Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 698

சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா

13

ந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான சகாரா குழும முதலாளி சுப்ரதா ராய் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். செவ்வாய்க் கிழமை (மார்ச் 4, 2014) கைது செய்யப்பட்டவர் அடுத்த விசாரணை தேதியான மார்ச் 11 வரை திகார் சிறையில் வைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் அழைத்துச் செல்லப்படும் சுப்ரதா ராய்
உச்சநீதிமன்றத்தில் அழைத்துச் செல்லப்படும் சுப்ரதா ராய்

“திகார் சிறையில் சுப்ரதா ராய் மற்ற கைதிகளைப் போலவே தரையில் படுத்து தூங்குவார், சிறை உணவையே சாப்பிடுவார்” என்று அலறியது ஒரு தலைப்புச் செய்தி. ‘கிரிமினல்’களும், ‘மோசடி பேர்வழி’களும் வைக்கப்பட்டிருக்கும் திகார் சிறையில் சுப்ரதா ராய் போன்ற தொழிலதிபரை, ‘தேச பக்த’ரை, ‘பாசமிக்க குடும்ப’த் தலைவரை, தாயை ‘நேசி’க்கும் மகனை அடைத்து வைக்க நேர்ந்ததற்கு என்ன காரணம் என்று பலரும் சாமியாடுகின்றனர். இந்த கேள்விகளின் நியாயத்தை உணர்ந்துள்ள உச்சநீதிமன்றம் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது.

முதலாவதாக, “சந்தையின் நம்பகத்தன்மையை பாதுகாப்பது பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய நலனுக்கும் இன்றியமையாதது. சந்தையை முறைகேடாக பயன்படுத்தும் நிதித் துறை குற்றங்கள் நாட்டின் பொருளாதார அமைப்பையே கேள்விக்குள்ளாகி, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே சொத்து ஏற்றத் தாழ்வை உருவாக்கி விடுகின்றன.” என்கிறது நீதிமன்றம்.

சமூக ஏற்றத் தாழ்வில் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பல நூறு கோடி சொத்துக்களை கொண்ட தில்லை கோயிலை சில நூறு தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்த உச்சநீதிமன்றம் முதலாளிகளின் பொருளாதார அமைப்பை பாதுகாப்பதற்காக ஏழைகளின் நலனை எண்ணி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறது.

சுப்ரதா ராய்
சொல்பேச்சு கேட்காமல் அடம் பிடித்ததற்காகத்தான் சுப்ரதா ராய்க்கு ஒரு செல்லக் குட்டு

அப்படியே அவர்கள் சொல்லும் புனிதமான சந்தையின் செயல்பாட்டு அடிப்படையில் பார்த்தாலும் சந்தை முறைகேடுகளுக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்களின் வரிசையில் ரிலையன்ஸ் அம்பானியிலிருந்து, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் வரை பெரிய தரகு முதலாளிகளின் பட்டியலே உள்ளது. ஆனால், உத்தர பிரதேசத்தின் உள்ளூர் கந்து வட்டிக்காரனான சுப்ரதா ராய் மட்டும் தண்டிக்கப்படுவதற்கு காரணம், முதலாளிகள் நாட்டையும் மக்களின் சேமிப்பையும் கொள்ளை அடிப்பதற்காக தமக்குள் வகுத்துக் கொண்டிருக்கும் பங்குச் சந்தை விதிகளை அவர் மதிக்காமல் நடந்து கொண்டதுதான். அதாவது திருடர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தத்தை ஒரு திருடன் மீறினால் திருட்டு சமூகம் அவனை கண்டிக்கும் அல்லவா?

இருந்தாலும் உடனடி காரணமாக தன் சொல்பேச்சு கேட்காமல் அடம் பிடித்ததற்காகத்தான் சுப்ரதா ராய்க்கு ஒரு செல்லக் குட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

“இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் இருப்பது, நமது நீதி அமைப்பிலும், சட்டரீதியிலான ஆட்சியின் மாண்பையும் அசைத்துப் பார்க்கிறது. அவற்றை பாதுகாப்பதற்கான பொறுப்பில் இந்த நீதிமன்றத்தின் கௌரவம் அடங்கியிருக்கிறது. இதன் மூலம்தான் இந்நாட்டு மக்களுக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பராமரிக்க முடியும்”. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்த அனில் அம்பானி, சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி முன் தோன்றி, கேட்ட கேள்விக்கெல்லாம் “மறந்து விட்டது”  என்று சமத்தாக பதில் சொன்னது போல சுப்ரதாவும் ஒருவேளை 26-ம் தேதியே ஆஜராகியிருந்தால் ஆளும் வர்க்க சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டிருக்கும். அவர்களின் நலன்களுக்கு காவலாக இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கோபம் வந்திருக்காது.

ஆனால், சுப்ரதா ராயின் ‘நேர்மை’ அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மோசடி செய்வதிலும் சரி, அதிலிருந்து தப்பிப்பதிலும் சரி நேர்மை, தேசபக்தி, குடும்ப பாசம் என்று இந்து ஞான மரபின் விழுமியங்களை தவறாமல் கடைபிடிப்பவர் அவர். “நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்ப்பதற்கு வழக்கமாக (முதலாளிகள்) செய்வது போல உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்ளும்படி பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், அது போன்ற டிராமாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று தனது நேர்மையை பறை சாற்றியிருந்தார்.

மாறாக, ஒரே நேரத்தில் லட்சம் பேரை ஜனகணமன பாட வைத்த கின்னஸ் சாதனையை பாரதமாதாவின் திருவடியில் சமர்ப்பிப்பது, அதை நாட்டுக்கு அறியத் தருவதற்காக அனைத்து தினசரிகளிலும் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடுவது என்று விரிவான திரைக்கதையுடன் கூடிய நாடகங்களை அரங்கேற்றுபவர் அவர்.

சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன், சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் 3 கோடி மக்களிடம் திரட்டியதாக சொல்லப்பட்ட ரூ 19,000 கோடி நிதியை 15% வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி 2010 நவம்பரில் செபி (இந்திய பங்குச் சந்தை வாரியம்) உத்தரவிட்டது. முதலாளிகளின் நலன்களை பாதுகாக்க செபி வகுத்திருந்த சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் சகாராவின் நிதி திரட்டல் நடத்தப்பட்டதுதான் செபியின் கோபத்தை தூண்டியிருந்தது.

சுப்ரதா ராய்
ஒரே நேரத்தில் லட்சம் பேரை ஜனகணமன பாட வைத்த கின்னஸ் சாதனையை பாரதமாதாவின் திருவடியில் சமர்ப்பித்த சுப்ரதா ராய்

இதை எதிர்த்து சகாரா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்த போது சகாரா ரூ. 22,500 கோடியை செபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்தப் பணத்தை செபி முதலீட்டாளர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னது உச்ச நீதிமன்றம். இதில் முதல் தவணையாக ரூ. 5,210 கோடியை செபியிடம் சகாரா செலுத்தியது. இரண்டு மாதங்கள் கழித்து, முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர்களுக்கு தானே நேரடியாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் இன்னும் ரூ. 2,620 கோடி மட்டுமே பாக்கியிருக்கிறது என்றும் கூறும் சகாராவின் முழுப் பக்க விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன.

செபி அமைப்பு, தான் கொடுத்த பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பிக் கொடுக்க முயற்சிக்கவேயில்லை என்று சகாரா குற்றம் சாட்டியது. தேசத்துக்கு சேவை செய்து வரும் சகாரா குழுமத்தின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் செபி அதிகாரிகள் வேண்டுமென்றே செயல்படுவதாக வழக்கம் போல பாரதமாதா படத்துடன் கூடிய முழுப்பக்க விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன. ஆர்.எஸ்.எஸ்க்கு அடுத்தபடியாக பாரதமாதாவை அதிகம் பயன்படுத்தியது சகாரா குழுமம் மட்டும்தான்.

பணம் கேட்டு வெறும் 3,500 கோரிக்கைகள் மட்டுமே வந்தததாகவும் அவற்றில் 560 மட்டுமே உண்மையானவை என்றும் செபி கூறி விட்டது. அதாவது பணம் போட்டதாக கூறப்படும் பல கோடி பேருக்கு தமது பணத்தை திரும்பப் பெறும் ‘அக்கறை’யே இல்லை.

சரி, சகாரா தானே திருப்பிக் கொடுத்த ரூ 19,000 கோடிக்கான ரசீது ஆதாரங்களை காட்டச் சொல்லி கேட்டால் 127 லாரிகளில், 32,000 அலுமினிய பெட்டிகளில் ஆவணங்களை நிரப்பிக் கொண்டு வந்து செபி அலுவலகத்தில் இறக்கியது. மும்பையில் செபி அலுவலகம் அமைந்திருந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடியே ஏற்பட்டு விட்டதாம். அந்த ஆவணங்களிலிருந்து இயைபிலா அடிப்படையில் (ரேண்டமாக) 20,000 முதலீட்டாளர்களுக்கு தகவல் அனுப்பியதில் 68 பேர்தான் பதில் போட்டிருக்கின்றனர். முதலீட்டாளர்கள் பட்டியலில் ஒரே பெயர்கள் பல முறை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன, உதாரணமாக கலாவதி என்ற பெயர் மட்டும் 6,000 முறை வருகிறது.

“எங்களிடம் பணம் போட்டவர்கள் எல்லாம் வீடு, வாசல் இல்லாத மக்கள். அவர்களுக்கு செபி போட்ட கடிதமே போய் சேர்ந்திருக்காது. ஒரு ரிக்சா தொழிலாளி பணத்தை திரும்ப பெற்ற பிறகு ரூ 2-க்கு தபால்தலை வாங்கி செபிக்கு எழுதப் போவதில்லை.” என்று அடித்து விட்டிருக்கிறார் சுப்ரதா ராய். அதாவது, சுமார் 3 கோடி வீடற்ற ஏழை மக்களிடமிருந்து ரூ 19,000 கோடி திரட்டினாராம். அதைத் திருப்பியும் கொடுத்து விட்டாராம்.

பங்குச் சந்தையிலும் வங்கிக் கடன்களிலும் வரி தள்ளுபடிகளிலும் ‘சட்டப்படி’ மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் முதலாளிகளுக்கு மத்தியில், பணம் வசூலிக்காமலேயே நிதி மோசடி செய்திருக்கிறார் சுப்ரதா ராய்.

சகாரா போர்ஸ் இந்தியா
சகாரா போர்ஸ் இந்தியா – சுப்ரதா ராய், விஜய் மல்லையாவுடன்

மேலும், தனது நிறுவனத்தின் 37 ஆண்டு கால வரலாற்றில் 137 லட்சம் கோடி பணத்தை திருப்பிக் கொடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் கணக்கு சொல்லியிருக்கிறார். ‘இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை பங்குச் சந்தைக்கு இழுத்து வந்து நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி’ என்று குரு படத்தில் மணிரத்தினம் காட்டியது போல , 37 ஆண்டுகளில் 8 கோடி ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்ததாக வீரவசனம் பேசினார் சுப்ரதா ராய். உண்மையில் ஏழைகளின் பெயரில் போலியாக ஆவணம் தயாரித்து பண முதலைகளின் கருப்புப் பணத்தை புழங்க விடும் திருப்பணியைத்தான் சுப்ரதா ராய் செய்து வந்திருக்கிறார்.

மேலும் சகாரா நிறுவனம், செபியிடம் ஒப்படைத்த சொத்து ஆவணங்களில் பலவற்றின் மதிப்பு மிகையாக மதிப்பிடப்பட்டிருந்தது. மும்பையில் இருக்கும் அம்பி பள்ளத்தாக்கின் மதிப்பாக குறிப்பிட்டிருந்த ரூ 10,000 கோடி, சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகம். மும்பை வெர்சோவாவில் ரூ 118 கோடிக்கு வாங்கிய நிலத்தின் மதிப்பை ரூ 20,000 கோடி என்று குறிப்பிட்டிருக்கிறது சகாரா. இன்னும் 67 பிளாட்டுகளின் மதிப்பு, 2012-13ல் வாங்கிய விலையை விட 16 மடங்கு அதிகமாக காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வளவு பெரிய மோசடி பேர்வழியை உடனடியாக தேடிப்பிடித்து என்கவுன்டர் செய்து விட வேண்டும் என்று தேசபக்த ஊடகங்கள் கொதிக்கவில்லை. இந்த மோசடிகளுக்கான ஆதாரங்கள் தன் முன்னே வைக்கப்பட்டும் தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக அவருக்கு தூக்குத் தண்டனையும் விதித்து விடவில்லை உச்சநீதிமன்றம்.

ஏனென்றால் தேசபக்தியிலும், தேசத் தொண்டிலும் அசைக்க முடியாத ரிக்கார்ட் வைத்திருக்கிறார் சுப்ரதா ராய். சென்ற ஆண்டு டிசம்பர் வரை இந்திய கிரிக்கெட் அணியின் புரவலர் அந்தஸ்தை குத்தகை எடுத்திருந்ததன் மூலம் தேசத்தின் கூட்டு மனசாட்சியையும்  குத்தகைக்கு எடுத்திருந்தார். சகாரா ஃபோர்ஸ் இந்தியா கார் பந்தய அணியை பெங்களூரு பிளேபாய் விஜய் மல்லையாவுடன் இணைந்து பராமரிப்பவராகவும் திகழ்கிறார் சுப்ரதா ராய். ஆர்.எஸ்.எஸ்சின் தேசபக்திக்கு ஆதாரமாக முன்வைக்கப்படும் சேவைகளைப் போல பாரதத் தாயின் உண்மையான புதல்வனாக, கார்கில் தியாகி குடும்பங்களுக்கு உதவி, மும்பை பயங்கரவாத தாக்குதல் தியாகிகளுக்கு ஆறுதல், வெள்ளம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று தான் செய்த சேவைகளின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.

சகாரா கிரிக்கெட்
சகாராவின் ‘தேச’ப்பற்று இந்திய கிரிக்கெட் அணியின் சட்டையில்

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சுப்ரதா ராயும் பிற சகாரா இயக்குனர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மட்டும் ஒரு ‘கடுமையான’ உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

சுப்ரதா ராய் இந்த துக்கடா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கூட கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லாதவர். சகாராஸ்ரீ என்று அழைக்கப்படும் அவர் லக்னோவின் குறுநில மன்னராக வாழ்பவர்; உத்தர பிரதேசத்தின் சமஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அரசை தன் பைக்குள் வைத்திருப்பவர்.

மார்ச் 2012-ல் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மூத்த அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் தொழில்துறை முதலாளிகள் லக்னோவில் உள்ள சுப்ரதா ராயின் சகாரா ஷகர் பண்ணையில் கொண்டாட்டத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு முழுவதும் வெளிநாட்டு மது வகைகள் வெள்ளமாக ஓடின. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமது தொழில்முறை அரட்டைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். பல கட்சித் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சகாரா ஷகரின் பசும்புல் வெளிகளில் மட்டையாகியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் சகாரா ஷகருக்கு சொந்தமான வெள்ளை நிற மெர்சிடஸ் கார்களில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ‘நம்ம வீட்டில் தண்ணி குடித்த லக்னோ அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நம்மை கைது செய்து விடுவார்களா என்ன’ என்று அவர் தெனாவெட்டாக யோசித்திருக்கலாம்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே கண்டு நடுங்கும் நாட்டின் விலை உயர்ந்த ராம் ஜெத்மலானி, ஆர்யமா சுந்தரம் போன்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை தன் சார்பில் வாதாட அமர்த்தியிருக்கிறார்.

சகாரா திருமணம்
ரூ 500 கோடியில் நடத்தப்பட்ட சகாரா திருமணத்தின் போது ஜொலிக்கும் சகாரா ஷகர்.

2004-ம் ஆண்டு லக்னோவில் ரூ 500 கோடி செலவில், அமிதாப் பச்சன், ஷாரூக் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும், சச்சின் டெண்டூல்கர் முதலான கிரிக்கெட் தேசபக்தர்களும், வாஜ்பாய் தலைமையிலான அரசியல் தலைவர்களும் உட்பட 10,000 பேர் கலந்து கொண்ட அவரது இரண்டு மகன்களின் திருமண விழாவின் போது ராம்ஜெத்மலானியும், பா.ஜ.கவின் ரவிசங்கர் பிரசாத்தும்தான் அது தொடர்பான சட்ட சிக்கல்களை சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த திருமணத்தில் மெழுகுவர்த்தி வாங்கக் கூட ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம். விருந்தினர்கள் தனி விமானத்தில் லக்னோவுக்கு அழைதுத்து வரப்பட்டார்கள்.

ராம்ஜெத்மலானி உருவத்தில் சட்டமும், அகிலேஷ் யாதவ் வடிவத்தில் அரசு நிர்வாகமும், கிரிக்கெட்-கார் பந்தயம்-தேசிய கீதம் வடிவத்தில் தேசத்தின் கூட்டு மனசாட்சியும் தன் பக்கம் இருக்கையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு டிமிக்கி கொடுத்து விட முடிவு செய்தார். ராம்ஜெத்மலானியின் ஆலோசனைப்படி 92 வயதான தனது அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று நீதிமன்றத்துக்கு லீவ் லெட்டர் அனுப்பினார். அம்மாவின் உடல்நிலை குறித்தும் மகன் அம்மாவின் அருகில் உட்கார்ந்திருப்பதற்கான தேவை குறித்தும் சான்றிதழ் கொடுப்பதற்கு சகாராவுக்கு சொந்தமான லக்னோவின் மேட்டுக்குடி மருத்துவமனையின் இருதய பிரிவு தலைமை மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் மன்சூர் ஹசனும் இருக்கிறார்.

சகாரா மருத்துவமனை
சகாரா மருத்துவமனை

ஆனால், நீதிமன்ற ஊழியர்களிடமிருந்து பாட்டிக்கு உடம்பு  சரியில்லை என்று மருத்துவ சான்றிதழ்களுடன் பல லீவு லெட்டர்களை பார்த்திருக்கக் கூடிய நீதிபதிகள் தமக்கு இழைக்கப்பட்ட ‘அவமான’த்தை தாங்க முடியாமல், சுப்ரதா ராய் மீது பிணை வாங்க முடியாத கைது ஆணை பிறப்பித்து விட்டார்கள். “அம்மாவின் அருகில் உட்கார்ந்திருக்கும் அந்த மகன் நகர முடியாமல் அவரது கையை தாய் பிடித்திருக்கிறார்” என்ற ராம்ஜெத்மலானியின் சென்டிமென்டும் எடுபடவில்லை.

சுப்ரதா ராயை கைது செய்ய சொல்லும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உ.பி போலீசாருக்கு அனுப்பப்படுகிறது. லக்னோ மாஜிஸ்திரேட்டிடம் வாரண்ட் வாங்கிக் கொண்டு 370 ஏக்கரில் அமைந்திருக்கும் சுப்ரதா ராயின் லக்னோ வசிப்பிடமான சகாரா ஷகருக்குப் போய் 2 மணி நேரம் தேடியதாக சொல்கிறார்கள். மருத்துவர்களால் சூழப்பட்ட 92 வயதான அவரது தாய் மட்டும்தான் வீட்டில் இருந்தாராம். கொலைக் குற்றவாளிகளை பிடிப்பதற்கு விமானத்தில் பறந்து சென்று அவர்கள் ரயிலில் ஊர் போய்ச் சேருவதற்கு முன்பு கைது செய்து விடும் சென்னை சி.பி.சி.ஐ.டி போன்ற திறமை அவர்களுக்கு இல்லை போலிருக்கிறது.

உண்மையில் சகாரா ஷகருக்குள் போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த விருந்துபச்சாரம் நடந்திருக்கிறது. தானே சரணடைந்து விட்டதாக அறிவிக்கும்படியும் சிறையில் அடைப்பு வேண்டாம், வீட்டுக் கைதியாக இருப்பதாக சொல்லி விடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார் சுப்ரதா.

சகாரா ஷகருக்கு வெளியே லக்னோவின் சிரிப்பு போலீஸ்
சகாரா ஷகருக்கு வெளியே சுப்ரதா ராயின் கைதை அறிவிக்கும் லக்னோவின்  போலீஸ்

இதைத் தொடர்ந்து திரைப்படம் சென்டிமென்ட் காட்சிகளுக்குத் திரும்பியது.

“மார்ச் 3-ம் தேதி வரை என் அம்மாவுடன் வாழ அனுமதிக்கும் வகையில் வீட்டுச் சிறையில் வைக்கும்படி நீதிபதிகளை கைகூப்பி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” உருக்கமான அறிக்கை ஒன்றை சுப்ரதா வெளியிட்டார். “என்னை பழி வாங்க நினைக்கும் பல ஊடகங்கள் வேண்டுமென்றே கட்டுக் கதைகளை பரப்பி வருகின்றனர். நான் ஊரில் இல்லாத நேரத்தில் என் அம்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், அதை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என்று தமிழ்/இந்தி சினிமா கதாநாயகர்கள் போல டயலாக் பேசினார்.

டெல்லி போலீசின் அழுத்தம் காரணமாக, கடைசியில் மாலை 5 மணிக்கு மேல் மாளிகையிலிருந்து சுப்ரதாவுடன் உத்தர பிரதேச போலீஸ் வெளியேறுகிறது. சொகுசு கார்களின் அணிவகுப்பில் வந்து இறங்கிய சுப்ரதா ராயை காவலில் எடுப்பதற்கு டெல்லி போலீஸ் அனுமதி கேட்கிறது. கொடுக்கலாமா என்று நீதிபதி அரசு சிறப்பு வழக்கறிஞரிடம் கேட்க, அவர் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நெஞ்சு வலிக்கிறது என்று உட்கார்ந்து விடுகிறார். லக்னோ போலீசின் காவலில் வைக்க உத்தரவிட்டு தனது பொறுப்பை கைகழுவுகிறார் நீதிபதி. போலீஸ் புடைசூழ குக்ரைல் என்ற சுற்றுலா தலத்தில் உள்ள வனத்துறை விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுகிறார் சகாராஸ்ரீ.

சுப்ரதா ராய் மனைவி சுவப்னாவுடன்
சுப்ரதா ராய் மனைவி சுவப்னாவுடன்

தான் கைது செய்யப்பட்டிருப்பது தனது தேசம் கொடுத்திருக்கும் மிக உயர்ந்த கௌரவம் என்று அடுத்த பஞ்ச் டயலாகை அடித்து விட்டார். “நான் தலைமறைவாகியிருக்கிறேன என்ற செய்திகள் என்னையே என்னை வெறுக்க வைத்திருக்கின்றன. இந்த அளவிலான மன உளைச்சலையும், அவமானத்தையும் தாங்க முடியவில்லை. எதிர்மறை மனம் படைத்த, உணர்ச்சிரீதியாக முடங்கிய சில ஊடகவியலாளர்களை பார்த்து நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.” என்று உணர்ச்சிபூர்வமாக உருகினார்.

4-ம் தேதி டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அவர் காரில் அழைத்து வரப்படுகிறார். “நீதி கருணையோடு வழங்கப்பட வேண்டும்” என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.

பெரும்பான்மை வைப்புதாரர்களுக்கு பணம் கொடுத்து விட்டதாக சகாரா கூறுவது பொய் என்றும் சகாரா சமர்ப்பித்த ஆவணங்களே, முதலீட்டாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் இருக்கிறார்களா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்றும் இது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் அனைவரும் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் உண்மையில் இல்லவே இல்லை என்று சந்தேகிப்பதாகவும் சொன்ன நீதிபதிகள், ஒன்றரை ஆண்டுகளாக சகாரா குழுமம் தம்மை ஏமாற்றி வருவதாகவும் அறிவித்தனர்.

சுப்ரதோ ராயையும் சகாராவின் இன்னும் இரண்டு இயக்குனர்களான அசோக் ராய் சவுத்ரி, ரவிசங்கர் தூபே ஆகியோரையும் சிறைக்கு அனுப்பியிருக்கின்றனர். நான்காவது இயக்குனரான வந்தனா பார்கவே வெளியில் இருந்து, நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தயாரித்து வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்க அனுமதித்திருக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளாக அடுக்கடுக்காக பொய் சொல்லி உச்சநீதிமன்றத்தை ஏமாற்றியதாக சகாரா முதலாளிகளை குற்றம் சாட்டினாலும், 11-ம் தேதிக்கு முன்னதாகவே திருப்திகரமான மாற்றுத் திட்டத்தை சமர்ப்பித்து விட்டால் சுப்ரதா முதலானோரை பிணையில் விடுவதையும் பரிசீலிப்பதாக ஆறுதலும் கூறியிருக்கிறது.

சுப்ரதா ராய் முகத்தில் மை
மனோஜ் சர்மா என்ற குவாலியரைச் சேர்ந்த சுயமரியாதை உள்ள வழக்கறிஞர், சுப்ரதா ராயின் கறுப்பு டை, வெள்ளை சட்டையின் மீது மை வீசியிருக்கிறார்.

1970-களின் இறுதியில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் ஒரு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் தெருத் தெருவாக  பிஸ்கெட், காரச்சேவு வினியோகம் செய்யும் வேலை செய்து கொண்டிருந்த சுப்ரதா ராயின் இத்தகைய பிரமிக்கத்தக்க முன்னேற்றம் நவீன இந்தியக் கனவின் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம். எளிய சீட்டு கம்பெனியில் வாழ்வை ஆரம்பித்த சுப்ரதா ராயின் சகாரா குழுமத்தின் இப்போதைய சொத்து மதிப்பு ரூ 70,000 கோடியிலிருந்து ரூ 1.5 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று பல்வேறு மதிப்பீடுகள் சொல்கின்றன. 12 லட்சம் ஊழியர்கள், 8 கோடி முதலீட்டாளர்கள் என்று பிரம்மாண்டமான எண்களை அள்ளி விடுகிறது சகாராவின் இணையதளம். அந்த குழுமத்தில் 4,800 நிறுவனங்கள் உள்ளனவாம். லண்டனில் உள்ள குரோஸ்வேனர் பேலஸ் ஹோட்டல், நியூயார்க்கின் மன்ஹாட்டன் பிளாசா ஹோட்டல் பூனா வாரியர்ஸ் ஐ.பி.எல் அணி மற்றும் சகாரா சமய என்ற பெயரில் இந்தியிலும், பிற இந்திய மொழிகள் 24-லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார் சுப்ரதா. இன்னும் சகாரா ஃபில்மி சேனல், மற்றும் நாடு முழுவதும் 36,000 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்.

அத்தகைய பெருமை வாய்ந்த சுப்ரதா ராய் உச்சநீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது, காமன்வெல்த் ஊழல் புகழ் சுரேஷ் கல்மாடி மீது செருப்பு வீசிய மனோஜ் சர்மா என்ற குவாலியரைச் சேர்ந்த சுயமரியாதை உள்ள வழக்கறிஞர், சுப்ரதா ராயின் கறுப்பு டை, வெள்ளை சட்டையின் மீது மை வீசியிருக்கிறார். முகத்தில் வழியும் மையையும் தனது தொப்பியில் சொருகிய சிறகாக கருதி பெருமையாக நகர்ந்திருக்கிறார் சுப்ரதா ராய். ஒவ்வொரு நாளும் தானும் தன் சக முதலாளிகளும் இந்திய மக்களின் முகத்தின் மீது ஊற்றும் மைக்கு முன் இது ஒரு மேட்டரா என்று அவர் நினைத்திருக்கலாம்.

மை வீசிய மனோஜ் சர்மாவின் செயலை தானாகவே முன் வந்து விசாரித்த நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்சு அவரை 11-ம் தேதி வரை திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது. சிறைக்குப் போன சுப்ரதா ராய்க்கோ, வயதானவர் என்ற காரணத்தை முன்னிட்டு மரக்கட்டிலும், போர்வைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போக என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று நாம் அறியவே முடியாது.

சகாரா ஸ்ரீஜி என்று அழைக்கப்படும் சுப்ரதா ராய் சிறைக்குள் போயிருக்கிறார். இதனால் அவரது கொள்ளைக் கூட்ட தொழில் சாம்ராஜ்ஜியத்தில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப் போவதில்லை. ஒரு மாநிலத்தின் கட்சி செல்வாக்கை வைத்தே சொத்து குவிப்பை வழக்கை ஜெயலலிதா கேலிக்குரியதாக்கியிருக்கும் போது, நாடு முழுவதும் கட்சிகள், போலீசு, நீதிமன்றங்கள், விளையாட்டு, தொழில்கள் என்று அனைத்தையும் சட்டைப் பையில் வைத்திருக்கும் சுப்ரதா ராயை என்ன செய்து விட முடியும்?

இந்த சமூக அமைப்பு தூக்கி எறியப்படாத வரை சுப்ரதா ராய் போன்ற திமிங்கலங்களை ஒன்றும் செய்ய முடியாது.

–    அப்துல்.

மேலும் படிக்க

கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்

20

ல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள், நிர்வாக அலுவலகங்கள் என்று சமூகத்தில் உள்ள பெருவாரியான முக்கியமான இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுது. முக்கியமா பள்ளிகளில் நடக்கும் தீண்டாமை மிகவும் கொடுமையானது. சாதிய கட்டுமானங்களோட இருக்கும் கிராமத்தில் பெற்றோர்களே சாதிய பாகுபாட்டோடதான் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், தூண்டுதலாகவும் பள்ளியில் வேலை செய்பவர்கள் இருந்தால் பிள்ளைகளின் மனநிலையில ஏற்படும் விளைவு மிகவும் கொடுமையானது. அப்படி ஒரு பள்ளியில் நடந்த அவலம் தான் இது.

சாதி வெறிதமிழக மாவட்டம் ஒன்றில் உள்ள ஒரு கிராமத்து நடுநிலைப் பள்ளியில் வேலை செய்தவருதான் அலுவலக உதவியாளர் (பியூன்) சண்முகம். இவர் முக்குலத்தோர் பிரிவில் வரும் சாதியை சேர்ந்தவர். அந்தப் பள்ளியில் வேலை செய்த தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவங்க. ‘மேல்’ சாதி என்ற இறுமாப்போடு தலித் ஆசிரியர்களை மதிக்க மாட்டார் இந்த சண்முகம். அது மட்டும் இல்லாது ‘கீழ்ச்’ சாதி மாணவர்கள், ‘மேல்’ சாதி மாணவர்கள் என பாகுபாடு பார்த்து பழக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும், மாணவர்கள் யார், யாரு கூட பழக்கம் வச்சுக்கனும் என்பதை தீர்மானிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.

எந்த குறையும் இல்லாமல் சண்முகம் அவருக்கு உண்டான வேலையை முறையாக செய்வார். கூடவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு தமிழ், கணக்கு என்று ஆரம்ப பாடம் நடத்துவார். ஆனால் சாதியை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களை நக்கல் செய்து நடந்துக் கொள்ளும் குருர புத்திக்காரர். தோட்டக் கலை ஆசிரியர் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர், ஒரு அப்பாவி. அவரிடம் சண்முகம் “இந்தாய்யா நீ அந்த ஆறாம் வகுப்பு கட்டிடத்துக்குத் தானே போறே, அப்புடியே இந்த அட்டவணையை அந்த வகுப்புல கொடுத்துடு” என்று உத்தரவிடுவார். ஆசிரியர்களுக்கு உதவி செய்யும் அலுவலக உதவியாளர் வேலை இங்கு தலை கீழாக இருக்கும். இதை ஒரு ஏளனத்தோடு செய்வார் சண்முகம்.

எங்கள் பள்ளியில் சைவ வெள்ளாளர் ஒருவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் ஒரு பொறுக்கி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரக்கூடியவர். அப்படிப்பட்ட அயோக்கியனுக்கு சாதியால் உயர்ந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக கீழ்படிந்து வேலை செய்வார் இந்த சண்முகம். ஆனால் அதன் பிறகு வந்த தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு ஒரு தலித் என்பதால் ஏதாவது வேலை சொன்னால் “இப்பதானே சொல்லிருக்கிங்க, செய்றேன் பொறுங்க ஏன் பறக்கறீங்க’’ என்று எதிர்த்து பேசுவார்.

ஒரு முறை தேர்வின் போது ஆதிக்க சாதி மாணவர்களிடம் முன்கூட்டியே வினாத் தாளை எடுத்துக் கொடுத்து “கேள்விகளை குறித்துக் கொண்டு நல்ல மதிப்பெண் எடுங்க. ஏன் மதிப்பெண் குறைவா வாங்கிட்டு இந்தாள் கிட்ட கைகட்டி நிக்கணுமா” என்று கூறினார். “பாடமா நடத்துறாங்க, பிள்ளைங்களுக்கு ஒரு வாய்ப்பாடு தெரியல. க,ங,ச… தெரியல, மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்” என்று அங்கலாய்த்துக் கொள்வார். இதில் மாணவர்கள் மீதான அபிமானம் போல சாதிவெறி வெளிப்படும்.

எங்க பள்ளியில் ஒரு பெண் ஆசிரியர் இருந்தார். அவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்தான். மிகவும் தைரியமானவர். சண்முகத்துக்கு பயப்பட மாட்டார். அவருடன் மாணவிகள் நெருக்கமாக பழகுவார்கள். அவர் ஒருவர்தான் பெண் என்பதால் சில மாணவிகள் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். டீச்சர் சாப்பாடு கொண்டு வரும்  பாத்திரத்தையும் சேத்து குளத்துக்கு கொண்டு போய் கழுவுவார்கள். இதை பொறுத்துக் கொள்ள சண்முகத்தால் முடியாது. மாணவிகளை தனியாக கூப்பிட்டு திட்டுவார். “அவ யாரு? நீங்க யாரு? அவளுக்கு போய் நீங்க தட்டுக் கழுவறதா? கொஞ்சம் கூட வெட்கமா இல்ல? வீட்டுக்கு போங்க. உங்க அப்பாருகிட்ட வந்து சொல்றேன்” என்று மாணவிகளை ஏதோ செய்யக் கூடாத தப்பு செய்து விட்டது போல மிரட்டுவாரு. மாணவிகள் இயல்பா சாதி வேறுபாடு இல்லாம இருக்குறது கூட சண்முகத்துக்கு பொறுக்காது.

சாதி இறுமாப்பினால் அவர் ஒரு தலைமை ஆசிரியருக்கு உண்டான மிடுக்குடன் நடந்து கொள்வார். வெவ்வேறு சாதி மாணவர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு சினேகமாக இருந்தால் பழகினால் இவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. “இங்க வாங்க என்ன ஒட்டிக்கிட்டேதான் பொறந்திங்களா, பிரிஞ்சு இருக்க மாட்டிங்களா, ஒருத்தன் செய்றதத்தான் இன்னொருத்தன் செய்வீங்க, அவன் மாடு மேய்ப்பான் நீயும் மாடு மேய்க்கப் போறியா. போய் படிக்கிற வேலையை பாருங்க” என்று அவர் செய்யும் அட்வைஸில் சாதி வாசம் தெரியும்.

“வாட மாப்பிள்ளை, என்ன மருமகளே, வீட்டுல உங்க அப்பாரு இருக்காரா, என்ன குழம்பு இன்னைக்கு ஒங்க வீட்டுல. மாமா கேட்டேன்னு கொஞ்சம் வாங்கிட்டு வா” என்று மாணவர்களை முறை சொல்லி கூப்பிட்றதும் உரிமையோடு நடந்துக்கற விதமும் ஊர்க் காரங்களுக்கும் இவருக்கும் அதிக நெருக்கம் போல் காட்டிக் கொள்வார். அதனால் இவர் பற்றிய புகார்களை ஊரில் முக்கியமாக கருதப்படும் யாரிடம் சொன்னாலும் எடுபடாது. ஊர் காரவங்களுக்குள்ளும் சாதி பாகுபாடு இருக்கும். ஆனால் ஆசிரியர்களிடம் அதை காட்டிக் கொள்ளாமல், “அவருக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான் நீங்க கொஞ்சம் அனுசரிச்சு போங்க சார்! இன்னும் ரெண்டு மூனு வருசத்துல ரிட்டேர் ஆயிருவாரு” என்று சமரசமா பேசுவாங்க.

பள்ளிக்கூடத்துலயும் ஊருலயும் சண்முகத்துக்கும் ஊருக்காரங்களுக்கும் பெரிசா ஒன்னும் வித்தியாசம் இருக்காது. இதுல அவங்ககிட்ட பஞாசாயத்துக்கு போன என்ன பெருசா நடந்துர போகுது. வீட்ல பெத்தவங்க பிள்ளைங்க கிட்ட நடந்துக்குற லட்சணம் கேக்கவே ஆத்திரமா இருக்கும். “கைகாலல்லாம் பாரு வெள்ள வெள்ளையா பறையவீட்டு புள்ள மாதிரி புட்டாங்காச்சு போயிருக்கு, இங்க வா எண்ணைய தடவுவோம். பறச்செரிக்கி கணக்கா தலையப் பாரு எவ்வள பேனு, ஈறுன்னு, பறபுத்தி சிறுபுத்தின்னு அவந்தான் நக்கி நக்கி சாப்புடுவான் ஒனக்கென்ன வந்துச்சு எழுந்து போய் கைய கழுவு, என்னடா ஒங்கப்பாரு பறையோட்டு கலருமாரி செக்கச் செவேல்ன்னு சட்டத்தச்சு போட்ருக்கான்”னு பக்கது வீட்டு கொழந்தையில இருந்து எல்லா குழந்தைகள் கிட்டேயும் பேச்சோட பேச்சா சாதிவெறி எனும் பிசாச மனசுல ஒட்டவச்சுருவாங்க.

என்னதான் படிச்சுட்டு தாழ்த்தப்பட்டவங்க ஆசிரியரா பதவி அதிகாரத்துல இருந்தாலும் சாதிண்ணு வரும் போது அதிகாரத்துக்கு மதிப்பில்லாம போகுது. ஊர்க் காரங்களும், சண்முகமும் ஒரே சாதின்னு சொல்லிக்கிட்டாலும் அவர்களுக்கு இடையிலும் வேறுபாடு இருந்துச்சு. ஏரியா வேறவேற என்பதாலும் திருமண முறையில் இருவரும் வெவ்வேறு பழக்கத்தை கடைபிடப்பதாலும் இருவரும் ஒன்றல்ல என சொல்வார்கள். இருந்தாலும் தாழ்த்தப் பட்டவங்கன்னு வரும்போது அவர்களுக்கு எதிரா ஒண்ணு கூடிருவாங்க.

நான் மேல குறிப்பிட்டவை 80-90-களில் நடந்தவை. சமீபத்தில் அந்த கிராமத்துக்கு பக்கத்து ஊர்ல தெரிந்த நண்பருக்கு வீடு வாடகைக்கு வேணுன்னு தேடிட்டு போனோம். அப்பதான் அந்த ஏரியா புதுசா அங்கொண்ணும் இங்கொண்ணுமா வீடுகளோட உருவாயிட்டு இருந்துச்சு. வாடகை கொறச்சலா இருக்குமேன்னு அந்த பக்கம் தேடினோம். எதுவும் தென்படல. புதுசா ஒரு வீடு கட்டிட்டு இருந்த எடத்துல ஒரு பெரியவரு நின்னாரு. அவருட்ட கேக்கலாம்னு கிட்டக்க போனா, அது நம்ம பள்ளிக்கூட சண்முகம்.

அவருக்கு எங்களை அடையாளம் தெரியல, “நீங்க எந்த ஊரு? உங்களுக்கு என்ன வேணும்?”னு கேட்டார். விசயத்த சொன்னதும், ”நீங்க என்ன ‘ஆளுங்க’ இந்த ஏரியாவுல தாழ்த்தப் பட்டவங்களுக்கு எடம் விக்கவும் மாட்டாங்க, வாடகைக்கு வீடு தரவும் மாட்டாங்க, நான் நல்ல விசாரிச்சுட்டுதான் இங்க எடம் வாங்கி என் பொண்ணுக்காக வீடு கட்டுறேன். நீங்க என்ன ஆளுங்கன்னு தெரிஞ்சுகிட்டா இங்க ஒரு வீடு இருக்கு, போய் பாருங்கப்பான்னு சொல்லலாம். இல்ல இங்கெல்லாம் கெடைக்காதுப்பான்னு வெவரத்த சொல்லலாம். உங்களுக்கு அலைச்சல் இல்லாம போகும் அதனாலதான் கேட்கிறேன்”னு சொல்லிக்கிட்டே “தண்ணி குடிக்கிறீங்களா” என்றார்.

“உங்களுக்கு எங்களை தெரியல, ஆனா எங்களுக்கு உங்களை தெரியும். உங்க கையால தண்ணிக் குடிச்சாலே அது பாவம்”ன்னு சொல்லிட்டு எழுந்து வந்துட்டோம்.

– சரசம்மா

(சம்பவம் உண்மை – பெயர்கள் கற்பனை)

தரகு முதலாளிகளின் சேவைக்கு மோடி – ராகுல் போட்டி !

3

திர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி, “முதல்முறையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்கள் கவலைகொள்ளும் பிரச்சினை என்ன?” என்ற தலைப்பில் இந்தியா-டுடே இதழ் 28 மாநிலங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், 76.3 சதவீதம் பேர் நல்ல வேலையைத் தேடிக் கொள்வதை முக்கிய பிரச்சினையாகக் குறிப்பட்டுள்ளனர். 73.7 சதவீதம் பேர் கல்வியையும், 62.7 சதவீதம் பேர் வறுமையையும் முக்கிய பிரச்சினைகளாகக் குறிப்பிட்டுள்ளனர். இதே கருத்துக்கணிப்பில், “மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்சினை எது?” என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலில் விலைவாசி உயர்வு முதலிடத்தையும், வேலை வாய்ப்புகள், பெண்களின் பாதுகாப்பு, கல்வி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.

ராகுல் காந்தி
இந்தியத் தரகு முதலாளிகளின் சங்கமமான ஃபிக்கியின் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி. (கோப்புப் படம்)

இதே போன்று ஜூனியர் விகடன் இதழ் தமிழகம் முழுவதும் 4,490 பேர் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்பில், 1,867 பேர் விலைவாசி உயர்வையும், 1,411 பேர் பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வையும் அதிக பாதிப்பை ஏற்படுத்திய பிரச்சினைகளாகக் குறிப்பிட்டுள்ளனர். இவ்விரண்டு கருத்துக்கணிப்புகளும் மிகமிகக் குறைவான மக்கள் மத்தியில் எடுக்கப்பட்டிருப்பினும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, வறுமை, கல்வி, மருத்துவம், பெண்களின் பாதுகாப்பு ஆகியவைதான் அடித்தட்டு மக்களை மட்டுமின்றி, ஓரளவிற்கு நடுத்தர வர்க்கத்தினரைக்கூட வாட்டியெடுக்கக் கூடிய பிரச்சினைகளாக இருந்து வருவதை மறுத்துவிட முடியாது.

ஓட்டுக்கட்சிகள் ஒவ்வொன்றும் மக்கள் தங்களைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் வாழ்க்கையில் அளப்பரிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிடுவோம் என்றவாறு பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவீசி வருவதால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அக்கட்சிகளிடம் என்ன திட்டம் உள்ளது? அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? என்ற கேள்விகளை முன் வைப்பது அவசியமானதாக உள்ளது. குறிப்பாக, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா, மாயாவதி, ஜெயா உள்ளிட்ட மற்ற ஓட்டுக்கட்சித் தலைவர்களைவிடப் பிரதமர் பதவிக்குத் தகுதி வாய்ந்த ‘நாயகர்களாக’ ஊடகங்களாலும், முதலாளித்துவ அறிவுத்துறையினராலும் முன்னிறுத்தப்படும் ராகுல் காந்தி, நரேந்திர மோடி ஆகிய இருவரும் இந்தப் பிரச்சினைகள் குறித்துச் சொல்வதென்ன என்பதை அறிந்து கொள்வது இன்னும் முக்கியமானது.

‘‘100 புதிய நகரங்களை உருவாக்குவேன்; நதிகளை இணைப்பேன்; வர்த்தகம் (டிரேட்), தொழில்நுட்பம் (டெக்னாலஜி), சுற்றுலா (டூரிஸம்), திறன் (டேலண்ட்), பாரம்பரியம் (டிரேடிஷன்) ஆகிய ஐந்து “டி’’-களின் மூலம் இந்தியாவைச் சர்வதேச அளவிற்கு முன்னேற்றப் போவதாக’’த் தனது பொருளாதார திட்டத்தை அறிவித்திருக்கிறார், மோடி.

‘‘பஞ்சாயத்துக்களின் வறுமை என்பது தகவலின் வறுமையாகும். தகவல் பெறுவதற்கான வழிவகை இல்லாததுதான் உடல் நலம், கல்வி உள்ளிட்ட சேவைகளையும் ஆதாரங்களையும் பெறவிடாமல் தடுக்கிறது. பிராட் பேண்ட் இணைப்பைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் இதற்குத் தீர்வு” எனத் தனது திட்டத்தை முன்வைக்கிறது, ராகுலின் அணி. மேலும், அதிகாரப்பரவலாக்கம், திறன் மேம்பாடு, இரண்டாவது பசுமைப் புரட்சி ஆகியவற்றின் மூலம் வேறு எந்த நாட்டுக்கும் பின்தங்கிவிடாமல் உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது அவரின் தொலைநோக்காகக் கூறப்படுகிறது.

02-captionஇவர்கள் இருவரும் முன்வைத்துள்ள திட்டங்களுக்கும் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? கிராமப்புற விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்கக் கோரிப் போராடுகிறார்களா, இல்லை, பிராட் பேண்ட் இணைய தள இணைப்பைக் கேட்கிறார்களா? மோடி அறிவித்திருக்கும் 100 புதிய நகரங்கள் என்ற திட்டம் விவசாயிகளுக்கு இன்னொரு கொடுந்தீமையாகவே அமையும். ஏழை-நடுத்தர விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்யாமல், வானத்திலா 100 நகரங்களை உருவாக்க முடியும்? இந்தியாவை உலகின் பெரிய பொருளாதாரமாக, சர்வதேச அளவில் முன்னேறிய நாடாக மாற்றிவிட்டால், வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் ஒழிந்துவிடுமென நம்புவதைவிட, கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிடுவது” எவ்வளவோ உத்தமமானது. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்தால், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துவிடும் என்ற கருத்தின் மூலம் பெரும்பான்மையான மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதால், ராகுலால், மோடியால் இப்படிபட்ட மோசடியான, நயவஞ்சகமான தீர்வுகளை, வெவ்வேறுவிதமாக ஜோடனை செய்து முன்வைக்க முடிகிறது.

நரேந்திர மோடி
புது தில்லியில் நடந்த ஃபிக்கியின் பெண் தொழிலதிபர்கள் கூட்டத்தில் உரையாற்றும் நரேந்திர மோடி (கோப்புப் படம்).

கேட்பதற்கு வெவ்வேறாகத் தோன்றினாலும், ராகுலும் மோடியும் அறிவித்திருக்கும் இந்தத் திட்டங்கள் அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது என்பதைத் தாண்டி, வேறெதையும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாக முன்வைக்கவில்லை. இந்தத் தீர்வு கீறல் விழுந்த ரிக்கார்டுக்குச் சமமானது. பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பதற்கு விரைவுச் சாலைகள், அடுக்குப் பாலங்கள், நவீன விமான நிலையங்கள், நகரமயமாக்கம் போன்ற அடிக்கட்டுமான திட்டங்களில் அரசு முதலீடு செய்ய வேண்டுமென்று தனியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட காலத்திலிருந்தே இந்தியத் தரகு முதலாளிகள் கோரி வருகிறார்கள். குறிப்பாக, பொருளாதாரம் மந்த நிலையை அடையும்பொழுது இந்தக் கோரிக்கையை அவர்கள் வலுவாக அரசிடம் வைக்கிறார்கள். அந்நிய முதலீடு, வர்த்தகத்திற்கு உள்ள தடைகளை அறவே நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கம் முன்வைத்துள்ள இந்தத் தீர்வுகளைத்தான் ராகுலும் மோடியும் எதுகை மோனையோடு தமது சோந்த சரக்குகளைப் போல எடுத்துவிடுகிறார்கள். இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் பிரச்சினைகளை நாட்டின் பிரச்சினையாக, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதையே மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக மடைமாற்றும் வேலையைத்தான் ராகுலும் மோடியும் செய்கிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு கொழுத்த இலாபத்தை வாரிக் கொடுக்கும் அடிக்கட்டுமான திட்டங்களை உருவாக்கும்பொழுது ஒரு நூறு பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைப்பதில்லையா என இவர்கள் இதனை நியாயப்படுத்தி வருகிறார்கள். நெல்லுக்குப் பாயும் நீர் ஆங்கே புல்லுக்கும் புசிவது போல, முதலாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து அடித்தட்டு மக்களைச் சென்றடையும். அதுவரை காத்திருங்கள் என்பதுதான் இதன் மூலம் இவர்கள் விடுக்கும் செய்தி.

ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சிறு துளியாவது கசிந்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் கைகளில் விழுந்திருக்கிறதா? வாஜ்பாய் ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து வந்த ஐக்கிய முன்னணி ஆட்சியிலும் சாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 8 சதவீதப் பொருளாதார வளர்ச்சி அம்பானி, அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட கையளவேயான தரகு முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களாக உயர்த்திய அதேசமயம், கோடிக்கணக்கான மக்களை முன்னெப்போதும் இல்லாத வறுமையிலும் ஏழ்மையிலும்தான் தள்ளிவிட்டது. நாடெங்கிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைத்தான் தீவிரப்படுத்தியது. சிறுதொழில்களை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியது. கிராமப்புற ஏழைகளை, வேலை தேடி உள்நாட்டிலேயே அகதிகளாக அலையும்படி துரத்தியடித்தது. நிரந்தர மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்பு என்பதையே இல்லாது ஒழித்துக் கட்டியது.

02-caption-3

ராகுலும் மோடியும் அறிவித்திருக்கும் திட்டங்கள், இந்திய மக்களை மரணக் குழிக்குள் தள்ளிவிட்டுள்ள இந்த நிலையை மேலும் தீவிரமாக்குமேயொழிய, எள்ளளவும் அவர்களுக்கு நன்மை செய்துவிடப் போவதில்லை. இந்திய ஊடகங்களுள் பெரும்பாலானவை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், அவை இந்தத் திட்டங்களைப் பெயரளவுக்குக் கூட விமர்சிப்பதில்லை. இந்தத் திட்டங்களை விமர்சிப்பது தமது சொந்த நலன்களையே விமர்சிப்பதாகும் என்பதால், ஊடகங்கள் வௌக்குமாறுக்குப் பட்டுக்குஞ்சம் கட்டும் வேலையைத்தான் செய்ய்து வருகின்றன. மேலும், இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் மிகவும் வெளிப்படையாக ராகுல் கோஷ்டி, மோடி கோஷ்டி எனப் பிரிந்து நின்று கொண்டு, அவர்கள் இருவருக்கும் காவடி தூக்கும் வேலையையும் செய்து வருகின்றன. அவர்கள் இருவருக்கு மட்டுமே பிரதமர் பதவியில் அமருவதற்கான தகுதி இருப்பது போலவும்; அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளில் ஆயிரம் ஓட்டைகள் இருப்பினும், மோடியும் ராகுலும் அப்பழுக்கற்றவர்களாகவும் இந்தியாவை முன்னேற்றியே தீருவது என்ற இலட்சியத்திற்காகவே வாழும் கர்ம வீரர்கள் போலவும் ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்படுகின்றனர்.

மோடியும் ராகுலும் அறிவித்திருக்கும் திட்டங்களுக்கு இடையே மட்டுமல்ல, காங்கிரசு, பா.ஜ.க. என்ற இரு ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும் இடையேகூட எந்த வேறுபாடும் கிடையாது. காங்கிரசின் ஊழல்களை பா.ஜ.க. பட்டியல் இடும்பொழுது, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபொழுது நடந்த கார்கில் சவப்பெட்டி ஊழல், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல் மற்றும் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல்கள் நினைவுக்கு வருகின்றன. பா.ஜ.க. வெளிப்படையான இந்து மதவெறிக் கட்சி என்றால், காங்கிரசோ இந்து மதவெறியை மட்டுமல்ல, முசுலீம் மத அடிப்படைவாதத்தையும் தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகக் கும்பலாகும். தனியார்மய-தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எப்படி அமல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் இவர்களுக்கு இடையே வேறுபாடு இருக்குமே தவிர, அந்தக் கொள்கைதான் இந்தக் கட்சிகளின் உயிர்நாடி.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயம் மற்றும் சிறுதொழில் நசிவு உள்ளிட்டு மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது இந்த நாசகார மறுகாலனியாதிக்கக் கொள்கைதான். இந்தப் பிரச்சினைகள் நாளும் நாளும் தீவிரமடைந்து வருவது இந்தக் கொள்கையின், இந்த அரசியல்-பொருளாதாரக் கட்டுமானத்தின் தோல்வியைத்தான் குறிக்கிறது. ஆனால், ஆளுங்கும்பலும், அவர்களது கைத்தடிகளான ஊடகங்களும், முதலாளித்துவ அறிவுஜீவிகளும் அதிகாரத்தில் ஆட்களை/கட்சிகளை மாற்றி உட்கார வைப்பதன் மூலம் இப்பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும் என்ற மோசடித் தீர்வையே மீண்டும் முன்வைக்கிறார்கள். பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றிக் கொடுப்பதைப் போல, ஏற்கெனவே அமலில் உள்ள கொள்கைகள்/திட்டங்களுக்குப் புதிய ஜோடனை செய்து, அதனைப் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வாகக் காட்டுகிறார்கள். இப்படி ஆளையோ, கட்சியையோ மாற்றிமாற்றி அதிகாரத்தில் உட்கார வைப்பதன் மூலம் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதற்கு கடந்தகால அனுபவங்கள் நம் கண் முன்னே உள்ளன. எனவே, இப்பிரச்சினைகளுக்கான தீர்வை, இந்த அமைப்பு முறைக்கு வெளியே, தேர்தல் அரசியல், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு வெளியே தேட வேண்டும் என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் வந்துவிட்டது.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

உமா மகேஸ்வரி கொலை: சிறுசேரி என்ன நினைக்கிறது ?

25

மா மகேஸ்வரி கொல்லப்பட்டது இப்போது பழைய செய்தியாகிவிட்டது. புதிய பரபரப்புகள் பழையவற்றை தின்று செரிக்கின்றன. எனினும் உமாவின் சக நண்பர்கள், அவர் பணிபுரிந்த வளாக ஊழியர்கள், அந்தப் பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். தங்களிடையே ரத்தமும், சதையுமாக நடமாடிய ஓர் உயிர் இப்போது இல்லாமல் போனதை அவர்கள் எவ்வாறு உணர்கின்றனர் என்பதை அறிய நினைத்தோம். ஒரு மாலை நேரத்தில் சிறுசேரி தொழில்நுட்ப வளாகத்தில் நுழைந்தபோது நுழைவாயிலில் ஒரே ஒரு காவல்துறை வாகனம் மட்டும் நின்று கொண்டிருந்தது.

சிறுசேரி டி.சி.எஸ்
சிறுசேரி டி.சி.எஸ் கட்டிடம்

அந்த கரிய நிற சாலை எங்கள் முன்னே நீண்டு சென்றது. சற்று தூரம் சென்றதும் இடதுபுறம் படர்ந்து கிடந்த கருவேல புதர்க்காடுகள் தென்பட்டன. சாலையில் இருந்து சுமார் 100 அடி தூரமுள்ள அந்த புதர்களின் இடையில்தான் உமா மகேஸ்வரியின் உடல் கிடந்ததாக சொன்னார்கள். மனம் கனக்க அந்த இடத்தைக் கடந்தோம். எங்கள் முன்னே சாலையின் விளிம்பில் உயர்ந்து நின்றன வானுயர்ந்த கட்டடங்கள். அதுதான் டி.சி.எஸ். நிறுவனம். பக்கவாட்டில் பார்வையைத் திருப்பினால் இன்னும், இன்னும் ஏராளமான நிறுவனங்கள் திரும்பிய திசை எங்கும் தென்படுகின்றன. அது ஒரு தனி உலகம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

டி.சி.எஸ். நிறுவனத்தை சுற்றிக்கொண்டு பின்பக்கமாகப் போனோம். அங்கே கட்டடத்தின் கடைசிப் பகுதியில் சுமார் 100 இளைஞர்கள் கூட்டம் தேநீர் அருந்திக் கொண்டும் சிகரெட் புகைத்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் நின்றனர். எல்லோரது கழுத்திலும் டி.சி.எஸ். நிறுவனத்தின் அடையாள அட்டை மினுமினுத்தது.

தேநீர் குடித்தபடி சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்த நான்கைந்து இளைஞர்களிடம் பேசத் துவங்கினோம். முதலில் மிரண்டனர். பின்னர் மெள்ள, மெள்ளப் பேசத் துவங்கினர்.

‘‘இங்கே 26 ஆயிரம் பேர் வேலைப் பார்க்குறோம் சார். ஆனால் ஒருத்தருக்கு இன்னொருத்தரைத் தெரியாது. அதிகப்பட்சம் எங்க புராஜெக்டுல இருக்குறவங்களைத் தெரியும், அவ்வளவுதான். உமா மகேஸ்வரிங்குற பொண்ணை எங்க யாருக்கும் தெரியாது. அவங்க ஃப்ரெஷ்ஷர்னு நினைக்கிறோம்’’

‘‘அந்தப் பொண்ணை கொலை செய்ததா வட இந்தியத் தொழிலாளர்களை போலீஸ் கைது பண்ணியிருக்கு. அவங்க இதுபோல வேற ஏதாவது குற்றச் செயல்களில் இதுக்கு முன்ன ஈடுபட்டிருக்காங்களா, உங்களுக்குத் தெரியுமா?’’

‘‘அப்படி எதுவும் இல்லைங்க. அவங்க கட்டட வேலைப் பார்க்குறாங்க. அங்கே எதுவும் நடந்திருந்தா எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த சிப்காட்குள்ள எவ்வளவோ கம்பெனிகள் இருக்குது. எல்லாத்துலயும் என்ன நடக்குதுன்னு நமக்கு என்ன தெரியும்?’’

‘‘ஆனா வட இந்தியத் தொழிலாளர்கள்தான் இப்படிப்பட்ட குற்றங்களை செய்யுறதா போலீஸும், மீடியாவும் சொல்லுதே?’’

‘‘அது தப்புங்க. இந்த வழக்குல வட இந்தியர்கள் குற்றவாளி, அவ்வளவுதான். அதுக்காக வட இந்தியர்கள் எல்லாரும் குற்றவாளிகள்னு சொல்றது தப்பு. இப்போ, நாங்க ஆன்சைட் வேலைக்கு வெளிநாடு போறோம். அங்கே ஏதோ ஒரு தமிழன் தப்புப் பண்ணிட்டான்னு வைங்க. மொத்தத் தமிழர்களுமே இப்படித்தான்னு சொன்னா நமக்கு கஷ்டமா இருக்கும்ல… அதுபோலதான்’’

அவர்களின் விசாலப் பார்வையை மதிக்கத் தோன்றியது. இன உணர்வை நீக்கம் செய்து இரு தரப்பும் தொழிலாளர்கள் என்ற கோணத்தில் அதை புரிந்து கொண்டுள்ளனர் என்றபோதிலும், ‘‘வட இந்தியர்களிடம் நாகரிகம் இல்லை. கல்வியறிவு இல்லை’’ என்பதும் அவர்களின் கருத்துதான். மேற்கொண்டும் உமா மகேஸ்வரி குறித்துக் கேட்க முயற்சித்தோம். ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. ‘இருந்தாங்க, இப்போ இல்லை, அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?’ என்ற தொனியில் அமைந்திருந்தன அவர்களின் பதில்கள். தங்களுடன் பணிபுரிந்த ஒரு சக உயிரின் இழப்பு அவர்களை சிறு அளவிலும் தொந்தரவு செய்யவில்லை.

‘‘இதுக்கு யார் என்ன சார் செய்ய முடியும்? கம்பெனி வேலைதான் கொடுக்கும். கூடவே துணைக்கு ஆளையுமா அனுப்பும்? நடந்தது நடந்து போச்சு. அதை விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான். மத்தபடி எங்க கம்பெனியில பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பக்கா சார். ஐ.டி. கார்டு இல்லாம யாரும் உள்ளே வரவே முடியாது’’

நவீன ஐ.டி. தலைமுறை மனப்போக்கின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவர்கள் பிரதிபலித்தனர். அவர்கள் உதிரிகளாக பிரிக்கப்பட்டிருப்பது உடல்கள் என்ற அளவில் மட்டுமல்ல… அக மனதிலும் அவர்கள் உதிரிகளே. எல்லோரின் மனதும் தனித்தனி ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஐ.டி. துறையில் அண்மை காலமாக நடந்துவரும் அதிவேக ஆட்குறைப்புக் குறித்துக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அங்கிருந்து நகர்ந்தோம். மறுபடியும் டி.சி.எஸ். அலுவலக வாயிலுக்கு வந்தபோது வரிசையாக பர்வீன் டிராவல்ஸ் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. பர்வீன் டிராவல்ஸை சேர்ந்த சுமார் 110 பேருந்துகள், டி.சி.எஸ். நிறுவனத்துடன் வாகன ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. ஊழியர்களை அழைத்து வருவதும், திரும்ப அழைத்துச் செல்வதும் இவர்கள்தான். நாங்கள் அங்கு சென்ற நேரம் ஒரு ஷிப்ட் முடியும் நேரம். பேருந்துகள் தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தன. அங்கு நின்றிருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் பேசினோம்.

‘‘ஒரு பொண்ணை கொலை பண்ணிட்டதா சொல்லிக்கிறாங்க சார். அதைப்பத்தி நமக்கு என்னா சார் தெரியுது? ஒண்ணும் தெரியாது. வருஷக்கணக்குல பஸ்ஸுல வர்றாங்க. ஆனால் யாரும் ஒரு வார்த்தைக் கூட பேச மாட்டாங்க சார். நம்மக்கிட்ட பேசாதது மட்டும் இல்ல… அவங்களே அவங்களுக்குள்ள பேசிக்க மாட்டாங்க. ஏறி உட்கார்ந்ததும் போன் ஒயரை காதுல சொருகிக்குவாங்க. பேசுறாங்களா, பாட்டுக் கேட்குறாங்களான்னுக் கூட நமக்குத் தெரியாது. அமைதியா வருவாங்க..’’

சிறுசேரி டி.சி.எஸ்
டி.சி.எஸ்

ஓர் இளைஞர் குறுக்கிட்டார். ‘‘பஸ் பஞ்சரானா கூட ஏன், எதுக்குன்னு கேட்குறது இல்லை. ‘வேற பஸ் ரெடி பண்ணுங்க’னு கூட சொல்ல மாட்டாங்க. நாமளா பார்த்துதான் பண்ணனும். வர்றதுக்கு லேட்டாச்சுன்னா மட்டும் கம்பெனில நம்பர் வாங்கி நமக்கு போன் பண்ணுவாங்க, ‘டிரைவர் அண்ணாவா… ஃபைவ் மினிட்ஸ்ல வந்திருடுறேண்ணா… ப்ளீஸ்’னுவாங்க. வந்து ஏறுனதும் ஒரு தேங்க்ஸ், அவ்வளவுதான்’’ என்று சிரிக்கிறார்.

மற்றொரு பணியாளர், ‘‘நைட் 8 மணிக்கு வேலையை முடிச்சுட்டுப் போனா இந்த மாதிரி கொலை எல்லாம் ஏன் நடக்கப்போகுது’’ என்றார்.

‘‘நமக்கு வருமானம் பத்தலைன்னு ஓவர்டைம் பார்க்குறோம். அதுபோல அவங்க வேலைப் பார்க்கலாம் இல்லையா?’’

‘‘என்னது.. அவங்களுக்கு சம்பளம் பத்தலையா?’’ என்று அதிர்ச்சியடைந்தார் அந்த இளைஞர்.

இவர்களின் பேருந்து சேவை இரவு 10 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு வாகன வசதி தேவைப்படுவோருக்கு நிறுவனத்தில் இருந்து ‘கேப்’ ஏற்பாடு செய்து தருவார்களாம்.

உமா மகேஸ்வரி வேலை முடிந்து சென்ற இரவு 10.00&10.30 மணி என்பது அதிகமான வாகனங்கள் சென்றுவரும் நேரம். தொழில்நுட்ப வளாகத்தில் இருக்கும் நிறுவனங்களில் அது ஷிப்ட் முடிந்து, துவங்கும் நேரம் என்பதால் ஏராளமானோர் உள்ளே வந்தும், வெளியே சென்றும் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில்தான் உமா மகேஸ்வரியை வட இந்தியத் தொழிலாளர்கள் இழுத்துச் சென்றனர் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை என்று குறிப்பிட்டனர் ஓட்டுனர்கள். ஆனால் அவர்களே, ‘‘கண்ணுக்கு நேரா யாருக்கு எது நடந்தாலும் இவங்க கண்டுக்க மாட்டாங்க சார். அதனால் ஒருசிலர் பார்த்திருந்தாலும் கம்முன்னு இருந்திருப்பாங்க’’ என்றார்கள்.

இருள் கவியத் துவங்கியிருந்தது. மஞ்சள் தலைக்கவசமும், ஃபுளோரசன்ட் மேல்அங்கியும்  அணிந்திருந்த வட இந்தியத் தொழிலாளர்கள் சைட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் சிறு பையன்கள். காலையில் இருந்து உழைத்து களைத்த சோர்வு. ஒல்லியான தேகம். நரம்பு புடைத்திருக்கும் கை, கால்கள். யாருக்கும் உடம்பில் கொஞ்சமும் சதைப்பற்று இல்லை. மெதுவாய் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். தங்கள் சொந்த ஊர் விவரங்களை தயங்கிப் பேசியவர்கள் உமா மகேஸ்வரியின் பெயரைச் சொன்னதும் ‘‘எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்று ஓட்டம் எடுத்தனர். பெரும் அச்சம் சூழ்ந்திருக்கும் அவர்களின் கனக்கும் மனதின் படபடப்பை புரிந்துகொள்ள முடிந்தது. கடந்த சில நாட்களாக, பார்க்கும் கண்களில் எல்லாம் வெளிப்படும் குரோதத்தையும், வன்மத்தையும் எதிர்கொள்பவர்கள் அல்லவா? காவல்துறையின் மிரட்டலையும், விசாரணையையும் தினம், தினம் அனுபவிப்பவர்கள் அல்லவா? அந்த அச்சம் நியாயமானதே.

சிறுசேரி மக்கள்
சிறுசேரி மண்ணின் பூர்வகுடிகள்

வெளியே வந்தோம். இடதுபக்கம் திரும்பி கொஞ்சம் வெளியே வந்தால் வரிசையாக கடைகள். ‘சிறுசேரி’ என்ற பெயர்ப்பலகையும், அதன் பின்னால் பூர்வீக சிறுசேரி ஊரும் தென்பட்டன. இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்ன கருதுகின்றனர்? உள்ளே சென்றோம். ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து நான்கைந்து பெண்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர். ஒரே சிரிப்பு சத்தம். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது வேறொரு முனையில் இருந்து துவங்கினார்கள்.

‘‘இந்த கம்பெனிக இருக்குற இடத்துலதான் நாங்க காலம், காலமா விவசாயம் செஞ்சு வாழ்ந்தோம். நெல்லு, கம்பு, தர்ப்பூசணி, காய்கறிக எல்லாம் போடுவோம். விதவிதமா வெளையும். இப்போ செத்துப்போன பொண்ணு வேலைப் பார்க்குற இடம்தான் என் இடம். நானும், என் ஊட்டுக்காரரும் அதுல வெள்ளரித் தோட்டம் போட்டது இப்பவும் எனக்கு நினைவு இருக்கு. உள்ளே ஒரு ஏரி இருந்துச்சு. அதுலேர்ந்துதான் தண்ணீ பாய்ச்சுவோம். இந்த சிப்காட் காரன் வந்து எல்லாத்தையும் புடுங்கிட்டு உட்டுட்டான். எங்க ஆளுகளுக்கு எல்லாம் வேலை தர்றேன்னான். கடைசியில எங்க வூட்டு பொம்பளை சனத்துக்கு குப்பை அள்ளுற வேலைதான் கொடுத்திருக்கான்’’ என்று ஆற்றாமையுடன் பேசும் அனைவரும், கோடிகளில் விலைபோகும் அந்த நிலம் தங்களிடம் இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குகிறார்கள்.

உமா மகேஸ்வரியின் பேச்சைத் துவங்கியதுமே, ‘‘பயம்மா இருக்குதுப்பா… இந்தா இருக்குற காம்பவுண்ட் சுவரைத் தாண்டிதான் கொலை நடந்த இடம் இருக்கு. இன்னைக்கு அந்தப் புள்ளைக்கு நடந்தது, நாளைக்கு நமக்கு. சேதி தெரிஞ்ச அன்னையிலேர்ந்து திக்கு, திக்குன்னு இருக்கு, தூக்கம் வரமாட்டங்குது. நம்ம புள்ளைகளும் இப்படித்தானே ஏதோ ஒரு ஊர்ல வேலைப் பார்க்குதுக… அதுகளுக்கும் இப்படி ஒரு ஆபத்து நடக்க வாய்ப்பு இருக்குல்ல..’’ என்று கிராமத்துப் பெண்களுக்கே உரிய இயல்புடன் பேசினார் ஒரு பெண். எல்லோரது கருத்தும் அதுதான்.

ஆனால் வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த அவர்களின் கருத்து ஊடகங்களின் கருத்தை அப்படியே எதிரொலிக்கிறது. ‘‘இந்திக்காரங்க வந்தப் பிறகுதான் இவ்வளவு அட்டூழியம். ஒரே திருட்டு. ரோட்டுல நடக்க முடியலை. கடைக்குப் போனா, பொம்பளைங்க நிற்கிறாங்களேன்னு நகர்ந்து நிற்கிறது கூட இல்லை. இப்போ கொலை வேற செஞ்சிருக்கானுங்க. அவங்களை வேலை செய்யுற இடத்துலயே வெச்சுக்கு சொல்லுங்க. வெளியே விட்டா எல்லாருக்கும் ஆபத்து’’ என்று அவர்களை ஏதோ வேற்றுகிரக வாசிகளைப் போலவே கருதிப் பேசினார்கள். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த விசமத்தனமான கருத்துக்கு அவர்கள் இரையாகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இது மிகவும் துயரமானதுதான். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பீகார், ஒரிசா, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து, குறைந்த கூலிக்கு நாள் முழுக்க கடும் உடல் உழைப்பை மேற்கொள்ளும் அவர்களை ஓரிரு சம்பவங்களை முன்வைத்து கொலையாளிகளாக சித்தரிப்பது எத்தனை மோசமானது? பகலும், இரவும், பனியும், வெயிலும், கோடையும், குளிரும் கடந்து அந்தத் தொழிலாளர்கள் உழைத்துக் கொட்டுவது கொலையாளி பட்டம் பெறவா? அவர்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ள மற்றுமொரு முறை முயற்சிக்கலாம் என்று சிப்காட் உள்ளே சென்றோம்.

காக்னிசென்ட் நிறுவனத்தின் இரவு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. வரிசையாக நான்கைந்து தொழிலாளர்கள் நாங்கள் சொல்வதைக் கூட கேளாமல் அச்சத்துடன் விலகிச் சென்றனர். இளமைத் துடிப்பும், அரும்பு மீசையும் நிரம்பிய ராஜ் என்ற இளைஞன் நின்று பேசினார். கூடவே மற்றொரு சிறுவனும் இருந்தான். ராஜுக்கு 21 வயது. ஒரிசா மாநிலத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். தேர்ந்த அனுபவசாலியாக அவர் பேசியவை எளிய சொற்கள்தான். ஆனால் மனதை நொறுக்க வல்லவை.

வட மாநிலத் தொழிலாளர்கள்ராஜ், ஊரில் மினிபஸ் ஓட்டுனர். அந்த வேலை வேண்டாம் என்று அம்மா தடுத்ததால் இந்த வேலைக்கு வந்துள்ளார். இங்கு கட்டட வேலை பார்க்கிறார். அவருக்கு இரண்டு அண்ணன்கள். இருவரும் திருமணம் முடிந்து தனித்தனியே சென்று விட்டனர். ஒரு தங்கைக்கும் திருமணம் ஆகிவிட்டது. அம்மா மட்டும் தனித்திருக்கிறார். வீட்டில் திருமணம் ஆக வேண்டியவர் ராஜ் மட்டுமே.

‘‘அப்புறம் என்ன பையா.. அடுத்து உங்க கல்யாணம்தானே?’’ என்ற கேள்விக்கு அவரிடம் சிறு வெட்கத்தையேனும் எதிர்பார்த்தோம். எதுவும் இல்லை. ‘‘எதுவும் லவ்வா?’’ என்றதும் இதழோரம் ஒரு விரக்தி குறுநகை எட்டிப் பார்த்தது. ‘‘நிறைய கடன் இருக்கு சார். தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கினது’’ என்றார். ராஜ் விவரிக்கும் கணக்குப்படி சுமார் 50 ஆயிரம் ரூபாய் கடன் அவர்களுக்கு இருக்கிறது. அதை அடைத்தபிறகு இன்னும் மூன்று, நான்கு வருடங்கள் கழித்துதான் திருமணமாம். பல வருடங்களுக்கு முன்பே பக்கவாதம் வந்து படுத்தப் படுக்கையாய் இருந்து இறந்துபோன அப்பா மட்டும் இருந்திருந்தால் தன் வாழ்க்கையின் துயரங்கள் சற்று குறைவாக இருந்திருக்கும் என்று மனம் கனக்க சொல்கிறார் ராஜ்.

‘‘10 வயசுலயே கோவாவுக்கு வேலைக்குப் போனேன். நான் ரொம்ப சின்னப் பிள்ளையா இருக்கேன்னு வேலை தரலை. இருந்தாலும் வந்துட்டோம், திரும்பப் போகக்கூடாதுன்னு ஒரு ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு வருஷம் வேலை பார்த்து ஊருக்கு 10 ஆயிரம் கொண்டு போனேன்’’ என்கிறார்.

இவர்களுக்கு நான் ஒன்றுக்கு 300 முதல் 350 ரூபாய் வரை சம்பளம். மாதம் ஒன்றுக்கு சுமார் 9,000 ரூபாய். அதில் 1,000 ரூபாய் செலவுக்கு வைத்துக்கொண்டு மீதியை ஊருக்கு அனுப்பிவிடுகிறாராம். ‘‘இந்தக் கம்பெனியில் வேலை பார்க்குறவங்க எவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னு தெரியுமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘அவங்க கூட இணைச்சு யோசிக்கிறதே தப்பு. இது எங்க தலைவிதி. வேற என்ன பண்றது?’’ என்கிறார். சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் திட்டம் எதுவும் தீர்மானமாக இல்லை என்றும், ‘வாழ்க்கை எப்படிப் போகிறதோ அப்படியேப் போக வேண்டியதுதான்’ என்று ஒரு ஞானியைப் போல பேசிய ராஜிடம் உமா மகேஸ்வரியின் மரணம் குறித்துக் கேட்டோம்.

‘‘யாரோ ஒருசிலர் தப்பு செய்யுறதால எங்க எல்லாருக்குமே கெட்டப் பேர். நாங்க இங்கே பொழைக்கத்தான் வந்திருக்கோம். எங்களுக்கும் ஊர்ல அக்கா, தங்கச்சி இருக்காங்க’’ என்கிறார். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த மொத்த பொதுப் புத்தியின் கேள்விகளுக்கும் அது பொருத்தமான; போதுமான பதிலாக இருந்தது.

இரவின் அடர்த்தி மிகுந்திருந்தது. அவர்கள், தங்களின் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும். இருவரும் சென்று சமைத்து உண்ண வேண்டும். பகல் எல்லாம் உழைத்த உடல் தசைகளுக்கு சற்றே ஓய்வு தர வேண்டும். அடுத்த நாள் உழைப்புக்குத் தயாராக வேண்டும். நாங்கள் விடைபெற்றோம்.

உமா மகேஸ்வரியின் நினைவுகளை இந்த அளவுதான் சிறுசேரி வைத்திருக்கிறது. இனி எத்தனை நாட்கள் அது நீடிக்கும் என்று தெரியவில்லை. சிறுசேரி மக்கள், ஐடி ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், வட இந்தியத் தொழிலாளிகள் என உழைக்கும் மக்கள் சங்கமிக்கும் அந்த இடத்தில் உண்மையில் எந்த சங்கமித்தலும் இல்லை. இருந்திருந்தால் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.

–    வினவு செய்தியாளர்கள்.

பூஷண் ஸ்டீல் : முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் !

2

டந்த நவம்பர் 13-ம் தேதியன்று ஒரிசாவின் தேங்கனால் மாவட்டத்தின் மேராமுண்டுலி பகுதியில் உள்ள பூஷண் எஃகு ஆலையின் கொதிகலன் வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கதி என்னவாயிற்று என்றே யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், 3 தொழிலாளர்கள்தான் மரணமடைந்துள்ளனர் என்றும், 38 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், 168 தொழிலாளர்களைக் ‘காணவில்லை’ என்றும் அலட்சியமாக அறிவித்துள்ளது, அம்மாநிலத் தொழிலாளர் துறை. காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள இத்தொழிலாளர்கள் இந்த விபத்தில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் எங்கேயாவது வீசியெறியப்பட்டு, அடையாளம் தெரியாத பிணங்களாக புதர்களில் நாளை கண்டறியப்படலாம் என்றே பலரும் அஞ்சுகின்றனர்.

10-bhushan-steelவிபத்து நடந்த போது எத்தனை தொழிலாளர்கள் அங்கு பணியில் இருந்தனர் என்ற எந்த விவரமும் அந்த ஆலையின் பதிவேட்டிலோ, தொழிலாளர் துறையிடமோ இல்லை. 35 ஒப்பந்ததாரர்களின் பொறுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் இந்த ஆலையில், விபத்து நடந்தபோது 974 பேர் அங்கு பணியாற்றியுள்ளனர் என்று ஒப்பந்ததாரர்கள் கூறும் தகவலை வைத்துத்தான் இந்தக் கணக்குகூட தரப்படுகிறது. இவ்வளவு பெரிய கொடூரம் நடந்துள்ள போதிலும், நீதித்துறையோ, ஊடகங்களோ, ஓட்டுக் கட்சிகளோ இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தைக் கண்டும் காணாமல் உணர்ச்சியற்றுக் கிடக்கின்றன.

இந்த ஆலையில் அற்பக் கூலிக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான குறைந்தபட்சக் கூலியோ, சேமநல நிதியோ, தொழிலாளர் மருத்துவ ஈட்டுறுதியோ, போனசோ எதுவுமே கிடையாது. மேலை நாடுகளிலிருந்து கழித்துக் கட்ட எந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி இந்த ஆலையில் இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்துகள் நேருகின்றன. அரசின் அதிகாரபூர்வக் கூற்றுப்படியே, 2006-ம் ஆண்டில் இந்த ஆலை நிறுவப்பட்டதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் வெவ்வேறு விபத்துகளில் 119 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல்துறை, வனத்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறாமல் ஆலை இயக்கப்படுவதையொட்டி கடந்த 7 ஆண்டுகளில் இந்த ஆலை நிர்வாகத்தின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இப்பயங்கரவாத முதலாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆலை நிர்வாகத்தின் அறிவிக்கப்படாத தனியார் குண்டர் படையாகவே உள்ளூர் போலீசு இயங்குகிறது. இவையனைத்தும் மைய அரசு, மாநில அரசு, ஆலை முதலாளிகளின் கிரிமினல் கூட்டணியை நிரூபித்துக் காட்டுகின்றன. ஒரிசா மாநில மக்களிடமிருந்து அவர்களது காடுகளையும் நிலங்களையும் பறித்துக் கொண்டு அவர்களுக்கு வேலை வாப்பு அளிப்பதாக கூறும் தனியார்மய – தாராளமயத்தின் கோரமுகத்தை பூஷண் எஃகு ஆலை மட்டுமின்றி, நாடெங்கும் தொடரும் முதலாளித்துவப் பயங்கரவாதமே நிரூபித்துக் காட்டுகிறது.
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?

714

காஷ்மீர் மக்களின் தேசிய இனப் போராட்டத்தை தீவிரவாதமாகவும், பாக் சதியாகவும் மட்டும் பார்க்க பழக்கும் அரசு – ஊடகங்களின் செல்வாக்கு, வட இந்தியாவில் அதிகம். அதனால் எங்கு சென்றாலும் காஷ்மீர் மாணவர்கள் இத்தகைய வன்மத்துடன்தான் பார்க்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

ஷாகித் அப்ரிடி
பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார்.

சு வாமி விவேகானந்தா சுபார்த்தி எனும் தனியார் பல்கலைக் கழகம் உபி மாநிலம் மீரட் நகரில் உள்ளது. இங்கு படிப்பவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் நிரந்தர ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரில் கல்வி, அதுவும் உயர் கல்வி கற்பது என்பது பல்வேறு காரணங்களால் கடினமானது. கல்லூரிகளும் அதிகம் இல்லை. இதன் பொருட்டு காஷ்மீர் மாணவர்கள் அருகாமை வட இந்திய மாநிலங்களில் படிக்கச் செல்கின்றனர்.

சுபார்தி பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிறு 2.3.2014 அன்று மாணவர்கள் அவர்கள் தங்கியிருக்கும் மதன் திங்கரா விடுதியில் கிரிக்கெட் போட்டியை பார்த்திருக்கின்றனர். வங்கதேசத்தில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கான லீக் சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவும், பாக்கும் மோதி அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் போட்டி நடக்கும் போது காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தான் அணியை ஆதரித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் ஆட்டம் இருந்ததால் ஏனைய ‘இந்து-இந்தியா’ மாணவர்கள் காஷ்மீர் மாணவர்களின் குரலை கண்டு கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார். இதை  காஷ்மீர் மாணவர்கள் கைதட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.

போதாதா, இந்து மாணவர்களுக்கு சினம் ஏறி காஷ்மீர் மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள். பத்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். மூத்த மாணவர்கள் தலையிட்டு காப்பாற்றவில்லை என்றால் சில காஷ்மீர் மாணவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அங்கு படிக்கும் காஷ்மீர் மாணவர் ஒருவர் கூறியிருக்கிறார். பிறகு காஷ்மீர் மாணவர்களின் விடுதி சன்னல்களை தாக்கி, உடைத்து இரவு முழுவதும் அச்சுறுத்தியவாறே இருந்திருக்கிறார்கள். காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் “காஷ்மீர் மாணவர்களை வெளியேற்று” என்று முழக்கமிட்டபடியே இந்து-இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை பெரும்பான்மையாகவும் விவேகானந்தரை பெயரிலும் கொண்டிருக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் என்ன செய்திருக்கும்? ‘இந்திய’ மாணவர்களின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்த நிர்வாகம் காஷ்மீர் மாணவர்கள் பலரை வளாகத்தை விட்டே வெளியேற்றியிருக்கிறது. அல்லது விரட்டியிருக்கிறது என்றும் சொல்லலாம். மேலும் எந்தக் காரணமோ விளக்கமோ அன்றி ரூ 5,000 அபராதமும் இம்மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாணவர்களை அண்டை மாநிலங்களில் படிப்பதற்கு ஏற்பாடு செய்து அனுப்பும் “காஷ்மீர் கன்சல்டன்சி” நிறுவனத்தை சேர்ந்த ராபியா பாஜி, இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவில்லை என்றாலும் அன்று மாலை பல்கலையின் தலைவர் அதுல் கிருஷ்ணா அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் குறித்து தெரிவித்திருக்கிறார்.

அதில் “ இந்த ஆண்டிலிருந்து காஷ்மீர் மாணவர்களுக்கு இடம் கொடுப்பதாக இல்லை, வேண்டுமானால் காஷ்மீர் மாணவர்கள் படிப்பதற்கு பாகிஸ்தான் செல்லலாம்” என்றும் கூறப்பட்டிருப்பதாக ராபியா தெரிவித்தார்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறி
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறி

இதே போன்று பஞ்சாப் மாநிலத்தில் தேசி பகத் பல் மருத்துவக் கல்லூரியிலும் காஷ்மீர் மற்றும் ‘இந்திய’ மாணவர்களிடையே இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து சச்சரவு எழுந்திருக்கிறது. எனினும் விவேகானந்தர் போல பகத் நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றவில்லை.

விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் மொத்தம் 67 மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காஷ்மீர் அனுப்பப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. மேலும் அந்த செய்தியில், பல்கலையின் துணை வேந்தரான டாக்டர் மன்சூர் அகமது, “இத்தகைய நடைமுறைகளை மேற்கொள்ளும் மாணவர்களை நாங்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் மாணவர்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டதாக சக மாணவர்கள் புகார் அளித்ததாக கூறும் அகமது அவர்களை மீது மட்டும் நடவடிக்கை எடுக்க நினைத்ததாகவும், அந்த மாணவர்கள் யார் என்று மற்ற காஷ்மீர் மாணவர்கள் தெரிவிக்க மறுத்ததால் 67 பேர்களை வெளியேற்றியதாகவும் கூறியிருக்கிறார்.

அந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று எதிர்பார்த்தாகவும் அது நடக்கவில்லை என்பதாலேயே இந்த் தற்காலிக நீக்கம் எடுக்க நேரிட்டது என்று அகமது நியாயப்படுத்துகிறார்.

கிரிக்கெட்டில் வெற்றி பெறும் பாக் அணியை இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று இந்துமதவெறி அமைப்புகள் இந்தியாவெங்கும் உருவாக்கியிருக்கும் ஒரு அவதூறும், வெறுப்புணர்வும் கலந்த கருத்து, நெடுங்காலம் செல்வாக்கோடு இருக்கிறது. முதலில் இது உண்மையல்ல. இங்கிருக்கும் முசுலீம்கள் எவரும் இந்தியாவைத்தான் தமது நாடாக கருதுகின்றனரே அன்றி பாக்கை அல்ல.

முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிறது. அமெரிக்காவின் இளவல் சவுதி புரவலராக இருந்து உருவாக்கிய இசுலாமிய மதவாதிகள் கூட அப்படித்தான் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய மதம் சார்ந்த இசுலாமிய சகோதரத்துவம் இந்த உலகில் எப்போதும் இருந்ததில்லை. காரணம் ஒரு மனிதன் அல்லது சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை அல்லது மதத்தோடு தொடர்புடையவை அல்ல.

மேலும் குறிப்பிட்ட மக்களை ஒடுக்கும் இன-மத-ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளர்கள் அனைவரும் ஒடுக்குபவர்கள் குறித்த துவேசத்தை கிளப்புகிறார்கள். தேவையென்றால் அமெரிக்கா தன்னை இசுலாத்தின் புனிதனாக காட்டிக் கொள்ளும். தேவையில்லை என்றால் இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தைக் கண்டிக்கும்.

இப்படித்தான் இந்தியாவில், பார்ப்பன இந்துமதவெறி இயக்கங்களால் இந்த கிரிக்கெட் பிரச்சினையில் மதம் திணிக்கப்பட்டது. இந்திய முசுலீம்கள் அனைவரும் இந்துமதவெறியர்கள் உருவாக்கியிருக்கும் அவதூறுகளை அன்றாடம் சந்தித்தபடியேதான் வாழ்கிறார்கள். மேலும் குஜராத் போன்ற நாடறிந்த கலவரங்கள் வரும் போதும், அதில் இந்துமதவெறியர்களை ஜனநாயகத்தின் படியே தண்டிக்க முடியாது என்று இந்த நாட்டின் அரசியல்-நீதி அமைப்புகள் நிரூபிக்கும் போது ஒரு கோபம் கொண்ட இசுலாமிய இளைஞன் சுலபமாக தீவிரவாதத்தின் பக்கம் போக முடியும். அப்படி போக முடியாமலும், அதே நேரம் இந்த நாட்டின் மீது தனது அதிருப்தியை காட்ட வேண்டும் என்று விரும்பும் ஒரு இசுலாமிய இளைஞன் பாக் கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கை தட்டுவதற்கு வாய்ப்பிருப்பதை அனைவரும் உணர வேண்டும். எனினும் அப்படி அநேகம்பேர் கைதட்டுவதில்லை.

ஆனால் விளையாட்டில் அரசியலும், தேசபக்தியும் நுழைந்தது எப்படி?

இந்த உலகில் விளையாடப்படும் அனைத்து அணி விளையாட்டுகளிலும் அதன் போட்டிகளிலும் இத்தகைய சமூக, அரசியல் நிலைமைகள் காரணமாக ரசிகர்கள் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ செய்கின்றனர். ஏகாதிபத்தியங்களால் பிரிந்திருக்கும் உலகில் விளையாட்டுகள் மட்டும் ஒற்றுமையை ஏற்படுத்தி விடாது. கால்பந்து போட்டியில் அமெரிக்க அணியை ஈரான் அணி வென்றால் ஈரான் மக்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். ஜப்பான் அணியை சீனா வென்றால் அதன் மக்களும் கொண்டாடுவார்கள்.

ஈழப்போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசுக்கு உதவியாக இருக்கும் இந்தியாவை கண்டிக்க நினைக்கும் ஒரு ஈழத்தமிழர், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைப்பதற்கும் இதுவே காரணம். இப்படித்தான் காஷ்மீர் மக்களும் தங்களை ஆக்கிரமித்து கொன்றோ இல்லை சித்ரவதை செய்தோ நடத்தி வரும் இந்தியாவை இயல்பாக வெறுக்கிறார்கள். இங்கே இந்தியா என்பது அரசு-கட்சி-இராணுவம்-நீதி-நிர்வாக அமைப்புகளின் கட்டுமானத்தை குறிக்கிறதே அன்றி இந்திய மக்களை அல்ல.

மூவர்ணக் கொடி பறப்பது, ஜனகனமண பாடுவது, வீட்டில் பாரதமாதா படத்தை பூஜை செய்வதையெல்லாம் வைத்து தேசபக்தியை மதிப்பிடுவது பார்ப்பனிய மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. ஒருவகையில் இது அடக்குமுறைக்கான பாசிச கருத்தியலாகவும் விளங்குகிறது. உண்மையில் இந்திய தேசபக்தி என்பது அங்கு வாழும் மக்களின் துன்ப துயரங்களோடு தொடர்புடையது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் துயரத்தை பார்த்து நாம், ஆளும் வர்க்க இந்தியாவை கண்டிக்கிறோம்.

காஷ்மீர் இளைஞர்கள்
காஷ்மீர் இளைஞர்கள்

காஷ்மீரில் ஐந்தடிக்கு ஒரு இந்திய இராணுவத்தின் துப்பாக்கியை பார்த்து மிரண்டவாறே காலத்தை ஓட்டும் மக்களில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், வாழ்க்கையை இழந்தவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று ஏதாவது ஒரு பாதிப்பின்றி எவரும் இல்லை. மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் கிரமமாக தமது வாழ்க்கை வசதிகளுடன் வாழும் சூழலில் காஷ்மீரின் சூழலை பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒருக்கால் தேசபக்தி வெறி கொண்டு காஷ்மீரை நடத்துவதாக இருந்தால் முழு காஷ்மீர் மக்களையும் கொன்றால்தான் பள்ளத்தாக்கை இந்தியாவோடு இணைத்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பல மாநிலங்களில் மக்களே இருக்க முடியாது எனும் நிலையே உள்ளது. இந்நிலையில் ஒரு காஷ்மீர் மாணவன் கிரிக்கெட் போட்டியில் பாக்கை ஏன் ஆதரிப்பான் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ‘பயங்கரவாதத்தின்’ அபாயத்தை வரவேற்கிறீர்கள் என்று பொருள்.

காஷ்மீரில் இந்திய அரசின் அடக்குமுறை மட்டுமல்ல, அதை கேடாகப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானும் நிறைய தீங்கை இழைத்திருக்கின்றது. முக்கியமாக ஜனநாயக முறையில் இருந்த விடுதலை இயக்கங்களை மதவாதிகளாக மாற்றியது பாக்கின் சாதனை. என்றாலும் இந்தியா போன்று பாக் நேரடியாக காஷ்மீர் மக்களை ஒடுக்கவில்லை, இந்தியாவை அநேக நேரங்களில் எதிர்க்கிறது, போராட்டத்திற்கு உதவி செய்கிறது என்ற காரணங்களினால் காஷ்மீர் மக்களிடையே பாக் மீது ஒரு கரிசனம் இருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழகத்து மக்கள் மீது அப்படி ஒரு கரிசனம் இருப்பதை இதோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். அதனால்தான் சிங்கள இனவெறி அரசும் கூட ஏனைய இந்தியாவை ஆதரித்தும் தமிழகத்தை எதிர்த்தும் வருகிறது. ஆகவே ஒரு இனத்து மக்கள் தமது உயிர்வாழும் உரிமைக்கு ஆதரவானவர்களோடு இணக்கம் காண்பிப்பது இயல்பானது. இதை தேசபக்தியோடு முடிச்சுப் போடுவது அயோக்கியத்தனம்.

காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை. அத்தகைய முடிவு எடுக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தை ஆதரிப்போர் செய்ய வேண்டிய கடமை. இதில் அவர்கள் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அது அடக்குமுறை மூலம் சாத்தியமில்லை, அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதெல்லாம் பாசிஸ்டுகளுக்கு புரிவதில்லை. துப்பாக்கிகளின் பலத்தில் வாழ்பவர்களுக்கு அன்பும், தோழமையும் சமத்துவத்தின் மூலம்தான் வரும் என்பதெல்லாம் தெரியாது.

ஆக மீரட்டில் படிக்கும் ஒரு காஷ்மீர் மாணவன் பாக் அணியை ஆதரிக்கிறான் என்பதை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளாமல் அதன் சமூகப்பின்னணியை புரிந்து கொள்வதே அவசியம். ஆகையால் அது எந்தக்காலத்திலும் ஒரு குற்றமாக முடியாது. இதை இந்த அர்த்தத்தில் மட்டுமல்ல ஒரு விளையாட்டு என்ற கோணத்திலும் பார்க்கலாம்.

காஷ்மீர் மாணவியர்
காஷ்மீர் மாணவியர்

ஒரு விளையாட்டு போட்டியில் இரு நாட்டு அணிகளே போட்டியிட்டாலும் கூட ஒரு நாட்டு ரசிகன் தனது நாட்டைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. விளையாட்டை விளையாட்டாய் ரசிப்பவர்கள் எந்த நாட்டையும் ஆதரிக்கலாம், எந்த நாட்டு வீரருக்கும் ரசிகராக இருக்கலாம். இதையெல்லாம் தேசபக்தி அல்லது தேச துரோகத்தோடு முடிச்சுப்போடுவது அயோக்கியத்தனம். பொதுவில் விளையாட்டு என்பது மதம்,மொழி,இனம்,நாடு கடந்தது என்று சொல்லிவிட்டு நாடுவிட்டு நாடு ஆதரித்தால் மட்டும் தேச துரோகம் என்று சொல்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?

மீரட் பல்கலைக்கழகத்தில் இந்த பிரச்சினையை வேறு முறையில் கையாண்டிருக்க வேண்டும். காஷ்மீர் மாணவர்களை தாக்கிய பிற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அதே காஷ்மீர் மாணவர்கள் இந்தியா மீது ஒரு புதிய நம்பிக்கையை பெற்றிருக்க கூடும். மாறாக அவர்கள் இந்தியா மீது என்ன கோபத்தை கொண்டிருந்தார்களோ அதை பல்கலைக்கழக நிர்வாகம் அதிகப்படுத்தியிருக்கிறது.

ஊடகங்களிலும் நிர்வாகத்திற்கு ஆதரவான தேசபக்தி வன்முறையின் ஒளியிலேயே இந்த செய்தி வந்திருக்கிறது. பல ஊடகங்களில் இந்த செய்தி வரவே இல்லை. தினமணியில் இந்த செய்தியை பல்கலையின் பெயர் போடாமல் போட்டுவிட்டு துணை வேந்தர் அகமதுவின் கருத்தை மட்டும் கவனப்படுத்தி போட்டிருந்தார்கள். அதாவது ஒரு இசுலாமியர்,  காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக நாம் புரிந்து கொள்ள வேண்டுமான். இது குறித்து செய்தி வெளியிட்ட எந்த ஊடகங்களும் காஷ்மீர் மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டிக்கவில்லை. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம்.

என்னதான் தேசபக்தி என்று கூச்சமிட்டாலும், வல்லரசு என்று பெருமிதத்தை கடைவிரித்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டத்தை எவரும் அடக்கியதாக சரித்திரமில்லை.

காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.

இன்னும் புரியும் விதத்தில் சொல்வதாக இருந்தால் இந்திய அணியை தோற்கடித்த பாக் அணியின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.!
___________________

மேலும் படிக்க

மோடி : 24 X 7 தேசிய இம்சை !

24

நரேந்திர மோடி

யிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியான ஒரு கொலைகாரனை, ஒரு முட்டாளாகவோ கோமாளியாகவோ கருத முடியுமா என்று வாசகர்கள் எண்ணலாம். “கிரேட் டிக்டேடர்” என்ற திரைப்படத்தில் இட்லரையும் முசோலினியையும் பற்றிய சார்லி சாப்ளினின் சித்தரிப்பு, ஒரு பாசிஸ்டின் ஆளுமைக்குள் முட்டாள்தனமும் கோமாளித்தனமும் பிரிக்க முடியாமல் பிணைந்திருப்பதை நமக்குக் காட்டியது.

பின்னர் நாம் ஜார்ஜ் புஷ்ஷைப் பார்த்தோம். ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் போர் தொடுத்துப் பல இலட்சம் மக்களின் பேரழிவுக்குக் காரணமாக இருந்த புஷ் ஒரு அடி முட்டாள் என்பது, அவருடைய மனைவி லாரா புஷ் ஒருவரைத் தவிர, அநேகமாக மற்றெல்லோரும் அறிந்த உண்மையாகத்தான் இருந்தது. அதன்பின் ஒரு பாசிஸ்டு முட்டாளாக இருக்க முடியுமா என்ற கேள்வி மறைந்து, பாசிஸ்டுகளுக்கு முட்டாள்தனம் ஒரு முன்நிபந்தனையோவென்று தோன்றத் தொடங்கியது. புஷ் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராவதற்கு அவரது முட்டாள்தனமே ஒரு தகுதியாக மாறிவிட்டது.

05-modi-14தற்போது மோடியின் “அபரிமிதமான வளர்ச்சி’’யைப் பார்க்கும்போது, ஆளும் வர்க்கம் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பாதி கிரிமினல் புத்தியும் பாதி முட்டாள்தனமும் கலந்து உருவாக்கப்பட்ட நபர்களையே விரும்புகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. முன்னர் 23-ஆம் புலிகேசி போன்ற பென்சன் ராஜாக்களை “யுவர் எக்சலன்சி” என்று அழைத்து ஏற்றி விட்டு, நாட்டை அடிமை கொண்ட பிரிட்டிஷ்காரர்களின் உத்தியை இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் அச்சுப் பிசகாமல் கடைப்பிடிக்கிறதென்பது தெளிவாகிவிட்டது.

தொலைக்காட்சி, இணையம் எங்கும் மோடி விளம்பரம். நாளேடுகள், வாரப் பத்திரிகைகளைப் பிரித்தால் மோடி பற்றிய செய்தி. பிரிக்காவிட்டாலும் அட்டையில் மோடி. ஊடகங்களில் மோடிக்கு எதிரான செய்திகளைப் பிரசுரிக்க வேண்டாமென்று கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாகவே அழுத்தம் கொடுப்பதும், மீறி விமர்சிப்போர் களையெடுக்கப்படுவதும் தற்போது சந்தி சிரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்திலோ தினமணி, தினமலர், தினத்தந்தி முதல் ஜூனியர் விகடன், குமுதம் வரையிலான எல்லா பத்திரிகைகளும் பா.ஜ.க.வுக்கு கூட்டணி அமைத்துக் கொடுக்க புரோக்கர் வேலை பார்க்கின்றன. பிரபலமான 11 கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், காசு வாங்கிக் கொண்டு தேர்தல் கருத்துக் கணிப்பு செய்து கொடுக்கத் தயாராக இருப்பதை “நியூ எக்ஸ்பிரஸ்” என்ற தொலைக்காட்சி வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் 41% வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜூ.வி.-யில் திருமாவேலன் வெளியிட்ட கருத்துக் கணிப்பை வாசகர்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த வரிசையில் “மோடியின் பிரச்சார பீரங்கி” என்ற தலைப்பில் சமீபத்திய இந்தியா டுடே வார இதழ் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் கண்டுள்ளபடி பார்த்தால், மோடியின் பிரச்சாரம் ஒரு பிரம்மாண்டமான மசாலா சினிமாவின் தயாரிப்பை நினைவுபடுத்துவதுடன், தற்போது மேடைகளில் மோடி உச்சரிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையையும் நமக்கு அறியத் தருகிறது.

05-modi-15மோடியின் ஒவ்வொரு பேச்சுக்கான தரவுகளையும் 250 பேர்களைக் கொண்ட அணி மேற்கு அகமதாபாத்தில் உள்ள ஒரு பாசறையில் உருவாக்குகிறதாம். பிறகு அதை வைத்து 12 பேர் அடங்கிய ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் பேச்சைத் தயாரிக்கிறார்களாம். பிறகு அதனை மோடியின் நிர்வாக செயலர் கைலாஷ் நாதன் ஐ.ஏ.எஸ். சரி செய்து மோடியிடம் ஒப்படைப்பாராம். அப்புறம் அதில் மோடி கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்ல ஒரு தனிச்செயலர், அந்தந்த மாநிலத்துக்குரிய மக்கள் தொடர்பு ஆலோசகர் … என இந்தப் பட்டாளம் விரிகிறது. போதாக்குறைக்கு மோடியின் வெற்றிக்கு உழைப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பல நிதிமூலதன நிறுவனங்களின் உயரதிகாரிகள் தம் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்திருக்கிறார்களாம்.

“கூட்டங்களின் செய்தி வேண்டுமானால் விவாதத்துக்கு உரியதாக இருக்கலாம். ஆனால், அது ஒரு கலையாக வடிவமைக்கப்பட்டுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறது இந்தியா டுடே. இதைவிடத் தெளிவாக யாரேனும் உண்மையை உரைக்க முடியுமா?

ஆக, மோடியின் பேச்சு என்பது இவ்வளவு “அறிஞர் பெருமக்கள்” சேர்ந்து வைத்த குழம்பு! இதில் மோடியின் பாத்திரம் என்ன என்று கேட்டால், பாத்திரம் என்பதுதான் பதில். அந்த குழம்பைத் தாங்கி நிற்கும் சட்டிதான் மோடி. எம்.ஜி.ஆர். வாயசைத்த காரணத்தினால் பட்டுக்கோட்டையார் பாட்டு எம்.ஜி.ஆர். பாட்டாக மாறியதைப் போல, மண்டபத்தில் எழுதிக் கொடுத்த பேச்சு, மோடியின் பேச்சாகி, அதுவே பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

மோடியின் ஒவ்வொரு மேடைப்பேச்சும் எப்படி அமைக்கப்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறது இந்தியா டுடே. முதலில் கூட்டத்தினரின் மொழியில் பேசி, கேட்க வந்த மக்கள் பெருமைமிக்கவர்கள் என்பதை அவர் உணர்த்துவாராம். பிறகு உள்ளூர் பிரச்சினைகள் சிலவற்றைப் பற்றி பேசிவிட்டு, அப்படியே குஜராத்தில் எப்படி பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று மறைமுகமாகக் கோடி காட்டுவாராம். அப்புறம் காங்கிரசு அரசின் திறமையின்மை பற்றி நக்கலாகப் பேசி, தனக்கு வாய்ப்பு கொடுத்தால் உன்னதமான எதிர்காலம் இருக்கிறது என்று கூறிவிட்டு, இறுதியில் கூட்டத்துக்கு வந்த மக்களின் அருமை பெருமையை இன்னொரு முறை கூறி பேச்சை முடிப்பாராம்.

இதைத்தானே தேர்தல்தோறும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நைந்துபோன இந்த சரக்கைத் தயாரித்து மேடையேற்றுவதற்குத்தான் 250+12 வல்லுநர்கள், பாசறைகள், கணினி, லேப்டாப், தனி விமானம், கருப்புப் பூனை, ஐ.டி பட்டாளமாம்! “இந்திய வரலாறு காணாத அதிரடியான பிரதமர் வேட்பாளர் பிரச்சாரம்” என்று இந்தியா டுடே – வால் வியந்துரைக்கப் படும் மோடியின் பிரச்சார உரைகளுடைய யோக்கியதையைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போம்.

05-modi-16

வட இந்திய அரசியல்வாதிகள் உள்ளூர் மொழியில் இரண்டு வார்த்தை பேசி தமது பேச்சைத் தொடங்குவதும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்குப் போனால், கோழி இறகு, மயில் இறகு போன்றவற்றைத் தலையில் செருகிக் கொண்டு அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் காலாவதியாகிப்போன ஒரு பழைய உத்தி. இது போதாதென்று கருதியதனாலோ என்னவோ மோடி படைப்பூக்கத்துடன் சிந்தித்து தன் உரையைத் தொடங்குகிறார்.

சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றிருந்த மோடி, அம்மாநிலத்தில் உள்ள ஆடி என்ற இனக்குழுவில் மோடி என்றொரு வம்சத்தினர் இருப்பதைச் சுட்டிக்காட்டி, “உங்களுக்கும் என் குடும்பத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது; அதை வரலாற்று ஆய்வாளர்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும்” என்றார். அப்புறம், “கிருஷ்ணன் எங்கள் ஊர், ருக்மணி உங்கள் ஊர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது நமது உறவு” என்று அடித்துவிட்டார். ருக்மணி ஜென்ம பூமி என்று ஏதாவது இடத்தை வளைத்துவிடப் போகிறார்கள் என்று அந்த மக்கள் பீதியடைந்திருக்கக்கூடும். அப்புறம், “சூரியன் உங்கள் ஊரில் உதயமாகி எங்கள் ஊரில்தான் மறைகிறது” என்று ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அடித்துவிட்டார். லேகிய வியாபாரியின் பேச்சை ஒத்த இந்த நாலாந்தரப் பேச்சுகளெல்லாம் உள்ளூர் மக்களுடன் ஐக்கியமாகும் மோடி வித்தைகளாம்.

அடுத்து ஒரிசாவுக்குச் சென்றார். “எங்கள் ஊரில் சோம்நாத். உங்கள் ஊரில் ஜெகந்நாத். ஜெய் ஜெகந்நாத்” என்று கூவி ஒரே வரியில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டினார். கருமை மூன்றெழுத்து, அருமை மூன்றெழுத்து, எருமை மூன்றெழுத்து என்ற விளங்காத அடுக்குமொழியை எத்தனை காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதே டெக்னிக்தான்.

05-modi-17

அத்தோடு முடித்துக் கொண்டிருந்தால் பரவாயில்லை. வருங்கால பாரதப் பிரதமர் என்ற முறையில் வரலாற்றையும் அவர் ஒரு கை பார்க்க வேண்டியிருக்கிறதே. பீகாருக்குப் போனார். தன்னைக் கூட்டணியிலிருந்து கழற்றி விட்டுவிட்ட நிதிஷ்குமாரிடமிருந்து பீகார் மக்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்க வரலாறைக் கையில் எடுத்தார். ஆர்.எஸ்.எஸ்.காரன் கையில் சிக்கிய வரலாறு கழுதை வாயில் சிக்கிய காகிதம் என்பது தெரிந்த கதைதானே. “பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்றார். “பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு வந்தவழியே திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது கங்கைக்கரையில் நம்மோடு சண்டை போட்டான்?” என்று மக்கள் யோசித்து முடிப்பதற்குள், அடுத்த குண்டை வீசினார். “மாபெரும் கல்வி மையமான தட்சசீலம் உங்கள் ஊரில் இருக்கிறது” என்று கூறி பிகாரிகளை பாகிஸ்தானியர்களாக்கினார். மவுரிய வம்சத்தை சேர்ந்த சந்திரகுப்தனை குப்த வம்ச மன்னன் என்று அடித்துக் கூறினார்.

இதுபோன்ற பிதற்றல்கள் அதிகரிக்கவே மோடி விவரம் புரியாமல் வரலாற்றுடன் விளையாடுவதாக காங்கிரசுக்காரர்கள் கேலி செய்தனர். ஆத்திரமுற்ற மோடி, “யார் வரலாறுடன் விளையாடுகிறார்கள்? 1930-இல் இலண்டனில் இறந்துபோன, விவேகானந்தரின் நெருங்கிய நண்பரான சியாமா பிரசாத் முகர்ஜியின் சாம்பலைக் கொண்டு வர நேரு ஏன் முயற்சிக்கவில்லை? அதை நான் அல்லவா கொண்டு வந்தேன்” என்று குஜராத்தில் முழங்கினார். சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பாரதிய ஜனதாக் கட்சியின் தாய்க்கழகமான ஜனசங்கத்தை 1951-இல் நிறுவியவர். 1901-இல் பிறந்து 1953-இல் காஷ்மீரில் இறந்தவர். விவேகானந்தரோ 1902-இல் இறந்தவர். மோடியின் வாயில் சிக்கிய அவருடைய சொந்தக் கட்சியின் வரலாறும், தலைவரின் வரலாறும் கழுதை வாய்க் காகிதமாகிவிட்டது. ஒரே வரியில் எண்ணிலடங்காத உளறல்கள்! இதைத் தயாரித்துக் கொடுப்பதற்கு பாசறையாம், வல்லுநர்களாம்!

“என் வேட்டி அவுந்ததுகூடத் தெரியாம நீங்க என்னடா பண்ணிக்கிட்டிருந்தீங்க?” என்று தனது கைத்தடிகளைக் கேட்கும் வடிவேலுவைப் போல, வல்லுநர்களை மோடி வறுத்திருக்கக்கூடும். மோடிக்காக போலி என்கவுன்டர்களை நடத்திவிட்டுச் சிறையில் கிடக்கும் வன்சாராவைப் போல, இப்படி உரை தயாரித்துக் கொடுத்து தனது மானத்தை வாங்கிய “கொல்லர்களை”ப் புலிகேசி நாளை சிறையில் அடைக்கவும் கூடும்.

05-modi-18

போகின்ற மாநிலங்களிலெல்லாம் உள்ளூர் பிரச்சினைகளைக் கூறி, அப்படியே நாசூக்காக குஜராத்தின் அருமை பெருமைகளை அடித்து விடவேண்டும் என்று மோடிக்கு ஆசைதான். இருந்தாலும், காங்கிரசு ஆளும் மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் அப்படிப் பேசமுடியாத ஒரு நிலைமை! தனிப்பெரும்பான்மை கிடைக்காதென்பதால், பிரதமராவதற்கு எப்படியும் பலர் காலில் விழ வேண்டியிருக்கும் என்பது மோடிக்குத் தெரியாததல்ல. அதனால்தான் மே.வங்கத்துக்கு சென்ற மோடி மம்தாவைப் பாராட்டி விட்டு, போதாக்குறைக்கு “2004- இல் பிரணாப் முகர்ஜியை காங்கிரசு கட்சி பிரதமராக்காதது ஏன்?” என்று கேட்டு வங்காளி உணர்வையும் தட்டிவிட்டு ஓட்டாக்கப் பார்த்தார். “வங்கத்தில் மம்தா, டில்லியில் நான், தலைமையில் பிரணாப் முகர்ஜி இருந்தால் எப்படி இருக்கும்?” என்று வாயில் எச்சில் ஒழுகப் பேசினார். “மொழிவாரி மாநிலங்களைப் பிரித்ததே காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சிதான்” என்று அவர் திருச்சியில் பேசியது நினைவிருக்கிறதா? அது வேறவாய்; வங்காளத்தில் பேசியது நாறவாய்!

தனது எதிர்காலக் கூட்டாளியாகப் போகின்ற ஜெயலலிதாவை அனுசரித்துப் போகவேண்டும் என்பதில் மோடி எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், பிரதமர் பதவியில் மட்டுமின்றி, வேறு பல விசயங்களிலும் இருவருக்குமிடையே பலத்த போட்டியும் இருக்கத்தான் செய்கிறது.

05-modi-19

“நான் ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் தூங்குகிறேன்” என்று எல்லா கூட்டங்களிலும்சொல்வார் மோடி. “உங்கள் அன்புச் சகோதரி நாளொன்றுக்கு 22 மணி நேரம் உங்களுக்காக உழைக்கிறாள்” என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தன்னுடைய தூக்கம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. “குஜராத்தின் லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்கு நான் சொல்கின்ற ஆளைத்தான் நீதிபதியாகப் போட வேண்டும். அந்த நீதிபதிக்கும் என்னை (முதல்வரை) விசாரிக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது” என்று கூறி, 2002 முதல் வழக்கு நடத்தி இழுத்தடித்து வருகிறார் மோடி. அம்மாவோ 1997- இலிருந்து சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் வரலாறு படைத்தவர். “நான் சொல்கின்ற அரசு வக்கீல்தான் எனக்கு எதிராக வழக்கு நடத்த வேண்டும். நான் சொல்கின்ற நீதிபதிதான் என்னை விசாரிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி கண்டவர்.

“குஜராத்தான் நம்பர் ஒன்” என்று மோடி ஒருபுறம் சோல்லிக் கொண்டிருக்க, “முதலீடுகளை ஈர்ப்பதில் கடந்த 4 ஆண்டுகளில் குஜராத்தை விடத் தமிழகம் முன்னணியில் இருக்கிறது” என்று நைசாகக் குத்தியிருக்கிறார் ஜெயலலிதா. இது கிரேட் டிக்டேட்டர் படத்தில் வரும் இட்லர், முசோலினி சந்திப்பு காட்சியில் இரண்டு அற்பர்களும் போட்டி போட்டுத் தத்தம் நாற்காலிகளின் உயரத்தை அதிகரித்துக் கொண்டு, “உன்னை விட நான் பெரியவன்” என்று காட்டிக்கொள்ளும் காட்சியை நமக்கு நினைவூட்டுகிறது.

மம்தா, ஜெயாவை மட்டுமல்ல; யார் தயவு தேவைப்படும் என்று அனுமானிக்க முடியாதாகையால், எந்த மாநிலக் கட்சியையும் மோடியால் தாக்கிப் பேச முடியாது. காங்கிரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த கொள்கை வேறுபாடும் இல்லாத காரணத்தால், காங்கிரசின் கொள்கைகளையும் தாக்க முடியாது. ஆகவே, “க-வுக்கு க, ப-வுக்கு ப” என்ற டி.ராஜேந்தர் பாணியில் பஞ்ச் டயலாக்குகளை இறக்குகிறார் மோடி.

“ஹார்வர்டா, ஹார்டு ஒர்க்கா பார்த்து விடுவோம்” என்று சிதம்பரத்துக்குச் சவால் விடுகிறார். “60 ஆண்டுகள் காங்கிரசிடம் ஆட்சியைக் கொடுத்தீர்கள், 60 மாதங்கள் என்னிடம் கொடுங்கள்” என்று கெஞ்சுகிறார். மோடியின் வாயில் விழுந்த எல்லா புள்ளிவிவரங்களும் லாரியில் சிக்கிய நாயின் கதிக்கு ஆளாகின்றன. “வாஜ்பாயி 6 ஆண்டு ஆட்சியில் 6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்” என்று கான்பூரில் பேசினார் மோடி. இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது. “ஆறுக்குஆறு” – அவ்வளவுதான். (இதே 6 ஆண்டுகளில் வாஜ்பாயி 1.16 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார் என்று சென்னையில் மோடி கூட்டத்தில் பேசியிருக்கிறார், எச்.ராசா)

காங்கிரசு அரசு சி.பி.ஐ. மூலம் தனது அரசியல் எதிரிகளை வேவு பார்க்கிறது என்றும், சி.பி.ஐ. என்பது, ‘காங்கிரசு பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ என்றும் போகுமிடம் எல்லாம் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் மோடி. மான்சி சோனி என்ற பெங்களூரு பெண்ணுடன் மோடி கள்ளத் தொடர்பு வைத்திருந்ததும், அந்தப் பெண்ணைத் துரத்தி, அவள் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு, வேறு ஆணுடன் பழகுகிறாளா என்று மோப்பம் பிடித்துத் தனக்குத் தகவல் சொல்லுகின்ற (மாமா) வேலைக்கு, குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு அதிரடிப்படை, குற்றப்பிரிவு, உளவுத்துறை ஆகியவற்றின் ஏட்டு முதல் எஸ்.பி. வரையிலான அதிகாரிகளையும் மோடி பயன்படுத்தினார் என்பதை நிறுவும் தொலைபேசி ஒலிப்பதிவுகளும் வெளிவந்து சந்தி சிரித்துவிட்டன. அத்தோடு முடிந்தது சி.பி.ஐ. பேச்சு.

“சும்மா ஊழல், ஊழல் என்று பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை. நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சியைச் சமாளிக்க உதார் விட்டார். “அம்பானியின் சுவிஸ் வங்கி கணக்கு எண் இதோ இருக்கிறது. என்ன சொல்கிறாய்?” என்று மோடிக்கு கேள்வி எழுப்பினார் கேஜ்ரிவால். அத்தோடு கருப்புப் பணம் பற்றிய பேச்சையும் தலைமுழுகிவிட்டார் மோடி.

டில்லி வெற்றியைத் தொடர்ந்து ஆம் ஆத்மியின் செல்வாக்கு பரவத்தொடங்கவே, தானும் ஒரு ஆம் ஆத்மிதான் என்று நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு மோடி தள்ளப்பட்டுவிட்டார். “மோடிக்கு அரசியலும் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது; டீ விற்கத்தான் தெரியும்” என்று மணி சங்கர் ஐயர் பேசியதை கப்பென்று பிடித்துக் கொண்டார் மோடி. “பாசி மணி ஊசியெல்லாம் விப்போமுங்க, காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்” என்ற பாட்டைப் போல, “நான் டீ விற்பேனே தவிர, நாட்டை விற்க மாட்டேன்” என்று பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டார். “நாட்டின் எரிவாயுவை அடிமாட்டு விலைக்கு அம்பானிக்கு விற்றதைப் பற்றி மோடி என்ன சொல்கிறார்?” என்று கேட்டது ஆம் ஆத்மி. அத்தோடு பஞ்ச் டயலாக்குக்கும் இறங்கியது ஆப்பு.

அம்பானி, டாடாக்களுடன் டிசைனர் உடை, டிசைனர் தாடியில் தோன்றிக் கொண்டிருந்த மோடியின் பிம்பத்தை மாற்றி அவரும் “ஆம் ஆத்மிதான்” (எளிய மனிதன்தான்) என்று நம்பவைக்க வேண்டுமானால் “மோடி டீ குடிப்பதை உலகமே பார்க்கச் செய்வதுதான் ஒரே வழி” என்று முடிவு செய்த அவருடைய வல்லுநர் குழு, “சாய் பே சர்ச்சா” (டீக்கடை பெஞ்சு) என்ற “லைவ் டெலிகாஸ்டை” அரங்கேற்றியது. அன்று மோடி குடித்த ஒரு டீக்கான செலவு 250 கோடி ரூபாய்.

05-modi-20

உடனே இந்த “கான்செப்டை” காக்கி அரை டவுசர்கள் பிடித்துக் கொண்டார்கள். கார்கில் விநாயகர், கசாப் விநாயகர் என்று விநாயகரை டெவலப் செய்தது போல, ஆங்காங்கே மோடி டீக்கடை திறந்தார்கள். அடுத்து மோடி மீன்கடை. “மோடி பிரதமரானால், சிங்களப் படையின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காப்போம்” என்று கையில் வஞ்சிர மீனுடன் மூக்கைப் பிடித்துக் கொண்டு முழங்குகிறார் இல. கணேசன். வாக்காளர்களில் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அடுத்து “மோடி சாராயக்கடை”யையோ, குறைந்தபட்சம் சாக்கனாக் கடையையோ விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஏழைப்பங்காளன் அவதாரம் ஒரு புறம், இன்னொருபுறம் சூத்திர அவதாரம். 1980-களின் துவக்கத்தில் குஜராத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்தையும், தலித்துகளுக்கு எதிரான வன்முறையையும் தலைமை தாங்கிய நடத்திய மோடி, “அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பறிக்க சதி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோரின் குரல் ஓங்கி ஒலிக்கும்” என்று கொச்சியில் புலையர் சங்க மாநாட்டில் தேனொழுகப் பேசியிருக்கிறார். உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் ஓட்டுப் பொறுக்குவதற்காக, மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர் என்ற பிரச்சாரம் நடக்கிறது. அது மட்டுமல்ல, கன்சிராமுக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்ற கோரிக்கையையும் உ.பி. மாநில பாரதிய ஜனதாக் கட்சி முன்வைத்துள்ளது.

தான் முஸ்லிம்களின் எதிரி அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, வாடகைக்குப் பிடித்த ஆட்களுக்கு குல்லா போட்டு விட்டு முன்வரிசையில் உட்கார வைத்தார். ஹோல்சேலில் குல்லா கொள்முதல் செய்த பில் வெளிவந்து குட்டு உடைந்து விட்டது. “கோயிலைவிட கக்கூசுதான் முக்கியம்” என்று அதிரடியாகப் பேசி, தான் மாறி விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். “அப்புறம் 2500 கோடி ரூபாய்க்கு படேலுக்கு எதற்கு சிலை வைக்கிறா? அந்தக் காசுக்கு கக்கூசு கட்ட வேண்டியதுதானே” என்று அடித்த பந்து மோடிக்கே திரும்பி வந்தது. “இனி வெக்கமானம் பார்த்தால் வேலைக்கு ஆகாது” என்று முடிவு செய்த ராஜ்நாத் சிங், “கடந்த காலத்தில் செய்த எல்லா தவறுகளுக்கும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதாக” இப்போது அறிவித்திருக்கிறார்.

மோடியின் வல்லுநர் படை அவருக்கு மட்டும் வேசம் போடவில்லை. அசந்தால் ஒபாமாவுக்கே பவுடர் போடுகிறது. எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் உரையைத் தொலைக்காட்சியில் ஒபாமா பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை உல்டா செய்து, மோடியின் உரையை ஒபாமா பார்க்கிறார் என்று பரப்பியது. குட்டும் உடைந்தது. எம்.ஜி.ஆர். – சிவாஜி போன்ற எல்லா நட்சத்திரங்களுக்கும் ரேகை பார்க்கும் படத்தை மாட்டி வைத்திருக்கும் ஜோசியக்காரனைப் போல, அமிதாப்பும் ரஜினியும் மோடியை ஆதரிப்பது போல வீடியோ, புகைப்பட உல்டாக்களை இறக்கவே, அவர்களே அதனை மறுத்தார்கள். இதற்காகவெல்லாம் காக்கி அரைடவுசர்கள் வெட்கப்படவில்லை. அடுத்தது டென்டுல்கரின் மகள் பெயரில் டிவிட்டர் தளத்தை உருவாக்கி, மோடியை அவர் ஆதரிப்பதாக அதில் எழுதினார்கள். “என் மகளுக்கு டுவிட்டர் கணக்கே இல்லை” என்று டென்டுல்கரே அறிவிக்க வேண்டியதாயிற்று.

“வளர்ச்சி நாயகன், டீக்கடைக்காரர், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதி என்று எந்த தரப்பினருக்கு எது பொருத்தமாக இருக்குமோ, அதற்கேற்ப மோடி பல முகங்களைப் பிரித்துக் கொண்டுள்ளார்” என்று மோடியின் இத்தகைய அருவெறுப்பான கழைக்கூத்துகளுக்கு சென்ட் அடித்து, ஜிகினா சொற்களில் விவரிக்கிறது, இந்தியா டுடே.

05-modi-21

தனது ஆண்மையைப் பறைசாற்றிக் கொண்டார் மோடி. “எல்லோராலும் குஜராத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கு 56 அங்குலம் கொண்ட மார்பு தேவைப்படுகிறது” என்று உ.பி.யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பீற்றிக் கொண்டார் மோடி. எத்தனை கிராம் எடையுள்ள மூளை தேவை என்பது பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. ஏனென்றால், பயில்வானின் உடல் மீது தன் தலையை ஒட்ட வைத்து வரலாற்றில் இடம்பெற முயற்சிக்கும் 23-ஆம் புலிகேசியின் நடவடிக்கைக்கும் மோடியின் பிரச்சார உத்திகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

“சரி, நீங்கள் பிரதமரானால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு ஐந்து டி” (technology, talent, tourism, trade, tradition š தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம், பாரம்பரியம்) என்று கையை விரித்துக் காட்டுகிறார் மோடி. அதில், தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம் என்ற முதல் நான்கு விரல்களும் தரகு முதலாளிகளின் நலனுக்கானவை. ஐந்தாவதாகக் கூறப்படும் பாரம்பரியம் என்பது கட்டைவிரல் – அது பார்ப்பனியத்துக்கானது. மோடி ஆட்சிக்கு வந்தால் இந்த ஐந்து விரல்களும் உழைக்கும் மக்களுக்கு எதிராக மடக்கப்படும். அதுதான் பார்ப்பன பாசிசம்.

– தொரட்டி
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

சர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் !

8

சில நாட்களுக்கு முன் பெங்களூரு ஐபிஎம் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்ட செய்தியை பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் நினைவுக்கு வந்தது என் கல்லூரி கால நண்பன் மகேஷ் தான்.

ஐ.பி.எம்மகேஷும் நானும் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒன்றாகவே சுமார் 2 வருடம் வேலை தேடினோம். அவன் முதலில் டிசிஎஸ் நிறுவனத்தில் தான் வேலைக்குச் சேர்ந்தான். சில வருடங்களில் தொடர்பில்லாமல் போனது. பின்பு அவனது திருமணத்திற்கு அழைப்பதற்காக என்னைத் தொடர்புக் கொண்ட போது தான், அவன் ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பது தெரிந்தது.

மகேஷை அறிவாளி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராக படிப்பான், ஆனால் அபார கடவுள் நம்பிக்கை உள்ளவன். எப்பொழுதும் ஏதாவது மந்திரம் சொல்லியபடியே தான் இருப்பான். பரீட்சைக்கு முன் கலர் கலராக பல கயிறுகளை கையில் கட்டியிருப்பான். செமஸ்டர் கடைசி பரீட்சை முடிந்தவுடன் ஒரு கயிறையும் பார்க்க முடியாது. அவனுக்கு எல்லாம் அதிர்ஷ்டத்தால் தான் நடக்கிறது என்று நம்பிக்கை.

ஆனால் நான் கவனித்த வரை அவனிடம் சில ஆளுமைகள் இருந்தன. முதலில் அருமையான ஆங்கிலப் புலமை. இரண்டாவது எதையும் சுலபமாகவும், மற்றவருக்கு எளிமையாகவும் புரியும்படி விளக்குவான். தான் செய்யாத ப்ரொஜக்ட்டை பற்றி கூட இரண்டொரு வரிகள் படித்துவிட்டு, அவன் ஈடுபாட்டுடன் செய்ததை போல் அருமையாக விளக்கி விடுவான். இது போதாதா, ஐடி துறையில் பிழைக்க. ஆனால் அவனை கேட்டால் தாயத்து, வேண்டுதல்களால் தான் தனக்கு நன்மைகள் நடக்கிறது என்று கூறுவான்.

அவனிடம் பேசியும் பல மாதங்கள் ஆகிவிட்டது. எப்பொழுதாவது விழாக்களில் சந்திப்பதோடு சரி. போனில் பேசினாலும் அவன் வேண்டுதல்களின் புராணங்கள் குறித்தே அறுப்பான் என்பதால் பெரும்பாலும் பேசுவதை தவிர்த்து விடுவேன்.

இந்த முறை ஐபிஎம் வேலை நீக்கம் செய்தி பார்த்ததால் அவனை போனில் அழைத்தேன்..

அவன் போனை எடுக்கவில்லை. சிறிது நேரம் முயற்சிக்கு பின் என் இன்னொரு கல்லூரி நண்பன் பிரேமை அழைத்தேன். அவனும் பெங்களூரில் விப்ரோ நிறுவனத்தில் தான் பணிபுரிகிறான். அவனும், மகேஷும் மிகவும் இணக்கம்.

பிரேமை அழைத்து மகேஷ் ஏன் போன் எடுக்கவில்லை என்று கேட்டது தான்.

“எடுக்கலையா? அவன் அப்படித் தான் இருக்கான். வேலை போயிடிச்சுல்ல. அதான். அவனுக்கு வேலை போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் குழந்தை வேற பொறந்தது. ஒரு வேளை ஆஸ்பிடல்ல இருப்பான், டிரை பண்ணு. எடுத்தா எனக்கும் கூப்பிட சொல்லு” என்றான்.

வேலை போன பல பேரில் மகேஷும் ஒருவனா? சரி சரி குழந்தை பிறந்திருக்கிறது வாழ்த்துவோம், வேலை போனதை பற்றி ஆறுதலாக பேசுவோம், என்று விடாப்பிடியாக அவனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். சில அழைப்புகளுக்கு பின் எடுத்தான்.

“சொல்லுடா” என்றான் சற்றே அழுத்தமாக.

நான் சாதாரணமாக பேசினேன்.

குழந்தையை பற்றி விசாரித்தேன். “நார்மலா சிசேரியனா” என்று கேட்டேன்.

“சிசேரியன்” என்றான்.

“ஏதாவது காம்பிளிகேஷனா”

“இல்ல இல்ல, எங்க வீட்ல நார்மலா இருந்தாலும் சரி இல்லையானாலும், சரி நாள் நட்சத்திரம், நேரம் பார்த்து சிசேரியன் தான் செய்வோம். என் தங்கச்சிக்கும் அப்படி தான். இந்த குழந்தைக்கும் அப்படி தான். குழந்த பொறக்குற நேரம் முக்கியம் இல்லையா?” என்றான்

சர்ப்ப தோசம்
சர்ப்ப தோசம்

எனக்கு பல வருடங்களுக்கு முன்னால் பல வண்ண கயிறுகள் நினைவுக்கு வந்தது. சற்றே கோபம் கூட. சிசேரியன் செய்தால் அந்த பெண் பழையபடி எல்லா வேலையிலும் சாதரணமாக ஈடுபட முடியாது, ஏதோ சிக்கல் என்று மருத்துவர் மடிவெடுத்து செய்தால் பரவாயில்லை நேரம், நட்சத்திரதிற்கெல்லாமா இப்படி செய்வார்கள்?

கோபத்தை அடக்கிக் கொண்டு சரி வேலை இழந்தவன், ஆறுதலாக பேசுவோம் என தொடர்ந்தேன்.

“நான் பிரேம் கிட்ட பேசுனேன்.”

அவனுக்கு சட்டேன்று புரிந்திருக்கும் போல. “ஆமான்டா காஸ்ட் கட்டிங்ல வேலை போய்டிச்சு”

அவன் வருத்தப்படுவது தெரிந்தது. நான் தொடர்ந்தேன்

“விடுடா. உனக்கு திறமை இருக்கு, எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. வேற கம்பனியில வேலை கிடைச்சிடும். வெளிய ட்ரை பண்ற இல்ல, நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?”

“இல்ல டா நான் எங்கேயும் ட்ரை பண்ணல. எப்படியும் ட்ரை பண்ணாலும் கிடைக்காது. 6 மாசத்துக்கு எனக்கு ஸர்ப்ப தோஷம் இருக்காம். தோஷம் கழிஞ்சதுக்கப்புறம் தான் வேல தேடப் போறேன்” என்றான்.

“நீ திருந்த மாட்டே. சரி அத விடு, கொழந்த எப்படி இருக்கு?”

“நல்லா இருக்குன்னு அம்மா சொன்னாங்க”

“அம்மா சொன்னாங்களா, நீ போயி பாக்கலையா?”

“இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”

“என்னடா முட்டாள் மாதிரி பேசுர?”

“அப்படி சொல்லாத, நானும் மொதல்ல நம்பல. ஆனா பாரு குழந்தை பொறந்த ரெண்டாவது நாள் டக்குனு வேலை போயிடிச்சு. அதுகப்புறம் தான் நானும் நம்பினேன்.”

எனக்கு எரிச்சல் தலைக்கேறியது.

“ஏன்டா உனக்கு வேல போக க்ளோபலைசேஷன், காஸ்ட் கட்டிங், அவுட்சோர்ஸிங்ன்னு ஆயிரம் காரணம் இருக்கு. பொறந்த குழந்த மேலே ஏண்டா பழி போடுற?”

தோச பரிகாரம்“நீ எப்பவுமே இப்படி தான். சொன்னா நம்ப மாட்டே”

“நம்புற மாதிரி ஏதாவது எப்பவாது சொல்லி இருக்கியா. சரி எப்ப தான் கொழந்தையா போய் பாக்க போற? “

“தோஷம் கழிஞ்சப்புறம்” என்றான்

“தோஷ்ம் எப்ப கழியும்?”

மொதல்ல ஸர்ப்ப தோஷம் கழிக்க காளஹஸ்திரியில போய் ராகு கேது நிவர்த்தி பண்ணனும். அப்புறம் குழந்த பொறந்த தோஷம் கழிய சில பூஜைகள் பண்ணனும். எப்படியும் ஆறு மாசம் கழிச்சு தான் போவேன்.”

“தோஷம் கழிக்க ஆறு மாசம் ஆகுமா?”

“ஆமா அப்படி தான் ஜோஸியர் சொன்னாரு.”

“டே உன் குழந்தைய பாக்க ஜோசியர் யார்ரா நாட்டாமை..”

கொஞ்ச நேரம் மகேஷ் அமைதியாய் இருந்தான். அப்புறம் சற்று எரிச்சலுடன் பேசினான்.

“நீ  நம்ப மாட்டே, ஆனா நான் நம்புறேன். எனக்கு வேல கிடைக்கும்னு ஜோசியர் சொன்னாரு கிடைச்சுது, சம்பளம் ஏறும்ன்னு சொன்னாரு ஏறுச்சு, இப்ப தோஷம்ன்னு சொன்னாரு, வேலை போயிடுச்சு. இத விட வேற என்ன ப்ரூஃப் வேணும். தோஷம் கழிச்சா எனக்கு நல்லது நடக்கும்ன்னு சொல்றாரு. நம்பறேன்.”

“அவர் ஒன்ணும் சாதாரண ஜோசியர் இல்ல. என் முன் ஜன்மத்தையே கணிச்சு கரக்ட்டா சொல்றாரு. அவருக்கு எப்படி என் முன் ஜென்மம் பத்தியெல்லாம் தெரியுது ?”

எனக்கு கோபம் தலைக்கேறியது. இவனுக்கெல்லாம் ஐடி கம்பெனியில எப்படி வேல கொடுத்தாங்க, இவன் எஞ்சினியரிங் ஏன் படிச்சான் என்று நினைத்து கொண்டேன். சரி, இன்ஜினியரிங், ஐ.டின்னாலே முற்போக்குன்னு அர்த்தமா என்று நீங்கள் கேட்கலாம். அப்படி இல்லைதான். ஆனால் அறிவியல், பொறியியல் எல்லாம் ஷார்ப்பா கற்றுக் கொண்டதாக பெருமையடித்து விட்டு இப்படி சாமியாடினால் யாருக்குத்தான் கோபம் வராது? சரி போகட்டும் என்று சமாதானம் செய்து கொண்டாலும் அவன் சொன்ன முன் ஜென்மம் கதை கொஞ்சம் என்னை அசைத்தது.

“இரு இரு. என்ன முன் ஜென்மமா?” என்று இழுத்தேன்

“ஆமான்டா, முன் ஜென்மத்துல நான் ஒரு பண்ணையாரா இருதேனாம். அப்போ பல வேலையாட்கள கொடுமை படுத்தினேனாம். அவங்க அழுகை என்ன சுத்துதாம். அவங்க ஆன்மாவை சமாதானப் படுத்தினால் என் தோஷம் நீங்கும். அதனால் ஒரு பூஜை பண்ணனும்.”

“பூஜையா என்ன பூஜை”

“அதை பத்தி எனக்கு தெரியாது என் ஜோசிய காரர் 50,000 ரூபாய் கொடுக்க சொன்னார், பூஜையை அவர் பாத்துக்குவார். நான் அந்த நேரம் திருநள்ளாறு கோயில்ல இருக்கனும்.”

“இது என்ன சனி தோஷ நிவர்த்தியா ?”

“எனக்கு தெரியாது ஜோசியர் சொன்னார்.”

“ஏன்டா இதையெல்லாமா நம்புற?”

“நம்பி தான் ஆகணும், வேலை போயிடிச்சுல்ல”

“டேய் திரும்பவும்… வேலை போனதுக்கு க்ளொபல் எகனிமிக் க்ரைசிஸ் அது இதுன்னு ஆயிரம் காரணம் இருக்கு. இந்த முன் ஜென்மம் பண்ணையாரு கதையெல்லாம் டூ மச்.”

“சரி நீ சொல்ற மாதிரி எகனாமிக் க்ரைசிஸ் வச்சுக்க. அது ஏன் நான் உயிரோட இருக்கும் போது வரனும்? என்னை பாதிக்கனும்? தோஷம் அதனால் தான்.

“அடேய் இந்த கிரைசிஸ் 5 வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்துகிட்டே தான் இருக்கு முன்னத விட பின்னது மோசமா இருக்கு அவ்வளவு தான். க்ளோபல் கிரைஸிசுக்கு உன் ஜோசியர் ஏதாவது பூஜை பண்ணா நல்ல இருக்கும். சரி நானும் ஜோசியத்த நம்புறேன் நீ கொஞ்சம் உன் ஜோசியர்கிட்ட சொல்லி இந்தியா ஏன் இப்படி இருக்குன்னு மொத்த பேருக்கும் தோஷம் நிவர்த்தி பண்ண சொல்லேன்.”

“நான் ஏன் சொல்லனும். அவரே ஒவ்வொரு வருஷமும் இந்தியாவோட ராசிய பாப்பாரு கொஞ்ச வருஷமா இந்தியாவுக்கு நேரம் சரியில்ல, அவர் அத சொன்னா எந்த முட்டா பயலும் நம்ப மாட்டேங்குறான்.”

“அடப்பாவி இந்தியாவுக்கே ஜோசியமா! அப்ப அமெரிக்காவுக்கு என்ன சொல்லுதாம்”

“அத பத்தி நான் கேட்கல.. ஆனா நீ கண்டிப்பா ஒரு வாட்டி அவர பாரு உன் வாழ்கையில கஷ்டம் எல்லாம் நீங்கிடும்.”

“அப்படியா எவ்வளவு காசு கேட்பாரு”

“கன்சல்டிங் 1000 ரூபா. உன் முழு ஜாதகத்தையும் பார்க்க 5000 ரூபா.  சயின்டிபிக், சாப்ட்வேரெல்லாம் வச்சிருக்காரு. சாகுற நாள் வர பிரின்ட் அவுட் எடுத்து பைன்ட் பண்ணி கொடுத்துருவாரு..”

“கம்ப்யூட்டர் ஜோசியமா? சிவகாமி.. சிவகாமி..” என்றேன்

“நீ திருந்த மாட்ட” என்று போனை துண்டித்து விட்டான்..

ஐபிஎம் கம்பெனியில் ஐந்திலக்க சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை போனதும் ஜோசியன், திருநள்ளாறுன்னு சுத்துறதப் பாத்தா என்ன தோணுது? இப்படிப்பட்ட பாமர பக்தர்கள் இருக்கும் போது ஐபிஎம் ஹெச் ஆர் துறையினர் படுத்துக் கொண்டே ஊழியர்களை வேலை நீக்கம் செய்யலாமே? எந்த கபோதி கேக்கப் போறான், சண்டை போடப் போறான்?

(உண்மைச் சம்பவம் – ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது)

–    மணிவண்ணன்.

புதிய ஜனநாயகம் – மார்ச் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

puthiya-jananayagam-march-2014

புதிய ஜனநாயகம் மார்ச் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. த.மு.மு.க. – தமிழக தாலிபான்

2. ராஜீவ் கொலை வழக்கு – எழுவர் விடுதலை : பார்ப்பன ஜெயாவின் கபடத்தனமும் பாசிச காங்கிரசின் தமிழின விரோதமும்

3. தரகு முதலாளிகளின் சேவையில்… மோடி – ராகுல் போட்டா போட்டி !

4. மோடி 24×7 தேசிய இம்சை !

5. வழக்கறிஞர்களுக்கு, நீதியரசர்களுக்கு கிரிமினல் சட்ட மேதை ஜெயலலிதாவின் சவால்கள்!

6. “புரட்சிகரப் போராட்டமின்றி பார்ப்பன-பாசிசத்தை முறியடிக்க முடியாது!” – தில்லை கோயில்-மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு விடுத்த அறைகூவல்

7. “நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி” – மாருதி சுசுகி முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை.

செய்திப் பதிவுகள்
8. நிடோ டானியம் படுகொலை : இந்து-இந்திய தேசியத்தின் இனவெறி!
9. சாலை சுங்க வரி : தனியார் முதலாளிகளின் சட்டபூர்வ வழிப்பறி!
10. பூஷண் ஸ்டீல்: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம்!

11. இந்திய – ஜப்பானிய ஒப்பந்தம் : அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் இந்தியா

12. போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை – உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் சூறை

13. கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா! நீதிபதி ஷா கமிசன் அம்பலப்படுத்திய உண்மைகள்

14. சத்திய சோதனை

புதிய ஜனநாயகம் மார்ச் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 6.5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் இருப்பது கல்வியா கண்துடைப்பா ?

7

2014, ஜனவரி 17,18,20 தேதிகளில்
சென்னை மாநகராட்சி மண்டல கல்வி அதிகாரிகளுடன்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் இணைந்து நடத்திய….
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின்

அடிப்படை வசதிகள் பற்றிய ஆய்வறிக்கை

மரியாதைக்குரிய மேயர் அவர்களுக்கு,

வணக்கம்.

ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும். அதனை தருகின்ற அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதன் அடிப்படையில் இந்த கோரிக்கையை அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

”கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் ” என்றார் வள்ளுவர்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி

அப்படிப்பட்ட கல்வியைக் கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் அனைத்து வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதிலும் மாநகராட்சிப் பள்ளிகள் முன் மாதிரிப் பள்ளிகளாக திகழ வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் படிப்பு வாசனையே மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் முதல் தலைமுறையாக படிப்பதற்காக வருகின்ற ஒரே இடமாக மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளன. எனவே இங்கு படிக்கும் பிள்ளைகளுக்கு அதிகப்படியான கூடுதல் கவனம் கொடுக்கப்பட வேண்டும். தரமான கல்வியை, அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ள பள்ளிச் சூழலை பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே பெறமுடியும் என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. அதே வகையான கல்வியை ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதே மாநகராட்சி பள்ளிகளின் நோக்கமாக இருக்கவேண்டும். இந்த பணியை மேற்கொள்வதில் லாப நட்ட கணக்கை பார்க்காமல், தனது முதல் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு இன்றி செலவு கணக்கு பார்க்கக்கூடாது என்கின்ற நியதி தாங்கள் அறிந்ததே.

மேலும் முதல் தலைமுறையாகப் படிக்க வருகின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் தங்கள் வீடுகளில் தூய்மையை உணரக்கூட முடியாத அளவுக்கு அவர்களை வறுமை வாட்டுகிறது. ஆம், தாயும் தந்தையும் தினசரி வயிற்றுப் பிழைப்புக்கு கூலி வேலைக்கு சென்று அதில் தங்களின் பெரும் நேரத்தை கழிக்கின்றனர். அவர்களின் தங்குமிடமோ குப்பை மேடுகளாக காட்சியளித்து ‘சேரி’ என்று அழைக்கப்படுகின்றது. அப்பிள்ளைகளின் வீடுகளில், பகுதியில் கழிவறை இல்லை. ஆக யாருக்கு எந்த அத்தியாவசியமான ஒன்று தேவைப்படுகிறதோ அதைக் கொடுக்க வேண்டும் என்பது அரசின் தார்மீகக்கடமை. அந்த அடிப்படையில் மாநகரட்சிப்பள்ளிகள் சுகாதாரமாகவும், தூய்மையுடனும் இருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் அது இல்லாமல் இருக்கிறது.

பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சூழலை அமைத்துத் தரவேண்டும். தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல மழலையர் பள்ளிகளில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் தனியாக பிள்ளைகளைப் பராமரிக்க ஊழியர்கள் (ஆயா) இருக்கவேண்டும்.

ஆர்வத்தை தூண்டும் சிறுகதைகள், பொது அறிவு புத்தகங்கள்கொண்ட நூலகங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கென தனியாக புத்தகங்கள் (children books) இருக்கவேண்டும்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்

வெறும் படிப்பு மட்டும் என்று இல்லாமல் அவர்களின் தங்கும் இடத்தில் மறுக்கப்பட்ட விளையாட்டு பள்ளியில் முறைப்படி கொடுக்கப்பட வேண்டும். எல்லா வகையான விளையாட்டுக்களும் கற்றுத் தரப்படவேண்டும், அவற்றிற்கான விளையாட்டுப் பொருட்களும் ஏராளமாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவால் பள்ளிக்கட்டிடங்கள், கழிவறைகள், மின் வசதிகள் போன்றவை சோதிக்கப்பட வேண்டும். சோதித்ததன் விபரங்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் இடம் பெற வேண்டும். அந்தக் குழுவினால் சான்றிதழ் அளிக்கப்படுவது என்பது பள்ளி செயல்படுவதற்கு அத்தியாவசியமான ஒன்றாக மாற்றப்பட வேண்டும். அக்குழு கூறுகின்ற குறைபாடுகளை சீர் செய்வதற்கு அதிகபட்சமாக 1 மாதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் துரிதமாக வேலைகள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நமது குழந்தைகள் ஆரோக்கியமான மாணவர்களாக – அறிவுப்பூர்வமான மாணவர்களாக- சிறப்பான மாணவர்களாக இருக்க முடியும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையே 22.10.2012 அன்று அரசாணை (நிலை) எண் 270 வாயிலாக ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றிய விவரங்களையும் அளித்துள்ளது என்பது தாங்கள் அறிந்ததே.

ஆனால் கோடம்பாக்கம் புலியூர் மேல்நிலைப்பள்ளி, அமைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அடிப்படை வசதிகளே முழுமையாக இல்லை. இதனை செய்துதரக் கோரி கடந்த அக்டோபர் மாதம் தங்களை சந்தித்து மனு கொடுத்திருந்தோம். ஆனால் மேற்கொண்டு அந்தப் பள்ளிகளில் கொடுத்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக இரண்டு முறை நினைவூட்டல் மனுவும் கொடுத்தோம். ஆனால் அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி மணலி புதுநகர், சடையன்குப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேற்தளம் இடிந்து விழுந்து, இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். அதில் குறிப்பாக, ஆகாஷ் என்ற மாணவனுக்கு, தலையில் அடிபட்டு, படுகாயமடைந்துள்ளான். அருகில் எந்த அரசு மருத்துவமனையும் இல்லாததால், ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அம்மாணவனின் குடும்ப பின்னணி மிகவும் ஏழ்மையானது. விரிக்க பாய் கூட இல்லாத நிலையில்தான் அக் குடும்பத்தின் வாழ் நிலை உள்ளது. இந்த நிலையில், கடனை வாங்கித்தான் அம்மாணவனின் குடும்பத்தினர் சிகிச்சை பார்த்துள்ளனர். இதுவரை எந்த அதிகாரியும் வந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்க்கவில்லை.

மாநகராட்சிப் பள்ளிசடையன் குப்பம் பள்ளிக்கு நாங்கள் நேரில் சென்று பார்த்த போதுதான் அப்பள்ளியை மாணவர்கள் பயன்படுத்தவே முடியாத சூழ் நிலையில் இருப்பதை அறிந்து கொண்டோம். அந்தக்கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற அபாயகரமான நிலைமையில் இருந்ததைப் பற்றி கவலைப்படாமல் பள்ளி நடத்தப்பட்டு கொண்டிருந்தது.

இந்த சூழலில்தான், கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பிறகு தங்களை சந்தித்து பேசினோம்.

அவ்வாறு பேசியதில், மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த, ஆதாரபூர்வமாக தகவல்கள் தேவை. ஆகவே, 10 மண்டலங்களிலும் உள்ள மாநகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி அதிகாரிகளுடன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் சென்று கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறினீர்கள். அந்த அடிப்படையில் 10 மண்டலங்களிலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்த இரண்டு நாட்களில் மட்டும் 57 பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டோம்.

இந்த ஆய்வின் மூலம் சேகரித்த தகவல்களை கீழ்க்கண்ட வகையில் அறிக்கையாக தொகுத்துள்ளோம். இதன்படி பார்க்கும்போது, 22.10.2012 அன்று அரசாணை(நிலை)எண் 270 வாயிலாக ஆணை யில் உள்ளபடி எந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியும் செயல்படவில்லை என்பதே நிலைமையாக உள்ளது. அதன் அடிப்படையில் கீழ்காணும் விபரங்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

I. குடிநீர்

22.10.2012 அன்றைய அரசாணை (நிலை) எண் 270 , குடிநீரை பற்றி சொல்லும் விதிகள்:

  1. பாதுகாப்பான குடிநீர் தரப்பட வேண்டும், குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் தூய்மையான முறையில் இருத்தல் வேண்டும். எப்போது யாரால் எப்படி சுத்தம் செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். குடிநீர் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்.
  2. மேலும் 20 மணவர்களுக்கு 1 குழாய் என்ற வீதத்தில் குடிநீர்க்குழாய்கள் ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்
  3. பாத்திரங்கள் கழுவ, கை, கால்கள் கழுவ 20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற அளவில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். தரை வழுக்கல் இன்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

(பள்ளிகளில் குடிநீர் வசதி குறித்த தரவுகள் அட்டவணை 1-ல்)

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்

ஆய்வுக்கு சென்ற அனைத்துப் பள்ளிகளிலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, 20 பேருக்கு ஒரு குடிநீர் குழாய், 20 பேருக்கு கை கழுவ தனியே ஒரு குழாய் என்ற அடிப்படையில் எங்குமே இல்லை. மேலும் சில பள்ளிகளில், குடிநீர் வசதி இல்லாமல் வெளியில் இருந்தோ, வீட்டில் இருந்தோதான் தண்ணீர் எடுத்து வந்து குடிக்கின்றனர் அல்லது தண்ணீரையே குடிக்காமல் இருக்கின்றனர். இதற்கான காரணங்கள், ஒன்று தண்ணீர் இல்லாமல் இருப்பது. மற்றொன்று, இருந்தும் அசுத்தமாக இருப்பது ஆகியவைகளே. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிக்கப்படுவதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பதை கண்டோம்.. சில பள்ளிகளில் குடிநீர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் வரும் என்ற நிலைமைதான் உள்ளது.

மண்டலம் – 7 ஆயிரம் விளக்கு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு வரும் குடிநீர் லைனில் இருந்து அருகில் உள்ள தனியார் நிறுவனங்கள் இன்னொரு லைன் போட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். இதன் காரணமாக பள்ளிக்கு தண்ணீர் வரத்து அறவே இல்லை. இதனை உடனே சீர் செய்ய வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற இயற்கை விதியின் அடிப்படையில் மாணவர்களால் குடிநீர் குடிக்க முடியாமல் போகிறது. இதன் மூலம் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, கல்வி கற்கும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது என்று கருதுகிறோம். எனவே அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம்தான் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்த முடியும் என்று கோருகிறோம்.

II. கழிவறை

பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270

  1. 20 மாணவர்களுக்கு 1 சிறு நீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில், புதிய அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முரையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்பட வேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.
  2. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்
  3. தண்ணீர்த்தொட்டிகள் மாணாக்கர்களால் திறக்க முடியாதபடி மூடப்பட்டு இருக்க வேண்டும். மழலையர் மற்றும் தொடக்க நிலை வகுப்பு குழந்தைகள், நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

(பள்ளிகளில் கழிவறை வசதி குறித்த தரவுகள் அட்டவணை 2-ல்)

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி மாணவியர்

ஆய்வுக்கு சென்ற அனைத்துப் பள்ளிகளிலும், அரசாணைப்படி 50 பேருக்கு ஒரு கழிவறை, 20 பேருக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் என்ற அடிப்படையில் கழிவறை வசதி இல்லை. எல்லா பள்ளிகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் அதற்கென்று நிரந்தரமாக இல்லாததால், தொடர்ச்சியாக பராமரிக்காமல் கழிவறைகள் அசுத்தமடைந்துள்ளன. மாத சம்பளம் ரூ.350/- அல்லது ஒப்பந்த அடிப்படையில் குறைவான சம்பளத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களே உள்ளனர். இதனால் முறையான பராமரிப்பு இல்லாமல் பல பள்ளிகளில் கழிவறைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் கதவு இல்லாமல் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை முக்கியமாக உள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதியும் இல்லை.

பெண்களுக்கு பிரத்தியேகமான கழிப்பறை வசதியும் இல்லை. குறிப்பாக பெண்களுக்கான கழிவறைகள், SANITARY NAPKIN DESTROYER, வசதிகள் கொண்ட GIRLS FRIENDLY TOILET என்ற முறையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த முறையில் பெண்கள் கழிவறைகள் அமைக்கப்படவில்லை. விதிவிலக்காக அமைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (மண்டலம் – 5) இவ்வசதி இருந்தும் பராமரிப்பில்லாமல் உள்ளது.

குறிப்பிட்ட நேர இடைவெளியில் உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றுவது மிகவும் அவசியம். ஆனால் அதற்கான வசதிகள் இல்லாதபோது, மாணவர்களுக்கு சிந்தனை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக, பெண்கள் 94% பேர் இதனாலேயே மேல்நிலை பள்ளி படிப்பை நிறுத்திவிடுவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

எனவே ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகளை கட்டித்தரவும் SANITARY NAPKIN DESTROYER வசதிகள் கொண்ட GIRLS FRIENDLY TOILET ஆகியவற்றை செய்து தரவும் பள்ளிகளுக்கு நிரந்தரமான துப்புரவுப் பணியாளர்கள், தேவையான தண்ணீர் வசதி ஆகியவற்றை உடனே செய்து கொடுக்க வேண்டும் என கோருகிறோம்.

III. ஆசிரியர்கள்

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமான, அதாவது வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர் எண்ணிக்கை இருக்கும்போதுதான் மாணவர்களை தரமானவர்களாக உருவாக்க முடியும் என்பது தாங்கள் அறிந்ததே. பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் உதிரித் தொழிலாளிகளாக வேலை செய்பவர்கள். அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கற்றுக் கொடுக்க போதுமான நேரம் இருக்காது. எனவே ஆசிரியர்கள் எடுக்கும் கவனம், அக்கறையின் மூலம் மட்டுமே மாணவர்களின் கல்வித்தரம் உயர முடியும். மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று காரணம் காட்டி 60 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற நிலை சில பள்ளிகளில் உள்ளது.

மாநகராட்சிப் பள்ளிசில இடங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, எனவே தற்போது உள்ள ஆசிரியர்களே போதுமானதாக உள்ளதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். vவகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பது இல்லாமல், மொத்த மாணவர் எண்ணிக்கையிலிருந்து ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிடுகின்றனர். உதாரணமாக k c கார்டன் நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்புக்கள் உள்ளன. அங்கு மாணவர் எண்ணிக்கை 37 மட்டும் உள்ளது. இதனை காரணமாக காட்டி இருந்த 4 ஆசிரியர்களிலிருந்து ஒரு ஆசிரியரை குறைத்துள்ளனர். உண்மையில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியைத்தான் மேற்கொள்ளவேண்டும். அதை விடுத்து ஆசிரியர்களை குறைப்பது பிரச்சினையை தீர்க்காது. மாறாக பற்றாக்குறையின் காரணமாக ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதே நேரிடுகிறது. இதனால் மாணவர்களை நெருக்கமாக இருந்து கவனிக்க முடியாமல் போவதால், மாணவர்களின் கல்வித்தரமும் தாழ்ந்துபோகிறது.

மேலும் உள்ள மிகமிக முக்கியமான பிரச்சினை எல்லா பள்ளிகளிலும் எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு தனியான அலுவலர்கள் இல்லை. இந்த வேலைகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளதால் அவர்களின் பணிச்சுமை அதிகரிக்கின்றது. இதனால் மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கவனம் குறைகின்றது. எனவே இத்தகைய பணிகளுக்கு பணியாளார்கள் உடனடியாக நியமிக்கப்படவேண்டும்.

சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 678, புத்தா தெரு, கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளியில் PTA மூலமாக வேலை பார்க்கும் 6 ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

இசை, ஓவியம், தொழில் பயிற்சி போன்ற துணைப்பாடங்கள் எல்லா பள்ளிகளிலும் இல்லை. இருக்கும் ஒரு சில பள்ளிகளிலும் அந்த பாடங்களுக்கான நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை.

அதே போல உடற்பயிற்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், போன்றவற்றிற்கு நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லாமல் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் பாடங்கள் எடுக்கப்படுகின்றன.

அதே போல், நூலகர் என்று தனியே எந்த பள்ளியிலும் இல்லை, அந்த பணியையும் இருக்கும் ஆசிரியர்களை வைத்துதான் நிறைவேற்றுகிறார்கள். இதனால், அந்த ஆசிரியர் தனக்கென உள்ள பாடத்துக்கு முழுமையாக நேரம் ஒதுக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. அதேபோல நூலகங்களும் முறையாக இயங்குவது இல்லை எனவே, உடற்பயிற்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், நூலகர் போன்றவற்றிற்கு நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும்.

ஆசிரியர்கள் முழுக்க முழுக்க மாணவர்களின் தரத்தை உயர்த்த நேரத்தை ஒதுக்கும்பொழுதுதான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் என்பது தாங்கள் அறிந்ததே. ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாமல், கல்வி தரத்தை உயர்த்தும் போதுதான் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த முடியும்.

எனவே, அரசாணைப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையிலும், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வகுப்புக்களின் எண்ணிக்கைக்கேற்ற ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும். ஓவியம், இசை போன்ற துணைப்பாடங்களுக்கான ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும். எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளில் எல்லாப் பள்ளிகளிலும் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

(பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்த தரவுகள் அட்டவணை 3-ல்)

IV. அடிப்படை பணியாளர்கள்

1. துப்புரவுப் பணியாளர்கள் ;

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்

துப்புரவுப் பணியாளர்களில் இரு வகையானவர்கள் உள்ளனர். மாநகராட்சி மூலமாக மாதம் ரூ 335.00 ஊதியம் பெறுபவர்கள், ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ 1500.00 ஊதியம் பெறுபவர்கள். ஒரு நாளைக்கு கழிவறைகளை மூன்று முறை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் பணியாளர்கள் இல்லாததால் துப்புரவுப் பணி எப்போதாவதுதான் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பள்ளியின் தூய்மை பாதிக்கப்படுகின்றது.

அதுமட்டும் இல்லாமல், வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மைப்படுத்தவதற்கு பணியாளர்கள் இல்லாததால், வளாகங்கள் புதர்கள் மண்டி காட்சியளிக்கின்றன.

மேலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 350 என்பது மிகவும் குறைவாக உள்ளது. இது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே துப்புரவு பணியில் அவர்களால் நிரந்தரமாக ஈடுபட முடியாமல் போகிறது.எனவே மாநகராட்சியே நிரந்தரமான துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, அவர்களுக்குப் போதுமான ஊதியத்தை வழங்க வேண்டும். இதன் மூலமே பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்வது சாத்தியம் என கருதுகிறோம்.

2. காவலர்கள்

பெரும்பாலான பள்ளிகளில் பகல், இரவு நேர காவலர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும், ஒப்பந்த அடிப்படையில் ரூ.1500 சம்பளத்திற்கு வேலை செய்பவர்களாக உள்ளனர். இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. எனவே இவ்வேலையில் நிரந்தரமாக யாரும் இருப்பது இல்லை. இவ்வாறு காவலர்கள் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்துவது, பொருட்களை சேதாரப்படுத்துவது என்பது பெரும்பாலான பள்ளிகளில் நடைபெறுகிறது. இது பள்ளியில் பாதுகாப்பற்ற சூழலையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக 731, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை மேல்நிலைப்பள்ளியில் வெளியாட்களின் பிரச்சினை அதிகமாக உள்ளது.

எனவே, எல்லாப் பள்ளிகளுக்கும் மாநகராட்சியே நிரந்தரமாக பகல், இரவு நேர காவலர்களை நியமித்து, அவர்களுக்குப் போதுமான ஊதியம் வழங்க வேண்டும் என கோருகிறோம்.

3. பிளம்பர், எலக்ட்ரீசியன்

எந்தப்பள்ளியிலும், முறையாக ப்ளம்பர், எலக்ட்ரீசியன்கள் இல்லை. பிரச்சினை ஏற்படும்போது. மண்டல அலுவலகத்திற்கு சொன்னாலும் முறையாக வருவதில்லை. சில வந்தாலும் உடனடியாக வருவதில்லை. இதனால் வெளியிலிருந்து ஆட்களை வரவைத்து பள்ளி நிர்வாகமே சரி செய்ய வேண்டியுள்ளது.

இதனால் மோட்டார் பழுதடையும்போது எலக்ட்ரீசியன் வருவதற்கு தாமதம் ஆவதால், கழிவறைக்கு தண்ணீர் பயன்படுத்த முடிவதில்லை. குறிப்பாக, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 678, புத்தா தெரு, கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளி இப்பிரச்சினையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நடுநிலைப்பள்ளி, ஆர்.ஆர்.புரம். கொருக்குப்பேட்டை (மண்டலம் 1) யில் மின்வயர்கள் அறுந்து ஆபத்தான நிலையில் உள்ளன. ஆனால் எலக்ட்ரீசியன் பிரச்சினையால் பராமரிப்பில்லாமல் அப்படியே உள்ளது.

V. கட்டுமான வசதி

வகுப்பறைகளைப் பொறுத்தவரை, நிறைய பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை என்ற நிலை உள்ளது. அதனால் இட நெருக்கடியான சூழலிலேயே மாணவர்கள் கல்வியினை கற்கும் நிலை உள்ளது. சில பள்ளிகளில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், வகுப்பறைகள் போதுமானதாக இருக்கிறது. மாணவர்கள் முழுமையாக சேரும்போது வகுப்பறைகள் போதாது.

1. விளையாட்டு

பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270

வளாகம் / வகுப்பறை
பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் காலி இடங்களில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவைகள் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு இன்றி இருப்பின் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும். வகுப்புத்துவக்கத்தில் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டுக் கருவிகளை சரியாக உள்ளதா? என சரிபார்த்தப் பிறகே விளையாட அனுமதிக்க வேண்டும். எக்காரணத்தினை முன்னிட்டும் வில் விளையாட்டு ஆசிரியர் துணை இன்றி விளையாடக்கூடாது. வீர விளையாட்டுக்கள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுக்களை விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு / முதலுதவி வசதியுடன் மாணவர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகாதபடி எச்சரிக்கையுடன் பார்த்து கவனமாக விளையாட வேண்டும்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை

ஆனால் நாங்கள் ஆய்வுக்கு சென்ற பள்ளிகளில் பெரும்பாலானவைகளில் விளையாட்டு மைதானம் கிடையாது. அப்படி விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிகளிலும் விளையாட்டு உபகரணங்கள் குறைவாக இருக்கிறது அல்லது இல்லை. அப்படி இருந்தும் சில பள்ளிகளில் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். (சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 678, புத்தா தெரு, கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளி) வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தால் இன்னும் சிறப்பாக செய்வர்.

அதேபோல் எந்தப்பள்ளியிலும் PET ஆசிரியர்கள் நிரந்தரமாக இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வந்து விட்டு செல்வது என்ற அடிப்படையிலேயே உள்ளது. PET ஆசிரியர்கள் நிரந்தரமாக இல்லாமல் மாணவர்களை விளையாட்டுக்களில் தகுதியுடையவர்களாக ஆக்க முடியாது. மேலும் உடல்நலமே அவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தவும் உதவும் என்பது தாங்கள் அறிந்ததே.

எனவே, அரசாணை விதிப்படி, விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், நிரந்தர PET ஆசிரியர் உள்ளிட்ட வசதிகளை எல்லா மாநகராட்சி பள்ளிகளிலும் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம்.

2. சத்துணவு

மாநகராட்சிப் பள்ளி சத்துணவு
மாநகராட்சிப் பள்ளி சத்துணவு

மாணவர்களுக்கு போதுமான சாப்பாடு தட்டுக்கள், தட்டுக்களை வைக்க அலமாரி வசதி, சத்துணவுக்கு தேவையான கேஸ், சத்துணவு அறைக்கே தண்ணீர் குழாய் வசதி , சத்துணவு அறையில் மேம்படுத்தப்பட்ட கட்டுமான வசதி போன்றவை எல்லா மாநகராட்சி அரசுப்பள்ளிகளிலும் இல்லை. இவற்றை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

அதேபோல் அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் ஆயா பணிகளுக்கு என ஆட்கள் எங்கும் இல்லை. (குறிப்பாக, சென்னை நடுநிலைப்பள்ளி, அரங்கநாதபுரம்) இது குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகுந்த அவசியம் என கருதுகிறோம். எனவே எல்லா ஆரம்ப பள்ளிகளிலும் ஆயா பணிக்கு ஆட்களை மாநகராட்சியிலிருந்து நியமிக்க கோருகிறோம்.

3. ஆய்வகம்

பெரும்பாலான பள்ளிகளில் ஆய்வகங்கள் பெயரளவுக்கே உள்ளன.

ஆய்வகம் மாணவர்கள் மொத்தமாக ஒரே சமயத்தில் ஆய்வு செய்யும் அளவில் இருக்காது. ஷிஃப்ட் முறையில் மாணவர்கள் ஆய்வு செய்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கொடுப்பதற்கு முடிவதில்லை. நேரமும் விரயமாகிறது. எனவே பரப்பளவு பெரியதாக ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஆய்வகத்தில் ப்ளக் பாயிண்ட் (மின்வசதி) மற்றும் தண்ணீர் ஆகியவை ஆய்வு செய்யும் மேடைக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் அவ்வாறு மின்சாரம் தண்ணீர் வசதிகள் இல்லை. அதேபோல் ஆய்வகங்களில் முதலுதவி பெட்டி இல்லை. தீயணைப்பான் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக இல்லை. மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோருகிறோம்.

முக்கியமாக, Lab Assistant என்பவர் இல்லை. இதை கவனத்தில் கொண்டு எல்லா மாநகராட்சி பள்ளிகளிலும் மாநகராட்சி மூலமாக நிரந்தரமாக Lab Assistant நியமிக்க வேண்டும் என கோருகிறோம்.

4. மருத்துவ வசதி

பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270
vi) பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 1500க்கு மேல் இருப்பின் முறையான முழு நேர மருத்துவ சேவை வசதிகள் இருக்க வேண்டும்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி

இந்த ஆணையின்படி நாங்கள் சென்ற எந்த ஒரு பள்ளியிலும் மருத்துவ சேவை இல்லை. ஆகவே 1500 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் முழு மருத்துவ சேவையை உடனே தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்து உடனடிக் கவனம் தேவைப்படும் பள்ளிகள்

  1. மணலி புதுநகர் சடையன்குப்பம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் (மண்டலம் 1), கட்டிடம் மிக அபாயகரமான நிலைமையில் உள்ளது. மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
  2. சென்னை நடுநிலைப்பள்ளி, அரங்கநாதபுரம், கொருக்குப்பேட்டை, செ- 21 ல் (மண்டலம் 1) உள்ள பள்ளியின் கட்டிடமும் அபாயகரமான நிலைமையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். இருக்கும் ஒரே வகுப்பறையில் 65 மாணவர்கள் உள்ளனர். இரண்டு இடங்களில் மேற்தளம் பெயர்ந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் கணுக்கால் அளவு வகுப்பறைக்குள் தேங்கி விடுகிறது. ஜன்னல் இல்லாமல் உள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. பெஞ்சுகள் உடைந்துள்ளன. பல வருடங்களாக பெயிண்ட் அடிக்காமல் கட்டிடங்கள் பழுதடைந்துக் காணப்படுகின்றன.
  3. அதேபோல் CPS RR நகர் (மண்டலம் 1) பள்ளியில் சுற்றுச் சுவர் சேதமடைந்ந்துள்ளது. வராண்டாவில் உள்ள விளக்குகள் உடைந்துள்ளன. மின்சார வயர்கள் பராமரிப்பில்லாமல் ஆபத்தான நிலைமையில் தொங்கிக் கொண்டுள்ளன. சுற்றுப்புறத்தில் குப்பை கொட்டும் இடம் உள்ளதால், மாசுபட்ட சூழலுக்கு நடுவில்தான் மாணவர்கள் படிக்கின்றனர்.
  4. திருவல்லிக்கேணி (மண்டலம் 6 ) ல் உள்ள சில பள்ளிகளிலும் மேற்கண்ட நிலைமைதான் உள்ளது
  5. மண்டலம் 1 ல் (திருவொற்றியூர்) சென்னை நடுநிலைப்பள்ளி, கார்ணேசன் நகர், கொருக்குப்பேட்டை, செ – 21. இப்பள்ளியில் பள்ளிக் கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. கட்டிடத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இது மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் அபாயமாக உள்ளது.

மேலும் அரசின் இலவச பொருட்கள் தரும் இடமாக பயன்படுத்துவது, ஆதார் அட்டை கொடுக்கப் பயன்படுத்துவது என்பது அனைத்துப் பள்ளிகளிலும் நடக்கிறது. இதனால் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்து அரசின் இலவச பொருட்களை மண்டல அலுவலகத்திலேயே கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

மேற்கண்ட விபரங்களின் அடிப்படையில் பள்ளியின் கட்டுமான வசதியானது பெரும்பாலும் மோசமான நிலைமையில் உள்ளது. இவற்றைக் கணக்கில் கொண்டு, அரசாணை எண் 270 விதிப்படி, கட்டுமான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொகுப்பாக,

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

அடிப்படை வசதிகள் இல்லாமல், கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்பட்டதே, அரசுப்பள்ளிகளை பொதுமக்கள் புறக்கணிப்பதற்கு முக்கியமான காரணமாகும் என்பது இந்த ஆய்வில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. அப்படி இருந்தாலும், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தனிப்பட்ட கடும் முயற்சி, மாணவர்கள் மீதான ஆசிரியர்களது அக்கறை ஆகியவை மூலமே அரசுப்பள்ளிகள் சில இடங்களில் சிறந்து விளங்குவதும், மொத்தமாக காப்பாற்றப்பட்டும் வருகின்றன எனத் தெரிகின்றன. பல பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சி எடுத்து சாதித்துள்ளனர். ஆகவே, பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270 விதிப்படி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால்தான் சென்னைப் பள்ளிகளில் கல்வி கற்கும் சூழல் உருவாகும். அதன் மூலம் சென்னைப் பள்ளிகள் எனும் மாநகராட்சிப் பள்ளிகள் தரமான பள்ளிகளாக, மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும். ஏழை மாண்வர்களுக்கும் தரமானக் கல்வி கிடைக்கும். சென்னைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் ( PPP ) மூலம் கல்வி கொடுக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக கடந்த மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் அறிவித்துள்ளீர்கள். இது ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் என்பதற்கு ஏற்கனவே பல உதாரணங்கள் உள்ளன. தனியாரைப் பொறுத்த வரையில் லாப நோக்கம் மட்டுமே இருக்கும். தமிழகம் முழுவதுமுள்ள தனியார்பள்ளிகளில் வெளிப்படையாக நடைபெற்றுவரும் கட்டணக்கொள்ளைகளும், அதற்கெதிரான பெற்றோர்களின் போராட்டங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன. எனவே, சென்னைப் பள்ளிகளை அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் ( PPP ) மூலம் பராமரிக்க எடுத்துள்ள முடிவை கைவிட்டு, அனைத்து சென்னைப்பள்ளிகளிலும் போதுமான, இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க தேவையான நிதியை ஒதுக்கி சென்னைப் பள்ளிகளின் தரத்தை உயர்தித்தர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

பள்ளிகளில் திரட்டப்பட்ட குடிநீர் வசதி, கழிவறைகள், ஆசிரியர்கள் பற்றிய தரவுகளின் அட்டவணைகள்

chennai-corporation-schools-water-1

 

chennai-corporation-schools-water-2

chennai-corporation-schools-water-3

chennai-corporation-schools-toilets-1

chennai-corporation-schools-toilets-2

chennai-corporation-schools-teachers-1chennai-corporation-schools-teachers-2

[அட்டவணைகளை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

இப்படிக்கு,
(செயலர்)
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை.
நாள் : 28.2.2014
இடம் : சென்னை.

[பள்ளிகளின் புகைப்படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை]

கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?

29
தர்மபுரி திரைப்படம்
விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதை கைவிட்டது தமிழகத்துக்கு எத்தனை மகத்தான சேவை என்பதை உணராதவர்கள் நரகத்தில் தர்மபுரி படத்தை தொடர்ந்து பார்க்கும் தண்டனைக்கு ஆளாவார்கள்.

வாய்ப்பு பறிபோன கதாநாயகர்கள் வில்லனாக நடிப்பதுதான் தமிழ் சினிமாவின் மரபு. கிழடுதட்டிய நாயகர்கள் ரொமான்ஸ் பண்ணுவதைப் பார்த்து மக்கள் சிரிக்க ஆரம்பித்த பிறகு ‘கற்ப’ழிக்கும் பாத்திரத்துக்கு அவர்கள் தம்மை தகவமைத்துக் கொள்கிறார்கள். இதற்கு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகிய உதாரணங்கள் இங்குண்டு, சிவாஜி கணேசன் மாதிரியான விதிவிலக்குகளும் உண்டு. ஆனால் ஒரு கதாநாயகன் காமெடியனான சம்பவம் ஒரேயொரு முறைதான் நடந்திருக்கிறது. கிழக்கே போகும் ரயில் சுதாகர்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்.

அவருக்குப் போட்டியாக யாருமே வர விரும்பாத சூழலில் அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பது நமது கேப்டன் மட்டுமே. விஜயகாந்த் படத்துக்கு கதை பிடிப்பதைவிட கதாநாயகி பிடிப்பது பெரும் துயரமாக மாறிய சில காலத்துக்குள் அவர் சினிமாவில் நடிப்பதை கைவிட்டுவிட்டார். அது தமிழகத்துக்கு எத்தனை மகத்தான சேவை என்பதை உணராதவர்கள் நரகத்தில் தர்மபுரி படத்தை தொடர்ந்து பார்க்கும் தண்டனைக்கு ஆளாவார்கள்.

நமது சினிமா கதாநாயகர்கள் இயல்பில் கோழைகள், பேராசைக்காரர்கள் மற்றும் சோம்பேறிகள். இவர்கள் எல்லோருக்குமே ஏதாவது ஒரு விபத்தில் எம்ஜியாராகிவிட வேண்டும் எனும் அடங்காத ஆவல் உண்டு. அதாவது ஸ்ட்ரெய்ட்டாக முதல்வராகி விட வேண்டும். ஆனாலும் பாசிசமும், பாமரத்தனமும் கலந்து உருவான எம்ஜிஆர் செய்த ‘கட்டிப்பிடி கிழவி’ போன்ற பம்மாத்துகள் செய்வதற்கு கூட இவர்கள் தயாரில்லை. ஆனால் கேப்டன் இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர். அவர் தன்னை ஒரு திமுக அனுதாபியாக பல காலம் காட்டிக் கொண்டவர். நடிகர் சங்கத்தை பலகாலம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் (இப்போது போண்டாமணிகூட அவர் பேச்சுக்கு கட்டுப்படமாட்டார் என்பது வேறு விடயம்). ஒரிஜினல் எம்ஜியார் படத்தை முடித்துத் தராமல் பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர், கேப்டனோ படத்தை முடித்துத் தந்ததன் வாயிலாக பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர். இந்த தகுதிகளைக் கொண்ட இன்னொரு முன்னாள் கதாநாயகன் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லை. இனி வரப்போவதும் இல்லை.

கேப்டன் அடி
கேப்டன் அவர் கட்சிக்காரனை வெளிப்படையாக அடிப்பார்

தன்னை ஒரு அரசியல் நிலைப்பாடு கொண்டவனாக காட்டிக் கொண்டது (ஈழம் கிடைக்கும்வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்), அவ்வப்போது தையல் மிஷின் கொடுப்பது என பலவழிகளில் அவர் தன்னை அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். கிழவிகளை கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தியதில்லை என்பது ஒரு குறைதான், என்றாலும் அது கேப்டனின் குற்றமா அல்லது கிழவிகள் குற்றமா என கண்டறியப்படாதவரை நாம் அதில் குறைகாண இயலாது. ஆகவே கேப்டன் கருப்பு எம்ஜியார் எனும் அடைமொழிக்கு மட்டுமல்ல, பச்சை, மஞ்சள், வயலட், லைட்ப்ளூ என எந்த நிற எம்ஜியார் அடைமொழிக்கும் பொருத்தமானவர்.

கேப்டன் எப்போதுமே வித்தியாசமானவர். எல்லா கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியின் திட்டங்களை வெளிப்படையாகச் சொல்லுவார்கள். யாரையாவது அடிப்பதென்றால் அதை பூட்டிய அறைக்குள் செய்வார்கள். துணிச்சலின் திருவுருவான ஜெயாவே, ஆடிட்டரை வீட்டுக்குள் வைத்துத்தான் வெளுத்தார். ஆனால் கேப்டன் அப்படியல்ல, அவர் கட்சிக்காரனை வெளிப்படையாக அடிப்பார். திட்டங்களை மட்டும் ரகசியமாக வைத்திருப்பார். மின்வெட்டை தீர்க்கும் திட்டம் என்னிடம் இருக்கிறது. ஆனால் அதை இப்போது சொல்லமாட்டேன், சொன்னா காப்பி அடிச்சிருவாங்க என சொல்லும் மனத்துணிவு அகில உலகத்தில் விஜயகாந்த் ஒருவருக்கு மட்டுமே உண்டு.

கேப்டன், சுதீஷ்
கேப்டனின் மச்சான் கோடிகளில் புரள்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் பாதி காமராஜர் ஆட்சிக்கான தகுதிகூட விஜயகாந்துக்கு மட்டுமே இருக்கிறது.

அவர் தன் கட்சிக்கு வைத்திருக்கும் பெயரை கவனியுங்கள், அதில் தேசியம், முற்போக்கு, திராவிடம் என சகலமும் கொட்டிக் கிடக்கிறது. எல்லா தரப்பையும் திருப்திப்படுத்தும் ஒரு கட்சிப் பெயரை இதுவரைக்கும் யாராவது சிந்தித்ததாகவேனும் வரலாறுண்டா? இலக்கியவாதிகளையும் கவுரவப்படுத்தும் வகையில் பின்நவீனத்துவம், மேஜிக்கல் ரியாலிசம் போன்ற வார்த்தைகளையும் கேப்டன் பரிசீலித்திருப்பார். உச்சரிக்க கடினமென்பதால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன.

காமராஜரின் அம்மா சாதாரண வீட்டில் வசித்ததாகவும் அன்றாட செலவுகளுக்கே அவர் சிரமப்பட்டதாகவும் நம் கண்பார்வைக்கு திட்டமிட்டு இழுத்துவரப்படும் வரலாறுண்டு. காங்கிரசு கோமான்கள் இந்திய மக்களை வசியப்படுத்த இந்த காந்திய எளிமையை ஆரம்பத்தில் ஒரு ஆயுதமாக உருவாக்கியிருந்தார்கள். இன்றைக்கு அந்த ஆயுதம் தேவைப்படவில்லை என்றாலும் முன்னொரு காலத்தில் ஒரு பொற்காலம் இருந்தது, அதில் எளிமையாக தலைவர் இருந்தார் என்றெல்லாம் ஆட்டோகிராஃப் இலக்கியமாக இது உயிர்வாழ்கிறது. போகட்டும், சமகாலத்தில் ஒரு தலைவர் குடும்பத்துக்கு அப்படியொரு நிலை இருக்கிறதா? ஆனால் விஜயகாந்தின் சொந்த சகோதரர் மதுரையில் பரோட்டாக் கடையில் வேலைசெய்கிறார், சொந்த சகோதரி நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்துதான் இன்றைக்கும் சாப்பிடுகிறார். ஆகவே காமராஜர் ஆட்சி என்ற ஒன்று அமையவேண்டுமானால் அது கேப்டனால் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கேப்டனின் மச்சான் கோடிகளில் புரள்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் பாதி காமராஜர் ஆட்சிக்கான தகுதிகூட விஜயகாந்துக்கு மட்டுமே இருக்கிறது.

கேப்டன்-தமிழருவி
2300 ஆண்டுகள் கழித்துப் பிறந்த இரண்டாம் சாணக்கியனும்… அறநெறி, அருள்நெறி மற்றும் குறள்நெறி ஆகியவற்றுக்கு ரத்த பாத்தியமும் சொத்து பாத்தியமும் உடையவருமான தமிழருவி மணியனின் வாக்குவங்கி சதவீதக் கணக்கில் இரண்டாமிடம் யாருக்கு?? கேப்டனுக்குத்தானே!!

2300 ஆண்டுகள் கழித்துப் பிறந்த இரண்டாம் சாணக்கியனும்… அறநெறி, அருள்நெறி மற்றும் குறள்நெறி ஆகியவற்றுக்கு ரத்த பாத்தியமும் சொத்து பாத்தியமும் உடையவருமான தமிழருவி மணியனின் வாக்குவங்கி சதவீதக் கணக்கில் இரண்டாமிடம் யாருக்கு?? கேப்டனுக்குத்தானே!! வாலிப வயோதிக ஆண் வாக்காளர்களைக் கவரும் உத்தி மோடிக்கே இப்போதுதான் கைவந்திருக்கிறது. கூட்டம் சேர்க்க கார்ப்பரேட் காசு மட்டும் போதாது மேக்னா படேல் கவர்ச்சியும் வேண்டும் எனும் ஞானம் அவருக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் இதையெல்லாம் ஆனஸ்ட்ராஜ் படத்திலேயே செய்தாயிற்று. அந்தப்படம் ஆனஸ்ட்ராஜுக்காக ஓடியதா இல்லை ஆம்னிக்காக ஓடியதா எனும் கேள்வி சிவபெருமானாலேயே பதிலளிக்க இயலாத கேள்வியன்றோ?

அவரை கொள்கையற்றவர், எதிர்காலம் பற்றிய திட்டமில்லாதவர் எனும் விமர்சனங்கள் அரசியல் வானில் சிறகடித்துப் பறக்கின்றன. சொல்பவர்கள் சில செய்திகளை நினைவில் கொள்வது நல்லது. எம்ஜியாரின் போர்ப்படைத் தளபதி பண்ருட்டி ராமச்சந்திரன் துறவறம் துறந்து முதலில் அடைக்கலமானது யாரிடம்? போயஸ் தோட்டத்தின் நெடுங்கதவுகள் மூடப்பட்டுவிடுமோ எனும் அச்சம் 2011 சட்டமன்ற தேர்தலில் உருவானபோது இடதுசாரிகள் அபயம் கேட்டு ஓடியது யாரிடம்? பேசியபடி நடப்பதில் எப்படியோ நடந்தபடியே பேசுவதில் வல்லமைமிக்க அரசியல் லெக்தாதா வைகோவின் ஒரே சொத்தான மூன்றாவது அரசியல் சக்தி எனும் பெயரை தட்டிப்பறித்தது யார்?

விஜயகாந்த்-பாஜக பேச்சுவார்த்தை
கசமுச வீடியோவைக் கூட வெளிப்படையாக பார்க்கும் வெளிப்படையானவர்களைக் கொண்ட பாஜகவிடம் ரகசிய இடத்தில் பேச்சு நடத்தும் கேப்டனின் சாமர்த்தியத்தை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

2001-ல் குஜராத் வளர்ச்சி பற்றிய எந்த திட்டமும் மோடியிடம் இல்லை. ஆனால் இன்றைக்கோ மோடியின் குஜராத்தில் மலச்சிக்கல் கணிசமாக குறைந்திருக்கிறது என்பதற்கும் ஏராளமானவர்களின் வழுக்கைத் தலையில் முடிவளர்ந்திருக்கிறது என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே திட்டமில்லாமல் இருப்பவனாலும் சாதனை செய்ய முடியும். மேலும் ஊடகங்கள் துணையிருந்தால் செய்தது எல்லாவற்றையும் சாதனையாக்கி விடவும் முடியும். ஆகவே கேப்டன் மீது வைக்க முடிகிற ஒரே குற்றச்சாட்டும் வலுவில்லாததுதான்.

எல்லாவற்றுக்கும் மேல், கேப்டனுக்கு கிட்டும் ஊடக முக்கியத்துவத்தை பாருங்கள். விஜயகாந்த், பாஜக ரகசிய இடத்தில் பேச்சுவார்த்தை என செய்தி போடுகிறது தினத்தந்தி. பக்கத்து வீட்டில் இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாட போனால் கூட கேப்டன் பாதாளசாக்கடை வழியாகத்தான் போவார். அவர் அரசியல் நடவடிக்கை ரகசியமாக இருப்பதில் என்ன தவறு? இருந்தாலும் கசமுச வீடியோவைக் கூட வெளிப்படையாக பார்க்கும் வெளிப்படையானவர்களைக் கொண்ட பாஜகவிடம் ரகசிய இடத்தில் பேச்சு நடத்தும் கேப்டனின் சாமர்த்தியத்தை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கம்பெனிகளுக்கு ஒரு ஐ.எஸ்.ஓ சான்றிதழைப் போல கட்சிகளுக்கு ஆனந்த விகடன் சான்றிதழ் முக்கியம். அந்தக் குழுமத்தின் ஜூவி கடந்த இரண்டு மண்டலமாக மோடி நாமாவை ஜபித்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த்
மக்களே கேப்டனுக்கு வாக்களிப்பீர், அண்ணியின் பொற்கால ஆட்சிக்கு வழிவகுப்பீர்

அப்பேர்பட்ட ஜூவி, பாஜகவை யாருடன் சேர்க்கப் போராடுகிறது?? கடந்த 2 மாதங்களாக கழுகாரின் முழுநேர மற்றும் பகுதிநேர வேலை என்பது பாஜக, தேமுதிக கூட்டணிக்கு உழைப்பதுதான். தொழில்ல பொறுமை ரொம்ப முக்கியம் என நன்கறிந்த தமிழருவியே கடுப்பாகி கேப்டனை மாட்டுத் தரகர் என சொல்லி கழன்று கொண்டு விட்டார். ஆனால் தமிழ் மக்களின் நாடித் துடிப்போ இன்றுவரை தன் முயற்சியில் தளராமல் போராடுகிறது. இதைவிடவா ஒரு தலைவனுக்கு நற்சான்றிதழ் வேண்டும்?? ஆகவே மக்களே கேப்டனுக்கு வாக்களிப்பீர், அண்ணியின் பொற்கால ஆட்சிக்கு வழிவகுப்பீர்.

நாக்கை மடித்து உரக்க சொல்லுங்கள் “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் சுதீஷ் ஆட்சி”

கொஞ்சம் சீரியசா பேசலாமா?

இந்தியாவின் தேர்தல் என்பது வீட்டுக்குள் புகுந்த பன்றியை இன்னொரு பன்றியை கொண்டு விரட்டுவதற்கு ஒப்பான காரியம். அடிப்படைக் கொள்கைகளற்ற ஒரு கட்சி, தனது திரண்ட சொத்து சாம்ராஜ்யத்தின் அடுத்த தொழிலாக ஒரு நடிகரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, தனித்து நின்று ஓட்டைப் பிரிப்பதைக் கூட ஒரு வருவாய் ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பதை தமிழ்மக்கள் உணர காரணமாக இருந்த கட்சி… தமிழகத்தின் மூன்றாவது பெரிய வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த், சோ, ஜெயலலிதா,மோடி
திமுக அதிமுகவை விட சகலவிதத்திலும் சீரழிந்த தேமுதிக தன்னை அவ்விரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இங்கே காட்டுகிறது.

திமுக அதிமுகவை விட சகலவிதத்திலும் சீரழிந்த தேமுதிக தன்னை அவ்விரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இங்கே காட்டுகிறது. அதற்கு ஒன்பதோ இல்லை ஐந்தோ சதவீதம் மக்கள் ஆதரவும் இருக்கிறது. புரட்சி செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டாலும் ஏழைகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று உச்சரிப்பில் மட்டும் கம்யூனிசத்தை ‘காட்டிக்’ கொள்ளும் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகள்கூட கூச்சமின்றி தேமுதிகவை அண்டியிருக்கும் நிலையில் இருக்கிறது நம் அரசியல் சூழல். எதற்கும் லாயக்கற்ற ஒரு கட்சியை, எந்த தகுதியுமற்ற ஒரு தலைவனை இந்தியாவின் பிரதான கட்சிகளும் தமிழகத்தின் பிரதான கட்சியும் தங்கள் வசம் இழுக்க போராடுகின்றன. அவர்களது பிராதானத்தின் தரத்தை அவர்களது செயல்களில் மட்டுமல்ல, கூட்டணி கைகோர்ப்பிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் கட்டுக் கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது, நாடு ஏறத்தாழ விற்பனை செய்யப்பட்டாயிற்று, அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்குலமும் ஊழலால் நிறைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்றியமைக்க மக்கள் வசமுள்ள மந்திரக்கோல் என கொண்டாப்படும் தேர்தலோ விஜயகாந்த் மாதிரியான ஆட்களின் சந்தை மதிப்பை கூட்டுவதைத் தவிர வேறெந்த விளைவையும் உருவாக்குவதில்லை. இவ்வளவு கேவலப்பட்ட பிறகும், இந்த தேர்தல் மூலம் மாற்றம் வந்துவிடும் என நீங்கள் நம்பினால் அது ஒரு விஜயகாந்த் ரசிகனாக இருப்பதைவிட இழிவானது இல்லையா?

–    வில்லவன்

எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்

19

ராஜீவ் கொலை வழக்கு – எழுவர் விடுதலை: பார்ப்பன ஜெயாவின் கபடத்தனமும் பாசிச காங்கிரசின் தமிழின விரோதமும்!

ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இன்று எழுந்திருக்கும் அனுதாபம் – என்ற நேரெதிரான இரண்டு விசயங்களையும் தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. மூவர் தூக்கு மட்டுமல்ல, ஈழப் பிரச்சினை என்பதே ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அவர் விரும்பிய படியெல்லாம் ஆதாயங்களைக் கறந்து கொள்ளக் கிடைத்த காமதேனுவாகத்தான் அன்று முதல் இன்று வரை பயன்பட்டு வருகிறது. அவ்வாறு கறந்து கொடுக்கும் பணியைத் தமிழகத்தின் இனவாதிகள் செய்து வருகிறார்கள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும்.

ராஜீவ் கொலை வழக்கு - சிறையில் உள்ள எழுவர்
ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனே, அம்மூவர் உள்ளிட்டு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய இருப்பதாகவும், மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்கத் தவறினால், மூவரையும் தமிழக அரசு விடுவித்துவிடும் என்றும் அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா.

நோயாளியான தந்தையைப் பார்ப்பதற்குகூட நளினிக்கு பரோல் தரமுடியாது என்று அனுமதி மறுத்த “மனிதாபிமானி”யும், நளினியின் தூக்கு தண்டனையைக் குறைத்ததற்காகவும், நால்வரையும் தூக்கிலிடுவதைத் தாமதித்ததற்காகவும் கருணாநிதியைச் சாடிய “சுப்பிரமணிய மாமி” யுமான ஜெயலலிதா, மூன்றே நாளில் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கெடு வைத்து கர்ச்சிக்கிறார் என்றால், அதன் நோக்கம் நேர்மையானதாக இருக்குமென்று அரசியல் மூடர்கள் கூட நம்ப இயலாது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடனான தி.மு.க., தே.மு.தி.க.-வின் கூட்டணி வாய்ப்புகளை முறியடிப்பது ஜெயலலிதாவின் முதல் நோக்கம். மூவர் விடுதலைக்காகப் போராடிய – குரல் கொடுத்த அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதன் பெருமையையும் புகழையும் களவாடிக் கொள்வது இரண்டாவது நோக்கம். மூவர் விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு தருமபுரியில் மாணவிகளை எரித்துக் கொன்ற ரத்தத்தின் ரத்தங்களையும் விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்வது மூன்றாவது நோக்கம். தனது அதிரடி அறிவிப்பின் காரணமாக மூவர் விடுதலை தடைப்பட்டு விடுமோ என்ற கவலை ஜெயலலிதாவுக்கு இல்லை. ஏனென்றால், அவர்களை விடுவிக்கக் கூடாது என்பதும் தூக்கிலிட வேண்டும் என்பதும்தான் ஜெயலலிதாவின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த தீர்ப்புக்கும், எழுவரை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுச் செய்திருக்கிறது மத்திய காங்கிரசு அரசு. இம்மனுக்களை அனுமதித்திருக்கும் உச்ச நீதிமன்றம், “எழுவர் விடுதலை எனும் முடிவை மேற்கொள்வதற்கு முன்னர் பின்பற்றியிருக்க வேண்டிய வழிமுறைகளைத் தமிழக அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை” என்றும் கூறியிருக்கிறது. இவையனைத்தும் ஜெயலலிதா எதிர்பார்த்த எதிர்வினைகள்தாம்.

ஜெயலலிதாவின் தந்திரங்கள் ஒரு புறமிருக்கட்டும். ஈழப் போராட்டத்தைக் கருவறுத்ததுடன், இராஜபக்சேயுடன் இணைந்து இனப் படுகொலையையும் நடத்தி முடித்திருக்கும் காங்கிரசுக்கு, பழிவாங்கும் ரத்த வெறி இன்னமும் அடங்கவில்லை என்பதையே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் எற்றுக் கொண்ட மறுகணமே, காங்கிரசார் அதனை வெடிவெடித்துக் கொண்டாடி, தாங்கள் நசுக்கி ஒழிக்கப்படவேண்டிய நச்சுப்பூச்சிகள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றர்.

ராகுல் - சோனியா
ஈழப் போராட்டத்தைக் கருவறுத்ததுடன், இராஜபக்சேயுடன் இணைந்து இனப் படுகொலையையும் நடத்தி முடித்திருக்கும் காங்கிரசுக்கு, பழிவாங்கும் ரத்த வெறி இன்னமும் அடங்கவில்லை.

“கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் நடந்திருக்கும் கால தாமதம் என்ற காரணத்துக்காக தூக்கு தண்டனையை ரத்து செய்வதென்பது பிற வழக்குகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; ஒரு பிரதமரைக் கொலை செய்த வழக்கிற்குப் பொருந்தாது; அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது ராஜீவ் என்ற தனிநபரல்ல, இந்திய அரசு. எனவே, இந்தக் கொலை தனிநபருக்கு எதிரானது அல்ல, தேசத்துக்கு எதிரான குற்றம் என்பதால் இதனை மன்னிக்கவே கூடாது” என்பதுதான் காங்கிரசின் வாதம். சுப்பிரமணிய சாமி, சோ, பாரதிய ஜனதா உள்ளிட்டோரின் வாதமும் இதுவேதான்.

ஆனால், 1999-இல் 19 பேரை விடுதலை செய்து நால்வரின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, “இந்தக் கொலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையோ, தேசத்துக்கு எதிரான தாக்குதலோ அல்ல; ராஜீவ் என்ற தனிநபருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே” என்றும் கூறியிருக்கிறது. மேலும், சிறீபெரும்புதூரில் கொல்லப்படும்போது ராஜீவ் பிரதமரல்ல; தனது ஊழல்கள் மற்றும் பாசிச நடவடிக்கைகளின் காரணமாகத் தோற்றுப்போய் மதிப்பிழந்த ஒரு முன்னாள் பிரதமர். இந்த உண்மைகளையெல்லாம் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டுத்தான், “ராஜீவ் கொலை என்பது தேசத்துக்கு எதிரான தாக்குதல்” என்ற தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துகிறது பார்ப்பனக் கும்பல். ராஜீவால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் தோற்றுப்போய் மதிப்பழந்து திரும்பி வந்த பின்னரும், அந்த ஆக்கிரமிப்பையும் படுகொலையையும் “தேசத்தின் முடிவு” என்று கூறி நியாயப்படுத்துகின்றது.

இந்த அடிப்படையில்தான் “தூக்கு தண்டனையை ரத்து செய்த தீர்ப்பே தவறு” என்கிறார் அருண் ஜேட்லி. “இவர்களுக்கெல்லாம் கருணை காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார் ரவிசங்கர் பிரசாத். “அரசியல் சட்டப்பிரிவு 256-இன் கீழ் இம்முடிவை அமல்படுத்த விடாமல் தமிழக அரசை பிரதமர் தடுக்க வேண்டும்” என்கிறார் சு.சாமி. இவர்கள் அனைவரும் பாரதிய ஜனதாவின் தலைவர்கள். ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.இராதாகிருஷ்ணனோ, எழுவரை விடுவிப்பது என்ற ஜெ.அரசின் முடிவை பாரதிய ஜனதா ஆதரிக்கிறது என்று தைரியமாகப் புளுகுகிறார். ஜெயலலிதா நடத்துவது நாடகம் என்று தெரிந்தவரான ஒப்பனைக்காரர் சோ, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இதனை, “இதெல்லாம் அரசியல்” என்கிறார். திராவிட அரசியலுக்கு ஜெயலலிதா பலியாகி விட்டதாகவும், இத்தகைய அணுகுமுறை அவர் தேசிய அரசியலில் இறங்குவதற்கு உதவாது என்றும் அங்கலாய்த்துக் கொள்கிறது எக்ஸ்பிரஸ் நாளேடு.

மூவர் தூக்கு ஆகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், காஷ்மீர் பிரச்சினையாகட்டும் – இவையனைத்தையும் பொருத்தவரை காங்கிரசு, பாரதிய ஜனதா போன்ற வெறியர்கள் மட்டுமின்றி, வட இந்தியக் கட்சிகள், ஊடகங்கள் முதல் அரவிந்த் கேஜ்ரிவால் வரையிலான அனைவரின் கருத்தும் ஒன்றுதான். அமைதிப்படையை அனுப்பியது முதல் இனப் படுகொலையை உடனிருந்து நடத்தியது வரையிலான எல்லா நடவடிக்கைகளும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய மாநிலங்களில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவ ஒடுக்குமுறைகளும் சரியானவை, கட்சி அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவை, தேசிய நலனின் பாற்பட்டவை என்பதுடன், இவற்றை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசவிரோத சக்திகள் என்பதுதான் இவர்களது கண்ணோட்டம்.

பார்ப்பனீய தேசியம்
“பார்ப்பன இந்து தேசியமும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய நலனும், அரசியல் சட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டவை”

சுருங்கக்கூறின், பார்ப்பன இந்து தேசியமும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய நலனும், அரசியல் சட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டவை என்பதுதான் காங்கிரசு, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் கருத்து. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை என்ற பெயரில், ஆக்கிரமிப்பு முதல் இன அழிப்பு வரை எதையும் செய்யலாம் என்ற பாசிச அரசியலை அவர்கள் ஆணவமாகப் பேசுகிறார்கள்.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், எழுவரின் விடுதலை செய்வது என்ற ஜெ.அரசின் முடிவையும் வரவேற்று கொண்டாடுவோர் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இராஜபக்சேவின் இன அழிப்புப் போருக்குத் துணை நின்ற இந்திய அரசுக்கு எதிராகவும், அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் மற்ற சந்தர்ப்பங்களில் சண்டமாருதம் செய்யும் வைகோ, சீமான், நெடுமாறன், தமிழருவி மணியன் உள்ளிட்டோர், “ஈழத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் இராஜீவ் கொலை; ஆகவே, அது போர்க்குற்றவாளிக்கு எதிரான ஒரு நடவடிக்கை” என்று பேசுவதில்லை. இலங்கை அரசின் இறையாண்மை கொண்ட அதிகாரத்தின் பெயரால் இன அழிப்புப் போரை ராஜபக்சே நியாயப்படுத்துவதைப் போலத்தான், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் காட்டி இந்திய அமைதிப் படையின் போர்க்குற்றங்களை இந்திய அரசு நியாயப்படுத்துகிறது என்று பதிலடி கொடுப்பதில்லை.

ராஜீவ் கொலை என்பது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்த போதிலும், பயங்கரவாத தடை சட்டத்தின் (தடா) கீழ், போலீசே எழுதிக்கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் பித்தலாட்டம் செய்த தியாகராசனின் ஒப்புதல் வாக்குமூலமும் இப்போது வெளிவந்திருக்கிறது. இத்தனைக்குப் பின்னரும் தனது தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த மறுக்கும் உச்ச நீதிமன்றத்தின் நேர்மையை இவர்கள் கேள்விக்குள்ளாக்குவதில்லை. அப்சல் குரு முதல் வீரப்பன் கூட்டாளிகள் வரையிலான பலருக்கும் உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனைகள் அனைத்தும் அரசியல் ரீதியான முடிவுகளேயன்றி, சாட்சியங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளல்ல என்ற உண்மையை மூவர் பிரச்சினையுடன் இவர்கள் இணைத்துப் பேசுவதில்லை.

மாறாக, “ராஜீவைக் கொலை செய்தது தவறு; உண்மையான குற்றவாளிகளைப் பிடித்து தண்டியுங்கள்; மூவரும் நிரபராதிகள் என்பதால் விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சுகிறார்கள். அல்லது, “மூவருக்காக மட்டும் கேட்கவில்லை, மரண தண்டனையே கூடாது என்பதால் கேட்கிறோம்” என்று மேலும் ஒரு அடி பின்வாங்குகிறார்கள். மூன்று பேரின் உயிரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதுதான் தங்களது நோக்கம் போலவும், அதன் பொருட்டுத்தான் மேற்கூறிய கேள்விகளை எழுப்பாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது போலவும் இவர்கள் காட்டுவது வெறும் பம்மாத்து.

ஜெயலலிதா
ஜெயலலிதா இப்பிரச்சினையைத் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைக் கண்டு மனம் குமுறியபோதிலும், ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்க தமிழினவாதிகள் மறுக்கிறார்கள்.

இனவாத பிழைப்புவாதிகளைப் பொருத்தவரை, இது மூவரைக் காப்பாற்றுவது பற்றிய பிரச்சினையல்ல; தங்கள் சோந்த அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வது குறித்த பிரச்சினை. அதனால்தான் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறும் அருண் ஜெட்லிக்கு எதிராக வைகோ உள்ளிட்டோர் பேச மறுக்கின்றனர். இப்பிரச்சினையில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு தெரிந்தேதான் அனைவரும் கூட்டணி அமைக்கின்றனர். பொன். இராதாகிருஷ்ணன் பேசுவது பித்தலாட்டம் என்று தெரிந்தேதான் தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவரும் மோடிக்கு காவடி எடுக்கிறார்கள்.

ஜெயலலிதா இப்பிரச்சினையைத் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைக் கண்டு மனம் குமுறியபோதிலும், ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்க இவர்கள் மறுக்கிறார்கள். அவ்வாறு இவர்கள் அம்பலப்படுத்துவதன் காரணமாக ஜெயலலிதா தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிடவும் முடியாது என்பதையும் இவர்கள் அறிவார்கள். ஈழத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதாவுக்கு உதவியவர்களே இவர்கள்தான் என்பதுதான் இவர்கள் வாய் திறக்க முடியாத நிலையின் இரகசியம்.

1991-இல் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்கள், ஈழத் தமிழ் அகதிகள், தமிழ் உணர்வாளர்கள், புரட்சிகர அமைப்புகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் ஜெ.அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இன்று எழுவர் விடுதலையை ஓட்டு வங்கி அரசியல் என்று பேசும் பார்ப்பனக் கும்பல், அன்று ராஜீவின் மரணத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைத் தனது ஓட்டு வங்கியாக்கிக் கொண்டது. ஈழப் போராட்டத்தையும் ஈழத்தமிழ் மக்களையும் எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவத்திற்கு தமிழக மக்கள் ஆட்படுத்தப்பட்டிருந்தனர்.

ராஜீவ் மரணத்துக்கு மொட்டை போட்டு ஒப்பாரி வைக்கும் அளவுக்கு சீரழிந்திருந்த தமிழக மக்களின் மனோபாவம், குறிப்பிடத்தக்க அளவிற்கு மூவர் தூக்குக்கு எதிரானதாக மாறியிருக்கிறது என்று சொன்னால், அதனைச் சாதித்திருப்பது மரண தண்டனை ஒழிப்பு மனிதாபிமான அரசியல் அல்ல. “இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி” என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது. எழுவர் விடுதலை குறித்த ஜெ.அரசின் அறிவிப்பு என்பது அதன் விளைவுதான்.

இனவாத பிழைப்புவாதிகள் இந்த உண்மையை இருட்டடிப்பு செய்து தமிழக மக்களை அரசியல் மொன்னைகளாக மாற்றுவதற்கான நோக்கம், மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் காவடி தூக்கும் அவர்களது அரசியல் பிழைப்புவாதமே அன்றி, வேறல்ல. இந்த அரசியல் பிழைப்புவாதிகளும் பார்ப்பன பாசிஸ்டுகளும் இன்னொரு முறை ஈழப் பிரச்சினையைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்பதே நம்முன் இருக்கும் கேள்வி.

_____________________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2014
_____________________________________

ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !

17

நான் இந்தப் பதிவில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆட்டோவில் கட்டண மீட்டர்கள் வைக்கக் கூடாது என்றோ, அல்லது அதில் வைத்திருக்கும் கட்டணத்தை விட அதிகமாக வாங்குவது நியாயம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஆட்டோ கட்டணத்தை ம‌ட்டும் பெரிதாகப் பேசும் அல்லது எழுதும் நண்பர்களிடம் கேட்பது ஒன்றுதான். ஆட்டோக்காரர்களிடம் மட்டும் “ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல” என்று சர்வ சாதரணமாக‌ கேட்கும் நாம் கீழே நான் சொல்லியிருக்கும் விசயங்களை எப்படி அணுகிறோம் என்று அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

ஆட்டோ
ஆட்டோக்காரர்களிடம் மட்டும் “ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல” என்று சர்வ சாதரணமாக‌ கேட்கும் நாம்…

இன்று பெருநகரங்களில் இருக்கும் திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு சாதரண மினரல் வாட்டர் பாட்டிலின் விலை என்ன? அதே வாட்டர் பாட்டிலை வெளியில் வாங்கினால் அதன் விலை என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு பாப்கார்ன் விலையில் வெளியில் உள்ள கடைகளில் அதேப்போல் இரண்டு வாங்க முடியும். ஆனால் அங்கெல்லாம் யாரும் ஏன்டா இப்படி விற்கிறீங்கனு பொங்குவதைப் பார்க்க முடியவில்லை. வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

இதைவிடக் கொடுமை வெளியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று வாசலியே போர்டு மாட்டிவிட்டு, அதற்கும் ஆள் வைத்துப் பரிசோதனை செய்கிறார்கள். டிக்கெட் எடுத்து தான் உள்ளே வருகிறேன், அதேப்போல் என்னுடைய பணத்தை கொடுத்து தான் வெளியில் இருந்து உணவுப் பொருளும் வாங்கி வருகிறேன். ஏன்டா இவைகளை நான் உள்ளேக் கொண்டு போகக்கூடாது என்று எவரும் கேட்பதில்லை. திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்குச் செய்யும் செலவை விட, இங்கு வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அநியாயமாகக் கொடுக்கும் விலையின் செலவு அதிகம். திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு கணக்குக் கேட்காமல் வாங்கிச் சாப்பிட்ட‌ நாம் தான் வெளியில் வந்து, நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று “ஆட்டோ வேணுமா சார்?” என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

மல்டிபிளெக்ஸ்
திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட்ட‌ நாம், நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று “ஆட்டோ வேணுமா சார்?” என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் புக் பண்ணும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், வாரத்தில் சாதரண நாட்களில் இருக்கும் டிக்கெட்டின் விலையை விடச் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை நூறு ரூபாயில் இருந்து முந்நூறு ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த மோசடி முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தான் இருந்த‌து, ஆனால் இப்போது வார இறுதி நாட்களிலேயே இப்படி விலையேற்றி கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பஸ் முதலாளிகள் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் டீசலுக்கு அதிக விலை கொடுப்பதில்லை, அதே போல பஸ் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் அதிகச் சம்பளம் கொடுத்தும் விடப் போவதில்லை. “அப்புறம் எதற்கு இந்த விலையேற்றம்?” என்று  கேட்கும் துணிவு எவருக்கும் இல்லை.

ஒரு பஸ் டிக்கெட்டிற்கு நூறு முதல் முந்நூறு ரூபாய் அதிகமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் கொடுத்து பயணித்து விட்டு விடியற் காலையில் பஸ்சை விட்டு இறங்கி போக வேண்டிய இடத்திற்காக ஆட்டோவை தேடும் போது, நமக்காகவே காத்திருந்தது போல் வந்து “எங்க சார் போகனும், வா சார் உட்கார்” என்று கேட்கும் ஆட்டோகாரரிடம் தான் “மீட்டர் போட்டா வ‌ரேன்” என்று சட்டம் பேசுவோம்.

ரெஸ்டாரண்ட் டிப்ஸ்
பெரிய ஹோட்டல்களில் கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல.

இப்போது சாதரணமாக ஒரு ஹோட்டலில் சென்று டிபன் ஆர்டர் செய்தாலே அதைக் கொண்டு வந்து பரிமாறும் சர்வர், இறுதியில் பில் கொடுக்கும் போது நமது முகத்தைப் பார்க்கிறார். அவருக்கும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் டிப்ஸ் வைக்க வேண்டும். சாப்பிட்டது ஐம்பது, அதற்குக் கொடுக்கும் டிப்ஸ் பத்து. இன்னும் கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் நடக்கும் டிப்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். தனது கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல. இவ்வளவு தாரளமாக நடந்து கொள்ளும் நாம் தான் ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் ஆட்டோகாரரிடம் வந்தால் மட்டும் சிக்கனம் பேசுவோம்.

நான் இப்போது இருக்கும் ஹைதராபாத்க்கு வந்தவர்களுக்குத் தெரியும். பிரியாணி என்றால் அது பாவர்ஜி ஹோட்டல் என்று. அந்தக் கடையின் பிரியாணி என்றால் சாப்பிட விருப்பமில்லை என்று சொல்பவனும் சாப்பிடுவான். அந்த அளவிற்குப் பிரியாணி சுவையாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிட எப்போதும் நமது ஊரில் நடக்கும் கல்யாணப் பந்தி போல் தள்ளுமுள்ளாகத் தான் இருக்கும். இந்த ஹோட்டலில் பில் போடுவதும், பணம் வங்குவதும் நமக்குப் பரிமாறும் சர்வர் தான். மொத்தமாகப் பில் போட்டு கொடுக்கும் போதே அவருக்குத் தேவையான டிப்ஸை அவரே பில்லில் போட்டு நம்மிடம் வாங்கிக் கொள்வார். ஒரு வேளை பில்லில் போட மறந்து விட்டால் அவரே கேட்டு வாங்கிக் கொள்வார். நாம் சாப்பிடும் தொகைக்கு ஏற்ப அவர்களின் டிப்ஸும் இருக்கும்.

இப்போது பயணத்திற்கு “நாங்க இருக்கோம் வாங்க” என்று நம்மைக் கனிவாக அழைப்பவர்கள் கால் டாக்சி வைத்திருப்போர். இவர்கள் இப்போது ஒரு சிஸ்டம் வைத்திருக்கார்கள், ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட‌ கிலோ மீட்டர் நாம் பயணம் செய்யலாம் அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். இதைப் பிளான் செய்து நாம் புக் பண்ணினால் என்ன ஆகும் என்பதைக் கீழே விளக்குகிறேன்.

நாம் போக வேண்டிய இடத்திற்கு ஆகும் நேரம் கால் மணி நேரம், அப்படியானால் வருவதற்கும் கால் மணி நேரம், சென்ற‌ இடத்தில் நம‌க்கு ஆகும் வேலைக்கான நேரம் அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒரு மணி நேரம் நமக்குத் தேவைப்படுகிறது. அதனால் நாம் அந்தக் கால் டாக்சியில் உள்ள ஒரு மணி நேர பிளானை புக் செய்கிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் போகும் போது கால் மணி நேரத்தில் சென்று விடுகிறோம், அங்குள்ள வேலையையும் அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வரும் போது டிராபிக் காரணமாக நாம் பத்து நிமிடம் தாமதமாக வருகிறோம் என்றால் அவர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? அதேப்போல் மற்றொரு ஒரு மணி நேரத்திற்கான பணம். இரண்டு மணி நேரத்திற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உண்டு. டிரைவரிடம் எப்படி என்று கேட்டால் அவர் மீட்டரை காட்டுவார். சார் எனக்கு இதில் எதுவும் கிடைக்காது, நீங்கள் குறைத்துக் கொடுத்தால் எனது சம்பள‌த்தில் பிடித்துக் கொள்வார்கள் என்று கையை விரிப்பார். இதையே ஒர் ஆட்டோ டிரைவர் செய்தால் நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்கும்.

ஆட்டோ டிரைவர்
சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார்

இன்றைக்கும் சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு சில‌ ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார். அது மட்டுமல்ல குடித்துவிட்டு நடுச் சாலையில் விழுந்துக் கிடப்பவ‌ர்களைச் சற்று ஒதுக்கி போடுவதற்கோ அல்லது அவருடய ஆடையைச் சரிசெய்வதற்கோ வழியில் செல்லும் எவருக்கும் மனசு வராது. அதையும் மனிதாபிமானம் உள்ள ஓர் ஆட்டோ டிரைவர் செய்வதை நாம் கைக‌ட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.

ச‌மீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், முதியோர்களை இன்றைய தலைமுறைகள் எவ்வாறு கவனிக்கின்றன என்ற தலைப்பில் பேசிய ஒரு பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியது : “இன்றைக்கு வீட்டில் தனியாக இருக்கும் பெரும்பாலான முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மனிதாபிமானம் உள்ள ஏதாவது ஒரு சில‌ ஆட்டோ டிரைவர்கள் தான். இந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை.”

சமீபத்தில் நான் சென்னை வந்தபோது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவரிடம் மீட்டர் கட்டணம் பற்றிப் பேசினேன். “என்னங்க மீட்டர் போட்டு ஓட்டினா லாபமா? நஷ்டமா?” என்றேன், அவரோ, “எனக்கே தெரியல சார்” என்றார். அப்புறம்,”நஷ்டம் தான் சார். எங்க சார்!! சவாரி கிடைக்க மாட்டேங்குது, எங்களுக்கு உறுதியாக இத்தனை சவாரி கிடைக்கும் என்று இருந்தால் லாபமாக இருக்கும். ஆனால் இப்போது சவாரி கிடைப்பதே குறைவாக இருக்கு” என்று சொன்னார்.

அவர் கூறியதும் எனக்கு உண்மையாகப் பட்டது, காரணம் இவர்களுக்கு இன்று இத்தனை சவாரிகள் கிடைக்கும் என்ற உறுதி இல்லை. ஆனால் அன்றைக்கும் அவர்கள் குடும்பத்தை நடத்த வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு மேல் மட்டத்தில் இருப்பவர்களையே அசைத்துப் பார்க்கிறது, இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். நம்மிடம் வாங்கும் பத்து, இருபது ரூபாய்களைக் கொண்டு அவர்கள் ஒன்றும் பங்களா கட்டிவிட முடியாது. அவர்கள் குடியிருப்பது என்பதோ வாடகை வீடுகளிலும், சேரிகளிலும் தான். அவர்களின் வாழ்க்கை தரமும் பெரிதாக உயர்ந்தாகவும் இல்லை.

மல்டிபிளெக்ஸ்
பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களின் சட்டையைப் பிடிப்பது எதனால்

இந்த ஆட்டோ டிரைவர்களுக்குக் கேட்கும் தொகையை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுக்கும் சில பயணிகளால் தான் இந்த பிரச்சனை என்றுப் புகார் வேறு கூறுகிறார்கள் முற்போக்காளர்கள். இவர்களால் தான் இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லோரிடமும் அதிகமாக பணம் கேட்பதாகவும் எழுதுகிறார்கள். இப்படிக் கொடுப்பவர்கள் தான் முதலில் திருந்த வேண்டும் என்று அறிவுரை வேறு. என்ன கொடுமை… கண்டிப்பாக நான் கொடுக்கும் பத்து அல்லது இருபது ரூபாய், அவனுடைய குழந்தைக்குப் பிஸ்கட் ஆகத் தான் வீட்டுக்கு போகும். இப்படிக் கொடுப்பதை நிறுத்தி தான் நான் திருந்த வேண்டும் என்றால் நான் திருந்தாமலே இருந்துவிட்டுப் போகிறேன்.

பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களின் சட்டையைப் பிடிப்பது எதனால். மேலே சொல்லியிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் எந்தப் பத்திரிகையும் எழுதியதாகவோ அல்லது ஊடகங்கள் பொங்கியதாகவோ தெரியவில்லை. காரணம் இந்தப் பெரிய கார்பரேட் முதலாளிகளின் விளம்பரம் பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் தேவை. இவர்களில் நியாயம், அநியாயம் எல்லாம் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் தான்.

நன்றி நாடோடியின் பார்வையில்

அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்

1

“அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் வரை போராடுவோம்!”

என்ற முழக்கத்தின் அடிப்படையில் 25-2-2014 அன்று காலை 11 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய தோழர் ஏழுமலை பேசியதாவது, “தமிழக அரசானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கிறது. மாணவர்களின் அடிப்படை தேவையான குடி நீர், கழிவறை, கேண்டின் செய்து தரவும், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார விழாக்கள் நடத்திடவும் வழிவகை செய்யாமல் இந்த அரசு இருந்து வருகிறது. இப்பிரச்சனைகளுக்கு போராடாமல் தீர்வு கிடைக்காது” என்பதை வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய பு.மா.இ.மு வின் மா நில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர்.சரவணன் பேசியதாவது, “தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி நடக்கின்றது, தேனாறும், பாலாறும் ஓடுகிறது என்று சொல்கின்றனர். அம்மா வாட்டர், அம்மா உணவகம், அம்மா காய்கறி அங்காடி போதாக் குறைக்கு அம்மா திரையரங்கம் என்று தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்றெல்லாம் துதிபாடிகளும் ஊடக அடிமைகளும் பேசி வருகின்றனர். கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், இதுவும் போதாது என்று கல்வியில் 100% சதவீத வளர்ச்சிக்கு கொண்டு செல்வோம் என்றெல்லாம் ஜெயாவும் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். இது வெறும் அறிக்கை தானே அதை நிறைவேற்ற முடியாது, நிறைவேற்றாவிட்டாலும் யார் கேட்க போகிறார்கள் என்ற எண்ணத்தில் இத்தகைய ஏமாற்று மோசடிகள் மக்களிடையே அன்றாடம் கொட்டப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிலைமையென்ன, குடிப்பதற்கு குடி நீர் இல்லை, கழிவறை இல்லை. கேண்டீன் இல்லை. இப்படி எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி படிக்கும் சூழலும் இன்றி, தான் அனைத்து கல்லூரிகளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவைகள் மட்டுமா, போதுமான வகுப்பறைகள் இல்லை பேராசிரியர்கள் இல்லை என்பது தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் கவலைக்குரிய நிலையாக உள்ளது.

மாணவர்களின் தனித்தன்மைகளை வளர்க்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகளோ, கலாச்சார விழாக்களோ நடத்துவதும் கிடையாது. 20 மாணவர்களுக்கு ஒரு தண்ணீர் குழாய் அமைத்திட வேண்டும் எனவும், 50 மாணவர்களுக்கு ஒரு கழிவறை அமைக்க வேண்டும் என்றும் அரசின் சட்டம் கூறுகிறது. ஆனால் இச்சட்டத்தை அரசே மதிக்காமல் செயல்படுகிறது என்பது தான் கேலிக்கு உரிய ஒன்றாக உள்ளது.

ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரியின் கதி எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அங்கே படிக்கும் சூழல் எப்படி உருவாகும். இன்னும் பெண்கள் படிக்கும் கல்லூரியே இதைவிட கேவலமான நிலைமையில் தான் இருந்து வருகிறது. கழிவறைகள் எல்லாம் பாழடைந்து இடிந்து விழும் நிலைமையில் தான் உள்ளது. காயிதே மில்லத் கல்லூரியில் போன வருடம் ஒரு மாணவி மீது சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னே அவர் உயிர் பிழைத்தார்.  இதைப் பற்றி அங்குள்ள பேராசிரியர்களிடம் கேட்ட போது அப்படி ஒன்றும் நடக்கவில்லை, இங்கு எல்லாம் நன்றாக தான் இருக்கிறது என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாகவும் உங்களுக்கு இங்க எந்த வசதியும் இல்லை எனில் ஃபாரின்ல போய் படிக்க வேண்டியது தானே என்று அலட்சியமாகவும் பதில் கூறினார்கள்.

இது இப்படியிருக்க இன்னொரு புறம் பாரதி மகளிர் கல்லூரியின் வாசலிலேயே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் மாணவிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் கோயில்கள் போன்ற இடங்களிலெல்லாம் டாஸ்மாக் இருக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்றம். ஆனால் இதையும் மீறி சாராய வியாபாரம் நடந்து வருகிறது. இதனைக் கண்டித்து நடவடிக்கை எடுக்காத போலீசு, கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சியான பஸ் டே வை கொண்டாடுகின்றனர். இது மாணவர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும் உள்ளதால், பஸ் டே விற்கு தடை ஆணை வாங்கி இருக்கிறது. திட்ட மிட்டே மாணவர்கள் மீது பொய் வழக்கையும் போட்டு வருகிறது அரசு. மாணவர்களிடையே ஏற்படும் சிறுசிறு மோதல்களைப் பெரிதாக்கி மாணவர்களை ரவுடிகளாகவும், பொறுக்கிகளாகவும் போலீசும் ஊடகங்களும் சித்தரித்து வருகிறது.

அனைத்து கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத இந்த அரசு தான் இந்தியா வல்லரசாகப் போகிறது என்று வெற்று தம்பட்டம் அடிக்கிறது. கல்லூரிகளில் கழிவறை வசதி செய்து கொடுக்க துப்பில்லாத இந்த அரசு தான் சந்திராயனை விண் வெளிக்கு அனுப்பி விட்டோம் என்று வீண்பெருமை பாடுகிறது. அனைத்து கல்லூரிகளிலும் கழிவறை, குடிநீர், கேண்டின் வசதிகள் உள்ளதா, வகுப்பறைகள், நூலகங்கள் போதுமான பேராசிரியர்கள் உள்ளார்களா என்று ஆய்வு செய்ய அரசாங்கத்தால் ”நாக்” என்ற கமிட்டி (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார ஆணையம்) 1994-ல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து உறுப்புக் கல்லூரிகளிலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அங்கீகாரம் பெற வேண்டும் அப்படி இல்லையென்றால், அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான நிதியை அரசிடமிருந்து பெற முடியாது. “ நாக்” கமிட்டியிடம் இருந்து அங்கீகாரம் பெற்று அனைத்துக் கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களுக்கு படிக்கும் சூழலை உருவாக்காத சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் தான் மாணவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்கிறார்.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற கொலைகார கொள்கைகளை அமல்படுத்தி வரும் அரசு அனைத்து கல்லூரிகளையும் இழுத்து மூடும் திட்டத்தோடு தான்  செயல்பட்டு வருகிறது. நூறாண்டு பேசும் ஈராண்டு சாதனை படைத்து விட்டோம்  என்று கூறிக் கொண்டு ஏற்கனவே நாடு முழுவதும் பற்றி படர்ந்திருக்கும் தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.

இதன் விளைவாகத் தான் சென்னை இராணி மேரி கல்லூரிகளை இடித்து தலைமைச் செயலகம் கட்டத் துடித்தது அன்றைய ஜெ. அரசு. ஆனால் மாணவிகளின் தொடர்ச்சியான உறுதிமிக்க போராட்டத்தால் தோற்றுப் போனது. இதில் வேடிக்கை என்னவென்றால் திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தில் இயங்காமல் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தையும் வீணடித்தது.

இதே போல் பச்சையப்பன் கல்லூரியை இடித்து, மெட்ரோ ரயில் பணியை தொடங்கியது மத்திய மாநில அரசுகள். இப்படி முதலாளிகளுக்கு ஆதரவான நகரமயமாக்கல் என்ற பொருளாதார கொள்கையின் படி நகரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் நகரத்தின் வெளியே மாற்றியமைக்கும் திட்டம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீரம் மிக்க போராட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் வரை போராடுவோம். இப்பிரச்சனைக்கு தடையாய் நிற்கும் தனியார்மய தாராளமய கொள்கைகளை வேரறுப்போம்”

என்று விளக்கி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

அப்பா சிறை சென்றால்தான் மகள் படிக்க முடியும்

4

களின் படிப்புக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கல்விக் கடனை கட்டாததற்காக கோழிக்கோட்டைச் சேர்ந்த லீலாம்மாவின் 73 வயதான கணவர்  கே.டி.ஜோசப், கடந்த ஒரு வாரமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

லீலாம்மா ஜோசப்
லீலாம்மா ஜோசப் பேரக்குழந்தைகளுடன் (படம் நன்றி The Hindu)

கடந்த 20-ம் தேதி மதியம் 3 மணிக்கு அவரது வீட்டுக்கு வந்த இரண்டு ஆசாமிகள், வழக்கு தொடர்பான சில நடைமுறைகளுக்காக ஒரு மணி நேரம் தம்முடன் வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அன்று அவர் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. தொலைபேசியில் லீலாம்மாவை அழைத்த அவரது வழக்கறிஞர் உடனடியாக கடன் தொகையை கட்டினால்தான் ஜோசப்பை விடுவிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். லீலாம்மா தனது மருமகளின் நகைகளை விற்று ரூ 25,000 திரட்டிக் கொண்டு போனாலும், அந்த தொகை போதாது என்று அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு போய் கண்ணனூர் சிறையில் அடைத்து விட்டனர்.

இருதய நோயாளியும், முடக்கு வாதம் பீடித்தவருமான ஜோசப் என்ற முதியவர் இப்படி கடன் கட்டத் தவறி சிறைக்குப் போயிருப்பது ஏன்?

2004-ம் ஆண்டு (ஆம், இந்தியா ஒளிர்ந்து கொண்டிருந்த அதே ஆண்டுதான்), மகள் செரீனை படிக்க வைத்து ஆளாக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரிக் கட்டணத்திற்காக திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் சீக்கொண்ணு கிளையிலிருந்து 11 சதவீதம் வட்டிக்கு ரூ 1.25 லட்சம் கடன் வாங்கியது ஜோசப்பின் குடும்பம். செரீன் படித்து முடித்து சிறிது காலம் ரூ 1,500 சம்பளத்திற்கு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பெங்களூருவிலும், அதைத் தொடர்ந்து ரூ 3,000 சம்பளத்திற்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும் வேலை செய்திருக்கிறார். தொடர்ந்து,  திருமணமாகி குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பை ஏற்று வேலையை விட்டு விட்டு இப்போது கண்ணனூரில் வசித்து வருகிறார்.

அதாவது, செரீன் பெங்களூருவில் முதலில் வாங்கியது கடன் தவணை அடைக்கக் கூட போதாத பற்றாக்குறை சம்பளம். திருவனந்தபுரத்திலும் வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவு மற்றும் பிற செலவுகள் போக கடன் கட்டுவது சாத்தியமே இல்லாத நிலை இருந்திருக்கிறது. எனவே, கடன் தொகையின் ஒரு தவணை கூட கட்ட முடியாமல், ஆண்டுக்காண்டு ஏறிய வட்டி வீதத்தின் கைங்கரியத்தால் மொத்தக் கடன் தொகை ரூ 3.25 லட்சமாக வளர்ந்து நிற்கிறது. சிறு விவசாயிகளான ஜோசப் குடும்பத்தினருக்கு கடன் கட்டுவதற்கான மாற்று வழிகளும் இல்லாத நிலையில் வட்டியுடன் கூடிய மொத்தக் கடன் சுமையும் 73 வயதான விவசாயி ஜோசப்பின் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது.

அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம் பார்ப்பனியக் கொடுங்கோன்மையால் உழைக்கும் மக்களை ஒடுக்கியது. இன்று திருவிதாங்கூர் ஸ்டேட் வங்கி அரசின் தாராளமயக் கொடுங்கோன்மையால் உழைக்கும் மக்களை சிறையிலடைக்கிறது.

இப்போது கோழிக்கோட்டில் மட்டும் கல்விக் கடன் வாங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 26,000 ஆகவும், கேரள மாநிலத்தில் 3.65 லட்சம் பேராகவும் இருப்பதாக இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

ப சிதம்பரம்
கல்விக் கடன்கள் என்ற பெயரில்  முதலாளிகளுக்கு வங்கிகளால் பணம் தாரை வார்க்கப்பட்டு கடன் சுமை பெற்றோர்கள் மீது சுமத்தப்படுவதற்கு வழி செய்து கொடுத்தார் சிதம்பரம்.

1990-களில் பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற நரித்தனமான போலி அக்கறையை காரணம் காட்டி உயர்கல்வித் துறைக்கு அரசின் நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற உலகவங்கியின் பரிந்துரையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. 1997-ல் உயர்கல்வி “நன்மை தரக் கூடிய சமூகநலப் பட்டியலிலிருந்து’ நீக்கப்பட்டு, “இரண்டாம் பட்ச சமூகநலப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டது. ஆனால், உயர் கல்வித் துறையில் மட்டுமின்றி தொடக்கக் கல்வித் துறையிலும் தனியார் மயத்தை ஊக்குவித்து மோசடி செய்து வருகிறது அரசு.

இதன்படி அனைத்துத் துறைகளிலும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அமைத்து லாப வேட்டை ஆடுவதற்கு முதலாளிகளுக்கு அனுமதியும், ஊக்கமும் அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான அரைகுறை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு, கல்விக் கட்டணங்கள் ஆண்டுக்காண்டு கொள்ளைக் கட்டணங்களாக மாறி வருகின்றன.

பெற்றோர்கள் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கியாவது சில இலட்சங்களை செலவழித்து தமது வாரிசுகளுக்கு தொழில்முறை படிப்புகளில் இடம் வாங்கி விட முயற்சிக்கிறார்கள். கட்டணத்துக்கான பணத்தை திரட்ட முடியாமல் விரக்தியடைந்த பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரங்களும் அதிகரித்து வந்தன. இவ்வளவிற்கும் இந்த படிப்புகளால் வேலையோ இல்லை குறைந்த பட்ச வாழ்க்கையை தொடர்வதற்கான சம்பளமோ கிடைக்கவில்லை.

விற்பதற்கு சொத்து இல்லாத அல்லது கடன் வாங்க முடியாத பெரும்பான்மை மக்களின் வெறுப்பைச் சமாளித்து, தனியார் முதலாளிகளை வாழ வைக்க சொத்து ஜாமீன் கேட்காமல் கடன் கொடுக்க வேண்டும் என்று அரசு வங்கிகளுக்கு உத்திரவு போட்டார் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

அதாவது, கல்விக் கடன்கள் என்ற பெயரில் தனியார் கல்லூரிகளை உருவாக்கி கொள்ளை அடித்து வரும் முதலாளிகளுக்கு வங்கிகளால் பணம் தாரை வார்க்கப்பட்டு கடன் சுமை மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் சுமத்தப்படுவதற்கு வழி செய்து கொடுத்தார் சிதம்பரம். மேலும், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகக் கருதப்பட்டு, அவற்றின் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் திருப்பணியையும் மத்திய அரசு செய்து வருகிறது.

2004-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி 3.19 லட்சம் ஆக இருந்த நாடு முழுவதும் உள்ள கல்விக்கடன் கட்டுபவர்களின் எண்ணிக்கை மார்ச் 31, 2011 புள்ளிவிபரப்படி 22.35 லட்சம் ஆக உயர்ந்திருக்கிறது. மொத்த கடன் தொகை ரூ 4,550 கோடியிலிருந்து ரூ 43,074 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 7 ஆண்டுகளில் கல்விக்காக கடனாளி ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மடங்காகவும், கல்விக் கடன் மூலம் தனியார் கல்வி கொள்ளையர்களின் பெட்டிக்குள் அனுப்பப்பட்ட தொகை 9 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது.

இந்த கடன் சுமையை ஏற்றுக் கொண்டு படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்பை மறுக்கும் வகையில் முதலாளிகளுக்கு ஆதாயம் அளிக்கும் உலகமயமாக்கல் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஊதிப் பெருக்கப்படும் துறைகளின் சந்தைத் தேவையின் நிச்சயமற்ற தன்மை, கொள்ளளவு ஆகியவற்றில் மிகையாக கழித்துக் கட்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை கட்டுவதற்கு கூட போதுமான சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

ஒரு புறம் மக்கள் சொத்துக்களை விற்றும், வங்கிக்கடன் வாங்கியும் தனியார் கல்வி முதலாளிகளின் கல்லாவை நிரப்ப வைக்கும் கல்வி தனியார் மயக் கொள்கை; மறுபுறம் படித்து முடித்து வெளிவரும் இளைஞர்களின் மிகை எண்ணிக்கை மூலம் சம்பள வீதங்களை குறைத்து, தொழில்துறை முதலாளிகளுக்கு லாபத்தை குவிக்கும் உலகமயமாக்கல் கொள்கை. இந்த இரண்டுக்கும் மத்தியில் மக்கள் சொத்துக்களை இழந்து ஓட்டாண்டிகளாகாவது நடந்து வருகிறது.

ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கல்வி வரை அனைவருக்கும் இலவச, சமச்சீர் கல்வியை அரசே வழங்குவதுதான் இதற்கான ஒரே தீர்வு. இந்தத் தீர்வை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, ஆள விரும்பும் பா.ஜ.க கட்சியோ, மாற்றாக முன் வைக்கப்படும் ஆம் ஆத்மி கட்சியோ ஏற்றுக் கொள்வதில்லை. கல்வித் துறையில் மேலும் மேலும் தனியார் மயத்தை ஆழப்படுத்துவது, வேலை வாய்ப்பு சந்தையில் மேலும் மேலும் நிச்சயமின்மையை உருவாக்குவது என்று நாட்டையும் நாட்டு மக்களையும் பேரழிவுப் பாதைக்கு செலுத்துவதுதான் அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளின் கொள்கை.

இந்நிலையில் வங்கிகள் கடனை வசூல் செய்வதற்காக பல்வேறு சட்டபூர்வமான மற்றும் சட்டபூர்வமற்ற வழிமுறைகளில் இறங்குகின்றன. கடன் கட்டாதவர்களின் படங்களை செய்தித் தாள்களில் வெளியிட்டு அவமானப்படுத்துவது, வங்கிக் கிளைகளுக்கு வெளியில் செய்திப் பலகையில் அல்லது பேனரில் போட்டு அழுத்தம் கொடுப்பது மற்றும் மாஃபியாக்கள் போல கடன் வசூலிப்பதற்கு நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வது என்று பெற்றோரின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்க ஆரம்பிக்கின்றன.

விஜய் மல்லையா
7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி செய்த விஜய் மல்லையா சுதந்திர மனிதர்.

அந்த வகையில்தான் ரூ 3.25 லட்சம் கட்ட வேண்டும் என்பதற்காக ஜோசப் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இவரைப் போன்ற அப்பாவிகளிடம் கெடுபிடி காட்டும் வங்கிகள், முதலாளிகள் கட்ட வேண்டிய ரூ 5 லட்சம் கோடி வாராக்கடன்களை ஒரு சில கையெழுத்துக்களில் தள்ளுபடி செய்து விடுகின்றன. 7,000 கோடி வங்கிக் கடன் வைத்திருக்கும் விஜய் மல்லையா சுதந்திர மனிதராக, சொத்துக்களுடனும், ஆடம்பர கேளிக்கை வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

மேலும், பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை வசூலித்து மோசடி செய்த வழக்கில் சகாரா குழும முதலாளி சுப்ரதா ராய் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட, ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன்னுடைய 82 வயது தாயாரின் அருகில் அவர் கையைப் பிடித்துக் கொண்டே உட்கார வேண்டியிருப்பதால் சுப்ரதா ராய் நீதிமன்றத்திற்கு வர முடியாது’ என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாட, ‘இந்த நீதிமன்றத்தின் கரங்கள் நீளமானவை, சுப்ரதா ராயை பிடித்து வரும்படி பிணையில்லா உத்தரவு பிறப்பிக்கிறோம். நாங்கள் நாட்டின் உச்சச நீதிமன்றம்’ என்று நீதிபதிகள் வீராவேசம் காட்ட, ‘சுப்ரதா ராயின் வீட்டில் ரெய்டு நடத்தி அவரை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று உ.பி போலீஸ் தமது திறமையை வெளிப்படுத்த மத்திய அரசும், நீதிமன்றமும், மாநில போலீசும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து நாளிதழில் வெளியான புகைப்படத்தில் லீலாம்மா ஜோசப்பிற்கு அருகில் பள்ளிச் சீருடையில் உள்ள அவரது பேத்தி கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருக்கிறாள். அது போன்று நாடுமுழுவதும் தனியார் கல்விக் கொள்ளை என்ற சிலந்தி வலைக்குள் சிக்க வைக்கப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

– செழியன்.

மேலும் படிக்க