ஒவ்வொரு ஆண்டும் ’சுதந்திர’ தின விழா முடிந்த பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், போலீசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டும் நேற்று நடைபெற்ற சுதந்திர விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடியாரும், துணை முதல்வர் தர்மயுத்தம் ‘புகழ்’ ஓ.பி.எஸ்-ஆரும் கலந்து கொண்டு நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் கவர்னர் மாளிகையின் தோட்டத்திலே ரோஜா மலர்ச் செடிகளை நட்டு மைய அரசின் தாமரை தோட்டத்து சேவகர்கள் தாங்கள் என்பதை பணிவன்புடன் நிரூபித்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் போடப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன.
கவர்னருக்கு மட்டுமல்ல, புதியதாக பணியிலமர்ந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கும் கூட இந்த வெற்றிருக்கைகள் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ‘பொறுப்பற்ற’ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் அதிர்ச்சி இருக்காதா என்ன?
’முன்னெச்சரிக்கை நோட்டீசு’ எதுவும் கொடுக்காமல், ’முன் அனுமதி’ எதுவும் வாங்காமல் திடீரென ஸ்டிரைக் அடிக்கும் அளவிற்கு அப்படி என்னதான் நிகழ்ந்துவிட்டதாம்? கடந்த ஆகஸ்ட் 12, 2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில்ரமணி அவர்கள் ஆளுநர் மாளிகையில் வைத்துப் பதவியேற்றார்.
அங்கே அமைச்சர்கள், போலீசு அதிகாரிகள் ஆகியோருக்கான இருக்கைகள் பின்னால்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கைகளைப் போட்டிருக்கின்றனர், கவர்னர் மாளிகை ஆபிசர்ஸ். இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் தகவல்படி, மேடையில் கவர்னரின் செயலாளர் ராஜகோபால் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுடன் அருகில் இருந்திருக்கிறார். ராஜகோபாலுடன் நெருங்கிய பிணைப்பு கொண்ட டி.ஜி.பி. தர போலீசு அதிகாரியான ஜாங்கிட்-க்கு நீதிபதிகளின் இருக்கைக்கு முன் வரிசையில் இடம் தரப்பட்டிருக்கிறது.
அது கவர்னரின் ஆவலின்படி நடந்ததா அல்லது குளறுபடியால் நடந்ததா என்ற கேள்வி இந்த இடத்தில் தேவையில்லை என்பதால் அதனை விட்டுவிட்டு நமது நீதிபதிகளின் வருத்தத்திற்குள் செல்லலாம்.
நீதிபதி எம்.எஸ். ரமேஷ் இதுகுறித்து பத்திரிகைகளிடம் கூறுகையில், “அரசியல் சாசன ஆளுகையாளர்களுக்கும், போலீசு அதிகாரிகளுக்கும் இடையிலான படிநிலை குறித்து கவர்னர் மாளிகைக்குத் தெரியாதா? அல்லது, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் போலீசு அதிகாரிகளுக்கும் கீழான மட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதாக அவர்களின் புரிதல் இருக்கிறதா?” என பொங்கியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் தஹில்ரமணி.
மேலும், ‘தி இந்து’ பத்திரிகையைச் சேர்ந்த இம்ரானுல்லாவிடம் கூறுகையில், “நான் ஒரு தனிநபராக எந்தப் பகுதியில் இருக்கை கொடுத்திருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக, இன்று (12.08.2018) அக்கறையின்றி பின்பற்றப்பட்ட நடைமுறை கண்டிப்பாக பிரச்சினையே. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராகினும் அவர்களிடமிருந்து நீதிபதிகள் விளக்கம் கோரமுடியும்.” என்று கூறியிருக்கிறார்.
சினிமா தியேட்டரில் முன்னிருப்பவரின் தலை மறைத்தால் ”கொஞ்சம் கீழே இறங்கி உக்காருங்க” என்று சொல்லிவிடலாம். இங்கு நீதிபதிகளுக்கு தலை மறைப்பது பிரச்சினையில்லை. யாரு ’பெரிய தலை’ என்பதுதான் பிரச்சினையாகிப் போய்விட்டது. அதற்கு கவர்னர் மாளிகையிலிருந்து உரிய பதில் வரவில்லை என்ற பிறகுதான் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஸ்டிரைக்கை அடித்துள்ளனர்.
ஸ்டிரைக் என்றவுடன் ஒரு கொசுவர்த்திச் சுருள் நம் மூளையில் புகைகிறது. கடந்த 2017 நவம்பரில் செவிலியர்கள் ஊதியம் போதாது என்று போராட்டம் நடத்தியதற்கு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெகுண்டெழுந்து கொட்டிய வார்த்தைகள் காதில் வந்து மோதுகின்றன. ”ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலை பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்டிரைக் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று பொரிந்து தள்ளினார்.
மாதம் தொடங்குகையில் சுளையாக ரூ. 2,25,000 சம்பளம் வாங்கும் மாண்புமிகு நீதிபதிகள்தான் ’உழைப்பிற்கான கூலி கிடைக்கவில்லை’ என போராட்டத்தில் ஈடுபட்ட – மாதம் ரூ.7000 சம்பளம்பெறும் செவிலியர்களிடம் அந்த வார்த்தைகளை உதிர்த்தனர்.
இன்று “தங்களுக்கான ’மரியாதை’ கிடைக்கவில்லை” என ’மானமிகு’ ஆளுனர் அவர்களின் மனம் புண்படும்படி, திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் நீதிபதிகளை முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், இன்னாள் உச்சநீதிமன்ற ’இளம்’ நீதிபதியுமான இந்திரா பானர்ஜிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினால், என்ன வாசகங்களை உதிர்த்திருப்பார்?
“உங்களுக்குத்தான் மாதம் பிறந்தால் ரூ.2,25,000 சம்பளம், அரசு வீடு, அரசு கார், ஒரு டவாலி, தனி மரியாதை என எக்கச்சக்கமான மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறதே. ’ஆஃப்ட்ரால்’ ரெண்டு ’ரோ’ பின்னாடி தள்ளி உக்கார வச்சதால இப்போ மரியாதை பத்தலைன்னு சொல்றீங்களே. உங்களுக்கு மரியாதை பத்தலைன்னா வேற வேலை பாத்துட்டு போக வேண்டியதுதானே?” என்று கேட்டிருப்பாரா? எப்படிச் சொல்வார்? தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு தக்காளிச் சட்னி எனும் கைப்பிள்ளையின் நீதிதானே இது?
இனி, கேள்வி:
தங்களுக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என கவர்னரின் டீபார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகளின் செயல் எத்தகையது? உங்கள் கருத்து என்ன?
அவமதித்த கவர்னருக்கு சரியான பதிலடி
நீதிபதிக்கு வந்தால் ரத்தம், மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி
இவங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
ஐயோ, பாவம் நீதிபதிகள்
இரண்டு பதில்கள் தெரிவு செய்யலாம்
ட்விட்டரில் வாக்களிக்க:
டிவிட்டர் Poll : கவர்னரின் டீபார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகளின் செயல் எத்தகையது? உங்கள் கருத்து என்ன?
இலங்கையிலோ இந்தியாவிலோ நடக்கும் ஆயிரமாயிரம் பாலியல் வன்முறைகள் / பாலியல் வன்முறையுடன் சேர்ந்த கொலைகளில் ஏதாவது ஓரிரண்டு மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
அப்போது அவ்வாறு செய்தவர்களைத் தூக்கில் போடுங்கள் என்று பலர் முழங்குகிறார்கள். அதற்கும் மேலாக அண்மைக்காலங்களில் அவர்களின் பிறப்புறுப்பை அறுத்துவிட்டு தூக்கில் போடுமாறும் கோசமிடுகிறார்கள்.
இது தொடர்பில் சில நாட்களுக்கு முன் ஒருதமிழ் குறும்படம் யூடியூபில் வைரலாகியுள்ளது. கொஞ்சமும் ஆழமாகச் சிந்திக்காமல், படக்கருவைப் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவுமில்லாமல், சும்மா கண்ணில் பட்ட ஓரிரு தரவுகளை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படமாகவே இதைக் கருதுகிறேன்.
படத்தின் கதைப்படி இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்முறைக் கொலைகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படாததால் அல்லது அளித்தாலும் மனித உரிமை அமைப்புகள் அதைத் தடுப்பதால் குற்றம் செய்வோருக்கு சட்டத்தின் மேல் பயம் குறைந்து விட்டதாம்.
அதனால் கருவிலேயே பெண் சிசுக்கருவைக் கலைப்பதற்கும் மேலாக கருப்பைக்குள் ஊசி ஏற்றி பெண் சிசுவை ஆண் சிசுவாக மாற்ற அறிவியல் வழி அமைத்துக் கொடுக்குமாம்.
அதன்படி 50 ஆண்டுகளில் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 250 பெண்கள்தான் இருப்பார்களாம். கதைக் காலம் கி.பி. 2067. ஆண்களைத் திருமணம் செய்யப் போதுமான அளவு பெண்கள் இல்லாததால், ஒரு பெண் இரு ஆண்களைக் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் வந்து விடுமாம். மொத்தத்தில் பெண்களைப் “பாதுகாக்க” வேண்டும் என்று யாரும் யோசிக்காததால் இப்படி ஆகிவிடுமாம்.
படத்தில் பல பிரச்சனைக்குரிய விடயங்கள் உள்ளன. சமூகம் பெண்ணுக்கு சம மனித அந்தஸ்து வழங்குவதில் கவனம் செலுத்தாமல் பெண்ணைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதே பிரச்சினைக்குரியது.
இருதார மணங்கள், ஓரினச்சேர்க்கை பற்றிய கதையாசிரியரின் தவறான கருத்துகள், காதலிப்பதாகச் சொல்லும் கணவன் கூட உறவில் பெண்ணின் சம்மதத்தை வலியுறுத்தாமை, பெண்ணைப் “பாதுகாக்க” ஒன்றுக்கு மூன்று போலிஸ்காரர்கள்; ஆனால் அப்போதும் கூட தெருவில் போகும் போது சீண்டும் ஆண்களைக் கண்டிக்காமை என கதையாக்கத்தில் உள்ள பல பிரச்சனைகளை விமர்சிக்கலாம்.
ஆனால் கொடிய பாலியல் வன்முறைக்குச் சித்திரவதையுடன் கூடிய மரணதண்டனை வழங்கப்படாததால்தான் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது எனும் கதையின் சாரம்சத்தை இக்கட்டுரைத் தொடரில் விரிவாக அலசலாம் என நினைக்கிறேன்.
சித்திரவதை செய்து கொலை செய் என்று இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்களா? அதனால் கொஞ்சமாவது பலன் கிடைக்குமா? என்றெல்லாம் இவர்கள் யோசித்திருப்பார்களா, தெரியவில்லை.
உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு அறிவார்ந்து யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவுகளும் அநேகமாக நியாயமாகவோ சரியாகவோ இருக்காது. மனித உரிமை அமைப்புகள் சொல்வது போல் மரண தண்டனை மனிதாபிமானமற்ற தண்டனைதான். மாற்றுக் கருத்தில்லை. மரண தண்டனை என்பது ஒருவகைப் பழிவாங்கலே தவிர நீதியானதல்ல. ஆதாரபூர்வமான எதிர்க்கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள், விவாதிப்போம்.
இந்த ஆட்கொல்லி தண்டனையால் பயனில்லை எனப் பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. ஆனால் பாலியல் வன்முறைகளுக்கு எவ்வாறு நிரந்தர தீர்வுகள் எடுக்கலாம் என்பதைப் பற்றி சிந்திக்காமல் இந்திய அரசாங்கமும் சிறுமி ஆசிபாவிற்கு நடந்த கொடூரத்துடன் மக்களின் கோசமும் சேர 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் எனத் தீர்மானம் எடுத்திருக்கிறது.
மரண தண்டனை மனிதாபிமானமற்றதென்பதைத் தாண்டி மரண தண்டனையால் உண்மையில் பலன் ஏதாவது இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள். குற்றங்கள் சமூகத்தில் குறைகின்றனவா என்பது முக்கியமா அல்லது குற்றவாளியைக் கொன்று போடுவது முக்கியமா? குற்றம் செய்தவன் கொடூரமான முறையில் பழிவாங்கப்படுவது தான் முக்கியம் என்று நினைக்கிறீர்களா? மரண தண்டனையால் சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் பெண் வெறுப்பும் பாலியல் வன்முறையும் முடிவுக்கு வந்து விடுமா? குறைந்தது மரண தண்டனை கொடுக்கும் சட்ட வல்லுநர்களும் நீதிபதிகளும் நியாயமாகச் செயற்படுகிறார்களா?
அநேகமான பாலியல் வன்முறைகள் புகார் செய்யப்படுவதில்லை, புகார் செய்யப்பட்டவற்றில் 90%-க்கு மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பெண்களுக்கோ, சிறுவர்களுக்கோ தெரிந்தோராலேயே நடத்தப்படுகிறது.
அது தந்தையாகவோ, துணைவனாகவோ, சகோதரர்களாகவோ வேறு உறவினர்கள் – நண்பர்களாகவோ கூட இருக்கலாம். 10%-க்கும் குறைவான பாலியல் வன்முறையே அந்நியர்களால் நடத்தப்படுகிறது.
ஆனால் பலதரப்பட்ட சமூகத்தவரும் குற்றவியல் / நீதி அமைப்புகளும் அந்த சிறுபான்மையான பாலியல் குற்றங்களிலேயே கவனம் செலுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கான சட்டங்கள் அனைத்தும், அந்நியரால் நடத்தப்படும் வன்முறை சூழல்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாதிரியான சட்டங்கள் / தண்டனைகள் பாலியல் அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்குத் தேவையான சமூக மாற்றங்களை வழங்குவதில் தோல்வியே அடைந்துள்ளன.
நிற்க. மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தால் தம் உறவினர்களின் அத்துமீறல்கள் குறித்து புகாரளிக்க அநேகமானோர் முன்வரமாட்டார்கள். கூடவே மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தால் பாதிக்கப்பட்டவரை வன்முறை செய்தவன் கொலை செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டெனவும் கருதப்படுகிறது.
கொடுக்கப்படும் மரண தண்டனைகளாவது குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் பக்கச் சார்பற்று, பாரபட்சங்கள் பார்க்காமல் கொடுக்கப்படுகிறதா? டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் நீதித்துறை அவ்வாறு செயல்படவில்லை என்றே சொல்கின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்கள் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
1 of 2
2013-இலிருந்து 2015 வரையான காலத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளில் 75% பேர் தாழ்த்தப்பட்ட சாதியை அல்லது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர். அதில் 63% பேர் அவர்களின் குடும்பத்தின் பிரதான வருமானத்தை ஈட்டுவோர். 88% அதற்கு முன் எந்தக் குற்றமும் செய்ததாகச் சான்றுகள் இல்லாதோர். 300க்கும் மேற்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்போரில் 12 பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தோர்.
இப்படி எல்லா வகையிலும் விளிம்புநிலையிலுள்ள மனிதருக்கே மிக அதிகமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. சாதி / மத / வர்க்க அடிப்படையில் மேல் மட்டத்திலுள்ளோர் குற்றம் செய்யவில்லை என்பதல்ல. அவர்கள் இலகுவாக தப்பித்துச் செல்வதற்கே நீதி அமைப்பு பயன்படுகிறது. எந்த வகையில் இது மனிதாபிமானது?
தண்டனை நிச்சயம் என்றால் குற்றங்கள் குறையலாம் என்று ஆதாரங்கள் சொல்கின்றன. சரி, ஆனால் பாலியல் வன்முறை செய்தால் கட்டாயம் பிடிபடுவோம் / தண்டனை கிடைக்கும் என்று நீங்கள் யாராவது நம்புகிறீர்களா என்ன?
அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. அதாவது நாட்டில் நடக்கும் ஆயிரம் பாலியல் வன்முறைகளில் இரண்டிற்கும் குறைவான குற்றங்களுக்கே குற்றவாளிக்குத் தீர்ப்பளிக்கப்படுகிறது. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?
மொத்தத்தில் மரண தண்டனை பயத்தால் பாலியல் வன்முறை / கொலைக் குற்றங்கள் குறையப் போவதில்லை. மாறாக அரசாங்கம் குற்றவியல் / நீதி அமைப்புகளை வலுப்படுத்த முயல்வதோடு பாலியல் வன்முறை செய்தோர் பொறுப்பேற்கவும் தேசிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தவிர எல்லா சமூகங்களிலும் பாலியல் வன்முறை மிகப் பரவலாக இருப்பதைத் தனியே சட்ட அமைப்புகளைச் சீர்திருத்துவதால் மாற்ற முடியாது. பாலியல் வன்முறை ஒரு சமூகப் பிரச்சனை.
அதன் தீர்வில் சமூகம் ஒரு பங்காக இருக்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் ஒரு தனி நபரின் செயல்களுக்கு அப்பாற்பட்டது. நமது ஆணாதிக்க சாதி-மத / கலாச்சார நம்பிக்கைகள், நடைமுறைகள், கட்டமைப்புகள் அனைத்தும் இவ்வன்முறை நிலைத்திருப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு பிரச்சனைக்குத் திடீர் தீர்வுகள் எதுவும் கிடையாது. இதை உணர்ந்து சமூக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முடியும்.
அன்னா: மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. வினவு கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்”எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம் – இண்ட்ரஸ்டிங் கேஸ் ஸ்டடி
வரலாற்றில் இருந்து பாடம் கற்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்..
இயற் பெயர் : அர்ஜூமந்த் பானு
பாலினம் : பெண்
பிறந்தது : 27 ஏப்ரல் 1593
இறந்தது : 17 ஜூன் 1631 தனது 38 வது வயதில்
14ஆவது குழந்தையை பிரசவிக்கும் போது பிரசவ உதிரப்போக்கு காரணமாக இறக்கிறார் இந்தப்பெண்.
இவரது இறப்பில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்?
இந்த பெண் வேறு யாரும் இல்லை. அப்போது இந்திய நாட்டை ஆட்சி செய்து வந்த முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் பட்டத்து ராணி – மும்தாஜ் மஹல்.
பட்டத்து ராணி என்றால் எத்தனை பவர்ஃபுல் என்பது, அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தின் குயின் எலிசபெத் எத்தனை பவர்ஃபுல்லாக இருந்தார் என்பதை அறிந்தால் தெரியும். இத்தனை சர்வ வல்லமை பொருந்திய சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி எப்படி இறந்தார்?
தனது 38வது வயதில் (High maternal age)
14வது குழந்தையை ஈனும் போது (High order birth )
பிரசவத்திற்கு பின் நேரும் அபாயகரமான உதிரப்போக்கினால் (Post partum hemorrhage) வந்து இறந்தார்
தனது காதல் மனைவியின் இறப்பை தாங்க இயலாத ஷாஜகான் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டித்திருக்கிறார். அவர் துக்கம் முடிந்து மீண்டும் மக்களுக்கு காட்சி அளித்த போது நரை முடி கூனுடன் வெளியே வந்தததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றை படியுங்கள்…
நாம் 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மகப்பேறு பிரசவங்கள் எப்படி இருந்திருக்கும்?
பெண்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் ? என்று எங்கும் போய் பார்க்க தேவையில்லை
மும்தாஜ் எனும் பட்டத்து ராணிக்கு எந்த மாதிரி வைத்தியம் அந்த காலத்தில் கிடைத்திருக்கும்?
சாதாரண மக்களை விடவும் சிறப்பான சிகிச்சை கண்டிப்பாக கிடைத்திருக்கும்?
பிறகு ஏன் மரணம் நடந்தது ?
இப்போது நவீன மருத்துவம், தாய்களின் இறப்பை கொண்டு கணித்து தாயின் வயது அதிகமாக அதிகமாக பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் (complication) கூடும் என்கிறது.
மேலும், எத்தனை அதிகமான முறை ஒரு தாய் பிரசவக்கிறாளோ அதற்கு ஏற்றாற் போல் தாய்க்கோ குழந்தைக்கோ பிரச்சனை வரும் என்கிறது. அந்த பட்டத்து ராணிக்கு உணவில் அன்பில் எந்த குறையும் இருந்திருக்காது.
14-வது பிரசவம் வரை தாக்கு பிடித்திருக்கிறார். கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் நல்ல ரத்த சோகை (anemia) இருந்திருக்கும். அதை சரி செய்யும் மருத்துவம் அப்போது இல்லை. பிரசவித்து விட்டு ரத்த போக்கு அதிகமாக வர அதை சரி செய்யும் சிகிச்சையும் அப்போது இருந்திருக்கவில்லை. இறந்து விட்டாள்.
இந்தியாவில் இன்றும் பல பெண்கள் கர்ப்பகாலத்தின் போது இரத்த சோகைக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். (மாதிரிப் படம்)
அவளது மரணத்தை அக்காலத்தில் மன்னர்களுக்கும் பேரரசர்களுக்கும் கிடைத்த மருத்துவத்தின் அளவுகோலாக கொள்ளலாம். கண்டிப்பாக சாதாரண மனிதர்களுக்கு அதை விட மிகவும் குறைவான மகப்பேறு சிகிச்சையே கிடைத்திருக்கும்.
இப்போது யோசித்து பாருங்கள். இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டு தாய் சேய் இறப்பு விகிதங்களை.
எப்படியும் ஒரு இலட்சம் பிரசவங்களில் 1000 முதல் 2000 தாய்மார்கள் நிச்சயம் இறந்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு.
சரி, இப்போது மும்தாஜ் பெற்ற அந்த 14 பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம். அப்போது இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant mortality rate மற்றும் under 5 mortality rate) கிடைத்து விடும்.
மும்தாஜின் முதல் குழந்தை – ஹூருன் நிசா பேகம் (30.3.1613 – 5.6.1616) மூன்று வயதில் பெரியம்மை வந்து இறந்து விட்டாள் ( அந்த காலத்தில் ஏது தடுப்பூசி ? இப்போது இந்த பெரியம்மை உலகத்தை விட்டே ஒழிக்கப்பட்டுவிட்டது )
இரண்டாவது பெண் ஜஹனரா பேகம் (23.3.1614 – 16.9.1681) இவர் தான் தனது தாய் மரணத்திற்கு பிறகு ஷாஜகானுக்கு மிகவும் விருப்பமான மகள். மூன்றாவது மகன் தாராஹ் சுகோஹ் ( 20.3.1615 – 30.8.1659) அடுத்து நான்காவது மகன் ஷா ஷூஜா ( 23.6.1616-7.2.1661) அடுத்து ஐந்தாவது பெண் ரோஷனரா பேகம் (3.9.1617- 11.9.1671) தனது அக்கா ஜனஹராவுக்கு பிறகு பவர்ஃபுல் லேடியாக விளங்கியவர் இவர்.
அடுத்து ஆறாவதாக “தல” அவுரங்கசீப் பிறக்கிறார்
(3.11.1618- 3.3.1707) இவர் தன் தந்தை நோய்வாய்பட்டவுடன் அவரை ஓரம்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறினார்.
இதுக்கப்புறம் தான் கதை ஆரம்பிக்குது பாருங்க…
ஏழாவது குழந்தை – மகன் இசாத் பக்ஷ் – (18.12.1619- 1621) ஒரு வயது முடிந்திருக்கும் சூழ்நிலையில் நோய் வந்து இறக்கிறார் இந்த இளவரசர். எட்டாவது சுரய்யா பானு பேகம் என்ற பெண் சிசு பிறந்து ஏழு வருடங்கள் வாழ்ந்து பெரியம்மை வந்து இறக்கிறாள். ஒன்பதாவது – பெயரிடப்படாத ஆண் மகவு. பிறந்தவுடன் இறக்கிறது.
பத்தாவது பிறந்த முரத் பக்ஷ் – 1624 ஆம் ஆண்டு பிறக்கிறார். 1661 ஆம் ஆண்டு தனது அண்ணன் அரசர் அவுரங்கசிப் ஏதோ காரணத்தால் இவரை கொன்றுவிட ஆணையிடுகிறார். (என்ன காரணமோ தெரியல) 11-வது மகன் லுஃப்த் அல்லாஹ் – ஒன்றரை வயதில் நோய்வாய்பட்டு இறக்கிறான்.12-வது பெண் குழந்தை தவுலத் அஃப்சா தனது ஒரு வயதுக்குள் நோய் வந்து இறக்கிறாள்.
13-வது ஹுசன் அரா பேகம். இவளும் தனது ஒரு வயதை தாண்டாமல் நோய் வந்து சாகிறாள். 14-வதும் கடைசியுமான பிரசவத்தில்… கவுஹர் அரா பேகம் எனும் பெண் குழந்தையை பெற்று போட்டு விட்டு தாய் இறக்கிறாள்.
இவ்வளவு தாங்க கதை…
யோசிச்சு பாருங்க..
14 ல அஞ்சு குழந்தை ஒரு வயச தாண்டல…
2 குழந்தை பத்து வயச தாண்டல..
பெரியம்மை தடுப்பு மருந்து கண்டறிந்த விஞ்ஞானி எட்வர்டு ஜென்னர்
இப்படி தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாக மட்டுமே பாவித்து வந்தனர் ஒரு பெண்ணிற்கு அதற்கு மேல் என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ப்ளீஸ் டேக் டைவர்சன்.
அந்த காலத்தில் ஷாஜகானே நினைத்திருந்தாலும் தனது மனைவியை பிழைக்க வைப்பது சிரமம் தான். அத்தனை சிகிச்சை முறைகள் அப்போது கிடையாது.
மும்தாஜுக்கும் அவரது அரண்மனையில் வைத்து மரபு வழி பிரசவம் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அனீமியாவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதிகள் கிடையாது. ரத்தம் ஏற்ற முடியாது. ரத்த போக்கை தடுக்க முடியாது. தடுப்பூசி கிடையாது. எந்த உயிர்கொல்லி நோயையும் தடுக்க முடியாது.
நோய் வந்தால் அரசன் ஆண்டி இருவரும் ஒன்று தான்.
இன்று ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அரசு அனைவருக்கும் இலவசமாக மகப்பேறு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.
இந்த கேஸ் சினாரியோ வழி நாம் அறிவது ;
மருத்துவமனை பிரசவமே பாதுகாப்பானது.
தாயின் வயது கூடக்கூட பிரசவத்தின் போது தாய் சேய் மரணம் நிகழ வாய்ப்பு அதிகம்.
கர்ப்பத்தின் எண்ணிக்கை கூடக்கூட பிரசவத்தின் போது பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம்.
பிரசவத்தின் போது ஏற்படும் உடனடி பிரச்சனைகளை கண்டறிந்து உயிர் காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய முடியும்.
இந்த பதிவை இதுவரை இந்த உலகை விட்டு; பிரசவத்தின் போதும் கர்ப்பத்தின் போதும் இறந்த மும்தாஜ் மஹல் போன்ற லட்சக்கணக்கான தாய்மார்களுக்கு காணிக்கையாக்குகிறேன். உங்களால் தான் நாங்கள் பாடம் கற்கிறோம். நன்றி தாய்மார்களே!
பள்ளி கல்லூரி விடுமுறையின் போது மாணவர்கள் என்ன செய்வார்கள்? பெற்றோர்களின் விருப்பம் என்ன? நீட் முதல் பரதம், டென்னிஸ், நீச்சல், இசை என்பதை நடுத்தர வர்க்கம் விடுமுறைக்காலத்தின் சுய முன்னேற்றமாக வைத்திருக்கிறது. சில பல ஆயிரங்களோடு அந்த பயிற்சி ஏதோ முடிந்தாலும் மாணவர்கள் அதில் என்ன பெற முடியும்?
ஆனால் உங்கள் பிள்ளைகளை இத்தகைய விடுமுறைகளின் போது உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு அனுப்பினால் அது உருவாக்கும் ஆளுமையே தனி! குடும்ப அமைப்புக்களில் பாராட்டி சீராட்டி வளர்க்கப்படும் நமது பிள்ளைகள் இத்தகைய வேலைகளைச் செய்யும் போது பல நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இந்த உலகம் எப்படி இயங்குகிறது, நமது சமூகத்தின் உழைக்கும் மக்கள் எப்படி அயராமல் வேலை செய்கிறார்கள், பணி நேரத்தில் எந்திரம் போல வேலை செய்து உடலை உழைப்புக்கு பழக்குவது, மக்களிடையே புரியும் விதத்தில் பேசக் கற்றுக் கொள்வது, நடைமுறை சார்ந்த திறமைகள் பலவற்றைக் கற்பது, தனியாக வேலைக்கு செல்வதன் மூலமும், வேலை சார்ந்த பிரச்சினைகளை சந்திப்பதன் மூலமும் பொறுமை, விடா முயற்சி, தைரியம் போன்றவற்றை சுயமாக தரிசிப்பது என்று அளப்பறிய பலன்கள் இருக்கின்றன.
இங்கே கல்லூரி மாணவி கவிமதி தனது விடுமுறைக் காலத்தில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய அனுபவத்தை தருகிறார்! அடுத்த விடுமுறையின் போது நீங்களும் முயன்று பாருங்கள்!
– வினவு
கல்லூரி முதல் வருடம் வெற்றிகரமாக (எந்த அரியரும் இல்லாமல்) முடிந்தது. கோடை விடுமுறையில் எந்த ஊருக்கு என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, வேலைக்கு போகலாம் என்ற அப்பாவின் யோசனை முதலில் இடியாக இருந்தாலும் பிறகு யோசிக்கும்படியாக இருந்தது..
கடைகளுக்கு பொருள் வாங்க செல்லும்போது அழகாக வரவேற்ற முகங்கள், வேலை தேடி செல்லும்போது வேண்டா வெறுப்பாக பார்த்தது. முதலில் எனது நகரின் முக்கியமான தெருவில் இருக்கும் துணிக்கடைக்கு சென்றேன். நாளை வேலைக்கு வா என்று சொல்வார்கள் என்ற கனவில் சென்றேன் நான்.
கோடை விடுமுறையில் எந்த ஊருக்கு என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, வேலைக்கு போகலாம் என்ற அப்பாவின் யோசனை முதலில் இடியாக இருந்தாலும் பிறகு யோசிக்கும்படியாக இருந்தது..
வேலை தேடி வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன், ‘ஓரமா நில்லுமா’ என்றுதான் பேசவே ஆரம்பித்தார்கள். காலேஜில் சேர்வதற்கு விண்ணப்ப படிவம் தருவதுபோல் வேலைக்கு கூப்பிடுவதற்கும் விண்ணப்ப படிவம் தரவேண்டும் என்பது ஆச்சரியமாக இருந்தது.
விண்ணப்பத்தில், ஜாதி, சமயம் என்ன என்றெல்லாம் கேட்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் கொடுத்த பிறகாவது கூப்பிடுவார்கள் என்று பார்த்தால், ஏற்கனவே வரிசையில் 50 பேர் இருந்தார்கள். கொடுத்து விட்டு வந்துவிட்டேன். 2… நாள் கூப்பிட வில்லை. திரும்பவும் சென்றேன். எச்.ஆர்-இடம் கேட்டு நாளை சொல்கிறோம் என்றார்கள்
அடுத்த நாளும் கூப்பிடவில்லை. ஒரு நாள் கழித்து சென்றேன். எச்.ஆர் இருந்தார்.
12 -ஆவது முடித்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தெரியும் என்றேன். முதல் கேள்வியாக ‘லீவுக்கு மட்டும்தான் வருவியா?’ என்றார். ஆமாம், என்றால் வேலை கொடுக்க மாட்டாரே. ‘இல்லை, நான் வீட்டிலிருந்து கரஸில் படிக்க போகிறேன். நிரந்தரமாக வேலைக்கு வருவேன், என்றேன். அவர்,’ காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை, சீக்கிரம் கூப்பிடுகிறோம்’ என்றார்.
அவர்களும் கூப்பிட வில்லை, நானும் போகவில்லை. வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவதற்காக நானும் அம்மாவும் அருகில் இருக்கும் கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் எதிரே ஒரு ஓட்டலில் பில்லிங் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்டு தொங்கி கொண்டிருந்தது. சென்று கேட்டவுடன், அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வர கூறிவிட்டார்கள்.
ஓனருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பது, தன்னை பெரிய ஆளு என்று நினைத்து கொண்டிருக்கும் சில டான்களுக்கு சாப்பாடு என்ன வேண்டும் என்று கேட்பது, டைம் பாஸ் ஆகாத கஸ்டமர்களின் மொக்க கேள்விகளுக்கு பதில் சொல்வது, மெனு போர்டு எழுதுவது, வேலை செய்பவர்களின் புலம்பலை கேட்பது, இதெல்லாமும் எங்கள் வேலை.
ஷிப்ட் மாறி மாறி வரும் என்றும் கூறினார்கள். விடியற்காலை எழுந்து குளித்து தயாராகி முதல் நாள் காலையில் 6 மணிக்கு வேலைக்குச்சென்றேன். கணினியில் அடிப்படை அறிவு இருந்தாலும், வேலையை எண்ணி பயமாக இருந்தது. வேலைக்கு சென்றவுடன், ஏற்கனவே இரண்டு பேர் பில்லிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சென்று பணிவாக ‘வேலைக்கு வர சொல்லியிருந்தார்கள்’ என்றேன். நாங்களே நேத்துலர்ந்துதான் வரோம் என்றார்கள் அவர்கள். அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறைக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
அவர்கள் ஷீலா, அரித்ரா. ஒரு மணி நேரத்தில் பில் எப்படி போடுவது என்று கற்றுக் கொண்டேன். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம், குடும்பத்தில் ஒருவர் புதியதாக வந்ததை போல விசாரித்தார்கள்.
காலை உணவு, என்ன வேண்டுமோ எடுத்து கொள்ளலாம். ஆனால், பரோட்டா, மல்லி இட்லி போன்ற விலையுயர்ந்தவற்றை எடுக்கக்கூடாது என்று பரோட்டா மாஸ்டர் கூறினார். நான் இரண்டு இட்லி சாப்பிட்டேன். அனைவரும் நன்றாக பேசினார்கள். பயம், கூச்சம் எல்லாம் முதல் நாளிலேயே மறைந்துவிட்டது எனக்கு.
பரோட்டா மாஸ்டர்
அரித்ராவும், ஷீலாவும் பக்கத்து ஊரிலிருந்து வந்தார்கள். ஷீலாவுக்கு இயேசு பக்தி அதிகம். கண்டிப்பாக இயேசு அருளோட நான் 1000 மார்க் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்வாள். அரித்ரா, மார்க் வந்தா என்ன வரலனா என்ன.. எனக்கு என் ஆளு இருக்கான். என்று இருப்பாள்.
அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஒவ்வொன்று இருந்தது. ஓனர்கள் இருவருமே நன்றாக பேசுவார்கள். பில் போடுவது மட்டும் அங்கும் வேலையல்ல. ஓனர் இல்லையென்றால், நாங்கள் தான் ஓனர்போல கேஷ் டேபிளில் உட்கார்ந்து சீன் போட்டுக்கொண்டு இருப்போம்.
ஐஸ் கிரீம், கூல் ட்ரிங்ஸ் எடுத்து கொடுப்பது, ஓனருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பது, தன்னை பெரிய ஆளு என்று நினைத்து கொண்டிருக்கும் சில டான்களுக்கு சாப்பாடு என்ன வேண்டும் என்று கேட்பது, டைம் பாஸ் ஆகாத கஸ்டமர்களின் மொக்க கேள்விகளுக்கு பதில் சொல்வது, மெனு போர்டு எழுதுவது, வேலை செய்பவர்களின் புலம்பலை கேட்பது, இதெல்லாமும் எங்கள் வேலை.
தனராஜ் அண்ணன், சவுந்தர்யா அக்கா (இடது) மற்றும் வனஜா அக்கா -கேஷியர் (வலது)
சவுந்தர்யா அக்கா, கிளீனர் அக்கா.
இவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. இரண்டு பேரும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். கணவர் ஐஸ் வியாபாரம் செய்கிறார். இவரது லட்சியம் என்று இவர் அடிக்கடி கூறுவது, ‘மாமியார் மண்டய போடறதுக்குள்ள லைப்ல செட்டிலாயிடணும்’ இதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்பார்.
ஓனர் எவ்வளவு திட்டினாலும் ‘ஏன்னா..? எப்ப பாத்தாலும் என்னையே திட்டுற? வேற யாரும் கண்ணுக்கு தெரியலயா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்பார். இவர் கணவரை பற்றி பெருமையாக பேசுவார். ‘என் வீட்டுகார் சண்டயில டி.வி.ய ஒடச்சிட்டு, அவரே நைட்டெல்லாம் உட்கார்ந்து சரி பண்ணாரு’ என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.
தனராஜ் அண்ணா
இவர் என்னதான் வேலை செய்கிறார் என்றே தெரியாது. ஒருநாள் ரூம்பாய் என்பார். ஒருநாள் சப்ளையர் வேலை செய்வார். ஒருநாள் பார்சல் வேலை செய்வார். ஆல் ரவுண்டர் என்றே கூறலாம். இவருக்கு சொந்தத்தில் திருமணம் நடந்ததால், மகளுக்கு சிறிது மனம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஒரு குறையாகவே சொல்ல மாட்டார். அவரது அம்மா என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு. அம்மாவுக்கு ஒரு டச் போன் வாங்கி கொடுத்து வேலையில் இருக்கும்போதெல்லாம், போன் செய்து, ‘அம்மா நான் நைட் வந்துடுவேன், சாப்பாடு செஞ்சு வை ‘ என்று கொஞ்சுவார்.
உடன் வேலை செய்பவர்கள் கலாய்த்தாலும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். மற்றவர்களை பயங்கரமாக கலாய்ப்பார். ஒருநாள் லாட்ஜில் ரூம் கேட்டு இரண்டு டூரிஸ்ட்கள் வந்தார்கள். விலையை கேட்டதும் சென்று விட்டார்கள். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், ‘அப்படியே நேரே போனீங்கனா காமாட்சி அம்மன் கோவில் வரும், அங்க போயி ப்ரீயா படுத்துக்கோங்க’ என்றார். ஓட்டலே சிரிப்பில் வெடித்தது.
வனஜா அக்கா, கேஷியர்.
ஓனருக்கு அடுத்து இவர்தான் ஓட்டலில் டான். அவர்கள் வெளியே சென்றுவிட்டால் மளிகை, காய்கறி கடன் காரர்களை சமாளிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இவருக்குதான். இவருக்கு ஒரு மகள். எல்லா வேலை செய்பவர்களும் தனது குடும்ப கஷ்டங்களை, வேலையிடத்தில் நடக்கும் சண்டைகளை இவரிடம் தான் கொட்டுவார்கள்.
இவரை நல்ல நாட்டாமை என்றே கூறலாம். இவரின் தந்திரமான பேச்சினால்தான் ஓட்டலுக்கு தினசரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ‘என்கிட்டருந்து கத்துக்கோடி’ என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். ஒருநாள் இந்த ஓட்டல் எதிர்லயே நான் ஒரு ஓட்டல் வெக்கிறேன் என்று ஓனரை அடிக்கடி நையாண்டியுடன் பயமுறுத்துவார்.
சாந்தி அக்கா பாஸ்கரன் அண்ணா
பாஸ்கர் அண்ணன், சப்ளையர்.
இவருக்கு எங்கள் வயதில் ஒரு மகன், காலேஜ் மூன்றாம் வருடம் படிக்கும் ஒரு மகள். மகன் ஒரு வேலையும் செய்யமாட்டான் என்று பெருமையாக கூறுவார். ‘நான் அவன ஒண்ணும் கேக்கமாட்டேன். ஏன்னா நான் எப்படி எங்கப்பன மதிக்காம இருந்தனோ அத மாரிதான் அவன் இருக்கான், எனக்கிது தேவதான்’ என்பார்.
இவர் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து , சைக்கிளில் சுற்றியுள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று டீ வியாபாரம் செய்துவிட்டு மதியம் ஓட்டல் வேலைக்கு வருகிறார். கேட்கும்போதே தலை சுற்றியது எனக்கு. இவ்வளவு கடினமான வாழ்க்கையிலும், நிமிடத்து ஒரு ஜோக் சொல்லுவார். இவருடன் இருந்தால் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.
சாந்தி அக்கா
அமைதிக்கு பெயர்தான் சாந்தி என்பதற்கு எடுத்துக்காட்டு இவர். அமைதியாக வேலைகளை செய்வார். அவர் மகளும் நான் பயின்ற பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் அவரே வந்து பேசுவார். கோலம் அவ்வளவு அழகாக போடுவார். அவர் கோலம் போடும் அழகை பார்ப்பதற்காகவே அனைவரும் வந்து வாசலில் நின்றுவிடுவார்கள்.
அமிர்தம் ஆயா, கிளீனர்.
அமிர்தம் ஆயா.
டோராவுக்கு வயதானால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். அவர் தேவையில்லாமல் பேசி ஒரு மாதத்தில் நான் பார்க்கவே இல்லை. ஓனரின் செல்ல ஆயா அவர். அவர் பெருக்கினால் அந்த இடத்தில் ஒரு தூசியைக்கூட கண்டுபிடிக்க முடியாது. வேலையில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டுமென்பதை தினமும் வாழ்ந்து காட்டினார் அவர்.
சக்திவேல் அண்ணா
பார்சல் கட்டுபவர். 5 நிமிடம் கூட ஓட்டல் சமையலறையில் நிற்க முடியாது. வேர்வை உடை முழுவதையும் நனைத்துவிடும். அந்த அனலில் வேலை பார்ப்பவர் இவர். இவர் 10, 20 இட்லியையும் அழகாக மடித்து, சட்னி வைத்து பார்சல் போட்டு தருவார். அது ஒரு கலை.
செந்தில் அண்ணா
இவர் செந்தில் அண்ணா, ஊர் ராமேஸ்வரம். இங்கேயே தங்கியிருக்கிறார். மகள்களுக்கு திருமணம் முடித்து விட்டாராம். குடும்ப சூழ்நிலையால் வந்திருப்பதாக கூறுவார். அவர் பேசும் தமிழ் கேட்பதற்கு நன்றாக இருக்கும். 1500 ரூபாய் ஜியோ போனில் காஞ்சிபுரத்தை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து வைத்திருப்பார். ஓட்டலுக்கு மாடு, இலை சாப்பிடவந்தால், அதையும் விட மாட்டார். நல்ல புகைப்படக்காரர்
ராஜி அக்கா
ஓட்டலின் சொர்ணா அக்கா. ராங்காக பேசினால் கஸ்டமர்களாக இருந்தாலும் விளாசுவார். பில்லிங்கும் போடுவார். என்னை மிரட்டி, சாப்பாடு அயிட்டங்களின் விலைகளை என் மண்டையில் ஏற்றியது இவரே. பிரச்னை என்றால் முன்னால் இறங்கி உதவி செய்வார். ஒருநாள் ஒரு க்ளீனர் அக்காவின் தாடையில் கணவர் அடித்து, பேச முடியாமல் இருந்தவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார். அப்போது, ‘ பயப்படாம வாடி, உனக்கு வாய்தான். எனக்கு மண்டையிலேயே கிழிச்சு தையல் போட்டு வெச்சிருக்கு’ என்றார்.
வாட்ச் மேன் தாத்தா
சிரிப்புடன் தினமும் வரவேற்பார். குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டியதில் கீழே விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால், 20 நாளில் திரும்பவும் வேலைக்கு வந்தார்.
ஒருநாள் வேலையில் இருக்கும்போது, பொறியியல் படிக்கும் என் பள்ளி தோழி வந்தாள், ‘நாங்க நாலு வருஷம் கழிச்சி செய்யப்போற வேலய நீ இப்போவே செய்யுற’ என்றாள். என் தோழியின் அப்பா ஒருநாள் வந்தார். என் அருகில் வந்து, ‘ உங்க ஓட்டலாமா?’ என்று இரகசியமாக, உண்மையை சொல்ல நச்சரித்தார். உண்மையை சொன்னவுடன் சப்பென்று சென்றுவிட்டார்.
வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, சில தினசரி வாடிக்கையாளர்களும் நன்றாக பேசுவார்கள்.
ஐஸ்கிரீம் தாத்தா
தினமும் வருவார். காபி மட்டுமே குடிப்பார். குடித்துவிட்டு ஐஸ்கிரீம் பெட்டி பக்கத்தில் உட்கார்ந்து விடுவார். குறைந்தது 50 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டுதான் கிளம்புவார். சாப்பிடுவது மட்டுமல்லாமல் என்னை, அது என்ன ப்ளேவர் என்று கேட்பார். நானும், இது பேரு ப்ளாக் கரன்ட், திராட்சை போட்ருக்கும் உள்ள சாக்லேட் இருக்கும் என்றெல்லாம் சொல்வோன். சரி குடு, சாப்ட்டு பாக்லாம், என்பார். சாப்பிட்டுவிட்டு, சூப்பரா இருக்கு என்று சொல்லிப் போவார்.
சில தாதாக்களும் வருவார்கள். வரும்போதே போனில், ‘ டேய்ய்ய்.. அங்க நா வந்தனா ஒருத்தனும் இருக்கமாட்டீங்க’ என்று கத்திக்கொண்டு வருவார்கள். எங்கே என்று ஒருநாளும் சொன்னதில்லை. கடைசியில் அவர்கள் இங்கு வருவதெல்லாம் விலை கம்மியாக கிடைக்கும் காபிக்காகத்தான்.
இவர்களுக்கு நடுவே, சில தாதாக்களும் வருவார்கள். வரும்போதே போனில், ‘ டேய்ய்ய்.. அங்க நா வந்தனா ஒருத்தனும் இருக்கமாட்டீங்க’ என்று கத்திக் கொண்டு வருவார்கள். எங்கே என்று ஒருநாளும் சொன்னதில்லை. கடைசியில் அவர்கள் இங்கு வருவதெல்லாம் விலை கம்மியாக கிடைக்கும் காபிக்காகத்தான்.
போலீஸ் சிலர் வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஓ.சி.யில் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இதில் அந்த சாம்பிராணி யூஸ் பண்ணாதீங்க ஸ்மெல் நல்லால்ல என்று சஜ்ஜஸ்ஸன் வேறு கொடுப்பார்கள்.
ஒருமாதம் வேலை. காலேஜ் நெருங்கியதும் விடைபெற்றேன். வேலை செய்த சம்பளத்துக்காக இரண்டு நாள் அலையவிட்டார்கள். பிறகு 20 நாளுக்கான ரூ 4,000 சம்பளத்தை மட்டும் கொடுத்தார்கள். மீதி பத்து நாளுக்கான சம்பளம் அடுத்த மாதம்தானாம்.
இன்று வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நமது தொலைக்காட்சி நெறியாளர்கள் எப்படி சொல்கிறார்கள்? “மே 22 ஏற்பட்ட கலவரத்தை அடுத்து…” இதுதான் அவர்கள் சூட்டியிருக்கும் காரணப் பெயர். பா.ஜ.க.வினரோ ரஜினியோ, மற்றவர்களோ கலவரம், சமூகவிரோதிகள், விஷமிகள், பயங்கரவாதிகள் என்று போராடும் மக்களை கொச்சைப் படுத்துவது, மிரட்டுவது, போலீசாரின் வன்முறையை நியாயப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல.
ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொதுப்புத்தி அனைத்திலும் இந்த மதிப்பீட்டிற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியம், காங்கிரசுக் கட்சியினரால் தலைமை வகிக்கப்பட்ட இந்திய அரசியல் வெளியிலேயே இந்த அடிமைக் கருத்து மனோபாவம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது.
உண்மையில் 1947 ஆகஸ்டு 15-ம் நாளில் நாம் பெற்றது அரசியல் சுதந்திரமல்ல! அது ஆங்கிலேயர்கள் தமது இந்திய வாரிசுகளிடம் அதிகாரத்தை கைமாற்றிக் கொடுத்த நிகழ்வு மட்டுமே! நமது கல்வி முறை போதிக்கின்றபடி காந்தியும், காங்கிரசும் நாட்டுக்காக போராடி சுதந்திரத்தைப் பெற்று தந்துவிடவில்லை. சொல்லப்போனால் ஆங்கிலேயர்கள் மனங்கோணாமல் அவர்களுக்குரிய அனைத்து நலன்களையும் பாதுகாப்பதாக உறுதி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட ஒரு அடிமை நிகழ்வுதான் ஆகஸ்டு 15 அதிகார மாற்றம்.
இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக வந்த நக்சல்பாரி இயக்கதோடு உருவான, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா.லெ)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய காலஞ்சென்ற தோழர் சுனிதி குமார் கோஷ் (Suniti Kumar Ghosh, 1918-2014) அவர்களின் ஆய்விலிருந்து இந்த நிகழ்வைப் பார்ப்போம். அவர் எழுதிய “நக்சல்பாரி முன்பும் பின்பும்” என்ற வரலாற்று நூலில் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
ஒரு காலனியாதிக்க நாட்டின் சுதந்திரம் என்பது காலனியவாதிகள் கட்டியமைத்த அரசியல், பொருளாதார அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்து அரசியல் அதிகாரத்தை கட்டியமைப்பது. இதுதான் விடுதலை அடையும் ஒரு நாட்டின் தேசியப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.
(கருப்பு வண்ணத்தில் இருக்கும் பத்திகள் சுனிதிகுமார் கோஷின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை)
”1947-ம் ஆண்டில் நடந்த “காலனியமுறை ஒழிப்பு உண்மையானதா அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப் பட்ட சூழ்ச்சிகரமான ஏய்ப்பு நடவடிக்கையா என்பதும், அது தனது நேரடி ஆட்சியைத் தொடரவியலாமல் இருந்த காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முனையை மழுங்கச் செய்வதற்காகப் போலியாக பின்வாங்கியதா…”
தோழர் சுனிதி குமார் கோஷ்
என்று கேட்கும் கோஷ்,
”ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய மக்கள் ஆகியோருக்கு இடையில் நிலவிய ஒப்பீட்டளவிலான பலத்தையும், இவ்விரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் வெற்றி, தோல்வியையும் சார்ந்திருந்தது”
என்கிறார். ஐரோப்பாவில் இருந்து உலகெங்கும் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பிய அரசுகள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் அதிகார வர்க்கத்தினரைக் கொண்டே ஆட்சி அமைப்பைக் கட்டி அமைத்தனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பை தவிர்ப்தற்கு இந்த உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
ரொனால்டு ராபின்சன் சரியாகவே கூறினார்: ”…. தொடக்கம் முதலே அந்த ஆட்சியானது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டது. அதுபோலவே எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் தொடர்ச்சியாக உள்ளூர் ஒத்துழைப்புத் தேவையாக இருந்தது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பலமும், இராணுவ மற்றும் ஆட்சி முறைக் கட்டமைப்பும் கைப்பற்றப்பட்ட நாடுகளில் உள்ள உள்ளூர் அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடுதான் கட்டியமைக்கப்பட்டது.1
காலனிய நாடுகளில் மக்களில் யார் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கிறார்கள்? யார் ஆதரிக்கிறார்கள்? இது வர்க்க ரீதியாக பிரிந்திருக்கிறது. காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளை நாம் அப்படி ஆய்வு செய்து பார்த்தால் அவர்களின் உண்மை நிலை புரியும். தோழர் மாவோ அதை சரியாக குறிப்பிடுகிறார்.
”மேற்கத்திய முதலாளித்துவ வர்க்கம் கிழக்குலகில் இருவகைப்பட்ட மக்கள் பிரிவினரை உருவாக்கியது. ஒன்று, குறுகிய சிறுபான்மையினரான ஏகாதிபத்தியத்தின் அடிமைச் சேவகர்கள். மற்றொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பெரும்பான்மையினரை உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கம், உழவர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், தேசிய முதலாளிகள் மற்றும் இவ்வர்க்கங்களின் பின்னணி கொண்ட அறிவுஜீவிகள்.”
இந்நிலையில் இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்த சமூகப்பிரிவினர் யார்?
1947, ஆக-14 நள்ளிரவில் சுதந்திர அறிவிப்பு… கிடைத்தது சுதந்திரமா?
அந்தக் குறுகிய சிறுபான்மையானது மன்னர்கள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரையும், தேசிய முதலாளிகளுக்கு எதிர்மறையான பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தினரையும், அன்னிய ஆட்சியாளர்களின் விழுமியங்களை முற்றிலுமாக உள்வாங்கியிருந்தவர்களும், அவர்களது ஆட்சியின் நற்பயன்கள் மீதும் முற்போக்குத் தன்மையின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருந்தவர்களும், ஒடுக்கப்பட்ட வேறு நாதியற்ற மக்களாக விளங்கிய இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது முழுமையான அவமதிப்பைக் கொண்டிருந்தவர்களுமான பெரும் அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட வசதி படைத்த சமூகப் பின்னணியைக் கொண்ட அறிவுஜீவிகளையும் கொண்டிருந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஆங்கில ஏகாதிபத்தியம் போரில் வெற்றி பெற்றாலும் பின்னடைவுக்குள்ளானது. பழையபடி தனது காலனிய நாடுகளை கட்டி ஆளமுடியவில்லை. காரணம் புதிதாக முன் அரங்கிற்கு வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச கம்யூனிச இயக்கம் – சோசலிச நாடுகள், காலனிய நாடுகளில் தீவிரமாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள், தனது சொந்த ஆயுதப்படைகளின் பிடிமானம் உடைபடுதல் ஆகியவை காரணமாக சிக்கலை சந்தித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதன்மையான பிரச்சினையாக இந்திய மக்கள் இருந்தனர்.
அந்தச் சிக்கலை முடிந்த முட்டும் குறைப்பதற்கு அவர்களுக்கு உதவியது யார்?
போரின் முடிவில் ஆங்கிலேயர் ஆட்சி அல்லாத இரு சக்திகள் இந்தியாவில் வினையாற்றின. ஐரோப்பாவில் போர் முடிவுற்ற பிறகு வைசிராய் வேவெல் காங்கிரசு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைச் சிறையிலிருந்து விடுவித்து ஜூன் – ஜூலை வாக்கில் சிம்லாவில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். வி.பி.மேனன் எழுதியது போல காங்கிரசு கட்சி எவ்வித நிபந்தனை ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தது.2 ”ஜப்பானுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நிறைவேற்றவும், ஆதரிக்கவும் தாங்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், காங்கிரசு தலைவர்கள் வைசிராயின் ஆட்சி மன்ற குழுவில் (இந்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சிமன்றக் குழுவை மாற்றியமைப்பதற்கு வைசிராய் எண்ணியிருந்தார்), இடம் பெறுவதற்கு ஆவலாய் இருந்தனர். (காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் அகிம்சைக் கோட்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இலகுவாக இருந்தது.) பெருமகிழ்ச்சியடைந்த நேரு கூறியதாவது, “நாங்கள் சிம்லாவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறோம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” ஆனால் மறுசீரமைக்கப்பட்ட ஆட்சிமன்றக் குழுவிற்கு அனைத்து முசுலீம் உறுப்பினர்களையும் நியமிக்கும் உரிமையைத் தனக்கு வழங்கவேண்டும் என்று லீக் (முசுலீம் லீக்) கோரியதால் சிம்லா மாநாடு தோல்வியுற்றது.
காந்தியுடன் முகமது அலி ஜின்னா.
”நாட்டில் அமைதியான சூழலைப் பேணிக் காக்கக் காங்கிரசு தலைவர்கள் பணியாற்றவேண்டும்” என்று வேவெல் கேட்டுக் கொண்டார். நாட்டில் போருக்குப் பிந்தைய எழுச்சியைக் கண்டு வேவெல் அஞ்சினார். அது போலவே காந்தியும் அஞ்சினார்.3 காங்கிரசு கட்சியின் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் வைசிராய்க்கு எழுதியதாவது:
”காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் கடந்த கால கசப்பான சம்பவங்களை பெரிதும் மறக்கடித்து நம்பிக்கை, நல்லெண்ணம் கொண்ட ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.4
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு பிரச்சனைகள், எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு, இராணுவ மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இன்ன பிற விஷயங்களான கல்வி, தொழில்துறைத் திட்டம் ஆகியவற்றைக் குறித்த விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு காங்கிரசு தலைவர்களை அழைக்கத் தவறிய தில்லை . ஜூன் 1944-ல் டாடா இயக்குனரும், பம்பாய் திட்டம் ஆசிரியரும், நேருவால் போற்றப்பட்டவரான சர் ஆர்தேசிர் தலால் என்பவரைத் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையில் பொறுப்பேற்கும் வகையில் வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.
காங்கிரசு இப்படி காலனியவாதிகளோடு நெருக்கமாக இருந்த போதும் இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சி மீது கடுங்கோபத்தில் இருந்தனர். கலகம் செய்தனர்.
நிலவிய புரட்சிகர சூழ்நிலையைச் சரியாகவே புரிந்து கொண்ட நேரு ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளோடு கைகோர்த்து அச்சூழ்நிலையை நீர்த்துப் போகச் செய்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்தியா ‘எரிமலையின் விளிம்பில் இருப்பதாகவும் ”நாம் எரிமலையின் உச்சியில் வீற்றிருப்பதாகவும்” நேரு கூறினார். மத்திய சட்ட அவையில் உள்ள ஐரோப்பியக் குழுவின் தலைவரான பி. ஜே. கிரிபித்ஸ் என்பவரும் கூட “பலரின் கருத்துப்படி இந்தியா புரட்சியின் விளிம்பில் இருக்கிறது” என்று கூறினார்.5
ஜூன் 2, 1947 அன்று மவுண்ட் பேட்டன் உடன் விவாதிக்கும் நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்கள்.
இவர்கள் அஞ்சியது போல இந்தியா வெடித்தெழும் நிலையில் எரிமலையின் விளிம்பில் நின்றது. இந்த பெருங்கோபத்திற்கு காரணம் ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் சுரண்டல் ஒருபுறம் என்றால், மறுபுறம் போருக்காக இங்கிலாந்து இந்திய மக்களை கசக்கி பிழிந்ததால ஏற்பட்ட கடுங்கோபம். இது முதன்முதலில் கொல்கத்தாவில் வெடிக்கிறது. நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ஐ.என்.ஏ அதிகாரிகளை விடுவிக்க கோரி கொல்கத்தா மக்கள் கலகத்தை துவங்கினர்.
வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருந்த இந்தியத் தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ) அதிகாரிகளை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற மாணவர் பேரணி மீதான போலீசு துப்பாக்கிச்சூடு தான் அதற்கு உடனடிக் காரணமாக இருந்தது. ஒரு மாணவரும், ஒரு இளைஞரும் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகினர். பலர் காயமுற்றனர். இந்நிகழ்வு கல்கத்தாவையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தீப்பிழம்பாக மாற்றியது. நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இரயில்கள் நிறுத்தப்பட்டன. தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வீதியோரப் போர்கள் நடந்தேறின. அனைத்துச் சமூக பாகுபாடுகளும் மறைந்து போயின.
… ஏறத்தாழ 150 போலீசு மற்றம் இராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதிகாரபூர்வக் கணக்கீட்டின்படி ஒரு அமெரிக்கர் உள்ளிட்ட 33 பேர்கள் கொல்லப்பட்டனர். 200 பொது மக்கள், பல போலீசுக் காரர்கள், 70 ஆங்கிலேயப் படை வீரர்கள் மற்றும் 37 அமெரிக்கப் படை வீரர்கள் காயமுற்றனர்.6 ஒட்டு மொத்த வங்காளத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளின் அதிர்வலைகள் பரவின.
அப்போது வங்க மக்களின் உணர்ச்சிக்கு சான்று தெரியவேண்டுமா? அல்லது போலீசு தடியடிக்கு பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் உணர்ச்சியை வங்கத்தில் காண வேண்டுமா?
மக்களின் உணர்வுகளைக் குறித்து விவரித்த வங்காள ஆளுநர் கேஸி எழுதியதாவது: ”வடக்கு மற்றும் தெற்குக் கல்கத்தா ஆகிய இவ்விரு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிறப்புக் கூறு யாதெனில் மக்கள் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது, கலையாது நின்றனர் அல்லது சிறிது தூரம் பின்வாங்கி மீண்டும் தாக்குவதற்கு முன்னேறினர்…
நவம்பர் 24 – அன்று ஆங்கிலேய அரசு படைகள் தலைவர் (Commander -in-Chief) ஆச்சின்லெக் இந்தியாவிற்குள் நிலவிய உள்நாட்டுச் சூழலைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வைசிராய் அவ்வறிக்கையைப் பொதுவாக ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்த எழுச்சியின் அனல் ஆங்கிலேயர்களை மட்டுமல்ல, காங்கிரசு, கம்யூனிஸ்டு கட்சியையும் தொட்டது. இரு கட்சி பிரமுகர்களும் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் ஆங்கிலேயர்களின் மதிப்பீடோ நிலைமையை சமாளிக்க முடியாது என்கிறது.
ஆச்சின் லெக் எழுதியதாவது: ‘இந்தியப் படைகள் முற்றிலுமாக நம்பவியலாதவையாக மாறும்பட்சத்தில் இப்போது கைவசம் உள்ள ஆங்கிலேய ஆயுதப் படைகளால் உள்நாட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது அத்தியாவசியத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பாதுகாக்கவோ இயலாது. இப்படைகளைச் சிறிது சிறிதாகப் பெருக்கிப் பயன்படுத்துவதும் பலனளிக்காது. உள்நாட்டுச் சூழலை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் அத்தியாவசியத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் இந்தியாவை மீண்டும் வென்றெடுப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது தவிர வேறு வழியில்லை.7
இந்திய தேசிய இராணுவ அணிவகுப்பை பார்வையிடும் நேதாஜி.
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்கும் செயல் இந்தியா முழுவதும் பெருங்கோபத்தைக் கிளப்பியது. காந்தி – காங்கிரசு உருவாக்கியிருந்த அஹிம்சைப் போராட்டம் மக்களிடையே ஆதரவு பெறவில்லை என்பதே ஐ.என்.ஏ வீரர்களை விடுவிக்குமாறு மக்கள் நடத்திய போராட்டத்திற்கு காரணம்.
ஆர்.பி. தத் கூறியது போல, ஐ.என்.ஏ. குறித்த முன்னுதாரணமும், ‘தொடர்ச்சியாக நடைபெற்ற ஐ.என்.ஏ. தலைவர்கள் மீதான வழக்கு விசாரணைகளும் போர்க்குணம் மிக்க தேசபக்தியின் மீதும், பழைய அகிம்சாவாதப் போராட்டத்திற்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த கருத்தியல் மீதும் நம்பிக்கைத் தீயை மூட்டின.8
படைகளின் முதன்மைத் தலைவர் ஆச்சின் லெக்கிற்கு நேரு பின்வருமாறு எழுதினார்: ”சில வாரங்களுக்குள்ளாகவே ஐ.என்.ஏ. குறித்த செய்திகள் இந்தியாவிலுள்ள கிராமங்களின் மூலை முடுக்குகள் வரை பரவிவிட்டது. எங்கெங்கும் அவர்கள் மீதான நன்மதிப்புப் பெருகியதோடு அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் தோன்றி விட்டது. மக்களிடையே பரவலாக எழுந்துள்ள ஆர்வக்கிளர்ச்சி வியப்பளிக்கக்கூடியதுதான். இருப்பினும் அதைவிட வியப்பளிக்கக் கூடியது யாதெனில் பெரும் எண்ணிக்கையிலான நிரந்தர இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மத்தியில் இதே போன்ற ஆர்வக்கிளர்ச்சி தோன்றியுள்ளது என்பதே. ஏதோ ஒரு உணர்வு அவர்களது ஆழ்மனதைத் தொட்டுவிட்டது. 9
ஐ.என்.ஏ மீதான இந்திய மக்களின் ஆதரவோடு பிரச்சினை முடிந்துவிடவில்லை. அன்றைக்கிருந்த பிரிட்டீஷ் இந்தியப் படை வீரர்களிடம் அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. வர இருக்கின்ற நாட்களில் பல நகரங்களில் படை வீரர்கள் செய்யப் போகும் கலகத்திற்கு இது ஒரு துவக்கமாக இருந்தது.
1 of 5
இந்திய தேசிய இராணுவத்திற்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தொடங்கியதை அறிவிக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் தலைப்பு செய்தி.
இந்திய தேசிய இராணுவ வீரர்களுடன் காந்தி.
இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கான கூட்டமொன்றில் பங்கேற்று விவாதிக்கும் காந்தி மற்றும் நேரு.
இந்திய தேசிய இராணுவத்திற்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கும் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.பி.பத்ரிதாஸ், நீதிபதி ஆச்ரு ராம், மற்றும் அசாப் அலி. (தில்லி செங்கோட்டை, 1945)
பாதுகாப்புகமிட்டிஅலுவலகத்திலிருந்து வெளியே வரும்ஜவஹர்லால்நேரு.
ஐ.என்.ஏ. க்கு ஆதரவு (பிரிட்டிஷ் இந்திய ஆயுதப் படைகள் மத்தியில்) பெருகி வருவதாக நவம்பர் 26, 1946 அன்று ஆச்சின் அத்தின்லென் வேவெலுக்கு எழுதினார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் எழுந்த போராட்டத் தீயை தணிப்பதற்கு காங்கிரசும், காந்தியும் பெரிதும் முயன்றனர்.
காங்கிரசு செயற்குழு கல்கத்தாவில் கூடி ”சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழிகாட்டும் நெறியாக” அகிம்சைவாதத்தின் மீது தனது நம்பிக்கையை வலியுறுத்தி, ”பொதுச் சொத்தை தீயிட்டுக் கொளுத்துவது என்பது போன்ற செயல்கள் அகிம்சை வாதத்திற்குள் அடங்காது எனத் தெளிவு படுத்தியது.
“அமைதியான சூழலைக் காப்பதன் அவசியத்தை” நேரு வலியுறுத்திக்கொண்டே இருந்தார்…. “நாட்டை ஆளுகின்ற பணியினை உடனடி யாகத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் “தலைமையேற்கத் தகுதிவாய்ந்த அரசியல் தலைவர்களிடம் அப்பணியினை விட்டுவிட வேண்டும்” என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.10 ‘தன்னால் இயன்றவரை மோதலைத் தவிர்ப்பதற்கும், தீவிர எண்ணம் கொண்டோரைக் கட்டுப்படுத்துவதற்கும்” முயன்று கொண்டிருப்பதாக நேரு பிரிட்டிஷ் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்சிடம் (அவர் மூலமாக பிரிட்டிஷ் அமைச்சரவை முழுமைக்கும்) டிசம்பர் 3, 1945 அன்று உறுதி அளித்தார்.11
”பயனற்ற தகராறுகளில் தங்களுடைய ஆற்றலை விரயம் செய்ய வேண்டாம்” என்று சர்தார் பட்டேல் இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.
நேதாஜி , காந்தியுடன் படேல்.
ஆனால் மக்கள் காங்கிரசு தலைவர்களின் வேண்டுகோள்களையும், காட்டிக் கொடுப்புகளையும் புறக்கணித்தனர்.
சட்டம் ஒழுங்கையும், அகிம்சை வழியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற காங்கிரசு தலைவர்களின் போதனைகளை புறக்கணித்த கொல்கத்தா…. பிப்ரவரி 11-18 1946 ஆகிய நாட்களில் கிளர்ந்தெழுந்தது. ஐ.என்.ஏ வின் அப்துல் ரஷீத்திற்கு விதிக்கப்பட்ட ஏழாண்டு கடுங்காவல் தண்டனைக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இக்கிளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. போராட்டத்தின் காரணமாக நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போனது. இரண்டு நாட்களுக்கு கொல்கத்தாவை ஒட்டியிருந்த பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இரயில்கள் ஓடவில்லை . ஆயுதந்தாங்கிய போலீசாருடனும் கவச வாகனங்களில் அணிவகுத்த இராணுவ படைகளுடனும் மக்கள் கடுமையான தெருமுனைப் போர்களில் ஈடுபட்டார்கள்… இந்துக்கள் மற்றும் முசுலீம்கள் இடையே நிலவிய உறுதியான ஒற்றுமை முக்கியக் கூறாக விளங்கியது…. அதிகாரபூர்வ புள்ளி விபரங்களின்படி 84 பேர் பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமுற்றனர். நவம்பர் மாதத்தில் ஏற்பட்டவாறே இப்போதும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் தோன்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை வங்காளம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வங்கக் கடலோரம் துவங்கிய எழுச்சி விரைவிலேயே அரபுக் கடலோரம் மும்பையை தொட்டது. பின்னர் அதுதான் புகழ்பெற்ற கடற்படை வீரர்களின் எழுச்சியாக பரிணமித்தது. அதன் பிறகு நாடெங்கும் உள்ள படை வீரர்களின் அணிகள் கலகம் புரிய ஆரம்பித்தனர். தனது சொந்தப் படையே தனக்கு எதிராக திரும்புவதுதான் ஒரு ஆளும் வர்க்கத்திற்கு முற்றிலும் தோல்வியடையும் தருணம்!
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான மும்பை எழுச்சியை வன்முறையாகச் சித்தரிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு.
பிப்ரவரி 18, 1946 அன்று துவங்கிய மும்பை கிளர்ச்சிதான் அவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அனைவரையும் ஈர்ப்பதாகவும் இருந்தது. ராயல் இந்தியன் கடற்படையின் (Royal Indian Navy) வீரர்கள் முதலில் மும்பையிலும் பின்னர் கராச்சி, கல்கத்தா (கொல்கத்தா), மதராஸ் (சென்னை) ஆகிய நகரங்களிலும் கலகம் புரியத் துவங்கினர். மோசமான உணவு, நிறவெறிக் கொள்கை, ஆங்கிலேய அதிகாரிகளால் சுமத்தப்பட்ட அவமானங்கள் போன்ற பல்வேறு குறைகளைக் கொண்டிருந்த கலகக்காரக் கடற்படையினர் சுபாஷ்போசின் வீரதீரச் செயல்களாலும், ஐ.என்.ஏ.வின் முன்னுதாரணத்தாலும் உந்தப்பட்டனர்.12
பிப்ரவரி 22, 1946 நாளுக்குள்ளாக கலகக்காரக் கடற்படையினர் ஆங்கிலேய கடற்படையினுடைய துணைத்தலைவரின் (Vice – Admiral) முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பையில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மொத்தமாக ராயல் இந்தியன் கடற்படையை சார்ந்த 78 கப்பல்கள், 20 கடற்கரையோர படை அமைப்புகள், 20,000 கடற்படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள ராயல் இந்தியன் விமானப் படை முகாம்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர். கட்டளை பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட இந்திய இராணுவப் படைவீரர்கள் மும்பை மற்றும் கராச்சியிலுள்ள ராயல் இந்தியன் கடற்படை வீரர்களைச் சுட மறுத்தனர்.
இராணுவத்தை அனுப்பி கடற்படை வீரர்களின் கலகத்தை ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தது பிரிட்டீஷ் இந்திய அரசு. ஆனால் இராணுவம் சுடவில்லை என்பதோடு இராணுவத்தில் இருந்த வெள்ளையின வீரர்களுக்கும் கடற்படை வீரர்களுக்குமான மோதலாக அது மாறியது.
மும்பை வீதிகளில் பிரிட்டிஷ் படைகள். மக்கள் எழுச்சியை நசுக்க இராணுவத்தின் கனரக வாகனங்கள் வந்தன!
பிப்ரவரி 21 அன்று கடற்படை வீரர்களின் போராட்டமானது அவர்களுக்கும், இந்திய இராணுவப்படை வீரர்கள் சுட மறுத்ததால் வரவழைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது.13
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த எழுச்சிக்கு மும்பை தொழிலாளிகள் கடற்படை வீரர்களுக்கு முக்கிய அரணாக திகழ்ந்தனர். முழு மும்பையுமே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றது.
தாங்கள் சார்ந்திருந்த சமூகங்களைப் பாராமல் மும்பையில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கடற்படையின் வீரதீரர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு உணவு கொண்டு சென்று, தடுப்பரண்கள் நிறுவி, ஆயுதந்தாங்கிய போலீசாருடனும், கவச வாகனங்கள், கனரக கவச வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்திருந்த பல ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும் கடுமையாக மோதினர்.
ஏற்கனவே பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுடன் இந்தப் போராட்டத்தை எப்படி தணிப்பது என்று பேசிக் கொண்டிருந்த காங்கிரசும், முசுலீம் லீக்கும் மும்பை எழுச்சியை குலைப்பதற்கு புயலாய் வேலை செய்தன. ஆனால் மும்பை அதனை சட்டை செய்யவில்லை.
தற்போது தூத்துக்குடியை நினைவுபடுத்தும் அப்போதைய மும்பை வீதியில் மக்களைச் சுடும் பிரிட்டிஷ் படைவீரர்கள்.
பிப்ரவரி 22 அன்று மிகப் பெரிய காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களின் எதிர்ப்புக்கு இடையில் மும்பை பொது வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது.
காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களைப் புறக்கணித்த மும்பையின் ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கமும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியால் (சி.பி.ஐ) ஆதரிக்கப்பட்ட, கடற்படை மையப் போராட்டக் குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, இணங்கப் போராட்டத்தில் குதித்தது. இரண்டு நாட்களாக நகரின் வீதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி ஏறக்குறைய 1,500 பேர் மோதல்களில் பலத்த காயமுற்றனர் . அவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.
”ஆயிரக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்றபிறகுதான் ஆங்கிலேயக் கனரக கவச ஊர்திகள் தெருக்களைக் கைப்பற்ற முடிந்தது” என எழுதினார் கிளர்ச்சியின் தலைவர்களுள் ஒருவரான பி.சி.தத். ”இந்திய விடுதலை இயக்கத்தின் கொந்தளிப்பான வரலாற்றில் நிராயுதபாணிகளாகத் தலைமையின்றித் தவித்த மக்களுடனான மோதலில் ஆட்சியாளர்கள் கனரக கவச ஊர்திகளை பயன்படுத்தியது இதுவே முதல்முறையாக இருந்தது. பிப்ரவரி 21 கடற்படை வீரர்களின் நாளாக இருந்தது. பிப்ரவரி 22 மும்பைத் தொழிலாளர்களின் நாளாக இருந்தது.”14
மும்பை மட்டுமல்ல, இன்றைய பாகிஸ்தானில் இருந்த கராச்சியிலும் கடற்படை வீர்கள் மோதலைத் துவங்கினர். அவர்களை சுடுவதற்கு கூர்கா படை வீரர்கள் மறுத்தனர். இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்தும் மத வேறுபாடுகள் இன்றி ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்றிணைந்து போர் புரிந்த நாட்கள் அவை.
பிரிட்டிஷ் படைகளை பிடறிதெறிக்க தெருக்களில் ஓடவிட்ட மும்பை மக்கள்.
மும்பைக்கு அடுத்தபடியாகக் கராச்சிதான் கடற்படை வீரர்களுக்கும், ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற உண்மையான மோதல் களமாக விளங்கியது. துணிவாகப் போரிட்ட இந்துஸ்தான் என்ற பழைய போர்க்கப்பலில் இருந்த கடற் படையினரைச் சுட பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்பணிய குர்கா படைவீரர்கள் மறுத்தனர். பின்னர் குர்கா படை வீரர்கள் மாற்றப்பட்டு ஆங்கிலேயப் படைவீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.
கடல், தரை இராணுவப் பிரிவுகளோடு விமானப் படையும் போராட்டத்தில் இணைகிறது.
……..பல்வேறு இடங்களில் கலகக்காரக் கடற்படை வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். பம்பாயில் நடைபெற்ற ஆதரவு தெரிவிக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போலவே பூனே, கல்கத்தா, மதராசு மற்றும் அம்பாலாவில் நடைபெற்ற போராட்டங்களிலும் விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். தத்தாவை மேற்கோள் காட்டுவோமானால், ”பம்பாய்க்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருந்த ராயல் இந்திய விமானப்படையின் ஒரு படையணி ஜோத்பூரில் முடங்கிவிட்டது. ஒவ்வொரு விமானமும் மர்மமான முறையில் இயந்திரக் கோளாரைச் சந்தித்தது.”15
இதோ உ.பி நகரங்களில் நிலை கொண்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அனுப்புகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த ஹாலட் அலகாபாத், பாம்ராலி, கான்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப் பட்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்குத் தங்களுடைய பங்களிப்புகளை அனுப்பியிருந்தனர் என்று நவம்பர் 19, 1945 என்று வேவெலுக்குத் தெரிவித்தார். 16 ஐ.என்.ஏ. வீரர்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைக் கல்கத்தாவில் இருந்த இந்திய விமானப்படை முகாம் எதிர்த்தது. ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் அது ”வீரம் செறிந்த தேசபக்தி மிகுந்த மைந்தர்களின் பாதுகாப்பிற்காக ” எனக் குறிப்பிட்டிருந்தது.17
அடுத்ததாக போலீசாரும் களத்தில் குதிக்கின்றனர்.
மும்பை எழுச்சியில் களப்பலியான மக்கள்.
சில இடங்களில் காவல் துறையினரும் கலகம் விளைவித்தனர். மார்ச் 1946-ல் காவல் துறையினர் அலகாபாத் மற்றும் டில்லியில் பட்டினிப் போர் நடத்தினர். ஏப்ரல் மாதத்தில் 10,000 காவல்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் மாதத்தில், பாட்னா மற்றும் பெகுசாரையில் இராணுவக் காவல்துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்…….
….வீரஞ்செறிந்த கடற்படை வீரர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை . குண்டுவீசும் விமானங்களை அனுப்பிக் கடற்படையை அழிப்போம் என்ற அட்மிரல் கோட்ப்ரீயின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துத் தங்களால் இந்திய தேசிய கடற்படை என்று மறு பெயர் இடப்பட்டிருந்த கடற்படையை அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் சி.பி.ஐ. உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் கலகக்காரக் கடற்படை வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்தும் அவர்களுக்கு செவி மடுக்கவில்லை .
இதுதான் அன்றைய அவலநிலை. காங்கிரசு, முசுலீம் லீக் போன்ற கட்சிகள் ஆங்கிலேயரின் தாளத்திற்கு வாத்தியம் இசைத்த போதும், உழைக்கும் மக்களிடம் வேர் விட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தனது இன்னுயிரை பணயம் வைத்து போராடிய வீரர்கள் என்ன செய்வார்கள்? நாடெங்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தாலும் ஒரு புரட்சிகரக் கட்சி வழிநடத்துவதற்கு இல்லை எனும் போது அவர்கள் என்ன செய்ய முடியும்?
மும்பையில் இந்திய கடற்படை வீரர்கள், பிரிட்டிஷ் படைகளை 6 மணிநேரம் எதிர்த்து போரிட்டதை பதிவு செய்துள்ள, ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டு பத்திரிக்கை.
தத் எழுதியதாவது “அறுதிப் பெரும்பான்மையினர் மரணம் வரை போரிடவே விரும்பினரே தவிர சரணயடைவதற்காக அல்ல.”18 இறுதியாகக் கடற்படை மைய போராட்டக் குழுவானது காங்கிரசு மற்றும் லீக்கிடம் சரணடைகிறோமே தவிர ஆங்கிலேய ஆட்சியிடம் அல்லவென கூறிச் சரணடைய முடிவெடுத்தது. மக்களுக்கு விடுத்த கடைசி அறிக்கையில் அவர்கள் கூறியதாவது: ”முதன்முறையாக படைவீரர்களின் குருதியும் மக்களின் குருதியும் ஒரே நோக்கத்திற்காக இரண்டறக் கலந்து ஆறாக ஓடியது. படைகளில் அங்கம் வசிக்கும் நாங்கள் இதை மறக்கவே இயலாது. எங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நமது மாபெரும் மக்கள் வாழ்க. ஜெய்ஹிந்த்.”19
சரணடைந்த வீரர்களை பிரிட்டிஷ் இந்திய அரசு என்ன செய்தது?
சரணடைந்ததற்கு பின்பு மனிதவேட்டை தொடங்கிற்று. 2000க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் தளைப்படுத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 500 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டு சாதாரணக் குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். “எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது” என உறுதியளித்திருந்த மூத்த காங்கிரசு தலைவர்கள் அவ்வாக்குறுதியை காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.20
கடற்படைக் கலகத்தின் போது துரோகவேலை பார்த்த காங்கிரசு தலைவர்களின் பங்கை சுனிதி குமார் கோஷ் ஆணவப்படுத்துகிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்படைக் கலகத்தின் போது காங்கிரசு தலைவர்கள் ஆற்றிய பங்கு என்ன ? சர்தார் பட்டேல், அபுல் கலாம் ஆசாத், எஸ். கே. பாட்டீல் (பம்பாய் மாகாணக் காங்கிரசு கமிட்டிச் செயலாளராகவும் பின்னர் மைய அரசின் அமைச்சராகவும் இருந்தவர்) போன்ற காங்கிரசு தலைவர்களும், முஸ்லீம் லீக்கைச் சார்ந்த ஜின்னா மற்றும் சுந்தரிகரும் கடற்படை மையப் போராட்டக் குழு விடுத்திருந்த பிப்ரவரி 22 வேலைநிறுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்துக் கடற்படை வீரர்களை ஆங்கிலேயரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.
பம்பாய் ஆளுநருடன் பாட்டீல் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். காங்கிரசும், லீக்கும் மக்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு காவல்துறைக்கும், ஆங்கிலேய இராணுவப் படைகளுக்கும் உதவுவதற்காக ஆங்கிலேய அரசுக்கு “தன்னார்வத் தொண்டர்களை” அனுப்பின.21
பிப்ரவரி 22 அன்று வேவெலுக்கு எழுதிய கடிதத்தில் கோல்வில்லே கூறும்போது, தான் “பல தன்னார்வத் தொண்டர்களைக் கண்டதாகவும் அவர்களுடைய பணி குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவாறு இருந்தது எனினும்… பயனுள்ளதாக இருந்தது” என்று எழுதினார்.”
மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள்.
காங்கிரசு மற்றும் லீக் தலைவர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் பம்பாய் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது. தொழிலாளர்களும், மாணவர்களும் காங்கிரசு மற்றும் லீக் தன்னார்வத் தொண்டர்களின் துணைகொண்டு ஒடுக்க முனைந்த ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும், ஆயுதந்தாங்கிய காவல் துறையினருடனும் தெருமுனைப் போர்களில் இறங்கினர்.
பம்பாய் அரசாங்கத்தின் அனுமதி பெற்று பிப்ரவரி 26 அன்று பம்பாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேருவும், பட்டேலும் ‘பம்பாயில் பரவலாக நடைபெற்ற மக்கள் போரை’ அதாவது ‘ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலகப் பதாகையை உயர்த்திப் பிடிக்கத் துணிந்த கடற்படை வீரர்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை’ வன்மையாகக் கண்டித்தனர். அடுத்த நாள் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நேரு ”இது போன்ற வேண்டுகோளை (வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு பம்பாய் நகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு) விடுப்பதற்கு ராயல் இந்தியன் கடற்படையின் மையப் போராட்டக்குழுவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் இது போன்ற செயல்களை அனுமதிக்க மாட்டேன்.22 நேருக்களுக்கு மட்டுமே வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புகள் விடுக்கும் உரிமை இருந்தது போலும்!
அகிம்சையின் தூதுவர் காந்தி கண்மூடித்தனமான வன்முறைக் கோரதாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டதற்காகக் கலகக்காரர்களைக் கண்டித்தார். மக்களை உண்மையில் பலி வாங்கிய ஆங்கிலேய ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த உண்மையான வன்முறைக் கோரதாண்டவத்தை அவர் கண்டிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, “வன்முறை நடவடிக்கைக்காக இந்துக்களும் முசுலீம்களும் பிறரும் ஒன்று சேர்வது பாவகரமான செயல்..” இந்தியாவிற்கு விடுதலை வழங்குவோம் என்ற ஆங்கிலேயரின் கூற்றுக்களை நம்ப மறுத்தவர்களையும் அவர் தொடர்ந்து கண்டித்தார். ஒன்றுபட்ட மக்களின் வன்முறைப் போராட்டம் பாவகரமானது எனினும், அகிம்சையின் இறைத்தூதர் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சில இலட்சம் மக்கள் கொல்லப்படக்கூடிய நிகழ்வுகளான இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான வகுப்புக் கலவரங்களையும் ”சகோதர யுத்தத்தையும்” எதிர்நோக்கி இருந்தார்.
மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள். முசுலீம் லீக் அதற்கு ஒத்தூதியது. கம்யூனிஸ்ட் கட்சியோ வீரர்களைக் கைவிட்டது. இந்தியா முழுவதும் இப்படி படையணிகளில் ஏற்பட்ட கலகம்தான் ஆங்கிலேயரை ஆட்சி மாற்றம் குறித்து உடன் முடிவெடுக்குமாறு நிர்பந்தித்தது. சுடுவதற்கு படை இல்லாதபோது ஒரு ஏகாதிபத்தியம் எப்படி ஆள முடியும்? ஆனாலும் காங்கிரசு என்ற துரோகப் படை இருந்த படியால் ஆங்கிலேயர்கள் தனது நலன்களை பாதுகாத்துக் கொண்டே ஆட்சியை தனது காங்கிரசு அடிமைகளுக்கு கைமாற்றிக் கொடுத்தனர்.
சுனிதி குமார் கோஷின் ”நக்சல்பாரி முன்பும் பின்பும்” நூலில் அவரால் எடுத்தாளப்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்:
1 – Ronald Robinson, ‘Non-European Foundations of European Imperialism’, in R Owen and B Sutcliffe (Eds), Studies in the Theory of imperialism, p. 120
2 – Transfer of Power , XII, pp. 790-1; Selected Works of Jawaharlal Nehru, XIV, p.47.
3 – Transfer of Power, IV, pp.333-8; 340-4,365-9; V, pp. 1-2,127,424,431; Collected Works of Mahatma Gandhi (CWMG), LXXX, pp.444- 5; HM Seerbhai, Partition of India, p.32 and fn 15.
4 – Transfer of Power, VI, p.455; S Gopal (Ed.), Selected Works of Jawaharlal Nehru, XIV, p.497 – emphasis added.
5 – Cited in RP Dutt, Freedom for India, front cover page.
6 – Transfer of Power, VI, p.713.
7 – Ibid, pp.543, 582.
8 – RP Dutt, Freedom for India, London, 1946.
9 – Selected Works of Jawaharlal Nehru (SWJN), XV, p.92-emphasis added.
10 – See SWJN, XIV, pp. 195, 207, 229, 231, 241, 252, 254, 491, 493, passim. Emphasis added.
11 – Cited in RJ Moore, Escape from Empire, p. 76.
12 – BC Dutt, Mutiny of the Innocents, p.61; Hindusthan Standard (a daily now extinct), 21.1.1947
13 – See SWJN, XV, p. 1, note 2.
14 – BC Dutt, op cit, pp. 174,175.
15 – BC Dutt, op cit, pp. 174,175
16 – Transfer of Power VI, pp. 507-8.
17 – SWJN,XIV,p.543,fn.4.
18 – Dutt, op cit, p.181
19 – Ibid, p. 185.
20 – Ibid, pp.185-6
21 – See Bombay governor John Colville’s report to Viceroy Wavell, February 27,1946, Transfer of Power, VI, pp.1079-84; See especially p.1082
22 – SWJN, XV, pp. 4,13; Transfer of Power, VI, p. 1083-emphasis added.
NSA-வில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை ! கொலைகார போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் இராஜு உரை !
எவன் குற்றவாளியோ அவனே அந்த வழக்கை விசாரித்தால் எப்படி இருக்கும்? அத்தகையதொரு சூழலின் நேரடி சாட்சியம்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளும், கைதுகளும். படுகொலை செய்த போலீசு, மக்களையும் மக்களுக்கு ஆதரவாக நின்ற புரட்சிகர, ஜனநாயக அமைப்பினரையும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்து சிறையிலடைத்தது.
குறிப்பாக மக்கள் அதிகாரம் தோழர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்து அச்சுறுத்தியது. மக்கள் அதிகாரம் அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் அது பயங்கரவாத அமைப்பு என்று பரப்புரை செய்தது. தூத்துக்குடி போராட்ட பேரணியில் கலந்து கொண்ட 6 மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது.
இத்தனை ஒடுக்குமுறைகளையும் சட்டரீதியாகவும், மக்கள் மத்தியில் பிரச்சாரமாகக் கொண்டு போய் எதிர்கொண்டது மக்கள் அதிகாரம் அமைப்பு. குற்றம் செய்த போலீசு அதிகாரவர்க்கத்தின் பொய்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று அறைகூவியது. இது தொடர்பாக போலீசு போட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும், பிற பொய்வழக்குகளையும் எதிர்த்தும், போலீசின் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்வைத்து வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 14, 2018 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் சிடிசெல்வம், பஷீர் அகமது ஆகியோர் வழங்கினர். இத்தீர்ப்பில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் செல்லாது என்றும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கில், போலீசுத் துறையின் கீழ் செயல்படும் சிபிசிஐடி போலீசே குற்றத்தில் சம்பந்தப்பட்ட போலீசை விசாரிப்பதை ஏற்கமுடியாது என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ எடுத்த நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு வெகு சாதாரணமாகக் கிடைத்த தீர்ப்பல்ல. தூத்துக்குடி படுகொலையில் போலீசே குற்றவாளி என்பதை நிரூபிக்கவும், சட்டவிரோதமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளைத் தகர்க்கவும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் பெரும்பங்கு செலுத்தியுள்ளனர்.
இந்த வழக்குகள் கடந்து வந்த பாதையையும், போலீசின் பொய்கள் முறியடிக்கப்பட்ட பின்னணியையும் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராஜு.
நேபாளம், முஸ்டாங்கைச் சேர்ந்த வறண்ட மற்றும் தனித்த மலைத்தொடர்கள் வெளி உலகின் பார்வையிலிருந்து தொலைதூரத்தில் உள்ளன. இமயமலையின் மிக உயரமான இப்பகுதிக்கு செல்ல கடினமான வண்டிகள் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான பாதை மட்டுமே உள்ளது. ஆனால் யாரையும் எளிதில் வரவேற்காத கடுமையான இப்பகுதி அரிய கலைப்பொருட்களை கொள்ளையர்கள் திருடுவதிலிருந்து தடுக்கப் படுவதில்லை.
உலகளாவிய கலைப்பொருட்கள் சந்தையில் இமயமலையில் உள்ள தெய்வங்களின் சிலைகள் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டவை. ஆனால் நேபாள மக்களைப் பொறுத்த வரையில் உயிருள்ளதாக கருதப்படும் அந்த தெய்வங்கள் அவர்களது சமூகத்திடமிருந்து களவாடப்படுகின்றன.
நேபாளத்தில், 1980–ம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கிடுகின்றனர். அவற்றில் சில கலைப்பொருட்கள் சட்டரீதியாக விற்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை கொள்ளையடிக்கப்பட்டு ஆண்டுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிழற்சந்தையில் விற்கப்படுகின்றன.
நேபாளிலுள்ள லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள பண்டைய மடாலயத்தில் புத்த பிக்குகள் வழிபாட்டு சடங்கை நடத்துகின்றனர். 14 -ஆம் நூற்றாண்டு முதல் இந்த இமயமலைப்பகுதியில் திபெத்திய புத்த மதச்சடங்குகள் மாறாமல் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனினும், சமீபத்திய சிலைத் திருட்டுகள் அவர்களது பண்டைய வாழ்க்கை முறை மற்றும் சமயச் சடங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
முஸ்டாங்கில் உள்ள நாமைகல்(Namygal) மடாலயத்தைச் சேர்ந்த செப்பு தாது கோபுரம் (copper stupa) ஒன்றில் மறைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியாக வடிக்கப்பட்ட கடவுளர் சிலைகளை காட்டுகிறார் துறவி ஒருவர். இவ்வகையிலான அரிய சிலைகள் திருடர்களால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டாயச்சூழல் மடாலயத்திற்கு ஏற்பட்டுள்ளது.
முஸ்டாங்கில் குன்றொன்றின் மீது கட்டப்பட்ட ஒரு மடாலயக்கூடத்தில் கைவிடப்பட்ட பண்டைய கவசமொன்றை டாஷி பிஸ்டா (Tashi Bista) ஆய்வு செய்கிறார். அரிய பழங்கால கலைப்பொருட்கள் அப்பகுதியிலிருந்து திருடப்படுவதைத் தடுக்க முஸ்டாங் உள்ளூர்வாசியான அவர் பல்லாண்டுகளாக போராடி வருகிறார். 14 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேடயங்கள் மற்றும் உடற்கவசம் அருகே அந்த கவசம் இங்கே படத்தில் காணப்படுகிறது.
முஸ்டாங்கிலிள்ள பழங்கால மடாலயமொன்றில் மறைவான அறையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆளுயர தர்மபாலர்களை (Dharmapalas) சூரிய ஒளி வெளிச்சப்படுத்திக் காட்டுகிறது. இப்பாதுகாப்பு தெய்வங்கள் மடாலயங்களையும், அவற்றைச் சுற்றி வசிப்பவர்களையும் தீங்குகளிடமிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டவை. இருப்பினும், வழிபாட்டுத்தலங்களிலுள்ள பல சிலைகளை கொள்ளையர்கள் திருடிச் செல்வதால் சிலைகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள துறவிகள் வேண்டுகின்றனர்.
சாம்டாலிங்கை (Samdaling) சேர்ந்த பண்டைய தாது கோபுரங்களின் சுவர்களில் உள்ள ஓட்டைகளை பாறைகள் மூடியிருக்கின்றன. புத்த வழிபட்டாளர்களால் வைக்கப்பட்ட புத்த சிலைகளை திருடுவதற்காக இந்த சுவர்களை கொள்ளையர்கள் உடைத்திருக்கின்றனர். உலகலாவிய நிழற்சந்தையில் இச்சிலைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முடியும்.
சாம்டாலிங்கில்(Samdaling) திருடர்களால் உடைக்கப்பட்ட ஒரு தாது கோபுரத்தில் களிமண் வழிபாட்டு வார்ப்புகளும், 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான ஆடைகளும் இன்னும் மிச்சம் இருக்கின்றன. எந்த கலைப்பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லை என்றாலும் உலகளாவிய நிழற்சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய புத்தரின் செம்பு மற்றும் வெண்கலச் சிலைகள் இந்த தாது கோபுரங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.
முஸ்டாங், லு மந்தாங்கை (Lo Manthang) சேர்ந்த இளம் பிக்குகள் ஒரு வழிபாட்டு நடைமுறையை பின்பற்ற முயல்கின்றனர். தொடர்ந்து வழிப்பாட்டு இடங்களிலிருந்து ஏராளமான சிலைகள் களவாடப்படும் நிலையில், புத்தமும், இமயத்தின் தொலைதூர பகுதிகளின் பழங்கால வாழ்க்கை முறையும் பாதிக்கப்படுவதாக குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்கள் மூதாதையர்கள் வழிபட்ட பல சிலைகள் இல்லாமல் வளர்ந்து வருவதாக பலர் அச்சமடைகின்றனர்.
முஸ்டாங் மலைத்தொடரொன்றில் புத்த பிக்குகள் வழிபாடு செய்கின்றனர். இத்தொலைதூர பகுதிகளில் உள்ள மடாலயங்களில் சிலைத் திருட்டு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தங்கள் தெய்வங்களின் பாதுகாப்பிணை அதிகரிக்க துறவிகள் வழிபாடு செய்கின்றனர்.
காத்மண்டுவிலுள்ள மூன்று தொல்பொருள்கள் அங்காடிகளில் மே மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது மீட்கப்பட்ட 100 சிலைகளை ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் காட்டுகின்றனர். ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகள் பற்றிய நடப்பு நிகழ்ச்சிகளுக்கான அல் ஜசீராவின் வார தொலைகாட்சி நிகழ்ச்சி “101 கிழக்கு” புலனாய்வு செய்து கொடுத்த தகவலின் பேரால் முறைகேடான அரிய பொருட்கள் விற்பனைகள் பற்றிய அந்த ஆய்வு செய்யப்பட்டது.
நேபாளத்தின் முஸ்டாங் பள்ளத்தாக்கிற்குள் செங்குத்தான பாறையொன்றின் மீது கட்டப்பட்ட பண்டைய மடாலயமொன்றிற்கு வருகை தரும் பார்வையாளர்களை பயங்கரமான இந்த சிலைகள் எதிர்கொள்கின்றன. ஆனால் திபெத்திய மக்களால் தெய்வங்கள் என நம்பப்படும் சிலைகளை கொள்ளையர்கள் உடைப்பதிலிருந்தோ திருடுவதிலிருந்தோ அச்சுறுத்தும் இந்த அடையாளங்கள் கிஞ்சித்தும் தடுப்பதில்லை.
திருடர்களைத் தடுப்பதற்காக கடவுளரின் முகங்கள் மீது வண்ணம் பூசும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் நேபாளத்தின் நம்கியால்(Namgyal) மடாலயத்தை சேர்ந்த பிக்குகள். உலக கலைப்பொருள் வணிகர்களால் செப்பு மற்றும் வெண்கல சிலைகள் மிகுந்த ஆவலுடன் தேடப்படுகின்றன. வழிப்பாட்டுத் தலங்களில் உள்ள சிலைகளைத் திருடுவதற்கு கொள்ளையர்களை பல நேரங்களில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
நேபாளத்தின் லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள புத்த மடாலயமொன்றில் தூய்மையான பொன்னால் பொறிக்கப்பட்ட பண்டைய கையெழுத்துப்படியான டாஷி பிஸ்டாவை(Tashi Bista) காட்டுகிறார் புத்த துறவியான சிமி குறுங்(Chime Gurung). ஒரு தாது கோபுரத்திலிருந்து அதன் சகோதரி புத்தகம் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கையெழுத்துப்படி மட்டுமே பாதுகாக்கப்பட்டது.
வினவு செய்திப் பிரிவு
நன்றி :அல்ஜசீரா Nepal’s stolen gods புகைப்படக் கட்டுரையின் தமிழாக்கம்
பெங்களூருவைச் சேர்ந்ததொரு உணவக நிறுவனம், ஒரு புதிய உணவுச் சேவையை சுதந்திர தினத்தன்று தொடங்கவிருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறது. அதன் பெயர் ”சுத்தமான பிராமண மதிய உணவுச் சேவை” (A Pure Brahmin Lunch Box Service)
கடந்த 07-08-2018 அன்று வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான முனைவர் கார்த்திக் நவாயனா இந்த விளம்பரம் அடங்கிய பேனரின் புகைப்படத்தை டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
சுத்தமான பிராமண உணவு வகைகளை, பெங்களூரு ஜே.பி. நகர், பி.டி.எம். லே-அவுட், புட்டெனஹள்ளி, பிலேகாஹள்ளி ஆகிய பகுதிகள் உள்ளிட்ட பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து விரைவாக ’டோர்-டெலிவரி’ செய்வதாக அந்த விளம்பர பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுத்தமான சைவ உணவு ரூ.40, ரூ.45, ரூ.60 ஆகிய விலைகளில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பிராமண உணவு சேவை வழங்குவதற்கு இந்நிறுவனம் மட்டுமே வழங்கவில்லை. இதுவே முதல் நிறுவனமும் அல்ல. இதற்கு முன்னரும் இத்தகைய ’சேவை’ நிறுவனங்கள் நிறைய உண்டு.
சென்னையைச் சேர்ந்த “அக்ஷயா எஸ் வீட்டு உணவு வழங்கல் சேவைகள்” நிறுவனமும் பிராமண உணவுகளை வழங்குவதில் ஏற்கெனவே மிகப் பிரபலமானது. இது போன்ற’ பிராமண உணவு சேவைகளை வெளிநாடுகளிலும் வழங்கி வருகின்றனர் பலர். அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் ’மைலாப்பூர் எக்ஸ்பிரஸ்’ என்ற உணவு நிறுவனம் சுத்தமான தமிழ் பிராமண (Tam-Brahm) உணவுச் சேவையை வழங்கி வருகிறது.
இத்தகைய பிராமண உணவு சேவைகள் உணவு வழங்கல் செயலிகளான ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவற்றிலும் இருக்கின்றன. பெங்களூரு இந்திராநகரில் உணவு வழங்கல் சேவையில் உள்ள ’பிராமண வீட்டு உணவு’ நிறுவனம் ஒரு உதாரணம்.
பெங்களூரில் மட்டுமே பல சிறு உணவகங்களும் உணவு வழங்கல் நிறுவனங்களும் வீட்டுத் தயாரிப்பு உணவு வழங்கல் சேவைகளை வழங்கி வருகின்றன. சுத்தமான ஜெயின் உணவு சேவைகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஜெயின் உணவு, ஹலால் உணவு என இருக்கும்போது பிராமண உணவு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள், இந்த விளம்பரத்தை சாதிவெறியைக் கக்குவதாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
சுத்தமான பிராமண சமையல் என்று இந்த விளம்பரத்தில் எதைக் குறிப்பிடுகிறார்கள்? வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
’சாதியரீதியான உணவுக்கு’ எதிராக பல்வேறு தலித் செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இத்தகைய ’தனிச்சிறப்பான உணவு’ என்பதுதான் பொதுவான உணவுத் தெரிவிலிருந்து தலித் மக்களை விலக்கி வைப்பதற்கான பாரம்பரிய வழிமுறை என்று கூறுகின்றனர். ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ உணவு வகைகள் இந்திய சமையல் கலாச்சாரத்திலிருந்து திட்டமிட்டவகையில் விலக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் உணவைப் பொருத்தவரையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. சந்திரபான் பிரசாத் என்ற தொழில்முனைவர் ஒருவர், தலித் உணவுகளுக்காக தனியாக இணையதளம் (Dalitfoods.com) திறந்தார். தலித் உணவு வகைகளை விற்பனை செய்வதற்கான ஒரு இணையதளமாக அது செயல்பட்டு வருகிறது. (அந்த இணையதளம் செயல்படவில்லை) ”Stir Fry Simmer” ஆவணப்படத்தைப் போன்று உணவு தொடர்பான சில ஆவணப்படங்கள் உணவுக்குப் பின்னர் மறைந்திருக்கும் அரசியலை வெளிக் கொண்டு வர முயற்சித்திருக்கின்றன.
உணவு மட்டுமல்ல, தங்கும் வீடு முதல், ஒய்வுக் காலத்தில் தங்குவதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்ட வீடுகள், முதியோர் இல்லங்கள் பிராமணர்களுக்காகவே என பிரத்யேகமாக தனிச் சந்தையைப் பிடித்திருக்கின்றன. தனி பங்களாக்களை கட்டி ’வில்லாக்களாக’ விற்பனை செய்யும் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அக்ரஹாரங்களாக பல்வேறு சமுதாய குடியிருப்புகளை (Community Homes) கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
***
சத்துணவு சமையலர் பாப்பாள் அம்மாளின் சமையலில் பல்லி இருந்ததாக சதி செய்த சாதி வெறியர்கள், தற்போது மாணவர்கள், ஆசிரியர்கள், சாதிவெறி பிடித்த மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக்திலேயே போராட்டம் செய்திருக்கின்றனர். எப்படியும் பாப்பாள் அம்மாளின் சமையைலை அவர்கள் ஏற்கப் போவதில்லை! அவரை எப்படி பணிநீக்கமோ இல்லை இடமாற்றமோ செய்யப் போகிறோம் என்பதே அவர்கள் முன் உள்ள கேள்வி! ஒரு அருந்ததியப் பெண் சமையலை எப்படி ஆதிக்கசாதி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாப்பிடலாம் என்பதிலிருந்து தெரிவது என்ன? என்ன உணவு என்பதை விட யார் சமையல் செய்கிறார்கள் என்பதே அவர்களது ஆதிக்க சாதிப் புனிதத்தின் தூய்மையாம்.
குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய ’உயர்’ சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.
பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.
வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல் – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.
ஆகவே இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கூட “சாதிப்புனிதம் மற்றும் தூய்மை” எனும் இழிவான சாதிவெறியை இங்கேயும்,கடல் கடந்தும் இவர்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்று! மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்கள்,தலித்துகள் கொல்லப்படுவதும், சுத்தமான பிராமண உணவு கிடைக்கும் என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
பிராமணர்களுக்கான வீடுகள்: Brahmins Villas in Coimbatore | Satkrut Homes Ltd
ஜே.என்.யு. மாணவர் தலைவர் உமர் காலித் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகாமல் தப்பியிருக்கிறார். டில்லியின் மையப்பகுதியில், நாடாளுமன்றத்துக்கு வெகு அருகில் இருக்கிறது கான்ஸ்டிடியூசன் கிளப் அரங்கம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் பத்திரிகையாளர்களும் வந்து போகும் அந்த அரங்கின் வாயிலில் 13.08.2018 அன்று இந்தக் கொலை முயற்சி நடந்திருக்கிறது.
உமர் காலித்
“அச்சத்திலிருந்து சுதந்திரம்” என்ற தலைப்பில் அங்கு நடைபெறவிருந்த கூட்டத்தின் நோக்கமே இத்தகைய கொலைகளுக்கு எதிராக குரலெழுப்புவதுதான்.
கூட்டத்தில் பேச வந்திருந்த உமர், கடையில் தேநீர் குடித்து விட்டு நகர்ந்திருக்கறார். அவரை பிடறியில் கைவைத்து கீழே தள்ளி, கைத்துப்பாக்கியால் வயிற்றில் சுட முனைந்திருக்கிறான் கொலையாளி. அவன் கையைப் பிடித்து தள்ளியிருக்கிறார் உமர். உமருடன் வந்திருந்த பனோஜ்யோத்ஸ்னா லாகிரி என்ற இளைஞரும் ஷாரிக் உசேன் என்பவரும் கொலையாளியைப் பிடித்து தள்ளியிருக்கின்றனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் ஒரு தோட்டா வெடித்திருக்கிறது. அவன் துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.
“நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்று கூறுகிறார் உமர் காலித்.
2016 பிப்ரவரியில் கண்ணையாகுமார், அனிர்பன் பட்டாசார்யா, உமர் காலித் ஆகியோர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளும் தாக்குதல்களும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. மோடி அரசை உலக அரங்கில் அம்பலப்படுத்திய அந்த நிகழ்வுக்குப் பின்னரே, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும், அதன் முற்போக்கான மாணவர் சமூகத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் குறிவைக்கத் தொடங்கி விட்டனர்.
துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.
குறிப்பாக உமர் காலித்துக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி. சமூக ஊடகங்களின் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விதம் விதமான பொய்ப்பிரச்சாரங்கள் சங்கிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தக் கொலை முயற்சி. தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரையிலான அனைவரின் விசயத்திலும் இப்படித்தான் நடந்திருக்கிறது.
உமர் சுடப்பட்ட செய்தி ஊடகங்களில் வரத்தொடங்கிய மறுகணமே, இந்த சம்பவத்தையே மறுக்கின்ற பொய்ப்பிரச்சாரமும் தொடங்கிவிட்டது. “சம்பவம் நடந்த போது நான் அங்கேதான் இருந்தேன். துப்பாக்கி சூடு நடந்தது உண்மை. ஆனால் உமர் காலித் அந்த இடத்தில் இல்லவே இல்லை” என்று தைனிக் பாஸ்கர் (இந்தியில் வெளிவரும் தினமலம்) நாளேட்டின் நிருபர் சந்தோஷ்குமார் ஒரு வீடியோவை சுற்றுக்கு விட்டிருக்கிறார். உடனே இதனை ஏ.பி.பி. நியூஸ் சானலின் நிருபர் விகாஸ் பதவுரியா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மோடியை அவதூறு செய்வதற்காக உமர் நடத்தும் நாடகம் என்றும், தாக்கியதே உமர்தான் என்றும் பலவிதமாக இந்தக் கதை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவிட்டது. இதனைப் பரப்பியவர்களில் பலர் டிவிட்டரில் மோடியால் பின் தொடரப்படுபவர்கள்.
ஒருபுறம், அடையாளம் தெரியாத அந்த கொலையாளிக்கு எதிராக கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறது டெல்லி போலீஸ். இன்னொரு புறம், பா.ஜ.க. எம்.பி.யும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மீனாட்சி லேகி “அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்றும் இது உமர் நடத்தும் நாடகம்” என்றும் வாதாடிக் கொண்டிருக்கிறார். அக்லக் கொலை முதல் அனைத்தில் கடைப்பிடிக்கப்படும் உத்தி இதுதான்.
“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.
***
டில்லி சம்பவத்துக்கு 3 தினங்களுக்கு முன், கடந்த 10 ஆம் தேதியன்று மகாராட்டிர பயங்கரவாத தடுப்பு போலீசார் காவி பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து பத்து கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெடனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.
இரண்டு வார காலம் இவர்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் பின்னர்தான் கைது செய்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் மகாராட்டிர போலீஸ் கூறுகிறது. இவர்களைக் கைது செய்திருக்காவிட்டால், பக்ரீத் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பல இடங்களில் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருப்பார்கள் என்றும் அதற்குத் தயார் நிலையில்தான் எல்லா வெடிபொருட்களும் இருந்தன என்றும் கூறுகிறது போலீஸ்.
சுதன்வா காண்டலேகர் (39) “ஸ்ரீ சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” என்ற அமைப்பின் உறுப்பினர். அந்த அமைப்பின தலைவர்தான் பீமா கோரேகானில் தலித்துகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சம்பாஜி பிடே.
சரத் கசால்கர் (25) பசு பாதுகாப்பு குண்டர் படை வைத்துக் கொண்டு இறைச்சிக் கடைகளை சூறையாடுவது, தாக்குவது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக கொண்டவர். குண்டுகள் இவரது வீட்டிலிருந்து தான் கைப்பற்றப்பட்டன.
இருப்பினும், இவர்களை “காவி பயங்கரவாதிகள்” என்றோ “இந்துத்துவ பயங்கரவாதிகள்” என்றோ ஊடகங்கள் குறிப்பிடவில்லை. “சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி” என்ற தலைப்பில் இது தலைப்புச் செய்தியாகவும் வெளியிடப்படவில்லை.
அன்று, மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணமான பிரக்யா சிங் தாகூர்உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளைக் கைது செய்த போலீசு அதிகாரி, ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவர்களைக் கைது செய்த போலீசு அதிகாரிகளுக்கும் அந்த கதி நேரலாம்.
ஏனென்றால், “சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடே, மோடியின் குருநாதர். “என் குருநாதர் பிடே இங்கு வருமாறு உத்தரவிட்டார். இதோ நான் வந்திருக்கிறேன்” என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே பேசியிருக்கிறார் மோடி.
கைது செய்யப்பட்டிருக்கும் “பிரிஞ்ச் எலிமென்ட்” சுதன்வா காண்டலேகருக்கும் பிடே தான் குருநாதர். அதற்காக, பிரதமர் மோடியை பிரிஞ்ச் எலிமென்ட் என்று சொல்லிவிட முடியுமா என்ன?
செங்கோட்டையிலிருந்து கொடியேற்றுபவரை பிரிஞ்ச் எலிமென்ட் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, அது அவதூறு அல்லவா?
***
உமர் மீதான கொலை முயற்சி நடந்த பின்னரும் திட்டமிட்ட நேரத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
பிரசாந்த் பூஷண், உமர் காலித் உள்ளிட்ட பேச்சாளர்களுடன்,
ஜார்கண்டில் பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட அலிமுதீனின் மனைவி மரியம்,
சென்ற ஆண்டு டில்லிக்கு அருகில் ரயிலில் கொலை செய்யப்பட்ட 16 வயது இளைஞன் ஜுனைத் -இன் அம்மா மரியம்,
மர்மமான முறையில் காணாமல் போன ஜே..என்.யு மாணவர் நஜீப் அகமதுவின் தாயார் பாத்திமா நபீஸ்
சமீபத்தில் ராஜஸ்தான், ஆல்வாரில் பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ரக்பர்கானின் சகோதரன் அக்பர்
கோரக்பூர் குழந்தைகள் மரணத்துக்காக பொய்க்குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டிருக்கும் டாக்டர் கஃபில் கான்,
கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று கோரக்பூரில் 3 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிர் தப்பிய டாக்டர் கஃபில் கானின் சகோதர் காஷிப் ஜமீல்
– ஆகியோர் கான்ஸ்டிடியூசன் கிளப்பின் அந்தச் சிறிய அரங்கில் “அச்சத்திலிருந்து சுதந்திரம்” குறித்துப் பேசியிருக்கின்றனர். கூட்டம் முடிந்து வீடு திரும்பிய டாக்டர் கஃபில் கானின் கைபேசிக்கு “அடுத்த இலக்கு – நீ” என்றொரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
நமக்கும் அப்படியொரு குறுஞ்செய்தி வரும் – அதற்குள் விழித்துக் கொள்ளத் தவறினால்!
ஆளும் பா.ஜ.க. அரசு ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துகிறது? இதற்கான விடையை நாம் ஆய்வுகளில் தேட வேண்டாம். தனது அனுபவத்தில் இருந்து முன்வைக்கிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய். இந்தி சேனலான, ஏ.பி.பி. தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெறியாளரான புன்ய பிரசூன் பாஜ்பாய், ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்ற பிரைம் டைம் விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்.
பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, சீத்தாப்பழ விவசாயம் மூலம் தனது லாபம் இரட்டிப்பானது என்று பேசினார். அவர் பொய்யாக அப்படி பேசியதையும், அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து பேச வைத்தனர் என்பதையும் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தினார் புன்ய பிரசூன். இதை தொடர்ந்து எழுந்த அழுத்தங்களால், மோடியின் பெயரை சொல்லக்கூடாது; மோடியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது; மோடி பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டார். இறுதியில் பணியில் இருந்து ராஜினாமாவும் செய்தார்.
தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விளக்கி புன்ய பிரசூன் எழுதியிருக்கும் கடிதம், அவருக்கு நேர்ந்ததை மட்டும் விவரிக்கவில்லை. இந்திய அளவில் ஊடகங்களின் குரலை ஒடுக்குவதற்கு மோடி நடத்தும் ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை’ வெளிக்கொண்டு வருகிறது.
***
நான் பணியாற்றும் ஏ.பி.பி. தொலைக்காட்சியின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் திடீரென ஒரு நாள் என்னை அழைத்தார். ”உங்கள் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பெயரை சொல்லுங்கள். மோடி பெயர் எந்த இடத்திலும் வர வேண்டாம்’’ என்றார்.
மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.
“அது எப்படி சாத்தியம்? அரசின் அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடிதான் அறிவிக்கிறார்; அவர்தான் தொடங்கி வைக்கிறார். துறையின் அமைச்சர்கள் கூட மோடிக்கே முழு பெருமையையும் சமர்ப்பிக்கின்றனர். அப்படி இருக்கும்போது மோடியின் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?” என்று கேட்டேன்.
‘’நீங்கள் செய்வதும், சொல்வதும் சரியாக இருக்கக்கூடும். ஆனால், நான் சொல்வதைக் கேளுங்கள். தற்காலிகமாகவேனும் மோடி பெயர் எங்கும் வேண்டாம்’’ என்றார்.
ஆனால் அவரது உத்தரவை செயல்படுத்துவது அத்தனை எளிமையானதாக இருக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்து நான் விவாதிப்பதாக இருந்தால் 2022-க்குள் 40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கப்படும் என்ற மோடியின் அறிவிப்பு குறித்தும், இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு மட்டுமே திறன் மேம்பாடு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் பேச முடியாது. நாடு முழுவதும் திறக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களில் 10-இல் 8 பூட்டிக்கிடக்கிறது என்பதையும் பேச முடியாது.
மோடி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘தற்போதுள்ள அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால் இது தொலைக்காட்சி ஊடகம். காட்சிகளைக் காட்டியாக வேண்டும். எங்கள் ‘வீடியோ லைப்ரரி’ முழுக்க மோடி காட்சிகள்தான் நிறைந்திருக்கின்றன. 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதிக்குப் பிறகு எங்கள் எடிட் இயந்திரங்கள் மோடியை மட்டுமே எடிட் செய்தன. 80 சதவிகிதம் புகைப்படங்களும், வீடியோவும் மோடியுடையது மட்டும்தான். ஆகவே மோடி என்ற பெயரை பயன்படுத்தாமல் ‘தற்போதைய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், டி.வி. திரையில் மோடியின் புகைப்படங்களே இடம்பெற்றன. ஆனால் அடுத்த 100 மணி நேரத்துக்குள் அடுத்த உத்தரவு வந்தது.
மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ‘தற்போதுள்ள அரசால்’ 106 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திட்டங்களையும் அறிவித்தவர் மோடி. துறை சார்ந்த அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை; தேடிக்கொள்ள வேண்டிய பெருமையை, அவரே தன் பெயரால் செய்தார். ஆகவே, மோடியின் பெயரை குறிப்பிடக்கூடாது; புகைப்படத்தைக் காட்டக்கூடாது என்றால், யார் குறித்தும், எது குறித்தும் முணுமுணுக்கக் கூடாது என்றுதான் அர்த்தம்.
ஜூன் கடைசி வாரத்தில் பா.ஜ.க.-வில் இருந்து வேறொரு அழுத்தம் வரத் தொடங்கியது. பா.ஜ.க. சார்பாக எங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரும் வர முடியாது என்று மறுத்தார்கள். அதில் இருந்து சில நாட்கள் கழித்து பா.ஜ.க. பிரமுகர்கள் ஏ.பி.பி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க மறுத்தனர். எங்கள் நேரலை விவாதம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ஒரு பேராசிரியருக்கு திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவர் அடுத்த விநாடி, ஸ்டுடியோவில் இருந்து எழுந்து, மைக் ஒயரை கழட்டிவிட்டு, அவர் போக்கில் வெளியேறிச் சென்றார். இவை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. அந்த செல்போன் அழைப்பு வந்தபோது, அவரது முகம் அச்சத்தால் வெளிறிப் போயிருந்ததைக் கண்டேன்.
இப்படி பா.ஜ.க. தனது எல்லா அழுத்தங்களையும் செலுத்தினாலும் விளைவு வேறாக இருந்தது. ஏ.பி.பி. சேனல் மிகக் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்ட ஜூலை 5 முதல் ஜூலை 12 வரையிலான டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஏ.பி.பி. தொலைக்காட்சி பலமடங்கு மேலே சென்று, இந்தி செய்திச் சேனல்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றது. விவாதங்களில் பா.ஜ.க.-வினர் பங்கேற்பதும், பங்கேற்காததும் ரேட்டிங்கில் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மேற்கண்ட ஜூலை 5-12ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில், ஜார்கண்ட் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் அமைக்கப்படவிருந்த அனல் மின் நிலையம் குறித்து ரிப்போர்ட் செய்தோம். அது அதானிக்கு சொந்தமான அனல் மின் நிலையம். இதற்கு நிலத்தை விற்கும்படி விவசாயிகள் மிரட்டப்பட்டனர். “நிலத்தை தரவில்லை என்றால் உயிரோடு எரித்துவிடுவதாக அதானி ஆட்கள் மிரட்டினார்கள்” என்று மக்கள் கதறினார்கள். இவை அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த வார ரேட்டிங்கில், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டும் வழக்கத்தை விட 5 புள்ளிகள் கூடுதலாக கிடைத்திருந்தது.
அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு; அரசை எதிர்த்து நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரித்தால், மற்ற தொலைக்காட்சிகள் மத்தியில் அது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யூகிக்க முடியாதது அல்ல. டி.ஆர்.பி. ரேட்டிங்கை அடிப்படையாக வைத்துதான் ஒரு சேனலுக்கான விளம்பர வருவாய் தீர்மானிக்கப்படுகிறது. மோடியை விமர்சித்தாலும் டி.ஆர்.பி. ரேட்டிங் வரும் என்றால், விளம்பரதாரர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள்; மோடி புகழ்பாடும் சேனல்களுக்கு விளம்பர வருவாய் குறையும். ஒரே நேரத்தில் இரட்டை பாதிப்பு. இந்த தருணத்தில்தான், மோடி அரசு எங்கள் கழுத்தை நெறிக்க முடிவு செய்தது.
அது இரண்டு பகுதிகளாக நடந்தது. ஒன்று, விவாதம், நிகழ்ச்சிகள், பேட்டி என ஏ.பி.பி. சேனலின் அனைத்தையும் பா.ஜ.க. சார்பில் புறக்கணிப்பது. இரண்டாவது, ஏ.பி.பி. சேனலின் வருடாந்திர பொது நிகழ்ச்சியை புறக்கணிப்பது. பொதுமக்கள் முன்னிலையில் பெரும் அரசியல் கட்சியின் தலைவர்களை ஒன்றாக அமர வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு எங்கள் தொலைக்காட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கௌரவம் மிக்கதும், வருமானம் ஈட்டித் தரக்கூடியதுமான இந்நிகழ்வு சேனலுக்கு பல வகைகளில் முக்கியமானது. இதற்கு பா.ஜ.க. சார்பிலோ, மோடி அரசாங்கத்தின் சார்பிலோ யாரும் வரமாட்டோம் என மறுத்தார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஆளும் தரப்பினர் யாரும் இல்லாமல் எப்படி அந்நிகழ்வை நடத்த முடியும்?
இதன்பிறகுதான் ஜூலை 6-ஆம் தேதி சர்ச்சைக்குரிய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்காக பா.ஜ.க. அரசு நியமித்திருக்கும் 200 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒரு நண்பர் எனக்கு அழைத்தார். “எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்” என்றார். இதன்பிறகு ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது மட்டும் எங்களுடைய செயற்கைக்கோள் இணைப்பு தடைபடத் தொடங்கியது. அந்த ஒரு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சித் திரை கருப்பானது. ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ முடிந்ததும், மிகச் சரியாக 10 மணிக்கு டி.வி. திரை பழையமாதிரி சரியாகிவிடும். எங்கள் தொழில்நுட்பக் குழுவால் இதை சரிசெய்யவே முடியவில்லை. உடனே தொலைக்காட்சியின் ஸ்க்ரோலிங் பகுதியில்,’’கடந்த சில நாட்களாக பிரைம் டைம் நிகழ்ச்சியின்போது எங்கள் ஒளிபரப்பில் சில தடங்கள் ஏற்படுகிறது. அதை சரிசெய்ய முயற்சித்துவருகிறோம். அதுவரை நேயர்கள் ஒத்துழைக்கவும்” என்ற செய்தியை ஒளிபரப்பினோம். ஆனால் இரண்டே மணி நேரத்தில் அந்த செய்தி அகற்றப்பட்டது. அதை ஒளிபரப்பக்கூடாது என்று நிர்வாகத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நிர்வாகம் அந்த முடிவை எடுத்தது.
‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி. நியூஸ் நெட்வொர்க்கின் ஒளிபரப்பு முடக்கப்பட்டது.
இதே நேரத்தில் ஏ.பி.பி. சேனலின் மிகப்பெரிய விளம்பரதாரரான ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், தன்னுடைய அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது. மற்ற விளம்பர நிறுவனங்களுக்கும் இத்தகைய அழுத்தம் தரப்படுவதாக எங்களுக்குத் தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருந்தது. ஒருநாள், இந்த நீண்ட நெருக்கடி நிலை ஒரு முடிவை எட்டியது. ஏ.பி.பி. தொலைக்காட்சி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் என் முன்னே கைகளை இறுக மடக்கிக்கொண்டு நின்றனர்.
“என்ன செய்வது? இந்த சூழ்நிலையில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அநேகமாக விடுமுறையில் செல்லலாம் அல்லது ராஜினாமா செய்யலாம்” என்றார்.
இந்த அதிர்ச்சிகளை விட ஓர் அதிசயம் நடந்தது. நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஏ.பி.பி. சேனலில் பதஞ்சலி விளம்பரங்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கின. மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் வழக்கமாக 15 நிமிடங்கள் விளம்பரங்களுக்கு ஒதுக்கப்படும். பா.ஜ.க. அழுத்தம் காரணமாக இது வெறும் 3 நிமிடங்களாக சுருங்கியிருந்தது. நான் ராஜினாமா செய்தபிறகு இது திடீரென 20 நிமிடங்களாக அதிகரித்தது. நான் ராஜினாமா செய்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவில் இருந்தே செயற்கைக்கோள் இணைப்பில் எந்த தொந்தரவும் இல்லை. டி.வி. திரைகள் கறுப்பாகாமல், வழக்கம்போல் ஒளிபரப்பாகின.
மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் என்.எஸ்.ஏ-விலிருந்து விடுதலை!
துப்பாக்கிச்சூடுக்கும் சேர்த்து சிபிஐ விசாரணை !
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக நின்று போலீஸ் நடத்திய அரச பயங்கரவாதப் படுகொலையை அம்பலப்படுத்தும் விதத்தில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. சி.டி.செல்வம், திரு.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.
முதலாவதாக, தூத்துக்குடி போராட்டத்தின் முக்கிய குற்றவாளியாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தாலும், போலீசாலும், பாரதிய ஜனதா கட்சியினராலும் சித்தரிக்கப்பட்ட மக்கள்அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு.
தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டு தற்போது உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் !
தூத்துக்குடி பேரணியில் கலந்து கொண்ட ஒரே குற்றத்துக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கலியலூர் ரஹ்மான் அவருடைய மகன்களும் மாணவர்களுமான முஹம்மது அனஸ், முகமது இர்ஷத் ஆகியோரையும், கோட்டையன், சரவணன், வேல்முருகன் ஆகிய தோழர்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு காலத்துக்கு சிறை வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது செல்லத்தக்கதல்ல என்று அவர்கள் 6 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இரண்டாவதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளையும், துப்பாக்கி சூடு தொடர்பான போலீசுக்கு எதிரான வழக்குகளையும் தமிழக காவல்துறையை சேர்ந்த சிபி சிஐடி விசாரிக்கக் கூடாது என்று கூறி அவற்றை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் மீதுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மே 22 அன்று நடைபெற்ற சம்பவத்துக்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரில் தாங்களே தயாரித்துக் கொண்ட பொய்யான வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து, சுமார் 175 வழக்குகளை தூத்துக்குடி போலீஸ் பதிவு செய்திருந்தது. கைது செய்யப்பட்ட ஒவ்வொருவர் மீதும் 20 முதல் 120 வழக்குகள் வரை போட்டு, அவர்களை பிணையில் வரவே முடியாமல் செய்வது என்பதுதான் போலீசின் நோக்கம். இது குறித்து விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.
வாக்குமூலங்களின் அடிப்படையில் ஒரு சம்பவத்திற்கு 175 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வதென்பது சட்டவிரோதமானது என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றிருந்தோம். குற்ற எண் 190, 191 ஆகிய இரண்டின் கீழ்தான் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு போலீஸ் அராஜகத்துக்கும் அத்துமீறல்களுக்கும் உதவிய அடித்தளத்தை தகர்த்து விட்டது.
இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது பொருத்தமல்ல என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளது.
முழுமையான தீர்ப்பின் நகல் இன்னும் கைக்கு வரவில்லை எனினும் அதன் சுருக்கத்தை கீழ்வருமாறு தொகுத்து தருகிறோம்.
144 தடை முதல் துப்பாக்கிச்சூடு கொலை வரை எந்தக் கேள்விக்கும் அரசு விளக்கமளிக்கவில்லை!
முதலாவதாக மே 21 ஆம் தேதி அன்று இரவு சுமார் பத்து முப்பது மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே ஒரு அசாதாரணமான நடவடிக்கை அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் போது மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லை உத்தரவு குறித்து உரிய முறையில் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இரண்டாவதாக துப்பாக்கி சூட்டுக்கு ஒரு துணை தாசில்தார் உத்தரவிட்டிருக்கிறார் உத்தரவிட்ட துணை தாசில்தாரின் அதிகார எல்லை துப்பாக்கி சூடு நடந்த இடம் அல்ல. தான் சுமார் 12.5 கிலோமீட்டர் தூரம் பேரணியுடன் நடந்து வந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய பிறகு அங்கே துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் கூறுவது சந்தேகத்துக்குரியதாக உள்ளது
மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?
துணை தாசில்தாரின் உத்தரவுப்படி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மட்டுமின்றி, ஆங்காங்கே தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் உத்தரவிட்டது யார் என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய காவல்துறையின் நிலை ஆணைகள் பின்பற்றப்படவில்லை.
இத்தகைய துப்பாக்கிச்சூடு நடைபெறும் தருணங்களில் இ.பி.கோ 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை.
மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பன்னிரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக மக்கள் வந்திருக்கின்றனர். போலீசார் இதனை எப்படி தடையின்றி அனுமதித்தனர் என்ற கேள்விக்கு காவல்துறையிடமிருந்து பதில் இல்லை.
இந்த வழக்கின் போது மனுதாரர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவை எதற்கும் அரசுத் தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
மேற்கூறிய காரணங்களினால் இந்த வழக்கை தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சிபிசிஐடி துறையினர் விசாரிப்பதை விட, சிபிஐ விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
இந்தக் காலத்தில் சில நாட்களுக்கு அம்மாவட்டங்களில் இணையத் தொடர்புகள் அங்கே துண்டிக்கப்பட்டிருக்கின்றன. (இதை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பத்திரிகையாளர் கவின்மலரை மனுதாரராக கொண்டு ஒரு மனு தாக்கல் செய்து தடையை நீக்கியிருந்தோம்) இந்த இணைய முடக்கத்துக்கு தேவை இருந்ததா என்பது குறித்தும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
நான்குமாதங்களில்விசாரணையைமுடிக்கவேண்டும் !
இந்த வழக்கை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நான்கு மாதங்களுக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் அத்துமீறல் குறித்து போலீசார் மீது தூத்துக்குடி மக்கள் புகார் கொடுத்தால் அவை குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.
– என்று நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அஹ்மத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனமும் தமிழக அரசும் காவல் துறையும் இணைந்து நடத்திய அரச பயங்கரவாதக் கொலை வெறியாட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்கறிஞர்களும் அமைப்புகளும் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்ததுள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும் இந்த தீர்ப்பு.
பொய்ப்பிரச்சாரம்செய்தவர்களைமறந்துவிடாதீர்கள்!
இந்த தருணத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போலீஸும் தமிழக அரசும் பாரதிய ஜனதா கட்சியும் ரஜினிகாந்த் போன்ற நபர்களும் சில ஊடகங்களும் பரப்பி வந்த பொய்ப்பிரச்சாரத்தை மக்கள் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்
மக்கள் அதிகாரம் அமைப்புதான் நடைபெற்ற வன்முறைகள் அனைத்திற்கும் காரணம் என்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர்தான் இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் என்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டே கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீஸ் கைது செய்தது. பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் போன்றவை ஏவப்பட்டன.
மீனவ பிரதிநிதிகளை மிரட்டி மக்கள அதிகாரத்திற்கு எதிராக புகார் மனு
மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக மேற்கொண்டது. தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுப்பதாக தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் நேற்று மோடியும் கூறியிருக்கிறார். இது மத்திய உளவுத்துறையும் சங்கபரிவார அமைப்பினரும் இணைந்து பரப்பும் பொய்.
இந்த பொய்யின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவதற்குத்தான் ரஜனி தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார். தூத்துக்குடி மட்டுமல்ல, எட்டு வழி சாலைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், சமூக ஆர்வலர்களையும் ஒடுக்குவதையும், தமிழ்நாடு முழுவதும் கருத்துரிமையை பறிப்பதையும் இந்தப் பொய்யின் அடிப்படையில்தான் பாஜகவும் தமிழக அரசும் நியாயப்படுத்தி வருகின்றனர்
யார் பயங்கரவாதிகள் யார் சமூகவிரோதிகள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக இனம் காட்டுகிறது. மக்கள் அதிகாரம் வன்முறையைத் தூண்டியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் பாஜகவினர் தொலைக்காட்சிகளில் சவடால் அடித்தார்கள். ஆனால் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனுதாரர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இது இறுதித் தீர்ப்பு அல்ல என்பது உண்மைதான். ஆனால் 13 பேரைப் படுகொலை செய்து, பலரை துப்பாக்கிக் குண்டுக் காயத்துக்குள்ளாக்கி,
நூற்றுக்கணக்கான மக்களை சிறைவைத்து அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து, போலீசு ரெய்டுகள் மூலம் தூத்துக்குடி மக்களை பீதிக்குள்ளாக்கிய போலீசார், தங்களது நடவடிக்கைகள் எதற்கும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க முடியவில்லை என்பதை நீதிமன்றத்தில் அம்பலமாக்கியிருக்கிறோம்.
144 தடை உத்தரவை மீறினார்கள் என்பது மட்டும்தான் மக்கள் செய்த குற்றம். ஆனால் எல்லா சட்ட நெறிமுறைகளையும் மீறியிருப்பவர்கள் போலீசும், தமிழக அரசும், அவர்களுடைய எசமானான ஸ்டெர்லைட் முதலாளியும்தான்.
இந்த அளவில் ஒரு தீர்ப்பைப் பெறுவதற்கு மிகக் கடுமையான விடாப்பிடியான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தில் எமக்கு உறுதுணையாக இருந்து, அரசு தரப்பு எத்தனை வாய்தா வாங்கி இழுத்தாலும் அலுக்காமல் வந்து, கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் முதல் இந்தப் பணிகளில் இரவு பகலாக உழைத்த இளம் வழக்கறிஞர்கள் வரை அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தருணத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் ஆலையை திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் வெற்றி பெற்று வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முதல் படியாக பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டபோது, அபராதம் கட்டிவிட்டு ஆலையை நடத்துமாறு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதை நாம் மறந்து விடக்கூடாது.
தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று தனிச்சட்டம் இயற்றுவது ஒன்றுதான் தீர்வு என்று ஆலைக்கு சீல் வைப்பதாக தமிழக அரசு அறிவித்த அன்றே கூறினோம். மீண்டும் அதையே வலியுறுத்துகிறோம்.
மோடி அரசு என்பது அனில் அகர்வாலின் அரசு. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லா விதத்திலும் அது உதவும். தமிழக அரசின் யோக்கியதை பற்றி சொல்லத் தேவையில்லை.
நிர்வாக கட்டிடத்திற்கு ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே எந்த நோக்கத்திற்காக 13 உயிர்களை பலி கொடுத்தோமோ, எந்த நோக்கத்திற்காக படுகாயம், பொய் வழக்கு, சித்திரவதை என்று பல துன்பங்களை அனுபவித்தோமோ அந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது. இது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டுமன்று. தமிழக மக்கள் அனைவரின் பிரச்சினை.
கார்ப்பரேட் அடியாள் அரசாக இருந்துகொண்டு குஜராத்தி பனியா மார்வாரி முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நாட்டை கூறு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, தமிழகத்தில் என்ன செய்கிறதோ, அதைத்தான் நாடு முழுவதிலும் செய்கிறது. எனவே இது நாட்டு மக்கள் அனைவரின் பிரச்சினை.
இந்தியாவிற்கு முன்னரே ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்டெர்லைட் நடத்திய படுகொலைகள் அம்பலமாகி இருக்கின்றன. வேதாந்தா என்பது ஒரு சர்வதேச கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனம். இதனை எதிர்த்த போராட்டத்தை பல்வேறு நாட்டு மக்களும் ஆதரிப்பார்கள்.
இந்த போராட்டத்தில் நாம் பெறுகின்ற வெற்றி, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மக்கள் மீது கொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து தம் வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக அமையும்.
இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்பதை அறிவோம். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உடனே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களாகிய நாங்கள் என்றும் எப்போதும் போராடுகின்ற தூத்துக்குடி மக்களோடும், போராடும் தமிழக மக்களோடும் இருக்கிறோம். அரச பயங்கரவாத குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை, கொலைகார ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் வரை ஓயமாட்டோம்.
மோடி அரசின் இந்துத்துவ செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒருசில பத்திரிகையாளர்களில் கார்ட்டூனிஸ்ட் சதிஷ் ஆச்சார்யாவும் ஒருவர். பசுவை முன்வைத்து நடந்து வரும் கும்பல் படுகொலைகள் குறித்தும், மோடி அரசின் பண மதிப்பு நீக்கல் நடவடிக்கை குறித்தும், அன்றாடம் இந்துத்துவ கும்பல் அவிழ்த்துவிடும் வன்முறைகள் குறித்து இவர் வரைந்த கார்ட்டூன்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுபவை. ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி – அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்…
‘கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள்’
சதிஷ் ஆச்சார்யாவின் முகநூல் பதிவு.
இப்படித்தான் ‘மெயில் டுடே’வுக்காக வரையப்பட்ட என்னுடைய கார்ட்டூன் பத்தி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. அப்பத்திரிகையின் ஆசிரியர் இப்படித்தான் ஒரு கார்ட்டூனையும் கார்ட்டூனிஸ்டின் கருத்தையும் பார்த்தார். இப்படித்தான் ஒரு குரலை ஒடுக்கினார்.
அவர் வெளியிட மறுத்த கார்ட்டூன் சீனாவின் ஆக்டோபஸ் கரங்கள், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைப் போல இந்தியா மீது நீள்கின்றன என்பதை சொன்னது. ஆசிரியர் இந்த கார்ட்டூன் ‘அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் சீன பிரச்சினையை மிதமிஞ்சியும் சொல்கிறது’ என்றார்.
இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை இப்படித்தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் பார்ப்பார் என நினைத்தேன். ‘இது விவாதத்துக்குரியதுதான், ஆனால், ஒரு கார்ட்டூனின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என நான் அவரிடம் சொன்னேன். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் குழுவிடம் கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள் என்றார் ஆசிரியர்.
‘மெயில் டுடே’ வெளியிட மறுத்த சதிஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன்.
என்னுடைய சுதந்திரத்தை பாதுகாக்கவும் கார்ட்டூன் பத்தியின் புனிதத்தை பாதுகாக்கவும் பல நாட்களாக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் ஓர் ஆசிரியருக்கு கார்ட்டூன் என்பது மூன்று கால இடத்தை நிரப்புவது, அவ்வளவே. ஆனால் ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு அதுதான் உலகமே. அந்த உலகத்தில் கார்ட்டூனிஸ்டால் தன்னுடைய கருத்தை முழுமையாக வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு. அந்த உலகத்தில் தன்னுடைய சொந்த படைப்பின் எல்லைகளை சவாலாக எதிர்கொள்ள முடியும். அந்த உலகத்தில் போராட்டத்தை, விமர்சனத்தை, புலம்பலை, உற்சாகம் உள்ளிட்டவற்றுக்கு குரல் தர முடியும்.
இதுதான் என்னுடைய அனுபவம்:
‘நீங்கள் வரைந்த பசு கார்ட்டூன் ஆசிரியருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை’ என பசுவை வரைந்ததற்காக என்னுடைய கார்ட்டூனை முதலில் நிராகரித்தார்கள்.
கும்பல் கொலைகள் பற்றிய என்னுடைய கார்ட்டூனுக்காக ‘இதில் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. இந்தியா டுடே குழுமம் மத அடையாளத்தோடு வருகிற கார்ட்டூன்களை வெளியிடக்கூடாது’ என்றார்கள்.
மோடி மீதான கார்ட்டூனுக்கு, ‘மோடிக்குப் பதிலாக, ஏதேனும் பா.ஜ.க.-காரரை பயன்படுத்தமுடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்கள்.
மேலும், ‘ஆசிரியர் இந்த கார்ட்டூனில் உள்ள இஸ்லாமிய கண்ணோட்டத்தை விரும்பவில்லை’
மேலும், ‘பண மதிப்பு நீக்கத்தையும் 100 சதவீத மின்வசதி ஏற்படுத்துவதையும் தொடர்புபடுத்துவது ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை’.
மேலும் பல, ‘இது சரியான பொருளில் இல்லை’, ‘இது ஏற்க முடியாதது’ என நிராகரிப்புக்கான காரணங்களாக சொல்லப்பட்டன.
இப்படி நிராகரிக்கப்பட்ட கார்ட்டூன் பிற ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு, சிலவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. பல பத்திரிகையாளர்கள் அவற்றை ரீ ட்விட் செய்தார்கள்.
என்னைச் சுற்றிலும் இருக்கும் தடைகளைக் கடந்து, கார்ட்டூன்களை படைப்பது எனக்கு சவாலாக உள்ளது. விரக்தியிலிருந்து வெளியேறி, என் மூத்த பத்திரிகையாளர் நண்பர்களை அனுகினேன். அவர்களை என்னை ஆறுதல்படுத்தினார்கள். சிலர் காத்திருக்கச் சொன்னார்கள்; சிலர் உறுதியாக இருக்கச் சொன்னார்கள்.
ஃப்ரீலான்ஸ் கார்ட்டூனிஸ்டாக மற்ற ஊடகங்களுக்கும் பணியாற்றும் எனக்கு, இந்த மாதிரியான சூழலில் விட்டுக்கொடுத்துப் போவது எளிதானது. ஆனாலும் என்னுடைய உரிமைக்காக நான் போராட வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பெயரில் வெளிவரும் கார்ட்டூன் பத்திக்கு, அதற்குரிய நியாயத்தை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
முடிவில், எனக்கான இடம் ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கடுமையுடன் நினைவு படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் என்னுடைய கார்ட்டூனை நீக்கிவிட்டு, ஒரு படத்தை அவர்களால் போட முடிகிறது.
உண்மையில், இதில் ஒரு விடுவிப்பு கிடைத்திருக்கிறது. பசுவை பற்றிய கார்ட்டூன் பற்றியோ, கும்பல் கொலைகள் பற்றியோ, மோடி கார்ட்டூன் பற்றியோ இந்து-முஸ்லிம் கார்ட்டூனில் இடம்பெறுவது குறித்தோ நான் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஒரு கார்ட்டூனை வரைய அமரும் முன், ஆசிரியர் என்ன சொல்வாரோ என நினைக்க வேண்டியதில்லை.
ஆனால், அவமானப்படுத்தும் அனுபவம் என்னை காயப்படுத்துகிறது.
ஒரு கார்ட்டூனிஸ்டாக, என்னுடைய ஆசிரியர் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்கிறேன். கார்ட்டூனிஸ்டுகள் ஒரு ஆசிரியரின் குரலை பிரதிபலிக்க வேண்டியதில்லை. கார்ட்டூனிஸ்டுகள் சுதந்திரமான குரலை வெளிப்படுத்த வேண்டியவர்கள்.
உண்மையில், ஓர் ஆசிரியர் அவருக்குள்ள உரிமையில் ஒரு கார்ட்டூனிலிருந்து வேறுபடலாம், அதுபற்றி கார்ட்டூனிஸ்டிடம் பேசலாம். ஆனால், அதிகாரத் தோரணை இல்லாமல் அவர் திறந்த மனதுடன் அதைச் செய்ய வேண்டும்.
சதிஷ் ஆச்சார்யாவின் கருத்துரிமைப் பறிப்புக்கெதிராக சக கார்ட்டூனிஸ்டுகள் வரைந்த கார்ட்டூன்.
என்னுடைய கார்ட்டூன்கள் ‘மெயில் டுடே’ திறந்த தலையங்கப் பக்கத்தில் இடம்பெறக்கூடியது. அங்கே பத்தி எழுதும் சில பத்திரிகையாளர்களுக்கு என் கார்ட்டூன்களைக் காட்டிலும் சுதந்திரம் இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, எனக்கு வேறு சில பத்திரிகைகள் உள்ளன. அங்கே உள்ள ஆசிரியர்கள் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்கிறார்கள். என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை எனினும் என்னுடைய கார்ட்டூனை நம்புகிறார்கள். இதுபோன்ற திறந்த மனுதுடைய ஆசிரியர்களை நாம் நிறைய பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. மேலும், என்னிடம் சமூக ஊடகம் உள்ளது, அங்கே சுயாதீனக் குரல்களை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
முரண்பாடாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷாவின் இணையதளத்தில் நான் வரைந்த அவரை உள்ளடக்கிய கார்ட்டூன்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கார்ட்டூன்கள் அவரை மிகவும் கடுமையாக எதிர்க்கக்கூடியவை.
நிகழ்பவற்றை நோக்கும் போது, ‘அவர்கள் குனியச் சொன்னார்கள்; இவர்கள் படுத்தே விட்டார்கள்!’ என்கிற மிகப் பிரபலமான வரிகள் நினைவுக்கு வருகின்றன.
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 13-08-2018 அன்று தீர்ப்பளித்து விட்டது.
“செல்லாத துரை” ஆன செல்லத்துரை, பத்திரிகையாளர் சந்திப்பில்…
செல்லத்துரையின் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்கி, கிரி ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், வினோத் கன்னா ஆகியோரும், ஆளுநர் சார்பில் சேகர் நாப்தேயும் ஆஜராகி வாதாடினர்.
செல்லதுரையின் நியமனத்துக்கு எதிராக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு (Save MKU) ஆகியவற்றின் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கோவிலன், வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.
“துணைவேந்தர் பதவிகள் ஏலமெடுக்கப்பட்ட பதவிகளே” என்று உலகத்துக்கே தெரிந்த போதிலும் அவையெல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள். எனவே “நிரூபிக்க முடிந்த” உண்மைகளின் அடிப்படையில்தான் வழக்கு நடத்தப்பட்டது.
முதலாவதாக செல்லத்துரையின் மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு இருக்கிறது. இதற்கு முந்தைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் சீனிவாசன் மீது தாக்குதல் தொடுத்த வழக்கு 2014 முதல் நிலுவையில் இருக்கும்போதே இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது முதல் முறைகேடு.
துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும். இது துணை வேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேடுதல் குழு (Search committee) ஏற்படுத்தியிருக்கும் வரையறை. ஆனால் அந்த தகுதி செல்லத்துரைக்கு இல்லை என்பது இரண்டாவது முறைகேடு.
வழக்கின் மனுதாரர், லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட செயலர், ம.உ.பா.மையம்.
துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேரா.மு.ராமசாமி செல்லத்துரையின் நியமனத்தை ஏற்க மறுத்த காரணத்தால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டு அதன் காரணமாக அவர் தேடுதல் குழுவிலிருந்தே ராஜினாமா செய்திருக்கிறார். இத்தகைய ராஜினாமா மதுரை பல்கலைக்கழகத்தில்தான் முதன்முறை நடந்திருக்கிறது. இது மூன்றாவது முறைகேடு.
மு.ராமசாமிக்குப் பின் தேடுதல் குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸ், “துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடாது” என்ற விதியை நீக்குகிறார். இது நான்காவது முறைகேடு.
தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட மூவரில் ராமகிருஷ்ணன், ஹரிஷ் மேத்தா ஆகிய இருவரும் “நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் செல்லத்துரையை சிபாரிசு செய்தோம்” என்று பிரமாண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு தேடுதல் குழுவினரே நிர்ப்பந்தம் என்று ஒப்புக்கொள்வதும் இதுதான் முதன்முறை. இது ஐந்தாவது முறைகேடு.
இவை அனைத்தையும் பரிசீலித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, தார்மீக ரீதியில் செல்லத்துரையின் நியமனம் தவறு என்ற அடிப்படையில் அவரது மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.
நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.
இது செல்லதுரை என்ற ஒரு நபருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமல்ல. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 2008- ‘11 காலகட்டத்தில், கற்பக குமாரவேல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே போராடி வருகிறது. பின்னர் 2011-‘14 காலத்தில் ஜெ ஆட்சியின் கீழ் கல்யாணி மதிவாணனின் முறைகேடுகளையும், அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து ம.உ.பா.மையம் போராடியது.
இந்த போராட்டத்தின் ஊடாகத்தான் “சேவ் எம்.கே.யு” (Save MKU) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் அமைப்பாளரான பேரா.சீனிவாசன் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக கல்யாணி மதிவாணன் மற்றும் செல்லத்துரையின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வைப்பதற்கே நீண்டதொரு சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
பின்னர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று ஜெ அரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் கல்யாணி மதிவாணன். இருந்த போதிலும் எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் அவர் எடுக்க முடியாத வண்ணம் நீதிமன்றம் மூலம் தடை பெற்றோம்.
வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம் முடிந்தவுடன் செல்லத்துரை நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தோம். உடனே வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றினார்கள். மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ராஜதுரை கட்டணமில்லாமல் வழக்கு நடத்திக் கொடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 2017-இல் முடிந்து விட்டது. இருப்பினும் தீர்ப்பு 6 மாத காலத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2018-ல்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் வழங்கப்பட்டது. செல்லத்துரையின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.
உடனே உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வுக்கு மேல் முறையீடு செய்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரினார் செல்லத்துரை. உச்ச நீதிமன்றம் சென்று அதனைத் தடுத்து நிறுத்தினோம். (இந்த வழக்கை நடத்திவிட்டு டெல்லியிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக சென்னை விமானநிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார்.)
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்.
துணைவேந்தர் செல்லத்துரையால் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் உச்ச நீதிமன்றத்தின் சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர்களை அமர்த்திக் கொண்டு வழக்கு நடத்த முடிந்தது. எமக்கோ உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்காட லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. இன்னொருபுறம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள், போலீசு ரெய்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற அடக்குமுறைகளை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.
பலமுறை இந்த வழக்குக்காக டெல்லிக்கு அலைவதற்கான செலவுக்குரிய நிதி, மதுரைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியப்பெருமக்கள் நன்கொடையாக வழங்கினார்கள். வீமன், சீனிவாசன், முரளி விஜயகுமார், புவனேசுவரன் ஆகியோர் மதுரைப் பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்கள்.
நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும். ஒரு துணை வேந்தருக்கான தகுதி என்ன, அவரை தெரிவு செய்வதற்கு தேடுதல் குழு வகுத்திருக்கும் நெறிமுறை என்ன என்பது குறித்து எந்த வித வரையறையும் இதுவரை பின்பற்றப்படுவதில்லை என்பதால் தேர்வு முறையே மோசடியாக இருந்து வருகிறது. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சில நெறிமுறைகளை வகுத்து பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த வழக்கு அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலை. நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.
வரலாறு கற்றுத்தரும் பாடங்களை உள்வாங்குவது மிக அவசியம் ஆகும். இந்து மதவாதம் மற்றும் முஸ்லிம் மதவாதம் காரணமாக இந்திய தேசம் பிரிவினைக் கொடுமைக்கு ஆளாகியது. பிரிவினை துயரங்களும் அந்த பிரிவினையை எதிர்த்துப் போராடிய அனுபவமும் சோகமான, ஆனால் முக்கியமான படிப்பினையை உணர்த்தியுள்ளன. அந்த படிப்பினை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடக்கூடாது.
பிரிவினையின் துயரங்கள் கணக்கற்றவை. உலகில் எத்தனையோ தேசங்கள் பிரிந்துள்ளன. செக்கோஸ்லேவாகியா செக் எனவும் ஸ்லோவாகியா எனவும் பிரிந்தன. சோவியத் ஒன்றியத்திலிருந்து பல குடியரசுகள் பிரிந்தன. யூகோஸ்லேவியா பல குடியரசுகளாக சிதைந்தது. சூடான் இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினைகளில் சில பின்விளைவுகளை உருவாக்கின. ஆனால், எந்த பிரிவினையும் இந்திய பிரிவினையை போல துயரங்களை விளைவித்தது இல்லை…
பிரிவினையின் சில அம்சங்கள் திரும்ப திரும்ப இந்த தேசத்தின் மீது தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளன. குறிப்பாக இந்து – முஸ்லிம் மக்களின் உறவில் இது ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. எப்பொழுதெல்லாம் மதவாதம் தீவிரம் காட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரிவினை தொடர்பான விவாதங்களும் வேகம் எடுக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்களின் தேசபக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது…….
பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? அல்லது அதற்கான புறச்சூழல்கள் இருந்தனவா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினையை எதிர்த்த குரல்கள் குறிப்பாக முஸ்லிம் குரல்கள் இருந்தனவா? அவை ஏன் வெற்றிபெறவில்லை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?
இதற்கான பதில்கள் கண்டு பிடிக்கும் சிறிய முயற்சிதான் இந்த நூல்.
– முன்னுரையிலிருந்து,
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களால் சித்தரிக்கப்பட்ட 1857 ஆயுத எழுச்சியில் மத – மொழி வேறுபாடின்றி தங்களை எதிர்கொண்டதை நன்கு உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக்கியது. ஒருபுறத்தில் இந்து, முஸ்லீம், சீக்கிய மத வேறுபாடுகள்; பல்வேறுபட்ட மொழி வேறுபாடுகள்; அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் உள்ளிட்டு சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிட்டு காலனி ஆதிக்க வாதிகள் தமது பிரிவினை நாடகத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர்.
1930-களில் வெளிப்படத் துவங்கிய தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காங்கிரஸ், முஸ்லீம் லீக் என இந்த இடைவெளியைப் பெருக்கிக் கொண்டே போனது. மறுபுறத்தில் இந்து மகாசபை, சமஸ்தான மன்னர்கள் என இந்து மத வெறியர்களும் இதற்குத் தூபம் போட்டுக் கொண்டேயிருந்தனர்.
முதலில் அது 1935-ஆம் ஆண்டில் பீகார் பகுதியிலிருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரிசா என்ற மாநிலத்தை மொழி அடிப்படையில் உருவாக்கியது. பின்பு 1936 ஆம் ஆண்டில் சிந்த் பகுதியை மும்பை ராஜதானியிலிருந்து பிரித்து மத அடிப்படையில் வடமேற்கு மாகாணத்தை உருவாக்கியது. அதைப் போன்று பலுச்சிஸ்தான் உள்ளிட்டு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பகுதிகளையும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள எட்டு பகுதிகளையும் இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சி படிப்படியாக உருவாக்கியிருந்தது.
இதைத் தொடர்ந்து 1937 இல் இந்தியாவிலிருந்து பர்மாவை முற்றிலுமாகப் பிரித்தது. இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அதை தனியொரு பிரிட்டிஷ் காலனியாக பிரித்திருப்பதாகவும் அதற்குக் காரணம் கூறியது. இது பின்னாளில் மத அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றே கூறலாம்.
– டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்.
பிரிவினையின் பெரும் துயரங்கள்; பிரிவினையை இலட்சியமாக முன்வைத்த முஸ்லிம் லீக்; பிரிவினை கருத்துக்களை விதைத்த சங்பரிவாரம்; சவார்க்கரை அம்பலப்படுத்தும் அம்பேத்கர்; மத ஒற்றுமையைப் பறைசாற்றிய சில நிகழ்வுகள்; மத்திய காலம் – மத மோதலா? மத ஒற்றுமையா?; இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி பற்றிய ஒரு சமூக மதிப்பீடு; பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய போராட்டங்களும் மத ஒற்றுமையும்; இந்து – முஸ்லிம் மதவாத அரசியலின் தொடக்கம்; பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகள்; பிரிவினை எதிர்ப்பு கருத்து ஏன் தோல்வி அடைந்தது? என்பது உள்ளிட்ட உட்தலைப்புகளில் அவசியமான புகைப்படங்களுடனும் விரிவான விளக்கங்களை அளிக்கிறார், நூலாசிரியர்.
வினவு செய்திப் பிரிவு
நூல்: தேசப்பிரிவினைக்கு காரணம் யார்?
முஸ்லீம மதவாதமா? இந்து மதவாதமா? ஆசிரியர்:பாரத் கபீர்தாசன்
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி: 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் – 3
பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.
110010001111
இந்த எண்களில் உங்களால் ஒரு pattern இருப்பதை கவனிக்கமுடிகிறதா? உங்களால் இதில் ஒரு pattern இருப்பதாய் நம்பவோ, உணரவோ, காணவோ, சந்தேகிக்கவோ முடிகிறதா? உண்மையில் நான் என்போக்கில் கோர்த்த எண்கள் அவை.
ஆனால் நமது மனம் ஏற்கனவே சொன்னதுபோல காணும் எல்லாவற்றிலும் pattern (படிவம்) தேடும் இயல்புடையது. இந்த இயல்புதான் சதியாலோசனை கோட்பாடுகளுக்கான மைய புள்ளி.
அதாவது எதைச்சையாக நடக்கும்/நடந்த நிகழ்வுகளுக்கு/சம்பவங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி ஒரு சித்திரத்தை, கோர்வையான ஒரு கதையை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள். உண்மையில் பலநூறு பேர் சம்மந்தப்பட்ட ஒரு இரகசியத்தை வெளியில் கசியாமல் கட்டிக்காப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இன்னும் சொல்லப்போனால் சாத்தியமே இல்லை.
இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு தெரிந்த இரகசியங்கள் எப்படி என்றாலும் வெளியில் கசிந்தே தீரும் என்பதை நிறுவ algorithm (படிமுறை) எழுதியிருக்கிறார்கள். truth alone நிஜமாகவே triumphs. அதாவது சதியாலோசனை என்று ஒன்று இருக்குமானால் அது வெளிப்பட்டே தீரும். சுபாஷ் சந்திரபோஸ் தப்பி பிழைத்தது உண்மையானால் அது இந்நேரத்திற்கு முழு ஆதாரங்களோடு வெளிப்பட்டிருக்கும்.
அப்படியென்றால் சதியாலோசனை என்றே ஒன்று உலகத்தில் இல்லையா? அரசாங்கங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா? நிச்சயம் இல்லை. நாம் எல்லாவற்றையும் சந்தேகிப்பதும், அலசி பார்ப்பதும் தவறே அல்ல. இன்னும் சொன்னால் நாம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சதியாலோசனை கோட்பாடுகள் உண்மை என்று பின்னால் வெளிப்படலாம்.
மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹான்.
உதாரணத்திற்கு, குஜராத்தில் நடந்தவை திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பது ஒரு சதியாலோசனை கோட்பாடாகத்தான் முதலில் வெளிப்பட்டது. பின்னர் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அதை உறுதி செய்தன. அப்படியென்றால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்? இருக்கிறது. மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதுதான் emotional investment (உணர்ச்சிவயப்பட்ட முதலீடு).
” ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” இந்த பாடலை இளையராஜாவின் பாடல் என்று நம்பி கொண்டுள்ளீர்கள். ஒரு நாள் உங்கள் நண்பர் மச்சி இந்த பாட்டு சங்கர் கணேஷ் போட்டது என்கிறார். அடுத்த நொடியிலிருந்து நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்கிறீர்கள். ஏனென்றால் இது ஒரு தகவல் பிழை சம்பந்தப்பட்டது. அதை திருத்துவதில்/மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்ச்சிவயப்பட்ட முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள்.
“மோதி” ஜி-க்கு முட்டுக்கொடுப்பதில் கில்லாடி கிழக்கு பதிப்பகம் பத்ரி. பொன். ராதாகிருஷ்ணனுடன்
பத்ரி, பானு கோம்ஸ் போன்றவர்கள் பி.ஜே.பி.க்கும்,மோடிக்கும் பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கையின் போது கூட யோசிக்காமல் மணியாட்டுவதற்கு காரணம் அவர்கள் பி.ஜே.பி.ன் மீதும் மோடியின் மீதும் emotional investment செய்திருக்கிறார்கள். மோடியை கோமாளி ஆக்குவது என்பது அவர்களையே அவர்கள் கோமாளி ஆக்கிக்கொள்வதை போன்றது அவர்களுக்கு.
சாதிவெறியர்களுக்கும்/மதவெறியர்களுக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் அதில் emotional investment செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனை ஆதாரம் கொடுத்தாலும். எத்தனை விளக்கம் கொடுத்தாலும், எத்தனை உதாரணங்கள் காட்டினாலும் அவர்களால் அவர்களுடைய நம்பிக்கைகளை மாற்றி கொள்ளமுடியாது.
உங்கள் சந்தேகங்கள்
உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.
அதுபோலத்தான் பாரிசாலன் அவருடைய சதியாலோசனை கோட்பாட்டு நம்பிக்கையின் மீது பெரும் emotional முதலீடு செய்துள்ளார். அவரை கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் அவர் மாறப் போவதில்லை. அவருடைய emotional investmentயை தற்காத்துக்கொள்ள அவர் எந்த எல்லைக்கும் போவார்.
நாம் ஒரு விஷயத்தை சந்தேகிக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட விஷயத்தின் மீது emotional investment செய்யக் கூடாது. உண்மை எப்படி வெளிப்படுகிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் மனத்தோடிருக்க வேண்டும். உங்கள் சந்தேகம் உண்மையென்றும் ஆகலாம் பொய்யென்றும் ஆகலாம்.
அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். உங்கள் சந்தேகங்கள் உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.
ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்றவர்களுடைய பேட்டிகளை பார்த்தவர்களுக்கு அவர்கள் ரொம்பவும் ஆதாரப்பூர்வமாக பேசுவதை போன்ற எண்ணம் ஏற்படும்.
இதற்கு ஒரு காரணம் நம் ஊரில் இருக்கும் பெரும்பான்மையான ஊடவியலாளர்களுக்கு ஒருவரை பேட்டி எடுப்பது என்றால் என்னவென்றெ தெரியாத நிலையில் இருப்பதாலும், பேட்டி எடுப்பது என்றால் கோமாளித்தனமான நாலு template கேள்விகளை கேட்பது என்கின்ற புரிதலில் இருப்பதாலும் ஏற்படுவது. அதை தாண்டி ஒரு முக்கியமான காரணமிருக்கிறது.
நிலவில் மனிதன் கால்பதித்தான் என்கின்ற தகவல் நமக்கு தெரியும். எந்த நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர், கால்பதித்த நாள் போன்ற அடிப்படை தகவல் தாண்டி நமக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. அது நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட சவால்கள், சோதனைகள், பயிற்சிகள், அதற்கு பின் உள்ள அறிவியல், விஞ்ஞானம் எதுவும் நமக்கு தெரியாது. அதை ஒரு தகவலாக பெற்றோம். விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும், ஊடகங்களையும் நம்பினோம். அந்த தகவலை நம்பி ஏற்றுக்கொண்டோம்.
ஆனால் நிலாவில் மனிதன் கால்பதிக்கவில்லை என்பதை நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதற்கு சம்மந்தமான ஆதாரங்களை, தகவல்களை திரட்டி தெரிந்து வைத்திருப்பார்கள். நாம் அவர்களிடம் உரையாடும்பொழுது நிலவில் எப்படி நிழல் தெரிந்தது, நிலவில் எப்படி அமெரிக்க கொடி அசைந்தது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள். அதற்கு நமக்கு பதில்தெரியாத பட்சத்தில் (விஞ்ஞானிகள் இயற்பியல் விதிகளை வைத்து எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துவிட்டார்கள்) நமக்கு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர் சொல்வதில் உண்மையிருப்பதாய் தோன்றும்.
சுருக்கமாக சொன்னால் ஒரு குருட்டுத்தனமான உணர்வு சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்கமுடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.
அதாவது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுக்கு மேலான அரசியல் வாழ்வை கொண்ட, பல்வேறு அரசியல் மாற்றங்களை/நிலைப்பாடுகளை முன்னெடுத்த பெரியாரை ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும்.
ஒரு 24 வயது சிறுவன் அவருடைய 4,5 வரிகளை மேற்கோளிட்டு மாமா பிசுக்கோத்து வாங்கி குடு என்கின்ற தோரணையில் பெரியாரை இலுமினாட்டி என்கிறான். பாரிசாலன் பெரியாரை பற்றி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் யாழினிது குழலினிது என்பர் பாரியின் மழலை சொல் கேளாதவர் என்கின்ற வகைமைக்குள்ளேயே வரும்.
உதாரணத்திற்கு எல்லா கற்பிதங்களையும், எல்லா புனிதங்களையும், எல்லா சமூக நிறுவனங்களையும் கேள்விக்குட்படுத்திய/சோதனைக்கு உட்படுத்திய ஒருவரை பாரி தம்பி நிர்வாணமாக இருக்கும் ஒரு secret society இரகசிய சங்கத்தை பெரியார் அவருடைய ஐரோப்பா பயணத்தில் சந்தித்தார் அப்பனா அவரு இலுமினாட்டிதான என்கிறார்.
அதாவது to begin with he got no clue what periyar stood for in the first place. பெரியாரை பற்றிய, அவருடைய வாழ்வியல் முறைமை பற்றிய அடிப்படையான புரிதலே இல்லாத காரணத்தால்தான் பாரிசாலன் வகையறாக்களுக்கு பெரியார் இலுமினாட்டியாக தெரிகிறார். ஹீலர் பாஸ்கரை பொறுத்தவரை அவர் சொல்வதை அவரே நம்புகிறாரா என்பதில் எனக்கு தீவிரமான சந்தேகமிருக்கிறது.
அவருடைய பேச்சு என்பது சினிமா நடிகர்களின் புகைப்படங்களை வைத்து கிளி ஜோசியம் சொல்லுகிறவரை ஒத்துள்ளது. பத்து ரூபாய் குடுத்து விட்டு நகர்ந்து விடலாம், ஆனால் சிறுவன் பாரிக்கு அவர் சொல்வதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கையிருப்பதை உணரமுடிகிறது.
அவருடைய ஓவ்வொரு பேச்சிற்கும், பேட்டிக்கும் கிடைக்கும் கவனிப்பும், ஆதரவும் மிகுந்த அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது. ஏற்கனவே சொன்னதைப்போல அடிப்படையான அறிவியலுக்கு, தர்க்கத்துக்கு (reasoning) ஒரு தலைமுறையே பயிற்றுவிக்கப் படவில்லை என்பதைத்தான் பாரிசாலன் அடிப்பொடிகள் நமக்கு உணர்த்துகிறார்கள்.
கோமாளி ரஜினியின் பாபா முத்திரையை மாபெரும் இலுமினாட்டி சதியாக கப்சா விடும் நாம் தமிழர் சீமான்!
ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும் சீமான் ஒரு செய்தி தொலைக்காட்சியில் வந்து ரஜினிகாந்தை இலுமினாட்டி என்று சொல்லும் கோமாளித்தனத்தை நிகழ்த்தும் அளவிற்கு இந்த இலுமினாட்டியை நம்பும் பொடியன்கள் தாக்கம் வளர்ந்திருக்கிறது. இது மிகுந்த கவலைக்கும், அச்சத்திற்கும் உரியது.
இது போன்ற சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களும், cult group (வெறி ஈடுபாட்டு குழுக்கள்) போல செயல்படுபவர்களும் இதுவரை மானுட சமூகத்திற்கு பேரழிவையே விளைவித்திருக்கிறார்கள். இவர்களிடம் நாம் மிகுந்த கவனத்தோடும், விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.
பாரிசாலன், பாஸ்கர் போன்ற ஆட்களை நாம் எப்படித்தான் கையாளுவது?
மனவியல் நிபுணர்கள் இவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தீவிரமாக அவர்களை மறுக்கிறீர்களோ அவர்கள் அதே தீவிரத்தோடு தங்களின் நம்பிக்கைகளை பற்றிக்கொள்வார்கள். அவர்களோடு நீங்கள் ஒருபோதும் விவாதித்து வெல்ல முடியாது. ஒரு போதும் அவர்களிடம் விவாதித்து அவர்களை மீட்க முடியாது. அவர்களிடம் நீங்கள் உரையாடும் நிலை வரும் பொழுது வெறும் அப்பட்டமான உண்மைகள்/தரவுகளை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுங்கள்.
உதாரணத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியபின் இத்தனை சதவிகிதமாக இருந்த போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை இத்தனை சதவீகிதமாக குறைந்துள்ளது என்கின்ற plain fact-டை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விடுங்கள். இது தொடர்ந்து நடக்கும் பொழுது ஒருவேளை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கு மனதில் ஒரு மாற்றம் நிகழலாம் என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால் ஒரு கண்மூடித்தனமான உணர்ச்சி சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்க முடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.
பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.
(முற்றும்)
பின் குறிப்பு :வெவ்வேறு சமயங்களில் நான் சதியாலோசனை கோட்பாடுகளை பற்றி பார்த்தவை,கேட்டவை,படித்தவை கொண்டும், why do people believe in conspiracy theories என்ற கேள்விக்கு google சுட்டிய முதல் 10 கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த கட்டுரை எழுதப்பட்டது.
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர். நன்றி : தி டைம்ஸ் தமிழ்