இனவெறி இஸ்ரேல் இந்த மாத தொடக்கத்திலிருந்து லெபனான் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை அழிப்பதாகக் கூறிக்கொண்டு குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
குறிப்பாக தெற்கு லெபனானை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி வருகிறது. இதனைப் பத்திரிகையாளர்கள் தங்களின் ஊடகம் வழியாக உலகிற்குத் தெரியப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 28 அன்று லெபனானைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குழு தெற்கு லெபனானில் செய்தி சேகரிப்பதற்காக ஜெஸ்ஸின் சாலையில் காரில் சென்றுள்ளனர். அப்போது இஸ்ரேல் “பத்திரிகையாளர்கள்” என்று தெளிவாக எழுதப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இக்கொடூரத் தாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
உடனடியாக மருத்துவ உதவியாளர்களுடன் மீட்புப் பணிக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவ உதவியாளரும் கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொடூரத் தாக்குதலில் அல் மயாதீன் (Almayadeen) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பாத்திமா ஃப்தூணி (Fatima Ftouni), அவரது சகோதரரும் ஒளிப்பதிவாளருமான முகமது ஃப்தூணி (Mohammed Ftouni) மற்றும் அல்–மனார் (Al Manar) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அலி ஷோயிப் (Ali Shoeib) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை இரண்டு செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஃப்தூணியின் உறவினர்கள் இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதனை நேரலையில் செய்தியாக அவர் பதிவு செய்திருந்தார். அத்தகைய இழப்பையும் கடந்து தொடர்ந்து செய்திகளைச் சேகரித்து வெளியிட்டு வந்துள்ளார். இவை அவர் தன்னுடைய துறையின் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
படிக்க: போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
இக்கொடூரத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இஸ்ரேல், ஷோயிப் ஹிஸ்புல்லாவின் உளவுப் பிரிவோடு தொடர்புடையவர் என்றும் தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேலியப் படைகளின் நிலைகளைக் கண்காணித்து வந்தார் என்றும் ஹிஸ்புல்லாவிற்காக பரப்புரை செய்து வந்தார் என்றும் பொய்யான காரணத்தைத் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை தற்போது வரை வெளியிடவில்லை. இஸ்ரேலின் குற்றச்சாட்டை இரண்டு பத்திரிகை நிறுவனங்களும் மறுத்துள்ளன.
அல்-மனார் செய்தி நிறுவனம் அலி ஷோயிப் பல ஆண்டுகளாக இஸ்ரேலின் தாக்குதல்களைச் செய்தியாக வெளியிட்டதில் முக்கியமான நிரூபராக இருந்தார் என்று வர்ணித்துள்ளது.
முக்கியமாக காசாவில் 270-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல் தான் குறிவைக்கும் பத்திரிகையாளர்கள் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் அல்லது அவற்றுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி வருகிறது.
இக்கொடூரத் தாக்குதல் குறித்து லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் “ஆயுத மோதல்களின் போது பத்திரிகையாளர்களுக்கு சர்வதேசப் பாதுகாப்பு வழங்கும் சர்வதேச நெறிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களை மீறிய ஒரு அப்பட்டமான குற்றம்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நவாஃப் சலாம் இந்தத் தாக்குதலை “சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அப்பட்டமான மீறல்” என்று கண்டித்துள்ளார்.
தெற்கு லெபனானின் டயர் (Tyre) பகுதியிலிருந்து அல்ஜசீரா ஊடகத்தின் நிரூபர் ஒபைதா ஹிட்டோ கூறுகையில், “இங்குள்ள பத்திரிகையாளர்களுடன் பேசுகையில் அவர்கள் தங்கள் பணியைத்தான் செய்து கொண்டு இருப்பதாகவும், வெளிப்படையான ஆபத்துகள் இருந்தபோதிலும் தங்கள் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தனர்” என்று கூறினார். இது பத்திரிகையாளர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் (Committee To Protect Journalists – CPJ) தகவலின்படி, 2025ஆம் ஆண்டு உலகளவில் 129 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சி.பி.ஜே பதிவுகளில், எந்த நாட்டையும் விட காசாவில் அதிகமான பத்திரிகையாளர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: லெபனான்: மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேல்!
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, மார்ச் 2 ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 1,142 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இஸ்ரேலின் தொடர்த் தாக்குதல்கள் மற்றும் கட்டாய இடம்பெயர்வு அச்சுறுத்தல் காரணமாக லெபனானிலிருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
அல் ஜசீராவின் நிருபர் ஹிட்டோ, “இன்னும் எனக்கு வெடிச் சத்தங்கள் கேட்கின்றன. தெற்குப் பகுதியில் இன்று கடுமையான குண்டுவீச்சும் வான்வழித் தாக்குதல்களும் நடந்தன. லிட்டானி ஆற்றிற்கு தெற்கே உள்ள பகுதி முழுவதும் ‘செல்லத் தடை செய்யப்பட்ட பகுதி’ (no-go zone) ஆக உள்ளது.
தெற்கு லெபனான் பகுதியில் சுமார் 20 சதவிகித மக்கள் அங்கேயே தங்கி உள்ளனர். அவர்கள் இஸ்ரேல் வெளியிட்ட கட்டாய இடம்பெயர்வு உத்தரவுகளை மீறி இருக்கிறார்கள். ஆனால், அந்த முடிவு மிகவும் ஆபத்தானதாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இனவெறி இஸ்ரேல் மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் படுகொலை செய்து வருகிறது. சுகாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரே நாளில் ஒன்பது பேரைப் படுகொலை செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், தொடர்ச்சியான தாக்குதல்கள் தெற்கு லெபனானில் சுகாதார சேவைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், இதன் விளைவாக நான்கு மருத்துவமனைகள் மற்றும் 51 ஆரம்பச் சுகாதார மையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், பல சுகாதார நிலையங்கள் குறைந்த திறனில் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்து வருகின்ற இனவெறி இஸ்ரேலை உலக பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டிக்க வேண்டும். அத்துடன் இனவெறி இஸ்ரேலுக்கு எதிராக உலக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











