Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 104

ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!

மிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மோடி அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அம்மாநில மக்களுக்கு எதிராக செயல்படுவதையும், ஆளும் மாநில கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பதையுமே முழுநேர வேலையாக செய்து வருகின்றனர். மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்து காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆளுநர் என்பதை தாண்டி, பா.ஜ.க. கட்சியின் உறுப்பினரைப் போல, அந்தந்த மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிரான கருத்துகளையும், சனாதனம் போன்ற இந்துத்துவ கருத்துகளையும் பிரச்சாரம் செய்வதையே தனது முழுநேரப் பணியாக கொண்டிருக்கின்றனர்.

ஆளுநர்கள் மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடுவது ஆளும் கட்சிகளுக்கு ஏற்படும் பிரச்சினையல்ல; பெயரளவிலான மாநில அரசுகளின் இறையாண்மையை பறிக்கும் பாசிச தாக்குதல். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் தனது உளவாளிகளான ஆளுநர்கள் மூலம் அரசு அதிகாரத்தை தன் கைக்குள் வைத்து, இணையாட்சியை நடத்தி வருகிறது.

மேற்கூறிய அடிப்படையிலே, நாகாலாந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டின் மக்களின் எதிர்ப்புக்கு தொடர்ச்சியாக ஆளாகிவருகிறார். “ஆர்.எஸ்.எஸ் உளவாளி”, “மோடியின் அடியாள்” என்று விமர்சிக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயுள்ளார். ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து மக்களிடம் வலுப்பெறுவதற்கு தானே காரியகர்த்தாவாக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய அவர், பரந்தூர் விமான நிலையம் போன்ற நாசகாரத் திட்டங்கள் மூலம் கார்ப்பரேட்டுகள் தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் கொள்ளையடிப்பதற்கான  “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023” க்கு மட்டும் ஒப்புதல் அளித்தது; “நீட் விலக்கு மசோதாவிற்கு” எப்பொழுது ஒப்புதல் அளிப்பீர்கள் என்று மாணவியின் பெற்றோர் ஒருவர் கேட்ட போது, “நான் இருக்கும் வரை நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று திமிர்த்தனமாக பதிலளித்தது; தனக்கு அதிகாரம் இல்லாத போதும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்தது; ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஆயிரக்கணக்கானோரின் உயிரும் பணமும் பறிக்கப்பட்டப்போதும் “ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு” ஒப்புதல் அளிக்காமல் இருந்தது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து மக்களுக்கு வலுப்பெறத் தொடங்கியது.


படிக்க: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!


இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது, தமிழ்நாடு அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தமிழ்நாடு ஆளுநர் இப்படி அரசியல் ரீதியாக சட்ட முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருப்பது தீவிர கவலை அளிக்கிறது” என்று கூறியிருக்கிறது.

மேலும், “ஒரு மசோதா ஒப்புதலுக்காக வந்தால், அதன்மீது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 200 கூறுகிறது. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு, ஒன்று ஒப்புதல் கொடுங்கள்; திருத்தம் தேவை என்று தோன்றினால் அதை மாநில அரசுக்குத் திருப்பி அனுப்புங்கள் அல்லது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்புங்கள். மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலத்திற்கு உட்காந்திருக்கக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

உடனே, ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகதான் நிலுவையில் வைத்திருந்த “பல்கலைக்கழக மசோதா” உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பினார். ஏற்கெனவே தமிழக மக்களின் மத்தியில் வெறுப்புக்கு உள்ளாகி இருந்த ரவி, இதன் மூலம் மக்களின் வசைபாடலுக்கு உள்ளானார். நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அவரை வறுத்தெடுத்தனர். ஆளுநர்கள் அவசியம்தானா? என்று அறிவுத்துறையினர் விவாதிக்கத் தொடங்கினர். “அரசியலமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா?” என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கேள்வியெழுப்பியது அதற்கு சான்றாகும்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது, தமிழ்நாடு அரசு. தற்போது தமிழ்நாட்டிலிருந்து ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்ற வகையிலான விவாதங்கள் மக்கள் மத்தியில் குறைந்து இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ்நாடும் ரவியை ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற உணர்விலே உள்ளது. சங்கிகளை தவிர்த்து ஆளுநரை ஆதரித்து பேசுபவர்களை நாம் விரல்விட்டு எண்ணி விடலாம்.


படிக்க: ஆளுநர் ரவி ஒரு குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்


ஆனால் ஆளும் தி.மு.க. கட்சியானது சட்டப்போராட்டத்தின் மூலமே ஆளுநரை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சிகளும் அந்த மனநிலையில்தான் உள்ளனர்.

சட்டப் போராட்டத்தின் மூலம் ரவியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளை நாம் தவறு என்று கூறவில்லை. ஆனால் சட்டப்போராட்டத்தின் மூலம் மட்டும் ரவியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என்றுதான் நாம் கூறுகிறோம். ஐந்து ஆண்டுகால சட்டப்போராட்டத்தின் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை; ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் மூலமாகதான் ஒன்றிய அரசை பணிய வைக்க முடியும் என்பது தான் தமிழ்நாட்டின் அனுபவமாகும்.

மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சூழல் தமிழ்நாட்டில் மிகப் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாகும். தமிழ்நாட்டை சுற்றிவளைத்து கைப்பற்றத் துடிக்கும் பாசிசக்கும்பலுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகும்.

எனவே தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவதற்கான மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது பாசிசத்திற்கு எதிராக போராட நினைக்கும் அனைவரின் கடமையாகும்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவு | இணைய போஸ்டர்கள்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவு :
மக்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், பாசிஸ்டுகளை தேர்தலில்கூட தோற்கடிக்க முடியாது!

***

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகள் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!
1. மக்கள் கோரிக்கைகளை கைவிட்டு துரோகமிழைத்தது
2. இந்துத்துவ அரசியலை கையிலெடுத்தது
3. கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டியது

***

பாசிசத்தை வீழ்த்த வேண்டும். அதனால் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள் என்று சொல்வோர்க்கு..

காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகளின் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!

டந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மிசோரம் தவிர்த்து பிற நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தனது 18 ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்துள்ளதோடு, ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கரில் காங்கிரசின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியோ, தெலுங்கானா தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், இமாச்சல பிரதேசத்தை தவிர்த்து பிற ‘பசு-வளைய’ மாநிலங்களிலிருந்து காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, “ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைவது உறுதி” என்று பேசிவந்த காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை மட்டுமே பாசிச எதிர்ப்புக்கான ஒற்றை ‘நம்பிக்கையாக’ பார்த்துவந்த பெரும்பாலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


படிக்க: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!


ஆனால், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு பா.ஜ.க-வின் ‘இந்து’ வாக்குவங்கிக்கு பின்னால் ஓடிய காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கு மக்கள் கொடுத்துள்ள பரிசே இத்தோல்வி!

இந்த ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.க-விற்கு எதிராக மாற்று திட்டத்தை முன்வைத்தோ, ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் உழைக்கும் மக்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்களுக்கு எதிராக பா.ஜ.க. கொண்டுவந்த ஜி.எஸ்.டி, சி.ஏ.ஏ., வனப்பாதுகாப்பு சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்களைத் எதிர்த்தோ, மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை கையிலெடுத்தோ காங்கிரஸ் கட்சி இத்தேர்தலை அணுகவில்லை.

முழுக்க முழுக்க கவர்ச்சிவாத, அடையாள, இந்துத்துவ அரசியலையே காங்கிரஸ் முன்னெடுத்தது. குறிப்பாக, ‘பசு வளைய’ மாநிலங்களில் மக்கள் பிரச்சனைகளை  பேசாமல் பா.ஜ.க-வின் இந்து முனைவாக்க உத்தியையே கையிலெடுத்தது.

சான்றாக, சத்திஸ்கரில் 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பா.ஜ.க. மீதான அதிருப்தியை அறுவடை செய்துகொண்டுதான் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அம்மக்களின் கோரிக்கைகளை குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை தூரவீசிவிட்டு ராமனுக்கு “ராம் வான் கமான் பாதை” அமைப்பது, ராமன்-சீதைக்கு சிலை அமைப்பது, கோவில் கட்டுவது போன்ற ‘இந்துமுனைவாக்க’ நடவடிக்கைகளில் இறங்கியது காங்கிரஸ்.

ராஜஸ்தான் மாநிலத்திலும் அங்குள்ள முக்கியமான பிரச்சினைகளான விவசாயிகள் கோரிக்கைகளை காங்கிரஸ் வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பார்த்தது. சான்றாக, அம்மாநிலத்தில் பசு ஏற்றுமதிக்கு தடை இருப்பதனால், தெருக்களில் திரியும் பசுக்கள் பயிர்களை மேய்வதால் ஆண்டுதோறும்  30 முதல் 40 சதவிகித பயிர்கள் நாசமடைகின்றன. பசு ஏற்றுமதிக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்பது அம்மாநில விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கை. ஆனால், அது தனது ‘இந்துமுனைவாக்க’ நோக்கத்திற்கு கேடாக முடியும் என்பதால் காங்கிரஸ் அதை செய்யவில்லை.

இதுபோன்ற எந்த மக்கள் கோரிக்கைகள் குறித்தும் பேசாமல் பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்கு ‘யூகம், உத்தி, தந்திரங்களை’ மட்டுமே நம்பி தேர்தலில் களமிறங்கியது காங்கிரஸ். அந்த யூகம், உத்தி, தந்திரங்கள் என்பதும் பாசிஸ்டுகளின் வழிமுறையாகதான் இருந்தது. மக்களின் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தது, கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிறுத்திகொண்டது போன்ற பாசிச வழிமுறையில் தான் பா.ஜ.க. எதிர்ப்பை மேற்கொண்டது, காங்கிரஸ்.

மொத்தத்தில், “பாசிச எதிர்ப்பு வாக்குகள் மட்டும் வேண்டும், ஆனால் பாசிச எதிர்ப்புக்கான திட்டமோ மாற்றோ முன்வைத்து செயல்படமாட்டோம்” என்பதே இக்கட்சிகளின் நடைமுறை. இத்தகைய கேடுகெட்ட சந்தர்ப்பவாதத்தை பின்பற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைதான் ‘பாசிச எதிர்ப்பாளர்களாக’ முன்னிறுத்துகின்றனர், பல பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்.

இதன் விளைவாக, மோடி பிரச்சாரத்திற்கு சென்றால் வாக்குகள் சரியும் என்ற அச்சத்திலிருந்த பாசிச கும்பல், தற்போது புது தெம்போடு 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

பலரும் சொல்வது போல் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்ப்போமேயானால், ஒருவேளை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோற்றாலும் எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை பயன்படுத்திக்கொண்டு, குறுகிய காலத்திலேயே பாசிச கும்பல் மீண்டும் ஆட்சியதிகாரத்தில் வந்து அமரும் என்பது தெளிவாகிறது. அதற்கான பாதையைதான் இந்த எதிர்கட்சிகளும், எதிர்கட்சிகளுக்கான தூதுவர்களான (ambassador) ‘பாசிச எதிர்ப்பாளர்களும்’ செப்பனிட்டு கொண்டிருக்கின்றனர்.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்

03.12.2023

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்: பாஜக வென்றது எப்படி?” | தோழர் அமிர்தா

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 20

“மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்:
பாஜக வென்றது எப்படி?” | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோடி அலை வென்றதா?, தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பா? | தோழர் மருது

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 19

மோடி அலை வென்றதா?, தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பா? | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஐந்து மாநிலத் தேர்தல்: ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்கள் பிரச்சனை!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 18

டந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில், “ஆதிவாசி பக்தி” மற்றும் பழங்குடியினரின் அடையாளம்/பெருமை என பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகியது. சான்றாக, நவம்பர் 7-ஆம் தேதி சத்தீஸ்கரில் உள்ள பிஷ்ராம்பூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் பழங்குடியினருக்குச் சேவை செய்ய பிறந்தவன்” என்றும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவைக் குறிப்பிட்டு, “பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக வருவார் என்று யாராவது நினைத்தார்களா?” எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசுகையில், பழங்குடியிகளைக் குறிக்கும் வகையில் “வனவாசி” என்ற சொல்லைப் பயன்படுத்தும்  வழக்கத்தை ஒழிப்பதாக உறுதியளித்தார். இந்த சொல்லை பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலையும் கண்டித்தார்.

ஆனால் பழங்குடி மக்களின் அடையாளங்கள், பெருமைகளை ஓட்டு பொறுக்குவதற்காகப் பேசிய காங்கிரஸ் அவர்களின் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி வாய் திறக்கவில்லை. பழங்குடி மக்கள் மீது மோடி அரசு தொடுத்துவரும் பாசிச தாக்குதல்கள் குறித்தும் வாய்திறக்கவில்லை. உலகளவில் விவாதிக்கப்பட்ட மணிப்பூர் இனப்படுகொலை கூட இத்தேர்தலில் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், மோடியின் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் கனிமவளச் சூறையாடலுக்காகப் பழங்குடியின மக்கள் மீது ஒரு போரையே பாசிச கும்பல் தொடுத்து நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் விவாதிக்கப்படாத பழங்குடி மக்கள் மீது மோடி அரசால் தொடுக்கப்பட்டுவரும் பாசிசத் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

000

இந்தியாவில் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இரும்பு, பாக்சைட் போன்ற கனிம வளங்களை சூறையாடி வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க மற்றும் மாநில அரசுகளின் துணையுடன் இச்சூறையாடலை மேலும் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த கனிமவளச் சூறையாடலுக்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டங்களைக் கட்டியமைத்து வருகிறார்கள். போராட்டங்களை ஒடுக்குவதற்காக பழங்குடியின மக்கள்மீது அரசு படைகள் ஏவப்பட்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. ஆனால், இத்தாக்குதல்கள் குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் எதுவும் வெளிக்கொண்டுவருவதில்லை; திட்டமிட்டே மூடிமறைத்துவருகின்றன. இத்தகைய திரைசீலைக்கு பின்னால் ஒன்றிய பா.ஜ.க. அரசும் மாநில அரசுகளும் பழங்குடியின மக்கள்மீது மறைமுகமான போரை தொடுத்து வருகின்றன.

பழங்குடி மக்களின் வீரமிகு போராட்டங்கள்!

இந்தியாவில் ஏறக்குறைய 3,896 மில்லியன் டன்கள் பாக்சைட் தாதுக்களில், சரிபாதி அளவுக்கு ஒடிசா மாநிலத்தில்தான் உள்ளது. ஆகையால், இரும்பு உற்பத்திக்கு தேவையான ஹேமாடைட் (Hematite) தாது அதிக அளவில் ஒடிசா மாநிலத்தில் இருந்துதான் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒடிசாவில் மட்டும் ஹேமாடைட், பாக்சைட் போன்ற தாதுக்கள் அதிகளவில் கொட்டிக்கிடக்கின்றன என்றால், இந்தியா முழுவதும் கொட்டிக்கிடக்கும் பிற தாதுக்கள் மற்றும் லித்தியம் போன்ற அரியவகைத் தனிமங்களின் அளவை நாம் ஊகித்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் இத்தகைய கனிம வளங்கள்தான் அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட்டுகளின் கண்களை உறுத்துகின்றன. கனிம வளங்களைச் சூறையாடுவதற்கு பழங்குடி மக்கள்தான் இவர்களுக்கு தடைகல்லாக இருக்கின்றனர். ஆனால், தங்கள் உயிரைக் கொடுத்தாவது மலைகளையும் காடுகளையும் பாதுகாத்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர், பழங்குடி மக்கள்.


படிக்க: ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!


கடந்த மே மாதத்தில் மட்டும் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் புதிதாக மேற்கொள்ளப்பட்டுவரும் சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக 70 நாட்களுக்கு மேலாக பழங்குடி மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளதாக கூறுகிறார், இண்டி ஜர்னல் (Indie Journal) பத்திரிகையாளர் பிரஜக்தா ஜோஷி. “ஜல், ஜங்கல், ஜமீன்” (தண்ணீர், காடு, நிலம்) என்பதுதான் அப்போராட்டங்களின் மையமான கோரிக்கை ஆகும். இக்கோரிக்கையை முன்வைத்து மத்திய இந்திய மாநிலங்களில் முப்பத்திற்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் பத்திரிகையாளர், “பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் போலீசு நிலையங்கள் மற்றும் முகாம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மக்கள் போராட்டத்திற்கான மற்றொரு காரணமாகும்” என்கிறார்.

சத்தீஸ்கரில் உள்ள பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களின் எல்லையில் உள்ள சில்கர் கிராமத்தில் நிறுவப்பட்ட சி.ஆர்.பி.எஃப் முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2021 மே 17 அன்று, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது சி.ஆர்.பி.எஃப் படையினர் துப்பாக்கி சூடு நடத்திய போதும், இரண்டு ஆண்டுகள் வரை போராட்டம் தொடர்ந்ததாக தெரிவிக்கிறார் பிரஜக்தா ஜோஷி.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்; இனியும் போராட்டத்தைத் தொடருவோம். சட்டப்படி எங்களிடம் அனுமதி எதுவும் பெறாமல் சுரங்கத் திட்டங்கள், சாலைகள், சி.ஆர்.பி.எஃப். முகாம்களைக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் தண்ணீர், காடு, நிலத்தைக் காக்கவே போராடுகிறோம்” என்று பஸ்தார் ஜன்சங்கர்ஷ் சமன்வே மஞ்ச் (பஸ்தார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்தும் பல்வேறு குழுக்கள் மற்றும் தளங்களின் குடை அமைப்பு) தலைவர் ரகு மாத்யாமி கூறுகிறார்.

மகாராஷ்டிராவில் சுர்ஜாகர் (Surjagarh) மலையில் ஆறு இரும்பு சுரங்கங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிரோலி மாவட்டத்தின் எட்டாபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள டோட்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள 70 கிராமங்களின் மக்கள் மார்ச் 11-ஆம் தேதி முதல் சுமார் 250 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மக்கள் போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கடந்த மே மாதம், ஓம்சாய்ராம் ஸ்டீல்ஸ் அண்ட் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட், சன்ஃப்ளாக் அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கு 4,684 ஹெக்டர் பரப்பளவில் சுரங்கங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, அப்பகுதியில் உள்ள சுரங்கங்கள் அங்கு கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன. சுரங்கத்தின் கழிவுகள் மலைகளில் இருந்து வழிந்தோடி ஆற்று நீரையும், அருகில் உள்ள கிராமங்களின் வயல்களையும் மாசுபடுத்தி வருகின்றன. சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சிவப்பு நிற தூசி சாலைகள், வயல்கள், வீடுகள் என சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் படிந்துவிடுகின்றது. இதனால் ஆறுகளும் விவசாய நிலங்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளன.

சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் துணை இராணுவப் படைகளால் ஏவப்படும் கொடிய தாக்குதல்களையும் மக்கள் உணர்ந்துள்ளதால்தான், சுரங்கத் திட்டங்களுக்கு எதிராகவும் போலீசு முகாம்களை அமைப்பதற்கு எதிராகவும் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து வருகிறார்கள், பழங்குடி மக்கள். மேற்கூறிய சில்கர், கட்சிரோலி மக்களின் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு சில சான்றுகள்தான்.

பழங்குடி மக்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்!

பழங்குடி மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக, பழங்குடி கிராமங்கள் மீது ட்ரோன் மூலம் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்துவது, துணை இராணுவப் படையினரும் போலீசும் இணைந்துக்கொண்டு மக்கள் மீது திடீரென கண்முடித்தனமான தாக்குதல் நடத்துவது, நள்ளிரவில் வீடுகளில் புகுந்து அடாவடித்தனமாக கைது செய்வது, கடத்திச் செல்வது, சுட்டுக்கொல்வது, காணாமல் ஆக்குவது போன்று எப்பொழுது என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பழங்குடி மக்கள் மீது ஏவிவிடப்படுகின்றன.

ஒடிசாவில் ராய்கடா, காலாஹண்டி மற்றும் கோராபுட் மாவட்டங்களில் பாக்சைட் சுரங்கத்திற்கு போராடி வரும் பழங்குடி மற்றும் பட்டியலின மக்கள்மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. நியாம்கிரி சுரக்ஷ்ய சமிதியின் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது ஊபா கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துவாமுல் – ராம்பூர் மற்றும் காஷீபூர் தொகுதிகளில் உள்ள சிஜிமாலி, குருட்மாலி, மஞ்சிங்மாலி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை செய்வதற்காக ராயகடாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்ரீ பிரபுல்ல சமந்த்ரா போலீசாரால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள படிகுடா, கவர்கட்டா, மீனாகட்டா, ஜப்பாகட்டா ஆகிய நான்கு கிராமங்களின் மீது ஆளில்லா கலன்கள் (ட்ரோன்) மூலம் குண்டுகள் வீசப்பட்டன. குண்டுகளை வீசிய பிறகு, மூன்று ஹெலிகாப்டர்களிலிருந்து கனரக இயந்திர மூலம் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது நான்காவது தாக்குதலாகும். கடந்த ஜனவரி மாதம் தொடுக்கப்பட்ட தாக்குதலில், தெலுங்கானா – சத்தீஸ்கர் – ஒடிசா சி.ஆர்.பி.எஃப் கிரேஹவுண்ட் மற்றும் கோப்ரா கமாண்டோக்கள் மாவட்ட ரிசர்வு படைகளுடன் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.


படிக்க: ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!


காடுகளை கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலிலிருந்து பாதுகாத்து நிற்கும் பூர்வக்குடிகளின் போராட்டங்களை ஒடுக்க அரசு மேற்கொண்டுவரும் இத்தகைய நடவடிக்கைக்கு பெயர் ஆபரேஷன் சமாதான் பிரஹார் (Operation SAMADAN-Prahar). 2017-ஆம் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சமாதான் பிரஹாருக்கு முன்னோடி மத்திய அரசு, இந்திய துணை இராணுவப்படை, சல்வா ஜூடும் அமைப்புகளால் பழங்குடியினத்தவர்கள்மீது நடத்தப்பட்ட காட்டு வேட்டை (Operation Green Haunt) ஆகும். பழங்குடியின மக்கள் வசித்துவரும் காடு, மலை பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இவை.

ஆளில்லா கலன்கள் மூலம் குண்டுகளை வீசுவது இரு நாடுகளுக்கிடையேயான போரில்தான் நடக்கும். ரஷ்ய – உக்ரைன் போரில் ட்ரோன் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எதிரி நாட்டிற்கெதிரான போரில் பயன்படுத்த வேண்டிய ட்ரோன்களை, பழங்குடியின மக்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்துவதன் மூலம் பழங்குடி மக்கள்மீது அரசு போர் தொடுத்துள்ளது என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.

மகாராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் இரும்பு சுரங்கங்களுக்கு எதிராக போராடி வரும் மக்கள்மீது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராடும் மக்கள் தங்களை கொல்ல முயன்றதாகவும், வெடி பொருட்களை வைத்திருந்ததாகவும், மாவோயிஸ்டுகளிடம் இருந்து நிதி பெறுவதாகவும் அவர்கள்மீது பொய்யாக குற்றம் சாட்டியுள்ளது, மகாராஷ்டிரா மாநில போலீசு.

இவ்வாறு பழங்குடி மக்கள்மீது பயங்கரவாதத் தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் மக்களின் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்று கனவு கண்டு வருகின்றன, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள். ஆனால் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, கனிமவளச் சூறையாடலுக்கு எதிராக போராடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையப் போவதில்லை என்பது தற்போது அதிகரித்துவரும் போராட்டங்களே நமக்கு உணர்த்தும்.

கனிமவளச் சூறையாடலை தீவிரப்படுத்தும் சட்டத்திருத்தங்கள்!

கார்ப்பரேட்டுகள் கனிம வளங்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு சாதகமாக மோடி அரசும் மாநில அரசுகளும் பல சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் ஆகிய பாசிச சட்டங்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி உள்ளது மோடி அரசு.

“பாக்சைட் புதைந்துகிடக்கும் நிலப்பகுதிகளையும் மலைகளையும் கையகப்படுத்துவதை விரைவுபடுத்துவதில் ஒடிசா அரசும் ஒன்றிய பா.ஜ.க. அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. வனப்பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்ட பிறகுதான் இப்படி நடக்கிறது” என்று கூறுகிறது, மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) அமைப்பின் அறிக்கை.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் லித்தியம் போன்ற அரிய வகைத் தனிமங்களைக் கொள்ளையடிக்கத்தான். அண்மையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், மணிப்பூரில் மேய்தி இனவெறியர்களால் குக்கி பழங்குடி மக்கள் மீது திட்டமிட்டு இனக்கலவரம் நடத்தப்பட்டு வருவதும், குக்கி மக்களை மலைகளில் இருந்து வெளியேற்றி அம்மலைகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழிவகை செய்து கொடுப்பதற்குதான்.

அண்மையில், நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசும் பழங்குடி மக்களின் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதற்கு சாதகமாக சட்டத்திருத்தத்தை செய்துள்ளது. நவம்பர் 14 அன்று, ஒடிசா பட்டியல் பகுதிகள் அசையா சொத்து பரிமாற்றம் (பட்டியல் பழங்குடியினர்) ஒழுங்குமுறை, 1956–யின் (Orissa scheduled areas transfer of immovable property (by scheduled tribes) regulation, 1956 – OSATIP) ஒழுங்குமுறை எண்.2-இல் திருத்தம் செய்வதன் மூலம், பழங்குடியினர் தங்கள் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பதற்கு அனுமதியளிக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது.

இச்சட்டத்திருத்தத்திற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக, இரண்டு நாள்களிலேயே அமைச்சரவை முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா அரசு. வருங்காலத்தில் இச்சட்டத்திருத்தத்தை நிறைவேற்றவே ஒடிசா அரசு முயற்சி செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே.

மேற்கூறிய சட்டத்திருத்தங்கள் அதானி, ஜிண்டால், வேதாந்தா போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு கனிம வளங்களை வாரிக்கொடுப்பதற்குதான் நிறைவேற்றப்படுகின்றன. வருங்காலங்களில், இச்சட்டங்களைப் போன்று பல சட்டங்கள் நிறைவேற்றப்படலாம். அவையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு கனிம வளங்களைச் சூறையாடலை எளிதானதாக்கவும் புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கவும் வழிவகுக்கும். இதன் விளைவாக பழங்குடி மக்கள்மீது தொடுக்கப்பட்டுவரும் போர் மேலும் தீவிரமாகும்.

இதேவேளையில், ஆதிகாலம் தொட்டு தாங்கள் பாதுகாத்துவந்த காடுகளின் பசுமையையும் மலைகளின் வளங்களையும், கொத்திக்குதற கழுகுப்போல் காத்துக்கிடக்கும் இலாபவெறிப்பிடித்த கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து கிளர்ந்தெழுந்த போராட்டம், மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, போராட்டக் களத்தில் பழங்குடி மக்களோடு தோளேடுதோள் நிற்க வேண்டியது அவசியம். கனிம வளக் கொள்ளைக்கெதிரான பழங்குடி மக்களின் போராட்டங்களை விவசாய, தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுடன் இணைக்க வேண்டியதும், பாசிச எதிர்ப்பு போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி கும்பலின் ஸ்டண்டுகள்! | இணைய போஸ்டர்கள்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 17

ஸ்டண்டு 1:

ஸ்டண்டு 2:

ஸ்டண்டு 3:

ஸ்டண்டு 4:

ஸ்டண்டு 5:

🔴LIVE: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 2

🔴LIVE: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 1

மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர் 7 முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளன. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3, 4 தேதிகளில் வெளியாக உள்ளன. 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி உருவாக்கம், தீவிரமடைந்து வரும் பாசிசக் கும்பலின் தோல்வி முகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தேர்தல் முடிவுகள் முக்கியத்துவமுடையதாகப் பார்க்கப்படுகின்றன.

இம்மாநிலங்கள் இந்திய வாக்காளர் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு வாக்காளர்களைக் கொண்டிருப்பதோடு, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்களவை தொகுதிகளையும் கொண்டிருக்கின்றன. மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க-வும் காங்கிரசும் நேரடியாக மோதியுள்ளன. இக்காரணங்களால், இத்தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் சத்தீஸ்கரிலும், பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரசே ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும், மாநிலக் கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சியிலிருக்கும் தெலுங்கானாவில் காங்கிரசுக்கும் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் பா.ஜ.க. கூட்டணியிலுள்ள ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொருபுறம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தாலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்தாலும் அரசியல் அரங்கில் தோல்வி முகத்திற்குத் தள்ளப்பட்ட பாசிசக் கும்பல், தொடர்ந்து தோல்விகளையும் பலமான அடிகளையும் எதிர்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் பா.ஜ.க. பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, இந்துத்துவ அரசியலின் இதயம் என்று கூறப்படுகின்ற பசு வளைய மாநிலங்களிலேயே பா.ஜ.க. கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளானது. இத்தேர்தல்களின் போது, “மோடியின் தோல்வி முகம்”, “சரிந்துவரும் மோடியின் பிம்பம்”, “தோல்வி பயத்தில் இந்துத்துவவாதிகள்” என பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவிற்கு பாசிசக் கும்பலின் தோல்வி முகம் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

நெருக்கடியில் பாசிசக் கும்பல்:

பா.ஜ.க-விற்கு எதிராக “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டதிலிருந்தே, அக்கூட்டணி குறித்து பாசிசக் கும்பல் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அவற்றில், “பிரதமர் வேட்பாளர் இல்லாத கூட்டணி” என்பது முக்கியமானது. இந்தப் பிரச்சாரத்தை மோடியிலிருந்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர்கள் வரை அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் ஒரு மாநிலத்தில் கூட தனது கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரம் செய்ய முடியாத பரிதாபகரமான நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டுமுறை முதல்வராக பதவி வகித்தவரும், ராஜஸ்தான் பா.ஜ.க-வின் முகமாக அறியப்படுபவருமான வசுந்தரா ராஜே, இம்முறை ராஜஸ்தான் தேர்தலிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதைப்போல, மத்தியப்பிரதேசத்தின் தற்போதைய பா.ஜ.க. முதல்வரும் மூன்றுமுறை பா.ஜ.க. சார்பாக முதல்வராக இருந்தவருமான சிவராஜ் சிங் சௌகானும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனால் இவ்விரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தவில்லை. சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும்  மிசோரத்திலும் கூட பா.ஜ.க. சார்பாக முதல்வர் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, “பா.ஜ.க-விற்கு ஒரே முகம், அந்த முகம் தாமரை” என்று பூசி மொழுகினார். மத்தியப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்திலும் “மத்தியப்பிரதேசம் மோடியின் இதயத்தில் உள்ளது, மோடி மத்தியப்பிரதேசத்தின் இதயத்தில் உள்ளார்” என்ற பாடல் மூலமாகவே பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது.

அதேசமயத்தில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. சார்பாக 18 எம்.பி-க்கள் சட்டமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இவர்களில், நான்கு பேர் மத்திய அமைச்சர்கள் என்பது முக்கியமானது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர்களையும் அண்டை மாநில பா.ஜ.க. தலைவர்களையும் அழைத்தே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பா.ஜ.க-வின் இந்தப் போக்கை விமர்சிக்கும்  பா.ஜ.க-வின் நலவிரும்பிகள், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பாவை ஓரங்கட்டியதால் ஏற்பட்ட எதிர்மறை விளைவை பா.ஜ.க. இன்னும் உணரவில்லை எனக் கடிந்துகொண்டன. மற்றொருபுறம், பா.ஜ.க-வின் இந்த அணுகுமுறைக்கு “கூட்டுத்தலைமை முறை” (Collective Leadership) என்று மோடி ஆதரவு ஊடகங்கள் பெயர் சூட்டின.

ஆனால் உண்மையில், பா.ஜ.க. கட்சி மற்றும் முதல்வர்கள் மீதான மக்களின் வெறுப்பு, உட்கட்சி சண்டை, மோடிக்கு நிகராக கட்சிக்குள் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற மோடி-அமித்ஷா கும்பலின் அடியறுக்கும் போக்கு போன்ற பல்வேறு காரணங்களால், அடுத்தடுத்த மாநிலங்களில் முதல்வர் வேட்பாளரை நிறுத்த முடியாத நெருக்கடியான சூழலுக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவிலும் பா.ஜ.க-வின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. “மிஷன் சவுத்” திட்டத்தின் அடிப்படையில் தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை குறிவைத்து வேலைசெய்துவரும் பா.ஜ.க., ஆறு மாதங்களுக்கு முன்புவரை “பி.ஆர்.எஸ். கட்சியை வீட்டுக்கு அனுப்பப்போவது பா.ஜ.க. தான்” என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனது பிம்பத்தை ஊதிப்பெருக்கி வந்தது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு இந்த பிம்பம் உடைந்ததோடு, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவு மனநிலையும் உருவாகத் தொடங்கியது.

இந்நிலையில், தற்போது தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் இருமுனைப் போட்டி உள்ளது. பா.ஜ.க. ஆட்டத்திலேயே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சில கருத்துக்கணிப்புகள், பா.ஜ.க. ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகளை வெல்லும் என்றும் பல இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்றும் கூறுகின்றன.

மேலும், பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் தெலுங்கானாவில் காங்கிரசின் கை மேலோங்கியது. இதனால் முன்பு காங்கிரசிலிருந்து வெளியேறிய பலரும் மீண்டும் வந்து இணைந்ததோடு, தெலுங்கானா பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு தலைவராக இருந்த விவேக் வெங்கடசாமி என்பவரும் பா.ஜ.க.-விலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இவற்றை கண்டு பீதியடைந்த பா.ஜ.க. கும்பல், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சி வென்றால் கூட பரவாயில்லை, ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

ஏற்கனவே, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடித்து காங்கிரஸ் வென்றதையடுத்து, “பா.ஜ.க-வை நிராகரித்தது தென்னிந்தியா” என இந்தியா முழுக்க பேசப்பட்டது. இந்நிலையில், தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இக்கருத்து மேலும் தீவிரமடைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்தியாவில் பா.ஜ.க-விற்கு பெருத்த அடிவிழும் என்பதால் பீதியில் உறைந்துள்ளது பா.ஜ.க. கும்பல்.

எடுபடாத மோடி பிம்பம்:

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தைப் பொறுத்தவரையில், மோடி நேரடியாக சென்று பிரச்சாரம் செய்யாமலேயே அங்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி நேரடியாக சென்று பிரச்சாரம் செய்யாமல் தேர்தல் நடந்த ஒரே மாநிலம் மிசோரம் மட்டுமே. இதற்குக் காரணம், பா.ஜ.க-வுடன் ஒன்றிய அளவில் கூட்டணியிலுள்ள மிசோரம் முதல்வர், தேர்தல் பிரச்சாரத்தில் மோடியுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று கூறியதுதான். இது பா.ஜ.க-வுக்கு பெருத்த அடியாகும்.

கடந்த அக்டோபர் மாதத்தில், பி.பி.சி.க்கு பேட்டியளித்த மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா, “மிசோரம் மக்கள் அனைவரும் கிறித்தவர்கள். மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்களை மெய்திகள் எரித்ததை மிசோக்கள் எதிர்க்கிறார்கள். இந்த நேரத்தில் பா.ஜ.க-விற்கு அனுதாபம் காட்டுவது என் கட்சிக்கு எதிர்மறையாக சென்று முடியும். எனவே, பிரதமர் தனியாக வந்து, அவர் அவருடைய மேடையிலும் நான் என்னுடைய மேடையிலும் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

பல விடயங்களில் பா.ஜ.க-வின் முடிவுகளை அப்படியே பின்பற்றுபவரான ஜோரம்தங்கா இவ்வாறு கூறியது பெரும் பேசுபொருளானது. பல மாதங்களாகக் கலவரம் நடந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு மோடி செல்லவில்லை என்பதாலும், மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க. கட்டுப்படுத்தவில்லை என்பதாலும், மோடியுடன் இணைந்து பிரச்சாரம் செய்தால் மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகி தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில்தான், மிசோரம் முதல்வர் மோடியுடன் மேடையைப் பகிர விரும்பவில்லை. ஒன்றிய அளவில் என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மிசோ தேசிய முன்னணிக் கட்சியானது, மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அக்டோபர் 30-ஆம் தேதி மிசோரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்த மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 60 முறை வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்த ஒரே பிரதமர் என பீற்றிக்கொள்ளப்பட்ட மோடி, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காணொளி வாயிலாக மிசோரம் மக்களிடையே பிரச்சாரம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பிற மாநிலங்களைப் பொறுத்தவரையிலும் பிரச்சாரக் கூட்டங்களில் பெரிய அளவில் மோடியைக் காண முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டத்தில்தான் கணிசமான எண்ணிக்கையில் மோடியின் பிரச்சாரங்களைப் பார்க்க முடிந்தது. மோடியின் வழக்கமான பிரச்சார எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இதுவும் குறைவுதான் என்றும் கூறப்பட்டது. இன்னொருபுறம், அமித்ஷா, ஜே.பி.நட்டா, யோகி ஆதித்யநாத், நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.-வின் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை தேர்தல் பிரச்சாரத்தில் இறக்கி இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப முயன்றது, பா.ஜ.க.

வளர்ச்சி நாயகன் என ஊதிப்பெருக்கப்பட்ட மோடியின் பிம்பம், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதன் பிறகு, பா.ஜ.க. எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் மோடியின் முகத்தைக் காட்டியே பிரச்சாரம் செய்தது. சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்படும் மாநிலத் தலைவர்களுக்கு எதிராக, நாட்டின் பிரதமராக உள்ள மோடியின் முகமே முன்னிறுத்தப்பட்டது.  இந்த உத்தியை 2015-ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலிலேயே பா.ஜ.க. கையாளத் தொடங்கிவிட்டது.

ஆனால், பாசிசக் கும்பலின் தோல்வி முகம் காரணமாக அண்மைக்காலமாக மோடியின் பிம்பம் சரிந்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலேயே இதைக் காண முடிந்தது. அத்தேர்தலின் போது 33 பேரணிகளிலும், 28 ரோடு ஷோக்களிலும், 7 நாள் தொடர் பிரச்சாரக் கூட்டங்களிலும் மோடி கலந்து கொண்டார். ஆனால், கர்நாடகாவில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்ததோடு, மோடி பிரச்சாரம் செய்ததால் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பிருந்த தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

இந்த எதிர்மறை விளைவின் காரணமாக தேர்தல்களில் மோடியின் முகத்தை முன்னிறுத்துவதில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், கர்நாடக தேர்தல் தோல்வியின்போதே “அதிர்ஷ்டமற்ற தலைவர் மோடி” என்று பொதுவெளியிலும் கட்சிக்குள்ளும் பேசப்பட்டது. எனவே, இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் தோல்வி உறுதியாகியுள்ள நிலையில் மோடியை முன்னிறுத்தினால், மோடி அதிர்ஷ்டமற்றவர் என்ற பிரச்சாரம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பேசுபொருளாகி, தங்களின் ஒரே பிரம்மாஸ்திரமான “மோடி பிம்பம்” புஸ்வானமாகிவிடும் என்ற அச்சம் பாசிசக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், பரிதாபம் என்னவெனில் தேர்தலை எதிர்கொள்ள மோடியை முன்னிறுத்துவதைத் தவிர பாசிசக் கும்பலுக்கு தற்சமயம் வேறு உத்தி கையில் இல்லை. அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குமிக்க பிரபலத் தலைவர்கள் பா.ஜ.க-விற்கு இல்லாத காரணத்தினாலும், அப்படியிருந்தாலும் உட்கட்சி பூசல் காரணமாக அவர்களை முன்னிறுத்த முடியாததாலும் இந்நிலை மேலும் மோசமாகியுள்ளது. எனவே, வேறுவழியில்லாமல் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் வரம்புக்குட்பட்ட அளவிற்கு மட்டும் மோடியை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது.

பாசிஸ்டுகளின் பிரச்சாரப் போக்கை மாற்றிய சாதிவாரிக் கணக்கெடுப்பு:

இந்த ஐந்து மாநிலத் தேர்தலில், முந்தைய தேர்தல்களை காட்டிலும் “கவர்ச்சிவாதம்” முன்னுக்கு வந்துள்ளது. மிசோரம் மாநிலம் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாநிலங்களில் மட்டும் மகளிருக்கு ஸ்கூட்டி, சிலிண்டர் விலை குறைப்பு, மகளிருக்கான மாதாந்திர தொகை உள்ளிட்ட பல்லாயிரம் கோடிகள் மதிப்பிலான கவர்ச்சிவாதத் திட்டங்களை காங்கிரசும், பா.ஜ.க.வும் வாரி இறைத்துள்ளன. இலவசத் திட்டங்களை “ரேவ்டி கலாச்சாரம்” என இழிவுப்படுத்திய பா.ஜ.க., குஜராத், உ.பி தேர்தல்களைப் போலவே இப்போதும் கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிவிப்பதில் காங்கிரசுடன் போட்டியில் இறங்கியிருக்கிறது.

மற்றொருபுறம், இந்துமதவெறியைத் தூண்டும் பா.ஜ.க-வின் வழக்கமான பிரச்சாரம் இந்தத் தேர்தலில் குறைவாகவே இருந்தது. இராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்வது, தெலுங்கானா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்துவது போன்ற வாக்குறுதிகள்,  தெலுங்கானா பாக்கியலட்சுமி கோவிலை ஒட்டிய பேரணிகள் என ஒருசில இந்துமதவெறிப் பிரச்சாரங்கள் பா.ஜ.க-வால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட “ஜெய் பஜ்ரங் பலி”, “தி கேரளா ஸ்டோரி” போன்ற இந்துமதவெறி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் அளவிற்கு அவற்றை பா.ஜ.க-வே இத்தேர்தலில் முதன்மைப்படுத்தவில்லை. பெரும்பாலும் கவர்ச்சிவாதத் திட்டங்களுக்கே கவனம் தரப்பட்டது. பா.ஜ.க-வின் உள்ளூர் பிரமுகர்கள் பலரே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து “பொழியும் வாக்குறுதிகள்: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டி கவர்ச்சிவாதம்” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய, “தி இந்து”  நாளிதழ்,  “பிரச்சாரத்தில் வகுப்புவாதத்திற்குப் பதிலாக போட்டி கவர்ச்சிவாதம் தோன்றியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது. இவையன்றி, பழங்குடி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளும் முன்னுக்கு வந்தன.

இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, எதிர்க்கட்சிகளால் கையிலெடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு. ஐந்து மாநிலத் தேர்தலில் சாதிவாரிக் கணக்கெடுப்பை காங்கிரஸ் ஒரு முக்கிய ஆயுதமாக கையிலெடுத்தது. காங்கிரஸ் வெற்றிபெற்றால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “இந்தியா” கூட்டணி வெற்றிபெற்றால் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் கூறியது. இது பாசிசக் கும்பலை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.

சான்றாக, அக்டோபர் மாதத் தொடக்கத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த மோடி, “காங்கிரஸ் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறது; இந்துக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது” என்று பேசினார். ஆனால், காங்கிரஸ் இந்த அரசியலை தீவிரமாகக் கொண்டு சென்றதன் விளைவாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் அதே சத்தீஸ்கரில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சாதிவாரிக் கணக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. அது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று தற்காப்பு நிலையிலிருந்து பதிலளித்தார்.

இத்தனை ஆண்டுகளாக தாங்கள் கட்டிவைத்திருந்த “இந்து” என்ற பிம்பத்தை சாதிவாரிக் கணக்கெடுப்பு நொறுக்கத் தொடங்குவதைக் கண்டு பாசிசக் கும்பல் பீதியடைந்தது. இந்து என்று கூறி பிரச்சாரம் செய்ய இயலாமல் உழைக்கும் மக்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடிகள் என பிரித்து பிரச்சாரம் செய்யும் நிலைக்கு பா.ஜ.க. சென்றது.

மேலும், சத்தீஸ்கர் மாநிலப் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியினரை “ஆதிவாசிகள்” என்பதற்கு பதிலாக “வனவாசிகள்” என்று குறிப்பிட்டு பா.ஜ.க. அவமதிக்கிறது, அவர்களை “மூத்த குடி” என்று சொல்வதற்கு பா.ஜ.க. அஞ்சுகிறது என்று பேசியது பாசிசக் கும்பலை பின்வாங்கச் செய்தது. இதனால் சத்தீஸ்கர் உள்ளிட்ட தேர்தல்களில் பல்வேறு பழங்குடி மக்கள் சார்ந்த திட்டங்களை பா.ஜ.க. முன்வைக்க வேண்டியிருந்தது. அச்சம் தலைக்கேற, தேர்தல் நடந்துகொண்டிருக்கும் போதே 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான “பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார் மோடி.

இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்புவரை புதிய நாடாளுமன்றத் திறப்பு, மோடியின் அரசுமுறை அமெரிக்கப் பயணம், நிலவின் தென்துருவத்தில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், G-20 உச்சி மாநாடு மற்றும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவிற்கு “பாரத்” என பெயர் மாற்றம் ஆகியவற்றைப் பிரச்சாரமாக்கியது, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர், ராமர் கோவில் திறப்புக்கான தேதி அறிவிப்பு என அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல்களை கொண்டுவந்த பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரல் சங்கிலியை சாதிவாரிக் கணக்கெடுப்பு அறுத்தெறிந்துள்ளது.

ராமர் கோவில் திறப்புக்கான தேதி நெருங்கிக் கொண்டிருந்தாலும், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கு அடுத்த நாளே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்குப் பலியாகி அதற்குள் சென்று விவாதிக்க எதிர்க்கட்சிகள் உட்பட யாரும் தயாராக இல்லை. இதனால் அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல்களை உருவாக்கிகொண்டிருந்த பாசிசக் கும்பல் இந்த இரண்டு மாதங்களாக சொந்தமுறையில் ஒரு நிகழ்ச்சிநிரலை உருவாக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், கிரிக்கெட்டில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால், அதைத் தமது மோடி பிம்பப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த எண்ணியதும் பகல் கனவாகிவிட்டது. இந்திய அணியின் தோல்விக்கு மோடியே காரணம் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காறி உமிழாத குறையாக தூற்றியது பாசிசக் கும்பலுக்கு மேலும் சோர்வை ஏற்படுத்தியது.

இவற்றின் மூலம் பாசிசக் கும்பல் எந்த அளவிற்கு தோல்வி முகத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது. அரசியல் அரங்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தோல்வி முகம் தேர்தல் உள்ளிட்ட பிற அரங்கங்களிலும் எதிரொலிக்கின்றது. சொல்லப்போனால், அடித்து வீழ்த்த ஆளில்லாத காரணத்தினாலேயே பாசிசக் கும்பல் இன்னும் அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஏறி அடித்தால் தேர்தல் களத்திலும் சமூக அரங்கிலும் பாசிசக் கும்பலை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

இச்சூழலுக்கு ஏற்ப பாசிசக் கும்பலை வீழ்த்துவதற்கான திசையில் பணிகளை மேற்கொள்ளாமல், பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்க்கட்சிகளை “மீட்பராக” முன்னிறுத்தும் போக்கு தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியும் அதிலுள்ள கட்சிகளும் எந்தளவுக்கு சந்தர்ப்பவாதமானவை என்பதையும், அக்கூட்டணியை நம்பி மக்களின் பாசிச எதிர்ப்பை அடகு வைப்பது அப்பட்டமான தற்கொலைப் பாதை என்பதையும் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரசின் நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

ஓட்டு பொறுக்குவதே ஒற்றைக் கொள்கை:  

தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசின் கை ஓங்கி இருந்தது. இதனால் காங்கிரசுக்கு இம்மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படவில்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளாமல் காங்கிரஸ் அக்கட்சிகளை ஓரங்கட்டியது. இதனால் கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டன.

சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிகள், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. இவ்விரு கட்சிகளும் இச்சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தங்களைக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தின. இக்கட்சிகளன்றி, ஆம் ஆத்மி கட்சியும் இத்தேர்தலில் தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கியது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் உ.பி. எல்லையோர மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றுள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் தொகுதிகளைப் பிரித்துத்தர காங்கிரஸ் மறுத்துவிட்டது. இதனால், கடுப்பான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் இவ்வாறே நடந்து கொண்டிருந்தால் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு இதே நிலை ஏற்படும் என்று மிரட்டல் விடுத்ததோடு தேர்தலைத் தனியாக எதிர்கொண்டார். இதனால், பல தொகுதிகளில் பலமுனைப் போட்டி உருவானது.

“இந்தியா” கூட்டணியின் பலமே பா.ஜ.க-விற்கு எதிராக ஒற்றை வேட்பாளரை நிறுத்தி பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வதுதான் என்று தொடக்கத்தில் சொல்லப்பட்டதற்கு, காங்கிரசே இப்போது குழி தோண்டியிருக்கிறது. இன்னொருபுறத்தில், ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்துவதாகவும், “இந்தியா” கூட்டணிக்கான வேலைகளை மறந்து விட்டதாகவும் நிதீஷ்குமார் புலம்பியிருக்கிறார்.

மோடிக்கு எதிரான தலைவராக ராகுல் வளர்ந்து வருவதாலும், காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறுவது போல தோன்றுவதாலும், பெரிய அளவில் கூட்டணிக் கட்சிகளை சாராமலேயே தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று காங்கிரஸ் திட்டமிடுகிறது. மேலும், கர்நாடகா மற்றும் ஹிமாச்சலில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால், இந்தத் தேர்தலிலும் குறைந்தது மூன்று மாநிலங்களில் வென்றுவிட்டால் பிரதமர் வேட்பாளரை காங்கிரசிலிருந்து நிறுத்த முடியும்; கூட்டணிக் கட்சிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க  முடியும் என்பது காங்கிரசின் திட்டமாக உள்ளது.

பிற எதிர்க்கட்சிகள் செல்வாக்காக உள்ள மாநிலங்களை பொறுத்தவரையிலும், அக்கட்சிகள் காங்கிரசுடனோ “இந்தியா” கூட்டணியிலிருக்கும் பிற கட்சிகளுடனோ தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை. ஆனால், தற்போதைய சூழலில் மாநில அளவில் அக்கட்சிகளுக்கு அடித்தளம் இருந்தாலும் காங்கிரசுடன் இணைந்து நின்றாலே, “இந்தியா” கூட்டணி பெயரில் நின்றாலே சமூகத்திலுள்ள பாசிச எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துகொள்ள முடியும்.

மொத்தத்தில், எந்தக் கட்சிக்கும் பாசிசக் கும்பலை எதிர்க்க வேண்டும் என்பதிலும் குறைந்தபட்சம், பா.ஜ.க-வை தேர்தலில் தோற்கடிப்பது என்பதிலும் கூட உறுதியில்லை. இந்தக் கூட்டணியை வைத்து தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, தேர்தலில் எவ்வாறு பொறுக்கி தின்னலாம் என்பதே இக்கட்சிகளின் ஒற்றைத் திட்டமாக இருக்கிறது.

காங்கிரசின் இந்துத்துவம் கொல்லாதா?

ஒருபக்கம், எதிர்க்கட்சிகளின் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பிரச்சாரம் காரணமாக, இத்தேர்தலில் பா.ஜ.க-வின் இந்துத்துவப் பிரச்சார நெடி குறைவாக இருந்தாலும் அந்தக் ‘குறையை’ காங்கிரஸ் தீர்த்து வைத்தது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெவ்வேறு அளவுகோல்களில் இந்துத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

மத்தியப்பிரதேசத்தில் அறிவிக்கப்படாத காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான கமல்நாத் பேசுவதை ஒருவர் கேட்டால் நிச்சயம் அவர் ஆர்.எஸ்.எஸ்-காரர் என்றே எண்ணத் தோன்றும். “பாபர் மசூதி இடத்தில் உள்ள தற்காலிக இராமர் கோவிலின் பூட்டுகளை இராஜீவ் காந்தி திறந்து வைத்தார். வரலாற்றை மறந்துவிடக் கூடாது” என்று காங்கிரசே பகிரங்கமாக சொல்லத் தயங்குவதைப் பேசும் இந்துத்துவவாதி தான் கமல்நாத்.

இத்தேர்தலில், ராமனும் சீதையும் வனவாசத்தின் போது சென்றதாக சொல்லப்படுகின்ற பாதையை மேம்படுத்தும் “ஸ்ரீ ராம் வான் கமன் பாதை” திட்டம், ராமன் உள்ளிட்ட இந்து கடவுள்களுக்கு சிலை வைப்பது ஆகியவை மத்தியப்பிரதேச காங்கிரசால் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும், காங்கிரஸ் ஆட்சியமைத்தால் இலங்கையில் சீதா கோவில் கட்டும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட பல ‘இந்து’ ஆதரவுத் திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். மத்தியப்பிரதேசக் காங்கிரசின் நிறத்தை கலம்நாத்  ஏற்கனவே காவியாக்கி வரும் நிலையில், சமீபத்தில் இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் சேனாவின் நிர்வாகிகள் கும்பலாக காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல, சத்தீஸ்கர் மாநிலக் காங்கிரஸ் முதல்வரான பூபேஷ் பாகலும் பல்வேறு இந்துத்துவ வாக்குறுதிகளை அளித்திருப்பதோடு, ஏற்கனவே பலவற்றை நடைமுறைப்படுத்தி, கமல்நாத்துக்கே முன்னோடியாக இருந்து வருகிறார். சொல்லப்போனால், அம்மாநிலத்தில் பா.ஜ.க-வால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாததற்கே, பா.ஜ.க-வின் இந்துத்துவ முகமூடியை  பூபேஷ் பாகல் அணிந்துகொள்வது தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.


படிக்க: தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆர்.எஸ்.எஸ்-இன் குடை அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை தடைசெய்வோம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்தது. அப்போது ஊடகங்களுக்கு பதிலளித்த பூபேஷ் பாகல், “மாநிலத்தின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் சத்தீஸ்கரில் தடை செய்வது பற்றி யோசிப்போம்” என்று மழுப்பலாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இந்துத்துவப் பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை எனினும், பல இந்துத்துவத் திட்டங்கள் காங்கிரஸ் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பிராமணர் நல வாரியம் அமைத்தது, அர்ச்சகர்களுக்கான கவுரவத்தை அதிகரிப்பது, கோசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு, பசுக் காப்பீடு போன்ற பல இந்துத்துவக் கொள்கைகள் ராஜஸ்தான் காங்கிரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அம்மாநிலத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கும்பல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ சொல்லிக் கொள்ளும்படியான எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுத்ததில்லை. மேலும், காங்கிரசின் ஆட்சியில் தான் ராஜஸ்தானில் பல  இந்துத்துவ அமைப்புகள் உருவாகி செழிப்பாக வளர்ந்துள்ளன. காங்கிரஸ் கைகட்டிக்கொண்டு இவற்றை வேடிக்கை பார்த்தது என்பதே உண்மை.

காங்கிரசின் இந்த இந்துத்துவ முகத்தை நாம் அம்பலப்படுத்தி, இது தான் மாற்றா என்று கேள்வி எழுப்பினால், “காங்கிரஸ் மிதவாத இந்துத்துவத்தை கடைப்பிடிக்கின்றதுதான், ஆனால், அது யாரையும் கொல்லுவதில்லை” என்று சிலர் பதில் வாதம் வைக்கக்கூடும்.

ஆனால், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் காங்கிரசின் இந்துத்துவம் இஸ்லாமியர்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர்களை பா.ஜ.க. சுதந்திரமாக கொலை செய்வதற்கான வழியை உருவாக்கி தருகிறது. பா.ஜ.க. கொலை செய்யும் போது கள்ளமவுனம் சாதித்துவிட்டு, கொலையில் தனக்குப் பங்கில்லை என்று நழுவிக் கொள்கிறது காங்கிரஸ்.

இந்தியா கூட்டணி பா.ஜ.க-விற்கு மாற்றா?

ஒருபக்கம், பசு வளைய மாநிலங்களில் இந்துத்துவத்தைக் கையிலெடுத்துப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ், தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் அங்குள்ள அரசியல் நிலைமைக்கு ஏற்ப தனக்கு மதச்சார்பின்மை வேடம் தரித்துக்கொண்டு பிரச்சாரம் செய்தது. இக்கட்சிக்கு ஆதரவாக பல ஜனநாயக அமைப்புகள் களத்தில் பிரச்சாரம் செய்தது காங்கிரசின் இந்த வேடத்திற்கு வலுச்சேர்த்தது. “பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டுவதை” போல வட மாநிலங்களுக்கு இந்துத்துவம், தென்மாநிலங்களுக்கு மதச்சார்பின்மை என பிரித்துப் பிரச்சாரம் செய்வதன் மூலம் காங்கிரஸ் ஒரு கேடுகெட்ட சந்தர்ப்பவாதக் கட்சி என்பதனை நிரூபித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் மட்டும் “பாசிசம், பாசிசம்” எனப் பேசி, பாசிச எதிர்ப்பு ஓட்டுகளைப் பொறுக்கிக் கொள்ளும் காங்கிரஸ், இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடி தருகின்ற எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டாலும், தேர்தலில் வென்ற பிறகு காங்கிரஸ் அதை நிறைவேற்றுமா என்பது சந்தேகமே.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என்று பேசிய காங்கிரஸ், தேர்தலில் வென்ற பிறகு அது குறித்து மூச்சுகூட விடாமல் இருப்பதே இதற்குச் சான்று. மேலும், 2011-ஆம் ஆண்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்த பின்பும், சந்தர்ப்பவாதமாக காங்கிரஸ் அதனை வெளியிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சாதிவாரிக் கணக்கெடுப்பு காங்கிரசிற்கே எதிராக சென்று முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் பேசிவரும் சூழலில், தேர்தலில் வென்ற பிறகு காங்கிரஸ் அவ்வாக்குறுதியை அப்படியே ஊற்றி மூடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் பாசிசக் கும்பல் புதியக் கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அவை, வெறும் திட்டங்கள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் என்ற பார்வையில் அணுகப்பட வேண்டியவை. கல்வி, மருத்துவம் – தனியார்மயம், மாநில உரிமைப் பறிப்பு, அம்பானி-அதானிகளுக்கான பன்னாட்டுச் சந்தை உருவாக்கம் என பல நோக்கங்களுடன் அவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவற்றுக்கு எதிராக காங்கிரஸ் எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை. ராகுல் காந்தி வாய்கிழிய பேசும் அதானி ஊழல் முறைகேடு, ஜி.எஸ்.டி-க்கு எதிராகக் கூட காங்கிரஸ் இத்தேர்தலில் பெரிதாகப் பேசவில்லை.

பலரும்  சொல்வதுபோல, இந்தத் தேர்தல்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரை இறுதியாக இல்லாவிட்டாலும், அத்தேர்தலுக்கான முன்னோட்டம் என்ற வகையில் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் மக்களின் பிரச்சினைகளையும் பாசிச எதிர்ப்பையும் பேசுபொருளாக்குவதில்லை. வெறும் கவர்ச்சிவாதத் திட்டங்களையும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளையும் வைத்தே தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இத்தகைய காங்கிரசும் “இந்தியா” கூட்டணியும் தான் பா.ஜ.க. மற்றும் பாசிசத்தை வீழ்த்தப்போகின்றன என்று நம் காதுகளில் பூ சுற்றுவதைச் சிலர் செய்து வருகின்றனர்.

பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் இருக்கும் இன்றைய சூழலில், பாசிஸ்டுகளுக்கு எதிராக சிதறலான வகையில் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில், பா.ஜ.க-வுக்கு எதிராக மறந்தும் பேசத் துணியாத சந்தர்ப்பவாதிகளை மாற்றாகக் காட்டுவது தற்கொலைப் பாதைக்கு ஒப்பானது. இது, தமது சந்தர்ப்பவாதத்தையும் செயலின்மையும் மறைத்துக் கொள்ள விரும்புவோரின் தந்திரமேயன்றி வேறேதுமில்லை.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்

இன்று டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளதால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து ஓர் பார்வைக்கு வந்தடைய “புதிய ஜனநாயகம்” டிசம்பர் மாத இதழ் கட்டுரை வெளியிடப்படுகிறது. இக்கட்டுரை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு எழுதப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி! | தோழர் ரவி

மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி! | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு

2002-ஆம் ஆண்டு குஜராத் படுகொலைக்கு சில நாட்களுக்குப் பின் BBC நிறுவனம் மோடியிடம் நேர்காணல் எடுத்தபோது கேள்வி ஒன்றைக் கேட்டது. ”இப்போது நீங்கள் (குஜராத் கலவரத்தை) திரும்பிப் பார்க்கும் போது இது குறித்து ஏதாவது ஒரு விஷயத்தை வேறுவிதமாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

அதற்கு மோடியின் பதில்: ”ஆம். ஊடகங்களை எப்படிக் கையாள்வது என்ற விஷயத்தில் நான் அப்போது பலவீனமானவனாக இருந்தேன்”

இந்த கேள்வியும் அதற்கான மோடியின் பதிலும் சமீபத்தில் BBC வெளியிட்ட 2002 குஜராத் படுகொலை பற்றிய ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

ஆனால் இங்கே நாம் ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் கால் பரப்பியுள்ள மிகப்பெரிய நிறுவனமான BBC-யின் மீது, குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அதன் அலுவலகங்களில் சோதனையை ஏவிவிட்டது மோடி அரசு. அப்படியானால், இந்தியாவில் எளிய மக்களின் குரல்களாக இருக்கும் சிறிய ஊடகங்களின் நிலை என்ன?

2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் தனக்கு தெரியாத கலையான ”ஊடகங்களை கையாள்வதை” தற்போது மோடி கற்றுக்கொண்டுவிட்டார். ஊடகங்களை தவிர்ப்பதற்கு மட்டுமல்ல, கடந்த 10 வருடம் பிரதமராக இருந்து ஊடகங்களின் குரல்வளையை எப்படி நெரிப்பது என்பதையும் மோடி கற்றுக்கொண்டுவிட்டார்.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஊபா சட்டம் உட்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சமகால இந்தியாவில் அரசாங்கத்தை கேள்வி கேட்கும், அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்யும் பத்திரிக்கையாளராக இருப்பதன் ஆபத்துகளைக் காட்டுகிறது.

அரசு மக்களுக்கு இளைத்த கொடுமைகளைக் கேள்வி கேட்ட, செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். சமீபத்தில் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதல் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஊடகங்களுக்கு இரட்டை அளவுகோல்களை வைத்திருக்கிறது மோடி கும்பல். தங்களுக்கு  சாதகமாக செய்திகளை வெளியிடும் அர்னாப் கோசுவாமி போன்றவர்களின் ஊடகங்களுக்கு விளம்பரங்களும் சலுகைகளும் கொடுக்கிறது. மோடி அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் மீது அமலாக்கத்துறையை ஏவிவிடுவது, மிரட்டுவது, முடக்குவது என ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது; அல்லது ஊடகங்களின் பங்குகளை கைபற்றி அவற்றை விலைக்கும் வாங்குகிறது.

சமீபத்தில் அதானியின் நிறுவனம் NDTV-யின் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ரவீஷ் குமார் என்ற மூத்த பத்திரிகையாளர் NDTV-யில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த ரவீஷ் குமார் தான் மோடி கும்பலுக்கு ஜால்ரா அடிக்கும் ஊடகங்களுக்கு “கோடி மீடியா” என்ற பொருத்தமான பெயரைக் கொடுத்தவர்.

இப்படி சமகாலத்தில் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் அவரசநிலை காலத்தைவிட மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

இந்திரா காந்தி கொண்டு வந்த அவரசநிலை காலத்தில் பத்திரிகைகள் அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டன. ஆனால் மோடி ஆட்சியில் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் தங்களது கருத்துகளை வெளியிட்ட பின்பு அரசு நிறுவனங்களால் வேட்டையாடப்படுகின்றனர். கருத்து சுதந்திரம் என்பது தற்போது பெயரளவிற்கு இருந்தாலும், கருத்து சொல்லிய பிறகு இங்கு நிம்மதியாக வேலை செய்யமுடியாது  என்ற வகையில் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு ஊடகங்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பது அல்லது ஊடகங்களை  விலைக்கு வாங்கி பத்திரிகைகளை தனது பாசிச நோக்கங்களுக்காக பயன்படுத்துவது போன்ற அனைத்து உத்திகளையும் கையாள்கிறது பாஜக கும்பல்.


படிக்க: “நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!


சமீப காலங்களில் மோடி அரசின் கொள்கைகளால் நிகழ்ந்த அவலங்களையும், மக்கள் மீதான அடக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த டிஜிட்டல் ஊடகங்களும் இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பவில்லை. டிஜிட்டல் மீடியா பரந்த அளவிலான பார்வையாளர்கள்/வாசகர்களிடம் வேகமாகக் கொண்டு சேர்ப்பது; ஒரு செய்தியை வைரலாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. மேலும் அச்சுப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை விட டிஜிட்டல் ஊடகம் மலிவானது, மக்களிடம் அதிகம் சென்றடையக் கூடியது என்பதால்  மோடி கும்பல்  டிஜிட்டல் ஊடகங்களை  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான சட்டத்தை (2021) இயற்றி, அதன்மூலம் அதனையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறது.

மோடி ஆதரவு தொலைக்காட்சி ஊடகங்கள் செய்யும் இந்துத்துவ பரப்புரைகளையும் மோடியின் போலிப் பிம்பத்தையும் உடைப்பதில் டிஜிட்டல் ஊடகங்களுக்கு முக்கிய பங்கிருந்தது என்பதால் அதையும் விழுங்கப் பார்க்கிறது காவி கும்பல்.

டிஜிட்டல் ஊடகத்தளங்களின் எண்ணிக்கையானது அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது. நூறாயிரக்கணக்கான செய்தி வலைத்தளங்கள் இருக்கின்றன. இவற்றில் வெளியிடப்படும் செய்திகள் பாஜக கும்பலுக்கு உவப்பானதாக இருந்தால் அதனை போலிச் செய்தி என்று முத்திரை குத்தி நீக்கும் அதிகாரத்தை இந்த புதிய சட்டம் அரசிற்கு வழங்கியுள்ளது. அந்த செய்தியை குறிப்பிட்ட நேரத்திற்குள் நீக்கவில்லை என்றால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்மூலம் இனிமேல் அரசை விமர்சிக்கும் எல்லா செய்திகளும் போலிச் செய்திகளாக மாற்றப்பட்டு நீக்கப்பட்டுவிடும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது பாசிச பாஜக கும்பல்.

இந்த சட்டம் இணைய செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களையும் கட்டுப்படுத்தும். இந்த சட்டத்தைக் கொண்டு ட்விட்டர் நிறுவனத்தை மோடி கும்பல் எப்படி வேட்டையாடியது என்பதை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தகவல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு , ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட “69A” என்ற  பெயரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று தற்போது அம்பலமாகியுள்ளது. அந்த கூட்டங்களில் மோடி அரசை விமர்சித்து பதிவிடப்படும் பதிவுகளை ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவை” என்று கூறி அவற்றை நீக்கச் சொல்லும் ஆணைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியதாகவும், மேலும்  இந்த சமூக வலைத்தளங்கள் எந்த மாதிரியான பதிவுகளை அனுமதிக்கலாம், எவற்றை அனுமதிக்கக்கூடாது என்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் ஒரு சில ட்வீட்களை மட்டும் அகற்றுமாறு கேட்டுக்கொண்டிருந்த  அதிகாரிகள்,  ஒருகட்டத்தில் முழு கணக்குகளையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கிவிட்டனர். நூற்றுக்கணக்கில் சமூக வலைத்தள கணக்குகளை  நீக்கச் சொல்லி அரசாங்க அதிகாரிகளிடமிருந்து  உத்தரவுகள் வந்ததாகவும், இதை மறுக்கும் பட்சத்தில் சமூக வலைத்தள‌ நிறுவனங்களின்  நிர்வாகிகள்  சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர்களின் நிறுவனங்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று மிரட்டப்பட்டனர்.

இதற்கு ட்விட்டர் நிறுவனம் மட்டுமே ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் ட்விட்டரின் புது டெல்லி அலுவலகத்திற்கு பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரை  மோடி கும்பல் ஏவிவிட்ட பிறகு, ட்விட்டர் அதன் உயர்மட்ட இந்திய நிர்வாகியை நாட்டை விட்டு வெளியேற்றியது. இந்த வகையில் மோடி கும்பல் புதிய விதிமுறைகள்,  தணிக்கை செயல்முறை மற்றும் சட்ட  முகமைகள் ஆகியவற்றின் கொடுங்கரத்தைக் கொண்டு ட்விட்டரின் எதிர்ப்பை முறியடித்தது.

அரசின் மீதான விமர்சனங்களை  பொதுமக்கள் பதிவு செய்யும் தளமாக செயல்படும் சமூக ஊடகங்களை கொடுங்கரத்தை பயன்படுத்தி எப்படி ஒடுக்குவது என்ற இழிந்த படிப்பினைகளை உலக நாடுகளுக்கு மோடி கும்பல்  கற்றுக் கொடுத்துள்ளது. இதை முன்மாதிரியாக வைத்து, பிற நாட்டின் அரசுகளும் மக்களின் சுதந்திர சித்தத்தை ஒடுக்க பயன்படுத்தும்.

பொதுவாக எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்க்கருத்துகளை விரும்பாது. ஆனால் பாசிச மோடி அரசாங்கமோ அரசு நிறுவனங்களைக் கொண்டு சட்டப்பூர்வமாக ஒழுங்கமைந்த முறையில் எதிர் கருத்துக்களை கடுமையாக ஒடுக்க புதிய  வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.

ட்விட்டர் போன்ற நிறுவனங்களின்‌ எதிர்ப்புகள் முறியடிக்கப்பட்டன என்றால் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இயல்பாகவே பாசிச பாஜகவுடன் கூட்டமைத்து செயல்பட்டு வருகின்றன.

“முஸ்லீம் குடியேறிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று பேசிய பாஜக அரசியல்வாதியான டி. ராஜா சிங் என்பவனின் பேஸ்புக் கணக்கை “ஆபத்தான தனிநபர்” என்று வகைபடுத்தவேண்டும் என்ற பேஸ்புக் ஊழியர்கள் கருத்து தெரிவித்தனர். ”அந்த அரசியல்வாதியை  தண்டிப்பது, இந்தியாவில் பேஸ்புக்கின் வணிக வாய்ப்புகளை பாதிக்கும்” என்று பேஸ்புக் அதிகாரியான அங்கி தாஸ் அப்போது பாஜகவிற்கு ஆதரவாக  வாதிட்டதாக வல் ஸ்ட்ரீட் ஜர்னல் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஊடகங்களின் தற்போதைய நிலைமை இதுதான். ஒருபுறம் விலைபோன ஊடகங்கள் பாஜக கும்பலுக்கு ஒத்து வாசிக்கின்றன. இவை மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளை மறைக்கின்றன, நியாயப்படுத்துகின்றன. மற்றொருபுறம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இணைய வானரப்படையால் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதை அம்பலப்படுத்தும் நியாயமான ஊடகங்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன.

நோயின் தாக்கம் அதிகமாகும் போது அதற்கெதிரான போராட்டமும் அதிகமாக வேண்டும். இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது. கட்டமைக்கப்பட்ட போலிச் செய்திகளும், உண்மையின் மீதான அடுக்குமுறைகளும் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் தான், ஒரு செய்தியை அதன் உண்மையான அரசியல் அர்த்தத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை அதிகமாகிறது. செய்திகளை அதன் சமூக அரசியல் பின்புலத்துடனும் வரலாற்று தொடர்ச்சியுடனும் வழங்கும் பத்திரிகைகளின் தேவை அதிகமாகிறது. இந்த வகையில் மக்களை அரசியல் படுத்தும் பணியின் தொடர்ச்சியாக நமது புதிய ஜனநாயகம் பத்திரிகை 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது; வினவு தளம் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அவற்றிக்கு சந்தா செலுத்தியும் நன்கொடை வழங்கியும் ஆதரவளித்து, மக்களை அரசியல்படுத்தும் புரட்சிகரப் பணியில் எங்களுடன் சேர்ந்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 4

பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து உண்மை அறியும் குழுவானது கண்டறிந்த முடிவுகள்

  1. ஜூலை 2 – 2023 முதல் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டங்கள் ஜனநாயக முறையிலானவையே. மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முறையான பேச்சு வார்த்தை எதுவும் இதுவரை நடைபெறவில்லை. முறையான பேச்சுவார்த்தை எதையும் நடைபெறச்செய்யாமல் போராடும் விவசாயிகளை சமூக விரோதிகள் போல தமிழ்நாடு அரசு சித்தரிக்கிறது.
  2. ”1,200 ஏக்கர் அளவிற்கு நில எடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் ஏதுமில்லை. மேலும், அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டதில், நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள, 1881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளனர்என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது. நில எடுப்பிற்கான அறிவிப்பு அளித்த நிலப்பரப்பில் நன்செய் நிலம் இல்லை என்பது பொய்யாகும். அக்கிராமங்களுக்கு செல்லும் எவர் ஒருவராலும் இதனை அறியமுடியும். 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபனை செய்தனர் என்பதும் பொய். சிப்காட் பிரிவு முதல் அமைச்சர் வரை பலரிடமும் விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். 22.07.2023 அன்று செய்யாறு சட்டமன்ற உறுப்பினரிடம்  மனு அளித்த போது சுமார் 1000 பேர் பேரணியாக சென்றனர் என்பது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு மக்களை செல்லவிடாமல் மறித்ததன் மூலம் சிப்காட்டிற்கு நிலம் கொடுக்க மறுத்தவர்களின் எண்ணிக்கையை சதித்தனமாக குறைத்துக்காட்டியுள்ளது.
  3. விவசாயிகள், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, நில எடுப்பு செய்ய தானாக முன்வந்து சம்மதம் தெரிவித்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தியது, பணி செய்த காவலர்களை தாக்கியது, பொது உடமைகளை சேதப்படுத்தியது ஆகிய குற்றங்களைச் செய்ததாகஅரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. விவசாயிகளிடம் சிப்காட் திட்டம் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இருந்தது, மக்களை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் செய்தது, அமைதியாகப்போராடிய மக்களின் போராட்டப்பந்தலை பிய்த்து எறிந்தது, ஜனநாயக வழியில் போராடிய மக்களை வீடு புகுந்து கைது செய்வது, சிலர் கதவுகளை உடைத்தது, போராட்ட முன்னணியாளர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போட்டது ஆகிய  குற்றங்களைச்செய்தது திமுக அரசுதானே தவிர விவசாயிகள் அல்ல. ஆகவே மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யாக புனையப்பட்டவையே.
  4. குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் சட்டமன்ற உறுப்பினரை இன்று (17-11-2023) நேரில் சந்தித்து, மேற்படி நபர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யார் சட்டமன்ற உறுப்பினருடன் வந்து, பொதுப்பணித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர் என்று தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் பொய்யே. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி மாபியாக்கள் போல செயல்பட்டது அமைச்சர் ..வேலுவும் சட்டமன்ற உறுப்பினர் .ஜோதியுமே ஆகும்.
  5. செய்யாறு சிப்காட் அலகு -3க்கான திட்டத்தை நேர்மையான முறையில் நிறைவேற்றாமல் ரகசியமாக, சதித்தனமான முறையில் வழிப்பறிக் கொள்ளையன் போல ஏமாற்றியும் மிரட்டியும் விவசாயிகளின் நிலங்களை பறிக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது .
  6. இந்திய நாட்டுக்குடிமகன் இந்தியாவில் எந்த ஒரு இடத்திற்கும் செல்வதற்கு உள்ள உரிமை என்பது, அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதை மறுக்கும் விதத்தில் அமைச்சர் . வேலுவின் பேச்சும் மாவட்ட போலீசுஆட்சியரின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன.
  7. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் உள்நாட்டு கார்ப்பரேட்மாபியா கும்பல்களும் நாட்டில் அனைத்து இயற்கை வளங்களையும் தங்கு தடையின்றி சூறையாடிக்கொண்டு இருக்கும் போது, விவசாய நிலங்களை சிப்காட்டுக்காக கொடுக்காமாட்டோம் என்ற மக்களை கைதுகுண்டர் தடுப்புச்சட்டம்கண்காணிப்புமிரட்டல் என தொடர்ந்து அச்சுறுத்தும் வேலைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மாவட்ட ஆட்சியர் ஆகியேர் ஈடுபட்டுள்ளனர்.
  8. எட்டுவழிச்சாலை எதிர்ப்புப்போராட்டத்தினை தனது வாக்கு வங்கிக்காக பயன் படுத்திக்கொண்ட திமுக, தற்போது ஆட்சிக்கு வந்த உடன் ஜனநாயகப்பூர்வமாக போராட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்காமல், அவர்களின் போராட்டப்பந்தலை பிடுங்கியெறிந்தும் ஆயிரத்திற்குமேற்பட்ட போலீசை கிராமங்களில் ஏவியும் கைதும் செய்துள்ளது. அமைதி வழிப்போராட்டம் தொடங்கிய 2023, ஜூலை நவம்பர் வரையில் மட்டும் மக்கள் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தது என்பது போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே.
  9. மேல்மா சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஐந்து பேர், தானாக முன்வந்து சிப்காட்டிற்கு நிலம் அளிக்க முயன்றதாகவும் அதை போராட்டத்தின் முன்னணியாளர்கள் தடுத்ததாகவும் 316/2023,317/2023,318/2023,319/2023,320/2023 ஆகிய பதிவெண்களைக்கொண்ட ஐந்து முதல் தகவல் அறிக்கைகள்8.2023 அன்று ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் அளித்த 5 பேரில் 4 பேரை சந்திக்க முயன்றதில் இந்த 4 பேருக்கும் அவர்களின் பேரில் நிலம் இல்லை என்பதும் முதல் தகவல் அறிக்கையில் தங்களுடைய நிலம் என்று அவர்கள் கூறியது அனைத்துமே பொய் என்பதை உண்மை அறியும் குழு கண்டறிந்துள்ளது. இந்த 4 பேரில்மூன்று பேர் திமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  10. ஜூலை 2 முதல் போராடும் விவசாயிகளிடம் எவ்விதப்பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திட்டமிட்டே, சதித்தனமாக விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து, போராட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே மாவட்ட போலீசு செயல்பட்டுள்ளது. தற்போது வரை சீருடை அணியாத உளவுப்பிரிவு போலீசின் சுற்றுக்கு அனுப்பில் மக்களை அச்சத்திலேயே வைத்துள்ளது.
  11. சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது என்பது இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாகும் இப்படிப்பட்ட கொடூரத்தை செய்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டி கடிதங்களைப்பெற்றும் திரு.தேவன் அவர்களின் தந்தையை மிரட்டி ஊடகங்களிடம் பேசவைத்தும் குண்டர் தடுப்பு சட்டம் இரத்து என்ற நாடகத்தை ஆளும் திமுக அரசு மேற்கொண்டு வந்துள்ளது. இந்த பாதகச்செயலில் அமைச்சர் .வவேலும், செய்யாறு எம்.எல். ஜோதி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
  12. 2013ம் ஆண்டு நில கையப்படுத்துதல் சட்டத்தில் கீழ் நிலத்தை கையகப்படுத்தாமல் 1956ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த திமுக அரசு முயல்கிறது.
  13. போராடும் மக்களை பிளவு படுத்துவதற்காகவே திரு. அருள் அவர்கள் மீதான குண்டர் சட்டம் இதுவரை இரத்து செய்யப்படவில்லை.
  14. விவசாயிகள் கைது செய்யப்பட்ட11.2023 முதல் இப்போதுவரை போலீசின் கண்காணிப்பிலேயே மேற்கண்ட கிராம மக்கள் இருந்துவருகின்றனர். சீருடை அணியாத போலீசு மக்களிடம் கருத்துகேட்பது என்ற பெயரின் சிப்காட்டிற்கு எதிராக யார் கருத்து கூறுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது, மாற்றுக்கருத்துள்ளவர்கள் மற்றும் போராட்ட குணம் உள்ளவர்களை கண்காணிப்பது போன்ற செயல்களில் போலீசு ஈடுபட்டு வருகின்றது. இப்படிப்பட்ட போலீசின் இச்செயல்களால் மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களிடம் பதட்டமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் உண்மை அறியும் குழு உறுப்பினர்களிடம் பேசுவதற்குகூட மக்கள் அச்சப்பட்டனர். மேலும் உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் மக்களிடம் கருத்துக்களைப் பெறும் போது சீருடை அணியாத போலீசார் அங்கே வந்து அமர்ந்து கொள்வது, உண்மை அறியும் குழு உறுப்பினர்களை படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதன் மூலம் மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களை அச்சுறுத்தும் வேலைகளில் திருவண்ணாமலை மாவட்ட போலீசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
  15. நவம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற சிப்காட் வேண்டும் என்ற போராட்டங்களானவை கார்ப்பரேட் நிறுவனங்கள், மாவட்டப்போலீசு, திமுகவினர் ஆகியோரால் திட்டமிட்டு இக்கிராமங்களில் நடத்தப்பட்டதாகும். இப்போராட்டங்களுக்கு வந்தவர்களுக்கு ரூ 200, பிரியாணி, மதுபானம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு போட்டியாக ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டங்கள் நடத்தில் தூத்துக்குடியை வேதாந்தா, போலீசு ஆகியவை பதட்டத்தில் வைத்திருப்பதைப்போலவே மேல்மா சுற்றுவட்டாரப் பகுதியையும் மாற்றுவதற்கு திமுக, கார்ப்பரேட், போலிசு ஆகியவை முயல்கின்றன. இப்படி மக்களை பிளவுபடுத்தும், இழிவுபடுத்தும் போக்குகளும் தொடருமானால்  பெரும் வன்முறைகள் நிகழ்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
  16. திமுக அரசு, மாவட்ட போலீசு , கார்ப்பரேட் கம்பெனிகள் இணைந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை மேல்மா பகுதியில் குவித்து அதன்மூலம் பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. ஆகவே மேல்மா சுற்று வட்டாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கும் இப்பகுதியில் கலவரச் சூழலை உருவாக்கியதற்கும்  திமுக அரசே முழு காரணமாகும். வேண்டும் சிப்காட் என்ற கோரிக்கையோடு நடத்தப்படும் போராட்டப் பாணியானது ஸ்டெர்லைட் போராட்டத்தை மேற்கொள்ளப்பட்ட அதே வழிமுறையாகும். 100 நாள் வேலைக்குச் சென்றவர்களை அழைத்து வருவது, வேலை என்று சொல்லி பொய் சொல்லி மக்களை அழைத்துவருவது ஆகிய கிரிமினல் வேலைகளில் திமுக அரசு, மாவட்டப்போலீசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடு பட்டுள்ளன.
  17. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. அப்பகுதியில் சிப்காட் அமைக்க திட்டமிடாமல் நீர்வளமிக்க மூன்று போகம் விளைவிக்கும் இந்த நிலங்களை செய்யாறு சிப்காட் அலகு 3க்கு கையகப்படுத்த முயல்வது கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே. செய்யாறு சிப்காட் அலகு 1 மற்றும் 2 ஆகியவற்றுக்காக நிலம் கையகப்படுத்தும் போது மக்கள் போராடவில்லை என்றும் பலர் ஒரு செண்ட் 350 ரூபாய்க்கு முன்வந்து கொடுத்துள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்திற்காகவே நீர்வளமிக்க, நிலவளமிக்க இப்பகுதியை தாரைவார்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
  18. செய்யாறு சிப்காட் அலகு-3 திட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளிடம் முறையான பேச்சுவார்த்தை எதையும் நடத்தாமல் பொய்வழக்குகள்கைது குண்டர் தடுப்புச்சட்டம்சீருடை அணியாத போலீசின் மூலம் அச்சுறுத்துவதுசிப்காட் வேண்டும் என்ற போராட்டங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது ஆகிய அராஜக செயல்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், சரக டிஐஜி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
  19. செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களிடமேற்பட்டுள்ள பதட்டத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், சரக டிஐஜி,  அமைச்சர் ..வேலு ஆகியோரே காரணமாகும்.

படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 2


வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பித்தலாட்டங்கள் குறித்து

வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில் இந்திய  நாட்டில் 1990 களுக்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டுக்கும், தொழிலாளர்களுக்கும் எவ்வித வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது மூலதனத்தை பல மடங்கு பெருக்கிக் கொள்ளவே வழிவகுத்தன. வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலி குறைவு, பல்வேறு சலுகைகள் போன்ற காரணங்களாலேயே இந்தியாவிற்கு வருகின்றன. இப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களையும்  இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. தொழிலாளிகளுக்கு சங்கம் சேரும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு 12 மணி நேரவேலை , குறைந்த கூலி என்று தொழிலாளிகளை கொத்தடிமைகளாக மாற்றி வைத்திருக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

கட்டமைப்பு வசதி, வரிச்சலுகை, இலவச தண்ணீர் – மின்சாரம், சாலைவசதி போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கோடிக்கணக்கில் லாபமீட்டுகின்றன. ரூ.2500 கோடி வரி ஏய்ப்பு செய்து திடீரென்று நிறுவனத்தை மூடிவிட்டுச் சென்ற நோக்கியா, 20 ஆண்டுகளில் மூடு விழா நடத்தப்பட்ட போர்டு கார் தொழிற்சாலை போன்றவை தான் போட்ட மூலதனத்தைவிட பல நூறு மடங்கு லாபத்தை கொள்ளையடித்து சென்றன. அத்தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலையோ பாதளத்திற்குச் சென்றதுதான் மிச்சம்.

நோக்கியா, போர்டு போன்ற நிறுவனங்கள் அதிகப்படியான நீரை உறிஞ்சி எடுத்து நாசகர ஆலைக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை நாசம் செய்து விட்டே சென்றன. மேலும் இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை மேற்கொள்ளவும்  பல்வேறு சலுகைகளைப் பெறவுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நிறுவனங்களைத் தொடங்குகின்றன. அதற்குத்தான் வெளிநாடுகளுக்குச்சென்று மாநில,  ஒன்றிய அரசுகள் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றன.ஆக வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவையே.

செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்ட எல்லைக்கு உட்பட்ட மேல்மா சுற்றூவட்டார கிராமத்தில் உள்ளவை விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலங்களாகும். விவசாயத்தை அழித்து மேற்கொள்ளப்படும், வளர்ச்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே.  விவசாயத்தை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். மண்ணின் மீதும் மக்களின்மீதும் உண்மையான அக்கறை கொண்ட அரசு மட்டுமே அதைமேற்கொள்ளும்.


படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 3


பரிந்துரைகள்:-

  1. சிப்காட்டிற்கு நிலம் தர முடியது என்று போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். சமூக செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச்சட்டத்தையும் பிற வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
  2. போராடுகின்ற விவசாயிகள் மீது அவதூறு பரப்பியும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட குடும்பத்தினரை அச்சுறுத்தி மன்னிப்பு கடிதங்களைப் பெற்றும் போராடும் விவசாயிகளிடம் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் எதிர் போராட்டங்களை செய்யத்தூண்டும் அமைச்சர் ..வேலு உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து செயல்பட்ட செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் .ஜோதி அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
  3. செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசைக்குவித்தது, நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியது, சீருடை அணியாத போலீசை கிராமங்களில் சுற்றுக்கு விட்டு மக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களுக்கு காரணமான டிஐஜி முத்துசாமி, மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் உடனடியாக  பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  4. செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகளிடம் அரசு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அம்மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.
  5. செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் 128 நாட்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிப்காட் பிரிவு அலுவலர், அமைச்சர் ..வேலு, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் .ஜோதி, மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்திருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித முறையான பதிலும் கூறாமல் கருத்துக் கேட்பு கூட்டத்திற்குக்கூட  அனுப்பவிடாமல் தடை செய்து போராட்டத்தை சீர் குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டது அமைச்சர் ..வேலு, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் .ஜோதி,மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை  டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கும் விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டதை ஊடகங்கள் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று ..வேலு தெரிவித்ததற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. மேலும் போராடும் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் .. வேலு மக்கள் போராட்டத்தை சீர்குலைப்பதில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கையை தி.மு. மேற்கொள்ள வேண்டும்.
  7. மேல்மா சுற்றுவட்டாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கும் அப்பகுதி மக்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் உதாசீனப்படுத்திய அனைத்து நிகழ்வுகளுக்கும் குண்டர் தடுப்புச்சட்டம்கைதுபொய் வழக்குபோலீசைக் குவித்தல்கண்காணிப்புஎதிர்ப்புப் போராட்டங்கள் என அனைத்து மக்கள் விரோத நடவடிகைகளுக்கும் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களே நேரடியாக பொறுப்பு ஏற்பதுடன் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவதுடன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் இனி தமிழ்நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஜனநாயகப்பூர்வமாக மேற்கொள்வதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
  8. தனியார்மயதாராளமயஉலகமயம் ஆகிய மறுகாலனியாக்கத் திட்டங்களின் விளைவாக மக்கள் நலன் புறம் தள்ளப்பட்டு கார்ப்பரேட் நலனையே முதன்மைப்படுத்தி செயல்படுவதில் திமுக அரசும் ஒன்றுதான். இயற்கை வளங்களை சூறையாடும் ஸ்டெர்லைட் முதல் செய்யாறு சிப்காட் வரையிலான கார்ப்பரேட் திட்டங்களுக்கு அரசு எப்போதுமே ஆதரவாகவே செயல்படுகிறது. பலமாதங்கள் தொடர்ந்து போராடிய பரந்தூர் மக்களின் கருத்துகளை உதாசீனப்படுத்தி விமான நிலையத்திற்கு நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் அதை தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க வேண்டும்.
  9. செய்யறு சிப்காட் அலகு – 3 திட்டத்திற்கு நிலம் கொடுக்க மறுத்து பொய்வழக்குகளையும், குண்டர் தடுப்புச் சட்ட நடவடிகைகளையும் போலீசின் அச்சுறுத்துல்களையும் எதிர்கொண்டு உறுதியாகப் போராடும் மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களுக்கு உண்மை அறியும் குழுவானது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அம்மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் போராட முன்வரவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 3

) செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்டத்தை ஆதரித்தும் போராடும் விவசாயிகள் மீது போலீசில் புகார் அளித்தவர்களின் கருத்துக்கள்:

செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்டத்திற்கு தானாக முன்வந்து நிலம் அளிக்க முயன்ற போது மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாய இயக்க முன்னணியாளர்கள் மிரட்டினார்கள் என்று புகார் அளித்த 5 பேரில் 4 பேரை சந்திக்க திட்டமிட்டுச் சென்றோம். அவ்வாறு சென்ற போது செய்யாறு வட்டம் தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் த/பெ துரைசாமி, இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி த/பெ பலராமன், ஆகிய இருவரை மட்டுமே நேரில் சந்திக்க முடிந்தது. வட ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் த/பெ லோக நாதன், அத்தி கிராமத்தைச்சேர்ந்த பழனி த/பெ முத்து ஆகிய இருவரும் வீட்டில் இல்லை.அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து கருத்துக்களைப்பதிவு செய்தோம்.

1. வேல்முருகன் /பெ துரைசாமி

நான் விருப்பப்பட்டுதான் என்னுடைய நிலத்தை சிப்காட்டுக்கு கொடுக்க முன்வந்தேன் என்று கூறினார் . நிலம் உங்களின் பெயரில் உள்ளதா என்று உண்மை அறியும் குழுவினர் கேட்டதற்கு நிலம் என்னுடைய சம்பந்தியின் பெயரில் உள்ளது. நிலத்தை விற்று அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே நான் முயன்றேன் என்றார். இது குறித்து அந்த நிலத்தின் உரிமையாளரான அன்பரசு என்பவரின் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லை. அவரின் மகனோ, சிப்காட் வருவது தெரியும். எங்களுடைய நிலத்தை சிப்காட்டுக்கு எடுப்பது தொடர்பாக எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை. எனவே எங்கள் நிலத்தை அரசுக்கு ஒப்படைப்பது பற்றி நாங்கள் பேசவே இல்லை என்றார். வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் காவல் நிலையத்தில் 316/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கையில் வேல்முருகன் தனக்கு சொந்தமான நிலம் 2 ஏக்கரை சிப்காட்டுக்கு தானாக முன்வந்து கொடுக்க உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2. கருணாநிதி /பெ பலராமன்

கருணாநிதி என்பவர் செய்யாறு எம்.எல்.ஏ ஒ.ஜோதியிடம் வேலை செய்வதாக கூறிய அவரின் தந்தை பலராமன், தான் இளநீர் குன்றம் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளதாகவும் தெரிவித்தார். தன்னுடைய பெயரில் நிலம் எதுவும் இல்லை என்றும் தான் முன்பு வேலை செய்த முதலாளி மேல்மாவில் 37 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும் அதற்கு தான் பவர் ஆப் அட்டார்னியாக இருப்பதாகவும் தெரிவித்தார். தான் சொல்லியே தன்னுடைய மகன் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். சிப்காட் வந்தால் வேலை பெருகும் என்றும் அரசை மீறி யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். 318/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கையில் கருணாநிதி தனக்கு சொந்தமான நிலம் 2 ஏக்கரை சிப்காட்டுக்கு தானாக முன்வந்து கொடுக்க உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

3. கலைச்செல்வம் /பெ லோகநாதன், வட ஆளப்பிறந்தான் கிராமம்

இவரை உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் சந்திக்க சென்ற போது வீட்டில் இல்லை என்பதால் அருகில் உள்ளவர்களிடம் தகவல் கேட்கப்பட்டது. அவரின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களோ சிப்காட் வரவுள்ள எல்லையில் கலைச்செல்வத்திற்கு நிலம் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்ட எல்லையில் அவரின் மாமியாருக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் கலைச்செல்வம் திமுகவில் நிர்வாகியாக இருப்பதையும் தெரிவித்தனர். இவரின் புகாரின் பேரில் அனக்காவூர் காவல் நிலையத்தில் 320/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

4. பழனி /பெ முத்து

இவரை சந்திக்கச்சென்ற போதும் வீட்டில் இல்லை. அருகில் இருந்தவர்களிடம் சிப்காட் வேண்டும் என்ற போராட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் இவர் திமுகவில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இவருக்கு நிலம் இருப்பது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். இவரின் புகாரின் பேரில் அனக்காவூர் காவல் நிலையத்தில் 319/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 1


) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள / சிறையில் இருந்து வெளியே நிபந்தனை பிணையில் இருப்பவர்களின் கருத்துக்கள்

1. பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள திரு.அருள் /பெ ஆறுமுகம்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான முருகன் சிறையில் என்னை அடைத்து தனிமைப்படுத்தி வாழ்நாள் முழுவதும் தனிமைச்சிறை தான் உனக்கு என்று சொல்லாமல் சொல்லி என்னை மன உளைச்சலை ஏற்படுத்தினர். என்னை பார்க்க பல்வேறு அமைப்பு தோழர்கள் வந்து போக இருந்தால் என்னை வழக்கமான சிறைக் கூடத்திற்கு மாற்றினர்.

இங்கிருக்கும் கைதிகள் என்ன தண்டனைக்காக வந்திருக்கீங்க என்று விசாரித்து, மக்களுக்காக போராட்ட வழக்கில் தான் வந்து இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். மக்களுக்கு தெரிவியுங்கள் நான் மன உறுதியோடு இருக்கிறேன். ஒரு கைப்பிடி மண்ணைக்கூட விவசாயி நிலத்திலிருந்து எடுக்க விட மாட்டேன். விவசாய மக்களுக்கு உறுதியோடு இருப்பேன். ஒரு வழக்கில் எனக்கு ஜாமின் வந்து விட்டது. ஆனால் இன்னொரு வழக்கு போட்டு உள்ளனர், அது என்னவென்று தெரியவில்லை. என்னைவெளியே விடமால் இருக்க திமுக அரசு வேலை செய்கிறது.

2. திரு.பச்சையப்பன், ஒருங்கிணைப்பாளர், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் (குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு பின்னர் தமிழ்நாடு அரசால் குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளார்.)

சிப்காட் வரவேண்டும் என்று போராடுகின்றவர்கள் யாரும் உள்ளூர் காரர்கள் இல்லை அல்லது அவர்களது நிலம் இந்த திட்டத்திற்கான எல்லைக்குள் இல்லை என்பதே உண்மை. அவ்வாறு அவர்களுக்கு நிலம் இருந்தால் அவர்களின் பட்டாவை காட்டச்சொல்லுங்கள், அரசுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். எங்கள் மீது புகார் கொடுத்த 5 பேருக்கும் இந்த சிப்காட் திட்டம் வர உள்ள எல்லையில் நிலமே இல்லை. சிப்காட் வேண்டாம் என்று சொல்லவில்லை. விவசாய நிலங்களை அழித்து சிப்காட் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். நாங்கள் 128 நாட்கள் போரடியும் இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. நாங்கள் சட்ட மன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, அமைச்சர் எ.வ வேலு, சிப்காட் பிரிவு, மாவட்ட ஆட்சியர் என எல்லோரிடமும் மனு அளித்து விட்டோம். எங்களை சாலை மறியல் செய்ய வைத்ததே அரசின் அணுகுமுறைதான். சாலை மறியல் செய்தோம் என்று எங்கள் மீது வழக்கு போட்டு சிறையிலடைத்தார்கள். இன்று (23.11.2023) சிப்காட் வேண்டும் என்று போராடுகின்றவர்களை கைது செய்தார்களா என்றால் இல்லை. எங்கள்மீது எப்படிப்பட்ட அடக்குமுறைகளை செலுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம், சிப்காட்டுக்கு நிலத்தை கொடுக்கமாட்டோம்.

3. கைது செய்யப்பட்டு நிபந்தனைப்பிணையில் உள்ள 19 பேரையும் சந்தித்தோம்.அவர்களை சந்தித்ததில் தொகுப்பாக,

வட ஆளப்பிறந்தான் கிராமத்தைசேர்ந்த பாபுவிற்கு சொந்தமாக 71/2 ஏக்கர் நிலம் உள்ளது. இரவு பதினோரு மணிக்கு எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்யப்பட்டிருக்கிறார். விவசாயிகள்மீது புகார் அளித்துள்ள கலைச்செல்வன் த/பெ லோகநாதன் இவரின் உறவினர் என்றும் கலைச்செல்வத்திற்கு சிப்காட் வரவுள்ள எல்லைப்பகுதியில் நிலம் இல்லை என்றும் தெரிவித்தார். குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டு நிபந்தனைப்பிணையில் வெளிவந்துள்ள மணிப்புரம் கிராமத்தைசேர்ந்த சோழன், மேல்மாவைச்சேர்ந்த திருமால் ஆகியோர் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். குறும்பூரைச்சேர்ந்த பாக்கியராஜ் கணிணி அறிவியலில் முதுநிலை படிப்பை நிறைவு செய்துவிட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்.

) மாவட்ட துணை ஆட்சியர்

மாவட்ட துணை ஆட்சியரை, செய்யாறில் உள்ள அலுவலகத்தில் இருமுறை சந்தித்து கருத்துக்கள் பெற திட்டமிடப்பட்டது. முதல் முறை அவர் அலுவலகத்தில் இல்லை. இரண்டாவது முறை அவரை சந்திக்க இயலாதென மாவட்ட துணை ஆட்சியரின் உதவியாளர் தெரிவித்துவிட்டார்.


படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 2


சிப்காட் வேண்டும் தொடரும் போராட்டங்கள்திமுக, அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் சமூக விரோத செயல்பாடுகள்

23.11.2023 அன்று சிப்காட் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக

இந்த போராட்டத்தில் உண்மை அறியும் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களின் களச்செய்தி

23.11.2023 காலை 10 மணி அளவில் மேல்மா கூட்டுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் பல்வேறு ஊர்களில் இருந்து 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வந்தவர்களை டாட்டா ஏஸ் வாகனம் வைத்து திமுக வினர் அழைத்து வந்துள்ளனர். இப்போராட்டத்தில் சிப்காட் வேண்டும் என்றும் பெண்களுக்கு வேலை வேண்டும், தரிசு நிலத்தை சிப்காட்டுக்கு ஒதுக்குவதன் மூலமாக வேலை கிடைக்கும் போன்ற பல்வேறு பதாகைகளை பெண்கள் பிடித்திருந்தனர்‌. சிப்காட் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, 100 நாள் வேலை வேண்டுமென்றால் அவசியம் ஆர்ப்பாட்டத்திற்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். ரூ 200 பணம் தருவதாகவும் பிரியாணி பாக்கெட் தருவதாகவும் சொல்லி அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு வயதான பெண்மணி பசியின் காரணமாக அருகில் உள்ள ஓட்டலில் உணவுக்காக சென்றுள்ளார். அங்குள்ள ஹோட்டல் உரிமையாளர் “நாங்கள் விவசாய நிலத்தை கொடுக்கமாட்டோம், நீங்கள் வேறு ஊரில் இருந்து வந்து சிப்காட் வேண்டும் என்று கூறுகிறீர்கள்” என்று அந்த பெண்ணுக்கு முதலில் உணவு தர மறுத்துள்ளார். பிறகு அவரின் முதுமையை பார்த்து அவர்களை அழைத்து உணவு வழங்கியுள்ளார். அப்போது உங்கள் நிலத்தை எடுத்துக் கொள்ளும் தகவல் எனக்கு தெரியாது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் மேல்மா, நெடுங்கள் உள்ளிட்ட கிராமங்களில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரித்ததில், பலரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும் என்பதற்காக பொறுத்து இருக்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும் மேலும் பகுதி மக்களை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது உளவுத்துறை போலீசார் உண்மை அறியும் குழு உறுப்பினர்களையும் அச்சுறுத்தும் வகையில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

திமுக கிளைச் செயலாளர் என்றால் ஐம்பது பேர் வரையிலும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் என்றால் 50 பேர் முதல் 100 பேர் வரையேனும் அழைத்து வரவேண்டும் என மேலிடம் உத்தரவு போட்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு கிளைச் செயலாளர் தெரிவித்தார். காஞ்சிபுரம், திண்டிவனம், வேலூர் மாவட்டம்- மேச்சேரி, செய்யாறு, கலவை, ஆற்காடு, வெம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 1300 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இதில் மினி வேன், லாரி மற்றும் செய்யாறு சிப்காட்டில் உள்ள நிறுவனங்களின் பத்துக்கும்மேற்பட்ட பேருந்துகள் மூலம் வெளியூர் மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

உள்ளூர் மக்கள் இப்போராட்டத்தை கண்டு கடும் ஆத்திரத்தில் உள்ளனர். காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறோம். சிப்காட் வந்தால் குடிநீர் ஆடு மாடுகள் மேய்ப்பது போன்ற இடங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். சிப்காட்டுக்கு நிலத்தை கொடுத்துவிட்டு பணம் வாங்கிக் கொண்டால் பணம் சீக்கிரம் செலவழிக்க வேண்டுமோ? பிறகு என்ன நாங்கள் பிச்சை எடுத்தா பிழைக்க முடியும் ? எங்கள் உயிரை வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம். நிலத்தை விட்டு தர மாட்டோம் என கிராம மக்கள் கூறுகின்றனர். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் 43 முதல் 46 வரை நில கையகப்படுத்துதல் பற்றி கூறியுள்ளது. அதில் இரட்டிப்பு இழப்பீடு வழங்குதல், மக்கள் விரும்பினால் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது. அதை தற்போது அப்பட்டமாக மீறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

24.11.2023 பைக் பேரணி

சிப்காட் வேண்டும் என்ற முழக்கத்தோடு வேலை இல்லா இளைஞர் சங்கம் என்ற அமைப்பின் மூலம் பைக் பேரணி மேல்மா சுற்றுவட்டார கிராமங்களில் நடத்தப்பட்டது. சுமார் 100 பேர் இருசக்கர வாகனங்களில் கொடியை கட்டியபடி, வேண்டும் சிப்காட், வேண்டும் வேலை என்று முழங்கியபடி சென்றுள்ளனர். இதை அறிந்த மக்கள் அவர்களுக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு தயாராக இருந்தனர். மக்களிடம் இருந்த கருப்புக்கொடியை போலீசு பிடுங்கிச்சென்றுள்ளது. அதனால் வேறு வழி இன்று போலீசு பாதுகாப்புடன் பைக்கில் வந்தவர்களை மறித்து, வெளியூரில் இருந்து வந்து இங்கே சிப்காட் வேண்டும் என்று கேட்கிறீர்களே, உங்கள் நிலத்தை சிப்காட்டுக்கு கொடுங்கள் என்று கூறியுள்ளனர். போராடிய மக்களை தடுத்துவிட்டு வாகனப்பேரணியை போலீசு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. வெளியூரிலிருந்து வந்து தங்கள் ஊரில், தங்களுக்கு எதிராகப் போராடுவது என்பது, மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களின் எதிர் நடவடிக்கைகளால் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.

23, 24 ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கு பணம் கொடுத்தே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பதையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பேருந்துகள் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதையும் கிராம இளைஞர்கள் மற்றும் உண்மை அறியும்குழு உறுப்பினர்கள் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளனர்.

(தொடரும்..)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இஸ்ரேல் மக்களையே கொலை செய்த இஸ்ரேல் இராணுவம்! | தோழர் அமிர்தா

இஸ்ரேல் மக்களையே கொலை செய்த இஸ்ரேல் இராணுவம்! | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உயிரியல் பாடம் படிக்காதவர்களுக்கு நீட்! | தோழர் ரவி

உயிரியல் பாடம் படிக்காதவர்களுக்கு நீட்! | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!