Tuesday, August 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 267

‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்

க்கீல் அலுவலகம். அன்றைக்கு காலையில் அலுவலகத்தில் அன்றாட வேலைகளை செய்ய துவங்கி இருந்த பொழுது… நண்பனின் உறவுக்கார பெண்மணி  அவருடைய அண்ணனுடன் எங்களைத் தேடிவந்தார். அந்த பெண்ணுக்கு வயது முப்பது இருக்கும். “நேற்றைக்கு முதல்நாள் காலையில் வீட்டை விட்டுப்போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்லுக்கு கூப்பிட்டா, போகவும் மாட்டேங்குது! நேற்றைக்கே திரும்பிவிடுவார் என எதிர்பார்த்தேன். வரவில்லை. எனக்கு தெரிந்த எல்லோரிடமும் கேட்டுப்பார்த்துவிட்டேன். யாருக்கும் விவரம் தெரியவில்லை” என எப்பொழுது வேண்டுமென்றாலும் கண்ணீர் வந்துவிடும் அளவில்.. அடக்கிக்கொண்டு பேசினார்.

“இப்ப எங்கே போயி தேடுவது? போலீசில் ஒரு புகார் கொடுத்துவிடலாமா?” அந்த பெண்ணிடமே கேட்டோம்.

“இங்க டாஸ்மாக் கடைக்கு லீவு விட்டுட்டாங்கன்னா அவரும், அவங்க கூட்டாளியும் சேர்ந்து டிரெயின் ஏறி (ஆந்திரா) சூலூர்ப்பேட்டை போயி, முன்னாடி ஒருமுறை குடிச்சாங்கண்ணா!  அதே கூட்டாளிக்கு போன் அடிச்சா ரிங் போகுது! ஆனா எடுக்க மாட்டேங்குகிறார்.” என்றார். பர பரவென வேலைகளில் இறங்கினோம். அந்த கூட்டாளியின் வீட்டை விசாரித்து கண்டுபிடித்தோம்.

நிறைபோதையில் இருந்தார். எதையும் கேட்டு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தண்ணீரை முகத்தில் தெளித்தும், வேறு வகைகளில் கேட்டும் பிரயோஜனமில்லை. போதை இறங்கும் வரை, காத்திருக்க வேண்டியது தான். காத்திருந்தோம்.  பிறகு கொஞ்சம் தெளிந்து, “சூலூர்ப்பேட்டைக்கு போய் குடிச்சோம். திரும்ப டிரெயின்ல நான் ஏறிட்டேன். அவனால ஏறமுடியவில்லை. அடுத்த டிரெயின்ல வந்துருவான்னு நினைச்சேன். இன்னும் வரல்லையா!” என அரைபோதையில் நம்மையே திரும்ப கேட்டார்.

சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை. ஆந்திரா போய் குடித்துவிட்டு காணாமல் போனால்… விசும்ப ஆரம்பித்தார். அப்போதே மதியம் 12 மணியாகிவிட்டது. சூலூர்பேட்டை போய்த்தான் தேடனும் என்ற முடிவுக்கு வந்தோம்.

படிக்க :
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டனம் !
♦ மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

நானும் சக வழக்கறிஞரும், ஆந்திரா என்பதால் தெலுங்கு கொஞ்சம் தெரிந்த இன்னொரு வழக்கறிஞர், காணாமல் போனவருடைய மனைவி, அவருடைய அண்ணன், அவரது மனைவி என ஆறு பேரும் திருவெற்றியூர் போய் டிரெயின் ஏறினோம். மொத்தம் 80 கிமீ. டிக்கெட் விலை ரூ.20. டாஸ்மாக் விடுமுறை நாட்களில் இங்கிருந்து டூப்ளிகேட் சரக்கு அடிச்சு சிரமப்படுறதுக்கு அடுத்த மாநிலத்திற்கு போய் சரக்கடிச்சிரலாம் என்ற தொலைதூர சிந்தனை தான் இவ்வளவு தூரம் போகவச்சிருக்கு!

வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. “இரண்டு பிள்ளை வைச்சிருக்கேண்ணா!” என  அந்த பெண் அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது.  குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.

மதியம் 2.30மணிக்கு ஒரு வழியாக சூலூர்ப்பேட்டை வந்து சேர்ந்தோம். நிலைய அதிகாரியைப் போய் பார்த்து விசயத்தைச் சொன்னோம். தமிழ்நாட்டுல டாஸ்மாக் கடை லீவுன்னா ரயிலேறி கூட்டம் கூட்டமா வந்து குடிக்க வந்துவிடுகிறார்கள். ஒரு ரயில்ல 1000 பேர், 1500 பேரெல்லாம் வருகிறார்கள் என தெலுங்கில் அலுத்துக்கொண்டார்.

பிறகு, கடந்த இரண்டு நாட்களில் இந்த ஏரியாவில் இரண்டு பேர் ரயிலில் அடிப்பட்டு இரண்டு பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அதில் ஒருவர் அம்பத்தைந்து வயதுகாரர். இன்னொருவருக்கு முப்பதைந்து வயதிருக்கும் என அவர் சொன்னதும், அந்த பெண்மணி அழவே ஆரம்பித்துவிட்டார்.

இறந்ததுமே புகைப்படம் எடுத்து பைலில் வைத்துக்கொள்கிற நடைமுறை ரயில்வேதுறையில் இருந்ததால், அதை உடனே வாங்கி சோதித்தோம்.  இரண்டு புகைப்படங்களுமே கோரமாய் இருந்தன. முப்பதைந்து வயதுகாரருடைய புகைப்படம், அவர் போட்டிருந்த ஆடைகளும் நாம் தேடிவந்தவருடையதில்லை. நிம்மதி அடைந்தோம்.

பிறகு அங்கிருந்தவர்களிடம் கையில் கொண்டு போயிருந்த புகைப்படம் காட்டி விசாரித்துக்கொண்டிருந்த பொழுது, மாலை ஐந்துமணியாகிவிட்டது. அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் செல்லிலிருந்து அழைப்பு வந்தது. வீட்டுக்கு வந்ததாகவும், மனைவியை காணோம் என உடனே அழைத்திருக்கிறார். இந்தம்மா இந்த விவரங்களைத் தெரிவித்ததும், “நான் என்ன சின்ன பிள்ளையா, வீடு வந்துசேர தெரியாது!” என கெத்தாக பேசினார்.  நேரில் பார்த்திருந்தால், இரண்டு அறைவிடும் அளவிற்கு கோபம் வந்தது. ஆள் கிடைத்துவிட்டார் என்றதும் எல்லோருக்குமே நிம்மதி. உடனே அடுத்த வண்டியை பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.

குடிச்சது சரி! அதென்ன ஊர் வந்து சேர இரண்டு நாள் ஏன் ஆச்சு? என பிறகு ஆற அமர விசாரித்த பொழுது, நல்லா தண்ணியடிச்சிட்டு, தெற்கு பக்கம் தமிழ்நாட்டு ரயில்ல ஏறுவதற்கு பதிலா, வடக்கு பக்கம் போகிற ரயில்ல போதையில் ஏறிவிட்டார். போதை தெளிஞ்சு ஊர்ப்பக்கம் வருவதற்கு தாமதமாகி இருக்கிறது.

படிக்க :
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்
♦ 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

டாஸ்மாக் இப்படி எத்தனையோ குடும்பங்களின் வாழ்வை தினந்தோறும் சீரழித்து வருகிறது. எவன் குடி கெட்டால் என்ன? யார் தாலி அறுந்தால் என்ன? எங்களுக்கு கல்லாப்பெட்டி நிறைஞ்சா போதும் என்கிற உயர்ந்த சிந்தனை தான் அரசுக்கு இருக்கிறது.

– வழக்கறிஞர் நூர்தீன்

சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !

சிந்துவெளி நாகரிகத்தை நிதியமைச்சர் சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் என்று குறிப்பிட்டது குறித்த சர்ச்சையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகளும் வரலாற்றுப் பேராசிரியருமான உபிந்தர் சிங்கூட சிந்துவெளி நாகரிகத்தை “சரஸ்வதி நாகரிகம்” என்று குறிப்பிடுகிறார் என்று கூறி ஒரு ஸ்க்ரீன் ஷாட் பகிரப்படுகிறது.

அதில் ஆச்சரியமளிப்பது, அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் இருக்கும் தகவல்களைக்கூட யாரும் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.

உபிந்தர் சிங்கின் History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century என்ற புத்தகத்திலிருந்துதான் அந்த ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டது. அதில் அவர் என்ன சொல்கிறார்?

//The vast geographical extent of the civilization should make the objection to the terms ‘Indus’ or ‘Indus valley’ civilization obvious. The terms ‘Indus–Sarasvati’ or ‘Sindhu–Sarasvati’ civilization are also used by some scholars. This is because a large number of sites are located on the banks of the Ghaggar-Hakra river, which is identified by some scholars with the ancient Sarasvati mentioned in the Rig Veda. However, the sort of objection to the terms ‘Indus’ or ‘Indus valley’ civilization can also be applied to the terms ‘Indus–Saraswati’ or ‘Sindhu–Saraswati’ civilization. Since civilization was not confined to the valleys of the Indus or Ghaggar-Hakra, the best option is to use the term ‘Harappan ’ civilization. This is based on the archaeological convention of naming a culture after the site where it is first identified.//

மேலே இருக்கும் பகுதியின் சுருக்கமான தமிழாக்கம் இது:

இந்த நாகரிகம் பெரும் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருப்பதால், அதனை சிந்து அல்லது சிந்துச்சமவெளி நாகரிகம் என்று குறிப்பிடுவதற்கு எதிர்ப்புக் காட்டப்படுகிறது. சில அறிஞர்கள் சிந்து – சரஸ்வதி நாகரிகம் என்ற பதங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நாகரிகத்தில் அமைந்துள்ள பல இடங்கள், Ghaggar-Hakra நதிக்கரையில் அமைந்திருப்பதுதான். இந்த நதியைத்தான் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பழங்கால சரஸ்வதி நதியாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆனால், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்வதற்கு எழும் எதிர்ப்பு சிந்து – சரஸ்வதி நாகரிகம் என்று சொல்வதற்கும் பொருந்தும். ஏனென்றால் இந்தப் பகுதிகள், சிந்து அல்லது Ghaggar-Hakra நதிகள் பாயும் சமவெளிப் பகுதிகளுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. அதனைத் தாண்டியும் இருப்பதால், இந்த நாகரிகத்தை ஹரப்பா நாகரிகம் என்று குறிப்படுவதே சிறப்பானது. முதன் முதலில் எந்த இடத்தில் ஒரு நாகரிகம் அடையாளம் காணப்பட்டதோ அந்த இடத்தைக் குறிப்பிடுவது என்ற தொல்லியல் ஆராய்ச்சி மரபின் அடிப்படையில் இதைச் செய்யலாம்.

இதுதான் உபிந்தர் சிங் சொல்லியிருப்பது. அதாவது இதை சரஸ்வதி நாகரிகம் என்றோ சிந்து – சரஸ்வதி நாகரிகம் என்றோ அழைக்காமல் ஹரப்பா நாகரிகம் என்று அழைப்பதே பொருத்தமானது என்கிறார் அவர்.

ஆனால், அவர் எதைச் சொல்கிறாரோ, அதற்கு மாறான ஒரு கருத்தை அவர் சொல்வதாக மேற்கோள் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !

உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரீகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.

முகநூலில் : Muralidharan Kasi Viswanathan

disclaimer

சமீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக்கதை !

மீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக் கதையினை விழிப்புணர்வுக்காக பகிர்கிறேன். நிச்சயம் அவரின் கதையில் நமக்கு படிப்பினை உண்டு.

சகோதரிக்கு பிரச்சினை உயர் ரத்த அழுத்தம் / மன அழுத்தம் / தூக்கமின்மை. மன அழுத்தத்திற்கு காரணம் அவரது கணவரின் முதிர்ச்சியடையா முன்கூட்டிய மரணம் .. இதை நாங்கள் Premature Death என்போம்.

70 வயதுக்கு குறைவாக மரணம் அடையும் அனைவரையும் இந்த Premature death என்ற வரையறைக்குள் கொண்டு வருகிறோம். ஒன்றாக இணைந்து வாழ்வோம் என்று இணைந்த மகன்றில் பறவையுள் ஒன்றை மட்டும் காலம் பறித்துக்கொண்டால் இணை பிரிந்த மற்றொரு பறவை என்ன செய்யும்..?

தாயை பிரிந்த மகனுக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறேன். மகனை பிரிந்த தாய்க்கு மகனாக நின்று பேசியிருக்கிறேன். ஆனால், இணை பிரிந்த ஒருவருக்கு ஆறுதல் கூறுவது எனக்கு இன்னும் கைவராத விசயமாகவே இருக்கிறது..

இவரின் கதையில் நமக்கான பாடம் படிக்க தொடர்வோம்.

(மாதிரி படம்)

அன்னாரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இப்பூவலக வாழ்வை நீத்து மண்ணுலகத்துக்கு சென்றுள்ளார். திருமணமான பதினேழு வருடங்களில், பதினேழு வருடங்களாகவும் அவர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.

வானம் பார்த்த பூமி இங்கு எங்கள் கஞ்சிக்கும் குறையில்லாமல் பார்த்துக்கொள்ள கிழக்கே வளைகுடா நாடுகள் மேற்கே மலேசிய தீபகற்பம்.

கடலோடிகளான இளைஞர்கள் வாழ்க்கையில் செய்யும் ஒரு சடங்காக திருமணம் இருக்கிறது. ஆசை அறுபது நாள் என்பார்கள். அந்த அறுபது நாள் கூட ஒன்றாக வாழாத இணைகள் இங்கு உண்டு.

மீண்டும் ரிட்டர்ன் டிக்கெட் போட்டு விட்டு புதிதாய் திருமணமான மனைவியுடன் வாழும் ஒவ்வொரு நாளும் இன்னும் நீடிக்காதா என்ற எண்ணமே எங்கள் கடலோடிகளுக்கு இருக்கும் …

பிரிதல் பிரிதல் நிமித்தமும் எங்கள் வாழ்க்கையில் புரையோடிவிட்டதால்
ஆங்காங்கே பச்சை தெரிந்தாலும் எந்நிலம் எப்போதும் பாலைதான்..

கதைக்குள் செல்வோம்.. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கணவர் ஊருக்கு வந்து இரண்டு மாதம் இருப்பாராம். இரண்டு வருடம் வாழ நினைத்த வாழ்க்கையை இரண்டு மாதங்களில் வாழ்வாகய்யா.. கடலோடிகளின் மனைவிக…

இப்படி இரண்டு முறை வந்து சென்றதில்.. இரண்டு குழந்தைகள்.. அதற்குப்பிறகு இருவருக்குள்ளும் சிறு ஊடல். எந்த காட்டுத்தீயும் சிறு பொறியில் தானே துவங்குகிறது.. சிறு ஊடல் .. பெரு ஊடலாகி… வெண்பாவாக முடிய வேண்டியது காண்டமாக நீண்டு.. அதற்குப்பிறகான பத்து வருடங்கள் தலைவனும் தலைவியும் சந்திக்கவே இல்லை.

இருப்பினும் கணவர் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் தேவையான பணத்தை அனுப்பியுள்ளார். பிள்ளைகளுடன் தினமும் பேசிக்கொள்வாராம்.

இதற்கிடையில் அவருக்கு வெளிநாட்டு வாழ்க்கை தரும் வரங்களான
ரத்த கொதிப்பு .. சர்க்கரை நோய் வர.. இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு ஸ்டெண்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன…

மழைக்கு இணங்காத மண் இல்லை. சூரியனுக்கு இணங்காத பனித்துளி இல்லை. அதுபோல,தலைவனுக்கு இணங்காத தலைவி இல்லை.

கணவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மனைவி ஊடலைக் கைவிட்டு பேச ஆரம்பித்து இரண்டு வருடங்களாக ஊருக்கு வாருங்கள் வாருங்கள் என்று அழைத்து…

ஒருவழியாக மூன்று வருடங்களுக்கு முன்பு ரமலான் மாதத்திற்கு இரண்டு மாதம் முன்பு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்கு பின் தாய்மண்ணை முத்தமிட்டிருக்கிறார் தலைவர்..

இளைப்பு நெஞ்செரிச்சல் போன்றவை அடிக்கடி வந்திருக்கிறது. இருப்பினும், தான் வாழாத இந்த வாழ்வை மனைவி மக்களுடன் வாழும் ஆசையில் முதல் இரண்டு மாதங்கள் இதய நல சிறப்பு நிபுணரை சந்திக்கவில்லை.

பத்துக்கு பத்து அறையில் முடங்கிக்கிடக்கும் அவலம்.

என் தந்தை வெளிநாட்டில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தவர். “தினமும் வேலை முடிந்தவுடன் உணவு சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து உத்திரத்தை பார்க்கும் போது ஒரு வெறுமை இதயத்தை கூறுபோட்டு அழுத்தும் அந்த வலிக்கு இணையே இல்லை” என்று கூறுவார்.

ஆம்… குடும்பத்தை பிரிந்து பிழைப்பு தேடி கடலோடியாய் வாழும் ஆண் தினமும் அனுபவிக்கும் பிரசவ வலி ஐயா அது..

இப்படியாக … கார்டியாலஜிஸ்ட்டை சந்திக்காமல் இரண்டு மாதங்கள் வாழ்ந்த தலைவனுக்கு ரமலான் மாதத்தில் நடுபத்தில் லேசான நெஞ்சு வலி வரவே நான்மாடக்கூடல் நகரில் உள்ள கார்டியாலஜிஸ்ட்டிடம் காட்ட.. அவர் உடனே ஆஞ்சியோ கிராஃபி எனும் இதய ரத்த நாள அடைப்பை அறியும் பரிசோதனை செய்ய.. முக்கியமான ரத்த நாளங்களில் 90% க்கு மேல் அடைப்பு உள்ளது . ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது.
உடனே பைபாஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் அட்டாக் வந்து உயிர் போகும் என்றே எச்சரித்திருக்கிறார் அவர்.

எச்சரிக்கையை துச்சம் செய்திருக்கிறார் கணவர். அவர் கூறிய காரணம்
தான் இதுவரை ஒரு பெருநாள் கூட குடும்பத்துடன் கொண்டாடியதில்லை என்பதே.. இந்த ஆசையில் தவறேதுமில்லையே, வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காத மனுசன் இதுக்கு கூட ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படலாம். ஆனால் அதுவே அவரது கடைசி ஆசையாகிப்போச்சே..

தன் வாழ்நாளில் மனைவி மக்களுடன் கொண்டாடிய ஒரே பெருநாளே அவரது கடைசி பெருநாளாகவும் ஆகி விட்டது. பெருநாள் கொண்டாடிய அடுத்த நாளாவது அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டும். சரியாக பெருநாள் முடிந்த ஆறாவது நாள்.. இதை ஆறு நோன்பு என்போம். அட்டாக் வந்து அன்னார் உயிர் நீத்தார்.. 😭

அந்த குடும்பத்திற்கு இறைவன் நாடியது ஒரு பெருநாள்தான் என்று எடுத்துக்கொண்டு கடந்து விடலாம். ஆனாலும் இங்கு அந்த தலைவன் செய்த மிகப்பெரிய பிழையை சுட்டி அதில் கொட்டு பட்டு பாடம் கற்காமல் விட்டால் அந்த பிழை நம்மையும் துரத்தி ஆட்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த கணவர் தாய்மண்ணை அடைந்த உடனே மருத்துவரை சந்தித்து உடனே பைபாஸ் செய்திருக்கலாம்.  அல்லது  ரமலான் மாதம் என்று பார்க்காமல் உடனே பைபாஸ் செய்திருக்கலாம். அல்லது, அவர் கூறியதைப்போல பெருநாளை கொண்டாடி விட்டு அடுத்த நாள் போய் அட்மிட் ஆகியிருக்கலாம்.

வாய்ப்புகளை வாழ்க்கை வழங்கிக்கொண்டே இருக்க.. எதையும் ஏற்காமல் மரணத்தை ஆரத்தழுவிக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது.. அன்னாரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்…

அவனிடம் இருந்து வந்த உயிர்கள் அவனிடமே செல்கின்றன..

உடல் விசயத்தில் மருத்துவர் கூறும் அறிவுரைகளை புறந்தள்ளாமல் உடனே வினையாற்றுவது பல மாற்றங்களை செய்யும். தயவு செய்து மருத்துவ அறிவுரைகளை புறந்தள்ளாதீர்கள்… தாமதிக்காதீர்கள்.

படிக்க:
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
அகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?

மருத்துவரின் அறிவுரை என்பது அவரது படிப்பறிவு, ஏட்டறிவு , பட்டறிவு
அனுபவ அறிவின் ஒட்டுமொத்த சாரமாக வெளிவருவதாகும்.

மருத்துவரின் அறிவுரையை கூகுள் தராது. கோரா தராது. அவை குழப்பத்தையும் மனநோயை மட்டுமே தரும்.

ரத்தமும் சதையுமான உங்களின் மருத்துவரை நம்பாமல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்துக்கும் நீங்களே பொறுப்பு.. இதுவே இந்த நிகழ்வின் மூலம் நாம் அறியும் பாடம்..

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

நூல் அறிமுகம் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்

மார்க்சியத்தின் தத்துவம் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இது பொருள்முதல்வாதத் தத்துவச் சிந்தனையின் ஒரு வளர்ந்த வடிவமாகும். மார்க்சியத்திற்கு முந்தியே பல பொருள்முதல்வாதத் தத்துவங்கள் இருந்திருக்கின்றன. தத்துவம் தோன்றிய காலத்திலிருந்தே, வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வகையான பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் வழக்கிலிருந்திருக்கின்றன. ஆயின் மார்க்சிய தத்துவம், முந்திய பொருள்முதல்வாதங்களிலிருந்து பலவகைகளில் வேறுபட்டு விளங்குகிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுவது அவசியம். எனவே பொருள்முதல்வாதத்தின் வரலாற்று வடிவங்களை நாம் காணவேண்டியுள்ளது.

பொருள்முதல்வாதம் என்றால் என்ன? 

தத்துவவரலாறு சுமார் 2500 வருட காலம் கொண்டது. இந்த நீண்ட நெடிய காலத்தில் உலக நாகரிகங்களில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தத்துவவாதிகள் தோன்றியுள்ளார்கள். மனித வாழ்வு குறித்து தத்துவவாதிகள் மிகச் சிக்கலான கேள்விகளை முன்வைத்துப் பேசி வந்திருக்கிறார்கள். இந்த உலகம், மனிதன், வாழ்க்கை இவற்றின் தோற்றம் என்ன? ஆன்மா என்ற ஒன்று உண்டா? இறந்த பின் என்ன நிகழுகிறது? உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு யாது? அறிவு என்றால் என்ன? நாம் எப்படி உலகை அறிகிறோம்? உண்மை என்றால் என்ன? அதன் அளவுகோல் யாது? நமது புலனுணர்வுகள் உண்மையை நமக்குத் தருகின்றனவா? இப்படி ஏராளமான கேள்விகளோடு தத்துவவாதிகள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இக்கேள்விகளுக்குத் தத்துவஞானிகள் தந்த பதில்களும் வேறு வேறானவை. இருப்பினும், மொத்தத் தத்துவ வரலாற்றையும் இரண்டு மிகப்பெரிய அணிகளாக வகைப்படுத்தலாம் என்று மார்க்சியம் கூறுகிறது. ஒன்று பொருள்முதல்வாத அணி, மற்றது கருத்துமுதல்வாத அணி.

தத்துவப் பிரச்சினைகளுக்கு உலகியல் ரீதியான பதிலை வழங்கியவர்கள் பொருள்முதல்வாதிகள் எனப்பட்டனர். பண்டைய இந்தியத்தத்துவத்தில் பூதவாதிகள் என்றொருபிரிவினர் இருந்தனர். உலகையும் மனித வாழ்வையும் இவர்கள் இயற்கையிலுள்ள ஐம்பூதங்கள் எனப்படும் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோற்றம் பெற்றதாக விளக்கினர். இவர்கள் பொருள்முதல்வாதிகள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றிலிருந்து சிகப்புநிறம் கொண்ட வெற்றிலைக் குழம்பு உண்டாவது போல் பௌதீகப் பொருட்களின் சேர்க்கையினால் மனித உடலும் அதன் உயிர் என்ற பண்பும் உண்டாகிறது என்று இந்தியச் சார்வாகர்கள் விளக்கினார்கள். இது பொருள்முதல்வாத விளக்கம். வைசேடிகத் தத்துவம் அணுக்களின் சேர்க்கை, பிரிவு ஆகியவற்றைக் கொண்டு உலகை விளக்கியது. இதுவும் ஒரு பொருள்முதல்வாத விளக்கம்தான். உலகில் துன்பம் உள்ளது, துன்பத்திற்குக் காரணங்கள் உள்ளன, அக்காரணங்களை விலக்கத் துன்பம் விலகும் என்று புத்தர் கூறியதும் கூட பொருள்முதல்வாதப் பண்பு கொண்ட விவாதம்தான். இவ்வாறாகப் பருப்பொருட்கள், பருப்பொருள் இயக்கம், உலகியற் காரணிகள், இயற்கை ஆகியவற்றைக் கொண்டு தத்துவக் கேள்விகளுக்குப் பதில் காணுதல் பொருள்முதல்வாத அணுகுமுறையாகும்.

படிக்க:
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !
எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

இதற்கு எதிர்நிலையிலுள்ள கருத்துமுதல்வாதம். ஏதாவதொரு சூக்குமக் கருத்தின் நிலைப்பாட்டிலிருந்து உலகை, வாழ்வை விளக்குவது கருத்துமுதல்வாதம் ஆகும். இயற்கையிறந்த, உலகைக் கடந்த, அப்பாலைத்தன்மை கொண்ட, அநுபூதப் பண்பு கொண்ட காரணிகளால் இது உலகை விளக்கும். இறைவன், ஆன்மா, உலக ஆன்மா, பிரம்மம், பரிபூரணக்கருத்து என்பது போன்ற துவக்கங்களிலிருந்து இது உலகையும் வாழ்வையும் விளக்குவதால் கருத்துமுதல்வாதம் என்ற பெயர் பெற்றது. (நூலிலிருந்து பக்.3-4)

… பஞ்சபூதங்களின் (காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம்) சேர்க்கையே உலகம் என்று கூறுவதிலும் கூட குறைபாடு உண்டு. இது இன்று ரசாயன மூலகங்களின் சேர்க்கையே மனித வாழ்வு என்று கூறுவதற்கு ஒப்பாகும். மனித உடலின் பௌதீக, ரசாயன, உள்ளடக்கம் குறித்த ஒரு விளக்கமாக இது அமையலாம். ஆயின் மனித வாழ்வின் பிரத்தியேகப் பண்புகளை இந்த அணுகுமுறை விளக்காது. மனித சிந்தனையை, அனுபவங்களை, கற்பனையை இது விளக்காது. வரலாற்றை இது விளக்காது.

ஒரே பருப்பொருள் அல்லது பஞ்சபூதங்கள் அல்லது இயற்கை, இவற்றிலிருந்து வாழ்வின் சிக்கலான அம்சங்களை வருவித்தல் என்பதில் ஒருவித குறைத்தல்வாதம் உள்ளது. இறைவன், உலகம், ஆன்மா ஆகியவற்றை முதற்புள்ளிகளாக எடுத்துக்கொண்டு முழு உலகத்தையும் அவற்றிலிருந்து வருவித்தல் போலவே பருப்பொருட்களை, பஞ்சபூதங்களை முதல் புள்ளிகளாகக் கொண்டு உலகை விளக்குதலும் அடிப்படையில் ஒருவித இயக்க மறுப்பியல் சிந்தனையே. இரண்டுமே குறைத்தல் வாதங்கள்தான். முறையியல் ரீதியாக இரண்டுமே ஒன்றுதான். பண்டைய பொருள்முதல்வாதம் பொருள் என்பதைச் சடப்பொருள் என்றே புரிந்துகொண்டது. உற்று நோக்கினால் இப்படித்தான் இயற்கையையும் பஞ்சபூதங்களையும் பருப்பொருட்களையும் பண்டைய ஆன்மீகவாதமும் உயிரற்ற, ஆன்மாவற்ற சடப்பொருளாகக் கருதியது. அவற்றைச் சடப்பொருள் என ஏற்றுக்கொண்டதன் மூலம், பண்டைய பொருள்முதல்வாதம் ஆன்மீகவாதிகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக ஆகிறது.

இயக்கம் குறித்த பார்வை பண்டைய பொருள்முதல்வாதத்தில் பலவீனமான ஒரு கண்ணி, சடப்பொருளாக உலகைக் குறைப்பதோடு சடப்பொருளின் பௌதீக இயக்கங்களை மட்டுமே அது இயக்கம் எனக் கொண்டது. இடப்பெயர்ச்சி, அணுக்களின் சேர்க்கை, பிரிவு என்ற மேலோட்டமான அளவில்தான் இயக்கம் புரிந்து கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில் தொழில்யுகம் தொடங்கிய காலத்தில், அதையொட்டி விஞ்ஞானங்கள் உயிர்ப்பு பெற்ற காலத்தில் பொருள்முதல்வாதமும் மறுமலர்ச்சி பெற்றது. இக்காலத்தில் பருப்பொருள் என்ற நிலைப்பாட்டைக் கடந்து வளர பொருள் முதல்வாதம் முயன்றது. ஐரோப்பாவில் ஆளுகை செலுத்திய விஞ்ஞானங்களும் அவற்றின் கண்டுபிடிப்புகளும் பொருள் முதல்வாதத் தத்துவத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தின.

இக்காலத்திய பௌதீக, ரசாயன விஞ்ஞானங்கள் பொருட்களின் பண்புகளை ஆய்வு செய்தன. பொதுமைப்படுத்தப்பட்ட வடிவில் பொருட்களின் பண்புகள் கண்டறியப்பட்டன. திடத் தன்மை, உருவம், பரப்பு, எடை, அடர்த்தி, ஆற்றல், விசை என்பது போன்ற ஏராளமான பொருட்பண்புகள் கண்டறியப்பட்டன. பௌதீகப் பொருட்களின் இப்பண்புகள் பற்றிய அறிவு, அப்பண்புகளின் அளவு ரீதியான கணக்கீடுகள் தொழில் யுகத்தின் தேவைகளான இருந்தன. பொருட்பண்புகள், புலனுணர்வுகளால் அறியப்படுகின்றன என்பதுவும் இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய பின்புலத்தில் தொழில் யுகத்தின் பொருள்முதல்வாதமும் உருவானது. (நூலிலிருந்து பக்.5-6)

வாழ்க்கை நிகழ்வுகளை நாம் நேரடியாகக் காணுகிறோம்; அனுபவிக்கிறோம். இந்த நிகழ்வுகளை அவற்றின் நேரடித் தளத்தில் முடிந்த சம்பவங்களாகக் கொள்ளுதல் கூடாது. சம்பவங்கள், நிகழ்வுகளுக்கிடையிலான உட்தொடர்புகள் அறியப்படவேண்டும். வெறும் சம்பவங்கள், நிகழ்வுகளோடு நிறுத்திக் கொண்டால் நமது மேலோட்டமான அனுபவத் தளத்தைத் தாண்டிய உட்தொடர்புகளை அறிய முடியாமற் போய்விடும். நிகழ்வியல் தளத்திலிருந்துதான் நாம் தொடங்க வேண்டிவரும்.

… நிகழ்வுகளோடு நிறுத்திக்கொள்ளுதல் தனிமனித வாதத்தையும் அனுபவ வாதத்தையும் வளர்க்கும். சாராம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு அது நிகழ்வுகளை நிர்ணயிக்கிறது என்ற முடிவிற்கு வருவது சாராம்சத்திற்கு அதீத அந்தஸ்து வழங்குவதில் முடியும். சாராம்சவாதம் இன்னொரு வகையான ஒரு தலைப்பட்சமாகவும் கருத்துமுதல்வாதமாகவும் முடியும். (நூலிலிருந்து பக்.20-21)

நூல் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | noolulagam

ஹைட்ரோகார்பன் திட்டம் – பாஜகவுக்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்டா காங்கிரசா | கேள்வி – பதில் !

கேள்வி : ஹைட்ரோகார்பன் குறித்த பாசிச மத்திய அரசின் சட்டத்திருத்தம்..”டெல்டா” இனி என்ன செய்ய வேண்டும்?

சி. நெப்போலியன்

ன்புள்ள மக்கள்,

டெல்டா மக்கள் மட்டுமல்ல, முழு தமிழகமும் மத்திய அரசை முடக்கும் வண்ணம் போராட்டம் செய்ய வேண்டும். அடிமை எடப்பாடி அரசின் காலத்திலேயே இந்தியாவில் அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இருப்பினும் இந்தப் போராட்டங்கள் ஓரிழையில் இணைக்கப்படாமல் தனித்தனியாக நடக்கிறது. அப்படி இணையும் போது பாசிச மோடி அரசை பணிய வைக்க முடியும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : வினவுக்கு… முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பெட்டக பதில்கள் தான் பல நாட்களாக வினவில் வருகிறது… புது கேள்விக்கான பதில்களை காணாமே ஏன்…?

செல்வராஜ்

ன்புள்ள செல்வராஜ்,

கேள்விகள் நிறைய வருகின்றன. அதில் சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகளும் நிறைய வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டிய இருக்கிறது. மொத்தத்தில் பணிச்சுமையின் சிரமத்திற்கிடையில் அவ்வப்போது பதிலளிக்க முயல்கிறோம். இனி அடிக்கடி பதிலளிக்க முடியுமென்று கருதுகிறோம். பொறுத்தருளவும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கொள்கை ரீதியாக பி.ஜே.பி -க்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்களா அல்லது காங்கிரஸா?

உடுமலைப்பேட்டை சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தோமானால் காங்கிரசும், பாஜக-வும் ஓரணியில் நிற்கின்றன. இந்துத்துவம் என்று வரும் போது காங்கிரசு பாஜகவிடமிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறது. அதே நேரம் மிதவாத இந்துத்துவத்தையும் பேசுகிறது. இதை சபரிமலை விவகாரத்திலும், மத்தியப்பிரதேச, ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்களின் போதும் நாம் பார்த்தோம்.

எனினும் ராகுல் காந்தி இந்துத்துவத்தையும், மோடி அரசையும் கடுமையாக கண்டித்து பேசுகிறார். அவரைப் போன்று மற்ற மூத்த தலைவர்கள் அப்படி பேசுவதில்லை. இதை அவரே கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவின் போது கூறியிருக்கிறார்.

தேர்தல் அரசியலில் இருக்கும் சிபிஎம், சிபிஐ கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை பொருளதாராக் கொள்கை அளவில் பாஜக – காங்கிரசிடமிருந்து வேறுபடுவதாக கூறுகிறார்கள். நாட்டுக்கு நலன் பயக்கும் அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும் கூறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களோ இங்குள்ள தரகு முதலாளிகளோ தன்னலன் பொருட்டே முதலீடு செய்கிறார்களே அன்றி மக்கள் நலன் பாற்பட்டல்ல. மேற்கு வங்க சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராடிய போது சிபிஎம் அரசு அதை ஒடுக்க முயன்றது. பின்னர் டாடாவே அதை குஜராத்திற்கு மாற்றினார். அங்கே மாநில அரசு பல ஆயிரம் கோடி சலுகை கொடுத்தும் டாடா நிறுவனத்தால் நானோ காரை வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை. இன்று நானோ கார் உற்பத்தியையே மூடி விட்டார்கள். ஒருக்கால் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை திறக்கப்பட்டிருந்தாலும் மேற்கு வங்க சிபிஎம் அரசு பல ஆயிரம் கோடி சலுகைகளை கொடுத்திருக்க வேண்டும். அதனால் டாடாவிற்குத்தான் இலாபமே அன்றி மக்களுக்கு அல்ல.

இந்துத்துவக் கொள்கைகள் என்ற அளவில் இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் பாஜக-வை எதிர்க்கின்றன. அதே நேரம் பார்ப்பனியம் என்று வரையறுப்பதோ, பார்ப்பனியத்திற்கு எதிரான சித்தாந்தப் போரட்டம், பண்பாட்டுப் போராட்டங்களை நடத்துவதோ இல்லை. அவ்வாறு செய்தால் இந்துக்கள் மனம் புண்படும் என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள்.

படிக்க :
திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !
♦ CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

பார்ப்பனியத்தை சித்தாந்த அளவில் வேரறுக்காமல் பாஜக-வின் செல்வாக்கை வீழ்த்த முடியாது என்பதை அவர்கள் தேர்தல் அரசியல் காரணமாக கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனினும் இன்றைக்கு மோடி அரசுக்கு எதிராக இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் முடிந்த அளவில் தீவிரமாக போராடி வருவதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

பாஜக-வின் கொள்கைக்கு நேரெதிரான கொள்கைகளை கம்யூனிசம்தான் கொண்டிருக்கிறது. அதுதான் மாற்று என்பதும் உண்மை. அதே நேரம் கள நிலவரப்படி பல மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் பலவீனமாகவே இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் இல்லாத மாலெ அமைப்புகளும் ஒரு சில மாநிலங்களைத் தாண்டி தங்களது செல்வாக்கை விரிவு படுத்த முடியவில்லை. மேலும் மாலெ அமைப்புகளில் பல பார்ப்பனியத்திற்கு எதிரான அரசியல் – பண்பாட்டு போராட்டத்தை புரிந்து கொள்வது கூட இல்லை.

இருப்பினும் இன்றைய பாசிச மோடி அரசு ஆளும் சூழலில் அனைத்து முற்போக்கு கட்சிகளும், இயக்கத்தினரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இதை தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒரு கூட்டணியாக கட்ட வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். இல்லை என்றால் அசுர பலத்தோடு திகழும் பாஜக-வை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?

நேற்று ஒரு முக்கியமான உரையாடல் :

அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க? இதனால எல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க?” என்று என்னை கேலி செய்தார்.

அவருக்கு தெரிந்த வேறொரு ஆண் மனநலமருத்துவரை பற்றி சொன்னார், “அவரு ஹிந்துத்வாவை ஆதரிக்கிறாரு. முஸ்லிம் நடத்துற கடையில நாம சாப்பிடக்கூடாதுனு சொல்லுறாரு. நீங்களும் தான் சைக்கியாறிஸ்ட், நீங்க முஸ்லிம்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க…. ஒண்ணும் புரியல!” என்றார்.

மனநல மருத்துவர் ஷாலினி

நான் சொன்னேன், “1925-ல் இரண்டு பெரிய இயக்கங்கள் உருவாயின. ஒன்று ஒரு டாக்டர் உருவாக்கியது. சாதா டாக்டர் இல்லை, பிரிட்டிஷ் முறைப்படி படித்து இங்கிலிஷ் மெடிசன் பட்டம் வாங்கிய டாக்டர் ஆரம்பித்த இயக்கம் ஒன்று. அதிகம் படிக்காத ஒரு சாமானியன் ஆரம்பித்த இயக்கம் இன்றொன்று.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், இந்து ராஜியம், இந்து மேலாதிக்கம் பேசியது.
பாமரன் ஆரம்பித்த இயக்கம், “அறிவு விடுதலையே எங்கள் குறிக்கோள்” என்றது.

இதற்கு பல தசாப்தங்களுக்கு பிறகு நான் பிறந்தேன். என் அம்மா ஒரு பக்தி பழம். எங்கள் வீட்டில் அரசியல், சமூகம் மாதிரி பெரிதா யாரும் பேசியதில்லை. ஒரு கிளீன் ஸ்லேட் மனதுடன் இருக்கும் எனக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள்:

1) டாக்டர் ஆரம்பித்த இயக்கம், தொடந்து பரவி, பள்ளி பருவம் முதல் மாணவர்களை cultivate செய்து இயக்கத்திற்கு உட்படுத்தியது.
2) பாமரன் ஆரம்பித்த இயக்கம், யாரையும் இயக்க ரீதியாய் cultivate செய்யாமல் மானாவாரியாய் விட்டது.

படிக்க :
தன்னார்வ மருத்துவக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை !
♦ கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி

இந்த இரண்டில் நான் எதை தேர்வு செய்வது?

யார் ஆரம்பித்த இயக்கம் என்பதை விட, ஒரு பெண்ணாய் எனக்கு எது survivalளுக்கு fit-டான இயக்கம் என்று நான் கூட்டி கழித்து பார்க்கிறேன்.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், மத அடிப்படைவாதம் பேசுகிறது.

  • இவர்கள் தான் பிளேக் நோயை ஒழிக்க எலிகளை அழிக்க வேண்டும் என்ற போது, எலி விநாயகரின் வாகனம், அதை கொல்லக்கூடாது என்று மருத்துவர்களை தடுத்து, சில மில்லியன் மனிதர்களை காவு கொடுத்தார்கள்!
  • இவர்கள் தான் சதி ஏறுவதை ஆதரித்தவர்கள்
  • இவர்கள் தான் பாலிய விவாக தடை சட்டத்தை எதிர்த்தவர்கள்
  • இவர்கள் தான் தேவதாசி முறையை ஆதரித்தார்கள்
  • இவர்கள் தான் பெண்ணின் சொத்துரிமையை எதிர்த்தவர்கள்
  • இவர்கள் தான் பெண்ணுக்கு வங்கி கணக்கு கூட இருக்க கூடாது என்றவர்கள்
  • இவர்கள் தான் ஆணுக்கு பெண் அடங்கி போவதே நம் தர்மம் என்றவர்கள்!!

இதற்கு நேரெதிராய் அந்த சாமானியன் ஆரம்பித்த இயக்கம், பெண்ணை ஒரு சரிநிகர் சமானமான பிரஜை என்கிறது. பெண்களுக்கான எல்லா உரிமைக்காகவும் போராடியது. விதவை மறுமணம், கல்வி உரிமை, சொத்துரிமை. பெண்களுக்கான கல்வி கூடம், அபலை இல்லம், அனாதை ஆசிரமம் என்று women friendly -யான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது….

இது இப்படி இருக்க, கொஞ்சமாவது அறிவிருக்கும் பெண் இந்த இரண்டு இயக்கத்தில் எதை தேர்வு செய்வாள்?

டாக்டர் ஹெக்டேவர் ஆரம்பித்த பிற்போக்கான ஆர்.எஸ்.எஸ் எனும் பெண்ணடிமை அமைப்பா?

அல்லது பெரியார் எனும் பெண்ணியவாதி ஆரம்பித்த முற்போக்கான சுயமரியாதை அமைப்பா?”

நான் இவ்வளவு பேசியதும் அந்த லேடி எழுந்து என் கையை குலுக்கி, “இதை பத்தி இனிமே நானும் பேசுறேன்” என்றார்….

அது!!!

நன்றி : ஃபேஸ்புக்கில் மனநல மருத்துவர் ஷாலினி

அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்

மிழகத்தின் கல்விச்சூழலை சிதைக்கும் நோக்கில் அரசால் முன்னெடுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! என்பதை உணர்த்தும் விதத்தில், கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் (CCCE).

ஒருங்கிணைப்பாளர் பேரா வீ.அரசு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பேரா.கருணானந்தன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் சக்திவேல், மனநல மருத்துவர் ருத்ரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இக்கருத்தரங்க உரைகளின் காணொளி இங்கே வாசகர்களின் பார்வைக்கு… பாருங்கள்! பகிருங்கள்!!

தேர்வு என்பதே ஒரு வன்முறை | பேராசிரியர் வீ.அரசு

♦ ”மோடி அரசு மூன்றாம் வகுப்பிலிருந்தே சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுக்க வேண்டுமென்கிறது. அறத்தை போதிக்கிறேன் என்று சொல்லி புராணங்களையும் இதிகாசங்களையும் மனுநீதியையும் சிறுவயதிலேயே திணிக்க முயற்சிக்கிறார்கள். 14 வயதுக்குள் தேர்வே இருக்கக்கூடாது என கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஐந்தாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை திணிப்பதன் மூலம் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் குறைவதோடு மனரீதியான தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.” என்று எச்சரிக்கிறார் பேரா வீ.அரசு.

♦ அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து என்ற திட்டம், தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் 69% இட ஒதுக்கீடு நடைமுறையை இல்லாதொழிப்பதோடு, மாணவர்களை கல்வியிலிருந்து அந்நியமாக்கும் சூழலை ஏற்படுத்தும் அபாயத்தையும் சுட்டிகாட்டுகிறார், பேராசிரியர் வீ.அரசு.

5-ம் வகுப்பு பொதுத்தேர்வு : குழந்தைகள் மனநலனை பாதிக்கும் |
மனநல மருத்துவர் ருத்ரன்

♦ ”தேர்வு எண்ணைக்கூட சரியாக எழுதி பழக்கப்படுத்தப்படாத, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது என்னை பொறுத்தவரையில் வன்முறை.”

♦ ” முன்பெல்லாம் சொன்ன பேச்சு கேட்க மாட்டேன்கிறான்; அடம்பிடிக்கிறான்; முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறான்; என்பது போன்ற காரணங்களோடு ஒழுங்கா படிக்கவும் மாட்டேன்கிறான் என்ற குறைகளைச் சொல்லி தம் பிள்ளைகளை அழைத்துவருவார்கள். அவர்கள் பெரும்பாலும் பத்தாம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆனால், கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒழுங்காக படிக்க மாட்டேன்கிறான் என்று சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வரத்தொடங்கியிருக்கிறார்கள். பள்ளியைத் தாண்டி தனிப்பயிற்சிக்காக குறிப்பிட்ட தொகையை செலவிட்டு வரும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள், அதற்காக தமது அத்யாவசிய தேவைகளை சுருக்கிக்கொள்ளும் அவர்கள், அதன்காரணமாக ஏற்படும் தங்களது மன அழுத்தத்தை தங்கள் பிள்ளைகள் மீதுதான் திணிப்பார்கள். இது மேலும் அந்த மாணவனின் மனநிலையைத்தான் பாதிக்கச்செய்யும். ” என்று எச்சரிக்கிறார், மனநல மருத்துவர் ருத்ரன்.

எடப்பாடியின் அப்பன் வீட்டு சொத்தல்ல அண்ணா பல்கலைக் கழகம் | பேரா. கருணானந்தன்

”இவர்கள் முன்வைத்த தேசியக் கல்விக்கொள்கை குறித்து, கல்வியாளர்களிடமும் கலந்தாலோசிக்காமல்; பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு சடங்கை நடத்திவிட்டு;  நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்கு முன்வைக்காமல், அங்கு விவாதிக்கப்பட்டு இன்னும் இறுதிவடிவம் பெறாத நிலையில், அதில் பரிந்துரைக்கப்பட்ட விசயங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வருவதென்பது பெருத்த மோசடிதான்”

”அடுத்து மாநில அரசின் மோசடி. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே அமல்படுத்தாத நிலையில், குறிப்பறிந்து செயல்படும் மனைவியைப் போல 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.”

”மாணவர்களை மதிப்பிடுவது அவசியம்தான். அது Evaluation ஆக இருக்க வேண்டும். exam ஆக அல்ல. குழந்தை அறியாமலேயே மதிப்பீடு செய்ய முடியும். இவர்கள் முன்வைக்கும் தேர்வு என்பது மதிப்பிடுவதற்கு அல்ல, மாணவர்களை வடிகட்டுவதற்கு. பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்படுவார்கள் என்கிறார்கள். தகுதியற்ற வகுப்பில் இருக்கிறோம் என்ற மனநிலை அந்த மாணவனை நிச்சயம் பாதிக்கும்.”

”அடுத்து, மாநில அரசு சட்டமியற்றி மக்கள் வரிப்பணத்திலிருந்து உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலை போன்ற உயர்கல்வி நிறுவனங்களை மைய அரசு கைப்பற்றும் முயற்சிதான் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டம்.

படிக்க:
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி – படங்கள்
எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

”கல்விக்கூடங்களை கபளீகரம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு நிதிஉதவி தராது; நடைமுறையிலுள்ள பணிப்பாதுகாப்புச் சட்டங்கள் செல்லுபடியாகாது. மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பதை நோக்கமாக கொண்டது. முழுமையான பல்கலைகழகம் என்றிருந்த கட்டமைப்பையே சிதைக்கப்போகிறார்கள். கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்க முடியுமா? ”

”இவைகளை எதிர்க்கத் தவறிவிட்டால் சமூகத் துரோகிகளாகிவிடுவோம். நாம் இதனை எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளோம். எதிர்த்து நிற்போம்.”

அரசுப் பள்ளிகளை விழுங்கும் மலைப்பாம்பு | ஆசிரியர் சக்திவேல்

”கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரைகளில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேநிலைப்பள்ளி என போதுமான கட்டமைப்புகளை தமிழகத்தில் திறம்பட கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது, தனியார் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை சிதைக்கப்பார்க்கிறார்கள். மலைப்பாம்பு போல பொதுப்பள்ளிகளை விழுங்கும் செயல். ”

”பள்ளிக்கூடங்கள் எழுதப்படிக்க மட்டும் சொல்லித்தரும் இடமல்ல. அனைத்து விசயங்களையும், வாழ்க்கையை புரிந்துகொள்ள, சக மனிதனோடு இணைந்து வாழ்வதையும் கற்றுக்கொள்ளும் இடமாக இருக்கிறது. அந்த சூழலை பாதுகாக்க வேண்டும்.” என்கிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரும் ஆசிரியருமான சக்திவேல்.

தொகுப்பு:

ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டனம் !

0

துரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. சித்தாந்தம் உடைய இளைஞனின் துப்பாக்கிச் சூட்டினை கண்டித்தும்; அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசின் டெல்லி போலீசை கண்டித்தும்; கடந்த ஜனவரி-30 அன்று கண்டன போராட்டத்தை நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.


படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்

75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

1

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அமல்படுத்திய முதலாண்டில் 10 விவசாயிகளில் மூன்றுக்கும் குறைவானவர்கள் மட்டுமே ரூ. 6,000 பெற்றுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 2018, டிசம்பர் முதல் 2019, நவம்பர் வரை ஒராண்டிற்கு ஒதுக்கிய தொகையில் 41% மட்டுமே மோடி அரசாங்கம் செலவழித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25% விவசாயிகள் மட்டுமே மூன்று தவணைகளிலும் பயனைடைந்துள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் 8 மாதங்களை விட அதற்கு முன்பு ஐந்து வாரங்களில் தான் பி.எம் கிசானின் கீழ் அதிக விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி வயர் பெற்ற தரவுகளிலிருந்தும், வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் இது அம்பலமாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் கிசான் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேகம் கணிசமாகக் குறைந்துவிட்டது என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்பது கோடி விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலுக்கு முன்னர் முடிவடைந்த முதல் காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் பதிவு செய்யும் வேகம் குறைந்துவிட்டது.

படிக்க:
♦ எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

சுமார் 75% விவசாயிகளுக்கு திட்டம் போய் சேரவில்லை:

டிசம்பர் 2018-க்கும் 2019 டிசம்பர் தொடக்கம் வரையிலும் 3.85 கோடி விவசாயிகள் மட்டுமே ஒவ்வொரு தவணையிலும் ரூ. 2,000 பெற்றுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 14.5 கோடி விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6,000 கிடைக்கும் என்று திட்டம் தொடங்கப்பட்ட போது அரசாங்கம் மதிப்பிட்டது.

திட்டத்தின் முதல் ஆண்டில் 26.6% விவசாயிகள் மட்டுமே பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ .6,000 பெற்றுள்ளனர்.

அதிகாரிகளால் மோசமாக செயல்படுத்தப்பட்டது அல்லது விவசாயிகளின் தரப்பில் பொருத்தமான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சிக்கல் நிகழ்ந்திருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு காலப்பகுதியில் 44% விவசாயிகள் இரண்டு தவணைகளையும் (ரூ. 4,000), 52% விவசாயிகள் ஒரே தவணையும் (ரூ .2,000) மட்டுமே பெற்றுள்ளனர். அதாவது முதலாண்டில் 48% விவசாயிகள் ஒரு தவணை கூட பெறவில்லை.

பாதி விவசாயிகள் ஒரு தவணை (ரூ .2,000) கூட பெறவில்லை. டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை – பயனடைந்த விவசாயிகளின் விழுக்காடு

கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 7.6 கோடி விவசாயிகள் ஒரு தவணையாக ரூ .2,000 பெற்றதாக அமைச்சகம் வழங்கிய தரவுகள் கூறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 14.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதன் படி பார்த்தால் 6.8 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ஒரு தவணை கூட பெறவில்லை என்று தெரிய வருகிறது.

அரசாங்கம் நினைத்தபடி முதல் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 14.5 கோடி விவசாயிகளுக்கும் திட்டம் சென்றிருந்தால் இதற்கான செலவு ரூ. 87,000 கோடியாக (ரூ .6,000 x 14.5 கோடி) இருந்திருக்கும். ஆனால் உண்மையான செலவு அதில் 41% (36,000 கோடி ரூபாய்) மட்டுமே.

படிக்க:
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
♦ பள்ளியை விட்டு பஞ்சாலைக்கு – ஓர் உண்மைக்கதை !

தேர்தல்களுக்குப் பிறகு ஆமை வேகம்:

மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 24, 2019 அன்று பிரதமர் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே வாக்காளர்களை முதல் தவணை (டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019) சென்றடைவதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது.

இதன் பொருள் முதல் காலாண்டில் இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த அரசாங்கத்திடம் ஐந்து வாரங்கள் மட்டுமே இருந்தது. இருப்பினும், இந்த காலகட்டத்தில்தான் பெரும்பாலான விவசாயிகள் பிரதமர் கிசானின் கீழ் பதிவு செய்யப்பட்டனர்.

தேர்தலுக்கு பிறகான எட்டு மாதங்களை விட அதிகமான விவசாயிகள் மக்களவை தேர்தலுக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை ஒவ்வொரு காலாண்டிலும் பிரதமர் கிசானின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை (கோடியில்)

(குறிப்பு : தொழில்நுட்ப ரீதியாக இந்த திட்டம் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து 2019 மார்ச் 31 வரை மட்டுமே முதல் காலாண்டிற்காக இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்ய அரசாங்கத்திற்கு நேரம் இருந்தது. மூலம்: வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்)

திட்டத்தை புதிதாக தொடங்கும் அதே நேரத்தில் இந்தியா முழுமைக்குமான திட்டத்தை செயல்படுத்துவதற்கான மிகக் குறைந்த திறன் மட்டுமே இருந்த போதிலும், 4.74 கோடி விவசாயிகளை மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாகவே அதாவது 2019 பிப்ரவரி 24 முதல் மார்ச் 31 வரை வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் பதிவு செய்ய முடிந்தது.

அதன் பிறகு வேகம் கணிசமாகக் குறைந்தது. அதாவது இரண்டாவது காலகட்டத்தில் நான்கு மாத காலப்பகுதியில் வெறுமனே 3.08 கோடி புதிய விவசாயிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டனர். 2019, நவம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலகட்டத்தில் 1.19 கோடி விவசாயிகளை மட்டுமே (முதல் காலகட்டத்தில் பதிவு செய்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே) அரசாங்கம் பதிவு செய்ய முடிந்தது.

இது தேர்தல்களுக்குப் பிறகு இரண்டாவது காலகட்டத்தில் ஆதார் கட்டாயமாகிவிட்டதால் அதன் தகவல்களை சரிப்பார்ப்பதில் ஏற்பட்ட சிக்கலை இதற்கு காரணமாக அரசாங்கம் கூறியுள்ளது. திட்டத்தின் முதல் காலகட்டத்தில் ஆதார் கட்டயமாக்கப்படவில்லை.

இதனால் ஆதார் இணைப்பு அக்டோபரில் தளர்த்தப்பட்டது. ஆயினும் மூன்றாவது காலகட்டத்தில் விவசாயிகளை பதிவு செய்வது குறைந்து இறுதியில் 1.19 கோடி விவசாயிகள் அதாவது முதல் காலகட்டத்தை விட நான்கில் ஒரு பங்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டனர்.

படிக்க:
♦ மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

தொடக்கத்தில் விவசாயிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் மிகையாக மதிப்பிட்டிருக்கலாம் என்று வேளான் அமைச்சகம் இதற்கு வேறொரு காரணம் கூறுகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் ‘யார் விவசாயி’ என்ற வரையறையின் அடிப்படையில் பார்த்தால் அரசாங்கம் மதிப்பிட்டதை விட விவசாயிகள் அதிகமாக இருக்கக்கூடும் என்பதை காட்டுகிறது.

அரசாங்கத்திற்கு தேவையான தரவுகளை வழங்குவதில் விருப்பமற்ற அணுகுமுறையுடன் இருக்கும் சில மாநிலங்களும் இந்த சிக்கலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சான்றாக, இந்த திட்டத்தின் கீழ் பங்கேற்க மறுத்து விட்டதால் ஒரு விவசாயியின் விவரங்களை கூட மேற்கு வங்கம் வழங்கவில்லை. அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி மேற்கு வங்கத்தில் 68 லட்சம் விவசாயிகள் இருக்க வேண்டும். ஆனாலும் பிரதமர் கிசானின் கீழ் மேற்கு வங்கத்தில் பயனாளிகள் யாருமில்லை.

பயனாளிகள் குறித்த தகவல்களை மாநிலங்கள் வழங்காத வரை மைய அரசாங்கத்தினால் பணத்தை வழங்க முடியாது. எதார்த்ததில் மாநிலங்கள் கேட்டால் மட்டுமே பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.

பாஜக ஆளும் மாநிலங்களும் கூட இதில் குற்றவாளிகள் தான். கர்நாடகா, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே 2.5 கோடி விவசாயிகள் கணக்கில் வராமல் உள்ளனர். பீகாரில் மட்டும் 1.13 கோடி பேர் கணக்கில் வராமல் உள்ளனர். அங்கு 1.5 கோடி விவசாயிகளில் 44 லட்சம் விவசாயிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நான்காவது காலகட்டத்தில் ஆறு கோடி விவசாய குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்:

திட்டத்தின் முதலாண்டுக்கு பிறகு (டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான) நான்காவது தவணைக்காக ஆறு கோடி விவசாயிகளின் கணக்குகளில் ரூ .2,000 பணம் போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி 2020 ஜனவரியில் அறிவித்துள்ளார்.

தற்போது நான்காவது காலகட்டத்தில், ஆறு கோடி விவசாயிகளின் கணக்குகளில் ரூ .12,000 கோடியை மோடி போட்டிருக்கிறார். 2019, நவம்பர் 30 -க்குள் ஒன்பது கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில் வெறும் ஆறு கோடி விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டம் சென்றது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நவம்பர் 30 -க்குப் பிறகு அதிகமான விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். அந்த தரவு இன்னும் கிடைக்கவில்லை.

ரூ .12,000 கோடி பரிமாற்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், 2020 மார்ச் வரை பிரதமர் கிசானின் கீழ் செலவிட வேண்டிய தொகையில் (ரூ .95,000 கோடி) 50% மட்டுமே அரசாங்கம் செலவிட்டுள்ளது.

பொருளாதார சரிவை சமாளிக்க மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உட்பட பல முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே வாதிடுகின்றனர். கிராம பொருளாதார சரிவு, வேலையிழப்பு என்று உள்நாட்டில் மக்களின் வாங்கும் திறன் கடுமையாக சரிந்திருக்கும் நேரத்தில் இது போன்ற திட்டங்களின் கீழ் மக்களுக்கு மேலும் பணத்தை வழங்குவது தான் சரியான முடிவாக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் 47,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் இருப்பது எந்த அளவிற்கு மக்கள் விரோதமாக மோடி அரசாங்கம் இருக்கிறது என்பதையே அம்பலப்படுதுகிறது.


தமிழாக்கம் : 
சுகுமார்
நன்றி :  தி வயர். 

தன்னார்வ மருத்துவக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை !

குடியரசு தின சிறப்பு முகாம்கள் நமது மருத்துவ குழு குறித்த பயணக்குறிப்பு மற்றும் விளக்கங்கள்

மது நண்பர்களுக்கும்/சொந்தங்களுக்கும் / புதிதாக நண்பர்களாக இணைந்தவர்களுக்கும்/ புதிதாக என்னை தொடர ஆரம்பித்திருப்பவர்களுக்கும் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக கேள்வி பதில் நடையில் பயணக்குறிப்பை எழுதுகிறேன்

1. யார் சார் நீங்கலாம்? கொடைக்கானல்ல என்ன பண்ணிட்ருக்கீங்க?

நாங்கள் “நனவாகும் கனா” என்ற பெயரில் இயங்கி வரும் தன்னார்வல மருத்துவக்குழு.  இந்த குழுவில் மருத்துவர்கள், இயன்முறை மருத்துவர்கள் , மருந்தாளுனர்கள், சட்டத்துறை வல்லுனர்கள் என்று பலரும் ஒன்றிணைந்து இயங்கி வருகிறோம். எங்களை ஒன்றிணைத்தது 2018 ஆம் ஆண்டு தமிழக டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்.

கஜா புயல் நடந்த மாவட்டங்களில் பல மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களுக்கு ஆறுதலும் நிவாரணமும் வழங்கினோம்.  அதற்குப் பிறகு குடியரசு தினம் / சுதந்திர தினம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் தமிழகத்தில் உள்ள சுகாதார வசதிகள் குறைவாக கிடைக்கின்ற பின்தங்கிய மலை குக்கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம்கள் அமைப்பதை வழக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம்.

சென்று வருடம் குடியரசு தினத்தன்று கொடைக்கானல் அருகில் உள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஊராட்சியான வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வில்பட்டி கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினோம்.

இந்த வருடம் , கொடைக்கானலில் இருந்து 40 கிலோமீட்டர் கடினமான மலைப்பாதைகளை கடந்து சென்று பூண்டி / கிளாவரை /  போளூர் போன்ற மலைக்கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் அமைத்தோம்.

நேற்று குடியரசு தினத்தன்று வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி காலனியில் மருத்துவ முகாம் அமைத்தோம்.

2. இந்த முகாம்களில் என்னவெல்லாம் சேவை செய்கிறீர்கள்?

மலைக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குகிறோம்.
இங்கே எனது கிளினிக்கில் என்னென்ன மருந்துகளை நான் எழுதுவேனோ அது அத்தனையையும் இலவசமாக மக்களுக்கு கிடைக்குமாறு செய்கிறோம்.

மருந்துகளில் காஸ்ட்லி என்று பார்த்து முகாமின் தரத்தை குறைப்பதில்லை. உதாரணம் விலை அதிகமான ஆண்டிபயாடிக்குகளான அசித்ரோமைசின்; செஃபிக்சிம் ; செஃப்போடாக்சைம்; அமாக்சிக்ளேவ் போன்றவை முகாமில் இடம்பெற்றிருக்கும். தரத்தில் குறை வைப்பது இல்லை.

மேலும் சிகிச்சை பெறுபவர்கள் அனைவருக்கும் ரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து புதிதாக நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோயாளிகளை அடையாளம் காண்கிறோம் .

அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மாத்திரைகளை வழங்கி , அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் தருகிறோம். அங்கு அவர்கள் சிகிச்சையை தொடரலாம்.

நேற்றும் அதற்கு முந்தைய நாள் நடந்த முகாம்களில் இரண்டு கிராமங்களுக்கு குடற்புழு நீக்கம் செய்துள்ளோம். குடற்புழுக்கள் ரத்த சோகையை வரவழைப்பவை.
பெரும்பாலும் அனைத்து பெண்களுக்கும் ரத்த சோகை இருந்தமையால் அனைவருக்கும் இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டது.

வயதான முதியோர்களுக்கும் / மெனோபாஸ் காலக்கட்ட பெண்களுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான கால்சியம் மாத்திரை வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு புரதச்சத்து வழங்கும் பவுடர்கள் / இரும்புச்சத்தை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இத்துடன் குழந்தைகளுக்கு ஸ்வெட்டர் / துணிகள் , காலணிகள், சோலார் லைட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

பூண்டி மலைக்கிராம முகாம்களுக்கான களப்பணிகளை பீக் ட்ரஸ்ட் அமைப்பு செய்திருந்தது. அந்த முகாமுக்கான ஏற்பாடுகளை அருட்தந்தை திரு.ஆரோக்கியசாமி அவர்களின் குழு சிறப்பாக செய்திருந்தது.

அட்டுவம்பட்டி மலைக்கிராம முகாம்களுக்கான களப்பணிகளை வாய்ஸ் அமைப்பு மற்றும் அட்டுவம்பட்டி கிராம ஸ்டார் இளைஞர் அணி அமைப்பு மற்றும் வாய்ஸ் மைக்கேல் அவர்களும் இணைந்து சிறப்பாக செய்தனர்.

சிறப்பான களப்பணியே பல மக்களை முகாமுக்கு அழைத்து வரும்.
களப்பணிக்கு நன்றி சகோதரர்களே.

நமது குழுவுக்கான சிறப்பான தங்குமிடத்திற்கான ஏற்பாட்டை செய்து குடியரசு தின முகாமிற்கு நமது அழைப்பை ஏற்று நேரில் வந்து விழாவை சிறப்பு செய்த கணம் கற்றறிந்த மாண்புமிகு நீதிபதி இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.

ஐயா இளங்கோவன் அவர்கள் எனது முகநூல் நண்பர். நமது தன்னார்வல தொண்டு அமைப்புக்கு தாமாக முன்வந்து உதவி செய்த அவருக்கு நன்றிகள். அவரை நேரில் கண்டு அளவளாவியதில் மகிழ்ச்சி.

3. இந்த முகாம்கள் எவ்வாறு நடக்கின்றன?

“Crowd funding” முறைப்படி பல தொழில் நிறுவனங்கள் / வியாபாரங்கள் நடக்கின்றன.  அதே போல் இந்த மருத்துவ முகாம்கள் “Soul sharing” முறைப்படி நடக்கின்றன.  எனது நண்பர்கள் சொந்தங்கள் அனைவரும் இந்த முகாம்கள் நடத்த தங்களின் பொருளாதாரத்தை நிதியாக அளிக்கின்றனர்.

எனவே இந்த முகாம்கள் உதவிகள் அனைத்தும் ஒத்தக்கருத்துடைய மனங்கள் ஒன்றிணைவதால் நடக்கின்றன.  எனது மருத்துவ துறை சார்ந்த நண்பர்கள் தங்களின் மருந்து கம்பெனிகளில் உள்ள தரமான மருந்து மாத்திரைகளை தாராள மனதுடன் தந்து உதவுகின்றனர்.

இன்னும் சில நண்பர்கள் குழந்தைகளுக்கு உண்டான பள்ளி கல்வி உபகரணங்களுக்கான செலவினத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இப்படியாக உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் அன்பு உள்ளம் கொண்ட எனது நண்பர்கள் மற்றும் சொந்தங்களினால் இந்த முகாம்கள் சாத்தியமாகின்றன.

இந்த முகாம்களுக்கு உடல் சார்ந்த அறிவு சார்ந்த உழைப்பினை எங்கள் குழு செய்கிறது. இன்றியமையாத பொருளாதாரத்தை தந்து உதவுவது எனது முகம் காணா நண்பர்கள் தான். இந்த முகாம்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் தங்களின் இன்னுழைப்பால் வந்த பொருளை கொடுத்த நண்பர்களே ஆவர்.

ஒருமுறை எனது மருத்துவ நண்பர் என்னைப்பற்றி குறிப்பிடும் போது
“கஜா புயலின் போது எனது சொந்த செலவில் மருத்துவ முகாம் நடத்தியதாக பாராட்டி எழுதியிருந்தார் ”

“NEWS18 தொலைக்காட்சி எனக்கு வழங்கிய பாராட்டு விருதிலும் 15 இலட்ச ரூபாய் உதவியை கஜா நேரத்தில் எனது செலவில் செய்ததாக பதிவு செய்தது” – அது தவறாகும்.

இந்த முகாம்களை அமைப்பதற்கு எனது அறிவையும் உடல் உழைப்பையும் தான் செய்தேன். மேலும் இந்த முகாம்கள் நடத்த எனது கிளினிக்கை அடைப்பதால் ஏற்படும் இழப்புகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. காரணம் நாம் சம்பாதிக்காத பொருளை நட்டக்கணக்கில் சேர்க்க முடியாது.

எனவே, எப்போதும் இந்த முகாம்கள் அனைத்தும் எனது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நடத்துமாறுதான் நடைபெறும் / நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

4. ஏன் மலைக்கிராமங்களில் முகாம் அமைக்கிறீர்கள்?

தமிழகத்தை பொறுத்த வரை சமவெளியில் ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை இருக்கிறது. மேலும் நடமாடும் அரசு மருத்துவமனைகள் (Hopsital on wheels) மருத்துவமனை இல்லாத இடங்களையும் கவர் செய்கிறது.

மலைக்கிராம மக்களுக்கு தான் மருத்துவ தேவை கிடைக்க நேரம் ஆகிறது.
நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அனைத்தும் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம்.

சனிக்கிழமை முகாம் நடந்த பூண்டி/ கிளாவரை போன்ற கிராமங்கள் கொடைக்கானலை விட்டு 40 கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கின்றன. சுமார் இரண்டு மணிநேர கடினமான பயணம்.

இருப்பினும் அங்கு வாழும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வமே எங்களை வழிநடத்தியது. மேலும் இது போன்ற மலைக்கிராமங்களில் இரண்டு வகையான மக்கள் உண்டு. ஒன்று மலைக்கிராமங்களை தங்களின் பூர்வீகமாக கொண்ட மலைவாழ் இன பூர்வகுடி மக்கள் மற்றவர்கள் இங்கிருந்து அங்கு சென்று தலைதலைமுறையாக வாழ்பவர்கள்.

இவர்களின் வாழ்வியல் எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்று சமவெளி மக்களுக்கு வரும் அத்தனை நோய்களாலும் அவதியுறுகிறார்கள் என்பதையும் நேரடியாக கண்டு வருகிறோம்.

அவர்களது உணவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டு வருகிறோம். தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உணவு முறை மாற்றத்திற்கான அறிவுரைகளை வழங்குகிறோம்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !
விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடந்த முகாம்களில்
சுமார் 600 மலைவாழ் கிராம மக்களுக்கு நோய்க்கான சிகிச்சை அளித்ததில் மகிழ்ச்சி.

நனவாகும் கனா மருத்துவக்குழு என்பது இருபதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் நூற்றுக்கணக்கான நிதியுதவி செய்யும் தொண்டுள்ளங்களையும் கொண்டு இந்த நிலையை அடைந்துள்ளது .

இந்த மருத்துவக்குழுவிற்கான தொடக்கப்பள்ளி கஜா புயலின் கோரத்தை நேரில் பார்த்தால் என் மனதில் உருவானது. என்னால் இயன்ற ஒரு பிஸ்கெட் பாக்ஸ், ஒரு மெழுகுவர்த்தி பாக்ஸ் , எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது  அந்த மக்களுக்கான தேவை
ஒரு பிஸ்கெட் பாக்ஸோடு முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.

என்னை முகநூலில் தொடர்ந்து வரும் எனது கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் உள்ளங்கள் இந்த முயற்சியிலும் பங்கேற்பாளர்கள் என்ற எண்ணத்தில் “soul sharing” முறையை ஆரம்பித்தேன் .

என்னைப் போன்ற தொண்டுள்ளம் கொண்ட எதையும் எதிர்பாராத உள்ளங்கள் ஒன்றிணைந்தன. அதனால் உருவானதே இந்த “நனவாகும் கனா” மருத்துவக்குழு.  கூடிய விரைவில் இந்த குழுவை அறக்கட்டளையாக மாற்றும் கனவை இறைவன் நனவாக்குவானாக…

எங்கெல்லாம் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று முகாம் அமைத்து தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது நோக்கம்.

முகநூல் மூலமாக நன்மைகளை விதைத்து நன்மைகளை அறுவடை செய்ய முடியும் என்பதற்கு நமது குழுவும் சிறு எடுத்துக்காட்டு.

இதற்கான பெரிய எடுத்துக்காட்டு தமிழகத்தில் மிகப்பெரிய தொற்றா நோய் குறித்த விழிப்புணர்ச்சியும் உணவுப்புரட்சியும் கொண்டு வரும் @ஆரோக்கியம்&நல்வாழ்வு குழுமத்தை சாரும்.

முகநூலை வெட்டி பேச்சு அரங்கம் என்ற நிலையில் இருந்து மாற்றியுள்ளது இது போன்ற இயக்கங்கள். சிந்தனைகள், எண்ணங்கள், கனவுகள் மட்டுமே நமது..
அதை நனவாக்குவது அவன்..☝️

முக்காலத்தையும் தன் வசம் வைத்திருக்கும் , அவனுக்கே புகழனைத்தும்… நம் எண்ணங்களில் சிந்தனையில் செயல்களில் முயற்சிகளில் நன்மையானவற்றில் இறைவனின் துணை நிற்பானாக..

நிச்சயம் நன்மையை ஏவி தீமையை தடுத்து  அச்சமூட்டி எச்சரிக்கவேயன்றி நம்மை இறைவன் நம் அனைவரையும் ஒன்றிணைக்கவில்லை..

முகாம்கள் சிறக்க உதவி செய்த அனைவருக்கும் நன்றி

உதவியன்றியும் முகாம்கள் சிறக்க பிரார்த்தனைகள் செய்தோருக்கும் நன்றி!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

அவன்தான் செத்துப்போனானே அடக்கமாகி நாலு நாளாச்சே !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 12

டுத்த நாளே அவனுக்குக் கடுமையான ஜுரம். பீட்டர்ஸ்பர்க் நகரப் பருவநிலையின் தாராள உதவியின் பயனாக நோய் சாதாரணமாய் எதிர்பார்க்கக் கூடியதைக் காட்டிலும் வெகு விரைவாக முற்றியது. ஆகவே மருத்துவர் வந்துசேர்ந்ததும் அவனுடைய நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு, வேறு ஒன்றும் செய்வதற்கின்றி, எதோ ஒத்தடம் கொடுக்கும்படி மட்டும் யோசனை சொன்னார். அதுவும் நோயாளியை மருத்துவத்தின் நன்மை தரும் உதவியில்லாமல் விட்டுவிடக் கூடாதே என்ற ஒரே காரணத்தினால்; அதே கையோடு ஒன்றரை நாள்களில் நோயாளியின் பாடெல்லாம் நிச்சயமாக முடிந்து விடும் என்றும் கருத்துத் தெரிவித்தார். பின்பு வீட்டுச் சொந்தக்காரியைப் பார்த்து, “நீங்கள், அம்மா, நேரத்தை வீணாக்காதீர்கள், இப்போதே இவனுக்காகப் பைன் மரச் சவப் பெட்டிக்குச் சொல்லிவிடுங்கள், ஏனென்றால் ஓக் மரப்பெட்டி இவனுக்குக் கட்டாது, இல்லையா?” என்றார்.

தன் வாழ்வைத் தீர்த்துக்கட்டும் இந்தச் சொற்கள் அக்காக்கியின் காதில் பட்டனவா? பட்டனவென்றால் அவன் உள்ளத்தில் அவற்றால் கிளர்ச்சி உண்டாயிற்றா? தனது அவல வாழ்வைக் குறித்து அவன் வருந்தினானா? இவ்விஷயத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை, ஏனெனில் அவன் ஜன்னிக் காய்ச்சலில் தவித்துக் கொண்டிருந்தான். ஒன்றைவிட ஒன்று விசித்திரமான காட்சிகள் இடைவிடாமல் அவன் மனக்கண்முன் தோன்றிய வண்ணமாயிருந்தன. ஒரு சமயம் பெத்ரோவிச்சைக் கண்டு, திருடர்களை அகப்படுத்தும் கண்ணிகள் வைத்த மேல்கோட்டு தைக்கக் கொடுத்தான்; திருடர்களோ தனது கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருப்பது போல அவனுக்குப் பிரமை உண்டாயிற்று.

எனவே அவர்களை அங்கிருந்து விரட்டும் படி வீட்டுச் சொந்தக்காரியிடம் நொடிக் கொரு தரம் கேட்டுக் கொண்டிருந்தான்; ஒரு முறை, ஒரு திருடனைப் போர்வைக்குள்ளிருந்து கூட விரட்டும்படிச் சொன்னான்; மற்றொரு முறை, தன்னிடம் புதிய மேல்கோட்டு இருக்கையில் பழைய ‘கப்போத்’ சுவரில் என் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று வினவினான்; பின்னொரு சமயம் தான் முக்கிய நபருக்கு முன் நின்றவாறு, அவர் தனக்குச் சரியான படி கொடுத்த கண்டனத்தைக் கேட்பது போல மருள் கொண்டு, “தவறுக்கு வருந்துகிறேன், பெரிய துரை அவர்களே!” என்றான்; அப்புறம் முடிவாக அவன் ஆபாச வசவுகளைப் பொழியத் தொடங்கி, மிக மிகப் பயங்கரமான சொற்களை உரக்கக் கத்தவே, அவன் அம்மாதிரி வார்த்தைகள் பேசி இதற்கு முன் கேட்டிராத வீட்டுச் சொந்தக்காரி, சிலுவைக்குறி இட்ட வண்ணமாயிருந்தாள் – அதுவும் இந்த வசவுச் சொற்கள் “பெரிய துரை அவர்களே” என்ற வார்த்தைகளை உடனடியாகத் தொடர்ந்து வந்தபடியால். பின்பு அவன் தலைகால் புரியாதவாறு எதேதோ அர்த்தமற்ற சொற்களைப் பிதற்றிக் கொண்டே போனான்; ஒன்றே ஒன்று தான் தெளிவாகப் புலப்பட்டது: அவனது தொடர்பற்ற வார்த்தைகளும் கருத்துகளும் மேல்கோட்டைச் சுற்றியே வட்டமிட்டன என்பதுதான் அது. கடைசியில் அக்காக்கிய் காலமானான்.

படிக்க:
மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !
ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !

அவனுடைய அறையோ, உடைமைகளோ முத்திரையிடப்படவில்லை, ஏனெனில், முதலாவதாக அவனுக்கு வாரிசுகள் யாருமில்லை, இரண்டாவதாக அவன் விட்டுச் சென்றது மிக மிக அற்பமான உடைமையே; இறகு பேனாக் கட்டு ஒன்று, அலுவலக வெள்ளைத்தாள் ஒரு கட்டு, காலுறைகள் மூன்று ஜோடி, காற்சட்டையிலிருந்து பிய்ந்து வந்துவிட்ட சில பொத்தான்கள், வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ‘கப்போத்’ ஆகியவையே அவனுடைய சொத்து. இந்தச் சொத்துக்கெல்லாம் யார் வாரிசானார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்: இந்தக் கதையாசிரியனுக்கு அவ்விஷயத்தைத் தெரிந்துகொள்வதில் அக்கறையும் ஏற்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அக்காக்கியின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பீட்டர்ஸ்பர்க் நகரம், அக்காக்கிய் இல்லாமலே முன்போன்றே நிலவிவந்தது – அப்படி ஒருவன் அங்கு வாழவே இல்லை என்பது போல. போன சுவடு தெரியாமல் மறைந்து போயிற்று ஒரு மனித உயிர், யாராலும் பாதுகாக்கப்படாத, எவருக்கும் அருமையில்லாத, ஒருவரது அக்கறைக்கும் பாத்திரமாகாத உயிர்; சாதாரண ஈயையும் உருப்பெருக்கிக்கு அடியில் இட்டு ஆராய்ச்சி செய்யும் பொருட்டுக் குண்டூசியால் குத்திவைத்துக் கொள்ளும் இயற்கை விஞ்ஞானியின் கவனத்தைக் கூடக் கவராத உயிர்; அலுவலகச் சக ஊழியர்களின் கேலிகளையெல்லாம் பணிவுடன் ஏற்றுக்கொண்ட மனித உயிர்; அசாதாரணச் செயல் எதுவும் ஆற்றாமலே சவக்குழியில் அடக்கமாகி விட்ட போதிலும், தனது அவல வாழ்க்கையில் கணப் பொழுது களி பரப்பிய மேல்கோட்டின் வடிவில் அருட்சுடரின் ஒளிர்வை வாழ்வின் இறுதிக்கு முன்னரேனும் காணப் பெற்ற மனித உயிர்; பின்பு சகித்தற்கரிய கொடுந்துயரால், உலகின் பேரரசர்களையும் மாண்புசால் பெரியோரையும் போலவே தாக்குண்டு வீழ்ந்துபட்ட உயிர்!..

அவன் காலஞ் சென்ற சில நாள்களுக்குப் பிறகு, அவனைக் கையோடு அழைத்து வரும்படி இயக்குநரே பிறப்பித்த கட்டளையுடன் அலுவலகக் கடைநிலை ஊழியன் அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அவனோ வெறுங் கையோடு அலுவலகம் திரும்ப வேண்டியதாயிற்று; அக்காக்கிய இனிமேல் அலுவலகத்துக்கு வர இயலாது என்று அறிவித்தான் அவன். “ஏன்?” என்ற கேள்விக்கு, “அப்படித்தான், அவன்தான் செத்துப்போனானே, அடக்கமாகி நாலு நாளாச்சே!” என்ற சொற்களில் விடை பகர்ந்தான். அக்காக்கியின் மரணம் பற்றிய செய்தி இவ்வாறு அலுவலகத்துக்கு எட்டியது. மறுநாளே அவனது இடத்தில் புது எழுத்தன் அமர்ந்து விட்டான்; இவன் அவனைவிட எவ்வளவோ உயரம், இவன் கையெழுத்து அக்காக்கியின் போன்று நேராக இன்றி முன்சாய்ந்தும் கோணலாகவும் இருந்தது.

அக்காக்கியின் விஷயம் இத்துடன் தீர்ந்து விடாது, எவராலும் பொருட்படுத்தப்படாத வாழ்வுக்குப் பரிசு போல மரணத்துக்குப் பின்பும் நகரத்தின் சர்ச்சைக்கு ஆளாகி இன்னும் சில நாள்கள் வாழ்ந்திருப்பது அவனுக்கு விதிக்கப்பட்டிருந்தது என்று யார்தான் கற்பனை செய்திருக்க முடியும்? ஆனால், நடந்ததென்னவோ அப்படித்தான். விளைவாக, நமது எளிய கதையின் முடிவு எதிர்பாரா வகையில் அதிசய நிகழ்ச்சிகள் கொண்டதாக அமைந்து விட்டது.

எழுத்தனது உருவமுள்ள பேய் ஒன்று கலீன்கின் பாலத்தருகிலும் அதற்கு வெகு தொலைக்கு அப்பாலுங்கூட இரவு வேளைகளில் தென்படுவதாகவும், பறிபோன மேல்கோட்டு ஒன்றை அது தேடுவதாகவும், இழந்த கோட்டை மீட்கும் பொருட்டு பதவியையும் அந்தஸ்தையும் பாராமல் எல்லாரது மேல்கோட்டுக்களையும் – பூனைத் தோல் வைத்தவை, நீர்நாய்த் தோல் வைத்தவை, பஞ்சு வைத்தவை, ராக்கூன் தோல், நரித்தோல், கரடித் தோல் ஆகியவற்றால் ஆனவை, மனிதர்கள் தங்கள் தோல்களை மூடிப் போர்க்கும் பொருட்டு உபயோகிக்கும் எல்லாவித மிருகங்களின் மென்மயிர்த் தோல்களுங் கொண்ட மேல்கோட்டுக்கள் அனைத்தையும் இந்தப் பேய் உருவிக்கொண்டு விட்டு விடுவதாகவும் திடீரென்று பீட்டர்ஸ்பர்க் நகரில் வதந்தி பரவியது.

துறை எழுத்தர்களில் ஒருவன் அந்தப் பேயைத் தன் கண்களாலேயே கண்டு அது அக்காக்கிய் தான் என்று அடையாளம் தெரிந்து கொண்டானாம்; அதனால் ஒரேயடியாகக் கிலிபிடித்துப் போய்க் குதிகால் பிட்டத்தில் பட விழுந்தடித்து ஓடிவிட்டதாகவும், எனவே பேயை நன்றாகப் பார்க்க முடியவில்லை என்றும், தூரத்திலிருந்து அது விரலை ஆட்டிப் பயமுறுத்தியதை மட்டுமே பார்த்ததாகவும் அவன் சொன்னான். இவ்வாறு மேல்கோட்டுகள் அடிக்கடி பறிக்கப்படுவதன் விளைவாகப் பட்டம் பெற்ற ஆலோசகர்கள் மாத்திரமே அல்லர், அந்தரங்க ஆலோசகர்கள் கூடத் தோள்களிலும் முதுகுகளிலும் குளிர் தாக்கும் அபாயத்துக்கு உள்ளாயிருப்பதாக நாற்புறமிருந்தும் இடைவிடாத முறையீடுகள் வரலாயின. இந்தப் பேயை உயிரின்றியோ உயிருடனோ பிடித்து, மற்றப் பேய்களுக்கு உதாரணமாயிருக்கும்படி, கொஞ்சங் கூடத் தயவு இன்றித் தண்டிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது; போலீஸார் அதை அநேகமாகப் பிடித்தும் விட்டார்கள்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !

கேள்வி : நான் வினவு வாசகர், என் மகள் இந்த வருடம் m.sc முடிக்கப்போகிறார். நான் என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். ஆனால் அவர் தற்போது வேண்டாம் என சொல்கிறார். உறவினர்கள், நண்பர்கள் “ஏன் திருமணம் முடிக்கவில்லை..” என கேட்கிறார்கள். நெருக்கடி ஏற்படுகிறது. இதை கையாள்வது எப்படி?

இரா.மகேஸ்வரி

ன்புள்ள மகேஸ்வரி,

உங்கள் மகள் ஏன் திருமணம் வேண்டாம் எனக் கூறுகிறார்? மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் அதை ஊக்குவிக்கலாம், நிறைவேற்றலாம். நவீனகாலத்தில் பெண்கள் படிப்பதும், வேலைக்கு போவதும் சுய பொருளாதாரத்தில் நிற்பதும் தேவைப்படும் ஒன்று. இப்படி படித்து வேலைக்கு போகும் பெண்கள் பலரும் 25 முதல் 30 வயது வரையில்தான் திருமணம் முடிக்கிறார்கள்.

படிக்கவும் விருப்பமில்லை, திருமணமும் செய்ய விருப்பமில்லை என்றால் தொழில்முறை மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிப்பதோடு களையும் வழிகளையும் ஆலோசனைகளாக முன்வைப்பார்கள்.

இதைத்தாண்டி உறவினர்கள், நண்பர்கள் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டாம். வயதுக்கு வந்த பெண்ணை உடன் திருமணம் செய்து முடிப்பதுதான் சமூகத்தின் பொதுப்புத்தி. அது பெண்ணடிமைத்தனத்தை காப்பாற்றுவதைக் கோருகிறது. ஆகவே தவறானது. அதற்கு செவி சாய்க்க வேண்டாம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கல்வி வேலைவாய்ப்பில் சாதியை குறிப்பிடாதவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால் சமூகத்தில் சாதி கட்டமைப்பை உடைக்க முடியுமா தோழர்…

ஜெகதீஸ்வரன்

ன்புள்ள ஜெகதீஸ்வரன்,

ஓரளவுக்குத்தான் முடியும். சாதியின் அடிப்படை, பொருளதாரக் கட்டமைப்பிலும், பண்பாட்டு ரீதியாக அகமண முறையிலும் நீடிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பில் சாதியற்றவர்கள் என்று இட ஒதுக்கீட்டிற்காக குறிப்பிட்டு விட்டு திருமணத்தை தன் சாதி பார்த்து முடித்துக் கொண்டால் என்ன செய்வது? அப்போது சான்றிதழ்களில் சாதி இருக்காது. சமூக வாழ்க்கையில் சாதி இருக்கும்.

இன்று கூட முற்போக்கு அமைப்புகளைச் சார்ந்தோர் சாதியற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி ஒரு பிரிவினை இல்லை என்பதால் அவர்கள் பொதுப்பிரிவில் வருகிறார்கள். இதனால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சாதிகளைச் சார்ந்தாரோக பிறப்பின் அடிப்படையில் இருந்தாலும் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை. இதனாலேயே பலர் சாதியற்றவர்கள் என பறை சாற்ற விரும்பினாலும் இட ஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டு சாதி குறிப்பிட்டு சேர்க்கிறார்கள்.

இட ஒதுக்கீடே தேவை இல்லை என அதை தியாகம் செய்வோரே சாதியற்றவர் என பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்க்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது சாதியற்றவர்களுக்கு மட்டுமல்ல சாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் ‘மேல் சாதி – கீழ் சாதி’ என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இன்றைக்கு நடக்கும் காதல் மணங்கள் அனைத்தும் சாதி மறுப்பைக் கணக்கில் கொள்ளாமல் தனிப்பட்ட முறையிலும், சம சாதி பொருளாதார அந்தஸ்து பார்த்தும் நடக்கின்றன. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட – மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினரோடு தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் திருமணம் அது தனிப்பட்ட காதல் மணமாகவே இருந்தாலும் பிரச்சினைக்குள்ளாகிறது. எனவே இத்தகைய பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வரும் அரசியல் மாற்றமும், அக மண முறையை ஒழிக்கும் பண்பாட்டு போராட்டமும் தீவிரமாக நடக்கும் போதுதான் சாதி அமைப்பில் பாரிய உடைப்பை ஏற்படுத்த முடியும்.

ஆனாலும் இன்றைய இட ஒதுக்கீட்டு அமைப்பில் சாதியற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்குவது தொடர்பான உங்களது கோரிக்கை ஏற்கத்தக்கதே!

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா

♦ ♦ ♦

கேள்வி : முகம்மதுபின் துக்ளக் ஒரு இஸ்லாமிய மன்னன் எனும் பொழுது சோ எப்படி அந்தப் பெயரில் பத்திரிக்கை ஆரம்பித்தார்?

சி. நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

நல்ல கேள்வி! பார்ப்பனியத்தை அதிதீவிரமாக பின்பற்றும் சோ ராமசாமி தனது பத்திரிகைக்கு ஆதி சங்கரர், பெரிய சங்கராச்சாரியார், சாணக்கியன் என்றுதான் சூட்டியிருக்க வேண்டும். பின் ஏன் அவர் துக்ளக்கை தேர்ந்தெடுத்தார்?

துக்ளக் ஆரம்பிக்கப்பட்ட 70-களில் திராவிட கட்சிகள் ஆட்சியிலும் சமூகத்திலும் பெரும் செல்வாக்கை செலுத்தி வந்தன. ஒரு பார்ப்பனராகவும், பாரத தேச பக்தராகவும் இருந்த சோவுக்கு இந்த நிலைமை கட்டோடு பிடிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையின் அன்று முதல் இன்று வரை இருக்கும் ஒரே மாறாத கொள்களை திராவிட எதிர்ப்பும் இந்துத்துவ ஆதரவும்தான். அதற்காக அவர் எந்த சமரசத்தையும் ஏற்றுக் கொண்டார். மிடாசின் இயக்குநராக கூட பொறுப்பேற்றார். மோடியை முதலில் முன்னிறுத்தியவரும் அவரே. சோவை தனது அரசியல் சாணக்கிய குரு என்று மோடியே போற்றியிருக்கிறார்.

இப்படி திராவிட இயக்க அரசியல்வாதிகளை கிண்டல் செய்வதற்கு அவருக்கு பார்ப்பன வரலாற்று மாந்தர்கள் பொருத்தமாக இருக்காது. அதனால்தான் துக்ளக்கை தெரிவு செய்திருக்க கூடும். இது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பொருளிலும் வரும். முகமது பின் துக்ளக், வரலாற்றில் அரசாட்சி அலங்கோலங்களுக்கு பெயர் பெற்றவராக இருப்பதால் அது தி.மு.க.விற்கு பொருத்தமாக இருக்கும் என்றும் யோசித்திருக்கக் கூடும். ‘அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதிகள் என்றாலே நச்சுப் பாம்புகள்’ என்ற நடுத்தர வர்க்கத்தின் அரசியலற்ற சந்தர்ப்பவாத பொதுப்புத்திதான் ‘சோ’வினுடையதும். இருப்பினும் அதில் பார்ப்பனியத்திற்கு பங்கம் வராத அரசியல் நிலவ அவர் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த “அரசியல் மோசம்” எனும் கருத்தாக்கத்தின் படியும் அவர் துக்ளக் பெயரை தெரிவு செய்திருக்க கூடும்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

பள்ளியை விட்டு பஞ்சாலைக்கு – ஓர் உண்மைக்கதை !

ஓர் உண்மைக்கதையை சொல்லட்டுங்களா ?

டத்தில் குறிப்பிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் குழந்தையோட பேரு மகேஸ்வரி. இந்த வருசம் எட்டாவது படிச்சிட்டிருந்தாங்க. அவங்க வீட்ல மொத்தம் நாலு புள்ளைக.

சிவக்குமாரும், இராஜேஸ்வரியும் இப்போ ஒன்பதாவது படிக்கிறாங்க Child Welfare Certificate மூலமா. மகேஸ்வரியும், இரஞ்சித்தும் நம்ம பள்ளியில படிச்சிட்டிருந்தாங்க. இரஞ்சித் நாலாம் வகுப்பு. பெயர் எழுதவே சிரமப்படுவாரு. எப்பவும் ஒருவிதத் தூக்கநிலையிலே இருப்பாரு. சிவக்குமார் ஆரம்பத்துல சுமாராதான் படிச்சாரு. ஆறாம் வகுப்புக்கு அப்புறம் தீயா படிக்க ஆரம்பிச்சாரு.

இராஜேஸ்வரி ஆரம்பத்துல தீயா படிச்சிட்டிருந்துச்சி; என்னமோ தெரியல எட்டாம் வகுப்புல கொஞ்சம் குறைஞ்சிடிச்சி. மகேஸ்வரி முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருந்துச்சி படிக்க; ஆனால் அதால படிக்க முடியாமத் திணறிச்சி.

“பரவால்ல மகேஸ்… ஒருசிலக் குழந்தைக ஆறாம் வகுப்பிலிருந்துக்கூட படிக்க ஆரம்பிச்சிடுவாங்க; நீங்க பயப்படாம படிங்க; நான் இருக்கேன்”னு சொல்லித் தேத்தித் தேத்தி கொண்டாந்துட்டேன்.

ஆறாம் வகுப்பு வந்ததுக்கு அப்புறம்… எப்பவும் சொல்றமாதிரி “எனக்கு லவ் லெட்டர் எழுதுங்க இல்லேனா கதை எழுதுங்க, இல்லேனா படம் வரைங்க, இல்லேனா கவிதை எழுதுங்க”னு சொன்னேன். அவங்கவங்களுக்கு புடிச்சத அவங்கவங்க செஞ்சாங்க. வீட்டுக்குக் கிளம்பும்போது எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துக் கொடுத்தாங்க. மகேஸூம் எடுத்துட்டு வந்துக் கொடுத்துச்சி. “வீட்ல போய்தான் மிஸ் படிக்கணும்”னு சொல்லியே கொடுத்துச்சி.

படிக்க :
மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !
♦ மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் படிச்சுப் பார்த்தேன். மகேஸோடது வரும்போது கொஞ்சம் எக்ஸைட்டடாகவே இருந்துச்சி. ஏனா…மகேஸ் முதன்முதலா எழுதிக் கொடுத்திருக்கிறது அது.

முதல் வரியே…”அன்புள்ள மகாவுக்கு” என்று தொடங்கியிருந்தது. “உங்கள எனக்குப் புடிக்கும்; நீங்க எனக்கு அம்மா மாதிரி…ப்ளா ப்ளா” னு எழுதிய பின்னாடி உங்களுக்காக நான் ஒரு கதை எழுதறேன்”னு சொல்லி ஒரு சின்னக் கதை எழுதியிருந்துச்சி.

எனக்காக எழுதப்பட்டதும், கதையுமே முழுக்க எழுத்தப்பிழையோடதான் இருந்துச்சி; ஆனா என் குழந்தையோட முதல் எழுத்தை என்னால தப்பில்லாம வாசிக்க முடிஞ்சிச்சி. அத்துணை மகிழ்ச்சியாவும் இருந்துச்சி.

அடுத்தநாள் போய் பெருசா பாராட்டித் தீர்த்துட்டேன் மகேஸ. அதுக்கப்புறம் மகேஸ் அப்பப்போ கதை எழுதிக் கொடுக்கும். இப்படியே ஆறு முடிஞ்சி, ஏழு, எட்டாம் வகுப்புக்கு வந்தாச்சி. எட்டாம் வகுப்புல நாடகத்த கிரியேட் பண்ண ஆரம்பிச்சி, நடிக்கவும் செஞ்சிச்சி. மகேஸ எப்டியாவது நர்ஸ் படிக்க வச்சிடணும்னு எனக்குள்ளே சொல்லிக்கிட்டேன். ஏனா…மகேஸ் மத்தக் குழந்தைகள அவ்ளோ நல்லா பாத்துக்கும்.

காலாண்டு லீவு முடிஞ்சி வந்த கொஞ்ச நாள் கழிச்சி, மகேஸோட அம்மா(கீதா) வேகவேகமா வந்து… வாடி வூட்டுக்குப் போலாம்; நீ படிக்கவும் வேணாம் ; ஒன்னும் வேணாம்னு சொல்லி…

மகேஸையும், இரஞ்சித்தையும் கூட்டிட்டுக் கிளம்புச்சி. வேற க்ளாஸ்ல இருந்த நான் சத்தம் கேட்டு ஓடிவந்து.. என்ன ஏதுனு விசாரிச்சா… என் பொண்ண நீ எப்டி திருடினு சொல்லலாம்னு புது கதையா சொன்னிச்சி. ரொம்ப அதிர்ச்சியா போச்சி.. “நான் அப்டிலாம் சொல்லல கீதா” னு சொன்னாலும் அது காதுல வாங்காம மகேஸையும் இரஞ்சித்தையும் கூட்டிட்டுக் கிளம்புச்சி. சைல்டு லைனுக்கு(லோக்கல்)
கால் பண்ணிக் கொடுத்ததுக்கு,என் பொண்ணுக்குப் படிக்க விருப்பமில்லனு சொல்லிட்டுக் கிளம்பிட்டே இருந்துடிச்சி.

கோவம் குறைஞ்சி மறுபடியும் புள்ளைய கூட்டிட்டு வந்து விட்டுடும்னு பார்த்தேன்; இந்தநாள் வரைக்கும் வரல. ரெண்டு குழந்தைகளும் நின்னே போயிட்டாங்க.

garment workers model Picture
மாதிரிப் படம்

இப்போ மகேஸ்… திருப்பூர்ல இருக்கிற ஏதோ ஒரு பனியன் கம்பெனியில வேல செய்யுது. நிழல்லே இருக்கிறதால நிறம் கூடி இருக்கு போல. சம்பாதிச்சு கொடுக்குது. பொங்கல் லீவுக்கு இப்போ வீட்டுக்கு வந்திருக்கும் போல.

மகேஸோட இப்போதைய தோற்றத்தைப் பார்த்து நம்ம பள்ளியில ஏழாம் வகுப்புப் படிக்கிற சுகுணாவுக்கும் ஆச வந்து இப்போ பனியன் கம்பெனிக்குப் போறதுக்கு ரெடியாயிட்டாங்க. அதனால இந்தப் பொங்கல் லீவு முடிஞ்சி பள்ளிக்கூடத்துக்கு வரல. அவங்க தங்கச்சிக்கிட்ட கேட்டதுக்கு, காரணம் இதுதான்னு சொன்னாங்க. புள்ளைகள விட வந்த அந்த ஊர் அண்ணன் ஒருத்தர் கிட்ட விசயத்தைச் சொல்லி, “அண்ணா எப்டியாவது சுகுணா கிட்ட போய் ஃபோன் பண்ணிக் கொடுங்கணா”னு சொல்ல… டவரே கிடைக்காத அந்த ஊர்ல டவர் இருக்கிற இடத்தைத் தேடி அவரு அலைஞ்சி, ஒருவழியா சுகுணா கிட்ட பேசினா… “நான் படிக்க வரல மிஸ்”னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிடிச்சி.

சைல்டு லைனுக்குக் கால் பண்ணணும்னு நெனச்சாலும், உங்க பள்ளிக்கூடம் திருவண்ணாமலை மாவட்டம்; நீங்க சொல்ற புள்ளைக வேலூர் மாவட்டம்னு சொல்லி ஆக்ஷன் எடுக்க மாட்டேன்றாங்க. ஏற்கனவே இவுகக்கிட்ட பட்டுட்டேன்.

மகேஸ்வரி என்மேல்பழிசுமத்தி பள்ளியைவிட்டு நிற்க என்ன காரணம்?

காலாண்டு பரீட்சை நேரத்துலதான் தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என அறிவித்தது. அப்போதே எட்டாம் வகுப்பில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் நேரடியாகச் சேர்க்கப்பட்ட மூன்று குழந்தைகளுடன் ஓரிரு குழந்தைகளும் பயப்படத்தொடங்கியிருந்தனர்.

படிக்க :
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
♦ கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி

“அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி.. நீங்களாம் பாஸாயிடுவீங்க”னு சொன்னாலும் அவங்க பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்புப் புள்ளைக பரீட்சை எழுதற கணக்கா கம்பேர் பண்ணியிருந்தாங்க. இதுதான் மகேஸ்வரியை யோசிக்க வச்சி… பள்ளிக்கூடத்தை விட்டு விரட்டிச்சி. மகேஸ், இரஞ்சித், இப்போ சுகுணாவும் இடைநிற்றல் கணக்குல வராங்க. சுகுணா நல்லா படிச்சாலும் குழந்தைகளைத் திருப்பூர் பனியன் கம்பெனியும் கோவை பஞ்சாலையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறது என்று புதிய நம்பிக்கைப் பிறந்து, அழகியல் கூடும் என்பதற்காகச் செல்லப்போகிறது.

குறிப்பு : இரண்டு மலைகள் தாண்டி 7-கிமீ தூரம் காட்டினூடே (நடந்து) பயணிக்கவேண்டுமென்பதால் செல்லமுடியாமல் தவிக்கிறேன். ஒற்றையடிப்பாதையில் வண்டியில் போகலாம்; ஆனால் கற்களின் மீது ஓட்டுமளவிற்கு எனக்குப் பயிற்சி போதவில்லை. பார்ப்போம்… சுகுணாவை அழைத்துவருகிறேனா இல்லை ஒரு குழந்தைத் தொழிலாளரை உருவாக்கி தமிழக அரசுக்குப் பெருமை சேர்க்கிறேனா என்று!

உங்களின் இந்தப் பொதுத் தேர்வு அரசாணைகள் எல்லாம் திருப்பூரின், கோவையின், ஈரோட்டின் பனியன் கம்பெனிகளுக்கும், பஞ்சாலைகளுக்கும் ஆட்களை அனுப்பும் புரோக்கர் தொழிலுக்குண்டான ஆணைகளாக இருக்கிறது. வாழ்த்துகள் தமிழக அரசே!

நன்றி : ஃபேஸ்புக்கில் மகாலெட்சுமி

வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி

காந்தியைச் சுட்ட அதே துப்பாக்கிதான்
காந்தி சுடப்பட்ட அதே நாளிலும் வெடிக்கிறது

மக்களின் விடுதலைக்கான
நீண்ட போராட்டத்திலிருந்து
காந்திக்கு இதே நாளின் அந்தியில்
ஒருவன் நிரந்தர விடுதலை அளித்தான்

அதே நாளில் விடுதலைக்கான ஊர்வலத்தில்
ஒருவன் மாணவர்களை நோக்கி
துப்பாக்கியால் சுடுகிறான்
‘இதோ நான் உங்களுக்கு விடுதலையைக்
கொண்டு வருகிறேன்’ என்று முழங்குகிறான்

அதே துப்பாக்கி
பெயர்கள்கூட அதிகம் மாறவில்லை
இன்று ராம்பக்த் கோபால்
அன்று கோபால் கோட்ஸே
ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு
அன்று குண்டடிபட்ட காந்தி
‘ஹேராம்’ என்றார்
இன்று சுடுகிறவன்
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்கிறான்

வெள்ளைக் கொடியை ஏந்தியிருந்த
ஒருவனின் கைகளில் ரத்தம் பெருகுகிறது
அந்தக் கொடிமேல்
நெருப்பின் வண்ணமாய்
அந்த ரத்தம் பெருகுகிறது

கருப்புப் படைகள் ஆயத்தமாகிவிட்டன
நேற்று தடிகளோடு வந்தார்கள்
இன்று துப்பாகியோடு வருகிறார்கள்
நாளை வதைமுகாம்களுக்கான
வாகனங்களோடு வருவார்கள்

கடந்த மாதம் போராடுகிறவர்களின் மேல்
குண்டாந்தடிகளை பாய்ச்சிய காவலர்கள் முன்
ஒருவன் துப்பாக்கியுடன் நடனமாடுகிறான்
இது தனது அரசு
இது தனது படை என்று
முழுமையாக நம்புகிறான்

நாம் அமைதி ஊர்வலங்களை நிறுத்தக்கூடாது
துப்பாக்கிகளைக் கண்டு நாம் அமைதியிழக்கக்கூடாது
துப்பாக்கியின் சப்தத்தைவிட வலிமையானது
அமைதியின் சப்தம்
அவர்கள் பதிலுக்கு நீங்கள் சுடவேண்டும்
என்று விரும்புகிறார்கள்
அது வெளிப்படையான ஒரு அழைப்பு
இந்த தேசம் எங்கும் விரியும் மனிதத் சங்கிலியினை
அறுப்பதற்கான அழைப்பு

காந்தி சுடப்பட்ட நாளில்
இன்னொரு துப்பாக்கி வெடிக்கிறது
காந்தி இந்த முறை சாகவில்லை
அந்த வெடியோசையில் உயிர்த்தெழுகிறார்

எந்த வெடியோசையையும் மீறி எழுகிறது
ஆஸாதி.. ஆஸாதி… என்னும் பேரோசை!

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !

ங்களது கல்வி உரிமைக்காக போராடிய டில்லி ஜவகர்லால நேரு பல்கலை மாணவர்களை கல்லூரிக்குள் முகமூடியோடு புகுந்து இரும்புத் தடிகளைக் கொண்டு தாக்கிய சங்கபரிவாரக் கூலிப்படை, தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஜாமியா மில்லியா மாணவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இந்த மண்ணின் மைந்தர்களின் மீது நடத்தப்படும் உள்நாட்டுப் போர் இது !

கருத்துப்படம் : வேலன்

முகநூலில் இருந்து : அன்று தடிகளோடு வந்தவர்கள் இன்று துப்பாக்கியோடு வந்திருக்கிறாரகள் !