Saturday, May 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 358

நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !

அலகாபாத் கும்பமேளா : நாகா சாமியார் என்ற பெயரில் நிர்வாண ஆசாமிகள் !
சனாதன தர்மத்தைக் காக்க சிரத்தை வெட்டவும் தயார் !

லகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இந்தியா முழுவதும் உள்ள நிர்வாண சாமியார்கள் குழுமியிருக்கிறார்கள். இவர்களுக்கென கங்கைக் கரையில் பல ஏக்கரில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் புதிய பாலத்தில் தொடங்கி கங்கையின் சாஸ்திரி பாலம், ரயில்வே பாலம் அதனையும் தாண்டி சில கிலோ மீட்டருக்கு இவர்களுக்காகவே குடில்கள் உள்ளன. இந்த கரைகளில் தங்கும் இடங்கள், கடைகள் என பல இருந்தாலும் 60% இடம் இந்த சாமியார்களுக்குத்தான். இதில் கார்ப்பரேட் சாமியார்களும் உண்டு.

அனைத்தையும் “துறந்த நிர்வாண” சாமியார்கள்தான் என்றாலும் புதிய புதிய பெயர்களில், கெட்டப்புகளில் வந்து குவிந்திருக்கிறார்கள். யாரேனும் ஒரு சாமியார் பெயரைச் சொல்லி அங்கு காவலுக்கு இருக்கும் போலீசிடம் கேட்டால், “இங்கு மொத்தம் 22 செக்டார் உள்ளது. நீங்கள் கேட்கும் சாமியார் எந்த செக்டார்” என்று நம்மையே திருப்பி கேட்கிறார்கள். அந்தளவிற்கு ஆயிரக்கணக்கில் வந்து குவிந்திருக்கிறார்கள்.

அங்கிருக்கும் பொதுமக்களைக் கேட்டால், “பொதுவாக காசி, வாரணாசிக்கெல்லாம் கூட போயிருக்கோம், ஆனா அங்கெல்லாம் இவ்ளோ சாமியார்களை பார்த்ததில்ல. இவங்கலெல்லாம் யார் எங்கிருந்து வந்திருக்காங்க.. உண்மையான சாமியார்களா இல்லையான்னுகூட தெரியவில்லை” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறார்கள்.

ஓரளவிற்கு முற்போக்கு பேசக்கூடிய தமிழகத்திலேயே நித்தி, ஜக்கி போன்ற சாமியார்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை, எனில் வட இந்திய சாமியார்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?  கங்கையும் யமுனையும் சர்வ நாசம்!

நிர்வாண சாமியார்கள் ஏரியாவிற்குள் நுழைந்தால் மூக்கைத் துளைக்கும் கஞ்சா வாடை. பார்க்கும் சாமியார்கள் எல்லோரும் கஞ்சா சிமிலியை வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். உடல் முழுவதும் எரிக்கப்பட்ட மரக்கட்டையின் சாம்பலை எடுத்துப் பூசிக்கொண்டு பார்க்கவே விகாரமாக காட்சியளித்தனர். பல சாமியார்களின் கூடாரம் பக்தர்கள் இன்றி காலியாக இருந்தன. ஒரு சில சாமியார்களிடம் பேண்ட்-சர்ட் அணிந்த நாகரீக மனிதர்கள், சாமியார்களின் முன்னே மண்டியிட்டு ஆசி வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

சில சாமியார்கள் கூட்டாக அமர்ந்து எதையோ பேசிக்கொண்டு ஒரேயொரு கஞ்சா பைப்பை வைத்து கொண்டு மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர்.  ஒருவர், வரும் போகும் பக்தர்களை எல்லாம் அவராகவே கூப்பிட்டு ஆசி வழங்கி காசு போடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவரிடம் ஐக்கியமானால் கஞ்சாவும் கிடைக்கும்!

வரிசையாக ஆடை இல்லாமல் நிர்வாணமாக அமர்ந்திருந்த சாமியார்களின் தோற்றமே ஒருவித பீதியை உண்டாக்கியது. அவர்களை நெருங்கவே தயக்கமாக இருந்த நிலையில், ஒரு நிர்வாண சாமியாரின் பேனரின்…… கீழ் புகையும் யாக குண்டத்தின் அருகில் காவி உடையுடன், சிக்கு பிடித்து……. அடைபடிந்த ஜடாமுடியுடன் அமர்ந்திருந்தார் ஒரு சாமியார்.

அவரிடம் அறிமுகமாகி…. இங்க இருக்க கலாச்சாரம் பத்தி எதுவும் தெரியாது. அதான் தெரிஞ்சிக்க வந்தோம் என்றதும்…… எங்களை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு , “என்ன தெரிஞ்சிக்கனும் கேளுங்க” என்ற தொனியில் பார்த்தார்.

“இங்கு பல பாபாக்கள் இருக்கிறார்களே, அவர்களைப் போல் நீங்களும் நாகா பாபா-வா?”

ஆம். என் பெயர் ஜமிந்தியா மெஹந்த் பாபா – லைட்டு கிரி” என்றார் கரகரத்த குரலில்.

“நாகா சாதுக்கள்’னு சொல்றாங்களே அவங்கெல்லாம் யாரு சாமி?”

“சனாதன தர்மத்தைக் காக்க சுக்ராச்சாரியாரால் உருவாக்கப்பட்டவர்கள் தான் நாகாக்கள். நாங்கள் சுக்ராச்சாரியர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள். அனைத்தையும் துறந்து வாழ்பவர்கள். கடவுள் இந்த உயிருக்காக கொடுத்த ஆடை என்பது சரீரம்… இந்த தோல் மட்டும்தான். அதற்குப்பின் இந்த சாம்பல் இவைதான் உண்மையான ஆடை. அதனால்தான் நாங்கள் உடை ஏதும் அணிவதில்லை. அதைத் தாண்டி நான் இப்போது போட்டிருக்கும் ஆடை என்பது மனிதர்களால் செய்யப்பட்டவை; அவை உண்மை இல்லை. இது போலி ஆடை” என்றார்.

“சரி உங்களைப் போல மாறுவதற்கு என்ன செய்யனும், தமிழகத்திலும்கூட மடங்கள் உள்ளது அங்கு துறவரம் மேற்கொள்ள தீக்சை தருவார்கள்…. நாகாக்களுக்கு அப்படி எதாவது இருக்கா?”

தலையசைத்துக்கொண்டே ம்ம்… நாகா சாதுவாக மாற முதலில் தேவையானது சேவைதான். குருவுக்கு செய்ய வேண்டிய சேவை; அதுதான் முதல். அதன் பின்னர் அகாடா (அகாரா) வில் தங்கி அங்கேயே இருந்து வேலைகளைச் செய்ய வேண்டும், சமைப்பது, இடத்தை சுத்தம் செய்வது, பாபாக்களுக்கு உதவி செய்வது இவற்றை செய்ய வேண்டும்.

அதன்பின்னர் பூஜைகள், யாகங்கள், ஆரத்தி போன்றவற்றுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அப்போது செய்யும் சடங்குகள் இவற்றை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஏதும் சந்தேகங்கள் என்றால் கேட்க வேண்டும். அதையெல்லாம் சரிவர கற்றுக் கொண்டபின்னர் நாகா பாபாவாக மாற ஒரு நாற்பது, ஐம்பதாயிரம் செலவு செய்ய வேண்டும், அதன்பிறகே அவருக்கு நாகா என்ற சான்றிதழ் வழங்கப்படும்.

“என்ன..! பணம் செலவாகுமா….? சான்றிதழ்… அரசாங்கம் ஏதும் தருமா..?

“ஆமாம்! செலவு ஆகத்தான் செய்யும். அரசாங்கம் எதுவும் தராது. நாங்கள்தான் சான்றிதழ் தருகிறோம்” என்று சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.

“சரி… கடவுள்தான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார் என்கிறார்களே…. அப்புறம் ஏன் சன்னியாசம்…?”

வாயில் இருந்த புகையை வெளியேற்றிவிட்டு….. “நீங்க சொல்லுவது சரிதான், எல்லா இடத்திலும் பகவான் இருக்கிறான். ஆனால், நாம் கடவுளை அடையனும் என்றால் அதுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாதுன்னுதான் தனித்தனி இடம் பண்ணி வெச்சிருக்கோம்… நீங்களே சொல்லுங்க, வீட்டுல மனைவி குழந்தைகள் எல்லாம் தொந்தரவு செய்யும் போது நாம முழு மனசா கடவுளப்பத்தி நினைக்க முடியுமா?

“நீங்க எந்த வயசுல இங்க வந்து சேர்ந்தீங்க…?”

எனக்கு 12 – 13 வயசு இருக்கும் அப்ப வந்து இங்க சேர்ந்தேன். அப்புறம்தான் பாபாவா மாறினேன். எனது தாய் தந்தை அனைவரையும் பிரிந்து வந்துவிட்டேன். இங்கு எனது குருவுக்கு சேவை செய்து, அதன் பின்னர் அனைத்து சம்பிரதாயங்களும் தெரிந்து கொண்டு மாறினேன். ஒருமுறை பாபாவாக மாறிய பின் எங்களுக்கு இந்த உலகத்துடன் எந்த பந்தமும் இல்லை. எங்களுக்கு எந்த சுகமும் – துக்கமும் இல்லை. சொல்லப் போனால் துக்கம் மட்டும்தான். எங்கள் வாழ்க்கையில் கடவுளை அடைவது மட்டும்தான் சுகம்.

“நீங்க உங்க வாழ்க்கையில இவ்ளோ கஷ்டப்படுறீங்க, பல கார்ப்பரேட் சாமியார்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபாராம்தேவ்லாம் சொத்து சுகமுன்னு இருக்கிறாங்களே…  இவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க…?

ம்ஹும்…. பெரிய பெரிய பாபாக்கள்-ன்னு சொல்லுறாங்களே அவங்க எல்லாம் ஏமாத்து பேர்வழிகள், குண்டர்கள், லுச்சா பசங்க இப்படி வச்சி இருக்கானுங்களே அது எப்புடி சரியா இருக்கும்..? இப்ப வந்து ஒருத்தன் என்கிட்ட பணம் கொடுத்து தப்பு செய்யச் சொன்னா அவன்கிட்ட வாங்க மாட்டேன். அடிச்சி துரத்துவேன். நாங்க யாருக்கும் பயப்பட மாட்டோம்.

“நீங்க சனாதன தர்மம்முன்னு சொல்லுறீங்களே அப்படின்னா என்ன? அத காப்பாத்துவதுன்னா என்ன?

இந்து தர்மம்தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்துக்காக நாங்க யார் தலையையும் சீவுவதற்கும், தேவைபட்டா எங்கத் தலைய கொடுக்குறதுக்கும் கூடத் தயாரா இருக்கோம். இப்பவும் துணிய அவுத்துட்டு நிர்வாணமா நின்னு சண்ட போடத் தயாரா இருக்கேன்.

“இப்படி சொல்லுறீங்களே போலீசு எதுவும் செய்யாதா..?”

ஒரு ஏளனமான சிரிப்பை உதிர்த்துவிட்டு….. “போலீசா.. எங்கள யாரும் எதுவும் செய்ய முடியாது.. நாங்க யாருக்கும் கட்டுப்பட மாட்டோம். எந்த பயமும் எங்களுக்கு கிடையாது. எல்லா இடத்துக்கும் போவோம், திரிசூலம், தல்வார் (வாள்) இது எல்லாம் அக்காடாவுல இருக்கும். யாரும் எங்ககிட்ட பிரச்சினைக்கு வரமாட்டார்கள். எந்த கேசும் எங்க மேல போட முடியாது.

“ஓ.. நாகா பாபாவுக்கு இவ்வளவு செல்வாக்கா.. யார் வேணுமுன்னாலும் பாபா-வா மாறமுடியுமா? அதுக்கு வயசு ஏதாவது தடை இருக்கா…?”

அதெல்லாம் கிடையாது.. யார் வேணுமுன்னாலும் ஆகலாம். சின்ன வயசுல இருந்து சாகற வயசுல இருக்குறவங்க வரைக்கும், பாபா-வாக மாற முடியும்.

“சரி எல்லா சாதியும் ஆகமுடியுமா…?”

ஆம்! பிராமண, சத்ரிய, பனியா (வைசியர்கள்) என யார் வேண்டுமானாலும் ஆகலாம் எல்லா சாதியினரும் இங்க அகாடாவுல இருக்காங்க எல்லா சாதிகளும் நாகாவா மாறலாம். ஆனா, ஹரிஜன் (தலித்துக்கள்) மட்டும் பாபா – வா மாறமுடியாது.

“அப்படின்னா பிராமணன் தான் உயர்ந்தவனா..?”

“எல்லாருக்கும் குரு பிராமணன், பிராமணர்களுக்கு குரு சன்னியாசிகள்.. நாங்கள் எல்லாரும் சன்னியாசிகள்” என்றார்.

“நன்றி….! புறப்படுகிறோம்…. என்றதும் நெற்றியில் விபூதியை பூசிவிட்டு தட்டை எடுத்து நீட்டினார்.

பூ வேறு… புஷ்பம் வேறு அல்ல. என்பதைப்போல, சனாதன தர்மம் வேறு… வருணாசிர தர்மம் வேறு அல்ல என்பது புரிந்தது! திரிவேணி சங்கமம் முழுவதும் இந்த சாமியார்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அங்கே சாமியார் என்பதே ஒரு பெரும் தொழில் போல நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சாமியாரைச் சுற்றியும் அவரது  குடும்பத்தினர், உறவினர்கள், சீடர்கள், உதவியாளர்கள் எனப் பலர் இருந்தனர். ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்று மறுக்க முடியாது. மக்களைப் பொறுத்தவரை பசுமாட்டை தொட்டுக் கும்பிடும் அனிச்சைச் செயல் போல இந்த சாமியார்களை வணங்கி திருநீறு பெறுகின்றனர்.

இன்னொரு புறம் மக்கள் சொல்வது போல கும்பமேளா கலக்செனுக்காக பலர் அப்போது மட்டும் சாமியார் டூட்டி பார்க்கவும் செய்கின்றனர். அந்த நாட்களில் நீங்கள் நிர்வாணமாக இருப்பதெனத் துணிந்தால் பெரும் சில்லறையை புரட்ட முடியும். மறுபுறம் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களில் வாழும் சாமியார்கள் தனி உலகம். இவர்களைக் கண்டு பொதுசமூகம் அஞ்சுகிறது. போலீசும் எதற்கு பிரச்சினை என்று இவர்களை கண்டு கொள்வதில்லை. இவர்கள் எங்கு சென்றாலும் முதல் உரிமை, சலுகை கோருகிறார்கள். பாஜக-வின் இந்துத்துவத்திற்கு இந்த சாமியார்கள் ஏதோ ஒரு வகையில் மதம், வருணாசிரமம், பண்பாடு என்று பயன்படுகிறார்கள். அதனால் அரசும் இவர்களுக்கென்று பெரும் ஏற்பாடுகளையும், செலவையும் செய்து வருகிறது.

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
பாகம் – 4:
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்

நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

விரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம். இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன? இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டதுதான் “இந்து மதத் தத்துவம்” (நூல்). மக்களை நல்வழிப் படுத்துவதற்கானது எனக் கூறிக்கொள்ளும் மதத்திற்கான எந்த யோக்கியதையும் இன்றி நால்வகை வருணம் நாலாயிரம் சாதி என மக்களை பிளவுபடுத்தி உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் இந்து மதத்தத்துவம் என்பதை சமூக வரலாற்று, பொருளியல், அரசியல் கோணங்களில் ஆய்வு செய்து விளக்குவதுடன் ஆரிய வேதங்கள், மனுஸ்மிருதிகள், பகவத்கீதை உபகதைகள் வழி ஆதாரத்துடன் நிறுவி இது ஒரு மதமே அல்ல; அடக்குமுறை, ஆதிக்க கருத்தியல் என்றும், இதைத் தூக்கி எறியாமல், சகோதரத்துவ சமத்துவ வாழ்வு சாத்தியமில்லை எனவும் எச்சரிக்கிறார். அனைத்து மதங்களுமே அதன் இருப்பிலே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகத்தான் இருக்கின்றன.

பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்று மக்களை மூலதனத்தால் ஒடுக்கும் மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியாக்க எதிர்ப்போடு தொடர்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சமூகமாற்றத்தை வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த நூலை பரவலாக்குவது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடைமையாகும். படியுங்கள்; பரப்புங்கள் ! ( நூலின் பதிப்புரையிலிருந்து…)

“…சாதியமைப்பை விவரித்த முன்னோடி என்ற நிலையில் மனு சாதிகள் எப்படி தோன்றின என்பதையும் கூறுகிறார். எனவே, மனு கூறும் சாதியமைப்பின் தோற்றம்தான் என்ன? இதற்கான அவரது விளக்கம் மிக எளிமையானது. நாற்பெரும் வருணங்களைத் தவிர்த்த மீதி சாதிகள் கீழானவை. நாற்பெரும் மூலச் சாதிகளைச் சேர்ந்த ஆண், பெண்களின் கூடா ஒழுக்கத்திலிருந்து உருவானவையே இந்த சாதிகள். நாற்பெரும் மூலச் சாதிகளைச் சார்ந்த ஆண், பெண்களிடையே நிலவிய பரவலான ஒழுக்கக்கேடுகளும் நடத்தைப் பிறழ்வுகளும் எண்ணற்ற சாதிகள் உருவாக வழிவகுத்தன; இத்தகைய சாதி, மக்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகக் காரணமாயின. நாற்பெருஞ் சாதி ஆடவர் – பெண்டிரின்பால் எத்தகைய பழியைச் சுமத்துகிறோம் என்பதைச் சிறிதேனும் பொருட்படுத்தாமலேயே அவர்கள் ஒழுக்கத்தின்பால் குற்றஞ் சுமத்துகிறார் மனு. குறிப்பாக, சண்டாளர் எனப்பட்ட தீண்டப்படாத சாதி மக்கள் பிராமணப் பெண்ணுக்கும், சூத்திரம் ஆடவனுக்கும் பிறந்த மக்கள். இதன்படி பார்க்கும்போது சண்டாளர்கள் எண்ணற்றவர்களாக இருப்பதால், ஒவ்வொரு சூத்திர பிராமணப் பெண்ணும் ஒழுக்கங்கெட்டவளாக, பரத்தையாக இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. இதேபோல் ஒவ்வொரு சூத்திர ஆடவனும் சோரம் போனவனாக இருந்திருக்க வேண்டும். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, மனு பல்வேறு சாதிகளின் தோற்றத்துக்குக் கூறும் மதிகேடான பழி சுமத்தல் வரலாற்றுண்மைகளைத் திரித்துக் கூறலாகவே அமைகிறது.” (நூலின் பின் அட்டையிலிருந்து…)

படிக்க:
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ
ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?

… இந்துச் சாதி அமைப்பால் சமுதாயத்துக்கு மிகுந்த பயனுள்ளதென கூறும் இந்துக்கள் பலரை அறிவேன். ஆகவே, இதனை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட விரும்பவில்லை. அவர்கள் இந்த முறையினை மனு புத்திசாலித்தனமாக உருவாக்கியதோடு புனிதமானதாகவும் ஆக்கியுள்ளார் எனப் பாராட்டுகின்றனர். சாதியைப் பார்ப்பதனாலேயே இத்தகைய நோக்கு உருவாகிறது. அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சாதியால் பெறப்படுகின்ற சமுதாயப் பயன் அல்லது பயனின்மையைச் சாதியின் தனித்தனித் தன்மைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்துத்தான் கணிக்க வேண்டும். சிக்கலை இவ்வகையில், எதிர்கொண்டால், பின்வரும் முடிவுகள் புலப்படும்.

(1) தொழிலாளரைச் சாதி பிரிக்கிறது
(2) சாதி, வேலையில் ஈடுபாடு கொள்வதிலிருந்து பிரிந்து வருகின்றது
(3) சாதி, உடலுழைப்பில் இருந்து புத்திசாலித்தனத்தைப் பிரிக்கின்றது
(4) சாதி, அடிப்படை ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதைத் தடுத்து ஊக்கம் அற்றவனாக்கிவிடுகின்றது
(5) சாதி, ஒருவரோடொருவர் இணைந்து பழகுவதைத் தடுக்கின்றது.

சாதி முறை தொழிலை மட்டும் பிரிப்பதாக இல்லை; அது தொழிலாளரையும் பிரித்து விடுகின்றது. சமூகத்துக்கு தொழில் பாகுபாடு தேவைதான். ஆனால், எந்த நாகரிகச் சமூகத்திலும் தொழில் பகுப்போடு, தொழிலாளர்களைச் சேரமுடியாதபடி பிரிவுகளாக, இயற்கைக்குப் புறம்பாகப் பிரிப்பதைக்காண முடியாது. சாதிமுறை தொழிலாளர் பிரிவு மட்டும் அல்ல. அது தொழிற்பகுப்பில் இருந்து மாறுபட்டது. சாதி முறை ஒன்றுக்குமேல் ஒன்றாய் அடுக்கு அடுக்காக உயர்வு தாழ்வுகளை வகுக்கும் தொழிலாளர்களின் அமைப்புமுறை. வேறெந்த நாட்டிலும் தொழில் பகுப்புடன் தொழிலாளர்களிடையில் வித்தியாசங்கள் இல்லை. சாதி முறைக்கு எதிராக மூன்றாவதாக இன்னொரு விமர்சனமும் உள்ளது. இந்த தொழில் பகுப்பு தானாக வந்ததல்ல; பிரிவுகள் இயல்பான பணி ஈடுபாட்டால் வந்தவையும் அல்ல. தனிப்பட்டவரின் திறமையின்மையை வளர்த்து, தானே தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செய்யும் அளவிற்கு உருவாக்க ஒவ்வொருவரின் தனித்திறமையையும் சமூகத் திறனையும் வளர்க்க வேண்டும்.

ஒருவர் பெற்றுள்ள அடிப்படைப் பயிற்சியைப் பொறுத்ததாக இல்லாமல் பெற்றோரின் சமூக அந்தஸ்தை வைத்தே ஒவ்வொருவருக்கும் வேலை தரும் வாய்ப்புள்ளதால் சாதி முறையில் அடிப்படைத் திறன் கொள்கையை மீறுகிறார்கள். இன்னொரு நோக்கில் பார்த்தால், சாதி முறையின் விளைவான இந்த அடுக்கு முறை ஆபத்தானது ஆகிறது. இதனால் தொழில் எப்போதும் நிலையாய் நிற்பதில்லை விரைவான, தலைகீழ் நிலையை அடைகிறது. இத்தகைய மாற்றங்களால் எவரும் தம் தொழிலை எளிதில் மாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். மாறுகின்ற சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மாற்றிக் கொள்ளும் நிலையில் இல்லாவிட்டால் அவனால் வயிற்றைக் கழுவ முடியாது.

சாதி அமைப்பில் ஓர் இந்து, நிறைய ஆட்கள் தேவைப்படுகின்ற வேலைக்கு மாற்றிக் கொள்ள நினைத்தாலும் அந்தத் தொழில் அல்லது அந்த வேலை தன்னுடைய பரம்பரைத் தொழிலாக இல்லாவிட்டால் அதைச் செய்யமாட்டார். ஓர் இந்து பட்டினி கிடந்தாலும் கிடப்பாரே ஒழிய தன் சாதிக்கு உரியது அல்லாத தொழிலைச் செய்ய மாட்டார். இதற்கு மூலகாரணம் சாதி முறைதான். (நூலிருந்து பக் 86-87)

நூல்: அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்
ஆசிரியர்: அம்பேத்கர்

வெளியீடு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110/63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024
தொலைபேசி: 94448 34519

பக்கங்கள்: 204
விலை: ரூ 80.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: marinabooks | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !

பிப்ரவரி 14 காதலர் தினம் என்றாலே காவிகளுக்கு  கடுப்பாகி விடுகிறது. வருடா வருடம் காதலர் தினத்தன்று இவர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லில் அடங்காது. இந்த வருடமும் சங்கி மங்கிகளின் அட்டூழியம் தொடர்கிறது. “காதல் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது. ஜோடியாக திரியும் காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம்” என்று மிரட்டி வருகின்றனர். காதலர் தினம் அல்லாத நாட்களில் இவர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் காதலர்களையும், குறிப்பாக காதலிக்கும் முஸ்லீம்களையும் குறிவைக்கின்றனர்.

இவர்களுக்கு போட்டியாக ஆடியோ பிஜே புகழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக காதலை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு தங்கள் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள். இந்த விஷயத்தில் இரண்டு கும்பலுக்கும் வேறுபாடு இல்லை. ஆனால், காவிகள் சொல்லும் “கலாச்சாரம்” பெரும்பான்மையின் பெயரால் வருவதால் அது நாட்டு மக்களின் நிம்மதியை குலைக்கிறது.

சாதிகளைப் பாதுகாக்கும் அகமண முறையை பாதுகாக்க காதல் கூடாது என்பார்கள். மீறி காதலித்தால் கட்டி வைத்து எரிப்பார்கள். பெண்களை தாய், மாதா, புனிதம் என்பார்கள். ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை துளியும் வெட்கமின்றி நியாயப்படுத்துவார்கள். கோயில் கருவறையில் எட்டு வயது சிறுமி ஆசிபாவை வைத்து குதறுவார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடவும் செய்வார்கள். இதுதான் இவர்கள் போற்றும் கலாச்சாரம்.  சங்க பரிவாரங்களின் காதல் எதிர்ப்பு காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றி  சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரை, செம்மொழி பூங்கா ஆகிய இடங்களுக்கு வந்திருந்த இளைஞர்களிடம் கேட்டுப் பார்த்தோம். அவர்களில் சில காதலர்கள் உண்டு. என்ன கூறுகிறார்கள் பார்ப்போம்.

பர்வத் அகமத், (பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர்)

“படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். திருவொற்றியூர்ல இருக்கேன்.. இந்த மாதிரியான கேள்வியெல்லாம் யாராவது என்கிட்ட கேப்பாங்களான்னுதான் வெயிட் பன்னிகிட்டிருந்தேன். காதல் என்பது நம்முடைய பிரைவசி. இது சுதந்திர நாடு என்பதால் எல்லோருக்கும் காதலிக்க உரிமை இருக்கிறது. நாங்களும் இண்டர் காஸ்ட் மேர்ரேஜ் தான் பன்ன போறோம். வீட்ல எந்த எதிர்ப்பும் இல்ல. ஆனா, ஆர்.எஸ்.எஸ். – காரங்க எதிர்க்கிறாங்க.

இவ்வளவு பேசுறாங்களே அந்த ராமனே – சீதையை காதலிச்சிதான் கல்யாணம் பன்னிக்கிட்டாரு. கிருஷ்ணர் ஒரு ப்ளே பாய் தான். இதுக்கு என்ன சொல்வாங்க… ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைப் பொருத்த வரைக்கும் இந்தமாதிரி எதையாவது பண்ணிகிட்டு இருந்தாதான் அவர்கள் இருப்பதாகவே மக்களுக்கு தெரியும். இல்லைன்னா அவங்க இருக்கிற இடமே தெரியாம போயிடும். காதல் எதிர்ப்புன்ற பேர்ல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இதை விட்டா இவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

» காதலர்களுக்கு கட்டாயமா தாலியோடு கல்யாணம் பண்ணி வைப்போம்னு சொல்லுறாங்களே…..?

என்கிட்ட வந்து சொன்னா அது உங்க வேலை இல்லைன்னு சொல்லுவேன். அவங்க எப்படி எனக்கு கல்யாணம் பண்ணி வெக்க முடியும்? அது அவுங்க வேலயே இல்ல… எனக்கு திருமணம் பண்ணி வக்கிறதுக்கு எங்க பெற்றோர்கள் இருக்காங்க. என்னோட குடும்பம் சார்ந்தது. அதனால என் திருமணத்தப் பத்தி என்னோட குடும்பத்தினர் தான் கவலைப்படனும். இவர்கள் இல்லை.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்
மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

அதேமாதிரி இவர்கள் சொல்லுறது இங்க செல்லாது. நார்த் இண்டியாவுல வேணும்னா இவுங்க படம் ஓடும். இது சவுத் இந்தியா. இங்க கல்வியறிவு இருக்கு. வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால வட இந்திய பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்.

» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஹத்தும் இதை எதிர்க்குறாங்களே…?

நான் சார்ந்த இனமாக இருந்தாலும் இதை எதிர்க்கிறேன். யார் செய்தாலும் தவறுதான்.

ஹாசன்.

இப்படி எதிர்க்குறாங்கன்னு நீங்க சொல்லிதான் தெரியும். அந்த காலத்துலயே லவ் இருந்துட்டுதான் வருது. இப்ப அதை ஒன்னும் செய்ய முடியாது.

» இது இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும்னு சொல்றாங்களே….?

அப்படின்னா…. “நான் ஒரு ஆண்டி இந்தியன்-னு வெச்சுக்கங்களேன்”

கமல், (புகைப்படம் தவிர்த்தார்).

காதல், தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறாகத்தான் தெரியும். நாங்க காதலிக்கிறதே கல்யாணம் பண்ணிக்கத்தான். இவர்கள் யார் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வக்க? ஒருவேளை எங்ககிட்ட வந்து அப்படி சொன்னா எங்க வீட்ல வந்து பேசி முடிங்கன்னுதான் சொல்லுவேன். இவனுங்க எல்லாம் இதை ஒரு பாப்புலாரிட்டிக்குத்தான் செய்யிறானுங்க.  மத்தபடி வேற எந்த நோக்கமும் இல்ல. எல்லாம் அரசியல்தான்.

காலித், (புகைப்படம் தவிர்த்தார்).

அவுங்க காலத்துல மட்டும் லவ் பண்ணாமலா இருந்தாங்க. அப்பல்லாம் ஆட்டம் போட்டுட்டு இப்ப வயசான காலத்துல நீதி நியாயம்னு பேசினா எப்படி? இது என்னோட தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு சுதந்திரம் இருக்கு. எங்க வீட்ல சொல்லிட்டோம். எந்த எதிர்ப்பும் இல்ல. நானும் ஒரு முசுலீம்தான். எங்க ஆளுங்களே காதலிச்சா விபச்சாரத்துக்கு சமம்னு சொல்லுறத ஏத்துக்க முடியாது.

நிதிஷ், விஷ்ணு,  (எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவர்கள், செம்மொழி பூங்கா).

(இடமிருந்து இரண்டாவது) நிதிஷ் மற்றும் விஷ்ணு நண்பர்களுடன்.

லவ்வர் இருக்கவனுக்கு ஜாலி.. இல்லாதவனுக்கு பொறாமை’ண்ணா…. காதல்-ங்கிறது செம்ம ஃபீல்… அது வேற லெவல்…. அதெல்லாம் இப்படி எதிர்க்கிறவனுங்களுக்கு தெரியாது. நான் கோ-எஜுகேட்லதான் படிக்கிறேன். எல்லாம் ஆல்ரெடி கமிடட். எங்களுக்குத்தான் இன்னும் செட் ஆகல. அதுக்குதான் பார்க் – பார்க்கா சுத்திட்டு இருக்கோம். சீக்கிறத்துல செட் ஆகிடும் ப்ரோ.

படிக்க:
ஆதலினால் காதல் செய்வீர் !
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி

காதலர்கள் ஒன்னா இருக்கும்போது தொந்தரவு பண்றவங்கள அடிச்சி விரட்டனும். பசங்க கொஞ்சம் பயப்படுறாங்க. அதுக்கு காரணம், கூட இருக்குற பொண்ணுக்கு பாதிப்பாகிடுமோன்னு யோசிக்கிறாங்க. இல்லன்னா இந்த மாதிரி ஆளுங்கள ஓட விட்டுடுவாங்க. எங்ககிட்ட வந்து அந்த மாதிரி பண்ணா அதுதான் நடக்கும். காதல எதிர்க்கிறவன் எல்லாம் சாதி வெறியனாத்தான் இருப்பான். அதனால தான் பி.ஜே.பி. எதிர்க்குது. அந்த கட்சியில இருக்கவன் எல்லாம் சாதி வெறியனுங்கதான்.

மணிகண்டன்.

லவ் ஒன்னும் இந்த காலத்துல வந்ததில்லயே… அந்த காலத்துலயும் லவ் எல்லாம் இருந்துச்சில்ல. காதலிக்கிறதே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசி அவங்களோட பலம் – பலவீனம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி விட்டு கொடுத்து பிரச்சன வராம பாத்துக்குவோம். இதுவே வீட்டுல பார்த்து கல்யாணம் பண்ணா அவங்கள புரிஞ்சிக்கவே சில காலம் ஆகும். ரெண்டு பேரோட கேரக்டரும் ஒத்து வராதபோது அது பிரச்சனையாகிடும். பேசி தீர்த்துகிறதுக்குள்ள அது குடும்ப சண்டையா மாறிடும். இந்து மக்கள் கட்சி போன்ற கட்சிங்க, லவ் பன்றத வேணாம்னு சொல்றதெல்லாம் சரியில்லாதது. போலிசுல கம்ப்ளையண்ட் பண்ணா பொண்ணுக்கு பிரச்சனையாகும். வேற வேலை இல்லன்னு இதெல்லாம் பண்ணிகிட்டு இருக்காங்க. அதனால, கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றவங்கள அடிக்கிறத விட்டா வேற என்ன பண்ண முடியும்?


நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்


இதையும் பாருங்க !

நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !

வாசந்தியின் ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் பிராமணத் துவேஷிகளாம் !

ருவழியாக வாசந்தியின் ‘ஜெயலலிதா’ புத்தகத்தைப் படித்துவிட்டேன். முன்பே சொன்னதுபோல் ‘தமிழில் இவ்வளவு மோசமான மொழிநடை கொண்ட புத்தகத்தை இதுவரை படித்ததில்லை’ என்ற எண்ணம் மறுபடி உறுதிப்பட்டது.

ஜெயலலிதா தன் இறுதிக்காலத்தில் தன் உடல்நலத்தைப் பேணவில்லை. சர்க்கரை வியாதி இருந்தாலும் இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அவர் உடல்நிலை மோசமானதற்கான காரணங்கள் இவை. இதைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதை வாசந்தி எப்படி எழுதியிருக்கிறார் தெரியுமா?

‘மற்றவர்களை அடக்கமுடிந்த அவர், தன் உடம்பின் வக்கிரங்களை அடக்கவில்லை’.

நல்லவேளையாக, இந்தப் புத்தகம் வருவதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆங்கிலப் புத்தகத்துக்காவது வழக்குத்தான் போட்டார். இந்தப் புத்தகம் மட்டும் கண்ணில் பட்டிருந்தால், ஜெயலலிதா சுபாவத்துக்கு நடப்பதே வேறு. அ.தி.மு.க.-வினருக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்பதால் பிரச்னையில்லை,

கேவலமான மொழிநடை, தப்புத்தப்பான தகவல்கள், ஜெயலலிதாவை எதிர்த்தவர்களை எல்லாம் ‘ஆணாதிக்கவாதிகள்’, ‘பிராமணத் துவேஷிகள்’ என்று சித்திரிக்கும் பார்ப்பனச் சார்பு ஆகியவை நிரம்பிய புத்தகம் இது. உலகத்தில் பெண்ணியம் எது எதற்கோ பயன்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அது ஜெயலலிதாவின் ஆணவத்தையும் பாசிச மனநிலையையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

‘வாக்காளர்களுக்குப் பணமும் பிரியாணியும் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தவர் ஜானகி ராமச்சந்திரன்’ என்கிறார் வாசந்தி. ‘கனிமொழியின் அரசியல் வருகைக்குப் பிறகுதான் தி.மு.க.வுக்கு அறிவுஜீவிகளிடம் ஓரளவு ஏற்பு கிடைத்தது’ என்று சலபதி எழுதியிருக்கிறாராம். இப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதற்காக காலச்சுவடுக்கு இந்த ஆண்டாவது அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும்.

அடுத்து வாசந்தி எழுதும் கலைஞர் புத்தகத்தைப் படித்துவிட்டு, இரு புத்தகங்கள் குறித்து நிச்சயம் விரிவாக எழுதுவேன்.

நன்றி : சுகுணா திவாகர்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

ஆதலினால் காதல் செய்வீர் !

காதல் என்ற ஒற்றை வார்த்தைகளுக்கு எங்கும் எதிலும் பொருள் சொல்லப்படவில்லை. காதல் எங்கோ இருக்கிற பொருளும் அல்ல. ஆனால், அதை பேசாத சங்க இலக்கியமும் இல்லை, சரித்திரமும் இல்லை. அப்படி என்ன காதல் பேசுகிறது. காதல் என்பது இருவர் சம்பத்தப்பட்ட விஷயம் என்பதாலேயே இது மனங்களின் அந்தரங்கம் என்பதாலேயே காதலை நம் முன்னோர்கள் அகம் என்றார்கள். அகம் என்பது உள் என்று பொருள்.

காதலை நுட்பமும் ஆழமும் கூடிய உணர்வாகப் பார்த்தவர்கள் நாம். இதை எழுத்தாளர் பிரபஞ்சன் தமது கட்டுரைகளில் மிக அழகாக எடுத்துக் காட்டியிருப்பார். காதலை மறைபொருள் என்று நினைத்தோம். மலரினும் மெல்லியது காதல் என்று நெறிப்படுத்தினோம். காதலும் காமமும் ஒன்றாக கலந்து பேசுகிறது. ஒரு பெண்ணும் ஆணும் காதலிக்க மரத்தடி நிழலுக்கு சென்று சேர்கிறார்கள். அவள் அந்த மரத்தடி வேண்டாம். அங்கு போகலாம் என்று தூரத்தில் உள்ள மரநிழலைக் காட்டுகிறாள். ஏன் என்று அவன் கேட்கிறான். இவள் பதில் கூறினாள், “ஒரு நாள் விளையாடும் போது அம்மா குரல் கேட்க, அவசரமாய்ப் புன்னைக் காய்களைத் திரட்டிக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அப்போது மண்ணிலே தங்கிப்போன ஒரு புன்னை, அன்றிரவு பெய்த மழையால் முளைத்துவிட்டது. அம்மா எனக்கு ஊட்டும் அன்பு அனைத்தையும் புன்னை செடிக்கும் ஊட்டினேன். புன்னை மரமாயிற்று, நானும் வளர்ந்தேன். நானும் புன்னை மரமும் தங்கைகள் ஆனோம். நான் இந்தப் புன்னையைத் தங்கையாகவே நினைத்து வந்தேன். அந்த மரநிழலில் காதலிக்க முடியுமா? தங்கையின் முன்னாலே எப்படிக் காதலிப்பது ?”

படிக்க:
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !
செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?

இப்படி காதலையும் காதலர்களையும் அந்தரங்கத்தையும் மறை பொருளையும் அப்படி காப்பாற்றியவர்கள் நாம். தமிழில் ஆதி இலக்கியத்தில்  சரிபாதிக்கு மேலாக அக இலக்கியங்கள் என்று பொதுவாக ஓர் உண்மையை முன்வைகிறது. காதலை கசிந்து உருகுகிற நம் மூதாதையரைப் பாருங்கள். சங்க இலக்கியம் தொட்டு நிலவுக்குள் ஊறி, ஊறி காதல் நம்மை தித்திக்க வைக்கிறது. இதில் உணர்வுகளும் உண்மைகளும் மட்டுமே மூத்தது. அதில் காதல் மாத்திரம், இன்னும் இளைமையாகவே இருக்கிறது. இதை குறுந்தொகையில்

“யாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளீர்
செம்புல
பெயல் நீர்ப்போல்
அன்புடை
நெஞ்சம்தாம்
கலந்தனவே
கலந்தனவே”

என்ற உணர்வுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நமக்குள் கேட்கிறது. குறுந்தொகை தொடங்கி எல்லா இலக்கியங்களும் பேசிகொண்டே இருக்கின்றன. இப்படி, காதலை மனித மனத்தை வடிவமைப்பதில் மண்ணுக்கும் இயற்கைச் சூழ்நிலைக்கும் உரிய இடத்தை சங்க இலக்கியம் வரையறுத்திருக்கிறது.

காதல் வெறும் உடலுறவு அல்லவே. ஆனால், உடலும் சேர்ந்தே காதல். பெண் மற்றும் ஆணின் விரல்கள் தீண்டுதலில் தீண்டுபவை விரல்கள் அல்ல. மாறாக, ஒரு இனத்தின் நாகரிகம் தன்னைத் தானே ஸ்பரிசித்துக் கொள்கிறது என்பதே பொருள்.

பெண்ணின் உலகம் ஆணை நம்பியும் அவன் அன்பை எதிர்பார்த்தே இருந்தது என்பதையும் கூடிய புரிதலோடேயே அந்தப் பழைய இலக்கியத்தை அணுக வேண்டும். அவை உன்னதமானவை அல்ல; மாறாக, அந்தக் காலத்தை உண்மையாக நாடகியமாகச் சொல்பவை. காதல் உலகத்தில் ஆண் ஒரு முதலாளியைப் போல, போலீஸ்காரனைப் போல நடந்துகொள்ளும் போது காதல் துளிர்ப்பதில்லை. காதல் அந்த மனிதரின் விடுதலை கூர் உணர்வில் தோன்றும் இயற்கை விழைவு. இந்த சமுகம் காதலை புரிந்து கொள்ளும் சமூகமாக இல்லை. இந்திய ஜனத்தொகையில் பெருபான்மையோர் வன்புணர்ச்சியில் பிறந்தவர்கள். ஏனெனில் சகாவான பெண் சம்பந்தப்பட்டு தாயாவதில்லை. இந்த தேசத்தில் காதல் தொழிலில் சமபங்கு ஆற்றாத பெண் காதலியாகக் கருதப் படலாமோ எனில் மட்டாள். மாறாக அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்.

அடுத்தது அழகு. காதல் அழகோடு இணைத்து பேசப்படுகையில் ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் அழகு என்பதே ஒன்றில்லை. அழகில்லாதது என்பதும் ஒன்று இல்லை. எது இயல்பாக இருக்கிறதோ அது அழகு. எது இயல்புக்கு விரோதமாக இருக்கிறதோ அது ஆபாசம்.

படிக்க:
எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு !
மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

அழகு பற்றி ஒரு ரஷ்ய எழுத்தாளர் அருமையான கதை ஒன்று தந்துள்ளார். போர்க்களத்தில் பீரங்கியால் தாக்கப்பட்ட, ஒரு வீரனின் முகமே சிதைந்து போகிறது. 18 மாத சிகிச்சைக்குப் பிறகு அவன் உயிர் பெறுகிறான். அவன் முகமே அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. குரலும் மாறிவிடுகிறது. அவன் விடுமுறையில் தாய் தந்தையை பார்க்கப் போகிறான்.

கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த அம்மா, யாருப்பா நீ என்கிறாள். அவன் மகனின் நண்பன் என்கிறான் மகன். அம்மா அப்பாவிடம் அவர்களின் மகனின் வீரம் பற்றி அவனே சொல்கிறான். மறுநாள் திரும்பும் முன், அந்த மகனின் சினேகிதியைப் பற்றி விசாரிக்கிறான். இராணுவ முகாமுக்குத் திரும்புகிறான். அவன் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. அதில் “மகனே, உன் நண்பன் ஒருவன் வந்து நம் வீட்டில் தங்கியிருந்தான். எனக்கென்னவோ வந்தவன் நீ தான் என்று தோன்றுகிறது. உண்மையை எழுது என்று எழுதிருந்தாள். மகன் உண்மையை எழுத தாயும், சினேகிதியும் இராணுவ முகாமிற்கு வருகிறார்கள்.

‘ஏண்டா என்னிடம் பொய் சொன்னே?’

இந்த கோரமுகத்தை என்னாலேயே சகிக்க முடியவில்லையே. உனக்கு எப்படி பிடிக்கும் என்று தான்.’ இப்போது தானடா உனக்காக நான் பெருமைப்படுகிறேன். என் மகன் தாயகத்துக்காகப் போராடிய வீரன் அல்லவா? அதுதானடா என் பெருமை.

“சினேகிதியைப் பார்த்து அவன் கேட்கிறான். இப்போதும் இந்த முகத்தை நீ விரும்புவாயா?” “முட்டாள்’’ என்று அவன் முகத்தில் முத்தமிட்டபடியே சொல்கிறாள் இப்போதுதானடா நான் உன்னைக் காதலிக்கிறேன்.

“புரிதலில்
புரிந்துணர்வு ஒப்பந்தமே
காதல்
அதில்
நெடுந்தூரப் பயணம்
திருமணம்
அதில்
அவன் அவனுமாய்
அவள் அவளுமாய்
ஒன்றாக பயணம் செய்யின்
அதுவே பயணத்தின் இலக்கு”

காதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ, பெண்ணோ ! நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில் நாம் வீரர்கள், அறிஞர்கள், அழகர்கள், மொத்தமாக மக்கள். நாம்தான் காதலிக்கப்படுவோம். ஆதலினால் காதல் செய்வீர் !

– சிந்துஜா, சமூக ஆர்வலர்


இதையும் பாருங்க !

நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்

டக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! என்ற தலைப்பில் பிப்-23 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டை தடுத்து நிறுத்துவதற்கு சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது, அடிமை எடப்பாடி அரசின் போலீசு.

மாநாட்டின் நோக்கம் குறித்து பேருந்துகள், இரயில்கள், கடைவீதிகள் மற்றும் தெருமுனைகளிலும் என மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சுவரொட்டி ஒட்டியதற்காக கைது; சுவரெழுத்து எழுதியதற்காக கைது; பிரசுரம் விநியோகித்ததற்காக கைது என அரசின் அடக்குமுறை தொடர்ந்த போதிலும் ”எதிர்த்து நில்!” என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது!

படிக்க:
மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

விருத்தாசலம்திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வேப்பூர் பகுதியில் மக்கள் அதிகாரம் மாநாடு சுவர் விளம்பரம்.

திருச்சி திண்டுக்கல் மற்றும் திருச்சி மதுரை நெடுஞ்சாலையில்  மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலம் சார்பாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள்.

 

சென்னை மண்டலம் சார்பாக சென்னை வேலூர் பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள்.

 

பென்னாகரம் பகுதியில் ஆட்டோ ப்ளக்ஸ் விளம்பரம்.சுவரெழுத்து பிரச்சாரம் …

தெருமுனைப் பிரச்சாரம் …

பேருந்து பிரச்சாரம் …

சுவரொட்டி பிரச்சாரம் …

#ResistCorporateSaffronFascism


தொகுப்பு:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

பத்திரிகைச் செய்தி

கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்த மாநாட்டை தடை செய்து திருச்சி மாநகர காவல்துறை பிறப்பித்திருந்த தடையை எதிர்த்து நேற்று முன்தினம் (12-02-19) உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தோம். “காவல்துறையின் ஆணை செல்லத்தக்கதல்ல” என்று நேற்று 13-02-19 மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது.

மாநாட்டைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டதால் பிரச்சாரத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காவல்துறை. கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தால் ஆத்திரமடைந்துள்ள பா.ஜ.க. வினர் ஆங்காங்கே பிரச்சாரத்தை தடுக்க முயற்சித்தனர். எல்லா இடங்களிலும் அவர்களுக்கு மக்களே சரியான முறையில் பதிலடி கொடுத்து அடக்கியிருக்கின்றனர்.

பா.ஜ.க. வினரால் நிறுத்த முடியாத எங்களது பிரச்சாரத்தை தடுக்கும் பொறுப்பை இப்போது போலீசார் ஏற்றிருக்கின்றனர். எல்லா ஊர்களிலும் கடை வீதிகள், குடியிருப்புகளில் மாநாட்டுக்கான துண்டறிக்கை விநியோகிப்பதை காவல்துறை தடுத்து வருகிறது. சுவர் விளம்பரங்களை அழிக்குமாறும் சுவரொட்டிகளை கிழிக்குமாறும் மிரட்டுகிறது.

தஞ்சையில் கைது செய்யப்பட்ட தோழர்கள்.

நேற்று தஞ்சை பேருந்து நிலையத்தில் மாநாட்டு துண்டறிக்கை விநியோகித்துக் கொண்டிருந்த மக்கள் அதிகாரம் தொண்டர்கள் 9 பேர் கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர். என்ன வழக்கு எதற்காக கைது என்பது கைது செய்த காவல்நிலைய அதிகாரிகளுக்கே தெரியவில்லை. பிறகு மேலிடத்திலிருந்து வந்த உத்தவின்படி, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தார்கள், உருட்டுக்கட்டை கொண்டு தாக்க வந்தார்கள் என்று இந்திய தண்டனைச் சட்டம் 505 1(b), 353, 147, 506(2) ஆகிய பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.

மேலும், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கோவில்பட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 5 தொண்டர்களை வீடு புகுந்து கொண்டு சென்றிருக்கிறது தூத்துக்குடி காவல்துறை. கைது நடவடிக்கை குறித்து பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தபோதிலும், அவை எதையும் மதிக்காமல் என்ன வழக்கு, எதற்காக கைது என்ற எந்த விவரத்தையும் சொல்லாமல், சட்டவிரோதமான முறையில் ரவுடிகளைப் போல இந்த ஆள்கடத்தலை போலீசு நடத்தியிருக்கிறது.

“காவல்துறையின் மேல்மட்டம் பா.ஜ.க.-வின் உத்தரவுக்கு ஆடுவது எல்லை மீறிப் போய்விட்டது” என்று போலீசார் வெளிப்படையாகவே புலம்பும் அளவுக்கு எடப்பாடி அரசு மோடியின் எடுபிடி அரசாக மாறி இருக்கிறது.

படிக்க:
திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

எங்களது பிரச்சாரத்தை போலீசாரே முன்னின்று முடக்க முயல்வதன் மூலம், தனது சட்ட விரோத கைது நடவடிக்கைகளின் மூலமும், இது கார்ப்பரேட் காவி பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரச்சாரப் பணியை போலீசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இனி நாங்கள் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றுதான் –  எதிர்த்து நில்!

#கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில் #ResistCorporateSaffronFascism


தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321

ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் ?

0
பாக்சைட்

ங்களது வாழ்விடங்களை விழுங்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால், அவர்களை “நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்றும் “நக்சலைட்டுகள்” என்றும் ஆளும் வர்க்கங்களும் அடிவருடி ஊடகங்களும் சித்தரிக்கின்றன. வளர்ச்சிக்கு எதிராக அவர்கள் ஏன் இருக்கிறார்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள்.

பழங்குடிகளின் கடுமையான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பிறகும் அவர்களது இடங்களை வலுக்கட்டாயமாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்ததும் பழங்குடிகளுக்கு என்ன நேர்ந்தது? வளர்ச்சி அவர்களுக்கோ அவர்களது இடங்களுக்கோ பயனளித்ததா?

கடுமையான எதிர்ப்பிற்கு பிறகும் கூட நிறுவனங்களால் எப்படி பழங்குடிகளது வாழிடங்களை கைப்பற்றிக்கொள்ள முடிந்தது என்பதை புரிந்து கொள்ள அப்படியான இடங்களுக்கு நேரில் செல்வது இன்றியமையாதது. மாநில அரசுகள் மற்றும் காவல்துறையின் உதவியினாலேயே இத்தகைய ஆக்கிரமிப்புகள் சாத்தியமானது. இந்நடவடிக்கையில் மக்களின் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் சிறைச்சுவர்களுக்குள்ளே அடைக்கப்பட்டனர்.

இப்பின்னணியில் இது போன்ற இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஒடிசாவின் காஷிபூர் (Kashipur) தொகுதியை சேர்ந்த குச்சைபடார் (Kuchaipadar) கிராமம் அதற்கு பதிலளிக்கிறது.

மண்ணின் மைந்தர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக 1992 -ம் ஆண்டில் டாடாவும் பிர்லாவும் பாக்சைட் சுரங்க மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தொடரும் திட்டங்களை அங்கே கைவிட்டனர். பின்னர், உட்கல் அலுமினா (Utkal Alumina – ஹிண்டால்கோ மற்றும் கனடிய நிறுவனம் ஒன்றின் கூட்டு நிறுவனம்) அங்கே நுழைந்தது. இம்முறையும் மக்கள் எதிர்த்தனர். ஆனால், மாநில அரசாங்கம் அந்நிறுவனத்தை அனுமதித்தது. கூடுதலாக மக்கள் கருத்தை அரசாங்கம் கேட்பதாய் கூறியது.

Hindalco

1992-லிருந்து பல்வேறு போராட்டங்களில் பகவான் மஜ்ஹி கலந்து கொண்டிருக்கிறார். 1996 லிருந்து பிரக்ருதிக் சம்பத்தா சரக்ஷ பரிஷத் (Prakrutik Sampada Suraksha Parishad) என்ற 24 கிராமங்களை உள்ளடக்கிய இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கருத்துக் கேட்பு நிகழ்வில் பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் உட்கால் அலுமினா நிறுவனத்திடம் சாய்ந்துவிட்டனர். போலீஸ் பட்டாளமும் நிரந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர். இளைஞர்கள் பணத்திற்கும் வேலைக்கும் விலை போயினர். அப்பா மகன், அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என குடும்பங்களுக்குள்ளும் மோதல்கள் உருவாக்கப்பட்டன. வாக்குறுதிகளுக்கு இணங்கி பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் இருந்து விலகி விட்டனர். இயக்கம் சிதறடிக்கப்பட்டது.

தொடர்ந்து போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் வீடு திரும்பியதும் உடைந்த குடும்பங்களை ஒன்று சேர்ப்பதில் மூழ்கி விட்டனர். சொற்ப மக்கள் மட்டுமே சுரங்கத்திற்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்தனர். கடைசியில், 2004 -ம் ஆண்டில் உட்கால் அலுமினா நிறுவனம் தன்னுடைய சுத்திகரிப்பு ஆலையை குச்சைபடாரில் தொடங்கியது.

இயற்கை சார்ந்த வாழ்வு அழிக்கப்பட்டது எப்படி?

திருட்டோ, கொள்ளையோ அல்லது பாலியல் கொடுமைகளோ எதுவும் பல நூறு ஆண்டுகளாக குச்சைபடார் அறியாமல் இருந்தது. மக்கள் அமைதியாகவும் ஒருவருக்கொருவர் நட்பாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தங்களது நிலங்களில் நெல் அறுவடை செய்து வந்தனர். காட்டிற்கோ, மலைகளுக்கோ அல்லது நீர்வீழ்ச்சிகளுக்கோ தனியாக செல்ல பெண்கள் ஒருபோதும் அப்போது அச்சம் கொண்டதில்லை.

அவர்கள் இயற்கையை வழிபட்டனர். பருவகால திருவிழாக்களில் ஆடியும் பாடியும் கொண்டாடினர். ஒரு குடும்பத்திற்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மொத்த சமூகமும் அதற்கு உதவி செய்தது. மகிழ்ச்சி என்றாலும் கூட மொத்த கிராமமும் பகிர்ந்து கொண்டது.

ஒடிசா பழங்குடிகள்
தண்ணீர் எடுப்பதற்கு கும்பலாக செல்லும் காஷிபூர் பெண்கள்

வீடுகள் ஒருபோதும் பூட்டப்படவில்லை. பரஸ்பர நம்பிக்கை உணர்வு நிலவியது. உட்கல் அலுமினாவின் சுத்திகரிப்பு நிறுவனம் அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கிராமத்தில் பதிவாகியுள்ளது. திருட்டுகள் அப்பகுதியில் அதிகரித்தது. தங்கள் நிலங்களுக்கு தனியாக செல்ல மக்கள் தயங்க தொடங்கினர்.மேலும், பெண்கள் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று தனியே குளிப்பதற்கு அஞ்சினர்.

பெண்களும் சிறுமிகளும் பட்டப்பகலிலேயே கடத்தப்பட்டனர். மேலும், பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகினர். அவர்களது வாழ்க்கைமுறை முற்றிலும் மாறியது. ஒரு பயங்கர சூழல் உருவானது. நீர்வீழ்ச்சிகளுக்கும் வயல்களுக்கும் சேர்ந்து செல்ல தொடங்கினர். ஆண்களும் கூட காடுகளுக்கு கூட்டாக சேர்ந்து செல்ல தொடங்கினர். வீடுகளை பூட்டத் தொடங்கினர்.

பழங்குடிகளது கலாச்சாரம் நொறுங்கியது எப்படி?

குன்றுகள், காடுகள் மற்றும் நீரூற்றுகளை கொச்சைப்படார் மக்கள் வழிபடுகின்றனர். மலைகள், நீரோடை மற்றும் நீரூற்றுகள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனை தெய்வங்கள் பழங்குடிகளுக்கு இருக்கின்றன. அவை அனைத்தும் வழிபட்டு கொண்டாடப்பட்டன.

சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமைந்த பிறகு, பழங்குடிகளில் சிலர் தங்கள் தெய்வங்களில் நம்பிக்கை இழந்தனர். வெளியில் இருந்து வந்த அந்த கடவுளை வலிமையானது என்று கருதியதால் அதை வழிபடத் தொடங்கினர். புதிய கடவுளை வழிபட்டால் தாங்களும் வலிமையானவராகலாம் என்று வேறு சிலர் நம்புவதை போல நம்பத் தொடங்கினர்.

பழங்குடிகள் மக்கள்
பழங்குடிகளின் விடுகளில் துளசி செடி.

சிலர் அருகிலிருக்கும் நகரத்திற்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு துளசி விதைகளை கொண்டு வந்து தங்களது வீடுகளில் வளர்த்தனர். பெண்களில் சிலர் காயத்ரி பூஜை செய்யத் தொடங்கினர். இன்று கிராமத்திலிருக்கும் பெரும்பாலான வீடுகளில் காயத்ரி பூஜை செய்யப்படுகிறது. பழங்குடி நம்பிக்கைகளும் கலாச்சாரமும் அவர்களது மனங்களில் தரம் தாழ்ந்து விட்டது.

எவ்விதமான வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்?

முறையான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு குறித்து பன்னாட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஏன் அக்கறை கொள்ளவில்லை என்று சிர்குடா (Shriguda) கிராமத்தை சேர்ந்த மனோகர் மஜஹி கூறுகிறார். “யாருடைய வளர்ச்சியை குறித்து அவர்கள் பேசுகிறார்கள்? நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா? அப்படியானால் எங்களுக்கான முன்னுரிமையை உள்ளடக்கிய வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை?” என்று அவர் கேட்கிறார்.

ஒரு நிறுவனம் எங்கு சென்றாலும் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தை திருப்பி விடுகிறது என்று அவர் கூறுகிறார். “போலீசுடன் வந்து வலுக்கட்டாயமாக அந்த நிறுவனத்திற்கு அரசாங்கம் வழி செய்து கொடுத்து போராட்டக்காரர்களை சிறையில் தள்ளுகிறது. கூடுதலாக அந்நிறுவனமும் குண்டர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் உடன் அழைத்து வருகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை காலில் இட்டு மிதித்து நீர்வளம், காடுகள் மற்றும் ஆறுகள் என அனைத்தையும் அழிக்கிறார்கள். மக்களது வாழ்க்கை திடீரென்று முழுமையாக மாறுகிறது” என்று அவர் கூறுகிறார்.

உட்கால் அலுமினா பாக்சைட்
பாக்சைட் எடுத்துச்செல்வதற்காக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை.

பாக்சைட் தாதுப்பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதால் கிட்டத்தட்ட 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பாக்ரிஜோலா (Bagrijhola) கிராமத்தை சேர்ந்த நதோ ஜானி கூறினார். “மலையில் சுரங்க எல்லைக்குள் இருப்பதால் 85 கிராமங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் மறுவாழ்வு இடங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே சுரங்க வேலைகள் தொடங்கி விட்டன. சுரங்கப்பணிகள் மலையில் தொடங்கிய பிறகு வாழ்நிலை மோசமானால் மக்கள் தாமாகவே ஓடி விடுவார்கள் என்று ஒருவேளை அவர்கள் எண்ணியிருக்கலாம்.” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சுத்திகரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு விவசாயம் செய்வது சாத்தியமில்லாததாகிவிட்டது என்று அவர் கூறுகிறார். மாசு அதிகரித்த பின்னர் எங்களது வயல்கள் மலடாகிவிட்டன. “இந்த அளவுக்கு மோசமாக நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று ஜானி கூறுகிறார்.

அனைத்தையும் அழித்த பிறகு அவர்கள் சென்று விடுவார்கள் :

சுத்திகரிப்பு நிறுவனத்தை எதிர்த்த போராட்டத்தின் போது மக்கள் எப்படி பிளவுபடுத்தப்பட்டார்கள் என்று குச்சைபடார் கிராம தலைவர் கூறுகிறார். போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்களிடம் ஒவ்வொரு மாதமும் 1,800 ரூபாய் தருவதாக கூறிய நிறுவனம் அவர்களை அதிலிருந்து விலக வலியுறுத்தியது. “ஒன்றன் பின் ஒன்றாக கிராமங்கள் சதிவலையில் விழுந்து விட்டன; போராட்டமும் வலுவிழந்துவிட்டது. பணத்தின் வலிமைக்கு முன்பு மக்களது போராட்ட உணர்வு நொறுங்கி விட்டது” என்று அவர் கூறினார்.

படிக்க:
பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!
இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

“சில இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தில் தற்காலிக வேலை கிடைத்தது. ஆனால், சுரங்கம் முடிந்ததும் அவர்களது வேலைகளும் போய் விடும் என்பது அவர்களுக்கு தெரியும். இந்த இளைஞர்களால் விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் வேலையைத் தேடி இடம் பெயர்ந்து சென்று விடுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.

“முன்பு வேலைகளில் அனைவரும் பங்கெடுத்து கொள்வார்கள். அது கிராமத்திற்கு உதவியாக இருந்தது. இனிமேல் அது நடக்காது. ஒருநாள் அனைத்தையும் அழித்த பிறகு மலடான இந்த இடத்தை விட்டு விட்டு இந்நிறுவனம் சென்று விடும். யார் இதன் அழகை மீட்டு வருவார்கள்? முன்னர் இருந்ததை போன்ற வாழ்க்கையை எங்களுக்கு யார் இனி தருவார்கள்?” என்று அந்த கிராமத் தலைவர் தொடர்ந்து விசும்புகிறார்.


கட்டுரையாளர்: Jacinta Kerketta
மூலக்கட்டுரை: நன்றி: thewire
How Adivasi Livelihoods in Odisha Were Ruined by ‘Development’
தமிழாக்கம்: சுகுமார்

திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

க்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு சட்டவிரோதமாக அனுமதி மறுத்திருக்கும் போலீசு, அதற்கான காரணங்களில் ஒன்றாக, “ ம.க.இ.க-வின் கோவன் அங்கு பாடுவார். அந்தப் பாடல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டிருந்தது.

மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் அப்படி என்ன பாடலை பாடப் போகிறார் தோழர் கோவன் ?

உண்மையில் வானைத் தொடும் பாடல்தான் அது .. விண்ணைத் தொடும் பட்டேல் சிலையும், விண்ணைத் தொடும் ரஃபேல் விமான பேர ஊழலும்தான் பாஜகவையும், அதன் எடுபிடி போலீசையும் அப்பாடலைக் கண்டு மிரளச் செய்திருக்க வேண்டும்..

பாடல் வரிகள் :

உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…
அதுக்கு உள்ளே போயி ஒழிய பாக்குது ரஃபேலு…

அம்பானி அடிச்சான் கோலு…
அறுந்து தொங்குது ரீலு…

30,000 கோடி அம்பானிக்கு ரஃபேலு..
மோடிஜி ஆசியோட நீரவ் மோடி அம்பேலு..

சீனா கிட்ட செஞ்சு வாங்குன “Made in China” பட்டேலு
இதான் “Make in india”வாம்… கேட்டுக்கடா கோவாலு…

ஆக்சிசன் சிலிண்டர் இல்லை… பிஞ்சு கொழந்த சாகுது… (முழுப்பாடலையும் கேட்க)

பாருங்கள் ! பகிருங்கள் !

 

திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் !

டந்த 10-02-2019 அன்று மோடி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து பாஜக கூட்டத்தில் பேசியது அனைவரும் அறிந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு வேறு ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு சில திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதுவும் பலருக்கு தெரிந்து இருக்கலாம். இந்த அரசு விழாவை பொறுத்தவரை முற்றிலும் அரசாங்கச் செலவு. இந்த அரசு விழாவானது மொத்தம் பத்து நிமிடம் மட்டுமே நடந்தது. வெறும் பத்து நிமிட மோடியின் விளம்பரத்திற்காக அரசு பணம் செலவழிக்கப்படுகிறது.

இந்த விழாவில் திருப்பூரில் 100 படுக்கை வசதி கொண்ட தொழிலாளர் காப்பீடு நிறுவனத்தின் (ESI) மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுதல், திருச்சி விமான நிலையத்தில் ஒரு ஒருங்கிணைத்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை விமான நிலையம் நவீனப்படுத்தும் திட்ட தொடக்கம், சென்னை மெட்ரோ திட்டத்தின் சிறு வழித்தடத்தினைத் தொடங்கி வைத்தல், சென்னையில் மற்றுமொரு ESIC மருத்துவமனையைத் திறந்து வைத்தல், சென்னையில் நெடுஞ்சாலை ஒன்றை நாட்டுக்கு அர்பணித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திருப்பூரில் அமைக்கப்பட்ட மேடை அரங்கு போக, இந்தத் திட்டங்கள் தொடங்கும் இடங்களிலும் சிறு மேடை அரங்கு, LED திரை என மக்கள் பணத்தில்தான் முழுச்செலவும். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் 2000 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அடிக்கடி வெளிநாடு செல்வதும், இந்தியாவில் இருக்கும் நேரங்களில் ஏதாவது திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக விழாவில் கலந்து கொள்வதுமாகவே இருந்து வருகிறார். வெளிநாடுகளுக்குச் செல்வது தனது கார்ப்பரேட் நண்பர்களின் இலாப நலனுக்காக என்றால், உள்ளூர் விழாக்களில் கலந்து கொள்வது தனது விளம்பரத்திற்காக. இது மட்டுமா, 4 துடைப்பம் 40 புகைப்பட கலைஞர்கள் சகிதம் ஊர் ஊருக்கு சென்று குப்பையே இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி கூட்டி விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் கூத்து வேறு.

இவை அனைத்துமே மக்கள் பணத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு மட்டும் வெறும் விளம்பரத்திற்காக ரூ. 536 கோடி செலவழித்துள்ளது இந்த அரசு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். ஏற்கனவே கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதும், கட்டி முடிக்கப்படாத திட்டத்திற்குத் திறப்பு விழா நடத்துவதும் இந்த ஆட்சியில்தான். அதுமட்டுமல்ல, வெறும் பத்தே கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையைக் கூட ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளும் இங்குதான் நடந்து வருகிறது. பட்டேல் சிலை, அதிவிரைவு நெடுஞ்சாலைகள், தொழிலக ரயில் பாதைகள் என மோடி தொடங்கிய பல திட்டங்கள் முழுக் கட்டுமான பணிகளும் முடிவடையாதவை. அந்த வகையில் சென்னையில் பிப் 10-ம் தேதி தொடங்கிய மெட்ரோ சேவையும், திருப்பூர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வும் அடங்கும்.

மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த மெட்ரோ சேவை வழித்தடமானது ஆயிரம் விளக்கில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவுக்கானது ஆகும். ஊடகங்கள் அனைத்தும் இது முதல் வழித்தடத்தில் இறுதி பகுதி என்று பொய் கூறி வருகின்றன. இந்தப் பத்து கிலோமீட்டருடன் இந்த வழித்தடம் முடிவுக்கு வருகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் வரையில் மேலும் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இதற்கு இன்னொரு தொடக்க விழா மக்கள் பணத்தில் நடக்கும்.

திருப்பூர் மருத்துவமனையைப் பொறுத்தவரை இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. இந்த மருத்துவமனைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றது. இதற்கான நிலம் வாங்கியதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. இப்போதும் அந்தச் சட்ட சிக்கல் முடிவுக்கு வரவில்லை. மேலை நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது தெரிந்தும் மோடி அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி இருக்கிறார். அதுவும் மக்கள் பணத்தில்.

இந்திய தொழிலாளர் காப்பீடு நிறுவனம் திருப்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று அதற்குத் தேவையான நிலங்களை விலைக்கு வாங்கும் பணியில் இறங்குகிறது. இது அரசின் நேரடி திட்டம் இல்லை என்பதால் அரசால் நேரடியாக நிலம் கையகப்படுத்திக் கொடுக்க இயலாது. இந்த நிறுவனமே நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கிய நிலத்தில் ஒரு பகுதி கோவில் நிலம். இந்தக் கோவில் நிலத்தை அறநிலையத்துறையிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. இதனை எதிர்த்துக் கோவில் குருக்கள் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். கீழை நீதிமன்றமானது அறநிலையத்துறை செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது. ஆனால் அந்தக் கூட்டம் மேல்முறையீடு செய்து கடந்த ஆறு வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது.

படிக்க:
திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !

தொழிலாளர் காப்பீடு நிறுவனம் ஒரு அரசு இயந்திரம், அறநிலையத்துறை ஒரு அரசு இயந்திரம். இந்த இரண்டுக்கும் இடையே நிலம் கைமாற்றப்படுகிறது, அதுவும் தொழிலாளர் நலனுக்காக மருத்துவமனை கட்டுவதற்கு. இந்த மருத்துவமனை உழைக்கும் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சில புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருப்பூரை பொறுத்தவரை இன்றைய தேதியில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சேர்த்து இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 8 லட்சம் பயனாளிகள் இந்த காப்பீட்டு சேவைக்கு தகுதியானவர்கள். ஆனால் இந்த நகரில் இரண்டு ESI மருத்துவமனை மட்டுமே உள்ளது. பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனையிலோ அல்லது கோவைக்கோ சென்றுதான் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சேலம் எட்டு வழி சாலையை எதிர்த்து போராடிய விவசாய மக்களைக் காவல் துறையை ஏவி அடித்து ஒடுக்க நினைக்கிறது எடுபிடி அரசு. நாட்டின் நலனுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று காவி கும்பல் உபதேசம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொழிலாளர் நலனுக்காகக் கட்டப்படும் மருத்துவமனையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் முட்டுக்கட்டையை தூக்கி எறிய இந்த மாநில அரசுக்கும் துப்பு இல்லை, மத்திய அரசுக்கும் துப்பு இல்லை. மோடியோ இது எதுவுமே நடக்காதது போல அடிக்கல் நாட்டி விட்டு போகிறார். நாம் ஆடும் நாடகங்கள் மக்களுக்குத் தெரியவா போகிறது, தெரிந்தால் மட்டும் என்ன செய்து விடுவார்கள் என்ற ஒரு நினைப்புதான். சொந்த உழைப்பிலா இதெல்லாம் செய்கிறார், மக்கள் பணம்தானே.

ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை கொடுக்கப் பணம் இல்லை; தமிழக அரசின் கடன் 3 லட்சம் கோடியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது; நாட்டில் அடுத்த ஆண்டின் போலியோ சொட்டு மருந்துக்கான பணம் இல்லை; ஆனால், வெறும் பத்து நிமிட விளம்பரத்திற்காக ஊருக்கு ஒரு மேடை போட்டு நிகழ்ச்சி நடத்த மட்டும் பணம் இருக்கிறது. தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.

நன்றி : முகநூலில் சக்திவேல்

திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

பத்திரிகை செய்தி  

12-02-2019

அடக்குமுறைதான் ஜனநாயகமா?
கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்!
நீதிமன்ற உத்தரவை மீறி மாநாட்டுக்குத் தடை!

திருச்சியில் 23.02.2019  அன்று நடக்கவிருந்த எமது மாநாட்டுக்கு, சட்டவிரோதமான காரணங்களைச் சொல்லி, திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

மோடி – எடப்பாடி அரசுகளின் கீழ் வாழ்வுரிமை பறிக்கப்பட்ட மக்களோ, அவர்களுக்காக போராடும் இயக்கங்களோ தமது உரிமை பற்றி பேசக்கூட முடியாது என்ற சூழ்நிலை கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் நிலவி வருகிறது. ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த திட்டங்களுக்கு எதிராக தமது கருத்தைப் பேசினாலோ, துண்டறிக்கை விநியோகித்தாலோ கூட கைது செய்யப்படுகின்றனர். இதனை எதிர்த்து, “அடக்குமுறைதான் ஜனநாயகமா?” என்ற தலைப்பில் திருச்சியில் மாநாடு நடத்த கடந்த செப்டம்பர் மாதத்தில் அனுமதி கேட்டிருந்தோம். அன்று அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

அனுமதி மறுப்புக்கு எதிராக நாங்கள் தொடுத்த வழக்கில், போலீசின் உத்தரவை ரத்து செய்து 21.12.2018 அன்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் மேற்சொன்ன மாநாட்டை நடத்த விண்ணப்பித்திருந்தோம். “காவி பாசிசம் என்று கூறுவது தேசியக் கொடியை அவமதிப்பதாகும்” “கோவன் மீது வழக்கு இருப்பதால் அவர் பாடக்கூடாது” “உங்களால் விமரிசிக்கப்படும் கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” – என்பன போன்ற சட்டவிரோதமான காரணங்களைக்கூறி மீண்டும் எமது மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.

“தமிழ்நாட்டில் எச்.ராஜா போன்ற காவி பாசிஸ்டுகளும், ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டும்தான் பேசலாம். அவர்களை எதிர்க்கும் தமிழ்மக்கள் பேசக்கூடாது” என்பது எழுதப்படாத சட்டமாக அமல்படுத்தப்படுகிறது. “அரங்குகளில் கூட்டம் நடத்த போலீசின் அனுமதி தேவை இல்லை. ஆனால் அரங்க உரிமையாளர்களை மிரட்டி தடுத்து வருகிறது. கூட்டம் நடத்த யார் அனுமதி கேட்டாலும் ஒரு நீண்ட வினாத்தாளைக் கொடுத்து, “கூட்டத்தில் யார் என்ன பேசப்போகிறார்கள்? மேடையில் பாடவிருக்கும் பாடல்களின் வரிகள் என்ன? பொதுமக்கள் எத்தனை பேர் வருவார்கள் – அவர்களுடைய முகவரி என்ன?” என்று தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட பல கேள்விகளை காவல்துறை எழுப்புகிறது.

படிக்க:
♦ எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு | பிப் 23
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப் 23

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அங்கேயும் காவல்துறை சட்டப்படியான காரணங்களை சொல்வதில்லை. பேச்சாளர்கள் செயல்வீரர்கள் மீது டஜன் கணக்கில் பொய் வழக்குகளைப் போட்டு வைத்துக் கொண்டு “பேச்சாளர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் பல வழக்குகள் உள்ளன” என்று கூறி அனுமதி மறுக்கிறது. ஒரு சுவரொட்டி ஒட்டினால் அதற்கு எதிராக பல காவல்நிலையங்களில் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நடத்தப்படும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கும், போராட்டத்திற்கும் ஒரு வழக்கு பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகிறது. வழக்கு இருப்பவர்கள் கூட்டம் நடத்தக்கூடாது என்றால் அதிமுகவும், பா.ஜ.கவும் எப்படி பேசுகிறார்கள்.?.

கூட்டம் நடத்துவதை தடுப்பது மட்டுமல்ல துண்டறிக்கை, சுவரொட்டி, ஓவியம்,  பாடல் என்று அனைத்துக்கும் தடை –  வழக்கு என்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை.

எதைக்கேட்டாலும் சட்டப்படியான விளக்கத்தை சொல்வதற்குப் பதிலாக, “மேலிடத்து உத்தரவு” என்று காவல்துறை உயரதிகாரிகள் பதிலளிக்கிறார்கள். அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு “மேலிடத்தின் ஆட்சி”தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த “மேலிடம்”. நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை மாநாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நிரூபிக்கிறது.

மக்களின் வாழ்வைப் பறிப்பது மட்டுமல்ல, அவ்வாறு வாழ்வைப் பறி கொடுத்தவர்கள் எதிர்த்துக் குரலெழுப்பவும் கூடாது என்ற இந்த ஒடுக்குமுறையை முறியடிக்க தமிழக மக்கள், கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனக் கோருகிறோம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டோர்

வழக்கறிஞர். சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
தோழர். காளியப்பன், பொருளாளர், மக்கள் அதிகாரம்.
தோழர். கற்பக விநாயகம், தலைமைக்குழு உறுப்பினர்
தோழர். வெற்றி வேல் செழியன், தலைமைக்குழு உறுப்பினர்.
தோழர். அமிர்தா, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்.
தோழர். மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர். கோவன், ம.க.இ.க. கலைக்குழு.

தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் அதிகாரம்.

செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?

50-60 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளை தவிர புதியதாக எதுவுமே நோயாளிகளுக்கு இல்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை.

தொழு நோய்க்கான சிகிச்சை பெறுவதற்காக எனது மாமியாரை சென்னையிலிருந்து செங்கலபட்டு திருமணி தொழு நோய் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அவரைப் பார்த்து வருவதற்காக சென்றிருந்தேன். தொழு நோய் என்பது தோலில் உணர்ச்சியற்ற நிலை மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, தொழுநோயின் முழுமையான பாதிப்புக்ளையும் அது ஏற்படுத்தும் ரணத்தையும் கண்முன்னே காட்டியது திருமணி தொழுநோய் மருத்துவமனை.

என் மாமியாரின் படுக்கைக்கு அருகே ஒரு இளம் பெண். இரவு முழுவதும் ஒரு சொட்டுக்கூட தூக்கம் இன்றி கதறுகிறாள். உடம்பெல்லாம் கொப்புளம் போட்டு தூக்க மாத்திரைகள், சிராய்ட் மாத்திரைகள் கொடுத்தும் தூங்காமல் “உடம்பெல்லாம் எரியுதே, எரியுதே” என்று கதறுகிறாள். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உடம்பில் உள்ள துணியை எல்லாம் அவிழ்த்து அழுகி்றாள். அவளது கதறல் என் மனதை அறுக்கத் தொடங்கியது.  காரணம் அதே பருவ வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அம்மாவை நினைத்து, அருகில் இருந்த என்னை அழைத்து பெருங்குரல் எடுத்து கதறுகிறாள்.

******

அந்த இளம்பெண்ணின் பெயர் திலகவதி. பத்தொன்பது வயது. பன்னிரண்டாவது படித்தவர். சொந்த ஊர் தர்மபுரி. பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். கடந்த ரெண்டு வருசமா கம்பியூட்டர் கம்பெனியில் வேலை செய்து பெற்றோரின் குடும்ப பாரத்தில் பங்கெடுத்த பெண். தொடர்ந்து காலேஜில் படிக்க முடியாமல் போனாலும், படிப்பு ஆர்வத்தால் தொலைதூரக் கல்வியில் தற்போது டிகிரி படிக்கிறார்.

சிங்கமுக வடிவம்ஒரு வருசத்துக்கு முன்னாடி கம்யூட்டர்ல தொடர்ந்து வேலை செய்ய முடியாம விரல்கள் முடங்குது. தனியார் மருத்துவமனையில் பார்க்கிறார். விரல்கள் முடக்கத்துடன் உடல் முழுவதும் கொப்புளங்கள் கிளம்புகின்றன. ஆரம்பத்தில் அம்மை என்று நினைத்து அதற்கான வைத்தியம் எடுக்கிறார்கள். டாக்டர்களும்  கொப்புளங்களை பல டெஸ்ட் எடுக்குறாங்க …. கொப்பளத்தை கீறி, தசை எடுத்து கல்ச்சர் டெஸ்டுக்கு அனுப்பி, கொப்பளம் இருந்த இடத்துல தையல் போடறாங்க….. இது போல பல டெஸ்டுகள்.  பணம் கரையுது.

படிக்க:
சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !
தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா ?

“என் பொண்ணுக்கு என்ன நோய்னு கண்டுபிடிக்கவே இவ்ளோ செலவும், நாளும் ஆகுதே…”என திலகவதியின் அம்மாவுக்கு வேதனையாகுது.  நிலைமை மோசமாகுது. ஒரே பொண்ணு. செல்லமான பொண்ணு.என்ன நோய்ன்னே தெரியாம, பல ஆயிரங்களை செலவு பண்ணியும், குழந்த  படற வேதனையைப் பார்க்க முடியாம, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறாங்க.

“டாக்டருங்களாலத்தான் முடியல… கடவுளையாவது நம்புவோம்ன்னு தொடர்ச்சியா பிரேயர், பிரேயர் பிரேயர்னு செபிச்சம்மா…. அதிலயும் தீர்வு இல்லம்மா”என்று மனம் உடைந்து அழுகிறார் திலகவதின் அம்மா… நிலைமை இன்னும் மோசமாக மாறுகிறது. பிறகுதான் ஒரு டாக்டர் செங்கல்பட்டு திருமணி தொழு நோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். இங்க வந்ததும் தொழுநோய்க்கான டெஸ்ட் நடந்தது. திலகவதிக்கு, “ஈஎன்எல் ரியாக்சன்”எனும்  தொழுநோய் இருப்பது உறுதி ஆனது.

குடும்பமே நிலைகுலைஞ்சி போகுது. தாங்க முடியாத துயரம்.  பயத்தை வெளியில் காட்டினால் மகள் உடைந்து விடுவாளே…! என்ன செய்வது? ஏற்கனவே  பக்கத்திலிருக்கும் நோயாளிகளைப் பார்த்தே பயந்திருக்கும் மகளுக்கு ஆறுதல் சொல்லுவதா? உனக்கும் இதே நோய்தான் என்று சொல்லுவதா? குழம்பித் தவிக்கிறது குடும்பம்.

தொழு நோயால் பாதிக்கப்பட்ட கை – மாதிரி படம் (படம் கூர் மழுங்கச் செய்யப்பட்டுள்ளது)

இவ்வளவு நாள், வலியின் கொடுமை எந்த ஆஸ்பத்திரிலயும் குறையல… இங்க வந்து பரவாயில்லையா இருக்கு…… என்பதால் திலகவதி  ஆஸ்பிட்டல்லில் தங்க ஒத்துக்கிட்டாங்க. பக்கத்தில்  இருக்கும் தொழு நோயாளிகளும், அங்கு வேலை பார்ப்பவர்களும் அவரிடம் அன்போடு,  நம்பிக்கையையும் கொடுத்ததால் சரியான இடத்திலதான் இருக்கோம்னு உணர்ந்தாங்க…

சிகிச்சைச் செய்யும் டாக்டர்கள், அவருக்கு தொடர்ச்சியாக சிராய்ட் மருந்தை  இன்ஜக்சன் ஆகவும் டெகட்ரான் மருந்தும் போடப்போட உடலில் கிளம்பும் கொப்பளங்கள் வெடிக்காமல், உள்ளுக்குள் அழுந்தி விடுகிறது. ஓரளவு வலியிலிருந்து மீள்கிறார் திலகவதி. ஆனால் கைகள் திடீரென மறத்துப் போகின்றன. அதற்கும் பிசியோவில் சிறு, சிறு எக்சசைஸ் செய்கிறார்.

மருந்தின் பக்க விளைவுகள் மேலும் வேதனையை தருகிறது. உடல் எடை கூடுகிறது. சில நாட்கள் தங்கி சிகிச்சைப் பெற்ற பிறகு திலகவதிக்கு மாதத்திற்கான மாத்திரையுடன் ஸ்டிராய்ட் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். திலகவதியும், பெற்றோர்களும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வீடு திரும்புகின்றனர்.

வீட்டில் தினமும் ஸ்டிராய்ட் மாத்திரையை சாப்பிட்டும் பலனின்றி நோயின் தீவிரம் பலமடங்கு அதிகமாகிறது. இடது கைவிரல்களும், மடங்கி உணர்ச்சியற்று,  மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு அழுதுக்கொண்டே வருகிறார்கள்.

படிக்க:
♦ தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்
♦ THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!

உடல் முழுவதும் கொப்பளம். நோய், ஸ்டிராய்ட் மருந்துக்கு அடங்க மறுக்கிறது. தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி அதில் தூக்கமின்மையும் சேர்கிறது. வேதனையில் துடிக்கிறார் திலகவதி. இரவு முழுவதும் தூங்காமல் உடம்பெல்லாம், எரியுது, எரியுது என்று  பிதற்றுகிறார். உணவையும் சாப்பிட மறுக்கிறார். அதைக் காண சகிக்க முடியாமல் அவரது தாய் தேவி கதறுகிறார்.

எவ்வளவு நோயாக இருந்தாலும் வயசு பெண்கள்  தன் உடம்பை மருத்துவரிடம் காண்பிக்க தயங்குவார்கள். தன்னிலை மறந்து தன் முழு உடலையும் பெண்கள் காண்பிக்கும் ஓரே இடம் பிரசவ அறை. ஆனால் திலகவதி உடல் மீது எந்த துணியும் வேண்டாம். உடம்பெல்லாம் எரியுது, வலிக்குது என்று சிறு துணியை போர்த்தினாலும் அழுகிறார். திலகவதியை  பார்த்து அனைவருக்கும் வேதனை.

“திலகவதி தொடர்ந்து இரண்டு வாரங்களாக இதே நிலையில் தன்னிலை மறந்து கிடக்கிறார் . தற்போது, மஞ்சள் காமாலையும் அவளுக்கு சேர்ந்து விட்டது.அதற்கான சோதனையும் அவளுக்கு இங்கு செய்ய வசதியில்லை .வெளியில் அனுப்பிய ரிப்போர்ட், நோயை உறுதிப்படுத்தியது” என்கிறார் அங்கு பல ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர்.

கடைசியில் எழுந்திருக்கவும் முடியாமல்,  “தயவு செய்து என்னை விட்டுடுங்க, எவ்வளவு நோவு தாங்கறது, என்னால நோவு தாங்க முடியல… அம்மா வா, வீட்டுக்கு போய்டலாம்.நான் செத்துப் போனாலும் பரவாயில்லை” என்று கூறி அதிகாலை 3 மணிக்கு எழுந்து, நடக்க முடியாமல் தடுமாறும் திலகவதியைப் பார்த்து, வார்டு தொழு நோயாளிகள் கண்கள் கலங்கி  ஆறுதல் சொல்கின்றனர். அதை ஏற்கும் நிலையிலோ, காதில் வாங்கும் நிலையிலோ திலகவதி இல்லை.

மீண்டும் அதிகாலை  நாலு மணிக்கு ரொம்ப துடிக்கிறாங்க. மருத்துவமனை ஊழியர்கள் கேலமைன் லோஷன் தடவினா ஜில்லுனு இருக்கும்னு தடவுறாங்க…. தடவும் போது தன்னிலை மறந்து ஒட்டு துணியில்லாம தன் உடல் முழுவதும் தடவச் சொல்லி அழுகிறார் திலகவதி. நடுவில் டுயுட்டி டாக்டருக்கு போன் செய்யப்படுகிறது. எந்த ரெஸ்பான்சும் இல்லை… விடியற்காலை நாலு மணிக்கு செய்த போனுக்கு 8 மணிக்கு விளக்கம் கேட்கிறார் டாக்டர்.

”இந்த டாக்டர்கள் எல்லாம் எப்போதுமே இப்படித்தானா?”, அருகாமையில் இருந்த நோயாளி ஒருவரிடம் எரிச்சலுற்றுக் கேட்டேன்.

“இதுவரை,  மத்திய அரசின் செங்கற்பட்டு திருமணி ஆஸ்பத்திரி தொழு நோயாளிகளின் தாய்வீடாக இருந்து. அவர்களின் உடல்நிலை மட்டுமல்ல வாழ்நிலையையே மாற்றியமைத்த  பெருமைக்குரியது. நோயாளிகளுக்கு நோய் தீர்த்து, வேலை கொடுத்து, வீடு கொடுத்து, அவர்களின் வாரிசுகளை வளர்த்தெடுக்கவும் உதவி செய்தது. பல ஆண்டுகள் இங்கு தங்கி சிகிச்சை எடுத்து வரும் நான் பல அனுபவங்களை நேரில் பார்த்திருக்கிறேன். 700 ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கும் தொழுநோய் மீட்பு கருணை இல்லம் இது. காரணம், அப்போ இருந்த அர்பணிப்புள்ள டாக்டர்கள், ஊழியர்களின் வேலைப்பாங்கு”என்றார் அந்த நோயாளி.

படிக்க :
♦ உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் !
♦ இது போராட்டக்காலம் ! புரட்சி வெற்றி கொள்ளும் !! ம.க.இ.க பாடல்

”அப்போன்னா எப்போ? இப்ப நடக்குறதெல்லாம் பாக்கும் போது, நீங்க சொல்றது எதுவும் சமீபத்துல நடந்த மாதிரி தெரியல..” என்றேன். அந்த நெடுநாள் நோயாளி விரிவாகக் கூறத் தொடங்கினார்…

*****

பல சம்பவங்கள் உதாரணத்துக்கு சொல்லலாம். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பச்சையம்மாள் தொழுநோயில் சாகும் நிலையில் வந்தார்.  நோயைக் கண்டறிந்த மருத்துவர் டாக்டர்  வாசு அவரின் நோயை ஆய்வுக்குட்படுத்தி, பல கட்டத்தில் சோதித்தறிந்து, பின் விளைவுகள் இல்லாமல்  தொழு நோயை எப்படிப் போக்கலாம் என்று மெனக்கெட்டார்.

மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து வீடு திரும்பி போகும்வரை பச்சையம்மாளின் அசைவுகளை கண்காணிப்பார். ஆதரவு கூறுவார். அவரை சிரிக்க வைக்க கிண்டல் பண்ணுவார். உடல் முழுவதும் போட்ட கொப்புளங்களை வெடிக்க வைத்து தொடர்ச்சியாக கவனித்து ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ற மருந்துகளை பல அளவுகளில் கொடுப்பார்.

உடல் முழுவதும் கொப்புளமாகி வெடித்து சீழ் வடிந்து காணவே கொடுமையாக மாறும். பிறகு, மாயம்போல், உடல் மாறும்.  அவரின் மருத்துவ கவனிப்பாலும், மருத்துவ ஊழியர்களின் அரவணைப்பாலும், கண்ணெதிரே படிப்படியாக தேறினார் பச்சையம்மாள்.வீடு சென்ற அவர் கம்பெனி வேலைக்கு சென்று தன் காலில் நிற்கிறார். 45 வயதாகும் பச்சையம்மா, தன்னை காப்பாற்றிய டாக்டரை அப்பா என்றே இன்றும் நினைவு கூறுவார்.

இப்படி பல நோயாளிகள். திக்கற்றவர்களாக வந்தவர்களுக்கு நோய் தீர்த்த நீண்ட வரலாறு திருமணி தொழு நோய் ஆஸ்பத்திரிக்கு உண்டு.

ஆனால், இப்போது திலகவதி போலவே இன்னொரு நோயாளி ராஜா…. 16 வயது.

படிக்க :
♦ எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு | பிப் 23
♦ நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை !

அவனுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு நோய் கண்டறியப்பட்டது.  அதிகமான ஸ்டிராய்ட் கொடுக்கப்பட்டது.   வலியால் துடித்தான். ஸ்டிராய்ட்டுக்கு கட்டுபடவில்லை என்பதால், டிஎல்டி கேப்சூல்களை தர ஆரம்பித்தார்கள். இந்த மருந்தைப் கொடுப்பதற்கு முன்பு நோயாளிகளை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இது  விதி.

இனி எதிலும் குணப்படுத்த முடியாது என்ற நிலையில் நோயாளியின் பெற்றோர்களின் ஒப்புதலுடனும், பிள்ளை பெற்றுக் கொள்ள கூடாது என்ற கண்டிசனுடனும்தான் மருந்து போடுவார்கள். வயதானவர்களுக்கே இதுதான் நிலைமை.

ஆனால், இப்போது வந்த டாக்டர்கள் பதினாறு வயதான ராஜாவுக்கு அதிக வீரியமுள்ள டிஎல்டியை இனிப்பு மிட்டாய் மாதிரி வாரிக் கொடுக்கிறார்கள். மாத்திரை போட்டதும்  வலி பறந்து போகும். போதை பொருள் சாப்பிட்ட எஃபெக்ட் கிடைக்கும். தூக்கம், தூக்கம். எதையும் மறக்கும் தூக்கம். இதை அனுபவித்து விட்டால், நோயைத் தாங்கும் தன்மை உடம்புக்கு இல்லாது போகும். டிஎல்டி மட்டும் இருந்தால் போதும் என்ற நிலைக்கு நோயாளிகள் வந்துவிடுவார்கள். இப்போது 16 வயது ராஜாவை ஒரு வருடத்தில் 30 வயது முதியவர் ஆக மாற்றி விட்டார்கள். எந்த வலியையும் தாங்க முடியாமல்  மாத்திரையை நிறுத்தினால், அதிர்ச்சியாகி விடுகிறான். எதாவது காரணம் சொல்லி மாத்திரையை வாங்குகிறான்.  தற்போது சர்க்கரை நோய்க்கும் ஆளாகி அதற்கும் மாத்திரை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இதுதான் இன்று திருமணி ஆஸ்பத்திரியின் நிலை.

நோயாளிகளின்  நாட்பட்ட புண், புழுவைத்து எலும்புகள் அழுகி நொறுங்க ஆரம்பிக்கும்.   மீதி காலையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் கால் மூட்டுக்கு கீழே காலை வெட்டும் அறுவை சிகிச்சை செய்வார்கள். வெகு நாட்களாக ஆறாத புண்ணுக்கு பல சிகிச்சைகள் செய்வார்கள்.

இன்று செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் அனைத்தும் நோயாளிகளை காக்க நடத்தப்படுவது இல்லை. ஆபரேஷன் தியேட்டருக்கு கணக்கு காட்டவே நடத்தப்படுகிறது. தியேட்டரில் ஆபரேசன் லிஸ்ட் பெரியதா இல்லை என்றால், கேட்கும் நிதி பல கோடி கிடைக்காது என்கிறார்கள்.

இன்று மருத்துவமனைகளும் மருத்துவர்களும் நோயாளிக்கானதாக இல்லை

கைகால் முடமான நோயாளி,  புட்டத்தால தேய்ச்சி நகர்ந்துப் போகும் நோயாளி,  கண்ணு தெரியாம சுவரை தடவிக்கொண்டு நகரும் நோயாளி, இப்படிப்பட்டவர்களை தனி கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ ஒதுக்கும் பணத்தில் கமிஷன் பார்க்கவும் தங்கள் அலுவலக அறையை நட்சத்திர விடுதியாக மாற்றவும் செலவழிக்கிறது. ஏசி அறை, டைல்ஸ் சுவர், நடக்கும் வழிக்கு குரோட்டன்ஸ் தோட்டம் என்று வாழ்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அனைத்தையும் திரும்பவும் இடித்து ஆஸ்பத்திரியை தனக்கான அரண்மனையாக மாற்றிக் கொள்கிறது.

மருத்துவ தேர்வுக்கான நீட்டால என்ன பிரச்சனை? தனியார்ல படிச்ச டாக்டரால என்ன பிரச்சனை? என்று கேட்பவர்களுக்கு ஏழை நோயாளிகளின் துயரம் தெரிவதில்லை. இத்தேர்வுகள் மூலம் வரும்  டாக்டர்களின் வேலையைப் பார்க்கும்போது ரொம்பவும் பயமா இருக்கு. ஏழ்மையில் உழலும் நோயாளிகளை அவர்கள் தீண்டதாகதவர்களாக நடத்துகிறார்கள். இதனுடன் நோயாளிக்கு தொழுநோயும் சேர்ந்தால் அவர்கள் கதி என்ன ஆவது?

அதிகப்படியான தொழுநோய் தொற்றுடன் வரும் நோயாளிகளை உடனே  பார்க்க  டாக்டர்கள் விரும்புவதில்லை. அதை கட்டு கட்டும் ஊழியர்கள் பாதி சரி செய்து, நோய் முக்கால்வாசி ஆறியப்பிறகு, தியேட்டருக்கு அந்த நோயாளிகளை அனுப்பி நாடகமாடுகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் தொழு நோயாளிகளுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாரும் வருவது இல்லை. பெரும்பாலும் கைவிடப்பட்டவர்கள். அநாதைகள், பிச்சை எடுப்பவர்கள். எனவே அவர்கள் இறந்தாலும் அவர்களை யாரும் உரிமை கோருவது இல்லை. இந்த தைரியத்தில்தான், மேட்டுக்குடி வகுப்பைச் சேர்ந்த இந்த டாக்டர்கள் அவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்.

வாரத்துக்கொருமுறை வார்ட் ரவுண்ட்ஸ் வரும் டாக்டர்கள் நோயாளிகள் தங்கள் வலிகளை சொல்ல ஆரம்பிக்கும் முன்னமே, தங்களுக்குள் ஆங்கிலத்தில், “இப்ப அழுது நடிக்கப் போகுது பாரு” என்று  கேலி பேசுகிறார்கள்.  தோல் மட்டுமே உணர்ச்சியற்ற இந்த நோயாளிகளை சுய உணர்ச்சியற்றவர்களாக, தன்மானம் அற்றவர்களாக நினைக்கிறது இந்த புது மருத்துவ கும்பல்.

ஆனால், பணியில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பல அலவன்சுகளையும் அரசு சலுகையையும் இவர்கள் தேடித்தேடி அலைகிறார்கள். அதை உடனடியாக அடைவதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்கள். வருடாந்திர சுற்றுலா, எல்டிசி  எங்கே போகலாம், ஒவ்வொரு வருசத்துக்கும் புதுப் புது அலவன்சுகளை வாங்குவது எப்படி?

மாதத்திற்கு லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டு, மேலும் உயர் கல்வி கற்பதற்கு எப்படி அனுமதி பெறுவது? என்று இதற்காக தங்களுக்கு ஒதுக்கிய  ரெஸ்ட் ரூமுக்குள் அதிவேக இண்டர்நெட்டுடன் கணினி, ஏசி என்று மொத்தத்தில் தொழுநோயாளிகளின் உடம்பில் உயிர்வாழும் ஒட்டுண்ணி புழுவாக திரிகிறார்கள்.

நாங்களும் நோய் தீர்க்கிறோம் என்று நோயாளிகளின்  வேதனையை தற்காலிகமாக குறைத்து பின் விளைவுகளைப் பற்றி கவலையின்றி மருத்துவம் பார்ப்பது, “என்னுடைய டூட்டியில் எந்த பிரச்சனையும் வரவில்லை” என்ற எண்ணத்தில் செயல்படுவது, மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கித் தருவது ஆகியவை தவிர வேறு ஒன்றும் செய்யாமல்  சினிமாவில் வரும்  டாக்டர்களாக வலம் வருகிறார்கள்.

ஆனால். சிறிது காலத்திற்கு முன்பு நடந்தது வேறு. ரவி என்று ஒரு  டாக்டர்.  நோயாளிகளின் நோயை போக்குவதில் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுத்து பேசுவதிலும் ஸ்பெஷலிஸ்ட்.  எங்களைப் போன்ற நோயாளிகளே  எங்களுக்கு மருந்து, மாத்திரை வேண்டாம், ரவி டாக்டரை  வரச்சொல்லுங்கள் என்று வேண்டுவோம். இப்படிப்பட்டவர்களை இனி நாம் எங்கு காண்பது!”

ஏக்கத்தோடு சொல்லி முடித்தார் அவர்.

சமீபத்தில் இறந்த 5 ரூபாய் டாக்டர் பத்தி தமிழ்நாட்டு மக்கள் தொடங்கி, மோடி வரைக்கும் பேசினார்கள். இனி அது போன்ற மருத்துவர்களை பார்க்க நாம் வானுலகுதான்  செல்ல வேண்டும். வேறு வழியில்லை.

காமாட்சி

(உண்மைச் சம்பவம் ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது)

வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !

0

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியிருக்கிறது. எம்.டெக் படித்த பட்டதாரிகள் தமிழக தலைமை செயலக துப்புரவு பணிக்கு விண்ணப்பித்திருப்பதும் மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் அரசு கேண்டீனில் மேசை துடைக்கும் பணிக்கு விண்ணப்பித்திருந்ததும் கடந்த வாரம் வெளியான செய்திகள்.  பி.எஸ்ஸி. பி.எல் பட்டதாரி ஒருவர் விவசாயம் செய்து கடனாளி ஆன யதார்த்த கதையும்கூட வெளியானது. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு பட்டதாரி, ‘படித்தும் முட்டை விற்கிறேன் எனில், பட்டப் படிப்பினால் என்ன பயன்?’ என கேட்கிறார். அல்ஜசீரா வெளியிட்டுள்ள இந்த சிறப்பு கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் மோடி அரசின் வேலைவாய்ப்பற்ற ‘வளர்ச்சி’யை தோலுரிக்கிறது.

*****

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியின் அமைதியான குடியிருப்புப் பகுதியில் கடுமையான முகத்துடன் முட்டையை வைத்து திண்பண்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். அவ்வப்போது, தனது வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய பண்டத்தின் ருசி எப்படி இருக்கிறது எனவும் விசாரிக்கிறார்.

இந்தி பேசும் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலமான உத்திர பிரதேசத்தை ஒட்டி அமைந்துள்ள நொய்டாவில் உள்ள திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம்  படிக்கும் 21 வயது சாகர் குமார், கோபத்துடன் இருக்கிறார்.

படித்தும் முட்டைக் கடைதான் வைக்க வேண்டுமெனில் பட்டப் படிப்பு எதற்கு ?

தனது சகோதரர்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டவும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு டயாலிசிஸ் செய்யவும் சாலையோரங்களில் உணவுகளை விற்றுக்கொண்டிருக்கிறார் இவர்.   அரசு வேலை கிடைக்கும் என்பதில் இவருக்கு நம்பிக்கை இல்லை.

“இரவில் படிப்பேன். மற்ற நேரங்களில் இந்த தள்ளுவண்டி உணவுக்கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 500 சம்பாதிக்கிறேன். பட்டம் படித்துவிட்டு, சாலையோரத்தில் முட்டையை விற்கிறேன். நான் வாங்கிய வணிகவியல் பட்டத்துக்கு என்ன பயன்?” என கேட்கிறார் சாகர்.

டெல்லியின் துக்ளகாபாத் பகுதிகளில் பகுதி நேரமாக சமையல் பணி செய்யும் 24 வயதான சீமா, அலுவலக செயலாளர் பணி கிடைக்கும் என காத்திருக்கிறார்.

“என்னுடைய தட்டச்சு வேகம் மிகவும் சிறப்பாக உள்ளது. உ.பி.யின் பாதாயூன் பகுதியிலிருந்து என் பெற்றோர் டெல்லிக்கு வந்துவிட்டார்கள். அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்ய விருப்பம். ஆனால், எனக்கு இதுவரை அந்த அதிருஷ்டம் கிடைக்கவில்லை. இங்கே பெண்ணாக வேலை தேடுவதும்கூட பாதுகாப்பற்றதாகவே உள்ளது” என்கிறார் சீமா.

எங்களுக்கு வேலை வேண்டும்

முன்னதாக, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்திலிருந்து ஊடகங்களில் கசிந்த, மோடி அரசால் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

இந்த ஆய்வறிக்கை மட்டுமல்லாது, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு கடந்த டிசம்பரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை 42 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

படிக்க:
♦ ஓடும் ரயிலில் மோடியை விமர்சித்தால் என்ன தப்பு ? | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் !
♦ நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

இதே அமைப்பு மார்ச் 2018-ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் 31 மில்லியன் இந்தியர்கள் வேலை தேடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

அதற்குப் பின் வெளியான அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை 2016-ல் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, 3.5 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டதாக சொன்னது.

இந்த பணி இழப்புகளின் பின்னணியில் இந்தியாவில் அரசு வேலைகளின் மீது கவனம் திரும்பியது. இந்திய ரயில்வே சமீபத்தில் 63 ஆயிரம் பணிகளுக்கு 19 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றது. இந்த விண்ணப்பங்கள் துப்புரவு மற்றும் ரயில்வே தண்டவாளங்களை தூய்மையாக்கும் பணிகளுக்காக விநியோகிக்கப்பட்டது.

மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு

பீகார் மாநிலத்தின் மாதேபுராவிலிருந்து குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த சாகர், ஏராளமான அரசு பணிகளுக்கு விண்ணப்பித்ததாக தெரிவிக்கிறார். அதில், பட்டப்படிப்பு அவசியமில்லாத ரயில்வே பணியும் அடங்கும்.

வாக்களிக்கும் வயதில் உள்ள அவர், ‘யார் அடுத்து அரசு அமைக்க இருக்கிறார்களோ அவர்கள் எங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்’ என்கிறார்.

“எங்களுக்கு வேலை வேண்டும். அது முடியவில்லை என்றால், சம்பாதிக்க உதவுங்கள். தொழில் முனைவோருக்கான கடன் வாங்கி தொழில் செய்யவும் முயற்சித்தேன். ஆனால், அதுவும் கொடுங்கனவாக இருக்கிறது. எங்கு போகவும் எங்களுக்கு வழியில்லை. வேலையும் கிடைக்கவில்லை; சிறுதொழில் தொடங்க கடன் கிடைப்பதும் எளிதாக இல்லை” என்கிறார் சாகர்.

இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையை பொருளாதார நிபுணர்கள் ‘வேலையற்ற வளர்ச்சி’ என்கிறார்கள்.

“வேலையில்லா பிரச்சினை மோசமான நிலையில் உள்ளது. நடுத்தர மற்றும் சிறு தொழிற் துறையினரும் விவசாயிகளும்தான் நம் நாட்டின் அதிகமான தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறவர்கள். தவறாக செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியாலும் 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தாலும் இந்தத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  முறைசாரா தொழில்களையும் இவை நொறுக்கின” என்கிறார் பொருளாதாரவியலாளர் பிரசன்ஜித் போஸ்.

படிக்க:
♦ வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
♦ கல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் !

மேலும் அவர்,  “இந்த அரசின் கீழ் அமைப்பு சார்ந்த தொழில்களும்கூட வளர்ச்சியடையவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள் இருந்தபோது, அது வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை” என்கிறார்.

“உண்மை என்னவென்றால் பொருளாதார வளர்ச்சி தகவல் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையிழப்பு இருக்கும் போது ஜிடிபி 7 % எப்படி சாத்தியமாகும்? இந்த முரண்பாட்டிற்கு வேறு எந்த விளக்கமும் தேவையில்லை”.

வேலையில்லாத் திண்டாட்டம் சமத்துவமின்மையை ஏற்படுத்துகிறது!

உலகிலேயே மக்கள் தொகையில் பாதியளவை எட்டக்கூடிய நிலையில் 25 வயதுக்குக் குறைவான இளைஞர்களைக் கொண்ட நாட்டில், வேலைவாய்ப்பின் அளவு குறைந்து  வருகிறது.

சாகர், சீமாவின் விசயத்தில் நிலையற்ற தொழிலாளர் சந்தையும் சமூக பொருளாதார காரணிகளும் அரசு வழங்கும் சேவைகளின் குறைபாடும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.

வறுமைக்கு காரணமாக உள்ள வருமான குறைவினால், சமத்துவமின்மை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.  வேகமான அதேசமயம் சீரற்ற பொருளாதார வளர்ச்சியால், கடந்த பத்தாண்டுகளில் கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்குமான எல்லைகள் மங்கலாகிவிட்டன. அதே நேரத்தில் குடிபெயர்வு, மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் தங்களைக் காட்டிலும் மற்றவர்களின் வாழ்க்கைத்தரம் வேகமாக மேம்படுகிறது என்பதையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

மகாராட்டிரம், குஜராத், அரியானா மற்றும் ராஜஸ்தானில் நில உரிமையாளர்களாக உள்ள உயர் சாதியினர் அரசு பணிகளில் இடஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டங்களை நடத்தினர்.

எங்கும் வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா இளைஞர்களை சமாளிக்க வேண்டிய அழுத்தம் காரணமாக, உயர் சாதியினருக்கு அரசு பணிகளிலும் கல்வியிலும் 10 % இடஒதுக்கீட்டை அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது அரசு.

வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத் திறன் இல்லாத நிலையில் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. தனியார் துறைகளில் போதுமான வேலை உருவாக்கமும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

“Demonetisation and the Black Economy” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார், ‘2011-12 ஆண்டுகளில் இருந்ததைவிட இந்திய பொருளாதாரத்தில் முதலீடுகள் தேக்கமடைந்திருக்கின்றன. மேலும், முறைசாரா தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளது’ என்கிறார்.

“வேளாண் துறையில் இருக்கும் நெருக்கடிகளை அரசு எதிர்கொள்ள வேண்டும். முறைசார தொழில்துறைக்கு ஊக்கம் தேவைப்படுகிறது, அவர்களுக்கு கடனும் வழிகாட்டுதலும் தேவை. முறைசாரா தொழில்துறை புத்துணர்வு பெறும்போது, அது தானாகவே தேவைகளை உருவாக்கும்” என்கிறார் அருண்குமார்.

வேலைவாய்ப்பின்மை (unemployment) மற்றும் வேலையின்மைக்குமான (under-employment) வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார் அருண் குமார். “இந்தியாவில் நமக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஒருவர் வேலையை இழக்கும்போது, இனி வேலை செய்ய மாட்டேன் என அவரால் சொல்ல முடியாது. எல்லோரும் ஏதோ வேலை பார்க்கிறார்கள். பட்டதாரிகள்கூட தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டிருப்பதை பார்க்க முடியும். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையைக் காட்டிலும் வேலையின்மை  அதிகம். என்ன பிரச்சினை எனில், முறைசாரா தொழில் துறையைச் சார்ந்த பணியாளர்களில் 93% பேர், பணிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, இந்த துறை நெருக்கடிகளில் உள்ளதால் 93% பேர் வேலையிழக்கிறார்கள்”.

தேர்தல் முக்கியத்துவம் பெறக்குடிய விசயம் இது!

இதனால்தான் ஆளும் பாஜக அரசு, தேர்தலை எதிர்கொள்ள திணறிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மோடி, ‘பக்கோடா விற்பதுகூட ஒரு வேலைதான். அந்த வேலையில் நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்க முடியும்’ என்றார்.

படிக்க:
♦ எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு | பிப் 23
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப் 23

இந்தப் பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியது. மக்கள் வேலை வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கும்போது, மோடி கொஞ்சம் கூட உணர்வற்று பேசிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில், வேலை தருவேன் என மோடி சொன்ன வாக்குறுதி என்ன ஆனது என அனைத்து தரப்பிலும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் என அறிவித்துள்ளது.

இந்தியாவின் உடைந்திருக்கிற அரசியல் பரப்பில், டசனுக்கும் மேலான மாநில கட்சிகளும் சாதி கூட்டணிகளும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

சாகர், சீமா போன்றவர்களின் பொருளாதார எதிர்பார்ப்புகளைக் காட்டிலும், மாநில மற்றும் சாதி அரசியல் வாக்களிப்பதில் பெரிய தாக்கத்தை செலுத்தும்.  அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்துக்கும் அதன் கருத்தியல் உறவைக் காட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதே முக்கியமான பணியாக இருக்கும்.

கட்டுரை: ஜீனத் சப்ரின்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : கலைமதி
நன்றி: அல்ஜசீரா

குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
வர் உயர் படிப்பு படிக்கும் மாணவி. அவரைச் சந்திப்பதற்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முயற்சி செய்தேன். அவர் என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை என்பதல்ல; அவருடைய வகுப்பு நேரங்கள் அப்படி. சிலநாட்களில் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவார். சில நாட்கள் அவர் திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும். இன்ன நாள் சந்திப்போம் என ஒரு தேதி தருவார், பின்னர் அவசரமாக அதை மாற்றுவார். இறுதியில் ஒருநாள் காலை 9 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. அவருடைய வகுப்பு 10.30-க்கு. அதற்கிடையில் என்னுடைய சந்திப்பை முடிக்கவேண்டும்.

அவர் கனடாவிற்கு வந்து குடியேறிய ஆப்பிரிக்கப் பெண். பெயர் மாரியாட்டு கமாரா. அவர் எழுதிய புத்தகம் “The Bite of the Mango” சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து பத்திரிகைகள் எல்லாம் அதுபற்றி சிறப்பாக எழுதியிருந்தன. உள்நாட்டுப் போரில் கலகக்காரர்கள் அவருடைய இரண்டு கைகளையும் துண்டித்துவிட்டார்கள். அப்போது மாரியாட்டுவுக்கு 12 வயது. இந்த நூல் அவருடைய கதையை சொல்கிறது.  இப்படியான கொடிய தண்டனை கிடைப்பதற்கு அவர் என்ன குற்றம் செய்தார்  என்பது அவருக்கு புரியாத ஒன்று.

அவர் எழுதிய புத்தகத்தை படித்த நேரம் தொடங்கி மாரியாட்டுவை எப்படியும் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவரைச் சந்தித்த அன்று காலை  முதல் வேலையாக அவர் எழுதிய புத்தகத்தை நீட்டி அவருடைய கையெழுத்தை பெற்றேன். மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்ட இரண்டு கைகளையும் இணைத்து பேனையை நடுவில் செருகிக்கொண்டு புத்தகத்தில் இப்படி எழுதினார்:

‘குழப்பத்துக்கு மன்னிக்கவும். என்னை சந்திக்க வந்ததற்கு நன்றி.

அன்புடன்
மாரியாட்டு கமாரா’

மாரியாட்டு கமாரா

அப்படியே இரண்டு கைகளையும் சுழற்றி பேனையை என்னிடம் நீட்டினார். அவர் புத்தகத்தின் சரியான பக்கத்தை திருப்பியதும், பேனையை உரிய இடத்தில் நிறுத்தி எழுதியதும், அதை நழுவவிடாமல் இறுக்கிப் பிடித்ததும் ஒரு மந்திரவித்தைபோல கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது. அவருடைய கையெழுத்து என்னுடையதிலும் பார்க்க நல்லாகத்தான் இருந்தது.

ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோர நாடான சியாரா லியோனில் ஒரு பின்தங்கிய கிராமம். 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 வயதுச் சிறுமி மாரியாட்டு தன் சிநேகிதிகளுடன் பக்கத்துக்கு கிராமத்துக்கு புறப்படுகிறாள். அவள் கிராமத்தை நோக்கி பெரிய ஆபத்து வருவது அவளுக்கு தெரியாது. கலகக்காரர்கள் ஒவ்வொரு கிராமமாக பிடித்து  முன்னேறி வந்தார்கள். அவர்களுடைய நோக்கம் தலைநகருக்கு போய் ஆட்சியை கைப்பற்றுவது. என்னென்ன குரூரமான வழிமுறைகள் உள்ளனவோ அத்தனையையும் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

ஒரு கிராமத்தை  அவர்கள் முற்றுகையிடும்போது முதலில் உணவுப்பொருள்களை பறிமுதல் செய்வார்கள். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றுவிடுவார்கள். சிறுவர்களையும் சிறுமிகளையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்வார்கள். அவர்களை பழக்குவது சுலபம். கட்டளைகளுக்கு கேள்வியில்லாமல் கீழ்ப்படிவதுடன் விசுவாசமாகவும் இருப்பார்கள்.

மாரியாட்டு திரும்பியபோது அவளுடைய கிராமம் கைப்பற்றப்பட்டுவிட்டது. படையினரில் ஒன்றிரண்டு பேர் மூத்தவர்கள், மீதிப் படையினர் அவளிலும் பார்க்க சற்று வயது கூடியவர்கள். மேல்சட்டை இல்லாமல், காக்கி கால்சட்டை மட்டுமே அணிந்து,  தோள்களில் மூன்று நான்கு துப்பாக்கிகளைக் காவியபடி உலாவினர். சிலருடைய கைகளில் நீண்ட கத்திகள். துப்பாக்கி குண்டு மாலைகள் அணிந்து ஏதோ களியாட்ட விழாவுக்கு போய்வந்தவர்கள்போல மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள்.

மாரியாட்டுவையும் அவளுடன் வந்த சிநேகிதிகளையும் கைகளைக் கட்டி இருத்தினார்கள். அவர்கள் கண்முன்னே பெரியவர்களை நிற்கவைத்து சுட்டுக் கொன்றார்கள். சிலரை கத்தியினால் வெட்டி சாய்த்தார்கள். ஒருவரை கல்லினால் அடித்துக் கொன்றார்கள். இருபதுபேரை குழந்தைகளுடன் ஒரு குடிசைக்குள் வைத்து பூட்டி அதற்கு நெருப்பு வைத்தார்கள். இதுவெல்லாவற்றையும் கதிகலங்கிப்போய் பார்த்தபடி தன் முறைக்காக மாரியாட்டு காத்திருந்தாள்.

African Child Soliders
மாதிரிப் படம்

தலைவன்போல காணப்பட்டவன் மாரியாட்டுவைப் பார்த்து ‘நீ போ, உனக்கு விடுதலை’ என்றான்.  அவளால் நம்பமுடியவில்லை. அவள் சிறிது தூரம் நடந்ததும் மறுபடியும் கூப்பிட்டு ‘ஒரு தண்டனை அனுபவித்துவிட்டு நீ உயிருடன் போகலாம்’ என்றான். ‘நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.’ மாரியாட்டு மௌனமாக நின்றாள். ஒருவன் அவளை பிடிக்க, மற்றவன் அவள் வலது கையை பாறையோடு அழுத்திப் பிடித்து  மணிக்கட்டோடு வெட்டினான். வெட்டில் போதிய விசை இல்லாததால் இரண்டுமுறை வெட்டவேண்டி நேர்ந்தது. வெட்டப்பட்ட கை துள்ளிப் பறந்து நிலத்திலே விழுந்த பிறகும் துடித்தது. இடது கையையும் மூன்று வெட்டில் துண்டித்தார்கள். அவர்கள் பலமாகச் சிரித்து பெரிய வெற்றியை கொண்டாடுவதுபோல ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டார்கள். ‘உன் கையை நாங்கள் வெட்டியது நீ வோட்டுப் போடக்கூடாது என்பதற்காக. நாங்கள் செய்ததை உன் ஜனாதிபதியிடம் போய் காட்டு.’ ஜனாதிபதி என்றால் என்ன என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே மாரியாட்டு மயக்கம் போட்டு விழுந்தாள்.

ஒரு முழு இரவு மயங்குவதும் விழிப்பதுமாக காட்டுக்குள் கழித்தாள். நிறைய ரத்தம் பெருகி உடையை நனைத்துவிட்டது. வழி தெரியாமல் காட்டுக்குள் அலைந்து ஒரு குளத்தை கண்டுபிடித்தாள். மிருகங்கள் குடிப்பதுபோல படுத்திருந்து வாயால் உறிஞ்சி நீர் பருகினாள். அவள் கண்களில் ஒருவருமே படவில்லை. அந்த நேரம் கடவுளின் தூதுவன்போல நெடுப்பமான ஒரு மனிதன் தனியாக தோன்றினான். மாரியாட்டு தன்னை காப்பாற்றும்படி அவனிடம் கெஞ்சினாள்.  அவனுடைய தாயாரைக் கொன்றுவிட்டார்கள். அவனுடைய மனைவி புதருக்குள் ஒளித்திருந்தாள். அவன் மாரியாட்டுவிடம் ஒரு மாம்பழத்தை கொடுத்து ‘இதைச் சாப்பிடு. இந்தப் பாதையால் நீ நேரே போனால் ஆஸ்பத்திரி வந்துவிடும். அங்கே போ, இல்லாவிட்டால் செத்துப்போவாய்’  என்றான்.

படிக்க:
♦ வரலாறு : ஆப்பிரிக்க இனப் படுகொலைகளுக்கு காரணம் யார் ?
♦ என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்

மாரியாட்டு எப்படியோ ஆஸ்பத்திரியை அடைந்து அங்கேயிருந்து தலைநகரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். சிகிச்சை முடிந்த பிறகு அவளை அகதி முகாமில் சேர்த்துவிட்டார்கள். அவளைப்போல 400 சிறுவர் சிறுமிகள், எல்லோரும் கைகள் வெட்டப்பட்டவர்கள், அங்கே இருந்தார்கள். தங்குவதற்கு இடம் மட்டும்தான். பகல் நேரத்தில் கூட்டமாய் வெளியே போய் பிச்சை எடுப்பார்கள், இரவு சமைத்து உண்ணுவார்கள். இந்த உலகத்திலேயே 400 கையில்லா சிறுவர்களும் சிறுமிகளும் ஓர் இடத்தில் தங்கினார்கள் என்றால் அது அங்கேயாகத்தான் இருக்கும்.

மாரியாட்டுவின் பெற்றோர் அவளை சாலியே என்ற கிழவருக்கு  இரண்டாம் மனைவியாக ஏற்கனவே நிச்சயித்திருந்தனர். கிராமத்து வீட்டில் இந்த மனிதர் ஒருநாள் இரவு அவளை பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமிக்கு விவரம் தெரியாத வயது. அகதி முகாமில் அவள் கர்ப்பம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முகாமை பார்வையிட வந்த பத்திரிகைக்காரர்கள் மாரியாட்டுவின் கதையை வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினார்கள். ‘கலக்காரர்கள் கைகளை வெட்டியதுமல்லாமல் சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டார்கள்’ என்ற தலைப்பின் கீழ் அவளுடைய படத்தையும் பிரசுரித்திருந்தார்கள். கனடாவில் பில் என்பவர் அந்தப் படத்தை பார்த்து பரிதாபப்பட்டு ஏதாவது செய்யவேண்டுமென தீர்மானித்தார். மாரியாட்டு கனடா வந்து சேர்ந்தததற்கு அவர்தான் காரணம்.

‘சிறுவயதில் இருந்து நிறைய இன்னல்கள் அனுபவித்துவிட்டீர்கள். நீங்கள் உங்களை ஆகக்கீழாக உணர்ந்த தருணம் எது?’

‘அகதி முகாமில் இருந்தபோதுதான். காலையில் நாங்கள் கூட்டமாக பிச்சையெடுக்க நகரத்திற்குள் செல்வோம். சிலர் ‘ஏ பிச்சைக்காரி’ என்று என்னை அழைத்து பிச்சை போடுவார்கள். நான் ஓர் ஏழைக் குடும்பதிலிருந்துதான் வந்தேன். ஆனாலும் நாங்கள் பிச்சை எடுப்பதை கேவலமாக நினைத்தோம். என் கைகளை வெட்டியபோது கூட நான் அவ்வளவு வேதனையை அனுபவித்தது கிடையாது.’

‘ஆகச் சோகமான தருணம் எது?’

‘அகதி முகாமில் எனக்கு ஆண் பிள்ளை பிறந்தது. நான் ஆசையாக அப்துல்  என்று பெயர் சூட்டினேன். பத்து மாதங்கள்தான் குழந்தை உயிர்வாழ்ந்தது. சத்தான உணவு இல்லாததால் இறந்துபோனது என்று சொன்னார்கள். நான் தற்கொலை செய்ய முயன்றேன், ஆனால் என்னை தடுத்துவிட்டார்கள். அந்த இழப்பு என்னால் தாங்கமுடியாததாக இருந்தது.’

‘கனடாவுக்கு வரமுன்னர் உங்களுக்கு கனடா பற்றி ஏதாவது தெரியுமா?’

‘ஒன்றுமே தெரியாது. அது பெரிய முன்னேறிய நாடு என்பது தெரியும். உப்புத்தூள் போல பனி பொழியும் என்று சொன்னார்கள்.’

‘யந்திரக் கை பொருத்த விருப்பப்படவில்லையா?’

‘எத்தனையோ தரம் கேட்டார்கள். இப்பொழுது தேவையில்லை. என் காரியங்களை நானே செய்கிறேன். மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது இல்லை. சமைக்கிறேன், சாப்பிடுகிறேன், உடைமாற்றுகிறேன், தலை சீவுகிறேன், எழுதுகிறேன், கதவை பூட்டுகிறேன்.’

‘உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?’

‘படிப்பை முடித்துவிட்டு முதுகலை பட்டம் பெறுவது. அதுதான் என் இலக்கு.’

‘அதற்கு பிறகு?’

‘நான் UNICEF-க்காக வேலை செய்கிறேன். போரினால் சீரழிந்த குழந்தைகளுக்காகவும், தாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தீங்கிழைத்த குழந்தை போராளிகளின் சீர்திருத்தத்துக்காகவும் பாடுபடுவேன். நானூறு சிறுவர் சிறுமிகளின் கைகளை ஒரு காரணமும் இன்றி அவர்கள் வெட்டிக் குவித்தபோது உலகம் சும்மா பார்த்துக் கொண்டிருந்தது, குரல் எழுப்பவில்லை. நான் எழுப்புவேன்.’

‘இது மிகப் பெரிய பணி அல்லவா? இரண்டு கைகளும் இல்லாதது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்காதா?’

‘அவர்கள் என் கைகளைத்தான் எடுத்தார்கள். என் குரலை எடுக்கவில்லை.’

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

ஓடும் ரயிலில் மோடியை விமர்சித்தால் என்ன தப்பு ? | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் !

சென்னை ம.க.இ.க தோழர்கள் புதிய கலாச்சாரம் – ஜனவரி மாதத்திற்கான “மோடியை கொல்ல சதியா?” இதழை தாம்பரம் – கடற்கரை இரயிலில் விற்பனை செய்து வந்தனர். இது போன்ற விற்பனையின் அவ்வப்போது பார்ப்பனர்கள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு, பொதுமக்களிடையே வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு.

இந்த முறை ஒரு மோடி பக்தாள், ’வாலண்டியராக’ வந்து வாயைக் கொடுத்திருக்கிறார். ”ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி எப்படி தவறாக பிரச்சாரம் செய்யலாம்?” என்று கேட்டுக் கொண்டே, விற்பனையில் ஈடுபட்ட தோழர்களை வீடியோ எடுக்கத் தொடங்கியிருக்கிறார் அந்த பக்தாள். விற்பனைக்கு சென்ற தோழர்கள், “ஒரு நாட்டின் பிரதமரை விமர்சிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு” என்று கூறி மக்களிடையே அந்த பக்தாளையும் மோடியையும் அம்பலப்படுத்தி பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுவிட்டு அடுத்த பெட்டியில் ஏறினர்.

விடாமல் அடுத்த பெட்டிக்கும் வந்து நின்ற மோடி பக்தாள், அங்கும் மோடிக்கு எதிராக எப்படி பேசலாம் என ’சவுண்டு’ கொடுக்கத் தொடங்கினார். இந்த முறை நமது ம.க.இ.க தோழர்கள் வாய் திறப்பதற்கு முன்னால், பொதுமக்கள் வாய் திறந்துவிட்டனர்.

அந்த சூழலில் பல வகைப்பட்ட எதிர்வினைகளைக் காண முடிந்தது. ”அவர்களை ஏன் நிறுத்தச் சொல்கிறீர்கள், உங்களுக்கு மோடி நல்லவர் என்றால் அதை தனியாகப் பேசுங்கள். அவர்களை நிறுத்தச் சொல்லாதீர்கள்” என்றார். இன்னொருவரோ, மோடியை கழுவி ஊற்றிவிட்டு, பக்தாளை அமைதியாக இருக்கும் படி எச்சரித்தார். ஒரு வேளை மோடியை மக்கள் அசிங்கமாகப் பேசி அதனைக் காது குளிர கேட்கவேண்டும் என நெடுநாள் ஆசையில் அந்த பக்தாள் இருந்தாரோ என்னவோ, தெரியவில்லை. பக்தாள் முகத்தில் ஈயாடவில்லை.

ஒரு இளைஞர் பக்தாளிடம் நேரடியாகப் போய், மோடி என்ன செய்தார் தெரியுமா? உனக்கு பட்டியலிடட்டுமா? என்று கேள்வி எழுப்பினார். வேறு வழியின்றி அந்த பக்தாள் செருப்படி படாத குறையாக அப்பெட்டியிலிருந்து வெளியேறினார்.

விற்பனையில் ஈடுபட்டிருந்த தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பொதுமக்கள் பாராட்டிச் சென்றனர்.

*****

மோடியைக் கொல்ல சதியா ? – பக்கங்கள் : 80 விலை ரூ. 30.00

புதிய கலாச்சாரம் – பிப்ரவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com