Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 536

மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கும் திருச்சி மண்டல போலீசு !

0

PP Logo

அனுப்புதல் :
க.காளியப்பன், மாநில பொருளாளர்,
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
அண்ணா நகர், சிவாஜி நகர் வழி
தஞ்சாவூர்.

பெறுநர் :
திருமிகு. காவல் துறைத் தலைவர் அவர்கள்,
மத்திய மண்டலம்,
திருச்சி.

அய்யா,

பொருள்: பொதுக்கூட்டம்,  ஆர்பாட்டம் போன்றவற்றிற்கு  காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது, அமைப்பு குறித்து அவதூறான கருத்துக்களை காவல்துறையினர் பரப்புவது குறித்து நடவடிக்கை கோரி மனு

எமது அமைப்பான மக்கள் அதிகாரம் தமிழகத்தையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடி வரும் அமைப்பு என்பதை அனைவரையும் போன்றே தாங்களும் அறிவீர்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி எல்லா கட்சிகள், அமைப்புகள் போன்று எமது கருத்துக்களையும் மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், அமைப்பை வளர்க்கவும் எமக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறோம்.

ஆனால் அண்மைக் காலமாக தங்கள் தலைமையிலான திருச்சி மண்டலத்தில் எமது அரசியல் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக பொதுக்கூட்டம், ஆர்பாட்டம், தர்ணா போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவதுடன் எமது தோழர்களின் பிரச்சாரத்திற்குத் தடைகளை உருவாக்குகின்றனர். மேலும் எமது அமைப்பைப் பற்றி தவறான கருத்தைப் பரப்பி மக்களிடம் பீதியூட்டுகின்றனர். இந்த நடவடிக்கைகளில் உளவுப்பிரிவினர்  குறிப்பாக கியூ பிரிவினர் ஈடுபடுகின்றனர்.

நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறையினர் குறிப்பிட்ட அமைப்புக்கு எதிராக செயல்படுவது சட்டவிரோதமானது,  ஜனநாயக விரோதமானது. இதற்கு ஆதாரமாக ஒருசில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறோம்.

  1. தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் நாள் திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டம் நடத்த 17.01.2017ல் அனுமதி கோரினோம். ஆனால் கடைசி நேரத்தில் ரத்து செய்து அறிவித்தனர். மீண்டும் 25.02.2017 அன்று நடத்த அனுமதி கோரினோம் இதையும் கடைசி நாள் நள்ளிரவு ரத்து செய்ததுடன் எமது தோழர்கள் முரளிஇ செல்வம் ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது 29.03.2017 அன்று நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தினை ஏற்கவே மறுத்துவிட்டனர். எனவே பதிவஞ்சலில் அனுப்பியுள்ளோம்.
  2. இம்மாதம் 15ந் தேதி (15.03.2017) மணப்பாறையில் தர்ணா நடத்த அனுமதி கோரினோம். வாய்வழியாக அனுமதியளித்து விட்டு தர்ணா தொடங்கிய நேரத்தில் அனுமதியை மறுப்பதாக அறிவித்து 25 தோழர்களையும் கைது செய்தனர்
  3. கரூரில் சுவரொட்டி ஒட்டியதற்காக இரு தோழர்கள் 26.01.2017 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
  4. பிப்ரவரி 17-ம் தேதி மாணவர்களின் புத்தக அட்டையில் திருவள்ளுவர் படம் கொண்ட லேபிள் ஒட்டியதற்காக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  5. அதே போன்று திருச்சியில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
  6. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு நல்லாண்டார் கொல்லை ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் வந்து ஆதரித்துப்பேசி வருகின்றனர். போராட்டத்திலும் கலந்து கொள்கின்றனர். எமது தோழர்களும் போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொள்கின்றனர். ஆனால் அங்குள்ள உளவுப்பிரிவினர், குறிப்பாக கியூ பிரிவினர் எமது தோழர்களை மட்டும் குறிப்பாக தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என அவதூறாகப்பேசி மக்களிடம் பீதியூட்டுகின்றனர். எமது அமைப்புத் தோழர்களை ஆதரித்துப் பேச அனுமதிக்கக் கூடாது என மக்களை மிரட்டுகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அதை அவமதிக்கும் செயலாகும். மேலும் காவல் துறை குறிப்பிட்ட அமைப்பு மற்றும் அதன் அரசியல் கொள்கைகள் குறித்து எதிர்ப்பிரச்சாரம் செய்வதும், பொய்யான கருத்தைக் கூறி அவதூறு செய்வதும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.

எனவே போலீசார்  எமது அமைப்புக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவும்,எமது சட்டப்பூர்வ உரிமைகளை மறுப்பதைக் கைவிடவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி !

தங்கள் உண்மையுள்ள
க.காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு

மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் ! டி ஜ மெட்டல் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் !

0

கொலைப்பழி, வன்முறைப்பழி சுமத்தி வாழ்நாள் சிறை உள்ளிட்ட தண்டனை வழங்கப்பட்ட மாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும். முதலாளிகளது அடியாளாக செயல்பட்டு வருகின்ற அரியானா மாநில அரசைக் கண்டித்தும். பொய்வழக்கு என்பதை அறிந்தும் அநீதி மன்றமாக செயல்பட்டுள்ள நீதித்துறையை அம்பலப்படுத்தியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து  இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

பு.ஜ.தொ.மு-வின் இணைப்புச் சங்கங்களும் இத்தகைய இயக்கத்தினை முன்னெடுத்து வருகின்றன. கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஆலைவாயில் கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்ற பல்வேறு வடிவங்களை கையாண்டு வருகின்றன.
பு.ஜ.தொ.மு-வின் இணைப்புச் சங்கமான டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கமும், அதே ஆலையில் இயங்கி வருகின்ற பு.ஜ.தொ. முன்னணியால் வழிநடத்தப்படும் காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியும் இணைந்து 22.3.2017 அன்று காலை 7.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. நிரந்தர மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு டி.ஐ. மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் செல்வன் தலைமை தாங்கினார்.
இந்த சங்கங்களின் சிறப்புத்தலைவரும், பு.ஜ.தொ.மு-வின் மாநிலப் பொருளாளருமான தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். “முதலாளிகளது இலாபவெறிக்காக தீவிரமாகி வருகின்ற காண்டிராக்ட் வேலைமுறையை எதிர்த்து மாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்கள் போராடினார்கள். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை, போர்க்குணம் ஆகியவற்றைக் கண்டஞ்சிய முதலாளி வர்க்கம் போராடிய தொழிலாளர்தள் மீது வன்முறையை ஏவிவிட்டதோடு, கொலைப்பழி சுமத்தி சிறையில் அடைத்துள்ளது.
தொழிலாளி வர்க்கம் ஒன்று திரண்டு போராடுவதன் மூலம் மாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையையும், தொழிலாளி வர்க்கத்துக்கு விடப்படுகின்ற அச்சுறுத்தலையும் முறியடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.” விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களது ஒற்றுமைக்கு சான்றாக அமைந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் ( மேற்கு).

பொறுக்கி போலீசு சேதுமணி மாதவனுக்கு பத்தாண்டு சிறை !

0

ஞ்சை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் அளித்த தீர்ப்பு 20-03-2017 அன்று காவல் ஆய்வாளரும் பொறுக்கியுமான சேதுமணி மாதவனை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தது.

ஆய்வாளர் சேதுமணி சிறப்பு குற்றத்தடுப்பு (என்கவுண்டர்) பிரிவில் முதன்மை இடத்தில் இருந்தவர். நேர்மையான அதிகாரி என்றும், ரௌடிகளுக்குச் சிம்மசொப்பனமானவர் என்றும் ஒளிவட்டம் உருவாக்கப்பட்டு தஞ்சையில் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்.

காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார், துணை கண்காணிப்பாளர் மூர்த்தி, துணை ஆய்வாளராக சேதுமணி மாதவன் அடங்கிய இக்கூட்டணி தஞ்சையில் கொடிகட்டி ஆண்டனர். எந்தப் பகுதிப் புகாராக இருந்தாலும், பணமோசடி வழக்குகளைத் தான் பணியாற்றும் காவல் நிலைய புகாராகப் பெற்று விசாரித்துக் கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பதில் இழிபுகழ் பெற்றவர் இந்த சேதுமணி மாதவன்.

பொறுக்கி போலீசு சேதுமணி மாதவன்

தஞ்சை ஆட்டோ ஓட்டுனர் முத்துசாமி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கட்டைப் பஞ்சாயத்து பாலு என்கிற பாலசுப்ரமணியன் என்று ஒரு கும்பல் எப்போதும் இவர் பின்னால் நின்று செயல்படும். ‘நான் தேவன்டா’ என்று சாதியை அடிக்கடி சொல்லி வீரத்தை வெளிக்காட்டியவர். ஆனால் ஏழைபாழைகள் என்று வரும் போது அவர்கள் “தேவர்” சாதியாக இருந்தாலும் துன்புறுத்துவார்.

தரைக்கடை தேங்காய் வியாபாரி காசிநாத தேவரை ஊரை விட்டு மதுரைக்கு ஓடிவிடு என்று மிரட்டியவர். தரைக்கடை உருளைக்கிழங்கு வியாபாரி கணேசனின் கைகளை உடைத்து கட்டுப்போட்டு வழக்குப்பதிவு செய்தவர். இவரால் வியாபாரி சேட்டு காவல்துறை கொட்டடியில் வைத்து சித்ரவதை செய்யப்பட்ட போது தரைக்கடை வியாபாரிகள் திரண்டு சென்று மீட்டு வந்தனர்.

இவை அனைத்தும் MVK மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் பாரதிமோகன் மற்றும் மருத்துவர்களுக்காக மாலைநேர தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்த சேதுமணி மாதவன் செய்த திருப்பணிகள். சங்க உணர்வின்றி இருந்த எங்களைச் சங்கமாக அணிதிரள வைத்தவர் சேதுமணி என்று வலிகளோடு நன்றியையும் பதிவு செய்கிறார்கள் தரைக்கடை வியாபாரிகள்.

பணமோசடி வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கென்று அழைத்து வரப்பட்ட கோவையைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்ற பெண் கணினிப் பொறியாளர், தஞ்சை டெம்பிள் டவர் விடுதியில் 19.11.2007 அன்று கொலையுண்ட செய்தியையும், அப்பெண்ணைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி மரணத்தை விளைவித்த தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்துறை ஆய்வாளர் சேதுமணி மாதவன் மற்றும் தஞ்சை பூக்கார 1-ஆம் தெரு பாலு என்ற கட்டைப்பஞ்சாயத்து போலீஸ் புரோக்கரையும் கைது செய்ய பல்வேறு அமைப்புகளின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானவுடன் மக்கள் கலை இலக்கியக்கழகம், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலை சிறுத்தைகள், மனித உரிமை கழகம், ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இது தற்கொலையல்ல பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு நடந்த கொலை என அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிய பின்னர்தான் பொறுக்கி ஆய்வாளர் சேதுமணி மாதவன் மீது பெயருக்கு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது காவல்துறை.

கோவை அகிலாண்டேஸ்வரி காவல் கொலைக்கு நீதிகோரும் கூட்டமைப்பு தஞ்சையில் உருவாக்கப்பட்டு தஞ்சை புகைவண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், பனகல் கட்டிடம் அருகில் ஆர்ப்பாட்டம், மருத்துவக்கல்லூரி எதிரில் ஆர்ப்பாட்டம், சேதுமணி மாதவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது ஆர்ப்பாட்டம் என்று தொடர் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் இப்பொறுக்கி போலீசை சிபிசிஐடி விசாரிக்குமாறு வற்பறுத்தி விரிவான இயக்கத்தை நடத்தினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்கள் சிலர் சேதுமணியின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்த போதும் கூட்டியக்கத்திற்கு வரமறுத்தது. அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தின் முன்னணியாளர் தோழர் தையல்நாயகி, அகிலா தற்கொலை வழக்கை வெளியில் கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தாலும்   CPI கட்டுப்பாட்டில் இருந்த அவ்வமைப்பு போராட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆய்வாளர் சேதுமணி மாதவனைத் தப்பிக்க வைக்க தொடக்கம் முதலே தஞ்சை மாவட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் முயற்சி செய்தனர். சேதுமணி மாதவன் காவலர் கணேசன் கட்டப்பஞ்சாயத்து பாலு இவர்கள் மீது ஆள்கடத்தல், அடைத்து வைத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கற்பழித்து மரணம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய் என்று கூட்டமைப்பு போராடியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுமணி மாதவன் சிறையில் அடைக்காமல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் துணைபுரிந்தது. போராட்டக்குழுவின் எதிர்ப்பால் பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சேதுமணி மாதவன் பற்றி சிலர் தெரிந்தும், பலர் தெரியாமலும் அவர் நேர்மையான அதிகாரி எனப் பிரச்சாரம் செய்தார்கள். சேதுமணி மாதவன் ரௌடிகளை ஒழிக்கிறேன் என்று மார்தட்டிக் கொண்டு ஒரு பகுதி ரௌடிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு எதிர்கோஷ்டி ரௌடிகளை மிரட்டிப் பணம் பறிப்பது பணம் தராதவர்களை அடித்து, உதைத்துச் சுட்டு விடுவேன் என்று மிரட்டிப் பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது, மேலும் சிறுகுற்றம் புரிந்த அப்பாவிகளின் கைகளை முறிப்பது, கால்களை உடைப்பது, சாலையோரங்களில் வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழைகளை எட்டி உதைப்பது பொருள்களை நாசம் செய்வது, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது போன்ற கொடிய செயல்களையும் செய்துள்ளர்.

நிலம் மோசடி செய்யும் ரியல் எஸ்டேட் பேர்வழிகளுக்கு அடியாளாய் இருந்து பணம் வாங்குவதும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டிப் பணம் பறிப்பது என சட்டவிரோதமாக செயல்பட்டு லட்சக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் யோக்கிய சிகாமணி தான் சேதுமணி மாதவன். இது தொடர்பாக, தமிழ்நாடு மனித உரிமை கழகத்தின் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் பெற்றுள்ளவர் சேதுமணி.

தீர்ப்பின் நகல்

வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி கூட்டமைப்பு போராடியது. சேதுமணியைக் காப்பாற்ற சாதிஅமைப்புகள், பிழைப்புவாதிகள் ஓரணியில் திரண்டு சேதுமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினர். தஞ்சை பார்கவுன்சில் முற்போக்கு வழக்குரைஞர்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சேதுமணிக்குப் பிணை கேட்டு அணிதிரண்டனர்.

இந்த நிலையில் அகிலா, மரணத்திற்கு முன் அவரது அன்னைக்கு எழுதிய கடிதம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்திற்குக் கிடைத்தது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அக்கடிதத்ததை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அகிலாவின் கடித நகலை சுவரொட்டியாக்கி இயக்கமெடுத்தது. இது வழக்கில் ஒரு திருப்பத்தைத் தந்து முக்கியமான ஆதாரமாகி சேதுமணியை சிறைக்கு அனுப்பியுள்ளது.

கிரிமினல் குற்றவாளி ஆணைக்கிணங்க இயங்கும் அரசு, ஊழல் பேர்வழிகள், கிரிமினல்களின் உற்ற நண்பனாக விளங்கும் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் இருக்கும் நம்பிக்கையில் முகமலர்ச்சியோடு சேதுமணிமாதவன் தியாகியைப் போல சிறை சென்றிருக்கலாம். எனினும் தொடர் மக்கள் போராட்டங்களே இத்தகைய பொறுக்கி போலீசை தண்டிப்பதற்கு உதவி செய்யும். ஏனெனில் போலீசுத் துறையே இத்தகைய பொறுக்கிகளை உருவாக்குவதற்கு காரணமாக அமைவதால் மக்கள் தமது அதிகாரத்தை மீட்டெடுக்கும் போராட்டமாகவும் இவர்களை தண்டிக்கும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.

-வினவு செய்தியாளர்

புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?

1

தமிழக மின் துறையில் புரட்சிகர தொழிற்சங்கம் உருவானது எப்படி ?

னியார்மயம்-தாராளமயம் – உலகமயம் அமுலாக்க தொடங்கிய பிறகு தொழிற்சங்க சுல்தான்களாகவும், தொழிலாளி வர்க்கத்தை தொழிற்சங்கவாத, பொருளாதாரவாத புதை சேற்றில் தள்ளி சந்தா மற்றும் துறை வாரியாக தேர்தல் நிதி, கட்சி வளர்சி நிதி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை எதாவது ஒரு பெயரில் மாநாடு என்று நிதி திரட்டுவதை மட்டும்  தொழிற்சங்க நடவடிக்கை என்று சீரழிவின் உச்சத்திற்கே சி.ஐ.டி.யு. – சி.பி.எம் – CITU – CPI(M) கட்சி சென்றுள்ளது.

ஆனால், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான மோடி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கும் இந்திய அரசியல்-பொருளாதார நிலைமைகளோ தொழிலாளர்களை மாற்றுப் பாதையில் சிந்திக்கும்படி நிர்பந்தித்துக் கொண்டே உள்ளது. சமீப பத்தாண்டுகளில் மேற்கு வங்கம், திரிபுராவில் ஓட்டுப்பொறுக்கி அரசியலை கூட நடத்துவதற்கு திராணியின்றி சிபிஎம் கட்சியினர் தோல்வியடைந்து வருகின்றனர்.

தடைகளைத் தாண்டி புரட்சிகர சங்கத்தை துவக்கிய முன்னணியாளர்கள்

தொழிற்சங்கத்திலும், அரசியலிலும் பூச்சியமாகி விட்ட இவர்களது தலைமையை உதறி தள்ளிவிட்டு வெளியேற ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறும் தொழிலாளர்களை முதலாளிகளும் போலிசும் செய்யத் துணியாத பல்வேறு கீழ்த்தரமான நடவடிக்கைகளை செய்து அணிகளை தக்க வைக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் செய்த எட்டப்ப வேலையை பட்டியலிட்டு மாளாது. இனியும் சிஐடியு – CITU சங்கத்தை நம்புவதற்கு ஊழியர்கள் தயாராக இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக மின்சாரவாரியத் துறையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதிய தொழிற்சங்கம் துவங்கப்பட்டுள்ளது

 

தமிழகத்தில் மின்சாரவாரியத்தை பொறுத்தவரையில் குறிப்பாக 16 மாதமாக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தள்ளிப்போடுவதோடு, 2.5 கோடி மின் இணைப்புகள் நிலுவையில் உள்ள நிலையில் வெறும் 74,000 ஊழியர்களை மட்டும் கொண்டு வேலை வாங்குகிறது நிர்வாகம். ஏற்கனவே 1.5 கோடி இணைப்புகள் நிலுவை இருந்த போது ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றினார்கள். ஆனால், இப்பொழுது வேலை அதிகம், ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் புதிய ஆட்களை நிரப்பாமல் இருப்பது குறித்து  தொழிற்சங்கம் போர்குணமாக போராடவில்லை, பணி உயர்வு என்று எதையும் பேசுவதில்லை. இந் நிலையில் சிஐடியு மீது  நம்பிக்கையிழந்து அதனை விட்டு வெளியேறி வருகின்றனர்.  சிலர் வேறு புகலிடம் தெரியாமல் அங்கேயே குமுறிக் கொண்டுள்ளனர்.

தோழர்.ஸ்ரீதர்

கடந்த 2013-ம் ஆண்டு சொத்து குவிப்பு குற்றவாளி ஜெயா ஆட்சியில்  கடும் மின்வெட்டு நிலவிய போது தமிழகம்  தழுவிய அளவில் பு.மா.இ.மு, புஜதொமு ஆகிய அமைப்புகள் சார்பாக “திட்டமிட்டே திணிக்கப்படுகிறது மின்வெட்டு! “பவரை கையில் எடுத்தால் பவர் வரும்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டது. இந்த  பொதுக்கூட்டங்கள் மின் துறை ஊழியர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது.

தொடர்ந்து பு.ஜ.தொ.மு-வின் செயல்பாடுகளை, தொழிலாளர்கள் பிரச்சனையில் பு.ஜ தொ.முவின் நிலைப்பாடுகளை கவனிக்க ஆரம்பித்ததுடன் துண்டறிக்கை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், புதிய தொழிலாளி மற்றும் புரட்சிகர அமைப்புகளின் வெளியிடுகளை தொடர்ந்து படித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பில் செயல்பட்ட தோழர்  ஸ்ரீதர், இளமின் பொறியாளர். சிஐடியு சங்கத்தின் தொழிற்சங்க  செயல்பாடுகளும், இன்றைய அரசியல் சூழலில் தொழிலாளி வர்க்கத்தை காக்கும் கொள்கை இல்லாமல் செயல்படுவதையும் பிடிக்காமல் அதிலிருந்து விலகி எமது தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை தொடர்பு கொண்டு இணைவதாக கூறினார். அவரை தொடர்ந்து முருகையன், பாவாடைசாமி, சண்முகம் மற்றும் பல தோழர்களை இணைத்து புதிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி  என்ற புதிய தொழிற்சங்க அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் துவக்க விழாவை முறையாக நடத்துவதென முடிவு செய்து அதற்கான பிரசுரம், சுவரொட்டிகள் அனைத்தும் தயாரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த CPM – சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன்,  தோழர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு “நீங்கள் வேறு சங்கத்திற்கு செல்ல வேண்டாம் எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம்” என்றார். அதற்கு தோழர் ஸ்ரீதர், ”நான் வெளியேறி இன்னொரு அமைப்பிற்கு வந்த பிறகு பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று பதிலளித்துள்ளார்.

அதற்கு CPM மாதவன் “சரி செல்வது என்று முடிவெடுத்து விட்டீர்கள் ஏஐடியூசி – சிபிஐ கட்சிக்கு (AITUC)  செல்லுங்கள். புஜதொமு NDLF க்கு செல்ல வேண்டாம்” கூறியுள்ளார். 0அதற்கு தோழர் ஸ்ரீதர் “நான் எங்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல தேவையில்லை” என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

தொடர்ந்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் (இவர் தொழிலாளிகளுக்கு நெருக்கமனவரா இல்லை முதலாளிகளுக்கு அனுசரணையானவரா என்பதை சிபிஎம் கட்சியினரே அறிவார்கள்) தோழர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு “ஒரு விபத்து நடக்க போகிறது. அந்த விபத்தில் மாட்டிக் கொண்டால் மரணம் நிச்சயம். அந்த விபத்து தான் NDLF – புஜதொமு” என்று பதறினார். “அதனை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று தோழர் பதில் கூறவே இணைப்பை துண்டித்து விட்டார். இனிமேல் அவரிடம்  பேசி பயனில்லை என்பதை புரிந்து கொண்டு முன்னாள் மாவட்ட செயலரை அனுப்பி இந்த விழாவை தள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார்… தோழர் “முடியாது” என்றதும் சென்று விட்டார்.

பிறகு, மாட்டு வண்டி  சங்கத் தொழிலாளர்களையும், ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தொழிலாளர்களையும் தூண்டி விட்டு பேச்சுவார்த்தைக்கு  சமாதான தூது அனுப்பினார்கள். இந்த வழிமுறைகள் எல்லாம்  தோழர் ஸ்ரீதரிடம் பேசி  முடியாமல் போனதால் தோழர் முருகையனிடம் வந்து பேசியுள்ளார்கள். தொடர்ந்து வீட்டிற்க்கு செல்வது, வேலை செய்யும் அலுவலகம் செல்வது என தொடர்ந்து அவரை சந்தித்துள்ளார்கள். அவரும் உறுதியாக நிற்கவே வேறு வழியின்றி அணிகளிடம் இப்பிரச்சனையை கொண்டு சென்றனர்.

கடந்த 15-ம் தேதி அன்று சிஐடியு கூட்டம் போட்டு தோழர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டோம். அந்த விழாவிற்கு யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்த வேலையை செய்து கொண்டிருக்கும்பொழுதே கடலூர் மாவட்டபோலீசின் SP – CID மற்றும் கியூ பிரிவு CITU  முன் வைத்த இதே கோரிக்கைகளை மிரட்டும் தொனியிலும், ஆலோசனைக் கூறுவது போலவும் களமிறங்கினர் என்பது CITU க்கும் போலிசுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

கிராமம் தோறும் கிளை கமிட்டியை கூட்டி யாரும் கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று தடை போட்டுள்ளார்கள். தொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று  அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.

மூன்று கார்களை வாடகைக்கு பிடித்து சிதம்பரம், விருதாசலம், நெய்வேலி, தொழுதூர், திட்டக்குடி ஆகிய ஊர்களுக்கு சென்று யாரும் சிஐடியு வில் இருந்து வெளியேராதீர்கள். இது நக்சலைட் சங்கம், இதில் சேர்ந்தால் வழக்கு வரும் என பீதியூட்டி பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இவர்களின் பொய் பிரச்சாரத்தை அன்னவெளி,கூத்தப்பாக்கம் ஆகிய பகுதி தொழிலாளிகள் காறி துப்பினர். அதுமட்டுமில்லாமல்,   பிரசுரம் போட்டு இவர்களை  நீக்கி விட்டோம். இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் விநியோகித்தனர். இந்த சம்பவம் சிஐடியு தொழிலாளர்கள் மத்தியில் எரிச்சலை எற்படுத்தியுள்ளது.

சங்கத்தில் இருந்து வெளியேறியவர்களை நீக்கிவிட்டதாக பொய்யுரைக்கும் சி.ஐ.டி.யு நிர்வாகம்

ஏற்கனவே அவர்கள் வெளியேறி விட்டார்கள். போனவர்களை பற்றி  எதற்கு நாம் பேச வேண்டும். நமது சந்தாவில்  நாமே நோட்டிஸ் போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று CITU உறுப்பினர்களே தலைமையிடம் எதிர்கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிலாளர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து விலகி வெறுமனே பொருளாதர கோரிக்கை, சட்டவாதத்தை மட்டுமே முன்னிறுத்தி வளர்ப்பதால் தான் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்கிறது CITU சங்கம்.

அதன் வெளிப்பாடு தான்  உறுப்பினர்கள் பிரிந்து போகும் ஜனநாயக உரிமையை கூட மறுக்கிறது. இவர்கள் தான் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு மற்ற ஓட்டுப்பொறுக்கி கட்சிகளிடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க போகிறார்களாம்.

இதற்கிடையில் அரசு தரப்பில்  கியூ பிரிவு போலிசு தோழர்.ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அது நக்சலைட் அமைப்பு. அதில் சேராதீர்கள். உங்கள் வேலைக்கு பிரச்சனை வந்துவிடும் என்று மிரட்டியுள்ளார்கள். இந்த மிரட்டலுக்கு பயப்படாத தோழர், என் வேலை போனாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அது மா-லெ கட்சி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு தோழர்.ஸ்ரீதர் “எல்லா கட்சியிலும் பொறுப்பாளர்கள் தான் தொழிற்சங்கத்திலும் பொறுப்பில் இருப்பார்கள். CITU செளந்தர்ராஜன் கூட அப்படி தான் என்று கூறியதும் வேறு வழியின்றி போனை வைத்து விட்டது கியூ பிரிவு போலிசு.”

ஒரு பக்கம் சிஐடியு வில் இருந்து  பிரிந்து போகக்கூடாது என்று போலிக் கம்யுனிஸ்ட்களின் மிரட்டல், மற்றொருபுறம் அரசு தரப்பில் போலிசு மிரட்டல் என்று தொடர்ந்து வந்த  தடைகளை  எல்லாம் தகர்த்து தான் புதிய சங்கம் வெற்றிகரமாக துவக்கப்பட்டது. இன்னும் வரவிருக்கும் பல்வேறு தடைகளையும் தகர்ப்போம்.

-வினவு செய்தியாளர், புதுச்சேரி
(புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உதவியுடன்)

பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !

0

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 6

துளசியம்மா, செருப்பு தைக்கும் தொழிலாளி, சென்னை சைதாப்பேட்டை.

“மகளிர் தெனமா? காதலர் தெனமுன்னா கேள்விப்பட்டுக்குறேன். பசங்க சொல்லிகினு கெடக்கும். இது இன்னான்னு தெரியாதும்மெ?

வயசா? தெரியாத கேள்வியா பாத்து கேளும்மே நீ. நீயே போட்டுக்கோ.

எனக்கு வெவரம் தெரியச் சொல்லோ, பொழப்புத் தேடி அப்பா கோவளத்துலேந்து சென்னைக்கி இட்டாந்தாரு. ஆளான மொதலா நானும் கட்டட வேலைக்கி போயினுருந்தேன். கல்யாணம் ஆச்சு அவரும் சித்தாளுதான். 2 பையன், ஒரு பொண்ணு. படாத பாடுபட்டு பொண்ண கட்டிக் குடுத்தேன். மருமகங்காரன் குடிபோதையில எம்பொண்ண கொளுத்தி சாவடிச்சிப்புட்டான். கேசு போட்டு ஸ்டேசனுக்கெல்லாம் அலஞ்சேன். ஒங்களுக்குள்ளேயே தீத்துகினு போங்கனானுங்க. எம் மகளா நெனச்சு பேரப் பிள்ளைய இட்டுனு வந்து வளக்கேறேன் 11 ஆச்சு. முடியலன்னாலும் பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன்.

நடந்து போகச்சொல்லா கீழ விழுந்துட்டேன். காலு எலும்பு துருத்திகினு போச்சு. கட்டட வேலைக்கி போக மிடியல. அப்பா செஞ்ச செருப்பு தக்கிற தொழில 7 வருசமா செஞ்சுனுருக்கேன். புருசங்காரன் என்னேரமும் குடிபோதையில இருக்கான். பையனுக்கு வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.

இப்பிடியான ஆம்ளைய வச்சுகினு நான் வீட்டாண்ட குந்திகினு இருக்க முடியுமா? வீட்டு வாடக ரெண்டாயிரம். எனக்கு ஒரு நாளைக்கி 200, 300 கெடைக்கும். ஒரு நா ஒன்னுமே இருக்காது. நேத்துப் பாரு ஒரு ரூவா கூட இல்ல கை காசு போட்டு நாஸ்டா வாங்கி துன்னேண். மாசத்துக்கொருக்க பாரீசு போயி செருப்பு தைக்க ஊசி, நூலு, லெதரு பட்ட, ஆணி, பாலிசு, கொடகம்பி எல்லாம் வாங்கினு வருவேன்.

இன்னா பேசினே இருந்துட்டு பொசுக்குன்னு கெலம்புறெ காபி வாங்கினு வாரேன், ஒரு வா குடிச்சுனு போமே!

பானுமதி, ஒப்பந்த துப்புறவு தொழிலாளி.

யதை கேட்டதும் தெரியாது என்று வெட்கத்துடன் சிரித்தார்.

“மகளிர் தினம்  என்னான்னு எனக்கு தெரியாது. விடியக்குள்ள வேலைக்கி வந்துருவேன் இதெல்லாம் தெரிஞ்சுக்க நேரமும் இருக்காது.

இது அரசாங்கம் கொடுத்த வேலை கெடையாது. காண்டிராக்ட் படிதான் வேலை பாக்குறொம். 5500 ரூபா சம்பளம். காலையில 6 மணிக்குள்ள வந்துறனும் மதியம் 2.30 மணிக்கு பொறவுதான் போகனும். வீட்டுக் குப்பைங்க தெரு குப்பைங்க எடுக்கனும். பிளீச்சிங் பவுடர் போடனும். தொடப்பம், மருந்து, கைப்பிடி கம்பு எல்லாம் காண்ராக்ட்ர் வாங்கிக் குடுத்துருவாங்க. எல்லாத்தையும் பாத்து பக்குவமா வச்சுக்கனும், அடிக்கடி தேஞ்சுருச்சுனு சொல்லக் கூடாது.

இந்தச் சம்பளம் மட்டும் குடும்பத்துக்கு போதாது. எம் பசங்க ரெண்டு பேரும் லாரி கிளீனர் வேலை செய்றானுங்க. சாப்பாட்டுக்கு கஸ்டம் இல்லாம வண்டி ஓடுது. மாசத்துல ஒரு நாளு லீவு உண்டு, நாமா போட்டா சம்பளத்துல பிடிச்சுப்பாங்க. தீபாவளி பொங்கலுக்கு போனசெல்லாம் கெடையாது, விருப்பப்பட்டா ஏதாச்சும் கொஞ்சம் காசு தருவாங்க. வருசத்துக்கு 2 சேல தருவாங்க அம்புட்டுதான்.”

அவரிடம் பேசிக்கொண்டிருந்த இடத்தில் அதிமுக – திமுக கட்சி போஸ்டர் இருந்தது. அதை காண்பித்து பேசினார்.

“இவங்கப் போல ஆளுங்க மீட்டிங் போட்டா குப்பை இல்லாமெ சுத்தமா கூட்டி பவுடர் போடனும். கூட்டம் முடிஞ்சதும் அதேப் போல சுத்தப்படுத்தி பவுடர் போடனும். வழக்கத்துக்கு அதிகமா அன்னைக்கி மட்டும் வேலை இருக்கும் மத்தபடி எப்பவும் போலதான் வண்டி ஓடிட்டு இருக்கும்.”

லட்சுமி, வயது 58, பொதுக் கழிப்பறை  பராமரிப்பாளர்.

சென்னையில் பல இடங்களில் இலவச பொதுக் கழிப்பிடம் அரசியல் கட்சி ஆதரவோடு ஏரியா தாதாக்களுக்கு ஏலத்துக்கு விடப்படுகிறது. அதில் வரும் வசூலில் அமுக்கியத் தொகைப் போக சொற்பமாக பராமரிப்பும் நடக்கிறது. அந்த வகையில்தான் லட்சுமியம்மா வேலை செய்கிறார்.

“இங்க மூனு வருசமா வேலை செய்றேன். காலையில 9 மணிக்கெல்லாம் வந்துருவேன் ராத்திரி 9 மணிக்கிதான் போவேன். நடுவுல 3 தபா கக்கூச அலசி விடுவேன். வசுலாகுற காசுல பாதிய காண்ட்ராக்டர்ட்ட குடுத்துறனும். கக்கூசு போறவங்க 5 ருவாயும் தருவாங்க 3 ருவாயும் தருவாங்க. ஒரு நாளைக்கி 100, 150 கெடைக்கும். பெருசா ஒன்னும் வேலை இல்லையே குந்திக்கிட்டு காச வாங்கி வச்சுக்கப்போறோம். வீட்டுல குத்திருந்தா ஆருப்பா ஒத்த ருவா தருவா.

தாம்பரத்துல பேரு கூட வரமாட்டேங்குது துணி தைக்கிற கம்பெனில 7 வருசமா வேலை பாத்தேன். அங்கேயும் எல்லா எடத்தையும் கூட்டி பெருக்கி கக்கூசு கழுவனும். வேலைக்கி போயிட்டு வரச் சொல்லோ ரயிலாண்ட தடுக்கி விழுந்து கை முறிஞ்சிப் போச்சு. ஆறு மாசம் வீட்டுலதான் இருந்தேன். வேற எங்கயும் அலைய முடியாது. வீட்டாண்டயே இருக்குன்னு இங்க வேலைக்கி வந்துட்டேன்.

புருசெ புள்ள இருந்தும் இல்லாத மாதிரிதாப்பா. வாச்சுமேனு வேலைக்கி போறான் அந்தாளு. புள்ள போஸ்டர் ஒட்டப் போவான். அப்பனும் மகனும் குடிச்சே அழியிரானுங்க. மருமக ரெண்டு பிள்ளைங்கள வச்சுட்டு வதபடுறா. நானும் வீட்டுல உக்காத்துட்டு சாப்புட முடியுமா சொல்லுப்பா?

வினவு செய்தியாளர்கள்

அமெரிக்கக் கோக்கே வெளியேறு ! – ம.க.இ.க பாடல் வீடியோ

0

 

நெல்லையில் தாமிரபரணி ஆற்றை உறிஞ்சுக் கொண்டிருக்கும் ‘கோக்’ ஆலைக்கு எதிராக 2005 -ம் ஆண்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் அங்கே பிரச்சார இயக்கமும் போராட்டமும் நடைபெற்றது.  அப்போது எழுதப்பட்டு அவ்வட்டாரத்தில் பிரபலமாக பாடப்பட்ட போராட்டப் பாடல் இது. ஜல்லிக்கட்டை தடை செய்த டெல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவில் நடந்த எழுச்சிப் போராட்டத்தின் போது தோழர் கோவனால் பாடப்பட்ட இப்பாடல் ஆயிரக்கணக்கான மக்களால் வரவேற்கப்பட்டது. அத்தகைய மக்கள் குரலால் அமெரிக்க கோக்கே வெளியேறு என்ற முழக்கம் இன்று தமிழகம் எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. வணிகர் சங்கங்கள் பெப்சி கோக்கை விற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றனர். பெருவாரியான மக்களும் அவற்றை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையிலும் தாமிரபரணியில் மற்ற தொழிற்சாலைகள் நீரை பயன்படுத்தும் போது கோக் ஆலை மட்டும் உறிஞ்சக் கூடாதா என்று உயர் நீதிமன்றம் (அ)நியாயம் பேசியது. கூடவே கோக் – பெப்சி ஆலைகள் நமது நீரை உறிஞ்சலாம் என தீர்ப்பை வழங்கி தனது உண்மை முகத்தை காட்டியுள்ளது. இதே காலத்தில்தான் தமிழகத்தில் விவசாயிகள் பரவலாக தற்கொலை செய்து வருகின்றனர். தாமிரபரணியை அமெரிக்காவின் கோக் உறிஞ்சக் கூடாது என்பதும் விவசாயிகளின் போராட்டமும் வேறு வேறு அல்ல.

“தாமிரபரணி எங்கள் ஆறு – அமெரிக்க கோக்கே வெளியேறு” பாடல் தற்போது முறையான இசை காட்சிகளோடு வெளியிடுகிறோம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இப்பாடலை எடுத்துச் செல்வதன் மூலம் கோக் பெப்சிக்கு எதிரான விழிப்புணர்வை அரசியல் உணர்வாக மாற்றுவதற்கு முயல்வோம். பாடலைப் பாருங்கள், பகிருங்கள். இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து செய்வதற்கு நன்கொடை தாருங்கள்!

 

தாமிரபரணி எங்கள் ஆறு
அமெரிக்கக் கோக்கே வெளியேறு

தண்ணீர் விற்பனைச் சரக்கல்ல
தாயும் விற்பனைச் சரக்கல்ல
தாய் நாடும் விற்பனைச் சரக்கல்ல
அமெரிக்கக் கோக்கே வெளியேறு…       (4)

கட்டபொம்மன் சுந்தரலிங்கம்
கப்பலோட்டிய வ.உ.சி. – எங்கள்
பூலித்தேவன் பிறந்த மண்ணிது
அமெரிக்கக் கோக்கே வெளியேறு…      (4)

எம் கண்ணில் நிற்குது கயத்தாறு – இது
இன்னொரு விடுதலை வரலாறு            (2)
இந்தத் தீயின் எரிபொருள் தண்ணீரு
அமெரிக்க கோக்கே வெளியேறு…          (4)

சென்னை – கோவை : பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் கூட்டம் !

0

மார்ச்,23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள் : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்!

சென்னைக் கருத்தரங்கம்:
நாள்: மார்ச் 23 மாலை 5 மணி
இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை
(வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்)

  • கருத்தரங்கம்: தலைமை – தோழர் ராஜா, செயலர், புமாஇமு, சென்னை
    உரையாற்றுவோர்:
  • பேராசிரியர் சம்சுல் இஸ்லாம், டெல்லி பல்கலைக்கழகம்
  • டாக்டர் எழிலன், நிறுவனர், இளைஞர் இயக்கம்
  • தோழர் துரை. சண்முகம், ம.க.இ.க,
  • தோழர் ரமேஷ், நிறுவன உறுப்பினர், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்,
  • தோழர் ம.சி. சுதேஷ்குமார், மாநில இணைச் செயலர், புஜதொமு, தமிழ்நாடு
  • தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு – 94451 12675, 94444 61480,
94453 68009, 88075 32859


கோவைக் கருத்தரங்கம்:

நாள் : 23.03.2017
நேரம் : மாலை ஐந்து மணி
இடம் : எஸ்.ஆர்.ஐ கிளை அலுவலகம் , கோவை.

நிகழ்ச்சி நிரல்
தலைமை : தோழர் சரவணன், மாவட்டக் குழு, பு.ஜ.தொ.மு , கோவை.
சிறப்புரை : தோழர் விளவை இராமசாமி , மாநில துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ் நாடு.
நன்றியுரை : தோழர் திலீப், மாவட்ட செயலர், பு.ஜ.தொ.மு , கோவை.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோயம்பத்தூர். தொடர்புக்கு  90924 60750

ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

1

 “அவர்கள் (முஸ்லீம்கள்) ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” – இது கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியாரின் பிரச்சார உரை. சுவாமி அசிமானந்தா, சாத்வி ஜோதி, சாத்வி ப்ரக்யா, சுவாமி சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்ட சாமியார்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், இந்த சாமியாரைக் குறித்து அதிர்ச்சி அடைய மாட்டீர்கள். ஆனால் மேற்சொன்ன சாமியார்களை விட அபாயகரமான சாமியாரைக் குறித்து தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் வேறு யாருமல்ல,  கடந்த ஞாயிற்றுக் கிழமை 19.03.2017 உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் தான் அவர்.

“ஒரு இந்துப் பெண்ணை எடுத்தால், நாங்கள்100 முஸ்லீம் பெண்களை எடுப்போம்” என அறிக்கை விட்ட யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்தைப் பொறுத்தவரை,  குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியைப் போன்று மதவெறிப் பேச்சால், அடிக்கடி மீடியாக்களின் விவாதங்களில் பேசப்படும் நபர். தற்போதைய உத்திரகாண்ட் மாநிலத்தில் பிறந்த யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் அஜய் மோகன் பிஷ்ட். கல்லூரிக் கல்விக்குப் பின், 1990-ம் ஆண்டு இந்தியா முழுவதும் இரத்த வெள்ளம் ஓட வைத்த ஆர்.எஸ்.எஸ் – விசுவ ஹிந்து பரிஷத்தின் இராம ஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அச்சமயத்தில் இவரது இரத்தவெறியைப் பார்த்து வியந்த கோரக்பூரின் ‘குரு கோரக்நாதர்’ ஆலயத்தின் தலைமைச் சாமியார் அவைதியநாத், அஜய்யை தமது சீடராக ஏற்றுக் கொண்டு, அவருக்கு யோகி ஆதித்யநாத் எனப் பெயர் சூட்டினார்.

யோகி ஆதித்யநாத் முதன்முதலாக தமது 26வது வயதில் (1998), கோராக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்று தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் ’ஹிந்து யுவ வாஹினி’ என்னும் ஒரு அடியாள் படையை உருவாக்கினார். இவ்வானரப் படையை வைத்து 1998 – 2007 காலகட்டத்தில் மட்டும், கோரக்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 கலவரங்களை நடத்தியிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய ‘பெருமைகள்’ இந்துத்துவக் கும்பலிடையே வெகு வேகமாகப் பரவக் காரணம், கலவரங்களைத் தொடங்க அவர் எடுத்துக் கொள்ளும் காரணங்கள் தான். மோடிக்கு குஜராத் கலவரம் நடத்த இரயில் எரிப்பு காரணம் தேவைப்பட்டது.  ஆனால் யோகி ஆதித்யநாத்துக்கு மசூதிக்கு அருகில் அரசமரம் வளர்ந்தது கூட கலவரம் செய்ய போதும். இத்தகைய திறன் தான் இந்துத்துவக் கும்பலின் மத்தியில்  ஆதித்யநாத்தின் பெருமையை கொண்டு சேர்த்தது.

மசூதிக்குள் வளர்ந்த அரச மரத்தை வைத்து ஒரு மதக் கலவரம், பான்பராக்கை மென்று  துப்பியதில் இரு நபர்களுக்கு நடுவே நடந்த சண்டையை வைத்து ஒரு மதக் கலவரம், இரு தனிநபர்களுக்கு இடையே இருந்த சிறு தகராறை வைத்து ஒரு மதக் கலவரம் என யோகி ஆதித்யநாத் நடத்தியிருக்கும் கலவரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆதித்யநாத்தின் உத்தரவுப்படி, 1998-2007-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடத்தப்பட்டன.

கோரக்பூரில் 2007-ம் ஆண்டு ஆதித்யநாத்தால் முன் நின்று நடத்தப்பட்ட கலவரம், இந்தியாவையே பதற வைத்தது. ஜனவரி மாத இறுதியில், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு கோரக்பூரில் இசுலாமியர்கள் ஒரு பேரணி நடத்தினர். அந்த சமயத்தில் இந்துத் திருமணத்தில் இரு தரப்புகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பேரணியில் பங்கேற்ற இசுலாமியர் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட இராஜ்குமார் அக்ரகர் என்பவர் பேரணிக்கு வந்த இசுலாமியர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத், கோரக்பூருக்கு சுற்றுவட்டார பகுதி முழுக்க தமது விஷ-வன்மப் பிரச்சாரங்களின் மூலம் இந்து, முசுலீம் கலவரத்தைத் தூண்டினார்.

ஆதித்யநாத்தின் “ஹிந்து யுவ வாஹினி” சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து பெரும் கூட்டத்தைத் திரட்டி வந்து, இசுலாமியர்களின் கடைகளுக்குத் தீ வைப்பதும், அவர்களது பொருட்களைச் சூறையாடி, திருடிக் கொள்வதும் என மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது.

கருத்துப்படம் – முத்து

இக்கலவரத்தின் தாக்கம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. யோகி ஆதித்யநாத்துக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இரத்து செய்யப்பட்டது. ஆதித்யநாத்தின் “ஹிந்து யுவ வாஹினி” – வானரக் கும்பல் கைது செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பும் இல்லாமல் அடியாள் படையும் இல்லாமல், கோரக்பூருக்குள் செல்வதற்கு பயந்த ‘மாவீரர்’ ஆதித்யநாத், தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக்க் கூறி, தமக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்கும்படியும் கேட்டு நாடாளுமன்றத்திலேயே கண்ணீர் விட்டுக் கதறினார்.

அதன் பின்னர், சிறு சிறு கலவரங்களை நடத்துவதைக் கைவிட்டு, அதிகாரவர்க்கத்தைத் தனது கைக்குள் போட்டுக் கொண்டு திட்டமிட்ட கலவரங்களை நடத்தத் தொடங்கினார்.

உத்திரப் பிரதேசத்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற முசாஃபர்நகர் கலவரங்களைத் தொடர்ந்து, லவ்-ஜிஹாத் என்னும் பெயரில் இந்துப் பெண்களைத் திட்டமிட்டு காதலித்து இசுலாமிய இளைஞர்கள் மதமாற்றம் செய்து வருவதாகக் கூறி இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரங்களை ஏற்படுத்தினர். கர்-வாப்சி என்னும் பெயரில் மாற்று மத்த்தினரை மிரட்டி, மதம் மாற்றும் வேலைகளிலும் ஈடுபட்டார். 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஆதித்யநாத்தின் கை மேலும் ஓங்கியது. பகிரங்கமாக இசுலாமிய விரோத அறிக்கைகளை வெளியிடுவது என அவ்வப் போது தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டிருந்தார்.

இதுவரை யோகி ஆதித்யநாத்தின் மீது கலவரம் செய்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், இடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொடூர ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை எதுவும் இந்தச் ‘சாமியார் ’ முதலமைச்சர் ஆவதைத் தார்மீகமாகவும், சட்டரீதியாகவும் தடுக்கவில்லை என்பது தான் சிறப்பு.

இந்தக் கிரிமினலை உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக்குவதன் மூலம், உத்தரப் பிரதேசத்தில் வாழும் முசுலீம்களுக்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருக்கும் மதச்  சிறுபான்மையினருக்கும் பகிரங்கமாகச் சவால் விட்டிருக்கிறது மோடி – அமித்ஷா கும்பல். ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை உபயோகித்து ஆட்சிக்கு வந்த மோடியைப் போலவே, அகிலேஷ் யாதவின் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையையும், ஆதிக்க சாதி அரசியலையும் வைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.  இவரது தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கையில் இந்த ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதோ இல்லையோ, உத்தரப் பிரதேசத்தில் இரத்த ஆறு ஓடும் என்பது மட்டும் புரிகிறது.

ஒரு தேர்ந்த ரவுடியை, நாடறிந்த காவி பயங்கரவாதியை, பல வழக்குகளின் குற்றவாளியை, முசுலீம்களை வெளிப்படையாகவே கொல்வதாக மிரட்டும் ஒரு வன்மம் பிடித்தவரை முதலமைச்சராக அறிவிப்பதன் மூலம் பார்ப்பனிய பாசிசத்தின் வெளிப்படைத்தன்மையை அறிவித்திருக்கிறார் மோடி.

என்ன செய்யப் போகிறோம்?

-நந்தன்

ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

0

ஜெயலலிதா எப்படிச் செத்திருந்தால் நமக்கென்ன? “ஜெயலலிதா இயல்பாகவே நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, சசிகலா கும்பல் சதி செய்து கொன்று விட்டது” என்று நிரூபிப்பதன் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகத் தன்னை காட்டிக் கொள்வதும், கட்சிக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் வாரிசுரிமை கொண்டாடுவதுமே பன்னீர்செல்வம் கும்பலின் நோக்கம்.

இதனுடன் இசைந்து போகின்ற வேறொரு நோக்கம் ஆளும் வர்க்கத்துக்கு, குறிப்பாக சங்க பரிவாரத்துக்கு இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் தற்போதைய நெடுவாசல் மற்றும் மீனவர் போராட்டம் வரையிலான அனைத்திலும், தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் காட்டும் ஈடுபாடும் போர்க்குணமும் இவர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கின்றன.  எச்.ராசா, பொன்னார், இல.கணேசன் போன்றோரின் சமீபத்திய குமுறல்களைக் கவனிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள இயலும். மக்களிடம் அரும்பியிருக்கும் சுயமரியாதையையும் போர்க்குணத்தையும் கருக்கி, “கருணையே வடிவான அம்மாவுக்கு நேர்ந்து விட்ட பரிதாபத்துக்குரிய மரணம் பற்றிப் பிலாக்கணம் வைக்கும் அடிமைகளாக” எப்பாடுபட்டேனும் தமிழ் மக்களை மாற்றிவிட வேண்டுமென எல்லா ஆளும் வர்க்கக் கும்பல்களும் தவிக்கின்றன.

காவிரி மறுக்கப்பட்டதால் மரணத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் தஞ்சை விவசாயிகள். விவசாயிகளின் தற்கொலை அன்றாட நிகழ்வாகி வருகிறது. “கடலுக்குப் போகும் தண்ணீரை கோக், பெப்சிக்குக் கொடுத்தால் என்ன?” என்று வாதாடும் தமிழக அரசு, நெடுவாசல் போராட்டத்தில் மக்களை ஆதரிப்பது போல நாடகமாடுகிறது. ரேசன் கடைகள் மெல்ல மூடுவிழாவை நோக்கித் தள்ளப்படுகின்றன. நூறுநாள் வேலைத் திட்டக் கூலி பல மாதங்களாக வரவில்லை, முதியோர் ஓய்வூதியம் வரவில்லை. மக்களின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளையிடுவது போல பெட்ரோலுக்கு அடாவடியாக வாட் வரி விதிக்கிறது அ.தி.மு.க. அரசு. தமிழ்ச் சமூகத்தின் காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, மீனவ இளைஞனைச் சுட்டுக் கொல்கிறது சிங்கள இராணுவம்.

ஜெயாவின் சாவுக்கு விளக்கம் கேட்கும் பன்னீர் கும்பல், மேற்கூறிய பிரச்சினைகளுக்கு அளிக்கும் விளக்கம் சசிகலா கும்பல் அளிக்கின்ற அதே விளக்கமாகத்தான் இருக்கும். அ.தி.மு.க. என்பது ஜனநாயகத்தின் வாசனைகூட அண்டாத ஒரு கொள்ளைக் கூட்டம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை மர்மமாகத்தான் இருந்தது. அவர்களுடைய மரணமும் மர்மமாவதில் வியப்பில்லை. எம்.ஜி.யாரை ஜானகி விசம் வைத்துக் கொன்றதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சசிகலா மீது குற்றம் சாட்டுகிறார் பன்னீர். அப்போலோ மருத்துவமனையில் நடந்த மர்ம நாடகத்தின் பங்காளிகள் இப்போது நியாயம் பேசுகிறார்கள்.

“காவிரிப் பிரச்சினையைக் கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஜெயலலிதா வழிகாட்டினார்” என்ற செய்தி வெளியானபோது, அந்தச் சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடையே பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கருணாநிதி கோரினார். “நாகரிகமற்றவர்” என்று அவரை வசை பாடினர் அ.தி.மு.க. அமைச்சர்கள். “அமைச்சரவையும் முதல்வரும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்” என்ற கோணத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போதெல்லாம், அதனைத் திமிர்த்தனமாக அலட்சியம் செய்தவர்கள், இப்போது தங்களது பதவிச் சண்டைக்காக ஜெயலலிதாவின் பிணத்தைத் தோண்டுகிறார்கள்.

அடிமைத்தனத்தின் முடை நாற்றத்தில் தமிழகம் மூச்சுத்திணறியது போதும். ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் பொதுச்சொத்தைக் கொள்ளையிட்ட ஒரு கிரிமினல். மரணத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிய ஒரு குற்றவாளி. செத்துப்போன குற்றவாளியின் படத்திற்கு முன்னால் கும்பிட்டு விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும், உயிரோடு சிறையிலிருக்கும் குற்றவாளியின் காலில் விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும் நின்று லாவணி பாடுகிறார்கள். “தமிழகத்தையே சாவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதற்குப் பொறுப்பான ஜெயலலிதா, எப்படிச் செத்திருந்தால் எங்களுக்கென்ன?” என்று நாம் கேள்வி எழுப்பினால்தான் இந்த லாவணி நிற்கும். தமிழகம் சுயமரியாதையுடன் நிமிரும்.

புதிய ஜனநாயகம், மார்ச் 2017

ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

0

தாமிரபரணியில் நீரை உறிஞ்சும் கோக் ஆலையை மூடு என நீங்கள் போராடினால்  உங்களை கைது செய்து 6 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையே (Charge Sheet)  சமர்ப்பிக்காமல் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சரி ஓய்வு நேரத்தில் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றியோ, ரசியப் புரட்சியைப் பற்றியோ படிக்கிறீர்களா? கடுமையான கால் வலி காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கவில்லையா? இதில் எதைச் செய்தாலும் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் உரிமை அரசிடம் சட்டப்படியே இருக்கிறது. “புறாவைக் கொன்றதற்கெல்லாம் போரா…? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது” என்கிறீர்களா?

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட பேராசிரியர் சாய்பாபா

இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி? விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை உங்களுக்கு பிணை மறுத்துச் சட்டப்படியே உங்களைச் சிறையிலேயே வைத்திருக்க முடியும். அப்படி என்ன சட்டம் அது? அது தான் ’ஊபா’ (UAPA) என அழைக்கப்படும் ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’  (Unlawful Activities Prevention Act).  இந்த ‘ஆள்தூக்கி’ கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.

கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஊபா’ சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்கள், அரசியல் சாசன சட்டத்தின் 19-வது பிரிவு குடிமக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமை, சுதந்திரத்தை அனுபவிப்பதற்கானஉரிமை மற்றும் வாழ்வுரிமை, சங்கமாக சேர்வதற்கான உரிமை ஆகிய அனைத்தையும், படிப்படியாக வெட்டிச் சுருக்கியுள்ளது.

இந்திய அரசு, இந்தக் கருப்புச் சட்டத்தை உருவாக்கியதன் பின்னணியில் இரு பெரும் சம்பவங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் பற்றியெழுந்த நக்சல்பாரி எழுச்சியும், தமிழகத்தில் மாணவர் போராட்டமாகப் பற்றியெரிந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் ஆளும் வர்க்கங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. இந்த இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எரியவே, கொடூரமான இந்த ஊபா சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்த ஆள்தூக்கிச் சட்டத்தின் சாரமே, தெளிவில்லாத பொதுவான விளக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட விதம் தான். இந்தியாவின் இறையாண்மைக்கு ‘எதிரான நடவடிக்கைகளில்’ ஈடுபடும் அமைப்புகளை உடன் தடை செய்வதும், அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும் இச்சட்டத்தின் நோக்கங்கள். எவையெல்லாம் இறையாண்மையை பாதிக்கின்ற விசயங்கள் என்பதைத் தெளிவாக விளக்காமல், அதனைக் காக்கிகளின் கையிலும் ‘குடுமி மன்றத்’ தின் கையிலும் ஒப்படைத்திருக்கிறது இச்சட்டம்.

அதன் பின்னர், சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கையை ஒடுக்க, 1985-ம் ஆண்டு, மத்திய அரசு ஊபாவைக் காட்டிலும் கடுமையான தடா (TADA – Terrorist and Disruptive Activities (prevention) Act) சட்டத்தை  இயற்றியது. இச்சட்டத்தின் படி, சிறப்பு நீதிமன்றம், இரகசிய நீதிமன்ற விசாரணை, இரகசிய சாட்சிகள் போன்ற ஜனநாயக விரோத புறவழிப் பாதைகள் அதிகார வர்க்கத்தினருக்கு திறந்து விடப்பட்டன.  1995-ம் ஆண்டு வரை தொடர்ந்த ‘தடா’ வின் கீழ் வெறும் பத்தே ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 75,000 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் வெறும் 750 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றனர். அதாவது 99% நிரபராதிகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கின்றனர்.

‘தடா’வின் கொடுமையையும், அது அதிகாரவர்க்கத்தால் பழி வாங்கும் நோக்கோடு பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டியும், பல்வேறு ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அதன் விளைவாக தடா சட்டம் 1995-இல் கைவிடப்பட்டது. அதன் பின்னர் , 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, அனைத்து உலக நாடுகளையும் தீவிரவாதத்திற்கு எதிரான  உள்நாட்டு சட்டங்களைக் கடுமையாக்குமாறு அமெரிக்கா மிரட்டியது.

அமெரிக்க ஆண்டையின் உத்தரவுப்படி 2002-ம் ஆண்டில் ‘பொடா’ (POTA – Prevention of Terrorism Act) சட்டத்தைக் கொண்டு வந்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு.

காங்கிரசு கிரிமினல்களின் ஆட்சியில் ‘தடா’ சட்டம் 8 அடி பாய்ந்தது என்றால், இந்துமத வெறி பாஜக பாசிஸ்டுகளின் ஆட்சியில் ‘பொடா’ 24 அடி பாய்ந்தது. மத்திய பாஜக ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளில் இந்தியாவே ‘பொடா’வின் வேட்டைக்காடாகியது. கோத்ரா கலவரம் நடந்த குஜராத்தில் மட்டும் அந்த 2 ஆண்டுகளில் சுமார்  240 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 239 பேர் இசுலாமியர்கள், மீதமுள்ள ஒருவர் சீக்கியர். குஜராத் கலவரங்களின் போது மூன்றே நாட்களில்  2,000 பேரை எரித்துக் கொன்ற எந்த இந்து மதவெறியனும் ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட பத்திரிக்கையாளர் ஷாஹைனா

பொடா சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்புக் கிளம்பியதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக்  ’பொடா’-வைத் திரும்பப் பெறுவதாக காங்கிரசு பெருச்சாளிகள் அறிவித்ததோடு ஆட்சிக்கு வந்ததும் நீக்கவும் செய்தனர். ஆனால் ‘பொடா’வில் இருந்த அத்தனை ஒடுக்குமுறை சரத்துக்ளையும் புறவாசல் வழியாக ‘ஊபா’ சட்டத் திருத்தத்திற்குள் நுழைத்தது காங்கிரசு கும்பல். ‘ஊபா’ சட்டத்தின் அத்தியாயங்கள் 4,5,6 ஆகியவற்றுள் ‘பொடா’ சட்டத்தின் தண்டனைப் பிரிவுகளும், தீவிரவாதம் குறித்த குதர்க்கமான விளக்கங்களும் சொருகப்பட்டன.

அடுத்தபடியாக 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்த மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து, ‘ஊபா’ சட்டத்தின் விதிமுறைகளை இன்னமும் தீவிரப்படுத்தியது காங்கிரசு அரசு. பிணை அளிப்பதற்கான நிபந்தனைகளைக் கடுமையாக்குவது முதல், பல்வேறு கெடுபிடிகளையும் உட்சேர்த்து, மிச்சசொச்ச ஜனநாயக உரிமைகளையும் பறித்தது.

பிறகு 2012-ம் ஆண்டில், இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் பட்டியலில் “நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு எதிரான செயல்களையும்” சேர்த்தது. அதாவது இங்கு தொழில் செய்யும் கார்ப்பரேட்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களும், சட்டவிரோத செயல்களே என்று மாற்றினார்கள். இதன் மூலம் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்தையும் மறுத்தது மத்திய அரசு. இது தான் ஐம்பதாண்டு கால ‘ஊபா’ சட்டம் வளர்ந்து வந்த விதம்.

ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ’ஊபா’ சட்டத்தின் விஷ நாவுகள் இதோ:

  • விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒருவரை 180 நாட்கள் வரை எவ்விதக் காரணமும் இன்றி சிறையில் அடைத்து வைக்க முடியும்
  • போலீசு கொட்டடியில் வைத்து விசாரிக்க 30 நாட்கள் வரை அனுமதிக்கப்படும்
  • இச்சட்ட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டால், பிணை என்பது உங்களது உரிமையிலிருந்தும், அகராதியில் இருந்து அகற்றப்பட்டு விடும். நீதிபதியாகப் பார்த்து இரக்கப்பட்டால் ஒரு வேளை பிணை கிடைக்கலாம்.
  • அரசு முடிவு செய்து விட்டால், ஒருவர் மீதான விசாரணை ‘பாதுகாப்பு’ கருதி நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெறும்.
  • இரகசிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
  • தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நோட்டீசைக் கையில் வைத்திருந்தாலும், ஒருவரைக் கைது செய்ய முடியும்.
  • தீவிரவாதம் என்ற சொல்லுக்கு தெளிவற்ற விளக்கங்களின் மூலமும், இச்சட்டத்திற்குள் அனைத்து வகை அரசியல், பொருளாதார, தொழிற்சங்க வகைப்பட்ட அமைதி வழிப் போராட்டங்களையும் கூட கொண்டு வர வழிவகை செய்கிறது
  • போலீஸால் வாரண்டு இல்லாமல் ஒருவரின் வீட்டைச் சோதனையிட, பொருட்களைக் கைப்பற்ற / பறிமுதல் செய்ய மற்றும் கைது செய்யவும் முடியும்.

இவற்றை எல்லாம் விட முக்கியமானது, கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக ஒருவர் வழக்காடினால் கூட அவரையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகனை, அவர் மாவோயிஸ்ட்டுகள் மீது போலீசு போட்ட பொய் வழக்கிற்கு எதிராக ஆஜரானார் என்ற காரணத்திற்காக இந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று ’ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீசு. இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் சாசனம் தரும் வாதாடும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

தடா, பொடாவைப் போலவே இச்சட்டமும் முழுக்க முழுக்க ஆளும் வர்க்கத்தின்  பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது உதாரணத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர்  குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர். அதில் ஒரு சிறுவனுக்கு வயது 12-க்கும் குறைவு. இதுவே இச்சட்டத்தின் கொடூர முகத்தைக் காட்டுகிறது.

தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நமது பேச்சுரிமை, கருத்துரிமை, உயிர்வாழும் உரிமை, தொழிற்சங்க உரிமை என அனைத்து உரிமைகளின் குரல்வளையையும் இறுக்கிப் பிடிக்கும் ஊபா என்னும் கொடிய சட்டத்தை இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறிவது தான் இழந்த நம் உரிமைகளை மீட்டெடுக்க நம் முன் இருக்கும் ஒரே தீர்வு. இல்லையேல் பாஜக பாசிஸ்டுகளின் ஆட்சியில் மோடிக்கு எதிராக பெருமூச்சு விடுபவர்களைக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.

– நந்தன்

தொடர்புடைய செய்திகள் :

தமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !

0
தடைகளைத் தாண்டி சங்கத்தை துவக்கிய முன்னணியாளர்கள்

மிழகத்தில் மின் துறையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது. அதில் மிகப் பெரிய தொழிற்சங்கம் சி.ஐ.டி.யு. இதன் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாலும்,  நிர்வாகத்துடன்  சமரச போக்கை கடைபிடித்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்வதையே தனது லட்சியமாக கொண்டுள்ளதால் அதிருப்தி அடைந்த கடலூர் மின்துறை ஊழியர்கள் அதில் இருந்து வெளியேறி தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக  முன்னணி என்ற தொழிற்சங்கம் தொடங்கி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்துள்ளனர்.

அதன் துவக்க விழா 19.03.2017 அன்று கடலூரில் TVM திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக  முன்னணி, மாநில ஒருங்கிணைப்பளர் தோழர் ஸ்ரீதர் தலைமையில்  நடைபெற்றது.  தனது தலைமையுரையில் பேசிய அவர், மின் துறையில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனையில் எந்த தொழிற்சங்கமும் பெரிய அளவில் கவனம் செலுத்துவது இல்லை. அதே போன்று மின்துறை மூன்றாக சிதைந்துள்ளது. முன்பு இருந்த தமிழ் நாடு மின்சார வாரியம் போன்று இல்லை. அனைத்தும் தனியார் மயமாக்குகிறார்கள். இந்த சூழலில் மின்துறையை காப்பாற்ற வேண்டும் என்றால் துடிப்பாக போராடக் கூடிய அமைப்பு தேவை. அதனால் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பில் இணைந்துள்ளோம். அந்த வகையில் புதிய சங்கம் துவங்குவது மிக்க மகிழ்சி. இந்த சங்க துவக்க பிரசுரத்தை ஊழியர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது நல்ல வரவேற்பு இருந்தது. பல  AE-க்கள் வாழ்த்து கூறினார்கள். இது ஒரு விடிவெள்ளி போல் உள்ளது. நமக்கு பல தோழர்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள். இன்னும் பல தோழர்களை இணைத்து நம் சங்கத்தை முன்னேற்றுவோம். தற்பொழுது கடலூரில் துவங்கியுள்ளோம். இன்னும் பல மாவட்டங்களில் தொடங்குவோம். இதனை ஒரு மாநில அமைப்பாக மாற்ற அனைத்து தோழர்களும் பாடுபட வேண்டும்.  என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக பேசிய கடலூர் மாவட்ட தலைவர் தோழர் சண்முகம் அவர்கள், “பல தொழிற்சங்கங்கள் குப்பைக் கொட்டிக்கொண்டிருக்கின்ற” இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களையும், மின்துறையையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இதனை தொடங்கியுள்ளோம். இந்த துறை எப்படி எல்லாம் போகும் என்று பல அறிஞர்கள் வேதனையில் சிந்தித்து கொண்டிருக்கும் வேலையில், அவர்களுக்கு ஒரு நம்பிக்கையாக நாம் உருவாகுகிறோம். எங்களுக்கு CITU ல்  லாபம் கிடைக்கவில்லை என்று இங்கு வரவில்லை. அப்படி தான் சிலர் சொல்கிறார்கள். அது பற்றி கவலை இல்லை. அப்படி சொல்பவர்களுக்கு வாழ்த்துக்கள். நமது நோக்கம் இன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மய மாக்கப்படுகிறது. இயற்கை வளங்கள், கனிம வளங்கள் என அனைத்தும் சூறையாடப்படுகிறது. திட்டம்போட்டு தொழிலாளர்  நலச்சட்டங்களை மாற்றுகிறார்கள். மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது அரசு. தனியார்மயமாக்கலை சிலர் வரவேற்கிறாகள். காரணம் லஞ்சம் வாங்குகிறார்கள். அந்த அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. மின்துறையில் ஆட்களை எடுப்பதே இல்லை. பணிச்சுமை அதிகமாகி விட்டது. வேலைப்பளுவற்ற ஊதிய உயர்வு என்று சொன்னார்கள். ஆனால் அப்படி இல்லை என்று அரசு கடைபிடித்து வரும் தொழிலாளர் விரோதபோக்கை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக பேசிய கடலூர் மாவட்ட பொருளாளர், தோழர் ஜோதிபாசு அவர்கள், “அடிமைத் தனத்துடன் வாழ்வதை விட போராடி சாவதே மேல்” என்று நினைப்பவன் நான். CITU-ல் இருக்கும் பொழுது பல போராட்டங்களில் கலந்து கொண்டவன். அங்கே சில தோழர்கள் அடிமைத் தனத்துடன் நடத்துவதையும், சங்கத்தின் சமரச போக்கையும்  எதிர்த்து கேட்டுள்ளேன்.அது தொழிலாளர்களுக்கு விரோதமாக மாறிவிட்டது. மார்க்சியம் தோற்றுவிட்டது என்கிறார்கள் முதலாளித்துவவாதிகள். ஆனால், அது ஒருபோதும் தோற்றது கிடையாது. துடிப்புடன் போராடக்கூடிய தொழிற்சங்கம் இருக்கும் வரை அது மேலே தான் செல்லும். அந்த அடிப்படையில் தொழிலாளி வர்க்க விடுதலைக்காக உணர்வுடன் போராடக்கூடிய அமைப்பில் இணைதிருப்பது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்  என்று கூறி தனது உரையை முடித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி இணைச் செயலர் தோழர் லோகநாதன் அவர்கள் பேசும் போது, தொழிலாளர்களின் உழைப்பு எங்கும் சுரண்டப்படுகிறது. அரசு ஊழியர்கள் என்றால் சொகுசாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பது மின்துறை ஊழியர்கள் படும் துன்பதுயரங்களில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அவல நிலையை மாற்றியமைக்க தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து போராடுவது மட்டும் தான் தீர்வு என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக, வாழ்த்துரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் தமிழ் நாடு, தோழர் அ.முகுந்தன் அவர்கள், புதியதாக ஒரு சங்கம் துவங்குவது என்பது சாதாராண விஷயம் அல்ல. பல்வேறு பிழைப்புவாத சங்கங்கள் இருக்கிறது.  அதிலிருந்து வெளியேறியதை புஜதொமு வரவேற்கிறது.  என்றென்றும் உங்களுக்கு அது தோள் நிற்கும். ஒரு சங்கம் செயல்படுவது சந்தா பெறுவதற்கு அல்ல. அது புரட்சிக்கு வேலை செய்ய வேண்டும். தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற வேண்டுமானால் புரட்சிகர சங்கம் தேவையாக இருக்கிறது.

அது மார்க்சிய- லெனினிய அடிப்படையில் இயங்கி வரவேண்டும். அரசுத் துறைகள் கார்ப்பரேட்மயமாகி வருகிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செவிலியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என எங்கும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் இந்த அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளோ ஆர்.கே நகரில் எப்படி வெற்றி பெருவது என்று திட்டமிட்டு வருகிறார்கள். தேர்தல் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. தொழிலாளிகள் ஒன்று திரண்டால் தான் தீர்க்க முடியும். மாருதி தொழிலாளிகள் நிலையை நாம் பார்க்கிறோம். அரசு- நிர்வாகம்-போலிசு கூட்டு சேர்ந்து தொழிலாளியை தண்டித்துள்ளார்கள். இனி தொழிலாளி வர்க்கம் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தி பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கொடியை அறிமுகம் செய்து விட்டு  சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொதுச்செயலர், தமிழ் நாடு. தோழர் சுப.தங்கராசு அவர்கள், “தொழிற்சங்கம் என்பது புரட்சிக்கான பயிற்சி பள்ளி தான். அதற்கான வேலையை தான் புஜதொமு செய்கிறது. அந்த வகையிலே புஜதொமு உடன் இணைந்திருப்பது மகிழ்சியளிக்கிறது. மின்துறையில் தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு இல்லை. ஆனால் பணிச்சுமை மட்டும் அதிகம். வேலைப்பளுவோடு கூடிய ஊதிய உயர்வு என்று தனியார் நிறுவனங்கள் பேசலாம். ஏனென்றால் அவர்களுக்கு கொள்ளை லாபம் வேண்டும். ஆனால், ஒரு பொதுத்துறை நிறுவனம் அப்படி ஏன் பேச வேண்டும்?   என்று கேட்டு  தொழிற்சங்கங்கள் போராடவில்லை. ஆனால்,நாம் கேட்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராட வேண்டும். அவர்களை பணிநிரந்தரம் செய்யகோரி கேட்க வேண்டும். 1926ல் இருந்து  தொழிலாளர் உரிமைக்காக போராடி  44 சட்டங்கள் கொண்டுவந்தார்கள். அதனை எல்லாம் காங்கிரசு அரசு ஒவ்வொன்றாக திருத்தியது. ஆனால் மோடி அரசோ, ஒரேடியாக, முதலாளிகளுக்கு சாதகமாக ஒரு தொகுப்பான கெயிட் லைன் (வழிகாட்டல்) மாதிரி அனைத்தையும் மாற்றி விட்டது.

கொடியை அறிமுகம் செய்து வைக்கும் தோழர்.தங்கராசு

தொழிற்சாலை ஆய்வாளர் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதற்கு தடை விதித்தார். தொழிலாளிகளின் கொஞ்ச நஞ்ச உரிமையை கூட மாற்றி விட்டார். இந்த சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் மற்றும் மத்திய, மாநில அரசை எதிர்த்து போராடி கொண்டு வந்த சட்டங்கள். ஆனால், தனியார்மயம்-தாராளமயம்-உலகமயமாக்கல் வந்த பிறகு அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்குவது, அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது. தனியார் துறையை ஊக்குவிப்பது ஏகமோசடித் தனங்களை மோடி அரசு செய்து வருகிறது.

எல்.ஐ.சி, ரயில்வே, பி.எஸ்.என்.எல், சேலம் உருக்காலை என அனைத்தையும் விற்று தொழிலாளர்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைகளாக்க முயற்சி செய்கிறார்.

மக்கள் சேமிப்புகளை, வங்கி பணத்தை முதலாளிகளுக்கு கொடுத்ததன் மூலம், 9.67 லட்சம் கோடி வாராக்கடனாக உள்ளது. அதனை வசூலிக்க மோடி அரசால் முடியவில்லை.  கருப்புப் பணத்தை ஒழிப்பது என்ற பெயரில் மக்களின் சுருக்குப்பை சேமிப்புகளை கொள்ளையடிப்பது என்று மக்கள் விரோத செயல்களையே செய்து வருகிறார்.

மாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை. பல்வேறு அழிவு திட்டங்களை மக்கள் மீது திணிக்கிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் எதிராக உள்ள இந்த அரசை நம்பி  பயனில்லை. அவர்கள் நமக்கானவர்கள் இல்லை என்பதை  நிரூபித்து விட்டார்கள். நமக்கு என்ன தேவை என்பதை தொழிலாளி வர்க்கம்  தான் இனி முடிவு செய்ய வேண்டும். அது ஒரு புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதனை மெரினா நமக்கு கற்றுக்கொடுத்தது.  அப்படிபட்ட போராட்டத்திற்கு  தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்சியின் இறுதியாக கடலூர் மாவட்ட இணைச்செயலர் தோழர் பாவாடைசாமி நன்றியுரை கூறியதும் நிகழ்சி முடிவுற்றது.

இவ்விழாவில் புதிய தொழிற்சங்கத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர் உட்பட புதிய பொறுப்பாளர்கள் அறிமுகபடுத்தப்பட்டது  அதேபோல் மின்துறையில் நீண்ட காலம் நேர்மையாக பணியாற்றிய, தொழிலாளர்களுக்காக போராடிய சிஐடியு–வால் கைவிடப்பட்ட  ஓய்வு பெற்ற அதிகாரி தோழர்.பொன்னுசாமி அவர்கள்  கெளரவிக்கப்பட்டார். பல்வேறு சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த துவக்க விழாவில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் 9  தீர்மானங்களை வாசித்தார்.

  1. மின்வாரியத்தை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுவதை தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வன்மையாக கண்டிப்பதுடன் கார்ப்பரேட்மயமாகாமல் மின் வாரியம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது.
  2. மத்திய அரசின் உதய் மின் திட்டம் திணிக்கப்படுவதை தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வன்மையாக எதிர்க்கிறது.
  3. 16 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இழுத்தடித்து ஊழியர்களையும், தொழிலாளர்களையும் துன்பதுயரங்களுக்கு உள்ளாக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக ஊதிய உயர்வினை அமுல்படுத்த வலியுறுத்துகிறது.
  4. மின் வாரியத்தில் ஊழியர் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வேலை சுமை கூடியுள்ளது. இந்த காலியிடங்களை உடனே நிரப்பிட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  5. மின் வாரியத்தில் கடுமையாகவும், அர்பணிப்போடும் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வை உடனே அளித்திட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  6. மின் வாரியத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  7. விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும் மீத்தேன், நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, உள்ளிட்ட நாசகார திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  8. சங்கம் வைக்கும் உரிமைக்காக போராடிய மாருதி ஆலைத் தொழிலாளர்கள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை, 14 பேருக்கு 3 ஆண்டுகள் சிறையென்று ஹரியானா நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வன்மையாக கண்டிப்பதுடன் இத்தண்டனையை ரத்து செய்யும்படி வலியுறுத்துகிறது
  9. இலங்கை கடற்படையால் திட்டமிட்டே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் தமிழ் விரோத நடவடிக்கையை வன்மையாக தமிழ் நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி கண்டிக்கிறது.


( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !

0

நீதித்துறையும் போலீசும் நமக்கானதல்ல – மாருதி ஆலைத் தொழிலாளர்களை பாதுகாப்போம் ! எனும் முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம். நீதித்துறையை விமர்சித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தர முடியாது என வழக்கம் போல் காவல்துறை கூறிவிட்டது.

17.03.2017 வெள்ளி மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பு.ஜ.தொ.மு மாவட்டக்குழு தோழர் சரவணன் தலைமை தாங்கி கம்பீரமாக முழக்கமிட ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. காவல்துறை தடை காரணமாக மாநிலத் துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி மட்டும் கண்டன உரையாற்றினார்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அரியானாவில் உள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அடக்கு முறையைக் கண்டித்து இங்கு நாம் முழங்குகிறோம். அரியானாவில் மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு இன்று தரப்படும் தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

எனவேதான் போராட்ட மரபில் எழுந்து நிற்கும் கோவை தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நமது தோழமையை கண்டன ஆர்ப்பாட்டமாக முழங்குகிறோம்.

தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நாம் நிற்கிறோம். இதனை ஏட்டில் மட்டும் எழுதாமல் நடைமுறையிலும் வெளிப்படுத்துகிறோம். மாருதி ஆலைத் தொழிலாளர்கள் நமது தோழர்கள் என்றால், அவர்களது எதிரிகளும் நமது எதிரிகளே. மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை என்பது இனி அடுத்து வரப்போகும் தாக்குதல்களுக்கு முன் அறிவிப்பு ஆகும்.

நாட்டில் ஏறத்தாழ பெரும்பகுதி தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டு விட்டனர். சிறுபகுதி மட்டும் நிரந்தரம், இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் என சின்ன சின்ன சலுகைகள் தங்கள் போராட்டங்கள் மூலம் பெற்று உள்ளனர். இவர்களைக் காரணம் காட்டி இதர தொழிலாளர்கள் உரிமை கேட்கின்றனர். எனவே நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த கூலிகளாக மாற்ற வேண்டும் என்பது கார்ப்பரேட்களின் உத்தரவு. இதனை உபி தேர்தல் வெற்றிக்கு பிறகு உற்சாகமாக அமுல்படுத்துவோம் என தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா அறிவிக்கிறார்.

வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாட்டில் அகதிகள் போல ஏதிலிகளாய் எந்தவித உரிமைகளும் அற்று அலைகிறார்கள். அவர்களது உழைப்பு வரைமுறையற்று சுரண்டப்படுகிறது. அதே நிலைமை இனி அனைவருக்கும் ஏற்படும். அரசு ஊழியர்களும் ஒப்பந்தக் கூலிகளாய் மாற்றப்படுவர்.

எனவே இப்போதே இந்தக்கணமே விழித்தெழுந்து போராட வேண்டும் எனக்கூறி முடித்தார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு அண்ணாமலை அரங்கில் வைக்கப்பட்டனர். அங்கும் தோழர்கள் நித்தியானந்தன் பி.ஜெகநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை இந்தியா தொழிலாளி வர்க்கத்தை மிரட்டும் என ஆளும் வர்க்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் நாம் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு – 90924 60750

குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?

0

ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு அவரும் பரப்பன அக்ரஹாரா சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருந்திருக்கும். ஜெயில் களியைத் தின்ன வேண்டிய தண்டனையிலிருந்து ஜெயாவை மரணம் காப்பாற்றிவிட்டாலும், அவர் தமிழகச் சொத்துக்களை வளைத்துப் போட்டுக்கொண்ட ஊழல் குற்றவாளி, சதிகாரி என்ற உண்மையை அந்த மரணத்தாலும் மூடிமறைத்துவிட முடியவில்லை.
ஜெயா-சசி கும்பலின் ஊழல், கொள்ளை, கிரிமினல் சதித்தனங்கள் குறித்து, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க., உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகளும், சமூக அக்கறை கொண்ட சில தனிநபர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் கூறி வந்தவை, இப்பொழுது உச்சநீதி மன்றத் தீர்ப்பு வழியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தாலும், ஜெயா-சசி இணை கடைந்தெடுத்த கிரிமினல்-மாஃபியா கும்பல், தமிழகத்தைக் கவ்வியிருந்த மலைப்பாம்பு என்ற உண்மை மறைந்து போயிருக்காது.

ஜெயாவின் மரணம், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நல்வாய்ப்பை அவருக்கு வழங்கியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கும், ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் “நிலைய வித்வான்களுக்கும்” ஜெயாவின் குற்றப் பின்னணி பற்றிப் பேச வேண்டிய தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் நல்வாய்ப்பையும் சேர்த்தே வழங்கிவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கின் மூளையாகச் செயல்பட்ட சதிகாரி ஜெயா.

“சசிகலாவின் கூடாநட்பினால்தான் ஜெயாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது; உச்சநீதி மன்றத் தீர்ப்பில் மற்ற மூவர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர், ஜெயா விடுவிக்கப்பட்டுவிட்டார்; தமிழக மக்களுக்கு ஜெயலலிதா மீதிருந்த மதிப்பும் மரியாதையும் இந்தத் தீர்ப்பினால் மங்கிப் போய்விடவில்லை; ஒவ்வொரு நீதிமன்றமும் ஒவ்வொரு விதமாகத் தீர்ப்பளிப்பதால், உச்சநீதி மன்றத் தீர்ப்பை இறுதியானதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” எனப் பலவாறு வாதங்களை அடுக்கி, ஜெயாவை உத்தமியாகக் காட்டுவதை அ.தி.மு.க. அடிமைகளும், ஜெயாவின் ஊதுகுழல்களும் திறமையாகச் செய்து வருகின்றன.

ஆனால், உச்சநீதி மன்றத் தீர்ப்போ, சொத்துக்களைச் சட்டவிரோதமாகவும் முறைகேடான வழிகளிலும் வாங்கிக் குவித்த இந்த கிரிமினல் வழக்கின் மூளையாகச் செயல்பட்டிருப்பது சசிகலா அல்ல, ஜெயலலிதாதான் என உறுதிபடுத்தியிருக்கிறது.

  • சொத்துக்களை வாங்கி குவிக்கவும், அச்சொத்துக்களை பினாமி லெட்டர் பேடு நிறுவனங்களின் பெயரில் காட்டவும் ஆழமான சதித் திட்டம் இவ்வழக்கில் தீட்டப்பட்டிருக்கிறது. இறந்து போன ஜெயலலிதாவும், சசிகலா உள்ளிட்டு மற்ற மூவரும், ஜெயலலிதா முறைகேடான வழிகளில் சேர்த்த பணத்தைக் கொண்டு, லெட்டர் பேடு நிறுவனங்களின் பேரில் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கு போயசு தோட்டத்தில் இருந்துகொண்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர்.
  • இந்த வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் சதித் திட்டம் தீட்டி, அதன் அடிப்படையில், ஜெயலலிதா வருமானத்துக்கு மீறிய வகையில் குவித்த சொத்துக்களை, மற்ற மூவரும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டதோடு, பினாமி நிறுவனங்களின் பெயரிலும் மாற்றிக்கொண்டு, ஜெயலலிதாவின் முகமூடியாகச் செயல்பட்டிருப்பது சாட்சியங்களின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது.
  • இந்த லெட்டர் பேடு நிறுவனங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்துதான் இயங்கி உள்ளன; இதெல்லாம் தனக்கு தெரியாது; சசிகலா, சுதாகரன், இளவரசியின் நடவடிக்கைகள் பற்றித் தனக்கு தெரியாது என ஜெயலலிதா பாசாங்கு செய்வதை ஏற்க முடியாது.
  • ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தைப் பயன்படுத்தித்தான் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனக் கணக்கில் புழங்கியுள்ளன. இத்தகைய சொத்துக் குவிப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று காட்டிக் கொள்ளும் நோக்கில்தான், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை (பவர் ஆஃப் ஆட்டர்னி) சசிகலாவுக்குக் கொடுத்திருக்கிறார், ஜெயலலிதா.
  • குற்றவாளிகள் நால்வரும் போயசு கார்டன் இல்லத்தில் சமூக உறவின் அடிப்படையிலும் சேர்ந்து வாழவில்லை. முதல் குற்றவாளி ஜெயலலிதா, மற்ற மூவரையும் மனிதாபிமான அடிப்படையிலும் தனது வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. மாறாக, முதல் குற்றவாளி முறைகேடாகச் சேர்த்த பணத்தில் குவித்த சொத்துக்களை, மற்ற மூன்று குற்றவாளிகளின் பெயர்களில் பிரித்துக்கொண்டு நிர்வகிப்பது என்ற சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே, முதல் குற்றவாளி ஜெயலலிதா, மற்ற மூன்று குற்றவாளிகளையும் தனது இல்லத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ள அனுமதித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் கொள்ளைகளுக்கு உடந்தையாகவும், அவரின் முறைகேடான சொத்துக்களுக்கு பினாமியாகவும் இருந்த திருட்டுக் கும்பல்: சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி.
  • சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது. இவர்களது தந்திரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும். இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.- இவை அனைத்தும் பரலோகம் போய்விட்ட ஜெயலலிதாவின் பங்கு குறித்து உச்சநீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள் (findings). மேலும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும், அமிதவராயும் ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளனர். குன்ஹாவின் தீர்ப்பு ஜெயலலிதாவின் சதிகளையும், கிரிமினல்தனங்களையும் அசைக்க முடியாத ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் நிரூபித்திருக்கிறது.குன்ஹா அளித்த தீர்ப்பில், இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளன. அந்த மூவாயிரம் ஏக்கர் நிலமும் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதைக் குற்றவாளிகளால் சொல்ல முடியவில்லை.
  • வடக்கு கடற்கரை சப்-ரிஜிஸ்ட்ரார், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த சாட்சியத்தில், அந்த இருவரும் அவர்களது மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் போயசு தோட்ட வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாமல் பத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்த நிலங்களின் பத்திரங்கள் அனைத்தும் அடிமாட்டு விலைக்குப் பதியப்பட்டுள்ளன. மிகவும் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், அதில் ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், பெயர்கூடக் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது அவை யாருடைய அனுபவத்தில் உள்ளது எனப் பார்த்தால், அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது.

    1991−96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா முறைகேடான வழியில் சம்பாதித்து, போயசு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த தங்க, வைர நகைகளின் ஒரு பகுதி.
  • சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி அளித்த வாக்குமூலத்தில், “இந்த நிறுவனங்கள் எந்தக் காலக்கட்டத்திலும் எதையும் உற்பத்தி செய்யவில்லை. பொருட்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன” எனக் கூறியிருக்கிறார்.
  • நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைப் பார்க்கும்போது மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. மூலதனமே இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்களும், எந்த வியாபாரத்திலும் ஈடுபடாத நிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் பல ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் பணப் பரிவர்த்தனை செய்துள்ளன. இப்படிப் பணத்தைச் சுற்றி வளைத்துப் போட்டு எடுப்பதற்காகவே, 1991-க்கு முன்புவரை 12 வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும், அதன் பிறகு 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.
  • போயசு கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர் ஜெயராமனிடம் ஒவ்வொரு முறையும் பை மற்றும் சூட்கேஸில் இலட்சக்கணக்கான ரூபாய்களை வைத்து, நிரப்பப்பட்ட வங்கி சலான்களைக் கொடுத்து வங்கியில் செலுத்த சசிகலாதான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தப் பணத்தை இவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கணக்குகளில் வரவு வைத்து, அவற்றை நிறுவனத்தின் பணமாக மாற்றி, அதன் பிறகு நிறுவனத்தில் இருந்து தங்கள் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
  • ஜெயலலிதாவிடம் இருந்து அரசு தரப்பு கைப்பற்றிய நகைகளின் எடை 27,588 கிராம். இதில், ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த நகைகள் 7,040 கிராம். மீதமுள்ள 20,548 கிராம் எடையுள்ள தங்கம் பதவிக் காலத்தில் சம்பாதித்தவை என்றாகிறது. இத்துணை ஆயிரம் எடையுள்ள தங்கம் தனது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை சொல்லவே முடியவில்லை.
  • ஜெயலலிதாவிடம் இருந்த வைரங்களின் மதிப்பு 1,62,61,200 ரூபாய். அதனைத் தங்க நகைகளின் மதிப்போடு சேர்த்துக் கணக்கிட்டால், 2,51,59,144 ரூபாய் வருகிறது. இத்தனை மதிப்புடைய தங்கத்தாலும், வைரத்தாலும் இழைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ஜெயலலிதாவால் முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்டது.
1991−96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா முறைகேடான வழியில் சம்பாதித்து, போயசு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெள்ளிப் பொருட்களின் ஒரு பகுதி.

தங்க, வைர நகைகள், வீட்டு மனைகள், நிலங்கள், கட்டிடங்கள், கொடநாடு எஸ்டேட், பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள் என ஜெயா-சசி கும்பல் முறைகேடான வழிகளில் சம்பாதித்த பணம், சொத்துக்களை நுணுக்கமாக ஆராய்ந்துள்ள குன்ஹா, தனது தீர்ப்பில் குற்றவாளிகள் 1991-96 காலக் கட்டத்தில் 53,60,49,954 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடான வழிகளில் ஈட்டியதாக நிரூபித்திருக்கிறார்.

வழக்கு தொடர்பான காலக்கட்டத்தில் (1991-96) ஜெயா-சசி கும்பல் முறைகேடான வழிகளில் குவித்த சொத்துக்களின் மதிப்பு இவ்வளவுதானா என்றால், நிச்சயமாக இல்லை. “இன்னும் நிறைய சொத்துக்கள் வைத்திருக்கின்றனர். எனவே, அவற்றை எல்லாம் விசாரிப்பதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 178(2)-ன் படி எனக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்கிறார், சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற நல்லம்மா நாயுடு. (ஜூ.வி., 22.2.17, பக்.14)

1991-96 காலக் கட்டத்தில், ஜெயா-சசி கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொத்துக்களை மட்டுமா வாங்கிக் குவித்தார்கள்? தமது ஊழல், கொள்ளைகளை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியினர், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மீதும், கவர்னர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மீதும் ரவுடிக் கும்பலை ஏவிவிட்டு வன்முறைத் தாக்குதலை நடத்தியதற்கு ஏராளமான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக அக்கும்பல் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை.

அ.தி.மு.க.வின் 2011-16 ஆட்சிக் காலம் 40 பர்செண்ட் ஆட்சி என்ற அடைமொழியால் குறிப்பிடுமளவிற்கு ஊழலிலும் கொள்ளையிலும் மூழ்கித் திளைத்தது. தாது மணல், ஆற்று மணல், கிரானைட் – என இயற்கை வளங்கள் தொடங்கி முட்டை, பால், மின்சாரக் கொள்முதல் வரை எங்கும் எதிலும் ஊழல், கமிசன் என பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதில் வரலாறே படைத்தது ஜெயா-சசி கும்பல்.

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சியையும் கட்சியையும் நடத்தி வந்த ஜெயா, தனது கிரிமினல் குற்றங்களைத் தமிழகத்தின் பாமர மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவர்களைச் சாராய போதையிலும், இலவச போதையிலும் மூழ்கடித்தார். பணத்தை வாரியிறைத்துப் பாமர மக்களின் ஓட்டுக்களை, வழிப்பறித் திருடனைப் போலப் பறித்துக் கொண்டார். இதனையும் மீறித் தன்னை எதிர்த்தவர்கள் மீது அவதூறு வழக்குகளையும், தேசத் துரோக வழக்குகளையும் போட்டு, அவர்களைச் சிறையில் அடைத்தார்.

ஜெயா−சசி கும்பல் அடித்த கொள்ளையின் வெளிப்படையான ஆதாரங்கள்: கொடநாடு எஸ்டேட் (இடது) சென்னையில் உள்ள மிக நவீன ஜாஸ் திரையரங்கு.

தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா, அந்தக் குற்றங்களில் ஒரு சிறு பகுதிக்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்டதொரு இழிந்த கழிசடையை, தண்டிக்கப்பட்ட குற்றவாளியைத் தமிழகத்தின் அம்மாவாக அ.தி.மு.க. கும்பலும், அக்கட்சியின் துதிபாடிகளும், அவர்களது அரசும் கொண்டாடுவதும் துதி பாடுவதும் தமிழகத்திற்கு நேர்ந்துவிட்ட அவமானம்.

மேலை நாடுகளில் ஊழல் மற்றும் குற்றம் புரிந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் கைவிலங்கிட்டு இழுத்துச் செல்லப்பட்டுச் சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். அந்நாடுகளில் குற்றவாளிகள் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும், எந்தவிதமான சலுகையும் மரியாதையும் காட்டப்படாது எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற மத்திய உளவுத் துறை அதிகாரி ப.ஸ்ரீ.ராகவன். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள்.

ஆனால், தண்டிக்கப்பட்ட ஜெயா விடயத்தில் என்ன நடக்கிறது? அம்மாவின் வழியிலேயே ஆட்சியை நடத்துவோம் என வெட்கங்கெட்டு அறிவிக்கிறார், சசிகலாவின் பினாமி முதலமைச்சர் பழனிச்சாமி. ஜெயாவின் பெயரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நலத் திட்டங்கள் இன்னமும் அவரது பெயரிலேயே தொடர்கின்றன. அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயாவின் பிறந்த நாளைத் தமிழக அரசே முன்னின்று கொண்டாடுகிறது. மெரினாவைக் களங்கப்படுத்தும் ஜெயாவின் சமாதியை நினைவிடமாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன.

தலைமைச் செயலர், காவல் துறை தலைவர் தொடங்கி அதிகார வர்க்கம் அனைத்தும் குற்றவாளி ஜெயாவின் படத்தின் கீழ் அமர்ந்துகொண்டு நீதி பரிபாலனம் செய்யும் கேலிக்கூத்து நடக்கிறது. சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவைச் சந்திப்பதற்குத் தமிழக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அனுமதி அளிக்கக் கோரி தமிழக போலீசு தலைமையே கர்நாடக சிறைத்துறைக்குக் கடிதம் எழுதும் அசிங்கமும் அரங்கேறுகிறது.

அம்மாவின் வழியில் நடப்பதாகக் கூறப்படும் இந்த ஆட்சியின் சுக்கான், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், லெக்ஸஸ் கார் இறக்குமதி மோசடி வழக்கை எதிர்கொண்டுவரும் நடராஜன் ஆகிய கிரிமினல் பேர்வழிகளின் கைகளில்தான் உள்ளது.

முதலமைச்சர் நாற்காலி தொடங்கி அனைத்து உயர் பதவிகளிலும் இந்தக் கும்பலின் அடிவருடிகள்தான் உட்கார முடியும் என்பதை உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தூக்கியடிக்கப்பட்ட விதம் உணர்த்துகிறது. சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், உளவுப் பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட தனது விசுவாசமிக்க ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்துக்கொண்டு, மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆட்சியை அடுத்த நான்காண்டுகளுக்குத் தொடர்ந்து நடத்திவிட எத்தணிக்கிறது, சசிகலா குடும்பம். சுருக்கமாகச் சொன்னால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்துள்ள அ.தி.மு.க. அரசு, கிரிமினல்களால், கிரிமினல்களுக்காக, கிரிமினல்கள் மூலம் நடத்தப்படும் அரசாகும்.

அம்மா கொடுத்த இலவசப் பொருட்களை வாங்கி அனுபவித்து வரும் தமிழக மக்கள் அம்மாவையும் எதிர்க்க மாட்டார்கள், இந்த அரசையும் எதிர்க்கத் துணியமாட்டார்கள் என வாதாடி, இந்த மானக்கேட்டை நியாயப்படுத்தி வருகிறது, அ.தி.மு.க. கும்பல். இதன் மூலம் தமிழக மக்களை எவ்வித அறவுணர்ச்சியும் அற்ற, தன்மான உணர்ச்சி இல்லாத சோற்றால் அடித்த பிண்டங்களாக இழிவுபடுத்துகிறது.

இந்த இழிவை, அவமதிப்பை எப்படித் துடைத்தெறிவது? இந்த இழிவைத் தடுக்கக் கோரித் தலைமைச் செயலரிடம் மனு கொடுக்கிறது, தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிவிக்கிறது, பா.ம.க. சட்டம், நீதிமன்றங்கள் மூலம் இந்த இழிவிற்கு விடிவு கிடைக்குமா என்றால், முந்தைய அனுபவங்கள் இந்த நிறுவனங்களை நம்ப முடியாது என்றே உணர்த்துகின்றன. பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயா அடைபட்டிருந்த நாட்களிலும், அவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நடந்துகொண்டிருந்த போதும் தமிழகத்தில் என்ன நடந்தது?

இப்பொழுது சசி-தினகரன் இருக்கும் இடத்தில், அப்பொழுது ஜெயா இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தார். குற்றவாளி ஜெயா போயசு தோட்டத்தில் பதுங்கிக்கொண்டு நடத்திய ஆட்சியை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எந்தவொரு உயர் அதிகார நிறுவனமும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயாவின் சட்டமன்றத் தொகுதியான சீறிரங்கம் தொகுதி காலியாக இருப்பதை உடனடியாக அறிவிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது, “சுதந்திரமான” தேர்தல் ஆணையம். அரசு அலுவலகங்களிலும் அதன் இணைய தளங்களிலும் ஜெயாவின் படத்தை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வாய்தாவுக்கு மேல் வாய்தா என இழுத்தடிக்கப்பட்டது.

ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிப்பது என்ற பெயரில் அ.தி.மு.க. ரவுடிகள் நடத்திய வன்முறை குறித்து உச்சநீதி மன்றத்தில் நடந்த விசாரணையில், “ஜெயாவின் கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்துகொள்வதற்கு அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரமுண்டா?” என ஜெயாவின் வக்கீலாகவே மாறி வாதிட்டார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து. “அம்மா என்பது அனைவரும் பயன்படுத்தும் பொதுவான சொல்தானே” என அ.தி.மு.க. அடிமையைப் போல விளக்கமளித்த பெருமைமிக்கது சென்னை உயர்நீதி மன்றம்.

ஜனநாயகத்தைத் தாங்கும் நான்காவது தூணாகக் கூறப்படும் ஊடகங்களின் அறவுணர்ச்சியோ நீதிமன்றங்களைவிடக் கேவலமாக இருக்கிறது. ஒருபுறம் உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்று எழுதிக் கொண்டு, இன்னொருபுறம் ஜெயாவிற்கு வக்காலத்து வாங்கும் மாமா வேலையையும் திறம்பட நடத்துகின்றன, ஊடகங்கள். குற்றவாளி ஜெயாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் தமிழக அரசின் விளம்பரத்தைக் காசுக்காக முழுப் பக்க அளவில் வெளியிட்ட ஊடகங்களுக்கு (தினமணி, தமிழ் இந்து உள்ளிட்டவை) பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை குறித்துப் பேசும் தகுதி இருக்க முடியுமா?

இன்றைய அரசியல் அமைப்பு முறை தோற்றுப் போய் நிற்பதை, எந்தச் சட்டம், நீதி, அறம் குறித்துப் பேசுகிறதோ அதற்கு எதிராக இவ்வமைப்பு செயல்படுவதை ஜெயா விவகாரம் துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது. எனவே, குற்றவாளி ஜெயாவின் படங்களை, அவரது சமாதியை, அவரது பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அகற்றவும், நீக்கவும் கோருவதோடு, கிரிமினல்களால் நடத்தப்படும் அ.தி.மு.க. அரசைப் புறக்கணிக்கும் மக்கள் திரள் போராட்டங்கள் மட்டும்தான் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட இழிவை, அவமானத்தைத் துடைத்தெறியும்.

-செல்வம்
புதிய ஜனநாயகம், மார்ச் 2017

மாருதி தொழிலாளிகளுக்காக புதுச்சேரியில் ஏன் போரடுகிறீர்கள் ?

0

 

ரியானா மாநிலம் குர்கானில் மாருதி தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் அந்நிறுவனத்தின் மனித வள அதிகாரி அவனிஷ்குமார், நிறுவனத்தின் குண்டபடையால் கொல்லப்பட்டார். இந்த கொலையை தொழிலாளிகள் தான் செய்தார்கள் என்று கூறி, அந்த மாநில அரசும் போலீசும் 148 தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்தது. தொழிலாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கபடாத போதும் அவர்களுக்கு பிணை வழங்க மறுத்தது நீதி மன்றம். இந்நிலையில் 118 பேரை விடுதலை செய்த நீதிமன்றம் 13  பேர் மீது கொலை வழக்கு, 18 தொழிலாளர்கள் மீது தீயிடல், சூறையாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்து 18.03.2017 அன்று தீர்ப்பு வழங்க உள்ளது (தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள்  சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்). அவர்களை விடுதலை செய்யகோரி தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக 16.03.2017 அன்று  புதுச்சேரி-மதகடிப்பட்டு  பேருந்து நிறுத்தத்தில்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் சரவணன் தலைமையுரையாற்றினார். இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மாருதி காரை உற்பத்தி செய்யும்  தொழிலாளியின் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் போராடினார்கள்.  திட்டமிட்டே வன்முறையை ஏவிவிட்டது மாருதி நிர்வாகம். அதில் ஒரு எச்ஆர் அதிகாரி இறந்துவிட்டார். அவரை கொலை செய்தது தொழிலாளிகள் தான் என்று, அன்று முதல் இன்று வரை தொழிலாளிகளுக்கு பிணை மறுத்தது  ஹரியானாவின் நீதித்துறை.

செய்யாத குற்றத்துக்காக தொழிலாளிகளுக்கு தண்டனை  என்றால், தினந்தோறும் முதலாளிகள்  செய்து வரும் குற்றத்திற்கு என்ன தண்டனை? தொழிலாளர் துறை என்பது முதலாளிகளின் கால்களை நக்கி பிழைக்கும் துறையாக மாறிவிட்டது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அதற்கடுத்ததாக திருபுவனை வட்டார கிளை பொருளாளர் தோழர் சங்கர் அவர்கள் பேசுகையில், இங்கே திருபுவனையிலும், தொழிலாளர்களுக்கு இதே நிலைமை தான். குறிப்பாக மதர் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அடிமைகளை போன்றே நடத்தப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிகள் சார்பாக ரவுடிகள் தாக்குதல் நடத்தினார்கள்.  இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட  தொழிலாளிகளை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட  எட்டு தொழிலாளிகளை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தனர். காரணம் கேட்டால் சட்டப்படி நடந்து கொள்கிறோம் என்றனர். ஆனால், தொழிலாளிக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய எந்த உரிமையும் வழங்குவதில்லை. தொழிலாளர் துறையில் முறையிட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசையும், காவல்துறையும் அம்பலபடுத்தினார்.

அவரை தொடர்ந்து பேசிய திருபுவனை வட்டாரக் கிளை செயலாளர் தோழர் மகேந்திரன் பேசும்போது, இந்த ஆர்ப்பட்டத்திற்கு திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் அனுமதி கேட்ட போது நீங்கள் ஆர்பாட்டம் நடத்தினாலே பிரச்சனை தான் அனுமதிதர முடியாது என்றார். எங்கோ நடந்த பிரச்சனையை ஏன் இங்கு பேசுகிறீர்கள், ஏற்கனவே திருபுவனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் தானே அடி வாங்கினீர்கள், பிறகு ஏன் அங்கேயே கேட்கிறீர்கள், தேவையில்லாத பிரச்சனை வரும்  என்றார் காவற்துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி. நீண்ட விவாதத்திற்கு பிறகு மதகடிபட்டில் நடத்திகொள்ளுங்கள் என்றார்.

“நாங்கள் அடி  வாங்கினோம் என்றால் எங்கள் மீது ஏன் வழக்கு போடணும்?  ரவுடிகளுக்கும், முதலாளிகளுக்கும்  சாதகமானவர்கள் தான்  என்பதை தன் வாயால் ஒத்துக்கொள்கிறார் SP தெய்வசிகாமணி. இதே திருபுவனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்பனிகள்  இருந்தது. அவை பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டது. காரணம் இங்கு இருக்க கூடிய ரவுடிகள், அரசியல்வாதிகள்  ஒப்பந்த தொழிலாளிகளை எனது காண்ட்ராக்டில் தான் விட வேண்டும், கமிசன் தர வேண்டும் என்று கம்பனிகளை மிரட்டுகிறார்கள்.

திருபுவனையில் 1988 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கம்பனியில் பெரும் ஊழல் நடந்தது. இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு  நிர்வாகத்தை மூடிவிட்டார் அதன் முதலாளி. தொழிலாளிகள் மத்தியில் கட்டைப்பஞ்சாயத்து  பேசியது இந்த லோக்கல் ரவுடிகள் தான். 20,000 மாத வருமான வாங்கியவர்கள்  தற்பொழுது ஐந்தாயிரம் சம்பளத்திற்கு பல கம்பனிகளில் பணியாற்றுகிறார்கள் என்று தொழிற்சாலைகளின்  மோசடித்தனங்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ரவுடிகளையும் அவர்களுக்கு  துணையாக இருக்கும்  அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையை அம்பலபடுத்தி  பேசினார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய புதுவை மாநில இணைச் செயலர் தோழர் லோகநாதன் பேசுகையில், ஏரிப்பாக்கம் எல்லையில் அமைந்துள்ள புல்கிட் என்ற இரும்பு தொழிற்சாலையில் அடுத்தடுத்து இரண்டு தொழிலாளிகள் இறந்து போனார்கள். ஒருவர் நிரந்தர தொழிலாளி, மற்றொருவர் ஒப்பந்த தொழிலாளி. மூன்று நாள் விடுமுறை விட்டார்கள். தற்பொழுது கம்பனி இயங்குகிறது. இந்த படுகொலைக்கு யார் காரணம்?

மாருதி தொழிற்சாலையில் மனிதவள அதிகாரி அவனிஷ்குமார் இறந்து விட்டார் என்பதற்காக தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இவர்கள் மீதான குற்றம் நிருபிக்கப்படவில்லை இருப்பினும் தண்டனை வழங்கினார்கள். ஆனால் கண்முன்னே நடந்த ஏரிபாக்கம் தொழிலாளிகள் கொலையில்  காவல்துறை அதன் முதலாளி மீது ஏன் வழக்கு போடவில்லை?

இதேபோல் ஹரியானாவில், ஹோண்டா நிறுவனத்தில் பணிபுரியும் அஜித்சிங் என்ற தொழிலாளி, ஐந்தாயிரத்துக்கும்  மேற்பட்ட தொழிலாளிகளை திரட்டி முதலாளித்துவ  பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடினார். அவர் முதலாளிகளால்  அடித்தே கொல்லப்பட்டார். இதற்காக கொலைக்கு ஒரு வழக்கு கூட பதியவில்லை காவல்துறை.

தமிழகத்தில் கோவை பிரிக்காலில் மனித வள அதிகாரி கொல்லப்பட்டார் என்று தொழிற்சங்க முன்னணியாளர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளினார்கள். ஆனால், ஸ்ரீபெரும்பத்தூர் தொழிற்பேட்டையில் முதலாளிகள் கோரத்தாண்டவம் ஆடுகிறார்கள். தினந்தோறும் தொழிலாளி வர்க்கம் கொல்லப்படுகிறார்கள், ஆனால் முதலாளிகள் மீது ஒரு வழக்கு கூட போடுவதில்லை.  இதை எல்லாம் எதிர்த்து தொழிலாளிக்கு நீதி கேட்டு போராடுகின்ற எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.

டெல்லிக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கிரேசியானோவில்  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொழிலாளிகளை அவமதிப்பாக பேசிய மனிதவள அதிகாரி மீது ஒரு தொழிலாளி  சம்மட்டியை எடுத்து வீசியதில் அதிகாரி இறந்துவிட்டார். அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஆஸ்கர் பெர்னாண்டர்ஸ் “தொழிலாளி வர்க்கத்தை கோபப்படுத்தினால் இப்படி தான் நடக்கும்” என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார். இதனை கேட்ட முதலாளிகள்  அனைவரும் உடனே பதறினார்கள். தொழிலாளர் சட்டத்தை திருத்துங்கள் என்று நாங்கள் பேசுகிறோம் நீங்கள் தொழிலாளிக்கு அதரவாக பேசுகிறீர்கள். நாங்கள் தொழிலை நடத்த முடியாது என்று கூவினார்கள்.

தொழிலாளி யாரையும்  கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. எங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுங்கள் என்று நியமான கோரிக்கைக்கு போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கையை கேட்க கூட தயங்குகிறது தொழிலாளர் துறையும், இந்த அரசும்.

முதலாளிகளின் எடுபிடியாக மாறிப்போன  இந்த அரசமைப்பில்  தொழிலாளி வர்க்கத்திற்கு நீதி கிடைக்காது என்பதற்கு தான் மேற்கூறிய சான்றுகள். இந்த உண்மையை புரிந்து கொண்டு  தொழிலாளி வர்க்கம் புரட்சிகர அமைப்பின் கீழ் ஒன்று திரளவேண்டும்.  விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிராகிப் போன, அழுகி நாறும்  இந்த அரசை  தகர்த்தெரிந்தால் தான் நாம் விடுதலை பெற முடியும் என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்ததுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திரளான தொழிலாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி

2

   புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
NEW  DEMOCRATIC  LABOUR  FRONT
தமிழ்நாடு-புதுச்சேரி
TAMIL NADU & PUDUCHERRY
e-mail : ndlftn@gmail.com                   puthiyathozhilali@gmail.com

         PRESIDENT :   A.MUKUNDAN
GENERAL SECRETARY :   S.THANGARAJ

 பத்திரிக்கைச் செய்தி

மாருதி  தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாழ்நாள் சிறை!
தொழிலாளி
 வர்க்கத்துக்கு  அச்சுறுத்தல்!

13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள்  சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். இந்த தண்டனை எப்படி அநீதியானதோ அதே போல இந்த வழக்கு  நடந்த விதமும் அநீதியானதாக இருந்தது.

மாருதி சுசூகி  ஆலைத்தொழிலாளர்கள் செய்த குற்றம் என்ன?

  • அவர்கள் இந்திய நாட்டு சட்டப்படி தொழிற்சங்கம் துவங்கினார்கள்!
  • அவர்கள் காண்டிராக்ட் என்கிற கொடூரமான சுரண்டல் முறையை எதிர்த்தார்கள்!
  • அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமும், சட்டப்படியான ஓய்வும் கேட்டார்கள்!
  • அவர்கள் தங்களை மனிதனாக நடத்துமாறு கேட்டார்கள்!
  • எல்லாவற்றுக்கும் மேலாக, நிரந்தரத் தொழிலாளர்கள்-காண்டிராக்ட் தொழிலாளர்களது ஒற்றுமையைக் கட்டியமைத்தார்கள்!
  • இதுதான் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முக்கிய காரணம்.

நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய தொழிலாளிகளை ஒடுக்கும் பொருட்டு, ஜூலை 2012-ல் மனேசரில்  உள்ள மாருதி சுசூகி கார் தொழிற்சாலை நிர்வாகம்  திட்டமிட்டு ஒரு வன்முறை நாடகத்தை அரங்கேற்றியது. நூற்றுக்கணக்கான குண்டர்களை ஆலைக்குள் குவித்து, ஆலையின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தி, தொழிலாளிகள் மீது அனுதாபம் கொண்டவராக இருந்த அவனேஷ் குமார் தேவ் என்ற மனித வள அதிகாரியை எரித்துக் கொன்றுவிட்டு, பழியை தொழிலாளிகளின் மீது போட்டது.

148 தொழிலாளர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். 2300 தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிறை வைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு  4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. நான்கு ஆண்டு விசாரணைக்குப் பின்னர் தொழிற்சங்க  நிர்வாகிகள் 13 பேரை கொலையாளிகளாகவும், 18 பேரை கலவரக்காரர்களாகவும் குர்கான் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் போலீசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டாக நடத்தி இருக்கின்றன. இந்த வழக்கை நடத்துவதற்காக அரியானா மாநில அரசு பல  கோடிகளை  செலவழித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட மார்ச் 10- க்கு முன்னதாகவே மனேசர்- குர்கான் தொழிற்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆயுதப் போலீசார் எஸ்.பி ஒருவரது தலைமையில்  குவிக்கப்பட்டுள்ளனர். ‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான்  அரசு எந்திரம் கூறும் நடுநிலையின்  இலட்சணம்.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையானது சிறை வைக்கப்பட்டிருந்த 148 தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுத்த நாள் முதல், சட்டம் – நீதி என்பதெல்லாம் மக்களை ஒடுக்குவதற்குத்தான் என்பதை பட்டவர்த்தனமாக்கிக் காட்டியது. 4 ஆண்டு சிறைக்குப் பின்னர் 117 பேரை குற்றமற்றவர்கள்  என்று விடுவித்திருக்கும்  நீதித்துறை  நிரபராதிகளைத் தண்டித்திருக்கும் மாருதி நிர்வாகத்துக்கும் அதற்கு அடியாள் வேலை செய்த போலீசுக்கும் என்ன தண்டனை வழங்கியிருக்கிறது?

2012 வன்முறை  மாருதி  நிர்வாகமும், அரியானா அரசும் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியே என்பது விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அம்பலமானது. அப்போதெல்லாம் நீதிமன்றம் என்ன செய்தது? குறைந்தபட்சம் ஜாமீன் கூடக் கொடுக்கவில்லை. போலீசு  கொண்டு  வந்த  சாட்சியங்கள்  மாருதி ஆலையின் காண்டிராக்ட் முதலாளிகள் ஸ்பான்சர் செய்த சாட்சிகள் என்பது நீதிமன்றத்திலேயே சந்தி சிரித்தது.  அதையெல்லாம் நீதிபதிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட மர்மம் என்ன? சிறையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் தானே என்கிற அலட்சியமா ? ஜப்பான் முதலாளியின் இலாபவேட்டைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற பதைப்பா?  தொழிலாளி வர்க்கம் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

அரசும்,முதலாளிகளும் மாருதி தொழிலாளர்களது போராட்டத்தை வெறுமனே கூலி அல்லது வேறு சலுகைக்கான போராட்டமாகப் பார்க்கவில்லை.அந்நிய மூலதனத்துக்கு எதிரான போராட்டமாகவே இந்த போராட்டத்தை பார்த்தனர். இதை அனுமதித்தால் மொத்த அந்நிய மூலதனத்துக்கும் ஆபத்து என்று அஞ்சினார்கள்.இதன் விளைவுதான் இத்துணை கொடூரமான தண்டனை.

2012 சம்பவத்தின்போது மாருதி சுசுகியின் கொடுங்கோன்மையும் சுரண்டலும் நாடு முழுவதும் அம்பலமாகியிருந்த சூழ்நிலையில், அன்று குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, ஜப்பானுக்கு ஓடினார். சுசூகி அதிபரை சந்தித்து மானேசரில் தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள், குஜராத்தில் உங்கள் ஆலையைத் தொடங்குங்கள். போராட்டமோ பிரச்சினையோ இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வெட்கங்கெட்ட முறையில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தவர்தான் இன்று நம் நாட்டின் பிரதமர். அவரது கட்சிதான் அரியானாவையும் ஆள்கிறது.

நான்தான் குண்டு வைத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தாவை சாட்சியமில்லை என்று விடுவிக்கும் நீதித்துறை, செட்டப் செய்யப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும், நாடே குர்கானாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் மோடியின் உ.பி வெற்றியை கொண்டாடுகிறது கார்ப்பரேட் முதலாளிவர்க்கம்.

என்ன செய்யப்போகிறது, தொழிலாளி வர்க்கம்? மாருதி தொழிலாளிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, இந்தியத் தொழிலாளிகள் அனைவரின் உரிமைக்காகவும் போராடியிருக்கிறார்கள். இந்த அநீதியை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

வடக்கே குர்கான் எழுப்பும் போர்க்குரலை தெற்கே இந்தியாவின் டெட்ராய்ட் என்று கார்ப்பரேட் உலகம் கொண்டாடும் தமிழகம் எதிரொலிக்க வேண்டும். மெரினா போராட்டத்தின் வாயிலாக பாரதிய ஜனதா அரசை நடுங்கச் செய்த தமிழகம்,  இன்னொரு முறை தனது போர்க்குணத்தை காட்ட வேண்டும்.

தோழமையுடன்
சுப.தங்கராசு
பொதுச்செயலாளர், புஜதொமு

மாருதி தொழிலாளிகளுக்காக சென்னை – ஆவடியில் புஜதொமு நடத்திய ஆர்ப்பாட்டம்

தில்லி மனேசாரில் உள்ள மாருதி சுசூகி கார் தயாரிப்பு நிறுவனத்தில் 18, சூலை 2012 அன்று உரிமைகளை கேட்கச்சென்ற தொழிலாளர்கள் மீது நிர்வாகம் குண்டர்களை வைத்தும், அரியானா மாநில போலீசை பயன்படுத்தியும் கொடுந்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆலையில் தீமூண்டது. வன்முறைத் தீயில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியான அவானேஷ் குமார் தேவ் என்பவர் இறந்து போனார். அவரது இறப்பை சாக்காக வைத்து நிரந்தர மற்றும் காண்டிடாக்ட் தொழிலாளர்களை அரியானா மாநில போலீசு நரவேட்டையாடியது. 148 தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையிலடைத்தது. அவர்களுக்கு தொடர்ச்சியாக பிணை மறுக்கப்பட்டது. உயர்நீதி மன்ரம், உச்சநீதிமன்றம் வரையிலும் போராடித்தான் பெரும்பான்மையானவர்கள் பிணையைப் பெற்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 10.3.2017 அன்று குர்கான் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.குற்றம்சாட்டப்பட்ட 148 தொழிலாளர்களில் 117 பேரை விடுவித்த நீதிமன்றம் எஞ்சிய 31 பேரில் 13 பேர் கொலைக்குற்றத்தையும், 18 பேர் மீது வன்முறை,தீயிடல் உள்ளிட்ட குற்றத்தையும் உறுதிப்படுத்தியது. இந்த 31 பேருக்கும் என்ன தண்டனை என்பதை 18.3.2017 அன்று அறிவிப்பதாக குர்கான் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமானதாகவும், மாருதி நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களது தொழிலாளர் விரோதப்போக்குகளுக்கு துணை நிற்பதாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிவித்தது.

மார்ச் 17 அன்று தண்டனை விபரம் அறிவிப்பதற்கு முன்னதாக போலீசு மற்றும் நீதிமன்றத்தின் கார்ப்பரேட் சார்பை அம்பலப்படுத்துவதோடு, “நீதித்துறையும் ,போலீசும் நமக்கானதல்ல; மாருதி தொழிலாளர்களைப் பாதுகாப்போம்” என்கிற தலைப்பில் தமிழகம் மற்றும் புதுவையில் சென்னை, கோவை,ஓசூர், புதுச்சேரி ஆகிய  4 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென பு.ஜ.தொ.மு அறிவித்தது. “குற்றம்சாட்டப்பட்டுள்ள  மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்!” என்கிற முழக்கத்தை தொழிலாளி வர்க்கம் தனது சொந்த முழக்கமாக உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் ஒத்த கண்ணோட்டமுடைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இதே முழக்கத்தை நாடெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முனைப்போடு இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ( Indian Federation of Trade Unions – IFTU ) புதிய தொழிற்சங்க முன்முயற்சி  ( New Trade Union Initiative – NTUI ) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மாருதி தொழிலாளர்களைப் பாதுகாக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

16.3.2017 அன்று அறிவிக்கப்பட்ட கண்டன இயக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் கிழக்குமேற்கு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டக்குழுக்களின் சார்பில் ஆவடி பெருநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பு.ஜ.தொ.மு-வின் மாநிலத்தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையேற்றினார். அவரது சிறப்புரையில்,

“மாருதி நிர்வாகம் குண்டர்களையும், போலீசையும் பயன்படுத்தி தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே அடித்து நொறுக்கியதுடன், தானே ஆலைக்குத் தீவைத்து அந்த பழியை தொழிலாளர்கள் மீது சுமத்தியது. இந்த வன்முறையின்போது மாண்ட மனிதவள அதிகாரி எப்படி செத்தார் என்பதற்கான பிரேதப் பரிசோதனை அறிக்கையே தெளிவில்லாத நிலையில்,  போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள் நிரூபிக்காத நிலையில் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டு திட்டமிட்ட சதிதான் என்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. இவ்வளவு ஓட்டைகள் கொண்ட குற்றச்சாட்டினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களை குற்றவாளிகளாக அறிவித்திருப்பதானது, நீதித்துறையோ, போலீசோ உழைக்கும் மக்களுக்கானதல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தை சாக்காக வைத்து குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் தொழிற்சங்க இயக்கங்களே வந்து விடாமல் அடக்கிஒடுக்குவதற்கான வேலையை அரியானா போலீசும், பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தரகு முதலாளிளும் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தொழிலாளர்களை வீடு வீடாகத் தேடி போலீசு வேட்டையாடியது. மறுபுறத்தில்  மாருதி நிர்வாகமோ சுமார் 800 நிரந்தரத்தொழிலாளர்களையும் 1500 காண்டிராக்ட் தொழிலாளர்களையும் உடனடியாக வேலைநீக்கம் செய்தது. இது பயங்கரவாதமில்லையா? இந்த பயங்கரவாதத்தை ஏவிவிட்ட முதலாளிகள் மீது எந்த நீதிமன்றம் தண்டனை கொடுக்கப்போகிறது?

தொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்க இயக்கத்தின் மீதும்  அடக்குமுறை ஏவப்படுவது புதிதல்ல. காலனியாதிக்க காலத்தில் பின்னி ஆலையில் தொழிற்சங்கம் துவங்கியதற்காக சர்க்கரைச் செட்டியார், வாடியா போன்ற தலைவர்கள் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டது. சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இந்தியாவில் இதே அடக்குமுறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 2016-ல் கூட கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீதான வழக்கில் தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான வழக்குகளில் சாட்சியங்கள் பலவீனமாக இருந்தாலும், குற்றச்சாட்டுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குவதே நீதிமன்றங்களின் இயல்பாக இருக்கிறது.

அதே நேரத்தில் முதலாளித்துவ பயங்கரவாதம் தனது இலாபவெறிக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை ஆலைவிபத்தில் கொலை செய்தும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும் வன்முறையை ஏவிவருகிறது. இதற்கு ஒரு தண்டனையும் இல்லை. இவர்கள் தொழிலதிபர்கள் என்கிற பெயரில் பல இலட்சம் கோடிகள் மானியமாகவும், வட்டி இல்லாக் கடனாகவும் வாங்கிக்கொண்டு உலா வருகின்றனர்.

மாருதி தொழிலாளர் பிணைவழக்கில் தொழிலாளர்களை அவமானச் சின்னம் என்று நீதிமன்றம் முத்திரை குத்தியது. ஆனால், மக்களது வரிப்பணத்தில் வங்கிக்கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவருகின்ற மல்லையா போன்ற தொழிலதிபர்களை கவுரவமாக நடத்துகிறது இந்த கட்டமைப்பு.

நீதிமன்றமும், போலீசும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறதென்றால், தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கின்ற தொழிலாளர் நலத்துறையோ, தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்கின்ற துறையாகவே இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் 2011-ல் தொழிற்சங்கம் துவங்கியபோது, அவர்களது தொழிற்சங்க விண்ணப்பத்தை மாருதி நிர்வாகத்திடம் கொண்டுவந்து கொடுத்தது,  அரியானா மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள் தான். இந்த அதிகாரிகளை நம்பி தொழிலாளி வர்க்கம் இருக்க முடியாது.

தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள  போராடித்தான் ஆக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற சூழலில். அனைத்துதரப்பு உழைக்கும் மக்களுடனும் இணைந்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது.

நடந்து முடிந்த உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து கார்ப்பரேட்டுகள் துள்ளிக்குதிக்கின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் மோடிக்கு எந்த தடையும் இல்லை என்று குதூகலிக்கின்றனர். இந்துமதவெறி பாசிஸ்டுகள் பெற்றிருக்கின்ற வெற்றி முதலாளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. மெரினா போராட்டத்தில் தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் காட்டிய உறுதியும், ஒற்றுமையும் நமக்கு நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் மட்டுமல்ல; இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்துக்கே விடிவினைத் தருகின்ற போராட்டத்தை; உழைக்கும் மக்கள் அனைவருக்கும் விடிவினைத் தருகின்ற போராட்டத்தைக் கட்டியமைப்போம், வாரீர் !” – என அறைகூவல் விடுத்தார்.

விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ( மேற்கு ) மாவட்டக்குழு தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையுடன் ஆப்பாட்டம் முடிவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தவவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர்-காஞ்சிபுரம்-வேலூர் மாவட்டங்கள்.