Thursday, July 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 213

கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்

கொரோனா மேளா : சைவ இந்து கொரோனா – ரொம்ப சாதுவானது!

ப்லிக் ஜமாத் கூட்டத்தோடு
கும்பமேளாவை ஒப்பிடக்கூடாது.

தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்நியர்கள்;
இது உள்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தப்லிக் ஜமாத் ஒரு காம்பவுண்டிற்குள் நடைபெற்றது;
கும்பமேளா புனித கங்கையின் திறந்தவெளி.

– திரத்சிங் ராவத்
உத்திரகாண்ட் முதலமைச்சர்.


கருத்துப்படம் : மு.துரை

அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி 20 வயது கருப்பின இளைஞனான டான்ட் ரைட்டை அமெரிக்க போலீஸ்  சுட்டு கொன்றுள்ளது.

கைது நடவடிக்கையின் போது தவறுதலாக மின்சார துப்பாக்கிக்கு பதிலாக கைத்துப்பாக்கியினால் போலிஸ் அதிகாரி  சுட்டுவிட்டார் என்று வழக்கம் போல காவல்துறை ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறது. ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரியும் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் சென்று விட்டார்.

இடது : சுட்டு கொல்லப்பட்ட கருப்பின இளைஞன் டான்ட் ரைட், வலது : ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரி

அமெரிக்க போலீசுக்குள் இருக்கும் வெள்ளை நிறவெறி பயங்கரவாதத்திற்கு பலியான கருப்பின மக்கள் ஏராளம்.  2020-ம் ஆண்டு மே மாதத்தில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட அதே மினியாபோலிஸ் நகரத்தில்தான் ரைட்டும் கொல்லப்பட்டிருக்கிறார். ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் படுகொலைக்கு எதிர்வினையாக அமெரிக்கா முழுதும் கடுமையாகப் போராட்டம் வெடித்தது.

அதற்கு இப்பொழுதுதான் வழக்கு விசாரணையே நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புரூக்ளின் மைய மேயர் மைக் எலியட் டான்ட் ரைட்டிற்கு ‘உரிய நீதியை’ எப்படியும் பெற்றுத் தறுவதாக உறுதியளித்துள்ளார். ஆயினும் இந்த உறுதிமொழிகளை கருப்பின மக்கள் நம்பத் தயாராக இல்லை. அவர்கள் வீதிகளில் இறங்கி விட்டனர்.

படிக்க :
♦ இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

 

மினசோட்டா, புரூக்ளின் செண்டரில் உள்ளூர் போலீசால் டுவான்ட் ரைட் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினரால் குறிப்பிடப்படும் இடத்திற்கு அருகில் போலீஸ் அதிகாரியை ஒரு போராட்டக்காரர் எதிர்கொள்கிறார்.

 

டுவான்ட் ரைட் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே போராட்டக்காரார்கள் எதிர்ப்பை தெரிவிக்க கைகளை உயர்த்துகின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் டுவான்ட் ரைட்டை போலீசார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரர் போலிஸை எதிர்கொள்கிறார்.

 

மினியாபோலிஸின் வடமேற்கில் உள்ள புரூக்ளின் சென்டரில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் போலீசால் கொல்லப்பட்ட் 20 வயதான டான்டே ரைட்டின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். ஞாயிற்றுக்கிழமை தனது காரில் ஏறிச் செல்வதற்கு முன்பாக அவரை போலீசார் சுட்டதாகவும் பின்னர் அவர் இறந்து போனதாக செய்தி கிடைத்து என்று குழுமியிருக்கும் கூட்டத்திடம் ரைட்டின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

டான்டே ரைட்டை புரூக்ளின் செண்டர் போலிஸ் சுட்டுக்கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் போலிஸ் வண்டியின் முன் கண்ணாடியின் மீது கோபமாக ஒருவர் ஏறுகிறார்.

 

புரூக்ளின் செண்டர் துப்பாக்கிச்சூட்டில் சம்மந்தப்பட்ட போலிஸ் அதிகாரியை விசாரிப்பதாக” மினசோட்டா குற்றவியல் புலனாய்வு பணியகம் கூறியது. ஆனால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண மறுத்து விட்டது.

 

புரூக்ளின் செண்டரில் போராட்டக்கரார்கள் மற்றும் போலீசாருடனான மோதலில் ரப்பர் குண்டினால் சுடப்பட்ட ஒருவரை மக்கள் கவனிக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டர் காவல் துறை அலுவலகத்திற்கு வெளியே காவல் பணியில் ஒரு போலீஸ் அதிகாரி.

 

புரூக்ளின் செண்டர் காவல் நிலையம் முன்பாக கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் புகைமூட்டத்திற்கிடையில் போலீஸ் அதிகாரிகள்.

 

புரூக்ளின் சென்டர் காவல் நிலையம் முன்பு போலீசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளிடம் இருந்து தப்ப, மக்கள் பாதுகாப்பு உடை உடுத்தியிருக்கின்றனர்.

தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera

பெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை பெயர் மாற்றம் : எடப்பாடி அரசின் தமிழினத் துரோகம் ! பார்ப்பனிய அடிமைத்தனம் !!

பா…ர்…
முழுசா சங்கியாக மாறும்
அடிமை எடப்பாடியைப் பார்.. !


கருத்துப்படம் : மு.துரை

ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

ஸ்புட்னிக்-வி (SPUTNIK – V) கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ரஷ்யா கண்டறிந்துள்ள தடுப்பூசி இந்தியாவில் அவசர காலப் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியை நிபுணர்கள் நிறைந்த பரிந்துரைக்குழு பரிந்துரைத்துள்ளது. கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் வர இருக்கிறது.

உலகின் முதல் செயற்கைக் கோளை 1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி விண்ணிற்கு ஏவி சாதனைப் படைத்தன சோவியத் ரஷ்ய ஒன்றிய நாடுகள். செயற்கைக் கோளின் பெயர் (ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை செலுத்த உதவிய விண்கலத்துக்குப் பெயர்) ஸ்புட்னிக். இந்தப் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகவும் உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி என்ற அடைமொழியுடன் “ஸ்புட்னிக்-V” 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று களமிறக்கப்பட்டது.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

எந்த மருத்துவ அறிவியல் ஏடுகளிலும் ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் நேரடியாக இவ்வாறு அறிவித்ததை அறிவியல் உலகம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகளை ( INTERIM ANALYSIS OF PHASE III CLINICAL TRIAL) வெளியிட்டால் அன்று இதைப் பற்றி பேசலாம் என்றே நான் நினைத்திருந்தேன். நான் நினைத்த அந்த நன்னாளும் வந்துவிட்டது.

லான்சட் எனும் பிரபலமான மருத்துவ இதழ், ஸ்புட்னிக் V தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகளை அலசி ஆராய்ந்து தனது இதழில் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன் சாராம்சம் இதோ உங்களுக்காக…

Gam- Covid- Vac என்றும் ஸ்புட்னிக்-வி என்றும் அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலயா மருந்து கண்டறியும் நிறுவனமும் ரஷ்ய அரசின் நேரடி நிதி முதலீடும் (RUSSIAN DIRECT INVESTMENT FUND) இணைந்து உருவாக்கியுள்ளன. தடுப்பூசியின் “வெக்ட்டார்” (VECTOR) தொழில்நுட்பம் மனிதர்களிடையே தொற்றை ஏற்படுத்தாத அடினோ வைரஸ்களின் மரபணுக்களை நீக்கி விட்டு அவற்றுக்குள் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களை உருவாக்கும் மரபணுக்களைப் புதைத்து உருவாக்கப்படுகின்றது.

இங்கு அடினோ வைரஸ் என்பது கொரோனா வைரஸின் மரபணுவை உடலுக்குள் செலுத்தப் பயன்படும் வாகனமாக மட்டுமே செயல்படும். உடலுக்குள் செலுத்தப்பட்டதும் அடினோ வைரஸ் உடைந்து உள்ளே இருக்கும் கொரோனா வைரஸ் மரபணு – ஸ்பைக் புரதங்களை உண்டாக்கும். அவற்றுக்கு எதிராக நமது உடல் அபரிமிதமான எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். கோவிஷீல்டு தடுப்பூசியும் இதே தொழில்நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏனைய வெக்டார் தடுப்பூசிகள் தடுப்பூசிகளிடம் இருந்து மாறுபடும் இடம்.

யாதெனில், இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணையாக போடப்படும் முதல் தவணையில் அடினோ 26 என்ற வகை வெக்ட்டார் செலுத்தப்படும். இரண்டாம் தவணையில் அடினோ 5 என்ற வகை வெக்ட்டார் செலுத்தப்படும் இதன் மூலம் மிக அதிகமான எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 20,000 நபர்களுக்கு மேல் பங்குபெறும் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகள் இதோ தடுப்பூசி பெறாத குழுவில் இருந்த 4902 பேரில் 62 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்ற குழுவில் இருந்த 14964 நபர்களுள் 16 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அறிகுறிகளுடன் கூடிய கோவிட் நோய் தடுக்கும் விகிதம் – 91.6% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் வழங்கப்பட்டு 18 நாட்களில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தீவிர கோவிட் நோய் தடுக்கும் திறன் 100% என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியில் ஸ்பெசாலிட்டியாக நான் காண்பது இந்த ஆய்வில் 60+ வயதுடையோர் 2144 பேர் பங்குபெற்றனர். அவர்களிடையே கோவிட் நோய் தடுக்கும் திறன் 91.8 % என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பான செய்தி. ஆய்வில் பங்கு பெற்றவர்களில் 25% பேர் பல தொற்றா நோய்களைக் கொண்டவர்கள் என்பதும் இந்த தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. தடுப்பூசி பெற்றவர்களுள் சீரியசான பக்கவிளைவுகள் தோன்றவில்லை. தடுப்பூசி பெற்ற குழுவில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் அந்த மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த நபர்களுக்கு பல தொற்றா நோய்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி தற்போது அர்ஜென்டினா, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளடக்கிய பதினைந்து நாடுகளில் ஏற்கனவே ஆய்விலும் மக்களுக்கு புழக்கத்திலும் உள்ளது.

படிக்க :
♦ பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ரஷ்யாவில் சில கோடி மக்களுக்கு மேல் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் 1600 பேர் கொண்டு மருத்துவ ஆய்வு நடந்து இதன் பாதுகாப்புத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து SUBJECT EXPERT COMMITTEE இந்த தடுப்பூசியை அவசர கால முன் அனுமதி வழங்க பரிந்துரைத்து விட்டது.

விரைவில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்துவிடும். நமது நாட்டின் குளிர் சங்கிலித்தொடரில் எளிதாக இந்த தடுப்பூசியைப் பராமரிக்க முடியும் என்பதாலும் 90%-க்கு மேல் 60+ வயதுடையோரிலும் நோயைத் தடுக்கும் என்பதால் கொரோனாவுக்கு எதிரானப் போரில் சிறப்பான அஸ்திரமாக இது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.

disclaimer

முதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் !

லகம் முழுவதும் பல கோடி மக்களால் செலுத்தப்படும் உழைப்பின் மதிப்புதான் உருவாக்கப்படும் பணம் ! கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெகு சிலரிடம் மட்டும் பணம் குவிகிறது என்பதன் பொருள், நம் உழைப்புதான் அவர்களின் சொத்தாகக் குவிகிறது. நம் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பணம்தான் முதலாளிகளின் சொத்தாகக் குவிகிறது !

நம் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இந்த முதலாளித்துவ சமூகம். இதனைக் களைந்தெறிந்து உழைக்கும் மக்களின் தலைமையிலான அரசை உருவாக்குவோம் !!

கருத்துப்படம்:

 

உலகப் பணக்காரர் பட்டியலில் இந்தியா 4-வது இடம் : கொரோனா காலத்துல வேலை இல்லாம உலகமே செத்துட்டிருக்கும் போது ஒங்களுக்கு மட்டும் எங்கேயிருந்துடா இவ்ளோ சொத்து ?


கருத்துப்படம் : மு. துரை

கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது

2019 இறுதியில் சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டது. உலகமே செய்வதறியாது திகைத்து நின்றபோது, 2020 பிப்ரவரியில் ட்ரம்பை குஜராத்துக்கு வரவழைத்து சுயதம்பட்டம் என்ற அருவருப்பை இங்கே அரங்கேற்றினார்கள். வெள்ளிங்கிரியில் போதை சாமியார் கூட்டிய கட்டுப்பாடற்ற கூட்டத்துக்கு பிரதமர் வந்தார்.

ஆனால் அனுமதி பெற்று நடத்தப்பட்ட டெல்லி தப்லிக் ஜமாத் இயக்கத்தையும் கூட்டத்தையும் பலிகடா ஆக்க அரசு முனைந்தது எனில் அதற்கு துணை போன அச்சு, டிவி ஊடகங்களும் சற்றும் குறைவில்லாமல் தம் ஒருதலைப்பட்சமான பிரச்சாரத்தின் மூலம் இந்திய சமூகத்தில் அருவருப்பான இஸ்லாமிய சமூக வெறுப்பை விதைத்தன.

டிசம்பர் 2019இல் சீனாவில் கண்டறியப்பட்ட உடனேயே சர்வதேச விமானபோக்குவரத்தை நிறுத்துமாறும் நாடாளுமன்ற கூட்டத்தை தள்ளிவைக்குமாறும் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் கேட்டுக்கொண்டபோதும் மத்திய அரசு அதற்கு செவிசாய்க்காமல் இருந்ததன் காரணம்?

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

மத்தியபிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம் எல் ஏக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுமந்தைகள் போல ஊர் ஊராக கூட்டிக்கொண்டு திரிய பிஜேபிக்கு விமானபோக்குவரத்து தேவைப்பட்டது என்ற ஒற்றைக்காரணம் மட்டுமே. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது, பிஜேபியின் ஒரே ஒரு முதல்வர் பதவி ஏற்ற உடன் பிரதமர் டிவியில் தோன்றி இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த நகர்வையும் நிறுத்தி யதார்த்த வாழ்வின் சங்கடங்களை உணராமல் ஊரடங்கை அறிவித்து பல கோடி உழைக்கும் மக்களின் வயிற்றில் நெருப்பை அள்ளிப்போட்டார்.

தப்லிக் ஜமாத்தை மீண்டும் மீண்டும் பேசிய ஊடகங்கள், தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்த டிவிக்கள், கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாமல் இருந்த ஒரே மாநிலம் பிஜேபி ஆண்ட மத்தியப்பிரதசம் மட்டுமே என்பதையும் அதற்கான காரணத்தையும் சொல்லாமல் அருவருக்கத்தக்க பாறை போன்ற மவுனத்தை வெட்கமின்றி கடைப்பிடித்தன.

சில மாதங்களுக்குப்பின் உச்சநீதிமன்றம், “கொரோனா இந்தியாவில் பரவியதற்கு அரசும் ஊடகங்களும் தப்லிக் ஜமாத்தை திட்டமிட்டு பலியாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்று கண்டித்ததை அதே ஊடகங்கள் மவுனமாக கடந்து சென்றன.

இந்த கேவலங்கள் ஒரு பக்கம். ஊரடங்கு அறிவித்த ஒரே வாரத்தில் பிரதமர் டிவியில் தோன்றி கை தட்ட சொன்னார், சாப்பாட்டு தட்டுகளை தட்ட சொன்னார், விளக்கு ஏற்ற சொன்னார், இதனால் மின்காந்த அலைகள் உற்பத்தி ஆகி கொரோனா கிருமிகள் சாகும் என்று நான் அறிந்த பி., எம்., எம்.எஸ்.சி, ஐ.ஐ.டி. எம்.டெக், பி.டெக் படித்த அறிவாளிகளும் அடிவயிற்றில் இருந்து கூவி விவாதம் செய்தார்கள். மாட்டு மூத்திரம், மாட்டு மலம் ஆகியவை சிறந்த கொரோனா கிருமி கொல்லிகள் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் பேசி இந்திய மக்கள் மத்தியில் அறிவியல் அறிவும் அறிவியல் ஆர்வமும் பரவ ஒப்பற்ற சேவை செய்தார்கள்.

இந்தக் கொடுமைகள் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்க, பலப்பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நடக்க தொடங்கியதில் 1947 பிரிவினைக்குப் பின் ஆன வரலாற்றின் மிக மோசமான மக்கள் இடப்பெயர்ச்சிக்கு மத்திய அரசே காரணமாக இருந்தது. பல்லாயிரம் பேர் செத்து மடிந்தனர். ரயில்வே பிளாட்பாரத்தில் தன் தாய் உயிரிழந்தது தெரியாமல் பாலுக்காக அவள் சேலையை பிடித்து இழுத்துக்கொண்டு இருந்தது குழந்தை. 900 கி.மீ தள்ளி ஊர் திரும்ப வழியின்றி மாட்டிக்கொண்ட மகனை, ஸ்கூட்டரில் சென்று மீட்டுக்கொண்டு வந்தார் தாய். ஏறத்தாழ 1000 கி.மீ பயணித்து தன் தகப்பனை சைக்கிளின் காரியரில் உட்கார வைத்து சொந்த ஊருக்கு ஓட்டிக்கொண்டு வந்தாள் இளம் மகள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டம் கொஞ்சம் இல்லை. கொரோனா குறித்த துளியளவு அறிவியல் பார்வையும் இல்லாத (என்றைக்கு இருந்தது?) காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு படம்‘, கொரோனா நோயாளிகள் இருக்கும் ஒரு வேனில் கொரோனா பாதிக்காத சிலரை அடைத்து விடுவதையும், கொரோனா நோயாளிகள் அவர்களை பயமுறுத்தி பேயாட்டம் ஆடுவதையும் இவர்கள் அலறி துடிப்பதையும் காட்டி தமிழக சமூகத்துக்கு பெரும் சேவை செய்த கேவலத்தையும் பார்த்தோம்.

இதன்றி, கரைவேட்டி ஆசாமிகளும் காவியிஸ்டுகளும் அல்லக்கைகளும் லோக்கல் போலீஸுடன் கைகோர்த்து சாலை சந்திப்புகளில் நின்றுகொண்டு பொதுமக்களை படுத்தியபாடு கொஞ்சமா? நமது உழைப்பில் சேமித்த பணத்தில் அல்லது கடனில் வாங்கிய இரு சக்கர வாகனங்களுக்கு இந்த அல்லக்கைகள் பெயிண்ட் அடித்தன, எவன் உரிமை கொடுத்தான்?

காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் கோரோணாவின் பெயரால் இவர்கள் ஆடிய சர்வாதிகார ஆட்டத்தின் உச்சம்தான் சாத்தான்குளம் மரணங்கள். சென்னை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நிவாரணப்பணிகளுக்கு ஆர் எஸ் எஸ் ஆட்களை நியமித்து கண்டனத்துக்கு உள்ளானதை மறக்க முடியாது.

தேர்தல் முடிந்த கையோடு இப்போது கொரோனா அச்சத்தை சங்கு ஊதும் அரசு நிர்வாகத்தின் இரட்டை நிலையை புரிந்துகொள்ள பெரிய பிரயத்தனங்கள் தேவையில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டை, முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டிய முதலமைச்சரோ அமைச்சர்களோ பின்பற்றினார்களா? ஆயிரக்கணக்கான பேர்கள் பின்தொடர, பல நூறு கார்கள் ஊர்வலம் வர கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தபோது தேர்தல் கமிஷனும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் எங்கே இருந்தார்கள்? அதை விடவும் வேறு முக்கியமான வேலை என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

படிக்க :
♦ இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
♦ இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

தங்கள் காரியம் முடிந்தவுடன் இப்போது தேர்தல் முடிந்த கையோடு மக்கள் மீது பழி சுமத்துவதும் மக்கள் கட்டுப்பாடுகளை மீறுகின்றார்கள் என்று பொய்யாக பழிப்போடுவதும் என்ன நியாயம்? மாட்டு மூத்திரத்திலும் மலத்திலும் கொரோனாவுக்கு மருந்து உள்ளதாக முட்டாள்தனமான பேசும் படித்த அரசியல் அதிகார வர்க்கம், மக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு இல்லை என்று பேசுவதை விடவும் கொடூரம் வேறு எதுவும் இல்லை.

உண்மையில் மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சமூகத்தில், ஒப்பீட்டு அளவில் மரணங்கள் குறைவு. உண்மையில் ஊரடங்கின் பின்னர் தம் உயிர்களை பட்டினியால் துறந்த மக்களையும் வேலை இன்றி வீடுகளில் முடங்கி பட்டினி கிடந்த மக்களையும் இதை விடவும் மோசமாக ஒரு அரசு நிர்வாகம் அவமானப்படுத்தி விட முடியாது.

வெற்று வீண் வார்த்தைகளால் தோரணம் கட்டுவதையும் வீண் ஜம்பங்களை வீசி மார் தட்டுவதையும் விட்டுவிட்டு அறிவியல் பார்வையுடன் கொரோனாவை அணுகினால் மக்கள் ஒத்துழைப்பார்கள். மாட்டு மூத்திரத்திலும் மலத்திலும் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக ஆள்வோர் பிரச்சாரம் செய்தால் மக்களும் ஆட்டுமந்தைகள் ஆக மாடுகளாகத்தான் இருப்பார்கள்.

முகநூலில் : இக்பால் அகமது

disclaimer

அரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்

அரக்கோணம் : வன்னிய சாதிவெறியர்களால் தலித்துக்கள் படுகொலை!

யிரமாயிரம் ஆண்டுகளாய்
அடக்கப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களின்
உரிமைகளுக்காகப் போராடி
உயிர்கொடுத்த எண்ணற்றப் போராளிகளின்
போர்க்குரல் இது.

உட்ராதீங்க யம்மோவ்
உட்ராதீங்க யண்ணோவ்…

கருத்துப்படம்

கருத்துப்படம் : மு. துரை

 

அரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்

அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக் கிரிமினல்களின் வன்னிய சாதி வெறி !

விசிக-விற்கு ஓட்டுப் போட்ட ‘குற்றத்திற்காக’ இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரக் கொலை. ஆற்று மணல் மாஃபியா – வன்னிய சாதி வெறி பாமக கிரிமினல்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம் !

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்க்கத் துப்பில்லாத, பார்ப்பனியத்தின் காலடியில் சேவகம் புரிவதற்குத் தயாராகி – தன்மானத்தை இழந்து – சாதிவெறி பிடித்த தற்குறிகளால் மட்டுமே இத்தகைய கொடூர செயல்களைச் செய்ய முடியும் !!

கருத்துப்படம் : மு. துரை

 

இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!

0

ந்துமத பக்தர்கள் அனைவரையும் அதிரச் செய்த ஒரு காணொலிக் காட்சி மார்ச் 28-ம் தேதி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அந்தக் காணொலியில், ஒரு கோவிலில் உள்ள ‘சீரடி’ சாய்பாபா சிலையை கடப்பாரையைக் கொண்டு ஒருவர் தகர்த்துக் கொண்டிருக்கிறார். உடன் நிற்கும் மற்றொரு நடுத்தர வயது நபரோ அந்த நடவடிக்கைக்கு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அருகில் உள்ள ‘பெரிய மனிதர்கள்’ பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வயது நபர் அந்தக் காணொலியில், “சாய்பாபா கடவுள் அல்ல. அவர் ஒரு முஸ்லீம். அவர் 1918-ல் இறந்துவிட்டார்” என்று கூறுகிறார்.

மற்றொரு காணொலியில் இதே நபர், காசியாபாத்தைச் சேர்ந்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி என்ற இந்து சாமியாருடன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சாமியார் அந்தக் காணொலியில் சாய்பாபாவின் சிலையை உடைத்து தூக்கியெறிந்ததற்காக அதே நடுத்தவயது நபரைப் பாராட்டுகிறார். சாய்பாபாவை “ஏமாற்றுக்கார சாய்” என்று அழைக்கும் இந்தச் சாமியார், “என் வழியில் விட்டிருந்தால் நான் சாய்பாபா போன்ற ஜிகாதிகளை கோவிலுக்குள்ளேயே அனுமதித்திருக்க மாட்டேன்” என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சென்றதை ஒட்டி, ஸ்க்ரால் (Scroll) இணையதளம், எந்தக் கோவிலில் இது நடந்தது என்பதைக் கண்டறிந்து அப்பகுதிக்குச் சென்று இது குறித்து விசாரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

இடித்து உடைக்கப்படும் சாய்பாபா சிலை

தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஷாப்பூர் ஜத் எனும் இடத்தில் கோவிலுக்குள் இருந்த சாய்பாபா சிலைதான் உடைக்கப்பட்டிருக்கிறது. சாய்பாபா சிலை உடைக்கப்பட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் அந்த செய்தியாளர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த பத்திரிகையாளருக்கு இதன் பின்னணி குறித்த வேறு சில தகவல்கள் கிடைத்துள்ளன.

சிலை உடைப்பின் போது அருகில் இருந்து வழிகாட்டுதல் கொடுத்துவிட்டு, சிலையை இடித்த பின்னர், சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற அந்த நடுத்தரவயது நபரின் பெயர் பதம் பன்வார்.

பதம் பன்வார் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவரிடம் ஸ்க்ரால் இணையதளம் சாய்பாபா சிலை உடைப்பு பற்றி விசாரித்த போது அந்த வீடியோ போலியானது என்று கூறிவிட்டு, பின்னர் சிலை ஏற்கெனவே உடைந்திருந்ததால் அதனை எடுப்பதற்காகவே உடைத்ததாக முரணாகக் கூறியிருக்கிறார்.

ஆனால் இது குறித்து சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியிடம் ஸ்க்ரால் பத்திரிகையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “அவரது (சாய்பாபா) உண்மையான பெயர் சந்த்கான். அவர் ஒரு ஜிகாதி. அவர் ஒரு ஒழுங்கற்றக் கொள்ளைக்காரன். நமது இந்துக்களின் முட்டாள்தனம் காரணமாக அவர் நமது கோவில்களில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு திமிர்த்தனமாகப் பேசும் இந்தச் சாமியார் சமீபத்தில் மற்றொரு பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர். சமீபத்தில் ஒரு இந்துக் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முசுலீம் சிறுவனை, இந்துத்துவக் கிரிமினல்கள் அடித்த சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சாமியார் இவர்.

இந்த இடிப்புச் சம்பவம் அந்தக் கோவிலின் தர்மகர்த்தாக்களின் சம்மதத்தோடுதான் நடந்திருக்கிறது. இது குறித்து அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரியிடம் கேட்ட போது, விரிசல் விழுந்து உடையும் நிலையில் இருந்ததால்தான் சாய்பாபா சிலை அகற்றப்பட்டதாகவும், சாய்பாபா சிலையை வேறு எதற்காகவும் உடைக்கவில்லை என்றும் தெரிவித்திருகிறார்.

அந்தப் பகுதி மக்கள் பலரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்தவர்களிடம் பதம்பன்வார் போன்ற செல்வாக்கானவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி வாயடைக்கச் செய்திருக்கிறார் கோவிலின் தலைமைப் பூசாரி.

சாய்பாபா சிலை இடிக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பலரும் அதிருப்தியாக இருக்கின்றனர். ஆனால் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒத்த குரலில், சிலை இடிக்கப்பட்டதற்குக் காரணமாக சிலை ஏற்கெனவே உடைந்ததுதான் எனக் கூறிவதோடு, படம் பன்வாரின் செல்வாக்கைக் காட்டி மிரட்டுவதால் யாரும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து போலீசில் புகார் அளிக்கும் நிலைக்குக் கூடச் செல்லவில்லை.

சாய்பாபாவை முஸ்லீம் என்று அவர்கள் கூறுவது பற்றி கேட்கும்போது, “அதனால் என்ன ? அவர் எங்களின் நம்பிக்கைக்கு உரியவர்” என்று குறிப்பிடுகின்றனர் அந்த மக்கள்.

இந்து மக்களில் பலரும் கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் கும்பிடும் சாய்பாபாவுக்கே இதுதான் கதி. இது ஏதோ தனிப்பட்ட ஒரு நபரின் நரசிங்கானந்த் சரஸ்வதி என்ற சாமியாரின் கொழுப்பெடுத்த தன்மையிலிருந்து செய்யப்பட்ட செயல் என்று கடந்து போய்விட முடியாது. ஏனெனில் சீரடி சாய்பாபாவை கடவுளாக அங்கீகரிக்க முடியாது எனும் முடிவை எடுத்தது சாமியார்களின் கூட்டமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புமான, “தரம் சன்சாத்” எனும் அமைப்பினால் கடந்த 2014-ம் ஆண்டு மோடி ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவு.

பெரும்பாலும் நடுத்தரவர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கம், மேல் தட்டு வர்க்கம் ஆகிய வர்க்கப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே சீரடி சாய்பாபாவை பெருமளவில் கும்பிட்டு வருகின்றனர். அவ்வகையில் ஓரளவுக்கு சமூகச் செல்வாக்குள்ள சீரடி சாய்பாபாவையே ஜிகாதி என்றும் ஏமாற்றுக்கார சாமியார் என்றும் கூறி சிலைகளை உடைத்தெறியத் துவங்கியிருக்கிறது.

சமூகச் செல்வாக்கு உள்ளவர்களின் கடவுளுக்கே இந்துத்துவக் கும்பலிடம் இவ்வளவு தான் மரியாதை என்றால், மாரியாத்தா, அய்யனார், சங்கிலி கருப்பு, முனீஸ்வரன் (முனியன்), கருப்பசாமி போன்ற தமிழக மரபு தெய்வங்கள், அதுவும் மாமிசமும் சாராயமும் உட்கொள்ளும் காவல் தெய்வங்களை என்ன செய்வார்கள் ?

ஏற்கெனவே முனியனை முனீஸ்வரன் என்றும், அய்யனாரை அய்யனார் ஸ்வாமிகள் என்றும், முருகனைக் கந்தன் என்றும் கருப்பனை கருப்பஸ்வாமி என்றும் பார்ப்பனமயப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பனியம். இனி படிப்படியாக மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஒரே வழிபாட்டு முறை அதுவும் சுத்தமான சைவ வழிபாட்டு முறைதான் என்று நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை இந்த சஙக பரிவாரக் கும்பல்.

சாய்பாபா சிலை இடிக்கப்பட்டது வழக்கு இல்லாமல் தப்பிக்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பதைப் பரிசீலித்துப் பார்த்தாலே தெரியும், அந்த கோவிலின் அறங்காவல் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இதற்கு உடந்தையாக இருப்பதுதான்.

இந்த நிலையை தமிகத்தில் இலகுவாக ஏற்படுத்தத்தான் கோவில்களை தனியார்களின் கையில் ஒப்படையுங்கள் என்கிறது சங்க பரிவாரக் கும்பல். ஆரம்பத்தில் எச். ராஜாவை வைத்து முயற்சித்து செல்ஃப் எடுக்காத இந்த சதித் திட்டத்தை தற்போது ஜக்கி வாசுதேவ் எனும் கார்ப்பரேட் சாமியார் மூலம் துவங்கியிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

படிக்க :
♦ கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?
♦ சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !

இன்று தமிழகத்தில் முக்கியமான கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தக் கோவில்களில் உள்ள வழிபாட்டை முடக்குவதோ, ஒரு கடவுளை இல்லை என்று மறுப்பதோ சாத்தியமில்லை. நாம் மேற்கண்ட “யதி நரசிம்மானந்த சரஸ்வதி”யைப் போன்ற சாமியார்களின் கைக்குச் சென்றால், இனி சீரடி சாய்பாபாவுக்கும், முனியனுக்கும் கோவில்கள் தமிழகத்தில் இல்லாமல் போகும் என்பது மட்டும் உறுதி. அவ்வளவு ஏன் முருகனுக்கும், சிவனுக்குமே அனுமதிப்பார்களா என்பதுதான் கேள்வி!

ஆகவே இது வட இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் மட்டும் நடந்த நிகழ்வு அல்ல, மாறாக இந்துத்துவக் கும்பல் 2014-ம் ஆண்டே எடுத்த முடிவு என்பதையும் அதை செயல்படுத்தும் நிலைக்கு வட இந்தியாவில் வளர்ந்து வந்திருக்கும் காவிக் கும்பல் தமிழகத்தில் அதனைச் செய்யவே ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

இந்தக் கிரிமினல் கும்பலிடமிருந்து மக்களின் பலவகைப்பட்ட வழிபாட்டு உரிமைகளைக் காப்போம் ! சாதாரண மக்களின் பக்திக்கும் சங்க பரிவாரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்ந்து கோவில்களை ஆக்கிரமிக்கும் சங்க பரிவாரக் கும்பலின் கனவுக்கு சாவு மணியடிப்போம்.


சரண்
செய்தி ஆதாரம் : Scroll.in

இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?

ந்தியப் பாராளுமன்றத்தில் பகத் சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் குண்டு வீசி இன்றோடு 92 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. 1929-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் நாளில் பிரிட்டிஷ் இந்தியாவின் பாராளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாராளுமன்றத்தின் நடுவில், ஆட்கள் இல்லாத பகுதியில் வெடிப்புத் திறன் குறைவாக உள்ள வெடிகுண்டுகளை வீசி, துப்பாக்கியால் வான் நோக்கிச் சுட்டு, அந்த இடத்திலேயே நின்று, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று தலைப்பிடப்பட்ட தங்களது துண்டறிக்கைகளை விசிறியடித்து தாமாகவே கைதாகினர் பகத் சிங்கும் அவரது உற்ற தோழர் பட்டுகேஷ்வர் தத்தும்.

ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராகப் போராடிய போராளி பகத்சிங்கை வெறுமனே ஒரு தேசியவாதியாகச் சுருக்கி வைப்பதில் காங்கிரஸ் முதல் சங்க பரிவாரக் கும்பல் வரை அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. பகத் சிங் தேசவிடுதலை என்பதை மக்கள் விடுதலையாகப் பார்த்தவர். அவரது சிந்தனைகள் ஒவ்வொரு கணத்திலும் உழைக்கும்  வர்க்கத்தின் விடுதலை மற்றும் அவர்கள் மீதான சுரண்டலில் இருந்து அவர்களை மீட்பதை நோக்கியே இருந்தது.

ஆனால் பகத் சிங்கை அதிகபட்சமாக, ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த துடுக்குமிக்க இளைஞர் என்பதாகவே காட்ட விளைகின்றன ஆளும் வர்க்கங்கள். ஆனால் பகத்சிங்கின் நீதிமன்ற வாக்குமூலம், புரட்சி பற்றிய பகத்சிங்கின் மார்க்சிய கண்ணோட்டத்தை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. அது பகத் சிங்கை நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு காவியம் !!

– வினவு

000

ட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் அமர்வு நீதிமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த வாக்குமூலம். அவர்கள் இருவரின் சார்பாகவும் வழக்கறிஞர் திரு. அஸப் அலியால் இந்த வாக்குமூலம் 1929 ஜூன் 6 அன்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் ஏன் வெடிகுண்டுகள் வீசப்பட்டன, அதன் நோக்கம் மற்றும் அதன் பின்னணியில் இருந்த கொள்கை என்னவென்பது இந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

சமூக உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து பிரிவு மக்களும் வறுமையில் வாடும் போது முதலாளிகளும் சுரண்டல்காரர்களும் ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதையே நாங்கள் புரட்சி என்கிறோம் என்று இவ்வாக்குமூலத்தில் புரட்சியின் உள்ளடக்கத்தை பகத்சிங் மார்க்சிய அடிப்படையில் விளக்குகிறார். மனிதனை மனிதன் சுரண்டும் சுரண்டல் இல்லாத சமுதாயம் அமைப்பதற்கான பாதையை அமைப்பதற்கு முதலில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர் சொல்வதன் மூலம் அக்காலகட்டத்திலேயே அவர் எத்தனை தூரம் மார்க்சியத்தை உள்வாங்கியிருந்தார் என்பது நமக்கு தெளிவாகிறது.

த. சிவக்குமார் (கேளாத செவிகள் கேட்கட்டும்… தியாகி பகத்சிங் நூலிலிருந்து)

000

அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்

கடுமையான குற்றங்கள் சிலவற்றுக்காக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். இந்நிலையில் எங்களது நடவடிக்கைகளை விளக்கிக் கூறுவது பொருத்தமுடையதாக இருக்கும்.

இது தொடர்பாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன :

  1. சட்டமன்ற அறையினுள் வெடிகுண்டுகள் வீசப்பட்டதா, அவ்வாறெனில் ஏன் வீசப்பட்டது?
  2. கீழ் நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சரியா இல்லையா ?

முதல் கேள்வியின் முதற்பாதிக்கு எங்களது பதில் ‘என்பதுதான். ஆனால் அதை ‘நேரில் பார்த்த சாட்சிகள்’ என்று சொல்லப்படுபவர்களில் சில பொய்ச்சாட்சி கூறியுள்ளாதாலும், அந்த அளவு வரை (வெடிகுண்டு வீசப்பட்டது என்பது வரை) எங்களது பொறுப்பை நாங்கள் மறுக்கவில்லை என்பதாலும் அவர்களது சாட்சியத்தின் உண்மைத் தன்மை என்ன என்பதை அவர்களைப் பற்றிய எங்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.

படிக்க :
♦ போலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை ! || குமார், நோதீப் கவுர்
♦ காதல், தியாகம், மரணம்: பகத்சிங்கின் பார்வை

உதாரணத்திற்கு, எங்களில் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக சார்ஜன்ட் டெர்ரி கூறியுள்ள சாட்சியம் ஒரு திட்டமிட்ட பொய். நாங்களாகவே முன்வந்து சரணடைந்த அத்தருணத்தில் எங்களில் எவரும் கைத்துப்பாக்கி வைத்திருக்கவில்லை. நாங்கள் வெடிகுண்டை வீசுவதை பார்த்ததாகக் கூறும் பிறசாட்சிகளும் நா கூசாமல் பொய்யுரைக்கின்றனர். நீதிமன்றத்தின் தூய்மையினையும் பாரபட்சமற்ற விசாரணையினையும் குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களுக்கு இவ்வுண்மைதானாகவே புலப்படும்.

அதே நேரத்தில், அரசு தரப்பு வழக்கறிஞரின் நேர்மையினையும் இந்த நீதிமன்றத்தின் நடுநிலை தவறாத போக்கையும் இதுவரையிலும் நாங்கள் ஒப்புக் கொண்டவர்களாகவே உள்ளோம்.

முதல் கேள்வியின் அடுத்த பாதிக்கு எங்களது பதிலைக் கூற வேண்டுமானால், இன்று ஒரு வரலாற்று நிகழ்வாக ஆகியிருப்பது வரை கொண்டுவந்து விட்டிருக்கும் எங்களது நோக்கத்தையும் சூழ்நிலையையும் முழுமையாகவும் ஒளிவு மறைவின்றியும் நாங்கள் விளக்கியாக வேண்டும். அவற்றை விளக்குவதற்கு நாங்கள் சில விபரங்களுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய தனது உரையில் இர்வின் பிரபு அவர்கள், “இந்தத் தாக்குதல் எந்தவொரு தனிநபருக்கும் எதிராகத் தொடுக்கப்பட்டதல்ல ; மாறாக நிறுனத்திற்கு எதிராகவே தொடுக்கப்பட்டுள்ளது” என இந்நிகழ்வை விவரித்துள்ளார். இதனை நிறையில் எங்களை சந்தித்த சில போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள். நாங்கள் இதனை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம். அந்நிகழ்வின் உண்மையான முக்கியத்துவம் மிகச் சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

போலித்தனமான நாடாளுமன்றம் : இந்திய அடிமைத் தனத்தின்  அடையாளம்

மனித குலத்தை நேசிப்பதில் நாங்க யாரும் சளைத்தவர்கள் அல்ல. எந்தவொரு தனிநபருக்கும் எதிரான பழிதீர்க்கும் எண்ணங்களையெல்லாம் தாண்டி மனித உயிர்களை  வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு புனிதமானதாகக் கருதுகின்றோம்.

போலி சோஷலிஸ்ட், திவான் சாமன் லால் வர்ணிப்பது போல் நாங்கள், கீழ்த்தரமான கொடுஞ்செயலைச் செய்து அதன் மூலம் நாட்டிற்கு அவப்பெயரை தேடித்தந்தவர்களுமல்ல ; லாகூர் ‘தி டிரிபியூன்’ பத்திரிக்கையும் மற்றவர்களும் நினைப்பதுபோல் நாங்கள் வெறிபிடித்தவர்களும் (Lunatics) அல்ல.

தாய்நாட்டின் நிலைமைகளையும் அவளின் விருப்பங்களையும் அறிந்த வரலாற்று மாணவர்கள் நாங்கள் என்பதற்கு மேல் வேறொன்றுமில்லை என்று மிகத்தாழ்மையுடன் கூறிக் கொள்கிறோம். போலித்தனங்களை நாங்கள் இழிவாகக் கருதுகிறோம். தான் உருவான நாள் முதல், தனது பயனற்ற தன்மையினை மட்டுமல்லாது, சொல்லொனா கேடுகளையும் விளைவிக்கவல்ல தனது ஆற்றலையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்திற்கு (நாடாளுமன்றத்திற்கு) எதிரானதே எங்களது இச்செயல்முறை எதிர்ப்பு.

இந்தியாவின் சிறுமையையும் கையறு நிலையினையும் உலகிற்கு காட்டுவதற்காகவும், பொறுப்பற்ற கொடுங்கோல் ஆட்சியின் மேலாதிக்கத்திற்கு அடையாளமாகவும் மட்டுமே இந்த நிறுவனம் இருக்கின்றது என்று நாங்கள் தீர்க்கமான ஆலோசனையுடன் மிக உறுதியாக நம்புகிறோம். மக்கள் பிரதிநிதிகளால் பல முறை வலியுறுத்தப் படும் தேசியக் கோரிக்கையானது அதன் இறுதி இலக்காக குப்பைக் கூடையையே சென்றடைகின்றது.

நிறுவனத்தின் மீதான தாக்குதல்

அவையில் நிறைவேற்றப்படும் மதிப்பு மிக்க தீர்மானங்கள், இந்திய நாடாளுமன்றம் என்பதாகச் சொல்லப்படும் அதன் தரையிலேயே ஏளனத்தோடு காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் யதேச்சதிகார நடவடிக்கைகளை ரத்து செய்யும் தீர்மானங்கள் இறுமாப்புடன் புறக்கணிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளுக்கும் முன்மொழிவுகளுக்கும் ஒரே வரியில் எழுதப்பட்ட உத்தரவின் மூலம் உயிர் கொடுக்கப் படுகின்றது.

சுருங்கக் கூறின், இந்தியாவின் கோடானு கோடி உழைக்கும் மக்களின் வியர்வைப் பணத்தை செலவு செய்து, ஆடம்பரமாகவும் பகட்டாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றமானது, போலித்தனமும் பாசாங்கும் நிறைந்த கேடுவிளைவிக்கத்தக்க கேலிக்கூத்து என்பதைத் தவிர, அது ஓர் நிறுவனமாக இருப்பதற்கு வேறெந்த முகாந்திரத்தையும் எங்களால் காணமுடியவில்லை. அதுபோலவே, இந்தியாவின் கையாலாகாத அடிமை நிலையை காட்டுவதற்காகவே வெளிப்படையாக அரங்கேற்றப்படும் இந்நாடகத்திற்காக, பொதுமக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் வேலையில் அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும் மக்கள் தலைவர்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்கும் எங்களால் முடியவில்லை.

தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன

தொழிற்தகராறு மசோதாவின் அறிமுகமானது, அவை நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதற்காக எங்களை அவைக்குள் இழுத்து வந்தது. அவ்வேளையில்தான் மேற்கண்ட விஷயங்கள் அனைத்தைப் பற்றியும், தொழிலாளர் இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்படுவது குறித்தும் நாங்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தோம்.

அவையில் நடந்து கொண்டிருந்த விவாதத்தின் போக்கானது, சுரண்டல்காரர்களின் அடக்குமுறைக்கும், நிராதரவான தொழிலாளர்களின் அடிமைத்தனத்திற்கும் அச்சுறுத்தும் நினைவுச் சின்னமாக மட்டுமே நிற்கக் கூடிய இந்த நிறுவனத்திடமிருந்து இந்தியாவின் கோடானு கோடி உழைக்கும் மக்கள் எதிர்பார்ப்பதற்கென்று எதுவுமில்லை என்ற எங்களது நம்பிக்கையினை உறுதி செய்வதற்கு மட்டுமே பயன்பட்டது.

இறுதியாக, மனிதத் தன்மையற்றது என்றும் மிராண்டித்தனமானது என்றும் நாங்கள் கருதும் அடக்குமுறைகள் இந்நாட்டு மக்களின் அர்ப்பணிப்புமிக்க பிரதிநிதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வறுமையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளும், அவர்கள் தங்களது பொருளாதார வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரே வழியும் மறுக்கப்பட்டன.

எதிர்த்துக் கேட்பதற்கும் உரிமையற்ற கொத்தடிமைகளாய் கிடக்கும் தொழிலாளர்களுக்காக உணர்வு பெற்ற எங்களைப் போன்ற எவராலும் இந்தக் காட்சியை உள்ளக் குமுறலின்றி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக அமைதியாய் தங்களது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் பொருட்டு இதயத்தில் இரத்தம் வழியும் எவராலும் ஈவிரக்கமற்ற இந்தக் தாக்குதலால் தம் இதயத்தில் எழும் போர்க்குரலை அடக்கி வைக்க முடியாது.

கேளாத செவிகள் கேட்கட்டும் !

கவர்னர் – ஜெனரலின் நிர்வாகக் குழுவின் முன்னாள் சட்ட உறுப்பினர், திரு.S.R. தாஸ், தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் : “இங்கிலாந்தை அவளது கனவுகளில் இருந்து தட்டி எழுப்புவதற்கு வெடிகுண்டு அவசியமானது”. அவரது வார்த்தைகளை மனதிற்கொண்டே நாங்களும், இதயம் பிளக்கும் வேதனைகளை வெளிப்படுத்த எவ்வழியும் இல்லாதவர்களின் சார்பாக, எங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சட்டமன்ற அறையில் வெடிகுண்டுகளைப் போட்டோம்.

“கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதும்”, எச்சரிக்கை உணர்வின்றி இருப்போரை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்வதுமே எங்களது நோக்கமாகும். எங்களைப் போல் மற்றவர்களும் கூர்ந்து கவனித்தால், வெளித்தோற்றத்திற்கு அமைதியாய் காட்சியளிக்கும் இந்திய ஜனசமுத்திரத்தின் அடியில் பெரும்புயலொன்று வெடித்துக் கிளம்பவிருப்பதை உணரமுடியும் எதிர்வரும் இந்தப் பேராபத்தை முன்னறியாது கண்மூடித்தனமாக சென்று கொண்டிருப்பவர்களை எச்சரிப்பதற்கான “அபாய அறிவிப்பை” மட்டுமே நாங்கள் பறக்க விட்டுள்ளோம்.

வருங்கால தலைமறையினராகிய இளைஞர்களால் சந்தேகத்திற்கிடமின்றி பயனற்றது என்று புரிந்து கொள்ளப்பட்டு விட்ட கற்பனாவாத அஹிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளத்தை மட்டுமே நாங்கள் காட்டியுள்ளோம்.

முந்தய பத்தியில் நாங்கள் பயன்படுத்திய “கற்பனாவாத அஹிம்சை” எனும் வார்த்தைகளுக்கு சில விளக்கம் தேவைப்படுகின்றது. ஒருவர் வலியச் சென்று தாக்குதல் நடத்தும் போது அது ‘வன்முறை’ ஆகின்றது. எனவே அதனை அறநெறிப்படி நியாயப்படுத்த இயலாது. ஆனால் அது சரியான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும்போது அதற்கு அடிப்படை நியாயம் கிடைத்து விடுகின்றது. எக்காரணத்திற்காகவும் வன்முறை கூடாது என்பது கற்பனாவாதமாகும்.

நாட்டில் தற்போது எழுந்துள்ள புதிய இயக்கமானது – எதனுடைய தொடக்கத்தை நாங்கள் முன்னறிவித்துள்ளோமோ அப்புதிய இயக்கமானது – குருகோவிந் சிங்கையும் சிவாஜியையும், கமால் பாஷாவையும் ரிஸா கானையும், வாஷிங்டனையும் கரிபால்டியையும், லஃபாயட்டேயையும் லெனினையும் வழி நடத்திய கொள்கைகளால் எழுச்சியுற்று எழுந்துள்ளது.

அந்நிய அரசாங்கமும் இந்திய மக்கள் தலைவர்களும் இந்த இயக்கம் இருப்பதையே அங்கீகரிக்க மறுத்து தங்கள் கண்களை இறுக மூடிக் கொண்டிருப்பதால், எங்கே எழுப்பினால் அவர்களது செவிகளுக்கு கேட்டே தீருமோ, அங்கே எங்களது எச்சரிக்கை ஒலியை எழுப்புவது எமது கடமை என்று நாங்கள் எண்ணினோம்.

இதுவரையிலும் பிரச்சனைக்குரிய நிகழ்வின் பின்னணியில் இருந்த நோக்கத்தை விவரித்தோம். இப்பொழுது எங்களது உள்நோக்கம் எதுவரையிலும் என்பதை வரையறுப்பது அவசியமாகும்.

மனித உயிர்கள் மதிப்புமிக்கவை

லேசான காயங்கள் அடைந்தவர்கள் மீதோ சட்டமன்றத்தில் இருந்த மற்றவர்கள் மீதோ எங்களுக்கு தனிப்பட்ட விரோதமோ பழிவாங்கும் எண்ணமோ இல்லை. மாறாக, மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள் என்பதை மீண்டும் கூறிக் கொள்கிறோம்.

மற்றவர்கள் எவரையும் காயப்படுத்துவதைவிட, வெகுவிரைவில் இம்மனித குலத்தின் சேவையில் எங்கள் உயிர்களை நாங்களே பலியிடுவோம். மனச்சாட்சியின் உறுத்தலின்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய இராணுவத்தின் கூலிப் படைவீரர்கள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கின்றோம்.

எங்களின் சக்திக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில், மனித உயிர்களை காக்கவும் முயற்சிப்போம் இருந்தபோதிலும், சட்டமன்ற அறையில் திட்டமிட்டு வெடிகுண்டை வீசினோம் என்று நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். உண்மை, தனக்காகத் தானே பேசும். நடந்த நிகழ்வுகளின் மீது கற்பனையாகப் புனைந்துரைக்கப்பட்ட சூழ்நிலைகளையும் அனுமானங்களையும் ஏற்றிவைக்காமல் எங்களது செயலின் விளைவுகளில் இருந்து மட்டுமே எங்களது உள்நோக்கம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தனிநபர்களைக் கொல்வது எங்கள் நோக்கமல்ல

அரசாங்க வல்லுனரின் சாட்சியத்திற்கு மாறாக, சட்டமன்ற அறையினுள் வீசப்பட்ட குண்டுகள், அங்கிருந்த காலி இருக்கைகளுக்கு லேசான சேதத்தையும் ஆறுபேருக்கும் குறைவான நபர்களுக்கு லேசான சிராய்ப்புக் காயங்களையுமே ஏற்படுத்தியுள்ளன. அரசாங்க விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் இந்த விளைவுகளை வியப்புடன் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவம் அனைத்திலும் விஞ்ஞான நடைமுறையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். முதலாவதாக, மரத்தடுப்புகளுக் குள்ளிருந்த காலி சாய்வு மேசைகள் மற்றும் காலி இருக்கைகள் இருந்த பகுதியிலேயே இரண்டு குண்டுகளும் வெடிக்கப்பட்டன.

இரண்டாவதாக, திரு. P. ராவ், திரு. சங்கர் ராவ் மற்றும் சர் ஜார்ஜ் சவுஸ்டர் போன்றவர்களுக்கும் கூட எவ்வித காயமும் ஏற்படவில்லை அல்லது லேசான சிராய்ப்புக் காயங்களே ஏற்பட்டுள்ளன. செயல்முனைப்பேற்றப்பட்ட பொட்டாசியம் குளோரேட் மற்றும் எளிதில் வெடிக்கக்கூடிய பைக்ரேட் ஆகியன நிரப்பட்ட அவ்வெடிகுண்டுகள் அரசாங்க வல்லுனர் தனது வாக்குமூலத்தில் கூறிய அளவிற்கு (அவரது மதிப்பீடு கற்பனையானதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருந்தாலும்) சக்தி வாய்ந்தவையாக இருந்திருந்தால் மரத்தடுப்புகளை உருத்தெரியாமல் அழித்திருக்கும் ; அது வெடித்த இடத்தில் இருந்த சில கெஜங்கள் தூரத்திற்குள் இருந்த பல உயிர்களைப் பலி கொண்டிருக்கும்.

(The Legend of Baghat singh – திரைப்படத்தில் வரும் காட்சி)

மேலும், அவ்வெடிகுண்டுகள் அழிவை உண்டாக்கக்கூடிய ரவைகளையும் விசிறியடிக்கத்தக்க எறிகணைகளையும் உள்ளடக்கிய அதிக சக்திவாய்ந்த வேறுவகை வெடிமருந்துகளால் நிரப்பப்பட்டிருந்தால், சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை ஒழித்துக் கட்டுவதற்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், அக்குண்டுகளை சில முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரசு அதிகாரிகள் பகுதியில் எறிந்திருக்க எங்களால் முடியும். இறுதியாக, எவருடைய அதிர்ஷ்டங்கெட்ட கமிஷனை பொறுப்புள்ள மக்கள் அனைவரும் வெறுத்தார்களோ அந்த சர்.ஜான் சைமன் அந்நேரத்தில் அவைத் தலைவரின் மேடையில் தான் வீற்றிருந்தார். எங்களால் அவரைக் குறிவைத்துத் தாக்கியிருக்கவும் முடியும்.

இருந்தபோதிலும் இவையெல்லாம் எங்களது நோக்கங்கள் அல்ல. எதைச் செய்வதற்காக அவ்வெடிகுண்டுகள் செய்யப்பட்டனவோ அதனைத் தவிர வேறெதையும் அவை செய்யவில்லை. அக்குண்டுகளை (யாருடைய உயிருக்கும் தீங்கு விளைவிக்காத) பாதுகாப்பான இடத்தில் எறிய வேண்டும் என்ற எங்களது வெளிப்படையான நோக்கத்தைத் தவிர வேறெதிலும் அரசாங்க வல்லுனர்களின் வியப்பிற்கான காரணம் அடங்கியிருக்கவில்லை.

எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்க முடியாது

அதன்பிறகு, நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துக்களை கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல் காரர்களை அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன் மூலம் அத்தேசத்தையே அழித்துவிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான் :

அடக்குமுறைச் சட்டங்களாலும் பாஸ்டில் சிறைச் சாலை ப்ரெஞ்சுப் புரட்சியை நசுக்கி விட முடியவில்லை. தூக்கு மேடை சைபீரியச் சுரங்கங்களாலும் ரஷ்யப் புரட்சியை அழித்துவிட முடியவில்லை. இரத்த ஞாயிறாலும் ஐரிஷ் துணை ராணுவப் படைகளான பிளாக் அன் டான்ஸ் (black and tans) களாலும் ஜரிஷ் சுதந்திரப் போராட்டத்தை அடக்கிவிட முடியவில்லை. அவசரச் சட்டங்களும் பாதுகாப்பு மசோதாக்களும் இந்தியாவின் சுதந்திரத்தீயை அணைத்துவிட முடியுமா ?

இட்டுக் கட்டப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்ட சதிவழக்குகளும், மாபெரும் தத்துவத்தின் பார்வையை கைக்கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களின் சிறைவைப்பும் புரட்சியின் அணிவகுப்பை தடுத்துவிட முடியாது. ஆனால் சரியான நேரத்தில் செய்யப்படும் எச்சரிக்கையானது, அக்கறையுடன் கவனிக்கப்பட்டால் உயிரிழப்புகளையும் பல்வேறு துயரங்களையும் தடுத்துவிட முடியும்.

அந்த எச்சரிக்கையினை வழங்குவதை எங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டோம் ; எங்கள் கடமையை நிறைவேற்றி விட்டோம்.

தோழர் பட்டுகேஷ்வர் தத்

புரட்சி என்பது வெடிகுண்டுகளின் வழிபாடு அல்ல

[‘புரட்சி’ எனும் வார்த்தையின் மூலம் எதனைக் குறிக்கின்றீர்கள் என்று கீழ் நீதிமன்றத்தில் பகத்சிங்கிடம் கேட்கப்பட்டது. அக்கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் கூறினார்:]

‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகஅமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

பொருள்களை உண்டாக்குபவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமுதாயத்தின் மிக இன்றியமையாத அங்கமாக இருந்துங்கூட அவர்களது உழைப்பைச் சுரண்டுபவர்களால் அவர்கள் சூறையாடப்படுகின்றனர். அவர்களது ஆதார உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அனைவருக்கும் தானியங்கள் விளைவித்து கொடுக்கும் விவசாயி, தனது குடும்பத்தோடு பட்டினியில் கிடக்கின்றான் ; உலகச் சந்தைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்கும் நெசவாளி, தன் உடலையும் தன் குழந்தைகள் உடலையும் மறைப்பதற்கும் போதுமான ஆடைகள் இன்றி தமிக்கிறான்.

நேர்த்தியான கட்டிடங்களை எழுப்பித்தரும் கட்டிடத் தொழிலாளர்களும் கொல்லர்களும் தச்சர்களும் இழிந்தோராய் சேரிகளில் வாழ்கின்றனர். ஆனால் சமுதாயத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும் சுரண்டல்காரர்களும் கோடிக்கணக்கான பணத்தை தங்கள் விருப்பம்போல் ஊதாரித் தனமாக செலவு செய்கின்றனர். இத்தகைய பயங்கரமான சமத்துவமின்மையும் வாய்ப்பு வசதிகளில் வலிந்து திணிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நிச்சயம் குழப்பத்திற்கே வழிவகுக்கும். இந்த நிலைமை நீடித்து நிலைத்திருக்க முடியாது. மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கும் தற்போதைய சமுதாய அமைப்பு முறை ஓர் எரிமலை வாயின் விளிம்பில் அமர்ந்திருக்கின்றது என்பது வெளிப்படை.

சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில் இந்த நாகரீகத்தின் முழுக்கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்க வேண்டியதே ஆகும். இது செய்யப்படவில்லையெனில், ஏகாதிபத்தியம் என்ற பெயரால் அறியப்படும் மனிதன் மனிதனால், தேசங்கள் தேசங்களால் சுரண்டப்படும் கொடுமையை ஒழிக்க முடியாது ; மனித குலம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் படுகொலைகளில் இருந்து (Carnage) விடுதலை பெற முடியாது. போர்களே இல்லாமல் செய்து உலகளாவிய அமைதிக்கான சகாப்தத்திற்கு அழைத்துச் செல்வது பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் ஒளிவு மறைவற்ற போலித்தனமாகவே இருக்கும்.

“புரட்சி” என்பதன் மூலம், இவ்விதம் (அதாவது, தற்போது நிலவும் சமுதாய அமைப்பு முறையைப் போல் – மொர்) நிலை குலையக்கூடிய அபாயம் இல்லாததும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான (ஓர் சமூக அமைப்பை, முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும் ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனித குலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் குறிக்கின்றோம்.)

இதுவே எங்களது கொள்கை. இந்தக் கொள்கையினால் உத்வேகம் பெற்றே நாங்கள் இச்சரியான, உரத்த எச்சரிக்கையை செய்தோம்.

படிக்க :
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
♦ நூல் அறிமுகம் : கேளாத செவிகள் கேட்கட்டும்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும்

இருப்பினும் இந்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படாமல் விடப்பட்டு தற்போதைய அரசு அமைப்பு முறையானது வளர்ச்சியடைந்து வரும் இயற்கை சக்திகளின் பாதையில் தொடர்ந்து ஒரு தடையாகவே இருந்து வருமானால், ஓர் கடுமையானப் போராட்டத்தின் முடிவில் அனைத்து தடைகளும் தகர்த்தெறியப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலை நாட்டப்பட்டு புரட்சியின் குறிக்கோளை அடைவதற்கான பாதை அமைக்கப்படும். புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்திரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கின்றோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகின்றோம். எங்களது இம்மகத்தான இலட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

“புரட்சி நீடூழி வாழ்க”

பகத் சிங் – பட்டுகேஷ்வர் தத்

ஆதாரம் : ‘தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ – சிவவர்மா, 1986 வெளியீடு (உட்தலைப்புகள் – த. சிவக்குமார்)

 

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் !!

த்தரப் பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 120 வழக்குகளில், 94 வழக்குகளை அடிப்படையற்றதாகக் கூறி ரத்து செய்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

ரவுடி சாமியார்  யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரானப் பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பாஜக அரசு, சிறுபான்மையினர் செய்யும் சாதாரணக் குற்றங்களுக்கு எல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் அம்பலமாகி இருக்கிறது.

படிக்க :
♦ பிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்
♦ உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை

கடந்த ஜனவரி 2018-ஆம் ஆண்டு முதல், டிசம்பர் 2020-ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிரான 120 ஆட்கொணர்வு மனுக்களில் (Habeas Corpus)  94 தடுப்புக் காவல் கைதுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய 32 மாவட்ட ஆட்சியாளர்கள் கொடுத்த ஆணைகளைத்தான் அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பெரும்பான்மை தடுப்புக் காவல் கைதுகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அதற்கான காரணங்களாக, “ஒரே விசயத்தை பழையை முதல் தகவல் அறிக்கைகளில் இருந்து அப்படியே எடுத்து ஒட்டி பதிவு செய்திருப்பது”, “குற்றம் சாட்டப்பட்டவருக்கான உரிமைகளை வழங்க மறுப்பது”,  “பிணைக் கிடைக்காத வகையில் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குத் தொடுப்பது” ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த கருப்புச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ள தமது அதிகாரத்தை உத்தரப் பிரதேச அரசுப் பயன்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

இவ்வாறு கடந்த மூன்றாண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் (41 வழக்குகள்) பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 41 வழக்குகளில் 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை என்.எஸ்.ஏ-விலிருந்து விடுவிக்கையில் மாநில அரசுக்கு தமது கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

மீதமுள்ள 10 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.

இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளைப் பரிசீலித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டதற்கும், பிணையை மறுப்பதற்கும் வைக்கப்பட்ட காரணங்களாகக் கிட்டத்தட்ட அனைத்துப் பசுவதை வழக்குகளிலும் ஒரே விசயமே சொல்லப்பட்டிருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள், சமூகத்தை அச்சுறுத்தும் தன்மை கொண்டவர்கள் என்றும், அவர்கள் “மீண்டும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

பசுவதைத் தொடர்பான வழக்குகளில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், என்னென்னக் காரணங்களைக் கூறியிருக்கிறது என்று பார்ககலாம்.

11 வழக்குகளில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சுவதற்கு அனுமதி தருகையில் மாவட்ட ஆட்சியர்கள், “கவனத்தைச் செலுத்திப் பரிசீலிக்கவில்லை” என்று குறிப்பிட்டு ரத்து செய்துள்ளது.

13 வழக்குகளில், கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது தரப்பைப் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளனர் என்று கூறி ரத்து செய்திருக்கிறது.

7 வழக்குகளில், அவை சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் என்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் தேவையில்லை என்றும் கூறி ரத்து செய்தது.

6 வழக்குகளில், தனி சிறப்பான வழக்காக முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டிருப்பதையும், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எவ்வித மோசமான குற்ற வரலாறு இல்லாததையும் சுட்டிக் காட்டி ரத்து செய்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

இதுமட்டுமல்ல, எதன் அடிப்படையில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து அனைத்து முதல் தகவல் அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளக் காரணங்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன என்று குறிப்பிடுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம்.

இந்த 41 வழக்குகளில் 7 வழக்குகளில் பசு வெட்டியது, “அந்தப் பகுதியில் அச்சமிக்க சூழலை ஏற்படுத்தியதாகவும், மொத்த நிலைமையும் பயங்கரவாதம் கமிழ்ந்தச் சூழலாக இருந்ததாகவும்” தெரிவிக்கின்றன.

ஆறு வழக்குகளில் ஒரே மாதிரியான 6 சூழல்களைக் குறிப்பிட்டிருக்கிறது. “அடையாளம் தெரியாத நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்”, “சம்பவம் நடந்த சில நிமிடங்களில் போலீசார் தகக்கப்பட்டனர்”, “போலீசார் தாக்கப்பட்டதால், மக்கள் தாறுமாறாக ஓடத் துவங்கியதால் நிலைமை மிகவும் பதற்றமானதாக  மாறியது”, “மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடத்துவங்கினர்”, “இச்சூழலால் மக்கள் தங்களது அன்றாடப் பணிகளைக் கூட செய்ய முடியவில்லை”. “குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கையால், அந்தப் பகுதியின் அமைதி, சட்டம், ஒழுங்கு நிலைமைகள் மிகவும் மோசமான வகையில் பாதிப்புக்குள்ளாகின” ஆகியவையே சூழல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இரண்டு வழக்குகளில், “குறிப்பாக பெண்கள், வீட்டை விட்டு வெளியேப்போகவும், தங்களது வழக்கமான வேலையைச் செய்யவும் தயங்கினர்”, “வேகமான வாழ்க்கை தடைபட்டதுதோடு, பொது ஒழுங்குப் பாதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரண்டு வழக்குகளில், “அச்சம் மிகுந்த சூழல் உருவானது, அருகில் உள்ள பெண்கள் பள்ளி மூடப்பட்டது, அருகாமை வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி மாடு வெட்டுபவரை கைது செய்த சூழல் பற்றி கூச்சமில்லாமல் போலீசு அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில்தான் மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.ஏ-வின் கீழ் வழக்குத் தொடுக்க அனுமதியளித்தார் எனில், அந்த மாவட்ட ஆட்சியரின் அறிவும் நாணயமும் எந்த அளவிற்கு ‘சிறப்பானதாக’ இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இது குறித்து உ.பி. மாநில ஆதித்யநாத் அரசின் தலைமைச் செயலரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் கேட்டபோது அதற்குப் பதிலளிக்கவில்லை.

படிக்க :
♦ மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு !
♦ யோகி என்ட்ரி : உ.பி. மாடல் ட்ரெய்லர் || கேலிச்சித்திரம்

ஒரு மாநிலத்தில் மக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை ஒடுக்குவதற்குக் கொடும் ஆள்தூக்கிச் சட்டமான என்.எஸ்.ஏ எவ்வாறுப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கானச் சான்று இது.

இதைப் போலவே ராஜ துரோகச் சட்டமும் (124A), சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் (UAPA) நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளுக்குப் பிறகு சமீபத்தில் இந்தச் சட்டத்தை சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது மீண்டும் ஏவத் துவங்கியது எடப்பாடி அரசு. இத்தகைய கருப்புச் சட்டங்களை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடினால்தான் விடிவு கிடைக்கும்.


கர்ணன்
செய்தி ஆதாரம் : The Indian Express

சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !

பீமா கொரேகான் வழக்கை முகாந்திரமாக வைத்து வட இந்திய சமூகச் செயற்பாட்டாளர்களையும், அறிவுத் துறையினரையும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கு ஜோடித்துக் கைது செய்து இன்றளவும் விசாரணை என்னும் பெயரில் அவர்களுக்கு பிணை தராமல் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. என்.ஐ.ஏ எனும் ஆள்தூக்கி போலீசு கும்பலை வைத்துக் கொண்டு ஊபா, தேசத் துரோக சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் செயற்பாட்டாளர்களை முடக்கி வருகிறது மோடி அரசு.

அந்த வகையில் வட இந்தியாவில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களை முடக்கிய பின்னர், தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கை வைத்திருக்கிறது மோடி அரசு. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தலித் பழங்குடியின மற்றும் பெண்கள் விடுதலை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு மொத்தம் 25 பேரின் வீடுகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தேடுதல் நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ.

படிக்க :
♦ ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்
காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !

செயற்பாட்டாளர்கள் 25 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதலில், செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகள், கணிணிகள், மடிக்கணிணிகள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை என்.ஐ.ஏ கைப்பற்றிச் சென்றதாக பி.யூ.சி.எல் அமைப்பு தெரிவிக்கிறது. மனித உரிமைகள் கூட்டமைப்பு, குடிமை உரிமைகள் அமைப்பு, ஆந்திரா குடிச் சுதந்திர கமிட்டி,  விரசம் (புரட்சிகர எழுத்தாளர்கள் கழகம்) உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருக்கிறது.

ஆந்திரப்பிரதேஷ் குடிச் சுதந்திர கமிட்டியைச் சேர்ந்த தெலுங்கானா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரகுநாத் வெரோஸ், ஜன நாட்ய மண்டலி அமைப்பைச் சேர்ந்த டப்பு ரமேஷ், மனித உரிமைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.எஸ்.கிருண்ணா, புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பானி, வரலட்சுமி, அருண் உள்ளிட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நன்கு அறியப்பட்ட செயற்பாட்டாளர்களைக் கைது செய்துள்ளது.

இவர்களைத் தவிர, சைதன்யா மகளிர் சங்கத்தைச் சேர்ந்த  தேவேந்திரா, சில்பா, ஸ்வப்னா, ராஜேஸ்வரி, பத்மா, ஆந்திரப்பிரதேஷ் சிவில் சுதந்திர கமிட்டியைச் சேர்ந்த ரகுநாத், சிட்டிபாபு, சிலிகா சந்திரசேகர், அமருலா பந்து மிருதுளா சங்கத்தைச் சேர்ந்த அஞ்சம்மா, சிரிஷா மற்றும் வழக்கறிஞர் கே.எஸ். செல்லம் ஆகியோர் வீட்டிலும் தேடுதலை நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொலைக்காட்சி  ஊடகவியலாளரான பங்கி நாகண்ணாவை மாவோயிஸ்ட்டுகளுக்கு தகவல் தொடர்பு கொண்டு செல்பவராகக் கூறி விசாகப்பட்டிணம் போலீசு கைது செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. கையாளத் துவங்கியது.

மாவோயிஸ்ட்டுகளுக்கு மருந்துகள், ஆவணங்கள் ஆகியவற்றை நாகண்ணா எடுத்துச் செல்லும்போது அவரைக் கைது செய்ததாக விசாகப்பட்டிணம் போலீசு தெரிவித்தது. விசாரணையின் போது பங்கி நாகண்ணா தாம் மாவோயிஸ்ட்டுகளுக்கும், சிவில் சமூகத்தவர்களுக்கு இடையிலான சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்ததாகவும் விசாகப்பட்டிணம் போலீசு கூறியது.

ஆந்திர போலீசு பதிவு செய்துள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதலை என்.ஐ.ஏ. நடத்தியுள்ளதாக பி.யூ.சி.எல் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் மொத்தமாக சேர்த்து 80 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதில் 27 பேரின் பெயர்கள் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி ஆந்திர போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டது.

பீமா கொரேகான் வழக்கிலும் புனே போலீசு போலியாகத் தயாரித்த ஒரு கடிதத்தை முகாந்திரமாக வைத்துக் கொண்டு கடந்த ஆண்டு முதல் என்.ஐ.ஏ இந்த வழக்கை கையிலெடுத்தது. அதேபோல ஆந்திராவிலும் விசாகப்பட்டிணம் போலீசு போட்ட ஒரு வழக்கை இப்போது என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையைத் துவங்கியிருக்கிறது.

இந்த செயற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் சதி(120B), அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் அல்லது தொடுக்க முயற்சித்தல் (121), பிரிவு 121-ன் கீழ் தண்டிக்கத்தக்க செயல்களைச் செய்வதற்கான சதியில் ஈடுபடுதல் (121A), சட்ட விரோதமாகக் கூடுதல் (143), மரணத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை ஏந்தியிருத்தல் (144), தேசத் துரோகச் சட்டம் (124A), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA), ஆந்திரப்பிரதேஷ் பொதுப் பாதுகாப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டப் பிரிவு 25 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஜனநாயக விரோத சட்டங்கள், சட்ட விரோதக் கைதுகள் மற்றும் இந்திய அரசின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடியவர்கள். மேலும், ஆணாதிக்க ஒடுக்குமுறை, இந்துத்துவத் தாக்குதல்கள், மக்களின் நிலம் மற்றும் வனத்தின் மீதான உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்துப் போராடியவர்கள் என்று பி.யூ.சி.எல் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?

பீமா கொரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர்களைச் சிக்க வைக்க இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் அவர்களது கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டன என்பது கணிணி சிறப்பு ஆய்வு நிறுவனத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு பிணை வழங்க மறுக்கிறது இந்து ராஷ்டிரத்தின் நீதிமன்றம்.

தற்போது ஆந்திராவின் செயற்பாட்டாளர்களிடமும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டது பாசிசக் கும்பல். நேற்று வட இந்தியா, இன்று ஆந்திரா தெலுங்கானா, நாளை தமிழ்நாடு தான் ! புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்தின் மூலம் பாசிச ஒடுக்குமுறை அபாயத்தை எதிர் கொள்ளத் தயாராவோம் !!


கர்ணன்
செய்தி ஆதாரம் : The Wire

ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்

ராஜ துரோக சட்டத்தைப் (124-A) பயன்படுத்தி மோடி அரசு கைதுகளை மேற்கொள்ளும்போது, “யாரோ கைது செய்யப்படுகிறார்கள்” என்று வெறும் பார்வையாளனாகக் கடந்து  செல்கின்றவர்களுக்கு இதே சட்டங்களால் தான் இந்த நாட்டு மக்களின் தனிநபர் சுதந்திரம், உரிமைகள் ஆகியனவும்  பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை எடுத்துகாட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

150 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் காலனி நாடாக இருந்த இந்தியாவில் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களை ஒடுக்கி அடக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1870-ல் கொண்டுவரப்பட்டதே இந்திய ராஜ துரோக சட்டம். பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்து 73 ஆண்டுகள் ஆனபிறகும் இன்றளவும் 124-A இந்தியன் தண்டனைச் சட்டத்தில் புனிதமானதாகப் பாதுகாக்கப்படுகிறது.

இதை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் அரசு 73-வது பிரிவு Coroners and Justice Act 2009-படி ராஜ துரோக செயல் மற்றும் பேச்சு  மற்றும் ராஜ துரோகமான அவதூறுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சட்டத்தில் இருந்து நீக்கிவிட்டது. இது 12 ஜனவரி 2010 முதல் அமுலுக்கு வந்தது. ஆனால் செத்துப்போன சவமான இந்த சட்டத்தை சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தியா தூக்கிச் சுமக்கிறது.

படிக்க :
♦ சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !
♦ குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !

ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே எவற்றுக்கெல்லாம் உரிமை உண்டோ எந்தெந்த உரிமைகள் எல்லாம் பாதுகாப்புக்கு உரியனவோ அவற்றையே மனித உரிமைகள் என்று வரையறுக்கிறோம்.

மனிதப் பிறவி எடுத்ததினாலேயே ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக உரித்தாகிற இந்த உரிமைகள் உருவாகவும் மாந்தர் அதை அனுபவித்து வருவதற்குமே கூடப் போராட்டங்கள் முக்கியமான காரணிகளாக இருந்தன. இப்போதும் இருந்து வருகின்றன.

124-A  ராஜ துரோக சட்டம் சொல்வது என்ன?

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124(A), ராஜ துரோகம் / தேச துரோகம் பற்றி தாராளமான மற்றும் விரிவான வார்த்தைகள் மூலம் விளக்குகிறது.  யாராக இருந்தாலும் பேச்சிலோ அல்லது எழுத்து வடிவிலோ அல்லது சைகை மூலமோ அல்லது வெளியில் தெரியக்கூடிய வகையில் பிரதிநிதித்துவம் அல்லது வேறு வகையில் வெளிப்படுத்துதல் அல்லது வெறுப்பு பேச்சுகள் அல்லது இழிவுப்படுத்தும் வகையில் வெளிப்படுத்த முயற்சிப்பது அல்லது தூண்டுதல் அல்லது சட்டத்தின்படி அமைக்கப்பட்டிருக்கும் அரசின் மீது விசுவாசமின்மையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் ஆயுள்தண்டனை வரை வழங்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களைப் பற்றி விளக்கும் அதே நேரத்தில் ‘sedition’ அதாவது ராஜ துரோகம் என்றால் என்ன என்பது பற்றி திட்டவட்டமான வரையறுப்பு எதனையும் தரவில்லை. (Pranjal Sharma)

அந்த 124-A சட்டப்பிரிவின் பொருளில் இருக்கும் தெளிவற்றத்தனம் அரசியல் செயற்பாட்டாளர்கள் மனித உரிமைப் போராளிகள் மற்றும் தங்களது அரசியல் சட்ட உரிமையைக் கோரும் தனிநபர்கள் மீது தவறான முறையில் பயன்படுத்தச் செய்கிறது.

1962-ல் கேதார்நாத்சிங் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு தான் 124-A பிரிவில் சில வரையறைகள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை தருவதாக சட்ட வல்லுநர்கள் அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

2014 மோடி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து விமர்சிப்போர் எதிர்ப்பு தெரிவிப்போர் ஆகியோர் மீது 124-A வழக்குகள் வெள்ளமாகப் பாயத் தொடங்கியது. கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவுக்கு வருகின்ற குற்றபதிவு ராஜ துரோகம் தான். ஏதோ நாடே ராஜ துரோகத்தில் நிரம்பி இருப்பது போலவும் மற்றும் மக்கள் கிளர்ச்சி மனநிலையில் இருப்பதாகவும் அரசே தோற்றத்தை உருவாக்குகிறது. (ஏ.ஜி.நூரனி-ப்ரண்ட்லைன்)

இதன் மூலம் நிரந்தரமாக மக்கள் மனதில் அச்சத்தை நிலைநிறுத்தி மெத்தப் பணிவுடன் மோடி அரசைப் பின்பற்ற செய்வதே பிரதான நோக்கமாகும். சொந்த நாட்டு மக்களை வேவு பார்க்க காலனிய ஆட்சியின் சட்டத்தைத் தத்தெடுத்து அதைப் பயன்படுத்தி தனது இந்து ராஷ்டிரக் கனவோடு காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

காலனியாதிக்க மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் மிச்ச சொச்சமாக விளங்கிய இந்தச் சட்டத்தை உலகின் பல நாடுகளும் தூக்கியெறிந்துவிட்டன. பல நாடுகள் அவற்றைப் பயன்படுத்தவே தயங்குகின்றன.

ஆர்ட்டிகல்-14 இணையதளம் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பதியப்பட்டிருக்கும் 124-A ராஜ துரோக வழக்குகளைப் பகுப்பாய்வு செய்திருக்கிறது. (Article 14’s sedition database). அதிலிருந்து சில விவரங்களை தொகுத்துப் பார்ப்போம் :

ஒரு 11 வயதுச் சிறுமியின் தாயார் மீது ராஜ துரோகக் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரணம் அந்தச் சிறுமி கர்நாடக மாநிலத்தில் பிதார் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த ஒரு நாடகத்தில் பங்கெடுத்ததுதான். அதேபோல இதே குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசினார் என்பதற்காக சர்ஜில் இமாம் என்ற ஜே.என்.யூ மாணவர் மீது ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டது. அந்த சர்ஜில் இமாம் வாழ்க என்ற முழக்கமிட்டதற்காக சுமார் 50 மாணவர்கள் மீது ராஜ துரோக சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. (ஹர்ஷவர்தன் ; நேசனல் ஹெரால்டு)

2010-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை சுமார் 11,000 தனிநபர்கள் மீது 816 ராஜ துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் 65 சதவிதத்திறகு மேலான வழக்குகள் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு போடப்பட்டவை. இந்த ராஜ துரோக பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் எதிர்கட்சி அரசியல்வாதிகள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் 405 இந்தியர்கள் மீது அரசியல்வாதிகளையும் அரசையும் குறைச் கூறியதற்காக ராஜ துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன. 2014-க்கு பிறகு 149 பேர் மீது மோடியை விமர்சனம் செய்தது, மோடியை சிறுமைபடுத்தும் விதமாக குறிப்புகள் எழுதியது ஆகியவற்றுக்காகவும், 144 நபர்கள் மீது யோகி ஆதித்யநாத்தை விமர்சித்ததற்காகவும் போடப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் 3,754 பேர் மீது 22 முதல் 25 ராஜ துரோக வழக்குகள் போடப்பட்டன. உ.பி-யில் 2010-ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட 115 வழக்குகளில் 77 சதவீத வழக்குகள் யோகி ஆதித்யநாத் முதலமைச்சரான பிறகு போடப்பட்டவை. இதில் பாதிக்கு மேலான வழக்குகள் தேசியவாதத்தை சுற்றிய பிரச்சனைகளை ஒட்டியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்கள் மீது “இந்தியா ஒழிக” என்று கோஷமிட்டதாக வழக்கு, புல்வாமா தாக்குதலைக் கொண்டாடியதாக வழக்கு, 2017-ல் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதைக் கொண்டாடியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

புல்வாமா-வில் மனித வெடிகுண்டு மூலம் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து 44 சாதாரண இந்திய மக்கள் மீது ராஜ துரோக வழக்கு பாய்ந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாகவும் சமூக வலைத்தளங்களில் இந்தியாவுக்கு எதிரானச் செய்திகளைப் பதிவு செய்ததாகவும் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.

உ.பி-யில் ஹத்ராஸில் ஒரு 19 வயது தலித் பெண்ணைக் கொடூரமாகக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கற்பழித்து கொலைச் செய்யப்பட்ட நிகழ்வுக்கு நீதிகேட்டு நடத்தப்பட்டப் போராட்டங்கள் அதைத் தொடர்ந்து போலீசு மூலம் அந்த பெண்ணின் பிணத்தைப் பெற்றவர்களின் ஒப்புதலின்றி அர்த்த ராத்திரியில் எரித்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியவர்கள் 18 அடையாளம் தெரியாதவர்கள் மற்றும் அடையாளம் தெரிந்த 5 பேர் ஆகியோர் மீது  22 ராஜ துரோக வழக்குகள் பாய்ந்தன.

தங்களது நிலம் வாழ்க்கை கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கப் போராடிய 3000 பழங்குடியினர் மீது இதே பிரிவில் வழக்குப் பதியப்பட்டது.

மேலே உள்ள பகுப்பாய்வின் விவரங்களிலிருந்து தெரிய வருவதென்ன?

124-A ராஜ துரோக பிரிவு பயன்படுத்தப்பட்டதைப் பற்றி  ஆராயும்போது மோடி அரசின் சட்டங்களை எதிர்த்துக் கருத்து சொல்வது, போராட்டம் நடத்துவது என்று நிராயுதபாணியாக மக்கள் செய்வது எல்லாவற்றையும் 124-A ராஜ துரோக பிரிவு அல்லது ஊபா UAPA-வுக்குள் குற்றமாக்குகிறது.  “போஸ்டர் வைத்திருத்தல் சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகள் முழக்கங்களை எழுப்புதல் மற்றும் தனிப்பட்ட செய்தி தொடர்புகள்” போன்ற ‘தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய சாதாரண முறைகளையும் கூட ‘ராஜ துரோகக்’ குற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது மோடி அரசு.

மோடி ஆட்சியில் இந்த பிரிவு வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனி நபர்களைக் குறிவைத்துப் பதியப்படுவதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவபடுத்தும் சில தனிநபர்கள் மீதே கவனம் முழுதும் செல்கிறது. மிகப்பெரிய இயக்கங்கள் நடந்து முடிந்த பிறகும் தொடர்புடையவர்கள் தொடர்பில்லாதவர்கள் என தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடக் கூடிய சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் எதையாவது தொடர்புப்படுத்தி இந்த பிரிவு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் பீமா கொரேகன் – தலித் மக்களின் விழாவில் திட்டமிட்டு தலித் மக்களைத் தாக்கி வன்முறையைத் தூண்டி விட்டனர் என்று இரண்டு இந்துத்வா தலைவர்கள் சாம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் ஏக்போடே ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. ஆனால் அதே சமயம் சுரேந்திரா காட்லிங்க், சுதிர் தவாலே, ரோனா வில்சன், ஷோமாசென், மகேஸ் ராட், ஆகியோரும் அக்டோபர் 2018-ம் ஆண்டில் வரவர ராவ், சுதா பரத்வாஜ், அருண்பெரிரா, கௌதம் நவல்கா மற்றும் வெர்னான் கான்சால்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள், கவிஞர், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள். இவர்கள் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை மோடி அரசைக் கடுமையாக விமர்சிப்பதுதான். இன்று வரை சிறையிலிருக்கும் இவர்களுக்கு ‘விசாரணை நடைபெறுகிறது’ என்ற அரசு தரப்பின் ஒற்றை வார்த்தையை ஏற்றுக் கொண்டு பிணை தர மறுக்கின்றன நீதிமன்றங்கள்.

அரசை கேள்வி கேட்பது தேச துரோகமாகி விடுமா?

UAPA – ஊபா இப்போது அமுலில் இருக்கும் போது 124-A பிரிவு தொடர்ந்து இருப்பது தேவை தானா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் UAPA – ஊபாவும் அரசுக்கு எதிரான குற்றங்களை அதே மொழியில்தான் பதிவு செய்கிறது.

நாட்டையும் அரசையும் இரு கூறுகளாக வேறுபடுத்தி பார்ப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது.

படிக்க :
♦ ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா ?

124-A பிரிவு அரசுக்கு எதிரான விமர்சனங்களை அதன் செயல்பாட்டுக்கு எதிரான போராட்டங்களைக் குற்றமாக்குகிறது. ஆனால் மக்கள் மனதில் ‘ராஜ துரோகம்’ என்பது ‘தேசத்திற்கு எதிரான’ அல்லது ‘தேச துரோகி’ என்று மாற்றி மொழியாக்கம் செய்யப்பட்டு பதிய வைக்கப்படுகிறது. இதன் உண்மையான அர்த்தம் “அரசுக்கு எதிராக” என்பதுதான். இந்த மொழியாக்கம் இந்திய மக்களிடையே ஒரு உணர்வுப் பூர்வமான இடத்தை குறிவைத்து தாக்குவதால் அரசுக்கு எதிர்ப்புகளையும் எதிர்த்து குரல் கொடுப்பவர்களையும் சட்ட விரோதமாக நடத்துவது எளிமையாக இருக்கிறது. அதனால்தான் 2019-ம் ஆண்டில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராஜ துரோக சட்டத்தை இன்னும் கடினமாக்கி தேச விரோத நடவடிக்கைகளை கட்டுபடுத்துவோம்’ என்று சொன்னபோது கூட்டம் கூச்சலிட்டு ஆரவாரித்தது. (ஹர்ஷவர்தன் : நேசனல் ஹெரால்டு)

ராஜ துரோக சட்டம் அரிதாகவே விசாரணைகளுக்கு இட்டுச் செல்கிறது. தண்டனைகளை விட்டு விடுங்கள், குறிப்பாக, கைதுகள் பற்றி பொது மக்களிடையே உருவாக்கப்படும் பொது கருத்துகள்தான் முக்கியமாகிறது. காலனிய ஆட்சியில் ராஜ துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ‘தேசிய வாதம்’ ஒரு தற்காப்பாக செயல்பட்ட அதேவேளையில் சமகால இந்தியாவில் அதே ‘தேசிய வாதம்’ தனி மனிதர்களைத் தேசத் துரோக குற்றம் சாட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்டின் இந்த வேண்டுதல் இந்த வழக்குகளில் ஒரு தார்மீக அம்சத்தை சேர்க்கிறது, மற்றும் ஒரு விசாரணை இல்லாமல் தீர்ப்பு வழங்க வழிவகுக்கிறது. சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும் சமூகத்தின் பிற உறுப்பினர்கள் ஆகியோரை குறிப்பிட ‘தேச விரோதிகள்’ என்ற சொற்கள் படிப்படியாக பொதுவானதாக மாறிவிடுகின்றன. ராஜ துரோக சட்டம் இதில் ஒரு தீர்மானகரமானப் பங்கை ஆற்றுகிறது.

மோடியின் அரசுக்கேற்றவாறு பொது கருத்தை ஒழுங்கமைக்கும் பணியை செய்யும் கருவிதான் ராஜ துரோக சட்டம் :

ஒவ்வொரு குடிமகனும் விசாலாமான பரந்த சுதந்திரத்திற்கு உத்திரவாதம் பெற்றிருக்கும் உயர்வான சுதந்திர குடியரசில் அரசு என்பது வரையறுக்கப்பட்ட பிரிவுகள் மூலமே தனது குடிமக்களைக் கட்டுபடுத்த முடியும். பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்திற்கானச் சட்டப் பிரிவுகள் தணிக்கைத் துறையை கட்டுப்படுத்துகின்றன. கண்காணிப்பு என்பது அந்தரங்க உரிமையால் (Right to privacy) வரையறுக்கப்பட்டுள்ளது.

பன்முகத்தன்மையுள்ள இந்தியாவில் கொள்கையளவில் குடியரசின் பாத்திரம் என்பது தனிப்பட்ட விருப்பம் உள்ள கும்பல்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசும் அதன் நிறுவனங்களும் தம்மளவில் குறைந்த அளவே அதிகாரத்தை வைத்திருப்பவை. இன்றைய இந்தியாவை பாதிக்கக் கூடிய உண்மையான நிலை இதுவல்ல.

சமகால அரசு என்பது “சர்வ அதிகாரம் படைத்த கடவுள் போல” இருப்பதை நமது ‘விரிவான அரசியல் சட்ட அமைப்புகள்’ மௌனமான பார்வையாளனாக இருப்பதுதான். இதற்கு விளக்கம் என்பது “அரசு நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை அனுபவரீதியாக உணராமல் அதன் அறிக்கைகள் மற்றும் அச்சில் இருக்கும் சட்ட நூல்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டுமே அரசு எனபதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானது” என்ற உணமையில் அடங்கியுள்ளது. அதற்குப் பதிலாக இந்தியாவின் ராஜ துரோக சட்டப் பிரிவை ஆராய்ந்து பார்த்தால் அரசு எவ்வாறு இந்த ஜனநாயக நாட்டின் ‘ஆக உயர்ந்த இறுதியான அரசியல் கருவியை’ கட்டுபடுத்தி வைப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்த முடியும். அதன் பெயர்தான் “பொதுk கருத்து”.

காலனிய அரசு எந்த சட்டத்தைக் கொண்டு அன்று மக்களுக்காக போராடியவர்களை சிறையில் தள்ளி வாட்டியதோ அதே காலனியச் சட்டத்தைக் கொண்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை ஓடுக்குகிறது மோடி அரசு. ஒரு சுதந்திர ஜனநாயகக் குடியரசு நாட்டில் காலனிய ஒடுக்குமுறைச் சட்டத்துக்கு என்ன தேவை இருக்கிறது?

1950-களில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இந்த சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்றே குறிப்பிட்டுள்ளதை பார்க்கலாம். அதன் ஒருபடியாகவே 1962-ம் ஆண்டில் கேதார்நாத்சிங் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு அமைகிறது. சட்டத்தின் படி அமைந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதும் அரசின் செயல்பாடுகள் அல்லது நடவடிக்கைகள் மீது அல்லது அதன் நிறுவனங்கள் மீது மக்களின் வாழ்நிலையை உயர்த்தும் நோக்கத்தோடு அரசின் செயல்பாடுகளை நீக்கச் செய்வது அல்லது மாறுதல் செய்ய தூண்டுவது அல்லது சட்டப்படியான நடவடிக்கைகளை கையாள்வது என்பதற்காகக் கடுமையான மொழிகளில் கருத்துக்களை சொல்வது எல்லாம் ஒன்றாகப் பார்க்க முடியாது. அரசைத் தூக்கியெறிவதற்கான நோக்கத்தோடு செயலில் ஈடுபட்டால் குற்றம். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது குற்றமல்ல. அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டினால் குற்றம்.

சொல்லப்படும் கருத்துக்களால் வன்முறை ஏற்படாது என்றால் அது குற்றமில்லை. எவரொருவரின் பேச்சால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உறுதி செய்தால் மட்டுமே கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கு நிபந்தனைகளும் தடைகளும் ஏற்புடையதாகும். இந்த தீர்ப்பின் வரையறைகளும் வழிகாட்டுதல்களும் நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களால் மதிக்கப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக இந்த நாட்டில் பதியப்பட்டிருக்கும் இந்த பிரிவின் கீழான வழக்குகள் இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.

124-A ராஜ துரோக சட்டம் இன்னமும் நீடித்திருப்பது. இன்றைய  அரசின் நிர்வாக எந்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டு காலனியாட்சியே நீடிக்கிறதோ என்று மக்கள் மனதில் கேள்விகள் எழுவதோ அதை எதிர்த்து கருத்துகள் தெரிவிப்பதோ தேசத்துரோக குற்றமாகுமா?

இந்த வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வருவது என்பதே மிக அரிதாக இருக்கிறது என்பதற்கு உதாரணம், 2014 முதல் 2016 வரை 179 பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் 2 பேர் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

சமகாலத்திய இந்தப் பிரிவு வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களைக் குறிவைத்துப் பதியப்படுவதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு இயக்கத்தை பிரதிநிதித்தவபடுத்தும் சில தனிநபர்கள் மீதே கவனம் முழுதும் செல்கிறது. 2016-ஆம் ஆண்டில் ஜே.என்.யூ மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கன்னையாகுமார் கைது செய்யப்பட்டது ஒரு சிறந்த உதாரணம். அவரின் குறிப்பிட்ட செயல்பாடுகள் நாட்டின் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மிக தந்திரத்தோடு அவர்கள் மீது வழக்கு பின்னப்படுகிறது.

ராஜ துரோக சட்டமும் மற்றும் தேசிய வாதத்தைச் சுற்றி இது உருவாக்கும் கருத்துருவாக்கமும் நேரடியாக மனித உரிமைகள் பற்றிய மொழியியல் மற்றும் இந்த நாட்டின் குடியுரிமைக்கும் எதிராக ஆபத்தானதாகிறது. பிணை கோரும் மனுக்களும் பத்திரிக்கைக் கட்டுரைகளும் ராஜ துரோக சட்டம் ‘சுதந்திரமாக இருத்தல் மற்றும் வெளிப்படுத்தும் உரிமைகளை’ அப்பட்டமாக மீறுகிறது என்று விளக்குகின்றன. ராஜ துரோக சட்டம் அடிக்கடி மனித உரிமை ஆர்வலர்களை குறிவைப்பதை பார்க்க முடிகிறது.

பினாயக்சென் சட்டிஸ்கர் அரசு 2011 வழக்கில் தொடங்கி நக்சலைட் இயக்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தி பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். உபேந்திரா நாயக் என்பவர் ஒடிசா ஆதிவாசி மக்களுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகப் பின்னப்பட்ட பொய் வழக்குகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவரை 2018-ஆம் ஆண்டில் இதே குற்றத்தை சுமத்தி ராஜ துரோக சட்டத்தின் கீழ் கைது செய்தது. நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதையே – வன்முறை இயக்கங்களில் பங்கெடுக்கவில்லை என்றாலும் – குற்றம் சுமத்தி ராஜ துரோக சட்டம் பாய்ச்சப்படுகிறது. தத்துவார்த்த ரீதியாக ஒத்துப்போனால் கூட அவர்களால் நாட்டுக்கு ஆபத்து என்று குற்றம் சாட்டப்படுகிறது. பினாயக்சென் வழக்கில் அவர் நக்சல் இலக்கியங்களை வைத்திருந்தார் என்பதே ராஜ துரோக வழக்குக்கானக் குற்றச்சாட்டாக இருந்தது.

சிந்திப்பதையே குற்றமாக்கிய மோடி அரசு :

குடிமகன் மற்றும் நாடு ஆகியவற்றிற்கிடையே இருக் கூறாகப் பிரித்துப் பார்க்கும் போது குடிமகனின் உரிமைகள் நாட்டின் கௌரவத்தையும் நேர்மையையும் சமரசபடுத்தி விடும் என்றக் கருத்தை சுட்டிக் காட்டுவதால் இது மிக முக்கியமானது. இந்திய ராஜ துரோக சட்டம் பயங்கரவாதத்தின் வன்முறைச் செயல்கள் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் மட்டுமல்ல இதில், ‘அரசின் மீதான அதிருப்தி தூண்டப்படுவது சாட்சியமாக சக குடிமக்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் அமைந்துள்ளதால் இது முதன்மையாக “சிந்தனை – குற்றங்கள்” சட்டமாகிறது என்பதுதான் உண்மை. ஏனெனில் இந்த ராஜ துரோக சட்டம் ஒரு உரையின் உள்ளடக்கத்தை மட்டும் அல்ல, மாறாக அது மற்ற குடிமக்களின் சிந்தனைகளைத் தூண்டக் கூடிய வகையில்  பொதுவெளியில் வெளிப்படுத்தப்படுவதால் குறிவைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கன்னையா குமார், அசீம் திரிவேதி, உபேந்திர நாயக் மற்றும் பலர் மீது போடப்பட்ட ராஜ துரோக வழக்குகள் எல்லாம் இயல்பில் ஒன்றுதான். அதாவது, நாட்டை பற்றி ஒரு தோற்றத்தை மக்கள் சிந்தனையில் திணித்தார்கள் என்பதுதான். இதில் “நாட்டின் அடையாளம் அல்லது கட்டுமானம் ஆகியவற்றை குறிப்பிடுவதும் ; அரசின் போக்குகளை எதிர்க்கும் பெரிய இயக்கங்களின் ஒரு பகுதியாக இருப்பது எல்லா தனிநபருக்கும் பெரிய சமூக அரசியல் பொருளடக்கத்தை அரசு கற்பிக்கிறது. என்பதும் நாட்டு குடிமக்களுக்கல்ல நாட்டுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கே நீதி உரைகள் என்பதும்  ராஜதுரோகம் மற்றும் நாடு இவற்றின் இயல்பை சுற்றி உருவாக்கப்படும் பிரபலமான கருத்துருவாக்கங்கள்; தனிநபர் மொழி மற்றும் மனித உரிமைகளுக்கு சவாலாக இருக்கும் ராஜ துரோக சட்டம்” என்பதும் அடங்கியுள்ளது. தெளிவாக இல்லையென்றாலும் இந்த குற்றச்சாட்டுகள் மூலமாக வாழுகின்ற மனிதர்களை விட ஒன்றுப்பட்ட நாடு அதன் நலன்கள் மேலானது என்ற கற்பனையான கருத்துருவாக்கத்தை உருவாக்குவது தெளிவாக தெரிகிறது

பறிக்கப்படுகின்றன தனிநபர் சுதந்திரம்:

ஏற்கனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக இந்த சட்டம் மோடி அரசால் புத்துருவாக்கம் செய்யபட்டிருக்கிறது.இங்கு கண்காணிப்புக்குள்ளாக்கப்படும் இலக்கு   என்பது வெறும் குறிப்பிட்;ட இயக்கங்களோ அல்லது பேச்சுகளுக்களோ அல்ல.மாறாக அலெக்சீஸ் டி டொக்யுவில்லி குறிப்பிட்டதை போல ஒரு ஜனநாயகத்தின் மிக ஆபத்தான கருவியான “எல்லாம்வல்ல சக்திவாய்ந்த ஆயுதமான பொதுமக்களின் கருத்துகள்தான்.”

எவ்வித எதிர்ப்புகளையும் தாங்கிகொள்ள முடியாத அதி உயர் உணர்ச்சிவசப்படக்கூடிய அரசின் கருவியாக இந்த ராஜ துரோக சட்டத்தை பார்ப்பதைவிட இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு மிக பணிவான தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் பார்க்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படுத்தக் கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டிய இந்தச் சட்டத்தை திரும்ப திரும்ப பயன்படுத்தும் விதம் இது  சாதாரண பேச்சுக்களையும் மற்றும் உணர்வுகளை வெளிபடுத்தும் தன்மையையும் கட்டுப்படுத்த தீவிரம் காட்டுவதாகவே எடுத்தக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாஜக அரசின் தேசியம் பற்றிய கொள்கை பன்முகத்தன்மை உள்ள இந்திய மக்களிடம் எடுபடவில்லை என்பதால் இந்நாட்டின் மக்களை தங்களது சுதந்திரங்களை தாங்களே கட்டுபடுத்திக் கொள்ளும் வகையில் இந்த நாட்டைப் பற்றியப் போலியானக் கருத்துக்களை  உருவாக்குவதற்கானக் கருவியாகத்தான் இந்த ராஜ துரோகம், ஊபா போன்ற சட்டங்கள் பாஜக அரசின் கைகளில் செயல்படுகின்றன.

சமூக ஊடகங்கள் இந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதிலும் மற்றும் செயற்பாட்டாளர்களை “அர்பன் நக்சல்கள்” என்று அடையாளப்படுத்தி அவதூறுகளைப் பரப்புவதில் முக்கியக் கருவியாக மாறியிருக்கிறது. ராஜ துரோக சட்டத்திற்கான நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ சாட்சியங்கள் அவசியமில்லாத ஒன்றாக மாறிவிட்டன. சமூக ஊடகங்கள் இந்த அரசின் செயல்பாட்டிற்கேற்றவாறுக் கருத்துக்களை பொதுமக்களின் சிந்தனைகளில்  வடிவமைப்பதில் அரசின் மேடையாகவே வேலை செய்கிறது. இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட உரிமைகளை – சுதந்திரங்களைக் கண்காணிக்கவும், எதிர்ப்பை – கருத்து வேறுபாட்டைக் கட்டுப்படுத்தவும், இந்த ராஜ துரோக சட்டம் அவர்களுக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அரசுக்குப் பயன்படுகிறது.

மக்களுக்கு அச்ச உணர்வை தூண்டும் எச்சரிக்கைகளே ராஜ துரோக சட்டங்கள் :

நாட்டையும் அதிலிருக்கும் மக்களையும் வெவ்வேறு கூறுகளாகப் பிரித்து பார்க்கும் போதுதான் மக்களாட்சியில் அரசு முழுஅதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு வரம்புக்குட்பட்ட வழிகளைக் கொண்டிருக்கும் ஜனநாயக இந்தியாவில் குடிமகன்களின் தனிப்பட்ட சுதந்திரமே ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது என்பது தெளிவாகும். ராஜ துரோக சட்டம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளை எதிர் கொள்ள வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், அதற்கு பதிலாக அரச அதிகாரத்தைச் சுற்றி ஒரு விவரிப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ராஜ துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் தனிநபர்களின் வன்முறை அல்லாத அல்லது நேரடியாக சேதத்தை உருவாக்காத செயல்பாடுகள் கூட ராஜ துரோகமாகக் கருதப்பட்டு அரசின் நடவடிக்கைக்கு உள்ளாகும் என்பதை நாட்டின் குடிமக்களுக்குக் காட்டுவதற்கான எச்சரிக்கைளாகப் பயன்படுத்தப்படுகிறது.

தேசியம் என்ற இந்த விவரிப்புகளை, குடிமக்களின் உரிமைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது என்று புரிந்துக் கொள்வதன் மூலம், நாட்டில் எழுச்சி பெற்றுவரும் கருத்தேயில்லாத எல்லோரையும் கவரும் வண்ணம் பேசப்பட்டு வரும் தேசியவாதம்  இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதை புரிந்துக் கொள்வது முக்கியமாகும். கருத்து வேறுபாட்டின் வெளிப்பாடுகள் ஜனநாயக உரிமைகளின் ஒரு பயிற்சியாக இனி புரிந்துக் கொள்ளப்படவில்லை, மாறாக அவை நாட்டிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன. மக்களை “நகர்ப்புற நக்சல்கள்” அல்லது “தேச விரோத” என்று முத்திரையிடுவது, மற்றும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத நக்சல் – அறிவுஜீவிகள் – ஊடகம் – அகாடமி – என்.ஜி.ஓ – ஆர்வலர் ஆகியோருடன் தொடர்பு கொண்டவர்கள் என்றக் கருத்தைப் பரப்புவது, நாட்டை அச்சுறுத்துவதன் மூலம் மற்ற மக்களை அமைதியாக்க செய்யும் ஒரு கருவியாகும்.

படிக்க :
♦ மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !
♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !

இந்தியாவில் தேச விரோதக் குடிமக்கள் என்ற கருத்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், தேசியம் என்பது பல்வேறு வகையான எதிர்ப்புகளை வெறும் சட்டத்தினால் அல்ல பொது மக்களின் கருத்து வலிமையினால் முடக்கப் பயன்படுவது குறித்து ஆய்வுகள் செய்து பொது வெளியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது அவசிய அவசர தேவையாகும்.

பயத்திலிருந்து விடுதலை என்பது சர்வதேச மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலகில், குடிமக்களின் முதுகெலும்பைக் கீழே இறக்கி வைக்க முயலும் தேசத் துரோகம் போன்ற ஒரு சட்டத்தின் தேவையை கேள்வி கேட்க வேண்டும். அதற்கான போராட்டங்களை அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முன்னெடுப்பது புரட்சியாளர்களின் கடமையாகும்.


தமிழாக்கம் மற்றும் கட்டுரையாக்கம் : மணிவேல்

உதவிய கட்டுரைகள் :

  • Long Read : The art of dissolving dissent: India’s sedition law as an instrument to regulate public opinion. – ஆயிசா பட்நாய்க். South Asia @ LSEblog, the London School of Economics.
  • Article 14’s sedition database – KUNAL PUROHIT.
  • NATIONAL HERALD சித்ரன்சுல் சின்கா எழுதியிருக்கும் The Great Repression: The Story of Sedition in India என்ற நூலின் அறிமுகம் – Harshvardhan

பணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்

காசுக்கு விலைபோவது ஆபாசம் ! பார்ப்பனிய கைக்கூலி பத்திரிகைகளைப் புறக்கணிப்போம் !

கருத்துப்படம் : மு.துரை

ஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது? || வீடியோ

மிழக சட்டமன்றத் தேர்தல் – 2021 நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் கட்சிகள் முதல் தேர்தலில் பங்கேற்காத பல்வேறு அமைப்புகள் / கட்சிகள் வரை அனைவரும் மக்களை தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !! மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது.

தேர்தல் ஆணையம் நேர்மையானதா?

தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் இந்த அரசு எந்திரத்தில் லஞ்சம் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளே இவர்கள் எப்படி தேர்தலை நேர்மையாக நடத்துவார்கள். தேர்தல் என்றால் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும் போன்ற பல்வேறு விளங்கங்களை அளிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர் மருது மற்றும் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

சீமான், கமல் இருவரும் தான் மாற்றா ?

எந்த ஓட்டுக்கட்சிகளும் தற்போது கொள்கையை பற்றியெல்லாம் பேசுவதில்லை. எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்பது மட்டுமே பிரதானமாக இருக்கிறது. இந்நிலையில் மாற்று என்று கமல், சீமானுக்கு ஓட்டு போடுவதன் மூலம் ஏதும் நடக்கபோவது இல்லை. தி.மு.க-வும் தனது திராவிட கொள்கையில் இருந்து படிப்படியாக குறைந்து கொண்டுவருகிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க எந்த திட்டமும் அக்கட்சியிடம் இல்லை.

 

தேர்தலில் ஓட்டு போடுவது மூலம் பாசிசத்தை தடுக்க முடியுமா?

பரவி வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிசத்தை தேர்தலில் ஓட்டு போட்டு தி.மு.க-வை கொண்டுவருவதன் மூலம் தடுக்கமுடியுமா? நிச்சயம் முடியாது. கார்ப்பரேட் நலன்களுக்கான சேவையில் தி.மு.க-வும் ஓரணியில்தான் இருக்கிறது. மக்களை தாக்கும் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க தேர்தல் தீர்வில்லை.