Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 760

தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!

24

தருமபுரி வன்கொடுமைத் தாக்குதல்:

ஆதிக்க சாதி ஓட்டு வங்கி அரசியலின் விளைவே!

யிரை மட்டும்மிச்சம் வைத்து விட்டு, வாழ்க்கையை உருத்தெரியாமல் அழிப்பது என்பதற்கு நடைமுறை எடுத்துக்காட்டுதான், நவம்பர் 7-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டத்தின் 3 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய சாதிவெறியர்கள் நடத்தியிருக்கும் வன்கொடுமைத் தாக்குதல்.

தருமபுரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாயக்கன் கொட்டாய். நக்சல்பாரி இயக்கத்தின் அரசியல் செல்வாக்கு காரணமாக, சாதிவெறி தலையெடுக்காமல் தடுக்கப்பட்டிருந்த மாவட்டம் தருமபுரி. தோழர் பாலன் தலைமையில் தனிக்குவளை முறை போராடி ஒழிக்கப்பட்ட இடம் நாயக்கன் கொட்டாய். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அடிமைத் தொழில்கள் ஒழிக்கப்பட்டிருப்பது அந்த வட்டாரம். நக்சல்பாரி இயக்கத்தின் முன்னணித் தியாகிகளான தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோரது நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருக்கும் இடமும், தமிழகத்தில் நக்சல்பாரி அமைப்புகள் செல்வாக்குப் பெற்றிருந்த ஊருமான நாயக்கன் கொட்டாய்தான் இன்று ஆதிக்க சாதிவெறியின் அடையாளமாகியிருக்கிறது. நக்சல்பாரி இயக்கம் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, சாதி அமைப்புகள் எனும் நச்சுப் பாம்புகள் திட்டமிட்டுத் தூண்டி வளர்க்கப்பட்டதன் விளைவே, நவம்பர்-7 அன்று நடந்திருக்கும் சாதிவெறித்தாக்குதல்.

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான முகாந்திரமாகப் பயன்பட்டிருக்கிறது. போலீசு வேலைக்குத் தெரிவு செயப்பட்டிருக்கும் இளவரசனும், செவிலியர் பட்டத்துக்குப் படித்து வரும் திவ்யாவும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும் என்றும், இரு சமூகங்களையும் சேர்ந்த சில இளைஞர்களின் ஒத்துழைப்புடன்தான் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அவர்களது திருமணம் நடந்ததாகவும் நத்தம் காலனி மக்கள் கூறுகின்றனர்.

அக்டோபர் 14-ஆம் தேதி பதிவுத் திருமணம் செது கொண்டு, டி.ஐ.ஜி. சஞ்சீவ் குமார் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் இளவரசனும் திவ்யாவும் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். மணமகனின் பெற்றோர் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். பெண் வீட்டார் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. பெண்ணின் தந்தை நாகராஜ், இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். சாதி உணர்வின் காரணமாக, இந்த திருமணத்தை தனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானமாக நாகராஜ் கருதியபோதிலும், அதற்கு மேல் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடும் நோக்கம் அவருக்கு இல்லை. அன்றாடம் நத்தம் காலனி வழியாகத்தான் அவர் வேலைக்குச் செல்வார் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுடன் நட்பாகப் பழகக் கூடியவர் என்றும் நாகராஜைப் பற்றி நத்தம் காலனி மக்கள் கூறுகின்றனர். இந்த திருமணத்தைச் சாக்கிட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர்கள் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும், சாதிவெறியர்களும்தான்.

வன்னிய சாதி வெறியர்கள்தான் அவரை மானங்கெட்டவன் என்றும், போறான் பாரு பறயன் சம்மந்தி என்றும் ஏசியிருக்கின்றனர். உன்னால் சாதிக்கே கேவலம் என்றும், தலைகுனிவு என்றும் தூற்றியிருக்கின்றனர். நாகராஜின் தனிப்பட்ட கவுரவப் பிரச்சினை என்ற வரம்பிற்குள் நின்றிருந்தால், இது தாக்குதலாக வெடித்திருக்காது. காலப்போக்கில் பெண் வீட்டார் சகஜ உறவுக்கும் வந்திருக்கக் கூடும்.

அப்படி ஒரு விபரீதம் நடந்துவிடக்கூடாதே என்பதுதான் சாதிவெறியர்களின் கவலையாக இருந்திருக்கிறது. அதனால்தான் திருமணம் முறைப்படி நடந்துவிட்டது என்று தெரிந்த பின்னரும், அடுத்த மூன்று நாட்களில் பையனின் தந்தையை உள்ளூர் போலீசு நிலையத்துக்கு வரவழைத்துப் பெண்ணின் பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு என்று அவரிடம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். பஞ்சாயத்துக் கூட்டத்தைக் கூட்டி பெண்ணைக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு நத்தம் காலனி மக்களை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள்.

பா.ம.க. தருமபுரி ஒன்றிய பொருளாளர் மதியழகன், கொண்டாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி ஆகியவர்கள் இந்தப் பஞ்சாயத்தில் முன்நின்றதாகவும், கண்பார்டி முருகன் பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் சோல்கிறார் நத்தம் காலனியின் ஊர்த் தலைவர்.

தர்மபுரி-வன்னிய-சாதிவெறி

“பஞ்சாயத்தில் 500, 600 பேர் இருப்பார்கள். ஒரே வார்த்தைதான் – பொண்ணைக் கொண்டாந்து வுடு என்பார்கள். சட்டப்படித் திருமணம் செய்தவங்களாச்சேன்னு சொன்னா, சட்டம் கிடக்கட்டும், பொண்ண கொண்டாந்து விடுங்கன்னுதான் பேசுவாங்க. நாங்க பதில் பேசினா பறப்பசங்களுக்குத் திமிரான்னு கூட்டத்திலேருந்து திட்டுவாங்க. உன் பொண்டாட்டிய தூக்கிட்டுப் போனா ஒத்துக்குவியான்னு கேப்பாங்க. பையனோட அப்பா பொண்ணை ஒப்படைச்சிடலாம்னுதான் நெனச்சாரு. ஆனால், அந்தப் பொண்ணுக்குப் பொறுப்புன்னு கையெழுத்து போட்டிருக்கார். பொண்ண ஒப்படைச்சி, அப்புறம் அதுக்கு ஏதாவது ஆனா, தான்தான் பொறுப்புங்கிறதால மறுத்துட்டாரு. இருந்தாலும் ஊர் சார்புல கேட்டதால ஏத்துகிட்டாரு” – என்று நடந்ததை விளக்கினார் நத்தம் ஊர்த் தலைவர்.

நவம்பர் 5-ஆம் தேதியன்று பஞ்சாயத்தில் நத்தம் மக்களை மிரட்டி எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். நவம்பர் 7-ஆம் தேதி காலை திவ்யா வீட்டார் சார்பில் அவருடைய அம்மா, பெரியம்மா, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்களும், நத்தம் ஊர் சார்பில் 10 பேரும் தொப்பூர் என்ற ஊருக்குச் சென்று திவ்யாவையும், இளவரசனையும் சந்தித்திருக்கின்றனர். திவ்யாவின் அம்மா தேன்மொழி, திவ்யாவின் காலைப் பிடித்து வீட்டிற்கு வா என அழுது கூப்பிட்டும், திவ்யா வர மறுத்திருக்கிறார். திவ்யாவின் உறவினர்கள் அவளைத் தனியாக அழைத்துச் சென்றும் பேசிப் பார்த்திருக்கின்றனர். வீட்டிற்குக் கூட்டிச் சென்று என்னைக் கொல்லத்தானப் போறீங்க, அதற்கு இங்கேயே என்னைய கொல்லுங்க” என்று அவர் கூறியிருக்கிறார்.

உன் பொண்ணு வரமாட்டேங்குறா, நீ இருக்குறதுக்கு தூக்கு போட்டு சாகலாம்” என்று உறவினர்கள் நாகராஜிடம் சொன்னதாகவும், அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள் நத்தம் காலனி மக்கள். நாகராஜின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள், அது தற்கொலையாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.

நாகராஜின் உடலை அன்று மாலை 4 மணிக்கு நத்தம் காலனிக்குள் கொண்டு வந்து, பையன் வீட்டு வாசலில் வைத்து, அந்தப் பையன் வீட்டை முதலில் உடைத்திருக்கிறது நூறு பேர் கொண்ட கும்பல். பிறகு உடலை தருமபுரி – திருப்பத்தூர் சாலைக்கு கொண்டு சென்று, அங்கே வைத்து மறியல் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். பைக், வேன், டெம்போ, மினி லாரியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திரண்டுள்ளனர். ஒரு கும்பல் சடலத்தின் அருகில் இருக்க, இன்னொரு கும்பல் மரங்களை அறுத்துப் போட்டுச் சாலைகளை மறித்தது. மீதமுள்ளவர்கள் 400, 500 பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிந்து நத்தம் காலனி, கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களுக்குள் வெறிக்கூச்சலுடன் புகுந்திருக்கின்றனர்.

கடப்பாரை, சம்மட்டி, கோடாரி, பெட்ரோல் கேன், பெட்ரோல் பாம் பாட்டில்களுடன் வெறிக்கூச்சலிட்டுப் புகுந்துள்ளனர். ஒவ்வொரு வீடாகச் சென்று, கதவினை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து நகைகளையும் பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர். துணிமணிகள், புத்தகங்கள், குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள், நிலப்பத்திரங்கள், மெத்தை, சோபா போன்றவற்றைக் கிழித்தெறிந்து மொத்தமாக எரித்துள்ளனர். கேஸ் சிலிண்டர்களைக் கழற்றி தாங்கள் கொண்டுவந்த வாகனங்களில் ஏற்றியுள்ளனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பெட்ரோலை பெயின்ட் அடிக்கும் ஸ்பேரேயரில் நிரப்பி வீடு முழுவதும் பீச்சி அடித்துள்ளனர். பிறகு வெளியிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசித் தீக்கிரையாக்கியுள்ளனர்.

ஓட்டு வீடுகளின் மேலே ஏறி, பெரிய கல்லால் அவற்றினை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். மின்சார மற்றும் தண்ணீர் பைப் லைன்களையும், மீட்டர் பெட்டிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். வெளியே நின்றிருந்த சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். உடைக்க முடியாத பீரோக்களையும், ஆடுகளையும் தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். நத்தம் காலனி கொடகாரி அம்மன் கோயிலுக்குச் சோந்தமான 5 கிலோ தங்கம் மற்றும் 22 கிலோ வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகளை, அவை பாதுகாக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்துக் கொள்ளையடித்திருக்கின்றனர். மூன்று ஊர்களிலுமாக மொத்தம் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள், சில நான்கு சக்கர வாகனங்கள் உருத்தெரியாமல் எரித்துச் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கன் கொட்டாய், சோனயம்பட்டி, புளியம்பட்டி, சவுலுப்பட்டி, சீராம்பட்டி, ஒன்னியம்பட்டி, குடூர், ஆண்டிப்பட்டி, கதிர்நாயக்கன் நள்ளி, கொல்லுப்பட்டி, மொரப்பூர், கெங்குசெட்டிப்பட்டி, குண்டல்பட்டி – எனப் பல ஊர்களிலிருந்து சாதி வெறியர்கள் திரட்டப்பட்டிருக்கின்றனர். காரிமங்கலம் பெட்ரோல் பங்கிலிருந்து பெட்ரோலும், ஒன்னியம்பட்டி, கோணம்பட்டி ரேஷன் கடைகளிலிருந்து மண்ணெண்ணையும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, மெடிகல் சிவா, கவுன்சிலர் பச்சையப்பன், லாரி மாது (செங்கல்மேடு), கொண்டம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி, பா.ம.க. ஒன்றியச் செயலர் மதியழகன் போன்றோர் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியிருக்கின்றனர்.

தாக்குதல் தொடங்கிய நேரம் மாலை 4 மணியாதலால் ஊரில் ஆண்கள் இல்லை. பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு கரும்புக்காட்டுக்கு உயிர் தப்பி ஓடி, இரவு முழுவதும் அங்கே ஒளிந்திருக்கின்றனர். தீயும் புகையும் சூழ்ந்து மூச்சடைத்துப் போன குழந்தைகளை, மற்ற குழந்தைகளின் சிறுநீரைக் குடிக்க வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள் பெண்கள்.

நடக்கவிருக்கும் தாக்குதல் பற்றி போலீசுக்கு ஏற்கெனவே தெரியும். நாயக்கன் கொட்டாய் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் நக்சல் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீசார், கிருஷ்ணாபுரம் இன்ஸ்பெக்டர் போன்றோரிடம் நத்தம் காலனியிலிருந்து புகார் செய்து தாக்குதலைத் தடுக்குமாறு மன்றாடியிருக்கின்றனர். போலீசார் கண்டுகொள்ளவில்லை. சுமார் 100 போலீசாரும், தீயணைப்பு வண்டிகளும் தாக்குதலை வேடிக்கைதான் பார்த்திருக்கின்றனர். மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் பரமக்குடியிலிருந்து வந்து சேர்ந்த பின்னர்தான் கைது நடவடிக்கைகளே தொடங்கியுள்ளன. சுமார் 2000 பேருக்கு மேல் வன்முறையில் ஈடுபட்டிருந்தும், பத்து சதவீதம் பேர்கூட இதுவரை கைது செயப்படவில்லை.

அழிவு வேலையைக்கூட நுணுக்கமாகவும் வக்கிரமாகவும் நிதானமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். தரைக்கு டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடுகளில் அவை தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. மாடி வீட்டின் மொட்டை மாடி உட்பட அனைத்தும் சேதமாக்கப்பட்டு, சுவர்களும் கூரையும் பிளக்கப்பட்டிருக்கின்றன. பெட்டிக்கடை, சவுண்டு சர்வீஸ், மரச்சாமான் வியாபாரம், பாத்திர வியாபாரம் போன்ற தொழில் செய்வோரின் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன. 4 நாட்களில் நடக்கவிருக்கும் மகளின் திருமணத்திற்கு வாங்கி வைத்த நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதல்ல. மிகவும் நிதானமாக சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வன்னிய சாதியினரைத் திரட்டி, ஆயுதங்கள் – எரிபொருள் ஆகியவற்றைக் கையாளும் முறை பற்றி சொல்லிக் கொடுத்து, திருட்டில் கைதேர்ந்தவர்களை வைத்துக் கொள்ளையடிக்கவும் ஏற்பாடு செய்து, உயிர்ச்சேதத்தை மட்டும் தவிர்த்து இந்த வெறியாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. குஜராத்தில் இந்துவெறியர்கள் நடத்திய வன்முறையைப் போன்றே இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் காடுவெட்டி குரு அப்பகுதிக்கு வந்து சென்றதாகவும் கூறுகின்றனர். இது மேலிருந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இது ஒரு காதல் திருமணம் தோற்றுவித்த கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல. நீண்டகாலமாக கனன்று கொண்டிருந்த சாதிவெறி. இப்பகுதியில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் கோவையிலும், திருப்பூரிலும், பெங்களூரிலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் ஓரளவு வசதிகளோடு வாழ்ந்துள்ளனர். தங்களிடம் கைகட்டி நிற்காமல், சுயமாக அவர்கள் அடைந்திருந்த வாழ்க்கைத் தரம்தான் சாதிவெறியர்களின் ஆத்திரத்தில் எண்ணெ வார்த்திருக்கிறது. தங்களுடைய வீட்டில் சாப்பிட்டவர்கள்தான் வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகளை எரிந்த தாகவும், காலையில் தன்னிடமிருந்து பைக்கை வாங்கி ஓட்டியவன், மாலையில் அதனை எரித்திருப்பதாகவும் கூறுகின்றனர் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கைத் தரம் சற்று மேம்பட்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காமலும், வயிறெரிந்து கொண்டிருந்த ஆதிக்க சாதிவெறி, தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தருணத்திற்காக காத்திருந்ததையே இந்த வெறியாட்டம் காட்டுகிறது. கடுமையாக உழைத்துச் சேர்த்த பணத்தில் அம்மக்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக எட்டியிருந்த பல வசதிகளை, ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர். ஓலைக்குடிசை, அலுமினியப் பாத்திரம் என்ற வாழ்நிலைக்கு மீண்டும் அம்மக்களைத் துரத்தவேண்டும் என்ற வன்மத்தை மனதிற்கொண்டுதான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கொண்டம்பட்டியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்திருக்கின்றனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால், ஓட்டுகள் போய்விடும் என்று கருதி ஏதும் செய்யவில்லை. அன்று வருத்தத்தில் இருந்த பெண் வீட்டார் இப்போது சகஜமாகி, மருமகனுடன் சுமுக உறவு வைத்திருக்கின்றனர். இது சாதிவெறியர்களின் வெறியை அதிகப்படுத்தியிருக்கிறது. கொண்டம்பட்டிமீது தாக்குதல் நடத்துவதற்கு இது முக்கியமான காரணம்.

அண்ணா நகரில் அருந்ததியர் காலனிக்கு நிலம் ஒதுக்கீடு செய்தபோது, காலனி வந்தால் தங்கள் நிலத்துக்கு சுற்றித்தான் செல்லவேண்டும் என்பதால், அதனைக் கட்டக்கூடாது என்று வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எதிர்ப்பை மீறி இடம் ஒதுக்கப்பட்டு காலனி வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, தற்போது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர் சாதிவெறியர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறியர்கள் ஆத்திரம் கொள்வதற்கு அவரவர்க்கு உரிய காரணங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பான காரணம் ஏதும் இல்லையென்றாலும், தங்களைச் சார்ந்திராமல், சொந்தக்காலில் அம்மக்கள் நிற்பதும், கவுரவமான வாழ்க்கை வாழ்வதுமே சாதிவெறியர்கள் ஆத்திரம் கொள்ளப் போதுமான காரணமாக இருந்திருக்கிறது. இளவரசன் – திவ்யா காதல் திருமணம் என்பது இத்தாக்குதலுக்கான ஒரு முகாந்திரம் மட்டுமே.

இந்தச் சாதிவெறியர்கள் பெரும் நிலவுடைமையாளர்கள் இல்லையென்றபோதிலும், இவர்கள் ஒரு புதியவகை ஆதிக்க சக்திகள். இட ஒதுக்கீட்டுக்காகப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றும்; சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு சத்திரிய சாதியினர் என்றும் தம்மை அழைத்துக் கொள்ளும் வன்னியர், தேவர், கவுண்டர் போன்ற சாதிகளில் தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் புதிய ஆதிக்க சக்திகளை உருவாக்கியிருக்கின்றன. சுயநிதிக் கல்லூரி, ரியல் எஸ்டேட், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜென்சிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள், கந்துவட்டி பைனான்சு, பிற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொழுத்திருக்கும் இந்தச் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள்தான், சாதிக்கட்சிகளின் தூண்கள். தத்தம் சாதிகளில் தமக்குத் தேவைப்படுகின்ற சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு, அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள்தான், தற்போதைய சாதிவெறி நடவடிக்கைகளின் பின்புலத்தில் இருப்பவர்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது வன்னிய சாதிச் சங்க முகத்தை மறைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி என்று பொய்முகம் காட்டி, வன்னிய, தாழ்த்தப்பட்ட, இசுலாமியக் கூட்டணி கனவு கண்ட ராமதாசின் பிழைப்புவாதம் இன்று அம்பலப்பட்டு விட்டது. இனி எந்தக் கொள்கையையும் சொல்லித் தனது சொந்த சாதியினர் மத்தியிலேயே தான் செல்வாக்கு பெற முடியாது என்ற நிலையில்தான், வெளிப்படையாகவும் கிரிமினல்தனமாகவும் ராமதாசு சாதிவெறியைத் தூண்டுகிறார்.

வன்னியப் பெண்களை மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட அல்லாத எல்லா சமூகத்துப் பெண்களையும் தலித் இளைஞர்கள் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிப்பதாக ஒரு கட்டுக்கதையைப் பரப்பி, ஆதிக்க சாதியினர் அனைவரையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் திருப்பி, அவர்கள் அனைவரின் பிரதிநிதியாகத் தன்னை முன்நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சாதிக் கட்சிகளின் கூட்டணி என்று ராமதாசு முன்வைப்பது முக்குலத்தோர், கவுண்டர் உள்ளிட்ட எல்லா ஆதிக்க சாதியினருக்கும் உவப்பானதொரு முழக்கம். அதனால்தான் நாயக்கன் கொட்டாயில் இத்தகையதொரு கொடூரமான வன்கொடுமைத் தாக்குதலை நடத்திவிட்டு, நாகராஜை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடு என்று திமிர்த்தனமாக பா.ம.க. பேசுகிறது.

மருத்துவர் ஐயாவுக்கு முற்போக்கு முகச்சாயம் பூசியவர்களும், தமிழ்க்குடிதாங்கி பட்டம் கொடுத்தவர்களும், தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை பேசியவர்களும், சாதிகளுக்கிடையிலான ஒற்றுமை பேசியவர்களும் இப்போது பம்முகிறார்கள். பார்ப்பனரல்லாத இடைநிலைச் சாதிகளின் ஆதிக்க சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை இழைப்பதென்பது புதிதல்ல. சாதிவெறி இலைமறை காயாக இல்லாமல் வெளிப்படையாக வருகிறது என்பதுதான் இப்போது புதியது.

சாதி, உட்சாதி அடையாளங்களை அங்கீகரிக்க வேண்டுமென்றும், கம்யூனிஸ்டுகள் அவற்றை அங்கீகரிக்க மறுப்பதாகவும் கூறி கம்யூனிச எதிர்ப்பு அரசியலை முன்நின்று நடத்தியவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். அடையாள அரசியல் என்பது சாதி அடையாளங்களை உறுதிப்படுத்தவும், சாதி – உட்சாதிப் பிளவுகளை அதிகப்படுத்தவும்தான் பயன்பட்டிருக்கிறது. அது அவ்வாறு மட்டுமே பயன்பட முடியும். சாதி என்ற நிறுவனமே ஜனநாயகத்துக்கு எதிரானது. சாதியின் அடிப்படையில் திரட்டப்படும் மக்களை வைத்து சாதி ஒழிப்பையோ, ஜனநாயகத்தையோ ஒருக்காலும் கொண்டுவர முடியாது. எந்த முற்போக்கான கோரிக்கையையும் சாதிக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர் மத்தியிலான சாதிகள் – உட்சாதிகளுக்கும் இது பொருந்தும்.

நக்சலைட்டு அரசியலின் செல்வாக்கு இருந்தவரை சாதி ஆதிக்கம் இல்லை என்பது, நத்தம் காலனி உள்ளிட்ட ஊர்களின் மக்கள் மட்டுமின்றி, முதலாளித்துவ ஊடகங்களும் இன்று ஒப்புக்கொள்ளும் உண்மை. இது வெற்றுப் பெருமை அல்ல, வர்க்க அரசியலின் வலிமை. புரட்சிகர அரசியலை நசுக்கி விட்டு, அந்த இடத்தில் சாதிய அரசியலையும், ஓட்டுச்சீட்டு பிழைப்புவாதத்தையும் மாற்றாக நுழைத்ததன் விளைவுதான் சாதிவெறியின் செல்வாக்கு.

வன்னிய சாதிவெறியர்கள் மற்றும் ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணமும், நீதியும் கிடைக்கப் போராடுகின்ற அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் தலையெடுத்து வரும் சாதிய அரசியலை நேருக்குநேர் மோதி முறியடிப்பதும் அவசரக் கடமையாக இருக்கிறது.

தகவல் உதவி : விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

___________________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
___________________________________________________________

சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!

57

ஆதிக்க சாதி பெருமை பேசும் உழைப்பாளி மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்…

  • ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பேருந்து முதலாளி தனது சாதி மக்களுக்கு சலுகைக் கட்டணம் பயணத்தை அனுமதிப்பாரா ?
  • ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றும் முதலாளிகளின் வீட்டுப் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ அதே சாதியில் உள்ள கூலி விவசாயியை, ஏழையை, தொழிலாளியை திருமணம் செய்து கொடுப்பாரா ? அல்லது தெரியாமல் காதலித்துவிட்டால் தான் சேர்த்துவைப்பாரா ?
  • ஆதிக்க சாதியை சேர்ந்த பண்ணையார் தனது சாதியை சேர்ந்த கூலி விவசாயிக்கு அதிக கூலி கொடுப்பாரா ? கொடுக்கிறாரா ?
  • தொழிற்சாலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முதலாளி, நிர்வாக அதிகாரி போன்றோர் தனது சாதிக்கார தொழிலாளி என்பாதால் சலுகைக் காட்டுவாரா ? அதிக சம்பளம் கொடுப்பாரா ? சங்கம் கட்ட அனுமதிப்பாரா ?
  • ஆதிக்க சாதியைச் சேர்ந்த் பள்ளி, கல்லூரி முதலாளிகள் அதே சாதியில் உள்ள மாணவனுக்கு இலவசமாக கல்வி வழங்குவாரா ? குறைந்தபட்சம் அய்யோ பாவம் என்று அதிக கட்டணம் வசூலிக்காமல் கல்வி கொடுப்பாரா ?
  • ஆதிக்க சாதிக்காரர் வைத்திருக்கும் மளிகை கடையில் எங்க சாதிக்காரனுக்கு மட்டும் தான் பொருள் விற்பனை என அறிவிக்கத் தயாரா ? அதையும் சலுகை விலையில் வழங்கத் தயாரா ?
  • ஆதிக்க சாதியில் பிறந்து வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் ஆகாமல் நொந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உழைப்பாளி பெண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வாழ்க்கை தரவேண்டும் என்று அதே சாதி இளைஞர்களை வலியுறுத்த ஆதிக்க சாதிச்சங்கங்கள் தயாரா ?
  • நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எங்கள் சாதிக்காரன் தயாரித்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறத் தயாரா ?
  • ஆதிக்க சாதி பெருமை பேசி திரியும் ஒருவர் பேருந்தில் ஏறும்போது தாழ்த்தப்பட்டவர் வண்டி ஓட்டுகிறார் என்றால் ஏறாமல் விட்டுவிடுவாரா ? அதிகாரி தாழ்த்தப்பட்டவர் என்றால் கூழைகும்பிடு போடாமல் இருப்பாரா ?
  • ஆதிக்க சாதிக்காரர் உபயோகிக்கும் ரூபாய் நோட்டை இதற்கு முன் தாழ்த்தபட்ட ஒருவர் கையில் இருந்து வாங்கி இருந்தால் இவர் அதை கீழே போட்டுவிடுவாரா?
  • தொழிலாளியாக ஆலைக்குள் நுழையும்போது, பேருந்தில் ஏறும்போது சாதி குறுக்கே வருகிறதா ? அங்கே சாதி பெருமையை பேச முடியாதது ஏன் ?
  • ஆதிக்க சாதிக்காரர்கள் தனது சாதிக்கு மனு இட்ட கட்டளைகளை, பழக்க வழக்கங்களை அப்படியே கடைபிடிக்க முடியுமா ? முடியவில்லை என்றால் காரணம் என்ன ?
  • ஆதிக்க சாதிக்காரர்கள் என்றால் காவிரித் தண்ணீர் உடனடியாகவோ, மின்சாரம் தடையில்லாமலோ கிடைத்து விடுகிறதா?
  • அன்றாடம் ஆயிரம் வேலைகளில் வர்க்கமாக ஒன்றுபட்டு நிற்கின்ற உழைப்பாளிகளை சாதியாக பிளப்பதால் ஆதாயமடைவது முதலாளிகள்தான் என்பது தெரியவில்லையா ? ஆதிக்க சாதியில் பிறந்து அரும்பாடுபடும் தொழிலாளி தனது உரிமையை கேட்க சங்கம் கட்டுவதை தடுக்கும் முதலாளிகளின் வீடுகளை ஆட்களை திரட்டி இடிப்பதற்கு ரோஷம் வராததன் மர்ம்ம் என்ன ?
  • சாதி வெறியை தூண்டிவிட்டு துப்பாக்கி சூடு, சிறைவாசம், வழக்குகளுக்கு ஆளாகிய உங்களின் நிலையும் , இதனால் ஆதாயம் அடைந்து சொத்து சேர்த்துள்ள தலைவர்களின் யோக்கியதையும் தெரியுமா ?

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அமலாக்கப்படும் நாட்டை காலனியாக்கும் கொள்கைகாளால் அன்றாடம் பல்வேறு பாதிப்புகளை, கொடுமைகளை அனுபவிக்கும் உழைக்கும் மக்களை பிளக்கும் சாதி பெருமை நம் வாழ்வை பாதுகாக்காது. மாறாக உழைப்பாளிகளை பிளவுபடுத்தி, முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதையும், சுரண்டி கொழுப்பதையும், உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து முறியடிப்போம் ! உழைப்பாளிகள் அனைவரும் சம்ம் என்ற ஜனநாயக உணர்வுகொள்வோம் ! புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறுவோம்!

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தமிழ்நாடு-புதுச்சேரி

பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !

19

 

சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரே கடந்த நவம்பர் 17 அன்று இயற்கையாக மரணமடைந்துவிட்டார் என்பதற்காக நாம் வருந்தத்தான் வேண்டும். ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவன் தண்டிக்கப்பட்டு, பலமுறை தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படாமல், இயற்கையாக மரணமடைந்திருப்பது வருத்தமானதுதான்.

செத்தவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், அவனைத் தெவமாக்குவதென்பது இந்துத்துவ மரபு. அந்த வழியில் முதலாளித்துவ ஊடகங்களும் ஓட்டுக்கட்சிகளும் தாக்கரேவுக்காக ஒப்பாரி வைத்து, அவரது சிவசேனா கும்பலின் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களைச் சூடு சோரணையின்றி மூடிமறைத்தன. ஆனால், இப்பயங்கரவாத கும்பலின் இரத்தவெறி பிடித்த வரலாறை நாட்டு மக்கள் ஒருக்காலும் மறக்கவே முடியாது.

1960-களில் இந்தியாவில் நிலவிய அரசியல் – பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆளும் காங்கிரசு கட்சியின் மீது மக்களிடம் அதிருப்தி பெருகிய நேரத்தில், மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன், மும்பையில் மார்மிக் எனும் மராத்திய வார இதழை நடத்திய பால்தாக்கரே, குஜராத்தியர்கள், பீகாரிகள் மற்றும் தென்னிந்தியர்களால் மராத்திய மக்களின் வாழ்வும் வளமும் பறிக்கப்படுவதாக இனவெறியூட்டும் பிரச்சாரத்தை நடத்தி, 1966-இல் சிவசேனா கட்சியைத் தொடங்கினார். மராத்திய மன்னன் சிவாஜியின் படையாக அறிவித்துக் கொண்ட இக்கட்சி, ‘வந்தேறி’களான குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள், உணவகங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. பிப்ரவரி 1969-இல் மும்பையில் குடியேறிய  கர்நாடகத்தவர் மீது கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட தாக்கரேவின் குண்டர்கள் 59 பேரைக் கொன்று 274 பேரைப் படுகாயப்படுத்தினர்.

மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பை நகரில் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைக் கண்டு அரசும் பெருமுதலாளிகளும் கதிகலங்கிய காலம் அது. 1967 செப்டம்பர் 10 அன்று மார்மிக் இதழில் கம்யூனிஸ்டுகளை ஒழிப்பதுதான் தனது லட்சியம் என்று தாக்கரே வெளிப்படையாக அறிவித்தார். மூன்று மாதங்கள் கழித்து, 1967 டிசம்பரில், சிவசேனா குண்டர்கள் பரேல் பகுதியில் தால்வி கட்டிடத்தில் இருந்த இருந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கித்  தீயிட்டுக் கொளுத்தினர். இடது, வலது கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த முன்னணியாளர்களும் தொழிற்சங்க செயல்வீரர்களும் சிவசேனா குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டம் நடக்குமிடத்துக்கு போலீசு வாகனங்களோடு கூடவே சிவசேனா குண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வந்திறங்கிப் போராட்டக்காரர்கள் மீது பாந்து தாக்குதல் தொடுப்பார்கள்.  படுகாயமடைந்த தொழிலாளர்கள் போலீசால் கைது செயப்பட்டு சிறையிடப்படுவார்கள். இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் பாரதீய காம்கார் சேனா என்ற சிவசேனாவின் தொழிற்சங்கம் ஆலைகளில் மட்டுமின்றி வங்கி, அரசுத்துறை மற்றும் சேவைத் துறை நிறுவனங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான போட்டி சங்கமாக வளரத் தொடங்கியது. இதனாலேயே தரகுப் பெருமுதலாளியான ராகுல் பஜாஜ், தனது ஆலையின் பிரச்சினைகளை தாக்கரே தீர்த்து வைத்தார்” என்று பெருமையுடன் கூறினார்.

பால்-தாக்கரே

1970-களில் தாக்கரேவின் இந்துவெறியானது பிவாண்டி, ஜலகோன், மகத் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலாகப் பரவியது. இந்திய நாட்டில் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் புற்று நோயைப் போன்றவர்கள்; அவர்களை அழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது” என்று வெறியூட்டிய தாக்கரே, முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப் படையைத் திரட்டுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்க,  தாழ்த்தப்பட்டோர் மீது திட்டமிட்ட பயங்கரவாத வெறியாட்டங்களை சிவசேனா குண்டர்கள் கட்டவிழ்த்து விட்டனர். ஜனவரி 1974-இல் தலித் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாகவத் ஜாதவ் தாக்கரே கும்பலால் படுகொலை செயப்பட்டார். 1984-இல் விதர்பா பிராந்தியத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் மீது சிவசேனாவின் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, அவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு பயிர்கள் நாசமாக்கப்பட்டன.

மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதை எதிர்த்து 1990-களில் சிவசேனா குண்டர்கள் இப்பிராந்தியத்தில் பயங்கரவாத வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். இருப்பினும், சிவசேனா குண்டர்கள் நடத்திய வன்கொடுமை வெறியாட்டங்கள் தொடர்பான 1,100 வழக்குகளை  1990-களின் இறுதியில் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தள்ளுபடி செய்தது. அதன் பின்னர், ஜூலை11,1997-இல் ராமாபா அம்பேத்கர் நகரில் சிவசேனா குண்டர்கள் நடத்திய தாக்குதல் நடத்திய பின், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டு, 30 பேர் படுகாயமடைந்தனர். ஆனாலும் சிவசேனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளஞ்சோடிகளைத் தாக்கிய சிவசேனா, தன்னை கலாச்சாரப் போலீசாக நியமித்துக் கொண்டு ஆட்டம் போட்டது. தேசபக்த சவடால் அடித்துக் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் எழுத்தாளர்களுக்கு எதிர்ப்பு காட்டுவது என்ற பெயரில் மிரட்டலையும் அச்சுறுத்தலையும் ஏவியது. பாலிவுட் திரைப்படங்கள் தாக்கரே தயவுக்குப் பின்னரே வெளிவர முடிந்தது. சச்சின் தெண்டுல்கர், சானியா மிர்சா முதலான விளையாட்டு வீரர்களும், அமிதாப்பச்சன், ஷாருக்கான் முதலான சினிமா நடிகர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாயினர். சிவசேனாவை விமர்சித்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் மீது தாக்கரே குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்.

மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன் மராத்தியர்களுக்காகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொண்ட சிவசேனா, மும்பை நகராட்சியைக் கைப்பற்றிய பின்னர், அரசு ஒப்பந்தங்களை மராத்தியர்களுக்குத் தராமல் பிற மாநிலப் பெரு முதலாளிகளுக்குத்தான் கொடுத்தது.  மும்பையில் ஜவுளி ஆலைகள் நெருக்கடியில் சிக்கியிருந்த காலத்தில், வேலைநிறுத்தம் செய்ததால் அதைச் சாக்கிட்டு ஆலை மூடல்கள் நடந்தன. அப்போது ஏறத்தாழ 2 லட்சத்து 75,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவர்களில் 90 சதவீதத்தினர் மராத்தியர்கள்தான். ஆனாலும் சிவசேனா அவர்களுக்காக எதுவும் செயவில்லை. ஜனவரி 1982 -இல் மும்பையில் நடந்த மாபெரும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து தொழிற்சங்க முன்னணியாளர்கள் மீது சிவசேனா குண்டர்கள் தாக்குதலை நடத்தினர். தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்த பின்னர்,  மூடப்பட்ட பஞ்சாலைகள் சிவசேனாவின் ஆதரவுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப் போயின.

ஜூலை 1996-இல் மும்பையின் மாதுங்கா பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்ய மறுத்த ரமேஷ் கினி என்பவர் சிவசேனா குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமிகாந்த் ஷா, தாக்கரேயின் தம்பி மகனும் தற்போதைய நவநிர்மாண் சமிதியின் தலைவருமான ராஜ்தாக்கரேவின் நெருங்கிய கூட்டாளியாவார். தனது கணவரின் கொலைக்குக் காரணம் ராஜ்தாக்கரேதான் என்று தைரியமாக குற்றம் சாட்டி அவரது மனைவி ஷீலா நீதிக்காகப் போராடினார். அப்போது சிவசேனா ஆட்சியிலிருந்ததால் புலன் விசாரணையை மாநில அரசு முடக்கியது. பின்னர் மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் மையப் புலனாவுத்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனாலும், மும்பை போலீசு ஒத்துழைக்க மறுத்து தடயங்களை அழித்தது. சிலி நாட்டில் ராணுவ சர்வாதிகாரி பினோசெட் உருவாக்கிய குண்டர் படையைப் போலவே சிவசேனா குண்டர்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாகக் கொட்டமடித்தனர்.

அமெரிக்காவின் என்ரான் மின் நிறுவனத்திக்கு எதிராகச் சவடால் அடித்து, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒப்பந்தத்தை ரத்து செய்து சூரத்தனம் காட்டிய தாக்கரே,  பின்னர் அதே என்ரான் நிறுவனத்தின் கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிட்டார். மராத்தியர்களின் வாழ்வும் வளமும் பிற மாநிலத்திலிருந்து குடியேறியவர்களால்தான் பாதிக்கப்படுகிறது என்று இனவெறியூட்டி தாக்குதலை நடத்திய தாக்கரே, அமெரிக்காவின் என்ரானால் மகாராஷ்டிரா சூறையாடப்பட்டதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுதான் தாக்கரே முன்வைத்த மண்ணின் மைந்தர்கள் எனும் இனவெறி பாசிச அரசியலின் யோக்கியதை.

காங்கிரசின் ஆதரவு இல்லாமல் சிவசேனா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது. வசந்தராவ் நாயக், வசந்த்தாதா பட்டீல் ஆகிய காங்கிரசு முதல்வர்கள் சிவசேனாவின் வெறியாட்டங்களுக்குத் துணைநின்றனர். சிவசேனாவை ஒரு கருவியாகக் கொண்டு மும்பையில் தொழிற்சங்க இயக்கம் வலுவடைவதைத் தடுத்தனர். பிவாண்டி கலவரம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி மதன் கமிசன் சிவசேனாவையும் இதர காவிக் கும்பல்களையும் குற்றம் சாட்டிய போதிலும், காங்கிரசு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக 1992-93இல் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர், மும்பையில்  இந்துவெறியர்களும் சிவசேனா குண்டர்களும் முஸ்லிம்கள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கும் நரவேட்டைக்கும் மூளையாகச் செயல்பட்டவர்தான் பால்தாக்கரே என்று சிறீகிருஷ்ணா கமிசன் குற்றம் சாட்டிய போதிலும், மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலை நான்தான் தொடங்கி வைத்தேன். நான் அறிவித்த பிறகுதான் தாக்குதல் நின்றது” என்று பகிரங்க வாக்குமூலமாக சாம்னா இதழின் தலையங்கத்தில் தாக்கரே எழுதியிருந்த போதிலும், இந்திய அரசு இப்பயங்கரவாதியைத் தண்டிக்காமல் அதிகாரபூர்வ பயங்கரவாதியாக வைத்துப் பாதுகாத்தது. தாக்கரே மீதான இதர வழக்குகளும் அவரது சாம்னா நாளேட்டின் இனவெறிப் பிரச்சாரத்துக்கு எதிரான வழக்குகளும் இன்னமும் நடத்தப்படவேயில்லை. பிரதீபா பட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் அரசுத் தலைவர்களான விவகாரங்களில் சிவசேனாவுடனான காங்கிரசின் கள்ளக்கூட்டு  அப்பட்டமாக வெளிப்பட்டது.

போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இல்லாமல் பாசிசம் ஒருக்காலும் அதிகாரத்துக்கு வருவதில்லை. போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் சமரச – சந்தர்ப்பவாதப் போக்கைப் பின்பற்றாமல் இருந்திருந்தால், பாசிச சிவசேனா கும்பல் இந்த அளவுக்கு வளர்ந்து வெறியாட்டம் போட்டிருக்கவே முடியாது. பால்தாக்கரேவின் உடல் எரியூட்டப்பட்ட அதே சிவாஜி பூங்கா பகுதியில் 1970-இல் பால்தாக்கரேவையும் அவனது கூலிப்படையினரையும் மும்பை வீதிகளில் வெட்டிப் புதைப்போம்!” என்று சூளுரைத்து 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.  மத்திய மும்பை தொகுதியின் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வும் தொழிற்சங்கவாதியுமான  கிருஷ்ண தேசா, ஜூன் 6, 1970 அன்று சிவசேனா குண்டர்களால் கொல்லப்பட்ட பின்னர் நடந்த அவரது இறுதி ஊர்வலம்தான் அது. சிவசேனாவுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராக இருந்தபோதிலும்,  அன்றைய போலிகம்யூனிசத் தலைமை அமைதி காத்தது. சிவசேனாவை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், அனைத்தையும் சட்டவாத ரீதியில் தீர்த்துக் கொள்ள முயற்சித்தது. உழைக்கும் மக்களிடம் இந்தியப் போலி ஜனநாயகத்தின் மீது மாயைகளை வளர்த்தது.

தேசாயின் துணைவியாரான சரோஜினி தேசா அதேதொகுதியில் வலது கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டபோது, இடைத்தேர்தலில் அவரைத் தோற்கடித்து, முதன் முறையாக கம்யூனிஸ்டு கோட்டையைத் தகர்த்து முன்னிலும் தீவிரமாக சிவசேனா கும்பல் தொழிற்சங்க இயக்கத்தினரைத் தாக்கத் தொடங்கியது. இவ்வளவுக்கும் பின்னரும், பாசிச இந்திரா ஆதரவு போலிகம்யூனிஸ்டு தலைவரான டாங்கே, ஒருமுறை தாக்கரேயுடன் சேர்ந்து மேடையேறி கைகுலுக்கினார். சோசலிஸ்டு வேடம் போட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ் தாக்கரே கும்பலின் குடும்ப நண்பராகிப் போனார்.

2001 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசின் பட்ஜெட்டை எதிர்த்தும், அரசுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், தொழிலாளர் சட்டங்களைத் தனியார் முதலாளிகளுக்குச் சாதகமாகத் திருத்தம் செவதை எதிர்த்தும் இடது, வலது கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தன.  அரசியல் ஆதாயத்துக்காக சிவசேனாவும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்ததும், அதனைப் போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் வரவேற்று, தங்களது பொதுக்கூட்டங்களில் பாசிச சிவசேனா குண்டர்படைத் தளபதிகளை மேடையேற்றிக் கூடிக்குலாவின.

போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிஸ்டுகளின் சந்தர்ப்பவாதமும் காங்கிரசின் ஆதரவும் மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமே இந்துவெறி போதை தலைக்கேறி பாசிச பயங்கரவாத சிவசேனா கும்பலை ஆதரித்து நின்றது. இதனாலேயே இட்லரின் வாரிசாக சிவசேனா இத்தனை காலமும் கொட்டமடிக்க முடிந்துள்ளது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய போலி ஜனநாயக அரசியலமைப்பு முறையின் மகிமை. தாக்கரே, மோடி, அத்வானி, இந்திரா, ராஜீவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா – என இத்தகைய பாசிஸ்டுகளும் இன்னும் பல புதிய பாசிஸ்டுகளும் உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அரசியலமைப்பு முறைதான்.

எந்த அரசுப் பதவியிலும் இல்லாத, இந்துவெறி – இனவெறி பாசிச பயங்கரவாதியான பால்தாக்கரேவின் உடலுக்குத் தேசியக் கொடியைப் போர்த்தி அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக  வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு, தேசிய ஒருமைப்பாட்டை உபதேசிக்கும் இந்திய அரசு தேசியக் கொடியைப் போர்த்தி மரியாதை செதது ஏன் என்பது புரியாத புதிரல்ல. ஏனென்றால் இந்திய அரசானது இந்துத்துவ மேலாதிக்க, பாசிச சர்வாதிகார அரசு.

தாக்கரேவின் பாசிச அரசியல் வாரிசாக அவரது மகன் உத்தவ் தாக்கரேவும், அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரேவும் உள்ளனர் என்றாலும், நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இயக்கங்களிலும் அவரது மண்ணின் மைந்தர்கள் கொள்கையை ஆதரித்து அரசியல் நடத்தும் இனவெறியர்கள் இருக்கவே செகிறார்கள். வர்க்க அரசியலை மறுத்து, உழைக்கும் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து திசைதிருப்பி ஆளும் வர்க்கத்துக்கு வெவ்வேறு அளவுகளில் சேவை செயும் இயக்கங்களும் கட்சிகளும் இன்னமும் நீங்காத அபாயமாக நீடிக்கவே செகின்றன.

மண்ணின் மைந்தர் கொள்கையை வேரூன்றச் செய்து மகாராஷ்டிராவில் அசைக்க முடியாத பாரம்பரியத்தை  நிலைநாட்டியவர், மக்களின் செல்வாக்குமிக்க தலைவர் பால்தாக்கரே என்று இந்துவறி-இனவெறியர்களும் ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளும் அவரைப் புகழ்ந்து அஞ்சலி செலுத்தி வருந்துகிறார்கள். நாமும் வருந்தத்தான் வேண்டும் – ஒரு பாசிச பயங்கரவாத மாஃபியா கும்பலின்  தலைவன் தண்டிக்கப்படாமல் இயற்கையாக மரணமடைந்ததற்காக.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_____________________________________________________________

சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் !

10

ன்றிலிருந்து 5 ஆண்டுகள் என எதிர்காலத்துக்குள் பயணிப்போம்.

அதற்குள் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து
==வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா வரை
==சென்ட்ரலிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, அண்ணா நகர், திருமங்கலம் வழியாக கோயம்பேடு வரை
==கோயம்பேட்டிலிருந்து வட பழனி, அசோக் நகர், கலைமகள் நகர் வழியாக கத்திப்பாரா வரை
==கத்திப்பாராவிலிருந்து  விமான நிலையம் வரை
என மெட்ரோ ரயில் ஓட ஆரம்பித்து விட்டிருக்கும்.

இந்த வழித்தடங்களில் தரைக்குக் கீழே 20 ரயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையில் 14 ரயில் நிலையங்களும் செயல்படும். சுமார் 8 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை தூரத்துக்கு ஏற்ப  டிக்கெட் எடுத்துக் கொண்டால் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட, நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், மின்னணுத் தகவல் பலகை என்று பளபளத்துக் கொண்டிருக்கும் தரையடி ரயில் நிலையங்களுக்குள் நுழையலாம். ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு அட்டைகளை வாங்கி பையில் வைத்திருந்தாலே தானியங்கி கதவு திறந்து உங்களுக்கு வழி விடும்.

ரயில் நிலையத்துக்குள் போன 3 நிமிடங்களுக்குள் ரயில் வந்து விடும். தானியக்கமாக இயங்கும்  ரயில் வந்து நின்றதும், கதவுகள் தானாகவே திறக்கும். துருப்பிடிக்காத ஸ்டீலில் செய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிக்குள் நுழைந்தால் கதவுகள் தானாகவே மூடிக்  கொள்ளும். அடுத்த நிலையம் பற்றிய விபரங்கள் மின்னணுப் பலகையில் காட்டப்படுவதோடு, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் செய்வார்கள். இப்போதைய பயண நேரத்தை விட 50% முதல் 75% வரை குறைவான நேரத்தில் போக வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்து விடலாம்.

இதுதான் எதிர்கால சாத்தியம்.

காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் அல்லது பேருந்தில் போக்குவரத்து நெருக்கடிகளோடு இந்த இடங்களைக் கடக்கும் சென்னைவாசிகளுக்கு மேலே சொன்ன எதிர்காலக் கனவு தான் ஆறுதல்.

இந்த மெட்ரோ ரயில் பணிகளைப் பார்த்தவாறு சாலையில் போகும் போது மஞ்சள் பூக்கள் சில எழுப்பப்பட்ட தடுப்புகளுக்குள் நகர்வது தெரிகிறது. பந்து வந்து தலையில் அடித்தால் காத்துக் கொள்ள கவசம் போட்டுக் கொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் போல இல்லாமல், மேலே இருந்து கற்கள்  அல்லது கருவிகள் தலையில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக கவசம் அணிந்து கொண்ட மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் நகர்வுகள் தான் அப்படித் தெரிகின்றன. வெயிலாய் இருந்தாலும், மழையாய் இருந்தாலும், காற்று அடித்தாலும் இந்தப் பூக்கள் அசரமால் உழைத்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும் இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? மெட்ரோ ரயில் வேலைகள் நடக்கும் பணியிடங்களுக்கு அருகிலும், ஒரு பகுதித் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் திருவேற்காடு தொழிலாளர்கள் குடியிருப்பிலும் தொழிலாளர்களைச் சந்தித்து தகவல் திரட்டினோம்.

வர்களின் அனுபவங்களைக் கேட்கும் பொழுதே தெரிந்தது, அவை அனுபவங்கள் அல்ல, ஆவணங்கள். அவர்களது உழைப்பின் பதிவுகள் வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்தப்படுவதில்லை. பாலங்களாய், சாலைகளாய், விண்ணை முட்டும் கட்டிடங்களாய்  ஆவணப்படுத்தப் படுகின்றன. ஆனால், அந்தப் படைப்புகளின் மீது உருவாக்கும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான காப்புரிமையும் இல்லை, ராயல்டியும் கொடுக்கப்படுவதில்லை. உரையாடல்களில் கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்த விபரங்களையும் தொகுத்து தருகிறோம். தொழிலாளர்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

இந்தத் தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

மெட்ரோ தொழிலாளிகள் 2இவர்கள் பெரும்பாலும் பீகார், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். வடபழனி சிக்னலுக்கு அருகில் மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடத்தில் நின்றிருந்த மூன்று தொழிலாளர்கள் பீகாரின் ஜமுய் மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்களை  ஜமுய் மூவர் என்று வைத்துக் கொள்வோம். கோயம்பேட்டில் சந்தித்த சுமார் 40 வயதான தொழிலாளர் பீகாரின் பாட்னாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து வருகிறார். இவரை ராதே ஷ்யாம் என்று அழைக்கலாம். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அருகில் சந்தித்து பேசிய செக்யூரிட்டி ஊழியர் அசாமிலிருந்து வருகிறாராம். இவரது பெயர் கோகோய். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வெளியில் வேலை நடந்து கொண்டிருந்த இடத்தில் மூர் மார்கெட் திசையிலிருந்து கையில் சாப்பாட்டு கேரியரோடு நடந்து வந்து கொண்டிருந்தவர் பஞ்சாபை சேர்ந்தவர். ஜமன்லால் சிங் என்று இவரைக் கூப்பிடலாம்.

ஈக்காட்டுத் தாங்கலில் சந்தித்த செக்யூரிட்டி ஊழியர் ஜார்கண்டைச் சேர்ந்தவர்.  நான்கு மாதம் ஊருக்குப் போய் விட்டு இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். ஆஷிஷ் குமார் என்று இவரை குறிப்பிடுவோம். காசி தியேட்டர் பாலத்தின் கீழ் சந்தித்த சிறுவன் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னான். முன்னா என்று வைத்துக் கொள்வோம். அண்ணா நகர் ரவுண்டானாவில் சாலையைத் தூய்மை செய்து கொண்டிருந்த மெட்ரோ பணியாளர் பீகாரின் பகல்பூரைச் சேர்ந்தவர். இவரது பெயரை ராம்லால் என்று வைத்துக் கொள்வோம். அதே இடத்தில் சிறிது தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான தொழிலாளருக்கு சொந்த ஊர் ஒரிசாவின் கஞ்சன் மாவட்டம். இவரை நாராயண் என்று அழைப்போம் அண்ணா நகர் புளூ ஸ்டார் அருகில் சந்தித்த சிவில் சூப்பர்வைசர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவரை பசந்த் என்று வைத்துக் கொள்வோம்

திருவேற்காட்டில் தங்குமிடத்துக்கு வெளியில் கடையில் சந்தித்த நான்கு தொழிலாளர்கள் பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை சிவான் சிராமிக் என்று அழைப்போம். இவர்கள் அனைவரும் வல்லரசாக உருவாகி வரும் இந்திய நாட்டில் வசிக்கும் குடிமக்கள் தான்  என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் ஏன் தமது சொந்த ஊரை விட்டு வெகு தூரம் வந்து வேலை செய்கிறார்கள்? எப்படி வந்து சேருகிறார்கள்?

மெட்ரோ ரயில் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு (எல்&டி, ஆப்கான்ஸ், சிசிசிஎல் முதலியன) ஒப்பந்தப் பணியாக அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு காண்டிராக்டர்கள் இந்தத் தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள்.

ஜமூய் மூவரிடம் ‘பீகாரிலிருந்து இங்கே எப்படி வந்து சேர்ந்தீங்க? ஏன் வந்தீங்க?’ என்று கேட்டதற்கு  ‘என்ன செய்ய சகோதரா! எங்க வயிறு நிரம்புகிறதோ அங்க போக வேண்டியிருக்கு’  என்றார்கள்.  அவர்களில் வயதான ஒரு தொழிலாளருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனவாம். ஊரில் நிலம் இருக்கிறதாம். விவசாயம் செய்கிறார்களாம். இவர் மாதா மாதம் காசு சேர்த்து 3,000 ரூபாய் அல்லது 4,000 ரூபாய் ஊருக்கு அனுப்புவாராம். எப்போதாவது வயல் வேலை அல்லது குடும்பத்தில் தேவை ஏற்பட்டால் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போவார்களாம்.

ராதே ஷ்யாமுக்கு ஊரில் விவசாயம், நிலம் இருக்கிறது. அண்ணன் குடும்பத்தினர் அதைக் கவனித்துக் கொள்கின்றனர். இவர் இப்படி வெவ்வேறு இடங்களுக்குப் போய் கூலி வேலை செய்து பணம் அனுப்புவாராம். மாதம் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஊருக்கு அனுப்புவாராம்.

செக்யூரிட்டி ஊழியர் கோகோயிடம் ‘அசாமில் இது போல வேலைகள் இல்லையா?’ என்று கேட்டால், ‘அசாமில் இது போன்ற வளர்ச்சி வருவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் வரை ஆகலாம்’  என்கிறார். ‘இங்கு நன்றாக இருக்கிறது. எங்க ஊரில் இருப்பது போல சாதிரீதியாக கொடுமைப்படுத்துவது இல்லை.  ஒழுங்காக நடத்துகிறார்கள். அனைவரும் சுதந்திரமாய் இருக்கிறோம்’ என்றார். ஜமன்லால் அவரது டேக்காதார் (மேஸ்திரி) எங்கு வேலை இருக்கிறது என்று அழைத்து போகிறாரோ அங்கே போவாராம்.

செக்யூரிட்டி ஆக இருக்கும் ஆஷிஷ் குமாருக்கு ஜார்கண்டில் மளிகைக் கடை இருக்கிறதாம். மனைவியும், குழந்தைகளும் அங்கு இருக்கிறார்களாம்.  ‘இந்தக் காலத்தில் ஒருவர் வேலை  செய்து குடும்பம் நடத்த முடியாது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அந்தச் செலவு இருக்கிறது. அதனால் தான் நான் வெளியில் வந்து சம்பாதித்து பணம் அனுப்புகிறேன்’ என்றார். முதலில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓரியண்டல் தொழிற்சாலையின் கட்டுமானம் நடக்கும்போது வேலைக்குப் போனாராம். வீட்டுக்கு மிக அருகில் வேலை. அந்த புராஜக்ட் முடிந்ததும் வேலை இல்லாமல் போய் விட்டது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செக்யூரிட்டி வேலைக்கு 4500 ரூபாய் தான் மாதச் சம்பளம். அதனால் வெளியில் வேலை தேடினாராம். தெரிந்த ஒருவர் மூலம் முதலில் ஐபிஎம் இல் (ராமாபுரம் டிஎல்எப்) டாப் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் வேலைக்குப் போனாராம். சென்னைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டனவாம்.

பீகாரிலிருந்து கிராமத் தலைவர் சேர்த்து விட இந்த வேலைக்கு வந்தாராம் ராம்லால். நாராயண் என்ற தொழிலாளரும் மேஸ்திரியை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறார். ஊரில் விவசாய வேலைக்கு ரூ. 100-120 வரை தினக்கூலியாகக் கிடைக்குமாம். இங்கு ஒரு நாள் வேலைக்கு ரூ. 220 வரை கூலி கிடைக்கிறது. செலவுகள் எல்லாம் போக மாதா மாதம் ரூ.

2000 – ரூ. 3000 வீட்டுக்கு அனுப்ப முடிகிறது. அதற்குத்தான் இந்தக் கஷ்டம் என்று  பெருமூச்சு விட்டார்.

சிவில் சூப்பர்வைசர் பசந்த் டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமான வேலைகளிலும் பங்கு பெற்றாராம்.  நிறுவனத்தின் புராஜக்டுகள் நடக்கும் இடங்களுக்குப் போகிறார். திருவேற்காட்டில் பேசிய சிவான் சிராமிக் நண்பர்கள் வீட்டுச் சூழலை கருத்தில் கொண்டு வெளியில் போனால் தான் பிழைக்க முடியும் என்று இது போன்று வந்து விட்டார்கள். ஒருவர் மெட்ரிக் பாஸ், இன்னொருவர் 8 வது வரை படித்தார், இன்னொருவர் 6 வதோடு படிப்பை நிறுத்திக் கொண்டார். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கே போவார்களாம். ‘ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் கூலி அன்றே செலவாகி விடும். இங்கு 200 ரூபாய் கூலியில் 100 ரூபாய்  செலவானாலும், 100 ரூபாய் சேமித்து விடலாம். அதுதான் இப்படி வந்து விட்டோம்.’

சிறு விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் உதிரிப் பாட்டாளிகளாக தூக்கி எறிந்திருக்கிறது தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம்.

இவர்களது வேலை நேரம், கூலி, பணியிடச் சூழல் எப்படி இருக்கிறது?

ஜமுய் மூவர் அணி:

மெட்ரோ தொழிலாளிகள் 1‘தினமும் 12 மணி நேரம் வேலை. சுமார் 200 ரூபாய் நாள் சம்பளம்’ என்று சொன்னார்கள். காலையில் 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை பார்க்க வேண்டும். நடுவில் 1 மணி நேரம் உணவு இடைவேளை. திருவேற்காட்டிலிருந்து வந்து  போவதற்கு கம்பெனி வண்டி இருக்கிறதாம். காலையில் 6 மணிக்கு அங்கிருந்து கிளம்புமாம்.  இரவு வேலை முடித்து வண்டியில் ஏறிப்  போய்ச் சேரும் போது 10 மணி ஆகி விடுமாம். காலையில் 4 மணிக்கு எழுந்து சோறும் பருப்பும் சமைத்து எடுத்துக் கொண்டு வருகிறார்களாம். ‘இரவு 11 மணிக்கு தூங்கி  விட்டு, காலையில் 4 மணிக்கு எழுந்திருப்போம்’ என்றார்கள்.

அதாவது தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 4 மணி நேரம் வேலைக்குப் போய் வரும் பயணம். 12 மணி நேர வேலை. வேலைக்குப் போவதும் வேலை செய்வதுமாக 16 மணி நேரம் போய் விடுகிறது. இதற்கு ஒரு நாள் சம்பளம் சுமார் 200 ரூபாய். கூடுதல் ஒரு ஷிப்டு வேலை பார்த்தால் கூடுதல் பணம்; அதற்கும் துணிகிறார்கள்.

‘ஊரை விட்டு வேலை செய்ய வந்திருக்கிறோம். வாரத்துக்கு 7 நாளும் வேலை செய்தால் தானே சம்பாதிக்க முடியும். அதனால் வார விடுமுறை எல்லாம் எடுப்பதில்லை.’ தேவை இருந்தால், வாய்ப்பு கிடைத்தால் இரவும் வேலை செய்கிறார்கள். விடுமுறை தேவை என்றால் சம்பளம் இல்லாத விடுமுறை மட்டும் தான். வேலை செய்தால் சம்பளம். இல்லை என்றால் சம்பளம் இல்லை அவ்வளவு தான்.

ராதேஷ்யாம் என்ற மூத்த தொழிலாளர் 8 மணி நேர வேலைக்கு 240 ரூபாய் சம்பளம் என்று சொன்னார். ஓவர் டைம் செய்தால் அதிகம் கிடைக்குமாம். அருகிலேயே தங்க இடம் கொடுத்திருக்கிறார்கள். செக்யூரிட்டி ஊழியர் கோகோய்க்கு சேத்துப்பட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்திருக்கிறார்களாம். வாடகை இல்லாத தங்குமிடம். அவர்களே சமைத்துக்  கொள்கிறார்கள். 12 மணி நேரம் வேலைக்கு மாதச் சம்பளம் ரூ. 7,000. இரண்டு ஷிப்டுகளாக பொருட்களைக் காவல் காக்கிறார்கள்.

பஞ்சாபி தொழிலாளர் ஜமன்லால் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலைக்கு 146 ரூபாய் சம்பளம் என்று சொன்னார். கூடுதல் 4 மணி நேரம் வேலை செய்தால் 220 ரூபாய் கிடைத்து விடுகிறது. வாரத்துக்கு 7 நாளும் வேலை செய்கிறார். விடுமுறை கிடையாது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் போவாராம்.

சென்ட்ரலுக்கு அருகில் தடுப்புத் தகரத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்துக்  கொண்டிருந்த இரண்டு சிறு வயதினரில் ஒரு பையன் ‘இங்கு நான் ஹெல்ப்பராக இருந்தாலும், இரவில் வெல்டர் வேலைக்குப் போகிறேன்’ என்று அந்நியன் பட ஹீரோ போல பேசினான். அப்போது அருகில் வந்த இன்னொரு இளைஞர் ‘அது எப்படி முடியும். பகலிலும் வேலை பார்த்து,  இரவிலும் வேலை பார்த்து ஒரு மனிதனால் முடிகிற காரியமா’ என்று வாதம் புரிந்தார்.

அவர் சூப்பர்வைசராம்; சூப்பர்வைசருக்கு ரூ. 8,000 முதல் 10,000 வரை சம்பளம் கொடுக்கிறார்களாம். அவருக்கும் 12 மணி நேர வேலை, வாரத்துக்கு 7 நாட்களும் வேலை தான். தேவைப்பட்டால் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்வாராம். அதற்கு சம்பள வெட்டு கிடையாது. மேலாளர் பார்த்து இது போல விடுப்புக்  கொடுக்கிறார்.

செக்யூரிட்டி ஊழியர் ஆஷிஷ் குமாரின் மாதச் சம்பளம் 6,500 ரூபாய். தங்குவதற்கான இடத்தை எதுவும் கட்டணம் இல்லாமல் கொடுத்திருக்கிறார்களாம். ‘நடுவில் உள்ளவனுங்க கொஞ்சம் சுருட்டிக் கொள்கிறாங்க.  நமக்கு இப்படி இழுத்துப் பறிக்கும் அளவுக்குத்தான் கிடைக்கிறது’ என்றார். 4,5 பேர் சேர்ந்து சமைத்துக் கொள்கிறார்களாம்.

முன்னா என்ற பையனுக்கு மணிக்கு 17 ரூபாய் வீதத்தில் சம்பளம் கொடுக்கிறார்களாம். நாராயண் என்ற தொழிலாளர் மிகவும் விரக்தியாகப் பேசினார். ‘கொஞ்சம் இள வயசுப் பசங்க சமாளிச்சுக்கிறாங்க. என்னை மாதிரி வயசாயிட்டா முடியலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை. அதுக்கு 200 ரூபாய் தராங்க. வேலைக்குக் கூப்பிடும் போது ஞாயிற்றுக் கிழமை அரை நாள் வேலை செய்துட்டு சம்பளத்தை வாங்கிக் கொள்ளலாம்னு மேஸ்திரி சொன்னார். ஆனா இங்க 8 மணியிலேருந்து 4 மணி வரை வேலை செய்து விட்டு நிறுத்தினா 8 மணி நேர சம்பளம்தான் கொடுக்கிறாங்க. முழு சம்பளம் தருவதில்லை’.

நிறுவனம் நேரடியாக வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 12,000 கிடைப்பதாகச் சொன்னார். ‘ஆனா  நமக்கு இவ்வளவுதான் கிடைக்குது’. கொஞ்சம் படித்த, மேற்பார்வை பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும், தங்கும் இட வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

சிவான் சிராமிக், ‘வெல்டர் போன்ற திறன் படைத்த தொழிலாளர்களுக்கு தினசரி தலா ரூ. 300 சம்பளம் கிடைக்கிறது. உடல் உழைப்பாளர்களுக்கு ரூ. 225 கிடைக்கிறது’ என்றனர். இவர்கள் இரவு ஷிப்டுக்குப் போகிறவர்கள்.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தரையடிப் பாதை உருவாக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 300 கோடி செலவு, உயர்த்தப்பட்ட பாதை உருவாக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 100 கோடி செலவாகும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தப் பிரம்மாண்டத்துடன் இந்த தொழிலாளர்களுக்கு  கொடுக்கப்படும் கூலிகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பணியை எப்படித் திட்டமிட்டு நடத்துகிறார்கள்?

வடபழனியில் பணியிடத்துக்கு அருகிலேயே ஒரு வளாகத்தில் செக்யூரிட்டி அறையுடன் சேமிப்புக் கிடங்கும் இருந்தது. இங்குதான் வேலைக்கான கருவிகள், மற்ற பொருட்கள், வேலை செய்பவர்களுக்கான குடிநீர், கழிவறை போன்றவற்றை அமைத்திருக்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள்ளும், வேலை நடக்கும் பகுதியிலும் அருகிலேயே பொருட்கள் வைக்கும் வளாகத்தில் சிறு அலுவலகம், பாதுகாப்பாளர் கூடம் என்று அமைத்திருந்தார்கள்.

சென்ட்ரல் அருகிலான வேலைக்கு பூங்கா நகர் ஸ்டேஷனுக்கு போகும் தெரு முனையில் பொருட்கள் வைத்திருக்கும் வளாகம் இருக்கிறது. உள்ளே செக்யூரிட்டி, போலீஸ் இருந்தார்கள். குடி தண்ணீர், கழிவறை, பொருட்கள் வைக்கும் இடம் என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வளாகம்.

எல்லா இடங்களிலும் வேலை வாங்குவதற்கு துல்லியமாக திட்டமிட்டு, ஏற்பாடுகள் செய்து  செயல்படுத்தியிருக்கிறார்கள். பொருட்கள் வீணாவதைக் கவனமாகத் தவிர்த்து, வேலையில் தடங்கல்  ஏற்படாமல் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்துகிறார்கள். பொருட்களை விட மதிப்பு வாய்ந்த மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை.

தொழிலாளர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள்? எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்?

சென்னை மெட்ரோ தொழிலாளிகள் 3

ஜமுய் மூவர் அணி தங்கியிருப்பது திருவேற்காட்டில். கம்பெனியே தங்குவதற்கு ஷீட் கூரையுடனான கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறதாம். 10 x 10 அறையில் சுமார் 20 பேர் படுத்திருப்பார்களாம். தங்கும் அறைக்கும், தண்ணீருக்கும் கம்பெனி காசு  வாங்குவதில்லையாம். சாப்பாட்டுச் செலவை இவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் சேர்ந்து சமைத்துக் கொள்கிறார்களாம். மதிய உணவைக் கையில் கொண்டு வந்து விடுகிறார்களாம்.

மாதக் கணக்கில் சென்னையில் தங்கி வேலை செய்யும் இந்தத் தொழிலாளர்களுக்கு சாதாரண  மக்களுக்குக் கிடைக்கும் நியாய விலை உணவுப் பொருட்கள், அரசு மானியங்கள், சலுகைகள் கூட கிடைப்பதில்லை. தமிழ்நாட்டு தொழிலாளர் ஒருவருக்கு 200 ரூபாய் தினசரி சம்பளம் கிடைத்தால், இலவச அரிசி 20 கிலோ வாங்கிக் கொள்ளலாம்; மானிய விலையில் எரி பொருளும், பருப்பு வகைகளும் வாங்கிக் கொள்ளலாம். இவர்களுக்கு அந்த ஆதரவும் கிடையாது. இவர்கள் அரிசியை வெளிக் கடையில்தான் வாங்குகிறார்களாம். கிலோ 25 ரூபாய், 30 ரூபாய் ஆகிறதாம்.

இவர்கள் யாரிடமும் செல்போன் எல்லாம் இல்லை. ஊருக்குப் பேச வேண்டுமானால் STD பூத்திலே சென்று பேசுவார்களாம். ஜமன்லால் சிங் தங்குமிடமும், தண்ணீரும் கட்டணமில்லாமல் கம்பெனி கொடுக்கிறது என்று சொன்னார். உணவுக்கு கம்பெனி கொடுப்பதை சாப்பிடுகிறார்.  அதற்கு மாதம் 700 ரூபாய்  பிடித்துக் கொள்வார்களாம். 300 பேருக்கு ஒன்றாகச் சேர்த்து சமைக்கிறார்கள். தண்டையார் பேட்டையில் தங்கியிருக்கிறார்களாம்.

ஆஷிஷ் குமார் பணியிடத்துக்கு அருகிலேயே நான்கைந்து பேருடன் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். உணவை அவர்களே தயார் செய்து கொள்கிறார்கள். திருவேற்காட்டில் இருக்கும் முகாம் மிகப் பிரம்மாண்டமாக நூற்றுக்கணக்கானோர்  தங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 அடிக்கு 15 அடி அறைகள் ஷீட்டுகளால்  உருவாக்கப்பட்டிருந்தன. வளாகம் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஆள்  நடமாட்டம் குறைவான பகுதியில் இது அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வேலை பார்த்து விட்டு, பகலில் ஓய்வெடுக்க வரும் தொழிலாளர்களுக்கு வெயில் அடிக்கும் போது இந்த அறைகள் எப்படி ஓய்வு எடுக்க உதவும் என்று தோன்றியது. தொழிலாளர்களை தங்குமிடத்திலிருந்து பணியிடத்துக்கு அழைத்து செல்ல நிறுவனத்திலிருந்து பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து விட்டால் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?

ஜமுய் மூவரணியினர் 4 மாதங்களுக்கு முன்பு வந்தார்களாம். வேலை நடப்பது வரை இங்கு இருப்பார்களாம். வேலை முடிந்ததும், அடுத்து வேலை கிடைக்கும் இடத்துக்கு, வேறு நகரத்துக்கு, வேறு மாநிலத்துக்கு நகர வேண்டியதுதான். தாங்கள் உருவாக்கிய மெட்ரோ ரயில் எப்படி ஓடுகிறது என்று பார்க்கும் வாய்ப்புக் கூட இவர்களுக்கு இருக்காது.

கோகோய் ‘நிரந்தர வேலை என்று எந்த கம்பெனியிலும் கிடையாது’ என்கிறார். ‘இங்கு வேலை நடக்கும் வரை வைத்திருப்பார்கள். அடுத்த வேலை இருந்தால் அழைத்துச் செல்வார்கள். இல்லாவிட்டால் நம்ம கெட்ட நேரம் அவ்வளவு தான்.’

ஆஷிஷ் குமார் ‘2012க்குப் பிறகு மெட்ரோ புராஜக்டில் வேலை இருக்காது. வேறு வேலை தேட வேண்டும்’ என்றார்.  ‘என்ன வேலை நேரம், என்ன சம்பளம் என்று எந்த நிச்சயமும் கிடையாது.’ ‘நீங்க மனது வைத்து வேறு இடத்தில் வேலை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு விண்ணப்பத்தையும் எங்களிடம் வைத்தார்.  சிவான் சிராமிக் இங்கு வேலை முடிந்ததும் அடுத்து வேலை கிடைக்கும் இடங்களுக்கு போக வேண்டியதுதான். அவர்கள் ஊரிலேயே வேலை செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிகவும் குறைவு என்றார்கள்.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் இவர்களை எப்படி நடத்துகின்றன?

ஜமுய் மூவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது மூன்று பேரில் ஒருவர் ‘வேலையைப் பாருங்க’ என்று மற்றவர்களை உஷார்ப் படுத்தினார். திரும்பிப் பார்த்தால், பின் பக்கத்திலிருந்து நீல நிறச் சீருடையுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் மேலாளர், தமிழில் பேசினார். ‘நீங்க யாரு, உள்ளே ஏன் வந்தீங்க?’ என்று கேட்டவர். ‘இப்படி அனுமதி இல்லாமல், பாதுகாப்பு உடை அணியாமல் உள்ளே வரக் கூடாது. அலுவலகத்தில் போய் அனுமதி வாங்கிக் கொண்டு வாங்க’ என்று அனுப்பினார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் இருந்த செக்யூரிட்டி தமிழ்நாட்டுக்காரர். அவரிடம் பேசினோம். “நம் ஊர் ஆளுக நேரக் கணக்கு பார்த்து வேலை செய்வாங்க சார். வட நாட்டவங்களைத்தான் நாய் மாதிரி வேலை வாங்க முடியும். ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு அப்புறம் தொடர்ந்து வேலை செய்வாங்க. கூலியும் கம்மியா கொடுத்தா போதும். அதனால தான் இங்க முழுக்க வடநாட்டுக் காரனுங்களை வேலைக்கு வச்சிருக்காங்க” என்றார். “தமிழ் ஆளுங்களே இல்லையா?” என்று கேட்டால் “இருக்காங்க சார். அதிகாரி, பொறியாளர், ஃபீல்டு ஆபிசர் இந்த பதவியிலெல்லாம் இவங்கதான் சார் இருப்பாங்க” என்றார்.

“எல்லாம் ரூல்ஸ் படிதான் நடக்குது. சட்டப்படி குறைந்தபட்சக் கூலி கொடுக்கிறாங்க. தங்குவதற்கு இடம் இலவசமா கொடுக்கிறாங்க. ஆர் ஓ தண்ணீர் தர்றாங்க. சாப்பாட்டுக்கு மெஸ் கூட இருக்கிறது” என்கிறார்கள் மேலாளர்கள்.  மெஸ்சில் சாப்பிட வேண்டுமானால் மாதா மாதம் ரூ. 700 முதல் ரூ. 1200 வரை  பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதை மிச்சப்படுத்த தாங்களே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்கிறார்கள், தொழிலாளர்கள்.

இந்தத் தொழிலாளர்கள் தமது வேலையையும், வாழ்க்கையையும் எப்படிப் பார்க்கிறார்கள்?

கோகோய்:

‘8 மணி நேர ஷிப்டு எப்படி சாத்தியமாகும். நான் 8 மணி நேரம் வேலை பார்த்து விட்டுப் போய் விட இரண்டாவது ஷிப்டில் வருபவர் 8 மணி நேரம் காவல் இருப்பார். மீதி 8 மணி நேரம் என்ன ஆகும். யாராவது வந்து பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்  விடுவார்கள். அதனால் தான் நாங்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறோம்’ என்று விளக்குகிறார். 3 ஷிப்டுகளாக பிரித்து இன்னொருவரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே என்று யோசிக்கக் கூட அவருக்குத் தோன்றவில்லை.

‘தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள் தான். சாப்பாடு எல்லாம் பிடித்திருக்கிறது’ என்கிறார். ‘நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் மற்றவர்களும் நம்மை நடத்துவார்கள்’ என்று தத்துவம் சொல்கிறார்.

ஆஷிஷ் குமார்:

’12 மணி நேர டுயூட்டிக்கு மாதம் 9,300 ரூபாய் கொடுத்தார்கள். அது நன்றாக இருந்தது. ஆனால் வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்து, சம்பளம் 5,300 ரூபாய் என்று சொல்லி விட்டார்கள். அதனால் அதை விட்டு விட்டு வந்தேன். இங்கு 12 மணி நேர வேலைக்கு 6,500 ரூபாய்  கிடைக்கிறது.’

சிவான் சிராமிக்:

‘நாட்டில் 70 கோடி உழைச்சுப் பிழைக்கிறவங்க இருக்காங்க. அவங்க எல்லாத்துக்கும் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? நாமதான் இப்படி அலைஞ்சு திரிந்து வாழ்க்கைப் பாட்டை பார்த்துக் கொள்ளணும். ஆனா ஒண்ண.  நாங்க இப்படி கஷ்டப்படுகிறோம். எங்க குழந்தைங்க இது போல வேலைக்கு வந்து விடக் கூடாது என்றுதான் உழைக்கிறோம்’

நிலப்பிரபுத்துவ கொடுமைகள் இல்லாத அரைகுறை போலி ஜனநாயகத்தைக் கூட பெரிதாக எண்ணும்  நிலைமையில் தான் இந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.  ‘எத்தனை மணி நேரமானாலும் வேலை வாங்குங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் கிடைத்தால் போதும்.’ என்பது தான் இவர்களின் அதிகபட்சக் கோரிக்கையாக இருக்கிறது. அப்போது தான் தம்மையும், குடும்பத்தையும்  காப்பாற்றிக் கொள்ள  முடிகிறது. இப்படி அதிக வேலையால் உடல்நிலை சீர்குலைந்து சில ஆண்டுகளில் உயிரிழந்து  விட்டால், அத்தோடு இந்த துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு விடை கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்களோ  என்னவோ!.

பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, குறைந்தபட்சக் கூலி, அளவுக்கதிகமான வேலை நேரம் என்று சுரண்டுவது ஏதோ தனியார் பெரு நிறுவனம் என்று நாம் நினைத்து விடக் கூடாது. உள்ளூர் மற்றும் பன்னாட்டு அரசு நிறுவனங்களின் நேரடி நிழலில் தான் இப்படிப்பட்ட சுரண்டல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மெட்ரோ 2சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு செலவாகப் போவதாக மதிப்பிடப்பட்டுள்ள 14,600 கோடி ரூபாயில் 41% மத்திய-மாநில அரசுகள் கூட்டாக பங்களிக்க, மீதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது (Japan International Cooporation Agency – JICA). இந்த நிறுவனம் கட்டுமானத்தில் ஆலோசனை வழங்குபவராகவும், கட்டுமானப் பொருட்கள், கருவிகளை வழங்குபவராகவும் செயல்படுகிறது.

2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்களாக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் செயலர், தமிழ்நாடு அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசின் தொழில்துறை, நிதித்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் அலுவலர்களும் இருக்கிறார்கள். இதன் நிர்வாகக் குழுவில் அரசு அதிகாரிகள் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

அரசு சட்டங்கள், நீதி மன்றங்கள், தொழிற்சங்கங்கள், பத்திரிகைகள் எதுவும் தமது நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு உதவியாக வரவில்லை.

தமது உரிமைகளைப் பற்றிய அடிப்படை விபரங்களைக் கூட தெரிந்து கொள்ளாமல் முதலாளிகளுக்காகத் தாமாகவே ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் இந்த தொழிலாளர்கள். ஒரு சிலர் உயிரும் இழந்திருக்கிறார்கள். இரத்தமும், வியர்வையும் சிந்தி இந்த ஏழைத் தொழிலாளிகள் உருவாக்கியிருக்கும் மெட்ரோவில்தான் நாம் பயணிக்க இருக்கிறோம். நாம் பயணிக்கும் போது இவர்கள் வேறு ஊரில், வேறு பணிகளில் தொடர்வார்கள்.

__________________________

– வினவு செய்தியாளர்கள்.

__________________________

சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !

0

ட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள சர்கேகுடா கிராமத்தின் பழங்குடி மக்களை, கடந்த ஜூன் 28 அன்று இரவில் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசு படை நாலாபுறமிருந்தும் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கியது.   காலில் குண்டடிபட்டு உயிர் பிழைக்கத் தப்பி ஓடியவர்களைக்கூட  அங்கே கிடைத்த கோடாரிகளைக் கொண்டு கொத்திக் கொன்றது. இரத்தம் பெருகிக் கிடந்த தெருவைச் சுத்தம் செய்துவிட்டு, இரண்டு பிணங்களுக்கு மாவோயிஸ்டுகளைப் போலச் சீருடை மாட்டிவிட்டு, “மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்” எனப் பச்சையாகப் புளுகியது.

உடனே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய மோதல் நடவடிக்கை இது” என்று அறிவித்தார். ஆனால், நடந்தது மோதல் அல்ல; படுகொலைதான் என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியதும், மத்திய ரிசர்வ் போலீசு படையின் இயக்குநரான ‘வீரப்பன் புகழ்’ விஜயகுமார், பயங்கரவாதிகளைக் கொல்லும் முன்  அவர்கள் யார் என்றெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது. அது எங்கள் வேலை அல்ல” என்று திமிராக அறிவித்தார். பின்னர் செய்தி ஊடகங்களில், பள்ளி செல்லும் சிறுவர்களும் பெண்களும் உள்ளிட்டுக் கொல்லப்பட்டோர் அனைவருமே அப்பாவிப் பழங்குடியினர்” என்ற உண்மை வெளியானதும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் சில அப்பாவிகள் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்காக வருந்துகிறோம்” என்று பசப்பினார்.

சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சிகள் இப்படுகொலை குறித்து நீதிவிசாரணை கோரியதும், “இச்சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள்” எனச் சீறினார் சட்டிஸ்கரின் பா.ஜ.க. முதல்வர் ராமன்சிங். ப.சிதம்பரமும், “எந்தவிசாரணையும் தேவையில்லை. கொல்லப்பட்டோரில் இருவர் மாவோயிஸ்ட் தலைவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று சாதித்தார். ஆனால், கொல்லப்பட்ட அந்த இரண்டு ‘தலைவர்களில்’ ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர், இன்னொருவரோ ‘டோலக்’ இசைக்கருவி வாசிக்கும் கலைஞர் என்ற உண்மை அம்பலமாகி ப.சிதம்பரத்தின் முகத்தில் கரிபூசியது. பழங்குடியினரின் வாக்கு வங்கியை மனதில்கொண்டும்,   இப்படுகொலையைக் கண்டிக்காவிட்டால் மக்களிடம் தனிமைப்பட வேண்டியிருக்கும் என்பதாலும், உண்மை கண்டறியும் குழுவை அமைத்த மாநில காங்கிரசுக் கட்சி, ப.சிதம்பரம் பொறுப்பின்றிப் பேசுவதாகக் கண்டித்தது.

தற்கொலைச் சாவுகளுக்குகூடப் பிரேதப் பரிசோதனை கட்டாயம் என்பது சட்ட நடைமுறை. ஆனால், சர்கேகுடாவில் பச்சைப் படுகொலை நடந்துள்ள போதிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவேயில்லை. பிஜாப்பூர் போலீசு தலைமைக் கண்காணிப்பாளரோ, போலீசு நிலையத்திலேயே பரிசோதனை நடத்தப்பட்டுவிட்டதாக நம்பச் சொல்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளேட்டின் நிருபர் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களும்,  பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் போடப்படும் தையல் ஏதும் பிணங்களின் உடலில் காணப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு, போலீசின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளனர்.

PJN_AUG-2012.pmdஇப்படி அரசு பயங்கரவாதிகள் உருவாக்கிய கதைகளின் சாயம் வெளுக்கத் தொடங்கியதும், அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட முதல்வர் ராமன்சிங், இச்சம்பவத்தை விசாரிக்கத் துணை வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்குழுவை நியமித்தார். கொலைக்கும்பலின் தலைவன் விஜயகுமாரும் தன் பங்குக்கு துறைசார்ந்த உள்விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்காக ‘மிகவும் வருந்துகிறேன்’ என்று ப.சிதம்பரமும் முதலைக் கண்ணீர் வடித்தார்.

படுகொலைகள் நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. ஆனால், உள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையைக்கூட  அரசு  இன்னமும் வெளியிடவில்லை. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பழங்குடியினர் என்பதால் படுகொலையில் ஈடுபட்ட போலீசுப்படை மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கொல்லப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் இவை எதுவும் செய்யப்படவேயில்லை.

சர்கேகுடாவை எட்டிக்கூடப் பார்க்காத தேசிய மனித உரிமை கமிசன், கொலைகார மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் இயக்குநரிடமே அறிக்கையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளது. விஜயகுமாரோ, ரிசர்வ் போலீசு படையில் துறைசார்ந்த உள்விசாரணையைக்கூட நடத்த முன்வராமல் ஓய்வு பெற்றுவிட்டார். மாநில காங்கிரசு அமைத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட்டால், மாவோயிஸ்டுகளுக்கு எதிராகப் போராடும் படையினரின் ஊக்கத்தை அது குறைத்துவிடும் எனக்  கட்சி மேலிடம் கூறியுள்ளதைக் காரணம் காட்டி, அறிக்கையை காங்கிரசு கட்சி முடக்கி வைத்துள்ளது. மாநில அரசு இப்படுகொலையை விசாரிக்க அகர்வால் என்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிசனை  நியமித்தது. ஆனால், அந்நீதிபதி தனது பணிகளைத் தொடங்க முறையான அலுவலகம் கூட இல்லாமல் மூன்று மாதங்களாக  இழுத்தடிக்கப்பட்டு, கடந்த  அக்டோபரில்தான் அலுவலக அறை ஏற்பாடு செயப்பட்டுள்ளது.

மிகவும் வறிய நிலையில் வாழ்க்கை நடத்தும்  பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும்  இத்தகைய அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன. எவர் மீதும் பயங்கரவாத, தீவிரவாத முத்திரையைக் குத்திவிட்டால் போதும், அவர்களைச் சித்திரவதை செய்து கொன்றாலும் சட்டவிரோதமானதில்லை எனும் அணுகுமுறையைத்தான் சட்டிஸ்கரில் அரசு பயங்கரவாதிகள் பின்பற்றி வருகின்றனர். இது, மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் நாகரிகத்துக்கும் விடப்பட்டுள்ள சவால் அன்றி, வேறில்லை.

__________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________

மரணப் படுக்கையில் ஒரு அருவி!

5

ரடுமுரடான பெரும் பாறைகளைக் கொண்டு கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர். அதன் மேல் உறுதியாகக் கால் பதித்து, எம்பி உச்சியிலே விரிந்து கிடக்கும் பிரகாசமான நீல வானத்தை எட்டிப் பிடிக்க ஆவல் கொண்டு நீளும் ஆயிரமாயிரம் பசுந்தளிர்க் கரங்களாய்  நெடிதுயர்ந்து நிற்கும் கானகம். இதில் இடையீடு செய்ய விரும்பாது அக்கணமே தானுருகித் தரையிறங்கும் கார் மேகம்.  அந்த வானமிழ்தம் போய்ச் சேர தன் வலப்புறத்தில் வழி விலகிய பாறை.  அந்த முகத்துவாரத்தில் இருந்து பொங்கும் பூம்புனலாய்ப் புறப்படும் ஓர் அருவி.  அதன் பால் வெண்ணிற அருவி எண்ணூறு அடிகள் செங்குத்தாய் மின்னிப் பிரகாசிக்கும் வண்ண ஜாலங்களுடன் அமுதக் கலசமாம் பாறைக் கலயத்தில் பொழிகிறது.  சமவெளி நோக்கிய அதன் பயணத்தில் அது முதல் தங்கல். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கட்புலனாக்கவென்று தன் அகன்ற மார்பினை விரித்து நிற்கும் கருப்பும் சிவப்புமான பாறைப் பிணைப்புகள்.  காண்போர் நெஞ்சம் இனம்புரியாப் பேரின்பமும், பெரு மருட்சியும் எதிர்மோத விம்மி வெடிக்கும்.  கிட்டவொண்ணாப் பெரும்பேரு பெற்ற உவகையில் உணர்ச்சிக் குவியலால் மண்டை கனக்கும், புத்திளமை மீண்டது போல் மெய் சிலிர்க்கும், உடல் முறுக்கும்.  நிதானத்துக்கு வர சற்று நேரம் பிடிக்கும்.

ஒடிசா மாநிலத்தினுள் அடக்கப்பட்ட சுந்தர்கர் பகுதியில் அமைந்துள்ள இந்த கண்ட தாரா  இந்தியாவின் நெடிதுயர்ந்த அருவிகளுள் ஒன்று.  தண்மையான தன் பார்வை பட்ட இடமெல்லாம் பல பத்தாயிரம் ஜீவராசிகளின் உயிர் நாடியாய் காலங்காலமாய் ஒயாது ஒழியாது ஒடிக் கொண்டிருக்கிறது இந்த கண்டதாரா.  அதன் அருமை உணர்ந்த அத்துனை திணைகளும் அதனை நெஞ்சார நேசித்துப் போற்றுகின்றன.  “எல்லா உயிர்களின் இயக்கத்துக்கும் கண்டதாராவே காரணகர்த்தா” என்கிறார் அம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள பந்த்பர்னா கிராமத்தில் வசிக்கும் ஒரு முண்டா.  ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர் ஆயினும், கண்டதாரா மலையும் அதன் அருவியும் பற்றிய இப்பகுதி வாழ் கிருத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து பூர்வகுடி மக்களின் புனித நோக்கைத் தானும் பகிர்ந்து கொள்கிறார், இந்த முண்டா.

தொன்றுதொட்டு இப்புனித பூமியின் பாதுகாவலர்களாய்த் திகழ்பவர்கள் பாரி புய்யா (Pauri Bhuiya) எனும் பழங்குடிகளே என்பது பெருவழக்கு.  இவர்கள் இடம்பெயரும் வேளாண் முறையைக் கடைபிடிக்கும் ஆதிவாசிகள்.  இம்மலையின் சிகரங்களைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த சால மரக் காடுகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வருபவர்கள்.

இந்த பாரி புய்யாக்களும், அந்தமான் தீவுக் கூட்டத்தின் ஜாரவாக்களும் 24,000 ஆண்டுகளுக்கு முன் ஒரே மூதாதையரின் வழிவந்தவர்கள் என்கிறது இவர்களின் இன மரபு பற்றிய ஆய்வு (Genetic research).  மனிதனாகப் பரிணமித்து இப்புவிப் பரப்பெங்கும் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தன சில இனக்குழுக்கள். அந்த இனங்களுள் ஒன்றின் நேர் வாரிசாக, இந்தியப் பூர்வ குடிகளில் எஞ்சியிருக்கும் மக்கள் தான் இந்த பாரி புய்யாக்கள்.  மொழி வழியில் இந்தப் பிராந்தியத்தின் பிற ஆதிவாசிகளில் இருந்து இவர்கள் தனித்துவம் பெற்று விளங்குகிறார்கள்.  இவர்கள் தனிச்சிறப்பான ஒரு வகை ஒரிய மொழியைப் பேசுகிறார்கள்; இதுவே தொன்மையான ஒரிய மொழி என்றும் இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.

இவர்களது வாழ்விடம் வற்றாத வளம் கொழிக்கும் பூமியானது எப்படி என்று இந்த பாரி புய்யாக்களின் பாரம்பரியக் கதைகள் விவரிக்கின்றன.  இவர்களது இனத்தின் சுந்தர்கர் பிரிவினர் முன்னொரு காலத்தில் ஒரு குண்டோதரியைத் தேவதையாகக் கொண்டிருந்தனராம்.  அவள் மரம், மட்டை, மண் என ஒன்றும் பாக்கியில்லாமல் கண்டதை எல்லாம் தின்று தீர்த்து விடுவாளாம்.  வெறுத்துப் போன இந்தப் பாரி புய்யாக்கள் ஒரு நாள் அவளை ஒரு குன்றின் மேல் உட்கார வைத்து விட்டனர்.  அன்றே அந்தக் குன்றையும் அவள் தின்று தீர்த்து விட்டாள்.  அது ஒரு பெரிய குகை போலாகி அப்பால் இருந்து நீர் பெருக்கெடுத்துக் கொட்ட ஆரம்பித்தது. அதுதான் இந்த கண்டதாரா (பாறைப் பிளவு அருவி).  இப்படித்தான் அவர்கள் என்றும் வற்றாத நீராதாரத்தைப் பெற்றனர் என்கிறது இந்தக் கதை.

கண்டதாரா அருவி
கண்டதாரா அருவி

அடுத்தபடியாக, கண்டதாரா மலைத்தொடரின் கிழக்கு அல்லது கியோஞ்கர் பகுதியில் வசிக்கும் தமது உறவினர்களைக் காண சுந்தர்கரில் இருந்து ஒரு தம்பதியினர் சென்றிருந்தனராம்.  அவர்களை வரவேற்று விருந்தோம்ப அங்கே யாரையும் காணோம்.  அவர்கள் எங்கோ வெளியில் சென்றிருந்தனர் போலும்.  ஆனால் அவர்களது வீட்டு வாசலில் ஒரு பெரும் தானியக் குவியல் கேட்பாரற்றுக் கிடந்தது.  என்ன ஆச்சரியம், ஒரு காக்கை குருவி கூட அந்தத் தானிய மணிகளைக் கொத்திச் செல்லவில்லை. இந்தப் பிரதேசத்துக்கு பெருவளம் சேர்த்த தேவதையான கண்டகுமாரி சின்னஞ்சிறு அழகிய நங்கையாக, அந்தத் தானியக் குவியலுக்குள் இருப்பதை இத்தம்பதிகள் கண்டு கொண்டனர்.  உடனே இது தான் சமயம் என்று கண்டகுமாரியைக் களவாடி சுந்தர்கர் கொண்டுவந்து விட்டனர்.  அன்று முதல் அந்த தேவதையோடு அவள் அருளும், செல்வச் செழிப்பு அனைத்தும் சுந்தர்கர் வாசிகளுடையதாகி விட்டது என்பது மற்றொரு கதை.

இது பழம் தரும் மரம், அது நிழல் தரும் மரம் என்ற வேறுபாடெல்லாம் பாரி புய்யாக்களுக்குக் கிடையாது.  அது எதுவாயினும் அதன் உயிர்த்துடிப்புள்ள கரங்கள் எதனையும் அவர்கள் வெட்டுவதில்லை.  ஆகவே மலைகளின் உச்சி  பசுமையால் குளிர்ந்து நிற்கிறது.  தொன்மைக்குப் பங்கம் நேராத அந்த பழம்பெரும் காடுகள் யானைகள், தேன் கரடிகள், சிறுத்தைகள், காட்டெருதுகள், மாபெரும் மலைப் பாம்புகள், மயில்கள், புலிகள் என ஏராளமான உயிரினங்களின் தாயகமாய்த் திகழ்கிறது.  உயிர்ச் சூழலின் செழுமையை எடுத்துக்காட்டும் மூலாதாரக் கூறாக விளங்கும் உயிரினமாகிய கால்களற்ற பல்லி வகைகளும் தம் வாழ்விடமாக இந்த காடுகளையே கொண்டிருக்கின்றன.  அடர்ந்த இந்தக் காடுகள் பருவ மழை முழுவதையும் உள்வாங்கிக் கொண்டு, என்றும் வற்றாத ஊற்றாக அதனைக் கண்டதாராவுக்கு வழங்குகின்றன. இப்படி பன்னெடுங்காலமாய் இந்தச் சூழல் தழைத்தோங்கி வருகிறது எனினும்,  இந்தப் பாரி புய்யாக்களது இடம்பெயரும் வேளாண் முறையால் காடுகள் நாசமாவதாகப் புனைந்து 90 களில் சுமார் எண்பது பாரி புய்யா குடும்பங்கள் ”பாரி புய்யா வளர்ச்சி முகாமை”யால் (PBDA) மலையுச்சியில் இருந்து அதன் அடிவாரத்துக்குப் புலம்பெயர்க்கப் பட்டனர்.

”இங்கே எங்களுக்கு என்ன இருக்கிறது?  கழிப்பிடம் அளவுக்கு ஒரு சிறு வீடு.  தலைக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னார்கள்.  கொடுத்ததோ சற்றேறக் குறைய ஒரு ஏக்கர் மட்டுமே.  காலில் ஒரு வெட்டுக்காயம் பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  காட்டில் இருந்தால் ஒரு பச்சிலையைப் பிடுங்கி வைத்துக் கட்டி, குணப்படுத்திக் கொள்வோம்.  இங்கோ கொளுத்தும் வெய்யிலில் மைல் கணக்காய் நடந்து டாக்டரிடம் போக வேண்டியிருக்கிறது.  அவரோ இன்று போய் நாளை வா என்கிறார்..“  என்றவாறு புலம்பித் தீர்க்கிறார், மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் கலிய தெகூரி.  விரக்தியும், கையறு நிலையும் பளிச்சென்று தெரிகிறது.  கீழே கொண்டுவரப்பட்ட குடும்பங்களில் குறைந்தது 15 குடும்பங்கள் மீண்டும் மலையேறி விட்டனர்.  “அங்கே பசுமை போர்த்திய குளுமையும், பழங்களும், தண்ணீரும், விறகும், கிழங்கு வகைகளும் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்” என்று மனக் கண்ணால் அந்த சொர்க்கத்தைக் கண்டு கூறுகிறார் அவர்.

பாவம், இன்னும் எத்தனை நாட்களுக்கு நிலைக்குமோ இந்த இன்பமெல்லாம்.  கண்டதாராவுக்கு எழிலூட்டும் அந்த செம்பழுப்புப் பாறைகளும், கரும்படிகப் பாறைகளும் தன்னில் இரும்பை அல்லவா கொண்டிருக்கின்றன.  கண்டதாரா அருவியின் வழித்தடமெங்கும் சுத்தமான இரும்பின் பெரும் புதையல் பளிச்சிடுகிறது.  கண்டதாரா மலைத் தொடரைக் கண்டுகொண்ட சுரங்கக் கம்பெனிகள் அதனை தங்களுக்கு அடித்த ”ஜாக்பாட்” டாகவே (சூதாட்டத்தில் பெரும் பிடியைத் தன் கையில் வைத்திருப்பவன் வழித்து அள்ளும் பொதுப் பணம்)  கூவிக் குதியாட்டம் போடுகிறார்கள்.  இந்த வேளையில் போட்டியிடும் பலப்பல நிறுவனங்களில் எதன் கையில் துருப்புச் சீட்டு இருக்கிறது என்று தடவிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். கண்டதாராவின் இரண்டாயிரத்து ஐநூறு ஹெக்டேர் பரப்பளவிற்கு நடுக் கண்டம் உனக்குத்தான் என்று தென்கொரிய போஹங்க் ஸ்டீல் கம்பெனிக்கு (POSCO) உறுதியளித்திருக்கிறது ஒடிசா அரசு.  இப்படியாக சுந்தர்கர் முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட வந்திருக்கும் ஒடிசா மாநில அரசின் குண்டோதரியாக இருக்கிறது போஸ்கோ.

போஸ்கோ உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை அப்பிராந்தியத்தின் ஆதிவாசி மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.  அதன் முன் உதாரணத்தை அவர்கள் ஏற்கெனவே கண்டு விட்டார்கள். ஆனால், மலையடிவாரத்தில் செல்லும் பதைகளில் இருந்து பார்த்தால் நம்மால் ஒரு வித்தியாசத்தையும் கண்டுகொள்ள முடியாது.  மலைத்தொடரின் உள்ளே சற்று சென்று பார்த்தாலோ இதயம் வெடித்து விடும்படியான கொடூரக் காட்சி ஒன்று அங்கே காத்திருக்கிறது.  உயிரோடு தோலுரிக்கப்பட்டுத் துடிதுடிக்கும் ஒரு ஜீவனாக, தனது தோலும் உரோமமுமாக இருந்த மேல் மண்ணையும் மரங்களையும் இழந்து குருதி கொப்பளிக்க நிற்கும் குர்மிதார் மலை அங்கமெல்லாம் துண்டாடப்பட்ட முண்டமாய், மாபெரும் பிரமிடாய் நிற்பதை நீங்கள் காணலாம்.  அதன் மேல் சுற்றி சுற்றிச் செல்லும் பாதையின் வழியே இரும்புத்தாது என்ற மாமிச மலையைச் சுமந்தபடி ஊர்ந்து செல்லுகின்றன டிரக்குகள்.

டைனமைட் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதால் உள்ளடங்கிய பாறைகள் எல்லாம் பொடிப் பொடியாகி, இரத்தம் பீறிடுவது போல் செம்புழுதிப் படலம் மேலெழும்ப, சுரங்கம் ஒரு போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. பல நூறு மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு அதன் செம்புழுதிப் படலம் காடெங்கும் பரவி மூச்சு முட்டி, திக்குமுக்காட வைக்கிறது.   இந்த செவ்வாய்க் கிரகக் காட்சிக்குப் பின்னால் பாதி மழிக்கப்பட்ட மற்றொரு மலை கண்ணில் படுகிறது.  மிச்சமுள்ள மரங்களும் மழிக்கப்பட்டு சுரங்கப் பணி என்னும் கசாப்பு வேலைக்குத் தயாரிக்கப்பட்டு வருகிறது.  சற்று தொலைவில் கண்ணில் தெரியும் கண்டதாராவின் அலைபாயும் அந்தப் பசுமையான விளிம்புகள்  கண்டதாரா ரிசர்வ் காடுகளில் இப்போதைக்கு என்ன மிச்சமிருக்கிறது எனபதை அறிவித்த வண்ணம் இருக்கின்றன.

133 ஹெக்டேர் பரப்பளவில் குர்மிதார் சுரங்கப் பணியை கலிங்கா கமர்ஷியல் கார்ப்பரேஷன் லிட். (KCCL) மேற்கொண்டிருக்கிறது.  தனது உற்பத்தி இலக்கை, அதாவது வெட்டி ஏற்றி விடும் இலக்கை, பல நூறு சதவீதம் விஞ்சி விட்டதாக அது தனது வலைத் தளத்தில் பீற்றிக் கொள்கிறது.  இரும்புத் தாதுவை சீனாவுக்கும், மாங்கனீசு தாதுவை ஏதோ பெயர் குறிப்பிடாத கொரிய கம்பெனிக்கும் ஏற்றுமதி செய்வதாக அது அறிவிக்கிறது.  இலக்குவனை உயிர்ப்பிக்க மூலிகை எடுப்பதற்காக அனுமன் தனது தோளில் சஞ்சீவி மலை என்னும் இமயக் குன்று ஒன்றைச் சுமந்து சென்றதாக புராணக் கதை சொல்லுகிறது.  ஆனால் கே.சி.சி நிறுவனத்தை நடத்தும் புவனேசுவரின் சமல் குடும்பம் அந்த அனுமனை விட சக்தி வாய்ந்தது.  அது மொத்த மலையையே சீனாவுக்கும், அதற்கு அப்பாலும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

தங்களது தேவியின் இருப்பிடமாக இருந்தது தான் அந்த குர்மிதார் மலை என்கிறார்கள் பாரி புய்யாக்கள்.  அடர்ந்த கானகமாய், யானைகள், கரடிகள் போன்ற எண்ணற்ற வனவிலங்குகள் வாழும் இடமாய், தேமதுரக் கனியான காக்ரிக் கனிகள் கொடிகளில் அசைந்தாடும் செழுமை மிக்க மலையாய், இயற்கை எழில் கொஞ்சும் தேவியின் உறைவிடமாய் இருந்தது தான் அந்தக் குர்மிதார் மலை.  அது வெடி வைத்துத் தகர்க்கப்படுவதாலும், தமது  வாழ்விடம் குலைந்து போனதாலும் யானைகள் சமவெளிகளில் தலைகாட்டத் தொடங்கி இருக்கின்றன.  மலையடிவாரக் கிராமமான புல்ஜாரில் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு புலி நுழைந்திருக்கிறது. மலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இருபது பாரி புய்யா குடும்பங்கள் மீண்டும் தங்களது காடுகளுக்குச் சென்று குடில் அமைத்துத் தங்கி விட்டனர்.  அவர்களது குடிசைகளையும், உணவு தானிய சேமிப்பையும் வனத் துறையினர் தேடிப் பிடித்து தீ வைத்துக் கொளுத்தி, நாசமாக்கினர். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தேறியது.

கலிங்கா கமர்சியல் கார்ப்பரேஷன் காடுகளை அழித்ததாலும், மலை உச்சியில் நீரோடைகளின் பாதையைத் திருப்பி விட்டதாலும் கண்டதாரா அருவி பெருமளவு வற்றி விட்டது.  அதன் நீர் பிரம்மணி ஆற்றை வழக்கம் போல் வந்தடைவதில்லை.  பந்த்பர்னாவில் வாழும் மக்கள் பாசனத்துக்கும், மீன் பிடிக்கவும், தமது அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்த கால்வாய் கடந்த இரண்டு கோடைக் காலங்களாக பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கிறது.  இந்தப் பிராந்தியமெங்கும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாய்க் கீழிறங்கி விட்டதால் அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகளும் செயலிழந்து விட்டன.  புல்ஜார் மற்றும் பிற சுற்று வட்டாரக் கிராமங்களில் நீரோடைகள் சுரங்கக் கழிவுகளால் இரத்தச் சிவப்பாகி இருக்கின்றன.  இதன் விளைவாக மீன்கள் சாகின்றன; விளைநிலங்கள் எல்லாம் பாழாகின்றன.  மழை பெய்யும் வேளைகளில் சுரங்கப் பணியால் காயம்பட்ட மலைகளின் இரத்தக் கசிவுகளாக செந்நீர் ஓடைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கண்டதாராவில் குருதி கொட்டுகிறது.  அப்போது அது கண்டதாராவாக அல்லாமல் இரத்ததாராவாகக் காட்சியளிக்கிறது.  இவை எல்லாம் ஒப்பீட்டளவில் ஒரு அச்சுறுத்தல் என்றே சொல்லலாம்.  எனினும் இந்த 133 ஹெக்டேர் பரப்பில் நடக்கும் சுரங்கப் பணியே இப்படியொரு பேரழிவைக் கொண்டு வருகிறது என்றால்,  போஸ்கோவின் 2500 ஹெக்டேர் குத்தகை பூமியில் சுரங்கப் பணி தொடங்கினால் விளைவு என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது.

கண்டதாரா அருவி முற்றாக அழியும்.  பல பத்தாயிரம் உயிரினங்கள் தண்ணீருக்குத் தவித்து விக்கிச் சாகும்.  அந்த அழிவின் தொடக்கம் இவ்வாறு தான் இருக்கும்.  ”இந்தச் சுரங்கக் கம்பெனிகள் பயங்கரமான பூதங்கள்.  இவை எங்களது மண்ணை, மரங்களை, மலையைத் தின்று தண்ணீரையும் ஒட்டுமொத்தமாய் உறிஞ்சித் தீர்த்து விடும்” என்கிறார் புல்ஜாரில் வாழும் ஒரு பாரி புய்யாப் பெண்மணி. “எங்களுக்கு இந்த தண்ணீரைக் கங்களதேவி கொடுத்தாள்.  இந்தப் பூதங்களோ அதையும் குடித்து ஒழித்து விடும்.  இவற்றை நாங்கள் துரத்தியடிக்கா விட்டால் இங்கு எதுவுமே மிச்சமிருக்காது” என்கின்றனர் அந்த ஆதிவாசிகள்.  கண்டதாரா மலைத்தொடர் எங்கும் ஆதிவாசி மக்கள் சுரங்கக் கம்பெனிகளுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகின்றனர்.  அவர்கள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, மனித இனத்தின் மாட்சிமை பொருந்திய மரபுச் செல்வங்கள் அனைத்தின் பாதுகாவலர்களாகவும் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்கள்.

நாம்?

_______________________________________________

– மது ஸ்ரீமுகர்ஜி, அவுட்லுக், ஜூன் 11, 2012

மொழியாக்கம்: செல்வன், புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________________

பாட்ஷா பாபாவான கதை!

29

இணைப்பு:

ரஜினி-விகடன்அவதரித்த திருநாளன்றே பாபா சமாதியானார். வழக்கமாகப் படம் வெளியாகிக் கல்லா கட்டியவுடனே ஆன்மீகப் போதைக்கு ஆட்பட்டு இமயத்துக்குப் புறப்பட்டுவிடும் ரஜினி இந்த முறை கிளம்பக் காணோம். படத்தின் தோல்வி, போதையை இறக்கி விட்டது போலும்! அவதாரமாக முடியாவிட்டாலும் சூப்பர் ஸ்டார் தகுதியையாவது தக்கவைத்துக் கொள்ள அடுத்த திரைக்கதைக்கு மசாலா அரைக்கத் தொடங்கயிருப்பார்.

” பாபா படுதோல்வி ” என்று நிச்சயமானவுடன், ரஜினி புகழ் பாடுவதையே தம் குலத்தொழிலாகக் கொண்டிருந்த பத்திரிகைகளும் ரஜினிக்கு சில ஆலோசனைகள் கூறுமளவு தைரியம் பெற்று விட்டனர். செத்த பாம்புதான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு கோடம்பாக்கத்திலிருந்தும் கூட சில சூரப்புலிகள் களமிறங்கியிருக்கிறார்கள். ‘ படத்தில் கட்டமைக்கப்படும் புனைவுகள், குறியீடுகள், சொல்லாடல்கள்’ இந்துத்வ அரசியலை முன் நிறுத்துவதாகக் கூறி, பாபா படத்தைக் கட்டுடைப்பதன் மூலம் ரஜினியின் அரசியலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சில அறிஞர் பெருமக்கள் இறங்கி விட்டனர்.

தன்னை அவதார புருசனாகவும் தனது ரசிகர்களைப் பக்தகோடிகளாகவும், தன்னை ஒரு மீட்பனாகவும் தமிழக மக்களைக் கடைத்தேற்றம் பெறக் காத்திருக்கும் மந்தையாகவும் சித்தரிக்கும் துணிச்சல் ரஜினி என்ற காரியக் கிறுக்கனுக்குத் தீடிரென்று வந்து விடவில்லை. ராமதாஸ்  இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்ததாகவும் தான் துணிந்து அதைச் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்ட அஞ்சிச் சும்மாயிருந்திருந்தால் பரவாயில்லை. பூனையைப் புலியாகச் சித்தரித்தனர். பிறகு “புலி வருது… புலி வருது” என்று எல்லா ஓட்டுக்கட்சிகளும் பத்திரிகைகளும் பெரிதாக ஊதிவிட்டனர். பிறகு தாங்கள் ஊதிப் பெதிதாக்கிய பலூனைக் கண்டு தாமே மிரண்டனர்; வணங்கினர். அந்தப் பலூனின் மீது ஒரு சிறிய குண்டூசியை வைத்துப் பார்க்கும்  தைரியம் மட்டும் யாருக்கும் வரவில்லை – மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தவிர.

இதைப் பெருமைக்கு கூறவில்லை. தமிழகத்தின் அருவெறுக்கத்தக்க நிலையை எண்ணி வெட்கி வேதனைப் பட்டுக் கூறுகிறோம். 1995 இல் ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்களின் வெறுப்பு உச்சத்தில் இருந்தபோதுதான் பாட்ஷா அரசியல் பேசத் தொடங்கினார். “கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் ” என்ற பாடிக் கொண்டிருந்த நடிகர்களை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும். காரணம் ” ஆன்மீகமும் தேசியமும் இணைந்த பாரதீதய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு உகந்த அரசியல் கண்ணோட்டத்தை ரஜினி கொணடிருந்தார் ” என்பதுதான்  – அப்போதே கூறினோம். ” கழிசடை அரசியல் நாயகன் ரஜினி “என்று சிறு வெளியீடு போட்டு 50,000 பிரதிகளைத் தமிழகமெங்கும் பேருந்துகள், கடைவீதிகள், குடியிருப்புக்களில் விற்றோம்; பொதுக்கூட்டங்களில் பேசினோம்.

ஜெ. எதிர்ப்பு அலையின் குறியீடாகவே ரஜினியை முன்நிறுத்தி கருணாநிதி முதல் தகவல் ஊடகங்கள் வரை அனைவரும் பிரச்சாரம் செய்த அந்தக் காலத்தில் ம.க.இ.க வைத்தவிர வேறு யாரும் இதைப் பேசவில்லை; ஜெயலலிதாவுக்கு மாற்றாக இன்னொரு ஆம்பிளை ஜெயலலிதாவை முன் நிறுத்தும் பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சி பற்றி யாரும் முணுமுணுக்கக் கூட இல்லை. ரஜினி ரசிகர்கள் என்ற அந்த ‘ மாபெரும் ‘ ஓட்டு வங்கியை அப்படியே களவாண்டு விடலாமென எல்லா ஓட்டுக் கட்சிகளும் வாயில் எச்சிலொழுகப் பின்தொடர்ந்தனர்; வழிபட்டனர்; வால் பிடித்தனர். ரஜினியைப் பற்றி எதிர்கருத்து வைத்திருந்தவர்கள் கூட அந்த நேரத்தில் அதைப் பேசத் தயங்கினர்; அஞ்சினர்; ராஜதந்திரமாக மவுனம் சாதித்தனர்.

பாட்ஷா ஏழாண்டுகளுக்குப் பின் பாபா ஆகிவிட்டார். இடையில் வந்த தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு படத்திலும் கள்ள மாக்கெட்டில் டிக்கெட் விற்று 100 கோடி ரூபாய் சம்பாதிக்க ரஜினிக்குப் பாதுகாப்பு வழங்கியது. இப்போது ரஜினியிடம் பூச்செண்டு வாங்கிய ஜெயலலிதா கள்ள மார்க்கெட் உரிமையைச் சட்டபூர்வமாக்கி விட்டார். கொள்ளைக்காரன் பாட்ஷா அவதாரபுருசன் பாபாவாகி விட்டார். இவர்கள் யாரும் பாபாவைத் தோற்கடிக்கவில்லை. ரஜினி தன் சொந்த முயற்சியில்தான் தோல்வியைச் சாதித்திருக்கிறார். “வாழ்க்கையே ஒரு சினிமாதான் ” என்ற தத்துவத்தைத் தன் சொந்த வாழ்க்கை மூலம் ரசிகர்களுக்குப் போதனை செய்ய முயன்று தோற்றிருக்கிறார்.

விடலைத்தனதமான சேட்டைகள், பொறுக்கித்தனங்கள், சினிமா வாய்ப்பு, புகழ், பார்பனக் குடும்பத்துடன் மண உறவு, பல கோடி ரூபாய் கருப்புப் பணம், துதிபாடிகளின் கூட்டம் இவையனைத்தும் தாமே உருவாக்கும் போதை மற்றும் அவர் தனியாக ஏற்றிக் கொண்ட போதை… என்பன போன்ற பலவிதமான ரசாயனப் பொருட்களின் அங்ககச் சேர்க்கையில்தான் பாபா அவதரித்திருக்கிறார்.  புளித்த ஏப்பக்காரனின் ஆன்மீகம் பசி ஏப்பக்காரர்களின் ஆன்மீகத்தோடு சேரவில்லை. பாபாவை அவதாரமாகவும், பிராண்டாகவும், அரசியல் தலைவராகவும், பொறுக்கியாகவும் ஒரே நேரத்தில் சித்தரித்து எல்லா முகங்களும் தருகின்ற வருமானத்தைப் பிழிந்து எடுத்து விடக் கனவு கண்ட லதா ரஜினியின் பேராசையும் பாபாவின் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கிறது.

மைனர்  கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும்.

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________

ரஜினி ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

40

இணைப்பு:

ரஜினி-ரசிகர்கள்

விடலைப் பருவத்துக்கேயுரிய அறிவு வளர்ச்சியும் உதிரித்தனமும் கொண்ட உழைக்கும் வர்க்கத்து இளைஞர்கள்தான் ரஜினி ரசிகர்களில் ( எல்லா ரசிகர்களும்தான் ) முக்கியமானவர்கள். குழப்பமான, உதிரித்தனமான மனோபாவத்தில் வளரும் இவர்கள் ரஜினியைத் தலைவா என்றும் தெய்வமே என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விடலைத்தனம் இத்தோடு முடிந்து விடுவதில்லை. பிழைப்புவாத அரசியலின் சமூக அடித்தளமாக இவர்கள் மாறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கட்சி இதற்கொரு முன்னோடி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பாசிச சக்திகள் அதிகாரத்துக்கு வரும்போது இதே கூட்டம் அவர்களது குண்டர் படையாக மாறுகிறது. இந்தக் கொக்குகளின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்து விடலாம் என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளின் கனவு.

ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டபோது “தேவையில்லை சார், அவர் ஒரு பிசினஸ்மேன் “என்று திமிராகப் பதில் சொன்னார் ஒரு ரசிகர் மன்றத் தலைவர். “நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.

அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும். “தலைவா, காங்கிரசில் சேர்; தனிக்கட்சியாவது தொடங்கு” என்று 1995 இல் ரஜினிக்கு வேண்டுகோள் விட்டவர்கள் இந்த ரசிகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, பிராந்திக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நடத்தும் ரசிகர் மன்றத் தலைவர்கள், வட்டம் மாவட்டத்துக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் தலைவராக இருக்கின்றனர். பெயர்ப்பலகை மாற வேண்டியதுதான் பாக்கி.

இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாபா டிக்கெட் விற்பனை. பாபா படத்தை விநியோகஸ்தர்கள் மூலமாக விற்காமல் நேரடியாகத் திரையரங்குகளுக்கு விற்றிருக்கிறார் ரஜினி. பத்திரிகைகளின் கணிப்புப்படி மொத்த வருமானம் 70 கோடி. பன்மடங்கு தொகை கொடுத்து படத்தை வாங்கிய தியேட்டர் அதிபர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஏலம் விட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தின் நகரத் தலைவர்களுக்கு முதல் காட்சி. திருச்சியில் ஷாகுல் ஹமீதுக்கு 4 காட்சி; கலீலுக்கு 2 காட்சி. இதை ரசிகர்களிடமே பிளாக்கில் விற்று சில லட்சங்களை இவர்கள் சுருட்டிக் கொள்வார்கள்.

மற்ற காட்சிகளனைத்தும் பகிரங்க ஏலம். ரசிகர்கள், ரசிகரல்லாதவர்கள் எனப் பலரும் ஏலம் எடுத்துள்ளனர். 1000 இருக்கைகள் கொண்ட அரங்கில் ரூ. 50 ( சராசரி ) வீதம் ஒரு காட்சியின் உண்øமையான விலை 50,000. கேளிக்கை வரி இதற்கு மட்டும்தான். ஒரு காட்சி ஒரு லட்சம் முதல் ஒன்றேகால் லட்சம் வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் 100, 125க்கு வாங்கி 200, 250க்கு விற்று விடலாமென்றும் ஓரே நாளில் 50, 60 ஆயிரங்களைப் பார்த்துவிடலாம் என்றும் கனவு கண்டவர்கள் ஏலமெடுத்திருக்கிறார்கள். வீடு , நகையை அடமானம் வைத்து, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியும் பலர் முதலீடு செய்திருக்கின்றனர்.

படம் தோல்வியடைந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான பேர் தமிழகமெங்கும் திவாலாகியிருக்கின்றனர். மனைவிக்குத் தெரியாமல் நகையை வைத்து ஒரே நாளில் சம்பாதித்து மனைவியிடம் காட்டி அவளை ஆச்சரியத்திலாழ்த்த விரும்பியவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகச் சொன்னார் ஒரு திரையரங்க அதிபர்.

திருச்சி நகரில் ஒரே நாளில் இத்தகைய ‘ முதலீட்டாளர்கள் ‘ பத்துப் பேரைச் சந்தித்தோம். எல்லொரும் 40,000 முதல் 75,000 வரை இழந்தவர்கள். தீடீர்க் காசு பார்க்க விரும்பிய இந்தக் கூட்டம் ஏமாந்து விட்டது குறித்து நாம் வருந்தத் தேவையில்லை. ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த அர்சத் மேத்தாவின் பெயர் பாபா!

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________

அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !

3

ரியானா மாநிலத்தில் கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள 19 பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மீது நடத்தப்பட்டவை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த 15 வழக்குகளில் பெரும்பாலானவை ஆதிக்க சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட கும்பல் பாலியல் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  இவ்வழக்குகளில் ஒன்றிரண்டில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்டு, குற்றமிழைத்த ஆதிக்க சாதிவெறியர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.  இதுவும்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களும் அமைப்புகளும் போராடிய பிறகுதான் நடந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆதிக்க சாதிக் கொழுப்பும் ஆணாதிக்க திமிரும் வக்கிரமும் கொண்ட ஜாட் சாதி பஞ்சாயத்துகள், அப்பஞ்சாயத்துகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் ஓட்டுக்கட்சிகள்-அரசு இயந்திரம் – இதுதான் அரியானாவின் உண்மை முகம் என்பது ஏற்கெனவே பலமுறை அம்பலமாகியிருக்கிறது.  இப்பொழுதும்கூட, அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு கட்சியும், போலீசும், ஜாட் பஞ்சாயத்துகளும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்துள்ள இந்த வன்புணர்ச்சித் தாக்குதல்களை உப்புசப்பில்லாத விவகாரமாக ஆக்கி, கைகழுவிவிடத் தொடர்ந்து முயன்று வருகின்றன.

ஜாட் சாதியைச் சேர்ந்த கும்பலால் 15 தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ள நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஜிந்த் மாவட்டத்தில் சச்சா கேரா என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் அளிக்கச் சென்றார்.  ஒரு சில நிமிடங்களே நடந்த இந்த ஆறுதல் நாடகத்தின் மூலம் எல்லா சாதிகளிலும் பெண்களுக்கு எதிரான போக்கிரி கும்பல் இருப்பதாகக் காட்டியதோடு, “கற்பழிப்புக் குற்றம் நாடு முழுவதும் நடப்பதுதான்” எனக் கூறி, அரியானா அரசிற்கு வக்காலத்து வாங்கினார்.

அக்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரான தரம்வீர் கோயட், “இக்கற்பழிப்பு சம்பவங்களில் 90 சதவீதம் பெண்ணின் சம்மதத்தோடு நடந்தவைதான்” எனக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பெண்களை நடத்தை கெட்டவர்களாகக் குற்றஞ்சுமத்துகிறார்.  வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்களுள் பலர் திருமணமானவர்கள் என்ற உண்மையை மறைத்துவிட்டு, இளைஞர்களுக்கு 16 வயதிலேயே திருமணம் செய்துவிட்டால், அவர்கள் அலைவதைத் தடுக்க முடியும்” எனக் கூறி, குழந்தைத் திருமண முறைக்கு வக்காலத்து வாங்குகிறது, உள்ளூர் காப் (சாதி) பஞ்சாயத்து.  இந்தக் காட்டுமிராண்டித்தனமான யோசனையை அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா வழிமொழிந்து, பின்பு ஜகா வாங்கிக் கொண்டார்.

அரியானா

முதலாளித்துவ அறிவுஜீவிகளோ, “அரியானா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு எண்ணூத்தி சொச்சம் பெண்கள் இருப்பதுதான் இப்பிரச்சினைக்குக் காரணம்” எனக் காரணம் கற்பிக்கிறார்கள். அரியானா மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை சரிந்துகொண்டே போவதற்கு ஆணாதிக்கம் நிறைந்த பிற்போக்கு குடும்பங்கள் பெண் சிசுக்களைச் சட்டவிரோதமான முறையில் கருவிலேயே அழித்துவிடுவதுதான் காரணம் என்பதும்; ஆண்கள் எண்ணிக்கைக்குச் சமமாகப் பெண்கள் இருக்கும் இடங்களிலும் பாலியல் வன்புணர்ச்சி நடைபெற்று வரும் உண்மையும் இவர்களை உறுத்தவில்லை போலும்.

அரியானாவை ஆண்டு வரும் காங்கிரசு அரசோ இன்னும் ஒருபடி மேலே போய், தனது ஆட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் அரசியல் சதி இது” என்ற புளுகுணி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  அரியானா  போலீசு துறை இயக்குநர் ரஞ்ஜிவ் சிங் தலால், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கற்பழிப்புக் குற்றங்களின் எண்ணிக்கையில் 80 குறைந்துள்ளதாக’’ப் புள்ளிவிவரத்தைத் தூக்கிப்போடுகிறார்.  ஹிஸார் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதியினரால் கற்பழிக்கப்படுவது குறைவுதான்” என வாதிடுகிறார்.  கோஹானா நகரின் துணைக் கண்காணிப்பாளர், “பெண்கள் மேற்கத்திய பாணி உடைகளை அணிவதால்தான் கும்பல் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிப்பதாக’’க் கண்டுபிடித்துச் சோல்கிறார்.  இவற்றின் மூலம் அம்மாநில அரசு, “இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையே தவிர, இதில் சாதிக்கு இடமில்லை” எனச் சாதிக்க முயலுகிறது.

அரியானா-1ஆனால், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் காப் பஞ்சாயத்து தலையீடு செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்றியிருக்கிறது; காப்பாற்ற முயலுகிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன.  ஹிஸார் மாவட்டம்-டாப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான தாழ்த்தப்பட்ட இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜாட் சாதியைச் சேர்ந்த சுனிலை போலீசு கைது செய்துவிடாமல் காப்பாற்றி வருகிறது, அக்கிராம காப் பஞ்சாயத்து.  குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக சுனிலைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன் போலீசு நிறுத்தியபோது, அப்பெண் காப் பஞ்சாயத்தின் கட்டாயத்தால் அவனை அடையாளம் காட்டவில்லை.  இப்பாலியல் வன்புணர்ச்சி வழக்கு தொடர்பாக காப் பஞ்சாயத்து நடத்திய கூட்டத்தில் வெளியாட்களையும் பத்திரிகையாளர்களையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும், அப்பொழுது அக்கூட்டத்தில் அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

டாப்ரா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞரான ரஜத் கல்ஸான், “போலீசு, நீதித்துறை என அரசு இயந்திரம் முழுவதிலும் ஜாட் சாதியினர் நிறைந்துள்ளனர்.  அதிகார வர்க்கமும் காப் பஞ்சாயத்தும் பல்வேறு வழிகளில் நெருக்கமாக உள்ளது.  இந்த நெருக்கம் காரணமாக, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காப் பஞ்சாயத்துதான் தீர்மானிக்கின்றன.  போலீசு அதற்குத் தலையாட்டுகிறது” எனக் குற்றஞ் சுமத்துகிறார்.

‘‘ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகள் போலீசால் கைது செய்யப்படும்பொழுது, காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தலையிட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கைத் தீர்த்துக் கொள்வதாகக் கூறி, குற்றவாளியை விடுவித்துவிடுகிறார்கள்.  இதையும் மீறி வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால், பஞ்சாயத்தின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண்ணே பிறழ் சாட்சியாக மாறிவிடுகிறார்” என்கிறார் ஜிந்த் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்.

அம்மாநிலத்தில் நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும் வன்புணர்ச்சி வழக்குகளில் வெறும் 13 சதவீத வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  இப்புள்ளிவிவரமும் போலீசு கண்காணிப்பாளரின் கூற்றும் வழக்குரைஞர் ரஜத் கல்சான் முன்வைக்கும் குற்றச்சாட்டை உறுதி செகின்றன.

கடந்த செப்.9 அன்று டாப்ரா கிராமத்தில் நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கில், குற்றவாளிகள் அச்சம்பவத்தைத் தாமே கைபேசியில் படமெடுத்ததோடு, அதனைப் பலருக்கும் அனுப்பி வைத்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கிருஷ்ணகுமார் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.  குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், கிருஷ்ணகுமாரின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக் கோரித் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிய பிறகுதான்,  இவ்வழக்கில் போலீசு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.  அதிலும்கூட, பாதிக்கப்பட்ட பெண் தந்த வாக்குமூலத்தைத் திரித்து எழுதி, சில தாழ்த்தப்பட்ட இளைஞர்களையும் வழக்கில் சேர்க்க முனைந்து அம்பலப்பட்டுப் போனது.

சோனியா அரியானாவிற்கு வந்து ஆறுதல் நாடகம் நடத்திச் சென்ற மறுநாளே, கைதால் என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமணமான தாழ்த்தப்பட்ட இளம் பெண் இரண்டு ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்.  குற்றவாளிகள் இருவரும் அப்பெண்ணிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதையும்; குற்றம் நடப்பதற்கு முன் அப்பெண் அவர்களோடு கைபேசியில் பேசியிருக்கிறார் என்பதையும் வைத்துக் கொண்டு, இவ்வழக்கில் குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முகமாக அப்பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறது போலீசு.  இப்படிப் பல்வேறு வழக்குகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்ட போலீசார் மீது கிரிமனல் சட்டப்படியோ, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியோ எந்தவொரு வழக்கும் தொடரப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘‘தனது பண்ணையாளின் மனைவியோடும் மகளோடும் வல்லுறவு கொள்ளாத எந்தவொரு ஜாட்டும், தன்னை ஜாட் என்று அழைத்துக் கொள்ளத் தகுதியில்லாதவன்” என்று காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பெருமையாக கூறிக் கொண்டு திரிவதை அரியானாவின் ஒவ்வொரு கிராமப்புறத்திலும் இன்றும் காண முடியும்.  இன்று இவர்கள் பண்ணையார்களாக, நிலப்பிரபுக்களாக மட்டும் இல்லை.  தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதுப் பணக்காரக் கும்பலாகவும் உருவெடுத்துள்ளனர்.  இவர்கள்தான் அரியானாவில் முதலீடு செயும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாங்கிக் கொடுக்கும் ரியல் எஸ்டேட் தரகர்களாக, அந்நிறுவனங்களுக்குக் கூலி ஆட்களை சப்ளை செயும் காண்டிராக்டர்களாக மாறி பெரும் பணத்தில் புரள்கின்றனர்.

இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கும்பலிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அவர்களின் சாதிக் கொழுப்பும் வக்கிரமும் அதிகரித்து வருகிறது.  அரியானாவில் 2004-ஆம் ஆண்டில் பதிவான பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களின் எண்ணிக்கை (386), 2011-இல் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதை (733) இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தும் வழக்குகளில், அந்த வக்கிரத்தை அக்கும்பல் கைபேசியில் பதிவு செய்து கொள்வதோடு, அக்காட்சிகளைப் பலருக்கும் அனுப்பிவைக்கும் போக்கும் தற்பொழுது அதிகரித்து வருகிறது.  அவர்கள் தங்களின் செய்கையை வெட்கப்படத்தக்கதாகவோ, குற்றமாகவோ பார்ப்பதில்லை.  தங்களின் ஆண்மையையும் ஆதிக்க சாதித் திமிரையும் நிலைநாட்டும் செயலாகவே கருதுகின்றனர்.  இவை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வன்புணர்ச்சி தாக்குதல்கள் காமத்தின் பாற்பட்டதல்ல; ஆதிக்க சாதித் திமிரோடு தொடர்புடையது என்பதைத்தான் நிரூபித்துக் காட்டுகின்றன.

பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, சாதியை மறுத்துத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரைப் படுகொலை செய்யும் குற்றச் செயலுக்குக் கௌரவக் கொலைகள் என நாமகரணம் சூட்டி, அப்படுகொலைகளைச் செய்யும் ஆதிக்க சாதிவெறி பிடித்த கொலைகாரர்களையும் காப் பஞ்சாயத்துகள்தான் ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.  இப்படிபட்ட சட்டவிரோத, சமூக விரோத, பிற்போக்கான காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்வதை ஓட்டுக்கட்சிகளே முன்னின்று தடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்ச்சி வழக்குகளில் நீதி கிடைத்துவிடும் என யாரேனும் நம்ப முடியுமா?  எட்டு மாதங்களுக்கு முன்பு நர்வானா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் மீது ஜாட் சாதிவெறிக் கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்திய வழக்கில், அக்குற்றவாளிகளின் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசு மறுத்துவிட்டதால், குற்றவாளிகளுள் சிலரைத் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கொன்றொழித்தனர்.  நீதி பெறுவதற்கு இதைக் காட்டிலும் காரிய சாத்தியமான வழி வேறெதுவும் இருக்கிறதா?

__________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

__________________________________________________

ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் – ஒரு நேருக்குநேர் !

58

ரஜினி என்ற மாபெரும் சக்தியின் சகல வல்லமைகளைப் பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான். அதற்கு ஆதாரமாக பாபா படம் வெளியான போது திருச்சியில் இந்த பலூனை வெடிக்கவைத்த  கதையை இங்கு காலப்பொருத்தம் கருதி பதிவு செய்கிறோம்.

ரஜினி-பால்சில திரைப்படங்களுக்கு எழுத்தில் விமரிசனம் செய்தால் போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்றைத் திரித்து பம்பாய், ரோஜா போன்ற இந்து மதவெறி ஆதரவுப் படங்களை மணிரத்தினம் வெளியிட்டபோது அவற்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பாலியல் வக்கிரங்களையே பண்பாடாக்கும் ஆபாசத் திரைப்படங்களுக்கு எதிராகவும் இத்தகைய நேரடி நடவடிக்கை தேவைப்பட்டிருக்கிறது.

ஆபாசமும் வக்கிரமும் படத்திற்குள்ளேதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாபா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் கதை இன்னதென்று தெரியாவிட்டாலும், படம் வெளியாவதற்கு முன்னால் அதற்குப் பத்திரிகையுலகம் அளித்த விளம்பரமும், தமிழகமெங்கும் பாபா வெளியீட்டையொட்டி நடைபெற்ற கூத்துகளும் ஆபாசம் வக்கிரம் என்ற சொற்களுக்குள் அடக்கவியலாத அளவுக்கு அருவருப்பானவை.இந்த அசிங்கம் தோற்றுவிக்கும் நாற்றத்தை எதிர்கொள்ளவியலாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிச் செல்வதென்பது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கே விடப்பட்ட சவாலாகக் கருதினோம். எனவே தமிழகத்தில் ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் இயங்கும் திருச்சியில், பாபாவையும் பக்தகேடிகளையும் நேருக்கு நேர் சந்திப்பது என்று களத்தில் இறங்கினோம்.

பாபா வெளியிடப்பட்ட ஆகஸ்டு 15, 2002 அன்று தமிழகத்தின் சூழல் என்னவென்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். நெசவாளர்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்த தி.மு.க வினர், முட்டை பிரியாணிக் கும்பலிடம் அடி வாங்கி, சிறை சென்ற முன்னாள் சபாநாயகர் உள்ளிட்ட  110பேர் கண்டிசன் பெயிலில் கையெழுத்துப் போட்டுக்  கொண்டிருந்தனர். நெசவாளர்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருந்தனர்.
காவிரியில் தண்ணீர் விடாமல் கர்நாடகம் அடாவடித்தனம் செய்து கொண்டிருந்தது. தஞ்சை  பஞ்சபூமியாகி விவசாயிகள் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தமிழகமெங்கும், ஆசிரியர் போராட்டம், வழக்குறைஞர் போராட்டம்.

இந்தச் சூழலில் தமிழகப் பத்திரிகைகளில் பாபாதான் அட்டைப்படக் கட்டுரை அல்லது முக்கியச் செய்தி. இதை விடப் பெரிய பூச்செண்டை பாபாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்க முடியாது. அந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டன மக்கள் பிரச்சினைகள்.பாபா வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன் ராமதாஸ் ரஜினியைப் பற்றித் தெரிவித்த விமரிசனம் பத்திரிகைகளில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டிலும், ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்திய செய்திதான் முக்கியத்துவம் பெற்றது. ரசிகர்கள் “கொந்தளிப்பு – ஆவேசம்” என்றும் ரஜினி மட்டும் தடுத்து நிறுத்தாமலிருந்தால் ரசிகர்கள் தமிழ்நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பது போலவும் ஒரு பயங்கரத் தோற்றத்தையும் உருவாக்கின பத்திரிகைகள்.

தங்கள் முகத்தை பூதக்கண்ணாடி வழியே பார்த்து தைரியம் பெற்ற ரசிகர்கள் எனப்படும் தெள்ளவாரிகள் கூட்டம் ” ராமதாசையும் திருமாவளவனையும் பொடாவில் கைது செய்” என்று அறிக்கை விட்டு தங்கள் அரசியல் பார்வையைத் தெளிவுபடுத்தியது; இதுவும் மாலைப் பத்திரிக்கைகளின் முதல் பக்கச் செய்தியானது.

திருச்சி நகரமோ பாபா நகரமாகவே இருந்தது. ஷாகுல்ஜி (ஷாகுல் ஹமீது) தலைமையில் அதிகாரபூர்வ ரசிகர் மன்றம்; கலீல்ஜி (கலீல்) தலைமையில் போட்டி ரசிகர் மன்றம். மாவட்டத்தில் மொத்தம் 550 கிளைகள், இரு ரசிகர் மன்றங்களுக்கிடையிலான போட்டியில் திருச்சி நகரத்தின் எல்லாச் சுவர்களுக்கும் ஆயில் பெயிண்ட் அடித்து விட்டனர். ஒரு சுவர் விளம்பரத்துக்கு 3000 ரூபாய் என்று மதிப்பிட்டாலும் மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய்க்கு (600 இடங்களுக்கு மேல்) பாபா விளம்பரம் செய்திருந்தனர். விளம்பர வாசகங்களைப் படித்தால் தன்மானமுள்ள வாசகர்களுக்கு அது கொலை வெறியை ஏற்படுத்தும் என்பதால் எழுதாமல் விடுகிறோம்.

இவையன்றி, சுவரொட்டிகள். ரஜினி திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 5 கோடியென்றால் ரசிகர்கள் செய்யும் விளம்பரச் செலவு 10 கோடி என்பதை ‘படையப்பா’ படம் வெளிவந்த போது உரிய விவரங்களுடன் புதிய கலாச்சாரத்தில் எழுதியிருக்கிறோம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர்’ படம் வருகிறதென்பதால் விளம்பரம் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.ரஜினியின் நண்பரும் தொழில் கூட்டாளியுமான முன்னாள் காங்கிரசு எம்.பி அடைக்கலராஜின் கொட்டகை உட்பட 3 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆகஸ்டு – 15 அன்று மட்டும் 5 திரையரங்குகளில் அன்றாடம் 5 காட்சிகள்.

ஆகஸ்டு – 14 ஆம் தேதியன்று போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்த திருச்சி நகர மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள், ஆகஸ்டு – 15 ஆம் தேதியன்று பாபா திரையிடப்படும் ரம்பா திரையரங்கின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கண்டன ஊர்வலத்திற்கும் போலீசிடம் அனுமதி கேட்டனர்.
“சுதந்திர தினத்தன்று குடிமக்கள் எந்த விதமான ஜனநாயக உரிமையையும் பயன்படுத்த அனுமதிப்பது வழக்கமில்லை” என்ற  புனிதமான மரபை போலீசார் சுட்டிக் காட்டினர். 16 ஆம் தேதி அனுமதியளிப்பதாக வாக்களித்தனர்.

“பாபாவுக்குப் பால்குட ஊர்வலம் நடத்த  அனுமதித்தால் அதை எதிர்த்து காலிப்பானை ஊர்வலம் நடத்துவோம் ” என்று போலீசை எச்சரித்தோம். பால்குட ஊர்வலத்தை அனுமதிக்க மாட்டோமென உறுதியளித்தனர் போலீசு அதிகாரிகள். ரஜினியின் படம் வெளியாகும் நாளன்று நகரம் எப்படி இருக்குமென்பதைத் தமிழக மக்களுக்கு விளக்கத் தேவையில்லை. சுதந்தி தினத்தன்று பிராந்திக் கடை திறக்கக்கூடாது என்ற ‘ கருப்புச் சட்டம்’ அமலில் இருப்பதால் 14 ஆம் தேதியே போதுமான அளவு ‘ ஜனநாயகத்தை’ வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டிருந்தார்கள் பாபாவின் பக்த கேடிகள்.

எம் தரப்பில், பாபாவை அம்பலப்படுத்தும் 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ஆம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை “நேருக்குநேர்” சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் ” மாபெரும் சக்தி ” பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தோம்.

செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். மக்கள் கும்பல் கும்பலாகப் படித்து ரசிக்கத் தொடங்கினர். ரசிகர்கள் நின்று படித்துவிட்டு மவுனமாக இடத்தை விட்டு அகன்றனர். ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது. படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். “ராமதாசுக்குத் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள் ” என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.

ரஜினி-பாபாதேநீர்க் கடைகள், தெருக்கள்  என்று நகரின் உட்பகுதிகளெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரேயொரு தெருவில் சுவரொட்டியைக் கிழித்த ரசிகர் கூட்டத்தைத் ‘ தக்கபடி கவனித்து ‘ கையில் பசைவாளியையும் சுவரொட்டிகளையும் கொடுத்து அவர்களையே ஒட்டச் செய்தனர் தோழர்கள். நகரின் மையமான இடங்களில் இதே முழக்கங்கள் ( தாழ்ந்த தமிழகமே! கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் காவிரிக்கு உழவன் கண்ணீர் விடும் மண்ணில் பாபா காட்சிக்கு அலை மோதும் ரசிகர் கூட்டம்! பாபா டிக்கெட் 600 ரூபாயாம்! தமிழனே! உன் சூடு சொரணை எத்தனை ரூபாய்?! ஆர்ப்பாட்டம், “ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” ) பெரிய தட்டிகளாக எழுதி வைக்கப்பட்டன.  அவற்றுக்கும் சேதமில்லை.

மதியம் தட்டிகளைக் கையிலேந்தியபடி பல குழுக்களாகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரச்சாரம் செய்யச் சென்றனர் தோழர்கள். ரஜினி ரசிகர் மன்றங்களில் உட்காந்திருந்தவர்களை அழைத்துப் பேசினர். “ரேசன் வாங்க வைத்திருந்த காசைக் காணோம்; பைனான்சுக்கு வைத்திருந்த காசை எடுத்து விட்டான்; பாத்திரத்தைக் காணோம்; நகையைக் காணோம்” என்ற தாய்மார்களின் புகார்களும், வசவுகளும், கண்ணீரும் எல்லாத்  தெருக்களிலும் கேட்டது. இந்த எதிர்ப்பியக்கத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று மேலும் விளக்கத் தேவையில்லை.

“படம் படுதோல்வி ” என்ற செய்தி அதற்குள் நகரம் முழுவதும் பரவிவிட்டது. ” பாபா படுதோல்வி! போண்டியானது ரசிகர்கள்தான் – ரஜினி அல்ல! பண்ட பாத்திரத்தை விற்று ரஜினிக்கு மொய் எழுதிய ரசிகர்களே இனியாவது திருந்துங்கள்!” என்ற தட்டிகளை அன்று மாலையே நகரின் மையப்பகுதிகளில் வைத்தோம். அன்று காலை “ஜெயங்கொண்டத்தில் படப்பெட்டியைப் பா.ம.க வினர் பறித்துச் சென்று விட்டனர் ” என்ற செய்தி மாலைப் பத்திரிகைகளின் பரபரப்புக்குத் தீனியானது.

போலீசுக்கோ 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்க இது ஒரு முகாந்திரமானது. ” அடுத்த 10 நாட்களுக்குள் பாபாவுக்கு எதிராக எதுவும் செய்ய அனுமதிக்கக்கூடாது ” என்று அம்மாவின் அரசு உத்திரவிட்டிருப்பதாகக் கூறினர். தடை உத்திரவை நள்ளிரவு 1 மணிக்குக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் 16ஆம் தேதி காலை 9 மணிக்குத் தடையை மீறி திருச்சி சிங்காரத் தோப்பில் திடீரென்று குழுமிய தோழர்கள் ஊர்வலமாகக் கிளம்பி ரம்பா திரையரங்கம் நோக்கிச் சென்றனர். தெப்பக்குளம் அருகே ஊர்வலத்தை மறித்துக் கைது செய்தது போலீசு. பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் செய்தி வெளிவந்தது. ( பரபரப்பு முக்கியத்துவம் என்று ஒன்று இருக்கிறதே )

பண்ருட்டியில் சுவரொட்டி வாசகத்திற்காக அதனை ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். “”ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” என்ற அந்தச் சுவரொட்டி வாசகம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி குற்றப் பிரிவு 153-ஏ இல் கைது செய்து சிறை வைத்தனர். அதாவது பாபர் மசூதியை இடித்ததற்கு அத்வானி மேல் போடப்பட்ட அதே குற்றப் பிரிவு!

16 – ஆம் தேதி இரவே திருச்சி நகரச் சுவர்களை அசிங்கமாக்கிக் கொண்டிருந்த பாபா விளம்பரங்கள் மீது வெள்ளையடித்து  “உலக வங்கிக் கைக்கூலி ஜெயா” வுக்கு எதிரான முழக்கங்களை எழுதத் தொடங்கினார்கள் தோழர்கள். வெள்ளையடிக்கும் பணி மறுநாள் பகலிலும் தொடர்ந்தது. இதைக் கண்டும் ரசிகர்கள் யாரும் கொந்தளிக்கவோ குறுக்கிடவோ இல்லை. ஒரு இடத்தில் ரஜினியின் முகத்தில் வெள்ளையடிக்கும்போது மட்டும் ஒரு ரசிகர் குறுக்கிட்டார். ” தலைவா… பாத்து… தலைவர் முகத்தில் அடிக்கும் போது மட்டும் கொஞ்சம் பாத்து அடிங்க ” என்றார்.

பார்த்து அடிப்போம்.

__________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
_____________________________________________

பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது!

4


பேரம் படிந்ததுநாடகம் முடிந்தது!

______________________________________________

ஊழல்   ராணியும்     – மலை  முழுங்கி   மகாதேவனும்

-மெகாசீரியல்

_________________________________________________________________

டந்த  7 மாதங்களாக கிரானைட் மாபியா பி.ஆர்.பி – துரைதயாநிதி கும்பலுக்கு எதிராக ஊழல் ராணி ஜெயா நடத்தி வந்த மெகா சீரியலின் இறுதிக்காட்சி தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஜெயா – சசி கும்பல் – பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்கள் – அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் – காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் இணைந்து ஊழல் எதிர்ப்பு மெகா சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஒலிம்பஸ்,மதுரா.சிந்து கிரானைட் முதலாளிகள் துரைதயாநிதி-செல்வராஜ்-ரபீக் ஆகியோருக்கு முதற்கட்டமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழகமக்கள் அனைவரும் கோமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்களை தண்டிக்கும் நோக்கத்துடன் ஜெ அரசு – மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படவில்லை – சில பேரங்களை முன்வைத்துத்தான் இக்கண்துடைப்பு நடவடிக்கை என்பது தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா ஊழலுக்கு எதிராக உண்மையிலேயே சாட்டையைச் சுழற்றுகிறார், உச்ச,உயர்நீதிமன்றங்கள் தற்போது ஊழல் வழக்குகளில் கடுமையாக உள்ளன என்று கருதிவந்த பலருக்கும் சமீபத்தில் வந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சர்மாவின் தீர்ப்பு பலவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளது  என்பதுடன்  தமிழக அரசும்-நீதித்துறையும் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

  • பி.ஆர்.பி  குவாரி  நடத்துவதை  ரத்து  செய்ய  இன்றுவரை  தமிழகஅரசு  நடவடிக்கை  எடுக்காதது   ஏன்? 
  • சட்டவிரோத குவாரி லீஸ்களை ரத்து செய்ய  உரிய நடவடிக்கை இல்லாதது ஏன்? 
  • பி.ஆர்.பியின் தெற்குத்தெரு தொழிற்சாலையை முடக்க நடவடிக்கை எடுக்காமல் நிர்வாக அலுவலகத்தை மட்டும் சீல் வைத்தது கூட சட்டவிரோதம் என தமிழக அரசே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன? தவறை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 
  • பி.ஆர்.பி நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள்  இன்றுவரை  அகற்றப்படாதது  ஏன்? 
  • பி.ஆர்.பி  ஊழலுக்கு  துணை  போன அரசு அதிகாரிகள் மீது தொடர்நடவடிக்கை இல்லாதது ஏன்? 
  • போராடும் ஏழை மக்களிடம் வீரம் காட்டும் ஜெ யின் போலீசு பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமார்அழகிரிமகன் துரைதயாநிதியை  கைது செய்யாமல்  விரல்  சூப்பிக் கொண்டிருப்பதேன்? 
  • சோ, தினமலரால் வியந்தோதப்படும் நிர்வாகத்திறமைமிக்க ஜெயா ஆட்சியின் மெத்தப்படித்த அதிகாரிகள்- அரசு வழக்கறிஞர்களுக்குஎந்த நடவடிக்கைக்கும் முன்பாக ஒரு நோட்டீஸ் தரவேண்டும் என்று தெரியாமல் போன மர்மம் என்ன? 
  • பி.ஆர்.பியின் வழக்கறிஞர்பி.ஆர்.பி செய்த குற்றம் என்ன? ஊழல் தொகை எவ்வளவு என்பதையாவது தமிழக அரசால் சொல்ல முடியுமா? ஏழு மாதங்களாக அரசாங்கம் என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது? என்ற கேட்டதற்கு பதில்சொல்லத் திராணியில்லாமல் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் திணறியது ஏன்? 
  • அப்பாவி கூடங்குளம் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஜெயா அரசு 54 கிரிமினல் வழக்குகள் உள்ள பி.ஆர்.பி யை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்? 
  • கடந்த 7 மாதங்களாக பதியப்பட்ட கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? 
  • தற்போது கிரானைட் மாபியாக்கள் எளிதில் ஜாமீனில் வெளிவர அரசே அனுமதிப்பது ஏன்? 
  • நூற்றுக்கணக்கான பென்சன் வழக்குகளை நிலுவையில் வைத்திருக்கும் உயர்நீதிமன்றம் கிரானைட் கிரிமினல்களுக்கு  விரைந்து  நீதி  வழங்கிய மர்மம் என்ன?  கைமாறிய தொகை எவ்வளவு? 
  • கடந்த 7 மாதங்களாக கிரானைட் ஊழலுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாகக்காட்டி வந்த தமிழக அரசு சட்டப்படி ஒரு நடவடிக்கை கூட எடுக்காமல் பி.ஆர்.பி யை மீண்டும் கொள்ளையடிக்க அனுமதித்திருப்பதின் பின்னணி பேரங்கள் என்ன? ஜெயாவின் அடுத்த பாராளுமன்ற தேர்தல் செலவு முழுவதும் லஞ்சமாக பெறப்பட்டது என்கிறார்களே உண்மையா? 
  • தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய கிரானைட் ஊழலில் இதுவரை மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் வாய் மூடி மவுனமாயிருப்பதேன்? காங்கிரஸ் கைமேல் பெற்ற பலன் என்ன? 
  • காங்கிரஸ். தி.மு.க. ம.தி.மு.க. பா.ம.க. வி.சி. தா.பாண்டியன், நெடுமாறன், சீமான்……..உள்ளிட்டோர் கிரானைட் ஊழலில் மவுனிப்பதன் மர்மம் — செஞ்சோற்றுக் கடனா? 

ஒட்டுமொத்தத்தில் தமிழக அரசு பி.ஆர்.பி க்கு எதிராக ஒன்றும் புடுங்கவில்லை என்பதுடன் பி.ஆர்.பி கொள்ளையடித்த மக்கள் பணத்தில் ஒரு பகுதியை ஜெயா – சசி கும்பல்- அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் -அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள்-உயர்நீதிமன்ற நீதிபதிகள் -காவல்துறை அதிகாரிகள் – பொதுப்பணித்துறை- கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

கடந்த இருபது ஆண்டுகளாக இந்த ஊழலுக்குத் துணை நின்ற இதே அதிகாரவர்க்கம் பி.ஆர்.பி போன்ற மக்கள் சொத்தை சூறையாடும் முதலாளிகள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்பதுடன் எடுப்பதாகப் பம்மாத்து காட்டுவது கூடுதல் எலும்புத்துண்டுகளை கவ்வுவதற்கே என்பதும் உள்ளங்ககை நெல்லிக்கனி.

பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் முதலைகளோ –- அம்பானி,டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகளோ– இன்னும் இந்நாட்டின் கனிமவளங்களையெல்லாம் மூர்க்கத்தோடு சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களோ—அடித்த, அடித்துவரும், அடிக்கஇருக்கும் அனைத்துக் கொள்ளைக்குமான அடிப்படை இந்திய அரசு பின்பற்றிவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கைதான்.இது சட்டப்படிதான் அரங்கேறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.அதில் ஏற்படும் சில பணப்பகிர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கே வழக்கு,வாய்தா. பி.ஆர்.பி. பிரச்சனையும் அவ்வாறே.

மேலும் இன்று  சட்டமே ஒரு சார்பாக மிக விரைந்து மாற்றப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றம்-நீதிமன்றம்-நிர்வாக அலகுகள் அதற்க்குத் துணைநிற்பது தவிர்க்கைஇயலாதது. இதை கிரானைட் ஊழலில் மட்டுமல்ல, ஸ்பெக்ட்ரம்-இஸ்ரோ-நிலக்கரி-சில்லறை வணிகத்தில் வால்மார்ட் உள்ளிட்ட சமீபத்திய ஊழல்களில் அரசும்-உச்சநீதிமன்றமும் எடுக்கும் நிலைப்பாடுகளில் இருந்து தெளிவாக உணர முடியும்.

ஆக இன்றைய ஒருசார்பு சட்டப்படி பி.ஆர்.பி போன்ற ஊழல் பெருச்சாளிகளையும் -துணைநிற்கும் – அதிகாரவர்க்கத்தையும் தண்டிக்கவே முடியாது என்பதே நிதர்சன உண்மை. ஆக இனி வெறுமனே சட்டத்தையும்,கோர்ட்டையும் நம்பிக்கொண்டிராமல் பி.ஆர்.பி. போன்ற கிரிமினல் முதலாளிகளை முச்சந்தியில்    நிறுத்தி  செருப்பால் அடித்துத் தண்டிக்க என்று மக்கள் தயாராகிறார்களோ அன்றே  ஊழல் ஒழியும்.

_____________________________________

 மனித உரிமைப்பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டம். 9443471003.9865348163
______________________________________

கசாப்புக்கு தூக்கு, தாக்கரேவுக்கு மரியாதை – ஏன்?

20

பாக். பயங்கரவாதிக்குத் தூக்கு!

உள்நாட்டு பயங்கரவாதி தாக்கரேவுக்கு அரசு மரியாதை!

166 பேரைப் படுகொலை செய்த, பிரபலமாக அறியப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்டவரான முகம்மது அஜ்மல் அமீர் கசாப், கடந்த 21/11 அன்று முற்றிலும் இரகசியமாக இந்திய அரசால் தூக்கிலிடப்பட்டார். இதை, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தியும், நினைவுகூர்ந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பலவாறாக நாடே கொண்டாடியது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டது; பயங்கரவாதத்துக்குப் பதிலடி கொடுத்தாகிட்டது; இந்தியச் சட்டம், நீதி அமைப்பின் சிறப்பு நிரூபிக்கப்பட்டுவிட்டது; பயங்கரவாதக் குற்றவாளிக்குக் கூட சட்டபூர்வமான எல்லா வாய்ப்புகளும் வழங்கிய இந்திய ஜனநாயகத்தின் மேன்மை உலகுக்கு மீண்டும் தெளிவாகியுள்ளது” என்று கூறி கசாப் தூக்கு பற்றி பலரும் பெருமிதம் கொள்கின்றனர்.

கசாப் தூக்கை வரவேற்பவர்களிலேயே இன்னொரு பிரிவினரும் உள்ளனர். கசாப்பைத் தூக்கிலிட்டதன் மூலம் பாதி நீதியைத்தான் நிலைநாட்டியிருக்கிறோம். பாகிஸ்தானில் பாதுகாப்பாக வாழும் பயங்கரவாதக் தலைமைக் குற்றவாளிகளின் கருவிதான், கசாப். 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டு, பயிற்சி, நிதி, ஆயுதங்கள் கொடுத்து ஏவிவிட்ட அக்குற்றவாளிகளைக் கொண்டுவந்து அல்லது அங்கேயே தாக்குதல்கள் நடத்திக் கொல்லப்பட்டால்தான் மும்பையில் பலியானவர்களுக்கு முழுமையான நீதி வழங்கியதாகும். கசாப்பை உடனடியாகத் தூக்கிலிடாமலும், பிற குற்றவாளிகள் மீது தாக்குதல் தொடுக்காமல் தாமதிப்பதும், கசாப்பை சிறையில் வைத்துப் பராமரிப்பதற்கு பல கோடி செலவு செய்ததும் தவறுதான் என்றும் பலர் கொந்தளிக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதாகக் கூறி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள அப்சல் குருவை இனியும் தாமதமின்றித் தூக்கிலிட வேண்டும் என்று கோருகின்றனர்.

இவ்வாறு கசாப்பின் தூக்கை வரவேற்றுக் கொண்டாடுபவர்கள், பாகிஸ்தான் மீதான பதிலடிக்கும் தாக்குதலுக்கும் ஏங்குபவர்கள்தான் தேச பக்தர்கள்; இதற்கு மாற்றுக் கருத்துடையவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்ற கருத்து அரசாலும், ஆளும் கட்சிகள் – எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்படுகிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் பரப்புபவர்களும் பாசிச முறையில் மிரட்டப்படுகின்றனர். அதையும் மீறுபவர்கள் அச்சத்துடன் கூடிய மழுப்பலைக் கவசமாக அணிந்து கொள்கிறார்கள். மரண தண்டனையையே எதிர்ப்பது என்ற மனிதாபிமான வாதத்துக்குள் புகுந்து கொள்கிறார்கள். குடியரசுத் தலைவர் தக்க காரணம் கூறாமல் அவசரகதியில் கசாப்பின் கருணை மனுவை நிராகரித்து விட்டார்; அதன் பிறகும் மேல்முறையீடு செய்வதற்கான கசாப்பின் சட்ட உரிமை மறுக்கப்பட்டு விட்டது; முற்றிலும் இரகசியமாக வைத்துத் தூக்கிலிடப்பட்டது தவறு; 26/11 தாக்குதலுக்கான ஒரே சாட்சியமாக இருந்தவரை, அதுவும் பாகிஸ்தானில் நடக்கும் வழக்கு விசாரணை முடியும் முன்பு தூக்கிலிட்டு அழித்தது தவறு; வரும் குஜராத் தேர்தலில் ஆதாயம் தேடிக் கொள்வதற்காகவும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு முதலிய தேசத்துரோகச் செயல்கள் மீதான எதிர்ப்பிலிருந்து திசைதிருப்பவும் ஆளும் கூட்டணி உள்நோக்கத்தோடு அவசர அவசரமாகச் செயல்பட்டு விட்டது” – இப்படிப்பட்ட மழுப்பலான மாற்றுக் கருத்துக்கள்தாம் சொல்லப்படுகின்றன.

ஆனால், கசாப்பின் தூக்கை வரவேற்றுக் கொண்டாடுவது மற்றும் அதற்குப் பதிலாக மழுப்பலான மாற்றுக் கருத்துக்களைக் கொள்வது- இரண்டில் இருந்தும் முற்றிலும் மாறாக, நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய வேறு சில உண்மைகள் உள்ளன.

கசாப் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் மும்பை சிவசேனாவின் நிறுவனரும் தளபதியுமான பாலாசாகேப் கேசவ் தாக்கரே அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரசு – அரசாங்கத் தலைவர்கள், அனைத்துப் பிரிவு ஊடகப் பிரபலங்களின் புகழஞ்சலியோடும் அனைத்து அரசு மரியாதைகளுடனும் இறுதிச் சடங்கு நடத்தி, எரியூட்டப்பட்டார். கசாப் தூக்கிலிடப்பட்டது, பால் தாக்கரே இயற்கை மரணமடைந்து அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தி எரியூட்டப்பட்டது – இவை இரண்டும் தொடர்பே இல்லாத, வேறுவேறு நிகழ்வுகளாக, ஒப்பீடு செய்யாது தனித்தனியே கருதத்தக்கவை அல்ல. கசாப், 26/11 மும்பைத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் – இசுலாமியப் பயங்கரவாதக் கும்பலில் ஒருவன்; ஆனால், பால் தாக்கரே மும்பையில் நடந்த பல படுகொலைகளுக்குக் காரணமான இந்திய ‘இந்து’ மத, சாதி, இனவெறி பயங்கரவாதக் கும்பலின் தலைவர்; ஒரு கிரிமினல் குற்றக்கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்.

மும்பையில் காலூன்றுவதற்காக, நூற்றுக்கணக்கான தென்னிந்தியர்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களைச் சூறையாடியது சிவசேனா பாசிசப் படை; தொழிற்சங்கங்களைக் கைப்பற்றுவதற்காக வலது கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினரையும் பல தொழிற்சங்க முன்னணியாளர்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றது; மும்பை சினிமா மற்றும் நிழல் உலகைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, தாவூத் இப்ராகிம் கும்பலுக்குப் போட்டியாக அருண் காவ்லி தலைமையிலான கிரிமினல் குற்றக்கும்பலை வளர்த்து, உருட்டல் மிரட்டல், மாமூல் வசூல் முதல் தாக்குதல்கள், படுகொலைகளைச் செய்தது; மண்டல் இடஒதுக்கீடு எதிர்ப்பு மற்றும் மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரிடுவதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை நடுத்தெருவில் வெட்டிச் சாய்த்தது; அயோத்தி-பாபரி மசூதியை இடிப்பதற்கு ஒரு பயங்கரவாத கும்பலை ஏவியதோடு, 1992-இல் இரண்டு மாதங்கள் மும்பையைத் தனது சர்வாதிகார-பாசிச படையால் கைப்பற்றிக் கொண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்களை வெட்டியும் உயிரோடு எரித்தும் கொன்றது. இதற்கெல்லாம் மூளையாக விளங்கியவர் பால்தாக்கரே.

இவையெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அல்ல; இக்குற்றங்களுக்காக 16 கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரசுத் தலைமை கூட்டாளிகளின் சதியால் பின்னர் முடக்கப்பட்டன. இவற்றுக்கான ஆதாரங்கள் பால் தாக்கரே மரணமடைந்த அன்றைய நாளில் எல்லா நாளேடுகளிலும் காணக்கிடக்கின்றன. 26/11 மும்பை பயங்கரவாதப் படுகொலைகளில் பங்கேற்றதற்காக கசாப் தூக்கிலிடப்பட்டான், முப்பதாண்டுகளாக பல படுகொலைகளை நடத்தி அதே மும்பையை ஆட்டிப் படைத்த பால்தாக்கரே இயற்கையாக மரணமடைய விடப்பட்டதோடு அரசு மரியாதை இறுதிச் சடங்கு பெற்றார்.

கசாப் பகை நாடாகிய பாகிஸ்தான் பயங்கரவாதி, பால் தாக்கரே நமது சொந்த நாடாகிய இந்தியப் பயங்கரவாதி என்பதால் மட்டும் இந்த வேறுபாடு இல்லை! அவர் ஒரு இசுலாமியப் பயங்கரவாதி. இவர் ஒரு “இந்து” பயங்கரவாதி என்பதாலும் இந்த வேறுபட்ட அணுகுமுறை. ஆயிரக்கணக்கான இசுலாமியரைக் கொன்ற “இந்து” பயங்கரவாதி மோடிக்கு என்ன தண்டனை தரப்பட்டது? ஐதராபாத் மசூதி, அஜ்மீர் தர்க்கா, சம்ஜவ்தா விரைவு வண்டி, மலேகான் மசூதி குண் டுவெடிப்புகளை நடத்திய இந்து பயங்கரவாதிகள் பல ஆண்டுகளாகத் தண்டனை ஏதுமின்றி, அரசு விருந்தினர்களாகத் தானே உள்ளனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இசுலாமியர்கள்தாம் காரணமென்று கூறிப் பல இசுலாமிய இளைஞர்களைப் பிடித்து, சித்திரவதை செய்து, சிறையில் அடைத்துத் தண்டித்து வருகிறது, இந்திய அரசு.

1996-ஆம் ஆண்டு டெல்லி லஜ்பத் நகர் சந்தை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருந்த இசுலாமிய இளைஞர்கள் இருவரை நிரபராதிகள் என 14 ஆண்டுகளுக்குப் பிறகு, கசாப் தூக்கிலிட்ட இரண்டாவது நாள் உயர் நீதிமன்றம் விடுவித்தது. அதற்குள் இதே வழக்கில் அவர்களில் ஒருவரின் சகோதரர் செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை முடிந்து விடுதலையாகி விட்டார். மரண தண்டனையிலிருந்து தப்பியவரை, இராஜஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்க வைத்து இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய மாதம்தான் பதினோரு இசுலாமிய “தடா” கைதிகளை உச்ச நீதிமன்றம் நிரபராதிகள் என விடுவித்தது. இதுதான் இந்தியச் சட்டம், நீதி! கசாப் தூக்கிலிடப்பட்டவுடன், “ஆதாரம் இல்லை என்றாலும், தேசத்தின் உணர்வை மதித்துத் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதாக” உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டுமென பார்ப்பன மதவெறி பாசிச பயங்கரவாதக் கும்பல் கூச்சலிடுகிறது.

இத்தகைய தேசிய உணர்வு, தேசபக்தி உண்மையானதா? நேர்மையானதா? அவசியமானதா? அறிவியல்பூர்வமானதா? இதுதான் மதவெறி பயங்கரவாத எதிர்ப்பா? ஒழிப்பா? இல்லை. இத்தகைய போக்கினால் இங்கே இந்து மதவெறியையும் அங்கே இசுலாமிய மதவெறியையும் தூபமிட்டு ஆதாயம் அடைகின்றன, இருநாட்டு ஆளும் கும்பல்கள். இதனால் ஒன்றுக்கொன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, பகைமையையும் வெறுப்பையும் அடுத்த கட்டத்திற்கு முன்தள்ளி, சுருள் வளர்ச்சி முறையில் மேலும் உயர்த்துவதாகவே முடியும்.

____________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_________________________________________

வாழ்க்கை : மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள் !

9

ந்தியாவின் எந்த தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்தாலும் நம்மோடு பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் முந்திச் செல்வதற்காக அவ்வப்போது காற்றைக் கிழித்துக் கொண்டு சர் சர் என்று பாயும் பல கார்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

சென்னையில் மட்டும் ஃபோர்டு, ஹூண்டாய், பி.எம்.டபிள்யு, லான்சர், ஸ்கோடா, ரெனால்ட் நிசான், மகிந்த்ரா எனப் பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில், பணி புரியும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்து முன்னூற்று ஐம்பது கார்களை உற்பத்தி செய்கிறார்கள். மாருதியின் மானேசர் ஆலையிலோ அதைவிட அதிகமான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகள் உள்ளன.

பன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.  அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது.

சென்னை ஹூண்டாய் தொழிற்சாலையைச் சுற்றி தமிழக லாரிகளோடு இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, அரியாணா, உ.பி, ம.பி, குஜராத், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், நாகாலாந்து என்று நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான லாரிகள் கார்களை ஏற்றிச் செல்வதற்காக நின்று கொண்டிருக்கின்றன. பல லாரிகள் பதினைந்து நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இங்கிருந்து டெல்லிக்கு ஹூண்டாய் கார்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு  அங்கிருந்து மாருதி லோடு கிடைக்கும். அதை ஏற்றிக்கொண்டு மாருதி கார்கள் எங்கே சொல்கிறதோ அங்கே போக வேண்டும். ஹூண்டாயிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு அனுப்பினால் ம.பி.யில் இறக்கிவிட்டு, அடுத்த லோடுக்காக காலி லாரியை ஓட்டிக்கொண்டு மானேசருக்கு தான் செல்ல வேண்டும். அதே போல மாருதி ஏற்றிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வரும் லாரிகள் கேரளாவிற்கு சென்றால் அங்கிருந்து லோடுக்காக சென்னைக்கு தான் வர வேண்டும்.

கார்களை ஏற்றிச் செல்லும் இந்த கண்டெய்னர் லாரிகளை நிறுத்துவதற்காகவே ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி பல ஏக்கர்கள் பரப்பில் காலி மைதானங்கள் இருக்கின்றன. முதலில் அத்தகைய மைதானம் ஒன்றிற்குள் நுழைந்தோம். சுற்றிலும் நூற்றுக்கணக்கில் லாரிகள். அந்த மைதானத்தின் மொத்தப் பரப்பளவு பதினாறு ஏக்கர்கள். இரண்டு லாரிகளுக்கிடையிலான இடைவெளியில் சில ஓட்டுநர்களும் கிளீனர்களும் அமர்ந்து ஓய்வெடுப்பதைக் கண்டு அருகில் சென்றோம்.

தனது லாரி மீது சாய்ந்து கொண்டிருந்த தர்மேந்திர சிங் பீகார் மாநிலத்தின் சப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளாக லாரி ஓட்டுகிறார். வண்டியின் முதலாளி பீகாரில் இருக்கிறார். “பீகாரிலிருந்து கிளம்பும் போது சரக்கு எதுவும் கிடைக்காது. ஏன்னா அங்க தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அதனால ஒன்னு ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர், இல்லைன்னா மேற்கு வங்கத்துக்கு போய் டாடா வண்டிகளை ஏத்திக்கிட்டு அங்கிருந்து எங்க போகச் சொல்றாங்களோ அங்கே போவோம்.”

“தில்லி கிடைச்சா அங்கே இறக்கிட்டு, மானேசரிலிருந்து மாருதி ஏத்திக்குவோம். தென்னிந்தியாவுக்கு கிடைச்சா எங்க இறக்கணுமோ அங்க இறக்கிட்டு சென்னைக்கு வந்துருவோம். இங்கிருந்து லோடை ஏத்திக்கிட்டு அடுத்த ஊருக்குப் போவோம். அங்கிருந்து அடுத்த லோடு, அடுத்த ஊர். இப்படியே ஆறு மாசம், ஒரு வருசம்னு போய்கிட்டே இருப்போம். தினம் தினம் எல்லாம் வீட்டுக்குப் போக முடியாது. வாழ்க்கையே ரோட்ல தான். வண்டில பார்த்தீங்கன்னா இங்கிருந்து கிளம்பும் போது ஹூண்டாய் போர்டு தொங்கும்; மானேசரிலிருந்து திரும்பும் போது மாருதி போர்டு.”

“வருசத்துக்கு ரெண்டு தடவை தான் அம்மா, அப்பாவையும், மனைவி குழந்தைகளையும் பார்க்க முடியும். ஏன்னா ஆறு மாசத்துக்கு ஒரு முறை, வருசத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கே போக முடியும். அதனால ஒரு ஃபோனை வாங்கிக் கொடுத்திட்டேன். இப்ப தினமும் வீட்டுக்குப் பேசுறேன். விடுமுறை நாட்கள்னு எதுவும் இல்லை. எப்ப ஊருக்கு போறோமோ அப்ப தான் விடுமுறை. வேலைக்கு வந்துட்டா லீவே கிடையாது. எல்லா நாளும் வேலை நாள் தான். ஞாயிற்றுக் கிழமைகளிலும் தீபாவளி மாதிரி பண்டிகை நாட்களிலும் கூட நாங்க வேலை செஞ்சுக்கிட்டே தான் இருக்கோம்.”

“பயணமும் சாதாரணமானது அல்ல. உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு தான் போறோம். இப்போதெல்லாம் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமா நடக்குது. டிரைவரைக் கொன்னுட்டு இருக்கிறதை எடுத்துட்டு ஓடிடுறாங்க. இப்படி குடும்பத்தை விட்டுட்டு, உயிரைப் பணயம் வச்சு, இரவு பகலா கண் முழிச்சு சரக்குகளைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் சேர்க்க முதலாளி எவ்வளவு சம்பளம் தருகிறார் தெரியுமா ? கிலோ மீட்டருக்கு பதினாறு ரூபாய். அதில் தான் டீசல் செலவு,  கிளீனர் சம்பளம், உணவுச் செலவு,  கட்டணச் சாலைகளுக்கான கட்டணம்,  வண்டி பராமரிப்பு அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

லாரி ஓட்டுநர்கள்
லாரி ஓட்டுநர்கள்

“சென்னையிலிருந்து-கொல்கத்தா போனால் எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி இரண்டு பயணங்கள் போய் வந்தால் பதினாறாயிரம் சம்பாதிக்கலாம். ஆனால் மாதத்தில் இரண்டு பயணங்கள் கிடைப்பது கடினம். இங்கே பார்த்தீங்கன்னா பல லாரிகள் பத்து நாட்களுக்கு மேல நின்னுக்கிட்ருக்கு. இப்படிக் காத்திருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் உணவுக்காக நூற்று ஐம்பது ரூபாய் தனியாக கிடைக்கும்.”

தர்மேந்திர சிங் அடிப்படையில் ஒரு விவசாயி. குடும்பமே விவசாயக் குடும்பம். நிலம் குறைவாக இருப்பதாலும், விவசாயத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நட்டத்தாலும் வேறு வழியின்றி இந்த வேலைக்கு வந்திருக்கிறார். எனினும் தனது குழந்தைகள் எந்த நிலையிலும் இந்தத் தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்று கருதுகிறார். “ஏன் நீங்கள் செய்கின்ற வேலை அவ்வளவு மோசமனதா?” என்றால் “இல்லை! எந்த ஊருக்குப் போனாலும் யார் வேண்டுமானாலும் திட்டவும், அடிக்கவும் முடிகின்ற பிரிவினர் நாங்கள் தான்.  எங்களுடைய உழைப்புக்கு யாரும் எந்த மரியாதையும் தருவதில்லை” என்றார் வருத்தத்துடன்.

லாரி டிரைவர்களை இளக்காரமாக பார்க்கும் சமூகம் அவர்கள் இல்லையென்றால் வாழ முடியாது என்பதை ஒத்துக்கொள்ளாது. அவரிடம் “அப்படின்னா உங்களுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை?” எனக் கேட்டதற்கு, “ஆமாம். இதைவிடக் குறைவான சம்பளத்திற்கு ஊரில் வேறு எந்த வேலை கிடைத்தாலும் போய்டுவேன்.” என்றார்.

“சரி! நிதீஷ்குமார் வந்த பிறகு தான் உங்க ஊர் ஓரளவு முன்னேறி இருக்குன்னு சொல்றாங்களே! உண்மையா?” என்றதும் “மற்றவங்க நூறு ரூபாய் கொள்ளையடித்தால் இவர் ஐம்பது ரூபாய் கொள்ளையடிக்கிறார். அதைத்தான் பத்திரிகைககள் முன்னேற்றம்னு எழுதுறாங்க போலிருக்கு!” என்றார் கிண்டலாக.

“டிரைவர், கிளீனர்ன்னு இங்க நூற்றுக்கணக்கில் இருக்கீங்களே! இதில் பலரும் பல சாதிகளை சேர்ந்தவர்களா இருப்பாங்க. யாரும் சாதி வேறுபாட்டோடு நடந்துக்குவாங்களா?” எனக் கேட்டோம். “இல்லை! இங்க யாரும் அப்படி நடந்துக்கிறது இல்லை. நாங்க எல்லோரும் ஒன்னா தான் இருக்கோம். ஒரு வண்டில சமைக்கிறதை இன்னொரு வண்டிக்காரங்களுக்கு கொடுத்து அவங்க சமைத்ததை வாங்கிக்குவோம். ஒன்னா தான் சாப்பிடுறோம்; ஒன்னா தான் பயணிக்கிறோம்.  யாரும் சாதி பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் கிராமத்துக்கு போனா அது இருக்கும்” என்றார். சாதி ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் பீகாரிலிந்து வந்தவர் கூறிய வார்த்தைகள் இவை. வர்க்கம் சாதியின் ஏற்றத்தாழ்வை தொழில் ரீதியாகவே மட்டுப்படுத்தும் இன்பதற்கு இவர்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

அடுத்ததாகத் தில்லியைச் சேர்ந்த சஞ்சய் குமார் சர்மா,  உத்தராஞ்சலை சேர்ந்த மேத்தா இருவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

“லோடு ஏற்றிக்கொண்டு கிளம்பினால் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் ஓட்டுவீங்க?” எனக் கேட்டோம். “ரெண்டு டிரைவர் இருக்கோம். ஒரு கிளீனர் பையன் இருக்கான். டிரைவருங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓட்டுவோம்.  ஒரு நாளைக்கு நானூறிலிருந்து அறுநூறு கி.மீ. வரை ஓட்டுவோம்.  ஒவ்வொரு உணவு வேளையிலும் ஒவ்வொரு மாநிலத்தில் இருப்போம். சாப்பாட்டு நேரம் நெருங்கும் போது எங்க இருக்கோமோ அங்கேயே நிறுத்தி சமைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் கிளம்புவோம். கொள்ளைக்காரர்கள் பயத்தால் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஓட்றது இல்லை. ஓரமா நிறுத்திட்டு தூங்கிருவோம். துணிஞ்சு போறவங்களும் தனியா போறது இல்ல, பத்து, இருபது வண்டிகள் ஒன்னா சேர்ந்து கொண்டு வரிசையா போவாங்க.”

“சம்பளம்னு பார்த்தா, முதலாளி கிலோ மீட்டருக்கு இருபத்தி நாலு ரூபாய் கொடுத்திருவாரு. டீசல், கிரீஸ் முதல் கிளீனர் சம்பளம், சாப்பாடு வரை எல்லாத்தையும் இதிலிருந்து தான் கொடுக்கணும். லோடுக்காக நிக்கிற நாட்களில் மட்டும் சாப்பாட்டுக்கு தனியா நூறு ரூபாய் கிடைக்கும். எல்லாச் செலவுகளும் போக ஒரு டிரைவருக்கு மாசம் பத்தாயிரம் கிடைக்கும். இருக்கிற விலைவாசி உயர்வில் இதை வச்சிக்கிட்டு எப்படி சார் தாக்குப்பிடிக்க முடியும்?”

“விவசாயம் செய்து வாழ முடியாததால் தான் இந்த வேலைக்கு வந்திருக்கோம். ஊரில் வெறும் ஐயாயிரம் ரூபாய் கிடைத்தால் கூட சந்தோஷமா போயிருவோம்; ஆனால் கிடைக்காது.  இப்போ டீசல் விலை ஏறியிருக்கு. வண்டி முதலாளிகளுக்கு லோடிங் கட்டணத்தை ஹூண்டாய் கூட்டிக் கொடுக்கும். ஆனால் முதலாளி எங்களுக்கு அதிகரித்துத் தர மாட்டார். கேட்டால் இஷ்டம் இருந்தா ஓட்டு, இல்லைனா ஓட்றதுக்கு வேற ஆள் இருக்கான்னு பதில் வரும். பணம் இருப்பவன் தான் மேலும் அதிகமா சம்பாதிக்கிறான்.” என்றார்.  டீசல் விலை உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர் சங்கம் போராடுவதைப் போல ஓட்டுநர்களின் ஊதிய உயர்வுக்கு இவர்கள் சங்கமாக அணிதிரண்டு போராட முடியாதபடி அவர்களின் வேலையே அலைக்கழித்து விடுகிறது.

“சரி, சரக்குகளைக் கொண்டு சேர்ப்பதற்குள் என்னென்ன பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொள்கிறீர்கள் ?” எனக் கேட்டோம். ”ஏத்தினதிலிருந்து இறக்குற வரைக்கும் ஒரே பிரச்சினை தான்.  போலீசு பிரச்சினை, செக்போஸ்ட்ல பிரச்சினை, கொள்ளைக்காரங்க பிரச்சினை, பெரிய வண்டிங்கிறதால சின்ன வண்டிக்காரங்களோட பிரச்சினைன்னு சின்ன பிரச்சியிலிருந்து பெரிய பிரச்சினைகள் வரை எல்லாத்தையும் சமாளிச்சு தான் சரக்கை எடுத்துட்டுப் போறோம். முக்கியமான பிரச்சினை போலீசும், கொள்ளைக்காரங்களும் தான்.  இப்பல்லாம் இரவுல மட்டுமில்ல, பகல்ல கூட ஓட்ட பயமாக இருக்கு. இதுவரை இல்லாத அளவுக்கு கொள்ளையர்கள் பிரச்சினை இப்போ அதிகமாகிருக்கு. கொள்ளையர்களால் இதுவரை பல டிரைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  உயிருக்கு அஞ்சி அஞ்சி தான் ஓட்டுறோம்.”  என்றார்.

மறுகாலனியாக்கத்தின் பொருளாதார சீர்கேடுகளால் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கொள்ளையடிப்பது அதிகரித்திருப்பதை ஓட்டுநர்கள் பலர் தெரிவித்திருப்பதில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. நாடாளும் தலைவர்களுக்கு கருப்பு பூனை, கமாண்டோ என்று பாதுகாப்பு செலவிற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு இந்த ஓட்டுநர்களுக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் கொள்ளையர்கள் மட்டுமா பிரச்சினை?

“ஊரைத் தாண்டினால் கொள்ளையர்கள் பிரச்சினைன்னா, ஊருக்குள்ள போலீசும் குண்டர்களும் தான் பிரச்சினை. இருக்கிறதுலேயே மகாராஷ்டிரா தான் ரொம்ப மோசம்.  டோல் கேட்டில் குண்டர்களோடு சேர்ந்து கொண்டு நூறு ரூபாய்க்கு பதிலா முன்னூறு ரூபாய் கேட்பாங்க. குடுக்கணும்; இல்லைனா அடி தான்.  குண்டா டேக்ஸ்ன்னு போலீஸ்காரனைக் கூட்டிட்டு வந்தே வாங்குவார்கள். மகாராஷ்டிராவில் போலீஸ்காரர்கள் தான் பெரிய கொள்ளையர்கள்.  வண்டியில் ஏறி அடிக்கிறது, சட்டைப் பையில் கையை விட்டுப் பறிப்பது எல்லாம் அங்கே தான் நடக்கும். தென்னிந்தியா ஓரளவு பரவாயில்லை. பெரியளவு பிரச்சினைகள் இல்லை.”

“அடுத்து ரோட்லயும் திட்டு வாங்க வேண்டியிருக்கு. பெரிய வண்டிங்கிறதால ரொம்ப பிரச்சினை. போறவன் வர்றவன் எல்லாம் திட்டிட்டு போவான். சிலர் மோசமான கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவாங்க. சிலர் திட்டுறதோட நிக்காம வேகமா லாரியை ஓவர்டேக் பண்ணி ஹீரோ மாதிரி பைக்கை குறுக்க மறிச்சு நிறுத்திட்டு மேலே ஏறி வந்து அடிப்பாங்க. பைக் காரங்க மட்டுமில்ல கார்ல வர்றவங்க கூட மோசமா நடந்துக்குவாங்க. அவங்க காரையே நாங்க தான் அந்த ஊருக்கு கொண்டு வந்து இறக்கியிருப்போம். ஆனா அதே காரில் உட்கார்ந்து கொண்டு எங்களுடைய வண்டிகளை மறித்து அடிக்க வருவார்கள்.”

“நீங்க இவ்வளவு கஷ்ட்டப்படுறீங்க. ஆனா லாரி டிரைவர்களை பற்றி மக்களிடம் நல்லவிதமான கருத்து இல்லையே ஏன் ?” எனக் கேட்டதற்கு ”இந்த வேலைக்கு வர்றவங்க எல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க இல்ல சார். படிப்பறிவு குறைவானவங்க தான் வர்றாங்க. அதுல சில பேர் ரோட்ல போற வர்ற பெண்களை கிண்டல் பன்னிருப்பாங்க. அதை வச்சும், அதோட லாரி டிரைவர் வாழ்க்கை முறை காரணமா தான் அவங்க பேசுறதும் நடந்துக்கிறதும் மோசமாக இருக்கிறதா நினைக்கிறாங்க. அந்த மாதிரி ஒரு சிலரை வைத்து எல்லோரையும் தப்பா நினைக்கிறாங்க.” என்றார்.

“இந்தியா முழுவதும் கார்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற உங்களுக்கு இந்த மாதிரி ஒரு கார் வாங்கணும்னு ஆசை இல்லையா ?” ”இல்லை. கார்களை ஏத்தி இறக்குறதே நிறைவை தந்துடுது. வாங்குற ஆசை எல்லாம் இல்லை. வாங்கினாலும் நம்மால பராமரிக்க முடியாது. அது யானைக்குத் தீனி போடுற வேலை.”

“உங்களுடைய பயணத்தில் மாவோயிஸ்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா ? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் ?” என்று கேட்டதற்கு “அவர்கள் நல்லவர்கள். ஏழைகளுக்காக, வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்காகப் போராடுகிறார்கள். அவர்களால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. சில நேரங்களில் திடீரென்று சாலையின் குறுக்கே வந்து நிற்பார்கள். நாங்கள் பயந்து போய் விடுவோம். ஆனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். டீசல் கேட்பார்கள். அதற்கும் கூட காசு கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தான் பிரச்சனை. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு!” என்றனர். கொள்ளையர்கள், போலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரையும் விமரிசனம் செய்யும் ஓட்டுநர்கள் மாவோயிஸ்டுகளை மட்டும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஓட்டுநர்களை அங்கீகரித்து மனிதத் தன்மையோடு நடத்துவது அவர்கள் மட்டும்தான் போலும்.

“மானேசரில் மாருதி தொழிலாளர்கள் போராடினாங்களே. அதை ஆதரிக்கிறீங்களா ?” “அவங்க போராட்டத்தால எங்களுக்கு வேலை இல்லாமப் போய்டுச்சு சார். மாசக்கணக்கில் லோடு இல்லைன்னா நாங்க என்ன பண்றது ? வீட்டுக்கு எப்படி பணம் அனுப்புறது ?  அவங்களுக்கு எங்களை விட நல்ல சம்பளம் தான்; வசதிகள் எல்லாம் இருக்கு. இப்ப அந்தக் கிராம மக்களும், தலைவர்களும் கம்பெனிக்கு அவங்க ஊர் இளைஞர்களை அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காங்க.” என்றனர். தொழிலாளிகளே அரசியல் உணர்வும், வர்க்க உணர்வும் குன்றியிருக்கும் போது இந்த அலைந்து திரியும் தொழிலாளிகள் தமது பாதிப்பிலிருந்து மாருதி போராட்டத்தை பார்ப்பதை புரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த பஞ்சாப் லாரியை நெருங்கினோம்.  அது மாலை நேரம். எனினும் அப்போதே இரவு உணவுக்கான தயாரிப்புகள் அங்கு நடந்து கொண்டிருந்தது. அருகில் நெருங்கியதுமே ஓட்டுனர் சுக்ஜித் சிங் ”நமஸ்தே ஜி! ஆயி ஆயி!” என்று வரவேற்று தார்ப்பாயில் அமர வைத்தார்.

“எப்போது சென்னைக்கு வந்தீங்க ?” “பத்து நாட்களாகி விட்டது. இன்னும் லோடு கிடைக்கவில்லை.” என்றார். “பஞ்சாபில் எந்த ஊர் ?” “அமிர்தசரசுக்கு பக்கத்துல ஒரு கிராமம். இருபத்து நாலு வருசமா இந்தியா முழுக்க சுத்தி சுத்தி வர்றேன்.  சம்பளம் கி.மீ.க்கு ஒரு ரூபா. அதோட தினசரி நூற்று ஐம்பது ரூபாய்; லோடு இல்லாம நிற்கும் போது உணவுக்கு தனியா நூறு ரூபாய் என்று கிடைக்கும்.  மொத்தமா பார்த்தா மாசத்துக்கு ஒன்பது இல்லைனா பத்தாயிரம் ரூபாய் தான் கிடைக்குது. சம்பளம் சின்னது; ஆனால் ஓனர் பெரிய ஆள். அவருக்கு மொத்தம் மூவாயிரம் லாரி இருக்கு. ஒரு ஐந்து நட்சத்திர விடுதி, டாடா வாகனங்களுக்கான ஷோரூம், அதோடு அகில இந்திய மோட்டார் வாகன உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.”

1984-ல் இந்திரா காந்தி பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதை பற்றி கேட்டோம்.  “பியந்த் சிங், சத்வந் சிங் ரெண்டு பேரும் அதுக்கு என்ன  தண்டனை கொடுக்கனுமோ அதை இந்திர காந்திக்கு கொடுத்தாங்க. சத்வந்த் சிங் எங்க கிராமத்துக்கு பக்கத்து கிராமம் தான். அவங்க நிலமும் எங்க நிலமும் பக்கத்து பக்கத்ததுல தான் இருக்கு. அவரோடு எனக்கு நெருக்கமான பழக்கமும் இருந்தது.”

“பகத் சிங் பிறந்த பஞ்சாபிலிருந்து மன்மோகன் சிங் மாதிரி ஒரு ஆள் வந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீங்க?” எனக் கேட்டதற்கு “அவர் சிலருடைய அதிகார தேவைகளுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். என்ன சொல்றது? எதுவும் செய்ய முடியாது. இப்போதைய அகாலிதள அரசும் ஊழல்வாத மக்கள் விரோத அரசுதான்.  எல்லாத்தையும் அடியோடு மாத்தியமைக்கணும். அதுக்கு எங்களுக்கு தனி நாடு வேணும்.” என்றார். முன்னேறிய பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் அவரது வாழ்க்கை உயர்ந்து விடவில்லை. எனினும் அந்த முன்னேற்றம் தனிநாடு கோரிக்கையில் அடங்கியிருப்பதாக அப்பாவித்தனமாய் நம்புகிறார். வெற்று உணர்ச்சி அரசியல் இந்த ஓட்டுநர்களையும் விடவில்லை என்று தெரிகிறது.

சுக்ஜித் சிங்கிடமிருந்து விடைபெறும் போது இருட்டி விட்டது. அந்த பார்க்கிங் மைதானத்தில் வெளிச்சமே இல்லை. அவர்கள் தமது ஒளித் தேவைகளுக்கு மெழுகுவர்திகளையும், வண்டியின் ஹெட்லைட்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெளியே வந்து ஆலையின் முன்பாக நின்றோம். சாலையின் இரு பக்கமும் லாரிகள் நின்று கொண்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக கடந்து சென்ற போது ஒரு வண்டியின் கண்டெய்னர் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே ஹூண்டாயின் புதிய மாடலான எலன்ட்ரா வரிசையாக நிற்கவைக்கப் பட்டிருந்தது. அந்த பளபளப்புக்கு அருகிலேயே ஒரு கொடி கட்டப்பட்டு, அதில் ஓட்டுநருடையதா கிளீனருடையதா என்று தெரியவில்லை, ஒரு பனியனும், ஜட்டியும் துவைத்து காயப்போடப் பட்டிருந்தன. அது அந்த புதிய காரில் ஒட்டி ஒட்டி உரசிக் கொண்டிருந்தது.

அதே போல இன்னொரு லாரியில் பதினைந்து லட்சம் மதிப்புடைய இந்த   பளபளப்புக்கு அடியில், அழுக்கு ஸ்டவ்வை வைத்து கிளீனர் ஒருவர் இரவு உணவுக்காக ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். சாலைக்கு வந்து ஹூண்டாய் வாயிலை நோக்கினோம். பல லாரிகள் உற்பத்தியான கார்களை ஏற்றிக்கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தன. அடுத்த ஷிப்டில் கார்களைத் தயாரிக்க தொழிலாளிகள் ஆலைப் பேருந்துகளில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.

கார்களைச் சுமந்தவாறு இந்தியா முழுவதும் சுற்றி வரும் இந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடக்கிறது. குடும்பத்தையும், சொந்த ஊரையும் மாதக்கணக்கில் பிரிந்து இருக்கும் இந்த தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த ஊதியமே கிடைக்கிறது. அந்த வேலையும் நிம்மதியாக செய்யும்படி இல்லை. ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை சந்தித்தபடியே நகர்கிறது. மாருதி, ஹூண்டாய்களை நாடெங்கும் விநியோகிக்கும் இந்த தொழிலாளிகள் இல்லையென்றால் அந்த கார் நிறுவனங்கள் இல்லை. ஆனாலும் இவர்களுக்காக கவலைப்படுபவர்கள் யாருமில்லை!

_________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_________________________________________________

பிணந்தின்னிகள் !

3

மெரிக்க விதைகள் அமோக விளைச்சல் தரும் என நம்பி, பி.டி. பருத்தியைப் பயிரிட்டுக் கடனாளியான விவசாயிகள், கந்துவட்டிக் கொடுமைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலம் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னமும் தொடர்கிறது. சாய்நாத் என்ற பத்திரிக்கையாளர் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி தொடர்ச்சியாக எழுதிய பின்னர்தான், விதர்பா பிராந்திய விவசாயிகளின் துயரம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. ஆனால், தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருந்த விவசாயிகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக்  கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்துள்ளனர், மகாராஷ்டிர ஓட்டுப் பொறுக்கிகள். இழவுவீட்டில் கூட திருடிக் கொண்டிருந்த அந்த இழிபிறவிகள், நீர்ப்பாசனத் திட்டங்களின் பெயரால் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பகற்கொள்ளையை நடத்தி வந்துள்ளனர்.

மகாராஷ்டிர  மாநில நீர்ப்பாசனத்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா அளவிற்கு ஊழல்கள் நடந்துள்ளதை அம்மாநிலத்தின்  தலைமைப் பொறியாளரான விஜ பந்தாரே என்பவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர  முன்னாள் துணை முதல்வரான அஜித்பவார் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது,  நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த செலவிடப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடியில், பாதிக்குப்பாதி கொள்ளையடிக்கப்பட்டு, கொள்ளையில் பெரும்பங்கு அஜித்பவாருக்குப் போயுள்ளது.

முன்பெல்லாம்  நீர்ப்பாசனத்துறையில் வெட்டாத கிணறுக்குக் கணக்குக் காட்டுவதும், ஒப்பந்தக்காரரிடம் சதவீதக் கணக்கில் பணம் வாங்குவதும்தான் ஊழல் என்றிருந்தது. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ள கொள்ளையோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு,  ஊழலின் அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது.

முதலில் அரசின் திட்ட மதிப்பிற்கு உட்பட்டு ஒப்பந்தங்களை வாங்குவது, பின்னர் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி திட்ட மதிப்பை உயர்த்திக் கேட்பது – என இக்கொள்ளை நடந்துள்ளது. மேட்டுப்பாங்கான இடங்களுக்கு நீரை ஏற்றி, அதன் பிறகு வாய்க்கால்கள் மூலம் பாசனவசதி செய்து தரும் திட்டங்களுக்காக  மகாராஷ்டிர அரசு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபா செலவிட்டுள்ளது. ஆனால் அதில் 90% திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை.  கீழ் பெங்கங்கா திட்டத்தில், ஒரு ஒப்பந்தத்தின் மதிப்பு அதன் உண்மை மதிப்பிலிருந்து ரூ.9072 கோடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.60 கோடி திட்டமதிப்பில் தொடங்கப்பட்ட ஜிகான் பாசன வசதித் திட்டம், பின்னர் ரூ.1322  கோடியாக உயர்த்தப்பட்டது. பல திட்டங்கள் அதன் உண்மை மதிப்பிலிருந்து 100 முதல் 1000 மடங்கு வரை உயர்த்தப்பட்டு, நிதி முழுவதுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நர்வாதே அணைக்கட்டை உயர்த்திக் கட்டுவதாகக் கூறி 650 கோடி ரூபா கொள்ளை, வாசிம் மாவட்டத்தில் 11 தடுப்பணைகள் கட்டுவதாகக் கூறி அணைக்கு 50 கோடி ரூபாவரை கொள்ளை -என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

விதர்பா விவசாயிகளின் தற்கொலை உச்சத்தில் இருந்த  2008-ஆம் ஆண்டில், மூன்றே மாதங்களில் அப்பகுதியில் தொடங்கப்பட்ட 32 திட்டங்களின் மதிப்பை மொத்தமாக ரூ,17,700 கோடி அளவிற்கு ஒப்பந்ததாரர்கள் உயர்த்தினர். ஒருபுறம் விவசாயிகளின் தற்கொலை அவலம் தொடர்ந்து கொண்டிருந்தபோது,  இன்னொருபுறம் அவர்களது வாழ்வை மேம்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு இத்திட்டங்களின் மூலம் கொள்ளையடித்துள்ளனர். திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் முழுவதையும் இவர்கள் விழுங்கிவிட்டதால், 32 திட்டங்களில் ஒன்றுகூட இதுவரை முடிக்கப்படவில்லை.

பெரிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை, அதிகாரிகளுக்குப் பதிலாக அஜித்பவாரே நேரடியாகத் தலையிட்டுத் தனக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கியுள்ளார். பெரிய ஒப்பந்தங்கள் அனைத்திலும் நீர்ப்பாசனத்துறை அதிகாரியின் கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில், அஜித் பவாரின் கையொப்பம் இருப்பதே அவரது தலையீட்டிற்குச் சாட்சி. வேலையைத் தொடங்கும் முன்னரே ஒப்பந்தக்காரர்களுக்கு பலநூறு கோடி ரூபாய்கள் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளன. பல சமயங்களில் ஒப்பந்தக்காரர்கள், கட்டுமானப் பணிகளைத் தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தபோதே நூற்றுக்கணக்கான கோடி ரூபாகள் அவர்களுக்கு அடுத்த தவணையாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முன்பணம் வழங்குதல் கூடாதென நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் இருவர் அனுப்பிய சுற்றறிக்கை, அஜித் பவாரால் திரும்பப் பெறப்பட்டது.

ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் இணைந்து நடத்தியுள்ள இந்தக் கொள்ளையின் விளைவாக 1200-க்கும் அதிகமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  பத்து ஆண்டுகளாகியும் பல திட்டங்கள் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர  மாநிலப் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் அம்மாநிலத்தில் பாசன வசதிபெறும் நிலங்களின் பரப்பு வெறும் 0.1% மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்தப் பகற்கொள்ளை அம்பலமாகிய பின்னரும் எந்த ஓட்டுக்கட்சியும் இதனைத் தட்டிக்கேட்கவில்லை.  மாநிலத்திலும், மத்தியிலும் தேசியவாத காங்கிரசுக் கட்சியானது கூட்டணியில் இருப்பதால், காங்கிரசுக் கட்சி இந்தக் கொள்ளைகளைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளும்  ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ளையடித்துள்ளதால், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க.வும் சிவசேனாவும்  இந்த ஊழலை அம்பலப்படுத்த முன்வரவில்லை.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நான்கு ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னர் சாதாரண ஒப்பந்தக்காரர்களாக இருந்த இவர்கள், இன்று பல ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள். அவர்களில் மூன்று பேர் பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரசின்  சட்டமேலவை  உறுப்பினர்களாக உள்ளனர். இன்னொருவரோ பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

பா.ஜ.க. தலைவர் கட்காரியோ, அஜித்பவார் மீது விசாரணை கூடாதென்றும் நடவடிக்கை தேவையில்லை என்றும்  கூறியிருக்கிறார். ஏனெனில், நீர்ப்பாசன ஊழல்களில் கட்காரியும் கை நனைத்திருக்கிறார். விதிமுறைகளுக்கு மாறாக, பத்துக்கும் அதிகமான ஒப்பந்தங்களை கட்காரியின் நிறுவனத்துக்கு அஜித்பவார் ஒதுக்கி, இருவரும் கூட்டுக் களவாணித்தனம் செய்துள்ளனர். அது மட்டுமன்றி, பா.ஜ.க. எம்.பி.யும் கட்காரியின் கூட்டாளியுமான அஜய் சஞ்செட்டியின் நிறுவனத்திற்குத்தான் மிக அதிக அளவில் ஒப்பந்தங்கள் வாரிவழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கட்காரி எவ்வாறு இந்த ஊழலை எதிர்த்துப் பேசுவார்?

அஜித்பவாருக்கும், நீர்ப்பாசனத்துறை ஒப்பந்தக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை, கடந்த 2009-ஆம் ஆண்டு லோக்சத்தா என்ற நாளேடு அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த அஜித்பவார் பதவி விலகினார். ஆனால், அப்பதவியில் அவரின் விசுவாசியான  சுனில் தட்காரே அமர்த்தப்பட்டார். அதன் பின்னர், அஜித்பவாரின் அரசியல் வளர்ச்சி வேகமடைந்தது. ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய அஜித்பவார், துணை முதல்வராக்கப்பட்டார். அவர் மீதான விசாரணைகள் படிப்படியாக முடக்கப்பட்டன.

2010-இல் நீர்ப்பாசனத்துறை முறைகேடுகளை விசாரித்த இரண்டு விசாரணைக் கமிட்டிகளின் அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இன்னமும் வெளியிடப்படாமல் கிணற்றில் போட்ட கல்லைப் போலக் கிடக்கின்றன. இதுவரை அஜித்பவார் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் தன்னார்வக் குழுக்களால் தொடரப்பட்டுள்ள இரண்டு பொதுநல வழக்குகளைத் தவிர, அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆதர்ஷ், காமன்வெல்த், 2-ஜி,  நிலக்கரி என அடுத்தடுத்து ஊழல்களும் கொள்ளையும் அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊழல்களில் பல லட்சம் கோடிகளை விழுங்கிய கொள்ளையர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். அவர்களைப் பாதுகாக்கின்ற அதே அரசியமைப்புதான் மகாராஷ்டிர நீர்பாசனக் கொள்ளையர்களையும் பாதுகாக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த அரசியலமைப்பே ஊழலுக்கும், கொள்ளைக்கும் ஏதுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தின் மூலம் இவர்களைத் தண்டித்துவிடமுடியுமா?

___________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

___________________________________

பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!

3

நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால்  அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசை ஆதரிக்கிறோம்” – தி.மு.க

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால் அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசையும் எதிர்க்கிறோம்; ஆனால் எதிர்த்து ஓட்டுப் போட மாட்டோம்” – பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி.

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோமா இல்லையா என்பதை எமது மகாராஷ்டிர நிலையை ஒட்டியே முடிவு செய்வோம். அது எப்படியிருப்பினும் நாங்கள் அரசை எதிர்க்கவில்லை” தேசியவாத காங்கிரசு.

“நாங்கள் அந்நிய முதலீட்டை எப்போதுமே ஆதரிக்கிறோம்; சில்லறை வர்த்தகத்திலும் முன்பு ஆதரித்தோம் ஆனால் இப்போதைக்கு எதிர்க்கிறோம். (எப்போதுமே எதிர்ப்போமா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது –  மைண்ட் வாய்ஸ்) ” –  இது பாரதிய ஜனதா, அ.தி.மு.க மற்றும் மமதா பானர்ஜி.

சி.பி.ஐ சி.பி.எம் மற்றும் அதையொத்த நண்டு சிண்டுகள், துண்டு துக்காணிகள், பழசு பட்டைகள் மற்றும் ஓட்டை உடைசல்களின் நிலைப்பாடுகள் மேலே உள்ளவற்றில் இருக்கும் வார்த்தைகளை மட்டும் அங்கேயும் இங்கேயுமாக இடம் மாற்றிப் போட்டால் வந்து விடும். இவ்வாறாக ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் “மாப்பிள்ளை இவரு தான்… ஆனா அந்த சட்டையப் பத்தி எனக்குத் தெரியாது” என்கிற பாணியில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றி வழவழாவென்று பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் இதைப் பற்றிய தீர்மானத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

545 பேர் கொண்ட லோக்சபையில் ‘கொள்கை ரீதியில்’ வெளிநடப்பு செய்தவர்களைத் தவிர்த்த 471 பேர் வாக்களித்துள்ளனர். இதில் அரசுக்கு ஆதரவாக 253 பேரும் எதிராக 218 பேரும் வாக்களித்துள்ளனர். இதில் வெளிநடப்பு செய்த 45 எம்.பிகள் அந்நிய முதலீட்டை எதிர்த்து விவாதங்களில் சூடுபறக்கப் பேசியுள்ளனர். ஆதரித்து வாக்களித்தவர்களில், தி.மு.க எம்.பி இளங்கோவனின் பேச்சு இது – “சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 30 கோடி பேரை பாதிக்கும்  என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று தெரிவித்து விட்டு அரசை ஆதரித்துள்ளார்.

வெளிநடப்பு செய்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் பேசியவைகளைக் கேட்டால் மரித்துப் போன  சேகுவேராவே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து அமெரிக்காவையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் விட்டு விளாசுவது போலவே விளாசியுள்ளனர். ஆனால், இவையணைத்துமே பச்சையாக நடத்தப்பட்ட நாடகங்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் தொடர்பான முடிவை எடுப்பது இவர்கள் கையில் இல்லை. அதற்கான அதிகாரமும் இவர்களிடம் இல்லை. 2008-ம் ஆண்டு துவங்கிய சர்வதேச பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி தேசங்கடந்த தொழிற்கழகங்களை புதிய சந்தைகளை வெறி கொண்ட முறையில் தேட வைத்துள்ளது. சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விட உலகளவிலான சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். உலகளவில் சுழற்சியில் உள்ள மூலதனத்தில் மூன்றில் இரண்டு பங்கு சூதாட்ட பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ளது.

இந்த பிரம்மாண்டமான மூலதனம் சுழலாமல் தேங்கி நிற்பது என்பது முதலாளித்துவமே மொத்தமாக செத்துப் போவதற்கு ஒப்பானது. ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளோ இதற்கு மேலும் சுரண்ட முடியாது எனும் அளவிற்கு ஏற்கனவே ஒட்டச் சுரண்டப்பட்டு விட்டது. அந்நாடுகளின் தொழிற்சாலை உற்பத்தி அலகுகள் குறைந்த கூலியைத் தேடி மூன்றாம் உலக நாடுகளுக்குக் கடத்தப்பட்டு விட்டன. வேலையும் வாழ்க்கையும் சமூக பாதுபாப்பையும் இழந்த மக்களோ தெருவிலிறங்கிப் போராடி வருகிறார்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைத்து இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.

இதைத் தாமதிக்கும் நாடுகளை பல்வேறு வகைகளில் மிரட்டியும் வருகிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதங்கள் சுமார் ஓராண்டுகளுக்கு முன்பாகவே துவங்கி விட்டது. இதை எந்த விவாதமும் இன்றி திடீரென்று திணிப்பது மக்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதாலேயே இதற்கு ‘எதிர்ப்பான’ குரல்களை சில காலத்துக்கு ஒலிக்க விட்டிருந்தனர். நடந்த நாடகத்தில் இந்த ‘அடுத்துக் கெடுக்கும்’ பாத்திரத்தை திறம்பட ஏற்று நடித்த கட்சி தான் பாரதிய ஜனதா. உலகின் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு வழக்கமாக பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறைகளைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பேனிகளுக்கும் விற்க தனியாக ஒரு அமைச்சரவையே ஏற்படுத்தப்பட்டது என்பதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

எனினும், அமெரிக்கா எந்தவகையான சந்தேகத்துக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. நாடகத்தின் பாத்திரங்கள் எழுதித் தரப்பட்ட திரைக்கதை வசனத்தைத் தாண்டி சொந்த வசனங்களைப் பேசினால் என்னவாகும் என்பதைக் குறிப்பாலுணர்த்தத் தவறவில்லை. அந்த வகையில் தான், அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 10ம் தேதியன்று பொருளாதாரத்துக்கான தரநிர்ணய நிறுவனமான எஸ் & பி, இந்தியாவுக்கான பொருளாதார மதிப்பீட்டை BBBயில் இருந்து BBB-(எதிர்மறை)யாக குறைத்தது. இதற்கான காரணங்களாக, இந்தியா இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது அந்நிறுவனம்.

இதற்கும் முன்பாகவே கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சுணங்கிய நிலை குறித்து டைம் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிடுகிறது. அதன் முகப்பு அட்டையிலேயே மன்மோகனின் படத்தைப் போட்டு “உதவாக்கரை”என்று தலைப்பிட்டிருந்தது. அதே மாதத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவின் இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார்.  இருநாடுகளின் நலனை உத்தேசித்து இந்தியா சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் இந்தியா ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நேரடியாகவே மிரட்டியிருந்தார்.

உடனடியாக ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, “கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுப்பது இந்தியாவின் இறையாண்மை சம்பந்தப்பட்டதாகும்” என்று தெரிவித்திருந்தார். அந்த ‘டக்கு’ தான் இந்த ‘டக்கு’. காங்கிரசு மட்டுமல்ல, பாரதிய ஜனதாவிலிருந்து சகல கட்சிகளும் அன்று ஒபாமாவின் கருத்துக்கு ‘எதிராக’ சவடால் அடித்திருந்தனர். ஆனால், அவையணைத்துமே வெறும் வெற்றுக் கூச்சல்கள் என்பதைக் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த கூத்துகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பாரதிய ஜனதா, காங்கிரசு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே கொள்கையளவில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களையும் காட் ஒப்பந்தத்தையும் அதன் ஷரத்துகளையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ள கட்சிகள் தாம்.  அமெரிக்க -இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் – கூடங்குளத்தை மாத்திரம் எதிர்க்கிறோம் என்று சொல்வது எப்படி முரண்பாடானதோ அதே போலத் தான் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டே அதை எதிர்ப்பதாகப் பேசுவதும். இவர்கள் கொள்கையளவில் அந்நிய முதலீட்டை ஏற்றுக் கொண்டனர். எனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்பது ஒரு சடங்கு தான்.  அது தான் இப்போது நிறைவேறியுள்ளது.

எனினும், இதில் எந்தவிதமான சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் வால்மார்ட் தெளிவாகவே இருந்துள்ளது. வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்காக கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து சுமார் 125 கோடி வரை அமெரிக்க செனேட்டர்கள் மத்தியிலும் அரசுத் துறைகளின் மட்டத்திலும் லாபி செய்ய மட்டும் செலவழித்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்க செனேட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை. வால்மார்ட்டின் வரலாறையும் பிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சந்தை வெறியைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் கூட அவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த எல்லைகளுக்குச் செல்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மறுகாலனியாதிக்கம் நமது நாட்டின் மேல் ஒரு பேரிருள் போல மெல்ல மெல்லக் கவிந்து வருகிறது. நாட்டின் இயற்கை வளங்கள்,  தொழில்கள், மனித வளம் என்று சகலமும் ஏகாதிபத்திய நாடுகளின் லாப வேட்டைக்கு இரையாக்கப் படுவதை நமது கண் முன்னே காண்கிறோம். ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் பின்னே செல்வதால் எந்தப் பலனும் இல்லையென்பதையும் அவர்களே நிரூபித்துக் காட்டி விட்டனர். இதற்கு மேலும் மக்கள் இந்த மண் குதிரைகளை நம்பியிராமல் நேரடியாய்த் தாமே தெருவிலிறங்கினால் மட்டுமே நாட்டைக் காக்க முடியும். தேசத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் சிந்திக்கட்டும்.

________________________

– தமிழரசன்
_____________________