கலையரசன்“என் முதல் ஆசிரியர்”- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த “கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)” பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப்பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாழ அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப்பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது தான் “என் முதல் ஆசிரியர்” எனும் குறுநாவல்.
இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.
இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விவரிக்கிறது.
அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப்படுகிறார்.
துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.
ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுகளைப் போன்று “உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து” ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.
இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப்பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, “பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!” என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
சினிமா என்பது சமீப கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது.
அந்த வகையில் சமீபகால தமிழ் சினிமாக்களில் தொற்றா நோய்களை காமெடியாகவோ அல்லது செண்ட்டிமெண்ட்க்காகவோ சேர்க்கும் தன்மையை காண முடிகிறது.
சமீபத்தில் பார்த்த ரஜினி காந்த் நடித்திருக்கும் “பேட்ட” படத்தில் கூட வில்லனான சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு சிறுநீரகம் முழுவதும் செயலிழந்து தனது வீட்டின் மாடியிலேயே, வீட்டிலேயே ஹீமோ டயாலிசிஸ் (Hemodialysis) செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாக இயக்குநர் காண்பித்திருப்பார்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி அவரைப் பழிவாங்க வரும்போது தப்பித்து சென்று விடாமல் இருப்பதற்காக அவருக்கு டயாலிசிஸ் செய்யுமாறு காண்பிக்கப்பட்டாலும் தற்போதைய நமது தமிழக நடப்பு நிலவரத்தை பிரதிபலிப்பதாகவே அந்த காட்சி அமைந்துள்ளது.
தமிழகத்தில் நீரிழிவு (Diabetes ) மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிகமாகி வருகின்றனர்.
இவர்களில் கிட்னி ஃபெயிலியர் நிலையில் மாற்று கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியலில் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. தெருவுக்கு ஒரு கிட்னி நோயாளியாவது இருக்கும் நிலை தற்போது இருக்கிறது. இது நாளை குடும்பத்தில் ஒருவர் கிட்னி நோயாளியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது
காரணம் 1980-களில் தெருவில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தது இப்போது குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது.
மாதிரிப்படம்
நாளுக்கு நாள் டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகள் அதிகமாகி வருவதும், டயாலிசிஸ் மிகவும் தேவையான சிகிச்சையாக மாறியிருப்பதும் உணர்த்துவது
நாம் இனிவரும் பத்து வருடங்களில் அதிகமான கிட்னி நோயாளிகளைக் காண இருக்கிறோம் என்பதைத்தான்.
இந்த கட்டுரை வழியே கிட்னி நோயாளிகள் ஏன் தோன்றுகிறார்கள் என்று காண்போம்.
நீங்கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சரியே.
அருகில் இருக்கும் மருத்துவமனையில் டயாலிசிஸ் யூனிட் இருந்தால் அங்கு சென்று டயாலிசிஸ் செய்து விட்டு வெளியே வரும் மக்களிடம், ஏன் டயாலிசிஸ் செய்யும் நிலை உங்களுக்கு வந்தது? என்று கேளுங்கள்;
99 சதவிகிதம் பேர் கண்டிப்பாக தங்களுக்கு நீரிழிவு அல்லது ரத்தக்கொதிப்பு இருந்ததாகவும் அதை சரியாக கட்டுக்குள் வைக்கவில்லை எனவும் கூறுவதைக் கேட்கலாம்.
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டு நோய்களும் தங்களது முதல் எதிரியாக நினைப்பது “சிறுநீரகங்களைத்தான்” எக்காரணம் கொண்டும் நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பை அதன் அளவுகளுக்குள் நீங்கள் வைக்காவிட்டால் உங்கள் கிட்னிகள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.
தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டையும் சரி செய்ய அறிவியல் பூர்வமான சிறந்த வழி அதற்குரிய நவீன அறிவியல் பயின்ற மருத்துவரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை எடுக்க வேணடும். கூடவே உணவு முறை மாற்றம் செய்ய வேணடும்.
அதிக மாவுச்சத்து உணவு முறை என்பது நீரிழிவையும் ரத்த கொதிப்பையும் அதிகப்படுத்தும். ஆகவே மாவுச் சத்தை குறைத்து உண்பது அறிவியல்பூர்வமாக நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பை குறைக்க உதவும்.
இது கூட தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி அல்லது தங்களது அலுவலகப் பணிகளுக்கிடையே 10,000 நடைகள் நடந்திருக்க வேணடும். மன அழுத்தத்தை முடிந்த அளவு திறனுடன் கையாண்டு மன அழுத்தம் நமது உடலை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் ஏழு மணிநேரமாவது உறக்கம் வேண்டும்.
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு குறித்த மூடநம்பிக்கைகளை நம்பாமல் அறிவார்ந்து சிந்தித்து அறிவியல் கூறிய முறைப்படி அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். “நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்றவை நோய்களே அல்ல என்று பொய்களை நம்பிக்கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் பின்னாளில் சிறுநீரகம் முழுதாக செயலிழந்து விட்ட பிறகு அதை சரிசெய்ய முடியாது.
மேலும் முழுதும் செயலிழந்து விட்ட கிட்னியை வைத்து பல மூடநம்பிக்கைகள் மற்றும் போலி மருத்துவ சிகிச்சைகள் வளர்ந்து மக்களை சுரண்டுகின்றன. முழுவதும் செயலிழந்த கிட்னியை முற்றிலும் சரிசெய்கிறேன் என்று யாராவது கிளம்பினால் அது முற்றிலும் பொய் புரட்டு வேலை.
காரணம் முழுவதும் செயலிழந்த கிட்னியில் நூறு சதவிகிதம் அதில் உள்ள நெஃப்ரான்கள் எனும் நுண்ணிய செல்கள் அழிந்திருக்கும். நெஃப்ரான்கள் முழுவதும் அழிந்துவிட்ட நிலையில் அதை சரிசெய்து செப்பனிடுவது முடியாத காரியம்.
இதற்காகவே கண்டறியப்பட்ட முக்கிய உயிர்காக்கும் சிகிச்சைதான்
டயாலிசிஸ் என்பதாகும். இந்த டயாலிசிஸ் என்பது இயந்திரத்தின் உதவியுடன் சிறுநீரகம் செய்யும் வேலையை செய்வதாகும்.
சிறுநீரகங்கள் இரண்டும் இயற்கையாக செய்யும் வேலை என்ன?
நமது ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை அனுதினமும் சுத்தம் செய்வது கிட்னிகளில் உள்ள நெஃப்ரான்களாகும்.
கிட்னிகள் சரியாக வேலை செய்கின்றன என்பதை எளிதாக நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் ?
ஒரு வீட்டில் நாம் தூய்மை செய்ய ஒரு பணியாளரை நியமிக்கிறோம். அவர் தினமும் சரியாக வேலை செய்வதை எப்படி நாம் கண்காணிக்க முடியும் ?
வீட்டில் சேரும் குப்பைகளின் அளவை வைத்து அவர் செய்யும் பணியை அளவிட முடியும். வீட்டில் குப்பையே இல்லையெனில் பணியாளர் தன் பொறுப்பை சிறப்பாக செய்கிறார் என்று அர்த்தம். குப்பை அதிகமாக சேர்ந்தால் அவர் பொறுப்பை சரியாக செய்யவில்லை என்று அர்த்தம்.
இது போலத்தான் நமது ரத்தத்தில் கழிவுப்பொருட்களான யூரியா மற்றும் க்ரியாடினின் ஆகிய இரண்டும் சரியாக இருந்தால்.. துப்புறவுப்பணியாளரான கிட்னி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இந்த இரண்டும் தன் அளவுக்கு மேல் இருந்தால் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்று அறிய முடியும்.
மேலும் ஆரம்பகட்ட கிட்னி செயலிழப்பை கிட்னி வழியாக ஆல்புமின் எனும் புரதம் கசிவதைக்கொண்டு அறிய முடியும். நுண்ணிய அளவில் இந்த புரதம் சிறுநீரில் வெளியேறுவது (microalbuminuria) என்பது கிட்னி செயலிழப்பின் ஆரம்பக்கட்ட நிலையை குறிக்கும்.
இது நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கு நிகழும் விசயமாகும்.
இதை உடனே அறிந்து சரியான சிகிச்சை எடுத்தால் கிட்னியை சீர் செய்ய இயலும்.
முழுவதும் கிட்னி செயலிழந்து விட்டது. இப்போது இதற்குரிய சரியான சிகிச்சை எது?
முழுவதும் செயலிழந்து விட்ட கிட்னிக்கு சரியான சிகிச்சை என்பது மாற்று கிட்னியை பொறுத்துவதே ஆகும். இதை கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என்கிறோம். (Kidney Transplantation)
அரசாங்கத்தால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கென தனி குழு அமைக்கப்பட்டு அந்த குழு கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியல் அடங்கிய ரிஜிஸ்டரை பராமரிக்கிறது.
மாதம் ஒரு முறை இந்தக் குழு கூடி கிட்னி தேவைப்படுவோருக்கு அதைக் கொடுக்க சம்மதிக்கும் நபரிடம் இருந்து பெற்று தருகிறது. இறந்த நபர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பெயர் (cadaver transplant ). நெருங்கிய ரத்த உறவு முறைகளிடம் இருந்து வாங்கப்படும் கிட்னிகளையும் பொறுத்த முடியும்.
இந்த கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையை பொறுத்து பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை செலவாகும். மேலும் மாற்று அறுவை சிகிச்சை செய்தபின் மாத மாதம் உண்ண வேண்டிய எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்துகளுக்கு ₹20,000 வரை செலவாகும்.
இந்த அறுவை சிகிச்சையையும் மாத்திரைகளையும் அரசாங்க மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலசவசமாகவும் பெற முடியும்.
சரி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் காலம் வரை எப்படி உயிரைக் காப்பது?
கிட்னி வேலை செய்ய மறுத்துவிட்ட நிலையில் அந்த வேலையை செய்ய நமக்கு இருக்கும் ஒரே உயிர்காக்கும் சிகிச்சை “டயாலிசிஸ்” எனும் உயிர்காக்கும் சிகிச்சை ஆகும்.
வாரம் இரண்டு முறை செய்யப்படும் இந்த சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.
டயாலிசிஸ் குறித்து பரப்பப்படும் தேவையற்ற அச்சத்தால், முழுதும் பழுதடைந்த கிட்னிகளை கொண்ட நபர்களும் டயாலிசிஸ் செய்து கொள்ளாமல் போலி மருத்துவர்களை நாடி அதனால் இறக்கின்றனர்.
ஒரு டயாலிசிஸ்க்கு தற்போது ₹1,200 முதல் 2,000 வரை செலவாகிறது. தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் பல தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் டயாலிசிஸ் இலவசமாக செய்யப்படுகிறது. இதை அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வீட்டிலேயே வயிற்றின் மூலம் செய்து கொள்ளும் Peritoneal Dialysis என்ற சிகிச்சையும் உண்டு. ஆனால் பின்னதை விட Hemo Dialysis சிறந்தது.
இககட்டுரை வழி நான் கூறவருவது…
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள் தங்களது சர்க்கரை மற்றும் ப்ரஷரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தங்களது சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறதா ? என்று அவ்வப்போது கவனிக்க வேண்டும்.
சிறுநீரகம் செயலிழந்தவர்கள் கண்டிப்பாக சிறுநீரக சிறப்பு நிபுணரை அணுகி அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.
டயாலிசிஸ் என்பது உயிர்காக்கும் சிகிச்சையாகும். அதைப்பற்றிய வதந்திகள் தேவையற்றது. யாருக்கேனும் கிட்னி முழுவதுமாக பழுதடைந்தால் கட்டாயம் டயாலிசிஸ் அவரது உயிரைக்காக்கும்.
*****
வில்லனுக்கு கிட்னி பிரச்சினை இருந்து, அதனால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதை காட்சியாக வைத்து இந்த கட்டுரையை எழுத உந்திய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
சாலைகளின் பெயர்களில் சொல்வதற்கு ஏதேனும் ஒரு கதை இருக்கும். கல்கத்தாவின் நெடிய தொடர்ச்சியான வரலாற்றில் அது இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. வடகிழக்கு கல்கத்தாவின் பாக்பாஸர் (Baghbazar) பகுதியில் மர்ஹாட்டா அகழி சந்து (Marhatta Ditch Lane) பெயரிடப்பட்ட பின்னணியில் அது போன்ற சுவாரசியமான கதை ஒன்று உள்ளது.
கல்கத்தாவின் வடகோடியில் 1740-களில் அந்த அகழி எதற்காக கட்டப்பட்டது? அந்த காலகட்டத்தில் வங்காளியர்களை படுகொலை செய்து கொண்டிருந்த மராட்டியத்தின் குதிரைப்படையை தடுக்கவே அது கட்டப்பட்டது.
இரகோஜி போஸ்லே.
1741-ம் ஆண்டுவாக்கில், பாஸ்கர் பண்டிட்டின் தலைமையில் அன்றைய நாக்பூர் மராட்டிய மன்னரான இரகோஜி போஸ்லேவின் (Raghoji Bhosle) குதிரைப்படை மேற்கு வங்கத்தை கொள்ளையிடத் தொடங்கியது. இந்த மராட்டியர்களை வங்காளிகள் பார்கிகள் என்றழைத்தனர். இது பர்கிர் (மூலச்சொல்-பாரசீகம்) என்ற மராட்டி சொல்லின் திரிபு. அகமத்நகரின் புகழ்பெற்ற முதன்மை அமைச்சரான மாலிக் அம்பர் (Malik Ambar) பீடபூமிக்கே உரித்தான கொரில்லா போர்முறையை நேர்த்தியாக்கியிருந்தார். அது அன்று பார்கிர் – கிரி (bargir-giri) என்றழைக்கப்பட்டது. அதிரடியாக தாக்கி மறையும் இந்த போர்த் தந்திரம் பீடபூமி வரித்துக்கொண்ட போர்முறையின் தவிர்க்கவியலாத ஒரு அங்கமானது. இதை பயன்படுத்திதான் சிவாஜி மிகப்பெரிய வெற்றி பெற்றார். கெடுவாய்ப்பாக, அதே போர்தந்திரம்தான் வங்கத்து மக்கள் மீது பின்னர் மராட்டியர்களால் தொடுக்கப்பட்டது.
பார்கிர் – கிரி:
1740-களில், வங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நவாப் அலிவர்டி கானின் (Nawab Alivardi Khan) படைகளை போஸ்லேவின் பார்கிரி-கிர் கொரில்லாப்படை திக்குமுக்காட செய்து கொண்டிருந்தன. சில நேரங்களில் நேருக்கு நேரான மோதல்களில் மராட்டிய படைகளை வங்க படைகள் தோற்கடித்தாலும், கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த மராட்டிய கொரில்லா படைகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கானின் வங்கத்துப்படைகளை எளிமையாக பிளந்து சென்றன.
இப்படி பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள் முதல் பொருளாதார நெருக்கடி வரை ஏற்பட்டன. சமகாலத்து டச்சு தகவல்களின் படி, மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற வணிகர்கள் உட்பட 4 இலட்சம் வங்க மக்களை மராட்டியர்கள் படுகொலை செய்தனர் என்று வரலாற்றாய்வாளர் பி.ஜெ மார்ஷல் எழுதுகிறார். இத்தகைய இழப்புகள் வங்கத்தை நிரந்தரமாக முடக்கியதாக அவர் மேலும் கூறுகிறார்.
கொரில்லா படைகளால் ஏற்பட்ட சேதங்களை மகாராட்டிர புராணத்தில் தான் எழுதிய வங்கப் பாடலொன்றில் பின்வருமாறு கூறுகிறார் கங்காராம்,
இச்சமயத்தில் ஒருவரும் தப்பவில்லை, பார்ப்பனர், வைணவர்கள், துறவிகள் மற்றும் குடும்பத்தினர், அனைவருக்கும் விதி ஒன்றுதான், பசுக்களுடன் மனிதர்களும் கொல்லப்பட்டனர்.
இப்படி பார்கிகளின் பயங்கரவாதம் அளப்பரியதாக இருந்தது. இது வங்கத்து தாலாட்டுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கத்து தாய்மார்கள் மராட்டிய படைகளின் தாக்குதலுக்கு பயந்து தங்கள் குழந்தைகளை தூங்கச் செய்வதற்கு கூட பயப்படுவார்கள் என்று வருகிறது. வங்காளிகளிடையே இன்றும் இக்கவிதைகள் பிரபலமாக இருக்கின்றன. அதில் ஒன்றின் சுமாரான மொழியாக்கம்,
குழந்தைகள் தூங்கும் போது, எங்கும் நிசப்தம் சூழ்ந்த சமயத்தில், பார்கிரிகள் நம்முடைய நாட்டிற்குள் வருவார்கள் பறவைகள் விதைகளை தின்று விட்டன, என்னால் எங்கனம் திரை செலுத்த முடியும் (பார்கிக்கு)? நம்முடைய உணவும் குடிநீரும் தீர்ந்து விட்டன, என்னால் எங்கனம் திரை செலுத்த முடியும்? சிலநாட்கள் காத்திருங்கள், நான் பூண்டு விதைத்திருக்கிறேன்.
கல்கத்தாவின் அகழிகள்:
கிராமப்புறங்களை மட்டுமல்ல வங்கத்தின் தலைநகரான முர்ஷிதாபாத்தையும் மராட்டிய பார்கிகள் விட்டு வைக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரான மார்வாரி வங்கியாளர் ஜகத் சேத்தின் (Jagat Seth) மாளிகையையும் அவர்கள் கொள்ளையடித்தனர்.
ஆயினும், ஆங்கிலேயர்களின் தகவல்கள் படி கல்கத்தாவை மராட்டியர்கள் ஒருபோதும் தாக்கவில்லை. மேலும் அகழியின் தெற்கு பகுதியில் “உண்மையான” கல்கத்தாவில் வாழ்ந்த மக்களுக்கு அகழி தோண்டுபவர்கள் (ditchers) என்று பெயர் வந்தது. இன்று இந்த அகழி மூடப்பட்டு மேல் வட்ட சாலையாக போடப்பட்டுள்ளது.
பத்தாண்டுகள் தொடர் கொள்ளைத் தாக்குதலுக்குப் பின்னர் தோல்வியை நவாப் ஒப்புக்கொண்டதாலும் ஒரிசாவையும் ரகோஜி போஸ்லேவிடம் ஒப்படைத்ததாலும் மாராத்தாக்கள் தாக்குதலை நிறுத்திக் கொண்டனர்.
வரலாற்றை இந்துத்துவ கண்ணாடியால் ஊடுருவுதல்:
ஆகார் படேல் (Aakar Patel) தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுவது போல, மாராத்தாக்களின் இந்த வரலாறு உண்மையாக ஒருபோதும் நினைவுக் கூறப்படுவதில்லை. மாராத்தாக்கள் எப்பொழுதுமே தேசப்பற்றாளர்களாகவும் இந்தியா அல்லது இந்து தேசியத்திற்கு உறுதுணை புரிந்தவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இது ஒரு பொதுவான போக்கு. மேலும் கட்டுக்கதைகளின் மூலமாகவே நவீன நாடுகள் வரலாற்றை உருவாக்குகின்றன. இசுலாமிய தேசியம் என்பது குதுப்-உத்-தீன் ஐபக்கின் (Qutb-ud-din Aibak) காலந்தொட்டே இருப்பதாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர். அதே போலவே விநாயக் சாவர்க்கரின் சொற்களில் சொல்வதெனில், “ஹிந்து பாத் பாத்ஷாஹி” (Hindu Pad Padshahi) யை உருவாக்கும் நோக்கிலேயே மாராத்தாக்களால் இந்து தேசியம் வளர்க்கப்பட்டதாக பெரும்பாலான இந்துக்கள் கருதுகின்றனர்.
குதுப்-உத்-தீன் ஐபக்.
பீடபூமியின் இசுலாமிய சுல்தான்கள் மற்றும் முகலாயர்களிடமிருந்து எப்படி எந்த சிக்கலுமில்லாமல் பாரசீக மொழியிலான “ஹிந்து பாட் பாஷ்சஹி” என்ற சொற்றொடர் மாராத்தாக்களால் முற்றிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது இங்கே முரண்படுகிறது. இப்படி வரலாற்றை எளிமையாக புரிந்து கொள்வது, “இந்து பெரும்பான்மை” வாழ்ந்த மேற்கு வங்கத்தை தாக்கி கொள்ளையிட்ட மராட்டியர்கள் பாத்திரத்தையும், அவர்களை துரத்துவதற்கு ஒரு “முஸ்லீம் நவாப்” போராடியதையும் எளிமையாக கடந்து செல்வதற்கே வழி வகுக்கிறது. இன்றைய இந்தியா “இந்து” மற்றும் “முஸ்லிம்” என்ற இருமைகளாக பார்க்கப்படுகிறது. அது கடந்த காலத்தையும் அதே பார்வையிலேயே பார்க்க முயல்கிறது. ஆனால், கடந்த காலத்தில் இருந்தது முற்றிலும் வேறான ஒரு நாடு.
“பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்பார்கள். அது ஆன்மிகத்தில் இன்னும் அதிகம் என்பதே நிதர்சனம். கும்பமேளா என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் அரசு நடத்தும் பாஜக-வின் அரசியல் மேளாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து ஊடகங்களும் புளகாங்கிதமடைந்து உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றன.
கும்பமேளாவிற்காக வருகை தந்துள்ள நடுத்தர மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனை பெயரளவிலும் சுற்றுலாவிற்கு வந்த மனநிலையே மேலோங்கியும் இருந்தது. சாதாரண மக்கள் அனுபவிக்க முடியாத, இதுவரையிலும் பார்த்திராத இந்த விழா ஏற்பாடுகளை இலயித்துப்போய் சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
சங்கம் என்று அழைக்கப்படக்கூடிய கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகியவை ஒன்றுகலக்கும் இடமான முக்கூடல் பகுதிக்கு அருகில் பணக்காரர்களுக்கான குடில்களும், சாதாரண மக்களுக்கு தொலைவிலும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பணக்காரர்கள் தங்கள் பக்தி நிலைக்கும், சக்தி நிலைக்கும் ஏற்ப ஒரு நாளைக்கே சிலபல ஆயிரங்களில் செலவு செய்து தங்கி இருந்து தங்களின் பாவங்களைக் கழுவிச் செல்கின்றனர்.
1 of 2
ஆம்! உத்திரப் பிரதேசத்தின் சுற்றுலா துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கம் டெண்ட் காலனி பகுதியில் ஒரு நாளைக்கான கட்டணம் உங்களின் விருப்பத்திற்கேற்ப 9,000/- ரூபாயிலிருந்து 18,000/- வரை உள்ளது. இவை இல்லாமல் கூடுதல் வரியும் வசூலிக்கப்படுமாம். வரிகள் உட்பட இவற்றின் கட்டணம் 12,000/- முதல் 24,000/- ரூபாயாக வருகிறது. இவை அனைத்தும் ஒரு நபருக்கானது மட்டுமே. உங்களுடன் கூடுதல் நபர்கள் வந்தால் அவர்களுக்கு தலா ஒரு நபருக்கு 15% மொத்த கட்டணத்தில் கூடுதலாக வசூலிக்கப்படும்.
1 of 2
இந்த குடில்களின் பெயரே நமக்கு சொல்லிவிடும் இவை யாருக்கானவை என்பதை. ரூ.9,000/- செலுத்துபவர்களுக்கான குடில்களின் பெயர் SWISS Cottage (சுவிஸ் காட்டேஜ்) மற்றும் ரூ.18,000/- செலுத்துபவர்களுக்கான குடிலின் பெயர் Maharaja Swiss Cottage (மஹாராஜா சுவிஸ் காட்டேஜ்). என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறது உ.பி டூரிஸம். நம்மைப் போன்ற ஏழைகள் அதன் உள்ளே சென்று பார்ப்பதற்கு கட்டணம் நிரணையித்தால்கூட அந்தக் காசை கொடுக்க முடியாது. அந்தளவிற்கு அதன் பாதுகாப்பும், இன்னபிற வசதிகளும் உள்ளன. அத்துவான வெளியிலே ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் அதற்கு சுவிஸ் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள். கும்பமேளாவிற்கான குடிலாக இருந்தாலும் அதற்கு இந்துத்துவப் பெயர்கள் வைக்க முடியாமல் போயிருக்கிறது. ஒருவேளை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பிருந்தாவனம், கிஷ்கிந்தா என்று வைத்தால் செட்டாகாது என்று கூட நினைத்திருக்கலாம்.
அதேபோல், ஆயுர் யுனிவெர்ஸ் என்ற நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்காக டீலக்ஸ் காட்டேஜ், லெக்சுரி காட்டேஜ் என்று வைத்திருக்கிறார்கள். சுமார் 25 ஏக்கரில் இந்த காட்டெஜ் அமைக்கப்பட்டுள்ளது. தரமான இருக்கை வசதிகளுடன் 100 குடில்கள் உள்ளன. அதன் வசதிகள் நம்மை மிரட்சியடைய வைக்கின்றன. வை-ஃபை இன்டர்நெட், டபுள் அண்ட் சிங்கிள் பெட் ரூம், வெஸ்டெர்ன் டாய்லட், ஹாட் வாட்டர் என்று வைத்திருக்கிறார்கள்.
தூங்கி எழுந்ததும் கங்கையின் அழுக்கு நிறைந்த அழகை ரசித்தவாறே நீங்கள் போட்டிங் செல்ல முடியும். அதற்காக இந்த நிறுவனமே சொந்த படகுகளை வைத்துள்ளது.
1 of 2
பசுமையான செயற்கைத் தோட்டங்கள், சங்கத்திற்கு அருகே குடில்கள் இருப்பதால் நதிகளை பார்த்துக்கொண்டே காலை நடை செல்லலாம். தியானம் மற்றும் யோக மையம், நாகா மற்றும் அக்காராஸ்களுக்கு செல்வதற்கான வழிகாட்டுதல்கள், யாருடைய தொந்தரவும் இல்லாமல் குளிப்பதற்கு தனியான இடம், உண்ணுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள தரமான உணவகம், மாலை நேரம் நெருங்க நெருங்க இசையுடன் கூடிய விருந்தோம்பல்கள், குளிருக்கு இரவு நேர நெருப்பு, இவற்றை எல்லாம் தின்னு கழிக்க அட்டாச்சிடு பாத்ரூம்; அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீசு பாதுகாப்பு என்று சகலமும் வைத்துள்ளனர்.
1 of 5
அதேபோல் கல்ப வ்ரிக்ஷ் என்ற பெயரில் யமுனா நதிக்கரையில் நூற்றுக்கணக்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டு உரிமையாளரில் ஒருவர் அலகாபாத்தின் லல்லூஜி பிரதர்ஸ்.
லல்லூஜி பிரதர்ஸ் அலகாபாத்தின் புகழ்பெற்ற ஒரு ஒப்பந்ததாரர். கார்ப்பரேட் ஈவண்ட், திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு ஸ்டீல் ஸ்ட்ரெச்சர் உருவாக்குவதிலும்; பெரு நிறுவனங்களுக்கு உலோகம், அலுமினியம் மற்றும் கனிம, ஸ்டீல் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கட்டமைப்பு உருவாக்கி கொடுப்பவரும்கூட. இத்தொழிலில் நான்கு தலைமுறை அனுபவமும், தனக்கு இருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்தி அரசின் பல ஒப்பந்தங்களை பெற்றுவரும் ஒரு கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்.
இந்த கல்ப வ்ரிக்ஷ் 3 வகையான அறைகள், KV Dorms, KV Cottages மற்றும் KV Luxury ஆகிய முறைகளில் குடில்களை வழங்கி வருகிறது. குறைந்தபட்சம் படுத்துக் கொள்வதற்கு ஒரு படுக்கை – தலையணைக்கு ரூ.600 தொடங்கி, சகல வசதிகளையும் பெற அதிகபட்சமாக ரூ.11,000 வரை வாங்குகிறது. இது சாதாரண நாட்களுக்கும், சிறப்பு நாட்களுக்கும் வேறுபடும். கல்ப விரிக்ஷின் இடம் சங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இரும்பு தகடால் போடப்பட்ட சாலை வசதியும் உள்ளது. குடிலுக்கு செல்ல போட் வசதியும் உள்ளது.
இவை இன்றி இன்னமும் பல்வேறு நிறுவனங்களும் இது போன்ற தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து அவற்றை வாடகைக்கு விட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாடகைகளை நிர்ணயித்துள்ளனர். இப்படியாக கும்பமேளாவின் மூலம் பாஜக தனது ஆதரவு நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் ஏற்பாடு செய்திருப்பதோடு, மக்களிடம் இந்துத்துவ சாம்பியனாக காட்டிக் கொள்ளவும் முயல்கிறது.
இந்த பிரமாண்ட தற்காலிக குடில்களுடன் கங்கை ஆற்றங்கரையில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிசைப் பகுதியைப் பார்த்தால்மேன்மக்களுக்கு எரிச்சல் வரும். இந்த ஏழைகள் கும்பமேளாவின் அழகை சீர்குலைப்பவர்கள், இவர்களை அப்புறப்படுத்தினால்தான் மேளா முழு அழகையும் பெறும் என்ற சிந்தனை வெண்தோல் இந்தியர்களுக்கு நிச்சயமாக எழும்.
“பாஜிராவ் மஸ்தானி” என்ற படத்தில் பேஷ்வா மன்னனாக வரும் ரன்வீர் காய்ச்சலால் நர்மதை நதிக்கரையோரம் டெண்ட் அமைத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பார்கள்.
அதைப்போலவே யமுனா மற்றும் கங்கா நதிக்கரையை ஆக்கிரமித்து தற்காலிக குடில்கள் அமைக்க அனுமதியளித்திருக்கிறது யோகியின் இந்துமதவெறி கும்பல். ரன்வீருக்கு வந்தது காதல் காய்ச்சல் என்றால் பணக்கார மேட்டுகுடிகளுக்கு வந்திருப்பதோ ஆன்மீகக் காய்ச்சல். இவர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்தை சிலாகித்து சொல்லுவார்கள். இதனை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகள் நிச்சயம் ஒரு தொகையை கறந்து விடுவார்கள். அதில் பாஜக கும்பலுக்கும் பங்கு போய்விடும்.
ஆனால், பக்தியின் பால் வந்துள்ள ஆயிரக்கணக்கான ஏழை பக்தர்கள் எலும்பைத் துளைக்கும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள ஆங்காங்கே சிறு கூடாரம் அமைத்து கீழே உமியை கொட்டி நிரவி படுக்கையை தயார் செய்து கொண்டனர். அதற்கும் வழியில்லாதவர்கள் திறந்தவெளியில் இரவின் உறைபனிகுளிரில் உறைந்துகிடந்தனர். இதன்படி பார்த்தால் கும்பமேளா ஏற்பாடுகள் எவையும் சாதாரண மக்களுக்கு அல்ல. ஊடகங்கள் வியந்தோடும் கும்பமேளா கட்டமைப்புகள் அனைத்தும் மேன்மக்களுக்கானது மட்டுமே. கடவுள், மதமும் கூட வர்க்க பிரிவினைக்கு உட்பட்டதே என்பதற்கு கும்பமேளாவும் விதிவிலக்கு அல்ல!
கேள்வி: வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ? இந்தப் பதிவில் ஆசிரியர் அளித்துள்ள பதிலுக்கு நான் முழுமையாக உடன்படுகிறேன். நான் ஒரு பிரபல தனியார் செய்தி ஊடகத்தில் பணியாற்றுகிறேன். அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுக்கவும், அதிகார வர்க்கத்தை நோக்கி கேள்வி எழுப்பவும் ஊடகத்துறைக்குள் நுழைந்தவன் நான். முன்பு பணியாற்றிய ஊடகத்திலும், இப்போது பணியாற்றும் ஊடகத்திலும் பல்வேறு சிறப்பு செய்தித் தொகுப்புகளை துணிச்சலாக வெளியிட்டுள்ளேன். அதில் சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் என்னால் முடிந்த ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது என்ற திருப்தி ஒருபக்கம் இருந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தமும், நாமும் கார்ப்பரேட் அடிமையாகி விட்டோமோ என்ற அச்சமும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
லோயர் மிடில் கிளாஸ் குடும்ப பின்னணியில் இருந்து வந்த என்னை பொருளாதார சுமையும் ஒரு பக்கம் அழுத்திக் கொண்டிருக்கிறது. வணிக ஊடகத்தில் இருந்துகொண்டு சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாதா? மேற்கொள்வதற்கு ஏதேனும் யோசனை இருந்தால் சொல்லுங்க….
ஊடகத்துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே உங்கள் பதிவுகள் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடரட்டும் உங்கள் உண்மையான ஊடகப்பணி.
– ஒரு பத்திரிகை நண்பர்
அன்புள்ள நண்பருக்கு,
மக்கள் பால் நேசமும், அதை போதுமான அளவு செய்ய முடியாத குற்ற உணர்வும் கொண்டிருப்பதற்கு முதற்கண் வாழ்த்துக்கள்! இந்த உணர்வு நீடிக்குமளவு சமூக மாற்றத்திற்கான உங்களது முயற்சிகளும் வெற்றி பெறும். வணிக ஊடகங்களில் கூட வரம்பிற்குட்பட்ட அளவில் மக்களுக்கு நன்மை தரத்தக்க வேலைகள் சிலவற்றை செய்ய முடியும். ஆனால், நிரந்தரமாகவும், பிரச்சினைகளின்றியும் செய்ய இயலாது. செய்யக்கூடியவற்றை செய்வதற்கு கூட நாம் ஒரு உறுதியான ஆளுமையாக மாற வேண்டியிருக்கிறது.
வர்க்கப் பின்னணியோடு நவீன வாழ்வியல் சூழலும் ஒரு நபரின் ஆளுமையை வடிவமைப்பதில் தீர்மானிக்கின்றது. ஒரு பொதுவுடமை அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கட்சி சார்ந்த வேலைகளின் போதும், தோழர்களோடு அளவளாவும் போதும் மட்டுமே சமூக அக்கறைக்குரிய விசயங்களோடு வாழ்கிறார். நிறுவன வேலைகளில்தான் அதிக நாட்களை அவர் செலவழிக்க வேண்டியிருப்பது ஒரு யதார்த்தம். எனில் பொதுவுடமை உலகை விட கார்ப்பரேட் உலகுதான் அவரது வாழ்வியலோடு அதிகம் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த முரண்பாட்டை உணர்ந்து தனது அக உலகை பாதுகாத்துக் கொள்வது யாராக இருந்தாலும் ஒரு போராட்டமே! கார்ப்பரேட் ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளருக்கும் அது பொருந்தும். பேயோடு வாழ்க்கைப்பட்டால் சுடுகாடுதான் பணியிடம் என்றான பிறகு குடியிருப்பில் இருக்கும் மக்கள் குறித்த எண்ணம் இருப்பது சிரமம்தான். அதற்காக கலங்கத் தேவையில்லை.
இந்த முரண்பாட்டை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என யோசித்துப் பார்ப்போம்.
மூன்று வழிகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று நடைமுறையில் மக்கள் வாழ்க்கை, போராட்டங்களோடு தொடர்பு வைத்திருக்க வேண்டும். நீட் போராட்டமோ, ஒக்கி புயலோ, கஜா புயலோ, அரசு ஊழியர் போராட்டமோ நடக்கும் போது அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் யதார்த்தமாக மக்கள் வாழ்க்கையையும், இந்த அரசமைப்பின் போதாமையையும் உணர்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அங்கு சென்ற வெளியூர் பத்திரிகையாளர்கள் துணிந்து போலீசை அம்பலப்படுத்தியதற்கு காரணம் கொடூரமான அந்த அடக்குமுறைக் காட்சிகளை நேரில் கண்டதுதான்.
இரண்டு மக்கள் வாழ்க்கை தொடர்பான இலக்கியங்கள், சமூகம் தொடர்பான பொது நூல்கள் (வரலாறு, சமூகவியல், மொழி, தத்துவம், அரசியல்) போன்றவற்றை படிப்பது கண்டிப்பாக வேண்டும். நமது உணர்ச்சிக்கு தேவையான உணர்வை அளிக்கவல்லது இந்த பல்துறை வாசிப்பு பழக்கம். அதே நேரம் இந்த வாசிப்பு படிக்கும் இன்பம் என்று இல்லாமல் பயன்பாட்டிற்கான படிப்பாக இருக்குமாறு நாம் வைத்துக் கொள்வது அவசியம். நல்ல நூல்களை படிப்போர் பலருக்கு, அந்நூல்கள் கூறும் கருத்துக்களை ஏதோ ஒரு வழியில் பயன்படுத்தம் வாய்ப்பற்று இருக்கும் போது காலஞ்செல்லச் செல்ல படிப்பு என்பது வாசிப்பின்பமாக மட்டும் மாறிவிட்டிருக்கிறது.
மூன்றாவதாக போராடும் மக்களோடு துணை நிற்கும் உண்மையான அரசியல் அமைப்புகளோடு தொடர்பில் இருப்பது அவசியம். சமூக மாற்றம் குறித்த எந்த ஒரு நடவடிக்கையும் நடைமுறையில் பணியாற்றும், அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் அரசியல் இயக்கங்களாலேயே மக்களுக்கு சென்று சேர்கிறது. தனி நபராக நாம் பேசும் சமூக விசயங்களின் பரிமாணம் மிகவும் குறுகியது. கருத்தரங்கில் தீர்வு சொல்வதும், களத்தில் தீர்வுக்காக போராடுவதும் முற்றிலும் வேறுபட்ட விசயங்கள். கம்யூனிச்தை கற்பதற்கு கூட இந்த களத் தொடர்பு அவசியம்.
மேலும், மக்களிடம் வேலை செய்யும் அரசியல் ஊழியர்களை சந்தித்து அளவளாவும் போதுதான் நாம் அறிவை மெருகிடுவது மட்டுமல்ல, அகந்தையை அகற்றுவதையும் செய்ய முடியும். நமது கருத்துக்களும் கூட வெறுமனே கருத்துக்கள் என்ற கிணற்றைத் தாண்டி களம் எனும் கடலை நோக்கி பயணிக்கிறது. அதன் போக்கில் சரி, தவறுகள் பரிசீலிக்கப்பட்டு கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து, கண்ணோட்டங்களை கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இவற்றையெல்லாம் ஓரளவுக்கு செய்து கொண்டு ஒரு பத்திரிகையளராயும் நாம் மக்களுக்கு தொண்டாற்ற முடியும். எங்கள் அனுபவத்தில் பல பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டிருக்கிறோம். மேற்கண்ட பாதையில் அவர்களை நட்புடன் அழைத்துச் சென்று புதிய உலகை கொஞ்சமாவது காட்டியிருக்கிறோம். நாங்களும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
அதே நேரம் பத்தரிகையில் பணியாற்றும் நண்பர்கள் பணிச்சுமை, நிர்வாக நெருக்கடி போன்றவற்றோடு அடித்துச் செல்லப்படும் போது அவர்களால் உரிய அளவில் சமூகத்திற்கு தொண்டாற்ற முடிவதில்லை. பகுதி நேரமாக அவர்கள் வினவு போன்ற மாற்று ஊடகங்களில் அடையாளம் தெரியாமல் நிறைய பணிகளை செய்ய முடியும். எனினும் இந்த விருப்பம் இன்னும் பெரும் போராட்டமாகவே இருக்கிறது.
“கருத்தாடல்” பக்கத்தில் பங்களிப்பு செய்யுமாறு பல ஊடக நண்பர்களுக்கு மடல் அனுப்பியிருந்தோம். அலுவலகத்தில் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக புனை பெயரில் எழுதுமாறும் ஆலோசனை கூறியிருந்தோம். சிலர் விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவர்களால் அப்படி செயல்பட முடியவில்லை.
எப்படியாவது மாற்று ஊடகங்களில் பணியாற்றும் போதுதான் ஒரு ஊடகவியலாளர் தனது சுயத்தையும், மக்களின் பால் உள்ள பொறுப்புணர்வையும் தக்கவைத்துக் கொள்வதோ, வளர்த்துக் கொள்வதோ சாத்தியம். ஆகவே, இது இறுதியில் எங்களது பிரச்சினையில்லை. அவர்களது பிரச்சினை. உண்மையில் ஒரு மக்கள் ஊடகவியலாளராக மாற வேண்டும் என்ற அவாவை ஒரு யதார்த்தமாக மாற்றுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்.
வினவோடு ஒரு பத்திரிகையாளர் தொடர்பு கொள்ளும் போது அவர் சமூகவியல், அடிப்படை மார்க்சியம், வரலாறு, கண்ணோட்டத்துடன் எழுதுவது போன்றவற்றை எங்களோடு விவாதித்து கற்றுக் கொள்ள முடியும். கடந்த காலத்தில் பத்திரிகையாளர்கள், பதிவர்களுக்கென்றே வகுப்புகள் நடத்தியிருக்கிறோம். இப்போதும் கூட செய்து வருகிறோம். இனியும் நடத்துவோம். எனவே உங்கள் வணிக ஊடகப் பணி பாதிக்கப்படாமல் மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
ஆகவே இந்த பதிவின் மூலம் தமிழக பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தொடர்பு கொள்ளுங்கள்.
மாற்றிக் காட்டுவதற்காக ஒரு புதிய உலகம் காத்துக் கொண்டிருக்கிறது!
இந்த ஆண்டு மே மாதத்தோடு மோடி அரசின் பதவிகாலம் முடிகிறது. ஆகவே இந்த ஆண்டின் இடைக்கால வரவு செலவு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது மோடி அரசு. இன்று (01.02.2019) காலை 11 மணி முதல் அருண் ஜெட்லிக்கு பதிலாக நிதியமைச்சராக செயல்படும் பியூஷ் கோயல் நிதிநிலை அறிக்கையை படித்து வருகிறார். நண்பகல் 12 மணி வரை அவர் கூறிய அருளுரைகளை ஒட்டி இந்த பதிவு முதல்கட்டமாய் வருகிறது.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால் தேசிய சாம்பிள் சர்வே அலுவலகத்தின் வேலைவாய்ப்பின்மை குறித்த அறிக்கை அரசல் புரசலாக வெளியாகியிருக்கிறது. இந்த அறிக்கை வெறுமனே நகல் அறிக்கைதான் என்று நிதி ஆயோக் கூறி சமாளிக்க முயன்றது. ஆனால் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் முன்னால் தலைவர் மோகனன், அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதற்காக கடந்த வாரம் பதவி விலகினார்.
மேலும் இது நகல் அறிக்கை இல்லை, இதுதான் இறுதி அறிக்கை என்றும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். மோடி அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் நகர்ப்புறத்தில் 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் இருக்கிறது.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
மேலும் 15 முதல் 29 வயது பிரிவினரின் வேலையின்மை விகிதம் 2011 – 12-ம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்தது 2017 – 2018-ம் ஆண்டில் அது 17.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோன்று கிராமப்புற பெண்கள் வேலையின்மை விகிதம் 2011 – 12-ம் ஆண்டில் 4.8 சதவீதமாக இருந்தது 2017 – 18-ல் 13.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. மோடி அரசின் இடைக்கால வரவு செலவு அறிக்கை ஒரு மோசடி என்பதற்கு இந்த விவரமே போதுமானது.
இந்த பட்ஜெட், முழு பட்ஜெட் என்று ஊடகங்களிடம் செய்தியை கசிய விட்ட பாஜக, தற்போது மோடி மூலம் இது இடைக்கால பட்ஜெட்தான் என்று தெரிவித்திருக்கிறது. ஒருவேளை வேலை வாய்ப்பின்மை பிரச்சினையை திசை திருப்புவதற்காக கூட அவர்கள் இதை கிளப்பி விட்டிருக்கலாம். ஆற்றோடு போகிறவன் அலங்கார உடை போட்டு போனால் என்ன அம்மணமாக போனால் என்று யோசிப்பதற்கு கூட இவர்கள் விடுவதில்லை.
நேரு அல்லது மோடியின் ஜாக்கெட்டை சாம்பல் வண்ணத்தில் அணிந்து வந்த பியூஸ் கோயல் சட்டையில் மூவர்ணக்கொடியை பதித்திருக்கிறார். என்ன இருந்தாலும் தேசபக்தி முக்கியமல்லவா? கூடவே வழக்கமாக நிதியமைச்சர்கள் சூட்கேசுடன் போஸ் கொடுப்பது போல கொடுத்துவிட்டுதான் பாராளுமன்றத்திற்கு சென்றார். இவரது வருகையை ஒட்டி மும்பை பங்குச் சந்தையின் பங்குச்சந்தை குறியீட்டு எண் தாழ்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. பங்குசந்தை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நாட்டு மக்களுக்கு பிரச்சினை இல்லை என்றாலும் கார்ப்பரேட் உலகில் இது ஒரு அபசகுனமாக பார்க்கப்படக் கூடும்.
“மோடி அரசு வேலைவாய்ப்பின்மை குறித்த அறிக்கை வெளியிட மறுப்பது தவறு. அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவது முக்கியமாகும். ஏனெனில் அதுதான் நம்பகமான தகவல்களை அறியுமாறு நாட்டு மக்களுக்கு உதவுகிறது. மேலும் பொருளாதார தளத்தில் என்ன நடக்கிறது என்பதோடு அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்வதற்கும் அது உதவுகிறது” என ஜே.என்.யூ பொருளாதார பேராசிரியர் ஜெயதி கோஷ் தெரிவித்திருக்கிறார். அதனால் என்ன அறிக்கை விவரங்களுக்கு ஒரு ஃபோட்டோஷாப் வித்தையோடு படம் காண்பித்தால் போயிற்று! இந்த நான்கு ஆண்டுகளில் சங்கிகள் உருப்படியாக கற்றுக் கொண்ட கலையே அடோப் நிறுவனத்தின் ஃபோட்டோஷாப் மட்டும்தான்.
வழக்கமாக பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை படிக்கப்படுவதற்கு முன்னால் நிதி அமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேனீர் விருந்தில் கலந்து கொள்வார்களாம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து சடங்கு இனிதே நடந்ததாக குடியரசுத் தலைவரின் டிவிட்டர் கணக்கு தெரிவித்திருக்கிறது. சாகப் போற நேரத்திலும் சங்கரா ஜெபிப்பது முக்கியமல்லவா!
போதிய இடமின்றி இருக்கும் அரசு மருத்துவமனைகள்
இடைக்கால நிதிநிலை அறிக்கை படிக்கப்படுவதற்கு முன்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மறுத்து வரும் மத்திய அரசை கண்டித்து நடந்திருக்கிறது. இதே நேரம் ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில், திருப்பதி தேவஸ்தானம் 150 கோடி ரூபாயில் திருமலைக் கோவில் கட்டப் போகிறதாம். அதை முதல்வர் சந்திரபாபு துவக்கி வைத்திருக்கிறார். இங்கே ஆன்மீகம், அங்கே சிறப்பு அந்தஸ்து!
அமெரிக்காவில் சிகிச்சை பெறும் அருண்ஜேட்லி நலம் பெற வாழ்த்தி, தனது உரையை பியூஸ் கோயல் தொடங்கினார். அடுத்தபடியாக 2022-ல் புதிய இந்தியா பிறந்தே தீரும் என்று அவர் முழங்கினார். அந்த இந்தியாவில் சுத்தம், சுகாதாரம் உடல் நலம் அத்தனையும் சக்கை போடு போடும் என்றார். ஆனால் நிதியமைச்ச்ர் அருண் ஜெட்லி உடல்நலத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஒருவேளை 2022-ல் இவர்கள் இங்கேயே சிகிச்சை பெறுவார்கள் என்று நம்பிவிடாதீர்கள். அவர்கள் சொல்லும் சிகிச்சை, அறுத்து விட்டு “நூல் இல்லை” என்று அவதிப்படும் அரசு மருத்துவமனை”களுக்குரியது.
மேலும் 2022-ல் அனைவருக்கும் வீடு, கழிப்பறை, மின்சார வசதி சொந்தமாக இருக்கும் என்றார். அப்போது விவசாயிகளுக்கு வருமானம் இருமடங்காக உயர்ந்து இருக்கும் என்று வேறு அடித்துவிட்டார். இந்தப் பொய்களை பார்த்து பாராளுமன்றத்து தூண்களுக்கே அழுகை வந்திருக்கும், அவை அஃறிணைப் பொருட்கள் என்றாலும்!
வெளிப்படையான நிர்வாகத்தில் புதிய யுகத்தை துவங்கியதாக கூறினார் நிதியமைச்சர். வேலை வாய்ப்பின்மை அறிக்கை வெளியே விடாமல் அமுக்கியதிலேயே இவர்களது வெளிப்படைத் தன்மை வெளிப்படையாக தெரிகிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், பினாமி சட்டம் இரண்டும் ரியல் எஸ்டேட் துறையை புதிதாக மாற்றி இருக்கிறது என்றார். அது என்ன மாற்றம் என்று அம்பானி – அதானிகளைத்தான் கேட்க வேண்டும். மேலும் நிலக்கரி மற்றும் அலைக்கற்றை போன்று இயற்கை வளங்களுக்கு வெளிப்படையான ஏலம் நடத்தி இருக்கிறோம் என்றும் அவர் கூறினார் நிலக்கரியில் கோவா முதல் கர்நாடக துறைமுகங்கள் வரை அதானி செய்த ஊழல் முறைகேடுகள் ஆஸ்திரேலியா வரை பிரபலமாக இருக்கிறது.
நிதி அமைச்சரின் வரவு செலவு அறிக்கை ஒலி அலைகளாக வெளியே வருவதற்குள் ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து, தற்போது டாலருக்கு நிகரான மதிப்பு 70.17 ஆக உள்ளது.
பாஜகவின் ஆசியோடு தப்பிச் சென்ற ‘தொழிலதிபர்கள்’
வராக்கடனை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் வங்கித்துறை செயல்பாடு சிறந்த பலனை தர தொடங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதை கேட்டு மல்லையாவும் நீரோ மோடியும் வெளிநாடுகளில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும் தவறு செய்த தொழிலதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும் 98% கிராமங்களில் சுகாதாரம் வெற்றிகரமாக செயல்படுவதாகவும் 5.45 லட்சம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியாவின் புள்ளிவிவர மோசடிகள் குறித்து வினவு தளத்திலேயே நிறைய கட்டுரைகள் உள்ளன.
ஹரியானாவில் நாட்டின் 22-ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அவர் கூறினார். ஏற்கனவே நான்காண்டுகளில் அடிக்கல் நாட்டப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பத்து சதவீதம் கூட வேலைகள் முடியவில்லை, நிதி ஒதுக்கவில்லை என்ற செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வந்து சந்தி சிரித்தது. பாஜக-வினருக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பதால் அவர்கள் சிரிக்காமலேயே அவலப் பொய்களை அடித்து விடுகிறார்கள்.
செல்போன் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மொத்தம் 15 சதவீதம் கூடியிருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதாக அவர் கூறினார். வேலை வாய்ப்பின்மையில் 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி அரசு இங்கே வேலை வாய்ப்பு என்று எதைக் கூறுகிறது?
முத்ரா திட்டத்தில் 70 % பெண்கள் பயனடைந்துள்ளனர். இதற்கு 7.2 லட்சம் கோடி செலவாகிறது என்றார் அமைச்சர். அந்த 70% பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இந்தியா முழுவதும் தேடிப்பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. கும்பமேளாவிலேயே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் இறக்கப்படும் போது, முத்ரா திட்டத்திற்கு யாரை இறக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
மேலும் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு தரப்பட்டிருப்பதாக கூறுகிறார். இந்த அரையாண்டு பேறுகால விடுமுறைகள் அரசுப் பணி தவிர தனியார் நிறுவனங்களில் கூட கிடையாது. கூடுதலாக 8 கோடி இலவச கியாஸ் இணைப்புகள் தரப்படும் என்றார் அமைச்சர். சமையல் எரிவாயு விலையை உயர்த்தி விட்டு, மானியத்தை ரத்து செய்துவிட்டு இணைப்புகள் அதிகரித்து என்ன பயன்? பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காமதேனு என்ற சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் அமைச்சர். மடி விற்றிய மாடுகளை விற்பதற்கு விவசாயிகளுக்கு தடை போட்டுவிட்டு தேனும் பாலும் ஓடுவதாக கூறுவதற்கும் ஒரு அழுத்தம் வேண்டுமல்லவா?
மீனவர்களுக்காக மீன்வளத்துறை அமைப்பதாக அமைச்சர் கூறியிருப்பது வரும் தேர்தலில் மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிப்பதற்கு பயன்படுமே அன்றி மீனவர்களுக்கு என்ன பயன்?
தொடர்ந்து ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாகவும் அதன் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நுகர்வோருக்கு பலன் கிடைத்திருக்கிறது என்கிறார் அமைச்சர். ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தபிறகு அனைத்து நிறுவனங்களும் தமது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை நுகர்வோர்வசம் தள்ளிவிட்ட நிலையில் ஓட்டல் முதல், ரீசார்ஜ் வரை மக்கள் படும் கஷ்டங்கள் அதிகம். மறைமுக வரியாக நாம் அளிக்கும் பணம் முன்னெப்போதைக் காட்டிலும் அதிகம்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெரும்பான்மை பொருள்கள் தற்போது 0% முதல் 5% ஜிஎஸ்டி வரி வளையத்திற்குள் வந்திருப்பதாக அமைச்சர் கூறினார். இந்த வளையத்தை அவர்கள் இஷ்டம்போல அவ்வப்போது மாற்றி வருகிறார்கள். உண்மையில் அத்தியாவசிய பொருட்களின் வரிவிதிப்பிலோ, விலைவாசி உயர்விலோ இன்றுவரை மாற்றமில்லை என்பதே உண்மை.
நான்காண்டுகளுக்கு முன்னர் இருந்த நேரடி வரி, ரூ.6.38 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது என்றார் அமைச்சர். இதே போன்று மறைமுக வரி எவ்வளவு உயர்ந்தது என அவர் கூறவில்லை. மறைமுக வரிதான் மக்களை கசக்கி பிழியும் வரி முறை. இது குறைவாகவும், நேரடி வரி அதிகமாகவும் இருந்தால்தான் மக்களுக்கு வரிச்சுமை குறையும்.
அதிகாரிகள் இன்றியே 99.5% வருமானவரி நடவடிக்கைகள் இணையத்தில் நடந்திருப்பதாக அவர் கூறினார். இதற்காக வணிகர்கள் புதிய ஆடிட்டர்கள், புதிய இணைய புரோக்கர்கள் என்று இந்த ஆண்டு மட்டும் அழுத தொகை எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. இரயில்வே துறையை பொருத்தவரைக்கும் வந்தே மாதர விரைவு வண்டி அல்லது ட்ரெயின் 18 வேகத்தையும் சேவையையும் பாதுகாப்பையும் வழங்குவதாகவும் அது முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்று பெருமை பேசினார். இத்துடன் புல்லட் ரயில் எனும் வெட்டி திட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ‘மேக் இன் இந்தியா’வின் இலட்சணம் புரியும்.
இராணுவத்திற்கு கூடுதல் நிதி வேண்டுமானாலும் ஒதுக்குவாராம் ! யாருக்கு அம்பானிக்கா ? அதானிக்கா?
பாதுகாப்பு துறைக்கு ரூ. 3 லட்சம் கோடியை அள்ளி வழங்கியிருக்கிறார். மேலும், தேவைப்படும் எனில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ரஃபேல் விமானங்களுக்கு 41% கூடுதல் விலை அளிக்கப்படும்போது, இந்த தொகை உயர்வதில் ஆச்சரியம் இல்லை. தொழில் துவங்கும் முயற்சிகளுக்கான தரப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதில் வேலை கொடுக்கும் நிலையை அடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். அதனால்தான் 45 ஆண்டுகால வேலையில்லா திண்டாட்ட சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது போலும். இனி டிவிக்களில் வாசிக்க வரும் பாஜக நிலைய வித்வான்கள் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பிற்கு காரணம் அனைவரும் வேலை கொடுக்கும் முதலாளிகளாக மாறிவிட்டார்கள் என்று பொய்யே தற்கொலை செய்யும் வண்ணம் புளுகுவது உறுதி.
முறைசாரா துறையில் இருக்கும் தொழிலாளிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படுமாம். இந்த மகா பென்ஷன் திட்டம் பிரதான் மந்திரி சரம் யோகி மந்தன் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக மாதம் 100 ரூபாய் ஒரு தொழிலாளி அளிக்க வேண்டும். அவருக்கு 60 வயது ஆன பிறகு மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படுமாம் இதன் மூலம் 10 கோடி முறை சாரா தொழிலாளர்களுக்கு பலன் இருக்கும் என்று அவர் கூறினார். அமைப்பு சாரா தொழிலாளர்களின் முதல் பிரச்சினையே அவர்களுக்கு சான்றிட அங்கீகாரம் மற்றும் அடையாளம் இல்லை. அது இல்லாத போது இவர்கள் அளிக்கும் பென்சன் திட்டம் என்பது நடைமுறையில் ஒரு சில லட்சம் பேர்களுக்கு கிடைப்பது கூட கடினம்.
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார நிலையை அடைந்து விடுவோம் நமது இளைஞர்கள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தலைமை தாங்குவார்கள். வேலைகளை உருவாக்குவார்கள் எதிர்கால எலக்ட்ரானிக் கார்களின் இடமாக இந்தியா இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஏன் இனி இந்தியாவில் ஏழைகள், தொழிலாளிகள் என்று யாருமில்லை, எல்லாரும் முதலாளிகள்தான் என்று ஒரே போடாக போட்டு விடலாமே?
பாசனப் பொறியியல் வல்லுநரான முனைவர் பழ. கோமதிநாயகம் அவர்களின் நூல் வரிசையில் பாவை பதிப்பகத்திலிருந்து வெளிவரும் மூன்றாவது நூல், ‘தாமிரவருணி: சமூக – பொருளியல் மாற்றங்கள்’.
ஏற்கெனவே, ‘தமிழக பாசன வரலாறு’, ‘தமிழகம்… தண்ணீர்… தாகம் தீருமா?’ என்ற இரு நூல்கள் வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன…
காய்தல், உவத்தல் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. (நூலின் பதிப்புரையிலிருந்து)
…தாமிரவருணியைச் சார்ந்து 60 ஆண்டுகளில் ஏராளமான சமூக பொருளியல் – அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, தாமிரவருணி நெடுகிலும் தலைமடை, நடுமடை, கடைமடைப் பகுதிகளில் ஆய்வுக் கிராமங்களைத் தெரிவு செய்து, மாற்றங்களை மிகத் துல்லியமாக மதிப்பிட்டுள்ளார் முனைவர் பழ.கோமதிநாயகம்.
சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன. (இந்நூலின் மொழிப்பெயர்ப்பாளரான எம்.பாண்டியராஜன் உரையிலிருந்து)
… தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் மன்னார் வளைகுடா வரையில் தாமிரவருணி ஆற்றின் நீளம் 125 கி.மீ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் இதுதான். கி.மு. 400 வாக்கிலேயே இந்தப் பகுதியில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்ததை ஆற்றின் கரைகளில் மேற்கொண்ட அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. வரலாற்றாய்வாளர்களின் கருத்தில், இந்திய ஆறுகளில் மிக உயரிய இடத்தைப் பெறுகிறது தாமிரவருணி. இந்த ஆறு, காவிரியைப் போலவே, இரு பருவ மழைக் காலங்களிலும் தண்ணீரைப் பெறுகிறது. குறுகிய, ஆனால், அதுவே உருவாக்கிய வளமான வண்டல் மிக்க படுகை வழியே தாமிரவருணி செல்கிறது. இதுபோன்ற ஆறுதான், வேளாண் சாகுபடிக்கு, குறிப்பாக, பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்வதற்கு மிகவும் பொருத்தமானது. தாமிரவருணி, பாண்டிய நாட்டில் இருந்தது. ஆறு, கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில்தான் கொற்கைத் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகம், ‘’தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ’’ மற்றும் தாலமியின் “ஜியாகிராபி’ ஆகிய இரு நூல்களிலுமே காணக் கிடைக்கிறது. தாமிரவருணியை ஒட்டியுள்ள நெல் விளையும் தாழ்வான பகுதிகளில் தமிழ்ப்பண்பாடு வாழ்ந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ‘டின்னவேலி டிஸ்ட்ரிக்ட்’ என்று அப்போது அழைக்கப்பட்ட இந்த மாவட்டத்தை, கொழும்புக்கும் அருகில் இருப்பதால், பன்னாட்டு வணிகத்துக்கான ஒரு திறவுகோல் என்று இயல்பாகவே ஆங்கிலேயர்கள் கருதினர். (நூலிலிருந்து பக்.25)
தாமிரபரணி எங்கள் ஆறு! அமெரிக்கக் கோக்கே வெளியேறு!!
… தாமிரவருணி பாசனத் திட்டம் பல்வேறு கட்டங்களாக வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், பல்வேறு வளர்ச்சிகள் – உயர்சாதியினரிமிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மாறிய நிலவுடைமைகள், ஒரு போகத்திலிருந்து இரு போகங்களாக சாகுபடிப் பரப்பின் விரிவாக்கம், கடைமடைப் பகுதியில் பணமதிப்புமிக்க வாழை மற்றும் வெற்றிலை போன்ற தண்ணீர்த் தேவையை அதிகரிக்கும் பயிர்ச் சாகுபடிக்கு மாற்றம், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பணப் புழக்கம், சமூகபொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி, நகர்ப்புறம் மற்றும் தொழில் துறைகளுக்கான தேவைகள் அதிகரிப்பு – ஆற்றுப் படுகையில் கிடைக்கக்கூடிய தண்ணீரின் மீதான நெருக்குதலை அதிகப்படுத்தின. இதனால், தகராறுகள் / மோதல்கள் தோன்றின. பாசனத் திட்டத்தின் பல்வேறு நிலைகளிலும் இந்த மோதல்கள் ஏற்பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் கிடைத்த தண்ணீரின் அளவு மற்றும் பல்வேறு கால்வாய்களின் பிரச்சினைகளைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால், மோதல்களுக்கு மேலாண்மைக் கொள்கையும் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. (நூலிலிருந்து பக்.50)
… வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக்கொண்டுள்ளான். ஆனால், இந்த அடிப்படையான வளத்தின் அளவை எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதிகரிக்க இயலாது. மக்கள்தொகை அதிகரிக்கும்போது, ஒரு தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைகிறது. இத்தகைய சூழ்நிலையில், வேளாண் துறைக்கும் தொழில் மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான நீர்வள ஆதாரங்களுக்கான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. நகர்மயமாதல் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது; 2025 இல் 250 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வளரும் நாடுகளில் மக்கள்தொகையின் அளவில் அறுபது சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வாழத் தொடங்கியிருப்பார்கள் (யூடெல்மேன், எம். 1994). இரண்டரைக் கோடி ஹெக்டேர்களுக்குப் பாசனம் செய்யத் தேவைப்படும் அளவுக்கு இவர்களுக்கும் தண்ணீர் தேவைப்படும்.
மாறிவரும் பொருளியல் கட்டமைப்பின் விலையே நகர்மயமாதல். தொழில் உற்பத்தி, நகர்சார்ந்ததாகிறது; உணவுக்கான ஒரு புதிய சந்தையையும் உருவாக்குகிறது. பாரம்பரியமாக, மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், வாழ்க்கைக்கான ஆதாரமாக விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்… வளர்ச்சியுறா நாடுகளின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், ஒரு சதவீதம் உயர்ந்தால், தானியப் பயன்பாட்டின் அளவு, பத்து கோடி டன்கள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இயான் கார்த்ரஸ் மற்றும் ஜெமி மோரிசன், 1994). எனவே, வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்; ஆனால், அது தண்ணீரைச் சார்ந்திருக்கிறது. (நூலிலிருந்து பக்.3-4)
… இத்தகைய காரணங்களால், தண்ணீர்ப் பகிர்வு தொடர்பாகப் போட்டி போட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இது போட்டியாளர்களிடையே மிக மோசமான தகராறை ஏற்படுத்தும். கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு பற்றிய குறிப்பிடத்தக்கதொரு பிரச்சினை என்னவென்றால் தன் எல்லைகளுக்கு வெளியிலிருந்து தோன்றிவரும் ஆறுகளில் வரும் (கிடைக்கும்) தண்ணிரில் எந்த அளவுக்கு ஒரு நாடு சார்ந்திருக்கலாம் என்பதே. டான்யூப், யூப்ரடீஸ், டைக்ரிஸ், சிந்து, நைல் போன்ற ஆறுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தண்ணீரைத் தருகின்றன. பிற நாடுகளிலிருந்து தங்கள் எல்லைகளைக் கடந்து செல்லும் தண்ணீரைச் சார்ந்திருக்கும் நிலையில், அந்த நாடுகளுக்கான தேவைகள், அதனதன் கட்டுப்பாட்டில் இருப்பதை விடவும் அதிகரிக்கும்போது, நீர்வள ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான தகராறுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. எதிர்காலத்தில், தட்டுப்பாடு மிகுந்த, மதிப்புமிக்கதொரு பொருளாகி, சண்டை சச்சரவுக்கும் அமைதி உருவாக்கத்துக்கும் மையப் பொருளாவதன் மூலம் எண்ணெய்யையும் தண்ணீர் விஞ்சி விடும் எனப் பலர் எச்சரித்துள்ளனர்.
தண்ணீரைப் பெறுவதில் பெரியளவில் சமூக-பொருளியல் காரணிகளின் தாக்கமும் இருக்கிறது. பல வளரும் நாடுகள், நீர்வள ஆதாரங்களை எடுத்துப் பயன்படுத்தத் தேவையான முதலீடும் தொழில்நுட்பமும் இல்லாதிருக்கின்றன. ஒரு நாட்டுக்குள்ளேயேகூட, செல்வாக்கு மிக்க தொழில் அல்லது வேளாண் துறை, நீர்வள ஆதாரங்களில் தங்களுக்குரியதை விடவும் அதிகமான பங்கைக் கேட்கலாம். தண்ணீர் விநியோகம் வரையறுக்கப்படும்போது, தாழ்நிலையிலுள்ள வறிய மக்களே எப்போதும் பாதிக்கப்படுகின்றனர். ஓர் ஆற்றுப் படுகையிலுள்ள பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையிலான தகராறுகளால் தண்ணீரைப் பெறுவது மேலும் சிக்கலாகி விடுகிறது. தனிநபர்களிலிருந்து நாடுகள் வரையில் பல்வேறு நிலைகளில் இந்தத் தகராறுகள் ஏற்படுகின்றன. இத்தகைய தகராறுகளும், வளர்ச்சியுடன் இணைந்ததொரு பகுதி என்கிற நிலையில், சிறந்த நீர்வள மேலாண்மைக்கும் பொருளாதார வளர்ச்சியைச் சமாளிக்கவும், தகராறுகளுக்கான அல்லது மோதல்களுக்கான வேர்களையும் அதற்கான தீர்வுகளையும் புரிந்து கொள்வது அவசியம். (நூலிலிருந்து பக்.4-5)
இந்நூலில் நீரும் வேளாண்மையும்; வளர்ச்சியில் வேளாண்மை; தாமிரவருணியில் வேளாண்மை; பாசன நிர்வாகம்; தாமிரவருணி ஆற்றில் பாசனம்; தாமிரவருணி ஆற்றுப்படுகையின் வளர்ச்சிகளும் மோதல்களும்; சமுதாய மோதல்கள்; 1970-2000 கால மோதல்கள்; விவசாயிகளின் சங்கங்கள்; தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் வேளாண் தேவைகளுக்கும் இடையிலான மோதல்… என்பது உள்ளிட்ட பல்வேறு உட்தலைப்புகளில் ஆய்வு நோக்கில் தொகுத்திருக்கிறார். பொருத்தமான வரைபடங்களும், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறைகளிடமிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களும் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
நூல்: தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள் ஆசிரியர்: முனைவர் பழ.கோமதிநாயகம் தமிழில்: பாண்டியராஜன்
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், 16, (142) ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014. தொலைபேசி:044 – 2848 2441 மின்னஞ்சல்: pavai123@yahoo.com
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்பாட்டை நிராகரிக்கின்றோம் !
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ மகேந்திரன்
தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஓப்பந்தம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த இழுத்தடிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில், கடந்த 2015 -ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த 1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும். என புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி: Artigala Awantha
கடந்த முன்று வருடங்களாக 1000 ரூபா சம்பள கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறு அரசியல் கபட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் கடந்த முன்று மாதங்களில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென கோரி பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தேசிய போராட்டமாக எழுச்சிபெற்று வந்த நிலையிலேயே அப்போராட்டங்களை மலினப்படுத்தும் வகையிலும் தொழிலாளர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் எட்டப்படிருக்கும் உடன்பாடு முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.
பேச்சு வார்த்தைகளின் போது கொடுப்பனவுகளுடன் 940 ரூபா வரை உடன்பாடு எட்டபட்டதாகவும் தாம் 1000 ரூபா அடிப்படை சம்பள நிலைப்பாட்டில் இருந்து தாம் பின்வாங்க போவதில்லை என கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்து வந்தன. மறுபுறதில் ஏனைய மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான நிலைப்பாட்டையை வெளிப்படுத்தி வந்தன. இந்த பின்னணியில் நாட்டின் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளும் ஏனைய தொழிற்சங்கங்களும் இனைந்து முன்னெடுத்து வந்த எதிர்ப்பு இயக்கம் நாடளாவிய ரீதியில் வலுப்பட்டு வந்த நிலையில் அரசாங்கமும் தொழிற்சங்களும் இனைந்து இந்த துரோகத்தனமான சூழ்ச்சியை செய்திருக்கின்றன.
எனவே, தோட்டத்தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத, நாட்டில் இருந்து வரும் அடிப்படை சம்பள கொள்கைக்கு முரணாகவும் எந்த வகையிலும் வாழ்க்கை செலவுக்கு போதுமானதுமல்லாத இந்த தீர்மானத்தை எமது கட்சி முற்றாக நிராகிக்கிறது.
தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட முன்வரவேண்டும் எனவும் இடது சாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஏனைய தொழிலிற்சங்கங்கள் தோட்டத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுப்பதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன். அதேவேளை, மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் தமது சுயநல மக்கள் விரோத அரசியலை கைவிட்டு தொழிலாளர்கள் சார்பாாக செயற்பட வேண்டும் எனவும் வலிறுத்துயுள்ளார்.
__________________
வரலாற்றில் மீண்டும் ஒரு மாபெரும் காட்டிக்கொடுப்பு அரங்கேறியுள்ளது.
தொண்டா, வடிவேல் இணைந்து இதனை நடத்தியுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்திற்காக போராடி வந்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முழுமையாக ஆதரித்ததோடு எமது நேச சக்திகளான சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து அடிப்படை சம்பளம் ரூ 1000/- ஜ வென்றெடுப்பதற்காக போராடி வந்திருக்கின்றோம்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதற்கு பிறகு தோட்டத் தொழிலாளர்கள் ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள், இளைஞர்கள் என ஒன்றிணைந்து அடிப்படை சம்பளத்திற்காக போராடி வந்த போதும் தோட்டத் தொழிலாளர்களின் சந்தாவை பெற்று கம்பெனிகளுக்கு விலைபோகும் பிற்போக்கான தொழிற்சங்கங்கள் தாம் கூறிவந்த ஆயிரம் ரூபாய் கோரிக்கையை முதலாளிமாருக்காகவும் அரசாங்கத்துக்காகவும் விட்டுக் கொடுத்துள்ளனர். வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பே நடந்துள்ளது எனவும் இதனை மிக வன்மையாக கண்டிப்பதாகவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் கூட்டு ஒப்பந்த காட்டிக்கொடுப்பிற்கு எதிராக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் வைப்பிலிடப்படும் தொகையையும் சேர்த்து சம்பளம் அதிகரிக்கப்படுள்ளது என காட்டும் மாபெரும் துரோகத்தனம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே நடந்துள்ளது.
இதற்கான முழுப் பொறுப்பையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் மத்தியஸ்தம் வகித்த அரசாங்கமும் ஏற்க வேண்டும். 28.01.2019 அன்று அலரிமாளிகையில் வைத்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருட்டுக் கூட்டத்தின் தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தோட்ட தொழிலாளர்கள் இவ்வளவு போராடியும் வாய் திறக்காத ஜனாதிபதி யார் பக்கம் என்பதை காட்டியிருக்கின்றார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது பற்றி முன்னாள் மனித உரிமைப் போராளி மனோ கணேசன் என்ன சொல்லப் போகிறார்? நாங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுபவர்கள் இல்லை. கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் மட்டும் தான் காட்டிக் கொடுத்து விட்டார்கள் எனக் கூறி தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து தப்பிக்க போகிறாரா அமைச்சர் திகாம்பரம்? மைத்திரி, ரணில், தொண்டா, திகா, வடிவேல் சுரேஸ் தொழிலாளர் பக்கம் இல்லை நாங்கள் என்றுமே முதலாளிமார் பக்கம் என்று அடித்து கூறியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறான அரசியல் பாதையை தெரிவுச்செய்ய போகிறார்கள் என்பது பற்றி பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், காணி, வீட்டுரிமை மற்றும் நிர்வாக சிவில் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி என்றுமே பயணிக்கும் எனவும் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து போராடும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.எல்.எஃப் ஐடி நிறுவனத்தின் கால் டாக்ஸி ஓட்டுநரை போலீசு திட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்திற்கு நீதி கேட்டும் சம்பந்தப்பட்ட போலீசுமீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்த நிறுவனத்தின் முன்பாக சக ஓட்டுநர்கள் 31.01.2019 அன்று போராட்டம் நடத்தினர்.
போலீசு திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர் ராஜேஷ்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்.டி.எல் கால்டாக்ஸியின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார் ராஜேஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ் சென்னை மாங்காட்டில் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார். கடந்த 25 -ம் தேதி காலை 7 மணிக்கு டி.எல்.எஃப்-ன் முதல் சவாரிக்காக கோயம்பேட்டில் இருந்து பாடி செல்லும் வழியில் உள்ள அண்ணாநகரில் பெண் ஊழியரை ஏற்றி வர சென்றிருக்கிறார்.
அப்பெண் ஊழியரை ஏற்றிக் கொண்டு மற்றொரு ஆண் ஊழியர் வருவதற்காக காத்திருந்த போது அங்கு வந்த போலீசுக்காரர், காரின் பின் பக்கம் அடித்து ராஜேஷை அசிங்கமாக திட்டியிருக்கிறார். அதனால் அடுத்த 100 அடி தள்ளி வண்டியை பார்க் செய்திருக்கிறார். அப்பொழுதும் அதே போலீசு வந்து திட்டியிருக்கிறார். வண்டியில் பெண் ஊழியர் இருப்பதாக சொல்லியும் அவமானப்படுத்தி இருக்கிறது போலிசு. இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலை நகர் ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
உடலை கைப்பற்றிய போலீசு தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது மொபலை ஆராய்ந்து பார்த்தபோது மரண வாக்கு மூலத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அந்த ஆதாரத்தை அழித்து விட்டு மொபலை ராஜேஷின் சகோதரரிடம் ஒப்படைத்து இருக்கிறது. அவருடைய மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள் போனை ரெக்கவரி செய்து பார்த்த போதுதான் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. உடனடியாக அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இல்லையென்றால் வழக்கம் போல் காதல் தோல்வி, பணிச்சுமை, குடும்ப தகறாறு என்ற பொய்யை சொல்லி போலீசு கிரிமினல்கள் மூடி மறைத்திருப்பார்கள்.
இதற்கு முந்தையநாள் திருவொற்றியூரில் வாடிக்கையாளரை அழைக்கச் சென்றபோது நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதாக சொல்லி ரூ. 500 அபராதம் விதித்துள்ளது. அதற்கு பில் கேட்டதற்கு அசிங்கமாக திட்டியுள்ளது போலீசு. அதுபற்றி தன் மரணத்திற்கு முன் பேசிய அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார் ராஜேஷ்.
மேலும் அந்த வீடியோவில், “பப்ளிக் ஸ்ட்ரைக் பண்ணால் அடிச்சி உள்ள ஏத்துறீங்க. போலிசு தப்பு பன்னா என்ன பன்றது. இதுக்கு எதனா ரூல் இருக்கா உங்க சட்டத்துல… எதுவும் கிடையாது. போலீசு வைத்ததுதான் சட்டம். நீங்க எட்டு மணி நேரம் டூட்டி பாத்துட்டு போயிட்டு தூங்குறிங்க. நாங்க எவ்ளோ நேரம் வண்டி ஓட்டுறோம்னு உங்களுக்கு தெரியுமா? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து 6 மணிக்குள் கம்பனி சென்று ஏழு மணிக்குள் பிக்கப் பாயிண்ட் போயிவிட்டு நைட்டு தூங்க ஒன்றை மணி ஆகி விடுகிறது.. மூன்றரை மணி நேரம் தான் தூக்கமே. இதை எல்லாம் தாங்கிட்டு வண்டி ஓட்டிட்டு இருந்தா உங்காளுங்க என்ன கேக்குறாங்கன்னா, “நீ உங்க அம்மாளுக்குத்தான் பொறந்தியா” என்று கேட்கிறார்கள். இது உன் வேலையா? நோ பார்க்கிங்கில் இருந்தால் நீ ஃபைன் போடு. நான் நோ பார்க்கிங்கில் கூட நிறுத்தவில்லை. என் சாவுக்கு காரணம் சென்னை போலீசுதான்” என்று கூறியிருக்கிறார்.
வாக்குமூல வீடியோவின் சுட்டி:
மேலும், “ஒவ்வொரு டிரைவரும் தினந்தோறும் செத்து செத்து வண்டி ஓட்டிட்டு இருக்கான். அதிலும் இந்த மாதிரி பிச்சைப் பசங்களால் மாசத்துக்கு ஒரு டிரைவர் செத்துகிட்டு இருக்கான். என் சாவே கடைசியா இருக்கனும். இதுக்கப்புறம் இந்த மாதிரி நடந்துச்சினா எடப்பாடி பழனிச்சாமியோ, ஏ.கே விஸ்வநாதனோ வேஸ்ட்தான்…
தரமணியில் ஒரு ஓட்டுநர் இதே போல் இறந்தார். எதாவது நடவடிக்கை எடுத்திங்களா? கேட்டா, இடம் மாத்திட்டேன், ஆயதப் படைக்கு மாத்திட்டேன்னு சொல்லுவிங்க. மாத்திட்டிங்க….. மறுபடியும் அதே மாதிரி தானே நடந்துக்கினு இருக்கு. அதுக்கு எதாவது தீர்வு இருக்கா. ஒன்னும் கிடையாது. மேற்கொண்டு இதுமாதிரி நடந்தா வேலையை விட்டு போயிடுங்க. மக்கள்கிட்ட கொடுத்துடுங்க. மக்களாட்சி பண்ணிக்கட்டும்” என்று கூறி இருக்கிறார்.
இந்த வீடியோ வாயிலாக தகவலறிந்த ஓட்டுநர்கள் தற்போது போராடி வருகிறார்கள். முக்கியமாக “மாடாக உங்கள் நிறுவனத்துக்காக நாங்கள் உழைக்கிறோம். எங்களுக்காக குரல் கொடுங்கள்”. சம்பந்தப்பட்ட போலீசை தண்டிக்க வலியுறுத்துமாறும் சம்பவம் நடந்தபோது வாகனத்தில் இருந்த ஊழியரை போலீசுக்கு எதிரான சாட்சியாக முன்னிறுத்துமாறும் கோருகிறார்கள். ஆனால் டி.எல்.எஃப் நிறுவனமோ அதன் ஊழியர்களோ அரசோ இப்போராட்டத்தை கிஞ்சித்தும் கண்டுகொள்ளவில்லை.
ஒருபக்கம் பணி பாதித்துவிடக்கூடாது என்று டி.எல்.எஃப் ஊழியர்களே இறங்கி வந்து ட்ராபிக் கிளீயர் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் அலுவலகத்தின் முன் போராடுவது பிரச்சனை எனக்கருதி போலிசின் மூலம் முடக்க முயற்சித்து வருகிறனர்.
போலீசை கண்டித்து டி.எல்.எஃப் நிறுவனம் முன்பாக ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் அதிகரித்த பிறகு கால் டாக்சிகள் பெருமளவு அதிகரித்து விட்டன. இந்தக் கார்களின் ஓட்டுநர்கள் சவாரிக்காக சென்னை முழுவதும் காத்துக் கிடக்கின்றனர். எல்லா இடங்களிலும் கார் நிறுத்த வழியில்லை. மீறி நிறுத்தினால் போலீசு அடாவடி செய்கிறது. தள்ளி நின்று வந்தால் தாமதமா என்று வாடிக்கையாளரோ இல்லை கால் டாக்சி நிறுவனங்களோ பதிவு செய்கின்றன. மேலும் குறிப்பிட்ட வேலை நேரத்தில் இத்தனை சவாரி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருக்கின்றனர். மற்றொரு புறம் பொதுப்போக்குவரத்தை கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கி வருகிறார்கள்.
இன்று சென்னையில் கால் டாக்சி ஓட்டும் ஓட்டுநர்கள் அனைவரும் பெரும் பதட்டத்திலேயே ஓட்டுகிறார்கள். அந்த பதட்டத்தை மேலும் கிளறிவிடுகிறது போலீசு. கார் வசதி வேண்டுமென்று ஆக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இது குறித்து கவலைப்படுவதில்லை. இறுதியில் நம் தொழிலாளிகள் தற்கொலை செய்கிறார்கள். தனியார்மயமாக்கத்தால் கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. ஆனால் இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அரசோ, ஆளும் வர்க்கமோ எதற்கும் பொறுப்பேற்பதில்லை. என்ன செய்யப் போகிறோம்?
”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் காணொளி …
அவர் உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள் …
♦ நான் மருத்துவம் படித்த மாணவர்களிடம் கேட்கிறேன்… அனாடமி படிச்சிருக்க, பிசியாலஜி படிச்சிருக்க, பயோகெமிஸ்ட்ரி படிச்சிருக்க, 19 அறிவியல் பாடத்தையும் படிச்சிட்டு அப்புறமும் உன் கிளினிக்ல சாமிபடம் இருந்திச்சினா என்ன சொல்றது?
♦ கேள்வி மேல கேள்வி கேட்பான். இந்த தியரி தப்பு. நான் இங்க படிச்சேன். அங்கே படிச்சேன். அப்படினு சொல்லிட்டு வீட்ல பட்ட போட்டுட்டு தூங்குவான்.
♦ நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா. பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது.. நம்ம வருமானம் குறைஞ்சிட்டே போகுதே… அத கடவுள் பாத்துப்பாருப்பா.. சிரிப்பா இருக்கு… கோவமா இருக்கு…
♦ இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள் நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது.
கேள்வி: நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா…?? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றிபெறுகிறாரா..???அல்லது யாரோ முடிவு செய்கிறார்களா..??
– க.தட்சிணாமூர்த்தி
அன்புள்ள தட்சிணாமூர்த்தி,
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் மக்களிடையே செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன. விளம்பரத் தொழிலே பிரம்மாண்டமாய் வளர்ந்தது. இன்று ஒரு நபர் பயன்படுத்தும் சோப்பு, சீப்பு, பற்பசை அனைத்தும் அவரே முடிவு செய்து வாங்குவதாக நினைத்தால் அது உண்மையில்லை.
நமது நுகர்வு ஆசையையும், அதில் வாங்க வேண்டிய பிராண்டையும் விளம்பரங்களே முடிவு செய்கின்றன. விளம்பரங்கள் என்பது ஊடகம், விளம்பரப் பலகைகள் மூலம் மட்டுமல்ல, இவற்றின் செல்வாக்கினால் மக்களே குறிப்பிட்ட பிராண்டுகளை தாமாகவே விளம்பரம் செய்கிறார்கள்.
ஒரு பற்பசை வாங்குவதையே நம்மால் சுயமாக முடிவு செய்ய முடியாத போது தேர்தலில் மட்டும் சுயமாக ஓட்டுப் போட முடியும் என்று நம்புகிறீர்களா? சென்ற 2014 தேர்தலில் மோடிக்கு வாக்களித்த மக்களில் கணிசமானோர் ஊடகங்களின் செல்வாக்கினால் பாஜக-வைத் தெரிவு செய்தனர். வாக்குப் பதிவு எந்திரத்தின் பிரச்சினை எல்லாம் இரண்டாம் பட்சமானது.
அந்தக் காலத்தில் இருந்த “பூத் கேப்சரிங் – வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது” இன்று இல்லை என்றாலும் இந்த எந்திரத்தில் மென்பொருள் மோசடி செய்ய முடியுமென்றும், முடியாது என்றும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சினையே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றது என்று சொல்ல முடியாது.
அரசியல் படுத்தப்படாத மக்கள் சிற்சில பிரச்சாரங்களின் மூலமும், எது வெற்றிபெறும் என பொதுக்கருத்தில் ஒத்துப் போவதினாலும் அதிகம் வாக்களிக்கிறார்கள். அல்லது ஆளும் கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளை தெரிவு செய்கிறார்கள். அவர்களுக்கு வேறு மாற்று இல்லை என்பதனாலும் அப்படி தெரிவு செய்கிறார்கள்.
சென்ற தேர்தலில் மோடியின் வெற்றியை தீர்மானித்தது ஆளும் வர்க்கங்களும், கார்ப்பரேட் ஊடகங்களுமே! அதானி எனும் தரகு முதலாளி பெரும் பணத்தை அளித்தார். ஊடகங்கள் மோடியின் “வளர்ச்சி” சவடால் பிரச்சாரத்தை செய்தியாக அளித்துக் கொண்டே இருந்தன. ஆகவே நமது நாட்டில் தேர்தல் முடிவுகள் என்பது பெயரளவில் ஜனநாயகத்தையும், செயலளவில் முதலாளிகள் – ஆளும் வர்க்கங்களுக்கானதாக மட்டுமே இருக்கின்றன.
தேர்தல் அரசியலுக்கு வெளியே யோசிப்பதன் மூலமே மக்களின் உரிமைகள் மீட்டெடுக்க முடியும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதோ, இந்துத்துவ பார்ப்பனிய பாசிசத்தை வேரறுப்பதோ தேர்தல் மூலம் மட்டும் முடியாது.
♦ ♦ ♦
கேள்வி: ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யாராக இருக்கும்…?
– எஸ். செல்வராஜன்
அன்புள்ள செல்வராஜன்,
காங்கிரசு போல பாஜக-வும் கோஷ்டி மோதலை வைத்து இயங்கும் ஒரு கட்சிதான். தமிழகத்திலேயே எச்.ராஜா, பொன்னார், தமிழிசை, எஸ்.வி.சேகர் போன்றோர் கோஷ்டிகளாகத்தான் செயல்படுகின்றனர். காங்கிரசு போல பாஜகவும் நேரடியாக முதலாளிகளின் நலனுக்காக செயல்படும் கட்சி என்பதால் முதலாளிகளின் பிரிவுகளுக்கேற்ப கோஷ்டிகள் செயல்படுகின்றன.
இறந்து போன பிரமோத் மஹாஜன், இன்றைய நிதியமைச்சர் (மருத்துவ விடுப்பில் இருக்கிறார்) அருண் ஜேட்லி போன்றோர் நேரடியாக சில தரகு முதலாளிகளை ஆதரிக்கும் சற்றே லிபரல் கொள்கை கொண்டோர். அன்று பாஜக-விற்கு நன்கொடை வாங்கும் வேலையை பிரமோத் மஹாஜன் செய்தார். சென்ற தேர்தலின் போது மோடி – அமித்ஷா கூட்டணி அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் தயவில் ஆட்சியைப் பிடித்தது. இவர்களது முதலாளிகள் பாசம் ரஃபேல் ஊழல் வரை சந்தி சிரிக்கிறது. இன்றோ நன்கொடைகள் முதலாளிகள் மூலம் குவிந்து வருகிறது. காங்கிரசு கூட பாஜக-வின் நன்கொடை சேர்ப்பு வேகத்தின் அருகில் இல்லை.
எனினும் மோடி எனும் பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ் – தரகு முதலாளிகள் – பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டாக நிறுத்தித்தான் மன்மோகன் சிங் எனும் பழைய பிம்பத்தை மாற்றினர். பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு தாராளமயக் கொள்கை எனும் பொருளாதார ஒடுக்குமுறையோடு இந்துத்துவத்தையும் அமல்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிப் போக்கு முதலாளிகளுக்கு ஆதரவாகவே இருப்பதால் மேற்கண்ட மோடி பிம்பத்திற்கு இப்போது பெரிய ஆபத்தில்லை.
அதே நேரம் சிற்சில அதிருப்திக் குரல்கள் அதாவது ஆர்.எஸ்.எஸ் – சில முதலாளிகள் மூலம் நிதின் கட்காரியை நிறுத்தலாம் என்று வரலாம். ராகுல் காந்தியை சந்தித்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரும், ரஃபேர் ஊழலில் அம்பானிக்கு ஆதரவாக மோடி செயல்பட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் சில முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த ஆளும் வர்க்கத்தின் அதிருப்தியை மோடி இழந்து விட்டார் என்று சொல்ல முடியாது.
ஜெயா போன்று மோடியும் தனிச்சிறப்பான சலுகைகளோடு ஆளும் வர்க்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு தலைவராக இருக்கிறார். அதனால்தான் ஊடகங்கள் முதல் நீதிமன்றம் வரை அவரை தட்டிக் கேட்க யாருமில்லை. அதேநேரம் மோடி எனும் தனிநபராலேயே இந்த ஆட்சி நடைபெறுவதாக பொருளில்லை.
மறைபொருளில் அது ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனியம், முதலாளிகளின் தாராளமயத்தின் நலனாகவே ஒரு கும்பலால் முன்னிறுத்தப்படுகிறது. ஆகவே மோடி எனும் நபர் இக்கொள்கைக் கூட்டணியின் நலனை முன்னிறுத்தும் ஒரு பிம்பம். அது மோடி இல்லையென்றாலும் அப்படித்தான் செயல்படும்.
♦ ♦ ♦
கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வந்தது. போராடும் ஊழியர்களை கைது – சிறை சஸ்பெண்ட் என்று அடக்குமுறையை ஏவி மிரட்டியது எடப்பாடி அரசு. இறுதியில் பேச்சு வார்த்தைக்கு எடப்பாடி அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் – மக்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணிக்கு திரும்பியிருக்கின்றனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு காரணம் யார்?
♦ எடப்பாடி அரசின் அடக்குமுறை
♦ எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
♦ வேலை போகுமென்ற பயம்
♦ மக்கள் ஆதரவில்லை
(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்.)
♦ ♦ ♦
இந்தப் போராட்டத்திற்கு நெடிய வரலாறு உண்டு.1.3.2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்;
மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தைத் தங்களுக்கும் தர வேண்டும், ஒரே கல்வித்தகுதியில் ஒரே வேலையை செய்யும் எங்களுக்கு மட்டும் ஊதியத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கோருகின்றனர்.
7-வது ஊதியக் குழுவின்படி பரிந்துரைப்படி 01.01.2016 முதல் ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசோ அக்டோபர் 2017 முதல் கணக்கிட்டு வழங்குகிறது. பாக்கியுள்ள 21 மாத கால நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது ஊழியர்களின கோரிக்கை.
ஐந்தாயிரம் அரசு பள்ளிகளை மூடவும், பல பள்ளிக்கூடங்களை இணைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதைச் செய்யக்கூடாது. இப்படி பள்ளிக்கூடங்களை இணைப்பதால் பல தலைமையாசிரியர் பணியிடங்கள் இல்லாமல் போய்விடும். ஒருவர் தலைமையாசிரியராக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி, அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி – யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணைகள் அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க வித்திடுகிறது. இது எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும். அதாவது அரசுப்பணிக்கு இனி ஆட்கள் எடுப்பது இருக்காது. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகி விடும். அதை நீக்க வேண்டும்” இதுவே போராடும் ஊழியர்களின் கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமான கோரிக்கை. இதனை தவறு என்று மறுத்துபேச இந்த ஊழல் கும்பலால் முடியவில்லை. அதனால்தான் போராட்டத்தை குறுக்கு வழியில் ஒடுக்க முயற்சிக்கிறது.
போராட்டம் தொடங்கிய வரலாறு
இந்த போராட்டம் நேற்று இன்று தொடங்கியதல்ல. சுமார் 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். போராட்ட வடிவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… தங்களால் என்ன வடிவங்களில் கோரிக்கையை எடுத்துரைக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் போராடி இருக்கிறார்கள். ஆனால், ஆளும் அதிமுக அரசோ அவர்களை கண்டுகொள்ளாமல் இழுத்தடிப்பது அல்லது பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்ற பாணியை பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து சிறையிடைத்தார் மறைந்த குற்றவாளியான ஜெயலலிதா.
எஸ்மா சட்டத்தின்கீழ் கொடூரமான அடக்குறைகளை ஏவினார். இரவில் வீடு புகுந்து கைது செய்வது, பொது ஒழுங்கை சீர்குலைத்தல் என்று பல்வேறு பொய் வழக்குகளை போட்டு 30 நாட்களுக்கும் மேல் சிறையிடைத்தார். 1 லட்சத்து 76 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அதே 2003 காலகட்டத்தில்தான் புதிய ஓய்வூதிய திட்டமும் அமல்படுத்தப்பட்டது. அதற்கான முன்னோட்டம்தான் அந்த அடக்குமுறை. அன்றிலிருந்தே தொடங்கி விட்டது இதற்கெதிரான போராட்டம். ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும், என அவர்கள் நம்பியதால் எதிர்ப்பு கிளம்பவில்லை.
2016: புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)
ஆனால், அரசு ஊழியர்கள் நம்பியதற்கு மாறாக புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணியாற்றியவர்கள் உயிரிழந்தபோது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவர்களிடம் பிடிக்கப்பட்ட தொகைகூட கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் இது ஒரு மோசடியான திட்டம் என உணர்ந்து போராட்டத்தை தொடங்கினர்.
பின்னாளில் எந்த ஜெயலலிதா இத்திட்டத்தை கண்மூடித்தனமாக அமல்படுத்தி ஊழியர்களின் வாழ்வை அதலபாதாளத்துக்கு தள்ளினாரோ அதே ஜெயலலிதாதான் கடந்த முறை சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழும், 2016 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதிகளின்போதும் இதனை ரத்து செய்வதாக கூறியிருந்தார். அதை நிறைவேற்றக்கோரிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
2017 ஆகஸ்ட் 22 அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து, செப்டம்பர்-7 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. தடையை மீறி போராட்டத்தை தொடரவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நாட்டண்மைத்தனத்துடன் நடந்து கொண்ட நீதிமன்றம் “இரண்டு மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்தது. அதனடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
பிறகு மீண்டும் 24.03.2018 மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 08.05.2018 கோட்டை முற்றுகை போராட்டம். கைது, சிறை … அப்பொழுதாவது இவர்களின் கோரிக்கையில் ஒருபாதியாவது நிறைவேற்ற முயற்சித்திருக்கலாம். ஆனால், இல்லை.
மீண்டும் ஜூன் மாதம் அடையாளப் போராட்டம் நடத்தி கைதாகினர். அதனைத்தொடர்ந்து அக்டோபர் 13-ம் தேதி ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்து நவம்பர் 27-ம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அந்த சமயத்தில் கஜா புயலால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் போராட்டம் டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
2017-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டம். (கோப்புப் படம்)
அப்பொழுதே பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் போராட்டத்தை சுமுகமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அடிமை எடப்பாடி அரசோ, மெத்தனம் காட்டியது.
டிசம்பர் 10-ம் தேதி நீதிமன்றத்தில் அந்த விசாரணைக்கு வந்ததால் ஜனவரி 7 வரை போராட்டத்தை ஒத்தி வைக்கவும் அதற்குள் ஊதிய முரன்பாடு குறித்த சித்திக் கமிட்டியின் அறிக்கையையும், புதிய பென்சன் திட்டம் குறித்த ஸ்ரீதர் குழுவின் அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் எடப்பாடி அரசு காற்றில் பறக்கவிட்டது. அதைப்பற்றி நீதிமன்றம் எள்ளளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.
அரசின் அடக்குமுறையும் பொய் பித்தலாட்டமும் !
இந்த போராட்டத்தை தனது வழக்கமான பாணியில் கலைத்து விடலாம் என்று கனவு கண்டது அதிமுக கும்பல். அது முடியவில்லை. பிறகு மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் பாதிக்கப்படுவார்கள் என்ற போலியான அக்கறையை ஊடகங்கள் மூலம் பரப்பியது. இந்த அக்கறை பள்ளிகளை மூடலாம் என்று முடிவு செய்தபோது வரவில்லை.
போராட்டம் தீவிரமடையவே நீதிமன்றத்தை நாடி தடைவிதிக்கக் கோரியது. முதலில் முடியாது என்று கூறிய நீதிமன்றம் அடுத்தடுத்து மென்மையாக கடிந்தது. பிறகு 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மிரட்டியது. இவ்வாறு நீதிமன்றம் தலையிடுவது முதல் முறையல்ல, நான்குமுறை இந்த போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளது.
எப்பொழுதெல்லாம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் நீதிமன்றம் பகிரங்கமாவே இவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இதுமட்டுமா? சம்பள உயர்வு கேட்டு போராடிய செவிலியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்ததோடு “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லலாம்” என்று எகத்தாளமாக சொன்னது. முதுகலை மருத்துவப் படிப்புக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிய அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை என அனைத்திற்கும் நீதிமன்றம் தாமாகவே உத்தரவு போட்டு வருகிறது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை 28-ம் தேதிக்குள் பணிக்கு வர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என மிரட்டியது. அவ்வாறு வருபவர்கள் அதே பள்ளியில் பணியைத் தொடரலாம் என்ற சலுகையும் அளித்தது. போராடுபவர்களை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. இவர்களுக்கு பக்கபலமாக பாஜக அல்லக்கைகள் பள்ளியை நாங்களே நடத்துவோம் என்று வக்காலத்து வாங்கியது.
போராட்டம் தொடரவே, தற்காலிக ஆசிரியர்களை எடுக்கப்போவதாக அறிவித்தது. அதற்கு இதுவரை மூன்று லட்சம்பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 10,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவித்து தனது கொடூர முகத்தை காட்டியது. இதற்கெல்லாம் அஞ்சாத அரசு ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
அரசோ, போராடுபவர்களுக்கு 17பி நோட்டீஸ் கொடுத்து பணிய வைக்க முயன்று தோற்றுப் போனது. 23-ம் தேதி மாவட்டத் தலைநகர்களில் செய்த மறியலில் உளவுத்துறை புள்ளிவிவரப்படி 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளார்கள். 24.01.2019 அன்று வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற மறியலில் 2 இலட்சத்து 32 ஆயிரம் பேர் கைதாகி உள்ளார்கள். இரண்டு நாட்களிலும் நாலரை லட்சம் பேர் கைதாகியுள்ளனர். இதில் இரண்டு இலட்சம்பேர் பெண் ஊழியர்கள்.
500-க்கும் மேற்பட்டோரை சஸ்பெண்ட் செய்துள்ளது. முன்னணியார்களை கைது செய்து அவர்கள் மீது 143 சட்டவிரோதமாக கூடுதல், 290 அரசு ஊழியர்கள் சொல்வதை கேட்காமல் இருத்தல், 341 அரசு ஊழியரை தடுத்தல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 7(1)(ஏ) (சிஎல்) பொதுமக்களுகும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் சாலை மறியல் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலிசு.
இந்நிலையில், மாநில அரசு மிக மோசமான நிதி நெருக்கடியில் இயங்குவதால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று வெளிப்படையாகவே கூறி, நிதி நெருக்கடிக்கான வரைவோலையை பத்திரிக்கையில் விளம்பரம் செய்தது.
அதில், “ஓய்வூதிய நிதிச் சுமையின் காரணமாக உலகம் முழுவதுமே புதிய ஓய்வூதிய முறைதான் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலப் பணிகளுக்கு நிதியே இல்லாமல் போய்விடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் 71 சதவீதம் சம்பளத்துக்கே சரியாகி விடுகிறது. ஊழியர்களுக்கான சம்பளத்தையே கடன் பெற்றுத்தான் தர வேண்டியிருக்கும். ஆகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது.
அதேபோல் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையை பொறுத்தவரை, தமிழக அரசு ஏற்கனவே 24 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் நிலையில், இந்த நிலுவைத் தொகையையும் வழங்கினால் கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படும் அதனைத் தங்களால் வழங்க முடியாது” என்றும் கூறியது.
அரசின் இந்த மோசடியான பொய் பிரச்சாரத்திற்கு பதலளிக்கும் விதமாக, நிதி நெருக்கடி இருக்கும்போது சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் எப்படி சம்பளம் உயர்த்தினீர்கள் என்றும், 21 மாத நிலுவைத்தொகையை நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆகியோருக்கு மட்டும் வழங்கியிருக்கிறீர்களே அவர்களுக்கு கொடுக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என்றும் கேள்வியெழுப்பினார்கள். இதுவரை அதற்கு பதில் இல்லை.
அதோடில்லாமல் வருவாயில் 71 சதவீதம் தங்களுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் சொல்வது உண்மையில்லை. சம்பளத்துக்கான செலவீனம் 31.63%. ஒரு ஆண்டுக்கு 52 ஆயிரத்து 172 கோடி. ஓய்வுதியத்துக்கான செலவீனம் 15.37 சதவீதம். இது ஆண்டுக்கு 25,362 கோடி. ஆக மொத்தம் 47 சதவீதம்தான் ஒதுக்கப்படுகிறது. இந்த சம்பளத்தில் உயர் அதிகாரிகளின் நிர்வாகச் செலவினமான 6.57 சதம், 10 ஆயிரத்து 837 கோடியும், வருடம்தோறும் அரசு செலுத்தும் வட்டியான 17.42 சதவீதமான 28,729 கோடியையும் சேர்த்து ஊழியர்களின் சம்பளமாக சொல்கிறார்கள்” என்பதை அம்பலப்படுத்தினர். அத்துடன் “முதல்வர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுதான் மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் நல்லது” என்றனர்.
இந்நிலையில் 28-ம் தேதி இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சசிதரன் மற்றும் சாமிநாதன், “தற்காலிகமாக வேலைக்கு ஆள் எடுத்தால் அவர்களும் நிரந்தரமாக்கக் கோரி போராடுவார்கள். எனவே புதுப்பிரச்சனைக்கு வழி வகுக்காமல் ஊழியர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும்” என்று கூறி வழக்கை பிப் 18 க்கு தள்ளி வைத்துள்ளது.
இருந்தாலும் முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த ஊழியர்கள் எதிர்த்து போராடுவது அடிமை எடப்பாடியின் எஜமானானர்களாகிய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்துதான். அதனால்தான் பிடிகொடுக்காமல் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கஜானா காலி யாரால் ?
உலகம் முழுவதும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கதறுவதன் பின்னனி என்ன? பங்களிப்புத் ஓய்வூதியத் திட்டம் வாஜ்பாய் அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டமே ஓய்வூதியத்துறையில் தனியார்மயத்தை திறந்துவிடத்தான்.
தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஊதியம், மற்றும் பி.எஃப் போன்றவற்றை அரசு மற்றும் துறைசார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து அதைப் பெருக்கும் திறன் அரசுக்கு இல்லை எனக் கருதி, இப்பெருந்தொகையைக் கையாளும் பொறுப்பை, ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. அம்பானி, அதானி போன்ற தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களிடம் அளித்தது மத்திய அரசு.
அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைவிட்டது மத்திய மாநில அரசுகள். தொழிலாளர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்திலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைத்ததாலேயே கஜானா காலியானது.
இந்த உண்மையை மறைத்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தால்தான் அரசின் கஜானா காலியாவதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி போராடுபவர்களை மக்களுக்கு எதிரானவர்களாக காட்டுகிறது.
போராட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் !
ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தாலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக இந்த போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்.
இன்னொருபக்கம் சமூக வலைத்தளங்களில் வேலை இல்லாத இளைஞர்களும் விமர்சித்து வருகின்றனர். ஒரு லட்சம் சம்பளம் போதாதா? எங்களுக்கெல்லாம் வேலையே இல்லை. அதில் பாதி சம்பளத்தை கொடுத்தால்கூட நாங்கள் வேலை செய்யத் தாயார் என்று ஏராளமான எதிர்ப்புக் குரல்களும் வருகிறது. இந்த எதிர்ப்புக் குரல்கள் ஊடகங்கள் மற்றும் அரசு கட்டியமைத்துள்ள பொதுப்புத்தியில் இருந்து கேட்கின்றன. உண்மையில் அரசுப் பள்ளிகளை ஒழிப்பது, கல்வி எனும் மக்கள் உரிமையை விற்பனைச் சரக்காக மாற்றுவது ஆகியவை அரசிடம் இருக்கும் கொள்கை. அந்த அபாயத்தை உணராமல் ஆசிரியர்களை எதிரிகளா பாவிப்பது பாரிய தவறு.
மற்றொருபுறம் அரசுபள்ளியின் தரத்தை உயர்த்த போராடாத ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்காக மட்டும் போராட வருகிறார்கள் என்ற குரலும் ஒலிக்கிறது. அப்படி வருவதில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்காக அந்தக் கோரிக்கையை ஆசிரியர்கள் வைக்காமலும் இல்லை.
தீர்வு என்ன ?
ஊழியர்களின் போராட்டத்திற்கு சுமூகமான முறையில் பேசி தீர்வு காண அரசு தயாராக இல்லை. பல்வேறு தரப்பினரை பொய் பிரச்சாரத்தின் மூலம் போராட்டத்திற்கு எதிராக திசைதிருப்பும் கீழ்த்தரமான செயலை செய்து கொண்டிருக்கிறது. மாணவர்களும் பெற்றோர்களும் அரசுப் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி ஆசிரியர்களோடு களத்தில் இறங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. கல்வி-வேலைவாய்ப்பு – சம்பள உயர்வு என ஒட்டு மொத்தத்திலும் தீர்வு காண முடியாமல் அரசு தோல்வியடைந்து விட்டது அரசு. இப்பொழுது கரம் கோர்த்து போராடாவிட்டால் நாளை நிச்சயம் இதே அடக்குமுறை நம்மீது பாயும். இதுதான் தமிழகம் சந்தித்து வரும் எல்லா பிரச்சினைகளிலும் நமக்கு கிடைத்திருக்கும் அனுபவம்.
தற்போது போராட்டம் விலக்கப்பட்டாலும் அது நீருபூத்த நெருப்பாகவே இருக்கும். அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் – மாணவ – இளைஞர்கள் -பெற்றோர்கள் இணைந்து சிவில் சமூகத்திற்கான போராட்டமாக முன்னெடுப்பதன் மூலம்தான் அனைவரது உரிமையையும் மீட்க முடியும்!
சமீபத்தில் நடந்த குடியரசு தின விழா தொற்றா நோய்கள் விழிப்புணர்வு மருத்துவ முகாமில், கொடைக்கானல் அருகில் உள்ள ஒரு சிற்றூரிலிருந்து வந்திருந்த 25 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
ரத்தப் பரிசோதனை செய்ய அனுமதித்த நூறு பேருக்கு ரத்த சர்க்கரை அளவு சோதிக்கப்பட்டது.
மிகவும் அதிர்ச்சி தரும் விசயமாக ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்ட சுமார் 300 -க்கும் மேற்பட்டவர்களில் 50% நபர்களுக்கு ரத்த அழுத்தம் சராசரி சரியான அளவை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில் சுமார் 50 பேருக்கு ரத்த கொதிப்பு நோய் இருப்பது அதுவரை தெரியாது.
100-க்கு மேற்பட்டவர்களுக்கு தாங்கள் எடுக்கும் ரத்த கொதிப்பு மாத்திரைகள் சரியாக எடுக்காததாலும் / தேவையான அளவுள்ள மாத்திரை எடுக்காததாலும் ரத்த அழுத்தம் சரியாக இல்லை என்று கண்டறியப்பட்டது
ரத்த சர்க்கரை அளவுகள் சோதித்ததில் சுமார் 100 பேரில் 48 நபர்களுக்கு சரியான அளவை விட அதிகம் இருந்தது. அதில் 33 நபர்களுக்கு தங்களுக்கு நீரிழிவு இருப்பது அதுவரை தெரியாது.
இந்த சிறிய முகாம் மூலம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வானது தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அம்மா ஆரோக்கியத் திட்டம் எனும் முழு உடல் பரிசோதனை முடிவுகளுடன் ஒத்துப்போகிறது.
ஆம்.. தமிழகத்தில் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் பேருக்கு ரத்த கொதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20-30 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு இருப்பது தெரியவருகிறது.
நிலம் / தொழில் / பொருளாதாரம் இவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை…
ஏழை, பணக்காரன், நன்றாக உழைப்பவன், அசமந்தமாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவன், ஆண், பெண் என்ற பெரிய பாகுபாடுகள் எல்லாம்
இல்லை..
எங்கு காணிணும் நீரிழிவும் ரத்தக்கொதிப்பும் வியாபித்திருக்கிறது. மூன்று புறத்தில் நீராலும் அனைத்து புறத்திலும் நீரிழிவால் சூழப்பட்ட தேசமாய் தமிழகம் மாறி வருகிறது.
நாங்கள் சென்ற மலைவாழ் கிராமத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் நீரிழிவு ரத்தக்கொதிப்பு பற்றிய விழிப்புணர்வு மிக குறைவு.
இதே நிலை தமிழகத்தின் கிராமங்களிலும் ஏன் பல நகர்ப்பகுதிகளிலும் உண்டெனலாம். நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எங்கு மக்கள் கூடிப்பிரிந்தாலும் இந்த இரு நோய்கள் குறித்து பேசப்பட வேண்டும்.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
இளைஞர்களுக்கு – இளைஞிகளுக்கு ஆரோக்கிய உணவு முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நூற்றாண்டு “தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு”.
தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது ஆனால் ஒரு சமூகத்தை ஒரு நாட்டை ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தை அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.
அரசு கட்டாயம் தனது உணவு சார்ந்த கொள்கைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. கொழுப்புணவை கெட்டது என்றும் மாவுச்சத்து கட்டாயம் என்றும் பேசியதால் இன்று அனைத்து மக்களும் மாவுச்சத்து / இனிப்பு / சீனி என்று அடிமையாகி நீரிழிவிற்கும் ரத்தக்கொதிப்புக்கும் இரையாகின்றனர்.
இன்னும் மருத்துவர்கள் கூடும் ஒரு கலந்தாய்வாகட்டும், ஒரு முக்கிய கூட்டமாகட்டும் அங்கும் சீனி கலந்த டீ காபி மட்டுமே வழங்கப்படுகிறது இது வேதனையான விசயம்.
எனது கனா யாதெனில் சீனி சர்க்கரை மற்றும் இவை கலந்த பானங்கள் பண்டங்களை விசமாகப்பார்க்கும் காலம் மலர்வதே…. பிறகு புகை மதுவை பார்த்துக்கொள்ளலாம்.
முதலில் நம் வீட்டில் உள்ள சீனி / நாட்டு சக்கரை / போன்ற அனைத்து இனிப்புகளையும் குப்பையில் போட வேண்டாம்… எரித்து விடுவோம் குப்பையில் போட்டால் நாயோ மாடோ பூனையோ கூட அதை திண்ணக்கூடும். அவற்றுக்கும் அவை விசம்தான்…
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசின் வருவாயில் 40%க்கும் மேல் இவர்களுக்கே செலவிட வேண்டியிருக்கிறது; இவர்கள் இதற்குமேலும் சம்பள உயர்வு கேட்டுப் போராடுகிறார்கள் என்று அரசே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தொடங்கி.. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வது; கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னணியாளர்களை மிரட்டுவது; தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது; பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு உடனடியாக பணியிட மாற்றம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை காட்டி தூண்டில் போடுவது வரையில் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு விதமான தந்திரங்களைக் கையாண்டு வருகிறது எடப்பாடி அரசு.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. “5000 அரசுப்பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட்டு, சமூக நீதியினை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; 3500 சத்துணவு மையங்கள் மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும்; சிறப்புக் காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்; எல்.கே.ஜி. / யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்; 2003, 2004-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.’’ என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே போராடி வருகின்றனர். ஒன்பது அம்சக் கோரிக்கைகளுள் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை. இது, உரிமைக்கான போராட்டம்!
பன்னாட்டு நிறுவனங்களிலும் தனியார் ஆலைகளிலும் பெயருக்கு பத்து நிரந்தரப் பணியாளர்களை நியமித்துவிட்டு ஆகப்பெரும்பான்மையினரை ஒப்பந்தக்கூலிகளாகவும், அப்ரண்டீஸ் மாணவர்களாகவும் வைத்துக்கொண்டு உற்பத்தியை நடத்தி இலாபத்தை ஈட்டுவதைப்போலத்தான் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களையும் அத்துக்கூலிகளைப் போல அற்ப சம்பளத்தில் நியமித்து வருகிறது. பழைய பென்சன் முறையை ஒழித்துக்கட்டியுள்ளது.
இந்தப் பின்புலத்திலிருந்து ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டுமென்று மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடந்த ஜன-29 அன்று கரூர் அரசு கலைக்கல்லூரி எதிரில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஈரோடு – சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள் ஜன-29 அன்று தங்கள் கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை அச்சுறுத்தும் விதத்தில் கல்லூரி முதல்வரும், போலீசும் புகைப்படங்களை எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் முழக்கங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்; அவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
“புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக கருத்தரங்கம் 25/01/2019 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது.
மொழிப்போர் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் கூட்ட பங்கேற்பாளர்கள்.
இக்கருத்தரங்கிற்கு CCCE-ன் ஒருங்கிணைப்பாளர் பேரா வீ. அரசு தலைமை தாங்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போலீசின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான தியாகிகளுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து UAPA-வின் பிரிவில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்ய முயற்சிக்கும் மோடி அரசை கண்டித்தும் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் வீ. அரசு
தலைமை உரையாற்றிய பேராசிரியர் வீ. அரசு ஐரோப்பாவில் கத்தோலிக்க மத நிறுவனம் எப்படி அறிவியல் வளர்ச்சியை ஆரம்ப காலத்தில் இருந்தே தடுத்து வந்தது என்பதையும் அறிவியல் வளர்ச்சி மத கருத்துகளுக்கு எதிரான சமூக போராட்டங்களாக மாறியதையும் உதாரணங்களோடு விளக்கி பேசினார்.
தமிழகத்தில் 1870-களில் சென்னை லௌகீக சங்கம் என்ற அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பத்திரிகைகள் வாயிலாக பரப்பியுள்ளனர். இந்தியாவில் பகவத் கீதையில் சொல்லப்பட்ட “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ……” என்ற முட்டாள் தனமான வசனங்களே வழிகாட்டியாகயுள்ளது என்று தனது வேதனையை தெரிவித்துப் பேசினார்.
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் உயர் சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஜாதியின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாய் மக்கள் அடிமையாக்கபட்டு உரிமைகள் மறுக்கபட்டு வந்துள்ளது. பாதிக்கபட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்றால் அது ஜாதி அடிப்படையில் தான் வழங்க முடியும். அரசியல் சாசனத்தில் கூட socially and educationally backward என்றுதான் உள்ளது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என திருத்தம் முன் மொழியபட்டபோது கூட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தத்தை நிராகரித்ததை விளக்கி பேசினார்.
பேராசிரியர் கதிரவன்
இந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 14,18,000 பேராசிரியர்களில் 4 லட்சம் பேராசிரியர்கள்தான் SC/ST பிரிவினர் இருக்கின்றனர். மேலும் 3% உள்ள பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகளிலும் ஐ.ஐ.டி.-களிலும் சுமார் 70 சதவிகிதம் ஆக்கிரமித்திருக்கின்றனர். தற்போது வழங்கப்பட்டுள்ள உயர்சாதி இடஒதுக்கீடு, பார்பனர்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்று விளக்கினார்.
மேலும் தனி நபர் வருமான வரிக்கு அரசு வைத்திருக்கும் குறைந்தபட்ச வருமான இலக்கு 2.5 லட்சம். ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருள்கள் பெற அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு வருமானம் ரூ.72,000. SC/ST மானவர்கள் metric scholarship பெறுவதற்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம். ஆனால் உயர்சாதியில் ஏழைகள் என்று தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம். மோடி அரசின் உயர்சாதி பத்து சதவிகித இடஒதுக்கீடு உயர்சாதிக்கு சார்பான திட்டம் என்பதையும் விளக்கினார்.
அவரைத் தொடர்ந்து மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, பிற்பட்ட/தாழ்த்தபட்ட சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை எப்படி மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது என்பதையும் விளக்கினார். இத்தீர்ப்பின் படி மொத்தமாக கணக்கிடப்படும் பல்கலைக்கழகத்திற்கான இட ஒதுக்கீடு என்பது துறை சார்ந்த இட ஒதுக்கீடாக மாற்றப்பட்டுள்ளது. பொதுப் போட்டியின் மூலம் உயர்கல்வி, வேலைகளுக்கு பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை உயர் சாதி இட ஒதுக்கீடு குறைக்கச் செய்யும் என்று பேசினார்.
மருத்துவர் எழிலன்
இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள் நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது என்பதை விளக்கி பேசினார். இந்நிலையில் RSS-BJP கூட்டத்திலிருந்து பலரும் வேத – புராண – இதிகாச குப்பைகளை அறிவியல் என பேசிவருவதையும் உதாரணங்களோடு கூறினார்.
அதன் பின் இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் என்ற தலைப்பில் பேராசிரியர் முருகன் உரையாற்றினார்.
பேராசிரியர் முருகன்
இந்தியாவில் உள்ள சாதி படிநிலையை நியாயப்படுத்தவே புராணக் குப்பைகளை உண்மை போல சித்தரிக்கிறார்கள் என்பதை விளக்கினார். போலி அறிவியலை பேசுபவர்கள் உண்மையான அறிவியல் கோட்பாட்டை பேசுவதோடு தங்கள் கருத்துக்களையும் சேர்த்து பேசுவார்கள். விஞ்ஞானிகளின் கோட்பாடுகளை ஒரே அடியாக நிராகரிப்பார்கள். இப்போக்கு இந்திய அறிவியல் பேராயத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது என்று விளக்கினார்.
அவரைத் தொடர்ந்து அறிவியக்கத்தின் தேவை பற்றி முனைவர் ரமேஷ் பேசினார்.
RSS-BJP ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் என இந்நாட்டின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் தொடர்ந்து வேத-புராணக் குப்பைகளை அறிவியல் தொழில்நுட்பம் என பொது வெளியில் தொடர்ந்து பேசிவருகின்றனர். பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் திணிக்கின்றனர்.
உதாரணமாக அடுத்த கல்வியாண்டிலிருந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், யோகா மற்றும் வேத-புராணங்களை கட்டாய பாடமாக்கியுள்ளனர். இக்கருத்துக்கள் அனைத்தும் RSS முகாமிலிருந்து தயாரிக்கப்பட்டவை.
முனைவர் ரமேஷ்
இவைகளனைத்தும் அறிவியலுக்கு முரணானவை என்று RSS-BJP கும்பலுக்கு தெளிவாக தெரியும். இருந்தும் இவைகளை முன்தள்ளுவதற்கு காரணம் மாணவர்களுடைய சமூக கண்ணோட்டத்தை பார்பனியமாக்குவதன் மூலம் அவர்களை அடிமைகளாகவும் அவர்களிடமிருந்து எதிர்ப்பற்ற சுரண்டலையும் உறுதிப்படுத்த முடியும். பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காகவும், பெருமுதலாளிகளின் லாப பெருக்கத்திற்காகவே இதனை செய்கின்றனர்.
ஆகவே போலி அறிவியலுக்கு எதிரான போராட்ட மற்றும் பகுத்தறிவு பற்றிய விவாதங்கள் வெறும் கல்லூரிகளுக்குள் மட்டும் நடந்தால் போதாது. சமுதாயத்தோடு இணைக்கப்பட வேண்டும். அதற்கு பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவரமைப்புகள், பெற்றோர்கள் என அனைவரும் சேர்ந்த ஒரு இயக்கத்தின் வாயிலாகவே சாத்தியமாகும். அதற்கான ஒரு சிறு முயற்சியே பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழுவின் இக்கூட்டம் என்று பேசினார்.
இறுதியாக கூட்டம் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.
தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு
(Co-ordination Committee for Common Education) சென்னை
பேச : 72993 61319, 94443 80211
இதையும் பாருங்க ..
போலி அறிவியல் பேசும் இந்திய அறிவியல் மாநாடு | Prof. Murugan