Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 426

என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 3

தொண்டு நிறுவனங்கள் பிரச்சனையை பிரித்துப் பார்க்கும் போக்கு

ப்போது இவர்களை வெளிநாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வர உதவி செய்த தொண்டு நிறுவனங்கள் பற்றி பார்க்கலாம். இவங்க பாதிக்கப்பட்ட நிறைய பேரை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர்றாங்க. கொண்டு வந்து உதவி செய்றாங்க.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்காங்க. ஒரு வேளை ஒருவர் வெளிநாட்டில் இறந்து போனாலும் உடலை கொண்டு வர உதவி பன்றாங்க. இந்த தொண்டு நிறுவனங்கள் செய்வதை கண்டிப்பா பாராட்டணும்.

ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலுமே தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு மாற்றாக இருக்க முடியாது. இது ஒரு எல்லாருக்குமே தெரிந்த ஒன்று.

ஒரு விசயத்த எடுத்தால் அந்த விசயத்துக்கு மூலமா இருக்கிற ஒரு காரணத்தை போய் தீர்க்கிறதுதான் நோய்க்கு மருந்தா இருக்கும். இப்போ எனக்கு அடி பட்டிருச்சு. அடிக்கு மருந்து மட்டும் போட்டிட்டிருந்தா, அடி வேற எங்கயும் பரவாம இருக்க மருந்து மட்டும் போட்டா போதாது. அந்த அடி ஏன் பட்டுச்சு, இனிமே மத்தவங்களுக்கு படாம இருக்கனும்.

அதுக்கான முயற்சிகளில் இந்தத் தொண்டு நிறுவனங்கள் எப்போதுமே இறங்கிறதே கிடையாது. பயமா அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு வரும் பணமே இந்த மாதிரி குற்றவாளிங்க கிட்ட இருந்து வருதா என்ற ஒரு கேள்வியை நான் இங்க எழுப்புகிறேன்.

இது இரண்டுமே காரணமாக இருக்கலாம். சில தொண்டு நிறுவனங்கள் பயத்தின் காரணமாக விலகி நிற்கலாம். பெரிய தொண்டு நிறுவனங்கள் அவங்களுக்கு வர வேண்டிய நிதியே அங்க இருந்து வர்றதுனால வாங்கிகிட்டு பிரச்சனையை பெரிசாக்காம நான்கு பேருக்கு தெரியாம முடிக்கிறதா இருக்கலாம்.

படிக்க :
சிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி : மாற்றா ? ஏமாற்றா ?

உதாரணமா வெளிநாட்டில் இருந்து மீட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் இது மாதிரி ஒருத்தர் அங்க மாட்டிக்கிட்டார்ன்னு தெரிஞ்சா அவங்க குடும்பத்துக்கு ஆதரவு, அவரை கொண்டு வர்ரதுக்கான ஆவணங்கள், தகவல் தொடர்பு இது மாதிரி நிறைய விசயங்கள்ள உதவி பண்றாங்க. உதவி செய்து கொண்டு வர்ராங்க.

ஆனா கொண்டு வந்த பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சட்ட உதவி, “இது மாதிரி செய்திருக்கீங்க, உங்களுடைய தவறு என்ன? ஏஜென்சியோட தவறு என்ன? ஏஜென்சியை தண்டிக்க என்ன செய்யணும், உங்களுடைய சட்ட உதவிக்கு அடுத்த தேவைக்கு என்ன செய்யணும்.” என்ற உதவியை கொடுக்கிறது கிடையாது.

வந்தவுடனே ஒரு பேச்சு வார்த்தை, புள்ளி விபரம் கணக்கு போட்டுக் கொள்கிறார்கள். போலீசுக்கு தகவல் சொல்றாங்க. அதுக்கு அப்பறம் அதைத் தொடர்ந்து கவனித்து “இது மாதிரி குற்றத்திற்கு என்ன ஆச்சு அது என்ன ஆச்சு? இதை பார்த்தீங்களா? அதை பார்த்தீங்களா? என்கிற ஆலோசனையும். சட்ட உதவியும் கொடுக்கிறதும் கிடையாது. (அதை மட்டும் செய்வதற்கு இன்னொரு தொண்டு நிறுவனம் இருக்கலாம், அவர்கள் வெளிநாட்டில் இருந்து மீட்பது பற்றி கவலைப்படுவது கிடையாது)

அவங்கள கொண்டு வந்து வீட்ல சேர்த்து ஒன்று இரண்டு நாட்களில் அவங்க கடமையை முடிச்சுக்கிறாங்க. அதுக்கப்பறம் அடுத்த கேஸ் பார்க்க போயிடறாங்க. இது சரியா என்பது கேள்வி.

ஒரு புற்றுநோயாளி என்றால் ஒரு நாள் வயிற்று வலி வரும். வயித்து வலிக்கு மருந்து ஒரு பெயின் கில்லர் மட்டும் கொடுத்தா போதுமா? அந்த புற்றுநோயாளியை குணப்படுத்த வேண்டாமா? அவருக்கு தீர்வு கிடைக்க வேண்டாமா?

இந்த வகையில வந்து தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது கிடையாது. அது ஏன் என்பதற்கு மேலே இரண்டு காரணங்களைச் சொன்னேன்.

போலீசு யாருக்கு?

இப்போது திரும்பிகொண்டு வரப்பட்ட 6 பேர் வந்த அன்றுதான் நம்ம மாண்புமிகு துணை முதலமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சரை பார்க்கிறதுக்காக ஏர்போர்ட் போனார். இந்த 6 பேரை பார்க்கிறதுக்காக வரும் போது போலீசுகிட்ட ஸ்பெசல் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தோம் வரேன்னு சொல்லியிருந்தாங்க ஆனா கடைசியில வரவே இல்லை. “தகவலை கேட்டு வாட்ஸ் ஆப்ல (whatsapp) அனுப்பிருங்க நாங்க பார்த்துக்கிறோம்” அப்பிடீன்னு சொல்லி விலகி போயிட்டாங்க.

இங்க எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுது? பாதிக்கப்பட்ட அதாவது ஒரு தவறு ஒரு குற்றம் அந்த குற்றத்தால பாதிக்கப்பட்ட ஒரு 6 பேர் நாடு கடந்து வர்ராங்க. அவங்களுக்கு கவனம் குடுக்கனுமா இல்ல இங்க இருக்கிற ஒரு அமைச்சர் ஒரு சொந்த விசயத்துக்காக டெல்லி போறார். எதுக்கு கவனம் குடுக்கனும். இங்க போலீசுக்கு வந்து… அந்த முன்னுரிமை தெரியலையா இல்ல அந்த முக்கியத்துவம் தெரியலையான்னு தெரியலை.

ஒருத்தன் இங்க வந்து ஏமாந்து போயி குடும்பமே நிர்கதியா நிற்கும் நிலையில் வந்துட்டிருக்கான் இவனை வந்து கவனிக்க வேண்டியதுதான் போலீசு துறை. பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியது தான் முதல் கடமை, இரண்டாவது தான் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு. ஆனா இங்க பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதோ, இல்லை அவர்களுக்கு ஆலோசனை சொல்லி உதவி செய்வதை விட அரசாங்கத்துக்கு பாதுகாப்பு குடுக்கிறதுக்குத்தான் போலீசுக்கு முதல் கடமையா இருக்கு, இந்த விசயத்தில. கடைசி வரை போலீஸ் வரவேயில்லை.

ஆசைக்கு யார் வெளிநாடு போகிறார்கள்?

கேசு எடுக்கும் போது போலீசு சொன்னாங்க இல்லையா , “உங்க ஆசைக்கு நீங்க போய் மாட்டிகிட்டீங்க”ன்னு.

இப்போ நீரவ் மோடியை எடுத்துப்போம், மல்லையாவ எடுத்துப்போம். இவங்க எல்லாம் கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு அங்க போய் உட்கார்ந்திருக்காங்க. அவங்க பேராசையால் பெரும் தவறுகள் இழைத்து விட்டு நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள்.

“உங்க ஆசைக்கு நீங்க போய் மாட்டிகிட்டீங்க” என பாதிக்கப்பட்டவர்களை குற்றம்சாட்டும் போலீசு.

ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடும்பத்தை காப்பாத்துறதுக்காக கையில் இருக்கும் பணத்தை குடுத்துட்டு போறாங்க. அங்க சம்பாதிக்கவும் முடியாம, உயிரை காப்பாத்திக்கிறதே பெரிய பிரச்சனையா வந்திருக்காங்க. இவங்களை போய் ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்வதுதான் போலீசின் இயல்பு.

சமீபத்துல கார்த்திக் ராஜ் அப்பிடின்னு திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த ஒருத்தர்  மலேசியால இறந்துட்டார். அவரோட பாஸ்போர்ட்-ன் கடைசி ஒரு பக்கம் மட்டும் வச்சு மருத்துவமனை வாசல்ல போட்டுட்டு போயிட்டாங்க. அதுக்கப்பறம் உலக மனித சங்கத்தில அவரை எடுத்து அவரோட குடும்பத்தை கண்டு பிடிச்சு, தகவல் போய் சேர்வதற்குள் 2 நாள் ஆகி விட்டது. அதற்குள் அவருக்கு ஈமச் சடங்கு எல்லாம் முடிச்சிட்டாங்க.

கடமை தவறும் அரசு

இது மாதிரி குற்றங்கள் தொடர்ந்து நடந்திட்டுதான் இருக்கு. அரசு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு உதவியோ இல்ல அடுத்து அவங்களுக்கான ஒரு ஆலோசனை என்ன செய்யலாம் என்ற மாதிரி திட்டமிட வேண்டும்.

இன்னோன்னு அரசு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டும் போது உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது.

படிக்க :
சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்

என் கைய கால உடைச்சுட்டு “உனக்கு பிரியாணி பாக்கெட் குடுத்திட்டேன், கை கால் இழந்ததுக்காக உனக்கு ஒரு லட்சம் குடுத்திட்டேன்.” என்று சொன்னால் என்ன பொருள். “கை கால் உடைஞ்சதுக்கப்பறம் நான் ஒரு லட்சம் வச்சு என்ன பண்ண முடியும். வச்சு பாத்திட்டிருக்க முடியும்… ஒன்னும் செய்ய முடியாது.”

அதுமாதிரி திட்டங்கள் வேலை இல்லாத இளைஞர்களை உருவாக்குவதாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று இது மாதிரி போய் பணத்தை குடுத்து ஏமாறுவார்கள், இல்லை பணத்தை ஏமாத்துற மோசடிகாரனாக மாறுவான்.

ஏன்னா அரசாங்கம் வேலை வாய்ப்பு உருவாக்கும் வாய்ப்புகளை பிரித்து பரவலாக்கவில்லை. வளர்ச்சியை பரவலாக்கினா எல்லா ஊர்லயும் வேலை வாய்ப்புகள் இருக்கும். இப்போது வேலை வாய்ப்புகள் பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன.

(தொடரும்)

– சரவணன்
நன்றி : new-democrats

முந்தைய பாகங்கள் :

1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
2.
 
விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?

ரஷ்ய புரட்சியின் 101-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் !

சியப் பாட்டாளிகளின் உன்னத சாதனைகளை உலகுக்கு பறைசாற்றிய தினமான நவம்பர் புரட்சி நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த புரட்சிகர அமைப்புகள் கொண்டாடின. அந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

*****

கோத்தகிரியில்…

கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக நவம்பர்-7 ரஷ்ய புரட்சி நாள் விழா கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், வாகனப்பிரிவு தோழர்கள் உட்பட 35பேர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் அவர்கள் கொடியேற்றி உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் தோழர் பாலன் சிறப்புரையாற்றினார். அழைப்பாளராக மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர்களது உரையில் ரஷ்ய புரட்சி வரலாறும், தொழிலாளி வர்க்கத்தின் மீதான  தற்போதைய அடக்குமுறைகளுக்கு விடிவு போராட்டங்களே! என்றும் விளக்கினார்கள்.

இறுதியில் நீ.அ.தொ. ச வாகனப்பிரிவு தலைவர் தோழர் சுப்பிரமணி இனிப்புகள் வழங்கினார்.

நமது நாட்டிலும் ஒரு புரட்சியை உருவாக்க போராட வேண்டியதன் அவசியத்தையும், அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்ற உற்சாகத்தை தோழர்களுக்கு இந்த நிகழ்வு வழங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
(இணைப்பு) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம்.

*****

பென்னாகரத்தில்…

வம்பர் 7 சூளுரை! மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !”

என்ற தலைப்பின் கீழ் 7.11.2018 அன்று காலை 10 மணியளவில் புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி சார்பாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கி, நவம்பர் புரட்சி இந்தியாவிற்கு தேவை என்பதனை விளக்கி பேசினார்.

இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தோழர்கள் மாணவர்கள் என அனைவரும் உற்சாகத்துடன் கலுந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம், மாவட்டங்கள்
தொடர்புக்கு: 63845 69228

*****

வேலூரில்…

ஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாளான நவம்பர் 7, அன்று அந்நாளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு  சங்கங்களான தட்டுவண்டி, தரைக்கடை வியபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் செங்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது.

மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் மற்றும் அடுக்கம்பாறை ஆகிய இடங்களில் கிளை சங்க தலைவர்கள் கொடி ஏற்றினர். இதில் மாவட்ட துணைத்தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் கலந்துக்கொண்டு இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சுரண்டலையும், அதற்கு துணையாக உள்ள பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தியும், அதை எதிர்த்து போராட வேண்டியதின் அவசியத்தையும் பேசினர்.

இது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் உணர்வூட்டும் வகையில் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,
வேலூர் மாவட்டம்.

*****

கடலூரில்…

சிய சோசலிச புரட்சியின் 1010-வது ஆண்டை முன்னிட்டு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக, பாட்டாளிவர்க்க ஆசான் தோழர் லெனின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.மேலும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தோழர்கள் ரசியப் புரட்சி பற்றியும் அதன் மகத்தான சாதனைகள் குறித்தும் உரையாற்றினர். மேலும் இந்திய மக்களை மரணக்குழிக்கு தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் என சூளுரைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். பேச : 97888 08110.

*****

சென்னையில்…

க்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் ! என்ற முழக்கத்தின் கீழ் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பறைமுழக்கத்துடன் கொடியேற்றி ரசியப் புரட்சிநாள் கொண்டாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.

_______________

சென்னை மதுரவாயல் பகுதியிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பிலும் நவம்பர் புரட்சிநாள் விழா பறைமுழக்கத்துடன் செங்கொடி ஏற்றி நடத்தப்பட்டது.

இதில் சிறுவர்கள், மாணவர்கள் – இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் புது உற்சாகத்தை வழங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

மனிதனை நம்பக்கூடாது என்பது கேவலமான விஷயமே !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 18

அன்று மாலை ஹஹோல் வெளியே சென்ற பிறகு, தாய் விளக்கையேற்றிவிட்டு, ஒரு காலுறை பின்ன முனைந்தாள். பின், உடனேயே எழுந்திருந்து, சஞ்சல மனத்தோடு அறைக்குள் மேலும் கீழும் நடந்தாள். சமையல் கட்டில் நுழைந்தாள். கதவைச் சாத்தினாள். புருவங்களைச் சுருக்கி நெரித்தவாறே திரும்பி வந்தாள். ஜன்னலின் திரைகளை இழுத்து மூடிவிட்டு, அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். மீண்டும் மேஜைமுன் சென்று அமர்ந்தாள்.

மாக்சிம் கார்க்கி

அவள் எவ்வளவுதான் முன்னேற்பாடுகள் செய்துவிட்டு உட்கார்ந்த போதிலும், அவள் கண்கள் மட்டும் அக்கம் பக்கம் பார்த்துத் திருதிருக்க விழிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. புத்தகத்தைத் திறந்து எழுத்துக்களை முணுமுணுக்கத் தொடங்கினாள். தெருப்பக்கத்தில் ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும் அவள் உடனே திடுக்கிட்டாள், புத்தகத்தைப் பட்டென்று மூடினாள். காதுகளை தீட்டிவிட்டுக்கொண்டாள்; பிறகு மீண்டும் அவள் புத்தகத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தாள். கண்ணைத் திறந்தும் மூடியும் வாய்க்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

“நாம் வாழும் இந்த நிலத்தில்…”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. விருட்டென்று எழுந்து புத்தகத்தை அலமாரியில் செருகிவிட்டுக் கலக்கத்துடன் கேட்டாள்.

”யார் அங்கே”

”நான்தான்”

ரீபின் தன் தாடியைத் தட்டி கொண்டு வந்து சேர்ந்தான்.

”நீ யாரங்கே?” என்று முன்பெல்லாம் கேட்க மாட்டாயே, தனியாயிருக்கிறாயா? ஹஹோலும் இருப்பான் என்று நினைத்தேன். அவனை நான் இன்று பார்த்தேன்; சிறைவாசம் இவனைக் கெடுக்கவில்லை” என்றான் ரீபின்.

அவன் கீழே உட்கார்ந்து தாயின் பக்கமாகத் திரும்பினான்.

”சரி. நான் வந்த விஷயத்தைப் பேசலாம்”

அவனது கவனமிக்க புதிரான பார்வை அவள் உள்ளத்திலே புரியாத பயத்தை எழுப்பியது.

“பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்று ஆழ்ந்து கரகரக்கும் குரலில் சொன்னான் அவன். “பிறப்பதற்கும் பணம் வேண்டும்; சாவதற்கும் பணம் வேண்டும். புத்தகம் போடவும், பிரசுரம் வெளியிடவும் பணம் வேண்டும். இந்தப் புத்தகங்களுக்கு எல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது என்பது உனக்குத் தெரியுமா?”

“இல்லை. எனக்குத் தெரியாது” என்று அமைதியுடன், எனினும் ஏதோ சந்தேக உணர்ச்சியுடன் சொன்னாள் தாய்.

“எனக்கும் தெரியாது. சரி, இன்னொரு விஷயம். இதையெல்லாம் யார் எழுதுகிறார்கள்?”

“படித்தவர்கள்…”

“ஓஹோ, படித்த சீமான்கள்தானா?” என்றான் ரீபின். அவனது தாடி வளர்ந்த முகம் திடீரெனச் சிவந்தது. “சொல்லப்போனால், இந்தச் சீமான்கள் புத்தகங்களை எழுதி அதை வெளியே பரப்பிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எழுதிய புத்தகங்களோ சீமான்களுக்கு எதிராக இருக்கின்றன. நீயே இதை யோசித்து எனக்கு விளக்கிச் சொல்லு, அவர்கள் எதற்காகத் தங்கள் பணத்தைப் பாழாக்கிப் புத்தகம் எழுத வேண்டும்? அந்தப் புத்தகங்களைக் கொண்டு சாதாரண மக்களைத் தங்களுக்கு எதிராகவே ஏன் தூண்டிவிட வேண்டும்? இல்லையா?”

தாய் படபடவென்று இமை கொட்டி பயந்து போய்க் கூச்சலிட்டாள். “நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”

”ஆஹா!” என்று கூறியவாறு அவன் ஒரு கரடியைப் போலத் திரும்பி உட்கார்ந்தான். “அப்படிச் சொல்லு, நானும், உன்னைப் போலத்தான், இந்த நினைப்பு என் மனதில் பட்டதோ இல்லையோ, உடனே என் உடம்பெல்லாம் குளிர்ந்து போயிற்று! ஆமாம்.”

“நீ என்ன, ஏதாவது புதிதாகக் கண்டு பிடித்திருக்கிறாயா?”

”ஆமாம். வெறும் ஏமாற்று” என்றான் ரீபின்.

“நம்மையெல்லாம் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நான் உணர்கிறேன். எனக்கு ஒன்றும் விவரம் தெரியாது. என்றாலும், இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை! துரோகச் செயல்! அதுதான் சங்கதி! என்னுடைய படித்த சீமான்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். ஆனால் நானோ உண்மையைத்தான் நாடுகிறேன். இப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. இனி நான் இந்தச் சீமான்களைப் பின்பற்றவே மாட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது, இவர்கள் என்னைக் கீழே தள்ளி என் எலும்புகளை ஒரு பாலம் மாதிரி உபயோகித்து அதன் மீது நடந்து சென்றுவிடுவார்கள்…”

அவனது வார்த்தைகள் தாயின் உள்ளத்தை ஒரு பாப சிந்தையைப் போல் பற்றிப் பிடித்தது.

“அட கடவுளே’ என்று வருத்தத்தோடு சொன்னாள் அவள், ”பாஷாவுக்குக் கூடவா இது புரியாமல் போயிற்று! மற்றவர்கள் எல்லோருக்கும் கூடவா…”

அவளது கண் முன்னால் உறுதியும் நேர்மையும் நிறைந்த முகங்கள் – இகோர், நிகலாய் இவானவிச், சாஷா முதலியோரின் முகங்கள் தோன்றி மறைந்தன. அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

“இல்லையில்லை” என்று தலையைக் குலுக்கிக் கொண்டே சொன்னாள் அவள். “என்னால் இதை நம்பமுடியாது! அவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள்”

”நீ யாரைச் சொல்லுகிறாய்?” என்று ஏதோ யோசித்தவாறே கேட்டான் ரீபின்,

“அவர்கள் எல்லோரையும்தான், நான் கண்டறிந்த அத்தனை பேரையும்தான்”

“அம்மா, நீ இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இன்னும் எட்டிப் பார்க்க வேண்டும்” என்று தலையைத் தொங்க விட்டுக்கொண்டே சொன்னான் ரீபின். ”நம்மோடு சேர்ந்து உழைக்கிறார்களே, அவர்களுக்கே இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம், அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நம்பிக்கொண்டிருப்பதே உண்மை என்கிறார்கள். ஆமாம், அது அப்படித்தான். ஆனால் அவர்களுக்குப் பின்னால் மற்றவர்கள் நிற்கலாம். தங்கள் சுயநலத்தையே பெரிதாக மதிக்கும் மனிதர்கள் நிற்கலாம். ஒரு மனிதன் தனக்குத்தானே எதிராக வேலை செய்வானா?”

பிறகு அவன் ஒரு விவசாயியின் கடுமையான நம்பிக்கையோடு பேசினான்:

“இந்தப் படித்த சீமான்களால் எந்த நன்மையும் என்றுமே விளையப் போவதில்லை.”

”நீ என்ன செய்வதாக நினைத்திருக்கிறாய்?” என்று மீண்டும் சந்தேகவயப்பட்டவளாய்க் கேட்டாள் தாய்.

“நானா?” என்று அவளைப் பார்த்துக் கூறிவிட்டு மௌனமானான் ரீபின். பிறகு சொன்னான். “இந்தச் சீமான்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. அதுதான் சங்கதி.”

மீண்டும் அவன் சோர்ந்து குன்றி, மெளனமானான்.

”நான் இந்தத் தோழர்களோடு சேர்ந்து உழைக்க விரும்பினேன். அந்த மாதிரி வேலைக்கு நான் லாய்க்குத்தான். மக்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்போதோ நான் விலகிச் செல்கிறேன். எனக்கு நம்பிக்கை அற்றுவிட்டது. எனவே நான் போகத்தான் வேண்டும்.”

அவன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

“கிராமங்களுக்கும் நாட்டுப்புறங்களுக்கும் போகப் போகிறேன். போய், அங்குள்ள சாதாரண எளிய மக்களைத் தூண்டிவிடப் போகிறேன். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களே வழிதேடி முனைய வேண்டும். அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால், தங்கள் வழியைத் தாமே கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதுதான் என் வேலை. அவர்கள் தம்மைத் தாமே நம்பவேண்டும். அவர்களுக்கு உதவுவதெல்லாம் அவர்களது சொந்த அறிவுதான் ஆமாம்!”

அவள் அந்த மனிதனுக்காக அனுதாபப்பட்டாள்; அவன் போக்கைக் கண்டு அஞ்சவும் செய்தாள். எப்போதுமே அவள் மனதுக்குப் பிடிக்காதிருந்த ரீபின். இப்போது, ஏதோ ஒரு புரியாத காரணத்தால், அவள் அன்புக்கு உரியவனாகத் தோன்றினான். எனவே அவள் அவனிடம் மிருதுவாகச் சொன்னாள்.

“அவர்கள் உன்னை பிடித்துக் கொண்டுபோய் விடுவார்கள்.”

ரீபின் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

”அவர்கள் என்னைக் கைது செய்வார்கள்; பிறகு விட்டுவிடுவார்கள். அதன்பின் நான் என் வேலையை மீண்டும் தொடங்குவேன்.”

“முஜீக்குகளே(1) உன்னைக் கட்டிப்போட்டு விடுவார்கள், சிறையில் தள்ளுவார்கள்.”

”நான் சிறைவாசம் அனுபவிப்பேன்; பிறகு வெளியேயும் வருவேன். மீண்டும் என் வேலையையே தொடங்குவேன். முஜீக்குகள் என்னை மீண்டும் ஒருமுறை, இருமுறை, பலமுறை கட்டிப் பிடித்துச் சிறைக்கு அனுப்புவார்கள். அதன் பிறகுதான் என்னைக் கட்டிப்போடத் தயங்கி நின்று, நான் சொல்வதை அவர்கள் காதில் வாங்குவார்கள்; உணரத் தொடங்குவார்கள். ”என்னை நம்ப வேண்டாம் ஆனால் நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்” என்பேன் நான். அவர்கள் கேட்கமட்டும் தொடங்கிவிட்டால், அப்புறம் என்னை நம்பவும் தொடங்குவார்கள்.”

அவன் மிகவும் மெதுவாகவே பேசினான்; ஒவ்வொரு வார்த்தையையும் எடை போட்டுத் தரம் பார்த்து நிதானமாகப் பிரயோகிப்பது மாதிரி தோன்றியது.

“அண்மையில் நான் நிறையக் கேள்விப்பட்டேன். ஏதோ கொஞ்சம் புரிந்துகொண்டேன்…”

“மிகயீல் இவானிவிச்! இத்துடன் நீ முடிந்து தொலையப் போகிறாய்” என்று தலையை வருத்தத்தோடு அசைத்துக் கொண்டு சொன்னாள் தாய்.

அவன் தனது ஆழ்ந்த கரிய கண்களால் எதையோ வினவுவது போலவும் எதிர்பார்ப்பது போலவும் அவளைப் பார்த்தான். அவனது பலம் பொருந்திய உடம்பு முன்புறமாகக் குனிந்தது. அவனது கைகள் நாற்காலியை இறுகப் பற்றின. அவனது பழுப்பு முகம் தாடிக்குள்ளாக வெளிறியதாய்த் தெரிந்தது.

“கிறிஸ்து நாதர் விதையைப் பற்றிச் சொன்ன விஷயத்தை எண்ணிப் பார். விதையை உற்பத்தி பண்ணுவதற்காக பழைய விதை செத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடாது. நான் ஒரு சாமர்த்தியமான கிழட்டுக் குள்ளநரிப் பிறவி!”

அவன் நிலைகொள்ளாமல் அசைந்து கொடுத்தான். பிறகு நிதானமாக நாற்காலியை விட்டு எழுந்தான்.

“நான் சாராயக்கடைக்குச் சென்று அங்குள்ளவர்களோடு சிறிது நேரம் பொழுது போக்குவேன். அந்த ஹஹோல் இன்னும் வருகிற வழியாய்க் காணோம். அவன் தன் பழைய வேலைக்குக் கிளம்பிவிட்டான் போலிருக்கிறது.”

“ஆமாம்” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள் தாய்.

“நல்லது. நீ அவனிடம் என்னைப்பற்றிச் சொல்லு…”

அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒன்றாகவே சமையற்கட்டுக்குப் போனார்கள். ஒருவரையொருவர் முகம் கொடுத்துப் பார்க்காமலே ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

“சரி, நான் வருகிறேன்.”

“போய்வா. நீ தொழிற்சாலை வேலைக்கு எப்போது கணக்குக் கொடுக்கப் போகிறாய்?”

“ஏற்கெனவே கொடுத்தாயிற்று.”

”எப்போது போகிறாய்?”

”நாளைக்கு அதிகாலையில். சரி வருகிறேன்.”

போகவே மனமற்றவனைப்போல் அவன் தயங்கித் தயங்கித் தடுமாறி வாசல் நடையைக் கடந்தான். ஒரு நிமிஷ நேரம் அவனது ஆழ்ந்த காலடியோசையைக் காதில் வாங்கியவாறே வாசலில் நின்றாள் தாய். அதே சமயம் அவளது இதயத்தின் சந்தேகங்களும் அவள் காதில் ஒலி செய்து கொண்டிருந்தன. அவள் அமைதியாகத் திரும்பி அடுத்த அறைக்குள் வந்தாள்; ஜன்னல் திரையைத் தூக்கிக் கட்டினாள். ஜன்னலுக்கு வெளியே இருள் அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து கிடந்தது.

“நான் இருளிலே வாழ்கிறேன்” என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்,

அந்தப் பலமும் திடமும் நிறைந்த கெளரவமான அந்த முஜீக்குக்காக அவள் வருத்தப்பட்டாள். அனுதாப்பட்டாள்.

அந்திரேய் ஒரே குதூகலத்தோடு திரும்பி வந்தான்.

தாய் அவனிடம் ரீபனைப் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டுவிட்டு அவன் சொன்னான். “போனால் போகட்டும். கிராமங்கள்தோறும் அலைந்து திரிந்து நியாயத்தைப் பற்றி அவன் கூச்சல் போடட்டும். அங்குள்ள மக்களை அவன் தட்டியெழுப்பட்டும், நம்மோடு ஒத்துழைப்பதென்பது அவனுக்குக் கொஞ்சம் சிரமம்தான். முஜீக்கின் கருத்துக்கள்தான் அவன் மூளை நிறைய இருக்கின்றன. நம்முடைய கருத்துக்கள் அவன் மண்டையில் ஏறாது. அதற்கு இடமும் கிடையாது.”

“அவன் படித்த சீமான்களைப் பற்றிப் பேசினான். அவன் சொன்னதில் ஏதோ கொஞ்சம் உண்மையிருப்பது போலத்தான் தெரிகிறது” என்று மிகவும் பதனமாகச் சொன்னாள் தாய். ”அவர்கள் உங்களை ஏமாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!”

“அம்மா, அவர்கள் உங்களை ஏமாற்றிக் கெடுக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல். “அம்மா, நம்மிடம் பணம் மட்டும் இருந்தால்… இன்னும் நாம் பிறர் தரும் பணத்தைக் கொண்டுதான் நம் காரியங்களைச் செய்கிறோம். உதாரணமாக, நிகலாய் இவானவிச்சுக்கு எழுபத்தைந்து ரூபிள்கள் மாதச் சம்பளம், அதில் அவன் நமக்கு ஐம்பது ரூபிள்களை நன்கொடையாகத் தருகிறான். அவன் மாதிரிதான் மற்றவர்களும் அரைப்பட்டினி கால் பட்டினியாகக் கிடந்து படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட, காலும் அரையுமாக வசூலித்த காசுகளை நமக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கிறார்கள். சொல்லப்போனால், சீமான்களில் எத்தனையோ ரகம்; சிலர் விட்டுப்பிரிவார்கள்; சிலர் ஏமாற்றுவார்கள். அவர்களில் மிகவும் நல்லவர்கள்தான் நம்முடனே சேர்ந்து நமது கொள்கைக்காகப் பாடுபடுவார்கள்…”

அவன் தன் இரு கைகளையும் தட்டிக் கொண்டு ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தான்.

”நம்முடைய இறுதி வெற்றிக்கு நாம் எவ்வளவோ தூரம் போயாக வேண்டும். எனினும் மேதின விழாவைச் சிறிய அளவிலாவது கொண்டாடுவோம், மகிழ்ச்சியாயிருக்கும்.”

ரீபினுடைய பேச்சினால் தாயின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த கவலை அவனது உற்சாகத்தினால் துடைத்தெறியப்பட்டது. அந்த ஹஹோல் தன் தலைமயிரைக் கலைத்துக் கோதியபடி, தரையையே பார்த்தவாறு மேலும் கீழும் நடந்தான்.

”சமயங்களில் இதயத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி நிரம்புகிறது, தெரியுமா உங்களுக்கு? எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களெல்லாம் தோழர்கள் என்று தோன்றும். அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே நெருப்பாய் எரிவார்கள். அவர்கள் அனைவரும் நல்லவர்களாகவும், குதூகலமும் அன்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். வாய்ப் பேச்சின் உதவியின்றியே ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள். அவர்கள் கோஷ்டி கானமாய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எனினும் ஒவ்வொருவரின் இதயமும் அவரவர் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கும். அந்த கீத நாதமெல்லாம் சிற்றாறுகளைப் போல் ஒரே ஜீவநதியில் சங்கமமாகும். அந்த ஜீவநதி விரிந்து பெருகி சுதந்திர வேகத்துடன் செல்லும். இறுதியாக, புதிய வாழ்க்கை என்னும் சந்தோஷ சாகரத்தோடு கலந்து சங்கமித்து ஒன்றாகிவிடும்!”

தாய் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். தான் லேசாக அசைந்து கொடுத்தாலும் அவனது சிந்தனையோ பேச்சோ அறுபட்டு நின்றுபோகக்கூடும் என அவள் அஞ்சினாள். அவள் எப்போதுமே மற்றவர்களைவிட அவனையே மிகவும் கூர்ந்து கவனித்துக் கேட்பாள்; அவனும் மற்றவர்களைப் போலல்லாது, எளிய, சாதாரண வார்த்தைகளையே உபயோகித்துப் பேசுவான். எனவே அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்துக்குள் நேராகச் சென்று புகுந்து பதிந்துவிடும். எதிர்காலக் கனவில் எண்ணத்தையும், கற்பனையையும் பற்றி பாவெல் எப்போதுமே பேசுவதில்லை. ஆனால் ஹஹோலோ எப்போதுமே அந்த எதிர்காலக் கனவில் இன்ப உலகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும். அவன் பேச்சுக்களெல்லாம் இந்தப் பூலோக மாந்தர் அனைவருக்கும் வரப்போகும் புதிய வாழ்வையும், புதிய மகிழ்ச்சியையும் பற்றியதாகவே இருக்கும். இந்தப் பேச்சுக்கள்தான் தாய்க்குத் தன் வாழ்க்கையின் அர்த்தத்தையும், தன் மகன் எடுத்துக்கொண்டுள்ள வேலையின் நோக்கத்தையும், அனைத்துத் தோழர்களின் சேவையின் காரணத்தையும் விளங்கச் செய்யும்.

”இந்தக் கனவிலிருந்து விடுபட்டு உணர்ச்சி பெறும்போது…” என்று தன் தலையை உலுப்பிவிட்டுப் பேசத் தொடங்கினான் ஹஹோல்.

”சுற்றுமுற்றும் பார்த்தால், எல்லாமே விறைத்துப்போய், அசிங்கமாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் களைத்துச் சோர்ந்து எரிந்து விழுகிறார்கள்.”

அவன் மேலும் துக்கம் தோய்ந்த குரலில் பேசத் தொடங்கினான்.

“மனிதனை நம்பக்கூடாது என்பதும், அவனிடம் பயப்பட வேண்டும். அவனை வெறுக்கக்கூட வேண்டும் என்பதும் கேவலமான விஷயமே. ஆனால் அது அப்படித்தான். ஒரு மனிதனுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. நீ மனிதனை நேசிக்க மட்டுமே விரும்பலாம். ஆனால் அது எப்படி முடியும்? உன் மனத்திலே உருவாகி உயிர் பெற்றுத் துடிக்கும் புதிய இதயத்தைக் காணாமல் உன் முகத்திலேயே ஓங்கி அறைவதற்காக, உன் மீது காட்டு மிருகம் மாதிரிச் சாடியோடிவரும் மனிதனை நீ எப்படி மன்னிக்க முடியும்? அதை உன்னாலே மன்னிக்கவே முடியாது. அதற்குக் காரணம் உனது தற்காப்புச் சிந்தை அல்ல. உன்னால் எதையுமே தாங்கிக் கொள்ளக்கூட முடியலாம். ஆனால், அப்படி அறைவதை நீ ஒப்புக்கொண்டு விடுவதாக அவர்கள் நினைக்கும்படி நீ விட்டுவிட மாட்டாய். மற்றவர்களை எப்படி அடித்து நொறுக்குவது என்பதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ள நீ உன் முதுகைக் குனிந்து கொடுத்து அவர்களை அடிக்க விட்டுவிடுவாயா? ஒரு நாளும் உன்னால் அப்படி விட்டுக் கொடுக்க முடியாது.”

அவனது கண்களில் உணர்ச்சியற்ற நெருப்பு கனல்வது போலிருந்தது; அவனது தலை பலமாகக் குனிந்து போயிருந்தது. அவன் மேலும் உறுதியோடு பேச ஆரம்பித்தான்,

“எந்தத் தவறானாலும் சரி, அது என்னைப் பாதித்தாலும் பாதிக்காவிட்டாலும் சரி, அதை மன்னித்து விட்டுக்கொடுக்க எனக்கு உரிமை கிடையாது. இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர்வாழவில்லை. இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கிழைப்பதை நான் விட்டுக் கொடுத்துவிடலாம். அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால், அதைக் கண்டு நான் சிரிக்கலாம்: அது என்னைச் சீண்டுவதில்லை. ஆனால், நாளைக்கோ என்மீது பலப்பரீட்சை செய்து பழகிய காரணத்தால், வேறொருவனின் முதுகுத் தோலையும் உரிக்க அவன் முனையலாம். ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது. மிகவும் ஜாக்கிரதையாக , நெஞ்சிளக்கமற்று ஆட்களை எடை போட வேண்டும். பொறுக்கியெடுக்க வேண்டும். “இவன் நம் ஆள், இவன் வேறு” என்று தீர்மானிக்க வேண்டும். இதெல்லாம் உண்மைதான். ஆனால், இது மட்டும் ஆறுதல் தராது.

என்ன காரணத்தினாலோ சாஷாவைப் பற்றியும் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள் தாய்.

“ஆமாம். உமியும் தவிடுமாக மாவிருந்தால் ரொட்டி எப்படிச் சுடுவது?” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

”அதுதான் இதிலுள்ள சங்கடம்” என்றான் ஹஹோல்.

“ஆமாம்” என்றாள் தாய். அவளது நினைவில் அவளது கணவனின் உருவம் தோன்றியது. பாசியும் பச்சையும் படர்ந்து மூடிய பாறாங்கல்லைப் போல் உணர்ச்சியற்றுப் போன தடித்த சொரூபியான கணவனின் உருவம் நிழலிட்டது. அதே வேளையில் அவள் வேறொன்றையும் கற்பனை செய்து பார்த்தாள். நதாஷாவை ஹஹோலும் சாஷாவை பாவெலும் மணந்து கொண்டால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாள்.

”சரி, இதெல்லாம் இப்படியிருக்கக் காரணம் என்ன?” என்று மீண்டும் தன் பேச்சில் சூடுபிடிக்கப் பேச ஆரம்பித்தான் ஹஹோல். “உன் முகத்தில் மூக்கு இருப்பது எவ்வளவு தெளிவாயிருக்கிறதோ, அவ்வளவு தெளிவானது இது. மக்கள் அனைவரும் ஒரே சமநிலையில் இல்லாதிருப்பதுதான் இதற்கெல்லாம் மூலகாரணம். நாம் இந்த ஏற்ற இறக்கத்தைத் தட்டி நொறுக்கி சமதளப்படுத்துவோம். மனித சிந்தனையும். மனித உழைப்பும் சாதித்து வெற்றிகண்ட சகல பொருள்களையும் நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம். பயத்துக்கும் பொறாமைக்கும் மக்கள் அடிமையாகாமல், பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் ஆளாகாமல் நாம் அவர்களைக் காப்பாற்றுவோம்…”

இதன் பிறகு அவர்கள் அதே மாதிரிப் பல பேச்சுக்களைப் பேசிக்கொண்டார்கள்.

அந்திரேயை மீண்டும் தொழிற்சாலையில் வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அவன் தன் சம்பளத்தையெல்லாம் தாயிடமே கொடுத்துவிட்டான். அவளும் எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இன்றி பாவெலிடமிருந்து பெறுவது போலவே சாதாரணமாக அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டாள்.

சமயங்களில் தன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அந்திரேய் தாயைப் பார்த்துச் சொல்லுவான்,

‘என்ன அம்மா, கொஞ்சம் பாடம் படிப்போமா?”

அவள் சிரிப்பாள்; கண்டிப்பாக படிக்க மறுப்பாள். அவனது கண்ணின் குறும்புத்தனம் அவளைத் துன்புறுத்திவிடும்.

“நான் பாடம் படிப்பது உனக்கு ஒரு வேடிக்கையாயிருந்தால் என்னை ஏன் நீ படிக்கச் சொல்கிறாய்?” என்று அவள் தனக்குள்ளாகவே நினைத்துக்கொள்வாள்.

ஆனால் எத்தனை எத்தனையோ முறை அவள் அவனை நெருங்கி ஏதாவது ஒரு அரும்பதத்துக்கு அர்த்தம் கேட்பாள். அப்படிக் கேட்கும்போது அவள் தன் பார்வையையும் வேறுபுறமாகத் திருப்பிக் கொள்வாள். கேட்கின்ற பாவனையிலும், தான் அதிக அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளமாட்டாள், என்றாலும் அவள் இரகசியமாய்க் கல்வி கற்று வருகிறாள் என்பதை அவன் ஊகித்துக்கொள்வான். அவளது அடக்கமான குணத்தைக் கண்டு வியந்து, அவளைப் பாடம் படிக்குமாறு கேட்டுக்கொள்வதை நிறுத்திக்கொண்டுவிட்டான்.

“என் கண்கள் வரவர மோசமாகி வருகின்றன. அந்திரியூஷா! எனக்கு ஒரு கண்ணாடி வேண்டும்” என்று அவள் அவனிடம் ஒருநாள் சொன்னாள்.

“அதற்கென்ன? போட்டால் போகிறது” என்றான் அவன். ஞாயிற்றுக் கிழமையன்று நகரிலுள்ள டாக்டரிடம் அழைத்துப் போகிறேன். கண்ணாடியும் வாங்கிக்கொள்வோம்.

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) முஜீக் – ருஷ்ய விவசாயி. பொதுவாக ஆண்களைச் சற்று இளக்காரமாகக் குறிப்பதற்கும் வழங்கும் சொல். – மொ-ர்.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு

நவம்பர் – 7, உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உன்னதக் கனவை நனவாக்கிய நாள் !

வம்பர் – 7,இது நினைவுகூறும் நாள் மட்டும் அல்ல.. செயலுக்காக உழைக்கும் வர்க்கம் தன்னை உருவேற்றிக் கொள்ள வேண்டிய தினம். கடந்த ஆண்டு (07.11.2017) ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை YMCA அரங்கில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தோழர் மருதையன், தோழர் தியாகு, வழக்கறிஞர் பாலன் ஆகியோர் உரையாற்றிய காணொளிகளின் மீள் பதிவு …

*****

இந்தியாவிற்கு தேவை புரட்சி என்ற தலைப்பில் கடந்த 07.11.2017 அன்று தோழர் மருதையன் ஆற்றிய உரையின் காணொளி…

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – மருதையன் உரை – 1

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – மருதையன் உரை – 2

*****

மூலதனம் நூலை தமிழாக்கம் செய்த தோழர் தியாகு அவர்கள் காலத்தை வென்ற மூலதனம் என்ற தலைப்பில் பேசிய உரையின் காணொளி…
 

காலத்தை வென்ற மூலதனம் – தியாகு பாகம் – 1

காலத்தை வென்ற மூலதனம் – தியாகு பாகம் – 2

*****

தொழிலாளர்களின் உரிமையை வென்ற ரசியப் புரட்சி பற்றியும், இன்றைய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது பற்றியும் வழக்கறிஞர் பாலன் அவர்களின் உரையின் காணொளி…

தொழிலாளர்களின் உரிமையை வென்ற ரசிய புரட்சி – பாலன்

தொகுப்பு :

 

கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி

டந்த அக்டோபர் 27, 2018 அன்று உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேராசிரியர் சிவக்குமார், பேராசிரியர் கருணானந்தம், பேராசிரியர் அரசு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அவர்களது உரையில், உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசினர். மேலும் தற்போது கொண்டுவரப்படும் கல்வி மசோதாக்கள் குறித்து அவை எவ்வாறு ஜனநாயக விரோதமாக நிதி மசோதாவாக கொண்டு வரப்படவிருக்கின்றன என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க ஊழல்மயமாவது குறித்தும், அதன் முதல்காரணமாக துணைவேந்தர்கள் இருப்பதையும் அம்பலப்படுத்தினர். கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியும், தனியார் மயமாக்கும் முயற்சியும் கொள்ளைப்புறத்தின் வழியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தினர். இதற்கு தீர்வு ஒரே வழிதான், அது மக்கள் போராட்டத்தின் மூலம்தான் என்பதை வலியுறுத்திப் பேசினர்.

பேராசிரியர் சிவக்குமார் உரை:

பேராசிரியர் கருணானந்தம் உரை:

நன்றி : TN Voice

பேராசிரியர் வீ.அரசு உரை:

நன்றி : TN Voice

சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு

த்துணவு ஊழியர்களின் போராட்டம் கடந்த 25.10.2018 அன்று தொடங்கி  நவம்பர் 2-ம் தேதி தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தின் நோக்கம், சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது ஒட்டு மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களைப்போல் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து விட்டு காலவரையற்ற வேலை நிறுத்தம், சாலை மறியல், ஊராட்சி ஒன்றிய அலுவலக முற்றுகைப் போராட்டம், இறுதியாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்று நடத்தி ஓய்ந்திருக்கிறது.

இந்த போராட்டம் என்பது ஊழியர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டம்.. அவர்களின் கோரிக்கையும் மிகமிக அத்தியாவசியமான, நியாயமான கோரிக்கை… இதனை அமல்படுத்தகோரி  போராடிய  பல இடங்களில் அனுமதி மறுத்தும், பெண் ஊழியர்களையும், நிர்வாகிகளையும் கைது செய்தும் போலிசு ஜனநாயக விரோத செயலை வழக்கம்போல் நிலைநாட்டியது. அது இப்பொழுது மட்டுமல்ல. தங்கள் கோரிக்கைக்காக போராடிவரும் கடந்த 30 ஆண்டுகாலமாக இதுதான் நிலைமை!

யார் இந்த சத்துணவு ஊழியர்கள்….!

குறைந்தபட்ச கல்வித் தகுதி அடிப்படையில் கடந்த 1982-ம் ஆண்டு வேலையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்  குறளமுதாசிரியர் என்ற பெயரில் அவர்களை பணிக்கு அமர்த்தியது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு. அப்பொழுது அவர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு 1 ரூபாய் வீதம் மாதம் முப்பது ரூபாய் என்று தீர்மானித்தது. சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 50 பைசா. இதற்கு முன்பு பள்ளிகளில் சத்துணவு போடும் பொறுப்பை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்கள் கவனித்து வந்தனர்.

படிக்க :
அங்கன்வாடி
மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

பணிச்சுமையாக இருக்கிறது என்று அவர்கள் இதனை எதிர்க்கவே இத்திட்டம் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அரசு ஊழியர்களின் ஆதரவில் 1985 -ஆம் ஆண்டு சம்பளம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக சங்கமாக திரண்டனர். தொடர்ச்சியான போராட்டத்தின்  காரணமாக 1987 -ல் 150 ரூபாயாகவும் சமையலருக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டது. பின்னாளில் இவர்கள் சத்துணவு அமைப்பாளர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

என்ன பிரச்சனை? எதற்காக இந்த போராட்டம்?

தமிழகத்தில் சுமார் 48 ஆயிரம் சத்துணவு மையங்களும், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார்  இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.  இவற்றில் சுமார் 40 ஆயிரம் காலிபணி இடங்கள் உள்ளன. கடந்த 2012 -க்குப் பிறகு  இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக ஒரு சத்துணவு அமைப்பாளர் ஐந்துக்கு மேற்பட்ட மையங்களைக் கண்காணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எனவே உடனடியாக காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அதேசமயம் தற்பொழுது அவர்கள் பெறும் கூலி அற்பத்தொகையே. இவர்களுடைய வேலை நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை 3 மணி வரை செய்கிறார்கள். சத்துணவு அமைப்பாளர்  ரூ.12,000மும், சமையலர் ரூ.6000 உதவியாளர் ரூ.4000 வாங்குகிறார்கள்.  இவர்களுக்கு நிகரான வேலை செய்யும் அரசு ஊழியர்கள் 50,000-க்கும் மேல்தான் வாங்குகிறார்கள்…. இவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அழைக்கப்படுவதால் இந்த ஊதியம் மறுக்கப்படுகிறது..

எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?  அதுவும் பே-கமிஷனில்தான் இந்த ஊதியமும் உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் பெற்ற சம்பளம்… 7,700-4100-3000 வீதமாகும். தினக்கூலி மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப் படும் ஊதியத்தைக் கூடத் தொடவில்லை. ஆனால் அதை அரசு நியாயப்படுத்துகிறது.

இதில் பெரும்பாலான பகுதியை காய்கறி வாங்குவதற்கே செலவு செய்து விடுகிறோம் என்கிறார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.அண்ணாதுரை.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.அண்ணாதுரை.

மேலும் அவர், “தமிழக சத்துணவுத் திட்டம் ஏழைக் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்து கிடைத்திடவும், முறையான சத்துணவு வழங்கிடவும்  1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  உணவு தயாரிப்பு செலவினம் ரூ. 1.70-ம் பருப்பு வழங்கும் நாட்களில் ரூ. 1.30 வழங்கப்படுகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1.80-ம் பருப்பு வழங்காத நாட்களில் ரூ. 1.40-ம் வழங்கப்பட்டு வருகிறது.

தினம் ஒரு உணவு என்ற வகையில் பிரியாணி தயாரிக்கும் நாளில் ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 வழங்கப்படுகிறது, 3 கிராம் எண்ணெய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றைய விலைவாசியில் காய்கறிகள் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு வாங்க இயலாத நிலையே நீடிக்கிறது. எண்ணெய் 3 கிராம் என்ற அடிப்படையில் 100 குழந்தைகளுக்கு 10 கிலோ அரிசிக்கு 300 கிராம் என்பது போதாத நிலை உள்ளதால் எண்ணெய்யின் அளவினை 7 கிராமாக உயர்த்துவதோடு அன்றைய தினம் மிளகு முட்டை வழங்க வேண்டும். மிளகு 100 கிராம் 100 ரூபாய் ஆகிறது. எனவே ஒரு மாணவனுக்கு ஒரு நாளைக்கு 5 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஆனால் அதனை அரசு வழங்க மறுக்கிறது” என்கிறார்.

கடந்த 2013-ல் நாடாளுமன்ற வல்லுநர் குழுவானது இன்றைய விலைவாசிக்கு தற்பொழுது வழங்கப்படும் செலவினத்தொகை போதாது.. அதனை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறியது. அதனை இன்று வரை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் எப்படி பிள்ளைகளை ஊட்டச் சத்து மிக்கவர்களாக வளர்க்க முடியும்” என்று கேள்வியெழுப்புகிறார்.

அதேபோல் கடந்த 19.2.2016 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் எதிர்வரும் ஊதியக்குழுவே பரிசீலிக்கும் என அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

அதேபோல பட்டதாரிகள் வாழ்வாதரத்துக்கான சம்பளமும், அவர்களை நிரந்தரமாக்கும் படி குறுகிய காலத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்து நிரந்தரமாக்குவோம் என்றார் அதுவும் நிறைவேறவில்லை.

இதனை எல்லாம் கேட்டு 34 வருடங்களாக போராடி வருகிறோம். ஆனால் இது வரை ஒன்றும் நடக்கவில்லை.  இத்தனை ஆண்டுகாலம் மாடாய் உழைத்து நாங்கள் ஓய்வு பெறும்போது என்ன கொண்டு போகிறோம்? ஒன்றுமில்லை…  பணிக்கொடையாக  சத்துணவு அமைப்பாளர் ஒரு லட்சம்,  சமையலர்  மற்றும் உதவியாளகள் 50000 ஆயிரம் .. அவ்வளவுதான். மாத பென்சன் 2000 ஆயிரம் தருகிறார்கள். இதனை கொண்டு எப்படி கடைசி காலத்தில் வாழ்வது நீங்களே சொல்லுங்கள்?  “ஏன் இந்த வேலைக்கு வந்தோம்” என்று சளித்து விட்டது என்கிறார் அன்ணாதுரை.

அரசின் வஞ்சகமும்துரோகமும்!

தமிழகம் தான் இந்தியா முழுமைக்கும் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்திட வழிகாட்டியாக விளங்கியது. மேலும், சத்துணவுத்திட்டம் என்ன நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ, அதில் சிறப்படைய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனே களைந்து அமல்படுத்துவதுடன் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழி யர்களின் ஊதியம், பதவி உயர்வு சம்பந்தமாக அல்லல்பட்டுவரும் ஏழைகள், கணவனால் கைவிடப் பட்டவர்களின் வாழ்வாதாரக் கோரிக் கையை நிறைவேற்றப்பட வேண்டி நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வரை இரண்டரை லட்சம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பங்கள் எதிர்பார்க்கின்றன.

சேப்பாகம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் (கோப்புப் படம்)

சத்துணவுத் திட்டத்திற்கென மத்திய அரசு ஒரு குழந்தைக்கு 150 கிராம் அரிசியும், உணவு தயாரிப்பு செலவினத்திற்காக ரூ.4.60 முதல் ரூ.5.00 வரை வழங்குகிறது. தேவையான பாத்திரங்களும், மையக் கட்டிடங்களும் மற்றும் அதற்கான நிதியும் இன்றைய விலைவாசிக்கு ஏற்றபடி உயர்த்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ள நிலையில், தமிழக அரசு கூடுதல் நிதியினைப் பெற முயற்சி மேற்கொள்ளாமல், திட்டத்தினை சுருக்குவது என்ற ரீதியில் செயல்படுவதுதான் சத்துணவு ஊழியர்களின் பிரச்சனைகளுக்குக் காரணமாகும்.

படிக்க :
ஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!
அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !

சத்துணவுத்துறையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி சத்துணவுத் திட்டம் சிறப்புடன் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளாமல் 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள மையங்களை மூடுவது என தமிழக அரசு பின்னோக்கி யோசிக்கிறது.

தமிழகம் தான் இந்தியா முழுமைக்கும் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்திட வழிகாட்டியாக விளங்கியது. ஆனால் சத்துணவு அமைப்பாளராக, சமையலராக, சமையல் உதவியாளராக, சமூக நலப்பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை முறையே வெறும் ரூ.700, ரூ.600 மற்றும் ரூ.500 மட்டுமே.

பல்லாண்டு காலம் சத்துணவுத் துறையில் வேலை செய்து விட்டு இப்போது, அடுத்த வேளை உணவிற்குக் கூட வழியின்றி தாங்கள் பணியாற்றிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களிலேயே சோற்றுக்காக தட்டேந்தி தவமிருக்கும் ஓய்வூதியர்களாக மாறியிருக்கும் அவலம் துயரமானது.

அம்மாவின் வழித்தோன்றல்

குறைந்தபட்சம், மாணவர்கள் ஊழியர்களின் நலன் கருதி, திமுக அரசு 18.07.2007 -ல் தொடக்கப்பள்ளி மாணவர்களின் காய்கறி மற்றும் விறகுக்கான செலவினத்தொகையையும், 24.9.2010-ல் சமையல் எண்ணெய் மற்றும் அரிசியின் அளவினை உயர்த்தி வழங்க அரசாணையை வெளியிட்டது. அதுகூட அதிமுக அரசில் இல்லை.

பள்ளி சத்துணவு மையங்களிலும், அங்கன்வாடி மையங்களிலும் பணிபுரிந்து பணியிடையே காலமான பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படியில் திமுக ஆட்சியில் மட்டுமே 118 பேருக்கு வழங்கப்பட்டது. அதுவும் தற்போதைய அதிமுக ஆட்சியில் வழங்கவில்லை. மகப்பேறு விடுப்பு, குடும்ப நல நிதி இதுபோன்ற சிறு சிறு உதவிகள்கூட திமுக ஆட்சியின்போதுதான் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறைகூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியிலேதான் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டது. முன்தேதியிட்டு வழங்கும் முறையைக் கூட அதிமுக அரசு காலி செய்துவிட்டது…

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வூதியமும் சரி, பதவி உயர்வும் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டதில்லை. ஆசிரியர் பட்டயப் படிப்பு பயிற்சி (Diploma in Teacher Education) முடித்த சத்துணவு மற்றும் குழந்தை மைய பணியாளர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பி.எட். படித்து முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க கழக அரசு ஆணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தும்பொருட்டு தகுதிவாய்ந்த 59 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் 405 சத்துணவுப் பணியாளர்களுக்கும் பெயர் பட்டியல் 4.10.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

சத்துணவு மற்றும் குழந்தை மையங்களில் 2001 முதல் 2006 வரை 5 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் காலிப்பணியிடங்கள் 20,000 ஆயிரத்திற்கும் மேல் இருந்தும் வெறும் 7,655 பணி இடங்களில் மட்டுமே புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். வெறும் 2,000 ஊதியம் பெறுபவர்களை நியமிப்பதற்கே இந்த அரசு சொத்தை எழுதித் தருவதைப் போல் வேலை புறக்கணிப்பு செய்தது எவ்வளவு பெரிய அலட்சியம். இந்த திட்டம் எதன் நோக்கில் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்தது.

கடந்த திமுக ஆட்சியில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பெற்றுவரும் ஊதியத்தை “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம் என்பது மட்டுமன்றி; அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் சலுகைகளும், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என்று குறிபிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஆனால், 2010-ம் ஆண்டு சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் செய்தபோது “சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல மைச்சர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சவடால் விடுத்தார் ஜெயலலிதா.

சத்துணவு அமைச்சர் “முட்டை ஊழல் புகழ் சரோஜா”

அதோடு இல்லாமல், “எம்.ஜி.ஆர். ஆட்சி விரைவில் மலரும், சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.  ஆட்சி வந்தது, சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படவிலை.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்று அறிவித்தார். அதையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கன்வீனர் மு. வரதராசன், “கடந்த ஆட்சியில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நியாயமானது, போராடும் நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று ஜெயலலிதா அறிவித்தார்.

படிக்க :
பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !
இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !

ஆனால் 3 ஆண்டாகியும் நிறைவேற்றவில்லை, போராடும் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசவில்லை, மாறாக போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சமூக நல இயக்குனர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்” என்று ஜெயலலிதா அரசின் பொய் வாக்குறுதிகைளை அம்பலப்படுத்தினார்.

எதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை… அடுக்கடுக்கான போராட்டம் நடத்தபட்டாலும் ஆட்சியாளகளின் அப்போதைய வாக்குறுதிகளை மட்டுமே நம்பி போராட்டத்தை கைவிட்டு விடுவதால், ஆட்சியாளகளும் அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். அதனை கண்டு கொள்வதே இல்லை. அம்மாவின் வழித்தோன்றல்களான இந்த எடப்பாடி கும்பலும் அதே வேலையை செய்து வருகிறது.

கடந்த முப்பத்தி ஒன்றாம் தேதி சத்துணவு அமைச்சர் ’முட்டை ஊழல் புகழ்’ சரோஜா, பேச்சு வார்த்தைக்கு அழைத்து, “கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. வரக்கூடிய நிதியில் கணிசமான தொகையை உங்களுக்கு தருகிறோம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள். முதல்வரிடம் பேசி ஒரு முடிவுக்கு வருகிறோம்” என்று கூறியதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் துணை செயலர் நூர்ஜகான் தெரிவித்தார்.

தொடர்ந்து நடத்திய போராட்டத்தின்போது, நவம்பர் 2 அன்று மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஒரு சில கோரிக்கைகளை மட்டும் பரீசிலிக்கிறோம். என்று கூறியதால், போராட்டதை கைவிடுவதாக அறிவித்தனர். அத்துடன் போராட்டம் தற்காலிகமாக முடிவு வந்துள்ளது.

ஆனால் இந்த முடிவில் சங்க நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. வந்தவர்களோ போராட்டதை தொடர வேண்டும் என்றாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. இந்த போக்கினால்தான் இந்த அரசும் தொடர்ச்சியாக இவர்களின் முதுகின்மீதமர்ந்து பயணித்து வருகிறது…!

ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?

ர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகின் மிகப் பெரிய சிலையை அமைத்துள்ளது மோடி அரசு. பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள இந்த சிலை திறப்பு விவகாரத்தின் பின்னணியில் பட்டேல் சாதியினர் மற்றும் சூத்திரர்களின் நிலையை அலசுகிறார் அரசியல் கோட்பாட்டாளரும் எழுத்தாளருமான காஞ்சா அய்லய்யா. ‘தி வயரில்’ வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…

*****

பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்திருக்கும் அதே நேரத்தில் பட்டேல், ஜாட், குஜ்ஜார், மராத்தா போன்ற வட இந்திய மேல்தட்டு சூத்திரர்கள் அரசின் இடஒதுக்கீட்டைப் பெற தங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் தங்களைச் சேர்க்குமாறு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அது நிகழ்ந்தால் இந்திய சூத்திரர்கள்  ஒற்றை சமூக அரசியல் வட்டத்துக்குள்  இணைவார்கள். இது நாட்டின் சமூக உறவை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் இந்து மதத்திலும் இந்திய சமூக அரசியல் அமைப்பிலும் பட்டேல் மற்றும் சூத்திரர்களின் நிலை என்னவாக இருக்கிறது என மதிப்பிடுவது அவசியமாகும்.

பட்டேல் குறித்த மதிப்பீட்டை, சுதந்திர போராட்ட காலத்தில் அவருடன் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பீடுவது சிறப்பாக இருக்கும். பட்டேல், காந்தி, நேரு ஆகியோரின் கதைகள் இந்தியாவில் சூத்திரர்கள், பனியாக்கள், பார்ப்பனர்களின் நிலைக்கு உதாரணமானவை.

பட்டேல், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சூத்திரர். காந்தி அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பனியா. நேரு, காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பார்ப்பனர், ஒருங்கிணைந்த காஷ்மீராக இருந்த அந்தப் பகுதி இப்போது உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. அதுபோல, இந்து மதத்தில் அவர்களுடைய நிலை குறிப்பிடத்தக்க வேறுபாடு கொண்டது.

படிக்க :
படேல் சிலை – மோடியின் நார்சிசமும், பாசிசமும் !
பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘ உலகின் மிகப் பெரிய சிலை

பட்டேலின் பூர்வீகம் வேத காலத்தில் அடிமை என அறியப்பட்டிருந்தது. காந்தியின் பூர்வீகம் வணிகம் தொடர்புடையது. நேரு, சமய போதகர் வழி வந்தவர். காந்திக்கும் நேருவுக்கும் புனித நூல் எனப்படும் பூணூல் அணியும் உரிமை இருந்தது. பட்டேலுக்கு அந்த உரிமை இல்லை. சூத்திரர்கள் இந்துக்கள் என அறியப்பட்டாலும் அவர்களுக்கு பூணூல் அணியும் உரிமை இந்த நாள் வரை இல்லை.

பட்டேலின் மூதாதையருக்கு கல்வி கற்க உரிமை இல்லை; வேத கடவுள்களை வணங்கவோ அல்லது இந்து மதத்தின் புனித நூல்களை வாசிக்கவோ அவர்களால் முடியாது. காந்தி மற்றும் நேருவின் மூதாதையர் வேத காலத்தின் தொடக்கத்திலிருந்தே இந்த உரிமைகளைப் பெற்றிருந்தார்கள். அவர்களால் சமஸ்கிருதத்தை கற்க முடிந்தது, காலத்துக்கேற்ப வேறு மொழிகளையும் அவர்கள் கற்றார்கள்.

பட்டேலின் மூதாதையர் நிலத்தை உழுபவர்களாகவும், கால்நடை மேய்ப்பவர்களாகவும் அறுவடை செய்கிறவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள், வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். மன்னராட்சி காலத்திலும் மொகலாய ஆட்சியிலும் காலனி ஆட்சி காலத்திலும் நாட்டையும் கிராமத்தையும் காப்பாற்றுவது சூத்திரர்களின் பணியாக இருந்துள்ளது. தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டபோதும் பாதுகாத்தல், உற்பத்தி போன்றவை தலித்துகளுக்கு பணியாக தரப்பட்டது.

காந்தி மற்றும் நேருவின் மூதாதையர் எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யவில்லை. வேளாண்மையும் உடல் உழைப்பும் கேவலமாக கருதப்பட்டன, அவை சூத்திரர்களுக்கானவை என ஒதுக்கப்பட்டன. பனியாக்களும் பார்ப்பனர்களும் போர்வீரர்களாக இருந்தமைக்கு ஒரு சில உதாரணங்கள் உள்ளன. அவர்களுடைய சைவ உணவு பழக்கமும் வன்முறை கூடாது என்கிற கருதுகோளும் அவர்கள் ராணுவத்தில் சேர்வதை தடுத்தன. ஆனால், அவர்கள் சூத்திரர்களை சார்ந்து இருந்தார்கள், சூத்திரர்களும் அவர்களுக்கு எப்போதும் பணி செய்தார்கள்.

பட்டேலும் அதே மனநிலையில் இருந்தே காந்திக்கும் நேருவுக்கும் பணி செய்தார். இந்த பாரம்பரியத்தின் காரணமாகத்தான் சுதந்திர போராட்டத்தின் ‘இரும்பு மனிதர்’-ஆக பட்டேல் ஆனார். காந்தி ‘மகாத்மா’ ஆனார்; நேரு ‘பண்டிட்’ ஆனார். பட்டேலின் பட்டப் பெயர், இழிபடுத்தலை குறிக்கிறது. சூத்திரர்கள் அறிவிலும் ஆன்மிகத்திலும் தாழ்வானவர்கள் என்கிற பொருளில் இந்தப் பட்டப்பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போரட்டத்தின் ‘இரும்பு மனிதர்’-ஆக பட்டேல் ஆனார். காந்தி ‘மகாத்மா’ ஆனார்; நேரு ‘பண்டிட்’ ஆனார். பட்டேலின் பட்டப் பெயர், இழிபடுத்தலை குறிக்கிறது.

இந்தியாவுக்குள் பிரிட்டீஷார் வரும்வரை பட்டேலின் மூதாதையருக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை; பிறரும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை. பட்டேலும் அவருடைய மூத்த சகோதரர் வித்தல்பாயும்தான் முதன்முதலில் பள்ளிக்குச் சென்றவர்கள். சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது என்கிற பாரம்பரியம் 18-ஆம் நூற்றாண்டில்தான் இங்கே உடைக்கப்பட்டது. அதனால்தான் பட்டேலின் பெற்றோரால் அவருடைய உண்மையான பிறந்த தேதியை எழுதி வைக்க முடியவில்லை. அவருடைய பிறந்த தேதியான அக்டோபர் 31-ம் தேதி பள்ளியில் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. பார்ப்பன அடக்குமுறைக்குள்ளான பட்டேலின் மூதாதையர்களின் காரணமாகத்தான் மோடி இந்த தேதியில் பட்டேலின் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.

பட்டேலின் பிறப்பு நேர்ந்த காலத்தில் பார்ப்பனர்களும் பனியாக்களும் ஆங்கிலத்தில் மேம்பட்ட கல்வியறிவை பெற்றிருந்தனர். காந்தி மற்றும் நேருவின் பிறந்த நாட்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன; அவர்களுடைய குடும்ப வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  அவர்கள் தானாக உயர்ந்த மனிதர்கள் அல்ல, அவர்கள் அந்தஸ்து மற்றும் சலுகையும் மூலம் அதைப் பெற்றார்கள்.

பட்டேல் தன்னை உருவாக்கிக்கொண்ட ‘கடினமான’ மனிதர்.  முரட்டுத்தனமான அரசியல் பலத்திலிருந்து அவர் உருவானார். அறிவிஜீவித்தனத்தின் மென்மையான ஆற்றலாக அவர் உருவாகும் ஆடம்பரத்தை அவர் ஒருபோதும் கைகொள்ளவில்லை. அவர், அவருடைய மூதாதையர் என்ன செய்தார்களோ அதையே அவரும் செய்தார். இந்துத்துவத்தின் பார்ப்பன அமைப்பு அவருடைய மூதாதையருக்கு என்ன இடம் கொடுத்திருந்ததோ அதை பட்டேல் உடைக்கவில்லை. எந்த அமைப்பு தன்னை ஒடுக்கியதோ அதை அவர் பாதுகாத்தார். சூத்திரர்களுக்கு பட்டேல் விட்டுச் சென்ற துரதிருஷ்டமான மரபு இது.

இன்று பார்ப்பனர்களும் பனியாக்களும் இந்திய அரசியல், அரசாங்கம், பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறவர்களாகவும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சூத்திரர்களின் மீது அடக்குமுறை செலுத்தும் இந்துத்துவ அமைப்பின் வழியாக அதிகார அமைப்புகளில் அவர்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய மதம்தான் என்றாலும் சூத்திரர்களுக்கு போதகருக்குள்ள உரிமையோ மந்திரங்கள் ஓதவோ உரிமை இல்லை.

மூடப்பட்ட அதிகார அமைப்புகளிலில் தங்களுக்கு  குறைந்தபட்ச இடம் வேண்டும் என கேட்டு பட்டேல்கள், ஜாட்கள், குஜ்ஜார்கள், மராத்தாக்கள் மற்றுமுள்ளோர் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவைக் கோரி அவர்கள் நிற்கிறார்கள், அந்தக் கட்சியும் பட்டேலுக்கு போலியான ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்புக்கு முன் ரத யாத்திரை சென்ற அத்வானி, பட்டேலை ‘அபினவா-புதுமையானவர்’ என வர்ணித்தார். ஆனால், பாஜக ஆட்சியின்போது சூத்திரர்கள் மேலும் ஒடுக்குதலுக்கு உள்ளானார்கள். பனியா மற்றும் பார்ப்பன சக்திகளின் மேலாதிக்கம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் வெளிப்படையாகவே இன்றும் உள்ளது.

பார்ப்பனர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம், பட்டேலை போற்றுகிறது. காரணம், வர்ண அடிப்படையை அவர் ஒருபோதும் கேள்வி கேட்காதவராக இருந்தார் என்பதே. அவர் சூத்திரர்களுக்கு மதகுருக்களான உரிமையை கோரவில்லை. அவர் தானும் பூணுல் அணிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்கவில்லை. அனைத்து மட்டங்களிலும் பனியாக்களும் பார்ப்பனர்களும் பெற்றிருக்கும் உரிமைகள் சூத்திரர்களுக்கும் வேண்டும் என அவர் கேட்கவில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் பார்ப்பனரா(நேரு)கத்தான் இருக்க வேண்டும் என காந்தி முடிவு செய்தபோது, பட்டேல் அதை கீழ்பணிந்து ஏற்றுக்கொண்டு தான் வகித்த காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, நேருவிடம் பதவியை ஒப்படைத்தார்.

காந்தியும் நேருவும் தங்களுடை வரலாற்றை எழுதினார்கள், கவனத்துடன் கூடிய சூயசரிதையை விட்டுச் சென்றார்கள். ஆனால், பட்டேல் அதை செய்யவில்லை. அவருடைய வரலாறும் அவருடைய குடும்பத்தின் வரலாறும் எழுதத் தகுதியானவை அல்ல என அவர் நினைத்திருக்கக்கூடும். பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களின் குறிப்பின்படி, பட்டேல் கடிதங்களை தானே கைப்பட எழுதினார், கடிதங்களை ஒருபோதும் அவர் சேமித்து வைக்கவில்லை. அதுபோல அவருக்கு வந்த கடிதங்களையும் சேமித்து வைக்கவில்லை.

இன்று, காந்தியும் நேருவும் நன்கு அறியப்பட்ட சிந்தனையாளர்களாக அறியப்படுகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன. பட்டேல், ‘இரும்பு மனிதர்’ என அழைக்கப்படுகிறார், அவர் தன்னுடைய வாழ்க்கை, தனக்குள்ள கருத்துக்கள், தன் குடும்பம், தன் சாதி குறித்து எந்த நூலையும் எழுதவில்லை. அவரைப் பற்றி பிறர் எழுதிய நூல்களின் வாயிலாகத்தான் அவரை அறிகிறோம். அவர்களும்கூட சூத்திரர்களாகவே இருக்கிறார்கள். இப்போது பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் பட்டேலை எத்தகைய வரலாற்றில் எழுதி அடைக்கலாம் என்பது எளிதாகிவிட்டது.

பட்டேலின் சுயத்தை அழித்துக்கொள்ளும் தன்மை சூத்திரர்களின் வழமையான குணாம்சம். அவர்களுக்கு வளமையான வாழ்மொழி வரலாறு – கதை கூறும் பாரம்பரியம் இருந்தாலும், பார்ப்பனியம் ஒடுக்குமுறையின் காரணமாக அவர்கள் எழுதும் கலாச்சாரத்தை மேம்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில், சுதந்திர போராட்டக்காலத்தைச் சேர்ந்த எந்தவொரு சூத்திர தலைவரும் சுயசரிதையை எழுதவில்லை.

படிக்க :
பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்

இந்து மதம், வரலாற்று ரீதியாக சூத்திரர்களை செயல்படுகிறவர்களாக பார்த்தார்களே தவிர, சிந்தனையாளர்களாக பார்க்கவில்லை. பட்டேலின் வாழ்க்கை பார்ப்பனர்களின் அதிகார வரம்புக்குள் செயல்பட்டது. காந்தி, நேருவின் வழித்தோன்றல்களைப் போல பட்டேலின் வாரிசுகள் எழுத்தாளர்களாகவோ அரசியல்வாதிகளாகவோ வரவில்லை. அவருடை இரும்பு மனிதத் தன்மை அவருடனே முடிந்துவிட்டது. அது அப்படி இருக்கத்தான் விரும்பப்பட்டது.

பட்டேல் ஹிந்து மகாசபையுடன் நெருக்கமாக இருந்தவர் என பட்டேல் குறித்து ஆர்.எஸ்.எஸ். பேசியது. சமூக, ஆன்மீக சீர்திருத்தம் கட்டாயமாக வேண்டும் என ஒரு சூத்திரராக அவர் கருதவில்லை. எனவே, அவர் அவர்களுடைய ஆளாக மாறிவிட்டார்.  ஆர்.எஸ்.எஸ். இவரை சூவீகரித்துக்கொள்ள பார்த்தாலும் ஒருபோதும் அந்த அமைப்பின் தலைவராக ஒரு சூத்திரரை வரவிட்டதில்லை என்பதே இதில் உள்ள முரண்பாடு. ஒரே ஒரு சத்திரியர், ராஜேந்திர சிங்- என்பவரைத் தவிர அத்தனை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பார்ப்பனர்கள்தாம்.

தன்னுடைய தத்துவத்தை, தன் குடும்பம் மற்றும் தன் சமூகத்தின் மீதான கருத்தை, தங்களுடைய இனத்தின் பணி மற்றும் ஆன்மீக கலாச்சாரம் பற்றிய தகவலை பட்டேல் எழுதியிருப்பாரேயானால், அது ஒட்டுமொத்த சூத்திர சாதியினரையும் தேசிய தத்துவார்த்த மற்றும் அரசியல் வகைமைக்குள் சேர்த்திருக்கும். காந்தியும் நேருவும் பனியாக்களுக்காகவும் பார்ப்பனர்களுக்காகவும் பணியாற்றினார்கள், தங்களுடைய சமூகங்களுக்கு ஏற்கனவே உள்ள பாரம்பரியத்தைத்தான் கொண்டுசேர்த்தார்கள். முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்கவில்லை.

பட்டேல், சூத்திரர்களுக்கு செய்யத் தவறியதை, வேறொரு மனிதர் தலித்துகளுக்காக செய்தார். அரசியல் சிந்தனை, தத்துவம், எழுத்து மற்றும் சொல்லாட்சி குறித்து தனக்குத்தானே கற்பித்துக்கொண்ட பி.ஆர். அம்பேத்கர், சமூக ஆன்மீக சீர்திருத்தத்தை இயக்கமாக முன்னெடுத்தார். பட்டேலைப் போல் அல்லாமல், இந்துத்துவம் தன் சாதியினருக்குக் கொடுத்த சமத்துவமற்ற படிநிலையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதோடு, இந்துத்துவத்தின் ஆன்மீக மற்றும் சமூக அடக்குமுறையின் அடித்தளம் குறித்து கேள்வி எழுப்பினார்.

கூட்டமொன்றில் உரையாற்றும் அம்பேத்கர்.

பட்டேல், சட்டம் படித்தவர். ஆனால், அவர் தத்துவார்த்த கேள்வி குறித்து ஆர்வம் காட்டவில்லை. அதுஇல்லாமல், சமூகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடம் குறித்து புரிந்துகொள்ள அவர் முயலவில்லை. பிரிட்டனில் மாணவராக இருந்த பட்டேல், இன மற்றும் சாதிய அடக்குமுறைகள் ஒத்த தன்மையுடையவை என அறியவில்லை. ஒப்பிடும்போது அமெரிக்காவில் படித்த அம்பேத்கர், கருப்பின மக்களின் போராட்டங்களின் வாயிலாக முக்கியமான பாடத்தைப் படித்தார். அம்பேத்கர் சாதியத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார்; ஆனால், பட்டேல் பிரிட்டீஷாருக்கு எதிரான மனநிலையிலிருந்து மேற்கொண்டு நகரவில்லை.

பிரிட்டீஷாரிடமிருந்து பனியாக்களிடமும் பார்ப்பனர்களிடமும் கைமாற்றப்படுவதல்ல சுதந்திரம்; சாதியத்தை ஒழித்த சுதந்திரம் என்கிற அம்பேத்கரின் பார்வையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பட்டேல் தன்னுடைய குருவாக காந்தியை ஏற்றுக்கொண்டார்; ஒருபோதும் தன்னைப் பற்றி அவர் சிந்தித்ததில்லை. காந்தியம் சொன்ன நிலப்பிரபுத்துவ ஜனநாயமான கிராம ராஜ்ஜியம் மற்றும் ராம ராஜ்ஜியம் – என்பதைக் கடந்து அவர் சிந்திக்கவில்லை. ஒருவேளை கிராம ராஜ்ஜியத்தில் சூத்திரர்கள் ஆட்சியாளர்களாக வரக்கூடும் என நினைத்திருக்கலாம். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டார். அவர் காந்தியின் மறுபக்கத்தை பார்க்கவில்லை. கிராம பொருளாதாரத்துக்கு திரும்ப வேண்டும் என சொல்லிக்கொண்டே பனியா தொழிலதிபர்களான பிர்லாக்கள், கோயங்காக்களிடம் அவர் நெருக்கமாக இருந்தார். பனியா தொழிலதிபர்களுக்காகத்தான் காந்தியின் உண்மையான ஆற்றல் வேலை செய்தது. இன்று நாட்டில் அவர்கள் பெற்றிருக்கும் அதிகாரம், காந்தி விட்டுச்சென்ற மரபின் ஒரு பகுதி.

பட்டேலின் அக்கறையின்மை சூத்திரர்களின் இக்கட்டான நிலைமை பிரதிபலிக்கிறது. இப்போதும் சம உரிமை மறுக்கப்பட்டு சாதிய படிநிலையில் நடுவில் எங்கோ ஒரு இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். கீழே இருந்த தலித்துகள், தங்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். குறைந்த காலமே நீடிக்கும், குறைந்தபட்ச சலுகைகளை சூத்திரர்கள் விட்டுத்தர தயாராக இல்லை. பார்ப்பனர்களும் பனியாக்களும் தங்களுக்கு மேல் இருக்கிறார்களே என்கிற கோபம் அவர்களிடம் இல்லை.  பதிலாக, தலித்துகள்தான் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என பனியாக்களும் பார்ப்பனர்களும் தங்களுக்கு வலியுறுத்தி வருவதை அவர்கள் ஏற்கிறார்கள்; தலித்துகளை எதிரிகளாக பார்க்கிறார்கள். இந்து மதத்தில் தங்களுக்குள்ள சமநிலையற்ற தன்மை குறித்தும் அதன் சமூக அரசியல் விளைவுகள் குறித்தும் அவர்கள் உணரவே இல்லை.

பட்டேலிடம் அறிவுசார் உற்பத்தி இல்லாத காரணத்தால் அவருடைய வரலாற்றுக்கும் அதிகாரத்துக்கும் குறுகிய வழியை ஏற்பட்டுவிட்டது. சூத்திரர்களின் வரலாறு மற்றும் அதிகாரம் குறுகிய நிலையில் உள்ளதைப் போன்றே இதுவும் அமைந்துவிட்டது.  அவருக்கென்று சமூக பொருளாதார கோட்பாடு இல்லை. பிரதிநிதித்துவ கோட்பாடு எதுவும் இல்லாமல் அவர் சூத்திரர்களின் பிரநிதியாக இருந்தார். இப்போதும் கூட சூத்திரர்கள், கருத்தியல் வெற்றிடத்துடனே இருக்கிறார்கள்.  எவ்வளவு பெரிய சிலை பட்டேலுக்கு அமைத்தபோதும் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முடியாது.

ஒரு பனியாவான மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவரான தன்னுடைய குரு பார்ப்பனர் மோகன் பகவத்திடமிருந்து கட்டளைகளைப் பெற்று, சூத்திரர் பட்டேலின் சிலையை திறக்கிறார். இப்போதுகூட பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-சும் சூத்திரர்களின் முக்கியமான பங்களிப்பை ஒதுக்கிவிட்டார்கள். பிரம்மாண்டமான சிலையை அளித்ததைக் கடந்து பார்ப்பன – பனியாக்களின் ஆட்சி இந்த நாட்டுக்கும் சூத்திரர்களுக்கும் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழாக்கம்:

 

நன்றி : தி வயர்

உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !

பேராசிரியர் ப. சிவக்குமார்
தனியார்மய கல்வியை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வி! என்ற லட்சியத்தோடு உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !

டந்த 27.10.2018 அன்று சென்னை பெரியார் திடலில் பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு அமைப்பின் அறிமுக கூட்டம் மற்றும் “உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர், பேராசிரியர். வீ. அரசு,  ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும், விவேகானந்தா கல்லூரி வரலாற்றுதுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும் குடியாத்தம் அரசு கலைகல்லூரி  முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப. சிவக்குமார், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி பொருளியியல் துறை பேராசிரியர் அமலநாதன், பொருளாளர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக உயிரிவேதியியல் துறை பேராசிரியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு உயர்கல்வி எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால்களான ஊழல், இந்துத்துவ திணிப்பு, தனியார்மயம் ஆகியவற்றை பற்றி பேராசிரியர்கள் உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் என மொத்தம் 120 பேர் கலந்து கொண்டனர்.

சமீப காலமாக உயர்கல்வி துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடுகளும் அதற்கு முந்ததையதை விட அளவில் மிகப்பெரியதாகவும் தன்மையில் அதீத கிரிமினல் மயமானதாகவும் உள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பாலியல் முறைகேடு, அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மற்றும் தகுதி இல்லாதவர்களை பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்களாக பணிநியமனம் செய்தது  போன்றவை சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுதான் நிலை.

பேராசிரியர். வீ. அரசு

தரமான உயர்கல்வி வழங்குவதை கண்காணிக்க / உறுதிப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் தனியார் கல்வி முதலாளிகளுக்காக UGCன் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை காலில் போட்டு மிதிக்கின்றனர். கவர்னர் முதல் பேராசிரியர்கள் வரை உள்ள உயர் கல்வித்துறையின் நிர்வாகிகளே இம்முறைகேடுகளின் சூத்திரதாரிகளாகவும் அதனை முன்னின்று நடத்துபவர்களாகவும் உள்ளனர்.

இந்த ஊழல் முறைகேடுகளின் அடிப்படையே தனியார்மய கொள்கைகள் தான். கடந்த இருபது ஆண்டுகாலமாக மத்திய – மாநில அரசுகள் அமல்படுத்தி வரும்  தனியார்மய – தாராளமய கொள்கைகளின் காரணமாக கல்வியில் அரசின் பங்களிப்பு கணிசமான அளவு குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. மொத்த கல்லூரிகளில் 66 சதவிகித கல்லூரிகள் தனியார் கல்லூரிகள். குறிப்பாக தமிழ் நாட்டில் 75 % சதவீத கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்.

பேராசிரியர் ப. சிவக்குமார்

மேலும் கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. அத்தோடு மட்டுமில்லாது ஒட்டுமொத்த உயர் கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளுக்கு நிதி வழங்குவதற்கு பதிலாக கடன் வழங்குகிறேன் என மோடி கூறுகிறார்; இக்கடனை வட்டியோடு 10 வருடத்திற்குள் கட்ட வேண்டும் என மோடி அரசு பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறது. கட்டிடம் கூட இல்லாத ‘ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது.

‘உயர்கல்வியின் தரத்தை உயர்துகிறோம்’ என்ற பெயரிலேயே மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவர்களின் உணமையான நோக்கமோ, 1990 களின் ஆரம்பத்திலிருந்து உயர் கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளை முடித்து வைப்பதும், இந்திய உயர் கல்வி சந்தையை உலக கல்விச் சந்தையோடு இணைப்பதும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிதி மூலதன நிறுவனங்கள் எவ்வித தடைகளுமின்றி கல்விச் சேவை என்ற பெயரில் இந்தியாவில் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும் தான்.

பேராசிரியர் அ. கருணானந்தன்

இந்த உலகமயமாக்கல் நடவடிக்கைகளின் வாயிலாக வெளிநாட்டு கல்விக் கொள்ளையர்கள் மட்டுமில்லாது அம்பானி, சுனில் மிட்டல், அனில் அகர்வால், சிவ் நாடார், ஜின்டால் போன்ற இந்திய தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் தங்களுக்கான பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதும் அதனை இந்தியாவின் சிறந்த கல்லூரிகளாக அறிவிப்பதும் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் தரமற்றவைகளாக அறிவித்து அவைகளை படிபடியாக மூடுவிழா நடத்துவதற்கான திட்டத்தோடு மோடி அரசு செயல்படுகிறது.

சென்னைப் பல்கலைக் கழகத்தை விட சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தரம் வாய்ந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதனை நடைமுறைப் படுத்துவதற்காகவே இந்திய மருத்துவக் குழு (Medical council of India) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(University grant commission) இரண்டையும் ஒழித்து அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்(National Medical Comission) மற்றும் இந்திய உயர்கல்வி ஆணையம்(Higher Education Comission of India) என்ற புதிய அமைப்பை மோடி அரசு உருவாக்குகிறது. இது முதலாளிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்க கூடிய அமைப்பாகும்.

பேராசிரியர் கதிரவன்

இதன் விளைவாக பலமடங்கு கல்விக்கட்டண உயர்வு, கல்வி உதவித்தொகைகள் பறிப்பு, இடஒதுக்கீட்டை பறிப்பது போன்றவை நடந்து வருகின்றன. இது இந்நாட்டின் பெரும்பாண்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண் சமுகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப் பறித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை எதார்த்தமாக்க தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களை தலைமை பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்தி-சமஸ்கிருத திணிப்பு, உயர்கல்வி மற்றும் பள்ளிகல்வியில்  பல்வேறு வழிகளில் பார்பனிய-வேத-இந்துத்துவ சார்பான விசயங்களை திணிப்பது, புராண கட்டுக் கதைகளை அறிவியல் உண்மையாக கூறுவது போன்ற நடவடிக்கைகளால் பார்பனிய மேலாண்மையை கல்வியின் வாயிலாக கொண்டு வருவதற்கு மோடி அரசு தீவிரமாக செயல்படுகிறது.

இச்சூழலில் கல்வி மீதான நமக்குள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் தரமான இலவச கல்வியை உத்திரவாதப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமான தேவையாகும்.

பேராசிரியர் அமலநாதன்

இதற்கு கல்வித்துறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் கல்வித் துறையில் நடக்கும் சீரழிவுகள், இதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உருவாக்குவது மிக அவசியமாகும். அதற்கானதொரு முயற்சியாகவே பேராசிரியர்கள், மற்றும் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களை கொண்டு “பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு” என்ற அமைப்பு உருவாக்கியுள்ளோம்.

தனியார்மய கல்வியை அடியோடு ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம்.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்

நியூயார்க் நகரிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மணிநேர பயணத்தில் ஆண்டனி மான்சினெலி பணிபுரியும் முடி திருத்தும் கடை ஒன்று அமைந்துள்ளது. மான்சினெலி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரையில் முடிவெட்டும் பணியை மேற்கொள்கிறார். இடையில் தனது மொபைலை நோண்டுவதோ ஓய்வெடுப்பதோ கிடையாது. அதில் என்ன சிறப்பு இருக்கிறது? தொடர்ந்து சோர்வுறாமல் பணி செய்யும் அவருக்கு வயது 107.

இத்தாலியின் நேப்பில்ஸ் நகரத்திற்கு அருகே 1911-ம் ஆண்டு பிறந்த மான்சினெலி, தனது 8-ம் வயதில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தார். தனது 11 வயதில் அருகில் உள்ள முடிதிருத்தகத்திற்கு பகுதி நேர பணியாளராகச் சென்றவர், 12-ம் வயதில் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு முழுநேர முடி திருத்தகராகப் பணிபுரியத் தொடங்கினார் மான்சினெலி. அன்று ஒருமுறை முடிவெட்ட 25 செண்டுகள் பெற்ற மான்சினெலியின் இன்றைய சம்பளம், நபர் ஒன்றுக்கு 19 அமெரிக்க டாலர்கள் (சுமார் 1330 ரூபாய்).

“வேறு யாரையும் நான் என் முடியைத் தொடக் கூட விடமாட்டேன்”, என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த 56 வயதான ஜான் ஓ ரூர்க். இவர் மான்சினெலியின் தொடர்ச்சியான வாடிக்கையாளர். “கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக முடிவெட்டிக் கொண்டிருக்கிறார் மான்சினெலி” என்கிறார் ஓ’ ரூர்க்.

சுமார் 97 ஆண்டுகளாக முடி வெட்டிக் கொண்டிருக்கும் மான்சினெலி, முழுநேரமாகப் பணி புரிகிறார். பணி நேரமான 8 மணிநேரம் முழுவதும் தொடர்ந்து நின்று கொண்டே பணிபுரிகிறார்.

கட்டுக்கோப்பான உடல், தலை நிறைய முடி, வாய் நிறைய பற்கள், கண்ணாடி இல்லாத கண்கள் என மான்சினெலி தன்னைத் தானே ஆரோக்கியமாக பராமரித்து வருகிறார்.

இவரது 96-ம் வயதிலேயே உலகின் வயதான முடி திருத்தகர் என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார். அதனைத் தொடந்து பலரும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த முடி திருத்தகத்தின் உரிமையாளரான ஜேன் டினெஸ்ஸா, அவரது ஆரோக்கியத்தையும், வேலைத்திறனையும் வெகுவாக பாராட்டுகிறார். “அவர் ஒரு போதும் உடல்நலனின்றி காணப்பட்டதில்லை. ஒரு 20 வயது நபரை விட அதிகமாக முடி வெட்டுவார். இளைஞர்கள் பணி நேரத்திலும் செல்போனைப் பயன்படுத்துவார்கள். ஆனால் மான்சினெலி வேலையே கண்ணாக இருப்பார்,” என்கிறார்

இந்த வயதிலும் ஆரோக்கியமாக அயராது பணிபுரிவதன் இரகசியம் குறித்து மான்சினெனிலியிடம் கேட்கப்பட்ட போது, “ஸ்பகெத்தி பாஸ்தா”-வையே உணவாக எடுத்துக் கொள்கிறேன். அதனால் உடல் பருமன் ஆவதைத் தடுத்துக் கொள்கிறேன். நான் பிறர் வற்புறுத்துவதால்தான் மருத்துவரைச் சென்று பார்க்கிறேன். அங்கும் எனக்கு எந்த வலிகளும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே கூறுவேன்” என்று கூறுகிறார், மான்சினெலி.

107 வயதிலும், மான்சினெலி தனது பணிகளைத் தானே மேற்கொள்கிறார். தினமும் காலையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த தனது மனைவி கார்மெல்லாவின் கல்லறைக்குச் சென்றுவிட்டே பணிக்கு செல்கிறார். தனது வாகனத்தைத் தானே ஓட்டுவதில் தொடங்கி, தனது உணவுகளை தானே சமைத்துக் கொள்வது, தனது பில்களைத் தானே கட்டுவது, தனது துணிகளைத் தாமே துவைப்பது, தனது வீட்டுத் தோட்ட வேலைகளை தாமே மேற்கொள்வது என தனது வேலைகளைத் தானே செய்வதில் விடாப்பிடியான குணம் கொண்டவராக இருக்கிறார்.

”எப்போதுமே, தாம் வெட்டிய முடிகளைப் பிறரை பெருக்க விடமாட்டார். பல்வேறு சமயங்களில், தனது முடியைக் கூட தானே வெட்டிக் கொள்வார்” என்கிறார் மான்சினெலியின் மகன், பாப் மான்சினெலி.

முடி திருத்தகத்திற்கு வரும் பலரும், “நான் என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்?, நான் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்? வயது குறைக்கும் க்ரீம் என்ன உபயோகிக்க வேண்டும்?” என மான்சினெலியைத் துளைத்துக் கேள்வி கேட்கின்றனர். ஆனால் இவை எதுவும் இன்றியே அவர் துடிப்புடன் செயல்படுகிறார்” என்கிறார் ஜேன் டினேஸ்ஸா.

படிக்க:
நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்

பல பத்தாண்டுகளில் மாறிவிட்ட சிகை அலங்கார முடி வெட்டுகளுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் மான்சினெலி. பல வாடிக்கையாளர்கள் இவரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முடி வெட்டிக் கொண்டிருக்கின்றனர். “எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.

தனது தொழில் தன்னை எப்போதும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பதுதான் 107 வயதிலும் தனது பணியை விடாமல் தொடர்வதற்கான ஒரே காரணம் என்கிறார் மான்சினெலி.

உழைப்பையே துன்பமாகவும், தன்னைப் பராமறித்துக் கொள்வதையே மாபெரும் தியாகமாகவும் கருதுகின்ற இருபத்தியோராம் நூற்றாண்டு நடுத்தர வர்க்கம் இந்தப் பெரியவரின் உழைப்பை பார்க்க வேண்டும். விரும்பிச் செய்கின்ற உழைப்பு, சக மனிதர்களுக்கு சேவை செய்கின்றஉழைப்புக்கு ஒருபோதும் சலிப்போ, விரக்தியோ வருவதில்லை என்பதை தோழர்களும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

செய்தி ஆதாரம்:
The world’s oldest barber is 107 and still cutting hair full time

செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல ! உழுது தள்ள வேண்டியதுதான் !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 17

மாக்சிம் கார்க்கி
றுநாள் பெலரகேயா தொழிற்சாலை வாசலுக்கு வந்து சேர்ந்த பொழுது, அவளை அங்கு நின்ற காவலாளிகள் வழிமறித்தார்கள். அவளது கூடைகளைச் சோதனையிட்டுப் பார்ப்பதற்காக அவற்றை இறக்கி வைக்கச் சொன்னார்கள். “ஐயையோ! எல்லாம் ஆறிப்போய்விடுமே!”  என்று அமைதியாக ஆட்சேபித்தாள் தாய். அவர்களோ அவளது ஆடையணிகளை முரட்டுத்தனமாகத் தடவிச் சோதித்தார்கள்.

”வாயை மூடு” என்று கடுகடுப்பாய்ச் சத்தமிட்டான் ஒரு காவலாளி.

”நான் சொல்வதைக் கேள். அவர்கள் அதை வேலிக்கு வெளியே இருந்து உள்ளே எறிந்து விடுகிறார்கள். அப்பா!” என்று அவளைத் தோளைப் பிடித்து லேசாகத் தள்ளிவிட்டுச் சொன்னான் இன்னொரு காவலாளி.

அவள் உள்ளே சென்றவுடன் முதன் முதல் அவள் முன் எதிர்ப்பட்டவன், அந்தக் கிழவன் சிஸோவ்தான்.

”அம்மா, நீ கேள்விப்பட்டாயா?” என்று அமைதியாக சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கேட்டான் அவன்.

“என்னது?”

“அதுதான் அந்தப் பிரசுரங்கள். அவை பழையபடியும் தலைகாட்டிவிட்டன. நீ ரொட்டியிலே உப்புத் தூவியிருக்கின்றாயே. அதுமாதிரி அந்தப் பிரசுரங்கள் எங்கே பார்த்தாலும் பரவியிருக்கின்றன. அவர்கள் சோதனை போட்டதிலும், கைது செய்ததிலும் குறைச்சலில்லை. என் மருமகன் மாசினைக்கூட அவர்கள் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள் எதற்காக? உன் மகனைக் கூடத்தான் உள்ளே தள்ளினார்கள். ஆனால் என்ன ஆயிற்று? இந்தப் பிரசுரங்களுக்கு இவர்கள் காரணமில்லையென்பது இப்போது எல்லோருக்குமே தெரிந்து போயிற்று.”

அவன் தன் தாடியைக் கையில் அள்ளிப் பிடித்துக்கொண்டு அவளைப் புதிர் நிறைந்த கண்களோடு பார்த்தான்.

“நீ ஏன் என் வீட்டுக்கு வரக்கூடாது? தன்னந்தனியே இருப்பது உனக்கும் சங்கடமாகத்தானிருக்கும்…”

அவள் அவனுக்கு நன்றி கூறினாள். உணவுப் பண்டங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே, வழக்கத்திற்கு மாறான ஒரு உற்சாகம் தொழிற்சாலையில் நிலவுவதைக் கூர்ந்து கவனித்தாள், தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வந்தார்கள். ஒரு தொழிற்கூடத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடினார்கள். கரிப்புகை படிந்த அந்தச் சூழ்நிலையில், ஏதோ ஒரு தைரியமும், துணிவும் நிரம்பி பிரதிபலிப்பதாக அவளுக்குத் தோன்றியது. இங்குமங்கும் எண்ணற்ற பேச்சுக் குரல்கள் கேட்டன.

கிண்டலான பேச்சுக்களும் உற்சாகம் ஊட்டும் பேச்சுக்களும் ஒலித்தன. வயதாகிப்போன தொழிலாளர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள். கவலை தாங்கிய முகங்களோடு முதலாளிகள் அவர்களைக் கடந்து சென்றார்கள். போலீஸ்காரர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் கூட்டமாக நிற்கும் தொழிலாளர்கள் மெதுவாகக் கலைந்து பிரிந்தார்கள்; அல்லது பேச்சு மூச்சற்றுக் கம்மென்று நின்றார்கள்; அப்படி நின்று கொண்டே, எரிச்சலும் கோபமும் மூண்டு பொங்கும் அந்தப் போலீஸ்காரர்களின் முகங்களை வெறித்துப் பார்த்தார்கள்.

எல்லாத் தொழிலாளர்களும் அப்போதுதான் குளித்து முழுகி வந்தது போலத் தோன்றினார்கள். கூஸெவ் சகோதரர்களின் மூத்தவன் விரைவாக நடந்து சென்றான். அவனது தம்பி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே அவன்கூட ஓடினான்.

தச்சுப் பட்டறையின் கங்காணியான வவீலவ், ஆஜர்ச் சிட்டைக் குமாஸ்தாவான இசாய் முதலியோரும் தாயைக் கடந்து சென்றார்கள். குள்ளமான அந்த நோஞ்சான் குமாஸ்தா தன் தலையைத் திருப்பிச் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு அந்தக் கங்காணியின் சுருங்கிப்போன முகத்தை ஏறிட்டுப் பார்த்தவாறு தனது தாடியைத் துடைத்துக்கொண்டே சளசளத்துப் பேச ஆரம்பித்தான்.

“அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான். இங்கே செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல. ஆனால் உழுது தள்ள வேண்டியதுதான்….”

வவீலவ் தனது கரங்கள் இரண்டையும் பிடரியில் கொடுத்துப் பிடித்துக் கொண்டவாறு நடந்தான்.

“ஏ நாய்க்குப் பிறந்தவனே! நீ போய் என்ன வேண்டுமானால் அச்சடித்துத் தள்ளு” என்று உரத்த குரலில் சத்தமிட்டான். “ஆனால், என்னைப் பற்றி மாத்திரம் துணிந்து எதுவும் சொல்லிவிடாதே, ஆமாம்!”

வசீலி கூஸெவ் தாயிடம் வந்து சேர்ந்தான்.

”நான் இன்றைக்கு இரண்டாம் தடவையாக உன்னிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் போகிறேன். நல்ல சுவை”

”நான் இன்றைக்கு இரண்டாம் தடவையாக உன்னிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் போகிறேன். நல்ல சுவை” என்று சொல்விவிட்டு, தன் குரலைத் தாழ்த்தி, கண்களைச் சுருக்கி விழித்துக் கொண்டு, “அவர்களுக்குச் சரியான பொட்டிலே அடி விழுந்திருக்கிறது. நல்ல வேலை அம்மா, நல்ல வேலை” என்றான்.

அவள் அன்பு ததும்ப, தலையை அசைத்துக் கொண்டாள். தொழிலாளர் குடியிருப்பிலேயே பெரிய போக்கிரி என்று பேரெடுத்தவனான வசீலி அவளிடம் மிகவும் மரியாதையோடு நடந்து கொண்டதானது அவளுக்கு இன்பம் தந்தது. மேலும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள உத்வேகமும் அவளுக்கு அதிக இன்பத்தை அளித்தது. அவள் தனக்குத்தானே நினைக்கத் தொடங்கினாள்.

“நான் மட்டும் இல்லாதிருந்தால்…”

மூன்று சாதாரணக் கூலியாட்கள் கொஞ்ச தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் அதிருப்தி தொனிக்கும் குரலில் அடுத்தவனிடம் மெதுவாகப் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது.

“என் கண்ணில் அது படவே காணோமே…”

”அதிலே என்ன எழுதியிருந்தது. என்பதைக் கேட்க எனக்கு ஆசை, நானோ எழுத்தறிவில்லாதவன். ஆனால், அது என்னவோ அவர்களைச் சரியான இடம் பார்த்து அடித்து விழத்தட்டியது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது” என்றான் இன்னொருவன்.

மூன்றாவது கூலி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, இரகசியமாகச் சொன்னான்:

”வாருங்கள், பாய்லர் அறைக்குள்ளே போவோம்.”

கூஸெவ் தாயைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் காட்டினான். “பார்த்தாயா? எப்படி வேலை?” என்றான்.

பெலரகேயா உவகையும் உற்சாகமும் நிரம்பித் ததும்பியவாறு வீடு திரும்பினாள்.

“வாசித்துப் பார்க்கத் தெரியாததால் ஜனங்கள் எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் தெரியுமா?” என்று அவள் அந்திரேயைப் பார்த்துச் சொன்னாள். “சின்னப் பிள்ளையாயிருக்கும்போது நானும்கூட எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். இப்போது எல்லாமே மறந்து போய்விட்டது.”

“ஏன், இப்போது படியேன்” என்றான் ஹஹோல்.

“இந்த வயதிலா? என்னை என்ன கேலி செய்யப் பார்க்கிறாயா?”

ஆனால் அந்திரேய் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அதன் அட்டையிலுள்ள எழுத்துக்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினான்.

“இது என்ன?”

”எர்” என்ற சிரிப்போடு பதில் சொன்னாள் அவள்.

“சரி, இது?”

“அ…”

அவளுக்குத் தன் நிலைமை பரிதாபகரமாகவும் அவமானகரமாகவும் இருப்பதாகத் தோன்றியது. ஏனெனில் அந்திரேயின் கண்கள் அவளைப் பார்த்து, கள்ளச்சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. அவள் அந்தப் பார்வைக்கு ஆளாக விரும்பவில்லை. ஆனால் அவனது குரல் மட்டும் அமைதியும் பரிவும் நிரம்பி இருந்தது. முகத்தில் கேலிபாவமே காணவில்லை.

“நீங்கள் உண்மையிலேயே எனக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கிறீர்களா. அந்திரியூஷா?” என்று தன் போக்கில் வந்த சிறு நகையோடு கேட்டாள் அவள்.

“ஏன் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்றான் அவன். “எப்படி எப்படியென்பதைக் கற்றுக் கொண்டால் அப்புறம் எல்லாம் மிகவும் லேசாக வந்துவிடும். படித்துத்தான் பாரேன். மந்திரத்தைச் சொல்லு பலித்தால் வெற்றி. பலிக்காவிட்டால் பாபமில்லை!”

“இன்னொரு பழமொழி. தெரியுமா? விக்ரகத்தை வெறித்துப் பார்த்தால் மட்டும் சந்நியாசி ஆக முடியாது.”

”ஊம்” என்று தலையை வெட்டியசைத்துக்கொண்டு சொன்னான் ஹஹோல். ”பழமொழிகளுக்கா குறைச்சல்? குறையத் தெரிந்தால் நிறையத் தூங்கலாம்!” இந்தப் பழமொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்? எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான் பிறக்கின்றன. இவற்றைக் கொண்டு மனத்திற்குக் கடிவாளம் பின்னுகிறது. வயிறு மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக, அதைப் பக்குவப்படுத்துவதற்காகவே பழமொழிகள் உதவுகின்றன.

”இது என்ன எழுத்து?” ”எல்” என்றாள் தாய்.

”சபாஷ்! பார்த்தாயா, இவை எல்லாம் எப்படி ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன! சரி இது என்ன?”

அவள் தன் கண்களைச் சுழித்து விழித்து, புருவங்களைச் சுருக்கி விரித்து மறந்து போன அந்த எழுத்து என்னவென்பதை ஞாபகப்படுத்துவதற்காக அரும்பாடுபட்டாள். தன்னை மறந்து அந்த முயற்சியில் அவள் ஈடுபட்டாள். ஆனால் சீக்கிரமே அவள் கண்களில் அசதி தட்டிவிட்டது. கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. முதலில் வழிந்தது சோர்வுக் கண்ணீர். பின்னர் வழிந்ததோ சோகக் கண்ணீர்.

“நானாவது படிக்கிறதாவது?” என்று பொருமினாள். “நாற்பது வயதுக் கிழவி நான், இப்போதுதான் படிக்கத் தொடங்குகிறேன்.”

‘அழாதீர்கள்’ என்று பரிவோடு கூறினான் ஹஹோல். ”நீங்கள் நன்றாக வாழத்தான் முடியாது போயிற்று. ஆனால் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு படுமோசமானது என்பதையாவது உணர்ந்து கொண்டீர்கள். நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பினால், எத்தனை ஆயிரம் பேரானாலும் நல்வாழ்வு வாழ முடியும். ஆனால் அவர்களோ மிருகங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த வாழ்க்கையைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறார்கள். ஒரு மனிதன் இன்றைக்கும் உண்கிறான், உழைக்கிறான். நாளைக்கும் உண்பான், உழைப்பான். இப்படியே என்றென்றைக்கும் அவனது வாழ்நாள் முழுதும் தினம் தினம் உண்பதும் உழைப்பதுமாகவே அவன் வாழ்ந்தால் அதனால் என்ன லாபம்?

இதற்கிடையில் பிள்ளைகளை வேறு பெற்றுப் போடுகிறான். குழந்தைப் பருவத்தில் அவை அவனுக்குக் குதூகலம் அளிக்கின்றன. கொஞ்சம் வளர்ந்து வயிற்றுக்கு அதிக உணவு கேட்கும் அளவுக்கு அந்தக் குழந்தைகள் பெரிதாகிவிட்டால் உடனே அவனுக்குக் கோபம் பொங்குகிறது. தன் குழந்தைகளையே திட்ட ஆரம்பிக்கிறான்; “ஏ பன்றிக்குட்டிகளா! சீக்கிரம் வளர்ந்து பெரிசாகி எங்கேயாவது பிழைக்க வழி தேடுங்கள்” என்று கறுவுகிறான். அவனே தன் பிள்ளைகளை வீட்டிலுள்ள ஆடுமாடுகள் மாதிரி மாற்றிவிட முனைகிறான், அவர்களோ தங்கள் கும்பியை நிரப்பிக்கொள்ளத்தான் உழைக்க முனைகிறார்கள். இப்படியாக அவர்கள் வாழ்க்கை இழுபடுகிறது.

மனித சிந்தனையை தளையிட்டுக் கட்டிய விலங்குகளையெல்லாம் தறித்தெறிய வேண்டும். என்ற காரணத்துக்காக எவனொருவன் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்கிறானோ, அவனே மனித ஜாதியில் உயர்ந்தவன். அம்மா, உங்கள் சக்திக்கு இயன்றவரை, நீங்கள் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள்”.

“நானா?” என்று பெருமூச்சு விட்டாள் அவள். “நான் என்ன செய்ய முடியும்?”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நாமெல்லாம் மழை மாதிரி. ஒவ்வொரு மழைத்துளியும் விதையைப் போஷித்து வளர்க்கிறது. நீங்கள் மட்டும் படிக்கத் தொடங்கினால்…”

அவன் சிரித்துக்கொண்டே பேச்சை நிறுத்தினான். அங்கிருந்து எழுந்து அறைக்கும் மேலும் கீழும் நடந்தான்.

”நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும். பாவெல் சீக்கிரமே வந்துவிடுவான். வந்தவுடன் அவன் உங்களைக் கண்டு அப்படியே திகைத்துப் போகவேண்டும். ஆமாம்”

”அந்திரியூஷா! வாலிபர்களுக்கு எல்லாமே சுலபம்தான். ஆனால் என்னை மாதிரி வயதாகிவிட்டால் – துன்பம் நிறைய, சக்தி குறைவு, அறிவோ முற்றிலும் இல்லை” என்றாள் தாய்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

தமிழில் தேர்வு எழுதுவது குற்றமா ? பேராசிரியர் அமலநாதன் உரை | காணொளி

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. அமலநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “சமீபத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொண்டாடப்பட்ட மகா புஷ்கர விழா நடத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தாலே, அதன் பின்னணி நமக்கு எளிமையாகப் புரிந்துவிடும். இந்த விழா பல்வேறு இடங்களில் சாதிய ரீதியாக பிரிக்கப்பட்டு சங்க பரிவாரத்தால் கொண்டாடப்பட்டது.

அதே போல சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவும் சாதிய ரீதியாக பிரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. சாதிய அடிப்படையில் கலவரத்தைத் தூண்டுகிறார்கள் சங்க பரிவாரத்தினர்.

பார்ப்பனியம் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான அரசியல் பேசி நடிக்கிறது. ஆதிக்க சாதியினரிடம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட, பட்டியல் சாதி மக்களிடம் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் பேசுகிறது. நாடகம் போடுகிறது.

பலரும் நினைக்கிறார்கள், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று. அது தவறு. அவர்கள் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பெரும்பான்மையினரை அடிமைப்படுத்துகிறார்கள்.

இங்கு நிலவும் சாதியத்தை உடைக்க ஆதிக்க சாதிகளிலிருந்து ஜனநாயக சக்திகள் முன் வர வேண்டும். அப்போதுதான் சாதியத்தை ஒழிக்க முடியும்.

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மீது கடுமையான தடியடியை நிகழ்த்தியது போலீசு.

மாணவர்கள் போராட்டத்தில் முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

  1. ஆங்கில வழியில் பாடம் நடத்தப்படும் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
  2. கல்லூரிக்கு போதுமான வருகைப்பதிவு இல்லையெனில் தேர்வில் எழுதும் ஒவ்வொரு தாளுக்கும் (பாடத்துக்கும்) அபராதப் பணம் கட்ட வேண்டிய புதிய விதியை எடுக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை மாணவர்கள் தமிழிலேயே தேர்வு எழுதினர். இந்த இரண்டு ஒடுக்குமுறை விதிகளையும் கொண்டு வந்தது, தற்போது அங்கு துணை வேந்தராகப் பதவியேற்ற பாஸ்கர்தான்.

தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க, வட மாநிலங்களில் நிலைமை மாறிவருகிறது. மருத்துவர் படிப்புக்கு ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்ற நிலைமையை பல்வேறு இந்தி பேசும் மாநிலங்கள் மாற்றி வருகின்றன. ஹிந்தியிலும் மாணவர்கள் பரிட்சை எழுதலாம் என மாறிவருகிறது.

உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மாணவர்கள் அவர்களது தாய் மொழியில்தான் படிக்கின்றனர். நாமும் தமிழில் படிக்க வேண்டும் என்றே கோருகிறோம். இந்த கோரிக்கை, தமிழ் பழமையான மொழி என்பதிலிருந்து விடுக்கப்படுவது அல்ல. மாறாக, தாய் மொழியான தமிழில் மாணவர்கள் படித்தால் அறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே நாம் இதனை முன் வைக்கிறோம்.

இதனை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் அரசியல்ரீதியாக அணிதிரள வேண்டிய அவசியம் இருக்கிறது. தனித் தனிப் போராட்டங்கள் தீர்வளிக்காது. இன்று ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் தனித் தனியாக மக்களைப் பிரிக்க என்.ஜி.ஓ-க்கள் பெருகி வந்து விட்டன. அவற்றின் முதல்பணி அரசியல் இல்லாமல் செய்வதுதான்.

மக்களின் அரசியல் உணர்வைக் காயடிக்கும் வேலையைச் செய்கின்றன, இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டும். அரசியல்ரீதியாக அணி திரள வேண்டும்” என்றார்.

இந்த உரையை முழுமையாகக் காண

காணொளியை பார்க்கவும் ! பகிரவும் !

வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !

சியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான சீனா நீண்ட காலமாக காற்று மாசுபாட்டிற்காக பெயர் பெற்றது. ஆனால் சமீப காலமாக, அதன் அண்டை நாடான இந்தியா காற்று மாசுபாட்டுடன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறது. தெற்காசிய நாடான இந்தியாவில்தான் உலகிலேயே மிகவும் மாசடைந்த 10 நகரங்கள் உள்ளன.

உலகிலேயே மோசமான காற்றை சுவாசிப்பதற்குக் கொடுக்கப்படும் தனிநபர் மற்றும் பொருளாதார விலை குறித்து 29 வயதான குசும் தோமர் (Kusum Tomar) நன்கறிந்துள்ளார். காற்று மாசுபாடே தனது நுரையீரல் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணி என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் ஒருபோதும் சிகரெட்டை புகைத்ததில்லை. சிகிச்சை செலவிற்காக அவரது கணவர் நிலத்தை விற்றுவிட்டார். உறவினர்களிடமிருந்து கடன் பெற்றுள்ளனர். அவர்களது சேமிப்பும் மெல்ல மெல்ல கரைந்துவிட்டது.

“நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியே இந்த அரசு எண்ணுகிறது. ஆனால் மக்கள் நோய்களால் துன்பப்படுகின்றனர், சாகின்றனர்” என்கிறார் தோமர். மேலும், “உள்நாட்டில் சொந்த மக்கள் காற்று மாசுபாட்டினால் பொருளாதார சிக்கல்களில் உழலும்போது எப்படி நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய முடியும்?” என்று கேட்கிறார்.

காற்று மாசுபாட்டைக் குறைக்க ஒரு ஒருங்கிணைந்த தேசிய அணுகுமுறைக்காக நீண்ட காலமாக இந்தியா போராடி வருகிறது. அதே அணுகுமுறை சீனாவிற்கு காற்று மாசுபாட்டை குறைக்க உதவியிருக்கிறது. காற்று மாசுபாட்டை குறைக்க புதிய திட்டங்களை அறிவித்துள்ள மோடி அரசாங்கம் அத்திட்டங்கள் மாசுபாட்டைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறது. ஆனால் நடைபெற்றுவரும் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகளால் ஏற்படும் மாசு முதல் இலட்சக்கணக்கான மகிழுந்துகள் வெளிப்படுத்தும் புகை வரை இந்தியாவின் பரவலான வளர்ச்சியின் விளைவுகள், இவ்வளர்ச்சியின் நல்ல அம்சங்களை ஒன்றுமில்லாமலாக்குகின்றன.

படிக்க :
தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!

வரும் வாரங்களில் வட இந்தியா மீது கவிய இருக்கும் பனிக்காலமானது மோடி அரசாங்கத்தின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகளை சோதிக்கக் காத்திருக்கின்றது. இந்த பயிர்ப்பருவத்தில் எரிக்கப்படும் பயிர்கள் மற்றும் தீபாவளிப் பண்டிகையின் போது கொளுத்தப்படும் கோடிக்கணக்கான பட்டாசுகள் காற்று மாசுபாட்டின் அளவை அபாயகரமான அளவிற்கு உயர்த்தும்.

கடுமையான மாசுப்பாட்டு வழிமுறைகளை வெற்றிகரமாக அமல்படுத்தியிருந்தால் இந்திய அரசும் அதன் மக்களும் இன்னும் செழிப்பாக இருந்திருக்கலாம். மருத்துவச்செலவுகள் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பின் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 விழுக்காடு அளவிற்கு இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி கணக்கிட்டுருக்கிறது. இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியான 2.6 ட்ரிலியன் டாலரில் (190 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்), சுமார் 221 பில்லியன் டாலர் (16 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) வரை ஆண்டுதோறும் இந்தியா இழக்கிறது.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் கூட 12.2 டிரில்லியன் டாலருடன் (894 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) அதை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பெரிய பொருளாதாரமாக சீனா உள்ளது. அடிப்படை உற்பத்தியை பெருக்க இந்தியா தீவிரமாக முயன்று வரும் நிலையில் அது காற்று மாசுபாட்டை மிகவும் மோசமடைய செய்து விடும் என்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான இராகபேந்திரா ஜா.

மேலும், “ஒரு மாசற்ற பொருளாதார வளர்ச்சிக்கான மாற்றம் சுமூகமாக இருக்கும் எனக் கருதுவது மிகவும் ஒரு எளிமையான புரிதல்” என்கிறார்.

தூய்மையான காற்று இல்லாமல் மூச்சு தினறுகிறது இந்தியா.

புது டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 1988-ம் ஆண்டில் ஒரு மார்பு அறுவை சிகிச்சை நிபுணராக தனது பணியை அரவிந்த் குமார் தொடங்கிய போது அவரிடம் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்தவர்களில் 90 விழுக்காட்டினர் புகைப்பழக்கம் உடைய நடுத்தர வயது ஆண்களாகவே இருந்தனர். ஆனால் தற்போது வருபவர்களின், 60 விழுக்காட்டினர் புகைப்பழக்கம் இல்லாதவர்கள் என்றும் அவர்களில் பாதி பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். காற்றில் பரவும் நுண்துகள்களால் ஏற்படும் மூச்சுத்திணறல், இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் காரணமாக 2015-ம் ஆண்டில் 11 இலட்சம் இந்தியர்கள் மரணமடைந்ததாக ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் (Health Effects Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கூறுகிறது.

இதற்கிடையில், இரண்டு பத்தாண்டுகால பொருளாதார விரிவாக்கத்தினால் சீனப் பொருளாதாரம் புனரமைக்கப்பட்டு தற்போது குறைந்த மாசுப்பாடு ஏற்படுத்தும் சேவைகள் மற்றும் பொருட்கள் பயன்பாட்டிற்கு சீனா மாறி வருகிறது. அதன் நகரங்கள் இன்னும் புகை மூட்டமாக இருந்தாலும் முன்னேற்றமும் அடைந்திருக்கின்றன.

படிக்க :
முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை ! – கருத்துப் படங்கள்
புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

புது டெல்லியில், 2017-ம் ஆண்டிலேயே, மிகவும் அபாயகரமான காற்று நுண்துகளான PM2.5-ன் அளவு 200-யைத் தாண்டிவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு 66-ஆக இருந்த “மிகவும் ஆரோக்கியமற்ற நாட்களின்” எண்ணிக்கை 2017 –ம் ஆண்டில் 84-ஆக அதிகரித்து விட்டது என்று காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் “ஏர்விசுவல்” நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன. இதே காலகட்டத்தில் பீஜிங்கின் “மிகவும் ஆரோக்கியமற்ற நாட்களின்” எண்ணிக்கையை 43-லிருந்து 20 நாட்களாக சீனா குறைந்திருக்கிறது.

“சீனாவைப் போல இங்கே மக்கள் தொடர்ச்சியாக காற்று மாசுபாட்டை குறைக்க கோரிக்கை விடுக்காமல் இருப்பது ஒரு பெரிய பிரச்சினை” என்கிறார் சிகாகோ பல்கலைகழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் கிரீன்ஸ்டோன். “ஏனெனில் மக்களது வாழ்நாளைக் குறைப்பதிலும் அவர்களை நோயில் தள்ளுவதிலும் காற்று மாசுபாடு எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்து முழுவதுமாக இங்கே கண்டு கொள்ளப்படவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.

காற்று மாசுபாடு தொடர்பான மரணங்கள் குறித்த உலகளாவிய ஆய்வுகள் [இந்திய நிலைமைகளுக்கு] பொருத்தமாக இல்லை. மேலும் உள்நாட்டு ஆய்வுகளின் அடிப்படையிலேயே காற்று மாசுபாட்டினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு கூறியிருக்கிறது.

காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறினார். டெல்லியில் நுண்துகள் (PM2.5) காற்று மாசுபாடு அளவு செப்டம்பர் மாதத்தில் தாங்கள் கணக்கிட்ட படி குறைந்துள்ளதை மேற்கோளிட்டு அவர் காட்டினார். காற்று மாசுபாட்டின் அளவு மிக அதிக அளவு எட்டும் முன்னரே எச்சரிக்கை செய்து தடுப்பதற்கான கட்டமைப்பு வசதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் சாலை துப்புரவு இயந்திரங்களை அதிகளவு பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மைய அமைச்சரான ஹர்ஷ் வர்தன்

அரசு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மைய அமைச்சரான ஹர்ஷ் வர்தன் கூறினார். “அனைத்தும் இப்போது சரியாக இருக்கிறது. நாம் பொறுமையாக வேலை செய்யலாம் என நாங்கள் கூறவில்லை. நாங்கள் ஒருகணம் கூட ஓய்வெடுக்கவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் சூரிய எரிசக்தியையும் ஊக்கப்படுத்தியிருக்கிறது, மாசு கட்டுப்பாட்டு தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது மற்றும் விறகடுப்பு பயன்பாட்டை குறைக்க இலட்சக்கணக்கான சமையல் எரிவாயு அடுப்புகளை கொடுத்தது. விவசாயிகள் விளைந்து களைந்த பயிர்களை கொளுத்துவதையும் அதிகாரிகள் தடுத்திருக்கின்றனர். ஆனால் அதிகாரபூர்வமாக தொடங்கப்படவிருக்கும் ஒரு தேசிய திட்டத்தின் உறுதியான இலக்குகளுக்காக சூழலியலாளர்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.

“இந்த கட்டத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான இலக்குகள்தான் அவசியமானவை” என்று காற்று மாசுபாடு குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆலோசனைகள் வழங்கிவரும் புது டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தைச் சேர்ந்த அனுமிதா ராய் சௌத்ரி கூறினார். மேலும் தெளிவான இணக்கம் மிகுந்த உத்தி ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

படிக்க :
யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?
புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

இங்கே மேலும் கூடுதலான சவால் ஒன்று இருக்கிறது. இந்தியாவின் குழப்பம்மிக்க மக்களாட்சியில், ஏழ்மையும் வேலையின்மையும் பெரும்பாலும் பெரும் பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. ஒன்றுக்கொன்று போட்டி போடும் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கங்களுக்கு காற்று மாசுபாட்டை கூட்டாக குறைப்பதில் சில சமயங்களில் இலாபம் எதுவும் இல்லை.

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு தன்னுடைய கட்சிக்கு குறைவான அதிகாரமே இருப்பதாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் இராகவ் சதா கூறுகிறார். ”தற்காலிகமாக கட்டுமானப் பணிகளை நிறுத்துவது போன்ற அளவு மட்டுமே எங்களால் தடுக்க இயலும். மைய அரசின் தலைமையில் பல்வேறு மாநிலங்களுக்கிடையிலான இணக்கம்தான் தற்போது தேவைப்படுகிறது” என்று கூறும் அவர் மோடியின் நிர்வாகத்துடன் கடுமையாக வேறுபடுவதாக கூறினார்.

நாடே ஸ்வாக ஆகும் போது மோடிக்கு யோகா.

இதற்கு மாறாக சீனாவைப் பொருத்தமட்டில் அதன் பிரதமர் லி கெச்சியாங் (Li Keqiang) காற்று மாசுபாட்டிற்கு எதிராக தேசிய அளவிலான போரை அறிவித்துள்ளார். காற்று தரத்தின் இலக்குகளை அடையாவிட்டால் பதவி உயர்வு கிடையாது என்று சீன அரசாங்கம் கூறிவிட்டது. மேலும் மாசுபாட்டை உருவாக்கும் தொழிற்துறைகளிலிருந்து விலகவும் முயன்று வருகிறது. அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகள் பல இலட்சக்கணக்கான குடும்பங்களையும் தொழில்களையும் நிலக்கரியிலிருந்து தூய்மையான இயற்கை எரிவாயுவிற்கு மாறச்செய்துள்ளது.

காற்று நுண்துகள் மாசுபாட்டின் (PM2.5) அளவு பீஜிங் மற்றும் தியான்ஜினில் 33 விழுக்காடும் சுற்றியுள்ள நகரங்களில் 26 விழுக்காடும் சென்ற ஆண்டின் 4-வது காலாண்டில் குறைந்துள்ளது.

“அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளைக் காட்டிலும் வேகமாகவும் விவேகமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலை சீனா பெற்றுள்ளது” என்று ஸ்மித் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியரும் “சீனாவில் காற்று மாசுபாடு” என்ற நூலின் ஆசிரியருமான டேனியல் கார்ட்னர் கூறினார்.

புற்றுநோயை எதிர்த்து சீனா தொடர்ந்து போராடுகிறது. அதே சமயத்தில் காற்று மாசுபாட்டை குறைக்கும் அதன் முயற்சிகளில் அதற்கேயுரிய சிக்கல்களும் உள்ளன. முதன்மையான நகரங்களில் காற்று மாசுபாட்டை உண்டாக்கும் தொழில்களை வெறுமனே மூடிவிட்டு அவற்றை மேற்கு பகுதிகளுக்கு மாற்றியிருப்பதாக உலகளாவிய காலநிலை ஆய்வு மையத்தை (Center for International Climate Research) சேர்ந்த மூத்த ஆய்வாளர் கிறிஸ்டின் ஆனன் கூறினார். பின்னர் விரிவாக்கப்பட்ட காற்று மாசுபாடு இலக்குகளை கொண்ட திட்டங்களை பிற மாநிலங்களுக்கும் சீனா பின்பற்றியுள்ளது.

இந்தியாவில் இதன் விளைவுகளை ஏற்கனவே வணிக நிறுவனங்கள் உணரத்தொடங்கி விட்டன. இணைய வர்த்தக நிறுவனமான பேடிஎம்-மின் நிறுவனரும் பில்லியனருமான விஜய் சேகர் சர்மா, காற்று மாசினால் ஏற்படும் திறமையானவர்களின் இழப்பு குறித்து வருந்துகிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னாள் வங்கியாளரான கிருஷ்ணா ஹெக்டே பேடிஎம்-மிற்கான புதிய தயாரிப்புகளை செய்வதற்காக பெங்களூருக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் டில்லியில் உள்ள பேடிஎம் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு பயணம் செய்ய முடியாததால் வேலையை விட்டு விட்டார். “முதல் நாளின் முடிவில் எனது ஆற்றலின் அளவு குறைந்து விட்டது. இரண்டாம் நாளின் இறுதியிலோ எனக்கு தலைவலியே வந்துவிட்டது” என்று ஹெட்கே கூறினார்.

புகைமூட்டத்தைக் குறைக்கவல்ல உள்ளூர் மற்றும் உலக அளவிலான புதிய நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு நிதிமூலதன முதலாளியுடன் சர்மா இணைந்திருக்கிறார். மற்ற நிறுவனங்களும் கூட இதேபோன்ற திட்டங்களை முயற்சிக்கின்றன. டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான சோனாலிகா குழுமம், ஹரியானாவில் உள்ள விவசாயிகள் விளைந்து களைந்த பயிர்களை எரியூட்டுவதை நிறுத்துவதற்காக புதிய இயந்திரக்கருவிகளை வடிவமைத்து அவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் நிலை நுரையீரல் புற்றுநோய்க்காக புது டெல்லியில் சிகிச்சை பெற்ற தோமர், எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. தமது வீட்டிலிருந்து கொண்டே மருத்துவ ஆய்வுகளுக்காகவும் வேதிச்சிகிச்சைக்க்கும் (கீமோத்தெரபி) தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

“எனது குடும்பம் மனரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், உடல்ரீதியாகவும் இன்னும் சொல்லப்போனால் பொருளாதார ரீதியாகவும் எனது சுமையைத் தாக்கிக் கொண்டிருப்பதை நினைத்து சில நேரங்களில் நான் உடைந்து போகிறேன்” என கலங்குகிறார் தோமர்.

தமிழாக்கம்:

 

நன்றி : லைவ்மிண்ட்

இந்தி பிரச்சார சபை : நிதி விவரங்களைத் தர மறுப்பது ஏன்?

தென்னிந்திய இந்தி பிரச்சார சபைக்கு 2005-ம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட கேள்விகளை அனுப்பியிருந்தேன்:

  1. தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபாவிற்கென மத்திய அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்கிறதா?
  2. 2017-ம் ஆண்டில் இந்தி பிரச்சார சபாவிற்கென மத்திய அரசு ஒதுக்கீடு எவ்வளவு?
  3. தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபாவிற்கென மாநில அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்கிறதா?

இதற்குப் பதில் அனுப்பியுள்ள பிரச்சார சபாவின் பொதுச் செயலர், “தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் வரவில்லையென்பதை அறியவும். தாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 -எச்ஐப் பார்க்கவும். ஆயினும் தாங்கள் கோரிய விவரங்கள் தங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்”. என்று சொல்லிவிட்டு, கேட்ட கேள்வி அனைத்திற்கும் இல்லையென பதில் அளித்துவிட்டனர். அதாவது மத்திய அரசிடமிருந்து நிதி எதையும் பெறவில்லையாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 H எதுவெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொது அமைப்பு என்பதை வரையறுக்கிறது. அந்த வரையறைக்குள் தாங்கள் வரவில்லையென்கிறது பிரச்சார சபா.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 H இதுதான்:

பிரிவு 2 (h) “public authority” means any authority or body or institution of self-government established or constituted,—
(a) by or under the Constitution;
(b) by any other law made by Parliament;
(c) by any other law made by State Legislature;
(d) by notification issued or order made by the appropriate Government, and includes any—
(i) body owned, controlled or substantially financed;
(ii) non‑Government Organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government.

2009-ம் ஆண்டிலும் இதுபோல தகவல் கேட்ட ஒருவருக்கு இதேபோல கேலியாக “தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்” என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

தில்லியைச் சேர்ந்த ரமேஷ் திவாரி என்ற அந்த மனிதர் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. நேரடியாக மத்தியத் தகவல் ஆணையத்திற்கு அப்பீல் போய்விட்டார்.

முதலில் அந்த அப்பீலை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், பிரச்சார சபா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் சொல்லவேண்டியதில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், ரமேஷ் திவாரி விடவில்லை. மத்திய அரசின் நிதி அந்த அமைப்புக்குச் செல்கிறது என்று கூறி மீண்டும் அப்பீல் செய்தார். அதனை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், 2005லிருந்து 2008 வரையிலான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்குகளைக் கேட்டு வாங்கியது.

அதன்படி பார்த்தால் 2005-2006 -ல் 76 லட்சத்து 17ஆயிரமும் 2006-2007-ல் 96 லட்சத்து 9 ஆயிரமும் 2007-2008-ல் 95 லட்சத்து 32 ஆயிரமும் மத்திய அரசிடமிருந்து மானியமாகப் பெற்றுள்ளது.

இதையடுத்து, பிரச்சார சபை சுட்டிக்காட்டிய அதே சட்டப்பிரிவு 2 H-ன் விதி எண் d 1-ன் படி, மத்திய அரசின் குறிப்பிடத்தக்க நிதியைப் (மொத்த வருவாயில் பத்து சதவீதத்திற்கு மேல்) பெறுவதால், மனுதாரர் கேட்ட தகவல்களை அளிக்க வேண்டுமென மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 2009-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் பொதுத் தகவல் அதிகாரி ஒருவரையும் முதல் நிலை மேல் முறையீட்டு அதிகாரி ஒருவரையும் நியமிக்க உத்தரவிட்டது.

இப்போது தகவல் கேட்டால், மீண்டும் அதே பழைய பல்லவியைப் பாடுகிறார்கள். என்ன செய்வது?

படிக்க:
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram

(தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபை தவிர, Department of Languages, சென்ட்ரல் இந்தி டைரக்ட்ரேட், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தி, கமிஷன் ஃபார் சயின்டிஃபிக் அண்ட் டெக்னிகல் டெர்மினாலஜி ஆகியவை மூலமும் கோடிக் கணக்கான பணம் இந்தி வளர்ச்சிக்குக் கொட்டிக்கொடுக்கப்படுகிறது. எந்தச் செலவுக்கும் கணக்குக் கேட்க முடியாது போலிருக்கிறது.)

மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையை பெற இங்கே சொடுக்கவும்: central information commission_order

முகநூலில் Muralidharan Kasi Viswanathan

விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 2

வாழ்வை இழந்த கதைகள்

 

ருவர், முன்னாள் ஆளுங்கட்சி, இப்போது இருக்கும் எதிர்க்கட்சி நபரால் பிடுங்கப் பட்டு தனது நிலத்தை இழந்தவர். அவரது நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் பண்ணிருக்கிறார்கள். இதனால் அவருடைய விவசாயமும், அதையொட்டி இருந்த அவருடைய வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எல்லாம் போயி முயற்சி பண்ணியிருக்கார். குற்றவாளி ஆளுங்கட்சியாக இருந்ததால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. புகாரைக் கூட எடுக்கல.

நிலத்தை மிரட்டிப் பிடுங்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்.

ஊருக்குள் பஞ்சாயத்து வச்சி நீ உயிரோட இருக்கணுமா வேண்டாமா என்று மிரட்டி அடி மாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி இருக்காங்க. அந்தக் காசை வைத்து பையனை டிப்ளமோ படிக்க வச்சிருக்கார். நல்ல தெரிஞ்ச சொந்தத் தொழிலை விட்டுட்டு சாப்பாட்டுக்கு வழியில்லாம, படிச்ச படிப்புக்கு அரியலூர் மாவட்டத்தில வேலையும் கிடைக்காம ஒரு போலி ஏஜென்டை நம்பி அங்கு சென்று மாட்டிக் கொண்டார்.

இன்னொருவருடைய இடத்தை அரசின் நெடுஞ்சாலை துறை பிடுங்கி இருக்கு. அந்த இடத்தில இருக்கும் கிணறும் வேணும் என்று சொல்லி, கிணற்றை அடைத்து அதனோடு சேர்ந்த இடத்தையும் எடுத்துகிட்டாங்க. இடமும் குறைந்து விட்டது. விவசாயம் செய்ய கிணறு போடணும்; நெடுஞ்சாலை அருகே வந்ததால் இலவச மின்சாரம் வாங்கும் தகுதி இல்லை என்று கூறி மின்சாரத்தையும் பிடுங்கிட்டாங்க. நட்டத்தை சமாளிக்க முடியமா இடத்தை விற்க வேண்டிய சூழ்நிலை. விற்று பெண்ணுக்கு திருமணம் செய்திட்டு, வருமானம் இல்லாமல் நகைகளை அடகு வைத்து மலேசியா போயி மாட்டியிருக்காங்க.

இவங்க 6 பேரோட பின்னணியை பார்த்தா ஒன்னு அதிகாரத்தை பயன்படுத்தி இடத்தை பிடுங்கி இருக்காங்க. அல்லது நெடுஞ்சாலைத் துறையோ வேறு நிறுவனங்களோ அது வருது, இது வருது என்று இடத்தை எடுத்திருக்காங்க.

விவசாயத்துக்கு மூலமாக இருக்க கூடிய நிலமும், தண்ணியும் இல்லாமல் வெறும் காசை வைத்து பெருசா ஒன்னும் பண்ண முடியல. நெடுஞ்சாலைத் துறை அந்த இடத்துக்கு என்ன மதிப்போ அந்த காசு கொடுத்ததும் ஒன்னும் செய்ய முடியல. ஏன்னா “இலவச மின்சாரம் போயிடுச்சி, தண்ணி இல்லை, ரோடு அருகே வந்ததால் விவசாயமும் செய்ய முடியவில்லை. இந்த இடத்தில் இந்தத் திட்டம் எல்லாம் வரணும்னு யாரு கேட்டா” என்று நொந்துபோய் பேசினார்கள்.

படிக்க :
ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

நெடுஞ்சாலை துறை கிட்டயிருந்து பணம் வாங்க 2% கமிஷன் கொடுத்து தான் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூலமா வாங்க முடிஞ்சிருக்கு. இதுதான் இன்னைக்கு நாட்டோட உண்மை நிலவரம்.

பணமா வாழ்க்கையா?

இப்படி பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை பற்றி திட்டமிடாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை கைப்பற்றி விட்டு, அதுக்கு இழப்பீடா 5, 6 லட்சம் கொடுத்தாலும் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? பணத்தை வச்சி கடை ஏதாவது வைத்து வாழலாம்னு நீங்க சொல்லலாம், ஆனால் எந்த விதமான முன் அனுபவமும் இல்லாமல் ஒரு புதிய தொழிலை செய்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?

பணமா வாழ்க்கையா?

ஒரு வியாபாரி தன் மகனை தன்னுடைய அனுபவங்களை கொண்டு ஒரு வியாபாரியாக வளர்க்க முடியும். ஆனால், ஒரு விவசாயி பணத்தை கொண்டு தன் மகனை முடிந்த அளவு படிக்க வைக்கவோ அல்லது ஏதேனும் ஒரு சிறு வியாபாரமோ செய்து பிழைக்க விரும்பினால், அதில் வெற்றி காணுவது அனைவராலும் இயலுவதில்லை.

புதிய தொழிலில் அல்லது வியாபாரத்தில் வெற்றிக்கான உழைப்பு மட்டும் போதுமா? இல்லவே இல்லை.. கடின உழைப்புடன் கூடிய விடாமுயற்சியோடு நீண்ட கால முதலீடு, நேரம், முன் அனுபவம், அந்தத் துறையில் தொடர்புகள் ஆகியவையும் தேவைப்படுகிறது. நமது மாநில அரசு ஆகட்டும் இல்லை மத்திய அரசு ஆகட்டும் அதற்கான வாய்ப்புகளையோ அல்லது அவகாசத்தையோ அனைவருக்கும் கொடுக்கிறதா?

எதற்கெடுத்தாலும் சென்னை தான் வரவேண்டியுள்ளது. அங்கிருந்து வெளி நாடு போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இதனால் கிராமங்களையும், சிறு நகரங்களையும் சேர்ந்த உழைப்பாளிகள் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் பொருளாதார பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு அரசை பின்புலமாக கொண்ட மற்ற சிலரும் ஏமாற்றுகிறார்கள்.

எப்படி ஏமாற்றுகிறார்கள்?

இதற்கு உதாரணமாக… இந்த 6 பேர் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விஜயலக்ஷ்மி, இளங்கோ என்ற இரண்டு பேர். இளங்கோ திருச்சியை சேர்ந்தவர். இவர்கள் கீழே ஒரு பெரிய நெட்ஒர்க்கே இருக்கு. இவங்க இந்த மாதிரி கிராமங்களில் போய்ட்டு டிப்ளமோ முடிச்ச பசங்க, கம்யூனிகேஷன் பலவீனமாக இருக்கிற பசங்க, வசதி இல்லாமல் இருக்கும் பசங்களிடம், “உனக்கு இந்த வேலை தெரியுமா, உனக்கு மலேசியாவில், துபாயில் வேலை வாங்கி தர்றேன், சிங்கப்பூர்ல வேலை வாங்கி தர்றேன்”-னு சொல்லி ஆசை வார்த்தை கூறி, அவர்கள் குடும்பத்திடம் பேசி ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு அவர்களை இந்த மாதிரி ஏமாற்றி அனுப்பிடறாங்க.

இது மாதிரி வெளிநாடுகளுக்கு டூரிஸ்ட் விசால போயி அங்குள்ள காண்ட்ராக்டர் ஒருத்தன் கூட்டிட்டு போய் கொத்தடிமையா நடத்தறான். உயிருடன் இருக்க சாப்பாடு மட்டும் போட்டுட்டு சம்பளமே கொடுக்காம கொத்தடிமையா நடத்தறான்.

முன் கூறிய ஆளுங்கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மீது ஆறு பேரும் இந்தியா வருவதற்கே முன்னாடியே குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனதுக்கு, “இந்தப் புகாரை எடுத்துக்க முடியாது. நீங்க காசுக்கு ஆசைப்பட்டு போர்ஜ்ரி பண்ணிட்டு எப்படி அவர் மேல புகார் கொடுக்க முடியும்”னு கேட்டு கேவலமா பேசி இருக்காங்க. மோசடி புகார்னு எடுக்கவும் மாட்றானுங்க.
இவங்க இந்தியா திரும்பிய பிறகு எஸ்.பி ஆபீஸ், Protector of emigrant ஆபீஸ்க்கெல்லாம் போனதுக்கு அப்பறம் தான் புகார் எடுக்கவே முயற்சி எடுக்குறாங்க.

விவசாயிகள், தொழிலாளர்களின் இத்தகைய பிரச்சனைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. முழு கவனத்தையும் சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு மட்டுமே கொடுக்கிறதால, கிராமப்புற மாணவர்களுக்கு வெளி உலகத்தை பற்றின புரிதலே இல்லாமல் போகுது. வெளி நாடு செல்வதற்கான சட்டபூர்வமான விதிமுறைகள், வழிமுறைகள் என்னென்ன என்று எல்லாருக்கும் தெரியிற மாதிரி எங்கேயாவது வெளியிடனும். ஆனால் இவைகளை எல்லாருக்கும் தெரியிற மாதிரி அரசு வெளியிடறதும் இல்லை; அதற்கான முயற்சியும் எடுக்கிறது இல்லை.

படிக்க :
தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
ஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை

சென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை பார்க்கிறோம். இடத்திற்காக பணம் கொடுத்தாலுமே, இந்த மாதிரியான குற்றங்களுக்கு ஒரு காரணமாக தான் அது அமையும்; அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க போவதில்லை.

“நான் விவசாயம் பண்ணுவேன், என் பையன் செய்வான் அப்புறம் என் பேரன் செய்வான். நாலு பேருக்கு சாப்பாடு போட்டு வாழ வைப்போம்.” இது தான் விவசாயம். ஆனால், எனக்கு ஆதாரமாக இருக்கிற இடத்தை பிடுங்கிகிட்டு அதற்கு ஒரு கோடி கொடுத்தாலுமே, அதை வைத்து வாழ முடியாது. ஒரு கோடியா இன்சூரன்ஸ்ல போட்டா tax, பேங்க்ல போட்டா எடுக்க முடியாது; எதை பண்ணாலும் tax … இந்த சூழ்நிலையில என்ன செய்ய முடியும்?

பையன படிக்க வச்சா வேலை வாய்ப்பு எல்லா மக்களுக்கும் சமமா கிடைக்குதா? ஒரு தட்டு மக்கள், ஒரு தரப்பட்ட மக்களுக்குத்தான் வேலை வாய்ப்பு- னு ஒரு எழுதப்படாத சட்டம் பின்பற்றப்படுது.

– சரவணன்

(தொடரும்)

நன்றி : new-democrats

இதன் முந்தய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?

நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும் ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 16

அன்று மாலையில் அவள் தேநீர் பருகிக்கொண்டிருக்கும்போது வெளியே சக்தி தெறிக்க வரும் குதிரைக் குளம்புகளின் ஓசையும் அதைத் தொடர்ந்து ஒரு பழகிய குரலும் கேட்டது. அவள் துள்ளியெழுந்து கதவைத் திறப்பதற்காக சமையல் கட்டுக்குள் ஓடினாள். யாரோ வாசல் பக்கத்தில் அவசர அவசரமாக நடந்து வருவதாய்த் தெரிந்தது. அவளது கண்கள் திடீரென இருண்டன. அவள் கதவைக் காலால் தள்ளித் திறந்துவிட்டு, கதவு நிலைமீது சாய்ந்து நின்று கொண்டாள்.

மாக்சிம் கார்க்கி

“வணக்கம் அம்மா!” என்ற பழகிய குரல் கேட்டது; அதே சமயம் மெலிந்து நீண்ட கரங்கள் அவள் தோள்களில் மீது விழுந்தன.

அவளது இதயம் ஏமாற்றத்தால் கலங்கியது. அந்த ஏமாற்றத்தோடு அந்திரேயைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தமும் பொங்கியது. அந்த இரு உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று முயங்கி, ஒரு பேருணர்ச்சியாகத் திரண்டு, அவளை மகிழ்ச்சிப் பரவசத்துக்கு ஆளாக்கி உந்தி எழச்செய்து, அந்திரேயின் தோள் மீது முகத்தைப் புதைத்துக் கொள்டாள். நடுநடுங்கும் கைகளோடு அவளை இறுக அணைத்துக்கொண்டான் அவன். தாய் அமைதியாக அழுதாள். அவளது தலைமயிரைத் தடவிக் கொடுத்துக்கொண்டே சொன்னான் அவன்.

”அழாதீர்கள். அம்மா! வீணாக மனத்தை நோகச் செய்து கொள்ளாதீர்கள். என்னை நம்புங்கள். அவர்கள் பாவெலைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஒரு சாட்சியமும் கிடையாது. வெந்து போன மீனைப் போல், எல்லோரும் ஊமையாகவே இருக்கிறார்கள்…”

தன் கரத்தைத் தாயின் தோள் மீது வைத்தவாறே அவளை அடுத்த அறைக்குள் அழைத்துச் சென்றான்; அவனோடு ஒட்டித் தழுவிக்கொண்டாள் அவள். ஒரு அணிற்குஞ்சின் சுறுசுறுப்போடு அவள் தன் கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள்.

“பாவெல் உங்களுக்குத் தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னான். அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்சாகமாகவும், நன்றாகவும் இருக்கிறான். சிறையிலே ஒரே கூட்டம் சுமார் நூறு பேரைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள். நம் ஊர் ஆட்களும் இருக்கிறார்கள். நகரிலிருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு கொட்டடிக்கு மூன்று அல்லது நாலு பேராகப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். சிறை அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள். இந்தப் பிசாசுப் பிறவிகளான போலீஸ்காரர்கள் கொடுத்துள்ள வேலையினால் அவர்கள் இளைத்துக் களைத்து ஓய்ந்து போயிருக்கிறார்கள்.

அதிகாரிகள் ரொம்பக் கடுமையாக இல்லை; அவர்கள் எங்களைப் பார்த்து ‘பெரியோர்களே, அமைதியாக மட்டும் இருங்கள். வீணாய் எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. நமது தோழர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள்; புத்தகங்களைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். சாப்பாட்டையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அது ஒரு நல்ல சிறைதான். ரொம்பப் பழசு. அட்டுப் பிடித்த சிறை; என்றாலும் கைதிக்கு மோசமாக இல்லை. கிரிமினல் கைதிகளும் ரொம்ப நல்லவர்கள், அவர்கள் நம்மவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்கிறார்கள். நானும் புகினும் இன்னும் நால்வரும் விடுதலையாகிவிட்டோம். பாவெலும் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம் தான்.

நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தான் கடைசியாக வருவான். அவன் அவர்களிடம் தாறுமாறாக நடந்து கொள்வதால், அவன் மீது அவர்களுக்கு ஒரே கோபம். அவனைப் பார்க்கக்கூட போலீஸ்காரர்கள் பயப்படுகிறார்கள். அநேகமாக அவனைச் சீக்கிரம் விசாரணைக்குக் கொண்டு செல்வார்கள்; இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் அடித்துத் தள்ளுவார்கள் !

நிகலாய் நிறுத்து. உன் வசவுகளால் ஒரு பயனும் இல்லை என்று பாவெல் அடிக்கடி கூறிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நிகலாயோ போலீசாரைப் பார்த்து ‘உங்களையெல்லாம் பொருக்காடிப்போன புண்ணைத் துடைக்கிற மாதிரி பூமியிலிருந்தே துடைத்துத் தீர்த்துவிடுவேன்!’ என்று கத்துகிறான். பாவெல் நன்றாக நடந்து கொள்கிறான். உறுதியோடும் நிதானத்தோடும் இருக்கிறான். அவனைச் சீக்கிரம் வெளியே விட்டுவிடுவார்கள் என்பதுதான் என் எண்ணம்…”

“சீக்கிரமா?” என்று அன்பு ததும்பும் புன்னகையோடு திருப்பிக் கேட்டாள் தாய்; “அவன் சீக்கிரம் வந்துவிடுவான். அது நிச்சயம்.”

“அதனால் விஷயங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கின்றன. சரி எனக்கு முதலில் ஒரு குவளைத் தேநீர் கொடுங்கள். அப்புறம், நீங்கள் எப்படிக் காலந் தள்ளினீர்கள்? சொல்லுங்கள்.”

அவன் சிரித்துக்கொண்டே, அவளை ஏற இறங்கப் பார்த்தான். அன்பும் அமைதியும் ததும்பப் பார்த்த அவனது பாசம் ஒளி வீசம் கண்களில் ஒரு கணம் சோகத்தின் சாயை படர்ந்து மறைந்தது.

“உங்கள் மேல் எனக்கு ரொம்பப் பிரியம். அந்தியூஷா” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள் தாய். மண்டி வளர்ந்திருந்த தாடிக்குள் தெரியும் அவனது மெலிந்த முகத்தை கூர்ந்து பார்த்தாள்.

”என்னை நீங்கள் கொஞ்சமாக நேசித்தாலும் எனக்குத் திருப்திதான்” என்று கூறிக்கொண்டே தான் அமர்ந்திருந்த நாற்காலியை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டான் அவன். “உங்களுக்கு என் மேலே பிரியம் என்பதும் எனக்குத் தெரியும். உங்கள் இதயம் பரந்தது, நீங்கள் எல்லோரையுமே நேசிக்கிறீர்கள்.”

“ஆனால் உங்களை பிரத்தியேகமாக நேசிக்கிறேன் என்று அவள் அழுத்திக் கூறினாள். ”உங்களுக்கு ஒரு தாய் மட்டும் இருந்தால், உங்களை மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்காக, எல்லோரும் அவள் மீது பொறாமை கொள்வார்கள்.”

அந்த ஹஹோல் தலையை அசைத்தான, தன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கரகரவென்று தேய்த்து விட்டுக் காண்டான்.

”எனக்கும் எங்கோ எவ்விடத்திலோ ஒரு தாய் இருக்கத்தான் செய்கிறாள்” என்றான். அவன் குரல் தணிந்து போயிருந்தது.

”இன்றைக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா?” என்று தொடங்கினாள் தாய். பிறகு மிகுந்த உணர்ச்சிப் பரவசத்தோடு அன்று அவள் தொழிற்சாலைக்குள் பிரசுரங்களைக் கொண்டு சென்ற விவரத்தைக் கொஞ்சம் மூக்கும் முழியும் வைத்துச் சொல்ல முனைந்தாள். எனினும் அவளது ஆனந்தத்தாலும், ஆர்வத்தாலும் சொல்லுக்கு வளையாமல் அடிக்கடித் தடுமாறிக் குழறியது நாக்கு.

முதலில் அவன் தன் கண்களை வியப்போடு அகல விரித்தவாறே இருந்தான், பிறகு வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தான்.

”ஓஹோ!” என்று ஆனந்த மிகுதியினால் கத்தினான். ”நீங்கள் செய்ததும் நல்ல காரியம்தான். இது விளையாட்டல்ல. பாவெல் கூடச் சந்தோஷப்படுவான். அம்மா, நீங்கள் செய்த வேலை எவ்வளவு பிரமாதம் தெரியுமா? பாவெலுக்கும் அவன் தோழர்களுக்கும் அது ரொம்ப உதவும்!”

அவனது உடம்பு முழுவதுமே முன்னும் பின்னும் அசைந்து குலுங்கியது. அவன் தன் விரல்களை முறித்துச் சொடுக்கு விட்டான். உற்சாகத்தால் புளகாங்கிதம் அடைந்து சீட்டியடித்தான். அவனது உவகையைக் கண்ட தாய்க்கு இன்னும் பேச வேண்டும் என்ற ஆசை உந்தியெழுந்தது…

”என் அருமை அந்தியூஷா!’ என்று ஆரம்பித்தாள் அவள். அவளது இதயமே திறந்து கொண்டது போல், திறந்த இதயத்திலிருந்து பரிபூரண உவகையோடு முன்னிட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் மளமளவென்று பொழிந்து வழியப் போவது போலத் தோன்றியது. “நான் என் வாழ்வையே நினைத்துப் பார்த்தால் – அட, ஏசுவே! நான் எதற்காகத்தான் உயிர் வாழ்ந்தேனோ, தெரியவில்லை. ஓயாத வேலை……. பயத்தைத் தவிர வேறு எதையுமே நான் அறிந்ததில்லை. ஓயாது உதை, அடி……. என் புருஷனைத் தவிர வேறு யாரையுமே நான் கண்டதில்லை! பாவெல் எப்படி வளர்ந்தான் என்பது கூட எனக்குத் தெரியாது.

என் புருஷன் உயிரோடிருந்தபோது, நான் பாவெலை நேசித்தேனோ. நேசிக்கவில்லையோ என்பதும் எனக்குத் தெரியாது. என் சிந்தனைகள் என் கவலைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான் என்னைக் கட்டிக் கொண்ட மிருகத்துக்கு இரை போடுவதும், உடனடியாக அவன் சௌகரியத்தைக் கவனிப்பதும்தான் என் கவலை. அப்படிக் கவனிக்காது மெத்தனமாக இருந்தால் அவன் கோபங்கொண்டு என்னைப் பயமுறுத்துவானே, அடிப்பானே என்ற பயத்தால், அந்த அடிக்கு ஆளாகாமல் ஒரு நாளாவது தப்பி வாழ வேண்டுமே என்ற கவலையால்தான் நான் அப்படி வாழ்ந்தேன். ஆனால் அவன் என்னை அடிக்காத நாளே கிடையாது. அவன் என்னை அடித்து உதைக்கும் போது தன் மனைவியை அடிப்பதாக அவன் நினைத்துப் பார்ப்பதே இல்லை. யார் யாரோ மீது உள்ள கோபத்தையும் காட்டத்தையும் என் மீது காட்டித் தாக்குவான். இருபது வருஷ காலம் நான் இப்படியேதான் உயிர் வாழ்ந்தேன்.

என் கல்யாணத்துக்கு முன்னால் நான் எப்படியிருந்தேன் என்பது கூட எனக்கு நினைவில்லை. என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தாலே நான் குருடாகிப் போவது மாதிரி இருக்கிறது. எதுவுமே தெரிவதில்லை. இகோர் இவானவிச் இங்கே வந்திருந்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அவன் எதை எதைப்பற்றியெல்லாமோ பேசினான். எனக்கோ அங்குள்ள வீடுகள் ஞாபகத்துக்கு வந்தன; ஜனங்கள் நினைவுக்கு வந்தனர். ஆனால் அந்த ஜனங்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன பேசினார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் என்ன ஆனார்கள் – இதெல்லாம் நினைவுக்கு வரவேயில்லை. எப்போதோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் — இல்லை – – இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. எனக்கு என்னவோ என் இதயத்தையே பூட்டிவிட்டது போல், என் ஆத்மாவுக்கே முத்திரையிட்டு இறுக மூடிவிட்டது போல் இருக்கிறது. கண்ணும் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை…”

கரையில் இழுத்துப்போட்ட மீனைப்போல், அவள் மூச்சுக்காக வாயைத் திறந்து திணறினாள். முன்புறமாகக் குனிந்து கொண்டு மீண்டும் அவள் தணிந்த குரலில் பேசத் தொடங்கினாள்.

”என் கணவன் இறந்தான். நானும் என் மகனைக் கவனிக்கத் தொடங்கினேன். ஆனால் அவனோ இந்த மார்க்கத்தில் ஈடுபட்டுவிட்டான். எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. அவனுக்காக அனுதாபப்பட்டேன். அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், நான் எப்படி வாழ்வது என்ற கவலை எனக்கு. நான் எப்படிப் பயந்து நடுங்கினேன் தெரியுமா? அவனுக்கு என்ன நேரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்தபோது என் இதயமே வெடித்துவிட்ட மாதிரி இருந்தது.

அவள் ஒரு கணம் மெளனமாயிருந்தாள். பிறகு மீண்டும் தலையை ஆட்டி விட்டுப் பேசத் தொடங்கினாள்.

“பெண்களாகிய எங்கள் அன்பு பரிசுத்தமான அன்பு அல்ல. நாங்கள் எங்களுக்காகத்தான் பிறரை நேசிக்க வேண்டியிருக்கிறது, இதோ நீங்கள் இருக்கிறீர்கள். தாயை எண்ணித் துக்கப்படுகிறீர்கள். எதற்காக நீங்கள் அவளை விரும்புகிறீர்கள்? இதோ இங்கே எத்தனையோ இளைஞர்கள் சகல மக்களின் க்ஷேமத்துக்காகவும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள், சிறைக்குச் செல்கிறார்கள்; சைபீரியாவுக்குச் செல்கிறார்கள்; சாகிறார்கள், இளம் பெண்கள் தன்னந்தனியாக வெகுதூரம் நடந்து செல்கிறார்கள். இருட்டிலே, மழையும் பனியும் கொட்டுகின்ற குளிரிலே, சேறு நிறைந்த பாதை வழியே ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கும் நடந்து செல்கிறார்கள்; அவர்களை இப்படிச் செய்யச் சொல்வது யார்? அவர்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், அவர்கள் கொண்டுள்ள அன்பு, பரிசுத்தமான தூய்மையான அன்பு அவர்களிடம் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றிருக்கிறது. அந்தியூஷா! ஆனால் எனக்கோ, அந்த மாதிரி நேசிக்க முடியவில்லை! எனக்குச் சொந்தமானவர்களையே மிகவும் நெருங்கியவர்களையே நான் நேசிக்கிறேன்!”

“நீங்களும் நேசிக்க முடியும்” என்று ஒரு புறமாகத் திரும்பிக்கொண்டு சொன்னான் ஹஹோல். அப்படிச் சொல்லும்போது வழக்கம் போலவே தன் கைகளால் தலையையும் கன்னத்தையும் கண்களையும் பரபரவென்று தேய்த்துவிட்டுக் கொண்டான்.” எல்லோரும் தம்மோடு நெருங்கியிருப்பதையே மிகவும் நேசிக்கிறார்கள்; ஆனால் ஒரு பரந்த இதயம், தனக்கு வெகு தொலைவிலுள்ள பொருள்களைக்கூட, தன்னருகே கவர்ந்திழுத்து நெருங்கச் செய்யும் சக்தி வாய்ந்தது. நீங்களும் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும் – ஏனெனில் உங்களிடம் மகத்தான தாய்மை அன்பு ததும்பி நிற்கிறது!”

“அப்படியே ஆகட்டும்” என்று பெருமூச்சோடு சொன்னாள் அவள். ”இந்த மாதிரி வாழ்வதும் ஒரு நல்ல வாழ்வுதான் என்பதை நான் உணர்கிறேன், அந்திரேய் நான் உங்களை நேசிக்கிறேன். ஒரு வேளை பாவெலைவிட உங்களை நான் அதிகம் நேசிக்கவும் செய்யலாம். அவனோ என்னிடம் திறந்து கூடப் பேசுவதில்லை. நீங்களே பாருங்கள். அவன் சாஷாவைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான், ஆனால் என்னிடம் அவன் தாயிடம், இதுவரை ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை..”

“அது உண்மையல்ல என்று ஆட்சேபித்தான் ஹஹோல். “அது உண்மையல்ல என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவன் அவளைக் காதலிக்கிறான், அவளும் அவனைக் காதலிக்கிறாள். அதுவும் உண்மைதான். ஆனால் அவர்கள் என்றுமே கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. அவள் விரும்பலாம். ஆனால் பாவெல் விரும்பமாட்டான்,”

“அப்படியா செய்தி” என்று சிந்தனை வசப்பட்டவளாய்ச் சொன்னாள் தாய். அவளது துயரம் தோய்ந்த கண்கள் ஹஹோலின் முகத்தையேப் பார்த்தன், “இப்படியா இருப்பது? நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்…”

”பாவெல் ஒரு அபூர்வப் பிறவி ” ஹஹோலின் குரல் மிருதுவாயிருந்தது. “அவன் ஒரு இரும்பு மனிதன்”

“ஆனால், இப்போது அவன் சிறையில் இருக்கிறான்’ என்று மீண்டும் சிந்தனையிழந்தவாறே பேசினாள் தாய். அதை நினைத்தாலே பயங்கரமாயிருக்கிறது. ஆனால் முன்பிருந்தது போல் அவ்வளவு பயமில்லை. என் வாழ்க்கையும் மாறிவிட்டது. என் பயங்களும் மாறிவிட்டன. இன்றோ நான் ஒவ்வொருவருக்காகவும் பயந்து கொண்டிருக்கிறேன். இப்போது என் இதயமே புதிது. ஏனெனில் என் ஆத்மா இதயத்தின் கண்களைத் திறந்து விட்டுவிட்டது. அந்தக் கண்கள் அகலத் திறந்து பார்க்கின்றன. சோகம் கொள்கின்றன. அதே வேளையில் மகிழ்வும் கொள்கின்றன.

எனக்குப் புரியாத விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. நீங்கள் கடவுளையே நம்பாமலிருப்பது எனக்குக் கசப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீங்கள் எல்லோரும் மிகவும் நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக துன்ப வாழ்வு வாழ்கிறீர்கள். சத்தியத்துக்காகச் சங்கடமான வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள், இப்போதுதான் உங்கள் சத்தியம், உங்கள் உண்மை எனக்குப் புரிகிறது. பணக்காரர்கள் என்று ஒரு வர்க்கம் இருக்கிறவரையில், சாதாரண மக்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை – மகிழ்ச்சியோ, நியாயமோ – எதுவுமே கிட்டப்போவதில்லை. இப்போதோ நான் உங்களைப் போன்ற இளைஞர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் இரவு நேரத்தில் எனது கடந்த காலத்தைப்பற்றி, பூட்ஸ் காலால் மிதித்து நசுக்கப்பட்ட எனது இளமையின் பலத்தைப் பற்றி, கசக்கிப் பிழியப்பட்ட எனது இளம் இதயத்தைப்பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. அந்த நினைவினால் எனக்கே என்மீது அனுதாபம் பிறக்கிறது, கசப்புணர்ச்சி பிறக்கிறது. ஆனால் இப்போதோ எனக்கு வாழ்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக நான் என்னையே உணர்ந்து வரத் தொடங்குகிறேன்………

நெட்டுவிட்டு வளர்ந்து மெலிந்திருந்த ஹஹோல் எழுந்தான் , சிந்தனை வசப்பட்டு, காலடியோசையே கேட்காத வண்ணம் எழுந்து உலவத் தொடங்கினான்.

“எவ்வளவு நன்றாகச் சொன்னீர்கள்!” என்று அதிசயித்தான். ”எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். கோச் நகரில் ஒரு வாலிப யூதன் இருந்தான். அவன் ஒரு கவி. ஒரு நாள் அவன் ஒரு பாட்டு எழுதினான். அறியாது கொலையுண்ட அனைவரும், உண்மை நெறிகொள்ளும் பலத்தாலே உயிர் பெற்று நிற்பார்! ”அவனையும் கூட கோச் நகர போலீசார் கொன்றுவிட்டார்கள். நான் அதைச் சொல்ல வரவில்லை. அவன் உண்மையை உணர்ந்தான், அந்த உண்மையை அவன் மக்களிடம் பரப்பினான். அவன் சொன்ன மாதிரி அந்த அறியாது கொலையுண்ட’ பேர்களில் நீங்களும் ஒருவர்.”

”இப்பொழுதெல்லாம் நானே பேசிக் கொள்கிறேன். அதை நானே கேட்டுக் கொள்கிறேன். என்னை நானே நம்புவதுமில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் ஒன்றே ஒன்றைப் பற்றித்தான் சிந்தித்தேன் ஒவ்வொரு நாளையும் யார் கண்ணிலும் படாமல் ஒதுக்கமாய் எப்படிக் கழிப்பது – யார் கையிலும் படாதபடி பார்த்துக்கொள்வது – இதுதான் என் சிந்தனை. ஆனால் இப்போதோ என் மனதில் பிறரைப் பற்றிய சிந்தனைகளே நிரம்பி நிற்கின்றன. உங்களது கொள்கையை நான் முழுக்க முழுக்க அறியாது இருக்கலாம்; ஆனால், நீங்கள் அனைவரும் என் அன்புக்கு உரியவர்கள். உங்கள் அனைவருக்காவும் நான் வருந்துகிறேன். அனைவரின் நலத்தைப் பற்றியும் முக்கியமாக உங்கள் சுகத்தைப்பற்றி நான் மிகுந்த அக்கறை கொள்கிறேன். அந்தியூஷா!”

அவன் அவள் பக்கம் வந்தான். “ரொம்ப நன்றி” என்றான் அவன். அவள் கரத்தை எடுத்து ஆர்வத்தோடு அழுத்திப் பிடித்தான். பிறகு விரைவாக விலகிச் சென்றுவிட்டான். அவள் தன் உணர்ச்சியினால் நிலை குலைந்து போய், மிகவும் மெதுவாகவும் மெளனமாகவும் பண்ட பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள், அப்போது அவள் மனம் தன் இயதயத்தின் அமைதி நிறைந்த ஆனந்தத்தையே எண்ணியெண்ணி புளகித்துக்கொண்டிருந்தது.

ஹஹோல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தவாறே அவளைப் பார்த்துப் பேசினான்.

“அம்மா! நீங்கள் வெஸோவ்ஷிகாவிடம் சிறிது அன்பு காட்டுங்களேன். அவனது தந்தை – அந்த உதவாக்கரையான குடிகாரமட்டை – சிறையில் இருக்கிறான்; தன் தந்தையின் முகத்தை ஜன்னலோரமாகக் கண்டாலும் போதும் உடனே நிகலாய் தன் தந்தையைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பிக்கிறான். அது ரொம்ப மோசமான செய்கை. நிகலாய் இயற்கையில் கருணையுள்ளம் படைத்தவன். அவன் நாய்களை, எலிகளை, சகல் மிருகங்களையும் நேசிக்கிறான். அன்பு காட்டுகிறான்; ஆனால், மனிதர்கள் மட்டும் பகைத்து ஒதுக்குகிறான்; ஆமாம், மனிதன் எப்படியெல்லாம் கெட்டுப்போகிறான்?”

“அவன் தாய் எங்கோ தொலைந்து போனாள். அப்பனோ குடிகாரன், திருடன்…” என்று முனகினாள் தாய்.

அந்திரேய் படுக்கைக்குச் சென்ற பிறகு, தாய் மிகவும் ரகசியமாக அவன் பக்கம் சென்று அவன் தலைக்கு மேலாக சிலுவைக் குறியிட்டு விட்டு வந்து படுத்தாள். அவன் படுத்து அரைமணி நேரம் கழித்த பின்னர் அவள் அவனைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள்:

“தூங்கி விட்டாயா, அந்திரியூஷா?”

“இல்லையே, ஏன்?”

“நல்லிரவு”

”நன்றி, அம்மா, நன்றி” என்று நன்றியுணர்ச்சியோடு சொன்னான் அவன்.

(தொடரும்)

 

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்