Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 360

கிண்டி ஸ்டீல் மார்கெட் : ஜி.எஸ்.டிக்கு பிறகு மூட்டயக்கூட தூக்க முடியாம மூப்படைஞ்சி நிக்கிறேன் !

ருபது வருடங்களுக்கு முன்பு களைகட்டியிருக்கும் கிண்டி மடுவங்கரையில் உள்ள ஸ்டீல் மார்கெட், தற்போது ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.

படிக்கட்டு கைப்பிடிகள், பால்கனி தடுப்புகள், ரசாயனத் தொட்டிகள் மற்றும் மேசை – நாற்காலிகள் போன்றவை தயாரிக்கத் தேவையான SS ஸ்டீல், பைப், இரும்பு தகடுகளின் விற்பனைச் சந்தை, கிண்டி காந்தி மார்கெட்டில் உள்ளன.

இரும்பு, எஸ்.எஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளிலிருந்து கழிவுகளைச் சேகரித்து, அதிலிருந்து நல்லவற்றைச் சேகரித்து, அதுகூடவே மேலும் சில புதிய பொருட்களையும் வாங்கி விற்பனை செய்து வந்தார்கள். ஜி.எஸ்.டி வரி அமுலாக்கத்திற்கு பிறகு தொழிலையே கைவிட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், சிறுவியாபாரிகள்.

கிண்டியில் கிருஷ்ணா ஸ்டீல்ஸ் கடையை நடத்திவரும் கிருஷ்ணசாமியை சந்தித்தோம்.

தொழில் எப்படி இருக்கு? என்று கேட்டதுமே “எங்க தொழில பத்தி என்னத்த சொல்லச் சொல்றீங்க, அந்தக் கேள்வியே எங்கள எரிச்சலூட்டுது. முன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை” – என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு, தொடர்ந்தார்.

திரு கிருஷ்ணசாமி

“படிக்கட்டுகளுக்குத் தேவையான SS கைப்பிடி, பைப்புன்னு விக்கிறோம். நம்மிடம் சின்ன சின்ன வியாபாரிகள் வாங்குவாங்க. அப்புறம் சொந்தத் தேவைகளுக்காக வீடு, கடைகளுக்கு நேரடியாகவும் வாங்கிப் போறாங்க.

ஒரு பொருள கம்பெனியிலிருந்து டீலர் மூலமாத்தான் வாங்க முடியும். இதுல கம்பெனிக்குத் தேவையான ஜி.எஸ்.டி வரிய டீலர்கிட்டே புடிச்சுக்குவான், டீலர் எங்ககிட்டே புடிச்சுக்குவாங்க. நாங்களும் நட்டத்துக்குக் கொடுக்க முடியாதே, அது சின்ன அளவில வாங்கக்கூடிய பொதுமக்கள் தலையிலதான் விடியுது. அதனால, எங்ககிட்டே நேரடியா வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களும் படிப்படியா கொறைஞ்சிட்டாங்க.

சரி, பழையபடி ஸ்கிராப் தொழிலையே முழுமூச்சா செய்யலாமுன்னு பாத்தா, பக்கத்துல இருந்த ஸ்டீல் ஃபாக்டிரியெல்லாம் சிட்டிக்குள்ளே இருக்கக்கூடாதுன்னு சொல்லி, திருமுடிவாக்கம், திருமழிசைன்னு கொண்டு போயிட்டாங்க. முன்னெல்லாம், ஒருபொருள எடுத்துவர ஏத்துக்கூலி எறக்குக்கூலியும் போலீசுக்குக் கொடுக்குற மாமூலும்தான் செலவாகும். இப்போ என்னடான்னா டிரான்போர்ட்டோட சேத்து, ஜிஎஸ்டி-க்கும் கட்டி அழவேண்டியிருக்கு.

கிருஷ்ணா ஸ்டீல்ஸ் நிறுவன ஊழியர்

எந்த ஒரு தொழிற்கூடமும் கச்சாப்பொருட்களை வாங்கும்போது அதுக்கு ஜி.எஸ்.டி கட்டித்தான் வாங்க முடியும். உற்பத்தி செய்த ஒரு பொருளை விற்கும்போது, மொத்த கச்சாப் பொருளுக்கும் சேர்த்து வரி வாங்க முடியாது. காரணம், தொழிற் போட்டியினால் குறைவான விலை வைத்தால்தான் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியும். மீதமுள்ள கச்சாப் பொருளின் கழிவில் அதன் விலையும் ஜி.எஸ்.டி-யும் அடங்கியிருக்கு. அந்தக் கழிவை நாங்கள் எடுக்கும்போது, அது எங்க தலையிலதான் விடியுது.

இந்த நடைமுறையினால், சிறிய வியாபாரிகளான எங்களால் தாக்குபிடிக்க முடியல. சரி, அதையே கொஞ்சம் பெருசா செய்யலாமுன்னு நெனச்சா, கழிவ சேர்த்து வைக்க குடோன் வசதியும் கெடயாது. அதனால, வர்ற பொருள உடனே கைமாற்றிக் கொடுத்தாகணும். இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கிராப்பின் விலையை அதிகப்படுத்துகிறார்கள். குடும்பம் வாழனுமுன்னா வேறு வழியில்லாமல் அதிக வெலகொடுத்து வாங்க வேண்டியிருக்கு. ஆதலால், எங்கள மாதிரி சிறிய வியாபாரிகள் படிப்படியாக அழிஞ்சுகிட்டிருக்கோம்.

படிக்க:
♦ பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?
♦ ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்

முன்னெல்லாம் கம்பெனிகாரங்க, அவங்க எடத்திலிருந்து ஸ்கிராப்ப எடுத்துப்போனா போதுமுன்னு தள்ளிவிடுவாங்க. ஆனா, இப்போ தொழில் போட்டி அதிகமானதுனால, ஸ்கிராப் போடுற கம்பெனிகாரனே ரேட்ட.. தீர்மானிக்கிறான்.

அதுமட்டுமல்ல, சேகரித்த இந்த உலோகக் கழிவுகளை நாங்கள் நேரடியாக உருக்காலைக்கு அனுப்ப முடியாது. முதலில் மும்பை மற்றும் வட இந்தியாவில் உள்ள மார்வாடி சேட்டுகளுக்கு கொடுப்போம். அதை அவர்கள் உருக்காலைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். காரணம் அவர்களுக்குத்தான் டை-அப் உள்ளது. மாதத்துக்கு 300 டன் அனுப்புனாத்தான் அவங்களுக்கு சர்வீஸ் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, முதல் பேமெண்டே 60 நாட்களுக்குப் பிறகுதான் நம்ம கைக்கு வரும். அதையும் தொடர்ச்சியா அனுப்பும்போதுதான் அதில் நீடிக்க முடியும். நம்மால செய்ய முடியுமா?

இனி, என்ன செய்யப் போறோமுன்னு எதுவும் புரியல. சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டேன் தம்பி. ஊருல மூட்ட தூக்குனேன். அப்புறம் நல்லா சம்பாதிக்கனுமுன்னு சென்னை மும்பைன்னு அலைஞ்சி ஸ்கிராப் எடுக்குற கடையில வேலைக்குச் சேர்ந்து படிப்படியா முன்னேறினேன்.

செழிப்பா வாழ்ந்த நேரம் அது. அப்பப்போ ஊருக்கு போயி வருவேன். கோயில்… கொளமுன்னு செலவு பண்ணுவேன். ஒரு அம்மன் கோயிலயே கட்டிக்கொடுத்திருக்கேன்னா பாருங்களேன். அப்படி சொந்த ஊருக்கு போகும்போது, சின்ன வயசுல என்கூடவே மூட்ட தூக்குன சொந்தக்காரன்தான் இப்போ ஞாபகத்துக்கு வர்றான். “நாம எவ்வளவோ முன்னேறி வந்திருக்கோம், இவன் பொழைக்க வழியில்லாம கிராமத்துல மூட்ட தூக்கியே செத்துடுவான்போலன்னு…” அவன நெனச்சி கவலப்பட்டிருக்கேன். ஆனா, இப்போ நான் அந்த மூட்டயக்கூட தூக்க முடியாது மூப்படைஞ்சி நிக்கிறேன்.” என்றார் சோகமாக…

பூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்

0

பூமி தட்டையானது என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கூகுள் காணொளி தளமான யூ-டியூப் முதன்மையான காரணங்களுள் ஒன்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வட கரோலினாவின் ரலாய் நகரில் 2017-ம் ஆண்டிலும் பின்னர் சென்ற ஆண்டில் கொலராடோவின் டென்வெர் நகரத்திலும் ஆண்டுதோறும் நடக்கும் “தட்டையான பூமி” கோட்பாட்டு நம்பிக்கையாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதுதான் ஆய்வாளர்களுக்கு இந்த சந்தேகம் எழுந்தது.

மாநாட்டில் கலந்து கொண்ட 30 நபர்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டது. வானில் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய கோள வடிவிலானது அல்ல மாறாக பூமி பெரிய தட்டை வடிவிலானதும், அதே சமயத்தில் வானில் சுற்றியும் வருகிறது என்பதை அவர்கள் எவ்வாறு நம்ப வைக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் விளக்கினார்கள். அவர்களது விளக்கங்கள் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தன.

பூமி தட்டையானது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பவில்லை என்றும் யூ-டியூப் தளத்தில் வெளியான சதிக்கோட்பாடுகள் பற்றிய காணொளிகளை பார்த்த பிறகே தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும் 29 நபர்கள் கூறினார்கள். “மகள் மற்றும் மருமகனுடன் வந்திருந்த ஒருவர் மட்டும் மேற்சொன்ன கருத்தை கூறவில்லை. மாறாக, அவரது மகளும் மருமகனும் கூறக் கேட்டிருக்கிறார்” என்று டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலையில் (Texas Tech University) இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆஸ்லே லேண்ரம் (Asheley Landrum) கூறினார்.

படிக்க:
யூ டியூப் வீடியோ வைரலாவதற்கு சாக வேண்டுமா ?
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

நேர்காணலில் பேசியவர்களில் பெரும்பாலானோர் 9/11 தாக்குதல், சாண்டி ஹூக் பள்ளி துப்பாக்கிச்சூடு மற்றும் நாசா உண்மையிலேயே நிலவுக்கு சென்றதா என்பது குறித்த சதிக்கோட்பாடுகளை யூ-டியூப்பில் பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து அதற்கு இணைப்பாக “தட்டையான பூமி” பற்றிய சதிக்கோட்பாடு காணொளிகளை யூ-டியூப் அவர்களுக்கு காட்டியுள்ளது.

அவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே காணொளிகளை பார்த்ததாகவும் ஆனால், விரைவில் அதில் கிடைத்த தர்க்க முறைகளால் தங்களது எண்ணம் மாறியதாகவும் சிலர் கூறினர்.

பூமி தட்டையானது எனக்கூறும் காணொளிகளில் “பூமி சுழலும் கோள் அல்ல என்பதற்கு 200 நிரூபணங்கள் (200 proofs Earth is not a spinning ball)” என்பது மிகவும் பிரபலமானது. விவிலிய இலக்கியவாதிகள், சதிக்கோட்பாட்டுவாதிகள் முதல் அறிவியல் புரட்டுவாதிகள் வரை அனைவருக்கும் அறிவியலை எதிர்த்து தர்க்கம் செய்வதற்கான வாய்ப்புகளை அது கொடுக்கிறது.

ஏதோ ஒரு வழியில் நேர்காணல் கொடுத்தவர்கள் இதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். முன்னதாகவே “எங்கே அந்த வளைவு?” மற்றும் “தொடுவானம் ஏன் கண்ணுக்கு அருகிலேயே இருக்கிறது?” போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டிருக்கின்றனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க அறிவியல் முன்னேற்ற சங்க (American Association for the Advancement of Science) ஆண்டு மாநாட்டில் தன்னுடைய ஆய்வினை லேண்ரம் முன் வைத்துள்ளார். யூ-டியூப் தவறு எதுவும் செய்திருக்கும் என்று தான் நம்பவில்லை. ஆனால், அதனுடைய படிமுறைத்தேர்வு அல்லது அல்காரிதத்தில் மாற்றங்கள் செய்து இன்னும் துல்லியமான விவரங்களை தங்களால் கொடுக்க இயலும் என்று அவர் கூறினார்.

“தேவையான தகவல்கள் ஏராளமாக உள்ளது போல தவறான தகவல்களும் ஏராளமாக யூ-டியூப்பில் உள்ளன” என்று அவர் கூறினார். “முயல் வலைக்குள்ளே செல்வது போன்ற கடினமான விசயங்களை யூ-டியூப்பின் அல்காரிதம் எளிதில் வயப்படக்கூடிய நபர்களுக்கு எளிமையாக்குகிறது.” என்று அவர் கூறினார்.

“பூமி தட்டையானது என்று நம்புவது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அதில் சேர்ந்தே வருகிறது” என்று அவர் கூறினார். மக்களுக்கு கிடைக்கும் தகவல் மீது அவர்களுக்கு விமர்சனப் பார்வை வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்” என்றார்.

இது போன்ற சதிக்கோட்பாட்டு காணொளிகளுக்கு தக்கப் பதிலடி கொடுக்க அறிவியலாளர்களும் ஏனையவர்களும் சொந்தமாக யூ-டியூப் காணொளிகளை தயாரிக்க வேண்டும் எனறு லேண்ரம் கேட்டுக்கொண்டுள்ளார். “இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது” எனக்கூறும் காணொளிகள் மட்டும் யூ-டியூப்பில் நிறைந்திருக்கக் கூடாது. ”இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது அல்ல” என்று சொல்வதற்கும் நமக்கு நிறைய காணொளிகள் வேண்டும். சொந்தமாக ஆய்வினை செய்வதற்கான வழிமுறைகளை கொடுப்பதற்கான ஏராளமான காணொளிகளும் நமக்கு வேண்டும்” என்று மேலும் கூறினார்.

ஆனால், பூமி தட்டையானது என்று நம்புபவர்களில் சிலரை விஞ்ஞானிகளின் விளக்கங்கள் மாற்றிவிடாது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். ஊர்ந்து செல்லும் உயிர்களுக்கு மிகப்பெரிய வளைவின் மேற்பரப்பின் ஒரு சிறிய பகுதி எப்படி தட்டையாக தெரிகிறது என்பதை அமெரிக்க வானியல் ஆய்வாளர் நீல் டெகிரீஸ் டைசன் (Neil deGrasse Tyson) விளக்கிய போது தட்டையான பூமி நம்பிக்கையாளர்களின் சிலர் அதை ஆதரித்தனர் சிலர் எதிர்த்தனர் என்று லேண்ரம் கூறினார்.

“விஞ்ஞானிகள் முன் வைக்கும் எதையும் நிராகரிப்பதற்கு என்றே ஒரு சிறு விழுக்காட்டினர் எப்போதுமே இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் ஒரு சிறு பகுதியினர் அதை எதிர்க்காமல் இருக்கக்கூடும். சிறந்த தகவல்களை கொடுக்க முயற்சிப்பதுதான் தவறான தகவலுக்கு பதிலடி கொடுப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம்” என்று அவர் கூறினார்.

இதுக்குறித்து கூகுளிடம் கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலேதும் அளிக்கவில்லை. வெறும் இலாப நோக்கம் மட்டுமே கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அறிவியல்பூர்வமான தர்க்கவியலை மக்களுக்கு பயிற்றுவிப்பதிலிருந்து என்றோ தம்மை துண்டித்துக் கொண்டன.

நிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஏனெனில், அங்கே அவற்றுக்கு கட்டளை கொடுக்க மட்டுமே மூளை இயங்கினால் போதும். ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது. தீர விசாரிப்பதுதான் நடைமுறை. அதற்கு நம்முடைய மூளையை நாம் சற்று கசக்கதான் வேண்டியிருக்கும்.

மார்க்ஸ் கூறுவது போல, “அறிவியலுக்கு இராஜபாட்டை ஏதுமில்லை: கடும் களைப்பினை ஏற்படுத்தும் அந்த செங்குத்தான பாதைகளில் துணிச்சலுடன் தீர்க்கமாக பயணிக்கிறவர்களுக்குத்தான், அதன் ஒளிமிகுந்த சிகரங்களை எட்ட முடியும்”.


நன்றி : தி கார்டியன்
கட்டுரையாளர் : Ian Sample
தமிழாக்கம் : சுகுமார்

நூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்

யற்கையாய் அமைந்த இவ்வுலகில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் தோன்றி 2-1 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. உயிர்கள் தோன்றி கிட்டத்தட்ட 2.5 பில்லியன் ஆண்டுகள் (அமிபா, பூஞ்சை ) இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், நம் உலகில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு உள்ளாக தோன்றிய மதங்கள் உலகம் மற்றும் பிரபஞ்ச படைப்பை பற்றி கூறும் கதைகளை நினைத்தால் வேடிக்கையாகவும், அறியாமை நிறைந்ததாகவும் இருக்கிறது.
மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்…

திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் தங்களை வருத்தி ஒப்பற்ற சேவைதனை மக்களுக்கும் இயக்கத்துக்கும் செய்திருக்கிறார்கள். அன்று போதிய கல்வியறிவு அற்ற மக்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சென்றதில் எஸ்.டி. விவேகி போன்றவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய கல்வி அறிவு பெற்ற சமூகமும் அன்றைய மக்களைப் போன்றுதான், இன்றும் விழிப்புணர்வற்று, அறிவியல் மனப்பான்மையற்று, அடிமை உள்ளம் கொண்டு மதமவுடீகத்தில் வீழ்ந்து அலைந்து திரிகிறார்கள்.

இன்றும் விவேகி போன்ற கருத்தாளர்களின் கருத்து தேவையானாதாகவே இருக்கிறது.
வேத மத புரோகிதத்தால் நாம் எவ்வளவு வீழ்ச்சிக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை எத்தனை ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார். நமது இன்றைய நிலையிலும் அடிமையாய் வாழ்ந்து, அடிபடும் இனமாக இருப்பதை எண்ணி வேதனைப்படமால் இருக்கமுடியாது. பார்பனியத்தின் சூழ்ச்சி சோ, சுப்ரமணியசாமி வடிவில் இன்றும் சாணக்கியத்தனம் செய்து அழிக்கத்தானே நினைக்கிறது!

அன்றைய அடிமை அரசர்களைப்போல் தான், இன்றைய அடிமை அரசாங்கங்களும் செயல்படுகின்றன. ஆசிரியரின் சொற்கள் மத வாதிகளை கடுமையாகவும் வேறுபாடு இன்றியும் தாக்குவது அவரது நேர்மையையும், உண்மையையும் காட்டுகிறது. நம்மை தாழ்த்தியும் வேறுபடுத்தியும், கேவலப்படுத்தியும் வரும் மத புரோகிதத்தின் மீதான கோபமும், வேதனையும் அவரை கடுமையாக விமர்சிக்கும் சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது இதனை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்..

கேரளாவில் புழக்கத்தில் உள்ள சொல்லாடல்களில் ஒன்று “ஒரு தந்தைக்கு பிறக்காதவனே” என்று திட்டுவது, விபச்சாரி மகன் என்பதை எப்படி இலக்கிய வடிவில் சொல்வது போன்று சொல்கிறார்கள். அது போல் நமது மதங்களும் மனிதர்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் கேவலப்படுத்துவதில் தலைசிறந்து விளங்குகிறது.
அதன் மீதான கோபமே ஆசிரியரின் கடுமையான சொற்களுக்கு காரணமாகும்.
இந்நூல் பழைய தமிழகத்தை ஆண்ட அரசர்களின் மற்றும், இந்திய அரசர்களின் அடிமைப் புத்தியையும், ஐரோப்பிய மத புரோகிதத்தின் அறிவியல் மானிட எதிர்ப்பு சிந்தனைகளையும் வெட்டவெளிச்சமாகப் புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நம்புகிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து)

தோழர் எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த நாத்திகர், தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே தந்தை பெரியாருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கூட்டங்களில் பேசியவர்கள் இருவர். ஒருவர் திருவாரூர் தங்கராசு மற்றொருவர் எஸ்.டி. விவேகி.
சாகுல் அமீது என்ற தன் பெயரை விவேகம் நிறைந்தவர் என்ற பொருளில் விவேகி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களில் மசூதிக்கு போகாமல் வெளிப்படையாக நாத்திகம் பேசியவர்களில் ஒருவர் எஸ்.டி. விவேகி… எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த மத ஆராய்ச்சியாளர். எல்லா மதங்களையும் நன்கு ஆராய்ந்து அறிந்தவர், குரான், பைபிள், இந்து புராணங்கள் என ஒன்று விடாமல் அலசி ஆராய்ந்து பேசியவர்- எழுதியவர்.

படிக்க:
பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்
நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

தந்தை பெரியாரின் பஞ்சசீலம் என்று 5 நாட்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் ஒரே தலைப்பில் இருபது மணி நேரம் பல கூட்டங்களில் பேசியுள்ளார். தனியாகவும் பல மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய அறிவாற்றலை எண்ணி எண்ணி வியப்படைவேன்.

இன்னும் நாம் அறிந்து உயரவேண்டிய நல் அறிவும், பேரறிவாற்றலும் உள்ள மாபெரும் பகுத்தறிவு களஞ்சியத்தை, நமக்காக நம் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்றுள்ளார்கள். அவற்றிலிருந்து இயன்ற அளவு எடுத்தும், அறிவியல், புவியியல், வானியல், வரலாற்றியல் ஆதாரங்களோடு இணைத்தும் தோழர் S.D.விவேகி அவர்களால், ‘பைபிள்’ ‘குர்-ஆன்’, ‘ரிக்’ முதலான வேத வசனங்களோடு மோதவிட்டும் தொகுக்கப்பட்டுள்ள நூல்தான் இந்த ‘வேதமும் விஞ் ஞானமும்’ என்ற நூல்.

இந்த நூலில், உலக வரலாற்றின் உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து, ஆதி முதல், இன்று வரையில் ஏற்பட்டுள்ள வேத – விஞ்ஞானப் போராட்டங்களுக்கு ஏற்பப் பொருத்தமாகக் குறித்துத் தரப்பட்டுள்ளன! மடமைக்கும் – அறிவுடைமைக்கும்
இடையே நீண்ட நெடுங்காலமாகத் நிகழ்ந்து வந்தப் பயங்கரக் கொலை பாதகக் கொடிய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை படிப்போர் உள்ளம் பதைபதைக்கும்!!

கி.பி. 1619-ல் வானனி என்ற பெயருடைய தத்துவஞானி ஒருவரை, பிரஞ்சுக் கிறிஸ்துவப் பாதிரிகள், கொடுந்தீயிலிட்டுக் கொளுத்தப்போகும்போதும் அவர் அஞ்சாது கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ளாதுக் கோபப்பட்ட அக்கொடியோர். அத்தத்துவ ஞானியின் நாக்கை பலாத்காரமாகப் பிடுங்கித் தீயிலிட்டு எரித்துவிட்டுப் பிறகுதான், துடித்துடித்துத் தவித்து வாய்வழியே இரத்தம் கொட்ட வதைபட்டுக்கொண்டிருந்த அவ்வறிஞர் வானனியையும் அதே தீயிலிட்டு எரித்துச் சாம்பலாக்கினர், அந்த “அன்பே கடவுள்” (LOVE IS GOD) என்று பாசாங்காகப் பேசி பாமரமக்களை மயக்கும் அக்கொலைகாரப் பாதிரிமார்கள் என்றால், இதைப்படிக்கும் எவருள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?

அதேபோல், நம் நாட்டிலும் “அன்பே சிவம்” என்று பாசாங்காகப் பேசி, பாமர மக்களை ஏமாற்றி, சைவசமயத்திற்கு ஆள் சேர்த்துக் கொண்டு அலைந்த கொலைகாரனாகிய வேதியக்கயவன் சம்பந்தன் மதுரையிலேயே எண்ணாயிரம் சமணத் தத்துவ ஞானிகளைப் பலாத்காரமாகப் பிடித்துக் கொண்டுவரச்செய்து கொஞ்சமும் ஈவிரக்கமே இல்லாமல், கழுவிலேற்றி சித்திரவதை செய்து சாகடித்த சண்டாளக்கொலை பாதகத்தைப் படிக்கும்போதும், யாருடைய உள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?

கி.பி. 600-ல். “அலெக்ஸாண்டரியா பல்கலைக்கழகத்தின் மீது ஆத்திரம் கொண்டு, பாய்ந்து சென்ற இஸ்லாமிய மதவெறியன் அமீர் என்பவன் அப்பல்கலைக்கழகத்தின் மகத்தான அறிவியல், வானியல் களஞ்சியமாகிய மாபெரும் நூல் நிலையத்தில் இருந்த விஞ்ஞான தத்துவ விளக்கங்கள் நிறைந்த – நூல்களை எல்லாம் தீயை வைத்துக் கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கி விட்டான் என்றால், எந்த பகுத்தறிவாளரின் மனந்தான் பதை பதைக்காமலிருக்க இயலும்? (நூலின் முன்னுரையிலிருந்து)

நூல்:வேதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர்: எஸ்.டி.விவேகி

வெளியீடு: அங்குசம் வெளியீடு,
எண்:15, எழுத்துக்காரன் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600 019.
தொலைபேசி: 94443 37384

பக்கங்கள்: 224
விலை: ரூ 110.00 (இரண்டாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: marinabooks | panuval

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

 

பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசும் அதிகார வர்க்கமும் மானம் வெட்கம் பாராமல் அரணாக நின்று பாதுகாத்து வருவதை தமிழகமே காறி உமிழ்கிறது.

கிரிமினல் குற்றக்கும்பலின் ஆட்சியான அதிமுக அரசும் அதிகார வர்க்கமும் குற்றவாளிகளுக்குத் தண்டனையை ஒரு போதும் பெற்றுத்தராது. அரசை நம்பிப் பயணில்லை மக்கள் நாமே தண்டனை வழங்குவோம் என்ற அறைகூவல் விடுக்கும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மகஇக மையக் கலைக்குழுத் தோழர்கள்.

பாடல் வரிகள்:

விட்டுடுங்கண்ணா…
அண்ணா விட்டுடுங்கண்ணா…
நானே கழட்டிடுறேன் விட்டுடுங்கண்ணா…

ஒரு தங்கையின் கதறல்…
ஒரு மகளின் கதறல்…
பெண் இனத்தின் கதறல்…
ஏழு வருடம் இருநூறு அவலம்…
கேட்குது கேட்குது நீதி கேட்குது…
யார் கொடுப்பது தண்டனை?

ஆசிஃபாவின் குற்றவாளிக்கு காவி
கொடுத்தது வரவேற்பு…
அரியலூரில் நந்தினியை
சிதைத்தவனுக்குசாதிவெறி பாதுகாப்பு…
இந்தப் பொள்ளாச்சிக் கூட்டத்துக்கு
போர்வை அரசு.

யார் கொடுப்பது தண்டனை?
அரசா? போலீசா? கோர்ட்டா?
இல்ல ஆளுங்கட்சியா?

மகளே, தங்கையே,
ஆணையும் படைக்கும் பெண்ணே
உமக்குத்தான் அந்த வலி புரியும்.
அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும்.
தண்டிக்க வழி தெரியும்.

முழுப் பாடலை கேட்க காணொளியைப் பாருங்கள்!

பகிருங்கள்!!


படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

பொள்ளாச்சி கொடூரம் : ஜல்லிக்கட்டு மாதிரி இதுக்கும் விடாம போராடணும் | மக்கள் கருத்து !

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பாதுக்காக்கும் நடவடிக்கையில் போலீசு மற்றும் ஆளும்கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.

இதுகுறித்து சென்னை மக்களிடையே கருத்து கேட்டோம். பலரும் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்று சொல்கிறார்கள். “எப்படி தண்டிப்பது..? யார் தண்டிப்பார்கள்…?” என்றால் அமைதியாகிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் பாதிக்கபட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு “கொலை செய்வேன்” என்று ஆவேசமாக சொல்கிறார்கள். “நீங்கள் இந்த பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள்…” என்று கேட்டாலும் அமைதியாகிறார்கள்……!

உண்மையில், கருத்துக்கூறியவர்கள் வக்கிர மனம் படைத்த பாலியல் குற்றவாளிகளிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் எப்படி ஒரு கையறு நிலையில் இருந்தார்களோ அதே போன்றுதான் இருக்கின்றார்கள். குற்றவாளிகளை இந்த சமூக அமைப்பு தண்டிப்பது குறித்து அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. இதைத்தாண்டி அவர்களது வாழ்க்கையும் கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே வழித்தடத்தில் சென்று கொண்டிருப்பதால் இத்தகைய பிரச்சினைகளுக்கு சமூக ரீதியாக சிந்திக்க வழியில்லாமலும் இருக்கிறார்கள்.

பிரதீப்

people opinion about pollachi rapist“யாரையும் யாரும் நம்ப முடியல… குறிப்பா போலீசுகிட்ட இந்த கேச விடக் கூடாது. பொதுமக்கள்தான் முடிவெடுக்கனும். ஏன்னா பாதிக்கப்பட்டவங்க அவங்கதான். பேருக்கு நாலு பேர காமிச்சிட்டு முடிக்க பாக்குறாங்க. இதுக்கு பின்னால் நெறைய பேர், பெரிய இடத்த சார்ந்தவங்க இருக்காங்க. அதை மறைக்க அரசியல்வாதிங்களுக்கு துணையா அதிகாரிகளும் போலீசும் வேலை செய்யிறாங்க.”

வின்செண்ட், ஐடி ஊழியர்.

people opinion about pollachi rapist“சம நீதி- சம உரிமை என்பதெல்லாம் ஏமாத்து. பெரிய இடம்னாவே ஒரு மாதிரி விசாரணைய கமுக்கமா நடத்துறாங்க. சட்டமும் அவங்களுக்கு துணை போகுது. நீதிமன்றம் எத்தனையோ கேசுல உப்பு சப்பு இல்லாத தீர்ப்ப வழங்குது… இப்பவே இதுல தலையிடுற எஸ்.பி- லிருந்து டி.எஸ்.பி வரைக்கும் பொம்பள பொறுக்கிங்கதான். இதுக்கு பின்னாடி அரசியல்வாதிகள் இல்லன்னு போலீசு அதிகாரிங்க அவசரமா வாக்குமூலம் தராங்க. ஏன்?

மு.க.ஸ்டாலின் இப்போ தலையிடுகிறார். பரவாயில்ல.. ஆனா அவரு ஆட்சியில இருந்தா இதே மாதிரிதான் நியூசை அமுக்கப் பார்ப்பார். பணம்தான் எல்லா ஆட்சிக்காரங்களையும் சரிப்படுத்துது. இதுக்கு ஒரே தீர்வு ஜல்லிக்கட்டு மாதிரி நாம மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து அவர்களை தண்டிக்க போராடனும். குற்றவாளிங்கள மொத்தமா தண்டிக்கனும். எவ்ளோ பெண்களுடைய வாழ்க்கையை சீரழிச்சிருக்கானுங்க!”

தருமன்

people opinion about pollachi rapist“சட்டம், நீதிமன்றம் எல்லாம் இப்ப என்ன செய்யுதுன்னு தெரியல. ஹெல்மெட் போட்டுக்காதது பெரிய ஆபத்துன்னு சுவோ-மோட்டோ போட்டு தனியா வழக்க எடுத்தாங்க. இதுக்கு இவ்ளோ நாள் ஆவுது. கண்டுக்கவே இல்லை. இதுல இருந்து கோர்ட்டு எப்படி சரியான தீர்ப்பு சொல்லும்னு நம்பறது? இதுல என்ன விசாரணை வேண்டி இருக்கு. அவனுங்களே வீடியோ எடுத்து சொல்லுறானுங்க, நாங்கதான் செஞ்சோம்னு. அதுல எல்லா ஃப்ரூப்பும் இருக்கு.”

ராஜ்குமார், ஜி.எம். தனியார் கம்பனி.

people opinion about pollachi rapist“தப்பு நடந்திருக்கிறத விசாரிச்சு குற்றவாளிகளை கடுமையா தண்டிக்கனும். சிங்கப்பூர் துபாயில் எல்லாம் சட்டம் கடுமையா இருக்கு. அந்த மாதிரி இங்கேயும் இருக்கனும். எதுக்கெடுத்தாலும் தடை வாங்குறது, ஜாமீன்ல வெளியே விடுறதுன்னு விடக்கூடாது.. ஒரு மாசத்துல இத விசாரிச்சி தண்டனை வழங்கனும். ஆனா அப்படி நடக்கிறது இல்ல. திரும்பவும் மேல் விசாரணை, கீழ் விசாரணைன்னு இப்படியே மறச்சிடுவானுங்க. குற்றவாளிங்க திரும்ப வந்து இதே வேலைய செய்வானுங்க.”

கன்னிவேல், டர்னர்.

people opinion about pollachi rapist“பிடிச்ச ஆளுங்க எல்லாம் MLA சொந்தகாரனுங்க, தெரிஞ்சவனுங்க. அவனுங்க அப்பன் எல்லாம் பெரிய அதிகாரத்துல உள்ளவனுகன்னு சொல்லுறாங்க. சாதாரண மக்களால அவனுங்கள கடைசி வரைக்கும் எதிர்க்க முடியாது. அப்படியே எதிர்த்தாலும் வருஷம் முழுக்க அலைய தெம்பு இருக்காது. கடைசியில இதை அப்படியே மூடி மறைச்சிடுவானுங்க. போலிச இதுல நம்பக் கூடாது. நேரடியா மக்கள்தான் இதுக்கு தண்டனை வழங்கனும். இல்லேன்னா மாட்டினவன் எல்லாம் நாளைக்கு ‘நல்ல புள்ளையா’ வெளியில வெளியே வந்து 200 பொண்ணுங்களை கெடுத்துட்டு திரிவானுங்க.”

ஜெயச்சந்திரன், எஸ்.. ஓய்வு.

people opinion about pollachi rapist“குற்றவாளிகளை தண்டிக்கனும். அது சரிதான். ஆனா இது சம்பந்தப்பட்ட பொம்பள பசங்களும் சரியில்ல… உஷாராயில்ல… இவங்க ஏன் ஃபேஸ்புக், வாட்சப்புன்னு அவனோட தொடர்பு வச்சிக்கினு தெரியாதவனோட பழகிட்டு அவன் கூட போயிட்டு எல்லாத்தையும் பன்றாங்க. இப்போ போட்டோ எடுத்துட்டான். பிரச்சனை ஆகிடுச்சி அப்படின்னு சொன்னா இது சரியா? நேரடியா பழக்கம் இல்லாதவன்கிட்ட இவங்க எப்படி நெருக்கம் ஆகலாம்?

இது ஜனநாயக நாடு. பொதுவா போலீசுமேல குறை சொல்லலாம். ஆனா அவங்க சட்டத்தின்படிதான் நடக்க முடியும்னு புரிஞ்சிக்கனும். பெரிய பணக்காரனுக்கு சட்டம் உடந்தையா போகலாம்னு சொல்லாலாம். ஆனா எல்லா கேசும் அப்படித்தான் நடக்குதுன்னு நாம கண்ண மூடிக்கினு சொல்ல முடியாது.”

சுந்தர், தனியார் நிறுவனம்.

people opinion about pollachi rapist“சட்டம் கடுமையா இருந்தாலும் அதை யாரும் சரியா பயன்படுத்தறது இல்ல. இப்போ இந்த மாதிரி நேரத்துல மீடியாவும் இந்த விஷயங்களை ஊதிப் பெருக்குது. இந்தப் பிரச்சனை தீர விசாரிச்சி குற்றவாளியை தண்டிக்கணும். ஆளும் கட்சி ஒன்னு சொல்லுது. எதிர்கட்சி அப்படி இல்லன்னுது. போலீசு விசாரணை சரியா நடக்கும்னு நம்பிக்கை இல்ல. தனி ஆணையம் அமைக்கனும். என் வீட்டுல இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்தா என்னால ஒன்னும் பண்ண முடியாது.”

செல்வநாயகிகாயத்ரி, தாம்பரம்.

people opinion about pollachi rapist
செல்வநாயகி-காயத்ரி

“அம்மா, அப்பா முன்ன பசங்கள கண்காணிச்ச மாதிரி இந்த காலத்துல கண்காணிக்கிறது இல்ல.  எல்லோரும் வேலைக்கு ஓடிடுறாங்க. அவங்களுக்கும் நேரம் இல்ல. அதிகம் போனா பசங்க கையில ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்து பேசிக்கீறாங்க. இப்போ யார குறை சொல்றது. குடும்பம் நல்லா இருக்கனும்னா பெண்கள வேலைக்கு போகாம இருக்கனும். புருஷங்க சம்பாரிக்கனும். பொம்பளங்க வீட்டப் பாத்துகனும். அப்பதான் பசங்கள பாத்துக்க முடியும். சரியா நடக்கறாங்களான்னு சோதனை பண்ண முடியும்.”

ஜெனிபர், ஆரோக்கிய லியோ, நிர்ஷா,  எம்.சி.சி கல்லூரி, தாம்பரம். (புகைப்படம் தவிர்த்தனர்)

“எல்லாத்துக்கும் பெரியவங்கள தான் காரணம் சொல்லனும். பெண்களை மட்டும்தான் அடக்க ஒடுக்கமா நடந்துக்கனும்னு சொல்றாங்க. பசங்ககிட்டயும் சொல்லனும். அதுவும் நம்ம வீட்ல இருக்க பெண்கள் மாதிரிதான் மத்த பெண்களும்னு சொல்லி வளக்கனும். ஆம்பள பசங்கன்னாவே தனியா அவங்களுக்கு செல்லம் கொடுத்து வளக்கிறது. எது செஞ்சாலும் கண்டுக்காம விட்டுடறது. இதுதான் இந்த மாதிரி செய்தியா வர்றதுக்கு காரணம்.

பொதுவா வெளில போற பொம்பள பசங்களப் பத்தி குறை சொல்றாங்க. அது மாறனும். போனுலயே பேசி போனுலயே நட்பு வச்சிக்கிறது இப்ப அதிகமா இருக்கு. அவங்க உஷாரா இருக்கனும். இதுக்கு விழிப்புணர்வு உருவாக்கணும்.

போலீச, கோர்ட்ட நம்ப முடியாது. எந்த விஷயத்துலயும் சரியா செய்யல. ஜனங்கதான் இதுக்கான தீர்வு சொல்லனும். ஆனா நான்-வயலன்ஸ் மூலமாதான் இந்த பிரச்சனைய தீர்க்கனும். வெட்டு குத்து பிரச்சனைய தீர்க்காது. புரிதல் இல்லாதவங்களுக்கு எஜுகேட் பண்ணனும்.”

அஸ்வினி – மேத்தா, பொலிட்டிகல் சயின்ஸ் மாணவர்கள். எம்.சி.சி கல்லூரி தாம்பரம்.

people opinion about pollachi rapist“இப்டி நடக்கிறது சாதாரண விஷயம்தான். இந்த பொம்பள பசங்களே இப்படித்தான். பெரிய சிக்கல்ல மாட்டிக்கின பிறகுதான் பிரச்சனைய வெளியே சொல்லுவாங்க. லவ் பண்ணும்போதே உசாரா இருக்க மாட்டாங்க. கெடச்சவங்க கூட சுத்துவாங்க. அப்பால ஆயிரம் குறை சொல்லுவாங்க. எப்படியா இருந்தாலும் ஆம்பள திமிரு என்பது தனிதான். இவனுங்கள எல்லாம் கண்டிப்பா தண்டிக்கனும். இவனுங்களால எங்களுக்கெல்லாம் கெட்டப் பேர். பொண்ணுங்க எல்லாம் இப்ப எங்களையும் அதே மாதிரி பாக்குறங்க. எவனோ ஒரு மிருகம் அப்படி செஞ்சதால மொத்த ஆண்களுக்கும் கெட்ட பேர். அவனுங்களுக்கு சரியா பாடம் புகட்டனும். சாவர வரைக்கும் தண்டனை நினைப்பு இருக்கனும்.”

அபுல்யா, பொலிட்டிகல் சயின்ஸ் மாணவி.  எம்.சி.சி கல்லூரி தாம்பரம்.
(
புகைப்படம் தவிர்த்தார்)

“வடக்க தான் இந்த மாதிரி நடந்தது. நிர்பயா கேசு எல்லாம் பார்த்தோம். இப்போ இங்கேயும் இந்த மாதிரி கொடூரங்கள் நடக்க ஆரம்பிச்சிடுச்சி. சினிமாவுல முன்ன எல்லாம் திராவிடத்த வளர்த்தாங்க. “அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை என்பது திராவிட உடமையடான்னு கத்துக் கொடுத்தாங்க. இப்போ இந்த சினிமாகாரனுங்க ஆபாசத்த கத்து கொடுக்கிறாங்க” அப்படின்னு எங்க அப்பா சொன்னாரு.. அது சரிதான். சினிமாவுல பெண்கள ஃபேன்சி பொருளா ஆக்குறானுங்க. நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி பாக்குறானுங்க. பொம்பள பசங்க நோ சொன்னா இந்த மாதிரி அசிங்கம் பன்றானுங்க. பொம்பள பசங்க நம்மை மாதிரி மனிதர்தான்னு யாரும் அவங்களுக்கு கத்துக் கொடுக்கல.

இப்போ நிர்மலாதேவி விவகாரத்துல ஜாமீன் வழங்கி இருக்காங்க. இதே மாதிரிதான் இந்த கேசும் நடக்கும். போலிசு கோர்ட் எதுலயும் நமக்கு சரியான நியாயம் கிடைக்காது. ஒரு நியாயமான ஆணையம் அமைக்கனும். நிரந்தமா கண்காணிப்பு இருக்கனும். தண்டனை கடைசி வரைக்கும் நியாபகம் இருக்க மாதிரி இருக்கனும். நடிகர் விக்ரம் பையன் தண்ணி அடிச்சி ஆக்சிடெண்ட் பண்ண விஷயத்தை தெரிய வெச்ச மாதிரி…. எம்.எல்.ஏ – எம்.பி பையனா இருந்தாலும் விடக்கூடாது. முக்கியமா அதிகாரத்துல இருக்கவங்க எப்போ பயப்படுவாங்கன்னா… தேர்ந்தெடுத்தவங்கள திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு வரும்போதுதான் பயப்படுவாங்க. அந்த மாதிரியான சிஸ்டம் கொண்டு வரனும்.

என் போட்டோ… எல்லாம் போடாதிங்க. அப்படிதான் ஒரு சூழல் இருக்குது. இதையும் சேர்த்து எழுதுங்க.”

ஆஷ்மித், பொலிட்டிகல் சயின்ஸ். எம்.சி.சி கல்லூரி தாம்பரம்.

“நம்மோட பிரண்ட்ஷிப் வந்து முதல்ல சரியா இருக்கனும். ஒருத்தன் நல்லவனா இருந்தா அந்த டீமே சரியா நடக்கும். இப்போ இந்த கேசுல மாட்டினவன்  ஒருத்தன் கூட சரியில்லன்னு தோணுது. அதேமாதிரி சோசியல் மீடியாவுல இந்த விஷயத்த ஓயாது பரப்புறாங்க. ஆரம்பத்துலயே பிரச்சனைய சரி செய்யாததால பெரிய பிரச்சனையா மாறுது. எது எப்படியோ போலிசு ஒழுங்கா டீல் பண்ணும்னு நம்பக் கூடாது. ஜல்லிக்கட்டு மாதிரி போராடணும்.”

அரிகிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநர்.

people opinion about pollachi rapist“இவனுங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனைதான் கொடுக்கனும். மினிஸ்டர், எஸ்பி சொந்தக்காரன்னு சுதந்திரமா உலாத்துவானுங்க. இவனுங்கள நிக்க வெச்சி தோல உரிக்கனும். ஒரு பொண்ண இவ்ளோ இழிவா நடத்துறானுங்கன்னா அவனுங்க மனுஷனா இருப்பானுங்களா? சட்டப்படி எல்லாம் இவனுங்ககிட்ட பேசக்கூடாது. உயிரோட உடம்பு புல்லா பிளேடு போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நடக்க உடனும். அதைப் பார்த்தாதான் மத்தவன் திருந்துவான். போலிசுகிட்ட போனா… நம்மளயே குற்றம் சொல்லுவான். பொண்ணுங்க மேலயே கேசு போடுவான். நாம போராடினா நம்மளயே உள்ள தூக்கி போடுறானுங்க. இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு ஆதரவா இருக்க போலீசுக்கு எதிரா முதல்ல போராடணும்.

“பொண்ணுங்க மட்டும் யோக்கியமான்னு?” சிலர் கேக்குறாங்க….. சாதரணமா ஒருத்தன் கிட்ட பேசுறதோ பழகுறதோ தப்பா இன்னா..? கிடையாது. பழகும்போதே நான் மிருகம்னு சொல்லியா பேசுறானுங்க…… நம்பி போன பொண்ண நாசம் பண்றாணுங்க.. அப்போ அவங்கள மிருகம் மாதிரிதான் ஹாண்டில் பண்ணனும்.”

பாண்டியன், தனியார் நிறுவனத்தில் எச்.ஆர்ராக பணிபுரிபவர்.

people opinion about pollachi rapist“இப்ப இந்த கேசை திடீர்னு சிபிஐக்கு மத்துறானுவ. ஏற்கனவே சிபிஐ என்ன பன்னும்னு தெரியும். கட்சிகாரணுங்க இன்னா சொல்லுறானுவளோ அதைத்தான் செய்யப் போவுது. பாதிக்கப்பட்டவங்க பாதி பேர் வெளியே வர்ல. வெளியே சொல்ல அவங்க பயப்படுறாங்க. எலக்சன் டைம். இன்னும் எத்தன நாள் பேசுவானுங்கன்னு தெரியாது. அதுக்குள்ள ஒரு புதுப் பிரச்சனைய பேச ஆரம்பிச்சிடுவோம். எல்லா பிரச்சனையையும் ஒரு புது பிரச்சனை எடுத்துனு வந்து மறைச்சிடுவானுங்க.’

அபிப், .டி டேட்டா என்ட்ரி ஊழியர்.

people opinion about pollachi rapist“தண்டனை கடுமையா இருக்கனும். அப்பதான் இதை எல்லாம் நிறுத்த முடியும். அவங்க சொந்தகாரங்க முதற்கொண்டு கவர்ன்மெண்ட் வேலையில இருந்தா அந்த வேலைய புடுங்கனும். அவங்க பெற்றொருக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கனும். இது எல்லாமே ஓப்பனா நடக்கனும். போலீசு என்னா செய்யுதுன்னே நமக்கு தெரியல. நாளைக்கு முக்கியமான ஆதாரம் இல்லன்னு விடுவிச்சிடுவானுங்க. இதுதான் வழக்கமா நடக்குது.”

போஸ் முத்து, மெட்ரோ சப்கான்ட்ராக்டர்.

people opinion about pollachi rapist“இந்த குற்றத்துல சம்பந்தபட்ட எல்லோரும் பெரிய பணக்கார இடத்து பசங்க. பணத்திமிர்ல அந்தமாதிரி பண்றாங்க. எங்களை மாதிரி வேலைக்கு போயிட்டு சம்பாதிச்சா அதோட அருமை தெரியும். பந்தபாசம் தெரியும். அந்த கவலை எல்லாம் அவனுங்களுக்கு இல்ல. அதனால இந்த திமிருக்கு காரணமான அவங்களோட சொத்துக்களை பறிமுதல் செய்யனும். அவர்கள் கடுமையா தண்டிக்கப்படனும். நீதிமன்றம் போலீசு மூலம் மூலம் இவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் போராட்டத்தின் மூலம் நீதியை பெற வேண்டும்.”

அஜித், ராம் கூலித் தொழிலாளர்கள்

people opinion about pollachi rapist“நீங்க சொல்ற பிரச்சனை பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது. காலையில வேலைக்கு போனோம்னா சாயங்காலம்தான் வருவோம். அதுக்குதான் நேரம் சரியா இருக்கும். ஆனா பேப்பர்ல போட்டிருந்தாங்கன்னு தெரியும். எங்களுக்கு படிக்கத் தெரியாது. விவரம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டோம். பட்டும்படாததுமா சொன்னாங்க. ஆனா நீங்க சொல்றத கேக்கும்போதே செம ஆத்திரம் வருது. அவங்களை விடக் கூடாது.  இதுக்கு என்ன பன்றதுன்னே தெரியல…..”

பகதூர்தீன்.

“அந்த நியூஸ் கேட்டதுல இருந்து ஒரு புள்ளைக்கு அப்பனா என் ரத்தமும் கொதிக்குது. அந்த குழந்தைங்கள இன்னா சீரழிச்சிருக்கானுங்க. அதை கண் கொண்டு பாக்க முடியல. மனம் பதைக்குது. அதைப் பார்த்ததுல இருந்து சரியா தூக்கமும் இல்ல. மனசும் சரியில்ல. எவ்ளோ… கொடுமை அது.

இந்தமாதிரி அக்கிரமக்காரனுங்களுக்கு மதம், சாதி கிடையாது. அவனுங்க தனி மிருக ஜாதி. என்னோட சின்ன வயசுல இப்படி எல்லாம் ஒரு கதையும் கேட்டது இல்ல. நாங்க முசுலீமா இருந்தாலும் பொம்பள குழந்தைகள பாதுகாப்பா வெளியில அழைச்சினு போனதெல்லாம் எங்க ஊர்ல இருக்கும் இந்துக்கள்தான். அதுல ஆசாரி, செட்டியார்னு இருக்காங்க. உடம்பு சரியில்லனாக்கூட அவங்க வேலையா டவுனுக்கு போகும்போது அவங்க கூட அனுப்பி வைப்போம். அவங்க குழந்தைங்கள பத்திரமா வீட்டுல கொண்டு வந்து சேர்ப்பாங்க”

அவருடைய மனைவி….

“நாங்க சிறு வயசுல படிக்கும்போது கண்மாயில வந்து குளிக்கிறதுக்கு துணையா, பாதுகாப்பா இருந்தது இந்துக்கள்தான். அவ்ளோ பாசமா இருந்தாங்க. பிரிச்சி பார்க்க மாட்டாங்க. அதெல்லாம் இப்ப காணல…. மனுசங்க நெஞ்சு நஞ்சாகி போயிடுச்சி. இதை எப்படி போக்குறதுன்னு கவலையா இருக்கு. யாரை பார்த்தாலும் சந்தேகமா இருக்கு.  குழந்தைங்கள வெளியில யாரையும் நம்பி அனுப்ப முடியல. இவனுங்களுக்கு கண்டிப்பா சரியான தண்டனைக் கொடுக்கனும். மத்தவங்க அதைப் பார்த்து திருந்தணும்.”


படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

கஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் !

சண்டேஸ்வரா நிறுவனத்திற்காக வங்கிகள் முடி வெட்டிக் கொள்ளும் 65% தொகையும் – கஜா புயலுக்கான நிவாரண தொகையும் !

சாதாரணமாகவே நாமும் நமது பத்திரிக்கைகளும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை. இப்போது தேர்தல் வேறு வந்து விட்டது, தொகுதி பங்கீடு, எந்த கட்சி யாருடன் கூட்டு சேருகிறார்கள். எந்த மக்கள் பிரதிநிதி எவ்வளவு லஞ்சம் வாங்கினார், எத்தனை கிரிமினல் வழக்குகள் அவர் மீது உள்ளன, போன்ற செய்திகள் மட்டுமே வந்து கொண்டு இருக்கும். இத்துடன் ‘நமது’ சங்கிகள் விடும் புருடாக்கள் இலவச இணைப்பு.

ஆனால் நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டே இருக்கின்றன, இருக்கும்… அதில் சிலவற்றின் பட்டியல்:

  • IL&FS என்ற நிறுவனம் கடனை கட்டமுடியாமல் பிரச்சனையில் உள்ளது என சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து செய்திகள் வந்தன. இப்போது அதைப் பற்றி அதிகமாக செய்திகளை பார்க்க முடிவதில்லை. இது போன்ற பெருநிறுவனங்கள் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் செய்வதையே இதற்கும் அரசு செய்தது. குழு ஒன்றை அமைத்து அந்தக் குழு இந்த நிறுவனத்தில் என்ன நடந்தது என்று விசாரிக்கும் என்று சொல்லி கடையை மூடியது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு அந்த நிறுவனம் பற்றி பெரிதாக எந்த செய்தியும் இல்லை. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள், அந்த நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் என எவரும் தண்டிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. அந்த நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் பெற்ற கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டும் என்று கூறுகிறார்கள்.
  • எஸ்ஸார் ஸ்டீல் (Essar Steel) என்ற நிறுவனம் வாங்கிய கடனை கட்டாமல் திவால் என்று அறிவிக்கப்பட்டு அந்த நிறுவனத்தை ஏலம் விடும் பணி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) நடந்து வந்தது. இந்த தீர்ப்பாயத்திற்கு வரும் இதுபோன்ற வழக்குகளை 270 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயம் என்று இழு-இழு என்று இழுத்து இரண்டு வருடங்களாக முடிவுக்கு வராமலேயே உள்ளது. ஒருவழியாக கடந்த வாரம் ஆர்சிலர் மிட்டல் (ArcellorMittal) என்ற நிறுவனம் ஏலத்தில் வென்றதாக தீர்ப்பாயம் அறிவித்தது.இந்த அறிவிப்பு வரும் முன்னரே கடன் முழுவதையும் தானே செலுத்தி விடுவதாக எஸ்ஸார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ருயா (Ruia) குழுமம் தெரிவித்தது. ஒரு நிறுவனம் திவால் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏலம் விடும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் பொழுது, தாய் நிறுவனம் கடன் முழுவதையும் திருப்பி செலுத்த முடியுமா… ? முடியாதா… ? என்பதுதான் இப்போது நீதிமன்றங்கள் முன் உள்ள பிரச்சினை. அவ்வாறு திருப்பி செலுத்த முடியாது, ஏலத்தில் வென்ற ஆரசிலர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் செல்லும் என்று கடந்த வெள்ளியன்று தீர்ப்பாயம் (NCLT) தீர்ப்பு கூறியது. ருயா குழுமம் இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு செல்லும், அதனால் இதில் எது சரி என்று தீர்ப்பு வரப்போகிறது, எப்போது வரப்போகிறது, என்று நமக்கு தெரியாது. தீர்ப்பே வந்தாலும் என்ன காரணத்திற்காக அந்த தீர்ப்பு வந்தது என்று நமக்குப் புரிய போவது இல்லை, யாரும் புரியவைக்கப் போவதும் இல்லை.
    அதனால் நமக்கு புரியும் விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்வோம். ருயா குழுமம் மொத்த கடனையும் திருப்பி செலுத்தி விடுவதாக சொல்கிறது, அந்தத் மொத்த கடன் தொகை சுமார் 54,000 கோடி. ஆர்சிலர் நிறுவனம் வென்ற ஏலத்தொகை ரூ. 42,000 கோடி, அதாவது ஆர்சிலர் நிறுவனத்துக்கு எஸ்ஸார் ஸ்டீல் செல்லும் பட்சத்தில் கடன் கொடுத்தவர்களுக்கு கிடைக்கப்போகும் தொகை ரூ. 42,000 கோடி. ஆக கொடுத்த கடனில் 12,000 கோடி கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
  • Zee தொலைக்காட்சி நிறுவனம் நம் அனைவருக்கும் தெரிந்த நிறுவனம்தான். அதன் தாய் நிறுவனத்தின் பெயர் எஸ்ஸெல் குழுமம் (essel group). எஸ்ஸெல் குழுமம் அதனுடைய ரூ. 13,500 கோடி கடனை கட்டுவதற்காக Zee தொலைக்காட்சி நிறுவனத்தை விற்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இதற்குப் பின்னாலும் என்ன நடக்கிறது என்று பெரிதாக செய்திகள் இல்லை.

இந்த நிறுவனங்கள் எல்லாம் நிதி சிக்கலில் மாட்டுவது என்பதையே நம்மால் நம்ப முடியவில்லை. இந்த நிறுவனங்களை எல்லாம் விட பிரபலமான நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் திவால் என்று அம்பானியே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) போய் சொல்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

அனில் அம்பானியின் அனைத்து நிறுவனங்களும் திவால் ஆகவில்லை, அவருடைய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் மட்டுமே திவாலானதாக அனில் அம்பானி இந்த தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நமக்கு அனைவருக்கும் பரிச்சயமான நிறுவனம்தான்.

மொபைல் போன்கள் வெகுமக்களுக்கு மத்தியில் அதிகம் புழக்கத்தில் இல்லாத பொழுது ரிலையன்ஸ் நிறுவனம் 500 ரூபாய்க்கு செல்போன்களை விற்பனை செய்தது, பேச்சுவழக்கில் அதை ‘கொம்பு செட்’ என்று கூறி வந்தோம். அந்த கொம்பு செட்டை விற்ற நிறுவனம் தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இப்போது அந்த நிறுவனம் திவால் ஆகி விட்டது.

மொபைல் போன் விஷயத்தில் இந்தியா ஒரு புரட்சியை செய்து விட்டது என்று புளகாங்கிதம் அடைவோருக்கு இந்த செய்திகள் ஒரு பொருட்டாக படுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் ஏர்செல் என்ற நிறுவனமும் திவாலானது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கட்டவேண்டிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா, ரூ. 45,000 கோடி. அனில் அம்பானி அவர்களின் மற்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுவதாக தெரியவில்லை.

படிக்க:
♦ போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி !
♦ ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !

எரிக்சன் என்ற நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அளித்த சேவைக்காக கொடுக்க வேண்டிய சுமார் 500 கோடி ரூபாயை ஒப்புக்கொண்டபடி கொடுக்காத வழக்கில், அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த தொகையை எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்காவிட்டால் சிறைக்கு அனுப்பப்போவதாக உச்ச நீதிமன்றம் அம்பானியை மிரட்டியுள்ளது. 500 கோடி என்பது அம்பானியை பொருத்தவரை சொற்பமான தொகை, ஆனால் அதையே அவர் செலுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பை செய்கிறார் என்றால் நிலைமை எவ்வாறு உள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

‘ஏழைத் தாயின் மகன்’ இவ்வளவு குளறுபடிகளுக்கும் கேள்விகளுக்கும் மத்தியில் ரஃபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு சாதகமாக முடிப்பதில் ஏன் இவ்வளவு அக்கறையும் முனைப்பும் காட்டினார் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இவைகள் எல்லாம் இவ்வாறு இருந்தாலும் இந்த கட்டுரை இவைகளை பற்றியது அல்ல. ‘ஏழைத்தாய் மகனி’ன் நெருங்கிய நண்பரான மெகுல் சோக்சி (Mehul Choksi) ‘யாருக்கும் தெரியாமல்’ நாட்டைவிட்டு தப்பியோடிய சமயத்தில் குஜராத்தை சேர்ந்த இன்னொரு தொழிலதிபரும் தப்பி ஓடினார்.

அவர் பெயர் நித்தின் சண்டேசரா. சண்டேசரா தப்பி ஓடி விட்டார் என்று அக்டோபர் 2018 -ல் செய்தி வந்தது. அவரது நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் கட்டாமல் இருக்கும் கடன் தொகை 5,000 கோடி ரூபாய் என்றும் செய்தி வந்தது.

அதற்குப் பிறகு இந்த வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு (NCLT) சென்றது. அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, எந்த செய்தியும் இல்லை.
Business Standard என்ற செய்தித்தாளில் 9 மார்ச், 2019 அன்று ‘Sterling Biotech: Lenders agree to 65% haircut’ என்ற தலைப்பிட்ட செய்தி வந்தது. இதன் தமிழாக்கம்: ‘ஸ்டெர்லிங் பயோடெக் விவகாரத்தில் கடன் கொடுத்தவர்கள் 65% முடிவெட்டிக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள்’.

அது என்ன ‘Haircut’ முடிவெட்டுவது, என்று நமக்கு தோன்றலாம். கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பதை கேள்விப்பட்டு இருப்போம், அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த ‘haircut’. இங்கு மொட்டை அடிக்கப்படுவது வங்கிக்கு, மொட்டை அடிப்பவர் கடன் வாங்கியவர்.

இந்த செய்தியில் மேலும் உள்ள விவரங்களைப் பார்ப்போம். ஸ்டெர்லிங் பயோடெக் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் கடன் தொகை ரூபாய் 15,000 கோடி. செய்தி என்னவென்றால், இந்த நிறுவனத்தை கட்டுப்படுத்துபவர்களான சண்டேசரா குழுமம் இந்த கடன் தொகையில் 35% திருப்பி செலுத்த முடியும் என்று கூறுகின்றனர்.

இவர்கள் சொல்கிறார்கள் என்பது பெரிய செய்தி இல்லை, கடன் வாங்கியவர்கள் மிகக் குறைவான தொகையை திருப்பித் தருவதாக சொல்வது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. நம்மால் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால், கடன் கொடுத்தவர்களும் 35% மட்டுமே தந்தால் போதும் என்று ஒப்புக்கொள்வதுதான்.
இந்த 35 சதவீதத்தையே ஏன் திருப்பி தருகிறார்கள் என்று நமக்கு தோன்றலாம், அதற்கு காரணம் இருக்கிறது.

எந்த ஒரு நிறுவனமும் வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்த தவறினால் கடன் கொடுத்தவர்கள் அந்த நிறுவனத்தை திவால் என்று அறிவித்து ஏலத்தில் விட்டு கடனை வசூல் செய்து தரும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) முறையிட முடியும்; அவ்வாறு கடன் தந்த வங்கிகள் செய்ய வேண்டும் என்பது தான் சட்டம் (IBC). மேலே சொன்ன எஸ்ஸார் வழக்கில் அவ்வாறு தான் நடந்தது.

ஆனால் இந்த ஸ்டெர்லிங் பயோடெக் விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வங்கிகள் வழக்குத் தொடுத்து இருந்தாலும், சண்டேசரா குழுமம் 35% கடனை திருப்பித் தருகிறோம் என்று சொன்னவுடன் அதற்கு ஒப்புக்கொண்டு இந்த வழக்கை கடன் தந்த வங்கிகள் திரும்பப் பெற்றுக் கொண்டன.

15,000 கோடி ரூபாய் கடன் கொடுத்து விட்டு அதில் 35% மட்டும் வந்தால் போதும் என்று இந்த வங்கிகள் கூறுகின்றன. அதாவது, சுமார் 5000 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறுகின்றன. மீதி 10,000 கோடி சுவாஹா தான்!

இவ்வளவு பெரிய தொகைகளை எந்தவித சத்தமும் இல்லாமல் ஸ்வாஹா செய்து கொண்டிருக்கும் பொழுது நமது செய்தி ஊடகங்கள் அதிமுக தேமுதிக-வுக்கு நான்கு தொகுதிகள் கொடுப்பது சரியா தவறா, மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தாமல் இருப்பது அரசியலா அரசியல் இல்லையா என்று பத்து பேரை வைத்து விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாமும், தேமுதிகவும் மூணு தொகுதியும் தான் உலகிலேயே முக்கியமான செய்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பக்கம் திரும்பினால், ஏழைத் தாயின் மகன் ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ரோடுகளை திறப்பதிலும், நிலமே கையகப் படுத்தப்படாத திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதிலும் முனைப்பாக உள்ளார். அதுபோக மோடியை கேள்வி கேட்பது இராணுவத்தை கேள்வி கேட்பதா இல்லை நாட்டையே கேள்வி கேட்பதா என்பது போன்ற எதற்கும் உதவாத கேள்விகளை கிளப்புகின்றனர்.

இங்கே 10,000 கோடிகள் சுவாஹா ஆவதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், வெகுமக்களுக்கு 100-களும், 1000-களும் அதிகம் போனால், லட்சம்களும் தான் பரிச்சயம். 10,000 கோடிக்கு எத்தனை பூஜ்யங்கள் வரும் என்று கணக்கிடவே நமக்கு சிறிது நேரம் தேவைப்படும். எத்தனை பூஜ்யங்கள் என்று கணக்கிட்டாலும், நம்மால் அந்த தொகையை புரிந்துகொள்ள முடியாது. ஆகையால் நமக்கு தெரிந்ததை வைத்து புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

  • கொங்கு மண்டல மக்களின் பல நாள் கோரிக்கையை நிறைவேற்றியதாக இவர்கள் கூறிக்கொள்ளும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய தொகை ரூ. 1,800 கோடி தான்.
  • 2019-20 ஆண்டுக்கு டெல்லி அரசு கல்விக்கு ஒதுக்கிய தொகை 15,000 கோடி.
  • மதிய உணவு திட்டத்துக்கு மத்திய அரசு 2016-17 ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ. 10,000 கோடி.
  • கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிவாரண தொகை 15,000 கோடி. இந்த தொகையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்பது நினைவில்கொள்ள வேண்டிய விஷயம்.

ஆக, கஜா புயல் நிவாரணத்திற்கு தேவைப்படும் தொகைக்கு இணையான ஒரு தொகையை சண்டேசரா குடும்பத்திற்காக வங்கிகள் முடி வெட்டிக் கொள்கின்றனர்!

இவை அனைத்துக்கும் தீர்வுகாண நாம் சொல்ல வேண்டியது :
நமும்கின் அப் மும்கின் ஹே! (‘Namumkin ab mumkin hai’ – Impossible is possible now)

செய்தி ஆதாரங்கள் :

– அருண் கார்த்திக்

காஷ்மீர் : நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன் | படக் கட்டுரை

0

ந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அனந்தநாக், காஷ்மீர் பிரச்சினையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட பகுதி.  பலர் தங்களுடைய கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்தவர்கள்.  மேலும், ஏறக்குறை 1500 அரை கைம்பெண்களுக்கு தங்களுடைய கணவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியாது.

“நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன். அதில் மூவர் கிளர்ச்சியாளர்கள். நான்காவது மகன், கிளர்ச்சியாளர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு போனபோது, என்கவுண்டர் செய்யப்பட்டான்” என்கிறார் 83 வயதான நப்சா பானோ. தெற்கு காஷ்மீரில் உள்ள சோம்ப்ரைட் கிராமத்தில் சிறியதொரு வீட்டில் வசிக்கிறார் இவர்.

நப்சா தன்னுடைய மகன்கள் உயிரிழந்த நேரத்தை நினைவில் கொண்டுவருகிறார்.  சிறுநீரக பிரச்சினை காரணமாக தனது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது தனது நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டதாகச் சொல்கிறார் இவர்.

அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் உள்ளது. இரு நாடுகளும் இந்தப் பகுதியை முன்வைத்து இரண்டு போர்களை நிகழ்த்திவிட்டன.  கடந்த மூன்று பத்தாண்டுகளில் 70 ஆயிரம் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள்.

மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, அரை இருள் சூழ்ந்த அறையில் தனது மகன் இறந்ததைக்கூட அறியாமல் அமைதியாக இருக்கிறார். இந்திய இராணுவத்தில் பணியாற்றிய அகமது, ஜம்மு பகுதியில் 2018-ம் ஆண்டில் நடந்த சன்ஜுவான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

“அவர் திரும்பத் திரும்ப தன்னுடைய மகனைப் பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் உயிரோடு இல்லை என்பதை அவர் அறியவில்லை” என்கிறார் அகமதுவின் தங்கை. “தன்னுடைய மகனின் தொலைபேசி அழைப்புக்காக அவர் காத்திருக்கிறார்”.

படிக்க:
இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !

மனநல மருத்துவரான ஆரிஃப் மக்ரிபி கான், ஸ்ரீநகர் பகுதியில் மனநல பிரச்சினைக்குள்ளான நோயாளிகளுக்கென்று தன்னார்வதொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு நோயாளிகளின் வருகை அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கிறார்.

“இவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை அதிர்ச்சியினால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சீர்கேடு (post-traumatic stress disorder – PTSD). ஒரு பெண் தன்னுடைய குடும்ப உறுப்பினரை இழக்கும்போது, பல மாதங்களுக்கு PTSD தவிர்க்க முடியாததாகிறது.  அது இன்னும் மோசமான பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று, அதிலிருந்து வெளிவர முடியாமல் போகிறது” என்கிறார் ஆரிஃப்.

முகப்புப் படத்துக்கான குறிப்பு: தெற்கு காஷ்மீரின் சோபியனில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பெண்கள்.  2016-ம் ஆண்டு ஆளுமைக்குரிய கிளர்ச்சியாளர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு பிறகு, சோபியன் மற்றும் புல்வாமா மாவட்டங்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஷகிலாவின் கணவர் ஒரு போலீசு அதிகாரி. ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு வெளியே அவரும் உடன் பணியாற்றியவர்களும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.  “என்னுடைய குழந்தைகள் அவருடைய அப்பாவைப் பற்றி தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறார்கள். அவருக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை” என்கிறார் ஷகிலா.

காஷ்மீரில் 1500-க்கும் மேற்பட்ட அரை கைம்பெண்கள், தங்களுடைய கணவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

தெற்கு காஷ்மீரில் உள்ள குத்வானியில் என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து அதிச்சிக்குள்ளான ஒரு பெண்ணை ஒரு இளைஞர் அழைத்துச் செல்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதி அதிகப்படியான எதிர்த்தாக்குதல்களையும் என்கவுண்டர்களையும் எதிர்கொண்டு வருகிறது.

நான்கு மகன்களை இழந்த நப்சா பானோ.

தெற்கு காஷ்மீரில் கிளர்ச்சியாளர் ஆசிப் மாலிக்கின் தாய், அவருடைய இறுதி ஊர்வலத்தில் முழுக்கங்களை எழுப்புகிறார்.

16 ஆண்டுகளாக தனது கணவரின் வருகைக்காக காத்திருக்கிறார் நசீமா பானோ. காஷ்மீரில் காணாமல் போன 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் அவரும் ஒருவர்.

தெற்கு காஷ்மீரின் கொகெர்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளருக்கு அஞ்சலி செலுத்தும் பெண்கள்.

இந்திய பாதுகாப்புப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், குல்காமின் வானிகுந்த் பகுதியில் உள்ள வீட்டிலிருந்த யாஷ்மினாவின் மகள் முஸ்கானின் நெற்றியைத் துளைத்தது ஒரு துப்பாக்கிக் குண்டு.

இந்திய இராணுவத்தில் பணியாற்றிய மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, தன் மகன் பலியானதை இன்னமும் அறியவில்லை.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள ஒரு சன்னதிக்கு வெளியே வழிபடும் பெண்கள்.

காஷ்மீரி கிளர்ச்சியாளரின் தாய் இவர். எல்லை தாண்டிச் சென்ற 20-களில் இருந்த இவருடைய மகன் திரும்பவேயில்லை. 1990-களின் ஆரம்ப காலத்தில் காஷ்மீரில் கிளர்ச்சியாளர்கள் உருவாகத் தொடங்கியபோது, பல இளம் சிறார்கள் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீருக்குள் ஆயுத பயிற்சிக்காகவும் இந்தியாவின் ஆட்சியை எதிர்த்தும் போராடவும் எல்லைத் தாண்டிச் சென்றார்கள்.

தெற்கு காஷ்மீரின் அர்வானி கிராமத்தில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதி சடங்கை பார்வையிடும் பெண்கள்.

தெற்கு காஷ்மீரில் உள்ள சூஃபி சன்னதியை வணங்கும் ஒரு பெண்.


தமிழாக்கம்: கலைமதி
நன்றி: அல்ஜசீரா


படிக்க:
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

மக்களின் வரிப் பணத்தில் மோடியின் புகழ்பாடும் ஃபேஸ்புக் விளம்பரங்கள் !

ஃபேஸ்புக் விளம்பரங்கள் வெளியிடப்படுவதில், பிரமோட் செய்யப்படுவதில் உள்ள வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வாரமும் யார், யார் எந்தப் பிரதேசத்திலிருந்து விளம்பரங்களை அளித்தார்கள், எவ்வளவு ரூபாய்களுக்கு அளித்தார்கள் என்ற தகவல்களை வெளியிட ஆரம்பித்துள்ளது.
இந்தத் தகவல்கள் தேடக்கூடிய வகையிலான தகவல் தொகுப்பாக பயனாளர்களுக்குக் கிடைக்கிறது. 2019 பிப்ரவரி முதல் மார்ச் 2, 2019 வரையில் விளம்பரம் கொடுத்தவர்களின் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

எதிர்பார்த்ததைப் போலவே அதிகம் விளம்பரம் செய்திருப்பது பாரதீய ஜனதாக் கட்சி, அதன் ஆதரவு ஃபேஸ்புக் பக்கங்கள் ஆகியவைதான். ஆனால், அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இந்திய அரசும் மக்களின் வரிப் பணத்தை பெருமளவில் இந்த விளம்பரங்களில் வாரியிறைத்திருக்கிறது. இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை பிரதமரின் புகழ்பாடுபவை.

படிக்க:
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !

பிப்ரவரி முதல் மார்ச் வரை 4,13,88,087 ரூபாய் இந்தியாவிலிருந்து ஃபேஸ்புக்கில் செலவிடப்பட்டுள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பது பாரத் கி மன் கி பாத் என்ற பா.ஜ.க. ஆதரவு பக்கம்தான். மொத்தமே 3 லட்சத்து பத்தாயிரம் ஃபாலோயர்களைக் கொண்ட இந்தப் பக்கம், ஒரு கோடியே 19 லட்சத்து சொச்சம் ரூபாய்களை விளம்பரத்திற்காக அள்ளியிறைத்திருக்கிறது. மொத்தம் ஆயிரத்து ஐநூறு விளம்பரங்கள்!! இந்த பாரத் கி மன் கி பாத் ஃபேஸ்புக் பக்கத்தின் உள்ள இணைய தள முகவரியை அழுத்தி யார் எனப் பார்த்தால், அது பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சொந்தமானதாக இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருப்பது NationwithNaMo. மொத்தம் 66 லட்ச ரூபாயை விளம்பரங்களுக்குச் செலவழித்திருக்கிறார்கள். இதுவும் பா.ஜ.க.வின் இணையதளம்தான்.

மூன்றாவது இடத்தில் இருப்பது MygovIndia. இது இந்திய அரசுக்குச் சொந்தமான ஃபேஸ்புக் பக்கம். ஒரு மாதத்தில் 34 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை விளம்பரங்களுக்கு வாரி இறைத்திருக்கிறார்கள். எல்லாம் நம் வரிப்பணம்தான். விளம்பரங்களில் எல்லாம் நரேந்திர மோதியின் சாதனைதான். ஒரு கட்டத்தில் ஒன்பது விளம்பரங்களுக்கு சுமார் 9 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது. கீழே ஸ்க்ரீன் ஷாட் இருக்கும் விளம்பரத்திற்கு மட்டும் 1 முதல் 2 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து அளிக்கப்பட்ட விளம்பரத்தில் அதிகமாக செலவழித்த அரசியல் கட்சி பா.ஜ.கதான். 96 சதவீதம்!! காங்கிரஸ் வெறும் மூன்று சதவீதம்தான்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கே.சி. பழனிச்சாமி போன்றவர்கள் தலா 20 ஆயிரம் ரூபாயை செலவழித்திருக்கிறார்கள்.

திராவிட நாஜி இன வெறியர்கள் ஒரு பைசாவைக்கூட ஃபேஸ்புக்கில் செலவழிக்கவில்லை.

முகநூலில் : Muralidharan Kasi Viswanathan

பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!

பொள்ளாச்சி கொடூரம்! ஒருத்தனையும் தப்பவிடாதே! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.

இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என்று மாவட்ட போலீசு அதிகாரி தாமாக முன்வந்து விளக்கமளிக்கிறார். வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராடும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் முறையிட முயற்சித்தாலும் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கீழ்நிலை அதிகாரிகளிடம் மனுவை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என துரத்தியடிப்பதுதான் வாடிக்கை.

இன்று, அதிமுக கிரிமினல் கும்பலைச் சேர்ந்த பார் நாகராஜனிடமிருந்து பவ்யமாக மனுவை பெற்றுக் கொள்கிறார் மாவட்ட ஆட்சியர். பொள்ளாச்சி கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகளை சுதந்திரமாக உலவ அனுமதித்துவிட்டு, இந்த கொடூரத்தை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறது, சி.பி.சி.ஐ.டி. போலீசு.

பொள்ளாச்சி கொடூரத்தை நிகழ்த்திய குற்றக்கும்பலுக்கும் அதிமுக-வுக்கும் மட்டுமல்ல அதிகார வர்க்கத்துக்கும் தொடர்பிருப்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது இந்த சம்பவங்கள். சட்டமும் சர்க்காரும் தண்டிக்கும் என்று பாமர மக்களிடம் மிச்சமிருந்த நம்பிக்கையையும் தகர்த்திருக்கிறது.

இந்தச் சூழலில்தான், தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்கிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள். முன்னுதாரணமும் உத்வேகமும் கொண்ட மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நமது கடமை! அதிமுக கிரிமினல் கும்பலும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து நிற்பது அம்மணமான நிலையில் தெருப்போராட்டங்களை தீவிரமாக்குவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

சிதம்பரம் – அண்ணாமலைப் பல்கலை கழகம் :

பொள்ளாச்சி பாலியல் வன்முறை – வெறியாட்டம்! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! என்ற முழக்கத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். கடந்த மார்ச் – 12 அன்று கலைத்துறை மாணவர்களும்; மார்ச் – 13 அன்று அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கலை – அறிவியல் துறை மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மார்ச் – 14 அன்று பொறியியல் துறை மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மதுரை – சட்டக்கல்லூரி :

மாணவர்களின் மனித சங்கிலிப் போராட்டம்.

திருச்சி – மக்கள் அதிகாரம் :

பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் – திருச்சி ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் கோரிக்கை.

சீர்காழி – மக்கள் அதிகாரம் :

தேனி – மக்கள் அதிகாரம் :

தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி. திடலில் மார்ச்-14 அன்று பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மக்கள் அதிகாரம் அமைப்பும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மண்டலம் – மக்கள் அதிகாரம் :
தொகுப்பு:


படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நீதிமன்றத்தில் அல்ல ! போராட்டத்தில்தான் தீர்வு ! | வழக்கறிஞர் பாலன் உரை | காணொளி

திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 23 அன்று, கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! மாநாட்டில் கலந்து கொண்டு பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்கள் உரையாற்றுகையில்,

”ஓட்டுப் போடும் அந்த 5 நொடிகளுக்கு மட்டுமே நமக்கு வழங்கப்படும் இந்த 5 வினாடி ஜனநாயகத்தில், சட்டத்தின் ஆட்சி துப்பாக்கியின் ஆட்சியாக மாறிவிட்டது. இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இதே நிலைமைதான் கடந்த 60 ஆண்டுகளாக நீடிக்கிறது. அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவை சூறையாட அனுமதிக்கும் தனியார்மயம் தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, தடா சட்டம் அமல்படுத்தப்பட்டது. போராடியவர்களை, செயற்பாட்டாளர்களை ஒடுக்க அச்சட்டத்தில் போலீசுக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டது, இந்தச் சட்டமும் இந்தியாவின் அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

படிக்க:
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
♦ விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !

இந்தச் சட்டம் காலாவதியானதும், இதன் சரத்துகளை அப்படியே கொண்ட MCOCA, KCOCA,RCOCA, GCOCA என்பது போன்ற மாநிலந்தழுவிய ஒடுக்குமுறைச் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் பொடா சட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரசு கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் பொடாவை ரத்து செய்வதாகக் கூறியது. ஆட்சிக்கு வந்ததும் பொடாவை நீக்கி விட்டு ஊபா சட்டத்தைக் கொண்டுவந்தது. இன்றுவரை அச்சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்களுக்காக களத்தில் நிற்பவர்கள் மீது இன்று வரை இத்தகைய கருப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

ஒருபுறத்தில் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அங்கீகரிக்கும் நீதிமன்றம், மறுபக்கத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதையும் அங்கீகரிக்கிறது. இவை அனைத்தும் ஒன்றை மட்டுமே நமக்கு அப்பட்டமாகச் சொல்கின்றன. நீதிமன்றத்தில் தீர்வு என்றும் கிடைக்காது. மாறாக வீதியிலேதான் தீர்வு. ஆகவே கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க வீதியில் இறங்கிப் போராடாமல் தீர்வு இல்லை” என்றார்.

முழு உரையையும் காண …

பாருங்கள் ! பகிருங்கள் !

போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !

0

மார்ச் 14-ம் தேதியன்று (1883-ம் ஆண்டு) பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மகத்தான மனிதருடைய பிரிவினால் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நாம் சீக்கிரமாகவே உணருவோம்.

அங்கக இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்; மனிதன் அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும், என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது; ஆகவே உடனடியான பொருளாயத வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருதுகோள்கள், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளர்ச்சியடைகின்றன; ஆகவே அதன் ஒளியில்தான் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள பூர்ஷ்வா சமூகத்தின் இயக்கத்தின் விசேஷ விதியையும் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது; அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகர்கள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.

படிக்க:
♦ மார்க்ஸ் எனும் அரக்கன் ! வீடியோ
♦ சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்

ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால் கூட அந்த மனிதர் அதிர்ஷ்ட முடையவரே. ஆனால் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் அவர் பல துறைகளை ஆராய்ந்தார், ஒரு துறையில்கூட மேம்போக்கான ஆராய்ச்சி செய்யவில்லை – கணிதத்தில் கூட சுயேச்சையான கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அத்தகைய விஞ்ஞான மனிதர் அவர். ஆனால் இது அவருடைய சாதனையில் அரைப் பங்கு கூட அல்ல. மார்க்ஸ் விஞ்ஞானத்தை இயக்காற்றலுடைய, புரட்சிகரமான சக்தியாகக் கண்டார். ஏதாவதொரு தத்துவார்த்த விஞ்ஞானத் துறையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை – அதன் செய்முறைப் பிரயோகம் எப்படியிருக்கும் என்பது இன்னும் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாத நிலையில் அவர் எத்துணை அதிகமான மகிழ்ச்சியுடன் வரவேற்ற போதிலும், அக்கண்டுபிடிப்பு தொழில்துறையில் மற்றும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியில் உடனடியான புரட்சிகர மாற்றங்களைத் தூண்டுமானால் முற்றிலும் வேறுவிதமாக மகிழ்ச்சி அடைந்தார். உதாரணமாக, மின்சாரத் துறையில் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை அவர் நுணுக்கமாகக் கவனித்தார். சமீப காலத்தில் மார்செல் டெப்ரேயின் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அப்படியே செய்தார்.

பாட்டாளி வர்க்கத்தின் இரு பெரும் மேதைகள்

ஏனென்றால் மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சிக்காரர். ஏதாவதொரு வழியில் முதலாளித்துவ சமூகத்தை மற்றும் அது உருவாக்கியிருக்கின்ற அரசு நிறுவனங்களை ஒழிப்பதற்கு, நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் – அதன் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படிச் செய்த முதல் நபர் அவரே – விடுதலைக்குப் பங்களிப்பது அவருடைய மெய்யான வாழ்க்கைப் பணியாகும். போராட்டமே அவருக்கு உயிர். அவரைப் போல உணர்ச்சிகரமாக, உறுதியாக, வெற்றிகரமாகப் போராடுவதற்கு எவராலும் முடியாது. முதல் Rheinische Zeitung (184 2), பாரிஸ் Vorwarts (1844), Deutsche-Brüsseler-Zeitung (1847), Neue Rheinische Zeitung (1848 – 1849), New-York Daily Tribune (1852 – 1861) இதழ்களிலும் போர்க் குணமிக்க பிரசுரங்களிலும், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஸ்தாபனங்களிலும் அவருடைய பணி; இறுதியாக, எல்லாவற்றுக்கும் சிகரமாக சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அவர் வேறு ஒன்றையும் செய்யாதிருந்தால் கூட இந்தச் சாதனையைப் பற்றி மட்டுமே நிச்சயமாகப் பெருமை அடைய முடியும்.”

ஆகவே மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சதிகார அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய இரண்டுமே அவரைத் தம்முடைய நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர், அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ – மார்க்ஸ் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் அவர் ஒட்டடையைப் போல ஒதுக்கித் தள்ளினார். அவற்றைப் புறக்கணித்தார்; இன்றியமையாத அவசியம் நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவற்றுக்குப் பதிலளித்தார். சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் எல்லாப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர சகதொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக அவர் மரணமடைந்த பொழுது அவர்கள் கண்ணீரைச் சொரிந்தார்கள். அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் !

– மார்ச் 17, 1883-ல் லண்டன், ஹைகேட் இடுகாட்டில் பி. எங்கெல்ஸ் ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை.

நூல்: மார்க்ஸையும் ஏங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்
பக்கம் 510 – 513
வெளியீடு: முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ

பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய ஒருத்தனையும் தப்ப விடக்கூடாது; நேர்மையான நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்தி உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

பரவலாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில்  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உடுமலை GVG கல்லூரி மாணவிகளும், வேலூர் ஊரிஸ் கல்லூரி மாணவிகளும் ஆயிரக்கணக்கில் திரண்டதோடு உணர்வுப் பூர்வமான பங்கேற்புடன் சாலை மறியல் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றனர்.

சமூகவலைத் தளங்களில் போராட்ட செய்திகள் உடனுக்குடன் பகிரப்படுவதோடு, தமிழகமெங்கும் தீயாய் பரவிவருகிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம்!!

உடுமலை  GVG மகளிர் கல்லூரி :

பொறுப்பில்லாத ஆட்சி! பொள்ளாச்சியே சாட்சி!! – உடுமலை GVG கல்லூரி மாணவிகள் முழக்கம்! உடுமலை – பொள்ளாச்சி சாலையை மறித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

வேலூர் ஊரிசு கல்லூரி :

வேலூர் ஊரிசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு சட்டக்கல்லூரி :

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி :

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புமாஇமு தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

கரூர் அரசு கலைக் கல்லூரி :

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்திருந்தது.

ஈரோடு CNC கல்லூரி :

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஈரோடு CNC கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் – அண்ணாமலை பல்கலை :

அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

சென்னையில் பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் :

அதிமுக கிரிமினல் குற்ற கும்பலை கைது செய்து சிறையிலடை! தூக்கில்போடு! என்ற முழக்கங்களுடன், சென்னை மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தம் அருகே பு.மா.இ.மு. – வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பொள்ளாச்சி பாலியல் வன்முறை – வெறியாட்டம் ! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! அதிகாரத்தை மக்கள் கையில் எடுப்போம்! பாலியல் வெறியர்களைத் தண்டிப்போம்! என்ற அறைகூவலோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

“அ.தி.மு.க. நாகராஜ், துணை சபாநாயகர் மகன்கள் பிரவீன், முகுந்தனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஏன் கைது செய்யவில்லை?’’ எனக் கேள்வி எழுப்பும் இவ்வமைப்பினர், “பாலியல் வக்கிரங்களை உற்பத்தி செய்யும் ஆணாதிக்க பாலியல் நுகர்வு வெறி, ஆபாச இணையதளங்களை தடுக்கமுடியாத அரசே குற்றவாளி!’’ எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

திருச்சி – மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஓட்டல் அருகில் மார்ச் – 14 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு நுற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி மக்கள் அதிகாரம் :

புதுச்சேரியில், மார்ச் -13 அன்று மாலை பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் சிந்தனையாளர் இயக்கம்; மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்; திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

பென்னாகரம் – மக்கள் அதிகாரம் :

பென்னாகரம் – பேருந்து நிலையம் அருகே மார்ச் – 14 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் :

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் கோவை எஸ்.பி பாண்டியராஜனை கண்டித்து மார்ச் – 14 அன்று காலை தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுப்பு:


படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

”தெய்வம் தொழாஅள்” என்ற குறளானது பெண்அடிமைத்தனம் அல்ல,
மாறாக இது ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக்கலகக் குரல் – வி.இ.குகநாதன்

ள்ளுவரின் பின்வரும் குறளானது பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)

இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். உண்மையிலேயே கணவனைக் கடவுளிலும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளாகவா இக் குறள் உள்ளது எனப் பார்ப்போம். கணவனை வழிபடச்சொல்லுகின்றார் என வைத்தாலும் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டாம் என்கின்றார்? ஒருவேளை கடவுளையே கும்பிடவேண்டாம் எனப் பகுத்தறிவு பேசுகின்றார் என்றால், அந்தப் பகுத்தறிவு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துமா? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. பிறப்பால் எல்லோரும் சமன் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) என்று கூறிய வள்ளுவர் எவ்வாறு பிறப்பினடிப்படையிலான பால் வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? மேற்கூறிய காரணங்களால், குறித்த இக் குறளிற்கு ஏற்கனவே பலர் கூறிய விளக்கம் பொருத்தமற்றது எனத் துணிந்து கூறலாம்.

எனவேதான் இக் குறளிற்கான விளக்கத்தினை வேறு வகையில் பார்க்கவேண்டியுள்ளது. இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.

“தெய்வம் தொழாஅள் ; கொழுநன் தொழுதெழுவாள் ;
பெய்யெனப் பெய்யும் மழை.”

இந்த மூன்றுபகுதிகளிற்குமான பொருளை பின்னிருந்து முன்னாகப் பார்ப்போம் (இது ஒரு வகையில் தேர்வில் எளிமையான கேள்விகளை முதலில் அணுகுவது போன்ற ஒரு முறை).

பெய்யெனப் பெய்யும் மழை :

“பெய் எனப் பெய்யும்” மழை என்பதற்கு “மனைவி ஆணையிட மழை பெய்யும்” என்பது போன்றே இதுவரைப் பலராலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிற்குப் பொருந்தாத “மந்திரம் ஓத மாங்காய் வரும்” போன்ற கருத்தை வள்ளுவர் வேறு எங்குமே கூறாதபோது, இந்த விளக்கம் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. பொதுவாக இன்றும் பெரு மழை பெய்யும்போது பேச்சுவழக்கில் “மழை பெய்யோ பெய் எனப் பெய்தது” என்கின்றோம். இங்கு பெய் என்று கூறியவுடன் பெய்கின்றது என்ற பொருள் அல்லவே. அதுபோன்றே இங்கும் ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் உழவர்களிற்கு அழிவும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமனானவை).

‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ திரிகடுகம் (96) – நல்லாதனார்

இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
கொழுநன் தொழுதெழுவாள்:

இத்தொடரில் கொழுநன், தொழு, எழுவாள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களைப் பார்ப்போம். இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளிற்கான விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும் இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் (தொழுதி) பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

“தொழுவினிற் புலியானான்’’ (கம்பராமாயணம் மூலபல-181) என்ற பாடலில் கம்பர் விலங்குகள் சேர்ந்து வாழுமிடத்தை தொழு என்கின்றார். ‘’தொழு’’ என்ற சொல் இணையர் (கணவன்-மனைவி) சேர்ந்து வாழ்வதனைக் குறிக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு சீவக சிந்தாமணியில் உள்ளது.

தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே
– சீவக சிந்தாமணி-856

இப் பாடலில் ‘’தொழுவில் தோன்றிய’’ என்பதற்கு ‘’இல் வாழ்வில் உண்டான’’ என்ற பொருளே கொள்ளப்படுகின்றது (இங்கு தொழு = இல்வாழ்வுச் சேரல்). இதனைக் கொண்டு தொழுதல் என்பதனைச் சேரல் (புணர்தல்) எனவும் கூறலாம். உங்களிற்கு இந்த ‘’தொழு’’ என்ற சொல் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி எழலாம். இப்போது ‘’தொழு’’ என்ற அந்த வினைச்சொல் ‘’தொகு’’ என்ற வினைச்சொல்லாக மருவியுள்ளது (மழவு – மகவு, முழை – முகை போன்று மருவியுள்ளது). இன்றும் ‘’தொகு’’ என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருள் உள்ளபோதும், மனிதர்களின் இல்லறச் சேரலை அச்சொல் இப்போது குறிப்பதில்லை. அதே போன்று ‘’தொழு’’ என்றால் இப்போது ‘’வழிபடு’’ என்ற பொருளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்படுவதாலேயே, குறளிற்கான விளக்கத்தில் குளறுபடி நடந்துவிட்டது. உண்மையில் குறளின் விளக்கத்தினை நாம் அந்தக்காலப் பொருளிலேயே (இல்வாழ்வுச் சேரல்) கொள்ளவேண்டும்.

மேற்கூறிய விளக்கங்களின்படி, ‘’கொழுநன் தொழுதெழுவாள்’’ என்பது கணவனுடன் சேர்த்து (புணர்ந்து) படுக்கையிலிருந்து துயில் எழுபவள் என்ற பொருளே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள்:

இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.

“தெய்வத்தால் ஆகா(து) எனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
{தெய்வம் = ஊழ்}

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
{தெய்வம் = ஊழ்}

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}

“ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
{ தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}

மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

இப்போது திருக்குறள் எழுதப்பட்ட காலத்தினை கவனத்திற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு கட்டுரையில் (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். எவ்வாறு முன்னைய குறள்களில் ஆசீவகக் கருத்தான ஊழ் என்பதனை தெய்வமாகவும், வேறு இடங்களில் தமிழரின் நீத்தார் வழிபாட்டினைத் (வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார்) தெய்வமாகவும் கொண்டாரோ, அதேபோன்று இங்கு வைதீகத் தெய்வத்தினைக் குறிப்பிடுகின்றார் (இத்தகைய வெவ்வேறு தெய்வங்கள் எல்லாம் தமிழர்களிடையே அன்று காணப்பட்டமையாலேயே, அத்தகைய வெவ்வேறான தெய்வங்களை வெவ்வேறு குறள்களில் வள்ளுவர் கையாளுகின்றார்). சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம்.

தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில்
மந்திராதீனம் ச தேவதா = தெய்வமோ, மந்திரத்தின் பிடியில்
தே மந்த்ரம் பிராமணா தீனம் = மந்திரமோ, பிராமணப் பிடியில்
பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!

ஆம், அந்த வைதீக தெய்வம் பார்ப்பனரே ஆகும். இந்தப் பார்ப்பனக் கடவுளிற்கும், ‘’தொழாஅள்’’ என்பதற்கும் என்ன தொடர்பு? என யோசிக்கின்றீர்களா? இதற்கு இன்றும் திருமணங்களில் ஓதப்படும் வடமொழி மந்திரமான “ஸோம: ப்ரதமோ…” (மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க) என்பதனை அறியவேண்டும். இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாக பல தேவர்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதிவருகின்றார்கள்.

இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள். இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினை பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். இதனை நாம் இன்றும் கேரளாவிலுள்ள தறவாடு முறையின் எச்சங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்’’.

(“கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்). கேரளாவிற்கு ஏன் போகவேண்டும். தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்த காலத்தில் “இயற்பகை நாயனார்” என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர்.

படிக்க:
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

சிலர், சிவனே பிராமண வேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள். (இந்த தறவாடு, இயற்பகை நாயனார் போன்ற நிகழ்வுகள் யாவும் குறளிற்குக் காலத்தால் பிந்தியவை என்றாலும், அவை கடந்த கால நடைமுறைகளின் / நடைமுறைப்படுத்த முயன்றவற்றின் எச்சங்களே). இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்த்த ஏனையோரினை சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற தொடர் தெளிவாக விளங்கும் என்று நினைக்கின்றேன். அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார்.

குறளின் விளக்கம்:

இப்போது மேலே பார்த்த மூன்று பிரிவுகளையும் ஒன்றாக்கினால் குறளின் விளக்கம் தெளிவாகும். (பார்ப்பனத்) தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

பார்த்தீர்களா! பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான குறள் என்று இதுநாள் வரை நாம் கருதியிருந்த ஒரு குறளானது, உண்மையில் எவ்வளவு முற்போக்குத்தனமான பார்ப்பனிய எதிர்ப்புக்குரலாக அமைந்துள்ளது என.

குறிப்பு: இக் கட்டுரையானது பேரா. ந. கிருஷ்ணன், ராமானுஜ தாத்தாச்சாரியார், முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான் ஆகியோரது பல்வேறுபட்ட எழுத்துகளிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

வி.இ. குகநாதன்

`

பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?

1

முதன்முதலாக ஒரு ஆணை நிர்வாணமாக பார்த்தபோது, நான் அழுதேன். கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த எனக்கு, என் உடல் உறுப்புகளைக்கூட நான் பார்த்ததில்லை. மேலும், சுயஇன்பம் கொள்வதற்காக நான் நரகத்துக்குப் போவேன் என நினைத்தேன். பாலுறவை தவிர்ப்பது என்பது மட்டும்தான் எனது பள்ளியிலும் வீட்டிலும் சர்ச்சிலும் நான் கற்றுக்கொண்டது. இது என்னை பல ஆண்டுகளாக அவமானத்திலும் தனிமையிலும் பயத்திலும் வைத்திருந்தது.

கோலரோடா, உட்டா, இடாஹோ போன்ற இடங்களில் பரந்துபட்ட பாலியல் கல்விக்கு அனுமதி குறித்த சமீபத்திய சச்சரவுகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுக்கு இது எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும். பாலியல் கல்வியாளராகவும் தொழில்முனைவோராகவும், நான் ஆயிரக்கணக்கான தவறாக கற்பிக்கப்பட்ட இளைஞர்களுடன் பேசியிருக்கிறேன். இது எத்தகைய மன மற்றும் உடல்நல சேதத்தை உருவாக்கிவிடுகிறது என்பதை நான் அறிவேன்.

பாலுறவு குறித்து குழந்தைகளுடன் பேசுவது பெற்றோருக்கு ஏற்படுத்தும் சங்கடங்களை பற்றி அமெரிக்கர்கள் சிரிப்பதுண்டு. கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது பரந்துபட்ட பாலியல் கல்வியை ஒருசில மாணவர்கள் பெறுகின்றனர். 1990-களிலிருந்து பழமைவாத செயல்பாட்டாளர்கள், பழமைவாத அதிபர்களின் துணையுடன் பாலியல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தடுத்துவிட்டார்கள். பள்ளிகள் உள்ள ஒரே திட்டம் பாலுறவை தவிர்க்க சொல்வது என்பது மட்டும்தான்.

அமெரிக்காவில் பாதிக்கும் மேலான பள்ளிகளில் எந்தவொரு பாலியல் கல்வியும் இல்லை. மீதமுள்ளவற்றில் பாலுறவை தவிர்க்க சொல்வது மட்டும் தான் ஒரே அறிவுறுத்தல். கருவுறுவதலை தடுப்பது குறித்தோ, பாலுறவால் பரவும் நோய்களை தடுப்பது குறித்தோ, ஒப்புதலுடன் பாலுறவு குறித்தோ எந்த கற்பித்தலும் இல்லை.

சொல்லப்போனால், 18 மாகாணங்களில் உள்ள பயிற்றுநர்கள், திருமணத்துக்குப் பிறகான பாலுறவே ஏற்றுக்கொள்ளத்தக்கது என மாணவர்களிடம் சொல்கிறார்கள். ஒருபாலின மாற்றுப் பாலினத்தினர் குறித்து பேசுவது ஏழு மாகாணங்களில் ஆசிரியர்கள் பேசுவது தண்டனைக்குரியது. ஒரு பாலினத்தை எதிர்த்தோ, எச்.ஐ.வி. தொற்று குறித்தோ பேசுவதற்கும் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பத்து மாகாணங்களில் மட்டுமே பாலியல் வன்முறை அல்லது மனமொத்த பாலுறவு குறித்து பாலியல் கல்வியில் சொல்லித்தரப்படுகிறது.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

மேலும், விரிவான பாலியல் கல்வி சொல்லித்தரப்படும் மாவட்டங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய கல்வி தேவையா இல்லையா என்பதை பெற்றோர் முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாலியல் கல்வி அளிப்பது அரசின் பணியல்ல என பழமைவாதிகள் எப்போதும் சொல்லிவருகிறார்கள். பாலியல்பு மற்றும் உறவுகள் குறித்து பெற்றோர் மட்டுமே சொல்லித்தர வேண்டும் என்பது அவர்களுடைய வாதம். ஆனால், பெரும்பாலான பெற்றோர் அத்தகைய வழிகாட்டுதலை தருவதில்லை. குழந்தைகளுக்கு தங்களுடைய பாலியல் வளர்ச்சி குறித்து மருத்துவ ரீதியிலான சரியான தகவல்களை வழங்க மறுப்பது கருத்தியல் அல்ல, அது அலட்சியம்.

அதுகூட பயனுள்ளதாக இல்லை. பாலுறவை தவிர்க்க வேண்டும் என்பதை மட்டுமே பாலியல் கல்வியாக சொல்லித்தரப்பட்ட மாகாணங்களில் அதிக அளவிலான பதின்பருவ கர்ப்பம் நிகழ்ந்துள்ளது.

ஒபாமா ஆட்சி காலத்தின் போது, பாலுறவை தவிர்க்க வேண்டும் என சொல்லித்தரப்பட்ட பாலியல் கல்வி, மேலும் விரிவடைந்த கல்வியாக சொல்லித்தரப்பட்டது. பதின்பருவ கர்ப்பம் தரித்தல் தேசிய அளவில் 41 சதவீதமாக குறைந்தது. டிரம்பின் அரசு, பாலுறவை தவிர்ப்பது மட்டுமே போதும் என முந்தைய கல்வி முறையை திருத்தியது. 200 மில்லியன் டாலர் அளவிலான நிதி ஒதுக்குதலையும் நிறுத்தியது.

இருந்தபோதிலும் சமூக பழமைவாதிகளின் கனவுகளுக்கிணங்க, சில பதின்பருவத்தினர் பாலுறவை தவிர்க்கின்றனர். சில ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளி படிப்பை முடிக்கும்போது கிட்டத்தட்ட 60% மாணவர்கள் பாலுறவு கொள்கின்றனர். ஆணுறைகள், தொற்று, மனமொத்த உறவு குறித்து தங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது பள்ளியிலிருந்தோ எந்தவித அறிவுறுத்தலையும் பெறாமல் பலர் இதைச் செய்கின்றனர்.

அதனால்தான், நான்கில் ஒரு அமெரிக்க பெண் தன்னுடைய 20 வயதை அடையும்போதே கர்ப்பம் தரிக்கிறார். அல்லது முன்னெப்போதும் இல்லாத வகையில் பதின்பருவத்தினர் பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

வெறும் 41% அமெரிக்க பெண்கள் மட்டுமே தங்களுடைய முதல் பாலுறவு அனுபவம் விரும்பத்தக்க வகையில் இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.

நாம் பாலுறவு குறித்து கற்பிக்க மறுக்கும்போது, பாலுறவை தடுப்பதில்லை. மாறாக, நாம் மேலும் அதை ஆபத்தானதாக மாற்றுகிறோம். இது பாலியல் தொற்று நோய்கள் தொடர்பானது மட்டுமல்ல.

தங்களது உடல் குறித்தோ தங்களுடைய உடலுக்கு தாம் மட்டுமே உரிமையாளர்கள் என்பது குறித்தோ அறிவற்ற குழந்தைகள் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பாலுறவு தவறானது என சொல்லித்தரப்படும்போது, பாலியல் வன்முறை அல்லது அத்துமீறல் குறித்து அந்த குழந்தையால் எதிர்த்து போராடவோ அல்லது புகார் அளிக்கவோ முடிவதில்லை.

பாலுறவை தவிர்க்கச் சொல்லித்தருவது, மனமொத்த பாலுறவை குறைக்கிறது. நான் பதின்பருவத்தில் இருந்தபோது, ஆண்கள் என்னிடமிருந்து பாலுறவை பெற எதிர்ப்பார்ப்பார்கள் என்றும் அதற்கு எதிர்ப்பது என்னுடைய வேலை என்றும் சொல்லித்தரப்பட்டது. பாலியல் வன்முறையோ அல்லது அத்துமீறலோ ஏற்பட்டால் அது என்னுடைய தவறுதான் என எண்ணவைத்தது அது. எல்லாவிதமான பாலியல் செயல்களும் தவறானவை. ஒரு பையன் என்னுடன் டேட்டிங் வந்தால், அவனை தொட அனுமதிப்பது என்னுடைய தவறு என்பதாக அவை சொல்லித்தரப்பட்டன.

குழந்தைகளை இருள் சூழந்த சூழலில் வைப்பது, வேட்டையாளர்களுக்குத்தான் வசதியாய் மாறும். அவமானம் கொண்டு அமைதியாக இருப்பது கலாச்சாரம் என நம்புகிறார்கள். கன்னித்தன்மை உயர்ந்த மரியாதையாக புகழப்படும்போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுபவர்கள் தங்களை மதிப்பற்றவர்களாக உணர நேர்கிறது. அவமானம் மற்றும் குழப்பம் காரணமாக பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் அளிக்கவும்கூட அவர்கள் தயங்கக்கூடும்.

ஒருபாலின – மாற்று பாலின குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பாலியல் கல்வியில் இவர்கள் குறித்து சொல்லித்தரப்படாதது, அவர்களை மேலும் தனிமைப்படுத்துகிறது; அவமானப்படுத்துகிறது. ஒருபாலின-மாற்று பாலின குழந்தைகளுக்கு ஒரளவே தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் அதிகப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை புகார் தெரிவிக்கும்போது உடல் ரீதியிலான தாக்குதலிருந்து வீடில்லாமல் தவிப்பது வரை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மருத்துவ அடிப்படையிலான பாலியல் நலனை சொல்லித்தருவதை தவிர்த்து பாலுறவை தவிர்ப்பது என்பதை மட்டும் சொல்லித்தந்தால், அது இளைஞர்களின் வாழ்நாள் முழுக்கவும் உடல் மற்றும் மன ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது இப்படியான வழிகளில் இருக்கக்கூடாது. பல நாடுகளில் பாலியல் நலன் குறித்த துல்லியமான தகவல்களை அளிப்பது முதன்மையானதாக கருதப்படுகிறது. நெதர்லாந்தில் மழலையர் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்படுகிறது. டச்சுக்காரர்களைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக அமெரிக்க பதின்பருவத்தினர் பிரசவிக்கின்றனர். பெரும்பாலான டச்சு பதின்பருவத்தினர் தங்களுடைய முதல் பாலுறவு குறித்து நேர்மறையாக கருத்து தெரிவிக்கின்றனர்.

பாலுறவை சொல்லித்தருவது கடினமாக உள்ளதாக நாம் சிரித்துக் கொள்கிறோம். நம்முடைய பெற்றோர் அதுகுறித்து பேசவில்லை என்பதால், நாமும் நம்முடைய குழந்தைகளிடம் அதுகுறித்து பேசுவதில்லை என்கிறோம். அடுத்த தலைமுறையினர் விரிவான பாலியல் கல்வியைப் பெற இந்த சுழற்சியை நாம் உடைக்கலாம். நம்முடைய அவமானத்தைவிட அவர்களுடைய பாதுகாப்பு முக்கியமானது.


கட்டுரை: ஆண்ட்ரியா பாரிகா
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: நியூயார்க் டைம்ஸ்

 

குழந்தைகள் என் ஆசிரியர்கள் , ஆசான்கள் என்கிறார் ஒரு ஆசிரியர் !

0

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 1-அ

அமனஷ்வீலி

அத்தியாயம் ஒன்று

குழந்தைகள் – என் ஆசிரியர்கள்

கல்வியாண்டு துவங்கும் தருவாயில்(*) (ஆகஸ்டு 31) …

ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தலைநகரமாகிய திபிலீசியில் ஆகஸ்டு மாதக் கடைசியில் எப்போதும் வெப்பமாக இருக்கும். தார் உருகி ஓடும், மக்களுக்கு எதன் மீதுமே அக்கறையில்லாததைப்போல் தோன்றும்.

தெருக்களில் குழந்தைகள் அதிகமில்லை. இவர்களில் பெரும்பாலோரை பெற்றோர்கள் கோடை ஓய்விடங்களுக்கும், சொந்த கோடையில்லங்களுக்கும், பயனீர் முகாம்களுக்கும், குறிப்பாக கிராமங்களில் உள்ள தாத்தா, பாட்டி மற்ற உறவினர்களிடமும் அனுப்பி விட்டனர்.

கிராமத்திற்குச் செல்லவும் அங்கேயுள்ள கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து விளையாடவும் அவர்களோடு சேர்ந்து காடுகளுக்குச் சென்று பழங்களைச் சேகரிக்கவும் கூடை பின்னவும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். காஹேத்தியாவின் சமவெளிகளில் நான் கழித்த குழந்தைப் பருவம் என்னுள் இப்போது விழித்துக் கொண்டது. நான் கிராமக் குழந்தைகளோடு சேர்ந்து ஆற்றில் குளிக்க ஓடியதுண்டு, சமவெளியில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை மீதேறி அமர்ந்து களைப்பின்றி சவாரி செய்ததுண்டு; மக்காச்சோளமும் கோதுமையும் நிறைந்த மூட்டைகளைத் தோள்கள் மீது சுமந்து கொண்டு நீர் சக்தியால் இயங்கும் அரவை இயந்திரத்திற்கு எடுத்துச் சென்றதுண்டு;

தானியக் களஞ்சியத்தினுள் மணம் மிகு மாவைக் கொட்டியபடி தட்டையான பெரும்வட்டக் கற்கள் சுற்றுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்; மல்யுத்தப் போட்டிகள் நடக்கும்போது அவற்றைக் கண்டு களிப்பதற்காக கிராமம் முழுவதுமே சிறு திறந்த வெளியில் கூடும். குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

ஆகஸ்டில் திபிலீசியில் கடும் வெப்பம் நிலவும். செப்டெம்பர் 1-ம் தேதி விரைவிலேயே வரவிருக்கிறது. ஆனால் தெருக்களில் இன்னமும் குழந்தைகளின் ஆரவாரத்தைக் காணோம், குறைந்த அளவே குழந்தைகள் காணப்படுகின்றனர்.

கடும் வெப்பத்தின் காரணமாக கல்வியாண்டு இம்முறை செப்டெம்பர் 1-ம் தேதி துவங்கப் போவதில்லை, இரண்டு வாரமோ, ஒரு மாதமோ கழித்துதான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்றொரு வதந்தி மின்னல் வேகத்தில் பரவுகிறது. தம் கனவுகள் பலிக்கின்றன என்று குழந்தைகளுக்குத் தோன்றுகிறது.

பெற்றோர்களும் நம்புகின்றனர். ஏனெனில் வகுப்புகளை ஒத்திப் போடுவதற்கான காரணங்கள் நிறையச் சேருகின்றன.

ஆனால் ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாட்களில் இக்கனவுகள் கலைகின்றன. ”பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பின் செப்டெம்பர் 1-ம் தேதி மீண்டும் துவங்கும்” என்ற பத்திரிகைச் செய்திகள் இதற்கு வழிகோலுகின்றன.

பள்ளி அழைக்கிறது! இது ஒரு புனிதமான அறைகூவல்.

பாடங்கள் விரைவில் ஆரம்பமாகும்! இரண்டு மூன்று நாட்களில் சூரிய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நகரம், மனதைக் கிறங்க வைக்கும் வாசனையுடன் கூடிய ஒரு பெரிய, அழகிய, பல வண்ண மலர் விரிவதைப் போல் காட்சியளிக்கிறது. இந்த மலரை உயரே, பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து பார்த்தால் அது எவ்வளவு அழகிய, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் தெரியுமா!

குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

நகரத்திற்கு உயிர் வருகிறது, உத்வேகம் வருகிறது, நகரம் தலையை உயர்த்தி, மெல்லிய காற்றில் ரோஜா செடியின் தண்டு ஆடுவதைப் போல் மெதுவாக ஆடத் துவங்குகிறது. ஒரு உண்மையை (இது ஒருவேளை இதுவரை தெரியாமலேயே இருந்திருக்கலாம்) நன்கு உணருகிறோம்: 1,500 ஆண்டுகட்கும் மேலாக நிலவிவரும் இந்நகரத்தில் இதன் மிகச் சிறு குடிமக்களாகிய குழந்தைகள் இல்லாவிடில் நகரமே வெறிச்சோடிக் களையிழந்து உள்ளது.

சத்தம்! தெருவில்தான் எவ்வளவு சத்தம், மகிழ்ச்சி, உற்சாகம்! குழந்தைகள் அவசர அவசரமாகப் போகின்றனர், ஓடுகின்றனர். பாதசாரிகளுக்கான இடங்களில் போவோர் வருவோர் மீது படாமல் வளைந்து வளைந்து மிதிவண்டி ஓட்டுகின்றனர். அமைதியாக, நிதானமாக நாம் தெருக்களில் நடப்பதற்கு அவர்கள் இடையூறு செய்கின்றனர், ”என்ன வெப்பம்” என்ற நமது வழக்கமான கோடைக்காலப் பேச்சின் போக்கை மாற்றுகின்றனர். வருவோர் போவோரின் முகங்களில் ஒருவிதக் களை, கவலை, மகிழ்ச்சி – குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்!

வெப்பமானியில் வெப்பம் இறங்கவேயில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வெப்பமானியைப் பற்றி என்ன கவலை!

இன்று 38 டிகிரி. அவர்களுக்கு வெப்பமாக இல்லையா என்ன ?

இல்லை, குழந்தைகளுக்கு வெப்பமாயில்லை. அவர்களுக்கு வேறு கவலை – அவர்கள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், ஸ்கேல்கள், வரைபடச் சாதனங்கள், வண்ணப் பென்சில்கள் முதலியவற்றை வாங்க வேண்டும். இவற்றையெல்லாம் பள்ளிப் பையில் வைக்க வேண்டும். சீருடையை ஒழுங்குபடுத்த வேண்டும். அழகாகக் காட்சியளிக்க வேண்டும்….

ஆசிரியர்களாகிய நாங்களும் எம் அறைகளில் குழுமியிருக்கின்றோம். பரஸ்பரம் முகமன் கூறிக் கொண்டோம், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். புதிய கல்வியாண்டிற்கான புதிய போதனை முறைத் திட்டங்களும் புதிய நம்பிக்கைகளும் நம்மிடமும் இருக்க வேண்டும், சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வம் மிக்க எதிர்பார்ப்பு நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியும் பதட்டமும் கலந்த ஒரு தெளிவற்ற நிலை ஒருவேளை உங்களை ஆட்கொள்ளக் கூடும்; கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம்கூடத் தோன்றலாம்.

இத்தகைய உணர்வுகள் உண்மையிலேயே உங்களை ஆட்கொண்டால் அது நல்லது, நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் அன்பு, நம்பிக்கை எனும் மிக கெளரவமான பரிசு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய எதிர்கால வகுப்புகளைப் பற்றிய எண்ணமே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பாத இவர்களுடனான சந்திப்பைப் பற்றிய எண்ணமே உங்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வது?

அதுவரை விஷயம் போகாமலிருந்தால் நல்லது…. எப்படி நடந்து கொள்வதென நீங்களே முடிவு செய்யுங்கள்.

நான், ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில் நள்ளிரவு வரை என் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறேன். நன்கு சிந்திக்கிறேன், திட்டமிடுகிறேன், மதிப்பிடுகிறேன், பொதுமைப் படுத்துகிறேன், என்னுடனேயே விவாதித்துக் கொள்கிறேன்; என் ஆசிரியர் பயிற்சி அனுபவத்தை யோசித்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளைச் சேர்ந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய நான் என் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறேன்.

அவர்களைவிட ஒரு நல்ல அனுகூலமான நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் ஒருவன்தான் ஆசிரியன், எனக்கோ முப்பத்தாறு அல்லது அதற்கும் அதிகமான ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் எனது மிக விடாப்பிடியான ”ஆசிரியர்களாக” விளங்குவார்கள்.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ?

நான் அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வரையவும் பாடவும் சொல்லித்தர அவர்கள் எனக்கு மிக உயர்வான போதனை முறைக் கல்வியைத் தருவார்கள். குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும் என்பதை அறிய தன்னை கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக உணர வேண்டும். என் மேசை முன் அமர்ந்து, புதிய தயாரிப்பு வகுப்புடனான சந்திப்பைப் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு தாளில் பின்வருமாறு எழுதிக் கொள்கிறேன்:

குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி எனும் கலையையும், ஆசிரியனின் திறமையையும் அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்.

இந்த வாசகத்தின் உண்மையை – பயனை இருபத்தொன்பது முறை நான் சோதித்து சரிபார்த்திருக்கிறேன். முப்பதாவது தடவையாக சரிபார்க்கப் போகிறேன்.

அடிக்குறிப்பு:
* சோவியத் நாட்டில், பள்ளியில் கல்வியாண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆரம்பமாகும்.-(ப-ர்.)
(தொடரும்)

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!