மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் 9-ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கீழ் கண்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 23.12.2012 அன்று மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் ம. லயனல் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்
தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது!
மின் உற்பத்தியை அரசு கைவிட்டது!
தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்!
வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!
தலைமையுரை – லயனல் அந்தோணிராஜ்
“தமிழ்நாடு மின்துறையின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் போக்குகளை வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றிய காலம் முதற்கொண்டே த.நா.மி.வா.பொறியாளர் சங்கம் அமைத்துப் போராடி வருபவர் பொறியாளர் கோவை.சா.காந்தி. பணி ஓய்வு பெற்ற பின்பும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்று அதே பணியை மக்கள் மத்தியில் தற்போது செய்து வருகிறார் பொறியாளர் காந்தி. இப்படி பொறுப்புடன் செயல்படுகிறவர்கள் மிகவும் அரிதாக உள்ளனர்.
அதுபோலவே டெங்கு பற்றி பேச வந்திருக்கும் மருத்துவர் மீ.அரிகர மகாதேவன் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுர்ரியில் மாணவராக இருந்தபோதே அரசின் அலட்சியங்களை எதிர்த்து மாணவர்களைத் திரட்டிப் போராடியவர். இப்போது முதுகலைப் பட்டம் பெற்று தனியே மருத்துவமனை நடத்தி வருகின்ற போதிலும் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார். டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்து உள்ளது என்று அரசுக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியும் பாராமுகமாக இருந்த அரசு இறுதிக் கட்டத்தில் ஏற்றுக்கொண்டு சித்தமுறை சிகிச்சையை பரிந்துரை செய்தது. மேலூர் பகுதியில் டெங்கினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதனால் அப்பகுதியில் இலவச முகாம் நடத்தினார் மருத்துவர் மீ.அரிகரமகாதேவன். இப்போதும் தொடர்ந்து தனது பணியை எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்து வருகிறார்.
இவர்களைப் போலவே தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் 9 தென் மாவட்டங்களின் விவசாயம், நீர் மேலாண்மைப் பிரிவு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய மூத்த பொறியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.விஜயகுமார் அவர்களும் பணி ஓய்வுக்குப் பின்னும் பொ.ப.துறையின் மூத்த பொறியாளர்களை அமைப்பாக்கியுள்ளார். முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மக்களைத் திரட்டும் பணியில் அவர் தன்னை அயராது ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இப்படிப்பட்ட சமுகப் பொறுப்புள்ள அதிகாரிகள், மருத்துவர்கள் சிலர் பலராகப் பல்கிப் பெருக வேண்டும். மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களுக்கான அமைப்புகள் அவர்களோடு எப்போதும் ஒத்துழைக்கும்”
குறுந்தகடு வெளியீடு
அதன் பின்பு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி கிளை நடத்திய கருத்தரங்கில் பொறியாளர் சா.காந்தி ஆற்றிய உரை “திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு ‘பவரை’ அதிகாரத்தைக் கையிலெடுத்தால் தடையின்றி ‘பவர்’ வரும்” என்ற தலைப்பில் ”ஒலிக்குறுந்தகடாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அது மதுரைக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. மதுரைக் கிளையின் தலைவர் ஐயா இரா.நல்லகாமன் வெளியிட மருத்துவர் அரிகர மகாதேவன் பெற்றுக் கொண்டார்.
‘கோரத் தாண்டவமாடும் டெங்கு-அலட்சியம் காட்டும் அரசு’ – மருத்துவர் அரிகர மகாதேவன் பேச்சு
டெங்குவின் ஆரம்ப அறிகுறிகளை விளக்கிய அவர் “அலோபதி மருத்துவத்தில் அதற்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள். ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகளில் வந்து குவிகின்றனர். சரியான கவனிப்பு இல்லை. தனியார் மருத்துவமனைகளில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை கொள்ளையடிக்கின்றனர். ஆரம்பத்தில் கடையநல்லுர்ரில் டெங்குவினால் இறப்பு ஏற்பட்ட போது பாளையங்கோட்டை மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சாவுகள் நிகழ்ந்தன.
டெங்கு பற்றியும் அரசின் அலட்சியம் பற்றியும் சித்த மருத்துவர் அரிகர மகாதேவன்
சித்த மருத்துவத்தில் டெங்கு சுரத்திற்கு சிகிச்சை இருக்கிறது என்று அரசுக்கு 11/6/12ல் அறிக்கை அளித்தோம். கண்டு கொள்ளவில்லை. சென்னை மெடிக்கல் அசோசியேசனில் அறிக்கை தந்தோம். அக்டோபர், நவம்பரில் தீவிரமாகும் என்று எச்சரித்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அலோபதியில் மருந்து இல்லையென்றால் வேறு எதிலுமே மருந்து இல்லை என்று பொருளா? அலோபதி பல லட்சம் கோடிகள் புரளுகிற மிகப் பெரிய வியாபாரம். லாபம் கொழிப்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். டெங்கு கொசுக்கடி ஏழைகளைத்தான் முழுவதுமாகப் பாதிக்கிறது. அதனால் அரசு அதைப்பற்றி அலட்சியம் காட்டுகிறது.
மேலும் டெங்குவை உருவாக்கும் ஏடியெஸ் வகை கொசு எப்படி உருவானது என்று ஆராய்ந்து பார்த்தால் அது அமெரிக்காவின் உயிரி தொழில் நுட்ப யுத்தத்தின் விளைவு என்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெங்குக்கு ஜிடி நாயுடு மருந்து கண்டுபிடித்தார். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.” என்று பேசினார்
‘மின்வெட்டு பேசப்படாத உண்மைகளும் பின்னணி அரசியலும்’ – பொறியாளர் கோவை சா.காந்தி
மிகத் துல்லியமான புள்ளி விவரங்களுடன் நீண்ட உரையாற்றினார். “மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து நான் தருகிற புள்ளி விவரங்கள் அனைத்தும் ஆதார பூர்வமானவை. இதைச் சொன்னது யார் என்று உங்களிடம் யாராவது கேட்டால் பொறியாளர் காந்தி சொன்னது என்று சொல்லுங்கள்” என்று சொல்லி அவர் பேச்சைத் தொடங்கியது அனைவரையும் ஈர்த்தது.
“தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற இடங்களில் மின்வெட்டு கடுமையாக பாதித்து உள்ளது. சென்னையில் இருப்பவர்களுக்கு மின்வெட்டைப் பற்றி தெரியாது. சென்னையும் பிற மாவட்டங்களும் இந்தியா-பாகிஸ்தான் போல தனித்தனி நாடு போல் உள்ளது. ரிலையன்ஸ் என்று பெயர் ஆனால் அதனை நம்ப முடியாது. சத்யம் (கம்ப்யூட்டர்ஸ்) என்று பெயர் அதில் உண்மை இல்லை. (மின்சார) ஒழுங்குமுறை ஆணையம் என்று பெயர் ஆனால் அதில் ஒழுங்கு கிடையாது. 2013-ல் தமிழ்நாடு மிகுமின் உற்பத்தி மாநிலமாக மாறும் என்று 31.10.12ல் முதல்வர் சட்ட சபையில் அறிவிக்கிறார். ஆனால் அதில் உண்மை இல்லை. நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன் தமிழ்நாடு அப்படி ஆகவே ஆகாது.
தமிழ்நாட்டின் இன்றைய மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஆனால் உற்பத்தியோ 8 ஆயிரம் மெகாவாட் தான் பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட். அடுத்த ஆண்டில் (2013-ல்) நமது தேவை 13 ஆயிரத்து 100 மெகாவாட். ஆனால் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் எல்லாத் திட்டங் களும் முடிக்கப்பட்டுவிட்டால் 3500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அப்போதும் 2 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக் குறை 2011ல் 5600 மெகாவாட்டாக அதிகரிக்கும்.
கூடங்குளம் அணுஉலை திறக்கப்பட்டால் மின் பற்றாக்குறை தீர்ந்து விடும் என்று கூறுவது தவறு. கூடங்குளத்தில் இப்போதைக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதான் தமிழ்நாட்டிலேயே அதிக திறன் கொண்டது. ஆனால் அதில் உற்பத்தி அதிகபட்சம் 270 மெகாவாட்டுக்கு மேல் இருக்காது. கல்பாக்கத்தில் இதுவரை 240 மெகாவாட்டுக்கு மேல் உற்பத்தி இல்லை. இவற்றில் தமிழ்நாட்டின் பங்கு மிகவும் குறைவு. இந்தச் சூழலில் தமிழ்நாடு எவ்வாறு மிகுமின் மாநிலமாக மாறும்?
மனித உரிமை பாதுகாப்பு மையம் கருத்தரங்கில் பொறியாளர் காந்தி
தமிழ்நாட்டில் புனல், அனல், எரிவாயு, காற்றாலைகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னை எண்ணூர். மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எரிபொருள் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுகிறது. காற்றாலைகள் ஆண்டிற்கு 5 மாதங்கள் மட்டும் தான் இயங்கும்-காற்று பருவமுறைப்படி வீசினால்.
புனல் மின்சாரத்தைப் பொருத்தவரை அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. எரிவாயுவின் மூலமாக குத்தாலம், வழுதூர் ஆகிய இடங்களில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால் அவற்றிலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. ஆனால் எரிகாற்று முலமாக மட்டுமே குறைந்த செலவில் தயாரிக்க முடியும். ஒரு யூனிட் உற்பத்திக்கு 68 பைசா தான் செலவு. ஆனால் அரசு அதை ஊக்குவிப்பதில்லை. ஆனால் தனியார் சிலபேர் இதைப் பயன்படுத்தி மிகுந்த லாபம் அடைகின்றனர்.
தமிழ்நாட்டின் மின் தேவையில் 35 விழுக்காடு மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 30% மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கிறது. மீதமுள்ள 35% தனியாரிடமிருந்து பெறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்கின்றன. அவர்களிடம் மின்சாரத்தை வாங்காவிட்டால் அதற்குரிய நிலைக் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும். இந்த வகையில் ஆண்டுக்கு ரூ 650/- கோடி நிலைக் கட்டணமாகத் தனியாருக்குச் செலுத்தப்படுகிறது. இப்படித்தான் மின் வாரியத்துக்கு ரூ 65 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டது. இப்போதும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மின்வாரியம் வாங்கி விநியோகிக்கலாம். ஆனால் கூடுதல் கட்டணம் தரவேண்டும். காற்றாலை முதலாளிகளுக்கு மட்டுமே ரூ 1000 கோடி பாக்கி வைத்துள்ளது அரசு. கொள்ளை லாபமடிக்கும் முதலாளிகள் தமிழக அரசுக்கு கடன் தர மறுக்கின்றனர். ஜெயலலிதா கடன் வாங்கத் தயாராக இல்லை. சென்னைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் மின் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு ஏனைய தமிழ்நாட்டினை சுடுகாடாக்குவதில் அவருக்கு வருத்தமில்லை. அது மட்டுமல்லாமல் தனியார் முதலாளிகளுக்குச் செயல்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்கிற கொள்கையை வகுத்துள்ளது. எனவே மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ கட்டண உயர்வு கட்டாயம் வரும். இவை தவிர தனியார் முதலாளிகளிடமிருந்து நமது ஆட்சியாளர்கள் வாங்குகின்ற கமிஷனும் மக்கள் தலையில் தான் வந்து விழுகிறது.
தமிழக அரசு ஏற்கனவே 2007-ம் ஆண்டு முதல் திட்டமிட்ட மின் நிலையங்கள் தான் அடுத்த ஆண்டு உற்பத்திக்கு வர இருக்கின்றன. அதில் 600 மெ.வா. மேட்டுர் இரண்டாவது அனல்மின் நிலையம் பி.எச்.இ.எல்க்கு தரப்படாமல் பி.ஜி.ஆர்-என்ற தனியார் நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு அனல் மின் நிலையம் கட்டமைப்பது பற்றிய எந்த முன் அனுபவமும் கிடையாது. ஏற்கனவே மிகுந்த கால தாமதம் ஏற்படுத்தி வரும் அந்த நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கினாலே நிஜம். இவை ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் 8 இடங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் 18 ஆயிரம் மெ.வா. மின்சாரம் தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் பல அதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எஸ்.ஆர்.எம் குழுமம் 1000 மெ.வா. அப்போலோ மருத்துவமனை குழுமம் மரக்காணத்தில் 1000 மெ.வா. சென்ட்ரல் பவர் ஜென் 1600 மெ.வா. இந்து பாரத் 1023 மெ.வா. ஐ.எல்.எப்.எஸ். 3600 மெ.வா. ஆனால் இவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தில் ஒரு யூனிட் கூட தமிழ்நாட்டுக்குக் கிடைக்காது. ஏனென்றால் புதிய சட்டங்களின் படி தனியார் முதலாளிகள் தயாரிக்கும் மின்சாரத்தை அவர்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவர்களைத் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. நம்முடைய நிலம். நம்முடைய நிலக்கரி, நம்முடைய உழைப்பு ஆனால் அதன் பயன் மட்டும் நமக்கு கிடையாது. இதைக் கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் கொண்டு வந்தது வேறு யாருமல்ல நம்முடைய செட்டிநாட்டு சிதம்பரமேதான்.
இப்போது சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க அதிகம் முதலீடு தேவைப்படுகிறது. 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 5 ஏக்கர் நிலம் வேண்டும். 1000 மெகாவாட் தயாரிக்க 5000 ஏக்கர் நிலம் வேண்டும். இப்போது சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்பில் உலக முழுவதும் குத்தகை எடுத்திருப்பவர்கள் வேறு யாருமல்ல ‘நம்முடைய’ வால்மார்ட்டும் மான்சாண்டோவும் தான். எனவே இதிலும் உலக மயமாக்கத்தின் தாக்கம் இருக்கிறது. நம்முடைய மண் முழுவதுமாக அந்நியனுடைய கைக்குப் போகிறது. தண்டகாரண்யா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மக்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். மக்கள் வாழுமிடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது உள்நாட்டு ராணுவம் போலீசு அதிரடிப்படைகள் உள்ளன. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக நம்மை ஆள்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டுவிக்கிற பொம்மையாக மக்கள் உருவாக்கப்படுகிறார்கள். பன்னாட்டுக் கொள்ளைக்கு ஏற்ப நமது நாடு உருவாக்கப்படுகிறது. எனவே மக்கள் இவற்றுக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். ஏழை மக்கள் சாவை நோக்கித் தள்ளப்படுவதைப் பற்றி நம்மை ஆட்சி செய்கிறவர்கள் கவலைப்படவில்லை. எல்லா வேறுபாடுகளையும் மறந்து மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்”
மதுரைக்கிளையின் துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act) மூன்றாவது முறையாகத் திருத்தப்பட்டிருப்பதைப் பற்றி விளக்கினார்.
போராட்டங்களும் அடக்கு முறை சட்டங்களும் பற்றி வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
“போராடும் உரிமை நமது அடிப்படை உரிமை. அரசியல் சட்டம் அதை உறுதி செய்துள்ளது. ஆனால் போராடும் உரிமையைப் பறிப்பதுதான் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம். எது சட்டவிரோதம்? உலக மயமாக்கச் சூழலில் பன்னாட்டு நிறுவனங்கள் வருகையின் பின்னணியில் சட்ட விரோதமாக இருந்தவை அனைத்துமே சட்டப் பூர்வமாக்கப்பட்டு வருகின்றன. புனேயில் தாக்கரேயின் இறப்புக்காக வருந்தமாட்டோம், மும்பையை முடக்கியது வீணானது என்று வலைத்தளம் முகநுர்லில் எழுதிய பெண்களை காவல்துறை கைது செய்து சிறையில் வைத்தது. தமிழ்நாட்டில் சட்டவிரோத என்கவுண்டர்கள் காவல் துறையில் சர்வ சாதாரணமாக நடத்தப்படுகின்றன, ஜெயலலிதா ஒருமுறை தவறு செய்பவர்களைக் கூட குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் மாநாட்டில் பேசுகிறார். இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் நீதிமன்றக்காவல் 15 நாட்களில் இருந்து 30 நாட்கள் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்தவித விசாரணையும் இல்லாமல், சட்ட உரிமைகள் எதுவும் மறுக்கப்படுகிற நிலையில் ஒருவரை 6 மாதங்கள் சிறையில் வைக்கலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.
இவையெல்லாம் போராடும் மக்களை ஒடுக்கும் நோக்குடன் கொண்டு வரப்படும் சட்டங்களாகும். இவற்றை எதிர்த்துப் போராட மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் இயக்கங்களுடன் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் நன்றி சொல்ல கூட்டம் நிறைவுற்றது.
தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறை பல்வேறு தரப்பினரையும் ஏதாவது ஒருவகையில் எதிர்வினையாற்றத் தூண்டியுள்ளது. பரவலான ஜனநாயக சக்திகள் பெண்களைக் குதறும் பாலியல் வன்முறைகளையும் அவற்றைக் களைவது பற்றியுமான விவாதங்களை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளனர். சமீப காலமாக தேசிய ஊடகங்களில் இருந்து உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றன.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க அதிக பட்ச தண்டனை வழங்குவதா அல்லது இக்குற்றங்களின் சமூக அடிப்படை என்னவென்பதைப் பார்த்து அவற்றைக் களைவதற்கு முன்னுரிமை வழங்குவதா, பாலியல் விழிப்புணர்ச்சிக் கல்வி வழங்கினால் குற்றங்களைத் தடுக்க முடியுமா என்று பரவலாக விவாதங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். இப்படி நாடெங்கும் மக்களின் விவாதப் பொருளாக மாறி அமளி துமளி ஆகிக் கொண்டிருந்த போது ஓரமாக உட்கார்ந்து ‘மிச்சர் தின்று கொண்டிருந்த’ இந்துத்துவ சங்கப் பரிவாரங்களும் இப்போது வாயைத் திறக்கத் துவங்கியுள்ளன.
அண்டங்காக்காய் வாயைத் திறந்தால் இசையா வழியும்? பல நாட்களாக மலச்சிக்கலால் அடிபட்டவன் அவித்த மொச்சைப் பயிறைத் தின்ற கணக்காக சங்கப் பரிவாரங்களின் கருத்துக்கள் இப்போது மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
மோகன் பகவத்
கடந்த ஜனவரி 4-ம் தேதி அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார். மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் மாஃபியா ‘பாஸை’ வெளியில் ஊருக்குள் அனுப்பும் போது வாயின் மேல் இறுக்கமாக ‘டயப்பர் பேடு’ கட்டித் தான் அனுப்புவார்கள். ஆனாலும் சில அசந்தர்பங்களில் இப்படி நடந்து விடுவது வாடிக்கை. தொடர்ந்து அவர்களின் அமைப்பு வழக்கப்படி மோகன் பாகவத்தின் ‘வாய்ப்போக்கிற்கு’ பொழிப்புரை எழுத முன் வந்த ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், “எங்க தலைவருக்கு பெண்கள் மேல் நிறைய மரியாதை உள்ளது, ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கூட வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறோம்” என்கிற ரீதியில் சமாளித்துக் கொண்டிருந்தார்.
ஆங்கில செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் ‘பாரதம் என்று அவர் சொன்னது நிலப்பகுதியை அல்ல; அது கலாச்சாரம் பற்றியதாக்கும்’ என்று பின்நவீனத்துவவாதிகள் பேரரசு படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் போல் பாரதிய ஜனதா உள்ளிட்ட பரிவார அமைப்பினர் பாகவத் கக்கிப் போட்டதில் நல்லரிசியைத் தேடிக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக மோகன் பாகவத்தின் மூஞ்சியில் கட்டியிருந்த டயப்பர் பேடு நெகிழ்ந்து விட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கடந்த 6-ம் தேதியன்று பேசிய மோகன் பாகவத், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருப்பது ஒரு ஒப்பந்தம் என்றும் இந்த ஒப்பந்தம் ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அது என்ன அந்த ஒப்பந்தம்? அதாகப்பட்டது, பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம் – அதற்கு பதிலாக ஆண்கள் மனைவியின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமாம். இந்த முறை பொழிப்புரைகளுக்கு வாய்ப்புகள் ஏதும் தராமல் அவரே விளக்கிக் கூறி விட்டார்.
இவைகளெல்லாம் ஏதோ வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் அல்ல. பெண்களை போகப் பொருட்களாகவும் உடமைகளாகவும் பார்க்கும் பார்ப்பனிய சித்தாந்தம் தசை நரம்பு எலும்பு மூளை என்று உடலின் சகல பாகங்களிலும் ஊரி ஊத்தைக் கொழுப்பெடுத்த ஒருவனின் வாயில் இருந்து தான் இந்த விதமான வார்த்தைகள் வெளிவர முடியும்.
பாரதம் என்பதை மோகன் பாகவத் கிராமப்புறம் எனும் அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் சரி பழைய பார்ப்பன கலாச்சாரம் என்கிற பொருளில் சொல்லியிருந்தாலும் சரி, அங்கே பெண்களின் நிலைமை நரகல் தொட்டியின் நாற்றத்தை விட கேடுகெட்ட நிலையில் தான் உள்ளது. ஹரியானாவின் கிராமங்களில் தலித் பெண்களை ஆதிக்க சாதி ஆண்கள் வன்கொடுமை செய்த சம்பவங்களும், காட்டு வேட்டை எனும் பெயரில் தண்டகாரண்யத்தில் ஆதிவாசிப் பெண்களுக்கு எதிராய் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், வாச்சாத்தி சம்பவங்களும், அசாமில் ஆயுதப்படையினர் நடத்திய பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் நடந்தது மோகன் பாகவத் சொல்லும் பாரதத்தில் தான். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழைக் கூலி விவசாயிகளின் வீட்டுப் பெண்களிடம் மைனர்தனம் காட்டும் ஆதிக்க சாதி ஆண்டைகளின் சொர்க்கபுரி தான் மோகன் பாகவத் விரும்பிக் கேட்கும் ‘பாரதம்’
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் விதந்தோதும் பாரதப் பண்பாட்டின் யோக்கியதையும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் விதமாக இல்லை. திரேதாயுகத்தின் ராமன் சம்சாரத்தை சந்தேகப்பட்டு நெருப்பில் தள்ளினான் என்றால் துவாபர யுகத்தின் கிருஷ்ணனோ கேடுகெட்ட பொம்பளைப் பொறுக்கி. ஊரில் இருக்கும் பெண்களின் ஆடைகளைக் களவாடுவதையே ஃபுல் டைம் ஜாபாக வைத்திருந்தவன் தான் கிருஷ்ணன். வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வரும் வரைக்கும் ராம ராஜ்ஜியத்தின் நீதி நெறிகளுக்குள் முங்கி முக்குளித்துக் கொண்டிருந்தவர்கள் தான் கைம்பெண்களை நெருப்புக்குள் தள்ளி சதி மாதாக்கள் ஆக்கினர்.
இதிகாச காலத்தின் இந்திரன் துவங்கி இண்டெர்நெட் காலத்தின் தேவநாதன் வரை ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பேரொளி வீசிப் பிரகாசிக்கும் பாரதப் பண்பாடெனும் சோமபானத்தை அருந்தி மோன நிலையில் சித்தியடைந்தவர்கள் வேறு யாருமல்ல – அவர்கள் தான் காஞ்சிபுரத்தின் பெரிய வால், சின்ன வால், தேவநாதன், நித்தியானந்தா, பிரேமானந்தா, கல்கி சாமியார், கேரளாவின் கண்டரர், சிதம்பரத்தின் தீட்சிதர் போன்ற மகான்கள், ரிஷிகள் மற்றும் முனிகள்.
அன்னார் முன்வைக்கும் பாரதக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிநிதி அசாராம் பாபு என்கிற சாமியார். “கற்பழித்தவர்கள் மட்டுமல்ல, கற்பழிக்கப்பட்ட பெண்ணும் தான் குற்றவாளி. தன்னைக் கற்பழிக்க வந்தவர்களை ‘அண்ணா’ என்று அழைத்து தன்னை விட்டு விடுமாறு அந்தப் பெண் கெஞ்சியிருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது” என்று பேசியிருக்கிறான். தில்லி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் செய்த குற்றத்திற்கு சற்றும் குறையாத இந்தப் பேச்சுகளுக்காக இந்த ஆளைத் தூக்கி உள்ளே வைக்காமல் அரசியல் கட்சிகள் ‘பேச்சை வாபஸ் வாங்கச்’ சொல்லி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாராம்சத்தில் அசாராம் பாபு பேசியதற்கும் மோகன் பாகவத்தின் கருத்துக்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. பெண்கள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும், வெளியில் செய்ய வேண்டிய வேலைகளை ஆண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் – அப்படியே வெளியே வந்து யாராவது ‘கற்பழிக்க’ வந்தால் காலில் விழுந்து கெஞ்சுங்கள் என்கிறான் இந்தச் சாமியார்.
தேவதாசி முறை, பொட்டுக்கட்டி விடுவது என்று மிட்டா மிராசுகளுக்கும் பண்ணையார்களுக்கும் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கி வைத்து ‘கோயில்தலமனைத்தும் விபச்சாரம் செய்குவோம்’ என்று கூத்தாடிய கலாச்சாரம் தான் ஆர்.எஸ்.எஸ் அமைக்கப் போவதாய்ச் சொல்லும் ராமராச்சியத்தின் கலாச்சாரம். காலச்சக்கரத்தை பின்னோக்கித் திருப்பி மீண்டும் அதே பழைய கலாச்சாரத்துக்கே திரும்பவும் போய் செத்து செத்து விளையாடலாமே என்று கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத். பிய்ந்த செருப்புகளைத் தயாராய் வைத்துள்ளீர்களா நண்பர்களே?
இந்தப் பேச்சுக்களும் கருத்துக்களும் வெறும் வாய்க்கொழுப்பு என்று ஒதுக்கித் தள்ளத் தக்கதல்ல. இவர்களின் கையில் நாட்டை ஒப்படைத்தால் என்னவாகும் என்பதன் ஒரு சிறிய முன்னோட்டம் தான் இந்தப் பேச்சுக்கள். தேசத்தை “பாரத மாதாவே” என்று படத்தில் மாட்டி தொட்டுக் கும்பிட்டு விட்டு அதன் வளங்களை கூறு போட்டு விற்க, கக்கத்தில் லெதர் பேக்கோடு அலைந்த பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள் தான். பாரதீய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் காங்கிரசை விட வெறி கொண்ட முறையில் தேசத்தின் வளங்கள் அனைத்தும் – ஆறுகள், மலைகள், நிலங்கள் உள்ளிட்டு – பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் வைக்கப்பட்டது.
ஆக, இவர்கள் முன்வைக்கும் கலாச்சாரமும் அரசியலும் பொருளாதாரக் கொள்கைகளும் வேறு வேறல்ல. இந்த நச்சுப் பாம்புகளைக் கண்ட இடத்தில் அழித்து ஒழிப்பது தான் மக்களின் உடனடிக் கடமை.
முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை போன்ற சில அரசு உதவித் திட்டங்கள் பண வடிவிலும், அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், எரிவாயு உருளை, டீசல், உரம் போன்றவைகளுக்கான மானியம் பொருள் வடிவிலும் வழங்கப்படும் தற்போதைய நடைமுறையை மாற்றி, அனைத்து மானியங்களையும், நல உதவித் திட்டங்களையும் பண வடிவில் மட்டுமே மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம் (Direct Cash Transfer) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், “உங்கள் பணம் உங்கள் கையில்” எனக் கவர்ச்சிகரமான முறையில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை முதற்கட்டமாக குறிப்பட்ட 51 மாவட்டங்களில் எதிர்வரும் ஜனவரி 1, 2013 முதல் அறிமுகப்படுத்தவும், 2013-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடெங்கிலும் கொண்டுவரவும் மைய அரசு திட்டமிட்டுள்ளது.
நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதைப் பார்ப்பது அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாலும், அதனைக் கையிலெடுத்துக் கொஞ்ச முடியாது. அதனைப் போன்றதுதான் இந்தத் திட்டமும். “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற இந்தக் கவர்ச்சிகரமான சொல்லடுக்கின் பின்னே, பொது விநியோகத் திட்டத்தை, அதாவது ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் அபாயம் மறைந்திருக்கிறது.
தனியார்மயம்-தாராளமயத்தை அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பை ஒழித்துக் கட்டுவதை ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர். இக்கொள்கையின்படி ரேஷன் அட்டைகள், வெள்ளை அட்டை, பச்சை அட்டை எனப் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் ஒழித்துக்கட்டப்பட்டது. குறைந்த விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுவரும் வறிய மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்-சோனியா கும்பல். இதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 29/- ரூபாய்க்கு மேலும், கிராமப்புறங்களில் 23/- ரூபாக்கு மேலும் கூலி பெறுவோர் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்ட கமிசன். இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
எனினும், நேரடி பணப்பட்டுவாடாத் திட்டத்தின் கீழ் தற்போதைக்கு 29 நலத் திட்டங்களை மட்டுமே கொண்டுவரப் போவதாகவும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை இத்திட்டத்தின் கீழ் உடனடியாகக் கொண்டு வரப் போவதில்லை என்றும் மைய அரசு அறிவித்திருக்கிறது. இது, மக்கள் மத்தியில் இந்தத் திட்டம் எப்படிபட்ட எதிர்வினையைத் தோற்றுவிக்கிறது என ஆழம் பார்க்கும் தந்திரம் தவிர வேறல்ல.
இந்தத் திட்டம் முழுமையாக அமலாகும்பொழுது, ரேஷன் கடைகள் பெயரளவில் இருக்கும். ஆனால், அக்கடைகளின் ஊடாக அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பது ரத்து செய்யப்பட்டு, அவை தனியார் மளிகைக் கடைகள் போல இயங்கும். இத்திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்கள் தற்பொழுது மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களைச் சந்தை விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் என்னென்ன பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பப்படும். அதன் பின், அவர்கள் வாங்கிய அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற பொருட்களுக்கான மானியம், அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும்.
உதாரணத்திற்குச் சொன்னால், ஒருவர் ஒரு கிலோ அரிசியை முப்பது ரூபா என்ற சந்தை விலைக்கு வாங்குவதாகவும், அந்த அரிசியின் மானிய விலை மூன்று ரூபா எனவும் வைத்துக் கொண்டால், பொது மக்கள் மானிய விலையைவிடக் கூடுதலாகச் செலுத்திய தொகையை (ரூ.27/-), அரசு அவர்களுக்குத் திருப்பித் தரும். இந்த மானியத்தைப் பெறுவதற்குப் பொது மக்கள் ஒவ்வொருவரும் ஆதார் அடையாள அட்டையையும், வங்கிக் கணக்கையும் பெற்றிருக்க வேண்டும். எனினும், இந்தப் பணப்பட்டுவாடா பொதுமக்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிய இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே நடந்துவிடாது. குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கொரு முறைதான் மானியம் பொதுமக்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்.
தற்பொழுது ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களையும், 10 லிட்டர் மண்ணெண்ணெயையும் ஓரே தவணையில் வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் கூலித் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் தட்டுத் தடுமாறுவதோடு, பல நேரங்களில் பொருட்களை வாங்காமலும் விட்டுவிடுகிறார்கள். இப்படிபட்ட நிலையில் வறியவர்களையும் ஏழைகளையும் சந்தை விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென்ற கட்டாயத்திற்குள் தள்ளுவது, ரேஷன் பொருட்களைப் பெறுவதிலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்துவிடும். இத்திட்டம் பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட டெல்லியிலும், ராஜஸ்தானிலும் கிடைத்த அனுபவங்கள் ஏழைகள் ஒதுக்கப்பட்டதை நிரூபித்திருக்கின்றன.
• • •
இராசஸ்தான் மாநிலம் – ஆல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்காசிம் என்ற பகுதியில் ரேஷன் கடைகளின் மூலம் மண்ணெண்ணெய் வழங்குவது பரிசோதனையின் அடிப்படையில் நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, மானிய விலையில் ஒரு லிட்டர் ரூ.15/-க்கு விற்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சந்தை விலையில் (ஒரு லிட்டர் ரூ.50/-க்கு) விற்கப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனை அதளபாதாளத்துக்குச் சரிந்தது. அப்பகுதியிலுள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சந்தை விலையைக் கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கிக் கொள்வது கட்டுப்படியாகாமல், அவர்கள் மண்ணெண்ணெய் வாங்குவதையே நிறுத்திவிட்டதால்தான் இச்சரிவு ஏற்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த தினக்கூலியான பச்சன் சிங், “கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் முடிய 1,000 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வாங்கியிருக்கிறேன். ஆனால், ராஜஸ்தான் கிராமிய வங்கியில் உள்ள எனது கணக்கில் இதுவரை ஒரு பைசாகூட மானியமாக வரவாகவில்லை. இனியும் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்க வழியில்லாததால் விறகு வாங்கத் தொடங்கி விட்டேன்” என்கிறார்.
கோட்காசிம் பகுதியிலுள்ள புர் கிராமத்தைச் சேர்ந்த பத்ரம் என்பவர், “ரேஷன் கார்டு எனது தந்தையின் பெயரிலுள்ளது. வங்கிக் கணக்கோ எனது பெயரில் உள்ளது. அரசு அதிகாரிகள் இதைக் காட்டி எனக்கு மானியம் வழங்க மறுப்பதால், நான் மண்ணெண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டேன்” என்கிறார்.
இப்படிபட்ட காரணங்களால்தான் அப்பகுதியில் மண்ணெண்ணெய் விற்பனை சரிந்து போனது என்பதை முதலாளித்துவப் பத்திரிகைகள் கூட அம்பலப்படுத்திய பிறகும், அரசோ, “போலி ரேஷன் கார்டுகளும் மண்ணெண்ணெய் கடத்தலும் ஒழிந்தததால்தான் இச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தில் 79 சதவீதம் வீணாவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுதான் இத்திட்டத்தின் வெற்றியென்றும்” தம்பட்டம் அடித்து வருகிறது.
‘‘ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும்போது ஏற்படும் நிர்வாகப் பிரச்சினைகளால்தான் கோட்காசிம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியம் முறையாகக் கிடைக்காமல் போயிருக்கிறது. வங்கிகளின் முகவர்கள் கிராமப்புற மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து மானியத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. எனவே, சில்லறை பிரச்சினைகளைக் காட்டி இப்பணப்பட்டுவாடா திட்டத்தை எதிர்க்கக் கூடாது” என வாதிடுகிறார், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
• • •
குடும்ப அட்டைதாரர்களின் வாசல் கதவைத் தட்டி மானியப் பணத்தைக் கொடுத்தாலும்கூட, இந்தத் திட்டம் அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானதுதான். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மையமான நோக்கமே உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளும் கட்டாயத்திற்கும், மனோ நிலைக்கும் மக்களைத் தள்ளிவிட வேண்டும் என்பதுதான். அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை; எனவே, இதனை ஏழை நாடுகள் கைவிட வேண்டும் என்பதை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் கொள்கையாகவும் நிபந்தனையாகவும் அறிவித்துள்ளன. உணவுப் பொருள் மானியத்தையும், அரசு கொள்முதலையும் ஒரே அடியில் ஒழித்துக் காட்டினால், அது அரசியல்ரீதியாகத் தற்கொலைக்குச் சமமானதாக இருக்கும் என்பதாலேயே, இவற்றைக் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டும் நோக்கில் நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.
பணமாக அல்லாமல், உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை மானிய விலையில் பொருளாக வழங்கும்போது மட்டுமே சந்தையில் குறுக்கீடு செய்வதற்கு வாய்ப்புண்டு. ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருளின் விலைக்கும், அவற்றின் சந்தை விலைக்கும் வேறுபாடு கிடையாது என்ற நிலையை உருவாக்கும்பொழுது, அரசு சந்தையில் தலையீடு செய்வது முடிவுக்கு வந்துவிடும்.
பதுக்கல், வர்த்தகச் சூதாட்டம் போன்ற பல கிரிமினல் நடவடிக்கைகளால் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கியும்; உணவுப் பொருட்களின் விலைகளைச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கியும் கொள்ளை இலாபம் சம்பாதித்து வந்த பதுக்கல் வியாபாரிகளையும் வர்த்தகச் சூதாடிகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் நாடெங்கும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டன. அக்கடைகள் இந்த நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யும் வண்ணம் அரசால் இயக்கப்படாவிட்டாலும், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளின் மூலம் விநியோகம் செய்யும் நடைமுறை இருந்து வருவதால்தான், ஏழை மக்களுக்கு அரைகுறை உணவுப் பாதுகாப்பாவது கிடைத்து வருகிறது. நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நிலையைத் திருப்பிப் போட முயலுகிறது, மன்மோகன் சிங் கும்பல்.
இன்னொருபுறமோ, உணவுப் பொருள்களின் விலைகள் சந்தையில் உயருவதற்கு ஏற்றவாறு மானியத்தை உயர்த்திக் கொடுக்கவும் அரசு முன் வராது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பற்றாக்குறையைக் குறைக்க மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்டி வரும் அரசு, சந்தை விலைக்கு ஏற்ப மானியத்தை உயர்த்திக் கொடுக்கும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் சந்தையின் சூதாட்டத்தில் சிக்கித் தவிக்க வேண்டியது தவிர, வேறு வழி இருக்காது. குறிப்பாக, வறிய நிலையில் வாழும் நகர்ப்புற உதிரித் தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், பழங்குடி மக்கள் ஆகியோர் ஒன்று, சந்தை விலையில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும், அல்லது பட்டினி கிடக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
‘‘மக்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ஒரு ரூபா மானியத்திலும் வெறும் 15 பைசாதான் அவர்களைச் சென்று சேர்கிறது. மீதியை இடைத்தரகர்கள் தின்று தீர்த்துவிடுகிறார்கள்” என்று ராஜீவ் காந்தி சொல்லிவிட்டுப் போனதைச் சுட்டிக்காட்டி, இந்த இடைத்தரகர்களை ஒழித்து, மக்களுக்கு ஒதுக்கப்படும் மானியம் முழுமையாக அவர்களைச் சென்று சேர்வதற்காகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகப் பீற்றி வருகிறது, காங்கிரசு கும்பல். உணவு மானியமாக, உர மானியமாக ஒதுக்கப்படும் இந்தப் பணத்தைக் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க தனியார் வங்கித் தரகர்கள் (Bank Correspondents) நியமிக்கப்பட்டு வருகின்றனர். சில்லறை வர்த்தகத்தில் உள்ள இடைத்தரகர்களை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்கள்; மானியத்தில் புகுந்து விளையாடும் இடைத்தரகர்களை ஒழிக்க வங்கித் தரகர்கள்!
கிராமப்புறங்களைச் சேர்ந்த கந்துவட்டி பேர்வழிகள், உர வியாபாரிகள் போன்ற பழைய நிலப்பிரபுத்துவக் கும்பல்கள்தான் வங்கித் தரகர்களாக அவதாரமெடுத்துள்ளனர். இக்கும்பல் கிராமப்புற ஏழை மக்களை ஏற்கெனவே பல்வேறு வழிகளில் சுரண்டியும் ஏய்த்துப் பிழைத்தும் வரும் நிலையில், மானியத் தொகையை முழுங்கி விடாமல், அதில் கமிசன் அடிக்காமல் பட்டுவாடா செய்வார்களா என்பதே சந்தேகத்திற்குரியதுதான். எனினும், இவர்களின் கைகளில் ஒரு ரூபாயல்ல, இரண்டு ரூபாயல்ல, ஏறத்தாழ 1,50,000 கோடி ரூபாய் மானியப் பணத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார், மன்மோகன் சிங். ரேஷன் கடைகளில் நடக்கும் உணவுக் கடத்தல் – ஊழலைவிட, மானியத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைத்திருக்கும் இத்தாராளமய நடவடிக்கைதான் மிகப் பெரிய ஊழலாகும்.
வங்கிக் கணக்கும் ஆதார் அட்டையும் இருந்தால் ஊழலும் மோசடியும் நடைபெறாது என மன்மோகன் சிங் கும்பல் நம்மை நம்பச் சொல்கிறது. ஆனால், இது வெற்றுப் பிதற்றல் என்பதை நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, இந்த ஆதார் அட்டை உண்மையான பயனாளிகளை நல உதவித் திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்குத்தான் பயன்பட்டுள்ளது என்பதை வறிய மாநிலமான ஜார்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆதார் அட்டைத் திட்டம் இதுநாள் வரை நாடாளுமன்றத்தின் ஒப்பதலையும் பெறவில்லை; நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் இந்த அட்டை வழங்குவதைச் சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ளவில்லை. மானியத்தை ஒழிப்பதைவிட, ஆதார் அட்டைகள் மூலம் ஏழைகளை ஒழித்துக் கட்டுவது எளிது என்பதனால்தான், குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால் மட்டுமே மானிய உதவியைப் பெற முடியும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார், மன்மோகன் சிங்.
நேரம் காலம் பாராமல் உழைத்து எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கிடைக்கும் கூலியைக் கொண்டுப் போதிய அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகும் நிலையில், ரேஷன் கடைகளில்கூட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாது என்ற நிலைமை மக்களின் மீது வலிந்து திணிக்கப்படுகிறது. அரைகுறைப் பட்டினியோடு போராடும் மக்களும், சத்தான உணவு கிடைக்காத கர்ப்பிணிப் பெண்களும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நமது நாட்டில், அவர்களுக்கு உரிய உணவுப் பாதுகாப்பை வழங்காமல், ஏதோ கொஞ்சம் பணத்தை வீசியெறிந்து, அவர்களை சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்துணை பயங்கரமானது? குடிப்பழக்கம் பெருகிவரும் வேளையில், குடும்பத் தலைவரின் பெயரில் வங்கியில் போடப்படும் மானியத் தொகை, உணவு வாங்கப் பயன்படுமா, டாஸ்மாக் கடைக்குப் போகுமா? ஏறத்தாழ 70 சதவீத மக்கள் வெறும் 20 ரூபாயை மட்டுமே தினக் கூலியாகப் பெறுகிறார்கள் என்ற நிலையில், மக்களுக்குக் கிடைத்து வந்த அரைகுறை உணவுப் பாதுகாப்பையும் பறிப்பது பட்டினிச் சாவுகள் என்ற பேரழிவைத்தான் ஏற்படுத்தும். இந்த அபாயத்தை உணர்ந்து, “உங்கள் கையில் உங்கள் பணம்” என்ற இந்த நயவஞ்சகத் திட்டத்தைப் பரிசோதனை அடிப்படையில்கூட நடத்தவிடாமல், உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணமிது.
“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன்” என்று கருணாநிதி உதிர்த்ததை வைத்து அழகிரியின் வாயில் ஏதாவது பிடுங்கி பரபரப்பு ஏற்ற வேண்டும் என்று பத்திரிகைகள் தொங்கிய நாக்குகளுடன் காத்திருந்தன. போலவே “தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல” என்று அழகிரி கூற பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு அரசியல் அக்கப்போரை அவிழ்த்து விட்டுவருவது நீங்கள் அறிந்ததே. இது குறித்து தனியாக எழுதுவோம்.
இங்கே சங்கர மடத்திற்கு ஆதரவாக துண்டு போட்டு கச்சேரி நடத்தும் ஜூனியர் விகடனை மட்டும் பார்ப்போம். அழகிரியின் சங்கர மட டயலாக்கிற்கு பதிலடியாக இன்று வந்த ஜூவியின் முதல் கட்டுரை, “கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது” என்று தலைப்பில் வந்திருக்கிறது.
இட ஒதுகீட்டை கிண்டல் செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் பயன்படுத்தும் வார்த்தை “கோட்டா”. புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் இருந்து சென்னை ஐஐடி வரை இட ஒதுக்கீட்டில் பயில வந்தால் கோட்டா மாணவர்கள் என்று கிண்டல் செய்வார்கள். இதனாலேயே பல பிற்படுத்தப்ட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான பார்ப்பனத் திமிரன்றி வேறல்ல. இதையே ஜூவியும் பூணூல் பாசத்துடன் தலைப்பில் வைத்திருக்கிறது.
“சங்கர மடமா இது?” என்பது கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வாயில் அடிக்கடி உதிரும் வார்த்தைகள். இப்போதும் இது சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. தி.மு.க-வில் அந்த வார்த்தை ஏற்படுத்திய கொந்தளிப்பை விட, சங்கர மடத்து பக்தர்கள் தரப்பிலும் அது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது”…. என்று ஆரம்பிக்கிறது ஜூவியின் சங்கர மட பஜனை.
திராவிட இயக்கத்தின் கருத்துக்கள் துருப்பிடித்த நிலையிலாவது கருணாநிதியிடம் அவ்வப்போது வெளிப்பட்டால் பார்ப்பன பத்திரிகைகளும், சங்க பரிவாரங்களும் துள்ளிக் குதிக்கும். கருணாநிதியை இந்து விரோதி என்று ஓயாமல் பிரச்சாரம் செய்யும். அப்படியும் ‘இந்துக்களை’ ஒன்றும் மாற்ற முடியவில்லை. சரிபாதிப்பேர் அதிமுகவிற்கு ஓட்டு போடுவது போல மீதி பாதிப் பேர் திமுகவிற்கு போடுகிறார்கள். இருந்தாலும் கருணாதியை இந்து விரோதி என்று சித்தரிப்பதற்காக பார்ப்பன பத்திரிகைகள் எப்போதும் இரத்த வெறி பிடித்து காத்திருக்கின்றன என்பதற்கு ஜூவியின் இந்த கட்டுரை நோக்கமே போதுமானது.
அடுத்து ஒரு விபச்சா விடுதியில் ரெய்டு என்றால் புரோக்கர்கள் மத்தியில் கூட கொந்தளிப்பு ஏற்படாது. இதெல்லாம் அவர்களது அன்றாட வாழ்வில் சகஜம். கிட்டத்தட்ட விபச்சார விடுதிக்கு இணையான மதிப்பை பெற்றிருக்கும் சங்கர மடத்தில் அதன் பக்தர்களிடம் கொந்தளிப்பு என்று சித்தரிப்பதற்கு பொய்யை உரக்க பேசும் கொழுப்பு வேண்டும். சங்கர ராமன் கொலை, அனுராதா ரமணன் மூலம் நிரூபிக்கப்பட்ட ஜெயேந்திரனது காம வக்கிரங்களுக்குப் பிறகு சங்கர மடம், காமாட்டி புராவிற்கு இருக்கும் மரியாதையைக் கூட பெறவில்லை.
சுட்டுப் போட்டாலும் பார்ப்பனத் திமிரை விடாத சில பார்ப்பனர்களும், சங்க பரிவாரங்களில் இருக்கும் சில கருப்பு பார்ப்பனர்களையும் தவிர சங்கர மடத்தை காஞ்சிபுரத்து நாய் கூட எட்டிப் பார்க்காது. ஆனால் ஜூவி தனது இதயத்தில் வைத்து அரற்றுகிறது. என்ன இருந்தாலும் நூல் பாசம் அல்லவா!
காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தரான வளசை ஜெயராமன் என்ற பீடிகையுடன் ஒரு ஜந்துவை தேடிப்பிடித்து அந்த ஜந்து தத்துப்பித்தென்று உளறியதை வைத்து இரண்டு பக்கத்தில் சங்கர மடத்தின் இமேஜை ஜாக்கி வைத்து தூக்க நினைக்கிறது ஜூவி. இந்த வளசை ஜெயராமன் இந்து முன்னணி ஜந்துவா, ஏதேனும் ஆன்மீக பிசனஸ் மாமாவா நமக்கு தெரியாது. ஆனால் இத்தகைய புரோக்கர்களெல்லாம் ஜூவியின் நிபுணர் கருத்துரை வாத்திய பதவியை ஊதி நிறைவேற்றுகிறார்கள் என்பதிலிருந்து விகடனின் தரத்தை புரிந்து கொள்ளலாம்.
சங்கர மடத் தலைவர் ஜெயேந்திரன் – ஆர்.எஸ்.எஸ் மடத் தலைவர் மோகன் பகவத்
இனி இந்த ஜந்துவோ இல்லை மாமாவோ ஊளையிட்டிருப்பதை கொஞ்சம் பார்ப்போம்.
“சங்கர மடம் என்பது பாரம்பரியம் மிக்கது. காஞ்சி மகா பெரியவர் சந்திசேகரேந்திரர், ஹொய்சால வம்சத்தைசத் சேர்ந்த கன்னடப் பிராமணர், ஜெயேந்திரர், திருவாரூரைச் சேர்ந்த தமிழர். பாலப் பெரியவரான விஜயேந்திரர், தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர். மூவருக்குமே ஒருவருக்கு ஒருவர் எந்த உறவும் கிடையாது.” வளசை ஜந்து இப்படி கூறியிருப்பதில் பார்ப்பன நரித்தந்திரம் எப்படி ஒளிந்திருக்கிறது பாருங்கள்.
சங்கர மடத்தில் ஸ்மர்த்த பார்ப்பன பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மட்டுமே சங்கர் சாரியாக வர முடியும். இதைத் தவிர அருந்ததியினரோ, வன்னியரோ, நாடாரோ எவரும் வர முடியாது என்பது மட்டுமல்ல கப்படிக்கும் சங்கர் சாரிகளை தொட்டுப் பார்க்கும் பாக்கியம் கூட கிடையாது. மேலும் இந்தப் பிரிவு பார்ப்பனர்களிலிருந்து யாரை சங்கர் சாரியாக கொண்டு வருவது என்பது பட்டத்தில் இருக்கும் சங்கர் சாரியின் முடிவு. மாறாக சங்கர மட பக்தர்களாக உள்ள பார்ப்பனர்கள் கூட கூடிப்பேசி ஜனநாயக அடிப்படையில் எல்லாம் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் சங்கர் சாரிகளை தெரிவு செய்ய முடியாது.
தி.மு.கவில் கூட கருணாநிதி முன்மொழியும் ஸ்டாலினை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்துத்தான் தெரிவு செய்ய முடியும். சங்கர மடத்தில் அப்படியெல்லாம் இல்லை. எல்லாம் சீனியர் சாரி முடிவுப்படிதான் நடக்கும். எனவே வாரிசுரிமையை கவுட்டுக்கிடையில் ஒளித்து வைத்துக் கொண்டு ஆடும் சங்கர மடம்தான் ஆகப்பெரிய ஜனநாயக விரோத அமைப்பு. அதிலும் இன்ன பிரிவில் பிறந்த பார்ப்பனர்களைத் தவிர யாரும் வர முடியாது என்று ஒரு விதியை இன்று வரையிலும் அமல்படுத்தி வரும் அநாகரீகமான மடம். இது சங்கர மடத்திற்கு மட்டுமல்ல இன்ன பிற மடங்கள், ஆதீனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
“சங்கர மடத்தில் பட்டத்துக்கு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மடங்களிலும் இருந்து சதஸ் நடத்தி, அதில் முதல் மாணவராகத் தேறியவர்தான் ஜெயேந்திர். அதற்கு பிறகுதான் அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அதே போல இந்தியாவில் உள்ள எல்லாப் பாடசாலைகளிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட பரீட்சையில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தவர்தான் பாலப் பெரியவர் விஜயேந்திரர்.”- இது வளசை அடுத்து விடும் காமடி கப்சா.
இதுவும் அப்பட்டமான பொய். செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி கும்பகோணம் டவுண் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது அப்போதைய சங்கர் சாரியால் அழைத்து வரப்பட்டு பின்னர்தான் இந்து மத புரட்டு தத்துவங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு பந்தயக் குதிரை போல தயார் செய்தார்கள். ஜெயேந்திரனுக்கு காம சூத்திரா சாத்திரத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. குமுதம் உரையாடல் ஒன்றில் பெரியார்தாசன் இந்த ஜெயேந்திரனிடம் ஒரு உபநிடதத்தின் பெயரைச் சொல்லி அர்த்தம் கேட்ட போது பேந்தப்பேந்த முழித்தவர்தான் இந்த ஜெயேந்திரன். பாலப் பெரியவா என்று உசிலைமணி போல இருக்கும் விஜயேந்திரனை தமிழ்த் திரைப்படங்களில் வரும் பயில்வான் ரங்கநாதனைப் போல ஒரு குஸ்திக்காரன் என்று வேண்டுமானால் அழைக்கலாமே ஒழிய வெறு ஒரு எழவும் அந்த குண்டுவுக்குத் தெரியாது.
தி.மு.க-வைப் போல கோட்டா சிஸ்டத்தில் எல்லாம் பதவி வழங்கும் வழக்கம் சங்கர மடத்திலும், வேறு எந்த மடத்திலுமே கிடையாது என்று இந்த வளசை ஜெயராமன் அவிழ்த்து விடுவதை விடுங்கள், அதை ஒரு பத்திரிகை இரண்டு பக்கங்களில் வெளியிட வேண்டுமானால் அது பார்ப்பன நரித்தந்திரமே அன்றி வேறல்ல. மதுரை ஆதீனம் தனது வாரிசாக நித்தியை நியமித்த போது ஆதீனங்களின் முடிவில் யாரும் தலையிட முடியாது என்று வக்காலத்து வாங்கியவர்கள் இந்த சங்க பரிவாரங்கள்.
அவ்வளவு ஏன், ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? உயிரோடிருக்கும் தலைவர் சாவதற்கு முன் அடுத்த தலைவர் இன்னார் என்று உயில் எழுதி வைத்து விட்டோ இல்லை உயிரோடிருக்கும் போது கைகாட்டி விட்டோதான் செய்வார். மற்றபடி இந்தியாவில் இருக்கும் எந்த ஸ்வயம் சேவக் குஞ்சுகளும் வாக்களித்து தமது தலைவரை தேர்வு செய்ய முடியாது. ஹெட்கேவார் எனும் முதல் தலைவர் கோல்வால்காரை கைகாட்ட, இவர் தேவரசைக் கைகாட்ட, பின்னர் தேவரஸ் ஏவரையோ கைகாட்ட தற்போது இந்த கைகாட்டி தத்துவத்தின்படி மோகன் பகவத் எனும் சம்சாக்கடை சேட்டு போல தோற்றத்திலிருக்கும் ஒருவர் தலைவராக இருக்கிறார். இவர்தான் சமீபத்தில் பெண்கள் முழு அடிமைத்தனத்தில் இருந்தால் யாரும் ரேப் செய்யமாட்டார்கள் என்ற தத்துவத்தை உதிர்த்த மகான்.
பிறப்பின் அடிப்படையில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இந்து மதத்திலும், இந்து மதத்தின் வருண தருமத்தை மீண்டும் கொண்டு வரத் துடிக்கும் மடங்களிலும், ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களிலும்தான் ஜனநாயகம் என்பது துளிக்கூடக் கிடையாது. இல்லையேல் ஜெயேந்திரன் போன்ற மன்மதக் கொலைகாரர்களெல்லாம் இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா என்ன?
பார்ப்பன பத்திரிகையான விகடன் குழுமத்திலும் வாசன் மகன், பாலசுப்ரமணியன், பாலசுப்ரமணியனின் மகன் சீனிவாசன் என்று வாரிசுரிமை அடிப்படையில்தான் பத்திரிகையின் சொத்துரிமை மட்டுமல்ல கருத்து சொல்லும் உரிமையும் செயல்பட்டு வருகிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் தி.மு.கவை திட்டுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இதனால் தி.மு.கவை நாம் ஆதரிப்பதாக பொருள் இல்லை. உண்மையில் எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்கள்தான் தி.மு.கவின் மக்கள் விரோத, முதலாளி ஆதரவு பாத்திரத்தை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தி வருகின்றன.
ஜூவி தனது கட்டுரையின் முடிவில்,” வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வது என்பது இதுதானா?” என்று முடித்திருக்கிறது.
உண்மைதான். மல்லாக்கப் படுத்துக் கொண்டு துப்புவது ஜூவிதான்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு அரசியலில் களமிறங்கிய ராமதாசு, இதுவரை தமிழகம் கண்டிராத பச்சோந்தி என்று அம்பலப்பட்டு, சொந்த சாதியினர் மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால், தனது அடுத்த ஆயுதமாக ஆதிக்க சாதிவெறியைக் கையிலெடுத்திருக்கிறார். 51 சாதிச் சங்கங்களைக் கூட்டி “அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை”யை உருவாக்கியிருக்கிறார். சாதி கடந்த திருமணங்கள் அனைத்தையுமே தடுக்க வேண்டுமென்பதும், வன்கொடுமைச் சட்டத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்பதும்தான் அவர்களது கோரிக்கை.
வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பதற்கு இனி ஒருவனுக்கும் தைரியம் வரக் கூடாது. பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித் தெளிவாகச் சோல்லுங்கள்” என்று வெறியுடன் பேசியிருக்கிறார் ராமதாசு. “ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த வந்தார்கள். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்” என்று ரெட்டியார் சங்கமும், “கலப்புத் திருமணம்தான் நம் முதல் எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும் பேசியிருக்கின்றனர். இந்து மக்கள் கட்சியும் இதில் கலந்து கொண்டு, இந்து என்பவன் எவன் என்று காட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசியவற்றுக்காகவே இவர்களை வன்கொடுமைச் சட்டத்தில் உள்ளே வைத்திருக்க வேண்டும். ஆனால் அம்மாவின் அரசை விமரிசித்தாலே அவதூறு சட்டத்தைப் பாய்ச்சும் ஜெ அரசு, இவர்கள் யாரையும் கைது செய்யவோ வழக்குத் தொடரவோ இல்லை. வெளிப்படையான இந்த சாதிவெறிப் பேச்சுகளையும், வன்கொடுமைச் சட்டம் குறித்து ராமதாசு பரப்பும் அபாண்டமான பொய்களையும் ஓட்டுக்கட்சிகள் கண்டிக்கவும் இல்லை. தனிக்குடியிருப்பு, தனிச்சுடுகாடு, தனிக்கிணறு, தனிக்கோயில்கள், தனிக்குவளைகள் ஆகியவை கிராமப்புறங்களில் அமலில் இருப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளும் தலைவர்களும் அவமதிக்கப்படுவதும் நாடறிந்த உண்மை.
இவற்றுக்கெதிரான போராட்டங்கள் நடக்கும் இடங்களில் கூட அரசு நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று நாடகமாடுகிறதே தவிர, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதில்லை. திண்ணியம் போன்ற வழக்குகளிலேயே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. தற்போது நடைபெற்றுள்ள நத்தம் சாதிவெறியாட்டத்திலும், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நாடு முழுவதுமே வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்தின் யோக்கியதை இதுதான்.
சாதி மறுப்பு காதல் திருமணங்களாலும், வன்கொடுமை வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாக ராமதாசு சித்தரிப்பது, தனது சாதிவெறி அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான தந்திரம். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்ற பிரிவு மக்களிடம் சாதிவெறியைத் தூண்டுகிறார் ராமதாசு. மறுகாலனியாக்க கொள்கைகளுடைய தாக்குதலின் விளைவாக மக்களின் அன்றாட வாழ்க்கையும், தொழில்களும் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றுக்கெதிராகப் போராடாமல் மக்களைத் திசை திருப்பும் சதியே இது. பெரியாருடைய பணியின் காரணமாக, சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதே இழிவானது என்ற பொதுக்கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கும் தமிழகத்தை, மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள் தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 31-ம் தேதி டெல்லியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஐடி துறையில் பணி புரியும் இரண்டு 24 வயது இளைஞர்கள் திட்டமிட்டு தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் செய்துள்ளாள். அந்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த மாணவி டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். ‘பேஸ்புக்கில் செயல்படா விட்டால் வாழ்க்கையே இல்லை’ என்ற சூழலில் படிக்கும் அந்த மாணவி தன் சக மாணவர்களைப் போல பல பேஸ்புக் நட்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
அதில் ஒருவர் தான் நவீன் சிங் கேத்வால் என்ற 24 வயதான கணினி என்ஜினியர். செப்டம்பர் 2011-ல் இவர்களது பேஸ்புக் நட்பு ஆரம்பித்திருக்கிறது. நவீன் சிங் தன்னுடைய உறவினரான ஐடி நிறுவனம் ஒன்றின் மனித வளத் துறையில் பணி புரியும் ராஜேஷ் சிங்குக்கும் இப்பெண்ணை அறிமுகம் செய்துள்ளான்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜேஷ் இப்பெண்ணுடன் நெருங்கி விட்டிருக்கிறான். தொலைபேசியில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, பேஸ்புக் அரட்டை, எப்போதாவது வெளியில் சந்திப்பு என்று உறவை வளர்த்திருக்கிறான். நவீனுடன் போட்டிருந்த திட்டத்தின் அடிப்படையில் மார்ச் 2012-ல் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்திருக்கிறான்.
இதனால் மனமுடைந்த அப்பெண், மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளாள். அந்த நேரத்தில், அவளை தேற்றும் விதமாக அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் நவீன் சிங். அவளுடன் லோதி கார்டன், லஜ்பத் நகர், கன்னாட் பிளேஸ் போன்ற இடங்களுக்கு தனது பைக்கில் ஊர் சுற்றியிருக்கிறான். ஜூலை மாதம் 24-ம் தேதி அவளை சப்தர்ஜங் என்க்ளேவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளான்.
அடுத்த சில வாரங்களில் தனது நட்பு உறவாடலை குறைத்துக் கொண்டு செப்டம்பர் 7-ம் தேதி வேலையை விட்டு விட்டு உத்தர்காண்டுக்கு திரும்பிப் போவதாக சொல்லி உறவை துண்டித்திருக்கிறான். இந்த முறை ஆறுதல் சொல்லும் பாத்திரத்தில் ராஜேஷ் இறங்கியிருக்கிறான். அடுத்த நாளே அவனது நண்பனின் அறையில் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான்.
இதைத் தொடர்ந்து நவீனும் ராஜேஷூம் இந்தப் பெண்ணுடைய தொலைபேசி எண்களை பிற நண்பர்களிடம் சுற்றுக்கு விட்டிருக்கின்றனர். அவளுக்கு ஆபாச தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த உளவியல் கொடுமையை தாங்க முடியாமல் லைசால் என்ற சுத்திகரிக்கும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்.
நவீன், ராஜேஷ் இருவரும் இணைந்து, திட்டம் போட்டு, ஒருவரோடு ஒருவர் பேசி வைத்துக் கொண்டு அவளிடம் நட்பு ஏற்படுத்துவதாக சொல்லி உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இந்த உண்மையை நவீனின் உறவினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட பிறகு அந்தப் பெண் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறாள்.
மேலோட்டமான நட்பு, நுகர்வு கலாச்சார வாழ்க்கை, விட்டேத்தியான தனிநபர் வாதம் போன்றவற்றில் மூழ்கியிருக்கும் அந்த மாணவியை இக்கயவர்கள் சுலபமாக பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய சூழலில் பொறுக்கிகள் பலரும் மெனக்கெடமால் தமது வக்கிரத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய வாய்ப்புகளைத் தராமல் வாழ்வை உறுதியாகவும், பயன்தரத்தக்க முறையில் கழிக்கவும் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்க இளையோர் முயல்வதில்லை. விளைவு இம்மாணவிக்கு நேர்ந்தது போல நடக்கிறது.
‘நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்’ என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர். எது நல்லது, கேட்டது என்று அறியாத பதின்ம வயதினருக்கு ‘எப்படியாவது 100க்கும் அதிகமான நண்பர்களை தங்கள் வட்டத்தில் சேர்க்க வேண்டும்’ என்ற பிற பள்ளி நண்பர்களிடையே ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, முன் பின் தெரியாத பலரின், நட்பு விண்ணப்பத்தை ஏற்று அவர்களின் ‘நட்பு’ வட்டத்தை 100-200க்கும் மேலும் பெரிதாக்குகின்றனர். விளைவு, கயவர்களின் ஜாலப் பேச்சுக்கும், பிற தொல்லைகளுக்கும், தவறுகளுக்கும் துணைபோகவோ, ஆட்படவோ நேரிடும் சூழலில் தள்ளப்படுகிறார்கள்.
சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளை அடிமைப்படுத்தும் கணினி, வீடியோ விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் அவர்களை வெளி உலக எதார்த்தங்களிலிருந்து அன்னியப்படுத்துகின்றன. மனிதர்களிடம் பழகுவது, அவர்கள் உணர்வுகளை பற்றின புரிதல் என்னவென்று அறிந்து கொள்ளும் திறமை குறைந்து போகின்றன. நண்பன் யார் பகைவன் யார் என்று தெரியாத வயதில் இவ்வாறான சூழல் அவர்களை மேலும் பிரச்சனைக்குள் தள்ளும் நிலைதான் வலுக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது. சென்ற ஆண்டு மட்டும் 12,300 குற்றங்கள் பதிவாகி உள்ளன. கொலை, பாலியல் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், தாக்குதல், கடத்தல், கொலை மிரட்டல், சாட்சியங்களை மிரட்டல், மோசடி போன்ற குற்றங்கள் மீதான விசாரணைகளில் பேஸ்புக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நட்புகளின் எண்ணிக்கையை சமூக அந்தஸ்தாக அளவிடும் மாணவர்களையும் இளைஞர்களையும் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேஸ்புக் புதிது புதிதான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு உத்திகளில் தனது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் பேஸ்புக் 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளும், பேஸ்புக்கில் சேர வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. குழந்தைகள் பெற்றோரின் கடன் அட்டைகளை பயன்படுத்தி தாம் விளையாடும் இணைய விளையாட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வைப்பதற்கான உத்திகளையும் யோசித்து வருகிறது.
பதின்மவயதினரை போல அவர்கள் பெற்றோர்களும் பேஸ்புக்க்கு அடிமையாகி இருக்கும் போது, தமது சந்தைப்படுத்தும் லாப வேட்டைக்கு பயன்படுத்தும் நோக்கில் வணிக நிறுவனங்கள் அந்த அடிமைத்தனத்தை மேலும் மேலும் உறுதியாக்கும் சூழலில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டங்களும் காவல் துறையும் என்ன பாதுகாப்பு அளிக்க முடியும்? அயோக்கியர்களையும் நண்பர்கள் என்று காண்பிப்பதுதான் முகம் தெரியாத பேஸ்புக்கின் அடிப்படை செயல் முறை. அதிலிருந்து அறுவடை ஆகும் வருமானத்தை வங்கியில் குவித்துக் கொள்ளும் பேஸ்புக் அதன் விளைவாக பலியாகும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்கப் போவதில்லை.
இந்த சம்பவத்தில் ராஜேஷ், நவீன், என்று இருவரை மட்டும் காவல் துறை கைது செய்திருக்கிறது. தவறான நபர்களை அறிமுகம் செய்து குற்றங்கள் நிகழும் சூழலை உருவாக்கியுள்ள பேஸ்புக் மற்றும் நகரத்து மேட்டுக்குடி கலாச்சார நிறுவன முதலாளிகளை தண்டிப்பது யார்?
தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் முதல் வருடம் 10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதை முற்றிலும் நீக்கக் கோரி தமிழ் திரையுலகினர் நேற்று சென்னையில் உண்ணா விரதம் இருந்தனர்.
முதலில் சேவை வரி குறித்து வினவில் வந்த இந்தக் கட்டுரையைபடித்து விடுங்கள். 94ல் 3 -4 வகைகளுக்கு இருந்த சேவை இன்று 120 வகைகளாக பெருகி அன்று 400 கோடி ரூபாயாக இருந்த வரி வருவாய் இன்று கிட்டத்தட்ட 1 இலட்சம் கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு வருமானம் தரும் அட்சய பாத்திரமாக வளர்ந்திருக்கிறது. இதை மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் அன்று கொண்டு வந்தார்கள். இன்று விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.
சேவை வரியின் தேவை என்ன? முதலாளிகள் தரும் வருமான வரி முன்னர் 70-80 சதவீதமாக இருந்தது இன்று 33 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதலாளிகளுக்கு பல்வேறு வரி சலுலகைகளும் உண்டு. மில்லியனிலும், பில்லியனிலும் இலாபம் பார்த்து வந்த முதலாளிகளை இப்படி குளிப்பாட்டியதால் ஏற்படும் வரி பற்றாக்குறையை ஈடு கட்டவே இந்த சேவை வரியைக் கொண்டு வந்தார்கள். இதன்படி மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.
எதெல்லாம் சேவை வரியில் அடங்கும்? இதை எதிர்மறையாக வைத்திருக்கிறார்கள். இன்னின்ன சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் சேவை வரிக்குள் வரும் என்று இலக்கணம் வைத்திருக்கிறார்கள். அதன்படி நமது கருமாதி தவிர அனைத்துக்கும் சேவை வரி கட்டவேண்டும். சேவைகள் கொடுக்கும் நிறுவனங்களும், முதலாளிகளும் சேவை வரியை மக்களிடமிருந்தே வசூலித்துக் கொடுக்கின்றன. இப்படித்தான் நம்மிடமிருந்து மறைமுகமாக சேவை வரி வசூலிக்கப்பட்டு செல்கிறது.
மேலும் சேவை வரியிலிருந்து பல்வேறு முதலாளிகள், நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சினிமாவை எடுத்துக் கொண்டால் கூட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு சேவை வரி கிடையாது. நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு மட்டும்தான் வரி உண்டு. இந்த வரியும் கூட சினிமா பிரபலங்களை குளிர்விக்கும் பொருட்டு நீக்கப்பட வாய்ப்பு உண்டு.
போகட்டும். மக்களை கசக்கி பிழியும் சேவை வரியை ரத்து செய்யவோ, குரல் குடுக்கவோ துப்பில்லாத தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வருமானத்தை காப்பாற்றிக் கொள்ளமட்டும் அக்மார்க் சுயநலத்தோடு இப்போது களமிறிங்கியிருக்கின்றனர். வருடம் ஓரிரு முறை மட்டும் வாய்ப்பு கிடைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடுத்தரமான நடிகர்களுக்கும் வேண்டுமானால் இந்த சேவை வரி கூடுதல் சுமையாக இருக்கும். ஆனால் முக்கிய நடிகர்கள் எவருக்கும் இது சுமை இல்லை என்பதோடு அப்படியே வரி கட்ட வேண்டியிருந்தாலும் அது அவர்களது சம்பளத்தோடு சேர்த்து பெறப்பட்டு கட்டப்படும்.
அதாவது நடிகரின் சேவை வரியை தயாரிப்பாளர் கொடுப்பார். அதன் பொருட்டு விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் கூடுதல் பணம் கொடுப்பார்கள். அந்தப் பணம் பிளாக் டிக்கெட் விற்பனை மூலம் நம்மிடமிருந்து பிடுங்கப்படும். அதன்படி நடிகர்களின் சேவை வரிக்கும் நாம்தான் அழ வேண்டியிருக்கும். கிடக்கட்டும்.
சேவை வரியை ரத்து செய்யாவிட்டால் திரையுலகில் கருப்புப் பணம் அதிகரிக்கும் என்று ரஜனியும், விக்ரமும் பச்சையாகவே மிரட்டல் விடுவிக்கின்றனர். வருமான வரி கட்டாதவர்களுக்கு கடுமையான சட்டம் போட்டு தண்டிக்கலாமே, அதற்கு எதற்கு சேவை வரி என்று கேட்கும் ரஜினி ஒருவேளை கருப்புப் பணத்தில் ஊதியம் வாங்கும் நடிகர்களுக்கு ஆயுள்தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஒவ்வொரு படத்திற்கும் தனது சம்பளம் இன்னதுதான் என்று வெள்ளையில் அறிவித்து வெள்ளையாக வாங்குவாரா?
மக்களுக்கு சேவை புரியும் நடிகர்கள் பதிலுக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பிடக்கூட முடியாமல் உடலை கச்சிதமாக வைத்திருக்க வேண்டிய சித்திரவதையை கூறி அடிமுட்டாள்தனமாக அனுதாபம் தேட முயன்றார் எஸ்.ஜே.சூர்யா. படப்பிடிப்பு நடக்கும் போது உச்சா போவதற்கும் ஓய்ந்தோ, போதையிலோ சாய்வதற்கும் ஏ.சி கேரவான் கேட்கும் நடிகர்களின் எளிமை நமக்குத் தெரியாதா என்ன?
அர்ஜூன் துவங்கி தங்கர் பச்சான் வரை சினிமாக்காரர்கள் மக்களுக்கு மாபெரும் சமூக சேவை செய்வதாக வெட்கமின்றி பேசினர். நாளையே சினிமா திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவித்து விட்டால் மக்கள் அனைவரும் தற்கொலை செய்து விடுவார்களா என்ன? நகர சுத்தி தொழிலாளி செய்வதுதான் சமூக சேவை, நடிகர்கள் செய்வது கலையின் பெயரால் நடத்தும் சுரண்டல் மட்டுமே.
சரி இந்த சமூக சேவை நமக்கு பிடிக்கவில்லை என்றால் நிறுத்துவதற்கு இவர்கள் தயாரா? ஒரு மொக்கை படம் நமது பொழுதை வீணாக்கி ரசனையை வீணடித்து விட்டது என்று சொன்னால் அந்த படத்துக்கு கொடுத்த டிக்கெட்டு பணத்தை திருப்பி அளிப்பார்களா என்ன? பாடல் வெளியீட்டு விழா, வெளிநாடுகளில் கலை விழா, விருது விழா, இசை விழா என்று ஏராளம் வழிகளில் சம்பாதிப்பதோடு, நாட்டு மக்களை கெடுத்து குட்டிச்சுவராக்கும் சினிமாவை சமூகசேவை என்று சொன்னால் அது உண்மையில் சேவை செய்பவர்களை இழிவுபடுத்தவில்லையா?
வெள்ளை வேட்டி கட்டிய தமிழன்தான் இந்தியாவை ஆள்வான் என்று ஆருடம் பேசிய ரஜினி அந்த வெள்ளை வேட்டி தமிழனான ப.சிதம்பரத்திடம் பேசி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அமீர் பேசினார். பிரபுவோ, அப்பாவின் தீவிர ரசிகர் சிதம்பரம் அவர்கள் கண்டிப்பாக வரியை ரத்து செய்வார் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார். பாருங்கள், அவர்களது கோரிக்கைகளையெல்லாம் எவ்வளவு சுலபமாக தீர்க்க முடிகிறது!
சென்னையில் பார்வையற்றோர் போராடினால் ஒடுக்குவதற்கு வரும் ஏட்டையாவைத் தாண்டி ஒரு கவுன்சிலர் கூட எட்டிப்பார்க்க மாட்டார். ஆனால் அரிதாரம் பூசிய நட்சத்திரங்கள் தங்களது தேவைக்காக ஏதோ கால் டாக்சி புக் செய்வது போல ப.சிதம்பரத்திடம் பேசி தீர்த்து விடுகிறார்கள் என்றால் இங்கே யாருக்கு ஜனநாயகம் இருக்கிறது? வரும் பத்தாம் தேதி ரஜினி தலைமையில் இவர்கள் ப.சிதம்பரத்தை பார்க்கப் போகிறார்களாம். ஆண்ட பரம்பரையில் இருந்து வந்திருக்கும் ப.சிக்கு இந்த ஆடும் நட்சத்திரங்களின் வலி தெரியாமலா போய்விடும். ரத்து செய்தாலும் செய்வார்.
உண்மையில் இந்தப்பிரச்சினையின் மையம் என்ன? குறைந்த வருமானம் கொண்ட திரைப்பட கலைஞர்களுக்கு வரியை ரத்து செய்வதோடு அதிக வருமானம் கொண்ட நட்சத்திரங்களுக்கு 30 சதவீதம் சேவை வரியாவது போட வேண்டும்.
ஆனால் கருப்பிலும் கோடிகளிலும் புரளும் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள இதை பொதுப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள். சரி, இவர்களுக்கு உண்மையிலேயே வருமானம் இல்லை என்றால், வாழ்க்கையை நடத்துவது பிரச்சினை என்றால் என்ன செய்ய வேண்டும்?
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ரேசனில் 30 கிலோ அரிச வழங்க வேண்டும் என்று போராடியிருந்தால் அது நியாயம். அதை விடுத்து எதற்கு இந்த போங்காட்டம்?
பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியான காசா முனை மீது நவம்பர் 14 தொடங்கி 22 முடிய, ஒரு வார காலம் மீண்டும் ஒரு முழு அளவிலான இராணுவத் தாக்குதலைத் தொடுத்தது, இசுரேல். இப்போர் நடந்த ஒரே வாரத்திற்குள், காசா முனை மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை வான்வழித் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றது, யூத மதவெறி இசுரேல் அரசு. கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்பது தற்பொழுது உலகெங்கும் அம்பலமாகிவிட்டது. இதுவொருபுறமிருக்க, காசா முனைப் பகுதியினுள் நுழைந்து தரைவழிப் போரை நடத்துவதற்கு 75,000 சிப்பாகள் தயாராக இருப்பதாகவும் இசுரேல் அறிவித்தது.
‘‘காசா முனை சுயாட்சிப் பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கம், கடந்த நவம்பர் 10 அன்று தன் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது. அதனால் தனது நாட்டையும் குடிமக்களையும் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்தில்தான் இந்த இராணுவத் தாக்குதலை நடத்தியதாக’’க் கூறித் தனது ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறது, இசுரேல். இதுவொரு புளித்துப் போன காரணம் மட்டுமல்ல, நவம்பர் 10 அன்று ஹமாஸ் இயக்கம் நடத்திய ராக்கெட் தாக்குதலை இசுரேலின் மீது தொடுக்கப்பட்ட போர் போலக் குற்றஞ்சுமத்துவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.
1990-களில் இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் கையெழுத்தான ஆஸ்லோ ஒப்பந்தப்படி காசா முனை சுயாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையில் காசா முனை இன்றும் இசுரேலின் ஆக்கிரமிப்பு-முற்றுகையின் கீழ்தான் இருந்துவருகிறது. காசா முனைப் பகுதியில் செல்வாக்குடன் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரை ஓடுக்க வேண்டும் என்பதற்காகவே, அப்பகுதி மீது 2008-ஆம் அண்டு தொடங்கி ஒரு சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை விதித்து, அத்தியாவசிய உணவுப் பொருள் போக்குவரத்தைக்கூடத் தடுத்து வருகிறது, இசுரேல். இப்பொருளாதாரத் தடை இனப்படுகொலைக்குச் சமமானது எனக் குற்றஞ்சுமத்தப்பட்ட பின்னும் இத்தடையை நீக்க மறுக்கிறது, இசுரேல். இது மட்டுமின்றி, காசா முனை மீது பீரங்கி கொண்டு தாக்குவது உள்ளிட்டு ஒரு தாழ்நிலைப் போரைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது, இசுரேல்.
இசுரேலின் இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்பைப் புறக்கணித்துவிட்டு, ஹமாஸ் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்களைப் பயங்கரவாதமெனக் குற்றஞ்சுமத்துவது ஒருதலைப்பட்சமானது. குறிப்பாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இசுரேல் காசா முனை மீது அடுத்தடுத்து நடத்திய இரண்டு தாக்குதல்களில், வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு மனநோயாளியும், ஒரு 13 வயதுச் சிறுவனும் மாண்டு போனார்கள். இதற்குப் பதிலடியாகத்தான் ஹமாஸ் இசுரேலின் மீது நவம்பர் 10 அன்று ராக்கெட் தாக்குதலை நடத்தியது.
காசா முனை மீது மீண்டும் ஒரு முழுநிறைவான இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதற்குக் காரணம் தேடிக் கொண்டிருந்த யூத மதவெறி பாசிச ஆட்சியாளர்களுக்கு இந்த ராக்கெட் தாக்குதல் சாக்காகக் கிடைத்தது என்பதே உண்மை. இந்த ராக்கெட் தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் காசா முனை மீது இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு இசுரேல் வேறொரு புளுகை அவிழ்த்துவிடவும் தயங்கியிருக்காது. ஏனென்றால், இசுரேலும், அதன் எஜமானனான அமெரிக்காவும் சில அரசியல்-இராணுவ நோக்கங்களுக்காக காசா முனை மீது இப்படியானதொரு விரிந்த தாக்குதலைத் தொடுக்கக் காத்திருந்தனர் என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. குறிப்பாக, இத்தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக இசுரேலும் அமெரிக்காவும் கூட்டாக நடத்திய இராணுவ ஒத்திகையைத் தற்செயலானதாக ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.
லெபனான் நாட்டில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா குழுவுக்கும் இசுரேலுக்கும் 2006-ஆம் ஆண்டு நடந்த போரின்பொழுது, ஹிஸ்புல்லா குழு நடத்திய ராக்கெட் தாக்குதல்களை இசுரேலால் சமாளிக்க முடியாமல் போனது. இப்படிபட்ட ராக்கெட் தாக்குதல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணை பாதுகாப்பு கேடயத் தொழில்நுட்பத்தை, அப்போருக்குப் பின் அமெரிக்காவின் உதவியோடு உருவாக்கி வருகிறது, இசுரேல். இரும்பு மாடம் என அழைக்கப்படும் இப்பாதுகாப்புக் கேடய செயல்திறனைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான வாப்பாக இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தியது, இசுரேல். இரானின் அதிகதொலைவு சென்று தாக்கும் ராக்கெட்டுகளை இடைமறித்து அழிப்பதற்கு இந்த ஏவுகைணைத் தொழில்நுட்பம் அவசியமானது என அமெரிக்க-இசுரேல் கூட்டணி கருதுவதால், காசா முனை மீது நடத்தப்படும் இத்தாக்குதலை ஒரு ஒத்திகையாக, இரான் மீதான போர் தயாரிப்புக்கான முன்னோட்டமாகவே கருதி நடத்தியது, அமெரிக்க-இசுரேல் கூட்டணி.
பாலஸ்தீனக் குழந்தைகள்
ஹமாஸ் இயக்கம் இசுரேல் மீது ஏவும் ராக்கெட்டுகள், இசுரேலிடம் உள்ளது போன்ற பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதம் கிடையாது. இந்த ராக்கெட் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்றால், அது நேரடியாக அவர் தலை மீது விழ வேண்டும் என மதிப்பிடுகின்றனர், இராணுவ வல்லுநர்கள். இத்தகைய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு காசா முனையில் அமைக்கப்பட்டுள்ள ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொன்று, அவ்வியக்கத்தை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்துவது இத்தாக்குதலின் முக்கிய நோக்கமாகும். இதன் அடிப்படையில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதியான அகமது ஜாபாரி காரில் சென்றுகொண்டிருந்தபொழுது, விமானக் குண்டுவீச்சு மூலம் கொல்லப்பட்டார். ஹமாஸின் இராணுவக் கிடங்குகளை அழிப்பது என்ற போர்வையில் காசா முனையின் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள் என கேந்திரமான மையங்கள் அனைத்தையும் விமானக் குண்டுவீச்சு மூலம் தரைமட்டமாக்கியிருக்கிறது, இசுரேல். பொது மக்களின் குடியிருப்புகள் மட்டுமின்றி, காசா முனையில் ஐ.நா. மன்றம் நடத்தும் அகதி முகாம்கூட இசுரேலின் விமானத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது.
2013 ஜனவரி மாதத்தில் இசுரேல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தற்பொழுது அதிகாரத்திலுள்ள பிரதமர் நேதன்யாஹு, தனது அரசின் தோல்விகளை மூடிமறைக்கவும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தற்பொழுது காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்தான் முன்னிறுத்திப் பிரச்சாரம் செதுவருகிறார். இந்த வகையிலும் இசுரேலின் ஆளுங்கட்சிக்கு இத்தாக்குதல் அவசியமானதாக இருக்கிறது.
வழமை போலவே, அமெரிக்காவும் இங்கிலாந்தும் இசுரேல் நடத்திவரும் இந்த அடாவடித்தனமான தாக்குதலை, பாறை போல ஆதரித்து நிற்கின்றன. ஒபாமா, இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, “இசுரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள நடத்தும் போர் இது” என அறிக்கை விடுத்து, யூத மதவெறி பயங்கரவாதத்துக்குக் கொம்பு சீவிவிட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இசுரேலின் ஒருதலைப்பட்சமான இத்தாக்குதலைக் கண்டித்து ஒரு காகிதத் தீர்மானம் இயற்ற முன்வந்ததைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியது, அமெரிக்கா. ஜார்ஜ் புஷ் இராக், ஆப்கானில் தொடங்கி வைத்த ஆக்கிரமிப்புப் போரை லிபியா, சிரியா என விஸ்தரித்த ஒபாமா என்ற ஓநாயிடமிருந்து இந்தப் போர் வெறியைத் தவிர, சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ எதிர்பார்க்க முடியாது.
ஒருபுறம் இசுரேல் காசா முனை மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையினையும், அதன் விமான மற்றும் கப்பற்படைத் தாக்குதலையும் ஆதரித்து நிற்கும் அமெரிக்க அரசு, மறுபுறம் இசுரேல் காசா முனை மீது தரைப்படை தாக்குதலை நடத்தக் கூடாது என உபதேசிக்கிறது. மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் தரைவழித் தாக்குதலை ஆதரிக்க மறுப்பதால், இசுரேலும் எல்லைப்புறத்தில் படைகளைக் குவித்து உதார் விடுவதற்கு அப்பால் செல்லவில்லை.
அரபுலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சில அரசியல் மாற்றங்கள்தான் அமெரிக்க-இசுரேல் கூட்டணி காசா முனை மீது உடனடியாகத் தரைவழித் தாக்குதலை தொடங்க முடியாமல், அவற்றின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளன. அமெரிக்க அடிவருடியும் இராணுவ சர்வாதிகாரியுமான ஹோஸ்னி முபாரக் பதவியிறக்கப்பட்ட பின் எகிப்தில் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள சன்னி பிரிவைச் சேர்ந்த முசுலீம் சகோதரத்துவக் கட்சிக் கூட்டணி, ஹமாஸ் இயக்கத்தை ஆதரிப்பதோடு, இசுரேல் தனது தாக்குதலை உடனடியாக நிறுத்திவிட்டு ஹமாஸுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரியது. எகிப்தின் இக்கோரிக்கையை துனிசியா, துருக்கி, கத்தார் ஆகிய அரபு நாடுகள் மட்டுமின்றி, அரபு லீக் அமைப்பும் ஆதரித்தன.
அமெரிக்காவை எதிர்த்து வரும் இரான், சிரியா மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தோடு நெருக்கமாக இருந்துவரும் ஹமாஸ் இயக்கம், தற்பொழுது அமெரிக்காவின் நட்பு நாடுகளான எகிப்து, துருக்கி, கத்தார் ஆகியவற்றை நோக்கித் திரும்புவது ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. எகிப்து அமெரிக்காவை மீறிச் செயல்படாது என்றபோதிலும், கடந்த இரண்டாண்டுகளில் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், பாலஸ்தீனத்துக்கு எதிரான இசுரேலின் போர் நடவடிக்கைகளை முன்னைப் போல வெளிப்படையாக ஆதரித்து நிற்க முடியாத நிலைமைக்கு அந்நாட்டைத் தள்ளியிருக்கிறது. இந்த நிலைமைகளைக் கருத்தில்கொண்டுதான் அமெரிக்காவும் எகிப்தின் சமாதான முயற்சிகளுக்கு வெள்ளைக்கொடி காட்டியது.
காசா முனை மீது இசுரேல் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக நீக்குவது, இசுரேலின் போர்க் குற்றங்களுக்காக அதனின் ஆட்சியாளர்களைத் தண்டிப்பது, காசா முனை மீது இசுரேல் இழைத்துள்ள நாசங்களுக்கு நட்ட ஈடு வழங்குவது, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது பற்றியெல்லாம் பேசாத எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் உண்மையானதாக, நியாயமானதாக இருக்கப் போவதில்லை. ஆனால், ஐ.நா.-எகிப்து-அமெரிக்கக் கூட்டணியோ, ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதலை நிறுத்த வேண்டும்; இசுரேல் தனது வான்வழித் தாக்குதலை நிறுத்த வேண்டும்” என்ற மொன்னையான ஒப்பந்தத்தைத்தான் பாலஸ்தீன மக்களின் மீது திணித்தது. அதாவது, இசுரேல் தனது இராணுவத் தாக்குதல்களுக்குச் சற்று ஓவு கொடுப்பதையே மாபெரும் சமாதானமாகக் காட்டி ஏத்துவிட முயலுகின்றன. பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக் கூடாது” என்ற தந்திரத்தோடு தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்படும் இத்தகைய சமாதான ஒப்பந்தங்கள் யூத மதவெறி பாசிச இசுரேல் அரசை மேலும் மேலும் பலப்படுத்தவே பயன்பட்டுள்ளன என்பதுதான் கடந்த கால அனுபவங்கள் உணர்த்தும் உண்மை.
விருத்தாசலம் பாலக்கரையில் 13-12-12 அன்று மாலை 5 மணிக்கு, தருமபுரி தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வெறித்தாக்குதலை கண்டித்தும், அந்த மக்களுக்கு உரிய நிவாரணமும், நீதியும் வழங்க கோரியும் மனித உரிமை பாது காப்பு மையம் – கடலூர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழுத்தாளர்கள் இமையம், கரிகாலன், வழக்கறிஞர்கள் செந்தில்குமார், ஜானகிராமன், பு.மா.இ.மு அமைப்பாளர் குழந்தைவேலு, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தலைவர் வை.வெங்கடேசன்,தமிழக ஆதிதிராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கோ.பாக்கியராஜ் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
“சாதிவெறியை தூண்டும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிசங்கங்களை தடை செய்,வன்முறையை தூண்டும் காடுவெட்டிகுருவை கைது செய்”, எனமுழக்கமிட்டதை பொறுக்க முடியாத பா.ம.க.வினர் சிறிது சிறிதாக வெகு நேரம் முயற்சி செய்து ஒன்று திரண்டனர். கூட்டத்தை தொடர்ந்து நடத்த விடக்கூடாது என முயன்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருமளவில் கூட்டத்தை கேட்க திரண்டிருந்தனர்.
காவல்துறை அதிகாரி, “பிரச்சினை வரும் போல் உள்ளது நீங்கள் கூட்டத்தை சீக்கிரம் முடியுங்கள், ஆர்ப்பாட்டம் எனக்கூறி பொதுகூட்டம் போல் நடத்துகிறீர்கள், ஏதேனும் பிரச்சினை வந்தால் நான் என்ன செய்ய முடியும்.என்னிடம் ஸ்டென்த் இல்லை” என்றார். ஆகையால் கூட்டம் அரை மணி நேரம் முன்பாக இரவு 7-30 க்கு முடிந்தது.
எழுத்தாளர் கரிகாலன்,
எழுத்தாளர் கரிகாலன்
“வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்கு தூண்டா மணிவிளக்காய் விளங்கும் பெருமாட்டி நத்தம் கிராமம் தோழர் இளவரசன்,திவ்யா திருமணத்தை தொடர்ந்து நடந்த தாக்குதல் தீ வைப்பு,கொள்ளையடிப்பு என்பது மனித நாகரீகத்திற்கு விடப்பட்ட சவால். ஒருபெண் தன் கணவனை தேர்வு செய்ய பொருளாதார ரீதியில் தன்னை வைத்து காப்பாற்றுவானா? என்பதுதான் அளவு கோல். அந்த வகையில் இளவரசன் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர். நத்தத்தில் நடந்த தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தபட்டது. ஈழத்தில் ஒரு இனத்தை அழிப்பதற்கு நடந்த முள்ளி வாய்க்கால் படு கொலை போல், நத்தத்தில் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்தபட்டுள்ளது. ஈழத்தாக்குதலை கண்டித்து மருத்துவர் ராமதாஸும் திருமாவளவனும், ஒன்றாக பிரச்சாரம், போராட்டம் நடத்தினர். சாதி பெயரால் கட்சி நடத்துபவர்கள் அடிப்படைவாதிகளாகவும், பாசிஸ்டுகளாகவும் வருவார்கள் என்பது நாம் கற்று கொண்ட பாடம். அரசியலில் தனித்துவிடப்பட்ட ராமதாஸ், சாதி வெறியை தூண்டி தனது வாக்கு வங்கியை உயர்த்த நினைக்கிறார். 20% தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக பிற இடைநிலை ஆதிக்க சாதியினரை திருப்ப நினைப்பது ஆபத்தான போக்கு ஆகும். இதை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
திருவள்ளுவர் எதிரியை அழிக்கும் கூறான ஆயுதம் அவன் பொருளாதாரத்தை அழிப்பது என்கிறார். தாழ்த்தபட்ட மக்கள் ஆதிக்க சாதியினரிடம் மாடுமேய்த்தார்கள், காடுகழனிகளில் வேலை பார்த்தார்கள், எழவுக்கு சேதி சொன்னார்கள்,பிணம் விழும் போது பறை அடித்தார்கள், ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகு அம்பேத்கர்,பெரியார் பிரச்சாரத்தால், போராட்டத்தால் இடஒதுக்கீட்டில் இன்று படித்து உயர் பதவிக்கு சென்றதும், உழைத்து சம்பாதித்து சமமாக வாழ நினைத்தும் இளைஞர்கள் சாதி இழிவை கடக்க முயலுகின்றனர். இதை சகிக்க முடியாத காரணத்தால் நத்தத்தில் அவர்கள் சொத்துக்கள் முற்றாக அழிக்கப்பட்டது. பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
சுனாமியால் அடைந்த சோகம் போல் நத்தம் மக்கள் மீண்டும் பழைய நிலையை அடைய பல வருடங்களாகும்.ஏனைய தாழத்தப்பட்ட மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கைதான் நத்தம் தாக்குதல். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதிவெறித்தாக்குதலில் தாழத்தப் பட்ட மக்கள் மட்டுமே உயிரிழந்தனர்.ஆனால் இன்று திருப்பி நடக்கும் தாக்குதலில் ஆதிக்க சாதியினரும் உயிரிழக்கின்றனர்.ராமதாசும், குருவும் தருமபுரி போல் பிற இடங்களில் நடத்தலாம் என நினைத்தால் அது பொய்த்து விடும். தாழ்த்தபட்ட மக்கள் எதிர் கொள்வார்கள்.
சாதியின் பெயரால் இரு பாட்டாளிகளுக்குள் மோதலை ஏற்படுத்தி வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்ற ராமதாசின் கணக்கு பலிக்காது.வன்னிய இளைஞர்களே பிற்போக்கு சாதி இழிவை தூக்கி பிடிக்காதீர்கள் சாதி வெறிக்கு பலியாகாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். டாக்டர் ராமதாஸ் காதல் நாடகம் என்கிறார், பழைய பண்பாட்டை காப்பற்ற பெற்றோர்கள் முயலுகிறார்கள் என்கிறார். காதல் அன்பு நிறைந்தது. இளைஞர்கள் சாதி மதத்தை மறந்து புதிய பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.
எனவே சாதி மறுப்பு திருமுணத்தை ஆதரிக்க நானும் நண்பர் இமையமும் பாராட்டு விழா நடத்தி காதலை ஊக்கபடுத்த நினைக்கிறோம். ஆதலினால் காதல் செய்வீர். காதல் நாடகம் அல்ல. பல்வேறு சாதி மறுப்பு திருமணத் தம்பதிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை பல்வேறு பத்திரிக்கை வாயிலாகவும் நடைமுறையிலும் பார்க்கிறோம்.தர்மபுரி சம்பவத்தை பார்த்து இளைஞர்கள் அச்சப்பட வேண்டாம்.உங்களோடு நாங்கள் இருக்கிறோம்.”
என்று பேசினார்.
எழுத்தாளர் இமையம்,
எழுத்தாளர் இமையம்
“தமிழகத்தில் தொடரும் சாதிப் படுகொலைகளில் தருமபுரியும் ஒன்று. இதோடு முடியப் போறதுமில்லே, இது முதல் முறையுமில்ல, அதற்கான சாதிய விஷ விதைகள் தூவப்பட்டு இருக்கிறது. அதனால் கலவரங்கள் தொடர வாய்புகள் இருக்கு. நடக்கின்ற சாதி கலவரங்களால் மனிதப் பலி, பொருளாதார இழப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறோம்.தொடர்ந்து இந்த சாதிய கலவரங்களை தூண்டியவர்கள் படிக்காதவர்களா? மாடு மேய்ப்பவர்களா? முட்டாள்களா? இல்லை. மருத்துவர்கள், வக்கீல்கள், அறிஞர்கள், மெத்த படித்தவர்கள் தான் சாதி கலவரத்தை தூண்டியிருக்கிறார்கள்.நாம் நாகரீக சமுகத்தில் தான் வாழ்கிறோமா? படித்த சமூகத்தில் இருக்கிறோமா? என்பதில் எனக்கு உண்மையில் நம்பிக்கை இல்லை.
2, 3-ம் நூற்றாண்டில் கூட காதலை போற்றிய சமூகமாக இருந்திருக்கிறது. அங்கு வன்முறை இல்லை,அனைவரும் காதலிக்க வேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன. தற்போதைய நிகழ்வு சமூகத்தை பின்னுக்கு இழுப்பவையாக உள்ளன. சாதிய வன்முறையை தூண்டுபவர்கள்தான் நம்மை ஆளநினைக்கிறார்கள். சாதிக் கலவரத்தை, மதக்கலவரத்தை நடத்தி ஆட்சியை பிடித்தவர்கள் தான் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி சமூக நல்லிணக்கம்,தேச ஒற்றுமை என்று நாட்டு நலன் பேசுகிறார்கள். இந்த முரண்பாடு உலகத்தில் எங்கும் இல்லை. பழங்காலத்தில் உள்ளவர்களை படிக்காதவன் காட்டுமிராண்டி, அறிவில்லாதவன், நாகரீகமில்லாதவன்னு பேசுறோம் ஆனா அப்பதான் சாதி கிடையாது கலவரம் கிடையாது.யார் யாரவேணுமின்னாலும் காதலிக்கலாம்,ஆம்பள பொம்பள விரும்பலாம் பொம்பள ஆம்பளய விரும்பலாம். இது இயற்கை,மனுசன் மாட்டையா விரும்ப முடியும். மனிதன் தோன்றி பசிக்கிதுன்னு என்னைக்கு சொன்னானோ அன்றைக்கே காதல் வந்திருச்சு.
40 தலைவர்கள் சேர்ந்து தீர்மானம் போடுறாங்க கலப்பு திருமணம்-காதல் நாடகத் திருமணம் படுதோல்வி ஆகிறது. ஆகவே தடுத்து நிறுத்த வேண்டும் என்று. காதலிச்சவன்தான் பொண்டாட்டியை விட்டுட்றானா?.ஜோசியம் பார்த்து மந்திரம் சொல்லி 100 பவுன் நகை போட்டு நடந்த திருமணத்தில் பொண்டாட்டி ஓடிபோறதில்லையா?,இல்லை அவன்தான் கைவிட்றதில்லையா?இது எல்லா இடத்திலும் நடக்கிறது. அந்த இரு நபர்கள் மன ஒற்றுமை பொருத்தது. தனி நபர்கள் சம்பந்த பட்டது. கட்சி சம்பந்தப்பட்டது இல்லை. இதற்கு தீர்மானம் போட முடியாது.
மெட்ராஸ்ல 40 பேர் உக்காந்துகிட்டு தமிழ்நாட்டுல யாரும் இனிமே காதலிக்க கூடாதுன்னு சொல்றது, வினோதமாக இருக்கு.யாரும் சாப்பிடாதன்னு சொல்ற மாதிரி இருக்கு. எங்கள் இனத்து பெண்களை பிற இனத்து ஆண்கள் காதலிக்க கூடாது, திருமணம் கூடாது, மீறினா வெட்டுங்கன்னு சொல்றீங்க, அது போல் உங்க இனத்து ஆண்கள் பிற பெண்களை காதலித்தால், உடலுறவு கொண்டால் அவர்களை என்னசெய்யப் போகிறீர்கள் அவர்கள் ஆண் குறியை வெட்டுவீர்களா?.
சமூகத்தில் வாழவே அச்சமா இருக்கு. தருமபுரியை தொடர்ந்து பாச்சாரப்பாளையம் வன்முறை நடக்குது, நாளைக்குவேற எங்காவது நடக்கும். நாம எம்ஏ.,பி.காம்.எல்லாம் படிச்சவன்னு சொல்றோம், என்னதான் படிச்சோம். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சமமாக நடத்துவதற்கு சாதி மதம் எப்படி தடையாக இருக்க முடியும், தருமபுரி சம்பவம் உணர்ச்சி வேகத்தில் நடந்த காரியம் அல்ல. இளவரசன் திவ்யா போய் 40 நாள் கழித்து, அறிவாளிகள் ஒன்று கூடி நன்கு திட்டமிடப்பட்டு நடத்தபட்டுள்ளது.
ஒரு இனத்தை அழிக்க மொழியையும், பிறகு அவன் ஆதாரத்தையும் அழித்தால் போதும். இங்கு பொருளாதாரத்தை அழித்துள்ளார்கள். யாரையும் கொல்லல, ரத்த காயம் இல்லை வெட்டு இல்லை. அறிவுப்பூர்வமாக செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற சிறு பாதுகாப்பு வன்கொடுமை தடுப்புச்சட்டம், அதையும் திருத்தணுமுண்ணு பேசறாங்க. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் எத்தனை ஆயிரம் பேர்மேல வழக்கு பதியபட்டிருக்கு எத்தனை ஆயிரம் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்காங்கன்னு தெரியல, திருத்தம் வேணும்னு சொல்றாங்க. ஆனால் சிறு பாதுகாப்பும் இருக்க கூடாது என்பது சாதித் தலைவர்கள் நோக்கமாக இருக்குது.
ஆனா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு தருமபுரி மட்டுமல்ல எங்கும் நடக்கலாம், நீங்களும் நானும் ஒன்னா பஸ்சுல போக முடியுமா தெரியல,கடந்த சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியிலிருந்து மீள்வதற்கான ஒரு தந்திரம். இத யாரும் நம்பல அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு திட்டம் போட்ட மாதிரி தமிழகம் முழுவதும் நடக்கல. எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்த கலவரத்தை ஞாபகம் வைத்து அது போன்று நடந்தால் இந்த பலத்தை காட்டி வருகிற நாடாளுமன்ற , சட்டமன்ற தேர்தல்ல அ.தி.மு.க, தி.மு.கவிடம் சீட்டு பேரம் பேசுவதற்காக நடத்தபட்டது இந்த வன்முறை. இப்படிதான் சமூக நல்லிணக்கத்தை குலைத்து எம்.எல்.ஏ எம்.பி.ஆக வேண்டுமா?
மக்கள் பிரச்சினைகள் இருக்கு. மின்சார பிரச்சினை, மழை பெய்யல தண்ணீர் பற்றாக்குறை, இங்குள்ள விளை நிலங்களை பன்னாட்டு கம்பெனி 1000,2000ஏக்கர்னு வளைச்சு போட்டிருக்கான் , அதற்கு போராடலாம், ஐ.டி.கம்பெனியில் அடிமையாக வேலை பார்க்குறான் உரிமைகளுக்கு போராடுங்க,அப்ப ஜனங்க உங்கள ஆதரிப்பாங்க,இதை எதையும் பண்ணாம மனுசன் எளிதில் உணர்ச்சி வசப்படுவானோ எதுல வன்முறையை தூண்டலாமோ அதுல வன்முறைய தூண்டுவது என்கின்ற ஒரு அற்பமான சிந்தனை. இது யாருக்கு இருக்கலாம் ஒன்னுமே தெரியாத படிக்காத முட்டாபயலுக்கு இருக்கலாம். நாம பெரிய தலைவர்களா இருக்கோம், அரசியல் கட்சி வைத்து நடத்துகிறோம் நிறைய எம்.எல்.ஏ.எம்.பி.யை உருவாக்கி இருக்குாம் .மந்திரிகளை உருவாக்க ஆசை படுகிறோம். அதற்கு குறைந்த பட்சம் ஒரு நாகரீகம் வேண்டாமா?
.தமிழ்நாட்டுல சில பேரு உயிரோட இருக்கும் போதே சாவடிப்பாங்க.சில பேரு செத்தும் சாவடிப்பாங்க.தென்மாவட்டங்கள்ல முத்துராமலிங்கத்தேவர் செத்து எத்தனையோ வருசம் ஆச்சு. ஒவ்வொரு வருசமும் அவர் செத்த அன்னைக்கு 4பேர்5பேர் செத்துகிட்டே இருக்கான். இது ரொம்ப கொடுமையாக இருக்கு இது இந்தியாவிலே, உலகத்திலே எங்கும் நடக்காத விசயம்.இவன் எல்லாம் எவ்வளவு பெரிய நச்சு பாம்பு, ஒருத்தம் பேர்லயே கொல நடந்திட்டிருக்கு. இந்த சமூகத்தில் வாழவே அச்சமாக இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் மகளை காணோம் என்று தேடும் பெற்றோர்களிடம் ஊர்காரர் இவ்வாறு கூறுகிறார் யாழ்லிருந்து மீட்கபட்ட இசை யாழுக்கு சொந்தமில்லை,மண்ணில் விழுந்த மழை நீர் மழைக்கு சொந்தமில்லை. எந்த பொருள் எதோடு சேர வேண்டுமோ அதோடு சேர்ந்து விட்டது. உன்மகள் உரியவனிடம் சேர்ந்து விட்டாள் நீ ஏன் உரிமை கொண்டாடுகிறாய் எனச் சங்க காலத்தில் சொல்லப்பட்டது. அது பின்தங்கிய சமூகம் என சொல்லுகிறோம். நாம படிச்சோமுன்னு சொல்றது முற்றிலும் பொய்யானது. அறிவுக்கு ஒவ்வாத பழமைகளை புறந்தள்ளி படிக்க வேண்டும்.சாதி தலைவர்களை பற்றி பாடம் வைத்திருக்கிறோம் சாதித் தலைவர்கள் பற்றி உணர்வு தூண்டப்படுகிறது.இந்த சமூகத்தை மேன்மையுறச் செய்யும் விசயங்களை விட்டு செல்வதில்லை.மிகவும் அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை விட்டு செல்கிறோம்.
வயது வந்த ஆண், பெண் விரும்பும் ஆணை,பெண்ணை திருமணம் செய்ய, மறுமணம் செய்ய உரிமை உண்டு. கல்வி கற்க, வாழ அரசியல் அமைப்பு உரிமை வழங்கியிருக்கிறது. இதற்கு சாதி சங்கங்கள் சாதியத் தலைவர்கள் பேச்சு தடையாக இருக்கிறது. இது நாகரீக சமூகம்தானா?.சாதி உணர்வை புறந்தள்ளி,சமத்துவத்தை நமது குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும்”,
எனக் கூறி முடித்தார்.
பாக்கியராஜ், மாநிலத்தலைவர், தமிழக ஆதிதிராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்,
“கையளவில் உலகம், விண்வெளியில் சாகசம் என 21-ம் நூற்றாண்டில் மனித நாகரீகத்திற்கு முற்றிலும் ஒவ்வாத சாதிய வன்கொடுமை தாக்குதல் தருமபுரியில் நடந்தேறியுள்ளது. சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லாமல் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க காதல் நாடகத் திருமணத்தை கையிலெடுத்துள்ளீர்கள். விஷ விதையை தூவி, ஜாதித் தீயை வளர்க்கும் இந்த பாசிச போக்கு மிக அபாயமானது. தருமபுரி சம்பவத்தை கண்டித்து வேறு எங்கும் இது போல் நடக்க அனுமதிக்க மாட்டோம் என கூறுங்கள் உங்கள்பின் அனைத்து சமூகமும் நிற்கும். ஒடுக்கபட்டவர்களை புறந்தள்ளி யாரும் ஆட்சியை பிடித்த்தாக வரலாறு இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் வாக்களித்ததால்தான் நீங்கள் மத்திய அமைச்சராக முடிந்தது. படிக்காத பாமரர்களை சாதித் தீக்கு உட்படுத்துகிறீர்களே, இது சரியா?.16 பதார்த்தங்களை வைத்துவிட்டு நடுவில் ஏதோ வைத்து சாப்பிடுங்கள் என்பார்களே அது போல் உங்கள் செயல் உள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்யாக தண்டிக்கப் பட்டார்கள் என ஒரு செய்தியை சொல்லுங்கள் பார்ப்போம். சென்னையில் அனைத்து சாதி சங்கங்களை கூட்டி வன்கொடுமை சட்டத்திற்கு திருத்தம் வேண்டும் என பேசுகிறீர்கள். இது சரியா?.கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்றத்தில் வன்கொடுமை சட்டத்தில் தண்டிக்கபட்டவர்கள் மிகச் சொற்பமானவர்கள். அதுவும் சமூக நிர்பந்தத்தால் தண்டிக்கபட்டவர்களே.வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கோரும் நீங்கள் எங்கள் வாக்கு தேவையில்லை எனச் சொல்லுங்கள்.ஒட்டு மொத்த தலித் மக்கள் மீது சாதி என்கிற விஷ விதையை விதைக்கிறீர்கள்.பயந்தவர்கள் என் மீது படுத்து கொள்ளுங்கள் எனக்கூறுவது போல் அனைத்து சாதிக் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறீர்கள்.
தருமபுரி தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என காவல் துறை ஒத்துக் கொள்கிறது.இந்த ஆர்ப்பாட்டம் ஒரு சமூகத்திற்கானது அல்ல. தலித் மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்களோ அவர்கள் பின் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்.”
என்றார்
வழக்கறிஞர் தோழர் ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
“தருமபுரி தாக்குதலை கண்டித்து இங்குமட்டும் பேசவில்லை. சென்னையில், விழுப்புரத்தில் தருமபுரியில் என பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.சமச்சீர் கல்வி, மின்வெட்டு, கூடங்குளம்,முல்லைப்பெரியாறு,ஊழல், காவல்துறை அத்துமீறல், என அனைத்திற்கும் போராடுவதுபோல் தருமபுரி நத்தம் காலனி ஆதிக்க சாதி வெறித் தாக்குதலை கண்டித்து பேசுகிறோம். தருமபுரி தாக்குதலின் நோக்கம் வெற்றியடையக் கூடாது என்பதற்காகதான் இந்த கூட்டம். பிரச்சினை வரும் என்னிடம் ஸ்டென்த் இல்லை ஆர்பாட்டம் எனக்கூறி பொதுக் கூட்டமாக நடத்துகீறிர்கள், விரைவாக முடியுங்கள் என காவல்துறை வலியுறுத்துகிறது. தருமபுரியில் உங்கள் கடமையை சரியாக செய்திருந்தால் இந்த ஆர்பாட்டத்திற்கு அவசியமே இருக்காது.
நவம்பர் 7-ம்தேதி லட்சாதிபதி, 8-ம் தேதி காலை மாற்று உடை இன்றி உணவுக்கு தட்டேந்தி வரிசையில் தான் வாழ்ந்த ஊரில் அகதியாக வாழும் நத்தம் காலனி மக்களின் அவலத்திற்கு யார் காரணம். காதலை மையமாக வைத்து வன்னியர்களை பாது காக்க வேண்டிய அவசியம் இல்லை.எவ்வளவோ பாதிப்புகள் இருக்கிறது. ராமதாசின் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட இந்த கொடுரத்தாக்குதலுக்கு வன்னியர்களே நீங்கள் சம்மதிக்கீறிர்களா?. ஒரே பைக்கில் பயணித்த இளைஞர்கள், ஒரே தொகுப்பு வீட்டில் அருகருகே அமர்ந்து சாப்பிட்ட இளைஞர்கள், இன்று பைக்கை அடித்து நொறுக்கி தீ வைப்பதும்,வீடுகளை சூறையாடி பெட்ரோல் பாம் வீசுவதும் எப்படி நடந்தது.
ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும் போட்டால் வன்னிய பெண்கள் மயங்குகிறார்கள் என சொந்த சாதிப் பெண்களை சீப்பாக கேவல படுத்துகிறாரே ராமதாஸ், நீங்கள் அதை ஏன் தட்டிக் கேட்கவில்லை. இரண்டரை கோடி வன்னியர்கள் காடு வெட்டி குரு பின்னால் இருக்கிறார்கள், யாரும் குருவை ஒன்றும் செய்யமுடியாது என ராமதாஸ் பேசுகிறார். தேசியப் பாது காப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த போது எங்கே போனார்கள். தி.மு.க.விடம் சரணடைந்து சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என்ற சபதத்தை துறந்து கருணாநிதியை சந்தித்து குருவை விடுவித்தீர்கள். தருமபுரி தாக்குதலுக்கு சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என்ற வழக்குடன், கலவரத்திற்கான முழு காரணத்தையும் விசாரிக்க நீதிபதி விசாரணைக்கு உத்திரவிட நாங்கள் போட்ட வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.
தலித் மக்களின் இரண்டு தலைமுறை உழைப்பை சூறையாடி இருக்கிறார்கள். சாதி ஏற்கனவே இருக்கிறது. அதுபிறப்பின் இழிவு. எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடிய சாதி உணர்ச்சியை தூண்டி சாதிக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் நரேந்திர மோடியாக ஆட்சியை பிடிக்க ராமதாஸ் முயற்சிக்கிறார்.நாம் அனுமதிக்க கூடாது. வன்கொடுமை சட்டத்தினை தாழ்த்தப்பட்ட மக்களா இயற்றினார்கள். அனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தில் இயற்றய சட்டம். அரசியலமைப்பு சட்டத்தில் தீண்டாமை மட்டுமே ஒரு குற்றமாக சரத்து 17 -ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன சொல்ல போகிறார் ராமதாஸ். இரண்டு சதவீதம் தான் தண்டிக்க படுகிறது எனவே வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, திருத்தம் வேண்டும் என அனைத்து ஆதிக்க சாதிகளையும் ஒருங்கிணைக்கிறார்.
பதிவு செய்யப்படாத வன்கொடுமை குற்றங்களை ஆயிரக்கணக்கில் நாங்கள் காட்டுகிறாம். தனிக்குவளை இருக்கு, தனிச்சுடுகாடு இருக்கு சமவழிபாடு இல்லை,ஊர்த் தெருவில் தலித்துகளுக்கு வீடு கொடுப்பார்கள?பஞ்சாயத்து தலைவராக தலித் சமமாக உட்கார முடியுமா ? ஆதாரங்களை காட்ட முடியும். ராமதாசின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தலித்துகளை எதிராக காட்டி சாதி இந்துக்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறார் அதன் மூலம் வன்னியர் வாக்கு கிடைக்கும் என கருதுகிறார். இதை நாம் அனுமதிக்கலாமா?. காதல் ஜோடிக்காக அந்த ஊரையே கொளுத்தலாம் என்றால் இந்த உரிமையை அனைவரும் கடைபிடிக்கலாமா? அனைத்து சாதியினர் மீது அமல்படுத்தலாமா?.
ஒரே பள்ளில், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மாணவர்கள் திடீரென்று சாதி பகைமையால் தூண்டப்பட்டு பிளவை, மோதலை ஏற்படுத்துவது ஆபத்தானது. ராமதாசின் இந்த திட்டத்தை நாம் அனுமதிக்க கூடாது, முறியடிக்க வேண்டும்.
என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் உரைகளைக் கேட்ட பா.ம.க சாதிவெறியர்கள் எப்படியாவது கலவரம் செய்து நிறுத்த வேண்டும் என முயன்றாலும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் வீச்சாக ஒலிவாங்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பகுதி முழுவதும் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. வன்னிய மக்களில் பெரும்பான்மையினர் தரும்புரி கொடுமையின் அநீதியை புரிந்து கொண்டு ஆதரவளித்தனர். இதனாலேயே மனித உரிமை பாதுகாப்பு மையத்தை தனிமைப்படுத்த நினைத்த பா.ம.க சாதி வெறியர்கள் தோற்றுப் போனார்கள்.
பா.ம.கவின் ‘கோட்டை’ என கருதப்பட்ட விருத்தாசலத்திலேயே நிலைமை இதுதான் எனும் போது ராமதாசின் வயிற்றெரிச்சல் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. தொடர்ந்து ராமதாசுக்கு பேதி போவது உறுதி.
நாட்டையே
பன்னாட்டு மூலதனங்களின் பலாத்காரத்திற்கு
தள்ளிவிடும் ப.சிதம்பரத்திற்கு வெட்கப்படவும் தெரியுமாம்!
ஒரிசா பழங்குடிப் பெண்களை
கூட்டாக பாலியல் வன்புணர்ந்து,
பழங்குடிப் பெண்களின் பிறப்புறுப்பில்
கற்களைத் திணித்து…
காட்டுவேட்டை நடத்தி
களித்திட்ட சிதம்பரம்,
தில்லி சம்பவத்திற்காக
ஒரு ஆண் என்ற முறையில்
வெட்கித் தலைகுனிகிறாராம்!
அடேயப்பா…
யாருக்கு வரும் இந்த கெழுதகை நடிப்பு!
அறிக்கையில் வெட்கப்பட்டு
அறிக்கையில் துக்கப்பட்டு
அறிக்கையிலேயே மிச்சப்படும் இவர்கள்,
ஆண் என்பதை நிரூபிக்க….
இன்னும் எத்தனை பாலியல் வன்முறைக்கு
ஆளாக வேண்டுமோ இந்தியப் பெண்கள்!
கருத்த பனையின்
உரித்த தோலென
அறுத்த முலையுடன் கிடந்த
ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும்,
இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு
ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட
பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக்
கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்!
கொடுமை இதைவிட வேறென்ன?
இவர்களின் இரக்கத்தைப் பெறுவதற்குக் கூட
தலைநகர் அளவுக்கு
பாலியல் வன்முறைக்கு ‘தகுதி’ வேண்டும் போல!
எந்த நேரத்திலும்… எந்த இடத்திலும்..
உழைக்கும் பெண்களுக்கு
ஒரு பாதுகாப்புமில்லை…
‘தாலி கட்டிய’ கணவனாலும்
கூலி கொடுக்கும் முதலாளியாலும்
குதறப்படுகின்றன பெண்களின் பொழுதுகள்.
கயர்லாஞ்சியில்
பிரியங்கா எனும் தலித் பெண்ணும்
அவரது அம்மா சுரேகாவும்
ஆதிக்கச் சாதிவெறியர்களால்
ஊரே கூடிநின்று வன்புணர்ந்து பிணமாக்கி பிறப்புறுப்பில் குச்சி செருகி
கொடூரமாக வெறியாடியபோதும்…
சிதம்பரம் பத்மினியும்
வாச்சாத்தி பழங்குடிகளும்
போலீசு நகங்களால்
பாலியல் வெறிக்கு பிய்க்கப்பட்டபோதும்…
உள்துறையும், உளவுத்துறையும்
கோபத்தால் வேண்டாம்,
வெட்கத்தால் கூட சிவக்காத மர்மம் என்னவோ?
பொதுவில் என்றால்
பொத்துக் கொண்டு வரும்
நடுத்தர வர்க்கக் கோபம் கூட
தலித்துகள் எனில்…
தனிக்கிணறு… தனிக்குவளை
தனிச்சுடுகாடு போல ‘தனி பாலியல் வன்முறை’ – என
தள்ளிவைக்கும் போல!
தில்லிக்கு திரள்வது நல்லதுதான்…
தலித்துக்கும் கூட,
பிறப்புறுப்பில் குச்சி செருகினால் வலிக்கும்
என்பதையாவது உங்களால் உணர முடியுமா?
பள்ளுக்கும், பறைக்கும் சேர்த்து தெருவில் இறங்குவாய் நன்நெஞ்சே!
பிளேடு விளம்பரம் முதல்
பர்ஃபியூம் விளம்பரம் வரை
பெண்ணுடலையும் சேர்த்து விற்கும் தாராளமயம்.
அடையாளம் தெரியாத நபர்களால்
பாலியல் வன்முறைக்குள்ளாகும்
பெண் மீதான கொடுமைக்கெதிராக
கண்டனம் முழங்கும் பெண்ணே – ஒன்றை
அடையாளம் தெரிந்து கொள்!
இதையே.. அன்றாடம்
மணிப்பூரிலும்…. சத்தீஸ்கரிலும்.. காசுமீரிலும்
படைகளைக் கொண்டு செய்யும்
அரசாங்கத்திடம்தான் நீ நீதி கேட்பது!
நாடெங்கும் ஆட்சியாளர்கள் 66-வது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்திலுள்ள வார்தா மாவட்டத்தின் சாகூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் கண்பத் போரே என்ற 40 வயதான விவசாயி, கடன் சுமை தாளாமல் ஆகஸ்ட் 15 அன்று தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனார். அவர் பயிரிட்ட பி.டி. பருத்தி அதிக அளவு தண்ணீரையும் உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விழுங்கி, செலவு அதிகரித்துக் கொண்டே போனதாலும், கடந்த 3 ஆண்டுகளாக பி.டி. பருத்தியின் விளைச்சல் குறைந்து போனதாலும், கடன் சுமை பெருகி கந்துவட்டிக்காரர்கள் நெருக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
விதர்பா பிராந்தியத்தில் 11 பெரிய அணைகளும் 58 நடுத்தர அணைகளும் உள்ளன. ஆனாலும் இப்பகுதியில் பாசன வசதியோ மிக மோசமானதாக இருக்கிறது. பருத்தி விவசாயிகளோ தண்ணீர் முறையாகக் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இடுபொருட்களின் செலவுகள் அதிகரிப்போடு, முறையாகப் பாசன நீர் இல்லாமல் பயிர்கள் பாழாவதும், விளைச்சல் குறைவதும், கடன் சுமை பெருகுவதும், அதனால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பதும் தொடர்கிறது. விதர்பா பிராந்தியத்தில் மட்டும் கடன் சுமையால் 2002 முதலாக இதுவரை 8,200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இத்தற்கொலைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உருவாக்கப்படும் 71 அனல் மின்நிலையங்களால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவற்றில் 33 மின்நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரிலையன்ஸ், டாடா, எஸ்ஸார், இஸ்பட், ஜிண்டால் முதலான கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கெனவே இங்கு மின்திட்டக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளன. 38 மின் திட்டங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
12-வது ஐந்தாண்டு திட்டத்தில், ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மைய அரசு தீர்மானித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாக நடந்துவரும் விதர்பா பிராந்தியத்தில் அனல் மின்நிலையங்களைத் தொடங்கி 55,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவாகியுள்ளது. இதன்படி, ஏறத்தாழ 2,049.2 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு விவசாயத்துக்கான பாசன நீர் இம்மின்திட்டங்களுக்காகத் திருப்பி விடப்படும். இத்திட்டங்களால் வார்தா ஆற்றின் நீர்மட்டம் 40 சதவீத அளவுக்குக் குறையும்.
விவசாயத்துக்கும் குடிநீருக்குமான நீரை, தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு ஒதுக்குவது சட்டவிரோதமானது. பருத்தி, கரும்பு விவசாயம் நடந்துவரும் விதர்பா பிராந்தியத்தின் கிராமப்புறங்களில் கிளைக் கால்வாய்கள் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், விதர்பா பாசன வளர்ச்சிக் கழகமோ இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறது. அரசாங்கமோ, விவசாயிகள் நீர்பாசனத்தைப் பயன்படுத்தாததாலேயே அவற்றை மின்திட்டங்களுக்குத் திருப்பி விட்டதாகப் புளுகிக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே தானே மாவட்டத்தில் 1996-இல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டத்தால் தகானு எனும் கிராமமே நாசமாகிவிட்டது. இவ்வட்டாரத்தில் பயிர்களின் மீது சாம்பல் படிந்து விளைச்சல் இல்லாமல் போயுள்ளதோடு, நீர்நிலைகள் பாழாகி கால்நடைகளுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், விவசாயத்துக்கு அல்லாமல் தண்ணீரை அனல் மின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டால் விதர்பா பிராந்தியமே வறண்ட பாலைவனமாகிப் போகும். அனல் மின் திட்டங்களால் விவசாயிகளில் சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டாலும், இலட்சக்கணக்கான இதர விவசாயிகளின் அப்பகுதியில் வாழக்கூட முடியாத நிலையில் தள்ளப்படுவார்கள். ஏற்கெனவே கடன் சுமையால் தற்கொலைகள் தொடரும் விதர்பாவில், விவசாயத்துக்குத் தண்ணீரும் இல்லாமல் போனால் விவசாயிகளின் தற்கொலைகள் மேலும் தீவிரமாகும். அதனாலென்ன? விவசாயமும் விவசாயிகளும் அழிந்தாலும் பரவாயில்லை, மின்திட்டங்கள்தான் முக்கியம் என்பதுதான் அரசின் அறிவிக்கப்படாத கொள்கையாகிவிட்டது. மின் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி இப்படி விதர்பா பிராந்தியத்தை நாசமாக்கும் செயல் நியாயப்படுத்தப்படுகிறது. மின் திட்டங்களுக்காக அரசின் சலுகைகளும் மானியங்களும் வாரியிறைக்கப்படுகின்றன.
விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மின்திட்டங்களை உருவாக்கிக் கொள்ளையடிக்கும் ஓட்டுப்பொறுக்கிகளும் முதலாளிகளும் இதற்கு முன்பாக இதே விதர்பா விவசாயிகளைக் காட்டி இன்னுமொரு கூட்டுக் கொள்ளையை நடத்தினர். மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் விவசாயிகள் கடனில் சிக்கி தற்கொலைகள் பெருகிய நிலையில், விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவும் பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டன. ஒப்பந்ததாரர்களோ இத்திட்டங்களின் செலவினங்களைப் பலமடங்கு உயர்த்தி கொள்ளையடித்தனர்.
2009-இல் தேசியவாத காங்கிரசு அரசில் அஜித்பவார் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, 20,000 கோடி மதிப்பில் விதர்பா பிராந்தியத்தில் 32 திட்டங்களும் கொங்கண் பிராந்தியத்தில் 6 திட்டங்களுமாக மொத்தம் 38 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நாலே நாளில் முறைகேடாக அனுமதி அளித்தார். இத்திட்டங்களைச் செயல்படுத்திய ஒப்பந்ததாரர்களோ, விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டதைவிட 300% அளவுக்கு செலவுகள் அதிகரித்துவிட்டதாகக் கணக்கு காட்டினர். அது குறித்து அரசு விசாரணை ஏதும் செயாமலேயே, செலவை 6 முதல் 33 மடங்கு உயர்த்திக் கொள்ள தாராள அனுமதி அளித்துள்ளது. உதாரணமாக, வார்தா கீழணைத் திட்டத்துக்கான உத்தேச திட்ட மதிப்பீடு ரூ.950 கோடியிலிருந்து, திருத்தப்பட்ட திட்டச் செலவு ரூ. 2,356 கோடியாக உயர்த்தப்பட்டது.
பா.ஜ.க. தலைவரான நிதின் கட்காரி இப்பிராந்தியத்தில் 5 மின் நிறுவனங்களையும் 3 சர்க்கரை ஆலைகளையும் வைத்திருக்கிறார். இதுதவிர, கட்டுமான நிறுவனம், சாராயம், விவசாயப் பொருட்களைப் பதப்படுத்தும் ஆலை முதலானவற்றையும் கொண்டு மிகப் பெரிய முதலாளியாக அவர் வளர்ந்துள்ளார். கட்காரியின் பூர்த்தி பவர் நிறுவனக் குழுமத்தின் கீழ் அவினாஷ் எரிபொருள் எனும் நிறுவனம் மகாராஷ்டிரா, ஒரிசா, ம.பி. மாநிலங்களில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
ஐடியல் ரோடு பில்டர் எனும் நிறுவனம் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியின் பூர்த்தி பவர் மற்றும் சர்க்கரை ஆலை ஆகியவற்றுக்கு நிதியளித்துள்ளது. நிதின் கட்காரி, முன்பு மகாராஷ்டிர மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, ஐடியல் ரோடு பில்டர் நிறுவனத்துக்குப் பல்வேறு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்துள்ளார். அதற்குக் கைமாறாக ஐடியல் நிறுவனம் கட்காரியின் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்துள்ளதாகக் கணக்குக் காட்டியது. கட்காரியின் மகன் நிகில், 270 மெகாவாட் திறன் கொண்ட ஐடியல் எனர்ஜி மின் நிறுவனத்தில் சுயேட்சையான இயக்குனராக உள்ளார்.
கட்காரியின் பூர்த்தி சர்க்கரை மற்றும் மின் நிறுவனத்தின் 70 சதவீதப் பங்குகளை 18 நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்த 18 நிறுவனங்கள் யார்? அவற்றின் பங்குதாரர்கள் யார் என்ற விவரத்துக்குள் போனால், அந்தப் பங்குதாரர்கள் எவருக்கும் முறையான முகவரியே இல்லை. உதாரணமாக, எர்ன்வெல் வர்த்தகர்கள் என்ற நிறுவனம் பூர்த்தி நிறுவனத்தில் 5 கோடிரூபா அளவுக்குப் பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் முகவரியாக மாலாட் கிழக்குப் பகுதியிலுள்ள கோவிந்த் கர்மான் குடியிருப்பிலுள்ள பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குடியிருப்பில் சென்று விசாரித்தால், அப்படியொரு நிறுவனமே இங்கு இல்லை என்று குடியிருப்போர் தெரிவிக்கின்றனர். பூர்த்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள பல பங்குதாரர்களின் கதையும் இதுதான். ஆனால் கட்காரியோ, பூர்த்தி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குதாரர்களாக இருப்பதால், அவர்கள் அடிக்கடி இடம் மாறியிருக்கலாம், அவர்களின் முகவரிகளைத் துல்லியமாக தெரிவிக்க வாப்பில்லை என்கிறார்.
மனோகர் பன்சீ என்பவர் கட்காரியின் வாகன ஓட்டுநர். அவர் அஷ்வாமி வர்த்தகம் என்ற நிறுவனத்தை நடத்துவதாகவும், அந்த நிறுவனம் கட்காரி நிறுவனத்தில் 3.2 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதாகவும் கணக்கு காட்டுகிறார் கட்காரி. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றுதான் பா.ஜ.க. தலைவரான கட்காரியின் கூட்டாளியும் பா.ஜ.க. எம்.பி.யுமான அஜ சஞ்செட்டியின் நிறுவனமாகும். இந்நிறுவனம் தேசியவாதக் காங்கிரசு அரசுடன் கூட்டுச் சேர்ந்து செலவுத்தொகையை பலமடங்கு உயர்த்திக் காட்டியதும், விவசாயிகளின் நலனை முன்னிட்டு இந்த நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கட்காரி கடிதம் எழுதியுள்ளார். ஒப்பந்தக்காரர்களால் கூடுதலாகக் கோரப்பட்ட தொகையைச் செலுத்துமாறு மைய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதிய கட்காரி, இந்த அணைக்கட்டுத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயிகளுக்குக் கொடுக்காமல், மின் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்து மைய அரசுக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. இதுதான் விவசாயிகளின் நலனுக்காக உருகுவதாக நாடகமாடும் கட்காரியின் லட்சணம்.
போலி நிறுவனங்களின் பெயரால் கட்காரி நிறுவத்தில் முதலீடுகள் செயப்பட்டதையொட்டி குற்றச்சாட்டுகள் கிளம்பியதும், அவரைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு பா.ஜ.க. வின் தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ராம்ஜெத்மலானி,யஷ்வந்த் சின்கா ஆகியோரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் சத்ருகன் சின்காவும் போர்க்கொடி தூக்கினர். இத்தனைக்கும் பிறகும் கட்காரியின் மீதான குற்றச்சாட்டுகள் அவரது வர்த்தகத்தில் நடந்துள்ள தவறுகள்தானே தவிர, அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுப்பட்டார் என்பதற்கான ஆதாரமல்ல என்கின்றனர், அத்வானியும் குருமூர்த்தியும்.
விதர்பாவில் நிலவிய விவசாயிகளின் தற்கொலையையும் அவலத்தையும் காட்டி நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்கி கொள்ளையடித்த அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளும் முதலாளிகளும், இப்போது அந்த நீர்ப்பாசனத் திட்டங்களால் கிடைக்கும் தண்ணீரை மின்நிலையங்களுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் மடைமாற்றிக் கொண்டுள்ளனர். விதர்பாவில் இப்போது பாசனத்துக்கு நீருமில்லாமல் போனதோடு, இப்பகுதியில் உருவாக்கப்படும் மின்திட்டங்களால் விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டு பட்டினிச் சாவுக்குள் தள்ளப்படும் பேரபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் நிலவும் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு அதன் வழியாகக் கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர். தனியார்மயம் – தாராளமயம் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் கொடூரமானது என்பதையும், அது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கானதுதான் என்பதையும் நாட்டுக்கு உணர்த்திவிட்டு தீராத அவலத்தில் புதைந்து கொண்டிருக்கிறது, மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம்.
1. ”ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தைத் தடை செய்! அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்!!” -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
2. சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
3. சாதிய அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
6. பொய்கள் – அவதூறுகளால் உண்மையை மறைத்துவிட முடியாது!
7. வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!
8 கிரானைட்: மெகா கூட்டணி – மகா கொள்ளை கிரானைட் கொள்ளையை எதிர்த்துப் போராட அறைகூவும் ஆவணப்படம்.
9. குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம்
10. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம்: பட்டினிச் சாவுக்கான நுழைவுச்சீட்டு! ”உங்கள் கையில் உங்கள் பணம்” என்ற கவர்ச்சிகரமான சொல்லடுக்கின் பின்னே, ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் தீயநோக்கம் மறைந்துள்ளது.
11. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத்திருத்தம் தீர்வாகுமா? பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் சமூக – அரசியல் கட்டமைப்புதான் பெண்களின் முதல் எதிரியாகும்.
12. நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது! மைய அரசின் அதிகாரத்தை நிலைகுலையச் செய்யும் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.
14. படிக்கட்டுப் பயணப் படுகொலைகள்: அரசே குற்றவாளி! பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் மாணவர்களைச் சாகசக்காரர்கள் எனக் குற்றஞ்சுமத்துவது அநீதியானது.
15. மினி பேருந்தா? மரண ஊர்தியா?
16. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: எதிர்த்தரப்பின் யோக்கியதை என்ன? சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்.
கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)
ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் முதலீடு செயும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கும் விரைவாக உரிமம் வழங்குவதற்காக தேசிய முதலீட்டு வாரியம் என்ற புதிய அமைப்பை முன்மொழிந்துள்ளார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஒரு பெரிய தொழில் நிறுவனம் ஒவ்வொரு துறையாக விண்ணப்பித்து அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்களைத் தவிர்த்து, அவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் மையமாக தேசிய முதலீட்டு வாரியம் செயல்படும் என்றும், இதற்கு பிரதமர் தலைவராகவும் நிதியமைச்சரும் சட்ட அமைச்சரும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் என்றும் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கை நிறைவேற்ற இத்தகைய அமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், இனி தனித்தனியாக ஒவ்வொரு துறையிடமும் தொழில் தொடங்குவதற்கு முன்னதாக ஒப்புதல் பெறத் தேவையில்லை; எவ்விதத் தாமதமோ, தடங்கலோ இன்றி அனைத்தும் இந்த வாரியத்தில் விரைவாக நிறைவேற்றித் தரப்படும்; இதனால் தொழில் வளர்ச்சி விரைவாக சாத்தியப்படும் என்கிறார் ப.சிதம்பரம். வெறுமனே உரிமங்கள் வழங்குவது, ஒப்புதல் அளிப்பது என்பதாக மட்டுமின்றி, தேர்தல் ஆணையம், மையப் புலனாவுத்துறை போன்று சட்டரீதியாக அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த வாரியம் இருக்கும்; ஒரு புதிய தொழில் நிறுவனத்துக்கு இந்த வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால், அதன் பிறகு வேறு எந்தத் துறையும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க முடியாது; தொடங்கப்படும் தொழில் நிறுவனத்தால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதைப் பற்றி மனித உரிமை அமைப்புகளோ, சுற்றுச்சூழல் இயக்கத்தினரோ, எதிர்க்கட்சிகளோ கேள்விகள் எழுப்பினால் இதற்கு தேசிய முதலீட்டு வாரியம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை; அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதுமில்லை; அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் நாட்டின் தொழில் வளர்ச்சியை விரைவாகச் சாத்தியமாக்கவும் இத்தகைய சட்ட ரீதியான அதிகார அமைப்பு அவசியமாகியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.
‘ஒரு தொழில் முனைவர், தொழில் தொடங்குவதற்கு முன்பாக பல துறைகளிடமிருந்தும் அனுமதி பெறுவதற்கு பல ஆண்டுகளாகிவிடுகின்றன; இதனால் இலக்கு நிறைவேறாமல் நட்டம் ஏற்படுகிறது; சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால், வனத்துறை அமைச்சகம் இழுத்தடிக்கிறது; இதனால் பல மின்திட்டங்கள் இன்னமும் ஒப்புதல் கிடைக்காமல் உள்ளன. நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஒப்புதல்கள் கிடைத்தாலும், அதன் பிறகு மைய அரசானது, நிலம் கையகப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் மறுவாழ்வும் அளிப்பது முதலான பிரச்சினைகளை வைத்து இழுத்தடிக்கிறது. அதிகார வர்க்கத்தின் சிவப்புநாடாத்தனம், ஊழல், மெத்தனம், அலட்சியம் தொடர்வதால், இதைக் களைந்தெறிய ஒரு அறுவை சிகிச்சை அவசியமாகிவிட்டது’ – என்று இந்த அமைப்பை சி.ஐ.ஐ; அசோசெம், ஃபிக்கி முதலான தரகுப் பெருமுதலாளிகளின் சங்கங்கள் வரவேற்று ஆதரிக்கின்றன.
நம்நாட்டிலுள்ள அரசியலமைப்பு முறைகளின்படி, ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சகத்திடமும் ஒப்புதல் பெற்றுதான் தொழில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அத்தகைய சில்லறைத் தடைகள் கூட இருக்கக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனத்தின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் சேவகர்களாக பிரதமரும் நிதியமைச்சரும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தியாவில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக ஆட்சியமைப்பு வடிவங்கள் இனி இருக்க வேண்டியதில்லை என்பதே இதன் பொருள்.
இயற்கை வளத்தையும் சுற்றுச்சூழலையும் ஒரு பெருந்தொழில் திட்டம் பாதிக்கும் என்றால், அதைத் தடுக்கின்ற பொறுப்பும் கடமையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உள்ளது. அதன்படி ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக இந்த அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும். தற்போதைய தேசிய முதலீட்டு வாரியம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி சுற்றுச்சூழல், பழங்குடியின நலத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்வி-சுகாதாரத்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு பெருந்தொழில் திட்டத்தைத் தொடங்க முடியும். இப்படி எல்லா துறைகளுக்கான கடமைகளையும் உரிமைகளையும் அதிகாரத்தையும் ஒரு அமைப்பே கையில் எடுத்துக் கொண்டால், மற்ற துறைகளும் அமைச்சர்களும் எதற்காக?
ஒரு திட்டம் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது என்றால், ஒரு திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது என்றால், இது பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது. ஒரு பெருந்தொழில் திட்டத்தால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டியது அத்துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும்தான்.
ஆனால் தேசிய முதலீட்டு வாரியம் என்ற அமைப்பு இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என்பதால், இந்த அமைப்பு பிற அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெயந்தி நடராசன் பிரதமருக்குக் கடிதம் எழுதி இந்த வாரியம் அமைக்கப்படுவதை எதிர்க்கிறார். பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் கே.சி.தேவும் இதே காரணங்களைக்கூறி எதிர்க்கிறார். சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உருவாக்கப்படும் இந்த வாரியம், ஜனநாய அரசமைப்பு முறையின் அடித்தளத்தையே சிதைக்கிறது என்கிறது, இந்து நாளேடு. இந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், அமைச்சர்களின், அமைச்சகங்களின் அதிகாரம் பறிக்கப்படுவது மட்டுமல்ல; நிலத்தை இழந்த விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து போராடினாலும் துறைசார்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பொறுப்பாக பதிலளிக்க முடியாது. போராட்டத்தை ஒடுக்க போலீசின் தடிகளும் துப்பாக்கிகளும்தான் பேசும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின், அமைச்சகங்களின் அதிகாரங்களைப் பறித்து இந்த வாரியத்திடம் இப்படி அதிகாரத்தைக் குவிப்பதன் காரணம் என்ன? ஏற்கெனவே நீடித்துவரும் பெயரளவிலான ஜனநாயக அரசமைப்பு முறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? தற்போதைய அரசும் ஆளும் வர்க்கங்களும் செயல்படுத்தி வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாகச் செயல்படுத்துவதற்கு ஏற்றதாக, நம்நாட்டில் ஏற்கெனவே உள்ள அரசியலமைப்புச் சட்டம் பொருத்தமானதாக இல்லை. தீவிரமாக்கப்படும் தனியார்மய-தாராளமய-உலகமயப் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தையே மறுவார்ப்பு செவது அவர்களுக்கு அவசியமாகியுள்ளது.
எவ்வாறு சோசலிச சீனத்தில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய முதலாளித்துவப் பாதையாளர்கள் முந்தைய அரசியலமைப்புச் சட்டங்களைப் படிப்படியாக மாற்றியமைத்து முதலாளித்துவ உற்பத்திமுறைக்கேற்ற முறையில் மறுவார்ப்பு செது முதலாளித்துவத்தை நிலைநாட்டினார்களோ, அதைப்போலவே நம் நாட்டில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக அரசியலமைப்பு முறையை மாற்றியமைத்து தனியார்மய- தாராளமய- உலகமயமாக்கலுக்கு ஏற்ப இன்றைய ஆட்சியாளர்கள் மறுவார்ப்பு செது மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். ஏகாதிபத்திய உலகமயமாக்கம், அதன் இயல்பிலேய ஜனநாயகத்தைச் சிதைக்கும் தன்மை கொண்டது. உலக அளவில் எல்லா வளங்களையும் கொள்ளையிடுவதற்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கோருவதுதான் உலகமயம். மறுகாலனியாக்கமானது பாசிச சர்வாதிகார அரசுகளையே, அப்படிப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட அரசு வடிவங்களையே உலகு தழுவிய அளவில் கோருகின்றது. இதற்கேற்ப சட்டங்களையும் அமைப்புகளையும் நிறுவனங்களையும் மறுகட்டமைப்பு செது புதிய வகைப்பட்ட அரசுகளை உருவாக்குவதே உலகமயமாக்கத்தின் நோக்கமாக உள்ளது.
இப்படித்தான் தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை, மின்துறை உட்பட பல துறைகளிலும் சுயேட்சையானதும் அதிகாரம் கொண்டதுமான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கேற்ப நில உச்சவரம்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவில் முதலீடு செதுள்ள பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் நுழைந்துள்ள அந்நிய நிதி நிறுவனங்களின் மீதான வழக்குகள்- தாவாக்களை நீதிமன்றத்துக்கு வெளியே கட்டப் பஞ்சாயத்து முறையில் தீர்த்துக் கொள்ளவதற்கு ஏற்ற வகையில் உரிமையியல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, வழக்குரைஞர்களின் போராட்டத்தால் அதை நடைமுறைப்படுத்துவதை மைய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
மொரிஷியஸ், சுவிட்சர்லாந்து போன்ற வரியில்லா சொர்க்கங்களின் வழியாக இந்தியாவில்முதலீடு செய்து வரி ஏப்பு செய்வதைத் தடுக்க, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான பொது உத்தரவு என்ற புதிய வரிவிதிப்பு முறையை இந்திய அரசு முன்மொழிந்தது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, பட்ஜெட்டுக்குப் பின்னர் இந்த வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரப்போவதாக அறிந்ததும் பலதரப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், பார்த்தசாரதி ஷோமே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை பிரதமர் அமைத்தார். அது ஏகபோக முதலாளிகளின் விருப்பத்துக்கேற்ப தனது வழிகாட்டுதலையும் பரிந்துரைகளையும் அளித்துள்ளது. அதன்படியே வருமாண்டு ஏப்ரல் முதலாக நேரடி வரி விதிப்பு மூலம் இது நடைமுறைக்கு வரப் போகிறது.
மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது; இதற்கான கள ஆவுகள் செவதையும் நிறுத்த வேண்டும் – என்று வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.களையும் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள இப்பரிந்துரையின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தால், எந்தக் கட்சியுமே இதை எதிர்த்துப் பேச வழியில்லை என்பதால், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு – அதாவது, மாண்சாண்டோ போன்ற ஏகபோக வேளாண் நிறுவனங்களின் பி.டி. பருத்தி விதைகளுக்கும், பி.டி. கத்தரிக்காக்கும் – எதிராகத்தான் நாடாளுமன்றம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படி நடந்தால் இனி மாண்சான்டோ இந்தியாவில் காலூன்றவே முடியாமல் போவிடும் என்று ஆடிப்போன மன்மோகன்சிங், பேராசிரியர் ராவ் தலைமையில் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு என்கிற நிபுணர் குழுவை அமைத்தார். அக்குழு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை வரிக்குவரி மறுத்து, மரபணு மாற்றுப் பயிர்கள் சிறப்பான நல்ல விளைவுகளைத் தருகின்றன, இதை எதிர்ப்பவர்கள் விவரம் புரியாதவர்கள்” என்று தனது பரிந்துரையாக அளித்துள்ளது. மீண்டும் கொல்லைப்புறமாக மாண்சான்டோவின் பி.டி.பருத்தி மற்றும் கத்திரிக்காயைத் திணிக்க இந்தக்குழுவின் பரிந்துரைப்படி செயல்பட முயற்சித்து வருகிறது, கைக்கூலி மன்மோகன் அரசு.
ஷோமே, ராவ் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளுக்கும் மேலானவர்களாக, ஆலோசகர்களாக, நிபுணர் குழுக்களாக மேலிருந்து திணிக்கப்பட்டு அவர்களிடம் அதிகாரம் குவிக்கப்பட்டு வருகின்றது.
ஏகாதிபத்தி உலகமயக் கட்டத்தில், இப்படி மேலிருந்து மட்டுமின்றி, கீழிருந்தும் அரசு அதிகாரம் பிடுங்கப்பட்டு வருகின்றது. சிவில் சமூக அமைப்புகள் எனப்படும் தன்னார்வக் குழுக்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தைக் கீழிருந்து செயல்படுத்தும் அமைப்புகளாக இயக்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகம் கூட இல்லாமல், யாருக்கும் பதில்சோல்லப் பொறுப்பில்லாத ஒரு அப்பட்டமான பாசிச ஆட்சி வேகமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. தலைப்பாகைக்கு ஆபத்து வந்துள்ளதாக சில அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் தலைக்கே ஆபத்து வந்துள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இன்னுமொரு சான்றுதான் தேசிய முதலீட்டு வாரியம்.
டிசம்பர் 14 ஆம் தேதி 2012 அன்று, அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது.
ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் தான் இந்த கொலைகளை துப்பாக்கியின் துணையோடு நடத்தியுள்ளான்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆடம், அவனுடைய அம்மாவுடன் நியூட்டன் நகரில் வசித்து வந்துள்ளான். ஆதாமின் தந்தை பீட்டர் லான்சா, ஜி.ஈ. கேபிடல் நிறுவனத்தின் துணைத்தலைவராக உயர் பொறுப்பில் பணிபுரிபவர். பெற்றோர் இருவரும் மூன்று ஆண்டுகளாக விவாகரத்து முடிந்து பிரிந்து வாழ்கின்றனர்.
சம்பவத்தன்று, தாயின் கைத்துப்பாக்கியால் அவரை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்று விட்டு, வீட்டில் இருந்த இன்னும் ஒரு நீளத் துப்பாக்கியையும் தானியங்கி துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு காரில் சாண்டி ஹூக் பள்ளிக்குச் சென்றிருக்கிறான் ஆடம். பள்ளியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கண்ணில் அகப்பட்டவர்களை குழந்தைகள் என்றும், ஆசிரியர்கள் என்றும் பார்க்காமல் சுட்டுத் தள்ளியுள்ளான். இறுதியில் தன் உயிரையும் மாய்த்து கொண்டான்.
இந்த சம்பவம் அமெரிக்க மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அமெரிக்காவில் பொது இடங்களில் தனி நபர்கள் இது போன்று கொலைச் செயல்களில் ஈடுபடுவது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகும். 1982-ம் ஆண்டு முதல் 61க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடந்திருப்பதாக மதர் ஜோன்ஸ் இணைய தளம் தெரிவிக்கிறது. அக்கொலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் உரிமம் பெற்றவையாகவே இருந்துள்ளன. இச்சம்பவங்களை நிகழ்த்திய நபர்கள் பெரும்பாலும் சகஜமாக வாழ்ந்து அமெரிக்க போட்டியில் தோற்றுப் போனதால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர்.
இக்கொலைகள் நடக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், ‘ஒவ்வொரு பள்ளியிலும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அரசு நியமிக்க வேண்டும்’ என்று அமெரிக்க துப்பாக்கிக் கழகத்தின் எதிர் கருத்துக்களும் வெளியாகும்.
தற்போதைய படுகொலையைப் பார்க்கும் போது குழந்தைகளைக் கூட பாதுகாக்க முடியாத அமெரிக்க சமூகத்தின் தோல்விக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
ஆடம் லான்சாவிற்கு, ஆட்டிசம் எனப்படும் மன இறுக்க குறைபாட்டின் ஒரு வகையான அஸ்பெர்கஸ் இருப்பதாக அவரது 5 வயதில் கண்டறியப்பட்டது. யாருடனும் பேசாமல், பழகாத ஒரு தனிமை விரும்பியைப் போல் இருந்தான் என்று அக்கம் பக்கம் வீட்டார் அவனுடைய குணாதிசயங்களை பற்றி கூறியுள்ளனர்.
2010 உயர் நிலைப் பள்ளி ஆண்டு புத்தகத்தில் அவனுடைய புகைப்படத்திற்கு பதிலாக ‘காமிராவுக்கு வெட்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் சராசரிக்கு அதிகமான புத்திசாலி என்று அவனது பள்ளி நண்பரகள் நினைவு கூர்கிறார்கள்.
அஸ்பெர்கஸ் வகை மன இறுக்கம் புலனுணர்வுகள், பேச்சுத்திறன் இவற்றை பாதித்து சமுதாய தொடர்புகளை துண்டிக்க செய்யும் ஒரு குறைபாடு. ஆட்டிசம், மரபு ரீதியாகவும் குழந்தை கருவில் இருக்கும் போதோ பிறந்து சில நாட்களிலோ சுற்றுச் சூழல் அல்லது உணவுப் பொருட்களில் இருக்கும் உலோக நச்சுக்கள், கதிர்வீச்சு மூலம் நரம்பு மண்டலமும் மூளையும் தாக்கப்படுவதால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் மதிப்பீட்டுப்படி, நாடு முழுவதும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம், மற்றும் சிறப்பு பராமரிப்புக்கு ஆண்டுக்கு $137 பில்லியன் தேவைப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க $2.3 மில்லியன் தேவைப்படும்.
அஸ்பெர்கஸ் வகை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விருப்பத்துக்கு மாறாக ஏதாவது நடக்கும் போது கோபத்தையும், ஆத்திரத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் நடந்து கொள்வார்கள்.
பெற்றோரின் அரவணைப்பும், தொடர்ச்சியான மருத்துவ உதவியும், ஆலோசனையும், சிறப்புக் கல்வியும் தான் அஸ்பெர்கஸ் குறைபாடு
உடையவர்களை இயல்பான வாழ்க்கை நடத்த உதவும் வழிமுறைகள் ஆகும், இதை வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை எல்லா மருத்துவ சேவையும், மருத்துவக் காப்பீடு திட்டம் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் மனநல நோய்களுக்கான சிகிச்சைகளை பெரும்பாலும் மறுத்து விடுகின்றன. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயது மகனுக்கு தாயான “லீசா லாங்” என்பவர் “நான் தான் ஆடம் லான்சாவின் தாய்”என்ற பதிவில் தனது மகனை சமாளிக்க முடியாமல், முறையான மருத்துவ சிகிச்சையும் அளிக்க முடியாமல் போராடும் துயரத்தை உருக்கமாக விவரித்துள்ளார்.
அரசு உதவியை பெற வேண்டும் என்றால் மன நோய் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மீது காவல்துறையில் கிரிமினல் வழக்கு ஒன்றை பதிவு செய்து விட்டால் அரசாங்கம் அவர்களுக்கு வைத்தியம் என்பதை சிறைச்சாலையில் அடைத்து வைத்து தரும். அமெரிக்காவின், மனித உரிமை கண்காணிப்புத் துறையின் கணிப்புப்படி, அமெரிக்க சிறைச்சாலைகளில் மனநலம் குன்றியவர்களின் எண்ணிக்கை 2000-ம் முதல் 2006 ஆண்டுக்குள் நான்கு மடங்காக அதிகமாகியிருக்கிறது.
அத்தியாவசிய மருத்துவ சேவைகள் கூட பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற சமூகக் கட்டமைப்பில் தனித்து விடப்படும் நபர்களும் குடும்பங்களும் உடல் நல, மன நலக் குறைபாடுகள் தொடர்பான முழு பொருளாதார மற்றும் மனவியல் சுமைகளை தாமே சுமக்க வேண்டியிருக்கிறது.
ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா, விவாகரத்துக்கு பிறகு வீட்டிலேயே வைத்து ஆதாமை பராமரித்து வந்திருக்கிறார். பணமும் வசதி வாய்ப்பும் இருந்ததால்தான், திருமதி நான்சி லான்சாவால் விவாகரத்து ஆன பிறகும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியே பிரச்சனை உடைய மகனை பராமரிக்க முடிந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் மகனின் நலம் கருதி அவனை மனநோய் காப்பகத்தில் கொண்டு சேர்க்க முடிவு செய்திருக்கிறார். அதை அறிந்ததிலிருந்து ஆடம் கோபமாக இருந்திருக்கிறான்.
அமெரிக்காவின் பெரும்பான்மை பதின்ம வயதினரைப் போல கணினி மற்றும் வீடியோ விளையாட்டுகளில் மிகவும் நாட்டம் கொண்டு, குழுவாக இணையத்தின் மூலம் விளையாடுவதிலும் ஆடமுக்கு பெருத்த ஈடுபாடு இருந்துள்ளது. அத்தோடு அமெரிக்க சமூகத்தின் தனிநபர் வாதம், ‘தகுதியுள்ளது மட்டும் தப்பிப் பிழைக்கும்’ என்ற கோட்பாட்டில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் தந்தை, அமைதியற்ற வீட்டுச் சூழல் அனைத்தும் சேர்ந்த ஆடம் லான்சாவின் மன இறுக்க குறைபாட்டை மோசமடையச் செய்திருக்கின்றன.
மருத்துவ உதவிக்கு இடையூறு மிக்க மனிதத்தன்மையற்ற சட்டத்திட்டங்களை வகுத்துள்ள அமெரிக்க அரசாங்கம், தங்கு தடை இன்றி துப்பாக்கி வாங்குவதற்கு வசதியான சட்டச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. “வேர்மொன்ட்” வகை துப்பாக்கி வகை வாங்க 16 வயது முதல் அனுமதி, நீளத் துப்பாக்கி வாங்கும் உரிமம் 18 வயதுக்கு மேல் அனுமதி, தானியங்கி கைத்துப்பாக்கி வாங்கும் உரிமம் 21 வயதுக்கு மேல் அனுமதி என்று வயது அடிப்படையில் துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன.
துப்பாக்கி விற்பனையை தடுத்து நிறுத்தும் எந்த முயற்சியையும் தேசிய ரைபிள் சங்கம் என்ற அமைப்பு பண பலத்தையும் அதிகார பலத்தையும் கொண்டு தடுத்து நிறுத்துகிறது. துப்பாக்கி உற்பத்தி செய்யும் முதலாளிகளோடு, பல ஆயிரக்கணக்கான சாதாரண அமெரிக்கர்களும் துப்பாக்கி சட்டங்களை மாற்றுவதை எதிர்க்கின்றனர். ‘சக மனிதர்களை நம்ப முடியாது, என்னையும் என் குடும்பத்தையும் நானே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று சமூகச் சூழலை சுட்டிக் காட்டி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.
இத்தகைய சூழலில் துப்பாக்கிகள் வாங்கி சேகரிப்பது என்பது திருமதி லான்சாவின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. ஆடம் லான்சாவையும் அவரது சகோதரனையும் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு அழைத்து போவது, அவர்களுக்கு சுடுவதற்கான பயிற்சி அளிப்பது என்று வளர்த்திருக்கிறார்.
லான்சாவின் பெற்றோர் நான்சி-பீட்டர்
மனக் குறைபாடுடைய ஆடம் லான்சா தனது விருப்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிக்காட்ட நினைக்கும் போது கைக்கெட்டிய தூரத்தில் கொலைக் கருவிகள் சட்ட பூர்வமாக வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றை பயன்படுத்தும் முறையான பயிற்சியும் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த கொடூரமான நிகழ்வுக்கு உடனடி காரணமாக இருந்திருக்கிறது.
குழந்தைகளின் உயிரிழப்பிற்காக கண்ணீர் சிந்திய அதிபர் ஒபாமா, இதை இனியும் தொடர அனுமதிக்க போவதில்லை என்று வாய்ச் சவடால் விட்டாலும், எந்தவிதமான செயல் திட்டத்தையும் முன்வைக்காமல் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹவாய்க்கு குதூகலமாக குடும்பத்துடன் சென்று விட்டார்.
மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. துப்பாக்கியின் விசைகளை அழுத்தியது ஆடம் லான்சாவாக இருந்தாலும் அவன் கையில் இந்த துப்பாக்கியை வைத்த அமெரிக்க ஆயுத முதலாளிகள்தான் இந்த கொலைகளுக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதுவரை இத்தகைய மரண பயத்தில்தான் அமெரிக்க மக்கள் வாழந்த்தே தீர வேண்டும்.
மைய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டபொழுது, பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, உப்பு சப்பில்லாத அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக அமர்த்தப்பட்டார். ஜெய்பால் ரெட்டி இப்படிப் பந்தாடப்பட்டதற்கு ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த நெருக்குதல்தான் காரணம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மையுண்டு எனப் புருவத்தை நெறித்தவர்களின் ஐயத்தைத் தீர்த்து வைத்தார், பெட்ரோலியத் துறையின் புதிய அமைச்சர் வீரப்ப மொய்லி. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சில முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டியிருக்கிறது” எனக் கூறியதன் மூலமும்; கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை மைய அரசின் தலைமைக் கணக்காயர் தணிக்கை செய்வதைத் தள்ளிப் போட்டதன் மூலமும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போட்டுடைத்தார், அவர்.
கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலுள்ள இயற்கை எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், அவ்வயல்களிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை யூனிட் ஒன்றுக்கு ரூ.226/- என்ற விலையில் அரசு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. இவ்விலையை ரூ.756/- ஆக அதிகரிக்க வேண்டுமெனக் கோரி வருகிறது, அந்நிறுவனம். ஜெய்பால் ரெட்டி இவ்விலைஉயர்வுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதோடு, ரிலையன்ஸ் நிறுவனம் குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவிற்கு எரிவாயுவை உற்பத்தி செயாமல் குறைந்த அளவிற்கே உற்பத்தி செய்து வருவதால், அந்நிறுவனம் 2011-12 ஆம் நிதியாண்டில் 100 கோடி அமெரிக்க டாலர்களை அரசிற்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த உற்பத்திக் குறைவு காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது 2012-13 ஆம் நிதியாண்டில் 172 கோடி அமெரிக்க டாலர்களும், 2013-14 ஆம் நிதியாண்டில் 210 கோடி அமெரிக்க டாலர்களும் அபராதம் விதிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்திருக்கிறார். ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியெறியப்பட்டதன் பின்னணி இதுதான் என்பது இப்பொழுது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
முதல் போட்டவனுக்கு இலாபம் கிடைக்காமல் ஜெய்பால் ரெட்டி தடுத்துவிட்டார்; அதனால் பிரதமர் மன்மோகன் சிங் அவரை பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியடித்து விட்டார் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறு பகுதிதான். இன்று பெட்ரோலியத் துறை அமைச்சகமே அம்பானியின் பாக்கெட்டில் இருப்பதாகக் கூறுகிறார்கள் இத்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள். கோதாவரிப் படுகையில் கொட்டிக் கிடக்கும் கச்சா எண்ணெ மற்றும் இயற்கை எரிவாயு வளத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கொள்ளையடித்துக் கொழுப்பதற்கு முந்தைய பா.ஜ.க. கூட்டணி அரசும், இன்றைய காங்கிரசு கூட்டணி அரசும் எல்லாவிதத்திலும் துணையாக நின்றன; நின்று வருகின்றன. சட்டபூர்வமான முறையிலும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துவரும் இக்கார்ப்பரேட் கொள்ளை முன் அலைக்கற்றை ஊழலெல்லாம் சுண்டைக்காய்தான்.
கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அப்படுகையின் பெரும்பகுதி – ஏறத்தாழ 339 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வயல்கள் உற்பத்திப் பகிர்வு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், முந்தைய பா.ஜ.க. கூட்டணி அரசால் ரிலையன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைத் தோண்டியெடுக்க எவ்வளவு மூலதனம் போடப்படுகிறதோ, அம்மூலதனத்தை ரிலையன்ஸ் முழுமையாகத் திரும்ப எடுக்கும் வரை, அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி” தொகை கொடுத்தால் போதும் என்பதுதான் உற்பத்தி பகிர்வு ஏல ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சம். இந்த மூலதனம் அதிகரிக்க அதிகரிக்க, அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி கொடுக்கும் காலமும் அதிகரித்துக் கொண்டே போகும். உமி கொண்டுவந்தவன் அவல் தின்னும் கதைதான் இது. இந்த ஒப்பந்த விதிதான் இந்தப் பகற்கொள்ளையின் ஆணி வேராக அமைந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இப்படுகையில் துரப்பணப் பணியைத் தொடங்கியபொழுது, தினந்தோறும் 4 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயுவைத் தோண்டியெடுக்க 239 கோடி அமெரிக்க டாலர் மூலதனச் செலவு பிடிக்கும் எனக் கணக்குக் காட்டியது. பின்னர், இம்மூலதனச் செலவை 519 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்து, தினந்தோறும் 8 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயுவைத் துரப்பணம் செய்யப் போவதாகக் கணக்குக் காட்டியது. இறுதியாக, இம்மூலதனச் செலவை 880 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது, ரிலையன்ஸ்.
மணிசங்கர் அயர் பெட்ரோலியத் துறையின் அமைச்சராக இருந்தபொழுது, அவர் ரிலையன்ஸ் தனது மூலதனச் செலவை அதிகரித்துக் கொள்வதை அங்கீகரிக்க மறுத்திருக்கிறார். இந்நிலையில் மணிசங்கர் அயர் இத்துறையிலிருந்து திடீரென மாற்றப்பட்டு, அம்பானி குடும்பத்தாரால் மாமா என அன்புடன் அழைக்கப்படும் முரளி தியோரா பெட்ரோலியத் துறையின் அமைச்சராக்கப்பட்டார். எரிவாயு உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கு, மூலதனச் செலவை நான்கு மடங்காக அதிகரிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியதையும் மீறி, பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முரளி தியோராவும், ஹைட்ரோ கார்பன் துறையின் தலைமை இயக்குநராக இருந்த சிபலும் ரிலையன்ஸ் தனது மூலதனச் செலவை அதிகரித்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் இப்படுகையைக் குத்தகைக்கு எடுத்தபொழுது, ஒரு யூனிட் இயற்கை எரிவாயு 124/- ரூபா என்ற அடிப்படையில் பதினேழு ஆண்டுகளுக்குத் தேசிய அனல் மின் கழகத்திற்குத் தருவதாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், உற்பத்தி தொடங்கிய ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையை 226 ரூபாயாக உயர்த்த வேண்டுமென பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தது. உள்நாட்டில் உற்பத்தி செயப்படும் இயற்கை எரிவாயுவை சர்வதேசச் சந்தை விலை அடிப்படையில் ரிலையன்ஸ் விற்க முயலுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல், பிரணாப் முகர்ஜி தலைமையில் செயல்பட்டுவந்த அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு விலை உயர்வு என்ற பகற்கொள்ளைக்கு அனுமதி அளித்தது.
தேசிய அனல் மின் கழகம் இவ்விலை உயர்வை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அக்கழகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், தேசிய அனல் மின் கழகத்திற்கு மட்டுமின்றி, தனது தம்பி அனில் அம்பானிக்கும் 226 ரூபா என்ற விலையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவை விற்கத் தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார், முகேஷ் அம்பானி. இந்த வழக்கின்பொழுது ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் உற்பத்திச் செலவு 2 அமெரிக்க டாலர்கள்தான் (ஏறத்தாழ நூறு ரூபா) என வாக்குமூலம் அளித்தது, ரிலையன்ஸ் நிறுவனம். இதேசமயத்தில், இந்திய அரசு நிறுவனமான எண்ணெய் – எரிவாயுக் கழகம் ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவை ரூ.100/-க்கும் குறைவாகவே சந்தையில் விற்பனை செய்து வந்தது. ஆனாலும், அப்பொழுது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் இவ்வழக்கை விசாரித்து வந்த அமர்வு மன்றம் ரிலையன்ஸூக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
இந்த விலை உயர்வினால் ரிலையன்ஸுக்கு 30,000 கோடி ரூபா வரை அதிரடி இலாபம் கிடைத்தது; தேசிய அனல் மின் கழகம் 24,000 கோடி ரூபா நட்டத்தில் தள்ளப்பட்டது.
இத்தீர்ப்பு வெளிவந்த அடுத்த ஐந்தாவது நாள் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்; ஓய்வு பெற்ற அடுத்த நிமிடமே, கேபினட் அமைச்சருக்குரிய தகுதி கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இது காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையல்ல.
மைய அரசு ரிலையன்ஸ் நிறுவனம் கோரியபடி ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.226/- என உயர்த்திய சமயத்திலேயே, இனி 2014-ஆம் ஆண்டு முடிய எரிவாயுவின் விலையை இதற்கு மேல் உயர்த்தக் கூடாது என நிபந்தனை விதித்து, ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனாலும், ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாகவே இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.756/- ஆக உயர்த்த வேண்டுமெனச் சண்டித்தனம் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் கோரி வரும் விலை உயர்வு ஒப்பந்த விதிகளுக்கு முரணானது என்பது ஒருபுறமிருக்க, இந்த விலை உயர்வை ஒப்புக்கொண்டால், ரிலையன்ஸிடமிருந்து எரிவாயுவைப் பெற்று இயங்கிவரும் மின் மற்றும் இரசாயன உர நிறுவனங்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 53,000 கோடி ரூபா வரை நட்டத்தைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, மின்சாரத்திற்கும் இரசாயன உரத்திற்கும் மைய, மாநில அரசுகள் தந்துவரும் மானியம் அடுத்த ஆண்டுக்குள் 48,000 கோடி ரூபா வரை அதிகரிக்கும். விலை உயர்வினால் அரசுக்கு ஏற்படும் இந்த நட்டம், இழப்பு ரிலையன்ஸுக்குக் கிடைக்கும் இலாபம் என்பதைக் கூறத் தேவையில்லை.
இந்தக் காரணங்களை முன்வைத்து ஜெய்பால் ரெட்டி விலை உயர்வை அனுமதிக்கத் தேவையில்லை எனக் கூறி வந்தபொழுது, மைய அரசின் நிதித் துறையோ, நட்டம், “கூடுதல் செலவு பற்றிக் கவலைப்பட வேண்டியது நாங்கள்தான்; பெட்ரோலியத் துறை இதில் மூக்கை நுழைக்கத் தேவையில்லை” என ரிலையன்ஸுக்குச் சாதகமாக வாதாடியிருக்கிறது. பிரதம மந்திரி அலுவலகமோ இந்தப் பிரச்சினையில் ரிலையன்ஸுக்குச் சாதகமாக முடிவெடுக்க முடியாதென்றால், இதனைச் சட்டத் துறையிடமும், அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவிடமும் விட்டுவிடுங்கள் என நயவஞ்சகமான ஆலோசனையை முன்வைத்தது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி கோதாவரிப் படுகை வயல்களில் நாளொன்றுக்கு 8கோடி கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய வேண்டும். ஆனால், பெட்ரோலிய அமைச்சகம் விலை உயர்வுக்கு அங்கீகாரம் அளிக்காததால், ரிலையன்ஸ் நடப்பாண்டில் எரிவாயுவை உற்பத்தியை நாளொன்றுக்கு 2.7 கோடி கன மீட்டராகக் குறைத்ததோடு, அடுத்த ஆண்டில் தனது எரிவாயு உற்பத்தி நாளொன்றுக்கு 1.8 கோடி கன மீட்டராகக் குறைந்துவிடும் என்றும் அறிவித்தது. இதனால், கோதாவரி எரிவாயுவை நம்பியிருக்கும் மின் மற்றும் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் ஒன்று தங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டும்; அல்லது, வெளிநாடுகளிலிருந்து எரிவாயுவை அதிக விலை கொடுத்து – யூனிட் ஒன்றுக்கு ரூ.650/- கொடுத்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.
ரிலையன்ஸ் எரிவாயு உற்பத்தியை முடக்கியதால், 2012-13 ஆம் ஆண்டில் 12,000 மெகாவாட் மின் உற்பத்தியும், அடுத்த ஆண்டில் 13,500 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்படுமென்றும்; எரிவாயு இறக்குமதிச் செலவு, மின் மற்றும் இரசாயன உர உற்பத்தி பாதிப்பு மற்றும் கூடுதல் மானியச் செலவு ஆகியவற்றால் அரசிற்கு ஏற்படவுள்ள மொத்த இழப்பு ஏறத்தாழ 1,10,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் அடாவடித்தனமான இந்த உற்பத்தி முடக்கம், ஒருபுறம் கையை முறுக்கி காரியம் சாதிக்கும் தந்திரம் என்றால், மறுபுறம், அதிக விலை கிடைக்கும் வரை எரிவாயுவை உற்பத்தி செயாமல் முடக்கி வைப்பது, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பது போன்ற கிரிமினல் குற்ற நடவடிக்கையாகும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடும் மீனவ கிராம மக்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகக் குற்றஞ்சுமத்துவதோடு, அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு உள்ளிட்டுப் பல்வேறு கிரிமினல் வழக்குகளைத் தொடுத்துள்ள அரசு, 13,500 மெகாவாட் மின் உற்பத்தி முடங்குவதற்குக் காரணமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. மாறாக, ஜெய்பால் ரெட்டியை பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியடித்து, ரிலையன்ஸ் நிறுவன முதலாளி முகேஷ் அம்பானியின் மனதைக் குளிர வைத்திருக்கிறது.
ஆறு சிலிண்டர்களுக்கு மேல் மானிய விலையில் சமையல் எரிவாயுவை வழங்கினால் பெட்ரோலிய நிறுவனங்களுக்குப் பெருத்த நட்டமேற்படும் எனப் பீதி கிளப்பி வரும் மைய அரசு, கோதாவரிப் படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் விலையை உயர்த்திக் கொள்ள ரிலையன்ஸுக்கு அனுமதி அளித்து, அதன் மூலம் அந்நிறுவனம் அடுத்த இரு ஆண்டுகளில் 43,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.
மைய அரசின் தணிக்கைத் துறை கிருஷ்ணா-கோதாவரிப் படுகை வயல்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உற்பத்தி பகிர்வு என்ற முறையில் ஒதுக்கப்பட்டதிலும்; அவ்வயல்களிலிருந்து கச்சா எண்ணெயையும் எரிவாயுவையும் உற்பத்தி செய்ய போடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மூலதனச் செலவிலும்; இயற்கை எரிவாயுவிற்கு விலை நிர்ணயம் செய்ததிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்து, மைய அரசிற்கு அறிக்கை அளித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மைய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள அத்தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா, ஹைட்ரோ கார்பன் துறையின் இயக்குநராக இருந்த சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது. எனினும், மைய அரசு அவ்வறிக்கையை வெளியேவிடாமல் அதிகாரத் தாழ்வாரங்களிலேயே அமுக்கிப் போட்டுவிட்டது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்களுள் சில, தங்களின் பங்குகளை 22,000 கோடி ரூபாக்கு விற்று இலாபமடைந்ததைப் போலவே, முகேஷ் அம்பானியும் கிருஷ்ணா-கோதாவரிப் படுகை ஒதுக்கீட்டில் 30 சதவீதப் பங்குகளை பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 37,908 கோடி ரூபாக்கு விற்றுக் கொழுத்த இலாபத்தைச் சுருட்டியிருக்கிறார். இக்கார்ப்பரேட் பகற்கொள்ளை பற்றிய செய்திகள் பத்திரிகைகள் வழியாகக் கசிந்து வெளிவந்த பிறகும்கூட, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சு.சாமி உள்ளிட்ட ஊழல் எதிர்ப்பு கனவான்களும் இதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. முகேஷ் அம்பானியின் (பண) பலம் இவர்களின் வாயை அடைத்துவிட்டது போலும்!
அம்பானி சகோதரர்களின் அன்பு மாமாவான முரளி தியோராவைத் தூக்கிவிட்டு, ஜெய்பால் ரெட்டியை பெட்ரோலியத் துறையின் அமைச்சராக்கியதன் மூலம், அத்துறையில் எல்லாம் சட்டபூர்வமான வழியில் நடப்பதாகக் காட்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது, மன்மோகன் சிங் கும்பல். முதலாளித்துவப் பத்திரிகைகளாலும், ஊழல் எதிர்ப்பு கனவான்களாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் விதந்தோதப்படும் ஜெய்பால் ரெட்டியின் நேர்மை என்பது கார்ப்பரேட் பகற்கொள்ளையைச் சட்டபூர்வமான வழியில் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பது தவிர வேறெதுவுமில்லை. டீசலுக்கும் சமையல் எரிவாயு உருளைக்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய வேண்டும் எனக் கூறி வந்த தனியார்மயத்தின் தாசானு தாசன்தான் ஜெய்பால் ரெட்டி.
பெட்ரோலிய அமைச்சகத்தில் மட்டுமல்ல, அரசின் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நத்திப் பிழைக்கும் கும்பல்தான் இன்று அமைச்சர்களாக, அதிகாரிகளாக வலம் வருகின்றனர். திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, நிதியமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், கனரகத் தொழில் அமைச்சர் பிரஃபுல் படேல், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜூ, மின்சாரத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா – இவர்கள் அனைவருமே கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலிகள்தான். இவ்வளவு ஏன், பிரதம மந்திரியாக உட்காரவைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கே உலக வங்கியின், அமெரிக்காவின் ஏஜென்ட்தானே! நாட்டின் வளங்களை இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்குத் திறந்துவிடுவதுதான் இக்கும்பல் செய்துவரும் ஒரே திருப்பணி!