Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 529

தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 1

0

நீலமலை

‘போராடு செங்கொடி ஏந்திப் போராடு’ என்ற முழக்கத்தின் கீழ் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
– மே தின தியாகிகளால் குருதி சிந்தி பெறப்பட்ட 8-மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் இன்று இல்லாத போது, இழந்த உரிமைகளைப் பேராடிப் பெறாமல் மே தினத்தை கொண்டாட இயலாது.  எனவே செங்கொடி ஏந்தி புரட்சிகர சங்கங்களில் இணைந்து அனைத்து ஒடுக்குமுறை, சுரண்டல்களை ஒழித்துக்கட்டப் போராடுவோம்.புதிய ஜனநாயகம் படைப்போம் !

–  என்று தொழிலாளர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக நீ.அ.தொ.ச. மாவட்ட பொருளாளர்  தோழர் விஜயன் தலைமையில் மாவட்ட செயலாளர் தோழர் பாலன் கொடியேற்றினார்.  மே தின தியாகிகளை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து தோழர். விஜயன் அவரது தலைமை உரையில் மே நாள் தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்த வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராகிய மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் தமது உரையில், இன்று நாடு முழுவதும் பெருகிவரும் போராட்டங்கள், கோரிக்கைகளை தீர்க்க முடியாமல் இந்த அரசுகளும் அரசுக் கட்டமைப்பும் தோற்றுப்போய் நிலைகுலைந்து உள்ளது. உரிமைகளை பெறவும், பிரச்சனைகளை தீர்க்கவும் இந்த அரசு கட்டமைப்பை நம்பிப்பயனில்லை.  அவற்றை தூக்கியெறிந்து மக்கள் தங்களுக்கான அதிகாரங்களை கையிலெடுக்க வேண்டும்.  அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நீ.அ.தொ.ச. மாவட்ட துணை செயலாளர் தோழர் ராஜா உரிமைகளை இழந்து விட்டு மே-நாள் கொண்டாடுவதால் பயன் இல்லை. சுரண்டும் முதலாளிகளே இன்று உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சொல்கிறார்கள்.  விடுமுறை அளித்து டூர் போக டிக்கட்டும் தருவது முரணாக உள்ளது. இந்த சூழ்ச்சியில் பலியாகாமல் போராடுவோம், பட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்றார்.

சிறப்புரை ஆற்றிய மாவட்ட செயலர் தோழர் பாலன் போராட்டத்தால் தீர்வு கிடைத்ததா என்று சிலர் கேட்கின்றனர். போராடாமல் இன்று நம்மிடமுள்ள எந்த உரிமைகளும் போராடாமல் கிடைத்ததில்லை. அதற்கு ஒட்டுமொத்த தீர்வாக செங்கொடி ஏந்தி கம்யூனிச புரட்சிகர அரசியலின் வழிகாட்டலில் போராட வேண்டும்.  அதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன.  எனவே போராடுவோம் என்று முடித்தார்.

முடிவில் தோழர் விஜயன் நன்றியுரையாற்றினார். கொண்டாட்டத்தை மறுத்து போராட்ட நாளாக மாற்றிய இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி. தொடர்புக்கு – 90474 53204.

***

சென்னை திருவெற்றியூர்

திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் தோழர் சதீஷ் மே நாள் உரையாற்றினார்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவொற்றியூர்

***

காஞ்சிபுரம்

மே தினத்தில் சூளூரைப்போம். போராடு செங்கொடி ஏந்தி போராடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் பு .ஜ. தொ .மு. சார்பாக மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று 5 மணிக்கு வீர வணக்கத்துடன் பேரணி துவங்கியது சிறுநகர் இசை சமர் கலைக்குழுவினரின் பறை இசையுடன் பேரணி புறப்பட்டது.

மே தின தியாகிகளுக்கும் உழைக்கும் மக்கள் விடுதலைக்கு போராடி உயிர்நீத்த புரட்சியாளர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் முழக்கமிட்டும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராக போராட வேண்டி விண்ணதிர முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று பேசிய மாவட்ட தலைவர் தோழர் சரவணன் மே தின வரலாற்றின் நோக்கத்தை நினைவுகூர்ந்து முதலாளித்துவம் தொழிலாளர்களின் உரிமையும் மொத்த சமுதாயத்தையும் சூறையாடுவதை ஒப்பிட்டு இதற்கு எதிராக போராட வேண்டும் எனஅறைகூவி தலைமை உரையை நிறைவு செய்தார். இதையடுத்து மேநாள் உரையாற்றிய மாவட்ட செயலாளர் தோழர் சிவா பேசுகையில் மே நாளில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பணியென்பது மறுகாலனியாக்கத்ததை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி உரையை நிறைவுசெய்தார். மாவட்டதுணை தலைவர் தோழர் ஏழுமலையான் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் புஜதொமு, இணைப்பு சங்கத்தினர், புமாஇமு, மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களுடன் 165 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். இவ்வார்பாட்டம் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்றது. தொடர்புக்கு :8807532859.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் தொடர்புக்கு : 8807532859

***

வேலூர்

மே 1 உலக தொழிலாளர்கள் தினத்தில், வேலூரில் பு.ஜ.தொ.மு சார்பில், மத்திய, மாநில அரசுகளை, மாலை 4.00 மணியளவில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே, “போராடு செங்கொடி ஏந்தி போராடு” என்ற தலைப்பின் கீழ் மாவட்ட செயலாளர், தோழர் சுந்தர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ம.க.இ.க. தோழர் வாணி, பு.ஜ.தொ.மு இணை செயலாளர் தோழர் சரவணன், பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் முகுந்தன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். முழக்கங்கள், பாடல்கள், பாடப்பட்டது. முழக்கங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பேசுகையில்…

”மே-தினம் என்பது இந்த ஆளும் வர்க்கமும், ஊடகங்களும், ஓட்டுக்கட்சிகளும் சொல்கின்ற மாதிரி கொண்டாட்ட நாள் இல்லை, இது பல தொழிலாளிகள் ஈன்னுயிர் இழந்து 8-மணி நேர வேலை, 8-மணி நேர கேளிக்கை, 8-மணி நேர ஒய்வு, என்ற உரிமை பெற்று தந்த நாள். ஆனால் இன்று அந்த உரிமைகள் ஏதும் இன்றி நசுக்கப்பட்டு கொன்டு இருக்கிறோம். எனவே அந்த உரிமைகளை மீட்கும் நாளாகவே போராட்ட நாளாகவே இன்று இருக்கிறது.”

”அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றாலும் அதை தலைமை இல்லாமல் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. அதற்கு புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரள வேண்டும்”

”8-மணி நேர வேலை என்பது இப்போது எங்கும் இருப்பதில்லை, ஏன் இங்கிருக்கும் காவல் துறையினருக்கே இந்த நிலைமை தான், அவருக்கும் இந்த செங்கொடி போட்ட தோழர்கள் தான் போராட வேண்டியிருக்கிறது”

”இந்தியாவிலயே அதிகமாக போராட்ட நடைபெற்ற மாநிலம், தமிழ்நாடு தான் விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், டாஸ்மாக்கிற்கு எதிராக பெண்களின் போராட்டம், I.T. ஊழியர்கள் என அனைத்து தரப்பினர்கள் மீதும் இந்த பாசிச அரசு அடக்குமுறையை செலுத்துகிறது”

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள், உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வேலூர்

***

திருவள்ளூர்

மே நாளையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் மே நாள் உரையாற்றினார்.

முன்னதாக, கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் துவங்கி, இரட்டம்பேடு சாலை வழியாக தபால் நிலையம் வரை பேரணிக்கும், தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்துக்கும் அனுமதி வழங்கியிருந்தார், கும்முடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் டில்லிபாபு. ஆனால் மே 01 காலையில் ‘திடீரென’ காவல் சட்டம் 30(2) அமுலுக்கு வந்து, திடீரென பேரணிக்கு அனுமதி மறுத்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்துவிட்டார் காவல் ஆய்வாளர் டில்லிபாபு. அனுமதியளித்தவரே, அவசர அவசரமாக எழுத்து மூலம் அனுமதி மறுத்ததற்கான காரணத்தை பெரிய ஆராய்ச்சி செய்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை என்றாலும் அனுமதி மறுப்பதற்கு புரட்சிகர அமைப்பு என்ற தகுதியே போதுமானது என்பதை உழைக்கும் மக்களுக்கு தாமாகவே உணர்த்தி விட்டார் காவல் ஆய்வாளர்.

மே 1 உருவான நாள் தொட்டு இன்று வரை தொழிலாளர்களின் பிரச்சனை தீரவில்லை, தீர்க்கவும் வக்கற்று தான் இந்த அரசமைப்பு உள்ளது. அரசை நம்பிப் பயனில்லை. தொழிலாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டுமெனில் புதிய ஜனநாயகப் புரட்சி தான் தீர்வு என்றும், அதற்கு தொழிலாளிகள் புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு.வில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்து தனது தலைமையுரையை நிறைவு செய்தார், மாவட்டச் செயலர் தோழர் விகந்தர்.

முழக்கங்களைத் தொடர்ந்து பேசிய தோழர் ம.சி.சுதேஷ்குமார், மே நாளின் முக்கியத்துவம் மறக்கடிக்கப்பட்டு, மேநாள் ஒரு கொண்டாட்ட நாளாகவும், விடுமுறை நாளாகவும் தொழிலாளிகளை பார்க்கும் வண்ணம் சமூகம் சீரழிந்துள்ளது என்று துவங்கி, மோடி அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தினார். மூன்று திரிசூலக் கொள்கைகள் என்ற பெயரில் மோடி அரசு மக்களின் மீது நடத்தும் தாக்குதலை நாம் முறியடிக்க வேண்டும். தனியார்மய, தாராளமய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை தொழிலாளிகள் மீதான தாக்குதல், அடக்குமுறை தொடரும். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை தகர்க்காமல் தொழிலாளி வர்க்கத்துக்கு விடிவில்லை. அதை ஒரு புரட்சிகர தொழிற்சங்கத்தினால் தான் தகர்க்க முடியும் என கூறி அதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள், தொழிற்சங்க ஜான்பவான்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், லட்சக்கணக்கில் தொழிலாளிகளை உறுப்பினராக வைத்திருப்பவர்கள் யாரும் கும்முடிப்பூண்டியில் மே நாள் கூட்டம் நடத்தாத நிலையில், புரட்சிகர அரசியலுக்கே உரிய தன்மையோடு விண்ணதிரும் முழக்கங்களுடன்    நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளைக் கொண்டு நாம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பகுதி மக்கள் சிறுகடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

அனுமதி மறுப்பு கடிதம்

திருவள்ளூர் மாவட்டம் ” கும்மிடிப்பூண்டி உட்கோட்டம். கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் – பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான காவல்துறை செயல்முறை உத்தரவு

Present: P. டில்லிபாபு
காவல் ஆய்வாளர்,
கும்மிடிப்பூண்டி உட்கோட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்.

Pettioner: திரு.எம். விகேந்தர்,(மாவட்ட செயலாளர்)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்

  1. தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள ஊர்வல பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கிடும் உத்தரவு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பெறவேண்டும்.

  2. கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்தில் காவல் சட்டம் 30(2) அமுலில் உள்ளது.

  3. எனவே தாங்கள் மனுவானது அனுமதி மறுக்கப்படும் நிலையில் உள்ளது.

  • மேலும் தாங்கள் நிகழ்வினை குறிப்பிட்டுள்ள காரணங்களால் அனுமதி மறுக்கப்படுகிறது.

  • மாவட்ட காவல் கண்காணிப்பாளின் ஊர்வலம் செல்வதற்கான அனுமதியும் பெறவில்லை.

  1. எனவே இன்றைய நாளில் தாங்கள் நிகழ்வினை நடத்திட விரும்பினால், ஊர்வலமாகமோ, பேரணியாகவோ செல்லாமல், கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் அருகில் வாகன போக்குவரத்திற்கு இடையூறின்றி தெருமுனை பிரச்சாரம் மட்டுமே செய்வதென முடிவெடுத்தால் அனுமதிக்கு பரிசிலனை செய்யப்படும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

  2. மீறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்படிக்கு
இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்
கும்மிடிப்பூண்டி

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்

***

திருவாரூர்

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

தஞ்சை-திருவாரூர்-நாகை மாவட்டங்கள்

குறிஞ்சிப்பாடியில் தூளான டாஸ்மாக் – நேரடி ரிப்போர்ட்

0

டலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள அன்னதானப்பேட்டை கிராமத்தில், அரசு சாராயக்கடை மக்கள் குடியிருப்புகளோடு கலந்து 22 கிராமங்களுக்கு ஊத்திக் கொடுக்கும் ஊழியத்தை செய்து வருகிறது. இந்த கிராமத்தில் குடியால் ஏராளமான வாகன விபத்துகளும், மரணங்களும் குடும்பங்களில் பிளவுகளும் ஏற்பட்டு குழந்தைகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது. விவசாயிகள் மாணவர்கள்-இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் குடிகாரர்களாக மாறி  சீரழிந்து உள்ளனர்.

அன்னதானபேட்டை டாஸ்மாக்கை முற்றுகையிடும் பெண்கள். படம் நன்றி: விகடன்

அரசு சாராயக்கடைக்கு இடம் கொடுத்தவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் இந்த கடையை அகற்றுங்கள் என மனு அளித்தார் உடனே அவரின் கணவனின் சிந்தனையை இலவச மதுவால் நிரப்பி, அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கி, அவரை வைத்தே அவரின் மனைவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளது அரசு. குறிஞ்சிப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தற்போது ஏறக்குறைய 50 கிராமங்களுக்கு மேல் விதவிதமான கார்களிலும், ஆயிரக்கணக்கான மொட்டார் சைக்கிள்களிலும் பேருந்துகளிலும் இந்த பகுதிக்கு படையெடுக்கின்றன.

பாண்டிச்சேரியில் உள்ள  கன்னிக்கோயில் தமிழக குடிகாரர்களின் சொர்க்க பூமியாகும். ஆதலால் அன்னதானப்பேட்டையை கன்னிக்கோயில் என்றே அழைத்து ஆனந்தம் அடைகின்றனர். பேருந்துகளில் பயணச்சீட்டும் அப்படியே கேட்கப்படுகிறது. இரவு பத்துமணிக்கு மேல் குடிமகன்களின் அவஸ்தைகளைப் புரிந்து கொண்ட கடை ஊழியர்கள், பாச்சாரப்பாளையத்தை சார்ந்த அதிமுக கட்சியை சார்ந்த தங்கமணியை கள்ள வியாபாரியாக்கி பார் நடத்த அனுமதியும் கொடுத்து  விடிய விடிய சாராய விற்பனை ஓகோ என நடக்கிறது. வெய்யில் கொடுமை தாங்காமல் வீட்டிற்குள் படுக்க முடியவில்லையே என குழந்தைகளோடு வெளியில் படுத்து உறங்கினால், விடியும் வரைக்கும் எவர் எவரோ தெரியாத முகங்கள், பாட்டில் இருக்கா இல்லையா என்று விசாரிப்பதால் பயத்தில் யாரும் தூங்குவதே கிடையாது.

இரவில் வெளியில் தூங்கும் குழந்தைகளிடமும் தெருவில் விளையாடும் குழந்தைகளிடமும் அவர்களின் கழுத்தில் கிடந்த தங்க தாயத்துகள் இதுவரை நான்கு குழந்தைகளிடம் குடிகாரர்களால் அறுக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிறுத்தத்திற்கும் சாலை ஓரத்தில் உள்ள கடைகளுக்கு, பெண்களையும் மாணவிகளையும் குழந்தைகளையும் அனுப்புவதற்கு மொத்த கிராமமும் பயப்படுகிறது. போதை குறைவாக உள்ள மதுபாட்டில்களில் ஆன்சை ஊறவைத்து அதன் சாரை ஊசியின் மூலமாக அந்த பாட்டில்களில் செலுத்தி அதிக விலைக்கு விவரம் அறியாதவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் ஏராளமான கொடுமைகளில் சிக்கிக்கிடந்த இப்பகுதிமக்கள், மாவட்ட ஆட்சியர் தான் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்குகிறார் என்பதை அறியாமல் அவரிடமே 5 முறை மனுகொடுத்தனர்.  கடலூர் குடிகாட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலரிடமும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த பயனும் இல்லை. குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக MLA சபாராஜேந்திரனிடம் டாஸ்மாக் அகற்றுதல் தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது. நான் அதிகாரிகளை உடனே உங்களிடம் பேச அனுப்பி வைக்கிறேன் என்று உறுதியளித்தார். மறுநாள் டாஸ்மாக்கை நேரில் வந்து பார்த்துவிட்டு ஆமாம் டாஸ்மாக் ஊருக்குள் தான் இருக்கிறது என வாஸ்கொடகாமா போல கூறிவிட்டு சென்றவர்தான் இன்றுவரை அவரின் பேச்சு மூச்சு எதுவும் டாஸ்மாக்கிற்கு எதிராக இல்லை. இறுதியாக  அதிகாரிகளை சந்திக்கச் சென்ற மக்களிடம் நீங்கள் கடை இருக்கக் கூடாது என்கிறீர்கள், உங்க ஊரில் உள்ளவர்கள், கடையால் எந்த பிரச்சனையும் இல்லை, யாருடைய வாழ்க்கையும் நாசமாக வில்லை என்றும் எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்துள்ளனர். ஆதலால் உங்கள் ஊரில் உள்ளவர்களிடம் பேசுங்கள் என மக்களுக்குள் மோதலை உருவாக்க முயற்சித்துள்ளனர்.

அரசின் கள்ள வியாபாரியும் பார் உரிமையாளருமான  தங்கமணி என்பவன்  டாஸ்மாக்கை மூடச் சொல்லி என்னுடைய பொழப்பை ஏன் இவளுங்க கெடுக்குறாளுங்க என்றும், கணவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வராததால் படுக்க ஆள்கிடைக்கல என்பதால் தான் இவளுங்க கடைய மூடச்சொல்லி அங்கும் இங்கும் அலையராளுங்க என்று திமிராக பேசி வந்தார். இந்த அயோக்கியர் கள்ளத்தனமாக மதுவை விற்பனை செய்வது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் மக்கள் புகார் செய்தபோது, அங்கிருந்த ஆய்வாளர் ரேவதி உங்க ஊரே ஒரு அம்மாத்தோப்பு  (குறிஞ்சிப்பாடியில் உள்ள அம்மாத்தோப்பு விபச்சாரம் நடைபெறும் பகுதி என கூறப்படுகிறது )  அதுல டாஸ்மாக்கு பெரிய பிரச்சனையாமா, உங்க ஊரில் எவடி யோக்கியம், முதல்ல உங்க ஊரில் உள்ளவளுங்களை திருத்துங்க தங்கமணியை திருத்தத் வந்துட்டாளுங்க என புகார்கொடுக்கச் சென்ற பெண்களைக் கேவலப்படுத்தினார். இதையெல்லாம் மக்கள் மனம் நொந்து வெளிப்படுத்தினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் பெண்கள். படம் நன்றி : தி இந்து

அதிமுக தங்கமணி என்ற பொறுக்கிக்கு ஒரு வரலாறு உள்ளது. இவர் கடந்த காலத்தில் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. இதே வடலூர் போலிஸ் தான் இவன் கழுத்தில் சாராய கேன்களைத் தொங்கவிட்டு புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இந்த மகா உத்தமனுக்கு தான் இதே காவல் நிலையம் சலாம் போடுகிறது.

இதையெல்லாம் சகிக்க முடியாத மக்கள் கடந்த மார்ச் மாதத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸ்காரர்கள் வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டே என்ன பிரச்சனை என திமிராக விசாரித்தனர். அதிகாரிகள் கூடிய சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பிறகு நாளுக்கு நாள் அரசின் சாராயக்கடையால் பிரச்சனைகள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே இருந்தன. பல குடும்பங்களில் கணவன் மனைவிகளுக்கு இடையில் பிரச்சனைகள் பெருகிக் கொண்டே இருந்தன. மக்களும், போராடும் பெண்களின் கணவன்மார்களும் உங்கள் போராட்டம் என்ன ஆச்சு கடையை மூடிட்டீங்களா என ஏளனமாக பேச துவங்கினர்.

பொறுத்துக்கொள்ள முடியாத பெண்கள் சுமார் 500 பேர் திரண்டனர் அரசின் சாராயக்கடைக்கு எதிராக எந்தமாதிரியான போராட்டத்தை நடத்துவது என திட்டமிட்டனர். கண்டிப்பாக எந்த கட்சிகளையும் நாம் இணைத்துக் கொள்ளக் கூடாது, மீறி யாரேனும் உள்ளே நுழைந்தால் உடனே கட்சிகளை வெளியேற்ற வேண்டும் என தீர்மானித்தனர். பிறகு ஒருவர் சாலைமறியல் செய்யலாம் என்றார். ஒரு பெண்மணி கடையை முற்றுகையிட்டு அமரலாம் என்றார். சிலர் கடையை அடித்து நொறுக்கலாம் என்றார்கள். இறுதியாக நம்மைக் கேவலப்படுத்திய அரசுக்கு பாடம் புகட்டும் விதமாக 5 பாட்டில்களை மட்டும்  உடைப்போம் கடையின் கதவை இழுத்து பூட்டுவோம், சாலைமறியலும் செய்வோம் என்று மக்கள் முடிவு செய்தனர். இப்படி பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் 27.04.2017 அன்று காலை போராட்டம் தொடங்கப்பட்டது.

அரசின் சுரண்டலுக்கு  ஆளாக்கப்பட்ட பெண்கள், பார்ப்பனியத்தால் பின்னப்பட்டிருந்த அடிமைவிலங்கை உடைத்துக் கொண்டு வீறுகொண்டு வீதியில் இறங்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள் என உரக்க முழங்கினர், மொத்த குடும்பத்தினர்களையும் ஒன்று திரட்டினர். பேருந்துகளையும் வாகனங்களையும் மறித்தனர். நாம் தேடிச்சென்ற அதிகாரிகள் இப்போது நம்மைத்தேடி வரட்டும் என போராடிய பெண்கள் இரண்டாக பிரிந்து ஒரு பிரிவினர் சாராயக் கடையை முற்றுகையிட்டனர் அப்போது விற்பனையாளர் பாட்டிலை உடைத்து ஒரு பெண்ணின் கையை கிழித்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற பெண்கள்  கடையில் இருந்த 5 மது பாட்டில்களை மட்டும் முடிவு செய்தபடி உடைத்தனர், பிறகு கடையை இழுத்து பூட்டினர். அப்பகுதி மக்களின் குரல் விண்ணைமுட்டும் அளவிற்கு ஆர்ப்பரித்து இச்செயலை வாழ்த்தி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.  மற்றொரு பிரிவினர் சாலையை மறித்து கடையை மூடச்சொல்லி முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். வர்க்கப் பாசம் பொத்துக்கொண்டு அரசின் சாரயக் கடையை  பாதுகாக்க வந்த போலீசு ஒழுங்கா எல்லோரும் ஓடிவிடுங்க இல்லன்னா ரிசர்வ் போலீசை வரவழைத்து எல்லோரையும் உதைத்து கைது செய்வோம் என மிரட்டியது. போலிசின் மிரட்டலுக்கு அஞ்சாத மக்கள் முற்றுகையை விளக்கிக் கொள்ளாமல் நெஞ்சுரத்தோடு நின்றனர்.

காவல்துறையின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களை போலீசு மிரட்டியது. போராடிய இளைஞர்களை போலீசார் வீடியோ எடுத்தனர். எதற்கு சார் பசங்கள படம் எடுக்குறீங்க? நீங்க இப்படி செய்தா நாங்க பயந்துடுவோமா அந்த கட்டத்தை எல்லாம் நாங்க தாண்டிட்டோம் என பதிலளித்தனர் பெண்கள். இவர்களோடு ஏராளமான ஆண்களும் திரண்டிருந்தனர். இந்த கடை தான் என் குடும்பத்தை அழித்தது. இது இல்லை என்றால் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்திருப்போம் என்று கூறி சில ஆண்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

பஞ்சாயத்துத் தலைவரின் கணவரை போலீசு அழைத்து வந்து பேச வைத்தது. அவர் வந்து ஏம்மா உங்களுக்கு வேறு வேலை கிடையாதா இதல்லாம் உங்களுக்கு தேவையா என சொல்லி முடிப்பதற்குள் போனால் போகட்டும் என உன் பொண்டாட்டிக்கு ஓட்டுப் போட்டோம் இப்ப நீ வந்து எங்களுக்கு வேலை இல்லையா என்றா கேட்குற ஒழுங்கா கிளம்பிடு என மக்கள் விரட்டியதும் அவரின் உரையை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

கடையின் உரிமையாளர் வந்து எனது வீட்டில் கடை உள்ளது உங்களுக்கு என்ன கெட்டுப்போச்சி என மக்களிடம் சண்டையிட்டார் அவரை மக்கள் கண்டுகொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

வட்டாட்சியர் ஜான்சி ராணியுடன் பேச்சு வார்த்தை நடத்தும் உழைக்கும் பெண். படம் நன்றி : தி இந்து

பாமக-வை சார்ந்த ஒருவர் முன்னணியார் போல் காட்டிக் கொண்டு செயல்பட்டார். அவரிடம் பெண்கள் தயவு செய்து மக்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம், போராட்டக் களத்தைவிட்டு உடனே வெளியேறுங்கள் என விரட்டியடித்தனர்.

பிறகு தாசில்தார் வந்து நானும் உங்களைப் போன்று ஒரு பெண்தான். இவ்வளவு நாட்களாக இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக எனக்குத் தெரியாது. கண்டிப்பாக உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றுகிறேன், எனக்கு இந்த போராட்டம் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனையோடு உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உறவு முடிந்து விடாது. உங்கள் முகத்தை நானும் எங்களின் முகத்தை நீங்களும் நாளை பார்க்கணும். ஆதலால்  தயவு செய்து சாலையைவிட்டு விலகுங்கள் என்று சென்டிமென்டாக பேசியதும் மக்கள் சாலையைவிட்டு மறியலையும், முற்றுகையையும் விலக்கிக் கொண்டனர்.

கடையை மூடும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு அகலமாட்டோம் என உறுதியாக நின்ற மக்களிடம் வரும் மே மாதம் 19 தேதி மாலையுடன் இந்த கடையிருக்காது என்றும் இவ்வளவு பணம் மதிப்பு கொண்ட பொருட்களை வேறு இடத்தில் வைக்க இடம் தயார் செய்து கொள்ளும் வரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்  என தாசில்தார நைச்சியமாக பேசியதை மக்கள் நம்பி போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொள்வதாக முடிவு செய்தனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்…  என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது, அந்த மக்களின் அடுத்தக்கட்டப் போராட்டத்தின் தன்மையைப் பறை சாற்றியது.

இப்பகுதி மக்களின் போராட்டத்தைக் கேள்விப்பட்ட பிறபகுதி மக்கள் எங்களை ஏன் கூப்பிடவில்லை சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போம். அதிகாரிகள் சொன்னபடி கடையை மூடவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெருந்திரளாக போராடலாம் என போராட்டத்தை திருவிழாவாக பாவித்து தீர்மானம் போட்டு கலைந்தனர்.

இச்செய்தியை கேள்விப்பட்டு கடலூர் புமாஇமு தோழர் சத்தியகுமார் தலைமையில் இரு தோழர்கள் அடுத்த நாள் அப்பகுதிக்குச் சென்றனர். மக்களை சந்தித்ததும் டாஸ்மாக் போராளிகளுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த பிறகு குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது தாய்மார்களே விடாதீர்கள் விளக்குமாற்றால் அடித்து விரட்டுங்கள், என்ற  சுவரொட்டியை பகுதிகளில் ஓட்டியதும் மக்கள் மகிழ்ச்சியோடு பார்த்தனர். வீடுகளில் சுவரொட்டி போடலாமா என்று கேட்டால் மக்கள் திட்டுகிறார்கள், டாஸ்மாக்கிற்கு எதிரான சுவரொட்டி என்றால் இதை முன்னாடியே சொல்லவேண்டியது தானப்பா, ஒட்டுப்பா எந்த சுவற்றில் வேண்டுமானாலும் ஒட்டுப்பா என்றனர். மாணவர்கள் இளைஞர்கள் இதுபோன்ற சுவரொட்டிகளை நிறைய பார்த்துள்ளோம் ஆனால் யாருன்னுதான் தெரியாம இருந்தோம். கண்டிப்பாக அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு வருவோம் என அனைவரும் வீட்டு விசேஷத்திற்கு கூறுவதுபோல் மகிழ்ச்சியாக கூறினார்கள்.

பிறகு போராடிய மக்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதா என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டு போராடிய மக்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது என்றும், 20 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது 5 பாட்டில் உடைத்ததை 40 பாட்டில்கள் உடைத்தார்கள் என்றும் சாராயம் விற்பவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தார்கள் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

உங்களின் வழக்குகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமே இலவசமாக நடத்தும் என்று உறுதியளித்துவிட்டு, சுற்றுவட்டார மக்களை ஒற்றைக் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்று திரட்டுவோம், அரசின் அடக்கு முறைக்கும், அரசின் நைச்சியமான பேச்சிக்கும் இடமளிக்காமல் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு தயாராவோம் என்ற தோழர்கள் பேசினிர்.

இது எங்களின் மானப்பிரச்சனை இந்த கடையை மூடியே தீரனும், அதனால் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையே ஏற்பட்டாலும் இந்த கடையை மூடியே தீருவோம், டாஸ்மாக் இல்லையென்றால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது நாங்கள் செத்தால் தான் மதுக்கடையை மூடமுடியும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். கட்சிகளை இணைத்துக் கொண்டால் எந்த போராட்டமும் வெற்றிபெறாது கட்சிகள் தங்களின் சுய லாபத்துக்காகத்தான் செயல்படுகின்றன ஓட்டு மட்டுமே அவர்களின் நோக்கம் ஆதலால்  மக்களின் போராட்டமே தீர்வைத்தரும்.

மக்கள் கூறுவதைத்தான் அரசு செய்ய வேண்டும். இப்படி ஒரு நிலையை உருவாக்கினால் தான் நாம் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியும், அமைதியான கிராமத்தை உருவாக்க முடியும் என எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த திருமதி தையல்நாயகியும் ராஜேஸ்வரியும் கூறுவதை கேட்கும் போதும், வயது முதிர்ந்த நிலையிலும் என் தலைமுறை எப்படியோ போய்விட்டது, இந்த ஊரை அரசிடமிருந்து பாதுகாத்தாக வேண்டும் ஆதலால்  சுற்றுவட்டாரப் பகுதிகளை நான் திரட்டுகிறேன் நீங்கள் மட்டும் எங்களோடு இருப்பீர்களா என பெரியம்மா நாகவள்ளியம்மா கூறுவதையும் கேட்கும் போது,

புரட்சிகர காலகட்டங்களில் சமூக சூழல் மாற்றம் பெற்றுக்  கொண்டே இருக்கும் – என்ற தோழர் லெனினின் வார்த்தைகளே சாட்சியாக நிற்கின்றன.

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி

கடலூர் பகுதி

பண்ருட்டி : உறவுகளே தடுத்தாலும் மதுக்கடையை மூடுவோம் !

2

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள அங்குசெட்டிப்பாளையத்தில் இரண்டு மதுபானக் கடைகள் இருந்தன.  அந்த இரு கடைகளும் தற்போது மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடமாக,  மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒருவரின் கொல்லையில் டாஸ்மாக் கடை வேகமாகக் கட்டப்பட்டது. இதையறிந்த மக்கள் ஒன்று திரண்டு எப்படி இதை தடுத்து நிறுத்துவது என பேசிக்கொண்டிருக்கும் போது தோழர் சத்தியக்குமார் மக்களை சந்தித்து ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் போராடுகிறார்கள். அதே போல்  அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் இந்த பகுதியில் டாஸ்மாக்கை திறக்கவிடாமல் செய்யலாம் என்று விளக்கினார்.

பின்னர் டாஸ்மாக்கிற்காக கட்டப்படும் கடையின்  உரிமையாளரை அழைத்து இது என்ன கட்டிடம்? என கேட்டதற்கு, இது மோட்டர் கொட்டகை என்றார். இப்படித்தான் தமிழகம் முழுக்க சொல்லப்படுகிறது என்பதை  மக்களிடம் விளக்கப்பட்டது.  இது எந்த கொட்டகையாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் இதில் மதுவிற்பனை நடந்தால் கண்டிப்பாக கடை தரைமட்டமாக இடித்து நொறுக்கப்படும் என்று மக்கள் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர். பின்னர் ஒரு குழுவாக இருந்தால் தான் இந்த பிரச்னையை முறியடிக்க முடியும் என மக்கள் போராட்டத்திற்கு தயாராகினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் பெண்கள். (மாதிரிப் படம்) நன்றி : தி இந்து

கட்டியக் கடையை திறக்க முடியாது என்றதும் ஊரில் வசதிபடைத்த ஒருவர் தோழரை அழைத்து நம்ம இடத்துலதா மாப்ள… கடைகட்டப் போறோம் நீங்க டாஸ்மாக்கிற்கு எதிராக நிறையப் போராட்டங்களை நடத்தி இருக்கீங்க. நான் கடை கட்டுவதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என அவர் கேட்டார். அதற்கு தோழர், சாராயம் விற்பது தவறு, இதில் உறவு என்று பார்க்கமுடியாது. கடையைக் கட்டி, வைத்திருக்கும் காசை பாழாக்கிவிடாதீர்கள், என கூறிவிட்டு வந்துவிட்டார்.

அதே பகுதியில் உள்ள இருளர் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து டாஸ்மாக் கடையை  கட்ட முயற்சித்தனர். தோழர் அங்கும் சென்று அப்பகுதி மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த பகுதிக்கு வாப்பா… அந்த கடைய இங்கு கட்டிவிட்டால் எங்களால வாழவே முடியாதுப்பா… என உரிமையுடன் கூறியுள்ளனர். அவர்களும் போராட்டத்திற்கு தயாராகினர்.

இப்படி அனைத்து இடங்களிலும் டாஸ்மாக்கை திறக்க விடாமல் தோழர் தடுத்ததை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரவர்க்கம் விழிபிதுங்கி நின்றது. புதுப்பேட்டை காவல்நிலையத்தை சார்ந்த சி.ஐ.டி. போலீஸ், தோழரை சந்தித்து என்ன சத்தியகுமார் உங்களுடைய உறவினர் இடத்தில் கடைகட்டுவதற்கு நீங்க கேட்டிங்களாம். அது கிடைக்கலன்னுதான் எல்லா இடத்திலும் டாஸ்மாக் கட்டவிடாமல் தடுக்கிறன்னு உங்கள் பகுதியில் உள்ளவங்க சில பேர் கூறுகின்றனர் என்று அவதூறை மற்றவர்கள் கூறுவதாக நோட்டம் பார்த்தார். அதற்கு  அவர்கள் சொல்வது உண்மையா சார்? என்று நம் தோழர் எதிர் கேள்வி கேட்டதற்கு உங்களைப் பற்றி எனக்கு தெரியும்பா… எவனாவது எதையாவது பேசிவிட்டுப் போகட்டும் விடுப்பா என்று நழுவிச் சென்றுவிட்டார்.

தோழருடைய நெருங்கிய நண்பர்தான் அங்குசெட்டிபாளயத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். அவருக்கு எப்படியாவது கடை இங்கேயே திறந்து விட்டால் நல்லது என்பது எண்ணம், அதற்கு தோழர் தடையாக உள்ளார் என்பதால் அவர் தோழரிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டார். என்னுடைய வாழ்க்கையை அழிப்பதில் இவன்தான் முதல் ஆளாக இருக்கிறான் என பார்ப்பவர்களிடத்தில் புலம்புகிறார். அதற்கு தோழர் என்னுடைய நண்பர் உள்ளிட்டு அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்று தான் நாங்கள் அரசியல் பணி செய்கிறோம். நாட்டை சுடுகாடாய் மாற்றிவிட்டு யாரும் நிம்மதியாக வாழமுடியாது  அதை அவர்தான் புரிந்துகொள்ள வேண்டும், டாஸ்மாக்கினால் ஊரே கெடும் போது அதை தனிப்பட்ட நபரின் வாழ்க்கை நலனோடு பார்க்க முடியாது என்றார்.

குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது என்ற சுவரொட்டியை தோழர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஓட்டினார். அதைக் கண்ட மக்கள் புதிதாக கட்டப்பட்ட வீடாக இருந்தாலும் எங்கள் சுவற்றில் ஒட்டுங்கள் என விருப்பத்தோடு கேட்டுக் கொண்டனர்.

கடந்த 28.04.2017 அன்று டாஸ்மாக்கை எங்கும் திறக்க விடாமல் மக்களைக் கொண்டு, விரட்டியடித்ததால் சாராயப்பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரைவிட்டே டாஸ்மாக் ஓடி விட்டது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக நுழைந்திருக்கும் தமிழக மக்களிடத்தில் இத்தகைய ஊர், உறவு, சாதி, நட்புக்களை வைத்தும் கூட கடை திறக்க முனைகிறார்கள் என்பதற்கு இந்த ஊர் ஒரு சான்று. ஆயினும் இங்கே அதை ஒரு தோழரே முன்னின்று மறுக்கும் போது மக்களின் போராட்டத்திற்கு புதிய உற்சாகம் பிறக்கிறது.

பொது வாழ்க்கையில் அரசியல் பணி செய்வது, போராடுவது என்பது இத்தகைய அம்சங்களையும் கொண்டிருக்கிறது. பொது வாழ்க்கையில் எதைப் பேசுகிறோமோ எதைக் கடை பிடிக்கிறோமோ அதை சொந்த வாழ்க்கையிலும் கடை பிடிக்க வேண்டும் என்பது புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்களுக்கு அத்தியாவசியமான ஒரு பண்பு.  அனைத்துப் போராட்டங்களும் இப்படித்தான் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி புதிய பண்புகளை மக்களுக்கும், தோழர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றன. தொடர்ந்து போராடுவோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
கடலூர் பகுதி.

கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம்

0

தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி! கேடுகெட்ட தொழிலா விவசாயம்! என்ற தலைப்பில் கடந்த 26/04/2017-ல் கம்பம் நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு அவர்கள் கலந்துகொண்டார்.

தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி! கேடுகெட்ட தொழிலா விவசாயம்! கருத்தரங்கம்

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.மோகன் தனது உரையின் துவக்கத்தில்,”இந்த கருத்தரங்கப் பிரச்சாரத்தின் போது “இதுவரை ஓட்டுக்கட்சிகளை எல்லாம் புறக்கணித்து வந்த நீங்கள் இன்று ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ-வை கூட்டிவந்து கூட்டம் நடத்துகிறீர்களே நியாயமா?” என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். திரு.அப்பாவு அவர்களுக்கு விவசாயி என்பதுதான் முதல் அடையாளம். கட்சி என்பது அவருக்கு இரண்டாவது அடையாளம்தான். அப்படித்தான் அவர் கடந்த காலங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தனது பகுதியில் நடந்த ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகவும், தாமிரபரணி ஆற்றுநீரை கொள்ளையடிக்கும் கோக் நிறுவனத்திற்கு எதிராகவும் இன்றுவரை சமரசமின்றி போராடி வருகிறார். நதிநீர் இணைப்புப் பிரச்சனைக்காக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்திருக்கிறார். தான் சார்ந்திருக்கும் கட்சி கடந்து, விவசாயிகள் நலனுக்காக போராடி வருகிறார். இதுபோன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட அப்பாவு போன்றவர்களை எங்கிருந்தாலும் தேடிச்சென்று அவர்களின் போராட்ட உணர்வை, அனுபவங்களை எங்களோடு இணைத்துக் கொள்வதற்கு மக்கள் அதிகாரம் தயங்காது என்று விளக்கமளித்தார். மேலும் டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்திய மத்திய மோடி அரசையும், மோடியின் தமிழகக் கைத்தடிகளான எச்.ராசா, தமிழிசை, பொன்னார் ஆகியோரையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

அடுத்துப் பேசிய வி வி மு. தோழர் மாறன், விவசாயத்தை ஒழித்துக்கட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம், கெயில் திட்டம், நியட்ரினோ திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் “தேசத்துரோகி” என்கிறது பி.ஜே.பி! மோடி கூறுவது போல இந்தியாவை “டிஜிட்டல் இந்தியா” என்று உலகநாடுகள் வர்ணிப்பதில்லை. விவசாய நாடு என்றுதான் கூறுகிறார்கள். ஏனென்றால் இன்றுவரை இந்தியாவின் 65 சதவீத மக்களுக்கு உணவளித்து உயிரூட்டி, வேலைவாய்ப்பும் அளித்து வருவது நமது விவசாயம் தான்! நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்தையும், விளை நிலங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறிக்குப் பலியிடும் மோடிக் கும்பல்தான் உண்மையான தேசத்துரோகிகள்!”என்றார்!

கூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்

சிறப்புரை ஆற்றிய திரு.அப்பாவு அவர்கள், ‘நாட்டைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக இங்கு நீங்கள் வரவில்லை. மக்கள் அதிகாரத்தில் இருந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று எதையும் எதிர்பார்த்து நீங்கள் கூடவில்லை என்பதை நான் அறிவேன். நான் இங்கு எனது கட்சி நண்பர்களுடன் வந்திருந்தாலும், விவசாயிகளின் நலனுக்காகப் போராடும் உங்கள் முயற்சியில் கடுகளவாவது உதவி செய்ய முடியுமா என்ற எண்ணத்தில்தான் வந்திருக்கிறேன்” என்று தனது உரையைத் துவக்கியவர், ‘இந்தியாவில் ஆண்டுக்கு 88,000 டிஎம்சி நீர்வளம் கிடைக்கிறது. இதில் நாம் பயன்படுத்துவது வெறும் 6,900 டிஎம்சி தான்! கேரளாவில் 44 ஆறுகள் மூலம் 2500 டிஎம்சி நீர் கிடைக்கிறது. ஆனால் 500 டிஎம்சி நீரைத்தான் பயன்படுத்து கிறார்கள். மீதி நீரெல்லாம் வீணாக கடலில் கலக்கிறது! தண்ணீர் பற்றாக்குறையில் தள்ளாடும் தமிழகத்தில் 36 ஆறுகள் இருந்தும், ஆண்டுக்கு 240 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது! இந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் ஒரு நாதியில்லையே! பென்னிகுயிக் போன்ற ஒருவர் இருந்தால் இப்படி நடக்குமா?” என்று விவசாயத்திற்கான நீராதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தினார்!

“1950-51-பட்ஜெட்டில் விவசாயத்திற்கு 14% தொகை ஒதுக்கப்பட்டது. அதனால் விவசாயத்துறையின் வளர்ச்சி விகிதம் 55% ஆக இருந்தது ! இது2012-13-ல் 6% ஆக குறைக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் வெறும்   3% மேலும் குறைந்துவிட்டது. 55% மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்திற்கு மோடியின் மத்திய அரசு காட்டியுள்ள அக்கறையின் அளவு இதுதான்! இதனால்தான் நாட்டின் மொத்த உற்பத்தியில் 55% ஆக இருந்த விவசாய உற்பத்தி இன்று வெறும் 17% ஆக குறைந்துபோனது. பிறகு எப்படி விவசாயம் செழிப்பாக வளர முடியும்?” என்று ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார்.

மேலும், “2010-11-ஆம் ஆண்டு இந்திராகாந்தி மற்றும் டாடா இன்ஸ்டியூட்கள், நபார்டு வங்கி, ஏ.ஜி.எம் வாங்கடே ஆகியோர் அடங்கிய குழு விவசாயிகள் தற்கொலை பற்றிய அறிக்கை ஒன்றை மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தது. அதில் “விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் இடுபொருள்களின் விலை உயர்வு, வங்கிக் கடன் தொல்லை,விளைபொருள்களுக்கு உரிய விலையில்லாதது ஆகியவைதான் 80% விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்” என்று குறிப்பிடுகிறது. இதனை முன்வைத்துதான் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 50% லாபத்துடன் விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சியைப் பிடித்தார் மோடி! நியாயமாகப் பார்த்தால், கடந்த இரண்டு வருட ஆட்சியில் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மோடி, டெல்லியில் போராடிய நமது அய்யாக்கண்ணுவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்! ஆனால் போராடிய விவசாயிகளை நேரில் பார்க்காமலே அவமானப்படுத்தும் மோடியிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?”

“20 கார்ப்பரேட் கம்பெனிகளின் மொத்த வங்கிக் கடன் 12.25 லட்சம்கோடி ரூபாய் ! இதில் மத்திய அரசு தள்ளுபடி செய்த தொகை  4 லட்சம் கோடி! மீதியுள்ள  8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கும் மத்திய அரசுதான் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது ! 18 பொதுத்துறை நிறுவனங்களை விற்று கார்ப்பரேட்டுகளின் 70,000 கோடி கடனை அடைத்த மோடிக்கு இப்படி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? இதையெல்லாம் தமிழ்நாட்டில் பேசுவதற்கே இடமில்லை. பேசினாலும் காதுகொடுத்து கேட்பதற்கு நாதியில்லை. அதனால்தான் மக்கள் அதிகார கூட்டத்தில் பேசுகிறேன் !”

பிற விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்

“காவிரி ஒருங்கிணைப்பு வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எனக்கு அதிகாரமில்லை என்று பேசுகிற மோடிக்கு இந்த உண்மை இன்றுதான் தெரியுமா ? GST திட்டத்தைக் கொண்டுவர அதிகாரமுள்ள மோடிக்கு காவிரி ஆணையம் அமைக்க மட்டும் அதிகாரமில்லாமல் போய்விடுமா ? 20,000 பேர் பேசும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 600 கோடி ஒதுக்கும் மோடி நதிநீர் இணைப்புக்கு வெறும் 100 கோடி ஒதுக்குகிறார் ! இவர் எப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்?”

“சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமுலாக்கத்துறை இம்மூன்றும் வேட்டை நாய்கள் ! எதிரிகளை பிடி என்றால் கடிக்கும்! விடாதே என்றால் ஓடவிடாமல் சுற்றிவளைத்து விடும் ! இந்த நாய்களை மேய்ப்பவர்தான் மோடி! மோடியின் இந்த நாய் விளையாட்டுக்கள்தான் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது ! கொள்ளையடித்த சொத்தை பங்குபோடுவதற்கு துடிக்கும் கூட்டம்தான் தமிழகத்தை ஆள்கிறது!”

“ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் வளைவதைவிட, அதானியின் மகளிடம் வளைந்து நெளிகிறார் மோடி ! FICCI, CII போன்ற கார்ப்பரேட்டுகளின் சங்கங்களில் போடும் தீர்மானங்கள்தான் நமது நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படுகிறது. இவர்களிடம் விவசாயிகளின் வாழ்வுக்கு வழி கிடைக்காது. பதவி சுகத்திற்கு ஆசைப்படாமல் தியாக உணர்வுடன் செயல்படும் மக்கள் அதிகாரத்தின் கோரிக்கைகளுக்கு நான் என்றைக்கும் துணை நிற்பேன்.” என்று முடித்தார்.

கூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார். சிறப்புரை ஆற்றிய திரு அப்பாவு அவர்களுக்கு பெரியார் இன்றும்- என்றும் எனும் நூல் பரிசளிக்கப்பட்டது!

இறுதியில் தோழர் ஈஸ்வரன் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது. பிற விவசாய சங்கத்தினர் உட்பட சுமார் 200 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்

தேனி

மே தினம் : போராடு… செங்கொடி ஏந்தி போராடு …!

0

 

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … செங்கொடி ஏந்தி போராடு …!

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம் !
பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம் !
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கட்டியமைப்போம் !

பேரணி :  மாலை 4 மணிக்கு ரங்கசாமி குளம்
ஆர்ப்பாட்டம் : காவலான் கேட்

அனைவரும் வருக !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் மாவட்டம் – 88075 32859


 

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … ஒன்றிணைந்து போராடு !

மக்களது வாழ்வுரிமையை முற்றிலும் நாசமாக்குகிறது அரசு கட்டமைப்பு !
நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுக்கிறது மோடி அரசு !
மறுகாலனியாக்கத்தையும், இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிப்போம் !

மே 1 2017
பேரணி : மாலை 5 மணி மரக்கடை
ஆர்ப்பாட்டம் : மாலை 6.30 மணி சத்திரம் பேருந்து நிலையம் – அண்ணாசிலை.

பேரணி துவக்கிவைப்பது :
தோழர் சி.கோபிநாத் செயலாலர், ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கம், திருச்சி.
தலைமை : தோழர் க.சுந்தரராசு பொதுச்செயலாளர், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி.
கண்டன உரை : தோழர் ஜீவா, செயலாளர், ம.க.இ.க. திருச்சி.
தோழர் பிரிதிவ் பொருளாளர், பு.மாஇ.மு. திருச்சி.
தோழர் செல்வராஜ், பொருளாளர், ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கம்
தோழர் பழனிச்சாமி செயலாளர், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுக்காப்பு சங்கம், திருச்சி.

சிறப்புரை : தோழர் கோவன் ம.க.இ.க. திருச்சி.

நன்றியுரை : தோழர் குத்புதீன் தலைவர், சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுக்காப்பு சங்கம்.

மே நாள் சூளுரைகள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 97916 92512, 89030 42388
மக்கள் கலை இலக்கிய கழகம் – 80569 05898
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி – 99431 76246
திருச்சி மாவட்டம்

தஞ்சை : நீரையும் நிலத்தையும் காக்க அணிதிரள்வோம் !

1

திருமருகல் : குருவாடி – அண்ணவாசல், இன்னுமொரு நெடுவாசல்!
ஹைட்ரோகார்பன் திட்டம்:
விவசாயத்தை அழிக்க மோடி ஏவும் அணுகுண்டு !
விவசாயிகளே நாம் என்ன செய்யப்போகிறோம்?

டந்த சில ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆகவே மீத்தேன் திட்டத்தை திரும்ப பெறுவது போல் நடித்த மோடி அரசு தற்போது ”ஹைட்ரோகார்பன்‟ என்ற பெயரில் சதித்தனமாக இத்திட்டத்தை திணிக்க முயற்சி செய்கிறது.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள, மக்கள் அதிகமாக குடியிருக்கும்பகுதிகளில் இந்த ஹைட்ரோகார்பனை எடுப்பது அப்பகுதியையே சுடுகாடாக்கி அழித்துவிடும். பலநாடுகளும் இந்த திட்டத்தை கைவிட்டு, தடையும் விதித்துள்ளன. ஆனால் மோடி அரசோ நெடுவாசல், திருமருகல் உள்ளிட்ட 31 இடங்களில் இத்திட்டத்தை கொண்டுவர கார்ப்பரேட் நிறுவனங்களுக்குஅனுமதி வழங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் இன்னும் 15 ஆண்டுகளில் 40 மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. இதை அனுமதித்தால் நமது நிலமும், நீரும், வாழ்வாதாரமும் என்ன ஆகும்?

தமிழக விவசாயிகள் தொடர்ச்சியாக டெல்லியில் போராடினர், உலகமே இவர்களின்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது, ஆனால் இந்த நாட்டின் பிரதமரான மோடிக்கு மட்டும் விவசாயிகளை சந்திக்க நேரமேயில்லையாம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு அந்நிய பானங்களான பெப்சி, கோக்கை விற்க தமிழக வணிகர் சங்கங்கள் தடைவிதித்தன. உடனே பெப்சியின் தலைமை அதிகாரி இந்திரா நூயி பிரதமரை சந்திக்கிறார், அடுத்த நாளே தாமிரவருணி நீரை அந்நிய குளிர்பானங்கள் பயன்படுத்திக் கொள்ள விதித்திருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்குகிறது. இப்படிபட்ட கார்ப்ரேட்டுகளின் விசுவாசியான பிஜேபியும், மோடியும் விவசாயிகளை அழிக்கும் இந்த நாசகார திட்டங்களை ”வளர்ச்சி” என்ற பெயரில் திணித்து நமது காதில் பூச்சுற்ற முயற்சிக்கின்றனர். பிஜேபியின்  தமிழக ஏஜென்ட் இல.கணேசனோ “நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும்” என்று கொக்கரிக்கிறார்.

இதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையம், நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், ONGC –ஷெல்எரிவாயு திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழித்து விவசாயிகளையும், மக்களையும் பிச்சைகாரர்களாக்கத் துடிக்கிறது மோடி கும்பல்.

தமிழக அரசோ ஆற்று மணலை கொள்ளையடிப்பது, மண்குவாரி, ஏரி – குளங்கள் ஆக்கிரமிப்பு,கிரானைட் கொள்ளை என உள்ளுர் மாஃபியா கும்பலாக மாறி விவசாயத்தை அழித்து, விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகிறது. திருமருகல் ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சவ்வூடு மண் குவாரியை கொண்டு வர ஒரு மாஃபியா கும்பல் எத்தணிக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் அடியாள் வேலை செய்கிறார்கள். நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, போராடும் மக்களிடம் “உங்களுக்கு விவசாயம் எப்படி ஒரு தொழிலோ, அவர்களுக்கு மண்குவாரி ஒரு தொழில்” என்று அடாவடியாக பேசி மக்களை மிரட்டுகிறார்.

ஆகவே காவல்துறை, கலெக்டர், நீதிமன்றம், அரசியல் கட்சிகள் என அரசின் அனைத்து உறுப்புகளும் பொதுமக்களுக்கு குறிப்பாக விவசாயத்திற்கு எதிராக செயல்படுவதையே நம்மால் காணமுடிகிறது.

இதெல்லாம் எங்களுக்கு புரிகிறது, என்ன தான் தீர்வு என்று கேட்கிறீர்களா? நம்மிடம் இருப்பது ஒரே தீர்வு தான். இந்த அரசு நமக்கு நல்லது செய்யும் என்று நம்புவதோ, மனுக்கொடுத்து கெஞ்சி கூத்தாடுவதோ அடிமுட்டாள்தனமான செயல். ஆகவே விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், தாய்மார்கள் என பாதிக்கப்படும் அனைவரும் களத்தில் இறங்குவதும், கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் தான் தீர்வு. இராணுவமே வந்தாலும் மக்கள் கமிட்டிகளை மீறி ஒருபிடி மண்ணைக்கூட அள்ளவிடாதபடி அரணாக மாறவேண்டும், இது தான் உண்மையான மக்களாட்சி.

வாருங்கள்! உங்களை மக்கள் அதிகாரம் அறைகூவி  அழைக்கிறது!

திருமருகல் ஒன்றிய பொதுமக்களே !
நீரையும் நிலத்தையும் காக்க திரண்டெழுங்கள் !

நாகை மாவட்ட ஆட்சியரே !
ஏர்வாடி ஊராட்சியில் மண்குவாரி  கொண்டுவர சதி செய்வதை நிறுத்து !

பொதுமக்களே !
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மண்குவாரிக்கு எதிராக ஒன்றுபடுவோம் !
கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுக்காப்போம் !

தகவல்
மக்கள் அதிகாரம் மற்றும் ஏர்வாடி ஊராட்சி பொதுமக்கள்
தஞ்சை, திருவாரூர், நாகை – 96263 52829

கோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் !

90
கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை.
பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை – குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

டந்த 2017 மார்ச் மாதம் குஜராத் அரசு தனது மாநிலத்தின் ’விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில்’ ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அதே போல, பசுப்பாதுகாப்பு குறித்து சமீபத்தில் பேசியுள்ள சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங், பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவருக்கு ஒரு படி மேலே போய் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், பசுவுக்கு அவமரியாதை செய்பவனின் கைகளை உடைப்பேன் என கூவியுள்ளார்.

பசு வதையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு சட்டரீதியாகவும், தாத்ரி, அல்வார் சம்பவங்கள் போன்று சட்டவிரோதமாகவும் பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள், மாட்டுக்கறி மற்றும் தோலுறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இசுலாமியர்கள் மற்றும் தலித்துகளை மட்டும் பாதிப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் இந்நடவடிக்கைகள் பசுக்களை வளர்க்கும் பெரும்பாண்மை விவசாயிகளுக்குத் தான் மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளைப் பொறுத்தவரையில், பால் கொடுப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுக் கன்றுகளையும் வளர்ப்பது என்பது தற்போதைய சூழலில் வாய்ப்பில்லாத ஒன்றாகும். ஆகவே விவசாயிகள் பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுகளையும், அடிமாட்டிற்கு விற்றுவிட்டு அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு மீண்டும் பசுக்களை வாங்கி வளர்க்கும் போது மட்டும் தான் இத்தொழிலில் சிறிதாவது வருமானம் பெற முடியும். ஆனால், தற்போதைய கடும் சட்டங்களின் காரணமாக விவசாயிகள் எருதுக் கன்றுகளையும், பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும் விற்பனை செய்வது சிக்கலாகி இருக்கிறது.  இதனால் அவர்களுக்கு புதிய மாடுகளை வாங்கி வளர்ப்பதில் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை – சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங்

இதன் தாக்கத்தால், பால் உற்பத்திக்கு பசுக்களை வாங்குவதை விட எருமைகளை வாங்கினால், பால் கறப்பதை நிறுத்திய பிறகும் அவற்றை அடிமாட்டிற்கு விற்க முடியும் என்பதாலேயே பசுக்களைத் தவிர்த்து எருமைகளை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் விவசாயிகள்.  இதன் காரணமாக எருமைகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 100 கிலோவிற்கு சுமார் 10,000 ரூபாய் முதல் 11,000 வரை விற்பனையாகிக் கொண்டிருந்த எருமை மாடுகளின் விலை 13,000 முதல் 14000 வரை விலையேற்றம் அடைந்தது. பசுக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடை கணக்கெடுப்பின் படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்திரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்படுகின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவிற்கும் குறைவாகவே உள்ளது.

ஆனால் இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அஸ்ஸாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கின்றது.  இந்தக் கணக்கெடுப்பு மிகத் தெளிவாக ஒரு விசயத்தை உணர்த்துகிறது. அதாவது மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால் பசுவதை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் இந்துத்துவ வார்த்தைகளில் சொல்லுவதானால், விவசாயிகளிடமிருந்து ’லெட்சுமி’யைப் பிடுங்கி விட்டு அவர்களது கைகளில்  ’எமனைக்’ கொடுத்திருக்கிறது.

இது போக, பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன. உதாரணமாகக் கடந்த  2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின் படி,  ’ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிவடைந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது, இச்சரிவிற்குக் காரணம், இப்பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திய பின்னர் இவற்றால் பலனில்லை என்பதால், விவசாயிகள் இப்பசுக்களை வளர்ப்பதற்கே விரும்புவதில்லை என்பதேயாகும்.

கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் மராட்டிய அரசு, பசுக்கள் மற்றும் காளைகள் வெட்டப்படுவதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும் முழுமையான தடை விதித்த பிறகு இம்மாநிலத்தில் மாடு வெட்டும் தொழிலைச் செய்து வரும் குரேசி சமூகத்தினர், மாட்டு வியாபாரிகள், தோல் உரிப்புத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பசு மற்றும் காளைகளுக்கான சந்தை மற்றும் தோல் மற்றும் அது சார்ந்த தொழில்கள் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் மாட்டுக் கறி மற்றும் மாட்டுத் தோல் சார்ந்த தொழில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார்  ரூ. 1,14,338 கோடி (17.8 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிற்கு மாட்டுத் தோல் மற்றும் அது சார்ந்த வியாபாரங்கள் நடக்கின்றன. பாஜக கும்பலின் இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கையால் இத்தொழில்களிலும் அது சார்ந்த தேசிய வருவாயிலும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

சங்கப் பரிவாரக் கும்பலான விசுவ ஹிந்து பரிஷத்தின் மதிப்பீட்டின் படியே மஹாராஸ்டிராவில் மட்டும் சுமார் 7,50,000 பசுக்களும் எருதுகளும் கேட்பாரற்று, கவனிப்பாரற்று, வீதியில் அலைகின்றன. இக்கால்நடைகள் அனைத்தும் விவசாயிகளால், விற்பனை செய்ய முடியாமலும், உபயோகப்படுத்த முடியாமலும் வீதியில் விடப்பட்டவையே. இப்படி கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை. இந்நிலை தொடருமானால், பசுக்களையும் காளைகளையும் இனி உயிரியல் கண்காட்சிகளிலும், சரணாலயங்களிலும் தான் காண முடியும் !!

மேலும் படிக்க:
The Beef Ban Effect: Stray Cattle, Broken Markets and Boom Time for Buffaloes

ஒரு அகதியின் பயணம் – படக்கட்டுரை

0

காம்பியாவின் தலைநகரும் தனது சொந்த ஊருமான பான்ஜூலை விட்டு 2016-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி ஐரோப்பாவுக்குக் கிளம்புகிறார் பத்தொன்பது வயது மாலிக் ஜெங். அப்போது அவருக்கு  தான் வழியில் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்களைக் குறித்து ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக். மூச்சுத் திணறடிக்கும் அந்த நீண்ட பயணத்தின் இடையே லிபியாவைக் கடக்கும் போது மாலிக் பிடிபட்டார். லிபியாவில் மாலிக்குடன் பயணித்துக் கைதானவர்கள் அவரது கண் முன்னே கொல்லப்பட்டனர். நல்லவேளையாக விசயத்தைக் கேள்விப்பட்டு மாலிக்கின் குடும்பத்தார் சரியான நேரத்தில் அனுப்பி வைத்த பணம் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

லிபியாவின் சிறையில் ஒரு மாதத்தைக் கழித்த பின் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சட்டவிரோத ஆள் கடத்தல் ஏஜெண்டுகளின் உதவியுடன் திரிபோலி கடற்கரையை வந்தடைகிறார் மாலிக். அங்கிருந்து சுமார் 120 பேருடன் ரப்பர் படகு ஒன்றின் துணையுடன் மத்திய தரைக்கடலைக் கடப்பதாக திட்டம். அந்தப் படகு பயணிகளுடன் தனது பயணத்தைத் துவங்கிய சில மணி நேரங்களிலேயே, லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் தன்னார்வக் குழு ஒன்றின் மீட்புப் படகான லுவெண்டாவால் கண்டறியப்பட்டு மீட்கப்படுகிறது.

மாலிக்கை முதலில் சிசிலியில் உள்ள கடானியா நகரத்திற்க்கும் பின்னர் வடக்கு இத்தாலியின் பெய்லா நகரத்திற்க்கும் மாற்றுகிறார்கள். அவர் தற்போது பெய்லாவில் தற்காலிக அகதிகள் முகாமான கோலிப்ரியில் தங்கியுள்ளார். அது சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட ஓட்டல் ஆகும். தற்போது அந்த ஓட்டலை அகதி மையமாக பராமரித்து வரும் கூட்டுறவு நிறுவனம், தமது மையங்களில் அனுமதிக்கும் அகதி ஒருவருக்கு ஒரு நாள் வாடகையாக 35 யூரோக்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. மாலிக்கிற்கும் அவருடன் தங்கியுள்ள குடியேறிகளுக்கும் தினசரி மூன்று வேளை உணவும், உறங்குவதற்கு ஒரு படுக்கையும், ஒவ்வொரு மாதமும் செலவுக்கு 75 யூரோக்களும் கிடைக்கின்றன.

அகதியாக தஞ்சம் கோரும் விண்ணப்பத்திற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் மாலிக். அந்த விண்ணப்பத்தின் பேரில் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே சட்டப்பூர்வ அகதியாகவோ அல்லது தற்போதைய நிலையைப் போல் தொடர்ந்து போராடியவாறோ அவரது எதிர்கால வாழ்க்கை அமையும்.

ஜூகெண்ட் ரெட்டெட் என்கிற தன்னார்வக் குழுவுக்குச் சொந்தமான லுவெண்ட்டா மீட்புப் படகில் இத்தாலி கடல் பாதுகாப்பு போலீசாரின் வருகைக்காக காத்திருக்கும் அகதிகள். இத்தாலிக்கு கொண்டு செல்லப்படவிருக்கும் இவர்கள் லிபிய கடற்கரையில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் மீட்கப்பட்டனர்.
மீட்புப் படகு லுவெண்டாவில் இருந்து கடலைப் பார்க்கும் காம்பியாவைச் சேர்ந்த மாலிக் (வலதுபுறம் இருப்பவர்) மற்றும் செனகலைச் சேர்ந்த ம்பேயி. லிபியாவில் இருந்து 12 பேர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணமான இவர்கள் சுமார் 7 மணி நேரம் கழித்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கொள்ளளவையும் மீறி 120 பேர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் ரப்பர் படகில் இருப்பவர்களை மீட்க லுவெண்டா மீட்புப் படகின் ஊழியர்கள் உதவுகின்றனர். லுவெண்டாவின் ஊழியர்கள் தடுமாறிக் கொண்டிருந்த ரப்பர் படகை சமநிலைக்குக் கொணர்ந்து அதில் உள்ளவர்களை மாதுகாப்பாக மீட்க முயற்சித்தும் சிலர் கடலில் தவறி விழுந்தனர்.
அகதித் தஞ்சம் கோரிய காம்பியாவின் மாலிக் ஜெங்கின் புகைப்படம். இவர் மத்திய தரைக்கடலில் இருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி மீட்கப்பட்டார். முதலில் சிசிலிக்கும் பின்னர் வடக்கு இத்தாலிக்கும் மாற்றப்பட்ட மாலிக், தற்போது ஒரு தற்காலிக அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
கோலிப்ரி ஓட்டலின் முகப்பு. ஓட்டலாக இருந்து கைவிடப்பட்டு பின்னர் தற்காலிக அகதிகள் முகாமாக பராமரிக்கப்படும் இந்த இடத்தில் தான் மாலிக் தங்கியுள்ளார். இதைப் பராமரிக்கும் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் இத்தாலியில் பல்வேறு இடங்களில் இதே போன்ற அகதி முகாம்களை நடத்தி வருகின்றனர்.
கோலிப்ரி ஓட்டலின் தாழ்வாரம். இந்த கட்டிடத்தில் சுமார் 55 பேர் வரை தங்க முடியும். பொதுவாக அகதிகளாக தஞ்சம் கோருபவர்கள் சுமார் 2 ஆண்டுகாலம் வரை இது போன்ற மையங்களில் தங்க முடியும். தற்போது இந்த இடத்தில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் ஆப்ரிக்காவின் சப்-சஹாரா நாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கு தங்கியிருக்கும் பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதிலும், உறங்குவதிலும், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அரட்டையடிப்பதிலுமே பொழுதைப் போக்குகின்றனர். இது போன்ற மையங்களில் இலவச வைஃபை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலிக் தனது நண்பரின் அறையில் ஒரு சிறிய மின்சார ஹீட்டரின் மூலம் தேனீர் தயாரித்துக் கொண்டுள்ளார். அவர் முன்பு குடும்பத்தோடு வசித்து வந்த போது பின்பற்றிய அதே தேனீர் தயாரிக்கும் முறையைத் தான் இங்கும் பின்பற்றுகிறார். நண்பர்களுடன் தேனீர் பருகுவது இங்கே தங்கியிருப்பவர்களின் நேரப் போக்குகளில் ஒன்று.
பெய்லாவில் உள்ள வெவ்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்தவர்கள் ஒரு சனிக்கிழமை காலை கால்பந்து விளையாடுகின்றனர். பின்னணியில் ஆல்ப்ஸ் மலைத் தொடர். கால்பந்தாட்டம் தான் அகதிகளின் முக்கியமான பொழுபோக்கு. இங்குள்ளவர்கள் பலருக்கும் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களாகும் கனவு உண்டு. பெய்லாவில் உள்ள அகதிகள் ஒருங்கிணைப்பு மையம் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்கின்றது. இந்தப் போட்டிகளில் உள்ளூர் இளைஞர்களோடு சேர்ந்து வாய்ப்பும் கிட்டுவதுண்டு.
பனிபடர்ந்த கால்பந்தாட்ட மைதானத்தில் செனகலைச் சேர்ந்த பாபா காம்பியாவைச் சேர்ந்த மாலிக்குடனும் மாலி நாட்டைச் சேர்ந்த முகமதுடனும் கால்பந்து விளையாடுகிறார். சிதோஷ்ணம் நன்றாக இருக்கும் நாட்களில் இவர்கள் தினசரி கால்பந்தோ கூடைப்பந்தோ விளையாடுகிறார்கள். அகதி மையத்தில் உள்ள மற்றவர்களைப் போல் இப்போது தான் முதன் முறையாக பனிப் பொழிவைப் பார்க்கிறார் மாலிக். அந்த அனுபவத்தால் வியந்து போன அவர்கள் விளையாடச் சென்றனர்; ஆனால், சீக்கிரமே பனியை நீண்ட நேரம் ஸ்பரிசிப்பது அத்தனை சுலபமானதல்ல என்பதைப் புரிந்து கொண்டனர்.
தனது அறையில் தொழுகை நடத்தும் மாலிக். அவர் ஒரு முசுலீம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோலிப்ரியில் இருந்து சுமார் 20 நிமிட நடை தூரத்தில் இருக்கும் மசூதிக்குச் செல்கிறார். மற்ற நாட்களில் தனது அறையிலேயே வழிபடுகிறார். அகதிகள் மதத்தை தற்காலிக நிவாரணத்திற்கான வழியாக பாவிக்கின்றனர். முசுலீமாக இருந்தாலும், கிருஸ்தவராக இருந்தாலும் தமது நம்பிக்கைகளில் ஊன்றி நிற்கின்றனர்.
காம்பியாவைச் சேர்ந்த டெம்பா தனது படுக்கையில் படுத்தவாறே தனது அறைத் தோழன் மாலிக்குடன் உரையாடுகிறார். தனது நாட்களை உறக்கத்திலும் நண்பர்களுடன் அரட்டையடிப்பதிலும் கழிக்கிறார் டெம்பா. அங்கே செய்வதற்கு வேறு வேலைகளும் இல்லை.
மாலிக்கும் அவரது நண்பர்களான ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த மௌசாவும், செனகலைச் சேர்ந்த முகமதுவும் படுக்கைக்குச் செலுலும் முன் உடற்பயிற்சி செய்கின்றனர். ஒவ்வொரு இரவும் அவர்கள் உடற்பயிற்சியைத் தவற விடுவதில்லை. அவர்கள் உடற்பயிற்சி செய்வது உடலுக்காக மட்டுமில்லை – அந்த நேரத்தில் மனதை அலைபாயாமல் நிறுத்த முடிவதுடன், நல்ல உறக்கத்திற்கும் அது உதவி செய்கிறது.
காம்பியாவின் அப்தௌலி தனது நண்பரின் அறையில் சிகரெட் பற்ற வைக்கிறார். லிபியாவில் இருந்து வந்த படகிலிருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீட்கப்பட்டவர் இவர். தற்போது லிபியாவில் கடலைக் கடக்க காத்திருக்கும் தனது சகோதரருடன் தினசரி தொலைபேசிக் கொண்டிருக்கிறார்.
2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோலிப்ரி ஓட்டலுக்க்கு வந்து சேர்ந்த நாள் முதல் கானா தேசத்தைச் சேர்ந்த பாட்ரிக் அங்குள்ள சமையல் அறையில் பணிபுரிகிறார். மாதச் சம்பளத்திற்காகவே வேலை செய்ய முன்வந்திருக்கிறார், என்றாலும் இதுவரை அவரது சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து வேலை செய்து வருகிறார் – அப்படி வேலை செய்வது ஒன்று தான் சுறுசுறுப்பாக தன்னை வைத்திருக்க ஒரே வாய்ப்பு என்று கருதுகிறார். அரசிடம் இருந்து பெறும் நிதியை சேமிப்பதற்காக தற்காலிக அகதி மையங்களை நடத்தும் நிறுவனங்கள் இப்படி அகதிகளிடமிருந்து சம்பளமில்லாமல் வேலை வாங்கிக் கொள்வதுண்டு.
கடந்த காலத்தின் நினைவுகளாக மத்திய தரைக்கடலைக் கடந்த நிகழ்வு அகதிகளின் சிந்தனையில் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. அவர்கள் அதை எப்போதும் மறப்பதில்லை. மேலே உள்ள படத்தில் அகதிகளை ஏற்றி வந்து மீட்கப்பட்ட படகிலிருந்து எழும் புகையைப் பார்க்க முடியும். அகதிகள் வரும் படகுகளை மீட்கும் இத்தாலி அரசு, அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் எரித்து அழித்து விடுகின்றது

– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்: முகில்
மூலக்கட்டுரை: From Gambia to Italy: a refugee’s perilous journey

இராணுவத்தை எதிர்த்து காஷ்மீர் மாணவிகள் போர் !

5
இந்திய இராணுவத்தின் அதிகாரத் திமிருக்கு தமது தாய் மண்ணின் கற்களால் பதில் சொல்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவிகள் !!

காஷ்மீர் இளைஞர் ஒருவர் மீது இந்திய இராணுவம் காட்டுமிராண்டித தனமாகத் தாக்கிய வீடியோப் பதிவு ஒன்று, காஷ்மீர் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு கண்டனம் தெரிவித்து போராடிய பல்வாமா அரசு கல்லூரி மாணவர்களுக்கும் காஷ்மீர் போலீசுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசுக்கல்லூரி வாயிலில் சோதனைச் சாவடி அமைத்துப் போராடிய மாணவர்களைக் கைது செய்ய இராணுவத்துடன் காத்திருந்தது போலீசு. அதற்கு எதிராக ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்களும் போலீசு கும்பலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டும் மாணவர்களை ஒடுக்க நினைத்தது இராணுவம். இதில் சுமார் 20-க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வாமா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் பெல்லட் குண்டுகளால் தனது கண் பார்வை இழந்த மாணவர்களே.

இதனைத் தொடந்து ஏப்ரல் 17 அன்று காஷ்மீரில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும், காஷ்மீர் போலீசுக்கு எதிராகவும் பெருந்திரளாகக் களத்தில் இறங்கிப் போராடினர். மாணவர்களின் உணர்ச்சிமிகு போராட்டமும், பல்வேறு இடங்களில் போலீசு மற்றும் இராணுவத்துடனான மோதலும் ஏப்ரல் 17 முழுவதும் நீடித்தது. இப்போராட்டத்தில் காஷ்மீர் மாநில கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் களத்தில் இறங்கி அதிகாரத் திமிர் பிடித்த போலீசு மற்றும்  இராணுவத்திற்குத் தக்க பதிலடி கொடுத்தனர்.

இது வெறும் வாகனத்தின் மீது விடப்படும் உதை அல்ல – காஷ்மீரை ஒடுக்க நினைக்கும் இந்திய வல்லாதிக்கத்திற்கு அடிபணியாத வீரத்தின் உதை
இந்திய இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்கும் பள்ளி மாணவிகள் – கனல் நெருப்பினில் – குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?.
இராணுவத்திடம் துப்பாக்கிகள் – காஷ்மீர் மக்களிடம் வெறும் கற்கள்!
பல்கலைக்கழக மாணவி – இக்ரா சித்திக் – காஷ்மீர் போலீசு மற்றும் துணை இராணுவத்தின் கொடுந் தாக்குதலில் இவரது மண்டை ஓடு பிளந்து, மூளையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.
வீதிகளில் இறங்கிய காஷ்மீரத்து – அஸ்ரத் மஹல்கள். (அஸ்ரத் மஹல் – 1857 முதல் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற வீராங்கனை)
போலீசின் மிரட்டலுக்கு பயப்படாமல் போராடும் மாணவிகள்!
ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் உள்ள எஸ்.பி. பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவியர்களின் போராட்டத்தை ஒடுக்க உபயோகிக்கப்பட்ட தண்ணீர் பீரங்கி!
போராடும் மாணவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் காஷ்மீர் பெண்கள் – இதைப் பார்க்கையில் மெரினா போராட்டத்தின் இறுதி நாளில் சென்னை மீர்ஜாப் பேட்டையில் போலீசுக்கு பயப்படாமல் போராடிய இளைஞர்களுக்கு நீரும் – உணவும் கொடுத்து உதவிய அப்பகுதி முசுலீம் பெண்களே நினைவுக்கு வருகிறார்கள்!
பேரணியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக முழக்கமிடும் பள்ளி மாணவிகள்!
இதோ – தங்களது உரிமைகளை வென்றெடுக்க கையில் சிக்கியதை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ள காஷ்மீரின் வீரமகள்
இந்திய இராணுவத்தின் அதிகாரத் திமிருக்கு தமது தாய் மண்ணின் கற்களால் பதில் சொல்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவிகள் !
போலிசின் கண்ணீர்ப் புகையையும், மிளகாய்த் தூள் குண்டையும் சுவாசித்ததால் மயக்கமடைந்த மாணவி ஒருவர்!!
ஆயிரக்கணக்கான காஷ்மீர மக்களை கொன்று காணாமல் போகச் செய்து, சிறையில் அடைத்து, ஒடுக்கி வரும் இந்திய அரசிற்கு – கற்களால் பதிலளிக்கும் மாணவிகள்!

– நந்தன்
நன்றி அல்ஜசிரா
மூலக்கட்டுரை: Female Kashmiri students lead anti-India protests

மோடி குறித்து யாரும் கேட்கக் கூடாது – வீடியோ

0

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சவுகான். இவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்  பிரதமர் மோடி  முதன் முதலாக கடவுச் சீட்டு பெறுவதற்காக அளித்த விவரங்கள், ஆவணங்கள் மற்றும் கடவுச் சீட்டை புதுப்பிக்க அவர் அளித்த விவரங்கள், ஆவணங்கள் ஆகியவை குறித்துக் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம், மத்திய தகவல் ஆணையத்திடம் விவரங்கள் கேட்டிருந்தார். இது குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது என வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் தகவல் அலுவலகம் கைவிரித்துவிட்டது. மோடியின் வீட்டு முகவரி, குடும்பத்தினர், மனைவி, சொத்து முதலிய இன்ன பிற விவரங்கள் அனைத்தும் இராணுவ இரகசியமா என்ன?

இதற்கு முன்னர் இதே போல, மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்கு ஆகும் செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி லோகேஸ் பத்ரா கேட்டதற்கு “தேசத்தின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி”  செலவுகள் குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனக் கூறி மறுத்தார் மாத்தூர். இது முன்னால் தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த மிஷ்ரா, “மிக முக்கிய நபர்களின் பயணச் செலவுகள் மக்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்”என அறிவித்ததற்கு எதிரானது. சவுதி மன்னரோ, அமெரிக்க அதிபரோ வெளிநாடு செல்லும் போது எவ்வளவு செலவழிக்கிறர்கள் என்பது தெரிய வந்ததால் நாம் விமரிசிக்கிறோம். அப்படி ஒரு விமரிசனம் வந்துவிடக் கூடாது என்றே இத்தகவல்களை மறுக்கிறார்கள்.

மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என முழுக்க முழுக்க அயோக்கியத்தனங்களையே வரலாறாகக் கொண்டுள்ள மோடிக்கு, இன்னும் நூறு அமித்ஷாக்களும், சதாசிவங்களும், மாத்தூர்களும் தேவை. இருப்பினும் இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேடாக தடை செய்யும் மோடியின் நடவடிக்கைகள் மக்களிடையே வலம் வருவதையோ அம்பலப்படுத்துவதையோ எவர் தடுக்க முடியும்?

ஆதார் : மாட்டுக்கு சூடு ! மனுசனை உளவு பார் !!

1

டந்த 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லக் இந்துமதவெறி குண்டர் படையால் கொல்லப்படுகிறார். அக்லக்கின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்திய இந்துத்துவ ரவுடிக் கூட்டம், அவரை வீட்டிலிருந்து இழுத்துப் போட்டு அடித்தே கொன்றது. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக்கின் வீட்டில் இருந்தது மாட்டுக்கறி இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது.

அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள்.

அதே போல 2015-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அருகே வழிமறிக்கும் பார்ப்பனிய இந்துமதவெறி கும்பல் ஒன்று, லாரி ஓட்டுநனர் ஜாகித் அகமதுவையும் அவருடன் வந்த இன்னொரு முசுலீமையும் கண்மூடித்தனமாக தாக்கியது. கொடூரமாக தாக்கப்பட்ட ஜாகித் பத்து நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறார். தாக்குதல் குறித்த தகவல் பரவியதும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் பரவுகின்றன.

உதம்பூர் தாக்குதலை அடுத்து போராடிய காஷ்மீர் மக்களை ஒடுக்க வந்த பாதுகாப்புப் படையினர் கல்வீச்சுக்கு ஆளாகினர். ’தேசிய ஊடகங்களோ’ பாதுகாப்புப் படையினர் அநியாயமாக தாக்கப்படுவதாக திரித்து தேசியவெறியைத் தூண்டின. பின்னர் விசாரணையில் ஜாகித் ஓட்டி வந்த லாரியில் கிடைத்த செத்த மாடுகள் விச உணவின் காரணமாகவே இறந்தன என்பதும் அவற்றின் இறைச்சி உண்பதற்கானதல்ல என்றும், அவை கசாப்புக்காக எடுத்து வரப்பட்டவை அல்ல என்பதும் உறுதியானது.

உதம்பூர் தாக்குதல் நடந்த அதே சமயத்தில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சகரன்பூர் அருகே மாடுகளைக் ’கடத்திச்’ செல்ல முயன்றதாக இருபது வயது இளைஞர் ஒருவரை அடித்தே கொன்றது இந்துத்துவ குண்டர் படை ஒன்று.

ஜனவரி 2016-ல் மகாராஷ்டிர மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கிர்க்கியா இரயில்வே நிலையத்தில் பயணிகள் சிலரை கண்மூடித்தனமாக தாக்குகிறது இந்து பரிவார அமைப்பான கோரக்‌ஷன சமிதியைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. மறுநாள் உள்ளூர் பத்திரிகைகள் பசு மாமிசத்தை கடத்திய முசுலீம் பயணிகளை கோரக்‌ஷன சமிதி தாக்கியதாக செய்தி வெளியிட்டன. எனினும், பின்னர் நடந்த விசாரணைகளில் போலீசாரால் “கைப்பற்றப்பட்டு” தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது பசு மாமிசம் இல்லையென்றும், எருமைக் கறி என்றும் தெரிய வந்தது.

2016 மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலம் லாத்தேகர் மாவட்டத்தில் இரண்டு முசுலீம் கால்நடை வியாபாரிகளை அடித்துக் கொன்று மரத்தில் தொங்க விட்டனர் இந்துத்மத வெறியர்கள். கொல்லப்பட்டவர்கள் மஸ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் லாத்தேகர் மாவட்டத்தில் நடக்கும் புகழ்பெற்ற கால்நடைச் சந்தையில் இருந்து வளர்ப்பதற்காக ஆடு மாடுகளை வாங்க வந்தவர்கள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.

ஊனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாக தாக்கியது இந்துத்துவ கும்பல்

2016 ஏப்ரல் 5-ம் தேதி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டெய்ன் அப்பாஸ் என்கிற 27 வயது வாலிபர் விவசாயத்திற்காக காளை மாடுகளை வாங்கி விட்டுத் திரும்பும் வழியில் கோ ரக்‌ஷா தள் என்கிற பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

2016 ஜூன் மாதம் சுமார் 40 பேர் கொண்ட பஜ்ரங் தள் குண்டர்கள் கர்நாடக மாநிலம் கோப்பா அருகே தலித் குடும்பம் ஒன்று மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. கொடூரமான இத்தாக்குதலில் அந்த தலித் குடும்பம் மரண காயங்களுக்கு உள்ளானது.

அதே ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலம் ஊனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாக தாக்கியது இந்துத்துவ கும்பல் ஒன்று. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் குஜராத் மாநிலம் முழுக்க தலித் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். செத்த மாட்டை சுமக்க மாட்டோம், உரிக்க மாட்டோமென தீர்மானித்த குஜராத் தலித் மக்கள், அரசு அலுவலகங்களை செத்த மாடுகளால் நிறைத்தனர். பல வாரங்கள் தொடர்ந்த இந்தப் போராட்டங்களால் அதிர்ச்சியடைந்த இந்துத்துவ கும்பல், தலித் வாக்குகளை இழந்து விடுவோம் என்கிற அச்சத்தில் ஆழ்ந்தன.

அதே மாதம் மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சோர் மாவட்ட இரயில்வே நிலையத்தில் மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம் சாட்டி இரண்டு முசுலீம் பெண்களைத் தாக்கியது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. 2016, ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மோகதி எலிசா, லாசர் எலிசா ஆகிய இரண்டு தலித் சகோதரர்கள் இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கும் போது கோ ரக்சா சமிதியைச் சேர்ந்த 100 குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

2017, ஏப்ரல் ஒன்றாம் தேதி ஹரியானா மாநிலத்தில் முறையாக அனுமதி பெற்று மாடுகளை ஏற்றி வந்த டெம்போ வாகனங்களை வழிமறித்த பஜ்ரங்தள் குண்டர்கள், மாடுகளை ஏற்றி வந்த 15 இசுலாமியர்களைக் கொடூரமாக தாக்கினர். இந்த தாக்குதலில் பெஹ்லு கான் என்கிற முதியவர் கொல்லப்பட்டார் (இணைப்பில் வீடியோ : Rajasthan cow vigilante beat Muslim man to death; Police books six, launches manhunt). இதே மாதம் கடந்த 21ம் தேதி ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கால்நடைகளுடன் இடம் பெயர்ந்த நாடோடிக் குடும்பம் ஒன்றை வழிமறித்த கோ ரக்‌ஷக் குண்டர் படை, கொடூரமான முறையில் தாக்கி உள்ளது. (இணைப்பில் வீடியோ: In Shocking Videos Of Cow Vigilante Attack, Jammu Family Begs For Mercy).

பஜ்ரங்தள் குண்டர்களால் கொல்லப்பட்ட இஸ்லாமிய முதியவர்.

ஜம்முவில் தாக்குதல் நடத்திய அதே நாளில் (21-ம் தேதி) புது தில்லி கால்காஜி பகுதியில் எருமைகளைக் கடத்த முற்பட்டதாக பொய்யாகக் குற்றம் சுமத்தி மூன்று முசுலீம் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். கடுமையான தாக்குதலோடு இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர்களை மறுநாள் எழுப்பி விசாரித்த போலீசார், அவர்கள் மேல் மிருக வதைத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலே விவரிக்கப்பட்டவை அனைத்தும் ஊடகங்களில் வெளியான சம்பவங்கள் மட்டுமே. ஊடகங்களில் வெளியாகாமல் சிறியளவிலான சம்பவங்களின் பட்டியல் மிக நீண்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சுமார் 317 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இந்த  தகவலை கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கான பதிலாக உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜ்ஜுவே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உத்திரபிரதேச தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் மதக் கலவரங்களின் எண்ணிக்கை ’திடீரென’ உயர்ந்துள்ளன. அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள். 2014-ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன் மோடி உத்திரவாதம் அளித்திருந்த “வளர்ச்சி” ஏதும் நடைபெறாத நிலையில் தான் இந்துத்துவ வெறுப்பரசியலை உயர்த்திப் பிடிக்கத் துவங்கினர்.

உண்மையில் மோடி வாக்களித்த “வளர்ச்சியை” அவரே கூட நம்பியிருக்க மாட்டார். காங்கிரசின் ஊழல்களால் ஆத்திரமுற்றிருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு காட்டிய கண்கட்டி வித்தை தான் மேற்படி “வளர்ச்சி”. ஆட்சிக்கு வந்ததும் பீறிட்டுக் கிளம்புவதற்கு தயாராக இருக்கும் பாலாறு மற்றும் தேனாற்றின் மதகுகளைத் திறந்து விடப் போவதாக சொல்லி வந்த மோடி, மெல்ல மெல்ல சுதி குறைந்து ”60 ஆண்டு கால காங்கிரசு ஆட்சி அவலங்களை ஐந்தாண்டுகளில் தீர்க்க முடியுமா?” எனக் கேட்க ஆரம்பித்துள்ளார் –ஆராசனை தலைக்கேறிய நிலையில் இடையில் ஆறாண்டுகள் நடந்த வாஜ்பாயின் ஆட்சியையும் காங்கிரசின் கணக்கிலேயே வரவு வைத்து விட்டனர் மோடி பக்தர்கள்.

தற்போது 2019-ல் நடக்க இருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை குறிவைத்து களமிறங்கியிருக்கும் இந்துத்துவ கும்பல், சகல வகைகளிலும் மத ரீதியிலான பதற்ற நிலையில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை நாடெங்கும் வெவ்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தமிழர் கலாச்சாரத்தை மீட்பது எனும் முகாந்திரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நைச்சியமாக இந்துத்துவ கோமாதா அரசியலுடன் முடிச்சுப் போட பாரதிய ஜனதா எடுத்த முயற்சிகளை நாம் அறிவோம். ”ஜல்லிக்கட்டுக்காக” நடந்ததாக சொல்லப்பட்டாலும், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கமாக பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பு இருந்ததாலும், தொடர்ந்து மத்திய அரசின் மாநில விரோதப் போக்குகளால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் போராட்டக் களத்தில் ஆளுமை செலுத்தியதாலும் பாரதிய ஜனதாவின் முயற்சி படுகேவலமாக தோற்றுப் போனதையும் நாம் கண்டோம்.

தமிழகத்தைப் போல் ஒப்பீட்டளவில் பார்ப்பன எதிர் மரபுகள் மக்கள் மயமாகாமலும் அவற்றுக்கு வலுவான அரசியல் அடித்தளங்கள் ஏற்படாத வரலாற்றுச் சூழலும் இந்தி பேசும் வட மாநிலங்களில் நிலவுவதால் இந்துத்துவ கும்பலின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்து வருகின்றன. சான்றாக யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட முடியும்.

கலவரங்களின் மூலம் வகுப்புவாத பதட்டத்தை உண்டாக்கி அதன் மூலம் சமூகத்தை மதரீதியில் பிளந்து அதனடிப்படையில் தொடர்ந்து தேர்தல்களில் வெல்வவது இந்துத்துவ கும்பலின் திமிரை பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆதித்யநாத்தின் வெற்றிக்குப் பின் பசுப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை அடுத்த ஃபதேபூர் சிக்ரியைச் சேர்ந்த முசுலீம் காய்கரி வியாபாரி ஒருவரைத் தாக்கிய ஹிந்து யுவ வாகினி, பஜ்ரங் தள் மற்றும் கோ ரக்‌ஷக் சேணாவைச் சேர்ந்த குண்டர்கள், அவரது காய்கறிக் கடையைக் கொள்ளையடித்துள்ளனர்.

மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது உள்ளூர் காவல் துறை. பாரதிய ஜனதாவே அதிகாரத்தில் இருப்பதால் முதல் தகவல் அறிக்கையே கூட மலம் துடைக்கும் தாளாகத் தான் மதிக்கப்படும் என்பது வேறு விசயம். ஆனால், தாமே அதிகாரத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில், தமது அடாவடிகளை குறைந்தபட்சமாக பதிவு கூட செய்யக் கூடாதென்கிற ஆத்திரத்தில் ஃபதேபூர் சிக்ரி காவல் நிலையத்தை கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த துணை சூப்பிரெண்டை குறி வைத்து அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு 20 நாட்களுக்கு முன் சகரான்பூரில் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கலவரம் ஒன்றின் போது ரோந்து வந்த மூத்த போலீசு சூப்பிரெண்டு லவ குமாரைத் தாக்கியுள்ளனர். சகரன்பூரைச் சேர்ந்த தலித்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடியுள்ளனர் – இதற்கு போட்டியாக இந்துத்துவ கும்பல் நடத்திய ஊர்வலமே கலவரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கலவரங்களின் மூலம் வகுப்புவாத பதற்றத்தை உண்டாக்கி அதன் மூலம் சமூகத்தை மதரீதியில் பிளந்து அதனடிப்படையில் தொடர்ந்து தேர்தல்களில் வெல்வதால் இந்துத்துவ கும்பலின் திமிர் பல மடங்கு அதிகரித்துள்ளது. போலீசு, இராணுவம், நீதித்துறை, அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரங்களைக் காவிமயமாக்குவது, அதனைக் கொண்டு சட்டபூர்வமாகவே தமது செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்கிற அவர்களது வழக்கமான அணுகுமுறைக்கு இணையாக தாமே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வது, தமது பரிவார அமைப்புகளையே சட்டவிரோத சிவில் இராணுவ படையாக மாற்றியமைப்பது என்கிற புதிய உத்தியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதையே மேற்படி தாக்குதல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

தொடர்ந்து மதரீதியிலான பதற்ற நிலையில் சமூகத்தைத் வைத்திருப்பதற்காக மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் தமக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு புதுப் புதுக் கோணங்களில் இருந்தெல்லாம் திட்டங்களை யோசித்து அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது மாடுகளுக்கும் ஆதார் எண் வழங்கும் திட்டத்தை துவங்கவுள்ளனர்.

“இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாட்டுக்கும், மாட்டு வம்சத்தைச் சேர்ந்த கால்நடைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்பட உள்ளது” என்று உச்ச நீதிமன்றத்தில் ஆதார் தொடர்பாக நடந்து வரும் வழக்கின் போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேட்பதற்கே கேனத்தனமாக உள்ள மேற்படி திட்டத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக கடந்த ஜனவரி மாதமே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மோடி அரசின் திட்டங்கள் முட்டாள்தனமானவை என்று நம்பியவர்கள் கூட அது இந்தளவுக்கு அடிமுட்டாள்தனமானது என்பதை நம்பாததால், அப்போது வெளியான செய்திகளை ’முட்டாள்கள் தின’ விளையாட்டென நினைத்துக் கடந்து  விட்டனர்.

ஆனால், மாடுகளுக்கு ஆதார் எண் வழங்கும் தமது திட்டத்தை முனைப்புடன் தொடங்கியுள்ளது மோடி அரசு. நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகளைப் பொருத்த சுமார் ஒருலட்சம் பணியாளர்களைத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள். சுமார் 150 கோடி ருபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளின் சட்டவிரோத நடமாட்டத்தைக் கண்காணிப்பது சாத்தியமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகளைப் பொருத்த சுமார் ஒருலட்சம் பணியாளர்களைத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள்.

அதாவது கன்று ஈனும் வயதைக் கடந்த, பால் வழங்க முடியாத வயதான மாடுகளை கைவிடுவது அல்லது மாடுகள் அறுப்பது அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு அடிமாடாக அனுப்புவது போன்ற முடிவுகளை எடுக்கும் விவசாயிகளையும் கூட இனிமேல் இத்திட்டத்தின் விளைவாக குற்றவாளிகளாக்க முடியும். இந்துத்துவ அரசியல் மாடு தின்னும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் இன்னபிற சாதியினருக்கும் மாத்திரமின்றி – விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்குமே எதிரானது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது.

ஒரு பக்கம் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் தமது பயங்கரவாதப் படைகளைக் களமிறக்கி கலவரங்களைத் தூண்டி நாட்டை எந்நேரமும் பதற்றத்தில் வைத்திருப்பது – இன்னொரு பக்கம் அவ்வாறு பதற்றத்தில் வைத்திருப்பதை உத்திரவாதம் செய்யும் விதமான திட்டங்களை சட்டப்பூர்வமாகவே நிறைவேற்றி வைப்பது என இரட்டை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது இந்துத்துவ கும்பல். இவையனைத்தும் எதிர்வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகளோ பாரதிய ஜனதாவின் கோமாதா அரசியலைக் கேள்விக்குட்படுத்தினால் தங்களுடைய இந்து ஓட்டு வங்கியிலும் ஓட்டை விழுந்து விடுமென்கிற அச்சத்தில் கள்ள மௌனத்தோடு உடன்பட்டுப் போகின்றன. இந்நிலையில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் முற்போக்காளர்களுமே இந்துத்துவ அரசியலைக் களத்தில் முறியடிக்க முடியும். எப்படி தமிழகத்தின் வீதிகளில் இசுலாமியர்களை விரோதிகளாக கட்டமைக்க முனைந்த இந்துத்துவ கோமாதா அரசியல் தோற்கடிக்கப்பட்டதோ அதே போல் நாடெங்கும் முறியடிக்கப்பட வேண்டும்.

– சாக்கியன்

மேலும் வாசிக்க:

கிரானைட் கொள்ளை : ஒரு பயங்கரவாத நடவடிக்கை !

0
கிரானைட் மாஃபியா கும்பலால் வெட்டிக் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, எஞ்சி நிற்கும் மேலூரிலுள்ள பஞ்சபாண்டவர் மலை.
கிரானைட் மாஃபியா கும்பலால் வெட்டிக் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, எஞ்சி நிற்கும் மேலூரிலுள்ள பஞ்சபாண்டவர் மலை.

கிரானைட் கொள்ளை : இந்த அமைப்புமுறை தோற்றுப் போய்விட்டது !

துரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சகாயம், அது குறித்து அளித்திருந்த அறிக்கையை, இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் பிரண்ட்லைன் ஆங்கில இதழ் (மார்ச் 31, 2017), “ஒரு கொள்ளையின் கூறுகள்” (Anatomy of a Loot) எனும் தலைப்பில் கட்டுரை வடிவில் மிகச் சுருக்கமாக வெளியிட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் செப்.11, 2014 அன்று சகாயத்தை சட்ட கமிசனராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 2014-இல் தனது விசாரணையைத் தொடங்கிய சகாயம், நவம்பர் 2015-இல், ஓராண்டுக்குள்ளாகவே தனது அறிக்கையை நீதிமன்றத்திடம் அளித்தார். சமூகத்தில் நிலவும் ஊழல் பற்றி அடிக்கடி சவுண்டுவிட்டு வரும் நீதிபதிகள் தாமாகவே முன்வந்து அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களோ, “சகாயத்தின் அறிக்கையை வெளியிடுமாறு அ.தி.மு.க. அரசிற்கு அறிவுறுத்திவிட்டு”த் தமது கடமையை முடித்துக் கொண்டனர்.

சகாயம் சட்ட கமிசனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற, சகாயம் விசாரணை நடத்துவதற்கு பெஞ்சு – நாற்காலியைக்கூடத் தராமல் அலைக்கழித்த, சகாயம் எங்கே போகிறார், யாரிடம் விசாரணை நடத்துகிறார், யாரெல்லாம் அவரைச் சந்தித்து புகார் தருகிறார்கள் என்பதையெல்லாம் உளவுத்துறையின் மூலம் கண்காணித்த புர்ரட்ச்சித் தலைவியின் அரசு, கிரானைட் கொள்ளை பற்றி அவர் தந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியிடும் என நீதிமான்கள் நம்பியது,  ”இன்னுமடா நம்பள நம்புறாங்கே” என்ற வடிவேலுவின் காமெடியை மிஞ்சக்கூடியது.

அறிக்கை அளிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், அதனை உடனடியாக வெளியிடக் கோரும் பொதுநல வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கை கடந்த மார்ச் 3-ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முதல் அமர்வு, அப்பொழுதும்கூட அறிக்கையை வெளியிடுமாறு உத்தரவிடாமல், இது குறித்துத் தமிழக அரசு பதில் அளிப்பதற்கு ஆறு வாரம் அவகாசம் அளித்து, வழக்கை ஒத்தி வைத்துவிட்டது. இந்த நிலையில்தான், பிரண்ட்லைன் இதழ் வழியாக சகாயம் அறிக்கை கசிந்து வெளியே வந்திருக்கிறது.

தமிழக அரசின் கடனும் கிரானைட் கொள்ளையும்

நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பு தோற்றுப் போய், திவாலாகி, மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது என நமது ஏட்டில் தொடர்ந்து எழுதி வருகிறோம். மக்கள் அதிகாரம் இக்கருத்தை முன்வைத்து, மக்களை அணிதிரட்டி வருகிறது. 600 பக்கங்களைக் கொண்டிருக்கும் சகாயத்தின் அறிக்கை இக்கருத்தை உறுதிப்படுத்தும் பல்வேறு தரவுகளையும் சான்றுகளையும் கொண்டிருக்கிறது.

சகாயம் அறிக்கையின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் கிரானைட் கற்களின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் வரி ஏய்ப்பால் தமிழக அரசிற்கு ஏற்பட்ட இழப்பு 65,154.60 கோடி ரூபாய். இந்த முறைகேடுகளின் மீது அபராதம் விதிக்கப்பட்டிருக்குமானால், அரசிற்கு 44,283.12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆக, மதுரை மாவட்டத்தில் மட்டும் நடந்துள்ள கிரானைட் சுரங்க ஒதுக்கீடு, உள்ளூர் விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,09,437.72 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டிருக்கிறார், சட்ட கமிஷனர் சகாயம்.

கிரானைட் கழிவுகளால் குப்பைத் தொட்டியாக்கப்பட்ட மேலூர் வட்ட கிராமப்புறம்.

பி.ஆர்.பி. உள்ளிட்டவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் குவாரிகள் உள்ளன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் மதுரையைத் தவிர, பிற மாவட்டங்களில் விசாரணை நடத்த தேவையில்லை என சகாயத்துக்கு உத்தரவு போட்டதால், அங்கு நடந்திருக்கும் கொள்ளை வெளியே வராமல் அமுக்கப்பட்டுவிட்டது.

ஒருபுறம் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளக் கொள்ளை; இன்னொருபுறம் ஆளும் அ.தி.மு.க. கும்பலின், அதிகார வர்க்கத்தின் அடிமடியிலேயே கைவைக்கும் ஊழல். இந்த இரண்டும் சேர்ந்ததன் விளைவுதான் தமிழக அரசின் 3.14 இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமை.

பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து, அதனைக் கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்த மாஃபியா கும்பல் காராகிரகத்தில் அடைக்கப்படவில்லை. ஆனால், அப்பாவித் தமிழர்களோ, கூடுதல் வாட் வரி, பேருந்துக் கட்டண உயர்வு, ரேஷன் சர்க்கரைக்குக் கூடுதல் விலை என இக்கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துமாறு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டாமின் – கிரானைட் கொள்ளையின் சூத்திரதாரி

தமிழகத்திலுள்ள கனிம வளங்களை முறையாக வெட்டியெடுத்து விற்று, அதன் மூலம் அரசிற்கு வருமானம் தேடித் தரும் நோக்கில்தான் டாமின் நிறுவனம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம், சொல்லிக் கொள்ளப்படும் அந்த நோக்கத்திற்கு எதிராகத் தமிழக அரசிற்கு வர வேண்டிய வருமானத்தையும் இலாபத்தையும் தனியாரிடம் கொண்டு சேர்க்கும் கைக்கூலியாகச் செயல்பட்டிருக்கிறது எனக் குற்றஞ்சுமத்துகிறது, சகாயத்தின் அறிக்கை.

“டாமின் நிர்வாகம் குவாரிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் நோக்கில் 1984-லும், அதன் பின்னர் 1998-லும் முகவர்களை உருவாக்குவது என்ற முறையே ஏற்படுத்தி, கிரானைட் கற்களை வெட்டுவதற்கும் அவற்றை விற்பதற்குமான உரிமங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தது. இவ்வாறு குவாரிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சட்டபூர்வ அதிகாரம் டாமின் நிர்வாகத்திற்கு இல்லாதபொழுதும், 1998, டிசம்பர் 28-இல் நடந்த டாமினின் 134-வது இயக்குநர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தனியார் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என சகாயத்தின் அறிக்கை டாமினில் நடந்த மோசடியைப் பதிவு செய்கிறது.

அதன் பிறகு, குத்தகைதாரர்கள் என்ற கொள்ளைக்கூட்டம், எந்த இடத்தில் கற்களை வெட்டியெடுக்க விண்ணப்பம் போடுகிறதோ, அந்த இடம் தொன்மை வாய்ந்த மலையா, நீர்ப்பாசன கண்மாயா, வாய்க்காலா, பஞ்சமி நிலமா, பொதுப்பாதையா, தனியார் நிலமா, சுடுகாடா என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனுமதி வழங்கி, அக்கும்பல் மேலூர் வட்டாரத்தை கிரானைட் கழிவுகளின் குப்பைத் தொட்டியாகச் சீரழித்ததற்குத் துணை போயிருக்கிறது, டாமின்.

திருவாதவூர் ஓவா மலையில் அமைந்துள்ள மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சமணர்களின் குகைகளுக்கு கிரானைட் மாஃபியா கும்பலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யும் சகாயம்.

மேலும், “குவாரிகளில் புதைந்து கிடக்கும் கற்களின் மதிப்பைக் குறைவாக மதிப்பிடுவதன் மூலம், தனியார் குத்தகைதாரர்கள் கொள்ளை இலாபம் அடைவதை டாமின் அதிகாரிகள் உத்தரவாதப்படுத்தியதோடு, டாமினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குவாரிகளில் வெட்டியெடுக்கப்பட்ட கற்களை உள்ளூரில் விற்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் பல முறைகேடுகளைத் தாமே நடத்தி, 5,507.53 கோடி ரூபாயைத் தமக்குள் பங்கு போட்டு முழுங்கியதாக”க் குற்றஞ்சுமத்துகிறது சகாயத்தின் அறிக்கை.

கிரானைட் கொள்ளை – ஒரு பயங்கரவாத நடவடிக்கை

“அதிகார வர்க்கத்தின் துணையோடு கிரானைட் குவாரி குத்தகைதாரர்கள் நடத்திய முறைகேடுகளிலேயே மிகப்பெரும் முறைகேடு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதில் நடந்த அந்நியச் செலாவணி மோசடிதான்” எனப் பதிவு செய்கிறது, சகாயத்தின் அறிக்கை. மேலும், “இந்த ஏற்றுமதி மோசடிகள் ரூபாயின் மாற்று மதிப்பைப் பாதிக்கக்கூடிய வகையில் அபாயகரமானதாக இருந்தன” என்று தனது அறிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார், சகாயம்.

மதுரை மாவட்டத்தில் வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் கற்களில் எழுபது சதவீதம் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட கற்களின் அளவையும், மதிப்பையும் குறைத்துக் காட்டி, அதன் மூலம் அமெரிக்க டாலர்களாகக் கிடைத்த கருப்புப் பணத்தை, குவாரி குத்தகைதாரர்கள் அந்நிய நாடுகளில் பதுக்கியிருக்கின்றனர்.

“இம்மோசடியைத் தாய்நாட்டின் பொருளாதார நலன்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கும் சகாயம், “இந்தத் துரோகத்திற்கு தூத்துக்குடி, கொச்சி, சென்னை, மங்களூர் துறைமுகங்களின் அதிகாரிகளும், சுங்கத் துறையும், அரசு வங்கிகளும் உடந்தையாகச் செயல்பட்டிருப்பதோடு, விசாரணையின்போது தகவல்களைத் தர மறுத்தும், ஆவணங்களை அழித்தும் பி.ஆர்.பி., துரை தயாநிதி உள்ளிட்ட குத்தகைதாரர்களைக் காப்பாற்றும் விசுவாசத்தோடு நடந்து கொண்டனர்” என அம்பலப்படுத்துகிறார்.

“கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதில் பல்வேறு தில்லுமுல்லுகளை நடத்தவும், இந்த ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அந்நிய நாடுகளில் பதுக்கி வைக்கவும் குவாரி குத்தகைதாரர்கள் லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கியதாக”க் குறிப்பிடும் சகாயம், தனது விசாரணையில் 15 லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கப்பட்டு, கருப்புப் பணம் அந்நிய நாடுகளில் பதுக்கப்பட்ட பிறகு கலைக்கப்பட்டதை ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார்.

நரபலி குறித்த விசாரணையை போலீசே தடுக்க முயற்சி செய்ததையடுத்து, சாட்சியங்களைப் பாதுகாக்க சுடுகாட்டிலேயே தங்கிய சகாயம்.

இந்த லெட்டர் பேடு கம்பெனிகளை உருவாக்குவதற்கு மைய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறை உதவியிருக்கிறது. இந்த நிறுவனங்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், அதன் வழியாக ஏற்றுமதி வர்த்தகத்தில் பல்வேறு தில்லுமுல்லைகளை நடத்தவும் வங்கிகள் உதவியிருக்கின்றன.

ஆம்னி பேருந்து முதலாளிகள் ஒரேயொரு போக்குவரத்து உரிமத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பல பேருந்துகளை இயக்குவதைப் போலவே, குவாரி குத்தகைதாரர்கள் ஒரேயொரு உரிமத்தையும், லாரி எண்ணையும் பயன்படுத்தி, பல லாரிகளை இயக்கியுள்ளனர். துறைமுகத்தின் ஆவணங்களில் குறிப்பிட்ட பதிவெண்ணும் உரிமமும் கொண்ட லாரி, ஒரு முறையோ, இரண்டு முறையோ கிரானைட் கற்களைக் கொண்டு வந்து இறக்கியதாகப் பதிவாகியிருக்கும். ஆனால், உண்மையில் அதே பதிவெண்ணையும் உரிமத்தையும் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான லாரிகள் கிரானைட் கற்களை குவாரியிலிருந்து துறைமுகத்திற்குக் கடத்தியிருக்கும்.

இந்தக் கடத்தலுக்கும், முறைகேடான ஏற்றுமதிக்கும் துறைமுகத்திலுள்ள மத்திய சுங்கத் துறை அதிகாரிகளும், கலால் துறை அதிகாரிகளும் உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர். “எத்துணை டன் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றின் தரம் என்ன, அவற்றின் விலையென்ன, இதன் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணி எவ்வளவு என்ற விவரங்களைக் கேட்டபோது, சென்னை, கொச்சி, தூத்துக்குடி, மங்களூரு துறைமுகங்களைச் சேர்ந்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்த விவரங்களை அளிக்க மறுத்துவிட்டதாக”க் குற்றஞ்சுமத்துகிறார், சகாயம்.

குத்தகைதாரர்களின் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பெரும்பாலான வங்கிகள் இந்த ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான அந்நியச் செலாவணி வரவு-செலவு கணக்குகளைத் தர மறுத்துள்ளன. குறிப்பாக, ஒலிம்பஸ் கிரானைட்ஸ் என்ற நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான அழகிரியின் மகன் துரை தயாநிதி குறித்த விவரங்களை சகாயம் கேட்டதற்கு, மதுரையிலுள்ள கார்ப்பரேஷன் வங்கிக் கிளை, “துரை தயாநிதி அந்நிறுவனத்தின் பங்குதாரர்தான். ஆனாலும், அவர் குறித்த விவரங்கள் (know your customer) தங்கள் வங்கிக் கிளையில் இல்லை” எனக் கூசாமல் கையைவிரித்துக் காட்டியிருக்கிறது.

கிரானைட் ஏற்றுமதி தொடர்பாகவும், அதில் ஈடுபட்ட லெட்டர் பேடு நிறுவனங்கள் தொடர்பாகவும் 2012-ஆம் ஆண்டுக்குரிய விவரங்களை மட்டும்தான் தேடி எடுக்க முடிந்தது என்றும், அதற்கு முந்தைய, பிந்தைய ஆண்டுகளுக்குரிய விவரங்களைத் தம்மால் நெருங்கவே முடியவில்லை என்றும் அறிக்கையிலேயே பதிவு செய்திருக்கிறார், சகாயம். அந்த ஒரு ஆண்டில் மட்டும் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம், ஒரு லெட்டர் பேடு நிறுவனத்தின் மூலம், தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ததில் 38.78 கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணி மோசடி செய்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியான பி.ஆர்.பி.க்குச் சிறந்த ஏற்றுமதியாளர் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது, மைய அரசு.

தனது மூன்று வயது குழந்தை கோபிகா, பி.கே.எஸ். குவாரியில் நரபலியாகக் கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த உஷா.

இந்தத் தொகையை (38.78 கோடி ரூபாயை) எதனால் பெருக்கினால், எத்தனை தடவை பெருக்கினால் கிரானைட் ஏற்றுமதியில் நடந்துள்ள மோசடிகளின் மொத்த மதிப்பு கிடைக்கும் என்பதை சகாயத்திற்கும் அப்பனான அதிகாரிகள் விசாரணை நடத்தினால்கூட கண்டுபிடித்துவிட முடியாது. ஏனென்றால், “தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள சுங்கத் துறை மற்றும் கலால் துறையின் கணினிப் பதிவுகளில், கிரானைட் ஏற்றுமதி தொடர்பான விவரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கிறது; கம்பெனிகள் விவகாரத் துறை, அந்நிய வர்த்தக இயக்குநரகம் ஆகியவற்றின் கணினிப் பதிவுகளில், பி.ஆர்.பி. கிரானைட்ஸ், ஒலிம்பியா கிரானைட்ஸ் உள்ளிட்ட கிரானைட் குவாரி நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான விவரங்களை நாங்கள் பெற முடியாதபடி தடுக்கப்பட்டோம். இந்த நிறுவனங்களின் ஏற்றுமதி/இறக்குமதி இரகசியக் குறியீட்டு எண், இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குறித்த விவரங்கள், இந்த நிறுவனங்களின் கார்ப்பரேட் இரகசிய குறியீட்டு எண் போன்றவற்றைக்கூட அரசின் இணையதளங்களில் இருந்து எம்மால் பெற முடியவில்லை” எனக் குறிப்பிடுகிறார், சகாயம். தொழில் அதிபர்கள் என்ற போர்வையில் பொதுச் சொத்தைத் திருடித் தின்ற ஒரு மாஃபியா கூட்டத்தை, இந்த அரசுக் கட்டமைப்பு எப்படியெல்லாம் பாதுகாக்கிறது என்பதை நிறுவும் சான்றுகள் இவை.

அதிகார வர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனம்

“கிரானைட் கொள்ளை தொடர்பான செய்திகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த சமயத்தில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுப்பதுபோலக் காட்டிக்கொண்டு, 44 கிரிமினல் வழக்குகளை கிரானைட் குவாரி அதிபர்கள் மீது தொடுத்தது. தமிழக அரசின் ஊழல் கண்காணிப்புத் துறை 34 அதிகாரிகளின் வீட்டைச் சோதனையிட்டது. மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர்களான மதிவாணன், காமராஜ்; சுரங்கத் துறையைச் சேர்ந்த துணை இயக்குநர் ராஜாராம் உள்ளிட்டுப் பல அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், நாளாக நாளாக விசாரணையின் சூடு தணிந்து போய், வழக்குகள் இயற்கையாக மரணித்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.”

“நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் சகாயம் கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவதையே உள்ளூர் போலீசு விரும்பவில்லை. நரபலி போன்ற கொடூரமான கொலைக் குற்றத்தைச் சட்ட ஆணையர் விசாரிப்பதைக்கூடச் சீர்குலைத்து, சுரங்க குத்தகைதாரர்களைப் பாதுகாக்கத் துணிந்தது போலீசு. கீழவளவு உதவி ஆய்வாளர் அய்யனார், மேலூர் பகுதி கூடுதல் துணை போலீசு கண்காணிப்பாளர் மாரியப்பன் ஆகிய போலீசு அதிகாரிகள் நரபலி தொடர்பான விசாரணையைத் தடுத்து அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்றால், மதுரை ஊரகப் பகுதி போலீசு மாவட்ட கண்காணிப்பாளர் விஜயேந்திர பிடாரி இந்த அதிகாரிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்.”

“ஊழல் அதிகாரிகள், நாணயமற்ற உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்கள், பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாத குவாரி குத்தகைதாரர்கள் என்று அமைந்திருந்த இந்தக் கூட்டணி, முறைகேடுகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தடுப்பதை உறுதிப்படுத்தியது.”

“ஒவ்வொரு குத்தகைதாரரும் அரசுக்கு ஏற்படுத்தியிருக்கும் நட்டத்தைத் தனித்தனியாகக் கணக்கிட்டு, அந்தத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் இரண்டே மாதங்களில் முடிக்க வேண்டும் என செப்.2015-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம், இது நாள்வரை ஒரு நயாபைசாவைக்கூட குத்தகைதாரர்களிடமிருந்து வசூலிக்கவில்லை. அவர்களிடம் பேருக்கு ஒரு விசாரணையை நடத்திவிட்டு, உச்சநீதி மன்ற உத்தரவையே முடக்கிப் போட்டுவிட்டது.”

“தாங்கள் மாட்டிக்கொள்ள மாட்டோம், தங்களை யாரும் தண்டித்துவிட முடியாது என்ற தைரியத்தில்தான், அதிகாரிகள் குத்தகைதாரர்களின் கொள்ளைக்கும் குற்றங்களுக்கும் எல்லாவிதத்திலும் உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இலஞ்சம் பணமாகவும், பொருட்களாவும் தரப்பட்டு, மேலிருந்து அடிவரை தமக்கு எதையும் செய்துகொடுக்கக் கூடிய அதிகாரிகளின் கூட்டத்தைக் குத்தகைதாரர்கள் உருவாக்கி வைத்திருந்தனர்” என அதிகார வர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனத்தைப் பதிவு செய்திருக்கும் சகாயம், “அதிகார வர்க்கத்தின் இத்தகைய ஒத்துழைப்பின்றி, பள்ளிப் படிப்பையே முடித்திராத ஒரு குத்தகைதாரர் (பி.ஆர்.பழனிச்சாமி) ஒரு மாபெரும் கிரானைட் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறுகிறார்.

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையை நடத்திய பெரும்புள்ளிகள் பி.ஆர்.பழனிச்சாமி (இடது) மற்றும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி.

கிரானைட் கொள்ளையை மாபெரும் கருந்துளையைப் போல ஆழங்காண முடியாத மோசடி என்று கூறும் சகாயம்,  “இந்த அமைப்பு முறை முற்றும் முழுதாக தோற்றுப்போயிருப்பதுதான், இந்தக் கொள்ளையின் ஆணி வேராக இருக்கிறது” என்று தனது அறிக்கையில் ஒப்புக்கொள்கிறார். பிறகு, தனது கூற்றுக்கே முரணான வகையில் நாய் வாலை நிமிர்த்துவதற்கான பரிந்துரைகளையும் தனது அறிக்கையில் பட்டியலிடுகிறார்.

  • சென்னை உயர்நீதி மன்றம், மத்தியப் புலனாய்வுத் துறையின் கீழ் ஒரு பன்முகப் புலனாய்வு அமைப்பை உருவாக்கி கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
  • மைய அரசின் கீழுள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், கிரானைட் தொழில் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தைக் கண்காணிப்பதற்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மையத்தை உருவாக்க வேண்டும்.
  • கிரானைட் ஏற்றுமதி தொடர்பாக நடந்துள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்கு மத்திய அரசின் அமலாக்கத் துறை சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்.
  • கனிமப் பொருட்களை வெட்டியெடுப்பது தொடர்பாக உள்ள பழைய சட்டங்கள் அனைத்தையும் திருத்தி அமைக்க வேண்டும்.
  • அனைத்திற்கும் மேலாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டங்களில் நேர்மையான, அப்பழக்கில்லாத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறார்.

தோற்றுப் போய்விட்ட அமைப்பு முறையை, அப்பழுக்கற்ற அதிகாரிகளைக் கொண்டும் சட்டங்களைத் திருத்துவதன் மூலமும் சீர்செய்துவிட முடியும் என்ற சகாயத்தின் நம்பிக்கை, கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற திரைப்பட காமெடியைத்தான் நினைவுபடுத்துகிறது. சகாயம் மட்டுமல்ல, நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரும், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அடிபணியாத, இலஞ்சத்திற்கு மயங்காத அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால்தான், இந்த அரசமைப்பு முறை சீரழிந்துபோய்விட்டதாகக் கருதுகிறார்கள்.

இந்த கிரானைட் கொள்ளை விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். மதுரை மாவட்டத்தில் இந்த முறைகேடு கடந்த இருபது ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள், போலீசு கண்காணிப்பாளர்கள், சுரங்கத் துறை இயக்குநர்கள் வந்து போயிருப்பார்கள். அவர்களுள் இரண்டே இரண்டு பேர்தான், சகாயமும், அன்சுல் மிஸ்ராவும்தான் இந்தக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணிந்தார்கள். நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் இருவரையும் பணிமாறுதல் என்ற பெயரில் தூக்கியெறிந்து, கிரானைட் கொள்ளையர்களைப் பாதுகாத்தார், அன்றைய முதல்வர் ஜெயா.

கிரானைட் கொள்ளையை விசாரிக்குமாறு சகாயத்திற்கு உத்தரவிட்டு, நெற்றிக் கண்ணைத் திறந்துவிட்டது போலக் காட்டிக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம், தனது உத்தரவின் மை காய்வதற்கு முன்பே விசாரணையை மதுரை மாவட்டத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு மறு உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தையும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும், எந்தவொரு அரசுத் துறையும் கால்தூசுக்குச் சமமாகக்கூட மதிக்கவில்லை. தனக்கு ஒத்துழைக்க மறுத்த தலையாரி, ஏட்டய்யாவைக்கூட சட்ட ஆணையர் சகாயத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைத்துவிட்டு நீதிமன்றம் பூச்சாண்டி காட்டியிருக்கிறது என்ற உண்மை விசாரணையின் போக்கிலேயே அம்பலமானது.

குவாரிக்குத் தனது நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் மாஃபியா கும்பலால் கை வெட்டப்பட்டதைச் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

இதற்கும் மேலாக, கிரானைட் கொள்ளையின் முக்கிய புள்ளியான பி.ஆர்.பழனிச்சாமி, மதுரை தவிர, பிற மாவட்டங்களில் தனது தொழிலை நடத்திக் கொள்ள அனுமதித்தார், உயர்நீதி மன்ற நீதிபதி ராஜா. இந்த முறைகேடான தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியிடமும் ஆளுநரிடமும் வழக்கறிஞர்கள் புகார் செய்தனர். அந்தப் புகாரின் மீது நடவடிக்கை இல்லை. மாறாக, தீர்ப்பை விமரிசித்த வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது அனைத்திந்திய பார் கவுன்சில்.

மதுரையில் உள்ள ஐந்து காவல் நிலையங்களைக் குறிப்பிட்டு, அந்த போலீசு நிலைய அதிகாரிகள் எந்த வழக்கிலும் பி.ஆர்.பழனிச்சாமியையோ, அவரது குடும்பத்தாரையோ கைது செய்யக்கூடாதென்ற உத்தரவையும் நீதிமன்றம் வழங்கியது.

“நீதிமன்றங்களின் ஒத்துழைப்போடுதான் கிரானைட் கொள்ளை நடந்திருக்கிறது. அதையும் சகாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு வெளிப்படையாகவே இந்து நாளிதழில் எழுதினார். ஆனால், ஏட்டய்யாவையே விசாரிக்க முடியாத சகாயம் நீதிபதியை எங்கே விசாரிப்பது?

இந்த இலட்சணத்தில் சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்குப் புலனாய்வு, அதனை உயர்நீதி மன்றம் கண்காணிப்பது என்றெல்லாம் சகாயம் பரிந்துரைத்திருக்கிறார். இவையெல்லாம் சங்கர் பாணி சினிமாக்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

இயற்கை வளங்களைத் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏற்றவாறுதான் தற்பொழுது சட்டங்கள் திருத்தப்படுகின்றன. நெடுவாசல் பகுதியில் எதை வேண்டுமானாலும் உறிஞ்சி எடுத்துக்கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.  இப்படிபட்ட நிலையில், கனிம வளங்களைக் கொள்ளையிட முடியாதவாறு சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற சகாயத்தின் பரிந்துரை போகாத ஊருக்கு வழி சொல்லுவதாகும்.

நாடும் மக்களும் எதிர்கொள்ளும் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகள் தொடங்கி இயற்கை வளக் கொள்ளை வரையிலான எதையும் இன்றைய அரசு, அதிகாரக் கட்டமைப்புக்குள்ளே தீர்க்க முடியாது  என்பதுதான் சகாயம் அறிக்கை கூறவரும் உண்மை. இதனை சகாயம் புரிந்துகொண்டாரோ இல்லையோ, பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!

0

ண்டா, கைநீட்டிக் கடன வாங்கிட்டு பதினோரு வருசமா வட்டியும் முதலும் கட்டாம இருந்தா, கோவப்படாம கொஞ்சிட்டா போவான். ஒழுங்காப் போயி விவரத்தைச் சொல்லிட்டு வா….. முடியலையா…. நிலத்தை எவனுக்காவது ஒத்திவச்சு கடனைக் கட்டுற வழியப் பாரு” என்று அம்மா சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணமும் கடன் தள்ளுபடியும் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.

அன்று இருந்த குடும்பக் கடனை அடைக்க வேறு வழியில்லை. விவசாயத்திலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. கவுரவமாக இருந்துவிட்டு சொந்தபந்தங்களிடம் கடன் கேட்கவும் மனசு வரவில்லை. கையிலிருக்கும் ஒரே சொத்து இந்த நாலு ஏக்கர் நிலம்தான். என்ன செய்யப்போறோம்னு குடும்பமே கண்ணு முழி திருகிப்போயி நின்றபோது, ஒரு நண்பன் கொடுத்த யோசனதான் இந்த வங்கிக்கடன்.

“தென்னையிலிருந்து மாத வருமானம், சப்போட்டாவில் வருடம் முழுவதும் வருமானம், மா, நெல்லியில் ஆண்டுக்கு இருமுறை வருமானம். இதற்கிடையில் மூன்று வருடம் ஊடுபயிர் செய்தால் அந்த வருமானத்திலேயே குடும்பத்தை  ஓட்டிவிடலாம். மரப்பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு 36,000 ரூபாய் தவணையைக் கட்ட முடியாதா?” என்று ப்ராஜெக்ட் ரிப்போர்ட் எழுதிக்கொடுத்த விவசாய அதிகாரி என்னிடம் கேட்டபோது,   மூணு லட்சம் ரூபாய் கடன் ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால், இன்றைக்கு வந்து குரல்வளையைப் பிடிக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நம்ம வறுமைக்கு பேங்குக்காரன் மீது ஆத்திரப்படுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?


அம்மா சொன்ன தைரியத்தில் அடுத்த நாள் காலையில் வங்கி வாசல்வரை சென்று விட்டேன். ஆனால் உள்ளே நுழைவதற்குத் தைரியம் வரவில்லை. “உள்ளே என்ன கேட்டுத் தொலைப்பானோ?” என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. ஒரு டீயும் இரண்டு பீடியும் குடித்த பிறகும் தணியாத பதட்டத்துடன், மனசுக்குள் முரட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வங்கிக்குள் நுழைந்தேன்.

நீளமான அந்த ஏ.சி. அறையில், ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இரண்டு நாளைக்குமுன் வீட்டுக்கு வந்த அதே பெண் அதிகாரி எதையோ உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தார். நான் அறை வாசலில் போய் நின்றதுமே கவனித்துவிட்ட அவர், கையில் ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியில் வந்து, “வாங்க ..மேனேஜரைப் பார்ப்போம்” என்று கூறி, இன்னொரு கண்ணாடிக் கூண்டுக்கு அழைத்துச் சென்றார்.

நான் வணக்கம் சொன்னதைக் கண்டுகொள்ளாத மேனேஜர், பெண் அதிகாரியிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறிமாறிப் பேசிவிட்டு, என்னை கண்ணாடி இடுக்குவழியாகப் பார்த்து, ”உட்காருங்கய்யா’’ என்றார்.

இல்ல… பரவாயில்ல சார்… என்று தயக்கத்துடன் நின்றேன்.

“அட..உட்காருங்கய்யா…நானும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். சும்மா உட்காருங்க” என்று சிரித்த முகத்துடன் சொன்னார்.

பெரிய அதிகாரிகளைப் போல பந்தா எதுவுமில்லாமல், ஒல்லியாக இருந்தார் மேனேஜர். ஒரு பார்வைக்கு சாதாரண வாத்தியார் மாதிரி தெரிந்ததால், உள்ளே நுழையும்போது இருந்த நடுக்கம் கொஞ்சம் குறைந்து மெதுவாக உட்கார்ந்தேன்.

“ஏன் இவ்வளவு ஏற விட்டீங்க? 3.5 லட்சம் கடன் வாங்கியிருக்கீங்க. இப்போ அசலும் வட்டியும் சேர்ந்து 6.5 லட்சமாகி நிக்குது. ஏன் இப்படி ஆச்சு?” என்ற மேனேஜரின் கேள்வியில் ஒரு அப்பாவின் அக்கறை தெரிந்தது.

“விவசாயத்துல எதிர்பார்த்த வருமானம் இல்ல. குடும்பத்துல அடுத்தடுத்து கஷ்டமான சூழ்நிலை, அதனாலதான் சார், ஒண்ணும் பண்ண முடியாம போச்சு.” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மனதில் தோன்றியதைச் சொன்னேன்.

“சரி..தோட்டத்துல வருமானத்துக்கு என்ன பண்ணி வச்சிருக்கீங்க?” என்று மீண்டும் அதே அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.

“மா, நெல்லி, சப்போட்டா, மரம் வச்சோம். எல்லாம் வருமானத்துக்கு வரும் நேரத்தில் யானைத் தொந்தரவு அதிகமாயிருச்சு சார். அதனால எல்லா மரத்தையும் வெட்டிட்டு  இப்போ தென்னை மட்டும்தான் வச்சிருக்கோம். ரெண்டு வருசமாதான் மகசூல் ஆரம்பிச்சிருக்கு சார்”

“பதினோரு வருசமாச்சு. இப்பதான் மகசூல் எடுக்கிறேன்றீங்க. மா மரத்தை வெட்டுற வரைக்கும் வருமானம் எடுத்திருப்பீங்கள்ல… அதிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயாவது கட்டியிருக்கலாமே” என்ற மேனேஜரின் அடுத்த கேள்விக்கு என்னால் பதிலே பேசமுடியவில்லை.

“கதை சொல்றத விட்டுட்டு, வாங்குன கடனுக்கு வழி சொல்லுடா”ன்னு நாசூக்கா கேட்குறான். இவன்கிட்ட, அப்பாவின் ஆஸ்பத்திரி செலவு, தம்பியின் திருமணம், தங்கச்சியின் மகளுக்குச் செய்த சீர், என் மகளின் கல்லூரி படிப்புச் செலவு என்று நம் குடும்பத்தின் கஷ்டங்களை எல்லாம் வரிசையா சொன்னா கேட்கவா போறான். என்ன காரணம் சொல்லி இவன்கிட்ட இருந்து தப்பிக்கிறது? என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,

“என்னங்கய்யா பேச்சக் காணோம்… நீங்க யோசிக்கிறதப் பார்த்தா என்ன பொய் சொல்லலாம்னு நினைக்கிற மாதிரி இருக்கு! நான் சொல்றது கரெக்ட்டா” என்ற மேனேஜரின் பேச்சில் நக்கல் தெரிந்தது.

கல்விக் கடன் தவணையைக் கட்டத் தவறிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவமானப்படுத்தியது, போடிநாயக்கனூர் ஸ்டேட் பாங்க். (கோப்புப் படம்)

“நூறுநாள் வேலைக்குப் போற பொம்பளைங்க லோன் வாங்கி மாதம் 460 ரூபா கட்டுறாங்க. உங்களால மட்டும் ஏன் முடியல? வாங்குன கடன திருப்பிக் கட்டணும்னு மனசுல நினைக்கணும்யா. கவர்மென்ட் பணத்தை வாங்குனா, எவனாவது வந்து தள்ளுபடி பண்ணிருவானு நினைச்சா எப்படிக் கட்டுவீங்க? எதையாவது பொய் சொல்லி சமாளிக்கனும்னுதான் தோணும்.”

மேனேஜரின் ஏளனமான வார்த்தைகள் குத்தூசியாக தெறித்துவந்தது. நம்மைக் களவாணிப் பட்டம் கட்டப் பார்க்கும் மேனேஜரை விடக்கூடாது என்று மனசுக்குள் கோபம் கொப்பளித்தாலும், கொஞ்சம் அடக்கியே வாசித்தேன்.

“சார் உங்ககிட்ட பொய் சொல்லனும்னு எனக்கு அவசியமில்ல. மரக் கன்றுகள் நட்டது, சொட்டுநீர் போட்டது, எல்லாத்தையும் போட்டோ எடுத்து பேங்குல கொடுத்திருக்கேன். யானைத் தொந்தரவுனாலதான் அஞ்சு வருசம் வளர்ந்த மரத்தை வெட்டினோம். நான் சொல்றது பொய்யினா நேரில் வந்து, ஏன் வெட்டினோம்னு அக்கம்பக்கத்துல விசாரிச்சு பாருங்க சார்”

“சரிங்கய்யா, நீங்க சொல்றதை ஒத்துக்கிறேன். இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட நீங்க கட்டலையே, ஏன்? அதுக்கு பதில் சொல்லுங்க.”

“தோட்டக்கலைத் துறையிலிருந்து 60,000 ரூபாய் மானியம் வாங்கிக் கொடுத்திருக்கேன். 2007-இல் பயிர்க்கடன் 54,000 ரூபாய் தள்ளுபடியாகி இருக்கிறது.”

“இதெல்லாம் அரசாங்கம் கொடுத்தது. விவசாய வருமானத்துல இருந்து நீங்க ஒரு பைசா கூட கட்டலையே…. ஏன் வருமானமே வரலையா?”

“வர்ற வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு சார். பிள்ளைகள் படிப்புச் செலவு, ஆஸ்பத்திரி செலவு எல்லாத்தையும் பாக்கணும்ல சார். எங்களுக்கு வேற வருமானமும் இல்ல. இந்த நிலத்தை நம்பித்தான் குடும்பமே இருக்கு.”

“ஓஹோ…உங்க பிரச்னையை எல்லாம் தீர்த்துட்டுத்தான் கடன் கட்டுவீங்களோ? கந்துவட்டிக்காரன்கிட்ட இப்படிக் காரணம் சொல்லுவீங்களா, சொல்ல முடியுமா?”

மேனேஜரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பாம்பு படம் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மளும் கம்பைத் தூக்கிற வேண்டியதுதான் என்று முடிவு பண்ணிவிட்டேன்.

“சார் கடன் வாங்குனவன் கஞ்சி குடிக்கிறதே தப்புங்குறீங்களா? இப்படி வந்து பதில் சொல்றதுக்காவது நாங்க உயிரோட இருக்கனும்ல சார்! கந்துவட்டிக்கு வாங்கினா, உள்ளூருல நாலு பேரை வச்சுப் பேசி வட்டியைக் குறைச்சு கணக்கு முடிச்சுறலாம். அல்லது அவனையே விவசாயம் செய்யச் சொல்லிட்டு, வட்டியே இல்லாமக்கூட கணக்கு முடிக்கலாம். இதெல்லாம் உங்ககிட்ட நடக்குமா சார்?”

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டுவிட்டு, இலண்டனுக்குத் தப்பியோடிவிட்ட தரகு முதலாளி விஜய் மல்லையா. (கோப்புப் படம்)

“என்னய்யா திடீர்னு இவ்வளவு எமோசன் ஆயிட்டீங்க! நீங்க வாங்கியிருக்குறது கவர்மென்ட் பணம். என்னோட பணம் கிடையாது. கொடுத்த கடனை வசூலிக்கிறதுக்குதான் எனக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. நீங்க கடன் கட்டலைனா நான்தான் மேலதிகாரிக்குப் பதில் சொல்லணும். நான் என்ன பதில் சொல்றதுன்னு நீங்களே சொல்லுங்க!”

“என்னை இப்படிக் கேட்குற மாதிரி 15,000 கோடி கடனை வாங்கிக்கிட்டு ஓடிப்போன மல்லையாவை உங்களால கேட்கமுடியுமா சார்? என் கஷ்டத்தைச் சொல்லி இதுவரைக்கும் கட்டமுடியலை சார்….. இனிமேல் கட்டுறேன், எனக்கு அவகாசம் கொடுங்கன்னு கேட்குறேன். என்னைய களவாணிப்பய மாதிரி பேசுறீங்க. நான் என்ன பதில் சொல்றது?”

“அய்யா நீங்க விவரமான ஆளா இருக்கீங்க. உங்ககிட்ட நான் அதிகமா பேச விரும்பல. இந்தக் கடனை எப்போ கட்டப் போறீங்க? அதை மட்டும் சொல்லுங்க.”

“என்னால இப்போதைக்கு ஒரு பைசாகூட கட்ட முடியாது சார். வட்டியைக் குறைச்சு சலுகை கொடுத்தா ரெண்டு மாசத்துல எப்படியாவது கட்டுறேன். இதுதான் என்னோட நிலைமை. இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது சார்.”

“வட்டியைக் குறைக்கிறதெல்லாம் என்னால முடியாது. மேலதிகாரிகள்தான் முடிவு செய்யணும்” என்றவர், ஏதேதோ கணக்குப் போட்டுவிட்டு “வட்டியில நீங்க எவ்வளவு கட்டுவீங்க?” என்று கேட்டார்.

“ஒரு 50,000 ரூபாய்தான் கட்ட முடியும் சார்.” என்றதுமே உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டிவிட்டு, “மேடம் இது கதைக்கு ஆகாது. இவர் கணக்கை வாராக்கடன் லிஸ்ட்டில் போட்டுருங்க. இவரு கோர்ட்டுல போயி பணத்தைக் கட்டட்டும்” என்று பெண் அதிகாரிக்கு உத்தரவு போட்டார்.

என்னை தன் ஆபீசுக்கு கூட்டிச்சென்ற பெண் அதிகாரி, “அய்யா உங்க கணக்கை வாராக் கடன் லிஸ்ட்டில் சேர்த்துட்டோம்னா, நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்குச் சலுகை கிடைக்கும். ஆனால், உங்கள் பெயரை ‘பிரச்னைக்கு உரியவர்’ என்று முத்திரை குத்தி கம்ப்யூட்டரில் போட்டுருவாங்க. அப்புறம் நீங்க தமிழ்நாட்டுல கூட்டுறவு பேங்குல கூட கடன்வாங்க முடியாது. பிள்ளைகளுக்கு கல்விக் கடனும் வாங்க முடியாது. நீங்க எங்க அப்பா மாதிரி இருக்கீங்க, அப்படின்றதால இதைச் சொல்றேன்.” என்றார்.

“அப்போ முழுசா வட்டியும் முதலும் கட்டச் சொல்றீங்களா மேடம்”

“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”

“இவ்வளவு பெரிய தொகையைக் கட்டுற அளவுக்கு என் சூழ்நிலை இல்ல, வேற வழியே இல்லையா, மேடம்”

“நான் சொல்றது உண்மையானு மற்ற பேங்க்குலயும் விசாரிச்சுக்கங்க. ஒன்னும் அவசரமில்ல. பொறுமையா யோசிச்சு சொல்லுங்க. உங்களுக்கு இன்னும் ஏழு மாத தவணை இருக்குது. வருசக் கடைசிங்குறதால மேனேஜர் கோபப்படுறார். நீங்க போயிட்டு வாங்க, நான் சொல்லிக்கிறேன்.” என்று சற்று ஆறுதலாக வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்திற்கு முன்னாள் மேனேஜரிடம் காட்டிய வீராப்பெல்லாம் சட்டென்று மறைந்து, மீண்டும் என் மனதிற்குள் பயம் தொற்றிக்கொண்டது. அம்மா சொல்லி அனுப்பியதுபோல கொஞ்சம் பொறுமையாகப் பேசியிருந்தால், இந்தப் பிரச்சனை வந்திருக்காதோ என்றுகூடத் தோன்றியது.

கடைசியாக எனக்கு முன்னாள் இருப்பது இரண்டே வாய்ப்புகள். ஒன்று, வட்டியும் முதலும் பைசா குறையாமல் கட்டி ‘நான் யோக்கியன்’ என்பதை நிரூபிக்கணும். அல்லது அசலோடு வட்டியைக் குறைத்துக் கட்டி ‘நாணயமற்றவன்’ என்ற பட்டத்தைச் சுமக்கணும்.

இப்படியும் சொல்லலாம். நான் யோக்கியனாகணும்னா நிலத்தை முழுசா விக்கணும்! நிலத்தை காப்பாத்தணும்னு நினைச்சா  நாணயமற்றவனாகனும்! நான் என்ன செய்யட்டும்?

மே தினம் : மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம் !

0

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … செங்கொடி ஏந்தி போராடு… !

8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான்.

8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை ! தொழிற்சங்கம் துவங்கியதற்காக கொலைப்பழியோடு வாழ்நாள் சிறையில் தள்ளப்பட்டுள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்களும், முதலீட்டாளர்களது இலாபவெறிக்காக ஒருமணிநேர அவகாசத்தில் வேலையை விட்டே துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான காக்னிசண்ட் ஐடி நிறுவன ஊழியர்களும் மிகச்சமீபத்திய உதாரணங்கள். இரண்டு பிரிவிலும் வேலைமுறைதான் வெவ்வேறாக இருக்கிறதே தவிர, துயரங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறது. வாழ்நாள் சிறையும், வேலைபறிப்பும் சாராம்சத்தில் ஒரே மாதிரியான தண்டனைதான்.

எல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டதால் எப்போது வேலை பறிபோகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. வேலை கிடைப்பதே அரிதாகி வருகிறது. கிடைக்கிற காண்டி ராக்ட் வேலைக்கும் போட்டிகள் அதிகரித்து வருகிறது. எத்தனை மணிநேர வேலைக்கும் தயார்; எவ்வளவு குறைந்த சம்பளத்துக்கும் தயார், எந்த வேலைக்கும் தயார் என்றெல்லாம் இறங்கி வந்து, கிடைத்த காண்டிராக்ட் வேலையை காப்பாற்றிக் கொள்ள குட்டகுட்ட குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பதை உள்ளடக்கிய மறுகாலனியாக்கக் கொள்கையை மத்திய – மாநில அரசுகள் கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமல்படுத்தியதால் முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளி வர்க்கம் மட்டும் பலியாகவில்லை. விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களும் பேரழிவை சந்தித்து வருகின்றன. நாட்டின் இயற்கை வளங்கள், தாது வளம், ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் ஆகிய அனைத்து வாழ்வாதாரங்களையும் சூறையாடி வருகிறது, மறுகாலனியாக்க நடவடிக்கைகள்.

மறுகாலனியாக்கக் கொள்கையானது இந்திய விவசாயத்தை குறிவைத்து அழித்து வருகிறது. விவசாயத்துக்கு தரப்படுகின்ற சலுகைகள் அனைத்தையும் வெட்டுவது, விவசாயக் கடன்கள் மறுப்பு, நீராதாரங்களை வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய ஆதாரவிலையை நிர்ணயிக்க மறுப்பது, உரம், விதைகள் உள்ளிட்ட இடு பொருட்களை பன்னாட்டு நிறுவனங்களது ஆதிக் கத்துக்கு விட்டுவிடுவது, வீரிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கட்டாயமாக்கி, விதைகளுக்காக பன்னாட்டு விதைக்கம்பெனி களை சார்ந்து நிற்பது, ஒப்பந்த விவசாயம் என்கிற பெயரில் சிறுவிவசாயிகளையும், உணவுப்பயிர் விவசாயத்தையும் ஒழித்துக்கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நம்பி இருந்த விவசாயம் கைவிட்டுப்போன நிலையில் கடன் தொல்லை தாங்க முடியாமலும், பிழைப்புக்கு வழி தெரியாமலும் தற்கொலை செய்து கொள்ளுகின்ற விவசாயிகள் மத்தியில், பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்தால் காண்டிராக்ட் வேலையைத் தவிர வேறு வழியில்லை.

ஆன்லைன் வர்த்தகம், ஒற்றை முத்திரை – பல் முத்திரை வணிகம் ஆகிய அனைத்துக்கும் அனுமதி அளித்து சிறுவணிகத்தை ஏகபோக வர்த்தகத்துக்கு பலியிட்டுள்ளது, அரசு. நவீனமயமாக்கல், காப்புரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் சிறுதொழில்கள் சுடுகாட்டுக்கு அனுப்பப்பட்டுள் ளன. பலகோடி பேருக்கு வேலைவாய்ப்பினை தந்து கொண்டிருந்த சிறுவணிகமும், சிறுதொழில்களும் ஒழிக்கப்பட்ட நிலையில், இவற்றை சார்ந்திருந்த மக்களின் கதி என்ன?

காடுவளம், தாதுவளம், நீர்வளம், கடல்வளம் ஆகிய அனைத்தும் இலாபத்துக்காகவே என்கிறது, அரசின் கொள்கை. குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்தாலும், கோக்-பெப்சிக்கு தண்ணீர் தந்தாக வேண்டும். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களை துரத்திவிட்டு, காடுகள், மலைகளை கார்ப்பரேட் கம்பெனிகளது சூறையாடலுக்கு அனுமதிக்க வேண்டும். கடலன்னை மீன்வளத்தை வாரிக்கொடுத்தாலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கே அவை சொந்தம்.

சொந்த நாட்டு மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகளது இலாபவேட்டை முக்கியம் என்கிறது, அரசு. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை, மானியங்கள், பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட எல்லா அடிப்படை துறைகளிலும் தொழில் துவங்க அனுமதி, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வணிகமாக்கிக் கொள்ள அனுமதி, இயற்கை வளங்களை அள்ளிக் கொள்ள அனுமதி, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், நில அபகரிப்பு ஆகிய அனைத்தையும் செய்து முடிக்கிறது.

வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எங்கு போனாலும் வேலையின்மையும், விலைவாசி உயர்வும் நம்மை துரத்திக் கொண்டு தானிருக்கின்றன. கார்ப்பரேட் காட்டாட்சி நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதை என்னதான் பிழைப்புக்கு வழியில்லை என்றாலும் எத்தனை காலத்துக்கு இந்த கொடுமைகளை சகித்துக் கொண்டிருப்பது ? மறுகாலனியாக்க கோரத்தாண்டவத்தை ஆடினாலும், இந்து மதவெறியர்கள் உழைக்கும் மக்களை தேசபக்தி போதையில் மூழ்கடித்து வருகின்றனர்.

இத்தனை நெருக்கடியிலும் மக்கள் தங்களது வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க போராட்டக்களம் புகுந்துள்ளனர். குறிப்பாக, மெரீனா எழுச்சிக்குப் பின்னர் போராட்டமே தமிழகத்தின் முகவரியாகி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன. குறைந்தபட்ச போராட்டமே மறியலும், முற்றுகையும்தான் என்கிற அளவுக்கு தமிழக மக்களது போராட்டங்கள் வீச்சாக நடந்து வருகின்றன.

இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு போலீசு விதவிதமான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. நியாயம் கேட்டு நீதிமன்றம் போனால், நீதிமன்ற பாசிசம் மக்களது  ஜனநாயக உரிமைகளைக்கூட பறிக்கிறது. அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக சொல்லிக் கொண்டாலும், நடந்து கொண்டிருப்பது முதலாளிகளது அரசுதான் என்பதை ஒவ்வொரு நடவடிக்கையும் நிரூபிக்கின்றன. மக்கள்நலன், நாட்டுநலன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எந்த கட்சி ஆட்சி செய்தாலும் கார்ப்பரேட் முதலாளிகள் போடுவதே சட்டம் என்றாகிவிட்டது. உழைக்கும் மக்கள் வாழ வேண்டும் என்றால் இந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

மக்களுக்கான அரசு தேவை என்றால், அங்கு கார்ப்பரேட்டுகளது அதிகாரம் ஒழிக்கப்பட்டு மக்களது அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும். முதலாளித்துவ இலாபவெறிக்காக திணிக்கப்பட்டு வருகின்ற மறுகாலனியாக்கத்துக்கும், அதனைப் பாதுகாப்பாக சுமந்து செல்கின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கும் முடிவுகட்டுகின்ற ஆற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது. போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம். போராட்டக்களத்தில் செங்கொடி ஏந்தி முன்னேறுவோம். மேதினத்தின் போராட்ட பாரம்பரியத்தையும், மே தினத் தியாகிகளது நினைவையும் உயர்த்திப்பிடிப்போம்!

மேதின தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்துவோம் !

  • மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம் !
  • பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை மோதி வீழ்த்துவோம் !
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
  • பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைக் கட்டியமைப்போம் !

பேரணி – ஆர்ப்பாட்டம்
மே 1, 2017
நேரம்  : மாலை 4.30 மணிக்கு
ஆவடி – கும்மிடிப்பூண்டி – காஞ்சிபுரம் – வேலூர்

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
94444 61480, 94453 68009, 88075 32859, 84897 35841.

படக்கட்டுரை : ஒளிரும் மரகதம் – இருளும் கொலம்பியா !

0
3. லா பிடா சுரங்கத்தில் ஜார்ஜ் கூடியெரஸ்(Jorge Gutierrez) வேலை செய்கிறார். அவருடைய பச்சை நிறக் கண்கள் சனந்தர் பகுதியைச் சேர்ந்த மியூசோ(Muzo) பழங்குடியாக அவரை அடையாளம் காட்டுகிறது. அங்கு பெரும்பான்மையானவர்கள் அரிய மியூசோ பூர்வக்குடி மக்களைச் சேர்ந்தவர்கள்.

கொலம்பியா – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த செழிப்பான  நாடு. வற்றாத ஆறுகளான அமேசானும் ஒரினோக்கோவும் கொலம்பிய மக்களின் உயிராதாரங்கள். இயற்கை வனப்புகளும் வளங்களும் கொள்ளை அழகாய் இருக்கும் கொலம்பியாவில்தான் உலகின் மிகச்சிறந்த மரகத கற்கள் உற்பத்தியாகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு மரகத கற்களுக்கு தாயகம் கொலம்பியா. கண்கொள்ளா அழகுடன் பச்சை நிறத்தில் மின்னும் மரகத கற்களில் சில வகைகள் வைரத்தை விடவும் விலை உயர்ந்தவை. உலகெங்கும் பணக்காரர்களின் விரல்களில் அழகுடன் வீற்றிருக்கும் பச்சை நிற மரகத கல் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியினால் உருவானவை.  உழைப்பை நீக்கிவிட்டால் நிறத்தை தவிர கருங்கல்லிற்கும் மரகத கல்லிற்கும் வேறுபாடு ஏதுமில்லை.

மரகத கற்களை ஏற்றுமதி செய்யும் ஏகபோக உரிமைக்காக ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் 1980-களில் மாஃபியா கும்பல்களுக்கு இடையே நடந்த வன்முறைகளில் சிக்கிக்கொண்டு சிதைந்து போன கொலம்பிய மக்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் இருக்கும். கொலம்பிய அரசின் உதவியுடன் சட்டபூர்வமாகவும் மாபியா கும்பல்களால் சட்டவிரோதமாகவும் நடத்தப்படும் இந்த காட்டு வேட்டையினால் கொலம்பியா நாடு இழந்த இயற்கை வளங்களும் எண்ணி மாளாதவை.

கரிய பாறைகளில் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மரகதத்தின் மின்னும் பச்சை நிறம் வறுமையை அகற்றி தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று பல்லாயிரக்கணக்கான கொலம்பிய மக்கள் அன்று நம்ப வைக்கப்பட்டார்கள். மரகத கல்லைத் தேடி புறப்பட்ட கொலம்பிய மண்ணின் மைந்தர்கள் பேரகொய்ரா(Berraquera) என்று அழைக்கப்பட்டனர். ஆனால் அப்படி மரகதம் தேடிய பெரும்பான்மையான கொலம்பிய மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

இன்று அந்த படுபயங்கர பச்சை யுத்தம் இல்லாமல் போய்விடினும் அது தோற்றுவித்த உள்நாட்டு அரசியல் குழப்பங்களாலும் போதை கடத்தல் கும்பல்களாலும் இயற்கை வளங்கள் சூறையாடுவதாலும் கொலம்பியா இரத்தக்களரி ஆகிவிட்டது. ஒட்டுமொத்த கொலம்பிய மக்களுக்கும் சொந்தமான இயற்கையை எதிரிகளிடம் இருந்து மீட்பதற்கான ஒரு போராட்டக்களத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன மரகதத்தின் பச்சை நிறமும் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியும்.

கொலம்பியாவின் மேற்கு பொயகா(Boyaca) மாநிலத்தில்  இருண்டு போன ஒரு சட்டவிரோதமான சுரங்கமொன்றில் மரகத கல்லை தேடுகின்றனர் இரண்டு தொழிலாளர்கள்.
மாரிபியை சேர்ந்த லா பிடா(La Pita) சுரங்கத்தில் தோண்டி எடுத்த செப்பனிடப்படாத ஒரு சிறிய மரகதப் பாறையொன்றை தன் கையில் வைத்திருக்கிறார் ஒரு சுரங்க தொழிலாளி. செதுக்கியப் பின்னர் அளவில் சிறிதாக இருக்கும் அதன் வர்த்தக மதிப்புக் குறைவு.
லா பிடா சுரங்கத்தில் ஜார்ஜ் கூடியெரஸ்(Jorge Gutierrez) வேலை செய்கிறார். அவருடைய பச்சை நிறக் கண்கள் சனந்தர் பகுதியைச் சேர்ந்த மியூசோ(Muzo) பழங்குடியாக அவரை அடையாளம் காட்டுகிறது. அங்கு பெரும்பான்மையானவர்கள் அரிய வகை மியூசோ பூர்வகுடி மக்களைச் சேர்ந்தவர்கள்.
சுரங்கக் கழிவுகள் சுரங்கப்பாதையை ஒட்டியோ அல்லது ஆற்றிலோ கொட்டப்படுகின்றன. இந்த பொதுவான பழக்கவழக்கம் கொலம்பியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களால் தடை செய்யப்பட்டிருந்தாலும் தற்போது தான் கடுமையாக்கப்பட்டிருகின்றன
சுரங்க ஆறானது மேற்கு போயகாவை(Boyaca) கடந்து செல்கிறது. பல நிறுவனங்கள் அருகிலுள்ள மலைகளில் மரகத கற்களைத் தோண்டுகின்றன. அங்கு வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளிகளும் பேரகொய்ராக்களும் தாங்கள் முகாம்களை அதற்கருகே அமைத்து கொள்கிறார்கள்.
சுரங்க ஆற்றின் பள்ளத்தாக்கில் சுமார் 40 ஆண்டுகளாக பேரகொய்ராவாக இருக்கிறார் ஜோஸ் இலியாஸ் வல்லேஜோ (Jose Elias Vallejo). மியூசோ சுரங்கங்களுக்காக உருவாக்கப்பட்ட நகர்புறச் சேரிப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத குடியிருப்பான டாடிகபேவில்(Matadecafe) அவர் குடியிருக்கிறார்.
ஜெய்மி வார்கஸ்(Jaime Vargas), ஒரு சுரங்க விபத்தில் தனது இரண்டுக் கால்களையும் இழந்து விட்டார். அதன் பிறகு லூயிஸ் கோமஸ்(Luis Gomez) மற்றும் மர்கஸ் எர்ராடா(Marcos Errada) இருவருடன் சேர்ந்து மரகத கல்லை தேடுவதற்காக தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்.
சுரங்க ஆற்றினை வெறும் கைகளாலும் மண்வெட்டிகளாலும் துழாவி மரகத கல்லைத் தேடும் குழு ஒன்று தோண்டுகிறது. இங்கே முன்புறத்தில் இருக்கும் கார்லோஸ் சாலமன்சா(Carlos Salamanca) அந்தப் பகுதியில் அனுபவம் மிக்கவர்களில் ஒருவர்.
நிலத்தை ஊடுறுவி மரகத கல்லை தேடுவதென்பது முழுவதும் மனித உழைப்பைச் சார்ந்த ஒன்றாகும். கரும்பாறைகளில் ஒளிந்திருக்கும் மரகதப் பச்சையின் ஒளிக்கீற்றை கண்டறியும் திறமை அதற்கு தேவைப்படுகிறது.
பள்ளத்தாக்கில் இன்று இவர்கள் கண்டறியக் கூடிய கற்கள் சிறியது மற்றும் சந்தை மதிப்பும் குறைவு. தங்கள் சகாக்களிடம் ஏற்படும் பொறாமைகளைத் தவிர்க்கப் பொதுவாக கற்களை கண்டறிந்த பின்னர் வாயில் ஒளித்து அதன் ஒளியை மறைக்கிறார்கள்.
மரகதத்தைத் தேடி தனது வீட்டிலிருந்து பல மைல் தொலைவு பயணம் செய்த பிறகு பெண் பேரகொய்ரா ஒருவர் ஓய்வெடுக்கிறார்.
சுரங்கத் தொழிலாளிகளிலும் பேரகொய்ராக்களிலும் சிலர் மட்டுமே பெண்கள். பெரும்பான்மையான பெண்கள் கேன்டினஸ்(cantinas) என்றழைக்கபடும் உணவு மற்றும் மதுக்கூடங்களில் பணிப் புரிகிறார்கள். மேலும் சுரங்கத் தொழிலாளிகள் மற்றும் பேரகொய்ராக்களின் துணிகளைத் துவைக்கிறார்கள்.
மரகத கல் செதுக்கும்(carver) வேலை செய்பவரான பிரெடி மாண்டில்லா (Fredy Mantilla) தனது வீட்டில் அமைந்துள்ள பட்டறையில் மரகத கல்லொன்றை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். பேரகொய்ராக்கள் மரகத கல்லை கண்டறிந்தவுடன் ஒன்று அதை சராசரியான விலையில் விற்கிறார்கள் அல்லது தங்களது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கொடுத்து அதை மறு மதிப்பீடு செய்கிறார்கள்.
சிறந்த மரகத கல்லைத் தேடுவதற்காக சுரங்கம் தோண்டுபவர்கள், பேரகொய்ராக்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் தங்களுக்குள்ளே நாள்தோறும் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள். போகோடோவின் ஜிமினேஷ்(Jimenez) தெருவைச் சுற்றிலும் உள்ள கடைகளில் சிறிய அளவிலான மரகத கல் வியாபாரம் நடைபெறுகிறது. விலை மதிப்பற்ற மரகத கல்லை மதிப்பீடு செய்யவும் மெருகேற்றவும் விற்பதற்கும் பல்வேறு வகையான கடைகளும் பட்டறைகளும் அங்கே அக்கம்பக்கமாக இருக்கின்றன.
மரகத சுரங்க முதலாளிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்க நடுவராக செயல்பட்டவர் மோன்சிங்கர் ஹெக்டர் குட்டியர்ஸ் பாதிரியார். ஆறு மரகத கற்களால் உருவான சிலுவை சின்னத்துடன் இருக்கும் மோதிரத்தை அணிந்துள்ளார். இவரது நண்பரான மறைந்த பிரபல மரகத மாபியா கும்பல் தலைவரான விக்டர் கிரான்சாவினால்(Victor Carranza) இவருக்கு இது பரிசாக வழங்கப்பட்டது.

– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்:சுந்தரம்.

மூலக்கட்டுரை: Into the green land: Emerald mining in Colombia