இந்தோனேசியாவில் புதியதாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இப்போராட்டங்களைக் கடுமையான முறையில் போலீசு ஒடுக்கி வருகிறது.
இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் “பல அம்சங்களைக் கொண்ட” வேலை உருவாக்கச் சட்டத்தை இந்தோனேசிய அரசு கடந்த திங்கள் கிழமை (05-10-2020) அன்று நிறைவேற்றியது.
தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு விரோதமான பல்வேறு அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்துக்கு இந்தோனேசியத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய அளவிலான போராட்டத்துக்கு அந்நாட்டு தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இதனையொட்டி, கடந்த செவ்வாய்க் கிழமை (06-10-2020) முதல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு நீண்ட பேரணிகளை நடத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தடியடி, தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மூலம் தாக்குதலைத் தொடுத்தது இந்தோனேசிய போலீசு. பல இடங்களில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
வேலைவாய்ப்பைப் பெருக்குவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என அந்த நாட்டின் அதிகார வர்க்கத்தினர் கூறிவருகின்றனர். இந்தியாவிலும் கூட தொழிலாளர் நலச் சட்டங்களில் கார்ப்பரேட் ஆதரவு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது அரசால் சொல்லப்படும் காரணமும் இதுதான். ஆனால் உண்மையில் இந்தச் சட்டம் என்ன செய்யவிருக்கிறது ?
இந்தோனேசியாவின் தொழிலாளர்களுக்கான சம்பளம், வேலை நிலைமைகளில் உள்ள பாதுகாப்பை ரத்து செய்துள்ளது. துறைவாரியான குறைந்தபட்ச ஊதியத்தை அகற்றுகிறது.
இதற்கு முன்னர், ஒரு நிறுவனத்திலிருந்து தொழிலாளர் வெளியேறும் போது அவருக்குக் கொடுக்க வேண்டிய பிரிவுத் தொகை, அதிகபட்சமாக 32 மாதச் சம்பளமாக இருந்தது. இது அவர் எவ்வளவு காலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார் என்பதைப் பொருத்து மாறுபடும். ஆனால் தற்போது இந்தப் புதிய சட்டம் அதிகபட்ச தொகையை 19 மாதச் சம்பளமாக சுருக்கிவிட்டது.
அனுமதிக்கப்பட்ட கூடுதல் உழைப்பு நேரத்தை (Overtime) நாளொன்றுக்கு 4 மணிநேரமாக உயர்த்தியிருக்கிறது இந்தச் சட்டம். வாரத்திற்கு 18 மணிநேரம் அதிகபட்ச கூடுதல் உழைப்பு நேரமாக வரம்பு வைத்திருக்கிறது.
வேலையை வெளியே கொடுப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்தச் சட்டம் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகளை அனுமதிக்கிறது.
இந்தப் புதிய சட்டம் பெரு முதலாளிகளுக்குப் பெரும் ஆதாயமாக இருக்கும் நிலையில் இந்தோனேசிய பங்குச் சந்தை புள்ளிகள் 1.31% அளவிற்கு உயர்ந்துள்ளன.
தங்களது உரிமைகளுக்காகப் போராடும் இந்தோனேசிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் !
போராட்டப் புகைப்படங்கள் !
இந்தோனேசியாவின் தெற்கு சுலவெசி மாகாணத்தில் உள்ள மகஸ்ஸரில் இந்தோனேசிய அரசிற்கு எதிராகப் போராடும் ஒரு பல்கலைக் கழக மாணவர் ! நாள் : அக் 06, 2020 படம் :ரெய்டர்ஸ்மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டங் பகுதியின் மண்டல பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்னர் தடுப்பரணாக நிற்கும் போலீசாருடன் மோதும் போராட்டக்காரர் ! நாள் : அக் 06, 2020 படம் :ரெய்டர்ஸ்சுமத்ராவில் உள்ள லாம்பங்க் பகுதியில் நடைபெற்ற போராட்டம் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பெகாசியின் ஜபபேகா தொழிற்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்மஃப்டியில் இருந்த ஒரு போலீசு (கையில் துப்பாக்கியைப் பிடித்திருப்பவர்), இரண்டாம் நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இளைஞரை கைது செய்து அழைத்துச் செல்கிறார். இடம் : பாண்டங்க்., நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்ஜகார்த்தாவில் போராட்டக்காரர்களுடனான மோதலில் கவிழ்க்கப்பட்ட போலீசு வாகனத்தை மஃப்டியில் உள்ள போலீசுக்காரர்கள் தூக்குகின்றனர். நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்மத்திய ஜாவாவில் உள்ள செமராங் பகுதியில் போலீசாருடன் மோதும் போராட்டக்காரர்கள் நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்இந்தோனேசியாவின் பெகாசி பகுதியில் கலவர போலீசுடனான மோதலுக்குப் பின்னர் மாணவர்கள் எதிர்வினையாற்றுகின்றனர். நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்ஜகார்த்தாவில் போராட்டத்தினிடையே போலீசு வாகனத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் மாணவர்கள். நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பிபாண்டங்கில் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தண்ணீர் பீரங்கியின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது கலவர போலீசு. நாள் : அக் 07, 2020 படம் : ஏ.எஃப்.பிமேற்கு ஜாவாவில் உள்ள பாண்டிங் பகுதியில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பிமேற்கு ஜாவாவின் பாண்டங்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அவை கட்டிடத்தின் முன்னர் நடந்த போராட்டம் நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பிஇந்தோனேசியா, ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள டான்ஞ்-ஜெராங்கில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டம் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்மேற்கு ஜாவா – பாண்டங்கில் நடந்த போராட்டத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பற்றி எரிகிறது. நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பிஇந்தோனேசியாவின் லாம்பங்கில் நடைபெற்ற போராட்டத்தில், இளைஞர்கள் போலீசை நோக்கி கற்களை எரிகின்ற காட்சி. நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
பிரியாணி அண்டா திருடர்கள் எனப் பெயர்பெற்ற இந்துத்துவக் கும்பல், பிரியாணியை முசுலீம்களின் உணவாக சித்தரித்து அதன் மீது தனது வன்மத்தைக் காட்டி வந்துள்ளது. வெளிநாட்டினரால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் இந்திய உணவாக பிரியாணி இருக்கிறது !
இந்த பிரியாணியின் வரலாறு என்ன ? அதனை இந்துத்துவக் கும்பல் வெறுப்பதன் பின்னணி என்ன ?
மோடியின் தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்கள் : தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் !
பாகம் 1
செப்டம்பர் 21 அன்று, பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலைநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு 2020 – The occupational Safety, Health and Working Conditios Code, 2020, சமூகப்பாதுகாப்பு குறித்த சட்டத்தொகுப்பு 2020 – The Code on Social Security, 2020 தொழிலுறவு குறித்த சட்டத்தொகுப்பு – The Industrial Relations Code, 2020 என்கிற 3 சட்டத்தொகுப்பு குறித்த மசோதாக்களை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது, மோடி அரசு. நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களையும் 4 சட்டத் தொகுப்புகளாக (codes) மாற்றி, அந்த சட்டங்களை செல்லாக்காசாக்குவது என்பதுதான் மோடி அரசின் திட்டம். ஏற்கனவே ஊதியம் குறித்த சட்டத்தொகுப்பு – Labour Code on Wages – 2019-ல் ஒரு தொகுப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த 44 சட்டங்களும் மத்திய அரசால் போடப்பட்டவை. இவை அன்றி, மாநில அரசுகள் போட்டுள்ள சட்டங்கள் 100-க்கு மேல் இருக்கின்றன. இந்தப் புதிய மசோதாக்கள் மூலம் மத்திய சட்டங்கள் காலாவதியாகிப்போனால், மாநில அளவிலான சட்டங்களும் காலாவதியாகிவிடும்.
ஊதியம் மற்றும் நிதி தொடர்பான சட்டங்களை எல்லாம் இணைத்து “Labour Code on Wages” என்கிற தொகுப்பை வெளியிட்டது, மோடி அரசு. குறைந்தபட்ச ஊதியம் குறித்து மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளது முன்மொழிதலைக்கூட மோடி அரசு நிராகரித்துவிட்டது. அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட கார்ப்பரேட்டுகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதே இதன் பின்னணி.
தொழிலாளர் நலச்சட்டங்கள் மத்திய அரசு பட்டியலிலும் இருக்கிறது. அதே போல மாநில அரசு பட்டியலிலும் இருக்கிறது. தற்போதைய, மோடி அரசின் நடவடிக்கையானது மாநில அரசுகளின் உரிமையை பறித்துவிட்டது. (இதே அணுகுமுறையை புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல துறைகளிலும் கையாண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தை கேலிப்பொருளாக்கி இருப்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்). தொழிலாளர் சட்டங்களில் கூடுதல் இறுக்கம் தேவைப்படுகின்ற இந்தத் தருணத்தில் தொழிற்சங்கங்களது எதிர்ப்பையோ, ஆலோசனைகளையோ பொருட்படுத்தவில்லை. தொழிலாளர் “நலன்” காக்க உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான ILO-வின் ஆலோசனையைக் கூட கேட்கவில்லை. இன்னும் ஒருபடி மேலே போய், இந்த சட்டத்திருத்தங்களை பரிசீலிப்பதற்காக அரசே உருவாக்கிய “நாடாளுமன்ற நிலைக்குழு” கூட புறம் தள்ளப்பட்டு, கார்ப்பரேட்டுகளே அனைத்தையும் தீர்மானித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 தொகுப்புகளும், தொழிலாளர்களது வாழ்வாதார உரிமைகள் மீது நடத்தப்பட்டிருக்கும் உச்சகட்ட தாக்குதலாக பார்க்க வேண்டி இருக்கிறது. தொழில்நிறுவனம் சார்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகிய எவரையும் விட்டு வைக்கவில்லை. தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டுவது, உழைப்புக்கும், இலாபத்துக்கும் ஏற்ற ஊதியம் பெறுவது, பணியிடத்திலும், பணி ஓய்வுக்கு பிந்தைய காலத்திலும் எவ்வித பாதுகாப்பும் அற்ற பலியாடுகளாக்கப்பட்டுள்ளது, தொழிலாளி வர்க்கம்.
சில முக்கிய தாக்குதல்களை தொழிலாளி வர்க்கத்தின் புரிதலுக்காக தொகுத்தளிக்க வேண்டியிருக்கிறது.
தொழிலாளி / பணியாளர், வேலையளிப்பவர், நிறுவனம், தொழிற்தகராறில் தலையிடும் அதிகாரம் போன்ற கேந்திரமான வரையறுப்புகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் மிக முக்கியமான அழித்தொழிப்பாக இருக்கிறது.
தொழிலாளர் நலச்சட்டங்களில் ஆகப் பெரும்பான்மையானவை காலனியாதிக்க காலத்தில் போடப்பட்டவை. அந்த காலகட்டத்தில் தொழிலாளி/பணியாளர் என்கிற வரையறுப்பானது அப்போது இருந்த தொழில் உற்பத்தி அடிப்படையில் வரையறை செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக, ஐ.டி ஊழியர்கள், ஷாப்பிங் மால்கள், கால் டாக்சி மற்றும் இதர வகை வாகன சேவைகள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், பல்வேறு சேவை நிறுவனங்கள், நடுத்தர – சிறு – குறு நிறுவனங்கள் போன்றவை அப்போது கிடையாது.
ஸ்விக்கி போன்ற உணவு சப்ளை நிறுவனங்கள் கூட பல்லாயிரம் பேரை பணிக்கு வைத்துள்ளன. இத்தகைய சூழலில் தொழிலாளி/பணியாளர் என்கிற வரையறுப்பானது உடலுழைப்பு அல்லது மூளையுழைப்பில் ஈடுபட்டு அதற்கு ஈடாக, ஏதேனும் ஒரு அளவில் பண வடிவிலான பரிவர்த்தனை மதிப்பை பெறுகின்ற எவரும் தொழிலாளி/பணியாளர்தான். ஆனால், இந்த வரையறுப்பை நிச்சயமற்றதாக மாற்றிவிட்டது, தொழிலுறவு குறித்த சட்டத்தொகுப்பு.
வேலையளிப்பவர் என்கிற புதிய வரையறையானது, காண்டிராக்டரை வேலையளிப்பவராக மாற்றிவிட்டது. எந்த ஒரு தொழில் நிறுவனத்திலும் காண்டிராக்டர் என்பவர் அந்த நிறுவனத்துக்கு வேலையாள் சப்ளை செய்பவர் தான். காண்டிராக்ட் தொழிலாளியை காண்டிராகடர் மூலமாக பணியில் அமர்த்தும் நிர்வாகமே முதன்மை வேலையளிப்பவர். காண்டிராக்டர் ஒருபோதும் வேலையளிப்பவராகிவிட முடியாது. காண்டிராக்ட் தொழிலாளிக்கு உரிய சம்பளம், போனஸ் தருவது துவங்கி பணியிடப் பாதுகாப்பு வரையிலான அனைத்துக்கும் முதன்மை வேலையளிப்பவரே பொறுப்பு. ஆனால், மோடியின் புதிய சட்டத்தொகுப்பானது காண்டிராக்டரையும் வேலையளிப்பவர் என்கிற வரையறுப்பில் கொண்டு வந்து விட்டதால், இனிமேல் காண்டிராக்ட் வேலைக்கு வருகின்ற எந்த தொழிலாளிக்கும் ஏற்படக்கூடிய உயிரிழப்பு முதல் முறையான சம்பளம் மறுப்பது வரை எந்த “குற்றத்துக்கும்” முதன்மை வேலையளிப்பவரான நிறுவனம் ஒருபோதும் பொறுப்பேற்க வேண்டியதில்லை.
எங்கெல்லாம் காண்டிராக்ட் முறை செழித்தோங்குகிறது? நடுத்தர நிறுவனங்கள் கூட காண்டிராக்ட் தொழிலாளியை பயன்படுத்துகின்றன. அதன் எண்ணிக்கை கைவிட்டு எண்ணக்கூடியதுதான். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களில்தான் பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையைவிட பன்மடங்கு காண்டிராக்ட் தொழிலாளர்கள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படடுகின்றனர். இவ்வாறு நேரடி உற்பத்தியில் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்துவது முன்பெல்லாம் சட்டவிரோதம் என்று சொல்லப்பட்டது. அந்த சட்டவிரோதத்தையே சட்டமாக்கிவிட்டது, மோடி அரசு. 100 ஆண்டுகளுக்கு முன்னர், காலனிய ஆட்சியில் சுரண்டலின் ஒட்டுமொத்த வடிவமாக இருந்த இத்தகைய காண்டிராக்ட் முறையை தேசபக்த மோடியின் அரசு புதிய வடிவத்தில், காலனியாதிக்க கொடுமையைவிட மிகப்பெரிய கொடுமையான உள்ளடக்கத்தில் துணிந்து செய்திருக்கிறது. இனிவரும் காலங்களில் நிரந்தரத் தொழிலாளி என்கிற வகையினமே இருக்காது.
தனக்கு வேலையளிப்பவர் யார் என்பதை அறியாதது மட்டுமல்ல, அந்த வேலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதைக்கூட அறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு ‘புதிய’ தொழிலாளர் பிரிவுக்கு அகல கதவைத் திறந்துள்ளனர். பிறக்கும்போதே இறப்புத் தேதி தீர்மானிக்கப்பட்ட குழந்தையைப் போன்றதொரு அவல நிலையைப் போல இந்த புதிய தொழிலாளர் பிரிவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் “தீர்மானிக்கப்பட்ட காலக்கெடு வேலைவாய்ப்பு” (Fixed Term Employment – FTE). இந்த வேலை இழ(ற)ப்பைத் தவிர்க்க வேண்டுமானால், முதலாளி சொல்கின்ற வேலை எதுவாக இருந்தாலும், வேலைநேரம் எவ்வளவாக இருந்தாலும், பணியிட பாதுகாப்பு எத்தனை வேதனை மிக்கதாக இருந்தாலும், கொடுக்கப்படும் கூலி எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், அதை செய்துதான் ஆக வேண்டும். சில சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்ற தற்போதைய சூழலில், தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளிக்கு வருடத்திற்கொரு முறை – ஒரே ஒருநாள் – வேலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இரண்டாவது நாள் அதே வேலைக்கு “புதிய” தொழிலாளியாக வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற அயோக்கியத்தனம் நடந்து கொண்டிருக்கிறது. மோடி கொண்டு வந்திருக்கும் புதிய சட்டத்தொகுப்பு இந்த அயோக்கியத்தனத்தை சட்டபூர்வமாக்கி இருக்கிறது; கூலி அடிமை முறை மேலும் மேலும் தீவிரமாகி வருகிறது.
வேலை அளிப்பவர் யார் என்று தெரியாது. வேலைக்கோ, உயிருக்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது என்பது போன்ற எல்லா கொடுமைக்கும் சிகரம் வைப்பதாக இருக்கிறது இன்னொரு வரையறை. “தொழில் நிறுவனம்” என்றால் என்ன என்பதற்கான வரையறைதான் அந்த உச்சகட்டம். அறக்கட்டளைகள், சமூகசேவை அமைப்புகள் கூட இனிமேல் தொழில் நிறுவனம் என்கிற வகைப்பாட்டில் அடக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையான அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உதவுவதே நோக்கம் என்று கூட சொல்லிக் கொள்கின்றனர். மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த வரையறையை கேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வாரிக் கொடுத்திருக்கிறது, மோடி அரசு. அம்பானி அறக்கட்டளையின் கீழாக ரிலையன்ஸ் தொழில் நடத்தலாம். அதானி சமூக சேவகராக ‘மாறி’ ஒரு பத்தாயிரம் பேரை வேலையில் ஈடுபடுத்தலாம். கோக் நிறுவனம் தாகம் தீர்க்கும் சமூகசேவை அமைப்பாக தன்னை பதிவு செய்து கொள்ளலாம். மருந்து தயாரிப்பு நிறுவனமோ, மின் உற்பத்தி நிறுவனமோ, கார்ப்பரேட் கல்விக்கூடமோ கூட தம்மை சமூகசேவை அமைப்பாக அறிவித்துக் கொள்ள முடியும்.
அறக்கட்டளைகள், சமூக சேவை நிறுவனங்கள் என்றால் இலாப நோக்கம் இல்லாதவை என சட்டம் சொல்வதால் அம்பானி அறக்கட்டளை அல்லது அதானி சமூக சேவை அமைப்பின் பேனரில் வேலை செய்யும் தொழிலாளிக்கு உழைப்புக்கேற்ற ஊதியமோ, இலாபத்துக்கேற்ற சம்பள உயர்வோ கொடுக்க வேண்டியதில்லை. இது கற்பனை அல்ல. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வருகின்ற மருத்துவமனைகள், கல்விக்கூடங்களைப் பார்த்தால் உண்மை நன்கு தெரியும். இவை எல்லாம் தர்ம ஸ்தாபனங்களாக கருதப்பட்டு, இலாபம் இல்லா நிறுவனங்களாக பட்டியலிடப்பட்டு, அங்கெல்லாம் வேலை பார்க்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மொட்டை அடிக்கப்படுவர். (இப்போதும் அதுதான் நடக்கிறது. இப்போது நடப்பதை சட்டவிரோதம் என்கிறோம். இனி அவை எல்லாம் சட்டப்படியான செயல் என்றாக்கப்படும்.)
(தொடரும்)
கட்டுரை ஆக்கம்: பா.விஜயகுமார், தலைமைக்குழு உறுப்பினர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு-புதுவை
தேசிய கல்விக் கொள்கை – 2020 குறித்து பேரா. அனில் சத்கோபால் எழுதிய கட்டுரை பிரண்ட்லைன் பத்திரிக்கையில் ஆகஸ்ட் 28, 2020 ல் வெளிவந்தது. இக்கல்விக் கொள்கையின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை தமிழ் வாசகர்களுக்குப் படைக்கும் நோக்கில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக வினவு வாசகர்களுக்கு இங்கே அளிக்கிறோம் !
0o0o0o0o0
இந்தியாவின் இயற்கை மற்றும் மனித வளங்களை கொள்ளையடிக்க இந்து ராஷ்டிர சக்திகளின் முதுகில் சவாரி செய்யும் புதிய தாராளமய முதலாளித்துவம் தனது நெருக்கடியை தீர்க்க வேண்டிய தேவையின் நோக்கத்திலிருந்து இணையவழிக் கல்வியை முன்தள்ளுகிறது.
ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை தேசிய கல்வி கொள்கை (NEP) 2020-க்கு ஒப்புதல் அளித்தது இந்த கொள்கைக்கு பின்னாலுள்ள தத்துவார்த்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.
மே 1 அன்று, NEP 2020 மறுபதிப்பீடு செய்த பிரதமர் நரேந்திர மோடி, இணையவழிக் கல்வி, இந்த கல்விக் கொள்கையின் மையமாக இருக்கும் என்று அறிவித்தார். மேலும் இணையவழிக் கல்வி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியா கல்வியை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் என்றார். இவை இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவதாக, இணையவழிக் கல்வி முறை, கல்வியின் தரத்தை அதிகரிக்கும் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? மாறாக, ஆசிரியருடனான நேரடித் தொடர்பு மற்றும் மாணவர்களுக்கிடையேயான தொடர்பு இல்லாமல் கற்பது கற்றல் மட்டத்தை தொடர்ந்து மோசமடையச் செய்கின்ற என்பதற்கு சான்றுகள் ஏராளமாக உள்ளன.
இரண்டாவதாக, இந்த உலகத்தரம் என்பது என்ன?, யார் இதை நிர்ணயிக்கிறார்கள்? இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் உலகப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதை கேள்விக்கிடமில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த தரவரிசை பட்டியலை தனியார் நிறுவனங்களே வெளியிடப்படுகின்றன. இதற்கான அளவுருக்கள்(parameters) சந்தை அடிப்படைவாதத்திலிருந்தே உருவாகின்றன. இந்த அளவுருக்கள் கல்வியின் சமூக இலக்கு , சமூக மாற்றத்திற்கு அதனுடைய பங்கு மற்றும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் ஆகியவற்றோடு தொடர்பில்லாதவை.
இந்த பின்னணியில், இந்தியாவின் கல்வி மட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்துகிறோம் என்ற பிரதமரின் அறைகூவல் இப்போது இருக்கும் பிரச்சனைகளை ஒப்பிட்டால் அடைய வேண்டிய இலக்குகள் எல்லாம் வெகுதொலைவில் உள்ளது. NEP இந்த பிரச்சனைகளை பற்றியெல்லாம் கேள்வி எழுப்பவில்லை; அதற்கு பதிலாக உலகத் தரம் வாய்ந்த கல்வியை விமர்சனமின்றி ஊக்குவிக்கிறது. கல்வியில் உடனடியாக இணைய தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
பிரதமரின் அறிவிப்பு வெளியான மறுநாளே, கூகிளின் தலைமை செயல் அதிகாரி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெரியளவில் முதலீட்டு செய்யப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, அடுத்த நான்கு ஆண்டுகளில் இணையவழிக் கல்வி வர்த்தகத்தின் இந்திய சந்தை மதிப்பானது 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என ஒரு தனியார் நிறுவனம் (marketing agency) செய்தி வெளியிட்ட பிறகு நடந்தது. இதன் மூலம் இணையவழிக் கல்விக்கு கொடுக்கப்படும் அழுத்தமானது கல்வியின் தேவையிலிருந்து உந்தப்பட்டதல்ல., மாறாக புதிய தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தீர்க்க வேண்டியதன் தேவையிலிருந்து உருவானது என்றுத் தெளிவாகத் தெரிகிறது.
சுயசார்பு இந்தியாவை (atmanirbhar Bharat) கட்டியமைப்பதற்கான அழைப்பை ஜூன் 11 அன்று பிரதமர் விடுத்திருந்தார். ஜூன் 24 அன்று, மனிதவள மேம்பாட்டு (இப்போது கல்வி துறை) அமைச்சகம் உலக வங்கியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி ஆறு மாநிலங்களின் பள்ளி கல்வியில் தலையிட உலக வங்கியை இந்தியா அரசு அனுமதித்து, உலகிற்கே குருவாக தன்னைக் கருதிக் கொள்ளும் இந்தியா, தனது பள்ளிக் கல்வியை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்வது என்று தெரியாத போது சுயசார்பு இந்தியாவை எப்படி உருவாக்குவது? முக்கியமாக, உலக வங்கியின் மாவட்ட ஆரம்ப கல்வித் திட்டம் (DPEP) (1993-2002) இந்தியாவின் பாதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அரசு ஆரம்பக் கல்வியை பலவீனமாக்கியது. அதன் விளைவாக தனியார் பள்ளிகளுக்கு ஒரு பரந்த சந்தையை உருவாக்கியது. இது தான் உலக வங்கியின் முக்கிய நோக்கமும் கூட. இந்த வரலாற்றை இந்திய அரசு புறக்கணித்துள்ளது.
2001-02 ஆம் ஆண்டில், கல்விக்கு உலகவங்கி கொடுத்த கடனின் அளவு கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் செய்த செலவினங்களில் வெறும் 1.38 சதவீதம் தான். உலக வங்கியின் இந்த இரண்டாவது தலையீடு சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் வாயிலாக அமைந்தது. இத்திட்டம் 2002 லிருந்து இன்றுவரை, பல அடுக்கு பள்ளி முறை (multilayered layered school system) உருவாக காரணமாக அமைந்தது. இந்த முறையால் பாகுபாடுகள் தான் அதிகமாயின. இதனால் 2010-க்குள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை (I std to VIII std) கொடுக்க வேண்டுமென்ற SSA-ன் இலக்கை அடையவில்லை.
மூன்றாவது தடவையாக கல்வியில் தலையிட உலக வங்கியை ஏன் அழைக்க வேண்டும்? இந்தியாவில் போதிய மூலாதரங்கள் இல்லாத காரணத்தினாலா? DPEP ஐ போலவே, STARS (strengthening teaching-learning and results for States)திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்படும் கடனின் அளவு கல்விக்காக மத்திய மாநில அரசு செய்யும் மொத்த செலவுகளில் வெறும் 1.4 சதவீதம் மட்டுமே. உலக வங்கியை அனுமதிப்பது என்ற இந்த முடிவு அரச சார்பற்ற தனியார் நிறுவனங்களின் நலங்கள் (அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கல்வி-தொழில்நுட்ப நிறுவனங்கள்) மற்றும் 20 கோடி குழந்தைகளைக் கொண்ட தொடக்கக் கல்வி சந்தை ஆகியவற்றுக்காக புதிய தாராளமய முதலாளித்துவ சக்திகளின் செயலூக்கத்தினால் உருவானதாகும்.
ஜூலை 6-ம் தேதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்து மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், கொரானா பாதிப்பைக் கூட கணக்கில் கொள்ளாமல், இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளை இணையவழியில் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது. இதற்கு முரண்பாடாக, சில வாரங்களுக்கு முன்னர், மாநில அரசாங்கங்களே உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கலாம் என்றும் UGC கூறியிருந்தது.
தேர்வுகள் நடத்துவதற்கு எதிராக முடிவெடுத்திருந்த ஏழு மாநிலங்களின் முடிவுகளை UGC நிராகரித்துள்ளது. அரசியலைப்பு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்பின் மீது மத்திய அரசாங்கம் நடத்தியுள்ள இதுபோன்ற தாக்குதல்கள் தற்போது NEP ன் ஒருங்கிணைந்த சிறப்புத் தன்மையாக உள்ளது. இணையவழித் தேர்வுகள் என்ற மிகப்பெரிய சந்தைக்கான கல்வி-தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபவெறியானது மத்திய அரசாங்கத்தின் புதிய தாராளமய மூலதனத்திற்கு தரும் ஆதரவோடு பொருந்திபோகிறது.
மேற்கூறிய மூன்று எடுத்துகாட்டுகள் கல்வியில் மத்திய அரசின் கண்ணோட்டத்தை வரையறுக்கும் புதிய தாராளமயத்துடனான ஒருங்கிணைப்புகளை வெளிப்படுத்துகின்றன. NEP-ஐ மேலும் ஆராய்ந்தால் RSS-BJP ஆட்சியின் இந்து ராஷ்டிராவிற்கான கருத்தியல் சார்பு கூடுதலாகத் தெரியவரும்.
“இந்தியாவின் அறிவு மற்றும் சிந்தனை முறையின் வளமையான பாரம்பரியம்” என்ற NEP-ன் முழுமையற்ற மற்றும் தவறான வடிவமைப்பு அதன் வரலாற்று முன்முடிவுகளை தான் வெளிப்படுத்துகிறது. இது பார்ப்பனிய மரபுக்கும் அதன் அறிவு மூலத்திற்கும் போதுமான கவனம் கொடுத்திருக்கும் அதே வேளையில் அறிவுத் தளத்தில் பார்பனியமல்லாத பிரிவின் பங்களிப்பு மற்றும் புத்தர் மற்றும் மகாவீரரால் செய்யப்பட்ட தர்க்கம் மற்றும் விவாத முறைகள், அவர்கள் சமூக அடுக்கு மற்றும் படிநிலை சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்கிய மரபு ஆகியற்றை புறக்கணித்துள்ளது.
கூர்ந்து கவனித்தல் (observation), அனுபவவாதம் (empiricism) மற்றும் நிபந்தனை அனுமானம் ஆகியவற்றில் வேரூன்றிய தத்துவங்களான சார்வாகம் அல்லது லோகாயதம் போன்ற பொறுள்முதல்வாத தத்துவ நூல்களை NEP தனது வரலாற்று நினைவகத்திலிருந்து முற்றிலும் அழித்துள்ளது. 2019-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு எதிர்ப்பு வரும் வரை இந்தியாவின் மரபின் ஒரு வளமான பகுதியான தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்களுக்கு இடமளிக்க NEP-ன் பார்ப்பனிய கண்ணோட்டம் தவறிவிட்டது. இதுபோன்ற முன்முடிவுகள் காரணமாக கி.பி. முதல் நூற்றாண்டில் கேரளாவின் கடலோரப் பகுதியில் குடியேறி துணைக் கண்டத்தின் சமூக-கலாச்சார நிலப்பரப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ள சிரிய- கிறிஸ்தவர்களின் பங்களிப்புகளுக்கான சரியான இடத்தையும் NEP கொடுக்கவில்லை.
மேலும் மத்திய காலத்தைப் பற்றி, அதாவது இஸ்லாமிய மரபுகள் இந்து மரபுகளுடன் கலந்து உருவான சூபிசம் மற்றும் பல்வேறு அறிவியல் துறைகள், நிர்வாகம் , வர்த்தகம், இலக்கியம், இசை மற்றும் கலையில் மத்திய காலத்தின் பங்களிப்பை NEP ஓரங்கட்டி உள்ளது. இதேபோல், மத்திய மற்றும் கிழக்கு இந்தியா பழங்குடி மக்களின் அறிவுத் துறை சார்ந்த பங்களிப்பு , வடகிழக்கு மாநில மக்களின் விவசாயம், வனவியல் மற்றும் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் முறைகள் ஆகியவை “பிரதான” இந்திய பாரம்பரியம் என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த கோணலானப் பார்வையே 21-ம் நூற்றாண்டு இந்திய இளைஞர்களுக்கான கல்வித் திட்டத்தை தவறாக வழிநடத்துகிறது.
(தொடரும்)
கட்டுரையாளர் :அனில் சத்கோபால்
தமிழாக்கம் :பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு நன்றி :பிரண்ட்லைன்
குறிப்பு : அனில் சத்கோபால் – கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மற்றும் டெல்லி பல்கலைக்கழக கல்வித் துறையின் முன்னாள் டீன். பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – பொதுக்கல்வியை வலியுறுத்தும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கல்வியாளர்களின் அமைப்பு.
மோடி அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாக்களின் பின்னணி என்ன ? அது தொழிலாளர்களுக்கு எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ? என்பது குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் உரையாற்றுகிறார் !
அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்கள்“குடிமை அழிப்புக்கு” உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்து இங்கு புகாரின் பேசினார். அவர் கூறுகிறார்: ”அவர்கள் நமது கட்சியின் அமைப்புகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்கள்”. அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்களை – புகாரின், ரைகோவ் மற்றும் டாம்ஸ்கி ஆகியோரை – கட்சியானது அவர்களுடைய தவறுகளுக்காக ஊடகங்களிலும் கூட்டங்களிலும் விமர்சித்து “குடிமை அழிப்புக்கு” உள்ளாக்கியிருந்தது, அதேவேளையில் அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் அமைதியாக இருக்க “நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்” என்று அவர் கூறினார்.
இதெல்லாம் முட்டாள்தனம், தோழர்களே. அவை தாராளவாதியாகிவிட்ட கம்யூனிஸ்டின் தவறான சொற்கள் ஆகும். அவர் வலது விலகலை எதிர்த்த கட்சியின் போராட்டத்தில் கட்சியைப் பலவீனப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். புகாரினின் கருத்துப்படி, அவரும் அவரது நண்பர்களும் வலது விலகல் தவறுகளால் சூழப்பட்டிருக்கிறார்கள் என்றால், கட்சிக்கு அவர்களை அம்பலப்படுத்த உரிமை இல்லை, கட்சி வலது விலகலை எதிர்த்துப் போராடுவதை நிறுத்த வேண்டும், புகாரினும் அவரது நண்பர்களும் தங்கள் தவறுகளைக் கைவிடும்வரை காத்திருக்க வேண்டும். புகாரின் நம்மிடம் அளவுக்கு மிகுதியாகக் கோரவில்லையா? கட்சி அவருக்காகத்தான் இருக்கிறது, அவர் கட்சிக்காக இல்லை என்ற எண்ணத்தில் அவர் இல்லையா?
அவரை அமைதியாக இருக்கச் சொல்லி யார் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், கட்சி முழுவதும் வலது விலகலுக்கு எதிராக அணி திரட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இடர்ப்பாடுகளை எதிர்த்துத் தீர்மானகரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் போது, செயலற்ற நிலையில் இருக்குமாறு யார் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்? புகாரினும் அவரது நெருங்கிய நண்பர்களும் வலது விலகலுக்கு எதிரான தீர்மானகரமான போராட்டத்தில் ஈடுபட முன்வராமல் அதனுடன் சமரசம் செய்து கொள்வது ஏன்? புகாரினும் அவரது நண்பர்களும் இந்த மிகவும் கடினமான பணியை மேற்கொள்ள முடிவு செய்தால் கட்சி வரவேற்கும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்க முடியுமா? இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு அவர்கள் ஏன் முடிவு செய்யவில்லை, அது அவர்களுடைய கடமையல்லவா?
அவர்கள் கட்சியின் நலன்களை விடவும் அதன் பொது திசைவழியை விடவும் மேலாகத் தங்களுடைய குழுவின் நலன்களை முன்வைக்கிறார்கள் என்பதுதான் காரணம், இல்லையா? வலது விலகலை எதிர்த்த போராட்டத்தில் புகாரின், ரைகோவ், டாம்ஸ்கி ஆகியோர் இல்லை என்பது யாருடைய தவறு? அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்களின் ”குடிமை அழிப்பு” பற்றிய பேச்சு, அரசியல் தலைமைக் குழுவின் அந்த மூன்று உறுப்பினர்கள் தரப்பில், அமைதிகாக்கவும், வலது விலகலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தவும் கட்சி நிர்ப்பந்திக்கப்படுவதை மோசமான முறையில் மறைக்கும் முயற்சி என்பது தெளிவாகத் தெரியவில்லையா?
வலது விலகலுக்கு எதிரான போராட்டம் நமது கட்சியின் இரண்டாம்பட்சமான பணியாகக் கருதப்படக் கூடாது. வலது விலகலுக்கு எதிரான போராட்டம் நமது மிகவும் தீர்மானகரமான பணிகளில் ஒன்றாகும். இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும், பாட்டாளி வர்க்கத்தை முன்னோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் நமது அணிகளிடையே, நமது சொந்தக் கட்சியில், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் முன்னணிப் படையில் – இந்த முன்னணிப் படையில், கட்சியைச் சீர்குலைக்கவும், தொழிலாளர் வர்க்கத்தின் உள உறுதியைச் சிதைக்கவும், ”சோவியத்” முதலாளி வர்க்கத்துக்கு ஏற்ப நமது கொள்கையைத் தகவமைக்கவும், அதன் மூலம் நமது சோசலிசக் கட்டுமானத்தின் இடையூறுகளுக்கு அடிபணியவும் முயற்சி செய்து கொண்டிருக்கும் வலது விலகல்காரர்களின் சுதந்திரமான இருத்தலையும் சுதந்திரமான செயல்பாட்டையும் அனுமதிக்க வேண்டுமானால், – இது அனைத்தையும் அனுமதிக்க வேண்டுமானால் அதன் பொருள் என்ன?
புரட்சிக்கு முட்டுக்கட்டை போடத் தயாராக இருக்கிறோம், நமது சோசலிசக் கட்டுமானத்தை ஊடறுக்கவும், இடர்ப்பாடுகளைக் கண்டு ஓடிவிடவும், முதலாளித்துவ சக்திகளிடம் நமது நிலைகளைச் சரணாகதியடையச் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று இதற்குப் பொருளாகாதா?
வலது விலகலை எதிர்த்துப் போராட மறுப்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு, புரட்சிக்குத் துரோகமிழைப்பதாகும் என்பதைப் புகாரினின் குழு புரிந்து கொள்கிறதா?
வலது விலகலையும் அதன்பாலான சமரசப் போக்கையும் எதிர்த்து நாம் வெற்றி பெறவில்லை என்றால், நம்மை எதிர்கொண்டுள்ள இடர்ப்பாடுகளை அகற்றுவது என்பது சாத்தியமாகாது என்பதையும், இந்த இடர்ப்பாடுகளை அகற்றாமல் சோசலிசக் கட்டுமானத்தில் தீர்மானகரமான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்பதையும் புகாரின் குழு புரிந்து கொள்கிறதா?
இதன் காரணமாக, அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்களின் “குடிமை அழிப்பு” பற்றிய பரிதாபகரமான பேச்சுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?
இல்லை, தோழர்களே, புகாரினியர்கள் “குடிமை அழிப்பு” பற்றிய தாராளவாதப் பேச்சின் மூலம் கட்சியை அச்சுறுத்த மாட்டார்கள்.
அவர்கள் வலது விலகலுக்கு எதிராகவும் அதனுடனான சமரசத்திற்கு எதிராகவும் நமது கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருடனும் தோளோடு தோள் சேர்ந்து ஒரு தீர்மானகரமான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கட்சி கோருகிறது. தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டவும், வர்க்க எதிரிகளின் எதிர்ப்பை முறியடிக்கவும், நமது சோசலிசக் கட்டுமானத்தின் இடர்ப்பாடுகளின் மீது தீர்மானகரமான வெற்றியை ஒருங்கிணைக்கவும் உதவுமாறு புகாரின் குழுவிடம் கட்சி கோருகிறது.
புகாரினியர்கள் கட்சியின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், அந்த நேர்வில் கட்சி அவர்களை வரவேற்கும், அல்லது அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்றால், அந்த நேர்வில் அவர்கள் தங்களைத்தான் குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும்.
முடிவுகள்:
நான் முடிவுகளுக்கு வருகிறேன். நான் பின்வரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கிறேன்.
1) நாம் முதலில் புகாரின் குழுவின் கருத்துகளைக் கண்டிக்க வேண்டும். அந்தக் குழுவின் அறிவிப்புகளிலும் அதன் பிரதிநிதிகளின் பேச்சுகளிலும் வெளிப்படுத்தப்படுகிற அவர்களுடைய கருத்துகளைக் கண்டிக்க வேண்டும். மேலும் இந்தக் கருத்துகள் கட்சியின் திசைவழிக்குப் பொருத்தமற்றவையாகவும் வலது விலகலின் நிலையுடன் முழுமையாகப் பொருந்திப் போவதாகவும் இருக்கின்றன என்று தெரிவிக்க வேண்டும்.
2) புகாரின் குழுவின் விசுவாசமின்மை மற்றும் குழுவாதம் ஆகியவற்றின் மிகவும் அப்பட்டமான வெளிப்பாடாக புகாரின் குழுவின் காமனேவின் குழுவுடனான இரகசியப் பேச்சு வார்த்தைகளை நாம் கண்டிக்க வேண்டும்.
3) புகாரின் மற்றும் டாம்ஸ்கியால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சரணடைவுக் கொள்கையை கட்சிக் கட்டுப்பாட்டின் தொடக்கநிலை தேவைகளை முழுமையாக மீறுவதாகும் என்று கண்டிக்க வேண்டும்.
4) புகாரினும் டாம்ஸ்கியும் அவர்களுடைய பதவிகளிலிருந்து அகற்றப்பட வேண்டும், மேலும் மத்தியக் குழுவின் முடிவுகளுக்குச் சிறிய அளவிலான கீழ்ப்படியாமை நேர்விலும் கூட எச்சரிக்கப்பட வேண்டும், மத்தியக் குழு அவர்கள் இருவரையும் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து விலக்கிவைக்க நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
5) அரசியல் தலைமைக் குழுவின் உறுப்பினர்களும் தேர்வுநிலை உறுப்பினர்களும் பொதுவெளியில் பேசும்போது, கட்சியின் திசை வழியிலிருந்தும் மத்தியக் குழுவின் அல்லது அதன் அமைப்புகளின் முடிவுகளிலிருந்தும் எந்த வகையிலும் விலகிச் செல்வதையும் தடை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.
6) கட்சி மற்றும் சோவியத்தின் ஊடக அமைப்பு இதழ்கள், செய்தித்தாள்கள், மற்றும் சஞ்சிகைகள் ஆகிய கட்சியின் திசை வழியையும் அதன் முன்னணி அமைப்புகளின் முடிவுகளையும் முழுமையாக உறுதிப்படுத்தும் வகையிலும் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
7) கட்சி மற்றும் அதன் மத்தியக் குழு மற்றும் அரசியல் தலைமைக் குழுவின் முடிவுகளின் இரகசியத் தன்மையை மீறுவதற்கு முயற்சி செய்யும் நபர்களுக்கான சிறப்பு விதிகளை, அவர்களை மத்தியக் குழுவிலிருந்தும் கட்சியிலிருந்தும் கூட வெளியேற்றுவது உள்ளிட்ட சிறப்பு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.
8) உட்கட்சி பிரச்சினைகள் தொடர்பான, மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கூட்டு முழு அமர்வுக் கூட்டத்தின் தீர்மானத்தின் பிரதியை, தற்போதைக்கு ஊடகத்தில் வெளியிடாமல், கட்சியின் அனைத்து வட்டார அமைப்புகளுக்கும், பதினாறாவது கட்சி மாநாட்டின் பிரதிநிதிகளுக்கும் நாம் விநியோகிக்க வேண்டும்.
எனது கருத்துப்படி, இதுதான் இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளிவருவதற்கான வழியாகும்.
புகாரினும் டாம்ஸ்கியும் மத்தியக் குழுவின் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று சில தோழர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்தத் தோழர்களுடன் நான் உடன்படவில்லை. எனது கருத்துப்படி, தற்போதைக்கு அத்தகைய தீவிரமான நடவடிக்கைக்குப் போகாமல் இருக்கலாம்.
(முற்றும்)
நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் தலித் இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில அரசின் அனைத்து உறுப்புகளும் பாலியல் வன்கொலை செய்த தாக்கூர் சாதிக் கிரிமினல்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
இந்தச் சம்பவத்தையும், இது போன்ற சம்பவங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமாக நடப்பதற்கான காரணமாக இந்துத்துவ சிந்தனையில் ஊறிப் போயுள்ள பார்ப்பனிய ஆணாதிக்க வெறியையும் அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் அமிர்தா உரையாற்றுகிறார்.
எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பு.ஜ.தொ.மு.) சங்கம், பிற தொழிற்சங்க அமைப்புக்களின் செயல்பாட்டில் இருந்து, மாறுபட்டு, புரட்சிகர அரசியலை, தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுக் கொடுப்பது, அதன் மூலம், சமூக அரசியல் மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டும் அரசியல் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்க ரீதியாக முதலாளி வர்க்கத்திடம் எவ்வித சமரசமின்றி, போராடி வருவதோடு, அரசியல் ரீதியில் தொழிலாளி வர்க்க எதிரிகளை அம்பலப்படுத்தி, பல்வேறு அரசியல் முன்னெடுப்புக்களையும் நடத்தி வருகிறது. தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும், அம்மக்கள் நலன் சார்ந்து நின்று போராடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர். சுப. தங்கராசு, பெல் சொசைட்டி மூலம் பெல் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக, அனாதீன நிலத்தை வாங்குவதில், ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அதற்காக அவரை பு.ஜ.தொ.மு. சங்கத்தின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நிரந்தர நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், புரட்சிகர இலட்சியத்தை நோக்கி இயங்கும் எந்த அமைப்பும் தமது அமைப்பில் நிலவும், சரி தவறுகள் பற்றிய பரிசீலணையை, கறாராகக் கையாண்டு சுப.தங்கராசு அவர்களை சொசைட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதை சோதித்திருக்க வேண்டும். அதை துவக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டும்.
மாநிலக் குழு அவ்வாறான பரிசீலணை நடவடிக்கைகளை முறையாக கையாளாததன் விளைவால் இந்த பெரும் தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை மாநில நிர்வாகக் குழு ஏற்கிறது. அது தான் இன்று எமது தொழிற்சங்க அமைப்பின் மீதான களங்கத்திற்கும், அவநம்பிக்கைக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. சுப. தங்கராசு செய்தது சாதாரண தவறாகப் பார்க்க முடியாது. அது மன்னிக்க முடியாத குற்றமாகும். அப்படிப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்திற்கு மாநில நிர்வாகக் குழுவே முக்கிய பொறுப்பு என எமது மாநில செயற்குழு கடும் விமர்சனமாகச் சுட்டிக் காட்டியதை மாநில நிர்வாகக் குழுவும் மனதார ஏற்கிறது.
இத்தவறை செய்த மாநில நிர்வாகக் குழு ஒட்டு மொத்தமாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குத் தண்டனையாக, மாநில நிர்வாகக் குழு தோழர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, தகுதி இறக்கம் செய்யப்பட வேண்டும் என்ற மாநில செயற்குழுவின் முடிவையும் ஏற்கிறது. அதன் படி, ஒட்டு மொத்த மாநில நிர்வாகக் குழு தோழர்களும் பதவி விலக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு, வருகின்ற 31.12.2020 – க்குள் மாவட்ட / மாநில மாநாடுகளை நடத்தி தேர்வு செய்யப்படுவர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக தலைமைக் குழுவாக செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
த.பழனிசாமி
தலைமைக்குழு சார்பாக
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374
அக்டோபர் 6, 2020 அன்று சென்னையில் மக்கள் அதிகாரத்தின் மாநில செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளோம்.
அமைப்பு விரோத, சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மாநிலப் பொருளாளர் காளியப்பன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் த.கணேசன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும், மக்கள் அதிகாரத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமைக் குழுவில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வழக்கறிஞர் சி.ராஜு கருத்து வேறுபாடு காரணமாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சுரேசு சக்தி முருகன், வேறு பணிகள் காரணமாக தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோர் அவர்கள் வகித்த மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் இருந்தும், செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.
தலைமைக் குழுவின் புதிய உறுப்பினர்களாக தோழர்கள் வெற்றிவேல் செழியன், மருது, குருசாமி, முத்துகுமார் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலப் பொருளாளராக தோழர் குருசாமி, மாநில செய்தித் தொடர்பாளராக தோழர் மருது என தேர்வு செய்யப்பட்டனர். மக்கள் அதிகாரத்தின் அனைத்து உறுப்பினர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவின் கீழ் வழக்கம் போல் இயங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் மற்றும் புதுவை மக்களும், அனைத்து சனநாயக சக்திகளும் மக்கள் அதிகாரத்தின் அரசியல்-அமைப்பு செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம்.
தோழமையுடன், வெற்றிவேல் செழியன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை
செப்டம்பர் 14-ம் நாள். அந்த தலித் குடும்பம் தீவனப் புல் அறுக்க வயலுக்குச் சென்றிருந்தது. சற்று நேரத்தில், அறுத்த சேகரித்த புல்லை வீட்டில் உள்ள கால்நடைகளுக்குப் போட எடுத்துச் சென்றுவிட்டார். தாய் ஒரு இடத்திலும் மகள் ஒரு இடத்திலும் புல் சேகரித்தார்கள். போதுமான புல்லை சேகரித்தப்பின், வீடு திரும்ப மகளை அழைத்தார் அந்தத் தாய். ஆனால், பதில் குரல் ஏதும் வரவில்லை. சுற்றிலும் தேடினார்; மகளைக் காணவில்லை. சுமார் நூறு மீட்டர் தொலைவில் புல் அறுக்கச் சென்ற மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
தனக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்லக்கூட அந்தப் பெண்ணால் இயலவில்லை. ஏனெனில் அவருடைய நாக்கு அறுபட்டிருந்தது. அணிந்திருந்த துப்பட்டாவை அவருடைய கழுத்தில் கட்டி இழுத்து வரப்பட்டு அங்கே கிடத்தப்பட்டிருந்தார். அவருடைய கழுத்து கிட்டத்தட்ட உடைக்கப்பட்டிருந்தது. அவருடைய முதுகெலும்பு உடைக்கப்பட்டிருந்தது. தன் மகளின் நிலையைக் கண்டு நிலை குலைந்துபோன தாயின் காதில், சந்தீப் என்ற பெயர் மட்டும் முனகலாக ஒலித்தது. அந்த கிராமத்தில் தாக்கூர் சாதி வெறி பிடித்த குடிகார கிரிமினலின் பெயர் அது.
தன் மகள் நான்கு தாக்கூர் சாதி வெறி கிரிமினல்களால் கொடூர வன்கொடுமைக்கு ஆளாக்கப்படிருப்பதை அறிந்துகொண்டார் அந்தத் தாய்.தன் மகளை காப்பாற்றுவதுதான் முதல் கடமை என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அந்த தலித் குடும்பம். கிட்டத்தட்ட 12 நாட்கள் கொடூர துயரத்துடன் போராடிய அந்தப் பெண், கடந்த செவ்வாய் (29-09-2020) அன்று உயிரிழந்தார்.
இந்தக் கொடூரம் நடந்தேறியது ராமனின் ராஜ்ஜியமாக பீற்றிக் கொள்ளப்படும் உத்தர பிரதேசத்தில். ராம ராஜ்ஜியம் என முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அப்படி சொல்ல முடியாது என்பதற்கு எந்த விசயமும் இல்லை என்பதால் ராம ராஜ்ஜியம் என்றே சொல்லலாம். ராம ராஜ்ஜியத்தில் நிகழ்ந்தது என்பதாலோ என்னவோ எந்தவொரு ‘இந்திய’ மைய ஊடகத்திலும் அந்தப் பெண் இறக்கும்வரை அது பேசுபொருளாகவில்லை.
பாலிவுட்டின் போதை புகை மண்டலத்தில் யாரெல்லாம் மயங்கிக் கிடந்தார்கள் என வாட்ஸ் அப் பில் புலனாய்ந்து கொண்டிருந்தன அந்த ஊடகங்கள். “இந்தியாவின் மகள்களாக” யாருமில்லா விமான நிலையத்தில் ஒய் பிளஸ் பாதுகாப்பில் கங்கணா போன்ற பெண்கள் ‘ஜான்சிராணி’களாக வலம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், தலித் பெண்ணின் நாக்கை வெட்டி, முதுகெலும்பை உடைத்து, அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கயவர்கள் மீது புகார் பதியவும்கூட முடியவில்லை.
சாதியும் வர்க்கமும் பொறுக்கிகளை பாதுகாக்கும் என்பதே ராம ராஜ்ஜியத்தில் எழுதப்பட்டிருக்கும் விதி என்பதால், கண் துடைப்பாக வழக்குப் பதியவே அந்தக் குடும்பம் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
அந்தப் பெண் இறந்த பின்னர், ராம ராஜ்ஜியத்தின் தளபதியாக உள்ள ஆதித்யநாத்தின் போலீசு அதிகாரி, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்றார். அடிக்கும்போது வலி தாங்காமல் நாக்கைக் கடித்துக்கொண்டு தானே நாக்கை துண்டித்துக்கொண்டதாக இறந்த பெண்ணின் மீதே பழிபோட்டார். தாக்கூர் குடும்பத்துக்கும் தலித் குடும்பத்துக்கும் முன்பகை இருந்ததாகவும் அதனாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்கூட ஆதித்யநாத்தின் ஏவலாளிகள் சொன்னார்கள்.
மாணவர்களால் எரிக்கப்படும் மனுஸ்மிருதி
பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதால் நான்கு தாக்கூர் பொறுக்கிகளின் பெயர் தெரிந்தது, அதனால், வெறும் தாக்குதல் மட்டும் நடந்திருப்பதை போலீசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இல்லையெனில், புல் அறுக்கச் சென்ற பெண் தன்னைத்தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்றும்கூட சொல்லக்கூடும். ஏனெனில் ராம ராஜ்ஜியத்தில் அனைத்து குற்றங்களுக்கும் பெண்களே பொறுப்பு.
“பாரம்பரியம் ஒரு சிதைந்த மரத்தைப் போல பெண்களை உலர்த்துகிறது, அங்கு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டும், அங்கு அவர்கள் வேறொருவரின் கரும் நிழலின் கீழ் வாழ வேண்டும். அத்தகைய நாட்டில் பெண்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறார்கள். ஒரு பெண்ணாகப் பிறப்பது ஒரு குற்றம், ஒரு பெண்ணாகப் பிறப்பது ஒரு குற்றம்”
– ஹிரா பன்சோட் என்ற மராத்திய தலித் பெண் கவிஞரின் வரிகள் இவை. பாரம்பரிய என்ற இடத்தில் ராம ராஜ்ஜியம் என இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். ராம ராஜ்ஜியத்தின் ஆதார பிரதிகள் அனைத்தும் பெண்களை, குறிப்பாக விளிம்பு நிலை பெண்களை உணர்வற்ற ஒரு பொருளாகவே பெண்களைக் கருதுகின்றன.
மனுஸ்மிருதி இப்படி சொல்கிறது: ‘ஒரு பெண், தனது வாழ்க்கையில் எந்த நிலையிலும், சுதந்திரமாக இருக்க தகுதியற்றவள் – அவள் திருமணம் செய்து கொள்ளும் வரை தந்தை அவளைக் காத்துக்கொள்ள வேண்டும், இளமையில் கணவன், மற்றும் வயதான வயதில் மகன்’. (பிரிவு I, வசனம் 9.3).
‘உயர்சாதி’ பெண், ‘தாழ்ந்த’ சாதி ஆணை மனதாலும் தீண்டக்கூடாது. ஆனால், ‘உயர்சாதி’ ஆண், ‘கீழ்சாதி’ பெண்களை வன்புணர்வு செய்துவிட்டு, நீரில் மூழ்கி எழுந்துவிட வேண்டும். ‘கீழ்சாதி’ பெண்ணை தொட்ட தீட்டு கழிந்துவிடுமாம். ராம ராஜ்ஜியத்தின் புனித நூல்கள் இப்படி விதி எழுதி வைத்திருக்கின்றன.
ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த விதியை பின்பற்றும் புதல்வர்கள் பெயரளவில் ‘ஜனநாயகம்’ என சொல்லிக்கொள்ளும் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். சாதியும் அது அளித்திருக்கும் மேலாதிக்கமும் அவர்களை கொடும் குற்றங்களிலிருந்து தப்ப வைத்துக்கொண்டிருக்கிறது.
2006-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சியில் நிகழ்ந்த இழிபுகழ்பெற்ற கொடூரத்தில் ஆதிக்க சாதியினரின் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக நின்ற போட்மாங்கே குடும்பம் என்ன ஆனது? பையாலால் போட்மாங்கே மனைவி, மகள் இருவரும் ஊரார் முன் நிர்வாணமாக்கபட்டனர். இரண்டு மகனையும் அடித்தே கொன்றனர். 17 வயது மகளை சாதி வெறி கும்பல் வல்லுறவு கொண்டது. அந்தச் சிறுமி இறந்த பிறகும் அவரை வன்புணர்ந்தது அந்தக் கும்பல். மனைவி, மகள், மகன்கள் ஊரார் முன் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில், போட்மாங்கே மட்டும் உயிர்பிழைத்தார். நீதி கிடைத்ததா? மனுஸ்மிருதி நீதியாக உள்ள நாட்டில் தலித்துகள் மீதான கொடுமைகள் இயல்பானவை என நீதிமன்றத்துக்குத் தெரியும்.
1992-ம் ஆண்டு குழந்தை திருமணங்களை எதிர்த்து நின்ற பன்வாரி தேவி, ஆதிக்க சாதி வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தலித் பெண்கள், பழங்குடி இன பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பெரும்பாலான குற்றங்களில் ஆதிக்கசாதிவெறி முதன்மையான கருவியாக உள்ளது. அதை புனிதப்படுத்துபவையாக ராம ராஜ்ஜியத்தின் மனுஸ்மிருதிகளும் புராணங்களும் உள்ளன.
இந்திய சமூகத்தின் அடிகட்டுமானம் மனுஸ்மிருதிகளின் மீது எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், புத்துணர்வுடன் அமைக்கப்பட்டிருக்கும் ராம ராஜ்ஜியத்தில் தினந்தோறும் ஆதிக்க சாதி ஆண்களின் கைகளால் விளிம்பு நிலை பெண்கள் உடைத்து எறியப்படுகிறார்கள். புல் அறுக்கச் சென்று ஆதிக்கசாதி பொறுக்கிகளால் உடைத்து எறியப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண், ஊரின் ஒதுக்குப்புறமாக புல் அடர்ந்த இடத்தில் குடும்பத்தினருக்கும்கூட தெரியாமல் அவசர அவசரமாக எரியூட்டப்படுகிறார். பெண்களிலும்கூட, தான் நீதியைக் கூட பெற முடியாத சாதியைச் சேர்ந்த ஒரு பெண் என்பதை அவர் அறிந்திருக்கக்கூடும். ராமனின் ராஜ்ஜியத்தில் அநீதியே, நீதி.
புகாரின் நமது கட்சியின் மத்தியக் குழுவின்பால் கொண்டுள்ள மனப்போக்கில் கட்சி உறுப்பினர்களில் மிகவும் “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவும்” ”விசுவாசமாகவும்” இருப்பவர்களில் ஒருவராவார் என்று இங்கு ரைகோவ் நமக்கு உறுதியளித்துள்ளார்.
நான் அதைச் சந்தேகிக்க நினைக்கிறேன். ரைகோவின் சொற்களை நம்ப முடியாது. நமக்குப் பொருண்மைகள் தேவை. ரைகோவால் அந்தப் பொருண்மைகளை வழங்க முடியவில்லை.
எடுத்துக்காட்டாக, டிராட்ஸ்கியர்களுடன் தொடர்புடைய காமனேவ் குழுவுடன் திரைமறைவில் புகாரின் நடத்திய பேச்சுவார்த்தைகள்; ஓர் உட்கட்சிக் குழுக் கூட்டணியை நிறுவுவது குறித்த பேச்சுவார்த்தைகள்; மத்தியக் குழுவின் கொள்கையை மாற்றுவது குறித்த, அரசியல் தலைமைக் குழுவின் உள்ளடக்கத்தை மாற்றுவது குறித்த, தானியக் கொள்முதல் நெருக்கடியை மத்தியக் குழுவைத் தாக்குவதற்குப் பயன்படுத்திக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் போன்ற பொருண்மைகளை எடுத்துக்கொள்வோம். எழுகின்ற கேள்வி: தனது மத்தியக் குழுவின்பால் புகாரின் கொண்டுள்ள “விசுவாசமான” ”விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட” அணுகுமுறை எங்கே?
அதற்கு மாறாக, அத்தகைய நடத்தை அவரது மத்தியக்குழுவுக்கு, அவரது கட்சிக்கு, அரசியல் தலைமைக் குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையிலும், எந்த ஒரு விசுவாசத்தையும் மீறிய செயல் ஆகாதா? இது மத்தியக் குழுவுக்கு விசுவாசமாக இருப்பது என்று குறிப்பிடப்பட்டால், ஒருவர் மத்தியக் குழுவுக்குத் துரோகமிழைப்பதற்கு என்ன பெயர் வைப்பது?
புகாரின் விசுவாசத்தைப் பற்றியும் நேர்மையைப் பற்றியும் பேச விரும்புகிறார், ஆனால் அவர் அவரது மத்தியக் குழுவுக்கு எதிராக டிராட்ஸ்கியர்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிற போது, மேலும் அதன் மூலம் அவரது மத்தியக் குழுவுக்குத் துரோகமிழைக்கிறபோது, அவரது மத்தியக் குழுவுக்கான விசுவாசத்தின் அடிப்படைத் தேவைகளை மிகவும் நேர்மையற்ற விதத்தில் அவர் மீறிக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதை அவரது மனச்சாட்சியைக் கேட்டு, ஏன் ஆய்வு செய்து பார்க்க முயற்சி செய்யக்கூடாது?
கட்சியின் மத்தியக் குழுவில் கூட்டுத்தலைமை இல்லாமல் இருக்கிறது என்பது பற்றி புகாரின் இங்கு பேசினார். மேலும் மத்தியக் குழுவின் அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மையால் கூட்டுத் தலைமையின் தேவைகள் மீறப்படுகின்றன என்று நம்மிடம் உறுதியாகக் கூறினார்.
உண்மையில், நமது முழு அமர்வுக் கூட்டம் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. புகாரினின் இந்த வெட்கமற்ற பாசாங்குக் கூற்றைக்கூட அதனால் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் மத்தியக் குழுவின் பெரும்பான்மைக்கு எதிராக முழு அமர்வுக் கூட்டத்தில் இந்த மாதிரி துணிவுடன் பேசுவதற்கு ஒருவர் வெட்க உணர்வு அனைத்தையும் உதறித் தள்ளியிருக்க வேண்டும்.
உண்மையில், அரசின் தலைமைப் பொறுப்பை வைத்திருக்கிற மத்தியக் குழுவின் பெரும்பான்மை அதன் சக்திகள் அனைத்தையும் அதை முன்னேற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறபோது, இந்தக் கடினமான பணியில் புகாரின் குழுவிடம் ஆதரவுக்கரம் அளிக்குமாறு வலியுறுத்திக்கொண்டிருக்கும்போது, அதேநேரத்தில் புகாரின் குழு மத்தியக் குழுவுக்கு ஆதரவுக் கரம் நீட்டாமல், அதற்கு மாறாக அதன் வழியில் இடையூறாக இருந்து கொண்டு, அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறபோது, விலகுவதாக அச்சுறுத்திக்கொண்டு, நமது கட்சியின் மத்தியக் குழுவுக்கு எதிராக, கட்சியின் எதிரிகளுடன், டிராட்ஸ்கியர்களுடன், உடன்பாட்டுக்கு வருகிறபோது, நாம் கூட்டுத் தலைமையைப் பற்றி எப்படிப் பேசமுடியும்?
உண்மையில், புகாரின் கட்சிக்கு எதிராக டிராட்ஸ்கியர்களுடன் ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டிருக்கிறார், அவரது மத்தியக் குழுவுக்குத் துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறார், நமது கட்சியின் மத்தியக் குழு கூட்டுத் தலைமையை நடைமுறைப்படுத்துவதற்கு விரும்பவில்லை, விரும்ப மாட்டார் என்பதை பாசாங்குக்காரர்கள் தவிர வேறு யாரால் மறுக்க முடியும்?
புகாரின் மத்தியக் குழுவில் கூட்டுத் தலைமை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோதிலும், மத்தியக் குழுவின் பெரும்பான்மை மீது அவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார், அவரது வஞ்சக நடத்தையை மறைக்கும் நோக்கத்துடன் அவர் அவ்வாறு செய்துகொண்டிருக்கிறார் என்பதை குருடர்களைத் தவிர வேறு யாரால் காணாமல் இருக்க முடியும்?
நமது கட்சியின் மத்தியக் குழு தொடர்பாக விசுவாசம் மற்றும் கூட்டுத் தலைமையின் அடிப்படைத் தேவைகளைப் புகாரின் மீறுவது இது முதல் முறையல்ல என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகளை நமது கட்சி அறிந்திருக்கிறது. லெனின் வாழ்நாளிலேயே, பிரெஸ்ட் சமாதானக் காலகட்டத்தில், சமாதானம் குறித்த பிரச்சினையில் சிறுபான்மையாக இருந்த புகாரின் நமது கட்சியின் எதிரிகளாக இருந்த இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களிடம் விரைந்து சென்று, அவர்களுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மேலும் லெனினுக்கும் மத்தியக் குழுவுக்கும் எதிராக அவர்களுடன் ஒரு கூட்டணியை நிறுவுவதற்கு முயற்சி செய்தார். இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களுடன் அந்த நேரத்தில் அவர் என்ன வகையான உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார் என்பது, துரதிர்ஷ்டவசமாக நமக்கு இன்னும் தெரியவில்லை.
ஆனால் இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்கள் அந்த நேரத்தில் லெனினை சிறைபிடிக்கவும், ஒரு சோவியத் எதிர்ப்பு ஆட்சிக் கவிழ்ப்புக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவில்லை. ஆனால், இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களிடம் விரைந்து சென்று அவர்களுடன் சேர்ந்து மத்தியக் குழுவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த அதேநேரத்தில் புகாரின் இப்போது அவர் செய்து கொண்டிருப்பதைப் போலவே கூட்டுத் தலைமையின் தேவை பற்றி உரத்துக் குரல் எழுப்புவதைத் தொடர்ந்து வந்தார் என்பதுதான் மிகவும் வியக்கத்தக்க விடயம் ஆகும்.
லெனின் வாழ்நாளிலேயே, நமது கட்சியின் மாஸ்கோ பிராந்தியக் குழுவில் பெரும்பான்மையையும், “இடதுசாரிக்” கம்யூனிஸ்டுக் குழுவின் ஆதரவையும் பெற்றிருந்தார். அவர் கட்சியின் மத்தியக் குழுவின் நம்பிக்கையின்மையைத் தெரிவிக்குமாறும், அதன் முடிவுகளுக்குக் கீழ்ப்படிய மறுக்குமாறும், நமது கட்சியைப் பிளவுபடுத்தும் கேள்விகளை எழுப்புமாறும் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்என்பது நமது கட்சியின் வரலாற்றில் நிகழ்ந்ததாகும். பிரெஸ்ட் சமாதானக் காலகட்டத்தின்போதுதான், பிரெஸ்ட் சமாதானத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவசியம் என்று மத்தியக் குழு முடிவு செய்திருந்தது.
புகாரினின் விசுவாசம் மற்றும் கூட்டுத் தலைமையின் தன்மை இப்படித்தான் இருக்கிறது.
கூட்டுப் பணியின் தேவை பற்றி இங்கு ரைகோவ் பேசினார். அதேநேரத்தில் அவரும் அவரது நண்பர்களும் கூட்டுப் பணிக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதற்குமாறாக அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மை அதற்கு எதிராக இருந்ததாகவும் கூறி, அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மை மீது குற்றம் சாட்டினார். இருப்பினும் ரைகோவால் அவரது கூற்றுக்கு ஆதரவாக ஒரே ஓர் உண்மைச் செய்தியைக் கூட எடுத்துக்காட்ட இயலவில்லை.
ரைகோவின் இந்தக் கட்டுக்கதையை அம்பலப்படுத்துவதற்காக, ஒரு சில பொருண்மைகளை நான் இங்கு எடுத்துக்கூறுகிறேன். அவை ரைகோவ் கூட்டுப் பணியை எப்படி மேற்கொள்கிறார் என்பதை உங்களுக்குக் காட்டும்.
முதல் எடுத்துக்காட்டு. அமெரிக்காவுக்கு தங்கம் ஏற்றுமதி செய்தது பற்றிய கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். மக்கள் கமிசார்களின் பேரவை அல்லது மத்தியக் குழுவின் முடிவுப்படி, அல்லது மத்தியக் குழுவின் ஒப்புதலுடன், அல்லது அதற்குத் தெரிந்தவாறு அமெரிக்காவுக்குத் தங்கம் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் என்று உங்களில் பலர் நம்பலாம். ஆனால் அது உண்மையல்ல, தோழர்களே. இந்த விடயத்தில் மத்தியக் குழுவுக்கோ மக்கள் கமிசார்களின் பேரவைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. மத்தியக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் தங்கம் ஏற்றுமதி செய்யக் கூடாது என்று ஒரு விதி இருந்தது. அப்படியானால் அந்த ஏற்றுமதிக்கு அனுமதியளித்தது யார்? அந்தத் தங்க ஏற்றுமதி ரைகோவின் உதவியாளர்களில் ஒருவரால், ரைகோவுக்குத் தெரிந்து, அவரது ஒப்புதலுடன் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
இதுதான் கூட்டுப் பணியா?
இரண்டாவது எடுத்துக்காட்டு. இது அமெரிக்காவில் தனியார் வங்கிகளில் ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்புடையதாகும். அந்த வங்கியின் சொத்துகள் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு நாட்டுடமை ஆக்கப்பட்டது, அது இப்போது அதன் இழப்புகளுக்கு இழப்பீடு கோரிக்கொண்டிருக்கிறது. நமது அரசு வங்கியின் அதிகாரி ஒருவர் அந்த வங்கியுடன் இழப்பீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மத்தியக் குழுவுக்குத் தெரிய வந்துள்ளது.
லெனின்
தனியார் கோரிக்கைக்குத் தீர்வு அளிப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதும், அது பிரிக்க முடியாதவாறு நமது அயலுறவுக் கொள்கையுடன் தொடர்புடையது என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்தப் பேச்சுவார்த்தைகள் மக்கள் கமிசார்களின் பேரவை அல்லது மத்தியக் குழுவின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டன என்று ஒருவர் நினைக்கலாம். இருப்பினும் அப்படி நிகழவில்லை, தோழர்களே. மத்தியக் குழுவுக்கும் மக்கள் கமிசார்களின் பேரவைக்கும் இந்த விடயத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அதைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, மத்தியக் குழு அவற்றைத் தடுத்து நிறுத்த முடிவு செய்தது.ஆனால் எழுகின்ற கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதியளித்தது யார்? ரைகோவின் ஒப்புதலுடன் அதற்கு அனுமதியளித்திருந்தது தெரிய வருகிறது.
இதுதான் கூட்டுப் பணியா?
மூன்றாவது எடுத்துக்காட்டு. இது குலாக்குகளுக்கும் நடுத்தர விவசாயிகளுக்கும் வேளாண் இயந்திரங்கள் வழங்குவது தொடர்பானதாகும். ரசிய – சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் எகோசோவிற்கு, ரைகோவின் உதவியாளர்களில் ஒருவர் ர.சோ.சோ.கூ.கு. தொடர்பான விடயங்களுக்காகத் தலைமை தாங்கினார். அது நடுத்தர விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்குவதைக் குறைக்கவும், விவசாய வர்க்கத்தின் உயர் அடுக்கினருக்கு அதாவது குலாக்குகளுக்கு இயந்திரங்கள் வழங்குவதை அதிகரிக்கவும் முடிவு செய்தது. ரசிய – சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் எகோசோவின் இந்தக் கட்சி விரோத, சோவியத் ஆட்சி விரோத முடிவின் பிரதி இங்கு தரப்படுகிறது:
“கசாக் மற்றும் பஷ்கிர் சோவியத் சோசலிசக் குடியரசுகள் சைபீரியா மற்றும் கீழ் வால்கா ஆட்சிப்பகுதிகள், நடு வால்கா, யூரல்கள் பிராந்தியங்கள் ஆகியவற்றில், இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணை இயந்திரங்கள் மட்டும் கருவிகளின் விகிதாச்சார விற்பனை விவசாய வர்க்கத்தினரின் உயர் அடுக்கினருக்கு 20 விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு 30 விழுக்காடு குறைக்கப்பட வேண்டும்.”
இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கட்சியானது குலாக்குகளுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிற நேரத்தில், குலாக்குகளுக்கு எதிராக ஏழை மற்றும் நடுத்தர விவசாய மக்கள் திரளை அமைப்பாக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில், ர.சோ.சோ.கூ.கு வின் எகோசோ நடுத்தர விவசாயிகளுக்குப் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் அளவைக் குறைக்கவும், விவசாய வர்க்கத்தினரின் உயர் அடுக்கினருக்கு வழங்கும் அளவினை அதிகரிக்கவும் ஒரு முடிவை மேற்கொள்கிறது.
மேலும் இது ஒரு லெனினிய, கம்யூனிசக் கொள்கை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி பற்றி மத்தியக் குழு தெரிந்து கொண்ட போது, அது எகோசோவின் முடிவைச் செல்லாததாக அறிவித்தது. ஆனால் இந்த சோவியத் விரோத முடிவுக்கு அனுமதியளித்தது யார்? ரைகோவின் உதவியாளர்களில் ஒருவரால் ரைகோவுக்குத் தெரிந்து அவரது ஒப்புதலுடன் அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதுதான் கூட்டுப் பணியா?
ரைகோவும் அவரது உதவியாளர்களும் எந்த அளவுக்கு கூட்டுப் பணியை நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் போதுமானவை என்று நான் நம்புகிறேன்.
(தொடரும்)
நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112
கட்சியின் பொது திசைவழியை மடைமாற்றி கட்சிக்குள்ளேயே கட்சிக்கு எதிரான குழு அமைத்து செயல்படும் வலது சந்தர்ப்பவாதத்தை தோழர் ஸ்டாலின் அம்பலப்படுத்துகிறார்.
கட்சியின் பொதுத் திசைவழிக்கு எதிரான போக்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புகாரின் தலைமையிலான வலதுசாரிக் கும்பல் மறைமுகமாக கொண்டுவருகிறது. புகாரின் குழுவின் இத்தகையப் போக்கு குறித்து விவாதிப்பதற்கு மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முழு அமர்வு கூடுகிறது. அதில் தோழர் ஸ்டாலின், புகாரின் கும்பலின் வலதுசாரி போக்கை கீழ்கண்ட மூன்று தலைப்புகளில் அம்பலப்படுத்துகிறார்.
அ) புகாரின் குழுவின் குழுவாதம் ஆ) விசுவாசமும் கூட்டுத் தலைமையும் இ) வலது விலகலுக்கு எதிரான போராட்டம்
கட்சியின் நன்மைக்காக என்ற பெயரிலும், ஜனநாயகம் என்ற பெயரிலும் கமுக்கமாக கட்சிக்குள் கொண்டுவரப்படும் வலதுசாரிப் போக்கின் தன்மை குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
– வினவு
0o0o0
கோட்பாட்டு அரங்கிலும், கம்யூனிஸ்டு அகிலத்தின் கொள்கை அரங்கிலும், நமது கட்சியின் உட்கட்சிக் கொள்கை அரங்கிலும் நமது கருத்து வேறுபாடுகள் தொடர்பான முதன்மையான பிரச்சினைகள் அனைத்தையும் இவ்விதமாக நாம் மதிப்பீடு செய்துள்ளோம். இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து ஒரே திசைவழி இருப்பது பற்றிய ரைகோவின் அறிக்கை உண்மையான நிலைமைகளுக்குப் பொருந்திப் போகாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து உண்மையில் நமக்கு இரண்டு திசைவழிகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு வழி கட்சியின் பொது திசை வழி. அதாவது, நமது கட்சியின் புரட்சிகர லெனினிய வழியாகும். இன்னொரு வழி புகாரின் குழுவின் வழியாகும்.
பகுதியளவுக்குப் புகாரின் குழுவின் அணிகளில் நம்பமுடியாத குழப்பமான கருத்துகள் இருப்பதாலும், பகுதியளவுக்கு இந்த இரண்டாவது வழி கட்சியில் சிறிதும் முக்கியத்துவமற்றதாக இருப்பதாலும் இந்த இரண்டாவது வழி இன்னும் முழுமையாகக் கெட்டிப்படவில்லை, அது தன்னை ஏதாவதொரு வழியில் மறைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது. இருந்தபோதிலும், நீங்கள் பார்த்தபடி, இந்த வழி நிலவுகிறது. மேலும் அது கட்சி வழியிலிருந்து தனித்த ஒரு வழியாக நிலவுகிறது. நமது கொள்கையின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கட்சியின் பொதுவழிக்கு எதிரான ஒரு வழியாக நிலவுகிறது. இந்த இரண்டாவது வழி வலது விலகல் வழியாகும்.
இப்போது நாம் கட்சித் தலைமை குறித்த பிரச்சினைக்குச் செல்வோம்.
அ) புகாரின் குழுவின் குழுவாதம்
நமது கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், புகாரின் குழு ஓர் எதிர்ப்புக் குழு அல்ல என்றும் புகாரின் கூறினார். அது உண்மையல்ல, தோழர்களே. புகாரின் குழுவில் ஒரு புதிய எதிர்ப்பு அடங்கியுள்ளது என்பதை முழு அமர்வுக் கூட்டத்தில் நடந்த விவாதம் மிகவும் தெளிவாகக் காட்டியது. இந்தக் குழுவின் எதிர்ப்பு வேலையில் கட்சி வழியைத் திருத்தும் முயற்சிகள் இருக்கின்றன; அது கட்சி வழியைத் திருத்தி, கட்சி வழிக்குப் பதிலாக வேறொரு வழியைக் கொண்டு வருவதற்கான அடித்தளத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது, அது வலது விலகல் வழியைத் தவிர வேறு எந்த வழியாகவும் இருக்க முடியாது.
மூவர் குழு ஓர் உட்கட்சிக் குழுவாக அமையாது என்று கூறினார். அது உண்மையல்ல, தோழர்களே. புகாரின் குழுவுக்கு ஓர் உட்கட்சிக் குழுவுக்கான அனைத்துப் பண்புகளும் இருக்கின்றன. அதற்குக் கொள்கை இருக்கிறது, உட்கட்சிக் குழுவுக்கான இரகசியம் இருக்கிறது, விலகிச் செல்லும் கொள்கை இருக்கிறது, மத்தியக் குழுவுக்கு எதிராக அமைப்பாக்கப்பட்ட போராட்டம் இருக்கிறது.வேறு என்ன தேவை? புகாரின் குழுவின் உட்கட்சிக் குழுவியத்தைப் பற்றிய உண்மையை, அது தானாகத் தெரியும் நிலையில் ஏன் மறைக்க வேண்டும்? மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முழு அமர்வுக் கூட்டம் கூடியதற்கான காரணமே கருத்துவேறுபாடுகள் பற்றிய அனைத்து உண்மையையும் இங்கு சொல்வதற்குத்தான். புகாரின் குழு ஓர் உட்கட்சிக் குழு என்பதுதான் உண்மை. மேலும் அது வெறுமனே ஓர் உட்கட்சிக் குழு மட்டுமல்ல, மாறாக, நமது கட்சியில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு அனைத்து உட்கட்சிக் குழுக்களிலும் மிகுந்த வெறுப்புணர்வு கொண்டதும் அற்பமானதும் ஆகும் என்று நான் கூறுவேன்.
அது இப்போது அதன் உட்கட்சிக் குழு குறிக்கோள்களுக்கு, அட்ஜாரியா இடையூறுகளைப் போன்ற ஒரு முக்கியத்துவமற்றதும் அற்பமானதுமான விவகாரத்தைப் பயன்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்ற உண்மையிலிருந்து அது சான்றாகத் தெரிகிறது. உண்மையில், அட்ஜாரியாவில் ”கலகம்” என்று அழைக்கப்பட்டதை கிரான்ஸ்டாட் கலகத்துடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு இருக்குமா? அட்ஜாரியாவில் ”கலகம்” என்று அழைக்கப்பட்டதுடன் இதை ஒப்பிடுகையில் அது கடலில் ஒரு துளி கூட இல்லை என்று நான் நம்புகிறேன்.
கிரான்ஸ்டாட்டில் நிகழ்ந்த தீவிரமான கலகத்தை டிராட்ஸ்கியர்கள் அல்லது ஜினோவியேவியர்கள் மத்தியக் குழுவை, கட்சியை, எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட நிகழ்வுகள் ஏதாவது இருந்தனவா? அத்தகைய நிகழ்வுகள் எவையும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் தோழர்களே. அதற்கு மாறாக, அந்தத் தீவிரமான கலகத்தின்போது, நமது கட்சியில் இருந்த எதிர்ப்புக் குழுக்கள் அதை நசுக்குவதில் கட்சிக்கு உதவின. மேலும் அதைக் கட்சிக்கு எதிராகப் பயன்படுத்துவதற்குத் துணியவில்லை .
நல்லது, புகாரின் குழு இப்போது எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? அது அட்ஜாரியாவில் நடந்த மிகமிகச் சிறிய “கலகத்தை” கட்சிக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்வதற்கு மிகவும் அற்பமானதும் மிகவும் தாக்குதல்தன்மை கொண்டதுமான முறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களிடம் ஏற்கெனவே சான்று இருந்தது. இது உட்கட்சிக் குழு குருட்டுத்தனத்தின் மற்றும் உட்கட்சிச் சிதைவின் மோசமான அளவி இல்லையென்றால் வேறு என்ன?
முதலாளித்துவ நாடுகளுடன் பொது எல்லைகளைக் கொண்ட நமது எல்லைப் பகுதிகளில் எந்தத் தொல்லைகளும் ஏற்படக் கூடாது என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்ததாகும். நமது சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களையும், ஏழைகளையும் பணக்காரர்களையும், தொழிலாளர்களையும் முதலாளிகளையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிந்ததாகும். அதிருப்தியுற்ற சக்திகள் எவையும் இருக்கக் கூடாது என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகும். புகாரின் குழுவில் உள்ள இந்தத் தோழர்களுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டதா?
நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முதலாளித்துவ உலகிற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்களாகிய நம்மிடம், நமது நாட்டில் அதிருப்தியுற்ற சக்திகள் எவையும் இருக்கக் கூடாது என்றும், நம்முடன் பகைமைகளில் நிகழும் எந்தத் தொல்லைகளும் இருக்கக் கூடாது என்றும் எவராவது கோர முடியுமா?
சர்வதேச மூலதனம் நமது எல்லைப் பகுதிகளில் அதிருப்தியுற்ற சக்திகளை சோவியத் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கும் அதன் முயற்சிகள் அனைத்தையும் பயன்படுத்தவில்லை எனில், வேறு என்ன நோக்கத்திற்காக முதலாளித்துவச் சுற்றி வளைப்பு அங்கு இருக்கிறது?மூளையற்ற தாராளவாதிகள் தவிர அத்தகைய சில நேரங்களில் மனிதர்களிடம் வகைமாதிரியான தாராளவாதக் குருட்டுத்தனத்தையும் குறுகியமனம் கொண்ட தன்மையையும் உருவாக்கிட முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?
(தொடரும்)
நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089
தொடர்ப்புக்கு : 98417 75112
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்த பட்டியலின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். இந்த நிகழ்வு உ.பியை ஆளும் சாமியார் ஆதித்யநாத்துக்கு, இந்தியாவை ஆளும் மோடி உள்ளிட்ட சங் பரிவாரங்களைத் தவிர அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. சாட்சியங்களை அழிக்கும் வகையில், அவசர அவசரமாக உயிரிழந்த பெண்ணின் உடலை ஆதித்யநாத் அரசு எரித்துவிட்டது. ராம ராஜ்ஜியத்தின் புனிதம் சிதைந்துவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக, ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்த மாநில அரசு.
உ.பி. பாஜக அரசின் பொய் அறிக்கையை உண்மை என நிரூபிக்கும் வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் அமித் மால்வியா, பாதிக்கப்பட்ட வெட்டி – ஒட்டப்பட்ட வீடியோக்களை ஆதாரங்களாக பரப்பினார். இப்படி மூன்று வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்த வீடியோக்களில் பாதிக்கப்பட்ட பெண் பேசியுள்ளதை எழுத்து வடிவில் தந்துள்ள த வயர் இணையதளம். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடுவதை சட்டம் தடைசெய்துள்ளதால், அதிகாரப்பூர்வ செயல்முறை மூலம் அவரது பெற்றோர் அல்லது உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல், அந்த வீடியோக்களை சட்டப்பூர்வமாக ஊடகங்களால் காட்ட முடியாது. ஆனால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்ற ஆதித்யநாத் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கூற்று மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் ‘நர்கோ பகுப்பாய்வு’க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எவ்வளவு அய்யோகித்தனமானது என்பதை அந்த ஆதாரங்கள் காட்டுகின்றன.
இந்த வீடியோக்களை யார் படம்பிடித்தார்கள் அல்லது எங்கு, எப்போது உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. குற்றம் நடந்த நாளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப் பற்றி அந்தப் பெண் பேசவில்லை என்ற ‘கருத்தை ’ உருவாக்க உலவ விடப்பட்டுள்ள மூன்று வீடியோக்களில் இரண்டு வீடியோக்களை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ட்விட்டரில் வெளியிட்டிருந்தாலும், ஹத்ராஸ் பெண்ணின் வாக்குமூலமும் வீடியோ உரையாடலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகின்றன . மூன்றாவது வீடியோ, பின்நாளில் மருத்துவமனை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் விவரிக்கும் குற்றத்தின் தன்மை குறித்தும் அதில் சந்தேகம் எழவில்லை.
செப்டம்பர் 22-ம் தேதி அந்த பெண், மாஜிஸ்திரேட் முன் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், நான்கு ஆண்களை தாக்குதல் நடத்தியவர்கள் என அடையாளம் காட்டியதாகவும் கூறினார். உ.பி. காவல்துறை அந்த அறிக்கையை குறைத்துக் காட்ட முயலும்வகையில், அவர் காவல்நிலையம் சென்ற செப்டம்பர் 14-ம் தேதி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிடவில்லை என்கிறது. இரண்டு வீடியோ ஆதாரங்கள் – செப்டம்பர் 14 அன்று சந்த்பா காவல் நிலையம் மற்றும் ஹத்ராஸில் உள்ள ஒரு உள்ளூர் கிளினிக்கில் எடுக்கப்பட்ட வீடியோவில் உ.பி. போலீசின் கூற்று முற்றிலும் முரணானதாக காட்டுகிறது.
வீடியோக்கள் திடீரெனத் தொடங்கி முடிவடைகின்றன என்பதும் இவை அந்தப் பெண் சொன்னவற்றின் ஒரு பகுதி, முழுமையான பதிவுகள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் வீடியோக்கள் தன்னிச்சையாக சுருக்கப்பட்டிருந்தாலும் அல்லது திருத்தப்பட்டிருந்தாலும் கூட, பாலியல் பலாத்காரத்தைப் பற்றி பேசியது மற்றும் தாக்குதல் நடத்தியவர்களில் சிலரின் பெயர்களை காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அந்தப் பெண் சொன்னதை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. பாலியல் வன்முறை வழக்கில் செய்யப்பட்ட கட்டாய தடயவியல் பரிசோதனை கிடைக்கவில்லை. செப்டம்பர் 22 வரை இது நடத்தப்பட்டது – அதாவது குற்றம் நடந்த எட்டு நாட்களுக்குப் பிறகு – அந்த நேரத்தில் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் பூஜ்ஜியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விந்தணு ஆதாரங்களை பாலியல் வன்முறைக்கு பிறகான ஒன்றிரண்டு நாட்களில் மட்டுமே பெற முடியும். மேலும், பாலியல் வன்முறை வழக்குகளில் விந்தணு ஆதாரம் கட்டாயமும் இல்லை.
பாஜகவின் அமித் மால்வியா வெளியிட்ட வெட்டி ஒட்டப்பட்ட முதல் வீடியோவில் அந்தப் பெண்ணிடம் யார் உன்னுடைய கழுத்தை நெறித்தார்கள் எனக் கேட்கப்படுகிறது. அவர், வலியுடன் துடித்துக்கொண்டே, ‘அவன் என்னை கட்டாயப்படுத்தினான், அவனை தடுத்தேன்’ என்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண்
‘அவன் ஏன் உன் கழுத்தை நெறித்தான்?’
இந்த முறை சற்று தெளிவான குரலில், ‘அவன் என்மீது அழுத்திய போது, நான் தடுத்ததால்’
‘எதை வைத்து கழுத்தை நெறித்தான்?’
‘அவன் கைகளால்.’
‘வேறு எங்கெல்லாம் அடிபட்டிருக்கிறது? எனக் கேட்கிறது ஆண் குரல்
‘கழுத்து, தொண்டை…’ என சொல்லும்போது அவருடைய வலியை வீடியோ உணர்த்துகிறது.
அப்போது நாக்கை காட்டு என தாய் சொல்கிறார், பெண் நாக்கை நீட்டுகிறார்.
இரண்டாவது வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ‘சந்தீப் இதைச் செய்தான்’ என சொல்கிறார். ஏன் இதைச் செய்தான் எனக் கேட்கும்போது, நாங்கள் புல் சேகரிக்கப்போயிருந்தோம்…அப்போது அவன் என்னை அங்கு கொண்டு சென்றான். அவன் என்னிடம் கட்டாயப்படுத்தினான். நான் மறுத்தேன். என் கழுத்தை நெறித்தான்’ என்கிறார். ஏற்கனவே உங்களுக்கிடையே பிரச்சினை இருந்ததா என்ற கேள்விக்கு ஆம் என பதில் சொல்கிறார் அந்தப் பெண்.
மூன்றாவது வீடியோ அலிகர், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அந்தப் பெண் கழுத்து பட்டை ஒன்றை அணிந்திருப்பது, வெண்டிலேடர் போன்ற ஒன்றை முகத்தில் அணிந்திருப்பதும் தெரிகிறது. எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
பாதிக்கப்பட்டபெண் ‘மேலும் ஒரு முறை’ என்கிறார். ஆண் குரல், ‘அவர்கள் மேலும் ஒரு முறை உன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்களா?’ எனக் கேட்கிறது.
‘ஆமாம்… அந்த சகோதரர்கள்’ என்கிறார். அதோடு அந்த வீடியோ முடிகிறது.
நியூஸ் லாண்ட்ரி இணையதளத்துக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த பேட்டியில், தன் மகள் உடலில் உடையின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தது குறித்தும், அவருடைய பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது குறித்து கூறுகிறார்.
பாஜக அரசு எவ்வளவுதான் மூடி மறைக்கப்பார்த்தாலும் இது அப்பட்டமான பாலியல் வன்கொடுமை என்பது உறுதியாகியுள்ள நிலையில், கொஞ்சம்கூட குற்றவுணர்வு இல்லாமல் பாஜக தலைமையில் சங் பரிவார கும்பல், ஆதிக்கசாதி வெறிகும்பலுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறது. காஷ்மீர் ஆசிபா ரேப்பிஸ்டுகளுக்காக போராட்டம் நடத்திய இழிபுகழ் பாரம்பரியத்தில் வந்தவர்கள் என நிரூபிக்கும் வகையில் உலகமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும்போது, ‘குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு’ நீதிகேட்டு முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தை யாரும் அணுகிவிடக்கூடாது என்பதற்காக ஹத்ராஸில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதெல்லாம் மற்றவர்களுக்குத்தான், சங் பரிவாரங்களுக்கு இல்லை. உள்ளூர் பாஜக தலைவரும் முன்னாள் ஹத்ராஸ் எம்.எல்.ஏவுமான ராஜ்வீர் பல்வான் ஏற்பாடு செய்திருந்த இந்தப் ‘போராட்டத்தில்’ பஜ்ரங்தளம், ஆர்.எஸ்.எஸ், கர்ணி சேனா, சில சாதி அமைப்புகள் பங்கேற்றன. கைதான ஆதிக்கசாதி கும்பலின் குடும்பத்தினர் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பாஜக பிரமுகர் வீட்டின் முன் கூடி ‘நீதி’ கேட்டு ‘போராடி’யுள்ளனர்.
அப்போது அவர் பேசியது, ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ள சிபிஐ விசாரணை முடிவு எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. “உண்மை விசாரணையில் வெளிவரும். ஹத்ராஸில் இத்தகைய கொடூரமான வன்கொடுமை நடந்ததாக பொய்யாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் இந்த சம்பவம் குறித்த உண்மை வெளிப்படும். அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் போதைப்பொருள் பகுப்பாய்வு அல்லது பொய்-கண்டறிதல் சோதனையை எடுக்க மறுப்பது குறித்தும் அவர் ‘கவலை’ தெரிவித்தார்.
‘ரேப்’ஐ கொண்டாடும் மனுவின் புதல்வர்கள் அல்லவா? ரேப்பிஸ்டுகளுக்காகத்தான் போராடுவார்கள். என் மகள் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் எனக் கூறினார், அவர்களை போதைப்பொருள் பரிசோதனை செய்யச்சொல்வார்கள். ‘புல் அறுக்கும்போது தடுக்கி விழுந்து, பெண்ணின் முதுகெலும்பு உடைந்தது, நாக்கு தானாகவே வெட்டிக்கொண்டது’ என ராம ராஜ்ஜியத்தின் சிபிஐ அறிக்கை வெளியாகும்.
இன்று திரும்பிய பக்கம் எங்கும் பாலியல் வன்புணர்வுச் செய்திகளே இந்திய ஊடகங்களில் நிறைந்திருக்கின்றன. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக `கற்பழிப்பு` எனும் சொல் பல ஊடகங்களால் பயன்படுத்தபடும் போக்கு இன்றும் காணப்படுகின்றது.
உண்மையில் Rape என்பதன் பொருள் `சட்டத்திற்குப் புறம்பான புணர்வு` {unlawful sexual intercourse } என்பதேயாகும். எனவே கற்பழிப்பு என்ற சொல் இங்கு பொருந்தாதது மட்டுமல்ல, அது பாதிக்கப்பட்டவரையே மீண்டும் ஒரு முறை பாதிப்பது போலுள்ளது . எடுத்துக்காட்டாக: பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒரு பெண்ணை “கற்பழிக்கப்பட்டவள்” எனவும், குற்றம் புரிந்த ஆணை அழைக்கும் போது “கற்பழித்தவன்” எனவும் அழைக்கின்றோம் எனக் கொண்டால்; இங்கு இரு சொல்லாடல்களும் குறிப்பது பெண்ணின் கற்பு(?) அழிந்தது பற்றியதேயாகும். மேலும் பின்வரும் இரு செய்திகளைப் பாருங்கள்.
`மூன்று வயதுச் சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை`
`பசு மாட்டைக் கற்பழித்த கயவன் கைது`
{அடையாளங்களை மறைப்பதற்காக செய்தித் தலைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன}
இங்கு முதலாவது செய்தியில் உலகினையே சரிவரப் புரிந்து கொள்ள முடியாத குழந்தைக்கு இத் தலைப்புப் பொருந்துமா! இரண்டாவது செய்தியில் பசு மாட்டுக்குக் கூட கற்பு வந்துவிட்டது. இங்கு மட்டுமல்ல, எந்தவொரு பாலியல் வல்லுறவினைக் குறிக்கவும் `கற்பழிப்பு` என்ற சொல் பொருந்தாது.
இதனை விளங்கிக் கொள்வதற்கு, கற்பு என்ற தமிழ்ச் சொல்லின் பொருளினை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கற்பெனப்படுவது உடலியல் புணர்ச்சிக்காக ஆணையும் பெண்ணையும் பெரியோர் ஒருவருக்கொருவர் கொடுப்பதாகக் கொள்ளலாம். தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய இளம்பூரணர் தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.
எனவே தொல்காப்பியத்தின் படியே கற்பு என்பது மனதோடு தொடர்புடையதேயன்றி, உடலுடன் தொடர்புடையதல்ல எனத் தெளிவாகின்றது. இதே சொல்லுக்கு அடுத்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உரை எழுதிய நச்சினார்கினியர் “கற்பாவது : தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.” என்று பொருள் எழுதுகிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரான இந்த உரை விளக்கத்திலும், கற்பு உடலுடன் தொடர்பு படவில்லை. கற்பு என்ற சொல்லுக்குத் தொல்காப்பியம் கொடுக்கும் விளக்கத்தினை முழுமையாக அறிய, `களவு` என்ற சொல்லுக்குத் தொல்காப்பியம் என்ன விளக்கம் கொடுக்கின்றது எனப் பார்க்க வேண்டும்.
மேலுள்ள பாடலில் இயற்கையான புணர்ச்சியாக களவொழுக்கமே கூறப்படுகின்றது. எனவே இத்தகைய குடும்ப அமைப்புக்குப் புறம்பான ஒரு ஒழுக்கத்திலிருந்து, குடும்ப முறைக்கு மாறும் ஒரு செயல்முறையின் போதே `கற்பு` என்ற சொல் முதன் முதலில் தோன்றுகின்றது.
வேர்ச்சொல் விளக்கம் :-
கற்பு என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் `கல்` (படி =learn) என்ற தொழிற் பெயரேயாகும் . இன்னொரு வகையில், கற்பு என்ற சொல்லினை `கற்றதைப் பின்பற்று` என்றும் சொல்லலாம். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி குடும்பம் நடத்தக் கற்றுக்கொள்வதே கற்பு எனலாம். பின்வரும் கம்ப ராமாயணப் பாடலினைப் பாருங்கள்.
இங்கு `மறுவறு கற்பினில்` என்பதன் பொருள் `குற்றமற்ற கல்வி கேள்விகளால்` என்றே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே கற்பு என்பது குடும்ப வாழ்க்கை முறையினைக் கற்றுக் கொள்ளும் ஒரு ஒழுக்கமே என்பது தெளிவாகின்றது.
குடும்பம் என்ற அமைப்பு முறை மனிதனின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மைல்கல் என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை யாதெனில் இந்த அமைப்பு முறை பெண்களின் சமத்துவத்தினைப் பாதித்தது என்பதுமாகும். எனவேதான் பிற்காலத்தில் கற்பு பற்றிய அறிவுரைகள் யாவுமே பெருமளவுக்குப் பெண்களை நோக்கியே இருந்தது. அதே வேளை பெண்களுக்குக் குழந்தைகளைப் பேணுவதில் குடும்ப முறை ஓரளவுக்கு உதவியாகவுமிருந்தது, ஏனெனில் குடும்ப அமைப்புத் தோன்ற முன்னர் குழந்தைகளைப் பேணும் பொறுப்பு முற்று முழுதாகப் பெண்களையே சார்ந்து இருந்தது (பொருள் சார்ந்த பொறுப்பும் பெண்களையே சார்ந்து இருந்தது). இந்த நிலையில் குடும்ப அமைப்பு முறையினை ஏற்படுத்துவதில் பெண்களின் விருப்பம் ஒப்பீட்டு ரீதியில் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகவிருந்தது {இதனைப் பல சங்க காலப் பாடல்களில் காணலாம்}. இதனாலேயே பின்வரும் குறள் உட்படப் பல குறள்களில் பெண்களுக்கே `கற்பு` வலியுறுத்தப்படுகின்றது.
இந்த குடும்ப அமைப்பு முறையே பிற்பட்ட இடைக் காலத்தில் வைதீக மதக் கொள்கைகளுடன் இணைந்து பெண்களின் கல்வி, பொருளியல் உரிமைகளைப் பறித்து வீட்டிற்குள் முடக்கியது.
கற்பு என்பதற்கு இடைக்கால ஔவையார் கொன்றை வேந்தனில் சிறப்பான விளக்கத்தினை வழங்கியிருந்தார் {இந்த ஔவை சங்ககாலப் புலவரான ஔவையிலிருந்து வேறுபட்டவர்}.
“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை”
{கற்பு எனப்படுவது யாதெனில் முன் பின் முரண்படாது வாக்கு மாறாது நடந்து கொள்ளுதலாகும்}
இதற்கு அடுத்த வரியான ” காவல் தானே பாவையர்க்கு அழகு`”என்ற வரி கூட, கொடுத்த `சொற்களைக் காவல் காப்பது பெண்களுக்கு அழகு` என்ற பொருளிலேயே இடம் பெறுகின்றது.
எனவேதான் பழந்தமிழ் நூல்கள் எதுவுமே கற்பு என்பதனையும் கன்னித்தன்மை இழத்தல் என்பதனையும் எங்குமே தொடர்புபடுத்தவில்லை என அடித்துக் கூறலாம். மிகவும் பிற்பட்ட காலத்திலேயே இவ்வாறு கற்பினைப் பெண்களின் உடலுடன் தொடர்புபடுத்தி, ஆணாதிக்க சமூகம் புரளி கிளப்பிவிட்டது. இதனை முறியடிக்கவே பாரதியார் பின்வரும் பாடலினைப் பாடியிருப்பார்.
“கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”
(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5)
முடிவுரை :-
கற்பு என்ற சொல்லானது மனதுடன் தொடர்புடையதேயன்றி, உடலுடன் தொடர்புடையதன்று. எனவே கற்பழிப்பு என்றால் குறித்த ஆளினால் தனக்குத் தானே மேற்கொள்ள முடியுமே தவிரப் பிறரால் அது முடியாது ; ஏனெனில் கற்பு மனதிலேயே உண்டு. எனவே பிறரால் மேற்கொள்ளப்படும் வன்புணர்வினை; பாலியல் வல்லுறவு / வன்புணர்வு / பாலியல் வன்முறை போன்ற சொற்களால் அழைக்க வேண்டுமே தவிர, `கற்பழிப்பு` என்ற சொல்லால் அன்று. இது மொழி சார்ந்த வேண்டுகோள் மட்டுமன்றி, சமூக அறம் சார்ந்த வேண்டுகோளுமாகும்.
தமிழகம் மற்றும் புதுவையில் தொழிலாளர்களின் அரசியல் விடுதலைக்காக செயல்படும் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (பு.ஜ.தொ.மு.) தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக இருந்த தோழர். சுப. தங்கராசு, அவர் பணிபுரிந்த பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதற்காக அமைக்கப்பட்ட சொசைட்டியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார்.
அந்த சொசைட்டிக்குத் தேவையான வீட்டுமனைகளுக்காக நிலம் வாங்குவதில், சொசைட்டி பணத்தை கையாடல் செய்துவிட்டதாக சொசைட்டி உறுப்பினர்களான பெல் தொழிலாளர்கள் மூலம் கடந்த 2019 அக்டோபரில் புகார் வந்ததை அடுத்து, புகாரின் உண்மை நிலை கண்டறிய 2019 நவம்பரில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அந்தப் புகார் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த விசாரணை முடிவின் அடிப்படையில் அவருக்கு குற்றப்பத்திரிக்கை கொடுத்து, அதற்கான அவரது விளக்கங்கள் 2020 ஜனவரி மாதம் பெறப்பட்டது. அவர் மீதான நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட இருந்த நிலையில், நிலமோசடி தொடர்பான கட்டுரை 29.07.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளிவந்தது.
அதே நாளில் பு.ஜ.தொ.மு. மாநில நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சுப. தங்கராசு அவர்களை பு.ஜ.தொ.மு. சங்கத்தின் சிறப்பு உறுப்பினர் தகுதியில் இருந்தும், பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை அன்றைய தினமே மாநில செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டுபதோடு, கடந்த 07.08.2020 அன்று பத்திரிக்கை செய்தியாகவெளியிட்டிருந்தோம்.
எமது சங்கத்தின் அமைப்பு விதிகளின்படி, இப்பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில செயற்குழுவிற்கே உள்ளது என்பதால், தோழர் சுப. தங்கராசு மீதான புகார் தொடர்பாக மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த 27.09.2020 நடத்தப்பட்டது. மாநில செயற்குழு முடிவின் படி, தோழர். சுப. தங்கராசு அவர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிறப்பு உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும், பு.ஜ.தொ.மு. சங்கத்திலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார். இனி, பு.ஜ.தொ.மு. அமைப்பிற்கும், சுப. தங்கராசு அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம், மற்ற கட்சி சார்பான சங்கங்கள், தனிநபர் சங்கங்கள், பிற அமைப்பு சார்ந்த சங்கங்களுக்கு மத்தியில், புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரட்டும் அரசியல் சங்கமாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாகவும் தனித்த அடையாளத்துடன் செயல்பட்டு வரும் சங்கம் என்பதை, அதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, அச்சங்கம் செயல்படும் பகுதி மக்களுக்கும், புரட்சிகர அரசியலையும், மாற்று அரசியல் கருத்துக்களையும் உற்று நோக்கும் பலருக்கும் தெரியும்.
குறிப்பாக, மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு மக்களுக்காக அர்ப்பணிப்பு, தியாகத்துடனும் தொழிலாளர் வர்க்க விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர தொழிற்சங்க அமைப்பின் தலைமைப் பொறுப்பில், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டிய தோழர், கூலி விவசாயிகளுக்குச் சேர வேண்டிய அனாதீன நிலத்தை பட்டாவாக மாற்ற முயற்சித்தது, இதற்காக லஞ்ச – ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு புரட்சிகர அரசியலைக் கற்றுத் தருவதற்கான பயிற்சிப் பட்டறை என்ற கூற்றை எமது செயல்திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புரட்சிகர சங்கத்தில், முதலாளிகள், நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் குற்றங்களை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் விரோதமானது என்று, எதிரி வர்க்க முறையில் பரிசீலிப்பது போல, சொந்த அமைப்பிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அவர்களின் தவறுகளுக்கு எதிரான போராட்டத்தில் எவ்வித சமரசமும் இன்றி செயல்படுவோம் என்று உறுதி ஏற்கிறோம். எல்லாக் காலத்திலும், மக்கள் பக்கம் நின்று தவறுகளை எதிர்த்து முன்னேறுவோம் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
(த. பழனிச்சாமி) தலைமைக்குழு,
பு.ஜ.தொ .மு., தமிழ்நாடு – புதுச்சேரி.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374.