டீசல் விலை உயர்வு : வண்டிய விக்கிறதா உடைக்கிறதான்னே தெரியல !

என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும்னா கடன் தான் - லாரி ஓட்டுநர் அய்யப்பன் நேர்காணல்

மோடியின் இந்தியாவில் மக்களின் வாழ்க்கை அதல பாதளத்தை நோக்கி செல்வது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், மக்கள் இந்த நிலைய எப்படி சாமாளிக்கிறார்கள்?

விவசாயத்துல ’உழுதவன் கணக்கு பார்த்தா உழக்குகூட மிஞ்சாது’ன்னு சொல்லுவாங்க… இந்த ஒரு சொல்லே போதும் விவசாயிங்களோடா நிலையை புரிந்து கொள்ள… இப்ப விவசாயிங்களோட நிலைமைதான் போக்குவரத்து தொழிலுக்கும்.

அன்றாடம் விவசாயிகள் விளைவிக்கிற பொருட்களில் இருந்து முதலாளிகளோட உற்பத்தி பொருட்களை கொண்டு போய் சேர்க்கிற வரைக்கும் லாரிக்கு பெரும் பங்கு உண்டு. அந்த லாரி தொழில்தான் இப்பபோது பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு நாளும் உயரும் பெட்ரோல்-டீசல் விலையால கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு சரக்கு போக்குவரத்து தொழில்.

படம் – வினவு செய்தியாளர்

இந்த பாதிப்பு பத்தி கோயம்பேட்ல இருந்த ஈச்சர் 1110 வண்டியோட டிரைவரும், உரிமையாளருமான அய்யப்பனிடன் பேசிப்பார்த்தோம்…

“வாங்க சார்… எங்க கொறைய யாருகிட்ட சொல்லுறதுன்னுதான் இருந்தேன்….

டெய்லியும் வெல ஏறிட்டே இருக்கு சார். வண்டிய நம்பி எடுக்க முடியல… ஒவ்வொரு நாளும் தலையில கல்ல தூக்கி போட்டது போல இருக்கு. கோயம்பத்தூர்ல இருந்து பன்னிரெண்டாயிரத்துக்கு வாழைத் தார் ஏத்திகிட்டு வந்தேன். அதுல ஒன்பதாயிரம் டீசல் போட்டுட்டேன். வரும்போது போலிசுக்கு படி அறநூறுபா ஆயிடுச்சி. இது நிக்காம ஓட்டுறதால வந்தது. மாட்டியிருந்தா இரண்டாயிரபா கூட புடுங்கியிருப்பனுங்க, எப்படியோ வந்து சேர்ந்துட்டேன்.

இப்ப இந்த (கோயம்பேடு) மார்கெட்டுல இருந்து போறதுக்கு டிரிப்பு இல்லாம காத்துகிட்டு இருக்கேன். டிரிப்பு கெடக்கிறதுக்குள்ள கையில இருக்க காசு கரஞ்சிடும் போலிருக்கு.

அடுத்து என்ன செய்வேன்..? அய்யப்பனின் கவலை (படம் – வினவு செய்தியாளர்)

அடுத்து கேரளா போகனும்னு சொன்னாங்க. என்னன்னு இன்னும் உறுதியா தெரியல. லோடு வந்தா தான் தெரியும். அதுக்கு ஒரு நாள் ஆகுமா, இரண்டு நாள் ஆகுமான்னு தெரியல.  இதெல்லாம் நெனக்கும் போது வண்டிய வித்துடுலாம்னு இருக்கேன்.

ஆனா, வண்டிய விக்க மனசு இல்ல. வண்டிய ஒடச்சி தான் போடனும். அவ்ளோ வெறுப்புல இருக்கேன். வண்டிக்கு ஓனரா இருந்தே என்னால சமாளிக்க முடியல. வெறும் டிரைவருங்க பாடு சொல்லுறதுக்கே தகுதி இல்ல…

ஒரு மாசத்துக்கு பத்து லோடு வந்தா பெரிய விஷயம்..சார்.. அது அப் & டவுன் இருக்கனும். அப்பதான் பொழப்பு நடத்த முடியும்.

மாசம் வண்டிக்கு செலவும், வீட்டு செலவும் கணக்கு போட்டா தலை சுத்துது. ஈச்சர் 1110-இந்த வண்டியோட வெல ஏழு லட்சம்..சார்…

ஆறு வருஷத்துக்கு டியூவ். மாசம் 22,000 கட்டணும். ஆறு வருஷத்து கணக்கு பார்த்தா பத்து லட்சம் ஆவுது. வண்டி ஓடுதோ ஓடலையோ மாசத்துக்கு பத்து டிரிப்பு ஓட்டினாலும் பத்தாயிரத்துக்கு சர்வீஸ் பன்னணும். பராமரிப்பு இல்லனா லாங் ரூட்டு நம்பி ஓட்ட முடியாது. கியர் ஆயில், பிரேக் ஆயில், இஞ்சின் ஆயில், கிரவுன் ஆயில்,  இதுக்கு மட்டும் எட்டாயிரத்து ஐநூரு ஆகும் கூலியோட.

போய்ட்டு வர ஒவ்வொரு டிரிப்புக்கும் டயரை கழட்டி பவுடர் போடனும், கிரீஸ் அடிக்கனும். இதை செய்யலன்னா டயர் சூடாகி வெடிக்கும். போதாக்குறைக்கு ஹெட்லைட், வைப்பர், கிரீஸ் அடிக்கிறது இப்படி எதாவது ஒரு செலவு வந்துகிட்டே இருக்கும்.

படம் – வினவு செய்தியாளர்

இது இல்லாம வீட்டுக்கான செலவ பார்க்கணும். உண்மைய சொல்லனும்னா எனக்கு இரண்டு வீடு. ஒன்னு இந்த வண்டி; இன்னொன்னு பொண்டாட்டி புள்ளைங்க இருக்குற வாடகை வீடு.

சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சார். இப்ப தொழிலுக்காக கோயம்பத்தூர் வந்துட்டேன். அங்க இருக்க வீட்டுக்கு வாடகை மாதம் 2000 . ஒரே ரூம்தான் சின்னதா இருக்கும். வெறும் சோறு ஆக்குறதுக்கும், துணி மாத்துறத்துக்கும் தான் அந்த இடம். புழங்குறது எல்லாம் வெளில சிமெண்டு ஓடு போட்ட வீட்டுல புழங்கிக்குவோம்.

ரெண்டு பசங்க கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிக்குதுங்க. சின்னதா கணக்கு பர்த்தாக் கூட வாரத்துக்கு சோப்பு, சீப்பு, பவுடர் செலவு, குழந்தைங்க செலவு, கை செலவுன்னு நாலாயிரம் ஆகும். அது இல்லாத அரசி, மளிகை வாரத்துக்கு இரண்டாயிரம் ஐந்து பேருக்கு தேவை. எங்க அப்பா, அம்மாவும் எங்க கூடதான் இருக்காங்க, அவங்களுக்கான செலவுன்னு மொத்தமா மாசத்துக்கு 22,000 தேவைப்படும்.

என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான் வாங்கனும். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும் எல்லாத்துக்கும் கடன் தான்.

கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகுது. திருச்செந்தூருக்கு, ஊட்டிக்கு கூட்டினு போறேன்னு பல தடவை சொல்லிட்டேன். இன்னும் எந்த ஊருக்கும் அதுங்கள கூட்டினு போக முடியல. இத சொல்லியே வீட்டுல சண்ட வரும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் அழைப்பு குறுக்கிட்டதால், பேசி முடித்து விட்டு மீண்டும் தொடங்கினார்.

“இது இல்லாத ஒரு நாளைக்கு வண்டியில உட்கார்ந்தா என்னோட செலவுக்கு  250 ரூபா வேணும். ஒரு வேளைக்கு 60 ரூபா இல்லாத எதுவும் சாப்பிட முடியாது. ரோட்டுல நிறுத்துற இடத்துல படுக்கனும்னா கொசு புடுங்கும். அதுக்கு கொசு வத்தி, பீடி, முழிப்பு வந்தா டீ குடிக்கிறதுன்னு நூறு ரூபா ஆகிடும்.

வாரத்துக்கு ஒரு வாட்டி தண்ணி அடிச்சா அது தனி செலவு. அது எப்படியும் 300 ரூபா ஆகும். எங்க கணக்கே அய்யாயிரம் இல்லாம போவாது. இந்த லட்சணத்துல, நாங்க பெட்ரோல் விலைய ஏத்தினா என்னா பன்றது?

யாரும் சரியில்ல…, கட்சி காரனும் சரியில்ல. அசோசியேசனும் சரியில்ல. டீசல் விலை கூடிடிச்சின்னு பார்டிகிட்ட சேர்த்து பணம் கேட்க முடியாது. லோடு ஆர்டர் கேன்சல் பன்னிடுவாங்க. எங்களுக்கும் பார்டிக்கும் இடையில வர்ற பிரச்சனைய சாமாளிக்க் முடியாம திண்டாடுறோம்.

போலிசு கெடுபிடி வேற. நம்ம வண்டி 7 டன் கொள்ளளவு புடிக்கும்.  எங்களுக்கும், பார்டிக்கும் நஷ்டம் வரக்கூடாதுன்னு நாங்க இரண்டு டன் அதிகமா ஏத்திகிட்டு போவோம். அதை போலிசுகாரனுங்க மோப்பம் புடிச்சி, கேசப் போட்டு அதுக்கு பல மடங்கு பணம் புடிங்கிக்குவானுங்க. சில நேரம் எல்லாம் சரியா இருந்தாலும் போலிசு சும்மா விட மாட்டனுங்க. நிறுத்தினதுக்கு ஐம்பது ரூபா கொடுன்னு சொல்லுவானுங்க. அதுக்கு பேரு எண்ட்ரி போடுறதாம். இந்த எண்ட்ரி எதுக்குன்னே இதுவரைக்கும் எங்களுக்கு தெரியல.

அப்புறம் சோதனைன்ற பேர்ல ஆர்.டி.ஓ வருவாரு. அவருகிட்ட மாட்டினோம்னா ஓவர் லோடுன்னு கேசு போடுவாரு. அதுக்கு 2500 ரூபா. கேசு போடாம விடறுதுக்கு 500 ரூபா கொடுத்தா போதும். இதுல யாருகிட்டயும் மாட்டாம ஓட்டுறது நம்ம சாமர்த்தியம்.

இந்த லட்சணத்துல உடம்புல ஆயிரத்தெட்டு நோயி. பாதி பேருக்கு நாற்பது வயசு ஆனாலே சரியா கண்ணு தெரியாது. ஸ்டியரிங் புடிச்சி இரண்டு கையும் கொடையும். தூக்கம் சோறு எதுவும் நேரத்துக்கு இல்ல. அல்சரு, கை கால் மூட்டு, உடம்பு வலி. இதோடதான் வாழ்க்கைய ஓட்டுறோம். எப்ப ஒழியும்னு தெரியல!

உடம்பும் போயி பணத்துக்கும் வழி இல்ல. இந்த வேலைக்கு எங்க குடும்பத்துல யாரும் வந்துடக் கூடாதுன்னு வேண்டுவோம். வண்டி எடுத்து வீடு போயி சேர்ந்தாதான் இந்த வாழ்க்க நிஜம்..” என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க