”பெட்ரோல் டீசல் விலை உயர்வு! எரிந்து சாம்பலாகிறது மக்களின் வாழ்வாதாரம்! ” என்கிற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கடந்த 01.10.2018 தேதியன்று மாலை 05:30 மணியளவில் கும்மிடிப்பூண்டி பஜாரில் தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேற்கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தலைமை வகித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மட்டுமல்ல இந்த ஆர்ப்பாட்டம் என்று உரையை ஆரம்பித்தார். உழைக்கும் மக்களின் சேமிப்பான வங்கிப் பணம் தொடர்ந்து வங்கிக்கடன் என்கிற பெயரிலே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைகளுக்கும், மக்களின் வரிப்பணம் வியாபம், ரஃபேல் போன்ற இமாலய ஊழல்களுக்கும், தற்போது தினம் தினம் உயர்ந்து வரும் பெட்ரோல் – டீசல் விலையேற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை உணர்த்தவும்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்றார். ஒட்டுமொத்த மக்களை சூழ்ந்துள்ள இத்தகைய அபாயகரமான நிலைமைகளை எதிர்த்து முறியடிக்க புரட்சிகர தலைமையின் கீழ் பெருந்திரள் மக்கள் போராட்டம் கட்டியமைக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவது இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என பதிவு செய்தார்.

கண்டன உரையாற்றிய மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் மக்கள் விரோத செயல்களை வரிசைகிரமமாக அம்பலப்படுத்தி அதன் தொடர்ச்சியாகத்தான் பெட்ரோல் – டீசல் விலை உயர்வையும் பார்க்க வேண்டும். பெட்ரோல் – டீசல் விலையேற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் முதலாளிகளின் இலாப நோக்கத்தையும் புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

படிக்க:
பெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் !
காங்கிரசு ஆட்சியைவிட பெட்ரோல் விலை ரொம்ப கம்மி – புளுகும் மோடி அரசு

மேலும், ”மத்திய மாநில அரசுகள் ஒருபக்கம் இந்தியாவை வல்லரசாக்குவோம் எனச் சவடால் பேசிக்கொண்டு, அநியாய வரிக்கொள்ளை மூலமாக மக்களை பொருளாதார ரீதியில் ஓட்டாண்டிகளாக்கிக்கொண்டு, மறுபக்கம் பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் மூலமாக மக்களை  பண்பாட்டு கலாச்சாரத்தின் மீதும் தாக்குதல் நடத்தி மக்களை பிளவுபடுத்துகிறது. இவற்றை அம்பலப்படுத்துகின்ற அல்லது எதிர்த்து போராடுகின்ற அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மீது அடக்குமுறை செலுத்தப்பட்டு வருகிறது” என கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு சாட்சியமாக தற்போது திருபெரும்புதூரில் நடைபெற்றுவரும் தொழிலாளர் போராட்டங்களை எடுத்துரைத்தார். யமஹா, ராயல் என்ஃபீல்டு, MSI ஆகிய ஆலைத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டு போராடிவரும் சூழலில் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு மாறாக ஆலை முதலாளிகளுக்கு நேரடியாகவே அரசு துணை நிற்பதை அம்பலப்படுத்தி இவற்றிற்கு எதிராக வலுவான மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படக்கூடிய ஆலைத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரோடு திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் இடையே பெட்ரோல் – டீசல் விலை உயர்வு குறித்து தொழிலாளி ஒருவர் எழுதிய பாடல் ஒன்றை சினிமா பாடல் வரிகளை மாற்றியமைத்து பாடப்பட்டது. இது மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு – 94444 61480.

சந்தா செலுத்துங்கள்

ஊடகத்துறையில் அஞ்சாமல், தளராமல், அறிவார்ந்து வினவு செயல்பட நீங்களும் தோள் கொடுக்க வேண்டாமா? ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க