Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 495

கடல் : பொது அறிவு வினாடி வினா 8

ந்த வினாடி வினாவில் கடல் குறித்த கேள்விகளைப் பார்க்க இருக்கிறோம். அதிலும் இந்தியப் பெருங்கடல் குறித்து கேள்விகள அதிகம் உள்ளன. முயன்று பாருங்கள்!

1. உலகில் உள்ள பெருங்கடல்களில் எண்ணிக்கை எவ்வளவு?
2. பூமியின் பரப்பளவில் பசிபிக் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன?
3. உலகில் மிகப்பெரிய மீன் இனம் எது?
4. கடலின் அலைகளை நிலா பாதிப்பது உண்மையா?
5. உலகளவில் உள்ள கடல் பரப்பில் இந்தியப் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன?
6. உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?
7. இந்தியப் பெருங்கடலின் எந்தப் பகுதியில் உப்புத் தன்மை குறைவு?
(இங்கே அதிக நதிகள் கடலில் கலப்பதால் கடலின் உப்புத் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு)
8. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கனிம வளங்களில் எது அதிக மதிப்பையும், அதிக இருப்பையும் கொண்டிருக்கிறது?
9. கீழ்கண்ட நகரங்களில் எது இந்தியப் பெருங்கடலின் எல்லையில் இல்லை?
10. கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியப் பெருங்கடலில் இல்லை?
(இந்த துறைமுகம் மட்டும் பசிபிக் கடலில் உள்ளது)
11. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் கடல்களில் எது பெரியது?
12. கீழ்க்கண்ட நதிகளில் எது இந்தியப் பெருங்கடலில் கலக்கவில்லை?
13. இந்தியப் பெருங்கடலைப் பற்றிய கீழ்க்கண்ட உண்மைகளில் ஒன்று மட்டும் பொருந்தாது, அது எது?

 


 

பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !

2

பீமா கோரேகான் போரில் மராத்திய பேஷ்வா அரச பரம்பரை வீழ்த்தப்பட்டு 2018, ஜனவரி முதல் நாளோடு 200 ஆண்டுகள் ஆகின்றது. ஷானிவார் வாடாவில் நடைபெற்ற நினைவுநாள் கூட்டத்தில் ரோகித் வெமுலாவின் தாயார் இராதிகா வெமுலா, குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் ஜெ.என்.யூ மாணவர் அமைப்பு தலைவர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கபீர் கலா மஞ்ச், சம்பாஜி பிரிகேட், முஸ்லிம் முல்னிவாசி, இராஷ்ட்ர சேவா தல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தலித் மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் அதில் பங்கேற்றன.

ஆனால் அகில பாரதிய பிராமண மகாசபா, இராஷ்ட்ரிய ஏகாதமடா இராஷ்டிரிய அபியான் உள்ளிட்ட பல்வேறு இந்துமதவெறி அமைப்புகள் இந்நிகழ்ச்சியை தேச விரோத செயல் என்றும் சாதிகளுக்கிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது என்றும் குற்றஞ்சாட்டி தடை செய்ய முயற்சி செய்தன.

பீமா – கோரேகான் வெற்றித்தூண்

“இந்தியாவை கைப்பற்றுவதற்காக மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் அரசர்களுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்கள் போரிடத் தொடங்கினார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மராட்டியத்தை வெல்வதற்காக அதற்கு தலைமையேற்றிருந்த பேஷ்வாக்களுக்கு எதிராக அவர்கள் சண்டையிட்டார்கள். ஆங்கிலேயர்கள் படையில் மகர், மராத்தா மற்றும் பிராமணர்கள் உட்பட அனைத்து சாதியினரும் இருந்தனர். பேஷ்வா படையிலும் மகர், மரத்தா உட்பட அனைத்து சாதியினரும் இருந்தனர். இது பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆட்சியாளர்களுக்கு இடையேயான ஒரு போராகும் மாறாக மகர் மற்றும் பேஷ்வாவிற்கு இடையில் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் எதைக் கொண்டாடுகிறார்கள்? மராத்தாவை வீழ்த்திய ஆங்கிலேயர்களின் வெற்றியையா?” என்று அகில பாரதீய பிராமண மகாசபாவின் தலைவரான ஆனந்த் தேவ் கூறினார்.

இதன் மூலம், சில அமைப்புகள் பேஷ்வாக்களை தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கியவர்களாக அவதூறு செய்ய முயற்சிக்கின்றன. அவர்கள் வேண்டுமென்றே பேஷ்வாவின் அரண்மனையாக இருந்த ஷானிவார் வாடாவில் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க அரசும் அனுமதியளித்திருப்பதைக் கண்டு நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். குறைந்தபட்சம் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியினரை பற்றி பேசி சமூகத்தில் மேலும் பதட்டம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய புனேவின் காவல்துறை ஆணையாளரை கேட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

“சாதி, மதத்தால் மக்களைப் பிரித்து நாட்டின் வளங்களை சில முதலாளிகளின் கைகளுக்கு பா.ஜ.க மற்றும் சங்க பரிவாரங்கள் தாரை வார்க்கின்றன” என்று நினைவு நாள் நிகழ்ச்சியில் கூறிய ஜிக்னேஷ் மேவானி அவர்களை “புதிய பேஷ்வாக்கள்” என்று எல்கார் பரிஷத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அரசை “புதிய பேஷ்வாக்கள்” என்று அழைப்பது அரசியலைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று புனே நகர் இந்து மகா சபா கூறியிருக்கிறது. எனவே இது ஒரு தேச விரோத செயல் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒருவகையில் ஒடுக்கப்படும் மக்கள் அதற்ககெதிராக ஒன்று கூடுவதை கண்டு ஏற்படும் அச்சம் தான்.

இந்துத்துவ கும்பல்கள் ஏன் அச்சம் கொள்கின்றன?

மராத்திய அரசர் சிவாஜியின் பழம்பெரும் வெற்றிகளில் மராத்திய மண்ணின் மைந்தர்களான மகர் சமூகத்தினர் இன்றியமையாத அங்கமாக இருந்து வந்தனர். ஆனால் சிவாஜிக்கு பின் ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பன பேஷ்வாக்கள் மனு தர்மத்தை நிலைநாட்டினர்.

மனுவின் படி சூத்திரனுக்கு ஆயுதம் தரிக்கும் உரிமை கிடையாது; கல்வி கற்கும் உரிமை கிடையாது; வணிகம் செய்யவும் உரிமை கிடையாது. இது பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க வருணத்தார் சூத்திர பஞ்சம மக்களை அடக்கியொடுக்க இன்றியமையாத ஒன்று.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிக்னேஷ் மேவானி மற்றும் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா

இடுப்பில் கட்டிய துடைப்பத்துடனும் கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும் தான் பார்ப்பனர்கள் வாழும் நகரத்திற்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும். அவர்களது கால்களால் தீண்டப்பட்ட தரையைத் துடைப்பத்தைக் கொண்டு துடைத்துக் கொண்டும் எச்சிலை பானையில் துப்பிக் கொண்டும் நகரத்தினுள் அலைந்து திரிய வேண்டும் என்பது தான் பார்ப்பனர்கள் விதித்த மனுதர்மம். மகர் சமூகத்தினர் தங்களது சாதியையும் யாரிடமும் மறைக்கக் கூடாது. மற்றும் அவர்களுக்கு படிப்பறிவும் ஆயுதங்களைத் தூக்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனைகள் என விலங்குகளை விட மோசமாக மகர் சமூகத்தினர் நடத்தப்பட்டனர்.

வரலாற்றின் இத்தருணத்தில் தான் தலைநகர் புனேவைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் பேஷ்வா பாஜிராவ்-II யை நெருங்கிக் கொண்டிருந்தனர். தமது அரசு – இராணுவ எந்திரத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர் என்பதால் அவர்கள் சாதி பார்க்காமல் தலித் மக்களை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர்.

வரலாறு எப்பொழுதுமே பக்க சார்பு கொண்டது. இந்தியாவில் தேசியம் என்றாலே என்னவென்று தெரிந்திராத நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களா அல்லது பார்ப்பனியமா, சுயமரியாதையா அல்லது அடிமைத்தனமா என்பதில் முன்னதை தெரிவு செய்தனர் மகர் சமூகத்தினர். யுத்தமும் தொடங்கியது.

நூற்றாண்டுகள் கழிந்தும் ஆர்.எஸ்.எஸ்-ன் இதயத்தை குத்தும் முள்ளாக, வரலாற்றின் அழியாத சின்னமாய் பீமா-கோரேகான் நினைவுத் தூணாக பின்னர் இதுவே நிலைத்துவிட்டது.

பீமா-கோரேகான் யுத்தம் :

1818, ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப். ஸ்டாண்டன் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படை அணியின் 500 வீரர்கள் பீமா ஆற்றைக் கடந்து 25,000 வீரர்களைக் கொண்ட மராத்தியப் பெரும்படையை பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர்.

பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தலித் மக்களின் விடுதலைக்கான ஓர் இன்றியமையாத திருப்பமாக இந்தப் போரை தலித் ஆர்வலர்களில் பலர் கருதுகின்றனர். இந்தப் போரில் 12 ஆங்கிலேய அதிகாரிகளும் மகர் வீரர்கள் உள்ளிட்டு 834 வீரர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற வீர்களின் எண்ணிக்கையில் சில கருத்து வேற்றுமைகள் உண்டு. புள்ளிவிவரங்கள் எதுவாக இருப்பினும் இந்தப் போரானது அதுவரை வழக்கத்தில் இல்லாத புதுமையில் திகழ்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

இதில் பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர். இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள்.

இந்த நினைவு நாளை தேச விரோத செயல் என்று கரித்துக்கொட்டும் அதே நேரத்தில் அவர்கள் முன் மொழியும் தேசம் அகண்ட பாரதம்;  தேசியம் – இந்து; கலாச்சாரம் – மனுதர்மம்; மொழி – சமஸ்கிருதம். இதை ஆதரிப்பவர்கள் தேச பக்தர்கள். எதிர்பவர்கள் தேச விரோதிகள். இந்த தேசியத்திற்குள் தலைகீழாக எப்படி நின்றாலும் தலித்துக்கள் சுயமரியாதையுடன் வாழவே முடியாது.

உண்மையில் தலித்துக்களையும் உள்ளடக்கி பார்ப்பன வர்ணாஸ்ரம அடிப்படையிலான ஒரு தேசியத்தை கட்டமைப்பதற்கே ஆர்.எஸ்.எஸ் கும்பல் கனவு காண்கிறது. அனால் பீமா கோரேகான் யுத்தமும் அதன் நினைவுச்சின்னமும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாக 200 ஆண்டுகள் கழித்தும் இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.

கடைசிச் செய்தி: இந்த நினைவுக் கூட்டத்தை அச்சுறுத்தி வந்த இந்துமதவெறி அமைப்புக்கள் இறுதியில் கல்லெறி மூலம் கலவரத்தை துவங்கியது. பல வாகனங்கள் எரிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் இருக்கின்றன. ஒரு இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலம் என்பதாலும், மோடி அரசின் ஆசியாலும் ஆட்டம் போடும் இந்துமதவெறி அமைப்புக்களை கண்டும் காணாமலும் போலிசார் இருக்கின்றனர். இவைகளை மீறி இந்த பீமா கோரேகான் வெற்றிக் கூட்டம் நடந்தேறியது. இதுதான் இந்துமதவெறியர்களை அச்சுறுத்தும் செய்தி.

மேலும் :


 

குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !

0

கோவளம் கடற்கரையை அழிக்க  வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
சாதி-மத வேறுபாடின்றி
எதிர்த்துப் போராடும் மக்கள் !
சாதி-மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் பாஜக!

ன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம் கிராமத்தில் அமையவிருந்த சர்வதேச சரக்குப் பெட்டக முனையம்(துறைமுகம்) மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகத் தற்போது கன்னியாகுமரி  அருகே உள்ள கோவளம் பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கேயும் மக்கள் துறைமுகத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். மக்கள் எதிர்ப்பின் அடிப்படை, துறைமுகம் வந்தால் இப்பகுதி கிராமங்கள் அழிந்து விடும் என்பதும், சரக்கு உற்பத்தி ஏதும் இல்லாத குமரி மாவட்டத்தில் துறைமுகத்திற்கான தேவையே எழவில்லை என்பதுமாகும். இதுதவிர  இராணுவ நோக்கங்களுக்காக மோடி அரசு இத்துறைமுகத்தை அமைக்கிறது என்ற  சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள். ஏற்கனவே அணு உலை, தாது மணல், இயற்கைச் சீற்றங்கள் எனப் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும் குமரி மாவட்டத்தை, கடற்கரையை அரசு ஏன் குறி வைக்கிறது? எனக் கேட்கிறார்கள்.

மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாத பாஜக அரசு, தனது கட்சியினர் மூலம் கிருத்தவ மீனவர்கள் – இந்து நாடார்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்காக துறைமுக ஆதரவுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆர் எஸ் எஸ் – பாஜக ஆட்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை, போஸ்டர் என இவர்கள் சாதி – மதப் பிரச்சனையைத் தூண்டி வருகிறார்கள். இது தவிர 19,000 கோடியில் வெறும் 10% கமிசன் என வைத்துக் கொண்டாலும் கிடைக்கப்போகும் 1,900 கோடி ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டத்தையும், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனையும் உந்தித் தள்ளுகிறது.

உண்மையில் துறைமுகம் வந்தால் பாதிக்கப்படும் மக்களில், இந்து நாடார் விவசாயிகள் ஏராளமானோர்  உள்ளனர். இவர்களின் விவசாய நிலங்கள், தென்னந் தோப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே இந்த மக்களும் போராடுகிறார்கள். இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

கோவளம் துறைமுகத்திற்கு எதிராக, கடந்த 28.12.2017 அன்று மாலை 5.00 மணியளவில் கோவளம் புனித இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், இளைஞர்கள், கடலோடிகள், விவசாயிகள், அறிவுத்துறையினர் கலந்து கொண்டனர். இனயம் துறைமுகத் திட்ட எதிர்ப்புக் குழுவைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சரவணன் என்பவர் தலைமையில், துறைமுகத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து அவர்கள் ஏற்கனவே தயாரித்து இணையம் பகுதி மக்களிடம் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய காணொளிக் காட்சிப் படங்களைக் கொண்டுவந்து திரையிட்டு விளக்கினர். கூடுதலாக பாதிரியார்களும் திட்டத்தினால் ஏற்படப்போகும் மோசமான விளைவுகளை எடுத்துச் சொல்லினர்.

வழக்கம் போல அரசு அதிகாரிகள் கோவளம் கடல் பகுதியில் விவசாயம், மீன் பிடிதொழில் எதுவும் இல்லை. தரிசு நிலமாகத்தான் உள்ளது என்று காட்டியுள்ளனர். துறைமுகம் வந்தால் இந்தப் பகுதி பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் அடையும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உள் நாட்டுப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகும், நாடு வல்லரசாகும் என்றெல்லாம் கூறியுள்ளனர். ஆனால் இதை நம்பாது சில இளைஞர்கள் எதிர்த்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த இளைஞர்களை கைது செய்து காவல் துறை வழக்குப் போட்டுள்ளது.

துறைமுகத் திட்டம் பற்றிய வரைபடத்தைத் திரையிட்டு விளக்கிப் பேசியவர் அதன் பாதிப்புகளை நுணுக்கமாகச் சுட்டிக் காட்டினார். வர்த்தகத் துறைமுகம் அமைக்க 70 அடி கடல் ஆழம் வேண்டும். கரையிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரம் கடலில் தரை உருவாக்கப்படும். ஏராளமான பாறைகள் மண் கொட்டப்படும். கடலை ஆழப்படுத்த தோண்டும் போது கடற்கரை மணல் வெளியேற்றப்படும். அதன் மூலம் கடல் ஓரம் உருக்குலையும். கடல் நீர் ஊருக்குள் வரும். மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம்வரை வேறு எந்த நடவடிக்கையும் நடைபெறாது. உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி அதன் பாரம்பரியத்தையும். எழிலையும் இழந்து பாலைவனமாகும். சுற்றுச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீன்பிடி தொழில் அனைத்தும் பாதிக்கப்படும். எனவே மக்களுக்கு எதிராக யாருக்காக இந்த திட்டத்தை அரசு கொண்டுவருகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அண்டை கிராமங்களின் தலைவர்கள், ஊர்த் தலைவர்கள். அமெரிக்காவில் பணியாற்றும் விஞ்ஞானி, கத்தோலிக்கப் பாதிரியார்கள் பலர் இதன் பாதிப்புகளை விளக்கிப் பேசினர். முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த பார்த்தசாரதி என்பவர் பேசும்போது , “பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் என்னை அணுகி இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டனர். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். எனக்கு இங்கே அதிகமான நிலம் இருக்கிறது. எனக்கு நாகர்கோவிலில் வீடு உள்ளது. இருந்தாலும் எனது மண்ணுக்காக, மக்களின் நலனுக்காக நான் சாதி, மதம் கடந்து போராட விரும்புகிறேன். எதற்காகவும் விலைபோக மாட்டேன் என்று பலத்த கர ஒலிக்கு நடுவே கருத்தைப் பதிவு செய்தார்.

அமெரிக்காவில் பணியாற்றும் விஞ்ஞானி பேசும் போது, சுற்றுச் சூழல் அறிஞர் லால் மோகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசாகாயம் போன்றவர்கள் நமக்காகப் போராட முன்வந்துள்ளனர், துறைமுகத்திற்காக அனல் மின் நிலையங்கள் வந்தால்  நாம் இங்கு வாழ முடியாது, தூத்துக்குடி சென்று பார்த்தால் பாதிப்புகள் தெளிவாக புலப்படும், மேலும் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கான இடங்களுக்கு, கண்டெய்னர் லாரிகள் நிற்பதற்கு கூடுதல் இடங்களை கையகப்படுத்துவார்கள்,  நாம் இங்கு வாழ முடியாது  என்று தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய பச்சைத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், “கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினால் என் மீது 300 -க்கும் மேற்பட்ட வழக்குகளை அரசு போட்டது. அமெரிக்காவிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு நாட்டுக்கு எதிராக சதி செய்வதாக பிரச்சாரம் செய்தார்கள். சாதி ரீதியாக என்னை நாடார் என்றும் மீனவர்கள் என்றும் பிரித்தார்கள். எனக்கு எந்த சாதியும் இல்லை. மதமும் இல்லை. இது என்னுடைய சொந்த மண். என்னுடைய ரத்த உறவுகள் இங்கே இருக்கின்றனர். உங்களோடு நான் எப்போதும் இருப்பேன். கிராமக் கமிட்டிகளை அமைத்து, நிதி ஆதாரங்களை உருவாக்கி விடாப்பிடியாகப் போராடுங்கள்.

இந்த திட்டம் ஒரு நாசகாரத் திட்டம். கடல் தொழில், விவசாயம், சுற்றுச் சூழல், நிலத்தடி நீர் அனைத்தும் பாழாகிவிடும். இந்த சரக்கு வர்த்தகத் துறைமுகத்திற்கு 2000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றால் அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். அதற்காக அனல் மின் நிலையத்தையும் அருகிலேயே அமைக்கப் போகிறார்கள். நிலக்கரி தூசியினால் இந்தப் பிரதேசமே சுடுகாடாகும். யாருக்கான திட்டம் இது?அம்பானி, அதானிகளை வாழவைப்பதற்காக எங்கள் மக்கள் சாக வேண்டுமா ? கிறிஸ்தவன், மீனவன், நாடார், இந்து, ஏழை, பணக்காரன் என்று சொல்லி மக்களைப் பிரிக்கப் பார்க்கிறது பி.ஜே.பி. இதற்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது”என்றார்.

மீன்வளத்துறை போர்டு உறுப்பினர் சகாயம் என்பவர் கூறும் போது, கோவளத்தில் துறைமுகம் அமைப்பதை மக்கள் எதிர்த்தவுடன் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் “கடற்கரை  மீனவ மக்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. கோவளத்தில் துறைமுகம் வந்தே தீரும்” என்று கூறினார். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று கருதி பாஜகவுக்கு ஆதரவாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது. பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்” இங்கு அனைத்து மக்களும் இணைந்துதான் போராடிகிறோம். இன்றைய கூட்டத்தில் பேசியவர்களில் அதிகமானோர் இந்துநாடார் விவசாயிகளே” என்றார்.

இதன்பின் 30.12.2017 அன்று கோவளம் பகுதியைப் பார்வையிட வந்த குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் மற்றும் அதிகாரிகளை மீனவர்கள் உள்ளிட்ட மக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்ததாகவும், துறைமுகம் வராது என்று எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கோரியதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர், “அரசு எனக்கு அளித்த பணியைச் செய்ய வந்துள்ளேன். எழுதிக் கொடுக்க முடியாது” என்று சொன்னதாகவும், பின்னர் போராடிய மக்கள் மீது வழக்குப் பதியப்பட்டதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

சாகர் மாலா திட்டத்தின்படி தமிழ் நாட்டின் கடற்கரை முழுவதையும் ஆக்கிரமித்து கார்பரேட் முதலாளிகளுக்கு கையளித்துவிடுவதே மோடியின் திட்டம்.அதை நிறைவேற்றவும், கமிசனுக்காகவும் சாதி-மதப் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளனர் பிஜேபியும், பொன்னாரும். மீண்டும் ஒரு மண்டைக் காடு கலவரத்தை நாங்கள் விரும்பவில்லை என வெளிப்படையாகப்  பேட்டி கொடுக்கின்றனர். அரசு இயந்திரம் முழுக்க இவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடிகள் அந்நியச் செலவாணி ஈட்டிக் கொடுத்து, இந்தியாவின் தென்மேற்குப் பகுதியைக் காத்து நிற்கும் சிறுபான்மை கிருத்துவ மீனவ மக்கள் மீதான பாஜக-வின் வெறுப்பும் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.

மேற்கண்ட சூழலில் கோவளம் பகுதி மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அப்பகுதி மக்களை அழிவிலிருந்து காப்பதும், ஆர் எஸ் எஸ் – பாஜகவின் மதக்கலவரத் திட்டத்தை  முறியடிப்பதும் தமிழகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தமிழ்நாடு.

 

இரண்டு பீட்சா ஒரு கொசுவர்த்தி மற்றும் பாகுபலி – 2

3

சென்னை புறநகர் ஒன்றின் ஆவின் பால் நிறுவனத்துல ஒரு ஐஸ்க்ரீம வாங்கி எம்புள்ள கையில குடுத்துட்டு புல்லு தரையில குந்தி இருந்தேன். ஆறு துண்டா நறுக்குன ஒரு பீட்சா தட்ட வச்சுகிட்டு நாக்குல எச்சில் ஊற மூணு பசங்க குந்திருந்தாங்க. பீட்சா தின்னப் போறோம்னு அந்தன சந்தோசம் அவங்க முகத்துல. ஆனா இன்னொரு பீசா வாங்கிட்டு வரப்போன நண்பன் வர்ற வரைக்கும் பசங்ககிட்ட பொறுமை இல்ல. பசங்களாச்சே, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம காத்துக் கிடக்கும் எரிச்சல் அவர்களுக்குள் சலசலப்ப ஏற்படுத்திருச்சு.

ன்னடா, இவன இன்னும் காணோம்.

கூட்டமாருக்குல்ல வாங்கிகினுதான்டா வரனும். இன்னாத்துக்கு அவுசரப்பட்ற நீ.

இவருக்கு மட்டும் அவுசரம் கெடையாதாக்கும். பீட்சாவ பாத்துனே இருக்க தோணுதா? துன்ன தோணலையா?

இவன இட்டாந்துருக்கவே கூடாதுடா!

ம்க்கூ. நீ ஏதோ துட்டு போட்டு இட்டாந்த மாறி சொல்ற. வெங்காயம் பொறுக்கி சேர்த்த துட்ட ஒனக்கு நாந்தாண்டி குடுத்துருக்கேன்.

உந்தம்பி தானடா. விட்டு குடுக்க மாட்டியா? அவனுக்கு செலவழிக்குற துட்டுக்கு கணக்கு பாக்குற. வந்த எடத்துல சண்ட வலிக்கிற. ஒனக்கே நல்லாருக்காடா.?

நீ நடிக்காதடா. ஒனக்கு மட்டும் சீக்கரம் துண்ணனும்னு ஆசையில்ல?

சண்டை பெருசாக மாறுவதற்குள் பீட்சா தட்டுடன் நண்பர்களே வந்துட்டாங்க. பீட்சாவ நடுவுல வச்சு, வட்டமா உக்காந்து சந்தோசமா சாப்பிட ஆரம்பிச்சாங்க.

இன்னாடா இது காக்கா முட்டை படத்துல சொன்னாப் போல நல்லாவே இல்லையே.

ஆமாடா! இதுக்கு ஐஸ்க்கிரீமே வாங்கினுருக்கலாம்.

ஒரு பால் பாக்கெட்டும் ப்ரட்டும் வாங்கினு வீட்டுக்கு போயிருந்தா டீ போட்டு நல்லா முக்கி சாப்ட்ருக்கலாம்.

சூப்பரா தானடா இருக்கு. எனக்கு புடிச்சுருக்குப்பா.

கை கழுவாமெ துன்னா நல்லாதாண்டா இருக்கும்.

அந்த பாப்பா பீட்சாவையே பாத்துகினு இருக்கு அதுக்கு ஒன்னு குடுடா.

இவர்கள் பேச்சில கவரபட்ட நான் என்னோட குழந்தைய மறந்துட்டேன். தான் கையில இருக்குற ஐஸ் க்ரீம் கரையறது தெரியாம பல கலர்ல பளிச்சினு இருக்குற பீட்சா தட்டையே வெறிச்சு பாத்துட்டுருந்த எம்பொண்ணுட்ட பசங்க பீட்சாவ எடுத்து நீட்டிட்டாங்க.

அதெல்லாம் வேண்டாப்பா நீங்க சாப்பிடுங்க.

பரவால்ல ஆன்டி. பாப்பாவுக்கும் குடுங்க.

எந்த ஏரீயாப்பா நீங்கள்ளாம்?

மதுரவாயல் ஆன்டி.

இன்ன படிக்கிறீங்க.?

நாங்க மூணு பேரும் 8 வது. அவனுங்க ரெண்டு பேரும் 7 வது.

எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்க.?

மதுரவாயல் கெவர்மெண்ட்டு ஸ்கூல்.

பீட்சா சாப்பிடவா இங்க வந்தீங்க?

இல்ல ஆன்டி. ஸ்கூலு லீவு, படம் பாக்கலாம்ன்னு வந்தோம்.

என்னா படம் பாத்தீங்க?

பாகுபலி -2 பாக்கலாம்ன்னு வந்தோம். டிக்கெட்டு கெடைக்கல.

பக்கத்துல வேற தியேட்டருல ஓடுதே போயி பாக்க வேண்டியதுதானே?

அதுக்கெல்லாம் துட்டு பத்தாது ஆன்டி. அஞ்சு பேரும் ஆளுக்கு அம்பதுதான் கொண்டாந்தோம். அதுக்கே இவங்க ஆயா அத்தன திட்டு திட்டுச்சு. பஸ்ல வந்தா துட்டு பத்தாதுன்னு சைக்கிள்ள வந்தோம். தியேட்டர்ல சைக்கிள் வச்சா காசு குடுக்கனுமேன்னு பக்கத்து ஏரியாவுல இவங்க அத்த வீட்டுல விட்டுட்டு நடந்தே போனோம்.

திரும்பவும் நாளைக்கி வருவீங்களா படம் பாக்க?

துட்டல்லாம் செலவு பண்ணிட்டோம். இனிமே வீட்டுல கேட்டா பூசதான் விழும்.

எல்லா துட்டுக்கும் பீட்சா சாப்பிட்டிங்களா?

இல்ல ஆன்டி. ரெண்டு பீட்சா  120 ரூபா. ஒரு கொசுவத்தி பாக்ஸ் 60 ரூபா. பத்துருவா பேனாவுல அஞ்சுது வாங்கிகினோம்.

கொசுவத்தியா அது எதுக்குடா வாங்குனீங்க?

பிக் பஜார சுத்திபாக்க போனோம் ஆன்டி. எதாவது ஒன்னு வாங்காம வர கூச்சமாருந்துச்சு. அதான் யூசாருக்குமேன்னு கொசு வத்தி வாங்கினு வந்தோம்.

என்னடா சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியல?

ஆமா ஆன்டி. எங்க ஏரியாவுல ஒரே கொசு தொல்ல. பொழுதுக்கா நாங்க பேசினுருக்க சொல்ல கொசு கடி பின்னி எடுத்துரும். இவந்தா சொன்னா கொசு வத்தி வாங்குனா கத பேசும் போது கொளுத்தி வச்சுகலாமுன்னு…

அது இல்லடா பிக் பஜார எதுக்கு சுத்தி பாக்க போனீங்க?

அதுவா ஆன்டி. சினிமாவுக்கு டிக்கெட்டு இல்லாங்காட்டி விஜய் மால சுந்தி பாக்கலாமுன்னு போனோம்.

நா அப்பவே சொன்னன் ஆன்டி உள்ள விட மாட்டாங்கெடா வேணாமுடான்னு. இவந்தா சொன்னா, எங்க அப்பாவும் விஜய் மால் ஓனரும் திக் ப்ரண்டு. வாடா போடான்னுதா கூப்புடவாரு ஓனரு. இந்த கட்டடம் இம்மாம் பெரிசு வர்ரதுக்கு எங்க அப்பாதான் காரணமுன்னான். அளந்து விட்டான் ஆன்டி. ஆனா உள்ள விடலனுட்டாங்க.

அப்புடி சொல்லல ஆன்டி. இந்த கட்டடம் கட்டசொல்ல அங்க அப்பாவும் அம்மாவும் சித்தாள் வேல பாத்தாங்கன்னுதான் சொன்னேன். இவந்தான் ஓவரா பேசுரான்.

ஏய் கோச்சுக்காதடா விட்றா விட்றா.

ஏண்டா அவன வம்புக்கிழுத்துட்டே இருக்க. மாலுக்குள்ள போனீங்களா இல்லையா?

இல்ல ஆன்டி. வாட்சுமேனு அண்ணா சொன்னாரு நீங்க எதுக்குடா உள்ள போறீங்க தொறத்தி விட்ருவானுங்க. எந்த பொருளும் 250 -ரூபாய்க்கு கம்மியா கெடைக்காது. வடபழனி கோயில் பஜாருல இருக்கறததாங் இங்க கண்ணாடிக்குள்ள வச்சுருப்பாய்ங்க. காசு வச்சுருந்தா வாங்கி துன்னுட்டு வீட்டப்பக்க போங்க. இல்ல உள்ள போயித்தான் ஆகனுமுன்னா அம்மா அப்பாவ இட்டுனு வாங்கன்னு தொரத்திட்டாரு.

என்னங்கடா எங்குட்டு திரும்புனாலும் பெயிலியரா பூடுது. இன்னைக்கி ஏதாவது பாத்து எஞ்சாய் பண்ணிட்டுதான் போவனும். வாங்கடா அடுத்த அட்டம்ட்டா பிக் பஜாரு போவலாமுன்னு சொன்னான். இந்த ஐடியாவ குடுத்தவனும் இவந்தான் ஆன்டி.

விஜய் மால் போல இருந்துச்சா பிக் பஜாரு?

பிக் பஜாரு போல இருந்துச்சான்னு விஜய் மால பாத்துருந்தாதானே தெரியும். ஆனா பிக் பஜாருல யாரும் எங்கள தடுக்கல. வாச்சுமேன் அண்ணே சொன்னாப் போல இங்கேயும் எதுவும் வாங்கறாப் போல இல்ல. சுத்தி பாத்துட்டு சும்மா வர கூச்சமாருந்துச்சு. சரி இருக்குற காசுக்கு யூசாகரப் போல ஒரு பொருள (கொசுவத்தி) வாங்கினு வந்துட்டோம்.

லீவு விட்டா இது போல எங்கெல்லாம் போவீங்க?

எங்கயும் போக மாட்டோம். வீட்டாண்டதான் வெளையாண்டுகினு இருப்போம். எப்பனா ஒருக்க லீவுல எங்க ஆயக்கூட நானும் இவனும் கோயம்பேடு மார்கெட்டுக்கு காயி பிரிக்கப் போவோம். நல்லக் காய், கெட்டக் காய், பெரிசு, சின்னது இது போல பிரிச்சு குடுத்தா துட்டு குடுப்பாங்க. அந்த துட்டுல பம்பரம், பேட்டு பந்து எதுனா வாங்கிப்போம். வீட்டுல ஊரு சுத்திப் பாக்கெல்லாம் துட்டு கேட்டா அப்புரம் வாயி மேல போட்ருவாங்க.

ஆன்டி நாங்க ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே!

என்னங்கடா! மீதி இருக்குற பீசாவெ என்ன தின்ன சொல்ல போறீங்களா?

அது இல்ல ஆன்டி. இந்தா பக்கத்துல இருக்க மெகா மார்ட் கடைக்குள்ள போனா விடுவாங்களா?

எனக்கும் அதே சந்தேகம்தான்!

– சரசம்மா
(உண்மைச் சம்பவம்)


 

நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?

4

ப்ரஜ் ரஞ்சன் மணி-யின் “கிஸ்கீ சாய் பேச்தா ஹை தூ”
என்ற இந்திக் கவிதையின் தமிழாக்கம்.

நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

விரல் நுனியிலும் காயம் படாமல்
உன்னைத் தியாகி என்று சொல்லிக் கொள்கிறாய்
கூட்டுக் குழுமங்களில் கிறிஸ்துக்களைத் தேடுகிறாய்
அம்பானி அதானி பேரரசை விகாசம் என்கிறாய்
அட பத்மாஷ், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

இந்துக் கயமையில் மூழ்கிக்கொண்டு
வர்ணாசிரமத்திலும் ஜாதியிலும் திமிர்பேசிக்கொண்டு
பூலே – பெரியார் – அம்பேத்கரிலிருந்து தூரத்தில் ஓடுகிறாய்
அடே ஓபிசி சிகண்டி, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மசூதியையும், தேவாலயங்களையும் நொறுக்கி தேசபக்தன் ஆகிறாய்
கலகங்களை உற்பவித்து தாடிமீசையை வளர்க்கிறாய்
தர்மத்தின் பெயரால் ஏழை மக்களைக் கொல்கிறாய்
பயங்கரப் பேயே, சொல், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மனைவியைக் கைவிட்டு பிரம்மச்சாரி ஆகிறாய்
நண்பனின் மகளுக்குத் தொல்லை கொடுக்கிறாய்
கருப்புக் குல்லாயும் காக்கிக் கால்சட்டையும் உன் மானத்தை மறைக்க,
அட வெட்கம் கெட்டவனே, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

கருப்புச் செயல்களில் வெட்கம் கொள்வதில்லை
மனிதன் ஆவதிலும் முயற்சி என்பதில்லை
டீ விற்பவர்களுக்கு இலவசமாகக் கெட்டபெயர் வாங்கித் தருகிறாய்
ஏமாற்றுக்காரனே, இப்போதாவது சொல்லிவிடு,
யாருடைய டீயை நீ விற்கிறாய்?

நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்

இந்தியிலிருந்து தமிழுக்கு: க. பூரணச்சந்திரன்

–ப்ரஜ் ரஞ்சன் மணி Debrahmanising History  : Dominance and Resistance in Indian Society, Knowledge and Power: A Discourse for Transformation நூல்களின் ஆசிரியர்.

 

நன்னிலம் : காவல் துறை ONGC கூட்டு சதியை முறியடித்த மக்கள் அதிகாரம் !

1

ஞ்சை டெல்டாவின் மையப்பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டம் உள்ளது. மத்திய அரசின் வஞ்சகத்தால் காவிரி பொய்த்துப் போன பின்பு தஞ்சை டெல்டாவில் விவசாயம் கேள்விக் குறியாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையிலும் ஒருசில இடங்களில் மட்டும் விவசாயிகள் பம்புசெட்டுகள், குளங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பகுதிகளில் நன்னிலமும் ஒன்று. இப்பகுதியில் பம்பு செட்டுகளை வைத்து விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். பகுதியே பசும்போர்வை போர்த்தியதுப் போல் தற்போதும் காட்சியளிக்கிறது, நன்னிலம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் விவசாயிகளுக்கு வாழ்வளித்து வருகிறது.

நாகை மாவட்டத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்த மோடி அரசுக்கும், ONGC என்ற நாசகார கும்பலுக்கும் இது கண்ணை உறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். ஆகவே மக்களுக்கு தெரியாமல் மெதுமெதுவாக இடத்தை ஆக்கிரமித்து தன்வேலையை தொடங்கினர். இன்றைய சூழலிலும் “பட்டிக் காடாக” இருக்கும் இந்த ஊருக்கு தீடீர் தீடீர் என்று புதிய பாலங்கள் முளைக்கின்றன, கப்பியும், செம்மண்ணுமாக இருந்த பேருந்து வழித்தடம் கனரக வாகனங்கள் வருவதற்கு ஏற்ப விரிவாக்கப்படுகின்றன.

டவர் அமைக்கப்பட்டவுடன் ONGC என தெரிந்துக்கொண்ட படித்த இளைஞர்கள், விவசாயிகள் அதை விரட்டியடிக்க ஆயத்தமானார்கள். நெடுவாசல், கதிராமங்கலத்தில் கிடைத்த அனுபவத்தில் இருந்து போலீசும், ONGC நிர்வாகமும் மக்கள் போராட்டங்களை முளையிலே கிள்ளியெறிய ஆயுத்தமாக இருந்தது. சில உள்ளூர் இளைஞர்கள் ONGC யை எதிர்த்து சுவரொட்டியை ஒட்டினர். இரவோடு இரவாக காவல்துறை பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 நபர்கள் மீது பொய்வழக்கு போட்டு 4 இளைஞர்களை சிறையில் அடைத்தது. மக்களை அச்சுறுத்தியது.

அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் போராடி 150 -க்கும் மேற்பட்ட மக்கள் கைதாகினர். ONGC க்கு எதிராக யாரும் மூச்சைக்கூட விடமுடியாதப்படி நன்னிலம் முழுக்க போலீசு அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த தோழர்கள் 28.12.2017 அன்று “ONGC யை எதிர்த்து” பொதுக்கூட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பல்வேறு கிராமங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அச்சமடைந்திருந்த மக்கள் நம்பிக்கையுற்றனர்.

மக்களை அச்சுறுத்த 10 மக்கள் அதிகார தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கு போட்டது. பொதுக்கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்தது. அத்துமீறும் போலீசின் அடாவடிதனத்தை உடைக்கவும், மக்களுக்கு போலீசு மீதுள்ள அச்சத்தை போக்கவும் 28.12.2017 அன்று காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிவு செய்யப்பட்டு, விரிவாக சுவரொட்டி மூலம் தகவல் அறிவிக்கப்பட்டது. சுவரொட்டிகளை கண்டு மிரண்ட போலீசு தமது நாக்கால் துடைத்து சுத்தம் செய்தது. உள்ளுர் இளைஞர்கள் உத்தமன், திலக், அன்பு ஆகியோரை இரவோடு இரவாக கைது செய்தது. நன்னிலம் முழுக்க போலீசை குவித்து கலவர பூமியாக்கியது.

அத்தனை தடையையும் மீறி அறிவித்தபடி 28.11.2017 காலை 11 மணிக்கு நன்னிலம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 150 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மக்கள் அதிகார அமைப்பினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். போலீசுக்கு தண்ணி காட்டிய மக்கள் அதிகார அமைப்பின் தொடர் போராட்டம் நன்னிலம் மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

பல ஆயிரம் செலவு செய்து பொதுக்கூட்டம் நடத்தி புரியவைக்க வேண்டிய விசயத்தை, போலீசை குவித்து நன்னிலம் முழுக்க பேசு பொருளாக்கி, ONGC -க்கு எதிரான கோபத்தை மக்களிடம் கிளப்பி, மண்டபம் ஏற்பாடு செய்து கொடுத்து, உணவையும் வழங்கி, தக்க பாதுகாப்பு கொடுத்து, மழை பெய்யும் சூழலில் அரங்கு கூட்டமாக நடத்தி வைத்து சாதாரணப் பொதுக்கூட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய திருவாரூர் காவல் துறையினருக்கு நன்றி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

***

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், “விவசாயியை வாழவிடு! நன்னிலத்தை  நாசமகாதே! ஓ.என் .ஜி.சி- யே வெளியேறு!” என்கிற முழக்கத்தின் அடிப்படையில், 29.12.2017 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் ஒருங்கினைப்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது .

பு.மா.இ.மு திருவாரூர் மாவட்டம் அமைப்பாளர் தோழர் பாண்டி ,தஞ்சாவூர் மாவட்ட  அமைப்பாளர் தோழர் குஸ்தீனா, தஞ்சாவூர் மண்டல ஒருகிணைப்பாளர் தோழர் சங்கத்தமிழன் ஆகியோர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் இதில் பங்கேற்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி


 

மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

0

மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! சகோதரர்களாக வாழக் கற்றுக் கொடுக்கிறது சோசலிசம்!!

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம் சென்னையில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது. கூட்டத்தில், தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க. ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!

து மூலதனம் நூலின் முதல் பதிப்பின் 150-ஆவது ஆண்டு, நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு. அது மட்டுமல்ல, சீனத்தில் நடந்த பண்பாட்டுப் புரட்சியின் 50-ஆவது ஆண்டு, இந்தியாவில் நடந்த நக்சல்பாரி எழுச்சியின் 50-ஆவது ஆண்டு. இவை எல்லாம் தனித்தனி நிகழ்வுகள் அல்ல. இவற்றுக்கிடையே உள்ளார்ந்த ஒரு உறவு இருக்கிறது.

கற்பனாவாத பொதுவுடமைக் கருத்துகளில் இருந்து தொழிலாளி வர்க்கத்தை விடுவித்து, ஒரு அறிவியல் பார்வையை வழங்கியவர் மார்க்ஸ்.

பொருளாதாரவாதப் போக்குக்கு எதிராகவும், சாகசவாத போக்குகளுக்கு எதிராகவும், தேசபக்தி என்ற பெயரிலே முதலாளித்துவத்துக்கு அடிமைச் சேவகம் செய்த தேசவெறிக்கெதிராகவும் போராடி ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை ரசிய மண்ணிலே சாதித்தார் லெனின்.

பெரும் திரளான விவசாயிகளைக் கொண்ட, மிகப் பின்தங்கிய சீனத்தில் ஒரு புரட்சியை நடத்திக் காட்டினார் மாவோ. சோசலிசம் வெற்றி பெற்றுவிட்டதென நாம் இறுமாந்திருந்திட முடியாது, மீண்டும் முதலாளித்துவம் மீட்கப்படுவதைத் தடுக்க பண்பாட்டுப் புரட்சி என்ற விடையைக் கண்டார் மாசேதுங்.

இங்கே இந்தியாவில் நாடாளுமன்றப் பாதையிலே சிக்கிக் கொண்ட பொதுவுடைமை இயக்கத்தில், புரட்சியை நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தது நக்சல்பாரி எழுச்சி. அதிலே பல தவறுகள், பின்னடைவுகள் இருப்பினும், அதன் முக்கியத்துவம் புரட்சியை நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டு வந்ததிலே இருக்கிறது.

இந்த நான்கு நிகழ்வுகளை இந்த நேரத்திலே நாம் நினைவுகூற வேண்டியிருக்கிறது என்றாலும் கூட, ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதனாலே, இரண்டை மட்டும் நாம் மையப்படுத்தியிருக்கிறோம்.

வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது ரசியப் புரட்சியில் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நிலைமைகள் தலைகீழாகிவிட்டன. தொழிலாளி வர்க்க அரசு இருந்த காலம் போய், ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்று சொல்லப்பட்டதும்கூட ரத்து செய்யப்படுகின்ற காலத்தில் நாம் உள்ளோம். மார்க்ஸ் காலத்திலே உலகம் எப்படி இருந்ததோ அந்த நிலை நோக்கிப் போயிருக்கிறோம்.

1990 – 91 -இல் பெர்லின் சுவர் வீழ்ந்தவுடன், முதலாளித்துவ ஜனநாயகம்தான் மனித நாகரீகம் அடையத்தக்க உன்னதம் – எண்ட் ஆஃப் ஹிஸ்ட்ரி என்றார் பிரான்சிஸ் ஃபுகுயாமா. இது முன்னரே ஹெகல் கூறியதுதான். அதை மறுத்தார் மார்க்ஸ். இன்று ஃபுகுயாமவை மறுப்பதற்கு ஒரு மார்க்ஸ் தேவைப்படவில்லை. முதலாளித்துவமே அக்கருத்தை மறுத்துவிட்டது.

அவர் புத்தகம் போட்டு மூன்றே ஆண்டில் தென்கிழக்காசிய நெருக்கடி. அடுத்த நான்கு ஆண்டுகளில் டாட்காம் குமிழி வெடிப்பு. அடுத்த ஐந்தாண்டுகளில் சப்-பிரைம் நெருக்கடி. அதிலிருந்து இன்று வரை முதலாளித்துவம் எழுந்திருக்கவில்லை. இது வழக்கமாக வந்து போகும் நெருக்கடியல்ல சிஸ்டமிக் க்ரைசிஸ், உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

மல்டி ஆர்கன் ஃபெயிலியரில் முதலாளித்துவம் ஐ.சி.யு.-வில் கிடக்கிறது. ஆனால், இட்லி சாப்பிடுகிறார், சட்னி சாப்பிடுகிறார். முதலாளித்துவத்தை மோடி மீட்டு விடுவார். ட்ரம்ப் மீட்டுவிடுவார் என்று சிலபல திண்டுக்கல் சீனிவாசன்கள் நமக்குக் கதை சொல்லுகிறார்கள்.

ஏழைத் தொழிலாளியின் உடலுறுப்புகளை எடுத்து நடராஜனது உயிரைக் காப்பாற்றினார்களே, அதுபோல, ஒடுக்கப்பட்ட நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தின் கிட்னியையும், லிவரையும் இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் கிரீஸ் நெருக்கடி. அதுதான் போர்ச்சுக்கல் நெருக்கடி. முதலாளித்துவ அமைப்பை மீட்க ஆளுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள்.

இன்று ரஜினிகாந்த்கூட சொல்கிறார், சிஸ்டம் சரியில்லை என்று. அவர் வீட்டில் ஹோம்தியேட்டர் சிஸ்டம் சரியில்லையாயிருக்கும். அல்லது டிக்கெட் எல்லாம் 1000 ரூபாய்க்குதான் பிளாக்கில் போகுது, 2000 ரூபாய்க்குப் போவது போல சிஸ்டத்தை மாற்றியமைக்கணும் என்று அவர் விரும்பலாம். மோடியும் அப்படித்தான் சொல்கிறார். காலாவதியான சட்டங்கள் இருப்பதால், எல்லாம் வீணாய்ப் போய்விட்டது. மாற்றியமைக்கிறேன் என்கிறார். எப்படி?

இருக்கின்ற பெயரளவிலான ஜனநாயகத்தை அவர்கள் ரத்து செய்ய விரும்புகிறார்கள். எதிர்த்திசையில் மாற்றியமைக்க விரும்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். –க்கும் பார்ப்பனியத்திற்கும் ஜனநாயகம் ஒத்துவராது. முதலாளித்துவத்துக்கும் ஜனநாயகம் ஒத்து வராது. புதிய தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதற்குப் பின்னால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட ஏற்றத்தாழ்வு அதிகமாகி விட்டது என்று தாமஸ் பிக்கட்டி சொல்கிறார்.

முதலாளித்துவம் என்று சொல்லக்கூடிய  இந்த அமைப்பைச் சீர்குலைப்பவர்களாக,  ஒழித்துக்கட்டுபவர்களாக முதலாளிகளே இருக்கிறார்கள் என்பதைத் தரவுகளோடு சொல்கிறார் ரகுராம் ராஜன்.  அவர் முதலாளித்துவக் கொள்கையாளர்தான். இருப்பினும், வாங்கின கடனைக் கட்டு என்று சொன்னதால், அவரை அம்பானிக்குப் பிடிக்கவில்லை.

முதலாளித்துவத்தை முதலாளிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர் எழுதினார். தொழிலாளி வர்க்கம் தான் இந்த முதலாளி வர்க்கத்திற்கு சவக்குழி தோண்டும் என்றார் மார்க்ஸ். முதலாளி வர்க்கமே முதலாளி வர்க்கத்துக்கு சவக்குழி தோண்டுகிறதென்று ரகுராம் ராஜன் சொல்வதைக் கேட்டு மனதார சிரிக்க மார்க்ஸ் இங்கே இல்லை.

சவக்குழி தோண்ட வேண்டிய தொழிலாளி வர்க்கம் பால் குடம் எடுக்கிறது. ஜெயலலிதாவிற்கு பால் குடம் எடுத்ததை மட்டும் சொல்லவில்லை. ஏன் ஆட்குறைப்பு என்று ஐ.டி. ஊழியர்களைக் கேளுங்கள். ரிஷசன் என்பார். திருப்பூர்த் தொழிலாளியைக் கேளுங்கள். எக்ஸ்போர்ட் ஆர்டர்  இல்லை என்பார். எல்லாருக்கும் ஒரு கண்ணோட்டம்தான். அந்த அளவிற்கு இந்தக் கருத்து  நம்முடைய மூளையிலே இறக்கப்பட்டிருக்கின்றது.

புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்த தொடங்கி பத்து வருஷம் ஆச்சே, என்னையா ஒண்ணையும் காணோமே இன்னும் என்று ப.சிதம்பரத்தைக் கேட்டபோது, அவர் சொன்னார், இருங்க டிரிக்கிள் டவுன் ஆவதற்கு கொஞ்சம் காலம் ஆகும். புல்லுக்கும் ஆங்கே பொசியும். காத்திருங்கள் என்று. முதலாளிகள் வீட்டிலே விருந்து நடக்கிறது. தொழிலாளிகளே கொஞ்சம் காத்திருங்கள். எச்சில் இலை விழுவதற்குக் கொஞ்சம் நேரம் ஆகும் என்பதே இதற்குப் பொருள்.

மோடி என்ன சொல்லுகிறார்? முதலாளிகளுக்கு ஆதரவான இன்வெஸ்மென்ட் பிரண்ட்லி அரசாக இருந்தால்தான், மக்களுக்கு முன்னேற்றம் வரும் என்கிறார். அதாவது, எச்சில் இலை விழும் அச்சே தின் வரும் என்று மூன்று ஆண்டுகளாகச் சொல்கிறார். செல்வம் மேலிருந்து கீழே வருவதற்கு அதனை இயக்குவது புவி ஈர்ப்பு விசை அல்ல. முதலாளித்துவத்தை இயக்குவது இலாபவெறி. அது கீழே இருந்து மேலே மட்டும்தான் உறிஞ்சும்.

புருசன் வேலைக்குப் போய் பொண்டாட்டி, புள்ள, அப்பன், ஆயி கஞ்சி குடித்த காலம் இருந்தது. இன்று கணவன், மனைவியுடன்  பிள்ளையும் வேலைக்குப் போகணும். மகள் தன் கல்யாணச் செலவைத் தானே ஈட்டிக்கொள்ளவேண்டும் என்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு தந்தை அவமானகரமாகக் கருதி இருப்பான். இன்று அவனே சுமங்கலி திட்டத்துக்கு அனுப்பி வைக்கிறான். மொத்தத்தில் எவ்வளவு தீவிரமாக உழைக்கிறோமோ, அந்த அளவிற்கு வேகமாக நமக்கு எதிரான சக்தியான மூலதனம் வலுப்பெறும் என்ற விதியைத்தான் மார்க்ஸ் மூலதனத்திலே சொல்கிறார்.

மூலதனத்திலே மார்க்ஸ் எழுதுவார். மேரி அன்னே வாக்கியே என்ற ஒரு பெண், நூற்பாலைத் தொழிலாளி. நாள் கணக்கில் தூக்கமின்றி வேலை செய்து ஆலையிலேயே இறந்து போவதைக் குறிப்பிடுவார். ஜப்பானில் இன்று ஒரு  பெண்மணி அந்த மாதிரி அளவுக்கதிகமான நேரம் வேலை செய்து ஆலையிலே இறக்கிறார்.

அன்றைக்குக் கடனுக்காகத் தமிழக மக்களை மலேசியாவுக்கும், இந்தோனேசியாவிற்கும் கொத்தடிமைகளாக  பிடித்துச் சென்றார்கள். இன்று நெல்லையிலே தற்கொலை செய்து கொண்டார்களே, அவர்கள் அந்தக் காலமாக இருந்தால், எட்டணாவிற்கோ ஒரு ரூபாய்க்கோ தங்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். மார்க்சுக்கு முந்தைய காலத்தில்  என்ன நடந்ததோ, அதை இன்று காண்கிறோம். ஆனால், மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிறார்கள். முதலாளித்துவம் காலாவதி  ஆகும் வரை மார்க்சியம் காலாவதி ஆக முடியாது.

முதலாளித்துவத்தின் அழிவு தவிர்க்க இயலாதது என்கிறார் மார்க்ஸ். அதற்குப் பொருள் முதலாளித்துவம் தானே அழிந்து விடும் என்பதல்ல. அம்பானியோ அதானியோ நெருக்கடி தாங்க முடியவில்லை, இந்தாங்க சாவியை, வச்சிக்கோங்க என்று தொழிலாளர் வர்க்கத்தின் கையில் பீரோ சாவியை கொடுக்க போகிறார்களா? அது எந்த காலத்திலாவது நடக்குமா?. முதலாளித்துவம் அழுகி நாறுகிறது என்பது உண்மைதான். ஆனால், அது தானாகவேஅழிந்து விடாது.

முட்டைக்குள்ளே குஞ்சி இருப்பது என்பது உண்மைதான். முதலாளித்துவத்துக்குள்ளே சோசலிசம் இருப்பதும் உண்மைதான். ஆனால், முட்டை தானாகக் குஞ்சு பொரிக்காது. அதற்குப் பொருத்தமான வெப்பத்தைக் கொடுக்கவேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் வேலை. அதற்குப் புரட்சி என்பது தேவை. படிப்படியாகக் கொண்டு வந்து விடலாம். அமைதி வழியில் சோசலிசம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அமைதி வழியிலே சீர்திருத்தியிருக்கிறதா முதலாளித்துவம்? ஏன் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் போயிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொரு தோலாக உரிப்பதற்கு இது வெங்காயமில்லை. முதலாளித்துவம் என்பது ஓநாய். அதன் நகத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்க முடியாது.

தங்களால் முடியாது என்று கருதுகிறவர்கள், அதை அப்படி சொல்லாமல், யாராலும் முடியாது என்கிறார்கள். சோசலிசத்தைப் பற்றி அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் சொல்லுகின்ற ஒவ்வொன்றுக்கும் கம்யூனிஸ்டுகள் விளக்கம்சொல்லுகிறோம். ஆனால், அவர்கள் எதற்காவது பதில் சொல்லியிருக்கிறார்களா? என்றைக்காவது?

உலகப் போர்கள், அணுகுண்டு, ஹிட்லர், முசோலினி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இவர்களெல்லாம் யார்? முதலாளித்துவம் பெற்ற பிள்ளைகள். அதை அவர்கள் சொல்வதில்லை. நமக்கும் கேட்கத் தெரிவதில்ல. பஞ்சமும் பட்டினியும் விவசாயிகள் தற்கொலையும் முதலாளித்துவத்தின் தோல்வியைக் காட்டவில்லையா? அவர்கள் இதெற்கெல்லாம் பதில் சொல்லுவதில்லை. நாம் பதில் சொல்லுகிறோம். ஏனென்றால், தொழிலாளி வர்க்கம் எங்களுக்கு என்று மட்டுமே கேட்டுப் பழக்கப்பட்ட வர்க்கம். எனக்கு எனக்கு என்பது முதலாளி வர்க்கம்.  முதலாளிகளைப் போலச் சிந்திப்பதற்கு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

போட்டி என்பதை உன்னதமாகக் கருதப் பழக்கப்படுத்தப்படுகிறோம். பத்து வேலைக்கு இருபதாயிரம் பேர் போட்டி. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்ளும் நாய்களாக நம்மை மாற்றி விட்டு, இதையே பெரிய கவுரவம் என்று கருதுமாறும் பழக்குகிறார்கள். அடுத்தவனை வீழ்த்தாமல் வாழமுடியாது என்ற பண்பாட்டை நமது மரபணுக்கள் வரை பதிக்கிறார்கள். இது அநாகரிகம். இந்த அநாகரிகத்துக்கு முடிவுகட்டியது தான் நவம்பர் புரட்சி. எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் வீடு என்பது சாத்தியம் என்பதை நிரூபித்தது.

யார் திறமைசாலியோ, யார் வலிமையானவனோ அவன் அடுத்தவனை வீழ்த்தித்தான் வாழமுடியும் என்பது முதலாளித்துவம். நாம் நாய்கள் அல்ல, மனிதர்கள். நாம் சகோதரர்களாக வாழ முடியும் என்று நிரூபித்தது சோசலிசம். 1917 என்பது கடந்த காலம் அல்ல, அது வருங்காலம். வருங்காலத்தை நோக்கி 1917 -ஐ நோக்கிச் செல்வோம்.

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – முனைவர் சேதுபதி

12
கதிராமங்கலம் மக்கள் பயன்படுத்தும் நீர்; பற்றி எரியும் கதிராமங்கலம்

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை

கதிராமங்கலம் ஆழ்துளை கிணறு

ஒ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம் 2002ஆம் ஆண்டு முதல், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுத்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு குழுவை சந்திக்கவும், களநிலவரத்தை ஆராயவும் கதிராமங்கலம் சென்றிருந்தபோது மக்கள் பருகும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மிக அதிக அளவில் மாசடைந்துள்ளதை கண்டு அதிர்ந்தேன். 100 முதல் 150 அடி ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வெளிவரும் நீரின் தன்மை எவ்வாறு இருக்கிறதென்றால், குடிநீரின் மேல்பரப்பில் கச்சாஎண்ணெய் (crude oil) படர்ந்திருந்தும், பெட்ரோல் நெடி கொண்டதாகவும், பழுப்பு நிறம் கொண்டதாகவும் மற்றும் சிறு சிறு மண்/தூசித்துகள்கள் கலந்ததாகவும் இருக்கிறது. அதே நீரை மறுநாள் பருக முடியாதபடி, குடிநீரின் நிறம் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டதாக மாறிவிடுகிறது.

கதிராமங்கலம் கிராமத்தின் நீரின் தன்மையை கண்டறிய, இரண்டு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளுக்கு அருகில் உள்ள வீதியிலிருந்து, 13 நிலத்தடி நீர் (குடிநீர்) மாதிரிகளை எடுத்து வந்தேன். அனைத்து மாதிரிகளையும், ஒரே ஆய்வகத்திற்கு அனுப்பினால், ஆய்வின் முடிவு தவறாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று எண்ணி மாதிரிகளை பிரித்து இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆய்வின் முடிவுகளை சர்வதேச மற்றும் இந்திய குடிநீர் தரத்தின் அளவுகளோடு (Indian Water Quality Standards – IS 10500, Bureau of Indian Standards – BIS, World Health Organization standard WHO மற்றும் European Union Standard – EU) ஒப்பிட்டு பார்த்து, எனது ஆய்வறிக்கையை கீழே விவரித்துள்ளேன். ஆய்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு முன், இதற்கு முந்திய வருடங்களில் மத்திய நிலத்தடிநீர் மையம் (Central Ground Water Board) மற்றும் ஒ.என்.ஜி.சி (ONGC) ஆகியவற்றால் நடத்தப்பட்ட நிலத்தடிநீர் ஆய்வு முடிவுகளையும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் அப்போது தான் நிலத்தடி நீரின் தன்மை, எவ்வாறு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளின் விளைவுகளால் மாறியுள்ளது என்று அறிந்து கொள்ள முடியும்.

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – 2017

மத்திய நிலத்தடிநீர் ஆய்வறிக்கை (Central Groundwater Board) – நவம்பர் 2008

குடித்தண்ணீர் மாசு : ஒ.என்.ஜி.சி-க்கு எதிராக மாணவர்களின் போராட்டம்

நாகபட்டினத்திற்குப்பட்ட குத்தாலம் பேரூராட்சியிலிருந்து சில நிலத்தடிநீர் மாதிரிகளை 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய நிலத்தடிநீர் மையம் ஆய்வு செய்தது. கதிராமங்கலம் கிராமம் குத்தாலம் பேரூராட்சியிலிருந்து 4 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. தங்களின் ஆய்வு முடிவுகளை, இந்திய குடிநீர் தர கட்டுப்பாட்டு (Bureau of Indian Standards) முறையுடன் ஒத்துப்பார்த்து, அவர்கள் அறிவித்த முடிவுகள் யாதெனில்,

  1. இங்குள்ள குடிநீர் எந்த நிறமுமற்று (Colour property), எந்த ஒரு நெடியுமற்று (Odour property) சீராக இருக்கிறது.
  2.  குடிநீரின் கடினத்தன்மையானது (Hardness property), இந்திய குடிநீர் தரம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமான அளவில் இருக்கிறது. இதற்கான காரணம் குத்தாலம் பேரூராட்சியில் உள்ள மண்ணில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து மிக அதிகமாக இருப்பதால், அது இங்குள்ள நிலத்தடிநீரின் தன்மையை பாதிக்கின்றது. (நீரின் கடினத்தன்மையானது நீரில் கலந்துள்ள சுண்ணாம்பு சத்தின் அளவை பொறுத்து, நீரின் தன்மையயை கடினமாக அல்லது மென்மையாக மாற்றும்).
  3. நிலத்தடி நீரில் நைட்ரைட் (Nitrate) உப்பின் அளவானது, இந்திய குடிநீர் தரம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமான அளவில் இருக்கிறது. இதற்கான காரணம் அதிகமான செயற்கை (வேதியியல்) உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், நீரில் நைட்ரைட் உப்பின் தன்மை அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய நிலத்தடிநீர் ஆய்வின்படி குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட நிலத்தடி நீர் மக்கள் பருகுவதற்கு ஏற்றபடியும் மற்றும் வீட்டின் தேவைகளுக்கும் பயன்படும் வகையிலும் உள்ளது. ஆனாலும் குத்தாலம் பேரூராட்சியில் அதிகமான அளவு நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதனால், நிலத்தடிநீர் மட்டம் மிக வேகமாக கீழே சென்று கொண்டிருக்கிறது. அதனால், குத்தாலம் பேரூராட்சியில், நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கு ஏற்ப எந்த ஒரு மேம்பாட்டையும் செய்யாமல், அதிக அளவில் நிலத்தடி நீரை உபயோகிக்கும் எந்த ஒரு தொழிலும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும். உவர்ப்பு நீர் உள்ளே வரவும் மற்றும் நீரின் மட்டம் கீழே செல்லவும் ஏதுவாக இருக்கும்.

ஒ.என்.ஜி.சி சுற்றுசூழல் ஆய்வறிக்கை – நவம்பர் 2013

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒ.என்.ஜி.சி நிறுவனம் காவேரி டெல்டா பகுதிகளில், ஹைட்ரோகார்பன் கிணறுகளால் ஏற்படும் சுற்றுசூழல் விளைவுகளை அறிந்துகொள்ள பல்வேறு சோதனைகளை நடத்தினர். நிலத்தடிநீர் மாதிரிகளை குத்தாலம் மண்டலத்திலிருந்து எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர் (கதிராமங்கலம் கிராமம் குத்தாலம் மண்டலத்தில் தான் உள்ளது). நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை இந்திய குடிநீர் தர நிர்ணய அளவுகளுடன் (IS 10050) ஒப்பிட்டு, அவர்கள் அளித்த முடிவானது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கதிராமங்கலம் மக்கள் பயன்படுத்தும் நீர்; பற்றி எரியும் தேங்கியுள்ள நீர்

நீரில் கலந்துள்ள “மொத்த கரைந்த தாதுஉப்புக்கள் (Total Dissolved Solids) ஒரு லிட்டர் குடிநீரில் 243 முதல் 3252 மில்லிகிராம் அளவிலும், நீரின் கடினத் தன்மையானது (Hardness) ஒரு லிட்டர் குடிநீரில் 78 முதல் 1032 மில்லிகிராம் அளவிலும் உள்ளதாக தெரிவித்தார்கள். இவற்றில் மொத்த தாதுஉப்புக்களின் அளவும் மற்றும் நீரின் கடினத்தன்மையின் அளவும் இந்திய குடிநீர் தரம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமானதாக உள்ளது. இதனால் தான், குடிநீர் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது என்று இந்த அறிக்கையும் குறிப்பிடுகிறது. ஆனால், மிக முக்கிய தாது உப்புகள் மற்றும் உலோகங்களான ஃப்ளோரைடு, செம்பு, துத்தநாகம், குரோமியம் மற்றும் கேட்மியம் ஆகியன நீரில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகக் குறைவாக உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், ஒ.என்.ஜி.சி (ONGC) தனது ஆய்வறிக்கையில் ஏனோ “குத்தாலம் மண்டலத்திற்கு உட்பட்ட நிலத்தடிநீர் மக்கள் பருகுவதற்கு மற்றும் ஏனைய வீட்டு தேவைகளுக்கும் உகந்த தன்மையுடன் உள்ளதா? இல்லையா? என்று எங்கும் கூறவில்லை”.

கதிராமங்கலம் நிலத்தடிநீர் தன்மையின் ஆய்வறிக்கை – ஆகஸ்ட் 2017

கதிராமங்கலம் கிராமத்தில் இரண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அருகில் எடுக்கப்பட்ட 13 நிலத்தடிநீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

குடிநீரில் கலந்துள்ள “மொத்த கரைந்த தாது உப்புகளின்” அளவானது ஒரு லிட்டர் தண்ணிருக்கு 2840 மில்லிகிராம் உள்ளது. இந்த அளவானது இந்திய குடிநீர் தரக் கட்டுப்பாட்டு (IS:10500 standards) ஏற்கத்தக்க (Acceptable Limit) அளவான 500 மில்லிகிராம் அதிகமாகவும் மற்றும் அனுமதிக்கப்பட்ட (Permissible Limit) அளவான 2000 மில்லிகிராம் அதிகமாகவும் உள்ளது. ஏற்கத்தக்க அளவை விட அதிகமாக இருப்பதால் இந்த நீரை பருகும் மக்களுக்கு இரைப்பை மற்றும் குடல் பகுதியில் வலி உண்டாக வாய்ப்பு உள்ளது.

இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய முறையின் படி, நீரின் கலங்கள் தன்மையானது (Turbidity) 1 NTU முதல் 5 NTU வரை தான் இருக்கவேண்டும். ஆனால் இங்கு 16 NTU-க்கு மேல் உள்ளது. அதனால் தான் குடிநீர் கலங்கிய படி சிறு சிறு மண்/தூசித்துகள்கள் அதிகமாக காணப்படுகிறது.

குரோமியம் (Chromium) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.7 மில்லிகிராம் உள்ளது. இந்த அளவானது இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.05 மில்லிகிராம் விட மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நீரை பருகும் மக்களுக்கு வயிற்று வலி, அல்சர் தீடிரென உடல் நடுங்குதல், சிறுநீரக கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் மற்றும் தீடீர் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளை அழிக்க வரும் மீத்தேன் திட்டம்

காட்மியம் (Cadmium) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.03 மில்லிகிராம் உள்ளது. ஈயம் (Lead) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.03 மில்லிகிராம் உள்ளது. இந்த இரண்டு உலோகங்களும் இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.01 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதால், நிலத்தடி நீரை நச்சுத்தன்மை கொண்டதாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதிக அளவு கேட்மியம் கலந்த நீர் மனித உடலுக்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் உலோகமாகும். கண்டிப்பாக சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக அளவு ஈயம் கலந்த நீரை பருகுவதால் மூளை, மத்திய நரம்பு மண்டலம், சிறுநீரக மற்றும் கல்லீரல் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிக்கல் (Nickel) உலோகத்தின் அளவு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 0.7 மில்லிகிராம் உள்ளது. இந்த அளவானது ஐரோப்பிய யூனியன் குடிநீர் தரக்கட்டுப்பாடு நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.02 மில்லிகிராமை விட மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நீரை பருகும் மக்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி Allergy) சம்பத்தப்பட்ட நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுந்த இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாட்டின் நிர்ணய அளவு கிடைக்கவில்லை.

இரும்பின் (Iron) அளவு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.81 மில்லிகிராம் அளவும் மற்றும் மாங்கனீசு (Manganese) 10.2 மில்லிகிராம் அளவும் உள்ளது. இந்த இரண்டுமே இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.3 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதால் தான் நீரின் தன்மை அடர்ந்த பழுப்பு நிறத்தில் உள்ளது.

கோபால்ட் (Cobalt) உலோகம் ஒரு லிட்டர் நீரில் 0.29 மில்லிகிராம் கரைந்துள்ளது. இந்த அளவானது இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய ஏற்கத்தக்க அளவான 0.0002 மில்லிகிராமை விட மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நீரை பருகும் மக்களுக்கு இருதய நோய், குடல் இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று போக்கு, வாந்தி, நுரையீரல் புற்றுநோய், எடை குறைதல், சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு, சுவாசம் சம்பத்தப்பட்ட பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நீரில் உள்ள பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) அளவு, இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாடு (IS:10500 standards) நிர்ணய அளவுமுறைப்படி 5 மில்லிகிராம் அளவுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 2.3 மில்லிகிராம் அளவு தான் உள்ளது. குறைந்த அளவிலான ஆக்சிஜன் நீரில் இருப்பதால், கதிராமங்கலத்தின் நிலத்தடி நீர் அதிக அளவில் மாசுபடிந்துள்ளது என்று உறுதியாக அறியமுடிகிறது.

முடிவுரை (ஆய்வுச் சுருக்கம்)

2008-ஆம் ஆண்டு மத்திய நிலத்தடிநீர் ஆய்வறிக்கை, குத்தாலம் பகுதியிலுள்ள நிலத்தடிநீர் மக்கள் பருகுவதற்கு உகந்ததாக உள்ளது என்று அறிவித்துள்ளது. 2013- ஆம் ஆண்டு, ஒ.என்.ஜி.சி (ONGC) ஆய்வறிக்கை, நிலத்தடிநீரில் கலந்துள்ள தாது உப்புக்கள் மற்றும் உலோகங்களின் அளவு நீரில் கண்டுபிடிக்க முடியாத அளவு குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் 2017 ஆம் ஆண்டு (எனது) ஆய்வின் படி, நிலத்தடிநீரில் கரைந்துள்ள சில முக்கிய தாது உப்புக்களும் மற்றும் உலோகங்களும் இந்திய மற்றும் சர்வதேச குடிநீர் தரக்கட்டுப்பாட்டு தரக்கட்டுப்பாட்டுகளின் நிர்ணய அளவுகளுக்கு மேல் உள்ளதால் குடிநீர் மிகவும் மாசடைந்துள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஒ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம் “சில முக்கிய தாது உப்புக்களும் மற்றும் உலோகங்களின்” உண்மையான அளவை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டால் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு உண்டாகும் என்று வேண்டுமென்று தங்களின் அறிக்கையில் தவிர்த்து விட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எடுக்கப்பட்ட பதிமூன்று (13) நிலத்தடி நீர் மாதிரிகளில், ஒன்பது (9) மாதிரிகள் மிகவும் மாசடைந்த நிலையில் உள்ளது. ஏனெனில் இந்த நீர் மாதிரிகள் (Water Samples) எல்லாம் ஹைட்ரோகார்பன் கிணறுக்கு அருகில் உள்ள வீடுகளின் குழாய்கள்/கிணறுகளில் எடுக்கப்பட்டது. மீதி 4 மாதிரிகள் ஆய்வு முடிவுகளின்படி, நீர் மக்கள் பருகும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்த மாதிரிகள் எடுத்த வீடுகளெல்லாம் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு தூரத்தில் உள்ளது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அதிக அளவில் வெவ்வேறு விதமான இரசாயன பொருட்களை பயன்படுத்துவார்கள் இந்த இரசாயன பொருட்களை சரியான அளவிலோ அல்லது முறையான வழிகாட்டுதல்களின் படியோ கைக்கொள்ளாவிட்டால், இவைகள் கண்டிப்பாக நிலத்தடி நீரையும் மண்ணையும் பாதிக்கும். சில முக்கிய உலோகங்கள் குடிநீரில் இருப்பதற்கு காரணம் என்னவென்றால், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு பயன்படுத்தும் இரசாயன பொருட்கள் கலந்த களிமண் கூழ் (mud fluids), டீசல், குரோமியம், இரும்பு-குரோமிய கலவை (Ferro-Chrome), மெலிப்பான்கள் (Thinners), எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய் குழாகளிலிருந்து கசிந்து வெளியேறும் கச்சா எண்ணெய் ஆகியவையாகும். கதிராமங்கலத்தின் நிலத்தடிநீர் எந்த வகையில் மாசுபட்டிருந்தாலும், இங்குள்ள நிலத்தடிநீர் மக்கள் பருகுவதற்கு மற்றும் வீட்டு வேலை பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல. இந்த மாசடைந்த நீரை தொடர்ந்து பருகினால் தோல் நோய் முதல் புற்று நோய் மற்றும் குடல் அரிப்பு முதலிய நோய்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கதிராமங்கல மக்களும், இவர்களின் மனித உறவுகளான நாமும் விழிப்புணர்வோடு ஒன்றிணைந்து, இதை அரசு அதிகாரிகள், அரசு மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தி தொடர் கோரிக்கைகள் / வழக்குகள்/ போராட்டங்கள் மூலம் மண்ணையும், நீரையும், மக்களையும் மீட்க வழி செய்வோமாக..!

Dr. சேதுபதி, PhD.
Geologist

 

சென்னை : மக்களை உறைய வைத்த கண்ணீர்க் கடல் ஆவணப்படம் !

2

ன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது ஒக்கிப் புயல். இந்த புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும், உடைமைச் சேதமும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து மீனவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது தெரியாது. காணாமல் போன மீனவர்கள் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என அவர்களது குழந்தைகளும், மனைவியும், தாய் தகப்பனும் கதறலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடல் விமானத்தில் வந்து இறங்கி பவுசு காட்டினார் மோடி. ஆனால் துயரில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களைப் பார்க்க எந்த வாகனத்திலும் வரமுடியாதாம்.

புயலுக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுப்பதில் தொடங்கி மீட்புப் பணி வரையிலான அனைத்துக் கடமைகளிலும் மெத்தனம் காட்டியது அரசு. விளைவு, 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. கொதித்துப் போன மீனவ மக்கள் போராடினார்கள். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

மக்கள் துயரத்துல் அல்லல் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் திமிரோடு பதிலளித்தார்; எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஆர்.கே. நகரிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும் தவம் கிடந்தார்கள்; மோடி குஜராத்தில் வீதி வீதியாக ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டிருந்தார்.

பொதுத்தளத்தில் பலரும் கடுமையாக விமரிசித்த பின்னர் எடப்பாடி ஒரு கூட்டத்தில் பங்கேற்று விட்டு,ஒரு சில இடங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். மீனவர்களின் பகுதிக்கு வரவே இல்லை. மோடியோ, வெறும் புகைப்படங்களில் மட்டும் பாதிப்பைப் பார்த்து விட்டு டாட்டா காட்டிச் சென்று விட்டார்.

பாதிப்படைந்த மீனவ கிராமங்களுக்குச் சென்று கள நிலைமைகளை வினவு செய்தியாளர்கள் பதிவு செய்தனர். அங்கிருக்கும் மக்களிடம் அரசின் மீட்புப்  பணிகளைப் பற்றி கேட்டறிந்தனர். அப்படி உருவானது தான் “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தை வெளியிடுவதோடு, ஒக்கிப் புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரி மீனவர்கள் மத்தியில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்கள் கலந்துரையாடல் மற்றும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றச் சென்று வந்த மீனவ இளைஞர்களின் நேருரையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

அதன்படி கடந்த டிசம்பர் 25 – திங்கள் கிழமையன்று சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. முன்னோட்டத் திரையரங்கில் இந்நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து வினவு இணைய தளத்தில் கடந்த 24.12.2017 அன்று அறிவிக்கப்பட்டது.

ஓரிரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்பட்டாலும் திரளான மக்கள், தோழர்கள், பத்திரிகை நண்பர்கள் திரண்டு வந்தார்கள்.

அறிமுக உரை பேசிய தோழர் மருதையன் இந்த நிகழ்வு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் சுருக்கமாகப் பேசினார்.

தோழர் மருதையன்

அதனைத் தொடரந்து “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் 1மணி நேரம் 20 நிமிடங்கள் திரையரங்கேறிய இந்த ஆவணப்படம் பார்வையாளர்களை உறையச் செய்தது. இளைஞர்களும், மாணவர்களும் இப்படத்தின் உதவியால் மீனவர்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்து கொண்டோம் என்றார்கள். தொழிலாளர்கள் சிலர் தமது பணியை விட மீனவர்களின் தொழில் எப்படி சிரமம் நிறைந்தது என்பதை அறிந்ததாக கூறினார்கள். பெரும்பாலானோர் படம் தங்களை கண்ணீர் விட வைத்ததை நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்கள்.

ஆவணப் பட திரையிடல் முடிந்ததும்,  மீனவர் நேருரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்திரிக்கையாளர் பாரதிதம்பி இந்நிகழ்வை நெறியாளுகை செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையச் சேர்ந்த மீனவ இளைஞர்களான ஆல்பர்ட் மற்றும் டிக்சன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களோடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையனும் கலந்து கொண்டார்.

பத்திரிக்கையாளர் பாரதிதம்பி தமது கள அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு மீனவ இளைஞர்கள் இருவரிடமும் அங்கிருக்கும் யதார்த்த நிலைமைகள் குறித்துக் கேட்டார். பொறியியல் பட்டதாரியான ஆல்பர்ட்-ம், மீனவரான டிக்சனும் தங்களது அனுபவங்களையும், மீனவர்களின் யதார்த்த நிலைமைகளையும் எடுத்துரைத்தனர்.

இதில் டிக்சன், அரசின் கடலோரக் காவல் படையுடன் மீனவர்களின் தேடுதலுக்கு உடன் சென்ற இளைஞர். அவர் தனது அனுபவத்தைக் கூறுகையில், கடலோரக்காவல் படையினர் தங்களை அழைத்துக் கொண்டு வெறுமனே 25 கடல் மைல்களுக்கு மட்டுமே சென்றதாகக் குறிப்பிட்டார்.

ஆல்பர்ட்

மேலும், மீனவர்கள் பொதுவாக மீன்பிடிக்குச் சென்றிருக்கும் பகுதிகளாக மீனவர்கள் குறித்துக் கொடுத்த பகுதிகளுக்கு அவர்கள் செல்லவில்லை. அதற்கு மேல் தாங்கள் செல்வதற்கு சட்டம் அனுமதிக்காது எனக் கூறியிருக்கின்றனர். அதைத் தாண்டி மேலும் சுமார் 50 கடல் மைல்கள் சென்றிருந்தால் கண்டிப்பாக பல மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்க முடியும். மீனவர்களின் உயிருக்காக சட்டமா, இல்லை சட்டத்திற்காக உயிர்களை இழக்க முடியுமா எனத் தெரியவில்லை என மிகுந்த மனவருத்தத்துடன் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

ஆல்பர்ட் பேசுகையில், பல மீனவர்கள் 3 நாள், 3 இரவுகள் தொடர்ச்சியாக நீந்திக் கடற்கரையை நோக்கி வந்ததாகக் குறிப்பிட்டார். அப்படி வந்தவர்களை கடற்கரையில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்னர், அவர்கள் கண் விழித்துப் பார்த்த போது, அவர்களை நடுக்கடலில் இருந்து கடற்படை காப்பாற்றியதாக செய்தி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

மேலும் பல மீனவர்கள் படகில் மீண்டு வந்தபோது அவர்களை இடைமறித்து அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் தாங்கள் மீட்டதாகக் கடலோரக் காவல் படையினரும், கடற்படையினரும் கூறியதாகவும் பதிவு செய்தார் ஆல்பர்ட். மேலும் முதலில் ஜப்பான் வர்த்தகக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 4 மீனவர்களை அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏற்றிக் கொண்டு திரும்பிய காட்சியை மட்டுமே கடைசி வரை மீட்டதற்கான ஆதாரமாக வெளியிட்டுக் கொண்டிருந்தது அரசு. அதனைத் தவிர வேறு எந்த வீடியோவையும் வெளியிடவில்லை. அரசு தொடர்ச்சியாக பல கப்பல்களீல் தேடுதல் வேட்டை நடத்துவதாகக் கூறியது. ஆனால் 3 நாட்கள் தொடர்ச்சியாக நீந்திக் கரையேறிய மீனவர்கள், வழியில் ஒரு கப்பலையோ, மீட்புப் படகையோ பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.  நிலைமை இப்படி இருக்கையில் இந்த அரசை எப்படி நம்புவது எனக் கேள்வி எழுப்பினார்.

வல்லவிளையை சேர்ந்த  டிக்சன்

சாலையில் விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றாமல் ஒரு தனி மனிதன் சென்றால் அவனை சுயநலவாதி எனக் கூறி ஒதுக்கிவிடலாம். ஆனால், ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது அதனால் இப்போது போய்க் காப்பாற்ற முடியாது எனச் சொல்ல முடியுமா? இன்று அரசும் அந்த நிலையில் தான் இருந்து கொண்டு பேசுகிறது. இதனை விபத்து என்று கூறுவதா இல்லை மீனவர் படுகொலை எனக் கூறுவதாவெனத் தெரியவில்லை என்று கூறினார்

வள்ளவிளை மீனவர்கள் சுமார் 8 படகுகளில் கடலுக்குள் சென்று 11 நாட்கள் தேடி 24 மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு அரசு கடற்படைக் கப்பலையும் தேடுதல் பணியில் தாங்கள் காணவில்லை என்கின்றனர் மீனவர்கள். இவர்கள் தேடினோம் என்று சொல்கிறார்களே, ஒவ்வொரு கப்பலிலும் இருக்கும் வாயேஜ் டேட்டா ரிக்கார்டரின் (பயணத் தகவல் பதிவகம்) தகவலை கடற்படை பகிரங்கமாக வெளியிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார் ஆல்பர்ட்.

அவர் மேலும் கூறுகையில், இவர்கள் தேடுவதாகச் சொன்னது அனைத்தும் நாடகமாகத் தான் தெரிகிறது. படகு கவிழ்ந்ததால், கரையை நோக்கி நீந்திக் கொண்டு வந்த மீனவர்கள் 4 பேர் கைகளை அசைத்தும் கடற்படை ஹெலிகாப்டர் அவர்களை மீட்கவில்லை.

புயல் வீசிய அன்று 123 மீனவப் படகுகள் தங்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவி கோருவதற்காக வழங்கப்பட்ட ஆபத்துக்கால எச்சரிக்கை ட்ரான்ஸ்மிட்டர் (Distress Alert Transmitter) பொத்தானை அழுத்தியுள்ளனர் மீனவர்கள். ஆனால் அந்தத் தகவல் தங்களுக்கு 14ம் தேதி தான் வந்து சேர்ந்ததாகக் கூறியிருக்கிறது மீன் வளத்துறை.

ஆபத்துக் காலங்களில் தங்களுக்குத் தகவல் கிடைக்கும் வகையில் செயற்கைக்கோள் அலைபேசி கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்பதற்கு பாதுகாப்புக் காரணங்களை சொல்கிறது அரசு. ஆனால் மீனவர்கள் கேட்பது ஒரு வழியில் மட்டும் பேசக் கூடிய அலைபேசிகளையே, அதில் பாதுகாப்புப் பிரச்சினை வர வாய்ப்பில்லையே. என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1000 படகுகள் ஒரு மாதத்திற்கு தலா 5000 லிட்டர் டீசல் வாங்குகின்றனர். அதன் மூலம் அரசு ஈட்டும் வரி வருவாய் மட்டுமே மாதத்திற்கு சுமார் 5 கோடியே 58 இலட்சம் ரூபாய் ஆகும். இது தவிர உணவுப் பொருள் தொடங்கி பல்வேறு வகைகளில் மீனவர்கள் அதிகமாக அரசுக்கு வரிவருமானம் ஈட்டித் தருகிறார்கள். ஆனால் ஒரு புயலுக்கு முன்னரும் அவர்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. புயலுக்குப் பின்னரும் மீட்புப் பணியில் அரசு ஈடுபடவில்லை. இது மீனவர்களை அழிக்கும் செயல் என்று ஆல்பர்ட் கூறினார்.

அரசின் நிவாரணம் குறித்து கேட்கப் பட்ட போது அதற்குப் பதிலளித்த ஆல்பர்ட், தங்கள் மக்களை பார்க்கக் கூட வராத அரசு, தனது குடும்பத்தாரை இழந்து உண்ணாமல் தவிக்கும் மக்களைப் பார்த்து சாப்பீட்டீர்களா என்று கூட கேட்காத அரசா, நிவாரணம் கொடுக்கப் போகிறது ? எனக் கேள்வி எழுப்பினார்.

மீனவர்களை இந்த அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகத் தெரிவித்த ஆல்பர்ட், கன்னியாகுமரிக்கும், இலங்கைக்கும் இடையே வெட்ஜ்பேங்க் என்ற மீன் அதிகம் கிடைக்கும் பகுதியை தற்போது அந்நிய நாட்டுக் கப்பல்கள் மீன் பிடிக்க இந்த அரசு தாரை வார்த்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். மற்றநாடுகள் தங்களது கடல்பரப்பையும், நிலப்பரப்பையும் விரிவு படுத்த முனையும் போது, நமது நாடு மட்டும்தான் தனது எல்லையை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

பத்திரிக்கையாளர் ரகுமான்

இந்தக் கலந்துரையாடலில் பேசிய தோழர் மருதையன் அவர்கள், விவசாய நிலம் – கடற்கரை, ஆகிய இரண்டையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது அரசு. விவசாயிகளையும், மீனவ மக்களையும் அப்புறப்படுத்துவது தான் அதன் நோக்கம். கடற்கரை நெடுகிலும், சரக்குப் பெட்டக முனையங்கள், துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள் என நிறுவுவது தான் அரசின் திட்டம். இதற்கு ’சாகர் மாலா’ எனப் பெயர் சூட்டியுள்ளது அரசு. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உல்லாச விடுதிகள், தீம் பார்க்குகள் போன்றவற்றை கட்டிக் கொள்ள கேரள கடற்கரைப் பகுதிகளை அவர்களுக்கு அள்ளிக் கொடுக்க திட்டமிடுகிறது அரசு. இதற்காக மீனவ மக்களை கடற்கரையை விட்டு அப்புறப்படுத்தத் துடிக்கிறது அரசு என்று கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ரகுமான் பேசுகையில், மீனவர்களின் மரணம், அரசின் மனதை உலுக்கவில்லை. அதனால் தான் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீண்டு வரவில்லை என நிர்மலா சீதாராமனிடம் மீனவமக்கள் கூறிய போது “பொய் சொல்லாதீர்கள்” என அவர்களை நோக்கிச் சொன்னார். அரசின் எண்ணத்திற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் ? என்று கூறினார்.

சமவெளி மக்கள், மீனவ மக்களுக்காக போராட முன் வராத நிலை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ரகுமான், சமவெளி மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகவே போராட முன்வராத சூழல் தான் இன்றும் நிலவுகிறது எனப் பதிவு செய்தார்.

நிகழ்வு மாலை 6:20 மணியளவில் நிறைவுற்றது. தமிழகமெங்கும் “கண்ணீர்க் கடல்” திரையிடப்படுமென தோழர் மருதையன் தெரிவித்தார். திரையிட ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

– வினவு செய்தியாளர்

மேலும் படிக்க: scroll.in ஆங்கிலப் பத்திரிகையில் “கண்ணீர் கடல்” குறித்து வந்த கட்டுரை:

A documentary on Cyclone Ockhi exposes government apathy towards Kanyakumari’s fisherfolk

 

பணிந்தால் பதவி – சதாசிவம் ! மறுத்தால் மரணம் – ஹர்கிஷன் லோயா !!

1

பணிந்தால் பதவி !  மறுத்தால் மரணம் !!

சோராபுதீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் பின்னே நடந்துள்ள சதிகளை, அவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் அம்பலப்படுத்துகிறது.

குஜராத் மாநில போலீசால் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பய் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு – நவம்பர் 30, 2014 அன்று நள்ளிரவில் நாக்பூரில் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்டது. நீதிபதி லோயாவின் மரணம் குறித்துப் பல்வேறு சந்தேகங்களை அவரது தந்தையும், சகோதரிகளும் தற்பொழுது எழுப்பியுள்ளனர்.

கேரவன் என்ற ஆங்கில இதழின் பத்திரிகையாளர் நிரஞ்ஜன் தாக்லே, லோயாவின் தந்தை, லோயாவின் சகோதரி டாக்டர் அனுராதா பியானி, அவருடைய மகள் மற்றும் லோயா மரணமடைந்த நேரத்தில் அவருக்கு அருகிலிருந்தவர்கள் போன்றோரைக் கடந்த ஓராண்டாகச் சந்தித்து, விவரங்களைச் சேகரித்து, “ஒரு குடும்பத்தின் மௌனம் கலைகிறது – சோராபுதின் வழக்கை விசாரித்து வந்த நீதிபதியின் மரணத்தில் எழும் அதிர்ச்சியூட்டும் விவரங்கள்” என்ற கட்டுரையை கேரவன் இணையதளத்தில் கடந்த மாதம் வெளியிட்டார்.

சோராபுதின் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அமித் ஷாவின் அதிகாரத்துக்கும் இலஞ்சப் பணத்துக்கும் பணிய மறுத்த காரணத்தினால் லோயா கொல்லப்பட்டாரா என்பதுதான் கேரவன் கட்டுரை எழுப்பும் கேள்வி. அதனால்தான், அக்கட்டுரை வெளியானவுடனேயே டெல்லி உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, மும்பய் உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி பி.ஹெச். மார்லபள்ளி ஆகிய இருவரும் லோயாவின் மரணம் குறித்து உச்சநீதி மன்றமோ அல்லது மும்பய் உயர்நீதி மன்றமோ உடனே விசாரிக்க வேண்டும் எனக் கோரினர்.

சோராபுதின் கொலை வழக்கு – சதிகளும் முறைகேடுகளும்

சோராபுதின் குஜராத் போலீசால் அகமதாபாத் நகரில் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். “சோராபுதின் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதியென்றும், அவன் மோடியைக் கொல்வதற்காக குஜராத்திற்குள் நுழைந்ததாகவும், குஜராத் போலீசின் தீவிரவாதத் தடுப்புப் படையினர் அவனைப் பிடிக்க முயன்றபொழுது நடந்த மோதலில் சோராபுதின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்” கூறியது, குஜராத் மாநில அரசு.

டிசம்பர் 28, 2006 அன்று சோராபுதினின் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி குஜராத்-ராஜஸ்தான் மாநில எல்லையையொட்டியுள்ள கிராமத்தில் குஜராத் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது, குஜராத் போலீசு.

இக்கொலைகள் நடந்த சமயத்தில் நரேந்திர மோடி தலைமையில் இருந்த குஜராத் மாநில அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் பா.ஜ.க.வின் இன்றைய தேசியத் தலைவரான அமித் ஷா.

சோராபுதினின் தம்பி ருபாபுதின் தனது சகோதரனின் மரணம் குறித்தும், அவர் இறந்துபோன அதே சமயத்தில் தனது அண்ணி கவுசர் பீ காணாமல் போனது குறித்தும் உச்சநீதி மன்றத்திற்குக் கடிதம் எழுதினார். ருபாபுதினின் கடிதத்தை வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், சோராபுதினின் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.

இவ்விசாரணையில், “சோராபுதின் தீவிரவாதி அல்ல, சிறு குற்றங்களைச் செய்துவந்த கிரிமினல். குஜராத், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமானவன். பா.ஜ.க. தலைவர்களுக்கும் போலீசுக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சோராபுதின் மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதி என்பது கட்டுக்கதை” என்ற உண்மைகள் தெரியவந்தன.

சோராபுதின் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பே, அவனும், அவனது மனைவி கவுசர் பீயும் கூட்டாளி துளசிராம் பிரஜாபதியும் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மூவரும் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டனர். சோராபுதினைக் கொன்ற குஜராத் தீவிரவாத தடுப்புப் படை, கவுசர் பீயைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. பின் மயக்க ஊசி போட்டுக் கொன்று, அவரது சடலத்தை இரகசியமாக எரித்தும் விட்டது. மிச்சமிருந்த ஒரே சாட்சி துளசிராம் பிரஜாபதி என்பதால், அவனையும் சுட்டுக்கொன்றது குஜராத் போலீசு.

2010-இல் உச்சநீதி மன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், “இம்மூன்று படுகொலைகளும் குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க.வின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சாந்த் கடாரியா ஆகிய இருவரின் உத்தரவுப்படியே நடந்தன. அமித் ஷா இப்படுகொலைகள் நடந்த காலம் நெடுகிலும், இக்கொலைகளைத் தலைமையேற்று நடத்திய வன்சாரா உள்ளிட்ட போலீசு அதிகாரிகளோடு நேரடியாகவே தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு, இப்படுகொலைகளை மேற்பார்வையிட்டிருக்கிறார். இக்கொலைகள் தொடர்பாக அமித் ஷாவிற்கும் சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரிகளுக்கும் இடையே ஏறத்தாழ 331 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன” என்பவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமித் ஷா குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

நீதிபதி லோயா மரணத்தின் பின்னணி

வழக்கு விசாரணை குஜராத்தில் நடந்தால் சாட்சியங்கள் கலைக்கப்படலாம் என்ற அடிப்படையில் 2012-ஆம் ஆண்டில் மும்பய் சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இவ்வழக்கை தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜே.டி.உத்பத் என்பவரை விசாரணை நீதிபதியாக நியமித்தது, மும்பய் உயர்நீதி மன்றம்.

நரேந்திர மோடி மே,2014-இல் பிரதமரான பிறகு, இவ்வழக்கைச் சீர்குலைக்கும் சதிகளை சி.பி.ஐ. அரங்கேற்றத் தொடங்கியது. அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க கோரினார். நீதிபதி ஜே.டி.உத்பத் அச்சலுகையைத் தர மறுத்து, ஜூன் 26, 2014 அன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஜூன் 25, 2014 அன்று அவரைத் திடீரென்று இடமாற்றம் செய்தது மும்பய் உயர்நீதிமன்றம். இவ்வழக்கை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவைத் துடைத்துப் போட்டுவிட்டு, இம்மாறுதல் செய்யப்பட்டது. எனினும் இந்த அத்துமீறலை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ளவில்லை.

உத்பத்தின் இடத்தில் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷண் லோயா நீதிபதியாக நியமிக்கப்பட்டார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில்தான் இந்த வழக்கில் தன்னைச் சேர்த்திருப்பதாகவும், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும்” அமித் ஷா கோரினார். இதனை ஏற்க மறுத்த லோயா, டிசம்பர் 15, 2014 அன்று அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அக்.31 அன்று உத்தரவிட்டார். ஆனால், டிசம்பர் முதல் தேதி அவர் உயிருடன் இல்லை.

நீதிபதி லோயாவிற்குப் பின் எம்.பி.கோசாவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னை விடுவிக்க கோரிய அமித் ஷாவின் மனுவை டிசம்பர் 15, 16 ஆகிய இரு தினங்களில் விசாரித்து, டிசம்பர் 30, 2014 அன்று அமித் ஷாவைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார் கோசாவி. அமித் ஷா அரசியல் காரணங்களுக்காகத்தான் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தான் ஒத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டு, அமித் ஷாவை விடுதலை செய்தார் கோசாவி.

இத்தீர்ப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் சி.பி.ஐ. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால்தான், நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சந்தேகங்களும் பூசிமெழுகும் விளக்கங்களும்

நீதிபதி லோயா சக நீதிபதியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நாக்பூருக்குச் சென்ற இடத்தில்தான் திடீரென இறந்து போகிறார். அவரது அகால மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது குடும்பத்தினர், மிக முக்கியமாக லோயாவின் சகோதரியும் மருத்துவருமான அனுராதா பியானி கருதுவதற்கு 16 விதமான ஐயங்களை எழுப்பியிருக்கிறார்கள்.

இந்தத் திருமணத்திற்குச் செல்லும் எண்ணமே லோயாவுக்கு இல்லை. தன்னுடன் பணியாற்றும் இரண்டு நீதிபதிகளின் வற்புறுத்தலின் காரணமாகவே லோயா திருமணத்திற்குச் சென்றிருக்கிறார். அந்த இரண்டு நீதிபதிகளிடமிருந்து விலகியிருக்குமாறு நீதிபதி லோயாவின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

அமித் ஷாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்குமாறு பல்வேறு இடங்களிலிருந்து நிர்பந்தம் கொடுக்கப்படுவதாக நீதிபதி லோயா தனது தந்தை மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, அச்சமயத்தில் மும்பய் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மோஹித் ஷாவே லோயாவைச் சந்தித்து நூறு கோடி வரையில் பணமாகவோ அல்லது மும்பயில் வீடாகவோ தருவதாகப் பேரம் பேசியதாக லோயா தன் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

மேலும் அமித் ஷாவை விடுதலை செய்யும் தீர்ப்பை டிசம்பர் 30-இல் அறிவிக்குமாறும், அன்று வேறொரு முக்கியமான நிகழ்வு தலைப்புச் செய்தியாகிவிடும் என்பதால், அமித் ஷா விடுதலை குறித்த தீர்ப்பை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் மோஹித் ஷா லோயாவிடம் தெரிவித்ததாக லோயாவின் சகோதரி கூறுகிறார்.

அவர் இறந்த பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோசாவியும் டிச.30, 2014-இல்தான் அமித் ஷாவை விடுதலை செய்யும் தீர்ப்பை அளிக்கிறார். அன்றுதான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி விலகும் செய்தி வெளியாகி, அது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக அடிபட, அமித் ஷா விடுதலையான செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு, coronary artery insufficiency காரணமாக இறந்து போனதாக லோயாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த வகை மாரடைப்பு ஏற்படுமென்றும், நீதிபதி லோயாவிற்கு இந்த வகையான நோய்கள் எதுவுமே இல்லையென்றும், தமது சந்ததியில் யாரும் இந்த நோய்களால் பீடிக்கப்பட்டோ, மாரடைப்பு ஏற்பட்டோ இறந்து போகவில்லை என்றும் மறுக்கிறார், மருத்துவரான அனுராதா பியானி.

வெளியூருக்கு வந்த இடத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மையானால், மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்ற தகவலை, லோயாவுடன் இருந்த நீதிபதிகள் லோயாவின் குடும்பத்தினருக்கு உடனே சொல்லியிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் 1 அதிகாலை ஐந்து மணிக்கு லோயா இறந்துவிட்டாரென்ற தகவலைத் தங்களுக்கு அறிமுகமேயில்லாத விஜயகுமார் பார்தே என்ற நீதிபதி தொலைபேசியில் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையிலோ அவர் டிச.1 காலை 6.15 மணிக்கு இறந்து போனதாக கூறப்பட்டிருக்கிறது. கேரவன் பத்திரிகையாளர் நிரஞ்ஜன் தாக்லே நாக்பூர் அரசு மருத்துவமனையில் நடத்திய விசாரணையில், பெயர் வெளியிட விரும்பாத சிலர், அவரது உடல் நவ.30 அன்று நள்ளிரவே மருத்துவமனைக்கு வந்துவிட்டதாகவும், பெயருக்குப் பிரேத பரிசோதனை நடத்தினால் போதும் என மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர்.

இந்த முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையாக மரணமடைந்ததாகக் கூறப்படும் நீதிபதி லோயாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமென்ன? அதற்கான சம்மதத்தை லோயாவின் மனைவி, தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் யாரிடமும் பெறாமல், லோயாவின் தந்தை வழி உறவினர் என நாக்பூரைச் சேர்ந்த பிரசாந்த் ரத்தி என்ற மருத்துவரை செட்டப் செய்து, பிரேதப் பரிசோதனையை நடத்தி, சடலத்தையும் அவரிடம் ஒப்படைத்தது ஏன்?

லோயாவின் மனைவியும் மகனும் மும்பயில் வசித்துவரும் நிலையில், அவரது உடல் குஜராத்திலுள்ள அவரது சொந்த கிராமமான கேட்காவ்னுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவரது சடலம் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்திற்கு யாருடைய துணையுமின்றித் தனியாக அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறுகிறார், அனுராதா பியானி. மேலும், அவரது தலைப்பகுதியில் காயம் இருந்ததாகவும், அவரது சட்டையின் காலர் பகுதியில் இரத்தக் கறை இருந்ததாகவும் கூறும் அவர், இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த தாங்கள் கோரியதாகவும், அதனை லோயாவின் சக நீதிபதிகள் விரும்பாமல் தடுத்துவிட்டதாகவும் கூறுகிறார், அவர்.

லோயாவிடமிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை போலீசுதான் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், லோயாவின் கைபேசியை குஜராத்-லட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஷ்வர் பஹேதி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரன்தான் லோயாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறான். அக்கைபேசியில் அனைத்துப் பதிவுகளும் அழிக்கப்பட்டிருந்தன, “அந்த இரண்டு நீதிபதிகளிடமிருந்து விலகி இருங்கள்” என்ற குறுஞ்செய்தி மட்டும் தப்பியிருக்கிறது.

இந்த சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிரஞ்ஜன் தாக்லே எழுதிய கட்டுரை வழியாக வெளியே வந்துவிட்ட நிலையில், அவற்றுக்குச் சப்பைக்கட்டும் விதத்தில் விளக்கங்கள் தரப்படுகின்றன. லோயாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டவுடனேயே கொண்டுபோய்ச் சேர்த்ததாகக் கூறப்படும் தாண்டே மருத்துவமனையில் ஈ.சி.ஜி. இயந்திரமே வேலை செய்யவில்லை எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், அனுராதா பியானி. அங்கு ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டதாகக் கூறி, அதனின் நகலைத் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். லோயாவிற்கு டிச.1, அதிகாலை 4.00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வெளியிடப்பட்டுள்ள ஈ.சி.ஜி.யில், அது எடுக்கப்பட்ட தேதி நவம்பர் 30 எனப் பதிவாகியிருப்பதோடு, லோயாவின் பெயரும் தவறாக உள்ளது. இவையெல்லாம்  தொழில்நுட்பக் கோளாறு எனச் சமாளித்திருக்கிறார்கள்.

பிரேதப் பரிசோதனைக்கான ஒப்புதலைத் தந்தவர் எங்கள் பெற்றோர் வழி உறவினரே அல்ல என லோயாவின் குடும்பத்தினர் மறுத்துவரும் நிலையில், ஒப்புதலைத் தந்தவர் லோயாவின் தந்தை வழி உறவினரின் உறவினர் எனக் கதை எழுதியிருக்கிறார்கள்.

நீதிபதி லோயாவின் சடலத்தோடு யாரும் வரவில்லை என்கிறார், அவரது சகோதரி பியானி. நீதிபதி லோயா இறந்துபோன நேரத்தில், அவரை வற்புறுத்தி திருமணத்துக்கு அழைத்துச் சென்ற இரு நீதிபதிகள் மட்டுமின்றி, 100 கோடி தருவதாகப் பேசிய மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவும் இருந்ததாக அவர்களே கூறுகின்றனர். ஆனால், தாங்கள் வேறு இரண்டு நீதிபதிகளை அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதால் சடலத்தோடு வரமுடியாமல் போய்விட்டதாகவும் கதை சொல்கிறார்கள். நாக்பூர் போலீசோ, அந்த இரு நீதிபதிகளும் ஆம்புலன்ஸில் லோயாவின் உடலுடன் சென்றதாகச் சாதிக்கிறது.

‘மோடிக்கேத்த’ மூடியாய் நீதிமன்றம்

நீதிபதி லோயா இறந்து போன மூன்றாவது மாதத்திலேயே அவரது அகால மரணம் குறித்து விசாரணை வேண்டுமென லோயாவின் மகன் அனுஜ் மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவிடம் நேரிலேயே கடிதம் கொடுத்தும் அது கமுக்கமாகக் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

அமித் ஷாவை விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிராக மும்பய் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த சோராபுதின் தம்பி ருபாபுதின், ஒரு கட்டத்தில் தனது மேல்முறையீட்டு மனுவைத் தனது வழக்குரைஞருக்கே தெரியாமல் திரும்பப் பெற்றுக்கொண்டார். ருபாபுதின் மிரட்டப்படாமல், இது நடந்திருக்காது. ஆனால், ருபாபுதின் மிரட்டப்படவில்லை என மும்பய் உயர்நீதி மன்றம் விளக்கமளிக்கிறது.

அமித் ஷாவை விடுவித்த தீர்ப்பை மீளாய்வு செய்யவேண்டுமென்று, குஜராத் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகத் தனது பதவியைத் துறந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஷ் மந்தேர் மும்பய் உயர்நீதி மன்றத்திலும், அதன் பின் உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தார். இரு நீதிமன்றங்களும் இதில் தலையிட மூன்றாவது நபருக்கு உரிமையில்லை எனக் கூறி, அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தன.

காந்தி கொலையிலிருந்து இந்து மதவெறி கும்பலை விடுவிக்கும் நோக்கத்தில் அந்த
வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று அபிநவ் பாரத் என்ற அமைப்பின் டிரஸ்டியான பங்கஜ் பட்னிஸ் என்ற “மூன்றாவது நபர்” தாக்கல் செய்த மனுவை அனுமதித்து, இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற ஆலோசகரை (amicus curie) நியமித்துள்ள உச்சநீதி மன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வுதான், ஹர்ஷ் மாந்தேரின் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதை எதிர்த்து அவருடைய கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

தமக்கு உடன்பட்டுக் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குப் பதவியும் சன்மானமும் அளிக்கவும் தமக்கு எதிராகத் துணிந்து நிற்பவர்களைத் தூக்கியெறிய எந்த எல்லை வரை செல்லவும் மோடி-அமித் ஷா கும்பல் தயங்கியதேயில்லை.

துளசிராம் பிரஜாபதி போலிமோதல் கொலை வழக்கில் அமித் ஷா மீது சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராகிவிட்டார்.

குஜராத் முசுலீம் படுகொலைகளில் மோடிக்கு பொறுப்பில்லை என்று  அறிக்கை அளித்த சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் ராகவன், சைப்ரஸ் தூதராகிவிட்டார்.

இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுப் பிணையில் வெளிவந்த பி.பி. பாண்டே குஜராத் போலீசுதுறையின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

அதே சமயம், அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்ட சி.பி.ஐ. நீதிபதி உத்பத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சோராபுதின் போலிமோதல் கொலை வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியன், அமித் ஷாவுக்கும் குஜராத் அரசுக்கும் எதிராக அறிக்கை அளித்ததன் காரணமாக, அவர் மீது சி.பி.ஐ. மூலம் அவதூறு பரப்பி, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவிடாமல் தடுத்தது மோடி-அமித் ஷா கும்பல்.

குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்த உண்மையைக் கூறிய குஜராத்  உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கும் தன்னைத் தீவிரவாதத்தை ஒழிக்க வந்த நாயகனாக காட்டிக்கொள்வதற்கும் 2002 – 2006 காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட போலி மோதல்களை அரங்கேற்றியிருக்கிறது மோடி-அமித் ஷா கும்பல். 2002 குஜராத் படுகொலை மூலம் அம்மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே, 2014-இல் லவ் ஜிகாத் என்ற பொய்யைக் கிளப்பி, முசாபர்பூர் கலவரத்தை நடத்தி உ.பி. நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது, அக்கும்பல்.

அதிகாரத்தைக் கைப்பற்றவும், தக்கவைக்கவும் எந்த எல்லை வரையும் செல்லத் தயங்காத கிரிமினல்தான் மோடி. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தத் தயங்காத சர்வாதிகாரிதான் மோடி. அதன் காரணமாக இறந்து போனவர்களைக் கேலி பேசிய இரக்கமற்ற கொடூரன்தான் மோடி. இத்தகைய கிரிமினலின் ஆட்சியில் நீதி, நியாயத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதைத்தான் லோயாவின் மரணம் எடுத்துக் காட்டுகிறது.

-செல்வம்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

பாரி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயி கமலாவின் போராட்டம் !

0
நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை என்றும், என் மகனும் அப்படித்தான்

மிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்கள் உரிமைக்காக போராடி வருவது அனைவரும் அறிந்ததே. கதிராமங்லம், நெடுவாசல் போன்ற விவசாய டெல்டா பகுதிகளில் அனுதினமும் விவசாயிகள் கொதித்தெழுந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

கமலாவும் அவரது மகன் இளவேந்தனும்

காவேரி பாயும் டெல்டா பகுதியான கரூர் மண்மங்கலம் தாலுக்கா பகுதிகளில் நெல், கரும்பு, வாழை போன்ற விவசாயம் செய்வது வழக்கம். இந்நிலையில் மண்மங்கலம் கிழக்கூரைச் சேர்ந்த பெண் விவசாயி கமலாவும் அவரின் மகன் இளவேந்தன் தன் சொந்த நிலத்தில் விளைவித்த கரும்பை வெட்டுவதற்கு புகளுர் பாரி சர்க்கரை ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய சம்பவம் சமீபத்தில் அனைத்து தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளியானது அனைவரும் அறிந்ததே!

இந்நிலையில் மக்கள் அதிகாரம் சார்பாக பாதிக்கப்பட்ட ஏழை பெண் விவசாயி கமலாவின் குடும்பத்தினரை சந்தித்து பிரச்சினை குறித்து கேட்டறிந்தோம். கிழக்கூரைச் சேர்ந்த பெண் விவசாயி கமலாவின் கணவர் தங்கவேல் இறந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தனது மகன் இளவேந்தனை கல்லூரியில் படிக்க வைத்து, கண்பார்வையற்ற தனது மாமியாரை பராமரித்து சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்.

தனக்கு சொந்தமான 3 ஏக்கரில் 1 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். 3-வது போகம் கரும்பு பயிரிட்டு வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு விற்பனை செய்ய கடந்த 21.12.2017 அன்று வெட்டும் பொழுது புகளுர் பாரி சர்க்கலை ஆலை ஊழியர்கள் மற்றும் கரும்பு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கமலாவின் கரும்பு காட்டிற்கு வந்து கரும்பை வெட்டக் கூடாது என்றும், கமலாவின் நிலத்தில் பயிர்செய்யப்பட்ட கரும்பு மேற்படி சர்க்கரை ஆலைக்கு சொந்தமானது என்றும், அதற்குண்டான ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து செய்துள்ளீர்கள் என்றும் கூறி கரும்பை வெட்ட விடாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

அப்பொழுது பெண் விவசாயி கமலா மூன்றாவது போகத்திற்கு மேற்படி சர்க்கரை ஆலையுடன் தான் எந்தவித ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்றும், கையெழுத்து என்னுடையது அல்ல என்றும், போலியான ஆவணம் தயார் செய்து, போலியாக கையெழுத்து போட்டு, நான் ஏழை விவசாயி என்பதால், என் கரும்பை அபகரிக்க நினைக்கிறீர்கள் என்று கூறி போராடியுள்ளார். மேலும் வலுக்கட்டாயமாக அவரின் சொந்த நிலத்திலிருந்தே கமலாவை வெளியேற்றியுள்ளனர்.

கமலாவின் நிலத்தில் பயிரிடப்பட்டு வெட்டாமல் கிடக்கும் கரும்பு

மேலும் கமலா கூறும்பொழுது, நாங்கள் 1 மற்றும் 2-வது போக கரும்பு வெட்டுவதற்கு மட்டுமே பாரி சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். 3-வது போக கரும்பு வெட்ட மேற்படி ஆலையுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறியது மட்டுமல்லாமல், பாரி சர்க்கரை ஆலையின் அடாவடித்தனத்தையும், முறைகேடுகளையும் தோலுரித்து காட்டுகிறார் கமலா. கரும்பு ஒரு டன்னுக்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ.2750.00 ஆனால் பாரி சர்க்கரை ஆலையோ டன் ஒன்றுக்கு ரூ.2333.00 மட்டுமே தருகிறார்கள். அதோடு 12 மாதத்தில் வெட்ட வேண்டிய கரும்பை 14 மாதங்கள் கழித்த பின்னரும் கரும்பை வெட்டாமல் பாரி நிறுவனம் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றும், கரும்பு நன்கு விளைந்த நிலையில் வெட்டாமல் அது காய்ந்து சருகாகும்போதுதான் மேற்படி நிறுவனம் வெட்டுகிறது. இதனால் கரும்பில் உள்ள சர்க்கரை அளவு குறையாது… கரும்பின் எடை குறைந்து எங்கள் வயிறுதான் எரிகிறது… எனக்கூறி வேதனையடைகிறார் கமலா.

மேற்படி பாரி சர்க்கரை ஆலை வெட்டிய கரும்பை காலை முதல் மாலை வரை வெயிலில் அடுக்கி வைத்து மாலைக்கு மேல் லோடு செய்து எடுத்துச் செல்வதால், கரும்பின் எடை குறைந்து, கரும்பு மெலிந்து விடுகிறது. மேலும் கரும்பை எடை போடும்பொழுது அதனை பார்க்க எங்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் சொல்லும் எடைதான். மேலும் முதல் போகம் கரும்பை வெட்டி 10கி.மீ தொலைவில் உள்ள சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் சென்றதாகவும், இரண்டாவது போகம் வெட்டியபோது 60கி.மீ தொலைவில் உள்ள பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் சென்று காலை முதல் கரும்பை டிராக்டரிலேயே வைத்து, அதன்பின் தான் சர்க்கரை ஆலைக்குள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தற்போது 200கி.மீ தொலைவில் உள்ள ஆலைக்கு கரும்பை எடுத்துச் சென்று எடைபோடுவதால் கரும்பின் எடை குறைந்து எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவுப்படி, 30 கி.மீ சுற்றளவில் மட்டுமே கரும்பை கொள்முதல் செய்துகொள்ள வேண்டும், விவசாயிகளை அலைக்கழிக்க கூடாது என பிறப்பித்த உத்திரவினை மீறி பாரி சர்க்கரை ஆலை செயல்படுகிறது.

முருகப்பா நிறுவனத்தின் பாரி சர்க்கரை ஆலை

2வது போகம் கரும்பை வெட்டிய பின்னர் அரசு நிர்ணயித்த ஒரு டன்-க்கு ரூ.2750 வீதம் கணக்கு பார்த்தால் முதல் இரண்டு போகத்திற்கு மேற்படி பாரி சர்க்கரை ஆலை தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.58000 தனக்கு வரவேண்டியுள்ளது என்றும், அதனை தராமல் இன்றுவரை எங்களை அலைக்கழித்து ஏமாற்றி வருகிறார்கள் எனக்கூறினார். மேலும் ஏழை விவசாயிகள் மேற்படி ஆலையுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யாத நிலையில், ஒப்பந்தம் செய்துள்ளதாக பொய்யான ஆவணங்களை தயாரித்து எங்கள் கரும்பை அபகரித்து கொள்கின்றனர் என்றும், பணக்கார விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அவர்களாகவே கரும்பை வெட்டினாலும் ஆலை நிறுவனம் கண்டுகொள்வதில்லை என்றும், மேற்படி பாரி நிறுவனம் ஏழை விவசாயிகளை துன்புறுத்தியும் அரசியல் செல்வாக்குள்ள பணக்கார விவசாயிகளை கண்டுகொள்ளாமலும், பராபட்சமாக நடந்து கொள்கிறது என ஆதங்கப்படுகிறார் கமலாவின் மகன் இளவேந்தன்.

மேலும் கரும்பு காய்ந்து போனால் ஆலையின் சார்பில் எங்களுக்கு காப்பீடு தருவதாக கூறி எங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கரும்பு காய்ந்தவுடன் இழப்பீடு கேட்டால் 100 ஏக்கர் 200 ஏக்கர் என மொத்தமாக காய்ந்தால்தான் காப்பீடு தருவோம், ஒரு ஏக்கர், 2 ஏக்கருக்கு நீங்கள் தான் பொறுப்பு என தட்டிக்கழிக்கிறார்கள். இதனை அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. கரும்பு வெட்டிய பிறகு எங்களுக்கு மொத்த தொகையும் கிடைக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது. இதனால் நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், எங்கள் குழந்தைகளுக்கு உரிய காலத்திற்குள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மேலும் கடன் பெறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது என குமுறுகிறார் கமலா. ஆகையால் இனிமேலும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளாத ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் கட்டுப்படமாட்டோம் என்கிறார் கமலா.

நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை

21.12.2017 அன்று சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு இன்ஸ்பெக்டர் வந்து, உங்களுக்கு குறையிருந்தால் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று கூறியதால், 23.12.2017 அன்று கமலாவும், அவரின் மகன் இளவேந்தனும் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் இல்லாத காரணத்தால் அவரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்துள்ளனர். மேற்படி மனுவில் 3-வது போகத்திற்கு தாங்கள் பாரி சர்க்கரை ஆலையுடன் எந்தவித ஒப்பந்தமும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும், அந்த கையெழுத்தும் தங்களுடையது அல்ல என்றும், எங்கள் நிலத்தில் விளைவித்த கரும்பிற்கு எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, எங்கள் விருப்பப்படி வெல்லம் தயார் செய்ய கரும்பை வெட்டுவதற்கு இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர். இந்த அரசு நடவடிக்கை எடுக்காது என்பதும் எங்களுக்கு தெரியும், அதிகாரிகள் கூறியதால் மனு கொடுத்தோம் என்று கூறினார் இளவேந்தன்.

விவசாயி கமலாவின் வீடு

எங்கள் கரும்பு காயும்போதும், நாங்கள் கஷ்டப்படும்போதும், பாரி நிறுவனம் எங்களை துன்புறுத்தியபோதும் இந்த அரசாங்கம் தலையிடவில்லை. அதனால்தான் நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை என்றும், என் மகனும் அப்படித்தான் என்கிறார் கமலா. இறுதியாக 27.12.2017-ம் தேதி புதன் கிழமை எங்கள் விளைநிலத்தில் உள்ள கரும்பை வெட்டப்போவதாகவும், “எவன் தடுத்தாலும் எங்கள் கரும்பு, எங்கள் மண்ணை விட்டுச் செல்லமாட்டோம்” இரவு பகல் பார்க்காமல் லாரியில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி நல்ல விளைச்சல் செய்வதால் தானே பாரி சர்க்கரை ஆலை வெட்ட வருகிறது. காயந்திருந்தால் எவன் வெட்டவருவான் ? பாரி நிறுவனத்திற்கு ஒரு துண்டு கரும்பக்கூட வெட்ட அனுமதிக்க மாட்டோம். மீறி வெட்ட முயற்சித்தால் என்னையும் என் மகனையும் வெட்டிவிட்டு கரும்பை வெட்டிட்டு போகட்டும் என மன உறுதியுடன் இருக்கிறார் எதிர்வரும் பிரச்சினையை களத்தில் சந்திக்க தயாராக உள்ளார் கமலா.

ஆம்! உண்மைதான், இது ஏதோ ஒரு கரும்பு விவசாயி கமலா குமுறல்கள் மட்டுமல்ல, உழைத்து வாழும் விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உண்டான கோபமும், மன உறுதியும் ஒட்டுமொத்த தமிழகத்தில் இந்தியாவில் தன் நிலத்தின் மீது விளையும் பொருளுக்கு தானே சொந்தக்காரன் என்று ஆளுமையோடு வரும் போராட்டக் குரல் !…

போராட்டக் குரலுக்கு தோள் கொடுப்போம் !
விவசாயிகளை காப்போம் !!
விளை நிலத்தின் மீதான நமது உரிமையை நிலைநாட்டுவோம்!!!

தகவல்
மக்கள் அதிகாரம், கரூர்
செல் – 97913 01097

 

உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை ! கருத்துப் படம்

3

32 நபர்களுக்கு உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை

”நாங்க எல்லாம் அப்பவே…    பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சோம்”னு சொல்லி…
இனி, கல்ல எடுத்துதான் கண்ண நோண்ட போராய்ங்க

படம் : வேலன்

இணையுங்கள்:

 

ரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பு : கருத்துக் கணிப்பு

27

ஆர்.கே.நகர் அத்தியாயம் முடியும் தறுவாயில் அடுத்த ‘பரபரப்பு’ வந்து விட்டது. வரும் டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவது பற்றி திருவாளர் ரஜினி அறிவிக்கிறாராம். இலண்டன் பிபிசி முதல் தில்லி என்டிடிவி வரை அலச ஆரம்பித்துவிட்டார்கள். என்றால் தமிழின் நடுப்பக்க கருத்து கந்தசாமிகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ரஜினியின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 66, 65, 64……….50 பிறந்த நாட்களில் என்னென்ன பேசினார்களோ அவையே சலிக்காமல் மீண்டும் புதிய மேக்கப்பில் வருகின்றன.

டிசம்பர் 26 முதல் ஆறு நாட்களுக்கு அடையாள அட்டை வைத்துள்ள ஆறு மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கிறாராம். புகைப்படமும் எடுக்கிறாராம். ரஜினியின் சமீபத்திய அரசவைப் புலவரான தமிழருவி மணியன் இந்த நாட்களின் திரைக்கதையை எழுதியிருப்பார் போலும்.

உதவி இயக்குநர்கள் விதந்தோதும் இயக்குநர் மகேந்திரன் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அவரும் ரஜினியைப் போன்ற தலைவர் யாருமில்லை, அவருடைய அறிவிப்பிற்காக காத்திருப்பதாக பேசியிருக்கிறார்.

பிறகு பேசிய ரஜினி “காலா படப்பிடிப்பு, மழை, மனம் சரியில்லாத காரணத்தால் ரசிகர்களை சந்திப்பது தள்ளிப்போனது” கூறியிருக்கிறார். மனம் சரியில்லாத காரணத்தால் காலா படப்பிடிப்பு ரத்தாகவில்லை, ரசிகர் சந்திப்புதான் ரத்தாகியிருக்கிறது. முன்னது பணம், பின்னது அடிமைத்தனம் என்பதால் விளக்கம் தேவையில்லை.

சென்ற முறை போர், வீரம் என்று ஆக்சன் ஹீரோ வேடம் போட்டவர் இந்த முறை, வியூகம், கஷ்டம் – நஷ்டம், தயக்கம் என ‘அறிவு’ வேடம் போடுகிறார்.  இறுதியில் வரும் 31 அன்று அரசியலுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் குறித்து அறிவிக்கப் போவதாக மட்டும் கூறியதாக தனிச்சிறப்பாக விளக்கியிருக்கிறார். இதை சாதாரண பாப்பையா பாணியில் ஆய்வு செய்தாலும், அவர் அரசியலுக்கு வரவில்லை என பொருள் கொள்ளலாம்.

எனினும் வரும் நாட்களில் பல்வேறு நிலைய வித்வான்களின் வாசிப்போடு ரஜினி அரசியல் பற்றி ஊடகங்களில் பீறாய்ந்து பேசப்படும். காதுகள் கவனம்.

இன்றைய கருத்துக் கணிப்பு

ரஜினியின் டிச 31 அறிவிப்பிற்கு என்ன காரணம்?

  • காலா – எந்திரன் 2.0 பட மார்கெட்டிங்
  • கமலுக்கு தான் குறைவில்லை என்று காட்ட
  • அட போங்கப்பா வினவுக்கு வேறு பிரச்சினை கிடைக்கவில்லை
  • தமிழருவி மணியனின் மாபெரும் சதித் திட்டம்
  • ரசிகர்களை தொடர்பில் வைத்திருக்க வேறு நாதியில்லை
  • சலிப்பூட்டும் நாடகம்
  • தமிழக மக்களின் முட்டாள்தனத்தில் அவ்வளவு நம்பிக்கை

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

உத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் !

0
மாதிரிப்படம்

சுமன் தேவி படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார். ஆனால் சரிந்து விழுந்துவிட்டார். அவரது மருமகள்கள் வேலைகளில் முழுமூச்சாக இருக்க அவரது குழந்தைகளோ விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒரு மூங்கில் கழியை பற்றிக்கொண்டு தடுமாறி மெதுவாக எழுந்து நின்றார். எட்டுக் குழந்தைகளுக்கு தாயாகவும் மற்றும் ஒரு பாட்டியாகவும் இருக்கும் 38 வயதே நிரம்பிய அவர் 11 -வது முறையாக கருவுற்றிருக்கிறார்.

சுமன் தேவி

உஷா தேவி, ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர் (Accredited Social Health Activist – ASHA). சுமன் தேவி வசிக்கும் உத்திரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த சலர்பூர் கிராமத்தில் ஒரு ஆஷாவாக(ASHA) அவர் பணி புரிகிறார். இந்தியாவின் சுகாதார அமைப்பைப் பொறுத்தவரையில், கருவுற்றப் பெண்களின் உடல்நலத்தை கவனிப்பது, அவர்களுக்கு அரசு அளிக்கும் விலையில்லாப் பொருட்களையும் மருந்துகளையும் கொடுப்பது, அருகாமை மருத்துவமனையில் நான்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதை உறுதி செய்வது மற்றும் அங்கு மகப்பேறுக்காக அழைத்து செல்வது ஆகியவை ஒரு ஆஷா ஊழியரின் பணிகளாக இருக்கிறது.

சுமன் தேவி கருவுற்றிருப்பது உஷா தேவிக்கு தெரியாது. கருவுற்றப் பெண்களின் பெயர்கள் இருக்கும் பதிவேட்டைத் தவறான இடத்தில் வைத்துவிட்டதாக அவர் கூறினார். “அவர் கருவுற்றதை அறிந்திருந்தால் இரும்புச் சத்து (இரும்பு ஃபோலிக் அமில) மாத்திரைகளை அவருக்கு அளித்திருப்பேன்” என்கிறார்.

கர்ப்ப கால இரத்த சோகை (maternal anaemia), எடைக்குறைவாக குழந்தை பிறத்தல் மற்றும் குறை பிரசவம் ஆகியவற்றை தடுப்பதற்காக கருவுற்றப் பெண்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

சுமன் தேவியும் தன் பங்கிற்கு ஆஷா ஊழியரை சந்திக்கவில்லை. அவர் கருவுற்ற அனைத்து காலத்திலும் கூடுதலாக (மருத்துக்கள் உள்ளிட்ட) எதையும் எடுத்துக் கொள்ளவில்லை, மருத்துவர் எவரையும் அவர் பார்க்கவில்லை அல்லது சிசுவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்து பார்க்கவுமில்லை. சலர்பூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் தான் மருத்துவமனை உள்ளது. கருவுற்றப் பெண்களை மருத்துமனைக்கு அழைத்து சென்று மகப்பேறு முடிந்ததும் குழந்தையுடன் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்துவிடும் உத்திரப்பிரதேச அரசின் மருத்துவ ஊர்தி சேவையை அவர் அறிந்திருக்கவில்லை. மேலும் மருத்துவ ஊர்தி சேவையைப் பெறுவதற்கு கைப்பேசியும் அவரிடம் இல்லை.

இப்படியான மருத்துவ வசதிகள் இருப்பது பொதுவாக உத்திரப்பிரதேசத்தின் தெராய் பகுதி பெண்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பெண்களின் பேறுகால மரணங்கள் மற்றும் குழந்தை மரணங்களின் எண்ணிக்கை தெராய் பகுதியில் இருக்கும் பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்களைப் போல இந்தியாவில் வேறெங்கிலும் பார்க்க முடியாது. பேறுகாலத்தில் சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் பிறப்பிற்கு 167 பெண்கள் மரணிக்கிறார்கள். ஆனால் ஆண்டு சுகாதார ஆய்வு 2012 – 13 -ன் படி தேவி பதான் பகுதியிலோ பேறுகால மரணங்கள் இலட்சத்திற்கு 366 ஆக இருக்கிறது.

தேசிய குடும்ப நல ஆய்வு 2015 – 16 -ன் படி பிறந்து ஒரு ஆண்டிற்குள் இந்திய அளவில் சராசரியாக ஆயிரத்துக்கு 41 குழந்தைகள் இறக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் தான் நாட்டிலேயே மிக அதிகமாக குழந்தைகள் இறக்கின்றன. அதாவது ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 64 குழந்தைகள் இறக்கின்றன.

குழந்தைகளின் இறப்பும் ஈன்ற தாயின் இறப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது:

பன்முறை கருத்தரித்த ஊட்டச்சத்து குறைபாடுடைய தாய் ஊட்டச்சத்து குறைபாடுடைய மகவையே ஈன்றெடுப்பார். இது தாயையும் மகவையும் சேர்த்தே பாதிக்கிறது.

பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்கள் தான் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிலேயே கீழ்மட்டத்தில் இருக்கும் மாவட்டங்கள். இது மென்மேலும் அப்பகுதிகளின் தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.

கோரக்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 2017, ஆகஸ்டு மாதத்தின் இரண்டே நாட்களில் 30 குழந்தைகள் மடிந்தன – இது போன்று எதாவது கடுமையாக நடந்தாலொழிய இந்த நெருக்கடி நிலை வெளியே தெரியாது. கவனக்குறைவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துமனைகளின் மோசமான நிலையில் அல்ல மாறாக அடிப்படை மருத்துவ வசதிகள் கிராமங்களில் இல்லாததில் தான் இருக்கிறது உண்மையான பிரச்சினை.

மாதிரிப்படம்

குழந்தை இறப்புகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் ஏன் தோல்வி அடைகின்றன என்பதற்கு கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் தெராய் பகுதியிலிருந்து வரும் இந்த தொடர் அறிக்கைகள் ஒரு நெருக்கமான தோற்றத்தை தருகின்றன. முறையான சுகாதார அமைப்பிற்குள் கருவுற்றப் பெண்களை கொண்டு வர கையாலாகாத அரசாங்கத்திடம் இருந்து தான் இந்த தோல்வி தொடங்குகிறது.

குழந்தை பிறப்பு மற்றும் இறப்புகள்:

பஹ்ரைச்சின் மாவட்ட அரசு மருத்துவமனையில் 2017, அக்டோபர் மாதத்தில் 49 குழந்தைகள் மடிந்தன. பெரும்பாலான பெண்கள் வீடுகளிலேயே குழந்தைகளை பெறுகிறார்கள். முடிவில் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைபாட்டு பிரச்சினையான ஆஸ்பிக்சியாவினால்(Aphyxia) குறிப்பாக மகப்பேறு சமயத்தில் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துவரும் நேரத்திற்குள் பாதி போராட்டம் முடிந்து விடுகிறது என்று குழந்தைகள் மருத்துவரான கே.கே.வர்மா கூறினார்.

சுமன் தேவியின் குழந்தைகள் அனைத்தும் வீட்டிலேயே பிறந்திருந்தன மேலும் அதில் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உடனடியாக இறந்து விட்டன. குழந்தைகளின் இறப்பிற்கான எந்த பதிவுகளும் கிடையாது மேலும் அவை எப்படி மடிந்தன என்று யாருக்கும் தெரியாது. “வீட்டில் குழந்தைகள் ஒருவேளை இறந்து விட்டால் குடும்பத்தார் வெறுமனே இறுதிச்சடங்கை செய்கிறார்கள்” என்கிறார் ஆஷா ஊழியர் உஷா தேவி. மகப்பேறின் போது பெண்கள் பலரும் குழந்தைகளும் இறக்கிறார்கள் ஆனால் அனைத்தையுமே நாங்கள் தெரிவிக்க முடியாது. ஏனெனில், மிகவும் தாமதமாக தான் சில நேரங்களில் எங்களுக்கு இது தெரிய வருகிறது.

தேசிய குடும்ப நல ஆய்வின் படி பொது நல மருத்துவமனைகளுக்கு செல்லாத 70 விழுக்காடு பெண்கள் பேறுகால பராமரிப்பை (பேறுகால உடல்நல கவனிப்புகள்) பெறுவதில்லை. பஹ்ரைச்சில் வெறும் 4 விழுக்காட்டு பெண்கள் மட்டுமே பேறுகால பராமரிப்பை பெறுகிறார்கள்.

ஒரே ஆஷா ஊழியர், பல்வேறு பணிச்சுமைகள்!

பல்வேறு வகையான சேவைகளுக்கு ஒரேயொரு ஊழியரை அதீதமாக சார்ந்து இருப்பது இந்திய சுகாதார துறையின் ஒரு பெரிய பலவீனமாகும். கருவுற்றப் பெண்களைப் பதிவு செய்வது, மருத்துவமனையில் மகப்பேறை உறுதிச்செய்தல், பிறந்த குழந்தைகளின் உடல்நலத்தை கண்காணித்தல், ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளை பகிர்தல் உள்ளிட்ட பணிகளை உஷா தேவி போன்ற ஆஷா ஊழியர்கள் செய்கிறார்கள். மேலும் அங்கன்வாடி ஊழியர்களும் துணை மருத்துவ தாதிகளும்(Auxiliary Nurse Midwives) ஊட்டச்சத்து திட்டங்களுக்காக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவதற்கும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும் இவர்கள் உதவி செய்கின்றனர்.

“வெளிநாடுகளில், குறிப்பிட்ட சேவைகளை அளிப்பதற்கு துறைசார் திறமை கொண்ட ஊழியர்கள் இருக்கிறார்கள்” என்று லக்னோவில் உள்ள டாக்டர் இராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மூத்த மகளிர் மருத்துவரான யசோதரா பிரதீப் கூறினார். “இந்தியாவில், அனைத்து உடல்நல குறிப்புகள், கருத்தடை, தாய்ப்பால் கொடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நோய்த்தடுப்பு குறித்த அனைத்தையும் ஆஷா ஊழியர் ஒருவரே விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று மேலும் கூறினார்.

தன்னுடைய ஆற்றலையும் நேரத்தையும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் மட்டும் செலுத்த முடியாத ஒரு ஆஷா ஊழியரால் பொது சுகாதார செய்திகளை அவர் வேலை பார்க்கும் சமூகம் முழுக்க திறம்பட கூற முடியாது என்று பிரதீப் வாதிடுகிறார்.

ஆஷா ஊழியர்களுக்கான பொறுப்புகள் பலவாக இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்னவோ சொற்பம் தான். குறைவான ஊதியம் மற்றும் ஊதியம் தாமதமாதலை எதிர்த்து 2017, மே மதம் ஆஷா ஊழியர்கள் உத்திரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். சில மாநிலங்கள் ஆஷா ஊழியர்களுக்கு ஓரளவிற்கு ஊதியம் கொடுக்கின்றன. ஆனால் செய்யும் சேவைகள் மற்றும் கையாளும் நபர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான ஊக்கத்தொகையை ஊதியமாக கொடுக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று.

சான்றாக, கருவுற்றப் பெண்களுக்கு அனைத்து டெட்டானஸ் தடுப்பூசி மற்றும் போலிக் அமில மாத்திரைகள் கிடைப்பதையும், நான்கு பேறுகால உடல்நல பரிசோதனைகளை எடுப்பதையும் மற்றும் மருத்துவமனையில் குழந்தை பிறப்பையும் உறுதி செய்தால் தான் ஒரு ஆஷா ஊழியருக்கு 600 ரூபாய் கிடைக்கும். மறுபுறம் குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஒரு ஆணை சம்மதிக்க வைத்தால் 400 ரூபாயும் ஒரு பெண்ணை சம்மதிக்க வைத்தால் 300 ரூபாயும் ஊக்கத்தொகையாக கிடைக்கும்.

“ஊக்கத்தொகை அடிப்படையிலான இந்த அணுகுமுறை காரணமாக அவர்கள் அதிகபட்ச பணத்தை பெறும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறார்கள்” என்று பிரதீப் கூறினார்.

மேலும் ஆஷா ஊழியர்களின் வெளிப்படையான பலன்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது மாறாக அவர்களின் முயற்சிக்கு அல்ல. “சில நேரங்களில் தடுப்பூசி போடுவதற்கும் மகப்பேறுக்காக மருத்துவமனை செல்வதற்கும் தாய்மார்களை(அல்லது கருவுற்றப் பெண்களை) சம்மதிக்க வைக்க நாங்கள் கடுமையாக முயன்றாலும் அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். அதனால் எங்களது முயற்சிகளுக்கு எவ்வித ஊதியமும் கிடைப்பதில்லை” என்று கூறினார் உஷா தேவி. அதனால் பல ஆஷா ஊழியர்கள் அதிகபடியான வேலைகள் எதுவும் செய்வதில்லை என்று மேலும் கூறினார்.

உஷா தேவி மாதமொன்றிற்கு சராசரியாக 500 ரூபாய் சம்பாதிக்கிறார். சில மாதங்களில் அதுவும் இல்லை.

பரிசோதனைகளுக்காகவோ அல்லது மகப்பேறுக்காகவோ மருத்துவமனைக்கு செல்ல பெண்களை சம்மதிக்க வைப்பதும் சில நேரங்களில் நடப்பதுண்டு. அனால் சுகாதார அமைப்பானது இருவரையும் ஏமாற்றி விடுகிறது. சான்றாக விலையில்லா மருத்துவ ஊர்தி சேவை அடிக்கடி வேலை செய்வதில்லை.

உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கு கருவுற்றப் பெண்களையும் பிறந்த குழந்தைகளையும் ஏற்றி செல்ல 2,270 மருத்துவ ஊர்திகள் உள்ளன. இந்த சேவையைப் பெற விரும்பும் பெண்கள் அவசர எண் 102 -யை தொடர்பு கொள்ள வேண்டும். பிற அனைத்து மருத்துவ நெருக்கடிகளுக்கும் மருத்துவ ஊர்தி அவசர எண் 108 -யை தொடர்பு கொள்ள வேண்டும். அவசர எண் 108 -ன் கீழ் 1,488 மருத்துவ ஊர்திகள் செயல்படுகின்றன. “அவசர எண் 108 -யை கருவுற்றப் பெண்கள் அழைத்தால் போதும் மருத்துவமனைக்கு அவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்” என்று உத்தரபிரதேச மருத்துவ ஊர்தி சேவையின் பொறுப்பாளரான மருத்துவர் பி.கே. ஸ்ரீவஸ்தவ் கூறினார்.

மிக அதிகமான அழைப்புக்களாலோ அல்லது அலைப்பேசி சமிக்ஞை எதுவும் கிடைக்கவில்லை என்பதாலோ மருத்துவ ஊர்திகள் சில நேரங்களில் கிடைக்காது என்று ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

பெரும்பாலான உத்திரப்பிரதேச பெண்களுக்கு அவசர எண் பற்றி தெரியும் என்று வாதிட்டார் ஸ்ரீவாஸ்தவா. ஆனால் ஸ்க்ரோல் இணையதளம் நடத்திய கள ஆய்வின் படி பெரும்பாலான பெண்களுக்கு அப்படி ஒரு வசதி இருப்பது பற்றி தெரியாது.

மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல மருத்துவ ஊர்தி சேவை கிடைத்தாலும் ஊழல் மற்றும் பிற சவால்களால் வீட்டில் மகப்பேறு பார்ப்பதையே ஸ்க்ரோல் சந்தித்த பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். “மருத்துவமனைக்கு நான் சென்ற போது 200 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை பார்ப்பேன் என்று ஒரு செவிலியர் கூறியதாக” நகினா கூறினார். குழந்தைக்கு உடை வாங்க வைத்திருந்த பணத்தில் இருந்து செவிலியருக்கு தன்னுடைய கணவர் பர்கத் அலி பணம் கொடுத்ததாக மேலும் கூறினார்.

நகினா

மருத்துவமனை அதிகாரிகள் இந்த ஊழலை அறிந்திருக்கிறார்கள். ஆனால் அதை எதிர்ப்பதில் கையறு நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். “யாராவது புகார் செய்தாலும் மருத்துவமனை ஊழியர்கள் பணத்தை வாங்கியதற்கும் கேட்டதற்கும் சான்றுகள் இல்லை” என்கிறார் பால்ரம்பூரின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கன்சன்யாம் சிங். “ஒருவேளை நான் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்தால் என்னுடைய தலைவலி இன்னும் அதிகரிக்கும். ஏனெனில் இங்கே ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே இப்போது எங்களால் வழங்கப்படும் சிறு அளவிலான சேவையும் கூட இதனால் நிறுத்தப்படும்” என்று மேலும் கூறினார்.

அரசு மற்றும் சுகாதார அமைப்பை இந்த சமூகம் நம்பவில்லை என்பதை ஸ்ரீவாஸ்தவா ஒப்புக்கொண்டார். இது ஆஷா ஊழியர்கள் தங்களது வேலைகளை நிறைவேற்றுவதை கடினமாக்குகிறது. சான்றாக, சப்ருன் பேகம் கருவுற்றிருக்கும் காலத்தில் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லவில்லை. மேலும் இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. “சர்கார் கி டாவை சே அஸர் நஹி பாடா,” என்று அவர் கூறினார். (அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருந்துகளால் எந்த பயனும் இல்லை.)

ஆஷா ஊழியர்கள் ஒரு பெரிய சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டியிருப்பதால் தனிநபர்களிடம் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே இது சமூகத்திடம் அவநம்பிக்கையை மேலும் வளர்க்கிறது. ஒவ்வொரு சுகாதார ஊழியரும் 1000 பேர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான ஆஷாக்கள் அதை விட அதிகமான மக்களை கவனிக்கின்றனர். சான்றாக, உஷா தேவி 1,400 பேர்களை கவனித்துக் வருகிறார்.

ஆஷா ஊழியரின் மதமோ சாதியோ சில நேரங்களில் சவாலாக இருக்கிறது என்று உஷா தேவியின் மேற்பார்வையாளரான பூசாம் சர்மா கூறினார். “முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் இந்து ஆஷா ஊழியர் ஒருவர் சென்று அவர்களை சம்மதிக்க வைப்பது சவாலானது” என்று அவர் மேலும் கூறினார்.

கைவிடப்பட்டு விட்டனரா?

சுமன் தேவி போன்ற கருவுற்றப் பெண்களுக்கு சுகாதார பராமரிப்பு முறையின் சுமூகமான செயல்பாடு என்பது வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான வேறுபாடு ஆகும். தன்னுடைய 11-வது கருவை சுமந்திருக்கும் நிலையில் சுமன் தேவி பிழைக்காமலும் போகலாம். “அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார்” என்று அந்த ஆஷா ஊழியர் கூறினார். “லக்டா நஹின் கே ஈ பர் பேஷ்கி” (ஏன் என்று எனக்கு தெரியவில்லை). என்று மேலும் கூறினார்.

மருத்துவ ஊர்தி சேவை, அருகமை அல்ட்ராசவுண்ட் சோதனை வசதி மற்றும் மருத்துவமனை மருத்துவர் – இவற்றை நம்பி தான் மகப்பேறுக்காக செல்லும் போது சுமன் தேவியின் உயிர் இருக்கிறது. ஆனால் இவற்றில் எதிலுமே உறுதி கிடையாது. (ஏனெனில்) முரண்பாடுகள் அனைத்தும் தெளிவாக அவருக்கு எதிராகவே உள்ளது.

– தமிழாக்கம் : சுந்தரம்

மூலக் கட்டுரை :

 

நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்

0

இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19 -ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். இதற்கு மாற்று சோசலிசமே!

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் எஸ்.பாலன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

வம்பர் புரட்சிக்குப் பின், ரஷ்யாவில் முதலாளித்துவம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. பண்ணை நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1917-க்குப் பிறகு பல நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கம் கண்டு போராடினர். காலனிய, அரைக்காலனிய நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

அதன் விளைவாக 1926-இல் இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் வருகிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, போராடும் உரிமை என மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனுடைய தியாகத்தினால் பாசிசம் வீழ்த்தப்பட்டது, அதே காலக்கட்டத்தில் இந்தியாவில் 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்டு, அதன் இடத்தில் இந்திய அரசு நிறுவப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் 1947-க்குப் பின் இந்தியாவில் 44 சட்டங்கள் வருகின்றன, சட்டப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, குடியுரிமை, பணிப் பாதுகாப்பு, L.T.C., E.S.I., P.F., தொழிற்தகராறு சட்டங்கள், தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர் துறை என அனைத்தும் தொடங்கப்பட்டன. இந்த ஆரம்ப காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் உரிமை எப்படி இருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்று.

அன்று நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளிக்கு, E.S.I., BASIC PAY, P.F., பஞ்சப்படி, குடியிருப்பு என அனைத்துச் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. அதேபோல் மத்திய தொழிற்சாலைகளான H.A..L., B.H.E..L., தனியார் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் போன்றவற்றிலும்கூட அனைத்துத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்கள். இந்த நிலைமை 1980 வரைதான்.

1980-இல் சுமார் 20% தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள். 80% தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சட்டப் பாதுகாப்பு இல்லாதவர்கள். இந்த நிலைமை 1990-இல் 10% பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள், 90% பாதுகாப்பற்ற தொழிலாளர்கள். தற்போது 97% தொழிலாளர்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர், வெறும் 3% தொழிலாளர்களுக்கு மட்டுமே சலுகைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

1971-இல் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள் – CONTRACT REGULATION AND ABOLITION ACT – ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளியாக ஆக்கக்கூடிய சட்டம் அது. 1976-இல் மத்திய அரசின் அரசாணை ஒன்று வருகிறது. அந்த அரசாணையின்படி துப்புரவு, கேண்டீன், கார்டனிங், செக்கியூரிட்டி ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கூறியது அந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தை முன்மாதிரியாக வைத்து நடந்த வழக்கில்தான் பல ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். 1997-இல் நடந்த ஏர்-இந்தியா வழக்கில் உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளியானார்கள்.

பின்னர் வாஜ்பாய் அரசு வந்தது. 2002-இல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. துப்புரவு, கேண்டீன், கார்டனிங், டிரைவிங் முதலிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்கத் தேவையில்லை என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் போட்டார்கள். 2001-இல் STEEL AUTHORITY OF INDIA வழக்கு தொடர்பான தீர்ப்பில் உச்சநீதி மன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தகைய  நடவடிக்கையின் மூலம் இந்த நாட்டின் 100கோடி கைகளும், கால்களும் இலவசம் என்று அறிவித்து விட்டார்கள். ஆகையால்தான் மோடி நாடுநாடாகச் சென்று எங்கள் நாட்டில் உள்ளதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூவிக்கூவி அழைக்கிறார்.

இந்த நிலைமையில் நாட்டில் எவ்வாறு தொழில் நடக்கிறது என்றால், மாருதி தொழிற்சாலையை எடுத்துக் கொள்ளுங்கள். மாருதி தொழிற்சாலையில் 15% நிரந்தரத் தொழிலாளர்கள், 80% ஒப்பந்த தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளிக்கு ரூ.30,000 சம்பளம், ஒப்பந்த தொழிலாளிக்கு ரூ.7000 அல்லது 8000 தான். ஹுண்டாய் கம்பெனியில் 18% நிரந்தரத் தொழிலாளர்கள், 82% ஒப்பந்த தொழிலாளர்கள்.
H.A.L., H.M.T., B.H.E.L., ஆகியவற்றில் ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தரத் தொழிலாளர்களும் சரிபாதியாக உள்ளார்கள்.

மாநில அரசின் ஆம்புலன்ஸ், செவிலியர், EB control, கணினி ஆப்பரேட்டர்கள் என அனைத்திலும் ஒப்பந்த தொழிலாளர்கள். அரசு அலுவலகத்திலும் டைப்பிஸ்ட் முதற்கொண்டு அனைத்தும் குத்தகைமயம். இவர்களுக்கு ஊதியம் வெறும் ரூ.7,000 அல்லது 8,000 தான். நீதிமன்றங்களில் என்ன நிலைமை என்றால், நீதிபதியும் குத்தகை நீதிபதி, ஊதியம் ரூ.10,000 தான்.

பெங்களூரில் துப்பரவுத் தொழிலாளர்கள் துடைப்பம் கேட்டார்கள் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் செருப்பு கேட்டார்கள் என்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். சங்கம் வைத்தால், சங்கத்தில் பெயர் பதிவிட்டுள்ள அனைவரும் வீட்டிற்குப் போகவேண்டியதுதான்.   இந்த மாதிரியான நிலைமையில்தான், இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

டொயோட்டோ கார் ஜெர்மனியில் என்ன விலையோ அதேதான் பெங்களுரிலும், சென்னையிலும், இங்கிலாந்து, அமெரிக்காவிலும். ஆனால், அதே இந்தியத் தொழிலாளியின் கூலி மட்டும் ஒரு டாலரில் கால் பங்கு, ஜெர்மனியில் 32 டாலர்.
1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியபோது ஜெர்மானிய முதலாளிகள் ஹிட்லரைத் தேர்ந்தெடுத்தார்கள். காரணம் போராடினால் இவர் இரும்புக் கரம் கொண்டு அடக்குவார் என்பதால்தான்.  போராடுபவர்களை நசுக்குவதற்காகவே இங்கே மோடி அரசு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19 ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். அப்படியென்றால், இந்த நூறு கோடி கைகள், நூறு கோடி கால்கள் நியாயம் கேட்டு எங்கே போவார்கள் என்பது தான் கேள்வி. சட்டசபையிலே சென்று முறையிட்டால் நடக்குமா, பாராளுமன்றத்தில் முடியுமா? நீதிமன்றத்தை நாடினால் உச்சநீதி மன்றம் கூறுகிறது தரமுடியாது என்று. ரஷ்யத் தொழிலாளி, முதலாளி வர்க்கத்தை தூக்கியெறிந்த பின்புதான் சுரண்டலிலிருந்து விடுபட்டான். இந்தியத் தொழிலாளிக்கு வேறு எதாவது மார்க்கமுண்டா என்றால், கிடையாது,

இந்த மூன்றாண்டுகால மோடியின் ஆட்சியில் பி.எஃப்., இ.எஸ்.ஐ., தொழிலாளர் துறை முடக்கம் எனத் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய, எந்த உரிமையும் பெறப்படவில்லை. மக்கள் நல அரசு என்ற தகுதியை மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் என அனைத்தும் இழந்துவிட்டன. இவர்கள் யாரும் தொழிலாளியின் பக்கமில்லை. ஆகவே தீர்வுதான் என்ன என்றால், ரஷ்யப் புரட்சி. வழிதான் நமது வழி.

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர. ஆனால், அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மார்க்ஸ். அதேதான் இன்றும். ஆனால், முதலாளிகள் இன்று என்ன சொல்கிறார்கள்? இதற்கு மாற்று என்ற ஒன்று இல்லை என்கிறான்.

நாம் கூறுகிறோம் சோசலிசமே மாற்று, இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானது சோசலிசம். சோசலிசமே வெல்லும், கம்யூனிசமே வெல்லும், தொழிலாளர்கள் அவர்களுடைய போராட்டத்தினால் வெற்றி பெற முடியும் என்று கூறி உரையை முடிக்கிறேன். நன்றி!

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com