மிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
4,989 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்திலும் ஜீலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரை 10 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3,188 முதுநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,000 தொகுப்பூதியத்தில் ஜீலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரை 8 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம்தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது மற்றும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிங்களை நிரப்ப சிறிது காலமாகும் என்பதால் தற்காலிகமாக ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதாக தமிழக அரசு நியாயவாதம் பேசுகிறது.
படிக்க :
♦ வந்தேபாரத் ரயில் சக்கரம் தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் : பல்லிளிக்கும் பா.ஜ.க.வின் தேசப்பற்று !
♦ மதுரை காமராஜர் பல்கலையில் ஒப்பந்த ஊழியர்கள் 135 பேர் பணி நீக்கம் !
தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பும் தமிழக அரசின் இச்செயலை ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
***
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் 70,000 பேரை (ஆசிரியர்களை) நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதேன்? உடனடியாக நியமிக்கப்படுவதற்கு நிரந்தர ஆசிரியர்களே இல்லை என்பதுபோல நாடகம் ஏன்?
ஒன்றிய அரசால் 2009-ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கொண்டுவரப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வானது, தமிழகத்தில் 2011-ம் ஆண்டுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
2013, 2014 (உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர்கள்) 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. அத்தேர்வுகளில் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்து, அதில் 25 ஆயிரம் பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் 70 ஆயிரம் பேர் பணிக்காக இன்றுவரை காத்திருக்கின்றனர்.
திமுக தங்களுடைய 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி 177-ல், ‘2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துக்கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தது.
ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பது திமுக அரசுக்கு புதிதல்ல. 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலே 2774 தற்காலிக ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் 5 மாதத்திற்கு நியமித்தது. இப்போது என்ன நியாயவாதத்தை முன்வைக்கிறார்களோ, அதை அப்போதே முன்வைத்தார்கள்.
திமுக அரசு மட்டுமல்ல, முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்திலும் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திமுக ஆட்சிக்கு வந்தும் அதையே தொடர்கிறது.
எல்லா ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதை நிறைவேற்றுவோம், இதை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தங்களை புதிய தாராளவாதக் கொள்கைகள் பெற்றெடுத்த பிள்ளையாக காட்டிக்கொள்கிறார்கள். திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
***
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் 70 ஆயிரம் பேரை ஆசிரியர்களாக நியமிக்காத திமுக அரசு, ஏற்கெனவே டெட் தேர்வு எழுதாமல் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை டெட் தேர்வு எழுதி தங்களுடைய தகுதியை நியமிக்க சொல்கிறது.
2009-ம் ஆண்டு மத்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட டெட் தேர்வானது தமிழகத்தில் 2011-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இடைப்பட்ட ஆண்டுகளில் முந்தைய வழக்கப்படி தேர்வில்லாமல் நேரடி நியமனத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் முதற்கொண்டு மீண்டும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தங்கள் பணியை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்திரவிட்டது தமிழக அரசு.
அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையை நிறுத்தி வைத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை வழியே முதலில் 5 ஆண்டுகள், பிறகு 4 ஆண்டுகள் என 9 ஆண்டுகள் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் வழங்கப்பட்டது.
இறுதியாக ஏப்ரல் 4, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்றமானது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது. தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இனி பணியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் இவ்வாறு 12 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்குப் பணி உயர்வோ, சம்பள உயர்வோ வழங்கப்படக் கூடாது என்றும் அத்தீர்ப்பில் திமிர்த்தனமாக கூறியது அரசு. இத்தீர்ப்பின் மூலம் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களின் பணி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ‘தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டும்’ என்று அரசு தரப்பு இத்தீர்ப்பிற்கு நியாயவாதம் கூறியது.
ஒருபக்கம் “தகுதி முக்கியம், ஆதலால் தேர்வு எழுதாமல் பணியில் நீடிக்க முடியாது” என்று சொல்வது, மறுபக்கம் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்க மறுப்பது என்று இரட்டை வேடம் போட்டுவருகிறது அரசு.
***
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதே ஆசிரியராக பணியாற்ற ‘தகுதி’ என்று கூறும் தமிழக அரசானது, தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியராக நியமிக்க மற்றொரு தேர்வான மறுநியமனத் தேர்விலும் தேர்ச்சி அடைவதே ‘தகுதி’ என்று புதிய விளக்கம் கூறுகிறது.
டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்து எப்பொழுது நமக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று ஏக்கத்தோடு காத்திருந்த ஆசிரியர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்தது தமிழக அரசு. 2018-ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவரும் மீண்டும் அரசு நடத்தும் மறுநியமனத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் வேலை என்ற அறிவிப்பை அரசாணை எண் 149 மூலம் வெளியிடப்பட்டது.
தங்களுக்கு நேர்ந்த இந்த வஞ்சகத்தைக் கண்டித்து, ஆசிரியர் நியமனத் தேர்வை இரத்துசெய்யக்கோரி அப்போதே சென்னை டி.பி.ஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்போரட்டத்தை நடத்தினர். “சாகும்வரை நாங்கள் தேர்வு மட்டும்தான் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா? எங்களை நீங்களே கொன்று விடுங்கள், ஏன் வருடம் ஒரு அரசாணைப் போட்டு கொலை செய்கிறீர்கள்?” – என்று போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் மனம் கொந்தளித்து கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022 மார்ச் மாதத்தில், டெட் தேர்வுக்கான தேதியும் அதனைத் தொடர்ந்து மறுநியமனத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த பட்டதாரி ஆசிரியர்கள், ‘மறுநியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’, ‘திமுக தேர்தல் வாக்குறுதி 177-யை அமல்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுநியமனத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்தும், திமுக அரசானது மறுநியமனத் தேர்வை அமல்படுத்துகிறது.
2018-ம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் மறுநியமனத் தேர்வு அரசாணை எண் 149 வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வை(டெட்) போல, மறுநியமனத் தேர்வானது மத்திய அரசின் 2009 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அமல்படுத்தப் படவில்லை. மாறாக தமிழக அரசினால் அமல்படுத்தப்படுகிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதில் சிக்கல்கள் இருப்பதால் ஆந்திராவைப் போன்று தமிழகத்திலும் மறுநியமனத் தேர்வு நடத்தப்படுவதாக தான் அரசாணை எண் 149-லேயே கூறப்பட்டுள்ளது.
***
மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடையும் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்குமா தமிழக அரசு. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் அரசிடம் ‘நிரந்தரப் பணி’ என்பதை நாம் எதிர்பார்க்க முடியுமா?
டெட் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி அடைந்து பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்காக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களை நிரந்திர ஆசிரியர்களாக நியமிக்காதவர்கள். டெட் தேர்வு எழுதாமல் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால்தான் பணி என்று கூறியவர்கள். மறுநியமனத் தேர்வை ரத்து செய்ய அதிகாரம் இருந்தும் ரத்து செய்யாதவர்கள். இவர்களில் மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடைந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப் போகிறார்கள். இவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன? அரசுத்துறைகளை எல்லாம் காண்ட்ராக்ட் மயப்படுத்துவதே.
அரசுத்துறைகளை எல்லாம் தீவிரமாக காண்ட்ராக்ட் மயமாக்குவதற்கு சிறந்த சான்று, செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் சமீபத்திய போராட்டமே.
அரசுத்துறையில் நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்த முறையைப் புகுத்தி செலவினங்களை மிச்சப்படுத்துவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராள சலுகைகள் வழங்குவதும், இதன்மூலம் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக கூறுவதும் தனியார்மய – தாராளமயக் கொள்கையின் அங்கமாகும்.
அரசுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு திறந்துவிடுவது மட்டும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவது ஆகாது. அரசுத் துறைகளை காண்ட்ராக்ட் மயமாக்குவதும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதே.
மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் நிரந்தரப் பணி என்பது பகல் கனவே. மறு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெறும் சொற்ப நபர்கள் மட்டுமே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுவும் இரண்டு சூழ்நிலைகளிலே சாத்தியம்.
ஒன்று, தன்னுடைய கவர்ச்சிவாத அரசியலுக்காக திமுக ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் பெயரளவுக்காக 12,000-க்கு மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களில் 1212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்த மாதிரி சொற்ப அளவில் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டால் வாய்ப்புண்டு. மற்றொன்று, மறுநியமனத் தேர்வில் தேர்ச்சி அடையும் பட்டதாரி ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் தீவிரமாகும் போது.
படிக்க :
♦ இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?
♦ 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
‘எல்லா சமூகங்களுக்கான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்பதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல். இன்னும் சுருக்கமாக சொன்னால் ‘எல்லாருக்கும் எல்லாம்’. இவை எல்லாம் வார்த்தை ஜாலங்களே.
தீவிரமாக புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதே, திராவிட மாடல் ஆட்சி. புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதில் திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்கும் என்ன வேறுபாடு. ஒரு மண்ணும் கிடையாது.
பாஜக எதிர்ப்பை முன்னிறுத்தி திமுகவுக்கு காவடி தூக்கும் கூட்டணிக் கட்சிகள் மற்றும் திமுக அடிவருடிகள், திமுகவின் புதிய தாராளவாதக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் நடவடிக்கைகளுடன் சமரசம் பண்ணிக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜகவானது, திமுகவை தூக்கியெறிந்துவிட்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கிறது.
திமுகவின் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், பாஜகவால் தூக்கியெறியப்படும் முன்னரே உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படும்.
பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க