பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 13

ழுந்து நிற்க வீண் முயற்சி செய்த பின் நிலை குலைந்து விழுந்த அலெக்ஸேய் கனநேர உணர்வு அவனைச் சுய நினைவு அடையச் செய்தது. பைன் மரச் சோலைவில் சந்தேகமின்றி மறைந்திருந்தார்கள் ஆட்கள். அவர்கள் அவனைக் கண்காணித்தார்கள். எதையோ பற்றிக் கிசுகிசு வென்று பேசிக்கொண்டார்கள்.

அலெக்ஸேய் கைகளை ஊன்றி நிமிர்ந்து, வெண்பனியிலிருந்து ரிவால்வாரை எடுத்துக்கொண்டு அதைத் தரைக்கு அருகில் மறைவாகப் பிடித்தவாறு உன்னிப்பாக நோக்கலானான். அபாயம் அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்தது. உணர்வு தெளிவாக வேலை செய்தது. இவர்கள் யார்? விறகு வெட்டுவதற்காக பாசிஸ்டுகளால் இங்கே வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டிருக்கும் மரம் வெட்டிகளோ? ஒருவேளை அவனைப் போலவே பகைவர்களால் சூழப்பட்ட ருஷ்யர்களோ? ஜெர்மானியப் பின்னணிகளிலிருந்து முனைமுக வரிசையின் ஊடாகத் தம்மவர்களிடம் செல்கிறார்களோ? அல்லது அந்த வட்டாரத்தைச் சேர்ந்த குடியானவர்களில் யாரேனுமோ? யாரோ ஓருவன் “மனிதனா” என்றுத் தெளிவாகக் கத்தியது அவன் காதில் படத்தானேச் செய்தது?…

இவ்வாறு அவன் எண்ணமிடுகையில் புதர்களிலிருந்து கிளர்ச்சி பொங்கும் குழந்தைக் குரல் கணீரென ஒலித்தது:

“ஏய், நீ யார்? ஜெர்மன்காரனா? உனக்கு ஜெர்மன் பாஷை தெரியுமா?’

இச்சொற்கள் அலெக்ஸேயைத் திடுக்கிடச் செய்தன. ஆனால் கத்தினவன் சந்தேகமின்றி ருஷ்யன், சந்தேகமின்றிச் சிறுவன் என்பது தெளிவாயிருந்தது.

“நான் ருஷ்யன், ருஷ்யன். நான் விமானி. ஜெர்மானியர்கள் என் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டார்கள்.”

இப்போது அலெக்ஸேய் எச்சரிக்கையாக இருக்கவில்லை. புதர்களின் பின்னே இருப்பவர்கள் தன்னவர்கள், ருஷ்யர்கள், சோவியத் நாட்டினர் என்பது அவனுக்கு உறுதிப்பட்டு விட்டது. அவர்கள் அவனை நம்பவில்லையாக்கும். அதனால் என்ன? யுத்தம் எச்சரிக்கையை கடைப்பிடிக்க கற்பிக்கிறது. தான் முற்றிலும் வலு இழந்து விட்டதையும் கையையோ காலையோ மேற்கொண்டு அசைக்கவோ, இயங்கவோ, தற்காத்துக் கொள்ளவோ தன்னால் முடியாது என்பதையும் தனது நெடும் பயணத்தில் முதல் தடவையாக அவன் உணர்ந்தான். இவனுடைய கன்னங்களில் கறுத்த குழிவுகள் வழியே பெருகி வழிந்தது கண்ணீர்.

”பார், அழுகிறான்! ஏய், நீ எதற்காக அழுகிறாய்?’ என்று ஒலித்தது புதரின் பின்னிலிருந்து வந்த குரல்.

“அட, ருஷ்யன் நான், ருஷ்யன், நம்மவன், விமானி.”

“எந்த விமான நிலையத்தை சேர்ந்தவன்?”

“ஆமாம் நீங்கள் யாரோ?”

“உனக்கு அது எதற்காக? நீ பதில் சொல்லு!”

“நான் மொன்ச்சாலோவ்ஸ்க் விமான நிலையத்தைச் சேர்ந்தவன். எனக்கு உதவுங்களேன், வெளியே வாருங்களேன்! என்ன சனியன் பிடித்த…”

புதர்களுக்குள் ஆட்கள் தீவிரமாகக் கிசுகிசுத்து விவாதித்தார்கள். இப்போது அவர்களுடைய பேச்சு அலெக்ஸேய்க்குத் தெளிவாகக் காதில் விழுந்தது.

படிக்க:
மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !

“கேட்டாயா, மொன்ச்சாலாவ்ஸ்க் நிலையத்தைச் சேர்ந்தவனாம்…. ஒருவேளை உண்மையாயிருக்கலாம்… ஏய், விமானி, ரிவால்வாரை இப்படி வீசி எறி! எறிந்து விடு, சொல்லி விட்டோம். இல்லாவிட்டால் வெளியே வர மாட்டோம், ஓடி விடுவோம்!”

அலெக்ஸேய் ரிவால்வாரை ஒரு புறம் எறிந்தான். புதர்கள் விலகின. ஆவல் கொண்ட சிட்டுக் குருவிகள் போன்று எந்த நிமிடமும் சிவ்வென்றுப் பறந்து விடத் தயாராக எச்சரிக்கையுடன், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அவன் பக்கம் நெருங்களாயினர் இரண்டு சிறுவர்கள்.

மூத்தவன், தகப்பனின் பிரம்மாண்டமான நமுதா நீள் ஜோடுகளை அணிந்து அலெக்ஸேயின் அருகே வந்து வெண் பனியில் கிடந்த ரிவால்வாரை எற்றித் தள்ளினான்.

“விமானி என்றா சொல்லுகிறாய்? தஸ்தாவேஜுகள் இருக்கின்றனவா? காட்டு”

சட்டைப் பைக்குள்ளிருந்து பிரமாணப் புத்தகத்தை எடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று. கமாண்டருக்குரிய நட்சத்திரம் பொறித்த சிவப்புப் புத்தகம் சிறுவர்கள் மீது மந்திரம் போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியது. பகைவர் கைப்பற்றலுக்கு உள்ளாகியிருந்த நாட்களில் அவர்கள் இழந்துவிட்ட பிள்ளைமைக் கூட, அவர்கள் முன் தங்களவன், அருமை சோவியத் சேனையைச் சேர்ந்த விமானி இருப்பதைக் கண்டதுமே ஒரேயடியாகத் திரும்பி வந்துவிட்டது போல் இருந்தது.

“மாமா, நீ ஏன் இப்படி இளைத்துப் போயிருக்கிறாய்?”

“பாசிஸ்டுகள் இங்கிருந்து விரட்டப்பட்டார்கள். நம்மவர்கள் அவர்களை எப்படி அடித்துப் புடைத்து நொறுக்கினார்கள் தெரியுமா? பயங்கரச் சண்டை நடந்தது இங்கே. ஜெர்மன்காரர்களைக் கொன்று குவித்து விட்டார்கள் நம்மவர்கள். அடேயப்பா, எத்தனை பேரைக் கொன்று விட்டார்கள் தெரியுமா?”

“பாசிஸ்டுகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அகப்பட்டதில் ஏறிக்கொண்டு தப்பி ஓடினார்கள். ஒருவன் தொட்டியை ஏர்க்காலுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு தொட்டியில் சவாரி செய்தான். காயமடைந்த இரண்டு பேர் குதிரை வாலைப் பிடித்துக் கொண்டார்கள். மூன்றாமவன் அதன் மேல் ஏறிக் கொண்டான். இந்தக் கோலத்தில் அவர்கள் பிரயாணம் செய்தார்கள்… ஆமாம் மாமா, உன் விமானத்தை யார் அடித்து வீழ்த்தினார்கள்?” இப்படிச் சற்று நேரம் புட்கள் போலச் சிலம்பிய பின் சிறுவர்கள் காரியத்தில் முனைந்தார்கள்.

திறப்பு வெளியிலிருந்து குடியிருப்பு அவர்களின் தகவலின்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. வில்லோ மரக்கிளைகள் சேகரிப்பதற்காக “ஜெர்மானியக் காடு திருத்திடத்துக்கு இச்சிறுவர்கள் கொண்டுவந்திருந்த ஸ்லெட்ஜ் மிகமிகச் சிறியதாக இருந்தது. தவிர, பாதையற்ற கன்னி வெண்பனிமீது ஓர் ஆளை இழுத்துச் செல்வது சிறுவர்களின் சக்திக்கு மீறிய செயல். முழு மூச்சாகக் கிராமத்துக்கு ஓடி ஆட்களை அழைத்து வரும்படி இளையவன் பேத்யாவுக்கு உத்தரவிட்டான் மூத்தவன் செர்யோன்கா. தான் அலெக்ஸேயை ஜெர்மானியர்களிடமிருந்து பாதுகாப்பதற்பாக அவனருகே தங்கிவிட்டான். ஆனால் வெளிக்கு இப்படிச் சொன்ன போதிலும் உள்ளூற அவன் நினைத்தது வேறு. அலெக்ஸேயை அவன் நம்பவில்லை. பாசிஸ்டு பலே தந்திரக்காரன். சாகப்போகிறவன் போலப் பாவனைச் செய்வான், சான்றுப் பத்திரங்களையும் எங்கேனும் திருடியிருப்பான்…” என்று எண்ணினான். ஆனால் கொஞ்சங் கொஞ்சமாக இருந்தச் சந்தேகங்கள் விலகிவிடவே சிறுவன் கலகலவென்று பொரிந்து கொட்டத் தொடங்கினான்.

மென்மையான, புஸ்புஸுவென்று அடர்ந்த ஊசியிலைப் பரப்பின் மேல் படுத்து, பாதி மூடிய விழிகளுடன் உறங்கி வழிந்தான் அலெக்ஸேய். சிறுவனின் கதையை அவன் அரை குறையாகவே கேட்டான். திடீரென அவனது உடல் முழுவதையும் பிணித்த அமைதியான உறக்க நிலையில், தனித்தனியான, சம்பந்தா சம்பந்தம் இல்லாத சொற்றொடர்களே அவன் உணர்வை எட்டின. அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ளாமலே தாய் மொழியின் ஒலிகளில் துயிலுடனே இன்பம் துய்த்தான் அலெக்ஸேய். ப்ளாவ்னி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அப்புறம்தான் அவன் தெரிந்து கொண்டான்.

“பாசிஸ்டுகள் இங்கிருந்து விரட்டப்பட்டார்கள். நம்மவர்கள் அவர்களை எப்படி அடித்துப் புடைத்து நொறுக்கினார்கள் தெரியுமா? பயங்கரச் சண்டை நடந்தது இங்கே.

காடுகளும் ஏரிகளும் நிறைந்த இந்தப் பிரேசத்துக்கு ஜெர்மானியர்கள் அக்டோபர் மாதமே வந்துவிட்டார்கள். ப்ளாவ்னியின் சுற்று வட்டாரங்களில் சண்டைகள் நடக்கவில்லை. ஒரு முப்பது கிலோ மீட்டர் மேற்கே அவசர அவசரமாக நிறுவப்பட்டிருந்த தற்காப்பு அரண்வரிசையில் இருந்த சோவியத் படைப் பிரிவைத் தாக்கி அழித்துவிட்டு விறல் மிக்க டாங்கி முன்னணிப் பிரிவுகளுடன் வந்த பாசிஸ்ட் படைகள், பாதையிலிருந்து ஒதுக்குப்புறமாகக் காட்டு ஏரியின் பக்கத்தில் மறைந்திருந்த இந்தக் கிராமத்தின் உள்ளே புகாமலே கிழக்கு நோக்கிச் சென்றுவிட்டன.

படிக்க:
♦ பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா !
♦ சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

போர் தங்களை விட்டு விலகிப் போய்விட்டது என்று பளாவ்னி கிராமக் குடியானவர்கள் மகிழ்ந்தார்கள். பாசிஸ்டுகள் வழக்கமாகக் கோருவதற்கு இணங்கத் தங்கள் கூட்டுப் பண்ணைத் தலைவனது பதவிப் பெயரை நாட்டாண்மைக்காரன் என்று மாற்றிவிட்டார்கள். ஆக்ரமிப்பாளர்கள் சதாகாலமும் சோவியத் மண்ணை மிதித்து வைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஆகவே இத்துன்பம் விலகும் வரைப் பொறுத்துச் சமாளிக்கக் காட்டின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ப்ளாவ்னி கிராமத்தவர்களுக்கு ஒரு வேளை முடியலாம். இவ்வாறு நம்பி, கிராமவாசிகள் முன் போலவே கூட்டுறவு முறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சதுப்பு நிலப் பூண்டு நிறச் சீருடை அணிந்த ஜெர்மானியர்களைத் தொடர்ந்து மோட்டார்களில் வந்தார்கள் கறுப்புநிறச் சீருடை அணிந்த ஜெர்மானியர்கள். அவர்களுடைய தொப்பிகளின் மேல் மண்டையோடும் எலும்புகளும் அடையாளமாகப் பொறிக்கப்பட்டிருந்தன. ஜெர்மனிக்கு நிரந்தர வேலைக்காகச் செல்ல பதினைந்து தொண்டர்களை இருபத்து மணி நேரத்திற்குள் தருமாறு ப்ளாவ்னி வாசிகளுக்கு உத்தரவு இடப்பட்டது. உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால் கிராமம் பெரு விபத்துக்கு உள்ளாகும் என்று அச்சுறுத்தப்பட்டது.

ஆனால் குறித்த நேரத்தில் ஒருவரும் வரவில்லை. கறுப்பு உடையணிந்த ஜெர்மானியர் ஏற்கனவே அடைந்துள்ள அனுபவம் காரணமாக, ஆட்கள் வருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சில ஆட்களைப் பிடித்து, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு முன் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் – மற்றவர்களை எச்சரிப்பதற்காக. நாட்டாண்மைக்காரன், குழந்தைப் பள்ளியின் முதிய ஆசிரியை வெரோனிக்கா கிரிகோர்யெவ்னா, இரு கூட்டுப் பண்ணைக் குழுத் தலைவர்கள், ஜெர்மானியர் கைகளில் பிடிபட்ட ஒரு பத்து குடியானவர்கள் ஆகியவர்கள் இந்த மாதிரிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய உடல்களை அடக்கம் செய்யவும் ஜெர்மானியர் அனுமதிக்கவில்லை. இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தொண்டர்கள் உத்தரவில் குறிக்கப்பட்ட இடத்துக்கு வந்து சேராவிட்டால் கிராமத்தினர் எல்லோருக்கும் இந்தக் கதியே என்று அறிவித்தனர்.

தொண்டர்களோ இந்தத் தடவையும் வரவில்லை. எஸ்.எஸ். படையினர் காலையில் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கையில் எல்லா வீடுகளும் வெறுமையாயிருந்தன. கிழவர்களோ, சிறுவர்களோ, ஒரு பூதரும் இல்லை அவற்றில். தங்கள் வீடுகளையும் நிலத்தையும் வருஷக்கணக்காக சேர்த்திருந்த எல்லாப் பண்டங்களையும், அனேகமாக எல்லாக் கால்நடைகளையும் அப்படியே போட்டுவிட்டு, இந்த வட்டாரங்களில் அடர்த்தியாக இருக்கும் இரவுப் பனி மூட்டத்தின் மறைவில் எல்லா ஜனங்களும் போன சுவடு தெரியாமல் மறைந்து விட்டார்கள். கிராமத்தார் அனைவரும் ஓர் ஆள் பாக்கியின்றிப் பதினெட்டு வெர்ஸ்டாக்கள் தொலைவில் காட்டுக்குள் இருந்த பழையத் திருத்திடத்துக்குக் குடியேறிப் போய்விட்டார்கள். மண்ணைத் தோண்டி நிலவறைகள் அமைத்த பின் ஆண்கள் கொரில்லாப் போர் புரியச் சென்றார்கள். பெண்களும் குழந்தைகளும் வசந்த காலம் வரும் வரை காட்டில் தங்கியிருந்தார்கள். கலகக்கார கிராமத்தை எஸ். எஸ். படையினர் எரித்து சாம்பலாக்கிவிட்டார்கள். பாசிஸ்டுகள் செத்த பிரதேசம் என்று அழைத்த இந்த வட்டாரம் முழுவதிலும் பெரும்பாலான கிராமங்கள் இவ்வாறே தீக்கிரையாக்கப்பட்டன.

“… எங்கள் அப்பா கூட்டுப் பண்ணைத் தலைவராக – இருந்தார். அவரை நாட்டாண்மைக்காரர் என்று ஜெர்மானியர்கள் அழைத்தார்கள்” என்று சொல்லிக் கொண்டு போனான் செர்யோன்கோ. அவனுடைய சொற்கள் சுவரின் மறுபுறமிருந்து வருபவைப் போல அலெக்ஸேயின் உணர்வில் சென்று பதிந்தன. “அவரையும் என் அண்ணனையும் ஜெர்மானியர் கொன்று விட்டார்கள். பதினாறு ஆட்கள் கொல்லப்பட்டார்கள். என் கண்ணால் பார்த்தேன். அவர்களைப் பார்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் இழுத்து செல்லப்பட்டோம். அப்பா விடாமல் கத்தித்திட்டி நொறுக்கினார். ’பன்றிப் பயல்களா, எங்களுக்காக உங்களைப் பழிவாங்குவார்கள் சோவியத் வீரர்கள்! எங்களைப் படுத்தியதற்குத் தண்டனையாக இரத்த கண்ணீர் வடிக்கப் போகிறீர்கள்’ என்று இரைந்தார்…”

அவரையும் என் அண்ணனையும் ஜெர்மானியர் கொன்று விட்டார்கள். பதினாறு ஆட்கள் கொல்லப்பட்டார்கள். என் கண்ணால் பார்த்தேன். அவர்களைப் பார்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் இழுத்து செல்லப்பட்டோம்.

அலெக்ஸேய் உறக்க மயக்கத்திலிருந்து சிரமத்துடன் தன்னை விடுவிடுவித்துக் கொண்டு, ”அப்படியானால் காட்டி தான் வசிக்கிறீர்களாக்கும்?” என்று காதில் அரிதாகவே படும்படி ஈன சுரத்தில் சிறுவனிடம் வினவினான்.

“வேறு எங்கே? அங்கேதான் வசிக்கிறோம் பேத்யா, அம்மா, நான், மூன்று பேர் தாம் இருக்கிறோம். நியூக்ஷா என்று ஒரு தங்கை இருந்தாள். பனிக்காலத்தில் காலமாகிவிட்டாள் – உடம்பெல்லாம் வீங்கிச் செத்துப் போனாள். இன்னோரு சின்னக் குழந்தையும் செத்துப் போய்விட்டது. ஆக மீதம் இருப்பவர்கள் நாங்கள் மூன்று பேர் மட்டுமே… அதோ பேத்யாவோடு, தாத்தா வருகிறார் பாருங்கள்!”

சிறுவர்களால் மிஹாய்லா தாத்தா என்று அழைக்கப்பட்ட கிழவர் உயரமும் கூனலும் ஒடிசலுமாக இருந்தார். அவர் முகத்தில் நல்லியல்பு சுடர் விட்டது. குழந்தையினுடையவை போன்ற தூய விழிகள் ஒளி வீசின. முற்றிலும் வெள்ளியாக நரைத்த அடர்த்தியற்ற மென் தாடி, அருவிப் போலக் காட்சியளித்தது. பல நிற எட்டுத் துணிகளால் ஆன பழைய ஆட்டுத் தோல் மேல் கோட்டை அலெக்ஸேய்க்கு மாட்டி, அவனுடைய லேசான உடலை அனாயசமாகத் தூக்கி அப்புறமும் இப்புறமும் புரட்டியவாறு கிழவர் இடைவிடாது பேசிக் கொண்டு போனார். அவர் குரலில் குழந்தைத் தனமான வியப்பு தொனித்தது.

“அடப் பாவமே! ஆள் எப்படி ஒரேடியாக தேய்ந்து மாய்ந்து போயிருக்கிறான்! எவ்வளவு எய்த்து இளைத்து விட்டான் பாரேன்!… அட என் ஆண்டவனே, வெறும் எலும்புக்கூடு தான் மிச்சம்! சண்டைதான் ஆட்களை என்னவெல்லாம் பாடுபடுத்து கிறது. அடா-டா-டா! அடா-டா-டா!”

பச்சைக் குழந்தையைப் போல அலெக்ஸேயைப் பதபாகமாகத் தூக்கி, அகன்ற ஸ்லெட்ஜில் கிடத்தினார். பூட்டுக்கயிற்றை அவன் மேல் சுற்றிக் கட்டினார், சற்று யோசித்தார். தமதுத் துணிக் கோட்டைக் கழற்றிச் சுருட்டி அலெக்ஸேயின் தலைக்கு அடியில் வைத்தார். முன்னே போய், கோணிச் சாக்குகளால் ஆன நுகத்தில் கழுத்தை மாட்டிக் கொண்டார், சிறுவர்களுக்கு ஆளுக்கு ஒரு கயிறு கொடுத்து, “”ஊம், புறப்படுவோம்!” என்றார். மூவருமாக இளகிய வெண்பனிமீது ஸ்லெட்ஜை இழுத்துச் செல்லலானார்கள். வெண்பனி, ஸ்லெட்ஜின் சறுக்கு கட்டைகளுக்கு அடியே உருளைக்கிழங்கு மாவுப் போல ஒட்டிக் கொண்டு கறுமுறுத்தது, பாதங்களுக்கு அடியே புதைந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க