மிழகத்தின் தலைசிறந்த நீரியல் அறிஞர்களில் ஒருவரான முனைவர் பழ. கோமதிநாயகம் அவர்கள் ”தமிழக ஆறுகளில் பல ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கொள்ளையின் விளைவாக தமிழகத்தின் வளங்களும் நலன்களும் எத்தகைய பாதிப்புக்குள்ளாகி வருகிறது” என்பதை ஆய்ந்து ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார்.

ஆறுகளைக் காப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரை போடப்பட்டுள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இந்நூலின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். (பதிப்பாளர் குறிப்பிலிருந்து…)

ஆறுகள் தண்ணீரை மட்டுமன்றி செழிப்பான வண்டலையும் மணலையும் அள்ளித்தருகின்ற. அளவுடன் பயன்படுத்தினால் தொடர்ந்து இந்த வளங்கள் நமக்குக் கிடைக்கும். ஆனால் தற்போது தண்ணீரும் மணலும் வணிகப் பொருளாகிவிட்டன. தமிழ்நாட்டில் ஆறுகளில் மணல் வளத்தைப் பாதுகாக்கப் போட்ட சட்டங்களும் அவை எப்படி வளைக்கப்பட்டு மணல் கொள்ளை தற்போதைய உச்சகட்டத்தை அடைந்த வரலாற்றை காணலாம்.

ஆறுகளைக் காப்பதற்காக 1884-ல் ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது. இன்றும் அச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தின் தொடர்பாக இடப்பட்ட அரசு ஆணை எண் 123/24-8/15.4.1911-ன் படி (இணைப்பு-1)

* ஆற்றின் இருபுறமும் வெள்ளக்கரைகளுக்கு அப்பால் 100 அடிவரை (தனியார் நிலங்கள் உட்பட) மண் அல்லது மணல் அள்ளக்கூடாது.

* தேவைக்காக மணல் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட ஆற்றுக்குப் பொறுப்பான பொதுப்பணித்துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அந்த அலுவலர் மணல் எடுக்க உத்தேசித்திருந்த இடத்தைப் பார்வையிட்டு மணல் எடுப்பதனால் ஆற்றின் பாதுகாப்பிற்கு இடையூறு உள்ளதா என்பதை ஆய்வு செய்தபின் சில விதிகளுடன் அனுமதி வழங்குவார். மணல் எடுப்ப்தை எப்போது வேண்டுமானாலும் தடுக்கும் அதிகாரம் அந்த அலுவலருக்கு உண்டு. விதிகளை மீறி மணல் அள்ளினால் சிறைத்தண்டனையுடன் ரூபாய் 50 அபராதமும் விதிக்கப்படும். (1911-ல் ரூபாய் 50 -ன் மதிப்பை எண்ணிப்பாருங்கள்) …

சென்னை பஞ்சாயத்துகள் சட்டம் 1958 (Madras Panchayat Act 1958) சட்டப்பிரிவு 84-ன் படி, பஞ்சாயத்துகளுக்கு ஏரி குளங்கள் மீது உரிமைகள் இருந்தன. எனவே ஆறு, குளங்களில் மணல் அள்ளுவதை அனுமதிப்பது கிராமப்பஞ்சாயத்துகளின் அதிகார வரம்பிற்குட்பட்டது. 1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட 73-வது திருத்தப்படி பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் சட்டம் இயற்றின. இதன்படி சென்னை கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் 1958-லிருந்து பிரிவுகள் 83 மற்றும் 85, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தில் பிரிவு 132 மற்றும் 133 ஆகவும் சேர்க்கப்பட்டன. பஞ்சாயத்துகளுக்கு நீர்நிலைகளிலிருந்த உரிமை வழங்கிய பிரிவு 84 புதிய பஞ்சாயத்துக்கள் சட்டத்தில் நீக்கப்பட்டது. பிரிவு 85-ல் வழங்கப்பட்டிருந்த அதிகாரம் புதிய பஞ்சாயத்துகள் சட்டத்தின் பிரிவு 133ன்படி மாவட்ட ஆட்சியாளருக்கு அளிக்கப்பட்டது. அதோடு நீர்நிலைகள் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்படாமல் பஞ்சாயத்து ஒன்றியங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பஞ்சாயத்துகளிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் அளிக்கப்பட்டதன் விளைவு ஆறுகளில்  நடைபெறும் மணற்கொள்ளையைப் பார்த்தாலே தெரியும்.

படிக்க:
குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி !
பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?

1957-ல் மத்திய அரசு ஆற்று மணலை சிறு கனிமம் என்று வகைப்படுத்தியது. இந்திய அரசின் சுரங்கங்கள் கனிமங்கள் (பயன்பாடும் கட்டுப்பாடும்) 1957 சட்டத்தின் வழிகாட்டுதலில் உருவான தமிழ்நாடு சிறுகனிமங்கள் பயன்பாட்டு விதிகளின்படி ஆற்றில் உள்ள மணல் ”சிறு கனிமம்” Minor Mineral என்று வரையறுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளருக்கு மணல் உரிமையாக்கப்பட்டது. ஆறுகளில் மணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, இச்சட்டம் மணல் அள்ளுவதைக் குத்தகைக்கு விடுவதைக் குறித்த சட்டமாகக் கருதப்படுகிறது. ஆற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதை இச்சட்டம் அனுமதிக்கவில்லை. பிறகு 19.04.2004 இல் ஒரு அரசு ஆணையின்படி அரசு தொழில்துறை செயலாளர் அனுமதியுடன் இயந்திரங்கள் பயன்படுத்தலாம் என்று சட்டம் திருத்தப்பட்டது. (இணைப்பு-2) எல்லா இடங்களிலும் இராட்சச இயந்திரங்கள் மூலம் மணல் சுரண்டப்படுவதைக் காண்கிறோம். யாருக்காக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது? ஆனால் அப்பாவி விவசாயிகள் குளங்களில் தூர் வாரினால் அவர்களைக் கைது செய்ய இச்சட்டம் வருவாய்த்துறையால் பயன்படுத்தப்படுகிறது…

1996-ல் காவிரி ஆற்றில் மாயனூர் பகுதியில் இராட்சத இயந்திரங்களின் உதவியுடன் மணல் அள்ளப்பட்டது. வெளியாட்கள் எளிதில் உள்ளே போகமுடியாது. இந்த இடத்தில் 25 எக்டேர் பரப்பில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு மணல் அள்ள ஏதுவாக நடு ஆறு வரை ரோடு போட்டு சிறிய அணையே உருவாகியிருந்தது. நாளொன்றுக்கு 300 லாரிகள் கோவை – ஈரோடு பகுதிகளில் அதிக விலைக்கும் அதைவிட அதிக விலையில் கேரள மாநில பாலக்காட்டிலும் விற்கப்பட்டது. அந்த கிராம மக்களுக்கு அவர்களுடைய குடிதண்ணீர் ஆதாரத்திற்கு ஆபத்து வந்ததும் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை அடக்க குண்டர்களை கொண்ட கூலிப்படை மணல் கொள்ளையர்களால் ஏவிவிடப்பட்டது. பணம் மற்றும் மிரட்டல் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை ஏவிவிட்டு  அவர்கள் மூலம் ”மணல் அள்ளுவதைத் தடுத்தால் பெரிய போராட்டம் வெடிக்கும்” என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சாதிக்கலவரம் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இந்த நிலையில் கரூர் வழக்கறிஞர் திரு பி.ஆர். குப்புசாமி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 09.02.1996 அன்று அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நில – நீரியல் வல்லுனர் குழுவினரை திரு. பி.ஆர். குப்புசாமி அவர்கள் அங்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், அவர்களை மாபியா கும்பல் வழிமறித்தனர். அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் குழுவினரை திரும்பிப் போகும்படி வேண்டினார். அவரும் பயத்தில் இருப்பது தெரிந்தது. இந்த சூழ்நிலையில் தங்களுடைய அறிக்கையை குழுவினர் அளித்தனர். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கரூர் மாவட்ட ஆட்சியாளருக்கு மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. கரூர் மாவட்ட ஆட்சியாளர் மணல் எடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ததுடன் இரண்டரைக் கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். மணல் கொள்ளை அப்போது நின்றது. சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மணல் கொள்ளை அங்கு ஆரம்பித்துவிட்டது… (நூலிலிருந்து பக்.5-9)

நூல் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை
ஆசிரியர் : முனைவர் பழ. கோமதிநாயகம்

வெளியீடு : தமிழ்க்குலம்,
33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை – 600 004.
தொலைபேசி எண்: 044 – 2464 0575.

பக்கங்கள்: 84
விலை: ரூ 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

1 மறுமொழி

  1. உங்களை வாழ்த்துவதற்கு வயது இல்லை சிறப்பு அருமை வாழ்க என்றும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க