Thursday, July 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 397

வானகரம் மீன் சந்தை ! படக் கட்டுரை

சென்னை மதுரவாயலை அடுத்துள்ளது வானகரம் மீன் சந்தை. இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. ஞாயிறு, புதன் என வாரத்தில் இரண்டு தினங்களில் மீன்கள் அதிகமாவும் மற்ற நாட்களில் மீன் வரத்து குறைவாகவும் இருக்கும்.

வானகரம் மீன் சந்தை இருபக்கமும் தூண்கள் எழுப்பி மேலே கூரை அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இரு பக்கமும் அமைக்கப்பட்ட சரிவான திண்ணையில் தான் கடைகள் உள்ளன. இரு தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் தான் ஒரு கடையின் அளவு. அதற்குள் அவரவர் மீன்களை வைத்துக் கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வியாபாரம் செய்கின்றனர்.

“ஒரு கடைக்கி வாடகை இருவதாயிரம். என்னால அம்புட்டு துட்டு தரமுடியல. பாதி கடைய 1,0000-த்துக்கு வாடைக்கி எடுத்துனுருக்கேன். சில பேரு காசிமேடு, சிந்தாதரிப்பேட்டன்னு மீனு வாங்கினு வந்து யாவாரம் பாப்பாங்க. நம்மால வண்டி வாடக குடுத்து அவ்ளோ தொலவு செட்டாகாது. நா.. இங்கியே சந்தைக்கி வர்ர மீனுகளையே ஏலத்துக்கு எடுத்து யாவாரம் பாப்பேன். ஆமா இன்னாத்துக்கு இதெல்லாம் கேட்டுனுகிறிங்க” என்றார் மீன் வியாபாரி மணி.

படிக்க :
♦ கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!
♦ கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

மீன் வியாபாரி மணி மற்றும் தொழிலாளி வினாயகம் (வலது)

“இன்னாது! படம் புடிச்சு பேப்பர்ல போடபோறிங்கலா!. போடுங்க போடுங்க எங்களுக்கு விளம்பரம்தான். ஆன புரட்டாசி மாசத்துல வந்துகிறிங்கோ கூட்டமே இல்லியே! எங்களுக்கு விளம்பரம் இல்லாமபுடுமே” என சிரித்தார் அருகில் இருந்த தொழிலாளி வினாயகம்.

“என்னப்போல சில பேரு மீனவக் குடும்பத்த சேந்தவங்க. மத்தவங்க வன்னியரு, நாயக்கரு, முதலியாருங்க எல்லா சாதிக்காருமே இருக்காங்க. சீலா, கொடுவா, வஞ்சிரம், கட்லா, பன்னா, சங்கரா, இறா, சுதும்பு, சுறா இப்படி பல வக மீனும் ஒன்னா கடல்ல வாழ்ராப்போல சந்தைக்குள்ள பல சாதியும் கலந்து பாகுபாடு இல்லாமெ ஆளுக்கொரு வேல பாத்துனுருக்கோம். எல்லா வேலையும் செஞ்சாதான் பத்துருவா காசு பாக்க முடியும்.

மீனவப் பெண்மனி கலா

நானு பொறந்ததுலேருந்து இதே தொழில்தான். நானு வெளியூரு (வெளிமாநிலம்) மீனுங்கள விக்க மாட்டேன். காசிமேடு, பழவேற்காடு, மீனுங்கதான் யாவாரத்துக்கு எடுத்துகினு வருவேன். மத்தவங்கள விட எம்மீனு பத்துருவா கூடத்தான் இருக்கும். விக்காத மீன கெட்டுப் போற வரைக்கும் வேடுகட்டி வச்சு விக்க மாட்டேன். கருவாடு போட்டு வித்துருவேன்”. என்றார் மீனவப் பெண் கலா.

“நீங்க ரெண்டு மணிக்கு மேல வந்து பாருங்க இங்கயே சோறு போட்டு சாப்புடலாம் அத்தன சுத்தமா இருக்கும். இங்க கிளினிங் வேல பாக்குற எங்களுக்கு சம்பளம்னா 100 ரூபாதான். ஆனா சரக்கு வரும் லாரியில மீன்கூட எறக்குறது, ஐஸ்பார் தூக்குறது இந்த வேலையில ஒரு நாளைக்கி 500 குறையாமெ சம்பாதிச்சுருவோம். ” என்றார் மீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்.

மீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்

சரவணன் சொன்னதை ஒப்புக் கொண்டு பேசினார் மீன் சுத்தம் செய்துகொண்டிருந்த ராஜலட்சுமி. “நானும் கிளினிங்கு வேலதான் பாத்துனுருக்கேன். சந்தைக்கி வர்ர மீன இறக்குனதும் வெளிய சுத்தம் செஞ்சு பிளிச்சிங் பவுடரெல்லாம் போட்ட பெறகு மதியத்துக்கா வந்து மீனு ஆஞ்சு குடுக்கலாம். அதுவரைக்கும் கட்டடத்துக்கு வெளியில மீனு ஆயிரதுக்குன்னு இருக்குற உறுப்பினருதான் மீனு ஆயனும். ஒரு நாளைக்கி 500 சம்பாதிப்பேன்”. என்றார் ராஜலட்சுமி.

ராஜலட்சுமி

“விடியகாத்தால மீனு வாங்க கெளம்புவோம். கடலுக்கு போன மீனவங்க வந்து தரம்பிரிச்சு மீன ஏலம் விடசொல்லோ… நீங்க எப்புடி எங்கிட்ட பேரம் பேசுரிங்களோ அத போல நாங்களும் பேரம் பேசி மீனு வாங்கினு வருவோம். நேத்து ரெண்டு பொட்டி எறா எடுத்துனு வந்தேன். கிலோ 120 போட்டாதான் கட்டுபடி ஆகும். புரட்டாசின்னு யாவரமே இல்ல. வச்சுருந்தா அழுகிபுடும். கிலோ 70-துக்கு குடுத்துனுருக்கேன். ஐஸ்கட்டியில மீனு அள்ளி அள்ளி கை ரேக தேஞ்சதுதான் மிச்சம்.” என்றார் வியாபாரி மஞ்சு.

மீன் வியாபாரி மஞ்சு

“இந்த மீன் மார்கெட்ட நம்பி ஆயிரம் குடும்பம் பொழப்பு நடத்தினுக்குது. எங்களுக்கு துரையண்ணே முதலாளி இல்ல எங்கள்ள ஒருத்தரு. நமக்கென்னென்னு குந்திகினு இருக்க மாட்டாரு. எங்க கூட வந்து நின்னு கவிச்சி நாத்தத்துல நனச்சுகினு வேல பாப்பாரு. தொடப்பக் கட்டய எடுத்துகினு தேச்சு கழுவுவாரு. மீன்மார்கெட்டு தொறந்து பதிமூணு வருசமாச்சு யாரையும் அண்ணெ அசிங்கமா பேசுனதே கெடையாது” என்றார் தொழிலாளி மாலா.

தொழிலாளி மாலா

“வெளி மாநிலத்து மீனுங்களுக்கு இங்க ஏஜென்ட்டு இருப்பாங்க. வெளியிருந்து மீன் அனுப்பும் ஆளுங்க கூட இவங்க தொடர்புல இருப்பாங்க. இங்க சந்த நெலவரத்துக்கு தகுந்தபடி மீன் வரத்த கூட்டி கொறச்சு வரவைப்பாங்க. அவங்கதான் ஏலத்தையும் விடுவாங்க. அதேப் போல உள்ளூர் மீனுங்கள வாங்கி வந்து வியாபாரம் செய்றவங்களும் இருக்காங்க. யாரும் யாருக்கும் பிரச்சனையா இருக்க மாட்டாங்க. எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராமெ துரையண்ணெ பாத்துப்பாரு.

மீன் வெட்டும் தொழிலாளி ஸ்டிபன்

இப்ப பாருங்க நானு ஒங்க கூட பேசினுருக்கேன் எனக்கு வந்த மீனெல்லாம் பக்கத்துல உள்ளவன் வெட்டுறான். இப்ப நான் உக்காந்தேன்னா அவம்பக்கம் வர்ர மீன எனக்கு விட்டுக் குடுத்துடுவான். இங்க கெட்டுப் போன மீன விக்க கூடாதுங்கற முறை வச்சுருக்கோம். கெட்டுப் போன மீன உள்ள வித்தாங்கன்னா வெளிய வெட்டுற நாங்க மீன திருப்பி அனுப்பிடுவோம்.” என்றார் மீன் வெட்டும் ஸ்டிபன்.

படிக்க :
கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்

“நானு தெனக்கூலி வேலதான் பாத்துனுருந்தேன். மீன் மார்கெட் வந்ததுலேருந்து இங்கனக்குள்ளதான் வேல. எம்மகனுக்கு படிப்பு வரல எங்கூட இட்டாந்துட்டேன். மீனுக்கு செதிலெடுப்பான்.. எறா உரிப்பான் அப்புடியே தொழில கத்துனுருக்கான்.” என்றார் ஆனந்த் தன் மகன் பப்லுவை அணைத்தபடி.

ஆனந்த் – பப்லு

புரட்டாசி கார்த்திகை மாசத்துலயும் மீன் பிடி தடைக்காலத்துலயும் எங்களுக்கு விற்பனை பாதிக்கும். வாங்குற மீன் விற்பனை ஆகலன்னா பாதுகாக்குறது பெரிய வேல. தேவைக்கான ஐஸ் கட்டி வாங்கனும். ஐஸ்கட்டி உருகி போகாத தரமான பொட்டி வேணும் அப்படியே உருகினாலும் தண்ணி வெளியேர வழி இருக்கனும். அப்புடி இப்புடி கொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் நாத்தம் எடுத்துக்கும், என்றார் தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரி.

கொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் எல்லாம் நஷ்டம் தான்.

“சந்தைக்குள்ள மீன் வெட்ட போகனுன்னா உறுப்பினரா இருக்கனும். சந்தக்குள்ள இருக்கவங்க பெரும்பாளும் சிந்தாதரிப்பேட்ட, புளியந்தோப்பு ஆட்களா இருப்பாங்க. அவங்க பேச்சு கொஞ்சம் அடாவடியா தெரியும். அதுக்காக அவங்க கெட்டவங்கன்னு சொல்லல, அவங்க பேச்சே அப்படிதான். அது என்னவோ கொஞ்சம் மரியாத கொறச்சலா தெரியிது, அதனாலதான் இங்குனக்குள்ள வர்ர மீன மட்டும் வெட்டுனா போதுன்னு இருந்துக்கிட்டேன்.” என்றார் ரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா.

ரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா

“நாங்க வெளியூர சேந்தவங்க. உள்ளூர் ஆளுங்களுக்கதான் சந்தைக்கி பக்கத்துலயும் அடுத்தடுத்தும் கடை போட்டுருக்காங்க. எங்கள தள்ளித்தள்ளி ஊரோட கடைசிக்கி வந்துட்டோம். புரட்டாசி பொறந்துட்டதால மீனு வெட்டுக்கு வரவே இல்ல. மணி ரெண்டாயிடுச்சு அஞ்சுகிலோ மீனுதான் ரெண்டு பேரு வெட்டியிருக்கோம்.” என்றனர் கணவன் மனைவியான சுந்தரம்மாள் நடராஜன்.

சுந்தரம்மாள் – நடராஜன் தம்பதியினர்

நேரம் மதியத்தை தாண்டியதும் நம்மிடம் யாரும் பேசத் தயாராக இல்லை. ஏனென்றால் விற்காத மீன்களை எடுத்து பக்குவப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர் வியாபாரிகள். கழிவுகளை வேளியேற்றுவதும் கட்டிடத்தை கழுவுவதுமாக துரிதமானார்கள் தொழிலாளிகள். அதிகாலை நேரத்தில் தொடங்கிய சுறுசுறுப்பான உழைப்பு பிற்பகல் கடந்தும் எந்த சுணக்கமும் இல்லாமல் தொடர்வதை பார்த்தால் சோம்பேறிகளும் வெட்கமடைவார்கள்.

மீன்களை ஐஸ் பெட்டிகளில் அடுக்கி வைக்கும் தொழிலாளி.

இங்குள்ள மக்களிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது சந்தைக்கு மீன் கொண்டு வருபவர்கள், ஏலமிடுபவர்கள், வாங்கும் வியாபாரிகள், விற்பனையாளர்கள், மீனை சுத்தம் செய்பவர்கள், ஏலமிடும் வெளிப்புறத்தை சுத்தம் செய்பவர்கள், விற்பனை கூடத்தை சுத்தம் செய்பவர்கள், கழிவுகளை எடுத்து செல்பவர்கள், வாகனத்தை பாதுகாப்பவர்கள் என ஆயிரம் பேருக்கும் மேல் இந்த சந்தையை நம்பி வேலை செய்வதாக கூறினர். எது எப்படியோ சமூகத்தின் அடிதட்டு மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழிவகை செய்திருக்கிறது வானகரம் மீன் சந்தை!

இருந்தாலும் இந்த மகிழ்ச்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்வியும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் மீன் நாற்றம் என புகார்கள் பலவற்றை அருகாமை நிறுவனங்களில் உள்ளவர்கள் (முக்கியமாக பார்ப்பன மற்றும் பிற ‘மேல்’ சாதியினர்) கொடுத்து சந்தையை காலி செய்ய முனைந்திருக்கின்றனர். அந்தப் பிரச்சினை பிறகு பேசி முடிவானாலும், தற்போது சந்தை மாறுவதற்காக காத்திருக்கிறது. அந்த சந்தை எங்கே போகும், எந்த இடம், வேலை எப்படி கிடைக்கும் என்ற கேள்விகளும் இருக்கின்றன. என்றாலும் வியாபாரிகளும், தொழிலாளிகளும் அந்த மாற்றத்தை எதிர் கொண்டே ஆகவேண்டும். அது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.

குறிப்பு: இந்தக் கள ஆய்வு புரட்டாசி மாசத்தில் எடுக்கப்பட்டது.

மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் தொழிலாளிகள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சந்தையை சுத்தம் செய்யும் தொழிலாளிகள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவர்கள் சிரித்துக் கொண்டே நம்மை தூக்கிலும் போடுவார்கள் !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 19

பாவெலைப் பார்க்க அனுமதி கோரி அவள் மூன்று முறை சிறைக்குச் சென்றாள். பெரிய மூக்கும், சிவந்த கன்னங்களும் நரைத்த தலையும் கொண்ட போலீஸ்காரர்களின் ஜெனரல் ஒருவன் அங்கிருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் அவளிடம் இதமாகப் பேசி அனுமதி தரவே மறுத்துவிட்டான்.

மாக்சிம் கார்க்கி

“அம்மா, நீ இன்னும் ஒருவார காலமாவது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவாரம் கழியட்டும். அப்புறம் பார்க்கலாம். ஆனால் இப்போது மட்டும் அது முடியாத காரியம்” என்பான்.

அவன் உருண்டு திரண்டு கொழுத்துப்போய் இருந்தான், பழுத்து அதிக நாளாகி, பூஞ்சைக் காளான் படர்ந்து போன காட்டிலந்தைப் பழத்தைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான். அவன் எப்போதும் ஒரு சிறு மஞ்சள் நிறமான ஈர்க் குச்சியால் தனது சின்னஞ் சிறிதான வெள்ளைநிற உளிப்பற்களைக் குத்திக் கொண்டிருந்தான். அவனது சின்னங்சிறு பசிய கண்கள் அன்பு ததும்பச் சிரித்தன. அவன் எப்போதுமே நட்போடு பேசினான்.

“அவன் மிகவும் அடக்கமானவன்” என்று அவள் ஹஹோலிடம் சொன்னாள், “எப்போதும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான்.”

”ஆமாம்!” என்றான் ஹஹோல்; ”அவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். அவர்கள் மரியாதை தவறமாட்டார்கள். சிரித்த முகத்தோடேயே பேசுவார்கள்; ஆமாம்! “இதோ ஒரு கண்ணியமான யோக்கியமான புத்தி நிறைந்த மனிதன் இருக்கிறான். இவன் ஒரு பயங்கரமான ஆசாமி” என நாங்கள் நினைக்கிறோம். எனவே, உங்களுக்குச் சிரமமில்லாவிட்டால், இவனை வெறுமனே தூக்கில் போட்டுவிடுங்கள்! போதும் என்று அவர்கள் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் சிரித்துக் கொண்டே அவனைத் தூக்கிலும் போட்டு விடுவார்கள். போட்ட பிறகும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.”

“ஆனால் இங்கே சோதனை போட வந்தானே ஒருத்தன், அவன் வேறு மாதிரிப் பேர்வழி. அவன் ஒரு பன்றிப் பிறவி என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்” என்று சொன்னாள் தாய்.

“அவர்களில் யாருமே மனிதப் பிறவிகள் அல்ல.  மக்களைச் செவிடாக்கும் சம்மட்டிகள்தான் அந்தப் பிறவிகள். நம்மை மாதிரி, ஆட்களையெல்லாம் மட்டம் தட்டி சீர்படுத்தி கையாள்வதற்கு சுலபமானவர்களாக நம்மை மாற்ற முனையும் கருவிகள்தான் அவர்கள். அவர்கள் நம்மை அதிகாரம் செய்யும் மேலிடத்தின் கைக் கருவிகளாக ஏற்கெனவே தம்மை மாற்றிக்கொண்டு விட்டவர்கள். தங்களுக்கு இட்ட எந்த ஆணையையும் எந்தவித முன்பின் யோசனையுமின்றி உடனே நிறைவேற்றி வைத்துவிடுவார்கள்.”

கடைசியாக ஒரு நாள் அவளுக்குத் தன் மகனைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஞாயிற்றுக் கிழமையன்று சிறைச்சாலை ஆபிஸில் ஒரு மூலையில் அவள் மிகவும் பணிவோடு அடங்கி ஒடுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அட்டும் அழுக்கும் நிறைந்த அந்தத் தாழ்ந்த கூரை கொண்ட அறைக்குள்ளே வேறு பலரும் இருந்தார்கள். அவர்களும் கைதிகளைப் பார்ப்பதற்காகக் காத்துக் கிடப்பவர்கள்தான். அவர்கள் அங்கு அப்படிக் காத்துக் கிடப்பது அதுவே முதல் தடவை அல்லவாதலால், அங்குள்ள மனிதர்கள் நாளாவட்டத்தில் ஒருவருக்கொருவர் பழகிக்கொண்டு விட்டார்கள். எனவே சிலந்தி வலை பின்னுவதைப்போல் அவர்கள் அமைதியாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மடியிலே ஒரு ஜோல்னாப் பையோடு உட்கார்ந்திருந்த தொளதொளத்த முகம் படைத்த ஒரு தடித்த பெண்பிள்ளை பேசத் தொடங்கினாள்; “உங்களுக்குச் சங்கதி தெரியுமா? இன்றைக்குக் காலையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பாதிரியார் ஞானப் பாடல் பாடுகின்ற பையன் ஒருவனின் காதைத் திருகினாராம்!”

“அந்தப் பையன்களும் சுத்தப் போக்கிரிப் பயல்கள்!” என்று ஒரு வயதான கனவான் பதில் சொன்னார். அவர் உடுத்தியிருந்த உடையைப் பார்த்தால் அவர் யாரோ ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மாதிரி இருந்தது.

குட்டைக் கால்களும், நெட்டைக் கைகளும், துருத்தி நீண்ட மோவாயும் வழுக்கைத் தலையும் கொண்ட சித்திரக் குள்ளப் பிறவியான ஒரு மனிதன், அந்த அறைக்குள் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். இடையிடையே உடைந்து கரகரத்த குரலில் ஏதேதோ உத்வேகத்தோடு பேசிக்கொண்டான்,

“விலைவாசியோ விஷம்போல் ஏறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களோ வரவர மோசமாகிக் கொண்டே வருகிறார்கள். இரண்டாம் தரமான மாட்டுக் கறியின் விலை கூட பவுண்டுக்கு பதினான்கு கோபெக்காம்! ரொட்டி விலையோ இரண்டரைக் கோபெக்குக்கு ஏறிப்போய்விட்டது…”

இடையிடையே கைதிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சாம்பல் நிறமான ஆடையும் கனமான தோல் செருப்புகளும் அணிந்திருந்தார்கள். மங்கிய ஒளி நிறைந்த அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அவர்கள் திருக திருக விழித்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு காலில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன.

சிறையின் சகல சூழ்நிலையுமே விபரீதமான அமைதியுடனும், விரும்பத்தகாத எளிமையுடனும் இருந்தது. தங்களது நிர்க்கதியான நிலைமையை அவர்கள் வெகு காலத்துக்கு முன்பே ஏற்றுப் பழகி மரத்துப் போய்விட்டவர் போலவே தோன்றினர். சிலர் தங்கள் சிறைத்தண்டனையைப் பொறுமையோடு அனுபவித்தார்கள். சிலர் உற்சாகமே அற்று சோம்பியுறங்கிக் காத்து நின்றார்கள். இன்னும் சிலர் ஒழுங்காக வந்திருந்து உற்சாகமோ விருப்பமோ அற்று, கைதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு சென்றார்கள். தாயின் உள்ளமோ பொறுமையிழந்து துடித்துத் தவித்தது. அவள் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை எதுவுமே புரியாமல் பார்த்துக் கொண்டாள். அங்கு நிலவிய சோகமயமான எளிமையைக் கண்டு வியந்தாள்.

அவளுக்குப் பக்கத்தில் சுருங்கிய முகமும் இளமைத் ததும்பும் கண்களும் கொண்ட முதியவள் ஒருத்தி இருந்தாள். அவள் தனது மெலிந்த கழுத்தைத் திருப்பி, பிறர் பேசிக் கொள்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டாள். கண்கள் படபடக்க அவள் ஒவ்வொருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

”நீங்கள் யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று பெலகேயா அவளை நோக்கி மெதுவாய்க் கேட்டாள்.

”என் மகனை! அவன் ஒரு கல்லூரி மாணவன்” என்று உரக்கப் பதில் அளித்தாள் அந்தக் கிழவி, “நீங்கள்?”

‘மகனைத்தான். அவன் ஒரு தொழிலாளி.”

”அவன் பேரென்ன?”

“பாவெல் விலாசவ்.”

‘கேள்விப்பட்டதே இல்லை. உள்ளே வந்து ரொம்ப காலமாகிறதோ?”

“சுமார் ஏழு வாரமிருக்கும்.”

“என் மகன் – அவன் வந்து பத்து மாசமும் முடியப் போகிறது” என்றாள் அந்த முதியவள். அவளது குரலில் ஏதோ ஒரு பெருமிதம் தொனிப்பதாக பெலகேயாவுக்குத் தோன்றியது.

“ஆமாம். ஆமாம்” என்று அந்த வழுக்கைத் தலைக் கிழவன் சளசளக்கத் தொடங்கினான். ‘மனிதர்களுக்குப் பொறுமையே போய்விட்டது. எல்லோரும் எரிந்து பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் சத்தம் போடுகிறார்கள். விலைவாசியோ மேலே மேலே போகிறது. ஜனங்களோ, அதற்குத் தக்கபடி நாளுக்கு நாள் நலிந்து வருகிறார்கள். இதற்கு ஒரு முடிவு காண எவனுமே முன்வரக் காணோம்!”

”நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்றான், அந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. “ஒழுங்கீனம்” கடைசி கடைசியாக ‘போதும் நிறுத்து’ என்று கத்தத்தான் வேண்டும். அந்தக் குரல், அந்தச் சக்திவாய்ந்த குரல்தான் இன்று நமக்குத் தேவை….”

ஒவ்வொருவரும் இந்த சம்பாஷணையில் கலந்து கொண்டார்கள். அவர்களது பேச்சு உயிர்பெற்று ஒலித்தது. எல்லோரும் வாழ்க்கையைப் பற்றிய தம் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமென்பதில் பேரார்வம் காட்டினார்கள். எனினும் அவர்கள் அனைவருமே தணிந்த குரலில்தான் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிக்கொண்டது அனைத்தும் தனது கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். வீட்டில் இருந்தவர்கள் அந்த மனிதர்களைவிட எவ்வளவு உரத்தும் தெளிவாகவும் எளிதாகவும் பேசிக்கொள்வார்கள்….

சதுரமாய்க் கத்தரித்து விடப்பெற்ற சிவந்த தாடியோடு கூடிய ஒரு கொழுத்த சிறையதிகாரி வந்தான். அவளது பேரைச் சொல்லிக் கூப்பிட்டான். அவளை அவன் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கெந்திக்கெந்தி நடந்து கொண்டே சொன்னான்:

“என் பின்னால் வா.”

அந்தச் சிறையதிகாரி முதுகைப் பிடித்துத் தள்ளி அவனைச் சீக்கிரம் முன்னேறி நடக்கச் செய்ய வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

பாவெல் ஒரு சின்ன அறையில் முகத்தில் புன்னகை தவழ கைகளை நீட்டியவாறே நின்றான். அவள் அவன் கையைச் செல்லமாகப் பற்றிப் பிடித்தாள்; சிறுகச் சிரித்தாள்; படபடவென்று இமைகொட்டிப் பார்த்தாள்.

“நலமா? நன்றாயிருக்கிறாயா?” என்றாள் அவள். அவளுக்கு பேச வார்த்தையே கிடைக்கவில்லை. தடுமாறிக் குழறினாள்.

”அம்மா, நிதானப்படுத்திக்கொள். பொறு” என்று அவளது கையைப் பற்றி பிடித்தவாறு சொன்னான் பாவெல்,

“இல்லை. நான் நன்றாய்த்தான் இருக்கிறேன்.’

“உன் அம்மாவா!” என்று பெருமூச்சுடன் கேட்டான் சிறை அதிகாரி. பிறகு அவன் பலமாகக் கொட்டாவி விட்டுவிட்டு, ”நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம் விலகி விலகி நில்லுங்கள். இடையிலே கொஞ்சம் இடம் இருக்கட்டும் என்றான்.

பாவெல் அவனது ஆரோக்கியத்தைப் பற்றியும் வீட்டு விஷயங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டான். அவள் வேறுபல கேள்விகளை எதிர்பார்த்தாள். அந்தக் கேள்விகளை எதிர்நோக்கி அவன் கண்களையே வெறித்து நோக்கினாள். ஆனால் பயனில்லை. அவன் எப்போதும் போலவே அமைதியாக இருந்தான். கொஞ்சம் வெளுத்துப் போயிருந்தான். அவனது கண்கள் முன்னை விடப் பெரிதாகி இருந்தன போலத் தோன்றின.

”சாஷா உன்னை விசாரித்தாள். தன்னை மறந்து விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள்” என்றாள் தாய்.

பாவெலின் கண்ணிமைகள் துடித்தன; முகம் தளர்வுற்றது. அவன் புன்னகை செய்தான். தனது இதயத்தில் திடீரென ஒரு குத்தலான வேதனை ஏற்பட்டது போல தாய் உணர்ந்தாள்.

“அவர்கள் உன்னைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று கருதுகிறாயா?” என்று எரிச்சலோடும் துயரத்தோடும் கேட்டாள் அவள். “எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!” என்றாள்.

பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன.

”உண்மையாகவா?” என்று உடனே கேட்டான்.

“ஏய்! இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் இங்கே பேசக்கூடாது. உங்கள் குடும்ப விஷயம் ஒன்றை மட்டும்தான் நீங்கள் பேசலாம்” என்று தூங்கி வழியும் குரலில் சொன்னான் சிறையதிகாரி.

”இது குடும்ப விஷயமில்லையா?” என்று எதிர்த்துக் கேட்டாள் தாய்.

“இதற்குப் பதில் ஒன்றும் சொல்ல முடியாது. அதை இங்குப் பேசக்கூடாது. அவ்வளவுதான்” என்று அலட்சியமாகச் சொன்னான் அவன்.

“சரி, நீ வீட்டு விஷயங்களையே சொல்” என்றான் பாவெல். “நீ எண்ண பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”

அவள் தனது கண்களில் இளமையின் குறுகுறுப்பு பளிச்சிட்டு மின்ன, அவனுக்குப் பதில் சொன்னாள்.

”நானா? நான்தான் அந்தச் சாமான்களையெல்லாம் தொழிற்சாலைக்கு கொண்டுபோய்க் கொடுக்கிறேன்…”

அவள் பேச்சை நிறுத்தினாள். பிறகு சிறு சிரிப்புடன் மீண்டும் பேசினாள்.

”முட்டைகோஸ், சூப்பு, சேமியா – இந்த மாதிரி சாமான்களையெல்லாம் மரியா செய்து தருகிறாள். மற்ற சரக்குகளும்…”

பாவெல் புரிந்து கொண்டுவிட்டான். அவன் தன் கையால் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். பொங்கிவந்த சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டான்.

“பரவாயில்லை. நீ சும்மா இராமல் சுறுசுறுப்போடு வேலை செய்வதற்கு இது ஒரு அருமையான உத்தியோகம்தான். அப்படியென்றால் உனக்குத் தனியாயிருக்கவே நேரமிராதே” என்று அவன் அன்பு ததும்பச் சொன்னான். அந்தப் பரிவு நிறைந்த குரலை அவள் அதற்கு முன் அவனிடம் கேட்டதே இல்லை.

”அந்தப் பிரசுரங்கள் மீண்டும் தலைகாட்டியவுடன், அவர்கள் என்னைக் கூடச் சோதனை போட்டுவிட்டார்கள்” என்று கொஞ்சம் தற்பெருமையுடனேயே அவள் சொல்லிக் கொண்டாள்.

“ஏய்! மீண்டும் அதையா பேசுகிறாய்?” சினந்து போய்ச் சொன்னான் சிறை அதிகாரி. “அதைத்தான் பேசக்கூடாது என்று ஒருமுறை சொல்லிவிட்டேனே. ஒரு மனிதனை எதற்காகச் சிறையில் அடைக்கிறார்கள்? வெளியில் நடப்பது என்ன என்பது அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்குத்தானே. நீயோ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்… ம்? எது எதைப் பேசக்கூடாது என்பது இன்னுமா தெரியவில்லை?”

“போதும் அம்மா” என்றான் பாவெல். “மத்வேய் இலானவிச் மிகவும் நல்லவர். அவரைக் கோபமூட்டுவதில் அர்த்தமே இல்லை. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நீ வந்த சமயத்தில் இவர் இருந்ததே ஒரு நல்ல காலம். வழக்கமாக இவருடைய மேலதிகாரிதான் இருப்பான்.”

”சரி நேரமாய்விட்டது” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே சொன்னான் சிறையதிகாரி.

“ரொம்ப வந்தனம். அம்மா கவலைப்படாதே. என்னைச் சீக்கிரம் விடுதலை செய்துவிடுவார்கள்” என்றான் பாவெல்.

அவன் அவளை ஆர்வத்தோடு அணைத்து முத்தமிட்டான். அவனது அரவணைப்பினால் உள்ளம் நெகிழ்ந்து ஆனந்தப் பரவசமாகி வாய் திறந்து கத்திவிட்டாள் தாய்.

“சரி போதும், புறப்படும்” என்று சொன்னான் சிறையதிகாரி. பிறகு அவளை வெளியே அழைத்து வரும்போது அவளிடம் லேசாக முணுமுணுத்தான். “அழாதே, அவர்கள் அவனை விட்டுவிடுவார்கள். எல்லோரையுமே விட்டுவிடுவார்கள். வரவர, இங்கே கூட்டம்தான் பெருத்துப் போயிற்று.”

வீட்டுக்கு வந்தவுடன் அவள் ஹஹோலிடம் எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லும்போது அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. புருவங்கள் துடிதுடித்தன.

”நான் அவனிடம் அதை எவ்வளவு சாமர்த்தியமாகச் சொன்னேன், தெரியுமா? அவன் அதைப் புரிந்து கொண்டுவிட்டான். அவனுக்குப் புரிந்திருக்கத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டுப் பெருமூச்செறிந்தாள். “இல்லையென்றால் அவன் என்னிடம் அத்தனை அன்பு காட்டியிருக்கமாட்டான். அவன் அப்படிக் காட்டிக் கொண்டதே இல்லை.”

“நீங்கள் ஒரு விசித்திரப் பிறவி, அம்மா” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல்; “மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்… பாசம்!”

“இல்லை. அந்திரியூஷா? அந்த மக்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்” என்று திடீரென்று ஏற்பட்ட உத்வேக உணர்ச்சியோடு பேசத் தொடங்கினாள் அவள். “அவர்களுக்கு அதெல்லாம் பழகிப்போய்விட்டது. அவர்களது பிள்ளைகளை அவர்களிடமிருந்து பிடுங்கிப் பறித்துச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள். என்றாலும். அவர்கள் எதுவுமே நிகழாதது மாதிரி நடந்து கொள்கிறார்கள். சும்மா வெறுமனே வந்து உட்கார்ந்து, காத்திருந்தது, ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களே இந்த மாதிரி நடந்து கொண்டால், அறிவில்லாத பாமர மக்களிடம் நீ என்னத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்?”

“புரிகிறது. அது இயல்புதானே?” என்று தனக்கே உரிய கேலித் தொனியில் பதிலளித்தான் ஹஹோல். “பார்க்கப் போனால், சட்டம் நம் மீது கடுமையாய் இருப்பதுபோல் அவர்களிடம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் நம்மைவிட அவர்களுக்குத்தான் சட்டத்தின் உதவி அதிகம் தேவை. எனவே சட்டம் அவர்கள் தலையில் ஓங்கியறைந்தால், அவர்கள் சத்தம் போடுவார்கள். ஆனால் வெளிக்குத் தெரியாமல் சத்தம் போடுவார்கள். தன் கையிலுள்ள தடியைக் கொண்டு தானே தன் தலையில் அடித்துக் கொண்டால், அந்த அடி அப்படியொன்றும் உறைக்காது. நம்மவர் அடித்தால்தான் உறைக்காது. வலிக்காது.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக !

உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லையில் அரங்கக் கூட்டம்

நாள் : 10.11.2018 நேரம் மாலை 5 மணி
இடம்: மூர்த்தி அரங்கு, சகுந்தலா இன்டர்நேசனல்,
வண்ணார்பேட்டை, நெல்லை.

தோழமைமிக்க பேராசிரியர்களே, மாணவ நண்பர்களே!

டந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் புகுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக, பொதுநலனுக்கான கல்வி என்பது விற்பனை சரக்காக, மதிப்பீடுகளற்ற பண்டமாக மாற்றப்பட்டுள்ளது.

நல்ல மாணவர்களை – சமூதாயத்தை உருவாக்க வேண்டிய இந்த கல்வி – அமைப்பு கிரிமினல் மயமானதன் விளைவாக சமூகமும் கிரிமினல் மயமாகி வருகிறது. கல்வித்துறையில் தற்போது மத்திய – மாநில அரசுகள் செய்து வரும் மாற்றங்கள் அனைத்தும், இதுவரை எதையெல்லாம் நாம் சட்ட விரோதம், விதிமுறைகளை மீறிய செயல் என்று மனம் குமுறி வந்தோமோ அதையெல்லாம் சட்டபூர்வமாக்கும் நடவடிக்கைகளாக்கிவிட்டன.

சமீப காலமாக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடும் அதற்கு முந்தையதைவிட அளவில் மிகப்பெரியதாகவும், தன்மையில் பேரளவு கிரிமினல் மயமானதாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களை தலைமைப் பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது, தமிழக பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பார்க்க :
♦ கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி
♦ உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை

பாடப் புத்தகங்களில் மத வெறிக்கருத்துக்களை திணிப்பது, புராணக் கட்டுக்கதைகளை அறிவியல் உண்மையாக திரித்துக்கூறுவது. பிராந்திய மற்றும் தேசிய இனங்களின் பண்பாடு – கலாச்சாரம் – மொழி அடையாளங்களை அழித்து ஒற்றைக் கலாச்சாரமாக மாற்றுவதையே இலக்காக வைத்து செயல்படுவது என தனது நச்சு ஆக்டோபஸ் கரங்கள் மூலம் பெரும்பான்மை மக்களை நாசமாக்கி வருகிறது இவ்வாளும் அரசு, தமிழக அரசு அதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது.

கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. அத்தோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயர்கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான பல நடவடிக்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இல்லாத அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்திற்கு இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்தை இவ்வரசு வழங்கியுள்ளது.

கல்வி முதலாளிகளின் கொள்ளைக்காக இந்திய மருத்துவக்குழு (MCI) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) இரண்டையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. திறமையானவர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்ற பெயரில் நீட் தேர்வை திணித்து காசு உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக்கல்வி என்ற நிலமையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

இது இந்நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பெண் சமூகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப்பறித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை நோக்கித் தள்ளும்.

இச்சூழலில் கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்தும் கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் மதவெறி சக்திகளிடமிருந்து கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கப்பெறச் செய்வதுமே இன்றைய காலக்கட்டத்தின் மிகமுக்கியமான கடமையாக உள்ளது.

இப்பணிக்காக பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், கல்வியாளர்களும், கல்வியின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்வோம்.

இது குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடைதான் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு. வாருங்கள் கலந்துரையாடுவோம் !

*****

நிகழ்ச்சி நிரல்:
தலைமை :

பேரா. ஜெ. அமலநாதன்,
நெல்லை ஒருங்கிணைப்பாளர் CCCE,
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை.

வாழ்த்துரை :

பேரா. தொ. பரமசிவன்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
ம.சு.பல்கலைக்கழகம், நெல்லை.

கருத்துரை :

தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம் :
பேரா. வீ. அரசு
ஒருங்கிணைப்பாளர் CCCE,
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், சென்னை பல்கலைக்கழகம்.

ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்:
பேரா. சோமசுந்தரம்
துணை ஒருங்கிணைப்பாளர் CCCE,
கணிதவியல் துறை, ம.சு.பல்கலைக்கழகம், நெல்லை.

காவிமயமாக்கப்படும் உயர்கல்வி :
முனைவர். க. ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர் CCCE, சென்னை.

நன்றியுரை :

பேரா. நவநீதன்
மனோ கல்லூரி, சேரன்மகாதேவி.

*****

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு
(Co-ordination Committee for Common Education)
திருநெல்வேலி. தொடர்புக்கு : 94892 35387.

சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !

அய்யனார் ஐயப்பனான கதை

ராமனின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த சபரி என்கிற கன்னிப் பெண்ணின் நினைவாகவே சபரிமலை எனப் பெயர் பெற்றது. பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ள அந்த அழகான மலைகளின் மீதுதான் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.

முந்தைய காலங்களில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய அய்யனார், பின்னர் 15-ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சிறிய அய்யப்பன் கோவிலாக உருவானது.

அய்யப்பன் அரச குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளவரசன் என்கிறது புராணக் கதைகள். பின்னர் கடுமையான தவங்களின் மூலம் அருள் பெற்று நால் வர்ணங்களுக்கு வெளியில் உள்ள சாதிகளால் வணங்கப்படும் அளவுக்கு ஆற்றல்களைப் பெற்றார் என்கின்றன அந்தக் கதைகள்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ( படம் நன்றி – ஃப்ரண்ட் லைன்)

தினசரி பூசை புனஸ்காரங்கள் ஏதும் செய்யப்படாமல் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருந்த இந்தக் கோவிலுக்கு வருடம் ஒரு முறை மகர சங்கரமனா எனும் சடங்கிற்காக (ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்) மலைப் பண்டாரம், உள்ளத்தார், மன்னன், நரிக்குறவர் போன்ற மலைவாழ் மக்கள் வருவதுண்டு. மேலும் தமிழ்நாட்டில் இருந்து சில பக்தர்களும் வந்து போவதுண்டு. பந்தளம் அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர் அந்த நாட்களில் பூசைகள் செய்து வந்துள்ளார்.

பின்னர் பந்தளம் அரச குடும்பம் திருவாங்கூர் அரசிடம் சரணடைந்ததை அடுத்து, இந்தக் கோவில் 1810-ல் வெள்ளை அதிகாரி கலோனல் முன்றோவின் அறிவுரைப்படி ராணி லட்சுமி பாயால் (1810-1815) உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேசஸ்வம் கமிசனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

வெள்ளமாய்ப் படையெடுத்த பக்தர்கள் !

சில வன ஆக்கிரமிப்பாளர்கள் ஜூன் மாதம் 1950-ம் ஆண்டு சபரிமலைக் கோவிலுக்கு தீவைத்து சிலையைச் சேதப்படுத்தினர். கோவிலுக்கு பக்தர்கள் வருகை வழக்கம் போல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு கோவிலின் சேதம் சரி செய்யப்படவில்லை.

திருவிதாங்கூர் ராஜ்ஜிய தேவசம் கமிசன் (TRDC) கலைக்கப்பட்டு 1950-ல் உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேவசம் போர்டு (TDB) என்கிற புதிய அமைப்பு பின்னர் ஒரு புதிய கோவிலைக் கட்டியது. அதன் பின் பக்தர்கள் வருகை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே சென்றது.

பதினெட்டாம் படி அருகே குவிந்து இருக்கும் பக்தர்கள்.

ஒரு சில ஆயிரங்களாக இருந்த பக்தர் கூட்டம், 70-களிலும் 80-களிலும் பல்லாயிரமாக அதிகரித்து, பின்னர் லட்சங்களைத் தொட்டு, இன்றைய நிலையில் ஏறக்குறைய நாளொன்றுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருமளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும், நாளொன்றுக்கு ஒரு கோடி பக்தர்கள் வருவதாக கொஞ்சம் ஊதிப் பெருக்கிச் சொல்கிறது தேவசம்போர்டு.

பக்தர்களின் வருகை அதிகரித்ததற்கு ஏற்ப, கோவிலின் வழிபாட்டு நாட்களும் அதிகரித்துள்ளன. இன்றைய நிலையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 133 நாட்கள் கோவில் திறந்து வைக்கப்பட்டு 1431 மணி நேரங்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் 10 பக்தர்களை ஒரு நொடி நேரத்திற்கு தரிசனம் செய்ய அனுமதிப்பதென்றால், பக்தர்களின் மொத்த தொகை 51,51,600 ஆக இருக்கும். பக்தர்களை கருவறைக்கு முன் நீண்ட நேரம் தரிசிக்க விடுவதும் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

இவ்வாறாக தற்போது தென்னிந்தியா எங்கிலும் இருந்து ஏராளமான நடுத்தர வர்க்க பக்தர்கள் வந்து குவிகின்றனர். இதன் காரணமாக தங்கமாகவும் பணமாகவும் ஏராளமான காணிக்கைகள் குவிகின்றன. இந்தப் போக்கில்  முன்னொரு காலத்தில் பழங்குடிகளாலும் பார்ப்பனிய சாதி அடுக்குகளுக்கு வெளியில் இருந்தவர்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட கோவில், தற்போது பார்ப்பனிய சாதிகளாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. பக்தர்களின் சேத்திராடனம் என்பதைக் கடந்து அரசால் கட்டுப்படுத்தப்படும் பல்லாயிரம் கோடி வியாபார சாம்ராஜ்ஜியமாக உயர்ந்து நிற்கிறது.

கண்டுபிடிக்கப்பட்ட சடங்குகள் !

பத்திலிருந்து ஐம்பது வயது வரையிலான பெண்களின் நுழைவுக்கு எதிரான தடை 1991ல் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பெண்களின் மாதவிலக்கின் காரணமாக அவர்களால் 41 நாட்களுக்கு புனிதத் தூய்மையை கடைபிடிக்க முடியாது என்பதும், அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் பெண்களை விரும்ப மாட்டார் என்பதுமே இந்த தீர்ப்பிற்கான முகாந்திரம்.

எனினும், இந்த தடைக்கு அறிவியல் பூர்வமான விளக்கமோ, சடங்குப்பூர்வமான புனிதக் காரணங்களோ ஏதும் இல்லை.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் பழைய புகைப்படம் இணையத்திலிருந்து…

பார்ப்பனிய சாதிகள் மாதவிலக்கை அசுத்தமானதாகக் கருதுவதும், அந்தக் காலங்களில் பெண்களை கோவில்களுக்கு அனுப்பாமல் இருப்பதும் உண்மை தான். ஆனால், மாதவிலக்கு என்பது பழங்குடிகளைப் பொறுத்தவரை புனிதமானது மட்டுமின்றி செழிப்பின் குறியீடு.

அவர்கள் எல்லா வயதுப் பிரிவையும் சார்ந்த தங்களது பெண்கள் மற்றும் குழந்தைகளோடு 60-கள் வரை இந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். அதே போல் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பார்ப்பனிய சாதிகளைச் சேர்ந்த பெண்களே கூட 80-களின் போது இக்கோவிலுக்கு வந்துள்ளதற்கு ஆவணப்பூர்வமான சான்றுகள் உள்ளன.

ஆகமப்பூர்வமான பாரம்பரியத்தை அதிகம் கொண்டிராத கருநாடகாவைப் பூர்விகமாக கொண்ட தாழமோன் என்கிற குலத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டனர்.

சமீப காலம் வரை சபரிமலைக் கோவிலில் நம்பூதிரி பார்ப்பனர்களால் கட்டுப்படுத்தப்படும் பிற கோவில்களில் பின்பற்றப்படுவதைப் போல் பார்ப்பனிய வேதங்களை அடிப்படையாக கொண்ட ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே காட்டுக்குள் இருக்கும் கீழ்த்தர சாமிகள் எனக் கருதப்பட்ட அய்யப்பன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வைதீக நடைமுறைப்படி அஷ்டபந்தன (எட்டு சடங்குகள்) முறையில் பிரதிஷ்ட்டை செய்யத் தேவையில்லை என்பதே நம்பூதிரி தந்திரிகளின் கருத்தாக இருந்து வந்தது.

அனைத்து சிறுதெய்வங்களையும் உட்செரித்து தனது சடங்குகளை புகுத்துகிறது பார்ப்பனியம்.

பதினெட்டு மலைகளைத் தனது எல்லையாக கொண்ட அய்யப்பன் கோவிலில் வைதீக முறைகளைப் பின்பற்றப்படுவதை எந்த நம்பூதிரிக் குடும்பமாக இருந்தாலும் எதிர்த்திருக்கும். வைதீக பாரம்பரியம் ஏதுமற்ற – தென் கருநாடகத்த்தின் பொட்டி குடும்பத்தைப் பூர்வீகமாக கொண்ட – தாழமோன் குடும்பத்தினரிடம் கோவிலின் உரிமை வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல.

கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் பெரும்பாலான புராணக் கட்டுக்கதைகளும், வழக்கங்களும் சமீபத்திய உருவாக்கங்கள் தாம். சடங்குகளின் பாரம்பரியம் எனப்படுவதில் எதுவும் நிரந்தரமானது கிடையாது. எல்லா பாரம்பரிய வழக்கங்களையும் என்னதான் நாம் காலங்களைக் கடந்தது என்று சொன்னாலும், புதிய புரிதலுக்கும், புதிய சூழலுக்கும் தக்கவாறு மாறித்தான் வந்துள்ளன. உலகப் பொது வழக்கமான இந்த சமூக நடைமுறைக்கு சபரிமலையின் பாரம்பரியங்கள் மட்டும் எந்தவிதத்திலும் முரணானது அல்ல.

பார்ப்பனிய மேலாதிக்கம் !

புதிய நடைமுறைகளைப் பொறுத்தவரை குறிப்பான போக்காக காணப்படுவது என்னவென்றால், பார்ப்பனிய கண்ணோட்டத்தில் சிலவற்றை அல்லது சிலரை தள்ளி வைப்பதும், வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கமும் திட்டமிட்ட ரீதியில் புகுத்தப்பட்டது தான்.

இதன் காரணமாக மிகக் கடுமையான கானகப் பயணத்தின் போது பக்தர்களிடையே நிலவிய ஒற்றுமையும் சகோதரத்துவமும் நீர்த்துப் போகின்றன. அதே போல் தற்போது மதச்சார்பின்மையின் குறியீடாக விளங்கி வந்த அய்யப்பனுக்கும் அவரது இசுலாமியத் தோழர் வாவர் சாமிக்கும்,  அர்த்துங்கல் கிறிஸ்தவ தேவாலயத்துக்குமான தொடர்பை அறுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

பார்ப்பனியவாதிகள் சபரிமலை பக்தர்களிடையே சாதி-மத-இன பேதமின்றி நிலவி வந்த நெகிழ்வுத் தன்மையையும், கூட்டுறவையும் அழித்தொழிப்பதற்கு முயல்கின்றனர்.

எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடும் காட்சி.

சபரிமலை என்பது எல்லா சாதிகள், பிரிவுகள் மற்றும் மதங்களுக்கானது என்கிற வழக்கம் திட்டமிட்ட ரீதியில் புதிய விதிகள் மற்றும் ’மரபுகளின்’ மூலம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. தங்களது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். பல பக்தர்கள் அர்த்துங்கள் கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் சென்று வழிபடுவதுண்டு.

இது போன்ற பொதுத்தன்மைகளும், வேறு சில வழக்கங்களும் அய்யப்ப பக்தி என்பது பௌத்த மத பாரம்பரியத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியது என்பதாக காட்டுகின்றது. எனினும், “தர்ம சாஸ்தா” என்று அழைப்பதைக் கொண்டோ, சரண கோஷங்களைக் கொண்டோ, பிரம்மச்சரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைக் கொண்டோ மட்டும் இந்நம்பிக்கை முழுவதற்கும் பௌத்த பாரம்பரியத்தை சாற்ற முடியாது.

ஏனெனில், தர்ம சாஸ்தா என்பது சமீபத்திய வார்த்தைப் பிரயோகம்; அதே போல் சரண கோஷம் என்பதை பௌத்த சங்கத்தின் இணைவதை உணர்த்தும் சரண கோஷத்தோடு இணை வைத்துச் சொல்ல முடியாது. போலவே இந்த கோணத்தை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் கிடையாது.

படிக்க :
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

மேலும் பௌத்த மடாலயங்கள் பாறைப் பகுதிகளிலும், குறிப்பாக வணிகப் பாதைகளிலும் அமைந்திருக்கும். சாஹ்ய மலையில் வீற்றிருக்கும் நீலகண்டர் எனும் போதி சத்வர் குறித்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு அவரோடு அய்யப்பனைத் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தவில்லை. மேலும், பௌத்த சிற்ப கலையின் தாக்கம் ஏதும் அய்யப்பனின் உருவத்தோடு ஒத்துப் போகவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பு !

புலிகளின் சரணாலயமாய் விளங்கும் அந்தக் காட்டின் சூழல் மற்றும் அதைப் பாதுகாக்கும் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு பக்தர்களின் வசதிக்காக எனும் பெயரில் நவீன நகரக் கட்டுமானங்களை ஏற்படுத்தக் கோரி வருகின்றது தேவஸ்வம் போர்டு.

சபரிமலை பெண்கள் நுழைவு விசயத்தில் மட்டுமல்ல, சுற்றுசூழல் குறித்த தீர்ப்புகளிலும் கூட நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை கோவில் நிர்வாகம்.

இதன் காரணமாக கேரள வனச் சட்டம் 1961, வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 ஆகியவற்றை மீறி காடுகளை அழிக்கப்பட்டும், வன நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றது. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவது சபரிமலைக்குப் புதிதல்ல. சொல்லப் போனால், பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உட்பட பல நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்பட்ட இடம் அது.

கோவிலின் சந்நிதானம் கட்டப்படுவதற்கு எதிராக பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துணை நீதிமன்ற உத்தரவு WP(C) எண் 202/95, WP(C) 212/2001 மற்றும் அக்டோபர் 24, 2005 தேதியிட்ட மத்திய அரசு உத்தரவு கடித எண் F.No.8-70/2005-DC,  மாநில அரசு உத்தரவு GO(Rt) 594/05/F7WLD (31-10-2005), மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு I.A No 1373  (No 202 of 1995) உள்ளிட்டவை வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படுவதற்கு எதிரானவை.

தேவசம் போர்டின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களால் மத்திய வனத்துறை அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தினால் அது அமல்படுத்தப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் சந்நிதானத்தைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் விருந்தினர் விடுதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கூடுதலாக கட்டிடங்கள் கட்டவும் தடை உள்ளது.

படிக்க :
♦ சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

சந்நிதானத்தைச் சுற்றியுள்ள நிலங்களையும் லீசுக்கு பெறப்பட்ட நிலங்களை பயன்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. லீசுக்குப் பெறப்பட்ட நிலத்தின் மொத்தம் 14.6 சதவீத நிலங்கள் பக்தர்களில் 9.5 சதவீதமானவரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.4 சதவீத நிலம் வெறும் 0.1 சதவீதமானோரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்கொடையாக விடுதிகள் கட்ட சந்நிதானத்தைச் சுற்றி அனுமதி வழங்கப்பட்டிருப்பது லீஸ் ஒப்பந்தத்திற்கு முரணானது மட்டுமின்றி பொது நிலத்தை ஒதுக்குவதில் செய்யப்பட்ட அநீதியுமாகும்.

வி.ஐ.பி-க்களும் பணக்கார பக்தர்களும் தங்களது சொந்த தேவைகளுக்காக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது கடுமையான வனப்பகுதியில் பாதயாத்திரை வரும் சபரிமலை பக்தர்களிடையே நிலவ வேண்டிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்த சகோதரத்துவம் என்கிற பண்புக்கே எதிரானது.

தற்போது எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் அப்பட்டமாக மீறப்படுகின்றது. கோவிலின் மீதான தங்களது கட்டுப்பாடு திருவாங்கூருக்கு மாற்றப்பட்டது குறித்த அறியாமையில் இருக்கும் பந்தளம் குடும்பத்தினரும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி குறித்த அறிவற்ற தாழமோன் தந்திரியும் சட்டவிரோதமான முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையே தான் கோவிலின் மற்ற பூசாரிகளும் செய்து வருகின்றனர். ஓட்டுக்களின் மீது ஒரு கண்ணை வைத்துள்ள அரசியல்வாதிகளும் அரசியல் சாசனம் குறித்த அறியாமையில் மேலும் தாழ்ந்து செல்கின்றனர். சடங்கு சம்பிரதாயங்களின் மீதான நெகிழ்வுத் தன்மையும் சமூக விடுதலையையும் அடிப்படையாகக் கொண்ட தனது பாரம்பரியத்திற்கு முரணான ஒரு நிகழ்வுப் போக்கை சபரிமலை சந்தித்து வருகின்றது.

தமிழாக்கம் :

 

நன்றி: அவுட்லுக்

மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா

ந்த பதிவின் மூலம் நான் கடந்து வந்த சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு அன்றாட வாழ்வியலையும் உயிர்களையும் பாதிக்கிறது என்று பார்ப்போம்.

இந்த பதிவில் நடந்த சம்பவங்கள் யாவும் உண்மையில் பல்வேறு கால நிலைகளில் சூழ்நிலைகளில் நிகழ்ந்தவை. இந்த பதிவில் நிகழ்வு 1 மற்றும் நிகழ்வு 2 என்று விரியும் சம்பவங்களில் சூழ்நிலை(situation) ஒன்று தான் இடம்(place of occurence) மற்றும் மனிதர்கள் வேறு.

நிகழ்வு 1
காட்சி 1

70 வயதான பாட்டி, வீட்டில் பரண் மீது ஏறி பொருட்களை அடுக்கும் போது தவறி கீழே விழுந்து விட, தலையில் வெட்டுக்காயம். மருத்துவரை சந்தித்து தையல் போடப்படுகிறது.

முதியோர் – மாதிரிப்படம்

தலையில் அடிபடும் நோயாளிகளுக்கு பொதுவாக கேட்கப்படும் அபாய அறிகுறிகள் குறித்து கேட்கப்படுகின்றன ;

காது மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வந்ததா?

இல்லை.

தலை சுற்றல் இருக்கிறதா ?

இல்லை.

வாந்தி ?

இல்லை.

“கவலை வேண்டாம் பாட்டி.. மாத்திரைகளை எடுங்கள். நாளை வந்து கட்டு மாற்றிக்கொள்ளுங்கள். தலைசுற்றலோ..வாந்தியோ இருந்தா தான் பெரிய பிரச்சனை. இப்போது பிரச்சனை இல்லை” என்று கூறப்படுகிறது

பாட்டியும் தனது மகளுடன் சென்று விடுகிறார்.

நிகழ்வு 2
காட்சி 1

மேற்சொன்னது போன்றே 70-80 வயதுகளில் உள்ள பாட்டி, யாரும் கூட வரவில்லை. தனியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகிறார்.

இரவு கழிப்பறை சென்று வருகையில் கீழே விழுந்ததில் தலையில் பலமான அடி வாந்தி அவ்வப்போது வருகிறது. தலைசுற்றல் இருக்கிறது. ரத்த அழுத்தம் சோதிக்கப்படுகிறது – மிகவும் அதிகமாக இருப்பதாக ரத்த அழுத்தமானி காட்டுகிறது. 108 அழைக்கப்படுகிறது

நிகழ்வு 1
காட்சி 2

தையல் போடப்பட்ட அந்த பாட்டியை அவரது மகள் இரண்டு நாட்கள் கழித்து அழைத்து வருகிறார். கையில் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேன் உள்ளது.

“சார். எங்க ரிலேசன் மெடிக்கல் காலேஜ்ல வொர்க் பண்றார். பயமா இருந்துச்சு சார். அதான் ஒரு சி.டி ஸ்கேன் எடுத்து பாத்துறலாம்னு.. பாத்துட்டேன்.. ”

” ஓ..ஓகே மா.. சிடி ல ஒன்னும் இல்ல மா.. மூளை நல்லா இருக்கு.. கவலைப்படறதுக்கு ஒன்னும் இல்லை”

நிகழ்வு 2
காட்சி 2

108 அழைக்கப்பட்ட பின். அந்த பாட்டியிடம் துணைக்கு செல்ல ஆள் இருக்கிறதா? என்று கேட்கப்படுகிறது.

“நான் ஒரு அநாதி ராசா.. யாரும் இல்ல.. பெத்த புள்ளைகளும் ஊருக்கு ஒன்னா போய்ருச்சு.. அவரும் போன வருசம் தான் போய் சேந்தாரு”

108 ஆம்புலன்ஸ்“பாட்டி வேற சொந்தம் இருந்தாலும் ஓகே தான். போன் நம்பர் குடுத்தா போன் பண்ணி வரவச்சுரலாம்.. சொல்லுங்க”

“ராசா.. எனக்குனு நாதியில்ல.. இங்குனயே ஒரு கட்ட போட்டு ஒரு பாட்டில் ஏத்திவிடுயா.. நான் வீட்டுக்கு போறேன்”

” பாட்டி.. தலைல பலமா அடிபட்ருக்கு.. சிடி ஸ்கேன் எடுத்து மூளைல அடிபட்ருக்கானு பாக்கணும். சிவகங்கை பெரியாஸ்பத்திரிக்கு போகணும். ”

” அய்யோ . ராசா..அங்கலாம் வேணா.. என்கிட்ட காசு இல்ல.. முதியோர் பென்சன் 1000த்த வச்சு கஞ்சி குடிச்சுட்ருக்கேன். நீ இங்கேயே பாரு தம்பி”

நிகழ்வு 1
காட்சி 3

“ஏம்மா.. சிடி ஸ்கேன் தேவையாயிருந்தா நானே எழுதித்தந்துருப்பேனே.. எதுக்கு தேவையில்லாம ஸ்கேன்..”?

” இல்ல சார்.. எங்களுக்கு ஒரே பயம் சார். அது போக மெடிக்கல் காலேஜ்ல
ஆள் இருக்காரு. சிடி ஸ்கேன் 500 ரூபாய்க்குனால உடனே எடுத்து ரிசல்ட்டும் குடுத்துட்டாங்க.. எதுக்கும் எடுத்து பாத்துறது நல்லது தான சார்”

” ஏம்மா.. ஒரு சிடி ஸ்கேன் இருபது எக்ஸ் ரேக்கு சமம்.. தேவையில்லாத கதிர் வீச்சுக்கு உடம்ப உட்படுத்துறது தப்புமா… “

” சரி சார்.. இனிமே உங்ககிட்ட கேட்டு செய்றோம்”

நிகழ்வு 2
காட்சி 3

“108 ஆம்புலன்ஸ்காரங்க கூட ஆள் இல்லனா ஏத்திட்டு போக மாட்டாங்க பாட்டி.. புரிஞ்சுக்கோங்க..”

“சாமி.. எனக்கு நெசமா ஆள் இல்லயா.. இருந்தா கூப்டமாட்டமா?”

108 வருகிறது.

ஆனால் வெளியே அதுவரை அமர்ந்திருந்த பாட்டியை காணவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் தேடப்பட்டும் காணவில்லை..

ஒரு சக பாட்டி;
” சார்.. அந்த பொம்பள செத்த நேரத்துக்கு முன்னாடியே கார் வந்துரும்னு கிளம்பி போய்ருச்சு சார்..”

” ஏம்மா.. நீங்க நிறுத்தக்கூடாதா.. அதுக்கு தலைல அடிபட்டுருக்கு மா..”

“எனக்கு என்ன சாமி தெரியும். சொன்னாலும் அது கேக்காது”

“சரி.. எந்த ஊரு பாட்டி அது?”

“@&#%!%÷”

நிகழ்வு 1 மற்றும் 2 இரண்டிலும் சூழ்நிலைகள் ஒன்று தான் மருத்துவரும் ஒன்று தான் முதல் நிகழ்வில் தேவையில்லாத சிடி ஸ்கேன் எடுக்கப்பட, இரண்டாவது நிகழ்வில் அத்தியாவசியமான சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை.

அந்த கிராமத்தை சேர்ந்த சுகாதார செவிலியருக்கு போன் செய்து.. அந்த பாட்டி குறித்து கூறி .. அவர் வீட்டிற்கு வந்தால் உடனே அவரை 108-ல் மருத்துவ கல்லூரிக்கு அனுப்ப சொல்லிவிட்டு அடுத்த நோயாளிகளில் மூழ்கிவிட்டேன்.

மறுநாள் பாட்டி நியாபகம் வர அந்த கிராம சுகாதார செவிலியருக்கு போன் செய்து விசாரிக்கும் போது;

” சார்.. அந்த பாட்டி வீட்டு அக்கம்பக்கத்துல உள்ளவங்க கிட்டலாம் சொல்லி வச்சு… வந்தா என்ன கூப்டுங்கனு சொல்லிட்டு வந்தேன் சார்..ஆனா”

“என்னமா ஆனா?”

” பாட்டி நைட் வீட்டுக்கு வரல சார்.. காலைல குளத்து ஓரத்துல கெடந்து பாடிய எடுத்துருக்காங்க.. அவங்களுக்கு பிள்ளைங்க யாரும் இல்ல. அதனால் யார்கிட்ட பேசுறதுனு தெரியல.. ஊர் சேர்ந்துதான் காரியம் பண்ணிட்ருக்கோம்”

“ஓ.. சரிம்மா.. நான் அங்க வர்றேன்.. போன வைங்க”

நிகழ்வு 1 மற்றும் 2 இரண்டிலும் சூழ்நிலைகள் ஒன்றுதான் மருத்துவரும் ஒன்று தான் முதல் நிகழ்வில் தேவையில்லாத சிடி ஸ்கேன் எடுக்கப்பட, இரண்டாவது நிகழ்வில் அத்தியாவசியமான சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை அதன் ஆணிவேரோடு உணர்ந்தால் அங்கு நம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வு விளங்கும்.

இது போன்ற பல நிகழ்வுகள் நினைவுகளாய் அலையாடுகின்றன

இறைவன் நாடினால் தொடர்ந்து பகிர்வேன்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 3

தொண்டு நிறுவனங்கள் பிரச்சனையை பிரித்துப் பார்க்கும் போக்கு

ப்போது இவர்களை வெளிநாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வர உதவி செய்த தொண்டு நிறுவனங்கள் பற்றி பார்க்கலாம். இவங்க பாதிக்கப்பட்ட நிறைய பேரை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர்றாங்க. கொண்டு வந்து உதவி செய்றாங்க.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்காங்க. ஒரு வேளை ஒருவர் வெளிநாட்டில் இறந்து போனாலும் உடலை கொண்டு வர உதவி பன்றாங்க. இந்த தொண்டு நிறுவனங்கள் செய்வதை கண்டிப்பா பாராட்டணும்.

ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலுமே தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு மாற்றாக இருக்க முடியாது. இது ஒரு எல்லாருக்குமே தெரிந்த ஒன்று.

ஒரு விசயத்த எடுத்தால் அந்த விசயத்துக்கு மூலமா இருக்கிற ஒரு காரணத்தை போய் தீர்க்கிறதுதான் நோய்க்கு மருந்தா இருக்கும். இப்போ எனக்கு அடி பட்டிருச்சு. அடிக்கு மருந்து மட்டும் போட்டிட்டிருந்தா, அடி வேற எங்கயும் பரவாம இருக்க மருந்து மட்டும் போட்டா போதாது. அந்த அடி ஏன் பட்டுச்சு, இனிமே மத்தவங்களுக்கு படாம இருக்கனும்.

அதுக்கான முயற்சிகளில் இந்தத் தொண்டு நிறுவனங்கள் எப்போதுமே இறங்கிறதே கிடையாது. பயமா அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு வரும் பணமே இந்த மாதிரி குற்றவாளிங்க கிட்ட இருந்து வருதா என்ற ஒரு கேள்வியை நான் இங்க எழுப்புகிறேன்.

இது இரண்டுமே காரணமாக இருக்கலாம். சில தொண்டு நிறுவனங்கள் பயத்தின் காரணமாக விலகி நிற்கலாம். பெரிய தொண்டு நிறுவனங்கள் அவங்களுக்கு வர வேண்டிய நிதியே அங்க இருந்து வர்றதுனால வாங்கிகிட்டு பிரச்சனையை பெரிசாக்காம நான்கு பேருக்கு தெரியாம முடிக்கிறதா இருக்கலாம்.

படிக்க :
சிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி : மாற்றா ? ஏமாற்றா ?

உதாரணமா வெளிநாட்டில் இருந்து மீட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் இது மாதிரி ஒருத்தர் அங்க மாட்டிக்கிட்டார்ன்னு தெரிஞ்சா அவங்க குடும்பத்துக்கு ஆதரவு, அவரை கொண்டு வர்ரதுக்கான ஆவணங்கள், தகவல் தொடர்பு இது மாதிரி நிறைய விசயங்கள்ள உதவி பண்றாங்க. உதவி செய்து கொண்டு வர்ராங்க.

ஆனா கொண்டு வந்த பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சட்ட உதவி, “இது மாதிரி செய்திருக்கீங்க, உங்களுடைய தவறு என்ன? ஏஜென்சியோட தவறு என்ன? ஏஜென்சியை தண்டிக்க என்ன செய்யணும், உங்களுடைய சட்ட உதவிக்கு அடுத்த தேவைக்கு என்ன செய்யணும்.” என்ற உதவியை கொடுக்கிறது கிடையாது.

வந்தவுடனே ஒரு பேச்சு வார்த்தை, புள்ளி விபரம் கணக்கு போட்டுக் கொள்கிறார்கள். போலீசுக்கு தகவல் சொல்றாங்க. அதுக்கு அப்பறம் அதைத் தொடர்ந்து கவனித்து “இது மாதிரி குற்றத்திற்கு என்ன ஆச்சு அது என்ன ஆச்சு? இதை பார்த்தீங்களா? அதை பார்த்தீங்களா? என்கிற ஆலோசனையும். சட்ட உதவியும் கொடுக்கிறதும் கிடையாது. (அதை மட்டும் செய்வதற்கு இன்னொரு தொண்டு நிறுவனம் இருக்கலாம், அவர்கள் வெளிநாட்டில் இருந்து மீட்பது பற்றி கவலைப்படுவது கிடையாது)

அவங்கள கொண்டு வந்து வீட்ல சேர்த்து ஒன்று இரண்டு நாட்களில் அவங்க கடமையை முடிச்சுக்கிறாங்க. அதுக்கப்பறம் அடுத்த கேஸ் பார்க்க போயிடறாங்க. இது சரியா என்பது கேள்வி.

ஒரு புற்றுநோயாளி என்றால் ஒரு நாள் வயிற்று வலி வரும். வயித்து வலிக்கு மருந்து ஒரு பெயின் கில்லர் மட்டும் கொடுத்தா போதுமா? அந்த புற்றுநோயாளியை குணப்படுத்த வேண்டாமா? அவருக்கு தீர்வு கிடைக்க வேண்டாமா?

இந்த வகையில வந்து தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது கிடையாது. அது ஏன் என்பதற்கு மேலே இரண்டு காரணங்களைச் சொன்னேன்.

போலீசு யாருக்கு?

இப்போது திரும்பிகொண்டு வரப்பட்ட 6 பேர் வந்த அன்றுதான் நம்ம மாண்புமிகு துணை முதலமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சரை பார்க்கிறதுக்காக ஏர்போர்ட் போனார். இந்த 6 பேரை பார்க்கிறதுக்காக வரும் போது போலீசுகிட்ட ஸ்பெசல் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தோம் வரேன்னு சொல்லியிருந்தாங்க ஆனா கடைசியில வரவே இல்லை. “தகவலை கேட்டு வாட்ஸ் ஆப்ல (whatsapp) அனுப்பிருங்க நாங்க பார்த்துக்கிறோம்” அப்பிடீன்னு சொல்லி விலகி போயிட்டாங்க.

இங்க எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுது? பாதிக்கப்பட்ட அதாவது ஒரு தவறு ஒரு குற்றம் அந்த குற்றத்தால பாதிக்கப்பட்ட ஒரு 6 பேர் நாடு கடந்து வர்ராங்க. அவங்களுக்கு கவனம் குடுக்கனுமா இல்ல இங்க இருக்கிற ஒரு அமைச்சர் ஒரு சொந்த விசயத்துக்காக டெல்லி போறார். எதுக்கு கவனம் குடுக்கனும். இங்க போலீசுக்கு வந்து… அந்த முன்னுரிமை தெரியலையா இல்ல அந்த முக்கியத்துவம் தெரியலையான்னு தெரியலை.

ஒருத்தன் இங்க வந்து ஏமாந்து போயி குடும்பமே நிர்கதியா நிற்கும் நிலையில் வந்துட்டிருக்கான் இவனை வந்து கவனிக்க வேண்டியதுதான் போலீசு துறை. பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியது தான் முதல் கடமை, இரண்டாவது தான் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு. ஆனா இங்க பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதோ, இல்லை அவர்களுக்கு ஆலோசனை சொல்லி உதவி செய்வதை விட அரசாங்கத்துக்கு பாதுகாப்பு குடுக்கிறதுக்குத்தான் போலீசுக்கு முதல் கடமையா இருக்கு, இந்த விசயத்தில. கடைசி வரை போலீஸ் வரவேயில்லை.

ஆசைக்கு யார் வெளிநாடு போகிறார்கள்?

கேசு எடுக்கும் போது போலீசு சொன்னாங்க இல்லையா , “உங்க ஆசைக்கு நீங்க போய் மாட்டிகிட்டீங்க”ன்னு.

இப்போ நீரவ் மோடியை எடுத்துப்போம், மல்லையாவ எடுத்துப்போம். இவங்க எல்லாம் கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு அங்க போய் உட்கார்ந்திருக்காங்க. அவங்க பேராசையால் பெரும் தவறுகள் இழைத்து விட்டு நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள்.

“உங்க ஆசைக்கு நீங்க போய் மாட்டிகிட்டீங்க” என பாதிக்கப்பட்டவர்களை குற்றம்சாட்டும் போலீசு.

ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடும்பத்தை காப்பாத்துறதுக்காக கையில் இருக்கும் பணத்தை குடுத்துட்டு போறாங்க. அங்க சம்பாதிக்கவும் முடியாம, உயிரை காப்பாத்திக்கிறதே பெரிய பிரச்சனையா வந்திருக்காங்க. இவங்களை போய் ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்வதுதான் போலீசின் இயல்பு.

சமீபத்துல கார்த்திக் ராஜ் அப்பிடின்னு திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த ஒருத்தர்  மலேசியால இறந்துட்டார். அவரோட பாஸ்போர்ட்-ன் கடைசி ஒரு பக்கம் மட்டும் வச்சு மருத்துவமனை வாசல்ல போட்டுட்டு போயிட்டாங்க. அதுக்கப்பறம் உலக மனித சங்கத்தில அவரை எடுத்து அவரோட குடும்பத்தை கண்டு பிடிச்சு, தகவல் போய் சேர்வதற்குள் 2 நாள் ஆகி விட்டது. அதற்குள் அவருக்கு ஈமச் சடங்கு எல்லாம் முடிச்சிட்டாங்க.

கடமை தவறும் அரசு

இது மாதிரி குற்றங்கள் தொடர்ந்து நடந்திட்டுதான் இருக்கு. அரசு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு உதவியோ இல்ல அடுத்து அவங்களுக்கான ஒரு ஆலோசனை என்ன செய்யலாம் என்ற மாதிரி திட்டமிட வேண்டும்.

இன்னோன்னு அரசு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டும் போது உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது.

படிக்க :
சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்

என் கைய கால உடைச்சுட்டு “உனக்கு பிரியாணி பாக்கெட் குடுத்திட்டேன், கை கால் இழந்ததுக்காக உனக்கு ஒரு லட்சம் குடுத்திட்டேன்.” என்று சொன்னால் என்ன பொருள். “கை கால் உடைஞ்சதுக்கப்பறம் நான் ஒரு லட்சம் வச்சு என்ன பண்ண முடியும். வச்சு பாத்திட்டிருக்க முடியும்… ஒன்னும் செய்ய முடியாது.”

அதுமாதிரி திட்டங்கள் வேலை இல்லாத இளைஞர்களை உருவாக்குவதாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று இது மாதிரி போய் பணத்தை குடுத்து ஏமாறுவார்கள், இல்லை பணத்தை ஏமாத்துற மோசடிகாரனாக மாறுவான்.

ஏன்னா அரசாங்கம் வேலை வாய்ப்பு உருவாக்கும் வாய்ப்புகளை பிரித்து பரவலாக்கவில்லை. வளர்ச்சியை பரவலாக்கினா எல்லா ஊர்லயும் வேலை வாய்ப்புகள் இருக்கும். இப்போது வேலை வாய்ப்புகள் பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன.

(தொடரும்)

– சரவணன்
நன்றி : new-democrats

முந்தைய பாகங்கள் :

1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
2.
 
விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?

ரஷ்ய புரட்சியின் 101-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் !

சியப் பாட்டாளிகளின் உன்னத சாதனைகளை உலகுக்கு பறைசாற்றிய தினமான நவம்பர் புரட்சி நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த புரட்சிகர அமைப்புகள் கொண்டாடின. அந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

*****

கோத்தகிரியில்…

கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக நவம்பர்-7 ரஷ்ய புரட்சி நாள் விழா கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், வாகனப்பிரிவு தோழர்கள் உட்பட 35பேர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் அவர்கள் கொடியேற்றி உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் தோழர் பாலன் சிறப்புரையாற்றினார். அழைப்பாளராக மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர்களது உரையில் ரஷ்ய புரட்சி வரலாறும், தொழிலாளி வர்க்கத்தின் மீதான  தற்போதைய அடக்குமுறைகளுக்கு விடிவு போராட்டங்களே! என்றும் விளக்கினார்கள்.

இறுதியில் நீ.அ.தொ. ச வாகனப்பிரிவு தலைவர் தோழர் சுப்பிரமணி இனிப்புகள் வழங்கினார்.

நமது நாட்டிலும் ஒரு புரட்சியை உருவாக்க போராட வேண்டியதன் அவசியத்தையும், அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்ற உற்சாகத்தை தோழர்களுக்கு இந்த நிகழ்வு வழங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
(இணைப்பு) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம்.

*****

பென்னாகரத்தில்…

வம்பர் 7 சூளுரை! மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !”

என்ற தலைப்பின் கீழ் 7.11.2018 அன்று காலை 10 மணியளவில் புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி சார்பாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கி, நவம்பர் புரட்சி இந்தியாவிற்கு தேவை என்பதனை விளக்கி பேசினார்.

இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தோழர்கள் மாணவர்கள் என அனைவரும் உற்சாகத்துடன் கலுந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம், மாவட்டங்கள்
தொடர்புக்கு: 63845 69228

*****

வேலூரில்…

ஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாளான நவம்பர் 7, அன்று அந்நாளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு  சங்கங்களான தட்டுவண்டி, தரைக்கடை வியபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் செங்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது.

மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் மற்றும் அடுக்கம்பாறை ஆகிய இடங்களில் கிளை சங்க தலைவர்கள் கொடி ஏற்றினர். இதில் மாவட்ட துணைத்தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் கலந்துக்கொண்டு இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சுரண்டலையும், அதற்கு துணையாக உள்ள பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தியும், அதை எதிர்த்து போராட வேண்டியதின் அவசியத்தையும் பேசினர்.

இது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் உணர்வூட்டும் வகையில் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,
வேலூர் மாவட்டம்.

*****

கடலூரில்…

சிய சோசலிச புரட்சியின் 1010-வது ஆண்டை முன்னிட்டு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக, பாட்டாளிவர்க்க ஆசான் தோழர் லெனின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.மேலும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தோழர்கள் ரசியப் புரட்சி பற்றியும் அதன் மகத்தான சாதனைகள் குறித்தும் உரையாற்றினர். மேலும் இந்திய மக்களை மரணக்குழிக்கு தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் என சூளுரைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். பேச : 97888 08110.

*****

சென்னையில்…

க்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் ! என்ற முழக்கத்தின் கீழ் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பறைமுழக்கத்துடன் கொடியேற்றி ரசியப் புரட்சிநாள் கொண்டாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.

_______________

சென்னை மதுரவாயல் பகுதியிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பிலும் நவம்பர் புரட்சிநாள் விழா பறைமுழக்கத்துடன் செங்கொடி ஏற்றி நடத்தப்பட்டது.

இதில் சிறுவர்கள், மாணவர்கள் – இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் புது உற்சாகத்தை வழங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

மனிதனை நம்பக்கூடாது என்பது கேவலமான விஷயமே !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 18

அன்று மாலை ஹஹோல் வெளியே சென்ற பிறகு, தாய் விளக்கையேற்றிவிட்டு, ஒரு காலுறை பின்ன முனைந்தாள். பின், உடனேயே எழுந்திருந்து, சஞ்சல மனத்தோடு அறைக்குள் மேலும் கீழும் நடந்தாள். சமையல் கட்டில் நுழைந்தாள். கதவைச் சாத்தினாள். புருவங்களைச் சுருக்கி நெரித்தவாறே திரும்பி வந்தாள். ஜன்னலின் திரைகளை இழுத்து மூடிவிட்டு, அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். மீண்டும் மேஜைமுன் சென்று அமர்ந்தாள்.

மாக்சிம் கார்க்கி

அவள் எவ்வளவுதான் முன்னேற்பாடுகள் செய்துவிட்டு உட்கார்ந்த போதிலும், அவள் கண்கள் மட்டும் அக்கம் பக்கம் பார்த்துத் திருதிருக்க விழிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. புத்தகத்தைத் திறந்து எழுத்துக்களை முணுமுணுக்கத் தொடங்கினாள். தெருப்பக்கத்தில் ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும் அவள் உடனே திடுக்கிட்டாள், புத்தகத்தைப் பட்டென்று மூடினாள். காதுகளை தீட்டிவிட்டுக்கொண்டாள்; பிறகு மீண்டும் அவள் புத்தகத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தாள். கண்ணைத் திறந்தும் மூடியும் வாய்க்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

“நாம் வாழும் இந்த நிலத்தில்…”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. விருட்டென்று எழுந்து புத்தகத்தை அலமாரியில் செருகிவிட்டுக் கலக்கத்துடன் கேட்டாள்.

”யார் அங்கே”

”நான்தான்”

ரீபின் தன் தாடியைத் தட்டி கொண்டு வந்து சேர்ந்தான்.

”நீ யாரங்கே?” என்று முன்பெல்லாம் கேட்க மாட்டாயே, தனியாயிருக்கிறாயா? ஹஹோலும் இருப்பான் என்று நினைத்தேன். அவனை நான் இன்று பார்த்தேன்; சிறைவாசம் இவனைக் கெடுக்கவில்லை” என்றான் ரீபின்.

அவன் கீழே உட்கார்ந்து தாயின் பக்கமாகத் திரும்பினான்.

”சரி. நான் வந்த விஷயத்தைப் பேசலாம்”

அவனது கவனமிக்க புதிரான பார்வை அவள் உள்ளத்திலே புரியாத பயத்தை எழுப்பியது.

“பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்று ஆழ்ந்து கரகரக்கும் குரலில் சொன்னான் அவன். “பிறப்பதற்கும் பணம் வேண்டும்; சாவதற்கும் பணம் வேண்டும். புத்தகம் போடவும், பிரசுரம் வெளியிடவும் பணம் வேண்டும். இந்தப் புத்தகங்களுக்கு எல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது என்பது உனக்குத் தெரியுமா?”

“இல்லை. எனக்குத் தெரியாது” என்று அமைதியுடன், எனினும் ஏதோ சந்தேக உணர்ச்சியுடன் சொன்னாள் தாய்.

“எனக்கும் தெரியாது. சரி, இன்னொரு விஷயம். இதையெல்லாம் யார் எழுதுகிறார்கள்?”

“படித்தவர்கள்…”

“ஓஹோ, படித்த சீமான்கள்தானா?” என்றான் ரீபின். அவனது தாடி வளர்ந்த முகம் திடீரெனச் சிவந்தது. “சொல்லப்போனால், இந்தச் சீமான்கள் புத்தகங்களை எழுதி அதை வெளியே பரப்பிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எழுதிய புத்தகங்களோ சீமான்களுக்கு எதிராக இருக்கின்றன. நீயே இதை யோசித்து எனக்கு விளக்கிச் சொல்லு, அவர்கள் எதற்காகத் தங்கள் பணத்தைப் பாழாக்கிப் புத்தகம் எழுத வேண்டும்? அந்தப் புத்தகங்களைக் கொண்டு சாதாரண மக்களைத் தங்களுக்கு எதிராகவே ஏன் தூண்டிவிட வேண்டும்? இல்லையா?”

தாய் படபடவென்று இமை கொட்டி பயந்து போய்க் கூச்சலிட்டாள். “நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”

”ஆஹா!” என்று கூறியவாறு அவன் ஒரு கரடியைப் போலத் திரும்பி உட்கார்ந்தான். “அப்படிச் சொல்லு, நானும், உன்னைப் போலத்தான், இந்த நினைப்பு என் மனதில் பட்டதோ இல்லையோ, உடனே என் உடம்பெல்லாம் குளிர்ந்து போயிற்று! ஆமாம்.”

“நீ என்ன, ஏதாவது புதிதாகக் கண்டு பிடித்திருக்கிறாயா?”

”ஆமாம். வெறும் ஏமாற்று” என்றான் ரீபின்.

“நம்மையெல்லாம் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நான் உணர்கிறேன். எனக்கு ஒன்றும் விவரம் தெரியாது. என்றாலும், இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை! துரோகச் செயல்! அதுதான் சங்கதி! என்னுடைய படித்த சீமான்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். ஆனால் நானோ உண்மையைத்தான் நாடுகிறேன். இப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. இனி நான் இந்தச் சீமான்களைப் பின்பற்றவே மாட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது, இவர்கள் என்னைக் கீழே தள்ளி என் எலும்புகளை ஒரு பாலம் மாதிரி உபயோகித்து அதன் மீது நடந்து சென்றுவிடுவார்கள்…”

அவனது வார்த்தைகள் தாயின் உள்ளத்தை ஒரு பாப சிந்தையைப் போல் பற்றிப் பிடித்தது.

“அட கடவுளே’ என்று வருத்தத்தோடு சொன்னாள் அவள், ”பாஷாவுக்குக் கூடவா இது புரியாமல் போயிற்று! மற்றவர்கள் எல்லோருக்கும் கூடவா…”

அவளது கண் முன்னால் உறுதியும் நேர்மையும் நிறைந்த முகங்கள் – இகோர், நிகலாய் இவானவிச், சாஷா முதலியோரின் முகங்கள் தோன்றி மறைந்தன. அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

“இல்லையில்லை” என்று தலையைக் குலுக்கிக் கொண்டே சொன்னாள் அவள். “என்னால் இதை நம்பமுடியாது! அவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள்”

”நீ யாரைச் சொல்லுகிறாய்?” என்று ஏதோ யோசித்தவாறே கேட்டான் ரீபின்,

“அவர்கள் எல்லோரையும்தான், நான் கண்டறிந்த அத்தனை பேரையும்தான்”

“அம்மா, நீ இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இன்னும் எட்டிப் பார்க்க வேண்டும்” என்று தலையைத் தொங்க விட்டுக்கொண்டே சொன்னான் ரீபின். ”நம்மோடு சேர்ந்து உழைக்கிறார்களே, அவர்களுக்கே இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம், அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நம்பிக்கொண்டிருப்பதே உண்மை என்கிறார்கள். ஆமாம், அது அப்படித்தான். ஆனால் அவர்களுக்குப் பின்னால் மற்றவர்கள் நிற்கலாம். தங்கள் சுயநலத்தையே பெரிதாக மதிக்கும் மனிதர்கள் நிற்கலாம். ஒரு மனிதன் தனக்குத்தானே எதிராக வேலை செய்வானா?”

பிறகு அவன் ஒரு விவசாயியின் கடுமையான நம்பிக்கையோடு பேசினான்:

“இந்தப் படித்த சீமான்களால் எந்த நன்மையும் என்றுமே விளையப் போவதில்லை.”

”நீ என்ன செய்வதாக நினைத்திருக்கிறாய்?” என்று மீண்டும் சந்தேகவயப்பட்டவளாய்க் கேட்டாள் தாய்.

“நானா?” என்று அவளைப் பார்த்துக் கூறிவிட்டு மௌனமானான் ரீபின். பிறகு சொன்னான். “இந்தச் சீமான்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. அதுதான் சங்கதி.”

மீண்டும் அவன் சோர்ந்து குன்றி, மெளனமானான்.

”நான் இந்தத் தோழர்களோடு சேர்ந்து உழைக்க விரும்பினேன். அந்த மாதிரி வேலைக்கு நான் லாய்க்குத்தான். மக்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்போதோ நான் விலகிச் செல்கிறேன். எனக்கு நம்பிக்கை அற்றுவிட்டது. எனவே நான் போகத்தான் வேண்டும்.”

அவன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

“கிராமங்களுக்கும் நாட்டுப்புறங்களுக்கும் போகப் போகிறேன். போய், அங்குள்ள சாதாரண எளிய மக்களைத் தூண்டிவிடப் போகிறேன். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களே வழிதேடி முனைய வேண்டும். அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால், தங்கள் வழியைத் தாமே கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதுதான் என் வேலை. அவர்கள் தம்மைத் தாமே நம்பவேண்டும். அவர்களுக்கு உதவுவதெல்லாம் அவர்களது சொந்த அறிவுதான் ஆமாம்!”

அவள் அந்த மனிதனுக்காக அனுதாபப்பட்டாள்; அவன் போக்கைக் கண்டு அஞ்சவும் செய்தாள். எப்போதுமே அவள் மனதுக்குப் பிடிக்காதிருந்த ரீபின். இப்போது, ஏதோ ஒரு புரியாத காரணத்தால், அவள் அன்புக்கு உரியவனாகத் தோன்றினான். எனவே அவள் அவனிடம் மிருதுவாகச் சொன்னாள்.

“அவர்கள் உன்னை பிடித்துக் கொண்டுபோய் விடுவார்கள்.”

ரீபின் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

”அவர்கள் என்னைக் கைது செய்வார்கள்; பிறகு விட்டுவிடுவார்கள். அதன்பின் நான் என் வேலையை மீண்டும் தொடங்குவேன்.”

“முஜீக்குகளே(1) உன்னைக் கட்டிப்போட்டு விடுவார்கள், சிறையில் தள்ளுவார்கள்.”

”நான் சிறைவாசம் அனுபவிப்பேன்; பிறகு வெளியேயும் வருவேன். மீண்டும் என் வேலையையே தொடங்குவேன். முஜீக்குகள் என்னை மீண்டும் ஒருமுறை, இருமுறை, பலமுறை கட்டிப் பிடித்துச் சிறைக்கு அனுப்புவார்கள். அதன் பிறகுதான் என்னைக் கட்டிப்போடத் தயங்கி நின்று, நான் சொல்வதை அவர்கள் காதில் வாங்குவார்கள்; உணரத் தொடங்குவார்கள். ”என்னை நம்ப வேண்டாம் ஆனால் நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்” என்பேன் நான். அவர்கள் கேட்கமட்டும் தொடங்கிவிட்டால், அப்புறம் என்னை நம்பவும் தொடங்குவார்கள்.”

அவன் மிகவும் மெதுவாகவே பேசினான்; ஒவ்வொரு வார்த்தையையும் எடை போட்டுத் தரம் பார்த்து நிதானமாகப் பிரயோகிப்பது மாதிரி தோன்றியது.

“அண்மையில் நான் நிறையக் கேள்விப்பட்டேன். ஏதோ கொஞ்சம் புரிந்துகொண்டேன்…”

“மிகயீல் இவானிவிச்! இத்துடன் நீ முடிந்து தொலையப் போகிறாய்” என்று தலையை வருத்தத்தோடு அசைத்துக் கொண்டு சொன்னாள் தாய்.

அவன் தனது ஆழ்ந்த கரிய கண்களால் எதையோ வினவுவது போலவும் எதிர்பார்ப்பது போலவும் அவளைப் பார்த்தான். அவனது பலம் பொருந்திய உடம்பு முன்புறமாகக் குனிந்தது. அவனது கைகள் நாற்காலியை இறுகப் பற்றின. அவனது பழுப்பு முகம் தாடிக்குள்ளாக வெளிறியதாய்த் தெரிந்தது.

“கிறிஸ்து நாதர் விதையைப் பற்றிச் சொன்ன விஷயத்தை எண்ணிப் பார். விதையை உற்பத்தி பண்ணுவதற்காக பழைய விதை செத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடாது. நான் ஒரு சாமர்த்தியமான கிழட்டுக் குள்ளநரிப் பிறவி!”

அவன் நிலைகொள்ளாமல் அசைந்து கொடுத்தான். பிறகு நிதானமாக நாற்காலியை விட்டு எழுந்தான்.

“நான் சாராயக்கடைக்குச் சென்று அங்குள்ளவர்களோடு சிறிது நேரம் பொழுது போக்குவேன். அந்த ஹஹோல் இன்னும் வருகிற வழியாய்க் காணோம். அவன் தன் பழைய வேலைக்குக் கிளம்பிவிட்டான் போலிருக்கிறது.”

“ஆமாம்” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள் தாய்.

“நல்லது. நீ அவனிடம் என்னைப்பற்றிச் சொல்லு…”

அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒன்றாகவே சமையற்கட்டுக்குப் போனார்கள். ஒருவரையொருவர் முகம் கொடுத்துப் பார்க்காமலே ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

“சரி, நான் வருகிறேன்.”

“போய்வா. நீ தொழிற்சாலை வேலைக்கு எப்போது கணக்குக் கொடுக்கப் போகிறாய்?”

“ஏற்கெனவே கொடுத்தாயிற்று.”

”எப்போது போகிறாய்?”

”நாளைக்கு அதிகாலையில். சரி வருகிறேன்.”

போகவே மனமற்றவனைப்போல் அவன் தயங்கித் தயங்கித் தடுமாறி வாசல் நடையைக் கடந்தான். ஒரு நிமிஷ நேரம் அவனது ஆழ்ந்த காலடியோசையைக் காதில் வாங்கியவாறே வாசலில் நின்றாள் தாய். அதே சமயம் அவளது இதயத்தின் சந்தேகங்களும் அவள் காதில் ஒலி செய்து கொண்டிருந்தன. அவள் அமைதியாகத் திரும்பி அடுத்த அறைக்குள் வந்தாள்; ஜன்னல் திரையைத் தூக்கிக் கட்டினாள். ஜன்னலுக்கு வெளியே இருள் அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து கிடந்தது.

“நான் இருளிலே வாழ்கிறேன்” என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்,

அந்தப் பலமும் திடமும் நிறைந்த கெளரவமான அந்த முஜீக்குக்காக அவள் வருத்தப்பட்டாள். அனுதாப்பட்டாள்.

அந்திரேய் ஒரே குதூகலத்தோடு திரும்பி வந்தான்.

தாய் அவனிடம் ரீபனைப் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டுவிட்டு அவன் சொன்னான். “போனால் போகட்டும். கிராமங்கள்தோறும் அலைந்து திரிந்து நியாயத்தைப் பற்றி அவன் கூச்சல் போடட்டும். அங்குள்ள மக்களை அவன் தட்டியெழுப்பட்டும், நம்மோடு ஒத்துழைப்பதென்பது அவனுக்குக் கொஞ்சம் சிரமம்தான். முஜீக்கின் கருத்துக்கள்தான் அவன் மூளை நிறைய இருக்கின்றன. நம்முடைய கருத்துக்கள் அவன் மண்டையில் ஏறாது. அதற்கு இடமும் கிடையாது.”

“அவன் படித்த சீமான்களைப் பற்றிப் பேசினான். அவன் சொன்னதில் ஏதோ கொஞ்சம் உண்மையிருப்பது போலத்தான் தெரிகிறது” என்று மிகவும் பதனமாகச் சொன்னாள் தாய். ”அவர்கள் உங்களை ஏமாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!”

“அம்மா, அவர்கள் உங்களை ஏமாற்றிக் கெடுக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல். “அம்மா, நம்மிடம் பணம் மட்டும் இருந்தால்… இன்னும் நாம் பிறர் தரும் பணத்தைக் கொண்டுதான் நம் காரியங்களைச் செய்கிறோம். உதாரணமாக, நிகலாய் இவானவிச்சுக்கு எழுபத்தைந்து ரூபிள்கள் மாதச் சம்பளம், அதில் அவன் நமக்கு ஐம்பது ரூபிள்களை நன்கொடையாகத் தருகிறான். அவன் மாதிரிதான் மற்றவர்களும் அரைப்பட்டினி கால் பட்டினியாகக் கிடந்து படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட, காலும் அரையுமாக வசூலித்த காசுகளை நமக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கிறார்கள். சொல்லப்போனால், சீமான்களில் எத்தனையோ ரகம்; சிலர் விட்டுப்பிரிவார்கள்; சிலர் ஏமாற்றுவார்கள். அவர்களில் மிகவும் நல்லவர்கள்தான் நம்முடனே சேர்ந்து நமது கொள்கைக்காகப் பாடுபடுவார்கள்…”

அவன் தன் இரு கைகளையும் தட்டிக் கொண்டு ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தான்.

”நம்முடைய இறுதி வெற்றிக்கு நாம் எவ்வளவோ தூரம் போயாக வேண்டும். எனினும் மேதின விழாவைச் சிறிய அளவிலாவது கொண்டாடுவோம், மகிழ்ச்சியாயிருக்கும்.”

ரீபினுடைய பேச்சினால் தாயின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த கவலை அவனது உற்சாகத்தினால் துடைத்தெறியப்பட்டது. அந்த ஹஹோல் தன் தலைமயிரைக் கலைத்துக் கோதியபடி, தரையையே பார்த்தவாறு மேலும் கீழும் நடந்தான்.

”சமயங்களில் இதயத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி நிரம்புகிறது, தெரியுமா உங்களுக்கு? எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களெல்லாம் தோழர்கள் என்று தோன்றும். அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே நெருப்பாய் எரிவார்கள். அவர்கள் அனைவரும் நல்லவர்களாகவும், குதூகலமும் அன்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். வாய்ப் பேச்சின் உதவியின்றியே ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள். அவர்கள் கோஷ்டி கானமாய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எனினும் ஒவ்வொருவரின் இதயமும் அவரவர் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கும். அந்த கீத நாதமெல்லாம் சிற்றாறுகளைப் போல் ஒரே ஜீவநதியில் சங்கமமாகும். அந்த ஜீவநதி விரிந்து பெருகி சுதந்திர வேகத்துடன் செல்லும். இறுதியாக, புதிய வாழ்க்கை என்னும் சந்தோஷ சாகரத்தோடு கலந்து சங்கமித்து ஒன்றாகிவிடும்!”

தாய் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். தான் லேசாக அசைந்து கொடுத்தாலும் அவனது சிந்தனையோ பேச்சோ அறுபட்டு நின்றுபோகக்கூடும் என அவள் அஞ்சினாள். அவள் எப்போதுமே மற்றவர்களைவிட அவனையே மிகவும் கூர்ந்து கவனித்துக் கேட்பாள்; அவனும் மற்றவர்களைப் போலல்லாது, எளிய, சாதாரண வார்த்தைகளையே உபயோகித்துப் பேசுவான். எனவே அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்துக்குள் நேராகச் சென்று புகுந்து பதிந்துவிடும். எதிர்காலக் கனவில் எண்ணத்தையும், கற்பனையையும் பற்றி பாவெல் எப்போதுமே பேசுவதில்லை. ஆனால் ஹஹோலோ எப்போதுமே அந்த எதிர்காலக் கனவில் இன்ப உலகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும். அவன் பேச்சுக்களெல்லாம் இந்தப் பூலோக மாந்தர் அனைவருக்கும் வரப்போகும் புதிய வாழ்வையும், புதிய மகிழ்ச்சியையும் பற்றியதாகவே இருக்கும். இந்தப் பேச்சுக்கள்தான் தாய்க்குத் தன் வாழ்க்கையின் அர்த்தத்தையும், தன் மகன் எடுத்துக்கொண்டுள்ள வேலையின் நோக்கத்தையும், அனைத்துத் தோழர்களின் சேவையின் காரணத்தையும் விளங்கச் செய்யும்.

”இந்தக் கனவிலிருந்து விடுபட்டு உணர்ச்சி பெறும்போது…” என்று தன் தலையை உலுப்பிவிட்டுப் பேசத் தொடங்கினான் ஹஹோல்.

”சுற்றுமுற்றும் பார்த்தால், எல்லாமே விறைத்துப்போய், அசிங்கமாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் களைத்துச் சோர்ந்து எரிந்து விழுகிறார்கள்.”

அவன் மேலும் துக்கம் தோய்ந்த குரலில் பேசத் தொடங்கினான்.

“மனிதனை நம்பக்கூடாது என்பதும், அவனிடம் பயப்பட வேண்டும். அவனை வெறுக்கக்கூட வேண்டும் என்பதும் கேவலமான விஷயமே. ஆனால் அது அப்படித்தான். ஒரு மனிதனுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. நீ மனிதனை நேசிக்க மட்டுமே விரும்பலாம். ஆனால் அது எப்படி முடியும்? உன் மனத்திலே உருவாகி உயிர் பெற்றுத் துடிக்கும் புதிய இதயத்தைக் காணாமல் உன் முகத்திலேயே ஓங்கி அறைவதற்காக, உன் மீது காட்டு மிருகம் மாதிரிச் சாடியோடிவரும் மனிதனை நீ எப்படி மன்னிக்க முடியும்? அதை உன்னாலே மன்னிக்கவே முடியாது. அதற்குக் காரணம் உனது தற்காப்புச் சிந்தை அல்ல. உன்னால் எதையுமே தாங்கிக் கொள்ளக்கூட முடியலாம். ஆனால், அப்படி அறைவதை நீ ஒப்புக்கொண்டு விடுவதாக அவர்கள் நினைக்கும்படி நீ விட்டுவிட மாட்டாய். மற்றவர்களை எப்படி அடித்து நொறுக்குவது என்பதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ள நீ உன் முதுகைக் குனிந்து கொடுத்து அவர்களை அடிக்க விட்டுவிடுவாயா? ஒரு நாளும் உன்னால் அப்படி விட்டுக் கொடுக்க முடியாது.”

அவனது கண்களில் உணர்ச்சியற்ற நெருப்பு கனல்வது போலிருந்தது; அவனது தலை பலமாகக் குனிந்து போயிருந்தது. அவன் மேலும் உறுதியோடு பேச ஆரம்பித்தான்,

“எந்தத் தவறானாலும் சரி, அது என்னைப் பாதித்தாலும் பாதிக்காவிட்டாலும் சரி, அதை மன்னித்து விட்டுக்கொடுக்க எனக்கு உரிமை கிடையாது. இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர்வாழவில்லை. இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கிழைப்பதை நான் விட்டுக் கொடுத்துவிடலாம். அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால், அதைக் கண்டு நான் சிரிக்கலாம்: அது என்னைச் சீண்டுவதில்லை. ஆனால், நாளைக்கோ என்மீது பலப்பரீட்சை செய்து பழகிய காரணத்தால், வேறொருவனின் முதுகுத் தோலையும் உரிக்க அவன் முனையலாம். ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது. மிகவும் ஜாக்கிரதையாக , நெஞ்சிளக்கமற்று ஆட்களை எடை போட வேண்டும். பொறுக்கியெடுக்க வேண்டும். “இவன் நம் ஆள், இவன் வேறு” என்று தீர்மானிக்க வேண்டும். இதெல்லாம் உண்மைதான். ஆனால், இது மட்டும் ஆறுதல் தராது.

என்ன காரணத்தினாலோ சாஷாவைப் பற்றியும் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள் தாய்.

“ஆமாம். உமியும் தவிடுமாக மாவிருந்தால் ரொட்டி எப்படிச் சுடுவது?” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

”அதுதான் இதிலுள்ள சங்கடம்” என்றான் ஹஹோல்.

“ஆமாம்” என்றாள் தாய். அவளது நினைவில் அவளது கணவனின் உருவம் தோன்றியது. பாசியும் பச்சையும் படர்ந்து மூடிய பாறாங்கல்லைப் போல் உணர்ச்சியற்றுப் போன தடித்த சொரூபியான கணவனின் உருவம் நிழலிட்டது. அதே வேளையில் அவள் வேறொன்றையும் கற்பனை செய்து பார்த்தாள். நதாஷாவை ஹஹோலும் சாஷாவை பாவெலும் மணந்து கொண்டால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாள்.

”சரி, இதெல்லாம் இப்படியிருக்கக் காரணம் என்ன?” என்று மீண்டும் தன் பேச்சில் சூடுபிடிக்கப் பேச ஆரம்பித்தான் ஹஹோல். “உன் முகத்தில் மூக்கு இருப்பது எவ்வளவு தெளிவாயிருக்கிறதோ, அவ்வளவு தெளிவானது இது. மக்கள் அனைவரும் ஒரே சமநிலையில் இல்லாதிருப்பதுதான் இதற்கெல்லாம் மூலகாரணம். நாம் இந்த ஏற்ற இறக்கத்தைத் தட்டி நொறுக்கி சமதளப்படுத்துவோம். மனித சிந்தனையும். மனித உழைப்பும் சாதித்து வெற்றிகண்ட சகல பொருள்களையும் நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம். பயத்துக்கும் பொறாமைக்கும் மக்கள் அடிமையாகாமல், பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் ஆளாகாமல் நாம் அவர்களைக் காப்பாற்றுவோம்…”

இதன் பிறகு அவர்கள் அதே மாதிரிப் பல பேச்சுக்களைப் பேசிக்கொண்டார்கள்.

அந்திரேயை மீண்டும் தொழிற்சாலையில் வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அவன் தன் சம்பளத்தையெல்லாம் தாயிடமே கொடுத்துவிட்டான். அவளும் எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இன்றி பாவெலிடமிருந்து பெறுவது போலவே சாதாரணமாக அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டாள்.

சமயங்களில் தன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அந்திரேய் தாயைப் பார்த்துச் சொல்லுவான்,

‘என்ன அம்மா, கொஞ்சம் பாடம் படிப்போமா?”

அவள் சிரிப்பாள்; கண்டிப்பாக படிக்க மறுப்பாள். அவனது கண்ணின் குறும்புத்தனம் அவளைத் துன்புறுத்திவிடும்.

“நான் பாடம் படிப்பது உனக்கு ஒரு வேடிக்கையாயிருந்தால் என்னை ஏன் நீ படிக்கச் சொல்கிறாய்?” என்று அவள் தனக்குள்ளாகவே நினைத்துக்கொள்வாள்.

ஆனால் எத்தனை எத்தனையோ முறை அவள் அவனை நெருங்கி ஏதாவது ஒரு அரும்பதத்துக்கு அர்த்தம் கேட்பாள். அப்படிக் கேட்கும்போது அவள் தன் பார்வையையும் வேறுபுறமாகத் திருப்பிக் கொள்வாள். கேட்கின்ற பாவனையிலும், தான் அதிக அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளமாட்டாள், என்றாலும் அவள் இரகசியமாய்க் கல்வி கற்று வருகிறாள் என்பதை அவன் ஊகித்துக்கொள்வான். அவளது அடக்கமான குணத்தைக் கண்டு வியந்து, அவளைப் பாடம் படிக்குமாறு கேட்டுக்கொள்வதை நிறுத்திக்கொண்டுவிட்டான்.

“என் கண்கள் வரவர மோசமாகி வருகின்றன. அந்திரியூஷா! எனக்கு ஒரு கண்ணாடி வேண்டும்” என்று அவள் அவனிடம் ஒருநாள் சொன்னாள்.

“அதற்கென்ன? போட்டால் போகிறது” என்றான் அவன். ஞாயிற்றுக் கிழமையன்று நகரிலுள்ள டாக்டரிடம் அழைத்துப் போகிறேன். கண்ணாடியும் வாங்கிக்கொள்வோம்.

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) முஜீக் – ருஷ்ய விவசாயி. பொதுவாக ஆண்களைச் சற்று இளக்காரமாகக் குறிப்பதற்கும் வழங்கும் சொல். – மொ-ர்.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு

நவம்பர் – 7, உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உன்னதக் கனவை நனவாக்கிய நாள் !

வம்பர் – 7,இது நினைவுகூறும் நாள் மட்டும் அல்ல.. செயலுக்காக உழைக்கும் வர்க்கம் தன்னை உருவேற்றிக் கொள்ள வேண்டிய தினம். கடந்த ஆண்டு (07.11.2017) ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை YMCA அரங்கில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தோழர் மருதையன், தோழர் தியாகு, வழக்கறிஞர் பாலன் ஆகியோர் உரையாற்றிய காணொளிகளின் மீள் பதிவு …

*****

இந்தியாவிற்கு தேவை புரட்சி என்ற தலைப்பில் கடந்த 07.11.2017 அன்று தோழர் மருதையன் ஆற்றிய உரையின் காணொளி…

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – மருதையன் உரை – 1

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – மருதையன் உரை – 2

*****

மூலதனம் நூலை தமிழாக்கம் செய்த தோழர் தியாகு அவர்கள் காலத்தை வென்ற மூலதனம் என்ற தலைப்பில் பேசிய உரையின் காணொளி…
 

காலத்தை வென்ற மூலதனம் – தியாகு பாகம் – 1

காலத்தை வென்ற மூலதனம் – தியாகு பாகம் – 2

*****

தொழிலாளர்களின் உரிமையை வென்ற ரசியப் புரட்சி பற்றியும், இன்றைய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது பற்றியும் வழக்கறிஞர் பாலன் அவர்களின் உரையின் காணொளி…

தொழிலாளர்களின் உரிமையை வென்ற ரசிய புரட்சி – பாலன்

தொகுப்பு :

 

கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி

டந்த அக்டோபர் 27, 2018 அன்று உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேராசிரியர் சிவக்குமார், பேராசிரியர் கருணானந்தம், பேராசிரியர் அரசு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அவர்களது உரையில், உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசினர். மேலும் தற்போது கொண்டுவரப்படும் கல்வி மசோதாக்கள் குறித்து அவை எவ்வாறு ஜனநாயக விரோதமாக நிதி மசோதாவாக கொண்டு வரப்படவிருக்கின்றன என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க ஊழல்மயமாவது குறித்தும், அதன் முதல்காரணமாக துணைவேந்தர்கள் இருப்பதையும் அம்பலப்படுத்தினர். கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியும், தனியார் மயமாக்கும் முயற்சியும் கொள்ளைப்புறத்தின் வழியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தினர். இதற்கு தீர்வு ஒரே வழிதான், அது மக்கள் போராட்டத்தின் மூலம்தான் என்பதை வலியுறுத்திப் பேசினர்.

பேராசிரியர் சிவக்குமார் உரை:

பேராசிரியர் கருணானந்தம் உரை:

https://youtu.be/opwnp-HDV6g

நன்றி : TN Voice

பேராசிரியர் வீ.அரசு உரை:

https://youtu.be/Bx1JlXZS9qE

நன்றி : TN Voice

சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு

த்துணவு ஊழியர்களின் போராட்டம் கடந்த 25.10.2018 அன்று தொடங்கி  நவம்பர் 2-ம் தேதி தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தின் நோக்கம், சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது ஒட்டு மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களைப்போல் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து விட்டு காலவரையற்ற வேலை நிறுத்தம், சாலை மறியல், ஊராட்சி ஒன்றிய அலுவலக முற்றுகைப் போராட்டம், இறுதியாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்று நடத்தி ஓய்ந்திருக்கிறது.

இந்த போராட்டம் என்பது ஊழியர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டம்.. அவர்களின் கோரிக்கையும் மிகமிக அத்தியாவசியமான, நியாயமான கோரிக்கை… இதனை அமல்படுத்தகோரி  போராடிய  பல இடங்களில் அனுமதி மறுத்தும், பெண் ஊழியர்களையும், நிர்வாகிகளையும் கைது செய்தும் போலிசு ஜனநாயக விரோத செயலை வழக்கம்போல் நிலைநாட்டியது. அது இப்பொழுது மட்டுமல்ல. தங்கள் கோரிக்கைக்காக போராடிவரும் கடந்த 30 ஆண்டுகாலமாக இதுதான் நிலைமை!

யார் இந்த சத்துணவு ஊழியர்கள்….!

குறைந்தபட்ச கல்வித் தகுதி அடிப்படையில் கடந்த 1982-ம் ஆண்டு வேலையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்  குறளமுதாசிரியர் என்ற பெயரில் அவர்களை பணிக்கு அமர்த்தியது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு. அப்பொழுது அவர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு 1 ரூபாய் வீதம் மாதம் முப்பது ரூபாய் என்று தீர்மானித்தது. சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 50 பைசா. இதற்கு முன்பு பள்ளிகளில் சத்துணவு போடும் பொறுப்பை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்கள் கவனித்து வந்தனர்.

படிக்க :
அங்கன்வாடி
மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

பணிச்சுமையாக இருக்கிறது என்று அவர்கள் இதனை எதிர்க்கவே இத்திட்டம் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அரசு ஊழியர்களின் ஆதரவில் 1985 -ஆம் ஆண்டு சம்பளம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக சங்கமாக திரண்டனர். தொடர்ச்சியான போராட்டத்தின்  காரணமாக 1987 -ல் 150 ரூபாயாகவும் சமையலருக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டது. பின்னாளில் இவர்கள் சத்துணவு அமைப்பாளர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

என்ன பிரச்சனை? எதற்காக இந்த போராட்டம்?

தமிழகத்தில் சுமார் 48 ஆயிரம் சத்துணவு மையங்களும், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார்  இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.  இவற்றில் சுமார் 40 ஆயிரம் காலிபணி இடங்கள் உள்ளன. கடந்த 2012 -க்குப் பிறகு  இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக ஒரு சத்துணவு அமைப்பாளர் ஐந்துக்கு மேற்பட்ட மையங்களைக் கண்காணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எனவே உடனடியாக காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அதேசமயம் தற்பொழுது அவர்கள் பெறும் கூலி அற்பத்தொகையே. இவர்களுடைய வேலை நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை 3 மணி வரை செய்கிறார்கள். சத்துணவு அமைப்பாளர்  ரூ.12,000மும், சமையலர் ரூ.6000 உதவியாளர் ரூ.4000 வாங்குகிறார்கள்.  இவர்களுக்கு நிகரான வேலை செய்யும் அரசு ஊழியர்கள் 50,000-க்கும் மேல்தான் வாங்குகிறார்கள்…. இவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அழைக்கப்படுவதால் இந்த ஊதியம் மறுக்கப்படுகிறது..

எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?  அதுவும் பே-கமிஷனில்தான் இந்த ஊதியமும் உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் பெற்ற சம்பளம்… 7,700-4100-3000 வீதமாகும். தினக்கூலி மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப் படும் ஊதியத்தைக் கூடத் தொடவில்லை. ஆனால் அதை அரசு நியாயப்படுத்துகிறது.

இதில் பெரும்பாலான பகுதியை காய்கறி வாங்குவதற்கே செலவு செய்து விடுகிறோம் என்கிறார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.அண்ணாதுரை.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.அண்ணாதுரை.

மேலும் அவர், “தமிழக சத்துணவுத் திட்டம் ஏழைக் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்து கிடைத்திடவும், முறையான சத்துணவு வழங்கிடவும்  1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  உணவு தயாரிப்பு செலவினம் ரூ. 1.70-ம் பருப்பு வழங்கும் நாட்களில் ரூ. 1.30 வழங்கப்படுகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1.80-ம் பருப்பு வழங்காத நாட்களில் ரூ. 1.40-ம் வழங்கப்பட்டு வருகிறது.

தினம் ஒரு உணவு என்ற வகையில் பிரியாணி தயாரிக்கும் நாளில் ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 வழங்கப்படுகிறது, 3 கிராம் எண்ணெய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றைய விலைவாசியில் காய்கறிகள் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு வாங்க இயலாத நிலையே நீடிக்கிறது. எண்ணெய் 3 கிராம் என்ற அடிப்படையில் 100 குழந்தைகளுக்கு 10 கிலோ அரிசிக்கு 300 கிராம் என்பது போதாத நிலை உள்ளதால் எண்ணெய்யின் அளவினை 7 கிராமாக உயர்த்துவதோடு அன்றைய தினம் மிளகு முட்டை வழங்க வேண்டும். மிளகு 100 கிராம் 100 ரூபாய் ஆகிறது. எனவே ஒரு மாணவனுக்கு ஒரு நாளைக்கு 5 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஆனால் அதனை அரசு வழங்க மறுக்கிறது” என்கிறார்.

கடந்த 2013-ல் நாடாளுமன்ற வல்லுநர் குழுவானது இன்றைய விலைவாசிக்கு தற்பொழுது வழங்கப்படும் செலவினத்தொகை போதாது.. அதனை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறியது. அதனை இன்று வரை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் எப்படி பிள்ளைகளை ஊட்டச் சத்து மிக்கவர்களாக வளர்க்க முடியும்” என்று கேள்வியெழுப்புகிறார்.

அதேபோல் கடந்த 19.2.2016 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் எதிர்வரும் ஊதியக்குழுவே பரிசீலிக்கும் என அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

அதேபோல பட்டதாரிகள் வாழ்வாதரத்துக்கான சம்பளமும், அவர்களை நிரந்தரமாக்கும் படி குறுகிய காலத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்து நிரந்தரமாக்குவோம் என்றார் அதுவும் நிறைவேறவில்லை.

இதனை எல்லாம் கேட்டு 34 வருடங்களாக போராடி வருகிறோம். ஆனால் இது வரை ஒன்றும் நடக்கவில்லை.  இத்தனை ஆண்டுகாலம் மாடாய் உழைத்து நாங்கள் ஓய்வு பெறும்போது என்ன கொண்டு போகிறோம்? ஒன்றுமில்லை…  பணிக்கொடையாக  சத்துணவு அமைப்பாளர் ஒரு லட்சம்,  சமையலர்  மற்றும் உதவியாளகள் 50000 ஆயிரம் .. அவ்வளவுதான். மாத பென்சன் 2000 ஆயிரம் தருகிறார்கள். இதனை கொண்டு எப்படி கடைசி காலத்தில் வாழ்வது நீங்களே சொல்லுங்கள்?  “ஏன் இந்த வேலைக்கு வந்தோம்” என்று சளித்து விட்டது என்கிறார் அன்ணாதுரை.

அரசின் வஞ்சகமும்துரோகமும்!

தமிழகம் தான் இந்தியா முழுமைக்கும் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்திட வழிகாட்டியாக விளங்கியது. மேலும், சத்துணவுத்திட்டம் என்ன நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ, அதில் சிறப்படைய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனே களைந்து அமல்படுத்துவதுடன் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழி யர்களின் ஊதியம், பதவி உயர்வு சம்பந்தமாக அல்லல்பட்டுவரும் ஏழைகள், கணவனால் கைவிடப் பட்டவர்களின் வாழ்வாதாரக் கோரிக் கையை நிறைவேற்றப்பட வேண்டி நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வரை இரண்டரை லட்சம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பங்கள் எதிர்பார்க்கின்றன.

சேப்பாகம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் (கோப்புப் படம்)

சத்துணவுத் திட்டத்திற்கென மத்திய அரசு ஒரு குழந்தைக்கு 150 கிராம் அரிசியும், உணவு தயாரிப்பு செலவினத்திற்காக ரூ.4.60 முதல் ரூ.5.00 வரை வழங்குகிறது. தேவையான பாத்திரங்களும், மையக் கட்டிடங்களும் மற்றும் அதற்கான நிதியும் இன்றைய விலைவாசிக்கு ஏற்றபடி உயர்த்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ள நிலையில், தமிழக அரசு கூடுதல் நிதியினைப் பெற முயற்சி மேற்கொள்ளாமல், திட்டத்தினை சுருக்குவது என்ற ரீதியில் செயல்படுவதுதான் சத்துணவு ஊழியர்களின் பிரச்சனைகளுக்குக் காரணமாகும்.

படிக்க :
ஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!
அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !

சத்துணவுத்துறையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி சத்துணவுத் திட்டம் சிறப்புடன் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளாமல் 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள மையங்களை மூடுவது என தமிழக அரசு பின்னோக்கி யோசிக்கிறது.

தமிழகம் தான் இந்தியா முழுமைக்கும் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்திட வழிகாட்டியாக விளங்கியது. ஆனால் சத்துணவு அமைப்பாளராக, சமையலராக, சமையல் உதவியாளராக, சமூக நலப்பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை முறையே வெறும் ரூ.700, ரூ.600 மற்றும் ரூ.500 மட்டுமே.

பல்லாண்டு காலம் சத்துணவுத் துறையில் வேலை செய்து விட்டு இப்போது, அடுத்த வேளை உணவிற்குக் கூட வழியின்றி தாங்கள் பணியாற்றிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களிலேயே சோற்றுக்காக தட்டேந்தி தவமிருக்கும் ஓய்வூதியர்களாக மாறியிருக்கும் அவலம் துயரமானது.

அம்மாவின் வழித்தோன்றல்

குறைந்தபட்சம், மாணவர்கள் ஊழியர்களின் நலன் கருதி, திமுக அரசு 18.07.2007 -ல் தொடக்கப்பள்ளி மாணவர்களின் காய்கறி மற்றும் விறகுக்கான செலவினத்தொகையையும், 24.9.2010-ல் சமையல் எண்ணெய் மற்றும் அரிசியின் அளவினை உயர்த்தி வழங்க அரசாணையை வெளியிட்டது. அதுகூட அதிமுக அரசில் இல்லை.

பள்ளி சத்துணவு மையங்களிலும், அங்கன்வாடி மையங்களிலும் பணிபுரிந்து பணியிடையே காலமான பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படியில் திமுக ஆட்சியில் மட்டுமே 118 பேருக்கு வழங்கப்பட்டது. அதுவும் தற்போதைய அதிமுக ஆட்சியில் வழங்கவில்லை. மகப்பேறு விடுப்பு, குடும்ப நல நிதி இதுபோன்ற சிறு சிறு உதவிகள்கூட திமுக ஆட்சியின்போதுதான் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறைகூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியிலேதான் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டது. முன்தேதியிட்டு வழங்கும் முறையைக் கூட அதிமுக அரசு காலி செய்துவிட்டது…

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வூதியமும் சரி, பதவி உயர்வும் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டதில்லை. ஆசிரியர் பட்டயப் படிப்பு பயிற்சி (Diploma in Teacher Education) முடித்த சத்துணவு மற்றும் குழந்தை மைய பணியாளர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பி.எட். படித்து முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க கழக அரசு ஆணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தும்பொருட்டு தகுதிவாய்ந்த 59 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் 405 சத்துணவுப் பணியாளர்களுக்கும் பெயர் பட்டியல் 4.10.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

சத்துணவு மற்றும் குழந்தை மையங்களில் 2001 முதல் 2006 வரை 5 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் காலிப்பணியிடங்கள் 20,000 ஆயிரத்திற்கும் மேல் இருந்தும் வெறும் 7,655 பணி இடங்களில் மட்டுமே புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். வெறும் 2,000 ஊதியம் பெறுபவர்களை நியமிப்பதற்கே இந்த அரசு சொத்தை எழுதித் தருவதைப் போல் வேலை புறக்கணிப்பு செய்தது எவ்வளவு பெரிய அலட்சியம். இந்த திட்டம் எதன் நோக்கில் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்தது.

கடந்த திமுக ஆட்சியில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பெற்றுவரும் ஊதியத்தை “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம் என்பது மட்டுமன்றி; அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் சலுகைகளும், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என்று குறிபிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஆனால், 2010-ம் ஆண்டு சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் செய்தபோது “சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல மைச்சர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சவடால் விடுத்தார் ஜெயலலிதா.

சத்துணவு அமைச்சர் “முட்டை ஊழல் புகழ் சரோஜா”

அதோடு இல்லாமல், “எம்.ஜி.ஆர். ஆட்சி விரைவில் மலரும், சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.  ஆட்சி வந்தது, சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படவிலை.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்று அறிவித்தார். அதையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கன்வீனர் மு. வரதராசன், “கடந்த ஆட்சியில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நியாயமானது, போராடும் நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று ஜெயலலிதா அறிவித்தார்.

படிக்க :
பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !
இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !

ஆனால் 3 ஆண்டாகியும் நிறைவேற்றவில்லை, போராடும் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசவில்லை, மாறாக போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சமூக நல இயக்குனர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்” என்று ஜெயலலிதா அரசின் பொய் வாக்குறுதிகைளை அம்பலப்படுத்தினார்.

எதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை… அடுக்கடுக்கான போராட்டம் நடத்தபட்டாலும் ஆட்சியாளகளின் அப்போதைய வாக்குறுதிகளை மட்டுமே நம்பி போராட்டத்தை கைவிட்டு விடுவதால், ஆட்சியாளகளும் அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். அதனை கண்டு கொள்வதே இல்லை. அம்மாவின் வழித்தோன்றல்களான இந்த எடப்பாடி கும்பலும் அதே வேலையை செய்து வருகிறது.

கடந்த முப்பத்தி ஒன்றாம் தேதி சத்துணவு அமைச்சர் ’முட்டை ஊழல் புகழ்’ சரோஜா, பேச்சு வார்த்தைக்கு அழைத்து, “கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. வரக்கூடிய நிதியில் கணிசமான தொகையை உங்களுக்கு தருகிறோம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள். முதல்வரிடம் பேசி ஒரு முடிவுக்கு வருகிறோம்” என்று கூறியதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் துணை செயலர் நூர்ஜகான் தெரிவித்தார்.

தொடர்ந்து நடத்திய போராட்டத்தின்போது, நவம்பர் 2 அன்று மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஒரு சில கோரிக்கைகளை மட்டும் பரீசிலிக்கிறோம். என்று கூறியதால், போராட்டதை கைவிடுவதாக அறிவித்தனர். அத்துடன் போராட்டம் தற்காலிகமாக முடிவு வந்துள்ளது.

ஆனால் இந்த முடிவில் சங்க நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. வந்தவர்களோ போராட்டதை தொடர வேண்டும் என்றாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. இந்த போக்கினால்தான் இந்த அரசும் தொடர்ச்சியாக இவர்களின் முதுகின்மீதமர்ந்து பயணித்து வருகிறது…!

ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?

ர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகின் மிகப் பெரிய சிலையை அமைத்துள்ளது மோடி அரசு. பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள இந்த சிலை திறப்பு விவகாரத்தின் பின்னணியில் பட்டேல் சாதியினர் மற்றும் சூத்திரர்களின் நிலையை அலசுகிறார் அரசியல் கோட்பாட்டாளரும் எழுத்தாளருமான காஞ்சா அய்லய்யா. ‘தி வயரில்’ வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…

*****

பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்திருக்கும் அதே நேரத்தில் பட்டேல், ஜாட், குஜ்ஜார், மராத்தா போன்ற வட இந்திய மேல்தட்டு சூத்திரர்கள் அரசின் இடஒதுக்கீட்டைப் பெற தங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் தங்களைச் சேர்க்குமாறு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அது நிகழ்ந்தால் இந்திய சூத்திரர்கள்  ஒற்றை சமூக அரசியல் வட்டத்துக்குள்  இணைவார்கள். இது நாட்டின் சமூக உறவை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் இந்து மதத்திலும் இந்திய சமூக அரசியல் அமைப்பிலும் பட்டேல் மற்றும் சூத்திரர்களின் நிலை என்னவாக இருக்கிறது என மதிப்பிடுவது அவசியமாகும்.

பட்டேல் குறித்த மதிப்பீட்டை, சுதந்திர போராட்ட காலத்தில் அவருடன் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பீடுவது சிறப்பாக இருக்கும். பட்டேல், காந்தி, நேரு ஆகியோரின் கதைகள் இந்தியாவில் சூத்திரர்கள், பனியாக்கள், பார்ப்பனர்களின் நிலைக்கு உதாரணமானவை.

பட்டேல், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சூத்திரர். காந்தி அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பனியா. நேரு, காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பார்ப்பனர், ஒருங்கிணைந்த காஷ்மீராக இருந்த அந்தப் பகுதி இப்போது உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. அதுபோல, இந்து மதத்தில் அவர்களுடைய நிலை குறிப்பிடத்தக்க வேறுபாடு கொண்டது.

படிக்க :
படேல் சிலை – மோடியின் நார்சிசமும், பாசிசமும் !
பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘ உலகின் மிகப் பெரிய சிலை

பட்டேலின் பூர்வீகம் வேத காலத்தில் அடிமை என அறியப்பட்டிருந்தது. காந்தியின் பூர்வீகம் வணிகம் தொடர்புடையது. நேரு, சமய போதகர் வழி வந்தவர். காந்திக்கும் நேருவுக்கும் புனித நூல் எனப்படும் பூணூல் அணியும் உரிமை இருந்தது. பட்டேலுக்கு அந்த உரிமை இல்லை. சூத்திரர்கள் இந்துக்கள் என அறியப்பட்டாலும் அவர்களுக்கு பூணூல் அணியும் உரிமை இந்த நாள் வரை இல்லை.

பட்டேலின் மூதாதையருக்கு கல்வி கற்க உரிமை இல்லை; வேத கடவுள்களை வணங்கவோ அல்லது இந்து மதத்தின் புனித நூல்களை வாசிக்கவோ அவர்களால் முடியாது. காந்தி மற்றும் நேருவின் மூதாதையர் வேத காலத்தின் தொடக்கத்திலிருந்தே இந்த உரிமைகளைப் பெற்றிருந்தார்கள். அவர்களால் சமஸ்கிருதத்தை கற்க முடிந்தது, காலத்துக்கேற்ப வேறு மொழிகளையும் அவர்கள் கற்றார்கள்.

பட்டேலின் மூதாதையர் நிலத்தை உழுபவர்களாகவும், கால்நடை மேய்ப்பவர்களாகவும் அறுவடை செய்கிறவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள், வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். மன்னராட்சி காலத்திலும் மொகலாய ஆட்சியிலும் காலனி ஆட்சி காலத்திலும் நாட்டையும் கிராமத்தையும் காப்பாற்றுவது சூத்திரர்களின் பணியாக இருந்துள்ளது. தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டபோதும் பாதுகாத்தல், உற்பத்தி போன்றவை தலித்துகளுக்கு பணியாக தரப்பட்டது.

காந்தி மற்றும் நேருவின் மூதாதையர் எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யவில்லை. வேளாண்மையும் உடல் உழைப்பும் கேவலமாக கருதப்பட்டன, அவை சூத்திரர்களுக்கானவை என ஒதுக்கப்பட்டன. பனியாக்களும் பார்ப்பனர்களும் போர்வீரர்களாக இருந்தமைக்கு ஒரு சில உதாரணங்கள் உள்ளன. அவர்களுடைய சைவ உணவு பழக்கமும் வன்முறை கூடாது என்கிற கருதுகோளும் அவர்கள் ராணுவத்தில் சேர்வதை தடுத்தன. ஆனால், அவர்கள் சூத்திரர்களை சார்ந்து இருந்தார்கள், சூத்திரர்களும் அவர்களுக்கு எப்போதும் பணி செய்தார்கள்.

பட்டேலும் அதே மனநிலையில் இருந்தே காந்திக்கும் நேருவுக்கும் பணி செய்தார். இந்த பாரம்பரியத்தின் காரணமாகத்தான் சுதந்திர போராட்டத்தின் ‘இரும்பு மனிதர்’-ஆக பட்டேல் ஆனார். காந்தி ‘மகாத்மா’ ஆனார்; நேரு ‘பண்டிட்’ ஆனார். பட்டேலின் பட்டப் பெயர், இழிபடுத்தலை குறிக்கிறது. சூத்திரர்கள் அறிவிலும் ஆன்மிகத்திலும் தாழ்வானவர்கள் என்கிற பொருளில் இந்தப் பட்டப்பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போரட்டத்தின் ‘இரும்பு மனிதர்’-ஆக பட்டேல் ஆனார். காந்தி ‘மகாத்மா’ ஆனார்; நேரு ‘பண்டிட்’ ஆனார். பட்டேலின் பட்டப் பெயர், இழிபடுத்தலை குறிக்கிறது.

இந்தியாவுக்குள் பிரிட்டீஷார் வரும்வரை பட்டேலின் மூதாதையருக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை; பிறரும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை. பட்டேலும் அவருடைய மூத்த சகோதரர் வித்தல்பாயும்தான் முதன்முதலில் பள்ளிக்குச் சென்றவர்கள். சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது என்கிற பாரம்பரியம் 18-ஆம் நூற்றாண்டில்தான் இங்கே உடைக்கப்பட்டது. அதனால்தான் பட்டேலின் பெற்றோரால் அவருடைய உண்மையான பிறந்த தேதியை எழுதி வைக்க முடியவில்லை. அவருடைய பிறந்த தேதியான அக்டோபர் 31-ம் தேதி பள்ளியில் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. பார்ப்பன அடக்குமுறைக்குள்ளான பட்டேலின் மூதாதையர்களின் காரணமாகத்தான் மோடி இந்த தேதியில் பட்டேலின் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.

பட்டேலின் பிறப்பு நேர்ந்த காலத்தில் பார்ப்பனர்களும் பனியாக்களும் ஆங்கிலத்தில் மேம்பட்ட கல்வியறிவை பெற்றிருந்தனர். காந்தி மற்றும் நேருவின் பிறந்த நாட்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன; அவர்களுடைய குடும்ப வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  அவர்கள் தானாக உயர்ந்த மனிதர்கள் அல்ல, அவர்கள் அந்தஸ்து மற்றும் சலுகையும் மூலம் அதைப் பெற்றார்கள்.

பட்டேல் தன்னை உருவாக்கிக்கொண்ட ‘கடினமான’ மனிதர்.  முரட்டுத்தனமான அரசியல் பலத்திலிருந்து அவர் உருவானார். அறிவிஜீவித்தனத்தின் மென்மையான ஆற்றலாக அவர் உருவாகும் ஆடம்பரத்தை அவர் ஒருபோதும் கைகொள்ளவில்லை. அவர், அவருடைய மூதாதையர் என்ன செய்தார்களோ அதையே அவரும் செய்தார். இந்துத்துவத்தின் பார்ப்பன அமைப்பு அவருடைய மூதாதையருக்கு என்ன இடம் கொடுத்திருந்ததோ அதை பட்டேல் உடைக்கவில்லை. எந்த அமைப்பு தன்னை ஒடுக்கியதோ அதை அவர் பாதுகாத்தார். சூத்திரர்களுக்கு பட்டேல் விட்டுச் சென்ற துரதிருஷ்டமான மரபு இது.

இன்று பார்ப்பனர்களும் பனியாக்களும் இந்திய அரசியல், அரசாங்கம், பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறவர்களாகவும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சூத்திரர்களின் மீது அடக்குமுறை செலுத்தும் இந்துத்துவ அமைப்பின் வழியாக அதிகார அமைப்புகளில் அவர்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய மதம்தான் என்றாலும் சூத்திரர்களுக்கு போதகருக்குள்ள உரிமையோ மந்திரங்கள் ஓதவோ உரிமை இல்லை.

மூடப்பட்ட அதிகார அமைப்புகளிலில் தங்களுக்கு  குறைந்தபட்ச இடம் வேண்டும் என கேட்டு பட்டேல்கள், ஜாட்கள், குஜ்ஜார்கள், மராத்தாக்கள் மற்றுமுள்ளோர் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவைக் கோரி அவர்கள் நிற்கிறார்கள், அந்தக் கட்சியும் பட்டேலுக்கு போலியான ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்புக்கு முன் ரத யாத்திரை சென்ற அத்வானி, பட்டேலை ‘அபினவா-புதுமையானவர்’ என வர்ணித்தார். ஆனால், பாஜக ஆட்சியின்போது சூத்திரர்கள் மேலும் ஒடுக்குதலுக்கு உள்ளானார்கள். பனியா மற்றும் பார்ப்பன சக்திகளின் மேலாதிக்கம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் வெளிப்படையாகவே இன்றும் உள்ளது.

பார்ப்பனர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம், பட்டேலை போற்றுகிறது. காரணம், வர்ண அடிப்படையை அவர் ஒருபோதும் கேள்வி கேட்காதவராக இருந்தார் என்பதே. அவர் சூத்திரர்களுக்கு மதகுருக்களான உரிமையை கோரவில்லை. அவர் தானும் பூணுல் அணிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்கவில்லை. அனைத்து மட்டங்களிலும் பனியாக்களும் பார்ப்பனர்களும் பெற்றிருக்கும் உரிமைகள் சூத்திரர்களுக்கும் வேண்டும் என அவர் கேட்கவில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் பார்ப்பனரா(நேரு)கத்தான் இருக்க வேண்டும் என காந்தி முடிவு செய்தபோது, பட்டேல் அதை கீழ்பணிந்து ஏற்றுக்கொண்டு தான் வகித்த காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, நேருவிடம் பதவியை ஒப்படைத்தார்.

காந்தியும் நேருவும் தங்களுடை வரலாற்றை எழுதினார்கள், கவனத்துடன் கூடிய சூயசரிதையை விட்டுச் சென்றார்கள். ஆனால், பட்டேல் அதை செய்யவில்லை. அவருடைய வரலாறும் அவருடைய குடும்பத்தின் வரலாறும் எழுதத் தகுதியானவை அல்ல என அவர் நினைத்திருக்கக்கூடும். பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களின் குறிப்பின்படி, பட்டேல் கடிதங்களை தானே கைப்பட எழுதினார், கடிதங்களை ஒருபோதும் அவர் சேமித்து வைக்கவில்லை. அதுபோல அவருக்கு வந்த கடிதங்களையும் சேமித்து வைக்கவில்லை.

இன்று, காந்தியும் நேருவும் நன்கு அறியப்பட்ட சிந்தனையாளர்களாக அறியப்படுகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன. பட்டேல், ‘இரும்பு மனிதர்’ என அழைக்கப்படுகிறார், அவர் தன்னுடைய வாழ்க்கை, தனக்குள்ள கருத்துக்கள், தன் குடும்பம், தன் சாதி குறித்து எந்த நூலையும் எழுதவில்லை. அவரைப் பற்றி பிறர் எழுதிய நூல்களின் வாயிலாகத்தான் அவரை அறிகிறோம். அவர்களும்கூட சூத்திரர்களாகவே இருக்கிறார்கள். இப்போது பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் பட்டேலை எத்தகைய வரலாற்றில் எழுதி அடைக்கலாம் என்பது எளிதாகிவிட்டது.

பட்டேலின் சுயத்தை அழித்துக்கொள்ளும் தன்மை சூத்திரர்களின் வழமையான குணாம்சம். அவர்களுக்கு வளமையான வாழ்மொழி வரலாறு – கதை கூறும் பாரம்பரியம் இருந்தாலும், பார்ப்பனியம் ஒடுக்குமுறையின் காரணமாக அவர்கள் எழுதும் கலாச்சாரத்தை மேம்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில், சுதந்திர போராட்டக்காலத்தைச் சேர்ந்த எந்தவொரு சூத்திர தலைவரும் சுயசரிதையை எழுதவில்லை.

படிக்க :
பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்

இந்து மதம், வரலாற்று ரீதியாக சூத்திரர்களை செயல்படுகிறவர்களாக பார்த்தார்களே தவிர, சிந்தனையாளர்களாக பார்க்கவில்லை. பட்டேலின் வாழ்க்கை பார்ப்பனர்களின் அதிகார வரம்புக்குள் செயல்பட்டது. காந்தி, நேருவின் வழித்தோன்றல்களைப் போல பட்டேலின் வாரிசுகள் எழுத்தாளர்களாகவோ அரசியல்வாதிகளாகவோ வரவில்லை. அவருடை இரும்பு மனிதத் தன்மை அவருடனே முடிந்துவிட்டது. அது அப்படி இருக்கத்தான் விரும்பப்பட்டது.

பட்டேல் ஹிந்து மகாசபையுடன் நெருக்கமாக இருந்தவர் என பட்டேல் குறித்து ஆர்.எஸ்.எஸ். பேசியது. சமூக, ஆன்மீக சீர்திருத்தம் கட்டாயமாக வேண்டும் என ஒரு சூத்திரராக அவர் கருதவில்லை. எனவே, அவர் அவர்களுடைய ஆளாக மாறிவிட்டார்.  ஆர்.எஸ்.எஸ். இவரை சூவீகரித்துக்கொள்ள பார்த்தாலும் ஒருபோதும் அந்த அமைப்பின் தலைவராக ஒரு சூத்திரரை வரவிட்டதில்லை என்பதே இதில் உள்ள முரண்பாடு. ஒரே ஒரு சத்திரியர், ராஜேந்திர சிங்- என்பவரைத் தவிர அத்தனை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பார்ப்பனர்கள்தாம்.

தன்னுடைய தத்துவத்தை, தன் குடும்பம் மற்றும் தன் சமூகத்தின் மீதான கருத்தை, தங்களுடைய இனத்தின் பணி மற்றும் ஆன்மீக கலாச்சாரம் பற்றிய தகவலை பட்டேல் எழுதியிருப்பாரேயானால், அது ஒட்டுமொத்த சூத்திர சாதியினரையும் தேசிய தத்துவார்த்த மற்றும் அரசியல் வகைமைக்குள் சேர்த்திருக்கும். காந்தியும் நேருவும் பனியாக்களுக்காகவும் பார்ப்பனர்களுக்காகவும் பணியாற்றினார்கள், தங்களுடைய சமூகங்களுக்கு ஏற்கனவே உள்ள பாரம்பரியத்தைத்தான் கொண்டுசேர்த்தார்கள். முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்கவில்லை.

பட்டேல், சூத்திரர்களுக்கு செய்யத் தவறியதை, வேறொரு மனிதர் தலித்துகளுக்காக செய்தார். அரசியல் சிந்தனை, தத்துவம், எழுத்து மற்றும் சொல்லாட்சி குறித்து தனக்குத்தானே கற்பித்துக்கொண்ட பி.ஆர். அம்பேத்கர், சமூக ஆன்மீக சீர்திருத்தத்தை இயக்கமாக முன்னெடுத்தார். பட்டேலைப் போல் அல்லாமல், இந்துத்துவம் தன் சாதியினருக்குக் கொடுத்த சமத்துவமற்ற படிநிலையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதோடு, இந்துத்துவத்தின் ஆன்மீக மற்றும் சமூக அடக்குமுறையின் அடித்தளம் குறித்து கேள்வி எழுப்பினார்.

கூட்டமொன்றில் உரையாற்றும் அம்பேத்கர்.

பட்டேல், சட்டம் படித்தவர். ஆனால், அவர் தத்துவார்த்த கேள்வி குறித்து ஆர்வம் காட்டவில்லை. அதுஇல்லாமல், சமூகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடம் குறித்து புரிந்துகொள்ள அவர் முயலவில்லை. பிரிட்டனில் மாணவராக இருந்த பட்டேல், இன மற்றும் சாதிய அடக்குமுறைகள் ஒத்த தன்மையுடையவை என அறியவில்லை. ஒப்பிடும்போது அமெரிக்காவில் படித்த அம்பேத்கர், கருப்பின மக்களின் போராட்டங்களின் வாயிலாக முக்கியமான பாடத்தைப் படித்தார். அம்பேத்கர் சாதியத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார்; ஆனால், பட்டேல் பிரிட்டீஷாருக்கு எதிரான மனநிலையிலிருந்து மேற்கொண்டு நகரவில்லை.

பிரிட்டீஷாரிடமிருந்து பனியாக்களிடமும் பார்ப்பனர்களிடமும் கைமாற்றப்படுவதல்ல சுதந்திரம்; சாதியத்தை ஒழித்த சுதந்திரம் என்கிற அம்பேத்கரின் பார்வையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பட்டேல் தன்னுடைய குருவாக காந்தியை ஏற்றுக்கொண்டார்; ஒருபோதும் தன்னைப் பற்றி அவர் சிந்தித்ததில்லை. காந்தியம் சொன்ன நிலப்பிரபுத்துவ ஜனநாயமான கிராம ராஜ்ஜியம் மற்றும் ராம ராஜ்ஜியம் – என்பதைக் கடந்து அவர் சிந்திக்கவில்லை. ஒருவேளை கிராம ராஜ்ஜியத்தில் சூத்திரர்கள் ஆட்சியாளர்களாக வரக்கூடும் என நினைத்திருக்கலாம். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டார். அவர் காந்தியின் மறுபக்கத்தை பார்க்கவில்லை. கிராம பொருளாதாரத்துக்கு திரும்ப வேண்டும் என சொல்லிக்கொண்டே பனியா தொழிலதிபர்களான பிர்லாக்கள், கோயங்காக்களிடம் அவர் நெருக்கமாக இருந்தார். பனியா தொழிலதிபர்களுக்காகத்தான் காந்தியின் உண்மையான ஆற்றல் வேலை செய்தது. இன்று நாட்டில் அவர்கள் பெற்றிருக்கும் அதிகாரம், காந்தி விட்டுச்சென்ற மரபின் ஒரு பகுதி.

பட்டேலின் அக்கறையின்மை சூத்திரர்களின் இக்கட்டான நிலைமை பிரதிபலிக்கிறது. இப்போதும் சம உரிமை மறுக்கப்பட்டு சாதிய படிநிலையில் நடுவில் எங்கோ ஒரு இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். கீழே இருந்த தலித்துகள், தங்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். குறைந்த காலமே நீடிக்கும், குறைந்தபட்ச சலுகைகளை சூத்திரர்கள் விட்டுத்தர தயாராக இல்லை. பார்ப்பனர்களும் பனியாக்களும் தங்களுக்கு மேல் இருக்கிறார்களே என்கிற கோபம் அவர்களிடம் இல்லை.  பதிலாக, தலித்துகள்தான் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என பனியாக்களும் பார்ப்பனர்களும் தங்களுக்கு வலியுறுத்தி வருவதை அவர்கள் ஏற்கிறார்கள்; தலித்துகளை எதிரிகளாக பார்க்கிறார்கள். இந்து மதத்தில் தங்களுக்குள்ள சமநிலையற்ற தன்மை குறித்தும் அதன் சமூக அரசியல் விளைவுகள் குறித்தும் அவர்கள் உணரவே இல்லை.

பட்டேலிடம் அறிவுசார் உற்பத்தி இல்லாத காரணத்தால் அவருடைய வரலாற்றுக்கும் அதிகாரத்துக்கும் குறுகிய வழியை ஏற்பட்டுவிட்டது. சூத்திரர்களின் வரலாறு மற்றும் அதிகாரம் குறுகிய நிலையில் உள்ளதைப் போன்றே இதுவும் அமைந்துவிட்டது.  அவருக்கென்று சமூக பொருளாதார கோட்பாடு இல்லை. பிரதிநிதித்துவ கோட்பாடு எதுவும் இல்லாமல் அவர் சூத்திரர்களின் பிரநிதியாக இருந்தார். இப்போதும் கூட சூத்திரர்கள், கருத்தியல் வெற்றிடத்துடனே இருக்கிறார்கள்.  எவ்வளவு பெரிய சிலை பட்டேலுக்கு அமைத்தபோதும் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முடியாது.

ஒரு பனியாவான மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவரான தன்னுடைய குரு பார்ப்பனர் மோகன் பகவத்திடமிருந்து கட்டளைகளைப் பெற்று, சூத்திரர் பட்டேலின் சிலையை திறக்கிறார். இப்போதுகூட பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-சும் சூத்திரர்களின் முக்கியமான பங்களிப்பை ஒதுக்கிவிட்டார்கள். பிரம்மாண்டமான சிலையை அளித்ததைக் கடந்து பார்ப்பன – பனியாக்களின் ஆட்சி இந்த நாட்டுக்கும் சூத்திரர்களுக்கும் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழாக்கம்:

 

நன்றி : தி வயர்

உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !

பேராசிரியர் ப. சிவக்குமார்
தனியார்மய கல்வியை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வி! என்ற லட்சியத்தோடு உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !

டந்த 27.10.2018 அன்று சென்னை பெரியார் திடலில் பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு அமைப்பின் அறிமுக கூட்டம் மற்றும் “உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர், பேராசிரியர். வீ. அரசு,  ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும், விவேகானந்தா கல்லூரி வரலாற்றுதுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும் குடியாத்தம் அரசு கலைகல்லூரி  முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப. சிவக்குமார், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி பொருளியியல் துறை பேராசிரியர் அமலநாதன், பொருளாளர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக உயிரிவேதியியல் துறை பேராசிரியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு உயர்கல்வி எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால்களான ஊழல், இந்துத்துவ திணிப்பு, தனியார்மயம் ஆகியவற்றை பற்றி பேராசிரியர்கள் உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் என மொத்தம் 120 பேர் கலந்து கொண்டனர்.

சமீப காலமாக உயர்கல்வி துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடுகளும் அதற்கு முந்ததையதை விட அளவில் மிகப்பெரியதாகவும் தன்மையில் அதீத கிரிமினல் மயமானதாகவும் உள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பாலியல் முறைகேடு, அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மற்றும் தகுதி இல்லாதவர்களை பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்களாக பணிநியமனம் செய்தது  போன்றவை சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுதான் நிலை.

பேராசிரியர். வீ. அரசு

தரமான உயர்கல்வி வழங்குவதை கண்காணிக்க / உறுதிப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் தனியார் கல்வி முதலாளிகளுக்காக UGCன் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை காலில் போட்டு மிதிக்கின்றனர். கவர்னர் முதல் பேராசிரியர்கள் வரை உள்ள உயர் கல்வித்துறையின் நிர்வாகிகளே இம்முறைகேடுகளின் சூத்திரதாரிகளாகவும் அதனை முன்னின்று நடத்துபவர்களாகவும் உள்ளனர்.

இந்த ஊழல் முறைகேடுகளின் அடிப்படையே தனியார்மய கொள்கைகள் தான். கடந்த இருபது ஆண்டுகாலமாக மத்திய – மாநில அரசுகள் அமல்படுத்தி வரும்  தனியார்மய – தாராளமய கொள்கைகளின் காரணமாக கல்வியில் அரசின் பங்களிப்பு கணிசமான அளவு குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. மொத்த கல்லூரிகளில் 66 சதவிகித கல்லூரிகள் தனியார் கல்லூரிகள். குறிப்பாக தமிழ் நாட்டில் 75 % சதவீத கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்.

பேராசிரியர் ப. சிவக்குமார்

மேலும் கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. அத்தோடு மட்டுமில்லாது ஒட்டுமொத்த உயர் கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளுக்கு நிதி வழங்குவதற்கு பதிலாக கடன் வழங்குகிறேன் என மோடி கூறுகிறார்; இக்கடனை வட்டியோடு 10 வருடத்திற்குள் கட்ட வேண்டும் என மோடி அரசு பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறது. கட்டிடம் கூட இல்லாத ‘ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது.

‘உயர்கல்வியின் தரத்தை உயர்துகிறோம்’ என்ற பெயரிலேயே மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவர்களின் உணமையான நோக்கமோ, 1990 களின் ஆரம்பத்திலிருந்து உயர் கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளை முடித்து வைப்பதும், இந்திய உயர் கல்வி சந்தையை உலக கல்விச் சந்தையோடு இணைப்பதும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிதி மூலதன நிறுவனங்கள் எவ்வித தடைகளுமின்றி கல்விச் சேவை என்ற பெயரில் இந்தியாவில் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும் தான்.

பேராசிரியர் அ. கருணானந்தன்

இந்த உலகமயமாக்கல் நடவடிக்கைகளின் வாயிலாக வெளிநாட்டு கல்விக் கொள்ளையர்கள் மட்டுமில்லாது அம்பானி, சுனில் மிட்டல், அனில் அகர்வால், சிவ் நாடார், ஜின்டால் போன்ற இந்திய தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் தங்களுக்கான பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதும் அதனை இந்தியாவின் சிறந்த கல்லூரிகளாக அறிவிப்பதும் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் தரமற்றவைகளாக அறிவித்து அவைகளை படிபடியாக மூடுவிழா நடத்துவதற்கான திட்டத்தோடு மோடி அரசு செயல்படுகிறது.

சென்னைப் பல்கலைக் கழகத்தை விட சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தரம் வாய்ந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதனை நடைமுறைப் படுத்துவதற்காகவே இந்திய மருத்துவக் குழு (Medical council of India) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(University grant commission) இரண்டையும் ஒழித்து அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்(National Medical Comission) மற்றும் இந்திய உயர்கல்வி ஆணையம்(Higher Education Comission of India) என்ற புதிய அமைப்பை மோடி அரசு உருவாக்குகிறது. இது முதலாளிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்க கூடிய அமைப்பாகும்.

பேராசிரியர் கதிரவன்

இதன் விளைவாக பலமடங்கு கல்விக்கட்டண உயர்வு, கல்வி உதவித்தொகைகள் பறிப்பு, இடஒதுக்கீட்டை பறிப்பது போன்றவை நடந்து வருகின்றன. இது இந்நாட்டின் பெரும்பாண்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண் சமுகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப் பறித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை எதார்த்தமாக்க தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களை தலைமை பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்தி-சமஸ்கிருத திணிப்பு, உயர்கல்வி மற்றும் பள்ளிகல்வியில்  பல்வேறு வழிகளில் பார்பனிய-வேத-இந்துத்துவ சார்பான விசயங்களை திணிப்பது, புராண கட்டுக் கதைகளை அறிவியல் உண்மையாக கூறுவது போன்ற நடவடிக்கைகளால் பார்பனிய மேலாண்மையை கல்வியின் வாயிலாக கொண்டு வருவதற்கு மோடி அரசு தீவிரமாக செயல்படுகிறது.

இச்சூழலில் கல்வி மீதான நமக்குள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் தரமான இலவச கல்வியை உத்திரவாதப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமான தேவையாகும்.

பேராசிரியர் அமலநாதன்

இதற்கு கல்வித்துறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் கல்வித் துறையில் நடக்கும் சீரழிவுகள், இதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உருவாக்குவது மிக அவசியமாகும். அதற்கானதொரு முயற்சியாகவே பேராசிரியர்கள், மற்றும் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களை கொண்டு “பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு” என்ற அமைப்பு உருவாக்கியுள்ளோம்.

தனியார்மய கல்வியை அடியோடு ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம்.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்

நியூயார்க் நகரிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மணிநேர பயணத்தில் ஆண்டனி மான்சினெலி பணிபுரியும் முடி திருத்தும் கடை ஒன்று அமைந்துள்ளது. மான்சினெலி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரையில் முடிவெட்டும் பணியை மேற்கொள்கிறார். இடையில் தனது மொபைலை நோண்டுவதோ ஓய்வெடுப்பதோ கிடையாது. அதில் என்ன சிறப்பு இருக்கிறது? தொடர்ந்து சோர்வுறாமல் பணி செய்யும் அவருக்கு வயது 107.

இத்தாலியின் நேப்பில்ஸ் நகரத்திற்கு அருகே 1911-ம் ஆண்டு பிறந்த மான்சினெலி, தனது 8-ம் வயதில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தார். தனது 11 வயதில் அருகில் உள்ள முடிதிருத்தகத்திற்கு பகுதி நேர பணியாளராகச் சென்றவர், 12-ம் வயதில் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு முழுநேர முடி திருத்தகராகப் பணிபுரியத் தொடங்கினார் மான்சினெலி. அன்று ஒருமுறை முடிவெட்ட 25 செண்டுகள் பெற்ற மான்சினெலியின் இன்றைய சம்பளம், நபர் ஒன்றுக்கு 19 அமெரிக்க டாலர்கள் (சுமார் 1330 ரூபாய்).

“வேறு யாரையும் நான் என் முடியைத் தொடக் கூட விடமாட்டேன்”, என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த 56 வயதான ஜான் ஓ ரூர்க். இவர் மான்சினெலியின் தொடர்ச்சியான வாடிக்கையாளர். “கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக முடிவெட்டிக் கொண்டிருக்கிறார் மான்சினெலி” என்கிறார் ஓ’ ரூர்க்.

சுமார் 97 ஆண்டுகளாக முடி வெட்டிக் கொண்டிருக்கும் மான்சினெலி, முழுநேரமாகப் பணி புரிகிறார். பணி நேரமான 8 மணிநேரம் முழுவதும் தொடர்ந்து நின்று கொண்டே பணிபுரிகிறார்.

கட்டுக்கோப்பான உடல், தலை நிறைய முடி, வாய் நிறைய பற்கள், கண்ணாடி இல்லாத கண்கள் என மான்சினெலி தன்னைத் தானே ஆரோக்கியமாக பராமரித்து வருகிறார்.

இவரது 96-ம் வயதிலேயே உலகின் வயதான முடி திருத்தகர் என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார். அதனைத் தொடந்து பலரும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த முடி திருத்தகத்தின் உரிமையாளரான ஜேன் டினெஸ்ஸா, அவரது ஆரோக்கியத்தையும், வேலைத்திறனையும் வெகுவாக பாராட்டுகிறார். “அவர் ஒரு போதும் உடல்நலனின்றி காணப்பட்டதில்லை. ஒரு 20 வயது நபரை விட அதிகமாக முடி வெட்டுவார். இளைஞர்கள் பணி நேரத்திலும் செல்போனைப் பயன்படுத்துவார்கள். ஆனால் மான்சினெலி வேலையே கண்ணாக இருப்பார்,” என்கிறார்

இந்த வயதிலும் ஆரோக்கியமாக அயராது பணிபுரிவதன் இரகசியம் குறித்து மான்சினெனிலியிடம் கேட்கப்பட்ட போது, “ஸ்பகெத்தி பாஸ்தா”-வையே உணவாக எடுத்துக் கொள்கிறேன். அதனால் உடல் பருமன் ஆவதைத் தடுத்துக் கொள்கிறேன். நான் பிறர் வற்புறுத்துவதால்தான் மருத்துவரைச் சென்று பார்க்கிறேன். அங்கும் எனக்கு எந்த வலிகளும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே கூறுவேன்” என்று கூறுகிறார், மான்சினெலி.

107 வயதிலும், மான்சினெலி தனது பணிகளைத் தானே மேற்கொள்கிறார். தினமும் காலையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த தனது மனைவி கார்மெல்லாவின் கல்லறைக்குச் சென்றுவிட்டே பணிக்கு செல்கிறார். தனது வாகனத்தைத் தானே ஓட்டுவதில் தொடங்கி, தனது உணவுகளை தானே சமைத்துக் கொள்வது, தனது பில்களைத் தானே கட்டுவது, தனது துணிகளைத் தாமே துவைப்பது, தனது வீட்டுத் தோட்ட வேலைகளை தாமே மேற்கொள்வது என தனது வேலைகளைத் தானே செய்வதில் விடாப்பிடியான குணம் கொண்டவராக இருக்கிறார்.

”எப்போதுமே, தாம் வெட்டிய முடிகளைப் பிறரை பெருக்க விடமாட்டார். பல்வேறு சமயங்களில், தனது முடியைக் கூட தானே வெட்டிக் கொள்வார்” என்கிறார் மான்சினெலியின் மகன், பாப் மான்சினெலி.

முடி திருத்தகத்திற்கு வரும் பலரும், “நான் என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்?, நான் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்? வயது குறைக்கும் க்ரீம் என்ன உபயோகிக்க வேண்டும்?” என மான்சினெலியைத் துளைத்துக் கேள்வி கேட்கின்றனர். ஆனால் இவை எதுவும் இன்றியே அவர் துடிப்புடன் செயல்படுகிறார்” என்கிறார் ஜேன் டினேஸ்ஸா.

படிக்க:
நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்

பல பத்தாண்டுகளில் மாறிவிட்ட சிகை அலங்கார முடி வெட்டுகளுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் மான்சினெலி. பல வாடிக்கையாளர்கள் இவரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முடி வெட்டிக் கொண்டிருக்கின்றனர். “எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.

தனது தொழில் தன்னை எப்போதும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பதுதான் 107 வயதிலும் தனது பணியை விடாமல் தொடர்வதற்கான ஒரே காரணம் என்கிறார் மான்சினெலி.

உழைப்பையே துன்பமாகவும், தன்னைப் பராமறித்துக் கொள்வதையே மாபெரும் தியாகமாகவும் கருதுகின்ற இருபத்தியோராம் நூற்றாண்டு நடுத்தர வர்க்கம் இந்தப் பெரியவரின் உழைப்பை பார்க்க வேண்டும். விரும்பிச் செய்கின்ற உழைப்பு, சக மனிதர்களுக்கு சேவை செய்கின்றஉழைப்புக்கு ஒருபோதும் சலிப்போ, விரக்தியோ வருவதில்லை என்பதை தோழர்களும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

செய்தி ஆதாரம்:
The world’s oldest barber is 107 and still cutting hair full time

செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல ! உழுது தள்ள வேண்டியதுதான் !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 17

மாக்சிம் கார்க்கி
றுநாள் பெலரகேயா தொழிற்சாலை வாசலுக்கு வந்து சேர்ந்த பொழுது, அவளை அங்கு நின்ற காவலாளிகள் வழிமறித்தார்கள். அவளது கூடைகளைச் சோதனையிட்டுப் பார்ப்பதற்காக அவற்றை இறக்கி வைக்கச் சொன்னார்கள். “ஐயையோ! எல்லாம் ஆறிப்போய்விடுமே!”  என்று அமைதியாக ஆட்சேபித்தாள் தாய். அவர்களோ அவளது ஆடையணிகளை முரட்டுத்தனமாகத் தடவிச் சோதித்தார்கள்.

”வாயை மூடு” என்று கடுகடுப்பாய்ச் சத்தமிட்டான் ஒரு காவலாளி.

”நான் சொல்வதைக் கேள். அவர்கள் அதை வேலிக்கு வெளியே இருந்து உள்ளே எறிந்து விடுகிறார்கள். அப்பா!” என்று அவளைத் தோளைப் பிடித்து லேசாகத் தள்ளிவிட்டுச் சொன்னான் இன்னொரு காவலாளி.

அவள் உள்ளே சென்றவுடன் முதன் முதல் அவள் முன் எதிர்ப்பட்டவன், அந்தக் கிழவன் சிஸோவ்தான்.

”அம்மா, நீ கேள்விப்பட்டாயா?” என்று அமைதியாக சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கேட்டான் அவன்.

“என்னது?”

“அதுதான் அந்தப் பிரசுரங்கள். அவை பழையபடியும் தலைகாட்டிவிட்டன. நீ ரொட்டியிலே உப்புத் தூவியிருக்கின்றாயே. அதுமாதிரி அந்தப் பிரசுரங்கள் எங்கே பார்த்தாலும் பரவியிருக்கின்றன. அவர்கள் சோதனை போட்டதிலும், கைது செய்ததிலும் குறைச்சலில்லை. என் மருமகன் மாசினைக்கூட அவர்கள் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள் எதற்காக? உன் மகனைக் கூடத்தான் உள்ளே தள்ளினார்கள். ஆனால் என்ன ஆயிற்று? இந்தப் பிரசுரங்களுக்கு இவர்கள் காரணமில்லையென்பது இப்போது எல்லோருக்குமே தெரிந்து போயிற்று.”

அவன் தன் தாடியைக் கையில் அள்ளிப் பிடித்துக்கொண்டு அவளைப் புதிர் நிறைந்த கண்களோடு பார்த்தான்.

“நீ ஏன் என் வீட்டுக்கு வரக்கூடாது? தன்னந்தனியே இருப்பது உனக்கும் சங்கடமாகத்தானிருக்கும்…”

அவள் அவனுக்கு நன்றி கூறினாள். உணவுப் பண்டங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே, வழக்கத்திற்கு மாறான ஒரு உற்சாகம் தொழிற்சாலையில் நிலவுவதைக் கூர்ந்து கவனித்தாள், தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வந்தார்கள். ஒரு தொழிற்கூடத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடினார்கள். கரிப்புகை படிந்த அந்தச் சூழ்நிலையில், ஏதோ ஒரு தைரியமும், துணிவும் நிரம்பி பிரதிபலிப்பதாக அவளுக்குத் தோன்றியது. இங்குமங்கும் எண்ணற்ற பேச்சுக் குரல்கள் கேட்டன.

கிண்டலான பேச்சுக்களும் உற்சாகம் ஊட்டும் பேச்சுக்களும் ஒலித்தன. வயதாகிப்போன தொழிலாளர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள். கவலை தாங்கிய முகங்களோடு முதலாளிகள் அவர்களைக் கடந்து சென்றார்கள். போலீஸ்காரர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் கூட்டமாக நிற்கும் தொழிலாளர்கள் மெதுவாகக் கலைந்து பிரிந்தார்கள்; அல்லது பேச்சு மூச்சற்றுக் கம்மென்று நின்றார்கள்; அப்படி நின்று கொண்டே, எரிச்சலும் கோபமும் மூண்டு பொங்கும் அந்தப் போலீஸ்காரர்களின் முகங்களை வெறித்துப் பார்த்தார்கள்.

எல்லாத் தொழிலாளர்களும் அப்போதுதான் குளித்து முழுகி வந்தது போலத் தோன்றினார்கள். கூஸெவ் சகோதரர்களின் மூத்தவன் விரைவாக நடந்து சென்றான். அவனது தம்பி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே அவன்கூட ஓடினான்.

தச்சுப் பட்டறையின் கங்காணியான வவீலவ், ஆஜர்ச் சிட்டைக் குமாஸ்தாவான இசாய் முதலியோரும் தாயைக் கடந்து சென்றார்கள். குள்ளமான அந்த நோஞ்சான் குமாஸ்தா தன் தலையைத் திருப்பிச் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு அந்தக் கங்காணியின் சுருங்கிப்போன முகத்தை ஏறிட்டுப் பார்த்தவாறு தனது தாடியைத் துடைத்துக்கொண்டே சளசளத்துப் பேச ஆரம்பித்தான்.

“அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான். இங்கே செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல. ஆனால் உழுது தள்ள வேண்டியதுதான்….”

வவீலவ் தனது கரங்கள் இரண்டையும் பிடரியில் கொடுத்துப் பிடித்துக் கொண்டவாறு நடந்தான்.

“ஏ நாய்க்குப் பிறந்தவனே! நீ போய் என்ன வேண்டுமானால் அச்சடித்துத் தள்ளு” என்று உரத்த குரலில் சத்தமிட்டான். “ஆனால், என்னைப் பற்றி மாத்திரம் துணிந்து எதுவும் சொல்லிவிடாதே, ஆமாம்!”

வசீலி கூஸெவ் தாயிடம் வந்து சேர்ந்தான்.

”நான் இன்றைக்கு இரண்டாம் தடவையாக உன்னிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் போகிறேன். நல்ல சுவை”

”நான் இன்றைக்கு இரண்டாம் தடவையாக உன்னிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் போகிறேன். நல்ல சுவை” என்று சொல்விவிட்டு, தன் குரலைத் தாழ்த்தி, கண்களைச் சுருக்கி விழித்துக் கொண்டு, “அவர்களுக்குச் சரியான பொட்டிலே அடி விழுந்திருக்கிறது. நல்ல வேலை அம்மா, நல்ல வேலை” என்றான்.

அவள் அன்பு ததும்ப, தலையை அசைத்துக் கொண்டாள். தொழிலாளர் குடியிருப்பிலேயே பெரிய போக்கிரி என்று பேரெடுத்தவனான வசீலி அவளிடம் மிகவும் மரியாதையோடு நடந்து கொண்டதானது அவளுக்கு இன்பம் தந்தது. மேலும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள உத்வேகமும் அவளுக்கு அதிக இன்பத்தை அளித்தது. அவள் தனக்குத்தானே நினைக்கத் தொடங்கினாள்.

“நான் மட்டும் இல்லாதிருந்தால்…”

மூன்று சாதாரணக் கூலியாட்கள் கொஞ்ச தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் அதிருப்தி தொனிக்கும் குரலில் அடுத்தவனிடம் மெதுவாகப் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது.

“என் கண்ணில் அது படவே காணோமே…”

”அதிலே என்ன எழுதியிருந்தது. என்பதைக் கேட்க எனக்கு ஆசை, நானோ எழுத்தறிவில்லாதவன். ஆனால், அது என்னவோ அவர்களைச் சரியான இடம் பார்த்து அடித்து விழத்தட்டியது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது” என்றான் இன்னொருவன்.

மூன்றாவது கூலி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, இரகசியமாகச் சொன்னான்:

”வாருங்கள், பாய்லர் அறைக்குள்ளே போவோம்.”

கூஸெவ் தாயைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் காட்டினான். “பார்த்தாயா? எப்படி வேலை?” என்றான்.

பெலரகேயா உவகையும் உற்சாகமும் நிரம்பித் ததும்பியவாறு வீடு திரும்பினாள்.

“வாசித்துப் பார்க்கத் தெரியாததால் ஜனங்கள் எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் தெரியுமா?” என்று அவள் அந்திரேயைப் பார்த்துச் சொன்னாள். “சின்னப் பிள்ளையாயிருக்கும்போது நானும்கூட எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். இப்போது எல்லாமே மறந்து போய்விட்டது.”

“ஏன், இப்போது படியேன்” என்றான் ஹஹோல்.

“இந்த வயதிலா? என்னை என்ன கேலி செய்யப் பார்க்கிறாயா?”

ஆனால் அந்திரேய் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அதன் அட்டையிலுள்ள எழுத்துக்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினான்.

“இது என்ன?”

”எர்” என்ற சிரிப்போடு பதில் சொன்னாள் அவள்.

“சரி, இது?”

“அ…”

அவளுக்குத் தன் நிலைமை பரிதாபகரமாகவும் அவமானகரமாகவும் இருப்பதாகத் தோன்றியது. ஏனெனில் அந்திரேயின் கண்கள் அவளைப் பார்த்து, கள்ளச்சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. அவள் அந்தப் பார்வைக்கு ஆளாக விரும்பவில்லை. ஆனால் அவனது குரல் மட்டும் அமைதியும் பரிவும் நிரம்பி இருந்தது. முகத்தில் கேலிபாவமே காணவில்லை.

“நீங்கள் உண்மையிலேயே எனக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கிறீர்களா. அந்திரியூஷா?” என்று தன் போக்கில் வந்த சிறு நகையோடு கேட்டாள் அவள்.

“ஏன் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்றான் அவன். “எப்படி எப்படியென்பதைக் கற்றுக் கொண்டால் அப்புறம் எல்லாம் மிகவும் லேசாக வந்துவிடும். படித்துத்தான் பாரேன். மந்திரத்தைச் சொல்லு பலித்தால் வெற்றி. பலிக்காவிட்டால் பாபமில்லை!”

“இன்னொரு பழமொழி. தெரியுமா? விக்ரகத்தை வெறித்துப் பார்த்தால் மட்டும் சந்நியாசி ஆக முடியாது.”

”ஊம்” என்று தலையை வெட்டியசைத்துக்கொண்டு சொன்னான் ஹஹோல். ”பழமொழிகளுக்கா குறைச்சல்? குறையத் தெரிந்தால் நிறையத் தூங்கலாம்!” இந்தப் பழமொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்? எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான் பிறக்கின்றன. இவற்றைக் கொண்டு மனத்திற்குக் கடிவாளம் பின்னுகிறது. வயிறு மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக, அதைப் பக்குவப்படுத்துவதற்காகவே பழமொழிகள் உதவுகின்றன.

”இது என்ன எழுத்து?” ”எல்” என்றாள் தாய்.

”சபாஷ்! பார்த்தாயா, இவை எல்லாம் எப்படி ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன! சரி இது என்ன?”

அவள் தன் கண்களைச் சுழித்து விழித்து, புருவங்களைச் சுருக்கி விரித்து மறந்து போன அந்த எழுத்து என்னவென்பதை ஞாபகப்படுத்துவதற்காக அரும்பாடுபட்டாள். தன்னை மறந்து அந்த முயற்சியில் அவள் ஈடுபட்டாள். ஆனால் சீக்கிரமே அவள் கண்களில் அசதி தட்டிவிட்டது. கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. முதலில் வழிந்தது சோர்வுக் கண்ணீர். பின்னர் வழிந்ததோ சோகக் கண்ணீர்.

“நானாவது படிக்கிறதாவது?” என்று பொருமினாள். “நாற்பது வயதுக் கிழவி நான், இப்போதுதான் படிக்கத் தொடங்குகிறேன்.”

‘அழாதீர்கள்’ என்று பரிவோடு கூறினான் ஹஹோல். ”நீங்கள் நன்றாக வாழத்தான் முடியாது போயிற்று. ஆனால் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு படுமோசமானது என்பதையாவது உணர்ந்து கொண்டீர்கள். நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பினால், எத்தனை ஆயிரம் பேரானாலும் நல்வாழ்வு வாழ முடியும். ஆனால் அவர்களோ மிருகங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த வாழ்க்கையைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறார்கள். ஒரு மனிதன் இன்றைக்கும் உண்கிறான், உழைக்கிறான். நாளைக்கும் உண்பான், உழைப்பான். இப்படியே என்றென்றைக்கும் அவனது வாழ்நாள் முழுதும் தினம் தினம் உண்பதும் உழைப்பதுமாகவே அவன் வாழ்ந்தால் அதனால் என்ன லாபம்?

இதற்கிடையில் பிள்ளைகளை வேறு பெற்றுப் போடுகிறான். குழந்தைப் பருவத்தில் அவை அவனுக்குக் குதூகலம் அளிக்கின்றன. கொஞ்சம் வளர்ந்து வயிற்றுக்கு அதிக உணவு கேட்கும் அளவுக்கு அந்தக் குழந்தைகள் பெரிதாகிவிட்டால் உடனே அவனுக்குக் கோபம் பொங்குகிறது. தன் குழந்தைகளையே திட்ட ஆரம்பிக்கிறான்; “ஏ பன்றிக்குட்டிகளா! சீக்கிரம் வளர்ந்து பெரிசாகி எங்கேயாவது பிழைக்க வழி தேடுங்கள்” என்று கறுவுகிறான். அவனே தன் பிள்ளைகளை வீட்டிலுள்ள ஆடுமாடுகள் மாதிரி மாற்றிவிட முனைகிறான், அவர்களோ தங்கள் கும்பியை நிரப்பிக்கொள்ளத்தான் உழைக்க முனைகிறார்கள். இப்படியாக அவர்கள் வாழ்க்கை இழுபடுகிறது.

மனித சிந்தனையை தளையிட்டுக் கட்டிய விலங்குகளையெல்லாம் தறித்தெறிய வேண்டும். என்ற காரணத்துக்காக எவனொருவன் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்கிறானோ, அவனே மனித ஜாதியில் உயர்ந்தவன். அம்மா, உங்கள் சக்திக்கு இயன்றவரை, நீங்கள் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள்”.

“நானா?” என்று பெருமூச்சு விட்டாள் அவள். “நான் என்ன செய்ய முடியும்?”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நாமெல்லாம் மழை மாதிரி. ஒவ்வொரு மழைத்துளியும் விதையைப் போஷித்து வளர்க்கிறது. நீங்கள் மட்டும் படிக்கத் தொடங்கினால்…”

அவன் சிரித்துக்கொண்டே பேச்சை நிறுத்தினான். அங்கிருந்து எழுந்து அறைக்கும் மேலும் கீழும் நடந்தான்.

”நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும். பாவெல் சீக்கிரமே வந்துவிடுவான். வந்தவுடன் அவன் உங்களைக் கண்டு அப்படியே திகைத்துப் போகவேண்டும். ஆமாம்”

”அந்திரியூஷா! வாலிபர்களுக்கு எல்லாமே சுலபம்தான். ஆனால் என்னை மாதிரி வயதாகிவிட்டால் – துன்பம் நிறைய, சக்தி குறைவு, அறிவோ முற்றிலும் இல்லை” என்றாள் தாய்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்