Friday, May 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 362

ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !

Personality என்ற சொல்லுக்கு இணையாக தமிழில் ‘ஆளுமை’ என்ற சொல்லை தற்போது சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த சொல் அவ்வளவு எளிதில் உருவாகிடவில்லை. இந்தச் சொல் உருவானதன் பின்னால், பெரும் உழைப்பு இருக்கிறது, ஒரு வரலாறு இருக்கிறது.

***

1940-களின் பிற்பகுதியில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவுக்கு இணையாக தமிழில் ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் துவங்கின. இந்தியா அப்போதுதான் சுதந்திரமடைந்திருந்த நிலையில், அது ஒரு இமாலய முயற்சியாக அமைந்தது.

இதன் முதுகெலும்பாக தி.சு. அவினாசிலிங்கமும் பெ. தூரனும் இருந்தனர். இந்தக் கலைக்களஞ்சியத்தின் அனைத்துத் தொகுதிகளும் வெளியாகி முடிக்க, 20 ஆண்டுகள் ஆயின.

1200 -க்கும் மேற்பட்டவர்கள் இதற்காகப் பங்களிப்புச் செய்தனர். முடிவில் 10 தொகுதிகளாக 7,500 பக்கங்களுடன் இந்த கலைக்களஞ்சியம் வெளியானது.

இந்தக் கலைக்களஞ்சியம் எப்படி உருவானது என்பது ஒரு மிகவும் சுவாரஸ்யமான வரலாறு. இந்தியாவின் பதிப்பு வரலாற்றாசிரியர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி இதனை மிகச் சுருக்கமாக, விறுவிறுப்பான நடையில் ஒரு சிறு நூலாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் கிரவுன் சைஸில் வெறும் 86 பக்கங்கள்தான். ஆனால், இதற்கே 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் சலபதி.

பதிப்பு வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ் மொழி வளர்ச்சியின் மீது ஆர்வமுடையவர்களும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளும் இதில் நிறைய உள்ளன. கண்டிப்பாக படியுங்கள்.

இந்நூல் இணையத்தில் கிடைக்குமிடங்கள் :

காமன் ஃபோக்ஸ் (Common Folks)
பனுவல் வெளியீட்டகம்
நூல் உலகம்

விலை : ரூ. 75/- காலச்சுவடு வெளியீடு.

மீண்டும் முதல் பத்திக்கு வருவோம். தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாக கிடைக்கவில்லை. புதிய சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர் குழு, ஒரு நாள் முழுவதும் விவாதித்து, எதுவும் தோன்றாமல் கலைந்து சென்றிருக்கிறார்கள். அதற்கு அடுத்த கூட்டத்தில், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், Personality-க்கு இணையாக, ஆளுமை என்ற சொல்லை முன்வைத்திருக்கிறார். என்சைக்கிளோபீடியா என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லான கலைக்களஞ்சியம் என்ற சொல்லும் இந்தக் குழுவினர் உருவாக்கியதே!!

இந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்காக தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி :முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

0

ன்பார்ந்த வாசகர்களே,

இந்த முறை வாசகர் புகைப்படங்கள் பகுதியில் இரண்டு வாரங்களுக்கான தலைப்புகள் சேர்த்துத் தருகிறோம்.

முதல் வாரத்திற்கான தலைப்பு : அரசு பள்ளிகள்

ஜாக்டோ ஜியோ போராட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கியமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று போராடி வருகின்றனர். அரசுப் பள்ளிகளை ஒழித்துவிட்டு தனியார் கல்வியை முழுமையடையச் செய்யும் சதி நீண்ட காலமாக நடைபெறுகிறது. கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை மாற்றி அதை காசுக்கேற்ற சரக்காக மாற்றுவதே உலகமயத்தின் நோக்கம்.

இந்தப் பின்னணியின் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை நம் மக்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகள் தொடர்பான காட்சிகள், பள்ளிக் கட்டிடங்கள், மைதானங்கள், பெயர்ப்பலகைகள், சீருடையுடன் செல்லும் மாணவர்கள், அறிவிப்பு பலகைகள், காலை நேர அணிவகுப்புகள், பாடம் நடத்தும் ஆசிரியர்கள், போராட்டம் செய்யும் ஆசிரியர்கள் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவரே பல படங்களையும் அனுப்பலாம். படங்களை தெளிவாகவும், விவரங்களோடும் அனுப்புங்கள். ஏனோ தானோவென்று அனுப்ப வேண்டாம். சில நண்பர்கள் சிரத்தை எடுத்து அழகுற அனுப்புகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.02.2019

இதற்கு அடுத்த வாரத்திற்கான தலைப்பு: விளையாடும் குழந்தைகள்

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாடும் காட்சிகளை மையப்படுத்தி படங்கள் எடுத்து அனுப்பலாம். நவீன வாழ்க்கையில் விளையாட்டு அருகி வருகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கும் அடைபட்ட நகர வாழ்க்கை நிலைபெற்று வருகிறது. குழந்தைகள் வயதில் விளையாட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இந்தக் கருவில் நீங்கள் படம் எடுத்து அனுப்பலாம். ஒருவரே பல படங்களையும் அனுப்பலாம். படங்களை தெளிவாகவும், விவரங்களோடும் அனுப்புங்கள். ஏனோ தானோவென்று அனுப்ப வேண்டாம். சில நண்பர்கள் சிரத்தை எடுத்து அழகுற அனுப்புகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 13.02.2019
மின்னஞ்சல் முகவரி: vinavu@gmail.com
வாட்ஸ்அப் எண்:
(91) 97100 82506

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்! தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி!

நட்புடன்
வினவு


புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:

♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.

♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.

♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.

♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.

♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.

♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.

♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.

♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.

♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.

♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.

♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).


புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !

த்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில்  பல ஆயிரம் கோடிகளை கொட்டி கும்பமேளா விழாவை நடத்தி வருகிறது உ.பி. அரசு. பாஜக-வின் இந்துத்துவ பிரச்சாரத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்த விழாவின் பிரம்மாண்டத்தில் ஒரு அம்சம் மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டக் கண்காட்சி. உள்நாட்டில் இருக்கும் தொழிலையும், சிறு முதலீட்டாளரையும் அழித்து வரும் மத்திய அரசு மறுபுறம் மேக் இன் இந்தியா என்று ஒரு முழுப் புரட்டை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட செட் சினிமா செட்டையே மிஞ்சி விடும் அளவிற்கு பல இலட்சங்கள் செலவு செய்து போடப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு வருபவர்களை கவர அரங்கத்திற்கு வெளியே திறந்தவெளி மேடை இசைக்கச்சேரியும் நடத்தப்பட்டு வருகிறது. யாரும் கேட்கவில்லையென்றாலும் பாடல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இடையிடையே இந்துத்துவத்தின் பிரசங்கமும் காதை குடைகிறது.

திறந்தவெளி மேடை இசைக்கச்சேரி.

காண்காட்சியின் உள்ளே சென்றால் உ.பி.யில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தொழிலையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அமேதி மற்றும் அலகாபாத்தின் மூஞ்ச் தயாரிப்பு, அயோத்தியின் ஜெக்கரி, ஜான்சி பகுதியின் பொம்மைகள், பெதாபுரி பெட்சீட்கள், சம்பாலின் கார்பெட் மற்றும் கைவினைப் பொருட்களின் தயாரிப்பு என்று ஏராளமாக இருந்தன. கடைசியில் மோடியின் மேக் இன் இந்தியாவிற்கான பிரச்சாரத்தில் வெறும் கொலு பொம்மைகளே வீற்றிருந்தன.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று சொல்லி உள்ளூர் தொழில் முதலாளிகளை வைத்து கண்காட்சி நடத்தியது போல அலகாபாத்திலும் நடத்துகிறார்கள். குளுகுளு ஏசி.. சிகப்புக் கம்பள விரிப்புகள், வண்ணமயமான டிசைன்கள் என்று பார்க்கவே பளபளப்பாக இருந்தன.

அந்த கண்காட்சியில் அலகாபாத் மாவட்டத்தின் தயாரிப்பான மூஞ்ச்-அழகு கூடை பின்னும் ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்டபோது, “மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பத்து வருடம் இந்த தொழிலை செஞ்சிகிட்டு இருக்கோம். இதனை வித்துதான் வேலை செய்யும் பெண்களுக்கு 200 ரூபாய் கூலி தரணும்.. அதையே தர முடியுமா.. இல்லையான்னு தெரியல. வருடா வருடம் இந்தமாதிரி கண்காட்சி நடக்கக்கூடியவைதான். ஆனால், இந்த வருடம் கண்காட்சியும், கும்பவிழாவும் ஆடம்பரமா செய்திருக்காங்க. ஆனா பெரிய அளவுல கூட்டம்தான் வர்ல” என்றார்.

உங்களுக்கு தொழில் செய்ய அரசு லோன் எதாவது தருகிறதா எனக்கேட்டால், “எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினார். மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் முதலீடு செய்வதாக கதையளந்தவர்களுக்கு இது ஒரு நல்ல கவிதை நீதி! மகளீர் சுய உதவிக் குழுக்கள்தான் பாஜக அரசின் உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு செய்கிறார்கள்.

வழக்கமாக இந்தக் கண்காட்சி “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற பெயரில் இருக்குமாம். ஆனால், இந்த முறை அந்தக் கண்காட்சிக்கு “மேக் இன் இந்தியா” எனப் பெயர் வைத்து தனது விளம்பரத்தை தேடிக்கொண்டது காவி கும்பல். மக்களை எப்படி மலிவாக நினைக்கிறார்கள் பாருங்கள்!

சரி இத்தகைய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலுக்காக மோடி அரசு ஏதும் செய்ததா என்றால் எதுவும் இல்லை. மேற்கண்ட தொழில்கள் பெரும்பாலும் நலிவடைந்து வருகின்றன. இதை அந்த அரங்குகளில் இருக்கும் பணியாளர்களிடம் பேசினால் நிறைய செய்திகளை அளித்து ஒத்துக் கொள்கிறார்கள். அவர்களை ஊக்குவிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பலவற்றை நம்மூரில் சாலைகளில் கடை விரித்து விற்றுக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

படிக்க:
இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு லோன் தருவதாக வங்கிகள் ஸ்டாலும் வைத்திருந்தனர். அது எல்லா கண்காட்சியிலும் இருக்கும் ஒரு வழக்கமான டெம்ப்ளேட்தான் என்பதால் இந்த கைதொழில் நிறுவனங்களுக்கு அவற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது நாமறிந்ததே.

அந்த காட்சியரங்கத்திற்குள் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் குறித்த வீடியோவை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ’மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் ஒப்புக்கு எதையாவது ஒளிபரப்பிக் கொண்டு தமது தோல்வியை மறைத்து வருகிறது காவி கும்பல். பெயர் மட்டும் பளபளப்பாக ‘மேக் இன் இந்தியா’வாம் !

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து…


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, ”இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரும் சென்னை விவேகானந்தா கல்லூரியின் மேனாள் இயற்பியல் துறைத்தலைவருமான பேராசிரியர் முருகன் ஆற்றிய உரையின் காணொளி …

உரையிலிருந்து சில துணுக்குகள்…

♦ நேஷனல் சயின்ஸ் காங்கிரசு ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பிலிருந்து நடைபெற்று வருகிறது. இது 106-வது காங்கிரசு. இந்திய விஞ்ஞானிகளுக்கு நல்ல தளமாக இருந்தது. சிறுவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் பொருட்டு, சிறுவர்களுக்கான சயின்ஸ் காங்கிரசு 25 வருசமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

♦ சிறுவர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விஞ்ஞானிகளுடன் சந்திப்பு என்ற உரையாடல் நிகழ்வில் பெரும்பாலும் மாணவர்கள் கேள்வி கேட்பார்கள், விஞ்ஞானிகள் அதற்கு பதிலுரைப்பார்கள். ஜெகதள கிருஷ்ணனும், நாகேஸ்வர ராவும் ஆளுக்கு ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார்கள். இது ‘மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

♦ இன்றைய நிலையில் அறிவியல் நம்மை அதிகமாக பாதிக்கிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? உண்மை இல்லை. எந்தளவுக்கு நம்பகத்தன்மை உள்ளது. நம்பகத்தன்மை இல்லை. அறிவியல் என்றால் என்ன? அறிவியலில் நிரூபணம் என்றால் என்ன? எவிடன்ஸ் என்றால் என்ன?

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் ? தினமணியின் பார்ப்பனப் புரட்டு !

தினமணியின் பார்ப்பனிய விஷமத்தனம் !

தினமணி தமிழ் நாளேட்டில், நடுப்பக்கத்தில் “இட ஒதுக்கீடு சலுகை : விட்டுக் கொடுக்க தயாரா? ” என்ற தலைப்பில் பூ.சேஷாத்ரி என்ற தினமணியில் பணியாற்றும் பார்ப்பனர் கட்டுரை எழுதியுள்ளார்.

எந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள் & பழங்குடிகள் மீது காட்டியுள்ளார்.

1) “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது ” எனத் துவங்கி, “பொருளாதாரத்தில் மேம்பட்ட SC &ST பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தாமாகவே முன்வந்து இட ஒதுக்கீடு எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் என அறிவிக்க வேண்டும் ” என முடிக்கிறார்.

பொருளாதாரத்தில் மேம்பட்ட என்பதற்கு “ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானம் – 5 ஏக்கர் நிலமா ” என அவர் எந்த அளவுகோலும் சொல்லவில்லை ; எவ்வளவு பேர் வருவார்கள் என்றும் சொல்லவில்லை. பார்ப்பன குசும்பும், காழ்ப்புணர்ச்சியும் இத்துடன் நிற்கவில்லை.

2) “10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார்” என மொட்டையாக ஒரு கருத்து சொல்லுகிறார். எப்போது தெரிவித்தார்? கல்வி, வேலைவாய்ப்பு விசயத்தில் சொன்னாரா? என்பது பற்றி எல்லாம் விளக்கவில்லை. பலரும் இவ் விசயத்தில் குழம்புகிறார்கள்.

இரட்டை வாக்குரிமை பற்றிய விவாதத்தில் தான் அம்பேத்கர் , மக்கள் மன்றங்களில் 10 ஆண்டு கால அரசியல் இட ஒதுக்கீடு பற்றி முன்மொழிகிறார். காந்தி தலையீட்டால் இரட்டை வாக்குரிமை முடிவுக்கு வந்துவிட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே! சாதிய அமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என அம்பேத்கர் பல இடங்களில் தெரிவித்து உள்ளார்.

3) அம்பேத்கர் இயக்க ஆய்வாளர் சுஹாஸ் சோனாவணே என்பவர் ‘தலித் அமைப்புகளோ, அம்பேத்கரியவாதிகளோ அரசியல் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் எனக் கோரவில்லை; இதனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை ; இது தேவையில்லாதது” எனக் கூறிவிட்டாராம். !

எனவே பூ.சேஷாத்ரி அய்யர் தாங்களாகவே பலரும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்ததுபோல … பொருளாதாரத்தில் மேம்பட்ட SC & ST யினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என விட்டு தரவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொருளாதாரத்தில் ஏழைகளாக உள்ள முன்னேறிய சாதிகளுக்கு, வசதி படைத்த பார்ப்பனர்கள் விட்டு கொடுக்கலாமே! பின்வரும் RTI தகவல் ஒன்றை பாருங்கள்!

Kind Attention : பூ.சேஷாத்ரி & வைத்யநாதன்!

1. ஜனாதிபதி செயலகத்தின் மொத்த பதவிகள் – 49.
இவர்களில் 39 பிராமணர்கள்; எஸ்.சி – எஸ்.டி – 4; ஓ.பி.சி – 06.

2.  துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள் – 7.
7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
எஸ்.சி – எஸ்.டி – 00. ஓ.பி.சி – 00

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20.
பிராமணர்கள் – 17; எஸ்.சி – எஸ்.டி – 01 . ஓ.பி.சி. – 02.

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் .
பிராமணர்கள் – 31; எஸ்.சி – எஸ்.டி – 02; ஓ.பி.சி.  – 02.

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த பதவிகள் – 274.
பிராமணர்கள் – 259; எஸ்.சி – எஸ்.டி – 05; ஓ.பி.சி. –10

6. மொத்த அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் 1379.
பிராமணர்கள் – 1300; எஸ்.சி – எஸ்.டி – 48; ஓ.பி.சி. – 31.

7. சமூக நல & சுகாதார அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 209.
பிராமணர்கள் – 132; எஸ்.சி – எஸ்.டி – 17; ஓ.பி.சி. – 60

8. நிதி அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 1008.
பிராமணர்கள் – 942; எஸ்.சி – எஸ்.டி –20; ஓ.பி.சி. – 46.

9. பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 409 பதவிகள்.
பிராமணர்கள் – 327; எஸ்.சி – எஸ்.டி –19; ஓ.பி.சி. – 63.

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 74.
பிராமணர்கள் – 59; எஸ்.சி – எஸ்.டி – 4; ஓ.பி.சி. – 9.

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 121.
பிராமணர்கள் – 99; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 22.

12. கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஒட்டுமொத்தம் – 27.
பிராமணர்கள் – 25; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 2.

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140.
பிராமணர்கள் – 140; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 00.

14. மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் – 108.
பிராமணர்கள் – 100; எஸ்.சி – எஸ்.டி – 03; ஓ.பி.சி. – 05.

15. மத்திய பொதுச் செயலாளர் பதவிகள் –26.
பிராமணர்கள்–18; எஸ்.சி – எஸ்.டி – 01; ஓ.பி.சி.-7.

16. உயர் நீதிமன்ற நீதிபதி – 330.
பிராமணர்கள் – 306; எஸ்.சி – எஸ்.டி – 04; ஓ.பி.சி. – 20.

17. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – 26.
பிராமணர்கள் – 23; எஸ்.சி – எஸ்.டி – 01; ஓ.பி.சி. – 02.

18. மொத்த ஐஏஎஸ் அதிகாரி–3600.
பிராமணர்கள்– 2750; எஸ்.சி – எஸ்.டி – 300; ஓ.பி.சி. – 350.

கோயில்கள், வழிபாட்டு தலங்கள், திருமணங்கள் & கருமாதிகளில் பிராமணர்கள் வாய்ப்பு 99% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள் 90% பதவிகளைப் பெற்றனர்.

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் பெற்றது.)

பூ.சேஷாத்ரி அய்யர் அவர்களே!

இது எல்லாம் ஆயிரத்தில் ஒன்று என்ற வகையான தகவல் ஆகும். மத்திய, மாநில அரசுகளின், பொதுத்துறையின் கணிசமான உயர் பதவிகளை, இடைநிலை பதவிகளை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது தாங்கள் அறியாத செய்தியல்ல! (தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், IT துறைகளை ஆக்கிரமித்துள்ள பார்ப்பனர்கள் பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை. )

பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பார்ப்பனர்கள் தாமாகவே முன்வந்து “இத்தகைய அரசுப் பணிகள் எல்லாம் எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் – ஏழை பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கிவிடுங்கள் ” என்று சொன்னால், உயர்சாதி ஏழைகள் பயனடைய வாய்ப்பாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

தாங்கள் இதைப் பற்றியும் கட்டுரை ஒன்றை தினமணியில் எழுத வேண்டும்.

பின்குறிப்பு :
அய்யா,
தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.

சந்திரமோகன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி: டைம்ஸ் தமிழ்

மனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

நாம் அனுதினம் காணும் மனிதர்களுள் ஒரு சிலரே நம் அகத்தையும் சிந்தையையும் ஒரு நிமிடம் அசைத்து வெகுவான பாதிப்பை உருவாக்கிச் செல்வார்கள். என்னை பாதித்த அப்படிப்பட்ட ஒரு பெண்மணியை பற்றியது தான் இந்த கட்டுரை.

அந்த பெண்மணிக்கு வயது 50. எனது தாயை ஒத்த வயது. அவருக்கும் என் வயதை ஒத்த ஒரு மகன் உண்டு. சிறு வயதில் இருந்தே இரண்டு காதும் சரியாக கேட்காது.
அதனால் ஏற்பட்ட மனத்தாழ்வு நிலை. காது கேளாத மனைவியை சரியாக மதிக்காத குடிகார கணவன். கசந்த திருமண பந்தம்…

கணவன் குடிக்கு அடிமையாக, காது கேளாத இந்த பெண்மணியோ மனநோய்க்கு அடிமையாகி விட்டார். சிறுவயதிலேயே சிசோஃப்ரெனியா என்ற மனநோய் ஆட்கொண்டு விட, அப்போதே கரண்ட் வைத்து சிகிச்சை அளிக்கும் எலக்ட்ரோ கன்வல்சிவ் தெரபி செய்யப்பட்டிருக்கிறார். இப்போதும் அவருக்கு அந்த பாதிப்பு இருக்கிறது.

கணவன் கைவிட்டு ஓடிவிட.. கையில் இருந்த மகனை ஒற்றை ஆளாக வளர்த்தெடுத்தால் அவனும் சேர்ப்பு சரியில்லாததால் குடிகாரனாக மாறி விட்டான்.

பெண்மணி செய்யும் தொழில் மருத்துவக்கல்லூரி வாயிலில் நோயாளிகளுக்கு தேவையான சிறு துணிமணிகள், நேப்கின், உள்ளாடை , போன்றவற்றை விற்பது. கூடவே பருத்திப்பால் செய்து விற்று வந்தார். தற்போது உடல் ஒத்துழைக்காததால் பருத்திப்பால் விற்பதில்லை.

என்னிடம் வரும் போதெல்லாம் சுமார் இருபது நிமிடம் அவர் மனதில் நினைப்பதை பேசுவார். நான் அதைக்கேட்டு தலையை அசைத்துக் கொண்டிருப்பேன்.

தன் மகன் ஒரு முறை குடித்து விட்டு வந்து நெஞ்சில் மிதித்ததை கூறி அழுவார். இன்னொரு முறை கணவன் தன்னை எப்படியெல்லாம் இளமையில் கொடுமை செய்தார் என்று கூறுவார்.

இன்னொரு முறை தான் விற்பனை செய்யும் இடத்தின் அருகில் இருக்கும் மற்றொரு குறவப்பெண்மணி தன்னை தாக்கியதை பற்றி கூறினார்.

ஏன் அவர் தாக்கினார் என்று கேட்டதற்கு..

இவர்.. உள்ளாடைகள், நேப்கின்களை குறைந்த லாபத்திற்கு விற்பதால் அந்த குறவர் இனப்பெண்மணிக்கு வியாபாரம் குறைந்து விட்டதாம். அதனால் கடுப்பாகி அந்த பெண்மணி தாக்கியிருக்கிறார்.

சமீபத்தில் கூட தான் இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய் சீட்டு போட்டு சேமித்து வைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு அந்த சீட்டு பெண்மணி ஓடிவிட்டதாக புலம்பினார். இத்தனை இன்னல்களை அனுதினமும் சந்தித்தாலும் அவர் என்னைக்கவர காரணங்கள் உண்டு..

கூறுகிறேன் கேளுங்கள்;

கடந்த ஏழு வருடங்களாக என்னிடம் மருத்துவம் பார்க்கும் அவர் ஒரு முறை கூட கடன் வைத்தது கிடையாது. மீறி சிறு கடன் ஏற்பட்டாலும் உடனே அடுத்த நாள் வந்து கொடுத்து விடுவார் என தந்தை கூறுவார்.

இன்று கிளினிக்கில் நீண்ட நேரம் அவரை காக்க வைத்து பார்க்க பத்து மணி ஆகிவிட்டது. நீரிழிவு நோயாளியான அவர்.. லோ சுகர் ஏற்பட்டதாக என்னை கடிந்து கொண்டார். நான் பணியாளர்களிடம் இருந்து மில்க் பிக்கிஸ் பிஸ்கெட் ஒரு பாக்கெட் கொடுத்தேன்.

“ஏன் சார். நீங்களே பிஸ்கட் சாப்டக்கூடாதுனு சொல்லிட்டு… இப்ப இத சாப்ட சொல்றீங்களே.. நான் வெளிய போய் இலந்த பழம் வாங்கி சாப்பிட்டேன்.. இலந்த பழம் சாப்பிடலாம்ல சார்?” என்றார்..

நான் ஆடிப்போய் விட்டேன். நம்ம வார்த்தைக்கு இத்தனை மரியாதை கொடுக்கும் ஒரு நபரா என்று உச்சி குளிர்ந்தேன். அடுத்த நினைவு சில மாதங்களுக்கு முன்பு..

நான் எழுதிய ஆரோக்கியம் 2.0 எனும் புத்தகம் வெளியான போது.. அதை பற்றிய பதாகை கிளினிக்கில் இடம்பெற்றிருந்தது. அதைப் படித்து விட்டு உள்ளே வந்த அவர்.
எனக்கு கை கொடுத்து..

புத்தகம் எழுதியிருக்கீங்களா? அருமை சார். எனக்கு ஒன்னு கொடுங்க.. படிக்கிறேன்.. என்றார்.

நானும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக நினைத்து தான் வழங்கினேன்.

ஆனால் வெளியே சென்ற அவர் கட்டாயம் புத்தகத்தை பணம் கொடுத்து தான் வாங்குவேன் என அடம் பிடித்து என் அப்பாவிடம் புத்தகத்திற்கான பணத்தை கொடுத்து சென்றிருக்கிறார்.

மீண்டும் அடுத்த முறை வரும் போது புத்தகத்தை பற்றிய தனது புரிதல்களைக் கூறினார். நன்றாக எழுதியிருப்பதாக பாராட்டினார்.

நான் கேட்டேன் ” உங்களுக்கு புத்தகம் படிக்க புடிக்குமா.. மா?”

“சார்.. நான் நல்லா படிப்பேன் சார். எனக்கு காது மட்டும் தான் கொஞ்சம் அவுட்டு. மத்தபடி அறிவாளி சார். என்ன எங்கம்மா படிக்க வைக்காம போய்டுச்சு சார்.” என்று வருத்தப்பட்டார்.

ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்.

படிக்க:
♦ மரணம் ஒரு வடிகட்டி | ஃபருக் அப்துல்லா
♦ கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

அந்த பெண்மணி எப்போது வந்தாலும்.. அவருக்கான நேரத்தை முழுமையாக ஒதுக்கி விடுவேன். அவர் கூறுவதை முழுவதுமாக கேட்பேன்.அவர் பேசுவதில் இருந்து அவரது எண்ண ஓட்டத்தின் அதிர்வுகளை உணர்வேன்.

உலகில் இத்தனை உன்னதமான பரிசுத்தமான ஒரு உயிர் இருக்குமா? என்று எண்ணி அகம் குளிர்வேன்.

இன்று கூட தன் மகனின் திருமணம் பற்றி பேசிய அவர்… என்னை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச்சென்றார்.

தனது மகன் குடிகாரனாக இருப்பதால் அவனுக்கு தான் வரன் பார்க்கப்போவதில்லை என்று கூறினார். இதனால் அவருக்கும் அவரது மகனுக்கு கடுமையான சண்டை வருவதாக கூறினார். தான் கட்டாயம் தனது மகனுக்கு வரன் தேட மாட்டேன் என்றும்… அதற்கு காரணம் “தான் சிறுவயதில் ஒரு குடிகாரனிடம் வாக்கப்பட்டு சீரழிந்ததைப்போல.. எனது மகனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு இன்னொரு அப்பாவி பிள்ளைய சீரழிக்க மாட்டேன்” என்றார்.

எனக்கு கண்கள் கலங்கி விட்டது. நீதி நேர்மை எல்லாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.

தன் சாதி, தன் ஊர், தன் மகன், தன் இனம் என்றால் எந்த தவறு செய்திருந்தாலும் அதை சரியென்று சொம்பு தூக்கும் இந்த உலகில். தன் மகனாகவே இருப்பினும் ஒரு அப்பாவி உயிர் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணிய இந்த தாயை என்னவென்று சொல்வது?

இவருக்கு இறைவன் இன்னும் அதிகம் அதிகம் ஆயுளையும் நன்மைகளையும் தரட்டும் என்று வேண்டியவனாய் வழியனுப்பி வைத்தேன். என் அகத்தை அந்தத் தாயின் கண்ணீரில் ஒரு முறை கழுவி சுத்தம் செய்து கொண்டேன்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

ரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றிவிட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

‘’தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்‌ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையிதோ இல்லியோ நிகழ்ச்சியோட பேரக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி ‘’மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், ‘’கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’ என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர கலகம் செய்தனர். ‘’எக்ஸாம் ஸ்ட்ரசுக்கா நடத்துறியா? எலெக்சன் ஓட்டுக்கா நடத்துறியா?’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். முற்போக்கு மாணவர்களுக்கு ஆதரவாக, கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கரவொலியும் விசில் சத்தமும் காதை பிளந்தது. மோடியின் நேரலை நிகழ்வும் அத்தோடு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலைந்து சென்றனர்.

அரசு அதிகாரத்தை முறைகேடான நோக்கத்துக்கு பயன்படுத்த எத்தனிக்கிறது, மோடி அரசு. சங்கிகள் கொண்டையை மறைத்துவிட்டு வந்தாலும் தப்ப முடியாது என வச்சி செய்திருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்.  கல்லூரியின் பெயரில் மட்டுமல்ல; பார்ப்பன எதிர்ப்பு மரபில் வந்தவர்கள் நாங்கள் என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். மோடிக்கு தமிழகத்தில் எங்கும் இடமில்லை.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்,
திருச்சி. தொடர்புக்கு: 99431 76246


இதையும் பாருங்க

எலே எங்க வந்து நடத்துற ரத யாத்திரை !

மறுபிறவி எடுத்த தாயின் ஆன்மா ! மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் இறுதிப் பகுதி !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 58

மாக்சிம் கார்க்கி

அன்பார்ந்த நண்பர்களே,

சோவியத் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக தாய் நாவல் தொடரை வெளியிட்டோம். அந்த தொடர் இன்றுடன் முடிகிறது. அக்டோபர் 12, 2018 அன்று ஆரம்பித்த தொடர் இந்த கடைசி பாகத்துடன் சேர்த்து மொத்தம் 74 பாகங்கள் வெளி வந்திருக்கிறது. படிப்பதற்கு தோதான வடிவமைப்பு, படங்களுடன் இந்நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இலக்கியம் வழியாக அரசியலை அறிமுகம் செய்வதற்கு இந்த நாவல் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இந்நாவலின் மாந்தர்கள் வெறுமனே ஒரு இலக்கியத்தில் உருவான பாத்திரங்கள் அல்ல. அவர்கள் பொதுவுடமைக் கட்சியின் வரலாற்றில், புரட்சிக்கான போராட்டத்தில் பங்கேற்ற நிஜ மனிதர்கள். ஆகவே அனைவரும் இதை அவசியம் படிக்க வேண்டும். படிக்காதோர் கண்டிப்பாக படிக்க வேண்டும். புதியவர்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவும் வேண்டும்.

தாய் நாவல் குறித்து உங்கள் கருத்துக்கள், நினைவுகள், அனுபவங்களை எழுதி அனுப்பலாம். தெரிவு செய்யப்படும் பதிவுகள் வெளியிடப்படும். விரைவில் அடுத்த நாவல் தொடரை வெளியிடுகிறோம். நன்றி!

வாழ்த்துக்களுடன்
வினவு

தாய் தெருவுக்கு வந்தவுடன், குளிர்ந்து விறைக்கும் வாடைக்காற்று அவளது உடம்பை இறுகப் பிணைத்து அவளது நாசியைத் துளைத்தது; ஒருகணம் மூச்சையே திணற அடித்தது. அவள் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். பக்கத்து மூலையில் தொளதொளத்த தொப்பியோடு ஒரு வண்டிக்காரன் நின்றுகொண்டிருந்தான். அதற்கு அப்பால் தெருக்கோடியில் கூனிக்குறுகி தனது தலையை உள்ளிழுத்து தோள்களுக்குள் புதைந்தவாறே ஒரு மனிதன் நடந்து சென்றான்; அவனுக்கும் அப்பால் ஒரு சிப்பாய் தன் செவிகளைத் தேய்த்து விட்டவாறே ஓடிக்கொண்டிருந்தான்.

“அந்த சிப்பாயை எங்காவது கடைக்கு அனுப்பியிருப்பார்கள்” என்று அவள் எண்ணினாள். எண்ணிக்கொண்டே, தனது காலடியில் நசுங்கி நொறுங்கும் பனிக்கட்டிகளின் சத்தத்தைக் கேட்டவாறே நடந்து போனாள். அவள் ரயில் நிலையத்துக்கு நேரங்காலத்தோடேயே வந்து சேர்ந்துவிட்டாள். அழுக்கும் அசுத்தமும் அடைந்திருந்த மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் அறையில் ஒரே ஜனக்கூட்டமாக இருந்தது. அங்கிருந்த தொழிலாளர்களை எல்லாம் குளிர் உள்ளே அடித்து விரட்டியிருந்தது. வண்டிக்காரர்களும், வீடு வாசலற்று கந்தல் கந்தலான உடையணிந்த அனாதைகளும் அங்கு நிறைந்திருந்தார்கள். அங்கு பிரயாணிகளும் இருந்தார்கள். சில விவசாயிகள், மென்மயிர்க்கோட் அணிந்த கொழுத்த வியாபாரி ஒருவன், ஒரு மதகுரு, அம்மைத் தழும்பு முகங்கொண்ட அவரது மகள், ஐந்தாறு சிப்பாய்கள், நிலை கொள்ளாது தவிக்கும் சில அங்காடிக்காரர்கள். இவர்கள்தான் அங்கிருந்தார்கள்.

ஜனங்கள் தேநீர் குடித்தார்கள், புகைபிடித்தார்கள்; ஓட்கா அருந்தினார்கள், சளசளத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிற்றுண்டிச்சாலையின் அருகே யாரோ குபுக்கென்று வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்களது தலைக்கு மேலாக புகைச் சுழல் வட்டமிட்டுச் சுழன்றது. கதவுகளைத் திறக்கும்போது அவை முனகிக் கீச்சிட்டன. கதவுகளை அடைக்கும்போது ஜன்னல் கண்ணாடிகள் நடுநடுங்கி கடகடத்து ஒசை செய்தன. அந்த அறையிலே சுருட்டு நாற்றமும் கருவாட்டு நாற்றமுமே நிறைந்திருந்தன.

தாய் வாசல் பக்கத்தில் ஓர் எடுப்பான இடத்தில் உட்கார்ந்து காத்திருந்தாள். எப்போதாவது கதவு திறக்கப்பட்டால் அவளது முகத்தில் குளிர்ந்த காற்று உறைக்கும். அந்தக் குளிர் அவளுக்கு இன்பம் அளித்தது. அப்படிக் காற்று உறைக்கும் போதெல்லாம் அவள் அதை இழுத்து சுவாசித்து அனுபவித்தாள். ஜனங்கள் பெரும்பாலோர் மூட்டை முடிச்சுகளோடும் கனத்த மாரிக்காலத் துணிமணி அணிந்து உள்ளே வந்தார்கள். அவர்கள் கதவு வழியே நுழைய முடியாமல் திண்டாடினார்கள்; திட்டிக்கொண்டார்கள். தரைமீதோ பெஞ்சின் மீதோ சாமான்களைத் தாறுமாறாகப் போட்டுவிட்டு, தமது கோட்டுக் காலரிலும் கைகளிலும் தாடி மீசைகளிலும் படிந்துகிடக்கும் பனித்துகள்களைத் தட்டிவிட்டார்கள்.

ஒரு தோல் பெட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு ஓர் இளைஞன் உள்ளே வந்தான், சுற்றுமுற்றும் பார்த்தவாறே அவன் தாயை நோக்கி நேராக வந்தான்.

“மாஸ்கோவுக்கா?” என்று கேட்டான்.

”ஆமாம். தான்யாவைப் பார்க்கப் போகிறேன்” என்றாள் அவள்.

“ஆஹா”

அவன் அந்தத் தோல் பெட்டியை அவளருகிலே பெஞ்சின் மீது வைத்தான், சிகரெட்டைப் பற்ற வைத்தான். தன் தொப்பியை உயர்த்தி வைத்தான். அடுத்த வாசல் வழியாகச் சென்று மறைந்தான். தாய் அந்தக் குளிர்ந்துபோன தோல் பெட்டியைத் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். பிறகு அதன் மீது முழங்கையை ஊன்றிச் சாய்த்தவாறே திருப்தியுணர்ச்சியோடு தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களைப் பார்த்தாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் அந்த இடத்தைவிட்டு எழுந்து வெளிவாசல் புறத்துக்கு அருகிலுள்ள பெஞ்சை நோக்கி நடந்தாள். அவள் தலையை நிமிர்த்தித் தன்னைக் கடந்து செல்பவரின் முகங்களைக் கவனித்தவாறே அந்தத் தோல் பெட்டியைக் கையில் சுமந்து கொண்டே நடந்து சென்றாள். பெட்டி ஒன்றும் அவ்வளவு பெரியதாகவோ கனமாகவோ இல்லை.

ஓர் இளைஞன் தனது குட்டையான கோட்டின் காலரைத் தூக்கி விட்டவாறே தாயின் மீது மோதினான். அவன் தன் கையால் தலையைத் தடவியவாறே பேசாமல் ஒதுங்கிச் சென்றான். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனை எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது. அவள் திரும்பிப் பார்த்தாள். அவனும் தனது வெளுத்த கண்களால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கூரிய பார்வை அவளது நெஞ்சைக் கத்தி போலக் குத்தியது, தோல் பெட்டியைப் பிடித்திருந்த அவளது கரம் பலமிழந்து தள்ளாடியது. திடீரென்று அந்தப் பெட்டியின் கனம் அதிகரித்துவிட்டது போல் தோன்றியது.

”இவனை நான் இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறேனே” என்று யோசித்தாள் அவள். தனது இதயத்திலே தோன்றிய புழுக்க உணர்ச்சியை அவள் வெளியேற்றிவிட முனைந்தாள். தனது இதயத்தை மெதுவாக, எனினும் தவிர்க்க முடியாதபடி உறையச் செய்யும் அந்த உணர்ச்சியை அலசி ஆராய அவள் விரும்பவில்லை. அதை ஒதுக்கித் தள்ளினாள். ஆனால் அந்த உணர்ச்சியோ விம்மி வளர்ந்து அவளது தொண்டைக் குழி வரையிலும் முட்டி மோதி அவளது வாயில் ஒரு வறண்ட கசப்புணர்ச்சியை நிரப்பியது. அவள் தன்னை அறியாமலேயே அந்த மனிதனை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு ஆளானாள். அவள் திரும்பினாள். அவன் அதே இடத்தில் கால் மாறி நின்று கொண்டு ஏதோ செய்ய எண்ணுவது போலவும் நின்று கொண்டிருந்தான். அவனது வலது கை கோட்டுப் பித்தான்களுக்கிடையில் நுழைந்து போயிருந்தது. இடது கை கோட்டுப் பைக்குள் இருந்தது. எனவே அவனது வலது தோள் இடது தோளைவிட உயர்ந்ததாகத் தோன்றியது.

அவள் பெஞ்சை நோக்கிச் சென்று மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் தன்னுள் உள்ள எதுவோ நொறுங்கிப் போய்விடும் என்ற பயத்தோடு உட்காருவது போல் ஓரிடத்தில் அமர்ந்தாள். வரும் துன்பத்தை உணர்த்தும் கூரிய முன்னுணர்வினால் கிளரப்பட்ட நினைவில், இரண்டு முறை அம்மனிதனைப் பார்த்ததாக திடுமென்று அவளுக்கு நினைவு வந்தது. ரீபின் தப்பியோடும்போது நகரின் கோடியிலுள்ள வெட்டவெளி மைதானத்தில் அவனை ஒருமுறை அவள் கண்டிருக்கிறாள். இரண்டாவது முறையாக அவனை விசாரணையின்போது பார்த்திருக்கிறாள். ரீபின் தப்பியோடும் போது தன்னை விசாரித்த போலீஸ்காரனுக்குத் தப்பான வழியைச் சுட்டிக் காட்டினாள். அந்தப் போலீஸ்காரனும் நீதிமன்றத்தில் இவன் பக்கத்தில் அப்பொழுது நின்று கொண்டிருந்தான். சரிதான். தன்னைப் பின்தொடர்ந்துதான் அவன் வருகிறான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். தெளிவாக அறிந்து கொண்டாள்.

“அகப்பட்டுவிட்டேனா?” என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் தன்னுள் நடுங்கிக்கொண்டே அதற்குப் பதிலும் கூறிக்கொண்டாள்.

”இன்னும் அகப்படவில்லை.”

ஆனால் உடனேயே அவள் பெரு முயற்சி செய்து மீண்டும் தனக்குள் உறுதியோடு சொல்லிக் கொண்டாள்:

”அகப்பட்டுவிட்டேன்!”

அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்; ஆனால் எதுவும் அவள் கண்ணில் படவில்லை. அவள் மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பளிச்சிட்டுத் தோன்றின.

“இந்தத் தோல் பெட்டியை விட்டுவிட்டு நழுவிவிடலாமா?”

இந்த எண்ணத்தை மீறி இன்னொரு எண்ணம் பளிச்சிட்டது.

”என்னது? என் மகனது வாசகங்களை நிராகரித்துவிட்டுச் செல்வதா? இவர்கள் போன்றவர்களிடம் விட்டுவிட்டுச் செல்வதா?”

அவள் பெட்டியை இறுகப் பிடித்தாள்.

“இதையும் தூக்கிக்கொண்டே போய்விடலாமா? ஓடி விடலாமா?”

இந்த எண்ணங்கள் எல்லாம் அவளுக்கு அன்னியமாய்த் தோன்றின. யாரோ வேண்டுமென்றே இந்த எண்ணங்களைத் தன் மனத்தில் திணிப்பது போல் இருந்தது. அவை அவளது மனக்குகையிலே எரிந்து கனன்றன; ஊசி முனைகளைப் போல் அவளது நெஞ்சைத் துளைத்தன. அந்த வேதனையுணர்ச்சியால் அவள் தன்னை மறந்தாள். தனக்கு அருமையான சகலவற்றையும், பாவெலையும்கூட மறந்தாள். ஏதோ ஒரு பகைச் சக்தி அவளது தோள்களையும் நெஞ்சையும் அழுத்திக்கொண்டு அவளை மரண பயத்துக்கு ஆளாக்குவது போலிருந்தது. அவளது நெற்றிப்பொட்டிலுள்ள ரத்தக் குழாய்கள் படபடத்துத் துடித்தன. அவளது மயிர்க்கால்களில் உஷ்ணம் பரவுவது மாதிரி இருந்தது.

திடீரென்று அவள் பெருமுயற்சி செய்து தன் எண்ணங்களையெல்லாம் கேவலமானதாக, வலுவற்றதாகக் கருதி அவற்றை மிதித்து ஒதுக்கினாள். தனக்குத் தானே கம்பீரமாகச் சொல்லிக்கொண்டாள்:

”உனக்கு வெட்கமாயில்லை?”

இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அவள் தெளிவடைந்தாள். அவள் மனத்தில் தைரியம் குடிபுகுந்தது. தனக்குள் பேசிக்கொண்டாள்:

”உன் மகனை இழிவுபடுத்தாதே. இதற்குப் போய் யாராவது பயப்படுவார்களா?”

அவளது கண்களில் யாரோ ஒருவனின் சோகமான மங்கிய பார்வை பட்டது. அவளது மனத்தில் ரீபினின் முகம் தோன்றியது. சில கணநேரத் தயக்கத்துக்குப் பின்னர் அவளது உள்ளமும் உடலும் நிதானத்துக்கு வந்தன, இதயத்துடிப்பு சமனப்பட்டது.

“இப்போது என்ன நடக்கும்?” என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தவாறே எண்ணிக்கொண்டாள்.

அந்த உளவாளி ஸ்டேஷன் காவல்காரனைக் கூப்பிட்டு அவனிடம் அவளைக் கண்ணால் சுட்டிக்காட்டி ஏதோ ரகசியமாகக் கேட்டான். அந்தக் காவலாளி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போனான். இன்னொரு காவலாளி வந்தான். அவனிடமும் அவன் ரகசியம் பேசினான். அதைக் கேட்டு அவன் முகத்தைச் சுழித்தான். அவன் ஒரு கிழவன், நரைத்த தலையும் சவரம் செய்யாத முகமும் கொண்டவனாகத் தோன்றினான். அவன் அந்த உளவாளியை நோக்கித் தலையை ஆட்டிவிட்டு, தாய் அமர்ந்திருந்த பெஞ்சை நோக்கி வந்தான்.

அந்த உளவாளி அதற்குள் மறைந்து போய்விட்டான்.

அந்தக் காவலாளி நிதானமாக அவளிடம் வந்து அதிருப்தியுணர்ச்சியோடு தாயைப் பார்த்தான். அவள் பெஞ்சிலிருந்தவாறே குன்றிக் குறுகினாள்.

“இவர்கள் என்னை மட்டும் அடிக்காமலிருந்தால்!” என்று எண்ணினாள்.

அவன் அவள் முன் நின்றான். ஒரு நிமிஷம் பேசாது நின்றான், கடுமையாகச் சொன்னான்:

“நீ என்ன பார்க்கிறாய்?”

“ஒன்றுமில்லை.”

“அப்படியா? திருடி! இந்த வயசிலுமா திருட்டுப்புத்தி?”

அந்த வார்த்தைகள் அவளது முகத்தில் ஓங்கியறைந்தன. ஒருமுறை – இரு முறை அந்தக் குரோதத் தாக்குதல் அவளது தாடையையே பெயர்த்து, கண்களைப் பிதுங்கச் செய்வது மாதிரி வேதனை அளித்தது.

”நானா? நான் ஒன்றும் திருடியில்லை. பொய் சொல்கிறாய்” என்று தன்னால் ஆனமட்டும் உரத்த குரலில் கத்தினாள் அவள். அவமானத்தின் கசப்பாலும், கோபவெறியின் சூறாவளியாலும் அவளது சர்வ நாடியுமே கதிகலங்கிப் போயின. அவள் தோல் பெட்டியை உலுக்கித் திறந்தாள்.

”பாருங்கள்; எல்லோரும் பாருங்கள்!” என்று கத்திக்கொண்டே அவள் துள்ளியெழுந்தாள். அவளது கைகளில் ஒரு கத்தைப் பிரதிகளை எடுத்துக்கொண்டு தலைக்கு மேலே உயர்த்தி ஆட்டிக் காட்டினாள்.

அவளை நோக்கி நாலா திசைகளிலிருந்தும் ஓடி வரும் ஜனங்களின் பேச்சுக்குரல் அவளது காதின் இரைச்சலையும் மீறிக் கேட்டது.

“என்ன நடந்தது?”

“அதோ அங்கே – ஓர் உளவாளி.”

”என்ன அது?”

“இவளை அவர்கள் திருடியென்கிறார்கள்.”

”பார்த்தாலே கண்ணியமானவளாய்த் தெரிகிறதே! இவளையா? ச்சூ! ச்சூ!”

”நான் திருடியல்ல” என்று உரத்தக் குரலில் சத்தமிட்டாள் தாய். தன்னைச் சுற்றி சூழ்ந்த ஜனக்கூட்டத்தைக் கண்டு அவளுக்கு ஓரளவு அமைதி ஏற்பட்டது.

”நேற்று அரசியல் குற்றவாளிகள் சிலரை விசாரணை செய்தார்கள். அந்தக் குற்றவாளிகளில் என் மகனும் ஒருவன். அவன் பெயர் விலாசவ். அவன் அங்கு ஒரு பிரசங்கம் செய்தான். இதுதான் அந்தப் பேச்சு அதை நான் மக்களிடம் வழங்கப் போகிறேன். அவர்கள் இதைப் படிக்கட்டும். உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும்…”

யாரோ மிகுந்த ஜாக்கிரதையோடு அவள் கையிலிருந்து ஒரு பிரதியை உருவிப் பிடுங்கினார்கள். அவள் அவற்றை மேலே உயர்த்தி ஆட்டிக் கொண்டே, ஜனக்கூட்டத்தில் விட்டெறிந்தாள்.

”இதற்கு உனக்குச் சரியான தண்டனை கிடைக்கும்” என்று யாரோ, கூட்டத்திலிருந்து பயந்த குரலில் சத்தமிட்டார்கள்.

ஜனங்கள் அந்தப் பிரதிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்துத் தமது கோட்டுகளுக்குள்ளும் பாக்கெட்டுகளுக்குள்ளும் மறைத்துக் கொள்வதைக் கண்டாள். இதைக் கண்டவுடன் அவளுக்கு மீண்டும் உறுதி பிறந்தது. அசையாமல் நின்றாள். அவள் அமைதியோடு அழுத்தத்தோடு பேசினாள். அவளது இதயத்தினுள்ளே ஓங்கி வளரும் இன்பத்தையும் பெருமிதத்தையும் உணர்ந்தாள். பேசிக்கொண்டே பெட்டியிலிருந்து அந்தப் பிரதிகளை வாரியெடுத்து அங்குமிங்கும் கைகளை நீட்டிப் பிடிப்பதற்காகத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்தை நோக்கி விட்டெறிந்தாள்.

”என் மகனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள் தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு தாயின் இதயத்தை, என் போன்ற ஒரு கிழவியின் பேச்சை நீங்கள் நம்ப முடியும் அல்லவா? அவர்களை விசாரணைக்குக் கொண்டு வந்தது ஏன்? எல்லோருக்கும் அவர்கள் உண்மையை எடுத்துக் கூறியதற்காகத்தான். அந்த உண்மையை மறுத்துப் பேச ஒருவன்கூட இல்லை என்று நேற்று நான் உணர்ந்தேன்.”

கூட்டம் அவளைச் சுற்றி அமைதியோடு பெருகியது. வட்டமிட்டுச் சூழ்ந்து நின்றது.

“வறுமை, பசி, பிணி — தங்களது உழைப்புக்கு பிரதியாக, மக்களுக்கு இவைதான் கிடைக்கின்றன. சகல விஷயங்களுமே நமக்கு எதிராக இயங்குகின்றன. நமது வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு நாளும், நமது கடைசி மூச்சுவரை, இறுதி பலத்தையும் நமது உழைப்புக்காக அர்ப்பணம் செய்வதால் எப்போதும் நாம் அழுக்கடைந்து அவர்களால் ஏமாற்றவும்படுகிறோம். நாம் பெற வேண்டிய இன்பத்தையும், நலன்களையும் மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள். சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நாய் மாதிரி நம்மை அவர்கள் அறியாமையில் ஆழ்த்தியுள்ளார்கள் – நமக்கு எதுவுமே தெரிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் பயப்படுகிறோம் – நாம் எதையும் தெரிந்து கொள்ளவே அஞ்சுகிறோம். நமது வாழ்க்கையே விடியாத இருள் நிறைந்த இரவாகப் போய்விட்டது!”

”சரிதான்” என்று ஒரு மங்கிய குரல் எதிரொலித்தது.

“அவளது வாயை மூடு!”

கூட்டத்திற்குப் பின்னால் அந்த உளவாளியும் இரண்டு போலீஸ்காரர்களும் வருவதை தாய் கண்டுவிட்டாள். அவள் அவசர அவசரமாக மிஞ்சியிருந்த பிரதிகளை விநியோகிக்க முனைந்தாள். ஆனால் அவளது கை தோல் பெட்டியைத் தொட்டபோது, அவளது கையோடு யாரோ ஒருவனின் கையும் மோதியது.

”எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக் கொள்ளுங்கள்” என்று குனிந்து கொண்டே சொன்னாள் அவள்.

“கலைந்து போங்கள்!” என்று சத்தமிட்டுக்கொண்டே போலீஸ்காரர்கள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஜனங்கள் வேண்டா வெறுப்பாக வழிவிட்டு, அந்தப் போலீஸ்காரர்களை முன்னேற விடாமல், தம்மையறியாமலேயே அவர்களை நெருக்கித் தள்ளினார்கள். அன்று விரித்த பிரகாசமான கண்களோடு அந்த அன்புருவான கிழவியைக் கண்டு எல்லாரும் தவிர்க்க முடியாதபடி கவர்ச்சி கொண்டார்கள். வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் ஒட்டின்றிப் பிளந்து போயிருந்த அந்த ஜனங்கள், அந்தப் பொழுதில் தாங்கள் அனைவரும் ஒரே இனமாக மாறிவிட்டது போல் உணர்ந்தார்கள். அந்த உத்வேகமான வார்த்தைகளை ஆழ்ந்த மன உணர்ச்சியோடு கேட்டார்கள். அந்த வார்த்தைகள்தான் வாழ்க்கையில் அநீதியால் துன்பத்துக்காளான எண்ணற்ற இதயங்கள் எவ்வளவோ காலமாகத் தேடித் திரிந்த வார்த்தைகளாக ஒலித்தன. தாய்க்கு அருகில் நின்ற ஜனங்கள் மெளனமாக நின்றார்கள். அவளையே விழுங்கிவிடுவதுபோல் இமை கொட்டாமல் பார்த்தார்கள். அவர்களது உஷ்ண மூச்சுக் காற்றுக் கூடத் தன் முகத்தில் உறைப்பதை அவள் உணர்ந்தாள்.

“ஏ, கிழவி, போய்விடு!”

“அவர்கள் உன்னை ஒரு நிமிஷத்தில் பிடித்துவிடுவார்கள்.”

“இவளுக்குத்தான் என்ன தைரியம்!”

“போங்கள் இங்கிருந்து! கலைந்து போங்கள்!” என்று கத்திக்கொண்டே போலீஸ்காரர்கள் மேலும் நெருங்கி வந்தார்கள். தாய்க்கு எதிராக நின்ற ஜனங்கள் ஆடியசைந்து ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தன்னை நம்பவும், தான் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் தயாராயிருப்பதாகத் தோன்றியது. எனவே அவள் அவசரமாக, தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையும், தனது அனுபவத்தால் கண்டறிந்த சகல எண்ணங்களையும் அவர்களுக்குச் சொல்லித் தீர்த்துவிட எண்ணினாள். அந்த எண்ணங்கள் அவளது இதயத்தின் அடித்தளத்திலிருந்து லாவகமாகப் பிறந்தெழுந்து, கவிதா சொரூபமாக இசைத்துக்கொண்டு வெளியேறின. ஆனால் அந்தக் கவிதையை தன்னால் பாடிக்காட்ட முடியவில்லையே என்று அவள் வேதனைப்பட்டாள். அவளது குரல் நடுநடுங்கி உடைந்து கரகரத்து ஒலித்தது.

“தனது ஆன்மாவை விற்றுவிடாத ஒரு தொழிலாளியின் நேர்மை நிறைந்த பேச்சுத்தான் என் மகனின் பேச்சு. நேர்மையான வாசகம்! அந்த வாசகத்தின் தைரியத்தைக் கொண்டே நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள்?”

ஒரு இளைஞனது இரண்டு கண்களும் அவளைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்துக்கொண்டேயிருந்தன.

யாரோ அவளது மார்பில் தாக்கினார்கள். அவள் பெஞ்சின் மீது விழுந்தாள். ஜனக்கூட்டத்துக்கு மேலாக போலீஸ்காரர்களின் கைகள் தெரிந்தன. ஜனங்களைத் தோளைப் பிடித்தும் கழுத்தைப் பிடித்தும் தள்ளிக்கொண்டும் தொப்பிகளைப் பிடுங்கியெறிந்து கொண்டும் அவர்கள் முன்னேறி வந்தார்கள். தாயின் கண்களில் எல்லாமே இருண்டு மங்கித் தோன்றின. அவள் தனது ஆயாசத்தை உள்ளடக்கி வென்று கொண்டே, தனது தொண்டையில் மிஞ்சி நின்ற சக்தியோடு உரத்துக் கத்த முனைந்தாள்.

”ஜனங்களே! ஒன்று திரளுங்கள் ஓரணியில் பலத்த மாபெருஞ் சக்தியாகத் திரண்டு நில்லுங்கள்!”

ஒரு போலீஸ்காரன் தனது கொழுத்த பெருங்கையினால் அவளது கழுத்தை எட்டிப்பிடித்து உலுக்கினான்:

“வாயை மூடு!”

அவளது தலை சுவரில் மோதியது. ஒரு கணநேரம் அவளது இதயத்தில் பயம் சூழ்ந்து இருண்டது. ஆனால் மறுகணமே அந்தப் பயம் நீங்கி ஒரு ஜோதி வெள்ளம் பொங்கியெழுந்து அந்த இருளை அப்பால் துரத்தியடித்தது.

“போ, போ” என்று சொன்னான் அந்தப் போலீஸ்காரன்.

“எதைக் கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்! நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையைவிட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப் போவதில்லை …”

“வாயை மூடு. நான் சொல்லுகிறேன், வாயை மூடு”

அந்தப் போலீஸ்காரன் அவள் கையைப் பிடித்து, வெடுக்கென்று இழுத்தான். இன்னொரு போலீஸ்காரன் அவளது மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டான். இருவருமாக அவளை இழுத்துச் சென்றனர்.

“உங்களது இதயத்தையே தின்று கொண்டிருக்கும் கசப்பைவிட தினம் தினம் உங்களது நெஞ்சையே சுவைத்துக் கடிக்கும் கொடுமையை விட…”

அந்த உளவாளி அவளை நோக்கி ஓடி வந்தான். தனது முஷ்டியை அவளது முகத்துக்கு நேராக உயர்த்திக் காட்டிக் கத்தினான்:

“ஏ, நாயே! வாயை மூடு!”

அவளது கண்கள் அகன்று விரிந்து பிரகாசித்தன. அவளது தாடை துடிதுடித்தது. வழுக்கலான கல் தரையின் மீது காலைப் பலமாக ஊன்றிக்கொண்டு அவள் மேலும் கத்தினாள்:

”அவர்கள் மறு பிறவி எடுத்த என் ஆத்மாவைக் கொல்லவே முடியாது.”

”ஏ நாயே!”

அந்த உளவாளி அவளது முகத்தில் அறைந்தான்.

“வேண்டும், அந்தக் கிழவிக்கு!” என்று யாரோ வெறுப்போடு கத்தினார்கள்.

ஒரே கணத்தில் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்த ஏதோ ஒன்றால் அவள் கண்கள் இருண்டன. ரத்தத்தின் உப்புக்கரிக்கும் ருசி அவள் வாயில் தட்டுப்பட்டது.

அவளைச் சுற்றிலும் எழுந்த ஆவேசக் குரல்களால் தாய் மீண்டும் உணர்ச்சி பெற்று விழிப்புற்றாள்.

“அவளைத் தொடாதே!”

“வாருங்களடா பயல்களா!”

“டே போக்கிரி, உன்னைத்தான்!”

”அவனை உதையடா!’

“அவர்கள் நம் அறிவை ரத்தமயமாக்க முடியாது!”

”அவர்கள் அவளைப் பின்னாலிருந்து கழுத்தில் கைகொடுத்துத் தள்ளினார்கள்; அவளது தலையிலும் தோளிலும் அறைந்தார்கள். கூச்சலும் கும்மாளமும் அலறலும் விசில் சப்தமும் ஒன்றோடொன்று எழும்பியொலித்த குழப்பத்தில் அவள் கண் முன்னால் பளிச்சிட்டுத் தோன்றி எல்லாம் சுழல ஆரம்பித்தன; அந்தக் கூக்குரல்கள் அவள் காதைச் செவிடுபடச் செய்தன. அவளது தொண்டை அடைத்தது, திணறியது; அவளது காலடியிலே இருந்த நிலம் நழுவி இறங்கியது. அவள் கால்கள் தள்ளாடின. உடம்பு வேதனையின் குத்தல் உணர்ச்சியால் பளுவேறி உழலாடி, ஆதரவற்றுத் தடுமாறியது. எனினும் அவளது கண்கள் மட்டும் தமது பிரகாசத்தை இழக்கவில்லை. அந்தக் கண்கள் மற்ற கண்களை நெருப்பாகக் கனன்றெரியும் கண்களை, தனக்குப் பழக்கமான துணிவாற்றலின் ஜோதியோடு ஒளி செய்யும் கண்களை, தனது இதயத்துக்கு மிகவும் அருமையாகத் தோன்றிய கண்களைக் கண்டு களித்தன.

அவர்கள் அவளை வாசற்புறமாகத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

அவள் ஒரு கையைப் பிடுங்கி விடுவித்துக்கொண்டு கதவின் கைப்பிடியை எட்டிப் பிடித்தாள்.

“இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது!”

அவர்கள் அவள் கையில் பட்டென்று அறைந்தார்கள்.

”ஏ, முட்டாள்களே நீங்கள் வீணாக எங்கள் பழியைத்தான் தேடிக் கொள்கிறீர்கள். உங்களது கொடுமைகளெல்லாம் ஒரு நாள் உங்கள் தலையிலேயே வந்து விடியப்போகின்றன!”

ஒரு போலீஸ்காரன் அவளது தொண்டையைப் பிடித்து அவளது குரல்வளையை நெரித்துத் திணறடித்தான்.

”அதிருஷ்டங்கெட்ட பிறவிகளே!” என்று அவள் திணறினாள்.

யாரோ ஓர் உரத்த தேம்பலால் அதற்குப் பதில் அளித்தார்கள்.

(முற்றும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? – ‍மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

வசரநிலை காலத்தில், இந்திரா காந்தியின் மத்திய அரசு அரசமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்திருந்தது (suspended fundamental rights); விசாரணை இன்றி சிறையில் அடைக்கும் “மிசா” சட்டத்தின் கீழ் ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட ஆயிரக் கணக்கானோரை சிறையில் அடைத்தது; சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சட்டப்படி அடைக்கப்பட்டார்களா என்ற கேள்வியை ஆட்கொணர்வு ரிட் மனுவில் உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ விசாரிக்க முடியுமா என்ற வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

நீதிபதி H.R.கன்னா

அதில் நான்கு நீதிபதிகள், அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். ஆனால், நீதிபதி H.R.கன்னா மட்டும் அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 21 வழங்கும் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையும் தனிநபர் சுதந்திரமும் ஒவ்வொரு மனிதனும் பெற்ற இயற்கையான உரிமைகள் என்பதால் மற்ற அடிப்படை உரிமைகளை அவசரநிலை காலத்தில் நிறுத்தி வைக்கலாமே ஒழிய, மனித சமூகம் பெற்ற இந்த இயற்கையான உரிமைகளை எந்த அரசும் நிறுத்தி வைக்க முடியாது என்றார். இதனால் மூத்த நீதிபதியான அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டு அவருக்கு இளைய நீதிபதி தலைமை நீதிபதியாக்கப்பட்டார்.

இதனை கண்டிக்கும் விதமாக H.R.கன்னா உச்சநீதிமன்ற நீதிபதி பதவியையே துறந்தார். மனித உரிமை காப்பாளர் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக உறுதியாக நின்றவர் என சமூகம் — குறிப்பாக நீதித்துறையை சார்ந்தவர்கள் — அவரை இன்றும் கொண்டாடுகிறது. 42 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிபதி H.R.கன்னாவின் தீர்ப்பே சரியானது என்று வரலாற்று சிறப்பான தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கன்னாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 10-01-2019 அன்று தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு (collegium) பரிந்துரைத்தது என்றும், உடனே 16-01-2019 அன்று மத்திய அரசு அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.

சஞ்சய் கன்னா, மேற்சொன்ன H.R.கன்னாவின் சகோதரரின் மகன். டில்லி உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 3 மூத்த நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டு, நான்காவது இடத்தில் இருக்கும் சஞ்சய் கன்னாவிற்கு இப்பதவி கொடுக்கப்படுகிறது. இது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியை துறந்த H.R.கன்னாவிற்கு செய்யும் அவமரியாதை.

இந்த 3 மூத்த நீதிபதிகளில் இருவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக உள்ளனர். சஞ்சய் கன்னா தலைமை நீதிபதியாகவே ஆகவில்லை.

படிக்க:
♦ நீதித்துறையை மிரட்டும் மோடி அரசு ! நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்
♦ அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்

முதல் நிலையில் இருக்கும் பிரதீப் நந்ராஜோக்-ஐ உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 12-12-2018 அன்று கூடிய தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு முடிவெடுத்தது. அந்த ஐவரில் ஒருவரான மதன் B. லோகூர் 12-12-2018-க்கு பின்னர் ஓய்வு பெற்தால் தேர்வுக்குழுவில் 5-வது நீதிபதியானார் அருண்மிஸ்ரா.

அருண்மிஸ்ராவை உள்ளடக்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு 12-12-2018 முடிவை கைவிட்டது. அருண்மிஸ்ரா தவிர்த்து மற்ற நால்வரும் 12-12-2018 மற்றும் 10-01-2019 ஆகிய இரு தேர்வுக்குழுக்களிலும் இருந்தனர்.

முன்னாள் தலைமை நீதிபதி லோதா, ஒரு தேர்வுக்குழு எடுத்த முடிவை, அதில் ஒருவர் ஓய்வு பெற்றார் என்ற நிலையில் அடுத்த தேர்வுக்குழு மாற்றுவது சரியில்லை என்று கூறியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு அடுத்த நிலையில் இருந்த 4 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் — செல்லமேஸ்வர், தற்போதைய தலைமை நீதிபதி, குரியன் ஜோசப், மதன் B. லோகூர் — ஊடகத்தை சந்தித்தது நீதித்துறை வரலாற்றில் முதல்முறை நடந்த நிகழ்வு. மத்திய அரசு விரும்பும் வகையில், அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை தீர்மானிக்க அனுப்புவதில் அவர்களுக்கு ஆட்சேபனை உள்ளது என்று ஊடக சந்திப்பில் கூறினர்.

டில்லி உயர்நீதிமன்றத்தை சேர்ந்த மூன்று மூத்த நீதிபதிகளை புறந்தள்ளி சஞ்சய் கன்னாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதை ஆட்சேபித்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் முன்னர் பணியாற்றி தற்சமயம் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் கிஷன் கவுல் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதும் சுட்டிக் காட்டப்படவேண்டும். இந்திய பார் கவுன்சிலும் இதை கண்டித்துள்ளது.

இந்த நேரத்தில், கேரளத்தை சேர்ந்த K.M.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில் மத்திய அரசின் நிலைபாட்டை கவனிக்க வேண்டும். அவர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவர். அவர் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரும் மத்திய அரசின் உத்தரவை அவர் ரத்து செய்தார். எனவே அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்தது.

K.M.ஜோசப்பை நிராகரிப்பதற்கு அவர் அகில இந்திய சீனியாரிட்டியில் 42-வது இடத்தில் இருப்பதாக காரணம் காட்டிய மத்திய அரசு, அகில இந்திய சீனியாரிட்டியில் 33-வது இடத்தில் இருக்கும் சஞ்சய் கன்னாவின் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் தந்துள்ளது.

அகில இந்திய சீனியாரிட்டியைக் காட்டிலும் மிக முக்கியமானது, உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுபவர் முதலில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியா என்பதே ஆகும்.

இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்படாத அவசரகாலநிலை (undeclared emergency) இருப்பதையும் நீதித்துறையின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதையும் தெளிவாக்குகிறது.

முகநூலில்: மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

தேழ்தா குருப்ஸ்கயா 1894-ல் ஒரு மார்க்சிய படிப்பு வட்டத்தில் லெனினை முதன் முதலில் சந்தித்தார். அப்போதே தன்னளவில் ஒரு மார்க்சிஸ்டாக ஆகியிருந்த நதேழ்தா, 1898-ல் லெனின் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டபோது உடன் சென்றார். பின் 1924-ல் லெனின் மறையும் வரை அவரது ‘வாழ்க்கைத் துணை’ ஆக இருந்தார். குருப்ஸ்கயா தனித்துவமானதும், முக்கியமான கட்சிப் பணியை தொடர்ந்து ஆற்றி வந்துள்ளார். புரட்சிக்குப் பின் சோவியத் அரசில் கல்விக்கான அமைச்சகத்தில் அனடோலிலுனாசார்ஸ்க்கியின் கீழ்துணை அமைச்சரானார். 1939-ம் ஆண்டுவரை அந்தப் பணியில் இருந்துள்ளார்.

லெனின் ஒரு மகத்தான மார்க்சிஸ்ட்டாக உருவானதை அருகிலிருந்து நோக்கிய மற்றுமொரு சக மார்க்சிஸ்ட்டான குருப்ஸ்கயா, லெனினின் கற்றல் முறையைப் பற்றி எழுதியிருப்பது அனைவருக்குமான பாடம் ஆகும். (நூலிலிருந்து பக்.3)

மார்க்சின் எழுத்துக்களை லெனின் வாசிக்கும் போது கணக்கிலடங்காத அளவு அதன் உள்ளடக்கங்களை அவர் குறிப்பெடுத்துக் கொள்வார். லெனின் கல்விக் கழகத்தில், மார்க்சின் புத்தகங்களை படித்து அவர் எடுத்திருந்த பல குறிப்பேடுகள் உள்ளன.

மார்க்சின் எழுத்துக்களை அவர் மீண்டும், மீண்டும் படித்து, குறிப்புகள் எடுத்து அதன் உள்ளீடுகளை தனது எழுத்துக்களில் கொண்டு வந்தார். மார்க்சின் எழுத்துக்களை நன்கு அறிந்தவராக மட்டும் லெனின் இருந்துவிடவில்லை. மார்க்சின் கற்பித்தல்கள் மீது தனது ஆழமான சிந்தனையையும் செலுத்தினார். “கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்” என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவது மாநாட்டில் (1920) லெனின் குறிப்பிட்டுள்ளார். “அனைத்து தரவுகளையும் – மிகக் கடினமாக உழைத்து அறிந்து கொள்ளாமல், விமர்சனப்பூர்வமாக அணுகுமுறையின்றி, ஆயத்த (Readymade) முடிவுகள் அடிப்படையில் ஒருவர் கம்யூனிசம் பேசினாரென்றால் அவர் மோசமான கம்யூனிஸ்ட் இருப்பார்”. (லெனின் தேர்வுநூல்கள் தொகுதி – XXV) (நூலிலிருந்து பக்.8)

“ஒன்றை முழுமையாக தெரிந்து கொள்ள, ஒருவர் அதுபற்றியான அனைத்து வகையான அம்சங்களையும் உள்வாங்க வேண்டும். குறிப்பிட்ட சூழலில், அதன் நிலையில் அதனூடான அனைத்து தொடர்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரால் இந்நிலையை முழுமையாக அடைய முடியாது, ஆனால் நான் கூறுவது, இது உங்களின் சோம்பலையும், தவறுகளையும் தவிர்க்க உதவும்.

இரண்டாவது, இயக்கவியல் தர்க்கமுறை படி, எடுத்துக் கொண்ட அம்சத்தின் வளர்ச்சி, தன்னியக்கம் மற்றும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். மூன்றாவதாக, உண்மையின் அடிப்படையில் குறிப்பிட்ட அம்சத்தின் மனித நடைமுறையிலான முழுமையான வரையறைக்கு வந்து, மனித தேவையின் அடிப்படையில் நடைமுறை காரணிகளின் தொடர்பை பார்ப்பது, நான்காவதாக ஹெகலை பின்பற்றும் பிளெக்னவ் சொல்ல விரும்புவது போல், இயக்கவியலின் தர்க்கமுறை கற்றுக் கொடுத்தது. “உண்மை என்பதில் அருவமானது என்று ஒன்றில்லை, உண்மை என்பது எப்போதும் திட்டமானது.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

லெனினுடன் குருப்ஸ்கயா.

இந்த வரிகள்தான் பல ஆண்டுகளாக தத்துவார்த்த கேள்விகள் குறித்து லெனினுடைய ஆய்வின் அடிப்படை சாரமாகும். அதாவது, அதில் எல்லா நேரமும் மார்க்சுடன் கலந்துரையாடி, இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் வழிமுறைகள் மூலம் கண்டடைவதாகும். அனைத்தையும் சேர்த்து பார்த்தால், இவ்வரிகளில் உள்ளது போல் செயலுக்கான வழிகாட்டியாக உள்வாங்குவதுதான் அவசியமானதாகும்.
மார்க்சை பயில லெனின் கையாண்ட முறையே, லெனினை பயில்வதற்கான முறையுமாகும். மார்க்சின் பங்களிப்பிலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒன்றுதான் லெனினின் பங்களிப்பும். அது செயல்படும் மார்க்சியம், லெனினியம் என்பது ஏகாதிபத்திய மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மார்க்சிய சகாப்தமாகும். (நூலிலிருந்து பக்.24)

நூல்: லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
ஆசிரியர்: நதேழ்தா குருப்ஸ்கயா (1869-1939)
தமிழில்: ச.லெனின்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 2433 2424
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 24
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: marinabooks | thamizhbooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

சனாதனமா ? சனநாயகமா ? தொல் திருமாவளவன் உரை | வீடியோ

‘‘சனாதனமா..? சனநாயகமா..?” என்ற தலைப்பில் “தேசம் காப்போம் மாநாடு’’  கடந்த 23.01.2019 அன்று திருச்சியில்  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய முஸ்லிம் லீக், தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் சிறப்புரையாற்றிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் சனாதன தர்மத்தை தனது உரையில் அம்பலப்படுத்தி பேசியுள்ளார். வேதங்கள், இதிகாசங்கள் தொடங்கி இன்று வரையிலும் பார்ப்பனியம் நம்மை அடிமைப்படுத்துவதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். அனைவரும் கேட்க வேண்டிய உரை. பாருங்கள்… பகிருங்கள்…

நன்றி : நக்கீரன்

மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் !

ந்திய பிரதமராக நரேந்திர மோதி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து எந்த பெரிய பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

உண்மை என்ன? அரசு தரவுகள் மற்றும் சுதந்திரமாக பெற்ற தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் 2014-ம் ஆண்டுக்குப் பின் பல பயங்கரவாத சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. இந்த கால இடைவெளியில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் இரண்டு தாக்குதல்கள் மிகப் பெரியவை என அரசுத் தரவுகளே கூறுகின்றன.

இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில், 2009- 2014 கால கட்டங்களில் தாக்குதல் சம்பவங்கள் மெல்ல குறைந்து வந்துள்ளன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பின் அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

2018-ம் ஆண்டில்தான், அதிகளவிலான மக்கள் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களில் பலியாகி உள்ளனர். அதாவது 451 பேர். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கைதான் அதிகம் என்கிறது எஸ்.ஏ.டி.பி-யைச் சேர்ந்த அஜய்.

நன்றி: முகநூலில் Muralidharan Kasi Viswanathan

இது குறித்த பிபிசியின் கட்டுரை :

கடந்த 5 ஆண்டுகளில் எந்த பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லையா? உண்மை என்ன?

கூறப்படுவது: இந்திய பிரதமராக நரேந்திர மோதி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து எந்த பெரிய பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

உண்மை என்ன? அரசு தரவுகள் மற்றும் சுதந்திரமாக பெற்ற தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் 2014-ம் ஆண்டுக்குப் பின் பல பயங்கரவாத சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. இந்த கால இடைவெளியில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் இரண்டு தாக்குதல்கள் மிகப் பெரியவை என அரசுத் தரவுகளே கூறுகின்றன.

இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அமைச்சர் கூறியவை: அண்மையில் நடந்த ஆளும் பா.ஜ.க-வின் கட்சி மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காத்திரமாக ஒரு கூற்றை பகிர்ந்தார்.

அந்த காத்திரமான கூற்று இதுதான்: “2014ஆம் ஆண்டுக்குப் பின் பெரிதாக எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை.”

அந்த மாநாட்டில் மேலும் அவர், “எல்லையில் சில தொந்தரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால், இந்திய ராணுவம் அந்த ஊடுருவல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்துள்ளது”

எதிர்க்கட்சிகள் கூறியவை: எதிர்க்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், “இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதான்கோட்டும், உரியும் எங்கு இருக்கிறது இந்திய வரைபடத்தை எடுத்து பார்ப்பாரா?” என்று டிவிட்டரில் ட்வீட் செய்திருந்தார்.

இவை இரண்டும் ராணுவ தளங்கள் மீது 2016-ம் ஆண்டு நடந்த தாக்குதல்கள்.

2016-ம் ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்களும், ஆயுத குழுக்களை சேர்ந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆயுத குழுக்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் உரியில் நடந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அரசு தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்திய பாதுகாப்புத் துறை தனது உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறது.

  1. இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்கள்.
  2. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் கிளர்ச்சி.
  3. இடதுசாரி பயங்கரவாதம்.
  4. இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்கும் தாக்குதல்கள்.

அரசின் தரவுகளின்படியே, அதாவது உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்களின்படியே, இந்தியாவின் உட்பகுதிகளில் (பிரிவு 4) 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

மற்ற மூன்று பிரிவுகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றதாக கூறப்பட்டு இருந்தாலும், மிகப் பெரிய என்ற வார்த்தை இந்தியாவின் உட்பகுதிகள் குறித்து கூறும் போதுதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சரி, பெரிய தாக்குதல் என்றால் என்ன?

பாதுகாப்புத் துறை வல்லுநர் அஜய் சுக்லா, “எது பெரிய தாக்குதல், எது சிறிய தாக்குதல் என்று தெளிவாக விவரிக்கும் கொள்கை சார்ந்த எந்த தரவுகளையும் அரசு வெளியிடவில்லை. அது நம் பார்வையை பொறுத்தது” என்கிறார்.

“எங்கு தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது, தாக்குதல் மேற்கொள்ளப்படும் இடத்தின் முக்கியத்துவம், அந்த தாக்குதலால் ஏற்படும் விளைவு. இவற்றைக் கொண்டே எது பெரிய தாக்குதல், எது சிறிய தாக்குதலென புரிந்துக் கொள்ளப்படுகிறது.” என்கிறார்.

இது குறித்து இந்திய அரசிடம் விளக்கத்தை பெற பிபிசி முயன்றது. அதாவது, அவர்களின் தரவுகளில் கூறப்பட்டுள்ள ‘பெரிய தாக்குதல்’ என்பதை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியது. ஆனால், இந்த கட்டுரை எழுதப்படும் வரை அவர்களிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

அரசுசாரா அமைப்பான, தெற்காசிய பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த தரவுகளை வைத்திருக்கும் எஸ்.ஏ.டி.பி தளம் பெரிய தாக்குதல் என்றால் என்ன என்று விளக்குகிறது.

மூன்றுக்கும் மேற்பட்ட சாமனியரோ அல்லது ராணுவத்தினரோ ஒரு தாக்குதலில் இறந்திருந்தால், அது பெரிய தாக்குதல் என்கிறது அந்த தளம்.

388 பெரிய தாக்குதல்கள்.

அதன் கணக்கின்படி, 2014 – 2018 இடையேயான கால இடைவெளியில் 388 பெரிய தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.

அமைச்சக தகவல்கள் மற்றும் ஊடக செய்திகளை கொண்டு அவர்கள் இதனை தொகுத்துள்ளார்கள்.

வன்முறை சம்பவங்கள்

எங்கு அதிகமான தாக்குதல் சம்பங்கள் நடந்துள்ளன, எங்கு குறைவான சம்பவங்கள் நடந்துள்ளன என்று ஆராய்ந்தோமானால், போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் இது வேறுபடுகிறது.

பயங்கரவாதத்தில் 451 பேர் பலி

அதே நேரம், இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில், 2009- 2014 கால கட்டங்களில் மெல்ல தாக்குதல் சம்பவங்கள் குறைந்து வந்துள்ளன. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்றப் பின் அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

2018-ம் ஆண்டில்தான், அதிகளவிலான மக்கள் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களில் பலியாகி உள்ளனர். அதாவது 451 பேர். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கைதான் அதிகம் என்கிறது எஸ்.ஏ.டி.பி-யை சேர்ந்த அஜய்.

காங்கிரஸ் ஆட்சியில், 2008-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது.

அரசு தரவுகளின் படி, 2012-ம் ஆண்டை தவிர, மற்ற ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன, சாமானியர்கள் கொல்லப்படுவதும் 2015-ம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளது.

இந்த பகுதிகள் பல இன மற்றும் பிரிவினைவாத பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயுத குழுக்கள் சுயாட்சிக்காகவும், தனி நாடு வேண்டியும் போராடி வருகின்றன.

இடதுசாரி பயங்கரவாத சம்பவங்களை பார்க்கும் போது, பிரதமர் நரேந்திர மோதி முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.

ஜுலை 2018-ம் ஆண்டு சுவராஜ்யா பத்திரிகையிடம் பேசிய நரேந்திர மோதி, மாவோயிச தாக்குதல் சம்வங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளன என்றும், இந்த சம்பவங்களில் மரணமடைவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளன என்றும் 2013 மற்றும் 2017 ஆண்டு தரவுகளை ஒப்பிட்டு பேசினார்.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் உள்ள மாவோயிச புரட்சி குழுக்கள் தாங்கள் கம்யூனிச ஆட்சி வேண்டியும், பழங்குடிகள் மற்றும் ஏழைகளின் உரிமைக்காகவும் போராடுவதாக கூறுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோதி கூறியது அரசு தரப்பு கணக்குடன் சரியாக இருந்தாலும், உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த பயங்கரவாத சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2011-ம் ஆண்டிலிருந்தே குறைந்த வண்ணம்தான் உள்ளது.

நன்றி: பிபிசி தமிழ்

கார்ப்பரேட் அதிகாரத்தை மக்களின் அதிகாரத்தால் வீழ்த்துவோம் !

கார்ப்பரேட் அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தால் வீழ்த்துவோம் !

போலீசு மட்டுமல்ல, நீதிமன்றங்களும் ஸ்டெர்லைட் முதலாளியின் கூலிப்படைதான் என்பதைத் தமிழக மக்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு. ஸ்டெர்லைட்டை மூடுவதற்குத் தமிழக அரசு போட்ட அரசாணை வெறும் சோளக்காட்டு பொம்மைதான் என்ற போதிலும், அந்த அரசாணையைக் கூடச் சட்ட விதிமுறைகளை மீறித்தான் ரத்து செய்திருக்கிறது, தீர்ப்பாயம்.

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடுத்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத்திற்குக் கிடையாது; உயர்நீதி மன்றமோ அல்லது உச்சநீதி மன்றமோதான் அவ்வழக்கை விசாரிக்க முடியும்” என்பதை ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய அமைப்புகள் மட்டுமின்றி, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனாலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது அதிகார வரம்பை மீறி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு, அதில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தீர்ப்பையும் அளித்திருக்கிறது.

இவ்வழக்கில் திட்டமிட்டே தமிழக அரசைத் தவிர வேறுயாரும் எதிர்த்தரப்பாகத் சேர்க்கப்படவில்லை. பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்க நிர்வாகி ராஜா, மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ. ஆகியோர் தலையீட்டாளர்கள் என்ற வகையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இத்தலையீட்டாளர்கள் வல்லுநர் குழுவின் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அல்லது நீதிபதி சிவசுப்பிரமணியத்தை நியமிக்க வேண்டும் எனக் கோரினர்.

ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகமோ தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் அனைவரும் இவ்விவகாரத்தில் பக்கச் சார்பாக நடந்துகொள்வார்கள் எனப் பழிபோட்டு, அவர்களை நியமிக்க மறுப்புத் தெரிவித்தது. தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் ஸ்டெர்லைட்டின் மறுப்புக்குப் பணிந்து, ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலை வல்லுநர் குழுவின் தலைவராக நியமித்தார். இந்நியமனத்தை எதிர்க்காமல் அமைதி காத்து, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நடந்து கொண்டது தமிழக அரசு.

ஸ்டெர்லைட் நிர்வாகம் வல்லுநர் குழுவிடம் அளித்த ஆவணங்களின் நகலைத் தலையீட்டாளர்களுக்கும் அளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவின் தலைவர் நீதிபதி தருண் அகர்வால் அந்த ஆவணங்களை தலையீட்டாளர்களுக்கும் கொடுக்குமாறு உத்தரவிட மறுத்தார். இதனால் பக்கச் சார்பற்ற விசாரணை என்பதற்கே இடமில்லாமல் போனது. அது மட்டுமின்றி, இவ்விசாரணைக் குழு தனது வரம்புகளை மீறி, “ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது” என இறுதித் தீர்ப்பு போலவே அறிக்கையை எழுதித் தீர்ப்பாயத்திடம் அளித்தது. தமிழக அரசின் அரசாணையைத் தீர்ப்பாயமே விசாரிக்க முடியாது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், வல்லுநர் குழுவிற்கு இந்த வானளாவிய அதிகாரம் எங்கிருந்து வந்தது?

வல்லுநர் குழு அளித்த அறிக்கையைத் தமிழக அரசு, தலையீட்டாளர்கள், ஸ்டெர்லைட் ஆகிய மூன்று தரப்புக்குமே அளிக்க மறுத்தார், தீர்ப்பாயத் தலைவர். நடுநிலை போலத் தெரியும் இந்த முடிவு உண்மையில் ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமானது. இதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, இரண்டு தரப்புக்கு மட்டுமே வல்லுநர் குழு அறிக்கையை அளித்த தீர்ப்பாயம், தலையீட்டாளர்களுக்கு அந்த அறிக்கையைத் தர மறுத்தது. இறுதியாக, வல்லுநர் குழு கூறியதையே, “ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது” என மண்டபத்தில் எழுதப்பட்ட மணிவாசகத்தையே தீர்ப்பாகவும் அளித்துவிட்டது.

படிக்க:
தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !
♦ அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !

மேலும், ஸ்டெர்லைட் எப்படியெல்லாம் காற்றையும், நீரையும், உப்பாற்றையும் மாசுபடுத்தியிருக்கிறது என விசாரணையில் எடுத்துக்காட்டப்பட்டதோ, அக்குற்றங்களில் இருந்தெல்லாம் ஸ்டெர்லைட்டை விடுவித்தும்விட்டது, தீர்ப்பாயம். தூத்துக்குடி நகர மேம்பாடு என்ற பெயரில் ஸ்டெர்லைட் தர முன்வந்திருக்கும் 100 கோடி ரூபாயைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசிற்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறது. இது உதவியல்ல, இலஞ்சம்! ஸ்டெர்லைட் தனது குற்றங்களைக் கழுவிக் கொள்ள தீர்ப்பாயம் கூறியிருக்கும் பரிகாரம்.

இத்தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது. அத்துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர் தலை மற்றும் மார்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும், இதில் பாதிப்பேர் பின்புறமாகச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதி செய்திருக்கிறது.

ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாகத் தமிழக போலீசு செயல்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் வழியாக மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. எனினும், இப்படுகொலைகளை விசாரிப்பதாகக் கூறிவரும் சி.பி.ஐ., கொலைக் குற்றமிழைத்த எந்தவொரு போலீசுக்காரனையும் இதுநாள் வரை கைதும் செய்யவில்லை, வழக்கும் பதியவில்லை. அதேபொழுதில், இக்கொலைகளின் சூத்திரதாரியான ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆலையை மீண்டும் திறந்து நடத்திட அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

“ஆலையை மூடும் அரசாணையை வெளியிடுவதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். மாசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட்டுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்” எனத் தனது ஆணையில் ஸ்டெர்லைட்டின் வக்கீலாக நின்று வாதாடியிருக்கிறது, தீர்ப்பாயம்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமைக்காக இந்தளவிற்கு வாதிட்டிருக்கும் தீர்ப்பாயம், “காற்றையும், நீரையும் நச்சுப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்” எனக் கோரிவரும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் குரலுக்கு என்ன மதிப்பு அளித்திருக்கிறது? 100 கோடி பணத்தை வீசி அவர்களின் வாயை அடையுங்கள் எனக் கீழ்த்தரமாக வழிகாட்டியிருக்கிறது.

தீர்ப்பாயத்தின் ஆணைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக உதார்விட்டு வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி. அந்த உதார் உண்மையானால்கூட, தீர்ப்பு மக்களுக்குச் சாதகமாகக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால், தீர்ப்பாயத்தின் முன்னோடியே உச்சநீதி மன்றம்தான். நச்சு ஆலை ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்து, 100 கோடி அபராதம் கட்டிவிட்டு ஆலையை நடத்திக் கொள்ள அனுமதியளித்த இழிபுகழ் கொண்டதுதான் உச்சநீதி மன்றம்.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருவதாகப் பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருந்ததைக் கலைத்துப் போட்டது, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. தீர்ப்பாயத்தின் ஆணையோ, சட்டத்தின் ஆட்சியெல்லாம் இனி இல்லை, நடைபெறுவது கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஆட்சி என்பதைப் பாமரனும் புரிந்துகொள்ளும்படி தெளிவுபடுத்திவிட்டது. இன்றைய அரசியல், பொருளாதாரக் கட்டுமானம் பொதுமக்களுக்கு எதிரானது, விரோதமானது என்பதை ஐயந்திரிபுற நிரூபித்திருக்கிறது ஸ்டெர்லைட் விவகாரம்.

பொதுமக்களுக்கு விரோதமான, எதிரான இந்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தேர்தல்கள் மூலமோ ஆளுங்கட்சிகளை மாற்றுவதன் மூலமோ வீழ்த்திவிடலாம் என்பதெல்லாம் வீண் கனவு. மாறாக, பொதுமக்களை அணிதிரட்டி, அமைப்பாக்கி, கீழிலிருந்து கட்டப்படும் மக்கள் அதிகார அமைப்புகள் மூலமே கார்ப்பரேட் கும்பலின் அதிகாரத்தைத் தடுத்து நிறுத்த முடியும், வீழ்த்த முடியும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று என்ற கோரிக்கை தமிழக மக்கள் மத்தியில் இருந்து எந்தளவிற்கு வீச்சாகவும் சமரசமின்றியும் எழுகிறதோ, அப்போராட்டத்தின் ஊடாக மட்டுமே நமது வெற்றியை உறுதி செய்யமுடியும்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

மீண்டும் நாம் மனு தர்மப்படிதான் வாழ்கிறோமா ? பேராசிரியர் கதிரவன்

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, ”சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு” என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் ஆற்றிய உரையின் காணொளி …

உரையிலிருந்து சில துணுக்குகள்…

♣ எந்தக் கூலித்தொழிலும் செய்யாமல், எந்த வறுமைக் கோட்டுக்கும் கீழ் இல்லாமல், சாப்பாட்டு அரிசிக்கு  ரேஷன் கடையில் நிற்காமல், எந்த பிளாட்பாரத்திலும் படுத்து உறங்காமல் இருப்பவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு…

♣ உயர்ஜாதியினருக்கு அவுங்க பிக்ஸ் பண்ணி வச்சிருக்க ரேட்டு 8 இலட்ச ரூபாய். நம்மல்லாம் 2.5 இலட்சத்துக்கு மேல போனா இன்கம்டாக்ஸ் கட்டியாகனும். எந்த ஸ்கேல வச்சி பேலன்ஸ் பண்ண போறாங்க..?

♣ அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களில் மொத்தமுள்ள 14,18,000 பேராசிரியர் பணியிடங்களில்: தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. எல்லாம் சேர்த்து டோட்டல் 4,84,000. ஆனால், அதுல மிச்சம் இருக்கிற 10 இலட்சம் போஸ்ட் வெறும் 3% மட்டுமே இருக்கின்ற பிராமணர்கள் ஆக்கிரமிச்சிருக்காங்க… திரும்பவும் நாம் மனு சாஸ்திரப்படி, வருணாசிரம படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் !

மிழகம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ நடத்திவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியை சார்ந்த மாணவர்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். தங்களது போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் கலந்து கொண்டதை அங்கிருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.

மாணவர்கள்  ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினார்கள். அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதையும், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதையும் சகித்துக்கொள்ள முடியாத போலீசு மாணவர்களை மிரட்டினர். அங்கிருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்  இவர்கள் எங்க பசங்க நாங்க இருக்கிற வரைக்கும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அரவணைத்துக்கொண்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றதையடுத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உற்சாகமடைந்தனர். மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்: 97888 08110.

♦ ♦ ♦

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் நேற்று (28.01.19) திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்,
திருச்சி. தொடர்புக்கு: 99431 76246

♦ ♦ ♦

க்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான்  தீர்வா? விடக்கூடாது !
அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !
அனைவரும் ஆதரிப்போம்!ஜாக்டோ  ஜியோ போராட்டம்! மக்களோடு இணையட்டும்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு: 99623 66321.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

தொகுப்பு: