Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 101

டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை

டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி நிர்வாகம் தலைநகரின் பல இடங்களை ‘அழக்காக்கும்’ பணியில் ஈடுபட்டுள்ளது.

டெல்லி மார்க் விகாஸ் மற்றும் யமுனை நதிக்கரையோரங்களில் வசித்துவரும் ஏழைக் குடும்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. உழைக்கும் மக்களை அப்புறப்படுத்தி ‘டெல்லியை அழகுபடுத்தும்’ நடவடிக்கையால் யமுனை நதிக்கரையில் வசித்து வந்த 40 குடும்பங்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளன.

இப்பகுதியில் பிறந்து வளர்ந்த 40 வயதான ராஜூ பால் என்பவர், அவரது சிறு வயதில் இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கிறார். ஆனால், இயற்கை சூழலாலும் அரசின் நெருக்கடியாலும் பலர் இப்பகுதியினை விட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

படிக்க : ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?

2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடந்தபோது பல குடும்பங்கள் யமுனை நதிக்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பும்படி மிரட்டப்பட்டன. ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இப்பகுதியை விட்டால் வேறு வழியேதுமில்லை. அப்பகுதியில் வசித்த பலர் அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்றும், அங்குப் பிழைக்க வழியேதுமில்லாததால் மீண்டும் யமுனை நதிக்கரைக்கே திரும்பியுள்ளனர்.

தற்போது டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை ‘புத்தம் பொலிவுடன்’ வைத்திருக்க, டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைநகரை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறதாம்.

காமன்வெல்த் போட்டி நடந்தபோது முன் அறிவிப்பு ஏதுவுமின்றி அதிரடியாக மக்களைக் குடிசைகளை விட்டு அப்புறப்படுத்தியதை போலவே, தற்போதும் முன் அறிவிப்பு ஏதுவுமின்றி அப்புறப்படுத்தும் பணியில் டெல்லி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், “நாங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்படலாம்” என்று கூறும் அவரிடம் அடுத்து எங்கே செல்வது என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. “இங்கு வசிக்கும் பலரும் தினக்கூலிகள்தான்; கிடைக்கும் வேலைகளைச் செய்பவர்கள். நாங்கள் இருக்க இடம் தேடிச் செல்ல ஒருநாள் கூலியைவிட்டுச் செல்லவேண்டும். இல்லையெனில், புல்டோர்சர்கள் எங்கள் வீடுகளைத் தரைமட்டமாக்கும் வரை இங்கேயே பிழைப்பைப் பார்த்திருக்க வேண்டும்” என்கிறார் ஆதங்கத்துடன்.

படிக்க : மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

நகரங்களை ‘அழக்காக்கும்’ பணி என்றாலே அதற்குப் பலிகடா உழைக்கும் மக்கள்தான். கடந்த ஆண்டு, ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றபோது அதற்காக மும்பையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வெளிநாட்டுப் பிரதிகளில் கண்ணில் படாதவாறு குடிசை பகுதிகள் ஜி-20 மாநாட்டுப் பேனர்களாலேயே திரையிட்டு மறைக்கப்பட்டன. அதேபோல், 2020 ஆம் ஆண்டு டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது காந்திநகரிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் சாலையில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டன.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் குடிசைவாழ் பகுதி மக்களை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டே வந்திருக்கின்றன. பாசிச பாஜக ஆட்சியில் இதன் வீரியம் அதிகம். வானுயர கட்டடங்களையும், சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் குப்பைகளையும், மனித கழிவுகளையும் அகற்றி நாட்டை சுத்தமாக வைத்திருக்கும் உழைக்கும் மக்கள்தான் ஆளும் வர்க்கங்களின் பார்வைக்கு ‘அசிங்கம்’. இவர்களை அகற்றுவதுதான் இவர்களது அகராதியில் ‘நாட்டை அழகாக்குவது’.

உண்மையில், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஏவிவிடும் பாஜக அரசும் ஆளும் வர்க்கங்களும்தான் இந்நாட்டைப் பீடித்திருக்கும் அசிங்கங்கள், அழுக்குகள். குப்பை கூளங்களோடு இவர்களையும் அகற்றுவோம்!

தங்களது பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் 40 குடும்பங்களில் ஒரு குடும்பம்.

000

எப்போதுவேண்டுமானாலும் குடிசைகள் தகர்க்கப்படும் என்ற நிலையிலும் அன்றைய தேவைக்காக நகர்ப்புறத்துக்கு பிழைப்புத்தேடி செல்லும் வியாபாரி.

000

புல்டோர்சர்கள் வந்தால் எதுவும் மிஞ்சாது என்ற அச்சத்தில் தங்களது தட்டுமுட்டு சாமான்களை தயாராக வண்டியில் ஏற்றிவைத்திருக்கும் காட்சி.

000

மாசுபட்ட, சுகாதார சீர்கேடாக இருக்கக்கூடிய யமுனை நதிக்கரை.

தாரகை
நன்றி: த வயர்

ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கு கடந்த 10.04.2023 அன்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஸ்டெர்லைட்டின் சதி நோக்கத்திற்கு துணை புரியும் வகையிலான இத்தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் எதிர்த்ததால் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையிலான குழுவே கழிவுகளை அகற்றும் என்று உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.

இந்நிலையில், 12-06-2023 அன்று கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனமானது ஊடகங்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், Expression of Interest (EOI) இன் அடிப்படையில் கட்டட, கட்டமைப்பு பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு, ஆலை மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல் / புதுப்பித்தல் / மாற்றுதல், வடிவமைக்கப்பட்ட திறன் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை அடைய ஆலை மற்றும் இயந்திரங்களை இயக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்த நிறுவனங்களை அழைத்துள்ளது.

இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் தமிழ்நாடு அரசின் இறையாண்மையையும் கேலிக் கூத்தாக்கும் நடவடிக்கையாகும். அதிகாரத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலை தனது கைக்குள் வைத்திருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர்தான் ஸ்டெர்லைட்டின் இந்த விளம்பரத்திற்கு அடிப்படையாகும்.

படிக்க : மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

ஸ்டெர்லைட் ஆலையை சதித்தனமான வழிமுறைகளின் மூலம் மீண்டும் இயக்க முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. 15 உயிர்களை பலி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய நாள் முதல் இன்று வரை மீண்டும் திறப்பதற்கான சதிகளை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். ஒருபோதும் இம்முயற்சியை தூத்துக்குடி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் தூத்துக்குடி மக்களோடு இருக்கிறது.

எனினும், கொலைகார வேதாந்தாவின் நயவஞ்சக முயற்சிகளை தீர்மானகரமாக முறியடிப்பதற்கு ஒரே வழி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்காக தனிச் சட்டம் ஒன்றை கொண்டு வருவதுதான்.

“தமிழ்நாடு அரசே, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று” என்பதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
13.06.2023

செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்

14.06.2023

செந்தில் பாலாஜி கைது!
இது ஊழல் பிரச்சினை அல்ல;
மோடியை எதிர்க்கும் அனைவருக்கும் இனி இதுவே நடக்கும்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதும் அவசர அவசரமாக இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் ஒன்றிய அரசு மோடிக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் இதுதான் கதி என்று கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நாம் கருத வேண்டி உள்ளது. ஆகவே ஒன்றிய அரசின்  நடவடிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை என்று கூறி ஒரு நாள் முழுவதும் அவருடைய வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் துணை ராணுவப் படையின் உதவியோடு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பதும் செந்தில் பாலாஜி மீதான கைது என்பதும் எவ்விதமான சட்ட, ஒழுங்கு, விதிமுறைகளுக்கு எதிரானதாகவே உள்ளது.

ஒரு மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ளே புகுந்து ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையுடன்  சோதனை செய்வதற்கு  முன்பு அந்த மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், மாநில அரசுக்கு எங்கே உரிமை உள்ளது? இதை தடுக்கக் கூட முடியாத அளவில் தான் மாநில அரசின் உரிமை உள்ளது என்பதே உண்மை. இப்படிப்பட்ட உரிமைகள் ஏதுமற்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.

ஒரு அமைச்சர் ஊழல் செய்துவிட்டார், அவர் மீது நடத்தப்படும் சோதனை தொடர்பான பிரச்சனையாகக் கருத முடியாது.

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் விசாரணை நடவடிக்கைகளும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கவே மேற்கொள்ளப்பட்டது.


படிக்க: மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்


நாடு முழுவதும் வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் பல்வேறு சோதனைகளை தினம்தோறும் செய்து வருகின்றன.பாசிச மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் ஏவல் துறைகளாக செயல்பட்டு எதிர்க் கட்சிகள் மீது தாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நபர் எப்படிப்பட்ட குற்றம் செய்திருந்தாலும் அவர்  நாட்டின் அரசியலமைப்பு வழங்கி உள்ள அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டின்  உழைக்கும் மக்களும் உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்போரும் எவ்வித வழிமுறை இன்றியும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் வருமான வரிச் சோதனை, அமலாக்கச் சோதனை போன்ற  சோதனைகள் நடந்து முடிந்தவுடன் அது தொடர்பான விவரங்களைச் சேகரித்து முறையான சம்மன் அனுப்பி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது என்பது முறையான நடவடிக்கை. அப்படிப்பட்ட முறைப்படியான நடவடிக்கை செந்தில் பாலாஜி விவகாரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

முறையற்ற கைதும் முறையற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது திமுகவை மிரட்டுவதற்காக மட்டுமல்ல;

இதன் மூலம் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பையோ,  ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிச எதிர்ப்பையோ யார் மேற்கொண்டாலும் அவர்களை இப்படித்தான் அணுகுவோம் என்று பாசிச மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட கைதுகளும் சோதனைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜியோடு மட்டும் நிறைவுறப் போவதில்லை.

அடுத்தடுத்த இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் திமுக அரசினை நிலை குலைய  வைத்து அதன் மூலம் ஆதாயம் அடைவது பாசிச ஆர் எஸ் எஸ்  –  பாஜகவின் திட்டம் .இப்படிப்பட்ட பல்வேறு  திட்டங்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பாசிச சக்திகள் எண்ணுகின்றன.


படிக்க: விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி


மாநிலங்கள் உரிமைகள் ஏதுமற்ற இந்து ராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாறிக்கொண்டிருப்பதையும் பாசிச பாஜகவுக்கு தேர்தலில் எதிராகச் செயல்படும் கட்சி அல்லது ஒரு மாநில அரசையே இப்படி மிரட்டும் என்றால் பாசிச பாஜக – ஆர் எஸ் எஸ்- ஐ எதிர்க்கக்கூடிய மற்ற அமைப்புகளையும் தனி நபர்களையும் ஜனநாயகவாதிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு இனி எந்த நிலைக்கும் பாசிச மோடி அரசு செல்லும் என்பதே உண்மை.

இப்படி  எல்லோரையும் ஒழித்துக் கட்டிவிட்டு ’ஜனநாயகப் பூர்வமான’  தேர்தல் நடத்தி அதில் தன்னை மாமன்னராக முடி சூட்டிக்கொள்ள பாசிச மோடி காத்திருக்கிறார்.

ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மாநில உரிமைகள் ஒழிக்கப்படுவதும்  எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவதும் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் ஒன்றிய அரசின் ஏவல் துறைகள் மாநில அரசின் அனுமதி இன்றி தமிழ்நாட்டில் செயல்படத் தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்துள்ள பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க , பாசிச மோடி அமித்ஷா கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!

திருச்சி பெல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெல் மருத்துவமனையின் செவிலியர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பெல் மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகச் சம்பளம் வரவில்லை என்று கடந்த வாரம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.

தனியார் மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட பிறகு கார்ப்பரேட்டுகள் கொடூர சுரண்டலுக்கு உள்ளாகுபவர்களாக ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

ஒப்பந்த முறையில் உழைப்பாளி மக்கள் மீதான கொடூர சுரண்டல் அரசுத்துறைகளிலும் பொதுத்துறைகளிலும் சமீப காலமாகவே தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிகராக அதிகரித்து வந்துள்ளது.


படிக்க: திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்


காண்ட்ராக்ட் ஒப்பந்த முறையால் கடுமையாக சுரண்டப்பட்டு எத்தனை ஆண்டுகாலமானாலும் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அத்து கூலிக்கு மாரடிக்கும் நிலையில் ஊதியமும் சரியாக கிடைக்காது போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தனியார் நிறுவனங்களைப் போல அரசுத் துறைகளிலும் அதிகரித்து வருகிறது.

மகாரத்ன  நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்திலும்  ஒப்பந்த முறை ஊழியர்கள் பல்வேறு பணிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே எல்சிஎஸ் எனும் பெல் நேரடியான ஒப்பந்த ஊழியர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் நிரந்தரப் படுத்தப்படாமல் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் மூலமாக பெல் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கு தான் மாதாமாதம் சரியாகச் சம்பளம் வழங்கப்படுவதில்லை; அவர்களது வருங்கால வைப்பு நிதியும் பிஎஃப் கணக்கில் கட்டப் படுவதில்லை; கருணைத்தொகையும் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை; ஒப்பந்ததாரர்களை இதற்கு  எதிராகக் கேள்வி கேட்டால் கேள்வி கேட்கும் ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்ற தொழிலாளர்களை மட்டுமே பணி நீட்டிப்பு செய்கின்றனர்.

இவையனைத்தும் பெல் நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். முதன்மை வேலை அளிப்பவர் என்ற முறையில் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பெல் நிர்வாகம், தனது பொறுப்பைக் கை கழுவி விட்டிருக்கிறது. ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் அவலநிலையை எத்தனை முறை முறையிட்டாலும் கண்டுகொள்ளாமல் இந்ந காண்ட்ராக்ட் சுரண்டலை ஒப்பந்ததாரர்களோடு சேர்ந்து நடத்தி வருகிறது திருச்சி பெல் நிர்வாகம்.


படிக்க: திருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்


திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் சார்பாக இப்பிரச்சினைகளை பெல் நிர்வாகத்திடமும், திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியோரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நான்கு மாதங்களாகச் சம்பளம் வராததால் வீட்டு வாடகை கட்டவும், உணவுக்கும், குழந்தைகளின் கல்வச் செலவுக்கும் பணம் இல்லாத அவல நிலைக்கு அவ்வூழியர்கள் தள்ளப்பட்டனர்.

தொழிற்சங்க உரிமைகள் செல்லாக்காசாக்க பட்டுள்ள இன்றைய சூழலில் ஒப்பந்ததாரர்களோடு கூட்டு வைத்துக்கொண்டு சுரண்டலில் ஈடுபடும் பெல் நிர்வாகத்தை எதிர்த்து மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தனித்துப் போராடி வருகின்றனர்.

தங்களது சுகாதாரக் கட்டமைப்போடு தொடர்புடைய இந்த தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து கொள்ளாத நிலைமையிலும் அறிந்துகொள்ளவும் விரும்பாத நிலையிலும் பெல் நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர்.

பெல் ஆலையில் இயங்கும் பல்வேறு தொழிற்சங்கங்களும் இதுபற்றி எந்த குற்ற உணர்வும் இன்றி வர்க்க உணர்வற்றுப் போய் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகும் ஒப்பந்த தொழிலாளர்களின் அவல நிலைக்குத் திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களின் நிலைமை ஒரு சோற்றுப் பதம்.


வினவு களச் செய்தியாளர்

பாசிச மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ!

ருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் பாசிச நடவடிக்கையை வெளிகொண்டு வந்திருக்கிறார் டிவிட்டர் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி. இவரது கூற்று இந்தியா ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று பீற்றித் திரியும் பாசிச மோடி அரசின் முகத்திரையை நார்நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடியதன் விளைவாய் மோடி அரசு பின்வாங்கியது. விவசாயிகளின் இம்மாபெரும் போராட்டத்தை ஒழித்துக் கட்டும் சதி வேலையில் இறங்கியது மோடி அரசு.

“காங்கிரஸ் தூண்டிவிடும் போராட்டம்”, “காலிஸ்தானிகள் போராடுகிறார்கள்” “மாவோயிஸ்டு பின்னணி” போன்ற நச்சுப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிடுவதன் மூலம் ஆரம்பத்திலேயே இப்போராட்டத்தைத் தனிமைப்படுத்தி ஒடுக்கிவிடலாம் எனப் பகற்கனவு கண்டது மோடி அரசு. இது வெளிப்படையாக மோடி அரசு செய்த வேலை. மறைமுகவும் பல வேலைகளைச் செய்திருக்கிறது மோடி அரசு. விவசாயிகளின் போராட்டத்தினை ஒடுக்கவும் அவர்களுக்கு ஆதரவாக எழும் சக்திகளை ஒழித்துக் கட்டவும் இறங்கியது. அதில் ஒன்றுதான் டிவிட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பதிவிடப்படும் பதிவுகளை நீக்க டிவிட்டரை மிரட்டியது.


படிக்க: டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்


இதுகுறித்து டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி பிரேக்கிங் பாய்ன்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், “மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அது போன்ற ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது டிவிட்டரில் அது குறித்து ஏராளமானோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அதில் சில பத்திரிகையாளர்கள் அரசை எதிர்த்து விமர்சித்தனர். விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது.

எங்களுடைய டிவிட்டருக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. ஆனால், அரசின் நிர்ப்பந்தத்தை ஏற்காத போது, எங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும், அரசு சொல்வதை ஏற்காவிட்டால் எங்கள் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் மிரட்டல் வந்தது. ‘உலகில் பெரிய மக்களாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாடான இந்தியா’வில்தான் இது நடந்தது. 2021 பிப்ரவரியில், விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகளை வெளியிட்ட தனிநபர்களது, அமைப்புகளது, ஊடகங்களது சமூக வலைத்தள பக்கக் கணக்குகள் முடக்கப்பட்டன” என்கிறார் ஜேக் டார்சி.

ஜேக் டார்சியுனுடைய கருத்தினை மறுத்து அதைப் பொய் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர். ஆனால் மோடி அரசின் இத்தகைய மறுப்பினை உழைக்கும் மக்களுக்காகச் செயலாற்றும் பத்திரிகையாளர்களும், ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒருபோதும் நம்பப்போவதில்லை.


படிக்க: புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


மக்கள் போராட்டத்தை வெளிகொண்டுவரும் பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தளப்பக்க பதிவுகள் முடக்கினால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்கிவிட முடியும் எனப் பகற்கனவு கண்ட மோடி அரசின் நடவடிக்கைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியடைந்தது விவசாயிகளின் மாபெரும் போராட்டம். சமூக ஊடகங்களில் கருத்து போராட்டம் நடத்தும் அதேநேரத்தில் களத்தில் பாசிச பாஜகவை நேரடியாக எதிர்க்க வேண்டியது அவசியம். இதுவே விவசாயிகளின் போராட்டம் நமக்கு உணர்த்தும் கள அனுபவம்.


தாரகை

காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!

0

டந்த ஜூன் 9 அன்று, அரசியல் விஞ்ஞானிகளான சுகாஸ் பால்சிகர் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்.சி.இ.ஆர்.டி) அரசியல் விஞ்ஞான பாடப்புத்தகத்தில் இருந்து தங்கள் பெயர்களை நீக்குமாறு வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ளனர்.

இவ்விருவரும் 2006–2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட என்.சி.இ.ஆர்.டி-இன் 9 – 12 வகுப்புகளுக்கான அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்திற்கான தலைமை ஆலோசகர்களாகப் பணியாற்றினர். தற்போது பாடப்புத்தகங்களில் பாசிச மோடி அரசு செய்துள்ள மாற்றங்களைக் கண்டிக்கும் விதமாக தங்களது பெயர்களை அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்தத் திருத்தங்களை எதிர்த்து “சிதைக்கப்பட்ட, கல்வி ரீதியாக முடமாக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர்களைத் தலைமை ஆலோசகர்கள் என குறிப்பிடுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று பால்சிகர் மற்றும் யாதவ் ஆகியோர் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.

என்.சி.இ.ஆர்.டி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் பால்சிகர் மற்றும் யாதவ் “பாடப்புத்தகத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து எங்களிடம் ஆலோசிக்கவில்லை; மாற்றங்கள் குறித்து தகவல்களைக்கூடத் தெரிவிக்கவில்லை. அடிக்கடி செய்யப்படும் இந்த தொடர் மாற்றங்கள் தர்க்கமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு இவை மேற்கொள்ளப்படுகின்றன” என்று கூறியுள்ளனர்.


படிக்க: என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!


மேலும், “நாங்கள் பங்களிப்பு செய்த 6 பாடப்புத்தகங்களில் இருந்து எங்களை விலக்கிக் கொள்கிறோம். பாடப்புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அவற்றை அடையாளம் தெரியாத அளவிற்குச் சிதைத்து விட்டன. இதனால் எங்கள் பெயர்களைப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி விடுமாறு என்.சி.இ.ஆர்.டி-யிடம் கோருகிறோம்” என்று அவர்கள் கூறினர்.

முன்னதாக பள்ளிப் பாடத்திட்டங்களை எளிமையாக்குவதாக் கூறி அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்தில் இருந்து என்.சி.இ.ஆர்.டி பல பகுதிகளை நீக்கியது. 12-ஆம் வகுப்பு அரசியல் விஞ்ஞானம் பாடத்திட்டத்தில் இருந்து 2002 குஜராத் கலவரம் குறித்த பகுதியும், 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, முக்கிய போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய பகுதிகளும், 8-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து தேசத்துரோகம் குறித்த பகுதியும் நீக்கப்பட்டது.

அதேபோல், என்.சி.இ.ஆர்.டி 12-ஆம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பகுதி நீக்கப்பட்டது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்தில் இருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு நீக்கப்பட்டது.

இந்நிலையில், பால்சிகர் மற்றும் யாதவ் ஆகியோரின் கடிதத்திற்குப் பதில் அளித்த என்.சி.இ.ஆர்.டி “இவ்விருவரின் பங்களிப்புகளை என்.சி.இ.ஆர்.டி அங்கீகரிக்கிறது. இவர்களின் பங்களிப்புகள் கூட்டு முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதால் இவர்களின் பெயர்களை நீக்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று கூறிவிட்டது. மேலும், இவர்களின் ஆலோசகர் பதவி புத்தகங்கள் வெளியிடப்பட்ட உடனேயே காலாவதியாகிவிட்டது என்றும் கூறியுள்ளது.


படிக்க: உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!


ஆரம்பத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு மாணவர்களுக்குச் சுமையாக உள்ள பகுதிகளைத் தற்காலிகமாக நீக்கிக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. அதனைக் காரணமாக வைத்துக்கொண்டு காவிக் கும்பலுக்கு ஒவ்வாத பல பகுதிகள் அப்போது நீக்கப்பட்டன. இந்நீக்கங்கள் தற்போது நிரந்தரமாக்கப் படுகின்றன.

பாடத்திட்டத்தில் நீக்கங்கள் செய்யப்படுவது குறித்துப் பேசிய ‘சுயேச்சை அமைப்பான’ என்.சி.இ.ஆர்.டி-இன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி “தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டல் படி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் அதனை அமல்படுத்துகிறோம்” என்று கூறியுள்ளார். அதாவது, பாசிச மோடி அரசின் காவி கல்விக் கொள்கையைத்தான் அமல்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.

புதிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்ட போதே அதில் தங்களின்  பரிந்துரைகளில் 60 – 70 சதவிகிதம்  இடம் பெற்றுள்ளன என்று ஆர்.எஸ்.எஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தான் தற்போது என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் செய்து வரும் மாற்றங்களை நாம் பார்க்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை இளம்பருவத்திலேயே இந்துத்துவ சித்தாந்திற்கு ஆட்படுத்தும் பொருட்டே பாடத்திட்டத்தில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


பொம்மி

ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை

டிசா ரயில் விபத்து நடைபெறாமல் தடுத்திருக்க முடியுமா? ஆம். கடந்த ஆண்டு இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பானது (Comptroller and Auditor General of India (CAG)) இந்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியது. இக்குறைபாடுகளைக் கருத்தில் கொண்டிருந்தாலே இக்கோர விபத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

கடந்த ஆண்டே, இந்த அமைப்பானது இந்திய ரயில்வே துறையில் பயன்படுத்தப்படுகிற தடைகள் மற்றும் இடர் கட்டுப்பாட்டு கருவிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஒன்றிய அரசை எச்சரித்திருந்தது. இந்த கருவியானது இந்திய ரயில்வே-யின் பல்வேறு துறைகளில், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சி.ஏ.ஜி அமைப்பானது கண்டறிந்த பல்வேறு குறைபாடுகளில்  பராமரிப்புக் குறைபாடுகளே முதன்மையானதாக இருக்கிறது. வெளிப்படையாகவே, ஒன்றிய அரசானது பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததே, பாலாசூரில் இந்த பேரழிவுமிக்க துயரச் சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.  இந்த சி.ஏ.ஜி அமைப்பானது, 2021- ஆம் ஆண்டுக்கான இந்திய தொடர்வண்டி துறையில் நிகழும் தடம் புரள்வு- என்ற தலைப்பில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ரயில்கள் தடம் புரள்வது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த கண்காணிப்பு நிறுவன முறைகள் என்ற ஒன்றே இல்லை என்று முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிடப்பட்டிருந்தது.

படிக்க : பகுதிநேர, தற்காலிக ஆசிரியர் முறைக்கு முடிவு கட்டு! | பு.மா.இ.மு. கண்டனம்

“கடந்த காலத் தவறுகளிலிருந்து, தவறுகளைத் திருத்திக் கொள்வதில் உள்ள குறைபாடுகளே, ரயில்கள் தடம் புரள்வதைத் தடுக்க முன்வைக்கப்படும் அறிக்கைகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன” என்று இந்த அறிக்கை கூறுகிறது.

“ஒவ்வொரு ரயில் விபத்திலும், ரயில்கள் தடம் புரள்வதற்கு ஒரு துறை சார்ந்த காரணிகளோ அல்லது கூட்டாக பல்வேறு துறை சார்ந்த காரணிகளோ காரணமாக அமைகின்றன. பெரும்பாலான ரயில்கள் தடம்புரண்டது என்பது ஒரே நேரத்தில் ஐந்து துறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளாலே நடந்தன. அந்த ஐந்து துறைகளாவன: 1. விதிகள் மற்றும் கூட்டு   நடைமுறை ஆணைகள் (Rules and Joint Procedure Orders (JPOs)), 2. பணியாளருக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை (Training/Counselling of staff),  3. செயல்பாடுகள் மீதான மேற்பார்வை ( Supervision of operations), 4. பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு  (Coordination and communication between staff of different departments) மற்றும் 5. திட்டமிட்ட ஆய்வுகள் (Scheduled Inspections)” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

“இந்த ரயில்வே நிர்வாகமானது, விசாரணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட விபத்து முன்தடுப்பு குறித்த கண்காணிப்பு ஆலோசனைகளை நிறைவேற்றுவதில்லை. இதே நிலைமைதான், இணைய கண்காணிப்பு சேவையான, பாதுகாப்பு தகவல் மேலாண்மை அமைப்பிலும் (Safety Information Management System ) நீடிக்கிறது “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தண்டவாள பராமரிப்பு அமைப்பு (Track Management System (TMS)) என்கிற இணைய வழி செயலியானது தண்டவாள பராமரிப்புச் செயல்பாடுகளை இணைய வழியில் கண்காணிப்பாதாகும். ஆனால், இந்த தண்டவாள பராமரிப்பு அமைப்பின் இணையதளமானது பயன்பாட்டிலேயே இல்லை” என்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.

மிக முக்கியமானது என்னவென்றால், தண்டவாள ஆய்வுகள் வெளிப்படையாகவே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. குறைபாடுடையவைகளாக அடையாளப்படுத்தப்பட்ட  350 தண்டவாளங்களில் வெறும் 181 மட்டுமே சரிசெய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த எண்ணிக்கையிலான தண்டவாள கார் (Track Recording Car) ஆய்வால் பெரும்பாலான தண்டவாளங்கள் தரமற்றதாக இருந்ததால், அந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரயில் போக்குவரத்திற்கும் ஆபத்தானதாக இருந்திருக்கிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் மட்டும் 217 ரயில் விபத்துகள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 75 ரயில்கள் தடம்புரண்டதால் ஏற்பட்டவையாகும் என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மேலும், 211 ரயில் விபத்துகள் சிக்னல் பிரச்சனையால் ஏற்பட்டவையாகும்.

படிக்க : மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய ரயில் பாதுகாப்பு நிதி அமைப்பின்  (Rashtriya Rail Sanraksha Kosh) வழிகாட்டுதல் நெறிமுறைக்கு எதிராக முக்கியவத்துவமற்ற வேலைகளுக்கு செலவு செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. நிதிப்பற்றாக்குறையால் ரயில் பாதுகாப்பு பணிகள் நிறுத்தப்பட்டன என்பதன் மூலம், ரயில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு நிதியின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்கிறது இந்த அறிக்கை.

சி.ஏ.ஜியால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கியமான மற்றொரு குறைபாடானது போதிய பணியாளர்கள் இல்லாததாகும். இந்திய ரயில்வே துறையானது காலிபணியிடங்கள் மற்றும் பெயரளவிற்கான அவுட்சோர்சிங் மூலமாகவே பாரமரிப்பு பணிகளை நிர்வகித்தது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோர ரயில் விபத்தின் குற்றவாளி ஒன்றிய அரசுதான் என்பதையும் மறைமுகமாக நிரூபிக்கிறது இந்த சி.ஏ.ஜி அறிக்கை (எமது கருத்து).

(குறிப்பு: மே 13 அன்று தெலுங்கானா டுடே-வில், “Odisha train accident was waiting to happen, indicates CAG report” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

அப்பு

மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

“விஷசாராய பலிகள்! திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை!” என்ற தலைப்பில் ஜூன் 10 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைமையுரையில், “கள்ளச்சாராயம் போலீசுக்கு தெரிந்தே தான் நடக்குகிறது. திமுக அரசு 2016-யில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்லிவிட்டு 2021-யில் நான் இப்போது சொல்லவில்லையே என்று மாற்றி பேசுகிறது. டாஸ்மாக் மூடும் வரை மக்கள் போராட்டம் தொடரும்” என்று பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன், “கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்வார்கள், இரண்டு மாதங்கள் கழித்து என்ன நடக்கும் மீண்டும் வெளியே வந்து சாராயம் காய்ச்சுவார்கள். அதிகாரிகளுக்கு இடமாற்றம் என்பதெல்லாம் ஏமாற்று. மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார்.

கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன், “போலீசு இருக்கும் வரை சாராயத்தை ஒழிக்க முடியாது. போதை என்பது மக்களின் சிந்தனையை சீரழிக்கிறது. சமூகத்தில் முறையான வாழ்க்கையை இல்லாமல் சீரழிக்க வைக்கிறது இந்த ஆளும் வர்க்கம். மக்கள் போராட்டமே தீர்வு” என்று பேசினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்

பெல் நிறுவன குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் ஒரே நாளில் 6 வீடுகளில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றும் பலரும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்த தொழிலாளர்கள். பள்ளி விடுமுறைக் காலமாதலால் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர்.

அந்த சமயம் பார்த்து ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து, திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

ஒரு வீட்டில் வைத்திருந்த சுமார் 10 சவரன் நகை திருடு போயுள்ளது.

மற்றொரு வீட்டில் 1 சவரன் நகை கொள்ளை போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து அந்த பதட்டம் தணிவதற்குள் பெல் நிறுவன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் 6 சவரன் நகை ஸ்பிரே அடித்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் சில வருடங்களாக இப்பகுதியில் அதிகரித்துள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு சில வீடுகளில் புகுந்து 30 க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

பெல் ஊழியர் கூட்டுறவு வங்கியில் 1.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இப்படிப்பட்ட குற்ற சம்பவங்களை தடுக்கக் கோரியும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்தும் அவற்றை தடுக்க எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பெல் நிர்வாகத்தைக் கண்டித்தும் CITU சங்கம் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்; பாதுகாவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; ஊரகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.

பெல் ஊரகப் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் வெகுநாட்களாகத் தொடர்வதாக சிஐடியு சங்கத்தினரும் பெல் ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் அச்சுறுத்தும் விதமாகச் சுற்றித் திரியும் நாய், மாடு, குதிரை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தவும் நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் ஊழியர்கள்.

மேலும் குடியிருப்பு வீடுகள், பள்ளிக் கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை பராமரிக்கவும் போதிய நிதியை ஒதுக்குவதில்லை என்கின்றனர்.

பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக உழைக்கும் வர்க்கத்திலேயே சலுகை பெற்ற வர்க்கமாக இதுநாள்வரை வலம் வந்த பெல் ஊழியர்களின் இன்றைய நிலை உத்தரவாதமற்றதாக மாறியிருக்கிறது.

பொதுத்துறை தனியார்மயம்; தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிப்பு உள்ளிட்ட தன்னுடைய வர்க்க நலன்களைப் பாதிக்கும் காவி கார்ப்பரேட் பாசிச அரசின் நடவடிக்கைகளைக் கூட அரசியல் ரீதியில் புரிந்துகொள்ள இயலாத மனநிலையில் இருந்தனர் பெல் ஊழியர்கள்.

ஆனால் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப் போல இந்த சமூகமே வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிற இன்றைய மறுகாலனியாக்க சூழலில், தாம் மட்டும் தப்பிப்ப பிழைத்துவிட முடியும் என்று நம்பி இறுமாந்திருக்க முடியாது என்பதையே நடந்த திருட்டு சம்பவங்கள் காட்டுகின்றன.

பெல் ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்களாகட்டும் இன்னபிற நடுத்தர வர்க்கத்தினர் ஆகட்டும் அவர்களின் எதிர்காலம் அமைதியானதாக இருக்க வேண்டுமெனில் நல்லதொரு சமூகம் அமைந்தால் தான் சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்காகச் சிறு துரும்பைக் கிள்ளிப் போடுவதற்காகவாவது மாற்றத்திற்கான அமைப்புகளில் அவர்கள் ஒருங்கிணைய வேண்டும்.


வினவு களச் செய்தியாளர்

அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!

0

குஜராத் மாநில அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாகக் கூட்டுறவு மனப்பாண்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.


படிக்க: தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்


தமிழ்நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது ஆவின். இது தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம் ஆகும். இதுவரை எந்தவொரு மாநில கூட்டுறவு நிறுவனமும் மற்ற மாநில கூட்டுறவு சங்கங்களை ஒழித்து, சந்தையை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை.

ஆனால் அமுல் தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அமுல் தன்னுடைய மாநில எல்லையைத் தாண்டி பிற மாநிலங்களுக்குள் ஊடுருவி, மற்ற மாநில கூட்டுறவு சங்கங்களை ஒழித்துக்கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊடுருவலை மோடி அரசின் துணையோடு தான் மேற்கொண்டு வருகிறது.

அமுலை ஆட்டுவிக்கும் மோடி அரசு!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவின் கூட்டுறவு நிறுவனம், கிராமப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆகிய மூன்றடுக்கு அமைப்பின் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 9,673 கிராமப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 4.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளாலும் நிர்வாக குளறுபடிகளாலும் ஆவின் நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கிராமப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் படிப்படியாக கலைந்து வருகின்றன. பால் கொள்முதல் திறனும் குறைந்து வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை பல ஒன்றியங்களில் 90 நாள்களைக் கடந்தும் வழங்கப்படாத அவலநிலையே நிலவுகிறது. மேலும் ஆரோக்கியா, ஹட்சன் போன்ற தனியார் நிறுவனங்கள், ஆவினை விட ஒரு லிட்டர் பாலுக்கு அதிக விலையையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிலுவைத் தொகையை ஒப்படைப்பதால் அந்நிறுவனங்களை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் செல்கின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்குள் நுழைகிறது. அதற்கு ஏற்றாற்போல சட்டத் திருத்தங்களை மேற்கொள்கிறது மோடி அரசு. இதற்கு முன்னர் அமுல் நிறுவனம், தமிழகத்தில் ஜஸ்கீரிம் போன்ற பால் சார்ந்த பொருட்களை மட்டும் விற்பனை செய்தது; பால் கொள்முதலில் ஈடுபடவில்லை. ஆனால் மோடி அரசின் சட்டத்திருத்தற்குப் பின்னால் தான் பால் கொள்முதலில் நுழைய விழைகிறது.


படிக்க: அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !


கடந்த 2022 டிசம்பரில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் (Multi State Co-operative Society Act) ஒன்றிய அரசு, கூட்டுறவு சங்கங்களின் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் சில திருத்தங்களை செய்துள்ளது. இது மாநில அரசுகளை எந்த அதிகாரமும் அற்ற இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாற்றும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும்.

இரண்டு மாநில கூட்டுறவு சங்கங்களை இணைப்பதற்கு கூட்டுறவு சங்க நிர்வாகிகளில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் இணைத்துக் கொள்ளலாம் என்றும், இனிமேல் கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு தான் கூட்டுறவு சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளை நியமிக்கும் என்றும் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அமுல் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் கர்நாடகா மாநிலத்தின் நந்தினி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது கர்நாடக மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக பின்வாங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆவின், நந்தினி போன்ற எல்லா மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்டி, பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தை அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது மோடி அரசு.

எனவே அமுல் கூட்டுறவு நிறுவனம் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதை, ஏற்கெனவே தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன; கூடுதலாக அமுல் நிறுவனம் வருகிறது என்று மட்டும் கருதக் கூடாது. இது எல்லா மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களை அழிக்கத் துடிக்கும் மோடி அரசின் நோக்கத்தை பார்க்க மறுப்பதாகும்.

எல்லாம் அம்பானிக்காகவே!

தேசிய பணமாக்கல் கொள்கையின் மூலம் நாட்டின் பொதுச்சொத்துகளை எல்லாம் விற்று, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து வரும் மோடி அரசு அமுல் நிறுவனத்தை ஏகபோகமாக வளர்ப்பது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கத்தான். குறிப்பாக கூறவேண்டுமென்றால், அம்பானியின் நலனுக்காகத்தான். 13 லட்சம் கோடி மதிப்பு கொண்ட இந்திய பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையை அம்பானிக்கு தூக்கி கொடுக்கத்தான்.

சந்தையை கைப்பற்ற அம்பானி ஒவ்வொரு மாநில அரசுகளிடமும் போய் நிற்க வேண்டும் அல்லவா? அதனால்தான் மோடி அரசு மாநில கூட்டுறவு நிறுவனங்களை அழித்து, அமுல் என்ற ஒற்றை தேசிய கூட்டுறவு நிறுவனத்தை கட்டியெழுப்ப விழைகிறது.


படிக்க: பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !


மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு வலுவான கட்டமைப்பு தேவை. அத்தகைய கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கு திராணியுள்ள நிறுவனம் அமுல். இந்தியாவின் பால் உற்பத்தியில் முதலிடத்திலும், உலக அளவில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

மோடி அரசு, ஒருபுறம் அமுல் நிறுவனத்தின் மூலம் மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் சட்டதிருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் (National Dairy Development Board) மாநில கூட்டுறவு நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்கான அதிகாரம் கொண்டது.

இதன் இயக்குநர்களில் ஒருவர் தனியார் நிறுவனங்களை சார்ந்தவர் இடம்பெறலாம் என்றும், கூட்டுறவு சங்க அமைப்பு முறையோடு கூடுதலாக வேறு நிறுவன அமைப்பு முறைகளை கொண்டுவரலாம் என்றும், மாட்டுத் தீவன உற்பத்தி, பால் குறித்து ஆய்வு செய்யக்கூடிய துணை நிறுவனங்களின் பங்குகளை ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் விற்கலாம் என்றும் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

இந்தியாவின் பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையைக் கைப்பற்றுவதற்காக பல ஆண்டுகளாக அம்பானி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு சட்டத்தை திருத்திய பிறகு, ஐஸ்கீரிம் போன்ற பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் உயர்பதவிகளில் 41 ஆண்டுகள் பணிபுரிந்த ஆர்.எஸ்.சோதி அமுல் நிறுவனத்தில் இருந்து பதவி விலகி அம்பானி நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் அமுல் நிறுவனத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவை அம்பானி நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையை குறி வைத்து வேலை செய்வதற்கான துலக்கமான சான்றுகளாகும்.

மோடி ஆட்சியே அம்பானி, அதானி போன்ற பார்ப்பன, பனியா, குஜராத்தி, மார்வாடி, சேட்டுக்களின் ஆட்சி தான். இவர்களே எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்; ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற்றப்படுகின்றனர். எனவே இந்திய பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையை அம்பானி கைப்பற்றுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வெளிநாட்டு பால் பொருட்கள் சந்தையைக் கைப்பற்றுவதற்கான நோக்கமும் அம்பானியிடம் உள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எனவே இந்திய பால் பொருட்கள் உற்பத்தி வெளிநாட்டு சந்தையை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற திட்டத்திலும் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

000

இந்தியா முழுவதும் உள்ள மாநில கூட்டுறவு நிறுவனங்கள், அந்தந்த மாநில விவசாயிகளான பால் உற்பத்தியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும். தமிழகத்தில் மட்டும் ஆவின் நிறுவனத்தை 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து உள்ளனர். மேலும் இலாபமற்ற முறையில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தியவாசிய உணவுப் பொருளான பால், பெரும்பான்மையான மக்களை சென்று சேர்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்திய பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் சங்கிலியை அம்பானி முழுமையாக கைப்பற்றும் போது, மாநில கூட்டுறவு நிறுவனங்கள் ஒழித்துக் கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்பு கொண்ட தேசிய பால்வள மேம்பாட்டு ஆணையத்தின் துணை நிறுவனங்களான மதர் டெய்ரி போன்ற நிறுவனங்கள் அம்பானியால் விழுங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அடிமாட்டு விலைக்கு பாலை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். உழைக்கும் மக்கள் வாங்க முடியாத அளவுக்கு பால் விலை உயர்த்தப்படும்; பல பிஞ்சுக் குழந்தைகளின் அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருளான பால் பல குழந்தைகளிடம் இருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகும்.

சுருக்கமாக கூறினால், இந்தியா ஒரு பேரழிவை எதிர்நோக்கி இருக்கிறது. எனவே இந்த உண்மைகளை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மோடி அரசின் இத்தகைய பாசிச, நாசகார சதித் திட்டத்திற்கு எதிராக, மாநிலங்களைக் கடந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தால் பாதிக்கப்படும் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டடியமைக்க வேண்டும்.


பிரவீன்

விஷசாராய பலிகள்: திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் | ஆர்ப்பாட்டம்

சாதாரணமான மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளும் அதே குற்றத்தைத் தானே செய்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தப் பகுதியில் இருக்கும் கலெக்டரை, அரசு அதிகாரிகளை, காவல்துறையினரை என்ன லஞ்சம் வாங்கிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகின்றது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

சாராயகடை 10 இருக்கு | மக்கள் அதிகாரம் | மூடு டாஸ்மாக்கை! | ஆர்ப்பாட்டம்

5000 கடைகளைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு ஊற்றிக் கொடுப்பதானது சீர்கேடானது கேவலமானது; இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாராயக்கடைகள் 10 இருக்கின்றன ஆனால் பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை. டாஸ்மாக் வருமானத்தில் ஒரு அரசாங்கம் இயங்குவது என்பதை விட கேவலமானது வேறு ஏதாவது இருக்க முடியுமா..

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம் | மக்கள் அதிகாரம் | பத்திரிகை செய்தி

10.06.2023

பத்திரிகை செய்தி

தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம்!

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான தோழர் லிங்கன் (வயது 50) நேற்று உயிரிழந்தார்.

நெய்தல் நிலத்தின் பண்பாட்டையும் மீனவ மக்களுடைய பிரச்சினைகளையும் விவாதமாக்க வேண்டும் என்பதில் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடினார் என்பதே உண்மை . மீனவர் பிரச்சினை, சிங்காரவேலரின் பங்களிப்புகள் ஆகியவை தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக எமது அமைப்புக்கு அளித்து வந்தார்.

மக்கள் அதிகாரம் தோழர்களை சந்திக்கும் போதெல்லாம் தன்னிடமிருந்த பல புத்தகங்களை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

மக்கள் அதிகாரம் அமைப்புக்கு மட்டுமல்ல; போராடுகின்ற அனைத்து இயக்கங்களுக்கும் உற்ற தோழராக விளங்கினார். மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் சிங்காரவேலர் தொடர்பாகவும் நூல்களை எழுதியுள்ளார். 1985 சென்னை துப்பாக்கி சூடு, ஒக்கி புயலின் ஐந்தாம் ஆண்டு ஆகியவை தொடர்பாக பேட்டிகள் அளித்து இருக்கிறார்.

மீனவர் மக்களின் போராட்டம் மட்டுமல்ல ; உரிமைக்கான போராட்டம் எங்கே நடந்தாலும் அங்கே வழக்கறிஞர் லிங்கன் இருப்பார். தமிழகத்தின் தென்கோடியிலே கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் என்ற கிராமத்தில் பிறந்து சென்னையிலேயே கால் நூற்றாண்டு காலமாக மக்களின் போராட்டங்களில் பங்கெடுத்த, பங்காற்றிய தோழர் லிங்கனுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக செவ்வணக்கம் செலுத்திக் கொள்கிறோம்!

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர் ,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366421

நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவிய மோடி: அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்

2007 ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தின் ஹஸ்தேவ் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அதானி குழுமம் அனுமதி பெறுகிறது. இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், அந்த வனப்பகுதியில் உள்ள மரங்களும் எண்ணற்ற வன உயிரினங்களும் பாதிக்கப்படும் என பல்வேறு அரசுத்துறை நிறுவனங்கள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன. இருப்பினும் ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி விட்டார் அதானி.

2013-இல் நிலக்கரி சுரங்கம் தோண்ட ஆரம்பிக்கிறார் அதானி. தங்கள் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் நிலக்கரி சுரங்கம் பாதிக்கும் என அச்சம் அடைந்த கிராம மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு துணையாக LIFE (Legal Initiative for Forest and Environment) என்ற சட்ட அமைப்பு உதவ அவர்களுக்கு முன் வருகிறது. சுரங்கம் தோண்டும் நடவடிக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்கின்றனர்.

படிக்க : ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!

அதே பகுதியைச் சார்ந்த அலோக் சுற்றுலா எனும் சமூக செயல்பாட்டாளர் மக்களை நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஒருங்கிணைக்க முயல்கிறார். அவர் ஒரு முன்னாள் அரசு அதிகாரி. அதே காலகட்டத்தில் ஸ்ரீதர் எனும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் Environics Trust எனும் லாபநோக்கற்ற NGO நடத்தி வருகிறார். அவர் ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் உள்ள சூழலியல் அறிஞர்களுக்கு அதானியின் நிலக்கரிச் சுரங்க திட்டத்தை விவரித்து மின்னஞ்சல் அனுப்புகின்றார்.

ஜூன் 2019-இல் அதானி நிறுவனத்தின் சார்பாக புரோக்கர் ஒருவர் ஸ்ரீதரை தொடர்பு கொள்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா பகுதியில் அதானியின் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து ஸ்ரீதர் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்வதற்காக அதானி குழுமம் சார்பில் இடைத்தரகர் ஸ்ரீதரோடு பேச முனைகிறார்.

எவ்வித சமரசத்திற்கும் சம்மதிக்க மாட்டேன் என ஸ்ரீதர் தெரிவித்து விடுகிறார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் வருமான வரித்துறையினர் ஸ்ரீதரை விசாரிக்கின்றனர். அதானிக்கு எதிராக ஸ்ரீதர் தொடங்கிய வழக்கு பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது.

2020 ஜூனில் சுக்லாவின் போனை பெகாசஸ் மென்பொருளின் உதவி கொண்டு உளவு பார்க்கிறது மோடி அரசு. வாஷிங்டன் போஸ்ட் (Washington Post), பர்பிட்டன் ஸ்டோரிஸ் ஜர்னலிஸம் (Forbidden Stories Journalism) இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரிய வருகிறது. இந்நாள் வரை பெகாசஸ் பயன்பாட்டை மோடி அரசு ஒத்துக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பெகாசஸ் பயன்பாட்டை விசாரிக்க உச்சநீதிமன்றமே ஒரு குழு அமைத்தது.

2022 செப்டம்பர் 7-ஆம் தேதி, CPR (Center for Policy Research), IPSMF (Independent andPublic Spirited Media Foundation), LIFE (Legal Initiative for Forest and Environment), Environics Trust, Oxfam India ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்கின்றனர்.

ஆக்ஸ்பாம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக போராட தொழிலாளர்களை தூண்டியதாக ஒன்றிய அரசு Environics Trust மீது குற்றம் சாட்டியது. வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுக்கு நிலக்கரி சுரங்கம் பற்றிய தகவல்களை தந்ததாக என்பது Environics Trust நிறுவனர் ஸ்ரீதர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய நிறுவனங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகவும், அதானியின் கோட்டா நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீதர் மீது ஒன்றிய அரசு குற்றஞ்சாட்டி நோட்டீஸ் அனுப்பியது.

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று இந்தியாவின் நிலக்கரி சுரங்க திட்டங்களை முடக்க சதி செய்ததாக LIFE நிறுவனத்தின் இணை நிறுவனர் ரித்திக் தத்தா மீது ஒன்றிய அரசு குற்றம் சாட்டியது. அவருடைய மின்னஞ்சல்களை மேற்கோள்காட்டி அமெரிக்காவைச் சார்ந்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர்களுக்கு இந்தியாவின் 20-க்கும் மேற்பட்ட நிலக்கரி திட்டங்களின் தகவல்களை வழங்கியதாக இந்திய அரசு அவர் மீது குற்றம் சாட்டியது.

அந்த 20 திட்டங்களில் இரண்டு திட்டங்களில் மட்டுமே அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இருப்பினும், அதானி குழுமத்தின் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கம் ரித்திக் தாத்தாவுக்கு இருப்பதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டு நலனுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் ஒன்றிய அரசு அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

போராட்டக்காரர்களை தூண்டிவிட்டு, ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை தடுத்ததாக CPR நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்க நிதியை பயன்படுத்தியதாக CPR நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படவில்லை என தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

வருமான வரி சோதனை நடைபெற்ற சில வாரங்களில் ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவிழந்துவிட்டன. செப்டம்பர் 26-ஆம் தேதி ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்கில் ஈடுபட்டிருந்த LIFE நிறுவன வழக்கறிஞர்கள் வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

படிக்க : முஸ்லீம்கள் மீது தொடர் வெறுப்பைக் கக்கும் ஹைதராபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங்!

வழக்கிலிருந்து LIFE நிறுவன வழக்கறிஞர்கள் பின்வாங்கிய அதேநாளில், ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை (Phase 2) தொடங்கும் வகையில் மரங்களை வெட்டும் வேலையை வனத்துறையினர் ஆரம்பித்தனர். அதை எதிர்த்த கிராம மக்களை கைது செய்தனர். விசாரணையில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும். 2023-இல் LIFE, CPR, Environics Trust நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை இந்திய அரசு முடக்கியது. அதன் விளைவாக இந்நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி அதானி குழுமம் ஹஸ்தே காடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

(குறிப்பு: வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) இதழில் ஜூன் 5, 2023-இல் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

சு. விஜயபாஸ்கர்

disclaimer

முஸ்லீம்கள் மீது தொடர் வெறுப்பைக் கக்கும் ஹைதராபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங்!

1

தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசிவருபவர் ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங். அவர் இம்முறை தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வெறுப்பு பேச்சு பேசியுள்ளார். கடந்த ஜூன் 4 அன்று, தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில், ‘இந்து’ப் பெண்கள் முஸ்லீம் பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார்.

“நெற்றியில் திலகம் இட்டிருப்பவர் எனது சகோதரர்; ஒரு இந்து. திலகம் இட்டிருப்பவரிடம் மட்டுமே நான் நட்புக்கொள்வேன். இந்து பெண்கள் புர்கா அணிந்த பெண்களிடம் நட்புக் கொள்ளக்கூடாது. அஃப்தாப்கள் மூலம் மட்டும் அச்சுறுத்தலை சந்தித்து வந்தோம். ஆனால், தற்போது ஆயிஷாக்கள் மூலமும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நமது பெண்களை அஃப்தாப்கள்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஆயிஷாக்கள் இவர்கள்” என்று தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி திரைப்படத்தோடு பொருத்திப் பேசினார்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ‘லவ்‌‌ ஜிகாத்’ எனும் முஸ்லீம் வெறுப்பு போலிப் பரப்புரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ‘இந்து’ப் பெண்களை மதம் மாற்றும் பொருட்டு முஸ்லீம் ஆண்கள் திட்டமிட்டே காதலிப்பதாக இழிவாக சித்தரிக்கும் திரைப்படம் அது. இந்த ஒரே காரணத்திற்காக அத்தத் திரைப்படம் சங்கப் பரிவார் கும்பலின் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க : ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!


கடந்த ஆகஸ்ட் 2022-இல், நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசியதாக ஹைதராபாத் போலீசால் கைது செய்யப்பட்ட ராஜாசிங், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக பா.ஜ.க-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 75 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எந்த மதத்திற்கு எதிராகவும் வெறுப்புப் பேச்சுகளையோ அவதூறு பேச்சுகளையோ பேசக்கூடாது என்றும், சமூக வலைதளங்களிலும் அவ்விதம் பதிவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

ஆனால், ராஜாசிங் நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மத வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகிறார். கடந்த ஜனவரி – பிப்ரவரி மாதங்களில், மகாராஷ்டிராவில் இந்து தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு பேரணிகளில் கலந்து கொண்டு முஸ்லீம்களைத் தாக்க வேண்டும் புறக்கணிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். மங்கல்ஹாட் போலீசு மகாராஷ்டிராவில் அவர் பேசிய முஸ்லீம் வெறுப்பு பேச்சு குறித்து பலமுறை காரணம் கேட்கும் குறிப்பாணைகளை (show-cause notice) அனுப்பியுள்ளது. ஆனால், அவை எதுவும் அவருடைய வெறுப்பு பேச்சைத் தடுத்து நிறுத்தவில்லை.

முன்னதாக, ஹைதராபாத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற ராம நவமி ஷோபா யாத்திரையில் (Ram Navami Shoba Yatra) கலந்துகொண்ட அவர் முஸ்லீம்களை தாக்கிப் பேசியதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்து நாட்டை -அகண்ட பாரதத்தை- ஏற்படுத்துவதற்கான அரைகூவலையும் விடுத்தார்.


படிக்க : ‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!


“இன்று இந்தியாவில் 100 கோடி இந்துக்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது ஏன் இந்தியாவை இந்து நாடு என்று பிரகடனம் செய்யக்கூடாது? இன்று 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன; 150-க்கும் மேற்பட்ட கிறித்துவ நாடுகள் உள்ளன. எனவே, அகண்ட இந்து ராஷ்டிரத்தை எதிர்க்கும் ஆண்மையற்ற தலைவர்களை பார்த்துக் கேட்கிறேன்: ஏன் இந்த ராஷ்டிரத்தை எதிர்க்கிறீர்கள்?” என்று அவர் பேசினார்.

மோடி அரசு குறித்தும் அதானி குறித்தும் கேள்வி எழுப்புபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. கேள்வி கேட்டால் உ.பா சட்டம் பாய்கிறது; எம்.பி பதவி பறிக்கப்படுகிறது. ஆனால், காவி பாசிஸ்டுகளுக்கோ கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரம் வழங்கப்படுகிறது. எனவே ‘இந்து ராஷ்டிர நீதி’யின்படி பாசிஸ்டுகளுக்கு மட்டுமே ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும்.


பொம்மி