Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 678

இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

8

தொழிலாளர்களுக்காகப் போராடிய தோழர் சம்மனஸ் பொய் வழக்கில் கைது!
இராஜபாளையம் காவல்துறையா? ராம்கோவின் அடியாளா?

ராஜபாளையம் மில்ஸ் தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளுக்காக தொடர் போராட்டத்தை நடத்தியதால் தோழர் சம்மனஸ் அவர்கள் 13-01-2014 அதிகாலை 3 மணி அளவில் இராஜபாளையம் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜபாளையம் மில்லில் வேலை செய்யும் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைக்காக பு.ஜ.தொ.மு தொடர் பிரச்சாரங்களையும், போராட்டத்தையும் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்களின் அவல நிலையை விளக்கியும், சட்டப்படியான தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும், ஆலை வாயில் முன்பு பிரசுரம் வினியோகித்த போது, தோழர்கள் நிர்வாகத்தின் அடியாட்களால் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்தும் மில் நிர்வாகத்தின் ரௌடித்தனத்தை அம்பலப்படுத்தியும் தொழிலாளர்கள் மத்தியில் பிரசுரம் மற்றும் சுவரொட்டி மூலமாக வீச்சான பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. அடியாட்களை கொண்டு தாக்கினால் பயந்து விடுவோம் என்று நினைத்த நிர்வாகம் பு.ஜ.தொ.மு-வின் எதிர் நடவடிக்கையால் கலக்கமடைந்த்து.

தோழர் சம்மனஸ்
தோழர் சம்மனஸ்

தோழர்களைத் தாக்கிய மில் நிர்வாகத்தின் குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி, இராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரை பெற்றுக் கொள்ளாமல் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட மில் முதலாளிக்கே தன் விசுவாசமான ஆதரவு என வெளிப்படையாக அறிவித்து, காவல் துறை புகாரை நிராகரித்தது. இதனால் புகார் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

இரு மாதமாகியும் இது வரை கிரிமினல் குற்றமான கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் குண்டர்கள் மீது, எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறையை கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஆணையிடக் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் நீதிமன்ற ஆணை கிடைத்துவிடும் நிலை இருக்கிறது.

இவ்வாறான பு.ஜ.தொ.மு வின் எதிர் நடவடிக்கைகளை தாக்குப் பிடிக்க முடியாமல் பகுதியில் உள்ள தோழர்களின் வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவது, பணியா விட்டால் பின்பு சமாதானமாக பேசி பணம் கொடுப்பதாக சொல்லி விலை பேசுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது ராம்கோ நிர்வாகம். ’நக்சல்பாரிகளை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டு இதுவரை அச்சிடப்படவில்லை’ என்பதை பகுதி தோழர்கள் முகத்தில் அறைந்தாற்போல் பதில் கூறியுள்ளனர்.

75 ஆண்டுகால தனது மில் வரலாற்றில் கூழைக்கும்பிடு போடும் பிழைப்புவாத தொழிற்சங்கங்களையே பார்த்திருந்த மில் நிர்வாகம் முதன்முறையாக புரட்சிகர தொழிற்சங்கத்தின் வீச்சையும் வளர்ச்சியையும் கண்டு தூக்கமின்றி தவித்தது. தொழிலாளர்களும், நிர்வாகத்திற்காக வால் பிடிக்கும் துரோக தொழிற்சங்கங்களான INTUC, HMS, AITUC போன்றவற்றின் மீது அதிருப்தி அடைந்திருந்து, போராடுவதற்கு சரியான தலைமைக்காக ஏங்கியிருந்த நிலையில் பு.ஜ.தொ.மு -வின் தைரியமான நடவடிக்கைகளால் புத்துணர்வு பெற்று “இது தான் நமக்கான சரியான புதிய தொழிற்சங்கம்” என ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 30-12-2013 அன்று இராஜபாளையம் மில் முதலாளி ”குருபக்தமணி” ராம சுப்பிரமணியனை கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் இராஜபாளையம் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ”குருபக்தமணியின்” பெயரை உச்சரிக்க கூட பயந்திருந்த பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தால் உற்சாகம் அடைந்து, ராம்கோ முதலாளி சட்ட விரோதமாக அபகரித்திருக்கும் புறம்போக்கு நிலங்களையும் பறிமுதல் செய்ய போராடுங்கள் எனக்கூறி, ஆர்ப்பாட்ட்த்தை வாழ்த்திச் சென்றனர்.

தொழிலாளர்களிடையே பு.ஜ.தொ.மு வுக்கு பெருகி வரும் ஆதரவால் கலக்கமடைந்த நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல், தொழிலாளர்களை மிரட்டுவது, உளவு பார்ப்பது, கண்காணிக்க CCTV கேமரா பொருத்துவது, பொய் பிரச்சாரங்களை பரப்புவது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டது. இதுவரை தொழிலாளர்களின் கோரிக்கைக்காக எதுவும் செய்யாத அங்கிகரீக்கப்பட்ட துரோக தொழிற்சங்கங்களான INTUC, HMS, AITUC போன்றவற்றின் தலைவர்கள் களத்தில் இறங்கி தொழிலாளர்களிடம் முதலாளிக்கு நற்சான்றிதழ் வழங்கும் வேலையையும், பு.ஜ.தொ.மு என்பது தீய சக்தி எனும் பொய் பிரச்சாரத்தின் மூலம் தனது விசுவாசத்தை வெளிக்காட்டும் வேலையையும் செய்ததால் தானாகவே அம்பலப்பட்டு போயுள்ளனர். வாயிற் கூட்டம் நடத்தி முதலாளிக்கு சாமரம் வீசும் இந்த துரோக தொழிற்சங்க தலைவர்களை தொழிலாளர்கள் அந்தக் கூட்டத்திலேயே கிண்டல் செய்துள்ளனர்.

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் நிர்வாகத்தின் மீது அதிருப்தியையும் பு.ஜ.தொ.மு வின் மீது ஆதரவையும் வளர்த்தது. தான் செய்யும் எல்லா நடவடிக்கைகளிலும் தோல்வி அடைந்த இராஜபாளையம் மில் நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கான அடுத்த ஆப்பை தானே தயார் செய்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தோழர் சம்மனஸ் ஏதோ ஒரு தொழிலாளியிடம் தகராறில் ஈடுபட்டதாக பொய் புகாரை தயார் செய்து காவல்துறை மூலமாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நீதி மன்றங்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதை கணக்கில் கொண்டு திட்டம் தீட்டி, மற்ற நாட்களில் என்றால் அன்றே பிணையில் வெளிவந்து விடுவார்கள் என்பதால் பிணை கிடைக்கக் கூடாது என நினைத்து நீதிமன்ற விடுமுறை தொடங்கும் 13.01.2014 அன்று அதிகாலையில் தோழர். சம்மனஸை கைது செய்து, அன்று இரவு மதுரை மத்திய சிறையில் நீதி மன்றக் காவலில் வைத்துள்ளது.

கிரிமினல் குற்றமான கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் மீது கொடுத்த புகாரின் மேல் இரண்டு மாதமாகியும் வழக்கை பதிவு செய்யாத இராஜபாளையம் காவல்துறை, மில் நிர்வாகம் தூக்கியெறியும் எலும்பு துண்டிற்காக பொய் வழக்கை சோடித்து உடனடி கைது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.

பொய்வழக்கு, மிரட்டல், சதிச்செயல், பொய் பிரச்சாரம் போன்ற எத்தனை தடைகள் வந்தாலும் அவைகளை முறியடித்து இராஜபாளையம் மில்ஸ் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க, ஆலை வாயில் முன்பு புரட்சிகர தொழிற் சங்க செங்கொடி உயரும் நாள் தொலைவில் இல்லை. இறுதி வெற்றி தொழிலாளி வர்க்கத்திற்கே.

உழைக்கும் மக்களே!

  • ராம்கோ நிர்வாகத்தின் பண்ணையார் தனத்திற்கு முடிவு கட்டுவோம்!
  • ராம்கோ நிர்வாகம் மற்றும் இராஜபாளையம் காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து முறியடிப்போம்!
  • தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை விடாப்பிடியான போராட்ட்த்தின் மூலம் வென்றெடுப்போம்!

தமிழக அரசே !

  • தோழர் சம்மனஸை எவ்வித நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்!
  • ராம்கோ நிர்வாகத்தின் ஏவல் நாயாக செயல்படும் இராஜபாளையம் காவல்துறை மீது நடவடிக்கை எடு!

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு
இராஜபாளையம்
தொடர்புக்கு – 8344475144

ஏற்காடு ‘ புரட்சி ’ !

6

டந்த டிசம்பர் 4-ஆம் தேதியன்று நடந்த ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் எதிர்பார்த்தபடியே ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. பணத்தால் அடிப்பது, எதையும் விலை பேசுவது, எதிரியின் நிழலுக்கும் எலும்புத் துண்டை வீசுவது என்று தேர்தல் ஆணையக அதிகாரிகள் முன்னிலையிலேயே பாசிச ஜெயா பகிரங்கமாக ஏலத்தில் எடுத்து இந்த வெற்றியைச் சாதித்துள்ளார்.

ஏற்காடு தேர்தல்
பாசிச ஜெயா கும்பலின் பணநாயகத்துக்குப் பக்கமேளம்: அ.தி.மு.க.வினர் ஏற்காடு தொகுதியின் கிராமங்களில் பணத்தை வாரியிறைத்து வாக்காளர்களை விலைபேணிக் கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணத்தைப் பறிமுதல் செய்து சூரத்தனம் காட்டும் தேர்தல் ஆணையம்.

வாக்கு வித்தியாசத்தை முன்னைக்காட்டிலும் அதிகப்படுத்தி தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்வது, இதை முன்னுதாரணமாகக் காட்டி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவது என்பதே அவரது நோக்கமாக இருந்தது. இதற்காகவே, இதுவரை கண்டிராத வகையில் தனது அமைச்சரவையிலுள்ள 31 அமைச்சர்கள் உள்ளிட்டு மொத்தம் 61 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்தார். முன்னாள் – இந்நாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், செயலாளர்கள், தொண்டர்கள் என ஒரு பெரும்படையைக் கொண்டு தொகுதியை முகாமிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து வாக்காளர்களை விலை பேசி இந்த வெற்றியைச் சாதித்துள்ளது ஜெயா கும்பல். ஆபாசக் குத்தாட்டங்கள், பணம், சாராயத்துடன் பிரியாணி – என தி.மு.க.வின் திருமங்கலம் பார்முலாவை ஜெயா கும்பல் உச்சத்துக்குக் கொண்டு சென்றதால், எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வகையில் ஏற்காடு தொகுதியில் இம்முறை 89.23 சதவீத வாக்குகள் பதிவாகின.

போதாக்குறைக்கு தேர்தல் ஆணையமும், ஆணையர் பிரவீன் குமாரும் ஜெயா கும்பலின் அராஜக ஆட்டங்களுக்குப் பக்கமேளம் வாசித்தனர். ஏற்காடு தொகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனை போடவில்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆளும் கட்சியினர் தலா ரூ. 2,000 வழங்கியதை தொலைக்காட்சிகள் அம்பலப்படுத்தியபோதிலும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் போன்றவை வழங்கப்பட்டு, அ.தி.மு.க. அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் திடீரென நடத்தப்பட்டன.

அதிகாரத்திலுள்ள முதல்வர் வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகள் இருந்த போதிலும் ஏராளமான பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கான வாக்குறுதிகளை ஜெயலலிதா அள்ளி வீசினார். இதுபற்றி தி.மு.க.வினர் புகார் கொடுத்ததும், இப்புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவிடம் கோரியது. ஆனால் அவரோ, தான் எந்த விதிமுறையையும் மீறவில்லை என்று திமிராகப் பதிலளித்தார். இந்த விளக்கத்தை ஏற்க மறுப்பதாகக் கூறிய தேர்தல் ஆணையம், பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் புதிய திட்டங்கள் பற்றி பேசக்கூடாது, எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று அறிவுரைதான் வழங்கியதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், பணத்தையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதை உச்சத்துக்குக் கொண்டு சென்று இந்தத் தேர்தல் வெற்றியைச் சாதித்துள்ள ஜெயலலிதா, இதனை அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட பணிகளை மக்கள் அங்கீகரித்துள்ளதற்குக் கிடைத்த வெற்றி என்று திமிராகப் பறைசாற்றிக் கொள்கிறார். ஜனநாயகம் என்றால் அது ஓட்டுப்போடுவதற்கானது என்பதாகப் பயிற்றுவிக்கப்பட்டு, அரசியலற்ற பிழைப்புவாதத்திலும் ஊழலுக்கு உடந்தையாகவும் உழைக்கும் மக்கள் மிகக் கேவலமான முறையில் சீரழிக்கப்பட்டிருப்பதுதான் ஜெயலலிதாவின் ‘ஏற்காடு புரட்சி’!

– தனபால்
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_____________________________________________

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

7

புதிய ஜனநாயகம் 2014

புதிய ஜனநாயகம் ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. தில்லைக் கோயில் தீட்சிதர் சொத்தா?  ஜெ அரசு – சு.சாமி – பார்ப்பனக் கும்பலின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!

2. ஆம் ஆத்மி: சீரழிந்த நாடாளுமன்ற அரசியலைச் சிங்காரிக்க வந்த புதிய துடைப்பம்!

3. ஏற்காடு ‘புரட்சி’

4. ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் அனைவரையும் விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!!

5. “தில்லை தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம்!” – வெண்மணி நினைவு நாளில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய முற்றுகைப் போராட்டம்

6. பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி!

7. “வைப்பாறில் நவீன இயந்திரங்களால் மணல் கொள்ளை நடப்பதைத் தடுப்போம்! மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவோம்” – மாட்டு வண்டித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

8. நேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்

9. உ.வ.க. பாலி மாநாடு: ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்

10. மண்டேலாவின் மறுபக்கம்

11. அதிகார போதையில் ஆட்டம் போட்டு அம்பலப்பட்டு நிற்கும் ஓம்சக்தி சேகர் கும்பல்

12. நோக்கியா: கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை!

13. எதிர்கொள்வோம்!

14. “வேலைபறிப்பு – தற்கொலைகள் – ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – பு.ஜ.தொ.மு.வின் பேரணி – ஆர்ப்பாட்டம்

15. கரும்பு விவசாயிக்குத் தூக்குக் கயிறு! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பம்பர் பரிசு!!

16. 37-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று

புதிய ஜனநாயகம் ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

8

1. திருச்சி

  • தில்லைக் கோயிலை தீட்சிதனுக்குப் பட்டா போட்டுவிட்டது உச்சுக்குடுமி மன்றம்!
  • தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?
  • மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்!

என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 09.01.2014 காலை 10மணிக்கு திருச்சி இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுச்சொத்தான தில்லை நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொத்தாக கொள்ளை இட்டு அனுபவித்து வந்ததை எதிர்த்தும் தமிழில் தேவாரம் பாடும் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்தும் ஆறுமுகசாமி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் இணைந்து 10 ஆண்டுகளாக போராடி கோயிலை அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். ஆனால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஆதரவாக அரசே துணை நின்று அரசு கட்டுப்பாட்டில் இருந்த கோயிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைக்க காரணமாக இருந்துள்ளது.

  • மூத்த வழக்குரைஞர்கள் யாரையும் நியமிக்காமல் அரசு தரப்பை தோற்கடிக்க அரசே துணை போன செயலை கடுமையாக கண்டித்து பேசப்பட்டது.
  • மீண்டும் அக்கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் தமிழில் தேவாரம் ஒழிக்க ஏதுவாக தமிழக சட்ட மன்றத்தில் சட்டம் இயற்றி கோயிலை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி பேசப்பட்டது.
  • தீண்டாமையை கடைபிடிக்கும் வகையில் நந்தன் நுழைந்த தெற்க்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமை சுவரை அகற்றிட வேண்டும். கோயிலுக்குள் இருந்த தீட்சிதர்கள் அகற்றிய நந்தனார் சிலை நிறுவப் படவேண்டும் என்றும் வலியுறுத்தி பேசப்பட்டது.
  • மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓயமாட்டோம் என்று எழுச்சிகரமான முழக்கங்களும் போடப்பட்டது.
  • ம.க.இ.க.வின் மையக்கலைகுழுவினரின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.

தலைமை :
தோழர்.சரவணன்,ம.க.இ.க

மாவட்ட செயலர் திருச்சி.

உரை :
தோழர்.நிர்மலா,பெ.வி.மு
தலைவர், திருச்சி

தோழர்.சேக்,பு.மா.இ.மு
திருச்சி

சிறப்புரை :
தோழர் காவிரிநாடான், தலைவர்
மனித உரிமைபாதுகாப்பு மையம், திருச்சி

நன்றியுரை :
தோழர்.சுந்தரராசு,பொதுச்செயலாளர்,
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
தமிழ்நாடு.

புரட்சிகரப் பாடல்கள் :
மையக்கலைக்குழு ம.க.இ.க
தமிழ்நாடு.

செய்தி
ம.க.இ.க.திருச்சி பகுதி

2. மதுரை

தில்லைக் கோவில் மக்கள் சொத்து
திருட்டு தீட்சித பார்ப்பானை விரட்டு

என்ற தலைப்பில் மதுரை நேதாஜி சிலை முன்பு மாலை5.30 மணியளவில் விண்ணதிரும் முழக்கங்களுடன் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க. மதுரை அமைப்பாளர் தோழர்.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

உச்சிக் குடுமி மன்றத்தின் மனுநீதி தீர்ப்பை அம்பலப்படுத்தியும், மொட்டை சோ, சூனா சாமி, ஜெயா மாமியின் பார்ப்பனத் திமிரை அம்பலப்படுத்தியும், இதற்கு எதிராக போராடவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி தோழர். குருசாமி, வி.வி.மு. உசிலை, தோழர் மோகன், வி.வி.மு, கம்பம், தோழர்.லயனல் அந்தோணிராஜ், ம.உ.பா.மை, மதுரை ஆகியோர் உரையாற்றினார்.

மொட்டை சோ, சுனா சாமி, ஜெயா மாமி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு புரட்சிகர அமைப்புகள் சார்பில் செருப்படி பூசை செய்யப்பட்டு பின்னர் அப்படங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

3. புதுச்சேரி

தில்லை கோயிலை தீட்சதனுக்கு பட்டா போட்டுவிட்டது உச்சிக்குடுமி மன்றம்.
தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணிஆட்ட வந்த  தீச்சிதன் சொத்தா?
மானமுள்ள தமிழ் மக்களே  கொதித்தெழுங்கள்!

என்ற முழக்கத்தின் கீழ் 09-01-14 அன்று புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் நகரத்தில் தென்கோபுர வீதியில் மாலை 5:30 மணியளவில் கண்டன ஆர்பாட்டம்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் பரவலாக துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

இவண்  :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- புதுச்சேரி.

4. சிவகங்கை

  • “சாதி வென்றது! நீதி தோற்றது!”
  • “தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தாம்-உச்சுக்குடுமி நீதிமன்றம் தீர்ப்பு!”
  • “தீட்சிதர்-பாஜக-சோ-சு.சாமி-ஜெயா கும்பல் கூட்டுச்சதி!”

என்ற தலைப்பில் தமிழக அரசை தனிச்சட்டம் இயற்றி கோயிலைக் கையகப்படுத்த வற்புறுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனை வாசலில் 09/01/2014 அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு தோழர் ஆனந்த் தலைமை வகித்தார். தோழர் மணிமேகலை, தோழர் குருசாமி மயில்வாகனன் ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார். உச்ச நீதிமன்றம் எப்படி ஒரு உச்சுக்குடுமி மன்றமாகச் செயல்படுகிறது என்பதையும் தீட்சிதர்கள், ஜெயலலிதாவின் கூட்டுச்சதியையும் அவர் தனது பேச்சில் தோலுரித்தார்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
மக்கள் கலை இலக்கியக் கழகம் வாழ்க!
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

தில்லை நடராசர் கோயிலை
தீட்சிதர்களிடமே திருப்பிக்கொடுத்த
உச்சிக் குடுமி மன்றத்தின்
தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

அவமானம்  இது  அவமானம்!
தமிழுக்கு அவமானம்!
தமிழர்களுக்கு அவமானம்!
தமிழகத்திற்கே அவமானம்!
தமிழன் கட்டிய தில்லைக் கோயில்
தீட்சித பார்ப்பனக் கும்பலிடம்
பறி போனது அவமானம்!

சட்டமியற்று! சட்டமியற்று!
தமிழக அரசே! சட்டமியற்று!
கோவிலைக் கையகப் படுத்த
சட்டசபையில் சட்டமியற்று!

வென்றது இங்கே சாதியடா!
தோற்றது இங்கே நீதியடா!
விடமாட்டோம்! விடமாட்டோம்!
சாதியை வெல்ல விடமாட்டோம்!
வெல்ல வைப்போம்! வெல்ல வைப்போம்!
நீதியை இங்கே வெல்ல வைப்போம்!

கொள்ளைக்காரக் கூட்டத்தின்
கூடாரமாகுது தில்லைக் கோயில்
தில்லைக் கோயில் கோயிலல்ல!
அது தீட்சிதனின் போலீஸ் ஸ்டேசன்!

தீட்சிதனுக்கு வருமானம்!
பக்தனுக்குப் பட்டை நாமம்!
தீட்சிதனுக்கு கோயில் சொத்து!
பக்தனுக்கு வாயப்பொத்து!

நந்தனை எரித்துக் கொன்றவன்
வள்ளலாரை எரித்துக் கொன்றவன்
தீண்டாமைச் சுவர் கட்டியவன்
நடராசன் கொலுசைத் திருடியவன்
தேவாரம் பாடத் தடுத்தவன்
கோவிலைக் கொள்ளை அடித்தவன்
சிதம்பரம் பார்ப்பன தீட்சிதனோடு
சாதிவெறியன் சூனாச்சாமியும்
உச்சிக்குடுமி நீதிபதிகளும்
கூட்டுச்சதி! கூட்டுச்சதி!
பாதுகாக்குது அம்மா மாமி!

அனுமதியோம்! அனுமதியோம்!
பெரியாரும்- அம்பேத்கரும்
மார்க்சிய- லெனினிய புரட்சியாளரும்
எதிர்த்துப் போராடி ஒழித்துக் கட்டிய
பார்ப்பனிய  நச்சுப்பாம்பை
தமிழ்நாட்டில் தலையெடுக்க
அனுமதியோம்! அனுமதியோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
கோவில் சொத்தை கொள்ளையடித்த
தீட்சித பார்ப்பனக் கூட்டத்தின்
அராஜகத்தை, வெறியாட்டத்தை
சூனா சாமியின் சாதித்திமிரை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இடிப்போம்! இடிப்போம்!
தீண்டாமைச்  சுவரை இடிப்போம்!
சிலைவைப்போம்!  சிலைவைப்போம்!
தில்லை நடராசன் கோயிலுக்குள்
நந்தனாரின் சிலை வைப்போம்!

தமிழக அரசே! தமிழக அரசே!
சட்டமியற்று! சட்டமியற்று!
கோவிலைக் கைப்பற்றச் சட்டமியற்று!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை

5. ஒசூர்

சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சதர்க்கு சொந்தமாக்கி பட்டா போட்டுக் கொடுத்திருக்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்தும், “தில்லைக் கோயில் மக்கள் சொத்தா? இல்லை மணியாட்ட வந்த தீட்சிதன் சொத்தா? தமிழக மக்களே கொதித்தெழுங்கள்!” என்ற தலைப்பின் கீழ் 09.01.2014 இன்று மாலை 5.30 மணியளவில் ஓசூர் ராம்நகர் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் தனியொரு சட்டம் இயற்றி மேல்முறையீட்டிற்கு செல்ல வலியுறுத்தியும் மீண்டும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கோயில் நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத் தாங்கினார். மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கமாஸ் வெக்ட்ரா கிளைச்சங்க செயலர் தோழர் முரளி நன்றியுரையாற்றினார். திரளான தொழிலாளர்கள், பொதுமக்கள் இதில் கலந்துக்கொண்டு விண்ணதிர முழக்கமிட்டனர்.

“மணியாட்டும் தீட்சிதர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மக்களின் பொதுச் சொத்தான தில்லைக் கோயிலை சொந்தமாக்கி கொள்வதற்கு துணைநின்ற பார்ப்பன சக்திகள், தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலைசெய்து வரும் ஆலையை சொந்தமாக்கிக் கொள்ள துணை நிற்பார்களா?” என்று கேள்வி எழுப்பி பேசப்பட்டது நல்ல வரவேற்பைப் பெற்று மக்களை சிந்திக்க தூண்டும் வண்ணம் இருந்தது. “மன்னரால் கட்டப்பட்ட கோயில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடைபெறும் இக்காலகட்டத்தில் அரசாங்கம் எடுத்துக் கொள்வதுதான் சரியானது. இதனை விடக்கூடாது” என்று ஆர்ப்பாட்டத்தை கவனித்தவர்கள் கருத்து தெரிவித்துச் சென்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்

6. சென்னை சென்ட்ரல்

தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தாம், உச்சுக் குடுமி மன்றத்தின் தீர்ப்பு

என்ற தலைப்பில் 9.1.2014 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

7. கடலூர்

தில்லைக் கோயிலை தீட்சிதனுக்கு பட்டா போட்டு விட்டது உச்சுக்குடுமி மன்றம்
தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?
மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்

என்ற  தலைப்பில் 09-01-2014 அன்று கடலூர் பெரியார் சிலை அருகில் காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் கருணாமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே காவல் துறையினர் தோழர்களை சுற்றி வளைத்துக் கொண்டனர். தோழர் குழந்தைவேலு  உரை நிகழ்த்தினார். இறுதியில் அனைத்துத் தோழர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்

8. தர்மபுரி

  • “தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தாம்-உச்சுக்குடுமி நீதிமன்றம் தீர்ப்பு!”
  • “தீட்சிதர்-பாஜக-சோ-சு.சாமி-ஜெயா கும்பல் கூட்டுச்சதி!”

என்ற தலைப்பில் தமிழக அரசை தனிச்சட்டம் இயற்றி கோயிலைக் கையகப்படுத்த வேண்டும் என்பதை விளக்கி தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தோழர் சிவா, வட்டச் செயலாளர் தலைமை  தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் வழக்கறிஞர் ஜானகிராமன் கண்டன உரையாற்றினார். புமாஇமு தோழர் ராஜா உரையாற்றினார்.

இறுதியாக தோழர் கோபிநாத் கண்டன உரையாற்றினார்.

இந்தக் கூட்டம் பார்ப்பனியத்திற்கு பாஜக என்றால் தமிழனுக்கு நக்சல்பாரிகள் என்பதை உணர்த்துவதாக இருந்தது.

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி

9. கோத்தகிரி

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி மார்க்கெட் திடலில் 9.1.2014 காலை 10 மணிக்கு தில்லை கோயில் மக்கள் சொத்தா, மணியாட்டும் தீட்சிதன் சொத்தா என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீ.அ.தொ.ச தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திரு பரத் உரையாற்றினார். நீ.அ.தொ.ச செயலர் தோழர் பாலன் சிறப்புரையாற்றினார்.

செய்தி :
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி

10. கோவை

கோவையில் இன்று மாலை 7 மணியளவில், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கோவை நீதிமன்றத்தின் முன்பு,  சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சதி குறித்து அம்பலப்படுத்தி அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை பா.ஜ.க. வழக்கறிஞர்கள் வம்புக்கிழுத்து கைகளாலும், கட்டைகளாலும் தாக்கினார்கள். இது தொடர்பாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

11. வேதாரண்யம்

9.1.2014 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் வேதாரண்யம் மேல வீதியில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.வி.மு வட்ட பொறுப்பாளர் தோழர் தனியரசு தலைமை தாங்கினார். வி.வி.மு தோழர் கிருஷ்ணமூர்த்தி, பு.மா.இ.மு தோழர் பெரியார்தாசன் கண்டன உரையாற்றினார்கள். வி.வி.மு தோழர் செல்வி நன்றியுரையாற்றினார்.

செய்தி:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

12. கரூர்

ரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் பாக்கியராஜ் தலைமையில் 09.01.2014 அன்று காலை 10 மணி முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் இராமசாமி சிறப்புரையாற்றினார். இறுதியில் தோழர் கபில் நன்றியுரை கூறினார்.

தகவல் :
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
கரூர்

13. நாமக்கல்

நாமக்கல்லில் புதிய ஜனநாயகத் தொழிலாள் முன்னணியின் தோழர் மோகன் தலைமையில் 09.01.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் சத்யா சிறப்புரையாற்றினார். கரூர் புரட்சிகர மாணவர் இளைஞர் அணியின் செயலர் தோழர் பாக்கியராஜ் கண்டன உரையாற்றினார்.

தகவல் :
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
கரூர்

14. தஞ்சை

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

15. விழுப்புரம்

தில்லைக் கோயில் மக்கள் சொத்தா? இல்லை மணியாட்ட வந்த தீட்சிதன் சொத்தா? தமிழக மக்களே கொதித்தெழுங்கள்!” என்ற தலைப்பின் கீழ்…

  • உச்சநீதி மன்றம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சித பார்ப்பனர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கிய தீர்ப்பைக் கண்டித்தும்…
  • உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தனிச்சட்டம் இயற்றி மற்ற கோயில்களை போல நடராஜர் கோயிலையும் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்…
  • நடராஜர் கோயிலில் இருந்து தீட்சித பார்ப்பனர்களால் அகற்றப்பட்ட நமது முப்பாட்டன் நந்தனார் சிலை மீண்டும் அரசால் நிறுவப்பட வேண்டும்…
  • நந்தன் நுழைந்ததால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய வேண்டும்…

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் விழுப்புரம் ரயில் நிலைய வாயிலில் 09.01.14- வியாழன் மாலை ஐந்து மணிக்கு முதல் ஏழு மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வி.வி.மு திருவெண்ணெய் நல்லூர் வட்டார செயலாளர் தோழர் அரிகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

வி.வி.மு திருவெண்ணெய் நல்லூர் வட்டார செயற்குழு உறுப்பினர் தோழர் ஏழுமலை அவர்கள் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பு.மா.இ.மு விழுப்புரம் செயலாளர் தோழர் செல்வக்குமார் சிறப்புரையாற்றினார்.

வி.வி.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள், தீட்சித பார்ப்பன கும்பலின் கிரிமினல்செயல்கள், ஜெயாவின் பார்ப்பன சூழ்ச்சி நடவடிக்கைகள், தமிழக ஓட்டு கட்சித்தலைவர்களின் தமிழர் விரோத போக்குகள், தமிழின பிழைப்பு வாதிகளின் கையாலாகத்தனம், ஆகியவற்றை உள்ளடக்கி செறிவான முறையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அமைப்பு ஆதரவாளர்கள், பொதுமக்கள், பெரியார் தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் கடைசி வரை நின்று கூட்டத்தை ஆதரித்தனர்.

இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு; 96555 87276, 99650 97801

16. பட்டுக்கோட்டை

09.01.2014 அன்று காலை 10 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில், “தில்லை கோயிலை பட்டா போட்டு விட்டது உச்சிக் குடுமி மன்றம்“, “தில்லைக் கோயில் மக்கள் சொத்தா? மணியாட்ட வந்த தீட்சிதன் சொத்தா?“, மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டக்குழு உறுப்பினர் தோழர் முத்து தலைமையில் நடைபெற்றது.

வி.வி.மு வட்டார செயலாளர் தோழர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.

தகவல் :விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை

16. கோவில்பட்டி

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

சென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !

4

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை போராடுவோம் !

ல்லூரியில் தண்ணீர் இல்லை, கழிப்பறை இல்லை, வகுப்பறை இல்லை வாத்தியாரும் இல்லை. மாணவர்களின் சிந்தனையை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகளையோ, கலாச்சார நிகழ்ச்சிகளையோ நடத்துவதில்லை. மாறாக மாணவர்களை பொறுக்கிகள் ரவுடிகளாக சித்தரிக்கிறது அரசு. இதை அம்பலப்படுத்தும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை  செய்து தரக்கோரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்வந்து கையெழுத்திட்டு ஆதரவளித்தனர்.

மேற்கண்ட கோரிக்களைகளை வலியுறுத்தி சென்னைப்பல்கலை கழக துணைவேந்தரை சந்திக்கத் திட்டமிட்டோம். 08.01.2014 காலை சரியாகப் பதினோரு மணிக்கு

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வாழ்க!

குடி நீர் இல்லை, கழிப்பறை இல்லை
வகுப்பறை இல்லை இல்லை வாத்தியாரும் இல்லை!
எங்கே போகுது? எங்கே போகுது?
மக்கள் வரிப்பணம் எங்கே போகுது!
கல்விக்கு போதிய நிதி ஒதுக்காமல்
நாடு எப்படி ஆகும் வல்லரசு?

தமிழக அரசே! தமிழக அரசே!
அரசு ……….. கல்லூரிகளில்
அரசு உதவிபெறும் கல்லூரிகளில்
அடிப்படை வசதிகளை உடனே செய்துகொடு!

என முழக்கமிட்டபடியே 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னைப் பல்கலை கழகத்தினுள் பேரணியாக வந்தனர். “துணைவேந்தரை எல்லோரும் பார்க்க முடியாது” என்று என்று அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்களோ தங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் துணை வேந்தரைப் பார்க்க மாணவர்கள் சார்பில் 8 பேர் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 45 நிமிடங்கள் துணைவேந்தர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நீடித்தது. துணைவேந்தர் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் கல்லூரிக்கான கல்வித்துறை இயக்குனரை சந்திதத்து முறையிடுங்கள் என்றார்.

“அரசு அடிப்படை வசதிகளை உடனே அனைத்துக்கல்லூரிகளிலும் ஏற்படுத்தவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்களை திரட்டி கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்குவோம்” என சென்னைக் கிளையின் புமாஇமு செயலர் தோழர் கார்த்திகேயன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் .

100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கல்வித்துறை திட்டமிட்டு வியாபாரமாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தனியார் மயம்தான். அதனால்தான் அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றன. இதற்கு காரணமான தனியார்மயக் கொள்கையை வேரறுக்காமல் அடிப்படைக்கல்வி உரிமையை பெற முடியது. கண்டிப்பாக, அரசின் எருமை மாட்டுத்தோலுக்கு சூடு போடாமல் இனி படிக்கக்கூட முடியாது.

பல்கலைக் கழககத்திற்கு வந்த மாணவர்கள், எப்போது சிலியைப் போல கோடிக்கணக்கில் வீதிக்கு வருகிறார்களோ அன்று தான் கல்விக்கான சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின்  மீது கிளிக் செய்யவும்]

துணை வேந்தரிடம் மனு கொடுத்த பின்னர் போலீசின் அடக்குமுறைக்கு எதிராக சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை வாழ்த்தச் சென்றது மாணவர் படை. மாணவர்களைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். “எங்களுக்காக நீங்க வந்தது ரொம்ப சந்தோசம்” என்றார்கள்.

“தெருவுக்குத்தெரு வழிப்பறிசெய்யும் திருடனான போலீசு மீது நடவடிக்கை துப்பில்லாத அரசாங்கம் உழைக்கின்ற எங்களின் மீது நடவடிக்கை எடுக்க என்ன அருகதை இருக்கிறது” என்று அரசை காறி உமிழ்ந்தார்கள், “என்னுடைய மனைவியை என்னுடைய ஆட்டோவில் அழைத்து சென்றாலும் கூட அதற்கு மீட்டர் போடு இல்லையென்றால் 2500 ரூ அபராதம் கட்டச் சொல்கிறான் போலீசு, மறுத்தால், இது உன் மனைவியே இல்லைன்னு கேஸ் போடுவேன் என்கிறான். இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?” என்றார் இன்னொரு தொழிலாளி.

இறுதியாய் அவர்களிடம் சொன்னோம் “நமக்கு நடக்கும் அநியாயத்தை வேறு யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள், மாணவர்களும் தொழிலாளிகளும் என்றைக்கு ஒன்றிணைந்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறார்களோ அன்றைக்குத்தான் நாம் நிரந்தரமாக வெற்றி பெறுவோம். அதற்குத்தான் மாணவர்கள் நாங்கள் வந்திருக்கிறோம்” என்றோம்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருவர் “பச்சையப்பாஸ் காலேஜில் போலீசு உள்ளே புகுந்து அடிச்சான்னா எங்க கிட்ட வந்து சொல்லுப்பா, நம்மளப் போல கஷ்டப்படுறவங்களுக்கு நாம தான் சேர்ந்து போராடணும், நாங்க வரோம்” என்றார் கண்களில் நீர் தளும்ப. அந்தக் கண்ணீரைத் துடைத்த தோழர் கூறினார் “இது அழுவதற்கான நேரமல்ல”.

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின்  மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

மானங்கெட்டவர்க்கு சுப்பிரமணிய சாமி, மானம் உள்ளவர்க்கு ஆறுமுகச்சாமி !

13

மக்கள் மன்றத்தில் தொடர்வோம்!

உலகம் கடவுளுக்குள் அடக்கம்
கடவுள் மந்திரங்களுக்குள் அடக்கம்
மந்திரம் பார்ப்பானுக்குள் அடக்கம்

இப்படியான நாட்டில்,
நீதிமன்றமும் வாதப்படியா நடக்கும்
வேதப்படியே நடக்கும்
!

பீனல் கோடுகள்
பூணூல் கோடுகளுக்குள் அடக்கம்
,

உச்சநீதிமன்றம்
தீட்சிதன் முன்குடுமிக்குள் அடக்கம்
,

சுப்பிரமணியசாமி பிரிக்கும் காற்றின்
எடைக்கு எடை
தீர்ப்புகள் கிடைக்கும்
!
தீட்சித கழிப்பறைகள்
தில்லி வரைக்கும்
!

தில்லைவாழ் அந்தணரும்
தில்லிவாழ் அந்தணரும்
ஸ்தலத்தில் வேறு
சிதம்பர ரகசியத்தில் ஒன்று
!

சுப்பிரமணியசாமியும், ஜெயலலிதாவும்
கோத்திரத்தில் வேறு
,
ஆத்திரத்தில் ஒன்று
அதுதான் தமிழினப் பகை
!

தமிழாண்டு தை மீது
ஆரியச் சித்திரை திணிப்பு
,
தமிழக தொடக்கப் பள்ளிகளில்
ஆங்கில வழி நுழைப்பு
,
செம்மொழி நூலகம் அழிப்பு
மெல்ல மெல்ல கோயிலில
அரசு அறநிலையை
பார்ப்பனக் குருக்களின்
பொருள் நிலையாக்க அரிப்பு
,
எனும் ஆர்
.எஸ்.எஸ் பாம்பின்
கொழுப்பு
!

அவாளும் அம்மாவும்
சேர்ந்து வாங்கிய
சிதம்பரம்
(கோயில்) தீர்ப்பு!

பொதுச்சொத்து
வழக்கம் போல்
பிரம்மதேயமாகிறது
டாட்டாவுக்கும், தீட்சிதனுக்கும்
போராடும் நந்தன்களை
வழக்கம்போல வாசல் மறிக்கவும்
ஜோதியில்எரிக்கவும்
காத்திருக்கிறார்கள்
உச்சநீதிமன்ற தீட்சிதர்கள்
!

வழி மறிக்கும்
நந்திக்கும், பார்ப்பன தொந்திக்கும்
பணிவதில்லை நந்தன்
!

வழக்கம்போல்
தன்னுடல் திரியாக்கி
தன்மானம் ஒளியாக்கி
உரிமைக்காக
மக்கள் மனதில்
தணலாகிறார்கள் நந்தன்கள்
!

இடக்கால் தூக்கிக் காட்டி
களவு போன கொலுசை
இடக்கையால் குறிப்பு காட்டி
,
எழுவகை தாண்டவம் ஆடிய
இறைவா
,
இனி தீட்சிதத் தாண்டவம்
கண்டு நடுங்கிடாய்

திருவடியின் கணக்குகாட்டி
மீண்டும்
நிவேதனங்கள்
சுவாகாஆகலாம்
சிவகாமி அம்மையின்
சேலை கணக்கு
தீட்சிதன் குவார்ட்டரில் கரையலாம்

அர்த்தயாம பூஜைக்கு பின்
அவாள் அடிக்கும் கூத்தில்
ஆடல் வல்லானே
அஞ்சி நடுங்கலாம்

..எஸ், .பி.எஸ்,
அமைச்சர், நீதிபதிகள் என
அவரவரின் வசூலுக்கும்
வரவேற்புக்கும் ஏற்றபடி
எந்நேரமும் உன்மேல்
பாவத்தின்
பாரமிறங்கலாம்

உனக்கான உண்டியலை
தனக்கான தட்டாக்கும்
தீட்சித அபிஷேகத்தில்
நீ மூச்சு திணறலாம்

அனைத்தினும்,
உழைக்கும் மக்களின்
உதடுகள் தழுவிய தமிழை
தடுக்கும் தீட்சித கொடுங்கரந்தன்னில்
அகப்பட்டுக் கொண்டதாய்
கலங்கிட வேண்டாம் நடராச

மானங்கெட்டவர்க்கு
சுப்பிரமணிய சாமி

மானம் உள்ளவர்க்கு
ஆறுமுகச்சாமி

தமிழும், தமிழக மக்களின் உரிமையும்
நின் தில்லையம்பலத்திலே
காட்சி தரும் வாய்ப்பை
கண்ணுறுவாய் நீயும்

எரித்து சாம்பலாக்க
இனி நந்தனின் வாரிசுகள்
நாயன்மார்கள் அல்ல
,
நக்சல்பாரிகள்!
எதிர்த்துப் போராடி
இயற்பகை முடிப்பார்கள்
!

துரை.சண்முகம்

சாணிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் போராட்டம்

2

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளின் அவலம் – புமாஇமு போராட்டம் என்ற தலைப்பில் சென்ற வாரம் வினவில் வெளியான கட்டுரையை படித்திருப்பீர்கள் !

அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம்- கானை ஒன்றியம் –சாணிமேடு கிராமம் அரசு உயர் நிலைப்பள்ளியின் பிரச்சனை தொடர்பாக போராடி தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

சாணிமேடு கிராமத்தின் அரசு உயர் நிலைப்பள்ளி 2012-13 -ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 1௦௦% , தேர்ச்சி பெற்ற சிறந்த பள்ளி. இப்பள்ளி போதிய அடிப்படை வசதி இல்லாமல் திணறுகின்றது.

இப்பள்ளி நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக பெயரளவில் தரம் உயர்த்தப்பட்டதே தவிர அதற்கான போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக…

  • பள்ளி வளாகத்திற்குள் எந்த நிமிடத்திலும் இடிந்து விழும் நிலையில் தண்ணீர் தேக்கத்தொட்டி மோசமான நிலைமையில் உள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் இன்னொரு கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் படுகொலையாக இங்கும் நடந்து விடுமோ என்ற பயத்திலேயே பிள்ளைகளை வேறு வழியில்லாமல் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். எனவே வீண் அசம்பாவிதங்கள் அப்பள்ளியில் நடைபெறும் முன்பே உடனடியாக அந்த நீர்த்தேக்கத்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றித் தர வேண்டும்.
  • பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் மற்றும் போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், கட்டிட வசதி இவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டுமானத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்..

என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி

சாணிமேடு கிராமத்தில் உள்ள 520 பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்களிடம் கையெழுத்து பெற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், அதிகாரிகளை அம்பலப்படுத்தி பு.மா.இ.மு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்கும் திமிர் பிடித்த அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்காததால் எருமைத்தோல் அதிகாரிகளுக்கு உறைக்கும் வண்ணம் பள்ளியை புறக்கணிக்கும் போராட்டத்தை அறிவித்தோம்.

06.01.2014- திங்கள் அன்று பள்ளியை புறக்கணிப்பதென முடிவெடுத்து பெற்றோர்கள், மாணவர்கள், ஊர்மக்கள் அனைவரிடமும் நோக்கத்தை விளக்கி விளக்க பிரசுரத்தை பு.மா.இ.மு சார்பில் விநியோகித்தோம். சுற்று வட்டார கிராமங்களான ஆரியூர், எடப்பாளையம், பெரும்பாக்கம், சோழகனுர், வெங்கந்தூர், ஏழுசெம்பொன் ஆகிய கிராமங்களிலும் மற்றும் விழுப்புரம் நகரத்திலும் ஆதரவு கோரி விநியோகித்தோம். 1௦௦ சுவரொட்டிகளை கிராமங்கள், நகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக ஓட்டினோம்.

போராட்ட நாளான 06.01.2014- திங்கள் அன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர்மக்கள் பள்ளியை புறக்கணிக்கும் போராட்டத்திற்கு காலையிலேயே திருவிழாவில் கலந்து கொள்ளும் உற்சாகத்தோடு பேரணியில் கலந்து கொண்டனர். முழக்கம் ஆரம்பித்தது.

தமிழக அரசே! தமிழக அரசே!
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்து!,
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!

பள்ளியின் உள்ளே மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான நீர்தேக்கத்தொட்டியை உடனே அகற்று!
பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமி!

போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், இவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளியை கட்டிக்ககொடு!

அருகமைபள்ளி – பொதுப்பள்ளி முறையை அமுல்படுத்து!
அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக-கட்டாயமாக வழங்கு!

விண்ணதிர முழக்கங்களை முழங்கிக்கொண்டு ஊர் முழுவதும் ஊர்வலமாக சென்றனர். அந்த முழக்கத்தின் ஓசையால் கவரப்பட்டு வயல்வெளிகளில் இருந்தும், பக்கத்துக்கு கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர். ஊர்வலம் பள்ளியை அடைவதற்குள் ‘சட்டம் ஒழுங்கின் காக்கிசட்டை நாயகர்கள்’ குவிக்கப்பட்டனர். இந்த பூச்சாண்டிகளை பற்றி நாம் ஏற்கனவே அவர்களுக்கு விளக்கி இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படாத மாணவர்களும், பெற்றோர்களும், இளைஞர்களும் ஊர்வலத்தின் முடிவில் பள்ளியின் வாயிலில் திரளாக திரண்டு நின்று அரசுப்பள்ளிகளை திட்டமிட்டே நாசமாக்கும் அரசுக்கு எதிராகவும், கல்வித்துறையை கண்டித்தும் முழக்கமிட ஆரம்பித்தனர்.

ஆரம்பத்திலிருந்தே நயவஞ்சகமாக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று மனப்பால் குடித்த காவல்துறை ஒன்றும் செய்ய முடியாமல் திணறி நின்றனர். காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மதியம் 1.00 மணிவரை நீடித்தது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்து நம்முடைய கோரிக்கைகளை தீர்த்தாலொழிய பள்ளிக்குள் வரமாட்டோம் என்ற கருத்தில் மாணவர்களும், பெற்றோர், இளைஞர்களும் நம்முடன் உறுதியாக களத்தில் நின்றனர்.

ஊர்மக்களின் நலனுக்கு இதுவரை ஒன்றுக்கும் பயன்படாத ஊர் பஞ்சாயத்து தலைவரையும், ஆரம்பத்தில் வந்தவுடன் தேவையில்லாமல் வாய் உதார் விட்டு நம் தோழர்களிடமும், பிறகு மக்களிடமும் வாங்கி கட்டி பல்பு வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியையும் மட்டும் வைத்து போலித்தனமாக, பேருக்கு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்ப்பது போல் நடித்து சலசலப்பை உண்டு பண்ணிய போலிசின் நரித்தனத்தை,  மக்களை நம்முடன் இணைத்துக் கொண்டு அதிகாரிகளின் முகத்தில் கரியை பூசினோம். நம்மை அவ்வளவு சீக்கிரத்தில் கலைத்து விடமுடியாது என்று தீர்க்கமாக உணர்ந்த பிறகு விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜஸ்டின்ராஜ் தலைமையில் மேலும் போலிசை குவிக்க ஆரம்பித்தனர். எந்த சலசலப்பிற்கும் அஞ்சாமல் முன்னைக் காட்டிலும் வேகமாக மாணவர்கள் முழக்கமிட ஆரம்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அதற்கு பிறகுதான் தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, கிராம நிர்வாகத் தலைவர் என்று அனைத்து அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே இங்குள்ள நிலையை காவல்துறை அவர்களுக்கு முன்னமே விளக்கி இருக்க வேண்டும். அவர்கள் வந்த உடனே சாக்கு போக்கு ஏதும் சொல்லாமல் பிரச்சனையை தீர்ப்பதற்கான வேலையை ஆரம்பித்தனர்.

  1. விரிவான அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய பள்ளிக்கூடத்தை வகையில் கட்டுவதற்கான இரண்டு ஏக்கர் நிலத்தை மக்களுடன் விவாதித்து அடையாளம் கண்டு, 6 முதல் 8 மாதத்திற்குள் கட்டித்தருவதாக முதல் உறுதியை அளித்தனர்.
  2. மூன்று மாதத்திற்குள் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்தேக்கதொட்டியை புதிதாக கட்டிவிட்டு இதை இடித்து தள்ளுவதாக வாக்குறுதி அளித்தனர். மக்களிடம் இந்த முடிவை அறிவித்து அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு போராட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 5௦௦ மக்களுக்கு மேல் கலந்து கொண்ட இப்போராட்டத்தை ஆரம்பித்திலிருந்தே பிசிபிசுத்து போக வைக்க தன்னால் ஆன அனைத்தையும் காவல் துறையின் ஸ்பெஷல் பிராஞ்ச், கியு பிராஞ்ச் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் தீயாய் வேலை செய்து பார்த்தனர். தனித்தனியாக மக்களை பிரிக்க முயற்சி செய்து தோல்வியே கண்டனர்.

அதனால் விரக்தியின் விளிம்பிற்கே போன அவர்கள் மக்கள் எல்லோரும் கலைந்து போன பிறகு, அனைவரிடம் விடை பெற்று கிளம்பி வரும் வழியில் திருட்டுத்தனமாக நம்முடைய தோழர்களை மட்டும் கைது செய்ய முயற்சித்தனர். மக்கள் இந்த செய்தியை கேள்விப்பட்டு காட்டுத்தீ போல சம்பவ இடத்தில் திரள ஆரம்பித்ததும், காவல் துறை மிரள ஆரம்பித்தது.

குறிப்பாக பெண்கள் “எங்கள் பிள்ளைகளின் உயிருக்கும், கல்வி உரிமைக்கும் போராடிய தோழர்களை கைது செய்வதாக இருந்தால் முதலில் எங்களை கைது செய். மூன்று மாதமாக எங்கள் ஊர் பிரச்னை தீர்ப்பதற்க்கு அந்த பிள்ளைகள்தான் இரவு பகலாக மழையில் எல்லாம் நனைந்து வேலை செய்தார்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்து போராட ஆரம்பித்ததோடு நம்முடைய தோழர்களை பார்த்து, “நீங்கள் எங்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்” என்று தோழர்களை பாதுகாப்பாக அவர்கள் வீட்டில் அமர வைத்துவிட்டு உடனடியாக போனில் தகவல் தெரிவித்து அனைத்து இளைஞர்களையும் ஒன்று திரட்டி காவல் துறையின் அராஜகத்திற்கு எதிராக கேள்விகளை கேட்டு போராட ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் மக்கள் கொஞ்சம் பேர் இருக்கும்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவரை ஆபாசமாக பேசிய விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் குமார், மக்கள் ஏராளமாய் திரண்டு அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் குமாரின் மற்றும் காவல்துறையின் ‘பெருமைகளை’ மக்கள் மொழியில் எடுத்து விட்டதும், விட்டால் போதும் என்று இரண்டு இன்ஸ்பெக்டர்களும் இரண்டு சுமோக்களையும், சகாக்களையும் அள்ளிக் கொண்டு பிடரியில் அடிபட்டது போல் ஓடி சேர்ந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு நம்மிடம் வந்த மக்கள் உற்சாகமாக “இனிமேல் எங்களுக்கு கவலை இல்லை. இனி அனைத்து பிரச்சனைகளையும் நாங்களே எதிர்த்து போராடுவோம். கேள்வி கேட்போம்” என்று  நமக்கு உணவு ஏற்பாடு செய்து, “சற்று நேரம் கழித்து செல்லுங்கள். வழியில் உங்களை கைது செய்தால் எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். இந்த ஊரே விழுப்புரத்தை மறித்து போராடும்” என்று ஊக்கப்படுத்தும் உற்சாக வார்த்தைகளால் வழியனுப்பி வைத்தனர்.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை போராட்டத்தில் நம்முடன் நின்று சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் முழக்கங்கள் போட்ட நம் அரசியல் பிரசாரத்தால் கவரப்பட்ட பக்கத்து ஊரை சேர்ந்த வயதான பாட்டி ஒருவர் இறுதியாக நம்மிடம் “தருமபுரி பாலனை போன்று உறுதியாக போராடினீர்கள், வாழ்த்துக்கள்! அதேசமயம் அரசையும், அதிகாரிகளையும் எதிர்க்கும் போராட்டத்தில் நம்மோடு நிறைய பெண்களையும், இளைஞர்களையும் அரசியல் உறுதியோடு இணைத்துக்கொண்டால் தான் நாம் நிறைய வெற்றியை பெறமுடியும். அதை நோக்கி நகருங்கள்!” என்று அறிவுரையோடு வாழ்த்துக்களை சொன்னார்.

“உழைக்கும் மக்களுக்கு புரட்சியாளர்கள் பாதுகாப்பு! புரட்சியாளர்களுக்கு என்றென்றும் உழைக்கும் மக்களே பாதுகாப்பு! ” என்ற வரலாற்று உண்மையை சாணிமேடு கிராம உழைக்கும் மக்களின் போராட்டம் இன்னொருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு.99650 97801

சு.சாமி உருவப்படத்திற்கு செருப்படி – உச்சநீதிமன்ற உத்திரவு நகல் எரிப்பு !

32

மதுரை

கொள்ளையடிக்க தில்லைக்கோயில் மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைப்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து – துணைபோன சு.சாமி உருவப்படத்தை செருப்பால் அடித்து – எரித்து ஆர்ப்பாட்டம்

மனித உரிமைப்பாதுகாப்புமையம் மதுரைமாவட்டக்கிளை சார்பாக தில்லை கோவிலை தீட்சிதர்களிடம் மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தை கண்டித்து 07.01.2013 காலை 10.00 மணியளவில் மதுரை உயர்நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லை கோவிலை ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான் கூட்டாக சதி செய்து தீட்சிதர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளதின் பின்புலத்தை அம்பலப்படுத்தி தொடக்கத்தில் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உச்சநீதிமன்றம் பார்ப்பனர்களுக்கு ஆதரவான மனுநீதியை அமல்படுத்துகின்ற உச்சிக்குடுமிமன்றமாக இன்னமும் இருந்து வருகின்றது என்பதற்கு இந்த தீர்ப்பு மீண்டும் ஒரு ஆவணமாக வழங்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர். திருநாவுக்கரசு அவர்கள் பேசும் போது, “இந்தத் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு எதிரான தீர்ப்பு. நடராஜர் கோவிலை தீட்சிதர்களிடம் ஒப்படைக்க கூறுவது அநியாயமானது. உச்சநீதிமன்றத் தீர்ப்பேயானாலும் அதுவிமர்சனத்திற்குரியது தான் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம் இங்கு நடந்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் ம.உ.பா.மையத்துடன் இணைந்து போராட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

சமநீதி வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் கனகவேல், ராஜேந்திரன், கதிர்வேல் ஆகியோர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் பேசும் போது, “உச்சநீதிமன்றம் பார்ப்பன மயமாகியிருக்கிறது. பார்ப்பனர்கள் தங்களுடைய கவுரவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்களுடைய உரிமைகளைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள். அந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் மக்களின் சொத்தாகிய தில்லை கோவிலையும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் தீட்சிதர்களிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. சுப்பிரமணியசாமியினால் வாங்கப்பட்ட தீர்ப்பு. இதற்கெதிராக ம.உ.பா. மையம் தொடர்ந்து போராடி வருகிறது. இப்போராட்டத்தோடு நாம் இணைந்து செயல்படவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர் சங்க இணைச்செயலாளர் வழக்கறிஞர் அப்பாஸ் பேசும் போது, “மனித உரிமைப்பாதுகாப்பு மையம் ஒரு போராட்டத்தை கையில் எடுத்தால் அதை விடாப்பிடியாக இறுதி வரை போராடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல இந்த தில்லை கோவில் வழக்கினை பொறுத்தவரையில் ஆரம்பம் முதற் கொண்டு ம.உ.பா. மையம் மிகவும் கடுமையாக போராடி வருகிறது. அதனால் நாம் அனைவரும் ம.உ.பா.மையத்தின் இந்த போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்து இப்போராட்டம் வெல்ல உதவ வேண்டும்” என்றார்.

ம.உ.பா.மையத்தின் துணைத்தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார்.

ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது,”தில்லை கோவிலை தீட்சிதர்களிடமிருந்து பறித்து தாங்கள் வைத்துக்கொள்ள மக்களோ வேறு யாருமோ விரும்பவில்லை. அது அரசின் கட்டுப்பாட்டில் மக்கள் சொத்தாக இருக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம். சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் எப்படி ஒரு சிறிய தீட்சிதர் கும்பலுக்கு மட்டும் சொந்தமாக இருக்க முடியும்.  தில்லை தங்களுக்கு சொந்தமானது என்று சொல்வதற்கு ஒரு சிறு ஆதாரம் கூட அவர்களிடம் கிடையாது. சட்டப்படி இந்த சொத்து தங்களுடையது என்று அவர்களால் நிறுவ முடியாத நிலையில் பார்ப்பனர்கள் தான் கோவில்களுக்கு உரிமை படைத்தவர்கள் என்ற மனுதர்மத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பினை நீதிபதி சவுகான் வழங்கியுள்ளார். அரசியல் சட்டம் பெரிதா, ஆகம விதிகள் பொிதா என்றால் ஆகம விதிகள் தான் பெரிது, அது அவர்களது உரிமை, அதிலும் தீட்சிதர்கள் ஒரு தனிவகைப்பட்டவர்கள் என்று நீதிமன்றம் கூறுகிறது. அவர்கள் தனிவகைப்பட்டவர்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது. சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி, தீட்சிதர்களின் கூட்டுச் சதியே இந்தத் தீர்ப்பு. இது தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய இழிவாகும். இந்தத் தீர்ப்பு தமிழனுக்கு பெரிய அவமானம் இதை துடைத்தெறிய நாம் தொடர்ந்து போராடவேண்டும்” என்றார்.

ம.உ.பா.மையம், மதுரை மாவட்டக் கிளையின் மாவட்டச் செயலாளர். லயனல் அந்தோணிராஜ் பேசும் போது, “வழக்கைப் பற்றி நீதிபதிகள் எவ்வித ஆய்வும் செய்யாமல் முன்முடிவோடு தீட்சிதர்களிடம் கோவிலை ஒப்படைப்பதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக சவுகான் பேசியுள்ளார். பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கினால் மோட்சமும் புண்ணியமும் கிடைக்கும் என்ற அடிப்படையில், ‘நான் ஓய்வு பெறப்போகிறேன் போகும் போது ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்’ என்ற மனுதர்ம நீதியை கடைபிடித்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். தில்லை கோவில் போராட்டம் இன்று தொடங்கியது அல்ல, தீட்சிதர்களுக்கு இன்று கிடைத்துள்ள இந்த வெற்றி நிலையானதுமல்ல. மக்களைத் திரட்டி போராடி மீண்டும் தில்லைக் கோவிலை கைப்பற்றியே தீருவோம்” என்றார்.

செயற்குழு உறுப்பினர் சி.ராஜசேகர் நன்றி தெரிவித்தார். வழக்கறிஞர்கள், ம.உ.பா.மைய உறுப்பினர்கள் தோழமை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை.

திருச்சி

மக்கள் சொத்தான தில்லை சிதம்பரம் கோயிலை தீட்சிதர் கொள்ளைக் கூடாரமாக்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எரித்து போராட்டம் !

“தில்லைக் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியது செல்லாது” என உச்சநீதிமன்றம் தடைவிதித்து சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கண்டித்து HRPC திருச்சிக் கிளை சார்பில் எங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்க திருச்சி நீதிமன்ற வாயிலின் முன்பு 07.01.2014ம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை கொளுத்துவது என்று முடிவு செய்தோம். இதை விளக்கி ஆயிரக்கணக்கில் பிரசுரம் அடித்து விநியோகிக்கப்பட்டது. எரிப்பு போராட்டம் பற்றி போஸ்டர் ஒட்டப்பட்டது.

காலை 11 மணிக்கு சுமார் 15க்கும் மேற்பட்ட தோழர்கள் கைகளில் முழக்க அட்டை மற்றும் கோரிக்கை பேனரை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்குள்ளேயே ஒரு முறை ஊர்வலமாக வந்தோம். பொதுமக்களும் வழக்கறிஞர்களும் ஆர்வத்துடன் கவனித்தார்கள். நீதிமன்ற பணியாளர்களும் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்து ஆர்வத்தோடு கவனித்தார்கள். நீதிமன்ற வளாகம் பரப்பரப்பாக இருந்தது.

முழக்கமிட்டுக் கொண்டே தோழர்கள் வாயிலை நோக்கி வந்தனர். ஏராளமான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தார்கள். வாயிலுக்கு வந்தவுடன் சிறிது நேரம் முழக்கமிட்டோம். பிறகு உச்சநீதிமன்ற உத்தரவு நகலுக்கு தீவைக்க முயன்றோம். சுற்றிலும் குழுமியிருந்த போலீசார் தீவைக்க விடாமல் மல்லுக்கட்டி நகலை பிடுங்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது. அதையும் மீறி தீவைத்தோம். கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் வைக்கப்பபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டோம்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
திருச்சி கிளை

திருச்சி அரசு விடுதி மாணவர்களை வெளியேற்றிய ஆட்சியரின் அடாவடித்தனம் !

1

டந்த டிசம்பர் 24-ம் தேதியன்று திருச்சி காஜாமலை பகுதியலுள்ள அம்பேத்கர் விடுதி மாணவர்களுக்கு கழிவறை வசதி கோரி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் (இவர் “அம்மா”வோடு நேரடியாக தொலைபேசியில் பேசுமளவிற்கு நெருக்கமானவர்) அம்பேத்கர் விடுதி மாணவர்களுக்கு புத்தாண்டு பரிசு ஒன்றை அளித்திருந்தார். அதாவது board admission தவிர கூடுதலாக தங்கியிருக்கும் மாணவர்களை விடுதியை விட்டே விரட்டியடிப்பது என்பது தான் அது.

trichy-dr-ambedkar-hostelபெரியார் ஈ.வே.ரா கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, ஜமால் முஹமது கல்லூரி என சுற்றிலும் சுமார் 10,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பகுதியில் இருக்கும் அரசு விடுதியோ ஒன்று மட்டுமே. அதிலும் அனுமதிக்கப்பட்ட அளவு 300 பேர் மட்டுமே. எனவே இந்த வரைமுறையின் கீழ் விடுதியில் இடம் அளிக்கப்படாத மாணவர்களும் சக மாணவர்களுடன் தங்கி படித்துக் கொண்டிருந்தனர். இப்போது,  விதிமுறைகளை காரணம் காட்டி சுமார் 150 மாணவர்களை வெளியே விரட்டி அடித்திருக்கின்றனர்.

விழுப்புரம், பெரம்பலூர் போன்ற தொலைதூரங்களில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து இங்கே படித்து வந்த மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த மண்மேடுகள், பெரியார் கல்லூரி விளையாட்டுத்திடலின் பின்புறம் மறைவாக உள்ள பகுதிகள், விளையாட்டரங்க படிக்கட்டுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

விஷயம் அறிந்து தலையிட்ட பு.மா.இ.மு தோழர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலிஸ் மற்றும் உளவுத் துறையினர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விடுதிக்குள் புகுந்து அடாவடியாக மாணவர்களை வெளியேற்றியதோடு, “அவர்களுக்கு ஆதரவாக போராடினால் board admission மாணவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என மிரட்டியதாகவும் மாணவர்கள் கூறினர்.

செய்வதறியாது திகைத்த மாணவர்களில் பலர் நடுத்தெருவில் நிற்கும் நிலையில் படிப்பை விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். பஸ்ஸுக்கு கூட காசில்லாதவர்கள் கலங்கி நிற்க, சிதறிய மாணவர்களை ஒன்றிணைத்து சுமார் 20 பேருடன் 02/01/2014 அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.

எந்த உருட்டல் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் பு.மா.இ.மு தலைமையில் போராடியதால் அருகிலுள்ள பள்ளி மாணவர் விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்க ஏற்பாடு செய்வதாகவும், ஊருக்கு சென்றுவிட்ட மாணவர்கள் மீண்டும் வந்த பின் 06/01/2014 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள மாணவர்களையும் விடுதியில் சேர்த்து கொள்ளவது பற்றி முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

06/01/2014 அன்று அம்பேத்கர் விடுதியின் அனைத்து வாயில்களும் சங்கிலியால் பூட்டு போட்டு காவலுக்கு ஆட்கள் நிறுத்தியிருந்தனர். யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்த அடாவடித்தனத்தை முறியடிக்க பு.மா.இ.மு தோழர்கள் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். வார்டன் மற்றும் காவலுக்கு நின்றவர்களுடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

“என்ன அடாவடித்தனம் செய்றிங்களா? மிரட்டுகிறீர்களா?”என்றார் வார்டன். அதற்கு நம் தோழர்கள் “ஆமாம் மிரட்டுகிறோம், எங்கள் உரிமையை தடுக்க நீ யார்?” என சீறினர்.

வார்டன் பின்வாங்க, உள்ளே இருந்த வட்டாட்சியர் ரவி பதறிப் போய் “என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன், ஆட்சியரை சந்திக்க வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி அழைத்துச் சென்றார்.

ஆட்சியர் அலுவலகத்திலோ, “மேடம் மீட்டிங்கில், காத்திருங்கள்” என்றனர். அலுவலக வளாகத்தில் கொட்டும் பனியில் மாணவர்கள் காத்திருக்க வெளியே வந்த மாவட்ட ஆட்சியரோ அடுத்து அமைச்சரை பார்க்க போவதாக கூறி காரில் ஏற முற்பட்டார். (பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து மாவட்டங்களிலும் விலையில்லா பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை முடுக்கிவிட அமைச்சர்களுக்கு ஜெ., உத்தரவிட்டுள்ளதால் அதற்காக அமைச்சர்களுடன் சந்திப்பாம்..) “அம்பேத்கர் விடுதி மாணவர்கள?” என்று முகம் சிவந்த ஆட்சியரிடம் 8 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றாதது குறித்து முறையிட்டனர் மாணவர்கள்.

“இவர்கள் என்னை கேரோ செய்து பேசிக் கொண்டிருகின்றனர், இங்கே தனியே விட்டு அங்கே எல்லாரும் என்ன செய்றிங்க” என்று ஆட்சியர் சீற பதறி வந்தனர் பிற அதிகாரிகள்.

“நீங்கள் ஏதுவாக இருந்தாலும் D R O விடம் பேசுங்கள்” என்று கூறி விட்டு காரில் ஏறி பறந்து விட்டார். D R O, தாசில்தார், டெபுடி கலெக்டர், போலிஸ் உயரதிகாரிகள், உளவுத்துறையினர் உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை துவங்கியது.

மாணவர்களுக்கு தங்குவதற்கு விடுதி கொடுக்க வேண்டும் என்ற தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்து பேசியபின், “ஆட்சியர் தன் நடவடிக்கையில் உறுதியாக இருப்பதால் இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார் D R O.

கோரிக்கைகள் நிறைவேற்றிட குறிப்பான பல வழிமுறைகள் இருப்பதாக ஆதரங்களுடன் நமது தோழர்கள் சுட்டிக்காட்ட, “அதெல்லாம் கோப்புகளை பார்வையிடாமல் எதுவும் சொல்ல முடியாது” என மறுத்து விட்டார்.

வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு, புதிய கூடுதல் விடுதி கட்டிடம் என நாமும் தொடர்ந்து பேச பேச்சுவார்த்தை இழுபறியானது.

ஒரு கட்டத்தில் நம்மை மிரட்டும் தொனியில் காவல்துறை இணை ஆணையர் மிரட்ட, “நிர்வாகத்துடன் நாங்கள் பேசிக் கொண்டிருகிறோம். உங்களுக்கு இங்க என்ன வேலை? நீங்கள் ஏன் இதில் தலை இடுகிறீரிகள்?”என்று எதிர்த்து கேட்டோம்.

“நீங்கள் கேட்பதெல்லாம் நடக்குற காரியமா, ஆகுறத பேசுப்பா” என்று கேலி செய்யும் விதமாக அவர் பேசினார்.

“தமிழக முதல்வர் வந்தால் இரண்டே நாளில் பல கிலோமீட்டர் சாலையை உடனே உங்களால் போட முடியும போது இது மட்டும் ஏன் சாத்தியம் ஆகாது ?”என்று நாம் கேட்டது தான் தாமதம், அதிகாரிகள் போலிஸ் உட்பட அனைவரும் பதற்றமாகி, “நீங்கள் அரசியல் எல்லாம் பேசக்கூடாது” என்று தடுத்தனர்.

“நாங்கள் உரிமைகளை கேட்கிறோம்” என்று வாதிட பேச்சுவார்த்தை முறிந்து போனது.

மாணவர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது பெரும் போலிஸ் பட்டாளமே குவிக்கப்பட்டிருந்தது.

“அடுத்து என்ன செய்ய போகிறிர்கள்?” என்று உளவு பிரிவு போலிசார் நச்சரிக்க தொடங்கினர்.

“வேறென்ன போராட்டம் தான் “என்று பதிலளித்து வெளியேறினோம்.

அடுத்த சிலமணி நேரங்களில் பு.மா.இ.மு செயலரின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலிஸ் இன்ஸ்பெக்டர், பேச்சுவார்த்தைக்கு வந்த மாணவர்களுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து தருவதாக மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகக் கூறினார்.

நாமோ அடுத்த கட்ட போராட்டத்திற்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
திருச்சி – 9943176246.

ஆதர்ஷ் : தியாகிகளின் பெயரில் பாவிகள் சுருட்டிய வீடுகள் !

10

மும்பையிலிருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்திரபூர் மாவட்டத்தில் வசிப்பவர் சுரேஷ் குலாப்ராவ் ஆத்ராம். 42 வயதான ஆத்ராம் வேலை கிடைக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு ரூ 100 வரை சம்பாதிக்கிறார்.

ஆத்ராம்
“குடும்பத்துக்கு மூணு வேளை சோறு போடறதே திண்டாட்டமா இருக்கிற, எனக்கு எங்கய்யா இது மாதிரி வீடெல்லாம்”

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர் ஒருவர், மும்பையின் கொலாபா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ 78 லட்சம் மதிப்புள்ள வீடு அவரது பெயரில் உள்ளது என்று கூறி அது பற்றிய மேல் விபரங்கள் கேட்டிருக்கிறார். “குடும்பத்துக்கு மூணு வேளை சோறு போடறதே திண்டாட்டமா இருக்கிற, எனக்கு எங்கய்யா இது மாதிரி வீடெல்லாம்.” என்று சொல்லியிருக்கிறார் ஆத்ராம்.

உண்மையில் அப்போது கொலாபாவில் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆதர்ஷ் கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டு சொந்தக்காரர்கள் பட்டியலில் 86-வதாக ஆத்ராமின் பெயர் இருந்தது. ஆத்ராம் வேலைக்குப் போகும் எஸ்.எம்.எஸ் என்ற உள்ளூர் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குனர் அபய் சஞ்சேதி, பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர் அஜய் சஞ்சேதியின் சகோதரர். அஜய் சஞ்சேதி பாஜக தலைவர்களுள் ஒருவரான நிதின் கட்காரிக்கு நெருக்கமானவர்.

ஆதர்ஷ் கட்டிடத்தில் வீடு வாங்குவதற்கு ஆத்ராமுக்கு ரூ 59.5 லட்சம் கடனை அபய் சஞ்சேதியின் நிதி நிறுவனமே கொடுத்திருப்பதாக காட்டியிருக்கிறார்கள். இது போல, ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 வீடுகளில் 8 இந்த கும்பலால் ஆத்ராம் போன்ற தமது கடைநிலை ஊழியர்களின் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது.

இது போல அப்போது சிவசேனை கட்சியின் மாநில மேலவை உறுப்பினராக  இருந்த கன்னையாலால் கித்வானி வெவ்வேறு பெயர்களில் 10 வீடுகளை வாங்கியிருக்கிறார். இந்த 10 வீடுகளில் மூன்றை நேரடியாக அவரும் அவரது மகன்களும், நான்கை கட்டிடத்துக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை வழங்கிய மாநில அரசின் உயர் அதிகாரிகள் பெயரிலும் இரண்டை முன்னணி அரசியல்வாதிகளின் பெயரிலும் வாங்க ஏற்பாடு செய்திருக்கிறார் கன்னையாலால் கித்வானி.

அஜய் சஞ்சேதி
சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 வீடுகளில் 8 அஜய் சஞ்சேதி கும்பலால் வாங்கப்பட்டிருக்கிறது.

“ஏன், நான் வீடு வாங்கினால் என்ன தப்பு? நீங்கெல்லாம் வீடு வாங்கறதே இல்லையா?” என்று ஆதர்ஷ் கட்டிடத்தில் சட்ட விரோதமாக வீடு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற மகாராஷ்டிரா ஐஏஎஸ் அதிகாரி உத்தம் கோப்ரகடே சொல்லியிருக்கிறார். ஒருவர் வீடு வாங்குவது கிரிமினல் குற்றமா? முகேஷ் அம்பானி போன்றவர்கள் ரூ 5,000 கோடி மதிப்பிலான 27 மாடிகள் கொண்ட வீடு கட்டிக் கொள்ளும் போது ஒரு அரசு அதிகாரி தனக்காக ஒரு வீடு வாங்கிக் கொள்வதில் என்ன பிரச்சனை என்று பொருமுகிறார்கள் இந்த அதிகார முதலைகள்.

ஆதர்ஷ் கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்பின் கதை சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு 2000-ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளின் மூலம் பராமரித்து வளர்க்கப்பட்ட இந்திய தேசபக்தி, நேரடியாக நடந்த கார்கில் போர் மூலம் தீவிரமடைந்திருந்த நேரம். மும்பை பகுதி பாதுகாப்புத் துறை சொத்து பராமரிப்பு பிரிவு அலுவலர் ராமச்சந்திர சோனேலால் தாக்கூர், கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக ஆதர்ஷ் திட்டத்தை வகுத்தார்.

இரண்டு அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு வீடு (ஃபிளாட்) ஒன்று ரூ 2 கோடி வரை விலை போகும் மும்பையின் கொலாபா பகுதியில் கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கோரி அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு கடிதம் எழுதுகிறார் அவர். அந்த கடிதத்தில் உலகிலேயே விலை உயர்ந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்த கடற்கரையில் கடலை நிரப்பி நிலமாக்கிய 3,854 சதுரமீட்டர் (சுமார் 41,000 சதுர அடி) நிலத்தை சலுகை விலையில் ஒதுக்கும்படி வேண்டுகிறார்.

இந்த நிலம் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிடுகிறார். இந்த நிலத்தில் குடியிருப்பு கட்டிடம் கட்ட அனுமதி பெற்று 40 முன்னாள் இராணுவத்தினருக்கு வீடு கட்டித் தர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார். மும்பை மாநகரத்தின் வளர்ச்சித் திட்டத்தின்படி, இந்த நிலத்தை ஒட்டிய சாலையை 60 அடி சாலையாக மாற்றும் திட்டம் இருந்தாலும், ஏற்கனவே பகீரதி, கங்கோத்ரி என்ற இரண்டு கடற்படை குடியிருப்புகள் கட்டப்பட்டு விட்டிருப்பதால், இந்த சாலை அமைப்பது சாத்தியமில்லை. எனவே இந்த சாலை அமைக்கும் திட்டத்தை மும்பை வளர்ச்சித் திட்டத்திலிருந்து நீக்கி விட்டு ஆதர்ஷ் குடியிருப்பு கட்டிடத்துக்கு அனுமதி அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறார்.

ஆதர்ஷ் நிலம்
ஆதர்ஷ் சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம்.

முன்னாள் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு, குறிப்பாக கார்கில் தியாகிகளின் குடும்பத்துக்கு இந்தியாவின் விலை உயர்ந்த கடற்கரை பகுதியில் சலுகை விலையில் வீடு கட்டிக் கொடுக்கும் தன்னுடைய உத்தேசத்துக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக, நாட்டின் பாதுகாப்புக்காக தொலை தூரங்களில் பணி புரியும் இராணுவ அதிகாரிகளின் பெண் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஒரு பெண்கள் விடுதி கட்டுவதற்கும் இடம் ஒதுக்கப் போவதாக தெரிவிக்கிறார். இதை கருத்தில் கொண்டு விதிகளுக்கு விலக்கும், சட்டங்களுக்கு விடுமுறையும் கொடுக்க வேண்டும் என்று பணிவாக முன் வைக்கிறார்.

ரூ 2 கோடி சந்தை விலை போகும் வீடுகளை சுமார் 60 லட்சம் விலையில் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவது என்பது அவர் திட்டம். அதாவது, சலுகை விலை வீட்டை வாங்கும் ஒவ்வொருவருக்கும் ரூ 1 கோடிக்கு மேல் ஆதாயம் கிடைக்கும்.

இப்படி செத்துப் போன இராணுவ வீரர்களின் பெயரில் நடந்த அப்பட்டமான மோசடியில் ஆட்டையைப் போட்டவர்களில் இருவர்தான் மேலே சொன்ன அஜய் சஞ்சேதியும் கன்னையாலால் கித்வானியும்.

1940-கள் முதல் இராணுவத்தின் பயன்பாட்டில் இருக்கும் இந்த நிலப்பகுதியை வீடு கட்ட ஒதுக்கலாமா என்று அனுமதி கேட்டு மும்பை ஆட்சியர் மகாராஷ்டிரா, குஜராத் இராணுவத் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்புகிறார். “இந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்தி வந்தாலும், அது எங்கள் பெயரில் பதிவாக வில்லை. உங்கள் விருப்பப்படி இதை வீடு கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று ஒரே வாரத்துக்குள் பதில் சொன்னது இராணுவ தலைமையகம்.

கொலாபா
வளர்ச்சியடைந்த மும்பையின் கொலாபா.

இந்த அசாதாரணமான சுறுசுறுப்புக்கு காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முன்னாள் இராணுவ வீரர்களின் குறிப்பாக கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கு என்று முன் வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மூன்று இந்திய இராணுவத் தலைமை தளபதிகள், 1998 முதல் 2010 வரை மும்பை, குஜராத் இராணுவத் தலைமையகத்தின்  தளபதிகளில் ஒருவரை தவிர மற்ற அனைவரும், நிலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் பெயரில் இல்லை என்று உறுதி செய்த அதிகாரி, தென்னிந்திய இராணுவ ஆணையகத்தின் தலைமை தளபதிகள் என்று இராணுவத்தின் உயர் அதிகாரிகளும், நிர்வாகப் பிரிவு அதிகாரிகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அறிந்திருக்க வேண்டும்.

“நாங்கதானே தேவையான ஒப்புதல்களை வாங்கிக் கொடுக்கிறோம். அதற்கு ஊதியமாக வீடு வாங்குவதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையா” என்று கேட்டிருக்கிறார் கன்னையாலால் கித்வானி (அப்போது சிவசேனை மேல்சபை உறுப்பினர்). அப்போதைய வருவாய்த் துறை அமைச்சர் அசோக் சவான் அரசுப்பணி அதிகாரிகளுக்கு 40% வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். 38 பாதுகாப்புத் துறையினருக்கு 33 அரசுப் பணி அதிகாரிகளுக்கு என கட்டப் போகும் வீடுகளின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

இந்த நிலத்தை ஒட்டிய சாலையை அகலப்படுத்த வேண்டாம் என்றும், அங்கு வந்து சேரும் கேப்டன் பிரகாஷ் பேதே சாலையின் அகலத்தை 69.97  மீட்டரிலிருந்து 18.4 மீட்டராக குறைக்கலாம் என்றும் மும்பை வளர்ச்சித் திட்டம் திருத்தப்படுகிறது. மாநகரங்களின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணகான ஏழை மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடித்து துரத்தி விட்டு ஐந்து நட்சத்திர விடுதிகளை கட்டும் ஆளும் வர்க்கம், தமக்கு வீடுகளை கட்டிக் கொள்ள சாலை அகலமாக்கும் திட்டத்தை கைவிட்டிருக்கிறது.

பி வி தேஷ்முக்
சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்து விட்டதாக பொய் சொல்லி குறிப்பு எழுதிய பி வி தேஷ்முக் கைது செய்யப்படும் பிற அதிகாரிகளுடன்.

கொலாபா போன்ற பாதுகாக்கப்பட்ட கடற்கரை பகுதியில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெற வேண்டும். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு அனுமதி கேட்டு மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையின் துணை செயலர் பி வி தேஷ்முக் கடிதம் எழுதுகிறார். குறிப்பிட்ட நிலம் கடற்கரை பகுதி வகையினம் II-ல் உள்ளது என்றும் இதற்கான ஒப்புதல் வழங்கும் பொறுப்பை அந்தந்த வட்டார சுற்றுச் சூழல் துறையிடம் தான் ஒப்படைத்து விட்டதாக பதிலளித்திருக்கிறது மத்திய சுற்றுச் சூழல் துறை. அதையே சுற்றுச் சூழல் ஒப்புதலாக எடுத்துக் கொண்டு, சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்து விட்டதாக பொய் சொல்லி குறிப்பு எழுதுகிறார் பி வி தேஷ்முக். அதற்கு சம்பளமாக அவரும் ஆதர்ஷ் கட்டிடத்தில் வீட்டு உரிமையாளர் ஆகிறார்.

மும்பை மாநகராட்சியின் கட்டிட விதிமுறைகளின்படி நிலத்துக்கும் கட்டப்பட்ட பரப்பளவுக்குமான விகிதம் 1-க்கு 1.33 ஆகத்தான் இருக்க முடியும். ஆனால், வீடு ஒதுக்கப்பட வேண்டிய பெருந்தலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் மாடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், அதற்கு கூடுதல் நிலம் வேண்டும்.

இந்த நிலத்தை ஒட்டிய மனையின் பின்புறம் மும்பை போக்குவரத்து கழகத்தின் பணிமனை உள்ளது. ‘பேருந்துகள் பணிமனைக்குள் போகும் வழியாக பயன்பட்டு வந்த நிலத்தையும் சேர்த்து நமது கட்டிட பரப்பளவை கணக்கிட்டுக் கொள்ளலாம்’ என்று முடிவு செய்தார்கள் சங்கத்தினர். அப்போது மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலராக இருந்த ராமானந்த் திவாரி என்பவர், “அதெப்படி முடியும், இது பெஸ்ட்டுக்கு (போக்குவரத்துக் கழகம்) சொந்தமானதாச்சே” என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார். நகர்ப்புற அமைச்சகம் பெஸ்ட் நிறுவனத்திடம் கருத்து கேட்கிறது.

ராமானந்த் திவாரி
பெஸ்ட் நிலத்தை வாங்கிக் கொடுத்த ராமானந்த் திவாரி (அவரது மகன் ஓம்கார் திவாரிக்கு ஒரு வீடு பார்சல் போடப்பட்டது).

“நாங்கள்  பயன்படுத்தும் நிலத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்” என்று பெஸ்ட் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க, கோபமடைந்த ராமானந்த் திவாரி, “அப்படீன்னா, அந்த நிலத்துக்கான சந்தை விலையை மகாராஷ்டிரா அரசுக்கு கட்டி விட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று மிரட்டியிருக்கிறார். அவ்வளவு பணத்தை கட்ட முடியாத பெஸ்ட் நிறுவனமும் உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளுங்கள் என்று சரண்டைந்து விட்டது. இதற்கிடையில் ராமானந்த் திவாரியின் மகன் ஓம்கார் திவாரியின் பெயரில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டு விட்டது என்பதை தெரிந்து கொண்டால் அவரது மன  மாற்றத்தை புரிந்துகொள்ளலாம். அப்போது முதலமைச்சராக இருந்தவர் இப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் சுசீல் குமார் ஷிண்டே.

மும்பை போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளராக பின்னர் பதவி வகித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உத்தம் கோப்ரகடே தனது மகள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி தேவயானி கோப்ரகடே பெயரில் ஆதர்ஷ் திட்டத்தில் வீடு வாங்கியிருக்கிறார்.

600 சதுர அடியிலான வீடு வாங்குபவர்களின் மாத வருவாய் ரூ 12,500-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற விதி பல உயர் அதிகாரிகள் வீடு வாங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. நாட்டிற்காக தியாகம் புரியும் ராணுவ வீரர்களின் நன்மைக்காக வருமான வரம்பை ரத்து செய்யும்படி முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார் கன்னையாலால் கித்வானி. அதுவும் செவ்வனே நிறைவேற்றி வைக்கப்படுகிறது.

மும்பையில் அரசு அதிகாரிகளுக்கான ஒதுக்கீட்டில் சலுகை விலையில் வீடு வாங்குபவர்கள் மகாராஷ்டிராவில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. எப்போதாவது மகாராஷ்டிராவில் பணி புரிந்திருந்தாலே போதும் என்று விதி திருத்தப்படுகிறது. அதன்படி, 1968 முதல் 1972 வரை மகாராஷ்டிராவில் பணி புரிந்த ஒரு லெப்டினண்ட் ஜெனரலுக்கும் வீடு ஒதுக்கப்படுகிறது.

கன்யாலால் கித்வானி
ஆதர்ஷ் ஊழலை முன்நின்று நடத்தி வைத்த அரசியல் தரகர் கன்னையாலால் கித்வானி.

சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியுடன் 5 ஆண்டுகளாக நடந்த தொடர் அத்துமீறல்களுக்குப் பிறகு 2004-ம் ஆண்டு 3,824.43 சதுர மீட்டர் நிலம் ஆதர்ஷ் குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்டது. பொது பயன்பாட்டு தேவைகளுக்காக கட்டுமான பரப்பில் 15 சதவீதம் குறைத்துக் கொண்டு மாநகராட்சி வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்தது. இந்த 15 சதவீதத்தையும் சேர்த்துக் கட்டிடம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து அனுமதி பெற்றது ஆதர்ஷ் சங்கம். அதற்கு பதிலுதவியாக அப்போது மும்பை ஆட்சியராகயிருந்த திருமதி ஏ குந்தன் கட்டிடத்தில் வீடு வாங்குவோரின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒவ்வொருவரும் சுமார் ரூ 1 கோடி லாட்டரி அடிக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மும்பையில் உயர் அடுக்கு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும் சிறப்புக் குழு 27 மாடிகள் கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தது. ‘கூடுதலாக 28-வது மாடி கட்டுவதற்கு தனியாக அனுமதி பெறத் தேவையில்லை’ என்று நல்ல முடிவுக்கு வந்த ஜெய்ராஜ் பதக் என்ற ஆணையரின் மகனும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கும், ராணுவ வீரர்களின் பெண் குழந்தைகளின் விடுதிக்கும் என்ற ‘புனித’ எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில் கடைசியில் பெண்கள் விடுதி என்ற பேச்சே எழவில்லை. இறுதியாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு குடியிருப்பு தகுதி சான்றிதழ் பெறும் போது வீடு வாங்கிய கார்கில் போர் வீரர்களின் குடும்பங்களின் எண்ணிக்கை 3 மட்டுமே. சிவிலியன்கள் உட்பட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் 34 பேரும், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் 15 பேரும், நாடாளுமன்ற அல்லது சட்ட மன்ற உறுப்பினர்கள் 8 பேரும், அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் உறவினர்கள் 42 பேரும் வீடு பெற்றிருந்தார்கள்.

புறங்கையை மட்டும் நக்காமல், பானையையே உடைத்து திருடியவர்களின் இந்த பட்டியலில் அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மச்சினிக்கும் வீடு வாங்கியிருக்கிறார். தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய இராணுவ உச்ச  அதிகாரிகளுக்கும் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது.

கட்டிடம் கட்டப்பட்டு தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகு 2010-ம் ஆண்டு பத்திரிகைகளில் இந்த ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாகின. “ஒரு வீட்டு வசதி சங்கம் என்றால் அதில் இடம் கிடைக்காதவர்கள் பலருக்கு வயித்தெரிச்சல் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்கிறார் கன்னையாலால் கித்வானி. அப்படிப்பட்ட வயிற்றெரிச்சல் பேர்வழிகள்தான் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறார்கள்.

அசோக் சவான்
இரண்டு வீடுகளை விழுங்கியவர் அப்பாவி பூனை தோற்றமளிக்கும் முன்னாள் முதல்வர் அசோக் சவான்.

அப்போது முதலமைச்சராக இருந்த அசோக் சவானை நீக்கி ‘தூய்மையானவர்’ என்ற இமேஜ் இருந்த பிருத்விராஜ் சவானை முதலமைச்சர் ஆக்குதல், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜே ஏ பட்டீல் தலைமையில் விசாரணை கமிஷன், சிபிஐ விசாரணை என்று ஊழல் ‘ஒழிப்பு’ நாடகங்கள் முறையே தொடங்கி வைக்கப்பட்டன.

மத்திய தணிக்கை அதிகாரி இது தொடர்பாக ஆய்வு நடத்தி 2011-ம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் விதிமீறல்களும், ஊழல்களும் பட்டியலிடப்பட்டு மாநிலத்தின் அப்போதைய மற்றும் முந்தைய முதல்வர்களான சுசீல் குமார் ஷிண்டே, அசோக் சவான், மற்றும் விலாஸ் ராவ் தேஷ்முக் இதில் பங்கேற்றவர்கள் என்று கூறப்பட்டிருந்தது.

சி.பி.ஐ விசாரணையும், அமலாக்கப் பிரிவின் விசாரணைகளும் கண் துடைப்புகளாக தொடர்ந்து கொண்டிருந்தன. ஆதர்ஷ் தொடர்பான ஆவணங்களில் பல தொலைந்து போயின. ராணுவம் அளித்த தடையில்லாச் சான்றிதழ், திட்ட முன்வரைவு, சுற்றுச் சூழல் விதிகளை ரத்து செய்யும் ஆணை, சாலையின் அகலத்தை குறைப்பதற்கான அனுமதி வழங்கிய ஆணை, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்திக் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் ஆணைகள் ஆகியவை மாயமாகியிருந்தன.

இதுதொடர்பான பொது நல வழக்கு ஒன்றில் 2012-ல் மும்பை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ யை கண்டித்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் மேஜர் ஜெனரல் டி கே கவுல், மேஜர் ஜெனரல் ஏ ஆர் குமார், ஓய்வு பெற்ற பிரிகேடியர் எம்.எம் வாஞ்சூ, கன்னையாலால் கித்வானி, அப்போதைய மாநகர ஆணையர் மற்றும் 2012-ல் நிதித் துறை செயலராக இருந்த பிரதீப் வியாஸ் ஆகியோரை கைது செய்தது. இந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் பிரதீப் வியாஸ் மற்றும் ஜெய்ராஜ் பதக் ஆகியோரை அரசு பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக முதல்வர் பிருத்விராஜ் சவான் அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏர் இந்தியா அதிகாரியிடம் அவர் மீதான குற்றங்களை நீர்த்துப் போக வைப்பதற்காக ரூ 50 லட்சம் கேட்டதாக சிபிஐயின் வழக்கறிஞர்கள் ஜே கே ஜகியாசி, மற்றும் மந்தர் கோஸ்வாமியும் கைது செய்யப்பட்டனர்.

பிருத்விராஜ் சவான்
பிருத்விராஜ் சவான்- ‘நேர்மை’யான முதல்வர் ஊழல் பேர்வழிகளை தப்புவிக்கிறார்.

ஆனால், சிபிஐ 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தவறியதால் மே 2012-ல் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் 7 பேருக்கு நீதிமன்றம் பெயில் வழங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் பட்டீல் தலைமையிலான கமிஷன் விசாரணையை முடித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையில் தணிக்கை அதிகாரி குறிப்பிட்ட மூன்று முன்னாள் முதல்வர்களுடன் சிவாஜிராவ் நிலங்கேகர் பட்டீல் என்ற முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் ராஜேஷ் தோப்பே, சுனில் தத்காரே மற்றும் தேவயானி கோப்ரகடே உட்பட 12 பிற உயர் அதிகாரிகளும் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

சங்கத்தின் 102 உறுப்பினர்களில் 25 பேர் உறுப்பினர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் 22 பினாமி பரிமாற்றங்கள் நடந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆதர்ஷ் சங்கம் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெறவே இல்லை என்பதையும் உறுதி செய்திருக்கிறது.

இந்த அறிக்கையை தனது அரசு நிராகரிப்பதாக முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் அறிவித்தார். மகாராஷ்டிரா ஆளுநர் கே சங்கரநாராயணன் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி மறுத்திருக்கிறார். குற்றம் நடந்திருக்கிறது என்று முடிவு செய்வதற்கு ஒரு கமிஷனின் 2 ஆண்டு விசாரணை,  குற்றவாளிகள் மீது வழக்கு தொடரலாமா என்று முடிவு செய்யும் அதிகாரம் அதே குற்றவாளிகளின் அரசிடம் விடப்பட்டிருந்தது. ஊழல் எதிர்ப்பு இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் தலையீட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு அறிக்கையை பகுதியளவு ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறது. அதாவது, கண் துடைப்புக்காக சில அதிகாரிகள் தண்டிக்கப்படுவராகள். பல அதிகாரிகளும், தளபதிகளும், அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள். சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராகவும் விலாஸ் ராவ் தேஷ்முக் மத்திய அமைச்சராகவும் தொடர்கிறார்கள்.

ஆதர்ஷ் கட்டிடத்தின் குடியிருப்பு தகுதி சான்றிதழை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆதர்ஷ் சங்கம், தங்களைப் போன்றே சட்ட விரோதமாக, சட்டங்களை வளைத்து கட்டப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் பட்டியலை தயாரித்துள்ளது. போலீஸ் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கிக் கொண்ட சாகர் தரங், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்த நீதிபதிகள் பினாமி பெயரில் வீடு வாங்கிய சமதா திட்டம், கால்பந்தாட்ட மைதானத்துக்கான வண்டி நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தில்வாரா திட்டம் உட்பட 13 கட்டிடங்களின் பட்டியலை அவர்கள் கொடுத்திருக்கின்றனர்.

கார்கில் வீரர்கள்
கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்கள்.

இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கொள்ளையடிக்கும் நிலங்களின் உரிமையாளர்களான மக்கள் ‘வளர்ச்சி’யை கொண்டு வரும் முதலாளிகளால் ஏற்கனவே விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள்.

மும்பையின் கடற்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து மீன் பிடித்து வருபவர்கள் கோலி இனத்தைச் சேர்ந்த மீனவர்கள். ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து அவர்கள் படிப்படியாக தமது நிலங்களிலிருந்து துரத்தப்பட்டனர். மும்பையின் குறுகிய கடற்கரை ஓரங்களை கார்ப்பரேட் கட்டிடங்களும், நட்சத்திர விடுதிகளும், மேட்டுக் குடி பொழுதுபோக்கு மையங்களும், ராணுவ வளாகங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. கோலி மக்கள் இப்போது கடலோரங்களில் எஞ்சியிருக்கும் மீனவ குடியிருப்புகளில் மட்டும் வாழ்கின்றனர்.

ஆதர்ஷ் போன்ற ஆயிரக்கணக்கான மேட்டுக்குடி குடியிருப்புகள் உமிழும் கழிவு நீரும், பிளாஸ்டிக் பொருட்களும் குவிந்து கடலோர மீன்பிடிப்பு அழிக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயே, இந்திய ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்த இந்தப் பகுதியில் சுற்றுச் சூழலை பாதுகாக்க, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, நகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்த என்று இயற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் அவற்றை கழிப்பறை காகிதங்களாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது போன்று ஒவ்வொரு நாளும் புதுப் புது வாய்ப்புகளை உருவாக்கி நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளை அடிக்கின்றது இந்த கும்பல்.

கார்கில் போரில் இறந்த வீரர்களது குடும்பத்திற்கு வீடு என்ற பெயரில் இந்நாட்டின் அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகள், இராணுவ தளபதிகள், நீதிபதிகள், சிபிஐ அனைவரும் சேர்ந்து நடத்தியிருக்கும் ஊழல்தான் ஆதர்ஷ் வீடுகள் திட்ட ஊழல். போரில் செத்த வீரர்களின் பெயரில் கட்டப்படும் வீடுகளே அவர்களுக்கு போய்ச்சேராது என்றால் நாட்டின் ஏழை எளிய மக்களின் பெயரில் இறைக்கப்படும் திட்டங்களின் கதி என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் அரசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதிமன்றம், காவி-கதர் தேசியக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எப்படி இயங்குகின்றன என்பதற்கு ஆதர்ஷ் ஊழல் ஒரு சான்று. சான்று கிடைத்து விட்டது, இனி இந்த அமைப்பை தகர்க்கும் வழியை ஆராய்வோமா?

அப்துல்

மேலும் படிக்க

தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு,விருத்தாசலம்,கடலூர் மாவட்டம்.
94432 60164, hrpctn@gmail.com
103, ஆர்மேனியன் தெரு,  பாரிமுனை, சென்னை. 98428 12062

பத்திரிகை செய்தி

 சதி வென்றது! நீதி தோற்றது!

உச்சுக் குடுமி மன்றம்
உச்சுக் குடுமி மன்றம்

சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயிலை, தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

இப்படி ஒரு அநீதி இழைக்கப்படவிருக்கிறது என்பதை நவம்பர் மாத இறுதியில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய கணத்திலிருந்து நாங்கள் கூறிவந்திருக்கிறோம். மக்கள் தரப்பில் நின்று மக்கள் சொத்தைக் காப்பாற்ற வேண்டிய தமிழக அரசு தீட்சிதர்களின் அரசாகவே செயல்பட்டது. 2009-ல் திமுக ஆட்சியில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி  சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட போது, போயஸ் தோட்டத்துக்கே சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்த தீட்சிதர்கள் அதன் பலனைப் பெற்று விட்டார்கள்.

ஜெயலலிதா, தீட்சிதர்கள்
தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு.

இவ்வழக்கில் வாதியான தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு என்பதையும், மூத்த வழக்குரைஞர்களை யாரையும் நியமிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருவரைக் கூட டில்லிக்கு அனுப்பாமல் இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் வேலையை ஜெயலலிதா அரசே செய்கிறது என்று அம்பலப்படுத்தி, தில்லைக் கோயிலிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினோம். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளும் துவக்கம் முதலே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதையும், அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை கண்டிக்காததையும் கூட ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

தீட்சிதர்கள்
பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள் (உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் தரிசனம்).

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் சிவனடியார் ஆறுமுகசாமி, வி.எம்.சவுந்தரபாண்டியன் ஆகியோர் மூலம் இவ்வழக்கில் தலையிட்டிருந்த எங்களுடைய வழக்குரைஞர்களை சுமார் பதினைந்து நாட்கள் டில்லியிலேயே தங்கியிருந்து உழைத்தார்கள். மக்கள் மத்தியில் நிதி திரட்டி மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி வாதிட்டோம். இருந்த போதிலும், அரசுத் தரப்பே எதிர்தரப்புடன் கை கோர்த்துக் கொள்ளும் போது, நீதிமன்றமும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளும் போது வழக்கில் வெல்வது இயலாத காரியம்.

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடக்கூடாது என்று தடை விதித்த தீட்சிதர்கள் கோயிலைக் கவர்ந்து கொண்டால், அதைவிட அவமானம் தமிழர்க்கு இல்லை” என்று நாங்கள் இயன்றவழியில் எல்லாம் எச்சரித்தோம். ஆனால், உலகத்தமிழர்களுக்காகவும், ஈழ விடுதலைக்காகவுமே உயிர் தரித்திருப்பதாக கூறிக்கொள்ளும் யாரும் இதற்காகப் போராடவில்லை. முக்கியமாக ஜெயலலிதா அரசை கண்டிக்கவில்லை. மவுனம் சாதித்தன் வாயிலாக “தீட்சிதர்கள், பாரதிய ஜனதா, சு.சாமி, சோ, ஜெயலலிதா கூட்டணி”க்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தவர்கள் இவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ்மக்களைக் கோருகிறோம்.

சுப்பிரமணியசாமி
அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை நீதிமன்றம் கண்டிக்கவில்லை.

பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள். அன்று நால்வர் பாடிய தேவாரத்தை சிதம்பரம் கோயிலுக்குள் முடக்கி வைத்து அழிக்க முனைந்த தீட்சிதர்கள்தான் பத்தாண்டுகளுக்கு முன் திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையிலிருந்து அடித்து வீசினார்கள். அன்று நந்தனாரை எரித்துக் கொன்றது மட்டுமல்ல, 1935 -ம் ஆண்டுவரை நடராசர் கருவறைக்கு எதிரே இருந்த நந்தனார் சிலையை அகற்றியவர்களும் அவர்கள்தான். நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை மறித்து தீண்டாமைச் சுவர் எழுப்பிவைத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள்தான்.

தீட்சிதர்கள் பக்தர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பக்தர்களுக்குத் தெரியும். தீட்சிதர்கள் எந்த சட்டத்தையும், எந்த பக்தரையும் மதித்ததில்லை. பக்தர்களிடம் பணம் பறிப்பது, சாமி நகைகளை களவாடியது, கள்ளக் கையெழுத்துப் போட்டு கோவில் சொத்தை விற்றது என்று தீட்சிதர்கள் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி சக தீட்சிதர்களே அரசுக்குப் புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் 1982-ல் எம்.ஜி.ஆர் அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது. எம்.ஜி.ஆர் அரசு போட்ட ஆணையைத்தான் தற்போது ஜெயலலிதா அரசு குப்பையில் வீசியிருக்கிறது.

ஜெயா-மோடி
பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.

இது சிதம்பரம் கோயில் பிரச்சினை மட்டுமல்ல, எல்லாக் கோயில் சொத்துக்களையும் பார்ப்பனக் கும்பல் விழுங்குவதற்கான சதியின் தொடக்கம் என்பதை நாங்கள் பலமுறை எச்சரித்து விட்டோம். தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் ஜெ அரசு இதையும் சாதித்துக் கொடுக்கும். பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.

இப்படி ஒரு அநீதியான தீர்ப்பு வருமென்பதை நாங்கள் எதிர்பார்த்திருப்பதால் இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “காடு திருத்தி கழனியாக்கிய உழவனுக்கு நிலத்தை சொந்தமாக்க முடியாது” என்று சொல்லும் அரசியல் சட்டமும் நீதிமன்றமும்தான், “மணியாட்டும் அர்ச்சகனுக்கு கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது.  “குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியைத் தெரிவு செய்யலாம்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்த  நீதிபதிகள்தான், கோயில் நகைகளைத் திருடிய தீட்சிதர்களுக்கு கோயிலையை சொந்தமாக்கித் தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று வெளிப்படையாகவே சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டியது மட்டும்தான் பாக்கியிருக்கிறது.

சுயநிதிக் கல்விக் கொள்ளையர்களுக்கும், அணு உலைக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் ஆதரவாக அடுக்கடுக்காகத் தீர்ப்பளித்து வரும் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதில் வியப்பில்லை. உச்ச நீதிமன்றம் என்பது நீதிக்காக நாம் போராடும் பல்வேறு களங்களில் ஒன்று; அவ்வளவுதான். அது ஒன்றும் நீதி தேவதையின் உறைவிடம் அல்ல. உச்சுக்குடுமி மன்றம் என்று ஏற்கெனவே அறியப்பட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் தீட்சிதனைப் போலவே முன்குடுமி போட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு தனிச்சட்டமொன்று இயற்றி சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் சட்டமன்றத்தில் “வரலாற்று சிறப்பு மிக்க ஒருமனதான தீர்மானம்” இயற்றும் ஜெயலலிதா அரசு, இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து ஒருமனதாக அதை ந்நிறைவேற்றி சட்டமாக்க முடியும். அவ்வாறு சட்டமியற்ற வேண்டும் என்பதற்காகப் போராடுவோம். அது மட்டுமல்ல, பார்ப்பன சாதிவெறி பிடித்த தீட்சிதர்கள், தமிழ் மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வண்ணம் கோயிலின் தெற்கு வாயிலில் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். கோயிலில் இருந்து திருட்டுத்தனமாக அகற்றிய நந்தனார் சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்பதற்காகவும் போராடுவோம்.

வென்று விட்டோம் என்று தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இறுமாப்பு கொள்ள வேண்டாம். பார்ப்பனக் கும்பலுக்கு பாரதிய ஜனதா என்றால், தமிழ் மக்களுக்கு நாங்கள்! இது வரலாற்றுப் பகை என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்துவோம். பகை முடிப்போம்!

இவண்

 சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.

ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம்

51

ஓரங்க நாடகம் : ராமன் இரட்டைக் கொலை வழக்கு

ராமன்

ராமாயணத்தின் கதாநாயகனான இராமனின் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த ஓரங்க நாடகம் எழுதப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றையே ஒரு கிரிமினல் வழக்கு விசாரணையாக, விரிவாகவும் ஆழமாகவும், புராணப் புளுகுகளையும் தோலுரிக்கும் விதத்தில் எழுதினார் மலேசியப் பெரியார்.

ஆனால், இந்த் ஓரங்க நாடகம் மக்கள் மத்தியில் வீதிகளில் நடத்துவதற்காகச் சுருக்கமாக எழுதப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்க்கு முன்னதாக அன்றைய காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட நூலை இன்றைய கிரிமினல் சட்டப் பார்வையில் விமர்சிப்பது எப்படி சரியாகும் என ‘ஆத்திக அன்பர்கள்’ பொருமலாம். அப்படிப்பட்ட பழைய குப்பையையே இன்றைய சமுதாயத்தின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டி என்றும், அதன் நாயகர்களை புனிதர்கள் என்றும், அந்த ராமனே “தேசிய நாயகன்” என்றும் பார்ப்பன, ‘மேல்’சாதிக் கூட்டம் சித்தரிக்கும் போது அந்த ராமனை ” தேசிய வில்லன்” என்று நாங்கள் நிரூபிப்பதில் என்ன தவறு? அதுவும் கற்பனையாக அல்ல; பார்ப்பனர்களால் போற்றிப் புகழப்படும் வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் !

____________________________

பாத்திரங்கள் : – நீதிபதி, பெஞ்ச் கிளார்க், அரசு தரப்பு வழக்குரைஞர், ராமனின் வழக்குரைஞர், டவாலி, ராமன், வசிட்டன், நாச்சி முத்து (சலவைத் தொழிலாளி), மின்னல் கொடி (சீதையின் சேடிப் பெண்)

(நீதிபதி தனது இருக்கையில் வந்து அமர்கிறார். பெஞ்சு கிளார்க் வழக்கு விவரங்களைப் படிக்கிறார்)

டவாலி : கோதண்டராமன் என்கிற ராஜாராமன் என்கிற சீதாராமன் என்கிற அயோத்தி ராமன் என்கிற ராமன்…. ராமன்….ராமன்!

(ராமன் உள்ளே நுழைந்து கூண்டில் ஏறி நிற்கிறான்)

பெஞ்சு கிளார்க் : உன் பேர் என்னப்பா?

ராமன் : என் திருப்பெயர் ராமன்.

பெ.கி : அப்ப பாக்கி பேரெல்லாம்?

ராமன் : எல்லாம் நானே

பெ.கி : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்பமா இருக்குது. உனக்கு மொத்தம் எவ்வளவு பேரு?

ராமன் : ஆயிரம் நாமங்கள்.

பெ.கி :  (தலையிலடித்துக் கொள்கிறார்) சரி, ராமன்கிறது யாரு… நீதானே?

ராமன் : ஆம்

பெ.கி : சரி ஆள விடு.

அரசு வக்கீல் : யுவர் ஆனர், குற்றம் சாட்டப்பட்ட ராமன் வில் அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் கோர்ட்டில் வந்து நிற்கிறார். ஏற்கனவே இவர் மீது இரட்டைக் கொலை வழக்கு இருக்கிறது. இவரை ஆயுதங்களுடன் கோர்ட்டுக்குள் அனுமதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.

ராமனின் வக்கீல் : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர். இது என் கட்சிக்காரரின் உரிமையை பறிப்பதாகும். மேலும் இது எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

அ.வ : கனம் நீதிபதி அவர்களே , இந்த ஆள் ஏற்கனவே இந்த ஆயுதங்களைக் கொண்டு இரண்டு கொலை செஞ்சிட்டான். ஊரெல்லாம் அலம்பல் பண்ணிக்கிட்டு திரியுறான். கோர்ட் இதை அனுமதித்தால் நமக்கே ஆபத்து.

நீதிபதி : அப்ஜெக்சன் ஓவர்ரூல்ட்

(டவாலியிடம் கண்ணைக் காட்டுகிறார்- டவாலி அம்பு வில்லை பிடுங்கப் போகிறார்- ராமன் திமிறுகிறான், நீதிபதி மீது அம்பெய்ய முயலுகிறான். டவாலி பாய்ந்து சென்று வில்லைப் பிடுங்கி அம்பையும் உருவுகிறார். வில்லை இழந்த ராமன் கூண்டில் துவண்டு சாய்கிறான்)

ரா.வ : யுவர் ஆனர் அந்த வில்லை மட்டுமாவது என் கட்சிக்காரருக்குக் கொடுக்க வேண்டுகிறேன். இல்லையென்றால் அவரால் நிற்கக்கூட முடியாது.

(வில்லை மட்டும் கொடுக்க நீதிபதி உத்தரவிடுகிறார். வில் கிடைத்தவுடனே ராமன் மீண்டும் ‘கம்பீரமாக’ நிமிர்ந்து நிற்கிறான்.

அ.வ : உன் பெயர் என்ன?

ராமன் : ராமன்

அ.வ : அப்பா பேரு?

ரா : தசரத சக்கரவர்த்தி

அ.வ : அம்மா பேரு?

ரா : கோசலை

அ.வ : அப்படீன்னா நீங்கதான் தசரதனுக்கும் கோசலைக்கும் பிறந்த ராமன்கிறவரா?

ரா : அப்படி சொல்ல முடியாது, என் தாயார் கோசலை…

அ.வ : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்புற?

ரா : அதாவது… எனது தந்தை தசரத சக்கரவர்த்திக்கு 60,000 மனைவிமார்கள்; இருந்தும் அவருக்கு நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லை; ஆகையால் புத்திர காமோஷ்டி யாகம் என்று ஒரு யாகத்தை நடத்தினார். யாகம் முடிந்தவுடன் என்னுடைய தாயின் அந்தப்புரத்திற்கு ஒரு குதிரையை…

(வசிஷ்டர் “அபிஷ்டு… அபிஷ்டு…” என தலையில் அடித்துக் கொள்கிறார்.)

ரா.வ : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர்

(வெறி வந்ததைப் போல கத்துகிறார்)

சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு எனது கட்சிக்காரரை அரசு வக்கீல் குழப்புகிறார். இது எங்கள் மத உணர்வை புண்படுத்துகிறது.

நீதிபதி  : ஆர்டர்…ஆர்டர்.. அடுதத கேள்விக்குப் போங்க

அ.வ : சரி நேரா விசயத்துக்கு வரேன். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஏதாவது மனஸ்தாபம், சண்டைகள் உண்டா?

ரா : (வில்லன் சிரிப்பு சிரிக்கிறார்) என்ன ஒரு கேள்வி கேட்டு விட்டீர்கள். எங்கள் திருமணம் காதல் திருமணமய்யா. உங்கள் கம்பனைக் கேட்டுப் பாருங்களேன்.  “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”.

அ.வ : அதெல்லாம் தெரியும்யா..சம்பவத்தன்று என்ன நடந்தது அதச்சொல்லு.

ரா : சம்பவ தினத்தன்று அதிகாலையில்…நான் அம்சதூளிகா மஞ்சத்திலே சயனித்திருந்த போது…

அ.வ : யோவ்….. விஷயத்துக்கு வாய்யா!

ரா : நான் அரசவையில் அமர்ந்திருந்து நடன மங்கையரின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப்புரத்தில் திடீரென்று ஒரு சத்தம். நான் ஓடினேன் அந்தப்புரத்திற்கு அங்கே…… அங்கே… அங்கே..

அ.வ : அங்கே என்னய்யா

ரா: அங்கே பூமி பிளந்திருந்தது. எனது சீதா தேவி பூமித்தாயின் கருப்பைக்கே சென்று கொண்டிருந்தாள்.

அ.வ : அப்போ அந்தபுரத்தில் வேறு யார் இருந்தாங்க?

ரா : யாருமே இல்லை

அ.வ : அப்படின்னா… சம்பவத்தை கண்ணால் பார்த்த வேற சாட்சிகளே இல்லையா?

ரா : ஆம்

அ.வ : சத்தம் கேட்டு அந்தப்புரத்துக்கு போனீங்க உங்கள் மனைவி பூமிக்குள் தான் போனாங்கன்னு எப்படி நிச்சயமா சொல்றீங்க?

ரா : நான் தான் அவள் பூமிக்குள் போய்க் கொண்டிருப்பதை என் கண்ணால் பார்த்தேனே..

அ.வ : என்ன சார்…. லவ் பண்ணி கல்யாணம் பண்ணினதா சொன்னீங்க. நீங்க காப்பாத்த முயற்சிக்கலையா?

ரா : அவள் விதி முடிந்து விட்டது. நாம் என்ன செய்ய முடியும்?

அ.வ : சரி நீங்க போகலாம். நான் கூப்பிடும் போது வரணும்.

ரா: எமது அஸ்திரங்களை கொடுத்தீர்களானால்….

டவாலி : என்னாது…. அஸ்திரமா? போய்யா அதெல்லாம் கேஸ் முடிஞ்ச பின்னாலதான்.

2

டவாலி : மின்னல் கொடி…மின்னல் கொடி…. மின்னல் கொடி

(மின்னல்கொடி கூண்டில் ஏறி நிற்கிறாள்)

அ.வ : உன் பேரென்னம்மா?

மி.கொ : மின்னல்கொடிங்கய்யா

அ.வ : சீதையை உனக்கு எத்தனை நாளா பழக்கம்?

மி.கொ : ரொம்ப சின்ன புள்ளயிலிருந்தே பழக்கங்கய்யா

அ.வ : அப்படின்னா நீ அயோத்திக்கு எப்படிம்மா வந்தே?

மி.கொ : இந்த ஆளுக்கு கட்டி கொடுத்தப்ப, சீரு செனத்தியோட என்னையும் சேத்து அனுப்பிட்டாங்கையா.

அ.வ : அப்படின்னா நீ சீதைக்கு ரொம்ப நெருக்கம்னு சொல்லு.

மி.கொ : ஆமாங்கய்யா, எந்த விசயத்தையும் அம்மா எங்கிட்ட மறைச்சதே இல்ல.

அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சு?

மி.கொ : அது ஏங்க, இந்த ஆளு அந்த அம்மாவ என்னைக்கி ராவணங்கிட்டயிருந்து கூட்டிட்டு வந்தானோ அன்னையிலிருந்து ஒரே ராவடி தாங்கய்யா.

அ.வ : என்ன தகராறு?

மி.கொ : வேறென்ன? சந்தேகந்தான். ஆசையோட வாழ வந்த பொண்ண வீட்டுல வச்சி பாக்கலய்யா இவன், நெருப்புல இறக்கி பாத்தான்யா.

அ.வ : நெருப்புலயா…. என்னாச்சி?

மி.கொ : என்னா ஆச்சி….வெந்து போச்சி.

அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நீ சொல்லும்மா.

மி.கொ : அன்னையிலிருந்து அந்தம்மாவக் கண்டாலே இவனுக்கு ஆவல, தென…ம் சண்டை.

அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சி? அதச் சொல்லு.

மி.கொ : அட… வழக்கமான வம்புதாங்க. அன்னக்கு மத்தியானம் இந்த ஆளு சோறு திங்க வந்தாரு. எவனோ வழி மேல போறவன் அம்மாவ பத்தி தப்பு தண்டாவா ஏதோ பேசிட்டு போனானாம். இந்த ஆளுக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துடுச்சாம். ஒரே சண்டை.

அ.வ : என்ன சண்டை?

மி.கொ : இந்த ஆளு பேசினதெல்லாம் நாலு சனம் இருக்கிற சபையில் சொல்ல முடியுங்களா?

அ.வ : சரி அந்த அம்மா என்ன சொல்லிச்சு? அதையாவது சொல்லு

மி.கொ : நான் அங்க நிக்கலீங்க. ஆனா கேட்டிச்சி நாக்கு புடுங்கிக்கிற மாதிரி கேட்டிச்சு.

அ.வ : அப்புறம்

மி.கொ : அவ்வளவு தாங்க. அப்பத்தான் அந்தம்மாவை கடைசியா நான் பாத்தது.

அ.வ : ஏதாவது வெடிச்சத்தம் மாதிரி கேட்டிச்சா?

மி.கொ : வெடிச்சத்தமும் கேக்கலை. இடிச்சத்தமும் கேக்கல. இந்தாளு அந்தம்மாவைப் போட்டு அடிச்ச சத்தம்தான் கேட்டிச்சு.

அ.வ : சரி நீ போம்மா. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

3

டவாலி : நாச்சிமுத்து…நாச்சிமுத்து..நாச்சிமுத்து

(நாச்சிமுத்து கூண்டில் ஏறி நிற்கிறார்)

அ.வ : உம் பேரென்னப்பா?

நா.மு : நாச்சிமுத்து

அ.வ : உங்கப்பா பேரு?

நா.மு : வீரையன்

அ.வ : சொந்த ஊரு?

நா.மு : நம்ம பரம்பரையா அயோத்திதாங்க.

அ.வ : தொழில்?

நா.மு: சலவை தொழிலாளிங்க. பரம்பரையா அரண்மனை சேவகம் செய்யுறமுங்க.

அ.வ : சரி கேக்குற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லணும்.

நா.மு: சரிங்கய்யா

அ.வ : ஆத்தங்கரையில் வச்சி ராணியம்மாவைப் பத்தி நீ ஏதோ தாறுமாறா பேசுனியாமே?

நா.மு : அய்யய்யே… அப்படியெல்லாம் எதுவும் பேசலீங்க.

அ.வ : அப்படின்னா…. வேற என்ன பேசின?

நா.மு: நான் சொன்னது இதுதாங்க. நீ போயி சண்ட கிண்ட போட்டு அந்தம்மாவ கூட்டியாந்த. கூட்டியாந்தவன் ஒழுங்கு மரியாதையா வச்சி வாழ வேண்டியதுதானே.. அத வுட்டுட்டு நெருப்புல எறக்குனா அது என்னா நியாயம் -அப்படி சந்தேகப்பட்டவன் அவன்கிட்டயே வுட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானே. இதத்தான்யா நான் சொன்னேன். கதையையே மாத்திட்டானுங்கய்யா

அ.வ : நீ பேசும் போது அங்க யாராவது இருந்தாங்களா?

நா.மு: சாமி சத்தியமா என் பொண்டாட்டியத் தவிர வேற யாரும் கெடயாதுங்க. அரண்மனை விசயத்தை நாலு பேர வச்சிகிட்டுப் பேசமுடியுங்களா?

4

டவாலி: வசிட்டர்…. வசிட்டர்….வசிட்டர்

(வசிட்டர் கூண்டுக்கு வந்து நிற்கிறார். டவாலி வசிட்டரைத் தொடுவது போல் அருகில் போக வசிட்டர் தொடாதே…தொடாதே என்று தள்ளுகிறார்)

அ.வ : உங்க பேரு என்ன பெரியவரே?

வசிஷ்: வசிஷ்டர்

அ.வ: ஊரு

வசி: யாதும் ஊரே…யாவரும் கேளீர்

அ.வ : கிழிஞ்சுது போ. சரி உங்க அப்பாரு பேரு?

வசி: ஈரேழு பதினாலு லோகங்களையும் எட்டு திசைகளையும், சூரிய சந்திரர்களையும் எவன் படைத்தானோ அவனே என் அப்பன்.

அ.வ : யோவ், இது கோர்ட்டா என்ன? கேக்குறதுக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லனும். சரி.. உன் தொழில் என்ன?

வசி : ராஜகுரு

அ.வ : எந்த ராஜாவுக்கு குரு?

வசி: சூரிய வம்சத்தின் ஏழேழு பரம்பரைக்கும் நான தான் குரு!

அ.வ : ஏழு பரம்பரைக்கும் நீதான் குருவா…சரி உன் வயதென்ன?

வசி: கடலின் ஆழமென்ன?

(ராமன் தரப்பு வக்கீல் ஹா…. ஹா.. என சிரிக்கிறார்.)

நீதிபதி: (முறைத்துப் பார்த்துவிட்டு) யோவ் பெரியவரே.. கேக்குற கேள்விக்கு நேரடியா பதில் சொல்லு.

அ.வ : ராமனை உமக்கு தெரியுமா?

வசி: தெரியுமாவா? இதோ இந்தத் தோளில் தூக்கி வளர்த்தவனய்யா நான்.

அ.வ : சம்பூகனை தெரியுமா?

வசி: கேள்விப்பட்டிருக்கிறேன்.

அ.வ : உங்களுக்கு சம்பூகனுக்கும் ஏதாச்சும் முன் விரோதம் உண்டா?

வசி : முன்விரோதமாவது பின்விரோதமாவது, அவன் ஒரு தேச விரோதி.

அ.வ : தேச விரோதியா? என்னய்யா பண்ணினான்?

வசி: அவன் ஒரு சூத்திரன். பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்ய முயற்சி செய்த சூத்திரன்.

அ.வ : அது உங்களுக்கு எப்படி தெரியும்?

வசி: அயோத்தி நகர் பிராமணர்கள் என்னிடம் முறையிட்டார்கள். அதை விசாரித்து உரிய தண்டனை கொடுக்கும்படி நான்தான் ராமனுக்கு உத்தரவிட்டேன்.

அ.வ : அப்போ நீங்கதான் கொலை செய்யத் தூண்டினீங்க அப்படித்தானே?

வசி : கொலையா? தருமத்தின்படி எதை செய்ய வேண்டுமோ அதை நான் செய்தேன். சூத்திரன் என்பவன் அடிமை வேலை செய்யப் பிறந்தவன். பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், வைசியனுக்கும் தொண்டு செய்வதுதான் அவன் குலத்தின் கடமை. அதை அவன் மீறினான்

அ.வ : என்னய்யா செஞ்சான்? அதச் சொல்லு

வசி: பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்தான். இது சட்ட விரோதம். சூத்திரன் வேதத்தை காதால் கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று நம் சனாதன தர்மம் சொல்கிறது. ஏன்?..சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம் என்று ஆதிசங்கரரே சொல்லியிருக்கிறாரே

அ.வ : நீதான் கொலை செய்யத் தூண்டினதா மறுபடியும் ஒத்துக்கிற.

வசி : இது கொலையென்றால் இதுபோல ஆயிரக்கணக்கில் நாங்கள் செய்திருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் விசாரித்து தீர்ப்பு சொல்லிவிட முடியுமா?

– ஏகலைவன் கேஸை விசாரித்தீர்களா?

– நந்தனார் கதையென்ன – எங்களுக்கு தெரியாததா?

– அவ்வளவு தூரம் ஏன்? உங்கள் வெண்மணியில் நீங்கள் செய்தது என்ன?

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ராமன் செய்தான்.

அ.வ : அப்போ… ராமன் தான் இந்த கொலையை செஞ்சானு சொல்றீங்க

வசி : கொலை…கொலை…கொலை. இந்த கெட்டவார்த்தையைக் கேட்டு என் காதுகள புண்ணாகி விட்டன. சனாதன தர்மப்படி என்ன செய்ய வேண்டுமோ ஹிந்து தர்மப்படி என்ன் செய்ய வேண்டுமோ அதைத்தான் அவன் செய்தான்

அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்

– சரி நீங்க போகலாம்.

5

டவாலி : ராமன்…ராமன்….ராமன்

(ராமன் கூண்டில் வந்து நிற்கிறான்)

அ.வ : கனம் நீதிபதி அவர்களே! இந்த ரெட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாராமன், கோதண்டராமன், ராஜாராமன், அயோத்திராமன் என்ற பல்வேறு பெயர்களில் உலவி வருகின்ற ராமன் என்கிற இந்த நபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ததின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவன் தன் மனைவி சீதையை ஏமாற்றி தீ வைத்து கொளுத்தியிருக்கிறான். அவள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறாள். அதன்பின் அவளைக் கொலை செய்து புதைத்து இருக்கிறான். தடயங்களை அழிக்க முயற்சியெடுத்து இருக்கிறான். சாட்சிகளை மிரட்டியிருக்கிறான்.

ஒரு பாவமும் அறியாத சம்பூகன் என்ற தொழிலாளியை எவ்வித நியாயமான முகாந்திரமில்லாமல் திடீரென்று தாக்கி கொலை செய்திருக்கிறான். இந்தக் கொலைக்கு ‘ராஜகுரு’ என்று சொல்லப்படுகிற வசிஷ்டர் உடந்தையாகவும் தூண்டி விடுபவராகவும் இருந்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு புனைப்பெயர்களில் தசாவதாரம் என்கிற பெயரில் போர்ஜரி, ஆள்மாறாட்டம், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, சதி, கற்பழிப்பு போன்ற கொடிய கிரிமினல் குற்றங்களுக்காக இவன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டும் இத்தகைய கிரிமினல் பேர்வழி இனிமேலும் வெளியில் நடமாடுவது சமுதாயத்திற்கே ஆபத்து என்கிற உண்மையை கணக்கில் கொண்டும், இவனுக்கு உரிய தண்டனை அளிக்கக் கோருகிறேன்.

குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் இந்த நீதிமன்றத்தின் கருணைக்கும், இரக்கத்திற்கும் எள்ளளவும் தகுதியில்லாதவன் என்பதால் இவனுக்கு மிக அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நீதிபதி: என்னப்பா… இது சம்பந்தமா நீ ஏதாவது சொல்ல விரும்புறியா?

ரா: ஹா….ஹா…..ஹா…(சிரிக்கிறான்)

அ.வ : யோவ் என்னய்யா சிரிக்கிற. அய்யா கேட்கிறாரு ஒழுங்கா பதில் சொல்லு

ரா: யதா யதாஹி தர்மஸ்ய

நீதிபதி : என்னப்பா நான் இவவளவு சீரியசா கேட்டுக்கிட்டிருக்கேன். நீ என்னமோ உளர்றே, புரியுற மாதிரி சொல்லுய்யா

ரா: புரிந்தது…புரியாதது…தெரிந்தது..தெரியாதது எல்லாம எமக்குத்தான் . ராம் ராஜ்யத்தில் ராமன் மீதே விசாரணையா?

என் வீர பராக்கிரமங்களைப் பற்றி வால்மீகியிடம் கேட்டுப்பார்!

என் ஒழுக்கத்தைப்பற்றி கம்பனிடம் கேட்டுப்பார்!

என் காதல் லீலைகளைப்பற்றி துளசிதாசனிடம் கேட்டுப்பார்!

அ.வ : யோவ் நீ என்னய்யா சொல்ற… அத சொல்லு

ரா: மானிடப் பதரே! சூத்திர நாயே….! அற்பனே! யாரைப் பார்த்து நீ என்கிறாய்.

எங்கே என் கோதண்டம்…வாலியின் உயிர் பறித்த என் அஸ்திரங்கள் எங்கே? ராவணனின் சிரம் சாய்த்த எனது அம்புகள எங்கே…எங்கே…

நீதிபதி: ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு

(ராமன் இழுத்து செல்லப்படுகிறான்)

6

தொலைக்காட்சி அறிவிப்பு

ஒரு முக்கிய அறிவிப்பு :-

இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமன் என்கிற வாலிபர், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலிலிருந்து தப்பி விட்டார்.

அடையாளங்கள்

வயது : தெரியவில்லை. ஆனால் இளமையான தோற்றம்

நிறம் : பச்சை

போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் இந்த நபர் கையில் வில், அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். தற்போது தலைமறைவாக இருக்கும் இந்த நபர் தனக்கு ஆதரவாக தனது கூட்டாளிகளைத் தூண்டி விட்டு நாட்டில் கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் கடைசியாக வந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த நபரை எங்கேனும் காண நேர்ந்தால் உடனே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :- செயலர்,மக்கள் கலை இலக்கிய கழகம், தமிழ்நாடு.

– மருதையன்
______________________________________________
புதிய கலாச்சாரம் – டிசம்பர் 1992
______________________________________________

ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !

16

ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம்! தொழிலாளர்கள் – மாணவர்கள் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஆட்டோ தொழிலாளர்களே,

ஆட்டோ ஓட்டுனர்கள் நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை நாம் அறிவோம். அவசரமாக வெளியில் செல்ல வேண்டுமா? முக்கியமான வேலையா? நள்ளிரவா? உடனே ’’கூப்பிடு ஒரு ஆட்டோவை’’ என்கிறோம். சென்னை போன்ற பரந்து விரிந்திருக்கும் மாநகரத்தில் நாம் செல்ல வேண்டிய முகவரி தெரியவில்லையா? ஆட்டோக்காரர் உதவியோடுதான் கண்டுபிடிக்கிறோம். பிறப்பு, இறப்பு, மருத்துவம் பார்க்க, திருமணம், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப என நம் குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து உதவுபவர்கள் ஆட்டோக்காரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இப்படிப்பட்ட ஆட்டோக்காரர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி உரிமை கேட்டு போராடியதற்காக, கொலைவெறியுடன் தாக்கியுள்ளது பாசிச ஜெயா அரசின் போலீசு. இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதும், எதிர்த்து குரல்கொடுப்பதும் நம் அனைவரின் கடமை.

அரசு அடக்குமுறைகள்
ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது அரசு.

சென்னையில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. அரசு 6 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்கவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்க பெட்ரோல்,டீசல் விலையை விசம்போல் உயர்த்தி, ஆட்டோ ஓட்டுனர்கள் வயிற்றிலடித்து வந்தது அரசு. அப்போதும், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களுக்குள் ஒரு நிலையான கட்டணத்தை முடிவு செய்து அதையே வசூலித்தும் வந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க துப்பில்லாத அரசு, இப்போது ஆட்டோ ஒட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சுமத்துகிறது, ஆட்டோ ஓட்டுனர்களை கலந்து ஆலோசிக்காமல் புதிய மீட்டர், கட்டண நிர்ணயம், புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள், எஸ்.எம்.எஸ் மூலம் புகார் என புதுப், புது வடிவங்களில் கேள்வி கேட்பாரின்றி அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது.

இந்த புதிய முறையை அறிவித்ததில் இருந்து ஆட்டோ ஓட்டுனர்கள் சொல்ல முடியாத துன்ப துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவைக் கண்ட இடத்திலேயே வழிமடக்கி மிரட்டி மாமுல் வசூலிக்கும் ட்ராபிக் போலீசுகாரர்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன? இப்போது இவர்களுடன் காக்கிச் சட்டை கிரிமினல்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். இந்த கிரிமினல் கும்பல் தற்போது மீட்டர் சோதனை என்ற பெயரில் பொய்வழக்குப் போட்டு பணத்தையும், ஆட்டோக்களையும் வழிப்பறி செய்கிறது.

ஒரு சில ஆட்டோக்காரர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்பது உண்மைதான். அதை நாம் நியாயப்படுத்த முடியாது. உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி கங்குலி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது நாடு முழுவதும் நாறுகிறது, ஆனால், ஒட்டுமொத்த நீதிபதிகளுமே இப்படிப்பட்டவர்கள்தான் என்று யாரும் சொல்வதில்லையே? தொழிலாளர்கள், மாணவர்கள் மீது மட்டும் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளாக முத்திரைக் குத்த முயற்சிக்கிறார்கள். தவறு செய்யும் ஒரு சிலரை தவிர்த்து பார்த்தால், ஆபத்துக்கு உதவுபவன், பிரவத்திற்கு இலவசமாக வருபவன், மக்களின் நண்பன் என்றெல்லாம் மக்களோடு ஐக்கியப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் ஆட்டோக்காரர்கள். ஆனால், மக்கள் நலனுக்காகவே இந்த புதிய முறைகள் என்பதுபோல் காட்டி, ஆட்டோக்காரர்களை குற்றவாளிகளாக சித்திரித்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும், மக்களுக்கும், ஆட்டோக்காரர்களுக்கும் இடையிலான ஐக்கியத்தை உடைக்கவுமான சதித்தனத்தில் ஈடுபட்டுள்ளது கிரிமினல்மயமான போலீசு.

ஆட்டோக்காரர்கள் வாழ்க்கை நமக்குத் தெரியாததா என்ன? நம் நாட்டில் திணிக்கப்பட்டுள்ள தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக, கிராமங்களில் விவசாயம் அழிக்கப்பட்டு, கவுரவமான வாழ்வை இழந்து, நரகமாகிப் போயுள்ள சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் செய்யும் தொழில் ஆட்டோ ஓட்டுவது. கல்லூரிக்கு போக முடியாதவர்களும், மெத்தப் படித்து வேலை கிடைக்காதவர்களும் வந்து சேரும் இடம் ஆட்டோ ஸ்டேண்ட்.

சிங்காரச் சென்னையின் மாடி வீடுகளுக்கு வாடகை கொடுக்க முடியாமல் துர்நாற்றம் வீசும் கூவம் ஓரங்களிலும், சேரிகள் என்று இந்த அரசால் அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும், நெருக்கடி மிகுந்த வட சென்னையின் 8 க்கு 8 அறைகளிலும், சுகாதாரமான வாழ்க்கையின்றி, கொசுக்கடியில் தூக்கமின்றி உழலுபவர்கள்தான் ஆட்டோ ஓட்டுனர்கள். பெரும்பாலானோர் ஓட்டுவது வாடகை ஆட்டோ. சிலர் ராஜஸ்தான் மார்வாடிகளிடம் பர்மிட்டை அடகு வைத்து ஆட்டோ வாங்குவார்கள், மாதாந்திர தொகை கட்டமுடியாமல் போனால் மார்வாடி ஆட்டோவை பறிமுதல் செய்வான். அதை மீட்க இன்னொரு மார்வாடியிடம் அடகு என சுற்றி வரும் இவர்கள், சொந்த ஆட்டோ வைத்திருப்பதாக சொன்னாலும் அது அவர்களுக்கு சொந்தமில்லை.

ஷேர் ஆட்டோ, டாடா மேஜிக், கால் டேக்சி ஆகியவை நகரத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், முன்பு போல் இப்போதெல்லாம் ஆட்டோ ஓடுவதில்லை. ’’வருமானம் இல்லை, சென்னைக்குள் வாழமுடியாது’’ என்று குடும்பத்தை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றிவிட்டு, இரவில் ஆட்டோ ஸ்டேண்டிலேயே படுத்து, கடைகளில் சாப்பிட்டு, வாரம் ஒரு நாள் வீட்டிற்கு சென்று வரும் ஆட்டோ ஓட்டுனர்களை நாம் பார்க்கவில்லையா? பிள்ளையை படிக்க வைக்க, மகளுக்கு திருமணம் செய்ய, மனைவிக்கு வைத்தியம் பார்க்க பகல், இரவு என ஓய்வு ஒழிச்சலின்றி ஆட்டோ ஓட்டும் நபர்களிடம் பேசியதில்லையா? படிக்க வேண்டும் என்ற ஆசையில் பகலில் கல்லூரிக்கும், படிப்பு மற்றும் குடும்ப செலவுக்காக இரவில் ஆட்டோ ஓட்டப் போகும் மாணவர்களை கேட்டுப் பாருங்கங்கள், அந்த கடுமையான உழைப்பை பல கதைகளாக சொல்வார்கள். இவர்கள் கடுமையாக உழைப்பது கோடீஸ்வரர்களாவதற்கல்ல, அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காக. இப்படிபட்ட உழைப்பாளிகளைத் தான் குற்றவாளிகளாக சித்தரிக்கிறது, மக்கள் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் போலீசு.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுனர்களிடம் சோதனையிடும் போலீசு, ஆம்னி பஸ்களின் பகிரங்கமான பகற்கொள்ளையை சோதிக்க முடியுமா? ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் இந்த யோக்கியர்கள், பயணிகள் சேவை என்று சொல்லிக் கொண்டு சரக்குகளை ஏற்றி கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகளை பறிமுதல் செய்வார்களா? முடியாது. அவர்கள் போலீசுக்கு மாத சம்பளமும், போனசும் கொடுக்கும் பெரும் முதலாளிகள். அதனால், அந்த முதலாளிகளுக்கு வாலைக் குழைக்கிறார்கள். 50, 100 யை மட்டுமே பிடுங்க முடியும் ஆட்டோக்காரர்கள் தொழிலாளிகள்தானே, இதனால் வெறிநாய்போல் கடித்து குதறுகிறார்கள்.

ஆட்டோக்காரர்கள் மீது புகார் தெரிவிக்க சிக்னலுக்கு சிக்னல் டிஜிட்டல் போர்டில் தொலைபேசி எண்ணாம், அதே சிகனல்களில் வாகனங்களை வழிமறித்து பணம் பறிக்கும், லாரி ட்ரைவர்கள் விட்டெரியும் காசைப் பொறுக்கித் தின்னும் போலீசார் மீது யாரிடம் புகார் செய்வது? அந்த காட்சிகளுடன் அவர்களை படம் பிடித்து சிக்னலுக்கு சிக்னல் தொங்கவிடுவது யார்?

ஆட்டோ ஓட்டுனர்கள்
போலீசு தொல்லையை எதிர்த்து புகார் செய்யும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

எஸ்.எம்.எஸ்-ல் புகார் செய்தாலே வழக்குப் போடும் உத்தமர்களாம் போலீசார். ஆட்டோக்காரர்களை தாக்கிய அதே நாளில், எஸ்பிலனேடு போலீசுக்காரர் பள்ளிகொண்ட பெருமாள் தன் மனைவிடம் இரவு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு, சக பெண் காவலர் வீட்டில் கூத்தடித்து விட்டு, தப்பிக்கும் போது மாடியில் இருந்து விழுந்த செய்தி பகிரங்கமான பின்பும் அந்த அயோக்கியனை வேலையில் இருந்து தூக்கவில்லை, தலித் மக்களை பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் திட்டமிட்டு கொன்ற கொலைகார போலீசை சிறையிலடைக்கவில்லை. இப்படி லஞ்சம் ஊழலில் தொடங்கி போலி என்கவுண்டர், காவல் நிலைய கொலை என குற்றங்கள் மலிந்து கிடக்கும் இடம்தான் போலீசு நிலையம், அங்கு குற்றமற்றவர்களே இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இவர்களை தண்டிப்பது யார்? பொய் வழக்குப் போட்டு பணம் பிடுங்கவும், தொழிலாளிகளை குற்றவாளிகளாக்கி சிறையிலடைக்கவும்தான் எஸ்.எம்.எஸ் மூலம் சதி வலை பின்னுகிறார்கள்.

இப்படிபட்ட ’உத்தமர்களுக்குத்’ தான் பாசிச ஜெயா அரசு, அவ்வப்போது சிறந்த ’காவலர்கள்’ பட்டமும், சன்மானமும் வழங்கி உசுப்பேற்றுகிறது. வானளாவிய அதிகாரங்களை வாரி வழங்கி போலீசு ராஜ்ஜியத்தை நிறுவத் துடிக்கிறது. இது மிகப் பெரிய ஆபத்து. ஏற்கனவே விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்க குண்டாஸ் பாயும் என பீதியூட்டல், வாடகைதாரர்களின் விவரங்களை சேகரிக்க போலீசுக்கு அதிகாரம், பொது இடங்களில் கேமரா, மக்களை எப்போதும் வேவு பார்க்க ஆதார் அட்டை, எதிர்கால சந்ததிகளான மாணவர்களை திட்டமிட்டே ரவுடிகள், பொறுக்கிகள் என சித்தரிப்பது, பொய் வழக்குப் போட்டு சிறையிலடைப்பது, ரூட் கலாச்சாரம் ஆபத்தானது என ஊதிப்பெருக்கி மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பது, கல்லூரிக்குள் உளவு போலீசையும், வெளியே காக்கிச் சட்டைகளையும் நிறுத்தி பீதியூட்டுவது, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், உதவியாளர்களை கங்காணிகளாக்குவது, எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களையே மாணவ சமுதாயத்திற்கு எதிரான கைக்கூலிகளாக உருவாக்க ’ஸ்டூடன்ஸ் விங்’ எனும் அரைகாக்கிப்படை உருவாக்குவது என மாணவர்கள் மீதும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

  • இவை எல்லாவற்றுக்குமே இந்த அரசு ஒரு நியாயத்தை கற்பிப்பது போல, ஆட்டோ ஓட்டுனர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க ’கட்டண முறைகேடு’ என்று நியாயம் சொல்கிறது.
  • வானளாவிய அளவு சொத்து குவித்திருக்கும் தனியார் விமானங்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த பெட்ரோலுக்கு மானியம் வழங்கும் அரசு, வறுமையில் வாடும் ஆட்டோ ஓட்டுனர்கள் மானியம் கேட்டால் மண்டையை உடைக்கிறது.
  • தனியார் பள்ளி – கல்லூரி முதலாளிகளின் மிரட்டலுக்கு அடிபனிந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் நிர்ணயம் செய்துகொடுப்பவர்கள், எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப கட்டணம் நிர்ணயக்கக் கோரிக்கை வைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை கொலைவெறியுடன் தாக்குகிறார்கள்.
  • தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடினால் ஏளனம் செய்கிறார்கள்.

நவீன தொழில்நுட்ப கிரிமினல்மயமாக்கம்ஆட்டோ ஓட்டும் நண்பர்களே, ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், தொழிலாளி வர்க்கமாகிய நாம் லட்சக்கணக்கானவர்கள். நாம் நடத்துவது உரிமைக்கான போராட்டம். நாம் ஏன் ஓட வேண்டும். எதிர்த்து துணிவுடன் நிற்கவேண்டிய தருணமிது.

போலீசாரால் அடக்கப்படுவது நாம் மட்டுமல்ல, மாணவர்களும் நம்மைப் போன்றே போலீசாரால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களும் லட்சக்கணக்கானவர்கள்.

தொழிலாளர்கள், மாணவர்கள் ஒற்றுமையை கட்டியமைப்போம். உழைக்கும் மக்கள் ஆதரவைத் திரட்டுவோம்.

நம்மை குற்றவாளிகளாகவும், ரவுடிகளாகவும், பொறுக்கிகளாகவும் சித்தரித்து, நம் மீது இந்த அரசு நிறுவத்துடிக்கும் போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம்.

உரிமைக்காகப் போராடிய ஆட்டோ ஓட்டுனர்கள் மீது  காட்டுமிராண்டி போலீசு  கொலைவெறித் தாக்குதல்

தமிழக அரசே!

  • தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்களை கைது செய்
  • மீட்டர் சோதனை, எஸ்எம்எஸ் புகார் என்று ஆட்டோ ஓட்டுனர்களை குற்றவாளிகளாக்கி பொய் வழக்கு போடுவதை நிறுத்து

உழைக்கும் மக்களே

  • குற்றவாளிகள் ஆட்டோக்காரர்களல்ல
  • ஆட்டோவையும் பணத்தையும் பறிக்கும் போலீசுதான்
  • காக்கிச்சட்டை ரவுடிகளான போலீசு – மாணவர்களையும், தொழிலாளர்களையும் ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிப்பதை அனுமதியோம்

ஆட்டோ ஓட்டுனர்களே

  • உழைக்கும் மக்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்
  • போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தை முறியடிப்போம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
9445112675 – 9444834519

மதுரை HRPC கருத்தரங்கம் – செய்தி, படங்கள்

0

னித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை 10-ஆம் ஆண்டு தொடக்கவிழா 28.12.13 அன்று மடீசியா அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளைத் தலைவர் நல்லகாமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ம.லயனல் அந்தோணிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தாது மணல் கொள்ளையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் பெரியசாமி புரத்தைச் சார்ந்த எல்.எ.எழிலன், தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த எல்.எஸ்.ஜானி பூபாலராயர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தலைவர் உவரி எஸ்.ஏ.ஜோசப் ஆகியோர் பாதிப்புகள் பற்றி நேருரையாற்றினர்.

பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த எழிலன் பேசும் போது, “எங்களது கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு பகுதியாகும். இங்கே அரிய கடல்வாழ் உயிரினங்களாகிய ஆமைகள், கடல் பசுக்கள், மற்றும் பவளப்பாறைகள், நிறைந்துள்ள பகுதியாகும். மத்திய மாநில அரசுகள் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பலகோடி செலவில் பராமரித்து வருகின்றன. ஆனால் இந்தப் பகுதியில் வைகுண்டராசனின் வி.வி.மினரல்ஸ் கம்பெனி கடலுக்கு உள்ளேயே வந்து தாதுமணலை அள்ளிச் செல்கின்றது. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கீழ வைப்பாறு பகுதியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அறிக்கை கொடுத்தார். வி.வியால் எங்களது கடற்கரை பகுதியே அழிந்து விட்டது. கடற்கரையில் நடப்பட்டிருந்த கன்னாச் செடிகள் பனைமரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், சிப்பிகளின் ஊடாக தூண்போல் ஊடுறுவி தாங்கிநிற்கும் மணல் அனைத்தும் கரைந்து விட்டதால் மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு பகுதியே காணாமல் போய்விட்டது. கடல் இப்போது ஊருக்குள் வந்து விட்டது. கடற்கரையில் கிடைத்த நிலத்தடி நீர் உப்பாகி குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” என்று விளக்கினார்.

தூத்துக்குடியைச் சார்ந்த ஜானி பூபால ராயர் பேசும்போது, “தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என்று தூத்துக்குடியில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதுவரை துணிந்து இப்படி யாரும் செய்யவில்லை. மீனவ மக்கள் பயந்தவர்கள் இல்லை. ஆனால் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெரியாமல் தான் தவித்து வந்தோம். மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகள் வழிகாட்டினார்கள். என் போன்ற இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது மனித உரிமை பாதுகாப்பு மையம் மட்டும்தான். எதற்கும் போகாதே போகாதே என்று தடை போடுகின்ற என்னுடைய குடும்பத்தினர் இப்போது என்னைக் கட்டித் தழுவி ஊக்கப் படுத்துகின்றனர். அப்படிப்பட்ட இயக்கங்கள் கட்டாயம் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தும். அதற்கு எங்களது முழு ஒத்துழைப்பு உண்டு” என்று கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.ஏ.ஜோசப் அவர்கள் பேசும்போது, “மீனவமக்கள் உழைப்பாளிகள், உடல் வலிமை மனவலிமை உடையவர்கள். ஆனால் எங்களால் வி.வியை எதிர்க்க முடியவில்லை. ஆனால் மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர இயக்கங்களும் எதிர்த்துப் போராடுகின்றீர்கள். எங்களிடம் உள்ளது உண்மையான வீரம் அல்ல. உங்களுடைய போராட்டம் தான் வீரம் செறிந்தது. எனவே நாங்களும் இப்படிப்பட்ட போராட்டத்தோடு இணைய வேண்டும். எங்களுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். உங்களோடு நாங்கள் துணை நிற்போம். இணைந்து போராடுவோம்.” என்று உணர்ச்சிப் பெருக்கோடு உரையாற்றினர்.

“கொலைவழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை நடந்தது என்ன?” என்பது பற்றி வழக்கறிஞர் தோழர் பாலன் பேசினார். “பாராளுமன்றம் மீது நடைபெற்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல்குரு சாட்சியங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் சட்ட விரோதமாக, அநியாயமாகத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் 24 சாட்சியங்கள், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியபின்பும் 10 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்து, பேரம் பேசி நீதிபதியை விலைக்கு வாங்கியது அம்பலப்பட்டுப்போன, பின்பும் பெரியவாளு, சின்னவாளு எல்லாரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சங்கராச்சாரியும், சங்கரராமனும் ஒரே சைவைப் பார்ப்பனர்கள்தான். ஆனால் சங்கராச்சாரி கார்ப்பரேட்டுகளின் கையாள். சங்கரராமன் ஏழை. அதனால் தான் சங்கர ராமனுக்கு நீதிகிடைக்கவில்லை.

இது எதைக் காட்டுகிறது என்றால் சட்டத்தை உருவாக்குகிறவர்கள் (Law Makers) சட்டத்தை நிர்வகிக்கிறவர்கள் (Law Keepers) சட்டத்தை மீறுகிறவர்கள் (Law Breakers) எல்லோரும் ஒரே ஆட்கள்தான். மெக்காலே சட்டத்தை உருவாக்கும் போதே அதை விலைக்கு வாங்குகின்ற வகையிலே ஒரு பண்டமாகத்தான் (Commodity) உருவாக்குகிறான். எனவேதான் கார்ப்பரேட் பினாமி நீதியை விலைக்கு வாங்கிவிட்டார். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத அப்சல் குரு தூக்கில் கொல்லப்பட்டார். அப்படியானால் இந்த சட்டமும் நீதியும் மக்களுக்கானது அல்ல. மக்களுடைய பிரச்னைகளுக்கான தீர்வு, நீதிமன்றங்கள் அல்ல போராட்டக்களங்கள் தான்” என்று பேசினார்.

“கொள்ளையடிக்கத் தில்லைக் கோயில் மீண்டும் தீட்சிதர்களிடமா?” என்ற தலைப்பில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு பேசினார். “10 ஆண்டுகள் சட்டத்தின் மூலமாகவும் மக்களைத்திரட்டியும் போராடி தில்லைக் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தோம். இப்போது ஜெயா அரசும் சு.சாமியும் சேர்ந்து கொண்டு தில்லைக் கோயிலை கொள்ளையடிக்க மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைக்க சதி செய்து வருகின்றனர். இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒத்துழைக்கத் தயாராகின்றனர்.

தில்லைகோவில் மீது தீட்சிதர்களுக்கு ஒருதுளி கூட உரிமை இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கோவில் எங்களுடையது என்று வாதிடுகின்றனர். சுப்பரமணிய சாமி, ‘தில்லைக் கோவிலில் தமிழில் தேவாரம் பாடக்கூடாது. கோவில்களை அரசு நிர்வகிக்க அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 45-ஐ நீக்க வேண்டும். தீட்சிதர்களுக்கு கோவிலைவிட்டால் பிழைப்புக்கு வேறு வழி இல்லை’ என்று சொல்கிறார். ஆனால் கோயிலில் உண்டியல் வைத்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1 1\2 கோடி வசூலாகியுள்ளது. தீட்சிதர்கள் கோவில் சொத்தைக் கொள்ளையடித்தார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள், சிவில் கிரிமினல் கொலைவழக்கு உட்பட அவர்கள் மீது உள்ளன.

‘கோவில், வழிபாடு என்பது ஆன்மீகவாதிகளின் பிரச்சனை. நாத்திகர்களான நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். பக்தர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்குப் போராட முன் வரவில்லை. பெரிய, பெரிய ஆதீனங்கள் மடாதிபதிகள் முன்வரவில்லை. ஆன்மீகப் பெரியோர்கள் மொழி, இனப்பற்றாளர்கள் முன்வரவில்லை. மொழித் தீண்டாமை, ஆலயத் தீண்டாமை அங்கே கடைபிடிக்கப்படுகிறது. அது தமிழன் மீது சுமத்தப்படுகிற அவமானம். அதை எதிர்த்து ஆன்மீக வாதிகள் போராட முன்வராத போது, அந்த அவமானத்தை துடைத்தெறிகிற வகையில் நாங்கள் போராடவேண்டியுள்ளது.

மதத்தைப் போற்றுகிறவர்கள் போராடினால் எங்களுக்கு அந்த வேலை இல்லையே. நாங்கள் போராடுவதற்கு எண்ணற்ற களங்கள் உள்ளன. அங்கே போய் போராடுவோம். போராடிக் கொண்டிருக்கிறோம். தில்லைக் கோவில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப் படுமானால் தமிழ் மொழி மீதான தமிழன் மீதான அவமானம் தொடரும். அவற்றையெல்லாம் துடைத்தெறியாத வரை எங்களது போராட்டம் ஓயாது” என்று பேசிமுடித்தார்.

கிளையின் துணைத்தலைவர் வழக்குரைஞர் பா.நடராஜன் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !

1

சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி பகுதி தொழிற்சாலைகள் குறித்து வினவு செய்தியாளர்களின் நேரடி ஆய்வு

“50 வருஷம் முன்னேயெல்லாம் நான் சின்ன பையனா இருக்கும் போது இங்க இந்த ஃபேக்டரிங்க எல்லாம் கிடையாது சார். எல்லாம் குடிசை வீடுங்கதான். அப்புறம்தான் ஒவ்வொரு வீடா வாங்கி ஃபேக்டரிங்க கட்டிட்டாங்க. இப்போ எனக்கு 65 வயசாகுது” என்றார் அந்த பெரியவர். அவரிடம் பேச்சு கொடுத்ததும் மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள், பக்கத்து வீட்டுக் காரர்கள் என்று 10-20 பேர் கூடி விட்டார்கள்.

கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை

நாகல்கேணி பகுதி தோல் பதனிடும் நிறுவனங்களுக்கான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை ஒட்டிய குறுகலான சிறு தெருவில் அவர்கள் வசிக்கிறார்கள். வீடுகளின் மறுபுறம் கிங்ஸ் லெதர் தொழிற்சாலை உள்ளது.

“ராத்திரி எல்லாம் உறங்கவே முடியலைப்பா. ஃபேக்டரிக்கு வரக் கூடிய லாரியை எல்லாம் இந்தத் தெரு வழியாத்தான் கொண்டு போறாங்க. மேலே ஒயரை எல்லாம் ஒதுக்கி விடச் சொல்லி சத்தம் போடுவாங்க. பொறுக்க முடியாம வெளியே வந்து கேட்டா, போலீசை கூப்பிட்டு மிரட்டுறாங்க” என்றார் ஒரு வயதான அம்மா.

“இந்தத் தெருவையே நான் கலெக்டர்கிட்டேருந்து விலைக்கு வாங்கிட்டேன், நீங்க என்ன கேக்குறது-ன்னு அடாவடி பேசுறாம்பா அந்த ஃபேக்டரி ஓனரு. அவனும் இங்க சின்ன வீட்டில கொழந்தைங்களோட இருந்தவன்தான். இப்படி நிலத்தை வாங்கிப் போட்டு, ஃபேக்டரி வைச்சு பணம் சம்பாரிச்சிட்டான். போலீசுக்கு பணத்தைக் கொடுத்து எங்களை மிரட்டுறான்” என்றார் இன்னொரு பெண்.

“100 வருஷமா இங்கதான் குடியிருக்கிறோம். யார் கிட்டேயும் பட்டா கிடையாது. பொதுக் கிணத்திலே பைப்பு போட்டு ஃபேக்டரிக்கு தண்ணி எடுத்துக் கிட்டு இருந்தான். நாங்க வெளியே எங்கேயாவது அலைஞ்சுதான் தண்ணீ கொண்டு வரணும். இப்பதான் கவுன்சிலர வைச்சு அந்த குழாயை உடைச்சுப் போட்ட பிறகு நாங்க தண்ணி எடுக்க முடியுது.”

“அந்தத் தண்ணியை குடிக்க எல்லாம் முடியாது. பாலாறு தண்ணிதான் புடிச்சிக்கிறோம். தெருவுக்கு சிமென்டு தளம் போட்டாச்சு, தண்ணி குழாய் போட்டுக் கொடுத்திருக்காங்க, ஆனாலும் நிம்மதியில்லாம மிரட்டுறான் அந்த கம்பெனி ஓனரு. ரவுடிங்களை வைச்சு மிரட்டுறான், நடு ராத்திரில போலீசு காரங்க வந்து கூப்பிட்டுட்டு போறாங்க. பொம்பளைங்களை எல்லாம் வாடி, போடின்னு கேவலமா பேசுறான். என்ன செய்யறதுன்னே தெரியல”.

பித்தளை பானை
காற்று பட்டே நிறம் மாறும் பித்தளை பானை

“எல்லாத்தையும் சமாளிச்சுருவோம் சார், இந்த போலீஸ் தொல்லைதான் தாங்கல. முன்னே எல்லாம் இங்க போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. பல்லாவரம்தான். நாங்க எல்லாம் சேர்ந்ததுதான் பெட்டிசன் போட்டு சங்கர் நகர்ல ஸ்டேஷன் வர வைச்சோம். ஏண்டா அதைச் செய்தோம்னு இருக்கு. எப்பா பார்த்தாலும் வந்து மிரட்டுறானுங்க. அவங்க லட்ச லட்சமா செலவழிச்சு ஃபேக்டரி போட்டிருக்காங்க, நீங்கதான் வேற இடத்தைப் பார்த்து போகணும்னு திட்டுறானுங்க. தலைமுறை தலைமுறையா இருக்கற இந்த இடத்தை விட்டு எங்க போவோம் சொல்லுப்பா” என்கிறார் அந்தப் பெரியவர்.

“ஆரம்பத்தில மாட்டு வண்டியில பொருளுங்க வரும். அப்போ இடம் கொடுத்தோம். இப்போ பெரிய பெரிய லாரில கொண்டு வாராங்க. லாரி போக இடம் போதலைன்னு, வீட்டுக்கு முன்னால வெச்சிருந்த மரங்களையும், தடுப்பையும் புல்டோசர் கொண்டு வந்து புடுங்கி போட்டுட்டானுங்க”.

“கமிஷனர் ஆபீசுக்குப் போய் புகார் கூட எழுதிக் கொடுத்தோம். பார்த்தா, எங்க மேலேயே கொலை மிரட்டல் கேஸ் போட்டிருக்காங்க. எங்க வக்கீல் ஒரு ஆளு இருக்காரு, அவருக்கு காசு கொடுப்பதோட சரி, ஒன்னும் நடக்க மாட்டேங்குது”.

1980-களிலும், 1990-களிலும் தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் அலைகளை ஏற்படுத்திய துறை தோல் துறை. அப்போது புறநகர் பகுதியாக இருந்த பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி (இப்போது பம்மல் நகராட்சி)-யில் நூற்றுக் கணக்கான சிறு, நடுத்தர பட்டறைகளும், பல பெரிய தொழிற்சாலைகளும் உருவாகின. பல நூறு கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டன. சில நூறு தொழில் முனைவர்கள் லட்சாதிபதிகள் ஆனார்கள். இந்தப் பகுதியிலிருந்து பல ஆயிரம் டன் பதப்படுத்தப்பட்ட தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் தூண்டிய வளர்ச்சியில் கொழித்த அந்தப் பகுதியில் எஞ்சியிருக்கும் சில குடும்பத்தினரின் குரல்தான் மேலே கொடுத்திருப்பது. அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்கள், தொழிற்சாலைகளில் பணி புரியும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள், கடந்த சில ஆண்டுகளில் அவர்களை பெருமளவு இடம் மாற்றம் செய்திருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள், ஜாப் வொர்க் செய்து கொடுக்கும் சிறு முதலாளிகள் என்று பல தரப்பட்டவர்களை சந்தித்துப் பேசினோம்.

ஜாப் வொர்க் எடுத்து செய்யும் சிறு நிறுவன முதலாளியிடம் பேசிய போது,

“இந்தத் தொழில 1996 வரை நன்றாகத்தான் இருந்தது. இப்போது முன்பு போல் இல்லை. அப்போ எல்லாம் கிரமத்திலிருந்துதான் தோல் வந்து கொண்டிருந்தது. இப்போ வேறு மாநிலங்களில் இருந்து, வெளி நாடுகளிலிருந்து வருகின்றது. அவற்றை பெரிய டேனரிகள் வாங்கிக் கொள்கின்றன.

வேலைக்கு முன்பு போல் ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில்  கூலி வேலை செய்பவர்கள் கூட தங்கள் குழந்தைகளை கான்வென்டில் படிக்க வைக்கிறார்கள். தோல் வேலை என்பது அழுக்கு நிறைந்த வேலை. எங்களுக்கு இந்திகாரர்கள் தான் கிடைக்கிறார்கள். எங்களை போன்ற ஜாப் எடுத்து செய்பவர்கள் கொடுப்பதை விட டேனரி வைத்திருப்பவர்கள் அதிகமாக சம்பளம் கொடுத்தால் அங்கு சென்றுவிடுகிறார்கள். டேனரியினர் பெரிய அளவில் செய்வதால் அவர்களால் கூடுதல் சம்பளம் கொடுக்க முடிகிறது.

தோல் வேலை என்பது அழுக்கு நிறைந்த வேலை
தோல் வேலை என்பது அழுக்கு நிறைந்த வேலை

இந்தத் தொழிலில் நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். நாங்கள் வாங்கும் காசை விட 10 பைசா குறைவாக வாங்கிக்கொண்டு ஜாபை முடித்துக் கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள்.

தமிழ் ஆட்கள் சோம்பேறிகள், வட இந்திய தொழிலாளர்களைப் போல உழைக்க மாட்டார்கள். இந்தத் தொழில் வடஇந்தியர்களை நம்பிதான் இயங்குகிறது. அவர்கள் இல்லை என்றால் எதுவும் ஓடாது. ஆனா, அவனுங்க இப்பவே ரேசன் அட்டை கேட்க ஆரம்பித்து விட்டானுங்க, இன்னும் போனால் தேர்தலில் கூட நிற்பாங்க. இவங்களால தமிழ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு.“ என்று சிறு முதலாளிகளுக்கே உரிய அரசியலையும் பேசி முடிக்கிறார் அவர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தொழில் நுட்ப பட்டயம் அல்லது பட்டம் முடித்து வருபவர்கள் இது போன்று சிறு முதலாளிகளாகவும், தொழிற்சாலை மேலாளர்களாகவும், தொழில் நுட்ப மேலாளர்களாகவும் வேலை செய்கிறார்கள். அதிக திறன், நீண்ட கால பயிற்சி தேவைப்படும் இயந்திரங்களை இயக்கும் வேலையிலும் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். பெண்கள் எந்திரங்களை இயக்குபவர்களுக்கு உதவியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

எந்திரங்களில் பாதுகாப்பு சாதனங்களை நீக்கி விட்டு வேலை வாங்குவதும் அதனால் நடந்த விபத்துகள் குறித்தும் தொழிலாளர்கள் கூறினார்கள். நாங்கள பார்த்தவர்களில் ஒருவருக்கு ஒரு விரல் இல்லை, ஒருவருக்கு கை விரல் மூட்டுகள் வளைந்து போயிருக்கின்றன, இரசாயனத்தில் வேலை செய்து கைகளில் முடி அனைத்தும் உதிர்ந்து போயிருக்கிறது, இன்னொருவருக்கு கழுத்துப் பகுதியில் தோல் தடித்துப் போயிருக்கிறது.

தோல் வியாதிகள்
தோல் வியாதிகள்

ஒரு விரலை இழந்தால் ரூ 12,000 நிவாரணம் என்றும் நான்கு விரல்கள் போனால் ரூ.48,000 நிவாரணம் என்றும், முழுக்கையையும் இழந்தால் ரூ.1 லட்சம் நட்ட ஈடு என்று ரேட் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். அதையும் பெறுவதற்கு அலைய வேண்டியிருக்கிறது என்கிறார் அந்தத் தொழிலாளி.

உடல் உறுப்புகள் இழந்தவர்கள் மாற்று வேலை கேட்டு போராடினால் கிடைப்பது அரிது என்கிறார்கள். கிடைக்கிற தொகையை வாங்கிக் கொண்டு போய் விட வேண்டியதுதான்.

தமது வாழ்நிலைகளை மேம்படுத்த போராடுவது சாத்தியமில்லை. முதலாளிகளை யாரும் எதிர்க்க முடியாது. யாராவது எதிர்க்க முயற்சித்தால் அவர்களையும் காசு கொடுத்து அமைதியாக்கிவிடுவார்கள் என்று தொழிலாளர்கள் கருதுகின்றனர். சில தொழிற்சாலைகளில் பெயர் பலகைகள் வைத்திருக்கும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சந்தா வசூலிக்கும் சங்கமாக பெயரளவில் கூட செயல்படவில்லை.

ப்போது இங்கு சுமார் 250 தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

டேனரி எனப்படும் பெரிய தொழிற்சாலைகளில் அனைத்து வகையான இயந்திரங்களும் இருக்கின்றன. ஒரு wet blue தோல் உள்ளே சென்றால் தேவைப்படும் அனைத்து வகையான இரசாயன மற்றும் எந்திர செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தோல் பொருள் செய்யத் தயாரான நிலையில் தோல் வெளியில் வருகிறது. ஓரிரு அல்லது ஒரு சில எந்திரங்களை வைத்து ஜாப் வொர்க் செய்து கொடுக்கும் சிறு பட்டறைகள் சிறிய இடத்தில் 5-10 பேரை வைத்து செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி நிகழ்முறையின் ஒரு பகுதியை மட்டும் செய்து அடுத்தவருக்கு கைமாற்றி விடுகின்றன. இதுபோன்று சிறு பகுதிகள் பல்வேறு சிறு பட்டறைகளில் செய்யப்படுகின்றன.

இது போன்று காலணி செய்யும் நிறுவனங்களில், காலணியின் மேற்பாகத்தை (அப்பர்) மட்டும் செய்து ஏற்றுமதி செய்கின்றன. ஷூவின் அடிப்பகுதியும் நடுப்பகுதியும் இன்னொரு நாட்டில் இணைக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளின் சந்தைகளின் விற்கப்படுகின்றன.

ந்தப் பகுதியில் சுமார் 15,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதில் 10,000 பேர் வட இந்தியத் தொழிலாளர்கள்.

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 150-180 வரை சம்பளம் தரப்படுகிறது, மாதச் சம்பளமாக ரூ 5,000-முதல் ரூ 5,500 வரை கிடைக்கிறது. இது போக ஓவர்டைம் பார்த்து ரூ 9,000-முதல் 10,000 வரை சம்பாதித்து விடுகிறார்களாம்.

வேதிப் பொருட்கள்
பெட்டிக் கடைகள் போல விற்கப்படும் கெமிக்கல்கள்

”நம்ம ஊரு ஆளுங்க 8 மணி நேரம்தான் வேலை பார்ப்பேன்னு நிப்பானுங்க. இந்திக்காரனுங்க நம்ம ஆட்கள் போல சோம்பேறிகள் இல்லை. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கூட வேலை செய்வானுங்க. தோல் பதனிடும் டிரம் ஓடும் போது, நடுவில் ஓரிரு மணி நேரம் தூங்கி எழுந்து விட்டு தொடர்ந்து வேலை செய்வார்கள். அந்த 2 மணி நேரத்தை நாங்க கண்டு கொள்வதில்லை” என ஒரு சூப்பர்வைசர் பெருமையாக கூறினார்.

“அதற்கான ஓவர்டைம் கொடுத்து விடுகிறோம். ஓவர் டைம் என்றால் 1.5 மடங்கு, 2 மடங்கு எல்லாம் இல்லை. மாதச் சம்பளத்தை 30 (நாட்கள்) ஆல் வகுத்து, அதை 8 (மணி நேரம்) ஆல் வகுத்து ஒரு மணி நேரத்துக்கு கணக்கிட்டு கொடுத்து விடுவோம். தேவைப்படும் போது அவங்க கிட்ட நானே கடன் வாங்கும் அளவுக்கு சம்பாதிக்கிறாங்க. மாதம் ரூ 12,000 வரை சம்பாதிப்பவர்களும் உண்டு” என்றார். ரூ 5,400 அடிப்படை சம்பளத்திற்கு மேல் கூடுதலாக வேலை செய்து ரூ 12,000 சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு சராசரியாக 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அப்படிச் செய்வதை வட மாநிலத் தொழிலாளர்கள் பெரும் வாய்ப்பாக கருதுகிறார்கள்.

“ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற இடங்களில் தமிழ்நாடு போல தொழிற்சாலைகள் இல்லை. அதனால் குடும்பங்களை அங்கே விட்டு விட்டு இங்கு வேலைக்கு வருகிறோம். செலவுகள் போக மாதம் ரூ 7,000 வரை வீட்டிற்கு அனுப்ப முடியும்.”

“குடும்பத்தை இங்கு அழைத்து வருவதெல்லாம் முடியாது. ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றாலே ரூ 20,000 30,000 முன்பணம் கேட்கிறாங்க. அது இருந்தால் நாங்கள் ஏன் இங்கே வந்து வேலை செய்கிறோம்” என்று நிதர்சனத்தைப் பேசுகிறார் ஜார்கண்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளி. இங்கு நான்கைந்து பேர் அல்லது 10-20 பேர் ஒரே அறையில், தொழிற்சாலைக்குள்ளேயே தங்கிக் கொள்ள முடியும். அவரது அப்பா பெங்களூருவில் வேலை செய்கிறாராம், அண்ணன் கொல்கத்தாவில் வேலை செய்கிறாராம். அவரது அம்மா, மனைவி மற்றும் குடும்பத்தினர் ஊரில் கிராமத்தில் இருக்கிறார்கள்.

சுற்றுச் சூழல் மாசு
தோலிலிருந்தும், கழிவு நீரிலிருந்தும், இரசாயனங்களிலிருந்தும் வரும் கடுமையான துர்நாற்றம்.

பி.எஃப், ஈஎஸ்ஐ போன்ற வசதிகளை அவர்களும் கேட்பதில்லை, முதலாளிகளும் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்குப் போகும் போதோ, ஏதாவது மருத்துவ அவசரத்துக்கோ முதலாளி ‘கருணை’யுடன் ஏதேனும் கொடுப்பார். “எங்கள் முதலாளி வட இந்திய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை 20 நாட்கள் ஊருக்குப் போக அனுமதிக்கிறார். அந்த 20 நாளுக்கும் சம்பளத்தையும் பிடிப்பதில்லை.” என்கிறார் ஒருவர்.

ஜாப் வொர்க் செய்யும் சிறு பட்டறைகளில் 12-முதல் 15 வயதுக்கு மேல் மதிக்க முடியாத  சிறுவர்களும் வேலை செயவதை பார்க்க முடிந்தது.

ந்தப் பகுதி மக்களும், ஒரு தலைமுறை இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்களின் குழந்தைகளும் தோல் நிறுவனங்களில் வேலைக்கு போவதில்லை. “நம்ம கஷ்டம் நம்மோடு போகட்டும்” என்று வெளியிடங்களுக்கு வேலைக்குப் போகிறார்கள்.

பகுதி முழுவதிலும் தோலிலிருந்தும், கழிவு நீரிலிருந்தும், இரசாயனங்களிலிருந்தும் வரும் கடுமையான துர்நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. ஆண் தொழிலாளர்களில் பலருக்கு குடிப் பழக்கம் இருக்கிறது. பெண்களுக்கு பான்பராக், குட்கா, ஹன்ஸ் போடும் பழக்கம் இருக்கிறது.

பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சு திணறல், தோல் வியாதிகள் அதிகமாக வருகின்றன. தொடர்ந்து இந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அது பழகி விடுகிறது, ஆனால புதிதாக வருபவர்களில் பலர் ஒரு சில வாரங்களிலேயே தாங்க முடியாமல் இடத்தை விட்டு போய் விடுவதாக கூறினார் ஒருவர். தீராத நோய்களுக்கு டாக்டரிடம் போனால், இந்தப் பகுதியை விட்டு போவதுதான் தீர்வு என்று பரிந்துரைக்கிறாராம்.

நிலத்தடி நீர் முழுவதுமாக கெட்டுவிட்டது. பித்தளை பாத்திரங்கள் கழுவி 2 மணி நேரத்திற்குள்ளாக அது அடர் பச்சை நிறமாக மாறிவிடுகிறது என்று பானையை காட்டினார்கள். பெண்கள் காலில் போடும் வெள்ளிக் கொலுசு சில நாட்களில் கருத்து விடுகிறதாம். உடல் நலக் குறைவால் மருத்துவரிடம் சென்றால் அந்தப் பகுதியில் வசிக்காதீர்கள் என்று மருத்துவர் கூறுகிறாராம். தொழிற்சாலையை ஒட்டிய பகுதிகளில் இயந்திரங்களின் அதிர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

1990-களின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியாகும் வடிநீர் அனகாபுத்தூர் அருகில் அடையாறு ஆற்றில் கலக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் தோல், மற்றும் தோல் பொருட்களில் பெரும்பகுதி மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து கூட பச்சைத் தோலை இறக்குமதி செய்து, இங்கு தோலாக பதனிட்டு, கழிவுகளை நமக்கு பரிசாக கொடுத்து விட்டு, நமது தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி தோல் பொருட்களை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்பி லாபம் சம்பாதிக்கின்றனர் தோல் துறை முதலாளிகள். அவர்கள் சில பத்து டாலர் விலைகளில் விற்கும் பொருட்களுக்கு பல நூறு அல்லது சில ஆயிரம் டாலர்கள் வரை விலை வைத்து விற்று லாபம் ஈட்டுகின்றனர் மேற்கத்திய முதலாளிகள்.

அன்னியச் செலாவணி ஈட்டுவதற்காக நம் நிலத்தையும், நீரையும் பாழ்படுத்தி, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து வருகிறது இந்த ஏற்றுமதி சார்ந்த தொழில். இதன் விளைவுகளை நாகல் கேணியில் மட்டுமின்றி ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் மக்கள் எதிர் கொண்டு வருகிறார்கள்.

–    வினவு செய்தியாளர்கள்