Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 123

தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!

டந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த தி.மு.க அரசு, ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர் மோடி அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு ஒன்றை அமைத்தது.

ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் “நகல்” அறிக்கையை மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் தி.மு.க அமல்படுத்த முயல்கிறது என்பதை அம்பலப்படுத்தி அக்குழுவிலிருந்து வெளியேறினார், குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜகவர் நேசன். இதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை திமுக மறைமுகமாக அமல்படுத்தி வருகிறது என்பது மீண்டும் அம்பலப்பட்டு போனது.

இந்நிலையில், தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சி கல்லூரிகளிலும் “பொதுபாடத்திட்டம்” என்ற ஒற்றை பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்பதே அந்த அறிக்கையின் சாரம்.

இத்திட்டத்தின்படி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் “ஒரே கல்வி” திட்டம் திணிக்கப்படுகிறது! தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதனை நகல் எடுத்து பொது பாடத்திட்டம் என்று பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நசுக்கும் நாசகரத் திட்டத்தை அமல்படுத்துகிறது திமுக அரசு.


படிக்க: NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE


ஒவ்வொரு  பல்கலைக்கழகமும் தன்னாட்சி அதிகாரம் கொண்டு ஒவ்வொரு வட்டாரத்தின் தன்மை, சமூக அமைப்பு, கலாச்சாரம் போன்றவற்றை கல்வியில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றி வெவ்வேறு பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தி.மு.க அமல்படுத்தியுள்ள இந்த பொது பாடத்திட்டம், “ஒற்றைக் கல்விமுறை” என்பதை நுழைத்து பல்வேறு பகுதிகளில் இருக்கும் தனிச்சிறப்பான கல்வி முறையை அழிக்கப்பார்க்கிறது.

உதாரணமாக, கடலோர மாவட்டங்களில் கடல்சார் மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கைவினை மற்றும் கலை சார்ந்த படிப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களின் பாரம்பரியத்தை வரித்துக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொரு புவியியல் அமைப்புக்கும் ஏற்றவாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் தங்களுக்கான பாடத் திட்டத்தை தாங்களே தயாரித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வே.ரவி பேசுகையில், “நான் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் பாடத்திட்டக்குழு தலைவர். எனது தலைமையில் 12 பேராசிரியர்கள் கொண்ட குழுதான் இதுநாள் வரை எங்களுக்கான பாடத்தைத் தயாரித்தது. நாங்கள் ஆய்வுசெய்தவரை பொதுப் பாடத்திட்டம் காலாவதியானதாகவே இருக்கிறது. சமீபத்திய முன்னேற்றங்கள் எதுவும் அதில் இல்லை. குறிப்பாக செய்முறைப் பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஆனால் பல இடங்களில் புதிய பாடங்கள் நடத்தப்படவே இல்லை. பழைய பாடங்களையே நடத்துகிறார்கள். எங்களுக்கும் புதிய பாடங்களை எப்படி நடத்துவது என்று புரியவில்லை. இந்தப் பாடத்திட்ட வடிவமைப்பு அப்படியே புதிய கல்விக்கொள்கையை ஒத்திருக்கிறது. மாணவர்களை அறிவு-சார்ந்தவர்களாக உருவாக்காமல் திறன்-சார்ந்தவர்களாக மாற்றி நிறுவனங்களுக்கான தொழிலாளர்களாக ஆக்குவதுதான் பொதுப்பாடத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது” என்று கூறுகிறார்.

‘மூட்டா’ அமைப்பின் பொதுச் செயலாளரான நாகராஜன், “மாநில உயர்கல்வி மன்றம், பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு முன்வைக்கும் காரணங்கள் மொன்னையாக உள்ளன. ஒன்று ஈக்குவலன்ஸ் (சமநிலை) பிரச்சினை. இன்னொன்று, வெர்ட்டிகல் மொபிலிட்டி. இந்த வாதம் அடிப்படையிலேயே தவறு” என்கிறார்.


படிக்க: சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!


மேலும், “இந்தச் சமநிலைப் பிரச்சினையை பல்கலைக்கழகங்களே தங்களுக்குள் முடிவு செய்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இது தெரியாமல் உயர்கல்வி மன்றம் குழப்புகிறது. ஒரு மாணவன் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான். சில நேரங்களில் இரண்டாமாண்டில் அவன் வேறொரு கல்லூரியில் சேர நேரிடும். இதைத்தான் ‘வெர்ட்டிகல் மொபிலிட்டி’ என்பார்கள். வேறு வேறு பாடத்திட்டங்கள் இருந்தால் இதுமாதிரியான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுப் பாடத்திட்டம் இருந்தால் சிக்கல் வராது என்கிறார்கள். அதுவும் தவறு. பொதுப் பாடத்திட்டங்களை கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கல்லூரியில் ஒரு பாடம் முதலாமாண்டில் இருந்தால் இன்னொரு கல்லூரியில் மூன்றாமாண்டில் இருக்கும். வெர்ட்டிகல் மொபிலிட்டி பிரச்சினைக்கு பாடத்திட்டம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அடிப்படைக் கட்டுமானங்களை ஒரேமாதிரி வைத்தால் போதும்…” என்று கூறுகிறார்.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் 800-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களோடு முதலில் இருப்பது தமிழ்நாடு தான். 2022 தேசிய தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டின் 32 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தன்னாட்சி நிறுவனங்களே. சான்றாக, சென்னை மாநிலக் கல்லூரி அதில் 3-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிலவரம் இப்படி இருக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உயர் கல்வித்துறையை மேம்படுத்தத்தான் இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக கூறுவது பெரிய சதித்திட்டமாகும்.

நாங்கள் பா.ஜ.க-விற்கு நேர் எதிரானவர்கள் என்று கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் பல அஜெண்டாக்களை நிறைவேற்றி வருகிறது தி.மு.க. ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்து மாணவர்களுக்கு இந்துத்துவ கொள்கைகளை  கற்றுத்தர வழிவகை செய்துள்ளது திமுக அரசு. தற்போது, பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.

இத்திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு அடிமை கூட்டமாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு. முதலாளித்துவ கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க-விற்கு எந்த அளவிலும் தி.மு.க சளைத்தது இல்லை என்பதையே இந்நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது.


இராவணன்

எந்த ஆயுதமேந்த…….. | கவிதை

ந்த ஆயுதமேந்த……..

ஈரெட்டு இட்லிகளை
எடுக்க முடியும்
ஒரு அவியலில்..

வேகும் நேரத்தில்
விருப்பமான ஓர் முழு பாடலையும்
பாடிட முடியும் என்னால்..

புத்துணர்ச்சி தரும் புரட்சி பாடலாகவும் இருக்கலாம்
அல்லது
என் மீதான கழிவிரக்கத்தினைச்
சொல்லும் சோகப்பாடலாகவும் இருக்கலாம்…

அடுக்களைவிட்டு வெளியே போய்
முகங்கழுவி புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறிய அளவிலான நேரமும் கிடைக்கும்..

அதனாலேயே
இட்லி எனக்கு பிடித்தமானதாக இருக்கலாம்

அதற்காக
இட்லி அவித்து கொண்டே இருக்க முடியாது
காலம் முழுவதும்…

தோசை சுடுவதென்பது வரமுமல்ல
வட்ட தோசையாய் வராவிடில்
குறைசொல்ல வரும் குடும்பமே..

திருப்பிப் போடும் முன்போ
திருப்பிப் போட்ட பின்போ கருகிவிடக் கூடாது
அப்படி கருகினால்
அடுக்களைப் பக்கமே எட்டிப் பார்க்காத எருமை
என்னை அறையலாம்..

குடும்பமே கோவில்
கணவனே தெய்வம் என்பதால்
ஆக்கவும் அழிக்கவும்
அடிக்கடி அடிக்கவும்
அவனுக்கே அதிகாரம் அதிகமாய்..

ஐவர் இருக்கும் வீட்டில்
ஐந்து வித தோசை
நெய் தோசை சாதா தோசை
பேப்பர் ரோஸ்ட் முட்டை தோசை
பொடி தோசையென
அனைத்தும்
சுட்டு முடிக்கும்முன்
சூடும் வாங்க வேண்டும்
தோசைக்கல்லில்..

கையை மடக்கியபடியே
கை வலியை பொறுத்தபடியே
கால்கடுக்க நின்று
உங்களால் எத்தனை தோசையை சுட்டுவிட முடியும்…

நீண்ட நேரத்திற்கு மட்டுமல்லாது
நீ..ண்ட காலத்திற்கு அடுக்களையிலேயே நிற்க வைத்திருக்கும் வலி என்னவென்று
எங்களுக்குத்தான் தெரியும்..

பூத்தொழுகும் வியர்வையையும்
புதைக்கப்பட்ட கனவினையும்
புழுக்கமான உடம்பையும் பிசைந்து
எண்ணெய்ப்பிசுக்கான
அடுப்படிச் சுவற்றில் ஓவியமாக தீட்டியுள்ளதை
பார்த்தும்
பார்க்காதுபோல் இருக்கும்
உங்களிடம்
கேட்க ஒரு கேள்வி இருக்கிறது

இட்லியா தோசையா என்ற கேள்வியில்லை

நாங்கள் விடுதலை பெற
எந்த ஆயுதத்தை எடுக்க
என்பது மட்டும் தான் அந்த கேள்வி….!


ஏகலைவன்

ஒரே நாடு,  ஒரே தேர்தல்! மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை எதிர்கொள்வோம்!

02.09.2023

ஒரே நாடு,  ஒரே தேர்தல்!

மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும்
போரை எதிர்கொள்வோம்!

பத்திரிகை செய்தி

ரே நாடு , ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இம்மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

செலவினங்களை குறைப்பது, வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது, ஒன்றிய அரசுக்கு இருக்கக்கூடிய நிர்வாக மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளை சரி செய்வது என ஒப்புக்கு சப்பில்லாத பல்வேறு சால்ஜாப்புகளையே மோடியின் ஊடகங்கள் பிரச்சாரங்களாக தொடங்கிவிட்டன.

நரேந்திர மோடி உலகம் சுற்றுவதற்கு பல ஆயிரக்கணக்கான கோடிகள், இராணுவத்துக்கு பல லட்சம் கோடிகள், சமீபத்திய சிஏஜி அறிக்கையில் அம்பலமான பல லட்சம் கோடிகள் என ஊழலும் ஊதாரித்தனங்களும்  மேற்கொண்டு  நாறிப் போய் இருக்கிறது பாசிச மோடி அரசு. இப்படிப்பட்ட யோக்கியவான்கள் தான்  செலவினங்கள் அதிகமாகிறது, ஆகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்கிறார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது   பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடிய இந்த நாட்டின், தேசிய இனங்களின் அனைத்து வகையான உரிமைகளையும் பறித்து இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாற்றக்கூடிய பாசிச நடவடிக்கை. இந்த பாசிச நடவடிக்கையை  நிறைவேற்றுவதற்கு கேடுகெட்ட பாசிச  அணுகுமுறையை  பாசிச மோடி  – அமித்ஷா கும்பல் முன்னெடுத்திருக்கிறது.


படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பாக எந்த மாநிலத்திடமும் கருத்து கேட்கவில்லை. பெரும்பான்மை மக்கள் பங்கு பெறக்கூடிய தேர்தல் தொடர்பாக இந்த நாட்டின் மக்களிடத்திலும் கருத்து கேட்கவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு,  அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிறப்பாக நடத்தப்படும் தேர்தல், என்றெல்லாம் பெருமையாக பீற்றிக் கொண்ட ஜனநாயகத்தையும் ஆழ குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் மோடி அமித்ஷா – பாசிச கும்பல்.

மொத்த நாட்டையும் அதானி அம்பானி பாசிஸ்ட்டுகளுக்கு விற்பதற்கு மாநில உரிமைகள் தடையாக இருக்கின்றன என்பதை உண்மை. மாநிலத் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் மாநில தேர்தல் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இதன் உண்மையாக நோக்கமாக இருக்கிறது.

பாசிச கும்பல் தனக்கு ஏற்றபடி மொத்த நாட்டையும்  மாற்றிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தான் தேர்தலையும் மாற்றுகிறது.

இந்த கேடுகெட்டத் தேர்தல் அமைப்பிற்குள் நாம் சாதிக்க முடியும்  என்பதே மூடநம்பிக்கை. இதை மண்டும் மீண்டும் மோடி, அமித்ஷா பாசிச கும்பல் நமக்கு உணர்த்துகிறது.

ஆர் .எஸ் எஸ் –  பாஜக பாசிச கும்பல் தோற்றுக் கொண்டிருப்பதன் அடையாளம் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகள்.


படிக்க: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !


அச்சப்படுவதற்கு ஏதுமில்லை, இந்த நாட்டின் மக்கள் மீது வெளிப்படையான போரை அறிவித்திருக்கிறது மோடி –  அமித்ஷா பாசிச கும்பல்.

எதிரிகள் நம் மீது போரை அறிவித்திருக்கும் போது நாம் பதுங்குவதற்கும் மறைவதற்கும் இடம் ஏதும் இல்லை.  ஆர் .எஸ் .எஸ்- பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக என்று உரத்து முழங்குவோம்! நம் முழக்கத்தின் அதிர்வுகளில் பாசிச கோட்டைகள் தூள் தூளாக நொறுங்கட்டும்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்கு குறைவான எதுவும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி  -அதானி பாசிசத்துக்கு மாற்று இல்லை !

வேண்டாம் பாஜக!  வேண்டும் ஜனநாயகம்!

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம் : கோழைகளின் வீராவேசம்!
♦ சந்திரயான்-3 : போலி தேசப்பெருமித போதை!
♦ தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!
♦ “ஊழல் நாயகன்” மோடி!
♦ ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா”? பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது?
♦ அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!
♦ இந்திய தண்டனைச் சட்டம்: இனி இந்துராஷ்டிர தண்டனைச் சட்டம்!
♦ கார்ப்பரேட் அதானியின் கோரப்பிடியில் காட்டுப்பள்ளி!
♦ நைஜர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு: ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டி!
♦ பொதுப் பாடத்திட்டம்: தி.மு.க. அரசின் மற்றொரு கார்ப்பரேட் சேவை!

சங்கி மண்ணாக மாற்ற முயற்சிக்கிறார்கள்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

சங்கி மண்ணாக மாற்ற முயற்சிக்கிறார்கள்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலரை தடைசெய்! | தோழர் தீரன்

தினமலரை தடைசெய்! | தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

இந்தி திணிப்பு – அதிகார குவிப்பு – சர்வாதிகார போக்கு | வழக்குரைஞர் பாரதி

இந்தி திணிப்பு – அதிகார குவிப்பு – சர்வாதிகார போக்கு | வழக்குரைஞர் பாரதி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!

0

மாணவி அனிதா நீட் தேர்வை ஒழிக்க உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார். ”நீட் தேர்வுக்கு பயிற்சி எடுக்க என்னிடம் பணம் இல்லை. போதிய வசதி இல்லை. என்னை போன்று பல மாணவர்களின் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற நீட் தேர்வை ஒழியுங்கள்” என்று அனிதா நம்மிடம் கூறிச்சென்றார். அனிதா நம்மைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வினால் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் நீட் தேர்வை தமிழ்நாட்டில் தடைசெய்ய முடியவில்லை.

நீட் தேர்வின் மூலம், தனியார் மருத்துவ நிறுவனங்களும், நீட் பயிற்சி மையங்களும் வருடா வருடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்றோர்களிடமிருந்து கொள்ளையடித்து கொழுத்து வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்று படித்துவரும் அனிதா போன்ற ஏழை மாணவர்கள், உண்மையில் மருத்துவர்களாக மாறுவதென்பது அக்கிராமங்களின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும். மக்களுக்கு சேவையாற்றும் மனம் கொண்ட மக்கள் நல மருத்துவர்களை உருவாக்கும். அனிதா தற்போது மருத்துவராகி இருந்தால் அவரது கிராமத்திற்கு மக்கள் நல மருத்துவராக சென்றிருப்பார். அந்த மக்கள் நல மருத்துவர் என்ற தன்மையை அகற்றி, மருத்துவர்களையும் மருத்துவத் துறையையும் கார்ப்பரேட்மயமாக்குவதை தீவிரப்படுத்தியுள்ளது பாசிச மோடி அரசு திணித்த இந்த கொலைகார நீட் தேர்வு. காசு இருப்பவரே மருத்துவராக முடியும் – மருத்துவரானால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் மக்கள் நல மருத்துவம் என்பதை ஒழித்துக்கட்டி கார்ப்பரேட் நல மருத்துவத்தை மருத்துவத்துறையில் திணித்துள்ளது நீட் தேர்வு.

அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவ படிப்பிற்குள் செல்லும் பிரபஞ்சன்கள் நீட் தேர்வை விற்பனை செய்யும் விளம்பரதாரர்களாக கார்ப்பரேட்டுகளால் முன்னிறுத்தப்படுகிறார்கள். “நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மருத்துவராகலாம், நீ ஒழுங்கா படித்து மருத்துவராக வேண்டியதுதானே” என்று காவி-கார்ப்பரேட் பாசிசக்கூட்டம் கூச்சலிடுகிறது. ஆனால் நீட் தேர்வில் 427 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரனால் மருத்துவராக முடியவில்லையே ஏன்? நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் இலட்சக்கணக்கில் பணம் கட்டினால்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற அநீதியை கொண்டு ஜெகதீஸ்வரனை கொன்றுவிட்டார்கள் மருத்துவ மாஃபியாக்கள்.


படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!


பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல். மருத்துவ கனவு கொண்ட ஏழை மாணவர்களுக்கு மட்டும்தான் தெரியும் நீட் கார்ப்பரேட் நலன் கொண்டது என்று. பின்புலம் இருக்கும் பிரபஞ்சன்களால் இதனை புரிந்து கொள்ள முடியாது.

அனிதா மரணித்த செப்டம்பர் 1, 2017 அன்று ஏழை மாணவர்களை நீட் தேர்வு என்ன நிலையில் வைத்திருந்ததோ அதே நிலைதான் தற்போது வரை வைத்திருக்கிறது. நீட்டுக்கு எதிரான குரல்களும் அதே கொதிநிலையில்தான் இருக்கின்றது.

அனிதா முதல் ஜெகதீசன் வரை பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காவு வாங்கியும் தமிழ்நாட்டில் நீடித்துக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு. நீட் தேர்வை நான் ஒருபோதும் தடைசெய்ய மாட்டேன் என்று திமிராக பேசித் திரிகிறார் காவி – கார்ப்பரேட் பாசிச ஆளுநர் ஆர்.என். ரவி. மாணவர் ஜெகதீசன் மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடிய பயாஸ்தீன்களின் அழுத்தத்தின் காரணமாக ஆளும் திமுக கட்சியே உண்ணாவிரதப் போராட்டங்களில் இறங்கியிருக்கிறது. ஆனாலும் நீட் எனும் கொலைகாரனைத் தடை செய்ய முடியவில்லை. எனவே நீட் தேர்வையும் – அதை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிசக் கும்பலையும் மாபெரும் களப்போராட்டங்களை கட்டியமைக்காமல் தடைசெய்ய முடியாது. நீட்டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று அனிதாவின் நினைவுநாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்!


காளி

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வை தடைசெய்! | தோழர் தீரன்

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வை தடைசெய்! | தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகள்: பேராபத்தைக் காண மறுக்கும் பாசிச மோடி அரசு!

மாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிர மழைப்பொழிவும் பெருவெள்ளமும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமான ஆலங்கட்டி மழையும், அதன்பிறகான மழை வெள்ளமும் ஆப்பிள் விளைச்சலை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக 1100 விழுக்காடு கூடுதலான மழைப்பொழிவைப் பெற்றிருக்கிறது. அதேபோல் பஞ்சாபின் 12 மாவட்டங்களில் 1100 விழுக்காடு முதல் 7600 விழுக்காடு வரையில் கூடுதல் மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. முன்னதாக 2021-இல் உத்தரகாண்ட் மாநிலம் பேரழிவை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வடமாநிலங்களில் இது போன்ற பேரழிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உலகம் அதிர்ச்சியுற பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு இது குறித்த ஆய்வில் சர்வதேச ஆய்வாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்ற பேரழிவுகளுக்கும் இமயமலையின் பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகி வருவதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளனர்.


படிக்க: ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?


இமயமலை மற்றும் இந்துகுஷ் வட்டாரத்தில் 50,000 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன. அவற்றில் 30 மட்டுமே உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் இளம் மலைத்தொடரான இமயமலையின் பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகிக் கொண்டிருப்பதானது பேரபாயம் மிக்கதாக உள்ளது.  புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நிலைமையை மோசமாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

2009-அம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 127 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு செயற்கைக்கோள் வெளியிட்ட படங்களை ஆய்வு செய்த சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது. இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவது தற்போது தொடர் நிகழ்வாகிவிட்டது.

பனிப்பாறைகள் உருகுவது பற்றி இந்திய அரசு நிறுவனங்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று கடுமையாக ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.


படிக்க: அபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு !


மூத்த பனிப்பாறை நிபுணரான டாக்டர் டி.பி. டோபல் “நாங்கள் 2009-இல் பனிப்பாறைகளைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு மையத்தைத் தொடங்கினோம். இதை இந்திய பனிப்பாறைகள் தேசிய மையமாக உருவாக்கவும் திட்டமிடப்படிருந்தது. இது நடக்காததால் பனிப்பாறை குறித்த ஆய்வு பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.

அதேபோல் இந்திய அரசின் காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் கீழ், எட்டு தேசிய பணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று “இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பது”. அதன் நோக்கம் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பின் பனிப்பாறைகளைப் புரிந்து கொள்வதும், அவற்றின் தற்போதைய  ஆரோக்கியத்தை மதிப்பிடுவதும், தரவுகளை உருவாக்குவதும், புதிய முறைகளைப் பின்பற்றுவதும்” ஆகும்.

ஆனால், பாசிச மோடி அரசோ இமயமலையின் தற்போதைய ஆபத்தான  நிலைமை குறித்து எந்த அக்கறையும் காட்டாமல் இரத்தம் குடிக்கும் ஓநாயைப் போல காவி கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக நாடு முழுவதும் மதக்கலவரங்களை உருவாக்கி வருகிறது; அதானி – அம்பானிகளுக்காக சேவை செய்து வருகிறது.

புவி வெப்பமடைதல் எனும் உலகளாவிய பிரச்சினையின் அங்கமே இமயமலை பனிப்பாறைகள் உருகுவதாகும். ஏகாதிபத்தியத்தின் இலாபவெறியானது புவி வெப்பமடைதலை பாய்ச்சல் வேகத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதைக் கேள்வியெழுப்பாமல் சுற்றுச்சூழல் பேரழிவை ஒரு அங்குலம் கூட தடுத்து நிறுத்த முடியாது.


அய்யனார்

வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! – மதுரையில் சுவரெழுத்து அழிப்பு! ஜனநாயக சக்திகள் கண்டனம்

வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! –
மதுரையில் சுவரெழுத்து அழிப்பு! ஜனநாயக சக்திகள் கண்டனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலரின் பார்ப்பன கொழுப்பு! | தோழர் மருது

தினமலரின் பார்ப்பன கொழுப்பு! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலம் என்று சொல்லலாம்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

தினமலம் என்று சொல்லலாம்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

தினமலரை செருப்பை கழட்டி அடிக்கணும்.. | தோழர் மருது

தினமலரை செருப்பை கழட்டி அடிக்கணும்..

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!