தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 29 தொழிலாளர் சட்டங்களை பாசிச மோடி அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னிச்சையாக நீக்கிவிட்டு, தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020, தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகிய நான்கு சட்டத்தொகுப்புகளை பாசிச முறையில் நிறைவேற்றியது.
இதற்கெதிராக தொழிலாளர்கள் போராடிவந்த நிலையில் அவர்களின் எதிர்ப்பையும் மீறி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்துவதாக கடந்த நவம்பர் 21-ஆம் தேதி மோடி அரசு அறிவித்திருக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் கடும் எதிர்ப்பாலும், தொழிலாளர் சட்டங்கள் பொதுப்பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகள் இச்சட்டத் தொகுப்புகளை ஏற்றுக்கொண்டு அதற்கான விதிகளை உருவாக்க வேண்டியிருந்ததாலும் இச்சட்டத்தொகுப்புகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன.
ஆனால், மேற்குவங்கம், லட்சத்தீவுகள் தவிர்த்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உள்ளிட்டு 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இச்சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்த ஏற்றுக்கொண்டு வரைவு விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளன. அதனடிப்படையில், தற்போது இச்சட்டத்தொகுப்புகள் மோடி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற பல அடிப்படையான, அத்தியாவசிய உரிமைகளை பறிக்கும் இச்சட்டத் தொகுப்புகள் கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள் மற்றும் போலீசு கும்பலின் சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு காட்டாட்சியை நிறுவி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாய் மாற்றுகின்றன.
வேலையை வாங்கி முடித்தபின் தூக்கியெறி!
புதிய தொழிலுறவுக் கொள்கை
நிரந்தர தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் “நீம்” (NEEM), “நாப்ஸ்” (NAPS) போன்ற பயிற்சித் திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், புதிய சட்டத் தொகுப்பில் “நிலையான கால வேலைவாய்ப்பு” (Fixed Term Employment) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையான கால வேலைவாய்ப்பில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதற்கான கால வரம்பு குறிப்பிடப்படவில்லை. இது முன்னறிவிப்பின்றியும், இழப்பீடு வழங்காமலும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதாவது, ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் என்ற குறுகிய கால வரம்பில் தொழிலாளர்களை நியமித்து அவர்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டிவிட்டு வெளியேற்றுவது என்ற “வேலையை வாங்கி முடித்தபின் தூக்கியெறி” (Hire and Fire Policy) எனும் கொள்கையின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, முன்னர் 100-க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளை மூடுவதற்கும் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கும் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்ற விதி இருந்தது; ஆனால், இச்சட்டத் தொகுப்பில் தொழிலாளர்களின் வரம்பு 300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 90 சதவிகித தொழிற்சாலைகளில் 300-க்கும் குறைவான தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இம்மாற்றத்தின் மூலம் அக்கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையை கைகழுவியுள்ளது பாசிச மோடி அரசு.
மேலும், இச்சட்டத் தொகுப்பில் தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் பணியில் இருப்பவர் மாதம் ரூ.18,000 மேல் ஊதியம் பெற்றால் தொழிலாளி என்ற வரையறையின் கீழ் வரமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்புகள் ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட விதிகள் மூலம் தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தை தொழிலாளர்களிடம் உருவாக்கி, அவர்களின் எதிர்ப்பை அடக்குவது; முதலாளிகளுக்கு நவீன கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது என்பதே இவற்றின் பின்னணியில் உள்ள பாசிச சதித்திட்டமாகும்.
தொழிற்சங்க ஒன்றிணைவு
சட்டப்பூர்வமாகவே தடுப்பு
பழைய தொழிலாளர் சட்டத்தில், குறைந்தபட்சம் ஏழு தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கமாக பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் நடைமுறையில் நிறுவனமும் அரசும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு தொழிலாளர்களை அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் ஆலையில் சங்கம் வைக்கும் உரிமைக்கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் தி.மு.க. அரசு அவர்கள் மீது செலுத்திய ஒடுக்குமுறைகளுமே அதற்கான சான்று.
ஆனால், இப்புதிய தொழிலாளர் சட்டங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பது சட்டப்பூர்வமாகவே தடுக்கப்பட்டுள்ளன. புதியதாக ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 10 சதவிகிதம் அல்லது 100 தொழிலாளர்கள் (எது குறைவோ) ஆதரவு இருக்க வேண்டும் என்று புதிய சட்டத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சங்கமாய் ஒன்றிணைவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நைச்சியமாக இவ்விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டத்தொகுப்பில் தொழிற்சாலைகளில் செயல்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களையும் ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் சட்டவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒற்றை தொழிற்சங்கம் உள்ள தொழிற்சாலைகளில், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அத்தொழிற்சங்கம் 51 சதவிகித தொழிலாளர்களின் ஆதரவு பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக தொழிலாளர்களின் கூட்டுப்பேர உரிமையை பறிப்பதாகும்.
அதேபோல், முன்னர் தொழிற்சங்கத்தின் நிர்வாகக் குழுவில், 50 சதவிகித எண்ணிக்கையில் நிறுவனத்தில் பணிபுரியாத தொழிற்சங்கத் தலைவர்கள் இருக்க முடியும். ஆனால், தற்போது இத்தலைவர்களின் எண்ணிக்கை மொத்த நிர்வாகிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ஐந்து நபர்கள் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சங்க செயல்பாடுகளை முடக்க விழைகிறது மோடி அரசு.
முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக
வேலைநிறுத்த உரிமைகள் பறிப்பு
பழைய தொழிலாளர் சட்டத்தில் இரயில்வே, துறைமுகங்கள், சுகாதாரம் போன்ற பொதுப் பயன்பாட்டுத் துறைகளில் மட்டும் முன்னறிவிப்பின்றி (Notice) வேலைநிறுத்தம் செய்வதற்கு தடை இருந்தது. ஆனால், புதிய சட்டத் தொகுப்பானது அனைத்து துறைகளுக்கும் முன்னறிவிப்பை கட்டாயமாக்கியுள்ளது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்றால், அதற்கான முன்னறிவிப்பை நிர்வாகத்திடம் கொடுத்து 14 நாள் கழித்தே வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆலை நிர்வாகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களையும் தலைமை தாங்குகின்ற முன்னணியாளர்களையும் அச்சுறுத்தி சீர்குலைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சமரசப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதும், பேச்சுவார்த்தை முடிந்து ஏழு நாட்களுக்கும், தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தால், தீர்ப்பு வந்து 60 நாட்கள் வரையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, நிறுவனங்கள் பேச்சுவார்த்தை மற்றும் வழக்கை இழுத்தடிப்பதன் மூலம் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட விடாமல் தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல, நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூட்டாக முன்னறிவிப்பு இல்லாமல் விடுமுறை எடுத்தாலும் அது சட்டவிரோத வேலைநிறுத்தமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விதிகளை மீறுகின்ற தொழிலாளர்கள் மீது சிறைத்தண்டனை, அபராதம் என சட்டப்பூர்வமாகவே தாக்குதல் தொடுக்கப்படும். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் மீது ஏவப்படும் போலீசு அடக்குமுறையை, தற்பொழுது நிலவுவதை விட மேலும் தீவிரப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம், தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடுவதற்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டப்பூர்வமாகவே குற்றமாக்கியுள்ளது பாசிச மோடி அரசு.
கிக் தொழிலாளர்கள்:
சட்டப்பூர்வமாகவே “தொழிலாளி” அல்ல!
நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கிக் (செயலி வழி) தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பணிப் பாதுகாப்பற்ற வேலை நிலைமை, மிகக் குறைந்த ஊதியம், செயலி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை, கணக்கு தன்னிச்சையாக முடக்கப்படுவது உள்ளிட்டு தங்கள் மீதான அடக்குமுறைகளை முன்வைத்து நாட்டின் பல மாநிலங்களில் கிக் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலும் கிக் தொழிலாளர்களை “தொழிலாளி” என்று வரையறுக்காமல் “ஒப்பந்ததாரர்கள்” என்றே வரையறுத்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், கிக் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, குறைந்தப்பட்ச ஊதிய உத்தரவாதங்கள், கூட்டுப்பேரம் பேசும் உரிமைகள் இச்சட்டத்தொகுப்பிலும் மறுக்கப்பட்டுள்ளன.

மேலும், கிக் தொழிலாளர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டிய நலத்திட்டங்களை வரையறுத்துக் கூறாமல், அவ்வப்போது பொருத்தமான நலத்திட்டங்கள் ஒன்றிய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் என்று பாசிச திமிருடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் என்பவை உரிமை என்பதிலிருந்து பிச்சையாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த வர்த்தக வருவாய் (Turn Over) அடிப்படையில், ஆண்டுக்கு 1-2 சதவிகித நிதியை கிக் தொழிலாளர்களின் ஓய்வூதிய மற்றும் சுகாதார நலன்களுக்கான பங்களிப்பாக நிறுவனங்களிடம் கோருவது என்று இச்சட்டத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பங்களிப்பாக கோரப்படும் இத்தொகை மிகச் சொற்ப தொகை என்பது ஒருபுறமெனில், அத்தொகையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து முறையாக வசூலிக்கப்படுமா, தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
ஊதிய வெட்டு
துயர நிலைக்கு தள்ளப்படும் தொழிலாளர்கள்
ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் என்பது அடிப்படை ஊதியம் மற்றும் வீட்டு வாடகைப் படி, பயணப் படி, போனஸ் உள்ளிட்ட கொடுப்பனவுகளுடன் (Allowance) கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பானது அடிப்படை ஊதியம் 50 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும், அதுபோக, மீதமுள்ளவை கொடுப்பனவுகளாக இருக்க வேண்டும் என்றும் வரையறுத்து இருக்கிறது.
சதவிகிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பல தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தில் கொடுப்பனவுகளை விட குறைவாகவே அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.
இச்சூழலில், “இச்சட்டத் தொகுப்பிலுள்ள புதிய ஊதிய வரையறையினால் அடிப்படை ஊதியத்திற்கு நிறுவனங்கள் ஒதுக்கும் தொகை அதிகரிக்கும். எனவே, அடிப்படை ஊதியத்திலிருந்து கணக்கிடப்பட்டு முதலாளிகளால் வழங்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைக்கான தொகையும் அதிகரிக்கும்” என்று ஊடகங்கள் வரவேற்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், ஒரு நிறுவனம் தொழிலாளிக்கு அடிப்படை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுடன் சேர்த்து வழங்கும் மொத்த ஊதியம் இங்கு மாறப் போவதில்லை. மாறாக, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்திலிருந்தே 12 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களின் ஒட்டுமொத்த ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான பிடித்தமும் அதிகரிக்கும்; தொழிலாளி கையில் பெற்றுக்கொள்ளும் ஊதியத் தொகை முன்பை விட குறையவே செய்யும்.
இது, ஏற்கெனவே ஊதியமாக வழங்கப்படும் சொற்பத் தொகையை வைத்து வாழ்க்கையை நடத்த போராடிக் கொண்டிருக்கும் மக்களின் துயர நிலையை மேலும் அதிகரிக்கவே செய்யும். மேலும், நிரந்தரமற்ற பணிச்சூழல், முதலாளிகள் வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உரிய வகையில் வழங்கப்படுவதும் கேள்விக்குறியே ஆகும்.
8 மணி நேர வேலை உரிமை பறிப்பு
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பில் தினசரி வேலை நேர வரம்பு 8 மணி நேரமாகவும், வார வேலை நேர வரம்பு 48 மணி நேரமாகவும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இடைவேளை நேரத்தை தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது.
ஆனால் அதேசமயத்தில், ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வாரத்திற்கு 4 நாட்களுக்கும், 9.5 மணி நேரம் என 5 நாட்களுக்கும், 8 மணி நேரம் என 6 நாட்களுக்கும் வேலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வேலை நேரங்களுக்குப் பிறகு, தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தின் படி, கூடுதல் நேரம் வேலை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் கூடுதல் வேலை நேரத்திற்கான வரம்பு காலாண்டிற்கு 75 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது இதனை மாநில அரசாங்கங்கள் நிர்ணயிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர உறக்கம் என்ற தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையானது, “தொழிலாளர்கள் விரும்பினால் கூடுதல் நேரம் வேலை செய்யலாம்” என்ற பெயரில் சட்டப்பூர்வமாகவே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவசர சட்டம் மூலம் ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை கட்டாயமாக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வைக்க வேண்டும் என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கையாகும். ஆனால், இச்சட்டத் தொகுப்பானது தொழிலாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய விரும்புவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. மாறாக, தொழிலாளி வர்க்கம் கேட்பது 8 மணி நேர வேலை, நியாயமான ஊதியம், பணிப்பாதுகாப்பே ஆகும்.
ஆகவே, இச்சட்டத் தொகுப்பில் உள்ள விதிகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 12 மற்றும் அதற்கும் மேலாக உழைப்பில் ஈடுபட தொழிலாளர்களை முதலாளிகள் கட்டாயம் நிர்பந்திப்பர். முதலாளிகளின் விருப்பத்திற்கு கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்படலாம் (குறிப்பாக, நிலையான கால மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்) என்ற அச்சத்தின் காரணமாக கூடுதல் வேலை நேரத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் வேறுவழியின்றி தள்ளப்படுவர்.
அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய 14 முதல் 16 மணி நேர வேலை என்ற கொத்தடிமை முறை தற்போது சட்டப்பூர்வமாகவே நிலைநாட்டப்படுகிறது.
ஒப்பந்ததாரர்,
இனி காண்ட்ராக்ட் முதலாளி
புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, ஒப்பந்ததாரர் முதலாளியாக கருதப்படுகிறார். மேலும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய பொறுப்பு காண்ட்ராக்ட் முதலாளியினுடையது; அவர் ஊதியம் வழங்கத் தவறும் பட்சத்திலேயே ஆலை முதலாளி (Principal Employer) பொறுப்பாவார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ஆலை நிர்வாகத்திற்கும் தொழிலாளிக்கும் உள்ள தொடர்பு சட்டப்பூர்வமாகவே துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஆலை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல், காண்ட்ராக்ட் முதலாளிகளின் ஊதியச் சுரண்டல் என இரட்டை சுரண்டலுக்கு தொழிலாளர்கள் உள்ளாக்கப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி, இச்சட்டத் தொகுப்பில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான விதிகள் பொருந்தக்கூடிய வரம்பு 20 தொழிலாளர்களிலிருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 50-க்கும் குறைவான ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் காண்ட்ராக்ட் முதலாளிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
அதாவது, ஒப்பந்த தொழிலாளர்களில் கணிசமானோரை சட்ட வரம்பில் இருந்து விலக்கி, அவர்கள் மீதான ஆலை மற்றும் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துவதற்கே இவ்விதி வழியேற்படுத்திக் கொடுக்கிறது. சான்றாக, ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்னதாகவே தொழிலாளி ஆலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டாலும் அத்தொழிலாளியால் சட்டப்பூர்வமாக எதுவும் செய்ய இயலாது.
மேலும், ஒப்பந்த ஆண்டு வரம்பும் இரண்டு ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, ஒரு தொழிலாளியை ஒப்பந்த தொழிலாளி எனும் நிலையிலேயே இருத்தி வைப்பதற்கான ஏற்பாடாகும்.
அதேபோல, தொழிற்சாலை என உரிமம் வழங்க தொழிலாளர்கள் பணியாற்றும் வரம்பு மின்சாரம் உள்ள தொழிற்சாலைகளுக்கு 10-லிருந்து 20 ஆகவும், மின்சாரம் இல்லாத தொழிற்சாலைகளுக்கு 20-லிருந்து 40-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவின் ஜவுளி, உலோகம், உணவு பதப்படுத்துவது உள்ளிட்ட துறைகளின் தொழில் அலகுகள் 20-க்கும் குறைவான தொழிலாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில், அந்த அலகுகள் தொழிற்சாலை என்ற வரையறையிலிருந்து விலக்கி வைக்கப்படும். அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற இயந்திரங்கள், மோசமான சுற்றுச்சூழல், காற்றோட்டமின்மை உள்ளிட்ட மோசமான சூழலில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.
தீவிரமாகும் பெண்கள் மீதான
உழைப்புச் சுரண்டல்
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பின்படி, உற்பத்தி, சுரங்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரவு நேரங்களிலும் (இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை) பெண்கள் வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அவர்களின் ஒப்புதல் ‘கட்டாய’மாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகவும், தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில், ஆண் தொழிலாளர்களை ஒப்பிடும் போது, குறைவான கூலியில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும். உழைப்பு சுரண்டலை தீவிரமாக நடத்த முடியும். இந்த அடிப்படையிலிருந்தே அசெம்பிளி லைன் (Assembly Line) மூலம் இயங்கும் தொழிற்சாலைகளில் பெரியளவில் இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

சான்றாக, காஞ்சிபுரத்தின் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் மீது மிகக் கொடூரமான உழைப்புச் சுரண்டல் நிலைநாட்டப்பட்டுள்ளது. “டைம்” பத்திரிகையின் அறிக்கையானது, இந்நிறுவனத்தில் அசெம்பிளி லைனில் ஒரு மணி நேரத்திற்கு 520 ஐபோன்களில் வேலை செய்ய வேண்டும் என்ற மிக அதிகமான உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது. கழிப்பறை செல்வதற்கு கூட இடைவேளை இன்றி பெண்கள் வேலை செய்ய வைக்கப்படுவதாகவும், இதன் விளைவாக ஏற்படும் உடல் வலிகளை போக்க வலி நிவாரண மருந்துகள் வழங்கப்பட்டு தொடர்ந்து வேலை செய்ய வைக்கப்படுவதாகவும் கூறுகிறது.
பெண்கள் மீதான இத்தகைய ஈவிரக்கமற்ற, மிருகத்தனமான உழைப்புச் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்; அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே பெண்களுக்கு இரவு நேர வேலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெண் தொழிலாளர்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இரவு நேர வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் இரவு நேர வேலைகளுக்கு சம்மதம் தெரிவிப்பவர்கள் மட்டுமே பணிக்கு எடுத்துகொள்ளப்படுவர். மேலும், நிறுவனங்களால் 12 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை பெண் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக்கப்படும். இது தொழிற்சாலைகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் அதிகரிக்கும்.
களப்போராட்டங்களே தீர்வு!
மேற்கூறியவற்றை தொகுத்துப் பார்க்கும்போது, பழைய தொழிலாளர் சட்டங்கள் மூலம் தொழிலாளி வர்க்கம் பெற்று வந்த பெயரளவிலான உரிமைகளையும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பானது இல்லாதொழித்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.
இத்தகைய பாசிச சட்டத் தொகுப்புகளை அம்பானி, அதானி வகையறா உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிலிருந்தே மோடி அரசு அமல்படுத்தியிருக்கிறது. அதாவது, சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை மேற்கத்திய நாடுகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தருவதற்கான பின் நிலமாக மாற்றுவது; அதற்காக மலிவு விலையில் கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது என்ற அடிப்படையிலிருந்தே இச்சட்டத் தொகுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பாசிச மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி., மூன்று குற்றவியல் சட்டங்கள், சிறப்பு தீவிர மறு ஆய்வு ஆகியவற்றின் வரிசையில் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களில் ஒன்றாகும்.
இச்சட்டத் தொகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதுள்ள தங்களின் பெயரளவிலான உரிமைகளும் பறிபோகும் என்பதை உணர்ந்திருக்கும் தொழிற்சங்கங்கள் இதனைப் பின்வாங்க வைப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டங்களில் விவசாய சங்கங்களும் பங்கேற்றுள்ளன.
ஆனால், பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், இதற்கான வரைவு விதிகளை தயாரித்து அளித்ததன் மூலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு அப்பட்டமாக துரோகமிழைத்துள்ளன.
கேரள மாநில சி.பி.ஐ(எம்) அரசானது, “இச்சட்டத்தொகுப்புகளை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம். அவற்றை திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்” என்று கூறுகிறது. ஆனால், இச்சட்டத்தொகுப்புகளை அமல்படுத்துவதற்கு கேரள அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்ற மோடி அரசின் அறிவிப்பிற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாடு, தெலுங்கானா அரசுகள் இச்சட்டத்தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம் என்று பெயரளவிற்குக் கூட தெரிவிக்கவில்லை. கர்நாடக காங்கிரசு அரசு, சட்டத்தொகுப்புகளை அமல்படுத்துவதற்கு முன்னதாக தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களுடன் ‘கலந்தாலோசித்து’ முடிவெடுப்போம் என்று சந்தர்ப்பவாதமாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பில் உள்ள அம்சங்களை மறைமுகமாக அமல்படுத்துவது என்ற அடிப்படையிலிருந்தே ஆகும்.
ஏனென்றால், இச்சட்டத் தொகுப்பில் உள்ள அம்சங்கள் எதிர்க்கட்சிகளின் கார்ப்பரேட் நல கொள்கைகளுக்கும் சாதகமான வகையில் உள்ளன. இதனை அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து, மலிவான கூலிக்கு உழைப்பு சக்தியை விற்கும் கொத்தடிமைகளை உருவாக்கி, அதன் மூலம் கார்ப்பரேட் முதலீடுகளை தங்கள் மாநிலங்களை நோக்கி ஈர்க்கத் துடிக்கின்றன.
எனவே, தொழிலாளர்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் இவ்விவகாரத்தில் பாசிச மோடி அரசை எதிர்த்து போராடும் அதேவேளையில், தங்கள் மாநில அரசுகளை எதிர்த்தும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் விடாப்பிடியான, உறுதியான போராட்டங்களை போன்று, மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து வர்க்கங்களும் தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களே மோடி அரசை பணிய வைக்கும்!
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











