தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணத்தை 5 முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI). இந்தக் கட்டண உயர்வானது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாக உள்ளது. எஞ்சிய சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் செப்டம்பர் மாதத்தில் உயர்த்தப்பட உள்ளது.
இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விடக் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரையும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், வருடாந்திர “ஃபாஸ்டேக்” (Fastag) பாஸின் கட்டணமும் ரூ.3,000-இலிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த அறிவிப்பிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நுகர்வோர் ஆர்வலர் டி. சடகோபன் கூறுகையில், “இந்த வருடாந்திரக் கட்டண மாற்றம், சரக்குக் கட்டணங்கள் மற்றும் பேருந்துப் பயணச்சீட்டுக் கட்டணங்கள் உயர்வதற்கே வழிவகுக்கும். பேருந்துப் பயணச்சீட்டுக் கட்டணங்கள் ஏற்கெனவே மிக அதிகமாக உள்ளன. பண்டிகைக் காலங்களில், ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தங்கள் விருப்பம் மற்றும் மனம்போன போக்கில் பயணச்சீட்டுக் கட்டணங்களை வசூலிக்கின்றன. சரக்குக் கட்டணங்களைப் பொறுத்தவரை, சுங்கக் கட்டணங்களில் ஏற்படும் இந்த வருடாந்திர உயர்வால், சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் அந்தக் கூடுதல் சுமையை நுகர்வோர் மீதும், பார்சல்களை அனுப்புவோர் மீதும்தான் சுமத்தும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு மணல் லாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ்.யுவராஜ் கூறுகையில், “சுங்கச்சாவடிக் கட்டண உயர்வால் ஒவ்வொரு லாரிக்கும் தற்போது கூடுதல் செலவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. நகரத்தை ஒட்டியுள்ள 13 கிலோ மீட்டர் சுற்றளவுக்குச் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதையும் மீறிச் சேலம் கருப்பூரில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்றப் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் உட்படப் பலரும் போராட்டம் நடத்திய நிலையில், அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், தமிழ்நாட்டில் காலாவதியான 36 சுங்கச்சாவடிகளை அகற்றினாலே ஓரளவுக்குச் செலவு குறைந்துவிடும். அதையும் இதுவரை அகற்றவில்லை. சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தும் கார்களுக்கு வழங்கப்படுவது போல் லாரிகளுக்கும் வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் வழங்கினால் அதை வாங்கவும் தயாராக உள்ளோம். சுங்கக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பலமுறை நாங்கள் வலியுறுத்தியும், தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள்” என்று சுங்கக் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தினார்.
உண்மையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்பதே அதிகாரப்பூர்வ விதியாகும். ஆனால், இந்த விதியைப் பகிரங்கமாக மீறிப் பல சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அதேபோல, ஒப்பந்தக் காலம் முடிந்து முதலீட்டுத் தொகையை எடுத்துவிட்ட காலாவதியான சுங்கச்சாவடிகளை அரசிடம் ஒப்படைத்த பின்னரும், ‘பராமரிப்புச் செலவு’ என்ற பெயரில் 40 சதவிகிதக் கட்டண வசூலைத் தொடரலாம் என மோடி அரசு விதியைத் திருத்தியுள்ளது. இதன் மூலம் காலாவதியான சுங்கச்சாவடிகளிலும் அரசு தனது கொள்ளையைத் தடையின்றித் தொடர்ந்து வருகிறது.
படிக்க: சுங்கக் கட்டண உயர்வு: நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வழிபறிக் கொள்ளை
பாசிச மோடி அரசானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி, அப்பட்டமான கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தச் சுங்கச்சாவடிகளை ஒப்பந்த அடிப்படையில் 14 ஆண்டுகளுக்குத் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்த்து, அவை மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறது. இந்தத் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுங்கச்சாவடிகளுக்கான எந்தவொரு விதியையும் மதிக்காமல், எண்ணிலடங்காச் சுங்கச்சாவடிகளைச் சட்டவிரோதமாக இயக்கி வருகின்றன.
இதற்கு எதிராகத் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் போராடி வந்தாலும், மோடி அரசு இக்கொள்ளையைத் தொடர்கிறது. “சாலைகளின் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக, சுங்கக் கட்டண வசூல் இனி நிரந்தரமாகத் தொடரும்” என்று அறிவித்திருப்பதன் மூலம் இக்கொள்ளையை நிரந்தரமாக்கியுள்ளது.
அதிலும், ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் மேலாதிக்கப் போரால் நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்கள் இறக்குமதி பாதிப்பால் தீப்பெட்டித் தொழில் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது. அதேபோல், விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி பாதிப்பால் ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது.
இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு. இந்த மக்கள் விரோத பாசிச அரசை வீழ்த்தாமல் இந்திய நாட்டு மக்களுக்கு வாழ்வில்லை என்பது இதிலிருந்து மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
![]()
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











