து விடுவார். பத்து மணிக்கு பிறகு இந்த நிலை மாறும், எனினும் அதன் பொருள் கூட்டம் குறைந்துவிட்டது என்பதல்ல. மீண்டும் மாலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை அதே அளவு கூட்டம் இருக்கும்.
ஒரு கோடி மக்கள் தொகையை எட்டப்போகும் ‘வல்லரசு’ இந்தியாவின் நகரங்களில் ஒன்றான சென்னையில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 3,800 தான். எனவே தான் புளி மூட்டைகளைப் போல மக்களை அடைத்துக் கொண்டு வருகின்றன மாநகரப் பேருந்துகள். நான் பேருந்தில் போவதில்லை, சொந்த வண்டியில் போகிறேன் என்று நீங்கள் சொன்னால், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதிலும் முதல் இடம் பெறுபவை மாநகரப் பேருந்துகள்தான்.
இவ்வாறு நகரத்தின் நெரிசலான சாலைகளில் லட்சக்கணக்கான மக்களை தினந்தோறும் குறுக்கும் நெடுக்குமாக கொண்டு சேர்க்கும் மாநகர பேருந்துகளின் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பணி ஓய்வு பெறும் வரை மக்களுக்காகவே உழைக்கின்றனர், எனினும் அவர்களைப் பற்றிய பெரும்பான்மை மக்களின் கருத்து தவறானதாகவும், எதிர்மறையானதாகவும் இருக்கிறது. பயணிக்கும் போது அவர்களிடம் முறைப்பது, சண்டை போடுவது, கடுமையான வார்த்தைகளில் திட்டுவதோடு, சில இடங்களில் எதிரிகளைப் போல தாக்கவும் செய்கின்றனர். சென்ற மாதம் 25G பேருந்தில் நடத்துனரை ஒரு மாணவன் கல்லால் அடித்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே வாரத்தில் டெய்லர்ஸ் சாலை வழியாக செல்லும் ஒரு பேருந்திலும் நடத்துனரை ஒருவர் தாக்கியுள்ளார். தினமும் இப்படி நூற்றுக்கணக்கான பிரச்சினைகளை எதிர்கொண்டபடி தான் போகுவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மொத்தம் 26 பணிமனைகள் இருக்கின்றன. 18,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவற்றில் ஒன்று தான் அய்யப்பன் தாங்கல் பணிமனை. இங்கிருந்து 170 பேருந்துகள், இருபதுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 100 மெக்கானிக்குகள் உள்ளிட்டு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 750 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த பணிமனையில் உள்ள தொழிலாளர்களை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். (இந்த கள ஆய்விற்காக மூன்று பணிமனைகளுக்கு சென்றோம். மூன்றின் விவரங்களும் அய்யப்பன் தாங்கல் பணிமனையை மையமாக வைத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன.)
அன்று ஞாயிற்றுக்கிழமை. பெரும்பான்மை மக்களுக்கு ஓய்வு நாள். அன்று தான் ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஒரு ட்ரிப் அடித்த பிறகு சற்று நேரமாவது ஓய்வு கிடைக்கும் நல்ல நாள். வேலை நாட்களில் இருக்கும் பரபரப்போ, கூட்டமோ, நெரிசலோ அன்று இருக்காது. எனவே ஒரு சிங்கிளை (புறப்படும் இடம் – சேருமிடம் வரை செல்லும் பயணம்) முடித்து விட்டு இறங்கும் ஓட்டுனரும், நடத்துனரும் டீ கடைகளில் தேநீரை சற்று நிதானமாக விழுங்கியபடி சொந்தப் பிரச்சினைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூருங்க, 2007-ல் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த முதல் நாளே செத்துட்டேன், ஊருக்கே ஓடிப்போயிறலாமான்னு கூட தோணுச்சி, ஆனா அப்பா இந்த வேலை கிடைக்கிறதுக்காக சிரமப்பட்டு கொடுத்த ரெண்டு லட்சம் ரூபாய் தடுத்துடுச்சி, பல்லைக் கடிச்சிக்கிட்டு அப்படியே இருந்துட்டேன். முதல் மூணு மாசத்துல ரெண்டு தொடையையும் தூக்கவே முடியல, அவ்வளவு வலி, வீங்கிப்போய் கால் நாலு மடங்கு பெருசாயிட்ட மாதிரி பாரம். வண்டியை ஸ்டார்ட் பண்ணினா அந்த சிங்கிளை முடிக்கிறதுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கை மிதிக்கிறோம், எத்தனை தடவை ஆக்சிலேட்டரை மிதிக்கிறோம்னே தெரியாது. பஸ்ல இருக்கிற பார்ட்ஸ் மாதிரி தான் நாங்களும், பஸ் நிக்கிற வரைக்கும் எங்க உடல் உறுப்புகளும் இயங்கிக்கிட்டே இருக்கும். பிறகு ஓடாது.” என்கிறார் 31 வயதான ஓட்டுநர் குமரேசன்.
“காலையில் எத்தனை மணிக்கு வண்டியை எடுப்பீங்க?”
“பல ஷிப்ட் இருக்கு சார், புல் ஷிப்ட்டுன்னா 4.30 மணிக்கெல்லாம் டிப்போவிலிருந்து கிளம்பிறணும். 4.30 மணிக்கு வந்தா நைட்டு 8.30 மணி வரைக்கும் ஒரு ஷிப்ட், அடுத்த நாள் லீவ். இன்னொரு ஷிப்ட் எட்டு மணி நேரம், இந்த ஷிப்ட்ல எல்லா நாளும் வரணும். ஆனா ரெண்டு ஷிப்டிலும் வேலையை நேரத்துக்கு ஆரம்பிக்கனும், ஆனா நேரத்துக்கு முடிக்க முடியாது. எட்டரை மணின்னா ஒன்பதரை பத்துன்னு ஆகிடும், அதே மாதிரி தான் டெய்லி ஷிப்ட்லயும், கரெக்ட் டயத்துக்கு யாரும் வீட்டுக்கு போனதே இல்லை.”
“ஒரு ஷிப்ட்டுக்கு எத்தனை சிங்கிள், எத்தனை கட் (வழக்கமான ரூட்டின் பாதி அல்லது முக்கால் அளவு தூரத்தைக் கொண்ட சேருமிடம்)ன்னு சார்ட்ல இருக்கோ அதை முடிச்சே ஆகனும், இல்லைன்னா வேலை முடியாது. வேலை நேரம் முடிந்தாலும் டிரிப்பை முடிச்சா தான் வேலை முடிஞ்சதா அர்த்தம். 20 வருஷத்துக்கு முன்னாடி போட்ட இந்த ட்ரிப் சார்ட்டை தான் இன்னைக்கும் வச்சிருக்காங்க. அன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருந்தது இன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருக்கு. இதையெல்லாம் நிலைமைக்கு ஏத்தமாதிரி மாத்த வேண்டாமா சார்” என்று வெறுப்புடன் கேட்கிறார் குமரேசன்.
“நீங்க எந்த ரூட்ல ஓட்றீங்க, எத்தனை டிரிப் அடிக்கனும்?”
“11 H ஓட்றேன். நாலு சிங்கிள் அண்ணா சமாதி, ரெண்டு கட் கே.கே நகர். 8 மணி நேர ஷிப்ட் தான், ஆனா அதுக்குள்ள வேலை முடியாது. 17M-க்கு பார்த்தீங்கன்னா நாலு பாரிஸ், ரெண்டு வடபழனி கட், M88 அய்யப்பன் தாங்கல்-குன்றத்தூர் பஸ், அதுக்கு கட் இல்ல மொத்தம் 12 சிங்கிள், 16 J அய்யப்பன் தாங்கல் – கோயம்பேடு பஸ், அதுக்கு மொத்தம் 10 சிங்கிள். ஒரு சிங்கிள்னா இங்கிருந்து அண்ணா சமாதி வரைக்கும். ஒரு கட்னா இங்கிருந்து கே.கே நகர் வரைக்கும், கே.கே நகரிலிருந்து மறுபடியும் இங்க தான் வரணும் அப்படின்னா அது ரெண்டு கட்.”
“20 வருஷத்துக்கு முன்னாடி போட்ட இந்த ட்ரிப் சார்ட்டை தான் இன்னைக்கும் வச்சிருக்காங்க. அன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருந்தது இன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருக்கு.”
குமரேசன் மேலே கூறியவை அனைத்தும் 8 மணி நேர ஷிப்ட்டிற்கான அட்டவணை, முழு நாள் என்றால் இது அப்படியே இரண்டு மடங்காகும். 8 மணி நேரம் என்பது பெயருக்குத்தான், உண்மையில் அது 9 மணி நேரமாகவும், முழு நாள் என்பது 17, 18 மணி நேரமாகவும் நீடிக்கிறது. அய்யப்பன் தாங்கலிலிருந்து பாரிமுனை வரை, எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தபடியே ஒரு முறை சென்று வந்தாலே நாம் சோர்வடைந்து விடுகிறோம். ஆனால், 90-களில் போட்ட அட்டவணைப்படி தான் இன்றும் பாரிசுக்கு முழு ஷிப்டில் 10 சிங்கிள், 2 கட் ஓட்ட வேண்டும் என்று தொழிலாளர்களை கசக்கிப் பிழிகிறது நிர்வாகம்.
இரவுப் பேருந்துகளை இயக்க வேண்டுமானால் கூடுதல் செலவாகும் என்பதால், நிர்வாகம் வைத்துள்ள அரதப் பழசான பயண அட்டைப்படி ஓட்ட முடியாததை சாக்காக வைத்துக் கொண்டு பகல் நேரப் பேருந்துகளை இரவு வரை ஓட்ட வைக்கின்றனர். ஆனால், இதற்கு ஒரு ரூபாய் கூட அலவன்ஸ் கொடுப்பதில்லை. ஒரே நேரத்தில் இரவுப் பேருந்தும், பகல் பேருந்தும் வந்து நிற்பதால், அது இரவுப் பேருந்தா, பகல் பேருந்தா என்று தெரியாமல் பயணிகள் குழம்பி நிற்கின்றனர்.
இந்த கொடுமையுடன் ‘துறையை வளர்க்கும் உயர்ந்த நோக்கத்துடன்’ லிட்டருக்கு 5 கி.மீ இலக்கை எட்ட வேண்டும் என்கிற நிபந்தனை வேறு விதிக்கப்படுகிறது. “லிட்டருக்கு நாலு கி.மீட்டர்னா, இஞ்சின் நாலு கி.மீட்டர் தான் கொடுக்கும், அதெப்படி ஒரே இஞ்சின் ஒரு முறை நாலு கி.மீட்டர், இன்னொரு முறை அஞ்சு கி.மீட்டர் கொடுக்கும்” என்கிறார் குமரேசன்.
“சிவப்பு கலர் L போர்டு வண்டியை பார்த்திருப்பீங்களே. அந்த வண்டியே இந்த டிரைனிங்க்குக்காக தான் இருக்கு. அதுல ஏறினதும், வண்டி நேரா ஒரு டிபன் கடையில போய் நிக்கும், டிபன் டீ, காபி எல்லாம் சாப்பிட்டதும், சீனியர் டிரைவர் மைலேஜ் கிடைக்கிறதுக்கு எப்படி எப்படி எல்லாம் ஓட்டணும்னு சொல்லுவாரு, ஆனா அவர் எப்படி எப்படி எல்லாம் ஓட்டணும்னு சொல்றாரோ அப்படி அப்படி எல்லாம் டிராபிக்ல ஓட்ட முடியாதுங்கிறது தான் விசயம். இந்த டிரைனிங் கொடுக்கிற வேலையையே ஒரு பார்மால்டிக்காக தான் அதிகாரிங்க செய்றாங்க, சீனியர் டிரைவரும் ஒரு பார்மால்டிக்காக தான் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறாரு, நாங்களும் ஒரு பார்மால்டிக்காக கேட்டுக்கிறோம். மற்றபடி அப்படி ஓட்டவும் முடியாது, மைலேஜும் கிடைக்காதுன்னு எங்களுக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் தெரியும், சீனியர் டிரைவருக்கும் தெரியும். பயிற்சி முடிந்ததும், கடைசில வண்டி ஒரு டீ கடை ஓரமா நிற்கும், பஜ்ஜி, டீயோடு அன்னைக்கு டிரைனிங் முடிஞ்சிரும்” என்கிறார் கிண்டலாக.
“இந்த டிப்போவுக்கு தினமும் 12,000 லிட்டர் டீசல் வருது சார், அதுல ஒரு லிட்டருக்கு 30 பைசா – அதுக்கு மேலயும் கூட இருக்கலாம் சரியாத் தெரியல – கிளை மேலாளருக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷனா போகுது. டீசலை மொத்தமா வாங்குனா மத்திய அரசு அதிக வரி விதிக்குது, அது இவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கு, துறையை காப்பாத்துறோம்ங்கிற பேர்ல பெட்ரோல் பங்க் முதலாளிகள்கிட்ட பேசி வச்சிக்கிட்டு சந்தை விலைக்கு வாங்குறோம்கிற பேர்ல தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலை ஒரே பங்குல போட ஏற்பாடு பன்னிக்கிட்டு அதுல ஒரு கமிஷன் அடிக்கிறாங்க. மைலேஜ் மைலேஜ்னு டிரைவர்களை விரட்றதெல்லாம் இந்த கொள்ளையை மறைக்கத்தான், இவங்களை ஒழிச்சாலே லாபமும் கிடைக்கும், மைலேஜும் கிடைக்கும்” என்று ‘நமது இலக்கு 5 KMPL’ என்கிற ஏமாற்று முழகத்திற்கு பின்னால் உள்ள உண்மையை போட்டு உடைத்தார் மெக்கானிக் முத்து.
“டீசல்ல மட்டும் இல்ல சார், வண்டிகளை வாங்குறதுலயும், விக்கிறதுலயும், ஓடுற வண்டிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குறதுலயும் கூட சுருட்டுறானுங்க, வேலைக்கு சேரணும்னா ஒரு ரேட்டு, ரூட்டை மாத்தணும்னா ஒரு ரேட்டு, லீவு வேணும்னா அதுக்கு ஒரு ரேட்டுன்னு இந்த துறை முழுக்கவே அதிகாரிங்களோட கொள்ளை தான் நடக்குது.”
“முக்கால்வாசி பஸ்ல ஹாரனே இருக்காது சார், நீங்க வேணும்னா ஏறி கையை வச்சுப்பாருங்க, ஒரு சத்தமும் வராது” என்கிறார் ஓட்டுனர் குமரேசன்.
“முக்கால்வாசி பஸ்ல ஹாரனே இருக்காது சார், நீங்க வேணும்னா ஏறி கையை வச்சுப்பாருங்க, ஒரு சத்தமும் வராது”.
“எங்களுக்கு பெரும்பாலும் நைட்டு தான் சார் வேலை இருக்கும். வண்டிக்கு என்ன பிரச்சினை இருந்தாலும், காலையில ஓடணும்னு பெருசா சொல்லிட்டு போய்டுவாங்க. ஆனா வண்டிக்கு மாட்ட வேண்டிய ஸ்பேர் பார்ட்ஸை எல்லாம் அதிகாரிங்களே ‘தின்னுருவானுங்க’. அதே மாதிரி இப்ப வந்திருக்க டாடா மார்க்கபோலா இருக்கு பாருங்க, அது தான் சார் ரொம்ப மக்கர் பண்ணுது. அது லேலண்ட் மாதிரி இல்ல, அதை மொத்தமா ஒரு டைம்ல வாங்குனானுங்க, அப்படி வாங்கினதுல என்ன ஊழல், தில்லுமுல்லு பண்ணுனங்களோ தெரியலை” என்று அதிகாரிகளை வெறுப்புடன் நினைவு கூர்ந்தார் முத்து.
போக்குவரத்து துறையில் கொழுத்து திரியும் அதிகார வர்க்கத்தின் கொள்ளையை பற்றி கொட்டித் தீர்க்காத தொழிலாளிகளே இல்லை என்று கூறுமளவுக்கு அனைவரும் கதை கதையாக கூறுகிறார்கள். அதிகாரிகளின் அரசியல் தொடர்புகளும், ஆளும் வர்க்கச் சார்பும் ஏறக்குறைய கட்டப்பஞ்சாயத்து நடப்பது போன்ற நிலையை போக்குவரத்து துறைக்குள் உருவாக்கியிருக்கிறது.
ஏழு வருடங்களாக வெறும் 11,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஓட்டுநர் ஒருவர், வடபழனி டெப்போவில், மெமோவை தவிர்க்க 500 முதல் 1000 ரூபாயும், ஒரு நாள் விடுமுறையை பதிவேட்டில் பதிவு செய்ய 100 ரூபாயும், ஒரு வாரத்திற்கு 1000 ரூபாயும் கொள்ளையடிக்கும் கிளை மேலாளர் தர்மலிங்கத்தைப் பற்றி துணிவுடன் விவரிக்கிறார். இவர் வடபழனி டெப்போவில் பணிபுரிகிறார்.
டெப்போவுக்கு ஒரு கிளை மேலாளர் (BM) அவருக்கு ஒரு உதவி கிளை மேலாளர் (ABM) இவர்களுக்கு மேல் பகுதி மேலாளர் (AM) அதற்கு மேல் மூன்று டெப்போவுக்கு ஒரு மண்டல மேலாளர் (DM) அவருக்கு மேல் நான்கு டெப்போக்களுக்கு ஒரு பொது மேலாளார் (GM) கடைசியில் நிர்வாக இயக்குநர் (MD) என்று அதிகாரிகளின் கூட்டமே நூற்றுக்கணக்கில் இருக்கிறது. துறையை சூறையாடி கொள்ளையிடுவது தவிர இவர்களுக்கு மாதச்சம்பளமாக கிட்டத்தட்ட 40,000 முதல் 50,000 வரை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையே கோடிகளை தொடுகிறது. அதை குறைத்தாலே துறையை லாபகரமாக வளர்க்க முடியும் என்று அனைத்து தொழிலாளிகளும் ஒரே குரலில் கூறுகிறார்கள்.
“அதிகாரிங்க மட்டும் இல்லைங்க, ஒவ்வொரு டெப்போவுக்கும் 20 பேர், 30 பேர்னு ஆளுங்கட்சிக்காரன் தொழிற் சங்க பேருல, வேலையே செய்யாம சுத்திக்கிட்ருக்கான். ஹெட் ஆபீஸ்ல மட்டும் இந்த மாதிரி நூறு பேராவது இருப்பானுங்க. வேலைக்கு லஞ்சம், ரூட்டுக்கு லஞ்சம் எல்லாம் இவங்க வழியா தான் அதிகாரிங்களுக்கு போகுது. இப்படி நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்யாம சுத்துறதால, அவங்க ஓட்ட வேண்டிய வண்டிங்களையும் சேர்த்து நாங்க ஓட்ட வேண்டியிருக்கு” என்கிறார் ஒரு ஓட்டுநர். அப்போது தான் டெப்போவைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்த சில வெள்ளை உடை ‘அண்ணன்கள்’ நம் கண்ணில் தென்பட்டார்கள். அவர்களின் கழுத்தில், ஊர் தாலியை அறுத்த பணத்தில் வாங்கிய தாம்பு கயிறு அளவுள்ள செயின்களும், நான்கு விரல்களில் மோதிரங்களும் மின்னின. அடிமைகளுக்கு முத்திரை குத்தப்படுவது போல அனைவரின் மோதிரங்களிலும் அம்மா சிரித்துக்கொண்டிருக்கிறார். ஆட்சி மாறும் போது இந்த கும்பலும் மாறிக்கொள்ளும். உழைப்பாளிகளுக்கு மத்தியில் இத்தகைய தொழிற்சங்க கருங்காலிகளை பார்த்தபோது குமட்டிக் கொண்டு வந்தது.
“வேலையில் சேரணும்னா லஞ்சம் கொடுக்கனும்னு சொல்றாங்க, ஆனா ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் போக்குவரத்து துறையில் நிறைய வேலை வாய்ப்பிருக்கு, யாரும் வரமாட்டேங்கிறாங்கன்னு செய்தி வந்திருக்கே” என்றதற்கு, “ரெண்டு லட்சம் கேட்டா எப்படி சார் எல்லோரும் வருவாங்க, லஞ்சம் இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க அடுத்த நாளே வந்து குவியிறாங்களா இல்லையான்னு பாப்போம்” என்கிறார் நடத்துனர் செல்வராஜ். “ஆனா காச கொடுத்து வேலைக்கு சேர்ந்தாலும், வேலைக்கு வந்த பிறகு இந்த கொடுமை தாங்க முடியாம, காசே போனாலும் பரவாயில்லைன்னு வெறுத்து ஓடிப்போனவங்க நிறைய பேர் இருக்காங்க” என்கிறார் ஓட்டுனர் மாரிமுத்து.
போக்குவரத்து துறையில் மொத்தமுள்ள 18,000 தொழிலாளர்களில் 40% பேர் தான் நிரந்தரத்தொழிலாளிகள், மீதமுள்ள 60% பேர் தினக்கூலிகளாக (CL) பணிபுரிகிறார்கள். அதாவது புதிதாக பணியில் சேர்கிற ஒருவர் (CL) தினக்கூலி தான். அவருக்கு தினசரி வெறும் 266 ரூபாய் தான் சம்பளம். இது தவிர ஒருநாள் ஓட்டத்தில் வசூலாகும் தொகையில் நூற்றுக்கு தொண்ணூறு பைசா வழங்கப்படுகிறது. அதாவது ஓட்டுனர் நடத்துனர் இருவருக்கும் சேர்த்து நூறு ரூபாய்க்கு 1.80 பைசா கழிவு. பத்தாயிரம் ரூபாய் வசூலானால் 180 ரூபாய் கழிவு. ஆளுக்கு 90 ரூபாய். இந்த கழிவு ஜூனியர், சீனியர், நிரந்தரத் தொழிலாளி அனைவருக்கும் பொதுவானது.
“எல்லா வண்டியிலும் பத்தாயிரம் ரூபாய் வசூலாகாது, பத்தாயிரம் ரூபாய் என்பது ஒரு சில வழித்தடங்களில் மட்டும் தான் சாத்தியம். உதாரணத்திற்கு 17M, 37G, 88, M88, 88C, M25, 16J (வெள்ளை மற்றும் பச்சை பலகை வண்டிகள்) போன்ற பெரும்பான்மையான வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அதிகபட்சம் ஷிப்டிற்கு ஐயாயிரத்தை தாண்டினாலே பெரிய விஷயம், தாழ்தள சொகுசு பேருந்தில் இதைவிட இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் கூடுதல் வசூலாகும் அதற்கு மேல் ஆகாது” என்கிறார் கணேசன் என்கிற ஓட்டுனர்.
“இந்த டிப்போல குடிக்கத் தண்ணி கூட இல்லைங்க, இங்க மட்டுமில்ல எனக்குத் தெரிஞ்சு எந்த டெப்போவிலும் இல்ல. வெயில் காலத்துல ஒரு டிரிப்ப முடிச்சிட்டு இறங்கினா, அவ்வளவு தாகம் எடுக்கும், தாகத்தோட வந்தா டெப்போவில் தண்ணியோ, யூரின் போகவோ எந்த வசதியும் இல்லை, இருக்கிற டாய்லெட்டை சுத்தம் பண்ணாம அப்படியே வச்சிருக்காங்க. அந்த பக்கமே போக முடியாதபடி, மலஜலம் வெளியேறி நாற்றம் புடுங்குது. ஆனா ஆபீஸ்ல அதிகாரியா வேலை செய்றவங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளும் இருக்கு.”
“யாரும் கேண்டின்ல சாப்பிடுறது இல்ல, அவ்வளவு கேவலமா இருக்கும். நாங்க வீட்ல இருந்து கட்டிட்டு வந்துருவோம், இல்லைன்னா பக்கத்துல இருக்கிற கையேந்தி பவன்ல சாப்பிட்ருவோம்”
“காஞ்சிபுரம், செய்யாறு பக்கமிருந்து வர்ற டிரைவருங்க தினமும் வீட்டுக்கு போக முடியாது, அதனால ஒருநாள் விட்டு ஒரு நாளோ, வாரத்துக்கு ஒரு நாளோ தான் போவாங்க. அப்படி வெளியூரிலிருந்து வர்றவங்க ஒவ்வொரு நாளும் முன்னூறு பேராவது இந்த டிப்போல தங்குறாங்க.”
“பர்ஸ்ட் ஷிப்ட்னா காலையில 4.10 கெல்லாம் கத்தி எழுப்ப ஆரம்பிச்சுடுவாங்க, எழுந்தா குளிக்கக் கூட வேணாங்க, முகத்தை கழுகவோ, டாய்லெட் போகவோ கூட தண்ணி இருக்காது. டெப்போவுக்கு வெளியில் இருக்கிற டீ கடைக்கு போய் தான் முகத்தை கழுவிகிட்டு, வண்டியை எடுப்பாங்க. எந்த ரூட்ல போறாங்களோ அந்த ரூட்ல உள்ள, (வடபழனியிலோ, பூந்தமல்லியிலோ) கார்ப்பரேஷன் டாய்லெட்ல தான் தினமும் வெளியே போறாங்க, நாங்களும் வேலைக்கு வந்த பிறகு அவசரத்துக்கு போகணும்னா கார்ப்பரேஷன் டாய்லெட் தான். இந்த பிரச்சினைக்கு உங்களால முடிஞ்ச உதவியை பண்ணுங்க சார்” என்று நம்மிடம் கோரிக்கை வைத்தார் நடத்துனர் கிருஷ்ணன்.
“இது மட்டுமா சார் பிரச்சினை, சாப்பாட்டை பத்தி கேக்கவே வேணாம். பேருக்கு கேண்டீன்னு ஒன்னு இருக்கு. எல்லாம் புழுத்த அரிசில தான் பன்றானுங்க. CL தொழிலாளியை தவிர வேற யாரும் அங்க சாப்பிடுறது இல்ல, அவ்வளவு கேவலமா இருக்கும். நாங்க வீட்ல இருந்து கட்டிட்டு வந்துருவோம், இல்லைன்னா பக்கத்துல இருக்கிற கையேந்தி பவன்ல சாப்பிட்ருவோம், ஆனா புது தொழிலாளிக்கு வேற வழி இல்ல, தினமும் வாங்குற 266 ரூபாயை வச்சிக்கிட்டு எந்த கடையில போய் சாப்பிடறது. அதனால மாசத்துல சில நாள் மட்டும் கடையில் சாப்பிடுவாங்க. மத்த நாளெல்லாம் இங்க தான். ஆரம்பத்தில் நானும் பல வருஷம் இங்க தான் சாப்பிட்டுட்டு இருந்தேன், இப்ப ஓரளவு சமாளிக்க முடியறதனால சாப்பிடுறது இல்லை” என்றார் ஒரு ஓட்டுனர்.
“பிள்ளைகளோட வருமானத்துல தான் சார் குடும்பத்தையே ஓட்றோம், பல வருஷ சர்வீஸ் இருக்கிறதனால தான் இந்த வேலையில இன்னும் இருக்கோம்” என்கிறார்கள் 88E பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும். “எங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கு சார், சரியா ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் நைட்டு 11 மணி இருக்கும், குன்றத்தூர் பக்கம் இருந்து டெப்போவுக்கு திரும்பிக்கிட்டிருந்தோம். வண்டியில ஒரு ஜனம் இல்ல, நானும் கண்டெக்டரும் மட்டும் தான் இருக்கோம்.”
“அந்த வழியில பல இடங்கள் காடாத்தான் இருக்கும். நடுவில் உள்ள ஒரு ஸ்டாப்பிங்ல ஒருத்தன் மட்டும் நின்னு கையை காட்டினான், நிறுத்தி ஏத்திக்கிட்டோம். ஏறினதுமே, கையில வச்சிருந்த ரத்தக்கறை படிஞ்ச அருவாளைக் காட்டி மிரட்டி வண்டியை எங்கேயும் நிறுத்தாம ஓட்டச் சொன்னான். 5 கி.மீ தாண்டினதும் நிறுத்தச் சொல்லி இறங்கி ஓடிட்டான். அந்த கொலைகாரனை தேடிவந்த போலீசுக்காரங்க, சாட்சி சொல்ல வாங்கன்னு எங்க ரெண்டு பேரையும் ஆறு மாசமா கோர்ட்டுக்கு இழுக்கடிச்சாங்க” என்கிறார்.
ஓட்டுனராவதற்கு முன்பு கொத்தனாராக பணி புரிந்த சங்கர், அப்போது தினமும் 700 ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் பின்னர் அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு 1.5 லட்சம் கொடுத்து ஓட்டுனரானதாகவும், இந்த வேலையை விட கொத்தனார் வேலையே பரவாயில்லை என்றாலும், “பணத்தை கொடுத்து விட்டதால் வேலையை விட்டும் போகமுடியாது, நிரந்தரமாக்க இன்னும் எத்தனை வருசம் காத்திருக்கனும்னு தெரியல” என்று வருத்தத்தோடு கூறுகிறார்.
ஒரு வருடத்திற்குள் 500 ட்ரிப் அடிப்பவர்கள் மட்டுமே, சில வருடங்கள் கழித்து நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும், முதல் 240 சிங்கிளை முடித்ததும் அவர்களுக்கான எண் வழங்கப்படும், அடுத்த 240 சிங்கிளை முடித்த பிறகு நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நடப்பு நிலவரம் என்னவென்றால் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நிரந்தரமாக்கப்படாமல் காத்திருப்பவர்கள் பலர். இவ்வாறு நிரந்தரமாக்கப்படாதவர்கள் வண்டியில் ஏறினால் தான் சம்பளம். வண்டி கிடைக்கா விட்டால் அன்று வேலை நாளாக கணக்கில் வராது. இவர்கள் மட்டுமின்றி, நிரந்தரமாக்கப்பட்ட சிலரும் கூட வண்டி கிடைக்காமல் காத்திருப்பதுண்டு.
“இந்த பிரச்சினைகள் ஒருபக்கம்னா காலேஜ் பசங்களும், ஸ்கூல் பசங்களும் பண்ற அட்டகாசம் இன்னொரு பக்கம் சார். பசங்க மட்டுமா அப்படி இருக்காங்க, பொறுப்பான அம்மா, அப்பாக்களும் அப்படி தான் இருக்காங்க, கொஞ்சமும் புரிஞ்சிக்கிறதே இல்லை. வண்டில ஏறினதுமே முறைக்கிறதும், சிடுசிடுக்குறதும், அதட்டுறதும், கையை முறுக்குறதும் சில்லறை கேட்டா ஏன் உங்கிட்ட இல்லையா, பேகை காட்டுன்னு சட்டம் பேசுறதும், இது என்னா ஓன் வீட்டு வண்டியாங்கிறதும், இப்படி வாய் வார்த்தையோடு நிக்காம சட்டையை பிடிச்சி சண்டைக்கும் இழுப்பாங்க. இதையெல்லாம் நினைச்சா ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு ரொம்ப கஷ்ட்டமா இருக்கும் சார்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் நடத்துனர் தங்கவேல்.
“ஒரு தடவை குன்றத்தூர் ரூட்ல ஒரு பையன் ஏறி உக்காந்துகிட்டு பாஸ் இருக்குன்னு சொன்னான்.
எங்க காட்டுன்னேன்.
என்னாத்துக்கு காட்டனும் எங்கிட்ட இருக்குன்னான்.
சரிப்பா, இருந்தா காட்டுன்னேன்.
காட்ட முடியாது என்னா பன்னுவேன்னான்.
வண்டிய நிறுத்தி இறக்கி விட்டுட்டேன்.
ஆனா அதே ரூட்ல தான் திரும்பி வரணும், திரும்பி வரும் போது ஏரியா கவுன்சிலரை கூட்டிக்கிட்டு ஒரு கூட்டமே ரோட்டை மறிச்சிக்கிட்டு நிக்கிது. இன்னா ம.. டா ஒனக்கு பாசை காட்டனும்.., தே.. நான் காட்டட்டுமா, அப்படின்னு கெட்ட கெட்ட வார்த்தையில பேச ஆரம்பிச்சுட்டானுங்க. இந்த மாதிரி அந்த ரூட்ல பல வண்டிகளுக்கும் பிரச்சினையாகியிருக்கு, எதாவது பிரச்சினைன்னா உடனே, கவுன்சிலர், தலைவருன்னு ஒரு கூட்டமே வந்து வண்டியை மறிச்சிக்குவானுங்க. அதனால யாரும் அந்த ரூட்ல பாசை காட்டுன்னே கேட்கிறது இல்ல” என்கிறார் நடத்துனர் தருமன்.
போக்குவரத்து சட்டப்படி, மொழி தெரியாத ஒருவர் பயணச்சீட்டு வாங்கவில்லை என்றால், பரிசோதகர் அவரை வாங்கும்படி தான் வலியுறுத்த வேண்டும். அதே போல உடல் ஊனமுற்றவர்கள் எடுத்து வரும் பொருட்களுக்கு டிக்கெட் வாங்க வேண்டியதில்லை. அதே போல, பேருந்துக்குள் 75 பேருக்குள் இருந்து, அவர்களில் யாரேனும் பயணச்சீட்டு வாங்கவில்லை என்றால் தான் நடத்துனரை கேட்க வேண்டும், 75 பேருக்கு மேல் இருந்தால் அதற்கு நடத்துனர் பொறுப்பு அல்ல.
“ஆனா எல்லா டிக்கெட் செக்கரும், மொழி தெரியாதவங்க டிக்கெட் எடுக்காட்டி பெனால்டி போடுறதுலயும், காசு புடுங்குறதுலயும் தான் சார் குறியா இருக்காங்க. இப்பல்லாம் எடுத்த உடனே போனை புடுங்கிக்கிறாங்க. இந்த விசயங்கள்ல நாங்க சட்டப்படி தான் நடந்துக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் கொண்டு வரும் லக்கேஜ்க்கு டிக்கெட் போடாம இருந்தா, செக்கர் ஏன் போடலைன்னு கேப்பாரு, போக்குவரத்து சட்டத்தை பற்றி சொன்னா எனக்கே சட்டம் சொல்லித் தர்றியான்னு மிரட்டுவாங்க. அதனால பல கண்டெக்ட்டருங்க விருப்பம் இல்லாமலே கூட இதை செய்ய வேண்டியிருக்கு.”
பல்லவன் ஹவுஸ் – மாநகரப் பேருந்து பணிமனைகளின் தலைமை அலுவலகம். அதிகார வர்க்கத்தின் பிடியில் இருக்கும் இந்த அலுவலகம் தொழிலாளர்களின் கையில் வரும் போது அரசு போக்குவரத்தில் இலாபம் வரும்.
“இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் எங்க வாழ்க்கையில பிரச்சினை தான் சார். படியில நிக்காதன்னா கேக்கவே மாட்டானுங்க, படியில நிக்கிறது கூட பரவாயில்லைங்கிற அளவுக்கு சில குரங்குங்க, வண்டியோட சைடு கம்பியை பிடிச்சுக்கிட்டு, பேக் வீல்ல ஒரசுறா மாதிரி தொங்குங்க. என் வண்டில அப்படி தொங்குன ஒரு பையன் வீல்ல மாட்டிட்டான். அவன் ஏறுனதிலிருந்தே தொங்காத, தொங்காதன்னு கத்திக்கிட்டே தான் இருந்தேன், ஆனா அவன் கேக்கல. கடைசில கோர்ட்ல நீதிபதி நீ ஏன் மேல வரச்சொல்லலன்னு என்னையும், அவன் தொங்குறப்ப நீ ஏன் வண்டியை எடுத்தன்னு டிரைவரையும் கேட்கிறாரு.”
“இறங்குடான்னு கொஞ்சம் அதட்டிப் பேசினாலே 25G கண்டெக்ட்டருக்கு நடந்த மாதிரி தான் நடக்கும். நீதிபதி கோர்ட்ல உட்காந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசலாம், ஆனா பிரச்சினையை எதிர்கொள்றது நாங்க தான். நீதிபதி மட்டும் இல்ல, நிர்வாகமே எங்களுக்கு ஆதரவா இல்ல சார். 25G கண்டெக்ட்டர் விசயத்துல GM என்ன சொல்லியிருக்காரு தெரியுமா, டிரைவருக்கும் அந்த பையனுக்கு முன் விரோதமாம், இது டிபார்ட்மெண்ட் பிரச்சினை இல்லையாம். எப்படி இருக்கு பாருங்க” என்று இயலாமையுடன் கேட்கிறார் நடத்துனர் பெருமாள்.
“இறங்குடான்னு கொஞ்சம் அதட்டிப் பேசினாலே 25G கண்டெக்ட்டருக்கு நடந்த மாதிரி தான் நடக்கும்.”
“டிக்கெட் விலையை ஏத்தினா அதுக்கு நாங்க என்னா சார் பண்ண முடியும், மக்கள் தான் போராடணும். டிக்கெட் விலையை ஏத்தும் போதெல்லாம் அது எங்களுக்கு பெரிய தலைவலியா இருக்கும். ஏறுரவன் எல்லாம் ஏதோ நாங்க விலையை ஏத்தின மாதிரி எங்ககிட்ட முறைப்பானுங்க, கொஞ்சம் குரலை உயர்த்தி பேசினா கம்ப்ளெய்ண்ட் கொடுக்கிறோம்னு மிரட்டுவாங்க. ஒரு பக்கம் அதிகாரிங்களோட அராஜகம், இன்னொரு பக்கம் மக்கள் பன்ற பிரச்சினை இப்படித்தான் பிரச்சினைகளோட போகுது வாழ்க்கை” என்கிறார் ஒரு நடத்துனர்.
சில ரூல்ஸ் ராமானுஜங்கள், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் பேசும் ஓட்டுனர் – நடத்துனர்களை பழிவாங்குவதற்காகவே பேருந்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து நடக்காததை எல்லாம் புகாராக தெரிவிக்கின்றனர். அது தொழிலாளிகளை விசாரணை, பணியிடை நீக்கம் வரை அழைத்துச் செல்கிறது. இதனால் தொழிலாளிகளின் குடும்பமே பாதிக்கப்படுகிறது.
“அப்படி ஒருத்தன் என் மேல அடிக்க வந்தேன்னு பொய் புகார் கொடுத்திட்டான் சார், நான் அப்ப ஒப்பந்தத் தொழிலாளி, தினமும் வேலைக்கு போனா தான் சம்பளம். என்கொயரிக்கு கூப்பிடுற வரைக்கும் வேலை இல்லை. அப்ப தான் எனக்கு குழந்தை பிறந்து எட்டு மாசம் ஆகியிருக்கு, அந்த நிலைமையில குழந்தையோட செலவுக்கு கூட கையில காசு இல்லாம ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டேன். அதுக்கு பிறகு எவன் என்ன பேசினாலும் சொரணையே இல்லாத மாதிரி நகர்ந்து போக பழகிக்கிட்டேன்” என்று வேதனையோடு கூறுகிறார் ஓட்டுநர் சுந்தர்.
நிர்வாகத்தை முறையாக நடத்தத் தெரியாத அதிகார வர்க்க ஒட்டுண்ணிகள், பணிபுரியும் துறையையே கொள்ளையிடும் கொள்ளையர்கள்தான் தொழிலாளர்களை பழிவாங்குவதற்காகதான் இந்த புகார் எண்ணை அனைத்து பேருந்துகளிலும் அச்சிட்டிருக்கிறார்கள் என்று குமுறுகிறார் ஒரு தொழிலாளி.
“இவ்வளவு பிரச்சினைகளோடு நாங்க வேலை பார்த்தாலும் எங்களுக்கு முறையான விடுமுறை கிடைப்பதில்லை. வருஷத்துக்கு 58 நாட்கள் விடுமுறை இருக்கு, ஆனால் அத்தனை நாட்களையும் எடுக்க முடியாது. ஒரு அவசர தேவைன்னா எடுக்க முடியாது, தொடர்ந்து ஒரு வாரம் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் 11C என்கிற போக்குவரத்து சட்டப்பிரிவின்படி தற்காலிகமாக வேலைநீக்கம் செய்யப்பட்டு, சம்பளத்தை பிடிப்பார்கள், பிறகு தலைமை அலுவலகத்தில் நடக்கும் விசாரணைக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு தான் வேலை. அதுவரை வேலை இல்லை சம்பளமும் இல்லை. அது ஊதிய உயர்வையும், போனசையும் பாதிக்கும்.”
“எனக்கு கல்யாணம் ஆன பிற்பாடும் நான் இங்கே தனியா தான் சார் இருந்தேன், அப்ப தான் வேலைக்கும் சேர்ந்திருந்தேன், தினமும் கிடைக்கிற 266 ரூபாயை வைத்து குடும்ப நடத்த முடியாதுங்கிறதனால, கன்பார்ம் ஆன பின்னாடி மனைவியை கூட்டிட்டு வரலாம்னு ஊர்லயே விட்டுட்டு வந்துட்டேன். அவங்க மாசமா இருந்த போது வளைகாப்புக்காக ரெண்டு நாள் போய்ட்டு வரலாம்னு லீவ் கேட்டா கிளை மேலாளர் தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு. இத்தனைக்கும் அன்னைக்கு தீபாவளியோ, பொங்கலோ இல்லை சாதாரண நாள் தான். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன் கிடைக்கவே இல்லை, அப்புறம் போகல” என்று அந்த கொடிய நாளை எண்ணி அமைதியானார் மோகன்.
மற்றொரு நடத்துனர் “நானெல்லாம் குறைந்தது 80 மெமோவாவது வாங்கியிருப்பேன் சார்” என்கிறார். 80 முறை இடைநீக்கம் என்றால் அது அவருடைய பொருளாதரத்தை எவ்வளவு கடுமையாக பாதித்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரம் 25 ஆண்டுகளாக நடத்துனராக இருக்கிறார். அதாவது சீனியர். “போன பொங்கலுக்கு குடும்பத்தோட ஊருக்கு போறதுக்காக, தொண்ணூறு நாட்களுக்கு முன்னாடியே டிரைய்ன்ல ரிசர்வ் பண்ணியிருந்தேன் சார், கிளம்புற அன்னைக்கு வீட்ல எல்லோரையும் தயாரா இருக்கச் சொல்லியிருந்தேன். ஆனா BM கிளை மேலாளர் லீவ் இல்லவே இல்லைன்னு சொல்லிட்டாரு. நான் எப்படியும் வந்துருவேன்னு பிள்ளைங்க ஆசையா இருந்தாங்க, கடைசில லீவ் கிடைக்காததனால மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் தான் அனுப்பி வச்சேன்.”
வண்டியை எடுத்து விட்டால் அதன் பிறகு பணிமனையில் கொண்டு வந்து விடும் வரை, வேலை நேரத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு ஓட்டுநரையும் நடத்துனரையுமே பொறுப்பாக்குகிறது நிர்வாகம்
“அடுத்து இருபது நாள்ள என்னோட பெரிய அண்ணனும், ஒரு பெரியம்மாவும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. பொங்கலுக்கு போயிருந்தா அவங்களை பார்த்திருப்பேன். அப்ப ரெண்டு சாவுக்கும் போக வேண்டியிருந்தது. இனி இவன்கிட்ட போய் லீவுக்காக நிக்கக்கூடாதுன்னு எனக்குள்ளேயே ஒரு வைராக்கியம், லீவே கேட்கல. அன்னைக்கு புல் டே பார்த்துட்டு, நைட்டு கிளம்பி சாவுக்கு போய்ட்டு அடுத்த நாளே இங்க வந்துட்டேன், இப்படித்தான் ரெண்டு சாவுக்கும் போய்ட்டு வந்தேன்” என்கிறார் சுந்தரம்.
வண்டியை எடுத்து விட்டால் அதன் பிறகு பணிமனையில் கொண்டு வந்து விடும் வரை, வேலை நேரத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு ஓட்டுநரையும் நடத்துனரையுமே பொறுப்பாக்குகிறது நிர்வாகம். ஆண்டு முழுவதும் பிரச்சினைகள் இல்லாமல் ஓட்டினால் தான் ஊதிய உயர்வு கிடைக்கும். விபத்து என்றால் 6 மாதம் பணிநீக்கம் செய்துவிட்டு, நிர்வாகம் அப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக்கொள்ளும். ஓட்டுநர் தான் வழக்குரைஞரை நியமித்துக்கொண்டு வழக்காட வேண்டும். CL என்றால் வேலையை விட்டே கூட தூக்கி விடுவார்கள்.
நாள் முழுவதும் மக்களுக்காக உழைக்கும், மாநகரத்தின் நீள அகல எல்லைகளுக்கு மக்களை அழைத்து சென்று ஓய்ந்து வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளிகளில் பலருக்கு சொந்த வாகனங்கள் இல்லை. பொருளாதார பிரச்சினைகளோடு உடல் ரீதியிலான பிரச்சினைகளையும் அதிகமாக எதிர்கொள்கின்றனர். வருடம் முழுவதும் வண்டியிலேயே இருப்பதால் மூலம், முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் மனப்பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். முறையான உணவோ, உறக்கமோ, தேவையான மனநிம்மதியோ இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் ஏறக்குறைய வாழ் நாள் முழுவதுமே இழக்கின்றனர்.. அரசு வேலை, போனஸ், பென்ஷன் என்றெண்ணி வேலைக்கு வரும் இவர்கள் மீது இந்த வேலை கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் தங்களை அரசு ஊழியர்களாக கருதுவதில்லை. அதே போல் அரசும் இவர்களை ஊழியர்களாக நடத்துவதில்லை, போக்குவரத்துக் கழகச் சட்டத்தின்படி இவர்கள் கம்பெனி ஆக்ட் விதிப்படி நடத்தப்படுகின்றனர்.
“நாங்க நிம்மதியா வாழ்றது தான் இல்லைன்னா, கடைசி காலத்துல நிம்மதியா சாகிறதும் இல்லை சார். 58 வயசுல ஓய்வு பெறும் போது, அதற்கு மேல் காயலான் கடைக்கு போக வேண்டிய பேருந்தை போல பல உடல் பிரச்சினைகளோடும் இருக்கின்ற தொழிலாளிகள் ரெண்டு, மூனு வருஷம் கூட வாழ்றது இல்லைங்க, இந்த வேலைக்கு வர்றவன் எல்லாம் முன் ஜென்மத்துல ரொம்ப பாவம் பன்னவனா தான் இருப்பான்” என்கிறார் M49 ஓட்டுனர்.
“இந்த வேலைக்கு வர்றவன் எல்லாம் முன் ஜென்மத்துல ரொம்ப பாவம் பன்னவனா தான் இருப்பான்”
அரசு, மக்களுக்காகவே உழைக்கும் இந்த தொழிலாளிகளுக்கு சலுகைகளை அல்ல, இருக்கும் உரிமைகளையே கூட வழங்க மறுக்கிறது. நாம் கேட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் நூற்றுக்கணக்கான கதைகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. நாம் இதுவரை இவர்களை இவ்வாறு அணுகவில்லையே என்கிற குற்ற உணர்வு இதை கேட்கும் எவரது மனதையும் கனக்க வைக்கும். இந்த தொழிலாளர்கள் அனைவரும் பொறுப்பானவர்களாக இருக்கின்றனர். எவ்வளவு உடல் வலி இருந்தாலும், அதற்காக குடிப்பதோ, பிற கெட்ட பழக்கங்களையோ நாடுவதில்லை, சில விதி விலக்குகளைத் தவிர. ஏனெனில் இந்த வேலை முறையே அதை அனுமதிப்பதில்லை.
ஒரு பேருந்தை முழு நாளும் இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. உதாரணத்திற்கு 17M ஐ எடுத்துக்கொள்வோம். காலை 4.30 மணிக்கு டெப்போவிலிருந்து கிளம்பும் பேருந்து இரவு ஒன்பதரை, பல நேரங்களில் பத்தரை மணிக்குத் தான் தனது இயக்கத்தை நிறுத்துகிறது, பேருந்து மட்டுமல்ல தொழிலாளிகளும் தான்.
இந்த நீண்ட ஒரு முழு நாளில் ஓட்டுனரும், நடத்துனரும் சந்திக்கும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. நடத்துனருக்கு வெறுமனே டிக்கெட் கொடுப்பது மட்டுமல்ல வேலை. வண்டியில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பையும் அவர் ஏற்கிறார். மேல ஏறு, மேல ஏறு என்கிற வார்த்தையையும், உள்ள போ, உள்ள போ என்கிற வார்த்தையயும் ஒரு நடத்துனர் ஒரு நாளில் எத்தனை ஆயிரம் முறை உச்சரிக்கிறார் என்பதை எண்ண முடியாது. படியில் தொங்கும் மாணவர்கள், பெண்களை இடிக்கும் பொறுக்கிகள், பிக்பாக்கெட், பிளேடு போடும் திருடர்கள், சண்டை போட்டுக்கொள்ளும் பயணிகள், பயணச்சீட்டு எடுக்காதவர்கள், குடித்துவிட்டு கலாட்டா செய்பவர்கள், ரவுடிகள் என்று அனைவரையும் சமாளிக்க வெண்டியிருக்கிறது.
வண்டி ஓடும் போதே இறங்கி ஓடுபவர்கள், நிற்பதற்குள் இறங்க முயற்சிக்கும் வயதானவர்கள், வண்டி கிளம்பிய பிறகும் ஓடி வந்து தொற்றுபவர்கள், கையை வெளியில் தொங்கப் போட்டுக் கொண்டு தூங்குபவர்கள், குழந்தையை படிக்கட்டுக்கு அருகில் வைத்துக்கொண்டு நிற்பவர்கள் என்று அனைவருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பொறுப்பாக கவனித்து அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. தனக்கு இன்று மூடு இல்லை என ஒரு நடத்துநர் இவை எதனையும் மறந்து விட முடியாது.
இந்த பிரச்சினைகளோடு ஓட்டுநர் சந்திக்கும் பிரச்சினைகளும் உள்ளன. குறுகிய சாலைகளில் வழி விடமுடியாத போது சில ஹீரோக்கள், பேருந்தை ஓவர்டாக் செய்து பைக்கை குறுக்கே கொண்டு வந்து போட்டுவிட்டு சண்டை போடுவார்கள். காரில் வரும் திமிரெடுத்த மேட்டுக்குடி லும்பன்கள் காரை குறுக்கே நிறுத்திக்கொண்டு ஆங்கிலத்தில் சண்டை போடுவார்கள். வேறு பலர் டிரைவர் சீட்டில் ஏறி சட்டையை கோர்த்து பிடித்து கீழே இழுத்து அடிப்பது என்று தமது ‘வீரத்’தை இந்த தொழிலாளிகளிடம் தான் காண்பிக்கிறார்கள்.
‘எவ்வளவு கலவரம் நடந்தாலும் பஸ்ல இருக்கவனுங்க எல்லாம் பொம்மை மாதிரியே உட்கார்ந்திருப்பானுங்க சார், ஒருத்தன் எழுந்து வந்து கேட்க மாட்டான். எங்க பிரச்சினைக்காக கேக்கனும்னு சொல்லல, ஒரு பொண்ணுக்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா கூட எவனும் கேக்கமாட்டான் என்கிறார் ஒரு நடத்துனர்..
உடல் களைப்பாலும், இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் உளக்களைப்பாலும் இவர்கள் சோர்ந்து போகின்றனர். டி.வி பார்ப்பதோ, சினிமா பார்ப்பதோ, அல்லது பிறர் மகிழ்ச்சியை நாடும் வழிகளிலோ அவர்கள் மகிழ்ச்சியை கண்டடைவதில்லை. மகிழ்ச்சியை குலைக்கும் வேலையையே மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுவது தான் மகிழ்ச்சிக்கான வழி என்பதை அனுபவத்தில் அறிந்து கொண்டு தமது அணுகுமுறைளையே மாற்றிக் கொள்கின்றனர்.
பிரச்சினைகளை அதிகமாக்கும் தனது பண்புகளை வேலைக்காக மாற்றிக் கொண்டு பயணிகளுடன் முரண்படாத, கலகலப்பான நடத்துனராகவும், சாலையில் பயணிக்கும் சக வாகன ஓட்டிகளோடு முரண்படாத ஓட்டுநராகவும் இந்த தொழிலாளர்கள் தம்மை அனுபவத்தினூடாக மாறிக் கொள்கின்றனர். ஆனால் பேருந்தில் பயணிக்கும் நாம், நமக்காக சேவை செய்யும் இவர்களுக்காக நம்முடைய எந்த பண்பை மாற்றிக்கொண்டிருக்கிறோம் ?
அரசுப் பேருந்துகள் நட்டத்தில் ஓடுகின்றன, அரசு மானியம் வழங்குகிறது என்று அடிக்கடி வரும் செய்திகளின் பின்னே இத்தகைய கடும் சுரண்டலும் ஊழலும் மறைந்திருக்கிறது. போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகளும், பேருந்துகள் – பாகங்கள் தயாரிக்கும் முதலாளிகள், மற்ற சேவைகளை தரும் நிறுவனங்கள் சேர்ந்துதான் அரசு பேருந்துகளின் நட்டத்திற்கு காரணமாக இருக்கின்றனர். அதிகார வர்க்கம், தனியார் முதலாளிகள் மட்டும் வருடந்தோறும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஊழல், வர்த்தகம், சம்பளம் என்ற பெயரில் சுருட்டுகின்றனர்.
இவர்களுக்கு அடியாளாக ஆளும் கட்சி தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. தொழிலாளிகள் மீது நிர்வாகம் எடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் கமிஷன் வாங்கிக் கொண்டு நாட்டாமையாக வலம் வருகின்றனர், இந்த தொழிற்சங்க சுல்தான்கள். இவர்களிடையே சிக்கி கொண்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாக தொழிலாளிகள் இருக்கின்றனர்.
ஒரு நாளைக்கு 266 ரூபாய் சம்பளத்தை வைத்து என்ன செய்ய முடியும்? கொத்த்தனார், பிளம்பர், எலக்ட்ரிசியன் போன்ற தொழிலாளிகளுக்கு இருக்கும் சம்பளம் கூட இவர்களுக்கு இல்லை. கூடவே பணிமனையில் எந்த வசதியும், ஏற்பாடுகளும் இல்லை. எந்த பணிமனையிலும் மருத்தவமனையோ, மருத்துவரோ கூட கிடையாது.
இந்த அதிகார வர்க்கம் மற்றும் தனியார் முதலாளிகளின் கூட்டை ஒழித்து விட்டு தொழிலாளிகளே நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் போதுதான் அரசு போக்குவரத்து கழகம் இலாபகரமாகவும் செயல்படும், தொழிலாளிகளுக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் உரிமைகள் கிடைக்கும். இவ்வளவு இடர்பாடுகளுக்கிடையிலும் நேர்மையுடனும், சேவை மனப்பான்மையுடனும், கட்டுப்பாடுடனும் வாழும் இந்த தொழிலாளிகள் தமது வர்க்கத்திற்குரிய அரசியல் மற்றும் போர்க்குணத்தை பெறும் போது இது நிறைவேற முடியாத கனவல்ல. அந்த கனவும் இந்தியாவில் புரட்சி வரவேண்டும் என்பதும் வேறு வேறு அல்ல.
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா என்ற கால்பந்து அணி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிபடுத்தியதை அடுத்து அந்த அணி 1.1 கோடி யூரோ (சுமார் ரூ 93 கோடி) பணத்தை வரி அதிகாரிகளிடம் கட்டியுள்ளது. ஆயினும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ள பார்சிலோனா தான் முன் தயாரிப்பாக இந்தத் தொகையை கட்டியிருப்பதாக கூறுகிறது.
நிய்மார்
2013-ம் ஆண்டு பிரேசில் நாட்டின் சான்டோஸ் என்ற அணியிலிருந்து நிய்மார் என்ற வீரரை தனது அணிக்கு வாங்கியதற்கான ஒப்பந்தத் தொகையை 5.7 கோடி யூரோ (ரூ 484 கோடி) என்று அறிவித்திருந்தது பார்சிலோனா. இதில் 1.7 கோடி யூரோ சாண்டோஸ் அணிக்கும், 4 கோடி யூரோ நிய்மாரின் தந்தைக்கு சொந்தமான என்&என் நிறுவனத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் செலவழிக்கப்பட்ட விதத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பார்சிலோனாவின் நிர்வாகத்திற்கு எதிராக அதிருப்தியுற்ற கிளப் உறுப்பினர்களில் ஒருவரான ஜோர்டி கேசஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில்தான் வரி ஏய்ப்பு நடந்திருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து பலியாடாக பார்சிலோனா நிர்வாகத்தின் தலைவர் ரொசெல் நீக்கப்பட்டுள்ளார். தாங்கள் முன்னர் கூறிய 5.7 கோடி யூரோ என்பது நிய்மாரை அணிமாற்றுவதற்கான தொகை மட்டும்தான் என்றும் அது போக நிய்மாரின் சேருவதற்கான ஊதியம் (signing on fee), அவரின் தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்தது, ஏஜென்ட் கமிஷன் என பல பெயர்களில் மொத்தம் 8.6 கோடி யூரோ கைமாறியுள்ளதாக தற்போது ஒத்துக் கொண்டிருக்கிறது பார்சிலோனா நிர்வாகம். ஆயினும் இதில் எந்த முறைகேடும் இல்லை என சாதிக்கிறது.
ஸ்பான்சர்ஷிப்களால் இயக்கப்படும் கிளப்புகள்.
ஐரோப்பிய கால்பந்து விளையாட்டில், ஆண்டுக்கு பலகோடி டாலர் வருவாய் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஒத்த இது போன்ற கால்பந்து கழகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த கிளப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். நாடுகளுக்கு இடையிலான போட்டிகளை விட இந்த கிளப்களுக்கு இடையிலான போட்டிகளுக்கு தான் அங்கு முக்கியத்துவம் அதிகம். தரகு முதலாளிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் உரிமையாளர்களாகக் கொண்டு செயல்படும் நம் நாட்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளுக்கு முன்னோடி இந்த ஐரோப்பிய கால்பந்து கழகங்களின் போட்டிகள்தான்.
இந்த அணிகளின் வருமானம் பிரம்மாண்டமானவை. ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் என்ற அணியின் வருவாய் அதிகபட்சமாக 52.09 கோடி யூரோவாகவும், அடுத்தபடியாக அதே நாட்டை சேர்ந்த பார்சிலோனா வரவு 48.3 கோடி யூரோவாகவும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யூனைடட் வருமானம் 39.5 கோடி யூரோவாகவும் உள்ளன. இந்த வருமானம் பெரும்பான்மையாக ஸ்பான்சர்ஷிப்கள், (ஆர்சினல் அணி தனது ஸ்டேடியத்திற்குகூட ‘எமிரேட்ஸ்’ என ஸ்பான்சரின் பெயரை வைத்திருக்கிறது), தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விற்பனை இவைகள் மூலம் பெறப்படுகின்றன. ஒரே நாட்டின் கிளப்களுக்கு இடையிலான ஸ்பானிஷ் லாலீகா (Spanish Laliga), இங்கிலீஷ் பிரீமியர் லீக் போன்ற லீக் போட்டிகளுக்கும், ஒட்டுமொத்த ஐரோப்பிய கிளப்களுக்கு இடையிலான UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கும் உலகம் முழுவதும் பல மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இந்த கிளப்களுக்கு ஸ்பான்சர் செய்து தனது பிராண்டின் பெயரை இரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்க பெருநிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
ஸ்பெயின் – வேலையிழந்தவர்களின் வரிசை
இவ்வாறான விளம்பர வருவாய்க்கும், வெற்றிகளை குவித்து ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் புகழ்பெற்ற, திறமையான வீரர்களை தங்கள் வசம் வைத்து இருப்பது அவசியம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்குகின்றன இந்த கிளப்கள். மாட்டுச் சந்தையில் பல்லை தட்டிப் பார்த்து, துண்டை மறைத்து பேரம் பேசும் அதே முறை தான், ஆனால் இங்கு பேரம் போவதும், வாங்குவதும் மேட்டுக்குடிகள் என்பதால் வார்த்தைகளை நாகரிகமாக ‘டிரான்ஸ்பர் விண்டோ’ என்று மாற்றி நாகரிகமாக அழைத்துக் கொள்கிறார்கள். இப்படி துண்டை மறைத்து பேரம் பேசிய தொகையை அரசுக்கு குறைத்து கூறி வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக தான் தற்போது மாட்டிக்கொண்டிருக்கிறது பார்சிலோனா என்ற அணி.
இந்த பிரச்சனையில் வரிஏய்ப்பு முறைகேடு என்பதையும் தாண்டி ஒரு கேள்வி நமக்கு எழுகிறது. ஒரு விளையாட்டு வீரருக்கு இவ்வளவு செலவழிக்கப்படுகிறதே அப்படியானால் அந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி ஓடவில்லை. மக்கள் தான் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள்.
நிதிமூலதன சூதாடிகளால் சூறையாடப்பட்டு, உலக முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி திவால் நிலையில் உள்ளது ஸ்பெயின். இந்த நெருக்கடியின் விளைவாக பெருவாரியான மக்களின் வேலை பறிக்கப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில். இன்றைய தேதியில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 26 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. 2013 ஆண்டில் மட்டும் 2.6 லட்சம் மக்கள் ஸ்பெயினில் இருந்து வெளியேறி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் 2002 முதல் 2012 வரை வேலையில்லாதவர்களின் வீதம்.
இந்நிலையில் நிதி நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் வங்கிகளுக்கும் தனியார் தொழிற்கழகங்களுக்கும் பல கோடி டாலர்களை கொட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஸ்பெயின் அரசு. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்க வேண்டுமானால் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும், பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் எனற ஐரோப்பிய வங்கியின் ஆணைக்கிணங்க செயல்படும் ஸ்பெயின் அரசை கண்டித்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், இளைஞர்கள் என அனைத்துப் பிரிவினரும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஸ்பெயின் அரசின் போராட்ட தடை சட்டத்தையும் மீறி, மாட்ரிட் நகரின் மத்திய சதுக்கத்தில் மட்டும் 2012-ல் 396 போராட்டங்களும், 2013-ல் 391 போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய சதுக்கத்தில் போராட தடை விதிக்க வேண்டும் என்று மாட்ரிட் மேயர் புலம்பும் அளவுக்கு மக்கள் வீரியமாக போராடுகிறார்கள்.
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் கல்வி, பொது சுகாதாரம், ஓய்வூதியம் முதலியவற்றுக்கான நிதி வெட்டி சுருக்கப்படுகின்றன. பொதுச் சேவைகளை தொடர்ந்து குறைப்பதன் மூலம் 2014-க்குள் 10,200 கோடி யூரோ மிச்சம் பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது அரசு. இதே அரசு தான் ரியல்மாட்ரிட், பார்சிலோனா, அத்தலடிக் பில்போ, ஒசாசுனா ஆகிய அணிகளுக்கு 1990 ஆண்டின் “அனைத்து ஸ்பெயின் கால்பந்து கிளப்களையும் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாக்கும்” சட்டத்திலிருந்து விலக்கு அளித்து கார்ப்பரேட் வரி மற்றும் சொத்து வரியிலிருந்து விலக்களிக்கிறது. லாபநோக்கில்லாத நிறுவனம் என்ற தகுதியையும் தக்க வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது. வெலன்சியா அணியின் கடனுக்கு அந்த மாகாண அரசு உத்திரவாதம் அளித்து பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இப்படி வரலாறு காணாத வேலையின்மையும், பசியும், போராட்டமும் நடக்கும் இந்த நாட்டில் தான் மேற்கூறிய பணக்கார கால்பந்து கழகங்களும், அதன் பல மில்லியன் மதிப்புள்ள வீரர்களும் உள்ளனர். போராடும் மக்களை திசை திருப்பவும், வெறுமனே அணி வெறியை தூண்டி விட்டு அவர்களின் உழைப்பை பணமாக அபகரிப்பதையும் தாண்டி இந்த கிளப் போட்டிகள் எதையும் சாதிக்கவில்லை. கால்பந்துக்கு பதில் கிரிக்கெட், பிரீமியர் லீக், லா லீகா வுக்கு பதில் ஐ.பி.எல் என்று மாற்றி போட்டால் இது இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும்.
2012-ல் நடந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது மாட்ரிடில்ஆர்ப்பாட்டம்.
இந்த வக்கிரத்தின் உச்சகட்டமாக, 54.1கோடி யூரோ கடன் வைத்திருக்கும் ரியல்மாட்ரிட் அணி, 10 கோடி யூரோ விலை கொடுத்து கரேத் பேல் என்னும் டாட்டன்ஹாம் (இங்கிலாந்து) வீரரை ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த தொகையை பேங்கியா என்ற ஸ்பெயின் தேசிய வங்கியின் துணைநிறுவனமான கஜா மாட்ரிட் வங்கி கடனாக கொடுத்துள்ளது என்றும், பேங்கியா வங்கி ஐரோப்பியன் யூனியனால் 1,800 கோடி யூரோ கொடுத்து பெயில் அவுட் செய்யப்பட்டது என்பதால் ஐரோப்பிய யூனியன் இதை விசாரிக்க்க வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எப்னிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே ஸ்பெயின் வங்கிகள் தான், வேலைபறிக்கப்பட்ட எளிய மக்களின் கடனுக்காக அவர்களின் உடமைகளை மட்டுமல்ல உயிர்களையும் கூட பறித்து வருகின்றன. வெலன்சியா நகரில் மாதத்திற்கு 360 யூரோ சம்பளத்தில் வாழ்ந்து வந்த 47 வயதான் இனோசென்சியா லூகா என்ற பெண்ணை, அவர் வாங்கிய கடனுக்காக வீட்டை பிடுங்கி அவரை நடுத்தெருவில் நிறுத்தியதையடுத்து அந்த வங்கி கிளைக்கே சென்று தன்னை எரித்து தற்கொலை செய்துகொண்டார். சாகும் முன் அவர் கூறிய வார்த்தை “நீங்கள் என்னிடமிருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டீர்கள்” என்பது. லூகா போன்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதும், இந்த கார்பரேட்களுக்கு கொடுக்கப்படுவதும் வேறு வேறு அல்ல. ஒரே நிகழ்ச்சி போக்கின் இரு வடிவங்கள்.
வெளிச்சத்திற்காக அடிமைகளை கம்பங்களில் கட்டி எரித்து நீரோ மன்னன் அளித்த விருந்தில் விருந்தினர்கள் திளைத்திருந்தது போல, உழைக்கும் மக்களின் வாழ்க்கையை தீப்பந்தமாக்கி நவீன நீரோக்கள் அளிக்கும் கால்பந்தாட்ட விருந்தில் ஐரோப்பிய நடுத்தரவர்க்கத்தினர் மட்டுமல்ல இந்திய நடுத்தர வர்க்கத்தினரும் திளைத்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் நேரத்திற்கிணங்க இரவு விழித்திருந்து இந்த போட்டிகளை இரசித்துவிட்டு மறுநாள் மெஸ்ஸியா? ரொனால்டோவா? யார் சிறந்தவர் என்று பேஸ்புக்கில் ‘சண்டை’யிட்டுக்கொள்ளும் கால்பந்து இரசிகர்களே சொல்லுங்கள் நவீன நீரோ மன்னர்களின் விருந்தில் இனிமேலும் பங்கேற்கப் போகிறீர்களா?
ஆணாதிக்கம் இருட்டடிப்பு செய்த வாழ்க்கையை மீட்டெடுக்கவும், ஆண்களையும் சேர்ந்து வதைக்கும் மறுகாலனியாக்கத்தை வீழ்த்தவும் உலக மகளிர் தினம் அழைக்கிறது.
திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக 08.03.2014 அன்று மாலை காந்திமார்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது.
பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர்
10,000 பிரசுரம், 400 சுவரொட்டி தயாரித்து கடைவீதி, பேருந்து நிலையம், குடியிருப்பு, இன்ஸ்பெக்டர், ஏசி, டிசி, ஆணையர், பத்திரிக்கைகள் என அனைவருக்கும் செய்தி கொண்டு செல்லும் வரை உறக்கத்தில் இருந்த காந்தி மார்க்கெட் காவல்துறை இறுதி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுப்பதாகவும் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ளவும் நிபந்தனைக்கு உட்பட்டு (நிபந்தனை என்பது உண்மையை தவிர மற்றவை பேசலாம் என்பதே ஆகும்) நடத்த அனுமதிப்பதாக கடிதம் கொடுத்தது. பேரணிக்கு அனுமதி மறுப்பின் காரணம் : போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தேர்தல் விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது என வரிசையாக அடுக்கியது. தோழர்கள் மீண்டும் ஒரு சுற்று போராடிவிட்டு பொதுக்கூட்டம் நடத்தும் முயற்சியில் இறங்கினர்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பேரணி – பொதுக்கூட்டம் சுவரொட்டி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. தடையை மீறி பேரணி நடக்கும் என பீதியடைந்த காவல்துறை பெண் தோழர்களிடம் நல்லவர்கள் போல பேசி சமாதானம் செய்தது.
“உங்களைபற்றி தெரியும், நீங்க நல்லது தான் செய்றிங்க. நம்ம ஆய்வாளர் தங்கமான மனுசன். உங்களுக்கு உதவ முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டார். கோச்சுக்காதீங்கம்மா, இந்த ஒரு தடவை மட்டும் விட்டுக் கொடுங்க. அடுத்த முறை நிச்சயம் ஆய்வாளர் உதவி செய்வார்” என இவர்கள் பம்மியது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
“என்ன சார் மேடை போட தடை , மைக்செட் போட தடை என ரொம்ப உங்க ஆளுங்க தொல்லை பண்றாங்க. இதே ஆளும் கட்சினா இப்படி பண்ணுவீங்களா?” என நமது தோழர்கள் கொஞ்சம் எகிறினர்.
“அய்யோ விவரம் தெரியாம கான்ஸ்டபில்கள் பேசி இருப்பானுக. நீங்க பாட்டு போடுங்க, யாராவது கேட்டா என்னிடம் பேச சொல்லுங்க” என்றார்.
நாம் தடையை மீறி பேரணி நடத்த மாட்டோம் என தெளிவாக புரியவைத்ததும் தான் தமது பழைய போலீஸ் மிடுக்குக்கு மாறினர்.
பொதுக்கூட்ட நிகழ்வுகள்
மாலை 6.45 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டம் இரவு 9.55 மணிக்கு முடிந்தது. இப்பொதுக்கூட்டத்தை பெ.வி.மு பொருளாளர் தோழர்.பவானி தலைமை ஏற்று நடத்தினார்.
துவாக்குடி கிளை தோழர். லெட்சுமி கந்துவட்டி கொள்ளையர்கள் பற்றியும், குடிபோதைக்கு சீரழிந்த ஆண்களால் பெண்கள், குழந்தைகள் படும் துயரத்தையும், அதிலிருந்து மீண்டெழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.
தமிழக தாலிபான்களை எதிர்த்து போராடிய தோழர். அனிஸ் பாத்திமா தமது அனுபவங்களை பேசி மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார்.
மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராஜூ சிறப்புரையாற்றினார். தோழர். மலர்கொடி நன்றியுரை நிகழ்த்தினார். ம.க.இ.க மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி இறுதியாக நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பெருவாரியான தோழர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்ட செலவினங்களுக்காக பொதுக்கூட்டத்தில் வசூல் செய்யப்பட்டது. ஜெயாவின் பாசிச ஒடுக்குமுறையும், டாஸ்மாக் கொள்ளை பற்றியும் பேசியதை கேட்ட அ.தி.மு.க பிரமுகர் நன்கொடை அளித்தது கூட்டத்தின் முத்தாய்ப்பாக இருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தொடர்புக்கு அழைக்க : 9750374810.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள, முன்னாள் சோவியத் சோசலிச குடியரசாக இருந்து இப்போது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் உக்ரைன் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்? பக்கத்து நாடான ரசியாவின் பொருளாதார மற்றும் ராணுவ செல்வாக்கின் கீழ் இருக்க வேண்டுமா அல்லது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமா? என்பதுதான் இன்றைய உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சண்டை போடும் அரசியலின் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கேள்வி.
ஐரோப்பாவில் உக்ரைன்
கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் உக்ரைனில் பதவி இழந்த ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யனுகோவிச்சிடமிருந்து ‘மக்கள் எழுச்சி’ மூலம் பதவி பறிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட யனுகோவிச் தெருப்போராட்டங்கள் மூலம் பதவி இறக்கப்பட்டு மறு வாக்கெடுப்பில் எதிர்த்துப் போட்டியிட்ட “நமது உக்ரைன்” கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய சார்பு விக்டர் யுஷென்கோ ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.
ஆனால், 2010-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் 48% வாக்குகளை அளித்து அதே விக்டர் யனுகோவிச்சை அதிபராக தேர்ந்தெடுத்தனர் உக்ரைனிய வாக்காளர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக் காலம் 2015 வரை இருந்தாலும், அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக கலவரங்களை நடத்திய “தந்தையர் நாடு கட்சி”யின் தலைமையிலான வலது சாரி மற்றும் நியோ நாஜிக் கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றி விட அவர் உயிரைப் பிடித்துக் கொண்டு தெற்கு ரசியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான தயாரிப்புகள் சென்ற ஆண்டு (2013) நவம்பர் மாதம் தொடங்கின. உக்ரைனை ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்துடன் சேர்க்கும் முயற்சியில் குறிப்பாக ஜெர்மனியும் மற்றொரு பக்கம் அமெரிக்காவும் ஈடுபட்டு வந்தன.
ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்த ஒப்பந்தம் உக்ரைன் நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லி 2011-ம் ஆண்டு பேச்சு வார்த்தைகளை அதிபர் விக்டர் யனுகோவிச் முறித்துக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தால் உக்ரைனுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1.69 லட்சம் கோடி) இழப்பு ஏற்படும் நிலை இருந்தது. உலகின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் உக்ரைன் ஆண்டுக்கு 1 முதல் 1.5 கோடி டன் தானிய ஏற்றுமதி செய்கிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான ஒப்பந்தத்தின்படி 20,000 டன் தானியம் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி என்று வரம்பு விதிக்கப்பட்டது, பின்னர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அது 20 லட்சம் டன் என்று அதிகரிக்கப்பட்டாலும், அதன்படி உக்ரைன் தனது தானிய ஏற்றுமதிகளை 80 சதவீதம் குறைத்துக் கொண்டு மற்ற மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
பதவி நீக்கப்பட்ட விக்டர் யனுகோவிச்
மேலும், உக்ரைனின் ஏற்றுமதிகளில் 80% ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் ரசியா உள்ளிட்ட முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளுடன் நடந்து வருகிறது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால், ரஷ்ய தலைமையிலான சுங்க ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும். இரண்டு கூட்டமைப்புகளிலும் ஒரே நேரத்தில் இருப்பது சாத்தியமற்றது.
இந்த சூழலில் ரசியாவுடனான உறவை ஆதரிக்கும் அதிபர் விக்டர் யனுகோவிச் கடந்த நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மீண்டும் மறுத்தார். அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் தமது மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய, உக்ரைனின் தலைநகர் கீவ் நகரத்தில் தெருப் போராட்டங்களை ஆரம்பித்தன.
ஐரோப்பிய ஆதரவு எதிர்க்கட்சிகள் தரப்பில் பாசிச கட்சிகளான ஸ்வோபோடா, டிரிசுப் போன்ற வலதுசாரி பயங்கரவாத குழுக்களும் போராட்டங்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த அமைப்புகள் யூதர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் எதிரான இன வெறுப்பை உமிழ்பவை; புதிய நாஜி கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்கள். இந்த அமைப்புகளின் தொண்டர்கள் தலைநகர் கீவ் நகரின் “சுதந்திர மைதானத்தை” ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; கலவர எதிர்ப்பு போலீசை, பெட்ரோல் வெடிகுண்டு, துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.
‘ஊழல் நிறைந்த, மக்கள் விரோத யனுகோவிச் அரசை எதிர்க்கும் போராட்டத்தில் அராஜகவாதிகள், கம்யூனிஸ்டுகள், ரஷ்யர்கள், யூதர்கள் போன்றவர்களை அனுமதிக்க முடியாது’ என்று அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியடித்தனர். காரணம் அவர்கள் ஊழல் அரசை மட்டும் எதிர்ப்பதோடு ஐரோப்பிய, அமெரிக்க ஆதரவையும் நிராகரிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன்
மேற்கத்திய ஊடகங்கள் இவற்றுக்கு யூரோ மைதான் போராட்டங்கள் என்று பெயர் சூட்டி “ஊழல் நிறைந்த சர்வாதிகார யனுகோவிச் ஆட்சிக்கு எதிரான மக்களின் ஜனநாயகப் போராட்டம்” என்று தூக்கிப் பிடித்தன.
டிசம்பர் மாதம் உக்ரைன் பொருளாதாரத்துக்கு ரசியா $25 பில்லியன் நிதி உதவி அறிவித்தது. மேலும் $5 பில்லியன் மதிப்பிலான இயற்கை எரிவாயுவை சலுகை விலையில் வழங்கவும் முன் வந்தது. ஆனால், அதிபர் யனுகோவிச்சுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமாக்கப்பட்டன.
போராட்டக் காரர்களுக்கு மேற்கத்திய பணமும் ஆயுதங்களும் தடையின்றி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. போராட்டக்காரர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறை கலவரங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நியூலாண்ட் ஆகியோர் போராடும் கும்பல்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். “இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் பலர் அரசு படையினரால் கொல்லப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி குறியர்களால் (ஸ்னைப்பர்கள்) இறந்தார்கள்” என்ற தகவல், ஐரோப்பிய ஆதரவு எஸ்டோனிய வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மாஸ் பேட், சீமாட்டி ஆஸ்டனிடம் பேசும் தொலைபேசி உரையாடல் மூலம் அம்பலமானது. மேலும், அந்த உரையாடல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கத்திய நாடுகளால் திட்டமிட்டு இயக்கப்படுபவை என்பதையும் உறுதி செய்தது.
பிப்ரவரி 21-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில் யனுகோவிச் அரசுக்கும் எதிர்க்கட்சி போராட்டக் காரர்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆண்டு பிற்பகுதியில் செப்டம்பருக்கும் டிசம்பருக்கும் இடையே அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் அது வரை இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறும் என்றும் 2004-ல் செய்யப்பட்ட சட்ட திருத்தங்கள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் உடன்படிக்கை ஏற்பட்டது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று 4 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே இடைக்கால அரசு ஒன்றை அமைக்கவும், தேர்தலை சீக்கிரமாக நடத்தவும் முன் வந்திருக்கிறார்.
ஆனால், மேற்குலக ஆதரவு கலகக்காரர்களோ பிப்ரவரி 22-ம் தேதியே ஒப்பந்தத்தை கிழித்து எறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றி விட்டனர். 1990-களில் உக்ரைனின் யுனைட்டட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலராக இருந்து பின்னர் உக்ரைனிய பெருமுதலாளியாக உருவெடுத்து, நாட்டின் பிரதமராக பதவி ஏற்று, தற்போது ஊழல் குற்றங்களுக்காக சிறையிடப்பட்டிருந்த யூலியா டைமஷென்கோவின் “தந்தை நாடு கட்சி” சார்பில் 10 அமைச்சர்களும், புதிய நாஜி, ரஷ்ய வெறுப்பு ஸ்வோபோடா கட்சி சார்பில் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு, வர்த்தகம், கலாச்சாரம் போன்ற துறை அமைச்சர்களும் இந்த அமெரிக்க ஆதரவு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.
உக்ரைன் இடைக்கால அரசுப் படைகள்
வலது தீவிர வாத அமைப்புகளின் உறுப்பினர்கள் ஊர்பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். வெள்ளை இனவாத குழுக்கள் ஸ்வஸ்திகாவுக்கு பதிலாக பயன்படுத்தும் செல்டிக் சிலுவை, நாஜி ரகசிய போலீஸ் சின்னம் மற்றும் பிற ஹிட்லர் காலத்திய அடையாளங்களை அவர்கள் அணிந்து ரஷ்யர்களையும், யூதர்களையும் அழிப்பதற்கும், நாட்டை விட்டு துரத்துவதற்கும் பயங்கரவாத அடக்குமுறை பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். உக்ரைனின் தேசிய பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாடு இந்த பயங்கரவாத அமைப்புகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து எழுபதாயிரம் போலிஷ் மக்களையும், யூதர்களையும் இனப்படுகொலை செய்த, உக்ரைனிய இனவாத தலைவர் ஸ்டெபன் பணடேராவின் உருவப் படம் கீவ் நகரசபை மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. லெனின் சிலை, சோவியத் காலச் சின்னங்கள் உடைத்து எறியப்பட்டு அவை இருந்த இடத்தில் நாஜி, பாசிச சின்னங்கள் வரையப்பட்டுள்ளன.
டெட்யானா சோர்னோவோல் என்ற வலது சாரி உக்ரைனிய இனவாத கூட்டமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் அரசின் ஊழல் ஒழிப்பு துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் மே மாதம் நடைபெறும் என்று அறிவித்திருக்கும் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசு அடுத்தடுத்து நாட்டின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. ஐ.எம்.எஃப்பிடம் $35 பில்லியன் கடன் கோரியிருக்கிறது; அமெரிக்க அரசிடமிருந்து $1 பில்லியன் உதவித் தொகையை பெறவிருக்கிறது; மேற்கத்திய நாடுகளின் இலக்குகளில் ஒன்றான உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ப்பதற்கான இணைப்பு ஒப்பந்தத்தை மார்ச் 17 அல்லது மார்ச் 21-ம் தேதி கையெழுத்திடப் போவதாக அறிவித்துள்ளது.
மேலும், 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறுபான்மை இனத்தவருக்கும், மொழியினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. அதன்படி இனிமேல் உக்ரைனிய மொழி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்.
கிரீமியாவில் ஆர்ப்பாட்டம்
தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும், நாட்டை மேற்கத்திய நாடுகளின் பிடியில் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைகளை நாட்டின் தெற்கு, தென்கிழக்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தென் கிழக்கில் உள்ள 15 லட்சம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் கிரீமியா 1954-ம் ஆண்டு அப்போது சோவியத் குடியரசாக இருந்த உக்ரைனுடன் சேர்க்கப்பட்டிருந்தது. 1990-களில் சோவியத் யூனியன் வீழ்ந்து ரசியாவும், உக்ரைனும் தனி நாடுகள் ஆன பிறகு 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரீமியாவில் அப்போது இருந்த கருங்கடல் பகுதி கப்பற்படையில், 82 சதவீதம் ரசியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, செவஸ்தபோல் துறைமுகம் ரசியாவின் பயன்பாட்டில் விடப்பட்டது. அதற்கு பதிலாக உக்ரைனுக்கு நிதி உதவி, கடன் தள்ளுபடி வழங்கியதோடு ஆண்டு தோறும் பயன்பாட்டு கட்டணமும் ரசியா கட்டி வருகிறது.
சுய ஆட்சிப் பிரதேசமான கிரீமியா, உக்ரைனின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை தூக்கி எறிந்து விட்டு அரசியல் சட்டத்துக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது: உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவில் இணைவதற்கான கருத்துக் கணிப்பை மார்ச் 30-ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்தது. கிரீமியா மக்கள் படையினர் தெருக்களில் இறங்கி பலத்தை காட்டினர். ரசியா தனது வல்லரசு நலன்களையும் கிரீமியாவில் வாழும் ரஷ்ய மக்களையும் பாதுகாக்க கிரீமியாவுக்குள் ராணுவத்தை அனுப்ப முடிவு செய்தது.
ரசியாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்தன. கிரீமியா பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்துவது உக்ரைனிய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமெரிக்க அதிபர் விளக்கம் அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கலகம் செய்வது, நாஜி இனவாத கட்சிகள் அதிகாரத்தைப் பிடிப்பது எல்லாம் ஜனநாயகமாகக் கருதும் ஒபாமா, பிரிந்து போகும் உரிமையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்துவதை ஜனநாயக விரோதமாக கருதுகிறார்.
ரஷ்ய அதிபர் புடினின் சமாதானமான பேச்சுக்களை ஒதுக்கித் தள்ளிய அதிபர் ஒபாமா மார்ச் 6-ம் தேதி ரசியாவுக்கு எதிராக முதல் சுற்று பொருளாதார தடைகளை விதித்தார். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. அமெரிக்க ஆயுதங்கள் பால்டிக் பகுதிக்கு அனுப்பப்பட்டு, போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதியினுள் நுழைந்திருக்கின்றன. ஜூன் 3-ம் தேதி நடைபெறவிருந்த ஐரோப்பிய ஒன்றியம்-ரசியா உச்சி மாநாட்டுக்கான தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
ரசியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தால் மேற்கத்திய கார்ப்பரேட்டுகள்தான் பாதிக்கப்படும் என்று ரசியா பதிலடி கொடுத்திருக்கிறது.
கிரீமியாவின் செவஸ்டபோலில் ரசிய கப்பல்கள்
உலகின் மிக வளமான விவசாய பகுதிகளில் ஒன்றான உக்ரைன் ரசியாவை ஒட்டிய ஸ்லேவிய நாடுகளில் ஒன்று. அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போல சுமார் ஐந்து மடங்கு பெரியது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே உடையது (சுமார் 4 கோடி) . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அளவில் பிரான்ஸ் நாட்டை விட பெரியதாகவும், ஜெர்மனியின் மக்கள் தொகையில் பாதியையும் கொண்டிருக்கிறது.
7 சதவீதம் முதல் 14 சதவீதம் புராதன உயிர்ச்சத்து அடங்கியிருக்கும் செர்னோஜெம் என்ற கருநிற மண் வகையின் உலகளாவிய அளவில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் உள்ளது. இந்த வகை மண் பெருமளவு ஊட்டச் சத்துக்கள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உயர் நீர் தேக்கு திறனும் கொண்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் தானியம், இறைச்சி, பால், காய்கறிகள் உற்பத்தியில் 25% பங்களித்து வந்த உக்ரைன் சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டது.
ரசியாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உக்ரைன் சோசலிச குடியரசாக உருவாகி 1920-களில் உக்ரைனில் தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அனைவருக்கும் அடிப்படை சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு, மற்றும் வேலை செய்யும் உரிமை, குடியிருக்கும் வீடு பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டன. நூற்றாண்டுகள் பழமையான ஏற்றத் தாழ்வுகள் ஒழித்துக் கட்டப்பட்டு பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. 1930-களில் தொழில்துறை உற்பத்தி 4 மடங்காக அதிகரித்தது. விவசாய கூட்டுப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது போலந்துடன் இருந்த உக்ரைனிய பகுதிகள் இணைக்கப்பட்டு வரலாற்றில் முதன்முறையாக உக்ரைன் தேசிய குடியரசு சோசலிச முறையில் உழைக்கும் மக்களுடையதாக உருவானது. பிற்போக்கு கலாச்சாரங்களை தூக்கிப் பிடிக்கும், மக்களை சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய உக்ரைனில் ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளும், சுரங்க மற்றும் தொழில்துறையில் பயன்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் செழித்திருந்தன.
கீவ் நகரில் ஐரோப்பிய மற்றும் யூராசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் விக்டோரியா நியூலேண்ட்
உதாரணமாக, தற்போது இந்தியாவின் நடுத்தர ரக ராணுவ போக்குவரத்து விமானங்கள் அனைத்தும் உக்ரைனில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ரசியாவிலிருந்து பெறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்களுக்கான எஞ்சின்களை உக்ரைன்தான் வழங்குகிறது. இங்கே தயாராகும் கப்பல்களுக்கான எஞ்சின்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் இந்தியாவால் போடப்பட்டிருக்கிறது.
சோவியத் யூனியன் தகர்வுக்கு பிறகு உக்ரைன் தனிநாடான அடுத்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60% வீழ்ச்சியடைந்தது. 2000 ஆண்டுக்குப் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு ஏற்பட்டாலும், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தால் 2009-ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 15% சுருங்கியது. வரலாற்று ரீதியாக சோவியத் சோசலிச குடியரசாக சாதித்த உச்சகட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை உக்ரைன் மீண்டும் அடையவேயில்லை.
அரசியலில் நிலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்களின் ஊழல் இவற்றுக்கெல்லாம் தீர்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதுதான் என்ற பிரச்சாரம் நடுத்தர வர்க்க மக்களிடையே ஓரளவு எடுபட்டது. ஆனால், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து ‘சொர்க்கத்தில்’ திளைத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின், கிரீஸ் மக்களை கேட்டால் அது எத்தகைய தீர்வு என்பதை உக்ரைன் மக்கள் புரிந்து கொள்ளலாம்.
1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உலகின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பில் உள்ள இயற்கை மற்றும் மனித வளங்களின் மீது அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகளின் லாப வேட்டை மறுக்கப்பட்டது, கம்யூனிச எதிர்ப்பு அரசியலாக உருவெடுத்து சோவியத் யூனியனுக்கு எதிராக பனிப்போர் நடத்தப்பட்டு வந்தது. உலகின் பிரச்சனைகளுக்கெல்லாம் கம்யூனிசம்தான் காரணம் என்று பிரச்சாரம் செய்து கொரியா முதல் தாய்வான், மேற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் வரை ஜனநாயகத்தை நசுக்கி சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாளர்களை அமர்த்தி ஆதரித்துக் கொண்டிருந்தது அமெரிக்கா.
அமெரிக்க அதிபர் ஒபாமா
1990-ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு “இதுதான் வரலாற்றின் முடிவு” என்று முதலாளித்துவ அறிஞர்கள் கொக்கரித்தனர். அமைதி ஈவுத் தொகை (peace dividend) என்று மிச்சமாகப் போகும் பணத்தை என்ன செய்வது என்று கணக்கு போட்டனர்.
ஆனால், அமெரிக்கா முதலான மேற்கத்திய ஏகாதிபத்திய பொருளாதாரங்களுக்கு முழு உலகையும், முழு மக்களது உழைப்பையும் அபகரிப்பது, உயிர் வாழும் தேவையாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க தலைமையிலிருக்கும் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஒவ்வொன்றாக தம்முள் இழுக்க ஆரம்பித்தன. போலந்து, லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளை மேற்கத்திய பொருளாதார, ராணுவ மண்டலங்களுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
ராணுவ ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நேரடி ஆக்கிரமிப்புகளையும் எகிப்து, துனீஷியா, லிபியா, பஹ்ரைன், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு கலகங்களையும் நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
எனவே, ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடான உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தேவைப்படுவதை விட நிதிமூலதன முதலாளிகளின் இலாப வேட்டைக்கும், மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் இடையிலான கடும் முரண்பாட்டில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உக்ரைன் தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.
மார்ச் 9-ம் தேதி செவஸ்டபோலில் நடந்த பேரணி ஒன்றில் ரசிய ஆதரவு உக்ரைனிய ஆதரவு குழுக்களிடையே வாக்குவாதம்.
உக்ரைன் விவசாய நிலங்களை வாங்குவதற்கு லாபகரமான 10 நாடுகளில் ஒன்று என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. உக்ரைனில் விளைநிலங்களை அன்னிய நிறுவனங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமான நில கைப்பற்றல்கள் நடந்து வருகின்றன. உக்ரைனின் விவசாயத் துறையில் 1,600-க்கும் மேற்பட்ட மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் கால் பதித்திருக்கின்றன.
மறுபக்கத்தில் 2000-ம் ஆண்டு ரசியாவின் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புடின், ரசியாவின் வல்லரசு தகுதியை மீண்டும் அடைய முயற்சிக்கிறார். மேலும் ரசிய ஆளும் வர்க்கமும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறது. அதனால்தான் புடின் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறார்.
ரசிய தேசிய பெருமிதத்தை முன் வைத்து ரசியாவின் இயற்கை வளங்களை குறிப்பாக எண்ணெய் வளங்களை பயன்படுத்தி, ரஷ்ய பொருளாதாரத்தை ஓரளவு வலுப்படுத்தியிருக்கிறார் புடின். ரசிய முதலாளிகளின் சார்பில், ரசியாவின் அரசியல் செல்வாக்கை உலக அரங்கில் உயர்த்துவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கிறது ரசிய அரசு. சிரியாவில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஆசாத் அரசுக்கு ஆதரவு அளித்தது, அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடனுக்கு புகலிடம் அளித்தது போன்ற ரசியாவின் நடவடிக்கைகள் அமெரிக்க அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன.
ரசியாவின் ஆளும் முதலாளிகள் தமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் செல்வாக்கு செலுத்த அமெரிக்காவுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.
இவ்வாறு மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும், ரஷ்ய முதலாளிகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது உக்ரைன். இருப்பினும் இதன் முதன்மைக் குற்றவாளிகள் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம்தான்.
‘கம்யூனிசம்தான் சைத்தான், சோவியத் யூனியனை வீழ்த்தி முதலாளித்துவ ஜனநாயகத்தை உலகெங்கிலும் நிலைநாட்டி விட்டோம், இனிமேல் ஒரே அமைதி அமைதி’ என்று பாட்டு பாடிய முதலாளித்துவ அறிஞர்கள், இப்போது அமெரிக்கா உலகெங்கிலும் நடத்தி வரும் பொருளாதார, ராணுவ, அரசியல் ரீதியான ஜனநாயகப் படுகொலைகளுக்கு புதுப்புது விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். போரையும், பசியையும், படுகொலைகளையும் நடத்தி வருவது முதலாளித்துவம்தான் என்பது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.
‘கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சிக்கு பிறகு, உலகில் இனி போரே இல்லை’ என்று சிலர் மனப்பால் குடித்திருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை முதலாளித்துவம் எப்போதும் வழங்கவில்லை. போர்கள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை, அவற்றின் பொருளாதார மேலாதிக்கம் இல்லை என்பதை சோவியத் யூனியன் தகர்வுக்கு பிறகும் பார்த்து வருகிறோம். இதில் ஒற்றை ரவுடியாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க வல்லரசு நலனை எதிர்த்து இப்போது ரசிய வல்லரசு களத்திற்கு வருகிறது. அந்த வகையில் ஏகாதிபத்தியங்களுக்கிடையே உள்ள முரண்பாடு போர்களை நிச்சயம் எழுப்பும். இனி உலகில் பனிப்போர், இல்லை, வல்லரசுகளின் பகிரங்கப் போர்தான் நடக்கும். போரைக் கொண்டு வரும் முதலாளித்துவத்தை நாம் அழிக்கும் வரை இந்த உலகை காக்க முடியாது.
மசாலா: சென்னையில் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா மே 20 முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களும், பெண்களை நல்வழியில் சித்தரித்து உருவான படங்களும் இதில் பங்கேற்கவுள்ளன.
மருந்து: பொம்பளைங்கள உரிச்சு உப்புக் கண்டம் போட்ட சினிமாதாம்டே பெண்களுக்கு முதல் எதிரி! சினிமாக்காரனை கிழிச்சு நொங்கெடுக்காம ஏம்லே “நல்வழிப்படுத்திய படங்கள்னு” நரகல்ல அரிசியை தேடூதீக?
=======
மசாலா: ”தமிழ் சினிமாவுல யங் ஸ்டார்ஸ் நிறைய பேர் நடிக்க வந்துட்டாங்க. இனி நான் தொடர்ந்து நடிச்சு என்ன ஆகப்போகுது? அதனால, ‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க…” என்று ரஜினி பாக்யராஜிடம் சொல்லியிருக்கிறார்.
மருந்து: இல்லை நடிச்சுத்தான் பாருங்களேன், சிவப்பு – கருப்பு எம்ஜிஆருங்க எல்லாம் பேரன் பேத்தி காலத்துல ஜோடிக்கு ஆள் கிடைக்காம காமடியாவும், டிராஜிடியாவும் மேக்கப்பை பேக்கப் செஞ்சது உங்களுக்கும் நடக்காமயா போகப் போகுது!
=======
மசாலா: ”எல்லாப் பத்திரிகைகளையும் தவறாமல் படிக்கிறார். குறிப்பாக எல்லா அரசியல் செய்திகளையும் வரிவிடாமல் வாசிக்கிறார் ரஜினி. அரசியலைப் பற்றி யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. அதைப் பற்றி என்னிடம் பேச வேண்டிய அவசியமும் இல்லை. அரசியலில் அவர் தெளிந்த நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் நிஜம்!” – கே.பாக்யராஜ்.
மசாலா: “சார் விளையாட்டு இல்லை… உண்மையிலேயே தமிழ்ல இந்தப் படம் புதுசா இருக்கும். ஒரு நாய்தான் ஹீரோ. அது படம் முழுக்க பல சாகசங்கள், அதிரடிகள் பண்ணும். அந்த நாய்க்குப் பிறகு படத்தில் முக்கியமான கேரக்டர் எனக்கு!” – சொந்தத் தயாரிப்பில் உருவாகும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்துக்கு சுவாரஸ்ய அறிமுகம் கொடுக்கிறார் சிபிராஜ்.
மசாலா: ”ஓவராப் பேசிக்கிட்டே இருக்கிற உங்களை நம்ம முதல்வர்கிட்ட கொண்டுபோய் நிப்பாட்டினா, என்ன பேசுவீங்க?” என்று ‘நண்டு’ ஜெகனிடம் கேட்ட போது, ”நிகழ்ச்சிகள்லதாங்க நான் இவ்ளோ பேசுறேன். வீட்ல நான் ரொம்ப சைலன்ட். அதனால, நம்ம முதல்வரைப் பார்த்தா, பவ்யமா ஒரு வணக்கம் வெச்சுட்டு, வழக்கம்போல எல்லோரும் சொல்ற மாதிரி ‘நான் உங்களுடைய தீவிர ரசிகன்’னு சொல்லிட்டு, அப்படியே எங்க ஏரியாவில் ‘அம்மா உணவகம் திறந்ததுக்கு ஒரு தாங்க்ஸும் சொல்லிட்டு வந்துடுவேன். ஏன்னா அம்மா உணவகத்தோட ரெகுலர் கஸ்டமர் நான்.”
மருந்து: ஆனானப்பட்ட ஆதிக்கசாதி முறுக்கு மீசைங்கள்ளாம் அம்மா காலுல விழுந்து கும்பிடும் போது, விஜய் டிவியில காம்பியரிங், வெள்ளித்திரையில காமடின்னு வாயால மொக்கை போட்டு பொழைக்கும் இந்த தம்பியா புள்ள மட்டும் அம்மாகிட்ட எகிறுமா என்ன?
======
செய்தி: ”இனம்’ எந்த அரசியலையும் முன்வைக்காது. போரினால் பெற்றோர்களை, உறவினர்களை இழந்து அநாதையான குழந்தைகள் பற்றி மட்டுமே பேசும் படம் இது. இந்தப் படம் முடியும்போது சில கேள்விகள் உங்கள் மனதில் அலையடிக்கும். அப்படி உங்களுக்குப் பதில் கிடைச்சா, அதுதான் படத்துக்கான வெற்றி. இது இலங்கையில் நடக்கும் கதை. ஆனால், உலகம் முழுக்கப் போரால் பாதிக்கப்படும் எல்லாக் குழந்தைகளின் கதைகளையும் பேசும் படம் இது!” – ஈழப்பிரச்சினை பின்னணியில் உருவாகி வரும் “இனம்” படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் சிவன்.
மருந்து: படத்துல அரசியலே இல்லேன்னு சத்தியம் செய்யுற சிவனு, அனாதை குயந்தை வெச்சு ஒரு சென்டிமெண்ட பண்றேன்னு சொல்லாம ஈழம்னு உசுப்பேத்தி உதார் விடுறது என்ன அரசியலுடே?
=======
மசாலா: ”பொதுவா தன் பட ஹீரோக்கள் மூலமா சமூகத்துக்கு மெசேஜ் சொல்வார் ஜனநாதன். அவர் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்துக்கு எப்படி உங்களை டியூன் பண்ணிக்கிட்டீங்க?”
”ஏன் பாஸ் நாங்களும் சமூகத்துக்கு மெசேஜ் சொல்லக் கூடாதா? ஜனநாதன் படங்களில் ஒவ்வொரு வசனமும் பவர்ஃபுல்லா இருக்கும். ‘புறம்போக்கு’ சீரியஸ் மெசேஜ் சொல்ற படம்தான். ஆனா, அதை செம ஜாலியா சொல்லியிருப்பார். ஒரு படம், ரசிகர்களை சந்தோஷப்படுத்தணும்; இல்லைன்னா ஓர் அனுபவம் கொடுக்கணும்; அதுவும் இல்லைன்னா ஒரு மெசேஜ் சொல்லணும். ‘பொறம்போக்கு’ ரசிகர்களுக்கு நல்ல மெசேஜ் சொல்ற சந்தோஷமான அனுபவம்!” – ஆர்யா.
மசாலா: படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் பேர்… அரவிந்தன் சிவசாமி. ப்ளஸ் டூ வரை குரு குலத்துல படிச்சு, ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவன். பிரார்த்தனை, பைபிள், சித்தாந்தம், வேதாந்தம்னு ஒழுக்கமா வளர்ந்தவன். அதனாலயே அவனால் இந்தச் சமூகத்தோட சேர்ந்து வாழ முடியாது. எல்லாரும் எதையோ துரத்திட்டு ஓடுறதைப் பார்த்துட்டு, ‘ஏன் யாருமே சாந்தமா, சந்தோஷமா இல்லை?’னு ஏங்குவான். அப்படிப் பட்டவன், கோபத்துல வெடிச்சா எப்படி இருக்கும்? அதுதான் படம்! – “நிமிர்ந்து நில்” படம் குறித்து இயக்குநர் சமுத்திரக் கனி.
மருந்து: சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு கெங்கைக் கரையில கிழங்கு முழுங்குன காலத்துல இருந்து ஊசிப்போன ஒரு அரதப் பழசான பழமொழியை வெச்சு கோபம், வேகம், குண்டு, மிரண்டுன்னு கொல்லுதானுக யுவர் ஆனர்!
========
மசாலா: ”அரசியல்ல என்னை சம்பந்தப்படுத்தாதீங்க. ஒரு நடிகனா மட்டுமே பாருங்க’னு சொல்லியிருந்தீங்களே?”
”இப்பவும் அதைத்தான் சொல்றேன். என்னுடைய முதல் படத்தில் இருந்து, இன்னைக்கு வரைக்கும் நான் இந்தக் கேள்வியை எதிர்கொண்டுதான் இருக்கேன். ஏன்னா, எனக்கு அரசியல் பேசுற வயசு கிடையாது. தவிர, அரசியல் பேசுறதுக்கும், பண்றதுக்கும் எங்க குடும்பத்தில் நிறையப் பேர் இருக்காங்க.” – கருணாநிதி குடும்பத்து வாரிசும் நடிகருமான அருள் நிதி
மருந்து: ஏற்கனவே வூட்டுல அரசியலுக்கு வாரிசு, பட்டமுனு ஏகப்பட்ட குத்து வெட்டு இருக்கையில ஒன்ன மாரி சின்னப்பய புள்ளையெல்லாம் எங்கேர்ந்து சவுண்டு வுடுறதுன்னு நேர்மையா ஒத்துக்க வேண்டியதுதானே ராசா!. சரி அத வுடு, உங்க அண்ணக்கமாரு உதயநிதி, தயா அழகிரியெல்லாம் படத்தை தயாரிச்சு வினியோக்கிறானுகளே இதுக்கு மட்டும் வயசு வேணாமாடே?
=======
மசாலா: ”நான் கல்யாணத்துக்கான ஆள் கிடையாது ஜி. நண்பர்கள், உறவுக்காரங்க கல்யாணத்துக்குக்கூட ரிசப்ஷன்ல மட்டும் தலையைக் காமிச்சுட்டு ஓடி வந்துடுவேன். கல்யாண அட்மாஸ்பியரே எனக்குப் பிடிக்காது. என்னமோ தெரியலை, கல்யாணம்னாலே ஜெயிலுக்குப் போற ஃபீலிங் வந்துடும். காதலும் கிட்டத்தட்ட ஜெயில்தான். ஆனா, அட்லீஸ்ட் அந்த ஜெயில் கதவோட சாவி நம்மகிட்ட இருக்கும். நினைச்சா, நாமளே கதவைத் திறந்துட்டு வெளியே வந்துரலாம். ஆனா, கல்யாணத்துல அது முடியாதே! வேற யாரோ நம்மளை உள்ளே வெச்சுப் பூட்டிட்டு, சாவியைத் தொலைச்சுடுவாங்க அங்கே!” – சிபி.
மருந்து: சிம்பு தம்பி இவ்ளோ போல்டா, விவரமா பேசுதேன்னு வாய் பிளக்கியாடே? அந்தக் காலத்துல மல்லு வேட்டி மைனருமாரும் இப்படித்தாம்டே அலைஞ்சாங்க! ஆனா அவனுகளுக்கு இந்த வம் புபய சிம்பு மாதிரி பேசவோ, இல்லை பேசுறதோ போடுறதுக்கு ஒரு ஊடகமெல்லாம் கிடையாது பாத்துக்க!
=======
மசாலா: ”இப்போதைக்கு அரசியல் ஆர்வம் சுத்தமா கிடையாது. அப்பா என்னை சுதந்திரமா வளர்த்திருக்கிறார். என்னோட முடிவும் யோசனையும் அவருக்குத் தெரியும். என்கிட்ட பேசும்போதும் அவர் அரசியல் தொடர்பா டிஸ்கஸ் பண்ணதே இல்லை. ஒருவேளை ஃபியூச்சர்ல அப்பா கூப்பிட்டா, அந்தச் சமயத்துல என்னோட மைண்ட்ல என்ன ஓடுதோ, அதைப் பொறுத்து என் முடிவு இருக்கும். அப்போ எனக்கு அரசியல் ஆசை வரலாம்… வராமலும் போகலாம்!” – சரத்குமார் மகளும் நடிகையுமான வரலெட்சுமி
மருந்து: சினிமாவுல ஒரு ஆளானா சினிமாவுலேயே இருப்பாக, அது ஊத்திக்கிச்சுன்னா அரசியல்ல குதிப்பாக. நம்மளுக்கு என்ன அம்புடுதோ அதுதாம்டே வாழ்க்கை. இவுகளுக்கு எதுல கிளிக்காகுதோ அதை கையில எடுப்பாகளாம். தரும்புரி ராசப்பா புரோட்டா கடையில தென.மும் 50 குடம் எடுக்க வெச்சா ஆத்தாவை திருத்தலாம்டே!
கடந்த ஜனவரி 26 ‘இந்தியக் குடியரசு’ தினத்தன்று தலைமை விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கௌரவிக்கப்பட்டதோடு, ஜப்பானுக்கும் இந்தியாவுக்குமிடையே சுற்றுலா, இராணுவம், தொலைத் தொடர்பு, அடிக்கட்டுமானத்துறை, மின் உற்பத்தி, அணுசக்தி உள்ளிட்ட 8 வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதற்கு முன்னர், இந்தியாவுக்கு வந்த ஜப்பானிய இராணுவ அமைச்சர் இட்சுநோரி ஓனோடெரா-வுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு நாடுகளின் கடற்படைகளும் தொடர்ந்து முறையாகக் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும், அவசியமானால் அமெரிக்கப் படையுடன் சேர்ந்து இந்தியாவும் ஜப்பானும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் பிணைக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பூரிப்பில் இந்திய-ஜப்பானியப் பிரதமர்கள்.
மேலும் நாட்டின் பாதுகாப்பைக் கருதி, ஜப்பானிடமிருந்து 165 கோடி டாலர் மதிப்புள்ள “யூஎஸ்-2ஐ” எனும் உயர்தர போர் விமானங்களை வாங்கவும் ஜப்பானின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் போர் விமானங்களை வடிவமைக்கவும் முடிவாகியுள்ளது. ஜப்பானுடன் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தங்களால் இந்தியா வலிமையும் வளமும் பெறுவதற்கான வாப்புகள் பிரகாசமடைந்துள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரித்துவருகின்றன.
ஆனால், ஜப்பானிய வல்லரசுடன் இந்தியா போட்டுக் கொண்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் பசிபிக் கடல் பிராந்தியத்திலும் அமெரிக்காவுக்குச் சேவைசெய்யும் அடியாளாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. ஆசியாவுக்கான தனது போர்த்தந்திரத் திட்டத்தின்படி, ஏற்கெனவே ஜப்பானையும் ஆஸ்திரேலியாவையும் தனது கூட்டாளிகளாகக் கொண்டுள்ள அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவைத் தனது இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது.
****
அண்மைக்காலமாக தென்சீனக் கடல் பகுதியில் போர் பதற்ற நிலை தீவிரமாகி வருகிறது. தென்சீனக் கடலிலுள்ள ஆளில்லா சென்காகு தீவுக் கூட்டத்தில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பின்னர், சீனா தனது பாரம்பரிய உரிமைகளைக் காட்டி அவற்றுக்குச் சோந்தம் கொண்டாடுகிறது. இதேபோல இத்தீவுக் கூட்டங்களுக்கு சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. தென்சீனக் கடலிலுள்ள தீவுகள் யாருக்குச் சோந்தம் என்பதை அந்த வட்டார நாடுகள்தான் தமக்குள் பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் தலையிட்டு நாட்டாமை செய்வதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், அவ்வாறு தலையிடுவதற்கான முகாந்திரத்தைத் தேடுவதற்காகவே, தனது நட்பு நாடுகளின் பெயரால் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா, சீனாவின் செல்வாக்கை இப்பிராந்தியத்தில் தடுத்து தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறது.
இதன் காரணமாக, தனது இராணுவ வலிமையைப் பெருக்குவதிலும் போர்ப்பயிற்சிகளை நடத்துவதிலும் சீனா இறங்கியுள்ளது. சென்காகு தீவுக் கூட்டத்தை உள்ளடக்கியுள்ள தென்சீனக் கடலின் வான்பரப்புப் பகுதியைத் தனது “வான் பாதுகாப்புக்கு உட்பட்ட வளையம்” என்று கடந்த ஆண்டு நவம்பர் 24-இல் அறிவித்த சீனா, இப்பகுதியில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் முறைப்படி அனுமதி பெறாவிடில், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது. இதை ஏற்க மறுக்கும் ஜப்பானுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்க வல்லரசு, நவம்பர் 26 அன்று தனது இரு பி-52 ரக போர் விமானங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி அப்பகுதியில் பறக்கவிட்டு சீனாவைச் சீண்டியது.
அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கப் போர்தந்திர திட்டத்தின்படி, சீனாவுக்கு எதிராக ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்தியக் கடற்படை.
இதேபோல, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதற்ற நிலையை அமெரிக்கா தோற்றுவித்தது. அணுவாற்றல் கொண்ட வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பது, அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானைப் பாதுகாப்பது என்ற பெயரில், கொரிய தீபகற்பத்தில் பெரும்படைகளைக் குவித்து போர் ஒத்திகைகளை நடத்தி அமெரிக்கா அச்சுறுத்தியது. வடகொரியாவை ஆத்திரமூட்டிப் போருக்குத் தள்ளுவதன் மூலம் வடகொரியாவின் நட்பு நாடான சீனாவை இப்போரில் இழுத்துவிட்டு, அதன் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கத்துடனேயே அமெரிக்கா இந்நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முதலாளித்துவ நாடாக வளர்ந்துள்ள சீனா, உலகமயமாக்கலைப் பயன்படுத்திக் கொண்டு உலகின் நுகர்பொருள் சந்தையில் மட்டுமின்றி, உயர் தொழில்நுட்ப உற்பத்தியிலும் போட்டியிடத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஏற்றுமதியில் அமெரிக்காவே முதலிடம் வகிக்கிறது; அதேபோல சீனத்தில் போடப்பட்டுள்ள அந்நிய முதலீடுகளில் அமெரிக்க முதலீடுகளே அதிகமானதாக உள்ளது; தாராளமயக் கொள்கையைத்தான் சீனா பின்பற்றுகிறது என்ற போதிலும், உலகச் சந்தையில் சீனாவின் போட்டியை பெரும் சவாலாகக் காட்டி அமெரிக்காவும் முதலாளித்துவ ஊடகங்களும் பீதியூட்டுகின்றன.
அமெரிக்க வல்லரசை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக ஷாங்காய் கூட்டுறவு, ஆப்பிரிக்காவில் முதலீடுகள், தென்கிழக்காசியாவைத் தன்பக்கம் இழுப்பது போன்ற முயற்சிகளை சீனா மேற்கொண்டுள்ள போதிலும், அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு மையமாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்காவுடன் நேரடியாக மோதாமல், அதன் ஆத்திரமூட்டும் மேலாதிக்க நடவடிக்கைகளைத் தந்திரமாகக் கையாண்டு வரும் சீனா, அமெரிக்க ஏற்றுமதிச் சார்பிலிருந்து விடுபட்டு, உலகமயமாக்கலைப் பயன்படுத்திக் கொண்டு தனது சந்தையை விரிவாக்கிக் கொள்ளவே முயற்சிக்கிறது.
மூலப்பொருட்களுக்காகவும் சந்தைக்காகவும் எரிபொருளுக்காகவும் ஆப்பிரிக்காவில் கால்பதித்துள்ள சீனா, பொருளாதார ஒத்துழைப்பு, கட்டுமானப் பணிகள் முதலானவற்றின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் தனது செல்வாக்கைப் பெருக்கி வருகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலின்படி அனைத்து நாடுகளும் சுதந்திரமாகப் போட்டியிடலாம் என்று கூறும் அமெரிக்கா, இதில் தனது மேலாதிக்கத்துக்குப் போட்டியாக சீனா வரக்கூடாது என்பதற்காகவே சீனாவை “அச்சுறுத்தும் வல்லரசாகப்” பூச்சாண்டி காட்டுகிறது.
டெல்லி அருகே நொய்டா நகரில் கடந்த டிசம்பர் 15-18 தேதிகளில் நடந்த “இந்திய-ஜப்பானிய உலகளாவிய பங்குதாரர் உச்சி மாநாடு 2013” : மறுகாலனியாதிக்க விரிவாக்கத்துக்கும் இந்திய-ஜப்பானிய கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்குமான புதிய ஏற்பாடு
சீன முதலாளித்துவத்தின் போட்டியையும் உலகப் பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கையும், தனது உலக மேலாதிக்கத்துக்கு எதிரான சவாலாகக் கருதும் அமெரிக்கா, சீனாவின் உய்குர் பிராந்தியத்தில் இசுலாமிய தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவது, திபெத்தில் தலாய்லாமாவைப் பின்னாலிருந்து இயக்குவது, சீனாவின் அங்கமான தைவானைத் தனிநாடாக அறிவித்து அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டிருப்பது, சென்காகு தீவுகள் விவகாரத்தைக் கிளறிவிடுவது, தென்கிழக்காசிய நாடுகளை சீனாவுக்கு எதிராகத் திருப்புவது, சர்வதேச கடல் விதிகளை மீறி சீனக் கடற்பரப்பில் தனது உளவு விமானங்களை வேவு பார்க்க அனுப்புவது – எனப் பலவழிகளிலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உலகின் கடல்வழி வணிகத்தில்,குறிப்பாக எண்ணெ ய் வர்த்தகத்தில் பாதிக்கும் மேலாக மலாக்கா மற்றும் ஹெர்மஸ் நீரிணை வழியாக நடப்பதால், ‘எதிர்கால வல்லரசான’ சீனாவின் மேலாதிக்கத்தில் இந்தக் கடல்வழி சிக்கிவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது. அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ள ஜப்பானும் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் முன்னணிப் பாத்திரமாற்றுகின்றன. சந்தைக்காகவும் மூலதன விரிவாக்கத்திற்காகவும் நடக்கும் இந்த நாய்ச்சண்டையில் இப்போது இந்தியாவையும் அமெரிக்கா இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது.
இதன்படியே, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து கடற்படை ஒத்திகை நடவடிக்கைகளையும் கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொண்ட இந்தியா, இப்போது போடப்பட்டுள்ள இந்திய – ஜப்பானிய ஒப்பந்தத்தின்படி, சீனா அறிவித்துள்ள வான் பாதுகாப்பு மண்டலத்தினுள் அத்துமீறி தனது போர் விமானங்களைச் செலுத்தவும் தீர்மானித்துள்ளது. இனி இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் அதிகாரிகள், ஜப்பானிய அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கூட்டாளியான ஜப்பான், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த சட்டரீதியான கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு வெளிப்படையாகவே இராணுவ பலத்தைப் பூதாகரமாக அதிகரிப்பதிலும், ஆயுத விற்பனையிலும், பிற நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தால், இதுவரை தற்காப்புப் படையாக இருந்த ஜப்பானிய இராணுவம், இனி முழு அளவிலான தாக்குதல் திறன்மிக்கதாக மாற்றியமைக்கப்படும் என்று சீனாவுக்கு எதிராகத் தேசியவெறியூட்டி வருகிறார், ஜப்பானியப் பிரதமர் அபே. இரண்டாம் உலகப் போரில் காலனியாதிக்க அடக்குமுறையிலும் அட்டூழியங்களிலும் ஈடுபட்ட ஜப்பானின் முதல்தர போர்க்குற்றவாளிகளின் கல்லறைகள் அமைந்துள்ள யாசுகுனி வழிபாட்டுத் தலத்துக்குச் சென்று ஜப்பானின் உயர்மட்டத் தலைவர்கள் வழிபடுவதை சீனாவும், வட – தென்கொரிய நாடுகளும், இதர தென்கிழக்காசிய நாடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. இருப்பினும், சீனாவை ஆத்திரமூட்டவும் ஜப்பானிய மேலாதிக்கத்தைப் பெருமைப்படுத்தவும் கடந்த டிசம்பர் 26 அன்று பிரதமர் அபே அங்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஆசியப் போர்த்தந்திரத் திட்டத்தின்படியே ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமின்றி, சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளது இராணுவ வலிமையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. உலகில் அதிக அளவில் ஆயுதக் கொள்முதல் நடக்கும் பிராந்தியமாக தென்கிழக்காசியா மாறியுள்ளது. ஏற்கெனவே கடந்த 2007-2011 வரையிலான காலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ள இந்தியா, உலகின் ஆயுதக் கொள்முதலில் முன்னிலையிலுள்ள நாடுகளுள் ஒன்றாக வளர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத் திட்டத்துக்கும், உலக மேலாதிக்கத்துக்கும் பயன்படும் வகையில் புவிவியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தியா இருப்பதாலும், சீனாவின் அண்டை நாடாக இருப்பதாலும், அமெரிக்கப் போர்விமானங்களும் போர்க் கப்பல்களும் விரைந்து சென்று தாக்குவதற்கு ஏற்ற வகையிலான ஏவுதளமாகவும் அடியாளாகவும் இந்தியாவை மாற்றியமைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா முயற்சிக்கிறது.
இதுமட்டுமின்றி, தனது நாட்டில் புகுஷிமா பேரழிவுக்குப் பின்னர் அந்த அணுஉலையை மூடியுள்ள ஜப்பான், இப்போது தனது அணு உலைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, புகுஷிமா போன்ற பேரழிவுகளைக் கருக்கொண்டுள்ள அணு உலைகள் இந்திய நாட்டின் கடலோரப் பகுதிகளில் தொடங்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.
மொத்தத்தில் தேச நலன் – பாதுகாப்பு என்ற பெயரில் உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் அடிமையாகவும் அடியாளாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, இந்த ஒப்பந்தம். இந்திய – சீன வர்த்தக உறவானது, இந்தியத் தரகு முதலாளிகளுக்குப் பொருளாதார ரீதியாக ஆதாயமானதாக இருந்த போதிலும், அரசியல் காரணங்களுக்காக அமெரிக்காவின் பக்கமே அவர்கள் நிற்கின்றனர். ஏற்கெனவே சீன எதிர்ப்பு இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிவருவதாலும், இந்துவெறியர்களும் ‘தேசிய’ ஊடகங்களும் சீன அபாயத்தைக் காட்டி பீதியூட்டி வருவதாலும், ஈழ விவகாரத்தில் ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக சீனா நிற்பதைக் காட்டி சீனாவை எதிரியாக தமிழினவாதிகள் சித்தரிப்பதாலும், அமெரிக்காவின் அடியாளாக இந்தியாவை மாற்றும் இந்த முக்கியமான ஒப்பந்தம் எதிர்ப்பே இல்லாமல் கையெழுத்தாகியுள்ளது.
அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நாடு பிடிப்பதற்காக உலகெங்கும் நடத்திய ஆக்கிரமிப்புப் போர்களில் இந்தியர்கள் காலாட்படையாகச் சென்று கொல்லப்பட்டதைப் போலவே, இன்று அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கான அடியாள் படையாகச் சென்று இந்திய சிப்பாய்கள் கொல்லப்படுவதும், அதிநவீன அமெரிக்க ஆயுதங்கள் மேலும் இறக்குமதி செயப்பட்டு, அடுக்கடுக்காக வரிவிதிப்பும், அடக்குமுறையும் அதிகரிக்கப் போவதுதான் இந்திய மக்களுக்கு இந்த ஒப்பந்தம் தரப்போகும் பரிசுகள்.
நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் விவாதம் கூட நடத்தப்படாமல் அதிகாரிகள் மட்டத்தில் இறுதியாக்கப்பட்டு, கொல்லைப்புறமாகவே திணிக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் மறுகாலனியாதிக்கப் படுகுழியில் இந்தியாவைத் தள்ளிய “காட்” ஒப்பந்தமும், நாட்டை அமெரிக்காவின் அடிமையாக மாற்றிய அணுசக்தி ஒப்பந்தமும் நம் மீது திணிக்கப்பட்டன. நாட்டையும் மக்களையும் பேரழிவுக்குள் தள்ளும் அபாயகரமான இந்தத் தேசத் துரோகிகள் உடனடியாகத் தூக்கியெறியப்பட்டு, இந்திய – ஜப்பானிய ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்கான மக்கள் போராட்டங்கள் பெருக வேண்டும். இல்லையேல், அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் பிணைக்கப்பட்டு நாடே சின்னாபின்னமாக்கப்பட்டுவிடும்.
மலேசிய விமான விபத்துக் குறித்த செய்திகளை உலகம் அனுதாபத்துடன் கவனித்து வருகிறது. இந்த செய்திகளை தமிழக ஊடகங்களில் படித்தபோது ஒரு செய்தி மட்டும் துருத்திக் கொண்டு தெரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் உள்பட 5 இந்தியர்கள் பயணம் செய்ததாக ஊடகங்கள் எழுதின. இப்படி குறிப்பிடுவது வழக்கமானதுதான் என்றாலும், அந்த சென்னை பெண் பற்றிய தகவல்கள் சற்றே கவனிக்க வைத்தன.
சந்திரிகா சர்மா
அவர் பெயர் சந்திரிகா சர்மா. 51 வயது. சென்னை வேளச்சேரியில் கணவருடன் வசிக்கும் இவர் மீனவர் நலன்களுக்காக பணிபுரிந்து வருகிறார் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக மங்கோலியா செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டு விட்டார் என்றும் செய்திகள் தெரிவித்தன. ஓர் உயிரின் இழப்பு என்பது நிச்சயம் வருந்தத் தக்கதுதான். இதன்பொருட்டு அவரது குடும்ப உறுப்பினர்களின் மன உணர்வுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் இச்செய்தி இந்த பரிதாபத்துடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை.
சென்னை வேளச்சேரியில் உயர்வர்க்க பணக்கார குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் சர்மா பெண் ஒருவருக்கும் மீனவர்களுக்கும் என்ன தொடர்பு? அவர் உள்ளூர் மீனவர்களின் சிக்கல்கள் குறித்து பேச மங்கோலியாவுக்குச் செல்கிறார் என்றால் அது மிகவும் வினோதமாக இருக்கிறது. ஹரியானாவை சொந்த ஊராகக் கொண்ட இந்தப் பெண்மணி, மும்பை டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் படித்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் மேற்படிப்புப் படித்து டெல்லியில் பணிபுரிந்துள்ளார். இதில் எதுவுமே மீனவர் வாழ்க்கையுடன் பொருந்தவில்லை. மீனவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை கேள்வி ஞானத்தில் கூட அறிந்திருக்க வாய்ப்பற்ற இவர் எப்படி மீனவர் போராளியானார்? பத்திரிகை செய்திகளைப் படித்தபோது இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது.
International Collective in Support of Fishworkers (ICSF – மீன்பிடி தொழிலாளர்களுக்கு ஆதரவான பன்னாட்டு கூட்டமைப்பு) என்ற தன்னார்வக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார் சந்திரிகா. இந்தியா, லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் இந்த என்.ஜி.ஓ.வில் (தன்னார்வ தொண்டு நிறுவனம்) கடந்த 19 ஆண்டுகளாக இவர் பணிபுரிந்துள்ளார். சென்னையில் இருந்தபடியே உலக நாடுகளுக்குப் பறந்துள்ளார். அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளான்மைக்கான அமைப்பு மங்கோலியாவில் நடத்தும், ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் மண்டல மாநாட்டுக்குச் செல்வதற்காக அவர் மலேசியா வழியே பெய்ஜிங் சென்றுள்ளார். அப்போதுதான் விபத்து நடந்துள்ளது.
சென்னையில் இவருடன் பணிபுரிபவர்களும், நண்பர்களும் ‘‘சந்திரிக்காவின் இழப்பு மீனவ சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு’’ என்று பேட்டிக் கொடுத்துள்ளனர். உலகளாவிய அளவிலான மீனவர் சிக்கல்கள் தொடர்பான செய்திகளை உள்ளூர் மீனவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் இவர் முக்கியப் பங்காற்றி உள்ளாராம். மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல சர்வதேச கருத்தரங்குகளில் கலந்து கொண்டாராம்.
‘‘அவர் மிகவும் எளிமையாக பழகுவார்’’ என்கிறார் தேசிய மீனவர் பேரவையின் அகில இந்தியத் தலைவர் இளங்கோ. தேசிய மீன்பிடித் தொழிலாளர் பேரவையைச் சேர்ந்த எம்.ஜே.விஜயன், ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு அமைப்புகளான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு… ஆகியவற்றின் கொள்கை முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்தும் நபராக சந்திரிகா இருந்தார்’’ என்கிறார்.
இந்தப் பின்னணியில் இதை இரண்டு விதமாக நாம் பார்க்கலாம். ஒன்று, உண்மையிலேயே மீனவர்கள் மத்தியில் சந்திரிகா அப்படி என்னதான் பணியாற்றினார்? இரண்டு, அவர் கலந்து கொள்வதற்காகச் சென்ற மங்கோலியா கருத்தரங்கில் என்ன விவாதிக்கப்படுகிறது? இதில் முதல் கேள்விக்குப் பதில் தேடினால் கடும் அதிர்ச்சி. சந்திரிகா சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலாளர்களின் நலன்களுக்காக பணிபுரிந்ததாக எல்லா ஊடகங்களும் எழுதுகின்றன. ஆனால் உண்மையில் அவர் சிறிய மீனவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியை அப்பட்டமாக செய்துள்ளார். மேலும், கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கும், கடற்கரை சீரழிக்கப்பட்டதற்கும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழில்தான் காரணம் என்று அவரது தன்னார்வ நிறுவனம் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. அவரது ஐ.சி.எஸ்.எஃப். நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘மீன்பிடிக் குறித்து உயிர்ச்சூழல் அணுகுமுறை’ என்ற பிரசுரத்தைக் கவனியுங்கள். இது மிகவும் வழக்கமான என்.ஜி.ஓ. வகை மாதிரி துண்டு பிரசுரம்தான். ஆனாலும் மிகவும் அப்பட்டமாக மீனவர்களை கடலுக்கும், மீன்வளத்துக்கும் எதிரிகளாக சித்தரித்துள்ளனர்.
‘பெரிய விசைப் படகுகள் மட்டுமல்ல… நாம் பயன்படுத்தும் வலைகள் கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்’ என்று ஒரு மீனவர் சொல்வதாகக் கருத்துப்படம்.
புவிவெப்பமயமாதலில் நமக்கு என்ன பங்கிருக்கிறது என்று மீனவர்கள் சிந்திப்பது…
என்று முழுக்க, முழுக்க மீனவர்களுக்கு எதிராக இருக்கிறது இந்த பிரசுரம். கடலோரத்தில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி, மொத்த கடலோரத்தையும், கடற்பரப்பையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடத் துடிக்கும் கடற்கரையோர மேலாண்மை சட்டத்தைக் குறித்து இந்த தொண்டு நிறுவனம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களால் ஒட்ட சுரண்டப்படும் மீன்வளம் பற்றியும் மௌனம் காக்கின்றனர். மொத்தத்தில் பெரும் நிறுவனங்களின் வேட்டைக்காடாக இருக்கும் கடற்புரத்தில் இருந்து மீனவர்களை அடியோடு விரட்டியடித்துவிட்டு, இடையூறு இல்லாத ஏகபோக சந்தையை உத்தரவாதப்படுத்திக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். இதையும் சுற்றுச் சூழலோடு இணைத்து மீனவர்களை குற்றவாளிகளாக்கி இயற்கை ஆர்வலர் வேடம் போடுகிறார்கள் இந்த கபடதாரிகள்.
துண்டு பிரசுரத்திலிருந்து சில பக்கங்களின் படங்கள் [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இந்த லட்சணத்தில் அந்தப் பெண் மீனவப் போராளியாம். அவரது இழப்பு தாங்க முடியாத துயரமாம். என்.ஜி.ஓ. போராளியின் மரணத்திற்காக ஊளையிடும் ஊடகங்கள் இந்த உண்மைகளை ஆய்வு செய்வதோ, பரிசீலிப்பதோ இல்லை.
சரி, இவர் கலந்துகொள்ளச் சென்ற மங்கோலிய மாநாட்டில் அப்படி என்னதான் பேசப்படுகிறது? மங்கோலியாவின் உல்லன்பட்டார் என்ற இடத்தில் மார்ச் 10-ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் இந்த மாநாடு 14-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. ஆசிய, பசிபிக் மண்டலங்களைச் சேர்ந்த 46 நாடுகளின் விவசாய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கணிசமான அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து நாடுகளைச் சேர்ந்த தன்னார்வக் குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்தரங்கின் முதல் நாளில், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சிக்கல்கள் ஆராயப்படும் என்றும், முக்கியமாக இந்த பிராந்தியங்களில் மேற்கண்ட துறைகளில் முதலீடுகள் மற்றும் மானியங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்றும் சொல்கின்றனர். அதாவது ஆசிய, பசிபிக் நாடுகளில் உள்ள ஏழை மக்களின் உணவை உத்தரவாதப்படுத்துகிறார்களாம். எப்படி? விவசாயத் துறையில் முதலீடு செய்வதன் மூலம். அப்படியான முதலீட்டுச் சூழலுக்குரிய வாய்ப்புகள் தங்கள் நாடுகளில் எப்படி இருக்கிறது, எப்படி உருவாக்கலாம் என்பது குறித்து உரையாற்றவே பல்வேறு நாடுகளின் தன்னார்வக் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். பச்சையாக சொல்வதானால் தங்கள் சொந்த நாட்டை காட்டிக் கொடுக்கும் புரோக்கர் வேலையைப் பார்ப்பதற்காக இவர்கள் அங்குச் சென்றுள்ளனர்.
‘ஆசிய, பசிபிக் நாடுகளின் விவசாயிகளிடையே போட்டித் திறனை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதுக் குறித்து’ இந்தக் கூட்டத்தில் விவாதிக்கிறார்களாம். ஆசிய நாடுகளின் அரிசி உற்பத்தி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் நிலையில், அது சூழல் பாதிப்பு உள்ளிட்ட சில எதிர்விளைவுகளையும் உருவாக்குகிறதாம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்படுமாம். மொத்தத்தில் விவசாயத்தின் மீதான விவசாயிகளின் இறையாண்மையை இல்லாதொழிக்க வேண்டும். அதுதான் இவர்களின் நோக்கம். அதை ஐ.நா. சபை வழியே வேறு, வேறு வார்த்தைகளில் இழுத்துப் பிடித்துச் சொல்கின்றனர். இன்றைய விவசாயி எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளை இவர்கள் மருத்தளவுக்குக் கூட பேசாதது மட்டுமல்ல… இருக்கும் விவசாயிகளைத் துரடித்தியடித்துவிட்டு சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் சிந்திக்கின்றனர்.
நாம் சந்திரிகா சர்மாவில் பேசத் துவங்கினோம். அது இறுதியில் இங்கு வந்து நிற்கிறது. மீனவர் நலன், மங்கோலிய மாநாடு, விவசாய நலன், அரிசியால் சூழல் கேடு என்று இது யூகிக்க முடியாத வட்டமாக இருக்கிறது. தன்னார்வக் குழுக்களின் அரசியல் கண்ணி இப்படித்தான்… நாம் அறிய முடியாத ஆழங்களிலும், காண முடியாத தூரங்களிலும் படர்ந்துள்ளன.
தன்னார்வக் குழுக்கள்,வெளித் தோற்றத்தில் சேவையையும், உள்ளே ஏகாதிபத்தியங்களுக்கு தேவையான சதிகார நடவடிக்கைகளையும் கொண்டுள்ளன. இவர்களுக்கு கொடுக்குகள் வெளியில் இருப்பது இல்லை. உள்ளே இருக்கின்றன!
வினோதினி உட்பட 9 மாணவிகளின் உயிரைப் பறித்த மணக்குள வினாயகர் பொறியியல் கல்லூரி கல்விக்கூடமா? கொலைக்கூடமா?
புதுவை மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள மணக்குள வினாயகர் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எலக்ட்ரானிக்&எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் படித்து வந்தார் வினோதினி என்ற மாணவி.
பிப்ரவரி மாதம் 24-ம் தேதி திங்கள் கிழமை வினோதினி கல்லூரிக்கு சென்ற ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே கல்லூரியிலிருந்து பெற்றோர்களுக்கு போன் வருகிறது. போனில், “உங்கள் பெண் மயக்கம் அடைந்து விட்டார். உடனே வாருங்கள்” என்று அழைப்பு. ஆனால் அங்கு போனால்,”ஆசிரியர் என்ற முறையில் கண்டித்ததற்காக அது 5-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது. பெண் இறந்து விட்டது” என்று நிர்வாகம் கூறியிருக்கிறது.
வினோதினியின் பெற்றோருடன் தொடர்புடைய சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினரும், வினோதினியின் தந்தைக்கு ஆதரவான அம்பேத்கர் மறுமலர்ச்சி கழகம் என்கிற தலித் அமைப்பும் சென்று பார்த்த போது வினோதினி அவசர பிரிவில் காலையில் கல்லூரிக்கு கிளம்பி போகும்போது எப்படி சென்றாரோ அதே போல் பெட்டியில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உயிர் வினோதினியைவிட்டு பிரிந்திருந்தது. தலையில் சுவற்றில் மோதியதைப்போல சிறு ரத்த கசிவு, ஒரு பக்க தோள் பட்டையில் சிறு கீறல் மட்டுமே இருந்தது.
இதை கண்ட உறவினர்களும் ஜனநாயக சக்திகளும் “5-வது மாடியில் இருந்து விழுந்தது என்றால் உடல் சேதம் அதிகமாக இருந்திருக்கும், விழுந்த இடத்தில் எந்த தடயமும் இல்லை, வினோதினி விழுந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் மாணவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம், மேலும் அந்த இடம் செக்யூரிட்டி பாயிண்ட். இவர்களை யாரை கேட்டாலும் நாங்கள் பார்க்கவில்லை, எங்களுக்கு தெரியாது. இதைத்தான் சொல்லுகிறார்கள். எனவே இது தற்கொலையில்லை, எனவே போலீசுக்கும், பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்தது யார்? அவர்களை விசாரிக்க வேண்டும்” என்று கேட்டதற்கு நிர்வாகம் “தெரியாது” என்றார்கள்.
வினோதினி மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் சொல்லும் காரணம்: ‘அந்த பெண் சரியாக படிப்பதில்லை, ரெக்கார்டு நோட்டில் அதுவே திருத்தி கையெழுத்து போட்டுக் கொண்டது. இதை கண்டித்ததற்காக அது 5-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் எப்படி பொறுப்பேற்க முடியும்?’ என்பதுதான்.
ஆனால் வினோதினி ரெக்கார்டு நோட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டதாக கூறப்பட்ட அன்று (வெள்ளிக் கிழமை) வினோதினி தனி அறையில் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ”நீ படிக்க லாயக்கு இல்லை, படுக்கத்தான் லாயக்கு” என ஆபாசமாக வசைபாடியதையும் கல்லூரி மாணவர்களே (பெயர் சொல்ல அஞ்சுகின்றனர்) கூறுகின்றனர். மேலும் ஆசிரியர்கள் வினோதினியிடம், “உனது பெற்றோரை அழைத்துவா” என்று சொல்லி இருக்கிறார்கள். வீட்டில் வினோதினி நடந்தது பற்றி சொல்லி இருக்கிறார். ஆனால், “பிறகு வருகிறோம். நீ கல்லூரிக்கு போ” என்று சொல்லவே விருப்பமில்லாமல் அவர் கல்லூரிக்கு போனதாக பெற்றோர்களே சொல்லுகிறார்கள்.
கல்லூரி நிர்வாகம் பிரச்சினை பெரிதாகி விடாமல் பஞ்சாயத்து செய்து தீர்க்கப் பார்த்தது. லிபரேஷன் கட்சி பஞ்சாயத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை, அம்பேத்கர் மறுமலர்ச்சி கழகம் ஒத்துக்கொண்டது. இதில் முரண்பட்டு லிபரேஷன் அங்கிருந்து வெளியேறி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணிக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாகபுஜதொமு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் போலீஸ் புஜதொமுவுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றனர். மற்ற அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி கேட்டதற்கு, “அவர்கள் யார் என்றும், நீங்கள் யார் என்றும் எங்களுக்கு தெரியும். எனவே உங்களுக்கு தரமுடியாது” என்று எஸ்.பி. நேரில் மறுத்து விட்டார்.
மற்ற அமைப்பினருடன், மாணவர்களின் போராட்டத்தில் பங்கு பெற்று பு.ஜ.தொ.மு வின் சார்பாக தனியார்மய கல்வியை அம்பலப்படுத்தி பேசப்பட்டது. மற்றும் வினோதியின் இறுதி சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களை, தனியார்மய கல்வி கொள்கையும், அது விளைவிக்கும் கோரவிளைவுகளையும் அம்பலப்படுத்தி முழக்கமிட செய்யலாம் என்று முயன்ற செய்தபோது, எஸ்.எஃப்.ஐ(சிபிஎம்மின் மாணவர் இயக்கம்) “இப்படி வேண்டாம், மாணவர்கள் ஆட்டம் பாட்டம் என்றுதான் செய்வார்கள். அதை கட்டுப்படுத்தக்கூடாது” என்று மறுத்தனர். புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதனோ, “அப்படி விட முடியாது. முழக்கமிடுவதுதான் சரி, தோழர்கள் சொல்வதுதான் சரி” என்று கூற மாணவர்கள் முழக்கமிட்டார்கள்.
ஊர்வலம் நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முன்னணியாக பு.ஜ.தொ.மு செஞ்சட்டை தோழர்கள் எழுச்சிமிக்க முழக்கமிட்டது மக்களையும், மாணவர்களையும் முழக்கமிட வைத்தது. எமது முழக்க பிரசுரத்தை கேட்டு வாங்கி படித்து வைத்துக் கொண்டார்கள். “வினோதினியின் உயிர் மட்டுமல்ல, இந்தியாவில் பல மாணவர்களின் உயிர் பறிப்புக்கும் காரணம், கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களின் ரத்தத்தை உறிவதும் தனியார்மய கல்வி கொள்கைதான், இதை ஒழிக்காமல் விடிவில்லை” என்ற முழக்கம் கூடி இருந்த மாற்று கட்சிகளையும், பொது மக்களையும் ஈர்த்தது.
ஊர்வலமாக சென்று கொண்டு இருக்கும்போதே பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் பழனிச்சாமிக்கு லேன்ட் லைனில் இருந்து போன் செய்து, “உங்களது அமைப்பு எதற்கு இதில் தலையிடுகிறது? நீங்கள் முன்னாடி கோஷம் போட்டுக் கொண்டு போறீங்க. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு நிர்வாகம் என்ன செய்யும்? உண்மையை ஆராயாமல் நீங்கள் முடிவு எடுத்து இருக்கீங்க” என்று நிர்வாகத்தின் கையாள் ஒருவன் பேசினான். அதற்கு தோழர், “நாங்கள் ஆய்வு செய்துவிட்டுதான் முடிவு செய்து இருக்கிறோம், நீ யார்” என்று கேட்டதற்கு போனை துண்டித்து விட்டான்.
மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து எர்னஸ்ட் பால், பவானி, கீதா, பிரியதர்ஷினி ஆகிய நான்கு பேராசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக 306 பிரிவின்படி வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரில் இரு பெண் பேராசிரியர்கள் தமக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
தொடர்ச்சியான மாணவர்களின் போராட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) –ன் சுவரொட்டி பிரச்சாரம் ஆகியவற்றை கண்டு ஆத்திரம் அடைந்த கல்லூரி முதலாளி சுகுமார், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களை அழைத்து “போராட்டத்திற்கு செல்லக்கூடாது” என்றும், “அந்த மாணவி செய்த தவறுக்கு பொய்க் குற்றம் சாட்டி ஆசிரியர்களை கைது செய்தது தவறு. அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்றும் “நாம் கல்லூரியின் சார்பாக பேரணியாக சென்று கவர்னர் இடம் மனுக்கொடுக்க போகிறோம். அதற்கு அனைவரும் வரவேண்டும். இதுக்கு வரவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்வேன்” என்று மாணவர்களையும், ஊழியர்கள், டாக்டர்கள், செக்யூரிட்டி என அனைவரையும் மிரட்டி 3,000 பேரை திரட்டி பேரணி நடத்தினார். இதை அக்கல்லூரி மாணவர்களே காரி உமிழ்ந்தார்கள்.
மேலும், சுகுமார், கல்லூரியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளை கண்டித்து சுவரொட்டியும் மற்றும் பத்திரிக்கையில் அறிக்கையும் கொடுத்துள்ளார். அதில் பு.ஜ.தொ.மு உட்பட போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைத்து அமைப்புகளையும் அமைப்பு பெயர்களை அறிவிக்காமல் தீய சக்திகள், தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள் என பொதுவாக பேசி இவர்கள் பணத்துக்காக இப்படி போராட்டம் செய்து மிரட்டுகிறார்கள். உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார். ஏதோ தான் யோக்கியனைப்போலவும், இவர்கள் மீது வீண் பழியை போடுவதை போலவும் பதறும் நிர்வாகத்தின் யோக்கியதை என்ன?
கல்லூரி முதலாளி கேசவன் துவக்கத்தில் சாராய வியாபாரியாக இருந்தவர். கல்வி தனியார் மயம் ஆரம்பமான பிறகு சாராய வியாபாரத்தை விட்டுவிட்டு கல்வி வியாபாரத்தில் இறங்குகிறார். இந்த மருத்துவக்கல்லூரி தவிர மயிலம் என்கிற பெயரில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்தி வருகிறார். ஜானகிராமன் புதுவை முதல்வராக இருந்தபோது இந்த கல்வி வியாபாரி அரசு கொறடாவாக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான் நிறைய பணத்தை சுருட்டினார். கல்லூரி தவிர ரவுடிகளை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற பண்ணையார் வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் அனைத்து கட்சியையும் தனது பண பலத்தால் வளைத்து போடுவது, தனது பணபலம், அரசியல் பலம், போலிஸ் பலம், ரவுடிகளின் பலத்தால் தனது ஆளுமையை பெருக்கிக் கொள்வது. கோடி கோடியாய் சுருட்டுவது என்பதுதான் கேசவனின் அடித்தளம். கேசவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போய்விட்டதால் இன்றைக்கு கேசவனின் மச்சான் சுகுமார்தான் கல்லூரியின் சேர்மன்.
கல்லூரி கட்டப்பட்டதிலிருந்தே கல்லூரியில் சுகுமாரின் ஆதிக்கம் இருந்து வருகிறது. கல்லூரியில் நடக்கும் கொலைகளுக்கு சுகுமாரின் பங்களிப்பு அதிகம். மேலும் மதகடிப்பட்டு பகுதியிலே இயங்கும் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் சங்க தலைவராகவும் இருப்பவர் இந்த அயோக்கியர். இந்த பள்ளியில் மாணவர்கள் ஏதாவது தமது உரிமைகளுக்காக போராடினால் அதை தமது கூலிப் படையை வைத்து மிரட்டுவதும் உண்டு.
இங்கு கல்லூரி ஆரம்பித்த 14 ஆண்டுகளில் வினோதினி உட்பட 9 மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதில் வினோதினி தவிர மற்ற மாணவிகள் விடுதியில் தங்கி படித்தவர்கள் என்பதும் இதில் பலர் வெளி மாநில மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி நிவேதிதாவும், மே 17-ம் தேதி திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவி பிரியதர்ஷினியும் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டதாக நிர்வாகம் அறிவித்து அவர்களது மரணத்தை மூடி மறைத்தது.
வினோதினி மட்டும் கல்லூரியில் இருந்த பக்கத்து நகரப்பகுதியில் இருப்பதால் வீட்டில் இருந்தே செல்பவர். வினோதினிக்கு முன்பு இறந்துபோன பல மாணவிகளின் மரணத்திற்கு பேராசிரியர்களின் பாலியல் கொடுமைகளும் காரணம் என்பது உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை. இதற்கு முன்பு இறந்த மாணவிகளைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பாக, வினோதினிக்கு முன்பு இறந்துபோன பிரியதர்ஷினியின் பெற்றோர்கள்தான் முதன்முதலில் பிரச்சனையை வெளியில் கொண்டு வந்தார்கள். அதுவும் சில வாரங்களிலேயே சரிக்கட்டப்பட்டது.
பொதுவாகவே கல்லூரி நிர்வாகம் இந்த விசயத்தில் பேரம் பேசியோ அல்லது மிரட்டியோ பிரச்சனையை ’கப்சிப்’ ஆக்குவது வழக்கம். வினோதினி மரணத்திற்கு முன்பு இத்தனை கொலைகளுக்கும் காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, பிரச்சனையும் பெரிய அளவில் வெளியில் வரவில்லை. ஆனால் வினோதினி மரணத்தில் பிரச்சனை வெளியில் வந்தது, வழக்கு போட்டு 4 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் பெற்றோர்கள் அடிபணியவில்லை என்பதுதான் உண்மை. மேலும் ஜனநாயக சக்திகள் மற்றும் மாணவர்களின் மறியல் போராட்டங்களும் காரணம்.
இந்த சமூகத்தில் யாருக்கு அநீதி நடந்தாலும் உழைக்கும் வர்க்கம் அணிதிரண்டு போராடினால் மட்டுமே குற்றவாளிகளை தண்டிக்க முடியும். தனியார்மயம், தராளமயம்,உலகமயம் ஆகிய கொள்கையின் விளைவாக நாடு முழுவதும் இப்படி எண்ணற்ற சமூக விரோதிகளையும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளையும் உருவாக்கி இருப்பதுதான் மிச்சம். இதனால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரையில் பயந்து ஒடுங்கி வாழ வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்கள் விரோதிகள் துணிச்சலாக களமிறங்குகிற போது மக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள களம் காண வேண்டியுள்ளது.
மனித சமுதாயத்திற்கு அறிவை வளப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட கல்வி முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு தள்ளப்பட்டு அறிவை வளப்படுத்துவதற்கு பதிலாக அதிக மார்க், நல்ல ரிசல்ட் இதை காட்டி கல்லுரியை விரிவாக்குவது, பணத்தை குவிப்பது, பெற்றோர்களின் ஈரலை அறுப்பது, மாணவர்களின் எதார்த்த பூர்வமான உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தடுத்து சமூகறிவற்ற முண்டங்களாகவும், அடிமைகளாகவும் மாற்றி வருகிறது. இதற்கு தனியார்மய கல்வி முறையே பொறுப்பாக நம்முன் நிற்கிறது. இக்கேடுகெட்ட கல்விமுறைக்கு எதிராக போராடுவதும், அனைவருக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக பெறவும் போராட வேண்டிய கட்டாயம் இந்திய சமுதாயத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளது. இதை நாம் உணராவிட்டால் இன்னும் பல வினோதினிகள் மடிந்து கொண்டுதான் இருப்பார்கள்….
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இவண்:-
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – புதுச்சேரி.
நாட்டின் சட்டத்துறை-நீதித்துறை மாணவர்கள் ஜெயலலிதாவின் கிரிமினல் சட்ட சாகசங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. அவை சட்டப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கு வைக்கத் தகுந்தன. இந்த உண்மையை சட்ட – நீதி வல்லுநர்கள் எப்படிக் கவனிக்கத் தவறினர் என்பது வியப்பாகவே இருக்கிறது!
பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்தடுத்துப் பல வினோதங்கள்! வழக்கை “நடத்தும்” அரசுத் தரப்பின் கண்களில் இவ்வளவு காலமும் விரல்விட்டு ஆட்டிவந்த ஜெயலலிதா தரப்பினர் இப்போது திருட்டு “முழிமுழிக்கின்றனர்.” காரணம், அவர்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்து விட்டதுதான்!
ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்தவர் வி.பாஸ்கரன். இவர் ஒரு தணிக்கையாளர், கருத்துக்கணிப்பு நிபுணர். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக 1996-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட பொருட்களில் 55 இலட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளிப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் இருந்து 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிபந்தனையுடன் இவர் வாங்கிப் போயுள்ளார். “அவற்றை மீட்டுச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகுதான் வழக்கைத் தொடரவேண்டும், அதுவரை வழக்கைத் தள்ளிப் போடவேண்டும்” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கடந்த மாதம் ஒரு மனு போட்டார்.
ஆனால், அந்த நபரோ மூன்று மாதங்களுக்கு முன்பே செத்துப் போய்விட்டவர். வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவுவதற்காகத் தானே முன்வந்து சேர்ந்துகொண்ட தி.மு.க. வழக்கறிஞர் இந்த உண்மையைப் போட்டுடைத்த பிறகு, சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்குச் சம்மன் அனுப்பியது. அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று ஜெயலலிதாவின் கைக்கூலியான அரசு வழக்கறிஞருக்குத் தெரியவில்லையாம்! 10 நாட்கள் விசாரணைக்குப் பிறகும் மாநிலப் போலீசுக்கும் உளவுத்துறைக்கும் தெரியவில்லையாம்! குற்றவாளிக்கும் அவரது வழக்கறிஞர்களுக்கும்கூடத் தெரியவில்லையாம்! அந்த வி. பாஸ்கரன் வேலூர் மருத்துவமனையில் புற்று நோயால் இறந்துபோனதற்கான இறப்புச் சான்றிதழை தி.மு.க. வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகு மாநிலப் போலீசும் உளவுத்துறையும் அதை நம்புவதாகச் சொன்னபோதும் ஜெயலலிதாவின் கைக்கூலியான அரசு வழக்கறிஞர், தான் இன்னமும் நம்பவில்லை என்று சாதிக்கிறார்.
வி.பாஸ்கரன் மரணமடைந்த செய்தி அப்போதே பிரபல ஆங்கில நாளிதழ் “தி இந்து’’வில் கொட்டை எழுத்துகளில் வந்திருக்கிறது. ஏதாவது ஒரு குக்கிராமத்தில் தனது கழக இரத்தத்தின் இரத்தம் ஒருவர் செத்துப்போனால் “நமது எம்ஜியாரில்” இரங்கலைப் பெட்டிச்செய்தியாகப் போடும் ஜெயாவின் பாசிசப் பரிவாரங்களுக்கு அவரது ஆலோசகராக இருந்தவர், “அவரது” 55 இலட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளிப் பொருட்களை வாங்கிக்கொண்டு போனவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியவில்லையாம்! நம்பமுடிகிறதா? இதைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கேட்டபோது தலைகுனிந்து மவுனமாக இருந்தது, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பட்டாளம்.
தங்க-வைர நகைகளை அணிந்து கொண்டு அலங்காரப் பதுமைகளாக “போஸ்” கொடுக்கும் ஜெயா-சசிகலா. அடித்த கொள்ளைக்கு ஆதாரபூர்வமான சான்று! (கோப்புப் படம்)
கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவன் முட்டாள்தான். ஆனால் சொல்பவன் ஏய்ப்பவன் இல்லையா! 55 இலட்சம் ரூபாய் மதிப்புடைய அந்த வெள்ளிப் பொருட்களோ ஜெயலலிதாவின் வீட்டில்தான் இருக்கின்றன என்று செத்துப்போனவரின் வாரிசான மகன் கூறுகிறார்! என்னவொரு கிரிமினல் புத்தி! ஒப்படைக்கக் கோரும் பொருட்களும் தம்மிடமேயுள்ளது; ஒப்படைக்க வேண்டியவரும் உயிரோடில்லை. அவற்றை பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கிப்போய், மூன்று மாதங்களுக்கு முன் செத்துப் போனவர், அவற்றை ஒப்படைத்த பிறகுதான் வழக்கைத் தொடரவேண்டும், அதுவரை வழக்கைத் தள்ளிப் போட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் மூலமாகவே ஒரு மனுப் போட வைக்கிறார்கள். இதன் நோக்கம் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது தான்!
வருமானத்திற்கு மேல் 66 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக் குவித்தது மற்றும் 48 கோடி ரூபாய்க்கு மேல் இலண்டனில் நட்சத்திர ஓட்டல் வாங்கியது ஆகிய வழக்குகளில் 1997-இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 17 ஆண்டுகளாகி விட்டன. “குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது; ஆனால், இன்னமும் அது நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவில்லையே!” என்ற வழக்கமான வாதத்தை வைத்துத்தான் ஜெயலலிதா போன்ற பெருச்சாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள் மேற்கண்டவாறான கிரிமினல் சட்ட மோசடிகள் மூலம் ஜெயலலிதாவும் அவரது கூட்டாளிகளும் இத்தனை காலமும் தப்பித்து வருகின்றனர். ஆனால், குற்றப்பத்திரிக்கை எதுவும் இல்லாமலேயே, விசாரணை எதுவும் நடத்தப்படாமலேயே பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பல ஆண்டுகளாக இந்தியச் சிறைகளில் சும்மா இல்லை, போலீசு, சிறைத்துறை, நீதித்துறை அதிகாரிகளுக்குக் கொத்தடிமை ஊழியம் செய்வற்கென்றே அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள்.
ஜெயலலிதா போன்ற பெருச்சாளிகளோ, இலஞ்ச -ஊழல், அதிகாரமுறைகேடுகள் போன்ற கிரிமினல் குற்றங்கள் புரிந்துவிட்டு, கிரிமினல் சட்ட மோசடிகள் செய்து தொடந்து சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், மேலும் சொகுசாகவும் வாழ்கிறார்கள். இந்த நிலையிலேயே தேர்தல்களில் நின்று, மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்து, அதிகாரமும் வசதியும் பெற்று வாழ்வதோடு, தாங்கள் எதிர்கொள்ளும் வழக்குகளிலிருந்து விடுபடுவதற்காக அந்த அதிகாரத்தையும் கேடாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த வகையில்தான் ஜெயலலிதா கும்பல் மீது 1997-ம் ஆண்டு மூன்று சிறப்பு நீதி மன்றங்களில் தொடுக்கப்பட்ட 48 இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகள் வழக்குகளில் சொத்துக் குவிப்பு மற்றும் இலண்டன் ஓட்டல் வழக்கு தவிர, 47- வழக்குகளில் இருந்து விடுபட்டுக் கொண்டது.
1998-நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கேற்ற ஜெயலலிதா கும்பல், அப்போதைய தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபடவும் நிர்பந்தித்தது. வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசுடனான பேரங்கள் படியாததால், சுப்பிரமணிய சாமியின் தூண்டுதலால் காங்கிரசை நம்பி ஜெயலலிதா கும்பல் ஆட்சியைக் கவிழ்த்தது. அதன் இந்த சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியல் காரணமாக 1999 நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்றது.
2001-ல் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து, இரண்டாம் முறையாக அதிகாரத்தைப் பிடித்த ஜெயலலிதா கும்பல் தானே நியமித்த அரசுத் தரப்பு வழக்கறிஞரையும் ஊழல் தடுப்புப் போலீசையும் பயன்படுத்தி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கெனவே சாட்சியமளித்துவிட்ட 74 நபர்களை மீண்டும் வழக்கு மன்றத்துக்கு அழைத்து, 63 பேரை பிறழ் சாட்சியமாக மாற்றிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்துதான், அதிகாரத்தில் இருந்து கொண்டு இவ்வாறான கிரிமினல் சட்ட மோசடிகளில் ஜெயலலிதா ஈடுபடுவார் என்பற்காகத்தான், உச்ச நீதிமன்றம் 2001 மே மாதம் சொத்துக் குவிப்பு வழக்கை சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு மாற்றியது. அப்போது 6 மாதங்களில் அதை முடிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்திரவு போட்டது. ஆனாலும், மேலும் 13 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது, ஜெயலலிதா கும்பல். இந்த வழக்கில் மட்டும் சுமார் 500 தள்ளிவைப்புகள் வாங்கி சாதனை படைத்து, “வாய்தா ராணி” என்று பட்டமும் பெற்றுள்ளார், ஜெயலலிதா.
சில மாதங்களுக்கு ஒருமுறை இந்த வழக்கிலிருந்து தம்மை/தன்னை விடுக்கும்படித் தனித்தனியாகவும் கூட்டாகவும் மனுப்போட்டு விசாரணை-வாதங்கள் நடத்துவது; நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்து விட்டதாகத் தனித்தனியாகவும் கூட்டாகவும் மனுப்போட்டு விசாரணை-வாதங்கள் நடத்துவது; வழக்குப் போடுவதற்கு முன் உரியவர்களிடமிருந்து முன்அனுமதி பெறவில்லை என்று தனித்தனியாகவும் கூட்டாகவும் மனுப்போட்டு விசாரணை-வாதங்கள் நடத்துவது; ஆவணங்கள் கேட்டும், அவற்றை மொழிபெயர்த்துத் தரும்படியும், மொழிபெயர்ப்பு சரியில்லையென்றும் மனுப் போட்டு விசாரணை- வாதங்கள் நடத்துவது; பல சட்ட நுட்பக் கேள்விகள் எழுப்பி வழக்கைத் தடுத்து வைப்பது, தமது வழக்கறிஞர்களை மாற்றுவது – புதியவர்கள் ஆவணங்களைப் படிக்க அவகாசம் கேட்டுத் தள்ளிவைக்கக் கோருவது; இவை ஒவ்வொன்றுக்கும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்து விசாரணை-வாதங்கள் நடத்துவது என்று வழக்கை இழுத்தடித்தது, ஜெயலலிதா கும்பல்.
ஜெயா-சசி கும்பலின் ஆலோசகரான இறந்து போன பாஸ்கரன்
2011 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடித்ததும் பல கிரிமினல் வேலைகளில் இறங்கியது. தமிழக இலஞ்ச ஒழிப்புப் போலீசை வைத்து வழக்கை மீண்டும் விசாரிக்கும் முடிவைப் புகுத்தியது. உச்ச நீதிமன்றம் வரை போய் தி.மு.க. அம்முயற்சியை முறியடித்தது. பின்னர், ஏற்கெனவே சாட்சியளித்தவர்களை மீண்டும் விசாணைக்கு அழைத்து, பிறழ் சாட்சியங்களாக்கும் சதி நோக்கில் மனுப் போட்டது. அதையும் உச்ச நீதிமன்றம் வரைபோய் தி.மு.க. முறியடித்தது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் தமக்குச் சாதகமாக மாறமாட்டர்கள் என்பது உறுதியானவுடன் நேரடியாகவே அவர்களைத் துரத்தியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மல்லிகார்ஜுனையாவின் நியமனத்தில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று மனுப்போட்டு வாதாடியது. அது பொய்யென நிரூபிக்கப்படும் நிலையில் மனுவை விலக்கிக் கொண்டது. பி.வி. ஆச்சர்யாவைப் பதவி விலகும்படி மிரட்டியது, ஜெயா கும்பல். இது தொடரவே வேறு வழியின்றி, தான் நிர்பந்திக்கப்படுவதாகப் பகிரங்கமாகவே அறிவித்து, அவர் பதவி விலகினார்.
இப்படிப் பல ஆண்டுகளாகச் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்த ஜெயலலிதா கும்பல், கடந்த ஆண்டு பி.வி.ஆச்சார்யா பதவி விலகியும் மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றும் போனவுடன், தனக்குச் சாதகமான பி.எஸ்.பாலகிருஷ்ணாவை சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பவானிசிங்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் கர்நாடகா பா.ஜ.க ஆட்சியைப் பயன்படுத்தி நியமிக்கச் செய்தது. இந்தத் தில்லுமுல்லுகள் உச்ச நீதிமன்றத்தில் பின்னர் நடந்த வழக்கின் போக்கில் அம்பலமாகிப்போயின.
பி.எஸ். பாலகிருஷ்ணாவும் பவானிசிங்கும் சேர்ந்து கொண்டு ஜெயலலிதா கும்பலுக்குச் சாதகமாகத் வழக்கைத் திருப்பிவிட்டு, அவசர அவசரமாக நடத்தி முடிக்க எத்தனித்தனர். பவானி சிங், அரசுத் தரப்புச் சாட்சியங்களாக இருந்த 166 பேரை 99-ஆகக் குறைத்துக் கொண்டார். அரசுத் தரப்புச் சாட்சியமாக இருந்த தமிழக இலஞ்ச ஒழிப்பு போலீசு அதிகாரியை குற்றவாளிகளின் சாட்சியமாக அழைத்து விசாரித்தார். அவரைப் பிறழ் சாட்சியமாக அறிவித்துக் குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா கும்பலின் மனுக்கள்-கோரிக்கைகள் எதையும் மறுத்துரைக்கவில்லை. இதை நீதிபதி பாலகிருஷ்ணாவும் எதிர்க்கவில்லை. (தில்லைக்கோவில் வழக்கிலும் இப்படித்தான் அரசு வக்கீலையும் நீதிபதிகளையும் தம் கைக்குள் போட்டுகொண்டு, தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புப் பெற்றனர், சு.சாமியும் ஜெ.மாமியும்.)
ஜெயா-சசி கும்பலால் மிரட்டப்பட்டதால் அரசு வழக்குரைஞர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட பி.வி.ஆச்சார்யா (கோப்புப் படம்)
வழக்கில் ஏற்படுத்தப்பட்ட சட்டவிரோதப் போக்கைப் புரிந்துகொண்ட தி.மு.க. அரசுத் தரப்புக்குத் துணையாக தலையீடு செய்யும் உரிமையைப் பெற்றது; பின்னர், குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பவானிசிங் செயல்படுவதை அம்பலப்படுத்தியது. அவரை வழக்கிலிருந்து கர்நாடகா அரசு விலக்கிக் கொண்டதும், இதை சட்டவிதிப்படி உயர்நீதிமன்ற அனுதியுடன் செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி பவானிசிங்கே அரசுத் தரப்பு வக்கீலாக நீடிக்கவேண்டும்; வழக்கை விரைந்து முடிப்பதற்காக ஓய்வுபெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்துக்குப்போய் ஜெயலலிதா கும்பல் வாதிட்டது. (எதிர்த் தரப்பு வக்கீலாக யார் வாதாடவேண்டும், யார் நீதிபதியாக அமர வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குப்போட்டு உரிமையும் பெற்ற அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டினார், ஜெயலலிதா.)
பவானிசிங் நியமனமே முறைகேடாக நடந்துள்ளது. சட்டவிதிப்படி அரசுத் தரப்பு வக்கீல் நியமனத்துக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் பவானிசிங் பெயரே கிடையாது. ஆனாலும், தற்காலிகத் தலைமை நீதிபதி அவரை அரசுத் தரப்பு வக்கீலாக நியமித்துவிட்டார். இந்த முறைகேடு தன் முன்வைக்கப்பட்டபோதும் உச்சநீதிமன்றம் அதைக் கண்டுகொள்ளாமல், பவானிசிங்கையே மீண்டும் அரசுத் தரப்பு வக்கீலாக நீட்டிக்கும்படி உத்திரவு போட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு சட்டவிதிமுறைக்கு மாறாகப் பதவி நீட்டிப்பு வழங்கும்படியும் கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்திரவு போட்டது.
நீதிபதிகள் பாப்டே, சௌகான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? தில்லைக்கோவில் வழக்கு, சேதுசமுத்திரம் வழக்கு, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்று சுப்பிரமணிய சாமி-ஜெயலலிதா மாமி கும்பல் தொடர்புடைய உச்ச நீதிமன்ற வழக்குகளில் எல்லாம் இந்த அமர்வுதான் விசாரித்து “நல்லதீர்ப்பு” வழங்கவேண்டும் என்று திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதனால்தான் அங்கே அந்தக் கும்பல் உரிமையுடனும் துணிவுடனும் வாதிடுகிறது.
நீதிபதி பாலகிருஷ்ணாவோ தானே பதவி நீட்டிப்பை ஏற்காது போய்விட்டார். மீண்டும் அரசுத் தரப்பு வக்கீலாகப் பொறுப்பேற்ற பவானிசிங்கோ வழக்கம் போல ஜெயலலிதா கும்பலுக்கு ஊழியம் செய்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணாவையே சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் நியமிக்கவேண்டும் என்ற ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்னமும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குன்ஹா என்ற நீதிபதி சொத்துக் குவிப்பு வழக்கை மறுபுறம் விசாரித்து வருகிறார்! இவர் முன்புதான், ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரன் வாங்கிப்போன பொருட்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகுதான் வழக்கைத் தொடர வேண்டும், அதுவரை வழக்கைத் தள்ளிப் போடவேண்டும் என்ற பவானிசிங்கின் வினோதமான மனு-கோரிக்கை-வாதம் நடக்கிறது.
ஜெயா-சசி கும்பலுக்கு தொண்டூழியம் செய்து வரும் தற்போதைய அரசு வழக்குரைஞர் பவானிசிங்.
இப்போது ஊழலுக்கு எதிராகப் பெருங்கூச்சல் போடும் அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் மற்றும் ஊடகங்கள் உட்பட எவரும் ஜெயலலிதா இலஞ்ச – ஊழல்கள் செய்து கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள இத்தனை ஆண்டுகளாக, இத்தனை தகிடுதத்தங்கள் செய்வதைக் கண்டுகொள்வதில்லை. கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஊழல்வாதிகள் பட்டியலில் ஜெயலலிதாவின் பெயரில்லை. யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாத ஜெயலலிதாவுக்குள்ள அவரது சமுதாயச் செல்வாக்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்வின்மையும்தான் இவை எல்லா வற்றுக்கும் காரணம்! இல்லையென்றால் அம்பலப்பட்டு போன இவ்வளவு பெரிய இலஞ்ச- ஊழல் பெருச்சாளியை மீண்டும், மீண்டும் அதிகாரத்தில் வைப்பார்களா!
**
ஊறுகாய் பானைக்குள் ஊறும் வழக்குகள்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நடத்தும் வழக்கு அல்லாமல், இதே 17 ஆண்டுகளாக மேலும் மூன்று வழக்குகள் ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்து வருகின்றன. அவை, தனக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் முதலமைச்சர் ஒப்படைக்க வேண்டும் என்ற விதியை மீறி அவற்றை அமுக்கிக் கொண்ட “பரிசுப்பொருள் வழக்கு’’; வெளிநாட்டிலிருந்து அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மூன்று கோடி ரூபாய்களை ஜெயாவும் சசியும் தம் கணக்கில் போட்டுக்கொண்ட “அந்நியச் செலாவணி மோசடி வழக்கு’’; 1991,92, 93 ஆகிய ஆண்டுகளில் ஜெயாவும் சசியும் தமது வருமானக் கணக்கு அறிக்கையை ஒப்படைக்காத “வருமான வரிமோசடி” வழக்கு. “அந்த ஆண்டுகளில் தமக்கு வருமானமேயில்லை. அதனால்தான் வருமானக் கணக்கு அறிக்கை ஒப்படைக்கவில்லை” என்கிறார்கள், ஜெயாவும் சசியும். வருமானமேயில்லை என்றால் எப்படி இவ்வளவு சொத்துக்களைக் குவித்தார்கள்?