privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதை"எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!"

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

-

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: