Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 472

பா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு !

க்கள் விரோத சுற்றுச்சூழலை நாசமாக்கும் பேரழிவு அபாயம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களை அங்கீகரிப்பதிலும், அவர்களுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்வதிலும் தேசிய கட்சிகளான காங்கிரசு, பி.ஜே.பி. இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடலோர கிராமமான காலாப்பட்டில் இயங்கும் சாசன் ஸ்ரைட்ஸ் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே இதற்கு சாட்சி.

1990-களில் சாசன் பார்மசிடிக்கல் என்ற நிறுவனமும் ஸ்ரைட்ஸ் ஆர்கோ லேப் என்ற நிறுவனமும் கூட்டுச் சேர்ந்து வலி நிவாரண மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் தயாரிக்கும் உற்பத்தியில் இறங்கியது.  இந்தியா உட்பட அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்திக்கான தொழிற்சாலைகளும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கும் சந்தையைக் கைப்பற்றியுள்ள இப்பன்னாட்டு நிறுவனம், இந்தியாவில் பெங்களூருவைத் தலைமையகமாக் கொண்டு செயல்படுகிறது.

அருண்குமார் என்ற பி.ஜே.பி.-யினை ஆதரிக்கும் முதலாளியால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 566 மில்லியன் டாலர். இந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஐந்து ஆலைகள் இந்தியாவில் உள்ளது.  ஏழு ஆலைகள் ஆப்பிரிக்காவிலும்  இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் தலா ஒரு ஆலைகள் இயங்கி வருகின்றன.  தமிழகத்தில் கடலூரிலும் புதுச்சேரியில் காலாப்பட்டு பகுதியிலும் இதன் ஆலைகள் செயல்படுகிறது.

முதலாளித்துவம் உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் கேடுகளினால் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள், விபத்துக்களினால் ஏற்படும் உடல் ஊனங்கள், அடிபடுவதினால் ஏற்படும் காயங்கள் இவற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு, தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள், இரசாயனங்களைப் பயன்படுத்தி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியினைச் சுற்றிலும் நிலத்தடி நீரும், காற்றும் பல மடங்கு மாசுபட்டுள்ளது. இந்த ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் போன்ற நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த ஆலைப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தே 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளது நிர்வாகம். ஒப்பீட்டு ரீதியாக பிற ஆலைகளை விட ரூ.25,000/- முதல் 30,000/- வரை என கூடுதலாக சம்பளம் கொடுத்து வருகிறது.

இதன்மூலம், தனக்கு விசுவாசமான கருங்காலிகளை, அடியாட்களை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிலிருந்தே  உருவாக்குவதில் இந்த நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம். அதனால், தங்களுக்கோ, பகுதி மக்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அக்கறையற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போதைய உற்பத்தி நிலையிலேயே சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில், ஆண்டுக்கு 4,000 டன் உற்பத்தி என்ற இலக்கிலிருந்து ஆண்டொன்றுக்கு 9,500 டன்னாக உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. இவ்விரிவாக்கத்திற்கான சடங்குகளில் ஒன்றான கருத்துக் கேட்புக் கூட்டத்தினை கடந்த மே-8 அன்று ஏற்பாடு செய்தது புதுவை அரசு.

1987-இல் புதுவை அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் கடற்கரையிலிருந்து ஆறு கி.மீ.-க்குள் நாளொன்றுக்கு 10 இலட்சம் லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அனுமதிப்பது என்று வெளியிட்டது. அதன் பிறகு, 1988-இல் கடலோர கிராமங்களான கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், காலாப்பட்டு, மணப்பட்டு, பன்னித்திட்டு பகுதிகளில் இரசாயன ஆலை அமைக்கக் கூடாது என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டது.

மீண்டும் 1990-இல் மேற்படி இரண்டு அரசாணைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்குக் கூட விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே, அரசு விதிகளின் படி விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இந்த ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு புதுச்சேரி சுற்றுச்சுழல் துறை அனுமதி அளித்துள்ளது.

இவர்கள் போட்ட அரசாணையை இவர்களே மீறி விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்து விட்டு, மக்களை ஏமாற்ற கண் துடைப்பிற்காக கருத்துக்கணிப்புக் கூட்டம் நடத்தினர்.

ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று சுற்றுவட்டார கிராம மக்கள் தொடக்கம் முதலே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த எதிர்ப்பை மீறி, கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தமது எதிர்ப்பை பதிவு செய்வது என்ற முடிவுடன், அமைதியான முறையில் மக்கள் கருப்புக் கொடியுடன் சென்றனர்.

இதனால் பீதியடைந்த சுற்றுச்சூழல் துறை கருத்துக் கணிப்புக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. ஆக, கருத்துக் கணிப்பின் நோக்கம், மக்களின் கருத்தைக் கேட்பதற்காக அல்ல, அரசின் கருத்தைத் திணிப்பதற்கான முயற்சிதான் என்பது இதன்மூலம் அம்பலமானது.

கூட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, கூடியிருந்த மக்கள் கருப்புக்கொடிகளுடன் ஆலையை நோக்கி முன்னேறிச் சென்றனர். அவர்களின் கருத்தைக்கூடக் கேட்கத் தயாரில்லாத அரசு, ஆலையை நோக்கி முற்றுகையிடச் செல்வதை அனுமதிக்குமா என்ன? அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது புதுவை அரசு.

பா.ஜ.க. ஆதரவாளரான இந்த ஆலை முதலாளிக்கு புதுவையின் ஆளும் கட்சியான காங்கிரசு அடியாள் வேலை பார்க்கிறது. ஆலை விரிவாக்கத்தை எதிர்க்கும் மக்களுக்கு எதிராக அரசு எந்திரத்தை ஏவிவிடுகிறது. முதலாளிகளைப் பாதுகாப்பதில் காங்கிரசு – பி.ஜே.பி.-க்கு எந்த வேறுபாடும் இல்லை என்பதற்கு துலக்கமான சான்று இந்த சம்பவம்.

இந்த உண்மைகளையும், ஆலை விரிவாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கியும், போலிசு – காங்கிரசு – பா.ஜ.க. ரவுடிக் கும்பலின் கூட்டுத் தாக்குதலை கண்டித்தும், தொழிலாளர்கள் மத்தியிலும், புதுவை உழைக்கும் மக்களின் மத்தியிலும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வரும் பு.ஜ.தொ.மு., அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு அவர்களை ஆயத்தமாக்கி வருகிறது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடரபுக்கு: 95977 89801.

கடலூர் மின்துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : தொழிலாளிகள் மனதை வென்ற NDLF அணி !

கடலூர் மின் துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : கொள்ளையே கூட்டணிக்குக் ‘கொள்கை’ !

மின் துறையில் பு.ஜ.தொ.மு.-வின் இணைப்பு சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி கடந்த ஆண்டு, மார்ச் மாதம் உதயமானது.

மின் துறை தொழிலாளர்கள், ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் அதே நேரம், மின் துறையில் மட்டுமல்லாது, பரந்துபட்ட அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான காரணங்களை விளக்கியும், அது தொடர்பான போராட்டங்களை நடத்தியும், தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு  வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு மே 07 அன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்தது.

கடலூர் கோட்டத்திற்கு உட்பட்டு நடந்த தேர்தலில், பு.ஜ.தொ.மு. சங்கத்தின் சார்பில் NDLF-அணியாக களமிறங்கினோம். மொத்தம் உள்ள 11 இடங்களுக்கான தேர்தலில் 07 இடங்களில் தனித்துப் போட்டியிட்டோம்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சி.ஐ.டி.யூ., ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட இடதுசாரி சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒரு அணியாகவும், தொ.மு.ச. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன.

ஐ.என்.டி.யூ.சி (காங்கிரசு), பி.எம்.எஸ் (பி.ஜே.பி.), தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் (தே.மு.தி.க.) மற்றும் அண்ணா தொழிற்சங்கம் இணைந்து உருவாக்கியுள்ள “கொள்ளை கூட்டணி”

இதில் வேடிக்கை என்னவென்றால், அண்ணா தொழிற்சங்கம் (அ.தி.மு.க.), ஐ.என்.டி.யூ.சி (காங்கிரசு), பி.எம்.எஸ் (பி.ஜே.பி.), தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் (தே.மு.தி.க.) ஆகிய சங்கங்கள் இணைந்து கூட்டணி அமைத்ததுதான்.

கொள்கையிலே எதிரும், புதிருமாக காட்டிக் கொண்டு, ஆட்சியில் மக்களை பணத்தைச் சூறையாடவும், சங்கத் தேர்தல் என வந்தால் கூட்டு வைத்துக் கொண்டு தொழிலாளர் பணத்தைக் கொள்ளையிடவும் செய்கின்றனர்.

அதாவது, எதிரில் இருந்தாலும், சேர்ந்து இருந்தாலும், கொள்ளையடிப்பது தான் ‘கொள்கையாகக்’ கொண்டு வலம் வந்தனர்.

தொ.மு.ச. அணியோ பல லட்சங்களைச் செலவு செய்து, 100 ரூபாய் பணம், குவாட்டர், கோழி பிரியாணியுடன் வாக்காளர்களை வேன் வைத்து அழைத்து வந்தனர்.

குவாட்டர் நெடியுடன், ஓட்டுப் போடச் சென்ற வாக்காளர் ஒருவர், தான் காலையில் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் ஓட்டுப் போட்டதாகவும், மற்றவர்களுக்கு ஓட்டுப் போட, ஓட்டுப் பெட்டியிலே போட்ட வாக்குச் சீட்டை எடுத்துக் கொடுக்குமாறு குடிபோதையில் தகராறு செய்தார். குவாட்டர் ஓட்டு, செல்லாத ஓட்டு என்ற கதையாகிப் போனது.

தொழிலாளர்களை நேரில் சென்று சந்திக்கும் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி (NDLF அணியினர்) தோழர்கள்.

கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைகளுக்கு நேரடியாகச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.

சிவப்பு என்றாலே அது பு.ஜ.தொ.மு. தான் !

எங்கு சென்றாலும் சிவப்பு சட்டை சகிதமாக நமது தோழர்கள் வலம் வந்ததால், மின் துறையில் சிவப்பின் அடையாளமாக இருந்த சி.ஐ.டி.யூ. அணியினர். சிவப்பு சட்டை போட முடியாமல் நெளிந்தனர்.

சிவப்பு சட்டை அணிய முடியாது போனதால் சிவப்பு துண்டுடன் பிரச்சாரம் செய்யும் சி.ஐ.டி.யூ.-வினர்.

தப்பித் தவறி யாராவது போட்டாலும், அவர்களை NDLF அணியா என்று தொழிலாளர்கள் கேட்க ஆரம்பித்ததால், சிவப்பு சட்டை போடுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்திக் கொண்டனர்.

சிவப்பு என்றாலே அது நாம் தான் என்ற அடையாளத்தை தோழர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதனால், சிவப்புத் துண்டிற்கு மாறி, அதைப் பற்றியும் தொழிலாளர்கள் கேட்க ஆரம்பித்ததால், சிவப்பையே பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர் சி.ஐ.டி.யூ. அணியினர்.

நமது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வாக்குச்சாவடியாக உள்ள நகராட்சிப் பள்ளி வாயிலில் நமது சுவரொட்டியை மறைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. அணியினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு, சுவரொட்டியை மறைக்கச் செய்தனர்.

மறைக்கப் பட்ட பு.ஜ.தொ.மு. -வின் சுவரொட்டி.

மற்ற அணியினர், கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு நிர்வாக, சீர்திருத்தங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசிக் கொண்டிருந்த பொழுது, நேர்மையான நிர்வாகம் என்ற ஒற்றை வாக்குறுதியுடன் களமிறங்கினோம். நமது தோழர்கள் அனைவரும்.

தொழிலாளர்களை நேரடியாக சந்தித்தது முதல், தேர்தலுக்கான விளம்பர பேனர்களை வைக்கிற வரை, பல்வேறு வேலைகளில் தோழர்களே முன் நின்று கடும் வேலைகளை செய்தது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை விட, நேர்மையான சங்கம் தேவை என்பதை தொழிலாளர்களை உணர வைத்ததில் நமது NDLF அணி வெற்றிபெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கடலூர் கோட்டம். தொடர்புக்கு: 95977 89801.

கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …

3

ர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதை ஆதரிப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ஆளுநர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர், அவர் பா.ஜ.க. வை ஆட்சியமைக்க அழைப்பாரா, அல்லது பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட காங், குமாரசாமி கூட்டணியை அழைப்பாரா, அல்லது வித்யாசாகர் ராவைப் போல எஸ்கேப் ஆகிவிடுவாரா என்பது நமக்கு மட்டுமல்ல, எடியூரப்பாவுக்கும் தெரியாது.

அது அமித் ஷாவுக்கும் மோடிக்கும் மட்டுமே வெளிச்சம்.

மணிப்பூர், கோவா, மேகாலயாவில் ஹிந்து ராஷ்டிரம் அமைக்க பெரும்பான்மையை விலை கொடுத்து வாங்கியது போல, இங்கேயும் வாங்குவதற்கு பனியாஜி நிச்சயம் விரும்புவார். தம்மை விற்றுக் கொள்வதற்கு குமாரசாமி கட்சி எம்.எல்.ஏ க்களிலும் பலர் தயாராகவும் இருப்பார்கள். அவர்கள் ஏற்கனவே அவ்வாறு விலை போனவர்கள்தான். சிக்கல் என்னவென்றால், இந்த பேக்கரி டீலிங்குகளில் கர்நாடக அரசியல்வாதிகளும் கில்லாடிகள் என்பதுதான்.

இருந்த போதிலும், பா.ஜ.க.-வுக்குத் தேவைப்படுபவர்கள் வெகு சில எம்.எல்.ஏக்கள்தான் என்பதாலும், “விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை என்பதனாலும் எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது உறுதியாக கூறவியலாது. சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் அவகாசம் கொடுத்துவிட்டால், குமாரசாமி, காங்கிரசு கூட்டணி உடனடியாக ஒரு கூவத்தூரைத் தேடி ஓடவேண்டி வரும். அந்த கூவத்தூர் ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, வங்காளத்திலோ இருக்கலாம். நிச்சயம் தமிழ்நாடல்ல.

பா.ஜ.க.-வும் காங்கிரசும் ஒன்றல்ல, பா.ஜ.க.-வும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஒன்றல்ல என்பது உண்மைதான். “இரு தரப்பினரும் ஒன்றல்ல” என்று சொல்வது வேறு, “பா.ஜ.க. விற்கு இவர்கள் அரசியல் மாற்று” என்று புரிந்து கொள்வது வேறு.

குமாரசாமி கூட்டணி ஆட்சியமைப்பதை அமித் ஷா அனுமதிக்கும் பட்சத்தில் அது ஒரு தொலைநோக்குத் திட்டமாக இருக்கும். கூட்டணிக்குள் பதவிச் முரண்பாடுகளைக் கிளப்பி, 2019 தேர்தலுக்கு முன் கூட்டணியை உடைக்கும் திட்டமாக அது இருக்கலாம்.

எதுவாக இருப்பினும், தொலைக்காட்சிகள் அனைவருக்கும் அடுத்து வரும் நாட்கள் தொடர் தீபாவாளிதான். இந்தப் பதவிச் சூதாட்டத்தை ருசிகரமான அரசியலாக மாற்றித்தரும் வேலையை அவர்கள் செய்வார்கள்.

***

நாம் விசயத்துக்கு வருவோம். இன்று காலையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றுவிடும் என்பது போல தேர்தல் முடிவுகள் வந்தபோது அதை யாரும் ரசித்திருக்க மாட்டார்கள் – தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட.
குமாரசாமி – காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு வருவது பலருக்கு ஆறுதலாக இருக்கக்கூடும். குமாரசாமி – காங்கிரசு கூட்டணி எவ்வளவு மோசமான நபர்களால் நிரம்பியதாக இருந்த போதிலும், பெருந்தீமையான பா.ஜ.க.வை ஒப்பிடும்போது இந்தக் கூட்டணி பரவாயில்லை என்பதுதான் மேற்சொன்ன ஆறுதலுக்கு உரிய நியாயம்.

பா.ஜ.க.-வும் காங்கிரசும் ஒன்றல்ல, பா.ஜ.க.-வும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஒன்றல்ல என்பது உண்மைதான். எனினும் இவர்கள் பா.ஜ.க.-வின் மதவெறியையும், பாசிசத் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தப் போகின்ற மாற்றல்ல. “இரு தரப்பினரும் ஒன்றல்ல” என்று சொல்வது வேறு, “பா.ஜ.க. விற்கு இவர்கள் அரசியல் மாற்று” என்று புரிந்து கொள்வது வேறு.

இருந்த போதிலும் இந்துத்துவ பாசிசம் நாடு முழுவதையும் ஆக்கிரமித்து வரும் சூழலில், மண் குதிரை என்று தெரிந்தாலும், “வேறென்ன செய்வது, நம்பிவைப்போம்” என்று பலர் எண்ணுகின்றனர். இது குறிப்பிட்ட கட்சிகள் மீதான நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, இந்த அரசமைப்பின் மீதான நம்பிக்கை தொடர்பான பிரச்சனை.

கட்சிகள் அதிகார வர்க்கம் நீதித்துறை உள்ளிட்ட இந்த ஜனநாயக அமைப்பு முற்றிலுமாகத் தோற்று விட்டது என்பதற்கு ஆயிரம் நிரூபணங்கள் வந்த போதிலும், இந்த அமைப்பின் இந்துத்துவ சார்பு, ஆதிக்க சாதிச் சாய்வு, கார்ப்பரேட் அடியாள்தனம் என்பவையெல்லாம் அன்றாடம் நிரூபிக்கப்பட்ட போதிலும், சாதி – மதச் சார்பு, ஊழல் ஆகியவற்றால் இந்தத் தேர்தல் முறையே சிரிப்பாய் சிரித்த போதிலும் – இந்த “ஜனநாயக அமைப்பின்” துணை கொண்டே, இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று பலர் நம்புகின்றனர்.

“மோடி வெல்லப்படமுடியாதவர்” என்ற பிம்பம் தேர்தல் அரசியல் திருகுதாளங்களால் உருவாக்கப்பட்டதாகும். மோடிக்கு எதிராக நாடெங்கும் திரண்டிருக்கும் மக்களின்  கோபம் அதற்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு வடிவங்களை எடுக்கவில்லை என்பதுதான் மோடியின் வலிமை.

“ஒரு வரியில் சொல்வதென்றால், மாயாவதி – அகிலேஷ் – காங் கூட்டணி அமைத்திருந்தால் உ.பி. யில் பா.ஜ.க. வை வீழ்த்தியிருக்கலாம். கர்நாடகத்தில் காங் – குமாரசாமி கூட்டணி வைத்திருந்தால் பா.ஜ.க.வை முறியடித்திருக்கலாம். மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் இணைந்து ஒரு மெகா கூட்டணி அமைத்தால் 2019 இல் மோடியை தோற்கடித்து விடலாம்” என்ற கோணத்தில் மட்டுமே சிந்திக்கின்றனர்.

***

ப்படியானால், பா.ஜ.க. வின் தேர்தல் தோல்விதான் இந்துத்துவத்தின் தோல்வியா? குமாரசாமியின் வெற்றி மதச்சார்பின்மையின் வெற்றியா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது அபத்தம் என்று புரியும்.

தன்னுடைய மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடைய, “மதச்சார்பின்மை பற்று” குறித்து நம்மைக் காட்டிலும் குமாரசாமிக்கு தெளிவாகத் தெரியும். குமாரசாமியின் “மதச்சார்பின்மைப் பற்று” குறித்து தேவ கவுடாவுக்குத் தெரியும். தங்கள் மந்தையிலிருந்து எந்தெந்த ஆடுகளை அமித் ஷா திருடக்கூடும் என்பது தந்தைக்கும் மகனுக்கும் தெளிவாகத் தெரியும்.

இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இந்துத்துவ எதிர்ப்பு கொள்கையெல்லாம் இல்லை என்பது மட்டுமல்ல, குமாரசாமிக்கு வாக்களித்த வாக்காளர்களும் இந்துத்துவ எதிர்ப்புக்காக வாக்களிக்கவில்லை என்பதும் அவை சாதி வாக்குகள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. குமாரசாமி ஒருவேளை பா.ஜ.க. வுடன் கூட்டணி சேர்ந்தாலும் அவரது கட்சியினரும் சரி, வாக்காளர்களும் சரி அதிர்ச்சியடையப்போவதில்லை. இவையெல்லாம் ஏற்கெனவே நடந்த கதைகள்தான். குமாரசாமி மட்டுமல்ல, இன்றைய பா.ஜ.க. எதிர்ப்பு மாநிலக்கட்சிகள் பலரும் முன்னர் பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.-வுடன் கூட்டு சேர்ந்தவர்கள்தான்.

அதேபோல, பா.ஜ.க.-வுக்கு போடப்பட்ட ஓட்டுகள் அனைத்தும் இந்துத்துவக் கொள்கைக்கு போடப்பட்ட ஓட்டுகள் அல்ல. காங் ஆட்சியின் மீதான அதிருப்தி, சாதி, அம்மாநிலத்தின் மடாதிபதிகள் வாக்காளர்கள் மீது செலுத்தும் செல்வாக்கு, அனைத்துக்கும் மேலாக, கர்நாடக மாநில அரசியல் இதுவரை காணாத அளவுக்கு, ஓட்டுக்கு 3000 ரூபாய் வரை பா.ஜ.க. வாரி இரைத்திருப்பது – போன்ற பல விசயங்கள் பா.ஜ.க.-வின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கின்றன.
எனவே, பா.ஜ.க. வின் வெற்றியாகட்டும், அல்லது எதிர்தரப்பின் வெற்றியாகட்டும் அவற்றை இந்துத்துவ ஆதரவு அல்லது இந்துத்துவ எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்து கொள்வது பிழையானது.

***

ன்று, இந்து மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளாகட்டும், தனியார்மய தாராளமயத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களாகட்டும், நாடெங்கும் இவற்றை முன்நின்று நடத்துபவர்களில் பெரும்பான்மையினர் தேர்தல் அரசியல் கட்சி சார்புக்கு அப்பாற்பட்ட மக்கள் மற்றும் அறிவுத்துறையினர்தான். இவற்றின் பயனை அறுவடை செய்து கொள்வதற்கான அடையாள நடவடிக்கைகளில் மட்டுமே தேர்தல் கட்சிகள் ஈடுபடுகின்றன.

“மோடி வெல்லப்படமுடியாதவர்” என்ற பிம்பம் தேர்தல் அரசியல் திருகுதாளங்களால் உருவாக்கப்பட்டிருப்பதாகும். உண்மையில் மோடிக்கு எதிராக நாடெங்கும் திரண்டிருக்கும் மக்களின் வெறுப்பும் கோபமும் அதற்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு வடிவங்களை எடுக்கவில்லை என்பதுதான் மோடியின் வலிமை. எனவே, சமூகத்தையும் அரசியலையும் ஜனநாயகப் படுத்துகின்ற வகையிலான போராட்டங்களை கீழிருந்து கட்டியமைப்பதுதான் இந்துத்துவத்துக்கும் சரி, புதிய தாராளவாத தாக்குதல்களுக்கும் சரி, உண்மையான சவாலாக இருக்கும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழ்ச் சமூகத்தின் பொது மனநிலையாக இருக்கின்ற இந்து மதவெறியின் மீதான வெறுப்புதான் இந்துத்துவத்துக்கு எதிரான உண்மையான அரசியல் ஆற்றல். இதைக் கண்டுதான் பா.ஜ.க. அஞ்சுகிறது. இதைத்தான் நாடு முழுவதும் நாம் உருவாக்க வேண்டும்.

மக்களின் இந்துவெறி எதிர்ப்பு, தனியார்மய தாராளமய எதிர்ப்பு அரசியல் ஆற்றலுக்குரிய அமைப்பு வடிவம், மக்களுடைய அதிகாரமாகத்தான் இருக்க முடியுமேயன்றி, அதனை இன்றைய தேர்தல் அரசியலுக்குள் அடக்க முடியாது.
“இதெல்லாம் சரியானதாக இருப்பினும், இப்போதைக்கு சாத்தியமற்றது” என்று பலர் எண்ணலாம். இப்போதைக்கு சாத்தியம் எது? குமாரசாமி ஆட்சியா? அதை இந்துத்துவ எதிர்ப்பு ஆட்சி என்று நம்பி மனநிறைவு கொள்ளலாமா? அல்லது உண்மையை எதிர்கொண்டு “சாத்தியமற்றதற்காக” போராடலாமா?

என்ன செய்வது என்பதை நாமே யோசித்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது அமித் ஷா நமக்குப் புரிய வைப்பதற்கும் வாய்ப்புண்டு.

– மருதையன்
(மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.)

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை !

ராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகாஜன் என்ற அரசு அதிகாரி, தன் மீது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சக ஊழியர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மும்பை உயர் நீதிமன்றத்தால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட அவரது கோரிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதய் உமேஷ் லலித் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாஜன் மீது வழக்குப் பதியப்பட்டது சரி என்றோ, தவறு என்றோ தீர்ப்பளித்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அந்த எல்லையையும் தாண்டி, இந்தத் தனிப்பட்ட வழக்கைப் பொதுமைப்படுத்தி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே திருத்தி எழுதியிருக்கிறார்கள். தங்களது தீர்ப்பில் பல இடங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக வன்மத்தைக் கக்கியுள்ளனர். குறிப்பாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அப்பாவி மக்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், பணத்திற்கு ஆசைப்பட்டுப் பொய்ப் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்கிறார்கள் எனக் குறிப்பிட்டுத் திருத்தங்களை நியாயப்படுத்தியிருக்கின்றனர்.

தீண்டாமைக் குற்றங்கள் நாடெங்கும் அதிகரித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, இனி சாதிவெறியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதே இயலாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மிக முக்கியமாக, இனி இந்தச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுள் ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதுவே குற்றம் சாட்டப்படுபவர் அரசு அதிகாரியாக இருந்தால், அவர் சார்ந்த துறையின் உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் அனைத்திலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரைக் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே கருதப்பட வேண்டும் என்றும், ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தவறு செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக விசாரணை அதிகாரி கருதும்பட்சத்தில் மட்டுமே முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட வேண்டுமென்றும், அவ்வாறு இல்லையெனில் வழக்கே பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தங்களது தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18- பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் பிணை வழங்கினால், அவர் சாட்சிகளை மிரட்டிக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அடிப்படையில் முன் பிணை வழங்குவதைத் தடை செய்கிறது. ஆனால், அதனையும் திருத்திக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் பிணை வழங்கலாம் என்றும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

சமூக நீதியின்பாற்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களோ, மாற்றங்களோ கொண்டுவர வேண்டுமென்றால், அத்திருத்தங்களை ஏற்பது அல்லது மறுப்பது தொடர்பாக விவாதங்களை நடத்தி, அவற்றைச் செய்வதற்குத் தகுதியும் அதிகாரமும் கொண்ட இடம் நாடாளுமன்றம் மட்டும்தான்.

ஆனால், இரண்டு நீதிபதிகள் தங்களது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.

காகித அளவில்கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கக் கூடாது எனச் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இந் நீதிபதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் ‘‘வன்கொடுமை குறித்து அலசும் முன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியை நாம் முதலில் பார்க்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், தாக்குதல்களையும் தடுக்க 1955 ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதுவே 1977 குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், இப்பழைய சட்டங்களின் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தீண்டாமைக் குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைத் தண்டிக்கவோ முடியவில்லை.
தமிழகத்தில் இம்மானுவேல் சேகரன் கொலை, அதனைத் தொடர்ந்து நடந்த முதுகுளத்தூர் கலவரம், கீழ்வெண்மனியில் 44 தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஆதிக்க சாதி நிலவுடமைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்டு நாடு முழுவதும் நடந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் குற்றவாளிகளை பி.சி.ஆர். சட்டத்தின்படித் தண்டிக்க இயலவில்லை.

பி.சி.ஆர். சட்டம் பரிந்துரைத்த தண்டனைகளின் அளவும், அதனை ஒத்த கிரிமினல் குற்றங்களுக்கு மற்ற இந்தியச் சட்டங்கள் அளித்த தண்டனைகளை விடக் குறைவாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தீண்டாமைக் குற்றங்களும் புதுப்புது வடிவங்களை எடுத்து, பழைய சட்டங்களின் கீழ் தண்டிக்க முடியாத நிலைமை உருவானது.

தங்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் இழைக்கும் வன்கொடுமைகள் குறித்துத் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வந்த அதிருப்தியையும், கோபத்தினையும் எதிர்கொள்ளவியலாத நிலையில்தான், மைய அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை 1989- ஆண்டு கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் விதிகள் அனைத்தும் 1969- ஆண்டு அமைக்கப்பட்ட இளையபெருமாள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட வரலாறு கொண்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத்தான் இந்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் மூலம் செல்லாக் காசாக்கியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் தலித் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் அரசின் அடக்குமுறையைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் தீர்ப்புக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினரின் வீடு உட்பட போராட்டத்தின் முன்னணியாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளால் சென்னையில் நடத்தப்பட்ட பேரணியைக்கூட நகர்ப்புறத்து ஆதிக்க சாதியினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்பேரணி மீது வன்மத்தைக் கக்கினர்.

தாழ்த்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிற சாதியினர் மீது பொய்வழக்குப் போடுகிறார்கள் என்று இராமதாசு போன்ற ஆதிக்க சாதித் தலைவர்கள் வீண்பழி சுமத்தி வருவதைத் தங்களது தீர்ப்பில் பிரதிபலித்துள்ள நீதிபதிகள், அதனை நியாயப்படுத்தும்விதமாகத் தேசிய குற்றப் பதிவு மையத்தின் புள்ளி விவரங்களைக் காட்டியுள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 2016- ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட 15,638 வழக்குகளில், 11,024 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், 4,119 வழக்குகளில் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் பெரும்பாண்மை வழக்குகள் போலி வழக்குகள் என்றும் கூறுகின்றனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு நீதிபதிகள் பிரயோகித்துள்ள அதே அளவுகோலின்படி பார்த்தால், இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் பதியப்படும் பெரும்பாலான வழக்குகளையும் பொய் வழக்குகள் எனக் கூறலாம்.

இழிபுகழ்பெற்ற தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுள், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் அச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், அந்தச் சட்டத்தைக் கைவிட ஆளும் வர்க்கமும் போலீசு அதிகாரிகளும் விரும்பவேயில்லை.

பிரிட்டிஷ் காலத்திய ராஜதுரோகச் சட்டத்தின் கீழ் புனையப்பட்ட வழக்குகளுள் பெரும்பாலானவை போலி வழக்குகள்தான். டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடியதற்காக ம.க.இ.க. பாடகர் தோழர் கோவன் மீது ராஜதுரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தனது முகத்தில் கரியைப் பூசிக் கொண்டது பாசிச ஜெயா கும்பல்.

துஷ்பிரயோகம் செய்யப்படும் பல்வேறு இந்தியத் தண்டனைச் சட்டங்களைத் திருத்த முன்வராத உச்ச நீதிமன்றம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்வதன் காரணம் ஒன்றேதான் அது நீதிபதிகளின் ஆதிக்க சாதித் திமிர்.

தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை வழக்காகப் பதிவு செய்யவே தாழ்த்தப்பட்டவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. உள்ளூர் ஆதிக்கச் சாதி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு அதிகாரிகள் எப்போதும் இத்தகைய குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடுவர்.

வழக்கைப் பதிவு செய்ய வேண்டிய போலீஸ் அதிகாரிகள் வழக்கே பதியாமல் தவிர்த்து விடுகின்றனர். அப்படியே பதிந்தாலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியாமல் விட்டுவிடுவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிய வேண்டி போராட்டங்கள் மூலம் நிர்பந்திக்கும் போதும்கூடச் சரியான பிரிவுகளின் கீழ் பதியாமல் விட்டுவிடுவர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி வழக்கு பதியப்பட்டாலும், விசாரணையின் போக்கில் வழக்கை வலுவிழக்கச் செய்யும் உள்ளடி வேலைகளைச் செய்வார்கள். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது போலீஸ் அதிகாரிகளும் அரசு தரப்பு வழக்கறிஞரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, வழக்கை மிகவும் அலட்சியமாகக் கையாண்டு வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவர். இதன் காரணமாகவே பெரும்பாலான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்துள்ள நீதிக்கான சபை என்ற அமைப்பைச் சேர்ந்த வல்ஜிபாய் படேல், குஜராத் மாநிலத்தில் 1995 முதல் பதியப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட 450 வழக்குகளை எடுத்துக் கொண்டு, அவற்றில் 95% வழக்குகளில் போலீசும், அரசு தரப்பும் போதுமான ஆதாரங்களைக் கொடுக்காமல் வழக்கை ஏனோ தானோவென்று நடத்தியதுதான் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

மீதமுள்ள 5% வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு மதிக்காததன் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.

சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாதிச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்ற மொன்னையான காரணத்தைக் கூறி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு குஜராத் மாநிலத்தை மட்டும் மையமாகக் கொண்டு நடத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக வன்னிய சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட கண்ணகி முருகேசன் இணையர் வழக்கில் குற்றவாளிகள் இதுநாள் வரை தண்டிக்கப்படவில்லை. சாட்சிகளை மிரட்டி பிறழ்சாட்சிகளாக மாற்றி, அவ்வழக்கைப் பொய்வழக்காக மாற்றும் அபாயம் உருவாகியிருக்கிறது. தர்மபுரி இளவரசன் திவ்யா வழக்கின் அடிப்படையே வன்கொடுமைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் 94% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2011 முதல் 2016 வரையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,934 வழக்குகளில் 108 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் இது மேலும் குறைவாக வெறும் 1.6 சதவிதமாக இருக்கிறது. இதில் பெரும்பான்மை வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கை முறையாக நடத்தாததுதான் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சியில் தாழ்த்தப்பட்ட போட்மாங்கே குடும்பத்தினர் 2006 ஆண்டு ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. இருப்பினும் இவ்வழக்கில்கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

இந்த வழக்கிலும் சரி, 2002 ஆண்டு செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, அரியானவில் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் ஐந்து தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் சரி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததற்கு நீதிபதிகள் கூறும் காரணம் அயோக்கியத்தனமானது. ‘‘பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்று குற்றவாளிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிடுகின்றனர்.

இவ்விரு படுகொலைகளின் போதும் கொல்லப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒட்டுமொத்த கிராமத்திற்கும் தெரிந்திருந்தது, அவர்கள் கொல்லப்பட்டதன் காரணமும் உலகத்துக்கே தெரிந்திருந்தது. இந்நிலையில் குற்றவாளிகளுக்குக் கொல்லப்பட்டவர்களின் சாதி தெரியாது என்று நீதிபதிகள் கூறுவது அப்பட்டமான பொய். உள்நோக்கம் கொண்டது.

இனி தாழ்த்தப்பட்டவர்களைக் கொலை செய்யும் போதோ, பாலியல் வல்லுறவு செய்யும்போதோ அத்தகைய குற்றங்களை இழைக்கும் ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியபடியே அந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டும்தான் அதனை வன்கொடுமையாகக் கருதமுடியும் என்று நீதிபதிகள் கருதுகின்றனர் போலும்!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கடுமையாக இருப்பதாகக் கூறப்படும்போதே இதுதான் நிலை. தற்பொழுது உச்ச நீதிமன்றம் செய்திருக்கும் திருத்தங்களின்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர் மீது அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோர மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பார்க்க வேண்டும்; அல்லது அரசு உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். இவையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களை அலைக்கழித்து, வழக்குப் பதிவதை முளையிலேயே கைவிடச் செய்துவிடும் சதித்தனம் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் ஆகப் பெரும்பான்மை நீதிபதிகள் ஆதிக்க சாதியினராகத்தான் இருக்கின்றனர். இவர்களின் கண்ணோட்டமும் ஆதிக்க சாதிப் பணக்கார வர்க்க கண்ணோட்டமாகத்தான் இருக்கிறது. தீண்டாமையை இயல்பாகப் பார்ப்பது இவர்களது கண்ணோட்டத்திலேயே ஊறியிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அதிகரித்து வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலும், சட்ட வரம்புகளை மீறி உச்ச நீதிமன்றம் வன்கொடுமைச் சட்டத்தின் மீது தொடுத்திருக்கின்ற இந்தத் தாக்குதலும் வேறு வேறானவை அல்ல. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது பார்ப்பனிய சாதி ஆதிக்கவாதிகளின் ‘‘மன் கி பாத்”!

-அழகு

-புதிய ஜனநாயகம், மே 2018

ஜோர்டானில் நான்கு தலைமுறை கனவுகளுடன் சிரிய அகதிகள் ! படக்கட்டுரை

தூசியாகவும் வறண்டும், ஈவிரக்கமில்லாமலும் தோற்றமளிக்கும் ஜோர்டானின் பாலைவனம் தான் உயிர் தப்பி ஓடி வந்த சுமார் 80,000 சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறது.

நான்கு தலைமுறையினரின் கதைகளுடன் குழந்தைகள் அங்கே வளர்கிறார்கள். இழப்பதற்கு ஏதுமில்லை ஆனால் அடைவதற்கோ உலகத்தையே கொண்டுள்ள அந்த இளம் தலைமுறையினர் அக்கூண்டு வாழ்க்கைக்குள் அடைபட்டுக்கிடக்கின்றனர். அவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

ஏகாதிபத்தியங்களின் போர்ச்சக்கரத்தில் இழந்த பழைய வாழ்க்கையை மீண்டும் அடைவதற்கான அவர்களின் போராட்டம் தொடங்கிவிட்டது. இதோ அவற்றில் சில காட்சிகள்.

ஜோர்டானின் நான்காவது பெரிய நகரமாகி வரும் சாடாரி(Zaatari ) அதிகபடியாக 1,50,000 சிரிய அகதிகளுக்கு இடம் கொடுத்துள்ளது. தற்போது 79,000 அகதிகள் அங்கே உள்ளனர். 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அந்த முகாம் சிரியாவின் எல்லையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சாடாரி முகாமில் உள்ள முதன்மையான வீதிக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகழ்பெற்ற வீதியான சாம்பஸ்-எலிஸேஸின் (Champs-Elysees) பெயர் புனைப்பெயராக வைக்கப்பட்டுள்ளது. உற்பத்திப் பொருட்கள், சிறிய ஃபிளாபல்(falafel) உணவகங்கள் மற்றும் திருமண ஆடையகங்கள் ஆகியவற்றால் நிரம்பிய இச்சாலை மீண்டெழும் சிரிய அகதிகள் மற்றும் முகாமின் தொழில் முனைவோர்களுக்கான அடையாளமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 3,000 கடைகளை சாடாரியின் இந்த முறைசாரா சந்தை கொண்டுள்ளது.

அலியும் (இடப்புறம்) யூசுபும் உடன் பிறந்தவர்கள். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடமிருந்து முடித்திருத்தும் தொழிலைக் கற்றுக்கொண்ட 20 வயதான அலி பின்னர் சொந்தமாக கடையைத் தொடங்கினார்.

அலி, தன்னுடைய முடித்திருத்தும் கடையில் வேலை செய்யும் காட்சி. ஒருநாள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி தன்னுடைய குடும்பத்துடன் சேரவும் அங்கே ஒரு முடி திருத்தும் கடையை தொடங்கவும் அலி நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

நிஸ்ரீனும் (இடப்புறம்) நாஜட்டும் சிறந்த நண்பர்கள். சாடாரி முகாமில் சந்தித்த இருவருக்குமே 16 வயதாகிறது.

தன்னுடைய கொள்ளுத் தாத்தாவுடன் வீட்டிற்கு வெளியே சிரித்து மகிழ்கிறார் நாஜட். அவர்கள் சிரியாவின் தராவிலிருந்து 2012-ம் ஆண்டில் சாடாரி முகாமிற்கு தஞ்சம் அடையும் போது அவருக்கு வயது 11. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது, ஒரு மருந்தாளுனராக வேண்டும் என்பது அவரது கனவு. அதன் மூலம் சிரியாவை மீட்டுருவாக்க தன்னுடைய அத்தனை உழைப்பையும் நல்க முடியும் என்று நம்புகிறார்.

16 வயதான தபாரக் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இம்முகாமிற்கு வந்து சேர்ந்தார். “இங்கு நாங்கள் வருவதற்கு முன் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்ததில்லை. இங்கு நாங்கள் கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். – ஆனால் சிரியாவில், பால்கனி மற்றும் நான்கு அறைகள் கொண்ட எங்களது பழைய பெரிய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இங்கே…. நாங்கள் பழகிவிட்டோம். தற்போது இரண்டு அறைகள் கொண்ட ஒரு கூண்டு வீட்டில் வாழ்கிறோம்” என்கிறார்.

தபாரக் தன்னுடைய குடும்பத்துடன் மதிய உணவை பரிமாறிக் கொள்ளும் காட்சி. “ஜோர்டானுக்கு செல்லப்போகிறோம் என்று எனது பெற்றோர் கூறியவுடன் வேறொரு கட்டிடத்திற்கு தான் செல்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் இங்கே வந்தப்பிறகு தான் எங்களது வீடு பல பேர் வசிக்கும் பெரிய கூடாரம் என்று தெரிந்தது” என்று கூறுகிறார்.

சிரிய இளந்தலைமுறையினர் அம்முகாமிலேயே வளர்ந்து வருகிறார்கள். அங்கே 57 விழுக்காட்டினர் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். மேலும் 20 விழுக்காட்டினர் 5 வயதிற்குட்பட்டவர்கள்.

சிரிய இளைஞனான முகம்மதுவின் கூடாரம் இது. சாடாரியில் வசிக்கும் பெரும்பான்மையினரது வீடுகளுக்கு வெளியே தோட்டங்களும் உலோக தகடுகளாலான வரவேற்பறையும் இருக்கின்றன.

16 வயதாகும் யூசுப் கால்பந்து விளையாட்டை நேசிக்கிறார் மேலும் விளையாட்டுத்துறையில் பத்திரிக்கையாளராக விரும்புகிறார்.

அபு தலால், தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சாடாரியில் வசிக்கிறார். அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையேயான சுவர் வரைக்கும் தன்னுடைய கூண்டு வீட்டை பெரிதாக்கியுள்ளார். [சில] ஆண்டுகளாக காய்கறி தோட்டத்தை உருவாக்கி அங்கே புறாக்கள், வாத்துக்கள் மற்றும் ஒரு அழகிய நீரூற்றையும் பராமரிக்கிறார்.

நன்றி : அல்ஜசீரா

நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

த்திரப்பிரதேச மாநில பொது சுகாதாரத்துறையில் பாரிய அளவிலான சீர்த்திருத்தங்கள் செய்யவும் தணிக்கை ஆய்வுகள் நடத்துவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதற்கெதிராக கடந்த சில வாரங்களாகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு உ.பி அரசு முயன்று வருகிறது.

மாநில பொது சுகாதார செலவீனங்கள் மீது தணிக்கை ஆய்வுகளை மேற்கொள்ளுதல், நோயாளிகளுக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் விலையிலா உணவு வழங்குதல், விலையிலா மருத்துவ ஊர்தியை உத்தரவாதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அலகாபாத் நீதிமன்றம் மார்ச் மாதம் அளித்திருந்த இந்த தீர்ப்பினை எதிர்த்து தான் உ.பி அரசு மூன்று முறை உச்சநீதிமன்ற கதவைத் தட்டியிருக்கிறது

அரசு மருத்துவ சேவைகளையே அரசு ஊழியர்கள் பயன்படுத்த வேண்டுமென்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கான செலவீனங்களை அரசு ஏற்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் முதல் விசாரணையிலேயே இவ்வழக்கிலிருந்து விலகி விட்டார். அதன்பிறகு உ.பி அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீர்திருத்தங்களுக்காக வழக்குத் தொடுத்தவர்களை உச்சநீதிமன்றம் இதுவரை அழைக்காத நிலையில் அலகாபாத் நீதிமன்ற உத்தரவை நிறுத்த ஆதித்யநாத் அரசு விரும்புகிறது.

தவறான வாக்குமூலங்களை தந்ததற்காக மாநில மருத்துவக்கல்வி முதன்மை செயலரான இரஜினீஷ் துபே மற்றும் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் பதியவில்லை என்று காரணம் கேட்டு அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீசு அனுப்பியது தான் ஆதித்யநாத் அரசின் பீதிக்கு முதன்மையான காரணம்.

கொள்கை மற்றும் நிதி முறைக்கேட்டிற்காக மூத்த அரசு ஊழியர்களை நீதிமன்றத்திற்கு இழுப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று. உயர்நீதிமன்றம் வழங்கிய 21 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் தவறான வாக்குமூலங்கள் அளித்தது தான் உ.பி அரசின் இந்த நாட்டாமைத்தனத்திற்கு காரணம்

தன்னுடைய மூத்த அரசு அதிகாரிகளில் ஒருவரான இரஜினீஷ் துபேக்கு நோட்டீசு அனுப்பியதன் மூலம் உயர்நீதிமன்றம் தவறிழைத்து விட்டது என்று கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்த முயற்சிக்கிறது ஆதித்யநாத் அரசு. கடந்த பத்தாண்டுகளுக்கான தணிக்கை ஆய்வுகளை சுகாதாரத்துறையில் நடத்தவியலாது என்றும் அது கூறியிருக்கிறது. வழக்கு தொடுத்தவரின் வேண்டுகோளுக்கும் கூடுதலான சீர்திருத்தங்களுக்கு உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் உ.பி அரசு கூறியிருக்கிறது.

ஆனால் “இந்த ஆணையில் பொருத்தமில்லாத எதையும் அரசு காணும் பட்சத்தில் அதற்கான விவரங்களுக்கோ அல்லது மாற்றங்களுக்கோ நீதிமன்றத்தை அணுகலாம்” என்றும் உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் நீதிமன்ற உத்தரவை நிறுத்துவதிலேயே ஆதித்யநாத் அரசு குறியாக இருக்கிறது.

கோரக்பூரின் பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் இல்லாததால் குழந்தைகள் மரணத்த அவலத்திற்கு உ.பியின் பொது சுகாதாரத்துறையின் மோசமான செயல்பாடுகளே காரணம்.

சினேஹ் லதா சிங்கின் வழக்கு

உ.பி அரசு தடுக்க நினைக்கும் அந்த தீர்ப்பானது 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சினேஹ் லதா சிங் என்ற ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்டது. லதாவிற்கு 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-வது குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக சிறுநீர் போகும் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை உள்ளிட்ட குறைந்தது 10 மருத்துவமனைகளுக்காவது சிகிச்சைக்காக அலைந்து திரிந்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

அவரது சிகிச்சைக்காக 250 ரூபாய் போன்ற சிறுதொகையைக் கூட அவரது குடும்பத்தினர் கடன் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த துன்பத்திலும் அரசு அதிகாரிகள் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.

கடைசியாக லக்னோவின் பிரபலமான கிங் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரியில்(KGMU) அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆயினும் அவருக்கு தேவைப்படும் ஒரு அறுவை சிகிசைக்கு படுக்கை வசதி இல்லை என்று கைவிரித்து விட்டனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு 2008-பிப்ரவரி மாதத்தில் தான் அவருக்கு படுக்கை வசதி கிடைத்தது. மேலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகே அவரது உடலிலிருந்து செயற்கை சிறுநீர் வடிக்கும் குழாய் நீக்கப்பட்டது. மகப்பேறுக்குப் பிறகு சிறுநீர் போக்கு பிரச்சினை ஏற்பட்டு 12 மாதங்களாக அலைந்து திரியும் நிலைக்கு லதா தள்ளப்பட்டார்.

அதன் பிறகு நட்ட ஈடு 50,000 ரூபாய் மற்றும் இழப்பீடு 5 இலட்சம் ரூபாய் கேட்டு உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை லதா தொடுத்தார். ஆனால் அதில் பெரும்பாலும் மாநில சுகாதார அமைப்பிற்கான சீர்திருத்தங்களை தான் கோரியிருந்தார்.

“மகப்பேறு மருத்துவத்திற்காக வரும் ஏழைப்பெண்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் அனைத்தும் அவை எத்தகையதாக இருந்தாலும் விலையில்லாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்பது அவரது 8 கோரிக்கைகளில் ஒன்று. மேலும் கருவுற்ற போதும், பேறுகாலத்தின் போதும் பேறுகாலத்திற்குப் பிறகும் தேசிய ஊரக சுகாதார சேவை கிடைப்பதை கறாராக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதன்மை சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்திலும் உரிய சிகிச்சைக்கான பதிவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். குறைகளை சரி செய்ய ஒரு குழுவை உருவாக்கி பேறுகாலங்களில் நடந்த மரணங்கள் குறித்து தணிக்கை ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று கடைசியாக லதா கேட்டிருந்தார்.

உ.பி சுகாதார மேம்பாட்டிற்காக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள்

இலதாவின் கோரிக்கைகளை முன் வைத்து அலகாபாத் நீதிமன்றத்தின் சுதிர் அகர்வால் மற்றும் அஜித்குமார் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சிறப்புமிக்க அந்த 96 பக்க தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பில் உ.பி அரசுக்கு 21 வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளின் உள்ள காலி இடங்களை நிரப்புவது முதல் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்துதல் வரைக்குமான பல்வேறு தீர்ப்புகள் அந்த பக்கங்களில் நிறைந்திருந்தன.

அலகாபாத் உயர்நீதிமன்றம்

“வசதிவாய்ப்பு மிக்க உயர் அதிகாரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைக்ககூடிய அதே மருத்துவ வசதி ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் மேலும் ஏழ்மை, படிப்பறிவின்மை மற்றும் ஏனையத் தடைகளால் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் ஏழை மக்கள் அல்லலுற கூடாது என்றும் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் அரசுக்கு வழிகாட்டியிருந்தது.

அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்புகளில் சில,

  1. தவறான வாக்குமூலங்களை அளித்ததற்காக மருத்துவக்கல்வித் தலைமை அதிகாரிக்கும் மோதிலால் நேரு மருத்துவக்கல்லூரி தலைவருக்கும் நோட்டீசு அனுப்ப வேண்டும்.
  2. அனைத்து அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும் அவர்களுக்கென்று தனிச்சிறப்பான வி.ஐ.பி சிகிச்சை கிடையாது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கான சிகிச்சை செலவீனங்கள் அரசு ஏற்றுக் கொள்ள கூடாது.
  3. சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும் நிதியாதாரம் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தால் துறை சார்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஏனெனில் “பயன்படுத்தப்பாடாத நிதி என்பது தேவைப்படும் சிகிச்சை மறுக்கப்பட்டதாகவே ஆகும்”.
  4. மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) மூலம் தணிக்கை ஆய்வுகள் இரண்டு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நிதியாதாரங்களை அந்த தணிக்கைகள் ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில், குற்றவியல் அல்லது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  5. மாவட்ட மருத்துவமனைகள், சமூக நல மையங்கள் மற்றும் முதன்மை சுகாதார மையங்கள் அனைத்திலும் ஒராண்டிற்குள் தணிக்கை ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
  6. அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் தீர்ப்பு வந்த ஏழு மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும்.
  7. கர்ப்பிணிப் பெண்களுக்கு சேவை செய்ய பெண் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.
  8. அரசு மருத்துவர்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளையும் ஊடுகதிரியல் (radiodiagnosis) மற்றும் நோயியல் (pathology) சோதனைகளுக்கு தனியார் மருத்துவமனைகளை பரிந்துரைக்கும் அவர்களது போக்கையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
  9. கருக்கலைப்புகளை மருத்துவ அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட கூடாது. அங்கு நடக்கும் தவறுகளுக்கு மருத்துவ அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
  10. மருந்துகள், கருவிகள் மற்றும் சிகிச்சை அரங்கங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
  11. மருத்துவ ஊர்திகள் எளிதில் செல்லுமளவிற்கு போக்குவரத்து வசதிகள் மேம்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற வண்டி நிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட வேண்டும். குடிமக்கள் புதிய வண்டிகளை வாங்கும் போது குடியிருப்புகளில் வண்டி நிறுத்த அவர்களுக்கு இடம் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
  12. நோயாளிகளுக்கும் அவர்களை பரமரிப்பவர்களுக்கும் விலையில்லா உணவு வழங்க வேண்டும்.
  13. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள புல்வெளிகளை திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும் இரவு பத்து மணிக்கு மேல் சத்தமான எந்த கொண்டாட்டமும் கூடாது.
  14. இந்த அனைத்து நடவடிக்ககைகளையும் உ.பி யின் தலைமைச்செயலாளர் கண்காணித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இப்பட இருந்தாலும் அவை வழிகாட்டுதல்கள் மட்டுமே. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் வாழ்வுரிமைகளுக்கும் எதிரானதாக இருக்கும் போது ஓடோடி வந்து அதை நிறைவேற்றும் இந்த அரசுகள் ஏழைகளுக்கு சாதகமாக ஒன்னுரெண்டு தீர்ப்புகள் வரும் போது காகிதத்திற்கான மதிப்பினை கூட அவற்றிற்கு கொடுப்பதில்லை என்பது  இந்த தீர்ப்பின் மூலம் தெரிகிறது.

-வினவுச் செய்திப் பிரிவு

நன்றி: thewire

ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !

2810 கோடியைத் திருட 63.91 கோடி இலஞ்சம் !

கோச்சார் குடும்பத்தாருக்கும் வீடியோகான் நிறுவன முதலாளி வேணுகோபாலுக்கும் சுமார் இருபதாண்டு காலத் தொழில் தொடர்பு உள்ளது. கிரெடென்சியல் பைனான்ஸ் எனும் நிறுவனத்தை சாந்தா கோச்சார் உள்ளிட்டு அவரது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து 1995 ஆண்டு தொடங்கினர். இந்நிதி நிறுவனத்தில் 2001 ஆண்டு ஒரு பங்குதாரராக வேணுகோபால் இணைகிறார். இதே காலகட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் உயர் பொறுப்புகளில் மளமளவென உயர்ந்து வருகிறார் சாந்தா கோச்சார்.

அதே சமயத்தில், 2008 ஆண்டு டிசம்பர் மாதம் வேணுகோபால் தூத், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருடன் கூட்டுச் சேர்ந்து “நு பவர்” எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இருவரும் அந்நிறுவனத்தில் சரிபாதியாக முதலீடு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

அந்நிறுவனத்தை ஆரம்பித்த சில மாதங்களிலேயே தன் வசமிருந்த 25,000 பங்குகளை தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்து விடும் வேணுகோபால் தூத், அந்நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறார். இது நடந்த அடுத்த சில மாதங்களிலேயே (2010 மார்ச்) தன்னுடைய துணை நிறுவனமான சுப்ரீம் எனர்ஜி என்கிற உப்புமா கம்பெனியின் வழியாக சுமார் 64 கோடியை நு பவருக்கு வழங்குகிறது வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனம்.

இந்தக் கடனுக்கு ஈடாக நு பவர் நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுக் கொள்ளும் சுப்ரீம் எனர்ஜி, பின்னர் அதை வேணுகோபாலின் பினாமியான மகேஷ் சந்திர புங்காலியா என்பவருக்குக் கைமாற்றி விடுகிறது. தன்னிடம் கிடைத்த நு பவரின் பங்குகளை வெறும் ஒன்பது இலட்சத்திற்கு பினாக்கில் டிரஸ்ட் என்கிற உப்புமா கம்பெனிக்கு விற்கிறார் புங்காலியா. இந்தப் பினாக்கில் டிரஸ்டின் அறங்காவலராக உள்ளவர் தீபக் கோச்சார்.

புரியும் விதமாகச் சொன்னால், தீபக் கோச்சாருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை சரிபாதிக் கூட்டு முதலீட்டுடன் தொடங்குவது போல் போக்கு காட்டி விட்டு, பின்னர் தனது பங்கு முதலீட்டுத் தொகையைக் கள்ளத்தனமாகச் சுற்றி வளைத்து தீபக் கோச்சாருக்கே கையளித்துள்ளார் வேணுகோபால் தூத். அதாவது நு பவர் நிறுவனத்தில் தான் முதலீடு செய்த 64 கோடி மதிப்பிற்கான பங்குகளை வெறும் 9 இலட்சத்திற்கு தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார் வேணுகோபால்.

ஒரு பக்கம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயல் அலுவலரான சாந்தா கோச்சாரின் கணவருக்கு இலஞ்சப் பணத்தைச் சுற்றுப்பாதையில் மாற்றிக் கொண்டிருந்த வீடியோகான் நிறுவனம், இன்னொரு பக்கம் வங்கிகளிடம் கடன் வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 20 வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து வீடியோகான் நிறுவனம் ரூ.40,000 கோடியை கடனாக வாங்குகிறது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மட்டும் 3,250 கோடியைக் கடனாக வழங்கியிருக்கிறது. இவ்வாறு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வேணுகோபாலுக்கு வழங்கிய கடனில் 86 சதவீதம் – அதாவது 2,810 கோடி ரூபாயை வாராக்கடனாக அறிவித்துள்ளது.

எலி அம்மணமாகச் சுற்றி வந்ததன் காரணம் இப்பொழுது புரிகிறதா?

-புதிய ஜனநாயகம் மே 2018

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !

பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போட்டுவிட்டுத் தரகு முதலாளிகள் நாட்டை விட்டு நைசாக வெளியேறிவிடும்போதும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அலசும்போதும், பொருளாதார நிபுணர்கள் என்ற பெயரில் உலாவரும் தனியார்மயத்தின் கைத்தடிகள் அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல உபதேசிக்கும் ஒரே ஆலோசனை, பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்பதுதான்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் முகத்திரையை மட்டுமின்றி, வங்கிகளைத் தனியார்மயமாக்க முயன்று வரும் மோடி அரசின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது.

மோடி அரசு நிதி ஆயோக்கை அமைத்த பிறகு, இத்தனியார்மயக் கைக்கூலி நிபுணர்களின் கருத்தே அரசின் கருத்தாகவும் மாறிவிட்டது.

‘‘வாராக் கடன் பிரச்சினையால் பொதுத்துறை வங்கிகள் நட்டமடைந்திருப்பதாலும் அவற்றின் பங்கு மதிப்பு சரிந்திருப்பதாலும், அவற்றை உடனடியாகத் தனியார் முதலாளிகள் வாங்க விரும்பமாட்டார்கள். அதனால், அரசு பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து, அவற்றைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திய பிறகுதான் விற்க முடியும்” என்கிறார், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தெபராய்.

மோடி அரசும் 2.11 இலட்சம் கோடி ரூபாயைப் பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்யப் போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டது.

உங்கள் வீட்டில் புகுந்து திருடியவனை நீங்கள் போலீசில் பிடித்துக் கொடுப்பீர்களா, அல்லது திருடியதற்கு மேலும் சன்மானம் கொடுத்து அவனை வழியனுப்பி வைப்பீர்களா? இந்த மறுமுதலீடு என்பது திருடனுக்குச் சன்மானம் கொடுப்பதற்குச் சமமானது.

இதுவொருபுறமிருக்கட்டும். ‘‘வாராக் கடன் பிரச்சினையைக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போலாகாதா” என எதிர்க் கேள்வி கேட்டால், பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க வேண்டிய அவசியத்திற்குத் தனியார்மய ஆதரவாளர்கள் அடுக்கும்

காரணங்கள் இவைதான்:

‘‘பொதுத்துறை வங்கிகளின் உயர் நிர்வாகிகளுள் பெரும்பாலோர் திறன் வாய்ந்த தொழில்முறை நிபுணர்கள் கிடையாது. அவர்களுள் பெரும்பாலோர் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து, நிர்வாகப் பதவிகளைப் பிடிக்கிறார்கள்.

இதனால் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் யாருக்கெல்லாம் கடன் கொடு எனக் கைகாட்டுகிறார்களோ, அவர்களுக்குக் கடன் கொடுத்து பொதுத்துறை வங்கிகளை நெருக்கடிக்குத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால், தனியார் வங்கிகள் தகுதியும் திறமையும் கொண்ட தொழில்முறை பொருளாதார நிபுணர்களால் நிர்வகிக்கப்படுவதால், அவ்வங்கிகளில் கண்டவனெல்லாம் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட முடியாது.”

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்துத் தனியார்மய விசுவாசிகள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும், தனியார்மயத்தை அவர்கள் சர்வரோக நிவாரணியாகக் காட்டுவதற்குக் கூறும் காரணங்கள் ‘‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும்” என்ற நகைச்சுவையை விஞ்சக்கூடியவை.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என நாம் கூறி வருகிறோமே, அதற்கொரு சான்றாக அம்பலமாகியிருக்கிறது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த விவகாரம்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனியார் வங்கி என்றபோதும், அதில் புழங்கும் பணம் பொதுமக்களின் பணம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் இந்தப் பிரச்சினயை நாம் அணுக வேண்டும்.

எப்படிப்பட்டவர்களை வங்கி நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனத் தனியார்மய ஜால்ராக்கள் சொல்லி வருகிறார்களோ, அந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்டவர்தான் ஐ.சி.ஐ.சி.ஐ. தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ.) சாந்தா கோச்சார்.

அவர் சி.ஏ. படிப்பும், நிர்வாக மேலாண்மை படிப்பும் முடித்தவர் என்றும், தனது உழைப்பு மற்றும் திறமையால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் செயல் தலைவராக உயர்ந்தவர் என்றும் கூறுகிறது, அவரைப் பற்றிய விக்கி பீடியா பக்கம்.

அதாவது, அவர் அரசியல் தலைமையைக் காக்காய் பிடித்து, வங்கியின் தலைமைப் பதவிக்கு வரவில்லை. எந்த அரசியல்வாதியும் சொல்லி வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடனை வழங்கவில்லை. அது அவரால் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு.

பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகிக் கொடுத்த கடன்கள்தான் வாராக் கடனாக நிற்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். ஆனால், அரசியல் நெருக்கடியோ, வேறு எந்த சிபாரிசோ இல்லாமல் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனும் வாராக் கடனாகி நிற்கிறது.

இதற்குக் காரணம் சாந்தா கோச்சார் குடும்பத்தின் சொந்த ஆதாயம் என்பதும் அம்பலமாகிவிட்டது. கையூட்டு வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கும் சாந்தா கோச்சார் குடும்பத்தினர் அடைந்திருக்கும் ஆதாயத்திற்கும் அடிப்படையில் எந்தவொரு வேறுபாடும் கிடையாது.

அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் கொடுக்கப்படும் கடன்களைவிட, சொந்த ஆதாயத்தின் பொருட்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கும் சாந்தா கோச்சாரின் நிர்வாக முடிவுதான் மிகக் கேடானது.

‘‘நிதி அமைச்சகத்திலிருந்து சில சலுகைகளைப் பெற்றுத் தந்ததற்காகக் கையூட்டுப் பெற்றார்” என்பது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு.

சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டு அதைவிட மோசமானது. வங்கியில் உள்ள பொதுமக்களின் பணத்தை வீடியோகான் முதலாளி கொள்ளையடிக்க விட்டுவிட்டு, அதற்குச் சன்மானம் வாங்கியிருக்கிறார்கள்.

அலைக்கற்றை வழக்கில் 200 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக ஆ.ராசாவையும் கனிமொழியையும் கைது செய்தார்கள். வழக்கு தோற்றதும் மேல்முறையீடும் செய்கிறார்கள். அரசியல் நிர்பந்தம் காரணமாக நிரவ் மோடிக்கு வங்கிப் பணத்தை வாரிக் கொடுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்கும் விசாரணையும் நடந்து வருகிறது.

ஆனால், தனது குடும்பத்தின் சொந்த ஆதாயத்திற்காகக் கடன் கொடுத்த சாந்தா கோச்சார் மீது ரிசர்வ் வங்கியோ, நிதி அமைச்சகமோ, புலன் விசாரணை அமைப்புகளோ எந்தவொரு விசாரணையும் இதுவரை நடத்தவில்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிர்வாகமோ சாந்தா கோச்சாருக்கு அப்பழுக்கற்றவர் எனச் சான்றிதழ் வழங்கிவிட்டது. அவருக்குப் பணி நீட்டிப்பு கிடைக்காது என்றொரு செய்தி வதந்தியாக உலா வருகிறது. சொந்த ஆதாயத்திற்காக வங்கிப் பணத்தை எடுத்துச் சூறைவிட்டவருக்குக் கிடைக்கவிருக்கும் ‘‘தண்டனை” மரியாதைக்குரிய பணி ஓய்வு.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்தத் தயங்காத ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் குடும்பம் நடத்திய மோசடி குறித்து மூச்சுகூட விடவில்லை.

திருடனைத் தேள் கொட்டினால், வாயைத் திறந்து கத்தவா முடியும்?

வங்கிகள் பொதுத்துறையாக இருக்கும் வரைதான் அவற்றின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்க வாய்ப்புண்டு. அவற்றைத் தனியாரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டால் கேள்விக்கிடமற்ற கொள்ளைதான் நடக்கும் என்பதை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் வீடியோகான் கூட்டணி நடத்தியிருக்கும் கொள்ளை எடுத்துக்காட்டிவிட்டது.

-ஆர்.ஆர்.டி.

-புதிய ஜனநாயகம் மே 2018

கரூர் : மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தின் நீட் தேர்வு சதி ! புமாஇமு ஆர்ப்பாட்டம் !

0

நீட் தேர்வு : மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கூட்டுச்சதி !
நீட் தேர்வை ரத்து செய்ய டெல்லிக்கு எதிராக கிளர்தெழுவோம் !

என்ற தலைப்பின் கீழ் 10.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் கரூர் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் பகுதி பு.மா.இ.மு தோழர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு.-வைச் சேர்ந்த தோழர் சுரேந்தர், தோழர் பிரித்திவ், தோழர் மாஞ்சோலை, தோழர் சிவா, தருமபுரி பு.மா.இ.மு தோழர் அன்பு மற்றும் கரூர் பகுதி மக்கள் அதிகாரம், தோழர் விக்னேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் வினோத் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பேசிய உரையின் சுருக்கம்: சென்ற ஆண்டு நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலி வாங்கப்பட்டார். இந்த ஆண்டு மாணவர்கள் – பெற்றோர்கள் அலைகழிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். நீட் தேர்வு பல பெற்றோர்களின் உயிரை பலிவாங்கியுள்ளது. நீட் தேர்வில் மட்டுமல்ல காவிரி, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்டம் என தமிழகம் பல வகைகளிலும் வஞ்சிக்கப்படுகின்றது. இனியும் இந்த அவலங்கள் தொடராமல் இருக்க நாம் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று பேசினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதுவரை கரூர் பகுதியில் பு.மா.இ.மு. – சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பலமுறை அனுமதி மறுத்துள்ளது போலீசு. தோழர்களின் தொடர் போராட்டத்தால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதிலும் பல கெடுபிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் தாண்டி இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர், தொடர்புக்கு : 98941 66350.

ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !

1

ரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இந்த அறிவிப்பு, ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் மீதும் தாக்கத்தை உண்டாக்க வல்லது. அத்துடன் மத்திய கிழக்கில் வரப்போகும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அதிக அக்கறை செலுத்தாத சர்வதேச அரசியல் நிலவரம், எந்தளவு தூரம் நமது தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

டிரம்பின் திடீர் அறிவிப்புக்கு முதலில் எதிர்வினையாற்றியது பங்குச்சந்தை வர்த்தகம் தான். இதனால் எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் விளைவாக பெட்ரோல் மட்டுமல்லாது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப் படவுள்ளன. ஏனெனில், 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன.

இலங்கையில் இரவோடிரவாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் மங்கள சமரவீர, டெய்லி மிரர் பத்திரிகை பேட்டியில், விலை உயர்வுக்கு ஈரான் பிரச்சினையை காரணமாகக் காட்டி இருந்தார். இருப்பினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வதேச பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில், முதலாளிய “அரசியல் ஆய்வாளர்கள்” மிகவும் அவதானமாக உள்ளனர். அவர்கள் “மைத்திரி அரசா, மகிந்த அரசா சிறந்தது?” என்று பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்கள்.

ஈரான் அதிபர் அசன் ரவ்கானி

உண்மையில், ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் தனியே அமெரிக்காவுடன் மட்டும் கைச்சாத்திடப் படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து அணுவாயுத வல்லரசு நாடுகளுடன், ஜெர்மனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருந்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில், ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தன. அன்றிருந்த ஒபாமா நிர்வாகம், கடும்போக்காளர்களை ஓரங் கட்டி விட்டு ஒப்பந்தம் போட்டது.

டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பதற்கு காரணம், அந்நாடுகளின் வர்த்தக நலன்கள் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் வாதாடலாம். உண்மை தான். யாருக்கு தான் நலன்கள் இல்லை? அமெரிக்கா பொதுநலன் கருதி, உலகை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவதாக சொன்னால், அது நகைப்புக்குரியது.

முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.

ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் படுவதாக அறிவித்துள்ள டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத தவணை கொடுத்துள்ளது. இதனால், எண்ணை ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப் படும். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் தவணை கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானுடனான அமெரிக்க வர்த்தகம் மிகவும் அரிது என்பதால், டிரம்பின் முடிவால் அமெரிக்க வர்த்தகர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை பேணி வருகின்றன. அதனால், அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் ஐரோப்பாவும் பாதிக்கப் படுகின்றது என்பது நிச்சயம். உலக சந்தையில் அமெரிக்காவுடன் போட்டி போடுவது எந்தளவு கடினமானது என்பது ஐரோப்பிய முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்காவின் நிழல் கூடப் படாத ஈரானில், ஏராளமான வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன. ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இது அவர்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம். அதை இலகுவில் இழக்க விரும்ப மாட்டார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா ஈராக் போரைத் தொடர்ந்து, ஈரான் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானை சுற்றி வளைத்திருந்தன. இருப்பினும், அமெரிக்கா ஆழமறியாமல் காலை விட விரும்பவில்லை. அதனால், அரை மனதுடன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதன் விளைவு தான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம். இதனால் ஈரான் மீண்டும் சுதந்திரமாக சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடிந்தது.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் நெருக்குவாரம் உள்ளது. சிரியாப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈரான் இரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அறிவித்து வந்தார். அந்த நேரத்தில், அதை வெறும் இஸ்ரேலிய பிரச்சாரமாகக் கருதி, யாரும் பொருட்படுத்தவில்லை.

ஈரானில் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதை கண்காணித்துக் கொண்டிருக்கும் IAEA என்ற சர்வதேச அணு சக்தி முகாமைத்துவ நிறுவனம் அதை மறுத்துள்ளது. ஏற்கனவே ஈரானிய அணு உலைகளில் இருந்த யுரேனியம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. ஐ.நா. மன்றம் வரை சென்று படம் காட்டி பயமுறுத்திய, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் குற்றச்சாட்டு எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறுப் பிரச்சாரம்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை உலகில் யாரும் நம்பாவிட்டாலும், தான் அதை நம்புவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, ஈரான் இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்ற ஒரேயொரு காரணத்தை சொல்லித் தான், ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இது முன்பு சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய் கூறி ஈராக் மீது படையெடுத்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இது மீண்டும் மத்திய கிழக்கின் மீது போர் மேகங்கள் சூழ்கின்றன என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு ஈரானிய படையினர் வசமிருந்த ஆயுதக் கிடங்கு தாக்கப் பட்டதாகவும், சில ஈரானியரும் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய அரசு அதை மறுத்திருந்தது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவை அல்ல. ஆகையினால், இந்தத் தடவையாவது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானிய அரசியல் களத்தில் விவாதிக்கப் பட்டது.

கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த சிரியாவின் உள்நாட்டுப் போர் தற்போது பிராந்தியப் போராக மாறியுள்ளது. ஒருவேளை இது மூன்றாம் உலகப் போராகவும் இருக்கலாம். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அது ஈரானுக்கு வைக்கப் பட்டுள்ள குறி என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக, ஈரானிய இராணுவ ஆலோசகர்களும், லெபனானிய ஹிஸ்புல்லா தொண்டர்களும், சிரியாப் போரில் தலையிடுவதற்கு அதுவே காரணமாக இருந்தது.

உள்நாட்டு யுத்ததால் சிதைந்து போயுள்ள சிரியா.

போரின் முடிவில் சிரியாவை ஆளும் ஆசாத் அரசு கவிழும் என்றும், ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்றும், இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடந்தேறின. ரஷ்யாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கிளர்ச்சிக் குழுக்கள் தோற்கடிக்கப் பட்டு, இறுதியில் ஆசாத் அரசு வெற்றி வாகை சூடியது.

இஸ்ரேலின் அயல்நாடுகளில் சிரியா மட்டுமே இதுவரையில் எந்தவித சமரசமும் செய்யாமல் எதிரி நாடாக உள்ளது. அத்துடன், அது லெபனான் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்தது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதும் சிரியா மட்டும் தான். இதனால், சிரியாப் பிரச்சினையை ஒரு வழியாக முடித்து விட்டால், ஈரானை தாக்குவது இலகுவாகி விடும் என்று இஸ்ரேல் கணக்குப் போட்டிருந்தது.

அமெரிக்காவால் எதிரி நாடுகளாக நடத்தப் படும் ஈரான் போன்ற நாடுகள், கடந்த கால உலக வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெற்றுள்ளன. ஈராக், லிபியா என்று ஒவ்வொன்றாக தீர்த்துக் கட்டிய அமெரிக்கா, சிரியாவையும் பிடித்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. ஆகையினால், தனது சொந்த நலன் கருதியாவது, ஈரான் சிரியாப் போரில் தலையிட வேண்டி இருந்தது. ஆசாத் அரசை வெல்ல வைப்பதன் மூலம், சிரியாவை தொடர்ந்தும் ஈரானின் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கலாம்.

அதே நேரம், சிரியாவின் உள்நாட்டுப் போரானது, “ஜென்ம விரோதிகளான” இஸ்ரேலையும், ஈரானையும் அருகருகே கொண்டு வந்து விட்டுள்ளது. தனது வடக்கு எல்லையில் ஈரானியப் படைகள் நிலை கொண்டிருப்பதால், இஸ்ரேலுக்கு எந்நேரமும் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும். சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தனது பலமடைந்துள்ள சிரியாவின் அரச இராணுவம், எதிர்காலத்தில் கோலான் குன்றுப் பகுதியை மீட்கும் யுத்தத்தை தொடங்கலாம். அதை ஈரானும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு எல்லைப்போர் மூண்டால், வடக்கே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தலாம்.

இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, “கடைசி ஐரோப்பிய காலனியான” இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி – இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்கு மாறாக, ஷியா – இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப் படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் சக்தி படைத்த நாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐரோப்பா மட்டுமல்லாது, ரஷ்யா, சீனா கூட, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அனுசரித்து போன காலம் ஒன்றிருந்தது. அத்தகைய காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு ஈரானை ஒடுக்குவது இலகுவாக இருந்திருக்கும். எதிர்பாராத விதமாக, சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யா தலையிட்ட பின்னர் நிலைமை சிக்கலாகியுள்ளது.

ரசிய அதிபர் புடின்

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டால், ரஷ்யா எந்தப் பக்கத்தை ஆதரிக்கும்? உண்மையில், இது ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்கடியான நிலைமை. இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன ஜார் மன்னன் என அழைக்கப் படும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் கோஷத்தின் கீழ் தான் சிரியாப் போரில் ஈடுபட்டார். இது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வெளிவிவகார கொள்கையாக இருந்தது.

இருப்பினும், இஸ்ரேலில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ரஷ்யர்களை புட்டின் புறக்கணிக்க முடியாது. இலட்சக்கணக்கான ரஷ்ய யூதர்கள் மட்டுமல்லாது, பொருளாதார காரணங்களுக்காக குடியேறிய ரஷ்யர்களும் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலிய தேர்தல்களில் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கியாக உள்ளனர். பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேலிய ரஷ்யர்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றார். அதாவது, ரஷ்யா சென்று புட்டினை சந்தித்து பேசிய பொழுது, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை சுட்டிக் காட்ட மறக்கவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கை, ஈரானை ஆளும் ஆயத்துலாக்களின் கரங்களை பலப்படுத்தும். அமெரிக்காவுக்கு ஆதரவான லிபரல் முகாமை பலவீனப் படுத்தும். அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறி வரும் கடும்போக்காளர்களின் கரம் உயரும். “அமெரிக்கர்கள் அயோக்கியர்கள் என்றால், ஐரோப்பியர்கள் கோழைகள்” என்று ஈரானில் பேசிக் கொள்கின்றனர்.

ஈரான் இன்று வரையில், ஷியா இஸ்லாமிய மத அடிப்படைவாத கருத்தியலை அரச கொள்கையாக கொண்டுள்ள போதிலும், சவூதி அரேபியா போன்ற “இஸ்லாமிய” நாடுகளே அதன் பிரதானமான எதிரிகளாக உள்ளன. அதனால், ஈரான் தவிர்க்கவியலாது, “கிறிஸ்தவ” ரஷ்யாவுடனும், “நாஸ்திக” சீனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டியுள்ளது. அரசியல்- பொருளாதாரக் காரணங்களுக்காக உருவான இந்தக் கூட்டணி, மதத்திற்கு அப்பாலும் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது.

  •  கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம்  தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர் . வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

 

அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !

2

தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்.

“கல்லெறிந்தது குற்றம்” என்று குரல்கொடுத்த சான்றோர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

*****

எஸ்.வி.சேகரை நாந்தான் புடிக்க வேண்டுமென்றால், எனக்கு டி.ஜி.பி. பதவி கொடுங்கள். -பொன். ராதாகிருஷ்ணன்

பொன்னார் ஜியை இன்றுமுதல் குட்கா ஜி என்று ஹிந்து சமூகம் கொண்டாடட்டும்…

அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

உச்ச நீதிமன்றமே உன் விலையென்ன ? ரெட்டி பிரதர்ஸ்

சுரங்க மாஃபியா ரெட்டி சகோதரர்கள் ( இடமிருந்து : சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி) உடன்பிறவா சகோதரன் ஸ்ரீராமுலு.

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியளிக்க லஞ்ச வாங்கிய விவகாரம், மோடி அரசுக்கு சாதகமாக ‘பெஞ்ச் பிக்சிங்’, தன் வழக்கை தானே விசாரித்துத் தீர்ப்பளிப்பது உள்ளிட்ட விசயங்கள் நாறிக்கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த ஊழல் வெளியாகியுள்ளது.

சுரங்க மாஃபியா ரெட்டி சகோதரர்கள் ( இடமிருந்து : சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் இவர்களின் ‘உடன்பிறவா சகோதரன்’ ஸ்ரீராமுலு) .

சுரங்க மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இரண்டு ‘ஸ்டிங்’ வீடியோக்களாக கர்நாடக செய்தி சானல்களில் வெளியாகியுள்ளன. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ரெட்டி சகோதரர்களையும் அவர்களை அரவணைத்து வரும் பா.ஜ.க-வினரையும் அம்பலப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் இவ்வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வீடியோக்களில் பா.ஜ.க வேட்பாளரும் ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவருமான ஶ்ரீராமுலு, முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீநிஜன், மேலும் இடைத்தரகர்களான கேப்டன் ரெட்டி, ரஜ்னீஷ் ஆகியோர் தீர்ப்புக்காக பேரம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

“நீங்கள் யாரிடம் பேசினீர்கள், ஜனார்த்தன ரெட்டியிடமா இல்லை ஶ்ரீராமுலுவிடமா?”

“இருவரிடமும்”

“அவர்கள் 500 கோடி கேட்டிருக்கிறார்கள். 100 கோடி முன்னரே கொடுக்கப்பட்டுவிட்டது. பாலகிருஷ்ணன் 10-ம் தேதி தீர்ப்பளித்துவிடுவார்.”

மேற்கண்ட உரையாடல் ஒரு உதாரணம்.

முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்

ஆந்திர அரசு ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனத்திற்கு விதித்த தடையை அகற்றத்தான் இந்த பேரம் பேசப்பட்டிருக்கிறது.

வெளியான சில மணிநேரங்களிலேயே இந்த வீடியோவை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. நித்தியானந்தா சொன்னதைப்போல, “எல்லாம் கிராபிக்ஸ்” என்று சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

முன்னர் ரெட்டி பிரதர்ஸிடம் அடிவாங்கிய எடியூரப்பா, “நான் அடிவாங்குனதே உண்மையில்ல, அதெல்லாம் கிராபிக்ஸ்” என்று சொல்லி, மறுபடியும் ரெட்டி பிரதர்ஸின் காலடியில் விழுந்து கிடக்கும்போது, இதனை கிராபிக்ஸ் என்று அமித் ஷா சொன்னதில் வியப்பில்லை.

வழக்கின் சுருக்கம்

முறைகேடான சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜனார்த்தன ரெட்டியின் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் (Obalapuram Mining company) செயல்பாடுகளுக்கு 2009-ம் ஆண்டு நவம்பரில் தடைவிதித்தது ஆந்திர அரசு. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் ரெட்டிக்கு ஆதரவாக ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் அரசு கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து தனக்கு அறிக்கையளிக்க வேண்டும் என்றும் அதுவரை தற்போது இருக்கும் நிலையே (status quo) தொடரும் என்றும் தீர்ப்பளித்தது. ஆந்திர உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்தது.

சுப்ரீம் கோர்ட் கோரியபடி நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரெட்டியின் முறைகேடுகளை சுட்டிக்காட்டி சுரங்கப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதையும் மீறி ரெட்டியின் சுரங்கப் பணிகள் தொடரலாம் எனத் தீர்ப்பளித்தார், தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன். இந்த தீர்ப்பை பெறுவதற்கு நடந்த பேரங்கள்தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை ஊழலில் திளைக்கிறார்கள் நீதிபதிகள். நீதிமன்ற வளாகம் என்பது ஒரு சந்தை வளாகம் (Market place)தான் என்பதையும் அங்கு காசுக்கு ஏற்ற நீதி வழங்கப்படும் என்பதையும் இவ்வீடியோக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நீதித்துறையின் தலைமைபீடமான உச்ச நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதிகளுமே அம்பலமான பிறகும் இன்னும் நீதிமன்றங்களுக்கு என்ன மாண்பு மிச்சமிருக்கிறது? தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்றும், தீர்ப்புகள் சமூகவலைத்தளங்களிலும் தெருக்களிலும் விவாதிப்பதற்கில்லை என்றும் மக்களிடம் அதிகாரத் திமிரோடு பாடம் எடுக்கிறார்கள் சந்துரு போன்ற ‘நல்ல’ நீதிபதிகள் (சந்துருவின் தந்தி டி.வி பேட்டி). நீதிமன்ற மாண்பு என்ற ஒன்று இன்னும் இருப்பதாகவும் அதை மக்களும் எதிர்க்கட்சிகளும் மதிக்க வேண்டும் என்றும் இன்னும் விரும்புகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளே இது “பூட்டகேசு” என்று புரிந்து கொண்டு எல்லாருக்கும் தகவல் சொல்லி விடுவோம் என்று ஊராருக்கு சேதி சொல்லிவிட்டார்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளை அதையே உறுதிப்படுத்துகின்றன. அடுத்து நடக்கவேண்டிய “காரியங்களை” விடுத்து இன்னும் “நீதிமன்ற மாண்பு” என்று பேசிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

– வினவு செய்திப் பிரிவு.

வெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்!

ர் கண்டிசனர் போன்றவையெல்லாம் சமீப காலத்திய கண்டுபிடிப்புகள். வெயிலின் வெம்மையை சமாளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய முறைகள் பல. அவற்றில் முக்கியமானவை வெட்டிவேர், மூங்கில் தட்டிகள். இந்திய வெயிலில் இருந்து அந்தக் காலத்து மன்னர்களையும் பின்னர் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் காப்பாற்றியவையும் இந்த வெட்டி வேர் தட்டிகள்தான். இன்றைக்கும் வெள்ளைக்காரன் காலத்து கட்டிடங்கள் சிலவற்றில் வெட்டிவேர் தட்டிகளையும், பங்காக்களையும் பார்க்கலாம்.

மின் விசிறியும் ஏர் கண்டிசனரும் வந்த பின்னர், எல்லா கைவினைப் பொருட்களையும் போலவே வெட்டிவேர்த் தட்டியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இருப்பினும் தீங்குகள் ஏதும் இல்லாத, ஆரோக்கியத்துக்கு உகந்த பாரம்பரிய முறைகள், கைவினைப்பொருட்கள் போன்ற அனைத்தும் இன்று வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரியவையாக மாறியிருப்பதைப் போலவே, வெட்டிவேர் – மூங்கில் தட்டிகளும் புது மவுசு பெற்றுவிட்டன. இன்று வெட்டி வேர் வாசத்துடன் குளுமை வேண்டுமென்றால், பல ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.

ஆயிரங்கள் எதுவும் இவற்றை உருவாக்கும் தொழிலாளிகளுக்குப் போவதில்லை. சென்னையில் இதயப்பகுதியான வால்டாக்ஸ் சாலையில், நடைபாதைகளில் வாழும் இந்த வீடற்ற உழைப்பாளிகள், கத்திரி வெயிலில் இரும்புத் தகட்டு கூரைக்கு கீழே வெந்து வாடும் தம் கைகளிலிருந்து தென்றல் காற்றைத் தருவிக்கிறார்கள்.

சாந்தி, காவியா, சகுந்தலா, வால்டாக்ஸ் ரோடு பகுதியில் வெட்டி வேர் மற்றும் மூங்கில் பத்தைகளை கொண்டு ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளிகள்.

“ எங்களுக்கு வேலை கொடுக்கிறவங்க ஆர்டர் வந்தா கூப்பிடுவாங்க. காலைல 6 மணிக்கு வந்தோம். ஒரு பாய் பின்னிருக்கோம் பொழுது சாயரதுக்குள்ள இரண்டு பாய் பின்னினா 350 ரூபா கெடைக்கும்.”

சுந்தர், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“பெரிய பங்களா, பணக்கார வீடுங்களுக்கு செஞ்சு கொடுப்போம். இப்பக்கூட இரயில்வே அதிகாரி வாங்குனார். இந்த பாய் பெங்களுருக்கு போகுது. இதோட சைசு 6க்கு 7 அடி. இதற்கு நாலு கிலோ மூங்கில் பத்தை, பத்து கிலோ வெட்டி வேர் வேணும்.

இத கந்தசாமி கோவில்ல வாங்குவோம். அம்பது கிலோ மூட்டை 20,000 ரூபா. அத அலசினா மண்ணு, தும்புன்னு ஐஞ்சு கிலோ போயிடும். மிச்சம் இருக்க வேரை வெச்சி ஸ்க்ரீன் செய்வோம். நாடாபீடிங் கட்டி பார்டிக்கிட்ட கொடுப்போம்.”

மகேஷ், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“ஒன்னும் கையில நிக்காது சார். முதல்ல, பாய் பின்னுற பொம்பள ஆளுங்களுக்கு சம்பளம், வெயில்ல வேலமேல எங்களுக்கு ரெண்டு கட்டிங், ஒரு கோட்டருக்கே சரியாகிடும். சாவு பத்தை, பேனர் பத்தை, சாலை பெருக்கும் மலாரம் செய்வோம். கொஞ்சம் கைசெலவு நிக்கும்.

இந்த பாயில வெட்டி வேருக்கு பதிலா, தேங்கா நார் வச்சி பின்னலாம். ஆனா நம்பிக்கை போயிடும். தொழிலும் கெட்டுடும்.”

மாடி வீட்டு பால்கனியையும், பங்களாவையும் குளிர வைக்கும் வெட்டிவேர் மூங்கில் ஸ்க்ரீன்.

மகாதேவன், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“1972-ல வால்டாக்ஸ் ரோட்டுக்கு வந்தோம். அதுக்கு முன்னாடி பிராட்வே பஸ் ஸ்டாண்டு இடத்துல இருந்தோம். தாத்தா காலத்துல இருந்து பாய் பின்னும் வேலைதான்.
18 வயசுல வேலைய செய்ய ஆரம்பிச்சேன். இப்ப வயசு அம்பத்தி அஞ்சி ஆகுது. புள்ளங்க படிச்சி வேற வேலைக்கு போயிட்டாங்க. ரயில்வே அதிகாரிகள், பள்ளிகூடம், கோஸ்டல் கார்டுக்கு எல்லாம் ஸ்க்ரீன் பண்ணி கொடுத்திருக்கோம்.”

மகாதேவன் மனைவி ரத்தினாம்பாள்.

“இந்த தொழிலுக்கு இப்ப ஆளு இல்ல. என் பசங்களே இந்த வேலைய செய்ய மாட்டேங்குதுங்க. இந்த வேலைய செஞ்சி வாய, வயித்த கட்டி ரெண்டு பசங்களையும் பாரா மெடிக்கல் படிக்க வச்சேன்.

இப்ப ஒருத்தன், பிசியோதெரபி. இன்னொருத்தன் BASLB (Bachelor of Audiology & Speech Language Therapy) படிச்சிருக்கான். ஒரு பொண்ணு அதையும் கட்டிக் குடுத்துட்டோம்.”

முனியம்மாள், பார்வையற்றவர்.

“சின்ன வயசுலருந்தே இந்த வேலைதான். கண்ணுல பூ விழுந்ததால ஆறு வருசமா தடவி தடவி வேலையை செய்யுறேன்.

சாலை பெருக்கும் மலாரம் மட்டும் கட்டுறேன். ஒரு மலாரத்துக்கு 5 ரூபா தருவாங்க. ஒரு நாளைக்கு பதினைந்து கட்டுவேன்.”

அங்காளம்மாள்

“12 வயசுல இருந்து பாய் பின்னுறேன். அந்த காலத்துல எங்களுக்கு சம்பாதிக்கணும், சொத்து சேர்த்து வைக்கனும்னு தெரியல. சம்பாதிக்கிறது சாப்புடுறதுன்னு இருந்துட்டோம். இப்ப எதுவும் இல்ல. இந்த குடிசைய காப்பாத்திக்கனாலே போதும்…”

கார்த்திக், தர்ஷினி, சபிதா, ஜனனி. டாக்டர், ஆசிரியராக வேண்டும் என்ற கனவுகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள்.

பாலகிருஷ்ணன் – லலிதா, தம்பதியினர்.

“43 வருஷமா வேலை செய்யுறோம். எங்களுக்குன்னு எதையும் பண்ணிக்கல இந்த பிளட்பாரத்துலையே இருந்துட்டோம். இதுவும் நிரந்தரம் கெடையாது.
இத காலி பண்ண சொல்லி கார்ப்பரேசன்ல இருந்து நோட்டிசு வந்துடுச்சி. இங்க வாழுற இருபத்தி நாலு குடும்பத்துக்கும் என்ன பண்றதுன்னு தெரியல!”

வினவு புகைப்படச் செய்தியாளர்.

காவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் !

தடைகளைத் தகர்த்த மக்கள் அதிகாரம் ! மக்கள் வெள்ளத்தில் திருமுல்லைவாசல் பொதுக்கூட்டம் !!

டந்த 21.04.2018 அன்று துவங்கி 30.04.2018 வரை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணத்தின் இறுதி நிகழ்வாக சீர்காழி வட்டம் திருமுல்லைவாசலில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற பிரச்சார நடைபயணம். (கோப்புப் படம்)

முதலில், மக்கள் அதிகாரத்தின் காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது தமிழக போலீசு .

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று நடைபயணத்துக்கான அனுமதியைப் பெற்றது மக்கள் அதிகாரம். அந்த நடைபயணத்திற்கும் ”முப்பது பேருக்குமேல் பங்கேற்கக்கூடாது, ஆறுமணிக்கு மேல் நடக்கக்கூடாது” என்ற ஏகப்பட்ட ‘கூடாது’களுடன்  பல கட்டுபாடுகள் விதித்து மக்கள் மத்தியில் நமது பிரச்சாரம் சென்றடையாது தடுக்க முயன்றது போலீசு. அதைத் தாண்டி பல கிராம மக்களின் ஆதரவுடன் பிரச்சார நடைபயணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் இறுதி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுத்தது போலீசு. மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெறவேண்டியிருந்தது.

நீதிமன்ற அனுமதிக்குப் பின்னரும், போலீசு விதித்த பல நிபந்தனைகள், கெடுபிடிகளைத் தாண்டி, கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமை தாங்கினார்.

திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் சுற்றுவட்டார மீனவ பஞ்சாயத்தார் – தலைவர்கள் முன்னிலை வகிக்க பல்வேறு விவசாய சங்கத் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.

முன்னாள் நீதிபதி திரு கோபாலகிருஷ்ணன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் குணசேகரன், கொள்ளிட பாசன விவசாய  சங்க தலைவர் ஆச்சாள்புரம் திரு சிவபிரகாசம், வேட்டங்குடி திரு வில்வநாதன், விருத்தாசலம் திரு நந்தகுமார், தமிழர் தேசிய முன்னணி தோழர் ராஜராஜன், மனிதநேய மக்கள் கட்சி சீர்காழி திரு மசாகுதீன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் பெரியார் செல்வம், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் திரு வேலுகுபேந்திரன், தமிழக காவிரி விவசாய சங்க மாநில இணை செயலாளர் திருவாரூர் வரதராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் நிறைவுரையாற்றினார்கள்.

அருகதையிழந்த அரசுக் கட்டமைப்பு !

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கூட கர்நாடகா தயாராக இல்லை.

நடுவர் மன்றம், மேலாண்மை வாரியம், காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு என காவிரி விவகாரம் ஒரு விஷச் சக்கரம் போல சுற்றிகொண்டே இருக்கிறது.

இவ்வாறு திட்டமிட்டே தமிழக விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளவும், விவசாயத்தைவிட்டு விவசாயிகளை வெளியேற்றவும், மோடி அரசு வழி செய்கிறது.

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமானப்படுத்தப்படுகின்றனர். பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் பெருகிவருகின்றன. இக்குற்றங்களில் பாஜக அமைச்சர்களும், போலீசு மற்றும் அதிகாரிகளே முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளனர். இவை அனைத்தும் இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையே காட்டுகின்றன.

எனவே இனி இந்த கட்டமைப்புக்குள்ளேயே நின்று தீர்வை தேடுவது முட்டாள்தனம். அமைச்சர்கள், அதிகாரிகள் என்ற அதிகார வர்க்க தாழ்வாரத்தின் கீழ் பெரும்பான்மை மக்களுக்கு நியாயத்தை பெறமுடியாது.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் எனும் கிரிமினல்களிடமே மனுகொடுத்து நியாயத்தை பெறமுடியாது.

மாறாக இவர்களை அப்புறப்படுத்தி மக்களுக்கான புதிய அதிகாரத்தை பெறுவதுதான் தீர்வு. இதை நோக்கி மக்கள் போராட்டங்கள் வளர்ந்து செல்வதைக் கண்டுதான் இவர்கள் அஞ்சுகிறார்கள்.

அதனால் தான் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரச்சாரம் ஆகிய அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட தடை செய்கிறது  அரசு.

எத்தகைய தடைகள் வந்தாலும் சரி அவற்றை மக்கள் போராட்டங்கள் தூளாக்கும்.

பொதுக்கூட்டத்தில் கலைநிகழ்ச்சிக்கு போலீசு அனுமதி மறுத்ததால் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல்கள் பேச்சின் இடையிடையே பாடப்பட்டன.

துவக்கம் முதல் இறுதிவரை மக்கள் கூட்டம் கலையாமல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு பேச்சாளரின் உரையின் போதும் மக்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது.

இறுதியாக மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர் தோழர் வீரசோழன் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

குட்கா கூட்டணி ! புதிய ஜனநாயகம் மே 2018 மின்னூல்!

குட்கா கூட்டணி ! புதிய ஜனநாயகம் மே 2018 இதழ் !

may-2018-puthiya-jananayakam

வெளியான கட்டுரைகள்:

1. பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்! பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம்!!
இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.

2. அ.தி.மு.க.- பா.ஜ.க.- அதிகார வர்க்கத்தின் குட்கா கூட்டணி!
ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

3. எது வன்முறை? எஸ்.வி.சேகரின் சொல்லா, பத்திரிகையாளர்கள் எறிந்த கல்லா?
சங்க பரிவாரத்துக்கு எதிரான குரல் ஒலிக்கும் களமாக தமிழ்த் தொலைக்காட்சிகள் இருப்பதை பா.ஜ.க.வினரால் சகிக்க முடியவில்லை. அதன் விளைவுதான் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான எஸ்.வி.சேகரின் வக்கிரத் தாக்குதல்.

4. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை!
தீண்டாமைக் குற்றங்கள் நாடெங்கும் அதிகரித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, இனி சாதிவெறியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதே இயலாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

5. சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி!
காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் சிறுமி ஆஷிஃபாவைக் கும்பல் வல்லுறவு செய்து கொன்றிருப்பது ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தி வரும் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலின் ஒரு பகுதியே.

6. உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம்!
இந்துத்துவ ஆட்சியின் முன்மாதிரியாகக் காட்டப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, தாக்கூர் சாதிக் கிரிமினல்களின் காட்டாட்சியே என்பதை உன்னாவ் பாலியல் வன்முறை நிரூபிக்கிறது.

7. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர்!
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் முகத்திரையை மட்டுமின்றி, வங்கிகளைத் தனியார்மயமாக்க முயன்று வரும் மோடி அரசின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது.

8. ஒரு இந்து மேலாதிக்கவாதியின் அன்றாட வாழ்க்கை
பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மோயுக் சாட்டர்ஜி, எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி” வார இதழில் இந்து மேலாதிக்க உணர்வின் சாமானிய வாழ்க்கை” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

9. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் -உடன் ஓர் நேர்காணல்
சீனாவில் தொழிலாளி வர்க்கம் உண்மையிலேயே அதிகாரம் பெற்றதாக இருந்ததா? மாவோவின் சீனா நகர்ப்புறத்து இளைஞர்களைக் கிராமப்புறத்துக்கு அனுப்பியது ஏன்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார், ஃபிரட் எங்ஸ்ட்.

10. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!
போராடும் பொதுமக்கள் அம்பலப்படுத்தும் உண்மைகள்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart