Wednesday, August 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 763

ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்

63

ஏனிந்த அணு உலை வெறி?

கூடங்குளம் அணு உலை கட்டட வேலைகள் ஆரம்பம், ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, செர்னோபில் அணு உலை வெடிப்பு, சோவியத் யூனியனின் மறைவு…. இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் போலத் தோன்றும். எப்போதும் மக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் சக்திகளும் குறுகிய நலன்கள் குறித்தே சிந்தித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உழு கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை. எண்பதுகளில், ஈழப்போராட்டத்தில் தோன்றிய இடதுசாரி அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலை வெடித்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்தனர்.

“கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்.” இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வியறிவற்ற கூலித் தொழிலாளிகள் கூட, அணு உலை பற்றியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றியும் என்னிடம் விசாரித்தனர். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புற்று இருந்தனர். எனினும், கூடங்குளம் எதிர்ப்பு அலை அமுங்கிப் போனது. இந்திய நலன்களுக்கு சார்பான, வலதுசாரி அரசியல் சக்திகள், கூடங்குளம் அணு உலை குறித்து பேசுவதை விரும்பவில்லை. ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.

அதே காலகட்டத்தில் தான், உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பெருமளவு மக்கள் இறந்தனர். குறிப்பிட்ட பிரதேசம், மக்கள் வாழ முடியாத அளவுக்கு கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் அணு உலை குறித்த அச்ச உணர்வை தோற்றுவித்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. செர்னோபில் வெடிப்பின் பழி முழுவதும், அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் அரசின் மீது போடப் பட்டது. அதாவது, நிர்வாக சீர்கேடுகளே அணு உலை வெடிப்புக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. கலக்கமடைந்த உலக மக்களுக்கு அவ்வாறு தான் ஆறுதல் கூறப் பட்டது. அதே நேரம், “சிறப்பான நிர்வாகம் நடக்கும்” மேற்கத்திய நாடுகள் புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி விட்டன. இது அணு உலையின் ஆபத்தை, ஆளும் வர்க்கம் உணர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

செர்னோபில் அணு உலை வெடிப்பதற்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் அணு குண்டு வெடிப்பு பற்றிய அச்சம் நிலவியது. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் நேட்டோ படையணிகள், மறுப்பக்கம் வார்ஷோ படையணிகள் அணுவாயுதங்களை கொண்டு வந்து குவித்திருந்தன. பல தடவை, சம்பந்தப் பட்ட அரசுகள் தமது மக்களுக்கு அறிவிக்காமலே அதற்கு ஒத்துழைப்பு வழங்கின. உலகில், முதலும் கடைசியுமாக, ஜப்பானில் மட்டுமே அணு குண்டு போடப்பட்டாலும், இனியொரு போர் தொடங்கும் சமயம், எந்த தரப்பு அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தும் என்பதை ஊகிப்பது கடினமாக இருந்தது. “திடீரென யாரவது ஒரு மன நலம் பிசகிய அதிகாரி, அணுவாயுதம் ஏவும் பட்டனை அழுத்தி விட்டால்…?” இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் குடைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. “சமாதான இயக்கங்களின்” அங்கத்தவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. சோவியத் யூனியனின் அதிபராக கோர்பசேவ் தெரிவானதும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு, அணுவாயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அணு உலைகள் குறித்து அன்று யாரும் கவனம் செலுத்தவில்லை…. செர்னோபில் வெடிக்கும் வரையில். அதன் பிறகு தான், அணு சக்தி எப்போதும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, அனைவருக்கும் உணவு கிடைக்க வைப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அதே போன்று, மின்சாரம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒரு சவாலாகவே தொடர்கின்றது. மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க மேற்கத்திய நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துகின்றன. அணுவுக்கு மாற்றீடாக பயன்படுத்தக் கூடிய வளங்கள் உள்ளன. நீர், காற்றாடி, சூரிய ஒளியை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். உதாரணத்திற்கு டென்மார்க், நெதர்லாந்தில் காற்றாடி மின்சாரமும், நோர்வேயில் நீர் வலு மின்சாரமும் ஏற்கனவே கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பிரான்சிற்கு விநியோகிக்கும் திட்டமும் ஆலோசிக்கப் படுகின்றது. இத்தகைய பசுமைப் புரட்சிகள், இன்னமும் விருத்தி செய்யப் படவில்லை. இவை எல்லாம் இன்னமும் பெரும்பாலான மக்களை போய்ச் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, நெதர்லாந்து நாட்டின் பெரிய மின் விநியோக நிறுவனம், “உங்களுக்கு தூய்மையான மின்சாரம் வேண்டுமா?” என்று வீட்டுக்கு வீடு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது. “தூய்மையான மின்சாரம்” என்றால், காற்றாடிகளினால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எனப் பொருள் படும். மேலைத்தேய மக்கள், அணு சக்தி மின் திட்டத்தை எதிர்ப்பதன் காரணமாக, இது போன்ற மாற்றுத் திட்டங்களை அரசு அறிவித்து வருகின்றது.

இங்கே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று வளங்கள் இருந்தும், இவ்வளவு காலமும் எதற்காக அணு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்கள்? எண்ணெய் நிறுவனங்கள், தமது இலாப நோக்கத்திற்காக, மாற்று எரிபொருள் பாவனையை தடுத்து வருகின்றன. அது போலத் தான், அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. (மேற்கத்திய நாடுகளில், இவை “அணு உலை மாபியாக்கள்” என்று அழைக்கப் படுகின்றன.) செர்னோபில் அணு உலை வெடித்த பின்னர் தான், அவர்களது பிடி தளர்ந்தது. இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய அரசுகள், மாற்று எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. காற்றாடி, நீர், சூரிய ஒளி, என்று இயற்கையாக கிடைக்கும் சக்தியில் முதலிட முன்வருகின்றன.

புதிதாக அணு உலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவற்றில் இலாபம் பார்த்த நிறுவனங்கள் வேறு வழி தேடி அலைகின்றன. அவர்களின் முன்னாள் உள்ள ஒரே தெரிவு… மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலை கட்டிக் கொடுப்பது. பனிப்போர் நிலவிய காலத்தில் அதுவும் அரசியலாக்கப் பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஈரான் போன்ற சில நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பிருக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் மறைவின் பின்னர், “அணு உலை வியாபாரம்” செய்வதற்கு தடையேதும் ஏற்படப் போவதில்லை. அந்த அடிப்படையிலேயே, இந்தியாவில் கட்டப்படும் அணு உலைகளையும் பார்க்க வேண்டும். (அணு உலை கட்டுவது ரஷ்ய நிறுவனமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் பங்கு என்ன என்பது தான் முக்கியமானது.) முரண்நகையாக, ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் “சர்வதேச சமூகம்”, இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், மக்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இது சர்வதேச சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டமாக காணப்படுகின்றது.

மேற்கைரோப்பிய நாடுகளில், தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளை பார்த்து வரும் சாதாரண பார்வையாளர்கள் அனைவரும், அதனை அவதானித்திருப்பார்கள். அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும், ரயில் வண்டி (Castor train) மறிப்புப் போராட்டம் மிக ஆக்ரோஷமாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வு இது. (இரண்டு வருடங்களுக்கு முந்திய, வெற்றிகரமான அணு உலைக் கழிவு எதிர்ப்பு போராட்டம் பற்றிய வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது. ) குறிப்பாக பிரான்ஸ் எல்லையோடு இருக்கும் மேற்கு ஜெர்மன் பகுதி ஒரு போர்க்களம் போன்று காட்சி தரும். பல நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், தண்டவாளத்தோடு தம்மை சேர்த்து பிணைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பொலிஸ் படை குவிக்கப் பட்டிருக்கும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலிசார், உத்தரவு கிடைத்தால் தாக்குவதற்கு தயாராக நிற்பார்கள். இறுதியில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் நடக்கும் மோதலில் காயமுற்றோர், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும்.எதற்காக இந்தப் போராட்டம்?

பிரான்ஸ் நாட்டு அணு உலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை, ரயில் வண்டி மூலம் ஏற்றிச் சென்று, வட ஜெர்மனியில் ஓரிடத்தில் புதைப்பார்கள். ஒரு வேளை, கடுமையான பாதுகாப்புடன் செல்லும் ரயில் வண்டி தடம்புரண்டால், அக்கம் பக்க ஜனங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் படுவார்கள். அதை விட, அணு கழிவுகள் புதைக்கப் படும் இடத்தில், ஆயிரம் வருடங்கள் சென்றாலும் கதிர்வீச்சு அபாயம் காணப்படும். இது போன்ற தகவல்களை கேள்விப்பட்ட ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். சில இடதுசாரி (அனார்கிஸ்ட்) அமைப்புகளும், “கிரீன் பீஸ்” தொண்டு நிறுவனமும், இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றன. கணிசமான உள்ளூர் மக்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, பிற மக்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மை மக்கள் அரசின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அதற்குக் காரணம், அணு உலைக் கசிவுகளால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை. மாறாக, ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலுக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களை, “இலக்கற்ற வன்முறையாளர்கள்” என்றே மக்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களை அடக்குவது சரி என்று, காவல் துறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் அகதிகள் கூட இது போன்ற கருத்துகளை தெரிவித்ததை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ஒரு போராட்டம் நடக்கும் பொழுது, முதலாளித்துவ ஊடகங்களின் தன்மை குறித்தும், வெகுஜன மக்களின் மனப்பான்மை குறித்தும், ஆராய்வது அவசியமாகின்றது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள், “அனைவருக்குமான மலிவு விலை மின்சாரம்” குறித்து மட்டுமே பேசுவார்கள். அணுசக்திக்கு மாற்றீடு குறித்து தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லை என்று சாதிப்பார்கள். இதனால், அணு உலை எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தான், மாற்று எரிபொருள் குறித்தும் பேச வேண்டியுள்ளது. அது பற்றிய விளக்கங்களை, கலந்துரையாடல்கள், பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. “தூய்மையான மின்சாரம்” குறித்து மேற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்திய மக்களிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு அருகில் உள்ள, நேபாளமும், இலங்கையும், நீர் வீழ்ச்சிகளில் இருந்து தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யும் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஈழப்போர் வெடிப்பதற்கு முன்னர், நீர் மின்சாரத் திட்டத்தை விரிவு படுத்தி, தமிழகத்திற்கும் விநியோகிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப் பட்டன. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, இலங்கைக்கு விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. ஒன்றைப் பேசும் பொழுது, இன்னொன்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடிவதில்லை. “உலகமயமாக்கல்” எனும் பொருளாதார சித்தாந்தம், எவ்வாறு அனைத்து மக்களையும் பாதிக்கின்றது என்பதற்கு, அணு உலைகள் சாட்சியமாக உள்ளன. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நன்றி – கலையகம்

பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன? கேள்வி-பதில்!

சமீக காலமாக கேரளாவைச் சார்ந்த நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கிளைகளை அதிகமாக திறந்து வருகின்றனவே இதன் உண்மையான பின்னணி குறித்து விரிவாக விளக்க முடியுமா?

லிவிங்ஸ்டன்

__________________________________

அன்புள்ள லிவிங்ஸ்டன்,

தமிழகத்தில் கேரள நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதன் பின்னணி குறித்து பார்க்கும் முன், இதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக வேறு சில விஷயங்களை பார்த்து விடுவோம். குறிப்பாக நமக்கெல்லாம் அதிகம் அறிமுகமாகாத கேரள மக்களின் ‘மஞ்சள் பித்து’ குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு அளவான சுமார் 800 டன் தங்கத்தில் (2010ம் ஆண்டுக் கணக்கு) ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பங்கு அளவு கேரளாவில் மட்டும் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய சந்து பொந்துகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

இதெல்லாம் போக, ஆர்ரென்ஸ் கோல்டு சவுக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது கொச்சியில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை உருவாக்கி வருகிறது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக இருக்கும் இந்த ஷாப்பிங் மாலில், மேலே பட்டியலிடப்பட்டுள்ளதைப் போன்ற சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் தமது கடைகளைத் திறக்க உள்ளன. அவை மட்டுமல்லாமல், நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில் துவங்கப்படவுள்ளது.

சுதந்திரத்துக்குப் பின் மற்றய இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் முன்னணியில் இருந்தது. எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் கேரளமே முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவனியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.

வரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கவல்லது.  இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை. மூன்றாவதும் முக்கியமானதுமான வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தங்க நகை விற்பனைக்கான மதிப்புக் கூட்டு வரி கேரளாவில் 4 சதவீதம் – இதே பிற மாநிலங்களில் 1 சதவீதம் தான். இந்த அதிக வரி விதிப்பை இத்தனை நாளும் மலையாளிகளின் தங்க நூகர்வு வெறிக்குத் தீணி போடுவதன் மூலம் ஈடுகட்டி வந்த நிலையில், அதில் விழுந்த அடி தான் இவர்களைக் கேரளத்தை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது.

சாமானிய இந்தியர்களைப் பொருத்தவரையில் நகையும் அடகும்,  உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்தளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட்டு மினி மற்றும் மணப்புறம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மட்டும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.

கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் பைனான்ஸ்க்கு, 2011 ஆண்டு வாக்கில் 3,369 கிளைகள் இருந்தன. 2009-ம் ஆண்டு வாக்கில்  985 கிளைகளாக இருந்து இரண்டே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்தக்  கிளைகளில் சுமார் 85 சதவீதமானவை தென்னிந்திய மாநிலங்களில் தான் அமைந்துள்ளது.

தற்போது தங்க நகைக்கடன் சந்தையில் சுமார் 19.5 சதவீத அளவை முத்தூட் பைனான்ஸ் நிறுவனமே கட்டுப்படுத்துகிறது. கடன் அளிப்பதில் பொதுததுறை வங்கிகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத முத்தூட், அடகுக்காக நகைகளை எடுத்துவரும் ஒருவருக்கு பத்தே நிமிடத்தில் கடன் தொகையை அளித்து விடுகிறது. பொதுத்துறை வங்கிகள் கடனளிக்கவும் புதிய கிளைகள் துவங்கவும் ரிசர்வ் வங்கியின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள  அரசு, இது போன்ற தனியார் வட்டிக்கடை நிறுவனங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. கடந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் முத்தூட் 103 புதிய கிளைகளைத் துவக்கியுள்ளது.

கேள்வி - பதில் : பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன ?

இந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மலையாளி நிறுவனங்கள் தமது கிளைகளை விரிவாக்க அக்கம் பக்கத்து மாநிலங்கள் என்றால் வசதி. மொழி, கலாச்சாரம், உள்ளூர் அரசியல் போன்ற காரணிகளை சுலபத்தில் சமாளிக்கலாம். இரண்டாவதும் முக்கியமானதுமான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்கள். அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவோ அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவோ இந்நிறுவனங்கள் ஒரு வசதி.

மேலும் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவாணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது. அந்த வகையிலும் தென்னிந்தியா மாநிலங்களில் அடகுக் கடைகள் நிறைய வளர முடியும்.

வடக்கே தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஒரு சில மாநிலங்களும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மார்வாரி, பனியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு ஊடுருவி கடைகளைத் திறப்பது ஒப்பீட்டளவில் சவாலானது. ஆனாலும், தென்னிந்தியாவினுள் மட்டும் சுருங்கிக் கிடப்பது தமது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்துள்ள முத்தூட் சகோதரர்களில் மூத்தவரும் அந்நிறுவனத்தின் சேர்மனுமான ஜார்ஜ் முத்தூட், தனது அலுவலகத்தை தில்லியில் அமைத்துக் கொண்டு வட இந்தியாவில் கிளை பரப்பும் திட்டத்தை சொந்த முறையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆக, முத்தூட், மணப்புரம் போன்ற மலையாள அடகுக் கடைகளும், கேரளத்தை மையமாகக் கொண்ட பிற சங்கிலித் தொடர் நகைக் கடைகளும் தமிழகம் என்றில்லாமல் பிற மாநிலங்களிலும் தமது கிளைகளைத் திறந்தே வருகிறார்கள். அதற்கான சூழலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் நிலவுகிறது. இந்தியர்களுக்கே உரித்தான தங்கத்தின் மேலான பித்தும், அதை வாங்கி பதுக்கி வைப்பதில் இருக்கும் அற்பத்தனமான பெருமிதமும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியுமே மலையாளி தங்க முதலாளிகளுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நகைக் கடைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்ட இந்த நிறுவனங்கள் அண்டைய மாநிலங்களில் விரிவு படுத்துவது சாத்தியம்தான். அதற்கு தோதாக மறுகாலனியாக்கத்தின் விளைவாக வளரும் நடுத்தர வர்க்கமும், பெருகி வரும் அதன் வாழ்க்கைப் பிரச்சினைகளும் ஒருங்கே சேர்ந்து இத்தகைய நகைக்கடைகளுக்கான சமூக அடிப்படையை தோற்றுவிக்கின்றன. இதை நாம் தமிழர், மலையாளி என்ற இனவாத அரசியலுக்கு அப்பால் உள்ள பொருளாதார அடிப்படைகளின் மூலம்தான் புரிந்து கொள்ள முடியும்.

சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!

12

ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ஆனாலும் இதை வைத்து பெண்ணுரிமையின் மகத்துவம் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. பிரபலமற்ற பல கணவன்மார்கள் தத்தமது பிரபலமான மனைவியரின் பேரால் அறியப்படுவார்கள் என்றாலும் நடராசனின் கதை வேறு.

80களில் வீடியோக்கடை நடத்தி பிழைத்து வந்த சசிகலா பின்னர் நடராஜனின் வியூகத்தால் ஜெயாவின் அந்தப்புரத்தில் நுழைந்து உடன்பிறவா சகோதரி என்று ஜெ உருகுமளவு தலையெடுத்தார். அடுப்பங்கரை மங்கையாக இருந்தவர் கிச்சன் கேபினட்டின் குயின் மேக்கராக அவதரித்தார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் அரசு அதிகாரியாக இருந்த நடராசனது பங்கை பலரும் அறிந்திருக்கவில்லை. பிறகு அ.தி.மு.க எனும் மக்கள் அடித்தளமுள்ள மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை கட்டி மேய்த்ததோடு, கொள்ளையடித்து தரகு முதலாளியானதும் வரலாறு.

ம.நடராசன்
ம.நடராசன்

அதில் சசிகலாவின் ஒவ்வொரு அசைவும் நடராசனால் தீர்மானிக்கப்பட்டது. இடையில் ஜெயா சினம் கொண்டு நடராசனை வெளியேற்றினாலும் மறைமுக அதிகார மையங்களில் ஒன்றாக நடராசனே விளங்கினார். ஒரு வகையில் அவரை தமிழ்நாட்டின் சுப்ரமணிய சுவாமி என்றும் கௌரவமாக அழைக்கலாம். சுவாமி அளவுக்கு நகைச்சுவை உணர்வில்லை என்றாலும் தமிழ்நாட்டின் சக்திவாய்ந்த அரசியல் தரகராக நடராசன் பணியாற்றினார். எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல், அதிகார நியமனம் – பணிமாற்றம், தொழில் ஒப்பந்தங்கள், சொத்து விவகாரங்கள் என அனைத்திலும் நடரசானது பங்கு தீர்மானகரமாக இருந்தது.

குறுகிய காலத்தில் ஜெயா சசி கும்பல் முழு தமிழ்நாட்டையும் மொட்டையடிக்கும் அளவுக்கு நடராசனது வியூகம் விரிந்தது. இது போக அனைத்திந்திய அளவில் கூட்டணி, பல தேசிய பிரமுகர்களோடு நட்பும் நடராசனின் வழியாகவே இயங்கியது. பகுஜன் சமாஜ் கட்சின் இறந்து போன கன்சிராம் கூட நடராசனது நண்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் சு.சுவாமியான பிறகே நடராசன் மாணவர் பருவத்தில் 1967 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றார் போன்ற கீர்த்திகள் புழுதி படிந்த வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்து வியந்தோதப்பட்டன.

அதில் ஒன்று இவர் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது. என்ன தலைப்பில்? “மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு”! அந்த வகையில் ஜெயா-சசி எனும் இரட்டை மகளிரது முன்னேற்றத்தில் இவருக்கு முனைவர் பட்டம் நிச்சயமாகக் கொடுக்கலாம். சு.சாமி என்னதான் அரசியல் தரகராக இருந்தாலும், காமடியனாக இருந்தாலும் ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு சென்று பேராசிரியப் பணியாற்றுபவர் என்று அறிவாளியாகவும் இருப்பது போல நடரசானும் “புதிய பார்வை” எனும் இதழை ஆரம்பித்து அப்படிக் காட்டிக் கொண்டார். பத்திரிகையாளர் மணா போன்று பல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பிழைப்புவாதம் காரணமாக இவரை வியந்து போற்றும் நபராகவும் சித்தரித்தார்கள்.

இவரது கள்ளர் சாதி பிரமுகர்கள் முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் முழு அதிமுகவையும் ஆக்கிரமித்து ருத்ர தாண்டவம் ஆடுவதற்கு வழியமைத்தவரும் நடராசன்தான். இது போக காலனியாதிக்க எதிர்ப்பு வீரர்களான புலித்தேவன், மருது பாண்டியருக்கு சாதி ரீதியான விழா எடுத்து தன்னை தேவர் சாதி வெறியராகவும் காட்டிக் கொண்டார். இது போக பொங்கல் பண்டிகையை தஞ்சாவூரில் வருடாவருடம் நடத்தியும் தனது அடியாட்படையை கவனித்துக் கொண்டார். இந்த விழாக்களில் தேவர் சாதியைச் சேர்ந்த நடிகர்களும், மார்க்கெட் இல்லாத கனவுக் கன்னிகளும் கலந்து கொள்வார்கள்.

அண்ணனது கஞ்சா புகழ் செரினா கதை தனி அத்தியாயம். இனி தலைப்புக்கு வருவோம்.

ஜெயாவை விட்டு சசிகலா பிரியும் நாடகம் நடக்கும் போதும், தேர்தல் கூட்டணி கூத்துக்களின் போதும் நடராசன் என்ன சொல்கிறார் என்று கிசுகிசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு அவரை லைம் லைட்டுக்கு கொண்டு வரும். இப்போதும் அப்படித்தான். தற்போது அதிகாரத்திற்கு மயிலாப்பூர் கும்பல், சொத்துக்கு மன்னார்குடி கும்பல் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியே அடிப்பது போல் அடித்து அழுவது போல அழுது அவர்கள் நடத்தும் நாடகம் கிசுகிசு ஊடகங்களுக்கு ஜாக்பாட் சுரங்கமாக செய்திகளை வழங்குகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூரில் நடராசன் நடத்திய பொங்கல் விழவில் அவர் பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது.

இனி அவரது பேச்சை படியுங்கள்: (செய்தி – தினமலர்)

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், “முடிவெடு’ என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!’ இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார். தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.”

இதில் நடராசன் குறிப்பிட்டிருக்கும் இரண்டு விசயங்கள் நமது கவனத்தை கவருகின்றது. ஒன்று அவர் ஐயா பழ.நெடுமாறனுக்கும், மனைவி சசிகலா நடராசனுக்கும் கட்டுப்படுதல் குறித்தது. சசிகலாவுக்கு அவர் கட்டுப்படுவதை நாம் புரிந்து கொள்ளலாம். அதில் அரசியல், சொத்து, கட்சி, அதிகாரம் என்று எவ்வளவோ இருக்கின்றது. ஆனால் அவர் ஏன் பழ.நெடுமாறனுக்கு கட்டுப்பட வேண்டும்? இப்படி ஒரு அன்பான அடிமை பேசியதை ஐயா நெடுமாறனும் மறுத்திருக்கவில்லை.

பழ-நெடுமாறன்
பழ.நெடுமாறன்

ஐயா நெடுமாறனுக்கு கட்டுப்பட்டவர் நடராசன். நடரசானுக்கு கட்டுப்பட்டவர் சசிகலா. சசிகலாவுக்கு கட்டுப்பட்டவர் ஜெயா. பார்ப்பனியமும், பாசிசமும்,  கொள்ளையும் ஜெயாவுக்கு கட்டுப்பட்டவை. இனில் இந்த உறவு இழையில் ஏங்கோ இடிக்கிறதா? அது என்ன இடி?

ஐயா நெடுமாறன் தமிழகத்தில் பிரபலமானவர் என்பதை விட ஈழத்தில் பிரபலமானவர். முக்கியமாக புலிகளின் நெருக்கமான பிரமுகர். அந்த வகையில் தமிழகத்தின் புலி தூதர் என்றும் சொல்லலாம். புலி அபிமானத்திற்காக இந்து மதவெறியர்களையும் அரவணைத்துக் கொள்ளுமளவு ‘மனிதாபிமானம்’ மிக்கவர். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துமதவெறி புரவலர்களுக்கெல்லாம் பட்டம் கொடுத்து மகிழும் ஒழுக்கமுடையவர்.

முள்ளிவாய்க்கால் போரின் போது எப்படியாவது ஜெயா வெற்றி பெற்று ஈழத்தை வாங்கி தருவார் என்ற மூடநம்பிக்கையை ஈழத்தமிழர்களிடமும், புலிகளிடமும் செல்வாக்கோடு உருவாக்கியவர். இப்படி இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் லாபி வேலை செய்து ஈழப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்ற அணுகுமுறை புலிகளிடமும் இருந்தது; ஐயா நெடுமாறனிடமும் இருந்தது. இன்றும் அவர் சீனப்பூச்சாண்டியை எழுதி இந்திய அரசை மனம் குளிர்விப்பவர். ஈழம் மலர்ந்தால் அது வலுவான இந்திய வெளியுறவுக் கொள்கையின் கோட்டையாக இருக்குமென்று பிரகடனப்படுத்தியவர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் வெற்றி பெறும், பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக வேலை செய்தார். ஜெயாவை ஈழத்தாயாக போற்றுமளவு அந்த வேலை தொடர்ந்தது. பின்னர் ஈழப் போர் முடிந்து பின்னடைவுக்குள்ளானாலும் தொடர்ந்து அதிமுக பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார். ஜெயாவின் சட்டசபைத் தீர்மானம் குறித்து பாராட்டுபா படித்தார். அந்த வகையில் இப்போதும் மூவர் தூக்கிற்கு ஜெயா இழைத்த துரோகம் குறித்தும் மவுனம் சாதிக்கிறார்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் மேற்கண்ட இடியையும், இழையையும் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே நடராசன் ஏன் அப்படி பேசினார் என்பதும், ஐயா நெடுமாறனது அரசியலும் முரண்படவில்லை எனும் போது இதை புரிய வைக்க நாம் மெனக்கெட வேண்டியதில்லை.

இரண்டாவதாக நடராசன் தனது கார், வாட்ச், செயினை ஏலம்விட்டு ரூ.45 இலட்சத்தை முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்திற்காக ஐயா நெடுமாறனிடம் அளித்த செய்தியைப் பார்க்கலாம்.

இந்த ஏலம் அமெரிக்காவில் நடந்தால் கூட இப்படி வசூலாக வாய்ப்புள்ளது. அப்போதும் கூட இந்த அளவு ஏலம் கொடுத்து வாங்க நடராசன் ஒன்றும் ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் நடிகைகளின் பிகினி உடைகள் அல்ல. ஆதலால் அங்கேயும் அப்படி வசூலாகமுடியாது எனும் போது பட்டினிக்காக எலிக்கறி சாப்பிடும் தஞ்சை மாநகரத்தில் அப்படி யார் ஏலமெடுத்தார்கள் என்பது சிரிப்பதற்குரிய ஒன்று.

அது நிச்சயமாக நடராசனது பினாமிகள்தான் வாங்கியிருக்க வேண்டுமென்பது ஊரறிந்த விசயம்.

அடுத்து அந்த ஏலம் யார் எடுத்திருந்தாலும் நமக்கு பிரச்சினை அல்ல. ஆனால் நடராசனது சொத்து என்பது ஜெயா சசி கும்பலின் கொள்ளை, ஊழல் பணத்தில் வந்தது. இதை நடராசனது வீட்டு நாய் கூட மறுத்து வாதிடாது. இந்த கொள்ளை பணத்தை, இரத்தப் பணத்தை வெட்கம் கெட்டு ஐயா நெடுமாறன் ஏன் வாங்கினார் என்பதுதான் நமது கேள்வி. நடராசனது சொகுசுக் கார் இலண்டனிலிருந்து வரி கட்டாமல் மோசடி செய்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற போண்டா வழக்கே அண்ணாரது பெருமையை பறைசாற்றும்.

இந்திய தேசியத்திடமிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும், இலங்கையில் ஈழம் மலர வேண்டும், அங்கே புலிகள் ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் பாடுபடும் கட்சிகள், இயக்கங்கள், குழுக்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. நாள்தோறும் புதிது புதிதாக தோன்றியும் வருகின்றன.

அந்த இயக்கங்கள் மூலம் தமிழக மக்களிடம் வசூலித்து அப்படி ஒரு நினைவுச்சின்னம் கட்ட முடியாதா?

ஒருவேளை அவர்களெல்லாம் லெட்டர் பேடு கட்சிகள், வசூலாகாது என்று ஐயா நெடுமாறன் நினைத்தாரென்றால் அப்படி ஒரு நினைவுச்சின்னம் கட்டாமலேயே இருந்திருக்கலாமே?

நெடுமாறன், வைகோ உள்ளிட்ட ஈழ ஆர்வலர்களை தடா, பொடாவில் போட்டு, போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், மூவர் தூக்கை எதிர்க்கவில்லை என்பது வரை ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது?

இல்லை இது புலிகளது தவறான அரசியலுக்கு கிடைத்த கவித்துவ நீதியா ?

எது எப்படியோ போகட்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழன கட்சிகள், குழுக்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அந்த கொள்ளைப் பணத்தை மறுக்க வேண்டும். தூக்கியெறிய வேண்டும். நெடுமாறன் கட்டும் அந்த நினைவுச்சின்னத்தை நிராகரிக்க வேண்டும். இல்லையேல் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களது தியாகம் உங்களை மன்னிக்காது.

ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!

40

iit-sperm-wanted

சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………?

ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு  20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர்.

படிப்பதற்கு நாராசமாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் சமூகத்தின் பிற தளங்களிலும் பிரதிபலிக்கின்ற காரணத்தால், அது விளைவிக்கவிருக்கும் அபாயத்தையும் இங்கு பரிசிலிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது கூட பல நிகழ்ச்சி நிரல்களை அல்லது பிற்போக்குத்தனங்களை மனதில் நிறுத்தியே தங்கள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு உடன்படுகின்றனர். தத்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த சாதியிலேயே பிறந்த குழந்தை அல்லது சமூகக் கட்டுமானத்தில் அவர்களுக்கு மேலிருக்கிற சாதியில் பிறந்த குழந்தை, நோய் நொடியில்லாமல் அங்க பாதிப்பெதுவும் இல்லாத குழந்தை போன்றவையே பிரதான கோரிக்கையாயிருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் வைக்கிற  முக்கியமான நிபந்தனைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள் அல்லது தெருவோரங்களில் வசிப்பவர்களுடையதாக இருக்கக் கூடாது என்பதே, இதற்கு அவர்கள் வைக்கிற வாதம் அக்குழந்தைகளைத் தத்தெடுத்து தத்தம் குடும்பச் சூழ்நிலைகளில் வளர்த்தால் கூட அது தனது இரத்த உறவின் சாதிய குணநலன்களையே கொண்டிருக்கும் என்பதே. ஆக சாதியின், வர்க்கத்தின் மேல்நிலையில் உள்ளவர்களே அதிக அறிவைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச் சீலர்களாகவும் இவர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

மேலும் இவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே வழக்கமாகக்  கொள்கின்றனர். இது தத்தெடுத்தவர்கள் இறுதிக் காலங்களில் ஆண் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பெண் என்றால் கல்யாணம் ஆனவுடன் சென்றுவிடுவார்கள், சட்டப்படி சொத்துரிமை கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும் விளைந்ததே. ஆக எக்காலத்திலும் சொந்தக் குழந்தையானாலும், தன் பொருளாதார, சாதி நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். சீரழிந்து வருகிற ஒரு சமூகம் தான் விரும்பும் வாழ்க்கைக்கான விழுமியங்களை எத்தகைய விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ளத் தயங்காது என்பதற்கான ஆதாரமே இது.

இதற்குச் சற்றேதும் குறைவில்லாத விழுமியங்களுடன் கொண்ட விளம்பரத்தைத்தான் அத்தம்பதியினரும் கொடுத்துள்ளனர். மேற்கொண்டு இச்செய்தியை அறிவியல் கொண்டு பார்த்தால்………… விளம்பரத்தில் கோரியுள்ளபடியே அத்தம்பதியினர் தாங்கள் விரும்பிய ஐ.ஐ.டி பொலிகாளைகளின் விந்தைப் பெற்று, செயற்கை முறையில் கருவுறுதல் மூலம் குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தை வளர்ந்து அதன் இலக்கை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றது.

ஏனெனில் சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை. மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல.  ஆகையால் அது அப்துல் கலாம் விந்தணுவாக இருந்தால் கூட பிறக்கும் குழந்தை அவரைப் போன்று காமடி அறிவாளியாகப் பிறக்கும் என்பது அறிவீனம். இருந்தும் தற்போது நிலவுகிற சமனற்றச் சமூகத்தில் பெருஞ்சுயநலமிக்க பெற்றோர்களின் வளர்ப்பாலும், அவர்களால் ஊட்டப்படுகின்ற சமூகத்தைப் பற்றிய கருத்தோட்டங்களாலும் வளர்ந்து வருபவன் சுயநலம் மிகுந்த பிழைப்புவாதியாக மாறவே வாய்ப்புள்ளது. அரிதும் அரிதான வாய்ப்புகளில் மட்டுமே இவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக மாற இயலும். இதுவும் அத்தகைய அரசியல், தொடர்பு, இயக்கங்கள், மூலமே சாத்தியம். ஆக பிறக்கப் போகும் குழந்தையின் திறனை விந்தணுக்களின் மூலம் நிர்ணயிப்பதென்பது அறிவீனம்.

ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற பார்ப்பன மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.

தங்கள் பேச்சு முதல் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம், சாங்கியம் பார்த்தல் வரை அனைத்தையும் பார்ப்பனர்களைப் போலவே (இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட ஒரு படி மேலே) செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் சிந்தனைச் சொரிதலால் வந்த குழந்தையே இது போன்ற விந்து விருப்பம். ஐ.ஐ.டியனர் ஏதோ இயற்கையிலேயே அறிவுச் செழிப்புடன் பிறந்தவர்கள் போலவும் மற்றவர்கள் இவையெதுவும் இல்லாததால்தான் மற்ற கல்லூரிகளில் படிப்பதாகவுமான ஒர் கருத்து இவ்விளம்பரத்தின் மூலம் பிதுங்கி வருவதைக் காணலாம்.

நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் குறிப்பாக பார்ப்பன பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டி கனவுகளை ஊட்டி அதற்குத் தேவையான பாடங்களை எந்திரகதியில் மனதில் உருவேற்றிவிடுகிறனர். மாணவர்களுக்கோ சிறு வயது முதல் வாழ்வின் அத்துனை அம்சங்களையும் இழந்தாலும் ஐ.ஐ.டி ஒன்றே வாழ்க்கை போன்ற என்ணங்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது. இதில் அறிவிற்கு என்ன வேலை?

பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இது போன்று சிறு வயதில் இருந்தே பயிற்சியெடுக்க வாய்ப்பில்லாமல் போவதாலும் இங்கு இடஒதுக்கீடு இல்லாதபடியாலும் அவர்கள் இங்கு சேர்வதைப்  பற்றி யோசிப்பதில்லை. ஆக தான் வாழும் சமூகம் சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதையும் பார்க்காத/பார்க்க விரும்பாத இவர்களின் குருட்டுக் கண்களுக்கு பணத்தின் இருப்பு மற்றும் அதன் மீதான அதீத காதல் மட்டுமே தேவை என்பதாக கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் பிற்காலத்தில் அதுவாகவே ஆகின்றனர். எனவே இங்கு சேர்வதற்கான தகுதி திறமை எல்லாம் சாதி வர்க்க ரீதியில் அமைந்தது என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  அதனால் தான் நன்றாகச் சம்பாதிக்கப் கூடிய, சந்தையில் அதிக விலைபோகும் ஐ.ஐ.டி பொலிகாளைகளை இவ்விளம்பரம் கோருகிறது.

இந்த ‘அறிவுஜீவி’களின் யோக்கியதையை, இச்சமூகத்தில் குறைந்த பட்சம் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கூட செய்ய லாயக்கற்ற குப்பைத் தொட்டிகளாக விளங்குவதன் மூலம் காணலாம். தன் கூடப் படித்த சக மாணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்து கண்டும் காணாமல் வாய் மூடி ஊமைகளாய் இருக்கும் மாணவர் சமூகத்தை படைப்பதுதான் இந்த ஐ.ஐ.டிக்கள். சமீப காலங்களில் ஐ.ஐ.டிக்களில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளும், சென்ற மாதம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISC- Bangalore) மன உளைச்சல் மற்றும் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பராக் சதாலே என்ற பேராசிரியரைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அதீத மன உளைச்சல், தனிமை என்றால் சாவு ஒன்றுதான் தீர்வு போல, குறைந்தபட்சம் அதை எதிர்த்துப் போராடக்கூட வக்கில்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இச்சமூகத்தின், இக்கல்விமுறையின் பலிகடாக்கள், அதன் நேரடித் தோல்வியால் ஏற்பட்ட விளைபொருட்கள், ஒட்டுமொத்த வினைகளின் எதிர்வினைகள்.

டிசைனர்-பேபிஇது போன்ற விளம்பரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தாலும் இவ்வகையறா விளம்பரங்கள் மேலை நாடுகளில் பரவலாகக் காணமுடியும். அங்கு அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் வருகின்றன. டிசைனர் விந்தணு, டிசைனர் பேபி போன்ற மாய்மால வார்த்தைகள் அங்கு பிரபலம். பிறக்கப் போகும் உங்களுக்கான குழந்தைகளை உங்கள் விருப்பப்படி டிசைன் செய்து கொள்ள வேண்டுமா? நல்ல அறிவுடன், பச்சை நிறக்கண்களுடன், அழகான முடியுடன், பளிச்சென்ற நிறத்துடன், உயரமாக வேண்டுமா ! இது போன்ற சொற்களைத் தாங்கிய விளம்பரங்களும் சர்வ சாதாரணமே.

ஆனால் நமக்கு இது போன்ற விளம்பரங்கள்  வருவது புதியதாயினும் இலை மறை காயாக அத்தகைய விழுமியங்கள் நம் சமூகத்தில் காலங்காலமாகவே இருந்து வருகின்றன. வெகு நாட்கள் மூடியுள்ள முகத்திரையால் பயனேதும் இல்லை என்பதால் தனது போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளது அவ்வளவே! தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியினூடாக இது போன்ற செயல்கள் தவறானதல்ல என்றும், அது தனிமனிதர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்றும் நிலைநிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுள்ள, அசமத்துவப் படிநிலைகளைக் கொண்ட இச்சமூகம் இது போன்ற வீரியமிக்க ஒட்டுரக டிசைனர் குழந்தைகளை உருவாக்கும் பட்சத்தில் (உயிரித் தொழில் நுட்பம் மூலமாக சாத்தியமே என்கிறார்கள் அறிஞர்கள்) அது இச்சமூகத்தில் தனக்கான முரண்பாடுகளை அதிகமாக ஏற்படுத்திக்கொள்ளுமே ஒழிய அதனால் வேறெதுவும் பயனில்லை. இது போன்ற டிசைனர் குழந்தைகள் சமூக, பொருளாதார மற்றும் அறிவுத்தளங்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு அசமத்துவத்தின் புதிய படிநிலையில் விட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இங்கு விந்தை தானமாகக் கொடுப்பவரின் பின்புலம் பற்றி அறிய சட்டம் இடம் கொடுக்காது என்ற போதிலும் நிலவுகின்ற சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தாங்கள் விரும்பும் டிசைனர் விந்துவைப் பெற சாத்தியம் இருக்கவே செய்கிறது. டிசைனர் குழந்தைகள் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அப்பெற்றோர்களால், குழந்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கான முகாந்திரங்களும் உள்ளது.

மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering)  இல்லாமல் இயற்கையாகவே டிசைனர் விந்துக்களைக் கொண்டுள்ளதாகக் கற்பிக்கப்படும் பார்ப்பன ஐ.ஐ.டியினர், பொலிகாளைகளாக மாறும்பட்சத்தில், வீரியமற்ற இம்’மலட்டு’ச்சமூகம் மேலும் மலடாகி போகுமே அன்றி அறிவார்ந்த சமூகமாக மலர முடியாது.

அறிவும், திறனும், சமூக பிரக்ஞையும் சமூக நடைமுறைகளில்தான் மலருமே அன்றி டிசைனர் விந்துவால் உருவாக்க இயலாது. உடல் ஆரோக்கியத்தின் மேம்பட்ட தன்மையை வேண்டுமானால் டிசைனர் விந்து கொண்டு வரலாம். ஆனால் சமூக ஆரோக்கியத்தை இது வழங்கி விடாது. மூதாதையரின் உடற்கூறுகளைத்தான் மரபணு தாங்கி வருகிறதே அன்றி அவர்களின் சமூக வரலாற்று உணர்வை அல்ல. அது வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் வடிக்கப்படும் ஒன்று.

–    குட்டக்கொழப்பி

ஏனாமில் நடந்தது முன்னோட்டம் – பாண்டிச்சேரி ஆர்ப்பாட்டம் !

ஏனாமில் நடந்தது முன்னோட்டம்,
அதை புரிந்துகொள்வதற்கு தேவை பாட்டாளி வர்க்க கண்ணோட்டம்
.!

இந்தியாவிலேயே செராமிக் மற்றும் டைல்ஸ் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் 5 பெரும் கம்பெனிகளில் ஒன்றான ரீஜென்ஸி செராமிக் லிட். என்ற தொழிற்சாலையில் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால் இத்தொழிற்சாலை நிர்வாகம் வெறும் 300 பேரை மட்டுமே நிரந்தரப் படுத்தியுள்ளது. மீதம் உள்ள 1200 தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்துள்ளது. இக்கம்பெனியின் குறைந்தபட்ச வருடாந்திர வருமானம் 250 கோடி. ஆனால் நிரந்தர தொழிலாளர்களுக்கே கூட நிறுவனம் கொடுக்கும் சம்பளம் ரூ.8000 மட்டுமே.

இந்த கம்பெனியின் கேடுகெட்ட சுரண்டலை தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ தொழிலாளர் ஆணையமோ, புதுச்சேரி அரசோ இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை நிலைநாட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் படி 2011ல் ’ரீஜென்சி தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கத்தை கட்டினார்கள்.’ சங்கம் அமைத்த உடனே சங்கத்தின் முன்னனியாளர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி. இரண்டு மாதகால ஊதியமும் கொடுக்க மறுத்தது நிர்வாகம். தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மீது மின்விசிறி திருடியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி பணிநீக்கம் செய்தது.

அதுமுதல், பணிநீக்கம் செய்யப்பட்டோரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் சட்டபூர்வமான முறையிகளில் தங்களது போராட்டங்களை தொடர்ந்தனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை எல்லாம் சட்டபூர்வமான முறைகளில் தெரிவித்த போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நிர்வாகத்திற்கும் அரசிற்கும் உறைக்கும் வகையில் தொழிற்சாலையின் உற்பத்தியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை அறிவித்தனர். மிரண்டு போன நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டி அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி உற்பத்தியை தொடர திட்டமிட்டது. நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பலியான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதும் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்துள்ளது.  இப்படி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுப்பதை நிறுத்த, 27-1-2012 அன்று நிர்வாகிகளை போலீசை வைத்து மிரட்டியது நிர்வாகம். போலீசு மிரட்டலுக்கு தொழிலாளர்கள் அஞ்சாததால், ஆத்திரம் அடைந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் செயலர் முரளி மோகன் உட்பட 10 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். போலீசாரின் கொலைவெறி  தாக்குதலுக்குள்ளான சங்கத் தலைவர் முரளி மோகன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

சங்கத் தலைவரின் இறப்புச் செய்தியைக் கேட்ட தொழிலாளர்களும், ஏனாம் பகுதி மக்களும் இணைந்து வாகனங்களை எரித்தும், ரீஜென்ஸி ஆலையை அடித்து நொறுக்கியும் நிர்வாகத்தின் மேலாளர் சந்திரசேகரனைக் கொன்று பழிதீர்த்தனர். அரசின் உதவியுடன் தொழிலாளர் வர்க்கத்தை பயமுறுத்தி ஒடுக்கிவிடலாம் என்று கனவுடன் வாழும் முதலாளி வர்க்கத்தின் கபாலத்தில் ஓங்கி கத்தியை செருகியிருக்கின்றனர் ஏனாம் பகுதி தொழிலாளர்கள். தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக பன்மடங்கு எதிர்த் தாக்குதலை தங்களாலும் தொடுக்கமுடியும் என்பதை முதலாளி வர்க்கத்திற்கு புரிய  வைத்திருக்கிறார்கள்.

நம்முடைய உழைப்பைச் சுரண்டி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்க தொழிலாளர்களாகிய நாம் சாதி, மதம், இனம் என்பதை மறந்து ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம் என்ற முழக்கத்துடன் போலீசின் கொலை வெறிச் செயலைக் கண்டித்து 1-2-2012 அன்று பாண்டிச்சேரியில் புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

–    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பாண்டிச்சேரி

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை! பாண்டிச்சேரி – யேனம் போலீசாரின் கொலைவெறிச் செயல்!

தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பாண்டிச்சேரி – யேனம் போலீசார் அடித்துக் கொன்று விட்டனர். இக்கொலையைக் கண்டித்து போரட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இப்படி கொலை செய்யும் அளவிற்கும், துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கும் என்ன குற்றம் செய்தனர்? ரீஜென்சி செராமிக்ஸ் தொழிலாளர்களாகிய இவர்கள் தொழிற்சங்கம் அமைத்தனர். அவர்களுக்கான கொரிக்கையை வலியுறுத்திப் போராடினர். இதுதான் அவர்கள் செய்த ‘குற்றம்’! இச்சங்கத்தை நிர்வாகம் ஏற்கவும் இல்லை. சங்கத்தை கலைப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டது. மேலும், தொழிற்சங்கத்தைத் துவங்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நிர்வாகிகளை, முரளிமோகன் உட்பட 6 பேரை ரீஜென்சி செராமிக்ஸ் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

நீதிமன்றமும் தொழிற்சங்கத்திற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதையும் நீதுமன்றம் நிராகரித்து விட்டது. வேறு வழியின்றி நிர்வாகம் பணிந்தது. ஆனால், அடிமைச்சாசனம் எழுதி தந்து விட்டு வேலைக்கு வரும்படி கூறியது. இதை மறுத்த தொழிலாளர்கள், மீண்டும் போராட்டத்தை துவக்கி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கக் கோரியும், மேலும் 15 வருடத்திற்கு மேல் வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும், விலைவாசி உயர்வுக்கேற்ப சம்பளத்தை உயர்த்தக் கோரியும், பழிவாங்கும் அடிப்படையில் சிலரை வேறு கிளைக்கு மாற்றம் செய்ததை ரத்துச் செய்யக் கோரியும் போராடி வந்தனர்.

1983-இல் ரீஜென்சி செராமிக்ஸ் கம்பெனி முதலாளி ஜி.என். நாயுடு ரூ. 4 கோடியை வைத்துக் கொண்டு ரூ. 8 கோடியைக் கடனாகப் பெற்று மொத்தம் 12 கோடியை மூலதனமாகக் கொண்டு இத்தொழிற்சாலையைத் தொடங்கினான். இன்று அந்தக் கம்பெனியின் சொத்து மதிப்போ ரூ. 2500 கோடி. கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை தனது உழைப்பால் பெருக்கிக் கொடுத்த தொழிலாளியோ இன்னும் அற்பக் கூலிக்காக கையேந்தி நிற்கிறார். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஜி. என். நாயுடுவுக்கு தொழிலாளர் கோரும் அற்பக் கூலி உயர்வைக் கூட கொடுக்க மனமில்லை.

‘பசித்தவனைப் பார்க்க வைத்து தான் மட்டும் புசித்தவனை போல’ வக்கிர (வர்க்கப்) புத்தி பிடித்த ஜி.என். நாயுடுவோ இவர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு தொழிற்சங்கத்தையும் ஒழிக்க முயன்றான்.

ஜி.என். நாயுடுவுக்கு மேலும் நிர்ப்பந்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேலைநிறுத்தம் செய்தனர்! இதில் சில தொழிலாளர்கள் அவ்வப்போது வேலைக்குச் செல்ல முயல்வதும் அதை போராடும் தொழிலாளர்கள் தடுப்பதும் நடந்துள்ளது. இப்படி வேலைக்குச் செல்ல முயலும் தொழிலாளர்களைத் தடுப்பதை நிறுத்த, நிர்வாகிகளை போலீசை வைத்து மிரட்டினான் ஜி.என். நாயுடு. போலீசு மிரட்டலுக்கு தொழிலாளர்கள் அஞ்சாததால், ஆத்திரம் அடைந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் செயலர் முரளி மோகன் உட்பட 10 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கினர். போலீசாரின் இந்தக் கொலைவெறி தாக்குதலினால் தான் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்க செயலர் முரளி மோகன் இறந்தார்.

போலீசாரால் முரளிமோகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை படுகாயப்படுத்தியதோடு, சிலரை கவலைக்கிடமாகவும் கிடத்தி விட்டனர். இக்கொலைவெறியர்களை கைது செய்யவும் அவர்களை தூக்கிலிடும் வரை போராடுவதும் தொழிலாளர்களாகிய நமது கடமை என்பதை உணர்வோம்.

நம்முடைய உழைப்பைச் சுரண்டி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்க தொழிலாளர்களாகிய நாம் சாதி, மதம், இனம் என்பதை மறந்து ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம். அனைத்து ஒடுக்கமுறைகளில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்கென்று ஒரு படையைக் கட்டுவோம். தொழிலாளர்களையும் – இதர உழைக்கும் மக்களையும் ஒட்டச் சுரண்டும் மூலதனக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம். அதற்கு தேவை ஒரு மாற்றம் என்பதை உணர்வோம். அந்த மாற்றத்தை ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் கொண்டு வருவோம்.

 _____________________________________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை. 

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. PH 9444834519.

_______________________________________________________________________________

போலீசின் வெறிச்செயலைக் கண்டித்து 2.2.2012 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தொழிலாளிகளும் கலந்து கொண்டனர்.

சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 12

”முசுலீம்களும், கிறித்தவர்களும் எல்லா இடங்களிலும் தனிக்குடியிருப்பில் ஒதுங்கி வாழ்வது ஏன்? அவர்கள் இந்துக்களுக்கெதிராக தேச – விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், திட்டமிடுவதற்கும் இதுவே காரணமாவதால், இந்தத் தனிக் குடியிருப்புகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.”

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் முதல், இந்து முன்னணி இராம.கோபாலன் வரை  பலர் பேசி, எழுதி வரும் ஒரு அவதூறு.

முசுலீம்களும் கிறித்தவர்களும் தனியாக  வாழ்வது பற்றி பீதியைக் கிளப்பும் இந்துமதவெறியர்கள்தான், தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி இன்று வரையிலும் அமல்படுத்துகிறார்கள். உலக மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.

ஊருக்கு நடுவே கோவில், கோவிலுக்கருகில் குளம், இரண்டைச் சுற்றியும் அக்கிரஹாரம், அக்கிரஹாரத்தில் பார்ப்பனர்கள். அக்கிரஹாரத்தைச் சுற்றி மேலத் தெருக்கள். மேலத்தெருக்களில் வேளாளர், ரெட்டி, நாயுடு, முதலியார், செட்டியார் போன்ற ‘மேல்’சாதியினர். இதை அடுத்து கீழத்தெருக்களில் ‘பிற்படுத்தப்பட்ட மேல்’ சாதியினர். இவர்களை அடுத்து நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவைச் சாதியினர். ஊருக்கு வெளியே சேரி. சேரியில் பள்ளர், பறையர், சக்கிலியர். இந்த பார்ப்பன செட் – அப்பில் இல்லாத கிராமங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.

குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய மேல் சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.

பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.

வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல்  – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.

20-ஆம் நூற்றாண்டின் கணினி யுகத்திலேயே கிராமம், நகரம், சென்னை, தில்லி, அமெரிக்கா என்று எல்லா இடங்களிலும் தனி வாழ்க்கை முறையைத்தொடர்பவர்கள் யார் என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி இந்துமத வெறியர்களின் அவதூறைப் பரிசீலிப்போம்.

கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழகமெங்கும் முசுலீம் குடியிருப்புகளில் போலீசு காவல் அரண் வைத்துச் சோதிப்பதாக நாளேடுகள் செய்தி வெளியிடுகின்றன. ஏதோ தீவிரவாதத்தை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டே, அவர்கள் தனியாகக் குடியிருப்பதுபோல செய்தி நிறுவனங்களும், இந்து மதவெறியர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இது அப்பட்டமான பொய். ஏற்கனவே பார்த்ததுபோல சாதி ஆதிக்க உணர்வு நிரம்பி வழியும் சமூகத்தில் அனைத்துத் தனிக் குடியிருப்புகளுக்கும் காரணம் பார்ப்பனியம்தான். பார்ப்பன ‘மேல்’ சாதியினர் தங்களது புனிதத்தைக் காக்க, தாங்களே தெரிவு செய்து தனியாக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. முசுலீம்களுக்கும் இது பொருந்தும்.

சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது. கிராமங்களை விடுங்கள், நகரங்களில் கூட சேர்ந்து வாழ நினைத்தாலும் முசுலீம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாரும் வீடு தருவதில்லை. அநேக நகரங்களில் முசுலீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகிலோ, கலந்தோதான் வாழ்கின்றனர். அதிலும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதாலும் சேர்ந்து வாழ்கின்றனர். கிறித்தவ மதத்திலும் வர்க்க சாதி வேறுபாட்டுக்கேற்பவே சேர்ந்தோ, தனியாகவோ வாழ்கின்றனர்.

எனவே, இசுலாமிய மக்களின் தனிக்குடியிருப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு சாதி வர்க்கத் துவேசமாகும். பம்பாய், கோவை, திருவல்லிக்கேணி கலவரங்களில் சேரிகளில் முஸ்லீம் மக்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மக்களே முசுலீம்களைத் தாக்கினர். தனியாக இருந்தும் ஏழைகளாக இருந்தும் இரு பிரிவினரையும் ஒருவரையொருவர் மோதவிட்டிருப்பது தான் இந்து மதவெறியர்களின் சமீபத்திய சாதனையாகும்.

எனவே, சாதி  – மதக் கலவரங்களுக்காகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றால் – இந்து மதவெறியர்கள், சாதி வெறியர்கள் வாழும் அக்ரஹார – ‘மேல்’ சாதிக் தெருக்கள்தான் கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல மக்கள் விரோத – தேசவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு நகரத்தின் பணக்கார வர்க்கம் வாழும் பகுதிகளையும், நட்சத்திர விடுதிகளையும் கண்காணிக்க வேண்டும்.

– தொடரும்.

முந்தைய பாகங்களுக்கு :

புரட்சிக் கலைஞர் – புரட்சித் தலைவி: 2 புரட்சி வாள் ஒரு உறையில் தாங்குமா?

38

மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போலவும், மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் வெளியில் பேசுகிறார்கள் என்று தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் சந்திர குமார் நேற்று (1.2.2012) சட்டசபையில் பேசினார்.

கொஞ்சம் மேலோட்டமாக பாருங்கள், இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க நேரடியாக வைக்கவில்லை! வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்பதன் மூலம் இதை புரட்சித்தலைவியின் மனம் கோணாமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தே.மு.தி.கவின் உறுப்பினர்கள் அம்மா பயத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஏற்கனவே இவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை, புவியியலும் தெரியவில்லை என்று அம்மா ஏகப்பட்ட டோஸ் கொடுத்திருக்கிறார்.

இப்போதும் அப்படித்தான். மின் கட்டண உயர்வை நிர்ணயிப்பது அரசு கிடையாது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் நிர்ணயிக்கிறது, கருத்து கேட்பதும் கூட அவர்களது விதிமுறையின் கீழ்தான் நடக்கிறது, தான்தோன்றித்தனமாக கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கவில்லை, இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் பேசுவது உறுப்பினரின் அறியாமையைக் காட்டுகிறது என்று ஜெயலலிதா சீறினார்.

அல்லிராணி அவையில் வெளியே சில ஆட்டுக்குட்டிகள் பசியில் கத்துகின்றன என்று பேசுவதை உள்ளே ஒரு அடிமை முணுமுணுத்தது கூட அல்லிராணிக்கு அலர்ஜி என்பதுதான் விசயம். இப்படித்தான் புரட்சிக் கலைஞருக்கும், புரட்சித் தலைவிக்கும் உள்ளே ஆவேச வாதங்கள் துவங்கின.

பால் விலை, பேருந்து கட்டண உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பேயே அமல்படுத்தவில்லையே ஏன் என்று தே.மு.தி.க அப்பாவிகள் அடுத்த கேள்வியை கேட்டதால் சினமடைந்த ஜெ இதெல்லாம் ஏனென்று மக்களிடம் விளக்கிவிட்டேன், நீ யார் கேட்பதற்கு என்று சீறினார். கூடவே இதை சவால் விட்டுப் பேசும் அக்கட்சி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்தி போட்டியிட தில் உள்ளதா என்று சவால் விட்டார். அதாவது மேற்கண்ட கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் தேர்தலில் கூட நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது ஜெவின் சவால்.

உண்மையில் இது சவால் இல்லை வெறும் போங்காட்டம் என்பது அதிர்ஷ்டவசமாக கேப்டனுக்கும் பட்டிருப்பது குறித்து கொஞ்சம் ஆச்சரியம்தான். அவரும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதும், அது போன்ற அதிகார பலத்தால் நீங்களும் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவீர்கள் என்பது தனக்குத் தெரியுமென்று பேச இரு தரப்பு அடிமைகளும் ஆவேசமாக சண்டை போட்டனர்.

விஜயகாந்த் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டாரென ஜெ பேச, பென்னகரத்தில் நீங்கள் டெபாசிட் கூட வாங்கவில்லையே என்று பதிலுக்கு விஜயகாந்த் பேச சண்டை வலுத்திருக்கிறது. பின்னர் அ.தி.மு.கவினர் கையை காட்டி பேசியதாக கேப்டன் சீற அவரது கட்சியினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தே.மு.தி.கவினரின் பிரச்சினையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். உண்மையில் இவர்கள் அனைவரையும் சட்டசபை நடக்கும் காலம் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும், போனால் போகிறதென இத்தோடு முடித்திருக்கிறோம் என்று ஜெ உறுமியிருக்கிறார்.

இதன்பிறகு சட்டசபையில் தான் கூட்டணி வைத்தாலும், வைத்திருக்காவிட்டாலும் அ.தி.மு.க பெரு வெற்றி அடைந்திருக்குமெனவும், தன்னோடு கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.கவினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்டு கிடைத்திருக்கறது, தகுதியில்லாவர்களெல்லாம் பதவிக்கு வந்தால் என்ன ந்டக்குமென்பது தற்போது தெரியவந்திருக்கிறது, இவர்களோடு கூட்டணி வைக்க தான் விரும்பவில்லை, கட்சிக்காரர்களுக்காகத்தான் கூட்டணி வைத்தேன் என்றெல்லாம் ஜெ பொங்கியிருக்கிறார்.

விஜயகாந்த்-ஜெயலலிதா

இந்த இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்த போதே இதைபற்றி எழுதியிருக்கிறோம். ஜெயலலிதாதான் விஜயகாந்த், விஜயகாந்துதான் ஜெயலலிதா என்பதால் இந்த இரண்டு குண்டு ஆளுமைகளும் சேர்ந்திருப்பது சாத்தியமே இல்லை என்பதையும் அப்போது எழுதினோம்.

தகுதி குறித்து ஜெ பேசியிருப்பது அவரது பார்ப்பன மேட்டிமைத் திமிரில் கலந்த ஒன்று.  கண்ட கண்ட நாய்களெல்லாம், அறிவில்லாத கூமுட்டைகளெல்லாம் அரசியலுக்கு வந்து நாறடிக்கின்றன என்பதுதான் அவரது பேச்சின் உட்கிடை. தன்னைப் போன்ற கான்வென்டு எஜுகேட்டட் சீமாட்டிகளெல்லாம் இத்தகைய அறிவிலிகளோடு காலம் தள்ள வேண்டியிருக்கிறதே என்பது அவரது பொறுமல்.

எல்லாவற்றும் மேலாக தேர்தல் காலத்தின் போது அவர் கூட்டணி வைத்தது என்பது அவரது கூற்றுப்படி அவர் விரும்பிய ஒன்றல்ல. எப்படியாவது தி.மு.கவை தோற்கடிக்க வேண்டுமென்ற பொதுக்கருத்தை அறுவடை செய்து கொள்ள வேறு வழியின்றித்தான் அவர் கூட்டணி வைத்தார். சோ போன்ற தரகர்களும் அதற்கு தீவிரமாக முயற்சி செய்தனர். அப்படியும் அந்த கூட்டணியை கேலிக்குள்ளாக்கும் வகையில் அவர் தனியாக வேட்பாளர்களை அறிவித்ததும், அப்போதும் கூட தே.மு.தி.க மற்றும் போலிக்கம்யூனிஸ்டுகள் வெட்கம், மானம், ரோஷமின்றி அம்மாவை கூல் செய்து கூட்டணியை தொடர்ந்ததும் வரலாறு.

இந்த நிலையில் ஈழப்பிரச்சினைக்காகத்தான் ஜெ வெற்றி பெற்றார் என்று நமது தமிழின ஆர்வலர்கள் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அம்மாவின் கவனத்திற்கு போனால் அனைவருக்கும் குண்டாஸ் சட்டத்தில் உள்ள போவது உறுதி. ஏற்கனவே ஈழத்தாய் பட்டம் கொடுத்து அம்மாவை தொழுது வணங்கிய நாம் தமிழர் புலி சீமான் இப்போது ஆட்டுக்குட்டியாய் அடைந்து கிடைக்கிறார்.

ஜெ வெற்றி பெற்றதும் முற்றிலும் மாறிவிட்டார் என்று பார்ப்பன ஊடகங்களும், தி.மு.க எதிர்ப்பாளர்களும், போலிக் கம்யூனிஸ்டுகளும், தமிழின – ஈழ ஆர்வலர்களும் பிதற்றித் திரிந்தது அடி முட்டாள்தனம் என்பதை முன்னரே சொன்னபோது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

உள்ளாட்சித் தேர்தலின் போதே இதை ஜெ பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தினார் என்றாலும் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க, போலிக் கம்யூனிஸ்டுகள் எல்லாம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அப்போதும் சரி, அதன் பின்னரும் சரி இவர்கள் அனைவரும் ஜெவை பயபக்தியோடுதான் அணுகினர் அல்லது விமரிசித்தனர். இன்று கூட இவர்கள் ஜெவே எதிர்ப்பதெல்லாம் அவர்களது சொந்தக் கருத்து, கட்சி காரணமாக இல்லை. அதுவும் கூட ஜெவே பிடித்து தள்ளியதால் வந்த முரண்பாடுதான். இதில் கொள்கை, மக்கள் நலன், என்று எதுவுமில்லை.

ஆனாலும் சில அப்பாவிகள் அடிமைகளான தே.மு.தி.கவின் எதிர்ப்பை வைத்து விஜயகாந்தை ஏதோ மாபெரும் புரட்சி வீரனாக சித்தரிப்பதைப்ப பார்த்தால் இதற்கு ஜெவே தேவலாம் என்று தோன்றுகிறது. ஒரு கட்டவுட் நாயகனுக்கும், ஒரு கட்டவுட் நாயகிக்கும் நடக்கும் சவுடால் சண்டையை காமடியாக புரிந்து கொள்ளுமளவு கூட நமது மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்ன செய்வது? கவுண்டமனி, வடிவேல், விவேக் நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து சிரித்த மக்களின் தரம் இதுதான் என்றால் நம் நகைச்சுவை அறிவிலும் பெரிய கோளாறு இருப்பது உறுதி.

இதில் சசிகலா நீக்கத்தை வைத்து ஜெவின் அனைத்து பாவங்களையும் கழுவி புனிதப்படுத்திய பார்ப்பன ஊடகங்கள் இப்போது என்ன சொல்வார்கள்? மன்னார் குடி கும்பல் போய், மயிலாப்பூர் கும்பல் வந்த பிறகும் இதுதாண்டா ஜெ என்று அவர் காட்டிவிட்டதை குற்ற உணர்வுடன் ஒத்துக் கொள்வார்களா?

சுயமோகமும், பார்ப்பன விழுமியங்களும், அதிகார வர்க்கத்தை வைத்து பாசிச ஆட்சி நடத்தும் ஒரு சர்வாதிகாரிதான் ஜே என்பைதயும் இந்த பாசிஸ்ட்டை விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்தி ‘வீரர்கள்’ எதிர்க்க முடியாது என்பையும் இந்த அக்கப்போரிலிருந்து நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம். முல்லைப் பெரியாறு, கூடங்குளம் என்று மக்களின் ஜீவாதாரா பிரச்சினைகள் பேசப்படும் காலத்தில் இந்த அக்கப்போர்களெல்லாம் மாபெரும் பாரதப் போர் என்று அரசியலாக முன்வைக்கப்படும் துரதிர்ஷடமான காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மக்கள் நலனிலிருந்து மட்டுமே அரசியல் மலர முடியுமென்பதை புரிந்து கொள்வதற்கு இந்த எதிர்மறை சான்றும் ஒரு எடுத்துக்காட்டு.

கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!

76

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் போராடும் மக்களின் அச்ச உணர்வை போக்கிய பிறகு மின் உற்பத்தியை தொடங்கலாமென்ற நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதன்படி முத்து விநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இதுவரை மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது கூடங்குளம் போராட்டக்குழுவினர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வரும் நிபுணர் குழுவினர் நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.

அதன்படி நேற்று 31.01.2012 செவ்வாயன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிபுணர் குழுவும், கூடங்குளம் போராட்டக் குழுவினரும் வருகை தந்தனர். அப்போது இந்து முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் ரவுடி ஜெயக்குமாரின் தலைமையிலான குண்டர்கள் கூடங்குளம் போராட்டக்குழுவினரை வெறி கொண்டவாறு தாக்கியிருக்கின்றனர். தாக்குதலை வேடிக்கை பார்த்த போலிசார் பின்னர் இந்து முன்னணி குண்டர்கள் பத்து பேரை வேறு வழியின்றியும், போராட்டக் குழு பெண்களது போராட்டம் காரணமாகவும் கைது செய்திருக்கின்றனர்.

 கூடங்குளம் : இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம் !
காவிக் கிரிமினல்களின் ரவுடித்தனம்

ஜனநாயக முறையில் போராடுவதைக்கூட இவர்கள் அனுமதிக்கவில்லை, இந்து முன்னணி போன்ற மதவெறி குழுக்களின் வெளிப்படையான தாக்குதலை வைத்து பார்க்கும்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நிபுணர் குழுவிடம் மனுக் கொடுக்க வந்ததாகவும், போராட்டக் குழுவினர் தேச விரோதிகளென்றும், 140க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் உதயக்குமாரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றும் ரவுடி ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டி கொடுக்கின்றான். இந்து முன்னணி காலிகள் தாக்கிய இந்த சம்பவத்தைக்கூட இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக பொய்ச்செய்தியிட்டு அதற்கு ரகளை என்றும் தலைப்பிட்டு மகிழ்கிறது பார்ப்பன தினமலர்.

கூடங்குளம் போராட்டக்குழுவினரை அன்னிய சதி, வெளிநாட்டு பணம், தேச துரோகிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க வந்த நாசகார சக்தி என்றெல்லாம் பொய்ச்செய்தியை வெளியிட்டு தனது வாசகர் வட்டத்தை உசுப்பி வந்ததும் இதே தினமலர்தான். கூடங்குளம் பிரச்சினைக்காக தனிப்பெரும் வெறுப்பு இயக்கத்தையே பல்வேறு முனைகளில் தினமலர் எடுத்து வருகின்றது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாயும், பாயப்போகிறது என்று பீதியூட்டியதோடு, அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்களை மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை செய்தது, உதயகுமாரின் செல்பேசி எண்ணை வெளியிட்டு அனைவரும் அவரை செல்பேசியில் அழைத்து மிரட்ட வேண்டுமென்பது வரை தினமலர் தனது விசமப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்டவிழத்து வருகிறது.

இடிந்தகரை மக்கள் கிறித்தவ மீனவர்களாக இருப்பதை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல்  மதவெறி ஊட்டி குளிர்காய நினைக்கிறது. இந்தியாவை சீர்குலைக்க கிறித்தவ பாதிரியார்களின் சதியாக மக்களிடம் வன்மத்தை விதைத்து ஆதாயமடையவும் நினைக்கிறது இந்தக் கும்பல். கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் இருக்கும் தமிழக காங்கிரசோ தனது ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை நிலை நாட்ட அன்னிய நாட்டுப் பணம் கூடங்குளம் போராட்டக்குழுவினருக்கு வருகிறது என்று கிடைக்கும் காசுக்கு மேல் கூவுகிறது.

இடிந்தகரை மக்களுக்கு சொந்தமான தேவாலய இடத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், ஏனைய சில்லறை செலவுகளுக்கும் முதலில் பெரும் பணம் எதுவும் தேவையில்லை. மேலும் அத்தகைய செலவுகளுக்கும் அப்பகுதி மக்களே குறிப்பாக மீனவர்கள் தங்களது வருமானத்திலிருந்து நிதியுதவி அளிக்கின்றனர். இதை போராட்டக்குழுவினர் பலமுறை விளக்கியபிறகும் அப்படி ஒரு அபாண்டத்தை காங்கிரசு, காவி, தினமலர் காலிகள் தொடர்ந்து ஊளையிடுகின்றனர். கார்ப்பரேட் மீடியாவின் டார்லிங்காக இருந்த அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதக்கூத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தது போல கூடங்குளத்தில் நடக்க வில்லை, நடைபெறவும் முடியாது.

சரி காங்கிரசு கயவாளிகள் சொல்வது போல இந்தப் போராட்டத்திற்கு அன்னிய நாட்டு பணம் வந்தால் அது எந்த அன்னியா நாடு என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே? அமெரிக்காவா, ஜெர்மனியா, இத்தாலியா, பிரான்சா, ஜப்பானா என்று அந்த நாட்டைக் கண்டுபிடித்து தூதரக உறவை துண்டித்துக் கொள்ளலாமே? அதை விடுத்து பொதுவாக அன்னிய நாட்டுப் பணமென்று நாடகமாடுவதன் நோக்கமென்ன? ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் இங்கு அன்னியப்பணம் சட்டப்பூர்வமாக எப்படி வர முடியும்?

உண்மையில் மக்களது போராட்டங்களை சீர்குலைப்பதற்கு இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு காசு வரவழைத்து குளிப்பாட்டுவதெல்லாம் காங்கிரசு, பா.ஜ.க அரசுகளே தரகர்களாக முன்னின்று செய்யும் நடவடிக்கைகள்தான். அதிலும் வெளிநாட்டிலிருந்து அதிக பணம் பெறும் நிறுவனங்களாக விசுவ இந்து பரிஷத்துதான் முதலிடத்தில் இருக்கிறதென்பது பல வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்ட விசயம். அதிலும் கணக்கு வழக்கில்லை என்பதும் ஆதாரத்துடன் தோலுரிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.

இதற்கு மேல் இந்த நாட்டின் அன்னியக் கைக்கூலிகளாக நடந்து கொள்வது யார்? தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசும், முன்னர் இருந்த பா.ஜ.க கூட்டணி அரசும்தான் முதன்மையான அன்னியக் கைக்கூலிகள். பாரத மாதாவை பன்னாட்டு நிறுவனங்கள் கதற கதறக் கற்பழித்து வருவதற்கு மாமா வேலை பார்த்தது ஆதாயமடைந்தவை இந்தக் கட்சிகள்தான். மன்மோகன் சிங்கை விட ஒரு சிறந்த அன்னியக் கைக்கூலியை இந்தியாவில் யாரும் சொல்லிவிடமுடியுமா என்ன?

இப்படி இருக்கும் போது பீஸ் போன பல்புகளான இளங்கோவும், தங்கபாலுவும், ஞானசேகரனும், கோபண்ணாவும், அன்னிய சதி என்று பேசினால் அவர்கள் பல் இருக்க வேண்டுமா இல்லை உடைக்கப் படவேண்டுமா?

கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
அணு உலைக்கு ஆதரவாக காவிக் கிரிமினல்களும் கதர் கிரிமினல்களும்

அடுத்து தினமலர் முதலான பார்ப்பன ஊடங்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதற்கு உதவி செய்யும் என்றொரு பொய்யை விரித்து நடுத்தர வர்க்கத்தையும், ஏன் பொது மக்களையும் உசுப்பி விடுகின்றன. ஏதோ கூடங்குளத்தில் தயாரிக்கப் போகும் மின்சாரம் வராததினால்தான் தமிழக கிராமங்களில் ஐந்து மணி நேர மின்தடை இருப்பதாக இவர்கள் கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.

தற்போதைய மின்தடைக்கு காரணமென்ன? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பட்டணத்து பேரங்காடிகளுக்கும் தடையின்றி அளிக்கப்படும் மின்சாரம்தான் மக்களுக்கு மின்தடையாக மாறுகின்றது. சிறு, நடுத்தர தொழில்கள் செய்யும் முதலாளிகள் உட்பட பாமர மக்கள் வரை இந்த மின்தடையினால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மின் உற்பத்தி பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தாலும் இன்னும் 40 இலட்சம் கிராமங்களில் மின்சாரமில்லை. எனில் உற்பத்தியாகும் இலட்சக்கணக்கான மெகாவாட் மின்சாரம் எங்கே போகிறது?

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார தேவை என்பது இத்தனை இலட்சம் மெகாவாட்டுகளாக இருக்குமென்று பட்டியல் போடுகிறார்களே, அந்த தேவையில் நாம் இல்லை. ஆக பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளது தேவையை இந்தியாவின் தேவையென்று மடை மாற்றிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இது தெரியாத சிறுமுதலாளிகளெல்லாம் கூடங்குளம் மின்னுற்பத்தி ஆரம்பித்தால் தங்களது அவலம் மாறுமென்று அப்பாவியாக நம்புகிறார்கள். மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் தினமலரின் பலம். இந்தியா வல்லரசானால் முதலாளிகளுக்குத்தான் ஆதாயமே அன்றி ஏழை மக்களுக்கு அல்ல. அவர்களது வல்லரசு வளர்ச்சியில் பெரும்பான்மை மக்கள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இதற்கு மேல் அணுமின்சாரத்தில் சில பத்து மெகாவாட்டுகளைக்கூட தாண்டும் நிலையில் உற்பத்தி இங்கில்லை. வெளிநாடுகளில் காலாவதியான ரியாக்டர்களை பெரும் செலவில் நமது தலையில் சுமத்தும் கொள்ளைதான் கூடங்குளத்திலும், மற்ற இடங்களிலும் நடக்கப் போகிறது. அதுதான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தானே புயலால் நிலை குலைந்த கடலூர் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசா அணு விபத்தால் அழியும் நமது மக்களை காப்பாற்றும்?

ஆகவே கூடங்களும் அணுமின்நிலையத்திற்காக பொதுக்கருத்தை ஆதரவாக பல முனைகளில் உருவாக்கிவிட்டு பின்னர் போராட்டக்குழுவினரையும், மக்களையும் ஒடுக்கும் பாசிச தந்திரம்தான் இவர்களிடம் இருக்கிறது. அதன்படி வரும்நாட்களில் இவர்களது பாசிச தர்பார் படம் விரித்து ஆடும். அதன் முன்னோட்டம்தான் இந்துமுன்னணியின் ரவுடி தாக்குதல். இந்தபடிக்கு போனால் இவர்கள் உதயகுமாரை கொல்வதற்கு கூட முயல்வார்கள். அத்தகைய தாக்குதலை உளவுத்துறைகளே கூட வடிவமைத்தால் கூட ஆச்சரியமில்லை. கைது, சிறை, வழக்குகள் என்று மிரட்டினால் எந்த மக்களையும் பணியவைக்க முடியுமென்பது ஆளும் வர்க்கத்தின் பாலபாடம்.

ஆயினும் இந்த பாடத்தை நாம் உடைக்க முடியும். போராடும் மக்களுக்கு நமது ஆதரவை கருத்திலும், களத்திலும் தெரிவித்து இந்த வேடதாரிகளை முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும்தான் கூடங்குளத்திலும் மக்களது எதிரிகளாக வலம் வருகின்றன. ஏற்கனவே முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு காரணமான இந்த காங்கிரசு கயவாளிகள் தண்டனை பெறாமலேயே தெனாவட்டாக திரிகிறார்கள். ஆக பழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு என்றொரு கட்சி இனி இருக்கக் கூடாது.

அதே போல காவி வெறிக் கும்பலையும் தகுந்த பாடம் புகட்டி தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். எல்லாப் பிரச்சினையிலும் மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ரத்தவெறி பிடித்த ஓநாய்கள்தான் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. ஆரம்பத்திலேயே இந்த ஓநாய்களை வேட்டையாடி அழிப்பது நமது கடமை. இல்லையென்றால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!

முன்னுரை:
1996-97ஆம் ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரத்தை’ உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்தக் ‘கலவரத்தில்தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். இக்காலத்தில் எமது அமைப்புகள் தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தியது. பல்வேறு அளவுகளில், களங்களில் நடந்த இந்த இயக்கத்தின் போது நடந்த மணவிழாவின் பதிவுதான் இந்தக் கட்டுரை. சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப்  பாருங்கள்!
–    வினவு

மிழகமெங்கும் ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு. சார்பாக சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம் கருத்திலும், களத்திலும் நடைபெற்றது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். தமிழ்ச் சமூக வாழ்க்கையில் குறுக்கும்- நெடுக்குமாக ஊடுருவிய இவ்வியக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று விழுப்புரத்தில் 1997-ஆம்ஆண்டு நவ. 22-இல் நடைபெற்ற சாதி மறுப்பு மணவிழா.

சாதி சடங்கு பொருத்தங்களுடன் சமூகத்தில் நடக்கும் திருமணம், ஒரு மகிழ்ச்சியான நினைவு. ஆனால் சாதி மறுப்பு மணவிழா ஒரு மலரும் நினைவல்ல.

வெட்டரிவாள் மூலம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் ‘மேல்’ சாதிக் கொடூரத்தைக் கூட நேருக்கு நேர் சந்திக்க முடியும். ஆனால் கண்ணீரும், ஒதுக்கும் போக்கும், வெட்டவெளி வசவுகளும், திண்ணைப் பேச்சு அவதூறுகள் முதல் பொதுக் குழாய் குடிநீர் பிடிப்பது வரையிலும் ஒவ்வொன்றையும் எதிர்த்து சாதி மறுப்பு மணமக்கள் ஒவ்வொரு நொடியிலும் போராட வேண்டும்.

இன்று தீண்டாமை, நகரங்கள்- அதன் சுற்றுப்புறங்களில் பெருமளவு ஒழிந்திருந்தாலும், தீண்டாமை மறுப்பு மணம் என்பது இந்தியாவெங்கும் கிராமப்புறங்களில் நடக்க முடியாத ஒன்று. சாதி ஆதிக்கத்தின் உயிர் போகும் ‘மானப் பிரச்சனை’ இதில்தான் அடங்கியுள்ளது. எந்தச் சாதியில் பிறந்த பெண்ணும் தீண்டாமை மறுப்பு மணத்தை ஏற்கும் போது ‘மேல்’ சாதியினர் தமது ஆத்மா குத்திக் கிழிக்கப்பட்டதாக அலறுகிறார்கள்.

இதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்- பெண் இயல்பினால் காதலித்து கல்லறைக்கு போன மணமக்கள் எத்தனை பேர் என்பதற்கு வரலாறு ஏதுமில்லை.

பறையரான காத்தவராயன் பார்ப்பன ஆரியமாலாவை காதலித்து ஊரைவிட்டு ஓடுகிறார். இவ்வழக்கு அரசனுக்கு வருகிறது. முதலில் விடுதலை செய்தவன் பார்ப்பனர்களின் போராட்டத்தினால் முடிவை மாற்றுகிறான். மணமக்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். நாட்டுப்புற பாடல் ஒன்றின் கதை இதுவென்றால் தற்றோதைய நாட்டு நடப்பும் மாறவில்லை. தேர் இழுப்பதற்கு மட்டும் ஊர் கூடுவதில்லை, கலப்பு மணம் கண்ட மணமக்களை ஒற்றைப் பனையில் கட்டிவைத்து எரிப்பதற்கும் கூடுகிறது.

சாதி – மறுப்பு மணவிழா வெறும் பெருமையடையக் கூடிய ஒன்றல்ல. மாறாக இதில் சந்திக்கின்ற பிரச்சனைகளை வென்று கடப்பதுதான் முக்கியம்.

70 ஆண்டுகளுக்கு முன்பே ‘சுயமரியாதைத் திருமணம்’ என்ற பெயரில் தந்தை பெரியாரின் இயக்கம் இதை ஆரம்பித்து வைத்தது. 1968-ல் இத்திருமணங்களை அங்கீகரிக்கின்ற  சட்டப் பிரிவும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இயற்றப்பட்டது. எழுபது ஆண்டுகளாய் சமூகத்தில் பரவ வேண்டிய சாதி மறுப்பு மணம் வளராமல் போனது ஏன்?

இன்றைக்கு சுயமரியாதை மணம் என்பது புரோகிதர் இல்லாத மணம் என்பதாகச் சுருங்கி விட்டது. தாலி, சாதி, ஆடம்பர விருந்துகள், அலங்காரங்கள் இவையெல்லாம் இருந்துவிட்டு ஐயர் இல்லை என்பதால் மட்டும் இவை பார்ப்பனிய எதிர்ப்பாகாது. மாறாக பார்ப்பனியமயமாக்கப்பட்ட தமிழ்த் திருமணங்கள் என்று தான் அழைக்க முடியும்.

ஆனால் எழுபது ஆண்டுகளில் உள்ளுர் அளவிலான சாதி தனது வலைப் பின்னலை இந்திய அளவில் நிறுவியிருக்கிறது. நகரமயமாக்கம், செய்தி ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக, ஃபேக்ஸ், கணிப்பொறி, இணைய வசதிகளுடன் சென்னையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு சாதிச் சங்கங்கள் செல்வாக்குடன் செயல்படுகின்றன. பத்திரிகைகளில் வரும் மணமக்கள் விளம்பரங்கள் வயது. உயரம், நிறம், சம்பளம், போன்ற எண் கணக்குகளோடு உட்சாதிப் பிரிவையும் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றன.

காலனீய ஆட்சியிலிருந்தே ‘வடமாள், பாரத்வாஜம், அனுஷம்’ என்று தனது குல- கோத்திர- ஜாதக விவரங்களை வெளியிட்டு மண விளம்பரம் செய்யும் பார்ப்பன சாதியினரே இதற்கு முன்னோடிகளாவர். தெரு- ஊருக்குள்ளே சம்பந்தம் முடிக்கும் சாதியினரெல்லாம் இன்று அவாள் பழக்கப்படி தேச அளவில் தேடுகிறார்கள். முன்பை விட உட்சாதி அக மணமுறை மேலும் இறுகியிருக்கிறது. மேலும் நிச்சயதார்த்தம் முதல் சாந்தி முகூர்த்தம் வரை விரிவான சடங்குகள், மாப்பிள்ளை அழைப்பு, கார்- குதிரை ஊர்வலம், ஆடம்பர மண்டபம்- விருந்து- வீடியோ என்ற பார்ப்பனியத்துடன் நுகர்வுப் பண்பாடும் சேர்ந்துவிட்ட திருமணங்கள் தான் இன்று அனைத்துச் சாதிகளும் ஏற்றுக் கொண்ட முறையாகிவிட்டது.

இப்படி சுயமரியாதைத் திருமணங்களையே வீழ்த்திவிட்ட பார்ப்பனியமயமாக்கம் மட்டும்தான் கடந்த தலைமுறையின் வரலாறா? இல்லை. நகரமயமாக்கம், திரைப்படம், தொலைக்காட்சி, தொழில் வளர்ச்சி, கல்விப் பரவல் காரணமாக காதல்- கலப்புத் திருமணங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அப்படியானால் இயல்பாகவே சமூகத்தில தோன்றி வளருகின்ற காதல் திருமணங்களுக்கும், நமது மணவிழாவிற்கும் என்ன வேறுபாடு?

சமூக அக்கறை இன்றியும், வாழ்க்கை- பண்பாடு குறித்து சுயநல கண்ணோட்டமும் கொண்ட காதல் திருமணங்களின் புரட்சியும்- போராட்டமும் மணமேடையிலே தாலி கட்டியவுடன் முடிவுக்கு வருகிறது. ஆணாதிக்கமும், பார்ப்பனிய- சாதியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டும், ஆண் அல்லது பெண்ணின் சாதிக்குள் சங்கமமாகிவிடும் இந்தக் காதல் மணங்கள் சாதி ஒழிப்பு என்ற சமூகப் போராட்டத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை.

விழுப்புரம் மணவிழாவில் தோழர். மருதையன் குறிப்பிட்டதைப் போல எமது திருமணங்கள்- குடும்பங்கள், மூலமாக சாதி வெறியை எதிர்த்து மட்டுமல்ல, நான்கு சுவற்றுக்கு நடுவில் தாமும்- தன் வாரிசுகளுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று வாழும் குடும்பத்தின் கடைந்தெடுத்த சுயநலத்தையும் எதிர்த்தும் தான் போராடுகின்றனர். புரட்சிக்காக தன்னையும், குடும்பத்தினரையும் மாற்றிக் கொண்டு போராடுவதற்கு அமைப்பு வாழ்க்கை உதவி செய்கிறது. ஊருக்குள்ளே தீண்டாமை மறுப்பு மணமக்கள் போராடி வாழ்வதற்கும் இதுவே காரணம்.

மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மதுரை பாளையம் வட்டார வி.வி.மு. செயலர் தோழர். மோகன் பேசும் போது, ”தென் மாவட்ட ஆதிக்க சாதியினர் கலவரங்கள் நடத்தும் காலகட்டத்தில் தங்களது திருமணத்தின் மூலம் சாதி ஒழிப்புப் போராட்டத்தினைத் தொடுத்திருக்கும் மணமக்கள் இந்தப் பெருமையை தங்கள் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும்” என்று வாழ்த்தினர். தீண்டாமை மறுப்பு மணம் செய்திருக்கும் தோழர். மோகனது வாழ்க்கையும் அந்தப் போராட்டப் பெருமையைக் கொண்டதுதான்.

‘அமைப்பிற்கு வருவதற்கு முன்பே என் திருமணம் முடிந்துவிட்டபடியால் குழந்தையில்லாதவன் தொட்டிலை முகர்வது போல தீண்டாமை மறுப்பு மணம் புரியும் இந்த மணமக்களை வாழ்த்தி நிறைவடைகிறேன்’ என்று பேசிய ஆண்டிப்பட்டி வி.வி.மு. செயலர் செல்வராசின் வாழ்க்கையும் போராட்டங்களைக் கொண்டதுதான். அருகாமை தாழ்த்தப்பட்டவர் வீட்டில் வடை சாப்பிட்டதற்காகச் சிறுவயதில் அவரைக் குளிப்பட்டி வீட்டில் அனுமதித்தவர் அவரது தாய். இன்று சேரியோடு உறவாடும் தோழரை தாயால் சகிக்க முடியவில்லை. தாயும், தனயனும் தத்தமது போராட்டங்களைக் கைவிடவும் தயாரில்லை. விளைவு? இருவரும் 13 வருடங்களாகப் பேசுவதில்லை. அவரவர் வீடுகளுக்குப் படியேறுவதில்லை.

கலப்பு மணம் கண்ட தம்பதியினர் சேரியில் குடியிருப்பது எளிது. ஊருக்குச் சென்றால்? தருமபுரி அருகே ‘மேல்’ சாதித் தெருவில் குடியிருக்கும் தோழர் ஒருவரது மனைவி தாழ்த்தப்பட்டவர். பொதுக் குழாயில் குடிநீர் பிடிக்கும் போது மேல் சாதி கௌரவத்தை நெஞ்சிலே கொண்டிருக்கும் பெண்கள் சண்டை போடுகிறார்கள். முன்பு போல ஊரைவிட்டு ஒதுக்கவோ, பனைமரத்தில் கட்டி வைத்து அடிக்கவோ முடியவில்லை. தமது சாதிக் கௌரவத்தை குத்திக் கிளறும் வி.வி.மு. என்ற ‘அரக்கனை’ பகைத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. போராட்டத்தை தொடருகிறார்கள் எமது தோழர்கள்.

பார்ப்பனச் சாதியில் பிறந்த அந்த பெண்ணும் ம.க.இ.க. தோழர் ஒருவரும் விரும்புகிறார்கள். பெண்ணின் உறவினர்களது தடைகளைத் தாண்டி அமைப்பின் உதவியுடன் காதல் வெற்றி பெருகிறது. புதிய ஊரில் நிலையில்லாத வேலை- பொருளாதார நெருக்கடிகளுடன் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘வெண்மணி’ என்று பெயரிட்டு மகிழுகின்றனர். விழுப்புரம் மணவிழாவில் ‘மாட்டுக்கறி விருந்துண்ணும்’ அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டுவிட்ட அந்தப் பெண் தோழரை அவரது உறவினர்கள் இன்றுவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

சாதி- தீண்டாமை மறுப்புத் திருமணங்களைத் திட்டமிட்டு எமது அமைப்பே ஏற்பாடு செய்கிறது. அப்படி ஒரு விதியில்லை என்றாலும் உறுப்பினர்கள் அனைவரையும் அவ்வாறே மணம் செய்யுமாறு போராடுகிறோம். சமூகத்தில் நடைபெறும் காதல் மணங்கள் வெற்றியடைய கவர்ச்சி- வர்க்க அந்தஸ்த்தை உள்ளடக்கிய காதல் உணர்வு ஊக்குவிக்கிறது. தீண்டாமை மறுப்பு மணம் வெற்றியடைவதற்கு எம் தோழர்களின் சமூக உணர்வே காரணமாகிறதன்றி வெறும் காதல் உணர்வல்ல.

சென்ற ஆண்டு சாதி மறுப்புத் திருமணங்களை பல தோழர்கள் அவரவர் ஊர்களில் நடத்திவிட்டார்கள். விழுப்புரம் மணவிழாவிற்காக அமைப்பை பற்றித் தெரிந்த ஆதரவாளர்கள், நண்பர்கள், மற்றும் பொதுவானவர்கள் வீட்டிற்குச் சென்று மணவிழா குறித்து பேசி விளக்கிய போது மக்களுக்கு பல சந்தேகங்கள், கேள்விகள், ‘தாலியில்லாமல் கல்யாணம் செஞ்சா கூட்டிக் கொடுக்கிற மாதிரியில்லை’ என்றனர். திருச்சி அருகே துறையூரைச் சேர்ந்த சி.பி.எம். கட்சிக்காரர் ‘இந்தத் திருமணங்களுக்கு அத்தாட்சியில்லை’ என்று பெண் கொடுக்க வந்த ஒரு வீட்டினரைத் தடுத்து விட்டனர்.

‘உங்க சைடுல நீங்க எப்படி வேணா கல்யாணம் செஞ்சாலும் எங்களுக்கு ஒரு மாதா கோவில்ல மோதிரம் மாத்தினாத்தான் நிம்மதி’ என்றனர் ஒரு குடும்பத்தினர். அழைப்பிதழில் ‘மாட்டுக்கறி விருந்து’ என்று போட்டிருப்பதால் ‘எங்க உறவுக்காரங்களுக்கு எப்படி பத்திரிக்கை வைக்க முடியும்’ என்றார் ஒரு தந்தை.

இப்படி பல சுற்றுப் போராட்டங்களைத் தாண்டி ஆறு தம்பதியினர் தயாராயினர் என்றாலும் சரி பாதி மணமக்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும் மணப்பெண்கள் இருவருக்கு இது மறுமணமும் கூட. மணமகன்களில் ஒருவரான விழுப்புரம் பகுதி தோழர். நடராசன் விழா நடந்த அன்று காலை வரை தனது பெற்றோர்களைத் திருமணத்திற்கு வருமாறு மன்றாடுகிறார். ‘ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி அவமானமாக்கிட்ட’ என்ற பெற்றோர்கள் திருமணத்தன்று வெளியூருக்குச் சென்றுவிட்டனர்.

வேறு ஒரு தோழர் தனது தந்தையை திருமணத்திற்கு அழைத்த போது, ”நம்ம உறவுக்காரங்க இருக்குற கிராமத்தில உள்ள ‘இந்த’ பெண்ணை என்னை இழிவுபடுத்துறதுக்குன்னே கல்யாணம் செய்யப் போறே’ என்று வர மறுத்து விட்டார்.

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் ஊரைச் சேர்ந்த தோழர் ராஜா விழுப்புரம் நிகழ்ச்சியில்தான் தனது சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்கிறார். சாதி ஆதிக்கத்திற்குப் பேர் போன அவரது ஊரைக் கண்டஞ்சி பல பெண் வீட்டினர் தயங்குகின்றனர்.

இதே வட்டாரத்தில் இரு மாதங்களுக்கு முன்னர்தான் அமைப்பில் சேர்ந்த தோழர் ஒருவரது தங்கையை மணப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ராஜாவின் உறவினர், பெற்றோர் யாரும் விழுப்புரம் வரவில்லை. பின்னர் தம்பதியினராய் ஊருக்குத் திரும்பும் தோழர்கள் இருவரையும் சாணிக் கரைசல் ஆரத்தி வரவேற்கிறது. குடியிருக்க வீடு கூட கிடையாது என முடிவு செய்த ஊரார். அதனாலென்ன? அதே ஊரில் மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை பொதுக்கூட்டமாக நடத்தினார்கள் தோழர்கள்.

இப்படிப் பல தடங்கல்கள் இருந்தாலும் விழுப்புரம் மணவிழா தோழமையின் குதுகலத்தோடு நடந்தேறியது. தமிழகம் முழுவதிலிருந்தும் பல தோழர்கள், நண்பர்கள் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, மணமக்களின் பின்னே சாதிய ஒழிப்பு முழக்கங்களோடு அனைவரும் அணிவகுத்து வர- இந்த புதிய திருமண ஊர்வலத்தை விழுப்புரம் மக்கள் மகிழ்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரான அவர் தேநீருக்காக விழா மண்டபம் அருகே லாரியை நிறுத்தியவர், திருமண நிகழ்ச்சியைக் கேட்டறிந்து மணமார வாழ்த்தி நன்கொடையும் அளிக்கிறார். மண்டபத்தின் கடைசியிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை முழுவதுமாய் கவனித்துக் கொண்டிருந்த கருப்புச் சட்டையணிந்த இரண்டு முதிய திராவிட இயக்கத் தோழர்களின் கண்களில் ஆனந்தம் ததும்புகிறது.

விழுப்புரம் அருகே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அந்த நண்பர் விழாவினைப் பாராட்டி தனது முகவரியைக் கொடுத்து அமைப்பில் சேரவேண்டும் என்கிறார். விழாவிற்கு வந்த அனைவரும் மணமக்களுக்கு பல்வேறு நூல்களை பரிசாக அளிக்கின்றனர். விருத்தாசலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதி ஒழிப்பு வெளியீட்டைப் (சிறு நூல்) பாராட்டி ரூ.500 நன்கொடை அளிக்கின்றனர்.

குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு மாட்டுக்கறி பிரியாணி சமைக்கின்றனர் அந்த முஸ்லீம் இளைஞரின் தலைமையிலான குழுவினர். இளைய தலைமுறையினர் விருந்தைச் சுவைத்த போது, சில முதியவர்கள் மட்டும் விருந்துண்ணவில்லை. ஒரே நாளில் அவர்கள் மாறிவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். அதே சமயம் பல நண்பர்கள் முதல் முறையாக மாட்டுக்கறியைச் சுவைக்கிறார்கள். இந்த விழா அவர்களது புதிய சிந்தனைக்கு ஒரு துவக்கம்.

புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தமது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக மணமக்கள்  உறுதி மொழியேற்று மாலை மாற்றுகின்றனர். சாதி- தீண்டாமை மறுப்பு மணமக்கள் வாழ்க வாழ்கவே என்ற முழக்கம் மண்டபத்தை நிறைவிக்கிறது. இதுவரையிலும் இனிமேலும் வாழ்க்கையை போராட்டப் பாதையில் அமைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையையும், துணிவையும், பொறுப்புணர்வையும் அக்கணத்தில் பெறுகிறார்கள் மணமக்கள்.

விவசாயப் புரட்சி என்ற வர்க்கப் போராட்டத்தினூடாகத்தான் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை நிறுவமுடியும் என்ற போதிலும், சாதிகளற்ற எதிர்கால சமூகத்தை இன்றே வாழ்ந்து காட்டுவதன் மூலம், சாதிகளிலான இன்றைய சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதுதான் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் செயலூக்கமுள்ள நம்பிக்கை.

மணவிழா நடந்த மண்டபத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி, முறையான திருமணங்களைக் கண்டிருந்த அவர் இவ்விழாவை ஆரம்பத்தில் சட்டை செய்யவில்ல. நேரம் செல்லச்செல்ல மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களை வியப்புடன் பார்க்கிறார். நிகழ்ச்சிகளையும் சற்று கவனிக்கிறார். ஒதுங்கியிருந்தவர் முழு மனதுடன் உரைகளைக் கேட்கிறார். விழா முடிந்து நள்ளிரவு அமைதியில் தோழர்களை அணுகிக் கேட்கிறார், ”எங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. உங்க தோழர்கள்ள ஒருத்தருக்கு கட்டிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.”

– புதிய கலாச்சாரம், மார்ச் 1998

ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!

ஸ்ரீமுகம் பெறுதல்:
ஸ்ரீ ஜகத்குரு, சங்கரமடம், காஞ்சிபுரம்.

ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு மயிலாப்பூர் சுப்புணி நமஸ்காரம்.

கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு.

வெறுப்போட நியூஸ் பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன். மத்தவா பேப்பரா இருந்தா தேமேன்னு போயிருப்பேன், நம்ப தினமணியிலேயே போட்டிருக்கா, ”திருப்பதியில கத்தியால மொட்டை அடிச்சா எய்ட்ஸ் வந்துருமோன்னு பிளேடு வாங்க உலக சுகாதார நிறுவனத்திடம் தேவஸ்தானம் உதவி கேட்கிறது”ன்னு.

என்ன கிரகச்சாரமோ கலி முத்திடுத்து. காமாசோமான்னு இத டீல் பண்ணாம, தெய்வீக காணிக்கை விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டா மத்தவா என்ன நெனைப்பாள்.

அதுவும் இந்த கம்யூனிஸ்டு படவாள், கம்யூனிஸ்டுன்னா இந்த சி.பி.எம். நம்பூதிரிபாடு வகையறா இல்லே, அவா நம்ப தேவஸ்தான அம்பிகள வச்சே தொழிற்சங்கம் கட்ற அளவுக்கு ஒத்து வந்துட்டாள்.

புதுசா சில கம்யூனிஸ்டு படவாள்லாம் சேர்ந்துண்டு ”நாட்டையே மொட்டை அடிக்கிறவங்கிட்ட போயி நம்பள மொட்டை அடிக்கிறதுக்கும் பிளேடு கேக்குற அளவுக்கு நாடு போகுது எல்லாம் வெங்கடாஜலபதிக்கே வெளிச்சம்னு” கேலி பேசறாள். அப்படியே அறஞ்சுடலாம்னு ஆத்திரம் வர்றது.

ஏற்கனவே சொவரெல்லாம் ”எய்ட்ஸ் தடுக்க ஆணுறையை பயன்படுத்துங்’கோன்னு எழுதித் தள்ளிருக்காள். திருப்பதி பூரா ”எய்ட்ஸைத் தடுக்க பிளேடைப் பயன்படுத்துங்கள்”னு எழுதத் தொடங்கிட்டா என்ன பண்றது.? யாருக்கு அவமானம்? எல்லாரும் பகவான நம்பி வர்ற எடத்துல பிளேட நம்பச் சொன்னா பரிகசிக்கமாட்டாளா? இந்த விஷயத்துலயும் பெரியவா தலையிட்டே ஆகணும். எவ்வளவோ சிரத்தை எடுத்துண்டு தூர்தர்ஷன் வரைக்கும் போய் காரியம் பண்ணி எழுமலையான் மகிமையைப் பத்தி ‘பாலாஜின்னு’ சீரியல் காட்டிண்டு இருக்கறச்சே, ஜனமான ஜனம் ஏழுமலையான வேண்டிண்டு இருக்கரச்சே, ஏழுமலையான் தேவஸ்தானம், கேவலம் பிளேடுக்கு பாவாடைப் பாதிரிமார் நாட்டுண்ட்ட போயி கையேந்தறது கெடுதலா படறது.

மேலும் பாரம்பரியமா யூஸ் பண்ண கத்திய விட்டுட்டு பிளேடு யூஸ் பண்ண ஆகம விதியில எடமிருக்கான்னு குழப்பமும் மிஞ்சறது, இதுவும் பெரியவா தெளிவுபடுத்தணும்.

அப்படி பிளேடுதான் தோதுன்னா, நம்ப மீயூசிக் அகடாமி டி.டி. வாசுகிட்ட சொன்னா நிரோத் உறை புராடக்ட் பண்றத விட பிளேடையும் பண்ணுடான்னு பெரியவா சொன்னா கேப்பன்.

எதுக்கும் பொள்ளாச்சி மகாலிங்கத்துகிட்ட கூட இது சம்பந்தமா பேசினா இந்து மதத்த விட்டுக் கொடுக்காம தலையாட்டுவாம், பெரியவாளுக்கு தெரியாதது இல்ல, இருந்தாலும் நேக்கு ஆதங்கம் தாங்கல.

எதுவும் தோதுபடலேன்னா, நம்ம சுதேசிமஞ்ச், ஆர்.எஸ்.எஸ். போல தேசபக்தி அமைப்புல உள்ள சூத்ராள வச்சி திருப்பதியில ஷிப்ட்டு போட்டு மொட்டை அடிக்கலாம்.

பெரியவா சொன்னா கேக்க சூத்ராள்ள ஆளா இல்ல, எதுக்கு பொறத்தியார்கிட்ட கையேந்தி அவமானப்படணும்?

ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!! -வருஷத்துக்கு 70 லட்சம் மொட்டை போடறாள்; புதுசா கட்டடம் கட்ட 20 கோடி ரூபா ஒதுக்கறாள். ஏழுமலையான் பூஜை, புனஸ்காரத்த இண்டர் நெட்ல வேற காட்டறாள், மொட்டை அடிக்க பிளேடு வாங்க மட்டும் காசில்லையான்னு காதுபடவே பேசிக்கறது சகிக்கல்ல.

எதுக்கும் மேலிடத்துல சொல்லி வைங்கோ இண்டர்நெட்ல இங்கிலீஷ்ல போட்டா பரவால்ல, வேதத்த சூத்திர பாஷைல சொல்லி நீசத்தனம் பண்ணிடப்போறா.

கடைசியா ஒரு விஷயம் பெரியவா கவனமா இருங்கோ;  வழக்கம் போல பெரியவாளுக்கு நம்பளவா சகலச் சேவையும் பண்ணாலும், பெரியவாள்க்கு மொட்டை அடிக்கற பரியாரி மேலே ஒரு கண்ணா இருங்கோ, கண்ட கத்தியும் போட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் ‘சங்கராச்சாரிக்கு எய்ட்ஸ்னு’ இந்த சண்டாளப் பசங்க மானத்த வாங்கிடுவான், பெரியவாளுக்குத் தெரியாதது இல்ல, இருந்தாலும் மனசு கெடந்து பதர்றது. எதுக்கும் பிளேடு பாக்கெட்ட மொத்தமா வாங்கி வச்சுண்டா நல்லது.

இதிலெல்லாம் பெரியவாதான் நேரா தலையிடணம்னு இல்ல, நம்ப இராமகோபலானை உசிப்பி விட்டாலே உசிதம்னு தோண்றது. சகல க்ஷேமத்துக்கும் பெரியவா பொற்பாதம் பணியும்,

சுப்புணி அய்யர்,
மயிலாப்பூர், மெட்ராஸ் – 4

-புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 1997.

கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் – படங்கள்!

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக திருநெல்வேலி பாளை மார்க்கெட் ஜவஹர் திடலில் கடந்த 21.01.2012 அன்று கூடங்குளம் அணுஉலையை மூடகோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் தவிர திருநெல்வேலியை சேர்ந்த வழக்குரைஞர்கள்,ஜனநாயக சக்திகள்,எழுத்தாளர்கள் உட்பட சுமார் 125 நபர்கள் கலந்து கொண்டனர்.ஆர்பாட்டத்தில் அமலநாதன்
மற்றும் விஜயக்குமார் பாக்கியம் தவிர மற்ற அனைவரும் உரையாற்றினர்.ம.க.இ.க மைய கலை குழுவின் நாடகம் மற்றும் பாடல்கள் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வு பிரசுரம் PDF பெற இங்கே அழுத்தவும்

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

–  மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

7

அறிமுகம்

சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை, நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்ததன் 70வது ஆண்டு நினைவாக மை லாங் மார்ச் என்ற திரைப்படம் சீனாவைச் சேர்ந்த ஆகஸ்ட் பர்ஸ்ட் பிலிம் ஸ்டுடியோவினால் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படம் Axis of War (The First of August, My Long March, Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 திரைப்படங்களில் இரண்டாவதாக வெளிவந்த ஒன்று. ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தில் குண்டு வீச்சுகளும், போராட்டங்களும், மனித முயற்சிகளும், வலிநிறைந்த அனுபவங்களாக, போராட்டத் துடிப்பின் எத்தனமாக அழுக்கும், ரத்தமும், தூசியுமாக படமாக்கப்பட்டுள்ளன. .

சீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம். இதன் டிரைலர் யூடியூபில் சேர்க்கப்பட்டுள்ளது திரைப்படத்தின் டிவிடியை இணைய வழியாக வாங்கிக் கொள்ளலாம்.
இத் திரைப்படத்தின் சில பகுதிகளை காண

வரலாற்றுப் பின்னணி

நீண்ட பயணம் சினிமா அறிமுகம்!20-ம் நூற்றாண்டின் முதல் பாதி.

ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்ட சீன நாடு மன்னராட்சியிலிருந்து விடுபட்ட பிறகும், தொடர்ந்த அன்னிய ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்கள் சீனாவின் உள்ளே தமது ஆதிக்கப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு ‘சுய ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கின்றன. அதிகாரப் போட்டியில் ஜப்பான் ஏகாதிபத்தியமாக களம் இறங்கத் தயாராகிறது. ஏகாதிபத்திய சுரண்டல் என்ற பெரும் பாரம் ஒரு பக்கம், நிலப்புரபுக்களின் சுமை இன்னொரு பக்கம் என்று சீன மக்களின் முதுகு உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சுமைகளை தூக்கி எறிந்து மக்களை விடுவிக்கும் போராட்டம் வேண்டும். மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்று ‘சொத்துரிமை, பரம்பரை உரிமைகள் என்று பெரும்பான்மை மக்களை புதிய அதிகார வர்க்க சுரண்டலின் கீழ் வைத்திருக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ‘தேசிய’ அரசாங்கம் ஒரு பக்கம். ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம், தொழிலாளர்களுக்கு உற்பத்தியில் உரிமை, உழைக்கும் மக்களுக்கு அதிகாரம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி மறு பக்கம்.

யுத்தப் பிரபுக்களும் தேசியக் கட்சி (கோமிங்டாங்) அரசாங்கமும் நாட்டின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தென் சீனாவில் ஜியாங்ஷி மாகாணத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் செந்தள பிரதேசத்தை உருவாக்கினார்கள். கம்யூனிஸ்டுகளை தேசத் துரோகிகள் என்று வர்ணித்து அழித்தொழிப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக பல படைகளை ஏவி விட்டது சியாங் கை ஷேக் தலைமையிலான கோமிங்டாங் அரசாங்கம்.

செம்படையினரின் கொரில்ல போர் முறை இப்படி இருந்தது…

எதிரியை ஆழமாக ஊடுருவச் செய்வதற்கு ஆசை காட்டுதல்

எதிரி முன்னேறுகிற பொழுது நாம் பின்வாங்குகிறோம்

எதிரி நிற்கிற பொழுது நாம் துன்புறுத்துகிறோம்

எதிரி களைப்படையும் போது நாம் தாக்குகிறோம்

எதிரி பின்வாங்கும் போது நாம் துரத்துகிறோம்

‘செம்படையினரை தாக்கி, விரட்டி, துரத்தி முற்றிலும் அழித்து விட வேண்டும்’ என்று சியாங் கை ஷேக் பெரும் ஆயத்தங்களுடன் போர்களை நடத்தினான். பல முறை தோல்விகளைச் சந்தித்த பிறகு இறுதிப் போராட்டத்துக்கு 10 லட்சம் பேரைக் கொண்ட படையைத் திரட்டினான். ஜெர்மன் ஆலோசகர்களின் உதவியுடன் திட்டங்களை வகுத்துக் கொண்டு சண்டையைத் தொடங்கினான்.

‘பலமான எதிரியை சந்திக்கும் போது பின்வாங்க வேண்டும்’ என்ற கொரில்லப் போர் கோட்பாட்டுக்கு மாறாக நேருக்கு நேர் சண்டையில் அரசுப் படைகளை எதிர் கொண்ட செம்படை பின்னடைவுகளைச் சந்தித்தது. கோமிங்டாங் படையினரின் முற்றுகையிலிருந்து தப்பித்து தமது ஆயுதங்களோடும் படைகளோடும் மக்களோடும் 1934-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைப்பயணமாக கிளம்பியது கம்யூனிஸ்டுகளின் செம்படை.

தொடர்ந்து துரத்தி வந்த அரசுப் படைகளின் தாக்குதல்களை தவிர்த்தபடியே சீனாவின் மேற்குப் பகுதிகள் வழியாக வடக்கு நோக்கி நகர்ந்தது செம்படை. இந்த பயணம் சுமார் 370 நாட்கள் நீடித்து வடமேற்கில் உள்ள ஷான்ஷி மாகாணத்தில் முடிவுற்றது. ஜியாங்ஷியிலிருந்து புறப்பட்ட படையினரில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே பயணத்தை நிறைவு செய்தார்கள். மற்றவர்கள் வழியில் நடந்த போர்களிலும், பயணத்திலும் உயிரிழந்தார்கள்.

திரைப்படக் காட்சிகளும், வசனங்களும் – My Long March

1. விமானப் பயணம்

இந்த நீண்ட பயணத்தில் 15 வயது கிராமத்துச் சிறுவனாகக் கலந்து கொண்ட கதை சொல்லி (வாங் ருய்) 70 ஆண்டுகளுக்குப் பிறகு வயதான மனிதராக தனது ஊருக்குத் திரும்பி வருகிறார். ‘என்னுடைய வாழ்க்கையின் அதிக மகிழ்ச்சியான நிகழ்வுகளும், அதிக சோகமான நிகழ்வுகளும் நீண்ட பயணத்தில்தான் நடந்தன’ என்று அவர் சொல்ல விமானத்தில் பயணிக்கும் அவரது பார்வை  மேகங்களின் ஊடாக  வானத்திலிருந்து குண்டு மழை பொழியும் ஆற்றுப் பாலத்தின் மீது காட்சியாக விரிகிறது.

2. முதல் தாக்குதல்

செம்படை வீரர்கள் படகுகளின் மீது பலகைகளைப் போட்டு அமைக்கப்பட்ட மிதக்கும் பாலத்தின் மீது ஆற்றைக் (ஷியாங் ஆறு) கடக்கிறார்கள். வானத்திலிருந்து குண்டு மழை பொழிகிறது. நூற்றுக் கணக்கான படைவீரர்கள் கொல்லப்படுகிறார்கள். பிழைத்தவர்கள் விடாமல் முன்னேறி செல்கிறார்கள். விமானங்கள் எரிபொருள் தீர்ந்து திரும்பிப் போய் விட்டு வரும் இடைவெளியில் ஒரு 15 வயது சிறுவன் முதுகில் கனமான சக்கரம் ஒன்றை சுமந்து கொண்டே தன் தந்தையைத் தேடி குரல் எழுப்பிக் கொண்டே ஓடுகிறான். அலை அலையாக முன்னேறும் செம்படையினரைத் தாண்டி போகிறான்.

3.  தாக்குதலுக்குப் பிறகு

புகையிலும் அழுக்கிலும் ஊறிப் போயிருக்கும் மனிதர் கூட்டம் அலை அலையாக முன்னேறுகிறது. விமானங்கள் திரும்பி வருவதற்குள் தப்பித்து மறைந்து விட வேண்டும். காயமடைந்தவர்களை தூக்கிச் செல்லும் குழுவினரிடையே தனது அக்காவைப் பார்த்து ‘அப்பாவைக் காணவில்லை’ என்று அழுகிறான் பையன் வாங் ருய்.  அவனை முன்னால் போகச் சொல்லி விட்டு காயமடைந்தவர்களைத் தேடி அக்கா போகிறாள். எதிர்ப்படும் அப்பாவிடம் வாங்ருய் முன்னால் போகும் தகவலைச் சொல்கிறாள்.

சௌ-என்லாய் தொலைபேசியில் தகவல் அனுப்ப முயன்று தோல்வி அடைகிறார். கருவியில் ஏதோ கோளாறு. அவரை பாதுகாப்பாக கரை கடந்து போகச் சொன்னதை கோபமாக மறுத்து கருவியை சரி செய்யச் சொல்கிறார்.

4. இரண்டாம் தாக்குதல்

இதற்கிடையில் அடுத்த விமானத் தாக்குதல் ஆரம்பிக்கிறது. குண்டுகள் தண்ணீரிலும் பாலத்திலும், படைவீரர் கூட்ட நடுவிலும் விழுகின்றன. முதுகில் சுமையுடன் நடக்கும் வாங்ருய் குண்டு வீச்சில் கீழே விழுகிறான். அவனை தூக்கி நிறுத்தும் ஒருவர் அந்தக் குழுவினர் தூக்கி வரும் கனமான பொருட்களை ஆற்றில் தூக்கிப் போடச் சொல்கிறார். ‘அது மிக முக்கியமான கருவி, இதைத் தூக்கிப் போட்டு விட்டால் மேல் மட்டத்தில் எங்களைக் கேட்பார்கள். நீங்க ஒரு ரசீது எழுதி தர முடியுமா’ என்று வாங் தூக்கிப்போடச் சொல்பவரிடம் கேட்கிறார். ‘விட்டா கோயிலைக் கூட தூக்கிக் கொண்டு வருவார்கள், மாவ் சே துங் சொன்னார் என்று பதில் சொல்லுங்கள்’ என்று பதிலளித்து விட்டு நகர்கிறார் அந்த மனிதர். ‘சேர்மன் மாவோ!’ என்று வாய் பிழந்து நிற்கிறார் கிராமத்து மனிதர். சுற்றிலும் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

‘நாம் எங்கு போக வேண்டும்?’ என்று அப்பாவிடம் கேட்கிறான் வாங் ருய். ‘செம்படையோடு போ’ என்று பதில் சொல்கிறார் அவர்.

5. சிகிச்சை அறை

தாக்குதல் ஓய்ந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது. வாங் ருய்யின் உறவினன் சாங் (அக்காவின் முறைப்பையன்) தாக்குதலில் காயமடைகிறான். மருத்துவரின் சிகிச்சை மேசையின் மீது படுத்திருக்கும் அவன், ‘இது வரை பல ஆறுகளைக் கடந்து பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் பல மலைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. செம்படையின் கடைசி காலம் வந்து விட்டதா! வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தலைவருக்கு, எதிரிகளின் குண்டுகளுக்கு நம் வீரர்களின் உடல்கள்தான் தடுப்பரண்களாக பயன்படுகின்றன என்பது தெரியவில்லை’ என்று தனது படைப்பிரிவுத் தலைவனிடம் கத்துகிறான்.

காயமடைந்த அவனது கையை மயக்க மருந்து இல்லாமலேயே அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அவனது காதலியான வாங் மெய் ஆறுதல் அளிக்கிறாள். அடுத்து கொண்டு வரப்படுவது வாங்-ருய்யின் அப்பா. அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மகளையும் மகனையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சாங்கிடம் ஒப்படைத்து விட்டு உயிர் துறக்கிறார் அவர். ‘செம்படையுடனேயே தொடர்ந்து போவது’ என்று முடிவு செய்கிறார்கள் மூன்று பேரும்.

6. சுன் யீ (Zunyi) – விவாதக் கூட்டம்

பயணத்தின் ஒரு கட்டத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கும் இடத்துக்கு பணிக்காக அனுப்பப்படுகிறான் வாங்ருய். இருளில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பிரிவு படைவீரர்களுடன் பேச்சு கொடுக்கிறான். அந்த இடம் குய்சோ மாகாணத்தில் உள்ள சுன்யீ என்றும் அங்குதான் மா சே துங் இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறான். தனது பணியின் ஒரு பகுதியாக கூட்டம் நடந்து கொண்டிருக்கும் அறைக்கு நூடுல்ஸ் எடுத்துக் கொண்டு போகிறான். உள்ளேயிருந்து கதவைத் திறக்கும் மாவோ, ‘இப்போ நேரம் சரியில்லை, எடுத்துக் கொண்டு திரும்பிப் போ’ என்று கத்தி அனுப்பி விடுகிறார்.

அறையின் உள்ளே மாவோ உரத்த குரலில் விவாதம் செய்வது கேட்கிறது. ‘நாங்கள் வெறுமனே நடந்து கொண்டிருக்க மட்டும் செய்யவில்லை. எதிரியின் தாக்குதல்களை எதிர் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் சௌஎன்லாயை முழுமையாக ஆதரிக்கிறேன்’ என்று வெளிநாட்டு தலைவர்களுடன் விவாதிக்கிறார்.

அறையிலிருந்து வெளி வந்து தொலைபேசியில் தகவல் சொல்லும் சௌஎன் லாய், வாங் ருய்யைப் பார்த்து, ‘நீ கூட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வந்ததால்தான் அப்படிக் கத்தி விட்டார்’ என்று ஆறுதல் சொல்கிறார். அறையினுள் எரிந்து அணைந்திருந்த மெழுகுவர்த்திகளை பத்திரமாக துணிக்குள் சுருட்டி எடுத்துக் கொள்கிறான் வாங்ருய். அவன் கூடத்துக்குள் வரும் போது மாவோ அவனைப் பார்க்கிறார்.

7. மாவோவுடன் பேசுதல்

‘நீதான் நூடுல்ஸ் கொண்டு வந்த பையனா?’

‘எனக்கு முன்பே உங்களைத் தெரியும்?’

‘ஆமா, நான்தான் உன் மேல் கோபத்தில் திட்டி விட்டேனே, எப்படி தெரியாமல் இருக்க முடியும்’

‘இல்லை, ஷியாங் பாலத்தில் நான் கீழே விழுந்த போது நீங்கதான் எழுப்பி விட்டீங்க, அப்பவே தெரியும்’

பையனின் ஊர் பெயர் விபரங்களைக் கேட்கிறார். ‘அதுவரை புகைபிடிக்காவிட்டால் இனிமேல் கற்றுக் கொள்ள வேண்டாம்’ என்று அறிவுரை சொல்கிறார். ‘சோவியத் எல்லாம் இல்லாமல் ஆகி விட்டது. நான் சேர்மன் இல்லை, என்னை சும்மா முதிய மாவோ என்றே கூப்பிடு’ என்கிறார்.

‘களைப்பாக இருக்கிறது, தலையை பிடித்து விட முடியுமா’ என்று கேட்க ‘கைகழுவி விட்டு வருகிறேன்’ என்று சொல்பவனை மறுத்து அப்படியே தலையைப் பிடித்து விடச் சொல்கிறார்.

‘இந்த இடம் வரலாற்றில் இடம் பெறும். 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இந்தக் கூட்டத்தைப் பற்றிப் பேசுவார்கள்’

‘இங்கு வந்து ஏன் கூட்டம் போடுகிறோம்.’

‘இங்கு எல்லாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இங்குதான் செம்படை எங்கு போகிறது என்று முடிவு செய்ய வேண்டும்’

‘உங்க குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள்?’

‘4 பேர் எல்லோரும் செம்படையில், அப்பா, அக்கா, நான், அக்கா வீட்டுக்காரர். அக்கா மருத்துவக் குழுவில், நானும் அக்கா வீட்டுக்காரரும் ஒரே படைப்பிரிவில்’

‘அப்பா ஆற்றில் கடக்கும் போது கொல்லப்பட்டார்.’ என்று கண்ணீர் விடுகிறான் வாங்ருய். அவனுக்கு ஆறுதல் சொல்லி ‘தெருவில் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித் தருகிறேன்’ என்று அழைத்துப் போகிறார்.

தெருவில் ஒரு இடத்தில் அக்காவைப் பார்த்து ஓடிப் போகிறான். ‘வேலையை விட்டு விட்டு வந்து விட்டாயா!’ என்று அவனை கோபிக்கிறாள் அக்கா. ‘நான்தான் ஓய்வெடுக்கச் சொன்னேன்.’ என்று மாவோ பதிலளிக்கிறார்.

அக்காவும், அவளது காதலனும் சேர்மன் மாவோவுக்கு தமது விபரங்களைச் சொல்கிறார்கள். அவரிடமும் ‘செம்படை எங்கு போகிறது’ என்று கேட்கிறான் அக்காவின் காதலன்.

8. குழந்தை பிறப்பு

பயணம் தொடர்கிறது. படைப்பிரிவுத் தலைவன், அவர்களின் பொறுப்பாளர் பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு இடத்தில் முகாம் அமைக்கிறார்கள். ‘குழந்தை பிறந்து விட்டதா என்று பார்த்து விட்டு வருமாறு வாங்ருய்யை அனுப்புகிறார்கள்.

குழந்தையை பெற்ற தாய் ‘படைகள் எப்படி இருக்கின்றன’ என்று மருத்துவரிடம் விசாரிக்கிறார். வாங் மெய் உதவியாளராக பணி புரிகிறாள். மாவோ அறைக்குள் வருகிறார். மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு தன் மனைவியிடம் பேசுகிறார்.

‘குழந்தை உன்னை மாதிரி இருக்கிறதா, என்னை மாதிரி இருக்கிறதா?’

‘இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. உங்களை போலத்தான் இருக்கிறது’

‘அழகான பெண் ஆனால் மோசமான நேரத்தில் வந்திருக்கிறார்ள். இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும், வழியில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படும் என்று தெரியாது. குழந்தையை இங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்’

‘5 குழந்தைகளை ஒவ்வொரு ஊரில் விட்டு வந்திருக்கிறோம். இது இப்பதான் பிறந்த குழந்தை???’

‘இது என் குழந்தையும்தான். நான் கல் மனம் படைத்தவன் இல்லை. ஆனால் இந்தச் சூழலில் வேறு வழி இல்லை’

குழந்தையைப் படுக்கையில் போடச் சொல்கிறார் தாய்.  ‘குழந்தைக்குப் பேர் கூட வைக்கவில்லை’ என்று மாவோவிடம் கேட்க ‘நாம் திரும்பி வராவிட்டால் உள்ளூர் குழந்தையாகவே வளரட்டும், அதுதான் நல்லது’ என்று பதில் சொல்கிறார்.  ‘நாங்கள் செம்படை, வேறு வழியில்லாததால் விட்டு விட்டுப் போகிறோம். நன்கு வளர்க்கவும்’ என்று கடிதம் எழுதி  வைத்து விட்டு போகிறார்கள்.

13. லோங்ஷான் கணவாய்

பயணம் தொடர்கிறது. ‘சீஹ் ஷூய் ஆற்றை திரும்பத் திரும்ப பார்க்கிறோம்’ என்று சாங் சொல்ல, ‘அது மாவோவின் தந்திரம். எப்படியோ மேலும் உயிர்ச்சேதம் இல்லாமல் போகிறோம். மாவோவின் தலைமையில் நம்பிக்கை இருக்கிறது’ என்று பிரிவுத் தலைவன் பதில் சொல்கிறான்.

‘நான் நேற்று மாவோவைப் பார்த்தேன். மாவோ வயிற்றில் கை வைத்துக் கொண்டிருந்தார், பசியாக இருக்குமோ?’ என்கிறான் வழிகாட்டி.

‘ரூய் ஆர், இதைக் கொண்டு சேர்மன் மாவோவிடம் கொடு. துப்பாக்கியை கையில் எடுத்துக்கோ’ என்று கொழுக்கட்டைகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

எதிரிப் படையுடன் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகிறது. காயம் இன்னும் ஆறாத நிலையிலும் சாங் சண்டையில் கலந்து கொள்கிறான். மாவோவைத் தேடிப் போகும் வாங்ருய் கொல்லப்பட்ட ஒரு செம்படை வீரனின் இடத்தில் துப்பாக்கியை இயக்கி பல எதிரி வீரர்களை வீழ்த்துகிறான்.

திரும்பி வந்தவனை ‘ஏன் இவ்வளவு நேரம். மாவோவைப்  பார்த்தாயா, கொழுக்கட்டைகளைக் கொடுத்தாயா’ என்று கேட்கிறார்கள்.

‘நான் ஆறு சாப்பிட்டேன், 6 எதிரிகளை சுட்டேன் அதில் ஒரு படைத்தலைவன் கூட உண்டு’ என்கிறான்.

‘உண்மையிலேயே ஆறா? நீதான் உண்மையான வீரன், நீயே சாப்பிடு’ என்று பாராட்டுகிறார்கள்.

‘ஜியாங்ஷியிலிருந்து புறப்படும் போது நாம் ஓடினோம், இப்போது தாக்குகிறோம். இனிமேல் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்’ என்று பேசிக் கொள்கிறார்கள்.

16. மாவோவுடன் உரையாடல்

மாவோ செம்படை வீரர்களை பார்க்க வரும் போது வாங்ருய் ஓடிச் சென்று வணக்கம் சொல்கிறான் வாங் ருய்.

‘ரூய்ஆர் ஆறு பேரைக் கொன்றான். இனிமேல் அவன் சின்ன பையன் இல்லை. ஒரு ஹீரோ’ என்று தகவல் சொல்கிறார்கள்.

‘நீங்கள் வயிற்றைத் தொட்டதாக சொன்னார்கள். பசியாக இருக்குமோ என்று கொழுக்கட்டை அனுப்பினார்கள். இதோ இருக்கிறது’

‘உணவுப் பொருட்கள் கிடைப்பது கஷ்டம். நான் சாப்பிடுகிறேன்’ என்று இரண்டு பேரும் சாப்பிடுகிறார்கள்.

‘செம்படை எங்கு போகிறது என்று எனக்குத் தெரிந்து விட்டது, வெற்றியை நோக்கி’ என்கிறான் வாங்ருய்.

‘சரியாகச் சொன்னாய், நமது பாதை நீளமானது, ஆபத்தானது. ஆனால் நாம் அதை வெற்றிகரமாக கடப்போம்’

17. கோட்டை உடைப்பு

சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளில் பயணம் தொடர்கிறது. கோட்டை ஒன்றை உடைத்து நுழைகிறார்கள் செம்படை வீரர்கள்.

‘செம்படை உங்களைக் காப்பாற்ற வந்து விட்டது. பயப்படாதே!’ என்று ஒரு இளைஞனை காப்பாற்றுகிறார்கள். அவன் கத்தியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறான்.

‘என் கத்தியைத் பிடுங்கி விட்டு ஓடி விட்டான்’ என்று தகவல் சொன்னதும் ‘கத்தி உன் ஆயுதம், அதை எப்படி இழந்தாய்?’ என்று திட்டு கிடைக்கிறது.

18. பழங்குடி வீரன் செம்படையில்

படையினர் பயணத்தைத் தொடரும் போது அந்த பழங்குடி இளைஞன் இவர்களைத் தொடர்ந்து வருகிறான்.

‘என்ன செய்கிறாய்? என் கத்தியைக் கொண்டு வந்தாயா? எங்கள் கூடவே ஏன் வருகிறாய்? பேசுவது புரிகிறதா?’ என்று கத்தியை வாங்கிக் கொண்டு அவனை திரும்பி அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஒரு இடத்தில் ஓய்வு எடுக்க உட்காருகிறார்கள். சுருட்டு செய்யும் சாங்கிடம் ‘எங்கிருந்து புகையிலை கிடைத்தது? நீ புகைக்க மாட்டாயே’ என்று கேட்கிறார் வாங்ருய்.  ‘உங்க அப்பாவுக்காக  செய்தது.’

அந்த சிறுபான்மை இன இளைஞன் அவர்கள் அருகில் நிற்கிறான்.

‘ஏன் எங்க பின்னாலேயே வருகிறாய்? ஒருவேளை உனக்கு மாண்டரின் புரியவில்லையா, என்ன?’

‘பழி வாங்க வேண்டும்’

‘தலைவரிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டும்’ என்கிறான் பிரிவுத் தலைவன்.

படைப் பிரிவுத் தலைவர் வருகிறார். ‘என்ன சொல்ல வேண்டும்? கூட வர விரும்பினால் தாராளமாக வரட்டும். உழைக்கும் மக்கள் விரும்பினால் செம்படையில் சேர்ந்து கொள்ளலாம். தா ஆர் ஹூவா, நீ இந்தப் பிரிவில் சேர்ந்து கொள். உனக்கு ஆயுதம் இல்லை. சாங், உன் கத்தியை இவருக்குக் கொடு. எங்கள் கூட வந்தால், யீ பகுதிக்குத் திரும்பி திரும்பி வர 4, 5 ஆண்டு ஆகலாம், நன்கு பார்த்துக் கொள்’

‘வா நண்பா, உட்கார். இது என்ன பெரிய போர்வை போல இருக்கு’

‘இதன் பெயர் சார்வா. பகலில் உடுப்பு, இரவில் போர்வை. குடும்பம் யாரும் இல்லை. எல்லோரையும் கொன்று விட்டார்கள்’

வாங்ருய் தாஆர்ஹூவாவின் தலை முடியை ஒதுக்கப் போக, தூக்கி எறிந்து அடித்து விடுகிறான். ‘இது என் முடி இல்லை, புத்தா! இவன் செம்படையினராக இல்லாவிட்டால் கொன்றிருப்பேன்.’ என்று உறுமுகிறான்.

‘தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும், அவன் முடியைத் தொட்டது என் தவறுதான்’

‘அவன் தவறை ஒத்துக் கிட்டான் அவ்வளவுதான். இனிமேல் இரண்டு பேரும் நண்பர்கள்’

20. முட்டுச்சந்து

தொடரும் பயணத்தில் கிராம மக்கள் ஆயுதங்களுடன் செம்படையினரை எதிர்கொள்ள வருகிறார்கள்.

‘யாரும் சுடாதீங்க’

‘நாங்க செம்படை, உங்கள் நண்பர்கள்’

என்று சொல்லச் சொல்ல தா ஆர்ஹூவா மொழிபெயர்த்து சொல்கிறான்.

‘இப்படி எதிரெதிராக நிற்பது சரியில்லை. இரண்டு பேரை அனுப்புவோம்.’

‘நான் போறேன். நான் பெண் நம்புவராகள்’ என்கிறாள் வாங் மெய். கூடவே வாங் ருய்யும் புறப்படுகிறான். தாஆர்ஹூவா உள்ளூர் ஆளாகப் போகிறான்.

‘ஒரு பையன், ஒரு பெண், ஒரு yifu ஆள்.

பயமாக இருக்கு என்று சொல்லும் தம்பிக்கு தைரியம் ஊட்டப் பாடுவதாகச் சொல்லி, வாங் மெய் பாடுகிறாள். பாடல் முடிந்ததும் மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கட்டிப் போடுகிறார்கள். ‘திரும்பிப் போ சுடாதீங்க’ என்று செம்படையினருக்குச் சொல்கிறாள் வாங்மெய்.

அவர்களைப் பார்க்க பெண்கள் வருகிறார்கள். உரையாடலை தாஆர்ஹூவா மொழிபெயர்க்கிறான்.

‘இது என் அக்கா’ என்கிறான் வாங்ருய்.

‘இது என் அக்கா’ என்கிறான் அந்தப் பெண்ணின் தம்பி.

‘நானும் உன் அக்கா’ என்கிறாள் வாங்மெய்.

‘அக்கா’ என்று வாங்மெய்யை அழைக்கிறான் அந்தச் சிறுவன்.

‘நல்லது’ என்கிறாள் வாங்மெய்

‘நானும் உன் அக்கா’ என்று வாங்ருய்யிடம் சொல்கிறாள் கிராமத்துப் பெண்.

‘அக்கா’ என்று அவளைக் கூப்பிடுகிறான்

‘நல்லது’ என்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.

கிராம மக்களுடன் நடனம் ஆடுகிறார்கள்.

23. மாவோவுடன் பேசுதல்

அங்கு சேர்மன் மாவோ வருகிறார். அவருக்குப் பின்னால் போய் கண்ணைப் பொத்துகிறான் வாங்ருய்.

‘யாரு? பையனாக்கதான் இருக்க வேண்டும்.’ என்று கையை பிரிக்கிறார் மாவோ.

‘சீஹ் ஆற்றை தாண்ட வழி காட்டியவர் இதைக் கண்டுபிடிக்க மாட்டாரா’ என்று பக்கத்தில் ஒருவர் ஐஸ் வைக்கிறார்.

‘வாங் ருய் வளர்ந்து விட்டான். இனிமேல் அவன் ஒரு ஹீரோ’

‘இது தாஆர்ஹூவோவாக இருக்க வேண்டும்.  நான் அதிகாரி இல்லை. செம்படையில் எல்லோரும் தோழர்கள்தான். 3 நாள் முன்பு சேர்ந்தார். சிறுபான்மை இனங்களின் ஆதரவைப் பெற்றதால்தான் யீ பகுதியை தாண்டி செம்படை போக முடிந்தது’ என்கிறார் மாவோ.

இரவில் தாஆர்ஹூவாவும் சுவோ மாவும் சேர்ந்து வெளியில் போகிறார்கள்.

25. மருத்துவமன தாக்குதல்

அடுத்த நாள் காலையில் எல்லோரும் கூடியதும் ‘மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளது, காப்பாற்றுவோம்’ என்று உத்தரவு வருகிறது. தனது அக்கா அங்குதான் இருந்தாள் என்று உணர்ந்து வாங்ருய் சண்டையில் ஆக்ரோஷமாக கலந்து கொள்கிறான்.

‘சரணடைந்து விடுங்கள்’ என்று மருத்துவமனையைத் தாக்கிப் பிடித்திருந்த எதிரிப் படையினரை சுற்றி வளைத்து கைது செய்கிறார்கள்.

‘அக்கா எங்கே? என் அக்கா எங்கே?’ என்று தேடி ஒரு இருட்டு அறைக்குள் போனால், வாங்மெய் கொல்லப்பட்டிருக்கிறாள்.

‘அக்கா..கொல்லாம விட மாட்டேன்’ என்று கத்தியை உருவிக் கொண்டு ஓடுகிறான்.

அவன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி விட்டு, செம்படையின் நடத்தை விதிகளை நினைவுபடுத்துகிறான் பிரிவுத் தலைவன்.

‘கைதிகளை துன்புறுத்தக் கூடாது.’

27. தாவி ஆறு

பயணம் தொடர்கிறது. அடுத்து முக்கியமான ஆற்றுப் பாலத்தை கைப்பற்றி பின்தொடர்ந்து வரும் மற்ற படையினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு இந்த பிரிவுக்குத் தரப்படுகிறது.

‘மூன்று படகுகள்தான் உண்டு. எல்லோரும் படகில் போனால் 1 ஆண்டு ஆகும். இதற்கிடையில் சிசுவான் படைகள் பாலத்துக்குப் போய் விடும். 3 நாள் பயணத்தில் மலைப்பாதை வழியாகப் போய்ச் சேரலாம். 320 மைல்கள் தூரம். தாதூ ஆற்றுப் பாலத்தை எதிரிகள் வருவதற்கு முன்பு நாம் கைப்பற்ற வேண்டும்’ என்று படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.

‘மே 29ம் தேதிக்கு முன்போ போய் சேர வேண்டுமா? அது நாளைக்கு! ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கோம், 80 மைல்கள்தான் ஆச்சு. இன்னும் 240 மைல்கள் ஒரே நாளில் எப்படி’ என்று உத்தரவு கொண்டு வரும் தூதுவனிடம் படைத்தலைவன் கேட்க,  ‘இது மேலிட உத்தரவு’ என்று சொல்லி விட்டு திரும்பிப் போகிறான்.

‘வேகமாக ஓடுங்கள்’. கால் வலிக்கிறது என்று புகார் செய்யும் வாங்ருய்யை இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்

‘எதிரியும் அங்கே போறான்’ என்று ஆற்றின் மறு கரையில் போகும் அரசு படையினரிடம் ‘நாங்களும் குவோமின்தாங் தெரியுமா’ என்று பொய்யாக குரல் கொடுக்கிறார்கள். நிலச்சரிவு ஒன்றின் கற்களை நகர்த்தும் போது வாங்ருய் கால் தவறி கீழே விழப் போக அவனைக் காப்பாற்ற படைத்தலைவன் விழுந்து விடுகிறான். சத்தமாக அழக் கூட முடியவில்லை. எதிர்க்கரையில் எதிரிகள் கேட்டு விடுவார்கள்!

28. கட்சியில் சேருதல்

பாலத்தை தாக்குவதற்கு முன்பு 8 பேர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. ‘வாங்ருய்க்கு ஆறு மாதம் வயது குறைவாக இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லும் பிரிவுத் தலைவன்

‘முதன் முறையாக உன்னை தோழர் என்று அழைக்கிறேன். படைத்தலைவர் உன்னைக் காப்பாற்ற உயிர் விட்டார். நீ எதற்கு கட்சியில் சேருகிறாய்?’ என்று வாங்ருய்யை கேட்கிறான்.

‘செம்படையின் வெற்றிக்காக! ஏழைகளின் விடுதலைக்காக!. என் உடல், ரத்தம், உயிரைக் கொடுத்து அவற்றுக்காக போராடுவேன்’ என்று பதில் சொல்கிறான்.

29. இறுதிக் காட்சி

கடும் சண்டையில் பலத்த உயிரிழப்புக்குப் பிறகு செம்படை லூதிங் பாலத்தைத் தாண்டிப் போய் எதிரிகளை முறியடித்து, பின்வரும் படைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. சண்டையில் பிரிவுத் தலைவனும், சாங்கும் இறந்து விடுகிறார்கள்.

வெறித்துப் போய் உட்கார்ந்திருக்கும் வாங்ருய்க்கு மாவோ ஆறுதல் கூறுகிறார். ‘புரட்சி வென்றதும் இந்த சண்டையில் உயிர் நீத்தவர்களுக்கு பெரிய நினைவுச் சின்னம் அமைப்போம்’ என்று வாக்களிக்கிறார்.

‘உனது தலைமுடி கலைந்திருக்கிறது’ என்று சொல்லி தலையைப் பிடித்து விடுகிறார்.  ‘நீ 16 வயது பையன் இல்லை. செம்படை வீரன். நாம் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று தெரியாது.’

‘நான் செம்படையுடன் கூடவே போவேன்’ என்கிறான் வாங்ருய்

‘உன்னைப் போன்ற வீரர்கள் இருக்கும் போது செம்படை நிச்சயம் தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும்’

 

–  அப்துல்

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், முதல்வர் சக்தி, மக்கள் தொடர்பு அலுவலர் குஞ்சிதபாதம், துணை முதல்வர் தொல்காப்பியன் ஆகியோர் ஒரே குரலில், “நிர்வாகம் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் மாற்ற முடியாது, ஸ்மார்ட் கிளாஸ்க்கு  ரூ.10000 த்தில் பாதி கொடுத்தால் அரையாண்டு தேர்வு தாள் மதிப்பெண் பட்டியல் தருவோம், அரசு கட்டணம் செலுத்துவேன் என்பவர்கள் அரசு பள்ளிக்கு போகட்டும்” என ஜெயலலிதா சொந்தகாரர் போல் பேசினார்கள். பள்ளி தாளாளரின் உறவினர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியில் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஆனால் 24-2-12 செவ்வாய்க்கிழமை பள்ளி முன்பாக பெற்றோர்களை அணிதிரட்டி  முற்றுகை  போராட்டம் நடத்தி தேர்வு விடைத்தாளை வாங்கி கொடுத்து சாதித்துள்ளது, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம். பத்திரிக்கை நிருபர்கள் வேடிக்கை பார்க்க கூட வரவில்லை. அந்த அளவிற்கு செல்வாக்கு படைத்தவர் இந்த பள்ளி முதலாளி. மீறி எழுதும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கிடைக்காது. மேலும் பள்ளியின் தாளாளர் லட்சுமி காந்தன் கடலார் மாவட்ட தனியார் மெட்ரிக்  பள்ளி முதலாளிகளின் சங்கத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி நிர்வாகம் ஏற்கனவே கூடுதல் கட்டணத்திற்காக கட்டாய டி.சி. அனுப்புவது மதிப்பெண் பட்டியல் தரமறுப்பு என்ற அடாவடிக்கு  எதிராக  நாம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்தை பம்பரமாக சுழல வைத்தோம். அரசு நிர்ணயித்த  கட்டணத்தை மட்டுமே கட்டுவோம், ஸ்மார்ட் கிளாசுக்கு எவ்வளவு என சி.இ.ஓ.விசாரித்து சொன்ன பிறகு தான் கட்டுவோம் என சிதம்பரம் ஆர்.டி.ஓ.முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் எழுத்துப் பூர்வமாக முடிவு செய்யபட்டது. உரிய கட்டணத்தை டி.டி.எடுத்து பதிவுத் தபாலில் நமது சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனுப்பினர். பள்ளி நிர்வாகம் மூன்று மடங்கு (6000 ம் என்றால் 18000 ரூ கேட்கிறார்கள்) கேட்பதை நாம் மறுத்து விட்டோம்.

மேலும் கடந்த ஆண்டு இதே போல் பல மடங்கு வசூலித்ததை திரும்ப பெறவும், இந்த ஆண்டு கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்துவதை தடுக்கவும் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி சிங்கார வேல் கமிட்டி முன்பாக நமது சங்கம்  ரசீது ஆதாரங்களுடன் புகார் ஆனுப்பியுள்ளது. 2-2-12  அன்று விசாரணைக்கு வர உள்ளது.

கூடுதல் பணம் கட்டாத மாணவர்களை தனியே தரையில் அமரவைப்பது, தேர்வு வினாத்தாள் தர மறுப்பது, மதிப்பெண் பட்டியல் தரமறுப்பது என மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளச்சலுக்கு ஆளாக்குவதும் துன்புறுத்துவதும் பற்றி கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பினோம். மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் விசாரணைக்கு வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சினார், கதறினார். ஆனால் தாளாளர் தர முடியாது என்று மறுத்து விட்டார்.

நமது பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரான மேடம் என்ன சொன்னார் என கேட்டனர். பள்ளித் தாளாளர் எதையும் ஏற்க மறுக்கிறார், நான் இயக்குநரிடம் சொல்கிறேன்  என அமைதியாக சென்றார். மேடம் ஏற்கனவே இருந்த பள்ளி ஆய்வாளரை உள்ள விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என காவல் துறையில்  தாளாளர் மீது புகார் கொடுத்து விட்டு போய்விட்டார். அதனால் தான் அரசு உத்திரவை மயிரளவும் மதிக்காத தாளாளர் – முதல்வர் மீது கிரிமினல் நடவடிக்கை எடு என்று போஸ்டர் ஒட்டினோம்.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு

சிதம்பரம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், பொருளாளர் நடராசன், மாவட்ட தலைவர் அய்யா வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் புஷ்ப தேவன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பாக 24-2-12 அன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. அனைத்து பள்ளிகள் முன்பாக பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வெளிகேட்டில் பெரும்பகுதி பெற்றோர்களும் உள்புறம் சில நிர்வாகிகளும் முழக்க அட்டையை பிடித்து கோசம் போட்டனர். அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சிக்கும் தெரிவித்தோம் யாரும் வரவில்லை.

தினமணி நிருபர் நமது வேண்டுகோளை ஏற்று  ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் எனும் தலைப்பில் செய்தியினை மாற்றி நமது படத்துடன் செய்தி வெளியிட்டார்.

காவல்துறை அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தாசில்தார் என அனைவரும்  பெற்றோர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகம் பணிய மறுத்தது. நாமும் வினாத்தாள் வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தோம். பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர், தாளாளரிடம் போனில் பேசி அதிகாரிக்கு பதில் சொன்னார்கள். இறுதிவரை தாளாளர் வர வில்லை. மதியத்திற்கு மேல் ஏதோ சாவு என காரணம் சொல்லி முதல்வரும் ஒளிந்துகொண்டார். பல வழிகளில் பெற்றோர்களை பேசி சமாதான படுத்த முயன்றனர் அதிகாரிகள். ஆனால் பெண்கள் உட்பட அனைவரும் வினாத்தாள் வாங்காமல் போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தனர்.

போலீசார் எங்களுக்கு ஒன்றும் இல்லை 4 பேரை உட்கார வைத்து போய்விடுவோம் என அலட்சியமாக பேசினர். சாமியானா போடப்பட்டது. மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டது. பெற்றோர்கள் அனைவரும் பள்ளி அமைந்திருக்கும் வேங்கான் தெருவை வால்ஸ்ட்ரிட் போராட்டமாக மாற்றுவோம் என முழக்கமிட்டனர். இரவு உணவு தயார் செய்ய அடுப்பு பாத்திரம் விறகு வந்திறங்கியது. அதிகாரிகள் ஓடத்தொடங்கினர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆர்.டி ஓ.விடம் பேசினார். தாளாளருக்கும் முதல்வருக்கும் உடனே வரச்சொல்லி விசாரணைக்கு சம்மன் அனுப்ப பட்டது. துணை முதல்வரை தவிர வேறு யாரும் பள்ளியில் இல்லை.

இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை துண்டி போட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களிடம் வசூலித்துதான் அவர்களுக்கு சம்பளம் தரமுடியும் என நியாயம் பேச வைக்கப்பட்டனர். அதனால் குழந்தைகள் அனைவரும் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை, குடிநீர் இல்லை என்று திடலில் வெயிலில் அமர வைக்கப்பட்டனர். இதனால் போராடும் பெற்றோர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடியது. அதிகாரிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். பள்ளி நிர்வாகம் காவல் துறையினருக்கு தேநீர் பிஸ்கட் வழங்கியது. போராட்டத் திடலிலேயே நாம் தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம். இரவு உணவுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டது.

போராட்டத்தின் ஒற்றுமையை கண்டு திகைத்து அதிகாரிகள் தொலைபேசி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். மாலை ஆர்.டி.ஓ. நேரில் வந்து 2 நாள் அவகாசம் கொடுங்கள் என கேட்டார்.வினாத்தாள் வாங்காமல் செல்லமாட்டோம் என ஒரே குரலில் அறிவித்தனர். பள்ளி தாளாளர் யார் உத்திரவையும் மதிக்க மாட்டார்.நாங்கள் செய்வது தவறு என்றால் எங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள்.இல்லையென்றால் மாணவர்க துன்புறுத்தும் பள்ளி தாளாளரையும்  முதல்வரையும் கைது செய்யுங்கள், என நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

தாசில்தார், டி.எஸ்பி. அனைவரும் கடுங்கோபத்துடன்  பள்ளி உள்ளே சென்று துணை முதல்வரை வெளியே அழைத்து வந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் போராடும் பெற்றோர்களிடம் நாளை மாலைக்குள் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தற்போது மணி இரவு 7 ஆகிவிட்டது. என கூறினர். அதற்கும் பெற்றோர்கள் தாளாளர் லட்சுமிகாந்தனை நம்ப முடியாது. நாளை வரை போராடி இருந்து வாங்கியே செல்கிறோம் என கூறினர். அதிகாரிகள் நீங்கள் நம்பலாம் ஆனால் நாங்கள் நம்பத்தயாராக இல்லை என போராட்டம் நீடித்தது.

ஆர்.டி.ஓ. நான் உத்திரவாதம் தருகிறேன். நாளை விடைத்தாள் தராவிட்டால் போராட்டத்தை தொடருங்கள் என மன்றாடினார். பிறகு அனைவரும் பேசி குறிப்பிட்டபடி நடக்க வில்லையென்றால் குடியரசு தினத்தன்று பள்ளி முன்பாக கருப்பு கொடி ஏற்றி போராடுவோம் என முடிவு செய்யப்பட்டு கலைந்து சென்றோம். மறுநாள் விடைத்தாள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெற்றோர்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சென்றனர். தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களாக மதிக்காமல் இருப்பதும் அவர்கள் மீது சிறு நடவடிக்கை எடுக்க கூட அரசு விரும்புவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 4 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன் கொடுமைக்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் சி.பி.சி.ஐ.டி.யும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என குறிப்பிட்டு மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.பி.ஐ.க்கு மாற்றி உத்திரவிட்டுள்ளார். இது மற்றுமொரு சான்றாகும். தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 25 இலட்சம் கோடி ரூபாய் முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365. எழுபது இலட்சம் கோடி ரூபாயை கிராமங்களின் எண்ணிக்கையால் வகுத்தால், ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 கோடி ரூபாய் கிடைக்குமென்றும், அதை வைத்துப் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விடலாம் என்றும் முழங்கினார், பாபா ராம்தேவ். ‘இந்த ஐடியா நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணிய அத்வானி, உடனே கறுப்புப் பண எதிர்ப்பு ரத யாத்திரை கிளம்பி, “எழுபதை ஏழால் வகுத்தால் பத்து” என்று திக்கெட்டும் முழங்கினார். வகுத்தல் கணக்கின் விடையென்னவோ சரிதான். 70 இலட்சம் கோடி எப்படி வந்தது, எங்கே இருக்கிறது, அதுயார் யாருக்குச் சொந்தமானது, அதை எப்படிப் பறிமுதல் செய்வது என்பவையல்லவா விடை காண வேண்டிய உண்மையான கேள்விகள்.

காமன்வெல்த், ஆதர்ஷ், அலைக்கற்றை ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளாலும், அன்னா ஹசாரேயின் தொந்தரவுகளாலும் அவதிப்பட்டு வரும் சூழலிலும்கூட, அத்வானி வகையறா கறுப்புப் பணம் பற்றி நடத்தும் நாடாளுமன்ற அமளிகள் குறித்து காங்கிரசு அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கறுப்புப் பணத்துக்கு எதிராக அத்வானி உரையாற்றி அமர்ந்த பின்னர், “கருப்புப் பணத்துக்கு எதிராக ரதயாத்திரை போனீர்களே, அதனால் ஆன பயன் என்ன?” என்று அத்வானியைக் கேட்டார் பிரணாப் முகர்ஜி. அது மட்டுமின்றி, “சுவிஸ் வங்கிகளில் இருந்து பணத்தைக் கொண்டுவர  இராணுவத்தையா அனுப்ப முடியும்?” என்று நக்கலும் செய்தார்.  எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைத் தாக்குவதற்கு பாகிஸ்தான் மீது படையெடுக்கச் சொல்லும் பா.ஜ.க., கறுப்புப் பண விவகாரத்தில் ‘எல்லை’ மீறமுடியாது என்பது காங்கிரசுக்குத் தெரியாதா என்ன?

கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்“கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், அந்தப் பட்டியலை வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அந்தத் தகவல்களை இப்போது வெளியிட்டால், இதற்குப் பின் எந்தத் தகவலையும் அந்த நாடுகள் அளிக்காது” என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. “கருப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடு” என்று கேட்டுக் கொண்டிருக்கும் அத்வானி உள்ளிட்ட யாரும் இதனை எதிர்த்து மூச்சு விடவில்லை. கறுப்புப் பணம் குறித்த உண்மையான வெள்ளை அறிக்கை இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளோ, அல்லது கறுப்புப் பண சொர்க்கங்களான சின்னஞ்சிறிய நாடுகளின் அரசுகளோ ‘கறுப்பு இந்தியர்களின்’ பட்டியலை இந்திய அரசுக்குத் தரவில்லை. ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள் இலஞ்சம் கொடுத்து இவ்வங்கிகளின் ஊழியர்கள் மூலம் திரட்டிய விவரங்களில் ஒரு பகுதிதான் இப்போது பிரணாப் முகர்ஜியின்கையில் இருக்கும் பட்டியலாகும்.

இந்தப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளால் அதிகாரபூர்வமாக அளிக்கப்பட்டவை அல்ல என்பதால், இதை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று முதலில் கூறியது மத்திய அரசு. “அப்படியானால் பட்டியலையாவது வெளியிடு” என்று கேட்டால், “வெளியிடமாட்டோம். ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கொடுத்த சத்தியத்தை மீற முடியாது” என்கிறார் பிரணாப். அப்படியானால் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

கையில் இருக்கும் பட்டியலை வைத்துக் கொண்டு கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 3,887 கோடி ரூபாய் வரி  ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறுகிறது. 3887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகியிருக்கிறது என்றால், 70 இலட்சம் கோடிக்கு எத்தனை வருடம் ஆகும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கவும்.

பிரணாப் முகர்ஜியின் கையில் வைத்திருக்கும் 36,000 பேர் பட்டியலில் மற்றவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பரைச் சொன்ன பிறகும் கூட, அது எங்கள் அக்கவுண்ட் இல்லை என்று மறுக்கிறார்கள். வங்கிகளோ வாடிக்கையாளர் தொடர்பான இரகசியத்தை வெளியிட முடியாது என்று ஏற்கெனவே மறுத்துவிட்டன. இனி என்ன செய்வது?

கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்வெளிநாட்டு வங்கிக்கணக்குகளில் உள்ள விவரப்படி சம்பந்தப்பட்ட ஆண்டுகளில் அத்தகையோர் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்து உண்மை நிலை என்னவென்று ஆராயும்படி தொடர்புடைய வருமான வரி அலுவலகங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளதாம். (தினமணி  26 டிச.2011) அதாவது சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்துள்ள முதலாளியோ, சினிமா நட்சத்திரமோ, அரசியல்வாதியோ ஒவ்வொரு ஆண்டும் செய்த செலவுகள், அவர்களுடைய வருமானத்துக்கு மீறியதாக இருந்தாலோ, அல்லது வரி கட்டாமல் வருமானத்தை மறைத்திருந்தாலோ அவற்றையெல்லாம் வருமானவரித்துறை கண்டுபிடிக்குமாம். கண்டுபிடித்தபின், “இத்தனை கோடி ரூபாய் வருமானத்தை நீங்கள் மறைத்திருக்கிறீர்கள். இந்தப் பணத்தைத்தான் நீங்கள் சுவிஸ் வங்கியில் போட்டிருக்கிறீர்கள்” என்று அவர்களை மடக்கி, அப்படியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுமாம். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொக்கின் காதில் ‘வெண்ணெய்’ என்று சொன்னாலே போதும், அது சரணடைந்து விடும் என்கிறது அரசு.

மிகவும் சிக்கலானதாகச் சித்தரிக்கப்படும் இந்தப் பிரச்சினையை ஒரு  எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு நகைத்திருட்டு வழக்கை நம்மூர் போலீசு எப்படிக் கண்டுபிடிக்கிறது? தன் கையில் உள்ள திருடர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களைத் தேடுகிறது. இன்னொருபுறம், திருட்டு நகைகளை வாங்கும் சேட்டுக் கடைகளை சோதனையிட்டு, நகையைக் கண்டுபிடிப்பதுடன், அதனை அங்கே கொண்டுவந்து விற்ற திருடனையும் கண்டுபிடிக்கிறது.

கறுப்புப் பண விவகாரத்தில் நடப்பது என்ன? குறிப்பிட்ட சேட்டு கடையில் ஒரு திருடன் பத்து பவுன் நகையை விற்றிருக்கிறான் அல்லது அடகு வைத்திருக்கிறான் என்ற விவரம் அரசுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், சேட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார், திருடனும் மறுக்கிறான். சேட்டின் மேல் கைவைக்க முடியாது (படையையா அனுப்ப முடியும்?) என்று சொல்லிவிட்டார் பிரணாப் முகர்ஜி. திருடன் மீதும் அரசு கைவைக்காதாம். குறிப்பிட்ட ஆண்டுகளில் திருடனின் வரவுசெலவு கணக்குகளை வருமானவரித்துறை மூலம் பரிசீலித்து, கணக்கில் காட்டாத வரவு இருந்தால் அதைக் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில், “அந்தப் பணம் திருட்டு நகையை விற்று வந்ததாகத்தான் இருக்க முடியும்” என்று அரசு நிரூபிக்குமாம். இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர்  கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கும் சட்டபூர்வமான வழிமுறையாம்.

அப்படிக் கண்டுபிடித்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். வருமானவரித்துறை என்ன செய்யும்? சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் 700 இந்தியர்கள் இரகசியக் கணக்கு வைத்திருக்கின்றனர் என்ற விவரத்தை பிரான்சிடமிருந்து பெற்றிருக்கிறது இந்திய அரசு. கணக்கு வைத்துள்ளவர் பெயர், அவரது கடவுச்சீட்டு எண், மொத்த முதலீடு உள்ளிட்ட விவரங்கள் தற்போது அரசிடம் உள்ளன. ஆனால் இந்த விவரங்கள் உண்மை என்று அந்த வங்கியோ, அந்நாட்டு அரசோ சாட்சியமளிக்காது. எனவே, நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாது.

கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்ஒரு குறிப்பிட்ட நபருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது என்று வருமான வரித்துறை நிரூபித்து விடுவதாகவும் வைத்துக் கொள்வோம். சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துக் கொள்வதே கிரிமினல் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை. சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வருமானவரி கட்டவில்லை என்பதுதான், அந்தக் கறுப்புப் பணம் தொடர்பாக இந்திய அரசு சாட்டுகின்ற குற்றம். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுடைய சுவிஸ் வங்கிக் கணக்கை இந்திய அரசால் முடக்க முடியாது. ஏனென்றால் சுவிஸ் நாட்டின் சட்டப்படி, வரிஏய்ப்பு என்பது குற்றமல்ல. அது மட்டுமல்ல, உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான மோசடிகளை கிரிமினல் குற்றமாகக் கருதிய இந்தியாவின் பெரா (FERA) சட்டத்துடைய பல்லைப் பிடுங்கி, அதனை 1999 இல் பெமா (FEMA) என்ற உரிமையியல் சட்டமாக மாற்றிவிட்டது பா.ஜ.க அரசு. எனவே, அதை வைத்தும் எதுவும் செய்ய இயலாது.

எனவே,  எச்.எஸ்.பி.சி (சுவிஸ்) வங்கியில் 438 கோடி ரூபாயை இரகசியக் கணக்கில் வைத்திருந்த 80 இந்தியர்களிடம், “ஐயா, அருள் கூர்ந்து அந்தப் பணத்துக்கு வரியைக் கட்டிவிடுங்கள்” என்று வருமானவரித்துறை கெஞ்சியது. “டேய் முடியலடா, ஓடாதடா” என்று திருடனிடம் மூச்சிரைக்க கெஞ்சும் சிரிப்பு போலீசின் நிலைமைதான்! மனமிரங்கிய அந்த 80 தேசபக்தர்களும் வரி செலுத்திவிட்டார்கள். கொன்னால் பாவம், தின்னால் போச்சு என்ற கதைதான். 438 கோடிரூபாயும் இப்போது வெள்ளையாகிவிட்டது. அந்த 80 பேரின் பெயரைக்கூட அரசு வெளியிடவில்லை. இது கறுப்புப் பணம் தொடர்பான ஒரு கதை. (எகனாமிக் டைம்ஸ், நவ,10,2011)

இலஞ்ச ஊழல்தான் நம் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், ஊழலை ஒழித்துச் சிறந்த அரசாளுமையை வழங்க முடிந்தால் ஏழ்மை ஒழிந்துவிடும், நாடு வல்லரசாகிவிடும் என்ற பிரமையும், 70 இலட்சம் கோடியைக் கைப்பற்றி விநியோகிக்கும் கனவும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. குறிப்பாக 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூறப்படும் 2ஜி ஊழல் மற்றும் சுமார் 50,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மற்றும் வரிஏய்ப்பு மோசடி என்று குற்றம் சாட்டப்படும் ஹசன் அலி விவகாரம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்வோம். அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பட்டியலிட்டு, “இவர்களுக்கு உங்கள் நாட்டின் வங்கிகளில் கணக்கு இருந்தால் எமக்குத் தெரிவியுங்கள்” என்று கறுப்புப் பணத்தின் சொர்க்கங்களாக கருதப்படும் சுவிஸ், கேமேன் தீவுகள், வர்ஜின் தீவுகள், மொனாகோ போன்ற பல்வேறு நாடுகளுக்கும் கடிதம் (letter rogatory) அனுப்பியது. ஒரு மரியாதைக்காகக் கூட எந்த நாடும் பதிலளிக்கவில்லை. அதேபோல ஹசன் அலி வழக்கிலும் பல நாடுகளுக்குக் கடிதம் எழுதியும் பதில் இல்லை. (தெகல்கா, 23 ஜூலை, 2011)

வெளிநாட்டு வங்கிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்று ராம் ஜெத்மலானி தொடுத்திருக்கும் வழக்கு, ஜனவரி 19, 2011 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  லீசென்ஸ்டைன் வங்கியில் 18 இந்தியர்கள் 43.83 கோடி ரூபாய் பணம் போட்டிருப்பதாகவும், அதற்கு  24.26 கோடி ரூபாய் வரியும் அபராதமும் செலுத்துமாறு  கேட்டிருப்பதாகவும்  மத்திய அரசு கூறியது. மேற்படி இந்தியர்களின் பெயரை வெளியிட்டால் அது நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிப்பதுடன், அதன்பின் எந்த விவரத்தையும் பெற இயலாத சூழல் எற்படும் என்றும், லீசென்ஸ்டைன் உள்ளிட்ட பல நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் இருப்பதால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார், சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்.

கறுப்புப் பணம் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்“இவ்வளவுதான் கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரமா? நாம் பிரம்மாண்டமான தொகையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த தேசம் சூறையாடப்படுகிறது. இது கற்பனைக்கு எட்டாத குற்றம். இது கலப்படமில்லாத திருட்டு. இப்பிரச்சினை நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களைப் பற்றியதல்ல. இது எங்களுக்குப் பெரிதும் கவலையளிக்கிறது” என்றார்கள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகிய நீதிபதிகள். இதன் தொடர்ச்சியாக  கறுப்புப் பணத்தை புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்காக ஜூலை 4, 2011 அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜீவன் ரெட்டி, எம்.பி.ஷா ஆகியோர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பதாக உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். இவ்வாறு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது, நிர்வாக எந்திரத்தின் செயல்வரம்புக்குள் தலையிட்டுச் சீர்குலைப்பதாகும் என்றும், இந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் மனு செய்திருக்கிறது, மன்மோகன் அரசு.

திருட்டு, சூறை, கற்பனைக்கு எட்டாத குற்றம் என்று உணர்ச்சிகரமான பல சொற்றொடர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்தாலும், இச்சொற்களுக்கு சட்டரீதியாகவோ நடைமுறையிலோ எவ்விதப் பொருளும் இல்லை. திருட்டுப் பணம், கறுப்புப் பணம், வரி ஏய்ப்புப் பணம், போதை மருந்துப் பணம், ஆயுதக் கடத்தல் பணம் என்று என்ன அடைமொழிகளைச் சேர்த்து அழைத்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பல சொர்க்கத் தீவுகளைத் தனித்தனி நாடுகளாக உலக முதலாளித்துவம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு இந்தியச் சிறுநகரத்தின் பரப்பளவு கூட இல்லாத தீவுகளும், மக்கள் தொகையாக 10,000 பேர் கூட இல்லாத இடங்களும் இவ்வாறு தனித்தனி நாடுகளாகப் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை சுமார் 70. இந்த 70 நாடுகளின் மொத்த மக்கட்தொகையைக் கூட்டினாலும் ஒரு கோடிப் பேர் கூட வராது. ஆனால், உலகப் பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு இந்த ‘நாடுகளுக்கு’ச் சொந்தம்.

கறுப்பை வெள்ளையாகக் கருதும் இந்த சொர்க்கத்தீவுகளை மூலதனத்தின் மன்னராட்சிகள் என்றும் கூறலாம். எனினும், திருவிதாங்கூர் மன்னர்களைப் போல தம் செல்வத்தை முதலாளிகள் இங்கே புதைத்து வைக்கவில்லை. இது மூலதனம். சுரண்டலில் ஈடுபட்டால் மட்டுமே இது வாழவும் வளரவும் முடியும். எனவே, சுவிஸ் வங்கியின் கறுப்புப் பணம் என்று அழைக்கப்படும் மூலதனம், கண நேரத்தில் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் தாவியபடியே இருக்கிறது. அங்கிருக்கும்போது கறுப்பாகவும், இங்கிருக்கும்போது வெள்ளையாகவும் அது நம் கண்ணுக்குத் தென்படுகிறது.

(தொடரும்)

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012