Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 824

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் – 2

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!-பாகம் 1

இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்களில் ஒன்றான ‘இந்தியத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry) ‘2025-இல் தமிழகம்’ -(Tamilnadu Vision 2025) என்றொரு அறிக்கையை 2008-இல் வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (Price Water Coopers) என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.

1973 முதல் அமல்படுத்தப்பட்ட ‘தீவிர சோசலிச’க் கொள்கைகள், 1990-களின் துவக்கத்தில் விதைக்கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் ஆகியவற்றைக் கடந்து, ஒரு புரட்சிகரமான காலக் கட்டத்தின் வாயிலில் தமிழகம் நின்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது, அந்த அறிக்கை. அதிவேக நகரமயமாக்கம், கல்வி, ஒப்பீட்டளவில் செயல்திறன் வாய்ந்த உள்கட்டுமானங்கள் ஆகியவையே தமிழகப் பொருளாதாரத்தின் வலிமைகள் என்று கூறும் அந்த அறிக்கை, தமிழக மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கு, படிப்படியான மெதுவான மாற்றம் என்கிற நமது கடந்த கால  அணுகுமுறை பொருத்தமற்றது என்பதை வலியுறுத்துகிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் மாற்றங்களின் வீச்சும், அவற்றின் வேகமும் நாம் முன்னெப்போதும் கண்டிராததாக இருக்கப் போகின்றன என்று கூறும் இந்த அறிக்கை, 2025-இல் நாம் அடைய வேண்டிய இலக்குகளைத் துறை வாரியாகப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுருக்கித் தருகிறோம்.

“தற்போதைய சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் ஒரு மீப்பெருநகரப் பிராந்தியம் (Mega Urban Region) உருவாக்கப்பட வேண்டும். சுமார் 5000 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகவும், மரக்காணம்,அரக்கோணம், புலிகாட் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதுமாக அது அமையவேண்டும். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பெருநகரங்கள் தற்போதைய சென்னைக்கு இணையான மாநகரங்களாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தின் 24 முக்கிய நகரங்களின் தரமும் உயர்த்தப்பட்டு, அவற்றுடன் தாலுகா தலைநகரங்கள் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்படவேண்டும். இந்த 24 நகரங்களும் நான்கு பெருநகரங்களுடன் ஆறு வழி மற்றும் எட்டு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்பட வேண்டும்.

சுருங்கக் கூறின், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 13 மணி நேரமாக இருக்கும் தற்போதைய பயணநேரத்தை, 7 மணி நேரமாகக் குறைக்கும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப் படவேண்டும். சைக்கிள் சக்கரத்தின் (ஸ்போக்ஸ்) கம்பிகள் அதன் மையத்துடன் (ஹப்) இணைக்கப்பட்டிருப்பதைப் போல கிராமப்புறங்களும், சிறுநகரங்களும் பெருநகரங்களுடன் இணைக்கப்படவேண்டும்.விமானப்போக்குவரத்து தற்போது உள்ளதைப் போல ஏழு மடங்கும், மின் உற்பத்தி பதினோரு மடங்கும் அதிகரிக்கப்படவேண்டும்.”

“தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product) சேவைத்துறை மற்றும் தொழில்துறையின் பங்கு  93% ஆக உயர்த்தப்படவேண்டும்.  தற்போது (2008) 50 சதவீதமாக இருக்கும் நகர்ப்புற மக்கள் தொகை, 2025 இல் 75% ஆக உயர்த்தப்படவேண்டும். 2025-ஆம் ஆண்டில் விவசாயத்தை சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25% ஆகக் குறைக்க வேண்டுமானால், நகரமயமாவதை தற்போதுள்ளதைக் காட்டிலும்  18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.”

“2025-இல் தானியங்கி, தோல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, பிற ஆலை உற்பத்தித் தொழில்கள், கட்டுமானத்துறை, ஐ.டி. மற்றும் பிற சேவைத்துறைகளே வேலை வாய்ப்பை வழங்கும் முதன்மையான துறைகளாக இருக்கும். நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில் ஆகியவற்றை மையப்படுத்தித் தொழில்துறை வளர்க்கப்படவேண்டும். கால்நடை வளர்ப்பு, காய்-கனி-பூ ஆகியவற்றை மையப்படுத்திய தோட்டத்தொழில் போன்ற அதிகம் தண்ணீர் தேவைப்படாத உற்பத்திகளை நோக்கியும், மதிப்புக் கூட்டும் விவசாயத்தை நோக்கியும் (Value Added Agriculture)  விவசாய உற்பத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நகர்ப்புறத்தில் சில்லறை வணிக நிறுவனங்கள் காணவிருக்கும் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு (அதற்குப் பொருத்தமான விதத்தில்) அரசின் விவசாயக் கொள்கை அமையவேண்டும். (இதனை ஒட்டி)  ஒப்பந்த விவசாயத்தின் நிறை-குறைகள் பற்றிய ஆவு  மேற்கொள்ளப்படவேண்டும்.”

“கல்வித்துறையைப் பொருத்தமட்டில், வெற்றி பெற்ற முதலாளிகளின் கதைகளும் அனுபவங்களும் (உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் வரலாறு) மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதுடன், தொழில் முனைவராவது குறித்த (முதலாளியாவது குறித்த) தனி பட்டப்படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தச்சுவேலை, குழா ரிப்பேர் போன்ற செயல்முறைக் கல்விக்கான பாடத்திட்டங்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் படவேண்டும். ஆண்டொன்றுக்கு 10,000 (தற்போது 3000) மருத்துவர்களை உருவாக்கும் வகையில் 120 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இதன் பொருட்டு மருத்துவப் படிப்பு மற்றும் செவிலியர் படிப்பிற்கான தனியார் கல்லூரிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.”

“தற்போது  ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள், உரிமங்கள், தடையில்லாச் சான்றிதழ்கள் போன்றவற்றைப் பல்வேறு துறைகளிடமிருந்து பெற்று ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்குச் சராசரியாக 41 நாட்கள் ஆகின்றன. ஒரு சொத்தைப் பதிவு செய்வதற்கு 61 நாட்கள் ஆகின்றன. இவற்றை முறையே இரண்டு நாட்களாகவும், ஒரு நாளாகவும் குறைப்பதன் மூலம் அந்நிய மூலதனங்களை ஈர்க்கும் ஆசியாவின் 5 முக்கிய மையங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்ற முடியும்.”

“அரசு நிர்வாகத்தின் செயல்திறனை இவ்வாறு அதிகரிக்க வேண்டுமானால், அரசு நிர்வாகப் பணிகளில் அவுட் சோர்சிங் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளிலும், உள்கட்டுமானத் துறையிலும் தனியார் துறையுடன் கூட்டு அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்தக் கட்டுமானங்களை உருவாக்குவதற்கான மூலதனத்தை அரசாங்கத்தால் பெறமுடியும்” என்றும் வலியுறுத்துகிறது, அந்த அறிக்கை.

‘உலகத்தமிழர் ஒற்றுமை’யின் அவசியம் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. தமிழ்ப் பண்பாடு மூலமாக வெளிநாட்டில் குடியேறியிருக்கும் 40 இலட்சம் தமிழர்களை ஒன்றிணைக்க ‘உலகத் தமிழ் மையம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், இணையத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், உலகத் தமிழர்களின் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களைத் தமிழகத்தின் வளர்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வழங்குகின்ற பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் போன்ற பட்டங்களுக்கு இணையான ‘தமிழ் விருதுகளை’ உருவாக்கி, இத்தகைய சாதனைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை. சென்னை சங்கமம் போன்ற விழாக்களை மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் நடத்த வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை தனது செயல்திட்டமாக முன்வைக்கிறது.

‘திராவிட ஒற்றுமையை’யும் இவ்வறிக்கை விட்டு வைக்கவில்லை.  பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை ராஜதானி, தென்னிந்தியா முழுவதன் தலைநகரமாக இருந்ததையும், தென் மாநிலங்களின் வரலாறு அதனுடன் பிணைந்திருப்பதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாநில முதலாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதன் மூலம் அவர்களை ஈர்க்க வேண்டும் என்றும், கேரளத்தின் எல்லையில் இருக்கும் கோவை, கர்நாடக எல்லையில் இருக்கும் ஒசூர், ஆந்திர எல்லையில் இருக்கும் சென்னை ஆகிய நகரங்களை முக்கியமான வர்த்தக மையங்களாக உருவாக்குவதன் மூலம் தென்னிந்தியாவின் மையமாகத் தமிழகத்தை மாற்றவேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை.

*****

நகரமயமாக்கத்திற்கும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கும் இடையிலான உறவை, அதாவது, தமிழகத்தில் நாம் காணும் நகரமயமாக்கம் என்பது தனியார்மய, தாராளமயக் கொள்கைகளுடைய அமலாக்கத்தின் விளைவே என்பதை இந்த அறிக்கையின் வாயிலாகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.  இந்த அறிக்கை முன்வைக்கும் இலக்குகளும், மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்த அது பரிந்துரைக்கும் வேகமும் சாத்தியமானவைதானா என்ற பரிசீலனையைக் காட்டிலும், இதுதான் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தரகு முதலாளி வர்க்கத்தின் உள்ளக்கிடக்கை என்பதை நாம் புரிந்து கொள்வதே முக்கியமானது.

உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள், தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தளிப்பதற்கு பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ், மெக்கின்சி போன்ற சர்வதேச ஆலோசனை நிறுவனங்களைத்தான் அமர்த்திக் கொள்கின்றன. அவர்களது ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், பின்தங்கிய நாடுகளில் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அனைத்தும் செயல்வடிவம் பெறுகின்றன. அத்துடன் கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கைகளின் கீழ், இத்தகைய சர்வதேச ஆலோசனை நிறுவனங்களும், சி.ஐ.ஐ போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்களும் தற்போது அரசு அதிகாரத்தின் அங்கங்களாகவே மாறியிருக்கின்றன. எனவே, 2025-ஆம் ஆண்டுவரை தமிழகத்தை ஆளக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், தமிழகத்தின் செல்வழி இதுவாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் நகரமயமாக்கம் என்பது தன்னியல்பானதொரு நிகழ்ச்சிப்போக்கோ, விவசாயத்தின் வளர்ச்சியில் அரசு உரிய கவனம் செலுத்தாததன் தவிர்க்கவியலாத பின்விளைவோ அல்ல. அவ்வாறு கருதும் சில அறிஞர்கள்தான், அரசுக்கு புத்திமதி கூறி நாளேடுகளில் கட்டுரை எழுதுகிறார்கள். விவசாயத்தையும் நீர்ப்பாசனத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துகின்ற அதே நேரத்தில், விவசாயத்தையும் காப்பாற்றும் வகையில் திட்டம் வகுக்க முடியும் என்ற கற்பனைகளை விதைக்கிறார்கள். மாறாக, நகரமயமாக்கமும் விவசாயத்தின் அழிவும் மறுகாலனியாக்கக் கொள்கையினால் திட்டமிட்டே முன்தள்ளப்படுபவையாகும். கிராமப்புற மக்கட்தொகையை 25% ஆகக் குறைக்கவேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 93% நகரம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தரகு முதலாளி வர்க்கம் முன்வைத்திருக்கும் இலக்குகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பைத் தேர்தலில் அறுவடை செய்வதற்காக ஓட்டுக்கட்சிகள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் எதுவும் இந்தச் செல்வழியை மாற்றிவிடப் போவதில்லை. ஸ்ரீபெரும்புதூர் விமானநிலைய விரிவாக்கம், மதுரவாயல் சாலைத் திட்டம் போன்றவற்றுக்கு விவசாயிகளும்  குடிசைவாழ் மக்களும்  எதிர்ப்பு தெரிவிப்பதனால், அவை தொடர்பாக தி.மு.க. அரசை எதிர்த்த ஆர்ப்பாட்டங்களை அ.தி.மு.க. நடத்தியிருக்கிறது.

தி.மு.க. வும் கூட, ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துக்கு ஜெயலலிதா அரசு வழங்கிய சலுகைகளை முன்னர்  அம்பலப்படுத்தியது. ஆட்சிக்கு வந்த பின்னர் அதை விட அதிகமான சலுகைகளை ஹூண்டா, மகிந்திரா உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் தி.மு.க. அரசு வழங்கியது. தற்போது அ.தி.மு.க. காட்டி வரும் எதிர்ப்பும் அத்தகையதே.

அ.தி.மு.க., தி.மு.க. என 1990-களிலிருந்து மாறி மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இக்கட்சிகளிடைய இருக்கும் ஒற்றுமையைத்தான் தமிழகத்தின் சாதகமான அம்சமாக தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மதிப்பிடுகின்றனர். இவ்விரு கட்சிகளில் தி.மு.க., குறிப்பாக கருணாநிதியின் குடும்பம் ஆளும் வர்க்கத்தின் அங்கமாகவே வளர்ச்சியடைந்திருப்பதால், சி.ஐ.ஐ முன்வைத்திருக்கும் இந்த அறிக்கையை, கழகம் தனது சொந்தக் கொள்கை அறிக்கையாகவே கருதும் என்பதில் ஐயமில்லை. மாறிவிட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக, ‘உலகத்தமிழின ஒற்றுமை’, ‘தமிழ்ப் பண்பாடு’, ‘திராவிட ஒற்றுமை’ போன்ற  கழகத்தின் மூல முழக்கங்களைக் கைவிடத் தேவையில்லையென்றும், புதிய உள்ளடக்கத்தைப் புகுத்துவதன் மூலம் அவற்றைப் புளி போட்டு விளக்கி மீண்டும் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் தி.மு.க.வுக்குச் சூசகமாகத் தெரிவித்திருக்கிறது, சி.ஐ.ஐ யின் இந்த அறிக்கை.

2008-இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறும் திசையில்தான் தி.மு.க. அரசு தமிழகத்தைக் கொண்டு செல்கிறதா? ஒரு ரூபாய் அரிசியும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிடலாம். ஆனால், முதலாளிகளிடம் அப்படிச் சான்றிதழ் பெற்றுவிட முடியாது. இந்தியத் தரகுமுதலாளிகள் சங்கத்தின் தமிழகக் கிளை 2010- இல் வழங்கியுள்ள ‘சாதகமான தமிழகம்’ என்ற சான்றிதழ், 2025-ஆம் ஆண்டுக்கு அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்குகளை நோக்கித்தான் தமிழகம் துரத்தப்படுகிறது என்பதற்கு நிரூபணமாக இருக்கிறது.

(தொடரும்)

_______________________________________________

மருதையன், புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!

இரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து   ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? நினைத்துப் பார்ப்பதென்ன? நேரிலேயே பார்க்க முடியும், சென்னை, மதுரவாயில் பகுதிக்கு வந்தால்; காரணம் வேறொன்றுமில்லை, அவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் இருப்பவர்கள் என்பதுதான்.

தமிழகத்திலேயே தரங்கெட்ட பள்ளிகளைப் பட்டியலிட்டால், அதில் முதலிடம் பிடிப்பது மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியாகத்தான் இருக்கும். வகுப்பறை, கழிப்பறை, ஆசிரியர் எல்லோமே பிரச்சனைதான். பதின்வயது மாணவர்களைப் பண்பாட்டுச் சீரழிவின் உச்சகட்டத்தில் ஆழ்த்தியிருப்பதும் இங்குதான். இந்த லட்சணத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், கட்டாய நன்கொடையாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். இவை எல்லாவற்றிற்கும் தலைமை தாங்கி நடத்தி வந்த “மகாத்மா” பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரும், உள்ளுர் ரவுடியுமான டி.பி. யோசுவா.

மதுரவாயல், பிள்ளையார் கோவில் பகுதியை மையமாகக் கொண்டு, சுற்றுப் பகுதிகளில் இயங்கிவரும் பு.மா.இ.மு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களையும், பகுதி மக்களையும் திரட்டி, பள்ளியை முற்றுகையிட்டு, கட்டாய நன்கொடையை ஒழித்துக்கட்டியது, மேலும் யோசுவா உள்ளிட்டோரின் சாதி அரசியலை முறியடிக்கும் விதமாக, பகுதி இளைஞகளைத் தன் கீழ் அணி திரட்டவும் தொடங்கியது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவராக இருந்து கொள்ளை அடித்து வந்த யோசுவா, வருமானமும் இல்லாமல் அரசியல் அடித்தளமும் ஆட்டம் காணத் தொடங்கியதால் எப்படியேனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், வஞ்சம் தீர்க்கவும் துடித்து கொண்டிருந்த சமயத்தில், அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது, கடந்த 13ஆம் தேதி பள்ளியில் நடந்த சம்பவம்

13ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வழக்கம் போல, ஆசிரியர் ஒருவர், 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை தரக்குறைவாகப் பேசி, அடித்திருக்கிறார், இந்த சம்பவம் பற்றி பள்ளியில் உள்ள பு.மா.இ.மு தோழர்களுக்கு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அசிரியரிடம் சென்று தட்டிக் கேட்டனர். அவரோ மீண்டும் தனது பாணியில்  ஏளனமாகப் பேசவே, சக மாணவர்களை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட, அவரும் முதலில், மதிக்காமல், திட்டியிருக்கிறார். பின்னர் முறையீடு, முற்றுகையாக மாறியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரளவே தலைமை ஆசிரியர் சமாதானம் பேச இறங்கியிருக்கிறார்

மாணவர்களோ, “சம்பந்தபட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும், இனி இது போல நடக்காமலிருக்க உறுதி கூற வேண்டும்” என்று ஜனநாயக முறையில் கோரிக்கையை முன்வைத்தனர். ஆசிரியர்களின் “பாரம்பரிய உரிமையைப்” பறிக்கும் இந்த கோரிக்கையையும், மேலும் மேலும் ஒன்று சேரும் மாணவர்களையும், கண்ட, யோசுவாவின் விசுவாசிகளான சில ஆசிரியர்கள், யோசுவாவிற்கு தகவல் தந்தனர்.

தலைமையாசிரியர் முன்னிலையில், மாணவனை அடித்த ஆசிரியர் மன்னிப்பு கேட்பதாக கூறினார். பிரச்சினை முடிவுக்கு வரும் நேரத்தில், யோசுவா தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே நுழைந்து, எதுவும் பேசாமல் கண்மூடித்தனமாக குழுமியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கியது. பு.மா.இ.முவைச் சேர்ந்த ஆனந்தன், யோசுவாவிடம், “உனக்கும், இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு? எந்த அடிப்படையில் எங்களை அடிக்கிறாய்?” என்று கேட்டதுதான் தாமதம், “என்னையே கேள்வி கேட்கிறாயா? நான் யார் தெரியுமா?” என வசனம் பேசிய யோசுவா, கையில் கிடைத்த கட்டை, கம்பி, செங்கல்,செருப்பு என எடுத்து வீசினான். தடுக்க வந்த தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கும் அடிவிழுந்தது, தனது வெறி தீர அடித்த பின்பு எல்லோரையும் மிரட்டி விட்டுச் சென்றான் யோசுவா.

தகவல் அறிந்து உடனடியாகப் பள்ளிக்கு வந்த, மதுரவாயல் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் செந்திலிடம், தலைமையாசிரியர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்து, தங்களையும் மீறி இச்சம்பவம் நடந்து விட்டது, இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். மேலும் பள்ளி நேரத்தில் வெளியே நின்ற மாணவர்கள், தோழர் செந்தில் சொன்னவுடன் வகுப்பறைக்கு அமைதியாக சென்றது கண்டு ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டனர்.

தலைமையாசிரியர், மாணவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். ஆனால் யோசுவாவிற்கோ, தன்னை எதிர்து ஒரு சிறுவன் கேள்வி கேட்டுவிட்டானே, என்று உறுத்தத் தொடங்கியது. தன்னை ஒரு ரவுடியாக நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட யோசுவா, தனது மகன் சாந்த குமார் தலைமையில், உள்ளூர் பொறுக்கிகள் 30 பேரை திரட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தான்.

யோசுவாவின், அல்லக்கைகள் எல்லோருமே அவனை’அப்பா’ என்றுதான் கூப்பிடுவார்கள். ‘அப்பாவையே எதிர்த்து ஒருவன் அதுவும் ஒரு பள்ளி மாணவன் பேசிட்டானா? என்று ஆத்திரம் பொங்கியது அவர்களுக்கு.

மாலை 3 மணிக்கு பள்ளி இடைவெளியின்போது ஆனந்தனிடம் சக வகுப்பு மாணவன், வா வெளியே சென்று பேசலாம் என அழைக்க, கூடவே மணியும் உடன் சென்றார். காம்பவுண்டு சுவரை எட்டிப் பார்த்ததும், யோசுவாவின் ஆட்கள், இருவரையும் வெளியே இழுத்துக் கொண்டனர். பள்ளிக்குப் பின்புறம் உள்ள யோசுவா வீட்டருகே இழுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். பரமபிதாவின் தூதர் பெயரைக் கொண்டவனும் மாயாவதி கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவனான யோசுவா, இருபள்ளி மாணவர்களை உருட்டுக்கட்டையால் அடிபடுவதைக் கண்டு பரமானந்தம் கொண்டான். மயங்கி விழுந்தவர்களைத் தட்டியெழுப்பி , “இனிமேல் ஏதாவது பேசினால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி, மீட்க வந்த ஆசிரியர்களுடன் அனுப்பினான்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது யோசுவாவிற்கு பாரதூரமாகப் பொருந்தி விட்டது. 3 மணிக்கு, ஆள் வைத்து அடித்து , தன்னை ரவுடியாக நிலைநாட்டிக் கொண்டதாக நினைத்தவனின் சந்தோசத்தில் மண்ணள்ளிப்போட , பு.மா. இ.மு தோழர்கள் சற்று நேரத்தில் வந்து விட்டனர்.

தலைமை ஆசிரியர்,தனது பழைய பல்லவியை மீண்டும் பாட,தோழர்கள், இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என, அடிப்பட்டவர்களை உடனடியாக முதலுதவிக்கு அழைத்துச் சென்று , பின்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர்.

சென்னைப் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டனர் .

அன்று மாலையே பள்ளி மாணவர்கள் சுமார் நூறுபேர் , காவல் நிலையம் வந்து , தோழர்களைச் சந்தித்து, யோசுவாவை உதைக்காமல் விடக்கூடாது என வலியுறுத்தத் தொடங்கினர். பகுதி முழுவதும் பரபரப்பாகி விட , வழக்கைப் பதிவு செய்த போலிசு, பொறுக்கி யோசுவாவிற்கு பு.மா.இ.மு.வின் அரசியலைப் போதனை செய்திருக்கிறது. அதனால் உஷாரான மாநிலத்தலைவரும் , மகனும் மாயமாகிவிட்டார்கள்.

தோழர்களுக்கு யார் யாரோ போன் போட்டு , “சமாதானமாகப் போகலாம்/ வழக்கை வாபஸ் பெறுங்கள்” என்று , பேச”எதை , எப்படிச் செய்வதென எங்களுக்குத் தெரியும்” என்றார்கள் தோழர்கள். வேறு வழியின்றி , யோசுவாவின் அடியாட்கள் இரண்டுபேரை உடனடியாகக் கைது செய்தது போலிசு. பு.மா.இ.மு பற்றி யோசுவாவுக்கு தெரியுமோ இல்லையோ மதுரவாயல் போலீசுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து என்ன செய்யப் போகிறிர்கள்? என நச்சரிக்கத் தொடங்கினர்.

15 ம் தேதி காலையில் , பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் , பகுதி இளைஞர்களும் என 500 க்கும் மேற்பட்டோர் பு.மா.இ.மு தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு , கொலைகார ரவுடி யோசுவாவையும் , அவன் மகனையும் கைது சிறையிலடைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க வந்த அதிரடிப்படை போலீசை மதுரவாயல் போலீசார் திருப்பி அனுப்பினார். யோசுவாவை கைது செய்து, துணைக் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்திருப்பதாகக் கூறி , தோழர்களை அழைத்துச்சென்று நேரில் காட்டி , விரைவில் அவன் மகனையும் பிடித்து விடுவதாகவும் , போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறினர். நமக்கு போலீசை பற்றியும் தெரியும். ஆனால் மதுரவாயலில் எல்லாரையும் பயமுறுத்தி வந்த , உள்ளுர் பொறுக்கிகளால் சிங்கம் போல சித்தரிக்கப்பட்ட ஒரு ரவுடி இப்போதும் பயந்து போய் போலீசிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான். என்பது தான் முக்கியம். இப்போது யோசுவாவிற்கு வேண்டப்பட்டவர்களே, பள்ளி மாணவர்களை அடித்தது கண்டு காறித்துப்புகிறார்கள். அல்லக்கைகளே பயத்தில் கிலியாகி பதுங்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்போது யோசுவாவிற்கு ஆதரவாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்க போவதாய் தகவல் வந்திருக்கிறது. இதுவரை தமக்குள் அடித்துக் கொண்ட ஓட்டுப் பொறுக்கிகள், இப்போது ஒன்று சேர்கிறார்கள். அதற்கு உறுதுணையாய் நிற்கப் போவது அரசுதான் என்பது சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிராக நிற்பது வெறும் பள்ளி மாணவர்கள் அல்ல, பு.மா.இ.மு வால் புடம் போடப்பட்ட பகத்சிங்கின் வாரிசுகள்.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொண்டு உள்ளூர் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், ரியல் எஸ்டேட் என்று மோசடி செய்து சம்பாதிக்கும் இத்தகைய ரவுடிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த பகுதியின் எந்த பிரச்சினையும் இவர்களது கட்டப்பஞ்சாயத்தில்தான் அபராதத்துடன் தீர்க்கப்படும். சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக பெருத்து நிற்கும் இத்தகைய கழிவுகளை மக்கள் சக்தியைத் திரட்டினால் நிச்சயம் வீழ்த்த முடியும் என்பதற்கு மதுரவாயில் மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் வழிகாட்டியிருக்கின்றனர்.

__________________________________________________________
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!

இந்து முண்ணனி குண்டர்களால் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன்
இந்து முண்ணனி ரவுடிகள் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன், மருத்துவமனையில்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.

அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.

சமூகநீதியின் ஒரே அத்தாரிட்டி தாம் தான் என்று வெளியே சூரத்தனம் காட்டும் கருணாநிதி அரசு, பார்ப்பன அர்ச்சகர்களை வழக்குமன்றத்தில் முறியடிக்கும் உத்வேகம் இல்லாமல் வெறும் ஒப்புக்குச்சப்பாணி போல எதிர்வழக்காடி வருவகிறது.

மட்டுமல்லாமல், மேற்கண்ட பயிற்சிக் கல்லூரிகளில் படித்துத் தேறிய மாணவர்களுக்கு இன்று வரையில் பணிநியமன ஆணையை வழங்காமல் உள்ளது. கல்லூரியில் படித்துத் தேறிய மாணவர்களுக்கான சான்றிதழையும் ம.உ.பா மையம்(HRPC) தலையிட்டு மாணவர்களை சங்கமாகத் திரட்டிப் போராடிய பின் தான் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி உச்சிக்குடுமிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததை சாக்காக வைத்துக் கொண்டு தி.மு.க அரசு எல்லா பயிற்சி பாடசாலைகளையும் மூடிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் பராசரன்தான் இப்போது தமிழக அரசை எதிர்த்து மதுரை பார்ப்பன பட்டர்களுக்காக வழக்காடுகிறார்.

இது வெறுமனே வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லையென்பதாலும், பார்ப்பனத் திமிர் உறைந்து கெட்டிப்பட்டுக் கிடக்கும் கருவறையை கழுவிச் சுத்தப்படுத்த சூத்திரர்களுக்குக் கிடத்துள்ள பொன்னான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்திருந்ததாலும், மாணவர்கள் சங்கம் சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தரப்பினராகச் சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கின் தன்மை என்பது வெறும் சட்டவாத சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் உள்ள வளைவு சுழிவுகளால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒன்றல்ல. கொலைகார காஞ்சி ஜெயேந்திரனும், காமவெறிபிடித்த பார்ப்பன அர்ச்சகனான தேவநாதன் போன்றவர்களுக்கும் சிலைகளைத் தொட்டு பூஜைகள் செய்ய தடையேதும் இல்லாத போது, மந்திரங்களையும் பூஜாவிதிகளையும் முறையாகப் படித்தாலும் பிறப்பைக் கொண்டு இம்மாணவர்களை ஒதுக்குவதானது கருவறைத் தீண்டாமையாகும்.

இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெரியாரின் பிறந்த நாள் அன்று அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை ரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ம.உ.பா மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பகுதி பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்
பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

இது பற்றிய செய்தி முதலில் வினவிலும் பின்னர் விகடனிலும் விரிவாக வெளியானது. முக்கியமாக தந்தை பெரியார் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து அதை நிறைவேறப் போராடியவர் பெரியார். அவர் நாத்திகரே ஆனாலும் சூத்திர ஆத்திகர்கள் மீதுள்ள தீண்டாமையை ஒழிக்க போராடினார். அதனால் அவருக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை சூட்டியது நிச்சயமாக பொருத்தமானதுதான். இதுதான் இந்து முன்னணிக்கு பிடிக்கவில்லை.

இப்படி இந்து பார்ப்பன தீண்டாமை வெறியாட்டம் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்து முண்ணனியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்று இரவே அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதனையும் ம.உ.ப மையத் தோழர்களையும் மறித்து ‘ஏன் இவ்வாறு போராடுகிறீர்கள்?’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு, ‘இப்பவே கூட்டிப் போய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை வாங்கித் தந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்கள் தோழர்கள். அதில் மூக்குடைபட்டுப்போன அவர், ‘அண்ணாமலையார் கோயிலிலெல்லாம் முடியாது. வேணும்னா ஏதாவது ரோட்டோர கோயில்ல பூசாரி வேலை வாங்கித் தருவோம்’ என்று திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

‘எல்லாரும் இந்துக்கள் தான்’ என்று ஊர் ஊருக்கு சொல்லிக் கொண்டு அலையும் இராம கோபாலன் பிராண்டு சமத்துவத்தின் யோக்கியதை இதுதான். பார்ப்பனர்களுக்கு உசந்த சாமி; கீழ் சாதிக்காரர்களுக்கு ரோட்டோர சாமியாம். பார்ப்பனர்களுக்கு நன்றாக கலெக்ஷன் கட்டும் மதுரை மீனாட்சி – சூத்திரனுக்கு ரோட்டோரத்தில் அம்போவெனக்கிடக்கும் பட்டத்தரசி. இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பார்ப்பன தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தளவில் சாமியோ ஆசாமியோ எல்லாவற்றிலும் மேன்மையானவைகளை மட்டும் குடுமிக்குள் முடிந்து வைத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களில் விவகாரம் நாறத் துவங்கியதும் இந்து முண்ணனியின் மாவட்டச் செயலாளர் ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பது, அக்கம் பக்கத்தில் விசாரிப்பது என்று ரங்கநாதனின் உறுதியைக் குலைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட முயல்கிறார். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்வதை அடுத்து, அக்டோபர் 15ம் தேதி ரங்கநாதனும் ம.உ.பா மையத் தோழர்களும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து ரங்கநாதனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மனு கொடுக்கிறார்கள்.

அவர் அந்த மனுவை டி.எஸ்.பியை விட்டு விசாரிக்கச் சொல்வதாகவும் அன்று மாலை அவரைச் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று மாலையே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு ரங்கநாதன் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடிகள், அவரை பலமாகத் தாக்குகிறார்கள். சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் தன்னைத் தாக்கியவர்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து விடுகிறார். போட்டோ ஆதாரத்துடன் காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

முதலில் மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களின் சங்கத்தைப் பிளந்து வழக்கை நீர்த்துப் போய்விடச் செய்து விடலாம் என்று பார்ப்பனர்கள் தரப்பில் முயன்றுள்ளனர். அந்தத் திட்டங்கள் மண்ணைக் கவ்வியதால், அடுத்து சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘உனக்கு என்ன வேண்டும், ஏதாவது சின்னக் கோயிலைத் உன் பொறுப்பில் தருகிறோமே. இல்லை நீ ஏதாவது கம்ப்யூடர் படி -நாங்கள் செலவைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் பலவாறு ஆசை காட்டி அவர்கள் வழக்கை திரும்பப் பெற வைக்க முயன்றனர். அதுவும் மண்ணைக் கவ்வியது.

இப்போது பார்ப்பனர்களின் வழக்கமான உத்தியான ‘ஆனமட்டும் காலைப் பிடி ஆனபின்பு கழுத்தைப் பிடி’ என்கிற கதையாக தமிழகத்தில் பார்ப்பனர்களின் உருட்டுக் கட்டையாக விளங்கும் இந்து முண்ணனியைச் சேர்ந்த ரவுடிகளை ஏவி விட்டுள்ளனர்.

ஆனால், எத்தனை முறை எப்படியெல்லாம் ஆசை காட்டினாலும் சரி – மிரட்டினாலும் சரி – ஏன் உயிரே போவதானாலும் சரி; பார்ப்பனர்களிடம் சரணடைவதில்லை என்பதில் ரங்கநாதன் மிகத் தெளிவாய் இருக்கிறார். தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது. இதை எதிர்த்து தீண்டாமையின் கோட்டையாக விளங்கும் கருவறையிலேயே அதற்கு சமாதி கட்டும் தோழர்களின் போராட்ட உறுதியின் முன் பார்ப்பன இந்துமதவெறியர்களின் சதிகள் நிச்சயமாய் தோற்றுப் போகும்.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

டென்மார்க்கில் கலையரசனின் ஆப்பிரிக்க நூல் அறிமுகவிழா!

5
கலையகம் கலையரசன்
அறிமுக விழாவில் உரையாற்றும் கலையரசன்

10 -10 -10 அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது.  வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பாகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”  நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில்  சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன்,” தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில்  அகதியாக  வாழ்ந்த  காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற  தலைப்பு  ஏன் வந்தது  என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது  செய்யப்பட்ட  மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

இரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த “மூன்றாவது மனிதன்”, தற்போது லண்டனில் இருந்து வரும் “எதுவரை” ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார்.  பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை,  ஏகாதிபத்திய  தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன்,  “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.

கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொள்ளலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.  ஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

______________________________
–    நன்றி: கலையகம்
______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நான் கோவன் ஆனது எப்படி?

கோவன் ம.க.இ.ககோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!

“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.

ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.

இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.

நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.

கோவன் மகஇக
கலைக்குழு தோழர்கள்

எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.

இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி

உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி

திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்

இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்

இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!”

______________________

நன்றி: ஆனந்த விகடன்
______________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…!

படுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்
படுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்

தமிழ்நாடு,கடலூர்மாவட்டம்,பெண்ணாடம் பள்ளி மாணவர் பாரத்தை படுகொலை செய்தவர்களை கொலை வழக்கில் கைது செய்யக் கோரி கடந்த செப்டம்பர் 20 அன்று பெண்ணாடத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.அதன் பிறகும் பெண்ணாடம் போலிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிடுவதென முடிவு செய்தது.இதற்காக பெண்ணாடத்தில் இருந்து மாவட்ட தலைநகரான கடலூருக்கு செப்- 09,10,11 ஆகிய மூன்று தினங்கள் நடைபயணம் செல்வதாக அறிவித்தது.இச்செய்தியை மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.இந்த நடைபயணத்திற்கு கடலூர் மாவட்ட போலிஸ் தடைவிதித்துவிட்டு, மீறி வந்தால் கைது செய்வோம் என மிரட்டியது.இதற்காக ஏராளமான போலிசையும் பெண்ணாடத்தில் குவித்தது.

பாரத்தின் பெற்றோரையும்,விவசாயிகள் விடுதலை முன்னணியையும் நடைபயணம் செல்ல அனுமதித்தால் போலீசின் முகத்திரை மக்கள் மத்தியில் கிழிந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே சட்டத்திற்கு புறம்பாக,ஜனநாயகத்திற்கு விரோதமாக தடைவிதித்தது.பிரச்சாரத்தை முடக்கும் போலீசின் அடாவடித்தனத்தை புரிந்துகொண்ட விவசாயிகள் விடுதலை முன்னணி  தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை 11.10.2010 அன்று பெண்ணாடத்தில் நடத்த முடிவு செய்து, தனது பயணத்திட்டத்தை கிராம மக்களை நோக்கி திருப்பி, போலிசின் அடாவடித்தனத்துக்கு பதிலடி கொடுத்தது. அக்டோபர் 07,08,09,10 ஆகிய நான்கு நாட்களில் 15 கிராமங்களில் மக்கள் கலை இலக்கிய கழக மையக்கலை குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியோடு பிரச்சாரம் செய்தது.கொலைகாரர்களுக்கு அரசு,போலீசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் ஆதரவாக செயல்படுவதையும் கூலிஏழை விவசாயியான மாணவர் பாரத்திற்கு துரோகம் இழைப்பதையும் அம்பலப்படுத்தினர்.

மக்களிடமே நீதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். உழைக்கும் மக்களுக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற நக்சல்பரி புரட்சிகர அமைப்புகளே உண்மையான பிரதிநிதிகள் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரச்சாரம் உணர்ச்சிபூர்வமாகவும்,எழுச்சியுடனும் நடந்தது.

இப்பிரச்சாரத்தை கேட்டவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறினர்.  இப்படிகதறியவர்களின் கண்ணீரில் சொந்தம்,சாதி என்ற எந்த அடையாளமும் இல்லை. உழைப்பாளி என்ற அடையாளம் மட்டுமே பெருக்கெடுத்தது. “இவ்வழக்கில் போலீஸ் கையூட்டு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றுகிறது. இதை முறியடிக்க நாம் வீதியில் இறங்கி போராடுவதோடு மட்டுமல்லாமல், நாமும் சட்டபூர்வ வழிகளையும் பயன்படுத்த வேண்டும். இதற்காக நாம் உயர்நீதி மன்றமும் செல்ல வேண்டும். இப்படி செல்வதற்கு பாரத்தின் பெற்றோருக்கு வசதியில்லை.ஆண்டாண்டுகாலம் அழுதுபுரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அவர்கள் தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்பட்ட கதி இனியாருக்கும் ஏற்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள்.ஆகவே இது நமக்கான போராட்டம்.இந்த வழக்கு நமக்கான வழக்கு,கொலையாளியிடம் பணம் உள்ளது.நம்மிடம் சனம் உள்ளது.வீட்டிற்கு ஒரு ரூபாய் தருவோம்” என்று தோழர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினர்.

இதைக்கேட்டதும் மக்கள் தாராளமாக நிதி அளித்தனர்.கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படும், காப்பாற்ற முனையும் போலீஸ்,அரசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் மீது தமது வெஞ்சினத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர்.கொலையாளிகளுக்கு போலீஸ் தண்டனை வாங்கித்தராது,நாமே அவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும்.அவர்களை உயிரோடு விடக்கூடாது என்று கோபம் கொண்டனர்.

மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…! 11.10.2010 அன்று காலையிலிருந்து மாலை வரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஆகியோர்  உரையாற்றினர்.இவர்களின் பேச்சு அரசு,போலீசு,ஓட்டுக்கட்சிகளின் மீதான மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தியது. அதிலும் விடுதலை சிறுத்தைகளின் துரோகத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்தது. ம.க.இ.க மையக்கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் அதை பற்ற வைத்தது.

மக்கள் சமூக அக்கறையற்றவர்கள் சாதி,மதம்,சுயநலம் ஆகியவற்றில் மூழ்கி கிடப்பவர்கள், எப்போதுமே அநீதிக்கு வால் பிடிப்பவர்கள் இவர்களை திருத்தவே முடியாது”,என்றுக் கூறித்திரியும் மண்டை வீங்கிகளின் உளறல்களுக்கு ஆப்பறையும் வகையில் மக்கள் இப்போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.

மக்கள் எப்போதுமே அநீதிக்கு எதிரானவர்கள் தான். மக்களை வழிநடத்துபவர்கள்தான் அவர்களை எப்போதுமே ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்துள்ளனர். நக்சல்பரி புரட்சியாளர்கள் மக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள கட்டுகள் அனைத்தையும் உடைத்தெரிந்து,அவர்களை சமுக மாற்றத்திற்கு அணிதிரட்டுவார்கள் என்பதற்கு அடையாளமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

கொலைகாரர்களும்,கொலை செய்யப்பட்ட மாணவனும் ஒரே சாதியாயினும்  மாணவன் பாரத் ஏழை சாதி. இதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொலைகாரர்களுக்கு ஆதரவாக உள்ளது. நக்சல்பரி போராளிகளோ எல்லாசாதிகளிலும் உள்ள ஏழைகளின் பிரதிநிதி. அதனால் தான் மாணவன் பாரத்தின் கொலைக்கு நீதி கேட்டு போராடுகிறது”, என்று மகஇக மையகலைக்குழு தோழர்கள் கூறியதும், அதுவரை எதிரில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பலர் பந்தலுக்குள்ளே வந்து அமர்ந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் மிக உயரிய நிகழ்வாகும்.

பெண்ணாடம் நக்சல்பரி புரட்சியாளர்களின் கோட்டை என்பது பழைய செய்தி மட்டுமல்ல,மீண்டும் இப்பூமி சிவக்கப் போவதை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் இந்த தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடந்தது.

_______________________________________________________

–          தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்
_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள்  முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு  சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால்  50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.

நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர்.  “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை!  வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!

தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28  அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை  உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.

முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தன்னுடைய சாதனைகளையும் தகுதியையும் இந்த தேசம் நியாயமாக மதிப்பிட்டுப் பார்த்திருக்கும் பட்சத்தில், காந்தி – நேரு வரிசையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவராகத் தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்து. இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக அவர் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற திமிர் பிடித்த காங்கிரசுக்காரர்களால் அவ்வப்போது தான் விமரிசிக்கப்படுவதை அவரால் சகித்துக் கொள்ள முடிகிறது. பிள்ளைகளின் வாரிசுரிமைத் தகராறில் முச்சந்தியில் வைத்து அவரது வேட்டி இழுபடுவதைக்கூட அவர் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொள்கிறார். அவற்றுக்கெல்லாம் ஒரு நியாயம் இருக்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால் சத்துணவு ஊழியர்கள் போன்ற சாமானியர்கள் அவரது கவுரவத்தில் குறுக்கிடும்போது, அவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நெற்றிக் கண்ணைத் திறந்து பாசிச ஜெயலலிதாவின் வழியில் அடக்குமுறையை ஏவத் தொடங்கிவிட்டார்.

கனவைக் கலைத்த சாமானியர்களின் போராட்டம் !!

தமிழகத்தின் 12 இலட்சம் அரசு ஊழியர்களில் 5 லட்சம் பேர் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் மாதம் ரூ.300 முதல் ரூ.4500 வரை ஊதியம் பெறுகின்றனர். இவர்களில் 1.23 இலட்சம் பேர் சத்துணவு ஊழியர்கள்.  இவர்களுக்கு மைய அரசின் 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்ததைவிடக் குறைவாக, ஒரு புதிய சிறப்புக் காலமுறை ஊதியத்தைக் (ரூ.3780 முதல் ரூ.4694 வரை) கண்டுபிடித்து வழங்கி வருகிறது,கருணாநிதி அரசு. அற்ப ஊதியத்துடன் பணியாற்றிவிட்டு, பணிமூப்படைந்து ஓய்வுபெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.400 முதல் ரூ.600 வரைதான் ஓய்வூதியமாகத் தரப்படுகிறது. ஆனால், தமிழகப் போலீசுத் துறையில் 6,7 ஆண்டுகளில் ஓய்வு கொடுக்கப்படும் மோப்ப நாய்களைப் பராமரிக்க, அதன் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது

கடந்த 25 ஆண்டுகளாக, அற்ப ஊதியத்துடன் அடுப்படியில்  பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் சி.பி.எம். கட்சியின் தலைமையிலான சங்கத்தில் கணிசமாக அணிதிரண்டு காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் வேண்டும், கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பலமுறை போராடியும் அரசு அசைந்து கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் 30 அன்று தலைமைச் செயலகத்தை (கோட்டையை) முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். உடனே கருணாநிதிக்கு ஆத்திரம் பொங்கியது. சத்துணவு ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை ஆட்சிக்கு எதிரான போராட்டமாகவும் அதனைக் கம்யூனிஸ்டுகள் தூண்டிவிடுவதாகவும் பாயத் தொடங்கினார்.

கோட்டை முற்றுகைப் போராட்டத்தையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளிலும் வேன்களிலும் சென்னைக்கு வந்த சத்துணவு ஊழியர்கள் 3,500க்கும் மேற்பட்டோர் எல்லையிலேயே தடுக்கப்பட்டு இரவோடிரவாகக்  கைது செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறைக் கெடுபிடிகளைத் தாண்டி தலைமைச் செயலக வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். தமிழகம் முழுவதும் முன்னணியாளர்கள் ஏறத்தாழ 30,000 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை வாழ்த்தச் சென்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த 27 மாநில நிர்வாகிகள் வேலைநீக்கம் செய்யப்பட்டு, 42 பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்துக்குச் சற்று முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த டாஸ்மாக் ஊழியர் போராட்டமும் இதே முறையில் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு சாராயக் கடைகளில் (டாஸ்மாக்) பணியாற்றும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2100 முதல் 2800 வரைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. பலமுறை அரசிடம் முறையிட்டும் அசைந்து கொடுக்காததால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சட்டமுறைப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. முன்னணியாளர்களைப் போராட்டத்தில் பங்கேற்கவோ அணிதிரட்டவோ விடாமல் பிடித்து வைத்துக் கொண்டும், இதர பணியாளர்களை மிரட்டி கட்டாயமாகக் கடையைத் திறக்க வைத்தும், போலீசு பாதுகாப்புடன் சரக்கு விற்பனை செய்யப்பட்டு அப்போராட்டம் ஒடுக்கப்பட்டது.

கோட்டையை முற்றுகையிடுவது குற்றமா?

“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள். அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்டு தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்குக் கொழுந்துவிட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம். அரசுக்குச் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் போர்முனைக்கு வாருங்கள் என்று தி.மு.க.வோ தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காகப் போராட்டம் நடத்தினாலும், அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்திப் பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்கிறார் கருணாநிதி.

‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி மதுரையில் நடத்தும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் அறவழிதானா? தி.மு.க. மூத்த தலைவரான தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டாரே, அது அமைதி வழியா? மதுரையில் தினகரன் நாளேட்டின் அலுவலகத்தில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி தாக்குதல் நடத்தி 3 ஊழியர்களைக் கொன்றொழித்ததும்கூட அறவழியா? அதனால்தான் நீதிமன்றம் அந்த ‘மகாத்மா’வை விடுதலை செய்துவிட்டதா?

பதவிப் பட்டியலைக் கையிலே வைத்துக் கொண்டு குடும்பத்தோடு டெல்லிக்குப் படையெடுத்து முற்றுகையிட்டாரே, கருணாநிதி? பணி நிரந்தரம் கேட்டுக் கோட்டையைச் சத்துணவுப் பணியாளர்கள் முற்றுகையிடுவதுதான் குற்றமா? சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் தொலைக்காட்சி, திரையரங்குகள், சினிமா தயாரிப்புக் கம்பெனிகள், சிமெண்டு – சாராயக் கம்பெனிகள், வீட்டுமனைத் தொழில், இத்தனையும் போதாதென அமைச்சர் பதவிகள் – எனத் தமிழகத்தையே கருணாநிதியின் வம்சம் முற்றுகையிட்டிருக்கிறது. சத்துணவுப் பணியாளர்கள் கோட்டையை முற்றுகையிடுவதுதான் குற்றமாம்!

நாடாளுமன்றத்தில் வாய்திறந்து பேசாத அழகிரிக்கு முழுச் சம்பளம். ஏனென்றால், அவர் முழுநேரப் பணியாளர்! நாள் முழுக்க புகை மூட்டத்தின் நடுவே அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால், இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்!

போராடினாலும் குற்றம் வாய்திறந்தாலும் குற்றம்

இத்தகைய சாமானிய மக்கள், தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் சென்னை நகரிலிருந்து விரட்டப்படுகிறார்கள்.  சிங்காரச் சென்னையை மேலும் அழகுபடுத்துவது என்ற பெயரில், கூவம் – அடையாறு கரையோரக் குடிசைகள் இடித்துத் தள்ளப்படுகின்றன.  இதை எதிர்த்து வாய் திறக்கக்கூடாதாம். ஏனென்றால், இது தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாம்.

சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்யுமாறு மிரட்டுதல், ஆட்களைக் கடத்திப் பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து முதலான பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் – போலீசுத்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் ஆணையிடுகிறார், கருணாநிதி.

ஆனால், மலைகளையே மொட்டையடிக்கும் கிரானைட் குத்தகைதாரர்கள் அடிக்கும் கொள்ளையைத் தனது விரலசைவில் வைத்துப் பாகம் பிரித்துக் கொள்கிற ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரியை மதுரையிலேயே அம்பலப்படுத்திய “தினபூமி” நாளேட்டின் ஆசிரியரையும் அவரது மகனையும் கைது செய்து பொவழக்குப் போட்டு மிரட்டுகிறது, தி.மு.க. அரசு.

குடியாத்தம் நகரில் மேல் ஆலத்தூர் ரோடு, பாட்டை புறம்போக்கில் நூறாண்டு காலமாகக் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர் என 36 குடும்பங்களின் வீடுகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆளும் கட்சி ரியல் எஸ்டேட் கும்பல் சமூக விரோதிகளுடன் வந்து சட்டவிரோதமாக இடித்துத் தள்ளி,  குடியிருப்பவர்களைக் கடுமையாகத் தாக்கி, அந்த இடத்தை வளைத்து வேலி போட்டுக் கொண்டுள்ளது.

இந்த அநியாயத்தை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சி.பி.எம். கட்சி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தியபோது, இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் முன்னணியாளர்களையும் தாக்கி, கைது செய்து சிறையிலடைத்துள்ளது, கருணாநிதி அரசு. சி.பி.எம். கட்சியின் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரான லதா, மொசைக் செல்வம் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 20 இலட்ச ரூபாய் கேட்டதாகப் பொப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கருணாநிதியின் ஆட்சியில் அநியாயத்துக்கு எதிராகப் போராடினாலும் வாய்திறந்தாலும்கூடக் குற்றம். கருணாநிதி அரசை விமர்சித்த தா.பாண்டியன், பழ.கருப்பையா வீடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இனவெறி அரசின் அட்டூழியத்தைக் கண்டித்துப் பேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான இயக்குநர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வெளிவர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம்-ஒழுங்கு தன் கடமையைச் செய்யும் என்று தி.மு.க. அமைச்சர் எச்சரிக்கிறார்.

அருகதையற்ற மார்க்சிஸ்டுகளின் ஆகாத வழி

“மே.வங்கத்தில் சத்துணவுப் பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் இங்கே மட்டும் நிரந்தரம் செய்யக் கோருவது ஏன்? அங்கே சத்துணவு, ரேஷன் கடைகளைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு, இங்கு போராட்டத்தைத் தூண்டுவது ஏன்?” என்று மார்க்சிஸ்டுகளை மடக்குகிறார் கருணாநிதி. “ஜெயலலிதாவின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள், இப்போது வாய்மூடி கிடப்பது ஏன்? சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்த அருகதையில்லை என்று சாடுகிறார்.

ஓட்டுக்கும் சீட்டுக்கும் பாசிச ஜெயலலிதாவின் காலடியில் கிடப்பதாலும், தாங்கள் ஆளும் மே.வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தனியார்மய-தாராளமயமாக்கலை விசுவாசமாகச் செயல்படுத்தி வருவதாலும் கருணாநிதியின் இந்தக் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளால்  வாய்திறக்க முடியவில்லை. மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தாங்கள் போராடி வருவதாகவும், சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும் சி.பி.எம். கட்சி அறிக்கை விட்டு அடங்கி விட்டது. இதுதான் கருணாநிதியின் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளின் பதிலடி. கருணாநிதி உபதேசிக்கும் அறவழிக்கு மாற்றாக சி.பி.எம். வைக்கும் ஆகாத வழி இதுதான். மார்க்சிஸ்டுகளை நம்பி போராட்டத்தில் இறங்கிய சத்துணவு ஊழியர்களோ அடக்குமுறைக்கும் பழிவாங்கலுக்கும் ஆளாகி அவமானத்தால் துடிக்கிறார்கள்.

தி.மு.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத அடக்குமுறைகள் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள போதிலும், பிழைப்புவாதத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் மூழ்கிக் கிடப்பதால் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் இவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் நடத்த முடியவில்லை. கண்டன அறிக்கைகள், அடையாள எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மேல் அவை முன்னேறுவதுமில்லை. எதிர்க்கட்சிகளின் செயலற்ற தன்மையால், ஒருபுறம் இலவசத் திட்டங்கள் மறுபுறம் அடக்குமுறை என கருணாநிதியின் குடும்ப ஆட்சி கேள்விமுறையற்று ஆதிக்கத்தை நிறுவிக் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!

‘‘அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக” அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா.  அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது.  இந்த நடவடிக்கைகள் மூலம், “இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத் தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்” உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது, இராக் போர் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொள்ளும் தந்திரத்தோடு, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்தார்.  இப்பொழுது இந்தப் படை விலக்கத்தைக் காட்டி, அமெரிக்க மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகத்  தம்பட்டம் அடித்துக் கொள்கிறார், அவர்.  ஆனால், இந்தப் படைவிலக்கம் குறித்த செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, இதுவொரு மோசடி நாடகம் என்பதைப் பாமரர்கள்கூடப் புரிந்து கொள்ளலாம்.

இராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிக்கப் படை அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப்படவில்லை.  இராக்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்துள்ள குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறது.  1990-இல் அமெரிக்கா இராக் மீது போர் தொடுத்தபொழுது, அமெரிக்கப் படைகள் குவைத் வழியாகத்தான் இராக்கிற்குள் நுழைந்தன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வெளியேற்றத்திற்குப் பிறகும் இராக்கில் 50,000 முதல் 70,000 துருப்புகள் வரை அடுத்த ஆண்டு வரை தங்கியிருப்பார்கள் என்றும், இத்துருப்புகள் ‘தீவிரவாதிகளை’ எதிர்த்துப் போராடுவதற்கு இராக் இராணுவத்திற்கு உதவி செய்வார்கள் என்றும் அறிவித்திருக்கிறது, அமெரிக்க அரசு.

அமெரிக்க அதிபர் வாக்களித்துள்ளபடி இத்துருப்புகள்கூட இராக் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டே விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அதனால் இராக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்துவிட்ட தாகக் கருதிவிட முடியாது.  ஏனென்றால், அமெரிக்க அரசால் இராக்கில் நுழைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தனியார் கூலிப் படைகள் வெளியேறுவது பற்றி ஒபாமா வாயே திறக்க மறுக்கிறார்.

இதற்கும் மேலாக, இராக் நாட்டை தனது நிரந்தர இராணுவத் தளமாக மாற்றும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.  இதன்படி, இராக்கிலுள்ள பாலாத் என்ற ஊருக்கு அருகே 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும், அல்-அஸாத் என்ற ஊருக்கு அருகே 17,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும் அமைத்து வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.  இந்த இரண்டு தளங்களையும் சேர்த்து, இராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக 94 இராணுவத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.

இதுவொருபுறமிருக்க, அமெரிக்க இராணுவத் தலைமை பீடமான பென்டகனின் திட்டப்படி, இராக்கிலிருந்து வெளியேறியுள்ள படைக்கு ஈடாக மற்றொரு படையை இராக்கில் இறக்கிவிட்டுள்ளது, அமெரிக்கா.  அரசு தந்திர நிபுணர்கள், பொருளாதார ஆலோசகர்கள், சமூக சேவகர்கள் என்ற போர்வையில் நுழைந்துள்ள இந்த அரசியல் படையின் கண்ணசைவிற்குத் தகுந்தபடிதான் இராக் பொம்மையாட்சி நடக்கும்.  இதற்குத் தகுந்தபடி இராக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் 800-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.  இன்னும் சொல்லப்போனால், இராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம்தான் அந்நாட்டில் ஆட்சி அதிகார மையமாக இருக்கும்.

அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த பிறகு, தனது மேலாதிக்க நலன்களுக்குத் தகுந்தவாறு படைபல ஒப்பந்தமொன்றை உருவாக்கியது.  இந்த ஒப்பந்தம்தான் இன்று இராக்கின் எழுதப்படாத சட்டத் தொகுப்பாக விளங்குகிறது.  இந்தச் சட்டத்தின்படி, இராக்கின் வான்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இராக்கிற்கு கிடையாது.  அந்த அதிகாரம் இந்த ஒப்பந்தத்தின் வழியாக அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இராக்கை நேரடியாக ஆக்கிரமித்த பின், அதன் எண்ணெய் வளத்தில் 60 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.  சதாம் உசேன் ஆட்சியின்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டிருந்த இராக்கின் எண்ணெய் வயல்களைத் தனியார்மயமாக்கி, அவற்றை அமெரிக்க எண்ணெய்க் கழகங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது என்ற உண்மை இந்தக் கைப்பற்றல் மூலம் மீண்டும் பளிச்சென அம்பலப்பட்டிருக்கிறது.

இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதற்கு அமெரிக்க முதலாளிகளுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம்தான், இராக்கின் சுதந்திரமாகவும் விடுதலையாகவும் புரட்டிக் கூறப்படுகிறது.  இராக்கில் நுழைந்துள்ள இந்த அமெரிக்க ஏகபோக எண்ணெய் கழகங்களின் சொத்துரிமையை, சுரண்டலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே, இராக்கின் அரசியல் சாசனச் சட்டமாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, இராக்கின் எண்ணெய் வயல்களுள் பெரும்பாலானவை அமைந்துள்ள குர்து இன மக்கள் வசித்து வரும் பகுதி, அதிக அதிகாரங்கள் கொண்ட மாகாணமாக உருவாக்கப்பட்டுள்ளது. சதாமை எதிர்த்து நீண்ட காலமாகப் போராடி வந்த குர்து இன மக்களுக்கு அரசியல் உரிமைகள்     அளிப்பது இதன் நோக்கமல்ல.  மாறாக, அங்குள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்றியுள்ள அமெரிக்காவின் வர்த்தகச் சுதந்திரத்தில் இராக்கின் மைய அரசு தலையீடு செய்வதைத் தடுப்பதுதான் இம்மாகாண சுயாட்சியின் நோக்கம்.

இராக் மக்களுக்கு இந்த ‘சுதந்திரத்தையும் விடுதலையையும்’ வழங்குவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுவரை ஏறத்தாழ 10 இலட்சம் இராக்கியர்களின் உயிரைப் பறித்திருக்கிறது; ஏறத்தாழ 50 இலட்சம் இராக்கியர்களை அகதிகளாக சொந்த நாட்டிலிருந்து துரத்தியடித்திருக்கிறது; ஏறத்தாழ 27 இலட்சம் இராக்கியர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கியிருக்கிறது; 1,000 டன்னுக்கும் அதிகமான செறிவுகுறைந்த யுரேனியம் அணுகுண்டுகளை அந்நாட்டின் மீது வீசி, அந்நாட்டையே நஞ்சாக்கியிருக்கிறது; தனது காலனியாதிக்க நலன்களுக்காக ஷியா – சன்னி – குர்து ஆகியோருக்கிடையே பிளவைத் தூண்டிவிட்டு மோதவிடுவதன் மூலம், சமூக அமைதியையே சீர்குலைத்துவிட்டது.

சதான் உசேன் சர்வாதிகார ஆட்சி நடத்தினார் என்றால், அவரைத் தூக்கிலிட்டுவிட்டு அமெரிக்கா இராக் மீது திணித்துள்ள ‘ஜனநாயக’ ஆட்சியோ பேராசை பிடித்த ஊழல் பேர்வழிகளின், சொந்த நாட்டையே கொள்ளையடிக்கும் மோசடிப் பேர்வழிகளின் கூடாரமாக இருப்பதை முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்தி வருகின்றன.

2,500 ஆண்டு கால பழமை வாய்ந்த மெசபடோமியா நாகரிகத்தின் வரலாற்றுச் சின்னங்களுள் பெரும்பகுதி, அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த மறுநிமிடமே களவு போய்விட்டன.  மீதி அமெரிக்கா மற்றும் நேடோ நாட்டுப் படைகளின் தாக்குதல்களால் குப்பை மேடாகிவிட்டன.  பாபிலோனில் உள்ள வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடமொன்றை அழித்துவிட்டு, அங்கே தனது இராணுவ தளத்தைக் கட்டியமைத்திருக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.  சிதைவடைந்து வரலாற்றுச் சின்னமாக இருக்கும் இடம்  அழிக்கப்பட்டு, அங்கே அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.  வரலாற்றுப் புகழ்வாய்ந்த வழிபாட்டுத் தலத்தை அழித்து, அதனிடத்தில் பதுங்கு குழிகளை அமைத்திருக்கிறது, போலந்து நாட்டுப் படை.  பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய இந்து மதவெறியைவிடக் கேடானது, குரூரமானது, காலனியாதிக்கவாதிகளின் இந்த வெள்ளையின வெறி.

***

அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தயாரித்துள்ள தேசியப் பாதுகாப்பு போர்த் தந்திரத் திட்டத்தின்படிதான் இராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி இன்று குவைத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறதேயொழிய,  அதற்கு அப்பால் இதில் இராக் மக்களின் நலனோ, அமெரிக்க மக்களின் நலனோ அடங்கியிருக்கவில்லை.

மேற்காசியாவில் இராக்கிற்கு அடுத்து இரானிலும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற திட்டத்தோடு அலையும் அமெரிக்கா, உலக மக்களிடம் தனது நோக்கத்தை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இரான் இரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இரான் மீது அடுத்தடுத்துப் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகிறது.

சமீபத்தில், இரானுக்கு எந்த நாடும் பெட்ரோல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்கக் கூடாதென்றும், இரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களை எந்தவொரு நாடும் கடலில் வழிமறித்துச் சோதனை செய்யலாம் என்றும் ஐ.நா. மூலம் கட்டளையிட்டுள்ளது, அமெரிக்கா. இரான் இதற்குப் பதிலடியாக, தனது கப்பல்கள் வழிமறித்துச் சோதனை செய்யப்பட்டால், ஹெர்மோஸ் ஜலசந்தி வழியாக மேற்குலக நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் தனது போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி இரானை அச்சமூட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது, அமெரிக்கா.

ஆப்கானில் நடந்துவரும் ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கா வெற்றி பெறமுடியாது என்ற உண்மையை ஆப்கானில் அமெரிக்கப் படைத் தளபதியாக இருந்த ஸ்டான்லி ஏ.மெக்கிறிஸ்டல் சமீபத்தில் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார்.  இதனால் அவரை ஆப்கானில் இருந்து தூக்கியடித்து இவ்வுண்மையை மூடிமறைக்க முயன்றார், ஒபாமா.  எனினும், இவ்வுண்மை இப்பொழுது வேறொரு வழியில் அம்பலமாகிவிட்டது.

அமெரிக்கா இராணுவத்தால் ஆப்கான் போர் பற்றி இரகசியமாக வைக்கப்பட்டிருந்த 76,000 ஆவணங்களை  விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் சமீபத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியது.  அந்த ஆவணங்களில் ஆப்கானில் அமெரிக்காவும் அதனின் கூட்டாளியான நேட்டோவும் நடத்தியுள்ள போர்க்குற்றங்கள் மட்டுமின்றி, ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்துவரும் போர் அந்நாட்டு மக்களின் ஆதரவோடு நடந்துவரும் உண்மையும் பதிவாகியிருக்கிறது.

இரான் மற்றும் சீனாவைக் கண்காணிப்பதற்கும், மத்திய ஆசியப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அந்நாடுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தைச் சுரண்டுவதற்கும் ஆப்கானில் ஒரு அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு உள்ளது.  இதனால் ஆப்கான் போரில் எப்படியாவது  வெற்றி பெற்றுவிட வேண்டும் என வெறியோடு அலையும் ஒபாமா, இப்பொழுது அங்கு புதிய செயல் உத்தியைக் கையாளத் திட்டமிட்டுள்ளார்.  இதன்படி, ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் நேடோ துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது; தேசிய சமரசத் திட்டம் என்ற பெயரில் தாலிபானின் ஒரு பிரிவோடு சமரசம் செய்துகொண்டு ஆப்கானில் அமைதியை ஏற்படுத்துவது என்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அமெரிக்கா.

இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி குவைத்திற்கு இடம் பெயர்ந்திருப்பதை இந்தப் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும்.  ஆசியக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ப படையணிகளை இடம்மாற்றி நிறுத்தியிருக்கும் இராணுவ உத்திதானே தவிர, இது படை விலக்கல் அல்ல.

எனினும், ஒபாமா தன்னைச் சமாதானத் தூதுவனாகக் காட்டிக் கொள்ளும் சாக்கில், இராக் போர் தவறானது என்றும் கூறி வருகிறார்.  இப்போர் தவறானது என்றால், இப்போருக்குக் காரணமான ஜார்ஜ் புஷ், டோனி பிளேர், ரம்ஸ்ஃபீல்டு உள்ளிட்ட அனைவரும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.  நாஜிக் குற்றவாளிகளைத் தண்டிக்க நூரம்பர்க் விசாரணை மன்றம் நிறுவப்பட்டதைப் போல இராக் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச விசாரணை மன்றம் ஏற்படுத்த ஒபாமா முன் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒபாமாவோ இதற்கு மாறாக, இராக்கை தனது மறுகாலனியாகத் தொடருவதற்கான – எந்த நோக்கத்திற்காக இராக் ஆக்கிரமிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்கான கட்டுமானத்தை உருவாக்குவதில்தான் அக்கறை காட்டுகிறார்.  இது அக்கருப்பின அதிபரின் கபடதனத்தைத்தான் அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

52
ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!
அம்பானியின் ஆன்டிலியா

“ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு”… என்று வாய்ப்பாடு படித்து கூட்டலையும், கழித்தலையும், அதன் சுருக்கங்களான பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு. சொத்துடைமையின் நதி மூலத்தை பின் தொடர்ந்தால் கண்ணுக்கு தெரியும் அந்த மாய மாட்ரிக்ஸ் உலகத்தை எந்த கணித வல்லுனனும் கட்டவிழ்க்க முடியாது. அது கணிதத்தின் தோல்வியா, கணிதத்தின் சட்டதிட்டங்களுக்கு அடங்காத ‘கலையா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டும்தான் மக்கள் வருவார்கள். மற்ற கணக்கெடுப்புகளெல்லாம் பங்குகளின் முதல்வோரைகளைத்தான் சுற்றி வரும். கணிதத்தில் கூட வர்க்க வேறுபாடு துல்லியமாக நிலவுகிறது என்பது கணிதத்தின் குற்றமா, கணக்கு பார்க்க தெரியாத இந்த தேசத்தின் குற்றமா?

எங்கும் இறைந்து கிடக்கின்றன புள்ளிவிவரங்கள். நோய், சாவு, பசி, பஞ்சம், பட்டினி முதலான விவரங்களால் சலித்திருக்கும் உங்கள் கண்களை கனவோடு மின்ன வைக்கும் புள்ளிவிவரங்களும் இந்த உலகில் உண்டு. கனவிலும் எட்ட முடியாத அந்த கனவுகளின் கணக்குகளை வெளியிடுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. கேள்விப் பட்டிருப்பீர்களே, உலகின் பணக்காரர்களது பட்டியல்களை….

ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்திருக்கும் மதிப்பீட்டின்படி 2014ஆம் ஆண்டில் உலகின் முதல் பணக்காரர் யார் தெரியுமா? அவர் முகேஷ் அம்பானி என்ற இந்தியன்தான் என்றால் உங்களுக்கு பெருமை இல்லையா? 70,000 கோடி ஊழல் பணமென்றாலும் காமன்வெல்த்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்தபோது நீங்கள் பெருமைப்படவில்லையா என்ன? தகுதி, தராதரம் பார்த்தெல்லாம் நாம் பெருமைப்படுவதில்லை எனும் போது உலக பணக்கார வரிசையில் முதலிடம் ஒரு இந்தியனால் நிரப்பப்படப் போகிறது என்றால் சாதரணமா என்ன?

அந்த வரலாற்று சிறப்பைப் பெறப் போகும் முகேஷ் அம்பானி தன் தகுதியை முன் ஊகித்திருப்பாரோ தெரியவில்லை. இல்லையென்றால் அவரது தகுதிக்கேற்ப இத்தகைய பிரம்மாண்டமான மாளிகையை ஏழு ஆண்டுகளாக கட்டியிருக்க மாட்டார். 5000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அந்த மாளிகை விற்பனைக்கு இல்லை என்பதால் உலகின் அதிக மதிப்பு வாய்ந்த வீடு என்று அதை புகழ முடியவில்லை என்று வருத்தப்படுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ஆனால் மதிப்பெல்லாம் விற்பனையின் சாம்ராஜ்ஜியத்தில் அடங்காது என்பது அந்த பத்திரிகைக்கு மட்டுமல்ல அம்பானிக்கும் தெரியும்.

சில ஆயிரங்களை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் மராட்டிய விவசாயிகள் வாழும் விதர்பாவின் தலைநகரான மும்பையில் ஒரு பில்லியன் டாலர் செலவில் அம்பானி கட்டிமுடித்து புதுமனைப் போகும் அந்த மாளிகையின் அருமை பெருமையெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.

27 மாடிகள், 9 உயருந்துகள், மாளிகையை பராமரிக்க 600 ஊழியர்கள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கும் தளங்கள், நீச்சல் குளங்கள், கண்ணாடிகளால் செதுக்கப்பட்ட உணவகம், அதி நுட்பமான திரையரங்கம், உடற்பயிற்சியகம், 160 கார்கள் நிறுத்துமிடம், கார்களை பழுதுபார்க்குமிடம், சிறு மருத்துவமனை, விருந்தினர் அறைகள், கருத்தரங்க அறைகள் கிட்டத்தட்ட அங்கு ஒரு மேட்டுக்குடி ஹைடெக் நகரமே இருக்கிறது. இந்த மாளிகையில் மூன்று குழந்தைகளோடு அம்பானி தம்பதியினர் தங்கப்போகும் இடத்தின் பரப்பளவு 5,00,000 சதுர அடிகள்….

தாராவி
மும்பையின் சேரி - தாராவி

பத்துக்குப் பத்து இடத்தில் பத்து ஏணிக் கட்டில்களை வைத்து பொந்துகளைப் போல பதுங்கி வழியும் சேரிகளின் நகரத்தில் அரபிக் கடலைப் பார்த்தவாறு எக்காளத்துடன் எழுந்து நிற்கிறது இந்த மாளிகை. உலகின் முதல் பணக்காரர் தங்கப் போகும் அந்த மாளிகையை பல்லாயிரம் தொழிலாளிகள் ஏழு ஆண்டுகளாக கட்டி இல்லை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு ஆஸ்திரேலியா நிறுவனமும் பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனமும் இந்த பெருமை மிகு இந்தியனது மாளிகையை கட்டி முடித்திருக்கின்றன.

அக்டோபர் 28 இல் திறக்கபட உள்ள இந்த மாளிகையின் பால் காய்ச்சும் நிகழ்விற்கு பிரதமர் மன்மோகன் சிங் வருகிறாராம். மத்திய அரசின் பட்ஜெட்டே ரிலையன்சின் அலுவலகத்தில் திருத்தப்பட்டு வெளிவரும் காலத்தில் பிரதமர் ரிலையன்சின் உரிமையாளர் வீட்டு திருவிழாவிற்கு வருவது பொருத்தமானதுதான். மத்திய அரசு கிராமத்து மக்களுக்கு வீடு கட்டிக்க கொடுக்கும் திட்டத்தின்படி வீடு ஒன்றுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை அறுபதாயிரம் மட்டும்தான். இதேதொகை அம்பானி வீட்டில் எச்சில் துப்பும் ஒரு கிண்ணத்தின் விலையருகே கூட வராது. விருந்தினர்களில் பிரதமரே இருப்பதால் மற்றவர்களை இங்கே நாம் பட்டியலிட வேண்டியதில்லை.

நடுத்தர வர்க்கத்தின் கனவில் முதலிடம் பிடிப்பது வீடுதான். அந்தக் கனவிற்காக படும் ‘துன்பங்களை, தியாகங்களை’ பாலுமகேந்திராவின் “வீடு” திரைப்படத்தில் கண்டு உருகாதவர் எவருண்டு? இல்லை “காணி நிலம் வேண்டும், பராசக்தி” என்று பாரதியின் படிமங்களில் மூழ்காதவர் யார்? குழந்தைகளைப் பெற்று வளர்த்து, ஒரு வீட்டைக்கட்டி முடித்துவிடுவதிலேயே வாழ்க்கை கழிந்துவிடுமென்றாலும் அந்த இன்பமான துன்பத்தை நடுத்தர வர்க்கம் விரும்பித்தான் செய்கிறது.

அந்த நடுத்தர வர்க்கம் பிறந்த நாளுக்கு விழா வைத்து கொண்டாடும் இந்த நாட்டில்தான், இதே நாட்டில்தான் பிறந்த தேதி கூட தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். ஒண்டுவதற்கு ஒரு ஓட்டையில்லாதா கூரை கிடைக்குமா என்று தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு சொந்த வீடு குறித்த கனவும் அதை நிறைவேற்ற அழைக்கும் வங்கிக் கடன்களும் பார்ப்பதற்கு உறுத்தலாக இல்லையா?

ஆனாலும் அம்பானியின் மாளிகை சாதாரண நடுத்தரவர்க்க கனவின் வெளிப்பாடு அல்ல. அது பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை பறைசாற்றும் ஒரு பிரகடனம். எனினும் அந்த மாளிகைக்கு அம்பானி வைத்த பெயர் ஆன்டிலியா. பொருள் என்ன? அட்லாண்டிக் கடலில் இருக்கும் ஒரு மர்மமான தீவின் பெயராம் அது. பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது. அதாவது அம்பானியின் ஆன்டிலியா, ஒரு மர்ம மாளிகை.

இந்திய முதலாளிகளிலேயே ஏமாற்று, மோசடி, அதிகார பலம், அரசியல் துஷ்பிரயோகம் அனைத்திலும் சாதனை படைத்து தனது பேரரசைக் கட்டியவர் செத்துப் போன அம்பானி. அவர் சேர்த்த சொத்து அனைத்தும் மொள்ளமாரி, முடிச்சவிக்கி வழியில் வந்ததுதான். அம்பானி வளர்ந்த கதையில் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க முடியாது. ஆக அந்த வரலாற்றுக்கு உகந்த விதத்தில்தான் இந்த மர்ம மாளிகைக்கு ஆன்டிலியா பெயர் பொருத்தமாகவே இருக்கிறது.

விரைவில் ஆன்டிலியா மாளிகையின் அருமை பெருமைகள் குறித்து கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியடலாம். ஊடகங்கள் அதன் சிறப்புகளை வியந்தோதி வரும் நாட்களில் பொழிப்புரை செய்திகளை தரலாம்.

ஆன்டிலியா உருவான விதம் குறித்த புள்ளி விவரங்கள் தினசரிகளை நிரப்பலாம். ஆனாலும் ஆன்டிலியாவின் பின்னே தூக்கில் தொங்கிய விவசாயிகளின் புள்ளிவிவரங்களும் இருக்கத்தான் செய்கின்றது. மதிப்பு பெறும் புள்ளிவிவரம் எதுவென்று சொரணை வரும்போது ஆன்டிலியாவின் மதிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.  அதுவரை புள்ளிவிவரங்கள் ஆபாசமாக ஆட்டம் போடும். இரசிப்பீர்களா, காறி உமிழ்வீர்களா?

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?

திருப்பூர் உண்ணாவிரதம்
பருத்தி நூலிழை விலையேற்றத்தை எதிர்த்து உண்ணாவிரதம். படம் thehindu.com

இந்தியாவின் முக்கியமான தொழில்துறையும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுமான ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பருத்தி நூலிழையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதே இந்த நெருக்கடிக்குக் காரணம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கேண்டி (350 கிலோ) 23,000 ரூபாயாக இருந்த பஞ்சின்  (சங்கர் 6 என்ற பருத்தி ரகம்)சந்தை விலை, இன்று 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

பருத்தி விலை உயர்வின் விளைவாக நூல் விலையும் உயர்ந்திருக்கிறது. பருத்தி விலை உயர்வைக் காரணம் காட்டி நூற்பாலை முதலாளிகள், நூலின் விலையை மேலும் கூட்டி விற்பதால் ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த வரைமுறையற்ற விலையுயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கைத்தறி நெசவாளர்களும், சிறு விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும்  உண்ணாவிரதப் போராட்டங்களையும், தொழில்நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்திய ஜவுளித்தொழில் சம்மேளனம், தென்னிந்திய ஜவுளி ஆலைச் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முதலான பெரும் ஆலை அதிபர்களின் சங்கங்கள், பஞ்சு விலையைக் குறைக்கும் பொருட்டு பஞ்சு ஏற்றுமதிக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முதலாளிகளின் கோரிக்கை மனுவை அப்படியே நகல் எடுத்து அதன் கீழே கையொப்பமிட்டு, செப்.23 அன்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், கருணாநிதி.

பஞ்சையும், நூலையும் ஏற்றுமதி செய்து விட்டால், துணியையும் ஆயத்த ஆடையையும் நாங்கள் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே இந்த ‘சுதேசிகளின்’ கவலை.

இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த பருத்தி (பஞ்சு) உற்பத்தி 295 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 170 கிலோ). இதில் இந்திய மில்களின் தேவை 270 இலட்சம் பேல்கள். இதில் தமிழகத்திலுள்ள நூற்பாலைகளின் தேவை மட்டும் 100 இலட்சம் பேல்கள். உள்நாட்டு மில்களின் தேவைக்கு அதிகமாகப் பஞ்சு உற்பத்தியாகியிருக்கிறது என்ற போதிலும் பஞ்சின் விலை உயர்ந்து விட்டதால், ஏற்றுமதிக்குத் தடை விதிக்குமாறும், ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் மீது ஒரு கேன்டிக்கு 10,000 ரூபாய் சுங்கத்தீர்வை விதிக்குமாறும் கோருகிறார்கள், இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள்.

சந்தைதான் விலையை முடிவு செய்யும் என்றும், பருத்தி விலை குறைவாக இருக்கும் போது ஆதாயம் அடைந்த ஆலை அதிபர்கள், இப்போது விலை உயர்வால் விவசாயிகள் பயனடையும் போது அதைத் தடுப்பது நியாயமல்ல என்று விவசாயிகளின் நண்பனைப் போல முழங்குகிறார்கள், முன்பேர வர்த்தகம் நடத்தும் சூதாடிகள்.

“பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் விவசாயிகளைச் சென்றடையவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளதால், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் இப்போதே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்டின் துவக்கம் முதல் பருத்தி ஏற்றுமதியின் மீது இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டதால், வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்  என்று சூதாடிகளைச் சாடுகிறார், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் தலைவர், ஏ.சக்திவேல்.

எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான்.  ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.

இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.

சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் சீனாவில் ஜவுளிக்கான உள்நாட்டுச் சந்தை விரிவடைந்திருப்பது,  டாலருக்கு எதிராக சீன நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்ற பல காரணிகளால் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இந்திய ஜவுளித்துறை தற்போதைய மதிப்பான 3.27 லட்சம் கோடியிலிருந்து 2020-இல் 10.32 லட்சம் கோடிகளாக உயரும் என்றும் நாக்கில் நீர் சொட்டக் காத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இந்தக் கொள்ளை இலாபத்தை அறுவடை செய்வதற்குப் போதுமான பருத்தி குறைந்த விலையில் தங்களுக்குத் தேவைப்படுவதைத்தான், ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் ‘உள்நாட்டுத் தேவை’ என்று சித்தரிக்கின்றன.

நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.

தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள்.  பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

குமரன்-பத்மநாபன்-ஜெகத்-கஸ்பர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்குப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மூலமாக தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் கிறித்துவப் பாதிரியான ஜெகத் கஸ்பாரும் உதவியதாகவும், அவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இது குறித்துப் பேசி ஒரு திட்டம் தயாரித்ததாகவும், இதை ஏற்கக் கூடாது என்று புலிகளிடம் வலியுறுத்தி வைகோவும் நெடுமாறனும் இதற்குத் தடையாக இருந்ததால்தான் போர் நிறுத்தம் வராமல் போனது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சிகளுக்கு நல்ல பெயராகி தேர்தலில் சாதகமான நிலையைத் தோற்றுவித்துவிடும் என்று கருதி புலிகளின் முடிவை வைகோ மாற்றியதாகவும், தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுக்க முடியும் என்று வைகோ புலிகளிடம் கூறியதாகவும் கே.பி. குறிப்பிடுகிறார்.

பாதிரியார் ஜெகத் கஸ்பாரும் 2009 ஜனவரி இறுதியில் இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டது உண்மைதான் என்கிறார். இந்திய அரசின் சார்பில், புலிகளின் தலைவரான பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய – பிரபாகரனின் சார்பில் பேசும் தகுதியுடைய நடேசனோடு தொடர்பு கோரப்பட்டதாகவும், ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் (Intention to Lay Down Arms) மட்டுமே அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனை என்றும் அவர் கூறுகிறார். இதை புலித் தலைமையிடம் தெரிவித்த கஸ்பாரிடமே, நீங்களே ஒரு மாதிரி வரைவு (draft) தயாரித்து டில்லிக்காரர்களுக்குச் சம்மதமா என்று கேட்டுச் சொல்லுமாறு புலித் தலைமை கூறியதாம். அதன்படி ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டின்படி கஸ்பார் ஒரு வரைவு தயாரித்தாராம். இந்த வரைவினை இருதரப்பும் ஏற்றுக் கொண்ட பிறகு, புது டில்லி உயர் அதிகாரி ஒருவரோடு நடேசன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினாராம். பின்னர் அது முறிந்துவிட்டதாம். போர் நிறுத்தத்திற்கான அந்த வாய்ப்பு ஏன் தவறவிடப்பட்டது என்ற காரணத்தை நடேசன் சொல்லவில்லை என்கிறார் கஸ்பார்.

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுற்ற பிறகு, களத்தில் நின்ற பலருடன் விவாதித்த போது கஸ்பாருக்குப் பல உண்மைகள் தெரிய வந்ததாம். ” காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் தங்கள் கூட்டணிதான் வெல்லப் போகிறது, கொந்தளிக்கும் தமிழக மக்கள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றெல்லாம் புலிகளை எச்சரித்து, “ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியிருக்க வேண்டிய ஒரு வாழ்வா-சாவா கட்டத்தில் தங்கள் அரசியல் கணக்கு வட்டத்திற்குள் போராட்டத்தை வளைத்து, போராட்டத்தின் கட்டளைக் கட்டமைப்பு (Command Structure) அழிக்கப்பட காரணமாக இருந்துள்ளார்கள்” என்று வைகோவையும் நெடுமாறனையும் குற்றம் சாட்டுகிறார், கஸ்பார்.

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவர்கள் இப்படிக் கூறுவதில் ஏதாவது உண்மையிருக்கிறதா? சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்குப் பல்வேறு உதவிகளும் செய்து போரை வழிநடத்திய இந்தியா, போர் நிறுத்த முயற்சி செய்ததாகக் கூறுவதை நம்பத்தான் முடியுமா? இது பற்றி இந்திய அரசோ, ராஜபக்சே அரசோ வாய்திறக்காத நிலையில், இந்திய உளவுத்துறைக்கு அப்பாற்பட்டு கே.பி.யும் கஸ்பாரும் போர்நிறுத்தத் திட்டத்தைத் தயாரித்ததாகக் கூறும் கோமாளித்தனத்தை ஏற்கத்தான் முடியுமா?

மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்தியபோதிலும், தமிழகத்தில் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்ந்த போதிலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது, போர் நிறுத்தத்தைக் கோரவும் முடியாது என்றுதான் இந்திய ஆட்சியாளர்கள் கூறிவந்தனர். அதேசமயம், இந்திய இராணுவ மற்றும் இந்திய உளவுப்படையான “ரா” வின் அதிகாரிகள் முள்ளிவாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்தனர். தேர்தலையொட்டி தனது உண்ணாவிரத நாடகத்தின் விளைவாக போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று கருணாநிதி ஆரவாரம் செய்தார். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மட்டுமே நிறுத்தியிருக்கிறோம், இது போர் நிறுத்தம் அல்ல என்று இலங்கை அரசு அழுத்தம் திருத்தமாக அறிவித்தது.  அதுவும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும்வரைதான் நீடித்தது. அதன் பிறகு, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி முழுவீச்சில் இறுதித் தாக்குதலை சிங்கள பாசிச அரசு கட்டவிழ்த்துவிட்டு உலகின் மிகக் கொடியதொரு இனப்படுகொலையை அரங்கேற்றியது.

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியோ பிரதமர் மன்மோகன் சிங்கோ போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேச மறுத்துவிட்ட நிலையில், இவற்றுக்குத் தொடர்பே இல்லாத நிதியமைச்சரான ப.சிதம்பரம் வழிகாட்டுதலில் போர் நிறுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக கஸ்பார் கூறுவது அண்டப்புளுகு அன்றி வேறன்ன? கோயபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப இந்தப் பொயைச் சொல்வதன் மூலம் காங்கிரசு மற்றும் கருணாநிதி மீது ஈழ மற்றும் தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் வெறுப்பையும் திசைதிருப்புவதே இந்த கீழ்த்தரமான முயற்சியின் நோக்கம். இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறுவதன் மூலம், கருணாநிதியைப் பாதுகாப்பது மட்டுமல்ல; இலங்கை அரசு போர் நிறுத்தத்துக்கு தயாராக இருந்ததைப் போலவும், புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துச் சரணடைந்திருந்தால், முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தவிர்த்திருக்க இயலும் என்பதைப் போலவும் ஒரு புதுக்கதையைக் கிளப்புவதன் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்த்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

வைகோ, நெடுமாறன், சீமான் முதலானோர் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று புலிகளுக்கு நம்பிக்கையூட்டியவர்கள்தான். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, சீனாவின் கூட்டாளியான ராஜபக்சே கும்பலை நம்பி ஏமாறக் கூடாது என்று உபதேசித்து இந்திய அரசை இன்னமும் தாஜா செய்பவர்கள்தான். இருப்பினும், இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட கொலைகார ராஜபக்சே கும்பலைப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்றும், ஈழப் படுகொலைக்கு இந்தியாவும் காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போர் நிறுத்தக் கதை அவிழ்த்து விடப்படுகிறது. இந்தக் கதையை இன்று இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் பட்சத்தில் அதை நம்புவதற்கு ஆளிருக்காது. அதன் பொருட்டுத்தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யை ஊடகங்களின் முன் கொண்டுவந்து நிறுத்தி, இப்படி ஒரு பொய்யை உலகுக்குச் சொல்ல வைத்திருக்கிறது, இலங்கை அரசு.

ஈழப்போரின் போதே சிங்கள பாசிச அரசுக்கு ஆதரவாகத் தமிழக ஊடகவியலாளர்களை விலைபேசி இலங்கை அரசின் மீது நல்லெண்ணத்தைப் பரப்பும் வேலையை அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றிய அம்சா மூலமாக ராஜபக்சே கும்பல் நடத்தி வந்தது. போருக்குப் பின்னர் “இந்து” நாளேட்டின் ஆசிரியரான ராம் மற்றும் பிறரைக் கொண்டு நிவாரணப் பணிகள் சிறப்பாக நடப்பதாகக் காட்டி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சிகள் நடந்தன. பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும், சினிமா நடிகர்களின் சுற்றுப்பயணமும் அரங்கேற்றப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரியில் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்ததுவதென்றும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இது, இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து தொடுக்கத் தொடங்கியிருக்கும் உளவியல் யுத்தம். இந்திய மேலாதிக்கத்தால் கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம், இத்தகைய வதந்திகளைப் பரப்புவதற்குத் தோதான பலவகையான சக்திகளை ஈழத் தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவித்திருக்கிறது. இவர்களின் மூலம் துயரத்தில் வீழ்ந்திருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் பரப்பி, அவர்களை அரசியல் ரீதியாகவும் சரணடைய வைப்பதே ராஜபக்சே அரசின் நோக்கம்.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!

32

கம்ப்யூட்டரில் அச்சடிக்கப்பட்ட அந்தக் காகிதத்தையே மைக் பார்க் (Mike Park) என்னும் கொரிய நாட்டைச் சேர்ந்த அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் காகிதத்தையே பார்த்தான். அதிலுள்ள வாசகங்களையே திரும்பத் திரும்ப படித்தான். ஆச்சர்யமும், வெறுமையும், அவமானமும் கலந்த உணர்ச்சி அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் ஆயுளில் ஒருமுறை, ஒரேயொரு முறை கூட இதுபோன்ற காகிதத்தில் அவன் கையெழுத்து போட்டதில்லை. வேலைநீக்க உத்தரவு, சம்பள வெட்டு ஆகிய ஆணைகளில் மட்டுமே இதுவரை கையெழுத்திட்டவன், முதல்முறையாக தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து கையெழுத்து போட்டிருக்கிறான்.

அடுத்து வரும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில் தான் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். நினைக்கும்போதே மைக் பார்க்குக்கு  ஜுரம் கண்டது.

‘ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள்’ என்று இதுவரை அவன் கேள்விப்பட்டதுமில்லை. நிர்வாகவியல் தொடர்பாக அவன் படித்த பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற ஒரு பாடம் எப்போதேனும் நடத்தப்பட்டதா? மூளையை கசக்கிப் பார்த்தான். விடை கிடைக்கவேயில்லை.

அதுமட்டுமல்ல, தமிழகத்திலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இதுபோன்ற எழுச்சிமிக்க தொழிலாளர்கள் போராட்டங்கள் நடந்ததாகவோ அவை வெற்றி பெற்றதாகவோ அவன் அறிந்ததேயில்லை. அதுபோன்ற எந்த சம்பவமும் அவன் பார்வைக்குக் கூட வந்ததில்லை. மறுகாலனியாதிக்கத்துக்காக நெகிழ்த்தப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை இப்படி ஒன்றிணைந்து தொழிலாளர்கள் அனைவரும் முறியடித்து விட்டார்களே என உள்ளுக்குள் குமுறினான்.

அலுப்பும், சோர்வும் ஒருசேர அவனை ஆட்கொண்டது.

தான் கையெழுத்திட்ட காகிதத்தை பார்த்துவிட்டு தொழிற்சாலையின் வெளியே தொழிலாளர்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்வார்கள் என்று கற்பனை செய்துப் பார்க்க முயன்றான். நிரந்தர தொழிலாளர்களை கட்டிப் பிடித்தபடி ஒப்பந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் கண் கலங்குவார்களா? வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு ஆராவாரத்துடன் திரும்புவார்களா?

இருக்கும். இப்படியான காட்சிகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெருமூச்சு விட்டான்.

இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விதான் அவனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு நெருக்கியது. முழி பிதுங்கியபோதும் விடையேதும் அவனுக்கு கிடைக்கவில்லை.

____________________________________

1969ம் ஆண்டு கொரியாவில் தொடங்கப்பட்ட ‘அனில் டியூப்’ (Hanil Tube) நிறுவனத்தை ஒருவகையில் ஹுண்டாய் கார் தொழிற்சாலையின் சகோதர நிறுவனம் என்று சொல்லலாம். ஹுண்டாய் மோட்டார் வாகனத்துக்கு பயன்படும் பெட்ரோல் – டீசல் டியூப், டிஸ்க் பிரேக் லைனில் வரும் மிகச் சிறிய துளை கொண்ட பைப்கள் ஆகிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதுதான் இந்த நிறுவனத்தின் பணி.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ‘பண்டி பைப் இந்தியா’ என்ற பெயரில் பல்லாண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்கார்ட் தொழிற்பேட்டை வளாகத்தில், 2007ம் ஆண்டு முதல் ‘அனில் டியூப்’ என்ற புதிய பெயருடன் ஹுண்டாய் கார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்க ஆரம்பித்தது.

இந்த தொழிற்சாலையின் டைரக்டராக பதவியேற்று கொரியாவிலிருந்து விமானம் மூலம் வந்து இறங்கியவன்தான் மைக் பார்க்.

‘பண்டி பைப் இந்தியா’ நிறுவனத்தில் பணி புரிந்து வந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாளர்கள் என அனைத்து பிரிவு தொழிலாளர்களும் அப்படியே ‘அனில் டியூப்’ நிறுவனத்தின் தொழிலாளர்களாக மாற்றப்பட்டார்கள். அவர்களது முந்தைய அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டதன் மூலம், ‘புதிய தொழிற்சாலையில்’ பணிபுரிவதை தொழிலாளர்கள் ஏற்கும்படி ‘அனில் டியூப்’  பார்த்துக் கொண்டது. டைரக்டர், மேனேஜிங் டைரக்டர், ஜெனரல் மேனேஜர் என குறிப்பிட்ட சில பதவிகளை மட்டும் கொரிய நாட்டவர்கள் ஆக்கிரமிக்க, எஞ்சிய மேலாளர் பதவிகள் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இத்தொழிற்சாலையில் 25 நிரந்தர பணியாளர்களும், 40 பயிற்சியாளர்களும், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிகிறார்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் மாதம் ரூபாய் 15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம். மற்றவர்களுக்கு குறைவுதான். குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள், அவர்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் சம்பளம் வெறும் ரூபாய் 4 ஆயிரம்தான்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், லோடிங், அன்லோடிங், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசாங்கத்திடம் சொல்லிவிட்டு அவர்களை நேரடியாக உற்பத்தியில் ‘அனில் டியூப்’ ஈடுபடுத்தி வருவதுதான். அதாவது நிரந்தர தொழிலாளர்கள் என்ன வேலை செய்கிறார்களோ, அதே வேலையைத்தான் ஒப்பந்த தொழிலாளர்களும் செய்கிறார்கள். ஆனால், ஊதிய வேறுபாடு மட்டும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

அதுபோலவே முதல் ஷிப்டில் பணிக்கு வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு காலை சிற்றுண்டி உண்டு. பயிற்சியாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இந்தச் சலுகை கிடையாது. மதிய உணவிலும் தொழிலாளர்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்த்து தொழிலாளர்களால் குரல் கொடுக்க முடியாது. காரணம், சங்கம் வைக்க நிர்வாகம் தடை செய்திருக்கிறது. ஆறு பேர் கொண்ட ‘ஒர்க்கிங் கமிட்டி’யிலும் இருப்பவர்கள், கருங்காலிகள்; நிர்வாகத்தின் கைக் கூலிகள்.

200க்கும் அதிகமான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், மூன்று ஒப்பந்ததாரரின் கீழ் வருகிறார்கள். ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழும், கீவனூர், காட்ராம்பாக்கம், பென்னாலூர் தண்டலம் ஆகிய கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கிஷோர் என்ற ஒப்பந்ததாரரின் கீழும் வருகிறார்கள். இவர்களில் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் வரும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்ட பெண் தொழிலாளர்கள். எஞ்சியிருக்கும் விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் வட மாநிலத்தை, குறிப்பாக ஓரிசா, பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் மட்டுமல்ல, அவர்கள் நேரடியாக தொழிற்சாலை நிர்வாகத்தோடு தொடர்புடையவர்கள் இல்லை என்பதற்கும், தொழிற்சங்கம் கட்டாமல் இருப்பதற்கும் இந்த ஒப்பந்ததாரர் முறை உதவுகிறது. இன்று இந்தியாவின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இதுதான் நடைமுறை.

____________________________________________________

இந்நிலையில்தான் 2009ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை அம்பத்தூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதற்காக ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே தோழர்கள் ஆவடி – அம்பத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு தொழிலாளரின் வீட்டுக்கும் சென்று தோழர்கள் பேசினார்கள். மாநாட்டின் அவசியம் குறித்த துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்கள்.

இந்த வகையில் ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ‘அனில் டியூப்’ நிறுவனத்தில் பணிபுரிந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாள தொழிலாளர்களின் இல்லங்களுக்கும் பிரச்சாரம் சென்றது. குறித்த நாளில் மாநாடு நடந்து முடிந்தது. ஆனால், ‘அனில் டியூப்’ நிறுவன தொழிலாளர்கள் மாநாட்டுக்கு வரவில்லை.

இடையில் தொழிற்சங்கம் அமைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டு பிரபலமான ஓட்டுக் கட்சிகளது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் அணுகினார்கள். சொல்லி வைத்தது போல் அனைத்து சங்கங்களும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சங்கம் கட்ட முடியாது. 25 நிரந்தர தொழிலாளர்களுக்காக சங்கம் உருவாக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.

நிரந்தர தொழிலாளிகளிடம் சங்கம் கட்டினால் சட்டபூர்வ பாதுகாப்பு உண்டு என்பதால் அவர்களிடம் தொழிற்சங்கம் கட்டி, தரகர் வேலை பார்த்து, சந்தாக்கள் வசூலித்து மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா தொழிற்சாலைகளிலும் நிரந்தரத் தொழிலாளிகள் சிறுபான்மையினராகவும், ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையினராகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை காயடிப்பதற்காக இந்த அணுகுமுறை எல்லா நாடுகளிலும் முதலாளிகளால் பின்பற்றப்படுகின்றது.

இதற்கிடையில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கும் பலர், தங்கள் ஒப்பந்ததாரரை அணுகி பணி நிரந்தரம் செய்யும்படி கோரினார்கள். ஒப்பந்ததாரர்கள் அவர்களை கடுமையாக திட்டி, ‘இருக்கற வேலையை காப்பாத்திக்கப் பாருங்கடா’ என விரட்டியடித்திருக்கிறார்கள். சரி, நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம் என்று சென்றார்கள். அங்கு அவர்களுக்கு ‘எதுக்குடா பணி நிரந்தரம்? அதுதான் ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றாங்கல… கலைஞர் காப்பீடு திட்டம் மூலமா மருத்துவம் பார்த்துக்கறீங்கல… இலவச கலர் டிவி கிடைக்குதுல… இதுக்கு மேல என்னடா வேணும்…’ என்று பதில்தான் கிடைத்தது.

அனைத்து கதவுகளும் இப்படி மூடப்பட்ட நிலையில்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நினைவுக்கு வந்தது.

அன்றைய தினம் பணி முடித்து வீடு திரும்பியவர்கள், ஒன்பது மாதங்களாக தாங்கள் பாதுகாத்து வந்த பிரசுரத்தை எடுத்தார்கள். அதில் இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார்கள். குறிப்பிட்ட இடத்தில் அவர்களை தோழர்கள் சந்தித்தார்கள். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்கள். உடனடியாக சங்கம் ஆரம்பித்தால் பெரிய அளவில் பணி இழப்பு ஏற்படும். அதை தொழிலாளர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், தோழர்களை தொடர்பு கொண்ட நிரந்தர தொழிலாளர்கள், தங்களுக்காக மட்டும் பேசவில்லை. பயிற்சியாளர் – ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோருக்காகவும் பேசினார்கள் என்பதுதான்.

சட்டரீதியான தோழர்களின் ஆலோசனைகள், நிர்வாகத்துடன் மோதும் போக்கில் பெரிய அளவு வெற்றி பெற்றது. இதனையடுத்து பு.ஜ.தொ.மு மீது அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை பிறந்தது.

_______________________________________________

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயிற்சியாளர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருந்து நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுபவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி Tamilnadu Industrial Establishments (Conferment & Permanent Status to workmen) Act, 1981ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக தொடர்ந்து அவர்கள் 45 நாட்கள் உற்பத்தியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ரகசியமாக, நிர்வாகம் கவனிக்காதபடி திரட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

இந்த ஆதாரங்களை காஞ்சிபுர மாவட்ட தொழிலாளர் ஆய்வாளரிடம் சமர்பித்ததுடன் வழக்கும் தொடரப்பட்டது. இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட நிர்வாகம், முன்னணியாக இந்த விஷயத்தில் செயல்பட்ட 5 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அதிரடியாக வேலை நீக்கம் செய்தது. இவர்கள் அனைவருமே 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பவர்கள்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இப்படி வேலை நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என்று நிர்வாகத்துக்கும், தொழிலாளர் ஆய்வாளருக்கும் கடிதம் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. அத்துடன் ‘வழக்கு தொடர்ந்தவர்கள் யாருமே கையெழுத்திடவில்லை… அவர்கள் சார்பாக யாரோ போலியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள்’ என வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஆலோசனைகளை தொழிற்சாலை ஆய்வாளர் நிர்வாகத்திடம் வழங்கினார்.

இதையெல்லாம் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ந்துப் போனார்கள். நிர்வாகமும், ஒப்பந்ததாரமும், அரசு அதிகாரிகளும் இப்படி கைக் கோர்த்து கள்ளக் கூட்டணியில் ஈடுபடுவார்கள் என தோழர்கள் சொன்னதை நேரடியாக பார்த்த அவர்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றார்கள்.

இந்நிலையில் பணி நிரந்தர வழக்கு செப்டம்பர் 27 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் நேரடியாக விசாரணையில் கலந்துக் கொண்டு பேசினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகமும், தொழிலாளர் ஆணையரும் திகைத்தார்கள். வழக்கை தள்ளி வைத்தார்கள்.

இப்போது நிர்வாகம் நிச்சயம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என்பது தெளிவாயிற்று. அதற்கு தகுந்தாற்போல இரண்டு பயிற்சியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் போதே, பாதி ஷிப்டில், பணி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட சில ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் இதேபோல் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை தொழிலாளர்களும் புரிந்துக் கொண்டார்கள்.

அக்டோபர் மாதம் பிறந்தது. ‘இதோ இன்று… இல்லை இல்லை நாளை…’ என ஒவ்வொரு நாளும் நெருப்பின் மீது அமர்வது போல் தொழிலாளர்களுக்கு அமைந்தது. இப்படியான உளவியல் போராட்டங்களுடனேயே ஆறு நாட்கள் கழிந்தது. அக்டோபர் 7ம் தேதி அதிகாலை –

ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவடி – அம்பத்தூர் பிக்கப் பாயிண்டிலிருந்து முதல் ஷிப்டுக்காக பேருந்தில் ஏறினார்கள். பூந்தமல்லியை தாண்டியதும் அப்பேருந்தை காரில் வந்த ஓய்.சின்னையா, வழிமறித்து நிறுத்தினான். பேருந்தில் ஏறியவன், குறிப்பிட்ட 7 ஒப்பந்தத் தொழிலாளர்களை இறங்குமாறு கட்டளையிட்டான். ‘பணி நிரந்தரமாடா கேட்குது? இன்னிலேந்து உங்களுக்கு வேலையே கிடையாதுடா…’ என கொக்கரித்தான். இத்தகைய கைக்கூலி வேலைக்குத்தான் ஒப்பந்ததாரர்கள் முதலாளிகளிடம் சன்மானம் பெறுகிறார்கள்.

இந்தச் செய்கையால் அதிர்ந்துப் போன நிரந்தர தொழிலாளர்கள், உடனே கைப்பேசி வழியே தோழர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக அன்றைய தினம் காலை 11 மணிக்கு தொழிற்சாலை ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. சரியான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இரண்டாவது ஷிப்டுக்கு வரும் சில ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல் கிடைத்தது. இதை தடுக்க ஒரே வழி உள்ளிருப்பு போராட்டம்தான் என முடிவு செய்து, தொழிலாளர்களுக்கு தகவல் அனுப்பிய கையோடு இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்துக்கு தோழர்கள் வந்தார்கள். ‘அனில் டியூப்’ தொழிற்சாலையின் வாசலில், கேட்டுக்கு வெளியே, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும் நின்று கொண்டார்கள்.

முதல் ஷிப்ட் முடிந்து, இரண்டாவது ஷிப்ட் தொடங்கும்நேரத்தில் 18 தொழிலாளர்களை எதனால் நீக்கினார்கள் என அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து நிர்வாகத்திடம் கேட்பது. உரிய பதில் கிடைக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தொழிலாளர்கள், தோழர்களது வழிகாட்டுதலுடன் முடிவு செய்தார்கள்.

அதன்படியே அக்டோபர் 7 அன்று மதியம் 3 மணிக்கு அனைத்து தொழிலாளர்களும் நிர்வாகத்தை அணுகி கேட்டார்கள். எதிர்பார்த்தது போலவே சரியாக பதில் சொல்லாமல் நிர்வாகம் அவர்களை அலட்சியப்படுத்தியது.

உடனே மதியம் 3.30 மணிக்கு நிரந்தர தொழிலாளர்களும், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மொத்தம் 100 தொழிலாளர்கள். முதல் ஷிப்ட் முடிந்து வெளியேறுபவர்களை தடுத்தும், இரண்டாவது ஷிப்டுக்கு வரும் தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு உள்ளே அனுமதிக்காமலும் வழிமறித்து அமர்ந்து போராட ஆரம்பித்தார்கள்.

hanil tube - அனில்-டியூப்-முதலாளிகளை-வீழ்த்திய-தொழிலாளர்கள்

இவர்களால் என்ன செய்ய முடியும் என நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட நிரந்தர தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்த கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளார்களை அடுத்து சந்தித்தார்கள். ‘இந்தப் போராட்டத்தை நாங்கள் எங்களுக்காக நடத்தவில்லை. உங்களுக்காகத்தான் நடத்துகிறோம். உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்க வேண்டுமென்றுத்தான் போராடுகிறோம். இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார்கள்.

ஆண் ஒப்பந்தத் தொழிலாளார்கள் கூடிப் பேசி முடிவு எடுப்பதற்குள் –

கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் யோசிக்காமல் வந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.இதைப் பார்த்த ஆண் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தைரியம் பிறந்தது. அவர்களும் வந்து கலந்துக் கொண்டார்கள்.

‘வீக்கர் செக்ஸ்’ என்று கூறப்படும் பெண்ணினத்தை சேர்ந்த அந்த தொழிலாளிகள் கேட்ட மாத்திரத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வேலை நிறுத்தத்தில் உடன் கலந்து கொண்டார்கள். பெண் தொழிலாளர்களின் அந்த உறுதி சற்றே ஊசலாட்டத்தில் இருந்த சில ஆண் தொழிலாளிகளை திருத்தியிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இப்படியாக பாலினம் தாண்டி வர்க்க ஒற்றுமை எழுந்தது.

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரிந்தவர்கள், விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேசினார்கள். நிலமையை புரிய வைத்தார்கள். இதனையடுத்து அவர்களும் வந்து போராட்டத்தில் பங்கேற்றார்கள். ஆக தேசிய இனங்களையும் தாண்டி அந்த தொழிற்சாலையில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தார்கள்.

இப்போது நிர்வாகத்தினரையும், 6 கருங்காலிகளையும் தவிர வேறு யாருமே தொழிற்சாலைக்குள் இல்லை. இப்படியொரு மாற்றத்தை முற்றிலும் எதிர்பார்க்காத நிர்வாகம், உள்ளூர் காவலர்களையும், ஊராட்சி மன்றத் தலைவரையும் அழைத்தது.

இப்படி அழைப்பார்கள் என முன்பே  தோழர்கள் தொழிலாளார்களிடம் சொல்லியிருந்தார்கள். எனவே போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் தொழிலாளர்கள் – அவர்களில்  சிலர் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் – தங்கள் கைப்பேசி வழியே தலைவரை தொடர்பு கொண்டு, தங்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். ஆரம்பத்தில் கைப்பேசியில் நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவர், ஒரு கட்டத்தில் தொழிலாளர்களின் உறுதியை புரிந்துக் கொண்டு, இதற்கு மேல், தான் ஏதாவது பேசினால் அவர்களிடமிருந்து அம்பலப்பட்டு விடுவோம் என்பதை புரிந்துக் கொண்டார். எனவே தான் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார்.

இந்நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களை நிர்வாகம் அழைத்தது. காவல்துறை வாகனத்தில் வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பார்வையில், முதலில் தொழிற்சாலைக்கு வெளியே, சிப்காட் வளாகத்தில், நின்றிருந்த பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் தெரிந்தார்கள். காவல்துறையினரின் துணையுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார்.

ஆனால், ‘தொழிற்சாலைக்கு வெளியில்தான் நாங்கள் நிற்கிறோம். எந்தவிதமான அசம்பாவிதத்திலும் ஈடுபடவில்லை. போராட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. ஒரு முடிவு தெரியும் வரை இங்கிருந்து நகரமாட்டோம்’  என அழுத்தம்திருத்தமாக தோழர்கள் சொன்னதையடுத்து போராடும் நிரந்தர தொழிலாளார்களிடம் சப் இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பித்தார்.

முதலில் அவர்களை தனியாக அழைத்தார். ஆனால், ‘அப்படிச் சென்றால் நீங்களும் விலைபோய்விடுவீர்கள்; போராட்டமும் பிசுபிசுத்துவிடும்’ என அனைத்துத் தொழிலாளார்கள் முன்பும் பேச வேண்டியதை பேசும்படி நிரந்தர தொழிலாளர்கள் கோரினார்கள்.

‘கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். வேண்டிய சலுகைகள் கிடைக்கின்றன. எதற்காக மற்றவர்களுக்காக போராடுகிறீர்கள்’ என சப் இன்ஸ்பெக்டர் நைச்சியமாக பேசியதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பயிற்சியாளர்களோ, ஒப்பந்தத் தொழிலாளர்களோ அவர்களும் எங்களைப் போன்று உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிறவர்கள்தான். எனவே அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். எங்களைப் போலவே அவர்களுக்கும் சம்பள உயர்வும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என உறுதியாக நின்றார்கள்.

வேறு வழியின்றி தன்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டு சப் இன்ஸ்பெக்டரும், ஊராட்சி மன்றத் தலைவரும் சென்றார்கள்.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. நிர்வாகம் நேரடியாக பேச்சு வார்த்தைக்கு வரவேயில்லை. அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடவும் இல்லை.

இரவு மணி 8. மதிய உணவுக்குப் பின், தொழிலாளர்கள் எதையும் சாப்பிடவில்லை. அவர்களுக்கு எந்த சாப்பாட்டையும், ஒரு கோப்பை தேநீரையும் நிர்வாகம் வழங்கவில்லை.

செய்தி கேள்விப்பட்டு உள்ளூர் தொழிலாளர்களின் நண்பர்கள் தொழிற்சாலைக்கு வந்தார்கள். அவர்களிடம் தோழர்கள், அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடுவது குறித்தும், அவர்கள் நீண்ட நேரமாக எதுவும் சாப்பிடாமல் இருப்பது குறித்தும் சொல்லிவிட்டு, இரவு உணவுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார்கள்.

மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டவர்கள், அதற்கான வேலைகளில் உடனடியாக இறங்கினார்கள். உள்ளூர் மக்கள் அனைவருமாக சேர்ந்து அடுப்பை பற்ற வைத்தார்கள். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான இரவு உணவு, அடுத்த ஒரு மணிநேரத்தில் வந்து இறங்கியது.

ஆனால், அந்த சாப்பாட்டை தொழிலாளர்களிடம் ஒப்படைக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. செக்யூரிட்டிகளைக் கொண்டு தடுத்ததுடன், கோபம் தலைக்கேற காஞ்சிபுர மாவட்ட டிஎஸ்பியை தொடர்புக் கொண்டது.

நள்ளிரவு 11 மணிக்கு தனது பரிவாரங்களுடன் வந்திறங்கிய டிஎஸ்பி, வழக்கம் போல்  அடித்து விரட்டுவதில் ஆர்வம் காட்டினார். ‘பசியுடன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்த உணவுப் பொட்டலங்கள் இதோ இருக்கின்றன. நிர்வாகம், இதை அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. எந்தத் தொழிலாளியாவது மயக்கம் போட்டு விழுந்தால் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு’ என்று  தோழர்கள் அழுத்தமாக சொன்னார்கள்.

விபரீதத்தை புரிந்துக் கொண்ட டிஎஸ்பி, நிர்வாகத்துடன் பேசுவதற்காக உள்ளே சென்றார். அதற்குள் உணவுப் பொட்டலங்கள் தொழிலாளார்கள் மூலம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

நிர்வாகத்துடன் பேசிவிட்டு வந்த டிஎஸ்பி, முன்னணியில் இருக்கும் 6 தொழிலாளர்களை கைது செய்யப் போவதாக அறிவித்தார். என்ன செய்வதென்று தொழிலாளர்கள் கேட்க ‘இது சட்ட ஒழுங்கு பிரச்னையில்லை. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் நடக்கும் பிரச்னை. எனவே கைது செய்ய காவல்துறைக்கு உரிமையில்லை. அப்படியே கைது செய்வதாக இருந்தால், அனைத்து தொழிலாளர்களும் கைதாகும்படி’ வழிகாட்டப்பட்டது.

இதை சற்றும் எதிர்பார்க்காத டிஎஸ்பி, பின்வாங்கினார். அத்துடன் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் தொழிலாளர்களையாவது கட்டாயம் வீட்டுக்கு செல்லும்படி கெஞ்சினார். ஆனால், பெண் தொழிலாளர்கள் வீட்டுக்குச் செல்ல மறுத்தனர். போராட்டத்தின் முடிவு தெரியும் வரை, நகர மாட்டோம் என உறுதியுடன் நின்றார்கள்.

இருப்பினும் பெண் தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்வதுதான் சரி என்றும், மறுநாள் காலையில் வந்து அவர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதை ஏற்று பெண் தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

அடுத்ததாக தோழர்களிடம் வந்த டிஎஸ்பி, ‘இரவு முழுக்க நீங்கள் இங்கே இருந்தால் எனக்குத்தான் பிரச்னை. தயவுசெய்து கலைந்துச் செல்லுங்கள். இந்த சிப்காட் வளாகம் தனியாருக்கு சொந்தமானது. அவர்களுக்கெல்லாம் நான்தான் பதில் சொல்லியாக வேண்டும்’ என மன்றாடினார். ‘போராட்டத்தின் முடிவு தெரியாமல் நகர மாட்டோம். போராடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. அவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை’ என தெளிவாக சொல்லிவிட்டு தோழர்கள் நகர மறுத்தார்கள். வேறு வழியின்றி டிஎஸ்பி தன் பரிவாரங்களுடன் கிளம்பிச் சென்றார்.

இதன் பிறகும் நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அத்துடன் இரவு முழுக்க கருங்காலிகளும், உள்ளூர் மேலாளர்களும் வெளியே வந்து அடிக்கடி பார்த்துவிட்டும், தொழிலாளர்களை நோக்கி ‘சவுண்டு’ விட்டுவிட்டும் சென்றனர். கொரிய நாட்டைச் சேர்ந்த  மைக் பார்க் உட்பட எந்த டைரக்டரும் வெளியே வரவில்லை. தங்கள் இருப்பிடத்துக்கும் அவர்கள் செல்லவில்லை.

அக்டோபர் 7ம் தேதி இரவு முழுக்க அனைத்துத் தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் உறுதியுடன் நின்றார்கள். மறுநாள் பொழுதுவிடிந்தது. முதல் ஷிப்டுக்கான வேலை ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அமர்ந்திருந்த இடத்தை விட்டு எந்தத் தொழிலாளியும் எழுந்திருக்கவில்லை.

வேனில் வந்த ஆண் – பெண் தொழிலாளார்களும் வாகனத்தை விட்டு இறங்கவில்லை.

உடனே, ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபுரியும் யூடிஎஸ் என்ற உள்ளூர் ஒப்பந்தத்தாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ‘அனில் டியூப்’ நிறுவனத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். இவர்களை வைத்து உற்பத்தியை தொடங்க ‘அனில் டியூப்’ நிறுவனம் திட்டமிட்டது. தொழிலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகளை நிறுத்தும் வழக்கமான தந்திரம்தான்.

ஆனால், இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை. வந்தவர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்காததுடன், யூடிஎஸ் ஒப்பந்ததாரரை சந்தித்து, ‘நாளையே உங்களுக்கு கீழ் இயங்கும் தொழிலாளர்கள் போராடும்போது அவர்களுக்கு பதிலாக எங்களை ஹுண்டாயில் வேலை செய்ய இறக்கினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?’ என்று தொழிலாளிகள் கேட்டார்கள். போராட்டத்தின் நியாயத்தை யூடிஎஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணர்ந்தார்கள். அவர்களும் வேலை செய்ய மறுத்தார்கள். மீண்டும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது.

இதற்குப் பிறகுதான் மைக் பார்க், தனது அறையைவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு பின்னால் வந்த உள்ளூர் மேலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம். காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ‘லத்தி சார்ஜ்’ நடத்தலாம் என ஆலோசனை வழங்கினார்கள்.

ஆனால், இதற்கு மேலும் உற்பத்தி பாதிக்கப்பட்டால் தனது பதவிக்கு ஆபத்து என்பதை புரிந்துக் கொண்ட மைக் பார்க், தொழிலாளர்களிடம் வந்து, ‘உங்களுக்கு என்ன பிரச்னை? உங்கள் கோரிக்கை என்ன?’ என்று கேட்டான்.

முந்தைய நாள் மதியம் முதல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்போது வந்து ‘என்ன கோரிக்கை?’ என்று கேட்கிறான்!

அனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் கோரிக்கைகளை உரத்து சொன்னார்கள். ‘எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். போய் வேலையைப் பாருங்கள்’ என்றான். வாய்மொழி உத்தரவு வேண்டாம். முறைப்படி எழுதிக் கொடுங்கள் என தொழிலாளிகள் ஆணையிட்டார்கள்.

உள்ளே சென்று தன் ஆட்களுடன் பேசினான். பிறகு வெளியே வந்து தொழிலாளர்களிடம் பேசினான். இப்படியாக இந்த ‘உள்ளே வெளியே’ விளையாட்டு ஐந்தாறு முறை தொடர்ந்த பிறகு எழுத்துப் பூர்வமாக தர சம்மதித்தான்.

இப்போது கூட தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய அவனது ஈகோ தடுத்தது. எனவே கையெழுத்திட்ட அறிக்கையை நோட்டீஸ் போர்டில் ஓட்ட சம்மதித்தான்.

போராடிய தொழிலாளர்கள் 3 கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

1. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான ஊழிய உயர்வும், சலுகைகளும் நிரந்தர தொழிலாளர்களுக்கு தருவது போலவே வழங்க வேண்டும்.

2. இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஓய்.சின்னையா என்ற ஒப்பந்தத்தாரரின் கீழ் வரும் 18 ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும்.

3. உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது.

இந்த கோரிக்கைகளில் 2 மற்றும் 3 ஐ ஏற்க நிர்வாகம் சம்மதித்தது. முதல் கோரிக்கையை மட்டும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். வழக்கு நிலுவையில் இருக்கும்போது தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்கள்.

தொழிலாளர்கள் இதற்கு சம்மதித்தார்கள். முதலில் மைக் பார்க் எழுதிய நகலில் உரிய திருத்தங்களை செய்து தொழிலாளர்கள் கொடுத்தார்கள். அதை நிர்வாகம் ஏற்றது.

தோழர்கள் செய்த திருத்தங்களை, வார்த்தைகளை மைக் பார்க் அப்படியே ஏற்றான். கூடவே இரண்டு ஷிப்டுகளில் நடக்காத உற்பத்தியை சரி செய்து தரும்படி தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டான். தொழிலாளர்களும் உற்பத்தியை காம்பன்சேட் பண்ணுவதாக உறுதியளித்தார்கள்.

இதனையடுத்து தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் வெற்றி பெற்றது.

மைக் பார்க் கையெழுத்திட்ட காகிதம் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டு அதன் நகல் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

__________________________________________________

அட்டைப் பூச்சியைப் போல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறியும் மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமென்றால், வர்க்க உணர்வுடன் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் சாம்ராஜ்ஜியங்களில் தொழிற்சங்கம் கட்டுவது என்பது எளிதான விஷயமல்ல. விரல்விட்டு எண்ணக் கூடிய தொழிலாளர்களை மட்டும் நிரந்தரமாக்கிவிட்டு மற்றவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்தால் தொழிலாளர்கள் பிளவுபடுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளார்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் போராட மாட்டார்கள் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போடுகின்றன.

‘அனில் டியூப்’ தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், இது தப்புக் கணக்கு என காட்டியிருக்கிறார்கள். நிரந்தரமோ, பயிற்சியாளனோ, ஒப்பந்தமோ அனைவருமே தொழிலாளர்கள்தான் என்பதை தங்கள் வர்க்க ஒற்றுமை மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

இவர்களது போராட்டம் வெற்றி பெற்றிருப்பது ஒர் ஆரம்பம்தான். ஸ்ரீபெரும்புத்தூர் – சுங்குவார் சத்திரம் பகுதிக்கு இடையிலுள்ள எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இத்தகைய அடக்குமுறை சூழலில்தான் பணிபுரிகிறார்கள். ஃபாக்ஸ்கான் ஆலையில் சி.ஐ.டி.யு உதவியுடன் போராடிய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.

இனி அப்படி நடக்காது என்பதை இருங்காட்டுக் கோட்டையில் முளைத்த இந்தச் செடி உணர்த்தியிருக்கிறது.

புஜதொமு வழிகாட்டுதலில் போராடிய ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்த வெற்றி, வர்க்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போகும் வெற்றிக்கான ஆரம்பம் இது.

வெள்ளேந்தியாக எல்லா அடிமைத்தனங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த அந்த தொழிலாளிகள் இந்த போராட்ட அனுபவத்தோடு தங்களது வர்க்க ஆயுதங்களை கண்டுபடித்திருக்கிறார்கள். அந்த ஆயுதத்தின் முன் கொரியா முதலாளி என்ன, அமெரிக்க முதலாளியும் கூட பெரியவிசயமில்லைதான்.

தோழர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!

________________________________

–    வினவு செய்தியாளர், சென்னை
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

பிரான்ஸ் போராட்டம்

ஈராண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாடே குலுங்குகிறது. பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஏறத்தாழ 20 லட்சம் பேர் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் அன்று செயலிழந்து முடமாகிப் போயின. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு நாடெங்கும்  220-க்கும் மேற்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டங்களை  நடத்தியுள்ளனர்.

” அடிப்படை ஊதியத்தை அதிகப்படுத்து! தொழிலாளிகளை அதிரடியாக வேலையிலிருந்து தூக்கியெறியாதே! இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடு! முதியோர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை முழுமையாகக் கொடு!” என்பதுதான் போராடும் மக்களின் கோரிக்கை. அரசின் விசுவாச போலீசு -இராணுவ – அதிகாரிகளைத் தவிர, நாட்டில் எவரும் அதிபர் சர்கோசியின் அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஏறத்தாழ 80 சதவீத மக்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து அரசின் ‘சீர்திருத்த’ சதித் திட்டங்களை எதிர்க்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகையை எடுத்து நிதியாதிக்கச் சூதாட்டக் கும்பல்களுக்கு  வாரியிறைத்து விட்டதால், ஓய்வூதிய நிறுவனங்கள் அனைத்தும் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் உள்ளன. பிரெஞ்சு அரசோ ஓய்வூதியம் கொடுப்பதால் அரசின் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடி செலவாகிறது என்று கூறி ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 60-லிருந்து 62-ஆக நீட்டிக்கும் கொள்கையை அறிவித்து ஓய்வூதியத்தையே செல்லாக் காசாக்கத் துடிக்கிறது. பிரான்ஸ் மட்டுமின்றி, பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதேபோல ஓய்வூதியம் பெறும் வரம்பை 65 முதல் 67 வயதுவரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

போராடும் தொழிலாளர்களோ இந்தச் சதிகளையும் பசப்பல்களையும் ஏற்கத் தயாராக இல்லை. ஓய்வூதியத் தொகையைச் சுருட்டும் நிதியாதிக்கக் கும்பல்களிடமிருந்து அதனைப் பறித்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல இடங்களில் தொழிலாளிகள் பேரணி நடத்தியுள்ளனர். ஓய்வூதியப் பிரச்சினைதான் போராட்டத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், இது மொத்தப் பிரச்சினையின் ஒரு அம்சம்தான். சமூக அநீதிக்கும் முதலாளித்துவத்துக்கு எதிராக, அதாவது மூலதனத்தின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகவே இந்தப் போர் வெடித்துள்ளது.

நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள முதலாளிகளைக் காப்பாற்ற, நாட்டின் உழைக்கும் மக்களைக் காவு கொடுக்கும் கொள்கைகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக செப்டம்பர் 23-ஆம் தேதியன்று மீண்டுமொரு நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. செப்.21 முதல் செக் நாட்டிலும், செப்.29 முதல் ஸ்பெயின் நாட்டிலும் தொழிலாளி வர்க்கத்தால் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தொடரும் இப்போராட்டங்களின் ஊடாக, முதலாளித்துவ அரசியலமைப்பு முறையை வீழ்த்தி சோசலிசத்தை நிறுவுவதுதான் ஒரே தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

கறிக்கோழி-பிராய்லர்-சிக்கன்-கோழிப்-பண்ணை

Suguna-poultry-chicken

விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

1980-களின் நடுவில் அரசின் கோழி ஆராய்ச்சி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பை விவசாயிகளிடம் அறிமுப்படுத்தின. அரசின் கோழிக் குஞ்சு உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடியாகக்  குஞ்சுகளை வாங்கி 100 முதல் 1000 கோழிகள் வரை கொண்ட சிறிய பண்ணைகளை உருவாக்கி, தமிழகத்தில் பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, வேலூர் முதலான பகுதிகளில் விவசாயிகளால் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டன. வளர்ந்த கோழிகளை விவசாயிகளிடமிருந்து கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக வாங்கிக்கொண்டனர். இதே காலத்தில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் துணை நிறுவனமான தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டாப்கோ-TAPCO) கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தி ஆதரவளித்தது.

ஆனால் 1990-களில் தனியார்மய-தாராளமயக் கொள்கை திணிக்கப்பட்ட பிறகு, அரசுக்கு கோழி வளர்ப்பில் என்ன வேலை என உலகவங்கி உருட்டி மிரட்டத் தொடங்கியதும், உலக வங்கியின் கட்டளைப்படி, நிதி ஒதுக்கீட்டை அரசு நிறுத்தியதால் விவசாயிகளுக்குத் தேவையான குஞ்சுகளை அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. அரசு திட்டமிட்டே, அரசு நிறுவனங்களை ஒழித்தது. இலட்சக்கணக்கில் எந்திர சாதனங்களுக்குச் செலவாகும் என்பதால், கறிக்கோழி குஞ்சுகளை விவசாயிகளால் உற்பத்தி செய்யவும் முடியாது. இதன் விளைவாக, தனியார் கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கறிக்கோழி வியாபாரத்தில் ஈடுபட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கை ஓங்க ஆரம்பித்தது. கோழிக்குஞ்சுகளுக்காக தனியார் நிறுவனங்களை விவசாயிகள் முற்றாகச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. மேலும், விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புத் தொழிலைக் கைவிட இயலாத நிலைமையையும், கறிக்கோழி வளர்ப்புக் கொட்டகைக்கான விவசாயிகளின் கடன் சுமையையும் பயன்படுத்திக் கொண்டு தனியார் கறிக்கோழி நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தை விவசாயிகள் மீது திணித்தன.

கறிக்கோழி ஒப்பந்த விவசாயத்தில், ஒப்பந்த விவசாயத்தை நடத்தும் நிறுவனம் கோழிக் குஞ்சு, தீவனம், மருந்து மற்றும் மருத்துவ சேவையுடன் ஆலோசனைகளையும் கொடுக்கும். கோழிக் குஞ்சு வளர்ப்பிற்கான கொட்டகை, குடிநீர், மின்சாரம் மற்றும் உழைப்பைக் கொண்டு கறிக்கோழிகளை விவசாயிகள் வளர்க்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலியைக் (உயிருள்ள கோழிக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.50 முதல் அதிகபட்சமாக 2.50 வரை) கொடுத்துவிட்டு கோழிகளைக் கொள்முதல் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்த விவசாயத்தை வெங்கடேஸ்வரா, பயனீர், சாந்தி பார்சூன், சுகுணா போன்று 20-க்கும் மேற்பட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் தொடக்க காலத்தில் 500, 1000 கோழிகளை வளர்க்க ஒப்பந்தம் போட்டு விவசாயிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அடுத்ததாக, குறைந்த பட்சமாக 5000 கறிக்கோழிகள் வளர்க்க வேண்டும் என்று நிபந்தனை போட்டும், நிறுவனத்தினர் சொல்லும் விதத்தில் கொட்டகை அமைத்துப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டும் பல லட்சங்கள் முதலீடு செய்ய வாய்ப்பில்லாத சிறு விவசாயிகளை வெளியேற்றின. இன்னொருபக்கம் கறிக் கோழி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் வியாபாரிகளுக்குப் பல சலுகைகள் கொடுத்து தன் பிடியில் கொண்டு வந்து ஏகபோகத்தை நிறுவியுள்ளன.

கறிக்கோழி-பிராய்லர்-சிக்கன்-கோழிப்-பண்ணை

மேலும் இந்நிறுவனங்கள், கறிக்கோழி ஒருங்கிணைப்புக் கமிட்டி (Broiler Co-ordination Committee -BCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கி தன்னிச்சையாக கறிக்கோழியின் விலையைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பு அவ்வப்பொழுது அறிவிக்கும் கறிக்கோழிக்கான பண்ணை விலை என்பது விவசாயிகளுக்குக் கொடுக்கும் விலை அல்ல; விவசாயிகளுக்கு கோழி வளர்ப்புக்கான கூலி மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கமிட்டி அறிவிக்கும் பண்ணை விலையை அடிப்படையாகக் கொண்டுதான் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் நுகர்வோருக்கான கறிக்கோழி விலையைத் தீர்மானிக்கின்றனர்.

இப்படிச் செயல்படும் ஏகபோக நிறுவனங்களில் ஒன்றுதான், சுகுணா. இது, கோயம்புத்துரை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்று இந்நிறுவனம் 11 மாநிலங்களில் 8,000 கிராமங்களில் சுமார் 20,000 விவசாயிகளிடம் கறிகோழி ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நேரடியான சில்லறை விற்பனை இறைச்சிக் கடைகளை (சுகுணா டெய்லி ஃபிரஷ்) திறந்து வருகிறது. ஒப்பந்த விவசாயத்தின் மூலம் வாரம் ஒன்றுக்கு 80 லட்சம் கறிக்கோழிகளைச் சந்தைக்குக் கொண்டு வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 3200 கோடி ரூபாய்களாகும். ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனம், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.,

கோழி உட்கொள்ளும் தீவனம் மற்றும் அதன் எடை வளர்ச்சியின் அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலி கொடுக்கப்படுகிறது. அதாவது, ஒரு கோழி 4 கிலோ தீனி தின்று 40-45 நாட்களுக்குள் 2 கிலோ ஏறினால் அதிகபட்சமாக ரூ 5.00 (கிலோவுக்கு 2.50 ரூ என்ற வீதத்தில் ) கூலியா கொடுக்கப்படுகிறது. ஆனால், கறிக்கோழியின் எடை அதிகரிக்க ஒரு கிலோவுக்கு ஏறத்தாழ ரூ.6.00 வரை விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. விலைவாசியோ பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கோழி வளர்ப்போருக்கு இவ்வளவுதான் கூலியாகத் தரப்படுகிறது. இப்படி அற்பக்கூலி கொடுத்துச் சுரண்டும் சுகுணா நிறுவனம், கறிக்கோழிகளை கிலோ ரூ.130 வரை விற்று கொள்ளை லாபத்தைச் சுருட்டுகிறது.

பொதுவாக கறிக்கோழி உற்பத்தியில் குஞ்சுகளின் தரம், தீவனத்தின் தன்மை மற்றும் மருத்துவச் சேவைகள் ஆகியவைகளே கோழியின் வளர்ச்சியைப் பிரதானமாக தீர்மானிக்கின்றன. இவையனைத்தும் சுகுணா போன்ற ஒப்பந்த விவசாய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. விவசாயிகளின் கட்டுப்பாட்டில் வெறும் கோழிக் கொட்டகை, குடிநீர், தினசரி பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களது உழைப்பு மட்டுமே இருக்கிறது. கறிக்கோழி உற்பத்தியில் ஒரு நாள் வயது உள்ள தரமான கோழிக்குஞ்சு 50 கிராம் இருந்தால்தான் சீக்கிரம் எடை கூடும். ஆனால் 38 கிராம் எடை கொண்ட சுகுணா நிறுவனத்தின் குஞ்சுகள் தரமற்றவை. சுகுணா நிறுவனத்தின் தீவனத்தின் தரத்தைப் பொருத்த வரையில், இடுபொருட்களின் விலைக்கு ஏற்பவும், கறியின் விலைக்கு ஏற்பவும் தரம் மாறுபடுகிறது. உதாரணமாக, பறவைக் காச்சல் நோய் பரவி கோழிக்கறி விலை சரிந்தபோது, கோழிகளுக்கு தரம் தாழ்ந்த தீவனத்தை கொடுத்து தன் நட்டத்தை சுகுணா நிறுவனம் குறைத்துக் கொண்டது. கோழிகள் தீவனத்தை தின்றும்கூட எடை ஏறவில்லை. இதன் ஊடாக ஒட்டு மொத்த நட்டத்தையும் விவசாயிகளின் தலையில் அந்நிறுவனம் சுமத்தியது. வேறு காரணங்களால் சந்தை வீழ்ச்சியடையும் நேரங்களில், கோழிகளைக் காலம் தாழ்த்தி கொள்முதல் செய்வதன் மூலமாக இந்நிறுவனம் நட்டத்தை விவசாயிகளின் பக்கம் தள்ளுகிறது.

இன்னொரு பக்கம், சந்தை ஏறுமுகமா இருக்கும் காலகட்டத்தைக் கணக்கில் கொண்டுதான் அதற்கேற்ப இந்நிறுவனம் விவசாயிகளுக்குக் கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறது. குறிப்பாக, கறிக்கோழி வியாபாரம் இறங்குமுகமாக உள்ள புரட்டாசி மாதம் மற்றும் கோடைக் காலங்களில் இந்நிறுவனத்தால் கோழி உற்பத்தி திட்டமிட்டு நிறுத்தப்படுகிறது. 5000 கோழிகளுக்கு குறைந்த பட்சம் 4 முதல் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கொட்டகையைக் கடன் வாங்கி உருவாக்கிய விவசாயிகள், இப்படி பல மாதங்கள் கோழிகள் இல்லாமலே வெறுமனே கொட்டகை கிடப்பதால் பெருத்த நட்டத்தைச் சந்திக்கின்றனர். நட்டம் முழுவதும் விவசாயிக்கு; இலாபம் முழுவதும் சுகுணாவுக்கு. இந்த அநியாயத்தை எதிர்த்துக் கேட்காமல் இருக்க வெற்று பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி விவசாயிகளை இந்நிறுவனம் அறிவிக்கப்படாத கொத்தடிமைகளாக வைத்திருக்கிறது. இப்படி விவசாயிகள் நட்டப்பட்டு கறிக்கோழிகளை வளர்த்து சந்தைக்கு வருவதுதான் “சுகுணா சிக்கன்’’! விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி உருவானதுதான் சுகுணாவின் “இளசான, மிருதுவான, தரமான சிக்கன்’’!

நீண்ட காலமாகக் குமுறிக் கொண்டிருந்த ஒப்பந்த விவசாயிகள், வளர்ப்பு கூலியா உயிருள்ள கறிக்கோழியின் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு குறைந்த பட்சமாக 3.50 ரூபாயும், 50 கிராம் எடை கொண்ட குஞ்சு, தரமான தீவனம், மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் முழுமையாக கொட்டகையைப் பயன்படுத்துவதற்குத் தொடர்ச்சியாகக் கறிக்கோழிக் குஞ்சுகளைக் கொடுக்கவேண்டும் எனவும்; வெற்றுப் பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி மிரட்டுவதை நிறுத்தக் கோரியும் சுகுணா நிறுவனத்துக்கு எதிராகப் போராடினர். சுகுணா நிறுவனமோ பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது, கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியாது என்று திமிராக அலட்சியப்படுத்தியது. அரசோ கண்டும் காணாமலும் இருந்தது. விவசாயிகள் கோழிகளை பட்டினி போட்டு, இறந்த கோழிகளை சுகுணா அலுவலகத்தின் முன் கொட்டிய பிறகுதான், அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. சுகுணாவின் அடாவடித்தனத்தை எதிர்க்க வக்கற்ற அரசோ பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடகமாடியது. இறுதியில் சுகுணா நிறுவனம், உயிருள்ள கோழிக்கு எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு வளர்ப்புக் கூலியாக ரூ.3.50 தருவதாக ஒப்பு கொண்டதால் தற்காலிகமாகப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இன்று வரை சுகுணா, பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. போராடுகிற பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்குக் கறிக்கோழிக் குஞ்சுகள் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளது. மேலும் போராடும் விவசாயிகளை ஓரணியில் திரள விடாமல் பிரித்தாளும் சதிவேலைகளைச் செய்து வருகிறது.

தனியார்மய-தாராளமயக் கொள்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழக அரசோ, கால்நடை பராமரிப்புத் துறையோ அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமோ கறிக்கோழி ஒப்பந்த விவசாய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சூழலில் இல்லை. ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு குறிப்பிட்ட சட்ட வரையறையும் இல்லை. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் ஒப்பந்த விவசாயத்தின் யோக்கியதை!

கூலி உழைப்பாளிகளை மட்டுமின்றி சிறு உடமையாளர்களையும் சுரண்டிக் கொழுத்து ஏகபோகத்தை நிறுவுவதுதான் முதலாளித்துவம். விவசாயம் நசிந்து போனதால், வேறுவழியின்றி கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட சிறு விவசாயிகளின் நிலம், நீர், உழைப்பைச் சுரண்டி போண்டியாக்கிவிட்டு, அவர்களைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளுவதான் ஒப்பந்த விவசாயத்தின் நோக்கம் என்பதை சுகுணா நிறுவனத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டிவிட்டது. இந்நிலையில், ஒப்பந்த விவசாயத்துக்கு அரசின் பாதுகாப்பைக் கோரும் போராட்டங்களோடு, தனியார்மய-தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம்தான், ஏகபோக கோழிப்பண்ணை நிறுவனங்களின் இரும்புப் பிடியிலிருந்து கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் விடுபட முடியும்.

___________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
___________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!