தோழர் ஏகலைவன் (எ) மகாலிங்கம் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

10
தோழர்-ஏகலைவன்-டெய்லர்-மகாலிங்கம்
தோழர் ஏகலைவன்

வேலூர் மாவட்டம். திருப்பத்தூர் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ஏகலைவன் (எ) ‘டெய்லர்’ மகாலிங்கம்  அவர்கள் 28.05.2012 அன்று காலை நடந்த சாலை விபத்து ஒன்றில் தனது 65 வது வயதில் அகால மரணமடைந்தார்.

திருப்பத்தூர் – கந்திலி ஒன்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் பங்கேற்புடன் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்ட பிறகு 29.05.2012 அன்று தோழரின் உடல் அவரது சொந்த நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது

1980 களில் தோழர் ‘இருட்டுப் பச்சை’ அவர்களின் காலத்திலிருந்தே நக்சல்பாரி புரட்சிகர அரசியலோடு தொடர்பு கொண்டு பிறகு 1980 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் ஏகலைவன். அன்று முதல் திருப்பத்தூர் பகுதியில் ம.க.இ.க வின் முகவரியாகவும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் முகவராகவும் விளங்கியவர்.

இவர் ஒரு சிறந்த தையற் கலைஞர். அதனால் வங்கி – தொலைத் தொடர்பு – மருத்துவ மனை – நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  என பலரும் இவரிடம்தான் தங்களது ஆடைகளை தைத்துச் செல்வார்கள். இவர்களிடம் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளையும் அமைப்பின் பிரசுரங்களையும் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தார். இதன் மூலமாக திருபத்தூரில் ம.க.இ.க பிரபலமடைவதற்கு ஆதாரமாகத் திகழ்ந்தவர்.

இவர் ஒரு சிறந்த ஓவியக் கலைஞரும் கூட. தொடக்க காலத்தில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் விளம்பரங்களையும் ம.க.இ.க வின் போராட்டச் செயத்திகளையும் சுவரெழுத்துகளாகவும் சுவரொட்டிகளாகவும் தன்னந்தனியாகவே மக்களிடையே எடுத்துச் சென்றவர். இவரது சுவரெழுத்துக்கள் பிறரை பிரமிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும். கோடுகள் போடாமலேயே மிகப் பெரிய சுவரெழுத்துக்களை எழுதும் வல்லமை பெற்றவர். கந்திலி – திருப்பத்தூர் ஒன்றியங்களில் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தவைகளே.

திருப்பத்தூரில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ததோடு அக்கூட்டங்களில் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி உள்ளார். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து மக்களிடையே ‘நக்சலைட்’ பீதியூட்டி வந்த அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு தோழரின் துணிச்சலான செயல்பாடு மிகப் பெரிய பங்காற்றியுள்ளது.

ஒரு துணிச்சலான தோழராக விளங்கிய அதே நேரத்தில் கடின உழைப்பாளியாகவும் விளங்கியவர். மிதிவண்டிதான் அவரது 65 வது வயது வரை இவரது உற்ற நண்பன். சுவரெழுத்து எழுதுவதாக இருந்தாலும், சுவரொட்டி ஒட்டுவதாக இருந்தாலும் அல்லது தனது தையற்கடைக்கு வருவதாக இருந்தாலும் தனது கிராமத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள திருப்பத்தூருக்கு சளைக்காமல் மிதி வண்டியிலேயே பயணித்தவர். மரணத்தின் போதுகூட மிதிவண்டியோடுதான் மரணத்திருக்கிறார்.

சீனக் கதைகளில் வரும் ‘மலையைக் குடைந்த மூடக்கிழவனை’ப் போல தனது வீட்டருகே இருக்கும் ஏரிவாய்க்காலின் குறுக்கே ஒரு சிறு அணை போன்ற தடுப்பை தன்னந்தனியாய் அமைத்தவர். இவரது கடின உமைப்பை பறைசாற்றும் சான்றாய் ஊர் மக்களால் இது பேசப்படுகிறது.

அமைப்பு வேலைகளை முழுநேரமாக எடுத்துச் செயல்படும் தோழர்களைப் பராமரிப்பதிலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டியவர் தோழர் ஏகலைவன். அத்தகைய தோழர்களின் உணவு – உடை மற்றும் தோழர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையான உடை-நோட்டுப் புத்தகங்களை தானே முன் வந்து பூர்த்தி செய்வார். இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய கையில் உள்ள பணம் போதவில்லை என்றால் கடன் வாங்கியாவது ஈடு செய்வார். கழிவிரக்கம் கொண்டு அவர் இவ்வாறு செய்வதில்லை. மாறாக புரட்சியின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாகவே இவ்வாறு செய்த வந்தார்.

தனது குடும்ப உறுப்பினர்களை புரட்சிகர வேலைகளுக்கு ஆதரவாக மாற்றியமைத்தவர். சிறந்த தெருக்கூத்துக் கலைஞரான அவரது தந்தை நாராயணன் அவர்களையும் தெருக்கூத்துகளில் புரட்சிகரப் பாடல்களை எழுதிப் பாடும் அளவிற்கு மாற்றியமைத்தவர். அவரது வீடு திருப்பத்தூர் வட்டாரத் தோழர்களின் பாசறையாகவே விளங்கியது எனலாம்.

பிறர் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். அனைத்து தரப்பு மக்களிடமும் வயது வரம்பு பார்க்காமல், சாதி – மதம் பார்க்காமல் மிகவும் இயல்பாகப் பழகியவர். இவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டமே இதற்கு சாட்சியாய் அமைந்தது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் கோலோச்சும் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற சாதியினரின் வீடுகளுக்குள் இன்றைக்குக்கூட செல்ல முடியாது. ஆனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒடுக்கப்பட்ட சாதியினர் தனது வீட்டிற்கு வருவதும், உறவினர்கள் போல அவர்கள் உறவு முறை சொல்லி பழகுவதையும் நடைமுறைப் படுத்தியதோடு தனது குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் அதை ஜனநாயகப் படுத்தியவர்.

கடந்த சில ஆண்டுகளாக முன்பு போல நடைமுறை அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது புரட்சிகர உணர்வு சிறிதும் குன்றவில்லை. இறுதி அடக்கத்தின் போது செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களை அவரது பிள்ளைகள் புறக்கணித்ததை பார்த்த போது அவரது புரட்சிகர உணர்வின் மீது பிள்ளைகள் கொண்டிருந்த மதிப்பை உணர முடிந்தது.

தன்னை மட்டும் உயர்த்திக்கொள்ள பலர் முயலும் போது பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்த போதும் இவர் மட்டும் தனது வாழ்க்கையை புரட்சிகர அரசியலோடு பிணைத்துக் கொண்டதற்குக் காரணம் சமூக விடுதலையின் மீது இவர் கொண்டிருந்த வேட்கையே. அவரது வேட்கையை நாமும் நெஞ்சிலேந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சிப் போராட்டதை முன்னெடுத்துச் செல்வோம்!!

தோழர் ஏகலைவன் அவர்களுக்கு வீரவணக்கம்!

 __________________________________________________________________________

தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருப்பத்தூர்-கந்திலி ஒன்றியங்கள்.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

10 மறுமொழிகள்

 1. தோழருக்கு சிவப்பஞலி! அவரை பிரின்ட்கு வாடும் தொழர்களுக்கும் குடும்பட்தினரக்கும் எனது ஆழ்ந்த இரஙலை தெரிவிட்துக்கொல்கிறென்.

 2. தோழருடைய பல புரட்சிகர வேலைகளையும், முன்னுதாரணாமான குணங்களையும் சுட்டிக்காட்டும் பொழுது, சீனிவாசன் தோழருக்கு ஆற்றிய தோழர் மருதையன் உரை தான் நினைவுக்கு வருகிறது.

  //வாழ்கின்ற காலத்தில் எல்லாம் கம்யூனிஸ்டுக்கு கிடைப்பது என்னவென்றால் தாங்கள் செய்த வேலைகளைப் பற்றிய பரிசீலனை; தங்கள் வேலைகள் மீதான விமர்சனம்; குறைகள் குறித்த இடித்துரைகள்; அதைக்கேட்டு மாற்றிக்கொண்டு முன்னேறுவது; இன்று அவர் தன் மீது ஆற்றப்படுகிற புகழுரைகளை கேட்க முடியாத நிலை. அவருடைய நற்குணங்களை பற்றி; ஆற்றல்களைப்பற்றி இங்கு தோழர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். இது வரலாறு முழுவதும் மக்களுக்காக போராடிய அனைவருக்கும் நிகழ்கின்ற ஒரு விசயம். வாழும் பொழுது அப்படி முதுகு சொறியப்படுவதை உண்மையான போராளிகள் விரும்புவதில்லை. //

  தோழருக்கு எனது சிவப்பஞ்சலி!

 3. தோழர் சீனிவாசனின் மரணம் நிச்சம் எனத் தெரிந்தும் அவர் இறப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்காக வடித்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள் மற்றும் ஒரு நெருங்கியத் தோழனின் மரணம் அதுவும் எதிர்பாராத மரணம் என்னை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

  தோழர் ஏகலைவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். காரணம் அவர் எனது துணைவியாரின் அண்ணன் என்பதைவிட ஒரு தோழன் என்பதனால்தான். ஆரம்ப நாட்களில் அவரும் நானும் சேர்ந்து சுவரெழுத்து எழுதியதையும், பொதுக்கூட்ட மேடையில் அவர் தலைமை தாங்க நான் சிறப்புரையாற்றிய சம்பவங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். உறவுக்காரன் தோழனாய் இருக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை. இனி எனக்கு ஒரு உறவுக்காரன் தோழனாய் வருவானா என காத்துக்கிடக்கிறேன்.

  சமூகத்தின்பால் அக்கயறையில்லாமல் தனக்காக மட்டுமே வாழ்கின்ற உறவுக்காரன் மெல்ல மெல்ல எனது நெருக்கத்திலிருந்து விலகிச் செல்வதும், உறவு முறை இல்லை என்றாலும் சமூக விடுதலைக்காகப் போராடும் தோழன் என்னோடு மிக நெருங்கி வருவதும் ஏதோ தற்செயலானதல்ல. அதுதான் என் உள்ளார்ந்த மன உணர்வு.

  அதனால்தான் தனக்காக மட்டுமே வாழ்ந்து மடிகின்ற உறவுக்காரனின் மரணம் லேசானதாகவும் மக்கள் விடுதலைக்காக உழைத்து மடிகின்ற தோழனின் மரணம் கனமாதாகவும் இருக்கின்றது.

  கண்ணர் மல்க எனது தோழனுக்கு மீண்டும் சிவப்பஞ்சலி!

 4. // சீனக் கதைகளில் வரும் ‘மலையைக் குடைந்த மூடக்கிழவனை’ப் போல தனது வீட்டருகே இருக்கும் ஏரிவாய்க்காலின் குறுக்கே ஒரு சிறு அணை போன்ற தடுப்பை தன்னந்தனியாய் அமைத்தவர். //

  துணிச்சலானவர்…

  கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு, இவர் விபத்துக்குள்ளான அதே சாலையில் சிறிது தூரம் தள்ளி இரவில் ஒரு 14 அடி நீளமுள்ள ஒரு மலை பாம்பு சாலையை கடப்பதை வாகன ஒளியில் கண்ட இவர், அதை பிடிக்க முயன்று அது எதிரேயுள்ள புளியமரத்தில் ஏறியபோதும் இவருடைய நண்பர் துணையுடன் ஒரு ஏணியை கொண்டு இறுக்கி அதை கீழே தள்ளி பிடித்து ஒரு கூடையில் வைத்து, மேலே கோணிப்பை போர்த்தி தைத்து ஒரு வண்டியில் ஏற்றி இவர்கள் இருவரும் வண்டியை இழுத்துக்கொண்டே திருப்பத்தூர் வன இலாகாவை நோக்கி செல்லும்போது மீண்டும் அந்த பாம்பு தப்பித்து வண்டியின் குடையை சுற்றிய போதும் மீண்டும் போராடி பிடித்து சென்று திருப்பத்தூர் வன இலாகாவில் ஒப்படைத்தவர்.

  பாம்புகளை பற்றி ஒரு முறையான அறிவில்லாத போதும், அந்த இரவு நேரத்தில் செயல்பட்டு வன இலாகாவில் ஒப்படைத்து வன இலாகவையே ஆச்சரியபடவைத்தவர்.

 5. தனது வாழ்நாளை புரட்சிகர இலட்சியத்திற்காக செலவிட்ட தோழர் ஏகலைவனுக்கு சிவப்பஞ்சலி.

  தோழர் ஏகலைவனைப் போல் நாமும் அரசியல் ரீதியில் வளர்ந்து அவரைப் போன்ற நூற்றுக் கணக்கான தோழர்களை உருவாக்குவோம், புரட்சியை வென்றெடுப்போம் என்று உறுதியேற்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க