அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 51

பிரான்சில் ஆடம் ஸ்மித்

அ.அனிக்கின்

நாம் மேலே வர்ணித்திருக்கும் சம்பவங்களுக்கு ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஜான் படிஸ்ட் ஸேய் 1765-1766ம் வருடங்களில் ஸ்மித் பாரிசில் தங்கியிருந்த காலத்தைப் பற்றி வயோதிகரான டுபோன்னிடம் கேட்டார். ஸ்மித் டாக்டர் கெனேயின் “மாடியறை மன்றத்துக்குப்” போவதுண்டு; ஆனால் அவர் அங்கே அமைதியாகவே உட்கார்ந்திருப்பார், பிஸியோகிராட்டுகளின் கூட்டங்களில் எதுவும் பேச மாட்டார்; எனவே நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை எதிர்காலத்தில் எழுதிப் பிரபலமடையப் போகின்ற ஆசிரியர் இவர்தான் என்று யாரும் சந்தேகித்திருக்கக்கூட முடியாது என்று அவர் பதிலளித்தார்.

மொரெல்லே என்ற அறிஞரும் எழுத்தாளரும் பாரிசில் ஸ்மித்துக்கு நண்பராக இருந்தார். அவர் தம்முடைய நினைவுக் குறிப்புகளில் பின் வருமாறு எழுதுகிறார்: “திரு. டியுர்கோ… ஸ்மித்தின் திறமையைப் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். நாங்கள் அவரைப் பல தடவைகள் பார்த்தோம்; அவர் ஹெல்வெடியசுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நாங்கள் வர்த்தகத் தத்துவம், வங்கித் துறை, தேசியக் கடன் ஆகியவை பற்றியும் அவர் எழுதத் திட்டமிட்டிருந்த மாபெரும் புத்தகத்தில் பல விஷயங்களைப் பற்றியும் பேசுவதுண்டு” (1)  ஸ்மித் எழுதிய கடிதங்களிலிருந்து அவர் கணிதவியல் அறிஞரும் தத்துவஞானியுமான ட-அலம்பேர், அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்துப் போராடிவந்த மாவீரரான கோல்பாக் பிரபு ஆகியவர்களோடு நட்புக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது. ஸ்மித் வொல்டேரையும் ஜினீவாவின் புறநகர்ப் பகுதியில் அவருடைய பண்ணையில் சந்தித்தார்; அவரோடு சில முறை பேசி மகிழ்ந்தார். வொல்டேர் மிகச் சிறந்த பிரெஞ்சுக்காரர்களில் ஒருவர் என்று கருதினார்.

ஸ்மித் மிகவும் ஆரம்பத்திலேயே – அதாவது 1775-ம் வருடத்திலேயே – எடின்பரோ சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதினார்; அந்தக் கட்டுரையில் பிரெஞ்சுக் கலாச்சாரத்தைப் பற்றி ஸ்மித்தின் மிகச் சிறப்பான அறிவு வெளிப்பட்டது. அவர் ஜான் லோவின் கருத்துக்கள், நடவடிக்கைகளைப் பற்றி மிக விரிவாகத் தெரிந்துவைத்திருந்தார் என்பதை அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

படிக்க :
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

அவர் பிரெஞ்சுக் கலைக்களஞ்சியத்தில் கெனேயின் கட்டுரைகளைப் படித்திருந்த போதிலும் பிஸியோகிராட்டுகளின் நூல்களைப் பற்றி லேசாக மட்டுமே அறிந்திருந்தார். இப்பொழுது பாரிசில் அவர்களுடைய கருத்துக்களை அவர்களோடு ஏற்பட்ட நேரடியான சந்திப்புக்களில் தெரிந்து கொண்டார், ஏராளமான அளவில் வெளிவரத் தொடங்கியிருந்த பிஸியோகிராட்டிய பிரசுரங்களின் மூலமாகவும் அறிந்து கொண்டார்.

ஸ்மித் சரியான நேரத்தில்தான் பிரான்சுக்குச் சென்றார் என்று கூடச் சொல்லலாம். ஒரு பக்கத்தில் அவர் ஏற்கெனவே போதிய அளவுக்கு முதிர்ச்சியடைந்த புலமை உடையவராகவும் சுயமாகவே முடிவு செய்த கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்தார். மறுபக்கத்தில் அவருடைய பொருளாதார முறை இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லையாதலால் அவர் கெனே, டியுர்கோவின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ள முடிந்தது.

ஆடம் ஸ்மித்

ஸ்மித் பிஸியோகிராட்டுகளையும் குறிப்பாக டியுர்கோவையும் எந்த அளவுக்குச் சார்ந்திருந்தார் என்ற பிரச்சினையைப் பற்றி தனி சரித்திரமே இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை பிஸியோகிராட்டுகளைக் காட்டிலும் ஸ்மித் இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். ஆங்கில மரபையொட்டி அவர் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆதாரமாக வைத்துத் தன்னுடைய பொருளாதாரத் தத்துவத்தை அமைத்தார்; ஆனால் பிஸியோ கிராட்டுகளிடம் மதிப்புத் தத்துவம் என்பதே இல்லை. எனவே, அவர்களோடு ஒப்பு நோக்கில் ஸ்மித் மிக முக்கியமான முன்னேற்றத்தைச் செய்வதற்கு இது உதவியது. விவசாய உழைப்பு மட்டும் மதிப்பை உருவாக்கவில்லை, எல்லா விதமான பயனுள்ள உழைப்புமே மதிப்பை உருவாக்குகிறது என்று ஸ்மித் நிரூபித்தார். முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க அடுக்கமைவைப் பற்றி பிஸியோகிராட்டுகளைக் காட்டிலும் ஸ்மித் அதிகத் தெளிவான கருத்துக் கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் சில துறைகளில் ஸ்மித்தைக் காட்டிலும் பிஸியோகிராட்டுகள் அதிக முன்னேற்றமடைந்திருந்தார்கள். இது குறிப்பாக முதலாளித்துவப் புனருற்பத்தியின் இயந்திர நுட்பம் பற்றி கெனே வெளியிட்ட மிகச் சிறப்பான கருத்துக்களுக்குப் பொருந்துவதாகும். முதலாளிகள் தங்களுடைய நுகர்வை விலக்கிக் கொள்வதன் மூலம், தவிர்த்தலின் மூலம், சுய இழப்பின் மூலமாகவே மூலதனத் திரட்டல் சாத்தியம் என்ற நம்பிக்கையில் ஸ்மித் பிஸியோகிராட்டுகளைப் பின்பற்றினார். அவ்வாறு கருதுவதற்கு அவர்களுக்காவது ஒரு தர்க்க அடிப்படை இருந்தது. ஏனென்றால் தொழில்துறை உழைப்பு “மலட்டுத் தனமானது”, “ஒன்றும் இல்லாமலேயே” முதலாளிகள் மூலதனத் திரட்டலைச் செய்வதாக அவர்கள் கருதினார்கள்.

ஸ்மித்துக்கு இந்த வகையான நியாயமும் கிடையாது. பயனுள்ள உழைப்பின் எல்லா வகைகளுமே சமமானவை, பொருளாதார ரீதியில் சமமான மதிப்புடையவை என்ற கருத்துரையில் அவர் முரண்பாடுகளோடு தான் எழுதுகிறார். மதிப்பை உருவாக்குவதை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும் பொழுது விவசாய உழைப்பு முன்னுரிமை கொண்டிருக்கிறது, ஏனென்றால் இங்கே “இயற்கை மனிதனோடு சேர்ந்து பாடுபடுகிறது” என்ற கருத்தை அவர் இன்னும் தன்னுடைய மனதிலிருந்து தெளிவாக அகற்ற முடியவில்லை.

படிக்க :
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
♦ சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !

பிஸியோகிராட்டுகளின்பால் அவருடைய அணுகுமுறை வாணிப ஊக்கக் கொள்கையினரிடம் அவர் கடைப்பிடித்த அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. அவர் வாணிப ஊக்கக் கொள்கையினரைத் தன்னுடைய சித்தாந்த எதிரிகளாகக் கருதினார். அறிவுத் துறையைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும், அவர்களை மிகவும் கூர்மையாக (சில சமயங்களில் மிக அதிகமாகவே) விமர்சனம் செய்தார். பொதுவான வகையில் சொல்வதென்றால், பிஸியோகிராட்டுகளை ஒரே இலட்சியத்துக்காக ஆனால் வேறு வழிகளில் பாடுபடுகின்ற தோழர்கள், நண்பர்கள் என்றே அவர் கருதினார். “இந்த முறையில் எவ்வளவு குறைகள் இருந்தபோதிலும், அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி இதுவரையிலும் எழுதப்பட்டிருக்கின்றவற்றில் உண்மைக்கு மிகவும் நெருங்கி வருவது இதுவே” (2) என்பது தன்னுடைய முடிவு என்று நாடுகளின் செல்வத்தில் எழுதினார். அது “உலகத்தின் எந்தப் பகுதியிலும் எப்படிப்பட்ட தீமையும் செய்யவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்யாது” என்று வேறொரு பகுதியில் எழுதினார்.

கடைசியாகச் சொல்லியிருப்பதை வேடிக்கையாகச் சொன்னதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆடம் ஸ்மித் மிக நுட்பமான நகைச்சுவையைக் கையாள்கிறார், அதே சமயத்தில் தீவிரமாக சிந்தனை செய்வதைப் போல முகபாவத்தை வைத்துக்கொள்கிறார். அவர் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு நாள் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வமான விருந்து நிகழ்ச்சியின் போது அவருக்குப் பக்கத்தில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் உட்கார்ந்தார். பார்த்தவுடனேயே அவ்வளவு கெட்டிக்காரர் அல்ல என்று தோன்றக் கூடிய ஒரு நபரிடம் எல்லோரும் அதிகமான மரியாதை காட்டுவது ஏன் என்று அவர் ஸ்மித்திடம் ஆச்சரியத்தோடு கேட்டார்.

“அவர் கெட்டிக்காரர் அல்ல என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எங்கள் பல்கலைக்கழகத்திலிருக்கும் ஒரே பிரபு அவர்தான்” என்று ஸ்மித் பதிலளித்தார். அவர் கேலியாகப் பேசுகிறாரா இல்லையா என்பதைப் பக்கத்தில் இருந்தவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவருடைய புத்தகத்தில் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ பிஸியோகிராட்டுகளோடு தொடர்புடைய கருத்துக்களிலும் அதிகமான எண்ணிக்கையுள்ள பல்வேறு காட்சிப் பதிவுகளிலும் (இவற்றில் தனிப்பட்டவையும் உள்ளன) பிரான்ஸ் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குறிப்புகள் பொதுவாக விமர்சன ரீதியில் அமைந்திருக்கின்றன. நிலப் பிரபுத்துவ சர்வாதிகார அமைப்பைக் கொண்ட பிரான்ஸ், முதலாளித்துவ வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் விலங்குகள் மாட்டப்பட்டுள்ள பிரான்ஸ், இன்றைக்கிருக்கின்ற அமைப்புக்களுக்கும் இலட்சிய வடிவமான “இயற்கையான அமைப்புக்கும்” இடையே உள்ள முரண் பாட்டுக்குச் சிறந்த உதாரணம் என்று ஸ்மித் கருதினார். இங்கிலாந்தில் எல்லாமே மிகவும் சிறப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது, ஆனால் அந்த நாட்டிலுள்ள அமைப்பு தனி நபர் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் இவற்றைக் காட்டிலும் முக்கியமான எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதற்குரிய சுதந்திரத்தையும் அனுமதித்தது; எனவே “இயற்கையான அமைப்புக்கு” அது மிகவும் அதிகமான அளவுக்கு நெருங்கி வந்தது.

ஸ்மித் பிரான்சில் மூன்று வருடங்கள் இருந்தார். அவருடைய சொந்த வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?

முதலாவதாக, அவருடைய பொருளாயத நிலையில் அதிகமான அபிவிருத்தி ஏற்பட்டது. பக்லூ கோமகனின் பெற்றோர்களிடம் செய்து கொண்ட உடன்பாட்டின்படி அவருக்கு வருடத்துக்கு முந்நூறு பவுன் ஊதியம் கிடைக்கும்; இப்பணம் பிரான்சில் இருந்த மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்த ஏற்பாட்டின் பலனாக அவர் அடுத்த பத்து வருடங்களில் தன் கவனம் முழுவதையும் புத்தகம் எழுதுவதில் செலவிட முடிந்தது; அதற்குப் பிறகு அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழக வேலைக்குத் திரும்பவில்லை.

இரண்டாவதாக, அவருடைய சமகாலத்தவர்கள் அவருடைய குணத்தில் மாற்றத்தைக் கண்டார்கள்; அவர் இப்பொழுது அதிகமான திறமையும் சுறுசுறுப்பும் கட்டுப்பாடும் உடையவராக இருந்தார், தன்னுடைய மேலதிகாரிகள் உள்பட வெவ்வேறு விதமான நபர்களிடம் பழகும் பொழுது ஒரு வகையான திறமையைக் கூட அவர் இப்பொழுது பெற்றிருந்தார். எனினும் மற்றவர்களோடு பழகும் பொழுது அவசியமான நிதானத்தை அவர் கடைசிவரையிலும் அடையவில்லை. அவருடைய நண்பர்களில் பலருக்கும் அவர் ஓரளவு விசித்திரமானவராக, ஞாபக மறதியுள்ள பேராசிரியராகவே இருந்தார். அவர் புகழ் பெருகிய பொழுது அவருடைய ஞாபக மறதியைப் பற்றிய கதைகளும் வேகமாக அதிகரித்தன, சாதாரண மனிதர்களுக்கு இந்தக் கதைகள் அவருடைய புகழின் ஒரு பகுதியாக இருந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Morellet, Mémoires sur le dix-huitième siècle et sur la révolution française, t. I, Paris, 1822, p. 244.

 (2) A. Smith, The Wealth of Nations, Vol. III, London, 1924, p. 172.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க