Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 822

இது காதலா, கள்ளக்காதலா?

61

தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.

அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா? விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை உறவு எந்த அளவுக்கு கசக்கிறதோ அந்த அளவுக்கு கள்ள உறவு வாசகருக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. கூடவே ஒரு ஆணின் தடையற்ற பாலுறவுப் பசி அல்லது வெறி இந்தச் செய்தியினூடாக வெளிப்படுகிறது. இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கள்ளகாதல் என்பது கணநேர மகிழ்ச்சி. இறுதியில் கொலையில் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்படுகிறது.

இதுவும் செப்டம்பர் 24 இல் நக்கீரனில் வெளிவந்த ஒரு செய்திதான். சேலம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் தனது கணவன் ஆறுமுகத்தைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விடுகிறாள்.

இதைப்பற்றி ஊர் என்ன சொல்கிறது? ” அவளுக்கு 38 வயசுனு சொன்னா யாராலும் நம்ப முடியாது. வயசுப் பொண்ணு போலத்தான் வாளிப்பா போவா, வருவா. அவளோட சுண்டியிழுக்கிற கண்ணுக்கு சொக்கிப் போய் சுத்துற பசங்க…. 18 வயசுலயும் கூட இருக்கானுங்கன்னா பார்த்துக்கங்களேன். இவ்ளோ அழகிருந்து என்ன பிரயசோனம்? புருஷன் மகா குடிகாரன். அதுவே ஆறுமுகத்தோட உயிரை எடுத்துடுச்சி. இப்ப இவளையும் போலீசு பிடிச்சுட்டு போயிடுச்சி”.

38 வயதில் மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் பொன்னம்மாள் மினுக்கியவாறு இருந்ததை ஊர் வெளிப்படையாக ரசிக்கவில்லை. ஒரு கிராமத்துப் பெண் அழகிப்போட்டிக்கு தேவையான ஒப்பனை எதுவும் செய்வதில்லை. இருப்பினும் அவளது சாதாரண அலங்காரமும் அழகும் ஊரின் கண்களை சுண்டி இழுக்கிறது. ஒரு பெண் நடத்தை சரியில்லை என்பதைத் தெரிவிப்பதற்கு ஊர் பயன்படுத்தும் முதல் வாதம் அவள் அழகாக சிங்காரித்துக் கொள்கிறாள் என்பதுதான். மேலும் அந்த அழகை ‘ஊர்’ உள்ளுக்குள் இரசிப்பதும், வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்வதும், முடியாத போது புரணி பேசி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்வதும் வழக்கம்.

பொன்னம்மாளைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் உத்ரபதியின் வாக்குமூலம் இது: “என் புருஷன் குடிச்சுட்டு வந்து தானே கழுத்தைத் துண்டால் இறுக்கி தற்கொலை பண்ணிக்கிட்டாருனு சொல்லி அழுதாள். எங்களுக்கு இது சந்தேகம் தர விசாரிச்சப்போதான் நாராயணனோட இருந்த கள்ளக் காதல் உறவு தெரிய வந்தது. இவளுக்கு மகன் ஒண்ணு, மகள் ஒண்ணு இருந்து இருவருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சப்புறமும் இவள் கள்ளக்காதலை விடலை. இதை அவள் புருஷன் தட்டிக்கேட்கவும் கொன்னுருக்காள்”.

போலீசுக்கு வழக்கு முடிந்த நிம்மதி. குற்றவாளியைக் கண்டுபிடித்து, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குப் போட்டு தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்களின் பணிப் பதிவேட்டில் மதிப்புப்புள்ளிகள் ஏறும். பதவி உயர்வுக்குப் பயன்படும். மற்றபடி ஒரு பெண்ணின் வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அடக்குமுறை எந்திரங்களின் ஈரமற்ற இதயங்களில் உயிருள்ள வாழ்க்கையின் வலியும், அது தோற்றுவிக்கும் அவலமும் கடுகளவு கூட இறங்குவதில்லை.

நெடுங்காலம் தன்னை சித்திரவதை செய்த பிரச்சனையிலிருந்து விடுதலையையும் ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதறியாத இறுக்கமும் கலந்த வெளிறிப் போன முகத்துடனும் காவல் நிலையத்தில் இருக்கும் பொன்னம்மாள் தனது கருத்தை நிருபரிடம் கூறுகிறாள்.

அவளது முதல் கேள்வியே ” ஊரே கள்ளக்காதல்னு சொல்லி திட்டுறாங்க. காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா? ”
பதினைந்து வயதில் ஆறுமுகத்தை திருமணம் செய்த பொன்னம்மாவுக்கு இன்று ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. முப்பத்தி எட்டு வயதில் பாட்டி ஸ்தானத்தை அடைந்து வட்ட பொன்னம்மா இத்தனையாண்டுகளாக தனது குடிகார கணவனால் தினமும் கொடுமைகளேயே சந்தித்திருக்கிறாள். மரம் ஏறி பிழைக்கும் ஆறுமுகம் 50 ரூபாய் கிடைத்தாலும், 500 ரூபாய் கிடைத்தாலும் குடித்தே அழித்து விடுவான். குடித்து விட்டு வீட்டுக்குவரும் அவன் பொன்னம்மாளை நிர்வாணமாக்கி கண்ட இடங்களில் அடிப்பதும், மிருகம் போல வல்லுறவு வைத்துக்கொள்வதும் தினசரி வாடிக்கை. பேரன், பேத்தி எடுத்த பிறகும் இந்தக் கொடுமை தொடர்ந்தது. இந்த விஷச்சூழலில் மாட்டிக்கொண்ட பொன்னம்மா அன்புக்கும், பாசமான தாம்பத்திய உறவுக்கும் ஏங்கினாள். வயது குறைந்தவளென்றாலும், மற்ற ஆண்கள் பார்வையை வசீகரிக்கும் அழகுள்ளவள் என்றாலும் நெடுங்காலம் ஒழுக்கமாகத்தான் வாழ்ந்து வந்தாள்.

ஆறுமுகத்தின் தொடர் சித்திரவதை இந்த ஒழுக்கவேலியை தாண்டுமாறு தூண்டியது. தற்செயலாக நாராயணன் என்பவனது நட்பு கிடைத்தது. அவனுக்கும் குடும்ப வாழ்வில் நிம்மதியில்லை என்பதால் இந்த நட்பு பரஸ்பரம் தங்களது துன்பத்தை பரிமாறிக் கொண்டு தேவையான இன்பத்தையும் பகிர்ந்து கொண்டது. இளம்வயதில் தாயாகி, பாட்டியாகி, கணவனின் வெறிக்கும், அடிக்கும் வாக்கப்பட்ட பொன்னம்மாள் இந்தக் ‘கள்ள’ உறவில்தான் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டிருக்கிறாள். நீண்ட காலம் புரையோடிப் போயிருந்த புண்ணுக்கு அது மருந்து. திருட்டுத்தனமான மருந்தென்றாலும் ஆறுதலைத் தரும் மருந்து.

ஒரு நேரம் நாராயணனுடன் ஓடிப்போகலாம் என்று திட்டமிட்டு இருபது நாட்கள் அசலூரில் வாழ்ந்தாள். இருப்பினும் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை மனதில் கொண்டு இனி ஒழுக்கமாக வாழ்வோமென ஊருக்குத் திரும்பினாள். எல்லா சுகமும் இருபது நாட்களோடு போகட்டுமென முடிவெடுத்து வாழத் துவங்கினாள். ஆனால் ஆறுமுகம் திருந்துவதாயில்லை. பிள்ளைகள், மருகப்பிள்ளைகள் முன்பே அவளை அடிப்பதும், உறவுக்கு அழைப்பதும் என வாடிக்கையை தொடர்ந்தான். பொன்னம்மாளின் கள்ள உறவைப் பற்றி ஊர் பேசத்துவங்கியதும் ஆறுமுகத்தின் கொடுமைகள் அதிகரித்தன. தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியெல்லாம் ஆறுமுகத்திடம் ஏற்படவில்லை. அவனைப் பொறுத்தவரை அடிப்பதற்கு ஒரு முகாந்திரம் கூடுதலாகக் கிடைத்தது அவ்வளவுதான். பொன்னம்மாளும் தனது கணவனுக்கு தெரிந்து விட்டது குறித்து கவலை கொள்ளவில்லை. அன்புக்குப் பதில் வன்மத்தையும், வெறுப்பையும் கொட்டி வந்த அவனை அவள் எப்போதோ தன் மனதிலிருந்து அகற்றிவிட்டாள்.

“போன செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியிருக்கும். குடிச்சிபுட்டு வாயை பொளந்து தூங்கிக்கிட்டு இருக்கான். எனக்கும் தூக்கம் வராம அவனையே வெறிச்சி பார்த்தேன். ஏதோ வெறி வந்துடுச்சு. மெல்ல கட்டிலருகே போயி அவன் கழுத்துல இருக்கிற துண்டை இறுக்கினேன். துடியா துடிச்சான். அவன் என்னை படுத்துன கொடுமைக்கு முன்னாடி அவன் துடிப்பு பெரிசா தெரியலை. ரெண்டு கையாலேயே இறுக்கி கொன்னேன். என் இத்தனை வருஷ தாகம் நாராயணனோட சேர்ந்தப்ப தீர்ந்தது. இத்தனை வருட வெறி ஆறுமுகத்தோட கழுத்தை இறுக்கி கொன்னப்போ தீர்ந்தது. 23 வருஷ சிறையில இருந்து மீண்டுட்டேன். இனி தனியா படுத்தாலும் நிம்மதியா படுப்பேன்” நிம்மதிப் பெருமூச்சோடு நிருபரிடம் பகிர்ந்து கொண்ட பொன்னம்மா சிறைச்சாலை நோக்கி பயணமாவதற்குக் காத்திருக்கிறாள்.

நடந்த கொலையை அவளே ஒத்துக்கொண்டிருப்பதால் வழக்கு விசாரணை வேகமாக நடந்து அவளுக்கு அநேகமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். அப்படி விதிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து வருடம் சிறையில் இருக்கவேண்டும். 53 வயதில் விடுதலையடைவாள்.

ஆறுமுகத்தை பொன்னம்மாள் கொலை செய்தாளா, அல்லது தண்டனை கொடுத்தாளா? பொன்னம்மாள் இப்போது விடுதலை அடைந்து விட்டாளா, அல்லது சிறைக்கு செல்கிறாளா? இப்போது அவளுக்கு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதா, அல்லது தொடங்க்கப் போகிறதா? இறுதியாக…. இது காதலா, கள்ளக்காதலா?

 

 

ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !

62

எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன்றாடம் பல கொலைகளும், விபத்து மரணங்களும், இயற்கைச் சாவுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா வழியிலும் மரணம் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுத் தருணங்கள் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. வாழ்வைப் பற்றியே நினைக்க நேரமில்லாத போது சாவைப் பற்றி நினைக்க முகாந்திரமேது?

என்றாலும் இந்தச்சாவு ஒரு கணம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேரங்காடிகளும், சங்கிலித் தொடர் கடைகளும் முளை விட்ட நேரம். சிறுவணிகத்தை பெருவணிகம் முந்திச் சென்ற காலம். பெருகிவரும் நடுத்தர வர்க்கத்தின் முன்னேற்றத்தின் அளவுகோலாக சூப்பர் மார்க்கெட்டுகள் உதிக்கத் தொடங்கியிருந்தன. காய்கறிக் கடைகளும் பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் நகரெங்கிலும் சற்றே பிரம்மாண்டமாய் கடைவிரித்த நேரம். புறநகர் பகுதி ஒன்றில் புதிதாகத் துவங்கப்பட்ட அந்த காய்கனி அங்காடியில் வாரம் ஒரு முறையாவது காய்கள் வாங்கச் செல்வது உண்டு.

சிறு கடைகளில்தான் காய்கள் வாங்குவது பழக்கம் என்றாலும் தக்காளி, வெங்காயம், உருளை மட்டும் அந்தக் கடையில் வாங்குவது பழக்கமானது. இந்த மூன்று காய்கள்தான் பல இளைஞர்களைப் போல எங்களுக்கும் தேசிய உணவாக இருந்தது. பேச்சுலராக வாழ்வைக் கழிக்கும் நேரத்தில் சமையல் என்பது சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பமாக ஆவதும் உண்டு. எனினும் நாடாறு மாதம் காடாறு மாதம் போல உணவு விடுதி, பிறகு சலிக்கும் போது சமையல். நண்பர்கள் மத்தியில் என் கையே மணக்கும் என்று சபிக்கப்பட்டிருப்பதால் காய்கள் வாங்குவதும் எனக்கிடப்பட்ட பணியானது.

சுமார் ஆயிரம் சதுர அடியில் இருக்கும் அந்தக் கடையை தென் மாவட்டத்து அண்ணாச்சி ஒருவர் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் பத்து விடலைச்சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். மூன்று மணிக்கு கோயம்பேடு சென்று மூன்று சக்கர வாகனத்தில் மூட்டைகளை கொண்டு வந்து தரம்பிரித்து அடுக்கி, பழையதன் கழிவைக் கொட்டி, விலைப் பட்டியல் எழுதி அட்டையில் தொங்கவிட்டு, காலை ஆறு மணிக்கு கடையைத் திறந்து இரவு பதினொன்றுக்கு மூடி…. என்று நிற்காத தொடர் வண்டி போல ஒடும் அந்த வாழ்க்கையைப் பார்க்கும் போது மனது வலிக்கும். அண்ணாச்சியிடமும், அந்தச் சிறுவர்களிடமும் அவர்களின் காய்கனிச் சிறைவாழ்க்கையை கலகலப்பாக ஆக்கும் பொருட்டு பேசுவது உண்டு. தூங்கி வழியும் அந்தச் சிறுவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை விசாரிக்கும்போது மட்டும் ஒரு கணம் மின்னுவார்கள்.

2007 இல் அந்தப் பகுதிக்கு திடீரென்று வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் பிரஷ். அறிமுகச் சலுகை, உறுப்பினர் சேர்க்கை, தள்ளுபடி விலை என்று தினந்தோறும் அறிவிக்கப்பட்ட மோடிமஸ்தான் வேலையால் சுற்றுப்புற பலசரக்குக் கடைகள் தள்ளாடத் துவங்கின. நமது அண்ணாச்சி அதற்கு முன்பு வரை தினமும் ரூபாய் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை கல்லா கட்டியவர்; இப்போது ஐந்தாயிரமாய் சுருங்கிப் போனார்.

ஆரம்பத்தில் ரிலையன்ஸ் அப்படி ஒன்றும் நம்மை அசைத்து விடாது என அப்பாவியாய் நம்பினார். மெல்ல மெல்ல சிறுவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்து போனது. தினசரி விற்பனை இரண்டாயிரம் ரூபாயாக சரிந்தது. பிறகு, வேலையாளின் சம்பளத்தையாவது மிச்சப்படுத்துவோம் என்று தனது குடும்பம் முழுவதையும் கடையில் இறக்கினார் அண்ணாச்சி. இருப்பினும் நான்கு மாதத்திற்கு மேல் அந்தக் கடையின் மரணத்தை ஒத்திப் போடமுடியவில்லை.

ரிலையன்ஸின் சுற்றுவட்டாரத்தில் இப்படி சில ஜீவராசிகள் வாழ்வை இழப்பது பற்றி கட்சி மாறிய நடுத்தர வர்க்கத்திற்கு அக்கறைப் படவில்லை. கேட்டால் ‘அண்ணாச்சி கடையில் ஐம்பது காசு அதிகம்’ என்று அம்பானியின் பிரச்சார பீரங்கிகளாக பேசினார்கள்.

அண்ணாச்சி கடையில் கார்பென்டர் வேலை நடந்து கொண்டிருந்த்து. எனக்கு ஆச்சரியம்! விசாரித்தேன். கடையை ரிலையன்சு போல அலங்காரமாய் புதுப்பிக்கப் போவதாகச் சொன்னார்கள். புதுப்பிப்பவர் பழைய அண்ணாச்சி இல்லை. கடையை விற்று விட்டு அண்ணாச்சி காற்றில் கரைந்து விட்டார். தூக்கம் கலந்த விழிகளுடன் வேலை செய்த அந்தப் பழைய சிறுவர்களை நினைத்துப் பார்த்தேன். சுனாமியில் தொலைந்து போனவர்களை நினைவில் தானே துழாவ முடியும்!

பிறகு சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கடை ரிலையன்சு போல குளிர்சாதன வசதியுடன், சீருடை அணிந்த பணியாளர்களுடன், கணக்குப் போடும் கணினியுடன், கடையின் பெயர் அச்சிடப்பட்ட நாகரீகப் பைகளுடன் மொத்தத்தில் அழகாகத்தான் திறக்கப்பட்டது. இப்போது யாரென்று விசாரிக்கையில் கடை உரிமையாளர் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்று சொன்னார்கள். ஏதோ ஒரு பழமுதிர்ச்சோலையில் எட்டாயிரம் சம்பளத்தில் மேலாளராக பணியாற்றியவராம். அங்கே தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாய் ஒரு கடை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் சில இலட்சங்களை கடன் வாங்கி இந்தக் கடையை அணுஅணுவாய் அலங்கரித்து திறந்திருக்கிறார். அவருக்கு ஒரு 27 வயது இருக்கலாம். அப்பொதுதான் அவருக்கு திருமணமும் ஆகியிருந்தது. காதல் திருமணம். காதலில் வெற்றி பெற்ற கையோடு சுய தொழிலிலும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரது கண்களில் மின்னியது. சில நேரம் அவரது மனைவியும் கடையில் பில் போடும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

ரிலையன்சு வந்ததும் அருகாமையில் உள்ள சிறு கடைகளிலேயே எல்லாவற்றையும் வாங்குவதாக முடிவெடுத்து விட்டதால் அந்த கடைக்கு செல்வதில்லை. சமயத்தில் ஒரு நண்பர் அந்த கடைக்கு அழைத்துச் சென்று சாத்துக்குடி பழச்சாறு வாங்கித்தருவார். சாதாரணமாக மற்ற கடைகளில் அதன் விலை 20 ரூபாய். இங்கு மட்டும் அதன் விலை ரூ.10.. வாடிக்கையாளரை ஈர்ப்பதற்க்காக இந்த விலைக் குறைப்பு. ‘நீர் சேர்க்காமல் பழச்சாறை மட்டும் கொடு’ என்று கடை சிப்பந்தியை அந்த இளைஞர் நிர்ப்பந்திப்பதை சிலநேரம் பார்த்திருக்கிறேன். சில சமயம் சுறுசுறுப்பாக வாயிலில் நின்று கொண்டு வரும் மக்களை அவர் கவனிப்பதையும் கண்டிருக்கிறேன்.

இருப்பினும் ரிலையன்சை எதிர்த்து இவர் மட்டும் எப்படி தாக்குப் பிடிக்க முடியும் என்று நானும் நண்பரும் விவாதிப்பதுண்டு. இதை அந்த நாமக்கல் இளைஞரிடம் பேச விருப்பமிருந்தாலும் தயக்கமிருந்தது. அபசகுனமாக பேசுகிறார்களே என்று அவர் நினைத்து விடக்கூடுமல்லவா! ஏதோ கொஞ்சநாளைக்கு மலிவு விலையில் பழச்சாறை குடிக்க வாய்ப்பிருக்கிறது என்று நண்பருடன் தமாசாகப் பேசிவிட்டு அகன்று விடுவோம். கடையில் காய்கறிகளும் மிக மலிவாகவே விற்கப்பட்டது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுண்டு. இது எப்படி சாத்தியம், ஏதாவது வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இப்படி முதலீடு செய்து செலவழிக்கிறாரா என்றெல்லாம் எங்களுக்குள் விவாதிப்பது உண்டு.

உண்மையில் அவர் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதெல்லாம் அப்போது தெரியாது. மேலும் வாடிக்கையாளரைக் கவர மூன்று சதவீதம் மட்டும் இலாபம் வைத்து காய்கறிகளை விற்று வந்தததையும் நாங்கள் அறியவில்லை. இந்த இலாப விகிதத்தில் எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்பதோடு, இப்படி தொழில் நடத்தினால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இடையில் 2008இல் ரிலையன்சு கடை இரண்டாவது கிளையையும் இப்பகுதியில் திறந்து விட்டது. இரு வல்லூறுகளுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு எத்தனை நாள் தப்பிக்க முடியும்? என்னதான் நவநாகரீகமாக கடை நடத்தினாலும் நட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. கடை திறந்து நான்காவது மாதத்திலேயே காய்கள் வாடத்துவங்கின. கைமாற்றுப் பணமில்லாத காரணத்தால் புதிய காய்கறிகள் அடிக்கடி வரவில்லை. கூட்டமும் குறையத் தொடங்கியது.

இதற்குள் அவர் மாதத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் நட்டமடைந்திருந்தார். மொத்தம் ஐந்து இலட்சம் கடனாகிவிட்டது. வழக்கமாக கோயம்பேடில் சில்லறை வியாபாரிகள் கடனுக்கு காய் வாங்கி அடுத்த நாள் மொத்த வியாபாரிகளுக்குப் பணம் கட்டுவார்கள். இந்த முறையையும் அந்த நாமக்கல் இளைஞர் பின்பற்ற முடியவில்லை. கைப்புழக்கத்திற்குக் கூட பணமில்லாத நிலையில் ஒரு இலட்ச ரூபாயை கடன்பெற முயற்சித்திருக்கிறார். கிடைக்க வில்லை. கோயம்பேட்டிலும் மொத்த வியாபாரிகள் கடனுக்கு காய் வழங்க மறுத்து விட்டனர். 25,000 கோடி முதலீட்டுடன் இந்திய சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஐந்து இலட்சத்தை வைத்துக் கொண்டு ஒரு நாமக்கல் இளைஞர் எதிர் கொள்ள முடியுமா என்ன? எல்லா இடத்திலும் கடன் கேட்டும் கிடைக்காமல் வீட்டுக்கு வந்த அந்த இளைஞர் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது மனைவிக்கு என்ன ஆகியிருக்கும்? வழக்கம் போலத ‘தெரியவில்லை’ என்பதுதான் விடை.

இப்போது அதே கடையை வேறொரு அண்ணாச்சி – ஏற்கனவே சில கிளைகளை வைத்திருப்பவர் – வாங்கி அதே பெயரில் நடத்துகிறார். அவர்தான் நேற்று இந்த விவரங்களைச் சொன்னார். இவரும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் என்பதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. யோசிப்பதை அவரிடம் பேசவும் முடியவில்லை.

அதே கடை. அதே பெயர். அண்ணாச்சிகள் மட்டும் மாறியபடி இருக்கிறார்கள். உயிர்களைக் குடித்துத் தாகம் அடங்காத பலிபீடம் போல என்னை அச்சுறுத்துகிறது அந்தக் கடை. அந்தக் கடைப் பக்கம் செல்லும்போதெல்லாம் தூக்கில் தொங்கிய அந்த இளைஞனின் நம்பிக்கை ஒளிரும் கண்களும், கணவனுக்குத் துணைநின்ற அந்தக் காதல் மனைவியின் முகமும் கொஞ்சம் தடுமாற வைக்கின்றன. விலை மலிவு என்பதற்காக பத்து ரூபாய் பழச்சாறைக் குடித்த குற்ற உணர்விலிருந்து என்னால் இன்னமும் விடுபட முடியவில்லை.
…………………………………………………………………………………………………………………….
குற்ற உணர்வு கொள்ளாத இலக்கிய மனத்தை அறிந்து கொள்ள…

கேழ்வரகில் வடிகிறது நெய் ! கருத்துரிமைக்காகப் போராடுகிறது காலச்சுவடு !!

5

குடிமைச் சமூகத்திற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகிவரும் சூழலில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விவாதத்தை உருவாக்கவும் – கருத்துரிமையும் வாழ்வுரிமையும் – என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்றினை 14.06.08 அன்று சென்னையில் நடத்தியது காலச்சுவடு” – இது காலச்சுவடில் வெளிவந்த விளம்பரம். இக்கருத்தரங்கில் தியாகு, கிருஷ்ணானந்த், சதானந்த மேனன், பேராசிரியர் கல்யாணி, இன்குலாப், பா.செயப்பிரகாசம், இராசேந்திர சோழன், ஒவியா, அனிருத்தன் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

திடீரென்று கருத்துரிமையின் பால் காலச்சுவடுக்கு காதல் வந்த மர்மம் என்ன? 2003ஆம் ஆண்டிலிருந்து நூலகத்துறை சிறு அளவில் காலச்சுவடை வாங்கிவந்ததாம். 2006 ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க ஆட்சியேற்ற பின் 1500 பிரதிகள் வாங்கப்பட்டனவாம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒரு வாய்மொழி உத்தரவின் மூலம் காலச்சுவடு வாங்குவது நிறுத்தப்பட்டதாம். உடனே கருத்துரிமைக்கு ஆபத்து வந்து விட்டதென களத்தில் இறங்கிவி்ட்டது காலச்சுவடு.
நூலகத்துறை வாங்கியபோது சுமார் ஏழாயிரம் பிரதிகள் அச்சடித்த காலச்சுவடு தற்போது ஐந்தாயிரம் பிரதிகள் மட்டும் வெளியிடுகிறார்கள் என்று கருதுகிறோம். இதழ் வாங்குவது நிறுத்தப்பட்டதால் ஏதோ தமிழகத்திற்கு மாபெரும் ஆபத்து வந்துவிட்டதாகக் காலச்சுவடு பதறுகிறது. அந்தப் பதற்றத்தில் கருத்துரிமைக்கு கல்லறை கட்டப்பட்டதாக எண்ணுவதை என்னவென்று சொல்ல? தமிழகத்தின் பண்பாடு, கல்வி, அறிவு அத்தனைக்கும் தான்தான் அத்தாரிட்டி என்று ஒரு ஆதீனத்தின் மனநிலையில் காலச்சுவடு இருப்பதுதான் இந்தப் பதற்றத்திற்கு காரணம்.

நூலகத்துறை வாங்கி நிறுத்திய விவகாரத்தை ” காலச்சுவடுக்குத் தடை” என்ற சொல்லாடல் மூலமாக ஒரு மாபெரும் போராட்டமாகக் காலச்சுவடு முன்னெடுத்திருக்கிறது. இதற்காக பல இந்திய எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், த.மு.எ.ச, க.இ.பெ.மன்றம் என அனைவரும் காலச்சுவடுக்காக பரிந்துபேசி கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்கள் அனைத்தும் “கருத்து” அமைப்பின் கார்த்தி சிதம்பரம், கனிமொழிக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாம். நியாயமாக இந்த கடித வினைகள் நூலகத்துறை சார்ந்த அமைச்சருக்குத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். கருத்து அமைப்பிற்கு அனுப்பவேண்டிய காரணமென்ன? உங்களக்கோ, எனக்கோ ஒரு பிரச்சினை என்றால் போலீசில் புகார் கொடுப்போம், அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம். இதைவிடுத்து தமிழகத்தின் மனித உரிமை மீறல்களுக்கு யாரும் கருத்து அமைப்பிடம் செல்வதில்லை. அது மேட்டுக்குடியின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட வெற்று மனிதாபிமான அமைப்பு. கருத்துரிமைக்காக அது எதையும் பிடுங்கியதில்லை. ஆனால் காலச்சுவடு இவர்களிடம் புகார் கொடுத்தற்குக் காரணம் இந்த மேட்டுக்குடி குலக் கொழுந்துகளை வைத்து பல காரியங்கள் சாதித்திருப்பதுதான். நண்பர்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை பொது மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறது காலச்சுவடு.

தமிழகத்தின் அறிவுத் துறைக்கு ஆதீனமாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் காலச்சுவடின் ஆசிரியர் கண்ணன்.
தமிழகத்தின் அறிவுத் துறைக்கு ஆதீனமாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் காலச்சுவடின் ஆசிரியர் கண்ணன்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இதன் ஆசிரியர் கண்ணன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்,” காலச்சுவடின் நடுநிலைமையை யாரும் சந்தேகப்பட முடியாது. பதிப்பகத்துறைக்கு முதல்வர் செய்திருக்கும் உதவிகளைப் பாராட்டித் தலையங்கம் எழுதினோம். மூன்றாவது பாலினத்தாருக்கு நலவாரியம் தொடங்கியது, சென்னை சங்கம விழாவை நடத்தியது என பாராட்டத்தக்க விசயங்களைப் பாரட்டினோம். அதே சமயம், கடந்த மே மாதம் மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் தி.மு.க தரப்பை விமரிசித்து எழுதிய எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக தி.மு.க ஏற்பாடு செய்த கூட்டத்தையும் விமர்சித்தோம். கனிமொழியின் அணுசக்தி ஆதரவு உரையைப் பதிவு செய்து, அதற்கு விமர்சனமாக வந்த வாசகர் கடிதங்களையும் வெளயிட்டோம். குறிப்பாக செம்மொழி மையம் ஆரம்பிக்கப்படப் போவதாக அறிவிப்பு வந்த போது, அதற்குத் தலைவராக முதல்வர் கருணாநிதி இருந்தால், அரசியல் சார்பு என்பது போன்ற சர்ச்சைகள் வரும் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இதெல்லாம் ஆளும் தி.மு.க அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டதோ என்னவோ… தற்போது காலச்சுவடு இதழ் நூலகங்களில் நிறுத்தப்பட்டிருக்கிறது. எந்தக் காரணமும் சொல்லாமல் பத்திரிகைகள் மீது விரோதம் பாராட்டுவதை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தினகரன் பத்திரிகைக்குப் பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுத்தவர்கள், இப்போது அதை நிறுத்தி இருக்கிறார்கள். தேவைப்படும்போது வரம்பு மீறி வாரி வழங்குவதும், ஆகாத போது அரசு விளம்பரங்களைக் கொடுக்காமல் தவிக்கவிடுவதும் அரசின் வாடிக்கையாகி விட்டது. அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையே சட்ட ரீதியான நெறிமுறைகள் பிறப்பிக்கப்படவேண்டும். மாற்றுக் கருத்துக்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால்தான் அரசு இப்படி நடந்து கொள்கிறது”.

ஏதோ காலச்சுவடைப் பார்த்து தி.மு.க அரசு கதிகலங்கி பயம்பிதுங்கி நிற்பதைப் போல கண்ணன் பேசுகிறார். தினகரன் அலுவலகத்தில் புகுந்து அடித்தவர்களுக்கு காலச்சுவடெல்லாம் எம்மாத்திரம்? உலகத் தமிழ் இதழ் என்ற அடைமொழியோடு காலச்சுவடு வருவதால் தன் தகுதியை மீறி தன்னை மிகப்பெரிய அறிவுத்துறை ஆதினமாக கருதுவதுதான் நகைப்பிற்குரியது.

காலச்சுவடு நூலகங்களுக்கு வாங்கப்பட்டது நிறுத்தப்பட்ட உடன்தான் அரசின் மனப்பக்குவம் கண்ணனுக்குத் தெரிகிறது. அ.தி.மு.க ஆட்சியில் முரசொலி நிறுத்தப்படுவதும், தி.மு.க ஆட்சியில் நமது எம்.ஜி.ஆர் நிறுத்தப்படுவதும் இங்கு காலங்காலமாக நடந்து வரும் நெறிமுறைதான். மற்றபடி தினத்தந்தி, தினமலர், தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ், வாரப் பத்திரிகைகள், வாரமிருப் பத்திரிகைகள் அனைத்தும் எப்பபோதும் வாங்கப்பட்டுதான் வருகின்றன. இவற்றில் அரசை விமரிசித்து செய்திகளோ, கட்டுரைகளோ வந்தால் அதற்காக நிறுத்தப்படுவதில்லை.
இதையே இந்தப்பிரச்சினை குறித்துக் கேட்ட்போது அமைச்சர் தங்கம் தென்னரசும் (ஜூ.வி) கூறியிருக்கிறார்.” தி.மு.கவுக்கு எதிராக எத்தனையோ செய்திகளை காலச்சுவடு மட்டுமல்லாமல் பல இதழ்களும் இன்றைக்கும் வெளியிட்டுத்தான் வருகின்றன. அதற்காகவெல்லாம் இதழை நிறுத்த வேண்டும் என்றால், அந்த இதழ்களையும்தானே நிறுத்தியிருக்க வேண்டும். வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான் காலச்சுவடு பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். இது புரியாமல் அரசியல் காரணங்களுக்காக காலச்சுவடு நிறுத்தப்பட்டதாக திசை திருப்புகிறார்கள்.”

அமைச்சரின் இந்தக் கூற்றில் பாதிதான உண்மை. அரசுக்கு ஆதரவாக இருக்கும் பல அனாமதேயப் பத்திரிகைகள் நூலகத்திற்கு வாங்கப்படுவதும், அவைகளுக்கு விளம்பரம் வழங்கப்படுவதும், அந்த விளம்பரங்களுக்காகவே பல பத்திரிகைகள் 500, 1000 பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்படுவதும் எல்லா ஆட்சிகளிலும் நடக்கும் விசயம்தான்.

கனிமொழியின் உறவில் ஏற்பட்ட விரிசலே காலச்சுவடின் கருத்துரிமை பிரகடனத்திற்குக் காரணம்.
கனிமொழியின் உறவில் ஏற்பட்ட விரிசலே காலச்சுவடின் கருத்துரிமை பிரகடனத்திற்குக் காரணம்.

நாம் எழுப்பும் கேள்வி என்னவென்றால் காலச்சுவடைப் போல பல சிறு பத்திரிகைகள் மாதந்தோறும் வெளிவந்தாலும் காலச்சுவடு மட்டும் நூலக ஆணையைப் பெற்றதன் மர்மம் என்ன? காலச்சுவடு நூலகத்துறையால் நிறுத்தப்பட்டதை விட அது ஏன் வாங்கப்பட்டது என்பதைத்தான் அமைச்சரும், கண்ணனும் தெரிவிக்கவேண்டும். இதை தெரிந்து கொள்ள நமக்கு கருத்துரிமை இருக்கிறதல்லவா?

அதேபோல பாசிசத்திற்கு பேர்போன புரட்சித் தலைவியில் ஆட்சியில் சிறு அளவில் காலச்சுவடை நூலகத்துறை வாங்கியதற்கு என்ன காரணமென்பதை கண்ணன் அறிவிக்கத் தயாரா? தி.மு.க ஆட்சியில் 1500 படிகள் வாங்கப்பட்டதன் பின்னணி என்ன? முன்னது அதிகாரவர்க்கத்தின் சிபாரிசிலும் பின்னதில் கனிமொழியின் சிபாரசும்தானே காரணம்? ஆக காலச்சுவடு நூலகத்துறைக்குள் நுழைந்தற்கும் மற்ற அனாமதேயப் பத்திரிகைகள் நுழைந்தற்கும் எந்த வேறுபாடுமில்லை.
இதைவிடுத்து ஜெயலலிதாவும், கருணாநிதியும் வேலை மெனக்கெட்டு காலச்சுவடை வாங்குவதற்கு தீவிர முயற்சி எடுத்தார்களா என்ன? எல்லாம் பெரிய இடத்து தொடர்பும், சிபாரிசும், பழக்கமும்தானே வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதில் கருத்துரிமைக்கு ஆபத்து எங்கே இருக்கிறது? அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கனிமொழியின் பேச்சை காலச்சுவடு வெளியிட்டது ஐஸ்வைக்கத்தானே அன்றி வேறு என்ன காரணமிருக்கமுடியும்? அணு ஒப்பந்தம் குறித்து அதன் கேடுகள் பற்றியும் பல முன்னாள் விஞ்ஞானிகள், அறிஞர்கள் காத்திரமானக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விடுத்து மன்மோகன் சிங்கிற்கு முதுகு சொறியும் தி.மு.கவின் நிலைப்பாட்டை முதல் உரையில் வாந்தியெடுத்த கனிமொழியின் பேச்சை அப்படியே வெளியிட்டதன் அரசியல் நோக்கமென்ன? எல்லாம் எலும்புத் துண்டுகளை கவ்வத்தானே?

செம்மொழி மையத்தில் கருணாநிதியை விமரிசித்ததால் அரசின் வெறுப்புக்கு ஆளாகி விட்டோமென கண்ணன் கருதுகிறார். புற்றீசல் போல ஆங்கிலக் கான்வென்டுகள் பெருக்கெடுத்து மக்களை அறியாமைக் கவர்ச்சியில் இழுத்து வரும் நிலையில் தமிழ் செம்மொழி மையமா பிரச்சினை? உழைக்கும் தமிழனுக்கு உய்வில்லாமல் தமிழ் மட்டும் உயர்ந்து விடுமா என்ன? தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தி.மு.க அரசியலுக்கு இந்த செம்மொழி மையம் ஒரு அலங்கார நடவடிக்கைதானே ஒழிய இதனால் தமிழுக்கு ஒன்றும் வாழ்வு கிடைத்து விடப்போவதில்லை.
கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார் போன்ற இலக்கியவாதிகள் அரசியலுக்குள் நுழைந்ததை காலச்சுவடு பொதுவில் ஆதரித்துத்தானே எழுதியது? பண்பாட்டுத் துறையில் பண்பட்டவர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் நல்லது பல நடக்கும் என்று எதிர்பார்த்து விட்டு தனக்கு நல்லது நடக்கவில்லை என்பதால் மோசம் என்பது கடைந்தெடுத்த சுயநலமில்லையா?

கருணாநிதியின் அரசியலில் காலச்சுவடிற்கு எங்கே இடமிருக்கிறது?
கருணாநிதியின் அரசியலில் காலச்சுவடிற்கு எங்கே இடமிருக்கிறது?

இவர்களுக்கெல்லாம் அரசியலுக்குள் நுழைவதற்கு என்ன தகுதியிருக்கிறது? மற்றவர்களை விடுங்கள் கனிமொழியை எடுத்துக் கொள்வோம். சில கவிதைகள் எழுதியதைத் தவிர இவருக்கு அரசியலைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ என்ன தெரியும்? எல்லாம் ராஜாத்தி அம்மாள் தனது பங்குக்காக கருணாநிதியிடம் சண்டை போட்டு பெற்றதுதானே இந்த அரசியல் வாழ்வு? கனிமொழி ராஜ்ஜிய சபா உறுப்பினர் தேர்வுக்காக தனது சொத்துப்பட்டியலில் பத்து கோடி இருப்பதாக வெளியிட்டாரே? இந்த பத்துகோடி எப்படி வந்தது என்று காலச்சுவடுக்கு தெரியாதா என்ன?

கனிமொழியை வைத்து எல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்பதற்காகவே அவரிடம் நட்பு பாராட்டிய காலச்சுவடு பின்பு அதே கனிமொழி செம்மொழி பிரச்சினைபற்றி காலச்சுவடு எழுதியதற்காகச் சினம் கொண்டு நூலகத்துறை ஆணையை நிறுத்திவிட்டார் என்பதில் மட்டும் கருத்துரிமையைத் தேடவேண்டிய அவசியமென்ன? கனிமொழிதான் காலச்சுவடை நிறுத்திவிட்டார் என்று எழுதுவதற்குக்கூட கண்ணனுக்கு பயம். ஒருவேளை நாளை மீண்டும் சேர்ந்து விட்டால் பிழைப்பை ஓட்டவேண்டுமென்ற பாதுகாப்பு உணர்வுதான் காரணம்.

நூலகத்துறையின் குழுவில் காலச்சுவடின் ஆதரவாளர்கள் வெங்கடாசலபதி போன்றவர்கள் இடம்பெற்றது கனிமொழியின் கருணையில்லையா? இதன் மூலம் காலச்சுவடு தனது பதிப்பக புத்தகங்களை நூலகத்துறைக்குள் தள்ளவில்லையா? அந்தக் கணக்கு பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறீர்கள்? இப்படிப் பெரிய இடத்து தொடர்பின்றி நூலகத்துறைக்குள் தமது புத்தகங்களை அனுப்பமுடியாமல் பல ஏழைப் பதிப்பகங்கள் இருக்கின்றனவே அவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.

பொதுவில் இடதுசாரி பத்திரிக்கைகள் மற்றும் அவர்களது வெளியீடுகள் நூலகத்துறைக்குள் வாங்கப்படுவதில்லை. தி.மு.க அரசுடன் கூட்டணியில் இருந்த போதும் செம்மலர், தாமரை போன்ற பத்திரிகைகள் அரசால் வாங்கப்படவில்லை. இவர்களைவிட வெளிப்படையாகவும், கூர்மையாகவும் அரசை அம்பலப்படுத்தும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் முதலான பத்திரிகைகளும் அவற்றின் வெளியீடுகளும் அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவர்களும் அதை சட்டை செய்வதில்லை. இது போக பெரிய இடத்து பழக்கமில்லாத பல பதிப்பகங்களும் தமது நூல்களை நூலகத்திற்கு விற்கமுடியாமல் திணறித்தான் வருகின்றன.

பொதுவில் ஒரு வர்க்கம் தனது நலனுக்காக பரிந்து பேசுவதற்கு மற்ற வர்க்கங்களின் நலனும் இதில் கலந்திருப்பாத சொல்லிக் கொண்டு அதை ஒரு பொதுப் பிரச்சினையாக்கி தனது ஆதாயத்தை தேடும். காலச்சுவடுக்கு அந்த சாமர்த்தியம் கூட இல்லை. மற்ற சிறுபத்திரிகைகளையும் நூலகத்துறை வாங்கவேண்டும் என்று காலச்சுவடு பேசவில்லை. தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது. அதனால் அதன் கருத்துரிமை போராளி வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது.

தி.மு.க அரசைப் பற்றி காலச்சுவடுக்கு பொதுவான கருத்து என்று எதுவுமில்லை. நடுநிலையில் நின்று நல்லவைகளை ஆதரித்து, கெட்டவைகளை எதிர்ப்பார்களாம். முதலில் நடுநிலை என்ற கூற்றே ஒரு மோசடியாகும். எல்லாப் பத்திரிகைகளும் ஒரு கருத்தில் ஒரு நிலையெடுத்தே செய்திகளை வெளியிடுகின்றன. ஒரு அரசியல் நிலைப்பாடு மக்களுக்கு ஆதரவானதா, எதிரானதா என்பதைத்தாண்டி மூன்றாவதாக நடுநிலையென்பதாக ஒரு நிலையில்லை. உலகமயமாக்கத்தை தீவிரமாக மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் அமுலாக்கி வரும் தி.மு.க அரசின் கொள்கைகளால் விவசாயிகள் வாழ்விழந்து நகரங்களுக்கு கூலி வேலைக்காக ஓடி வருகிறார்கள். கல்வி, சுகாதாரம் அனைத்தும் தனியார் மயமாகி நடுத்தர மக்கள் கூட அவற்றை பயன்படுத்தமுடியாத சூழ்நிலையை நோக்கி தமிழகம் நகர்ந்து வருகிறது.

இதில் அடுத்த ஆட்சியில் வருவோமா, வரமாட்டோமா என்று தி.மு.க தளபதிகள் கிடைத்தைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியோ தனது கட்சியையும், ஆட்சியையும், சொத்தையும் தமது வாரிசுகளுக்கு பங்கிடும் வேலையை செய்து வருகிறார். இப்பேற்பட்ட மக்கள் விரோத அரசை நூலகத்துறை பிரச்சினையை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது காலச்சுவடு. இதுதான் இலக்கியவாதிகளின் அற்பவாதம். தனக்கு ஒரு குறை என்றால் உலகமே சரியில்லை என்று சாபமிடுவது சுந்தர ராமசாமியின் குருகுல மரபு. அந்த மரபின் படி காலச்சுவடும் தனது அற்பவாத அம்மணத்தைக் கூச்சமில்லாமல் காட்டிக் கொள்கிறது.

எல்லா எழுத்தாளர்களையும் ” கருத்து ” அமைப்பின் அமைப்பாளர்களான கார்த்தி சிதம்பரம், கனிமொழி இருவருக்கும் கடிதம் எழுதச் செய்திருக்கும் காலச்சுவடு இந்த இளவரசர்களின் யோக்கியதையை வானளாவ உயர்த்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றிவரும் மத்திய அரசின் முக்கிய அமைச்சரான ப.சிதம்பரம் இந்தத் துரோகச் செயலுக்கு கைமாறாக பல ஆதாயங்களை அனுபவித்து வருகிறார். அதில் முக்கியமானது இவரது மகன் கார்த்தி சிதம்பரம் பல பன்னாட்டு நிறுவனங்களில் கௌரவ ஆலோசகராக பணியாற்றி பல கோடி சம்பளம் வாங்கி வரும் விவகாரம். தற்கொலைக்கும், வேலையின்மைக்கும் ஆளாகிவரும் விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை நாடே பிழைப்பதற்காக நாடோடிகளாக மாறி வருவதற்கு காரணமான முழுமுதற் குற்றவாளிகளுக்கு சன்மானம் இப்படித்தான் வழங்கப்படுகிறது. இந்த சிகாமணிதான் கருத்து அமைப்பின் அமைப்பாளர் என்பதும் இவரிடம் மண்டியிட்டு கருத்துரிமைக்காக காலச்சுவடு கையேந்துவதும் இனம் இனத்தோடு சேரும் என்பதைத்தான் காட்டுகிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான கூட்டத்தோடுதான் காலச்சுவடு நட்பு வைத்திருக்கறது என்பதற்கு இதுவே எடுப்பான செய்தி.

கருத்துரிமை என்பது மக்கள் தங்கள் வாழ்வுரிமைப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டது. பறிக்கப்பட்ட தமது உரிமைகளுக்காக மக்கள் போராடும் போதுதான் ஆளும் வர்க்கம் அவற்றை ஒடுக்கி அந்தக் கருத்தையே பேசவிடாமல் ஒடுக்கிவிடுகிறது. காலச்சுவடு உலகப்பிரச்சினைகள் தொடங்கி உள்ளூர் பிரச்சினைகள் வரை எல்லாவற்றிலும் தமது கருத்துக்களைப பதிவு செய்வதை வைத்துக் கொண்டு தன்னை மாபெரும் கருத்துரிமைப் போராளியாக சித்தரிக்கிறது. இது புரட்சித் தலைவி தனது கட்அவுட்டை பார்த்து தனது அதிகாரத்தை பிரம்மாண்டமாக உணருவதற்கு ஒப்பானது.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் அற்றைத் திங்கள் என்னும் தலைப்பில் அருங்காட்சியக அறிஞர்களை வைத்து மாதம் ஒரு கூட்டத்தை நடத்தியது காலச்சுவடு. ஆனால் இதே கோவையில்தான் இந்து மதவெறியர்களை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் கூட்டம் நடத்துவதற்குத் தடை இருக்கிறது. கோவை ஆர்.எஸ் புரத்தில் இந்து மதவெறியர்களைக் கண்டித்தும், அப்பாவி முசுலீம்களை சிறையில் வைத்திருப்பதை எதிர்த்தும் காலச்சுவடு ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தியதில்லை. அப்படி ஒரு கூட்டம் நடத்தியிருந்தால் கருத்துரிமையின் வலியை கண்ணன் உணர்ந்திருப்பார். காலச்சுவடு தலைமை அலுவலகம் இருக்கும் நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் நெல்லையில் கோக் நிறுவனத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு புரட்சிகர அமைப்புகளுக்கு அனுமதியில்லை. நெல்லையில் வாசகர் வட்டம் நடத்தும் காலச்சுவடு கோக் கம்பெனிக்கு எதிராக பொதுக்கூட்ட்ம் வேண்டாம் ஒரு அரங்கக்கூட்டத்தைக்கூட நடத்தியதில்லை.

ஈழத் தமிழர்களிடம் சந்தையைக் கைப்பற்றியிருக்கும் காலச்சுவடு களத்தில் என்ன செய்தது?
ஈழத் தமிழர்களிடம் சந்தையைக் கைப்பற்றியிருக்கும் காலச்சுவடு களத்தில் என்ன செய்தது?

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் தனது நூல்களுக்கு விரிவான சந்தையை உருவாக்கியிருக்கும் காலச்சுவடு ஈழத்தமிழர்களுக்காக அவர்களை ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கை அரசைக் கண்டித்து ஏதாவது கூட்டம் நடத்தியிருக்கிறதா? புரட்சித் தலைவி ஆட்சியில் நடத்தியிருந்தால் கண்ணன் கோஷ்டி பொடாவில் கைதாகி புரட்சிப் புயலோடு சிறையில் வாலிபால் விளையாடிக்கொண்டிருக்கும். இதழின் அட்டையில் ஈழத்துக்காக கண்ணீர் விடும் காலச்சுவடு களத்தில் இறங்கியிருந்தால் உண்மையில் கருத்துரிமை என்றால் என்ன என்பதை தன் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டிருக்கும்.

புக்கர் பரிசு வென்றாலும் அருந்ததிராய் நர்மதா மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதற்காக அவர் எழுதிய கட்டுரைக்காக நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொண்டு ஒரு நாள் நீதிமன்றக் காவலில் இருந்தார். குடியுரிமைக்காக போராடிய பினாயக் சென் சட்டீஸ்கர் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்பாவி அபசல் குருவுக்கு தூக்குத் தண்டனை கொடுத்ததை எதிர்த்து பொது அரங்கில் விவாதத்தை எழுப்பினார். தற்போது காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு காஷ்மீருக்கு விடுதலை தரப்பபட வேண்டுமென எழுதுகிறார். இவையெல்லாம் ஒரு அறிவுஜீவியின் நேர்மையான கருத்துரிமைப் போராட்டம் என்று மதிப்பிடலாம். ஆனால் காலச்சுவடின் வரலாற்றில் இப்படி ஏதேனும் ஒரு சம்பவம் உண்டா?

அவ்வளவு ஏன் 2002 குஜராத் கலவரத்திற்கு நிவாரணம் என்ற பெயரில் காசு வசூலித்த காலச்சுவடு இந்து மதவெறியர்கள் என்ற சொல்லைக்கூட பயன்படுத்தவில்லை. அப்போது இந்த வசூலுக்கு கனிமொழியும் உதவி செய்தார். அந்த நேரம் தி.மு.க கட்சி, பா.ஜ.க அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்தது. இந்த துரோகத்தை அம்பலப்படுத்தியோ, இது குறித்து கனிமொழியிடம் ஒரு கேள்விகூட காலச்சுவடு கேட்டதில்லை. பதிவும் செய்த்தில்லை. 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்த இந்து மதவெறியர்களின் பெயரைக்கூட சொல்லாமல் செயல்பட்டதுதான் காலச்சுவடின் சாமர்த்தியம். அதனால்தான் மலர்மன்னன் போன்ற இந்துமதவெறியர்கள் அதன் வாசகர்களாக இருக்கிறார்கள்.

இப்படி பாதுகாப்பான அரங்குகளில் பாதுகாப்பான தலைப்புக்களில் யாரையும் கேள்விக்குள்ளாக்காமல் கூட்டம் நடத்துவதாலேயே காலச்சுவடு தன்னை கருத்துரிமைப் போராளியாக கருதிக்கொள்கிறது. இவற்றையெல்லாம் விட காலச்சுவடின் புரவலர்காளக இடம்பெறும் விளம்பரதாரர்கள் பலரும் மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானவர்கள்தான். நல்லி சில்க்ஸூம், ஆர்.எம்.கேவியும் காஞ்சிபுரத்தில் நெசவாளர்களைக் கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கிக்கொண்டுதான் தனது பட்டுச்சேலைகளை விற்றும், விளம்பரமும் செய்து வருகின்றன. ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனமோ பல ஏழைகளிடம் சீட்டுப் பணம் வாங்கிக் கடன் கொடுத்து அசலைவிட வட்டியை அதிகமாக கொள்ளையடித்து பின்பு வசூலிக்க அடியாட்களை அனுப்பி இறுதியில் வழக்கும் போட்டு அந்த மக்களை அலைக்கழிக்கிறது. தினமலரைப் பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. பார்ப்பனியத்தின் அடியாளாகச் செயல்படும் இப்பத்திரிக்கை புரட்சிகர அமைப்புக்கள், இசுலாமிய அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் பற்றி வெளியிட்டுள்ள அவதூறுகள், வன்மங்கள், துவேசங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம்.

ஆக பல பிரிவு மக்களின் வாழ்வுரிமையைப் பிடுங்கும் நிறுவனங்களின் பிச்சையோடுதான் காலச்சுவடின் பொருளாதார அடிக்கட்டுமானம் கட்டப்பட்டிருக்கிறது. காலச்சுவடு மேற்கண்ட நிறுவனங்களை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வெளியிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்பொது என்ன நடக்கும்? அந்த நிறுவனங்கள் விளம்பரங்களை ரத்து செய்யும். இதுவும் கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று காலச்சுவடு பேசுமா? அப்படிப் பேசாது. ஏனெனில் அந்த விளம்பரப் பணம் அந்த நிறுவனங்களின் சொந்தப் பணம். அவற்றை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என காலச்சுவடு வாதிடலாம். கருணாநிதி அரசு காலச்சுவடை நிறுத்தியது மக்களின் சொந்தப் பணத்தில். ஆகையால் இது கருத்துரிமைக் கணக்கில் வரும். இப்படி காலச்சுவடின் தருக்கத்தின்படி பார்த்தால் கருணாநிதிக்கு ஒரு நீதி, நல்லி குப்புசாமி செட்டியாருக்கு ஒரு நீதி என்றே வரும்.

இந்த அக்கப்போரைப் பார்க்கும்போது புரட்சித் தலைவி ஆட்சி வந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. அப்போதுதான் கருத்துரிமை என்னவென்பதை காலச்சுவடு அம்மாவின் தயவில் கற்றுக்கொள்ளும். ஆனால் அம்மா அவர்கள் காலச்சுவடு போன்ற இலக்கியக் கோமாளிகளையெல்லாம் தனது தரத்திற்கேற்ற எதிரியாகக் கருதும் வாய்ப்பில்லை என்பதால் கருத்துரிமை பற்றிக் காலச்சுவடு தெரிந்து கொள்ளமுடியமலே போகலாம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்

37

ஓரே நேரத்தில் இந்தியாவில் என்னவெல்லாம் நடக்கிறது? ஸ்ரீநகரில் இந்தியாவின் அடக்குமுறையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். பீகாரில் திசை திரும்பிய கோசி ஆற்றின் வெள்ளத்தால் பல இலட்சம் மக்கள் உடமைகளை இழந்து வர மறுக்கும் நிவாரணத்திற்காகத் தவிக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் சிங்கூரில் டாடாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்க விவசாயிகள் போராடுகிறார்கள். ஒரிசாவில் சங்கபரிவார குண்டர்களுக்கு அஞ்சி பல்லாயிரம் கிறித்தவப் பழங்குடிகள் காடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வடக்கிலிருந்து வரிசைப்படி வரும் இக்காலத்தில்மின்வெட்டால் இருண்டு கிடக்கும் தென்கோடித் தமி்ழ்நாட்டில் என்ன நடக்கிறது? நடிகை நமீதாவின் விஜயத்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல்! வடக்கே போராட்டம்; தெற்கே டிராபிக் ஜாம்!

நமீதாவால் மையம் கொண்ட அரசியல் புயல் என்று இந்த தூத்துக்குடி விஜயத்தைக் குமதம் ரிப்போர்ட்டர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. அரசியலில் கொட்டை போட்ட இரா. ஹென்றி எனும் பிரமுகர் முதலில் அ.தி.மு.கவிலும் பின்பு காங்கிரசிலும் காலம் தள்ளிக் கடைசியில் புரட்சித் தலைவியிடமே தஞ்சமடைந்திருக்கிறார். அம்மா கட்சியில் சேர்ந்த உற்சாகத்தில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜெபா ஜூவல்லர்ஸ என்றொரு நகைக்கடையைத் திறந்திருக்கிறார். இதனைத் திறந்து வைக்கத்தான் நமீதா முத்து நகருக்கு வந்தார்.

அரசியலிலேயே பிரம்மாண்டமாக ஏதாவது செய்து பெயரெடுத்த ஹென்றி தனது சொந்த நகைக் கடையை மட்டும் சிம்பிளாக திறப்பாரா என்ன? ஊர் முழுக்க நமீதாவின் கட்அவுட்டும், பேனரும் , சுவரொட்டிகளையும் இறைத்திருந்தார். உள்ளூர் சேனல்களில் நமீதா வாராரு, நகைக்கடையைத் திறப்பாரு என்று பாடல்கள் இடையறாது ஒளிபரப்பாகின. காலை ஒன்பதே முக்காலுக்கு கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அதிகாலையிலிருந்தே இரசிகர்கள் வெள்ளமெனத் திரண்டனர். டி.எஸ்.பி, மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஐம்பது போலீசாரின் தலைமையில் பாதுகாப்பு போடுமளவுக்கு கூட்டம். இதனால் திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் நெரிசல். தென்மாவட்டங்களில் நவரசக் கோமாளி கார்த்திக், நாட்டாமை சரத்குமார், கேப்டன் விஜயகாந்த், குண்டுகல்யாணம், குமரிமுத்து யார் வந்தாலும் கூட்டம் சேருவது என்ன கணக்கென்று புரியவில்லை.

நமீதாவுடன் நாசரேத் ஆயர்!
நமீதாவுடன் நாசரேத் ஆயர்!

மதுரை வரை விமானத்தில் வந்த நடிகை பின்னர் காரில் தூத்துக்குடி வந்து சேர்ந்தார். நமீதா வருகிறார், வந்து கொண்டேயிருக்கிறார் என்று அறிவிப்பு கொடுத்தவாறு கூட்டத்தைச் சூடேற்றினார்கள். திறப்பு விழாவுக்கு சர்வ கட்சிப் பிரமுகர்களையும் ஹென்றி அழைத்திருந்தார். நமீதாவின் முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்றஞ்சி யாரும் வராமலில்லை. பின்னே மேடைக்கு அருகாமையில் அந்த அம்மையாரை தரிசிக்கும் வாய்ப்பை யார்தான் இழப்பார்கள்?

நகைக்கடை விளம்பரத்தில் நமீதாவைப் போட்டவர் நகைக்கடை வைக்குமளவு சம்பாதிக்க வழி செய்த புரட்சித் தலைவி அம்மாவை கண்டுகொள்ளவில்லையே என சில அ.தி.மு.க தொண்டர்கள் கிசு கிசுக்க அரசியல் வேறு, தொழில் வேறு என்றாராம் ஹென்றி. இதை அம்மாவும் ஏற்றுக்கொள்வார் என்றுதான் தோன்றுகிறது. அம்மாவின் சேனல் அழகிரியின் கேபிள் நிறுவனத்தில் தெரிவதும், அம்மாவின் கோல்டன் மிடாஸ் சரக்குகள் டாஸ்மாக்கில் விற்பதும் சரியென்றால் இதுவும் சரிதானே? அரசியலில் எவ்வளவுதான் சண்டை போட்டாலும் தொழிலில் மட்டும் அது மணற் கொள்ளையோ, ரேசன் அரிசி விற்பதோ, கிரானைட் விற்பனையோ, ரியல் எஸ்டேட் தொழிலோ எதுவாக இருந்தாலும் ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் மனமாச்சரியங்களில்லாமல் ஒரு உண்மையான ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்கள். அரசியலில் வெட்டு குத்து இருந்தாலும் அரசியலால் கைவரப்பெற்ற தொழிலில் அவரவர் எல்லை என்ன என்பதை எழுதாத ஒப்பந்தம் போல ஒற்றுமையாக கடைபிடிப்பார்கள்.

நாம் தூத்துக்குடியைத் திணறடித்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க விஜயத்திற்குத் திரும்புவோம். எல்லோரையும் காக்க வைத்து டென்ஷனாக்கிய நமீதா சரியாக பதினொன்றரை மணிக்கு பல கார்கள் பவனி வர ஒரு மந்திரி ரேஞ்சில் வந்திறங்கினார். இறுதியில் பரம்பொருளைக் கண்ட பரவசத்தில் இரசிகர்கள் எழுப்பிய கூச்சல் கடல்தாண்டி கொழும்பிலும் எதிரொலித்ததாம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் சிறிய தடியடி நடத்தியபோது என் செல்லங்களை அடிக்காதே என்று மழலைத் தமிழில் பேசிய நடிகை கூட்டத்திற்கு எண்ணிறந்த பறக்கும் முத்தங்களை அள்ளி விட்டாரம். பெண் காவலர்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதற்குப் போட்டிபோட, மேடையிலிருந்த சர்வகட்சிப் பிரமுகர்கள் அவரையே பரவசத்துடன் பார்க்க, மேடையில் ஐந்தே முக்கால் வார்த்தைகள் பேசியபின் நகைக்கடையைத் திறந்த அம்மையார், பேசியபடி சில இலட்சங்களை தரிசனக் கட்டணமாக வாங்கிவிட்டு சென்னைக்கு விமானமேறிப் போய்விட்டார். இத்துடன் கதை முடியவில்லை, இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.

மேடையில் நமீதாவுக்கு அருகாமை இருக்கையில் அமரும் பாக்கியம் பெற்றவர் நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் அவர்கள். பொதுவாக பல நிகழ்ச்சிகளில் ஆயருக்காக மற்றவர்கள் காத்திருப்பார்கள். இங்கே எல்லோரையும் போல நமீதாவுக்காக ஆயரும் காலையிலிருந்தே காத்துக்கொண்டிருந்தார். ஒரு நடிகை திறக்கும் நகைக்கடையில் ஆயருக்கு என்ன வேலை?

நகைக்கடை முதலாளி பெரும் அரசியல் பிரமுகர் என்பதோடு கிறித்தவராகவும் இருக்கிறார் என்பதால் ஆயரை அழைத்திருக்க வேண்டும். இதே அழைப்பை கடற்கரை மீனவர் கிராமங்களில் இருக்கும் ஒரு ஏழை அம்புரோஸோ, அந்தோணி சாமியோ தங்களது வீட்டுநிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டிருந்தால் ஆயர் வரமாட்டார். என்ன இருந்தாலும் பணக்கார மந்தைகளுக்குத்தான் தேவனது கிருபை கிடைக்கும். அ.தி.மு.கவில் மாவட்ட செயலாளராக இருந்ததினால் அதுவும் ஜெயா சசி கும்பல் தமிழகத்தை மொட்டையடித்த காலத்தில் புறங்கையை ருசித்து சம்பாதித்தவர் ஹென்றி. இதை தூத்துக்குடி நகரமே அறியும் என்றால் ஆயருக்கு மட்டும் தெரியாதா என்ன? அரசியலிலும், சமூக வாழ்க்கையிலும் கடந்த சில ஆண்டுகளாக முளைத்திருக்கும் இந்த தீடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை நம்பித்தான் திருச்சபையும் இயங்க வேண்டியிருக்கிறது.

நடிகையின் விஜயம் நகைக்கடையைப் பிரபலமாக்குவதற்கும், நாசரேத் ஆயரின் வருகையின் மூலம் தேவனின் கிருபை கிடைப்பதற்கும் ஹென்றி விரும்பியிருக்கிறார். என்னதான் மக்கள் தாலிகளை அறுத்து உருக்கி நகைக்கடை உருவாக்கினாலும் அதுபற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஒரு ஊழல் பேர்வழியை சர்வகட்சி ஊழல் பேர்வழிகள் அங்கீகரிக்கும் போது ஆயரும் அங்கீகரிக்கத்தானே வேண்டும்? யாரும் இதை ஒரு பாவச்செயலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது ஆயருக்கும் தெரியும். உண்மையில் பல திருச்சபைகள் மேல்மட்ட கிறித்தவர்களின் பிரச்சினைகள் அல்லது பஞ்சாயத்துக்களைத்தானே கவனிக்கின்றன?

இறைச்சலுடன் சிரித்தவாறு நமீதா ரசிகர்களைக் கலாய்த்துக் கொண்டிருந்தபோது அதையே புன்னகை பூத்த முகத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார் நாசரேத் ஆயர். இதே நேரம் ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடிக் கிறித்தவ மக்கள் உயிரிழந்து, உடமையிழந்து, இந்துமதவெறியர்களுக்கு அஞ்சி காடுகளில் ஒளிந்தவாறு அலைகிறார்கள். இதற்காக இந்திய கத்தோலிக்கத் திருச்சபை தனது பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறைவிட்டு அடையாள எதிர்ப்பைக் காட்டியது. அதையொட்டி தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் நாசரேத் ஆயர் கலந்து கொண்டு கடமையைச் செய்தார். மற்றபடி ஜெபச்சந்திரனப் போன்ற ஆயர்கள் எவரும் தெருவில் இறங்கிப் போராடவில்லை. ஒரிசாவின் சபிக்கப்பட்ட கிறித்தவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாத ஆயர் நகைக்கடைக்கும், நடிகைக்கும் காலத்தை அள்ளி வழங்குகிறார்.

கருப்பு ஏசுநாதர்; தலித்துக்களுக்கு தேவகிருபை கிடையாது!
கருப்பு ஏசுநாதர்; தலித்துக்களுக்கு தேவகிருபை கிடையாது!

ஒவ்வொரு மாவட்டத்திலும் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் கிறித்தவ திருச்சபைகள் நவீன சிற்றரசர்களைப் போலத்தான் நடந்து கொள்கின்றன. இந்தச் சொத்துக்களை அனுபவிப்பதில் இவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டையும் நடப்பது உண்டு. பேராயரிலிருந்து கீழ்மட்டப் பாதிரியார் வரை சாதி ரீதியாக சேர்ந்து கொண்டு ஆதிக்கம் செய்வது தமிழகத்தில் சகஜம். தாழத்தப்பட்ட கிறித்தவ மக்களின் தெருவுக்கு இன்றும் கன்னி மேரியோ, தேவனோ வருவதில்லை. ஆயர்களே சாதி ஆதிக்கத்தில் ஊறியிருக்கும்போது, தேவாலயப் பிரார்த்தனையில் மட்டும் சாதி போய்விடுமா என்ன? கல்லறைகளில் கூட பல ஊர்களில் தலித் மக்களின் கல்லறைகளை சாதி ஆதிக்கச் சுவர் பிரித்திருக்கிறது. இப்படி நடை முறை வாழ்க்கையில் எந்தத் துரும்பையும் எடுத்துப் போடாமல்தான் திருச்சபைகள் இயங்கி வருகின்றன.

மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் எளியமக்களை சுரண்டியே பலர் தனித்தனி சபைகளை உருவாக்கியிருக்கின்றனர். இந்த சேவைகள் படம்பிடிக்கப்பட்டுகிறித்தவம் உளுத்துவரும் மேலை நாடுகளுக்கு அனுப்பிப் பணம் திரட்டப்படுகிறது. நம்மூரில் தழைக்காத தேவனின் ராஜ்ஜியம் கீழை நாடுகளிலாவது பரவட்டுமே என பல தனிநபர்களும் நிறுவனங்களும் வாரி வழங்குகின்றன. இயேசு அழைக்கிறார் கூட்டத்தை வைத்தே செத்துப்போன டி.ஜி.எஸ் தினகரன் பல கோடிகளுக்கு அதிபதியாயிருக்கிறார். குணமான சாட்சிகளை செட்டப் செய்தே காருண்யா பல்கலைக் கழகத்தை கட்டியெழுப்பியிருக்கிறார் என்றார் வசூல் எவ்வளவு நடந்திருக்கும்?

பொதுவில் இந்து, இசுலாமிய மதங்களைவிட கிறித்தவ மதம் சற்று முற்போக்காய் இருப்பது போல தோற்றமளிக்கும். அதிலும் இளம் பாதிரியார்கள் மார்க்சியம், சுற்றுச்சூழல், பெண்ணியம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெரியாரியம் என்று எல்லா இயங்களையும் பேசுவார்கள். இந்த இசங்களை வைத்து நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வார்கள். இப்படி ஊருக்கு உபதேசம் இலவசமாய் செய்தாலும், திருச்சபை ஊழல்களைப் பற்றி மட்டும் பேசமாட்டார்கள் என்பதோடு, விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். அவர்களின் வசதி நிறைந்த வாழ்வுக்கு திருச்சபையின் புனித இருப்பு தேவையாயிருக்கிறது.

ஏழு வயதில் தன்னை பாலியல் வன்முறை செய்த பாதிரியார் புகைப்படத்தைக் காண்பிக்கிறார், லீ காலிகோஸ்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏழு வயதில் தன்னை பாலியல் வன்முறை செய்த பாதிரியார் புகைப்படத்தைக் காண்பிக்கிறார், லீ காலிகோஸ்

ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் மட்டும் பெண்கள் ஆயர்களாக வரமுடியாது. அது ஆண்களுக்கு மட்டுமே உள்ள தகுதி. இவர்களது பெண்ணிய முழக்கத்தின் யோக்கியதை இதுதான். மேலும் உலகெங்கிலும் உள்ள திருச்சபை பாதிரியார்கள் செய்திருக்கும் பாலியல் முறைகேடுகள் சங்கரமட லீலைகளைப் போல எண்ணிலடங்காதது. அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறாரை பாலியல் வன்முறை செய்ததாக வழக்கு நடக்கிறது. பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை இரண்டு பில்லியன் டாலர் பணத்தை நிவாரணமாகவும், அபராதமாகவும் கட்டியிருக்கிறது. அமெரிக்க பாதிரியார்களில் நான்கு சதவீதம் பேர் பாலியல் முறைகேடுகள் செய்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து போப்பே அவமானப்பட்டிருக்கிறாராம்.

இவையெல்லாம் நமது உள்ளூர் பாதிரியார்களுக்கு தெரிந்த விசயம்தான். கூடவே யார் யாரெல்லாம் இங்கு அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் அவர்கள் மட்டுமே அறிந்த தேவரகசியம். இப்படி ஒழுக்கத்திலும், சாதி ஆதிக்கத்திலும், சொத்து முறைகேடுகளிலும் ஊறியிருக்கும் திருச்சபையை எந்தப் பாதிரியாரும் கேள்வி கேட்டு கலகம் செய்ததில்லை. இதனால் சுயவிமரிசனம் செய்து கொண்டு சபையை விட்டு வெளியேறியதுமில்லை. லிபரேசன் தியாலஜி என்றெல்லாம் கரடி விடும் முற்போக்கு பாதிரியார்கள் கூட இந்தப் பிற்போக்குத்தனத்தை கேள்வி கேட்டதில்லை. போப்புக்களின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அவர்களும் ஹிட்லரின் ஆதரவாளர்களாகவும், புஷ்ஷின் அபிமானிகளாகவும்தான் ஊழியம் செய்திருக்கிறார்கள்.

எது எப்படியோ தூத்துக்குடி மாவட்டத்தின் நாலுமாவடி ஊரில் நடந்த இயேசு விடுவிக்கிறார் கூட்டத்தில் நடிகை நக்மா சகோதரி நக்மாவாக பிரசங்கம் செய்யும் போது நாசரேத் ஆயர் நமிதாவின் இரசிகராக நடந்து கொண்டது அப்படி ஒன்றும் பெரிய தவறல்லவே!

 

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

8

நாற்பத்தி மூன்று வயதாகும் மவுலானா அப்துல் ஹலீம் என்ற இசுலாமிய அறிஞர் உத்திரப் பிரேதச மாநிலத்திலிருந்து 1988ஆம் ஆண்டு அகமதாபாத் நகரத்திற்கு வந்தவர். இந்தியாவில் சுமார் 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த அஹ்லி ஹதீஸ் எனும் இவருடைய சன்னி பிரிவை அகமதாபாத் நகரில் மட்டும் சுமார் 5000ம்பேர் பின்பற்றுகின்றனர். இவர்களுடைய மசூதியில் 20 வருடங்களாக மத உரை நிகழ்த்துகிறார் ஹலீம். இந்த மதப்பணி போக தன்னுடைய வருமானத்திற்கு ஓரு பழைய இரும்புச் சாமான்கள் சேகரிக்கும் கடையையும் நடத்தி வரும் இவருக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கின்றனர். மூத்த குழந்தைகள் இருவரும் டெல்லி மதரசாவில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடக்கும் ஜூம்மா நமாஸ் எனப்படும் ஒரு மணிநேரத் தொழுகையில் அப்துல் ஹலீம் உரையாற்றும் போது “அண்டை வீட்டார் பசியோடிருக்கும் போது உங்கள் வயிற்றை நிரப்புவது கூடாது, உங்களுக்கு அருகில் குடியிருப்போர் முசுலீமா, இந்துவா என்றெல்லாம் மதவேறுபாடு பார்க்கக்கூடாது” என்று வந்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். இதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 53 மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஒரு மத அறிஞராக வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹலீமை குண்டு வெடித்த மறுநாளே போலீசு அதிரடியாகக் கைது செய்கிறது. மசூதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹலீமின் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் இந்தக் கைதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். சிறையலடைக்கப்பட்ட ஹலீமை இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முன் நிறுத்திய போலீசு அவர் குண்டு வெடிப்புச் சதிகளில் ஈடுபட்டிருந்த்தாகக் குற்றம் சாட்டியது. இதையே ஊடகங்களும் பரபரப்பாக கண் காது மூக்கு வைத்து அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தன.

மேலும் அவர் சிமி எனப்படும் தடைசெய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்துடன் தொடர்புள்ளவர் எனவும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர், அகமதாபத் நகரிலுள்ள முசுலீம் இளைஞர்களை தெரிவு செய்து உத்திரப் பிரேதச மாநிலத்திற்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி எடுக்க வைத்தவர், அதன் மூலம் 2002 கலவரத்திற்கு பழிவாங்கும் முகமாக அத்வானி, மோடி முதலானவர்களைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குஜராத் அரசு வழக்கறிஞரால் நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து ஹலீம் தலைமறைவாகி விட்டார் என்றும் போலீசு குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் துளி கூட உண்மையில்லை என்பதை தெகல்வாக வார ஏடு (9.08.08) புலன் விசாரனை செய்து வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் குடியிருக்கும் ஹலீமை அவ்வட்டார மக்கள் நன்கு அறிவர். அவரைப் பற்றி போலீசுக்கும் நன்கு தெரியும். குண்டு வெடிப்புக்கு முந்தைய நாள் வரை அவர் சிமி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்று போலீசு எப்போதும் கூறியதில்லை.

இந்த ஆண்டு மே மாதம் ஹலீமும் அவரது மதப்பிரிவைப் பின்பற்றுவர்களும் ஒரு கடை முகவரியில் ஆரம்பித்த டிரஸ்ட் சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பிய போலீசு அதில் அந்த ட்ரஸ்ட்டில் உள்ளவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டிருக்கிறது. எந்த வித குற்றப் புகாரும் இல்லாத நிலையிலும் கூட ஹலீம் அந்த ட்ரஸ்ட் சம்பந்தமான விவரங்களை போலீசுக்கு அனுப்பியிருக்கிறார். இதிலிருந்து அவர் தலைமறைவாக இல்லை என்ற உண்மை போலீசுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹலீம் தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தனது குடும்பத்தினரை போலீசு அச்சுறுத்தியது என்று குஜராத்தின் போலீசு டைரக்டர் ஜெனரலுக்கும், அகமதாபாத் காவல் துறை ஆணையருக்கும் தந்தி அனுப்பியிருக்கிறார். அடக்குமுறைக்குகெதிரான இந்த சட்டப்பூர்வ முயற்சிகளையெல்லாம் ஒரு தலைமறைவு பயங்கரவாதி செய்வாரா என்ன?

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.
அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருமதத்தவர்களையும் அடக்கிய சமூக ஒற்றுமை அமைதிக்கான இயக்கம் என்ற அமைப்பு மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதி வாங்கியபோது அந்த விண்ணப்பத்திலிருந்த முக்கிய சொற்பொழிவாற்றுபவர்களின் பட்டியலில் ஹலீமின் பெயரும் இருந்தது. இதையெல்லாம் சொல்லித்தான் ஹலீமின் அப்பாவித்தனத்தை நீருபிக்க வேண்டுமென்பதில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். தனது குழந்தைகள் மீது ஆணையாக அவர் ஒரு பயங்கரவாதியில்லை, அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ஹலீமின் மனைவி நூர் ஷாபா.

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி வழங்க ஹலீம் முயிற்சி எடுத்த போதுதான் போலீசின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. கலவரத்தால் வீடு வாசல், உற்றார் உறவினரை இழந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் சிறார்களுக்காக உதவி பெற ஹலீம் முயன்றார். குவைத்திலிருந்து வந்த இரண்டு இந்திய முசுலீம்களை அவர் அந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று உதவி கோரினார். அதற்காகப் பின்னர் கடிதம் எழுதினார். அந்த இரண்டு நபர்களும் பின்னர் டெல்லி போலீசால் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு டெல்லி நீதி மன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த்தாக சாட்சி அளித்தவர்கள் போலீசார் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மொரதாபாத் வணிகர் ஒருவரை விடுதலை செய்த நீதிமன்றம் அகதிகள் முகாமுக்குச் சென்று குழந்தைகளுக்காக உதவி செய்ய நினைத்ததை குற்றமென வரையறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

குஜராத்தின் அனாதை முசுலீம் குழந்தைகளுக்காக இவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதால் ஹலீமும் வேறு ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உதவி கேட்டு இடம் பெற்ற வாசகங்கள் எல்லாம் போலிசால் தீவிரவாதத்தின் பொருளாகத் திரிக்கப்பட்டன. இதன் பொருட்டு கைது செய்யப்பட்ட ஹலீம் பின்னர் பிணையில் வந்தார். இவ்வழக்கின்படி குஜராத் குழந்தைகளைத் தீவிரவாதிகளாக்கும் பொருட்டு பயிற்சி முகாமுக்கு அனுப்ப முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு மூலமாக காட்டப்படுகிறது. ஆக வெளிப்படையாக ஒரு மத அறிஞராகவும், முசுலீம் மக்களுக்கு உதவவேண்டுமெனவும் பாடுபட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு இன்று சிறையில் வாடுகிறார்.கடை வருமானத்தை இழந்த அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குஜராத் போலிசோ குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்ததாக ஊடகங்களை நம்ப வைக்கிறது.

ஹலீமின் கதையோடு இந்த நாடகம் முடிந்து விடவில்லை. இவரைப் போன்ற பல இசுலாமிய அப்பாவிகள், குறிப்பாக இளைஞர்கள் இந்தியாவெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதை தெகல்கா ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அனாதை என்பதன் பொருளை பெற்றோர், உற்றார், உறவினரோடு வாழும் ஒருவர் அவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் எந்த உறவுமின்றி ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு அனாதையின் உளவியலை சகஜ வாழ்க்கையில் இருக்கும் நம்போன்றோர் அறிவதில்லை. இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல சமூக வாழ்க்கைக்கும் பொருந்தும். சொல்லப்போனால் சமூக வாழ்க்கையில் அனாதைகளாக்கப்படும் நபர்கள்தான் சொல்லணாத் துயரத்தைச் சந்திக்கின்றனர். இந்து மதவெறியர்களின் அடக்குமுறைக் கலவரங்களின் எதிர் விளைவால் தோன்றும் இசுலாமிய பயங்கரவாதம் உண்மையில் பல அப்பாவி இசுலாமிய மக்களையே பலி கொள்கிறது.

தொப்பியும், தாடியும் வைத்திருக்கும் ஒரு இசலாமிய இளைஞன் எந்த வித முகாந்திரமுமின்றி பயங்கரவாதியக இருக்கலாம் என்று சமூக அமைப்புக்களால் நினைக்கப்படுகிறான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் கேட்பார் கேள்வியின்றி இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகே இவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். எந்தக் குற்றமும் செய்யாத தம்மை இந்த சமூக அமைப்பு கிரிமனல் போன்று நடத்தப்படுவதை வைத்துத்தான் தங்களை எந்த உதவியுமின்றி துன்பப்படும் அனாதைகளாக இவர்கள் உணர்கின்றனர். இந்தியாவில் இத்தகைய இசுலாமிய அனாதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சமூக அளவில் தன்னை அனாதையாக்கும் இந்த அமைப்பு குறித்து அவர்களிடம் எழும் கோபத்தை எவரும் தணிக்க இயலாது.

பயங்கரவாத்த்திற்கெதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் இந்தப்போரின் விளைவு பல தீவிரவாதிகளை உருவாக்கவே உதவி செய்யும். மதசார்பற்ற சக்திகள் இந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவது ஒன்றே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலைச் சிறிதேனும் தரும். இல்லையென்றால் அதன் விளைவை எல்லோரும் சந்திக்கவேண்டும்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.
ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் கிறித்தவ மக்கள் மீது கட்டவழ்த்து விடப்பட்டிருக்கும் இந்து மதவெறியர்களின் பயங்கரவாதத்தை இந்த அரசியல் அமைப்பு கேள்வி கேட்பதில்லை. லட்சுமணானந்தா சரஸ்வதி என்ற விசுவ இந்து பரிசத்தின் தலைவரும், அவ்வட்டாரத்தில் பிரபலமான இந்து மதவெறியராகவும் இருந்த இவர் கொலை செய்யப்பட்டதை வைத்து இந்து மதவெறியர்கள் இந்தக் கொலைக்குத் தொடர்பில்லாத கிறித்தவ மக்களை வேட்டையாடுகின்றனர். குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் கற்பித்து விட்டோம், ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் கற்பிப்போம் என்று சங்க பரிவாரங்கள் வெளிப்படையாகவே வெறியைப் பரப்பி கலவரம் செய்து வருகின்றனர். ஒரிசாவே பற்றி எரியுமளவுக்கு பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 2000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு, 25பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிரகாம் ஸ்டேன்ஸ் எனும் ஆஸ்திரேலியப் பாதிரியார் இரு மகன்களுடன் ஒரு காரில் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்து மதவெறியர்களின் இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு கூட அவர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. அதனால்தான் இன்றும் அரசு ஆதரவோடு அவர்களது பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மத்த்திற்கு மதம்மாறிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களெல்லாம் அன்றாடம் இந்து பயங்கரவாதத்தைக் கண்டு நடுங்கியபடியேதான் வாழ நேரிட்டது. கடந்த பத்தாண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட கிறித்தவ மக்கள் பல தாக்குதல்களை சந்தித்திருக்கின்றனர். அதன் தொடர் விளைவாகத்தான் இன்றைய கலவரங்கள் இந்துமதவெறியர்களால் நடத்தப்படுகின்றன.

குண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்துமதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது. கிறித்தவ மக்கள் உயிருடன் கொளுத்த்தப்படும் போதுகூட போலிசின் துப்பாக்கிகள் சுடாமல் அமைதி காத்தன. பா.ஜ.கவின் இளைய பங்காளியான நவீன் பட்நாயக் அரசோ மோடியின் அரசுபோல இந்து மதவெறியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தொகாடியா போன்ற இந்து மதவெறியர்களின் பேச்சும் நடவடிக்கையும் எந்த தடையுமின்றி ஒரிசாவில் வலம் வருகின்றன.

இந்த நாட்டின் அரசியல் அதிகார அமைப்புகள் இந்து மதவெறிக்கு ஆதரவாக இயங்கிவரும்போது இதன் பயங்கரவாதத்தை எவரும் சட்டபூர்வமாக ஒழிக்க முடியாது. மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடும் பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவெறியர்கள் திசை திருப்பி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்றனர். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்து மதவெறியர்களை கருவறுக்கும்வரை எவருக்கும் விடுதலை இல்லை.

பயங்கரவாதத்தின் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை இந்தியாவில் அமைதி என்பது பிடிபடாத மாயமானைப் போல ஓடிக்கொண்டே இருக்கும்.

 

ஏழையின் கண்கள் என்ன விலை?

13

கண்கள். முட்டை பொரிந்து தாயின் அரவணைப்பில் பயந்து திறக்கும் குஞ்சுகளின் மெல்லிய கண்கள். உலகின் முடிவில்லா வண்ணக் காட்சிகளை குழம்பிய வியப்புடன் கண்டு வளரும் சிறிய கண்கள். தெரிந்த முகத்தை அடையாளம் கண்டு பழகிக்கொள்ளும் குழந்தைகளின் அழகிய கண்கள். உணர்ச்சிகளின் மாறுபாட்டிக்கேற்ப நிலை கொள்ளும் மனிதர்களின் பொருள் பொதிந்த கண்கள். மனதின் ஓட்டத்தை இனம் காட்டி மௌன மொழி பேசும் வித்தகக் கண்கள். நவீன வாழ்க்கை நுகரப்படுவதற்கு அச்சாணியாக இருக்கும் இமை மூடாத கண்கள்.

கண்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இவ்வுலகம். கண்கள் உறைந்து போய் கருத்தைக் கருத்தரிப்பதற்காக நகரில் பிரம்மாண்டமாய் வளரந்து நிற்கும் விளம்பரப் பலகைகள். விழி வழித் தூண்டி உமிழ் நீர் சுரப்பதற்கு வண்ணச் சிதறலாய் இறைந்து கிடக்கும் விதவிதமான உணவு வகைகள். எதிர் பால் விழிகளை மறித்து ஆளுமையை அறிவிப்பதற்கு சரம் சரமாகத் தொங்கும் உடை வகைகள். கண்களின் நீர் வேண்டி விளம்பரங்களுக்கிடையில் கதை சொல்லும் தொலைக்காட்சியின் நிழல் வாழ்க்கை சீரியல்கள். விழிகளின் பிரமிப்பிற்காகப் பெரிய திரையில் அணிவகுக்கும் திரைப்படங்கள். கண்களின் பரபரப்பிற்காகச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஊடகங்களின் செய்திக் கதைகள். காதலின் துவக்கமோ, கவிதையின் இயக்கமோ, கண்களின்றி இல்லை. விழிகளுக்காகவே இவ்வுலகம். விழிகளின்றி இல்லை இவ்வுலகம்.

ஆயினும் ஏழைகளின் கண்களுக்கு இந்த படிமங்கள் எதுவுமில்லை. கழுத்தை நெறிக்கும் வாழ்வை நகர்த்திச் செல்வதற்கு ஒரு உழைப்புக் கருவியாய் மட்டும் கண்கள். எழில்மிகு உலகத்தை இந்தக் கண்கள் அனுபவிப்பதற்கு எப்போதும் வழியில்லை. ஏழ்மையுடன் முதுமையும் சேரும்போது மங்கிப்போகும் கண்கள் மிச்சமிருக்கும் வாழ்வைக் கடனே என்று கழிக்கின்றன. அந்த மங்கிய கண்களையும் இரக்கமின்றி பறித்திருக்கிறார்கள் சில சதிகாரர்கள்.

திருச்சியிலும், பெரம்பலூரிலும் இருக்கும் ஜோசப் கண் மருத்துவமனை ஒரு பிரபலமான தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள கடுவனூரில் 28.7.08 அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது. இந்த இலவச முகாம்கள் மக்களைக் கொள்ளையடிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் மனிதாபிமான முகமூடிகள். இந்த முகமூடியிலும் கூட அவர்களுக்கு அபரிதமான பணம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு அரசின் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், இலவச முகாம்கள் நடத்துவதற்காக இம்மருத்துவமனைக்கு ஒன்றரைக் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இது போக ஜோசப் நிர்வாகம் இலவச முகாம்களைப் படம் பிடித்து வெளிநாட்டு மிஷினரிகளுக்கு அனுப்பி நன்கொடைகளையும் அளவில்லாமல் திரட்டி வந்தது.

வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும் இந்த இலவசத்திற்கு இலக்கு வைத்த நிர்வாகம் அவ்வட்டாரத்தில் உள்ள மக்களைக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிப்பது போல பிடித்திருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைந்தே ஆகவேண்டுமென அம்மருத்துவமனை காட்டிய தீவிரம் சந்தேகத்திற்குரியது. முகாமிற்கு வந்த 180 நபர்களில்- பெரும்பாலும் கூலி வேலை செய்யும் முதியவர்கள்- 45 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக அவசர அவசரமாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சிகிச்சைக்காக சில ஆயிரங்கள் செலவு தேவைப்படும் வசதி இல்லாத அம்முதியவர்கள் இந்த இலவசமில்லையென்றால் சதை வளர்ந்த கருவிழிகளுடன் மங்கிய பார்வையோடு மிச்சமிருக்கும் வாழ்வைக் கழித்திருப்பார்கள். ஒரு வேளை அப்படி விட்டிருந்தால்கூட இருக்கும் குறைந்த பட்சப் பார்வைத் திறனாவது மிஞ்சியிருக்கும்.

அந்த 45 ஏழைகளுக்கும் பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனையில் ஆடுமாடுகளுக்கு செய்வது போல அறுவை சிகிச்சை நடந்தது. இலவசம்தானே என்ற அலட்சியத்துடன் போதிய பாதுகாப்பின்றி, பயிற்சியற்ற மருத்துவர்களால், சோதித்த்தறியப்படாத மருந்துகளுடன் ஈவிரக்கமின்றி அந்த சிகிச்சை நடந்து முடிந்தது. ஊர் திரும்பிய மக்கள் சிகிச்சை நடந்த கண்களில் தாளமுடியாத வலியுடன் தெளிவில்லாத பார்வையுடன் அவதிப்பட்டனர். திரும்பிச் சென்று மருத்துவமனையில் கேட்டபோது மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போதும் பிரச்சினை தீராததால் ஒரு சொட்டு மருந்தைக் கையில் கொடுத்து விட்டு இனி பார்வை கிடைக்காது என்று அலடசியமாக கைவிரித்து விட்டது ஜோசப் மருத்துவமனை. ஏன்ன ஏது என்று அறியாமல் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே சாலை மறியல் செய்தபோது விசயம் வெளியே தெரியவந்தது.

இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. அதற்காக ஆளுக்கொரு இலட்சம் கொடுத்து சமாதனம் செய்ய முயல்கிறது அரசாங்கம். எத்தனை இலட்சம் கொடுத்தாலும் இழந்த பார்வை கிடைக்காதே என்று கதறுகிறார்கள் அந்த ஏழைகள். இனி ஓட்டை விழுந்த ஒற்றைக் கண்ணுடன் எப்படி வாழமுடியும் என்று நிர்க்கதியாக அழுகிறார்கள் அம்மக்கள். முதுமையோடு குருடும் இணைந்த பயங்கரத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை.

ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இந்த பயங்கரவாதத்தை மருந்துகளின் குறைபாடு, பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம், மருத்துவமனையைச் சோதனையிட்டோம் என்று மேலோட்டமாக விசாரணை நடத்துகிறது அரசு. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தலைமை நிருவாகிகள் அனைவரும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். இவர்களை வெளியே சுதந்திரமாக விட்டுவைத்தால் ஆதாரங்களை அழித்து விசாரணையையே திசை திருப்புவார்கள். ஜோசப் மருத்துவமனை சீல் செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கவேண்டும். மருத்துவமனையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏழைகளுக்கு நிவாரணம் அளித்திருக்கவேண்டும். ஆயினும் இவை எதுவும் நடைபெறவில்லை. காரணம் பார்வை இழந்தவர்கள் அதை இலவசமாக இழந்திருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று கேள்வி கேட்பதற்கு நாதியற்ற ஏழைகளாய் இருந்திருக்கிறார்கள்.

தனியார் மயத்தின் கோரமுகம் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு தனியார் மருத்துவமனை செய்த அநீதிக்கு அரசு நட்ட ஈடு கொடுக்கிறது. அந்த அநீதிக்கு எந்த பொறுப்பும் ஏற்காத அந்த மருத்துவமனை இன்றும் தடையில்லாமல் செயல்படுகிறது. அவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் தொழில் நடத்த பாதுகாப்பு கொடுக்கிறது. மருத்துவமனைகளின் முதலாளிகளைக் குற்றம் சாட்டாத அரசு மருந்துகளை காரணமாக்க முயல்கிறது. மருந்துகள்தான் காரணமென்றால் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இந்த பார்வைப் பறிப்பு நடக்கவில்லையே? அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது? மாறாக உயிர் காக்கும் மருந்து விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளையடிக்கவே உதவுகிறது.
திருவள்ளூரில் சரியாகப் பராமரிக்கப் படாத சொட்டு மருந்தினால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன. பணமிருப்பவனுக்குத்தான் மருத்துவம் என்றாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையும், இலவச முகாம்களையும் நாடும் மக்கள்தான் அரசின் நோய்களுக்கு பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர். உலகமயத்தின் கொள்கையில் ஏழைகளின் உயிர்கள் மலிவாக விலைபேசப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தின் அந்த ஏழைகள் பார்வையிழந்து வாழப்போகிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்களின் கண்களைப் பிடுங்கியிருக்கும் இந்தச் சம்பவத்தை ரம்பாவின் தற்கொலைக் கிசுகிசு குறித்து கவலைப்படும் நாட்டில் எத்தனைபேர் கவனிக்கப் போகிறார்கள்?
எது எப்படியோ நாம் பார்த்து நுகரத்தான் இந்த உலகில் அழகானவை ஏராளமிருக்கிறதே!

ஆனால், “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அ்தின்றேல் /புண்ணென்று உணரப் படும்.” என்கிறது குறள்.

 

குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல !

29

கடைசியாகக் கிடைத்த தகவலின் படி சாலிக்கிராமம் (சென்னை வடபழனிக்கு அருகில் இருக்கும் சினிமாக்காரர்களின் புண்ணியத்தலம்) வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். சைக்கிள் பாஸ் கலெக்சனிலும் கூட நாயகன் குசேலனை விஞ்சிவிட்டதாம்.

குத்துப்பாட்டுக்கு தொந்தியை ஆட்டி, குளோசப் காட்சிகளில் தொங்கி வழியும் முகச்சதைகளைக் காட்டி வெள்ளித் திரையில் அமர்க்களம் செய்யும் ரித்தீஸைக் காண வேலை மெனக்கெட்டு உடனே கிளம்பி விடாதீர்கள். அந்தி மயங்கும் நேரத்தில் தமிழ்ச் சேனல்களில் ஓடும் நாயகன் ட்ரைலரைப் பார்க்கும் போது அதில் என்ன நடக்கிறது என்பது புரியாவிட்டாலும் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக ஒரு நட்சத்திரம் உருவாகி வருவது மட்டும் தெரிகிறது. தற்போது ரஜினி ரசிகர்களே மறுக்க முடியாத வகையில் வசூலில் காலி டப்பாவாகி, திரையரங்கை விட்டு வெளியேறும் குசேலனின் திரைப்படச் சுருளும் அதைத்தான் நிரூபிக்கிறது.

வையகம் முழுவதும் உள்ள தமிழ் நாக்குகளால் சூப்பர் ஸ்டாரென தன்னிலை மறந்து பக்தியுடன் உச்சாடனம் செய்யப்படும் ஒன்றின் படம் இப்படி ஊத்திக் கொண்டதற்குக் காரணமென்ன?

ஈழத் தமிழரோ, மலேசியத் தமிழரோ, சிங்கப்பூர்த் தமிழரோ, அகதித் தமிழரோ, அகலாமலிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழரோ எல்லாத் தமிழர்களின் கண்களும் ஊடகங்கள் முதல் சின்னத்திரை, வெள்ளித்திரை வரை சகலமான அயிட்டங்களிலும் பார்த்த விழி பார்த்தபடி மாறாமல் உற்று நோக்கி ஒன்றுவது தமிழ் சினிமாவில் மட்டும்தான். செஞ்சோலை, மாஞ்சோலைப் படுகொலைகள் தெரியாது என்றாலும் ஆஸ்திரேலியப் பூஞ்சோலையில் பாடும் இளைய தளபதியின் மனைவி குழந்தைகள் பெயர்கள் மனப்பாடமாய்த் தெரியும்; காய்ந்து போயிருக்கும் காவிரியாறு எந்தெந்த மாவட்டங்களில் பாய்கிறது தெரியாவிட்டாலும் நமீதாவின் பூர்வாசிரமம் அட்சர சுத்தமாய்த் தெரியும்; இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு தெரியாவிட்டாலும் உலகநாயகனின் வரலாறு களத்தூர் கண்ணம்மாவிலிருந்து தசாவதாரம் வரை தப்பாமல் தெரியும்; பீகார் மாநிலம் எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டாலும் பில்லா திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட் பளிச்சென்று தெரியும்.

இப்படி உலகத் தமிழர்களுக்கு கல்வியை, வரலாறை, பூகோளத்தைக் கற்றுத்தரும் தமிழ் சினிமாவிலிருந்துதான் அடுத்தடுத்து தமிழகத்தை ஆளப்போவதாய்ச் சொல்லித் திரிகிற கேப்டன்களும், நாட்டாமைகளும் சிலிர்த்தவாறு வருகிறார்கள். மொத்தத்தில் தமிழ் வாழ்வின் மேல்வாய் முதல் கீழ்வாய் வரை வாயுவாய் விரவியிருக்கும் சினிமாவில் ஒரு பிரச்சினை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. திரைப்படங்களால் பாலூட்டி வளர்க்கப்படும் தமிழன் என்னதான் அடி முட்டாளாக இருந்தாலும் சமயத்தில் அவனுக்கே தெரியாமல் புத்திசாலித்தனமாய் ஏதாவது செய்து தொலைத்து விடுகிறான்.

இரசிகப் பெருமக்களின் புரிந்து கொள்ள முடியாத இந்த உளவியல்தான் திரையுலகின் படைப்பாளிகள், முதலாளிகள் அனைவரின் மண்டையையும் ஒற்றைத் தலைவலியாய் குடைகிறது. இதைத் தீர்க்கக்கூடிய டைகர் பாம் மட்டும் இருந்திருந்தால் குசேலன் குதிரையில் பணம்கட்டிய பெருமகன்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கும்.

தமிழ் நாட்டில் கிருஷ்ண பரமாத்மா என்றொரு சூப்பர் ஸ்டார் இருந்தாராம். அவருக்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தி குசேலன் என்றொரு தோழன் இருந்தானாம். அவன் இப்போது சலூன் கடை வைத்து பிழைக்கிறானாம். இருவரும் ஒரு நாள் சந்தித்தார்களாம். அதைப் பார்த்துப் பலரும் அழுதார்களாம். குசேலனைக் குபேரனாக்கிவிட்டு அடுத்தநாள் கிருஷ்ண பரமாத்மா இமயமலைக்கு போனாராம். தோழன் சலூனுக்கு ஒரு நாள் விடுமுறைவிட்டு என்னமோ யோசித்தானாம். குமுதத்தின் லைட்ஸ் ஆன் கிசுகிசுவுக்குக்கூட தகுதியில்லாத இந்தக்கதைக்குத் தமிழர்கள் 100 கோடி ரூபாய் பீஸ் கட்டவேண்டுமாம். அப்படியென்றால் இதைவிட மட்டமான சிவாஜிக்கு மட்டும் தமிழர்கள் புற்றீசல் போல பீஸ் கட்டினார்களே என்று நீங்கள் கேட்கலாம். தமிழன் ஏமாளிதான்! இருந்தாலும் சமயத்தில் கிரியேட்டிவாக ஏதாவது செய்யக்கூடாது என்று விதி இருக்கிறதா என்ன? அரசியலில் புரட்சித் தலைவியை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் புரட்சித் தலைவரால் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்த போது அல்வா கொடுத்து விட்டார்கள். இதையெல்லாம் ஏனென்று ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

கிருஷ்ண பரமாத்மா தும்மினாலும், தம் அடித்தாலும், இமயமலைக்குப் பம்மினாலும் அட்டைப்படக் கட்டுரைகளாக வெளியிடும் பத்திரிகைகள் பாபா படத்திற்குக் காகிதமே கண்ணீர் விடுமளவுக்கு அலப்பறைகள் செய்து ஊளையிட்டன. பரமாத்மா இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை படம் தந்தால் ஊடகங்கள் ஒரு மாமாங்க காலத்திற்குச் செய்தி வெளியிடும். கடைசியில் இந்த வெற்றுக் கூச்சலில் பாபா படம் கவிழ்ந்தது. பீடியை வலித்தவாறு பரமாத்மா புரூடா விட்ட ஆன்மீக அரட்டைகளை ரசிகர்களே சட்டை செய்யவில்லை, பேண்ட்டும் செய்யவில்லை. பாபா டாலர், செயின், டீ ஷர்ட் என முடிந்தமட்டும் சுருட்ட நினைத்த குண்டுக் கொழுப்பு லதா ரஜினிகாந்தின் பேராசை மண்ணைக் கவ்வியது. அப்போதும் பாபாவின் கிளைமாக்சை ஊடகங்கள் முடிக்கவில்லை. யானை விழுந்தால் எழாது, குதிரை விழுந்தால் மீண்டு எழும் என்ற பரமாத்மாவின் உளறல்களெல்லாம் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. உளுத்திருந்த இமேஜைத் தூக்கி நிறுத்த பரமாத்மா சந்திரமுகிக்குச் சென்ற கதைகள் அடுத்து வெளிக்கி வர ஆரம்பித்தன.

பாபா படத்தை பரமாத்வே தயாரித்திருந்ததால் தன்னை வைத்துச் சூதாடிய வினியோகஸ்தர்களுக்குச் சுருட்டிய தொகையில் கொஞ்சம் கொடுத்தார். இது போக அவருக்கு எஞ்சிய தொகை பத்து கோடியைத் தாண்டும். இதுவும் முதல் பத்து நாட்களுக்கு ரசிகர்கள் வீட்டு நகைகளை அடகுவைத்து 500, 1000 என்று ப்ளாக் டிக்கெட்டில் அழுத பணம்தான். உண்மையான கட்டணத்தில் பாபா திரைப்படம் நூறு நாட்கள் ஓடியிருந்தாலும் பரமாத்வுக்கு இந்தப் பணம் கிடைத்திருக்காது. திரைப்படம் வெளியிடப்படும் முதல் வாரம், மாதத்தில் திரையரங்குகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அளித்திருந்த சலுகை பகிரங்கக் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கியது. கடந்த பத்து வருடங்களாக கிருஷ்ண பரமாத்மாவும் இன்ன பிற நட்சத்திரங்களும், முதலாளிகளும் இப்படித்தான் வழிப்பறி செய்து சொத்து சேர்த்து வருகின்றனர்.

தற்போதைய பிரச்சினை என்னவென்றால் பாபா படத்திற்கு முதல் பத்து நாட்களுக்கு வந்த கூட்டம் கூட குசேலனுக்கு வரவில்லையாம். அப்படி வரும் என்று எதிர்பார்த்து குசேலனுக்கு கொட்டப்பட்ட பணம் 61 கோடி ரூபாய். இதில் ரஜினிக்கு 20 கோடி, இயக்குநர் வாசுவுக்கு 4 கோடி, படத்தைத் தயாரித்த கே.பாலச்சந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், வைஷ்ணவி மூவிஸ் அஸ்வினிதத் மூவருக்கும் தலா 7 கோடி, மிச்சமெல்லாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தின் தயாரிப்புச் செலவாம். இதை 61 கோடிக்கு வாங்கிய பிரமீட் சாய்மீரா எனும் கார்ப்பரேட் நிறுவனம் பரமாத்மாவின் இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சுருட்டலாம் என்று சப்புக் கொட்டியது. பரமாத்மா தமிழ்க் குசேலனுக்கு மட்டும் அருள் பாலிக்காமல் தெலுங்குக் குசேலனுக்கும் பிச்சை போடும் விதமாக தெலுங்கிலும் தனியாக படமெடுத்தார்களாம். என்.டி.ராமாராவ் கிருஷ்ணனாகவும், இராமனாகவும் அவதரித்து பக்தியில் ஊறப்போட்ட மண்ணாயிற்றே!

குசேலனின் இசை உரிமையை பிக் மீயுசிக் நிறுவனம் 2.45 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமையை 5 கோடிக்கு கலைஞர் டி.வியும் வாங்கியதாம். ஒரு படத்தில் பரமாத்மாவின் போஸ்டரைக் காண்பித்தாலே பிய்த்துக் கொண்டு ஒடும் காலத்தில் பரமாத்மாவின் இசை பஜனையும், தொலைக்காட்சி திவ்ய தரிசனமும் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதில் ஆச்சரியமில்லை. எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த படியால் ஒரு சுபமூகூர்த்தத்தில் 600 பிரிண்டுகள் போடப்பட்டு அமெரிக்கா, மொரிஷியஸ், பாங்காக், மலேசியா, சிங்கப்பூர், கேரளா, கர்நாடகம் என்று உலகம் முழுவதும் கோபால் பற்பொடி போல குசேலன் வெளியிடப்பட்டது. இதுதான் படத்தை போட்ட உடன் காசை எடுக்கும் பாராசூட் வணிகமாம். பத்து நாட்களுக்குப் பிறகு படத்தைப் பற்றி எதிர்மறைக் கருத்து உருவாகி வசூல் பாதிக்கலாம் என்ற அபாயம் இதில் இல்லையாம். அதனால்தான் இத்தனை அதிக பிரிண்டுகள் போட்டு இரண்டு வாரத்தில் முதலை இலாபத்தோடு எடுத்து விடுவார்களாம். சரியாகச் சொன்னால் ரசிகன் விழித்துக் கொள்வதற்குள் அவனிடம் பிக்பாக்கெட் அடித்து விடவேண்டும். தமிழகத்தில் பாதி இடங்களில் பிரமீட் சாய்மீராவே ரீலீஸ் செய்து மீதியை விநியோகஸ்தர்கள் மூலமாகத் திரையிட்டது. மொத்தத்தில் 100 கோடியைக் காணிக்கையாகப் பிடுங்குவது திட்டம்.

பக்தர்களைச் சோதனைக்குள்ளாக்கிக் கடைத்தேற்றும் பரமாத்வுக்கே அப்போதுதான் சோதனைகள் வரலாயிற்று. ஒகேனக்கல் பிரச்சினையில் தப்புச் செய்பவர்களை அடிப்பேன், உதைப்பேன் என்று பரமாத்மா வீரவசனம் பேசியதை வைத்து கர்நாடகத்தில் குசேலன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோமென எதிர்ப்புக் கிளம்பியது. பரமாத்மா எந்தவிதக் கூச்சநாச்சமின்றி மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தார். பரமாத்மாவின் பல்டியை கர்நாடகம் ஏற்றுக்கொண்டு வழி விட்டாலும், தமிழ் ரசிக பக்தர்களிடையே ஒரு நெருடல் ஏற்பட்டது. என்னடா நம்ம தலைவர் சுண்டுவிரலசைவில் நூறு பேரைப் புரட்டி எடுப்பாரே, இப்படி தீடீரென்று பணிந்து விட்டாரே, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழகத்தை நட்டாற்றில் விட்டுவிட்டாரே என்று பக்தர்களிடம் சற்று மனக்கிலேசம் பற்றியது.

இது ரிலீசுக்கு முந்தைய நாள் நிலவரம். பரமாத்மா ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்ததன் கூடவே அவரது இமேஜூம் உப்பியது என்பதை இந்த முக்கியமான தருணத்தில் நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். பரமாத்மாவினால் இமேஜ்! இமேஜினால் பரமாத்மா! இமேஜைப் பராமரிப்பது இரசிக பக்தர்களின் வேலை. திரையில் இமேஜாகவே விசுவரூபமெடுக்கும் பரமாத்மா நிஜவாழ்விலும் அதைப் பராமரிக்கவேண்டுமல்லவா! ஆனால் உண்மையில் முரண்படும் இந்த இரு துருவங்களை ஒத்திசைவாக கொண்டுசெல்வதற்கு அந்த நிஜ பரமாத்மாவே வந்தாலும் சாத்தியமில்லை. மாயைக்கும், உண்மைக்குமான சண்டையில் வியாபாரத்துக்கும், இமேஜுக்குமான மோதலில் பரமாத்மா தனது மகிமையைச் சற்ற சுருதி குறைத்துக்கொண்டார். வினை தொடங்கிவிட்டது.

அடுத்த குசேலன் படம் முழுவதும் சுமார் 55 நிமிடக் காட்சிகளில் வரும் பரமாத்மாவின் பண்பு நலன்கள், பழகும் தன்மை, எளிமை, சுறுசுறுப்பு, வேகம், விவேகம், வாழ்க்கையைப் பற்றி அவர் என்ன நினைக்கறார், அவரைப் பற்றி வாழ்க்கை என்ன நினைக்கிறது, இமயமலையில் அவர் பெற்ற ஆன்மீகம் எல்லாம் புண்ணிய நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இமேஜ் பில்டப்பில் ஒரு விசயம் மட்டும் பிழையாகிவிட்டது. அரசியலுக்கு தான் வருவதாக திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் பேசியதெல்லாம் தனது சொந்தக் கருத்தல்ல, இயக்குநர் எழுதிக் கொடுத்ததைத்தான் பேசினேன் என்று பரமாத்மா குசேலனில் வசனம் பேசியது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது அரசியல் இமேஜ் ஒரு மாயை என்கிறார் பரமாத்மா. பக்தர்களோ அது மாயை என்று தெரிந்தாலும் தங்களை அந்த மாயையில் வைக்குமாறு வற்புறுத்துகிறார்கள். இது பக்தர்களின் பிழையல்ல. ஏனெனில் அவர்கள் அந்த மாயையை நம்பித்தான் பரமாத்மாவுக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கூடவே வட்டிக்கு வாங்கிய காணிக்கையையும் கொடுத்து பூஜை செய்கிறார்கள். காணிக்கையை வாங்கி கல்லாவை நிரப்பிவிட்டு தான் ஒரு எளிய மனிதன் என்று புரூடா விட்டால் அதை நம்புவதற்கு பக்தர்கள் என்ன மாங்காய் மடையர்களா?

இதை லேட்டாகத் தெரிந்து கொண்ட படக்குழுவினர் அந்த வசனத்தை வெட்டி விட்டு பரமாத்மாவின் காட்சிகளை அதிகப்படுத்தி படத்தை புத்துருவாக்கம் செய்தார்கள். அப்போதும் படம் பிக்கப் ஆகவில்லை. பக்தர்களின் பிச்சையால் ஒரு பில்லியனராக விசுவரூபமெடுத்திருக்கும் பரமாத்மா அன்றாட வாழ்வில் எளிமையாக இருக்கும் ஒரு ஆன்மீகவாதி என்று தன்னை வெளிப்படுத்துவதெல்லாம் ஊடகங்கள் முதல் பக்தர்கள் வரைக்கும் பிரபலமான ஒரு சங்கதி. அதையே திரைப்படமாக எடுத்தால்? ஊற்றிக் கொள்ளும் என்பதையே பாபா, குசேலனின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் போட்டுடைக்கிறது. படையப்பா, பாட்சா, அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் ஒரு கணக்கில் பரமாத்மாவின் இமேஜுக்குப் பொருத்தமாக இருப்பதால் ஓடியது. பாபாவில் பரமாத்மாவின் ஆன்மீக உபன்னியாசங்களை பக்தர்கள் சீண்டவில்லை. என்ன கேட்டாலும் கிடைக்கும் வரம் பெற்ற பாபாவிடம் வினியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட காசையாவது திருப்பிக் கொடுங்கள் என்று வரம் கேட்டனர்.

குசேலினிலும் அதுவே ஆக்சன் ரீப்ளேவாக ஓடுகிறது. நிஜக்கதையில் குசேலனை குபேரனாக மாற்றுவார் பரமாத்மா. எங்களை குபேரனாக்காவிட்டாலும் பரவாயில்லை பிச்சைக்காரர்களாக மட்டும் மாற்றி விடாதீர்கள் என்று பரமாத்மாவுக்காக மூதலீடு செய்த பணத்தை கேட்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் குசேலனை வெளியிட்ட வினியோகஸ்தர்கள் திரைப்படப் பெட்டியை சென்னைக்கு அனுப்பிவிட்டு நட்டகணக்குடன் தயாரிப்பாளர்களை முற்றுகையிட்டிருக்கிறார்கள். இதில் பரமாத்மா தலையிட்டு பிச்சை போட்டாலும் பெற்றுக் கொள்வோம் என்கிறார் ராயலசீமா பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சங்கத்தைச் சேர்ந்த சசிதர் பாபு. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வமோ பரமாத்மாவை நேரில் சந்தித்து தாங்கள் நிழல் குசேலனால் நிஜ குசேலனாக்கப்பட்டதை எடுத்துக் கூறி நிவாரணம் கேட்டிருக்கிறார்.

பரமாத்மாவும் உரியவர்களிடம் பேசி முதலீட்டில் 33 சதவீதத்தை திருப்பித் தர ஆவன செய்வதாகக் கூறினாராம். இதை பன்னீர் செல்வம் ஏற்றுக் கொள்ளாததோடு தாங்கள் 80 சதவீதம் நட்டமடைந்திருப்பதாகவும் அதில் 70 சதவீதமாவது திரும்பத் தரவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பரமாத்மாவை வைத்து பணத்தை டபுளிங் (இரண்டு மடங்கு கள்ளநோட்டை ஒரு மடங்கு நல்ல நோட்டாக மாற்றுவது) செய்து விடலாம் என்று மனப்பால் குடித்த பிரமீட் சாய்மீரா நிறுவனம் இது குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. திரைப்படத்தை பார்த்து விட்டுத்தான் வாங்கினார்கள் எனவே பணத்தை திருப்பித் தரும் பேச்சே இல்லை என்று கே.பாலச்சந்தர் கறாராக கூறிவிட்டாராம். இப்படி சகல தரப்பிலும் குசேலனுக்கான உள்குத்து ஆரம்பித்து விட்டது. ஒரு நூறு கோடி ரூபாயை பக்தர்கள் மட்டும் உண்டியலில் செலுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

பரமாத்மா என்றொரு இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் என்று பரமாத்மா, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் ஆணித்தரமாக நம்பி இறங்கினர். இதில் பரமாத்விற்கும், தயாரிப்பாளர்களுக்கும் உரியது கிடைத்து விட்டது. மற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள். மாட்டிக் கொண்டவர்களும் அப்பாவிகளல்ல. பரமாத்மா என்றொரு மூடநம்பிக்கையை வைத்து முட்டாள் ரசிகர்கள் ஆராதிக்கும் வரை கவலையில்லை என்று நம்பிக்கையுடன் தொழிலில் இருந்தவர்கள்தான். அந்த முட்டாள்கள் இப்போது படத்தைப் பார்ப்பதற்குத் தயாரில்லை. என்ன செய்யலாம்?

பரமாத்மாவின் திருவிளையாடலை பக்திப் பரவசமின்றி பக்தர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். பரமாத்மாவின் 20 கோடி சம்பளத்தை குறைக்க முடியுமா? அவரது சந்தை மதிப்பு அதிகம் என்பதால் இந்தக் கூலியைக் கொடுத்துதான் ஆக வேண்டும். பரமாத்மாவின் படத்தை சுப்பிரமணியபுரம் மாதிரி லோ பட்ஜட்டில் எடுக்க முடியுமா? அவரது இமேஜுக்காக படம் பார்க்க வரும் பக்தர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ரிச்சாகத்தான் எடுக்க முடியும். அவரது படத்தை ஒரு நியாயமான விலைக்கு விற்க முடியமா? பந்தயத்தில் இந்தப் பரமாத்மா குதிரை ஓடி ஜெயித்து விட்டால் ஜாக்பாட் அடிக்குமென்பதால் அநியாய விலைக்குத்தான் விற்க முடியும். பரமாத்மாவின் படத்தை உரிய திரையரங்க கட்டணத்தில் பார்க்குமாறு செய்தால் இந்தப் பிரச்சினை தீருமா? அப்படி வருசம் முழுவதும் ஓட்டினாலும் கூட பணம் கைக்கு வராது என்பதால் பிளாக்கில் 500,1000 என்றுதான் விற்க முடியும். கிருஷ்ண பரமாத்மா என்ற இந்த சூப்பர் ஸ்டாரின் இமேஜும், வர்த்தகமும் இணைந்து நடத்தும் இந்த சூதாட்டம் இப்படித்தான் இயங்க முடியும்.

இந்த சூதாட்டத்தில் பக்தர்கள் நினைத்தால் ஜாக்பாட்டும் கொடுப்பார்கள், மொட்டையும் அடிப்பார்கள். இரண்டையும் எப்போது எப்படி செய்வார்கள் என்பது பரம்பொருளுக்கே பிடிபடாத மர்மம். ஆனாலும் ஒவ்வொரு சூதாட்டத்திலும் பரமாத்மாவுக்கு மட்டும் நட்டம் வராது. வெற்றி பெறும் ஒவ்வொரு சூதாட்டமும் மக்கள் தாலியறுத்த பணத்தில்தான் நடக்கிறது என்பதுடன் பரமாத்மாவின் புராணத்தை முடித்துக் கொள்வோம்.

_____________________________________________

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

35

62ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

 

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தேசபக்தி பெருமிதம் கொஞ்சம் சுருதி கூடியிருப்பதற்கு காரணம் அபினவ் பிந்த்ரா வாங்கிய தங்கப்பதக்கம். துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அபினவ் தங்கம் வென்ற அன்று தேசபக்தி தனது உச்சத்தைத் தொட்டது. செல்பேசியின் குறுஞ்செய்திகள் இலட்சக்கணக்கில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களில் அபினவ் கதாநாயகனாக வலம் வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம், 112 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்று புள்ளிவிவரங்களின் படியும் அபினவ் வியந்தோதப்பட்டார். அரசாங்கங்கள் கோடிகளிலும் இலட்சங்களிலும் பரிசுப் பணத்தை அள்ளி வழங்கின. முத்தாய்ப்பாக அபினவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா 200 கோடி ரூபாய் மதிப்பில் டேராடூனில் கட்டிவரும் அபினவ் இன் எனும் நட்சத்திர ஓட்டலை மகனுக்கு பரிசாக வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற எவருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை காஸ்ட்லியான பரிசு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அபினவோடு போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்ற சீனவீரரையும், வெண்கலம் வென்ற பின்லாந்து வீரரையும் எவரும் சீண்டியிருக்க மாட்டார்கள். அல்லது இந்தப் போட்டிக்காக அபினவ் செலவழித்த தொகையினை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அபினவ் பயிற்சி எடுப்பதற்காக தனது மாளிகை வீட்டிலேயே குளிர்பதன வசதியோடு ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடத்தை தந்தை பிந்த்ரா கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்திய அரசு அளித்த பயிற்சியாளர் போதாது என்று வெளிநாட்டு பயிற்சியாளரை தனது சொந்தச் செலவில் அபினவ்அமர்த்திக்கொண்டார். இதுபோக மாதக்கணக்கில் வெளிநாடு சென்றும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஆக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கே அபினவுக்கு சில கோடிகள் தேவைப்பட்டதும், அந்தக் கோடிகளைப் பெறும் வசதி அவரது பின்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, ஓட்டல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு, என்று பல தொழில்களை தந்தை பிந்த்ரா நடத்தி வருகிறார். பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் இருக்கும் அபினவின் மாளிகையில் மட்டும் 100 பணியாட்கள் வேலை செய்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து வீடியோ கேம்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அபினவுக்கு திறமையின் காரணமாக மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. அவரது முதலாளியப் பின்னணிதான் தங்கம் வாங்கித் தந்திருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பணக்காரர்களின் பிள்ளைகள்தான் விளையாட்டிலும், அரசியலிலும், தொழில் நடத்துவதிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் துணைக் காப்டனான யுவாராஜ் சிங்கும் இதைப்பொன்றதொரு பின்னணியைச் சேர்ந்தவர்தான். இவரது தந்தை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இம்மாநிலங்களைச் சேர்ந்த இம்மேட்டுக்குடியினர் சாதி ஆதிக்கத்திற்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். எந்த அரசியல் கட்சியானாலும் இவர்களைச் சுற்றியே செல்வாக்கைத் திரட்ட முடியும். இவர்களது பண்ணைவீடுகளின் வரவேற்பறைகளில் இன்றும் துப்பாக்கிகள் கௌரவச் சின்னமாய் அலங்கரிக்கும். அந்தக்காலத்து ஜமீன்தார்களின் இளவல்கள் வேட்டையாடி தமது வீரத்தையும், புகழையும் வெளிப்படுத்தினார்கள். இப்போது கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு தமது குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர். பார்க்க சாது போல இருக்கும் அபினவ் தனது சிறிய வயதில் வேலைக்காரரின் தலையில் பாட்டிலை வைத்து தந்தையின் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவாராம். குறி தவறி அந்த தொழிலாளி இறந்திருந்தாலும் அபினவ் ஒரு கொலையாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். பணக்காரர்களின் வீட்டில் இவையெல்லாம் சகஜம்தானே!

வேலையாளின் உயிரைப் பணயம் வைத்த அபினவைக் கண்டிக்காத பெற்றோர் அவனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஊக்குவித்தனராம். இதுதான் ஒரு மேட்டுக்குடி குலக்கொழுந்து தங்கம் வென்ற கதை. இதை இந்தியாவின் பெருமிதம், நூறுகோடி மக்களின் சாதனை என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடுவதில் பயனில்லை. அபினவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும், வசதிகளும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? உலகமயமாக்கத்தின் விளைவால் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விளையாட்டு மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அபினவின் வெற்றி இந்தியாவில் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தும் என்று கூறுகிறார்களே, அதன்படி ஒரு சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விரும்பினாலும் ஈடுபட முடியுமா?

இந்தியாவில் விளையாட்டு உணர்வு கிரிக்கெட்டினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் வேகமாகக் கொல்லப்பட்டு வருகிறது. கால்பந்து முதலான விளையாட்டுகளில் உள்ளூர் போட்டியானாலும், உலகப் போட்டியானாலும் விதிமுறைகள் மாறுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் கிளப் கலாச்சாரம் விளையாட்டை வர்த்தகமாக மாற்றியிருந்தாலும் ஆட்டத்திறன் வளர்வதில் குறைவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் என்று வைத்துக்கொண்டு ஆட்டத்திற்கொரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். இது ஆட்டத்தை வளர்ப்பதற்கல்ல, ரசிகரின் மேலோட்டமான வெறியை வளர்ப்பதற்கே பயன்படுகிறது. நொறுக்குத் தீனியைச் சுவைப்பது போல கிரிக்கெட்டை ரசிப்பதும் மாறிவிட்டது. வர்த்தகத்தினால் ஒரு விளையாட்டு அழிக்கப்பட்டது என்றால் அது கிரிக்கெட்டிற்கு மட்டும் முதன்மையாய்ப் பொருந்தும். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜொலித்தால் மட்டுமே தங்களது வருமானம் அதிகரிக்கும் என்பதால் வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடித்த நேரம் போக ஆட்டத்தில் கண்டபடி அடித்து ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது யார் திறமை குறித்து கவலைப்படப் போகிறார்கள்?

70களில் கிளைவ் லாய்டு தலைமையில் ஆடிய உலகின் கனவு அணி ஆட்டத்திறமையெல்லாம் இனி காண்பதற்கில்லை. பழம்பெருசுகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மாகமித்யங்களைக் கதைக்கும்போது நுகர்வு கலாச்சார இளைய தலைமுறையோ 20 ஓவர் கிரிக்கெட்டின் பின்னால் அலறியவாறு ஓடுகிறது. முதலாளிகளால் கிரிக்கெட் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிரிக்கெட்டின் வெறிக் காய்ச்சலால் மற்ற விளையாட்டுக்களும் இந்தியாவில் அழிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய ஹாக்கி அணி இடம்பெறவில்லை என்பது சிலரின் கவலையாக இருக்கிறது. இருபது வருடங்களாக அதிகார வர்க்கத்தின் ஊழல் கலந்த அலட்சியத்தாலும், கிரிக்கெட்டுக்கு கொட்டி கொடுக்கும் முதலாளிகள் ஹாக்கியை கண்டு கொள்ளாததாலும் இந்த விளையாட்டு தேசிய விளையாட்டு என்ற பெருமையை என்றோ இழந்துவிட்டது. திறமை அடிப்படையில் டெண்டுல்கரை விட ஹாக்கி வீர்ர் தன்ராஜ் பிள்ளை பல மடங்கு உயர்ந்தவர். முன்கள ஆட்டத்தில் சிறுத்தைபோல சீறுவதாக இருக்கட்டும், நூறு மீட்டர் தூரத்திலும் கழுகுப் பார்வையுடன் பந்தை சகவீரருக்கு கைமாற்றிக் கொடுப்பதிலும், பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், மின்னல் வேகத்தில் குடைந்து செல்வதிலும் மொத்தத்தில் அவர் ஹாக்கியின் ஒரு கவிதை. ஆட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தபோது பல வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். இந்த வீரரை இந்தியா எப்படி நடத்தியது?

டெண்டுல்கர் மேன்ஆப்திமேட்ச் விருதுக்காக உலகின் விலையுர்ந்த காரைப் பரிசாகப் பெறும்போது, தன்ராஜுக்கு ஒரு சைக்கிள் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது. டெண்டுல்கருக்கு விளம்பரங்களின் வழி கோடிகளில் வருமானம் கொட்டிய போது தன்ராஜை முதலாளிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதில் ஹாக்கி என்பதால் மட்டும் பிரச்சினையில்லை. தோற்றத்திலும், பேச்சிலும் தன்ராஜ் சாதரண மனிதராகவே காட்சியளிப்பார். விளம்பரங்களில் நட்சத்திர வீரர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் மேட்டுக்குடி அழகியல் டென்டுல்கரிடமும், சானியா மிர்சாவிடமும் இருக்கிறது என்றால் தன்ராஜுக்கும், பி.டி உஷாவுக்கும் அது இல்லை. ஆக ஒரு விளையாட்டு வீரர் நட்சத்திரமாக மாறுவதற்கு அவரது திறமை மட்டுமல்ல, விளம்பரங்களில் அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் சேர்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.

இவையெல்லாம் கூட பிரச்சினையல்ல, தன்ராஜ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவர் முன்வைத்த ஆலோசனைகளுக்காக போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாபில் அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொன்று குவித்த கொலைகார போலீசுப் படைக்கு தலைமை வகித்த கே.பி.எஸ் கில் என்பவர்தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். வீரர்களை அடிமைகளாக நடத்தியதிலும், ஊழலின் மூலம் சில வீர்ர்களைச் சேர்த்ததிலும் இந்த சம்மேளனம் புகழ்பெற்றது. தற்போது இவர்களின் ஊழல் அம்பலமாகி சம்மேளனம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நட்டம்? தன்ராஜின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டியது நடக்காமல் போனதுதான். இப்படியெல்லாம் அவமானப்பட்டபோதும் தன்ராஜ் இன்னமும் விளையாட்டை நேசிக்கிறார். தன்னைப் போலச் சிறந்த வீரர்களை உருவாக்கும் முகமாக ஒரு அகாடமியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய விளையாட்டின் தலை சிறந்த வீரருக்கே இதுதான் கதி எனும்போது மற்ற விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

விளையாட்டின் உணர்ச்சியை வர்த்தகம் உறிஞ்சிக்கொண்ட பின் என்ன மிஞ்சும்? காரியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் நடுத்தர வர்க்கம் தனது வாரிசுகளை டென்னீசிலும், கிரிக்கெட்டிலும், நீச்சலிலும், சதுரங்க ஆட்டத்திலும் வளர்ப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மாயையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி இதனால் விளையாட்டு ஒன்றும் வளரப் போவதில்லை. இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டுமென்றால் அது இன்றைய விளையாட்டை ஆக்கிரமித்திருக்கும் மேட்டுக்குடியினரால் நடக்கப் போவதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் உழைக்கும் சிறார்களிடமிருந்தே அந்த வீரர்கள் தோன்ற முடியும். கடற்கரை மீனவக் கிராமங்களிலிருந்து நீச்சல் வீரர்களும், மலையில் வசிக்கும் மக்களிடமிருந்து தொலைதூர ஓட்டப் பந்தய வீரர்களும், சுமைதூக்கும் தொழிலாளிகளிடமிருந்து பளுதூக்கும் வீரர்களும், கால்பந்தை நேசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறந்த கால்பந்து வீரர்களும், அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்குப் பெண்களை அளிக்கும் கேரளத்திலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளும் தோன்ற முடியாதா என்ன?

ஆயினும் இன்றைய சமூக அமைப்பு அதை சாத்தியப்படுத்தப் போவதில்லை. கல்வியிலும், விவசாயத்திலும், தொழிலிலும், சுகாதாரத்திலும் அப்புறப் படுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வாழ்வதற்கே வழியில்லாத போது வீரர்கள் மட்டும் எப்படித் தோன்ற முடியும்? ஆம் விளையாட்டில் ஒரு புரட்சி வரவேண்டுமென்றால் அது முதலில் அரசியலில் இருந்துதான் தொடங்கமுடியும். இந்தப் பார்வை இந்தியாவுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலகைச் சேர்ந்த எல்லா ஏழை நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக மக்களை விளையாட்டின் பெயரால் ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக், உண்மையில் விளையாட்டு உணர்ச்சியையும், சர்வதேச உணர்வையும் வளர்க்கிறதா என்ன? நாளொரு வண்ணம் ஈராக்கில் குண்டு போட்டு அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் கொல்லும் நேரத்தில் அதிபர் புஷ் பெய்ஜிங்கில் அமெரிக்க விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். ஒரு வீரர் மக்களைக் கொல்வதற்காக துப்பாக்கியைச் சுடுகிறார். மற்றொரு வீர்ர் தங்கப்பதக்கத்திற்காகச் சுடுகிறார். இதில் சர்வதேச உணர்வு எப்படி வளர முடியும்? நாடுகளை புவியியலின் எல்லைக் கோடு மட்டும் பிரிக்கவில்லை, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு அரசியல்தான் உண்மையில் நாடுகளைப் பல பிரிவினைகளாக வேறுபடுத்துகின்றது. வல்லரசு நாடுகளின் இராணுவ வலிமையை அவற்றின் ஆக்கிரமிப்பு வெளிப்படுத்தும்போது சமூக வலிமையை ஒலிம்பிக் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் கௌரவத்தை நிலைநாட்டுவதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் என்றால் அது மிகையல்ல. ஹிட்லர் காலத்திலிருந்து இன்றைய புஷ் காலம் வரையிலும் ஒலிம்பிக் வரலாறு அதைத்தான் வழிமொழிகிறது.

ஒலிம்பிக்கின் சர்வதேச உணர்வு இதுவாக இருக்கும்போது விளையாட்டு உணர்வு மட்டும் தனியாக வளராது. பெரும் நிறுவனங்களின் வர்த்தக வலிமையில்தான் ஒலிம்பிக் ஜோதி பிரகாசிக்கிறது. வெற்றி பெறும் வீரர்கள் மனித உடலின் எல்லையற்ற ஆற்றலை வரும் சந்ததியினருக்கு கைமாற்றித் தருவதில் உவகை கொள்வதில்லை. கையெழுத்திடும் விளம்பர ஒப்பந்தங்கள்தான் அவர்களின் இலக்கு. இதன் மூலம் வீரர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அறிமுகமாகும் புதிய தலைமுறை வீரர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படும் போது விளையாட்டின் நோக்கம் நமத்துப் போகிறது. ஆகவே மேற்கத்திய நாடுகளில்கூட விளையாட்டு உணர்வினால் வீரர்கள் தோன்றுவதில்லை. வீரர்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே கண்டு கொள்வதும் பயிற்சி கொடுப்பதும் அங்கே தனியொரு தொழிலாக வளர்ந்திருக்கிறது.

இது சாதாரண மக்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அச்சுறுத்தும் அளவுக்கு விசுவரூபமெடுத்திருக்கிறது. இங்கே அபினவ் பிந்த்ரா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் அங்கே சாதாரணம். பந்தயக் குதிரைகளை வளர்ப்பது போல மேற்குலகின் வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஒரு வீரனின் பலம், பலவீனங்கள், தசையின் சக்தி, குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேவைப்படும் சதையாற்றல், உடம்பின் நெளிவு சுளிவுகள், விளையாடும் போது அதில் ஏற்படும் மாற்றம், எடுக்கவேண்டிய உணவு, கலோரியின் அளவு, சிந்தனையின் கவனத் திறன், அத்தனையும் கணினி, உளவியல், உடலியல், நரம்பியல் முதலான நிபுணர்களின் உதவி கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகளின் வீரர்களை மனிதர்கள் என்று அழைப்பதை விட வார்க்கப்பட்ட இயந்திரங்கள் என்று சொல்லலாம். இதனால் ஒரு வீரன் வெற்றி பெறுவான் என்பதைக் களத்தில் நடக்கும் போட்டி தீர்மானிப்பதை விட முன்கூட்டியே அறிவியில் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது எனலாம். இத்தகைய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்காது எனும்போது விளையாட்டு உணர்வு மட்டும் எல்லோரிடமும் எப்படி வளரும்?

ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றியே ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார்கள். சின்னஞ்சிறு நாடான கியுபா இதை ஒரு சமூகச் சாதனையாகவே சாதித்திருக்கிறது. அங்கே சமூகமயமாக்கப்பட்ட விளையாட்டிலிருந்து வீரர்கள் தோன்றுகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமை இல்லாமலேயே குத்துச் சண்டை, வாலிபால், தடகளம் முதலியவற்றில் கியூபா வீரர்கள் சாதித்திருக்கின்றனர். அமெரிக்காவின் வர்த்தக மல்யுத்த நிறுவனங்கள் கியூபாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களை விலைக்கு வாங்க முயன்ற போது அவ்வீரர்கள் அதை மறுத்திருக்கின்றனர். இத்தகைய முயற்சிகள்தான் மனித உடலின் ஆற்றலை விளையாட்டில் காண்பிக்க முடியும் என்பதோடு மனித குலம் முழுவதையும் விளையாட்டு உணர்வோடு சமூக உணர்வையும் ஒன்று கலப்பதைச் சாத்தியப்படுத்தும். உலகின் நிகழ்ச்சி நிரல் வல்லரசு நாடுகளின் கையிலிருக்கும்போது இந்த உண்மையான விளையாட்டு உணர்ச்சி தோன்றப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியிலிருந்துதான் புரட்சி தோன்ற முடியும் என்ற அரசியல் உண்மை விளையாட்டிற்கும் பொருந்தும்.

அதுவரை ஒலிம்பிக்கை நாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. இந்தியா பதக்கம் பெறாதது குறித்து வருத்தப்படவும் தேவையில்லை.

_______________________________

அமெரிக்கா: சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள் !

12

2020ஆம் ஆண்டிற்குள் இராணுவத்திலிருக்கும் துருப்புக்களில் 30 சதவீதம் பேரை நீக்கிவிட்டு எந்திர ரோபோக்களை நியமிப்பதென அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் திட்டமிட்டிருக்கிறதாம். ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா விமானங்கள், கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் எந்திரங்களையெல்லாம் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய துணைச்செயல்களைத் தாண்டி இனிவரும் ரோபோக்கள் போர்க்களத்தில் இறங்கி சண்டையே போடுமாம்! வீடியோ விளையாட்டுக்களிலும், அறிவியல் புனைகதைத் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகியிருக்கும் இந்தக் கற்பனை ரோபோக்கள் உண்மையிலேயே வரப்போகிறார்கள் என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். எந்தப் பயனுமில்லாத இந்த ஆச்சரியத்தை ஒத்திவைத்து விட்டு இதன் அரசியல் பரிமாணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.


இவற்றினை ரோபோக்கள் என்பதைவிட தானியங்கிக் கட்டளைகளை நிறைவேற்றும் எந்திரங்கள் என்கிறார்கள் இதன் வடிவமைப்பாளர்கள். கவச வாகனங்களை ஓட்டுவதும், வெடிகுண்டுகளைச் செயலிழக்கவைப்பதும், முன்களத் தாக்குதலில் இறங்கி போரிடுவதுமென இதன் செயல்பாடுகள் நீள்கின்றன. இது ஒருபுறமிருக்க இந்த ரோபோக்களை இராணுவத்தில் சேர்ப்பதால் வரும் அறவியல் பிரச்சினைகளைக் குறித்து மட்டும் அமெரிக்க அறிவாளிகள் கவலைப்படுகிறார்கள். அந்த அறத்தின் கவலை என்ன?

எந்திரம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படப்போகிறது. ஆனாலும் எதிரில் வருபவர் அப்பாவியா, முதியவரா, பெண்களா, குழந்தைகளா, ஆடு-மாடா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரையும் சுட்டுத்தள்ளினால் என்ன செய்வது? இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தன்னறிவுடன் அவற்றை வடிவமைக்க முடியாதே? மாட்ரிக்ஸ் திரைப்படம் போல எந்திரங்கள் சுயமாக சிந்தித்து உலகை ஆளும் கற்பனையெல்லாம் நிஜத்தில் சாத்தியமில்லை. ஒரு மனிதன் எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக போரிடுகிறானோ அந்த அளவுக்கு ரோபோக்களை வடிவமைப்பது சாத்தியமென்றாலும் அதன் இயக்கு விசை மனிதனிடமே இருக்குமென்பதால் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள் அதன் பொறியியலாளர்கள். சண்டையிடும் ரோபோக்களைத் தூரத்தில் ஒரு கணினித் திரையில் பார்த்தவாறு பொத்தானை அழுத்தி இயக்கப்போவது மனிதனென்பதால் இது பாதுகாப்பான போர்முறைதான், வில்லங்கம் ஏதுமில்லை என்றும் கூறுகின்றனர்.

மற்றபடி இந்த எந்திரமயமாக்கத்தால் செய்யப்படும் ஆட்குறைப்பால் பலர் வேலை இழப்பார்களே என்பது கூட அவர்களது கவலையில்லை. அந்த வசதியான கவலையாளர்கள் எவரும் ஈராக்கில் போய் சண்டையிடப் போவதில்லை. இராணுவத்தில் சேரும் பெரும்பான்மையினரில் வாழவழியற்ற கருப்பின மக்கள்தான் அதிகம். இருப்பினும் இது குறித்து நாமும் கவலைப்படத் தேவையில்லை. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தில் மனிதன் இருந்தாலென்ன, எந்திரங்கள் இருந்தாலென்ன?

எந்திரப் பொம்மைகள் அப்பாவிகளைச் சுட்டுக்கொல்வது குறித்து அவர்கள் கவலைப்படுவது ஆடுகளுக்காக ஓநாய்கள் அழுவது போலத்தான். இப்போது பல நாடுகளிலிருக்கும் உயிருள்ள வீர்ர்களைக் கொண்ட அமெரிக்க இராணுவம் அப்பாவிகளைச் சுடாமலா இருக்கிறது? ஜப்பானில் அணுகுண்டு போட்டு இரண்டு நகர மக்களைக் கூண்டோடு அழித்தது எந்திரமா என்ன? வியட்நாமில் முழுநாட்டையே ஏஜெண்ட் ஆரஞ்சு வெடிமருந்தினால் அழித்தார்களே, அது யாருடைய வேலை? கிராமம் கிராமமாக வியட்நாமியப் பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, ஆண்களைச் சித்திரவதை செய்து கொன்றதையெல்லாம் வரலாறு குறித்திருக்கிறது.

இவையெல்லாம் நேற்று நடந்த கதையென்றால் ஆப்கானிலும், ஈராக்கிலும் என்ன நடக்கிறது? அப்பாவி மக்களைக் கொன்ற கணக்கு சில இலட்சங்களைத் தாண்டும். அமெரிக்க ஏவுகணைகளும், கிளஸ்டர் குண்டுகளும் மக்கள் குடியிருப்புகளைத் தாக்கி அழிக்கும் ஒவ்வொரு முறையும், இராணுவத் தளபதிகள் தெரியாமல் நடந்து விட்டதென போகிறபோக்கில் சப்புக்கொட்டினர். ஒரு வேளை ரோபோக்கள் வந்துவிட்டால் இந்த அட்டூழியங்கள் குறையத்தானே செய்யும்?

அபுகிரைபில் செய்த வக்கிரங்களை படம் பிடித்து மகிழ்ந்தது போல ரோபோக்கள் நிச்சயம் செய்யாது எனலாம். குவான்டனாமோ சிறையிலும், டீகோகார்சியா தீவிலும், எண்ணற்ற போர்க்கப்பல்களிலும், எல்லையற்ற சித்திரவதையால் துன்பப்படும் ஆயிரக்கணக்கான கைதிகளையெல்லாம் ரோபோக்கள் துன்புறுத்தப் போவதில்லை. ஆனால் ரோபோக்களையும் அப்படி வடிவமைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

விண்வெளி ஆய்வுகளுக்கு நிகரான செலவு பிடிக்கும் இந்த ரோபோக்களை வடிவமைக்கும் திட்டத்தில் அமெரிக்கா இறங்கியதற்கு சில காரணங்கள் இருக்கலாம். என்னதான் அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் போரென்று வரும்போது அமெரிக்காவும் தனது வீர்ர்களைப் பலிகொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. வியட்நாமிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் வீர்ர்களின் சவப்பெட்டிகள் நூற்றுக்கணக்கில் வந்திறங்கியது, அமெரிக்க மக்களிடம் போரெதிர்ப்பு உணர்வைத் தூண்டியது உண்மை. வியட்நாமிலிருந்து அமெரிக்கா தோல்வியுற்று பின்வாங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த உள்நாட்டு எதிர்ப்பை தவிர்க்க வேண்டுமெனில் வீர்ர்களின் இறப்புக் கணக்கை குறைத்துக் காண்பிப்பது அவசியம். அதற்கு ரோபோக்கள் உதவுமென்பது ஒரு எதிர்பார்ப்பு. ரோபோக்கள் அழிக்கப் பட்டால் யாரும் கண்ணீர் விடமாட்டார்கள் என்பதோடு சென்டிமென்ட் அரசியலும் எழாது.

தற்போதே ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் அறிவியல் தொழில் நுட்ப உதவியினால் நேரடி கள மோதலின்றி பாதுகாப்பான போரைத்தான் நடத்துகிறது. போராளிகள் நெருங்க முடியாத அதி உயர் குண்டு வீசும் விமானங்கள் மூலமும், பாரசீக வளைகுடாவில் பாதுகாப்பான தொலைவில் இருக்கும் போர்க்கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், ஈராக்கை சின்னா பின்னாமாக்கிய பிறகே அமெரிக்க வீரர்கள் எதிர்ப்பதற்கென்று ஆளில்லாமல் ஈராக்கில் இறங்கினார்கள். தற்போது வட்டியும் முதலுமாய்ச் சேர்த்து வாங்குகிறார்கள் என்பது வேறு விசயம். இங்கே நாம் சொல்ல வருவது பாசிஸ்ட்டுகள் தங்கள் நிழலைக் கண்டு கூட அஞ்சுவார்கள் என்பதைத்தான். எவ்வளவு வசதி இருந்தாலும் ஒரு ஆக்கிரமிப்பு படைக்கு நேரிட்டு போரிடும் தைரியம் நிச்சயம் இருக்காது. இந்த அணுகுமுறைக்கு ரோபோக்கள் பொருத்தமாய் இருக்கின்றன.

ஒரு ஆக்கிரமிப்பு போரை முழுவதும் ரிமோட் கண்ட்ரோலிலேயே நடத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இன்னும் எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் இறக்கவேண்டுமோ தெரியவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரசியலை நிறைவேற்ற மனிதர்கள் அடங்கிய துருப்புக்கள் என்ன செய்தனவோ அவற்றைத்தான் ரோபோக்களும் செய்யப் போகின்றன. இதைத்தாண்டி இதில் அறவியல் பிரச்சினை ஏதுமில்லை.

கடைசியாக ஒரு விசயம். அடுத்த அதிபர் தேர்தலில் புஷ் வேண்டுமா, ஒரு ரோபோ வேண்டுமா என்று அமெரிக்க மக்களைக் கேட்டால் யாரைத்தெரிவு செய்வார்கள்? புஷ்ஷை விட ஒரு ரோபோ முட்டாள்தனமாக செயல்படாது என்பதால் பொம்மையைத்தான் தெரிவு செய்வார்கள்!

_________________________________________

ரவி ஸ்ரீநிவாஸ்: நாங்கள், அவர்கள்……….நீங்கள்?

7

From ரவி சீனிவாஸ் to “சுரணையற்ற இந்தியா”, 2008/08/04 at 7:04 மாலை

தலிபான்கள் புத்தர் சிலைகளை இடித்தனர், இஸ்லாமியர அல்லாதோரை பாரபட்சத்துடன் நடத்தினர், துருக்கியில் ஆர்மினிய கிறித்துவர் இனஒழிப்பு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதற்கெல்லாம் யார் சாரி சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் பிற மதத்தினர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குவீர்களா.

 

From ரவி சீனிவாஸ் to “சுரணையற்றஇந்தியா”, 2008/08/04 at 6:57 மாலை

2002ல்நடந்தது குறித்து நீங்கள் எழுதுங்கள்.மொகலாய படையெடுப்பில்நடந்ததிற்கு,இடிக்கப்பட்ட கோயில்களுக்கு பழி வாங்க,பழைய கணக்கைத் தீர்க்க பாப்ரி மசூதியை இடித்தோம் என்று அவர்கள் எழுதுவார்கள். இருவர் தர்க்கமும்ஒன்றுதான், கால அளவுதான் மாறுபடுகிறது. 2002ல் குஜராத்தில் நடந்ததற்கோ அல்லது நூறாண்டுகள் முன்பு நடந்ததற்கோ இன்று  பழிவாங்குகிறேன் என்று யாரையும் கொல்ல, பொதுச்செத்துக்களை சேதம் செய்ய, பிறருக்கு ஊறு விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 1979ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் தன் ஆதரவு அரசை நிறுவியது. அதுதான் முதல் தவறு. அதற்கு தொடர்ச்சியாக அமெரிக்கா-பாக் ஒத்துழைப்பில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயிற்சி பெற்று, சோவியத் ஆதரவு அரசிற்கு எதிராக போரிட்டனர்.உங்கள் தர்க்கத்தின்படி மூலவினை சோவியத் செய்த செயல் என்றல்லவா கொள்ள வேண்டும். அதை வசதியாக மறைத்துவிட்டு எழுதுவீர்கள்.

இந்த்துவம் இல்லாத பாகிஸ்தானில் ஏன் குண்டு வெடிக்கிறது, சூடானில் ஏன்இனப்படுகொலை நடக்கிறது,பாலஸ்தீனத்தில் ஏன் ஹமாஸும், PLO பிரிவும் மோதிக்கொள்கின்றன என்று கேட்டால் பதிலாக இந்தியா என்ற நாடு இருப்பதால்தான் குண்டுகள் வெடிக்கின்றன, இந்து என்றமதம் இருப்பதே பழி வாங்கும் உணர்வை தூண்டுகிறது. எனவே இந்தியாவை ஜிகாதிகளிடம் கொடுத்துவிட வேண்டும், காஷ்மீரையும் அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும், இந்துக்கள் இஸ்லாத்தினை ஏற்று கோயில்களை,தங்கள் வழிப்பாட்டுத்தலங்களை இடித்துத் தள்ள வேண்டும்என்று தர்க்கபூர்வமாகநீங்கள் எழுதினால் நான் வியப்படையமாட்டேன்.

 

From ரவி சீனிவாஸ் to கருகும் கனவுகள் !, 2008/08/04 at 6:25 மாலை

இந்தியாவில்தமிழ்நாடு மட்டும்தான் மதுவை அனுமதித்துள்ளதா, பிற மாநிலங்களில் 100% மதுவிலக்கு நிலவுகிறதா.மது உற்பத்தியும்,விநியோகமும்,நுகர்வும் பலமாநிலங்களில் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆண்கள் குடிப்பதால்,சீக்கிரம்இறக்கிறார்கள் எனவே விதவைகள் எண்ணிக்கை அதிகம் என்பது ஏற்கத்தக்கதாக இல்லையே.நந்தனுக்கு இதுக் கூடப் புரியாதா?

“ஐ.நா சபையின் ஆய்வுப்படி இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில்ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம் (குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம்.அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே விதவைகளின் விகிதம்தமிழ்நாட்டில்தான் அதிகமாம்”

60+ வயதுகளில் விதவைகள் இல்லையா. அகில இந்திய விபரம் சராசரி என்றால் அதை வைத்துக் கொண்டு ஆரம்பகட்ட கருதுகோளைக் கூட வைக்கமுடியாது.மாநிலவாரியாக,
வயதுவாரியான தகவல் இல்லாமல் மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எழுதுவதை நம்ப படிப்பவர்களெல்லாம் முட்டாள்களா.

‘Why can’t you give information which says that drinking habit has improved the standard of living of the Indians (in particular Tamilians) or the society?’ I have not claimed that drinking has improved the standards of living.If you cant understand what I had written it is better you start agains from Class I.

‘It is because, in our society opportunity is not available equally to all. For example, Hindu religion tells that barber’s son has to do that work only’. For how long you will blame Hindu religion.Even the author states that workers from other countries in Asis go to Gulf in search of greener pastures. The problem lies not with Hindu religion but with lack of employment in many countries.

*******

வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள்!!, கருகும் கனவுகள், சுரணையற்ற இந்தியா ஆகிய வினவின் கட்டுரைகளுக்கு பதிவர் ரவி சீனிவாஸ் மேற்கண்டவாறு மறுமொழிகளை ஒரு தேர்ந்த அறிஞர் போல ஏராளமான விவரங்களுடன் எழுதியிருந்தார். அறிஞரின் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதிலளிப்பதைவிட அக்கருத்துக்களைத் தோற்றுவித்த அவரது இதயத்தைக் கேள்வி கேட்கிறது இப்பதிவு

ரவி சீனிவாஸ் ரொம்பவும் உணர்ச்சிவயப்படுகிறார். அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் தான் நடுநிலையாக சிந்திப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கவும் அவர் முயற்சி செய்கிறார். அதுதான் கொஞ்சம் அசட்டுத்தனமான முயற்சியாக இருக்கிறது. புத்தர் சிலையை இடித்ததற்கு தாலிபான்கள் சாரி சொல்லாதபோது, மோடி மட்டும் என்ன இளித்தவாயனா என்பதுதானே உங்கள் கேள்வி ரவி சீனிவாஸ்? அதை அப்படியே வெளிப்படையாகக் கேட்டிருக்கலாமே! மோடி ஒரு இந்து தாலிபான் என்பதை நாங்கள் மறுக்கவில்லையே1

2002 குறித்து நீங்கள் எழுதுங்கள், முகலாயர் அட்டூழியங்களுக்குப் பழிவாங்க மசூதியை இடித்த்தாக அவர்கள் எழுதுவார்கள், என்று குறிப்பிடுகிறீர்கள். நாங்கள் யாரென்பது தெரிந்ததுதான். அவர்கள் சங்க பரிவாரம். அதிருக்கட்டும். நீங்கள் யார்? இரண்டும் சாராத நடுநிலையாளரா? அப்படியானால் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். தினமணி வாசகர் கடிதங்களைத் தொடர்ந்து வாசித்தால் அந்த நடுநிலைக் கலையை நீங்கள் கற்றுத் தேறலாம்.

ஆப்கானிஸ்தானை ரசியா ஆக்கிரமித்தது நியாயம் என்று வினவு சொல்லவில்லையே. சொல்வீர்கள் என்று வாய்க்குள் வார்த்தையைத் திணித்து பிறகு அதற்கு பதில் சொல்கிறீர்கள். இது புத்திசாலித்தனமாகத் தோன்றும் தரம் தாழ்ந்த விவாதமுறை. சரி, ரசியா ஆப்கானை ஆக்கிரமித்தால் அமெரிக்கா ஒரு பின்லாடனை உருவாக்கித்தான் ஆப்கானுக்கு விடுதலை வாங்கித்தர வேண்டுமா? இந்த வாதத்தின் மூலம் பின் லாடன் உருவாக்கப்பட்டதற்கான நியாயத்தை நீங்கள்தான் வழிமொழிகிறீர்கள் என்பது கூடப் புரியவில்லையா உங்களுக்கு?

முன்பு நடந்ததற்காக இன்று பழிவாங்க யாருக்கும் உரிமை இல்லை, அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். என்று கூறுகிறீர்கள். அமெரிக்கா இராக்கின் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இராக்கில் எந்த ஒரு அந்நியநாடும் தலையிடுவதை ஏற்கமுடியாது என்று இந்திய அரசாங்கம் விட்ட அறிக்கையைப் போல இருக்கிறது இது. அல்லது பாரதிய ஜனதா கையும் களவுமாகப் பிடிபட்டுவிடும் சந்தர்ப்பங்களில், சோ தெரிவிக்கும் கண்டனத்தைப் போலவும் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் தெகல்கா வீடியோ பற்றி சோ வின் கருத்தைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் துக்ளக் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பது தெரியவரும்.

வரலாற்றுப் பழிதீர்ப்பது என்ற சொற்றொடரை இந்திய அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது யார்? அவ்வாறு பழிவாங்குவதை நியாயப்படுத்தி அந்த அரசியலால் நாட்டை இரத்தக்காடாக்கி ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது ஒரு கட்சி. அந்தக்கட்சியின் தலைவர்களைத் தண்டிப்பதைப் பற்றி நீங்கள் எழுதவில்லையே! இசுலாமிய தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பை நியாயப்படுத்தி வினவு எழுதவில்லை. அத்தகைய பழிவாங்கும் அரசியலுக்கான நியாயத்தை முன்மொழிந்தவர்கள் அல்லது வழிமொழிகிறவர்கள் சங்க பரிவாரத்தினர்தான். சங்க பரிவாரத்தைக் கண்டிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இசுலாமியத் தீவிரவாதிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும், இல்லையென்றால் நீ ஜிகாத் கட்சியா, கோயில்களை இடித்து மசூதி ஆக்கிவிடலாமா என்று மிரட்டுவதும் ரொம்ப பழைய உத்தி.

என்ன செய்வது, நாசூக்காக இந்துத்துவா பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி (பா.ஜ.க) முதல் ஸ்வபன்தாஸ் குப்தா (இந்தியா டுடே) வரையிலான ஜி க்கள் எல்லோருமே உணர்ச்சி வசப்படும்போது, வேட்டியை ஏத்திக் கட்டுகிறார்கள். உள்ளே இருக்கும் காக்கி அண்டர்வேர் தெரிந்துவிடுமே என்று அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதில்லை. உங்களை சங்க பரிவாரம் என்று முத்திரை குத்த விரும்பவில்லை. அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். மோடிக்கு ஓட்டுப் போட்ட எல்லோரும் சங்கபரிவாரத்தினர் என்றா சொல்ல முடியும்?

போகட்டும். டாஸ்மாக் மேட்டர் பற்றி ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? அது ஒரு செய்தியின் அடிப்படையிலான பதிவு (கருகும் கனவுகள்). ஆய்வுக் கட்டுரை அல்ல. மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளின் முன்னால் சந்திக்கும் டிராபிக் ஜாமை அன்றாடம் பார்ப்பதினால் அப்படி ஒரு ஆய்வு தேவையில்லை என்று கருதி விட்டோம். இதுதான் உண்மை. குஜராத்தில் 2002 இல் நடந்த்து கலவரமா இனப்படுகொலையா என்று முடிவுக்கு வருவதற்கு செத்தவர்கள் 2000 பேரா அல்லது 1986 பேரா என்ற புள்ளிவிவரம் அவசியமில்லை அல்லவா? அது போலத்தான் இதுவும்.

“சுரணையற்ற இந்தியா”

16

“எத்தனை வருஷங்களுக்கு இந்த காரணத்தை சொல்லி மக்களை பலியிடுவார்கள்.
இந்த பாரதத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றது, பிரச்சனை எல்லாருக்கும் தான் வருகிறது. சும்மா நடந்ததையே நினைத்து நினைத்து யாரும் இப்படி அப்பாவி மக்களை பழிவாங்கிகொண்டிருக்கவில்லை.”—“வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள்” என்ற எமது முந்தைய கட்டுரைக்கு குந்தவை எனும் பதிவர் எழுதிய மறுமொழி இது.

நடந்ததை மறக்கச் சொல்லுகிறார் குந்தவை. பெரியார் கிரிட்டிக் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரோ நடப்பது சர்வதேச பயங்கரவாதம் எனச் சித்தரிக்கிறார். ஊடகங்களும் இத்தகைய கருத்தையே பரப்புகின்றன. “இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடாக இருந்தும், அவமானகரமாக அதை எதிர்க்கும் அரசியல் உறுதியைக் காட்ட மறுக்கிறது சுரணையற்ற இந்தியா” என்று கூறுகிறது இந்தியா டுடேயின் அட்டைப்படக் கட்டுரை. இந்தப் பதிவை எழுதி முடித்த பிறகுதான் இந்தியா டுடேயைப் பார்த்தோம். அந்தத் தலைப்பும் நன்றாகத்தான் இருக்கிறது….”சுரணையற்ற இந்தியா”.

“சும்மா நடந்ததையே நினைத்து அப்பாவிகளைப் பழிவாங்கலாமா?” என்று கேட்கிறார் குந்தவை. ஒரு சிறிய திருத்தம். குற்றவாளிகளைத்தான் பழிவாங்க முடியும். அப்பாவிகளைப் பழிவாங்க முடியாது. ஒருவேளை குற்றவாளிகள் பழிவாங்கப்பட்டிருந்தால் அது குறித்து நாம் கவலைப்படப் போவதில்லை. ஆனால், ஒரு பாவமும் அறியாத ஏழை எளிய மக்கள் வெடிகுண்டுகளால் பிய்த்தெறியப்படும்போது! அந்தக் கொடூரத்தை யார்தான் நியாயப்படுத்த முடியும் – சங்க பரிவாரத்தினரைத் தவிர.

‘சும்மா நடந்ததையே நினைத்து’,,,,

நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. இருந்தாலும், ‘அன்று நடந்ததற்காகத்தான் இன்று நடக்கிறது’ என்பதையாவது நேர்மையாக ஒப்புக் கொள்கிறாரே குந்தவை. அந்த வரையில் மகிழ்ச்சி.

ஆனால், குந்தவை ஒப்புக் கொள்ளும் இந்த உண்மையை, ‘பக்கத்து வீட்டு மாமி’ சுஷ்மா சுவராஜோ, ‘எழுச்சி பெற்ற இந்து’ வினய் கட்யாரோ ஒப்புக் கொள்ளவில்லை. “எம்.பி க்களை விலைக்கு வாங்கிய அயோக்கியத்தனத்திலிருந்து நாட்டைத் திசை திருப்பவும், முஸ்லிம்களின் ஒட்டுக்களை அறுவடை செய்யவும் காங்கிரசு நடத்தும் சதிதான் இந்தக் குண்டுவெடிப்பு” என்பது சுஷ்மா புலனாய்வின் முடிவு.

“அதெப்படி குண்டு வெடித்து 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கரெக்டாகக் கண்டுபிடிக்க முடியும்?” என்று கேட்காதீர்கள். கோத்ரா ரயில் பெட்டி எரிந்த மறுநாளே ‘இது ஐ.எஸ்.ஐ சதி’ என்று அத்வானி கண்டுபிடிக்கவில்லையா? “பிணங்களின் மீதேறி பதவி கைப்பற்றும் கலையை பாரதிய ஜனதாவிடமே போட்டுக் காட்டுகிறதா காங்கிரசு? திருப்பதிக்கே லட்டா?” என்று கேட்கிறார் சுஷ்மா.

சுஷ்மாவின் குற்றச்சாட்டின்படி அப்சல் குருவுக்கு அடுத்தபடியாக மன்மோகன் சிங்கைத் தூக்கில் போட வேண்டும். ‘துப்புக் கொடுப்பவர்களுக்கு 51 இலட்சம் சன்மானம்’ என்று மோடி அறிவித்திருக்கிறாரே, அதையும் மாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது. ‘அது அவரது தனிப்பட்ட கருத்து’ என்று மாமியைக் கழட்டி விட்டுவிட்டது பாரதிய ஜனதா தலைமை.

‘பயங்கரவாதி’ மன்மோகன் சிங்குடன் ஒன்றாக நின்று போஸ் கொடுக்கிறார் மோடி. “குஜராத் படுகொலைக்காகத்தான் இசுலாமியத் தீவிரவாதிகள் பழிவாங்குகிறார்கள்” என்ற குந்தவையின் கருத்தையும் கூட மோடி ஏற்கவில்லை. என்ன நடக்கிறது இந்த நாட்டில்? அப்பாவி ஹிந்துக்கள் இவ்வளவு பேர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருந்தும், குஜராத்தில் ஒரேயொரு முஸ்லிம் கூட பதிலுக்குக் கொல்லப்படவில்லையே! மோடிக்கு நியூட்டனின் விதி கூட ஞாபகத்துக்கு வரவில்லையே! பூனை சைவமாகி விட்டதா?

“நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை” என்பதனால்தான் குண்டு வெடிப்பு நடந்த கையோடு அதை மோடியே மறந்து விட்டாரா?! “மோடியே மறந்து விட்டார், அப்புறம் என்ன, 2002 குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் மறந்துவிட வேண்டியதுதானே” என்கிறாரா குந்தவை?

மறக்கலாம். ஆனால் அதற்கு ஒரு சிறிய முன்நிபந்தனை இருக்கிறது. அநீதியால் பாதிக்கப்பட்டவன் தனது பாதிப்பை மறக்க வேண்டுமானால், அந்த அநீதியை இழைத்தவனும், அவனைச் சார்ந்த சமூகமும், தான் இழைத்த அநீதியை நினைவில் வைத்திருக்க வேண்டும். நினைவில் வைத்திருப்பது மட்டுமல்ல, அதற்காக வருந்த வேண்டும். பரி காரம் தேட வேண்டும். அநீதி இழைத்த குற்றவாளிகளைத் தண்டிக்கவும் வேண்டும். இத்தனையும் நடந்த பின்னர்தான் பாதிக்கப் பட்டவர்களுக்கும் அவர்களது சுற்றத்துக்கும் தங்களுக்கு நடந்த அநீதி மறக்கத் தொடங்கும்.

ஆனால் நாம் காண்பது என்ன? 2002 இனப்படுகொலைக்குப் பரிசாக முதல்வர் பதவியை மோடிக்கு வழங்கினார்கள் குஜரத்தின் பெரும்பான்மை இந்துக்கள். கார்ப்பரேட் உலகத்தின் தாரகை மோடியை, டெவில்ஸ் அட்வொகேட் நிகழ்ச்சியில் நேர்காணல் செய்தார் கரண் தாப்பர். “குஜராத் சம்பவங்களுக்காக நீங்கள் ஒரு சின்ன ஸாரி சொல்லக்கூடாதா?” என்ற லெவலுக்கு இறங்கி ஒரு கேள்வி கேட்டார். உடனே பேட்டியை அத்தோடு முறித்துக் கொண்டு வெளியேறினார் மோடி.

ஒரு சின்ன ஸாரி. கலீலியோவை சித்திரவதை செய்ததற்கு வாடிகன் தெரிவித்தது போன்ற நயாபைசா பெறாத ஒரு ஸாரி. கரண் தாப்பர் கோரியது இவ்வளவுதான். ஆனால் 2002 இல் நடந்த்தை நினைவுபடுத்துவதைத்தான் மோடி விரும்பவில்லையே!

நடந்ததையெல்லாம் மோடி மட்டுமா மறக்க விரும்புகிறார்? மரண வியாபாரி என்று வாய்தவறி உளறியதை மறுநாளே மறக்க விரும்பினார் சோனியா. பாரதிய ஜனதாவின் நேற்றைய பங்காளிகளான தி.மு.க வும் பா.ம.க வும் சந்திரபாபு நாயுடுவும் ஒமர் அப்துல்லாவும் கூட குஜராத்தை மறக்கத்தான் விரும்புகின்றனர். அன்று படுகொலையை நியாயப்படுத்திய மாயாவதியும், இன்று மாயாவதியுடன் கூட்டு சேர்ந்திருக்கும் மார்க்சிஸ்டுகளும் கூட குஜராத்தை மறக்கத்தான் விரும்புகின்றனர்.

குந்தவை அவர்களே, இப்படி ஒரு பச்சை இரத்தப் படுகொலையை எல்லோரும் மறந்து விட்டதனால்தான், ‘அவர்கள்’ நினைவில் வைத்திருக்கிறார்கள்.

2002 இனப்படுகொலையின் போது பக்கத்து வீட்டை ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு தேசாயோ, படேலோ ‘அது சலீமின் வீடு’ என்பதைப் ‘பெருந்தன்மையுடன்’ மறந்துவிட முடியும். ஆனால் வீட்டைப் பறிகொடுத்து விட்டு, அதே ஊரின் அகதி முகாமில் கையேந்தி நிற்கும் ஒரு சலீம், தனது வீட்டை எப்படி மறக்க முடியும்? தான் புணர்ந்த சிறுமிகளின் உறுப்புகளையும், கொன்ற உடல்களின் முகங்களையும் ரிச்சர்டும், பாபு பஜ்ரங்கியும் (2002 இனப் படுகொலையின் போது தாங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றி தெகல்காவிற்கு வீடியோ வாக்குமூலம் கொடுத்த கிரிமினல்கள்) மறந்துவிட முடியும். கொல்லப்பட்ட உடல்களின் உறவுகளும், உறுப்புகளின் உணர்வுகளும் எப்படி மரத்துவிட முடியும்?

மறக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நீதி கேட்டு உச்சநீதி மன்றம் போகலாம். மனநோயாளி ஆகலாம். மருந்து குடித்துச் சாகலாம். ‘இந்தியன் முஜாகிதீன்’ ஆகலாம். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது வேறு விசயம். ஆனால் அவர்களால் ‘மறக்க முடியாது’ என்பதுதான் பொது அறிவுக்குக் கூடப் புலப்படும் உண்மை. ஆனால் குந்தவை போன்றோரால் மட்டும் புரிந்து கொள்ள முடியாத உண்மை.

ஐந்து வயது ஹீரோ தனது அப்பாவைக் கொன்ற வில்லனை ஞாபகம் வைத்திருந்து, அவனைக் கொல்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு, கிளைமாக்ஸ் காட்சியில் வெட்டிக் கொன்றால் அந்த ‘வெறி’ வெள்ளி விழா கொண்டாடுகிறது. என்ன செய்வது! நண்பன் தனக்கு இழைத்த அநீதியை ‘அண்ணாமலை’ மறக்கக் கூடாது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் தனது கண் முன்னே மகளைக் கற்பழித்திருந்தாலும் அப்துல்லாவாக இருக்கும் பட்சத்தில் அவன் மறக்க வேண்டும்!

‘கோட்டா ஒழிக’ என்று இடஒதுக்கீட்டை எதிர்த்துக் குமுறி வெடித்த டெல்லி எய்ம்ஸ் மாணவர்களும் கூட மறக்கத்தான் சொல்கிறார்கள். “என்னுடைய கொள்ளுப்பாட்டனோ, எள்ளுப்பாட்டனோ எவனோ எப்பவோ யாருக்கோ செய்த அநீதிக்காக, அப்பாவிகளாகிய நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என்று நியாயம் கேட்கிறார்கள். அந்த வரலாற்றைச் சொல்வதற்கு நமது வாய் திறப்பதற்குள், கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ‘நான்தான் எனது கொள்ளுப்பாட்டன்’ என்று தரிசனம் தருகிறார்கள்.

எனக்கொரு கிணறு, உனக்குத் தனிக்கிணறு; எனக்கொரு சுடுகாடு, உனக்குத் தனிச்சுடுகாடு; எனக்கு கிளாஸ், உனக்குக் குவளை; எனக்கு ஊர், உனக்கு சேரி.. ஆயினும் இந்துவே, தீண்டாமையை மறந்துவிடு! அப்சலுக்குத் தூக்கு, மோடிக்கு முதல்வர் பதவி – ஆயினும் மறந்துவிடு! சோம்நாத் ரதயாத்திரை முதல் மோடியின் கவுரவ யாத்திரை வரை அத்தனையையும் மறந்துவிடு!

சகோதரர்கள் சொத்துத் தகராறை மறந்து விட்டால், பங்காளிகள் வரப்புத் தகராறை மறந்து விட்டால், வங்கிக்காரன் கொடுத்த கடனை மறந்து விட்டால் இந்த நாடுகூட நீதிமன்றங்களையே மறந்து விடலாம். பணத்தை விட மலிவானவையா என்ன மானமும் உயிரும்? கைநீட்டி அடித்த புருசன் சும்மனாச்சிக்கும் ஒரு சாரி கூட சொல்லாவிட்டாலும், (அடித்ததையே நினைத்துக் கொண்டிருக்காமல்) அவனை அணைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் உண்டா, தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களிடம் அத்தகைய கற்புநெறியைத்தான் குந்தவை கோருகிறாரோ!

இந்து – முஸ்லிம், ஆர்.எஸ்.எஸ் – கம்யூனிஸ்டு என்ற முரண் எதிர்வுகளின் கருத்துமோதல் கிடக்கட்டும். தார்மீக உணர்வு தோற்றுவிக்கும் கோபத்தையும் கூட ஒதுக்கிவிடுவோம். குறைந்தபட்சம் பொது அறிவுக்குப் பொருந்தி வருகிறதா இந்த புத்திமதி?

ராமஜென்ம பூமி, தாஜ்மகாலில் சிவன் கோவில், ராமன் பாலம் என எதைச் சொன்னாலும் நம்ப வேண்டும். அதே ராமன் அதே இடத்தில் அந்த சமுத்திர ராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க ‘பொது நீர்நிலையில் தண்ணீர் எடுத்து தீட்டுப்படுத்திய தீண்டத்தகாத இழிமக்கள் மீது’ பாணம் போட்டு அழித்தான் என்கிறார் வால்மீகி. சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அதே வால்மீகி ராமாயணத்தின் அதே சருக்கத்தில்தான் இந்த ஆதாரமும் இருக்கிறது. ஆயினும் அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. மறந்துவிட வேண்டும்.

‘மறக்கச் சொல்வதை மறக்க வேண்டும், நினைக்கச் சொல்வதை நினைக்க வேண்டும்’ என்று மனிதமனத்தை ஆட்டிப் படைக்க வேண்டுமானால் அது மாட்ரிக்ஸ் உலகில்தான் சாத்தியம். அதைத்தான் மோடியும் விரும்புகிறார்.

குஜராத்தின் பணவாடையை முகருங்கள், பிணவாடையை மறந்துவிடுங்கள் என்கிறார் மோடி. விதர்பாவை மறந்து விடுங்கள், பங்குச் சந்தையை நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் மன்மோகன். அபுகிரைபை மறந்து விடுங்கள், அதே சிறையில் நேற்று சதாம் நடத்திய சித்திரவதைகளை மட்டும் நினைவில் வையுங்கள் என்கிறார் புஷ்.

என்ன ஆச்சரியம்! குண்டு வைத்ததற்காகவும், வைக்க நினைத்ததற்காகவும் கைது செய்யப்படுபவர்களின் பெயர்கள் எல்லாம் இசுலாமியப் பெயர்களாகவே இருந்தும்கூட “இது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடுமோ’ என்ற சந்தேகம் சொல்லி வைத்தாற்போல யாருக்குமே வரவில்லை.

ஏனென்றால் இது சர்வதேச பயங்கரவாதமாம்! அமெரிக்காவில் வெடிக்கிறது, லண்டனில் வெடிக்கிறது, இராக்கில் வெடிக்கிறது, இங்கேயும் வெடிக்கிறதாம்!

இப்படி சர்வதேசங்களிலும் பயங்கரவாதிகளைத் தோற்றுவித்த சர்வதேச அகிம்சாவாதி யார்? பின்லாடனை உருவாக்கிய முன்லாடன் யார்? சர்வதேச பயங்கரவாதத்தின் தயாரிப்பாளராக சவூதி ஷேக்குகளைத் தயார்செய்த பைனான்சியர் யார்? பாகிஸ்தான் மதரஸாக்களுக்குத் தீவிரவாதப் பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்த வாத்தியார்கள் யார்?

அதையெல்லாம் கேட்கக்கூடாதாம். ஏனென்றால் இது பதிலி யுத்தமாம்! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிவீதம் ஏறிக்கொண்டே இருக்கிறதாம். ஐ.டி துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தைக் கண்டு டென்சனாகி பில் கேட்சுக்கே பி.பி ஏறுகிறதாம். இதையெல்லாம் பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலில்தான் பாகிஸ்தான் குண்டு வைக்கிறதாம்.

இதென்ன காப்டனின் வல்லரசு கதையைச் சுட்டா மா..திரி தெரிகிறதே என்கிறீர்களா? சுட்ட கதைதான். காப்டனின் கதையை மன்மோகன் சுட்டு, மன்மோகன் கதையை மோடி சுட்டு .. கிளைமாக்ஸ் காட்சியில் தீவிரவாதியைச் சுட்டு .. ஒரு வழியாகக் கதையை முடிக்கலாம் என்றுதான் முயற்சி பண்ணுகிறார்கள். முடியவில்லையே! ஏன்?

குந்தவை அவர்களே, ஒரிஜினல் வல்லரசு சொல்வதை ஒரே ஒரு முறையாவது காது கொடுத்துக் கேளுங்களேன்!

இராக்கில் பெண்கள் தற்கொலைப்படைப் போராளிகளாக மாறுவது அதிகரித்து வருகிறதாம். “பெண்கள் இப்படித் தற்கொலைப் படையில் சேருவதற்குக் காரணம் பழிவாங்கும் வெறி. அநேகமாக இவர்களெல்லாம் பெற்றோரையோ சகோதரர்களையோ பிள்ளைகளையோ பறிகொடுத்தவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் இராக்கில் உள்ள பாக்குபா அமெரிக்கப் படைத்தளத்தின் கமாண்டர், கெவின் ரெயான்.

“பழிவாங்கும் வெறி என்பது ஒரு வலிமையான உந்து விசை. இதை பின் லாடனின் ஆட்கள் துல்லியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” – இது இராக் ராணுவ கர்னல் அலி அல் கார்க்கி யின் வாக்குமூலம். (டைம்ஸ் ஆப் இந்தியா, 02.08.08).
லஷ்கர் ஏ தொய்பா.. ஜிகாத்.. சர்வதேச பயங்கரவாதம்.. எல்லாம் உண்மைதான். யார் இல்லை என்றார்கள்? ஆனால் காம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி லஷ்கர் ஏ தொய்பாவில் எப்படியாவது பிளேஸ்மென்ட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகப் பலர் முண்டியடிப்பதைப் போலவும், அவர்களையெல்லாம் அப்படியே கொத்தாக அமுக்கி பொடாவில் போட்டு விட்டால், பயங்கரவாதத்தை ஒரேயடியாக ஒழித்து விடலாம் என்பதாகவும் அத்வானி அண்டு கோ கூறிக்கொண்டிருக்கிறது.

மதரஸாக்களில் உருவாக்கப்படும் ஜிகாதிகளை அரசு பொடாவில் உள்ளே தள்ளலாம். ஏன், மதராஸாக்கள் மொத்தததையும் ரவுண்டப் பண்ணி பொடாவில் தள்ளி விடலாம். ஆனால் இந்துத்துவத்தின் சோதனைச்சாலையால் உருவாக்கப்படும் ஜிகாதிகளை எப்படிப் பொடாவில் போடுவது? காஷ்மீர் முதல் திருநெல்வேலி வரை அவர்களை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? அதைக் காட்டிலும் இந்துத்துவத்தை ரவுண்டப் பண்ணி உள்ளே தள்ளுவது புத்திசாலித்தனமில்லையா, குந்தவை அவர்களே!

அதாவது, நினைத்துக் கொண்டே இருப்பவர்களைத் தேடிப் பிடிப்பதை விட, மறந்து விடச் சொல்பவர்களை நோக்கி நமதுகவனத்தைத் திருப்பலாமே! இப்படிச் சொல்வதனால் தீவிரவாதி, கம்யூனிஸ்டு என்றெல்லாம் முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடாதீர்கள்.

இது கலப்படமில்லாத சுத்தமான பாரம்பரிய அறிவியல். “எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும்” என்பது பழமொழி. பழமொழியைப் பொடாவிலும் போட முடியாது. என்கவுன்டரும் பண்ண முடியாது.

________________________________

கருகும் கனவுகள் !

20

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் செய்து கொண்ட தற்கொலைக் கணக்கைப் பார்ப்போம். 2003இல் 40, 2004இல் 70, 2005இல் 84, 2006இல் 109, 2007இல் 118, 2008 ஜூன்வரைக்கும் 79 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள் (THE TIMES OF INDIA, 28.7.08). இந்த ஆண்டு தற்கொலை செய்தவர்களில் 23 பேர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதிப்பேர் கேரளா மற்றும் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தோரே கணிசமாக உள்ளனர். காரணம் வளைகுடா நாடுகளில் இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். மேலும் இந்தப் புள்ளிவிவரம் ஒரு நாட்டிற்கு மட்டும்தான் என்பதால் ஏனைய வளைகுடா நாடுகளின் விவரங்களைச் சேர்த்தால் கணக்கு இன்னும் அதிகமாகும். வேலை செய்யும்போது விபத்தில் கொல்லப்படும் தொழிலாளர்களின் கணக்கு இதில் சேரவில்லை.

ஏழ்மையிலும், அவலத்திலும், வேலையின்மையிலும் இழுபட்டுச் செல்லும் வாழ்க்கையில் வானத்து நட்சத்திரமாக தூரத்தில் நமக்கொரு வாழ்க்கை உண்டெனும் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்வது வளைகுடா வேலை வாய்ப்புகள். தமிழகத்தின் படித்த நடுத்தர வர்க்கம் நகரத்து தகவல் தொழில் நுட்பத் துறையின் பசுமையைக் காணும் வாய்ப்பைப் பெற்றிருப்பதற்கு மாறாக படிக்காத வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் உள்நாட்டில் நம்பிக்கையளிக்கும் வாய்ப்புகள் எல்லாம் பாலைவனமாய்க் காய்ந்து கிடக்கின்றன.

காட்டு வெள்ளத்தில் இழுபட்டுச் செல்லும் வாழ்க்கையில் கரையேறத் துரும்பில்லாத நிலையில் கிராமத்தில் ஓரிருவர் அரபு நாடுகளுக்கோ, மலேசியாவுக்கோ சென்றால் நம்பிக்கை துளிர் விடத் துவங்குகிறது. சென்றவர்கள் அடைந்த சிரமங்கள் மறைந்து, கொண்டு வரப்போகும் அதிருஷ்டங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதற்கு மேலும் காத்திருக்காமல் வெளிநாடு செல்லும் ஆசை, கனவுலகிலிருந்து இறங்கி நனவை சாத்தியமாக்க முனைகிறது. அந்த முயற்சியில் குடும்பமே தன்னை மறந்து எதிர்பார்ப்புடன் ஈடுபடுகிறது. விளையாத துண்டு நிலத்தை விற்பது, குண்டுமணித் தங்கத்தைச் சேகரித்து அடகுவைப்பது, இறுதியில் பெரும் தொகையைக் கந்து வட்டிக்கு வாங்குவது என முயற்சிகள் தீவிரமடைகின்றன.

பிறகு அந்த நாளும் வருகிறது. ஊர் கூடி வாழ்த்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்திருக்க விமானமேறி வெளிநாடு செல்கிறார்கள். இதில் திருட்டு விசாவில் செல்கிறவர்கள், சுற்றுலா விசாவில் போனவர்கள், கடவுச்சீட்டை அடமானம் கொடுத்து அல்லல் படுபவர்கள், இறுதியில் மலேசியச் சிறைகளில் சாட்டையடிபட்டு வாடுபவர்கள், அடுத்து எப்படியாவது இந்தியா திரும்பமாட்டோமா என்று தோல்வியுறுபவர்களின் கதையை விடுவோம். முறையான வழிகளில் சென்றவர்களாவது முழுநிறைவை அடைந்து தன் குடும்பத்தில் விளக்கேற்றுகிறார்களா?

அரபு நாடுகளின் சம்பள விகிதம் முன்பைக்காட்டிலும் கணிசமாக குறைந்திருக்கிறது. குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்கு ஏனைய தெற்காசிய நாடுகளின் பஞ்சைப்பராரிகள் தயாராக இருப்பதால் 80களின் பொற்கால வளைகுடாப் பணி இன்று இல்லை. இந்த உண்மை அங்கு சென்ற பிறகே தொழிலாளர்களுக்கு புரியவருகிறது. இருந்தாலும் கடந்த காலத்தின் எச்சம் மனதில் வேர் விட்டிருப்பதால் அரபு மயக்கம் குறைந்தபாடில்லை.

மற்ற தற்கொலைகளுக்கும் வளைகுடாவில் நடப்பதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. அவல வாழ்வில் மகிழ்ச்சியையும், புதிய வாசல்களையும் ஒரு பண்புமாற்றம் போல திறக்கச்செய்யவேண்டிய இந்தக் கனவு மொட்டிலேயே கருகுவது ஏன்? கடன் ஏற்படுத்தும் நெருக்கடியும், குடும்பத்தின் எதிர்ப்பார்ப்பும்தான் காரணங்கள். வெளிநாடு செல்வதற்கு விசா எடுக்க, போக்குவரத்து, தரகர் கழிவு என்று சில இலட்சங்களைச் செலவு செய்யக் கை கொடுப்பது கந்து வட்டிக் கடன்தான். இந்தக் கடனை அடைக்குமளவு வெளிநாட்டின் வேலையும் சம்பளமும் அமைவதில்லை. கிடைக்கும் சம்பளத்தின் பாதியை தங்குமிடம், உணவு போன்றவற்றிற்காக நிறுவனங்கள் பிடித்துக்கொள்கின்றன. தனியாகத் தங்கினாலும் கால் வயிற்றுக் கஞ்சி மட்டும் குடித்துக் கொண்டு ஓட்டினாலும் செலவு குறைவாதாயில்லை. சில வருடங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு ஓடிவிட்டால் நிச்சயம் வழி பிறக்குமெனத் தொழிலாளிகள் காத்திருக்கின்றனர்.

இடையில் இந்தக் கஷ்டங்களை அறியாத குடும்பத்தினர் எதிர்பார்ப்புகளை தெரிவித்தவாறு நெருக்குகின்றனர். தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு, சொந்த வீடு கட்டுவது, மனை வாங்கிப் போடுவது, எல்லாவற்றுக்கும் மேல் வெளிநாடு செல்ல வாங்கிய கடனை அடைக்கவேண்டிய நிர்ப்பந்தம் எல்லாம் சேர்ந்து கெடு விதிக்கின்றன. இந்த அழுத்தத்தில் தத்தளிக்கும் தொழிலாளிகள் எதிர்காலத்திலாவது நல்ல சம்பளம் கிடைக்கும் என்று அரபு நாடுகளிலேயே கடன் வாங்குகின்றனர். நிறுவனத்தில் கொத்தடிமைபோல வாழ்வேன் என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு முன்பணம் வாங்குகின்றனர். வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை என்றால் கடன் அட்டைகளை வாங்குகின்றனர். அதுவும் போதாது எனும்போது கந்து வட்டிக்கு கடனும் வாங்குகின்றனர். ஊர்ப்புறங்களில் குடிகொண்டிருக்கும் கந்து வட்டி கடல் கடந்தும் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது.

எனினும் இந்த ராஜ்ஜியத்தில் அடிமைகளுக்கு கதிமோட்சம் இல்லை. எதிர்பார்த்த வாழ்வு இனி கிடைக்கப் போவதில்லை எனும் அவல யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் தொழிலாளிகள் அதற்கு விடைதேடும் முகமாக தமது உயிரைத் துறக்கும் துணிச்சலான முடிவை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். பொறுப்புணர்வோடும், வீட்டிற்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற பாசமும் நிறைந்திருக்கும் இந்தத் தொழிலாளிகள் எவ்வளவு மன உளைச்சலுடன் இந்த முடிவை எடுத்திருப்பார்கள்? கடல் கடந்து தீர்வு தேடிய கனவு இடையிலேயே கருகிப் போகிறது. மகன் வழி திறப்பான் என்று ஆவலுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. ஆயினும் இந்த சோக முடிவுகள் ஊருக்குள் கருக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மோகத்தைக் கலைத்து விடுவதில்லை.

அமெரிக்காவின் கணிப்பொறி நிறுவனங்களுக்காக இலட்சங்களில் சம்பளம் வாங்கச் செல்லும் மேட்டுக்குடியினருக்கு எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யும் அரசு வளைகுடாவின் தொழிலாளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. விபத்திலோ, தற்கொலையிலோ இறந்துபோகும் தொழிலாளிகளின் பிணங்கள் தாய்நாடு வருவதற்கே சில வாரங்கள் ஆகிவிடுகின்றது. இதற்கான நிவாரணத் தொகையை நிறுவனங்களிலிருந்து வாங்குவதற்குக்கூட வளைகுடாவிலிருக்கும் இந்தியத் தூதரகங்கள் உதவுதில்லை. வாழ்ந்த போதும், வாழ்வு முடிந்த போதும் மதிப்போ, மரியாதையோ ஏழைகளுக்கு இல்லை. மொத்தத்தில் வளைகுடா கனவுகளின் மறுபக்கம் இதுதான்.

சலிக்காமல் கனவுகளை ஏற்றுமதி செய்யும் தமிழகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? விதவைகள் வாழ்வுரிமை இயக்கம் எனும் அமைப்பு துவங்கியுள்ள கலங்கரை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஒரு ஐ.நா சபையின் ஆய்வுப்படி இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில் ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம் (குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம். அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம். இந்த அதிக விதவை விகிதத்திற்கு என்ன காரணம்?

தமிழ்நாடு குடிகாரர்களின் தேசமாக மாறிவருவதுதான் இந்த நிலைக்கு காரணம். டாஸ்மாக் விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்றால் குடிப்பவர்களின் எண்ணிக்கையையும், குடியின் அளவையும் ஊகித்தறியலாம். நகரமயமாக்கம் உருவாக்கியிருக்கும் புதிய உடழைப்பு வேலைகள் காரணமாக உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை சாராயக்கடையில் அள்ளிக் கொடுக்கின்றனர். மிதமாக ஆரம்பிக்கும் குடிப்பண்பு பின்பு மிதமிஞ்சியதாக மாறி குடிக்கு அடிமையாக மாற்றிவிடுகிறது.

எனவே இந்தப்பிரிவினர் 40, 50 வயதுகளில் கல்லீரல் கெட்டு மரணத்தைத் தழுவுகின்றனர். இம்மக்கள் பார்க்கும் கடின உழைப்பு வேலைகள் உடல் சோர்வை மறக்கக் குடித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதும் உண்மைதான். குடிக்கும் நடுத்தரவர்க்கம் போதிய உணவை எடுத்துக்கொள்வதாலும், அவர்களுக்கு கடின உழைப்பு வேலைகள் இல்லை என்பதோடு குடியும் அளவுக்குட்பட்டு இருப்பதாலும் இளவயது மரணம் இவர்களிடத்தில் பொதுவில் இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கமோ சத்தான உணவைச் சாப்பிட வாய்ப்பில்லாமலும், இருக்கும் காசை குடியில் கொட்டுவதாலும் மரணம் வாசலைத் தட்டுகிறது. ஆக திருமணம் ஆன பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிறார்கள்.

விதவைகள் மற்றவர்களைப் போல வாழ்வதும், மறுவாழ்வு பெறுவதும் இயல்பாக முடியுமென்ற நிலை இன்னும் வரவில்லை. விதவைகளைப் புறக்கணிக்கும் பிற்போக்குச் சமூகமாகவே தமிழகம் நீடிக்கிறது. புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத் திரிகிறாள் என்று பேசுவதும், மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும் சமூகத்தில் சாதாரணம்தான். அவ்வளவு ஏன் மேற்கண்ட விதவைகள் சங்கம், கூட்டம் நடத்துவதற்குக்கூட பல திருமண மண்டப உரிமையாளர்கள் புனிதத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுத்துவிட்டனராம்.

பெண்கள் கைம்பெண்களாவதும், வளைகுடா தொழிலாளர்கள் தற்கொலை செய்வதும் நாளிதழ்களின் செய்தியலைகளில் ஒதுங்கிவிட்ட இருபிரிவினரின் வாழ்க்கை மட்டுமல்ல. அதன் சங்கிலித் தொடர் வாழ்க்கையில் அல்லல் படும் மக்கள் ஏராளம் இருக்கின்றனர். தோல்வியும், விரக்தியும், சலிப்பும், சோர்வும் இன்னபிற சோகங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் “இந்தியா முன்னேறுகிறது, வல்லரசாகிறது” என்று சொல்வது சிரமம் இல்லையே?

______________________________________________

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

36

மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?

நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!

16

தனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.

இனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று:

விஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம்! நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே!
ஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்!

விலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்து தின்ற நினைவுகள்.. பிறகு மீண்டும் நாகர்கோவில்.

ஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா? நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன்.

இரண்டு நாட்கள் கழித்து “கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை” ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரி்க்கிறார். “ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா?” உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது.

மொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் – ரிலையன்ஸ் பிரஷ்.

முகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்..

ஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது.

“முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்துவருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது? பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்” என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன்.

மிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், “அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது” என்கிறார் ஜெயமோகன்.

இதென்ன, “ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்” என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது.
இதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை.

“பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா” என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் “அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்?” என்று ஒரு பாமரன் கேட்டானாம். “இதென்னடா நியூஸென்ஸ. அதெல்லாம் வியவகாரிக சத்யம்” என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த த்த்துவஞானி.
“திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை.

தெரியவேண்டியதில்லையே! காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் எ்ன்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்?

அதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களு்க்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு:

தனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம்! கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல! தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்த்து. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது.

பிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்த்து. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, “முடியாது” என்று கைவிரித்தார்கள்.

இதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல் ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பீ.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன்.  தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை.

சென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்த்து திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று  சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

லாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள்.

இது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும்! அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள்.

உண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

உண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே! “தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்” என்கிறார் ஜெயமோகன்.

வறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய  சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே!
இருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு “சுட்டபழம் சுடாத பழம்” ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை.

ஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே! அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது.
வீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப் பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல.

இவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்த்தால் வந்த்தல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும்.

ஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைபூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன்.

மனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான்.

இந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது.

“எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்” என்று கூறும் ருசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

(இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்)

________________________________

275 + 256 + வந்தே மாதரம் = 541

9

‘வரலாற்று முக்கியத்துவம்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தலாமென்றால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது பணநாயகமே என்ற உண்மை பலருக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும், ‘புனிதமான’ அந்த நாடாளுமன்றத்திற்குள் புனிதமற்ற ஒரு சாக்குப்பையில் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொண்டுவந்து அவிழ்த்துக் கொட்டினார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள். ஜனநாயகம் என்பது பணநாயகமே என்று தொண்டை வலிக்கக் கத்தி மக்களுக்கு நம்மால் புரிய வைக்கமுடியாததை இந்த ஆடை அவிழ்ப்பு நடனத்தின் மூலம் அம்பலமாக்கிக் காட்டிய அத்வானி கம்பெனிக்கு நம் நன்றி. வந்தே மாதரம்!


இதற்கு முன்னர் உறுப்பினர்கள் விலைபேசப்பட்ட குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றம் சந்தித்திருக்கிறது. சூட்கேஸைக் கூட சந்தித்திருக்கிறது. அந்தரங்கமாகத் தனியறைகளில் மட்டுமே பணத்தை அதன் நிர்வாண வடிவில் தரிசித்திருக்கிறார்கள் நம் உறுப்பினர்கள். இன்று தணிக்கை செய்யமுடியாத நேரலை ஒளிபரப்பில் நாடே அதனைத் தரிசித்தது. இந்த கொடுக்கல் வாங்கல் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை  ஒளிபரப்புவது நாடாளுமன்றத்தின் உரிமையில் தலையிடுவதாகிவிடும் என்பதால் சபாநாயகரிடம் டேப்பை ஒப்படைத்து விட்டதாகவும் சொன்னார் சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய். வாக்கெடுப்புக்கு முன்னரே அந்த புளூ பிலிமைப் போடு என்று கத்தினார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள்.  ரேப் சீனைப் போட்டபிறகு கல்யாணம் எப்படி நடத்த முடியும்? தலைமைப் புரோகிதர் சோம்நாத் அதற்கு ஒப்பவில்லை. படம் போட முடியாது. கமிஷன் வேண்டுமானால் போடுகிறேன் என்று தீர்ப்பளித்தார். இப்படியாக மயிரிழையில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. வந்தேமாதரம்!

முன்னர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு நரசிம்ம ராவ் பணம் கொடுத்த விவகாரம், வாக்கெடுப்புக்குப் பின்னால்தான் அம்பலமானது. இப்போது முன்னரே அம்பலமாகிவிட்டதே, இதனால் வாக்கெடுப்பே செல்லாமல் போய்விடுமோ என்று அரசியல் சட்ட வல்லுநர்களிடம் கேள்வி எழுப்பினார்கள் தொலைக்காட்சிக் காரர்கள். பணம் கொடுத்தது உண்மைதான் என்றாலும், சம்மந்தப்பட்ட உறுப்பினர் கட்சி மாறி ஓட்டுப்போட்டதும் உண்மைதான் என்றாலும், இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நிரூபிக்கப்படாத வரை அந்த ஓட்டு செல்லாது என்று கூறமுடியாது என்று விளக்கமளித்தார் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி. மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமை, நமது நாட்டின் பரிதாபத்துக்குரிய விலைமாதர்களுககு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. எப்படியோ, குற்றவியல் சட்டத்தின்படியும் ஜனநாயகத்தின் ‘கற்பு’ தப்பித்து விட்டது. வந்தேமாதரம்!

கட்சிகளின் அதிகாரப்பூர்வமான முடிவின்படி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தால் காங்கிரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய வாக்குகள் 262. அரசுக்கு எதிரான வாக்குகள் 276. கட்சி விசுவாசத்தைக் கைவிட்டு ‘ஒரு இந்தியன் என்ற முறையில்’ உறுப்பினர்கள் வாக்களித்ததன் விளைவாக 262 என்பது 275 ஆகி விட்டது. நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசிய ராகுல் காந்தி, கட்சிக்காரன் என்ற எல்லையைத் தாண்டி ஒரு இந்தியன் என்ற உணர்வுடன் சிந்திக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்தபோது, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. ஆனால் மாலை 4 மணிக்கு சாக்குப்பையிலிருந்து ‘இந்திய உணர்வு’ கட்டுக்கட்டாக எடுத்துக் காட்டப்பட்ட போதுதான் விசயம் புரிந்தது. சாதி, மதம், இனம், மொழி, கட்சி போன்ற எல்லா வகையான பேதங்களுக்கும் அப்பாற்பட்டு இந்தியர்களை ஒன்றிணைக்கும் உணர்வல்லவா அது! வந்தேமாதரம்!

பிளாசிப்போரில் வெல்வதற்கு ராபர்ட் கிளைவ் மீர்ஜாபருக்கு வழங்கிய பொற்காசுகளை நாடு அன்று கண்டிருக்க வாய்ப்பில்லை. அப்பட்டமான இந்த துரோக ஒப்பந்தத்தின் ஷரத்துக்களோ கட்டுக்கட்டாக  அவைச் செயலரின் மேசையின் மீது வைக்கப்பட்டு நாட்டுக்கே ஒளிபரப்பப்பட்டன. துரோகி என்ற பட்டம் கூட மன்மோகன்சிங்கின் தகுதிக்குச் சற்று அதிகமானது என்று திருவாளர் புஷ் கருதியிருப்பார் போலும்! வாக்கெடுப்பபின் இறுதி முடிவை மரியாதைக்குரிய நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர் அறிவிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது, 50க்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கும்போதே, இந்திய நாடாளுமன்றத்தின் அரசியல் களத்தில் வீரம் செறிந்த முறையில் போரிட்டு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் காட்டிய மன்மோகன்சிங்கைப் பாராட்டி (For Bravely Soldiering the Deal) அறிக்கை வெளியிட்டது அமெரிக்க வெள்ளை மாளிகை. டெல்லியின் வீதிகளில் காங்கிரசுக் காரர்கள் தவுசண்டு வாலாவைக் கொளுத்துவதற்கு முன்னால், முதல் வெடியைக் கொளுத்திவிட்டது  வெள்ளைமாளிகை! வந்தேமாதரம்!

இதைக்கண்டு ஆர்.எஸ்.எஸ் அறிவாளி ஸ்வபன் தாஸ் குப்தாவே, என்.டி.டி.வி யில் கொஞ்சம் நெளிந்தார். ஆனாலும் இந்த அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் கூட நாசூக்கு தெரியவில்லை. ஹமீத் கர்சாயையும், முஷாரப்பையும் நடத்துவது போலவே இந்தியாவையும் நடத்துகிறார்கள். பாராட்டுவதென்றாலும் கொஞ்சம் மறைவாகப் பாராட்டினால்தான் என்ன என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தயாராக இசையமைத்து வைத்திருந்த
சிங் இஸ் தி கிங்
என்ற பாடலைத் தனது செய்தி அறிக்கைகளின் பின்னணி இசையாக ஒலிபரப்பியது. தொலைக்காட்சித் திரையின் ஸ்க்ரோலிங்கில் குறியீட்டு எண்கள் உச்சஸ்தாயிக்குச் சென்று கொண்டிருந்தன. நாடாளுமன்றத்திலும் பங்குச்சந்தையிலும் ஒரே நேரத்தில் வந்தேமாதரம்!

உணர்ச்சிகள் இல்லாத கூச்சல்களாலும் உண்மைகள் இல்லாத வாதங்களாலும் நிரம்பியிருந்த அந்த இரவில் உண்மை எது பொய் எது? நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அடித்துக்கொண்டது பொய். ஆளும் வர்க்கமும் தரகு முதலாளிகளும் ஒரே குரலில் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தது உண்மை. அத்வானி அனல் தெறிக்க மன்மோகன்சிங்கை கிழித்தது பொய்! பா.ஜ.க உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தது உண்மை. சமூகநீதி லாலுவின் பாமர மொழி பொய். அருவெறுக்கத்தக்க அமெரிக்க அடிமைத்தனம் உண்மை! சோம்நாத்தின் நாடாளுமன்றக் கற்புநெறி பொய்! அமர்சிங்கும் அம்பானியும் உண்மை! வாக்கெடுப்பில் திகில் தருணங்கள் பொய்! முடிவை முன் அறிவித்த அமெரிக்காவின் அதிகாரம் உண்மை!

வாக்கெடுப்பு முடிந்தவுடன் அவசரம் அவசரமாக இசைக்கப்பட்ட வந்தேமாதரம் பொய்! விபச்சாரமே உண்மை!

_________________________________