Friday, July 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 396

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி

1

நண்பர்களே….

பொ.வேல்சாமி

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வரலாறு)

ரபோஜி மன்னரின் (1777-1832) நெருங்கிய தோழரும் சரபோஜியை உருவாக்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரின் வளர்ப்புச் சீடரும் தமிழ்நாட்டு ப்ராட்ஸ்டன்டு கிறிஸ்தவர்கள், தேவாலயங்களில் துதிப் பாடல்களைப் பாடுவதற்கு தமிழில் முதல்முதலாக பாடல்களை இயற்றி தந்து புகழ்பெற்று இருந்தவரான தஞ்சை வேதநாயக சாஸ்திரியாரால் (1774-1864) தமிழறிஞர் ஜி.யூ.போப் தஞ்சையிலிருந்து விரட்டப்பட்டதாக வரலாறு உண்டு. இதைப் பற்றி வேதநாயக சாஸ்திரியாரே “ஜி.யூ.போப் உபத்ரா உபத்திரவம்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். ( அந்தத் தீர்மானத்தின் குறிப்பை பதிவின் படத்தில் தந்துள்ளேன்.) கூடுதலாக கிறிஸ்தவர்களான தாழ்த்தப்பட்டவர்களால் வழங்கப்படும் உணவையும் உண்ண வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது.

படிக்க:
கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!

கிறிஸ்தவ மதத்தில் சாதி வேறுபாடு பார்க்கக்கூடாது என்ற இந்தப் போக்கை வேதநாயக சாஸ்திரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஜி.யூ.போப் பாதிரியாராகப் பணிபுரிந்த தேவாலயத்தில் வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று தடைவிதித்து இருக்கின்றார் (தஞ்சையில் உள்ள அந்த தேவாலயம் வேதநாயக சாஸ்திரியாரின் வீட்டிற்கு எதிரில் இன்றும் உள்ளது. அந்தத் தெருவின் பெயர் மிஷன் தெரு). இந்தப் பிரச்சினை உண்டாக்கிய மனத்துயரினால் ஜி.யூ.போப் தஞ்சை செயிண்ட் பீட்டர் கல்லூரியின் (அந்தக் காலத்தில் இந்தப் பள்ளி கல்லூரி என்று அழைக்கப்பட்டது) தலைமைப் பொறுப்பில் இருந்தும் தேவாலயத்தின் பொறுப்பிலிருந்தும் விடுபட்டு தஞ்சையை விட்டே சென்று விடுகிறார்.

“தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்” என்ற இந்த நூலில் உள்ள ஒருசில சுவையான செய்திகளை இந்தப் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். இவை போன்ற பல அரிய சுவையான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது. அ.மாதவையாவின் புகழ்பெற்ற நாவலான “கிளாரிந்தா”வின் கதாநாயகியும் பிராமணராகப் பிறந்து கிறிஸ்தவராக மாறி முதல்முதலாக திருநெல்வேலியில் கிறிஸ்தவத் தொண்டு செய்த கிளாரிந்தா அம்மையாரைப் பற்றியும் அவருடைய கணவரைப் பற்றியும் அவருக்கு ஞானஸ்தானம் வழங்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரைப் பற்றியும் பல சுவையான வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை நீங்கள் படிக்க விரும்புவீர்கள் என்ற எண்ணத்துடன் இந்நூலின் இணைப்பைத் தந்துள்ளேன்.

தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

அவனைக் கண்டாலே எனக்குப் பயமாகத்தானிருக்கிறது

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 21

மாக்சிம் கார்க்கி

வாழ்க்கை அதிவேகமாகக் கழிந்து சென்றது. பற்பல சம்பவங்கள் நிறைந்து துரிதமாக, நாட்கள் போவதே தெரியாமல். காலம் கழிந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் கொண்டு வந்தது. ஆனால் தாய் அவற்றைக் கேட்டுத் திடுக்கிடவில்லை. அவளுக்கு அவை பழகிப்போய்விட்டன. அவளது வீட்டுக்கு மேலும் மேலும் இனந்தெரியாத புதிய நபர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மாலை நேரங்களில் வந்து அந்திரேயோடு ஆர்வமும் அடக்கமும் நிறைந்த குரல்களில் பேசிக் கொள்வார்கள். பிறகு தங்கள் கோட்டுக் காலர்களைத் தூக்கிவிட்டுக்கொண்டும், தொப்பிகளைக் கண் வரையிலும் இழுத்து மூடிக்கொண்டும் இருளோடு இருளாய் அரவமேயில்லாது அதி ஜாக்கிரதையோடு மறைந்து போய்விடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ளடங்கித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தை அவளால் உணர முடிந்தது. அவர்கள் அனைவருக்குமே ஆடிப்பாடிச் சிரித்து மகிழ வேண்டும் என்ற ஆசையிருப்பது போலத் தெரிந்தது. எனினும் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமே இல்லை. அவர்கள் எப்போதும் எங்கேனும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடுமையாகவும், ஏளன சுபாவம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் வாலிபத்தின் வலிவும், மினுமினுப்பும் உற்சாகமும் நிறைந்து காணப்பட்டார்கள். சிலர் மிகவும் அமைதியாக, சிந்தனை வயப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருமே ஒரேவிதமான லட்சிய நம்பிக்கையோடு ஒத்து நிற்பதாகத் தாய்க்குத் தோன்றியது. எனினும் அவர்கள் அனைவரும் தனித்தனியே தமக்கென ஒரு உருவும் குணமும் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் அனைவரது முகங்களும் அவளுக்கு ஒன்று போலவே தோன்றின; எம்மாஸை நோக்கிச் செல்லும் கிறிஸ்து நாதரின் அருள் நாட்டத்தைப் போல் – அன்பும் அழுத்தமும் பிரதிபலிக்கும். ஆழமும் தெளிவும் கருமையும் கொண்ட கண்களோடு அமைதியும் தீர்மானம் புத்தியும் நிறைந்து விளங்கும் மெலிந்த முகத்தைப் போல் – ஒரே முகம் போல் தோன்றியது அவளுக்கு.

அவர்களின் தொகையை எண்ணிக் கணக்கிட்டாள் தாய். அவர்கள் அனைவரையும் பாவெலைச் சுற்றி நிற்க வைத்து அவர்களுக்கு மத்தியில் பாவெலை நிறுத்தி வைத்தால், பாவெல் எதிரிகளின் கண்ணில் படாமல் எப்படி அந்த வியூகத்துக்குள்ளேயே மறைந்து நிற்பான் என்பதை அவள் கற்பனாரூபமாகவே சிந்தித்துப் பார்த்துக் கொண்டாள்.

ஒரு நாள் குறுகுறுப்பும் சுருண்ட கேசமும் நிறைந்த ஒரு யுவதி நகரிலிருந்து வந்தாள். அவள் அந்திரேய்க்கு ஒரு பொட்டலம் கொண்டு வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போது அவள் தாயை நோக்கித் திரும்பி, உவகை நிறைந்த தன் கண்களில் ஒளிபாய்ந்து பளிச்சிட்டு மின்ன, வாய் திறந்து சொன்னாள்;

“தோழரே, போய் வருகிறேன்.”

“சென்று வருக!” என்ற சிரிப்புக்கு ஆளாகாமல் பதிலளித்தாள் தாய்.

அந்தப் பெண் வெளியே சென்ற பிறகு, தாய் ஜன்னல் அருகே சென்று நின்றாள். வசந்தகால மலர்போல புதுமையும், வண்ணாத்திப் பூச்சியைப்போல மென்மையும் பெற்று, சிறு கால்களால் குறுகுறுவென்று தெரு வழியே நடந்து செல்லும் அந்தத் தோழியைப் பார்த்தாள். பார்த்தவாறே தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“தோழி!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் தாய். ‘அடி’ என் செல்லப் பெண்ணே! உன் வாழ்க்கை முழுதும் உன்னோடு துணை நின்று உதவ, கடவுள் உனக்கு ஒரு நல்ல உண்மையான தோழனையும் அருள் செய்யட்டும்!”

படிக்க:
தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்

நகரிலிருந்து வரும் அத்தனை பேரும் ஏதோ பிள்ளைக்குணம் படைத்த பேதைகளைப் போலத் தோன்றியது. அவளுக்கு அதைக் கண்டு மிகுந்த பெரியதனத்தோடு அவள் தன்னுள் சிரித்துக்கொள்வாள். என்றாலும், அவர்கள் கொண்டுள்ள கொள்கை வைராக்கியம் அவளை ஆனந்த வியப்பில் ஆழ்த்தும்; உள்ளத்தைத் தொடும். அந்த வைராக்கியத்தின் ஆழ்ந்த தன்மையும் அவளுக்கு வரவரப் புரியத் தொடங்கியது, நீதியின் வெற்றியைப் பற்றி அவர்கள் காணும் லட்சியக் கனவுகள் அவளது உள்ளத்தைத் தொட்டுத் தடவிச் சுகம் கொடுத்தன. அந்தக் கனவு மொழிகளை அவள் கேட்கும்போது காரண காரியம் புரியாத ஏதோ ஒரு சோக உணர்ச்சிக்கு அவள் ஆளாகிப் பெருமூச்செறிந்து கொள்வாள். முக்கியமாக, அவர்களது சர்வ சாதாரணமான எளிமையும் தங்களது சொந்த நலன்களில் அவர்கள் காட்டும் அழகான அசட்டை மனப்பான்மையும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன.

வாழ்க்கையைப் பற்றி அவர்கள் சொல்லியவற்றை பெரும்பாலும் ஏற்கெனவே அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் தாம் மனிதகுலத்தின் துயரங்களுக்குரிய உண்மையான பிறப்பிடத்தை, மூலாதாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் என அவள் உணர்ந்தாள். எனவே அவர்களது சிந்தனைகளையும் அதன் முடிவுகளையும் அவளும் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப் பழகினாள். என்றாலும், அவளது இதயத்தின் அதலபாதாள ஆழத்திலே அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து விடமுடியும் என்பதையோ, தங்களது லட்சியத்துக்காகச் சகல தொழிலாளி மக்களையும் ஒன்றுதிரட்டி ஒரே சக்தியாகப் பலப்படுத்தி விடுவார்கள் என்பதையோ அவள் நம்பத் துணியவில்லை. இன்றோ ஒவ்வொருவனும் அவனவன் வயிற்றை நிரப்பவே வழி பார்க்கிறான்; அந்தப் பிரச்சினையை நாளைவரை ஒத்தி வைப்பதற்குக்கூட எவனும் விரும்பவில்லை. மூமூ இதுதான் அவளுக்குத் தெரியும். தொலைவும் துயரமும் நிறைந்த இந்தப் பாதையில் அதிகம் பேர் துணிந்து செல்ல ஒப்பமாட்டார்கள். இறுதியாக எய்தப்போகும் அனைத்து மக்களின் சகோதரத்துவ சாம்ராஜ்யம் எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்துவிடப் போவதில்லை. எனவேதான் அந்த நல்ல மனிதர்கள் எல்லோரும் அவளுக்குக் குழந்தைகளைப் போலத் தோன்றினார்கள். அவர்களது முகத்தில் மீசை தாடிகள் வளர்ந்திருந்தபோதிலும், சோர்வினால் களைத்து வாடிய முகபாவம் தெரிந்தாலும் அவளைப் பொறுத்தவரை அவர்கள் சின்னஞ் சிறார்கள்தாம்.

“அட, என் அருமைக் குஞ்சுகளே!” என்று தலையை அசைத்துக் கொண்டு தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள் அவள்.

இப்போது அவர்கள் அனைவரும் அருமையான, நேர்மையான, தெளிவாற்றல் கொண்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் நன்மை செய்வதைப் பற்றிப் பேசினார்கள்; தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முயற்சியிலும் தங்களைப் பற்றிய கவலையின்றியும் அவர்கள் முன்னேறினார்கள். இம்மாதிரியான வாழ்க்கையை, அதனது ஆபத்தான சூழ்நிலையைக்கூடப் பொருட்படுத்தாது எப்படி ஒருவர் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதையும் அவள் உணர்ந்து கொண்டாள். தன்னுடைய கடந்த காலத்தின் இருள் செறிந்த வாழ்க்கைப் பாதையை அவள் நினைத்து நினைத்துப் பார்த்து பெருமூச்செறிந்து கொண்டாள். அவளது இதயத்துக்குள்ளே, நான் இந்தப் புதிய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றவள் என்ற உணர்ச்சியும் சிறுகச் சிறுக வளர ஆரம்பித்தது. இதற்கு முன்பெல்லாம் தன்னை எவருமே விரும்பவில்லை எனக் கருதினாள் அவள். ஆனால், இப்போதோ எத்தனையோ பேருக்குத் தான் தேவைப்படுவதை அவள் கண்கூடாகப் பார்த்தாள். இந்தப் புதிய இன்பகரமான உணர்ச்சி அவளைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தது.

அந்த நல்ல மனிதர்கள் எல்லோரும் அவளுக்குக் குழந்தைகளைப் போலத் தோன்றினார்கள். அவர்களது முகத்தில் மீசை தாடிகள் வளர்ந்திருந்தபோதிலும், சோர்வினால் களைத்து வாடிய முகபாவம் தெரிந்தாலும் அவளைப் பொறுத்தவரை அவர்கள் சின்னஞ் சிறார்கள்தாம்.

அவள் தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்களை ஒழுங்காகக் கொண்டு சென்று கொண்டிருந்தாள், அப்படிச் செய்வது தன் கடமை என்று கருதினாள். வேவுகாரர்கள் அவளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போனார்கள்; எனவே அவள் மீது அவர்கள் அத்தனை சிரத்தை காட்டவில்லை. எத்தனையோ தடவைகளில் அவர்கள் அவளைச் சோதனை போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சோதனை போடும் நாளெல்லாம் தொழிற்சாலைக்குள் அந்தப் பிரசுரங்கள் தலைகாட்டிப் பரவித் திரிந்த நாளுக்கு மறுநாளாகவே இருந்து வந்தது. அவளிடம் எந்தவிதமான பிரசுரங்களும் இல்லாத நாட்களில் அவள் வேண்டுமென்றே காவல்காரர்களைத் தன்மீது சந்தேகங் கொள்ளுமாறு தானே தூண்டிவிட்டு விடுவாள். அவர்கள் அவளைப் பிடித்துச் சோதனை போடுவார்கள். அதுதான் சமயம் என்று அவள் அவர்களோடு வாதாடித் தன்னை அவர்கள் இழிவுபடுத்திவிட்டதாகப் பாவனை செய்துகொள்வாள். அவர்களை அவமானப்படுத்தி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு அகன்று செல்வாள் அவள். தன்னுடைய சாமர்த்தியத்தை எண்ணித் தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வாள். இது அவளுக்கு ஒரு ஆனந்தமயமான விளையாட்டுப்போல இருந்தது.

நிகலாய் வெஸோவ்ஷிகோவை தொழிற்சாலையில் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. உத்திரக்கட்டைகள், விறகு, பலகைகள் முதலியனவற்றை ஏற்றுமதி செய்யும் ஒரு மர வியாபாரியிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். அநேகமாக ஒவ்வொரு நாளும் அவன் மரங்களைப் பாரமேற்றிக்கொண்டு செல்வதை, தாய் பார்த்துத்தான் வந்தாள். முதலில் நோஞ்சான் பிறவிகளான ஒரு ஜோடிக் கறுத்த குதிரைகள் வரும். அந்தக் குதிரைகள் தமது பஞ்சடைந்து நொந்துபோன கண்களைத் திருகத்திருக விழித்துக்கொண்டு தலைகளை அசைத்து அசைத்து வரும். உழைப்பினால் ஓய்ந்துபோன அவற்றின் கால்கள் வெடவெடத்து நடுங்கும்.

குதிரைகளை அடுத்து, பச்சை மரக்கட்டைகளாவது, அறுத்தெடுத்த பலகைகளாவது ஒன்றோடொன்று மோதியவாறு தரையில் தேய்ந்தபடி வந்துகொண்டிருக்கும். அந்தப் பக்கத்தில் நிகலாய் வருவான். அவனது கைகள் குதிரைகளின் லகானை வெறுமனே பிடித்துக்கொண்டிருக்கும். நிகலாயின் கால்களில் கனத்த பூட்சுகள் இருக்கும். தொப்பி தலைக்குப் பின்னால் தள்ளிப் போயிருக்கும். மேலும் அவனது ஆடையணிகளும் கிழிந்து பழங்கந்தலாய்ப் போயிருக்கும். உடையெல்லாம் ஒரே புழுதி படிந்து, தரைக்குள்ளிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணடைந்து அலங்கோலமாய்த் தோன்றும். தடித்த முண்டுக் கட்டையைப் போலத் தோன்றுவான் அவன். அவனும் அந்தக் குதிரைகளைப் போலவே தலையைத் தொங்கப்போட்டு அசைந்தாடிக் கொண்டு தரையையே பார்த்தவாறு செல்வான். அவனது குதிரைகள், கண்மூடித்தனமாக எதிரே வரும் ஆட்கள் மீதாவது வண்டிகள் மீதாவது சாடி விழுந்து தடுமாறும். அந்த ஜனங்கள் நிகலாயைப் பார்த்து உரத்துக் கூச்சலிடுவார்கள். மானாங்காணியான வசை மொழிகள் குழவிக் கூட்டத்தைப் போல அவனை மொய்த்துப் பிடுங்கும். அவன் அவற்றுக்கு எந்தப் பதிலும் சொல்வதில்லை, நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. வெறுமனே உரத்துக் கூச்சலிட்டுத் தன் குதிரைகளை முடுக்குவான்.

“போ, முன்னே!”

வெளிநாட்டிலிருந்து புதிதாக வந்த ஒரு பத்திரிகையையோ புத்தகத்தையோ வாசித்துக் காட்டுவதற்காக, அந்திரேய் சமயங்களில் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வருவதுண்டு. அந்தக் சமயங்களில் நிகலாயும் வருவான். வந்து ஒரு மூலையிலே சென்று உட்காருவான். ஒரு மணியோ, இரண்டு மணியோ, அவன் அப்படியே வாய் பேசாது உட்கார்ந்து வாசிப்பதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பான். வாசித்து முடிந்தவுடன், அந்த இளைஞர்கள் காரசாரமான விவாதங்களில் இறங்குவார்கள். அவற்றில் நிகலாய் பங்கெடுத்துக் கொள்வதேயில்லை. எல்லோரும் சென்ற பிறகு அவன் மட்டும் பின்தங்கி அந்திரேயோடு தனிமையில் பேசுவான்.

“யாரை அதிகமாகக் குறை கூறுவது?” என்று துயரத்துடன் கேட்பான்.

”குறைகூற வேண்டிய மனிதர்களில் முதன்மையானவன் யார் தெரியுமா?” ‘இது என்னுடையது’ என்று எவன் முதன் முதல் சொன்னானோ, அவன்தான். அந்தப் பயல் செத்துப்போய் எத்தனை ஆயிரம் வருஷங்களோ ஆகிவிட்டன. இனி அவன்மீது நாம் பாய்ந்து விழ முடியாது” என்று வேடிக்கையாகப் பதில் சொன்னான் ஹஹோல். எனினும் அவனது கண்களில் உற்சாகம் இல்லை. நிலைகொள்ளாமல் அவை தவித்தன.

“பணக்காரர்கள்? அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் கூட்டத்தார்? அவர்கள் மட்டும் ஒழுங்கானவர்களா?”

“அதிகாரத்திலே இருக்கும் கனதனவான்கள் இந்தச் சாதாரண மக்களின் மனத்திலே வளர்ந்துவிட்டிருக்கிற உணர்ச்சிகளைப் பார்த்தீர்களா, அம்மா? நிகலாய் மாதிரி நபர்கள் நமக்கு இழைக்கப்பட்ட தீங்கை உணர்ந்தால், அதனால் தமது பொறுமையையும் இழந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவ்வளவுதான். வானத்தில் இரத்த வெள்ளம் பரவும். பூமி ஒரு சோப்புபோல இதில் நுரை தள்ளும்!”

அந்திரேய் தன் தலை மயிரை விரல்களால் உலைத்துவிட்டு கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பற்றியும், மாந்தர்களைப் பற்றியும் விளக்கமான முறையில் விவரித்துச் சொல்வதற்குரிய எளிய வார்த்தைகளைப் பற்றி யோசித்தவாறே மீசை முனையை இழுத்து விட்டுக்கொண்டான். ஆனால் அவன் எதைச் சொன்னாலும் சகல மக்களையும் பொதுப்படையான முறையில் குறைகூறுவது போலத்தான் இருந்தது. அது நிகலாய்க்குத் திருப்தியளிக்கவில்லை. அவன் தனது தடித்த உதடுகளைக் கப்பென்று மூடியவாறே தலையை அசைப்பான். ‘அது அப்படியல்ல’ என்று ஏதாவது முணுமுணுப்பான். கடைசியாக அவன் திருப்தியடையாத கலங்கிய மனத்தோடு விடைபெற்றுக்கொண்டு செல்வான்.

ஒருநாள் அவன் சொன்னான்:

”இல்லை. குற்றம் சாட்டப்பட வேண்டிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். நான் சொல்லுகிறேன். கேள், நாமோ வாழ்நாள் முழுவதும் தழை படர்ந்த வயல் வெளியை கருணையின்றி உழுது தள்ளுவது மாதிரி உழைத்து உழைத்துச் சாக வேண்டியிருக்கிறது!”

‘உன்னைப்பற்றி இஸாயும் இதைத்தான் ஒருநாள் சொன்னான்’ என்று சொன்னாள் தாய்.

“யார். இஸாயா?” என்று ஒரு கணம் கழித்துக் கேட்டான நிகலாய்.

”ஆமாம். அவன் ஒரு மோசமான பயல். அவன் எல்லோர் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறான். எல்லோரைப் பற்றியும் அநாவசியமான கேள்விகளையெல்லாம் கேட்கிறான். அவன் நமது தெருவுக்குள்ளும் வந்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறான்.”

“என்னது? ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறானா?” என்று திருப்பிக் கேட்டான் நிகலாய்.

ஆனால் அதற்குள் தாய் படுக்கச் சென்றுவிட்டாள். எனவே அவனது முகத்தை அவள் பார்க்கவில்லை. இருந்தாலும் ஹஹோல் பேசியதைப் பார்த்தால் தான் அந்த விஷயத்தை நிகலாயிடம் சொல்லியிருக்கக்கூடாது என்றுதான் அவளுக்குப் பட்டது.

படிக்க:
ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?
நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்

ஹஹோல் அவசர அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னான்: ”அவனுக்குப் பொழுது போகாவிட்டால் இப்படி எட்டிப் பார்த்துவிட்டுத்தான் போகட்டுமே…..”

“நிறுத்து” என்றான் நிகலாய்; “குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களில் அவனும் ஒருவன்!”

“அவனை எதற்காக குற்றம் கூறவேண்டும்? முட்டாளாக இருப்பதற்காகவா?” என்று அவசரமாக கேட்டான் அந்திரேய்.

நிகலாய் பதிலே பேசாமல் எழுந்து சென்றுவிட்டான். ஹஹோல் அறைக்குள்ளே மெதுவாகவும் சோர்வோடும் மேலும் கீழும் நடந்தான். அவனது ஒல்லியான கால்கள் சரசரத்து மெதுவாக நடந்தன. அவன் தனது பூட்சுகளைக் கழற்றிவிட்டு நடந்தான். நடப்பதால் சத்தம் உண்டாக்கி பெலகேயாவை எழுப்பிவிடக் கூடாது என்று கருதினான். ஆனால் அவளோ தூங்கவில்லை. நிகலாய் சென்ற பிறகு அவள் ஆத்திரத்தோடு பேசினாள். “அவனைக் கண்டாலே எனக்குப் பயமாகத்தானிருக்கிறது.”

“ஹூம்!” என்று முனகினான் ஹஹோல். “ஆமாம். அவன் எப்போதுமே வக்கிர புத்தி கொண்டவனாகவே இருக்கிறான். இனிமேல் அவனிடம் இஸாயைப் பற்றிப் பேச்செடுக்காதீர்கள் அம்மா. இஸாய் உண்மையில் ஒரு ஒற்றன்தான்.”

“அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்றாள் தாய். “அவனது பந்துக்களில் ஒருவன் ஒரு போலீஸ்காரன்.”

“இல்லை. நிகலாய் அவனை வெளுத்து வாங்கி விடுவான்” என்று மேலும் தொடர்ந்து பேசினான் ஹஹோல். “அதிகாரத்திலே இருக்கும் கனதனவான்கள் இந்தச் சாதாரண மக்களின் மனத்திலே வளர்ந்துவிட்டிருக்கிற உணர்ச்சிகளைப் பார்த்தீர்களா, அம்மா? நிகலாய் மாதிரி நபர்கள் நமக்கு இழைக்கப்பட்ட தீங்கை உணர்ந்தால், அதனால் தமது பொறுமையையும் இழந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவ்வளவுதான். வானத்தில் இரத்த வெள்ளம் பரவும். பூமி ஒரு சோப்புபோல இதில் நுரை தள்ளும்!”

“பயங்கரமாயிருக்கிறது, அந்திரியூஷா!’ என்று வியந்து போய்ச் சொன்னாள் தாய்.

“ஈக்களை விழுங்கினால் குமட்டத்தான் செய்யும்” என்று ஒரு நிமிஷம் கழித்துச் சொன்னான் அந்திரேய், “முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது.”

திடீரென அவன் சிரித்தான். பிறகு சொன்னான்:

“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது!”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

சர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா ? வாழ வைத்தனவா ?

விஜய்ண்ணாவும் சற்குணம் ஐஏஎஸும் இல்லாத நாட்கள் !

1966 நவம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியான ஒரு செய்தி : “கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். சிலரிடம் மறைத்துக்கொள்ள எதுவும் இல்லை. சிலர் குடையைப் பிடித்துக்கொண்டும் சிலர் பையை தலைமேல் போட்டுக்கொண்டும் நிற்கிறார்கள்”. இப்படித்தான் இருந்தது அப்போது நிலைமை. அந்தத் தருணத்தில் விஜய்ண்ணா பிறக்கவில்லையென்பதால் என்ன செய்வதென அரசுக்கும் தெரியவில்லை.

1943 அன்றைய வங்காளத்தில் பட்டினிக் கொடுமையால் மாண்டு போன குழந்தையின் புகைப்படம். (படம் நன்றி : விக்கிபீடியா.)

1965-ல் மிகப் பெரிய உணவுதானிய பஞ்சத்தை இந்தியா எதிர்நோக்கியிருந்தது. 1964 – 65ல் 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி 65-66ல் 72.3 டன்களாகக் குறைந்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை. கேட்கவும் வேண்டுமா? இந்தத் தருணத்தில்தான் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966 நவம்பர் 16-ல் இந்தத் திட்டம். ஆனால், எல்லா குடும்பங்களுக்கும் கார்டுகள் கிடைக்கவில்லை.

1967-ல் முதலமைச்சரான சி.என். அண்ணாதுரையால் (இவர் விஜய்ண்ணா இல்லை.. வேறு ஒரு அண்ணா) வாக்குறுதி அளித்தபடி ரூபாய்க்கு 3 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால், அப்போதுதான் தமிழக நிர்வாகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்தது என்கிறார் இந்தியாவின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை செயலராக இருந்து ஒய்வுபெற்ற எஸ். நாராயணன்.

அண்ணா துரை வலியுறுத்தியதால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி சில மாவட்டங்களில் மட்டும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமூக நலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் சி.என். அண்ணாதுரை மாற்றினார். அதுவரை திட்டங்கள் மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கி செயல்படுத்தப்படுவது வழக்கம்.

அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான் கீழிருந்து மேல் நோக்கி திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது என்கிறார் அவர்.
1969-ல் மு. கருணாநிதி முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மாறியது. பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டறிந்து தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் பிரச்சினைகளைச் சொன்னால், அதிகாரவர்க்கம் அதற்கு காதுகொடுக்க வேண்டியிருந்தது.

1960-களில் துவங்கி 80-களுக்குள் பெரிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரிகளானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமங்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள்.

1975-க்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. அரிசிக்காக துவங்கப்பட்ட இந்த முறையின் மூலம் சர்க்கரை, மண்ணெண்ணையும் வழங்கப்பட்டன. 1972-ல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. இந்த கார்டை வைத்தே கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவையும் வழங்கப்படுகிறன. அரசின் பல நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

ரேஷன் கார்டுகளுக்காக அடிதடியில் ஈடுபட்ட காலம் மாறி, வருவாய்க்கேற்றபடி வெவ்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள், பொருட்களே வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் வரை வந்துவிட்டது. மக்கள் தொகையின் பெரும் பகுதி அரசி வாங்க ரேஷன் கடைகளைச் சார்ந்திருந்த காலம் மாறியிருக்கிறது.

1970-க்கும் 76-க்கும் இடையில் மாநிலத்தின் உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்தது. தனிநபர் வருவாய் 30 சதவீதம் அதிகரித்தது. 1971-ல் 39.5 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 1981-ல் 54.4 சதவீதமாக மாறியது. 1971-ல் 125ஆக இருந்த சிசு இறப்பு விகிதம் 77-ல் 103ஆகக் குறைந்தது. வறண்ட நிலங்களுக்கு நில வரி ஒழிக்கப்பட்டது. 1974-ல் கொண்டுவரப்பட்ட சட்டம், பரம்பரைக் கர்ணம் முறையை ஒழித்தது. இதையெல்லாம் இடஒதுக்கீட்டை வைத்து, தகுதியில்லாமல் வேலைக்குச் சேர்ந்தவர்களே செய்தார்கள்.

திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின, திராவிடச் சித்தாந்தம் என்பது எப்படி மக்களை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை உண்மையிலேயே அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் Dravidian Years: Politics and Welfare in Tamilnadu. எழுதியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ். நாராயணன்.

*****

வளர்ந்த நாடுகள் இலவசங்களை வழங்குவதில்லையா ?

ந்தியா போன்ற ஊழல் அரசியல்வாதிகளும் ஏழ்மையான மக்களும் நிறைந்த நாடுகளில் மட்டும் இலவசங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஊழலுக்காகவே தோன்றி, நிலைபெற்றிருக்கும் திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டில் இது அளவுக்கு மீறி போய்விட்டது. எந்த வளர்ந்த நாடும் இலவசங்களை வழங்குவதில்லை என்கிறார்கள் நண்பர்கள். உண்மையில் வளர்ந்த நாடுகளில் இலவசங்கள் இல்லையா?

சில வளர்ந்த நாடுகளில் வழங்கப்படும் இலவசத் திட்டங்கள், மானியங்கள் பின்வருமாறு. இவை இணையத்திலிருந்து தொகுக்கப்பட்டவை. அந்தந்த நாடுகளில் வசிப்பவர்கள் தவறுகளோ, கூடுதல் திட்டங்களோ இருந்தால் சேர்க்கலாம்.

1. ரஷ்யா: நாட்டின் கிழக்குப் பகுதியில் மக்கள் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஹெக்டேர் நிலம் இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த சட்டவிரோத நடவடிக்கையும் அங்கு நடக்கவில்லையெனில் ஐந்தாண்டுகளில் நிலம் பயனாளிக்கு முழுமையாக மாற்றித்தரப்படும்.

2. வடக்கு அயர்லாந்து: மருந்துச் சீட்டுகளுக்கு மருந்துகள் இலவசம். ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மருந்துகள் இலவசம்.

3. நியூசிலாந்து: வேலைக்காக வேறு இடங்களுக்கு நிரந்தரமாக குடிபெயர்பவர்களுக்கு வரியில்லாமல் 3,000 நியூசிலாந்து டாலர்கள் – 1500 பவுண்டுகள் – வழங்கப்படுகிறது.

4. அமெரிக்கா :

  1. பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பேச சலுகை விலையில் தொலைபேசி.
  2. வருவாயில் பின்தங்கிய வகுப்பினருக்கு உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்கும் Supplemental Nutrition Assistance Program திட்டம்.
  3. வீட்டு வாடகையோ, சலுகை விலையில் வீடுகளையோ வழங்கும் Federal Public Housing Assistance திட்டம்
  4. National School Lunch Program’s Free Lunch Program – அமெரிக்காவில் இதுபோல பல திட்டங்கள் உண்டு.

5. சிங்கப்பூர் : மக்கள் தொகையை அதிகரிக்க முதல் இரண்டு குழந்தைகளுக்கு தலை சுமார் 3,890 பவுண்டுகளும் மூன்றாவது குழந்தை முதல் ஒவ்வொரு குழந்தைக்கும் 4,870 பவுண்டுகளும் வழங்கப்படுகின்றன.

6. போர்ச்சுகல் : இங்குள்ள Alcoutim-ல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 4,430 பவுண்டுகள் வழங்கப்படுகின்றன.

7. ஹங்கேரி : மணமாகும் இளந்தம்பதிகள் 3 அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெறுவதாக வாக்குறுதியளித்தால் தனியாக வீடு வழங்கப்படுகிறது.

8. இத்தாலி : பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 3 வயதாகும்வரை மாதம் 61 பவுண்டுகள் வழங்கப்படுகிறது.

9. ஸ்பெயின் : பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் 2 ஆயிரம் பவுண்டுகள்.

10. பிரான்ஸ் : கர்ப்பிணி பெண்களின் ஏழாவது மாதத்தில் சுமார் 900 பவுண்டுகள் வழங்கப்படும். ப்ரீ ஸ்கூல் வகுப்பு குழந்தைக்கு இலவசம்.

11. கனடா : பல நகரங்கள் குறைந்தபட்ச வருவாயை உறுதிசெய்யும் வகையில் மானியங்களை அளிக்கின்றன. அதாவது ஒருவர் குறைந்தபட்ச வருவாயை சம்பாதிக்க முடியாவிட்டால், மீதமிருக்கும் தொகையை அரசு வழங்கும்.

12. நெதர்லாந்து : Utrecht-ல் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது.

13. நார்வே : பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம்.

14. ஃபின்லாந்து : கல்வி முழுக்க முழுக்க இலவசம். (தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முழுக்க முழுக்க இலவசம்).

15. டென்மார்க் : ஐக்கிய ராஜ்ஜியம், போலாந்து : மருத்துவ சேவைகள் இலவசம்.

*****

ரசு இலவசமாகக் கொடுத்த பொருட்களை தூக்கியெறிவது, உடைப்பது என ஒரு விரல் புரட்சி காட்சிகள் வீடியோக்களில் பார்க்கக் கிடைக்கின்றன.

https://youtu.be/3YIvi3buxE0

நம் வீடுகளில் உள்ள மின் இணைப்பில், முதல் 100 யூனிட்டுகளை அரசு இலவசமாக வழங்குகிறது. அதுவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெட்கமேயில்லாமல் இலவசமாக அனுபவிப்பவர்கள் எப்படி இதை திருப்பிக் கொடுக்கப் போகிறார்கள்?

அந்த மின்சாரத்திற்கான மானியத்தை டாஸ்மாக் வருமானத்தில் இருந்து அனுப்பாமல், தமிழக அரசு மூட்டை தூக்கி, கூலி வேலை செய்து மின்வாரியத்திற்கு அனுப்புகிறதா?

நன்றி: Muralidharan Kasi Viswanathan

அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

விருந்துக்கு என்னையும் அழைத்துப் போகும்படி நண்பனிடம் கேட்டேன். அவன் மறுத்துவிட்டான். அப்பொழுது நான் வாசிங்டனில் சில நாட்களை விடுமுறையில் கழிப்பதற்காக போய் தங்கியிருந்தேன். என்னுடைய முகம் அப்படி விழுந்துபோகும் என்று நண்பன் எதிர்பார்க்கவில்லை.

‘சரி சரி அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன்’ என்றான். எனக்கு உடனேயே கூச்சம் வந்தது. ஐஸ்கிரீம் வண்டியை துரத்திச் சென்ற சிறுவனிடம் ஐஸ்கிரீம்காரர் ‘முடிந்துவிட்டது’ என்று சொன்னது போல எனக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அந்த ஏமாற்றத்தை மறைப்பது ஆகப் பெரிய சவாலாகவும் ஆனது.

எனக்கு ஒருவிதத்திலும் சம்பந்தம் இல்லாத விருந்து அது. என்னுடைய நண்பருடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மூன்று வருடமாகக் காதலித்தவளுக்கு இப்பொழுதுதான் காதலன் ஒரு மோதிரத்தை கொடுத்து காதலை உறுதிப்படுத்தியிருந்தான். அடுத்து திருமணம்தான். இந்தக் காதலர்களுக்கு வாழ்த்து சொல்கிற மாதிரி அந்தப் பெண்ணின் அலுவலகத்தை சேர்ந்த சில நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த விருந்துக்குத்தான் நான் போகவேண்டுமென்று விரும்பினேன். காரணம் நண்பர் போகிறபோக்கில் சொன்ன ஒரு தகவல்தான். அந்தக் காதலன் வேலை செய்வது சி.ஐ.ஏ ( Central Intelligence Agency) நிறுவனத்தில். அதாவது  அமெரிக்காவின் மைய உளவுத்துறையில். என்னுடைய ஆர்வம் அதுதான். நான் என் வாழ்க்கையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தது கிடையாது. இனிமேல் சந்திப்பேன் என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

உளவுத்துறை பற்றி நான் அறிந்தது எல்லாம் புத்தகத்தில் படித்ததுதான். மீதியை அமெரிக்க சினிமாவில் பார்த்து தெரிந்துகொண்டேன். சினிமாவில் நான் பார்த்த துப்பறிவாளர்கள் எல்லாம் மனதில் திகில் எழுப்பக்கூடியவர்கள். அவர்கள் சாகசங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். சிறுவயதில் படித்தது சங்கர்லால். அவர் சத்தம் எழுப்பாத மெல்லிய ரப்பர் சூக்களை அணிந்தபடி நாலு மாடிக் கட்டடங்களில் அனாயசமாக பாய்ந்து ஏறிவிடுவார்.

அடுத்து படித்து வியந்தது வந்தியத்தேவன். இவன் தைரியசாலி. வாய் திறந்தான் என்றால் புதுப்புது பொய்களை அந்தக் கணமே உண்டாக்கிவிடுவான். ஆனால் அவன் புத்திசாலியல்ல; மூடத்தனம் கூடியவன். அவன் கண்டுபிடித்தது எல்லாம் தற்செயலாகத்தான் நடந்தது. ஆகவே நவீன துப்பறிவாளன் என்ன செய்வான், எப்படி திட்டமிடுவான், எப்படி செயல்வடிவம் கொடுப்பான் என்பதையெல்லாம் நேருக்கு நேர் நான் அறிய துடித்தது இயற்கையானது.

பின்னேரம் அலுவலகத்திலிருந்து திரும்பிய நண்பர் ‘சரி, பிரச்சினை இல்லை’ என்றார். அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மாலை நடந்த விருந்துக்கு என்னை அழைத்துப்போனார். போகும் வழியில் காரில் நண்பரிடம் அந்த சி.ஐ.ஏ அதிகாரிக்கு பக்கத்தில் எனக்கு ஓர் ஆசனம் பிடித்து தரும்படி கேட்டுக்கொண்டேன். அந்த உளவாளியிடமிருந்து அத்தனை விசயங்களையும் ஆகக் குறைந்த நேரத்தில் உறிஞ்சிவிடவேண்டும் என்பது என் திட்டம். நண்பரும் ரோட்டை பார்த்தபடி சரி என்று தலையாட்டினார்.

ஆனால் விருந்து நடந்த இடத்துக்கு போய்ச் சேர்ந்தபோது எனக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கே ஆசனங்களே இல்லை, அது ஒரு கொக்ரெய்ல் (காக்டெயில்) விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

பரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தை கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான்.

நண்பன் நான் கேட்டதை மறக்கவில்லை. முதல் வேலையாக என்னை அழைத்துப்போய் தன்னுடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணை அறிமுகப்படுத்தினான். முற்றிலும் மென்சிவப்பு வர்ணத்தில் அவள் இருந்தாள். அவளாகவே தான் மணமுடிக்கப் போகும் சி.ஐ.ஏ அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு  மறைந்துபோனாள். முப்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஆள். சதுரமான முகம், சதுரமான உடம்பு. என்னுடைய கைகளை குலுக்கியபோது முறிந்து விழுந்துவிடும்போல இருந்தது. ஒரு ஜேம்ஸ் பொண்டின் உருவத்தை மனதிலே சித்தரித்து வைத்திருந்த எனக்கு அவருடைய உடலமைப்பும், முக வெட்டும், சொண்டுக்குள் மறைந்திருந்த சிரிப்பும் அப்படியே பொருந்திப் போனது. ஆனால் அதற்கு பிறகு நடந்ததுதான் நான் எதிர்பாராதது.

அந்தக் கூட்டத்தில் ஒருவராவது நின்ற இடத்தில் நின்று பேசவில்லை; சுற்றிக்கொண்டே இருந்தார்கள். உளவுத்துறை அதிகாரியும் என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்துவிட்டார். விருந்துக்கு டிவி சீரியலில் நடிக்கும் ஒரு சின்ன நடிகரும் வந்திருந்தார். இளம் பெண்கள் எல்லோரும் அவரைச் சுற்றி நின்று பேசினார்கள். அவர் நகர்ந்தபோது சொறி பிடித்த நாயை சுற்றி இலையான்கள் (ஈக்கள்) மொய்ப்பதுபோல அவர்களும் நகர்ந்தார்கள். ஒரு பெண் எழுத்தாளரும் வந்திருந்தார். அவருக்கு 50 வயது இருக்கும். எகிப்திய கடவுள்கள் பற்றிய அவருடைய புத்தகம் ஒன்று ஏற்கனவே வெளிவந்திருந்தது. அதிலே பிரதானமாக தோத் என்ற கடவுள் மீது தான் ஆராய்ச்சி செய்ததாகவும், தோத் கடவுள் ஆண் உடம்பும் ஐபிஸ் பறவையின் தலையும் கொண்டிருப்பார் என்று விளக்கினார். தன்னுடைய அடுத்த புத்தகம் தயாராகிவிட்டது ஆனால் அதற்கு ஒரு பதிப்பாளரை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார். அது என்ன புத்தகம் என்று நான் கேட்கவில்லை. அது இன்கா இனத்தவரின் கடவுள்களாக இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டேன்.

ஒருவர், யாரோ பாடப் போகிறார் என்று அறிவித்தார். ஒரு சீனப் பெண் கையிலே வட்டமான வைன் கிளாசை தூக்கிப்பிடித்தபடி கூடத்தின் நடுவுக்கு வந்து நின்றார். தரையை தொடும் ஆடையில் அவர் நடந்து வந்தபோது அவர் பாதங்களை ஒருவரும் பார்க்கவில்லை. இனிமேல் பாடப்போகும் மெட்டுக்கு ஏற்ப அசைந்து வந்தார். முதுகு நேராக நிற்க அவருடைய இடை மாத்திரம் பெண்டுலம்போல இரண்டு பக்கமும் ஆடியது. அந்தப் பாடல் ஒரு பழைய சீனப் பாடல் என்று சொல்லிவிட்டு பாடினார்.

ஒலிவாங்கியை பிடிப்பதுபோல வைன்கிளாஸை வாய்க்கு கிட்ட வைத்துக்கொண்டு பாடியபோது எல்லா வார்த்தைகளும் ஒரே வார்த்தைபோல ஒலித்தன. உயிர் எழுத்துக்கள் எல்லாம் மூக்கினாலும், மெய் எழுத்துக்கள் வாயினாலும் ஒலிவடிவம் பெற்றன என்று நினைக்கிறேன். பாடலின் இசை சாதாரணமாகத் தொடங்கி முடிவில் ஒரு மெல்லிய சோகரசத்தை தொட்டுவிட்டு நின்றது. பாட்டு முடிந்ததும் எல்லோரும் கைதட்டி அவரை சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள்.

கூட்டம் ஒருவாறு அகன்றதும் நானும் பாராட்டிவிட்டு ‘இது ஒரு சோகப் பாடலா?’ என்று வினவினேன். அவர் அது சரி என்றார். நீங்கள் பாடியதன் பொருள் என்ன என்றேன். அவர் அதிசயித்தார். ஒருவருமே அவரிடம் அதைக் கேட்கவில்லை. புதிதாக மணமான ஆண், மனைவின் பிரிவை தாங்கமுடியாமல் அரற்றியது. மெல்லிய குரலில் சீன மொழியில் ஒவ்வொரு வரியாக உச்சரித்து அதன் மொழிபெயர்ப்பையும் சொன்னார். வீட்டுக்கு வந்தபோது எல்லாமே மறந்துவிட்டது, சில வரிகளைத் தவிர.

“பளிங்குத்தரையில்  உனது பட்டாடை
உரசும் சத்தம் நின்றுவிட்டது.
புழுதி சேர்ந்துவிட்டது.
பழுத்த இலைகள் வாசல் கதவடியில்
குவிந்துவிட்டன.
உன்னையே ஏங்கி அடிக்கும் என் இருதயம்
ஓய்வதற்குள் திரும்பிவிடு.”

ஒரு குறுந்தொகை பாடலை நினைவூட்டுகிறது என்று அவரிடம் சொன்னேன். அவர் குறுந்தொகை என்றால் என்னவென்று கேட்டார். பின்னர் அது பற்றிப் பேசினோம்.

அவரை எனக்கு நல்லாகப் பிடித்துக் கொண்டது. நான் பேசியபோது ஒரு வார்த்தையையேனும் தவற விட்டுவிடக்கூடாது என்பதுபோல உன்னிப்பாகக் கேட்டார். அவ்வளவு கூர்மையான கவனத்தை நான் முன்னர்  ஒருவரிடமும் கண்டதில்லை. ஒரு நிமிடத்தில் வெடிக்கப் போகும் வெடி குண்டை செயலிழக்க வைப்பது எப்படி என்று ஒருவர் கூறுவதை  உள்வாங்குவதுபோல அவர் முழுக்கவனத்துடன் கேட்டார். தன்னுடைய தொலைபேசி எண்ணை ஒரு பழைய கார் தரிப்பு டிக்கட்டின் பின்பக்கத்தில் பேனையால் எழுதி என்னிடம் தந்தார். மறுபடியும் சுற்றில் அவர் கலந்துகொண்டபோது நான் அவர் பாதங்களை காணவில்லை.

மீதிச் சுழற்சியில் மேலும் இரண்டு முறை அமெரிக்க உளவாளியை சந்தித்தேன். இரண்டு இரண்டு நிமிடங்கள் பேசினார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்  காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று படித்திருந்தேன். ஆனால் இன்றுவரை அதில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. எந்தெந்த நாடுகளில் அமெரிக்க உளவாளிகள் மறைந்திருக்கிறார்கள் என்பதும் ஒருவரும் அறிந்ததில்லை. நிறுவனத்தின் பட்ஜெட் வருடத்துக்கு 40 பில்லியன் டொலர்களுக்கு மேல் என்று சொன்னார். ஆனால் உண்மை ஒருவருக்கும் தெரியாது. எனக்கு முன் நின்று பேசிய உளவாளி பார்த்தால் மெல்லிய ரப்பர் ஒட்டிய சப்பாத்து அணிந்த சங்கர்லால் போலவோ, முரட்டுத் தோற்றம் கொண்ட வந்தியத்தேவன் போலவோ இல்லை. ஒளிவு மறைவு இல்லாமல் நேராக கண்களைப் பார்த்து நேசமுடன் பேசினார். ரோட்டிலே இவரைப் பார்த்தால் நான் ஒரு வீடு விற்பனை முகவர் என்றோ அல்லது விமான ஓட்டி என்றோதான் ஊகிப்பேன்.

நான் மறுபடியும் சுழற்சியில் சேர்ந்து நகர்ந்தபோது விவாதம் செய்யும் இருவரிடம் அது என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. ஒருவர் அந்த கூடத்தையே நிறைத்து விடுவதுபோல நடுவிலே நின்றார். பக்கத்திலே ஓர் இளம் பெண். அங்கு வந்திருந்த பெண்களில் அவரே அதிக அழகானவர். மாலை வெய்யில் நிறம். அவருடைய கண் இமைகள் அவருடைய கண்களை பாதி மறைத்துவிட்டன. தன்னுடைய வம்ச வேர்களைத் தேடிப்போன கதையை அவர் சொன்னார். தன்னுடைய தகப்பன் வழி ரஸ்யாவில் தொடங்கி போலந்துக்கு வந்து இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததென்றும், தன் தாய் வழி நேராக கிரீஸிலிருந்து வந்ததாகவும் கூறினார். ரஸ்ய முடியும் கிரேக்க கண்களும் அவருக்கு அப்படி அமைந்திருந்தன.

கூடத்தின் நடுவில் நின்ற மனிதர் தன்னுடைய பெயர் கிப்ளிங் என்றும், தன்னுடைய மூதாதையர் இங்கிலாந்தின் பிக்கரிங் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும்,  தனக்கு பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் சொந்தமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். எல்லாவிதமான வம்சத் தேடலும் ஓர் அரசகுமாரனிலோ, புகழ்பெற்ற எழுத்தாளனிலோ, பிரபலமான பாடகனிலோதான் முடிவடையும். ஒரு கொலைகாரனிலோ, கொள்ளைக்காரனிலோ, நாட்டை விட்டு துரத்தப்பட்டவனிலோ முடிவடைவதில்லை.

பத்து மணியளவில் விருந்து முடிந்ததும் நான் நண்பனின் காரில் ஏறிக்கொண்டேன். அவன் கார் சாவியை துளையில் நுழைத்துவிட்டு காரை கிளப்பாமல் சும்மா அமர்ந்திருந்தான். பின்னர் என்னை திரும்பி பார்த்து ‘நான் உங்களுக்கு இன்னும் கூட உதவி செய்திருக்கலாம்’ என்றான். ‘இதுவே பெரிய உதவி’ என்றேன் நான். காரை மௌனமாக எடுத்து நெடுஞ்சாலைக்கு விட்டான். எதிர் வெளிச்சத்தை வெளிச்சத்தால் வெட்டிக்கொண்டு வேகமாக காரை ஓட்டிய நண்பன் ‘அமெரிக்க ஒற்றருடன் நிறையப் பேசினீர்களா? என்ன கண்டு பிடித்தீர்கள்?’ என்று கேட்டான். எனக்கு டக்கென்றது.

யோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர், எங்கேயெங்கே வேலை செய்தேன், என்ன வேலை, யார் யாரைத் தெரியும், என் மனைவி, என் பிள்ளைகள், என் வீடு, என் ஆசைகள், என் திட்டங்கள் என சகலதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவருடைய மூன்றெழுத்து முதல் பெயர்தான் தெரியும். முழுப்பெயரைக்கூட நான் கேட்டு அறியவில்லை. இந்த உண்மை தலையில் இறங்கியதும் நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

அந்த விருந்துக்கு என்னிடமிருந்த ஆகத் திறமான உடுப்பு தரித்து, ஆகத்திறமான சப்பாத்து அணிந்து, ஆகத்திறமான அமெரிக்க ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டு போனது எவ்வளவு வீண் என்று பட்டது. உளவாளியிடம்  நான் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஒன்றுமே மிஞ்சவில்லை. மிஞ்சியது ஒரு சீனக் கவிதை மட்டுமே.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

சுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு ! படக்கட்டுரை

சென்னையின் வர்த்தக மையங்களில் பழமையும், முக்கியத்துவமும் வாய்ந்ததென்றால் மூலக்கொத்தளம் கருவாட்டு மண்டியை கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். சுமார் 130 வருடங்களாக சென்னையின் வரலாற்றில் பயணித்து வருகிறது அந்த மண்டி.1806 -ல் பக்கிங்ஹாம் கால்வாய் சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு,   பின்னர் ஆந்திராவின் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாயாக மாறிப் போயுள்ள பக்கிங்காம் கால்வாய்.

1876-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பஞ்சத்தை போக்க மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்க வேண்டிய சூழலில் அந்தக் கால்வாயை மேலும் நீட்டித்து அடையாறு வரையும் பின்னர் அது விழுப்புரம் வரையிலும் தோண்டப்பட்டது. பின்னாளில் அக்கால்வாய் நீர்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.”

படிக்க :
கருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்

“விஜயவாடவில் இருந்து விழுப்புரம் கூனிமேடு வரை வெட்டப்பட்டுள்ள இந்த கால்வாய் வழியாக அரிசி, உப்பு, பருத்தி, மீன், கருவாடு உள்ளிட்ட உணவு பொருட்கள் மூலக்கொத்தளத்தில் உள்ள படகுத்துறையில் வந்து இறங்கும். அதில் வரும் கருவாட்டை இங்கே விற்பனை செய்வார்கள். அதுவே நிரந்தரமாகி விட்டது” என்கிறார்கள் மண்டி வியாபரிகள்.  இன்று அந்தப் பகுதியில் பல்வேறு தொழில்கள், கடைகள் என ஏகத்துக்கும் பரந்து விரிந்தாலும் கருவாடு என்றால் அப்பகுதி மட்டுமல்ல, கருவாடு ரசிகர்களாக உள்ள அனைத்து மக்களின் நினைவிற்கு வருவது அந்த மண்டிதான்.

பரபரப்பான அந்த நான்குமுனை சந்திப்பில், வால்டாக்ஸ் சாலையின் ஓரத்தில் உள்ள கடைகளின் எதிரில் ஒய்யாரமாக நின்று கொண்டு கருவாட்டின் விலையை விசாரித்து கொண்டிருந்தனர் மக்கள். கருவாட்டின் மணம் காற்றில் பரந்த வண்ணம் சாலைகளில் செல்வோரையும் இழுத்து வாங்கும்படி வீசியது.

கருவாடு ஆவணப்படம்

நண்பகல் பத்து மணி என்பதால் அப்பொழுதுதான் கடையைத் திறந்து விற்பனைக்கு எடுத்து வைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்தார் குமார். நெற்றியில் விபூதியும், குங்குமமும் நிறைய பவளச் சிரிப்புடன் நம்மை நோக்கி……

“பாருங்க…சார்… எந்த கருவாடு வேணும்..எல்லாம் ஃபிரஷ்..ஷா.. இருக்கு..”என்றார்.

“என்னென்ன கருவாடு’ண்ண இருக்கு”?

குமார்

“வாலை, கெளிச்சக் கருவாடு, காரப்பொடி, நெத்திலி, காஞ்ச எறா, சுறா, பால்சுறா, சென்னாகொன்னி, ஷீலா, வஞ்சிரம், பாம்பேடெக், கோலா, மாசி” என்று கூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கருவாட்டினை ஒவ்வொன்றாக சொல்லி முடித்துவிட்டு, . “எந்த கருவாடு வேணும்” என்று பார்வையிலே கேட்டார்.

“இருக்கிறதுலயே வெல அதிகமான கருவாடு எது’ன்னு சொல்லுங்களேன்”?

வஞ்சிரம்தான் சார். கிலோ 600 ரூபா… அடுத்து கோவா நெத்திலி 600 ரூபாய். ராமேஸ்வரம் நெத்திலி 400 ரூபாய். எல்லாம் நல்ல அயிட்டம்தான்….சார்.

“சரி! எல்லாம் எந்த ஊரு சரக்கு”?

வஞ்சிரம் கருவாடு

சார்! கெளிச்ச, சென்னா, எறா எல்லாம் ஆந்திராவில் இருந்து வருது. கோலா காசிமேடு, பாம்பே டெக் மும்பையிலிருந்து வருது…. வாள கருவாடு குஜராத், ஆந்திரா, காசிமேடு அப்புறம் ராமேஸ்வரத்தில் இருந்து வரும்.!

“குஜராத்ல இருந்து பாடம் செய்து வரும் வாளக்கருவாடு செம்ம டேஸ்ட்டா இருக்கும். ஆனா அங்க இருக்கவங்க அதிகம் சாப்பிட மாட்டாங்க. எல்லாத்தையும் ஒரு பாக்சில போட்டு இங்க அனுப்சிடுவாங்க. அது வந்த இரண்டு மூனு நாளைக்குள் விற்றால் ஓரளவு  லாபம் கிடைக்கும். இல்லன்னா காய்ஞ்சி எடை குறைஞ்சிடும்.

பெட்டிகளில் அடுக்கப்பட்டடுள்ள வாளை கருவாடு.

ராமேஸ்வரம்  வாள கருவாடு ஆறு மாசத்துக்குகூட கெடாம இருக்கும். அந்த அளவுக்கு தரமா பாடம் பண்ணுவாங்க. விற்பனையே ஆகாத பட்சத்தில் கருவாடு கெட்டுப் போனால் அதனை கோழி தீனிக்கு கொடுத்து விடுவோம்” என்றார்.

கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வர அங்கிருந்து நகர்ந்ததும், அருகிலிருந்த கடையில்……ஊழியர் ஒருவர் கருவாட்டை அழகாக வெட்டிக் கொண்டிருக்க… உள்ளே இருந்து ஒருவர் வேகமாக வந்து….

“என்ன வேணும்”? என்றார் காத்திரமான குரலில்! அவர் பெயர் ஜெபகுல்லா.

ஜெபகுல்லா (இடது புறம் உள்ளவர்)

“விற்பனையெல்லாம் எப்படி இருக்கு”? என்றதும்….. சற்று யோசித்து விட்டு…. மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்…..

“சென்னையை பொருத்த வரைக்கும் கருவாடு சாப்பிடுறவங்களோட எண்ணிக்கை கொறஞ்சிகிட்டே வருது. ஆனா கிராமத்துல இருக்கும் மக்கள் கருவாட்டை விரும்பி சாப்பிடுறாங்க. அவங்களால வஞ்சிரம் போன்ற விலையுயர்ந்த கருவாடு வாங்க முடியறதில்ல. விலை கூடுதலா இருக்குன்னு நெனக்கிறாங்க. வாங்கக் கூடியவர்கள் கருவாட்டையே ஒதுக்குறாங்க.

எப்படி இருந்தாலும் வஞ்சிரம் 1000 ரூபாய்க்கு  மேலதான் விற்கனும். ஆனா 600-க்குதான் விக்கிறோம். எப்படின்னா, வஞ்சிரம் மீனே 1000 ரூபாய்க்கு விற்கிறது. அதனை காயவைத்து பாடம் போட்டு கொடுப்பது கடினமான வேலை. அதற்கு ஏத்த விலையைப் போட்டால் மீனைவிட அதிகமாக விற்க வேண்டி வரும். இருப்பினும் குறைவாகத்தான் விற்கிறோம்..

“குஜராத்ல இருந்து வரும் வாளை சிறப்பா இருக்கும்னு சொல்லுறாங்களே எப்படி”?

உண்மைதான். அதைவிட ராமேஷ்வரம் கருவாடு நல்லா இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் பாடம் பண்ணுவதுல ஒரு பக்குவம் இருக்கும். அதுல கைதேர்ந்தவங்க நம்ம ராமேசுவரத்துகாரங்க.

“சரி..! இடையில கருவாடு விக்க கூடாதுன்னு சொன்னாங்களே… அதனால எதாவது பாதிப்பு வந்ததா”?

காய்ந்த இறால்

“சிலர் ‘நான்–வெஜ்’ஜிக்கு எதிரா தொடர்ந்து எதாவது கருத்து சொல்லிக்கிட்டே இருக்காங்க. இவங்க,  எல்லோரையும் மனிதர்கள் என்பதை ஏத்துக்கவே மாட்டாங்க..  இவர்கள் (பார்ப்பனர்கள்) இதுபோன்ற உணவில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மாட்டுக் கறி முதல் கருவாடு வரை எல்லா உணவையும் அவர்கள் எதிர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் எப்பவும் கருவாடு உழைக்கும் மக்கள் உணவாகவே இருக்கிறது” என்கிறார், ஜபகுல்லா.

அது என்னவோ உண்மைதான்…. கிராமப்புறங்களில் சுண்டக் கஞ்சிக்கு  கருவாடுதான்  “இன்ஸ்டண்ட் சைடிஸ்ட்”. எறிகிற நெருப்பில் சுட்டுக் கொடுப்பார்கள்..  அதிலிருக்கும் சுவை வேறு எதிலும் இருக்காது. முக்கியமாக விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரின் விருப்பமான தொடுகறி உணவு கருவாடுதான். அதுமட்டுமா?

படிக்க :
சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?
நாடெங்கும் காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் – செய்தித் தொகுப்பு

கருவாட்டில் இருக்கும் மருத்துவ குணம், அதன் நன்மைகள் பற்றி சரளமாக விளக்குகிறார்….. முகமது சலீம் பாஷா.

முகமது சலீம் (வலது புறம் உள்ளவர்)

“சார், முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த விற்பனை இப்ப இல்ல. காரணம் வரத்து குறைவு. விலையேற்றம் அதிகாமகிடுச்சி. நெத்திலி கருவாடு எல்லாம்  சில்லறை விலைக்கு வித்தோம். இன்னைக்கு அந்த விலைக்கு தான் கொள்முதலே பன்றோம். ராமேஸ்வரத்துல இருந்து வர கருவாடு எல்லாம் அவ்வளவு அற்புதமா இருக்கும். விலையும் குறைவா இருக்கும். சுனாமிக்கு பிறகு எதிர்பார்த்த அளவு சரக்கு வரது இல்ல. எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்ப ஆந்திரா, கேரளா, குஜராத்துன்னு வெளியில இருந்துதான் இறக்குமதி பண்றோம். தமிழ்நாட்டுல எல்லாம் கொழம்பு கருவாடுதான் வருது.

இன்னொரு பக்கம், எந்த வியாதிக்கு மருத்துவமனைக்கு போனாலும் டாக்டர் முதல்ல சொல்லுறது கருவாடு சாப்பிடாதிங்கன்னு தான் பயமுறுத்துறாங்க. பி.பி, சுகர்  வந்தவங்க கருவாடு சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுறாங்க. இன்னிக்கு எல்லாருக்கும் அந்த பிரச்சனைதான் அதிகமா இருக்கு. அதனாலயே கருவாடு சாப்பிடுறது குறைஞ்சிடுச்சி.

உண்மையிலே கருவாட்டுல நெறைய கால்சியம் சத்து இருக்கு.  மருத்துவ குணமும் கருவாட்டுக்கு இருக்கு சார்.!  பறவைக் காய்ச்சல், சிக்கன் குன்யா வந்த பிறகு கச்ச கருவாட்ட ரசம் வச்சி குடிக்க சொன்னாங்க.  அதுல கசப்பு அதிகம். அந்த கசப்பு தான் அந்த நோயை குணப்படுத்தும். திருக்கை  கருவாடு இடுப்பு வலிக்கு நல்ல மருந்து. பால்சுறா குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நல்லது.  மாசி மீன்…. உடம்புக்கு நல்லது. வலிமைய தரும். இந்த மாசி கருவாடு மாலத்தீவுல இருந்து வருது. சுறாவினுடைய கறியை அறுத்து காய வைத்து பாடம் போட்டு கொடுப்பாங்க. அது தான் அந்த கருவாட்டோட சிறப்பு.

மாசி கருவாட்டை ராம்நாட் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க.  பாம்பே டெக்  கருவாட்டை பெங்களுர் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கருவாட்ட வறுத்து சாப்பிட்டா செம்ம டேஸ்ட்டா இருக்கும்.  வாளக் கருவாட்ட வால்டாக்ஸ் மக்க விரும்பி சாப்பிடுவாங்க சார்.

உப்பு இறால்

பால் சுறாவினுடையை இறக்கையை சைனீஸ் மக்கள் சூப் வைத்து குடிப்பார்கள். ஆண்மை அதிகரிக்கும்.  சுறாவும் இடுப்பு வலிக்கு நல்ல மருந்து தான்.  மழையில கருவாடு சாப்பிடுறது அவ்வளவும் உடம்புக்கு நல்லது சார். குளிர்ந்த உடம்ப சூடாக்கும் தன்மை கருவாட்டு இருக்கு.  அதனால் மழையில கருவாடு சாப்பிடனும்னு சொல்லுறது…..  நம்ம கிராமத்து மக்கள் குழம்பு கருவாடு வாங்கிக்குவாங்க. ஆனா இவ்ளோ நல்லது இருந்தும் மக்கள் கிட்ட கருவாடு சாப்பிடுவதற்கான மோகம் குறைந்து விட்டது.

அசைவத்து மேல வெறுப்பு ஏற்படுத்திட்டாங்க. எல்லாத்தையும் அசைவம்னு முத்திரை குத்தி ஒதுக்கிடுறாங்க.. அப்படி பார்த்தா சீஸ் இருக்கே அதுவே மாட்டினுடைய கொழுப்புல இருந்தும், பன்றிக் கொழுப்பிலிருந்தும் தான் தயாரிக்கிறாங்க. அதை மட்டும் எப்படி சாப்பிடுறாங்க? செடி-கொடி எல்லாத்துக்கும் உயிர் இருக்கு! அதை அறுக்கிறது தப்பில்லையா? என்னக் கேட்டா பூமியில வெளஞ்சி சாப்பிடுற எல்லாம் அசைவம்தான் சார்”…!

ரஷ்ய புரட்சி நாள் விழா ! கொடியேற்ற போலீசு தடை

சியப் புரட்சியின் 101 வது ஆண்டையொட்டி “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 2

*****

நவம்பர் 7, ரசியப் புரட்சிநாளை முன்னிட்டு கரூரில் கொடியேற்றியதற்காக பு.மா.இ.மு. தோழர்கள் கைது !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

டந்த 07.11.2018 அன்று தமிழகம் முழுவதும் நவம்பர் விழா நிகழ்ச்சி கொடியேற்றி இனிப்பு கொடுத்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தமிழகம் முழுவதும் பலராலும் கொண்டாடப்பட்டது.

கரூர் – தாந்தோன்றிமலை பகுதிகளில்  பு.மா.இ.மு. அமைப்பு கடந்த 8 ஆண்டு காலமாக  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 07.11.2018 அன்று நவம்பர் புரட்சி நாளன்று, தாந்தோன்றிமலை பேருந்து நிலையம் அருகில் பு.மா.இ.மு. அமைப்பின் சார்பில் கொடியேற்ற விழா நடத்தப்பட்டது.

அதையொட்டி பட்டாசு வெடித்தும், பறை இசை நிகழ்ச்சி நடத்தியும் “நவம்பர் புரட்சி வாழ்க!” என்றும், “முதலாளித்துவம் தோற்றுவிட்டது, இனி கம்யூனிசம்தான் மாற்று, காவி கார்ப்பரேட் ’ஹைபிரிட்’ பாஸிசத்தை முறியடிக்க நவம்பர் புரட்சி நாளில் சபதம் ஏற்போம்” என்றும் முழங்கி எமது அமைப்பின் கொடியை ஏற்றினோம்.

இந்நிலையில் ‘டைரக்டர் ஹரி படத்தில் வரும் போலீசு போல’ தயாராக வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேன் ஒன்று சர்..ரென வந்து தோழர்களுக்கு முன் நின்றது. சுமார் 20, 30 போலீசார் பரபரப்பாக இறங்கினார்கள். என்ன ஏது என அறியா நிலையில் அக்கம் பக்கம் இருந்த மக்களிடம் இனிப்புகள் வழங்கி கொண்டிருந்த தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்களின் வேனில் ஏறும்படி பிடித்து இழுத்தனர்.

“என்ன காரணத்திற்காக வேனில் ஏறச் சொல்கிறீர்கள், ஜனநாயக உரிமை அடிப்படையில் எங்கள் அமைப்பின் கொடியை ஏற்றி மக்களுக்கு இனிப்புதானே வழங்குகிறோம். ரஷ்ய புரட்சி பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரச்சாரம்தான் செய்தோம்” என்று கூறியதற்கு, பசுபதிபாளையம் S.I. அழகுராமன், ”எதையும் பேசாதீர்கள், எதையும் சொல்லமுடியாது, வேனில் ஒழுங்கா ஏறுங்க” என்று கூறி அரைமணி நேரத்தில் தோழர்களை வேனில் ஏற்றிச்சென்று P.K.T.திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் 9 ஆண் தோழர்கள், 3 பெண் தோழர்கள் 4 குழந்தைகள் என 16 பேர் இருந்தனர்.

அதன்பிறகு நமக்கு ஆதரவாக வழக்கறிஞரை வைத்து பேசுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அனுமதியின்றி கொடி ஏற்றியதற்காகத்தான் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

“கோடி கோடியாக கொள்ளை அடித்த கார்ப்பரேட் முதலைகளை பிடிக்கவில்லை, நவம்பர் புரட்சி விழாவை கொண்டாடியதற்கு கைது செய்கிறீர்களா…?” என்று பெண் தோழர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு போலீசாரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

மண்டபத்தில் தோழர்களுக்கு தேவையான தண்ணீர், உணவுகளைக் கூட உரிய நேரத்தில் வழங்கவில்லை. கட்டாய ரிமாண்ட் செய்ய வேண்டும் என பசுபதிபாளையம் போலீசார் முடிவோடு இருந்தனர். அதன்பிறகு சக அமைப்பு தோழர்களும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து போராடியதால் மாலை 6.30 மணியளவில் விடுவித்தனர்.

நாம் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பாகவே ஓரிரு போலீசார் அங்கு வந்துவிட்டனர். 10 நிமிடத்திற்குள்ளாகவே 20 – 30 போலீசார் வந்து கைதுசெய்துவிட்டனர். பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் மண்டபத்தில் இருந்த தோழர்கள், ”எதற்காக கைது செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, நாங்கள் எதுவும் பண்ண முடியாது, இது மேலிடத்து உத்தரவு” என்று கூறினார்.

காவல்துறையினர் கைது செய்ததற்கான நோக்கம் என்ன?

காவிரி பிரச்சனையிலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை கைது செய்தபோதும், நீதிபதி குன்காவை இழிவுபடுத்திய போதும், உண்ணாமலை பகுதி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி நீதிமன்றம் உத்திரவிட்ட போதும் அதை அகற்றாமலும் இருந்து நீதிமன்றத்தை அவமதித்தது இந்த அரசும் போலீசும்தான். ஆனால் ஜனநாயக நாட்டில் ஒரு கொடி ஏற்றக்கூட அனுமதி வழங்குவதில்லை.

15 நிமிடத்திற்குள் ஒரு போலீஸ் பட்டாளமே வந்து கைது செய்கிறது. அவ்வாறு கைது செய்ததற்கான உண்மையான நோக்கம், நவம்பர் புரட்சியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதுதான். இதனால் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், நவம்பர் புரட்சி பற்றி வினவு தளத்திலும், புதிய ஜனநாயம் போன்ற இதழ்களிலும் வெளியான கட்டுரைகளை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

புரட்சிகர அமைப்புகள் கொடியேற்றி, இனிப்பு கொடுப்பதற்குக் கூட ஜனநாயக உரிமை இல்லை என்பதுதான் பாசிசம்.

இனி நாம் முழங்க வேண்டியது இதைத்தான் “பாசிச பா.ஜ.க. ஒழிக!”

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு : 98941 66350.

*****

திருச்சியில்…

ஷ்ய புரட்சியின் 101 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. அமைப்புகளின் சார்பாக, பகுதிகளில் கொடியேற்றியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும், மாலையில் அரங்கத்தில் சிறப்புரை மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தியும் விழாவாக கொண்டாடப்பட்டது.

காந்திபுரத்தில் காலை 10 மணி அளவில் பு.ஜ.தொ.மு. மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர ராஜ் தலைமையில் கொடிஏற்றி ”ரஷ்ய புரட்சி.. இன்றைய தேவை!” என்பதை வலியுறுத்திப் பேசினார். பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ம.க.இ.க. அலுவலகத்திற்கு முன்பு, இந்த வருடம் முதன் முதலாக மூவேந்தர் பகுதி மக்களுடன் இணைந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ம.க.இ.க. தோழர் சத்யா கொடியை ஏற்றி வைத்தார்.

அந்தப் பகுதியில் சிறுவர்கள், மாணவர்களைத் திரட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அன்று மாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மாவட்ட செயலர். தோழர் ஜீவா தலைமை ஏற்றார்.

பு.ஜ.தொ.மு. – தோழர் தர்மராஜ், பு.மா.இ.மு. – தோழர் பிருத்திவ், மக்கள் அதிகாரம் – தோழர் ராஜா ஆகியோர் உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர்,
தோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இதற்கிடையே தோழர்கள் கவிதைகளும் பாடல்களும் இசைச்சித்திரமும் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

தோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க.  சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இறுதியாக போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மாட்டுகறி விருந்து பரிமாறப்பட்டது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

*****

விருத்தாச்சலத்தில்…

சியப் புரட்சி நாளான நவம்பர் 7 அன்று பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில், லெனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வெடி வெடித்து ரசிய புரட்சியை தோழர்கள் கொண்டாடினர்.

அதன் பின்னர் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள உழவர் சந்தை, பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் நவம்பர் 7 ரசிய புரட்சி தினத்தை பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

*****

மதுரையில்…

துரையில் ம.க.இ.க. மற்றும் பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் சார்பில் ரசிய சோசலிச புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட்டது.

தோழர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி பாடல்கள், கவிதை, நாடகம், பட்டாசுகள், புத்தாடை, விவாதங்கள், உரைவீச்சுகள், மாட்டுக்கறி விருந்து என ஒரு மாற்றுப் பண்பாட்டு நிகழ்வாக சோசலிசப் புரட்சியை கொண்டாடினார்கள்.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி விழா துவங்கியது.

காலை அமர்விற்கு பு.மா.இ.மு. தோழர் ஆனந்த் தலைமை தாங்கினார்.  அன்றைய ரசியாவின் நிலைமை, புரட்சியின் தேவை, புரட்சி உருவாக்கிய மாற்றங்கள், உலகெங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி உருவாக்கிய தாக்கம் ஆகியவற்றை விளக்கியும், ரசியப் புரட்சியை கொண்டாட வேண்டிய அவசியத்தையும் விளக்கி விழாவை துவக்கிவைத்தார்.

பின்னர் பறை இசையுடன் விழா துவங்கியது.

“நாம் கருப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா” என்ற தா.கலையரசன் எழுதிய நூலை அறிமுகம் செய்து பேசினார் தோழர் அடைக்கலம்.  ‘உழைக்கும் வந்தேறி’களுக்கு எதிராக களமாடும் தமிழினவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக நூல் இருப்பதை விவரித்தார்.  தமிழனே தமிழ்நாட்டிற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்து ஏறியவன் தான் என்பதை நூலின் வழி நின்று விளக்கினார்.  தோழரின் உரை நூலை வாசிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருந்தது.

உசிலை பகுதியை சேர்ந்த தோழர் சோவியத், கடந்த காலங்களில் புரட்சிகர அமைப்புகள் தங்களது பகுதியில் நிகழ்த்திய போராட்டங்களையும், அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள், நம்பிக்கைகள் பற்றியும் பேசினார்.  டீசல் பதுக்கலுக்கு எதிராகப் போராடி, டீசலை பறிமுதல் செய்து மக்களிடையே விநியோகித்தது, யூரியா பதுக்கலை கைப்பற்றி விநியோகம் செய்தது, ஈழத்து கொலைகாரன் பாசிச ராஜீவ்காந்திக்கு கருப்புக்கொடி காட்டியது எனப் பல்வேறு போராட்ட அனுபவங்களை பகிர்ந்தார்.  அந்த நாளில் நாம் இல்லையே என்ற ஏக்கமும் பொறாமையும் பார்வையாளர்கள் முகங்களில் தெரிந்தது.

“மக்களுக்காக போராடும் நகர்ப்புற நக்சல்கள்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில செயலாளர் பேரா இரா.முரளி உரை நிகழ்த்தினார்.  பாசிச பா.ஜ.க., மோடி அரசு அறிவுத்துறையினர் மீது நடத்திவரும் அடக்குமுறைகள் பற்றியும், இத்தகைய அறிவுத்துறையினர் மீது பாசிசக் கும்பல் கொண்டுள்ள அச்சம் பற்றியும் விளக்கமாக எடுத்துக்கூறினார்.  மேலும், பாட்டாளி வர்க்க விடுதலைக்காக பாடுபடுவதுதான் அறிவுத்துறையினரின் லட்சியமாக இருக்க வேண்டும் எனபதையும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக தோழர் லயனல் அந்தோனிராஜ், புரட்சிகர போராட்டங்களில் ஈடுபடும்போது நம்மை பாதிக்கும் தயக்கம், அச்சம், ஊசலாட்டம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணங்கள் பற்றிய விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்.  விவாதம், தோழர்கள் மத்தியில் சுயபரிசீலனையை தூண்டியது என்றால் மிகையில்லை.

புரட்சிகர அரசியலும் புரட்சிகர அமைப்பும் என்ற தலைப்பில்  பு.மா.இ.மு. தோழர் மருது, “மார்க்சியம் தான் சரியான விடுதலைத் தத்துவம் என்பதையும், அதனை எப்படி உள்வாங்கி அமல்படுத்துவது என்பது பற்றியும்” ஒரு சிறு வகுப்பு எடுத்தார்.

மதியம் மாட்டுக்கறி விருந்து, இளம் தோழர்களின் பட்டாசு கொண்டாட்டம் எல்லாம் முடிந்த பின், மதிய அமர்விற்கு தலைமை தாங்கிய ம.க.இ.க. மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் முதலில் பறையிசை முழங்க தோழர்களை அழைத்தார். அது சுரண்டலுக்கெதிரான போர்ப் பறையாக ஓங்கி ஒலித்தது.

“மண உறவுக்கு வெளியே பெண்கள் பாலுறவு கொள்வது கிரிமினல் குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும்” நடந்த விவாதத்தை தோழர் வாஞ்சிநாதன் ஒழுங்கமைத்தார்.  தோழர்கள் மத்தியில் நிலவும் பல்வேறு வகை ஆணாதிக்க கண்ணோட்டங்களை வெளிக்கொணர்ந்த விவாதம் சரியான புரிதலை நோக்கி இறுதி உரையில் பயணித்தது.

“லாபமே கடவுள்” என அணு முதல் அண்டம் வரை சூறையாடும் பன்னாட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களைப் பற்றியும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும், நமது கடமை என்ன என்பது பற்றியும் எளிமையாக விளக்கினார் ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்.

நிகழ்வுகளுக்கு இடையிடையே, குழந்தைகளும், தோழர்களும் புரட்சிகர பாடல்களை பாடினர்.  தோழர் ரம்யா கவிதை வாசித்தார். பு.மா.இ.மு தோழர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த நாடகம் ஒன்று நிகழ்த்தினர்.

முழுக்கவும் வணிகம் நுகர்வு சார்ந்த ஆரிய தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மாற்றாக, புரட்சிகர உணர்வை ஊட்டுவதாக, சமூக அக்கறையை உருவாக்குவதாக எழுச்சியுடன் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை.

*****

நெல்லையில்…

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்னால், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரியும், வருகைக்குறைவு அபராதக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசு புகுந்து தடியடி நடத்தி கலைத்தது.

இதனைத்தொடர்ந்து போலீசைக் கண்டித்து நெல்லை சட்டக் கல்லூரி, புனித சவேரியர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” எனும் தலைப்பில், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் நவம்பர் புரட்சி தினம் பாளையங்கோட்டை ஏ.டி.எம்.எஸ் மஹாலில் கொண்டாடப்பட்டது.

விழாவை நெல்லை பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் சிவா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவர் தன் தலைமையுரையில், இங்கு நமது நாட்டில் ஒரு நவம்பர் புரட்சியை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தனது பேச்சில் உணர்த்தினார்.

அடுத்து மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் அன்பு தன்னுடைய உரையில் நெல்லை பகுதியில் இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் மாணவர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு அந்த போராட்டத்தை வலிமையாக நடத்தியது என்பதை விளக்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில், கால்வயிற்றுக் கஞ்சிக் கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் வாடும் இந்த நாட்டில் 3000 கோடிக்கு சிலை வைக்கிறார்கள்.

தொழிலாளர்கள் எங்களை கழிப்பறை செல்லக் கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று போராடுகிறார்கள். ஆனால் சோவியத் யூனியனில் ஆறு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வது சட்ட விரோதம் என அறிவித்தார்கள் என்று ஒப்பிட்டு மாணவர்கள் பெருமளவில் இந்த சமூக சீர்கேடுகளை கண்டித்து போலீசுக்கு அஞ்சாமல் போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.

அடுத்து பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர் அமுதன், இன்றைய மாணவர்களின் நிலை எப்படி இருக்கிறது? பல்கலைக் கழகங்கள் எப்படி ஊழல் மலிந்ததாக இருக்கின்றன, சாதியக் கூடாரங்களாக இருக்கின்றன, சீரழிந்து போய் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இதற்கு மாறாக சோவியத் யூனியனில் உயர்கல்வி வரையில் இலவசக் கல்வி, அனைவருக்கும் வேலை போன்றவை மக்கள் உரிமை ஆக்கப்பட்டிருந்தன. எனவே, அது போன்ற நிலையை இங்கும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்

அடுத்ததாக இளந்தோழர் வைகுந்தன் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடலான தமிழா, தமிழா பாடலை பாடியது அனைவருக்கும் உற்சாகமளிப்பதாக இருந்தது.

இதனையடுத்து, தோழர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். விவசாயத்தின் அழிவு தொடங்கி, ஒக்கி புயலின் போது அரசு நடந்து கொண்ட முறை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற அழிவுத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது உள்ளிட்ட பல அரசின் நாசகாரத் திட்டங்களையும் இவற்றின் பாதிப்புகளிலிருந்து விடுபட புரட்சி ஒன்றே மாற்று என்பதை எளிமையாக விளக்கி உரையாற்றினார்.

தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் கிங்சன் நன்றியரை கூற விழா நிறைவுற்றது.

தீபாவளி விடுமுறைக்காக மாணவர்கள் சொந்த ஊர் சென்றிருந்தது, தேர்வு கால படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கடந்து மாணவர்கள் அதிகமாக கலந்து கொண்டது தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாக இருந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் ரஷ்யப் புரட்சியின் வீச்சையும், சோவியத் யூனியன் எவ்வாறு மக்களின் வாழ்வை உறுதிப்படுத்தியது என்பதையும் உணர்த்தி உற்சாகப்படுத்தியது.

சோவியத் யூனியனின் சாதனைகளை விளக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிப் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெல்லை.

*****

கிருஷ்ணகிரி : போலீசின் தடையை உடைத்து வானில் பறந்த செங்கொடி !
வம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 101 – ம் ஆண்டையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் பகுதியில் கொடியேற்றி நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். ஆண்டு தோறும் நவம்பர் 7 புரட்சி நாளை நினைவு கூறும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம்.
கொடியேற்றவிடாமல் தடுக்கவும், மக்களை மிரட்டவும் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட போலீசு வாகனம்.

இந்த ஆண்டும் நாட்றாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி, இனிப்பு வழங்குவதற்கான ஏற்பாட்டு வேலைகள் செய்துக் கொண்டு இருந்தோம். அப்போது அஞ்செட்டி போலீசு நிலையத்தில் இருந்து வந்த 10 -க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் உளவுப் பிரிவினர். கொடியேற்றக் கூடாது, இதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

”கொடியேற்றுவதற்கு அனுமதி வாங்க சொல்லி சட்டம் இல்லையே”, என்று பதில் கூறினர் பகுதி தோழர்கள். உடனே “மேல் இடத்து பிரசர் நீங்க கொடியேற்ற கூடாது, மீறினால் கைது செய்வோம்” என்றனர். என்ன நடந்தாலும் நாங்க கொடியேற்றிதான் நிகழ்ச்சியை நடத்துவோம் என்று பேச உடனடியாக, போலீசாரின் எண்ணிக்கையை 30 பேராக கூட்டினர்.
கைது செய்வதாக மிரட்ட இரண்டு போலீசார் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தினர்.
கொடி ஏற்றியே தீருவோம் என பதிலளித்து போலீசின் முகத்தில் கரியைப் பூசிய தோழர்கள்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொடியேற்றும் வேலையை தோழர்கள் செய்துக்கொண்டு இருக்க, என்ன முடிவு என்று ஆய்வாளர்  தோழர்களை தொந்தரவு செய்தனர். மீண்டும் மீண்டும் வந்து எப்படியாவது தடுத்தே தீரவேண்டும், என்ற வகையில் போலீசார் செயல்பட்டனர். எவ்வளவு முயன்றும் பயனளிக்கவில்லை என்பதை உணர்ந்த போலீசார், ”சரி முழக்கம் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.

”கொடியேற்றுவது  எங்கள் உரிமை அதில் நாங்க பின்வாங்க போவதில்லை” என்று உறுதியாக இருக்க வேறு வழியில்லாமல், ”அரை மணிநேரத்தில் நிகழ்ச்சியை முடித்து கொள்ளுங்கள்” என்று அடுத்தகட்ட வேலையில் இறங்கினர் போலீசார். ”கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த எவ்வளவு நேரம் பிடிக்குமோ, அவ்வளவு நேரம் செய்வோம், அதனை எல்லாம் நேரம் தீர்மானிக்க முடியாது” என்று தோழர்கள் பேச வேறு வழியில்லாமல் இறுதியில் போலீசார் கூட்டத்தை தடுக்க முடியாமல் கொடியேற்றும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தனர்.
வெற்றிகரமாக கொடியேற்றி முழக்கமிடும் தோழர்கள்.
இறுதியில் கொடியேற்றி இங்கும் ஒரு நவம்பர் புரட்சியை உருவாக்குவோம் என்று உறுதியேற்றனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை நிறைவு செய்தனர்.
தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
நாட்றாம்பாளையம். கிருஷ்ணகிரி மாவட்டம்.

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்

பெண்களை தடுப்பது ஐயப்பனா

புதிய கலாச்சாரம்

பரிமலையில் பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் சபரிமலைக்குச் சென்ற பெண்களின் மீது நடு வழியிலேயே ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாயர் சேவா சமூகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் தாக்குதல் தொடுத்தனர்.

சபரிமலையில் பெண்கள் நுழைவது ஆகம விதிகளுக்கு எதிரானது; இந்துக்களின் பாரம்பரியத்தைக் கெடுக்கும் செயல்; மத விவகாரங்களில் நீதித்துறை தலையிடக் கூடாது என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்கள் கூறுகின்றன. பாலின சமத்துவத்திற்கான தீர்ப்பை இந்து தர்மத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாக பிரச்சாரம் செய்கின்றன.

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என அம்பேத்கர் சட்டமியற்றியபோது இதே எதிர்ப்பை இந்துத்துவவாதிகள் அப்போதும் தெரிவித்தனர். பார்ப்பனப் பெண்களை அழைத்துச் சென்று, பெண்களுக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என டெல்லியில் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர்.

படிக்க:
சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !
சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !

இதே போல தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டபோதும் சரி, உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்ட போதும் சரி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயல் என்று முட்டுக்கட்டை போட்டனர் இந்து மதவெறியர்கள்.

பெண்கள் மட்டுமல்ல, தலித் மக்கள், பழங்குடி மக்கள், சில இடங்களில் சூத்திரர்கள் இவர்களுக்கும் இன்னும் சமத்துவத்தை வழங்க மறுக்கிறது பார்ப்பனியம். கோவில் கருவறை முதல், ஊரில் இருக்கும் கிணறு வரை இம்மக்களுக்கு அனுமதி மறுக்கப் படும் இடங்கள் பல. இதுதான் ‘வல்லரசு இந்தியாவின்’ இலட்சணம்!

பாடப் புத்தகங்களில் பாவம் எனச் சொல்லப்படும் தீண்டாமை, சட்டப் புத்தகங்களில் ஆகம விதிகளாக, மத நம்பிக்கையாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது. பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மேற்கண்ட பிற்போக்குத்தனங்களை மக்களிடம் உசுப்பிவிட்டு அதையே இந்து தர்மம் என கற்பனையாக கட்டமைக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களை அபகரிக்க சதி செய்து வருகிறது.

வட இந்தியா முழுவதும் கலவரங்கள் மூலம் இரத்த ஆறு ஓடச் செய்த ஆர்.எஸ்.எஸ்., மக்களை இந்துமதவெறியின் பிடியில் திரட்டுவதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இத்தகைய பிற்போக்கு பண்பாடுகள்தான். தமிழகம் மற்றும் கேரளாவில் அத்தகைய கலவரங்களைத் தூண்டிவிடவே ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். வரவிருக்கும் பேராபத்தை எச்சரிக்கிறது இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? – புதிய கலாச்சாரம் நவம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ?” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • சபரிமலை: பெண்கள் நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
  • சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
  • பெங்களூரு கோவிலில் நுழைந்த 15 தலித் சிறுவனுக்கு அடி உதை
  • போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
  • சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : சபரிமலை ஐயப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
  • சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
  • பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!
  • சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
  • கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
  • பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
  • பிரசாத லட்டு கூட ‘அவா’தான் பிடிக்கணும் | – உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
  • இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
  • ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !
  • பார்ப்பனரின் எச்சிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்
  • பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 4

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க

திரும்ப ஒரு கேள்வி கேட்கலாம். வேலை வாய்ப்புகள் எல்லா இடத்துலயும் வரணும்னா ஸ்டெர்லைட் கம்பெனி வைக்கணும், சேலம் 8 வழி சாலை வரணும், ஜிண்டால் ஃபாக்டரி வரனும், அதானி வரணும் என்று சொல்லலாம். ஆனால், ஸ்டெர்லைட்டும், ஜிண்டாலும், அதானியும் முதலீடு செய்து அவர்கள்தான் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்களே தவிர, படித்த இளைஞர்களுக்கு கௌரவமான வேலை கிடைப்பது அரிதாகி வருகிறது. எனவே, வேறு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது.

நன்றி : எக்கனாமிக் டைம்ஸ்

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்களே. அதற்கு மேல் இங்கு முதலாளி என்ற ஒரு வர்க்கம் உண்டு. அந்த வர்க்கம் சிறுபான்மை வர்க்கம். பெரும்பான்மை வர்க்கம் தொழிலாளிதான்.

ஆனால் தொழிலாளி வர்க்கம் ஆங்காங்கே பிரிந்துள்ளனர். Blue Collar, white Collar என்று பொருளாதார அடிப்படையில், வாழ்வின் அடிப்படையில், பின்புலன் அடிப்படையில் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.

அடிப்படையில் நாம் தொழிலாளிகள். தொழிலாளிகள் நீண்ட நெடு போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த சட்ட, திட்டங்கள் உண்டு. இந்த சட்ட திட்டங்களை எப்படி அணுகுவது, என்ன கேட்க வேண்டும், நமது உரிமை என்ன என்பது பற்றிய அறிவு இல்லாததை ஒரு பெரிய குறைபாடாகக் கருதுகிறேன்.

படிக்க :
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்
தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்

10வது – 12வது பாட புத்தகங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும். கொண்டு வரும் பட்சத்தில் அதைப் படித்த இளைஞர்கள் தமது உரிமைகளை புரிந்து கொண்டு சுயமாக யோசித்து செயல்படுவார்கள். சுய யோசனையும் சுய அறிவும் விழிப்புணர்வும் இல்லாதது தான் வெளிநாடு போய் ஏமாறுவது போன்ற தவறுகளுக்கு காரணம்.

வெளிநாடு வேலை மோசடியை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மலேசியா சிங்கப்பூர் இது மாதிரியான நாட்டுக்கு போய் நிறைய பேர் பாதிக்கப்படுறாங்கன்ற போது அந்த விசா மையத்திலேயோ, இல்லை ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலையோ இது மாதிரி பாதிக்கப்படுறவங்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி முகாம் மாதம் ஒரு முறை நடத்தலாம்.

பஸ் நிலையத்தில், ரயில் நிலையத்தில் “தேவை (WANTED), பிக் பாக்கெட்டுகள் ஜாக்கிரதை” அப்பிடின்னு ஃபோட்டோ ஒட்டி போடுவாங்க. இது மாதிரி போலி ஏஜெண்டுகள் முகங்களை எல்லாம் ஏன் ஒவ்வொரு பாஸ்போர்ட் ஆபிசுலயும் “இவங்க எல்லாம் போலி ஏஜெண்டுகள், இந்த போலி ஏஜெண்டுகளை நம்பி ஏமாற வேண்டாம் அப்பிடீன்னு அவங்க ஃபோட்டோவோட போட்டு ஒட்டுனீங்கன்னா போலி ஏஜெண்டுகளை நம்பாம இருப்பாங்க இல்லையா.” ஏன் இதை பண்ண மாட்றாங்க.

இது செய்யாம இருக்கிறதுக்கு காரணம் அந்த போலி ஏஜெண்டுகள் அரசியல் பின்னணி உள்ள நபர்களாக இருக்காங்கன்றது காரணமா இல்ல வேற ஏதும் காரணமா?

ஒரு பிக் பாக்கெட்டு 100, 50 எல்லாம் திருடுறதுக்கு அவங்க ஃபோட்டோ எல்லாம் போட்டு அவங்களை பகிரங்கப்படுத்தி, மானத்தை வாங்கி அவங்க குற்றம் செஞ்சாங்கன்னு சொல்றீங்க. ஆனா, இதே போல குற்றம் இழைக்கும் வெளிநாட்டு ஏஜென்டுகளை ஏன் துரத்துவதில்லை. 1 லட்சம் 5 லட்சம் 10 லட்சம் அப்டின்னு ஒரு பெரிய தொகை வர்றதுனால இந்த தொகையோட கமிசன் போலீசுல இருந்து அரசாங்கத்துல இருக்கிற எல்லாத்துக்கும் போறதால இதை கண்டுக்காம இருக்காங்கன்னு எனக்கு தோணுது.

ஏன் வெளிநாடு போகணும்?

இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கிட்டு தான் இருக்கு. இந்த குற்றங்கள் நடக்கிறதுனால தான் அங்க போறவங்களுக்கு பாதுகாப்பு இல்லை. போறவங்க தப்புதான் செய்றாங்க. ஆசைப்பட்டு தான் போறாங்க. “எனக்கு அங்க போனா வேலை கிடைச்சிடும். ஒரு சின்ன தப்பு தான் டிராவல் விசால தான் போறேன். அங்க போய் வேலை வாங்கிப்பேன்’னு அவங்க போறதுக்கு காரணம் நெருக்கடி. பொருளாதார நெருக்கடி.

படிக்க :
ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் ! மோடினாமிக்ஸ் !

அவர்கள் ஏன் வெளிநாட்டு வேலைக்கு சட்டத்தை மீறி போகிறார்கள் என்று சிலர் கேட்கலாம். இது கை கால்களை ஒடித்த பின்பு, ஏன் தவழ்ந்து போறாங்க என்று கேள்வி கேட்பது போன்று உள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக அரசின் திட்டங்கள்தான் இருக்கு. அரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் இது போன்று வாய்ப்புகளை நோக்கிச் சென்று விட்டில் பூச்சி ஆகின்றனர்.

“எனக்கு வேற வழி இல்லை. நான் diploma படிச்சிருக்கேன் Engineering படிச்சிருக்கேன், வேலை கிடைக்கல. எனக்கு மாத வருமானம் வேண்டும். எங்க அப்பா விவசாயம் பன்னிட்டிருந்தாரு அதையும் நிறுத்தி விட்டீங்க. எனக்கு கவர்மென்ட் குடுத்த இழப்பீட்டு பணத்திலதான் படிச்சு முடிச்சிருக்கேன். நான் குடும்பத்துக்கு திரும்ப சம்பாதிக்கணும். மாசம் 5 ஆயிரம், 6 ஆயிரமாவது குடுக்கணும். இங்க நான் பிளம்பிங் வேலை இது மாதிரி வேலை தான் பார்த்திட்டிருக்கேன். இங்கயும் வருமானம் இல்ல. இந்தியா முழுவதிலும் இருந்து குறைந்த கூலிக்கு உழைக்க நிறைய பேரை கொண்டு வருகிறார்கள். அவங்களுக்கும் விவசாயம் அழிவினால் வேலை இல்லாமல் இப்படி வருகிறார்கள். கிடைக்கிற வேலை வாய்ப்புக்கும் கடும் போட்டி உள்ளது. நான் வேலைக்கு எங்க போவேன்.”

உள்ளூரில் கிடைக்கும் சொற்ப வேலை வாய்ப்புகளிலும் ஒருதரப்பட்ட படிச்சு வர்ர மக்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு கொடுக்கணும்ன்ற unethical rule, unwritten rule follow பண்ணப்படுது. அதில் ஊழல், சிபாரிசு என்று பல முறைகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கிராமங்கள்ல படிச்சவங்க, மக்களுக்கு வேலை கொடுக்கணும்ன்னு ஒரு ஒதுக்கீடு கிடையாது. ‘திறமை’ அடிப்படையில் என்று சோதித்து கொடுக்கப்படுகிறது. ‘திறமை’ ஒரு மேட்டர்ன்னா அதற்கான பயிற்சி எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா?

– சரவணன்

(தொடரும்)

நன்றி : new-democrats

இதன் முந்தய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
2. வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா !
3. என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !

நாம் எப்போதுதான் சண்டைக்குக் கிளம்புவது ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 20

ரு நாள் இரவில் தாய் மேஜையருகே அமர்ந்து காலுறை பின்னிக்கொண்டிருந்தாள்; ஹஹோல் பண்டைக்கால ரோமானிய அடிமைகளின் புரட்சி சரித்திரத்தை அவளுக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

மாக்சிம் கார்க்கி

அந்தச் சமயம் யாரோ கதவைப் பலமாகத் தட்டும் ஓசை கேட்டது. ஹஹோல் எழுந்து சென்று கதவைத் திறந்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோல் கையில் ஒரு மூட்டையுடன் உள்ளே வந்தான். அவனது தொப்பி தலையின் பின்புறமாகச் சரிந்து போயிருந்தது. முழங்கால் வரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது.

“போகிறபோது இங்கே விளக்கு வெளிச்சம் தெரிந்தது. சரி, பார்த்துவிட்டுப் போகலாம் என்று உள்ளே வந்தேன். சிறையிலிருந்து வருகிற வழி” என்று ஒரு விபரீதத் தொனியில் பேசினான் அவன். பிறகு பெலகேயாவின் கரத்தைப் பிடித்து மன நிறைவோடு குலுக்கிவிட்டு மேலும் சொன்னான்; “பாவெல் தன் வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னான்.”

அவன் மிகவும் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்தான். சோர்ந்து மங்கிய சந்தேகக் கண்களோடு அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான்.

முன்பெல்லாம் தாய்க்கு அவனைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அவனது விகாரமான மொட்டையடித்த தலையும், சின்னஞ்சிறு கண்களும் அவளை ஏனோ பயமுறுத்திக் கொண்டேயிருந்ததுண்டு. ஆனால் அன்றிரவிலோ அவனைப் பார்த்தபோது அவள் மகிழ்ச்சிக் கொண்டாள். அவனோடு பேசும்போது அன்பு ததும்பப் புன்னகை செய்தாள்.

“நீ எவ்வளவு மெலிந்துவிட்டாய்! அந்திரியூஷா, இவனுக்கு ஒரு குவளை நேநீர் கொடுப்போம்.”

“நான் தேநீர்ப் பாத்திரத்தை அப்போதே கொதிக்க வைத்தாயிற்றே” என்று சமையல் கட்டிலிருந்தவாறே பதில் கொடுத்தான் ஹஹோல்.

“சரி. பாவெல் எப்படி இருக்கிறான்? உன்னைத் தவிர வேறு யாராவது விடுதலையானார்களா?”

நிகலாய் தலையைத் தொங்கவிட்டான்.

“பாவெல் இன்னும் பொறுமையோடு காத்துக்கொண்டு தானிருக்கிறான். அவர்கள் என்னை மட்டும்தான் விடுதலை செய்தார்கள்.” அவன் தன் கண்களைத் தாயின் முகத்துக்கு நேராக உயர்த்தினான்; பற்களை இறுக கடித்துக்கொண்டு மெதுவாகப் பேசினான்: “நான் அவர்களிடம் சொன்னேன்! “போதும் போதும் என்னைப் போகவிடுங்கள். இல்லையென்றால் நான் இங்கேயே உங்களில் யாரையாவது கொன்று தீர்த்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன்” என்று சத்தம் போட்டேன். எனவே அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள்.

“ஆ” என்று பின்வாங்கியவாறு அதிசயித்தாள் தாய். அவனது குறுகிய குறுகுறுத்த கண்களை அவளது கண்கள் சந்தித்தபோது அவள் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

“பியோதர் மாசின் எப்படியிருக்கிறான்? இன்னும் கவிதை எழுதிக் கொண்டுதான் இருக்கிறானா?” என்று சமையலறையிலிருந்தவாறே கத்தினான் ஹஹோல்.

“எழுதுகிறான். ஆனால் அதெல்லாம் எனக்குப் புரிவதில்லை” என்று தலையை அசைத்துக்கொண்டு சொன்னான் நிகலாய். “அவன் தன்னைப் பற்றி என்னதான் நினைத்திருக்கிறானோ? வானம்பாடி யென்று நினைப்பு போலிருக்கிறது! அவர்கள் அவனைக் கூண்டில் பிடித்து அடைத்துவிட்டார்கள்; அந்த வானம்பாடியோ உள்ளேயிருந்து கொண்டு பாட்டுப்பாடுகிறது. எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப்படுகிறது. நான் என் வீட்டுக்குப் போக விரும்பவில்லை!”

“வீட்டுக்குப் போய்த்தான் ஆகப்போகிறதென்ன,” என்று முனகினாள் தாய். “காலியான வீடு, எரியாத அடுப்பு, எல்லாம் குளிர்ந்து விறைத்துக் கிடக்கும்….”

அவன் பதில் சொல்லவில்லை. கண்களை மட்டும் சுருக்கிச் சுழித்தான். பிறகு தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். தன் முன்னே திரிதிரியாகப் பறந்து செல்லும் புகை மண்டலத்தை ஒரு சோம்பேறி நாயைப்போல் வெறுமனே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் நிக்கலாய்.

“ஆமாம். எல்லாமே குளிர்ந்து போய்த்தான் கிடக்கும். தரையில் பாச்சைகள் செத்து விறைத்துக் கிடக்கும். எலிகள்கூட செத்துக்கிடக்கும் பெலகேயா நீலவ்னா. “இன்று இரவு நான் இங்கே கழிக்கிறேனே, முடியுமா?” என்று அவளைப் பார்க்காமலேயே கரகரத்துப் பேசினான் அவன்.

“தாராளமாய், இதற்குக் கேட்க வேறு வேண்டுமா?” என்று அவசர அவசரமாகப் பதிலளித்தாள் அவள். அவனது முன்னிலையில் இருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது.

”இந்தக் காலத்திலே, பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்காகக்கூட வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது…..”

”என்ன?” என்று திடுக்கிட்டு அதிசயத்தோடு கேட்டாள் தாய்.

அவன் அவளைப் பார்த்தான். பிறகு கண்களை மூடிக்கொண்டான். அப்போது அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகத்தில் கண்களும் குருடாகிப் போய்விட்டது போலத் தோன்றியது.

“இல்லை. பெற்றோர்களைக் கண்டுகூட பிள்ளைகள் வெட்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொன்னேன்” என்று பெருமூச்சுடன் பதிலளித்தான் அவன். “பாவெல் உன்னைக் கண்டு வெட்கப்படவில்லை. நானோ என் தந்தைக்காக வெட்கப்பட வேண்டியிருக்கிறது. நான் இனிமேல் அவன் வீட்டில் காலடி கூட எடுத்து வைக்க மாட்டேன். எனக்கு அப்பனே கிடையாது. எனக்கு வீடும் கிடையாது. போலீஸ்காரர்கள் என்னைக் காவலில் வைத்திராவிட்டால், நான் சைபீரியாவுக்கே போயிருப்பேன். அங்கு கடத்தப்பட்டு, அங்கிருப்பவர்களை விடுதலை செய்வேன். ஓடிப்போய்விட உதவி செய்வேன்…”

அவன் துயரப்படுகிறான் என்பதை அவளது உணர்ச்சிபூர்வமான இதயம் உணர்ந்தது. எனினும் அவனது வேதனை அவள் இதயத்தில் அனுதாப உணர்ச்சியை உண்டாக்கவில்லை.

“அப்படி நினைத்தால், நீ போய்விடுவதே நல்லது” என்று பதில் சொன்னாள். ஏதாவது பதில் சொல்லாதிருந்தால் அவனைத் துன்புறுத்தியதாகும் எனக் கருதியே இப்படிச் சொன்னாள்.

அந்திரேய் சமையலறையிலிருந்து வெளியே வந்தான். “நீ என்ன உபதேசிக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே சிரித்தான்.

தாய் எழுந்து நடந்து கொண்டே, “நமக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழி பண்ணப் போகிறேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

ஹஹோலையே சிறிது நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு நிகலாய் திடீரென்று சொன்னான்.

“எனக்குச் சில பேரைக் கண்டால் கொன்று தீர்க்க வேண்டும் போலிருக்கிறது.”

”ஓஹோ! அப்படியா? எதற்காக?” என்றான் ஹஹோல்.

“அவர்களை ஒழித்துக் கட்டத்தான்.”

நெட்டையாகவும் மெலிவாகவும் இருந்த ஹஹோல் அந்த அறையின் மத்தியில் வந்து நின்று கொண்டு, பாதங்களை உயர்த்தித் தன் உடம்பை ஆட்டிக் கொண்டான், நிகலாயைப் பார்த்தான். நிகலாயோ நாற்காலியில் அசையாமல் சிலைபோல் அமர்ந்து புகை மண்டலத்தைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவனது முகம் திட்டுத் திட்டாகச் சிவந்து கனன்றது.

‘நான் அந்தப் பயல் – இலாய் கர்போவின் மண்டையை உடைக்கிறேனா இல்லையா, பார்!”

“ஏன்?”

”அவன் ஒரு ஒற்றன்; கோள் சொல்லி! அவன்தான் என் அப்பனைக் கெடுத்தான். அவன் என் தந்தையைத் தன் கையாளாக மாற்றிவிட்டான்” என்று அமுங்கிப்போன குரோத பாவத்தோடு அந்திரேய் பார்த்துக்கொண்டே பேசினான்.

“அப்படியா! ஒரு முட்டாள் தான் உன்னை இப்படி எதிர்ப்பான்” என்றான் ஹஹோல்.

“முட்டாளும் புத்திசாலியும் ஒரே இனம்தான்” என்று உறுதியோடு சொன்னான் நிகலாய். ”உன்னையும் பாவெலையும்தான் பாரேன். நீங்கள் இரண்டு பேரும் புத்திசாலிகள்தான். இருந்தாலும் நீங்கள் பியோதர் மாசினையும், சமோய்லவையும் பார்க்கிற மாதிரியா என்னைப் பார்க்கிறீர்கள்? இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் மதித்துக் கொள்வது போல் என்னை மதிக்கிறீர்களா? பொய் சொல்லாமல் சொல்லு. எப்படியானாலும் நான் உன்னை நம்பமாட்டேன். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு என்னை ஒதுக்கி வைக்கிறீர்கள். தனிமைப்படுத்துகிறீர்கள்.”

“நிகலாய்! உன் மனம் புண்பட்டிருக்கிறது” என்று அன்பும் இதமும் ததும்பச் சொல்லிக்கொண்டே அவனருகே சென்று உட்கார்ந்தான் ஹஹோல்.

“என் மனம் புண்பட்டுத்தான் போயிருக்கிறது, உங்கள் மனமும் அப்படித்தான். ஆனால் உங்கள் வேதனை என் வேதனையைவிடக் கொஞ்சம் உயர்ந்த ரகம். அவ்வளவுதான் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் போக்கிரிகளாக நடந்து கொள்கிறோம். அவ்வளவுதான். நான் சொல்வேன். நீ இதற்கு என்ன சொல்லப் போகிறாய்? உம். சொல்வதைச் சொல்லு.”

அவன் அந்திரேயின் முகத்தைக் கூரிய கண்களால் பார்த்தான். இறுக்க கடித்த பற்களோடு பதிலுக்காகக் காத்திருந்தான். அவனது சிவந்த முகத்தில் உணர்ச்சியின் உத்வேகம் மாறவில்லை. எனினும் தடித்த உதடுகள் மட்டும் நெருப்பால் சூடுபட்டது போல் நடுங்கின.

‘நான் எதுவுமே சொல்ல முடியாது” என்று கூறிக்கொண்டே குரோதம் நிறைந்த நிகலாயின் பார்வைக்கு எதிராக தனது நீலநிறக் கண்களில் அன்பு நிறைந்த சிரிப்புக் குமிழிடப் பார்த்தான் ஹஹோல். “இதயத்தின் சகல புண்களும் இரத்தம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒருவனோடு எதை விவாதித்தாலும் வேதனைதான் அதிகரிக்கும், அது எனக்குத் தெரியும். தெரியும் தம்பி!”

“நீ என்னோடு விவாதிக்க முடியாது. எனக்கு எப்படியென்று தெரியாது” என்று தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டே முனகினான் நிகலாய்.

”நாம் ஒவ்வொருவரும் தனித்தனி முள்ளடர்ந்த பாதையில்தான் நடந்து சென்றிருக்கிறோம். உன்னைப்போல் ஒவ்வொருவருக்கும் துன்பம் எதிர்ப்பட்டிருக்கிறது….” என்றான் ஹஹோல்.

“நீ எனக்கு எந்தச் சமாதானமும் சொல்ல முடியாது” என்று நிகலாய் மெதுவாகச் சொன்னான், “என் இதயம் ஓநாயைப்போல் உறுமி ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது.”

”நான் உனக்கு எதுவுமே சொல்ல விரும்பவில்லை என்றாலும் உன்னுடைய இந்தச் சஞ்சலம் போய்விடும்; பரிபூரணமாகப் போகாவிட்டாலும் ஓரளவாவது போய்விடும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.”

அவன் லேசாகச் சிரித்தான், பிறகு நிகலாயின் தோள்பட்டைமீது. தட்டிக் கொடுத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்.

“இது இருக்கிறதே. இது ஒரு குழந்தை நோய் மாதிரி; மணல்வாரி நோய் மாதிரி. நம் எல்லோருக்குமே இந்த நோய் என்றாவது ஒரு நாள் வந்துதான் தீரும். பலமுள்ளவனை அது அவ்வளவாகப் பாதிக்காது; பலமில்லாதவர்களை மோசமாகவும் பாதிக்கக்கூடும். இந்த நோய் எப்போது பற்றும் தெரியுமா? நம்மை நாமே உணர்ந்துகொள்ள முனையும் சமயம் பார்த்து. எனினும் வாழ்க்கையைப் பரிபூரணமாக உணர்ந்துகொள்ளாமல், அதில் நமக்குரிய இடத்தை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற குறைப்பக்குவ சமயம் பார்த்து, நம்மை வந்து பற்றிக் கொண்டுவிடும். நீதான் உலகத்திலேயே உயர்ந்த ரகச் சரக்கு என்றும், எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத் தோன்றும்.

ஆனால் கொஞ்ச காலம் போனால், எல்லோருடைய இதயங்களும்… உன் இதயத்தைப் போலவேதான் இருக்கின்றன என்ற உண்மையை நீ உணர்ந்து கொள்வாய். உணர்ந்த பின்னர் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும். கூப்பிடு தூரத்துக்குக் கூட ஒலிக்காத உனது சின்னஞ்சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியிலே கொண்டு கட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உன் அறியாமையைக் கண்டு நீயே நாணம் அடைவாய், உனது மணியை போன்ற பல்வேறு சிறுமணிகளின் சம்மேளனத்தோடுதான் உனது மணியோசையும் ஒன்றுபட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ உணர்வாய். நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் விழுந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா??

“எனக்குப் புரியலாம். ஆனால் நான் அதை நம்பத்தான் இல்லை’ என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் நிகலாய்.”

ஹஹோல் சிரித்துக்கொண்டே துள்ளியெழுந்தான்; பரபரவென்று நடக்க ஆரம்பித்தான்.

”ஏ, பார வண்டி! நானுங்கூடத்தான் அதை நம்பவில்லையடா!” என்றான் ஹஹோல்.

“என்னை ஏன் பார வண்டி என்று சொன்னாய்?” என்று உயிரற்ற சிரிப்போடு ஹஹோலைப் பார்த்துக் கேட்டான் நிகலாய்.

“ஏனா? நீ அப்படித்தானே இருக்கிறாய்?”

திடீரென்று நிகலாவும் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். சிரிக்கும்போது அவன் வாய் விரிந்து திறந்திருந்தது.

“என்னப்பா இது… என்ன சிரிப்பு?” என்று நிகலாயின் முன்னால் சென்று நின்று வியப்புடன் கேட்டான் ஹஹோல். “இல்லை. திடீரென்று ஒன்றை நினைத்துக்கொண்டேன். சிரிப்பு வந்தது. உன் மனத்தைப் புண்படுத்த எண்ணுபவன் உண்மையிலேயே முட்டாளாய் தானிருக்க வேண்டும்” என்றான் நிகலாய்.

“என் உணர்ச்சியை எப்படிப் புண்படுத்த முடியும்?” என்று தோளை உலுப்பிக்கொண்டே கேட்டான் ஹஹோல். “அது எனக்குத் தெரியாது” என்று அன்பு கலந்த இனிய புன்னகையோடு சொன்னான் நிகலாய். “உன்னை ஒருவன் புண்படுத்திவிட்டால். பின்னால் அவன்தான் அதையெண்ணி வெட்கப்பட்டுக் கொள்ளவேண்டும். அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.”

”வழிக்கு வந்துவிட்டாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ஹஹோல்.

“அந்திரியூஷா?’ என்று சமையலறையிலிருந்து அழைத்தாள் தாய்.

அந்திரேய் போய்விட்டான்.

தன்னந்தனியாக விடப்பட்ட நிகலாய் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு முரட்டுப் பூட்சுக்குள் புதைந்திருந்த தன் காலை எடுத்து நீட்டினான். காலைப் பார்த்தான், தடித்து போன காலின் கெண்டைக்காலை தடவி விட்டுக்கொண்டான்; கையை உயர்த்தி தனது கொழுத்த உள்ளங்கையையும் உருண்டு திரண்டு, கணுக்களில் மஞ்சளாய்ப் பூ மயிர் வளர்ந்திருந்த தன் குட்டையான கைவிரல்களையும் பார்த்துக் கொண்டான். ஏதோ ஒரு கசப்புணர்ச்சியோடு கையை உதறிவிட்டு அவன் எழுந்தான்.

அந்திரேய் தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்த சமயத்தில் நிகலாய் கண்ணாடியின் முன் நின்ற தன்னுருவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என் உருவைக் கண்ணாடியில் பார்த்தே எவ்வளவோ காலமாகிவிட்டது. என் மூஞ்சியில் விழிக்கக்கூட யாரும் துணிய மாட்டார்கள்!” என்ற ஒரு வறட்டுப் புன்னகையோடு சொல்லிக் கொண்டான்.

“உன் முகத்தைப் பற்றி இப்போது ஏன் கவலைப்பட ஆரம்பித்தாய்?” என்ற நிகலாயைக் கூர்ந்து கவனித்தவாறே கேட்டான் அந்திரேய்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று சாஷா சொன்னாள்.

“அபத்தம்!” என்று கத்தினான் ஹஹோல். அவள் மூக்கோ மீன் பிடிக்கிற தூண்டில் முள் மாதிரி இருக்கிறது, கன்னத்தின் எலும்புகளோ கத்திரிக்கோலைப் போல் இருக்கிறது; ஆனால் அவள் உள்ளமோ நட்சத்திரம் போல் ஒளிவிடுகிறது. அகத்தின் அழகாவது, முகத்தில் தெரிவதாவது?”

நிகலாய் அவனைப் பார்த்தான்; சிரித்தான். அவர்கள் தேநீர் அருந்த உட்கார்ந்தனர்.

நிகலாய் ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்தான். ஒரு ரொட்டித் துண்டின் மீது அமிதமாக உப்பைத் தடவிக்கொண்டான். பிறகு மெதுவாக, ஒரு எருதைப்போல், அசைபோட்டுத் தின்னத் தொடங்கினான்.

“சரி, இங்கே நிலைமை எல்லாம் எப்படி இருக்கிறது?” என்று தன் வாய் நிறைய ரொட்டித் துண்டு நிரம்பியிருக்கும் போதே கேட்டான் அவன்.

தொழிற்சாலையில் தங்கள் பிரச்சாரம் எப்படி வலுப்பெற்று வருகிறது என்ற விவரத்தை உற்சாகத்தோடு எடுத்துரைத்தான் அந்திரேய். ஆனால் நிகலாயோ அதைக்கேட்டு மகிழ்வுறவில்லை; சோர்வடைந்தான்.

“’ரொம்ப நாள் இழுத்தடிக்கிறது. இந்த ஆமை வேகம் கூடாது. அசுர வேகம் வேண்டும்.”

தாய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். திடீரென ஒரு வெறுப்புணர்ச்சி அவள் மனதில் கிளர்ந்தெழுந்தது.

“வாழ்க்கை என்பது குதிரையல்ல, நீ அதைச் சவுக்கால் அடித்து விரட்ட முடியாது!” என்றான் அந்திரேய்.

நிகலாய் தன் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டான்.

“எவ்வளவு காலம்? என்னால் பொறுத்திருக்கவே முடியவில்லையே நான் என்ன செய்வேன்?”

ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்து அவன் ஹஹோலின் முகத்தை நிராதரவான பாவத்தோடு பார்த்தான்.

“நாம் அனைவரும் இன்னும் கற்கவேண்டும்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டிய காரியம்” என்று தலையைக் குனிந்தவாறே சொன்னான் அந்திரேய்.

”நாம் எப்போதுதான் சண்டைக்குக் கிளம்புவது?” என்றான் நிகலாய்.

”நாம் போருக்குக் கிளம்புவது எப்போது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அப்படிக் கிளம்புவதற்கு முன்னால், நாம் நம் எதிரிகளிடம் எத்தனையெத்தனையோ தடவை உதைபடத்தான் செய்வோம். அது மட்டும் எனக்குத் தெரியும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல். “இருக்கிற நிலையைப் பார்த்தால், நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நமது மூளையைத்தான் முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.”

நிகலாய் மீண்டும் சாப்பிடத் தொடங்கினான். அவனது அகன்ற முகத்தைக் கள்ளத்தனமாக ஓரக் கண்ணிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய். அவனைக் கண்டதும் தனக்குள் ஏற்படும் வெறுப்புணர்ச்சியைத் தவிர்ப்பதற்காக அந்தக் கனத்த சதுர உருவத்தில் ஏதோ ஒரு அமைதியைத் தேடுபவள் போலத் தோன்றினாள் அவள்.

திடீரென்று நிமிர்ந்து நோக்கிய அவனது சிறிய கண்களின் கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவளது புருவங்கள் நெளிந்தன. அந்திரேய்க்கு அங்கு இருக்கவே நிலைகொள்ளவில்லை. எனவே அவன் வாய்விட்டுச் சிரித்தான். பிறகு பேசினான். பேச்சை இடையிலே நிறுத்திவிட்டு சீட்டியடித்துக் கொண்டிருந்தான்.

அவனது அமைதியின்மையின் காரணத்தைத் தாய் உணர்ந்து கொண்டதாகத் தோன்றியது. நிகலாய் வாய்மூடி மெளனியாகி அசையாது உட்கார்ந்திருந்தான். ஹஹோல் ஏதாவது பேசினால் மட்டும் அதை எதிர்த்து வறட்டுத்தனமாக பொறுப்பற்று, ஏதேனும் பதில் கூறிக்கொண்டிருந்தான் அவன்.

அந்தச் சிறிய அறை அந்திரேய்க்கும், தாய்க்கும் நெரிசலாய் வசதிக் குறைவாயிருந்தது. எனவே அவர்கள் இருவரும் ஒருவர் மாற்றியொருவர் தங்கள் விருந்தாளியைப் பார்த்தார்கள்.

கடைசியாக நிகலாய் எழுந்திருந்து சொன்னான்;

”நாம் படுக்கப் போகலாமே, சிறையில் உட்கார்ந்து உட்கார்ந்து பழகிப் போய்விட்டது. திடீரென்று அவர்கள் என்னை விடுதலை பண்ணிவிட்டார்கள். நானும் வெளி வந்துவிட்டேன். எனக்கு ஒரே களைப்பாயிருக்கிறது.”

அவன் சமையலறைக்குள் நுழைந்தான். அங்குச் சிறிது நேரம் அவன் தூக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுப்பது தெரிந்தது. பிறகு சவம் மாதிரி அசையவோ சத்தமோ அற்றுக் கிடந்தான். தாய் அந்த அமைதியைக் கவனித்துவிட்டு, பிறகு அந்திரேயிடம் திரும்பி இரகசியமாகச் சொன்னாள்;

“அவன் மனதில் பயங்கரமான எண்ணங்கள் இருக்கின்றன.”

“ஆமாம், அவன் ஒரு அழுத்தமான பேர்வழி” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல். ”ஆனால் அவன் சரியாகிவிடுவான். நானும் கூட முன்னால் இப்படித்தானிருந்தேன். இதயத்தில் தீக்கொழுந்துகள் பிரகாசிப்பதற்கு முன் முதலில் வெறும் புகைதான் மண்டிக்கொண்டிருக்கும். சரி, நீங்கள் படுக்கப்போங்கள். அம்மா, நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து படிக்கப்போகிறேன்.”

மூளையிலே துணித்திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த படுக்கையை நோக்கிச் சென்றாள் தாய். வெகுநேரம் வரையிலும் அவளது பெருமூச்சையும் பிரார்த்தனையின் முணுமுணுப்பையும் அந்திரேயால் கேட்க முடிந்தது. அவன் புத்தகத்தின் பக்கங்களை அவசர அவசரமாய்ப் புரட்டினான்; நெற்றியைத் தேய்த்துவிட்டுக்கொண்டான்; தனது நீண்டு மெலிந்த விரல்களால் மீசையைத் திருகிவிட்டுக் கொண்டான். கால் மாற்றிக் கால் போட்டுக்கொண்டான். கடிகாரம் தன்பாட்டில் சப்தித்துக்கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே காற்று முனகி ஓலமிட்டது.

”ஆ! கடவுளே!” என்று தாயின் மெதுவான தணிந்த குரல் ஒலித்தது: ”உலகில் எத்தனையோ பேர், அத்தனை பேரும் அவரவர் துக்கத்தால் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அழாமல் இருக்கும் அந்தப் பாக்கியசாலிகள் எங்கேதான் இருக்கிறார்களோ?”

”இருக்கிறார்கள். அம்மா” என்றான் ஹஹோல்; “சீக்கிரமே அவர்களில் பலரை, பல்லாயிரம் பேரை, நீங்கள் காணப்போகிறீர்கள்.”

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்றொரு அரசியல் சித்தாந்தம் !

லகின் மிக உயர்ந்த சிலையைத் திறந்து வைத்துள்ளார் திருவாளர் நரேந்திர மோடி. சுமார் 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை முதலில் கற்பாறைகளால் அமைக்க வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாக திறப்பு விழாவின் போது பேசிய பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்காக அக்கம் பக்கத்து மலைகளைச் சுற்றிப் பார்த்த போது (அவர் சொல்கிறார்; நாம் நம்புவோம்) அந்தப் பாறைகள் இலகுத் தன்மை வாய்ந்ததாக இருந்ததை அறிந்துள்ளார். இதற்கிடையே தீவிரமாக மூளையைக் கசக்கியதில் (மோடியின் மூளை தான்) தீர்வு ஒன்று கிடைத்துள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என்கிற அடைமொழிக்குச் சொந்தக்காரர் என்பதால் இரும்புச் சட்டங்களாலேயே சிலையை வடிப்பதென பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். பின் மேற்படி சிலையை 70,000 டன் சிமெண்ட், 24,500 டன் இரும்பு, 1700 மெட்ரிக் டன் பித்தளை (பிரான்ஸ்) உள்ளிட்ட கந்தாயங்களைப் பயன்படுத்திக் கட்டியுள்ளனர். பட்டேல் இரும்பு மனிதராக இருந்த அதே நேரம் சிமெண்ட் மனிதராகவும், வெண்கல மனிதராகவும் விளங்கியுள்ளார் என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

படிக்க:
♦ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்
♦ ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?

சிலைத்திறப்பை ஒட்டி நகர்ப்புற நக்சல்கள் நிறைந்த தமிழ்நாட்டு சமூக வலைத்தள வட்டாரங்களில் கேலியும் கிண்டலுமாக அமளிதுமளிப்பட்டது. சிலர் திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரனின் தலையை போட்டோஷாப்பில் பட்டேலின் சிலையோடு இணைத்திருந்தனர். வெறுங்காலிலேயே குத்தாட்டம் போடும் கூட்டத்தின் காலில் சலங்கையைக் கட்டி விட்டது “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” .

விசயம் என்னவென்றால், ஒற்றுமைச் சிலை அல்லது ஒருமைப்பாட்டுச் சிலை (Statue of Unity) என நாமகரணம் சூட்டப்பட்டுள்ள மேற்படி சிலையை ஒட்டி உலக மொழிகள் சிலவற்றில் அதன் பெயரை எழுதிய பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மேற்படி பதாகையில் Statue of Unity என்பதை தமிழில் “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என “முழி பெயர்ந்திருந்தனர்”. தகவல் கிடைத்ததும் தமிழ் வலைஞர்கள் சதிராடித் தீர்த்து விட்டனர்.

உண்மையில் சீனம், அரபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் “முழி பெயர்க்கப்பட்டிருக்கும்” மேற்படி வாசகத்தை மொழிபெயர்ப்பு செய்யாமல் ஒலிபெயர்ப்பு செய்துள்ளனர். எனினும், தமிழ் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில் பா.ஜ.கவின் நாராயணன், இலக்கிய பிரிவைச் சேர்ந்த ஸ்லீப்பர் செல் உறுப்பினர் எழுத்தாளர் மாலன் உள்ளிட்டோர் இத்தகவல்  பொய்யானது என்றும், அப்படி ஒரு அறிவிப்புப் பலகையே வைக்கப்படவில்லை எனவும் சாதித்தனர். அதே நேரம், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும், மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணனும், தவறு சரி செய்யப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (தினமணி கூரூப்) பத்திரிகை மேற்படி “முழி பெயர்ப்பு” செய்தியே தவறானது என்றும், சம்பந்தப்பட்ட (பெயர் குறிப்பிட விரும்பாத) அதிகாரியிடம் தாம் பேசி உறுதிப் படுத்திக் கொண்டதாகவும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால், புகைப்படத்தை எடுத்த பி.பி.சி செய்தியாளர் தான் அப்புகைப்படத்தை எடுத்ததையும், அவ்வாறு ஒரு அறிவிப்புப் பலகை சர்தார் பட்டேலின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்ததையும் உறுதிப்படுத்தினார். குஜராத் முதல்வரின் ட்விட்டரில் வெளியான புகைப்படங்களிலும் அந்த அறிவிப்புப் பலகை இடம் பிடித்திருந்தது.

பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல் உறுப்பினர் எழுத்தாளர் மாலன்.

அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்ததும், அதில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் வன்கலவி செய்யப்பட்டதும் உறுதியான நிலையிலும், பா.ஜ.க நாராயணனும், மாலனும், தமது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை – அவர்களைப் பொறுத்தவரை அது பொய்ச் செய்தி தான். ஒரே விசயத்தைக் குறித்து இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட “உண்மைகள்” உலாவும் நிலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது; ஆனால், “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” எனினும் தத்துவத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.

*****

பாரதிய ஜனதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி முழுவதுமே ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாகத் தான்  இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். கருப்புப் பணத்தை ஒழிப்பதே நோக்கம் என முதலில் சொல்லப்பட்டது; பின்னர் கள்ளப் பணத்தையும் ஒழிப்போம் என்றனர். கருப்புப் பணம் வங்கிகளுக்குத் திரும்ப வராது என்றார்கள். ஐம்பது நாட்களில் பலன் கிடைக்கவில்லை என்றால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னைத் தூக்கிலேற்றுங்கள்  என்று பிரதமரே சவால் விட்டார்.

செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் திரும்பி வந்த பின் அவற்றை ‘வருடக்கணக்கில் எண்ண்ண்ண்ணி’ இறுதியில் சில மாதங்களுக்கு முன் 99 சதவீத நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இதில் பூட்டான் மற்றும் நேப்பாள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளிடம் இருப்பில் இருக்கும் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 100 சதவீதத்திற்கும் மேலான தாள்கள் திரும்பி வந்து விட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ள வெண்டும்.

15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதில் திரும்ப வராது என்று கணிக்கப்பட்ட 3-4 லட்சம் கோடி கருப்புப் பணம் வெள்ளையானது; 100-க்கும் மேலான மக்கள், வங்கித் தானியங்கி இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்கையில் மரணமடைந்தனர்; 15 லட்சம் வேலைகள் மூன்றே மாதங்களில் காணாமல் போனது; புதிய நோட்டுக்கள் அச்சடிக்க 7,965 கோடி தண்டச் செலவு. நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக தலை குப்புற விழுந்தது தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கிடைத்த ‘பலன்களின்’ சாராம்சம்.

படிக்க:
♦ மோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்
♦ மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

என்றாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் வெற்றி என்பதே பா.ஜ.கவினரின் துணிபு. எப்படி வெற்றி? அதான் எல்லா பணமும் வங்கி வலைப்பின்னலுக்குள் வந்து விட்டதே என்று தோசையை அப்படியே திருப்பிப் போட்டு விட்டனர். தலை விழுந்தால் தோல்வி என்பது தானே விதி முறை – பூ விழவில்லை என்றால் தோல்வி என்று சொல்லவில்லை அல்லவா? ஆக மொத்தம் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவத்தின் அடிப்படையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் வெற்றியானது.

அதற்கும் கொஞ்சம் முன்னே சென்றால், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பணத்தை மீட்டு 15 லட்சம் போடப்போவதாக சொன்னார்கள். தேர்தலில் வென்ற பிறகு அதெல்லாம் ஜெயிக்க மாட்டோம் என்கிற நம்பிக்கையில் சொன்னது; இப்போது ஜெயித்து விட்டதால் செல்லாது என்கிறார்கள். ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவம் அதன் கருவடிவில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திலேயே காணப்பட்டது என்பதை 15 லட்ச விவகாரத்தில் மட்டுமல்ல – அகமதாபாத்தில் உதித்தெழுந்த சீனச் சாலைகள் மற்றும் கம்யூட்டரின் மதர் போர்டில் காட்சியளித்த குஜராத் நகரங்களிலும் காண முடிந்தது. நமக்குத் தான் ‘அப்போ புரியலை; இப்போ புரியுது’

பின்னர் நாட்டு மக்களின் தலையில் விடிந்தது ஜி.எஸ்.டி என்கிற நவீன மூட்டைப் பூச்சி நசுக்கும் இயந்திரம். தொழில் புரிவோர் வரிகட்டுவதை எளிமையாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் இருக்கும் ‘நெளிவு சுழிவுகளை’ சிறு தொழிலதிபர்கள் புரிந்து கொள்வதற்குள் அவர்களின் தொழில்கள் மொத்தமும் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போனது. என்றாலும் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் ஜி.எஸ்.டி மாபெரும் வெற்றி; எப்படி? எளிமைப்படுத்துவதே நோக்கம் அல்லவா, தொழில்கள் இல்லை என்பதால், வரிகட்டுவதும் தேவையில்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. வரி கட்ட வேண்டிய தேவை இல்லாததால், தொழிலதிபர்களும் இனிமேல் வருமான வரித்துறையின் சிக்கலான வரிவிதிப்பு முறைகளுக்குள் தலையைக் கொடுக்கத் தேவையில்லை. அனைத்தும் எளிமையாகி விட்டது.

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியின் ஆகச் சிறந்த பங்களிப்பு ரபேல் போர் விமானங்கள். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வெறும் 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் மோடி கையெழுத்திட்ட போது (அப்போதைய) பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர்  கோவாவில் மீன் கடை ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார். பழைய ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக விலை என்பதோடு, ஒப்பந்தப்படி கூட்டுப் பங்கு நிறுவனம் துவங்க ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருந்த அரசுப் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் கழட்டி விடப்பட்டு சின்ன அம்பானியின் நிறுவனம் நுழைக்கப்பட்டது.

இதைக் குறித்த விவரங்கள் அனைத்தும் பிரான்சு பத்திரிகைகளில் (விலை விவரங்கள் உட்பட) வெளியாகிக் கொண்டிருந்த போது நம்முடைய (இப்போதைய) பாதுகாப்புத்துறை அமைச்சரோ, ரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கே உலை வைத்து விடும் என்றொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையே பாதுகாப்புத்துறை தொடர்பான விசயங்களுக்கு நிதி அமைச்சரும், நிதி அமைச்சகம் தொடர்பான விளக்கங்களை தகவல் தொடர்புத்துறை அமைச்சரும், தகவல் தொடர்புத் துறை தொடர்பான விளக்கங்களை வேறு ஒரு துறையின் அமைச்சரும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் ஊறுகாய் போடும் படங்களை வெளிட்டு ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனியன் தத்துவத்தின் அடிப்படையில் சேவையாற்றிக் கொண்டிருந்தார்.

இந்த வரிசையில் புதுவரவு வங்கித்துறை விவகாரங்கள். ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் ஏறத்தாழ திவாலாகி பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 90 ஆயிரம் கோடி வட்டியை கட்டவில்லை. அரசு மற்றும் தனியார் துறையின் கட்டுமானப் பணிகளுக்கு மேற்படி நிறுவனமே நிதி உதவி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மோடியின் கனவுத் திட்டங்களான குஜராத் கிஃப்ட் சிட்டி, புல்லட் ரெயில் போன்ற திட்டங்களுக்கான நிதி உதவியை இந்த நிறுவனமே செய்து வந்தது.

ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் திவாலாவது ஏறக்குறைய உலகப் பெருமந்தத்தைத் துவக்கி வைத்த லேமென் பிரதர்சின் திவாலின் இந்திய வடிவம் என பொருளாதார நிபுணர்களே தொண்டை அடைக்க உட்கார்ந்திருந்த நிலையில் , வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வாராக் கடன்கள் ஒழுங்கு செய்யப்படவில்லை என்றால் பொதுத்துறை வங்கிகளின் கடன்களை நிறுத்தி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன் காரணமாக வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கி வந்த வீட்டுக் கடன்களின் தவணைகளும் தடைபட்டது.

படிக்க:
♦ ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
♦ ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேலைப் பொருத்த வரை வாராக் கடன்கள் ஒழுங்கு செய்யப்படாத நிலையில் பொதுத்துறை வங்கிகளைக் கடன் கொடுக்க அனுமதிப்பது நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தையே சீரழித்து விடும் என்று அஞ்சுகிறார். சாவு உறுதி என்றால் அது என் கையால் நடந்ததாக இருக்கக் கூடாது என்பது அவரது நிலை. ஆனால், அரசியல் சாசணத்தின் ஏழாவது பிரிவில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பிரிவு ஒன்றை பயன்படுத்தியுள்ளது மத்திய அரசு.

ஆக மொத்தம் பாரதிய ஜனதாவின் கையில் மொத்த நாடும் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் வலைஞர்களோ முழி பெயர்ப்புக்காக பொங்குவதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? சிந்திப்பீர் நியாயமாரே!

– சாக்கியன்

திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !

9

றந்த காலத்தில் கதைத் திருட்டிற்காக பேசப்பட்டு விளம்பரமடைந்த சர்கார், நிகழ்காலத்தில் வசூல் சாதனைக்காக வியந்தோதப்படுகிறது. கூடவே கதையில் வரும் ‘அரசியல்’ காட்சிகளுக்காகவும், அ.தி.மு.க.வினர் எதிர்ப்பதை ஒட்டியும் செய்திகளையும் ஆக்கிமித்திருக்கிறது. படம் வெளியான அன்றே தரமான பிரிண்டை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் குறித்தும் விவாதிக்கப்படுவது ஒரு கொசுறு நியூஸ். மொத்தத்தில் ஜாக்பாட் விளம்பரத்தில் சுருட்டப்பட்ட வசூல் மழை!

கார்ப்பரேட் நிறுவன மூளையின் வலிமை குறித்து கத்தி படத்தில் வில்லன் பேசுவார்! சர்காரில் நாயகனே பேசுகிறார். சாதாரண விவசாய கிராமத்தில் இருந்து வந்த விஜய் கார்ப்பரேட் கிரிமினல் மூளையில் புகுந்து துவம்சம் செய்தால் அது கத்தி. அதே  கார்ப்பரேட் மூளையோடு எடப்பாடி ஓபிஎஸ்-ஐ துவம்சம் செய்தால் இது சர்கார்.

இப்படியாக கார்ப்பரேட் உலகைச் சார்ந்தோரே இப்படங்களின் படைப்பிலும், படைத்ததிலும் இருக்கும்போது தங்களைப் பற்றிய மேற்கண்ட கதைகள் குறித்து அவர்கள் வெறுப்படையா விட்டாலும் கொஞ்சம் வெட்கமடைந்திருப்பார்கள். காசு வருகிறது என்றால் கரடியாக கத்தவேண்டுமென்றாலும் கத்துவதற்கு மானம் பார்ப்பவர்கள் அல்ல முதலாளிகள். வாங்கிய சில ஆயிரம் கடனுக்காக தற்கொலை செய்பவன் விவசாயி. சுருட்டிய சில ஆயிரம் கோடி கடனுக்காக மரியாதையுடன் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் முதலாளிகள்.

படிக்க :
♦ சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு
♦ சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !

உலகின் நம்பர் 1 நாடு; அங்கே நம்பர் 1 கம்பெனி; அக்கம்பெனியில் நம்பர் 1 நிர்வாகி சுந்தர் ராமசாமியாக நடிக்கிறார் விஜய். அவரது மகிமை குறித்து பிசினஸ் மேலாண்மை படிக்கும் வெண்ணிறக் கொழுந்துகள் பலப்பல படத்தின் ஆரம்பத்தில் பேசுகிறார்கள். அண்ணாத்தே ஒரு இடத்தில் வந்தால் போட்டி கம்பெனி காலி, போட்டி பிராண்ட் காலி, நினைத்ததை சாதிப்பார், பயங்கரமான மூளைக்காரர், பிசினஸ் மாணவர்களின் கார்ப்பரேட் குரு இன்னபிற.

எங்க ஏரியா உள்ள வராதே என்று தாதாக்களின் மதுக்குப்பி சண்டைகளோடும் ஐயிட்டம் பாடல்களோடும் கதை இறைத்துப் பழகிய கோடம்பாக்கம், கார்ப்பரேட் சண்டைகளையும் அத்தகைய குழாயடிச் சண்டைகளாகவே கருதுவதில் வியப்பில்லை. இவற்றையெல்லாம் தாண்டி கார்ப்பரேட் உலகம் என்பது கண்ணுக்கு தெரியாத முறையில் இயங்கி வருகிறது.

விமான நிறுவனங்கள் ஒன்றாகச் சேர்வது, விளையாட்டு சேனல்கள் ஒன்றாக சேர்வது, பெரிய நிறுவனத்திடம் பெரும் விலைக்கு விற்றுக் கொண்டு சிறிய நிறுவனங்கள் சேர்வது என அத்தகைய கூட்டு, சேர்க்கைகளே இன்றைய முதலாளித்துவத்தின் தந்திரம். தற்போது இந்தக் கூட்டுகளுக்கிடையே முரண்பாடு வருவதும், அது நாடு – ஏகாதிபத்திய முரண்பாடாக விரிவதும் அடுத்த நிலை.

கொக்கோ கோலாவை கிண்டலடித்து பெப்சி விளம்பரம் வெளியிட்டாலும் கொக்கோ கோலாவில் பல்லி கிடந்தது என்றோ, அதன் வேதிக் கரைசலில் பிரச்சினை என்றோ செய்தி வந்தால் பெப்சி நிறுவனம் வெளிப்படையாக கொக்கோ கோலாவிற்கு உதவும் – உதவியிருக்கிறது. காரணம் குளிர்பானத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்தாக வேண்டும்.

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

ரஜினி, விஜயின் மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் போன்ற நிறுவனங்கள் கூட ஆரம்பத்தில் இத்தகைய கோல்மால் வேலைகளை செய்தே கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறின. மாறிய பிறகு அவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக தொழில் செய்வார்கள். நாட்டின் அதிபர்களுக்கு நன்கொடை கொடுப்பார்கள். அவர்களோடு பார்ட்டிகளில் சியர்ஸ் அடிப்பார்கள். அப்படிப் பார்த்தால் அம்பானி, அதானி என க்யூ வரிசையில் பலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அந்த கோல்மால் வேலை செய்தும் தொழிலை தொடர முடியாதவர்களே மல்லையா, நீரவ் போன்றோர்களாக மோடி அரசால் மரியாதையுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் போட்டி நிறுவனத்தை காலி செய்வது என்பது சட்ட விரோதமாகத்தான் நடந்தாக வேண்டும். அந்த வகையில் பார்த்தால் சுந்தர் ராமசாமி இன்றோ என்றோ நிச்சயம் கம்பி எண்ணியிருக்க வேண்டும். இதுதான் சர்கார் நாயகனின் பாத்திர வார்ப்பு! இன்னொரு புறம் அவர்களது கிரிமினல்தனத்தை படு லோக்கலாக காட்டி சரியாகச் சொல்வதாக இருந்தால் ஒரு தமிழ்ப்படத்தில் ஒரு தமிழ் கதாநாயகர் அண்டர் டிராயரில் அணு குண்டை கடத்துகிறார் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். நம்பித் தொலைப்போம்.

எப்படிப் பார்த்தாலும் ஒரு முதலாளித்துவ உலகின் மூளை என்பது எவ்வளவு கிரிமினல்தனமானது என்பதை தமிழ் சினிமாவின் மசாலா கண்ணாடி மூலம் பார்ப்பது என்பது உண்மையான கார்ப்பரேட் கொள்ளையை மறைப்பதற்கே உதவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் ஜெயமோகன் இதில் மறைந்து போன எழுத்தாளர் சுந்தர ராமசாமியை வெச்சு செஞ்சுட்டார். மற்ற எழுத்தாளர்கள் தனது எழுத்தாற்றலுக்கு இணையில்லை என்பதை உறுதி செய்து கொண்டேதான் சுந்தர ராமசாமி அவர் காலத்திய தமிழ் எழுத்தாளர்களை பாராட்டுவதோ இல்லை விமர்சிப்பதோ செய்வாராம். இதை அவர் மறைந்த நாட்களில் ஜெயமோகன் எழுதிய நினைவின் நதியில் காவியம் உறுதி செய்திருக்கிறது. இதனால்தான் ஆரம்ப காலத்தில் குரு ஸ்தானத்தில் இருந்த சுந்தர ராமசாமி பின்னர் சீடனிடம் தோற்றுப் போன ஆடுகளம் வில்லனாக மாறிப் போனார். அந்த வகையில் போட்டி நிறுவனங்களை காலிசெய்யும் சுந்தர் ராமசாமியின் பில்டப், ஜெயமோகனது இலக்கிய ஆன்மாவில் பொதிந்திருக்கும் கொலை வெறி.

கவிஞர் விக்ரமாதித்யன்

இதை நம்மைப் போன்ற பாமரர்கள் கண்டு பிடித்திருந்தாலும், ஒரு ஆக்சன் ஹீரோவின் பெயராக நம்மவர் பெயர் இருக்கிறதே என தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்காக தனது – பிறரது சொத்துக்களை எழுதிக் கொடுத்துப் பயணம் செய்யும் கவிஞர் அண்ணாச்சி விக்ரமாதித்யன் போன்றோர்  மனமுருகும் வாய்ப்பு இருப்பதால் காலச்சுவடு கண்ணன் கூட கவலைப்பட வாய்பில்லை.

இயக்குநர் முருகதாஸுக்கு இலக்கிய அக்கப்போர் ‘அறிவு’ கிடையாது. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பொருளாதார அறிவு கிடையாது. இருவருக்கும் இலக்கியம் – பொருளாதாரத்தை ஆளும் அரசியலின் அரிச்சுவடி தெரியாது. ஆகவே பூலோக சொர்க்கத்தின் நம்பர் ஒன் கார்ப்பரேட் மூளை இப்படியாக கோடம்பாக்கத்தின் கதை இலாகாவில் சதை கிழிந்து சாயம் போன ஒன்றாக இளிக்கிறது. ஒருவேளை கூகிள் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ், பெப்சியின் முன்னாள் தலைவர் இந்திராநூயி போன்ற நம்பர் ஒன் மூளைகள் இதைக் கேள்விப்பட்டால் ஜாலியாக ஒரு பெக் கூடுதலாக அடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.

படிக்க:
கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பகாசுர சுரண்டலை, மக்கள் விரோதத்தை இப்படியாக ஒரு திறமை வாய்ந்த – அதுவும் அண்ணாச்சி கடையில் ஐம்பது காசு கடலைமிட்டாயில் ஊழலை கண்டுபிடிக்கும் அற்பத்தனமான – மூளையாக, ஆக்சன் ஹீரோவாக காட்டுகிறார்கள்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருக்கும் இந்து மேல்நிலைப்பள்ளியில் பல பிரபலங்கள் படித்திருக்கிறார்கள். அந்தப் பள்ளிக்குத்தான் ஓட்டுப் போட அமெரிக்காவில் இருந்து வருகிறார் விஜய். அந்த வாக்கை ஒரு குவார்ட்டருக்கு கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார் யோகி பாபு. அவரது வேலையால் விஜய் தனது கார்ப்பரேட் மூளையைப் பயன்படுத்தி மறுதேர்தலை நடத்தவும் வைக்கிறார். அதன் மூலம் முதலமைச்சராகவும் ஆகும் நிலையில், இப்போதைக்கு அடுத்து சில படங்களில் நடிக்க இருப்பதால் போனால் போகிறது என சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ முதலமைச்சராக மாற்றுகிறார்.

ஒருவேளை கூகிள் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ், பெப்சியின் முன்னாள் தலைவர் இந்திராநூயி போன்ற நம்பர் ஒன் மூளைகள் இதைக் கேள்விப்பட்டால் ஜாலியாக ஒரு பெக் கூடுதலாக அடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.

அரசு வட்டாரத்தில் பேசிப் பார்த்தீர்கள் என்றால் இந்த சகாயம் எப்பேற்பட்ட விளம்பர மோகி என்பதறியலாம். அந்த வகையில் அவரும் இந்த போனால் போகிறது முதலமைச்சர் போஸ்ட்டை தேவன் பங்கு போடாமல் தந்த சூப்பர் அப்பமாக கருதுவார். அதை சட்டைப் பையில் இருந்து தானமாக வீசிய விஜய் ஒரு மாபெரும் வள்ளலாக சகாயம் அவர்கள் எதிர் வரும் கூட்டங்களில் பேசப்படுவது உறுதி.

கள்ள ஓட்டு குறித்து மவுனம் சாதிக்கும் தமிழகம் கள்ள உறவிற்கு மனைவியை கொடுக்கும் மானங்கெட்ட கணவனாக இருக்கிறது என்று விஜய் பேசுகிறார். அப்படிப் பார்த்தால் கள்ள ஓட்டால் தனது ஓட்டை பறிகொடுத்த பெண்களுக்கு என்ன உவமை என்று சர்கார் படைப்பாளிகளைத்தான் கேட்க வேண்டும். ஆண்கள் ஊர் மேய்வது சகஜம்தானே, பெண்தானே பிரச்சினை என்று அப்பட்டமான ஆணாதிக்கத்தை வைத்து யோசித்திருக்கிறார்கள் சர்கார் குழுவினர். ஒரு படத்தின் திருப்பு முனை எனும் அக்கப் போருக்காக தமிழக மக்களை இப்படி இழிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்தக் கதையை பிளாக்கில் விற்றுத்தான் வசூலில் சாதனை என்று விளம்பரம் வேறு! மூணு சீட்டுக் காரன் கூட இப்படி பச்சையாக மோசடி செய்யமாட்டான்.

நம்ம ஆட்டோக்காரர்கள் இன்டிகேட்டரை இடது புறம் போட்டு வலது புறத்தில் கையைக் காண்பித்து நேராக போவார்கள் என விவேக் சொன்னதை கொஞ்சம் மாற்றிப் போட்டு லெப்டில் ஏர்போர்ட்டு, ரைட்டில் வீடு, நேரே போனால் என நீதிமன்றத்திற்கு போகிறார்கள். அங்கே நீதிபதியின் அருகில் அமர்ந்து நேற்று சாப்பிட்ட பிரியாணி ஜீரணமாக என்ன கசாயம் குடிப்பது என்று ஹீலர் பாஸ்கர் பேசுவது போல விஜய் லா பாயிண்ட் பேசுகிறார். அவர் அமர்த்திய பல இலட்ச ரூபாய் ஊதியம் வாங்கும் ஜேட்மலானி சார் பிச்சுட்டீங்க என்று கை தட்டுகிறார். நீதிபதியும் இத்தனை நாள் குப்பை கொட்டியும்  கிடைக்காத ஒரு புதிய லா பாயிண்டை பார்த்து வாய் பிளக்கிறார்.

நமது ஓட்டை ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டால் நமது உரிமைக்கு தேர்தல் கமிசன் வைத்திருக்கும் பரிகாரம் என்ன? அதுதான் 49 பி-யாம். அதன்படி தனது வாக்கைப் போட விஜய் முடிவு செய்து அதையே வாட்ஸ்ப்பில் பற்ற வைக்கிறார். திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழகம் எங்கும் இந்த லா பாயிண்டை வைத்து வரும் மக்களுக்காக வாதாடுகிறார்களாம். அவர்கள் பின்னே தான் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அடக்கமாக வேறு விஜய் கூறுகிறார்.

இன்றைக்கு கைப்பிள்ளையின் மீம்களில் இடம்பெறும் அளவுக்கு பீஸ் பீசாகிப் போன சி.பி.ஐ எனும் போலீசுப் பிரிவு ஒரு காலத்தில் மலையாளப் படங்களில் மாபெரும் சாகசக்காரத் துறையாக சித்தரிக்கப்பட்டது. லோக்கல் போலீசின் மீசைகளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு உருவிவிட்ட பூணூலால் கொலைகாரனை கண்டுபிடிப்பார் மம்முட்டி. அதே மம்முட்டி தற்போது கொலைகாரனை பிடிக்க காஃபி குடித்தவாறு விக்கி பீடியாவின் பாய்சன் தலைப்பில் ஆராய்ச்சி செய்வார். ஏனப்பா ஒரு அதி உயர் போலீசு விசம் குறித்த நவீன விசயங்களை விக்கிப்பீடியாவின் துணை கொண்டுதான் கண்டுபிடிக்கிறார் என்றால் அந்த விசமே தனது நிலை குறித்து வருந்தி தற்கொலை செய்து கொள்ளாதா?

அண்டர் டிராயரில் அணு குண்டை கடத்தும் நம் தமிழ் நாயகர்கள்.

கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இந்த 49-பி வருகிறது. ஏதோ சில ஆமை வடை வக்கீல்களோடு டிஸ்கசன் செய்து இந்த பயங்கரமான பாயிண்டை கண்டு பிடித்திருக்கிறார்கள் போலும். அல்லது இந்த பாவத்தை சர்காரின் ஒரிஜினல் படைப்பாளியான வருண் ராஜேந்திரன் கூட செய்திருக்க கூடும். கதைதான் திருட்டே ஒழிய மசாலா மாசாலாதான், அது தேனாக இருக்குமா என்ன?

ஒருவர் ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டால் அந்த ஒருவர் என்ன செய்ய முடியும்? நெஞ்சு வெடித்து மாரடைப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பிரிவை வைத்திருக்கிறார்கள். அதன்படி சிவாஜி கணேசன், பூத்தில் இருக்கும் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து 49-பி படிவத்தை வாங்கி வாக்களித்து அதை தனியாக கொடுக்கலாம். மற்றபடி மொத்த வாக்கு எண்ணிக்கையில் அது சேர்க்கப்படாது. கள்ள ஓட்டையும் மொத்த எண்ணிக்கையில் பிரிக்க முடியாது. ஆகவே இந்த 49-பியால் எந்த விளைவும், நல்லதும் நடந்து விடாது. சரி இலட்சக்கணக்கானோர் இப்படி புகார் கொடுத்தாலும் இருக்கின்ற சட்ட நடைமுறைப்படியும் ஒன்றும் ஆகிவிடாது.

படிக்க :
♦ சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !
♦ திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

மேலும் பீகார் பாணி பூத் கேப்சரிங் என்பது தற்போது மின்னணு எந்திரத்தால் வழக்கொழிந்து போய்விட்டது. ஆகவே ஒரு தொகுதியில் ஒரு சிலவற்றுக்கு மேல் கள்ள ஓட்டு விழுந்து விடாது. தற்போது ஆதார் அடையாள அட்டையை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைத்து விட்டால் அந்த ஒரு சில கள்ள ஓட்டுக்களுக்கும் வழியில்லை என்று தேர்தல் கமிசன் கூறுகிறது. அந்தபடிக்கு ஓட்டுப் போட ஆதார் அவசியம் என்ற ஆள் காட்டி வேலையைத்தான் சர்கார் வலியுறுத்துகிறது.

விக்கிபீடியாவில் கிரியேட்டிவிட்டியை கண்டடைய ஆட்டையைப் போடும் ஒரு கும்பலால் நமது உரிமைகள் எப்படி பறிபோகிறது பாருங்கள்! இந்த அக்கப்போருக்காக மற்ற எல்லாவற்றையும் காமெடி பீசாக்கிவிட்டார்கள் படக்குழுவினர். திருவல்லிக்கேணி தேர்தல் பூத்திலேயே நானும் காரில் ஓரமா ஒக்காந்து வரவா என்று கீர்த்தி சுரேஷா, ரமேஷா கேட்கும் போதே சர்கார் கதாநாயகியின் இடம் தெரிந்து விடுகிறது.

இதற்கு மேல் வம்படியாக பார்வையாளர்களின் கண்ணில் இருந்து கண்ணீரை கையை விட்டு எடுப்பதற்காக கந்து வட்டிக் தீக்குளிப்பை சேர்த்திருக்கிறார்கள். எடுத்த கையோடு அடுத்த காட்சிகளில் விஜய் ஐயிட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடுகிறார். இதுதான் 200 கோடி ரூபாய் வசூலின் சாமர்த்தியமாம். மதுரை அன்புவின் கந்து வட்டி கொடுமைக்காக ஒரு தயாரிப்பாளரே தற்கொலை செய்திருக்கிறார். இதை தட்டிக் கேட்கத் துப்பற்ற விஜய் இங்கே இசக்கிமுத்து கொலைக்காக கோபங்களை ஃபார்வர்டு செய்யும் வாட்ஸ் அப் இளைஞர்களை நக்கல் செய்கிறாராம்.

இப்போதைக்கு அடுத்து சில படங்கள் நடிக்க இருப்பதால் போனால் போகிறது என சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ முதலமைச்சராக மாற்றுகிறார். தளபதி விஜய்.

ஆனால் வறுமை, ஏழ்மை, துயரம், மரணம் போன்றவற்றை ஒரு நாயகனது ரொமாண்டிக்கான ஆக்சன் படத்திற்காக ஆங்காங்கே முந்திரிப் பருப்பு போல தூவும் அயோக்கியத்தனத்தைத்தான் நம்மால் சகிக்க முடியவில்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் பல செய்திகள் வந்து போகின்றன. ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு வெளிப்படையாக கொல்லும்போது மோடி அரசு அதை வெளிப்படையாக கண்டிக்காத போது அந்த மீனவர்கள் நாங்கள் இந்தியாவில் இல்லை என்று அறிவியுங்கள் என்கிறார்கள். இதைக்கூட வெளிப்படையாக கூறி மோடி அரசையோ, சிங்கள அரசையோ கண்டிக்கத் துப்பற்ற சர்கார் கூட்டம் என்னவெல்லாம் பேசுகிறது?

அதாவது விஜய் மீனவர் குடும்பமாம். வாக்களிப்பதற்காக அவரது தந்தை நடுக்கடலில் இருந்து வர இருந்தாராம். மற்றவர்கள் அஸ்தியை கடலில் கரைப்பார்களாம். விஜய் மட்டும் அப்பாவை கடலில் கரைத்து விட்டாராம். இதை மீனவர்கள் வாழும் அயோத்தியா குப்பத்தில் கூறுவாராம். ஒக்கி புயல் முதல், பாக் நீரிணை வரை மீனவர்கள் இந்த அரசால் சாகடிக்கப்படுகிறார்கள். நடிகர் விஜயோ அந்த அவலத்தை காசாக்குவது எப்படி என்று கதை செய்வாராம். அதற்கு முருகதாஸும், ஜெயமோகனும் மூளையை கொடுப்பார்களாம். பிறகு சன் டி.வி மாறன்கள் அதை வசூலாக்குவார்களாம்.

இந்த இலட்சணத்தில் மருத்துவமனைப் படுக்கைகளில் இருக்கும் நோயாளிகளை வைத்து சர்கார் விஜய் நமக்கு விஜயகாந்த் பாணியில் அ.தி.மு.க அரசின் ஊழலை அம்பலப்படுத்துகிறாராம். விஜயகாந்தே இப்போது அஸ்மித்துவிட்ட நிலையில் தளபதி விஜயின் அம்பலம் என்ன செய்து விடும்?

படிக்க :
♦ மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?
♦ நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?

பொதுப்பணித்துறைதான் டெங்கு கொசுவிற்கு காரணம் என்ற மகத்தான் உண்மையை கண்டுபிடித்த சர்காரின் அல்பங்களை விட அ.தி.மு.க அரசு பரவாயில்லையோ என்று ஒரு கணம் தோன்றத்தான் செய்கிறது. ஏனெனில் விக்கு வைக்காத ஜெயக்குமாரோ, காசு பணத்தை விட்டு வைக்காத விஜய் பாஸ்கரோ கொசு, டெங்கு போன்ற வஸ்துக்கள் சுகாதரத்துறையில்தான் வரும், பொதுப்பணித்துறையில் வராது என்ற அளவுக்கு அறிவுள்ளவர்கள்.

இனி விஜய் அமைக்கப் போகும் சர்காரில் முருகதாஸ், ஜெயமோகன் போன்றோரெல்லாம் அமைச்சாரானால் என்ன நடக்கும்? சுள்ளி பொறுக்கும் மலைவாழ் மக்கள் ஜெயமோகனின் காடு படிக்க வேண்டும், இராணுவத்தில் பணி பெறுவதற்கு துப்பாக்கி படத்தில் இருந்து விடையளிக்க வேண்டும் என்று வராதா என்ன?

இதில் ஒளிப்பதிவு சூப்பர், பின்னணி இசை அட்டகாசம், உடை ஆடை அருமை என்று டெம்பிளேட் வார்த்தைகளைப் போட்டு கார்ப்பரேட் ஊடகங்கள் விமர்சனம் என்ற பெயரில் சோப்பு போடுகின்றன. இது கூடப் பரவாயில்லை சில அப்பாவிகள், கேள்வி கேட்டால்தான் பதில் வரும்,  காலை மடக்கினால்தான் உட்கார முடியும், கண் இருந்தால் தான் கண்ணடிக்க முடியும், நீ பாதி முட்டாள் என்றால் கோபப்படுவாய், நீ  பாதி புத்திசாலி என்றால் பெருமைப்படுவாய் போன்ற மண்டபத்தில் சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்தால் எழுதிக் கொடுக்கப்படும் கிளி ஜோசிய வசனங்களுக்காக ஜெயமோகனை பாராட்டுகிறார்கள். என்ன இருந்தாலும் நான்கு வெண்முரசின் உழைப்பல்லவா!

தீபாவளியை குறி வைத்து இறங்கியிருக்கிறது சர்கார். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இரண்டு மணிநேரம்தான் என உத்தரவு போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். வட மாநிலங்களில் மக்களின் பண்டிகையான தீபாவளி அன்று கூடக்குறைய பட்டாசு வெடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்போமென பா.ஜ.க அரசுகளோ பிற அரசுகளோ இருக்கும் போது தமிழக அரசு மட்டும் எல்லா மாவட்டங்களிலும் தடை மீறி வெடித்தவர்கள் மேல் வழக்கு போட்டிருக்கிறது. அந்த அளவுக்கு  சட்டத்திற்கும், அந்த சட்டத்தை கையில் எடுத்திருக்கும் காவி கோஷ்டியினருக்கும் பம்மி பணிந்து ஆள்கிறது எடப்பாடி அரசு! இப்பேற்பட்ட அரசை பயங்கரமாக பேசி எதிர்க்கிறாராம் விஜய். அதில் கோமளவல்லி என்ற பெயரோடு முதலைமைச்சரின் மகளாக பாப்பா வருகிறாம்.

கோமளவல்லி உயிரோடு இருந்த போது கொடநாடு சென்று ஒன் பாத்ரூம் போவதை கூட தள்ளி வைத்து விட்டு மணிக்கணக்கில் காத்திருந்தார் சர்கார் விஜய். அந்த சூரர் இன்று கருணாஸ் போன்ற காமடியன்களே வம்பிழுத்து சண்டை போடும் எடப்பாடி கும்பலை பயங்கரமாக எதிர்க்கிறாராம். இதனால் காண்டான எடப்பாடி கும்பல் உடனே தியேட்டர்கள் மூலம் ஆர்ப்பாட்டம் செய்யுமாம். இவர்கள் இருவரையும் நாம் எதிர்க்க வேண்டுமென்றால் எந்த இடத்திற்கு செல்வது?

தமிழகத்தில் ஊழல் என்று ரஜினி, கமல், குருமூர்த்தி, அமித்ஷா பேசுவது போல சர்கார் விஜயும் பேசுகிறார். இதனால் தமிழகத்தில் ஊழல் இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் ஊழலின் தலைநகரம் புதுதில்லியில் இருக்கும் போது விஜய் போன்ற சூரப்புலிகள் பாஜகவை பேசாமல், மல்லையா, நீரவ் மோடி, பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி கொள்ளைகளை பேசாமல் கமிஷன் பிரதர்சை மட்டும் கண்டிப்பது ஏன்? தில்லியில் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு கவுரி லங்கேஷ், கல்புர்கி முதல் சமீபத்தில்  கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் வரை பல செய்திகள் இருக்கின்றன. ஆகவே மறந்தும் காவிக் கறையை பேசக்கூடாது என்பதை ஜெயமோகன் மட்டும் சொல்ல வேண்டியதில்லை. விஜய் வகையறாக்களுக்கும் அது நன்றாகவே தெரியும்.

ஒன்று மட்டும் நிச்சயம். விஜய் தலைமையில் ஒரு சர்கார் அமையுமானால் நாம் ஐம்பது ஜெயலலிதா, நூறு எம்.ஜி.ஆர்கள் ஒன்றாக சேர்ந்து செய்யும் வன்முறையை அனுபவிப்பது உறுதி. ஒரு பாசிஸ்டின் ஆட்சியை விட ஒரு கோமாளி பாசிஸ்டு ஆட்சியில்தான் கொடுமைகள் அதிகம்!

ஒரு காட்சியில் இலவச பொருட்களை ஆவேசமான முகத்துடன் வீசுகிறார் இயக்குநர் முருகதாஸ். இது குறித்து மக்கள் பலர் பொங்கி எழுந்திருக்கிறார்கள். அதனால் அதைத் தவிர்ப்போம். ஆனால் அதே மக்கள் பிளாக்கிலும், ஒயிட்டிலும் போடும் பிச்சையால்தான் இந்த சினிமாக் கூட்டம் நத்திப் பிழைத்திருக்கிறது! இந்த ஒட்டுண்ணிகளை அடித்து விரட்டாமல் இங்கே ஊழலையோ, அதிகார முறைகேடுகளையோ ஒழிக்க முடியுமா என்ன?

– இளநம்பி

தியாகிகளுக்கு செவ்வணக்கம் | வசந்தத்தின் இடி முழக்கம் | ம.க.இ.க. பாடல் காணொளி

லகம் முழுவதும் உழைக்கும் மக்களை, சுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ’வசந்தத்தின் இடி முழக்கம்’ பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல் !

***

பாடல் வரிகள் :

செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கமே!

தெலுங்கானாவில் நிஜாம் வம்ச
ஆதிக்க வேர் அறுக்கவே
குருதி சிந்தி உயிர் துறந்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

நக்சல்பாரி எழுச்சி போரில்
துப்பாக்கிகள் ஏந்தியே
அதிகாரத்தை வென்றெடுத்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

பண்ணைக் கொடுமை
மண்ணில் சாய
செஞ்சுடரை ஏந்தியே
இன்னுயிரை ஈந்து சென்ற
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

பாசிசத்தை வேரறுக்க
பாட்டாளிகள் தலைமையிலே
அணி திரண்டு போர் தொடுத்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

வட ஆற்காடு தர்மபுரியில்
வர்க்கப் போரின் களத்திலே
தோட்டாக்களை எதிர்கொண்ட
தோழர்களுக்கு செவ்வணக்கம்!

சாதிமதக் கொடுமைகளை
வேரறுத்து சாய்க்கவே
சமர் புரிந்து உயிர் துறந்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம் !

செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கமே!
செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கமே!

***

யூடியூபில் காண:

புரட்சியின் தருணங்கள் ! காணொளித் தொகுப்பு !!

லகைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம் என்று காரல் மார்க்ஸ் சொன்ன கம்யூனிச பூதம் இன்றும் முதலாளித்துவத்தை அச்சுறுத்தி வருகிறது.

மூலதனம் நூல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் கடந்த பிறகும், ரசிய சோசலிசப் புரட்சி நடத்தப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவற்றைப் பார்த்து ஜன்னி கண்டவர்களைப் போல் அரற்றுகிறார்கள் முதலாளித்துவவாதிகள்.

மூலதனம் வெறும் புத்தகம் அல்ல முதலாளித்துவத்தின் சாவை முன்னறிந்துகூறிய அசரீரி. எனவே தான் மூலதனதை மீண்டும் படிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என தங்கள் வாயாலே ஒத்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.

பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சியை கோருகின்றன. அதனால் தான் மாஸ்கோவின் குளிர்கால அரண்மனையின் முற்றுகையை நினைவூட்டும் வண்ணம் மக்களின் பேரெழுச்சி போராட்டங்கள் வால் வீதி முதல் மெரினா வரை நீள்கின்றன.

“இனியும் இந்த சமூக அமைப்பை சகித்துக் கொள்ள முடியாது” என்ற முழக்கத்தின் எதிரொலிப்புதான் ஸ்டெர்லைட் வரை நீள்கிறது. “இதோ உனது முடிவு நெருங்குகிறது” என முழங்குகிறது மக்களின் குரல். துப்பாக்கிகளின் வேட்டு சத்தங்களைத் தாண்டி புரட்சியின் ஓசை கேட்கத் தொடங்குகிறது கேளுங்கள் அதை…

காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியான “மார்க்ஸ் எனும் அரக்கன்” எனும் காணொளி.

*****

புரட்சியின் தருணங்கள் !” காணொளி இது உங்களை ரசியப் புரட்சியின் போராட்ட களத்துக்குள்ளாகவே அழைத்து செல்லும்

இது ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிட்டப்பட்டது.

*****

ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிடபட்ட “தோழர் லெனின் சாதனைகள்” எனும் காணொளி…

*****

மெரினா எழுச்சியின் போது தோழர் கோவன் பாடிய “புதிய உலகம் உன் கண்ணில் படவில்லையா” – பாடலின் காணொளி…

*****

“தன்னை முதன்முதலாக மனிதனாக உணர்கிறேன்” எனக் கூறி சோவியத்தின் சமத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன பால்ராப்சன் பாடிய “சோவியத் கீதம்” உங்களுக்காக.

*****

ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிடபட்ட “நவம்பர் புரட்சி நூற்றாண்டு” காணொளி…

தொகுப்பு :

காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை

லித் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா ஷெப்பர்ட் எழுதிய மூன்று நூல்களை முதுகலை படிப்புகளுக்கான அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்திலிருந்து அகற்ற தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது.

நூல்களில் உள்ள கருத்துக்கள் இந்து மதத்தை அவமதிப்பதாக கூறி இந்நடவடிக்கையை தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கான நிலைக்குழு கடந்த அக்டோபர் 25, 2018 அன்று பரிந்துரைத்தது. இம்முடிவு கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதைப்பற்றி விவாதிக்க எதிர்வரும் நவம்பர் 15-க்கு முன்னதாக ஒரு கூட்டம் நடத்தப்படும். மேலும் ’தலித்’ என்ற சொற்பதத்தையே வழக்கொழிக்கவும் இக்குழுவிற்கு நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முதுகலை படிப்புகளுக்கான ஒன்பது பாடத்திட்டங்களைப் பற்றிய விவாதம் ஒன்று நடந்ததாக நிலைக்குழு உறுப்பினரும் பேராசிரியருமான ஹன்ஸ்ராஜ் சுமன் கூறியுள்ளார். “நான் ஏன் ஒரு இந்து அல்ல (Why I am not a Hindu), எருமை தேசியவாதம் (Buffalo Nationalism) மற்றும் இந்து இந்தியாவிற்குப் பின் : தலித் – வெகுஜன சமூக ஆன்மிக மற்றும் அறிவியல்பூர்வப் புரட்சி பற்றிய ஒரு பிரசங்கம் (Post-Hindu India: A Discourse in Dalit-Bahujan Socio-Spiritual and Scientific Revolution) ஆகிய நூல்கள் இந்து மதத்தை இழிவு செய்வதால்தான் அவற்றை நீக்க முடிவு செய்துள்ளோம். மாணவர்கள் அதை படிப்பது பொருத்தமானதாக இருக்காது என்று கருதினோம்” என இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அய்லைய்யாவின் நூல்கள் இந்து மதத்தை பற்றிய அவரது சொந்த புரிதலின் அடிப்படையில் இருந்தன என்றும் அவரது புரிதலை நிறுவுவதற்கு ஆய்வின் அடிப்படையிலான தகவல்கள் எதுவும் அதில் இல்லை” என்று தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி குழுவின் உறுப்பினரான பேராசிரியர் கீதா பட் நியூஸ்18 செய்தியாளரிடம் கூறினார்.

மேற்கூறிய மூன்று நூல்களைத் தவிர நீக்கப்பட வேண்டிய மற்றொரு நூலையும் அவர்களது அறிக்கை முன்வைத்தது. அரசியல் தத்துவஞானியாக கடவுள் : பார்ப்பனியத்திற்கு புத்தரின் சவால் (God as Political Philosopher: Buddha’s Challenge to Brahminism) என்ற நூலும் கூட பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியது.

படிக்க:
சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி
பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !

“அரசியல் விஞ்ஞான துறை அதன் பாடத்திட்டங்களை சரிபார்க்க வேண்டும். காஞ்சா அய்லைய்யாவின் நூல்கள் இந்து நம்பிக்கையின் மீதான கசப்புணர்வையே காட்டுகின்றன. மேலும் நூலாசிரியரின் எழுத்துக்கள் உண்மைக்கு புறம்பாகவும் உள்ளன” என்று பட் கூறினார். “என்னுடைய முஸ்லிம் மற்றும் கிறுத்துவ உடன்பிறப்புக்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டுமென இந்துத்துவா பள்ளி எப்படி விரும்பியது” என்றும் “காவிப் பொட்டை பார்க்கும் போதெல்லாம் அது எப்படி அவரை துன்புறுத்துகிறது” என்றும் அய்லையா எழுதியுள்ளதாக அவர் கூறினார். அவருக்கு தவம் (tapasya) என்ற சொல்லில் பிரச்சினை இருக்கிறது. அவரது எண்ணத்தையும் இந்து நம்பிக்கையை எப்படி அவர் புரிந்து வைத்துள்ளார் என்பதையும் பொருத்ததுதான் இதெல்லாம். பாடத்திட்டம் என்ற வகையில் அவரது எழுத்தில் எதுவும் இல்லை எனவே அதை கற்பிக்க காரணம் எதுவும் இல்லை. அவரது அனைத்து நூல்களிலும் இந்த கசப்புணர்வுதான் உள்ளது” என்று அவர் கூறினார்.

“சிலரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகள்தான் காஞ்சா அய்லைய்யாவின் நூல்கள் மீதான சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாங்கள் தொடர்ந்து அவற்றை கற்பிக்க விரும்பினால் அதற்கு எதிர் கருத்தையும் மாணவர் முன் வைக்க வேண்டும் என்று எங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. எனினும் சிலர் அந்த நூல்களை நீக்க விரும்பினார்கள். நாங்கள் ஒரு ஜனநாயகக் குழுவாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள் ஒன்றாக அய்லைய்யாவின் நூல்களை எதற்காக கற்பிக்க வேண்டும் என்பதை விவாதித்து ஜனநாயகபூர்வமாக ஒரு முடிவெடுப்போம்” என்று அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவரான வீணா குக்ரேஜா கூறியுள்ளார்.

மேலும் இரண்டு நூல்களுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அவற்றை நீக்கச்சொல்லி அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.. பேராசிரியர் நந்தினி சுந்தர் எழுதிய கீழ்நிலை அதிகாரிகளும் மன்னர்களும் : பாஸ்தரின் மானுடவியல் வரலாறு (Subalterns and Sovereigns: An Anthropological History of Bastar’ and professor Archana Prasad) மற்றும் பேராசிரியர் அர்ச்சனா பிரசாத்தின் சூழலியல் புனைவியத்திற்கு எதிராக : வெர்ரியர் எல்வின் மற்றும் நவீனத்திற்கு எதிரான பழங்குடியின எதிர்ப்பின் உருவாக்கம் (Against Ecological Romanticism: Verrier Elwin and the Making of an Anti-Modern Tribal Identity (2003)) என்ற இரண்டு நூல்கள்தாம் அவை.

பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா எழுதிய கொமட்லு சமூகக் கடத்தல்காரர்கள் (Komatlu Social Smugglers) என்ற நூலைத் தடைச்செய்ய வேண்டி 2017-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ஒரு வக்கீல் தொடுத்த பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீண்டத்தகாத கடவுள் (Untouchable God’) என்ற அவரது நூலின் சாரத்தை இங்கே படிக்கலாம்.

படிக்க:
என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து,  நாடெங்கிலும் பாடத்திட்ட பாடநூல்கள் மாற்றம் கண்டன. பள்ளி பாடநூல்களிலிருந்து மொகலாயர்கள் மெதுவாக மறைந்து போகிறார்கள். வரலாறு திரிக்கப்பட்டு மீண்டும் எழுதப்படுகிறது. மகாத்மா காந்தி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரைப் பற்றிய இன்றியமையாத குறிப்புகளை பள்ளி பாடநூல்களிலிருந்து அகற்றியதற்காகவும் வரலாற்றை மாற்றியதற்காகவும் இராஜஸ்தான் பேர் பெற்றது. இந்தியா, 1962-ல் சினோ – இந்தியப் போரில் இந்தியா வென்றதாக மத்தியப்பிரதேசத்தில் பள்ளி பாடநூல்கள் பொய்யுரைக்கின்றன. மகாத்மா காந்தியை நாதுராம் கோட்ஸே படுகொலை செய்ததை பற்றிய குறிப்பும் கூட நீக்கப்பட்டுவிட்டன.

“புதிய பள்ளி பாடநூல்கள் மூலம் தன்னுடைய கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடியின் மீது புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது கல்வியமைப்பை தன்னுடைய சொந்த அரசியல் கொள்கைகளை விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாக மோடி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. 85 விழுக்காட்டு பணத்தாள்களை மதிப்பழிக்க செய்த பணமதிப்பழிப்பு திட்டத்தையும், நிதிப்பற்றாக்குறையால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் பெண்குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தையும் நல்ல விதமாக கூறுவதற்காக பாடநூல்களில் புதிதாக சில பத்திகள் இணைக்கப்பட்டுள்ளன.  25 பாட நூல்களை ஆய்வு செய்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இதனை கண்டறிந்துள்ளது” என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

தமிழாக்கம் :

 

நன்றி: Sabrangindia.in

தீபாவளி – நமக்கு தீராவலி | நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை | கவிதைகள்

தீராவலி !

ரகாசுரனை
கெட்டவன் என்று
எப்படி நம்பமுடிகிறது
உங்களால்?

திங்கிற சோற்றிலும்
ஜி.எஸ்.டி. மண்ணை
அள்ளிப் போடவில்லை
நரகாசுரன்.
ஒரே இரவில்
கையிலிருக்கும் காசை
செல்லாது
எனச் சொல்லி
மக்களை தவிக்கவிடவில்லை.

ஊரான் வீட்டு
ஆட்டையும் மாட்டையும்
அக்கினியில் அடித்துப்போட்ட
ஓம குண்டர்களை
உழைக்காத
ஆரிய தேவர்களை
அடித்து விரட்டியதல்லாமல்,

உன் வீட்டு
எரிவாயு உருளையில்
உன்னையே
அடித்துப் போட்டு
மானியத்தை ரத்துசெய்து
சூனியத்தில் உன்னை
எரிக்கவில்லை
நரகாசுரன்.

வெடியும், ராக்கெட்டும்
இந்துக்களின் பாரம்பரியம்
அதை எப்படி
எங்கள் கையை விட்டு
பறிக்கலாம்?
கட்டுப்பாடு விதிக்கலாம்?
எனக் கூவிக்கொண்டே,

விவசாயத்திற்கும்
சிறுதொழிலுக்கும்
‍வேட்டு வைத்து பிடுங்கி
வேதாந்தாவுக்கும்
அம்பானிக்கும்
கட்டுப்பாடில்லாமல்
வாரிக் கொடுக்கவில்லை
நரகாசுரன்.

சிவகாசி ராக்கெட்
சிலது வெடிக்காததற்கே
கடைக் காரனை
கருகும்படி திட்டிவிட்டு,

ரபேல் ராக்கெட்
ரகசியங்கள்
‘புஸ்’ ஆவது பற்றி
அலட்டிக் கொள்ளாமல்
சுழியம் சுவைத்ததில்லை
நரகாசுரன்.

தலித் சிறுமி
ராஜலட்சுமி தலையை
தனியாகத் துடிக்கவிட்டு,

ஆதிக்க சாதிவெறிக்கு
வேட்டு  வைக்காமல்
அதிரசமாய்
ரத்தம் குடிக்க
நரகாசுரனுக்கு
தெரியாது.

ஒருபக்கம்
நன்மைப் பெருக
நாட்டு மக்களுக்கு
தீபாவளி வாழ்த்து

மறுபக்கம்
நாசமாய்ப் போக
முன்னூற்று அய்ம்பது கோடிக்கு
‘டாஸ் மாக்’ இலக்கு!

சந்துக்கு சந்து
சாராயம்
வெடிக்க
இரண்டு மணிநேரம்,
குடிக்க
இருபத்தி நான்கு
மணி நேரமும்…

இவர்களை எல்லாம்
விட்டு விட்டு
கெட்டவன்
நரகாசுரன் என்று
இன்னுமா
நம்ம முடிகிறது
உங்களால்?

– துரை. சண்முகம்

*******

நவம்பர் 7 : கொண்டாடுவோம் நமது புரட்சியை !!

புரட்சி
எங்கோ தொலைவில் இருப்பதாய்
புலம்புகிறார்கள்
பலர்.

உண்மையில்
புரட்சி
உன் அருகில் இருக்கிறது.

மெல்ல மெல்ல
காயப் போடப்படும்
உன் நிலத்தின் வெடிப்புகளில்,
எந்நேரம்
குடும்பத்தோடு சாவோமோ
எனும்
சிறுதொழிலின் துடிப்புகளில்
உனக்கு
பக்கத்திலேயே
வெடிக்க காத்திருக்கிறது புரட்சி

வீட்டுக் கதவை
தண்டல் காரன் தட்டினால்
இன்றைக்கு
வேறு பதில் ஏதும் இல்லை
எனும் தன் வெறுப்பில்
பால் மறவா குழந்தைக்கு
ஒத்துக்கொள்ளாது
என
பார்த்து பார்த்து சாப்பிட்டவள்
‘என்னம்மா இது?’
என்ற பிள்ளையின் கேள்விக்கு
நெஞ்சடைத்து
விசம் தருகிறாளே!…
அதற்கு விடை என்ன?
ஒரு புரட்சியைத் தவிர!

புரட்சிக்கு
ஏங்குகிறது அங்கே கருப்பை!

நேற்று வரை
பக்கத்திலிருந்த
சாப்ட்வேர் தொழிலாளி
நியாயமின்றி
இன்று
நிர்கதியாய் விரட்டப்பட்டானே…
உன்னால்
இணைந்து கொள்ளப்படாத
அவன் கோபத்தில்
புரட்சி
உன்னருகே துடித்து நிற்கிறது.

நறுக்கப்படும்
தலித் மக்களின் தலைகள் சிதைக்கபடும்
பெண்களின் உடல்கள்
உரிமைக்காக வீதிக்கு வந்தால்
தேவடியாள் பட்டம்

ஆதிக்க அருவருப்பை
அடித்து நொறுக்குமிடத்தில்,
அதற்கு நானும் வருவேன்
எனும் துணிவில்..
உனது
செயலுக்கு எட்டிய தூரத்தில்
புரட்சி பிறக்கிறது.

தேச எல்லைகளைக் கடந்து
மதப்பிளவுகளைத் தாண்டி
சாதியச் சங்கிலிகளைக் கடந்து
மூலதனம்
சுரண்டும் வர்க்கமாய்
அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது..

பாதிக்கப்படும்
உனது பக்கத்து வர்க்கத்திடம்
தானும் கலந்திடாத
உனது தயக்கம்
உனது அறியாமை
உனது அச்சம்
விலகும் தூரத்தில்தான்
உனக்கான
புரட்சி இருக்கிறது!

எல்லோராலும்
முடியும் ஒன்றை
என்னால் முடியாது
என
நீ ஒதுங்கிச் செல்லும் வழியில்தான்
புரட்சி தவிக்கிறது.

பீறிட்டு வரும்
பெருவெள்ளத்தை
கண்களை மூடிக்கொள்வதன் மூலம்
தவிர்த்து விடலாம்
என்ற உனது நினைப்பை
புரட்சி தகர்க்கிறது.

விடையில்லாமல்
தவிக்கும்
ஒவ்வொரு விடியலும்
புரட்சியின் தருணமாய் இருக்கிறது.

நேர்மையாக
பதில் சொல்ல மனமின்றி
முகத்தை திருப்பிக்கொள்ளும்
நீ,
இங்கெல்லாம் ரசியா போல
புரட்சி எல்லாம் நடக்காது!
என
பொறுப்பை தட்டிக்கழிக்கும்
உனது
பதட்டத்திற்கு பக்கத்தில்
புரட்சி பேசத் தவிக்கிறது!

நீ
உணர இயலா சோகத்தில்
நீ
உணர மறுக்கும்
கோபத்தில்
புரட்சி தகிக்கிறது.

மார்க்சியம்
சாத்தியம்
கம்யூனிசமே வெல்லும்!

கதையல்ல வரலாறாய்
உலகுக்கு காட்டியது ரசியப் புரட்சி!

அது,
மனிதகுலத்தின் படிநிலை
அழகியல் உணர்ச்சி!

சும்மா வரவில்லை
அது,
கோடிக்கணக்கான
உழைக்கும் மக்களின்
மார்க்சிய அரசியல் மலர்ச்சி!

மனித குருதிக்கே கிடைத்த
புதிய மானிட உணர்ச்சி!

உனக்கும் வேண்டுமா?
தானாய் வராது புரட்சி
அது
உன்னையே நீ
தருவிக்கும் நிகழ்ச்சி

பார்! ரசியப் புரட்சியே சாட்சி!

-துரை. சண்முகம்