பெட்ரோல் – டீசல் விலையுயர்வு : சென்னை கோயம்பேட்டிற்கு வந்த சிறுகடை உரிமையாளர்கள் கருத்து !

ண்ணாச்சி கடைன்னாலே நமக்கு எப்பவும் சொந்தகாரங்கள பாக்குறோம்ங்குற ஒரு நெனப்புதான். கடைக்கு பொருளு வாங்கப் போறோம்னா விலையக் கேட்டு, “இன்னா இம்மா வெல விக்கிற; பான வெல கேட்டா ஆனை வெல சொல்லுறியே”ன்னு சண்டையும் போட்டிருப்போம்.

கையில காசு இல்ல கணக்குல வச்சிக்கன்னு சொல்லியிருப்போம்… “இம்மாம் பொருளு வாங்கிருக்கனே கொஞ்சம் கொசுரு போட்டா கொறஞ்சியா போயிடுவா”ன்னு கொஞ்சம் அன்பாவும் கடிஞ்சிக்குவோம்.. இதையெல்லாம் காதுல வாங்கியும் வாங்காமலும் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பார் அண்ணாச்சி.

கோயம்பேடு சந்தை ( படம் – வினவு புகைப்பட செய்தியாளர் )

அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கும் அவர்களுடைய வாழ்க்கை இரவு பன்னிரண்டு மணிக்குதான் முடியும். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம். எழுந்ததும் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க பழைய ‘ஸ்கூட்டர்’ டி.வி.எஸ் 50-களை எடுத்துக்கொண்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்துவிடுவது சென்னையில் வழக்கம்.

அப்படி  கோயம்பேட்டில் இருக்கும் பெரியார் காய்கறி அங்காடிக்கு தினந்தோறும் வந்து செல்லும் சிறு வியாபாரிகள் மோடி அரசின் இந்த பெட்ரோல் விலையுயர்வை எப்படி சமாளிக்கிறார்கள்….

எம். ராகவன், திருமழிசை.

நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா இரண்டு தடவ வந்து போவேன். இப்ப இரண்டாவது தடவை வரதுக்கே இழுக்குது. காய்கறி வாங்கிட்டு போனா இரண்டு நாளைக்கு தாங்கும். ஆனா, கறிவேப்பிலை தாங்குமா? காய்கறி கடைக்கு பச்சயா இருந்தா தான் வருவாங்க. இதுக்குனாலும் இரண்டு நாளைக்கு ஒரு வாட்டி மார்க்கெட்டுக்கு வந்தாகனும். ஒரு முறை வந்தா மூவாயிரத்துக்கு சரக்கு போடுவோம். ஒரு கிலோ கோசு பதினைஞ்சி ரூபாய்க்கு வாங்குனா இருபதுக்கு விப்பேன். கேரட் பதினைஞ்சி ரூபாய்க்கு வாங்கி இருபதுக்கு விப்பேன். உருளை இருபதுக்கு வாங்கி இருபத்தஞ்சிக்கு விப்பேன். எல்லாம் அஞ்சி ரூபா லாபம் தான்.

இதுவே அழுகிப்போனா நமக்குதான் நஷ்டம். அதுக்கும் சேர்த்துதான் லாபத்துல எடுக்கணும்.  இப்ப பெட்ரோல் விலையும் கூட சேர்ந்திருக்கு. இதையும் ஜனங்க கிட்டதான் சேர்த்து வாங்கணும். வீட்டுல கடை இருக்கதால கொஞ்சம் சமாளிச்சிக்கலாம்.

இந்தக் கடை மட்டும் நமக்கு சோறு போடாது. இதை வச்சி பொழப்பு நடத்த முடியாது. கல்யாணத்துக்கு சமையல் வேலை  செய்வேன். அங்க போனா இரண்டாயிரம், மூவாயிரம் கிடைக்கும். இப்படித்தான் குடும்பத்த அட்ஜஸ் பண்ணி ஓட்டுறேன்.

இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும். கையில இரண்டு மூணு தொழில் இருந்தாதான் குடும்பத்தை நடத்த முடியும். அதான உண்மை.  சின்னதா காய்கறி கடை மட்டும் வச்சி வாழ்க்கைய நடத்துறவங்க தண்டல் வாங்கியே அழிஞ்சிடுவாங்க.

அப்துல் ரகுமான், போரூர், காய்கறி கடை வியாபாரி.

போட்டோ எல்லாம் எதுக்கு? இப்ப போட்டோ எடுத்து இன்னா பண்ண போறிங்க. விலைவாசி எல்லாம் ஏறிடுச்சி. நீங்க சொன்ன எல்லாம் இறங்கிடுமா. நாம சொன்ன எவன் குறைக்க போறான். போராட்டம் பிரச்சனன்னு நம்மள இழுத்து விட்டுடுவானுங்க. இதோடதான் வாழணும். நான் போறேன். எனக்கு வேலை இருக்கு.

பழனிசாமி, காசிமேடு.

மார்க்கெட்டு உள்ள கடை இருக்கு. தினமும் இரண்டு தடவை ஓ.எம்.ஆர் ரோட்டுல இருக்க கேண்டின், ஓட்டலுக்கு காய்கறி போட்டுட்டு வருவேன். ஒவ்வொரு  கடைகாரங்களும் மூவாயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்குவாங்க. இதுக்கு முன்னூறு ரூபா பெட்ரோல் ஆகும். இப்ப நானூறு ரூபா ஆகுது. இந்த செலவு எங்க கடை தலை மேலதான் விழும். நாங்க எதோ.. மார்க்கெட்டுல இருக்கதால பொழைக்கிறோம். சின்னக் கடை, தெருக்கடை எல்லாம் பிரச்சனை. பெட்ரோல் விலையேற்றம் எல்லாம் அவங்களுக்குதான் பெரிய பாதிப்பு.

காயத்ரி, வேளச்சேரி.

ஆமா, பெட்ரோல் விலைய ஏத்திட்டான்… எங்களை மாதிரி வியாபாரிங்க என்ன பண்றது? வாங்கி போட்டு அழறதுதான். அதோடதான் வியாபாரத்தை பார்த்துக்குனு இருக்குறோம். ஏற்கனவே ஜிஎஸ்டி, பணம் செல்லாது இதெல்லாம் பிரச்சனை. அதுலயே பாதி வியாபாரம் போயிடுச்சி. இப்ப மீதி வியாபாரம். பெட்ரோல் விலையேற்றத்துனால நெருக்கடிதான். ஒருநாளைக்கு ஐம்பது ரூபா நஷ்டம்னா நாம ஏத்துக்கலாம். தினமும் நஷ்டம்னா வாங்குறவங்க தலையிலதான் வைக்கணும்.. இதால வியாபாரம் பாதிக்கத்தான் செய்யும்.

சேகர், நெசப்பாக்கம்.

சொந்த ஊர் திருநெல்வேலி, ஏறக்குறைய இருபத்தி ஐந்து வருஷமா நானு மளிகை கடை வியாபாரம் பண்ணுறேன்.

இந்த மாதிரி அடிமேல் அடி இப்பதான் பாக்குறேன். காங்கிரசு பீரியட்ல நான் முப்பத்தி ரெண்டு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன். இப்ப எழுபத்தி எட்டுல வந்து நிக்குது. வியாபாரம் பல மடங்கு இப்ப இருக்கு. செலவுதான் அதிகமாவுது. மோடி ஏதோ வாய் ஜாலத்துல பிரதமரா வந்துட்டாரு. அவரு சொன்னதெல்லாம் நாங்க நம்புனோம். இப்ப எல்லோருக்கும் நஷ்டம்தான்.

பெரிசா நஷ்டம். நாங்க பொழக்கிறதே எங்களோட வியாபாரத் தந்திரத்தால்தான். கவர்மெண்ட் சப்போட்டு இல்ல. கடையில நாலு பொருளு வச்சிருந்தா அதை வாங்கின விலைக்கு ஐந்து பைசா கம்மியாவே கொடுப்போம். குறிப்பா பிராண்டட் அயிட்டம், எண்ணையில் கோல்டு வின்னர், அணில் சேமியா, இப்படி அதிகமா போறதுல லாபமே எடுக்காது. இதை வச்சி நாங்க பிராண்டு இல்லாத அயிட்டங்களை வித்தாதான் ஏதோ காசு கிடைக்கும். அதுலதான் ஐந்து ரூபா கிடைக்கும்.

மோடியை நம்பின ஜனங்க எல்லாம் மோசமா போயிட்டாங்க. அதை அவங்களே சொல்லுறாங்க.  நான் வியாபாரின்றதால நாலு மக்கள்கிட்ட பேசுவோம். ஒருத்தர் மோடியை முன்ன வாழ்த்துன மாதிரி வாழ்த்தல. நாம்ப மோசம் போயிட்டோம்னு அப்படி வெளிப்படையாவே சொல்லுறாங்க. ஏற்கனவே பழைய வியாபாரிங்கதான் இப்ப பொழைக்கிறாங்க. புதுசா கடை வச்சி எதுவும் பண்ண முடியாது.

அவங்க தண்டல் வாங்கி அழிய வேண்டியதுதான். என் கண்ணால் பார்த்திருக்கேன்… எவ்ளோ பேர் கடன் வாங்கிட்டு ஓடி போயிட்டாங்க.. நேத்து கூட பேப்பர்ல பார்த்திங்களா.? சாக்லேட் வியாபாரி கடன் தொல்லையால குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. இனி அதான் நிலமை. மோடிக்கு ஓட்டு போட்டு நாம ஆதரிக்கல.

ஆனா மோடி ஆட்சியில உட்கார வச்ச மத்த மாநிலத்துக்குகாறங்க தான் ரொம்பவும் பாதிக்கப்பட்டுட்டாங்க. அங்க வாழ முடியாம வடக்கே இருந்து வரவங்களே அதுக்கு சாட்சி.  அவங்கள இனிமேலும் மோடியால் வாய வச்சிக்கினு ஏமாத்த முடியாது. வர எலெக்சன்ல எல்லாம் தெரியப்போவுது பாருங்க.

பிரபாகரன், திருநின்றவூர்.

சொந்த ஊர் தூத்துக்குடி, இங்க வந்து கடை வச்சி இரண்டு வருஷம் ஆகுது. தினமும் நான் மளிகை பொருளு வாங்க மார்க்கெட்டுக்கு வருவேன். இங்க வந்து போக நாப்பத்தி எட்டு கிலோ மீட்டர். சரக்கை எல்லாம் மினி வண்டியில ஏத்தி அனுப்பிட்டேன். நான் சும்மா போகக் கூடாதுன்னு வண்டியில இந்த சரக்கை வச்சிருக்கேன்.

இது டபுள் செலவு..வேற இன்னா பன்றது. என்னோட கடை கொஞ்சம் மீடியமான கடைதான். ஊர்ல இருந்து ஆளுங்க கூட்டினு வந்து வேலை வாங்குறேன். அவங்க சாப்பாடு செலவு, கூலி ஐநூறு, சேர்த்து ஒரு ஆளுக்கு எட்டு நூறு ஆகுது. இந்த செலவை நாங்க ஜனங்க கிட்ட இருந்து வாங்கிப்போம்.

சாதாரண ஜனங்க வாழ்க்கைதான் கஷ்டம். அஞ்சாயிரம், ஆறாயிரத்துக்குள்ள குடும்பம் நடத்தியாவணும்னு பல பேர் இருக்காங்க. அவங்கதான் எங்க கஸ்டமர். இப்படியே விலையேறிட்டே போனா அவங்க கண்டிப்பா வாங்குற பொருளை குறைச்சிப்பாங்க. நாங்க எப்படியோ சமாளிக்கிறோம்.

சங்கத்துல இருந்து போராட்டம் பண்ண சொல்லுறாங்க நாங்களும் கடைய மூடுறோம். ஆனா விலை குறையிறதே இல்ல. இந்த கடையடைப்பால எங்க வருமானம்தான் போவுது. அன்னிக்கு கடை ஆளுக்கு சம்பளமும் தந்தாவணும். எவ்ளோ போராட்டம் பண்ணாலும் எந்த பலனுமில்லை. தீர்வு கிடைக்கிற மாதிரியான போராட்டத்தையும் பண்றதில்ல. இது அரசியல் கட்சிகாரனுங்களுக்கு தெரியாதா? அதால இவங்க மேலையும்  வெறுப்பா இருக்குது.

செந்தில், அரும்பாக்கம், சிவகாசி சொந்த ஊர்.

நான் அரும்பாக்கத்துல சின்ன மளிகை கடை வச்சிருக்கேன். அங்க ஒரு நாளைக்கு அஞ்சி மூட்டை அரிசி தேவைப்படும். அதை எடுத்துனு போக வருவேன். வாரத்துக்கு இரண்டு தடவை பெட்ரோல் போடுவேன். வந்து போக சரியா இருக்கும். இப்ப அதிக செலவுதான். அரிசி ஒரு ரூபா இரண்டு ரூபா லாபம் தான். ஆனா இதை சொல்லி விலை ஏத்த முடியாது. இதனால வர லாபத்துல நஷ்டம்தான் அடையுது. என்ன பண்றதுன்னு தெரியல.

நாம் சந்தித்த கடைக்காரர்கள் அனைவரும் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டதோடு, பொதுவில் விலைவாசி உயர்வினால் வியாபாரம் நன்கு நடக்கவில்லை என்பதையும் வேதனையோடு பேசுகிறார்கள். ஆனால் இதற்கு என்ன தீர்வு என்பதை பேசுவதில்லை. அப்படி பேசுவதற்கும் அவர்கள் வாழ்வில் இடமோ, நேரமோ, கருத்தோ இருப்பதில்லை. கடிவாளமிட்ட குதிரை போல வீடு – கடை – சந்தை என்று சுற்றி வருகிறார்கள். போராடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. அப்படி போராடுமளவு அவர்கள் அரசியலால் இணைக்கப்படவில்லை. மோடியை வெறுப்பதோடு எந்தக்கட்சியும் சரியில்லை எனும் பொதுக்கருத்தும் அவர்களிடம் வேரோடி இருக்கிறது. யாராவது தேவதூதன் வந்து இந்த பிரச்சினையை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. ஒருவகையில் தோல்வியையும், இழப்புக்களையும் ஏற்றுக் கொண்டே வாழ்வது எனும் ஓட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு?

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க