Saturday, August 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 363

ஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு ! வலுக்கும் எதிர்ப்புகள் !!

1

டந்த பிப்ரவரி 2016-ல் நடந்த ஜே.என்.யூ பிரச்சினை தொடர்பாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு 2019, பிப்ரவரியில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது டில்லி போலீசு. இதன் மூலம், “குடிமக்களின் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் அரசியல் பிரிவுகளின் இளவரசன்” என காந்தியால் அழைக்கப்பட்ட காலனிய காலத்திய சட்டமான “தேச துரோகப் பிரிவு” மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. ஜே.என்.யூ பல்கலையில் நடந்த ஒரு கூட்டத்தில் தேச விரோத முழக்கங்கள் எழுப்பியதாக 10 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட இவ்வழக்கு இச்சட்டத்தை துடைத்தெறிவதற்கான விவாதத்தை மீண்டும் துவங்கியுள்ளது.

இவ்வழக்கில், டில்லி அரசாங்கத்திடம் அனுமதி பெறாமல், 1200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததற்காக நீதிமன்றம் டில்லி போலீசை கடிந்து கொண்டது. அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் தலைவர் ஆகாஷ் படேல், இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உரிமைப் போராளிகள் மீது அடிக்கடி பாய்ச்சப்படும் இந்த ஒடுக்குமுறைச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கிடைத்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 JNU மாணவர்களின் போராட்டம்.
டில்லியில் தேசத்துரோக சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட JNU மாணவர்களின் போராட்டம்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்படும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பெங்களூருவில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டி அம்னெஸ்டி இண்டெர்னேசனல் அமைப்பின் மீதும் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. சமீபத்தில் உள்ளூர் நீதிமன்றம் சட்டப்படி அவ்வழக்கை முடித்து விட்டாலும், அந்த அமைப்பு தேச விரோதமானதாகவும், குற்றப் பின்னணியுடையதாகவுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது, என்கிறார் ஆகாஷ் படேல்.

“காலனிய ஆதிக்கத்தின் மிச்ச சொச்சமாக இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 124A பிரிவுக்கு, சட்டத்தின் ஆட்சியால் கண்காணிக்கப்படும் ஒரு சமூகத்தில் இடமில்லை. அளவுக்கதிகமாக விரிவாகவும், பொதுவானதாகவும் இப்பிரிவு இருப்பதால், மாற்றுக் கருத்துக்களையும் விவாதங்களையும் நெறிப்பதற்கு அரசு இதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறது. உடனடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளிப்பாடு இருக்கும் பட்சத்தில் மட்டுமே தேச துரோக வழக்கு போட முடியும் என நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், இப்பிரிவு தொடர்ச்சியாக விமர்சனக் கருத்துக்களைப் பேசுபவர்கள் மீதே தொடர்ச்சியாக பாய்ச்சப்படுகிறது” என்கிறார் படேல்.

தேச துரோக வழக்கு
ஹிரேன் கோஹைன், அகில் கோகாய் மற்றும் பத்திரிகையாளர் மஞ்சித் மஹந்தா

கடந்த 1962-ம் ஆண்டு கேதர்நாத் சிங் வழக்குத் தீர்ப்பில் தேச துரோக வழக்குக்கான முகாந்திரத்தைக் குறுக்கியுள்ளது. இந்த அரசைத் தூக்கி எறிய நடவடிக்கைகளை செய்து கொண்டே அதற்குத் தூண்டும் வகையில் பேசினால்தான் தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் போலீசு இதனை உதாசீனப்படுத்திவிட்டு, அரசுக்கு எதிராக கருத்துக்களைப் பேசும் அரசியல் எதிராளிகள் மற்றும் குடிமக்களுக்கு எதிராகவே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்று வழக்கறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை விமர்சித்ததற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அசாமிய எழுத்தாளர் ஹிரேன் கோஹைன், க்ரிஷக் முக்தி, சங்கரம் சமீதியின் தலைவர் அகில் கோகாய், பத்திரிகையாளர் மஞ்சித் மஹந்தா ஆகியோரின் மீது தேச துரோக சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விரிந்தா க்ரோவர், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிறார். மேலும், “இந்தச் சட்டம் அடிக்கடி அமல் படுத்தப்படுகிறது. விசாரணை நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதி மன்றத்திலோ நீதி விசாரணை நடக்கும் சமயத்தில், குறிவைக்கப்பட்ட நபர் அதிகமாக பாதிக்கபட்டிருப்பார். இச்சட்டம் ஒட்டு மொத்தமாக நீக்கப்படவேண்டும் அல்லது, கறாரான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

“மனித உரிமைச் சட்ட வலைப் பின்னல்” அமைப்பின் காலின் கான்சால்வேஸ் இதனை ஏற்றுக் கொள்கிறார். பிரிவு 377 விவகாரத்தில் செய்ததைப் போலவே, உச்சநீதிமன்றம் தேசவிரோத சட்டத்தின் சட்டரீதியான தன்மை குறித்து எந்த ஒரு குழப்பமும் இல்லாத வகையில் அதை அரசியல்சாசன விரோதமானது என அறிவிக்க வேண்டும். இதில் மறுவரையறை என்னும் பேச்சுக்கே இடமில்லை. உலகம் முழுவதிலும் இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சசி தரூர், தேசத் துரோக சட்டத்தின் அம்சங்களை மறுவரையறை செய்யக் கோரி தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விசாரணையின்றி நீண்டகாலம் சிறையிலடைக்க அனுமதிக்கும் ஊபா என்ற ஒரு சட்டம் இருக்கிறது. அது அரசியல் நர வேட்டைக்கு பயன்படுத்தப்படுவதற்காக பல உரிமைகள் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பைப் பெற்றது. கடந்த ஜனவரி 1, 2018 அன்று பீமா கொரேகான் கிராமத்தில் வன்முறைகளை தூண்டிவிட்டதாகவும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறி சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 9 பேர் புனே போலீசால் கைது செய்யப்பட்ட பின்னர், இந்த சட்டத்தின் கடுமையான வரைமுறைகள் பேசுபொருளாகின. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கல்வியாளர் ஆனந்த் தெல்தும்ப்டே, மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து தற்காலிக பாதுகாப்பைப் பெற்றுள்ளார்.

ஊபா சட்டம்
கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள்

செயற்பாட்டாளர்களின் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் நோக்கங்கள் மற்றும் பழிவாங்கும் நோக்கத்திற்காகவே போடப்படுகின்றன என்கிறார், தெல்தும்ப்டே-யின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய். பியூசிஎல் அமைப்பின் மராட்டிய மாநிலத் தலைவராக இருக்கிறார் தேசாய். தேசவிரோத சட்டம் (124A), ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்கிறார் தேசாய். “இவ்வகையான கூடுதல் சட்டங்களுக்கு அவசியமில்லை. இந்திய தண்டனைச் சட்டங்களில் ஏற்கெனவே உள்ள குற்றவியல் சட்டங்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளப் போதுமானவை. ஊபா போன்ற சட்டங்களில் உள்ள அசாதாரணமான வரைமுறைகள், கருத்துச் சுதந்திரத்தை நெறிக்கவே பயன்படுகின்றன.” என்கிறார் தேசாய். மேலும், தடா, பொடா உள்ளிட்ட முந்தைய கருப்புச் சட்டங்களை நீக்கியது போல இச்சட்டங்களையும் பாராளுமன்றத்தால் நீக்க முடியும் என்கிறார்.

மராட்டியத்தில் செயல்படும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு கமிட்டியைச் (CPDR) சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், இந்தச் சட்டங்கள் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன என்கிறார். “அவர்களை எவ்வளவு அதிகமாக சிறையில் அடைக்க முடியுமோ அவ்வளவு காலமும் அவர்களை சிறையிலடைப்பதுதான் இச்சட்டங்களின் நோக்கம்” என்றார் பெயர் வெளியிடவிரும்பாத செயற்பாட்டாளர்.

AFSPA
இந்திய இராணுவ சட்டம் AFSPA க்கு எதிராக போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண்கள்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் யாவும் ”பதட்டமான பகுதி” என அரசால் கருதப்படுவதோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இம்மாநிலம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ”மனித உரிமைகள் எச்சரிக்கை” என்ற அமைப்பைச் சேர்ந்த பப்லூ லொய்டங்க்பாம், இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.4% மட்டுமே மணிப்பூர் பங்களிப்பு செய்கிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஊபா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கைதுகளில் 60% கைதுகள் மணிப்பூரில் நிகழ்ந்துள்ளன என்கிறார். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், ஆயுதப் பிரிவுப் படையணியினரின் அடாவடிக்கு அரணாக உள்ளது. அரசு யாரையெல்லாம் தொல்லை கொடுப்பவர்களாகக் கருதுகிறதோ அவர்கள்தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்கிறார் அவர்.

மேலும், “ கொலை செய்யப் படுவதும், காணாமல் போவதும் அதிக எண்ணிக்கையில் நடப்பதற்கு உகந்த சூழலை இச்சட்டம் உருவாக்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையிலும், மொத்தமாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு, அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் இதனை நாங்கள் எதிர்த்து வருகிறோம். மனநல நிபுணர்களின் உதவியுடன் அவர்களுக்காக பட்டறை முகாம்கள் நடத்தி வருகிறோம்.” என்றார்.

”தேசியப் பாதுகாப்பைக் காரணம்காட்டி உருவாக்கப்படும் மனப்பிரமையின்” காரணமாக பிரச்சினைக்குரிய பகுதிகளான காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக லொய்டங்பாம் கூறுகிறார்.  சமீபத்தில், முகநூலில் பதிவிட்ட காரணத்தால் ஒரு மணிப்பூர் பத்திரிகையாளருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத்-ன் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான வழக்கை நடத்தியவர் வழக்கறிஞர் ஸ்ரீஜி பவ்சர். எச்.ஆர்.எல்.என் என்ற அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீஜி பவ்சர் கூறுகையில், தேசத்திற்கு ஆபத்தானவர்கள் என நபர்களை முலாம் பூசுவதற்காகவே இத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சந்திர சேகர் ஆசாத்தின் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக ரத்து செய்தது உத்தரப்பிரதேச அரசு.

“பயங்கரவாத குற்றச்சாட்டோடு இதை இணைக்கும்போது பிணை பெறுவது மிகவும் சிரமமானது. அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே ஒருவருக்கு விசாரணை நீதிமன்றத்தில் பிணை கிடைக்கும். நபர்களின் மீது இந்தப் பிரிவைப் பாய்ச்சும் அரசின் குறிக்கோள், அவர்களைத் தண்டிப்பது அல்ல, மாறாக அவர்களை எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு சிறையில் அடைப்பதுதான்” என்கிறார் பவ்சர்.

  • கட்டுரையாளர் : பிரீதா நாயர்
    தமிழாக்கம் : நந்தன்
                  நன்றி  : Outlook

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம்

(இருண்ட நிலையில் குரல் ஒலி)
‘பாரத் வர்ஷம், பரத கண்டம், புண்யபூமி’ என்று புகழ்ந்தனர் புராணிகர்கள், புலவர்கள் சகலரும். எனினும் புண்ணிய பூமி அடிமைப்படுத்தப்பட்டது. எங்கும் காரிருள் சூழ்ந்து கொண்டது. எங்கும் திகைப்பு! கலக்கம். ஆனால், காரிருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று சுதந்திர ஜோதி. மராட்டியத்திலே ஏற்றி வைக்கப்பட்ட விடுதலை விளக்கு புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று. மாவீரன் சிவாஜி கிளம்பினான், சீறிப் போரிட, சிதறி ஓடினர் எதிரிகள். விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், சமூகம் ஜாதி பேதமெனும் சனியனுக்கு ஆளாகி அவதிப்பட்டது. வீரர்கள் விடுதலைப் போரை நடத்தினர். வீணர்கள் ஜாதியையும் மதத்தையும் காட்டிக் கொழுத்தனர். சமூகக் கொடுமை மராட்டியத்தை விட்டு ஒழியவில்லை. அந்த நிலையிலே……

♦ ♦ ♦ 

சி.என். அண்ணாதுரை

காட்சி – 1
இடம்: குளக்கரை

உறுப்பினர்கள் :
(கேசவப்பட்டர், பாலசந்திரப் பட்டர், பச்சை .)

(பட்டர்கள் இருவரும் தடிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். பச்சை அடிபட்டு ஒடிவருகிறான்)

கேசவப்பட்டர்: அடடே! எவ்வளவு திமிருடா உனக்கு. அடி, உதை, எவ்வளவு மண்டைக் கர்வம் இவனுக்கு ?

பாலச்சந்தர்: வெட்டு, குத்து.
(பச்சை ஒடி வந்த வேகத்தில் கீழே விழுகிறான். அவனைத் தடியால் தாக்குகிறார்கள். அவன் எழுந்து கும்பிட்டபடி)

பச்சை: ஐயோ! சாமி, சாமி கும்பிடுறேன்; அடிக்காதிங்க. தெரியாத்தனமா செய்துட்டேன். இந்தத் தடவை விட்டுடுங்க.

கேசவப் பட்டர்: (அடித்துக் கொண்டே திருக்குளத்தில் போயா குளிப்பது? எவ்வளவு திமிருடா உனக்கு சண்டாளா! பஞ்சாமப் பயலுக்கு ஆகுமோ இந்தப் பதட்டம்? பாவி
புண்ணிய தீர்த்தத்தையே பாழாக்கிவிட்டாயே.

பச்சை: (உடம்பைத் துடைத்துக் கொண்டு) இல்லிங்க; இனிமே செய்யலிங்க , உயிர் போகுதுங்களே… ஐயையோ!

பாலசந்தர்: பிடித்துக்கட்டி சவுக்கால் அடிக்கணும் நீச்சப்பயல். அடுக்குமாடா நீ செய்த அக்ரமம்? அடே, மதத்துரோகி எந்தக் காலத்திலேயாவது நடந்தது உண்டா இந்த மாதிரி அக்ரமம்? உன் தோலை உறிச்சுப் புடுறேன் பார் ,

பச்சை: வேணாங்க, வேணாங்க! இந்தப் பக்கமே வரமாட்டேன்.

கேசவப்பட்டர்: (மிரட்டும் குரலில்) வந்தா?

பச்சை: (பயந்து) தோலை உறிச்சுடுங்க.

கேசவப்பட்டர் : நடிப்போ ? நீச்சப்பயலே, இனி இந்தப் பக்கம் தலை காட்டவே கூடாது. தெரிஞ்சுதா.

(பச்சை ஓடிவிடுகிறான். கேசவப்பட்டர் தனிமையில்) பயல்களுக்கு எவ்வளவு கர்வம். லோகம் என்ன ஆவது, இப்படி, இதுகள் நடக்க ஆரம்பித்தால்?

♦ ♦ ♦ 

காட்சி – 2
இடம் : வீதி
உறுப்பினர்கள் : (பச்சை, பிச்சை, ஆண்டி , சாது)

(அடிபட்ட பிச்சை காயங்களைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான்)

பச்சை: ஆண்டவனே! வயலிலே வேலை செய்ததாலே உடலிலே அழுக்கு. அதைக் கழுவக் குளத்திலே இறங்கினேன். குளித்தது பாவமாமே பாவிப்பயல்க படுகொலை செய்துட்டானுங்க. குளிக்கப் போனவன் சேத்தப் பூசிக்கிட்ட கதை மாதிரின்னு ஊரிலே உலகத்திலே சொல்லுவாங்க என் கதி குளிக்கப் போயி ரத்தாபிஷேகமாச்சு. தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா. இந்த தேசத்திலே பிறந்தவன், இதிலேயே உழைக்கிறவன், இங்கேயே இருக்கிற குளத்திலே நான் குளிக்கக் கூடாதாம். எங்கப்பன் சொல்லுவார் முன்பெல்லாம் இந்தக் குளத்தை எங்கப் பாட்டன் வெட்டினானாம். இதுலே குளிச்சா புண்ணியமாம் இதோ, வழியுது புண்ணியம்.

(ரத்தக் கறையைத் துடைத்துக் கொள்கிறான். பச்சையின் கூக்குரல் கேட்டு ஆண்டி ஒடி வந்து…)

ஆண்டி: பச்சை ! நீயா ஐயோ, ஐயோன்னு கூவினது. என்னடப்பா நடந்தது. உடம்பெல்லாம் காயம், ரத்தம் என்ன அநியாயமிது.

பச்சை: ஆண்டி பார்த்தாயா இந்தக் கோரத்தை கேட்டியா இந்த அக்ரமத்தை? நீ என்னமோ நம்ம சாதியிலே யாரும் படிக்காத படிப்பு படிச்ச வேண்ணு ஊரு, நாடெல்லாம் உன்னைப் புகழுதே இந்த அக்ரமத்தைக் கேட்க வேண்டாமா நீ?

ஆண்டி: பச்சை ! என்ன நடந்தது? முரட்டு மாடு ஏதாவது இடித்துக் காயப்படுத்தினதா? வெறிநாய் மேலே விழுந்து கடித்ததா? கொள்ளைக்காரப் பசங்க தடியாலே தாக்கினாங்களா? அழாமே சொல்லு பச்சை .

பச்சை: ஆமாம் முரட்டு மாடுதான் மேலே விழுந்து முட்டுச்சி. வெறி நாய்தான் கடித்தது. கொள்ளைக்காரனுங்கதான் என்னைத் தடியாலே தாக்கினாங்க.

ஆண்டி: இப்படி ஜன்னி கண்டவன் போலப் பேசினா நான் என்னான்னு நினைக்கிறது. முரட்டு மாடான்னா அதுக்கும் ஆமாங்கிறே. வெறி நாயான்னா அதுக்கும் ஆமாங்கிறே! கொள்ளைக்காரனுங்காளன்னா அதுக்கும் ஆமாங்கிறேன் நான் என்ன செய்யறது? யார் செய்தா இந்த அக்கிரமத்தை

பச்சை : அந்தக் கும்பல்தான். ஆளை ஏச்சுப் பிழைக்குதே, அந்தக் கூட்டந்தான்.

ஆண்டி : யாரு? ஐயமாரா ?

பச்சை : அந்தப் பாழாய்ப்போன பட்டாச்சாரிக் கூட்டந்தான்.

ஆண்டி : ஏன்? நீ என்ன செய்தே?

பச்சை : நானா? குளிக்கப் போனேன்.

ஆண்டி : எங்கே?

பச்சை : அவுங்க வீட்டுக்காப் போனேன் ; குளத்துக்குத்தான்.
அது புண்ணிய தீர்த்தமாம். அதிலே குளிக்கலாமான்னு பாவிப் பயலுங்க இந்த அநியாயம் செய்துட்டானுங்க.

பச்சை : நீ ஏண்டப்பா அங்கே போகணும்? அதுவோ, ஐயமாரு கொளம்; நாம் ஈன சாதி.

மாதிரிப் படம்

ஆண்டி : (கோபத்துடன்) அடே முட்டாளே போனால் என்னடா குளத்திலே நாய் தண்ணீர் குடிக்கிறதேடா நாய். நாம் என்ன நாயை விடக் குறைவா? மலம் தின்னும் நாயாடா நாம். அது உரிமையோடு தண்ணீர் குடிக்கிறது குளத்தில் பச்சை, நாய்க்கும் கேடு கெட்டவனா? சேற்றிலே புரளுகின்ற எருமை குளித்தால் விரட்டவில்லை. மனிதன் தலைமுறை தலைமுறையாக மற்றவர்க்குப் பாடுபட்டு மேனி கருத்துப் போன சாதி நாம். நாம் குளித்தால் குளம் தீட்டாகிவிடுமா? என்ன அக்ரமம்? அடுக்குமா இந்த அநீதி?

பச்சை : அநீதியோ, அக்ரமமோ! இது இன்று நேற்று ஏற்பட்டதா? நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்திலே இருந்து நடக்குது. நாம் என்ன செய்யலாம்.

ஆண்டி : என்ன செய்யலாம். இந்தக் கொடுமையாவது தொலைய வேண்டும். அல்லது நாமாவது ஒழிய வேண்டும்.

பச்சை : பதறாதே ஆண்டி. நாம பாவம் செய்தவங்க. அதனாலேதான் இந்தப் பாழான ஈனக் குலத்திலே பிறந்தோம். ஆண்டி மடையன் ஈன சாதி என்று எவனோ சொன்னால் அதை நம்பி நாசமாகிறாயே. நாம் எந்த விதத்திலே தாழ்வு? உழைக்கவில்லையா? நாம் மனிதரில்லையா? ஊரை ஏய்த்தா பிழைக்கிறோம்?

பச்சை : ஆண்டி! நீ நம்ம சாதியிலே படிச்சவன். என்னென்னமோ பேசறே. நீ சொல்றதை கேட்கிறபோது எனக்கென்னவோ தலை சுற்றுவது போல் இருக்கு.

ஆண்டி : உன்னைப் போன்ற ஜென்மங்கள் நம் சமூகத்தில் இருப்பதால் தான் இந்த இழிவு பச்சே! பாழான சமூகக் கொடுமையை நான் இப்போது பார்த்தது மட்டுமல்ல! அனுபவித்துமிருக்கிறேன். (சட்டையைக் கிழித்துப் பழைய தழும்புகளைக் காட்டி )
பார், தழும்புகளை! அந்தப்பாவிகள் செய்த அக்ரமம். என் பத்தாம் வயதிலே நேரிட்டது. இந்தத் தழும்பும் என் உடலை விட்டுப் போகாது. இந்த மமதையை அழிக்க வேண்டும் என்ற உறுதியும் என் உள்ளத்தை விட்டுப் போகாது. நம்மைப் படுத்துகிற பாடு இருக்கிறதே, இதற்கெல்லாம் ஒருநாள் அவர்கள் பதில் சொல்லித் தீர வேண்டும். வா போகலாம்.

(சாது பாடியபடி வருகிறார்… பாட்டு முடிந்ததும்) சாது அப்பா, பாட்டாளி மக்களே! அண்டசராசரத்தைப் படைத்த ஐயன் உங்களைக் காப்பாற்றுவாராக.

பச்சை : ஐயா, சாமி நாங்க தீண்டாதவங்க

ஆண்டி : ஆம்; ஐயா! ஆம்! நாங்க தீண்டாதவர்கள் தான்! ஊரார் சொத்தைத் தீண்டியதில்லை. வஞ்சனையைத் தீண்டியதில்லை. சூது, சூழ்ச்சியை நாங்கள்
தீண்டியதில்லை பாவத்தைத் தீண்டாதவர்கள் நாங்கள்.

சாது : தம்பி! உன் மதி கண்டு மகிழ்கிறேன். மகான் குலமானலும், பிரபு குலமானாலும், ராவ் குலமானாலும், எல்லோரும் மனிதர் குலம். பேதம் ஏது? நீ அறிவாளி.

ஆண்டி : அறிந்ததால் தான் என் அல்லல் அதிகமாகிறது. இதோ பச்சை! யாவும் தெய்வ சம்மதம் என்று நம்புகிறான். அதனால், அவனுக்கு ஜாதி வெறியரின் செயல் ஆத்திரமூட்டவில்லை.

சாது : ஆத்திரமல்ல! அநேக காலமாக இருந்து வந்த அக்ரமத்தைக் கண்டு சத்தியம் கோபிக்கிறது என்று பொருள். நீ சலிப்படையாதே. சமரசக் கீதத்தை இந்த மராட்டியத்திலே பல ஜீவன் முக்தர்கள் பரப்பிக் கொண்டு வருகிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தின் முன்பு, அனைவரும் சமம், சாதி, மதம், உயர்வு தாழ்வெனும் தீது, சமரச ஞான மகான்களுக்கேது என்ற தத்துவம் தழைத்து வருகிறது.

ஆண்டி : ஐயா, சாது! உம்முடைய சமரச ஞானம் அத்தி பூத்தது போல் இருக்கிறது. சேற்றிலே ஒரு செந்தாமரை போல் இருக்கிறீர், ஆனால் என் மேல் கோபிக்காதீர். உம்முடைய முயற்சி உத்தமமானதுதான்; ஆனால், அது பலிக்காது. வேண்டுமானால் உம்மை ஒரு அவதார புருஷர் என்று கொண்டாடுவார்கள்; கோவில் கட்டுவார்கள், கூத்தாடுவார்கள். ஆனால், எல்லோரும் சமம்; பிறவியிலே உயர்வு தாழ்வு இல்லை என்று பேசுகிறீரே, அதை மட்டும் நடைமுறையிலே கொண்டு வரமாட்டார்கள். நான் பதட்டமாகப் பேசுவதாக எண்ண வேண்டாம். ஐயா! காவியும், கமண்டலமும் எங்கள் குலத்தின் கஷ்டத்தைப் போக்காது. முக்திக்கு வழிதரக்கூடும். உங்களுக்குள்ள இழிவைத் துடைக்காது; எங்கள் சமூகத்தை இந்தக் கொடுமை செய்கிறவர்கள் தங்களைக் கடவுள், உயர்ந்த சாதியராகப் படைத்ததாகக் கூறுகிறார்கள். அது கொடுமை. இதோ பச்சை. அதை உண்மைதான் என்கிறான். இது மடமை. இந்த மடமையும், அந்தக் கொடுமையும் ஒழிய வேண்டுமே ஐயா! கீதம் பாடினால் போதுமா?

சாது : அப்பா நெறியற்றவரின் வெறிச் செயலால் நீ மிகவும் வாடியிருக்கிறாய். கடவுளின் லட்சணமும், குணமும், அக்கயவரின் மொழிப்படியல்ல என்பதை அறிந்து கொள். கடவுள் என்றால் மனம், வாக்கு, காயம் என்பனவற்றைக் கடந்தவர் என்று பொருள்.

ஆண்டி : இருக்கலாம் அய்யா ! எதையும் கடந்தவராக இருப்பார். ஆனால், அந்த ஆரியர் போடும் கோட்டினை மட்டும் அவரால் கடக்க முடிவதில்லை . லோகம் மந்ராதீனம், மந்திரம் ப்ராமணாதீனம், ப்ராமணம் தேவதாதீனம் என்பது கீதையல்லவா! கடவுளுக்கே அவர்கள் எஜமானர்களாமே….?

சாது : வெறும் புரட்டு ; மமதை; அகம்பாவம் ; கடவுள் வாக்கல்ல அது ; கபட மொழி.

ஆண்டி: கண்ணன் காட்டிய வழியாமே?

சாது : இல்லை ; கயவர் வெட்டிய படுகுழி. அப்பா! மராட்டியத்திலே புதிய சக்தி பிறந்திருக்கிறது. மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரமம் வீழ்கிறது. சமரசம் பிறந்துவிட்டது. சண்டாளன், சர்மா என்னும் பேதம் இனி இராது. அனைவரும் சமம் அனைவரும் சமம்.

ஆண்டி : அழகான ஆரூடம். ஆனால், அது பலிக்காது. இன்பக் கனவு காண்கிறீர் ஐயா தங்களுடைய உபதேசத்தையும் ஒரு நூலாக்கி வைத்துக் கொள்வார்கள். ஏட்டுச்சுரை, காதுக்கு இனிப்பு, வாய்க்குப் பயனில்லை.

படிக்க:
புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார்?
பள்ளி திறக்கப் போகிறது – ஆசிரியர் தயாராவது எப்படி ?

சாது : தம்பி! விதை தூவி வருகிறோம். விளையும் பயிர் முளையிலே என்பது போல, இப்போதே சமரச மணம் வீச ஆரம்பித்து விட்டது. நிச்சயம் மாறுதல் ஏற்படும்
என் மொழி கேள். பொறுமை கொள்.

ஆண்டி : பொறுமை? ஐயா! பொல்லாங்கு ஏதும் செய்யாது, பிறருக்காக உழைத்துவிட்டு, உருமாறி, உள்ளங்குமுறி , ஒண்டக் குடிசையின்றி, ஒட்டாண்டியாகி ஓலமிட்டுக் கிடக்கிறோம். இன்று நேற்று முதல் அல்ல; பல தலைமுறைகளாகக் கொடுமைகளைச் சகித்தோம்; வறுமையால் வாடினோம். வஞ்சகரால் வீழ்ந்தோம். வாழ்வே பெரும் சுமை எங்களுக்கு? இம்சிக்கப்படும் நாங்கள், இழிவாக நடத்தப்படும் நாங்கள், ஊரிலே உரிமையோடு உலவ அனுமதிக்கப்படாத நாங்கள், மனித உரிமையும் தரப்படாது, குளத்திலே குளிக்கவும், உரிமையும் பெற முடியாத நாங்கள், பொறுமையாய் இருக்க வேண்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! காலின் கீழ் நசுக்கப்படும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

காலில் வெள்ளெலும்பு முளைத்த நாளாய் அடிமைக்காரனாக இருந்து பாடுபட்டுக் கிடக்கும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அற்புதமான யோசனை, பாம்பின் வாயிலே சிக்கிய தேரைக்கும், புலியின் பிடியில் சிக்கிய மானுக்கும், போய்ச் செய்யும் இந்தப் போதனையை! பொறுமையாம் பொறுமை. பொறுத்ததெல்லாம் போதாதா? இவ்வளவு தாம் உம்மால் முடியும். எங்களிடம் பொறுமையின் அருமையைப் பற்றி உபதேசிப்பீர். எம்மை மிருகங்களினும் கேவலமாக நடத்தும் கொடியோருக்கு அன்பின் பெருமையைப் பற்றிப் பேசுவீர். இருவரிடமும் மறுமையின் மேன்மையைப் பற்றிப் பேசுவீர். ஆனால் உரிமைப் போருக்கான வழி உரைக்க அறியீர். அது அறிந்திருந்தால் இந்தக் காவியும், கமண்டலமும் கையிலிராது.
(போகிறான்.)

சாது : தம்பி கொஞ்சம் நில்!
(போனவன் திரும்பி வந்து சற்றுக் கோபத்துடன்)

மாதிரிப் படம்

ஆண்டி : ஆமாம் இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் உமக்கு . மிருகங்களிலே பொறுமையைப் பூஷணமாகக் கொண்ட கழுதையைக் கண்டவர் அடிப்பர்.
ரோஷத்துடன் உறுமும் புலியிடமோ கிலி கொள்வர். அய்யா எங்களை பூதேவர்கள் என்ற புரட்டர்கள், தங்கள் ஆகமம் என்னும் அரக்கு மாளிகைக்கு அழைத்துச் சென்று கைகால்களைக் கட்டிப்போட்டு விட்டார்கள். தாங்கள் அந்த அரக்கு மாளிகையிலே ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்கிறீர்கள்! ஆபத்துதான் உண்டாகும் அதனால், ஐயா சாது! சன்னியாசிக் கூட்டதவராகிய நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள். சகித்துக் கொள்ளப்பா சமரசம் உதயமாகும் பாரப்பா! சகலரும் சர்வேஸ்வரன் கண்முன் ஒன்றுதானப்பா என்று உபதேசம் செய்கிறீர்கள்.

நாட்டு விடுதலைப் போர் வீரர்களோ அடிமைத்தனம் அழிந்து பட்டதும், எதிரி விரட்டப்பட்டதும், சுய ஆட்சி கிடைத்ததும் ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் எல்லோரும் ஓர் குலம் ஒருவரை ஒருவர் தாழ்வாகக் கருதும் மடமையும், கொடுமையும் ஒழிக்கப்படும். உறுதியாக இதை நம்பு என்று நல்வாக்கு கொடுக்கின்றார்கள். உங்கள் உபதேசமும், அவர்கள் உறுதிமொழியும் இதோ இந்தக் கொடுமையைப் போக்கவில்லையே, அய்யா! நாடு விடுதலை பெற்று என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம்? அன்னிய ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம் நாங்கள் ? எங்களுடைய இழிவு போகவில்லையே எங்கள் நிலை உயரவில்லையே. அய்யா !
(போகிறான்.)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முகிலன் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி , சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
 ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு’ ஒரு திட்டமிட்ட படுகொலைதான் என்று  ஆதாரப்பூர்வமாக நிரூபித்த சூழலியலாளர் முகிலனை, கடந்த பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து காணவில்லை.சென்னையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆதாரத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டுவிட்டு, மதுரைக்கு இரயில் மூலம் கிளம்பிய முகிலன் அதன் பின்னர் காணவில்லை. அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி, பல முறை புகார் கொடுத்தும் எந்தத் தகவலும் இல்லை. போலீசும், தமிழக அரசும் மிகவும் தெனாவெட்டாக பதில் அளிக்கிறது.
தமிழகம் முழுவதும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரியும், மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (06-03-2019)  திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று (06-03-2019) திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் கல்லூரி வாயில் முன்பு தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், மெத்தனமாக செயல்படும் தமிழக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

பேரறிவாளனை விடுவிக்க தாமதம் ஏன் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி !

PP Logo

பத்திரிக்கை செய்தி

06.03.2019

கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பிய பிறகும், ஒட்டு மொத்த தமிழகமும் அற்புதம்மாள் அவர்களின் கோரிக்கையை ஆதரித்து நிற்கும் நிலையில், பா.ஜ.க மத்திய அரசும் ஆளுநரும் தாமதம் செய்வது ஏன்?.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை உடனே விடுதலை செய்!

பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மார்ச் -9 ஆம் தேதியன்று மாலை 4 மணி முதல் 6 வரை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்பதுடன் மக்கள் அதிகாரம் அதில் பங்கேற்கும்.

தங்கள்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு

தகவல் :
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு. 99623 66321

உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

வரலாற்றில் பாடம் படிப்போம் !

மீபத்தில் கிளினிக்கில் 8 வயதே இருக்கும் ஒரு சிறுமிக்கு பேலியோ பரிந்துரை கொடுத்தேன். காரணம், அந்தச் சிறுமியின் எடை – 82 கிலோ. (மருத்துவம் சார்ந்த அனைத்து ரத்த ஆய்வுகளும் செய்யப்பட்டு எந்த நோயின் காரணமாகவும் அவள் உடல் ஏறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது)

மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி – 82 கிலோ எடையுடன் இருக்கிறாள் என்பது இப்போதெல்லாம் எனக்கு அத்தனை அதிர்ச்சி தருவதில்லை. காரணம் சிறு வயது உடல் பருமன் உள்ள பிள்ளைகளை காண்பது அனுதினமும் அதிகரித்து வருகிறது.

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் எடை விசயத்தில் பெரிய வேறுபாடு இருக்கிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தாங்கள் வயதுக்கு இருக்கும் எடையை விட குறைவாகவோ சரியாகவோ இருப்பதைக் காண முடியும். ஆனால் தனியாரில் பயிலும் மாணவ மாணவிகளில் பலர் தாங்கள் இருக்க வேண்டிய எடையை விட அதிகமாகவும் மிக அதிகமாகவும் இருக்கின்றனர்

5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது. ஏன் இக்கால குழந்தைகள் குண்டாகிறார்கள் ? பசி என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறை உருவாகி வருகிறது.

ஆனால் நமது தமிழகத்தில் பசி… பசி… பசி… என்ற ஓலமும் எங்கும் பசியால் மரணித்த உடல்களைக் கொண்டு ஒப்பாரியும் கேட்டது என்றால் நம்ப முடிகிறதா.??

வரலாற்றின் இருண்ட பக்கங்களை சென்று பார்த்து விட்டு வந்தால்… நாம் யார்? நமது ஜீன் கட்டமைப்பு என்ன? நமது மூதாதையர் நமக்கு விட்டுச்சென்ற சொத்து எது?
என்று தெரியும்..

படிக்க:
♦ அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்
♦  கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஆம்.. அது 1876 ஆம் ஆண்டு. தென்னிந்தியாவை வரலாற்றில் மிகப்பெரும் பஞ்சம் தாக்கியது. (பஞ்சம் என்றால் என்னவென்று நம் குழந்தைகளுக்குத் தெரியாது. ஏன் நமக்கே தெரியாது. கற்றுக்கொடுப்போம்)

Great Famine of Madrasஅரிசி, கோதுமை விளையவில்லை. சிறு தானியங்களும் கைவிட்டன. ஆங்கில
அரசாங்கத்தின் கருமித்தனமான நடவடிக்கைகளால் பஞ்சம் முறையாக சரிசெய்யப்படவில்லை.

எங்கு காணிணும் மக்கள் எலும்பும் தோலுமாக காட்சி அளித்தனர். மிகக் கொடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர்.

1877 ஆம் ஆண்டு மிகப்பெரும் மலேரியா கொள்ளை நோய் வந்தது. ஏற்கனவே பஞ்சத்தால் குற்றுயிர் குலையுயிராய் இருந்தவர்களை மலேரியா காவு வாங்கியது. அந்த பஞ்சமானது மூன்று ஆண்டுகள் நீடித்தது.

கிட்டத்தட்ட 55 லட்சம் மக்களை கொன்றொழித்துப் போனதென்கிறது வரலாறு. அன்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தவர்களின் வாரிசுகள் தான் நாம். நமது ஜீன்களுக்கு பஞ்சமும் பட்டினியும் மிகவும் பரிச்சயமானவை.

மூன்று வேளையும் அரிசி உணவை உண்பது என்பது மன்னர்களுக்கே கூட கிடைக்காத காலம் இருந்தது. தொப்பை போட்டு கொலுக் மொலுக் என்று இருக்கும் யாரையும் பார்த்தால் அவரை அனைவரும் வணங்கியிருப்பர். காரணம் அவர் பெரிய மிராசுதாராகவோ அல்லது மன்னராகவோ தான் இருந்திருக்க முடியும்.

நமது மூதாதையர்களின் ஜீன்களில் ஒரு பூதம் ஒழிந்திருந்தது. அந்த பூதம் ஜாடிக்குள் இருந்து வெளியே வராமல் தான் இருந்தது. நாம் கடந்த முப்பது வருடங்களாக அந்த ஜாடியை திறந்து பூதத்தை வெளியே விட்டு விட்டோம்.

அந்த பூதம் தான் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்

ஜாடியைத் திறப்பது என்பது நாம் உண்ணும் அதிக மாவுச்சத்து / ஃபாஸ்ட் ஃபுட் / குளிர்பானம் / சீனி சக்கரை எல்லாம். இப்போது பூதம் செய்யும் கபளீகரம் தான் நீரிழிவு, உடல் பருமன், PCOD, இதய நோய், கிட்னி நோய் எல்லாம்…. 

மீண்டும் பூதத்தை ஜாடிக்குள் அடைக்க முயற்சிகள் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை நாம் உடனே உணர வேண்டும்…

காரணம் எதிர்காலம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. வரலாற்றில் இருந்து பாடம் கற்காத சமுதாயம் வரலாறாகிவிடும்….

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகள் : பொருளாதாரம் கற்போம் – 12

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 12

முன்னோடிகள்

அ.அனிக்கின்
புதிதாக ஒன்றைச் செய்வதோ சொல்வதோ கடினமானதே. பதினேழாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களின் சாதனைகளை மதிப்பிடும் பொழுது அவர்களை எதிர்நோக்கிய மாபெரும் கஷ்டங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆங்கிலப் பொருள் முதல் வாதத்தின் மாபெரும் தத்துவ ஞானிகளான பிரேன்சிஸ் பேக்கன், தாமஸ் ஹாப்ஸ் ஆகியோர் இயற்கை மற்றும் சமூகத்தைப் பற்றிய ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்; அதன்படி இயற்கை மற்றும் சமூகத்தின் புறவய விதிகளை விளக்கிக் கூறுவது விஞ்ஞானத்தின் முக்கியமான கடமையாக ஆயிற்று.

பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கும் மத அறவியல் கோட்பாடுகளைப் பொருளாதாரச் சிந்தனையில் மீறிப் போவது அவசியமாயிற்று. முன்பு புனிதமான மத நூல்களின் எழுத்துக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற வகையில் பொருளாதார வாழ்க்கை எவ்விதம் இருக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இருந்தது. இப்பொழுது உண்மையில் என்ன இருக்கிறது, இந்த நட வடிக்கையின் மூலமாக ”சமூகத்தின் செல்வ வளத்தின்” நலன்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமாயிற்று.

பூகோளத் துறையில் ஏற்பட்ட மாபெரும் கண்டு பிடிப்புகளும் வர்த்தகத்தின் வளர்ச்சியும் மக்களுடைய அறிவின் எல்லையை விரிவுபடுத்தியிருந்த போதிலும் அவர்கள் உலகத்தைப் பற்றி அறிந்தது குறைவாகவே இருந்தது. இங்கிலாந்தைப் பற்றி பூகோளத்திலும் பொருளாதாரத்திலும் செய்யப்பட்டிருந்த வர்ணனைகளே தப்பாகவும் பொருளற்ற வகையிலும் இருந்ததென்றால், வெளிநாடுகளைப் பற்றி என்ன எழுதியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளுக்கு மிகக் குறைவான விவரங்களே கிடைத்தன; புள்ளி விவரங்களோ அநேகமாக ஒன்றுமில்லை.

பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கும் மத அறவியல் கோட்பாடுகளைப் பொருளாதாரச் சிந்தனையில் மீறிப் போவது அவசியமாயிற்று.

ஆனால் வாழ்க்கை மனிதனுடைய விவகாரங்களைப் பற்றி ஒரு புதிய சிந்தனை வேண்டுமென்று வற்புறுத்தியது; புதிய துறைகளில் சிந்தித்தவர்களை ஊக்குவித்தது. மான், ஸ்மித் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நூற்றாண்டுக் காலத்தில் வெளிவந்த பொருளாதார நூல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1764 -ம் வருடத்தில் ஜி. மாஸ்ஸி இப்புத்தகங்களின் விவரப் பட்டியலை முதன் முறையாகத் தொகுத்தார்; அதில் 2,300 -க்கும் அதிகமான எண்ணிக்கையுள்ள புத்தகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவை பெரும்பாலும் வாணிப ஊக்கக் கொள்கைக்கு ஆதரவான புத்தகங்களே; எனினும் பெட்டி, லாக், நோர்த், இன்னும் வேறு சிலர் எழுதிய புத்தகங்களில் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் அக்காலத்திலேயே இடம் பெற்றிருந்தன.

வாணிப ஊக்கக் கொள்கை என்பது இங்கிலாந்தில் மட்டுமே ஏற்பட்ட பிரத்யேகமான நிகழ்வு அல்ல. பணத்தைத் திரட்டுதல், காப்பு வரிக் கொள்கை, பொருளாதாரத்தை அரசு ஒழுங்குபடுத்துதல் என்பவற்றைக் கொண்ட கொள்கை பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை போர்த்துகல் நாட்டிலிருந்து மஸ்கோவியா வரை ஐரோப்பா முழுவதிலுமே பின்பற்றப்பட்டது. பிரான்சில் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் எல்லா அதிகாரங்களையும் கொண்டிருந்த கொல்பேர் என்ற அமைச்சரின் கீழ் வாணிப ஊக்கக் கொள்கை நடைமுறை வளர்ச்சியடைந்த வடிவங்களைப் பெற்றது. அதன் தத்துவத்தை இத்தாலியப் பொருளாதார நிபுணர்கள் வெற்றிகரமாக விளக்கி எழுதினார்கள்.

படிக்க:
♦ பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ இந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்

இங்கிலாந்தில் வாணிப ஊக்கக் கொள்கை சம்பந்தப்பட்ட எந்தப் பிரசுரத்தின் தலைப்பிலும் ‘வர்த்தகம்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதைப் போல, இத்தாலியில் ”பணம்” என்ற சொல் இடம் பெற்றிருந்தது; சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதறிக் கிடந்த இத்தாலியில் பணம் மற்றும் சிறு அரசுகளுக்கிடையே அதன் பரிவர்த்தனை பற்றிய பிரச்சினை மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஜெர்மனியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலும் வாணிப ஊக்கக் கொள்கை ”காமரா லி ஸ்டிக்” என்று சொல்லப்படும் வடிவத்தில் அதிகாரபூர்வமான பொருளாதாரக் கொள்கையாக இருந்தது.

ஆனால் வாணிப ஊக்கக் கொள்கையின் கருத்துக்களை முறைப்படுத்துவதில் முதன்மையான பாத்திரத்தை வகித்தவர்கள் ஆங்கிலப் பொருளாதார நிபுணர்களே. இதற்கு இங்கிலாந்தின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தின் முதிர்ச்சியும் காரணங்களாகும். மார்க்ஸ் வாணிப ஊக்கக் கொள்கை பற்றிய தமது புலமை சான்ற ஆராய்ச்சியை எழுதும்பொழுதும் ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களை முக்கிய அடிப்படையாகக் கொண்டு எழுதினார்.

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

ஆடம் ஸ்மித் வாணிப ஊக்கக் கொள்கையை அறிமுகப்படுத்திய பொழுது அது ஒரு வகையான தப்பெண்ணம் என்பது போலக் காட்டினார். மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள் மத்தியில் இந்தக் கருத்து வேரூன்றியது. மார்க்ஸ் இதை எதிர்த்தார். ”… பிற்காலத்தில் வந்த கொச்சையான சுதந்திர வர்த்தகக் காரர்களால் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு வாணிப ஊக்கக் கொள்கையினர் முட்டாள்களாக இருந்ததாக நினைக்கக் கூடாது.”(1) வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கை அதன் காலத்தில் ஒரு கணிசமான விஞ்ஞானச் சாதனையாக இருந்தது. இந்தப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளில் அதிகமான திறமைசாலிகள் பதினேழாவது நூற்றாண்டில் தத்துவஞானத்திலும், கணிதத்திலும் இயற்கை விஞ்ஞானங்களிலும் மிகச் சிறந்த சிந்தனையாளர்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படக் கூடிய தகுதி உடையவர்கள்,

வாணிப ஊக்கக் கொள்கை ஒரு தத்துவ அமைப்பு மற்றும் கொள்கை என்ற வகைகளில் தேசியத் தன்மையைக் கொண்டிருந்ததற்குச் சில காரணங்கள் உண்டு. ஒரு தேசியச் சுற்றுவட்டத்துக்குள்ளாக மட்டுமே முதலாளித்துவம் மிக வேகமாக வளர்ச்சி அடைய முடியும்; மேலும் அது மூலதனத் திரட்டலுக்கும் அதன் மூலமாகப் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப் பெரிய அளவுக்கு அரசாங்கத்தை நம்பியிருந்தது. வாணிப ஊக்கக் கொள்கையினர் தங்களுடைய கருத்துக்களில் பொருளாதார வளர்ச்சியின் உண்மையான விதிகளையும் தேவைகளையும் வெளியிட்டனர்.

”செல்வம்”, அதாவது படைக்கப்பட்ட, உபயோகப்படுத்தப்பட்ட, திரட்டப்பட்ட பொருள்களின் மொத்தம் பயன் மதிப்புக்களின் மொத்தம்-ஒரு நாட்டைக் காட்டிலும் இன்னொரு நாட்டில் அதிகத் தீவிரமாக வளர்ச்சியடைவது ஏன்? செல்வம் அதிவேகமாக வளர்ச்சியடைவதற்கு உற்பத்தி மட்டத்தில், குறிப்பாக அரசாங்க மட்டத்தில் அவசியமாகச் செய்ய வேண்டியது என்ன? இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கொடுப்பதன் மூலம் தான் அரசியல் பொருளாதாரம் ஒரு விஞ்ஞானம் என்று கருதப்பட முடியும்.

வாணிப ஊக்கக் கொள்கையினர் தங்கள் காலத்திய பொருளாதார நிலைமைகளில் இதற்குப் பதில்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றார்கள். பொருளாதார விஞ்ஞானத்தின் மிக முக்கியமான பிரச்சினை ”பகுத்தறிவுள்ள” பொருளாதாரத்தை ஏற்படுத்துவதே என்று முதலில் சொன்னது அவர்களே என்று கூடச் சொல்லலாம். அனுபவத்தின் மூலம் அவர்கள் செய்த பல முடிவுகளும் சிபாரிசுகளும் யதார்த்த ரீதியில் நியாயமானவை; எனவே இந்த அர்த்தத்தில் அவை விஞ்ஞானத் தன்மை கொண்டவை.

அதே சமயத்தில் அவர்கள் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் விதிகளையும் உள்ளமைப்பையும் புரிந்து கொள்ளும் திசையில் முதல் காலடிகளை எடுத்து வைத்தார்கள். அவர்களுடைய அறிவு அதிகமான அளவுக்கு மேலெழுந்தவாரியாகவும் ஒரு தரப்பாகவும் இருந்ததென்று கூறலாம். ஏனென்றால் அவர்கள் பொருளாதார அமைப்பின் இரகசியங்களைச் செலாவணியின் பரப்புக்குள் தேடினார்கள். ஒரு விமர்சகர் சுட்டிக்காட்டியது போல., அவர்கள் உற்பத்தியைத் “தேவையான தீமை” என்று மட்டுமே கருதினார்கள்; நாட்டுக்குள் அல்லது முதலாளிகளின் கைகளுக்குள் என்று கூடச் சொல்லலாம்-பணம் வந்து சேருவதை உறுதி செய்கின்ற ஒரு வழியாக மட்டுமே கருதினார்கள்.

படிக்க:
♦ பீட்சா வர்க்கம் நாசமாக்கும் உணவுச் செல்வம் !
♦ போர் என்பது பணம் | கேலிச்சித்திரங்கள்

ஆனால் உண்மையில் எந்த சமூகத்திலும் பொருளாயத செல்வத்தின் உற்பத்தியே அதற்கு அடிப்படையாகும்; இதற்கு இரண்டாவது நிலையிலே தான் செலாவணி இருக்கும். அந்தக் காலத்தில் வர்த்தக மூலதனமே பொதுவான மூலதனத்தின் வடிவமாக இருந்தது வாணிப ஊக்கக் கொள்கையினர் இவ்வாறு கருதியதற்குக் காரணம். உற்பத்தி என்பது பெருமளவுக்கு முதலாளித்துவத்துக்கு முந்திய முறைகளின்படியே இன்னும் நடைபெற்று வந்தது; ஆனால் செலாவணி வட்டம், குறிப்பாக வெ ளி நாட்டு வர்த்தகம் அந்தக் கால நிலைமைகளுக்குப் பெரிய மூலதனத்தினால் முன்பே எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது.

17-ம் நூற்றாண்டு – முழுவதிலும் 18-ம் நூற்றாண்டின் முதற்பாதியிலும் இங்கிலாந்தில் நடைபெற்ற பொருளாதார விவாதங்களின் மையமாகக் கிழக்கிந்திய, ஆப்பிரிக்க மற்றும் இதர கம்பெனிகளின் நடவடிக்கைகள் இருந்தது தற்செயலானதல்ல.

வாணிப ஊக்கக் கொள்கையினர் ”நாடுகளின் செல்வவளம்” என்பதை அடிப்படையில் வர்த்தக மூலதனத்தின் நலன்கள் என்ற பலகணி வழியாகவே பார்த்தனர். எனவே பரிவர்த்தனை மதிப்பு போன்ற ஒரு முக்கியமான பொருளாதார இனத்தைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டியது இயற்கையே. அவர்கள் தத்துவாசிரியர்கள் என்ற வகையில் இதைப் பற்றித்தான் ஆர்வங்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் பரிவர்த்தனை மதிப்புக்குப் பணம் மற்றும் தங்கத்தைக் காட்டிலும் வேறு சிறப்பான கருத்துருவம் ஏது?

எனினும் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற எல்லா வகையான செல்வம், உழைப்பு ஆகியவை சமமானவையே என்ற அரிஸ்டாட்டிலின் ஆரம்ப காலக் கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு மாறாக, பரிவர்த்தனை என்பது சமமானது அல்ல, அது இயல்பாகவே சமத் தன்மையற்றது என்று அவர்கள் நம்பினார்கள். (அவர்கள் வெளிநாட்டுப் பரிவர்த்தனை வர்த்தகத்தையே முதன்மையாக நினைத்தார்கள்; குறிப்பாகப் பின் தங்கிய, ”காட்டுமிராண்டி” மக்களிடம் செய்த வர்த்தகத்தில் அது மிக மோசமான அளவுக்குச் சமத்தன்மை அற்றதாகவே பெரும்பாலும் இருந்தது என்பதைக் கொண்டு அவர்களுடைய கருத்தை வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.)

உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் மூலக்கருக்கூறுகள் அரிஸ்டாட்டிலிடமும், சில மத்திய கால எழுத்தாளர்களிடமும் காணப்பட்ட போதிலும், வாணிப ஊக்கக் கொள்கையினர் வழக்கமாகவே அதை வளர்க்கவில்லை.

உபரி மதிப்பு என்பது உண்மையில் கூலித் தொழிலாளர்களின் கூலி கொடுக்கப்படாத உழைப்பு, அதை முதலாளிகள் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்கின்றனர். வாணிப ஊக்கக் கொள்கையினரிடம் அது வர்த்தக லாபம் என்ற வடிவத்தில் தோன்றுகிறது. மூலதனத்தின் வளர்ச்சியையும் திரட்டலையும் உழைப்புச் சுரண்டலின் விளைவு என்று அவர்கள் பார்க்கவில்லை; அது பரிவர்த்தனையின், குறிப்பாக அந்நிய வர்த்தகத்தின் பலன் என்றே அவர்கள் கருதினர்.

அவர்களிடம் இப்படிப் பல மயக்கங்களும் தவறுகளும் இருந்த போதிலும், அவர்கள் பல பிரச்சினைகளை அவற்றின் உண்மையான தோற்றத்தில் பார்த்தனர். உதாரணமாக, மக்கள் தொகையில் இயன்ற அளவுக்கு அதிகப் பெரும்பான்மையான பகுதியினர் முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் அதிகமான அக்கறை காட்டினர். இதோடு மிகக் குறைவான உண்மையான ஊதியத்தையும் சேர்த்தால், இதன் மூலம் லாபம் அதிகரிக்கும்; மூலதனத் திரட்டல் வேகமாக நடைபெறும்.

பொருளாதார வளர்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான பணவியல் முறைக்கு இவர்கள் மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்தனர். பொருளாதாரத்தில் பணவியல் காரணிகளின் பாத்திரத்தைப் பற்றி அவர்கள் கொடுத்த பொருள் விளக்கம் – சில அம்சங்களில் ஆடம் ஸ்மித்தைக் காட்டிலும் அதிக ஆழமானதாக இருந்தது. அவர்களுடைய பொருளாதாரத் திட்டங்களில் ஒரு பலமான அரசின் ஆட்சியதிகாரத்தை அவர்கள் அனுமானம் செய்து கொண்டனர்; பிற்காலத்திய வாணிப ஊக்கக் கொள்கையினர் அரசு பொருளாதாரத்தில் அதிகத் தீவிரமாகவும் அற்பமான முறையிலும் தலையிடுவதை ஆட்சேபித்தனர்.

இங்கிலாந்தின் வாணிப ஊக்கக் கொள்கையினரைப் பொறுத்தவரையிலும் இது குறிப்பிடத்தக்க வகையில் உண்மையாகும். ஒரு பலமான, சுதந்திரமான, அனுபவமிகுந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை அவர்கள் வெளியிட்டனர்; அந்த நலன்களைப் பொதுவான முறையில் பாதுகாப்பதற்கு மட்டுமே அரசு அதற்குத் தேவையாக இருந்தது.

விலையுயர்ந்த உலோகங்களின் ஏற்றுமதியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்குபடுத்துவதை எதிர்த்து தாமஸ் மான் விடாப்பிடியாகப் போராடினார். விவசாயி நிலத்தில் விதையை ஊன்றினால்தான் பிறகு அறுவடை செய்ய முடியும்; அதைப் போல வர்த்தகர் பணத்தை ஏற்றுமதி செய்து அந்நியப் பொருள்களை வாங்கினால்தான் தன்னுடைய சொந்தப் பொருள்களை அதிகமாக விற்பனை செய்ய முடியும், அதன் மூலம் கூடுதலான பணத்தின் வடிவத்தில் நாட்டுக்கு லாபத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் எழுதினார்.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1)
K. Marx, Theories of Surplus-Value, Part 1, Moscow, 1969, p. 179,

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

போர்வெறியின் எச்சங்களில் ஈராக்கின் மொசூல் நகரம் – படக்கட்டுரை

0

சுலாமிய, யூத, கிறித்தவ மக்கள் அருகருகே வாழ்ந்து வந்த பெருமை மிக்க நகரம்தான் வடக்கு ஈராக்கில் அமைந்திருக்கும் மொசூல் நகரம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மொசூல் நகரம் முழுமையாக விடுவிக்கப்படுவதாக, ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி-யால் அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகியும் எந்த முன்னேற்றமும் இன்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது, வரலாற்றுப் புகழ்பெற்ற மொசூல் நகரம்.

சிதைந்து போயுள்ள மொசூல் நகரம்

சுமார் 5 இலட்சம் மக்கள் வாழ்ந்து வந்த இந்நகரம் 2013-ல் ஐ.எஸ்-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதுவரை டைப்ரிஸ் நதிக்கரையின் மேற்குப்பகுதி முழுவதும், மொசூல் நகரத்தின் பொருளாதாரக் கேந்திரமாகவும், மொத்தத்தில் மொசூல் நகரம் இந்தப் பகுதிகளுக்கு இதயத்துடிப்பாகவும் இருந்துவந்தது. ஐ.எஸ்-ன் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது.

மொசூல் நகரத்தைத்தான் ஐ.எஸ் இயக்கத்தினர் தங்களுடைய இறுதிப்புகலிடமாக்கிக் கொள்ளத் தீர்மானித்தனர். ஏனென்றால் பழமை வாய்ந்த இந்த நகரத்தின் தெருக்கள் மிக நீண்டதாகவும், பதுங்கிக் கொள்ள மிகவும் பாதுகாப்பானதாகவும் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் ஈராக் இராணுவம் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஐ.நா-வின் அறிக்கையின்படி, ஏறக்குறைய 5000 கட்டிடங்கள் சீர்குலைக்கப்பட்டு, சுமார் 500 கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.

ஈராக்கில் அனைத்து மட்டங்களிலும் ஊழல், புற்றுநோய் போன்று பரவிவிட்டதால், இந்த நகரத்தைச் சீர்செய்வதற்கு எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. அப்படி ஒன்றிரண்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலும், நிலத்தின் கீழ் கன்னிவெடி புதைக்கப்பட்டிருப்பதாலும், அபாயகரமான வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாலும் சீரமைப்புப் பணிகள் மேலும் தொய்வடைகின்றன. மொசூல் நகரம் விடுவிக்கப்பட்ட 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 80 பேர் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது உயிரிழந்துள்ளனர்.

இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மொசூல் நகரவாசிகள் சிலர், உயிரிழப்புக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் வீடுகளைச் சரிசெய்யும் பணிகளிலும், வேறுசிலர் தேனீர் மற்றும் பழக்கடைகள் நிறுவியும் வருகின்றனர்.

சுமார் 10 வருட காலமாக ஈராக் மீது அமெரிக்காவால் திணிக்கப்பட்ட போரின் எச்சங்களாக உருவானதுதான் ஐ.எஸ்.ஐ.எல் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம். அதிதீவிர இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட ஒரு அழிவை ஒத்ததாக இருக்கிறது மொசூல் நகரம்.வரலாற்றுக் காலம் தொட்டே பொருளாதாரக் கேந்திரமாக விளங்கிவந்த மொசூல் நகரம் இன்று வேட்டைக்காடாக மாறி நாதியற்றுக் கிடக்கிறது.

வான்வழித் தாக்குதலிலிருந்து தப்பிக்க இரு கட்டிடங்களுக்கிடையில் துளைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐ.எஸ் அமைப்பு

அல் முசாஃபீ மசூதி – வான் வழித் தாக்குதலில் தப்பிய மசூதிகள் சிலவற்றில் இதுவும் ஒன்று

ஐ.எஸ்-பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் சீரழிக்கப்படும் மொசூல் நகரம்

ஐ.எஸ் அமைப்பு தங்களின் இறுதிப்புகலிடமாகப் பயன்படுத்திய கட்டிடங்கள் சூழப்பட்ட மொசூல் நகரம்

மொசூல் நகரத்தின் இதயத்துடிப்பாக விளங்கிய பழமை வாய்ந்த கட்டிடம் உருக்குலைந்து நிற்கிறது

காசீம் யாஹ்யா வயது 75 – தேனீர் விடுதியொன்றில் காலை சிற்றுண்டி தயாரிக்கிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் ஐ.எஸ் அமைப்பால் தலை கொய்யப்பட்டும், கட்டிடங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டும் கொல்லப்பட்டனர் என்கிறார்.

வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிபயங்கர வெடிகுண்டுகளால் இராணுவத்தையும், அப்பாவி மக்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்றொழித்தனர்.

சீரழிக்கப்பட்ட மொசூல் நகரத்தைப் படம்பிடிப்பவர்கள் கைது செய்யப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் ஆளுநர்.

மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையின் சின்னமாயிருந்த மொசூல் நகரத்தின் இப்போதைய அவல நிலை

ஏறக்குறைய 5000 கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்கிறது ஐ.நா-வின் அறிக்கை

ஐ.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமுமில்லாத  மொசூல் நகரம்.


தமிழாக்கம்: வரதன்
நன்றி:  அல்ஜசீரா 

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

” கார்ப்பரேட் காவி பாசிசம்! எதிர்த்து நில்! ” மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் கோவன் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

♠ மோடி – அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ”உலகத்துலே பெரிய சிலை பட்டேலு… அது உள்ள போயி ஒளிஞ்சிக்கிச்சி ரஃபேலு…” என்ற பாடல்;
♠ விடுதலை போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்று தியாகங்களை எதிர்கொண்ட இருட்டடிப்பு செய்யப்பட்ட இசுலாமியர்களின்  வரலாற்றை  நினைவுகூரும், ”சொல்லாத சோகம்… யாரும் வெல்லாத வீரம்…” என்ற பாடல்;
♠ தமிழகத்தில் தமிழிசையின் அலப்பறைகளை அலறவிடும் ”மலர்ந்தே தீரும்… தாமரை மலரந்தே தீரும்…”  என்ற பாடல்;
♠ கார்ப்பரேட் – காவி பாசிசத்தை அம்பலப்படுத்தும் ” அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…!” உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

தோழர் கோவனின் கலை நிகழ்ச்சிகளில் இந்த முறை கிடார் உள்ளிட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் துடிப்புடன் பாடலை அள்ளித்தந்தது !

இந்தப் பதிவில் அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…! பாடல் இடம்பெறுகிறது.

பாடலில் இடம் பெற்ற சில வரிகள்..

… நீ விரும்பவில்லை… நான் பேசக்கூடாது!
நீ ரசிக்கவில்லை… நான் பாடக்கூடாது!
நான் உண்ணுவதை நீ தடுக்கிற…
நான் எண்ணுவதை நீ மறுக்கிற…
அதிகாரம் இருப்பதால் ஆடாதே…
மக்கள் அலையாய் எழுந்தால்…
காற்றாக அழிவாய்…
காணாமல் போவாய்…
காவியே நீ ஒழிவாய்! …

பாருங்கள்.. பகிருங்கள்..!

அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…!

காஷ்மீரின் ஊடகங்களை ஒடுக்கும் மோடி அரசு !

0

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக வாசகர்களைக் கொண்ட “கிரேட்டர் காஷ்மீர்”’ நாளிதழுக்கு அளிக்கப்பட்டு வந்த காஷ்மீர் அரசின் விளம்பரங்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. காஷ்மீர் போராட்டங்களின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே மத்திய அரசின் விளம்பரங்கள் மற்றும் காட்சிப்பூர்வ விளம்பர இயக்குநரகம் கடந்த 2008-ம் ஆண்டிலேயே இந்த நாளிதழை கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மேலும் “காஷ்மீர் ரீடர்” என்ற நாளிதழுக்கும் காஷ்மீர் அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்ட 2016-ம் ஆண்டு காலகட்டத்தில் 3 மாதங்களுக்கு அப்போதைய பிடிபி, பாஜக கூட்டு அரசாங்கத்தால் இந்த நாளிதழ் தடை செய்யப்பட்டது.

ஏன் இந்த நடவடிக்கை? அதுவும் இப்போது ஏன் இந்த நடவடிக்கை ? விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதாக எவ்வித அலுவலகரீதியான அதிகாரப்பூர்வ ஆணைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்கப்பட்டபோது, “மேலிருந்து வந்த வழிகாட்டுதல்” என இந்திய அரசாங்கத்தைக் குறிப்பிடுகின்றனர். ஆளுநர் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் மாநிலம், மைய அரசாலேயே ஆளப்படுகிறது.

கடந்த அக்டோபர் 18, 2017 அன்று மெஹ்பூபா முஃப்தியின் அரசாங்கத்திற்கு இந்திய உள்துறை அமைச்சகம் எழுதிய ஒரு கடிதத்தை ஆளுநர் நிர்வாகம் காலங்கடந்து தற்போது அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தைத் தாம் கண்டதாகக் கூறியிருக்கிறது. அக்கடிதத்தில் உள்துறை அமைச்சகம் சில நாளிதழ்களைக் குறிப்பிட்டு, அவை “தீவிரவாதிகளையும் தேச விரோத சக்திகளையும் உயர்த்திப் பிடிக்கும் விதமான” தீவிரமான உள்ளடக்கங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவை இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வகையான பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் அளிப்பதன் மூலம் ஆதரவளித்து வருவதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு மாநில அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

“தீவிரவாதிகளையும், தேச விரோத சக்திகளையும் உயர்த்திப்பிடித்தல்” என்பதற்கான விளக்கத்தை அளிப்பதிலோ அல்லது ஒரு நாளிதழிடம் ஏன் அதற்கு விளம்பரங்கள் கொடுக்கப்படமாட்டது என்பது குறித்து விளக்கம் அளிப்பதிலோ சர்வாதிகார ஆட்சிக்கான அடையாளங்களைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கம் ஆர்வம் காட்டப் போவதில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகத்தின் கடிதம் வந்து ஒரு ஆண்டிற்குப் பின்னர் மாநில அரசாங்கம் ஏன் இம்முடிவை இந்நேரத்தில் எடுத்திருக்கிறது என்பதை, விளம்பர இருட்டடிப்பு செய்யப்பட்ட நாளைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் விளக்குகின்றன.

படிக்க:
♦ மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
♦ காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்

நாற்பது சி.ஆர்.பி.எஃப் படையினரைப் பலி கொண்ட பிப்ரவரி 14, புல்வாமா தாக்குதல் குறித்த மத்திய அரசின் கடுமையான பேச்சைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை போர் பயம் ஆட்கொண்டது. மாநில அரசாங்கம், விளம்பரங்களை நிறுத்துவதாக தெரிவித்த அதே நாளில், சுமார் 10,000 துணை இராணுவப் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு கொண்டு வரப்பட்டனர். உணவுத் துறைக்கு உணவுகளை உடனடியாக விநியோகிக்குமாறும், மருத்துவமனைகளுக்கு உடனடியாக போதுமான அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை வைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. மருத்துவர்களுக்கு விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது.

நெருங்கிவரும் தேர்தலுக்காகத்தான் கூடுதல் படையணிகள் குவிக்கப்பட்டுள்ளன என்ற நிர்வாகத்தின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் அரசு தேர்தலுக்கான தயாரிப்புக்காகத்தான் இந்த அதீத முனைப்புடன் செயல்படுகிறது எனில், முகநூல் பக்கத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் ’லைக்’-களையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருவாரியான இணைய வாசகர்களைக் கொண்டுள்ள “கிரேட்டர் காஷ்மீர்” பத்திரிகைக்கு விளம்பரங்களை ஏன் நிறுத்த வேண்டும். தேர்தல் நோக்கத்தை இது எவ்வகையில் நிறைவேற்றும்? அதுவும் இவ்விளம்பரங்களில் பெரும்பாலானவை தேர்தலுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவை எனும் போது குறிப்பாக இது எவ்வகையில் அந்நோக்கத்தை நிறைவேற்றும்? பரந்துபட்ட அளவில் விநியோகமாகும் ஒரு பத்திரிகையில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கிடைக்கப்பெறாமல் செய்வது எந்த நோக்கத்தை நிறைவேற்றக் கூடும்?

ஊடகங்களை மண்டியிடுவதை நோக்கித் தள்ளுவது

கடந்த பிப்ரவரி 28 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி என்ற சமூக – மதவாத அமைப்பு தடை செய்யபட்டத்தைத் தொடர்ந்து அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் 400 பேரை கைது செய்ததன் பின்னணியிலும் இந்த விளம்பர ரத்து நடவடிக்கையைப் பார்க்க வேண்டும். அச்சுறுத்தும் நிலைமைகள் மேலெழும் போது, காஷ்மீர் ஊடகங்கள் சத்தமின்றி முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொருட்டு ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமாகவும் இது இருக்கலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே மிகப்பெரிய ஒரு ஊடகத்தையும் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் திரள் போராட்டங்களின் போது ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட “காஷ்மீர் ரீடர்” நாளிதழையும் தனக்கு கீழ்படிந்து இருக்கச் செய்வதற்கு விளம்பரங்களை நிறுத்துவதைத் தவிர சிறந்த வழி வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் பொறியமைவாக விளம்பரங்களை பயன்படுத்துவது காஷ்மீரில் இப்போது புதிதாக நடக்கவில்லை. இதற்கு முன்னால் காங்கிரசு கட்சி மத்தியில் ஆட்சியிலிருக்கும்போது, விளம்பரங்கள் மற்றும் காட்சிப்பூர்வ விளம்பர இயக்குநரகத்தின் மூலம் ”க்ரேட்டர் காஷ்மீர்” நாளிதழுக்கு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஊடகங்களை மண்டியிடச் செய்ய வேறு வழிமுறைகளும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 2002-ம் ஆண்டுக்கும் 2008-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட – ஒப்பீட்டளவில் அமைதியான காலகட்டமாகக் கருதப்பட்ட – ஆண்டுகளில், “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழின் மீது பத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. இப்பத்திரிகையின் மீதான பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றங்கள் ரத்து செய்து விட்டன. காஷ்மீரில், முதல் தகவல் அறிக்கை என்பது ஊடக மட்டறுத்தலின் மறைமுக வடிவமாகும். உதாரணத்திற்கு, முசாஃபராபாத்தில் உள்ள ஒரு வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தி அறிக்கையை அப்படியே வெளியிட்டதற்காக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அதில் ஒன்று. இந்தியாவில் மையங்களைக் கொண்டுள்ள அந்த வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு ஒரு நோட்டீசு கூட அனுப்பவில்லை.

படிக்க:
♦ ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்
♦ ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை

விளம்பரங்களின் மூலம் போடப்படும் இந்த வாய்ப்பூட்டு, பெரும் கடினமான சூழலையும் எதிர்கொண்டு காஷ்மீரில் வளர்ந்த ஒரு உறுதியான நிறுவனத்தை சீர்குலைப்பதற்காகவா? கொந்தளிப்பான 1990-களின் தொடக்கக் காலகட்டத்தில் “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழ், முதலில் ஒரு வார இதழாகத் தொடங்கப்பட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல் ஆங்கில நாளிதழாக வெளிவந்து நூற்றுக்கணக்கான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கொடுக்கும் ஒரு ஊடக நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

“கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழின் நிதி ஆதாரங்களில் மத்திய அரசு தாக்குதல் தொடுத்திருப்பது, காஷ்மீரின் ஒவ்வொரு நிறுவனத்தையும் “தேச விரோதமானதாகக்” கருதும் மத்திய அரசின் கொள்கையோடு தொடர்புடையதாகும்.  இச்செய்தித்தாளுக்கு இந்தியாவின் அரசியலில் அடைக்கலம் புகுந்துள்ள பல எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஒரு வலதுசாரிக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கத்தில் ஒரு முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல், “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழுக்கு இயல்பிலேயே வகுப்புவாத நோக்கம் இருப்பதாகப் பேசினார்.

முசுலீம்கள் அடித்துக் கொல்லப்படுவதைக் கண்டு மவுனமாக இருப்பதற்காகவும், பெரும்பான்மைவாத அரசியலை ஆதரிப்பதற்காகவும் விமர்சிக்கப்படும் ஒரு அரசாங்கம், பெரிய செய்தித்தாள் ஒன்றிற்கு விளம்பரங்களை நிறுத்துவது குறித்து ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால் இது காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிற்கு பாடங்களை வழங்கியுள்ளது. அவர்கள் ஊடகங்களைக் கையாண்ட விதமே பரவாயில்லை என்ற கருத்து, பாஜக மாதிரியான ஒரு கட்சி, பத்திரிகைகளை ஆக்ரோஷமாக ஒடுக்குவதன் மூலம் மட்டும்தான் ஏற்பட முடியும்.


கட்டுரையாளர்: ஹிலால் மிர்
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : ஸ்க்ரோல் இணையதளம்

பல்கேரியா : ஓர் அறிமுகம் ! | கலையரசன்

1

கலையரசன்
“உல‌கில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இனப் பிர‌ச்சினை இருப்ப‌தாக‌” நினைத்துக் கொண்டிருக்கும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளை ப‌ல்கேரியாவுக்கு கூட்டிச் சென்று காட்ட‌ வேண்டும்.

இங்கும் அதே இன‌ப்பிர‌ச்சினை. மொழி ம‌ட்டும்தான் வேறு. ம‌ற்ற ப‌டி அர‌சியல் ஒன்று தான். அர‌சிய‌ல்வாதிக‌ளின் பேச்சுக‌ளும் கேட்டால் ஒரே மாதிரித் தான் இருக்கும்.

இல‌ங்கையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர் – த‌மிழர் பிர‌ச்சினையை விட‌ ப‌ல்கேரிய‌ இன‌ப் பிர‌ச்சினை இன்னும் மோச‌மான‌து என‌லாம். அய‌ல் நாடுக‌ளும் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டிருப்ப‌தால் சிக்க‌லான‌து.

சுருங்க‌க் கூறின் : பெரும்பான்மை ப‌ல்கேரிய‌ர்க‌ளுக்கும், சிறுபான்மை துருக்கிய‌ருக்கும் இடையிலான பிர‌ச்சினை. இல‌ங்கையில் சிங்க‌ள‌வர் போன்று ப‌ல்கேரிய‌ர்க‌ளும் த‌மிழ‌ர் போன்று துருக்கிய‌ரும் ஒரே மாதிரியான‌ அர‌சிய‌ல் க‌தையாட‌ல்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர்.

துருக்கிய‌ர்க‌ள், ப‌ல்கேரிய‌ பேரின‌வாத‌ ஒடுக்குமுறை ப‌ற்றி பேசுவார்க‌ள். அதே நேர‌ம், ப‌ல்கேரிய‌ர்க‌ள் துருக்கியின் பிராந்திய‌ வல்ல‌ர‌சு ஆக்கிர‌மிப்பு ப‌ற்றி பேசுவார்க‌ள்.

அதை விட‌ இருப‌தாம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ள், இன‌ச் சுத்திக‌ரிப்புக‌ள் ப‌ற்றி இன்றும் நினைவுகூருகிறார்க‌ள். அத‌ற்காக‌ நீதி கோரி ஜெனீவாவில் முறையிடுகிறார்க‌ள்.

இன்றைகும் இன‌ முர‌ண்பாடுக‌ளின் விளைநில‌மான‌ பால்க‌ன் பிராந்திய‌த்திற்கு உங்க‌ளை வ‌ர‌வேற்கிறோம்!

இன‌ப் பிர‌ச்சினை ப‌ற்றி தெரிந்து கொள்வோமா? நான் இன்னும் சொல்லத் தொட‌ங்க‌வேயில்லை… எங்கே த‌லை தெறிக்க‌ ஓடுகிறீர்க‌ள்?

பல்கேரியா தலைநகர், சோபியா நகர மத்தியில் அமைந்துள்ள மசூதி, ஐநூறு வருட காலப் பழமையானது. இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சோபியாவில் வாழும் துருக்கி – இஸ்லாமிய சிறுபான்மையினர் மட்டுமல்லாது, அகதிகள், மாணவர்களும் அங்கு தினசரி தொழுகைக்காக வருகின்றனர்.

சுமார் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக, பல்கேரியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் இலட்சக் கணக்கான பல்கேரியர்கள் இஸ்லாமியராக மதம் மாறி இருந்தனர்.

ஓட்டோமான் ஆட்சியில் கிடைத்த சலுகைகளும், குறிப்பாக அரச பதவிகள் இஸ்லாமியருக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டமையும் மத மாற்றத்திற்கு ஒரு காரணம். அதனால், பெரும்பாலானவர்கள் துருக்கி மொழியை தாய்மொழியாக பேசி துருக்கியராக மாறி விட்டனர்.

இதைவிட “போமாக்” எனப்படும், பல்கேரிய மொழி பேசும் முஸ்லிம்களும் அங்கே வாழ்கிறார்கள். ஆனால் அந்த சமூகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தொலைதூர மலைப் பிரதேசங்களில் வாழும் அந்த சமூகம், உலகில் அழிந்து வரும் சிறுபான்மை இனங்களில் ஒன்று.

துருக்கி எல்லையோரம் இருக்கும் தெற்குப் பகுதியில் துருக்கியரின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இப்போதும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாகவும், பல்கேரிய மொழி பேசி கடையில் ஒரு பொருள் கூட வாங்க முடியாது என்று பல்கேரிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கும் என்ற மாதிரி, பல்கேரிய இனப்பிரச்சினைக்கும், இலங்கை இனப்பிரச்சினைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு நாடுகளிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதற்குக் காரணம், தேசியவாத அரசியல் சமூகங்களும், அது தொடர்பான தீர்க்கப் படாத பிரச்சினைகளும் தான். துருக்கி சிறுபான்மையினர் தனிநாடு பிரித்து தரச் சொல்லிக் கேட்பதாகவும், அதை துருக்கி ஊக்குவிப்பதாகவும் பல்கேரியர்கள் கூறுகின்றனர்.

பல்கேரிய பெரும்பான்மை இனத்தவரின் வாதம் இப்படி இருக்கிறது. தமது நாட்டில் உள்ள துருக்கியர்கள், இனத்தால் பல்கேரியர்கள் என்றும், துருக்கி மொழி பேசுவதால் வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் துருக்கி சிறுபான்மையினரின் வாதம் அதற்கு நேர் எதிரானது. பல்கேரியர்கள் பூர்வீகத்தில் துருக்கியரே என்றும், ஸ்லாவிய மொழி பேசுவதால் தம்மை வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

இரண்டு தரப்பினரும் சொல்லும் வாதங்களிலும், ஓரளவு உண்மையும் இருக்கிறது. அதே நேரம் மிகைப் படுத்தல்களும் உள்ளன. பண்டைய கால அரசியல் இன்றுள்ளதை விட மிகவும் மாறுபாடானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசியவாதம் அறிமுகமானது. அன்றிலிருந்து எல்லோரும் தேசியக் கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எண்பதுகளில் பல்கேரிய அரசியல் போக்கும் மாறிக் கொண்டிருந்தது. பூகோள அரசியல் மாற்றங்கள் காரணமாக, அந்நாட்டிலும் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினை தலைதூக்கியது. அயல்நாடான துருக்கி நேட்டோ உறுப்பினராக இருந்த படியால், பல்கேரியாவில் இருந்த துருக்கி சிறுபான்மையினர் நசுக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும் என கோரப் பட்டனர். பல்கேரிய மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் துருக்கிக்கு செல்லலாம் என அறிவிக்கப் பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் அகதிகளாக வெளியேறி துருக்கிக்கு சென்றனர்.

*****

நாஸி ஜெர்மனியில் நடந்த பாராளுமன்ற எரிப்பு வழக்கில் துணிச்சலாக தனது தரப்பு வாதங்களை முன்வைத்து விடுதலையாகி உலகப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் டிமிட்ரேவ் ஒரு பல்கேரியா நாட்டுக்காரர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் சோஷலிச பல்கேரியாவின் முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். பல்கேரியாவில் அவரது காலம் பொற்காலம் என்று கூறலாம்.

பிரபலமான பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ், சோஷலிச பல்கேரியாவில் 1949 -ம் ஆண்டு காலமானார். மொஸ்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் இந்த சமாதி கட்டப் பட்டு, டிமித்ரோவின் பூதவுடல் அங்கு வைக்கப் பட்டிருந்தது.

பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ்

பல்கேரியா முதலாளித்துவ- ஜனநாயக நாடான பின்னர், டிமித்ரோவின் பூதவுடல் அகற்றப் பட்டு எரிக்கப்பட்டது. 1999 -ம் ஆண்டு, வலதுசாரிக் கட்சி ஆட்சியில் இந்த சமாதியையும் இடித்து விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் கூட எதிர்ப்பு இருந்தது.

ஒரு கருத்துக் கணிப்பில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமாதி இடிக்கப்படுவதை விரும்பவில்லை. இருப்பினும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், டிமிட்ரோவ் நினைவாலயம் நான்கு தடவைகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் அப்படி ஒரு கட்டிடம் இருந்தமைக்கான எந்த சுவடும் இல்லை.

ப‌ல்கேரிய‌ த‌லைநகர் சோபியாவில் முன்பிருந்த‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சிலைக‌ளை எல்லாம் அக‌ற்றி விட்டார்க‌ள். அவ‌ற்றில் சில‌வ‌ற்றை ஓரிட‌த்தில் வைத்து மியூசிய‌ம் ஆக்கி விட்டார்க‌ள்.

அத‌ற்கு அருகில் Socialist art museum என்ற‌ பெய‌ரில் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஓவிய‌ங்க‌ளை காட்சிக்கு வைத்திருக்கிறார்க‌ள். அந்த‌ ஓவிய‌ங்க‌ள் 1989-ம் ஆண்டு முத‌லாளித்துவ‌த்திற்கு திரும்பிய‌தை கொண்டாடுகின்ற‌ன. அந்த‌ வருட‌த்திற்கு முந்திய‌ வ‌ர‌லாற்றை அழித்து விட‌ விரும்புகிறார்க‌ளாம்.

*****

லைநகர் சோபியாவில் இருந்து வடக்கு நோக்கி சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் Montana என்ற நகரம் உள்ளது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளும் கொண்ட அழகிய நகரம். இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அங்கு பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அழகிய மோண்டனா நகரம்

அங்கு ஒரு ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ரின் விருந்தாளியாக‌ த‌ங்கி இருந்தேன். அந்த‌ ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ருக்கு ஆங்கில‌ம் ஒரு சொல் கூட‌ தெரியாது. இந்த தொட‌ர்பாட‌ல் பிர‌ச்சினை ப‌ற்றி சோபியாவில் இருந்து என்னை அங்கு அனுப்பி வைத்த‌ ந‌ண்ப‌ரும் முன்கூட்டியே அறிவித்து இருந்தார். மொழிப் பிர‌ச்சினையை தீர்ப்ப‌த‌ற்கு என்ன‌ செய்ய‌லாம் என்று என்னைப் போல் அவ‌ரும் யோசித்திருப்பார். என்னை அழைத்துச் செல்ல‌ வ‌ந்த‌ நேர‌ம் “பிரெஞ்சு தெரியுமா?” என்று கேட்டார். ந‌ல்ல‌வேளையாக‌ என‌க்கும் பிரெஞ்சு தெரிந்த‌ ப‌டியால், இருவ‌ரும் பிரெஞ்சில் உரையாடினோம்.

இங்கே முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப் பட வேண்டிய‌ விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. ப‌ல்கேரியா சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் ஆங்கில‌ம் இர‌ண்டாம் மொழியாக‌ க‌ற்பிக்க‌ப் ப‌ட‌வில்லை. அத‌ற்குப் ப‌திலாக‌ ர‌ஷ்ய‌ன் க‌ற்பித்தார்க‌ள். 90-க‌ளுக்கு பிற‌கு தான் அதை நிறுத்தி விட்டு ஆங்கில‌த்திற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள்.

தொண்ணூறுக‌ளுக்கு முன்ன‌ர், ர‌ஷ்ய‌ன் இர‌ண்டாம் மொழியாக‌ இருந்தாலும், பாட‌சாலைக‌ளில் இன்னொரு அந்நிய‌ மொழியும் க‌ற்பித்த‌ன‌ர். அது மாண‌வ‌ர்க‌ளின் சுய‌ தெரிவாக‌ இருந்த‌து. மூன்றாம் மொழியாக‌ ஆங்கில‌ம், பிரெஞ்சு, ஜெர்ம‌ன், ஸ்பானிஷ் ஆகிய‌ மொழிக‌ளை க‌ற்ற‌ன‌ர். இதே த‌க‌வ‌லை முன்னாள் சோஷ‌லிச‌ நாடுக‌ளில் வாழ்ந்த‌ ப‌ல‌ர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அவ்வாறுதான் என‌து ப‌ல்கேரிய‌ நண்ப‌ருக்கு பிரெஞ்சு பேச‌த் தெரிந்திருக்கிற‌து. ஓய்வு பெறும் வ‌ய‌திலும் அவ‌ர் பிரெஞ்சை ம‌ற‌க்க‌வில்லை. என‌க்கும் ச‌ர‌ள‌மாக‌ பிரெஞ்சு தெரியாது. கொஞ்ச‌ம்தான் தெரியும். ஆனால், அடிப்ப‌டை விட‌யங்க‌ள் ப‌ற்றிய‌ தொட‌ர்பாட‌லுக்கு தேவையான‌ அள‌வு பிரெஞ்சு தெரிந்தால் போதும்.

விராட்சா நகரில் ஒரு பெரிய அர‌ச‌ அச்ச‌க‌ம் இருந்த‌து. பல்வேறு வகையான அரச வெளியீடுகளை அங்கு தான் அச்சடித்தார்கள். 1990 -ம் ஆண்டு வரையில், சுமார் 300 தொழிலாள‌ர்க‌ள் அங்கு வேலை செய்த‌ன‌ர். தொண்ணூறுக‌ளில் “ஜ‌ன‌நாயக‌ம்” வ‌ந்த‌ பின்ன‌ர் உற்ப‌த்தியை நிறுத்தி விட்டார்க‌ள். விலை உய‌ர்ந்த‌ அச்சு இய‌ந்திர‌ங்க‌ளை, இந்திய‌ நிறுவன‌ம் ஒன்றுக்கு அடி மாட்டு விலைக்கு விற்று விட்ட‌னர். தொன்(டன்) க‌ண‌க்கிலான‌ கட‌தாசிக‌ளை வீசி விட்ட‌ன‌ர். அங்கு வேலை செய்த‌வ‌ர்க‌ள் வேலையில்லாம‌ல் ந‌டுத் தெருவில் விட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அந்த‌ தொழில‌க‌த்தை நான் நேரில் சென்று பார்த்தேன். பாழடைந்த‌ க‌ட்டிட‌மாக‌, உள்ளே ஒன்றும் இல்லாம‌ல் வெறுமையாக‌ இருந்த‌து. ஜ‌ன்னல் க‌ண்ணாடிக‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு, த‌ரையெங்கும் க‌ண்ணாடித் துண்டுக‌ள் சித‌றிக் கிட‌ந்த‌ன‌. நொறுங்கிய‌ க‌ண்ணாடித் துண்டுக‌ள் போன்ற‌து தான், அந்த‌ ந‌க‌ர‌த்தில் வாழும் பெரும்பாலான தொழிலாள‌ர்க‌ளின் நிலைமையும். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி க‌வலைப்ப‌ட‌ யாருமில்லை.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !

இலங்கையைப் போதைக் கடத்தலின் மையமாகவும், ஊழல் தேசமாகவும் ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர்.

(இலங்கை) புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் தெரிவிப்பு :

“நாட்டின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகள் என்றுமில்லாதவாறு மோசமடைந்துவருகின்றன. உழைக்கும் மக்கள் அனைவர் மீதும் உழைப்புச் சுரண்டலும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளும் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்கின்றன.

உயர்வர்க்க மேட்டுக்குடியினரும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளான ஆட்சி அதிகார ஆளும் வர்க்கத்தினரும் அதியுயர் சம்பளங்கள், தரகு, ஊழல் மற்றும் குறுக்கு வழிகள் போன்றவை மூலம் சொத்து சேர்த்து வருகிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் துணையுடன் நாட்டின் வளங்கள் அந்நிய, உள்நாட்டு கொம்பனிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.” என புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் அவர்கள் அக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அண்மைய அரசியல் போக்குத் தொடர்பாக வெளியிட்டுள்ள கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில், “உழைக்கும் மக்களின் உழைப்பு கோரமாகச் சுரண்டப்படுகிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மறுக்கப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைக் கோரிய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளந்த சம்பளத்தில் வெறும் இருபது ரூபா மட்டுமே பிச்சை பணம் போன்று வழங்கப்பட்டமையை கூறலாம். இதில் முதலாளிமார் சம்மேளனமும் அரசாங்கமும் ஒன்றாக நின்றனர். பிரதமர் முன்னிலையில் அலரி மாளிகையில் இருபது ரூபாவிற்கு முதலாளிமார்களும் காட்டிக் கொடுப்புத் தொழிற்சங்கங்களும் கைச்சாத்திட்டனர். இதனை முழுநாடும் அனைத்து உழைக்கும் மக்களும் கண்டனர். இதனூடாக வர்க்க வேறுபாட்டின் ஆழமும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வான நிலையும் அப்பட்டமாக வெளிப்பட்டது. இது இலங்கையின் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் ஆளும் சொத்துடைய வர்க்கத்திற்குமிடையிலான அடிப்படையான முரண்பாட்டிற்கு ஒரு சோற்றுப் பதமாகும்.

படிக்க:
♦ இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

இத்தகைய அடிப்படை முரண்பாட்டின் வழியாகவே, பொருளாதார நெருக்கடிகளும் வரிச் சுமைகளும் 5,300 கோடி அமெரிக்க டொலர்கள் அந்நியக் கடனும் மக்களின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் மீதான அதிகரித்த வரிகளே அவற்றின் தொடர்ச்சியான விலையுயர்வுக்குக் காரணமாகும். இதனால் வாழ்க்கைச்செலவு அதிகரித்தும் வாழ்க்கைத் தரம் கீழிறங்கியும் செல்கிறது. வறுமையும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரின் தொகையும் அதிகரித்துச் செல்கின்றன. வேலைவாய்ப்பின்மை வளர்ந்து செல்கிறது. விவசாயமும் சிறு தொழில்களும் அழிவடைந்துள்ளன.

சேவைத்துறையினைக் காட்டி இலங்கையை மத்தியதர வாழ்க்கையுடைய நாடாக மாற்றப் போவதாக ரணில் விக்கிரமசிங்க பிரகடனம் செய்து நான்கு வருடங்களாகிவிட்டது. பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூவியவரும் அவரே. அதேபோன்று, ஊழலை ஒழிப்போம் என்று கூறியவர்களே பெரும் ஊழலுக்குத் துணை போனார்கள். முன்னைய பெரும் ஊழல் வாதிகளைத் தண்டிப்பதற்கு பதிலாகப் பாதுகாத்தும் கொண்டனர். இன்று இலங்கை ஊழல் தேசமாகி நிற்பதையே காண முடிகிறது.

நாளாந்தம் போதைப் பொருட்களின் கடத்தலும் விற்பனையும் அதிகரித்து செல்கிறது. போதைப் பொருள் பாவனை பாராளுமன்றத்திற்கு உள்ளும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள்ளும் சென்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் எதிர்த்தரப்பில் இருப்போரும் இருந்து வருகிறார்கள்.

ராஜபக்சே, சிரிசேனா, விக்கிரமசிங்கே

இந்நிலையிலே நாடு இவ்வாண்டு மூன்று முக்கிய தேர்தல்களைச் சந்திக்கிறது. நாட்டின் தெற்கு அரசியலில் அடுத்த ஆட்சி அதிகாரத்திற்கு யார் வருவது என்பதில் மூன்று தரப்புக்களாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான பெரு முதலாளிய பேரினவாத கட்சிகளிடையே கடுமையான போட்டி இடம்பெற்று வருகிறது. ஆனால் இவர்களில் எத்தரப்பும் நாட்டின் அடிப்படை பிரச்சனையான பொருளாதார நெருக்கடிப் பிரச்சனையில் ஏகப் பெருபான்மையான உழைக்கும் மக்களுக்குச் சார்பான கொள்கை நிலைப்பாடு உடையவர்களல்லர். அதேபோன்று நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு நியாயமான தீர்வைக் கொண்டு வருவதற்குச் சாதகமானவர்களும் அல்லர். இவர்கள் அனைவருமே முப்பது வருட கொடிய போரினை நடத்தியவர்கள் என்பது மறக்கப்படமுடியாததாகும்.

அதேபோன்று கடந்த நாற்பது வருட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நாசகாரம் கொண்ட தாராளமயம் தனியார்மயம் பூகோளமயமாதல் என்பவற்றையும் அதன் தொடர்ச்சியான நவதாராள பொருளாதாரத்தையும் எக் கேள்வி நியாயங்களுக்கு அப்பால் நடைமுறைப்படுத்தி அந்நிய ஏகாதிபத்திய – பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஆதரவும் அரவணைப்பும் கொடுத்தவர்களும் இதே ஆட்சி அதிகார வெறிபிடித்து நிற்பவர்களேயாவர். அதே போன்று தேசிய இனப்பிரச்சினையை போர் வரை வளர்த்துச் சென்ற இனவாதத் தலைமைகளும் இத்தகைய தரப்புக்களேயாவர். அவர்களில் எத்தரப்பு அதிகாரத்திற்கு வந்தாலும் மேலே சுட்டிக் காட்டிய எந்தவொரு பிரச்சினைகளுக்கும் மக்கள் சார்பான தீர்வுகள் ஏற்படப் போவதில்லை.

அதேபோன்று வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று தத்தமது ஆதிக்க அரசியலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளக் குறுந்தேசியவாத நிலைப்பாட்டையும் இனமத அடையாள அரசியலையும் முன்தள்ளி மக்களிடையே வாக்கு வேட்டை நடாத்த தயாராகி வருகிறார்கள். வழிவழி வந்த மேட்டுக்குடி உயர்வர்க்க உயர்சாதியத் தலைமையை நிலை நிறுத்துவதில் ஆதிக்க அரசியல் தலைமைகள் மிக கவனமாக இருந்து வருகின்றன. தங்களுக்குள் மாற்றம் வேண்டிப் போட்டி போடுகிறார்களே தவிர உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் எவரும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதுடன், தமது சாதிய சமூகச் சிந்தனை வழியாக மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் தலைமை தொடர்வதையே குறுந்தேசியவாத தமிழ் தலைமைகள் தமது உள்ளார்ந்த நிலைப்பாடாகக் கொண்டுள்ளன.

இச்சூழலில் உழைக்கும் மக்கள் அனைவரும் சரியானதும் தூரநோக்கிலுமான அரசியல் சிந்தனையை அறிவுபூர்வமாகவும் நடைமுறை வாயிலாகவும் விளங்கித் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் தெளிவான நிலைப்பாட்டிற்கு வருவது அவசியமாகும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகின்றது.

ஏற்கனவே இருந்துவருகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தை  எதிர்த்துவந்த மக்களை, அதைக் கைவிடுவதாகக் கூறி ஏமாற்றியவாறு, அச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனும் முன்னிலும் கொடுமையான அடக்குமுறைச் சட்டத்தை அரசு கொண்டுவர முனைகிறது. அதனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஆரம்பம் முதலே வலுவாக எதிர்த்து வந்ததுபோன்று எமது கட்சி மிக வன்மையாகக் கண்டித்து எதிர்க்கின்றது.

படிக்க:
♦ வீழ்ந்த விமானம் – விடாத உறுதி ! உண்மை மனிதனின் கதை 2
♦ யார் இந்த அருந்ததிராய் ?

தமது பாரம்பரிய நிலங்கள், வீடுகள், தொழிலிடங்களை மீட்பதற்காக இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தையும் அதே போன்று காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு தொடர்ச்சியாக நடந்துவரும் மக்கள் போராட்டங்களையும் எமது கட்சி ஆதரித்து வந்திருக்கிறது. அதேபோன்று அண்மையில் மன்னார் சிலாவத்துறையில் தமது நிலங்களை படையினரிடமிருந்து மீட்பதற்காக ஆரம்பித்திருக்கின்ற மக்கள் போராட்டங்களையும் நாம் ஆதரித்து நிற்கின்றோம்.

புத்தளத்தின் அருவக்காட்டில் பாரிய அளவில் குப்பையை கொண்டுவந்து கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து தமது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக நூறு நாட்களுக்கு மேல் போராடிவரும் புத்தளம் மக்களின் போராட்டத்தை எமது கட்சி ஆதரித்தும் அதில் பங்குகொண்டும் வந்திருக்கிறது. தொடர்ந்தும் அப்போராட்டத்துடனும் புத்தளம் மக்களோடும் கட்சி தன்னை இணைத்து நிற்கிறது.

புத்தளத்தைக் காப்போம் – இலங்கையில் தொடரும் போராட்டங்கள் !

புதியதோர் கொள்கை வகுத்து அதனை உழைப்போரிடையே கொண்டு செல்ல வேண்டும். ஆண்ட பரம்பரையினரினதும் ஆதிக்க அரசியல் தலைமைகளினதும் பிற்போக்குத்தனங்களையும் அந்நிய சக்திகளை அடிமைத்தனமாக நம்பி மக்களை ஏமாற்றுவதையும் அம்பலபடுத்துவது இன்றைய தேவையாகும். உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் வெகுஜன மார்க்கத்தில் மக்களை அணிதிரட்டுதல் வேண்டும். அத்தகைய அணிதிரள்வு எத்தகைய அந்நிய சக்திகளுக்கும் புலம்பெயர்ந்த, தமிழ்க் குறுந்தேசியவாத மேட்டுக்குடித் தலைமைகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் விலை போகாத வெகுஜனப் போராட்டங்களை ஐக்கியப்பட்ட கூட்டுத்தலைமையின் ஊடே முன்னெடுக்க வேண்டும்.அதற்கான பரந்துபட்டதும் உறுதியானதுமான ஐக்கிய முன்னணி கட்டப்பட வேண்டும். அத்தகைய வெகுஜனப் போராட்ட மார்க்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தேர்தல்களம் அமைய வேண்டும். மாறாக, தேர்தல் வெற்றிக்காக மக்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லக் கூடிய சந்தர்ப்பவாதக் கொள்கை கொண்டிராது, உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்த மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க வைப்பதற்கு, நேர்மையான உழைக்கும் மக்களுக்கான சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதற்கான அர்ப்பணிப்புடன் செயலாற்ற எமது கட்சி முன்னிற்கிறது.

தனது கொள்கை வேலைத்திட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கும் அதேவேளை, ஏனைய இடதுசாரி, முற்போக்கு, சனநாயக அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்செல்வதை எமது கட்சி வலியுறுத்தி நிற்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் : புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சி

புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார்?

2

ந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் சூழலில் நாட்டு மக்கள் பதைபதைப்புடன் இருந்த சமயத்தில், பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்?  புல்வாமா தாக்குதல் நடந்த பின், சில மணிநேரங்கள் வரை படப்பிடிப்பில் இருந்தார்.  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தியா உளவுத்துறை பலவீனத்தின் காரணமாக, 40 சி.பி.ஆர்.எஃப் வீரர்களை பலிகொண்டது.  அதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் நடத்தப்பட்ட பாலகோட் பகுதி மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை கொன்றதாகக் கூறிக்கொண்டது. பின்னால், அதுவும் பொய்யென நிரூபணமானது. ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தானிடையே போர் மூளும் சூழல் உருவானது, அரசு அத்தகைய சூழலை உருவாக்கியது.

பாஜகவின் ஊதுகுழல் ஊடகங்கள் நடக்காதவற்றை ஊதிப் பெரிதாக்கி, போரை விரும்பாத மக்களை போருக்கு தயார்படுத்தின. இந்தியா கூறிக்கொண்டவற்றை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், பிரதமரோ அல்லது தொடர்புடைய அமைச்சர்களோ எதுவும் பேசவில்லை.

இந்த இரண்டு வாரங்களிலும் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்….

பிப்ரவரி 14:

தேசிய பாதுக்காப்பு சூழல்: புல்வாமா மாவட்டம் லெத்போரா அருகே மாலை 3.15 மணியளவில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில்  மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் ஆவணப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தார் மோடி.  உள்ளூர் பத்திரிகைகளின்படி அவர் தேசிய பூங்காவில் 6.40 மணி வரை, அதாவது புல்வாமா தாக்குதல் நடந்து 3 மணி நேரத்துக்குப் பிறகும் அங்கேயே இருந்திருக்கிறார்.

பிப்ரவர் 15:

தேசிய பாதுகாப்பு சூழல்: தாக்குதலுக்கு அடுத்த நாள், வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய புலனாய்வு முகமையுடன் புல்வாமா சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கும் ஜெய்ஸ் இ முகமது அமைப்புக்கும் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.

மிகவும் ஆதரவான நாடுகள் என்ற பட்டியலிலிருந்தும் பாகிஸ்தானை நீக்கியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  ‘சி.பி.ஆர்.எஃப். வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது’ என உத்தரபிரதேசத்தின் ஜான்சியிலிருந்து இந்தத் தாக்குதல் குறித்து மோடி முதல் கருத்தை உதிர்த்தார்.

மேலும், ஜான்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசினார்.

வந்தே பாரத் என்ற ரயிலை கொடியசைத்தும் தொடங்கி வைத்தார். அன்றைய நாள் மாலையில் பிரதமர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். புது டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக சென்றார் மோடி.

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

பிப்ரவரி 16:

தேசிய பாதுகாப்பு சூழல்: டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பாதுகாப்புப் படைகளுடன் உறுதுணையாக நிற்பது என அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இந்திய விமானப்படை தலைவர், இந்தியா தேவையான பதிலடிக்கு தயாராகிவருவதாக சொன்னார்.

உலகத்தினரின் ஆதரவை இந்தியா பெறத் துவங்கியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்குள்ள தற்காப்பு உரிமையை ஆதரித்தார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரி மாணவர்களை குறிவைத்து இந்துத்துவ காவிகள் வன்முறையை கட்டவிழ்த்தனர். ஜம்முவில் நடந்த கலவரம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200% வரியை உயர்த்தியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  படையினருக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்க கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்தார் பிரதமர்.

துலே என்ற இடத்தில் நீர்ப்பாசன திட்டம் ஒன்றை தொடங்கி வைத்ததோடு, ஜல்கான் உதானா ரயில் திட்டத்தையும், ஒரு ரயிலையும் தொடங்கிவைத்தார் மோடி. இரண்டு ரயில் பாதைகளுக்கான அடிக்கல் நட்டு விட்டு, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

 

பிப்ரவரி 17:

தேசிய பாதுகாப்பு சூழல்:  ஞாயிற்றுக்கிழமை ஐந்து பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. நான்கு மாணவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து,  காஷ்மீரி மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டிருந்தது.

பாலிவுட்டின் சினிமா தொழிலாளர் அமைப்பு, பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்திய படங்களில் பணிபுரிய தடை விதிப்பதாக அறிவித்தது.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: பிரதமர் ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்றார். ராஞ்சியில் அயூஷ்மான பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட பயனாளிகளுடன் உரையாடினார்.

ஹசாரிபாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த அவர், பரவுனியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிப்ரவரி 18:

தேசிய பாதுகாப்பு சூழல்:  புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்ததாக சொல்லப்பட்ட அப்துல் ரசீது காசி உள்ளிட்ட ஐவர் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது ராணுவ மேஜர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் மவுரிசியோ மார்சியுடன் அன்றைய பொழுதை கழித்தார் மோடி. இவர்கள் இருவரும் பல்வேறு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.

கலாச்சார இணக்கத்துக்கான தாகூர் விருதை அளித்தார் பிரதமர் மோடி.

அதோடு, சிவ சேனா – பாஜக கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டதை குதூகலத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் மோடி.

 

பிப்ரவரி 19:

தேசிய பாதுகாப்பு சூழல்: ‘100 மணி நேரத்துக்குள்’ ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைமையை காஷ்மீரில் அழித்ததாக இந்திய ராணுவம் சொன்னது.

இந்தியா இராணுவ தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இருமுறை சிந்திக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது முதல் கருத்தை சொன்னார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  வாரணாசியில் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் மருத்துவமனையையும் தொடங்கி வைத்தார்.

புது டெல்லிக்கு திரும்பிய அவர், பாதுகாப்பு முறைகளையும் மீறி சவுதி பட்டத்து இளவரசரை வரவேற்க நேரில் சென்றார்.  இருமுறை கட்டித்தழுவி உற்சாக வரவேற்பு கொடுத்தார்.

பிப்ரவரி 20:

தேசிய பாதுகாப்பு சூழல்: புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐநாவின் மனித உரிமைகளுக்கான தலைவர்  உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டனர்.

ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தானியர் ஒருவர் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடக்கவில்லை என அதிகாரிகள் சொன்னபோதும், தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சவுதியின் பட்டத்து இளவரசருடன் அந்த நாளைக் கழித்தார் பிரதமர். இருவரும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

பின்னர், மோடி தென் கொரியாவுக்கு பயணமானார்.

பிப்ரவரி 21-22:

தேசிய பாதுகாப்பு சூழல்: நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசு பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். தற்போதைய முடிவு மட்டுமல்லாது, முந்தைய முடிவுகளை மறுபரிசீலனை செய்வது என பாஜக தலைவரின் கூற்று தெளிவாக்கியது.

ஏதேனும் ஆக்கிரமிப்பு அல்லது மீறல் முயற்சிகள் நடந்தால் தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இராணுவத்துக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பதாக இம்ரான் கான் வெளிப்படையாக தெரிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சியோல் சென்ற மோடி இந்திய சமூகத்தினரிடையே பேசினார். யோன்சேய் பல்கலைக்கழகத்தில் காந்தியின் உருவச் சிலையை தொடங்கி வைத்தார். இந்திய-தென்கொரிய வர்த்தக அமைப்பினரிடையே உரையாற்றினார்.

 

பிப்ரவரி 23:

தேசிய பாதுகாப்பு சூழல்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பிரிவினைவாத தலைவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பரவின.

இந்தியா பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் எழுதியது.

’இந்திய-பாகிஸ்தான் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய உலக வர்த்தகர்கள் மாநாட்டில் மோடி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடந்த பாஜக தேர்தல் பேரணியில் பேசினார். இங்கே, இறுதியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட காஷ்மீரி மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தனது கள்ள மவுனத்தை உடைத்தார். நாம் காஷ்மீருக்காக போராட வேண்டுமே தவிர, காஷ்மீரையோ காஷ்மீரிகளையோ எதிர்த்து அல்ல என்றார் மோடி.

பிப்ரவரி 24:

தேசிய பாதுகாப்பு சூழல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘அமைதிக்கான வாய்ப்பைக் கொடுங்கள்’ என மோடியிடம் கேட்கிறார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமரின் கிஷான் திட்டத்தை தொடங்கிவைத்தார். பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் நீராடி, சுவச் கும்ப் என்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அதோடு, மிகப் பெரும் அளவிலான டிஜிட்டல் அளவளாவலுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்த மோடி, தேர்தல் பரப்புரை வாசகம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.

பிப்ரவரி 25:

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: அன்றைய தினம் இருவேறு நிகழ்ச்சிகளில் மோடி உரையாற்றினார். ஒன்று ரைசிங் இந்தியா சம்மிட். மற்றொன்று தேசிய போர் நினைவேந்தல் நிகழ்ச்சி. இரண்டிலும் தொடர்பே இல்லாதவகையில் காங்கிரசை தாக்கி பேசியது சர்ச்சைகளை கிளப்பியது.

நியூஸ் 18 நடத்திய ரைசிங் இந்தியா சம்மிட்-ல் பேசிய மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

பிப்ரவரி 26:

தேசிய பாதுகாப்பு சூழல்:  எல்லையை மீறி நடத்தப்பட்ட பாலகோட் விமான தாக்குதல் இந்தியாவுக்குள்ளும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயும் பதட்டத்தை உண்டாக்கியது.  வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, இந்திய விமானப்படை தாக்குதலை உறுதி செய்தார். ‘ஜெய் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பெரிய அளவிலான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த கமாண்டர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடுகள் போர்நிறுத்த மீறல்களும் நடக்கத் தொடங்கின.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் மோடி பேசினார். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் முழக்கத்தைக் கொண்ட கவிதை ஒன்றை மேற்கோளிட்டு அவர் பேசினார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசை பல்வேறு முறை தாக்கிப் பேசினார்.

அன்றை தினம் டெல்லியில் இஸ்கான் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் உலகின் மிகப் பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார்.  டெல்லி மெட்ரோவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

பிப்ரவரி 27:

தேசிய பாதுகாப்பு சூழல்: புதன்கிழமை பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்திய வான்வெளிக்குள் வந்து, திறந்தவெளியில் தாக்குதலை நடத்தியது. ஒரு வான்வழி சண்டையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் சிக்கினார்.

பிரதரின் நிகழ்ச்சி நிரல்:  தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் கலந்துகொண்டு மோடி பேசினார். பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துரையாடினார்.

பிப்ரவரி 28:

தேசிய பாதுகாப்பு சூழல்:  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானப் படை பைலர் அமைதி நடவடிக்கையாக விடுவிக்கப்படுவார் என அறிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: டெல்லியில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துக்கான சாந்தி ஸ்வரூப் பாத்நகர் விருதுகளை அளித்தார். அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான்கான அறிவிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானுடனான தற்போதுள்ள சூழல் குறித்தும் விங் கமாண்டர் குறித்தும் விநோதமான கருத்தை கூறினார்.

“நீங்கள் ஆய்வகங்களில் உங்களுடைய வாழ்க்கையை கழிக்கிறீர்கள். முதலில் பைலட் புராஜெட்டை உருவாக்குவது ஒரு சடங்கு. அதன் பிறகு நடைமுறைப்படுத்துதல் நடக்கும். இப்போதுதான் ஒரு பைலட் புராஜெக்ட் முடிந்திருக்கிறது. இனி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்பு அதுவொரு பயிற்சியாக மட்டுமே இருந்தது”  என்றார் மோடி.

மார்ச் 1:

தேசிய பாதுகாப்பு சூழல்: வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் பல மணி நேர தாமத்துக்குப் பின் அபிநத்தனை விடுவித்தது.  பாகிஸ்தான் இராணுவம் பிரச்சார நோக்கத்துக்காக அபிநந்தனை வைத்து வீடியோ ஒன்றை எடுத்ததுதான் தாமதத்துக்கு காரணம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  அதற்கு அடுத்த நாள்,  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தேர்தல் பேரணி கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனின் தைரியத்தில் அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்வதாக மோடி பேசினார்.

அபிநந்தன் இந்தியா திரும்ப வாழ்த்தாத மோடி, அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து இப்படி ட்விட்டினார்..

“தாயகம் திரும்பியிருக்கும் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன்! இந்த தேசம் உங்கள் முன்மாதிரியான தைரியத்தை எண்ணி பெருமை கொள்கிறது. நம்முடைய ஆயுதமேந்திய படைகள் 130 கோடி இந்தியர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. ஜெய் ஹிந்த்!”


நன்றி : தி வயர்
கலைமதி

அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !

காவி அடிப்படைவாதம் சந்தை அடிப்படைவாதம் இரண்டுமே ஒன்றுதான் : எழுத்தாளர் அருந்ததி ராய்

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு கடந்த பிப்-23 அன்று திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இம்மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததிராய் பங்கேற்று உரையாற்றினார். மோடி அரசின் கார்ப்பரேட் பாசிச தாக்குதலைப் பற்றியும், நாடெங்கும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்.  அவர் உரையை தோழர் தியாகு தமிழில் மொழி பெயர்த்தார்.

அவரது உரையின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!


எதிர்த்து நில் மாநாட்டு உரைகள் – ஆடியோ வடிவில் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
காவி பாசிசம் எதிர்த்து நில் ! அரிராகவன் – முகிலன் – வரதராஜன் உரை | ஆடியோ

நூல் அறிமுகம் | சச்சார் குழு அறிக்கை : அறிமுகம் சுருக்கம் விமர்சனம்

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை கண்டறிய ஏற்படுத்தப்பட்ட சச்சார் குழு தன் அறிக்கையின் மூலம் இஸ்லாமிய சமூகம் குறித்து நிலவிவந்த ஒற்றைப் பார்வையை மட்டுப்படுத்தியதுடன் அவர்களின் வாழ்நிலை குறித்த ஏராளமான தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. நாட்டின் மிகப் பெரும் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்பட்ட குஜராத் இன அழிப்பைத் தொடர்ந்து இந்துத்துவ சக்திகளால் கக்கி எறியப்பட்ட வார்த்தைகள். “முஸ்லீம்கள் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறார்கள்” என்பதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட அவர்களின் நிஜ பரிமாணங்களும் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் எதிர்கொள்ளும் இன்னல்களும், எந்தவித அகக் கட்டுமான வசதிகளும் அற்று ஏனைய பகுதிகளின் குறைந்தபட்ச வசதிகள்கூட இன்றி வாழ்வதும் இப்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

மேலும், கல்வி பெறுவதில் அவர்களின் போதாமையும் நாட்டின் மற்ற பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரைவிட கல்வியில் பின்தங்கி இருப்பதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய செய்தியே ஆகும்.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று மேற்குலக நாடுகளாலும் முஸ்லிம் தீவிரவாதம் என உள்நாட்டு ஊடகங்களாலும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் ஒரு சமூகம் தன் இன, மத அடையாளங்களுடன் வாழ்வது என்பதே அவர்களை தேச நலனுக்கு எதிராக நிறுத்தும் பிம்பத்தை கட்டமைத்துவிடுகிறது. இதுவே அவர்களுக்கு வங்கிக் கடன்களிலிருந்து அரசியல் பங்கேற்பு, கல்வி, மருத்துவம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைப் பெறுவதிலிருந்தும் விலக்கப்பட்ட சமுதாயமாக மாற்றியுள்ளது.

நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமுதாய இன மக்களின் வளர்ச்சியே என்பதை சச்சார் குழு அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. ஏற்கனவே சிறுபான்மையினரின் நலனுக்காக நியமிக் கப்பட்ட பல கமிட்டிகளின் பரிந்துரைகளே இன்னும் நிறைவேற்றப் படாமல் தூங்கிக் கிடக்க சச்சார் குழு அறிக்கையின் மேல் முஸ்லிம் சமூகம் எத்தகைய பார்வையைச் செலுத்தும் என்பதும், அதை நடைமுறைப்படுத்த அரசியல் ரீதியாக எவ்வாறு நிர்பந்திக்கப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியே… (நூலின் பதிப்புரையிலிருந்து)

சச்சார் குழு அறிக்கையின் பின்புலம், முக்கியத்துவம் ஆகியவை குறித்து இந்நூலிலுள்ள பல்வேறு கட்டுரைகளிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்பட்டுள்ளன… சரியாக 404 + 20 = 424 பக்கங்களில் விரிவாகத் தொகுக்கப்பட்ட இந்த ஆவணத்தின் அடிப்படையான அம்சங்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு கோணங்களிலிருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ‘சென்சஸ் ‘ உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்ட விரிவான தரவுகளிலிருந்து பெறக்கூடிய முக்கியச் செய்திகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முக்கிய வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியன தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன. சச்சார் குழு அறிக்கையை பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்தும் விமர்சித்தும் எழுதப்பட்ட பல கட்டுரைகள் இந்த ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை Reference பகுதியில் காணலாம். குறிப்பாக, குழு உறுப்பினர் ராகேஷ் பசந்தின் கட்டுரை அறிக்கையை அறிமுகம் செய்யப் பெரிதும் பயன்பட்டுள்ளது…

…சச்சார் அறிக்கை என்பது ஏதோ முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மட்டுமேயான ஒரு பரிந்துரை என்பது போல இங்கு சிலரால் முன்வைக்கப்பட்டுகிறது. சமூக-பொருளாதார-கல்வி நிலை என்கிற எல்லா அம்சங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள இந்திய முஸ்லிம்களை மேம்படுத்தி பிற சமூகப் பிரிவினருக்கு இணையாகக் கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு என்பது பல்வேறு வழிமுறைகளில் ஒன்று மட்டுமே.

சச்சார் குழுவின் பரிந்துரைகள் மிகவும் விரிந்த தளத்தில் இயங்குவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவக் குறியெண்” (Diversity Index) ஒன்றை உருவாக்குவது பற்றிப் பேசுகிறது சச்சார் குழு அறிக்கை. பன்மைத்துவம் குறித்தும், முஸ்லிம்கள் மீது சமூகத்தில் நிலவும் புறக்கணிப்பு குறித்தும், அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பிரக்ஞையூட்டுவதையும் அது வற்புறுத்துகிறது.

பாடநூல்களின் உள்ளுறையை மதிப்பிடுகிற சட்டபூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து அது கவனத்தை ஈர்க்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் பன்மைத்துவம் செயல்படும் வகையில் ஒரு மாற்றுச் சேர்க்கை அளவுகோல் ஒன்றைப் பரிந்துரைக்கிறது. முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார அடிப்படையில் சுருங்குவதைத் (ghetoisation) தடுப்பதில் சிவில் சமூகத்தின் பொறுப்பை அது சுட்டிக்காட்டுகிறது. பஞ்சாயத்து முனிசிபாலிடி, கார்ப்பரேஷன், கூட்டுறவு வங்கி, மார்கெடிங் கமிட்டி’ ஆகியவற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை நியமனம் செய்யும் ஆந்திர மாநிலச் சட்டத் திருத்தங்களின்பால் பிற மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கிறது…

…முஸ்லிம்கள் குறித்த கட்டுக்கதைகளையே நம்பி உயிர்வாழும் இந்துப் பாசிச அரசியல் தொடர்ந்து முன்வைக்கும் சில மாயைகள் சச்சார் அறிக்கை மூலம் தகர்ந்துள்ளன. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பி ஆய்வு செய்வதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டிக்காட்டியுள்ளது…

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

மசூதி இடிப்பு, தொடர்ந்த கலவரங்கள், பாசிச எழுச்சி ஆகியவற்றின் பின்னணியில் இந்திய முஸ்லிம்கள் தம்மைப் பலதுறைகளிலும் ஆற்றல்படுத்துதல், அரசதிகாரத்தில் பங்கேற்பு, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு முதலிய கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். இந்தப் பின்னணியில் உருவான “முஸ்லிம் இட ஒதுக் கீட்டிற்கான தேசிய மாநாடு” (புது டெல்லி, 1994 அக்டோபர் 9), “முஸ்லிம் இந்தியர்களை ஆற்றல் படுத்துவதற்கான இயக்கத் தொடக்கத்திற்கான மாநாடு” (புது டெல்லி, 1999 மே 8) ஆகியன முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், இம்மாநாடுகளின் தீர்மானங்களும் பின்னிணைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என்னும் கோரிக்கை தமிழ்நாட்டில் மேலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விரிவான வரலாற்றுப் பின்னணியில் சச்சார் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போதுதான் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்களின் கோரிக்கைகளும் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கென முன்வைக்கப்படும் பரிந்துரைகளும் அப்படியே மாறாது இருப்பது விளங்கும். இதன் பொருள் அவை எதுவும் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதே, எனவே இப்போதைய தேவை வெறும் பரிந்துரைகளல்ல. என்ன செய்யப் போகிறோம்?’ என்பதே. (நூலின் முன்னுரையிலிருந்து)

நூல்: சச்சார் குழு அறிக்கை: அறிமுகம், சுருக்கம், விமர்சனம்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு: எதிர் வெளியீடு,
305, காவல் நிலையம் சாலை,
பொள்ளாச்சி – 642 001.
தொலைபேசி: 04259 – 226012 | 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@sify.com

பக்கங்கள்: 144
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval | discovery book palace

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

பள்ளி திறக்கப் போகிறது – ஆசிரியர் தயாராவது எப்படி ?

1

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 1

கல்வியாண்டு துவங்கும் தருவாயில் (1) (ஆகஸ்டு 31)  குழந்தைகள்-என் ஆசிரியர்கள்!

ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தலைநகரமாகிய திபிலீசியில் ஆகஸ்டு மாதக் கடைசியில் எப்போதும் வெப்பமாக இருக்கும். தார் உருகி ஓடும், மக்களுக்கு எதன் மீதுமே அக்கறையில்லாததைப் போல் தோன்றும்.

தெருக்களில் குழந்தைகள் அதிகமில்லை. இவர்களில் பெரும்பாலோரை பெற்றோர்கள் கோடை ஓய்விடங்களுக்கும், சொந்த கோடையில்லங்களுக்கும், பயனீர் முகாம்களுக்கும், குறிப்பாக கிராமங்களில் உள்ள தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்களிடமும் அனுப்பி விட்டனர்.

கிராமத்திற்குச் செல்லவும் அங்கேயுள்ள கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து விளையாடவும் அவர்களோடு சேர்ந்து காடுகளுக்குச் சென்று பழங்களைச் சேகரிக்கவும் கூடை பின்னவும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். காஹேத்தியாவின் சமவெளிகளில் நான் கழித்த குழந்தைப் பருவம் என்னுள் இப்போது விழித்துக் கொண்டது. நான் கிராமக் குழந்தைகளோடு சேர்ந்து ஆற்றில் குளிக்க ஓடியதுண்டு, சம வெளியில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை மீதேறி அமர்ந்து களைப்பின்றி சவாரி செய்ததுண்டு; மக்காச்சோளமும் கோதுமையும் நிறைந்த மூட்டைகளைத் தோள்கள் மீது சுமந்து கொண்டு நீர் சக்தியால் இயங்கும் அரவை இயந்திரத்திற்கு எடுத்துச் சென்றதுண்டு, தானியக் களஞ்சியத்தினுள் மணம் மிகு மாவைக் கொட்டியபடி தட்டையான பெரும்வட்டக் கற்கள் சுற்றுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்; மல்யுத்தப் போட்டிகள் நடக்கும் போது அவற்றைக் கண்டு களிப்பதற்காக கிராமம் முழுவதுமே சிறு திறந்த வெளியில் கூடும். குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வம்மிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

ஆகஸ்டில் திபிலீசியில் கடும் வெப்பம் நிலவும். செப்டெம்பர் 1-ஆம் தேதி விரைவிலேயே வரவிருக்கிறது. ஆனால் தெருக்களில் இன்னமும் குழந்தைகளின் ஆரவாரத்தைக் காணோம், குறைந்த அளவே குழந்தைகள் காணப்படுகின்றனர்.

கடும் வெப்பத்தின் காரணமாக கல்வியாண்டு இம்முறை செப்டெம்பர் 1-ஆம் தேதி துவங்கப் போவதில்லை, இரண்டு வாரமோ, ஒரு மாதமோ கழித்து தான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்றொரு வதந்தி மின்னல் வேகத்தில் பரவுகிறது. தம் கனவுகள் பலிக்கின்றன என்று குழந்தைகளுக்குத் தோன்றுகிறது.

பெற்றோர்களும் நம்புகின்றனர். ஏனெனில் வகுப்புகளை ஒத்திப் போடுவதற்கான காரணங்கள் நிறையச் சேருகின்றன.

ஆனால் ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாட்களில் இக்கனவுகள் கலைகின்றன. ”பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பின் செப்டெம்பர் 1-ஆம் தேதி மீண்டும் துவங்கும்” என்ற பத்திரிகைச் செய்திகள் இதற்கு வழிகோலுகின்றன.

பள்ளி அழைக்கிறது! இது ஒரு புனிதமான அறைகூவல்.

பாடங்கள் விரைவில் ஆரம்பமாகும்! இரண்டு மூன்று நாட்களில் சூரிய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நகரம், மனதைக் கிறங்க வைக்கும் வாசனையுடன் கூடிய ஒரு பெரிய, அழகிய, பல வண்ண மலர் விரிவதைப் போல் காட்சியளிக்கிறது. இந்த மலரை உயரே, பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து பார்த்தால் அது எவ்வளவு அழகிய, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் தெரியுமா!

நகரத்திற்கு உயிர் வருகிறது, உத்வேகம் வருகிறது, நகரம் தலையை உயர்த்தி, மெல்லிய காற்றில் ரோஜா செடியின் தண்டு ஆடுவதைப் போல் மெதுவாக ஆடத் துவங்குகிறது. ஒரு உண்மையை (இது ஒருவேளை இது வரை தெரியாமலேயே இருந்திருக்கலாம்) நன்கு உணருகிறோம்: 1500 ஆண்டுகட்கும் மேலாக நிலவி வரும் இந்நகரத்தில் இதன் மிகச் சிறு குடிமக்களாகிய குழந்தைகள் இல்லாவிடில் நகரமே வெறிச்சோடிக் களையிழந்து உள்ளது.

சத்தம்! தெருவில் தான் எவ்வளவு சத்தம், மகிழ்ச்சி, உற்சாகம்! குழந்தைகள் அவசர அவசரமாகப் போகின்றனர், ஓடுகின்றனர், பாதசாரிகளுக்கான இடங்களில் போவோர் வருவோர் மீது படாமல் வளைந்து வளைந்து மிதிவண்டி ஓட்டுகின்றனர். அமைதியாக, நிதானமாக நாம் தெருக்களில் நடப்பதற்கு அவர்கள் இடையூறு செய்கின்றனர், ”என்ன வெப்பம்” என்ற நமது வழக்கமான கோடைகாலப் பேச்சின் போக்கை மாற்றுகின்றனர். வருவோர் போவோரின் முகங்களில் ஒரு விதக்களை, கவலை, மகிழ்ச்சி-குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்!

வெப்பமானியில் வெப்பம் இறங்கவேயில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வெப்பமானியைப் பற்றி என்ன கவலை!

இன்று 38 டிகிரி. அவர்களுக்கு வெப்பமாக இல்லையா என்ன ?

இல்லை, குழந்தைகளுக்கு வெப்பமாயில்லை. அவர்களுக்கு வேறு கவலை-அவர்கள் பள்ளி செல்ல தயாராகின்றனர். பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், ஸ்கேல்கள், வரைபடச் சாதனங்கள், வண்ணப் பென்சில்கள் முதலியவற்றை வாங்க வேண்டும். இவற்றையெல்லாம் பள்ளிப் பையில் வைக்க வேண்டும். சீருடையை ஒழுங்கு படுத்தவேண்டும். அழகாகக் காட்சியளிக்க வேண்டும்….

ஆசிரியர்களாகிய நாங்களும் எம் அறைகளில் குழுமியிருக்கின்றோம். பரஸ்பரம் முகமன் கூறிக் கொண்டோம், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். புதிய கல்வியாண்டிற்கான புதிய போதனை முறைத் திட்டங்களும் புதிய நம்பிக்கைகளும் நம்மிடமும் இருக்க வேண்டும், சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வம் மிக்க எதிர்பார்ப்பு நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும்.

படிக்க:
குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள்

மகிழ்ச்சியும் பதட்டமும் கலந்த ஒரு தெளிவற்ற நிலை ஒருவேளை உங்களை ஆட்கொள்ளக் கூடும்; கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம் கூடத் தோன்றலாம்.

இத்தகைய உணர்வுகள் உண்மையிலேயே உங்களை ஆட்கொண்டால் அது நல்லது, நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள், குழந்தைகளின் அன்பு, நம்பிக்கை எனும் மிக கெளரவமான பரிசு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய எதிர்கால வகுப்புகளைப் பற்றிய எண்ணமே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பாத இவர்களுடனான சந்திப்பைப் பற்றிய எண்ணமே உங்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வது?

அது வரை விஷயம் போகமாலிருந்தால் நல்லது…. எப்படி நடந்து கொள்வதென நீங்களே முடிவு செய்யுங்கள்.

நான், ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில் நள்ளிரவு வரை என் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறேன். நன்கு சிந்திக்கிறேன், திட்டமிடுகிறேன், மதிப்பிடுகிறேன், பொதுமைப் படுத்துகிறேன், என்னுடனேயே விவாதித்துக் கொள்கிறேன், என் ஆசிரியர் பயிற்சி அனுபவத்தை யோசித்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளைச் சேர்ந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய நான் என் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறேன்.

பள்ளிக் குழந்தைகளுடன் நூலாசிரியர்.

அவர்களை விட ஒரு நல்ல அனுகூலமான நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது . எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் ஒருவன் தான் ஆசிரியன், எனக்கோ முப்பத்தாறு அல்லது அதற்கும் அதிகமான ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் என து மிக விடாப்பிடியான ”ஆசிரியர்களாக” விளங்குவார்கள்.

நான் அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வரையவும் பாடவும் சொல்லித்தர அவர்கள் எனக்கு மிக உயர்வான போதனை முறைக் கல்வியைத் தருவார்கள். குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும் என்பதை அறிய தன்னை கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக உணர வேண்டும். என் மேசை முன் அமர்ந்து, புதிய தயாரிப்பு வகுப்புடனான சந்திப்பைப் பற்றிச் சிந்திக்கும் போது ஒரு தாளில் பின்வருமாறு எழுதிக் கொள்கிறேன்:

குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி எனும் கலையையும், ஆசிரியனின் திறமையையும் அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்.

இந்த வாசகத்தின் உண்மையை, பயனை இருபத்தொன்பது முறை நான் சோதித்து சரிபார்த்திருக்கிறேன். முப்பதாவது தடவையாக சரிபார்க்கப் போகிறேன்.

அடிக்குறிப்புகள் :

(1) சோவியத் நாட்டில், பள்ளியில் கல்வியாண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆரம்பமாகும்.-(ப-ர்.)

(தொடரும்)

முந்தைய பகுதி:

பகுதி – 1 : குழந்தைகள் வாழ்க ! ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர்