மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி அவர்கள் தொண்டு செய்யும் அம்பானி முதலான கார்ப்பரேட்டுகள், மன்மோகன் சிங்கை ஆட்டுவித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தி சாதாரண மக்கள் தலையில் அடிக்கும் எண்ணெய் கம்பெனி முதலாளிகள், சவுதி ஷேக்குகள் இவர்களை இணைத்துக் காட்டும் கிண்டல் வீடியோ
“கங்னம் ஸ்டைல்” என்பது தென் கொரிய பாடகர் ப்சை என்பவரின் பாப் பாடல். ஜூலை 2012ல் வெளியிடப்பட்ட அந்த பாடல் ஆண்டு இறுதிக்குள் யூ-டியூபில் 100 கோடிக்கும் மேல் பார்க்கப்பட்டிருந்தது. கங்கம் என்பது சியோல் நகரத்தின் மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதி. அந்த பாடல் இந்த மேட்டுக் குடி மக்களின் வாழ்க்கை முறையை கிண்டல் செய்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் இந்திய அரசியல்வாதிகளும், கார்ப்பரேட்டுகளும் பொருத்தப்பட்டு மலையாளத்தில் வெளியான வடிவம் இது.
இனியாவது காதல் இளவரசன் பட்டத்தை வெட்கத்துடன் துறப்பாரா?
இனியாவது காதல் இளவரசன் பட்டத்தை வெட்கத்துடன் துறப்பாரா?
தாழ்த்தப்பட்டோரின் ஊரையும் கொளுத்திவிட்டு, உடைமைகளையும் பறித்துவிட்டு, சந்தடி சாக்கில் வந்தவரை ஆதாயம் என வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும், அதன் பல்லைப் பிடுங்க வேண்டும் என ஆதிக்கசாதி வெறியர்கள் அய்ந்து நட்சத்திர விடுதியில் ரூம் போட்டு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாகாரர்களையே விஞ்சும் வகையில் ‘நாடகக் காதல்’ எனப் புது ட்ரீட்மென்ட்டோடு பாமக ராமதாஸ் போன்றோர் பிலிம் காட்டவும் இறங்கிவிட்டார்கள். “டேய்! எவனாவது சாதி மாறி காதலிச்சா வெட்டுங்கடா!” என காடுவெட்டியும், கந்துவட்டியும் உருட்டுக் கட்டையோடு உலா வருகையில், “ஒரு பொண்ணும் நீயும் லவ் பண்ணா… அவள கடத்தி தருவேன், உனக்கே மண முடிப்பேன்..” என்று ‘போடா!போடியில்!’ ஸ்டெப்பு போட்ட எந்த சிம்புவும் சந்து பக்கம் கூட காணோம்! மொத்த கோடம்பாக்கத்து கும்பலுக்கும் இது பொருந்தும்.
காதலுக்கு விதவிதமாக ‘சீன்’ சொன்னவர்கள், பார்த்து காதல், பார்க்காமலே காதல் என்று காதலிலே கரைகண்டவர்கள், காதலுக்கு மெட்டு போட்டே கட்டை தேய்ந்த விற்பன்னர்கள், காதலுக்கென்றே பிறந்து வளர்ந்ததுபோல காட்டிக் கொள்ளும் கவிஞர்கள், இப்படி ஊரை உசுப்பேத்தியே காதலை வைத்து கல்லா கட்டியவர்கள் எல்லாம், ஒரு காதல் திருமணத்தை சாக்கு வைத்து வன்னிய சாதிவெறியோடு செட்டு போடாமலேயே சேரியை கொளுத்தும்போது, எட்டிப்பார்க்கவும் இல்லை, எதிர்த்துப் பேசவுமில்லை என்றால் இந்த கோடம்பாக்கத்து காரியவாதிகளை ஆதிக்க சாதிவெறிக்கு அடிக்கொள்ளிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? காதலுக்கு கண்ணில்லாமல் போகலாம், ஆனால் சாதி, வர்க்கம், மதம், ஆணாதிக்கம் எல்லாம் இருக்கிறது, எதார்த்தத்தில் இவைகளைக் கடந்து இரு தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ள விரும்பும்போது, தடுக்கும் ஆதிக்க வெறியர்களை தட்டிக் கேட்டு, சமுதாயத்தை நாகரிகப்படுத்துவதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் வேலை.
காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வெட்டுங்கடா! என்ற கும்பலும், காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிங்கடா! படத்தை ஹவுஸ்புல்லா ஓட்டுங்கடா! என்ற கும்பலும் சமூக அக்கறைக்கும், நாகரிகத்துக்கும் சம்பந்தமில்லாதவர்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தருமபுரி தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள்.
இவ்வளவு காலம் ‘காதலை’ வைத்து வயிறு வளர்த்தோமே என்ற கூச்சநாச்சம் கொஞ்சமாவது இருந்தால், காதல் பிரச்சனையை சாக்குவைத்து ஆதிக்க சாதிவெறியை கிளப்பி வெறியாடும் அயோக்கியர்களுக்கு எதிராக ஒரு கண்டனம், இல்லை ஒரு ‘கனிவான’ அறிக்கை கூட வெளியிடாமல், எந்த ஜோடியாவது சாகட்டும், நாம் அடுத்த காதல் ‘சிச்சுவேசனை’ ‘டெவலப்’ பண்ணி காசை பார்ப்போம் என்று தன்பாட்டுக்கு காதலை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த கும்பல்தான், காதலை வைத்து காசு பறிப்பவர்களே ஒழிய தலித் காதலர்கள் அல்ல, என்ற உண்மையை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். எது எதுக்கோ ‘விஸ்வரூபம்’ எடுக்கும் காதல் ‘இளவரசன்’ பழைய பட்டத்துக்கு ஏற்ற மாதிரி பாய்ந்து புரள வேண்டாம், ‘கலைஞானி’ அளவுக்காவது கத்தக்கூடாதா? உள்ளூரில் ஒன்று நடக்கும்போது வாயைத்திறக்காத இவர் குறைந்த பட்சம் காதல் இளவரசன் பட்டத்தையாவது வெட்கத்துடன் துறப்பாரா? கன்னட இனவெறியன் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்த, சூப்பர்ஸ்டார் காதலர்களை வாழ வைக்க காடுவெட்டிக்கு ஒரு ‘வாய்ஸாவது’ கொடுக்கக்கூடாதா? நத்தம் காலனி பற்றி எரியும்போது வாயைத் திறக்காமல், சத்தம் போட்டு ‘தீ..தீ..’ என்று காதலியோடு பாட்டுப்பாடி ‘டூப்பு’
போட்டால் போதுமா? படிக்கப் போகும் பெண்ணை விரட்டி, விரட்டி காதலித்து “எங்கள எல்லாம் பாத்தா புடிக்காது! பார்க்க பார்க்கத்தான் புடிக்கும்!” என்று விடலைகளை உசுப்பேத்தும் தனுஷ், அல்டிமேட், ஆக்சன் கிங், இளையதளபதி, சின்னதளபதி, காதல், திருமணம் அனைத்தையுமே விஜய் டி.விக்கு வியாபாரமாக்கிய சினேகா-பிரசன்னா இப்படி காதலை பல பரிமாணத்தில் தமிழகத்துக்கு கலக்கி கொடுத்த பெரிய பட்டியலே.. நாட்டில் காதலை முன்வைத்து ஒரு அநியாயம் நடக்கும்போது வாயை மூடிக்கொள்வது, நமக்கேன் வம்பு! என்ற பிழைப்புவாத கண்ணோட்டம் மட்டும் காரணமல்ல, திரைத்துறைக்குள்ளும் தினவெடுத்து திரியும் சொந்தசாதி அரிப்பும்தான்!
மனிதனிடமுள்ள எல்ல நற்குணங்களையும் காதல்தான் வெளிக்கொண்டு வரும்! ஆதலினால் காதல் செய்யுங்கள்! என்று மூன்று மணிநேரம் நம்மை தியேட்டரில் வைத்து வகுப்பெடுத்த இந்த ‘படைப்பாளி’ கும்பல், சாதிவெறி, காதலர்களை படுத்தும்போது உங்கள் நல்ல குணம் எந்த டிஸ்கஸனில் ‘புல்’ ஆகி இருந்தது? நாட்டில் எது நடந்தாலும் அதை வேடிக்கை பார்த்து, அதிலும் வியாபாரத்திற்கு ஒரு ‘ஒன்லைன்’ கிடைக்குமா? என்பதுதான் கோடம்பாக்கத்தின் ஒரிஜினல் கேரக்டர். சினிமாவில் பதினெட்டுபட்டியைக் கூட்டி மரத்தடியில் ‘கலப்புத் திருமணத்திற்கு’ ஆதரவு கொடுத்து ‘இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு!” என்று சொடக்கு போடும் சரத்குமாரும், காமெடி ட்ராக்கில் கலக்கும் ’தேவர்’ கருணாஸூம் பச்சையான சாதிவெறி ரகமென்றால், மத்த பார்ட்டிகள் அவர்களுக்கே உரிய இயக்குநர் இமயம், இயக்குநர் சிகரம் என்று தனி ஆங்கிளில் சாதி பார்ப்பவர்கள்தான்.
‘என் இனிய தமிழ் மக்களே’ என்று நம்மை சினிமா டிக்கெட் வாங்க கூப்பிடும் கிராமத்து பாரதிராஜா… காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பேசாதது ஏன்? ‘சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!’ நாடு முழுக்க ‘வீராசாமிகள்’ கேட்கிறார்கள்! பதில் சொல்லுங்கள்! தமிழர் தாய்நிலத்தை பறித்த சிங்கள வெறியர்களையும், சிங்களச்சிகளையும் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென மேடை போட்டு கொட்டி முழக்கும் செந்தமிழன் சீமான்… வன்னிய சாதிவெறிக்கு தீக்கிரையான நாய்க்கன் கொட்டாய் சேரிகளுக்காக, வன்னிய ராசபக்சே ராமதாசை ஜாடையாகக் கூட கண்டிக்காத மர்மமென்ன? ஒருவேளை உங்கள் தமிழ்த்தேசத்தில் சேரிகள் சேர்த்தியில்லையோ?
வார்த்தைக்கு வார்த்தை “நான் தமிழன். தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லுகின்ற சினிமா தமிழ்நாட்டில் இல்லை!, நான் விவசாயி. தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளின் அவலத்தை ஆவணப்படமாக எடுத்து போராடுகிறேன்!” என்று வழக்காடிய தங்கர்பச்சான் இந்நேரம் சொந்த சாதி ஆதிக்க வெறிக்கு எதிராக உடுக்கெடுத்து “பாவிகளா! சேரிகளை கொளுத்தி சாதிக்கு படையல் போடும் உங்கள் சங்கை மிதிப்பேன்!” என்று ஆடியிருக்க வேண்டாமா? சக மனிதனை வாழவிடாத வன்னிய சாதிவெறியின் கேவலத்தை முதலில் உங்கள் பாட்டாளி சொந்தங்களுக்கு படம்பிடித்துக் காட்டுங்கள்! ஒட்டுமொத்த தமிழர்களுக்கான உலகத்தரத்தை பிறகு பார்க்கலாம்! இவர்கள் மட்டுமல்ல, கோடம்பாக்கத்துக்குள்ளேயே குட்டி அக்ரஹாரங்களும், மேலத்தெருவும், கீழத்தெருவும், காலனிகளும் ‘மெயின்டெய்ன்’ ஆகும்போது, இவர்களின் சமூக உணர்வு சாதியெல்லை தாண்டாதது ஆச்சரியமில்லை. சொந்த காலையே கழுவாத இந்த சுரணையற்றதுகள்தான் சமூகத்தை குளிப்பாட்டி கலையாக்கப் போகிறார்களாம்!
காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பாரதிராஜா பேசாதது ஏன்?
இதில் கவிஞர்கள் தனிரகம். வட்டார வழக்கில் அசத்துவதாக சொல்லி “ஏடி.. கள்ளச்சி.. தெரியலயா” என்று காதல் பாட்டில் ‘கள்ளப்பாட்டு’ எழுதும், சமூகப் பேரவை என்ற பெயரில் சாதிக் குழுக்குறி கொண்டாடும் கவிப்பேரரசு, ‘தமிழுக்குச் சோறு போட்டு’ சாதிக்கு குழம்பு ஊத்தும் பேர்வழி. எல்லா சாதிக்கும் காதலை கவுச்சியாகப் பாட்டெழுதினாலும், தன் வாயை மட்டும் ‘அவா’ பாஷையை கழுவாமல் வைத்திருக்கும் வாலி, சசிகலா நடராசனும் சாதிக்கூட்டணியில் கோதிக்கொண்டு “உன்னக் கொன்னா கூட தப்பேயில்ல’ என்று காதலாய் கசிந்துருகும் சினேகன், காதலை வார்த்தைகளில் வாழவைக்கும் ‘கவிப்பேரலை’ நா. முத்துக்குமார், வித்தகக்கவி விஜய், இன்னும் பல வெங்காயக் கவியெல்லாம், “சாதிமாறி காதலித்தால் வெட்டுவோம்” என்று சவால்விடும் போதும்! வடநாட்டு டான்சருக்கு குத்துப் பாட்டெழுத தெம்பிருக்கும் இந்தக் கவிராயர்களால், வன்னிய சாதிவெறி காடுவெட்டி குருவுக்கு ஒரு குத்துமதிப்பு அளவுக்காவது கண்டனம் தெரிவிக்க சாதியக் கட்டுமானம் இடம் கொடுக்கவில்லை போலும்.
இப்படி சினிமா கலைஞர்கள் மட்டுமல்ல, சினிமாவுக்கு துண்டு போட்டு நோட்டம் பார்க்கும் இலக்கியக் கும்பல்களுக்குள்ளும் ஆதிக்க சாதிவெறிக்கெதிரான ‘ஆளுமை’ பீறிடவில்லை. “வெட்கத்தைக் கேட்டால்.. என்ன தருவாய்” என்று குமுதத்தில் காதலுக்காகவே சீழ் வடிந்த தபூ சங்கரால், இராமதாசிடம் போய் காதலைக் கேட்டால் என்ன தருவாய் என்று கேட்க நேரமில்லை போலும். காதலுக்காகவே நேரம் ஒதுக்கி சிந்தித்த இந்தக் கழிசடைகள் கிடக்கட்டும். பின்தொடரும் நிழலில் கம்யூனிச அபாயத்தை எச்சரிக்கும் ‘தரமான’ படைப்பாளி, காடுவெட்டிக் குருவைப் பின்தொடர்ந்து போய் எச்சரிக்கத் தயாரா? இதுதவிர தமிழ்ப்படைப்பாளிகள் எழுத்தாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக உணர்வைக் கொப்பளிக்கும் பிரபஞ்சன் வகையறாக்கள் வரை ராமதாசுக்கு எதிராக பொருள் பொதிந்த ஒரு கொட்டாவியைக் கூட விடக் காணோம்! இவர்கள் மட்டுமல்ல, காதலை கலை இலக்கியம் என பல வடிவங்களில் கடை விரித்த எந்தக் கும்பலும் காதலர்களை வழிமறிக்கும் சாதிவெறிக்கு எதிராக தெருப்பக்கம் காணோம். காதலர்கள் மேல் சாதிவெறி தீ வைக்கும்போது களத்தில் வந்து போராடாமல், எதையும் ‘வித்தியாசமாக’ வேடிக்கை பார்க்கும் இந்த வியாபாரிகள்தான் கலை வளர்க்கும் விற்பன்னர்களாம்! என்ன ‘இவற்றினைப்’ பார்க்கவே பயங்கரமாயில்லை!
இங்கிலாந்தில் சட்ட விரோதமாக திரைப்படங்கள், பாடல்கள், புத்தகங்களை டவுன்லோட் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை
போலிகளுக்கு எதிரான வர்த்தக உடன்பாடு (ACTA), என்பது பெரிய கார்ப்பரேட் பிராண்டுகளின் ஆடைகள், மருந்துகள் போன்றவற்றை நகல் எடுத்து மலிவாக விற்பது, இணையத்தில் காப்புரிமை மீறல் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு ஒப்பந்தம். இதை ஏற்றுக் கொண்ட நாடுகள் கடும் தண்டனைகள் வழங்குவதற்கான தேசிய சட்டங்களை இயற்ற வேண்டும். அதன்படி இங்கிலாந்து சட்டம் இயற்றியிருக்கிறது. இந்தியாவில் எப்போது? முதலாளிகள் தங்களது வர்த்தக நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைத்தான் சார்ந்து நிற்கிறார்கள். உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால், சிறுதொழில், விவசாயம், வியாபாரம் உள்ளிட்டு அனைத்து தொழில்களும் அழிந்து வருவதன் மூலம் மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக சூறையாடப்படுவதைக் கண்டித்தும், நோக்கியா, போர்டு, ஹூயுண்டாய், ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்கள், நீச்சல் குளங்கள், உல்லாச விடுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை ரத்து செய்து சமச்சீர் மின்வெட்டை அமல்படுத்தக் கோரியும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் பிரச்சார இயக்கம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 5.1.2013 அன்று கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர் கிளையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி தனது உரையில், “மின்வெட்டும், மின்வெட்டால் இன்று சாதாரண மக்கள் பயன்படுத்தும் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர், போன்றவை விலை உயர்த்தப்படுவதும் முதலாளிகளின் லாபம் அதிகரிப்பதற்கான அரசின் கொள்கைகளின் விளைவுதான்” என்பதை விளக்கினார்.
“ஒரு ரெனால்ட்ஸ் பேனாவின் உற்பத்திச் செலவு வெறும் 70 பைசாதான். ஆனால், அதை கடையில் ரூ 10க்கு விற்கிறார்கள். கறிச் சிக்கன் என்று நாம் சாப்பிடுவது உண்மையில் கோழிக் கறியல்ல. மக்களின் உணர்ச்சிகளை தூண்டி நுகர்வு வெறியை வளர்த்து விடுகிறார்கள். இவற்றை ஊக்குவிப்பதுதான் உலகமயமாக்கல் கொள்கை. இன்றைக்கு மின்துறையை முதலாளிகளின் சந்தைக்கும், கொள்ளைக்கும் பங்கு போட்டுக் கொள்ள அரசே உருவாக்கியிருக்கும் ஒரு ஏற்பாடுதான் டெல்லியில் உள்ள மின்வாரிய ஒழுங்குமுறை மேலாற்று வாரியம். வேலை. மின்சாரத் துறையின் தேவை, யாருக்குத் தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட புரோக்கர் கும்பல்தான் இவர்கள். தனியார் மயம், தாராள மயம், உலக மயக் கொள்கைகள்தான் இதன் ஆணிவேர். எனவே இதை எதிர்த்துப் போராடுவது ஒன்றுதான் மின்வெட்டை தீர்க்க நிரந்தரமான ஒரு வழி” என்றார்.
2 மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சின் போது மக்கள் ஆர்வமாக அமைதியாக குறிப்பெடுத்துக் கொள்வதை கவனிக்க முடிந்தது.
அடுத்துப் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ,
“கடந்த ஓராண்டுக்கு மேலாக மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில், தஞ்சை மாவட்டப் பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். திருப்பூரில் பின்னலாடைத் தொழில் உள்ளிட்ட அனைத்து ஆயத்த ஆடை தொழில்களும் பாதிக்கப்பட்டு தெருவில் நின்று போராடுகிறார்கள். மின்சாரம் இல்லை, பற்றாக்குறை என்பது பொய். கருணாநிதியும் ஜெயலலிதாவும் வெளிநாட்டு கம்பெனிகளுடன் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி நமது நாட்டை சூறையாடக் காட்டிக் கொடுக்க கிளம்பி விட்ட தேசத் துரோகிகள். மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும், மான்டேக் சிங் அலுவாலியாவும் நமது நாட்டைக் காட்டிக் கொடுத்த ஒன்றாம் நம்பர் கிரிமினல்கள். இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் யாரும் தாங்கள் மின்சாரத்தை தனியாருக்கு விடப் போகிறோம் என்றா ஓட்டுக் கேட்டார்கள்? அப்படிக் கேட்டு இருந்தால் நாம் ஓட்டுப்போட்டு இருப்போமா”
என்று கேள்வி எழுப்பிய போது மக்கள் கைதட்டி வரவேற்றனர்.
“இனி மாற்று தேர்தல் பாதையல்ல, புரட்சிகர அமைப்புகளின் போராட்ட வழிமுறையே தீர்வு! இனி சட்டத்தின் ஆட்சி நடக்காது. சட்டத்தை மீறி தெருப்போராட்டங்களின் மூலம் அரசியல் அதிகாரத்தை மக்களே கையிலெடுக்கப் போராட வேண்டும்”
என்று முடித்தார்.
இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் நாடகமும், கலை நிகழ்ச்சியும் மக்களின் அரசியல் பார்வையை தங்களின் வாழ்க்கையின் அன்றாடம் அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணம் இன்றைய பொருளாதார அமைப்புதான் என்று அம்பலப்படுத்தியது.
குறிப்புகள்:
1. இப்பொதுக்கூட்டத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டக்கூடாது என்று சட்டம் பேசிய போலீசு மைக்செட் போட்டவரை மிரட்டியது. பின் பு.மா.இ.மு., hrpc தோழர்கள், ‘குழாயை கழற்ற முடியாது, எல்லா கட்சிக்கும் இப்படித்தான் செய்கிறீர்களா’ என்று வாதிட்டு மற்ற தெருக்களில் அவிழ்ப்பதை நிறுத்தினோம்.
2. பொதுக்கூட்டத்தின் போது மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் குடியிருக்கும் தெருக்களில் அமைதியான சூழ்நிலையில் பொதுக்கூட்ட கருத்துக்கள் பகுதி மக்களிடம் வெகுவாகச் சென்றது. பகுதிப் பெண்களும், மக்களும் கணிசமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டெல்லியில் நடநத மாணவி மீதான பாலியல் வன்முறையை கண்டித்து மாணவர்களும் பொதுமக்களும் நடத்துகின்ற போராட்டங்கள், அவற்றை ஒடுக்க நினைகின்ற அரசின் காவல்துறை அராஜகம் இவற்றை உழைக்கும் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவும், பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடப்பதற்கு பெண்களை போகப் பொருளாய், அடிமைகளாய் நடத்தும் ஏற்கனவே உள்ள சமூகக் கட்டமைப்பு, மாணவர் இளைஞர்களின் சிந்தனையை சீரழிக்கும் மறுகாலனியாக்க விளைவுகளே காரணம் என்பதை மக்களிடையே எடுத்துக் கூறவும் 27.12.2012 அன்று சென்னை பல்லாவரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை பெண்கள் விடுதலை முன்னணி திட்டமிட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு அமைதி வழங்க உள்ளுர் போலீசு, உளவுத்துறைக்கு போகச் சொன்னது. உளவுத்துறையும் அனுமதி வழங்குகிறோம் என்று முதலில் சொன்னார்கள். 26.12.2013 அன்று மாலை 7.00 மணிக்கு மேல் நமது அலுவலக முகவரிக்கு அனுமதியை மறுத்து விட்டனர் என்ற செய்தியை அனுப்பினார்கள். ‘அனுமதி கொடுப்பதற்கு 5 நாட்கள் முன்னதாக மனு கொடுக்க வேண்டுமாம். அனுமதி மறுப்பதை மட்டும் சில மணி நேரங்களுக்கு முன்னால் கொடுப்பார்களாம்.’ இது தான் காவல்துறை சட்டத்தின் ஜனநாயகம்.
அனுமதி மறுப்பதற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக 26.12.2013 ம் தேதி சற்று முன்பாகத்தான் தகவல் தெரிந்ததாம். ஆர்ப்பாட்டம் நடத்தும் போது கலவரமாக பரவி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவார்கள் என நம்பத்தகுந்த தகவல்கள் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அறிந்தார்களாம். எனவே அனுமதியை மறுத்தார்களாம். கலவரம் செய்பவர்கள் அனுமதி வாங்கிக் கொண்டா செய்வார்கள் என்று குழந்தை கூட கேள்வி கேட்கும்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றவுடன் தோழர்கள் மலைக்கவில்லை. 1 குடம் குடிநீருக்கு குடத்தைத் தூக்கிக் கொண்டு லாரி தண்ணீர் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கும் பெண்கள் லாரி வரவில்லை எனில் தன்னெழுச்சியாக மறியல் செய்தால் மறியல் செய்யக் கூட 30 நாட்களுக்கு அனுமதி வாங்க வேண்டும் என்றும் குண்டர் சட்டம் போடும் அரசின் கருவிதானே உளவுதுறை. இவர்கள் அனுமதியை மறுத்ததில் ஆச்சரியம் இல்லை என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த பெ.வி.மு தோழர்கள் அடுத்த கட்ட வேலைகளுக்கு தயாரானார்கள்.
அனுமதி மறுக்கப்பட்ட செய்தியினை உடனடியாக பெண்களுக்கு சொன்னார்கள். சுவரொட்டி அடித்து ஆர்ப்பாட்டத்தில் கலத்துக் கொள்ள இருக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது என்ற செய்தியையும், அதே இடத்தில் வேறோரு நாள் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்பதை உறுதியாக அறிவித்தனர்.
சுவரொட்டியை பார்க்க வருபவர்களை வேவு பார்க்க உளவுத்துறை அங்கே குவிந்தது. ‘போராட்டமே மகிழ்ச்சி’ என்ற மார்ச்சின் வழி வந்த பெ.வி.மு தோழர்கள் அடுத்ததாக நீதிமன்றத்திற்கு போராட தயாரானார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி போன போது அங்கே புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொதுக் கூட்டத்திற்கும் இதே மாதிரி காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இரண்டு வழக்குகளும் ஒன்றாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. அதுவும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் போராடி வழக்கை எடுத்துக் கொள்ள வைத்தனர். நீதிபதி மனுவை பார்த்தவுடன் ‘இந்தப் பிரச்சனைக்கு ஏன் தடை’ என்று காவல்துறையைப் பார்த்து கேட்டாலும் 19.1.2013 ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கினாலும் ‘100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பொது அமைதிக்கு இடையூறு வரக் கூடாது’ என்பது போன்ற 16 நிபந்தனைகள் போடப்பட்டன.
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது ‘இன்று வா, நாளை வா’ என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள். அதனை எடுத்துக் கொண்டு வந்து உள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்தால் “அதற்குள்ளாகவா ஆர்டர் வாங்கி விட்டீர்கள்” விடாம போராடுறீங்களே” என்றனர்.
ஆச்சரியப்பட்டு நம்மை பாராட்டுகிறார்களாம். இதன் பின்னே என்ன உள்ளது என்பது நமது தோழர்கள் அறியாதது அல்ல. அது 19.1.2013 அன்று வெளிப்படையாக தெரிந்தது.
உள்ளூர் போலீஸ் ‘அனுமதி கேட்ட இடத்தில் இருந்து உட்புறமாக நடத்த வேண்டும்’ என்றது, பேருந்து நிலையத்திற்கு வரும் மக்களது பார்வையிலிருந்து விலக்கி வைக்கவே இந்த ஏற்பாடு. வாக்குவாதத்திற்குப் பின் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
தோழர் அமிர்தா தலைமையேற்று நடத்தினார். அவர் பேசும் போது
சமூகத்தை சாக்கடையாக மாற்றியுள்ளனர் அதிலிருந்து கொசுக்கள் உருவாகிறது. கொசுக்களை ஒழிப்பதை விட சாக்கடையைத் தான் ஒழிக்க வேண்டும். சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் மிக்க சமூகமாய் உள்ளது. இதனை மாற்றாமல் பெண்களது நிலைமை மாறாது.
என்பதை வலியுறுத்திப் பேசினார்.
சிறப்புரை ஆற்றிய மக்கள் கலை இலக்கிய கழக தோழர் துரைசண்முகம்.
பெண்களது பிரச்சனைக்குப் பெண்களே காரணம், ஆடைகளே காரணம் என்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பெண்களை போகப்பொருளாய், அடிமைகளாய், நுகர்வுபொருள் பிரியர்களாய் ஆக்கி வைத்துள்ள இந்த நிலவுடைமை சமூகக் கட்டமைப்பை, பார்ப்பனீய பண்பாட்டை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கிப் பேசினார்.
சட்டத்தை பாதுகாப்பதாக் சொல்லும் காவல்துறையிலேயே பெண் போலீசுக்கு பாதுகாப்பு இல்லை. இதில் பெண்களுக்கு பாதுகாப்புக்கு சட்டத்தை கடுமையாக்கி பயனில்லை. திட்டமிட்டே நுகர்வோர் கலாச்சாரத்தை வள்ர்த்து மலிவான் விலைக்கு செல், மெமரிகார்டுகளை கொடுத்து இளைஞர்களின் சிந்தனையை சிதறடிக்கும் மறுகாலனியாக்கத்தைப் பற்றி விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் பங்கேற்றனர், தோழமை அமைப்புத் தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை பிரதான சாலையில் நம்மை நிற்கவிடாமல் உட்பகுதிக்கு காவல்துறை விரட்டியதையும் தோழர்கள் சாதகமாக பயன்படுத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய நேரம் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தி வியாபாரிகளும் பொதுமக்களும் நமது தோழர்கள் எழுப்பிய முழக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதிக அளவில் நின்று கவனித்தனர்.
கல்லூரி மாணவிகள், தொழிலாளர் பெண்கள் நமது முழக்கங்களையும் தோழர்களது பேச்சையும் அங்கீகரிக்கும் வகையில் ஆர்வமோடு பங்கேற்றனர்.
1991ல் ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரில் ராணுவ தளபதியாக பல ஆயிரம் ஈராக் மக்களை கொன்று பணியாற்றிய நார்மன் ஸ்வார்ஜ்கோ்ப் தனது 78வது வயதில் டிசம்பர் 27, 2012ல் காலமானதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இணைய பத்திரிகை த ஆனியன் (வெங்காயம்)வெளியிட்டிருக்கும் கார்ட்டூன்.
இயேசு கிறிஸ்துவும், சொர்க்கத்தின் வாயில் காப்போரும், அமெரிக்காவுக்கு ஜே போடும் அடியாள் அரபிகளும் அமெரிக்க டாங்கியில் வரும் நார்மனை வரவேற்கிறார்கள்
கொடியங்குளம், திண்ணியம், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர், மேலவளவு முருகேசன் படுகொலை, விருத்தாசலம் கண்ணகி-முருகேசன் தம்பதி படுகொலை உள்ளிட்டுத் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்களைக் கண்டித்து ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளும், இடது, வலது கம்யூனிஸ்டுகளும் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகளும் போராடியதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. ஆதிக்க சாதிச் சங்கங்களோடு கூட்டணி வைத்துக் கொள்ளத் தயங்காத திராவிடக் கட்சிகளும்கூடத் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்படும் வன்கொடுமைத் தாக்குதல்களைக் கண்டித்து வந்துள்ளன.
இப்படிபட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் சில “தலித்” அறிவுஜீவிகள் தருமபுரித் தாக்குதலைக் கண்டிக்கும் சாக்கில், தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்படும் வன்கொடுமைத் தாக்குதல்களை இடது, வலது கம்யூனிஸ்கள் உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகளும்; தேர்தல் அரசியலுக்கு வெளியே செயல்பட்டுவரும் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களும் கண்டித்துப் போராடியதேயில்லை என்ற பச்சைப் பொய்யைத் திரும்பத்திரும்ப பேசியும் எழுதியும் வருகின்றனர். குறிப்பாக, தொல். திருமாவளவன், “நத்தம் தாக்குதலுக்கு முன்பாக இந்த அமைப்புகள் வன்கொடுமைகளைக் கண்டுகொண்டதேயில்லை” என்றவாறு ஒரு பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.
வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருவதில் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்பொழுது, இவர்கள் எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசியும், எழுதியும் வருகிறார்கள் என்பதைக் கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்; தாழ்த்தப்பட்ட மக்களை வேறு யாரும், குறிப்பாக நக்சல்பாரி புரட்சிகர இயக்கங்கள் அணிதிரட்டி விடக் கூடாது; அம்மக்களைத் தமது ஓட்டுவங்கியாகப் பயன்படுத்தும் சுயநல நோக்கத்திற்காகவே புரட்சிகர-ஜனநாயக இயக்கங்கள் மீது அபாண்டமாகப் பழிபோட்டு வருகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறோம். யார் பக்கம் உண்மை இருக்கிறது என்பதைத் தாழ்த்தப்பட்ட மக்கள் உணர வேண்டிய தருணமிது.
– ஆசிரியர் குழு
“தலித்துகள் மீது ஈவிரக்கமற்ற வன்கொடுமைகள் ஏவிவிடப்பட்ட எத்தனையோ சந்தர்ப்பங்களில் இவர்கள் மனசாட்சி இல்லாத அளவுக்கு அமைதி காத்திருக்கிறார்கள். ஆனால், தருமபுரி பிரச்சினையில் கம்யூனிஸ்டுகள் உடனே களத்துக்கு வந்தனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூடத் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை எடுத்தன.”(விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆனந்த விகடன்-நவ.28 இதழுக்கு அளித்த நேர்காணலில், “தருமபுரி பிரச்சினையில் தமிழ்த் தேசியவாதிகள், திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்டுகள்… இவர்களின் நிலைப்பாடு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?” என்ற கேள்விக்கு அளித்த பதில்.)
1997-இல் தென்மாவட்டங்களில் நடந்த தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து, ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய சாதி-தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையொட்டி வெளியிடப்பட்ட நூலின் முகப்பு அட்டை (வலது) மற்றும் அவ்வியக்க நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் (இடது)
“எதிர்வினையாற்ற வேண்டியவர்கள் தலித்துகள்தான். அதிலும் குறிப்பாக, அடங்க மறு! அத்து மீறு! திமிரி எழு! திருப்பி அடி! என்கிற முழக்கங்களை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள்தான் எதிர்வினையாற்ற வேண்டியவர்கள். ஆனால், சிறுத்தைகளோ அமைதி காக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தலித் இயக்கங்கள் எழுப்புகின்றன.”‘‘பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்ன பிற சனநாயகச் சக்திகளும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் ஆற்றவிருக்கும் எதிர்வினைகளுக்காக – செயற்பாடுகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருப்பதையே தற்போதைய கடமையாகக் கருதுகிறது.”(வன்னி அரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
“அந்த தருமபுரியில் அதே நாய்க்கன்கொட்டாய் கிராமத்தில் 1984-ஆம் ஆண்டு தருமபுரி எதிரொலிகள் என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அப்பு, பாலன் சிலை திறப்பில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தோழர்களை, அவர்கள் இசைத்த புரட்சிப் பாடல்களை எண்ணிப் பார்க்கிறேன். திரும்பிய திசையெல்லாம் செங்கொடிகள் அசைந்த ஊர்கள். இப்போது அதே கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்த நெருப்பு, செங்கொடிகளைவிடவும் சிவப்பாக மேலெழுந்துள்ளன. இந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கிறது? அவர்களது போராட்ட வடிவங்களும் அமைப்பின் அங்கங்களாக மாறிவிடும்போது அவர்கள் தம்மைத்தாமே மாய்த்துக்கொண்டு அழிவது தவிர, வேறென்ன வழி இருக்கிறது?”(ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
“சாதி அமைப்பை எதிர்த்த போராட்டத்தில் தலித்துகளுக்கு சமூகக் கூட்டாளி என எவருமே இல்லை என்று அம்பேத்கர் சொன்னார். அது இப்போதும் பொருந்துகிற ஒன்றுதானா என்பதை மனசாட்சி உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.”(ரவிக்குமார், தருமபுரி எதிரொலிகள், நிறப்பிரிகை வலைப்பூ)
அன்னூர் பகுதியில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, பெரியார் திராவிடர் கழகம் அருந்ததியின மக்களைத் அணி திரட்டி நடத்திய பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போராட்டம் (கோப்பு படம்)
“தலித்துகள் தொடர்ந்து படுகொலைகளுக்கும் வாழ்வாதார கொள்ளைகளுக்கும் உட்படுத்தப்படும்போது, அவர்களுக்காகப் பொதுச் சமூகத்திலிருந்து உள்ளார்ந்த குரல் கொடுக்க யாரும் இல்லாத சூழல் நிலவுகிறது.மாற்று அரசியலை முன்வைக்கக்கூடியவர்கள் என்று தங்களை விளித்துக்கொள்ளும் நவீனகால அரசியல் ஆளுமைகள்கூட தலித்துகளுக்குக் குரல் கொடுக்காத இருட்சூழல் நிலவுகிறது.ஆக, சாதிய சமூகத்தின் வேர்களைக் கெல்லி எடுக்கத் தங்கள் கைகளைத் தருகின்ற ஆதரவு சக்திகள்தான் இன்றைக்கும் பெயரளவில் பொதுவாக இயங்குவதாகக் கூறுகின்றனர். அதற்கான உண்மையான முன்னெடுப்புகள் தலித்துகளால் மட்டுமே அல்லது சிறுபான்மையினரால் மட்டுமே எடுக்கப்படுகிறது என்பது வரலாற்று உண்மை.”(யாழன் ஆதி, சமநிலைச் சமுதாயம் – டிசம்பர் 2012)
“ஈழம், மூவர் தூக்கு தண்டனை எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு, பரமக்குடி, தாமிரபரணிப் படுகொலை என எல்லாப் பிரச்சினைக்கும் வலியச் சென்று போராடும் திருமாவளவன், தலித் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்போது மட்டும் அரசியல் அனாதை போல தனித்துவிடப்படுகிறார். அரசியலிலும் தீண்டாமை இருப்பதை அவர் உணர வேண்டிய தருணம் இது.”(சுகிர்தராணி, காலச்சுவடு, டிசம்பர் 2012)
பின் குறிப்பு:
தருமபுரி வன்கொடுமை தாக்குதல் பற்றி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசுவதைக்கூட அனுமதிக்காமல் கூச்சல் போட்டு, கலாட்டா செய்தது, அ.தி.மு.க. கும்பல். அதனால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார், சபாநாயகர். ஆனாலும், திருமாவளவன் தருமபுரி தாக்குதலுக்கு அ.தி.மு.க.வும் துயர் துடைக்கும் நடவடிக்கைகள் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எப்பேர்பட்ட பெருந்தன்மை! எப்பேர்பட்ட பெருந்தகை!
ஒண்ணுமே செய்யாமல் இருப்பதை, இனி யாரும் கையாலாகத்தனம், துரோகம் எனக் கூறக் கூடாது. அதற்கு கடமை, பொறுப்புணர்ச்சி, முதிர்ச்சி என்றவாறு மறுபெயர் இடலாம். இது குறித்து விளக்கம் வேண்டுவோர், வன்னி அரசை அணுகவும்.
________________________________________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________
கலங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் நிற்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அருகாமையில் சில வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது.
சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் மட்டும், மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார், பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.
அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது….
காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.
அவள் பெயர், ரிசானா நஃபீக்
ரிசானா நபீக்
அவள் இலங்கையைச் சேர்ந்தவள். இசுலாமியத் தமிழ்ப் பெண். கிழக்கு இலங்கையில் இருக்கும் மூதூர் கிராமத்தில் ஒரு ஏழை முசுலீம் குடும்பத்தில் பிறந்தவள். 2004-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து அவள் தந்தையின் வருமானம் நின்று போகிறது; குடும்பம் வறுமையின் பிடியில் சிக்குகிறது. பள்ளியில் நன்றாகப் படிக்கும் சிறுமி எனப் பெயர் வாங்கியிருந்த ரிசானா, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் போக்க வெளிநாட்டுக்கு வேலை செய்யத் தயாராக இருப்பதாக வீட்டாரிடம் தெரிவிக்கிறாள். அது 2005-ம் ஆண்டு.
1988 பிப்ரவரி மாதம் பிறந்தவளான ரிசானாவுக்கு அப்போது 17 வயது தான் ஆகியிருந்தது. பிழைக்க வேறு வாய்ப்புகள் இல்லாத அக்குடும்பத்தை அணுகும் இடைத்தரகன் ஒருவன், ரிசானாவின் பிறந்த தேதியை 02-02-1982 என்பதாக போலிச் சான்றிதழ் தயாரித்து அதனடிப்படையில் கடவுச் சீட்டும், சவுதியில் வேலை செய்வதற்கான பணி அனுமதியும் வாங்கித் தருகிறான். 2005 மே 4-ம் தேதி ரிசானா சவுதி செல்கிறாள். சவுதியின் தலைநகர் ரியாத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாதமீசா எனும் பகுதியைச் சேர்ந்த பணக்கார சவுதி ஷேக் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள்.
வீட்டைப் பராமரிப்பது, சமைப்பது உள்ளிட்ட வேலைகளோடு மூன்று மாதங்களே நிரம்பியிருந்த ஷேக்கின் குழந்தையைப் பராமரிக்கும் வேலையையும் கவனித்து வருகிறாள். அதே மாதம் 22-ம் தேதி 17 வயதே நிரம்பியிருந்த ரிசானாவின் பொறுப்பில் தனது மூன்று மாதக் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே செல்கிறாள் அந்த வீட்டின் எஜமானி. முன்பின் அனுபவமில்லாத ரிசானா, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டுகிறாள். சற்று நேரத்தில் அக்குழந்தைக்குப் புரையேறி மூக்கிலிருந்து பால் வடிகிறது. என்ன நேர்ந்தது என்பதை உணராத ரிசானா, குழந்தைக்கு நீவி விடுகிறாள். குழந்தை தூங்கி விட்டதாகக் கருதிக் கொண்டு வேறு வேலைகளில் மூழ்குகிறாள்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வரும் எஜமானி, குழந்தை இறந்து போயிருப்பதை காண்கிறாள் – ரிசானாவை அடித்துத் துன்புறுத்துகிறாள். தொடர்ந்து காவல் துறையிடம் கையளிக்கப்படும் பதினேழு வயதே நிரம்பிய சிறுமி ரிசானா மொழி தெரியாத நாட்டில், நண்பர்களோ உறவினர்களோ இல்லாத சூழலில் ஒரு கொலைப்பழியை எதிர் கொண்டு நிற்கிறாள். போலீசாரும் கண்மண் தெரியாமல் அடித்து வாக்குமூலம் கேட்கிறார்கள் – தமிழ் மட்டுமே அறிந்திருந்த ரிசானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கிறார்கள். அடி பொறுக்க முடியாமலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் (சிலர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள்) மொழிபெயர்த்துச் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாமலும், அரபி மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலப் பத்திரத்தில் எழுதப்பட்டது என்னவென்று அறியாமலும் அதில் கையொப்பமிடுகிறாள் ரிசானா.
வழக்கு விசாரணைக்கு வருகிறது. இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்படுகிறார். ரிசானா தன்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை மறுக்கிறாள். அரபு தேசத்தில் நடந்த அந்த விசாரணையில், அரபிக் குடும்பம் தொடுத்த வழக்கில், தனது தரப்பில் வாதாட யாருமே இல்லாமல் ரிசானா நிர்கதியாக நின்ற நிலையில், நீதிமன்றத்தில் பேசப்படுவது என்னவென்பதையே புரிந்து கொள்ள முடியாமல் ரிசானா தவித்துக் கொண்டிருந்த நிலையில், அரபு போலீசார் முன்வைத்த ‘ஆதாரங்கள்’ மற்றும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடந்த அந்த ஒரு தலைப்பட்சமான விசாரணைகளின் முடிவில் அவளுக்கு ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அது 2007-ம் ஆண்டு ஜூன்மாதம்.
2005-ம் ஆண்டு மே மாதத்திலிருந்தே சிறையிலடைக்கப்பட்ட ரிசானாவின் நிலை சுமார் ஓராண்டு காலம் வெளியுலகுக்கே தெரியவில்லை. அவளது வீட்டாருக்கும் எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. ஹாங்காங்கைத் தலைமையகமாய்க் கொண்டு செயல்படும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தான் முதலில் இதை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட ஒரு தலைபட்சமான தீர்ப்பு உலகெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்போடு ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல் முறையீட்டில் கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பே உறுதி செய்யப்படுகிறது. உலகளவில் இது சர்ச்சைக்குள்ளாகி விட்டிருந்த நிலையில், இலங்கையிலும் மக்கள் போராட்டம் வலுத்த நிலையில், இலங்கை அரசு இதில் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் ரிசானாவை விடுதலை செய்யக் கோருகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே கூட மக்கள் போராட்டங்களுக்காக கொஞ்சம் ‘மனமிறங்கி’ சவுதி அரசுக்குக் கடிதங்கள் அனுப்புகிறார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு மேற்குலகின் பிரபலங்களும் ரிசானாவை விடுவிக்க வேண்டுமென்று கோருகிறார்கள்.
குழந்தையின் பெற்றோர் இறந்த தமது குழந்தைக்கு பதிலாக ரிசானாவிடமிருந்து ‘குருதிப் பணம்’ பெற்றுக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தால், ஷரியா (ஷரியத்) சட்டப்படி அவள் சிரச்சேதத்திலிருந்து தப்ப முடியும் என்று ஷரியா சட்டம் கூறுகிறதாம். உடனே, சவுதி இளவரசர் குழந்தையின் பெற்றோர்களிடம் நேரடியாக பேசிப் பார்த்தாராம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இதெல்லாம் மரண தண்டனையை தவிர்ப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று சவுதி அரசு கூறுபவை.
ரிசானாவின் உறவினர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் அந்தப் பெற்றோருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்களும் மன்றாடல்களும், அல்லாவிடம் செய்யப்பட்ட துஆக்களும் ரிசானா மீண்டும் ஊர் திரும்புவாள் என்று வைத்த நம்பிக்கைகளும் பயனற்றுப் போயின. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:40க்கு ரிசானாவின் தலை வெட்டி வீழ்த்தப்பட்டது. காண்போர் பதைபதைக்க அல்லா அருளிய ஷரியத் சட்டப்படி பச்சையாய்ப் படுகொலை செய்யப்பட்டாள்.
ஷரியத் சட்டத்தை முன்வைத்து நடக்கும் வெட்டி விவாதங்கள்!
ரிசானாவின் படுகொலை உலகெங்கும் கடும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இசுலாமிய ஷரியத் சட்டங்கள் சரியா தவறா என்பதைச் சுற்றி இவ்விவாதங்கள் நடந்து வருகின்றன. முசுலீம்களில் கடுங்கோட்பாட்டுவாதிகளான வகாபிகள் தவிர மற்றவர்களால் ரிசானாவின் கொலையை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இவர்களில் ஜனநாயக பூர்வமாகச் சிந்திக்க கூடிய மிகச் சிலர் மட்டும் இந்த தண்டனையை மாத்திரமின்றி, இதற்கு அடிப்படையாய் இருக்கும் ஷரியத் சட்டங்களையே கூட கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கிறார்கள்.
வகாபிகள் அளவுக்கு கடுங்கோட்பாட்டுவாதிகளாக இல்லாவிட்டாலும், இசுலாமிய சட்டங்களின் மேல் விசுவாசம் கொண்ட பலரும் இந்தக் கொலைக்குப் பல்வேறு வகையான வியாக்கியானங்களைத் தருகிறார்கள். அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம் –
குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிசானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுததப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்து விடுவார். அவருக்கு நல்ல எண்ணங்கள் இருந்திருந்தால் அதனடிப்படையில் அவர் உயர்ந்த சொர்க்கத்தை அடைவார்.
அவள் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாவிடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வாள்.
அறிந்து கொண்டே அவளுக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாவின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.
மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லா வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?
அதாவது அனைவரின் கண் முன்பாகவே இகலோகத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு யாருமே காணாத பரலோகத்தில் தண்டனை வழங்கப்படும் என்று நம்ப வேண்டுமாம். ரிசானாவைப் போன்ற ஏழைகள் – மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் – ஷேக் குடும்பங்களைச் சாராதவர்கள் அநியாயமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டால் ‘சொர்க்கம்’ கிடைக்குமாம்; யாருக்குத் தேவை அந்தச் சொர்க்கம்? ‘உளச் சுத்தியோடும் அர்ப்பணிப்போடும் வாழ்நாள் முழுக்க, மேல் வருணத்தாருக்கு நீ பீ அள்ளிக் கொண்டேயிருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் வருண புரமோசன் கிடைக்க கூடும்’ என்று கூறும் மனுநீதியின் அரபு மொழியாக்கம் தான் இந்த வாதங்கள்.
இசுலாமிய மதவாதிகளின் தரப்பிலிருந்து இப்படுகொலையை ஆதரித்து வைக்கப்படும் அயோக்கியத்தனமான வாதங்களை உலகெங்குமுள்ள பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் இதழில் எழுதி வரும் ‘எதிர்குரல்’ எனும் தொடரில் கண்டித்திருந்தார். வழக்கின் விவரங்களை நேர்மையாக அலசும் மனுஷ்யபுத்திரன், மனிதாபிமானமற்ற விதத்தில் ரிசானா கொல்லப்பட்டது எவ்வகையிலும் நியாயமில்லை என்கிறார். ‘கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்’ என்கிற பழங்காலத்திய இனக்குழு சமூகங்களின் தண்டனை முறைகளை அப்படியே இன்றும் பின்பற்றுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்.
மனுஷ்யபுத்திரனின் கட்டுரை வெளியானதும் அதை எதிர்த்து காட்டு மிராண்டித்தனமான எதிர்வினை தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த வகாபியர்களிடமிருந்து எழுகிறது. தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெயினுலாபிதீன், தனது தளத்தில் கிட்டத்தட்ட மனுஷ்யபுத்திரனை கொன்று போட வேண்டும் என்ற தோரணையில் இரத்தவெறி பிடித்து எழுதியிருந்தார். மேற்கோள் காட்டுவதற்கோ விவாதிப்பதற்கோ எந்த வகையிலும் தகுதியோ தராதரமோ இல்லாத நாலாந்தர பொறுக்கியின் மொழியில் ஏகவசனத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையின் சுருக்கமான சாரம் இது தான் – “டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படி கொன்றால் மன்னிப்பாயா?”
மனுஷ்யபுத்திரனை ரத்த வெறியுடன் கண்டிக்கும் ஜெயினுலாபிதீனின் கட்டுரை
இத்துப்போன மதச் சட்டத்துக்கு விளக்கம் எதற்கு?
ஷரியத் சட்டங்கள் சரியானது தான் என்று நிறுவும் நோக்கம் கொண்ட மேற்படி வாதங்களில் இருக்கும் அபத்தங்களை ஆராய்ச்சி செய்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். எனினும் ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியரின் இரத்தவெறி பிடித்த காட்டுக்கூச்சல்களின் முன் சில எளிய கேள்விகளை முன்வைக்கிறோம்.
ஈராக்கில் போர் துவங்குவதற்கு முன்பதாகவே பொருளாதாரத் தடை விதித்து மருந்துப் பொருட்களைத் தடுத்து ஐந்து இலட்சம் இராக்கிய குழந்தைகளை சாகடித்தது அமெரிக்கா. இதையெல்லாம் சவுதி அரசின் இடம், பணம், பொருள், ஆள்பல உதவியுடன்தான் அமெரிக்கா செய்தது.
ஷேக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் இறப்புக்காக இந்த அளவுக்குத் துள்ளிக்குதிக்கும் பீ.ஜே, அமெரிக்காவின் அடியாளாக செயல்பட்டு உலகெங்கும் இசுலாமிய மக்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்ற சவுதி அரசை தண்டிக்க, இசுலாமிய சட்டத்தில் என்ன ஷரத்துகள் இருக்கின்றன என்று இவர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யாத காரணம் என்ன? ‘காஃபீர்களோடு’ கைகோர்த்து நிற்கும் சவுதி ஷேக்குகளின் பணத்தில் மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்துவதைக் காட்டிலும், மானங்கெட்ட வேலை எதுவுமில்லை என்றும், அப்படி காசு வாங்குபவன் இசுலாமியனே இல்லை என்றும் இவர்கள் ஏன் கூறுவதில்லை.
ஷரியத்தின் படி அந்தக்காசையெல்லாம், இராக் மக்களின் சார்பில், குருதிப் பணமாக வரவு வைத்துக் கொண்டு, சவூதி ஷேக்குகளின் குற்றத்தை மன்னித்துவிட்டார்களா பி.ஜே க்கள்?
பி.ஜெயினுலாபிதீன்
மிகவும் விரிவான வாழ்வியல் வழிகாட்டுதல்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் ஷரியத் சட்டங்களின் படி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அதிலும் குறிப்பாக இசுலாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் அரபு தேசங்களுக்குச் சென்று வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது சந்திக்கும் பாலியல் கொடூரங்களுக்காக சவூதி ஷேக்குகள் எத்தனை பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன?
ஆப்கானிய தாலிபான்கள் ஷரியா சட்டப்படி பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள், ஆண் துணையின்றி வெளியிடங்களுக்குச் சென்றாலே பெண்களைக் கொன்று போடுகிறார்கள் – ஆனால், அரபு தேசங்களோ மூன்றாம் உலக ஏழை நாடுகளில் இருந்து இசுலாமிய சிறுமிகளை வேலைக்கு தருவித்துக் கொள்கிறார்கள். அவர்களைச் சுரண்டுகிறார்கள்: பாலியல் வக்கிரங்களுக்கு கிடைத்த இலவசமான அடிமைகளாக கருதி அந்த பிஞ்சுகளைக் குதறுகிறார்கள்.
வெளி வேலைக்கு ஒரு பெண் விமானமேறுவதை ஷரியா அனுமதிக்கவில்லையென்றால், வளைகுடா ஷேக்குகள், இசுலாமிய ஏழைச் சிறுமிகளை எப்படி இறக்குமதி செய்கிறார்கள்? ஆண்கள் கூப்பிடுவது குற்றமில்லை, பெண்கள் போவதுதான் குற்றம் என்கிறதா இவர்களது சட்டம்? பரவாயில்லையே, நம்மூர் விபச்சார தடை சட்டம் மாதிரியே “நடுநிலையாக” இருக்கிறதே!
“இந்த விசயத்தில்” அல்லாவுக்கு பயந்து, நடந்து கொள்ள விரும்பும், 60, 70 வயதுக்கு மேற்பட்ட உண்மையான முஸ்லிம்கள், (ஷேக்குகள்,) 15 வயது சிறுமியாக இருந்தாலும் நிக்கா செய்து ஐதராபாத்திலிருந்து அழைத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். நிக்கா செய்து அழைத்துப் போவதால், இகலோகத்தில் பாஸ்போர்ட் விசா பிரச்சினையும் இல்லை. ஷரியா படி நடந்து கொள்வதால் சுவனத்தில் போதுமான பெண்களும் கிடைப்பதற்கும் உத்திரவாதம் உண்டு. இதெல்லாம் பி.ஜே போன்ற ஷரியா கன்சல்டன்சி சர்வீசஸ் நடத்துவோர் கொடுக்கும் ஐடியாவா, அல்லது டிராவல் ஏஜென்சி நடத்தும் முஸ்லிம்கள் கொடுத்த ஐடியாவா தெரியவில்லை.
குரானோ, ஷரியத்தோ சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் கொண்டவையும் அல்ல. நம்மைப் பொருத்தளவில் பார்ப்பன மனுநீதியை எந்த அளவுக்கு ம(மி)திக்கிறோமோ அதே தகுதியைத்தான் ஷரியத்திற்கும் ஒதுக்கியிருக்கிறோம்.
“இந்து சட்டம் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட அனுமதித்த்து. எங்கள் சட்டம் நான்கோடு உச்ச வரம்பு விதித்து விட்டது. அப்படிப் பார்த்தால் நாங்கள் தானே முற்போக்கு” என்று இசுலாமிய நண்பர்கள் தயவு செய்து கேட்காதீர்கள். அப்புறம் எங்கள் மதச்சட்டப்படி உச்ச வரம்பு 3 என்று யாராவது வருவார்கள். இன்னொருவன் எங்கள் மதத்தில் எல்லோரும் பாச்செலர்தான் என்பான். இந்த லூசுத்தனங்களின் பின்னால் மூச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல நமது வேலை.
மதங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்கள் எனப்படுபவை அவை தோன்றிய காலத்துக்கு மட்டுமே உரியவை. 7ம் நூற்றாண்டில் நாகரீகமற்று இனக்குழுக்களாய் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த ஃபதூயின் இன அரபிக்களை முகம்மது நபி அவருக்கு அந்தக்காலம் வழங்கியிருந்த வாய்ப்புகளுக்குட்பட்டு நெறிப்படுத்தினார். அந்தக் காலத்துக்கு மட்டும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தார். அதன் கதை அன்றோடு முடிந்தது. இது 21ம் நூற்றாண்டு. பங்குச் சந்தை சூதாட்டங்கள் பற்றியோ, இணைய வக்கிரங்கள் பற்றியோ, பாலியல் திரைக்காட்சிகள் பற்றியோ அல்லது விலையேற்றம், மின்சாரத் தடை, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சமகால வாழ்க்கைச் சிக்கல்களுக்கு குரானிலோ பைபிளிலோ என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தேடிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.
ஆனால் ஜெய்னுல்லாபிதின் முதலான வகாபியர்கள் அந்த ஏழாம் நூற்றாண்டு விதிப்படிதான் இன்றும் வாழ வேண்டும் என்று பரிதாபத்திற்குரிய இசுலாமிய மக்களுக்கு கட்டளை போடுகிறார்கள். இல்லையென்றால் பத்வா விதித்து கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு அவர் எழுதியுள்ள காட்டுமிராண்டித்தனமான மிரட்டலை பார்த்தால் போதும். இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் மாட்டிக் கொண்டால் தமிழ்நாட்டில் ஏழை முஸ்லிம்கள், தலையில்லாமல் வாழும் கலையைக் கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணக்கார முஸ்லீம்கள், பி.ஜே யிடம் பணம் கட்டி, சொர்க்கத்துக்கு நுழைவுச்சீட்டு வாங்கிவிடுவார்கள்.
ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியர்கள் இப்படியெல்லாம் இரத்த வேட்கையுடன் ஊளையிடுவதற்கு காரணம் இல்லாமலில்லை.
பி ஜெயினுலாபிதீன் இணைய தளம் ஆன்லைன் பிஜெ
யார் இந்த வகாபியர்கள் ?
வகாபிசம் அல்லது சலாஃபியிசம் என்று அழைக்கப்படும் சுன்னி இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் பிறப்பிடம் அரேபியத் தீபகற்பம். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முகம்மது இப்னு அல்-வஹாப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வகாபிசம் எனும் இந்த மதப்பிரிவு. மிகக் குறைந்த மக்கள் தொகையும் மிகப் பரந்த பாலைவனமும் கஞ்சிக்கே வழியில்லாத பொருளாதாரமும் கொண்டிருந்த அரபு தீபகற்பத்தில் நம்மூர் பாளையக்காரர்கள் போல கும்பல் கும்பலாய்ப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதில் திரிய்யா எமிரேட் எனப்படும் பகுதியின் இளவரசரான முக்கம்மது இப்னு சவூத்தோடு கைகோர்க்கும் வஹ்ஹாப், மதக் கடுங்கோட்பாட்டுவாதத்தை அடிப்படையாக வைத்து இசுலாமிய நாடு ஒன்றை உருவாக்க முனைகிறார்.
1744ல் திரிய்யா எமிரேட் சவுதி அரசானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி பல்வேறு விரிவாக்கச் சண்டைகளில் இறங்குகிறது. ஏற்கனவே அந்தப் பகுதியில் நிலவிய தர்ஹா வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இசுலாமிய நம்பிக்கைகளை வாள் முனையில் ஒழித்துக் கட்டுகிறார்கள். சவுத்தின் அதிகாரம் 19 நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் எகிப்திய தளபதியினால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரைக்கும் ஒரு நிலையான அரசாட்சியின்றி சவுத் வம்ச வாரிசுகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சில காலத்திற்கு ரியாத்தைச் சுற்றியுள்ள மிகச் சிறிய பகுதியைக் கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள்.
முதலாம் உலகப் போரின் சமயத்தில் நேசநாடுகளுக்கு (இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா) எதிரணியான அச்சுநாடுகளோடு (ஜெர்மன், ஆஸ்த்ரியா, இத்தாலி) இருக்கிறது துருக்கியை மையமாகக் கொண்ட ஒட்டோமன் பேரரசு. இந்நிலையில் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அரேபிய பகுதியைச் சேர்ந்த குட்டிக் குட்டி பாளையக்காரர்களில் சிலர் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுபடுவதற்காக இங்கிலாந்தை ஆதரிக்கின்றனர். அதில் முதன்மையாக இருக்கிறார் சவுத் வம்சாவளியைச் சேர்ந்த இப்னு சவுத். அவருக்கு துணையாக நின்றது வகாபிய அடிப்படைவாதத்திற்கு ஆட்பட்டிருந்த பழங்குடியினர்.
வஹாப் மற்றும் சவூத் குடும்பங்கள் அன்றிலிருந்து இன்று வரை பரஸ்பர திருமண பந்தங்களின் மூலம் இணைந்துள்ளன – இவர்கள் தாம் சவுதி அரசின் பல்வேறு அடுக்குகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்துகிறார்கள்.
அமெரிக்க – சவுதி காதல் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சவுதி மன்னருடன்
20ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளிடயே அதைக் கைப்பற்றும் நாய்ச்சண்டை மூள்கிறது. இதில் சவுதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவின் காலில் சரணாகதியடைகிறது. எண்பதுகளில் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளை விரட்டியடிக்க நேரடியாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முஜாஹித்தீன் குழுக்களுக்கு அமெரிக்க உத்தரவின் படி, ஆள் பலம் முதல் மத அடிப்படையிலான தத்துவ அடிப்படை வரை வழங்கியதும் இசுலாமிய மதவெறியையும் ஊட்டியதும் சவுதியைச் சேர்ந்த வகாபிகளே.
மட்டுமின்றி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் நடத்திய ஈராக் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் அமெரிக்காவின் மத்திய கிழக்குப் பிராந்திய செல்ல ரவுடியாக செயல்பட்ட இசுரேலுக்கும் சவுதி நேரடியான நட்பு நாடாகவும் அடியாளாகவும் விளங்கி வருகிறது. ஈரான், சிரியா, லெபனான் என்று எங்கெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடியாட்களும் கூலிப்படையும் தேவையோ அங்கெல்லாம் முன்னின்று உதவிக்கு வருவது சவுதி அரசும் அதன் வகாபிய தத்துவமும் தான்.
உலகெங்கும் இசுலாம் அல்லாத மக்களிடையே எழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை நிறுவனமயமாக்கி நீர்த்துப் போகச் செய்ய என்.ஜி.ஓக்களை அமெரிக்கா நம்பியிருக்கிறதென்றால், இசுலாமியர்களை அரசியல் ரீதியில் காயடிக்க சவுதி வகாபியம் உதவி செய்கிறது. சவுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் நேரடியாக அமெரிக்கா முதலீடு செய்துள்ளது என்றால், அவற்றில் பங்குகளைக் கொண்டிருக்கும் ஷேக்குகள் தங்கள் வருமானத்தை முதலீடு செய்வதும் அமெரிக்காவில் தான். அமெரிக்கப் பங்குச சந்தையில் மட்டுமின்றி, வால்வீதியின் முக்கியமான நிதிமூலதன வங்கிகள் உள்ளிட்ட முக்கியமான தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்களின் பங்குகளிலும் ஷேக்குகள் தங்கள் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இராணுவ ரீதியிலோ பொருளாதார ரீதியிலோ அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடையுமானால் அது அரபி ஷேக்குகளையும் தன்னோடே பாதாளத்திற்குள் இழுத்துச் சென்று விடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இவர்கள் இருவரின் நலனும் பிரிக்கவொண்ணாதபடிக்கு பரஸ்பரம் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது.
ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் குழுமத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகெங்கும் அமெரிக்கா நடத்தும் இசுலாமிய நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு சாதகமாக கருத்துப் பிரச்சாரம் செய்து போருக்கு ஆதரவான பொதுக்கருத்தைக் கட்டமைப்பது இந்த ஸ்டார் குழுமம் தான். இதில் பிரதான பங்குதாரர், சவுதி இளவரசர். அந்த வகையில் இசுலாத்தையும் இசுலாமியர்களையும் கேவலமாக சித்தரிப்பதற்குத் துணை போகும் சவுதி ஷேக்குகள், மறுபுறம் தூய இசுலாம் எனும் பெயரில் வகாபியிசத்திற்கு ஸ்பான்சர் செய்கிறார்கள்.
உலகின் எந்த மூலையிலும் அமெரிக்கா வீசும் குண்டுகளுக்குச் சிதறி விழும் இசுலாமியச் சடலங்களிலிருந்து வழிந்தோடும் குருதியில் சவுதி அரசுக்கும் பங்கு கிடைக்கிறது. அந்தப் பங்கிலிருந்து கிள்ளிக் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான டாலர்களில் தான் வகாபிய மதரஸாக்களும் பள்ளி வாசல்களும் கொழிக்கின்றன. ஜெய்னுல்லாபிதின்கள் மஞ்சக்குளிக்கிறார்கள்.
எண்பதுகளில் பாகிஸ்தானில் முஜாஹித்தீன்களை அறுவடை செய்ய அமெரிக்கா உருவாக்கிய மதரஸாக்கள் இன்று அதற்கு தலைவலியாக உருவெடுத்திருப்பதாக சிலர் கணிக்கிறார்கள். ஆனால், தன்னால் உருவாக்கப்பட்ட இந்தக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் நடவடிக்கைகளையே நாகரீக உலகத்திற்கான அச்சுறுத்தலாக பிரச்சாரம் செய்து அதையே தனது ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான நியாயமாகவும் அமெரிக்கா முன்னிருத்துகிறது. இந்த மேட்ரிக்ஸ் உலகில் அமெரிக்க ஹீரோ தான் இசுலாமிய பூச்சாண்டியின் கர்த்தா. அந்தப் பூச்சாண்டியின் சின்னச் சின்ன சீண்டல்கள் தான் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அமெரிக்கா வைத்திருக்கும் முக்கியமான துருப்புச் சீட்டு.
இந்தப் பின்னணியில் வைத்துத் தான் உலகெங்கும் விஷம் போல பரவிவரும் வஹாப்பியத்தை நாம் ஆராய வேண்டும். இந்தியாவைப் பொருத்தமட்டில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட வஹாபிய அடிப்படைவாதிகள் இசுலாமியர்களின் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்குப் போராடுவதில்லை. கோகோ கோலா, டிஷ் ஆன்டனா, உலகமயமாக்கம் ஆகியவை குறித்து இசுலாம் என்ன சொல்கிறது என்று கூறுவதில்லை. தூய இசுலாமியர்கள் இப்படி சைத்தான் தனமான கேள்விகளைக் கேட்பதும் இல்லை.
கடுங்கோட்பாட்டுவாத நம்பிக்கைகளை காத்துக் கொள்ளும் நோக்கில் மட்டுமே குறியீட்டு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவது தஸ்லீமா நஸ்றீன், சல்மான் ருஷ்டி போன்றவர்களை எதிர்த்துப் போராடுவது, உழைக்கும் மக்களின் தர்ஹா வழிபாடு எதிர்ப்பு போன்றவற்றில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகள் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையில், ஜெய்னுல்லாபிதின் போன்றவர்கள் முன்னின்று அதைத் துரிதப்படுத்துகிறார்கள். இந்தக் கடுங்கோட்பாட்டுவாத வெறித்தனங்கள் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நச்சுப்பிரச்சாரங்களுக்கு ஒரு அரசியல் அடிப்படையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்குகிறது.
மனுஷ்ய புத்திரன்
பீ.ஜே தளத்தில் வெளியாகியிருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கான எதிர்வினையில் தொனிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அவதானித்திருப்பீர்கள். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான அடிப்படைவாத நடவடிக்கைகள் தான் சும்மா இருக்கும் இந்துக்களுக்கும் கூட காக்கி டவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் ஷாக்காவுக்கு தெளிவாக மேப் போட்டு அனுப்பி வைக்கின்றது. இதன் விளைவுகளை பீ.ஜே எதிர்கொள்ளப் போவதில்லை – சாதாரண உழைக்கும் வர்க்கத்து இசுலாமியர்கள் தான் எதிர்கொள்ளப் போகிறார்கள். இந்தியாவில் இந்து பயங்கரவாதம் தன்னளவிலேயே ஒரு பாசிச அரசியல் அடிப்படையைக் கொண்டிருந்தாலும், மேலதிகமாக சாதாரண உழைக்கும் மக்களிடம் அதற்கு ஒரு அங்கீகாரம் வாங்கித் தரும் வேலையை பீ.ஜே போன்றவர்கள் செய்கிறார்கள்.
ஆதிக்க சாதியில் பிறந்த ஜனநாயகவாதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை நிகழும் போது அதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஒரு ஜனநாயகவாதி என்கிற வகையில் அது தான் அவர்களின் முதன்மையான கடமை. அதே போல் இசுலாமியர்களில் கொஞ்சமேனும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் முன்னின்று பீ.ஜே உள்ளிட்ட கடுங்கோட்பாட்டுவாதிகளையும், ஷரியத் சட்டத்தையும் எதிர்க்க வேண்டும். இசுலாமிய மத அடிப்படைவாதத்தால் வெட்டி வீழ்த்தப்பட்ட ரிசானாக்களின் தலைகளுக்கு அது தான் நாம் கொடுக்கக் கூடிய நேர்மையான பதிலாக இருக்க முடியும்.
ஆனால் ஜைனாலுபிதீன் போன் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் இசுலாமியராக பிறந்து ஷரியத்தையும், கடுங்கோட்பாட்டு வாதத்தையும் எதிர்க்கும் இசுலாமியர்கள் மிகக் குறைவு. இதுதான் தவஹீத் ஜமாஅத்துக்களின் பலம். இந்நிலையில் பிறப்பால் இசுலாமியராக இருந்தாலும் மனுஷ்ய புத்திரன் வெளிப்படையாக இவர்களை மட்டுமல்ல இவர்கள் புனித ஜல்லி அடிக்கும் இசுலாமிய மத பிற்போக்குத்தனங்களையும் கண்டிக்கிறார். அதுதான் அவர் மீது இவர்கள் கொள்ளும் கொலைவெறிக்கு அடிப்படை.
நாம் மனுஷ்யபுத்திரனை ஆதரிப்பதோடு குறிப்பாக இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக தவஹீத்தையும், பிஜேவையும், ஷரியத்தையும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இல்லையெனில் இசுலாமிய மக்களை ஒரு இருண்ட காலத்தில் மூழ்க வைத்து ஷரியத்தின் பெயரில் அவர்களை ஆயுள் கைதிகளாக்கி தொடர் விளைவாக இந்து மதவெறியர்களை மனங்குளிர வைக்கும் ஆபத்திற்கு நீங்கள் துணை போனதாக வரலாறு உங்களை கேள்வி கேட்கும்.
இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக பேச வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நட்புடன் முன்வைக்கிறோம்.
பின்குறிப்பு:
1. இந்தப் பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பின், அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது ஜெய்னுலாபிதினுக்கே! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
2. ‘விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்’ என்று பி.ஜே உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்களும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், ரிசானா விவகாரத்தில் ‘நாங்கள் பயங்கரவாதிகள்தான்’ என்று பி.ஜெயினுலாபிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய மதவாதிகள் வெளிப்படையாகக் கூவுகின்றனர். இவர்களைக் கண்டிக்காமல் விஸ்வரூபத்தை மட்டும் எதிர்க்க முடியுமா?
“சமீபத்திய டீசல் விலை உயர்வு (17 ஜனவரி 2013 நள்ளிரவு முதல்) அறிவிப்பில் தனியார் முதலாளிகளுக்கு டீசல் ஒரு லிட்டருக்கு 55 பைசா உயர்வு! என்றும்- மொத்தமாக, அதிகமாக நேரடி கொள்முதல் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, ராணுவம், கப்பல் போக்குவரத்து போன்றவற்றிற்கு லிட்டருக்கு ரூ 11.67 விலை உயர்வு!! என்ற அறிவிப்பு மத்திய அரசின் மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது”
இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணையை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணி என்பது 80 சதவீதம் (ரிபைனரிஸ்) “ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திடம்” தான் உள்ளது. எனவே இன்றைய தாராளமயமாக்கல் சூழலில், ஓட்டுக்கட்சி அரசியல் சூழலில் எரிபொருள் விலையை அடிக்கடி உயர்த்த வேண்டும் என ஆளும் கட்சியின் கழுத்தில் கத்தியை வைப்பது இத்தகைய கார்ப்பரேட் பெரு முதலாளிகளே.
தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் உயர்வுகள் ஏற்படும் போதெல்லாம்
டீசல் பெட்ரோல் விலை உயருமா?
டீசல், பெட்ரோல் விலை உயர்வு பற்றி விவாதிப்பதற்காக கூடிய ஐக்கிய முற்போக்கு அரசின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை !
டீசல், பெட்ரோல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை, என சம்மந்தமில்லாத துறை அமைச்சர் ஒருவர் எங்கோ நடக்கும் ஒரு விழாவில் பேசுவார்,
எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தை சமாளிக்க விலை உயர்வு மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை – பெட்ரோலிய அமைச்சர்
என 4 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை செய்தி ஊடகங்களில் செய்தி வந்து நின்றபின் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு விடும். உடனே மத்திய நிதி அமைச்சரும், பெட்ரோலிய அமைச்சரும் இந்த விலை உயர்வு தவிர்க்க இயலாதது என்று அறிக்கை வாசித்துவிடுவார்கள். எதிர்கட்சிகள், வெகுஜன அமைப்புகள் அவரவர் இடங்களில் ஒரு ஆர்ப்பாட்டம் என்ற போராட்டத்துடன் அந்த விலை உயர்வு மறந்து போகச் செய்யப்படும்.
நமது தமிழகத்தைப் பொறுத்தவரை
திமுக குடும்பச் சண்டை,
இரண்டு பெண்டாட்டி புகார் – அமைச்சருக்கு கல்தாவா?
நடிகையின் விவாகரத்து
ஒரு திரைப்படம் வெளிவருமா வெளிவராதா?
யானைகளுக்கு குஜால் விழா
போன்ற ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வந்தவுடன் டீசல் விலை உயர்வு என்பது ஆணி முதல் அங்குசம் வரை, உணவுப்பொருட்கள், விளைபொருட்கள், துணி, என அனைத்தையும் விலை உயரச் செய்யும் ஒரு அம்சம் என்பதை சுலபமாக மக்களால் மறக்கப்படும்.
11 ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் 2011ல் தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டு, சாதாரண கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் அந்த சுமையிலிருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத ஒரு புதிய நிகழ்வாக பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 61.67- அதே டீசல் தனியார் பேருந்துகள் வாங்கும் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் விலை ரூ 50.35 என்பதை செய்தித் தாள்களில் பார்த்தவுடன் பல பேருக்கு இதன் பொருள் இன்னும் விளங்கவில்லை, இப்படியும் இருக்குமா என்கிற கேள்விதான் எழுந்துள்ளது.
ஏனிந்த வித்தியாசம் ??
ஒரு பொருளை சில்லரையாக வாங்குவதை விட மொத்தமாக வாங்குபவருக்குத்தானே விலை மலிவாக கிடைக்கும். அதுவும் நேரடியாக ஆயில் நிறுவனங்களின் இடத்திற்கே சென்று கொள்முதல் செய்துவரும் கழகங்களுக்கு, ரயில்வேக்கு, ராணுவத்திற்கு ஏனிந்த வித்தியாச விலை உயர்வு? நேற்று வரை இது போன்ற கொள்முதலுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வந்தது. அந்த மானியத்தை மொத்தமாக அதிக அளவில் கொள்முதல் செய்பவர்களுக்கு முற்றிலுமாக நிறுத்த ஆளும் அரசு முடிவெடுத்ததால் இந்த அயோக்கியத்தனமான விலை உயர்வு திணிக்கப்பட்டுள்ளது. (ஆமாம் மதுரை – பொன்னமராவதி தடம் இயக்கும் கிரானைட் (கொள்ளை) புகழ் பிஆர்பிக்கு ஒரு லிட்டர் டீசல் 50-35க்கு கிடைக்கும், அதே தடத்தை இயக்கும் அரசு பேருந்திற்கு ஒரு லிட்டர் டீசல் விலை 61-67)
இதனால் நேரவிருக்கும் அபாயங்களை பார்ப்பதற்கு முன்பாக எண்ணை நிறுவனங்கள் ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளில் ஈட்டி வந்திருக்கும் லாப விபரங்களை பின்வரும் இணைப்பு சுட்டியில் ஒரு முறை பார்த்து விடுங்கள்.
கோடிகளில் லாபத்தை காண்பித்துவரும் இந்நிறுவனங்கள் ஏன் நஷ்டம் என தெரிவிக்கிறார்கள் என்றால் ஒரு வருடத்திற்கு ஈட்ட வேண்டிய லாப குறியீடு (டார்கெட்) ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு அந்த அளவிலிருந்து லாபம் குறையும் போதெல்லாம் நட்டம் என அரசு கூச்சலிடுவதுதான் வேடிக்கையான மற்றும் நிதர்சனமான உண்மை. மேலும் கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல் வாதிகள், அமைச்சர்கள் ஆகிய அனைவரும் மத்திய பொதுத் துறை எண்ணை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து வைத்திருப்பதால், அவர்கள் லாப பங்கு குறைய நேரிடும் என அஞ்சும் போதெல்லாம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்படுகிறது.
எதிர்கொள்ள இருக்கும் அபாயங்கள்
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அரசுப் பேருந்துகள் என்பவை மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளது. அதில் சில மாநிலங்கள் மேற்சொன்ன விலை உயர்வினை தொடர்ந்து இனிமேல் தினசரி கொள்முதலாக தனியாரிடம் பேருந்துகளுக்கு டீசல் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டதாக செய்திகள் வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப் பொறுத்தவரை டீசல் விலை உயர்வு களுக்கேற்ப பேருந்து கட்டண உயர்வுகளை அவ்வப்போது தீர்மானித்துக் கொள்ள REGULATORY AUTHORITY என்ற அமைப்பு உள்ளதால் விரைவில் அங்கு பேருந்து கட்டண உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
நம்முடைய முதலாளித்துவ ஊடகமான புதிய தலைமுறை தொலைகாட்சி, இந்த செய்தியை சொல்லி தமிழகத்தில் 22000 பேருந்துகள் இயங்கி வருவதால் தனியாரிடம் டீசல் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது, என செய்தியை சொல்வது போல் தனியார் மயத்திற்கான பாதையை தனது விவாதத்தின் போது சுட்டிக் காண்பித்துள்ளது. ஏனினல் புதிய தலைமுறையின் முதலாளி பச்சமுத்து எஸ்.ஆர்.எம் டிராவல்ஸ் நடத்தி வருகிறார் என்பதுதான்.
22,406 அரசு பேருந்துகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. மேலும் இங்குதான் எந்த ஒரு மாவட்ட தலைநகரிலிருந்தும் எந்த ஊருக்கும் முதல் பேருந்து இத்தனை மணிக்கு, கடைசி பேருந்து இத்தனை மணியுடன் முடிந்துவிடும் என்கிற நிலைமையின்றி எந்த ஊருக்கும் 24 மணிநேரமும் செல்லலாம் என்கிற வகையில் மக்கள் சேவை என்பது நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தில் 2.3 கோடி மக்கள் பயணித்து வருகின்றனர். பள்ளிப்பிள்ளைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பாலிடெக்னிக் மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், மொழிப்போர் தியாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பலருக்கு இலவச பேருந்து சேவை என்பது அரசு பேருந்துகளால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நெடுந்தடத்திலும் வழிநடையில் எந்த மோட்டலில் நிறுத்த வேண்டுமென்பது அவ்வப்போதைய ஆளும் கட்சியின் போக்குவரத்து அமைச்சரால் முடிவெடுக்கப்படுகிறது. கேவலத்தின் உச்ச கட்டம் என்னவென்றால், அந்த மோட்டலில்தான் நின்று சென்றது என்பதை உறுதிப் படுத்தும் வகையில் அரசுத் துறை பேருந்து இன்வாய்சில் மோட்டலில் ஒப்பம் அல்லது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பெற்று வரவேண்டும் (அந்த முத்திரையை அங்கு டேபிள் துடைக்கும் பையன் வைத்துக் கொடுப்பார்) (இது தெரியாமல் பாடாவதி மோட்டலில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இலவசம் என்பதால் நிறுத்துகிறார்கள் என நம்மில் பலபேர் பயணத்தின் போது அந்த பஸ் தொழிலாளர்களின் மீது வசவு பொழிந்திருப்போம்)
தனியார் பெட்ரோல் பங்கில் அரசு பேருந்துகள் டீசல் போட்டுக் கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டால் எந்த விற்பனையாளரிடம் வாங்க வேண்டும் என்பதை “கவனிப்பினைப்” பொறுத்து துறை அமைச்சர் முடிவு செய்வார்
அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள், கழக அதிகாரிகள் முதல் இந்த நிர்வாக முடிவினை செயல்படுத்தலில் ஈடுபடும் அனைவரையும் தனியார் பெட்ரோல் பங்க் முதலாளி கவனிக்க வேண்டியிருக்கும் – கவனிப்பார்
95 லிட்டர் நிரப்பிவிட்டு 100 லி என எழுதிக் கொள்வார்
படிப்படியாக கலப்படம் உள்ளே புகும்
ஒரிரு மாதங்கள் தனியார் பங்க் மூலம் டீசல் நிரப்பிவிட்டு, பின்னர் அந்த தனியார் முதலாளி என் பெயரில் பில் போட்டுக் கொண்டு கழக பணிமனைக்குள் இருக்கும் பங்கில் நிரப்பச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பணியாளர்களை வைத்தே நிரப்பிக் கொள்ளுங்கள் – அதற்கு தனியாக கவனித்து விடுகிறேன் என்பார்.
தற்போது விழாக்காலங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு ஊருக்கு அதிகமான பயணிகள் சென்றபின், அதற்கு பயன்படுத்திய பேருந்துகள் திரும்பி வரும் போது வசூலின்றி குறைவான பயணிகளோடு திரும்பிவரும். அதனால்தான் தனியார் வாகனங்கள் அத்தகைய காலங்களில் இரட்டிப்பு கட்டணம் பெறுகின்றனர்.
இனிமேல் பயணிகள் அடர்வு குறைவான நடைகளை நிறுத்திவிட்டால் என்ன என்கிற எண்ணம் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு தோன்றும்
உலகம் முழுவதும் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வில் பொது வாகன பயன்பாட்டினை அதிகரித்து, இரு சக்கரம், நான்கு சக்கர சிறிய வாகனங்கள், மற்றும் தனியார் வாகனங்களை குறைக்க வேண்டும் என உரக்க சொல்லப்பட்டு வரும் இந்த நேரத்தில், மன்மோகன், அலுவாலியா, சீனா தானா கூட்டணி இந்த பொதுத துறைக்கான மானிய வெட்டை அறிவித்துள்ளது.
இதனை பாராட்டி மேல்தட்டு அறிவு ஜீவிக்கள் அரசின் மானிய வெட்டு நல்ல நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என பிசினஸ் டுடே யில் கட்டுரை எழுதியாயிற்று.
இந்த விலை உயர்வினை
செயல்பாட்டில் ஒரு சிறிய திருத்தம் (small correction) என்கிறார் மத்திய நிதி அமைச்சர்
இந்த விலை உயர்வு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும், இதனால் விலைவாசி உயராது என்கிறார் 36 ரூபாயில் ஒரு நாள் உயிர் வாழலாம் என சொல்லும் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா (18ம் தேதி பிசினஸ் டுடே ஆங்கில நாளிதழ்)
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை. இதை எதிர்த்து பொது மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது உடனடி தேவையாகும்
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள கோயமுத்தூர் பிரிமியர் கார்ப்பரேஷன் (CPC) கம்பெனியில் கடந்த 30 வருடங்களாக எந்தவொரு தொழிற்சங்கமும் இல்லை. தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்ட கடுமையாக சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 30 வருடம் வேலை செய்த தொழிலாளிகளுக்கு மாதச் சம்பளம் ரூ 8 ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை.
சம்பளம் மட்டுமல்ல முறையான கழிப்பிடம் இல்லை. ஓய்வு விடுதி ஒழுங்காக இல்லை. தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டைக் கூட சாப்பிட வசதி இல்லை. கடுமையான வெப்பத்தில் வேலை செய்ய வேண்டிய கொடுமையான நிலை நிலவி வந்தது. தொழிலாளர்கள் சங்கமாகச் சேர்ந்து இதனைத் தட்டிக் கேட்டனர். இதனால் நிர்வாகம் கடும் கோபம் அடைந்து தொழிலாளர்களின் ஒற்றுமையை உடைக்க ஆயிரம் வழிகளில் முயற்சி செய்து கொண்டுள்ளனர்.
கம்பெனிக்குள் நிலவும் இக்கொடுமைகளை தொழிற்சாலை ஆய்வாளரிடம் முறையாக புகார் செய்யப்பட்டது. அவரும் இதனை விசாரித்து தொழிலாளர் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்தந்தனர். எனவே CPC கம்பெனியின் மீது நடவடிக்கை எடுத்து ரூ 45,000 அபராதம் விதித்தார். இப்படியாக அரசாங்கத்துக்கு அபராதம் கூட கட்டுவோம்; ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்திக் கொடுக்க மாட்டோம் என்பதுதான் நிர்வாகத்தின் கொடூரமான நிலைப்பாடு.
சங்கத்தைக் கலைத்து விட்டு வாருங்கள்; உங்களுக்கு சகலமும் தருவோம் என்கின்றனர். முப்பது வருடங்களாக நிர்வாகத்தை நம்பி சங்கமே இல்லாமல் இருந்த தொழிலாளிகளுக்கு என்ன கொடுத்தீர்கள்? என்று கேட்டால் எந்தப் பதிலும் இல்லை.
2011-12ம் நிதியாண்டிற்கான பேலன்ஸ் ஷீட் (நிதிநிலை அறிக்கை) CPC கம்பெனி நிர்வாகம் கொடுத்துள்ளது. அதனை ஆய்வு செய்து பார்த்தோம், 20ம் பக்கத்தில் லாப நஷ்டக் கணக்கு விபரம் உள்ளது (Statement of Profit and Loss) அதில் Employee Benefits Expenses எனும் வகையில் ரூ 5,63,36,000 தொழிலாளர்களுக்கு கொடுத்ததாக கணக்கு எழுதியுள்ளனர். திரு கோபால் அய்யர் அவர்கள் தணிக்கை செய்துள்ளார். கம்பெனியில் வேலை செய்யும் 150 தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ 20,000 சம்பளம் கொடுத்தாலும் இதனை எட்டிப் பிடிக்க முடியாது. எனவே மரியாதைக்குரிய (P.M.) திரு K ஜெயவீரன் அவர்கள் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.
CPC நிர்வாகம் தொழிற் தகராறுகளை நியாயமான முறையில் பேசித் தீர்க்க வேண்டும். அதை விடுத்து எந்த விசாரணையும் இல்லாமல் சங்க நிர்வாகிகளிடம் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லக் கூடாது.
நக்சல்பாரியை விலைக்கு வாங்கக் கூடிய ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் அச்சடிக்கவில்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்!
பிறவியிலேயே கண்தெரியாத மனிதருக்கு சூரியோதயத்தை சொல்லி புரிய வைக்க முடியாது!
கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : துடியலூர் பேருந்து நிலையம் நாள் : 31-12-2012 மாலை 5.30 மணி தலைமை : தோழர் P இராஜன், மாவட்டத் தலைவர்
உரை வீச்சு :
தோழர் P ஜெகநாதன்
தோழர் கோபி
தோழர் பூவண்ணன்
கண்டன உரை:
தோழர் விளவை இராமசாமி, மாவட்டச் செயலாளர்
நன்றியுரை :
தோழர் R பத்ரப்பன், CPC கிளைச் செயலாளர்
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை மாவட்டம்
தொடர்புக்கு : 96297 30399
ஐடி துறையில் வேலை பார்க்கும் என் நண்பன் ஒருவன், தங்கள் நிறுவனத்திற்கு புதிதாக வரும் புராஜக்ட் வேலைக்காக அமெரிக்கா சென்று மூன்று மாதங்களுக்கு பின் திரும்பியிருந்தான். கிறிஸ்துமஸ் அன்று அவனை சந்திக்க சென்றிருந்தேன்.
இனிமேல் இந்தியாவில் இவன் பொறுப்பில் அந்த புராஜக்ட் வருவதால் இத்தனை நாள் வரை அமெரிக்காவில் (இதற்கு முந்தைய நிறுவனத்தில்) அதை பரமரித்துக் கொண்டிருந்தவரிடமிருந்து, தொழில் நுட்ப நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும், இனி அவன் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தொடர்பான தகவல்களையும் பெறுவதற்குத்தான் அவன் அமெரிக்கா சென்றிருந்தான்.
மூன்று மாதங்கள் அவனை பெரிதாக மாற்றி விடவில்லை என்றாலும், திடீரென தயிரை ஆங்கிலத்தில் யோகர்ட் என்றான் (அமெரிக்க ரிட்டர்ன்). ஆங்கில எழுத்து Z ஐ இசட் என்று சொல்லாமல் ஜீ என்றான். மற்றபடி இன்னும் திராவிட நிறம் தான்.
பேச்சு வழக்கமாக அமெரிக்கா சென்று திரும்பும் கனவான்கள் சொல்லும் கிளிப்பேச்சில் ஆரம்பித்து ‘அமெரிக்காவில் ரோடெல்லாம் படு சுத்தம், எல்லோரிடமும் கார் இருக்கிறது, உயரமான அடுக்கு மாடி கட்டிடங்கள், நியூயார்க் போனேன், சுதந்திர தேவி சிலை பார்த்தேன், அங்கேயும் பிட்சா பர்கர் தான் உணவு” என்று போனது.
மெல்ல ‘எல்லாம் ஓகேதான்டா, ஆனா எனக்கு சொல்லி கொடுக்க வேண்டிய அமெரிக்காவைச் சேர்ந்த பழைய நிறுவன ஊழியர்கள் தான் படுத்தி எடுத்துவிட்டார்கள்‘ என்றான்.
வார இறுதி நாட்களில் சொர்க்கமாகத் தெரிந்த அமெரிக்கா வார நாட்களில் அலுவலகத்தில் நரகமாகக் கழிந்திருக்கிறது. இவனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பழைய ஊழியர்கள் இவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எப்பொழுதும் கடுமையாக இருந்திருக்கிறார்கள். மேலாளரின் வற்புறுத்தலின் பேரில் சில பயிற்சி அமர்வுகள் நடந்துள்ளன. அவர்கள் வேலை இழப்பதற்கு காரணம் இவன்தான் என்பதால் இவனை ஒரு ஜென்மவிரோதி போல நடத்தியுள்ளனர். (வெளிப்படையாக இல்லை).
ஆனால் அவ்வளவு சொல்லிக் கொண்டிருந்த நண்பன் அவர்களைப் பற்றி கோபம் ஏதுமில்லாமல் ஒரு வித இரக்கத்துடனேயே பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் மிகவும் சோர்ந்து போயும், மனவுளைச்சலோடும் இருந்திருக்கிறார்கள். நண்பன் அவர்களை புரிந்துகொண்டு, ‘தான் அவர்கள் வேலையைத் திருட வரவில்லை தானும் பிழைக்க வந்தவன் தான்’ என்பதை உணர்த்தியுள்ளான். மேலும் ’இப்பொழுது அவர்களுக்கு நடப்பது போல் இனி வரும் ஆண்டுகளில் தனக்கும் நடக்கும்’ என்றும் ’அப்போது அவன் வேலை சீனாக்காரனுக்கோ, பிலிப்பைன்ஸ்காரனுக்கோ செல்லும், அதற்குள் தான் சேமித்து வைத்துக் கொள்ள் வேண்டும்’ என்றும் மனம் விட்டு பேசியுள்ளான். அதன் பிறகு அவர்கள் இவனுடன் இணக்கமாக ஆரம்பித்திருக்கின்றனர். கடைசி சில நாட்கள் நன்றாகவே பேசியுள்ளனர்.
அவர்களது முதல் கவலை தாங்கள் கொண்டாடும் வருடத்தின் மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் வேலை இழக்கிறார்கள் என்பதுதான். அவர்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை.
இத்தனை நாள் ஒரு பெரு நிறுவனத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் மென்பொருள் நிபுணராக வேலை பார்த்தவர், இனி பிழைப்பிற்காக டாக்ஸி ஓட்டப் போவதாகவும், இன்னொருவர் லேப் டெக்னிஷ்யன் பயிற்சி பெறுவதாகவும் சொல்லியுள்ளனர்.
’35 வயதான ஒருவர் தனது கல்லூரிக் கல்விக்கான கடனை இன்னும் அடைக்கவில்லை’ என்றும் ’குழந்தைகளின் படிப்புச் செலவை வரும் காலங்களில் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை’ என்றும் புலம்பியுள்ளார்.
இதையெல்லாம் கேட்டு என் நண்பன் மிகவும் உருகி விட்டிருக்கிறான், . அவனுக்கு பயமும் மனதில் பரவியிருக்கிறது. அமெரிக்க அனுபவம் அந்த அளவு அவன் மீது தாக்கம் செலுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை.
அமெரிக்க சொர்க்கத்தில் தொழிலாளர்கள் போரட்டம் எதுவும் நடத்தி விடக் கூடாது என்ற முதலாளிகளால் வழங்கப்பட்ட சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு வலம் வந்தனர், ஆனால் முதலாளித்துவத்தின் உலகளாவிய லாப வேட்டைப் பாய்ச்சல் சகல சலுகைகளுக்கும் மூடு விழா நடத்தி வேலை வாய்ப்புகளையே பறித்து அவர்களை தெருவில் விட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி நாட்டுத் தலைவர்கள் ’இந்த கிறிஸ்துமஸ் சோக கிறிஸ்துமஸ்’ என்று சிறுவர்களாக மாறி சாண்டாவுக்கு எழுதிய கடித்ங்கள் இணையத்தை நிரப்புகின்றது. முதலாளித்துவம் ஒழிக என்று தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த கிறிஸ்மஸ் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. ஆயினும் அவர்களும் அதற்காக போராடாமல் சோர்ந்து போவதில்லை.
– ஆதவன்
________________________________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
________________________________________________________________________________________________________
தோழி! *திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!
சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!
வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!
கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!
அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.
பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!
சொற்கள் உணர்த்தும் நேர்மறை பொருளை நீர்த்துப் போகும் வண்ணம் நமது கருத்து கந்தசாமிகள் படுத்தி எடுக்கிறார்கள். விசுவரூபம் குறித்த அத்தகைய விவாதங்கள், கருத்துக்கள், ‘தத்துவங்கள்’, புளகாங்கிதங்கள், புல்லரிப்புகள் அனைத்தும் இந்த ரகத்திலானவை. இவற்றில் எவற்றை விட – எழுத என்று தத்தளிக்கும் வண்ணம் கந்தசாமிக்கள் தினுசு தினுசாக பொங்கித் தீர்த்திருக்கிறார்கள்.
நாளை மறுநாள் திரையிடப்படும் இப்படத்தை அனுமதிக்கக் கூடாது என்று இசுலாமிய அமைப்புகள் அறிவித்திருக்கும் நிலையில் சற்று பின்னே சென்று பார்க்கலாம்.
முதலில் கமலஹாசனை மாபெரும் தியாகி என்று சித்தரிக்கும் அவஸ்தையை பார்ப்போம். கமல் சினிமாவில் சம்பாதித்ததை முழுக்க இந்தப்படத்தில் செலவழித்திருக்கிறார், அந்த அளவு சினிமாவை நேசிக்கிறார், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு போகத் துடிக்கிறார் என்று கேழ்வரகில் நெய் வடிவதாக சத்தியம் செய்கிறார்கள். விசுவரூபம் தயாரிப்புச் செலவு 90 கோடி என்றால் கமல் இவ்வளவு வருடங்களாக இம்புட்டுதான் சம்பாதித்தார் என்பது நம்பும்படியாக இல்லை. விட்டால் டீக்காசு கூட இல்லாமல் கமல் கஷ்டப்படுகிறார் என்று அழுதாலும் அழுவார்கள்.
தொலையட்டும். சினிமா என்பது கலையோ இல்லை உன்னத விழுமியங்களை வளர்க்கும் சமூக நடைமுறையோ இல்லவே இல்லை. அது அப்பட்டமான வியாபாரம். மாபெரும் மூலதனத்தை கோரி நிற்கும் முதலாளித்துவத் தொழில். சரியாகச் சொல்லப்போனால் கிச்சு கிச்சு மூட்டி உணர்ச்சிகளை சுரண்டி கோடிகளில் வயிறு வளர்க்கும் ஒரு பிரம்மாண்டமான ஜந்து. ஒருவர் சினிமாவில் இருக்கிறார் அல்லது சினிமாவுக்கு செல்ல ஆசைப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவர் கலைத்தாகம் கொண்ட யோகி என்பதல்ல. சினிமா தரும் அளப்பரிய பணம், புகழ், போதை, சொத்து, அதிகாரம், பிரபலம் இவைதான் ஒரு நபர் சினிமாவில் இருப்பதற்கு அடிப்படையான காரணம்.
பலரும் இத்தகைய ஆழ்மன வேட்கையை நைசாக அமுக்கிவிட்டு தான் சினிமாவில் போய் உலகத்தை திருத்த பாடுபடுவேன் என்று தேய்ந்த ரிக்கார்டு போல விடுவார்கள். கமலே கூட 70களில் அப்படி பேசியவர்தான். மறைந்து போன அனந்துவுடன் பெல்பாட்டம் போட்ட கமல் மயிலாப்பூர் வீதிகளில் உலக சினிமா குறித்து விவாதித்ததெல்லாம் இன்று ஊசிப்போன பழங்கஞ்சி. தற்போது தானே வெட்கப்படுப்படி தேர்ந்த கலை வியாபாரி ஆகியதை கமல் ஒத்துக் கொள்கிறார் – கந்தசாமிகள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
இப்படத்தை டி.டி.எச்சில் ஒளிப்பரப்புவதால் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என பிரச்சினை வந்த போது கமல் அதிகம் பேசியது என்ன? “இந்த படம் என் சொத்து, நான் விரும்பிய வகையில் வியாபாரம் செய்வேன்” என்றெல்லாம் பேசினாரே ஒழிய இது கலை, தவம், ஆன்மீகம் என்றா பாடினார்? சரி இதையெல்லாம் மீறி கமல் “நாயகனில்” அற்புதமாக நடித்தார், “அவ்வை சண்முகியில்” அட்டகாசமாக மேக்கப் போட்டார், “பஞ்ச தந்திரத்தில்” வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் என்று ரசிக்கிறீர்களா? ரசித்து விட்டு போங்கள். ஆனால் அதற்குமேல் உலகை உய்விக்க வந்த கலைஞானி என்று உருகுவதுதான் சகிக்க முடியாத ஒன்று.
ஒரு நாட்டுப்புறக் கலைஞனைப் போல இலவசமாகவோ இல்லை மலிவான கட்டணத்திலோ சினிமா கலைஞர்கள் தமது திறமைகளை காட்டுவதில்லை. கமலை ரசிப்பதற்க்காக மல்டி பிளக்சில் நீங்கள் செலுத்தும் 120 ரூபாய் கட்டணத்தில் 40 ரூபாய் அவரது பாக்கெட்டிற்கு போகிறது. உங்களை சிரிக்க வைக்க அவர் கட்டணம் வாங்கிக் கொண்டு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இதனால் இதை வியாபாரம் என்று அழைக்கலாமே ஒழிய கலைச் சேவை என்றால் அது அந்த கலைவாணிக்கே அடுக்காது.
அடுத்து கமல் தமிழ் சினிமாவுக்காக பல தொழில்நுட்பங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று கொல்லுகிறார்கள். “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்று சன் டிவியின் ஆம்பளைக் குரல் கூவும் போது தோன்றும் நகைச்சுவைதான் கமலின் முதல் சாகசங்கள் குறித்தும் வருகிறது. தலைக்கு மேல் ஒலிக்கும் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டு வந்தார், டிஜிட்டல் கேமராவை இட்டுக்கிணு வந்தார், கிழவன் மேக்கப்பை ஹாலிவுட்டிலிருந்து பெயர்த்து வந்தார், ஆவிட்டைக் (AVID) கொண்டு வந்தார், ஆத்தாவைக் கொண்டு வந்தார் என்பதில் துவங்கி தற்போது டிடிஎச்சில் முதன்முறையாக ஒளிபரப்பப் போகிறார் என்று துள்ளிக் குதிக்கிறார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள்!
இதெல்லாம் தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய சாதனையாம்! கமல் போட்ட ரோட்டில்தான் தமிழ் சினிமாவே தடம் புரளாமல் வால்வோ பஸ் போல சொகுசாக பயணிக்கிறதாம். ஒரு புதிய தொழில்நுட்பத்தின் வருகையை எதைக் கொண்டு அளவிடுவது? கமலைப் போன்ற ஞானிகள் படப்படிப்பின் போது பங்களா வசதி கொண்ட கேரவான்களில் மூச்சா விடும் போது, கழிப்பறைக்கு கூட பல நூறு மீட்டர் தூரம் நடந்து செல்லும் கோடான கோடி மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக கேரவானில் மூத்திரம் பெய்தவர் என்பதற்காக, அந்த கழிப்பறைக் கோப்பைக்கு பூஜை செய்வது கேலிக்கூத்தல்லவா?
பெரும்பான்மை மக்களின் துன்பமான வாழ்வை இதுவரை எந்த நவீனத் தொழில் நுட்பமும் குறைத்ததாக வரலாறு இல்லை. அப்படிக் குறைத்தால் நாம் எந்த தொழில் நுட்பத்திற்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். பீகாரிலிருந்து குடும்பத்தைத் துறந்து இங்கு மெட்ரோ வேலையில் உயிரை இழக்கும் தொழிலாளியின் வாழ்வை எளிதில் தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கும் செல்பேசி என்ன செய்து விடும்? ரோபோட்டிக் எந்திரங்கள் இருப்பதனாலேயே மாருதி தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் அடங்கி விடவில்லையே?
இல்லை தமிழ் சினிமாவில் இவ்வளவு தொழில்நுட்பங்களை கமல் கொண்டு வந்ததால் நாயக்கன் கொட்டாய் தலித் மக்கள் தாக்கப்படாமல் இல்லையே? குறைந்த பட்சம் காதல் இளவரசனது படங்களை பார்த்துக்கூட காதலை தண்டிக்க கூடாது என்று ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தோன்றவில்லையே? ஆக வாழ்வையும், பண்பாட்டையும் இம்மியளவு கூட கமல் கடத்தி வரும் தொழில் நுட்பங்கள் பண்படுத்தி விடாத போது அதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? இல்லை கமல் படங்கள்தான் அந்த நவீன தொழில்நுட்பத்தால் தமிழ் மக்களின் வாழ்வை அச்சு அசலாக காட்டியிருக்கிறதா? பாச மலரில் அழுத தமிழர்களின் கண்கள் மகாநதியில் இன்னும் கொஞ்சம் வீங்கித்தானே போனது?
வாழ்வு குறித்த கூர்மையான தத்துவ நோக்கில்லாமலும், சமூக அக்கறை இல்லாமலும் எவ்வளவுதான் டெக்னாலஜி வந்தாலும் தமிழ் சினிமாவின் அற்பத்தனமான சென்டிமெண்ட் மாறிவிடாது. மேலும் டிடிஎச்சில் ஒளிபரப்ப முயன்றதற்கு காரணம் 150 கோடி வசூலை திரையரங்குகளில் மட்டும் சுருட்ட முடியாது என்ற இலாப நோக்குதான். ஆனால் இன்றைக்கு கமலும், கமல் ரசிகர்களும் இந்த டிடிஎச் நடைமுறைக்கு வந்தால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிறார்கள்.
சற்று வசதி உள்ள நடுத்தர வர்க்கம்தான் டிடிஎச் வைத்திருக்கிறதே அன்றி தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் கேபிள் மூலம்தான் டிவி பார்க்கிறார்கள். தமிழகத்தில் 35 இலட்சம் டிடிஎச் இணைப்புகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். இவர்கள் மாதத்தவணையாக கேபிள் டிவி கட்டணத்தை விட சில மடங்கு அதிகம் கட்டித்தான் பார்க்க வேண்டும். இப்படி வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கு வசதி குறைந்த பட்ஜெட் படங்களை கொண்டு போய் வியாபாரம் செய்யலாமாம். விசுவரூபத்திற்கு டிடிஎச் கட்டணமாக தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்தார்கள். இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதுப்படத்தை எத்தனை தமிழர்கள் பார்க்க முடியும்? விசுவரூபத்திற்கே அப்படி கலெக்சன் கன ஜோராக வரவில்லை என்று கூறுகிறார்கள். இப்படி இருக்க குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டும் எப்படி வெற்றி பெறும்?
சினிமா என்பது முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொழில். அது கலை என்பதாக ஏற்கப்பட்டாலும் நிச்சயம் தொழில்தான். சினிமா சந்தையை ஒரு சில முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெயர் வேண்டுமானால் மாறுபடலாம். இவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் சிறிய பட்ஜெட் படங்கள் வாழவோ சாகவோ முடியும். அதைத்தாண்டி வேறு அற்புதங்கள் நிகழ்ந்து விடாது.
என் தொழில், என் சொத்து, என் விருப்பம் என்று ஆரம்பத்தில் அடம்படித்த கமலை அதே டயலாக்கை வைத்தே திரையரங்க உரிமையாளர்கள் அடக்கி விட்டார்கள். ஆனால் நமது கமல் பையன்களோ திரையரங்க உரிமையாளர்களை டெக்னாலஜிக்கு எதிரான வில்லன்களாக சித்தரிக்கிறார்கள். என்ன இருந்தாலும் நம்பியாரைப் பார்த்து வில்லன்களை முடிவு செய்பவர்களாயிற்றே! நம்மைப் பொறுத்த வரை முழு தமிழக சினிமாத்துறையும் தமிழக மக்களுக்கு வில்லன்கள்தான். இதில் கமல் தியாகி, அபிராமி ராமநாதன் பாவி என்ற பாகுபாடெல்லம் நம்மிடம் இல்லை. இந்த புரிதலில் இருந்து பார்த்தால் திரையரங்க உரிமையாளர்கள் கமலை அடக்கியது அவர்களே சொல்லிக் கொள்ளும் பிசினெஸ் விழுமியங்களுக்கு உட்பட்டதுதான்.
கமல் தனது படத்தை தனது விருப்பம் போல டிடிஎச்சில் வெளியிடும் போது திரையரங்க உரிமையாளர்கள் தமது விருப்பம் போல கமல் படங்களை இனி வெளியிடுவதில்லை என்று பேசுவதில் என்ன தவறு? அவர்கள் சொத்தில் தனது படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று கமல் தார்மீகரீதியாக கூட கோர முடியாது. ஆனால் டிடிஎச்சில் தான் நினைத்த மாபெரும் கல்லா கலெக்சன் இல்லை என்றதும் கமல் வேறு வழியின்றி முதலில் திரையரங்கில்தான் வெளியாகும், ஒரு வாரம் கழித்து டிடிஎச்சில் வெளியாகும் என்று இறங்கி வந்தார். முதலில் அவர் முண்டியதற்கும் வியாபாரம் காரணமாக இருந்தது போலவே அவர் முடங்கியதற்கும் அதுவே காரணம்.
இடையில் நமது இணைய ரசிகர்கள் பலர் கமலின் புது டெக்னாலஜியில் தமது பெயரும் வரலாற்றில் இடம்பிடித்தே ஆகவேண்டும் என்று ஆயிரம் ரூபாயை பல்வேறு டிடிஎச் நிறுவனங்களுக்கு மொய் எழுதி அதை வேறு பெருமையான டிரைலராக வெளியிட்டு அழகு பார்த்தார்கள். கடைசியில் கமலின் புது டெக்னாலஜியில் ஏமாந்தவர்கள் என்ற பட்டமே வரலாற்றில் காத்திருக்கிறது. அதுவும் கட்டிய பணம் கட்டியதுதான் என்று பல நிறுவனங்கள் கம்மென்று முடித்துக் கொண்டன. எந்த ஆசை காட்டி ஆயிரம் ரூபாயை சுருட்டினார்களோ அந்த ஆசை இல்லை என்றான பிறகும் பணம் திரும்ப வராதாம். இதை எதிர்த்து சண்டை போடக்கூட துப்பில்லாத நுகர்வோராகத்தான் நமது இணைய ரசிகர்கள் வீரம் பேசுகின்றனர். ஆக நவீன டெக்னாலஜி பல பயன்படுத்தும் இந்த டெக் சிங்கங்களை இப்படி அடிமாட்டு ரேட்டுக்கு ஏமாற்றலாம் என்றால் அந்த தொழில்நுட்பங்களால் என்ன பயன்?
துப்பாக்கி படத்திற்கு இசுலாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு காட்டியதை வைத்துக்கூட கமல் முன் எச்சரிக்கையாக டிடிஎச்சில் காட்ட நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவர் வியாபாரி அல்லவா? விசுவரூபம் டிரைலரில் அமெரிக்கா, அமெரிக்க கொடி, அமெரிக்க இராணுவம், அமெரிக்க ஹெலிகாப்டர்கள், எஃப் பி ஐ எல்லாம் வருகிறது. கூடவே வில்லன்களாக இசுலாமிய அடையாளங்களும் ஏராளமாக வருகிறது. ஹாலிவுட், ஆஸ்கார் என்று போக வேண்டுமென்றால் இசுலாமிய வில்லன்கள்தான் என்ட்ரி பாயிண்ட் என்று கமல் நினைத்திருக்கலாம்.
உன்னைப் போல ஒருவனில் பாசித்தை முன்மொழிந்த கமலஹாசன் உலகளாவிய கதைக்களன் என்ற பெயரில் சல்லிசாக இருக்கும் இசுலாமியத் தீவிரவாதத்தை கையில் எடுத்திருக்கலாம். என்ன இருந்தாலும் வியாபாரி என்பதால் எது தற்காலிக வாழ்க்கையில் வில்லத்தனமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறதோ அதை எடுத்தால்தான் பரபரப்பாக இருக்கும் என்பது கமலுக்கு தெரியும். இதற்கு மேல் படத்தைப் பார்க்காமல் எப்படி விமரிசனம் செய்யலாம் என்று சிலர் கேட்கலாம். இல்லை, இங்கே நாம் விமரிசனம் செய்வது கமலின் வியாபார நோக்கத்தை மட்டுமே.
தனது படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை, இசுலாமியர்கள் படத்தை பார்த்தால் பிரியாணி செய்து தந்து ஆதரிப்பார்கள் என்று கமல் பேசிய கையோடு பல்வேறு இசுலாமிய தலைவர்களைகூட்டி படத்தை காட்டியிருக்கிறார். பார்த்தவர்கள் பலர் இப்போது கொலை வெறியோடு இந்த படத்தை எதிர்க்கிறார்கள்.
தற்போது இசுலாமிய அமைப்புகளின் தலைவர்கள் அந்தப் படத்தை வெளியிட வேண்டாம் என்று தடை கோரி போராடி வருகிறார்கள். இசுலாமிய மதவாதிகள் படத்தைப் பார்த்து அதில் குறியீடாக வரும் இசுலாமிய அடையாளங்களை வைத்து மட்டும் இப்படி முடிவு எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் கதையின் அரசியலிலிருந்து அதை எடுத்து முன்வைப்பதை நாம்தான் செய்ய முடியும். அதனால் படம் வந்த பிறகு தொடருவோம்.
ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திய இசுலாமிய மதவாதிகள் அடுத்த கட்டமாக விசுவரூபத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் சவுதி அரேபேயாவை உச்சி மோரும் இவர்கள் அதே அமெரிக்காவின் ஆசியோடு வரும் விசுவரூபத்தை எதிர்ப்பதை இறைவன்(PBUH) தான் விசாரிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக விசுவரூபம் படத்தின் சாட்டிலைட் உரிமை, பாடல் வெளியீட்டு விழா உரிமை இதெல்லாம் ஜெயா டிவியிடம் இருப்பதாக வைத்துக் கொண்டால், கமல் கோட்டை சென்று காத்திருந்து அம்மாவை பார்ப்பார். ஒரு வேளை அந்த உரிமைகள் இல்லை என்றாலும் அம்மா மனது வைத்தால் கமலை ஆதரிக்கலாம். என்ன இருந்தாலும் பாபர் மசூதி இடிப்பிற்காக்க தொண்டர்களை அனுப்பியவர் கமலின் துக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பிறகு என்ன, அம்மா போலிசை பார்ப்பார். அம்மாவே களத்திற்கு வந்துவிட்டால் அம்மாவுடன் கூட்டணி வைத்த தவ்ஹீத் ஜமா அத்தும், தமுமுகவும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பம்மி விடுவார்கள். பிறகு இசுலாமிய மக்களின் சுயமரியாதைக்காக மதச்சார்பற்ற முற்போக்கு, ஜனநாயக சக்திகள்தான் கமலை கண்டித்து போராட வேண்டும்.
அதற்கு தேவை இருக்கிறதா என்பதை படம் பார்த்த பிறகு தெரிவிக்கிறோம்.
‘காவிரி நீர் இல்லாமல் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் குறுவை/சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கே காரணம்’ என்று உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையும் காவிரி நடுவர் மன்ற முடிவையும், பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணைய உத்தரவுகளையும் மதிக்காமல் திமிராக நடந்து கொள்கிறது.
2012 செப்டம்பர் 19ம் தேதி காவிரி நதி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் ‘செப்டம்பர் 21 முதல் தினமும் தமிழ்நாட்டுடனான பிலிகுண்டு எல்லையில் விநாடிக்கு 9000 கன அடி விட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதை கர்நாடகா மதிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசை கண்டித்து நதி நீர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறியது.10 நாட்கள் மட்டும் விநாடிக்கு 5,000 கன அடி நீர் விட்ட கர்நாடகா அரசு உச்ச நீதி மன்ற உத்தரவையும், பிரதமர் உத்தரவையும் மீறி அக்டோபர் 8ம் தேதி நீர் விடுவதை நிறுத்தியது.
அக்டோபர் 9ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர உத்தரவிட்டார்.
அக்டோபர் 17ம் தேதி தமிழ்நாடு அரசு தண்ணீர் விடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரும் ஒரு புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
நவம்பர் 15ம் தேதி காவிரி கண்காணிப்பு குழு நவம்பர் 16க்கும் 30க்கும் இடையே தமிழ்நாட்டுக்கு 4.81 டிஎம்சி தண்ணீர் விடும்படி உத்தரவிட்டது. கர்நாடக அரசு அதை மதிக்கவில்லை
நவம்பர் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொல்லி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தும் மறு பேச்சு பேசாமல் பெங்களூருவுக்குப் போய் கர்நாடக முதல்வர் ஷெட்டாரிடம் பேசினார், ஜெயலலிதா.எதிர்பார்த்தபடியே ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு கூறி விட்டது.
டிசம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் விநாடிக்கு 10,000 கனமீட்டர் நீரை தமிழ்நாட்டுக்கு விடும்படி உத்தரவிட்டதுமூன்று நாட்கள் மட்டும் தண்ணீர் விட்ட கர்நாடக அரசு அதன் பிறகு அணைகளை மூடி விட்டது.
டிசம்பர் மாதம் காவிரி நடுவர் குழுவின் இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிடும்படி உத்தரவிட்டது. மத்திய அரசு அதை இன்று வரை மதிக்கவில்லை.
உடனடியாக 12 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை வரும் 28-ம் தேதி நடக்கவுள்ளது. கர்நாடகா அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையும், காவிரி நதி நீர் ஆணையத்தின் முடிவுகளையும், காவிரி நதி கண்காணிப்பு ஆணையத்தில் பிரதமரின் உத்தரவுகளையும் மதிக்காத கர்நாடக அரசின் மீது, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டு மட்டும் டில்லிக்கும், பெங்களூருவுக்கும் ஜெயலலிதாவும் தமிழ்நாடு அரசும் நடந்த நடைகளின் வண்டிச் சத்தமே பல கோடி ரூபாய்களை தாண்டும். கூடவே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கட்டணத்தையும் சேர்த்து கர்நாடகாவுடனான லாவணிக்கு தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய்களை வீணாக்கியிருக்கிறது. இருப்பினும் அரசியல் சட்ட அமைப்புகளை பகிரங்கமாக மீறும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுக்கோ உச்ச நீதிமன்றத்துக்கோ வக்கில்லை.
இவ்வளவுக்கும் பிறகு இன்னும் ஒரு சிவில் வழக்கை பதிவு செய்யப் போவதாக சொல்கிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு. வாடிக் கொண்டிருந்த பயிர்களை காப்பாற்றுவதற்கான உத்தரவுகளை செயல்படுத்த முடியாத பல் இல்லாத புலியான உச்ச நீதிமன்றத்திடம் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்காக நஷ்ட ஈடு பெற்றுத் தருவதற்கான வழக்கைத் தொடர்கிறார் ஜெயலலிதா. துக்ளக் சோவும், சுப்ரமணிய சாமியும், குருமூர்த்தியும், இந்து பத்திரிகைக்கு லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகளும் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் இந்து தேசிய பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்கான நடவடிக்கைகள் எதுவும் தோன்றி விடப் போவதில்லை என்பது நிதர்சனம்.
சொத்துக் குவிப்பு தொடர்பான சிவில் வழக்கில் வாய்தா மேல் வாய்தா கேட்டு சாட்சியங்களை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்று காமெடி செய்து வரும் அதே பாசிஸ்டுதான் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு மூலம் தமிழ்நாட்டுக்கு நீதி வாங்கித் தரப் போவதாக போக்கு காட்டுகிறார். ஜெயலலிதாவுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பயணப் படியும், பஞ்சப்படியும், கட்டணமுமாக ஆதாயம் கிடைப்பதற்கு வேண்டுமென்றால் அது வழி செய்யலாமே தவிர வாழ்வாதாரங்களை இழந்து துன்புறும் விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் தந்து விடப் போவதில்லை.
உண்மையில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள மாநில முதலமைச்சராக இருந்தால் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்.
கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவுகளை முழுமையாக பின்பற்றாதது வரை தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய/மாநில அரசு அமைப்புகளிலிருந்து மத்திய அரசுக்கு வரிப் பணம் அனுப்பப்படாது; தமிழ்நாட்டிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படாது; தமிழ்நாட்டில் மத்திய அரசின் அமைப்புகள் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்காது; என்று அறிவித்து செயல்படுத்துவதற்கான துணிச்சல் ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா?
ஒருவேளை அப்படிச் செய்தால் இந்திய அரசுக்கு கண்டிப்பாக ஒரு நெருக்கடி வரும். அப்போது அவர்கள் கர்நாடகத்தை வழிக்குக் கொண்டு வரும் வழிகளை யோசிப்பார்கள். இல்லையென்றால் மத்திய அரசு புறக்கணிப்பை இன்னும் வீச்சாகக் கொண்டு செல்லலாம். அப்படி செய்தால் பாசிச ஜெயா தனது அரசைக் கூட இழக்க நேரிடலாம். ஆனால் தமிழகத்தின் போராட்டத்தை இது இன்னும் உயர்ந்த தளத்தில் கொண்டு செல்லும். என்றாலும் பாசிச ஜெயாவுக்கு அத்தகைய துணிச்சலோ, உறுதியோ, மக்கள் பால் நாட்டமோ கிடையவே கிடையாது.
கர்நாடகா அரசியல்வாதிகள் தம் மாநிலத்தின் அநியாய உரிமைகளுக்காக எடுக்கும் துணிச்சலான முடிவுகளுக்கு பதிலடியான முடிவுகளை எடுக்காத கோழைகள்தான் தமிழ்நாட்டு முதலமைச்சரும் அரசும். உச்ச நீதிமன்றத்துக்கும் காவிரி நதி ஆணையத்துக்கும் மனு எழுதுவதாக ஜெயலலிதா நடத்தும் நாடகங்கள், மத்திய அரசையும் நீதிமன்றங்களையும் பொறுத்த வரை அவர் ஒரு காகிதப் புலி மட்டுமே என்பதையே காட்டுகின்றன.
“இவ்வளவு கொடூரம் நடந்தால் தான் நான் திரும்பிப் பார்ப்பேன் என்கிற நம் மனநிலை சரிதானா. டெல்லியில் மட்டும் அல்ல… தமிழ்நாட்டில், நமக்கு மிக அருகே, நம் ஊரில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து நாம் கவலைப்பட்டு இருப்போமா?”
மேற்கண்ட அறச்சீற்றத்தை சமீபத்தில் வாசிக்க நேர்ந்த போது உண்மையிலேயே அரண்டு போனேன். ஆனந்த விகடன் 9.1.2013 தேதியிட்ட இதழில் கவின்மலர் எழுதியிருக்கும் ‘அன்பானவர்களுக்கு ஒரு கடிதத்தில்’ தான் இந்த அறச்சீற்றம் காட்டாற்று வெள்ளம் போலக் கரைபுரண்டு ஓடியிருக்கிறது. கலகக்குரல் தளத்தில் இந்தக் கட்டுரை வெளியான போதே இந்த இதழைப் படிப்பதற்காக தேடினேன் – ஆனால், சமீபத்தில் தான் அதற்கு வாய்ப்பு அமைந்தது.
கட்டுரையின் முதல் பக்கத்தை வாசித்து முடித்து விட்டு ஒருவித ‘குற்றவுணர்ச்சியோடு’ அடுத்தப் பக்கத்தைத் திருப்பினால், புருவத்தை நெருக்கிக் கொண்டு, கண்களை இடுக்கிக் கொண்டு, சொக்காயின் காலரை தூக்கிக் கொண்டே ஒரு சிறுவன் நம்மை தர்ம அடி அடிப்பதற்கு புத்தகத்திலிருந்து வெளியேற எத்தனித்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் அதிர்ந்து போய், ‘ஐயையோ நான் எந்த தப்பும் செய்யல்லீங்க’ என்று அலறியவாறே பக்கத்தில் பார்த்தால்… அது அலெக்ஸ் பாண்டியன் விளம்பரம். அந்தக் கோபக்கார குழந்தை கார்த்தி. ‘ஃப்பூ… இதுக்குத்தானா பயந்தோம்.. நல்ல வேளை யாரும் பாக்கலையே’ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டே அடுத்த பக்கத்தில் தொடர்ந்த அறச்சீற்றத்துக்குள் முங்கினேன்.
“இந்த 21-ம் நூற்றாண்டிலும் பொழுதுபோன பின்னால் பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்போம் என்று கூறும் விந்தை மனிதர்களாக இங்கே பலர் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது”
“உலகம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது நண்பர்களே! ஆனால் நாம் இந்தப் புள்ளியில் தேங்கி நிற்கிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது” – மேற்படி கட்டுரை, பக்கம் 12
எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாகத் தான் இருந்தது. விகடன் நிர்வாகம் கவின்மலருக்கு சம்பள பாக்கி ஏதும் வைத்து விட்டதோ? இதே விகடனில் தான் துணி துவைப்பது, கூட்டிப் பெருக்குவது, சமைப்பது போன்ற வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆண்களைக் கேலி பேசி ‘ஜோக்குகள்’ வந்துள்ளன. மட்டுமல்லாது மாமியார் மருமகள் சண்டை, பொரணி பேசும் பெண், வீட்டு வேலைக்கரியை பெண்டாள நினைக்கும் ஆண் என்று ‘பெண்ணை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பதை’ ஆதரிக்கும் கருத்துக்களின் விளைநிலமே விகடனாயிற்றே; அப்படியிருக்கும் போது இவர் எதுக்கு சேம் சைடு கோல் போடுகிறார் என்பது தான் ஆச்சர்யத்துக்குக் காரணம். பாலியல் வன்முறையைக் கற்றுக்கொடுப்பதிலும் பிசினெஸ், பாலியல் வன்முறையைக் கண்டிப்பதிலும் பிசினெஸ். எனில் விகடனின் இத்தகைய இரட்டை வேடத்திற்கு கவின் மலர் தன்னாலான முறையில் உதவி செய்கிறார். இந்த மனிதாபிமானத்தைக் கூடவா அறுத்துப் பார்ப்பது?
“இந்தக் குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்கள் குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதியவைக்கிறது? கள்ளங்கபடம் இன்றிப் பழகும் குழந்தைகளில், பெண் குழந்தை பெரியவளானதும், ஆண்களுடன் பேசத் தடை விதிப்பது, அவளை விளையாட அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்வது போன்ற நடைமுறைகள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன”
எதிர்பாராத நேரத்தில் சொக்காயைக் கொத்தாகப் பற்றி செவிட்டில் பொளேர்ர்ர்ர்… என்று அறைந்தது போலிருந்தது. ஆனால், அது கவின்மலரிடம் வெளிப்பட்ட ‘சத்தியாவேசத்தின்’ விளைவினால் அல்ல. “பொண்ணுங்கன்னா எப்டி இருக்கனும் தெரியுமா?” என்பதில் ஆரம்பித்து, ‘என்ன உடை அணிய வேண்டும், எந்த செருப்பு போட வேண்டும், கொண்டையில் எத்தனை குண்டூசி குத்திக் கொள்ள வேண்டும், பெண் தன் உடலை எப்படி கவர்ச்சியாக காட்ட வேண்டும், அந்தப் பெண்ணை எப்படி மூர்க்கமாக அடைய வேண்டும்’ என்பது வரைக்கும் பாடம் நடத்தும் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் முதல் அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு வரை பாடம் நடத்தும் பேட்டிகளையும் அவர்களைப் பற்றிய செய்திகளையும் கிசுகிசுக்களையும் வெளியிட்டு கல்லா கட்டும் விகடனின் பக்கங்களில் இருந்து இப்படியொரு ‘சத்தியாவேச’ ஜூவாலை குப்பென்று பற்றியெறிவதைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு அது. இருக்காதா பின்னே, ரெண்டு சைக்கிள் பிராண்டு ஊதுவர்த்தியை செப்டிக் டேங்கினுள் சொருகி வைத்து விட்டு முகர்ந்து பார்க்கச் சொன்னால் இப்படித்தானே இருந்தாக வேண்டும்?
“ஓர் ஆண் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை வல்லாங்கு செய்து விட முடிகிற ஒரு சமூகத்தில், திருமணத்தில் கூட ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கேள்வி கேட்கும் ஆணாதிக்கம் தான் தர்மபுரியில் மூன்று கிராமங்களின் மீது நடந்த தாக்குதலுக்கான அடிப்படைக் காரணம்” – மேற்படி கட்டுரை. பக்கம் 13
என்னாது… காடுவெட்டி குரு விகடன் பத்திரிகையில் பங்குதாரரா? லீனா மணிமேகலை எடுத்த டியூஷன்கள் வீண் போகவில்லை. ஊரே காறித்துப்பிய சாதிவெறியாட்டத்திற்கு இப்படிக்கூடவா வியாக்யானம் எழுத முடியும்? நாயக்கன் கொட்டாய் தாக்குதலை சாதிவெறியில் மூழ்கிய வன்னியப் பெண்கள் முழு மனதாக ஆதரித்து தமது வீட்டு ஆண்களுக்கு சக்தி மாதாக்களாய் இருந்ததெல்லாம் கவின்மலருக்குத் தெரியவில்லை. ஈராக் போருக்கு ஆண்கள் காரணம் என்று லீனா மணிமேகலை எழுதும் போது தருமபுரி தாக்குதலுக்கு ஆண்கள் காரணம் என்று கவின்மலர் ஏன் எழுதக்கூடாது? ஆனால் ஒன்று நிச்சயம், களப்பணி மூலம் சமூக மாற்றத்திற்கு இம்மியளவு கூட செயல்படாத இத்தகைய விளம்பர மோக அறிவாளிகளின் அறிவு குண்டு சட்டியை விட்டு தாண்டவே தாண்டாது. பாவம் கவின்மலர் என்ன செய்வார்!
“வீடுகளிலும் கல்விக்கூடங்களிலும் மட்டும் அல்ல; பொழுதுபோக்கச் செல்லும் திரையரங்குகளில் காட்டப்படும் திரைப்படங்களும், விளம்பரங்களும் பெண்களை நுகர்வுப் பொருளாக சித்தரிக்கின்றன” – மேற்படி கட்டுரை. பக்கம் 13
வாசித்துக் கொண்டிருக்கும் போதே லேசாக வீசிய காற்றில் வாசித்துக் கொண்டிருந்த பக்கம் புரண்டு அடுத்த பக்கத்தில் நின்றது. “நயன்தாரா யாருக்கு? – ஸ்டார் ‘பிரதர்ஸ்’ வார்” என்கிற தலைப்பு கண்களைப் பிடுங்கியது. கவின்மலர் மேலே அடுக்கியிருக்கும் காரணங்களில் ‘பத்திரிகைகளிலும்’ என்பது மட்டும் எப்படியோ மிஸ் ஆகி விட்டிருப்பது தற்செயல் என்றே சத்தியமாக ‘நம்பி’ விட்டேன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என்பது எந்தப் பெண்ணியத்தில் வரும் என்று உலக இலக்கியங்களை ஆராய்ந்தும் வருகிறேன்.
கடைசியில் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார் கவின்மலர்,
“மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். நம் துறையில் இருந்து தொடங்க வேண்டும். நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும்” – மேற்படி கட்டுரை. பக்கம் 13.
இங்கேயும் ‘நாம் வேலைபார்க்கும் பத்திரிகையிலிருந்து தொடங்க வேண்டும்’ என்கிற வரி தற்செயலாக மிஸ் ஆகிவிட்டது என்று சத்தியமாக ‘நம்புகிறேன்’.
***சமூகத்தில் ஆணாதிக்கக் கருத்துக்கள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பது உண்மை தான். ஆம்பிள்ளைத் திமிரோடு வளர்க்கப் படும் பொறுக்கிகள் வாய்ப்புக் கிடைக்கும் போது பெண்களின் மேல் பாய்ந்து குதறுகிறார்கள் என்பதும் உண்மை தான். ஆனால், இந்தத் திமிர்த்தனத்திற்கு ஒரு வெகுஜன அங்கீகாரம் வழங்குவது யார்? இதை ரசிக்கத்தக்க குறும்புகளாக கற்றுக் கொடுப்பது யார்? அங்கே தான் வருகிறார்கள் விகடன் மாமாக்கள்.
ஜூ.வி, ஆ.வி, குமுதம், ரிப்போர்ட்டர் என்கிற பலான குப்பைகளின் வரிசையில், இதிலேயே தனிச்சிறப்பான நிபுணத்துவம் மிக்க பத்திரிகையாக ‘டைம்பாஸ்’ என்கிற பத்திரிகை சமீபத்தில் தான் விகடன் குழுமத்திலிருந்து அறிமுகமாகி இருக்கிறது. யாரும் வாசிக்காமல் இருந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் அதனை ஐந்து ரூபாய் விலையில் மலிவாகவும் கிடைக்கும்படி செய்துள்ளது விகடன் குழுமம். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பெண்களின் அரை நிர்வாணப் படங்கள், உள்ளூர் சினிமா நடிகையிலிருந்து ஆங்கிலச் சினிமா நடிகைகள் வரை பாலியல் கிசுகிசுக்கள், ‘யாரோடு யார் எங்கே எந்த இடத்தில் எப்போது’ என்கிற வானிலை அறிவிப்புகள் என்று முற்றுமுழுதான மஞ்சள் பத்திரிகையாக வெற்றி நடை போடுகிறது ‘விகடன் டைம்பாஸ்’.
இதிலும் கிசுகிசுக்கள் யாரைப் பற்றிச் சொல்லப்படுகின்றன என்பதை வாசகன் அறிந்து கொள்ளாமல் போய் விடக்கூடாதே என்கிற அக்கறையில் எந்த நடிகருக்கு எந்தப் பட்டப்பெயர் என்கிற அகராதியையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பக்கம் கீழ்த்தரமான பாலியல் ரசனையைக் கடைவிரித்துக் கொண்டே அந்தப் பக்கம் வேதம் ஓதும் திறமை என்பது விகடனின் கண்டுபிடிப்பல்ல. கருவறையில் கடவுள் பக்தி – வெளிப் பிரகாரத்தில் காம பக்தி என்பது தானே பார்ப்பனிய இந்து மதத்தின் பெருமை மிகு ‘பாரம்பரியம்’?
விகடனின் வரலாற்று வளர்ச்சியில் இதெல்லாம் புதிதில்லை. ‘சரசுவாகிய நான்’ தொடரின் மூலம் போலீசு, எம்.எல்.ஏ, மந்திரி என்று சகலரோடும் கள்ளத்தொடர்புகளால் ‘வளர்ந்து’ ஆளான சாராயக்கடை சரசக்காவின் கதை ஒரு அப்பட்டமான பாலியல் தொடர். வாசகர்களின் மிருக உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் காசு பார்ப்பதில் இவர்களுக்கு எந்தவகையான கூச்ச நாச்சமும் இருப்பதில்லை. சிவகாசி ஜெயலட்சுமியில் இருந்து பிரேமானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன், நித்யானந்தா வரைக்கும் நடந்த குற்றங்களை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு அவர்கள் அடித்த காமவெறி கண்றாவிகளையே முக்கியத்துவம் கொடுத்து ‘சுவை’பட விவரித்துக் கல்லாக் கட்டியவர்கள்தான் இந்த யோக்கியவான்கள்.
பாலியல் ரீதியிலான குற்றங்களைப் பற்றி எழுதுவதோ அல்லது அதைப் பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதோ அல்லது இப்படியொரு அபாயத்தை சமூகத்தின் பகிரங்கமாக முன்வைத்து விவாதத்துக்குள்ளாக்குவதோ தவறில்லை. ஆனால், இந்தப் பத்திரிகைகள் நடந்த விவகாரத்தில் இருக்கும் விகாரங்களைத் தெரியாதவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றன. கோபம் வரவழைக்க வேண்டிய இடத்தில் காம வெறியைத் தூண்டி விடுகின்றன. டாக்டர் பிரகாஷின் குற்றங்களை அம்பலப்படுத்தும் போர்வையில் அவரது லீலா வினோதங்களை விரிவாக விவரித்து அதுவரைக்கும் தெரியாதவர்களையும் இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளத் தூண்டியது பத்திரிகைகள் தான். இந்தத் தூண்டலுக்கு வாசகனை மலிவான உணர்ச்சியில் மூழ்க வைத்தால்தான் சர்குலேஷன் எகிறும் என்ற சுரண்டல் கண்ணோட்டம்தான் காரணம்.
பாலியல் உணர்ச்சிகளைப் பொருத்தவரை விலங்குகளும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு – மனிதர்களுக்கு இருக்கும் சமூக உறவும், அந்த உறவின் பாற்பட்டு அவன் பின்பற்றும் சமூகக் கட்டுப்பாடுகளும்தான். பாலியல் உணர்ச்சிகளுக்கும் அவனது சமூக ரீதியான பொறுப்பு உணர்வுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளும் அதையொட்டி ஒருவனின் அகநிலையில் ஓயாது நடக்கும் போராட்டங்களையும் எதிர்கொள்ளும் போது ஆனந்த விகடன்களும் குமுதங்களும் எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுகின்றன. அந்த முரண்பாட்டை நல்ல விதமாக ஆற்றுப்படுத்துவதற்குப்பதில் வெறியைக் கிளப்பி விட்டு கல்லா கட்டுகின்றன.
பெண்கள் என்றால் சமைக்க வேண்டும் – ஆண் சமைப்பது கேலிக்குரியது என்பதை மொக்கை ஜோக்குகள் மூலம் சொல்லி விட்டு, நேரடியாக பெண்களுக்கு சமையல் குறிப்புகளை எழுதுகிறார்கள். பெண்கள் என்றால் அழகாய் இருக்க வேண்டும், அழகு படுத்திக் கொள்ள வேண்டும் – அதற்கு அழகுக் குறிப்புகள், பெண்கள் என்றால் பொரணி பேசுவார்கள், குடும்பச் சண்டைகளில் இறங்குவார்கள் – இதற்கு மாமியார் மருமகள் மொக்கைகள். இவ்வாறு ஏற்கனவே பொதுப்புத்தியில் உறைந்து போயிருக்கும் அசிங்கங்களை மேலும் வளர்த்தெடுக்கின்றன. இறுதியில் பெண்களை வீட்டு சிறையில் ஒரு போகப்பொருளாய் அடைத்து வைத்திருப்பதைத்தான் விகடன், குமுதம் அறிவாளிகள் செய்து வருகின்றனர்.
ஆம்பளைப் பொறுக்கித்தனத்தையே ஹீரோத்தனமாக முன்வைக்கும் சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது, திரையில் பெண்களை தரக்குறைவாக மதிக்கும் ‘நாயகர்களை’ அழைத்து பேட்டி காண்பது என்று ஆணாதிக்க திமிர்த்தனங்களுக்குப் பரிவட்டம் கட்டி அதையே ஒரு பொதுக் கலாச்சாரமாக நிலைநிறுத்தியதில் பத்திரிகைகளின் பங்கு முக்கியமானது. பெண்ணை போகப் பொருளாக்கி விட்டார்களே, விற்பனைப் பண்டமாக்கி விட்டார்களே என்று பத்தாம் பக்கத்தில் கவின்மலர் உயிரைக் கொடுத்து தொண்டைத் தண்ணீர் வற்றக் ‘குமுறிக்’ கொண்டிருக்கிறார் – நடுப்பக்கத்திலோ கல்யாண் ஜுவல்லர்ஸின் விளம்பரம்; கழுத்து நிறைய நகைகளோடு ஒரு பெண் அமர்ந்திருக்க பக்கத்திலேயே, ‘திருமணம் பற்றிய சிந்தனை.. இனி ராஜகம்பீரமாகும்” என்கிற வாசகங்கள். பெண்ணைப் பெற்றால் வரதட்சிணையாக நகை போட்டுக் கட்டிக் கொடுக்க வேண்டுமென்பதை விளம்பரத்தில் சொல்லி விட்டு முதல் பக்கத்தில் நீர்த்துப் போன மொழியில் கவின்மலரின் உபதேசம். அருவெறுப்பூட்டுகிறது இந்த நாடகம்.
ஊருக்கு உபதேசம் சொல்லும் கவின்மலர், அவருடன் இணைந்து பணியாற்றி டைம்பாஸ் என்ற மலிவான ‘மெல்லிய’ போர்னோ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் ரீ.சிவக்குமாரின் (சுகுணா திவாகர்) சட்டையைப் பிடித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் இரண்டு கேள்விகளாவது கேட்கத் தயாரா? இல்லை இவரை ஆசிரியர் பொறுப்பில் விட்டு காசு பார்க்கும் விகடன் நிர்வாகத்தினை கண்டித்து ஒரு மொக்கை கவிதையாவது எழுதத் தயாரா? முடியாது எனில் யாரை ஏமாற்றுகிறீர்கள்?
இப்படிப்பட்ட பத்திரிகைகளைப் படித்து ‘தயாராகும்’ ஒரு இளைஞன் எப்படியிருப்பான்? பொறுக்கியாக இல்லையென்றால்தான் ஆச்சரியம். இவ்வாறாகத் ‘தயாரான’ இளைஞன் ஒருவன் சாலையில் செல்லும் பெண்ணை எப்படிப் பார்ப்பான்? அவன் குற்றவாளியென்றால் அவனது ஆண்மைத் திமிர் கொண்ட ஆளுமையின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்தப் பத்திரிகைகள் குற்றவாளிகள் இல்லையா? பெண்களை போகப் பொருட்களாகவும், நுகர்வுப் பண்டங்களாகவும் கடைவிரிக்கும் ஊடகங்கள் வழியே தனக்கென்று ஒரு ஆணாதிக்க ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் லும்பன்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் போது தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்தக் குற்றத்தைத் தூண்டிய பத்திரிகைகளோ தண்டனையிலிருந்து தப்புவது மட்டுமின்றி நடந்த குற்றச் சம்பவத்தையே எந்தக் கூச்சநாச்சமும் இன்றிக் காசாக்குகின்றன.
பாலியல் குற்றச்சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களுக்கு தூக்கு, ஆண்மை நீக்கம், ஆயுள் சிறை என்று அவரவர்க்குத் தோன்றிய தண்டனைகளைப் பட்டியலிடுகின்றனர். ஆனால், இந்தக் குற்றங்களின் காரண கர்த்தாக்களுக்கு யார் எந்த தண்டனையை வழங்குவது?