Tuesday, August 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 268

அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

ண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institutions of Eminence – IoE) என்ற சிறப்பு தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலக தர பட்டியலில் இடம் பெற செய்யவேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு IoE என்ற திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மோடி அரசு அறிவித்தது. அத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி பெறுவதனால் இடஒதுக்கீடு, பல்கலைக்கழகத்தின் மீதான மாநில அரசின் கட்டுப்பாடு, நிதி ஒதுக்கீடு குறித்த பல சந்தேகங்களும் விவாதங்களும் நடந்து வருகின்றன. ஆனால் மாநில அரசோ இது குறித்த தெளிவானதொரு விளக்கம் தராமல் சிறப்புத் தகுதி பெறுவதற்கான வேலைகளை முடுக்கியுள்ளது.

IoE-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உயர்கல்வி நிறுவனங்களையும் Empowered Expert Committee – EEC என்ற குழுவே நிர்வகிக்கும். இக்கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 30% வெளிநாட்டு மாணவர்களையும் பேராசிரியர் நியமனங்களில் 25% வரை வெளிநாட்டு பேராசிரியர்களையும் அனுமதித்துக் கொள்ளலாம்.

படிக்க:
♦ ரஜினிக்கு வருமான வரி விலக்கு – விவசாயிக்கு தூக்கு !
♦ ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

மாணவர் சேர்க்கை முற்றிலும் திறமை அடிப்படையிலேயே (merit based system) இருக்க வேண்டும் அதற்கான முறையை பல்கலைக்கழகமே தீர்மானித்துக் கொள்ளலாம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அக்கல்வி நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என விதிமுறையில், UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulations, 2017, கூறப்பட்டுள்ளது.

  1. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டவர்களே Empowered Expert Committee -யின் உறுப்பினர்கள். இக்குழு மத்திய அரசிற்கு கட்டுப்பட்டது. இக்குழுவே அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டது. இதில் மாநில அரசுக்கோ பல்கலைக்கழக மானியக் குழுவிற்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது.
  2. மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் பணிநியமனங்களில் 69% இடஒதுக்கீடு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. சிறப்புத் தகுதியின் காரணமாக பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து மாணவர்கள், பேராசிரியர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதிப்பது கட்டாயம். எனவே 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது கடினம்.
  3. அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. IoE விதிமுறையின் படி திறமை அடிப்படையிலே மாணவர் சேர்க்கை கட்டாயம் என்பதால் இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் பொறியியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வை போல தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என மோடி அரசு கூறிவருவதை பொருத்திப் பார்க்க வேண்டும்.
  4. அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு வருடக் கட்டணம் 30,000 ரூபாயாகவும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான வருடக்கட்டணம் 50,000 ரூபாயாகவும் உள்ளது. சிறப்புத் தகுதி பெறும் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் இக்கல்வி நிறுவனங்களுக்கு நிதி தன்னாட்சியும் வழங்கப்படுவதினால் அக்கல்வி நிறுவனங்களே தங்களுக்கு தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனவே தற்போது 30,000 ரூபாயாக உள்ள கல்விக்கட்டணம் சில வருடங்களுக்குள் பல லட்சமாக உயரும். உதாரணமாக நிதி தன்னாட்சியின் காரணமாக கடந்த பத்து வருடங்களில் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. களில் B.Tech படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 25,000 லிருந்து 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டினுடைய சமூக – பொருளாதார வளர்ச்சியில் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளது. தற்போது சிறப்புத் தகுதியின் காரணமாக பொது நுழைவுதேர்வு, 69% இடஒதுக்கீடு நீக்கப்படுவது, அதீத கல்விக் கட்டணம், மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவது போன்ற பேராபத்துகளினால் கிராமப்புற சமுதாய-பொருளாதார நிலைகளில் பிந்தங்கிய சூழலிருந்து வரக்கூடிய தமிழ்நாட்டு மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு செல்வது தடுக்கப்படும்.

நீட் தேர்வு பற்றிய உண்மைகளை மறைத்ததைப் போல அண்ணா பல்கலைக்கழக விசயத்திலும் உண்மைகளை மறைத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகம் இருக்கும், இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது என்று மக்களிடம் பொய் சொல்லிவருகிறது.

மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பலதரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கூறியதோடு அதற்கான வேலைகளையும் செய்துவருகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, மூன்று பருவ பாடங்களின் சுமை, மாதிரி வினாத்தாள் வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களினால் அரசுப் பள்ளியிலும் மாணவர்கள் மிகக்கடுமையாக பாதிப்புக்குள்ளாவார்கள். இத்தேர்வுகள் மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்பொதுத் தேர்வு கிராமப்புற மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டமே என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சிறப்புத் தகுதியும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் கிராமப்புற மற்றும் சமுக – பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய சூழலில் இருந்து வரக்கூடிய தமிழ்நாட்டு மாணவர்களை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியிலிருந்தே வெளியேற்றுவதற்கான சதித் திட்டமாகும். மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கக்கூடிய இவ்விரண்டு திட்டங்களையும் தமிழக அரசு கைவிடவேண்டும் என பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.

இதனை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேரா. வீ. அரசு, பேரா. கருணானந்தன், ஆசிரியர் சக்திவேல் ஆகிய கல்வியாளர்களும் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு உயர் தகுதி குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் “அண்ணா பல்கலைக்கழகம்: உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?” என்ற சிறு நூல் இக்கருத்தரங்கில் வெளிடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை,
தொடர்புக்கு : 94443 80211, 72993 61319.

குறிப்பு : கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர்கள் மற்றும் மருத்துவரின் உரைகளின் காணொளிகள் விரைவில் வினவு  யூடியூப் சேனலிலும் வினவு இணையதளத்திலும் வெளியிடப்படும்.

கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா

“செபாஸ்டியன் அண்டு சன்ஸ்:
மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு”

நூலாசிரியர்: டி.எம்.கிருஷ்ணா.                                                        

வெஸ்ட் லாண்ட் பதிப்பக வெளியீடு.

(30.1.20 தி இந்து ஆங்கில நாளிதழ் இந்நூலின் சில பகுதிகளை நூல் அறிமுகமாக வெளியிட்டிருந்தது. அந்த நூல் அறிமுகத்தின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 2.2.20 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கலாக்ஷேத்ராவில் நடைபெறுவதாகவும் ராஜ்மோகன் காந்தி, திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இந்து நாளிதழில் இக்கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்கிறது கலாக்ஷேத்ரா நிறுவனம்.)

♦ ♦ ♦

“அரசியல், கலாச்சார, சமூக நல்லிணக்கமின்மையைத் தூண்டுகின்ற ஒரு நிகழ்ச்சியை அரசு சார்ந்த அமைப்பான கலாக்ஷேத்ரா அனுமதிக்கவியலாது. இன்றைய நாளிதழில் வெளியான நூல் திறனாய்வுக் கட்டுரையில், இந்த நூல் தொட்டுச் செல்கின்ற சர்ச்சைக்குரிய, பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய விசயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நூலின் உள்ளடக்கத்தை சுற்றி நிலவுகின்ற சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து முன்னமே எங்களுக்கு தெரியாதாகையால், எங்கள் அரங்கத்தை 2.2.20 அன்று நூல் வெளியீட்டு விழாவுக்கு தருவதாக ஒப்புக்கொண்டு விட்டோம். தற்போது இந்த அனுமதியை திரும்பப் பெறுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறது கலாக்ஷேத்ரா.

அனுமதி மறுத்த கலாக்ஷேத்ரா.

இதனை மோடி அரசின் மறைமுக அச்சுறுத்தல், கருத்துரிமை பறிப்பு என்று கண்டிக்கலாம். அதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் இந்த நூல் அதற்கு அப்பாற்பட்ட உண்மைகளைப் பேசுகிறது. கேள்விகளை எழுப்புகிறது. கர்நாடக சங்கீத வித்வான்களும் ரசிகர்களும்தான்  இதற்கு பதில் சொல்லவேண்டியவர்கள்.

தமிழிசைக் களவையும்  அபிரகாம் பண்டிதர் போன்ற அறிஞர்களை பார்ப்பனியம் இருட்டடிப்பு செய்திருப்பதையும் ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசைவிழா தொடர்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

தண்டபாணி தேசிகர் அமர்ந்த மேடைக்கு தீட்டுக் கழித்ததெல்லாம் அந்தக்காலம் என்று சொல்பவர்கள் உண்டு. தமிழ் குடமுழுக்குக்காக போராட்டம் நடந்து கொண்டிருப்பது இந்தக் காலத்தில்தான். கலாக்ஷேத்ராவின் கதவுகள் மூடப்படுவதும் இந்தக் காலத்தில்தான்.

லிபரல் பார்ப்பனர்களுடைய உண்மை சொரூபத்தை தரிசிக்க விரும்புகிறவர்கள், இந்தக் கட்டுரையை துண்டறிக்கையாக அச்சிட்டு சபாக்களின் வாசலில் நின்று விநியோகியுங்கள்.

♦ ♦ ♦

கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில்….டி.எம்.கிருஷ்ணா!

மிருதங்கம் என்ற இசைக்கருவியை உருவாக்குபவர்களைப் பற்றி யாரும் இதுவரை பேசியதில்லை என்கிறார் கர்நாடக இசைப் பாடகரும் எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா. தானும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை என்பதை அவர் சொல்லத் தவறவில்லை. அவரது முதல் நூல், கர்நாடக இசையுலகில் சாதியின் பாத்திரம் பற்றி ஆராய்ந்தது. இருப்பினும் அதில் இசைக்கருவிகளை உருவாக்குவோரின் உலகம் பற்றியோ, அவர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் இடையிலான உறவு பற்றியோ அவர் ஆராயவில்லை.

இந்து நாளிதழில் வெளியான நூல் மதிப்புரை.

“செபாஸ்டியன் அண்டு சன்ஸ், மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்பது அவரது புதிய நூல். கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் முதன்மையான பயன்படுத்தப்படும் தாளக்கருவி மிருதங்கம்தான் என்று அந்த நூலில் குறிப்பிடுகிறார் கிருஷ்ணா. இரு முகம் கொண்ட தாளக்கருவியான மிருதங்கத்தின் உடல் கூடு போன்றது. அதிர்வை உள்வாங்கி ஒலியாக  வெளியிடும் அந்தக் கூடு, பலா மரத்தினால் செய்யப்பட்டது. இரு புறமும் சரிந்து இறங்கும் அதன் முனைகளான வலமும் இடமும், பசுத்தோல், எருமைத்தோல், ஆட்டுத்தோல் ஆகியவற்றால் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் சாதிய ஒதுக்கலும் இழிவுபடுத்தலும் கொண்ட இருண்ட கதையொன்று ஒளிந்திருக்கிறது.

♦♦♦

ந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்பது உலகம் முழுவதும் மட்டுமின்றி, இந்தியாவிலும் கூட நிலவி வரும் ஒரு நம்பிக்கை. ஆனால் வேதகாலத்திலும் அதற்குப் பின்னரும் பார்ப்பனர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பெருமளவில் நிலவியிருக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது. இந்துக்களில் தலித் சமூகத்தினர் மட்டுமன்றி மற்ற பலரும் இன்றைக்கும் மாட்டிறைச்சி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, உலகில் மிகப்பெரும் அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யக்கூடிய முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

பசு என்பது கொல்லப்படக்கூடாத புனிதமான மிருகம் என்பது நவீன கால பார்ப்பனியக் கருத்தாக்கம். இதனைப் பெரும்பகுதி மக்கள் அங்கீகரிப்பதில்லை. ஆனால் கொள்கை மற்றும் பண்பாட்டு நெறிகளை கட்டமைப்பதில் தங்களுடைய எண்ணிக்கைக்கு மீறி, மிகையான செல்வாக்கு செலுத்துகின்ற பார்ப்பன சாதியினர், இப்படியொரு பொய்யை உலகமே ஒப்புக்கொண்டுவிட்ட புனிதக்கருத்து போல நிறுவி விட்டார்கள். இப்படியாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் இந்தக் கருத்து இடம் பிடித்து விட்டது.

வழிகாட்டும் கோட்பாடுகளில்தான் இது இடம்பெற்றிருக்கிறது என்றாலும், இதனை நீதிமன்றத்தின் வாயிலாக இக்கருத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்றாலும், அரசமைப்பு சட்டம் பசுவுக்கு ஒரு தனியிடத்தை வழங்கத்தான் செய்கிறது. கடந்த பல ஆண்டுகளில் வெவ்வேறு மாநில அரசுகள் பசுவதையைத் தடை செய்தோ அல்லது அதன் மீது கட்டுப்பாடுகள் விதித்தோ சட்டமியற்றியிருக்கின்றன.

சங்கடமான கேள்விகள்

மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அய்யர், சம்பிரதாயமான பாலக்காடு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஒரு முரண்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் வெகு காலம் தவித்து வந்தார்: ஒரு இசைக்கருவி. அந்த இசைக்கருவிதான் மணி அய்யரின் உயிர் மூச்சாக இருந்தது.  ஆனால் அந்தக் கருவி மூன்று விலங்குகளின் உயிர்களைப் பறித்தெடுப்பதை – அவற்றில் பசு மிக முக்கியமானது – தவிர்க்கவொண்ணாத அவசியமாக கொண்டிருந்தது.

மிருதங்கம் சூசைநாதன்.

மிருதங்கம் என்பது வேதமே போற்றுகின்ற ஒரு இசைக்கருவி என்பது ஐயரின் நம்பிக்கை. இருப்பினும் அதனை உருவாக்குவதற்காக ஒரு பசுவைக் கொலை செய்யலாமா என்ற கேள்வி அவரைப் பெரிதும் துன்புறுத்தி வந்தது. தன்னை வாட்டிய அந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு, காஞ்சி சங்கராச்சாரியாரை அணுகுவது என்று அவர் முடிவு செய்தார். இருந்தாலும் பெரியவாளிடம் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சங்கடத்தில் ஆழ்த்தலாமா என்று ஐயருக்குள் ஒரு தயக்கம்.

அதனால், ராஜாஜியை சந்தித்து இந்தக் கேள்விக்கு விடை காண்போம் என்று ஒருவழியாக முடிவுக்கு வந்து, நண்பர்கள் மூலம் ராஜாஜியை சந்தித்தார். தனது கேள்வியை அவரிடம் முன்வைத்தார். ராஜாஜி எப்பேர்ப்பட்டவர்? “என்னுடைய மனச்சாட்சியின் காவலன்” என்று மகாத்மா காந்தியாலேயே சான்றளிக்கப்பட்டவரல்லவா ராஜாஜி!

அய்யரின் ஐயத்தை ராஜாஜி தெளியவைத்து விட்டார். ஒரு பழமொழியை மேற்கோள் காட்டி அய்யரின் வாழ்க்கைக்கு இடையூறு செய்யாத, நடைமுறை சாத்தியமான ஒரு பதிலை வழங்கி விட்டார். “ரிஷிமூலமும் நதி மூலமும் பார்க்கப் ப்டாது” என்பதே அந்தப் பழமொழி. அதாவது, “அசவுகரியமான கேள்விகளுக்கெல்லாம் விடை தேடியலையாதீர்” என்று மணி அய்யருக்கு புத்தி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் ராஜாஜி.

ஜேசுதாஸ்.

எவ்வளவு சவுகரியம்! இப்படி ஒரு பழமொழியைச் சொல்லிக் கொண்டு, மிருதங்க வித்வான் தப்பித்துக்கொள்வதற்கு வசதியாக, இசைக்கருவியின் பிறப்பிடமான இறைச்சிக் கூடத்தை மறைத்துக் கொண்டு, இடையில் நிற்கிறான் அந்தக் கருவியைப் உருவாக்கும் படைப்பாளி.

மிருதங்கத்திற்கு தோலை வழங்கும் பசு, வித்வானின் கண்ணில் படுவதேயில்லை. பசுவைக் கொல்வதும் அதன் தோலை உரிப்பதும் மிருதங்க வித்வானின் உலகத்துக்கு வெளியே எங்கேயோ வெகுதூரத்தில் நடக்கிறது. எனவேதான், இப்படி ஒரு காரியமே நடக்கவில்லை என்பது போல மிருதங்க வித்வானால் நடந்து கொள்ள முடிகிறது.

கொல்லப்படும் பசுவுக்கும், மிருதங்க வித்வானான பிராமணனுக்கும் இடையில் நின்று கொண்டு, தனது புனிதத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பிராமணனுக்கு உதவுகிறான் அந்த இசைக்கருவியைப் படைப்பவன்.  மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளி இல்லாமல், அந்தக் கருவியை வித்துவான் ஒருபோதும் வாசிக்க முடியாது. இருப்பினும் அந்தப் படைப்புத் தொழிலே அவனைத் தீட்டானவன் ஆக்குகிறது, கீழானவன் ஆக்குகிறது.

இரத்தத்தை வழித்தெடுத்து, தோலை சுத்தம் செய்து வெட்டி ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து, உலர வைத்து, இறுதியாக மிருதங்க வித்வானின் கைக்கு வந்து சேரும்போது, அந்த உயிரற்ற பொருளான தோல், அதனை உருவாக்குபவர்களின் உழைப்பால் புதியதொரு ஆற்றலாக உருப்பெறுகிறது. மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளியான ரவிக்குமாரின் கருத்துப்படி, இறந்த விலங்கின் தோல் என்பதனால் அது இழிவானதல்ல; அந்தத் தோலுக்கு உயிர் இருக்கிறது. தனது உயிர்ப்பை சுருதியின் மூலம் அது நமக்கு உணர்த்துகிறது.

மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளியான ரவிக்குமாரும் அவரைப்போன்றவர்களும்தான் மரித்துப்போன அந்தத் தோலுக்கு மறுபிறப்பை வழங்குபவர்கள். இது மறுக்க முடியாத உண்மை. இப்படி சொல்லிக் கொள்வதற்கு ரவிக்குமார் மறுக்கிறார் அல்லது இவ்வாறு சொல்லிக்கொள்வது  சரியல்ல என்று தயங்குகிறார். பளிச்சென்று தெரியும் இந்த உண்மையை நான் குறுக்கிட்டு அவருக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

குடலைப் புரட்டும் துர்நாற்றம்

இருப்பினும் வித்வான்களுடைய பார்வைக்குத் தென்படாத இந்த முரண்பாடு, மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு உறுத்தலாகத்தான் இருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி.

மிருதங்கம் உருவாக்கும் ஒரு படைப்பாளி சொன்னார். “நாம் ஆட்டையும் பசுமாட்டையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மிருதங்க வித்வான்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு இந்த வாடை பிடிக்காது. இந்த தோலையெல்லாம் எப்படி நாங்கள் பதப்படுத்துகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களது பூஜையறையில் இந்த மிருதங்கம் இருக்கும். மிருதங்கத்துக்கு வழங்கப்படும் அந்த மரியாதை, மிருதங்கத்தை உருவாக்கும் எங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.”

இன்னொருவர் சொன்னார். “மிருதங்கத்தை தயார் செய்யும்போது அதனை என் கால்களுக்கு இடையில் இடுக்கி வைத்துத்தான் வேலை செய்கிறேன். என் கால் பட்ட அதே மிருதங்கத்தை உங்கள் பூஜையறையில் வைத்து வழிபடுகிறீர்கள். (பார்ப்பனியக் கண்ணோட்டத்தின் படி கால்களும், பாதங்களும் தீட்டானவை ஆயிற்றே)

பசுவையும் பிராமணனையும் பிரித்து வைத்தல்

இவையெல்லாம் நம் கண் முன் தெரிகின்ற உண்மைகள். இருந்த போதிலும், தங்களது கறைபடியாத புனித பிம்பத்தை பராமரித்துக் கொள்ள வேண்டுமானால், இந்த உண்மைகளிலிருந்து தாங்கள் விலகியிருப்பது மட்டுமின்றி, தங்களது ரசிகர்களையும் முடிந்த அளவு எட்டத்தில் வைத்திருப்பது வித்வான்களுக்கு ஒரு தவிர்க்கவியலாத அவசியம். மாட்டிறைச்சிக் கூடத்தின் கவிச்சி வாடை சபாக்களின் பழமைவாத ரசிகர்களுடைய நாசித்துவாரங்களுக்குள் காற்று வாக்கில் கூட நுழைந்து விடக்கூடாதே!

மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அய்யர் எதிர்கொண்ட இருத்தலியல் நெருக்கடிக்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு சம்பவம் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும். அது என்ன?

பார்லந்து ஐயர்.

மிருதங்கம் செய்யும் தொழிலின் சக்ரவர்த்தியாக இருந்தவர் பார்லந்து. அவரது நெருங்கிய உறவுக்காரனான ஆல்காட்டான், தோலைத் தெரிவு செய்வதிலும் வார் பிடிப்பதிலும் கைதேர்ந்தவர். பார்லந்துவுக்கு ஆல்காட்டான் எந்த வகையில் உறவு என்று குறிப்பாக என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நமக்கு உதவுவதற்கென்றே “கசின்” என்ற ஆங்கில வார்த்தை இருப்பதால்,  அவர்களுக்கிடையிலான உறவைக் குறிக்க அந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஆல்காட்டானிடம் அய்யர் ஒரு ஆர்டர் கொடுத்தார். ஆர்டர் செய்யப்பட்ட பொருள் – பசுவின் தோல். “தோல் உயர்தரமாக இருக்கவேண்டும். என்ன விலையாக இருந்தாலும் பரவாயில்லை” என்று ஆல்காட்டானிடம் சொன்னார் ஐயர். “நூறு ரூபாய் ஆகும்” என்றார் ஆல்காட்டான். பணம் முழுவதையும் அட்வான்சாகவே கொடுத்துவிட்டு, மாலை 4 மணி வாக்கில் ஓட்டலுக்கு சாப்பிடக் கிளம்பினார் ஐயர். திரும்பி வீட்டுக்கு வந்தால், வாசலில் ஆல்காட்டான் நின்று கொண்டிருக்கிறார், கையில் ஒரு பசு மாடு. ஐயருக்கு தூக்கி வாரிப் போட்டது.

இந்தப் பசுவின் தோல் அற்புதமாக இருக்கிறது. ஆனால் மாட்டு சொந்தக்காரன் 120 ரூபாய் விலை சொல்கிறான். வாங்கிடலாமா சாமி? என்று ஆல்காட்டான் கேட்க, அய்யர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

டி.எம்.கிருஷ்ணா.

வாழ்க்கையிலேயே முதல் முறையாக இதுநாள் வரை கண் மறைவாக நடந்து கொண்டிருந்த ஒரு காரியம் இப்போது கண் முன் வந்து நிற்கிறது. இதற்கு அய்யர் பொறுப்பேற்றாக வேண்டும். அநேகமாக, வாழ்க்கையிலேயே முதல் முறையாக, ஒரு பசுவை கொலை செய்வது பற்றி அய்யர் இப்போது முடிவெடுத்தாக வேண்டும்.

“போ, போ.  அந்த மாட்டையும் இழுத்துண்டு போ..” என்று ஆல்காட்டானை அங்கிருந்து அவசரம் அவசரமாக விரட்டியிருக்கிறார் அய்யர். இது பாலக்காடு மணி அய்யருடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவம் மட்டுமல்ல, நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் ஒரு உண்மை. அன்று அய்யருக்கு ஏற்பட்ட அந்த நிலைமை தனக்கும் ஏற்படுவதை இன்று எந்த மிருதங்க வித்வானும் விரும்ப மாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களைப் பொருத்தவரை, மிருதங்கத்துக்கான தோல், சொர்க்கத்திலிருந்து கீழே விழுகிறது. அப்படித்தான் அவர்கள் நம்ப விரும்புகிறார்கள்.

படிக்க:
நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்
பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது!

மணி அய்யரும் சரி, வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளையும் சரி மிருதங்கம் தயாரிப்பவர்கள் தோலை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு பெரிதும் முயற்சி எடுக்கத்தான் செய்தார்கள். ஆனால் அவர்கள் சோதித்துப் பார்த்தது, மிருதங்கம் செய்பவர்களால் பதப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட தோல். காலப்போக்கில் பதப்படுத்தப்பட்ட தரமான தோலை பெரிய அளவில் வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ளவும் தொடங்கி விட்டார்கள் மிருதங்க வித்வான்கள்.

அவர்களுக்குத் தரமான தோல் வேண்டும். அது தோற்றுவிக்கின்ற தனிச்சிறப்பான நாதம் வேண்டும். அது மிருதங்கம் என்ற இசைக்கருவியின் மீது அவர்கள் கொண்டிருக்கும் காதலேயன்றி, வேறொன்றுமில்லை.

♦♦♦

குறிப்பு:
கலாக்ஷேத்ராவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி, ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் அரங்கில் நடைபெறும் என்று டி.எம்.கிருஷ்ணா அறிவித்திருக்கிறார்.டி.எம். கிருஷ்ணாவின் இணையதளம் 


மூலக்கட்டுரை: தி இந்து
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு.

CAA வுக்கு எதிராக மதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மக்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்த சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேடு – தேசிய மக்கள் பதிவேடு என இந்திய இறையாண்மையை குழித் தோண்டி புதைக்கும் மத்திய பாசிச பாஜகவுக்கு எதிராக நாடெங்கிலும் தொடர்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டங்கள் பெருந்திரள் மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜனவரி-30)  மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரி, U.C திடலில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும்  ஒன்று கூடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளை முன்னிட்டு ”இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்! காந்திக்கு தொடர் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி”யாக ஜனவரி 30 அன்று  இரவு 7.00 மணிக்கு தொடங்கியது இப்போராட்டம், நள்ளிரவு வரை நீடித்தது. இரவையும் பல்வேறுவிதமான அசவுகரியங்களையும் பாராமல் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என குடும்பமாக திரண்டிருப்பதை கண்டு அரண்ட போலீசார், அவர்களை எச்சரித்து திடலைவிட்டு வெளியேறுமாறு மிரட்டினர்.

படிக்க:
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !

சமூக ஊடகங்களின் வாயிலாக இப்போராட்டம் குறித்த செய்தியறிந்து தாமும் பங்கேற்க திரண்டு வந்த மாணவர்களையும் பொதுமக்களையும் திடலின் உள்ளே நுழைய விடாமல் கயிறு கட்டி தடுத்து நிறுத்தியதோடு, அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டிப்பது உள்ளிட்ட கீழ்த்தரமான வழிமுறைகளையும் கையாண்டனர் போலீசார்.

போலீசாரின் தொடர் மிரட்டல் காரணமாக, மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்தது கல்லூரி நிர்வாகம். இதன் காரணமாக, நள்ளிரவு 12 மணி அளவில், தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னர் தேதி அறிவித்து தொடர் போராட்டமாக நடத்தப்படும் என்று அறிவித்து அவர்கள் கலைந்து சென்றபிறகும், ”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! மதஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோத சக்திகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்!” என்று அவர்கள் எழுப்பிய முழக்கம் இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

ரஜினிக்கு வருமான வரி விலக்கு – விவசாயிக்கு தூக்கு !

திருவண்ணாமலை அருகே சாத்தனூர் ௭ன்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு விவசாயி வங்கியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியிருந்தார். சரியாக தவணையை கட்டிக் கொண்டிருந்தார். ஒரு மாத தவணையை கட்டத் தவறினார். உடனே வங்கி தனியார் ஆட்களை அனுப்பி மிரட்டி, அசிங்கப் படுத்தியது.

அந்த தன்மான விவசாயி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்பம் இன்று நடுத்தெருவில்.

ஆனால், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு சம்பாதிக்கும் ரஜினிக்கு, வருமான வரி பாக்கிக்கான அபராதத் தொகை 66லட்சத்து 22ஆயிரத்து 438ரூபாய் தள்ளுபடியாம்!

66 லட்சம் ௭ன்பது ஒரு ஏழை ஆயுள் முழுவதும் ௨ழைத்தாலும் சம்பாதிக்க முடியாத தொகை!

வருமான வரி கட்டவில்லை ௭ன்பது ஒன்று.
அதற்கு அபராதம் ௭ன்பது இரண்டு.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை!
வீட்டு வாடகை, பள்ளிக்கூட வாடகை பாக்கி கேட்கறாங்க!

பெரியாரை திட்டியாகிவிட்டது.
திமுகவை திட்டியாகிவிட்டது.

பரிசாக தள்ளுபடி!
சிஸ்டம் சரியாயிடுச்சி!
இது ௭ப்டி கீது!

சும்மா அதிருதில்லே!

அப்படியே அந்த வாடகை பாக்கி கேசையும் தள்ளுபடி பண்ணிடுங்க! பாவம், நாலு தெரு பிச்சையை இரண்டு தெருவாக குறைச்சுக்குவாரு!

ஒரு பக்கம் நிதிநிலை சரியில்லை ௭ன பொதுத் துறை நிறுவனங்களை ௭ல்லாம் தனியாருக்கு தாரை வார்ப்பது!

படிக்க:
2002 குஜராத் வன்முறை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !
♦ ரஜினி : வரமா – சாபமா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு !

ஒருபக்கம் மவுண்ட் ரோடில் பிச்சை ௭டுக்கும் ரஜினிக்கு 66லட்சத்தை (சும்மா, வெறும் நயா பைசாதானே!) தள்ளுபடி செய்வது !

௭வன் அப்பன் வீட்டுதுடா இந்தப் பணமெல்லாம் !

நடுத்தர வர்க்கம், வருமான வரி கட்ட கொஞ்சம் லேட்டானாலே, Penalty, penal interest, surcharge, அப்புறம் துணை வரி, அதுக்கு இணை வரி, அதுக்கு அத்திம்பேர் வரி, அப்புறம் அந்த துணையோட ஒண்ணு விட்ட நாத்தனார் வரி ௭ல்லாம் போடறீங்களேடா !

கோடிக்கணக்கில வெள்ளை பணத்துக்கு வரி கட்டாமல் ஏமாத்தறான்.
இன்னும் கறுப்பு வேற இருக்கு!
ஏமாத்தறக்கு தண்டனை இல்லை!
அபராதம் போடப்பட்டது!
இப்போ இரண்டும் தள்ளுபடி!

நண்பர்களே!
சிந்திப்பீர்!

பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடத்தை அரசு சதுர அடிக்கு வெறும் 1ரூபாய்தான் விலை நிர்ணயம் செய்யும். இப்போது அதே விலைக்கு தனியாருக்கு தாரை வார்ப்பு!

உதாரணத்திற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சென்னையிலுள்ள இடம் சுமார் 100 ஏக்கர் இருக்கும். அதற்கு தற்போதைய மதிப்பு ௭வ்வளவு இருக்கும் ௭ன யோசித்துப் பாருங்கள், புரியும்! இது யாருக்கான அரசு ௭ன்று? மக்கள் பணத்தை மகா செல்வந்தர்களுக்கு வாரி வழங்குகிறீர்களே, நியாயந்தானா?

ஆனாலும் ஒன்றேயொன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!

அது கிழட்டு குதிரை!
நிச்சயமாக நீங்கள் கட்டும் பணம் பாழ்தான்!
நிச்சயமாக வெல்லாது ௭ன்பது நிச்சயம்!

ஏன் தெரியுமா?

சமன் செய்து சீர்தூக்கும் கோலாய் ௭ன் தமிழர்!

காரணம், இது பெரியார் மண்…

நன்றி : ஃபேஸ்புக்கில் Sugumar Munirathinam 

நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்

ருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மாயைகளும், கற்பனைகளும் மட்டுமே இந்தியாவில் நிறைந்துள்ளன என ஐரோப்பிய அறிவுஜீவிகள் சிலர் கதையளந்து கொண்டிருந்தனர். இக்கதையையே தேசியப் பெருமிதம் எனத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர் இந்தியர் பலர். இத்தகைய சூழலில்தான் உருவெடுக்கிறார் மெய்யியல் பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. அவர் குவியல் குவியலாக எழுதியவர்; எழுதி எழுதிக் குவித்தவர். பண்டைய இந்தியப் பொருள் முதல்வாத முறையான உலகாயதத்தை அகழ்ந்து அவர் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ‘உலகாயதம்’. பிறகு, இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம்’ என்னும் சிறிய நூல் ஒன்றை, அதன் தலைப்புக்கேற்ப அறிமுக வடிவில் எழுதினார். எவ்வேளையும் மெய்யியல் ஆய்வு வேலையிலேயே மூழ்கியிருந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா 1981-ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல் “மதமும் சமூகமும்’ (Religion and Society). இதன் தமிழாக்கம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பற்றியதே இச்சிறு எடுத்துரைப்பு.

‘மதம் தோன்றுவதற்கு முன்பு’ என்னும் முதல் இயலில் உலக வரலாற்றில் கடவுளை நம்புவது’ – அதாவது, மனிதனுள் இறைவனின் ஆவி என்ற அடிப்படை நம்பிக்கையானது அனைத்து மதங்களுக்கும் இன்றியமையாத முன் நிபந்தனை என்று கூறி, கடவுளற்ற மதம் எனக் குறிப்பிடப்படும் புத்தமதம்கூட இவ்வினத்தைச் சேர்ந்ததே என்று இயம்புகிறார் சட்டோபாத்யாயா. பொருள்முதல்வாத அடிப்படையில், ஒரு சமூகவியல் பார்வையுடன் தோன்றிய புத்த மதம் பிற்காலத்தில் ஒரு பெரும் கடவுள் பல சிறு கடவுள்களால் சூழப்பட்டுள்ளதாக உருமாறி அமைப்பு ரீதியான மதமாக ‘மகாயானம்’ என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டது என்றும், இந்த நிலை நாகார்ஜுனரின் சூன்யவாதக் கொள்கைக்கு அவசியப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார். வரலாற்று நோக்கிலிருந்து பார்க்கையில் ‘மனிதனுள் கடவுள் ஆவி’ என்பது தவிர்க்கவியலாத உண்மையாகிவிட்டது. அந்த உண்மையின் சமூகப் பின்புலத்தை அறிவதற்குத் தொல்லியலுடன் இணைந்த இனவரைவியல் ஆய்வின் மூலம் தெரிய வந்த சான்றுகளை எடுத்துக் கூறுகிறார். மனிதனிடம் கடவுள் நம்பிக்கையும் ஆவியும் இல்லாத காலம் ஒன்று இருந்தது என்ற மெய்ந்நிலையைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.

உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும். இவ்விடயங்களில் இயங்கியல் நோக்கைக் கையாள வேண்டும் என்கிறார். மாயவித்தை, பழங்காலத்தில் தோன்றியிருந்த புராணப் பழக்க வழக்கங்கள் இந்த இருபதாம் நூற்றாண்டைய நவீன காலத்திலும் கிராமியப் பண்பாடாக வெளிப்படுகின்றன என்று கூறும் சட்டோபாத்யாயா ‘அன்றைய ‘மாயவித்தை’ வேறு, இன்றைய ‘மதம்’ என்பது வேறு’ என்று விளக்கிக் காட்டுகிறார். (நூலிலிருந்து பக்.5-6) 

படிக்க :
மக்களை மயக்கும் அபினி போன்றது மதம் !
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !

கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்ட சமூக உபரி, நகரங்களில் சேமித்து வைக்கப்பட்டபோது அந்தச் சேமிப்பைப் பாதுகாப்பதற்கென்று புதிய பணிப்பிரிவினரை ஏற்படுத்துதல், அந்தப் பிரிவினருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு ஏற்படுத்துதல், அந்தப் பாதுகாப்புச் செலவுக்குப் பொருளாதாரத்தைக் கைக்கொள்ளுதல் என்ற போக்கில் சென்று, அந்தக் கைக்கொள்ளுதலை, எந்தச் சிக்கலுமின்றி நிறைவேற்ற ‘மதம்’ என்னும் நிறுவனத்தை / அமைப்பை உருவாக்குகின்றனர்’ என்று விளக்குகிறார் ஆசிரியர். அப்போது இடர்ப் பாதுகாப்பிற்காக விவசாயிகள் தங்கள் உற்பத்தியின் ஒரு பகுதியைத் தாய்த் தெய்வங்களுக்கு, அதாவது, அவர்களின் பிரதிநிதிகளான மதகுருமார்கள் அல்லது மதநிறுவனங்களுக்கு வழங்கினர். இங்கே மாயவித்தை மதமாக உருவெடுக்கிறது. மதம், கடவுள் என அச்சுறுத்தி, பொருளைப் பறிக்கும் நிலையை மாற்றுவதற்கு, அதே வகையில் வாழ்விற்கு சுயேச்சையான, நிலையான பாதுகாப்பை ஏற்படுத்தினால், கடவுள், மதம் என்னும் கருத்து நிலைகள் காணாமல் போய்விடும் என்று கூறுவதே மார்க்சியம். மாறாக, தடாலடியாக, மதத்தை அப்புறப்படுத்த முடியாது’ என்று கூறும் ஆசிரியர் அதற்கு வரலாற்றிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார்.

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

கி.மு.1372 முதல் 1354 வரை எகிப்தில் ஆட்சி புரிந்துவந்த நான்காம் ஆமென்ஹோடெப் என்னும் மன்னன் குடிமக்களிடம் பல கடவுள் வழிபாட்டை ஒழித்து, எளிய சூரிய வழிபாட்டைப் பறைசாற்றி, நாட்டிலுள்ள மரபுவழிக் கோயில்களுக்கெல்லாம் பூட்டுப் போட்டான். உடனே, மக்கள் ஆற்றாமையில் ஆழ்ந்தனர். காரணம், அந்த வரலாற்றுக்கட்டத்தில் அவர்களது துன்ப உணர்வுகளின் வடிகாலாக மதம் வேரூன்றி இருந்தது. இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் நூலாசிரியர் சமூகப் பொருளாதார நிலைமைகள் மாறாமல் இருக்கும் பொழுது, வெறும் சட்டத்தினால் மட்டும் மதத்தை ஒழிக்க முடியாது என்று தெளிவுறுத்தி அதைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு – அதாவது, அன்றைய எகிப்தியர்களுக்கு இல்லாத வாய்ப்பு – நமக்கு இன்று மிகவும் அருகிலேயே இருக்கிறது என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார். (நூலிலிருந்து பக்.7)

… புராதன மாயவித்தையிலிருந்து தேர்ந்த திறத்துடன் திட்ட மிட்டு உருவாக்கப்பட்ட மதம் மந்திரம், சடங்கு ஆகியவற்றால் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த மந்திரம், சடங்கு ஆகியவையும் மதத்தால் வளர்க்கப்பட்டு வருவதை அறிவோம். மதம் என்னும் ‘கூறு கெட்ட’ கூறு கடவுள், மறுபிறவி என்கிற அருவத்துக்கு உருவம் கொடுத்து, அதன் மூலம் அடித்தள மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, அவர்களின் பண்பாட்டையும், பொருளாதாரத்தையும் கையகப்படுத்தி ஆதிக்கச் சமூக மக்களுக்கு ஆண்டாண்டு காலமாகத் தாலாட்டுப் பாடி வருகின்றது.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட மார்க்சிய அறிஞர் பெருமக்களின் தடத்தைப் பின்பற்றி, தமிழகத்தில் அடித்தள மக்களின் பண்பாட்டை ஆய்ந்து, அது ஒற்றை மதம் என்னும் பெயரால் மத ஆதிக்கத்துக்கு ஆளாவதை எதிர்த்துக் களம் கண்டவர்களில் முன்னோடியானவர் அறிஞர் நா.வானமாமலை. நாட்டார் வழிபாட்டு மரபை, பண்பாட்டைப் பேணும் பலாது முயற்சியில் ஆ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அவரது மாணவர்கள் விடாது தொழிற்பட்டு வருகின்றனர். அத்தொழிற்பாடுகளில் ஒன்றாக, ‘பொத்தன் தெய்யம்’ என்னும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஆ. சிவசுப்பிரமணியனின் ஆற்றுப்படுத்தலின் கீழ், நா. இராமச்சந்திரன் பதிப்பித்திருக்கும் இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் நா. வானமாமலை

இந்நூலில் இடம்பெற்றுள்ள சங்கர் சென்குப்தா ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை நா.வானமாமலை தமிழில் மொழிபெயர்த்து, ‘ஆராய்ச்சி’ இதழில் வெளியிட்டதாகும். அதற்கு நா.வானமாமலை எழுதிய ஒரே பத்தியளவுள்ள சிறப்புமிகு அறிமுகத்துடன் ‘கணேசர் குடும்பம்’ என்னும் இக்கட்டுரை தொடங்குகிறது. கணேசரின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலையைப் பற்றிய விவரங்களைக் கொண்டது இக்கட்டுரை. பழங்காலத்தைச் சேர்ந்த யானைமுகச் சிற்பங்களும், யானைமுகமூடிகளும் இருந்தனவென்று அகழ்வாராய்ச்சிகள் சான்று பகர்வதால் பண்டைய நாகரிகங்கள் தழைத்திருந்த ஆசியாவிலும் மெஸபடோ மியாவிலும் மனித விலங்கு வணக்கம் பரவியிருந்ததை அனுமானிப்பது எளிது. இந்தக் கருத்தோட்டத்துடன் பார்த்து, வங்காளத்தில் கணேசர் துர்க்கையின் குடும்ப உறுப்பினராக நம்பப்படுகிறார் என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாளர் சங்கர் சென்குப்தா. (நூலிலிருந்து பக்.16-17)

நூல் : இந்திய சமூகத்தில் மதம்
ஆசிரியர் : சா.ஜெயராஜ்.

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : ncbhpublisher | marinabooks

‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?

1

திரௌபதி, அல்லி, ஆரவல்லி – சூரவல்லியைக் கண்டு வலதுசாரிகள் ஏன் அஞ்சுகிறார்கள்?

கடந்த ஜனவரி 4, 2020 அன்று சென்னை சி.பி.ராமசாமி ஐயர் இந்தோலாஜிக்கல் ஆய்வு மையத்தில் ஜேஎன்யூ பேராசிரியர் விஜயா ராமசாமியின் ‘மகாபாரதத்தில் பெண்கள்’ சொற்பொழிவு நிகழ இருந்தது. வலதுசாரிகளின் மிரட்டல் காரணமாக பேரா. விஜயா ராமசாமியின் நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ‘விருப்பமற்ற மணப்பெண்கள், விலகிநிற்கும் மனைவிகள், வஞ்சகமிக்க தந்திரக்காரிகள் : தமிழ் மகாபாரத்தில் பெண்கள், திரௌபதி, அல்லி மற்றும் ஆரவல்லி – சூரவல்லியின் மீதான பார்வை’ என்ற பெயரில் பேராசிரியர் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவின் சுருக்கப்பட்ட வடிவம் த வயர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே…

காபாரதத்தின் முக்கியமான பதிப்புகள் ஆண்களால், பார்ப்பன பார்வையில் எழுதப்பட்டவை. உண்மையில் அப்படி இல்லையென்றாலும், ஆணாதிக்க கண்ணோட்டத்தில் அல்லது கட்டமைப்பிற்குள் பொருந்தும்படியாக எழுதப்பட்டவை. இவை சமஸ்கிருத – பார்ப்பனிய மற்றும் ஆணாதிக்க  கண்ணோட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில விளக்க மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களுக்குள் பெண்களை அவை உறைய வைத்துள்ளன.

பேராசிரியர் விஜயா ராமசாமி.

மறுபுறம், பிராந்திய  ரீதியில் வேறுபட்ட மகாபாரத்தில் காவிய கதாபாத்திரங்களின்  சித்தரிப்புகள் மிகவும் தளர்வாக இருக்கின்றன. துரியோதனன் மற்றும் கர்ணன் போன்ற நபர்கள், எதிர்மறையான சொற்களில் ‘தீய’ சக்திகளாகக் குறிப்பிடப்படுகிறார்கள், இத்தகைய சித்தரிப்புகள் பிராந்திய பதிப்புகளுக்குள் மிகவும் நுணுக்கமான மற்றும் குறைந்த சார்புடைய இடத்தைப் பெற்றுள்ளன.

குறிப்பாக காவியத்திற்குள் உள்ள திரௌபதி, காந்தாரி மற்றும் கர்ணனின் மனைவி பொன்னருவி போன்ற பெண் கதாபாத்திரங்கள் பெண் கதாபாத்திரங்களில் இது உண்மையாக உள்ளது.

கர்ணனின் மனைவியாக விருஷாலி (துரியோதனனின் தேர் ஓட்டியின் மகள்) யாக முக்கியமான பதிப்புகளின் வருகிறது. மாறாக  பொன்னருவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விருஷாலியின் குறைந்த சமூக அந்தஸ்துக்கு மாறாக, கர்ணனின் வாழ்க்கையின் தமிழ் பதிப்பில், பொன்னருவி அரச வம்சத்தைச் சேர்ந்தவர், கலிங்க இளவரசி என்று கூறப்பட்டிருக்கிறார்.

19-ம் நூற்றாண்டில்தான் மெட்ராஸ் பிரசிடென்சியில் மகாபாரதம் ஆண்கள் – பெண்கள் உள்ளிட்ட சாமானியர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

சித்ரங்கதா.

மலிவான விலையில் பிரபலமான நாட்டுப்புறக் கதைகள் ‘குஜிலி’ இலக்கியம் (இது குஜராத்தி வணிகர்களைக் குறிக்கிறது) என்ற பெயரில் சந்தையில் நுழைந்து, புதிய வாசகர்களைப் பெற்றது; குறிப்பாக பெண்கள் மத்தியில். தமிழ் மகாபாரதங்களிலிருந்து வரும் துண்டுகள், சேர்த்தல் மற்றும் இடைக்கணிப்புகளுடன், அல்லது இரண்டையும் கடந்து, முற்றிலும் புதிய கதாநாயகர்களுடன், மகாபாரதத்திலிருந்து வரும் கதாபாத்திரங்களின் புரிதலை மாற்றி, எதிர் கதாநாயகர்கள் மற்றும் போர்க்குணமிக்க, காவியத்தின் விளிம்புகள் அல்லது அதற்கு வெளியே இருந்த இணக்கமற்ற பெண்களை மையமாகக் கொண்டுவந்தன.

பல துண்டு துண்டான மகாபாரதங்களின் தமிழ் பதிப்புகளில், முக்கியமான பதிப்புகளில் முக்கிய பெண் கதாபாத்திரமாக உள்ள திரௌபதி போன்ற கதாபாத்திரங்கள்  மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.  சமஸ்கிருத பதிப்பில் சித்ரங்கதா என உள்ளவராக அறியப்படுகிறவர், அல்லி அரசானி போன்றவற்றில் முக்கிய கதாபாத்திரமாகிறார்.

சிமோன் தி போவார் சொல்வது போல், “பெண்களால் ஆராய்ச்சி செய்யப்படும் பெண்களின் நாட்டுப்புறக் கதைகள் இத்தகைய ஆய்வுகளில் உள்ள பெண்களை ‘பொருள்கள் என்பதைக் காட்டிலும் உண்மையிலேயே பாடங்களாக’ காட்டுகின்றன.”

மிகப்பெரிய காவியத்திலிருந்து கதை சொல்ல முறையில் மாற்றமடையும் செயல்முறையின் சூழல் குறித்து தமிழ் மகாபாரதங்களை ஆய்வு செய்யும்போது, சமஸ்கிருதமற்ற, ஓரளவிற்கு உள்ளூரை முதன்மையாகக் கொண்டு புதிய பிறப்பெடுத்துள்ளது தெரிகிறது. அல்லி, பவழக்கொடி, பாம்பு இளவரசி உலுபி, சிவ பக்தையான மின்னொலியாளும் அவர்களுக்கு அர்ஜூனனுடனான திருமணமும் ஒரு பெரிய காவியத்தின் பெரிய  விவரிப்புகளை உடைத்து, பிரதான பதிப்பில் இல்லை (வியாசரின் மகாபாரதம்) இல்லாதவர்களை மைய நிலை நபர்களை முழுமையாகக் கொண்டுவருகின்றன.

பொன்னருவி மசக்காய், கர்ண மோட்சம் மற்றும் கர்ணமகாராஜன் சண்டை போன்ற கதைப்பாடல்கள் கர்ணனின் மனைவி பொன்னருவியின் விவரிப்புக்கு கவனத்தை தருகின்றன, அவரின்  ‘தாழ்ந்த சாதி’ கணவர் வெறுப்பு மற்றும் அவரது தேவையற்ற கர்ப்பம், சாதி மற்றும் வர்க்கம் ஆகியவற்றின் மீது கூர்மையான கவனத்தைச் செலுத்துகிறது.

குருக்ஷேத்ரா போரின் 17-வது நாளில் கர்ணன் இறப்பதற்கு முன், அவன் பிறந்த ரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது, இது அவளது விரக்தியை வருத்தமாக மாற்றுகிறது. எனவே இந்த துண்டு துண்டான விவரிப்புகள் அவை உண்மையிலேயே எதிர் – கதைகளாக இருக்கின்றனவா அல்லது ஆணாதிக்க பிரதான நீரோட்டத்தில் சமூகமயமாக்கப்படுகின்றனவா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு பெரிய விவரிப்பின் குறிப்பிடத்தக்க பிராந்திய மாறுபாடுகளாக இருக்கின்றன.

திரௌபதி ஒரு தெய்வமாக வணங்கப்படுவது தமிழர்களிடையே மட்டுமே உள்ளது. தமிழகம் முழுவதும் திரௌபதி அல்லது பஞ்சாலி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுமார் 300 கோயில்கள் உள்ளன.

தமிழ் மகாபாரதங்களைப் பற்றிய எனது ஆய்வில், விமர்சனப் பதிப்புகளில் குந்தி, காந்தாரி மற்றும் திரௌபதி ஆகிய கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, முக்கியமான பதிப்புகளில் குறிப்பாக திரௌபதியின் அதிக தளர்வான பிரதிநிதித்துவங்களுக்கு எதிராக இணைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக திரௌபதி  கதாபாத்திரம் மகாபாரதத்தின் மறு கதைசொல்லலான எஸ்.சுப்ரமண்ய பாரதியாரின் பஞ்சாலி சபதத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

திரௌபதியின் தன்மை மற்றும் பாத்திரத்தை மீண்டும் சொல்வதில் சமமான முக்கியத்துவத்துடன் திரௌபதி குறம் அல்லது குறவஞ்சி போன்ற நாடக நூல்கள்.

தமிழ் சமூகங்களால் திரௌபதியை தெயவாக்கும் செயல் சில நூற்றாண்டுகளில் திரௌபதி அம்மன் வழிபாட்டை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், காந்தாரியை பல தமிழ் சாதியினரும் தெய்வமாக வணங்குகிறார்கள்.

பேராசிரியர் ஆர். ஸ்ரீனிவாசன், நல்லப்பிள்ளை பாரதத்துக்கு எழுதிய தனது அறிமுகத்தில், திரௌபதி வழிபாட்டு முறையே மகாபாரதத்தின் விரைவான பரவலுக்கு,  குறிப்பாக கதை மற்றும் செயல்திறன் முறையில் பரவியதற்கு காரணம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழர்கள் கணிசமான புலம்பெயர் சமூகமாக குடியேறிய இடங்களில் – பிஜி மற்றும் ரீயூனியன் தீவுகள் போன்ற பகுதிகளில், தமிழர்களிடையே திரௌபதி மற்றும் காந்தாரி அம்மன் ஆகிய இருவரையும் சுற்றி கொண்டாடப்படும் திருவிழாக்களில் தீ மிதிக்கும் சடங்கு நடைமுறையில் உள்ளது.

தமிழ் பிராந்தியங்கள் முழுவதும் கொண்டாடப்படும் திரௌபதி திருவிழாவின் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன. குறிப்பாக அதன் வடக்குப் பகுதியில் – பாரத பிரசாங்கி (மகாபாரதத்தின் நாடகக் கதையை முன்வைக்கும் கலைஞர்கள்) ஒவ்வொரு மாலையும் மகாபாரதம் பாராயணம் செய்யப்படுகிறது; பாரத கூத்து என்ற நாட்டுப்புற வடிவம், தெரு கூத்து என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது தெரு நாடகம், இது காவியத்தை அடிப்படையாகக் கொண்ட இரவு நிகழ்ச்சிகள்; மற்றும் தீ  மிதித்தல், அல்லது தீயில் நடத்தல் ஆகியவை திரௌபதி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுச் செயலாகும். உலுபி மற்றும் அர்ஜுனனின் மகனான அரவனின் கதையைப் பற்றிய கூத்தாண்டவவர் திருவிழா பெரும்பாலும் திரௌபதி வழிபாட்டு சடங்கு விழாக்களுடன் இணைக்கப்படுகிறது.

கூடுதலாக, மகாபாரதத்துடன் இணைக்கும் அல்லி நாடகம் மற்றும் அல்லி அரசாணி மாலை ஆகியவை பெரும்பாலும் பெண்களால் படிக்கின்றன, மேலும் அவை தெரு கூத்து அல்லது வில்லு பாட்டாகவும் நிகழ்த்தப்படுகின்றன.

காலவரிசைப்படி இல்லாத மலாயத்வஜ பாண்டியன் என்ற மன்னரின் ஒரே குழந்தை அல்லி என்று கூறப்படுகிறது. பாண்டிய இராச்சியத்தின் தலைநகரான மதுரை அல்லி புராணத்தின் இருப்பிடம். திருவிலையாடல் புராணத்தில் மதுரை மூன்று மார்பகங்களைக் கொண்ட மீனாட்சியால் ஆளப்பட்டது என்ற பார்வையின் அடிப்படையில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு தியாகமான ‘புத்ரா காமேஷ்டி யாக’த்தின் முடிவில், அல்லி ஒரு ‘அல்லி’ அல்லது பூவில் கிடந்தார் எனவும் இது ஒரு அதிசயமான பிறப்பு என்றும் கூறப்படுகிறது. தெய்வீக ஆட்சியாளரான மீனாட்சியைப் போலவே, அல்லியும் தற்காப்புக் கலைகளில் பயிற்சியளிக்கப்பட்டு, புனித நூல்களையும், ஆட்சி நூல்களையும் கற்க ஒரு குருகுலத்துக்குச் சென்றார்.

பாண்டிய சிம்மாசனத்தை கைப்பற்றிய நீன்முகனை போரில் தோற்கடித்து அல்லி தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்; ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டார். அல்லி கொடுங்கோலரை எதிர்த்து இராணுவத்தை வெற்றிகரமாக வழிநடத்தியதாக அல்லி கொடை என்ற கதைப்பாடல் கூறுகிறது. மேலும்  வீரம்மிக்க அல்லி கொடுங்கோலன் நீன்முகனை அழித்த காரணத்தால் மதுரையே புகழையும் பெருமையையும் பெற்றது என்கிறது.

அவர் அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே கொண்டு ஆட்சி செய்தார். எனவே பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் வீட்டுக்கு ‘அல்லி ராஜ்யம்’ என்ற பிரபலமான பழமொழி தமிழில் உண்டு. அல்லி அரசாணி மாலை கூறுகிறது:

அல்லியின் பெயரைச் சொன்னால்
பறவை கூட தண்ணீரைப் பருகாது
அல்லியின் பெயரைச் சொன்னால்
பூத கணங்கள் ஆடுவார்கள்.
அல்லியின் பெயரைச் சொன்னால்
வெட்டப்பட்ட தலைகளும் உளரும்!

அர்ஜுனன் அல்லியால் ஈர்க்கப்பட்டு அவளை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ளும்போது, புலந்திரன் பிறப்பதன் விளைவாக அல்லி விவரிப்பு மகாபாரத காவியத்துடன் இணைகிறது.

முக்கியமான சமஸ்கிருத பதிப்பில், அல்லியின் கதை சித்ரங்கதா மற்றும் அவரது மகன் பாப்ருவஹானாவுக்கு இணையாக உள்ளது. அல்லி கதையின் இந்த திருப்பம், பார்வையாளர்கள் பெரும்பாலும் ஆண் பார்வையாளர்களாக இருந்ததால், அது தமிழ் மேடை மற்றும் சினிமாவுக்குள் நுழையும் போது அது ஒரு ஆணாதிக்க விவரிப்புடன் இணைக்கப்படுகிறது.

படிக்க:
2002 குஜராத் வன்முறை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !
5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !

ஆயினும்கூட, ஒரு உரையாக அல்லி கதை பெண்களால் விரிவாகப் படிக்கப்பட்டது; ஒரு மாறுபட்ட உரையாகக் காணப்பட்டது.

மறைமலை அடிகளின் (1916-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தனி தமிழ் இயக்கத்தின் இணை நிறுவனர்) மகள் நீலாம்பிகை அம்மையார்  இவ்வாறு எழுதினார்:

“அல்லி அரசாணிக்கோவை, பவளக்கொடி மாலை, ஏணி ஏற்றம் போன்ற நூல்களைப் படிக்க பெண்களை அனுமதிக்கக்கூடாது, அவை மோசமான வழிகளில் கொண்டு செல்லக்கூடும். அவர்கள் இரவும் பகலும் இதுபோன்ற நூல்களைப் படிப்பது மட்டுமல்லாமல், தவறான கோட்பாடுகளான கைவல்ய நவநீதம் போன்ற புத்தகங்களையும் (பிராமண சமஸ்கிருத நூல்கள்) படிக்கிறார்கள்.”

ஒருபுறம், நீலாம்பிகை அம்மையாரின் அறிக்கை அல்லி புராணத்திற்கான ஆணாதிக்க பதில்களைக் குறிக்கிறது, அதாவது இது முறைகேடு நிறைந்ததாகவும், சூழ்ச்சியாகவும் கருதப்பட்டது. அதே சமயம், பெண்களை மையமாகக் கொண்ட இந்த மகாபாரத துண்டுகளை பெண்கள் ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்பதை அவளுடைய அச்சங்கள் நிரூபிக்கின்றன.

முடிவாக, தமிழ் மகாபாரதங்கள், உரை துண்டுகளாக இருந்தாலும், நிகழ்த்து கலைகளாக இருந்தாலும், சாதி மற்றும் பாலின தடைகளை குறிப்பிடத்தக்க வழிகளில் உடைத்து, சமஸ்கிருத மகாபாரத காவியத்திலிருந்து வேறுபட்டிருப்பதைக் காட்டுகின்றன. அவற்றின் பன்மடங்கு வடிவங்களில் அவை பார்ப்பன ஆணாதிக்க விவரிப்புகளின் வெவ்வேறு பக்கங்களைக் குறிக்கின்றன.

கட்டுரையாளர்:பேராசிரியர் விஜயா ராமசாமி
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

ரஜினி – கிரில்ஸ் : மேன் வெர்சஸ் வைல்ட் – ஒரு கற்பனை !

பேர் கிரில்ஸ் உடன் பந்திப்பூர் புலிகள் சரணாலயம்… மைசூர், முதுமலை, வயநாடு எல்லைகளில் முதுமலையில் இருந்து பயணம் தொடர்கிறது. மைசூர் கர்நாடக எல்லை வழியே வயநாட்டில் இறங்குவதுதான் திட்டம்.

சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், தூக்கம், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அனைத்தையும் பேர்கிரில்ஸ் கற்பிப்பார்.

காலை ஏழு மணி …

பேர்கிரில்ஸ் குதித்து ஓடுகிறார், பாறைகளை தாண்டுகிறார். நம்ம சூப்பர் பின்னால் வந்த கேமராமேனைப் பார்த்து என்னோட டூப்பு எங்கே என்கிறார்.

டைரக்டர் முறைக்க….

நிலைமையை உணர்ந்த பேர்கிரிஸ்ல் கைத்தாங்கலாக ரஜினியை அழைத்து செல்கிறார்… பயணம் தொடர்கிறது.

அய்யோ பாம்பு என ரஜினி கத்த…
அய் சாப்பாடு என பேர் குதிக்க…..
தலையை வாயால் கடித்துத் துப்பி நடுக்கண்டத்தை ரஜினிக்கு நீட்டுகிறார்…

உவ்வேக் என வாந்தி வரவும்… தானே முழுதையும் தின்றுவிட்டு நடக்கிறார்… கைத் தாங்கலாக ரஜினியும்…

ரஜினிக்கு சாப்பாடு வேண்டுமே என சிந்திக்கிறார் பேர்….
ரஜினி யானை சாணம் மேல் காலை வைத்து உதற…
சாணியை கிளறுகிறார் பேர்….

உள்ளே பலாக்கொட்டைகள் தென்பட உற்சாகமாக அதைப் பொறுக்கி எடுத்து, தணலில் போட்டு உறித்துத் தருகிறார்…. ரஜினி முகம் போன போக்கைப் பார்த்து… முழுதையும் தின்றுவிட்டு நடை தொடர்கிறது…. (கைத் தாங்கலாக ரஜினியோடு)

மதியம் ஆகிறது காவிரி தென்படுகிறது, ரஜினிக்காக மீன் பிடிக்கிறார் பேர்… அதை ஒரு கோப்பையில் போட்டு அவித்து… சூப்பு தர அதை ரஜினி குடிக்க… குழு உற்சாகம் ஆகிறது.

சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை நடை தொடர்கிறது…

படிக்க:
♦ 5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !
♦ முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !

இருள் சூழத் தொடங்க ஏதோ கயிறு என நினைத்து ஒரு விழுதைப் பிடிக்கிறார் ரஜினி, சடாரென அது ரஜினியை சுற்றிவளைக்க… அய்யோ அது மலைப்பாம்பு…

பேர் களத்தில் இறங்கி பாம்பை ரஜினியிடமிருந்து மீட்கிறார்.

சுற்றி வளைத்ததில் மதிய மீன் சூப்பும், சாப்பாடும் வெளியேறி விட்டது வாந்தியாக..
படையப்பா படத்தில் பாம்பு பிடிப்பது கண்ணில் வருகிறதா…?

இரவு மரத்தின் மேலே தூங்கமுடிவெடுத்து பரண் அமைத்து முடிக்க…. ரஜினிக்கு அந்நேரம் பார்த்து ஒன்னுக்கு வர… கீழே பார்த்தால் ரஜினியை ஒரு கரடி பார்க்கிறது….

மூத்திரத்தை கரடி மீதே அடித்துவிட அது தலை தெறிக்க ஓடுகிறது… எனக்கே இந்த வித்தை தெரியாதே என பேர் வாய் பிளக்க…!?!

பயத்துல அதுவே கழிஞ்சுடுச்சு என ரஜினி கூற…

கழிஞ்சது ஒன்னுக்கு மட்டுமா அல்லது ரெண்டுமா என கேட்க…

வயிறு காலி பேர்ர்ர்ர் எப்படி ஆய் வரும்னு சொல்ல…

இந்தாளோட படா பேஜாரா கீது என பேர் புலம்ப… காலையில் நடை, தளர்வாக ரஜினியும் செல்ல…. ஒரு தென்னை மரம் தென்பட இளநீர் தருகிறார்…
வழுக்கையை சீவட்டுமா என பேர்ர் கேட்க….

எனக்கே வழுக்கை எனக்கும் வழுக்கை என ரஜினி தெம்பாக பேச…

ஒரு போன் வருகிறது…
மறுமுனையில் மோடி…

ஹல்லோ ரஜினி எப்படி இருக்கு..?

பயமா இருக்கு என இவர் பேச….

கேமராமேனைப் பார்த்து பேசு மேன் தைரியம் வரும் என அட்வைஸ் கூறுகிறார்.
சிக்னல் கட்டாகிறது…

வழியில். திடீரென… அது தென்பட குழு உசார் ஆகிறது…

– தொடரும்

நன்றி : ஃபேஸ்புக்கில் ராஜா ஜி 

தமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து !

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வுப் பிரிவில் முன்பு பணியாற்றிய பேராசிரியர் விஜயா ராமசாமி சென்னையில் கடந்த நான்காம் தேதி உரையாற்றவதாக இருந்தது. Reluctant Brides, Deviant Wives and Cunning Witches: Women in Tamil Mahabharatas, focusing on Draupadi, Alli and Aravalli-Suravall என்பதுதான் தலைப்பு. அடிப்படையில், தமிழில் எழுதப்பட்ட மகாபாரதங்களில் திரௌபதி, அல்லி, ஆரவல்லி, சூரவல்லி ஆகிய பெண் பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்த உரை அது.

பேராசிரியர் விஜயா ராமசாமி

ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில சக்திகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது ரத்துசெய்யப்பட்டது. அந்த உரையின் சற்ற சுருக்கப்பட்ட வடிவத்தை தி வயர் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது.

விஜயா ராமசாமியின் கட்டுரை அடிப்படையில், ஒரு ஆய்வுக் கட்டுரை. யாரையும், எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கமோ, அம்மாதிரியான தகவல்களையோ கொண்ட கட்டுரையல்ல. இருந்தபோதும் எதிர்ப்பு.

அந்தக் கட்டுரையின் சுருக்கம் இதுதான்:

1. மகாபாரதம் அடிப்படையில் ஆண்களால் ஆண் மையத் தன்மையுடனும் பிராமணத்தன்மையுடன் எழுதப்பட்ட ஒரு காப்பியம். சமஸ்கிருத – பிராமண ஆண்மைய உலகில் பெண்களுக்கு இருக்கும் இடம்தான், இந்தக் காப்பியங்களில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2. பிராந்திய மொழிகளில் மகாபாரதம் எழுதப்பட்டபோது, அவற்றின் மையம் மாறியது. துரியோதனன், கர்ணன் போன்ற ‘தீய’ சக்திகள், அவ்வளவு தீய சக்திகளாக இல்லை.

3. திரௌபதி, காந்தாரி, கர்ணனின் மனைவி பொன்னருவி ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சமஸ்கிருத் மகாபாரதத்தில் கர்ணனின் மனைவியின் பெயர் வ்ருஷாலி. தமிழில் எழுதப்பட்ட சில மகாபாரதங்களில் பொன்னருவி.

படிக்க:
♦ தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !
♦ மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்

4. குஜிலி புத்தகங்களாக வெளிவந்த மகாபாரதக் கதைகளில் ஆன்டி – ஹீரோக்களுக்கும் எல்லைகளைத் தாண்டிய பெண்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

5. தமிழ் பாரதங்களில் அல்லி, பவளக்கொடி, உலுப்பி, மின்னொளியால் போன்றவர்கள் அர்ஜுனனை மணந்தார்கள். வியாச பாரதத்தில் இவர்களுக்கு இடமே இல்லை. இவ்வாறாக, குஜிலி பாரதங்களில் மகாபாரத காப்பியத்தின் மையம் வேறு இடத்திற்கு, குறிப்பாக பெண்களை நோக்கி நகர்த்தப்பட்டது.

6. தமிழ்நாட்டில்தான் திரௌபதி மிகப் பெரிய கடவுளாக வணங்கப்படுகிறாள். தமிழ்நாட்டில் திரௌபதி அல்லது பாஞ்சாலிக்கு 300-க்கும் மேற்பட்ட கோவில்கள் உண்டு. சில ஜாதியினர் காந்தாரியையும் வணங்குகிறார்கள்.

7. பூ மிதிக்கும் நேர்த்திக்கடன் பெரும்பாலும் திரௌபதி அல்லது காந்தாரிக்காகவே செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் ஃபிஜி, ரி யூனியன் தீவுகளிலும் இப்படி நடக்கிறது.

8. மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனின் மகளாகப் பிறந்த அல்லியின் கதை, ஏதோ ஒரு வகையில் மகாபாரதத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டாக படிக்கப்படுகிறது; நாடகமாக நடிக்கப்படுகிறது.

9. முடிவாக என்ன சொல்கிறார் என்றால், தமிழ் மகாபாரதங்கள் ‘குஜிலி’ எழுத்து வடிவிலும் சரி, நாடகங்களிலும்சரி, ஜாதி – பால் பேதங்களைத் தகர்க்கின்றன. சமஸ்கிருத மகாபாரதத்திற்கும் தமிழ் பாரதங்களுக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசம் இது.

மேலே உள்ள content -ல் மணம் புண்படுவதுபோல என்ன இருக்கிறது?

த வயர் கட்டுரைக்கான இணைப்பு. கண்டிப்பாக படியுங்கள். முதல் வாசிப்பில் புரியவில்லையெனில் இன்னொருக்க படிக்கலாம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

குழந்தையின் கல்வியை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன ?

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நெருங்கியிருந்தது. 1000 மதிப்பெண்களை எடுத்தால் ஹீரோ பேனா வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார் கணேஷ் அண்ணன். என் அண்ணனின் நண்பர் அவர். மற்ற பாடங்களிலெல்லாம் சமாளித்து விடுவேன். இந்தக் கணக்குதான் என்னைப் பலியெடுத்தது. வகுப்பில் என்னையும் கார்த்திக் என்ற இன்னொரு மாணவனையும் தவிர அனைவரும் என்.சி.சி. மாஸ்டரிடம் டியூசன் செல்வார்கள். அவர்தான் கணக்குக்கும் ஆசிரியர். கணக்கிலும், காசிலும் கறார் பேர்வழி. டியூசன் சேரவில்லை என்ற காரணத்தால் ஒவ்வொரு கணக்கு வகுப்பிலும் எனக்கும் கார்த்திக்குக்கும் சிறப்புப் பூசைகள் விழும். தினமும் இதே கதைதான். அவர் தெளிவாக இருந்தார். ஒன்று டியூசன் சேரவேண்டும் இல்லையென்றால் பள்ளியைவிட்டு நின்றுவிட வேண்டும். அவ்வளவுதான்.

டியூசன் சேரவேண்டும் என்று சொன்னால் வீட்டிலும் அதைத்தான் சொல்லப்போகிறார்கள். சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது டியூசனுக்கு மாதம் 60 ரூபாயை யார் தருவார்? இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது நின்றுவிடலாம் என்று எனக்குள் தோன்றிய என்னத்தை மாற்றியவர் எங்கள் தெரு வாசி பான்பராக் பாலு. கொஞ்சம் படித்தவர். எனக்கு மாலை நேரங்களில் கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் கணக்கில் 86 மதிப்பெண் எடுத்திருந்ததால் ‘ உனக்கு கணக்கு நல்லா வருது நீ மேக்ஸ் குரூப் எடுத்துக்கோ..’ என்று என்னை இதில் தள்ளியவர் அவர்தான். 10-ம் வகுப்புக் கணக்குக்கும் 12-ம் வகுப்புக் கணக்குக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்ததுதான் என் துரதிர்ஷ்டம். அந்தக் கழிவிரக்கத்தாலோ என்னவோ எனக்கு தினமும் வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

958 மதிப்பெண்கள். பள்ளியில் 4-ம் இடம். ஆயிரம் மதிப்பெண் எடுக்காதபோதும் என்னை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேனா வாங்கிக் கொடுத்தார். ஹீரோ பேனா என்பது அப்போது என்னைப்போன்ற ஆட்களுக்குப் பெருங்கனவு. வாஞ்சையோடு அதைத் தடவிப்பார்த்த நினைவுகள் இன்னும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது.

மேற்கொண்டு என்ன படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. திட்டமிட்டு வழிநடத்தவும் குடும்பத்தில் யாருமில்லை. பான்பராக் பாலுவும் அப்போது வீடு மாறிச் சென்றிருந்தார். சொல்லப்போனால் மேற்கொண்டு என்னைப் படிக்க வைப்பார்களா என்ற நம்பிக்கையும் இல்லாத காலம் அது. நோயாளி அப்பா. குடும்பத்தின் ஒரே வருமானம் அண்ணன் மட்டுமே.

எதற்கும் இருக்கட்டுமென்று இளங்கலை இயற்பியல், இளங்கலை வேதியியல் இரண்டுக்கும் விண்ணப்பித்திருந்தேன். எங்கள் காம்பவுண்டில் குடியிருந்த ஒரு பெரியவர் ரியாசுதீன். அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக இருந்தார். அவரது ஆலோசனைப்படி சென்னை கிண்டி இன்ஸ்டிட்டியூட்டில் லேப் டெக்னீசியன் 3 ஆண்டுப் படிப்புக்கும் விண்ணப்பித்திருந்தேன். மூன்று இடங்களிலும் சீட் கிடைத்தது.

கிண்டி இன்ஸ்டிட்டியூட்டில் படிப்பு முடிந்ததும் வேலையில் சேரும் உத்திரவாதத்தோடு அழைப்பு வந்திருந்தது. பெரியவர் ரியாசுதீனின் உறவினர் அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர்கள் அனைவரிடமும் அதைப் பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாள் அது.

அந்த நாளும் வந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 1650 ரூபாய் கட்ட வேண்டும். குடும்பம் கை விரித்து விட்டது. அந்தத் தொகையைக் கட்ட எங்கள் தெருவாசிகளில் சிலர் முன்வந்தார்கள்தான். ஆனால், அது மட்டும் போதாதே. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவேண்டும். அதுகூட அரசு விடுதியில் பெற்றுத்தருவதாகச் சொன்னார் ரியாசுதீன். புத்தகங்களுக்கு, தினந்தோறும் செலவுகளுக்கு. முக்கியமாக சாப்பாட்டுக்கு? பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இல்லாமல் இருந்திருந்திருந்தால் நானெல்லாம் 12-ம் வகுப்புகூட படித்திருக்க முடியாது. மதியம் சத்துணவு, இரவுக்கு பள்ளியில் வழங்கிய சத்து மாவு. இப்படித்தான் கழிந்தது. இதெல்லாம் கிண்டி இன்ஸ்டிட்டியூட்டில் கிடையாதாம். எனக்கு எதார்த்தம் புரியக்கூடிய வயதுதானே அது. அம்மா என் முகத்தைப் பார்க்கத் தயங்கி விலகிப் போனதை உணர்ந்தேன். என் கல்வி ஆசையை நிறைவேற்ற முடியாத இயலாமை அவளை வதைத்துக் கொண்டிருந்தது. இரவுகளில் நான் தூங்கிவிட்டேனா என்று உறுதிசெய்துவிட்டுத் தலைமாட்டில் அமர்ந்து அழுவாள். அவளுக்குத் தெரியாமல் போர்வைக்குள் நான் அழுதுகொண்டிருப்பேன்.

இந்த அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினேன். அந்த அக்னாலட்ஜ்மெண்ட் அட்டையைக் கிழித்து எரிந்துவிட்டுச் சொன்னேன். ‘ நான் நாளைலர்ந்து வேலைக்குப் போறேன்..’

படிக்க:
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !
தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !

யாருமே எதுவுமே பேசவில்லை. மயான அமைதி நிலவியது. எங்கேயோ போய்விட்டு வந்த அக்கா கிழிந்து கிடந்த அட்டையைப் பார்த்துக் கதறி அழுதாள். கட்டுப்படுத்த முடியாமல் நானும் உடைந்து அழுதேன். அம்மாவும் அழுதாள். அன்று பிடித்த சுத்தியல் இன்றுவரை கீழே வைக்கவில்லை…

கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகள் பங்குபெற்ற புகைப்படத்தைப் பார்த்ததும் ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறது.. கல்வி என்பது கனவு லட்சியம் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. அது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன..?

முகநூலில் : Samsu Deen Heera

disclaimer

5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !

குழந்தைகள் கல்வியின் வரையறை எது???

ம் குழந்தைகளை அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து மதிப்பு தரும் பெற்றோராக நாம் இப்போது மாறினால் நம் குழந்தைகள் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்தும் நாம் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்காக மட்டுமே நம்மை மதிக்கும் நிலை நாளை உருவாகும்.

கல்வி என்பது என்ன?

கல்வி என்பது பல நல்ல பழக்க வழக்கங்களை ஒருங்கே கற்பது. அதை குழந்தையின் மூளை வேகமாக உள்வாங்கி கொள்ளும் என்பதால் கல்வியை தொடக்கம் முதலே ஆரம்பிக்கிறோம்.

சப்பான், சீனா முதலிய நாடுகளில் ஆறு வயது வரை கூட தாத்தா பாட்டியிடம் கதை கேட்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். தாத்தா பாட்டியிடம் ஒழுக்கங்கள்/ பழக்க வழக்கங்கள் / கதைகள் கேட்டு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள் .

நாம் மூன்று வயது முடியுமுன்னமே முந்தி அடித்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறோம்.

அங்கு குழந்தை எதை கற்கிறது ?

அதுவரை தாய் தந்தை தாத்தா பாட்டி என்ற குக்கூனுக்குள் இருந்து வெளியே வந்து தொடக்க கல்வி என்ற ப்யூப்பா கட்டத்திற்கு செல்கிறது. அங்கே தன் போன்ற சகல குழந்தைகளுடனும் விளையாடுகிறது .அங்கு பணிபுரியும் ஆசிரியைகள் தான் அவர்களுக்கு அப்போதைய தேவதைகள். தேவதைகள் செய்யும் அனைத்தையும் தானும் செய்து பார்க்கின்றன.

மனிதன் ஒரு சமூக மிருகம் என்கிறோம். சமூகத்துடன் தன்னை ஒருமித்துக்கொள்ளும் வித்தையை பள்ளிக்கூடங்கள் தான் ஆரம்பித்து வைக்கின்றன .

விட்டுக்கொடுத்தல்; தட்டிக்கொடுத்தல்; புறம்பேசுதல்; காட்டிக்கொடுத்தல்,
போன்ற பல மனித உணர்வுகள் ஊற்றெடுப்பது சமூகத்துடன் கலந்தவுடன் மட்டுமே … இவையனைத்தும் பள்ளிகளில் ஒருங்கே நிகழும்.

பிறகு பள்ளிகள் இந்த குணங்களில் எது அதிகம் தேவையோ அதை ஃபைன் ட்யூனிங் செய்து அதிகமாக்கும். எது தேவையில்லையோ அதை கொஞ்சம் கண்டிப்புடன் குறைத்து வைக்கும். ஆக பள்ளிக்கூடங்கள் என்பது மனிதனை மனிதனாக்கும் கூடங்கள்.

அல்லது, மனிதனை சமுதாயத்துக்கு தேவையுள்ளவனாக மாற்றும் கூடங்கள். பள்ளிக்கூடம் விட்டு வெளிவரும் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கான தனது பணியை உணர்ந்தவர்களாக வெளிவருவது அந்த பள்ளியின் நோக்கமாக இருக்கிறது.

சரி .. இதனூடே பனிரெண்டாம் வகுப்பு எனும் மலை முகட்டில் ஏறி சிறகு விரித்து பறக்கத் தேவையான ஆயத்தப்பணிகளும் நடக்கும்.  ஆம்… பனிரெண்டாம் வகுப்புக்கு பிறகு ஒரு மாணவ மாணவியின் எதிர்கால தொழில் முடிவாகுவதால் அது ஒரு மலை முகட்டோடு ஒப்பிடப்படுகிறது.

சிலர் தாங்களாக சிறகு விரித்து பறக்கிறார்கள்… சிலருக்கு பெற்றோர் பணமெனும் காகிதத்தால் செயற்கை சிறகு செய்து பறக்க விடுகிறார்கள் … பலருக்கு அதற்கான எந்த பாக்கியமும் இல்லாமல் சிறகின்றி மலை முகட்டிலேயே நின்று அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

இப்படி பனிரெண்டாம் வகுப்பின் மீது இத்தனை ப்ரஷர் ஏற்றப்பட்டு
காணும் பிள்ளைகளின் தாய் தந்தையர் அனைவருமே தன் பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் கனவு காண்கிறார்கள். பத்து லட்சம் பேர் தேர்வு எழுதும் இடத்தில் ஐயாயிரம் சீட்டுகள் மட்டுமே மருத்துவராக இருக்கிறது. அதே அளவுதான் சிறந்த இஞ்சினியரிங் கல்லூரிகளில் பயில இருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அடிப்படை திறன் இருக்கிறது. இருக்கும்.
ஆனால், அந்த திறனை வெளிக்கொண்டு வரும் பெற்றோரும் கல்வி நிலையமும் சமுதாய சூழ்நிலையும் அமையாதிருப்பதே, பல துறை சார்ந்த மேதைகள் நம் நாட்டில் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் அவரது மகனின் திறமையில் நம்பிக்கை வைக்காமல் அவரை அடித்து துன்புறுத்தி படிக்க அனுப்பியிருந்தால் அவர் இன்று ஏதோ ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்.

இருப்பினும் இந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக காரணமானது
அவரது தந்தை ஒரு இசையமைப்பாளர்; தாய் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை.

கீபோர்டு கையில் எடுத்த அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானாக முடியும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் நிச்சயம் பல ஏ.ஆர்.ரஹ்மான்கள் உருவாகாமல் இருப்பதற்கு நமது கல்வி அமைப்பே காரணமாகிறது என்று கூறுகிறேன்.

இப்போது கல்வி நிலையத்தில் தனித்திறமைகள் போற்றப்படுவது குறைந்து வருகிறது. தனித்திறமைகள் வைத்து சம்பாதிக்க முடியாது என்ற வாதம் தான் நம் அனைவரையும் அந்த மலை முகட்டை நோக்கி உந்தித்தள்ளுகிறது.

இன்றோ ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு / பதினோறாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு என்று பல சிகரங்கள் உருவாகி
குழந்தைகளின் வாழ்வை போர் மயமாக்கி வைத்துள்ளன.

இந்த சிகரங்களை யாரெல்லாம் கடக்க வேண்டும்? யாரெல்லாம் பின் தங்க வேண்டும் ?  என்று சமூகம் முடிவு செய்கிறது.

சிலரை வாழை இலையில் உணவு உண்ண அழைக்கிறது. சிலரை எச்சில் இலையை பொறுக்க அழைக்கிறது.  சிலரை வீடு கட்டவும் , சிலரை வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யவும் மட்டுமே தயார் செய்கிறது.

சிலரை தகுதி இல்லாவிடினும் மருத்துவராக்குகிறது. பலருக்கு தகுதி இருந்தும் மருத்துவக்கனவு காணக்கூடாது என்கிறது.  இப்படியாக சமூகம் தான் பெற்றெடுத்த குழந்தைகளிடமே ஏற்றத்தாழ்வு கற்பிக்கிறது…

எல்.கே.ஜி. பயிலும் குழந்தைக்கு பரிட்சையின் போது காய்ச்சல் அடித்தாலும் லீவ் போடாமல் பரீட்சை எழுத வைக்கும் வேலையை பெற்றோர்கள் செய்கின்றனர்.  இது போன்ற பெற்றோர்களுக்கு நாளை தனிமைதான் பரிசாகக்கிடைக்கப் போகிறது என்பதை உணர்கிறார்கள் இல்லை.

இன்று காய்ச்சல் இருமலில் உழலும் உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி அதை தனிமைபடுத்தும் ஒவ்வொரு பெற்றோருக்கும் நாளை முதியோர் இல்லமோ தனிமையான அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையோ காத்துக்கொண்டிருக்கிறது.

படிக்க:
விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

உண்மையில், சமுதாயத்துக்கு நன்மையை கற்றுத்தர வேண்டிய கல்வி முறையாக மாறாமல் சமுதாயத்தை இன்னும் சுயநலமிக்கதாக தான் மாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் குலக்கல்வியின் இருபத்தி ஓராம் நூற்றாண்டு வெர்சன்களாகவே தெரிகின்றன. மேலும் பெண்கள் கல்வி கற்பதை தடுக்கும் ராஜாராம் மோகன் ராய் காலத்துக்கு முந்தைய சமுதாயத்துக்கு இழுத்துச் செல்லும் முயற்சியாகவே இருக்கிறது.

இந்த பாதைகளெல்லாம் எங்கு சென்று முடிகின்றனவோ .. அங்கு நம் குழந்தைகளின் குழந்தைத் தன்மைகளை சேட்டைகளை சுட்டிகளை குழிதோண்டி புதைக்கும் சுடுகாடு இருக்கிறது… ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமுதாய அடுக்கில் கீழே இருக்கும் மக்களை கல்வியை விட்டு இன்னும் தூரப்படுத்தும்.

எனவே, மத்திய-மாநில அரசுகளை உடனே இது குறித்து தாய்மை உள்ளம் கொண்டு ஆராய்ந்து இந்த பரீட்சைகளை கைவிடக் கோருகிறேன்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா

மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமாருக்கு சிவப்பஞ்சலி | பு.ஜ.மா.லெ.க – இலங்கை

மூத்த எழுத்தாளரும் மக்கள் கவிஞருமான மல்லிகை சி.குமாருக்கு செவ்வஞ்சலிகள்!

லையக மண்வாசனை சொட்ட அம்மக்களின் வாழ்வியலை தன் படைப்பிலக்கியத்தின் ஊடாக பறைசாற்றி நின்ற கவிஞர், சிறுகதையாசிரியர், ஓவியர் என பல்பரிமாணம் கொண்ட மூத்த இலக்கியவாதி, மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமார் அவர்களின் மறைவுக்கு எமது புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மலையக மண் இன்று மூத்த எழுத்தாளரை, எப்போதும் சலனமில்லாத, எந்த வேளையும் சமரசம் செய்து கொள்ளாத, இறுதி வரை மக்கள் விடுதலையின்பால் தீரமுடன் எழுதி வந்த படைப்பிலக்கியவாதியை இழந்து நிற்கிறது.

கவிஞர் மல்லிகை குமார்.

புகழுக்கும் பகட்டுக்கும் பின்னால் பலர் ஒடுகையில் கடின உழைப்பை வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டு, தன் பேனா முனையில் மலையக மக்களின் வாழ்வையும் அவர் தம் விடுதலையையும் நெஞ்சுரத்துடன் பேசியவர் கவிஞர் மல்லிகை சி.குமார்.

புன்முறுவல் பூத்த முகத்துடன் எப்போதும் அன்பாய் ஆராதிக்கும் அவர் குணம், நகைச்சுவையாய் நையாண்டியாய் அவரது எழுத்துகளில் மாத்திரமன்றி ஓவியங்களிலும் வெளிப்பட்டு நிற்பதை கண்டிருக்கின்றோம். நேரடி அரசியல் செயற்பாட்டாளராக இல்லாதபோதும் தன் படைபிலக்கியத்தின் ஊடாக சோரம் போகாத அரசியல் அறப்போர் புரிந்தவர் மக்கள் கவிஞர் மல்லிகை சி. குமார்.

அவரது எழுத்துக்கள் மலையக மண்வாசனையுடன் சமூக உணர்வையும் வெளிப்படுத்துவனவாகவே இருந்து வந்திருக்கின்றன. மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்க செயற்பாடுகளின் போது களத்தில் அவர் வாசித்த கவிதைகள் மலையக மண் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கு இன்னுமொரு சான்றாகும்.

தனது சிறுகதைகள் கவிதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கையை பதிவு செய்தது மட்டுமின்றி பிழைப்புவாத அரசியலை எள்ளி நகையாடி சமூக விடுதலையை வலியுறுத்தி வந்துள்ளார். அன்னாரின் திடீர் இழப்பு இலக்கியத் தளத்தில் மாத்திரமன்றி சமூக அரங்கிலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

படிக்க:
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

இந்த வேளையில் அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடனும் கலை இலக்கிய நண்பர்களுடனும் எமது கட்சி துயரைப் பகிர்ந்து கொள்கிறது.

எந்த மக்கள் விடுதலைக்காக மல்லிகை சி. குமார் தன் பேனா முனையை போர்வாளாய் தூக்கிப் பிடித்தாரோ. அந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்த உழைப்பதே அன்னாருக்கு நாம் செய்யும் உண்மையான, நேர்மையான அஞ்சலியாகும்.

V.மகேந்திரன்,
தேசிய அமைப்பாளர்,
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி.

நன்றி : முகநூலில் புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி

disclaimer

விவகாரத்தை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதோ உமக்கு ?

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 11

முக்கிய நபர் தமது அறையில் உட்கார்ந்து, பல ஆண்டுகளாகத் தாம் பார்க்காத தமது பழங்கால நண்பரும், குழந்தைப் பருவத் தோழரும் சமீபத்தில் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்திருந்தவருமான ஒருவருடன் மிக மிகச் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் பஷ்மாச்கின் என்ற ஒருவன் அவரைக் காண விரும்புவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. “யார் அது?” என்று வெடுக்கென வினவினார் முக்கிய நபர். “யாரோ எழுத்தனாம்” எனப் பதில் கிடைத்தது. “ஓ அப்படியா? காத்திருக்கச் சொல்லுங்கள். இப்போது எனக்கு நேரமில்லை” என்றார் முக்கிய நபர்.

முக்கிய நபர் சொன்னது பச்சைப் பொய் என்பதை இங்கே கூறிவிடுவது நல்லது. அவருக்கு நிறைய நேரம் இருந்தது. அவரும் நண்பரும் பேச வேண்டியதையெல்லாம் எப்போதோ பேசி விட்டார்கள். வெகு நேரமாகவே நடு நடுவே நீண்ட மௌனத்தில் ஆழ்ந்துவிடுவதும், மௌனத்துக்கு மத்தியில் ஒருவரையொருவர் முழங்காலில் அடித்து, “ஆச்சா, இவான் அப்ராமவிச்!” “அப்படியாக்கும் சேதி, ஸ்தெபான் வர்லாமிச்!” என்பதுமே அவர்களுடைய உரையாடலாகத் திகழ்ந்தது. இருந்தபோதிலும் அவர் எழுத்தனைக் காத்திருக்கச் சொன்னது எதற்காகவென்றால், அரசுப் பணியிலிருந்து வெகுகாலத்துக்கு முன்பே விலகி, கிராம வீட்டிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த நண்பருக்கு, எழுத்தர்கள் எவ்வளவு நேரம் தமது பேட்டிக்காக நடையில் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காகத் தான். கடைசியில் வேண்டிய அளவு பேசிவிட்டு, அல்லது உண்மையில் மௌனமாயிருந்து முடிந்து, வசதியான சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து இன்பமாகச் சுருட்டு புகைத்து முடிந்ததும் முக்கிய நபர் திடீரென எதோ நினைவுக்கு வந்தது போன்று, கத்தைக் காகிதங்களும் கையுமாகக் கதவருகே நின்று கொண்டிருந்த தமது செயலாளனை விளித்து, “அங்கே யாரோ எழுத்தன் காத்திருக்கிறான் போலிருக்கிறது பேட்டிக்கு. அவனை வரச் சொல்லும்” என்றார்.

அக்காக்கியின் எளிய தோற்றத்தையும் பழைய உடுப்பையும் கண்டதும் முக்கிய நபர் சட்டென அவன் பக்கம் திரும்பி, தமக்கு தற்போதைய வேலையும் ஜெனரல் பதவியும் கிடைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தனிமையில் நிலைக் கண்ணாடிக்கெதிரே நின்று பயிற்சி செய்து கொண்ட கடுமையான குரலில், “உமக்கு என்ன வேண்டும்?” என்று வெடுக்கெனக் கேட்டார்.

ஏற்கெனவே வேண்டிய அளவு அச்சமும் நடுக்கமும் நிறைந்திருந்த அக்காக்கிய், சற்றுத் தடுமாற்றங் கொண்டு, “வந்து…” “அதாவது…” என்று அசைச் சொற்களை வழக்கத்துக்கு அதிகமாகவே உபயோகித்து, தன் மேல்கோட்டு புத்தம் புதியதென்றும் மனிதத்தன்மையற்ற முறையில் அது அபகரிக்கப்பட்டு விட்டதென்றும், தான் முக்கிய நபரிடம் வந்திருப்பது, அவர் தக்கவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லியோ, நகரப் போலீஸ் கமிஷனருக்கோ வேறு யாருக்கேனுமோ எழுதியோ தனக்கு மேல்கோட்டு திரும்பக் கிடைக்கச் செய்வார் என்ற நம்பிக்கையுடனேயே என்றும், தன்னால் இயன்றவரை, குழறும் நா அனுமதித்த அளவுக்கு விவரமாக விளக்கினான். அவன் இவ்வாறு தம்மை அணுகியது முறையற்ற சொந்தம் பாராட்டுதல் என்று என்ன காரணத்தாலோ முக்கிய நபருக்குப் பட்டது. “என்ன அய்யா, ஒன்றும் புரியவில்லையே! ஒழுங்கான நடைமுறை உமக்குத் தெரியாதா என்ன? இங்கே எதற்காக வந்தீர்? விவகாரத்தை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதோ உமக்கு? இதைப் பற்றி விண்ணப்பம் எழுதி நீர் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பம் தலைமை எழுத்தர் பார்வைக்கு வந்திருக்கும், அதாவது அலுவலகப் பிரிவின் தலைவருக்கு; அவர் அதை என் செயலாளருக்கு அனுப்பியிருப்பார், செயலாளர் என் கவனத்துக்கு அதைக் கொணர்ந்திருப்பார்…” என்று கடுகடுத்த குரலில் சீறினார்.

அக்காக்கிய் தன்னிடமிருந்த சொற்ப மனோ தைரியத்தை முழுவதும் திரட்டி, மேல்காலெல்லாம் வியர்த்துக் கொட்ட, “ஆனால், பெரிய துரை அவர்களே, நான் மாட்சிமை பொருந்திய தங்களைத் தொந்தரவுபடுத்தத் துணிந்தது எதனாலென்றால், செயலாளர்கள் இருக்கிறார்களே இவர்கள்… அதாவது… வந்து… நம்பகமானவர்கள் அல்லர்…” என்று ஆரம்பித்தான்.

படிக்க:
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

“என்ன? என்ன? என்ன சொன்னீர்?” என்றார் முக்கிய நபர். “இம்மாதிரிப் பேச எங்கிருந்து ஐயா வந்தது உமக்கு நெஞ்சுத் துணிச்சல்? இந்த உதவாக்கரை எண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன உமக்கு? தங்கள் தலைவர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் எதிராக இளைஞர்களுக்கிடையே பரவிவரும் இந்தக் கலக உணர்ச்சிக்கு என்ன ஐயா அர்த்தம்?” என்று விளாசினார். அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது என்பதை முக்கிய நபர் கவனிக்கவில்லை போலும். அவனை இளைஞன் என்று அழைத்தது, எழுபது வயதானவனுடன் ஒப்பிட்டால் அவன் இளைஞன் என்ற பொருளிலேயே என நினைக்க வேண்டியிருக்கிறது. “யாரிடம் இதையெல்லாம் சொல்லுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு? உம் எதிரே நிற்பது யார் என்பது புரிகிறதா ஐயா? புரிகிறதா ஐயா இது? புரிகிறதா ஐயா? உம்மைத் தான் கேட்கிறேன்.”

இவ்வாறு கூறுகையில் அவர் காலைத் தொப்பென்று அடித்துக் குரலை உச்சத் தொனிக்கு உயர்த்திவிடவே, அதனால் குலைபதறியது அக்காக்கிய் அக்காக்கியெவிச் ஒருவனுக்கு மட்டுமே அல்ல. அக்காக்கிய் கதி கலங்கிப்போய், கால்கள் குடுமாற, மெய்விதிர்க்க, நிற்க முடியாமல் தத்தளித்தான். வாயில் காப்போர் ஓடிவந்து தாங்கியிராவிட்டால் அவன் துவண்டு தரையில் சாய்ந்திருப்பான். அநேகமாக உணர்ச்சியற்ற நிலையில் அவனை வெளியே கொண்டு போனார்கள். விளைவு தாம் எதிர்பார்த்ததையும் விஞ்சி விட்டது என்பதைக் கண்டு திருப்தியடைந்த முக்கிய நபர், தமது வாய்ச்சொல் ஒருவனை உணர்விழக்கச் செய்யும் வன்மை கொண்டது என்ற எண்ணத்தால் உவகை மீதார, தமது நண்பர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவரைக் கடைக் கண்ணால் நோக்கினார்; நண்பர் மனநிம்மதியின்றித் தவிப்பதையும், தாமே அரண்டு போயிருப்பதையும் பார்த்து அவருக்கு மன நிறைவு ஏற்படாமலில்லை.

எப்படி மாடிப்படி இறங்கினோம், எப்படித் தெருவுக்கு வந்தோம் என்பது ஒன்றுமே அக்காக்கிய்க்கு நினைவில்லை. அவன் கை கால்கள் உணர்விழந்து மரத்துப் போய் விட்டன. வாழ்வில் ஒரு முறைகூட அவன் ஒரு முக்கிய நபரால், அதுவும் வேறு அலுவலக முக்கிய நபரால் இவ்வளவு கடுமையாக அதட்டி உருக்கப்பட்டது கிடையாது. வீதியில் இரைச்சலுடன் அடித்துக் கொண்டிருந்த பனிப் புயலில், நடைபாதையிலிருந்து இடறி இடறி விழுந்தவாறு நடந்தான்; காற்றோ, பீட்டர்ஸ்பர்க் வழக்கப்படி எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாச் சந்துகளிலிருந்தும் எககாலத்தில் வீசிக் கொண்டிருந்தது. கணப்போதில் அவன் தொண்டை அழன்றுபோயிற்று, எப்படியோ தள்ளாடியவாறு வீடு வந்து சேர்ந்ததும் அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. மேலெல்லாம் வீக்கங்கண்டிருந்தது. உடனே படுக்கையில் படுத்தான். அதிகாரிகளின் சரியான விளாசல் சில சமயங்களில் அவ்வளவு வன்மையுள்ளதாகும்!

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்

நூல் வெளியீடு – கருத்தரங்கம்

நாள் : 30.01.2020, மாலை 5 மணி.
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம்.

நூல் வெளியீடு :

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

மொத்தம் 16 பக்கங்கள்
நன்கொடை : ரூ 10/-

***

கருத்தரங்கம் : அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் : கல்வி உரிமையைப் பறிக்கும் இருபெரும் ஆபத்துகள் !

தலைமை :

பேரா. வீ. அரசு
ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.

சிறப்புரை :

பேரா. கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.

திரு. சக்திவேல்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை.

மருத்துவர் ருத்ரன்
மனநல மருத்துவர், சென்னை.

அனைவரும் வாரீர்…!

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை
Coordination Committee for Common Education – CCCE, Chennai.

புத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா !

சில சமயங்களில் புத்தகம் எழுதுவதுகூட சிலரது வாழ்வை நாசமாக்கிவிடும். அதற்கு உதாரணம், வரலாற்றுப் பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா.

1998-ல் சுஷில் ஸ்ரீவஸ்தவா குஜராத்தில் உள்ள மகாராஜா சாயாஷிராவ் பல்கலைக்கழகத்தில் வரலாறு பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அப்போது கல்வித்துறை அமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் – பிறகு குஜராத்தின் முதல்வரானவர் – பா.ஜ.க எம்.எல்.ஏ.வான மது ஸ்ரீவத்ஸவா மூலம் ஒரு செய்தியை அனுப்புகிறார். அதாவது சுஷில் குஜராத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும். அதன் பின் அனில் கானே அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பிறகு, சுஷிலை அழைத்து “உடனடியாக வெளியேறாவிட்டால் கை, கால்களை உடைத்து விடுவார்கள். ஏன் இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறாய்?” என்று கேட்கிறார்.

பயந்துபோன சுஷில் சீக்கிரமே அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேலை தேடிக்கொண்டு சென்றுவிடுகிறார்.

அப்படி அவர் என்ன புத்தகத்தை எழுதினார்? “The Disputed Mosque: A Historical Inquiry” என்பதுதான் அந்தப் புத்தகம்.

நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, எழுதப்பட்ட புத்தகம் இது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி குறித்து துல்லியமான தகவல்களுடன் எழுதப்பட்ட புத்தகம் இது. 1853-க்குப் பிறகுதான், பாபர் மசூதியை சொந்தம் கொண்டாடும் போக்கு ஆரம்பித்தது. அதற்கென ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பதுதான் இவரது புத்தகத்தின் வாதம்.

அயோத்தியில் முதன் முதலாக அலக்ஸாண்டர் கன்னிங்கம் தொல்லியல் சர்வேயை மேற்கொண்டபோது, அங்கே பௌத்த விகாரைகளின் இடிபாடுகள் இருந்தனவே தவிர, கோவில்களின் இடிபாடுகள் எதையும் அவர் பார்க்கவில்லை என்பதையும் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் சுஷில்.

படிக்க:
♦ நாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54
♦ அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !

இந்தப் புத்தகத்தை எழுதியதால் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனிமைப்படுத்தப்பட்டு, மனம் நொந்து 2018-ல் செத்தே போய்விட்டார் சுஷில்.

இதைவிட கொடூரம் அந்தப் புத்தகம் இப்போது எங்கேயுமே கிடைப்பதில்லை என்பதுதான். Archive.orgல் இரவல் பெற்று வாசிக்கலாம் அவ்வளவுதான்.

சுஷில் ஸ்ரீவஸ்தவா குறித்து ஒரு அட்டகாசமான கட்டுரையை கேரவான் இதழ் வெளியிட்டிருக்கிறது. அதற்கான இணைப்பு:

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

எம்புள்ளைய விரட்டிட்டீங்களே !

டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது துர்கா. இப்போ அஞ்சாவது படிக்குது. ஆனா ஆறாவது படிச்சிருக்கணும். மொத வகுப்பு சேர்ந்ததிலிருந்தே டிசம்பர் கடைசியில துர்காவோட அப்பா அம்மா அத கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய்டுவாங்க வீட்ல பாத்துக்க ஆளில்லாததால.”நம்ம பள்ளி விடுதியோடு இணைஞ்சது, இங்கயே விட்டுட்டுப் போங்க”னு சொல்லி எவ்ளோ கூப்பாடு போட்டாலும் அவுங்கக் கேட்டதேயில்ல.

டிசம்பர் மாசம் கடைசியில போய் ஏப்ரல் மாசம் யுகாதி சமயம் வருவாங்க. கேரளாவுல இருந்து வந்ததும் அதுவே பள்ளிக்கூடத்துக்கு வந்துடும்… இல்லேனா போய்ட்டுக் கூப்டு வந்துருவேன். நாலாவது படிக்கும்போது (போனவருசம்) என்னனு தெர்ல… அவுங்க அப்பா அம்மா கூட கேரளாவிக்கு மிளகு எடுக்கப் போகல அது. ரொம்ப ஷாக்கிங்காதான் இருந்தது. “ஏன் மா இந்த வருசம் போகாமவிட்டுட்ட”னு கேட்டதுக்கு “படிக்கணும் மிஸ்”னு சொன்னிச்சி. அவ்ளோ சந்தோசமா இருந்துச்சி.

இந்தக் கல்வியாண்டின் அரையாண்டு லீவுக்குக்கூட நான் வீட்டுக்குப் போகல. காரணம் பள்ளியில கொஞ்சம் வேல பாக்கி இருந்துச்சி & எலெக்ஷன் டியூட்டி. 24-ம் தேதி பள்ளிக்கூடத்துக்கு வந்து என்கூடவே இருந்துச்சி. துர்கா மட்டுமில்ல… டேஸ்காலர்ஸ்(13) எல்லாருமே!

படிக்க :
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
♦ வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !

“மிஸ்….காலையில 6-மணி பஸ்க்கு துர்கா அவங்க அப்பாம்மா கூட கேரளா போயிடிச்சி”னு மத்த புள்ளைக அடுத்தநாள் (25-ம் தேதி) சொல்றாங்க.
“போனவருசம் போகலியே.. இந்த வருசம் ஏன் திடீர்னு கிளம்பிப் போச்சி? நேத்துக் கூட வந்துச்சி… ஒரு வார்த்தக் கூட சொல்லலியே”னு கேட்டதுக்கு.

“மிஸ்… இந்த வருசம் அஞ்சாவதுக்கு பப்ளிக் எக்ஸாம் வைக்கிறாங்கல்ல… அதுக்கு பயமா இருக்குதாம்… அதான் போயிடிச்சாம்”னு மத்த புள்ளைக சொன்னபோது… “ஐயோ…..துர்கா” எனக்கத்தி வாய்விட்டுக் கதறி அழத் தோனிச்சி.

“எதுக்கும் பயப்படாதீங்கமா… அதெல்லாம் சும்மா… சாதாரண டெஸ்ட் மாதிரிதான்”னு நான் சொல்லியும் நீங்க அரசாணை போட்டு, டிவிலயும், பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியர் மூலமும், மத்த ஆசிரியர்கள் மூலமும் தெரியப்படுத்திய பொதுத்தேர்வு என்ற வார்த்தை, எம்புள்ளைக்குப் பயத்தைக்கூட்டி, பள்ளியைவிட்டுக் கேரளாவுக்குத் தொரத்தியிருக்கு.

துர்கா மட்டுமில்ல… ஆனந்தன், சிவா, அஜீத் இவங்க எல்லோருமே கேரளாவுக்குப் போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குத் திரும்ப வராம நின்னுபோனவங்க.
அவங்கள தொரத்தி, தொரத்திப் புடிச்சிப் பார்த்தும் தோத்துப் போய் நிக்குறேன். இதுல துர்கா மட்டும்தான் வந்துகிட்டிருந்துச்சி. இப்போ அந்தப் புள்ளைய நான் என்ன சொல்லி வரவைக்கிறதுனு தெர்லியே…

“வாழ்வாதாரம் தேடி நாலஞ்சு மாசத்துக்குக் கேரளாவுக்குப் போற பெத்தவங்க தம்புள்ளைகளையும் சேர்த்தே கூப்பிட்டுட்டுப் போயிட்றாங்க. அதனால அவுங்களுக்கு இங்கயே எதாவது ஒரு நிரந்தரமான வேல வேணும்; அதுக்காக ஒரு மினி தொழிற்சாலை (இந்த மலையில் பருவகாலத்திற்கேற்ப விளையும் பயிர்களை அடிப்படையாகக் கொண்டு) ஒன்ன உருவாக்கினா… அவுக இங்கேயே இருப்பாங்க… புள்ளைகளோட படிப்பும் கெடாது”னும்…. இல்லேனா… “கேரள அரசுக்கிட்ட பேசி, பெரிய பெரிய மிளகுத் தோட்டத்துக்கு மிளகு எடுக்க வர்றவங்க யாரும் 6-14 வயசு இருக்கிற குழந்தைகளைக் கூட்டிட்டு வரக்கூடாது; அப்படி வந்தா இங்க வேல கிடையாதுனு சொல்லச்சொல்லுங்க”னும் State Planing Commission, UNICEF,  Child Rights Commission and Collectorate வரை கத்திட்டேன் 2015-லிருந்து. ஆனா இதுநாள் வரை அதுக்கான எந்த நடவடிக்கையும் யாருமே எடுக்கல. இந்த மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கபபடும் நிதி கொஞ்ச நஞ்சமல்ல… அதெல்லாம் இறுதியில் என்ன ஆகிறது என்று கூடத் தெரிவதில்லை.

இந்த மலையிலுள்ள 372-க்கும் (தி.மலை) மேற்பட்ட வாழ்விடப்பகுதிகளிலுள்ள 100 பள்ளிகளிலிருந்தும் ஒவ்வோராண்டும் குழந்தைகள் கேரளாவுக்குப் போய்க்கிட்டேதான் இருக்காங்க. இதைத் தடுப்பதற்கான வழியை இந்த அரசு ஒருபோதும் சொல்லாது… இவர்களே நிரந்தர கேரள மிளகெடுப்பவர்களாக மாற்றும் முயற்சியைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது.

வாழ்த்துகள் தமிழக அரசே!

குறிப்பு: துர்காவின் ஃபோட்டோ இதில்தான் தெளிவாக இருந்தது.

நன்றி : ஃபேஸ்புக்கில் மகாலெட்சுமி

இதையும் பாருங்கள் :

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு