நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் ரசியப் புரட்சி தினத்தன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புதிய ஜனநாயகம் முதல் இதழ் வெளியானது. 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து வெளிவரும் ஒரே அரசியல் இதழ் புதிய ஜனநாயகம் ஆகும். பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இன்றளவும் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகம் உழைக்கும் மக்களின் போர்வாளாக திகழ்ந்து வருகிறது.
புதிய ஜனநாயகத்தின் வெற்றிகரமான பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும், வாசகர்களுக்கும், முகவர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடதுசாரி இயக்கங்களும் வார, மாத, தினசரி இதழ்களை கொண்டுவருகின்ற போதிலும் அவை அனைத்தும் அந்தந்த அமைப்பு சார்ந்த அணிகளுக்கு அமைப்பின் நிலைப்பாடுகள் அரசியல் போக்குகள் குறித்த சில விமர்சனங்கள் மற்றும் அமைப்புச் செய்திகளைத் தெரிவிப்பதற்கானவையாகவே இருந்து வருகின்றன.
ஆனால், புதிய ஜனநாயகமானது வெகுஜன மக்களிடம் புரட்சிகர அரசியலைக் கொண்டு சேர்க்கும் வகையில் வெளிவரும் ஒரே மார்க்சிய-லெனினிய பத்திரிகையாகும்.
மேலும், புதிய ஜனநாயகம் தேசிய, சர்வதேசிய அரசியல் போக்குகள், சமூக பொருளாதார நிலைமைகள், மக்களின் வாழ்வாதார சிக்கல்கள் மற்றும் அவர்களின் போராட்டங்களை அலசி ஆராய்ந்து சமூகத்தின் பார்வைக்கு வைப்பதுடன் நின்று கொள்வதில்லை. அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை மாற்றி அமைப்பதற்கான மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் முன்வைக்கிறது. அவற்றுக்கான சமூக அரசியல் பொருளாதார மாற்றுக் கட்டமைப்பை முன்மொழிகிறது என்பதே புதிய ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பதை வாசகர்கள் அறிவர்.
புதிய ஜனநாயகம் ஏடு தனித்த சில அறிவுஜீவிகளால் மட்டும் நடத்தப்படுகின்ற இதழாக இல்லாமல் தன்னை ஒரு அமைப்பின் அரசியல் சார்ந்து ஒழுங்கமைத்துக் கொண்டிருப்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புதிய ஜனநாயகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் ஜனநாயக சக்திகள் மற்றும் பாசிச எதிர்ப்புப் போராளிகளின் அரசியல் கண்ணோட்டத்தை கூர்மைப்படுத்தியதுடன் அரசியல் உணர்வையும் வளர்த்தெடுத்தது.
இந்த 40 ஆண்டு கால வரலாற்றில் அவற்றில் முக்கியமான சிலவற்றையாவது குறிப்பாக எடுத்துக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.
1967 நக்சல்பாரி எழுச்சி அன்றைய வலது, இடது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சமரச சந்தர்ப்பவாதத்திற்கு பலத்த அடியை கொடுத்தது. நக்சல்பாரி புரட்சியைத் தொடர்ந்து உருவான மார்க்சிய-லெனினியக் கட்சித்தலைமை மார்க்சிய-லெனினிய தத்துவத்தை உட்கிரகித்துக் கொண்டு அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறாமல் இடது தீவிரவாத சாகசப்பாதையில் சரிந்தது.
சித்தாந்த ரீதியில் அவர்களது இயக்க மறுப்பியல் வகைப்பட்ட ஒருதலைப்பட்சக் கண்ணோட்டம் அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தியது. கட்சித் தலைமையின் கீழ் மக்களை அணிதிரட்டும் ஆற்றலை இழக்கச் செய்தது. அந்த முக்கிய வரலாற்றுக்கட்டத்தில் இந்திய புரட்சிக்கான புதிய பாதையை, மக்கள் திரள் பாதையை வரையறுத்து முன்வைத்தது புதிய ஜனநாயகத்தின் அரசியல் தலைமை. இந்தியப் புரட்சியின் வரலாற்றில் அது ஒரு மைல் கல்லாகும்.
1990-களில் காங்கிரஸ் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டையே திறந்துவிடும் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கைகளை இந்தியாவின் முன்னேற்றத்துக்கானது என்று பார்ப்பன-கார்ப்பரேட் ஊடகங்கள் பரப்புரை செய்து வந்த நேரத்தில், அதனை தோலுரிக்கும் வகையில், அது நாட்டை அடகு வைக்கும் திட்டம் என்றும் காட் ஒப்பந்தம் என்பது மறுகாலனியாக்க ஒப்பந்தம் என்றும் முதன் முதலில் உரத்துச் சொன்னது புதிய ஜனநாயகம்தான். அதற்காக காட்டாட்சி என்ற ஒரு தனி வெளியீட்டை கொண்டு வந்தது.
அயோத்தியில் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக குழந்தை ராமன் சிலை வைக்கப்பட்டதை தொடர்ந்து, பூட்டப்பட்டு கிடந்த மசூதியில் ராஜீவ் காந்தி ராமனை வழிபட இந்துக்களுக்கு கதவை திறந்து விட்டதை மதவெறி கலவரங்களுக்கு முதற்கொள்ளி என்று விமர்சித்தது புதிய ஜனநாயகம்.
அதைத்தொடர்ந்து அயோத்தி மசூதியை இடித்து தகர்த்த இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக துரும்பையும் அசைக்காத நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியையும் அந்த வழக்குகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பலுக்கு சாதகமாக அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஜனநாயகத்தின் சார்பாக நின்று அழுத்தமான பதிவுகளை எழுதியது புதிய ஜனநாயகம். இஸ்லாமிய மக்கள் அன்றும் இன்றும் புதிய ஜனநாயகத்தின் நேர்மையை பாராட்டுகின்றனர்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அதுவரையிலும் ஈழப் போராட்டத்தை ஆதரித்து போராளி குழுக்களுக்கு எல்லா வகையிலும் உதவிக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்டு நீக்கமற தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒரு பிரதமரின் படுகொலையை எப்படி நியாயப்படுத்த முடியும்? என்று நிலைதடுமாறி அமைப்பு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முடங்கிப் போயினர். அப்பொழுது ராஜீவ் காந்தியின் படுகொலை “பழிக்குப் பழி” என்று அட்டைப்படம் போட்டு கட்டுரை வெளியிட்டது புதிய ஜனநாயகம். அதன் பிறகுதான் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர்.
ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு தி.மு.க-வின் மீது பயங்கரவாதப் பழி சுமத்தி மக்களை ஏய்த்து ஆட்சியைப் பிடித்தது பாசிச ஜெயா கும்பல். ஜெயாவின் ஆட்சிக் காலத்தை தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்றும் அ.தி.மு.க. கட்சி என்பது ஒரு பிழைப்புவாத பொறுக்கி கும்பல் என்றும் அடையாளப்படுத்தியது. பாசிச ஜெயா கொண்டு வந்த மதம் மாறும் தடைச் சட்டம், கிடா வெட்டும் தடைச் சட்டம் போன்ற அனைத்தையும் மக்கள் போராட்டங்களால் முறியடிக்க வேண்டும், எதிர்க்கட்சிகளின் வருகைக்காக காத்திருக்க முடியாது என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தது புதிய ஜனநாயகம்.
தமிழ்நாடு மற்றும் இந்திய பார்ப்பன ஊடகங்கள் அனைத்தும் ஜெயாவின் சட்டவிரோத மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கூட துணிச்சலானவை என்றும் ஜெயா தீரமும் தைரியமும் மிகுந்தவர் என்றும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையிலும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் மீதும் உழைக்கும் மக்களின் மீதும் வெறுப்புணர்வு கொண்ட பாசிஸ்ட் என்பதை புதிய ஜனநாயகம் துணிவுடன் எழுதியது. பாசிச ஜெயா தமிழ்நாட்டைப் பிடித்த நோய்; தமிழ்நாட்டை உருக்குலைக்க வந்த சதிகாரி என்றெல்லாம் அட்டைப்படம் போட்டு எழுதியது.
பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்களை போட்டுக் கொண்டு முற்போக்கு பேசி தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு சாதி வெறியூட்டி வன்னியர் மக்களை திரட்டி வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பா.ம.க. ராமதாஸ் ஒரு பச்சோந்தி என்று அட்டைப்படம் போட்டதை ஜனநாயகவாதிகள் பலரும் வரவேற்றனர் (பா.ம.க-வினர் வடமாவட்டங்களில் பல ஊர்களில் கடைகளில் இருந்த இதழ்களை பணம் கொடுத்து வாங்கி கிழித்தெறிந்தனர்).
அதேபோல், தமிழீழ மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தனி ஈழக் கோரிக்கையை, ஆயுதப் போராட்டத்தை தமிழ்நாட்டின் பல்வேறு தமிழ் இனவாத அமைப்புகளும் தனிநபர்களும் இங்கு தத்தமது நோக்கங்களுக்கேற்ப தேர்தல் வாக்கு அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.
அந்நிலையில் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளை வீழ்த்த இலங்கையில் வர்க்க ஒற்றுமையின் தேவையை உணர்த்தியவாரே “ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரிப்போம்” என்று வர்க்க கண்ணோட்டத்துடன் சரியான முழக்கத்தை முன்வைத்து ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.
புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடுகள் மிகச் சரியானவை என்பதை 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் முடிவுகள் அழுத்தமாகப் பதிவு செய்தன. உலகம் முழுவதும் இருக்கும் தமிழின விடுதலையை விரும்பும் ஜனநாயகவாதிகள் பலரும் அவற்றை உணர்ந்து ஏற்றனர். இறுதியாக பாசிச ராஜபக்சேவை நாட்டைவிட்டே விரட்டியடித்து உலகின் முகத்தை தம்பக்கம் திருப்பிய சிங்கள, தமிழ் மக்களின் எழுச்சி புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை கல்வெட்டில் செதுக்கின என்றால் மிகை இல்லை.
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆளும்வர்க்கப் பத்திரிகைகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகையில் புதிய ஜனநாயகம் உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக நின்று ஒவ்வொரு போராட்டங்களின் அனுபவங்களையும் தொகுத்து மக்கள் முன்னால் எடுத்து வைத்துள்ளது.
1990-களில் நடந்த அமெரிக்க-ஈராக் வளைகுடா போரில் தொடங்கி, செக்கஸ்லோவேக்கியா, யுகோஸ்லோவியா ஆகிய மறைந்து போன நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திய உள்நாட்டுப் போர்களைப் பற்றியும் எரித்திரியாவின் தேச விடுதலைப் போராட்டத்தை பற்றியும் இன்று நடந்து வருகின்ற ரஷ்ய-உக்ரைன் போர், இஸ்ரேல் காசா மீது நடத்தி வருகின்ற போர்வெறி தாக்குதல் வரையிலும் எல்லா தேசிய சர்வதேசிய அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளில் மார்க்சிய லெனினியக் கண்ணோட்டத்தில் இருந்து பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டினை முன்வைத்திருக்கிறது.
எகிப்திலும் துனிசியாவிலும் நடந்த மக்கள் எழுச்சிகள் யாவும் பாசிச சர்வாதிகார ஆட்சிகளை பணியவைத்தன என்றாலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்சியும் அதன் தலைமையிலான ஒரு ஐக்கிய முன்னணியும் இல்லாத நிலையில் அப்போராட்டங்கள் ஒரு போதும் அதன் நோக்கத்தை அடைய முடியாது என்பதை புதிய ஜனநாயகம் மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துவைத்தது.
எல்லா காலக்கட்டத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று கூறிக்கொள்வோர், இந்திய இடதுசாரி பிரிவினர் எனப்படுவோர் பலரிடமும் நிலவிய பின்நவீனத்துவம் உள்ளிட்ட பலவகையான ஏகாதிபத்திய சித்தாந்தங்களையும் மற்றும் வர்க்க சமரச சந்தர்ப்பவாதக் கண்ணோட்டங்களையும் எதிர்த்து தொடர்ந்தும் சித்தாந்த போராட்டம் நடத்தி ஏகாதிபத்திய சித்தாந்தங்களை தோலுரித்திருக்கிறது புதிய ஜனநாயகம்.
ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் பாசிச சர்வாதிகாரம் மேலேறித் தாக்கும் இன்றைய காலத்தில் உழைக்கும் மக்களைச் சகோதர யுத்தங்களில் ஈடுபடுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுகிறது பாசிசக் கும்பல். இந்த அயோக்கியத்தனங்களுக்கு எதிராக எல்லா நிலைகளிலும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது புதிய ஜனநாயகம்.
ஆட்சியாளர்களான பாசிசக் கும்பல், உழைக்கும் மக்களின் பண்பாட்டுத்தளங்களில் இயல்பாக வெளிப்படும் சின்னஞ்சிறிய வேற்றுமைகளை எல்லாம் பெருக்கிக்காட்டி, உழைக்கும் மக்களை பலவகைப் பிரிவுகளாய், சிறு சிறு குழுக்களாய் உடைத்துப் பிரித்து மோதிக்கொள்ளச் செய்கின்றது. மக்களின் முதன்மையான வர்க்க அடையாளத்தை பின்னுக்குத் தள்ளி மறைத்து, சாதி, மத, இன, மொழி அடையாளங்களை கூர்தீட்டி அடையாள அரசியலாக முன்னுக்குத் தள்ளுகின்றன என்றபோதிலும் அவையெல்லாம் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் எவற்றையும் தடுத்து நிறுத்தி விடுவதில்லை. உழைக்கும் மக்களின் அத்தகைய எல்லா போராட்டங்களுக்கும் புதிய ஜனநாயகம் தன் ஆதரவுகரங்களை நீட்டி இருக்கிறது, வழிகாட்டியிருக்கிறது.
அத்துடன், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அதானி – அம்பானி பாசிசக் கும்பல் இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் எல்லா தாக்குதல்களையும் செய்யும் எல்லா அட்டூழியங்களையும் அவற்றின் காரண காரியங்களை எடுத்துக்காட்டுவதுடன் அனைத்துத் தருணங்களிலும் அவற்றை எதிர்த்துச் செயலாற்றி இருக்கிறது.
மேலும், இன்று பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் கூட நடைமுறையில் பாசிசத்தைப் பற்றிய அச்சத்தையும் அதன் ஆபத்தையும் பிரச்சாரம் செய்வதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இது தவிர்க்கவியலாமல் மக்களை மேலும், குழப்பத்தில் ஆழ்த்துகிறது. புதிய ஜனநாயகம் மட்டுமே பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றை முன்வைக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் பிணைக்கிறது.
இனியும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அதானி – அம்பானி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கருத்தியல் தளத்தில் முன்னணி பாத்திரத்தை செவ்வனே ஆற்ற உறுதியேற்கிறோம். அனைவருக்கும் நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
ரஷ்ய சோசலிச புரட்சி நாளை ஒட்டி மார்க்சியத்தை சமூக சூழலுடன் பொருத்துவது, சமூகத்தின் தன்மை புரட்சியின் தன்மை ஆகியவற்றைத் தீர்மானிப்பது தொடர்பாக புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரையை வெளியிடுகிறோம். மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று சொல்லி மார்க்சியத்தின் அடிப்படைகளை நிராகரிக்கும் திரிபுவாத போக்குகளைப் புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும்.
***
இந்தியப் பொதுவுடைமை இயக்கம்
வலது, இடது வரலாறு: மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?
ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் என்றால் எப்படியும் பேசுவார்கள், கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனதுதான். ஆனால், “அட இப்படியும் பேச முடியுமா” என்று ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டார், சீனிவாசன்.
இவர் நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார். ”ஒரு மூத்த கம்யூனிஸ்ட்” தலைவர் திடீரென்று, அக்கட்சியின் பரம எதிரியும், இந்து மதவெறி பாசிசக் கட்சியுமான பாரதீய ஜனதாவுக்கு எப்படி மாறினார்? ஏதாவது ஒரு முற்போக்கு சாயலுடைய கட்சிக்குத் தாவினால் கூட கொஞ்சமாவது நியாயமிருக்கும்.
சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.
”முன்புகூட சில சி.பி.ஐ. பிரமுகர்கள், தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போயிருக்கிறார்கள். கடந்த தலைமுறையில் மோகன் குமாரமங்கலம், நந்தினி சத்பதி, கே.ஆர். கணேஷ் போன்ற சில தலைவர்கள் காங்கிரசு – இந்திரா மூலமாக சோசலிசத்துக்குப் பாதை போடுவதாகச் சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், இப்படியா!” திகைத்து நிற்கிறார்கள், அக்கட்சியில் சிலர்.
”பிழைப்புவாதம் எந்த வயதிலும் வரலாம், இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சமாதானம் கூறுகிறார், கட்சியின் இளைய – புதிய தலைவர் மகேந்திரன்.
ஆனால், கட்சி மாறிய சீனிவாசன், தனது செயலுக்குச் சித்தாந்தபூர்வமான நியாயம் சொல்லுகிறார். ”மார்க்சியத்தின் மறுவடிவம் பா.ஜ.க.”
”அது எப்படி முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகிறாரே” என்று நீங்கள் வியக்கலாம்.
”முடியும்” என்று சாதிக்கிறார். ”சிகப்பு வெளுத்தால் காவி” என்று கூடச் சொல்லவில்லை. “காவியும் ஒரு சிகப்பு வண்ணம்தான் – சாயல்தான் வேறு” என்று ”நிகழ்” காலத்துக்கு ஏற்ற ‘நிறப்பிரிகை”த் தத்துவம் பேசுகிறார்.
”இந்திய மண்ணில், இந்தியக் கலாச்சார மரபில், இந்தியத் தத்துவஞானத்தில் வேர்விட்டு, மார்க்சியத்தின் சிந்தனை வழியில் நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சியின் அமைப்பு விதியிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. வேதங்களையோ, உபநிஷத்துக்களையோ, இதிகாசங்களையோ, புராணங்களையோ, மகாபாரதத்தையோ, இராமாயணத்தையோ பற்றிக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எப்படிச் சிறந்த கம்யூனிஸ்டாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார், சீனிவாசன்.
மேலும், ”மார்க்சியம் என்பது விஞ்ஞானம். இதை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்த இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டார்கள். காங்கிரசு, திராவிட இயக்கங்கள் போன்றவற்றின் சித்தாந்தங்களும் காலாவதியாகிவிட்டன. மார்க்சிய சிந்தனைகளை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடிய கட்சி பா.ஜ.க. என்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன்.”
1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
“இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் இவற்றில் நாம் வேரூன்றி நிற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் வாதம். இது மார்க்சியத்தின் மறுவடிவம்தான்.” என்றும் கூறுகிறார்.
“ஒரு கம்யூனிசத் துரோகி கண்டதையும் பேசுவான். அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கொள்ளத் தேவையில்லை” என்று வெகு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியும். இது ரொம்ப எளிமையான கணக்கு! பாரதீய ஜனதாவோ இந்து வெறி பாசிச – பார்ப்பன சனாதனக் கட்சி, அதில் போய் சேருகிறவன் வேறு எப்படி இருப்பான், எதிரியின் அணியில் சேருபவன் வேறென்ன பேசுவான் என்பதுதான் அந்தக் கணக்கு.
சீனிவாசன் எதிரி முகாமுக்குப் போய் விட்டதாலேயே அவர் சொன்ன கருத்துப் பற்றிக் கணக்குப் போடுவது பலருக்கு எளிதாகப் போய்விட்டது. பா.ஜ.க.வின் எதிரி முகாமாகிய ”நம்மிடையே” இருக்கும் இவர்களுடைய கருத்துக்களையும் பற்றிக் கணக்குப் போடுவது அதே பலருக்கு சிக்கலாக உள்ளது. பல சமயம் தவறாகவும் போய் விடுகிறது.
பா.ஜ.க.வையும் மார்க்சியத்தையும் இணைப்பதற்கு சீனிவாசன் பயன்படுத்தியிருக்கும் சங்கிலி, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்.” முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியாக அவர் இந்து மத வெறி பாசிச – பார்ப்பன சனாதனத்தை மார்க்சியத்திற்குள் புதைத்து மோசடி செய்ய முயலுகின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தவிர, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசுவோர் பட்டியலில் சமீபத்திய அவதாரம்தான் இந்தத் துரோகி என்பது மற்றொரு உண்மை.
“இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இதுவரை மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைக் கடைப்பிடிக்கவில்லை” என்பது சீனிவாசனின் குற்றச்சாட்டு, ”பா.ஜ.க.தான் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றும் சரியான கட்சி” என்பது, அவர் எடுத்திருக்கும் முடிவு.
சீனிவாசனின் முடிவில் மாறுபட்டாலும் அவரது குற்றச்சாட்டில் முற்றாக உடன்படுபவர்கள் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளும், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், தலித்தியம், தமிழினம், திராவிடம், சமூகநீதி எனப் பல்வேறு பிரிவுகளாக உள்ளவர்கள் வெளியேயும் ஏராளம்.
உள்ளே இருப்பவர்கள் வெளியே போகும்போதெல்லாம், வெளியே இருப்பவர்களின் நிலைப்பாடுகளை பொதுவுடைமை இயக்கத்தவர்கள் விமர்சிக்கும் போதெல்லாம், ஏதோ முற்றிலும் புதிதாகச் சொல்லுவதைப் போல முன்வைக்கப்படுவதுதான் ”மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை” என்கிற வாய்ப்பாடு.
இவர்கள் அனைவரும் இரண்டு உண்மைகளை மறந்து விடுகின்றனர்.
முதலாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்கு எண்பது ஆண்டு கால வரலாறு உள்ளதென்றால், இந்த “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்கிற வாய்ப்பாட்டுக்கும் எண்பது ஆண்டுகால வரலாறு உண்டு.
இரண்டாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் இந்த எண்பதாண்டு கால வரலாற்றில், ஒரு சில குறிப்பிட்ட, குறுகிய காலங்கள் தவிர இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தியதே ”மரபு வழி மார்க்சியம்” அல்ல; ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” தான். ஆனாலும், ”இந்தியப் பொதுவுடைமை இயக்கம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வகுத்து வழி நடத்தவில்லை. அது வரட்டுத்தனமாக மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றித்தான் பரிதாபகரமாகத் தோற்றுப் போய்விட்டது” என்று விமர்சிக்கப்படுகிறது.
பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார்
இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” ”மரபு வழி மார்க்சியம்” என்கிற சொற்றொடர்களுக்கு ஒரே பொருள் விளக்கம் தருவதில்லை. அவரவர் நிலையில் நின்று பலவாறாக விளக்கங்களும் விமர்சனங்களும் தருகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய ஆன்மீகம், அகிம்சையை, ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் காந்தியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று சிலர் சொல்லுகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய தேசிய இனப்பிரச்சினை, சாதிய முறை போன்றவற்றை ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
இவ்விரு பிரிவினரின் கருத்துப்படி இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவியவர்களும், அதன்பின் தலைமையேற்றவர்களும் ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியத்தை அப்படியே பின்பற்றினார்கள் என்றாகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர்கள் என்று ”அறியப்படும் அனைவரும்” மரபுவழி மார்க்சியத்தை ஆரம்ப முதலே ஏற்க மறுத்தவர்கள். உலகப் பொதுவுடைமைக் கட்சிகள் எல்லாம் இணைந்திருந்த மூன்றாவது அகிலம், அதன் மூலமாக லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் வழிகாட்டுதலை நிராகரித்தவர்கள்தான் அவர்கள்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறு, இங்குள்ள தேசிய முதலாளிகள் முற்போக்கானவர்கள். மூன்றாவது அகிலத்தைச் சேர்ந்த போல்ஷவிக் (ரஷ்யப் பொது வுடைமைக் கட்சி) ஏஜெண்டுகளின் மரபுவழி மார்க்சியம் இதைக் கணக்கில் கொள்ளவில்லை. இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குப் பிரிவினருடன் ஐக்கியப்பட்டு, விடுதலையையும் சோசலிசத்தையும் சாதிப்பதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று சொல்லி, அந்த திசையிலே தான் பொதுவுடைமை இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள்.
”தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்று மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் பல பிரிவு வாதாடிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர், சென்னை சிங்காரவேலர். அதுவும் 1923-லேயே, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மண்ணில் – மே நாள் கொண்டாடியவர்; 1925-ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதுடன் அதில் நிறுவப்பட்ட பொதுவுடைமைக் கட்சிக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிங்காரவேலர்.
இந்தச் சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர். இவர் தனித்தன்மை வாய்ந்த, புரட்சியைச் சாதிக்கவல்ல, இரகசிய – சட்டவிரோத, ஆயுத பாணியாக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் ஒரு போதும் உடன்பாடு கொள்ளவில்லை.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் முன்பகுதி, காந்தியின் தலைமையிலான காங்கிரசுக்குள் பொதுவுடைமை இயக்க அமைப்புக்களை நிறுவி, விடுதலையையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அமைந்தது. அப்போது வன்முறை தவிர்த்த மார்க்சியமே காந்தியம்; புத்தரும் பொதுவுடைமையும், காந்தியமும் ஒன்றே; வழிமுறை மட்டுமே வேறானது. புத்தரின் வாரிசாகவே காந்தியம் அமைந்துள்ளது; புத்தரும் காந்தியும் போதிக்கும் அகிம்சை புரட்சியே சரியானது – இவைதான் சிங்கார வேலரின் ஆரம்பகாலப் பொதுவுடைமைக் கண்ணோட்டம்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார்.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி, பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்துக்குள்ளேயே பொதுவுடைமை கட்சியைக் கட்டி விடுதலையையும் சமதருமத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டது. இதற்காக சுயமரியாதை இயக்கத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை சமதருமக் கட்சியை நிறுவினார். இந்தக் காலத்தில் சிங்காரவேலர் கொண்டிருந்த பொதுவுடைமைக் கண்ணோட்டத்தில் காந்தியம் கைவிடப்பட்டிருந்தது; இருந்தாலும் அகிம்சை முறையில் விடுதலை – பொதுவுடைமையைச் சாதிக்கும் நோக்கம் நீடித்தது. சாதி – மத எதிர்ப்பு போன்ற சுயமரியாதைக் கூறுகளும் சேர்க்கப்பட்டிருந்தன.
சிங்காரவேலர் காங்கிரசில் இருந்த போது அதற்குள்ளாகவே, பொதுவுடைமை காணும் நோக்கோடு ”இந்துஸ்தான் பஞ்சாயத்து” என்ற அமைப்பை நிறுவினார். பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுமாறு கம்யூனிச அகிலம் கோரியபோது அதற்குப் பதிலாக “இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி” (தொழிலாளர் விவசாயக் கட்சி)யை நிறுவினார். 1925, கான்பூரில் பொதுவுடைமையாளர்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்று, கட்சிக்கும் தலைவராவதற்கு முன்பு, தொழிலாளர் அரசியல் கட்சியை நிறுவினார். அது பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைப் போன்று இயங்கும், (ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பிரதமரான) இராம்சே மாக்டனால்டு போன்றோரின் கருத்துக்களை வழிகாட்டும் தத்துவமாக ஏற்கும் என்றார்.
காங்கிரசில் இருந்து கொண்டு அதன் மூலம் பொதுவுடைமை இயக்கத்தையும் கட்டும் சிங்காரவேலரின் முயற்சி, பொதுவுடைமை கொள்கையில் உடன்பாடு கொண்ட தொழிலாளர் தலைவர்கள் என்று திராவிட – தமிழினவாதிகளால் போற்றப்படும் திரு.வி.க., சக்கரை (செட்டியார்) பூரீராமுலு போன்றவர்களாலேயே முறியடிக்கப்பட்டது. அதுவும் கண்ணியமான முறையில் இல்லை. தொழிலாளர் போராட்டத்துக்காக காங்கிரசு கொடுத்த நிதியை சிங்காரவேலர் கையாடல் செய்தார், பதவிக்காக முறைகேடாக முயன்றார், கான்பூர் சதி வழக்கில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார் என்கிற அவதூறு செய்து ஒதுக்கப்பட்டார்.
சிங்காரவேலரால் தலைமையேற்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள், அனைத்திந்திய தொழிலாளர் காங்கிரசின் தலைவர்களான வி.வி. கிரி, என்.எம். ஜோஷி ஆகியோரின் துரோகத்தால் தோல்வியடைந்தன. இதனால் வெறுப்புற்ற சிங்காரவேலர், அப்போது தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்த பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கம் கண்டார். ஆனால், 1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இத்தோடு சிங்காரவேலரின் பொதுவுடைமை இயக்க முயற்சிகள் எல்லாம் முடிவுக்கு வந்தன.
ஏறக்குறைய 15 ஆண்டுகள் தனது ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” அடிப்படையில் தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவி, வளர்க்க சிங்காரவேலர் முயன்றார். அதே காலகட்டத்தில் மேற்கு இந்தியாவில் டாங்கேயும் அவரது சீடரும், காந்தி ஆசிரமவாசியுமான சத்திய பக்தாவும் அதே முயற்சியை மேற்கொண்டனர்; வட இந்தியாவில் மணிலால் என்பவர் அதே முயற்சியில் இருந்தார். 1922 டிசம்பரில், கயாவில் கூடிய இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டையொட்டி சிங்காரவேலர், டாங்கே, மணிலால் மூவரும் சந்தித்து ஒருங்கிணைப்புக்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வங்காளத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்காரோடு நான்கு மையங்களில் இருந்து நான்கு அறிக்கைகளை முன்வைத்து காங்கிரகக்குள்ளாகவே நான்கு ”பொதுவுடைமை” அமைப்புகளைத் தனித்தனியே அமைத்தனர்.
முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பது, சட்டபூர்வ – வெளிப்படையான அமைப்பாக மட்டுமே செயல்படுவது, கம்யூனிச அகிலத்துடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பது என்பதே அன்றைய பொதுவுடைமை இயக்கத்தின் பிரதான பெரும்பான்மை நிலையாக இருந்தது. தெற்கே சிங்காரவேலரும் வடக்கே டாங்கேயும் இந்த நிலையின் பிதாமகர்களாக இருந்தனர்.
1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை நிறைவேற்றியது. ஆனால் அதை அப்போதைய சி.பி.ஐ நிராகரித்து விட்டது. 1930 இல் மீண்டும் அகிலத்தின் அதிகார பூர்வ பத்திரிக்கை இந்தியாவுக்கான விமர்சனமும் செயல்திட்டமும் எழுதியது. இதை கல்கத்தா மையம் ஏற்ற போதும் டாங்கே தலைமையிலான பம்பாய் மையம் ஏற்கமறுத்து, காந்தி – காங்கிரசு தலைமையிலான இயக்கங்ளில் இணைந்து செயல்பட்டது.
ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்
இந்தியாவில் குடியேறி செயல்பட்டு வந்த பிரிட்டன் பொதுவுடைமையாளர்களும், கல்கத்தா மையமும் அகிலத்துக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் 1932-இல் இ.பொ.க.வின் தவறுகளைக் கடுமையாக விமர்சித்து பிரிட்டன், சீனா, ஜெர்மனிப் பொதுவுடைமைக் கட்சிகள் ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பின. 1933-இல் மீண்டும் சீனப் பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.கவின் அமைப்பு – நடைமுறைகள் மீது விமர்சன அறிக்கை அனுப்பியது.
வெளியிலிருந்து வந்த இத்தகைய இடையறாத முயற்சிகளின் விளைவாக 1933-இல் கூடிய இ.பொ.க வின் இரகசிய மாநாடு, பொதுவுடைமை அகிலத்தில் இணைவது என்றும் அதன் வழிகாட்டுதல்களை ஏற்பது என்றும் முடிவு செய்தது. டாங்கே தலைமையிலான காந்திய – காங்கிரசுக் கம்யூனிஸ்டுத் திட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய புரட்சிகர அறைகூவலை அந்த மாநாடு அமைத்த மத்தியக் குழு விடுத்தது.
ஆனால், ஆறாவது மாதமே கட்சியையும் அதன் துணை அமைப்புகளையும் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. டாங்கே போன்ற ”மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்” எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்கிற அமைப்பை காங்கிரசுக்குள்ளாகவே நிறுவி, அதில் இணைந்தனர். சிங்காரவேலருக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் பொறுப்பேற்ற ஜீவா தலைமையிலான மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்பற்றினர்.
காங்கிரசு – காந்திய வழியில் தமது ஆசிரம அரசியலைத் தொடங்கிய ஜீவா, 1932-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில் பகத்சிங்கின் கட்சித் தோழர்களிடம் போதனை பெற்று கம்யூனிச அரசியலை ஏற்றார். வெளியில் வந்ததும் பெரியார், சிங்காரவேலருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து ஒரு நாத்திக மாநாடும், பிறகு ஒரு ஜமீன்தாரல்லாத மாநாடும் நடத்தினார். பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார். அதை அச்சிட்டவர் வெளியிட்டவர் என்கிற முறையில் பெரியாரும் அவரது சகோதரியும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு, ஜீவாவையும் அப்படிச் செய்யுமாறு பெரியார் நிர்பந்தித்தார். ஜீவா மறுத்து விட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் எனத் திராவிட – தமிழினவாதிகளால் இன்றும் போற்றப்படும் பெருவியாபாரிகள் முதலாளிகள், நிலக்கிழார்களின் நிர்ப்பந்தம், அரசின் மிரட்டல் காரணமாக ”கொள்கையைவிட அமைப்பைப் பாதுகாப்பதே முக்கியமானது” என்று சொல்லி சுயமரியாதைத் திட்டதையும் பெரியார் கைவிட்டார்.
இதனால் வெறுப்புற்ற ஜீவா, ”சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்று கூறி வெளியேறி, சிங்காரவேலரைத் தொடர்ந்து சுயமரியாதை சமதருமக்கட்சிக்குத் தலைமையேற்று பிரச்சாரமும், மாநாடும் நடத்தினார். அதற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த டாங்கே சிறப்புரையாற்றினார். அவரது ஆலோசனைப்படி சுயமரியாதை – சமதருமக் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசு மகாசபையிலும், காங்கிரசு சோசலிசக் கட்சியிலும் இணைந்தனர். 1936-இல் சேலத்தில் மாநாடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசு சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவா ஆனார்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார். அவர்கள் உருவாக்கி இருந்த “யங் கம்யூனிஸ்டு லீக்” என்ற இளைஞர் பொதுவுடைமை அமைப்பு ஆங்கிலேயக் காலனி அரசால் தடை செய்யப்பட்ட போது, அவர்களும் காங்கிரசு சோசலிசக் கட்சியில் இணைந்தனர்.
அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள்.
இக்கட்சியை வலுவாகக்கட்டி, பல தொழிலாளர் அமைப்புக்களை நிறுவி, பொருளாதார போராட்டங்களை நடத்திய போது, இக்கட்சியின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருந்த காங்கிரசு முதல் மந்திரி இராஜாஜியும், தொழில் மந்திரி வி.வி. கிரியுமே அவற்றை ஒடுக்கினர். இருந்தாலும் காங்கிரசுக்குள் செயல்பட்டு அதன் அமைப்புப் பதவிகளைப் பிடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டனர் ஜீவா போன்றவர்கள். இராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோரோடு போட்டியிட்ட ஜீவா அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 திரிபுரா காங்கிரசில் சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் காந்தி-நேரு குழுக்களுக்கிடையே தலைமைக்காக நடந்த மோதலின் போது ஒற்றுமையை உருவாக்கவே டாங்கே, ஜீவா போன்றவர்கள் முயன்றனர். காந்தி கும்பல் அம்மாநாட்டில் தோற்றபோதும், நிர்ப்பந்தம் – மிரட்டல் மூலமாக சுபாஷ் சந்திரபோசை விரட்டி விட்டு தலைமையைக் கைப்பற்றியது. அதன் விளைவாக கம்யூனிஸ்டுகள் எனக் கருதப்பட்ட அனைவரையும் காங்கிரசு சோசலிசக் கட்சியிலிருந்து விரட்டும் வேலையை அது மேற்கொண்டது.
இப்படி வெளியேற்றப்பட்டவர்கள் ஜோஷி தலைமையில் தனிக் கட்சியாக அமைந்தனர். அதற்கு இங்கே ஜீவா, இராமமூர்த்தி போன்றோர் தலைமையேற்றனர். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் காங்கிரசின் நிலைப்பாடு எடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜோஷி – டாங்கே போன்ற கம்யூனிஸ்டுகள். சோவியத் ஒன்றியத்தை இட்லரின் ஜெர்மனி தாக்கிய போது கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஏகாதிபத்தியப்போரை எதிர்த்துப் புரட்சியைத் தொடுப்பதற்குப் பதில், சோசலிச அரசைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஆங்கில ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்தனர். இதனால் தடை நீக்கப்பட்டு வெளியே வந்தார்கள்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் நாடு முழுவதும் காந்திய காங்கிரசு வழிமுறைகளை நிராகரித்து, உடனடி விடுதலை கோரி, தொழிலாளர்கள், படைவீரர்களின் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் வெடித்தன. இதன்பின்னணியில் கம்யூனிஸ்டுகளின் சதி இருப்பதாகக் கருதிய காங்கிரசு அமைச்சரவை பொதுவுடைமை இயக்கத்தைத் தடை செய்து அதன் அணிகளை வேட்டையாடியது. ஆனால் அதன் தலைவர்களோ, புரட்சிக்கு அவசியமான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியையும், இரகசியக் கட்சி அமைப்புகளையும் நிறுவுவதற்குப் பதிலாக, காங்கிரசு, திராவிடர் கழகப் பிரமுகர்களின் ஆதரவுடன் வெறுமனே தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். ஆந்திராவின் தெலுங்கானாவில் மட்டுமே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1947 அதிகாரமாற்ற நெருக்கடியைப் பயன்படுத்தி, ஆயதந் தாங்கிய உழவர் பேரெழுச்சியாக வளர்த்தெடுத்தனர். அதேசமயம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ரணதிவே நாட்டின் நிலைமையை மிகை மதிப்பீடு செய்து ரஷ்யப் புரட்சியை அப்படியே காப்பியடித்து, உடனடியாகவே நாடு தழுவிய முறையில் ஆயுதப் பேரெழுச்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிகாட்டுதலைக் கொடுத்தார். இந்த “அதீதப் புரட்சி” காரணமாக கட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்ததோடு, டாங்கே, மோகன் குமாரமங்கலம், அஜாய் கோஷ் போன்ற துரோகிகளின் சரணடைவுக்குப் பிறகு தடைநீங்கி, இ.பொ.க. சட்டபூர்வக் கட்சியானது.
அதன்பிறகு, நாடாளுமன்ற சகதிக்குள் மூழ்கிக் கொண்டே, எந்தப்பாதையில் நகர்வது என்று குழம்பிக்கிடந்த போது, பொதுவுடைமைத் தலைவர்களுக்கு குருச்சேவின் வருகை பேருதவியாக அமைந்தது. அவர்கள் இந்திய – சீனப்போரைக் காரணமாக வைத்து ”கம்யூனிசக் கட்சி”. “மார்க்சிசக் கட்சி’ என்று இரண்டு பிரிவுகளாக இயங்கினாலும் அவர்களிடையே அடிப்படைத் திட்டத்தில் ஒரே ஒரு வேறுபாடுதான் இருந்தது.
1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது.
காங்கிரசு, பிற்போக்குப் பெருமுதலாளிகளின் கட்சி அதனுடன் அணிசேரக் கூடாது என்பது ”மார்ச்சிஸ்ட் கட்சி”யின் நிலையாகவும், காங்கிரசு முற்போக்குத் தேசிய முதலாளிகளின் கட்சி, அதனுடன் அணிசேர்ந்தே ஆகவேண்டும் என்பது ”கம்யூனிசக் கட்சி’யின்” நிலையாகவும் இருந்தது. இந்த இருகட்சிகளுமே காங்கிரசு பற்றிய தத்தமது நிலையை தேர்தல் அரசியலுக்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளதால் இதுவொன்றும் அடிப்படையான வேறுபாடு அல்ல. 1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது. 1977 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, சி.பி.ஐ. காங்கிரசுக்கு எதிராகப்போய் சி.பி.எம்.மின் நிலை எடுத்தது. இப்போது காங்கிரசுக்கு ஆதரவு என்ற சி.பி.ஐ.யின் முன்னாள் நிலையை இரண்டு கட்சிகளுமே எடுத்துள்ளன.
தமிழகத்தில், சிங்காரவேலருக்குப் பிறகு, டாங்கேயின் வழியில் ஜீவா, கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் போன்றவர்கள் ஒரு பிரிவை வழி நடத்தினார்கள். நம்பூதிரிபாடு வழியில் ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியம், நல்லசிவம், சங்கரய்யா போன்றவர்கள் மற்றொரு பிரிவை வழிநடத்தினார்கள்.
இந்த இரண்டு பிரிவுகளுமே, ”மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றின, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றவில்லை” என்று இந்த இரண்டு ”மார்க்சியங்களை”யும் அறியாதவர்கள்தான் சொல்ல முடியும். இவ்விருபிரிவினருமே மார்க்சிய – லெனினியப் புரட்சிவழியை நிராகரித்து, குருச்சேவ், பிரஷ்னேவ், கோர்பச்சேவ், டென்சியாபிங் வழிமுறைகளைப் பின் பற்றுபவர்களாகத்தான் உள்ளனர்.
தேர்தல் அரசியல்வாதிகளாகச் சீரழிந்துபோய்விட்டார்கள் என்பதற்காகமட்டும் இதைச் சொல்லவில்லை. அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள். இதைத்தான் ”இந்திய மரபு. இந்திய ஞான. இந்தியக் கலாச்சாரம் ஆகியவற்றில் வேர் விட்டு பொதுவுடமை இயக்கத்தை வளர்க்க வேண்டும்” என்கிறார்கள்.
மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ”மார்க்சிஸ்ட்கட்சி – சி.பி.எம்”காரர்கள் நம்பூதிரிபாடின் சனாதன வியாக்கியானங்களைப் பற்றி ஒழுகுகின்றனர். ஆனால் சிங்காரவேலர், ஜீவா வழிவந்த சி.பி.ஐ.காரர்கள் பாரதி, வள்ளுவம், கம்பராமாயணம் இவற்றில் எல்லாம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தேடி “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” உருவாக்கி, அந்த வகையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.
இவை ஒருபுறமிருக்கட்டும். மரபு வழி மார்க்சியமே மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தான் போதிக்கிறது. மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை. மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது. மார்க்சிய – லெனினிய இயக்கம் மட்டும்தான் இந்த வழியிலே முயற்சிக்கிறது. எனவேதான், அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பே கையிலெடுத்தது.
இதைக் காண மறுத்துக் கண்களை மூடிக் கொள்ளும் தமிழின, தலித்தியவாதிகள் பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வையை ஏற்றுக் கொண்டால்தான் தேசிய இன, சாதியப் பிரச்சினையை அணுகித் தீர்க்கும் “மண்ணுக்கேற்ப மார்க்சியம் இல்லையென்றால் மரபுவழி மார்க்சியம்” என்று அடாவடி பேசுகின்றனர்.
மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி பாசிச- பார்ப்பன சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!
தன்னுடைய லாபவெறிக்காக இந்திய உழைக்கும் மக்களையும் இயற்கை வளங்களையும் சூறையாடிய ரத்தன் டாடாவின் மரணத்தை ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ரத்தன் டாடா மரணித்த அதே நாளில்தான், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கடுத்து மூன்று நாட்களில், அக்டோபர் 12-ஆம் தேதி “ஊபா” எனும் கருப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பத்தாண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா மரணமடைந்தார். ஆனால், ரத்தன் டாடாவின் சொத்தில், அவரின் வளர்ப்பு நாய்க்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு குறித்து மும்முரமாக செய்தி வெளியிடும் ஊடகங்கள், இவ்விரு சம்பவங்கள் குறித்தும் வாயை திறக்கவில்லை.
ஸ்டான் சுவாமி, சாய்பாபா தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்
கார்ப்பரேட் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து செயல்பட்டார் என்பதற்காக பேராசிரியர் சாய்பாபா 2014-ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகப் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாசிச மோடி அரசால், சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா
90 சதவிகிதம் உடல் செயலிழந்துள்ள சாய்பாபா, அரசுக்கு எதிராக போராடும் சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட “அண்டா சிறையில்” (முட்டை வடிவிலான) அடைக்கப்பட்டு ஈவிரக்கமின்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு பாசிச மோடி அரசால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிந்துரைத்த சிகிச்சைகளும் மருந்துகளும் அவருக்கு மறுக்கப்பட்டது. சிறையில் கொரோனா மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதும் உடனே சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது உடலின் இடது பக்கம் செயலிழந்த போதும் ஒன்பது மாதங்கள் கழித்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. வலியால் துடிக்கும் போதும் உரிய சிகிச்சை அளிக்காமல் வலி நிவாரண மாத்திரைகளை வழங்கி அவரது உடல் உறுப்புகளை பாதிப்படைய வைத்தது சிறை நிர்வாகம்.
மேலும், சாய்பாபாவிற்கு அவருடைய தாயாரின் இறப்பிற்கு செல்வதற்கு கூட பிணை வழங்கப்படவில்லை. 2022-இல் மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று விடுதலை செய்தபோது, உச்சநீதிமன்றம் ஒருநாள் கூட அவரை வெளியில் விட அனுமதிக்காமல் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்துச் செய்தது.
பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதம் சாய்பாபா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சாய்பாபா, “நான் சிறைக்குச் சென்றபோது, எனது இயலாமையைத் தவிர வேறு எந்த நோயும் இல்லை. இப்போது, என் இதயம் 55 சதவிகிதம் மட்டுமே செயல்படுகிறது. மேலும், நான் தசை சிக்கல்களை எதிர்கொள்கிறேன். எனது கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. எனது வலது கை ஓரளவுதான் செயல்படுகிறது. என் மருத்துவர் எனக்கு பல அறுவை சிகிச்சைகள் தேவை என்று கூறுகிறார்” என உடல்ரீதியாக தான் எந்தளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன் என்பதை அம்பலப்படுத்தியிருந்தார்.
பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான பாதிரியாரும் சமூக செயற்பாட்டாளருமான ஸ்டான் ஸ்வாமியை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி படுகொலை செய்ததைப் போலவே, சாய்பாபாவையும் படுகொலை செய்துள்ளது பாசிச மோடி அரசு. ஸ்டான் ஸ்வாமி சிறையிலேயே மரணமடைந்தார்; சாய்பாபா சிறையில் இருந்து விடுதலையாகிய ஏழு மாதங்களில் மரணமடைந்துள்ளார்.
கொலை குற்றவாளிகளுக்கு அங்கீகாரம்வழங்கும் பாசிஸ்ட்டுகள்
கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றமானது கௌரி லங்கேஷை படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் எட்டு பேரை பிணையில் விடுதலை செய்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில் இதுவரை 16 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காவி குண்டர்கள்தான் கௌரி லங்கேஷை படுகொலை செய்தனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருந்த போதிலும் விசாரணையை நடத்தாமல் திட்டமிட்டு இழுத்தடித்து, தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் காரணம்காட்டி பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
மேலும், அக்டோபர் 11-ஆம் தேதி பிணையில் வெளிவந்த குற்றவாளிகள் பரசுராம் வாக்மோர், மனோகர் யாதவே ஆகிய இருவரையும் ஸ்ரீராம் சேனை உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் “பாரத் மாதா கி ஜே” என்று கூச்சலிட்டும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வரவேற்றுள்ளனர்.
இதுபோன்ற பயங்கரவாதிகளை கொண்டாடுவதை காவி கும்பல், ஒரு வழக்கமாக மாற்றிவருகிறது. பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளையும் காவி கும்பல் இவ்வாறுதான் கொண்டாடியது. இதன்மூலம், பாசிசக் கும்பலுக்கு எதிராக குரலெழுப்பும் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் அச்ச உணர்வையும், சிறுபான்மையினர் மீதான பாசிசத் தாக்குதல்களையும் இயல்புநிலையாக மாற்ற முயற்சிக்கிறது.
000
கௌரி லங்கேஷை படுகொலை செய்த குற்றாவாளிகளுக்கு பிணை வழங்கியது குறித்து பேசிய ஆர்வலர் சிவசுந்தர், “கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விசாரணை முடியும்வரை சிறையில் இருக்கக் கூடாது என்று சொல்வது சரிதான். பிரச்சினை என்னவென்றால், இந்தக் கொள்கை மிகவும் பாரபட்சமாக செயல்படுத்தப்படுகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காவி பயங்கரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்
மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பா.ஜ.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளார்களை பொய்வழக்குகளில் சிறையிலடைத்து பிணை கூட வழங்காமல் சித்திரவதை செய்வதும், பாலியல் வன்முறை, சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் காவிக் குண்டர்களை நிரபராதி என்று விடுவிப்பதும் பிணை வழங்குவதும் ஒரு போக்காக மாறியுள்ளது.
ஒருபுறம் பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்; மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு பிணை வழங்கப்படுகிறது; ஹரியானா தேர்தலையொட்டி பா.ஜ.க-விற்கு பிரச்சாரம் செய்வதற்காக, கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங் பிணையில் விடுதலை செய்யப்படுகிறான்.
ஆனால், இன்னொருபுறம் பாசிச மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் எந்தவித விசாரணையுமின்றி, பிணையும் வழங்கப்படாமல் நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; பீமா கொரேகான் வழக்கில் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் என சுமார் 16 செயற்பாட்டாளர்கள் மோடி அரசால் திட்டமிட்டு புனையப்பட்ட பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை ஏதுமின்றி ஐந்தாண்டுகளாக சிறையில் சித்திரவதைக்குள்ளாகி வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்தும்டே உள்ளிட்ட ஆறு பேருக்கு பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணை வழங்கப்பட்டது. 84 வயதான ஸ்டான் ஸ்வாமி இறுதிவரை பிணை மறுக்கப்பட்டு சிறையிலேயே படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கூட பீமா கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேர் தங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேசமயம், பாசிசக் கும்பலின் இந்த அபாயகரமான போக்கிற்கு எதிராக பெரியளவில் சமூகத்தில் எதிர்ப்புகள் எழுவதில்லை என்பதுதான் இன்னும் ஆபத்தானதாக உள்ளது.
2017-ஆம் ஆண்டு கர்நாடகாவில், கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டபோது நாடுமுழுவதும் அதிர்வலை உருவானது. சர்வதேச முதலாளித்துவ பத்திரிகைகள் இப்படுகொலையை கண்டித்து எழுதின. கௌரி லங்கேஷ் படுகொலையை எதிர்த்து இளைஞர்கள் பலர் அரசியல் இயக்கத்திற்குள் நுழைந்தனர்.
ஆனால், இன்றோ “கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது பற்றி கர்நாடகாவில் எந்த அரசியல் கட்சிகளும் பேசவில்லை. செய்தி ஊடகங்களும் அதைப்பற்றி விவாதிக்காமல், மூடா, வால்மீகி ஊழல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் பிணையில் விடுதலையானது மக்களில் பலருக்கும் தெரியாது” என ஆதங்கத்துடன் கூறுகிறார் கர்நாடகப் பத்திரிகையாளரான அசோக்.
அதேபோல், பழங்குடி மக்களை கொன்றொழித்த டாடா-விற்கு இரங்கல் “ஸ்டேட்டஸ்” போடும் இளைஞர்கள், பழங்குடி மக்களுக்காக போராடிய பேராசிரியர் சாய்பாபாவின் மரணம் குறித்து தெரியவில்லை என்று சொல்வது அவமானகரமானதும் அதேநேரத்தில் ஆபத்தானதுமாகும்.
ஏனெனில், பாசிசம் மேலோங்கிவரும் இக்காலகட்டத்தில் இச்செயற்பாட்டளர்கள், அறிவுஜீவிகளின் தேவை அதிகமாக உள்ளது. இத்தகைய செயற்பாட்டாளர்கள் மீதான பாசிச ஒடுக்குமுறைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பது பாசிச எதிர்ப்பு சக்திகளின் முக்கியமான பணியாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் பாசிச எதிர்ப்புணர்வை வளர்த்தெடுப்பதிலும் இது முக்கிய பங்காற்றும்.
அதேபோல், மோடி அரசால் பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதும் மோடி அரசால் விடுதலை செய்யப்படும் இந்துமதவெறி குண்டர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்றுத்தருவதும் நாம் எந்தளவிற்கு களப்போராட்டங்களை கட்டியமைக்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. எனவே, பாசிசத்தை வீழ்த்த செயல்பட்டுவரும் ஜனநாயக சக்திகள் மேற்கூறிய கடமையை நிறைவேற்றும் வகையில் களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்; அப்போராட்டங்கள் கொடிய பாசிச கருப்புச் சட்டமான ஊபாவை ரத்து செய்யும் வகையிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை தடை செய்யும் வகையிலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி, கார்ப்பரேட் வணிக ஆங்கில நாளிதழ்களில் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது.
புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவர 25 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த சட்டங்கள் அடிப்படையிலான வரைவு விதிகளை அவை வகுத்து முடித்துவிட்டன. மேகாலயா, மேற்கு வங்கம், நாகாலாந்து ஆகியவை தங்களது மாநிலங்களுக்கான விதிகளை இன்னும் வகுக்கவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு சட்டங்களாக இருந்த தொழிலாளர் சட்டங்களை நான்கு குறியீடுகளாக மாற்றியமைத்திருப்பது என்பது தொழில் வளர்ச்சி பெருகுவதில் முக்கிய பங்காற்றும் என இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன.
தற்போது கார்ப்பரேட் ஊடகங்களின் இந்த மகிழ்ச்சியைக் காணும் போது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இச்சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படலாம்; மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், அதற்கான அறிவிப்புகளை பாசிச பா.ஜ.க. அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பிலிருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு, ஊதியச் சட்டம் 2019 (மூன்று சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது), சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 (ஒன்பது சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது), தொழில் உறவுகள் சட்டம் 2020 (மூன்று சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது), பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலைநிலைமைகள் சட்டம் 2020 (13 சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது) ஆகிய புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை பாசிச பா.ஜ.க. எந்தவித விவாதமுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாகவும், தொழிலாளர் சட்டம் பொதுப்பட்டியலில் (Concurrent List) இருப்பதால் மாநில அரசுகள் இச்சட்டங்களை ஏற்றுக்கொண்டு இதற்கான விதிகளை உருவாக்க வேண்டியிருந்ததாலும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இச்சட்டங்களுக்கான விதிகள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் இச்சட்டங்களுக்கான வரைவு விதிகளை வகுத்து முடித்துள்ளன.
1990-களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற நாசகரக் கொள்கையின் விளைவாக தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வேலையின்மை வளர்ந்து, ரிசர்வ் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் பெருகியுள்ளது. நவீனமயமாக்கம், டிஜிட்டல்மயமாக்கத்தின் விளைவாக இந்தியத் தொழிலாளர்களின் ஊதிய சராசரி தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ஐ.எல்.ஓ.) டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் (ஐ.ஹெச்.டி.) இணைந்து வெளியிட்டுள்ள “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை” தெரிவித்துள்ளது.
இந்த புதிய நிலைமைகளில், மேலும் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கும் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து வர இருக்கின்ற தாக்குதல்களுக்கும் பரந்த அடித்தளத்தை இந்த சட்டங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.
2002-ஆம் ஆண்டில் பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டாவது தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றுதான் 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு அல்லது ஐந்து சட்டங்களாக சுருக்குவதாகும். அன்றைக்கு பத்தாண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரசு அரசு அதனை நிறைவேற்றுவதில் மந்தப் போக்கைக் காட்டியது; மோடி தலைமையிலான அரசுதான், இதில் தீவிரம் காட்டியிருக்கிறது என்று தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மெச்சிக்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல்.
புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால், தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடும். கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்படுவர்.
ஒப்பந்தத் தொழிலாளர் முறை, கிக் வேலைமுறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அதிகரித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ஆகப் பெரும்பான்மையினர், தங்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற அவலநிலையில் வாழ்கின்றனர். இந்நிலையில், தொழிலாளர் சட்டங்களால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவது இயல்பானதே. ஆனால், பழைய 44 சட்டங்களைப் போல தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்பான சட்டங்கள் அல்ல, புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்.
இந்தப் புதிய சட்டங்களின்படி தொழிலாளர்கள் சங்கம் வைப்பதற்கும் தங்களது உரிமைகளைப் பெறுவதற்குமான அனைத்து வாய்ப்புகளும் சட்டப்பூர்வமாகவே தடுக்கப்பட்டுவிடும். சங்கம் வைப்பதற்கு சட்டப்பூர்வமான உரிமை இருக்கும் இன்றைய நிலையிலேயே, ஆயிரத்திற்கும் அதிகமான சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் வைப்பதற்கு ஆலை நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை, மாநில அரசும் சாம்சங் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அதைப்போலவே, ஒன்றிய அரசு வரையறுத்துள்ள குறைந்தபட்ச கூலியைவிட (Minimum Wage) குறைவான கூலியைத்தான் 80 சதவிகித தொழிலாளர்கள் பெறுகின்றனர். சட்டம் இதனை வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த புதிய நான்கு சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால், தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடும். கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்படுவர்.
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள், காவி – கார்ப்பரேட் – போலீசின் கும்பலாட்சியை நிறுவுவதற்கு உதவுவதைப் போல, இந்த புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களை ஆலைகளிலேயே நவீன கொத்தடிமைகளாக அடைத்து வைப்பதற்கான வழிவகைகளைச் செய்து கொடுக்கிறது.
அந்தவகையில், தொழிலாளர்களுக்கு எதிராக ஆளும் பாசிச பா.ஜ.க. அரசினால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்கள் “கார்ப்பரேட் அரசின்” ஓர் அங்கமாகும்; இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளங்களில் ஒன்றாகும்.
எனவே, இத்தகைய தொழிலாளர் விரோத சட்டத்தை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சிகள் விதிகளை உருவாக்கியிருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.
எட்டுமணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றதாகும். இன்று, இவை சட்டப்பூர்வமாகவே பறிக்கப்படும் நிலைமைக்கு எதிராகவும் தமது உரிமைகளை மீட்டெடுக்கவும் தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.
வலென்சியாவுக்கு அருகிலுள்ள ரயில் பாதையில் கார் மற்றும் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன
ஸ்பெயின் நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மாகாணத்தில் அக்டோபர் 30 அன்று திடீரென கனமழை பெய்தது. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்ததால் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கஸ்டிலா லா மஞ்சா, அண்டலுசியா ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்ததுள்ளது.
இந்த கனமழை – வெள்ளம் காரணமாக 202க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடம் என்ற அச்சம் நிலவுகிறது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களைத் தொகுத்து வழங்குகிறோம்.
வலென்சியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் – கழுகுப்பார்வை புகைப்படம்வலென்சியாவில் உள்ள செடாவி பகுதியில் தெருவில் குப்பைகளைப்போலக் குவிந்துள்ள கார்கள்வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட கார்கள்தண்ணீருக்காக பைபோர்ட்டா (Paiporta) நகராட்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்வலென்சியாவில் மால் ஒன்றின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள்பைபோர்டா (Paiporta) நகரில் துப்புரவு முயற்சிகளுக்கு உதவ ஒன்றிணைந்துள்ள உள்ளூர்வாசிகள்தன்னார்வலர்கள் குழு சுத்தம் செய்வதற்காக வலென்சியாவில் உள்ள லா டோரே (La Torre) சுற்றுப்புறத்தை நோக்கி நடந்து செல்கிறது
பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி வசந்தன் என்பவர் தேவையில்லாத விசயங்களை எழுதியிருக்கிறார்.
– ஆர்.கே தாஸ்
பசும்பொன் முத்துராமலிங்கம்
அன்புள்ள தாஸ்,
நீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.
சரி, விசயத்துக்கு வருவோம். தேவர் சாதி மக்கள் பசும்பொன் தேவரை வணங்குவதற்கு சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை. 47க்குப் பிறகு சீர்திருத்த முறையில் முன்னேறி வரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகள் வளர்ந்திருக்கின்றன. அரசு பதவிகள், வணிகம், ஓரளவு நிலவுடைமை என்று வளர்ந்த நிலையில் சுயசாதி அடையாளத்தின் வீச்சு முன்னெப்போதைக் காட்டிலும் வளர்ந்து விட்டது.
நவீன தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்த அளவுக்கு சாதி அபிமானம் குறைந்து விடவில்லை. மணமக்கள் விளம்பரங்களில் கூட சுய சாதி, உட்பிரிவு விதிகளுக்குட்பட்டே மணமக்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. சிதறிக்கிடந்த சாதி மக்களை ஊடகங்களும், திருமண நிலையங்களும், சாதி சங்கங்களும் ஒன்று சேர்த்திருக்கின்றன. இன்னொரு புறம் அரசியலில் அனைத்து சாதிகளும் தத்தமது செல்வாக்கை நிரூபித்து அதிகாரத்தின் பங்கை கேட்பதும் இக்காலத்தில்தான் துவங்கியது.
ஆனால் இத்தகைய முன்னேற்றங்களோடு தாழ்த்தப்பட்ட மக்கள் கொஞ்சம் தலைநிமிரத் துவங்கியதை மட்டும் ஆதிக்க சாதியினர் விரும்பவில்லை. தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இடங்களிலெல்லாம் ‘கலவரங்கள்’ எழுந்தன. கொடியங்குளம் கலவரம் தொடர்ந்து அதிக பரப்பளவில் நீடித்ததற்கு இதுவே காரணம்.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சாதி கலவரங்கள் நடந்ததில்லை, அமைதியாக இருந்த தமிழகம் என்றெல்லாம் பலர் அபத்தமாக ‘ஆய்வு’ செய்து அப்போது கண்டுபிடித்தனர். அந்த அமைதிக்கு காரணம் என்ன? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா வகைக் கொடுமைகளையும் எதிர்க்க இயலாமல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தனர். ஆயிரமாண்டுத் தீண்டாமைக் கொடுமை, காலம் காலமாக இருக்கும் ஒரு நியமம் என்ற அளவில் அவை சமூகத்தால் கேள்விக்கிடமின்றி பின்பற்றப்பட்டு வந்தன. தனித்து விடப்பட்ட சேரிகள் ஊரை எதிர்ப்பதற்கு அன்று வழியே இல்லை. இதுதான் அந்த அமைதியின் காரணம். பின்னர் பொருளாதார சுயபலம் வந்த பிறகு அவர்கள் அந்த கொடுமைகளை எதிர்த்துக் கேட்கின்றனர். அமைதி குலைந்து கலவரம் வருகிறது.
இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் பசும்பொன் தேவரது வாழ்க்கையை நாம் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. அமைதிக் காலத்தில் ஆதிக்க சாதிகளது ஆட்சியில் அடங்கிக்கிடந்த காலத்தில் தாழ்த்தப்பட்டமக்களுக்காக தேவர் என்ன செய்திருக்க முடியும்? அவர் கஞ்சி ஊற்றினார், பால்கனியில் இருந்து பொற்காசுகளை அள்ளி வீசினார், தான தருமம் செய்தார் என்றுதானே அதிகபட்சம் இருந்திருக்க முடியும்? எங்கேயாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைகளை தேவர் எதிர்த்திருக்கிறார் என்று பேச்சளவில் கூட எதுவும் வந்ததில்லையே?
தேவர் செய்த பண்ணையார் தரும சிந்தனைகள் கூட புதுச்சரக்கு அல்ல. காந்தி முதல் பல காங்கிரசு தலைவர்கள் அதைத்தான் செய்தனர். அந்த வகையில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனங்கள் என்று காந்தி அழைத்தார். “ஆயிரங்காலம் அடிமை என்றாயே அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே” என்ற ம.க.இ.க பாடல் வரி அந்த தரும சிந்தனையின் மீதான வரலாற்றுக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இன்றளவும் தமிழக தலித் மக்களின் தேசிய கீதமாக அந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரன் ஒரு தலைவராக சரிக்கு சமமாக தன் முன் பேசுவதை தேவரால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் தேவரது அடியாட்களால் கொல்லப்படுகிறார். இதற்கு மேல் தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை கீழே தருகிறோம்.
தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். 1937 இல் காங்கிரசு வேட்பாளராக இருந்த தேவர் அன்றைய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சேதுபதிக்கு ஓட்டுப்போட்ட குற்றத்துக்காக தலித் மக்களிடம் உடனடியாக கடனை வசூலிக்குமாறு தமது சாதியினருக்கு கட்டளையிட்டார். ஒரு சப் மாஜிஸ்டிரேட் கொல்லப்பட்டதும், டிஎஸ்பி ஒருவருக்கு காலில் வெட்டு விழுந்த்தும் இந்த கலவரத்தில் நடந்தது.
1957 தேர்தலில் கூட இப்படி ஆன பிறகும் கலவரம் நடத்தினார் தேவர். காமராசர் தமிழக முதல்வராக வந்ததை இழிவாக பார்க்கும் வகையில் அவருக்கு ஓட்டுரிமை பெறுவதற்காக சொத்து வாங்கிக் கொடுத்ததே தன்னால்தான் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். காமராசர் ஆட்சியில் விருதுநகர் நாடார்கள் கள்ள நோட்டு அடித்து தமிழகமெங்கும் புழக்கத்தில் விடுவதாக அவதூறு செய்தார். “சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்” என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார்.
குமாரசாமி காமராஜ்
ஒரே நாளில் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து ஆரம்ப கல்விக்கு உதவிய காமராசரது திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களது பகுதிக்கு பள்ளிகள் வருவதை தடுக்கவும் பேசியிருக்கிறார். இங்கிலீசு படிப்பு சொல்லிக் கொடுத்தால் மதம் அரசிலிருந்து பிரிந்துவிடும் என்று அந்த முருக பக்தர் கூறவும் தவறவில்லை. காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை விமர்சிக்கும் எவரும் கூட அவரது கொலையை கொண்டாட முடியாது. ஆனால் அதற்காக மறைமுகமான நோக்கத்துடன் கோல்வால்கருக்கு மதுரையில் பணமுடிப்பு வழங்கி விழா நடத்திவர் தேவர். இந்துமத துரோகி என்று காந்திக்கும் பெயர் சூட்டினார்.
தங்களது உழைப்பு, சுய சாதி சமூக உதவி, சீர்திருத்தம் காரணமாக நாடார் சாதியினர் இன்றும் முன்னேறுவதை நாடே அறியும். 19 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் காணத் துவங்கிய அச்சாதியினருக்கு சமூக அந்தஸ்து ஒன்றும் ஆரம்பத்தில் எளிதாக கிடைத்து விடவில்லை. விவசாயம்,வணிகம் மூலம் முன்னேறிய நாடார் மற்றும் நாயக்கர் சாதியினர்களில் வர்ணாசிரம வரிசையில் கீழ்நிலையில் இருந்த நாடார்கள் மீது முத்துராமலிங்கத் தேவருக்கு ஆண்ட பரம்பரையின் இழந்துபோன வெறுப்பு மேலோங்கி இருந்த்து.
அவரது தேவர் சாதியினரோ நாயக்கர் கால ஆட்சியில் ஊர்க்காவல் வேலையைப் பார்த்து வந்தனர். வெள்ளையரின் முதலாளித்துவ பாணி காவல்துறை எல்லாம் வந்தபிறகு அவர்களுக்கு வேலை இல்லாமல் போகவே அவர்களில் சிலர் திருடுவதை கையிலெடுக்க வேண்டிய அவசியம் வந்தது. எனினும் தேவர் சாதிப் பெண்கள் காடுகளில் பாடுபட்டு உழைத்துக் கொண்டுதான் இருந்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவகாசி கலவரம் என்பதே இதுபோல ஆடு திருடும் கள்ளர்களுக்கும், ஆடுகளைப் பறிகொடுத்த நாடார்களுக்குமிடையில்தான் நடந்தது. திருடப் போகும்போதும், கன்னம் வைக்க முதலில் போகும் நபருக்கும் சிறப்பு பூஜைகளையெல்லாம் செய்யுமளவுக்கு திருட்டை சமூகமயமாக்கினர்.
அப்போது சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று கூறி அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டு சட்டத்தினால் அச்சாதி ஆண்கள் எல்லாம் காவல் நிலையங்களில் இராத் தங்க நேரிட்டது. இச்சாதிகளில் முக்குலத்தோரும் இருந்த காரணத்தால் அன்றைய கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து அச்சட்டத்திற்கு எதிராகப் போராடினார் பசும்போன் தேவர்.
காங்கிரசில் திறமை இல்லாமல் முன்னுக்கு வந்தவர் காமராசர் என்ற கணிப்பு தேவருக்கு நிரம்பவே இருந்தது. குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த காரணத்தால் பதவி விலக நேரிட்ட ராஜாஜி தனிமைப்பட்டிருந்த வேலையிலும், ஆசி வாங்க வந்த காமராசரிடம் “நீ முதலமைச்சர் ஆகாமல் கட்சித் தலைவனாகவே இருக்கலாமே” என்று கூறினாராம் தேவர்.
சாலைகளை குக்கிராமங்களுக்கும் விஸ்தரிக்க முனைந்தபோது, அது தங்களது நாட்டு அரசுகள் என்ற கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரானது என்பதால் “நாங்க எல்லாம் இன்றைக்கு அடித்துக் கொள்வோம் நாளை பேசி தீர்த்துக்கொள்வோம். சாலை எல்லாம் போட்டால் போலீசு எல்லாம் ஊருக்குள் வந்து விடும்” என்று கூறி மறவர் நாடுகளில் சாலை போடுவதையே தடை செய்தவர் தேவர். நம்ம வீட்டு கருமறத்திகள் வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு எடுக்கும் பருத்தியால விருதுநகர், கமுதி சாணாத்திகள் (நாடார் சாதிப் பெண்கள்) காது மூக்கு எல்லாம் தங்கமாக தொங்குகிறது என பொதுக்கூட்டத்திலே பேசி சாதி துவேசத்தை வளர்த்துவிட்டவர்தான் தேவர்.
ஆனால் இதனால் எல்லாம் தேவர்சாதி மக்கள் அனைவரும் நாடார் இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. அவரது கைத்தடிகள்தான் இதுபோன்ற கலவரங்களில் ஈடுபட்டனர். இந்து முன்னணி ராமகோபாலன் இன்று ”முசுலீம் கடையில் வாங்காதே” என முழங்குவதைப் போலவே அன்றும் “சாணார் கடையில் சாமான் வாங்காதே” என முழங்கினார் தேவர். இந்தியா – பாக் பிரிவினையின்போது பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக இங்குள்ள முசுலீம்களை விரட்டிவிடவும் வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் தேவர்.
இமானுவேல் சேகரன்
1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அல்லக்கைகளிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த கீழத்தூவல் துப்பாக்கிச் சூடும் அதில் அரசு கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியும் தனிக்கதை.
தனது தந்தையிடம் வேலை பார்த்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சோலைக் குடும்பன் என்பவரையே அடியாளாக பயன்படுத்தி வந்த தேவர் அதை வைத்து தான்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தலைவன் என்றும், இமானுவேல் சேகரன் இல்லை என்றும் பேசினார். அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்றும் குறிப்பிட்ட்டிருக்கிறார். பொதுவில் அவர் திராவிட இயக்கத்தை பார்ப்பனிய வருணாசிரம கண்ணோட்டத்துடனே கீழானவர்கள் என்பதாக வசைபாடியிருக்கிறார்.
சில தொழிற்சங்க போராட்டங்களை இவர் ஆதரித்தபடியால் ஈர்க்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இவரை ஆதரிக்கவும் செய்தனர். அரசியலற்ற பொருளாதாரவாதமும், காங்கிரசுக்கு வால்பிடிப்பதும் அன்று அவர்களிடம் மேலோங்கிய காரணத்தால் தேவரை ஒரு இடதுசாரியாக தவறாக பார்க்க வைத்தது. முதுகுளத்தூர் கலவரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அவரை கேடிகே தங்கமணி போன்றவர்கள் ஆதரித்தும் பேசி உள்ளனர்.
மற்றபடி தேவரின் காமடிகளுக்கு அளவே இல்லை.
நேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து மூன்றாம் உலகப்போரை தான் ஆரம்பிக்கப் போவதாகவும், தான் வைத்திருக்கும் மேக்கனடிக் எந்திரத்தால் உலகத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் பனிக்கட்டி ஆக்க முடியும் என்றும், அதனைக் கொண்டு அமெரிக்க சீன கப்பல்களை எல்லாம் ஆங்காங்கே அப்படியே நிற்குமாறு செய்து அமெரிக்காவை பிடிக்க ஐடியா தன்னிடம் இருப்பதாக சொன்னதும் இருபதாம் நூற்றாண்டு கண்ட தேவரின் காமடிகளில் சில.
தனது சொந்த சாதியினரின் கல்வியையும், நகருக்கு போய்வருவதற்கான வாய்ப்பையும் நாடாரான காமராசரை எதிர்க்க வேண்டும் என்ற தனது ஈகோவிற்காக பலிகொடுத்த தேவரை உழைக்கும் தேவர் சாதியினரோ அல்லது முன்னேற நினைக்கும் அச்சாதி அபிமானிகளோ கூட போற்ற முடியாது. இன்றும் மற்ற சாதியினர் படித்து பல்வேறு வேலைகளுக்கு போக முடிந்த வேளையில் கூட ரவுடிகளாவும், கொஞ்சம் முயற்சி செய்தால் போலீசாகவும் மட்டுமே போக முடிந்த அளவுக்குத்தான் மதுரையை சுற்றிலும் அச்சாதியின மக்களில் கணிசமானர் இருக்கின்றனர். இதற்கு ஒருவகையில் காரணமான தேவரை அம்மக்கள் குருபூசை நடத்தி கவரவிப்பது வியப்பாகவே உள்ளது.
நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.
90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?
தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா? இல்லை சேதுராமலிங்கத்தின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேவர் சாதி மக்களுக்கு மலிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எதுவுமில்லையே?
இப்படி இருக்கையில் இந்த சாதி உணர்வால் என்ன பயன்? தேவர் சாதி நண்பர்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலத்து மாற்றிக் கொள்ளட்டும்.
நன்றி.
ஆதாரம்:
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் – தொகுப்பு கே.ஜீவபாரதி
3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் – தொகுப்பு கே.ஜீவபாரதி
4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு – தொகுப்பு கே.ஜீவபாரதி
(ஜூன் 4, 2011 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட கட்டுரை)
சென்னை மாநகராட்சி பூங்காக்கள், மைதானங்கள், அரங்கங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசு!
பத்திரிகை செய்தி
சென்னையில் உள்ள பூங்காக்களுடன் இணைந்தும், தனியாகவும், விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இவற்றில் உள்ள டென்னிஸ் திடல், ஷெட்டில் பேட்மிண்டன் திடல்களை கடந்த ஆண்டு 2023 அன்றே சென்னை மாநகராட்சி தனியாருக்குக் கொடுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாயன்று (அக்டோபர்.29) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்கும் கட்டணம் நிர்ணயித்து, தனியார் வாயிலாகப் பராமரிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்த மைதானங்களுக்கு இனி ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 120 ரூபாய் செலுத்த வேண்டும். இரண்டு அணிகள் (5+5) ஒரு மணி நேரம் விளையாடினால் 1200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறாக 9 மைதானங்களில் இருந்து ஆண்டுக்கு 2 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தனியார் கட்டணமாக வசூலித்து, மாநகராட்சிக்கு 40 விழுக்காடு (93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்) தொகையைத் தர வேண்டும்.
மேலும், மாநகராட்சியில் உள்ள 871 பூங்காக்களில் 98 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், 168 பூங்காக்கள் மாநகராட்சி மூலமும் பராமரிக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 595 பூங்காக்களையும் 55.60 கோடி செலவில் தனியார் மூலம் பராமரிப்புக்கு விடவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், செனாய் நகர் அம்மா அரங்கத்தின் வாடகை 3.40 லட்சம் ரூபாயிலிருந்து 5.43 லட்சம் ரூபாயாகவும், தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தின் வாடகை 20 ஆயிரத்து 650 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் (18 விழுக்காடு ஜிஎஸ்டி தனி) உயர்த்தி தனியாருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இதிலிருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 2.22 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி பிற மாநகராட்சிகளிலும் பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள் தற்போது வரை நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முறையாக ஊதியமும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் வழங்காமல் அவர்களை சுரண்டும் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் மீண்டும் ஒப்படைப்பது எந்த விதத்தில் ஏற்புடையதாக இருக்கும்? இது ஒட்டுமொத்த அரசுத் துறையையும் கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கையின் ஒரு அங்கமாகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக அரசே, சென்னை மாநகராட்சி நிர்வாகமே!
தனியாருடனான ஒப்பந்தங்களையும், தனியார்மயமாக்கும் தீர்மானத்தையும்
உடனடியாக திரும்பப் பெறு!
கார்ப்பரேட் கும்பலுக்கான சேவைகளைக் கைவிடு!
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
9488902202.
(கடும் எதிர்ப்பு கரணமாக அக்டோபர் 30 அன்று மாநகராட்சி சார்பில் 9 விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு வழங்க அனுமதித்து மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 56-வது எண் கொண்ட தீர்மானத்தை மட்டும் ரத்து செய்வதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.)
மக்கள் நலன் என்ற பெயரில் போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை நுழைக்கும் திமுக அரசு!
கண்டன அறிக்கை
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகையாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு அரசால், தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், பயன்படுத்துவதற்கான காலம் முடிந்த சுமார் 1000 பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இதற்கு கடும் கண்டனம் எழுந்த போதும் பேருந்துகள் வாங்காமல், தேவையான எண்ணிக்கையில் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு போக்குவரத்துத் துறை பணியாளர் இடங்களை நிரப்பாமல் பழைய பேருந்துகளை புதிய பேருந்துகள் போல வண்ணம் பூசுவதில் தான் தமிழ்நாடு அரசு முனைப்பாக இருக்கிறது.
இப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நெருக்கடியில் பாதிக்கப்படுவார்கள் என்ற முகாந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
மக்களின் பயண நெருக்கடியைத் தீர்ப்பதற்கு போதுமான அளவில் தமிழ்நாடு அரசின் பேருந்துகள் இல்லை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதற்கு வக்கற்ற தமிழ்நாடு அரசு, எதையோ பேசி தான் செய்யும் தொழிலாளர் விரோத – மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு கேட்கிறது.
தமிழ்நாடு அரசின் இந்த தொழிலாளர் விரோத – மக்கள் விரோத செயல்பாட்டை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு எதிராக அனைத்துத் துறை ஊழியர்களும் போராட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன் தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை 9962366321
கோவையில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் 14, 15 தேதிகளில் பெய்த கனமழையால் கோவையில் சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. குடிசை வீடுகள் சில இடிந்தன, சில வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. மேலும், ஒரு சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி, அடுத்த நாளே மழைநீர் வடிந்துள்ளது.
அதேபோல், ஆவாரம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இரவோடு இரவாக குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வேண்டிய நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. உள்ளூர் அளவில் கவுன்சிலரை தொடர்பு கொண்டு எந்த உதவியும் கிடைக்காததால் அன்றிரவே மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கினர். அதன் பின்னரே, அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மேயர் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் ஆகியோர் வந்துள்ளனர். கனமழையில் முக்கிய ஆவணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகள் சேதமடைந்துள்ளன, சில ஆவணங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவையனைத்தையும் அதிகாரிகள் கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை கவுன்சிலரோ, அதிகாரிகளோ சென்று சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரண பொருட்களும் வழங்கவில்லை. மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து காணொளி எடுத்து வெளியிட்ட பின்னரே பலருக்கும் அம்மக்கள் மோசமான சூழலில் இருப்பது தெரியவந்துள்ளது. காணொளியைப் பார்த்துவிட்டு எஸ்.டி.பி,ஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்கள் ஏற்பாடு செய்து, மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். மேலும், தன்னார்வ மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள் 20 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். ஆனாலும், அவ்வப்போது வருகின்ற சிறு மழைக்கே அவர்களது வீடுகளில் தங்க முடியாமல் சமுதாயக் கூடத்திலோ அல்லது அண்டை வீட்டார் வீடுகளிலோ தங்கவேண்டியதாகிறது.
***
ஆவாரம்பாளையம் பகுதியில் சுமார் 500-600 குடும்பங்கள் சாக்கடையை ஒட்டி வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியிலுள்ள மக்கள் அன்றாட கூலி வேலைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும், தூய்மை பணிகளுக்கும் சென்று வருகின்றனர். அவர்கள் சாக்கடையை ஒட்டி வாழ்ந்து வருவதால் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது.
சில முதியவர்களின் வீடுகளைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. மழைக் காலங்களில் அவர்களது வீட்டின் மண் தரை எப்போதும் ஈரப் பதமாகவே இருக்கிறது. அதில் தான் படுத்துறங்குகின்றனர். சிறு மழை வந்தால் கூட மேற்கூரை ஓட்டையில் வீட்டுக்குள் மழைநீர் வந்துவிடும் என்ற அவலநிலையில் தான் பல வீடுகள் உள்ளன.
ஒரு பாட்டியை சந்தித்த போது, பொதுவெளியில் கட்டில் போட்டுக்கொண்டு, சுற்றி தார்ப்பாயைக் கட்டி அதிலும் ஓட்டைகள் உள்ளவாறு அமர்ந்திருந்தார். அவரிடம் பேசிய போது, “தினமும் இரண்டு பெட்சீட் போற்றிக்கொண்டு தான் தூங்குகின்றேன். ஆனால் தூங்க முடியவில்லை. மழை வந்தால் தண்ணீர் நிற்கிறது, அடிக்கடி பாம்பு வருகிறது. மழை வந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு; எப்போது சாவேனு இருக்கிறது” என மன வேதனையுடன் அழுதுகொண்டே பேசினார்.
அப்பகுதியை ஒட்டியுள்ள சாக்கடை நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் இருந்ததையடுத்து கனமழையின் போது சில வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. அதனால், அப்போதைக்கு தூர்வாரியுள்ளனர். ஆனாலும், அந்த இடத்தில் தண்ணீர் எங்கும் செல்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது. அதனால் கொசுக்கள் அதிகமாக உருவாவதும், பாம்பு, பூச்சிகள், அட்டைப் பூச்சிகள் வீடுகளுக்கு வருவதும் அதிகமாகியுள்ளது. மேலும், குழந்தைகள் அந்த சாக்கடைக்குள் சென்று விளையாடவும் செய்கின்றனர். அந்த சாக்கடை ஓரத்தில் உள்ள வீடுகள் மனிதன் வாழத் தகுதியற்றதாகவே உள்ளன. அம்மக்கள் அங்கு தான் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் சிலர் வேறு அரசு ஒதுக்கும் அடுக்குமாடி வீடுகளுக்குச் செல்ல முயன்றாலும், லஞ்சமாக மூன்று லட்சம் வரை கட்ட சொல்லியுள்ளனர். இந்த ஊரை யாரும் கண்டுகொள்ளாத மற்றொரு அத்திப்பட்டி என்றே அம்மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
அந்த தூர்வாரப்பட்ட மேட்டுப் பகுதிக்கும், மக்கள் வசிக்கும் வீடுகளுக்கும் இடையில் இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தவாறு இருக்கின்றன. அது எப்போது விழும் என்ற அச்சமும் அம்மக்களிடம் நிலவுகிறது. அடுத்து ஒரு கனமழை வந்தால் கூட அருகிலுள்ள வீட்டில் தான் விழும் என்ற நிலையே உள்ளது. தூர்வாரப்பட்ட சாக்கடையும் சரியாகத் தூர்வாரப்படவில்லை. தண்ணீர் தேங்காதவாறு வடிகால் பணியை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கூறினாலும் இது இரயில்வேக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு தூர்வாரவே கூடாது எனவும், மத்திய அரசின் இடத்தில் எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர். கனமழையின் போது வெள்ளம் வீடுகளுக்குள் சென்றதால் தான் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், ஏன் இங்கு வசிக்கிறீர்கள் என்று திமிராகவும் பேசியுள்ளனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாத இடத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதே அம்மக்களின் அவலநிலை.
“அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் வருகின்றனர், அதற்குப் பின்னர் எந்த சலுகையோ, மழை போன்ற காலங்களில் எந்தவித உதவியோ செய்ய அவர்கள் வருவதில்லை. நாங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை எங்களுக்கு எதற்கு, திருப்பி கொடுத்து விடுகிறோம்” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் அப்பகுதி மக்கள். அங்குள்ள மேட்டுப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வேண்டும் என்கிற கோரிக்கையும், மின்சார வசதி வேண்டியும், இறக்கத்தில் அதாவது சாக்கடைக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாற்று இடம் வேண்டிய கோரிக்கையும் அம்மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவ்வப்போது வெற்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு நீண்டகாலமாகக் கண்டுகொள்ளாமலேயே இருந்துள்ளனர்.
திமுக தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஆட்சிக்கு வந்தவுடன் பட்டா வழங்குவதாகக் கூறியுள்ளது. கடந்த 10 வருடங்களாக இந்த கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்துள்ளனர். “நாங்கள் எப்படியோ கடந்து வந்துவிட்டோம், இனி எங்களது குழந்தைகளாவது மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு இந்த கோரிக்கைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்கிறனர் அப்பகுதி மக்கள்.
திமுக, அதிமுக எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்து மக்களின் ஓட்டை பெற்றுவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அந்த மக்களை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதென்பது ஒன்றும் புதிதல்ல. அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதிலிருந்து பதவிக்கு வருவதில்லை. இவர்களை மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய வைக்கவே மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கையையும் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தின் மூலமாகவே நிறைவேற்ற முடியும்.
தமிழ்நாடு அரசே!, மாநகராட்சி நிர்வாகமே!
உடனடியாக சாய்வாக இருக்கும் மின் கம்பங்களைச் சரிசெய்து கொடு!
தூய்மையற்ற, வாழத் தகுதியற்ற இடத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வாக மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடு!
சமதளப் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு பட்டா மற்றும் மின் இணைப்பை வழங்கிடு!
ஷாதி அகதிகள் முகாமில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமையால் (யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ) நடத்தப்படும் அஸ்மா பள்ளியை தாக்கிய இஸ்ரேல் இராணுவம்
அக்டோபர் 27 அன்று இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா நகரின் ஷாதி (Shati) அகதிகள் முகாமில் உள்ள அஸ்மா பள்ளியில் (Asma School) நடந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர் என்று காசாவின் சிவில் பாதுகாப்பு படை (Civil Defence) அக்டோபர் 27 அன்று தெரிவித்துள்ளது. (சிவில் பாதுகாப்பு படை என்பது உள்துறை அமைச்சரின் நேரடி பொறுப்பின் கீழ் பாலஸ்தீனிய பாதுகாப்பு சேவைகளின் முக்கிய கிளைகளில் ஒன்றாகும்)
இது இப்பள்ளியின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதலாகும். முன்னதாக, அக்டோபர் 19 அன்று இப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கோரச் சம்பவம் குறித்து தாஹர் அல்-ரான்டிசி (Taher al-Rantisi) என்பவர் கூறுகையில், “ஒரு விமானம் கட்டிடத்தை அழித்ததைக் கண்டேன், அது மக்கள் மீது இடிந்து விழுந்தது. இந்த தாக்குதல் என்பது ஒரு படுகொலை” என்று கூறினார்.
“பள்ளிக் கட்டிடத்தில் தஞ்சம் புகுந்துள்ள பாலஸ்தீனியர்களில் அப்பாவி குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அடங்குவர். தாக்கப்பட்டபோது அனைத்து மக்களும் குழந்தைகளும் கிழித்தெறியப்பட்டனர்” என்று ரான்டிசி மேலும் கூறினார்.
ஒரு இளம் பெண் உட்பட ஆறு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குடிமை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் நான்கு வாரமாக முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்து வரும் ஜபாலியா மற்றும் வடக்கு காசாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தான் ஐ.நா. பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் என்று துணை மருத்துவ நிபுணர் ஹுசைன் மொஹ்சென் (Hussein Mohsen) கூறினார். “இஸ்ரேல் பள்ளிகளைக் குறிவைப்பது இது முதல் முறை அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.
சமீபத்திய மாதங்களில், இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனிய போராளிகள் செயல்படுவதாகக் கூறி, தங்குமிடங்களாக மாற்றப்பட்ட பல பள்ளிகள் மீது குண்டுகளை வீசியுள்ளது. ஆனால், இஸ்ரேல் தனது கூற்றிற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
சமீபத்திய நாட்களில், முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேலின் குண்டுவீச்சு காரணமாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். காசா மீதான இனப்படுகொலைப் போர் தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய படைகள் கிட்டத்தட்ட 43,000 பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் உட்படக் காயமடைந்தவர்கள் பலர் காசா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.காசா நகரின் ஷாதி அகதிகள் முகாமில் உள்ள அஸ்மா பள்ளியில் நடந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.ஒரு இளம் பெண் உட்பட ஆறு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடும் மக்கள்.
மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கும் இச்சூழலில், செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியில் இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் செல்லூர் கண்மாய் நிறைந்து குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்துள்ளது. இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடுப்பு அளவு தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு வாழ்வாதாரமும் பொருளாதாரமும் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை இன்று (27/10/24) நாங்கள் நிவாரண பொருட்கள் (பால், பிரட்) கொடுக்கும் போது காணமுடிந்தது.
வீடுகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு அடுப்புகள், பாத்திரங்கள், அரிசி, குளிர் சாதனபெட்டி, மிக்ஸி, குளியலறை அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வெள்ளம் வடிந்தாலும் எதை வைத்துச் சமைத்துச் சாப்பிடுவது?… எங்கே குளிப்பது?… என செய்வதறியாமல் மக்கள் இருக்கின்றனர்.
ஒரு வீட்டில் சோகமும் களைப்பும் முகத்தில் அப்பியிருந்த பாட்டி ஒருவர் “இப்போது தான் வெள்ளம் வடிந்திருக்கு.. வீடு, பாத்திரம், அடுப்பு எல்லாவற்றையும் சுத்தம் செய்ய ஆரம்பித்து இன்னும் முடிந்த பாடில்லை. பசிக்குதுப்பா! நேற்று சாப்பாடு கொடுத்தார்கள் இப்போது எதுவும் கிடைக்குமா” என்றார்.
அதேபோல் சிறுகுறு சில்வர் பட்டரையிலும் வெள்ளம் புகுந்து உற்பத்தி செய்த பாத்திரங்கள் பாலீஸ் செய்யப் பயன்படும் மோட்டார் உபகரணங்கள் போன்றவை வெள்ளத்தில் மூழ்கிப் பழுதடைந்துள்ளன.
இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, “இந்த தீபாவளி மாதம் தான் எங்களுக்கான சீசன். பாதி பண்டங்கள் தயாராகி பாலீஸ் செய்யக்கூடிய நிலையிலும் மீதி உற்பத்தி செய்யப்பட வேண்டிய நிலையிலும் வெள்ளம் வந்து அனைத்தையும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?” என்றனர்.
இதற்கு யார் பொறுப்பு:
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தப் பாதிப்புக்குக் காரணமாகக் கூறுவது கால்வாய் கரை சுவர் எழுப்பாமல் இருப்பது, செல்லூர் கண்மாய் ஆகாயத்தாமரையால் நிறைந்திருப்பது, முறையாகத் தூர் வாராமல் பராமரிப்பு ஏதும் இல்லாததும் தான். இவற்றைச் செய்ய வேண்டியது யாருடைய கடமை என்ற கேள்வி எழுகிறது.
இவற்றையும் மக்களோ, தன்னார்வலர்களோ, மக்களுக்காக இயங்கும் இயக்கங்களோ செய்யுமானால் அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் எதற்கு?
இதுபோன்ற பேரிடர் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் நேருமா? அப்படி நேருமாயின் அதிகார வர்க்கம் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் நிற்குமா?
பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு வரி கட்டாதவர்களா? அவர்களுடைய வரிதான் தங்களுக்குச் சம்பளம் என்பதை உணராதவர்களா? இவர்களுடைய தேர்தல் வாக்குகளில் தான் ஆட்சி அமைத்திருக்கிறோம் என்பதை அறியாதவர்களா? எல்லாம் அறிந்தவர்கள் தான் அவர்கள்.
இருப்பினும், யார் நம்மைக் கேள்வி கேட்பார்கள் என்கிற மெத்தனப் போக்கே இதற்குக் காரணம்.
தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே உரிய இழப்பீட்டை வழங்கு!
சில்வர் பட்டரை, கிராதி பட்டரை, மிட்டாய் கம்பெனி போன்ற சிறுகுறு கம்பெனிகளுக்கு நிவாரண நிதியை உடனே வழங்கு!
கால்வாய் சுவரைப் போர்க்கால அடிப்படையில் கட்டியெழுப்பு!
செல்லூர் கண்மாய் போன்ற அனைத்து கண்மாய்களையும் தூர்வாரு!
பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருத்துவ முகாமை நடத்து!
தகவல், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம். 9791653200
(வினோத் குமார் சந்த் என்பவர் எழுதிய இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர் யாரென்று தெரியவில்லையென்றாலும் அவரது மதிப்பீடு துல்லியமாக இருக்கிறது என்பதால்.. தமிழில்: ஆர். விஜயசங்கர்)
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பின்வரும் காரணங்களுக்காக நினைக்கப் படுவார்:
சக நீதிபதிகளுடன் சேர்ந்து ராமர் கோவில் தீர்ப்பை எழுதிவிட்டு அதன் கீழ் கையொப்பமிடும் துணிச்சல் இல்லாதவர் என்பதற்காக;
தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறிய பின்னர் பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தைத் திரும்ப வசூலிப்பதையோ அல்லது அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதையோ உறுதி செய்யாதவர் என்பதற்காக;
சண்டிகர் நகர மேயர் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரியைக் குற்றவாளி என்று சொல்லிவிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதற்காக;
மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்ட ஷிண்டே/ஃபத்னாவிஸ்/அஜித் பவார் அரசையும் அதற்குத் துணை போன ஆளுநரின் செயல்களையும் சட்டவிரோதமானவை என்று கூறிவிட்டு, அதைக் குறித்து ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்காமல், சட்டவிரோதமாகத் தொடரும் சபாநாயகரிடம் பொறுப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, அவர் சட்டவிரோதமான முடிவுகளை எடுக்க அனுமதித்து விட்டு, அந்த அரசு மீதமிருக்கும் பதவிக் காலம் முழுவதிலும் தொடர அனுமதித்தவர் என்பதற்காக;
ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடருமாறு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கூறாமல், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ‘வல்லுனர்களைக்’ கொண்ட ஒரு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையில் ஹிண்டன்பர்க்கையும் ஒரு தரப்பாக ஆக்காமல், அந்த ‘வல்லுநர்’ குழுவின் இறுதி அறிக்கையை தெய்வ வாக்காகக் கருதி அதானி நிறுவனத்திற்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கியதற்காக;
காஷ்மீர் தொடர்பான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது அரசியலமைப்புச் சட்டப் படி செல்லுமா என்கிற வழக்கை இழுத்தடித்து, அந்த விவகாரத்தில் சட்டப்படி கலந்தாலோசித்திருக்க வேண்டிய ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு அந்த மாநிலம் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்கிற உண்மையைப் புறக்கணித்துவிட்டு, ரத்து செய்த முடிவு சரிதான் என்று முடிவு செய்ததற்காக; அவருடைய இந்தச் செயல் குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவரைக் கலந்தாலோசித்து அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட வேண்டுமென்று முடிவெடுத்தார் என்கிற ஒரு விசித்திரமான நிலைக்கு இட்டுச் சென்றதற்காக;
உமர் காலித் பணக்காரராகவோ அல்லது வலிமை மிக்கவராகவோ இல்லையென்பதாலும், அவர் முஸ்லிமாக இருக்கிறார் என்பதாலும் அவருக்கு பிணையை மறுத்து சிறையில் தொடர்ந்து இருக்கச் செய்ததற்காக;
பீமா கொரேகான் வழக்கு முற்றிலும் போலியானது, போலீஸும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணினிகளில் புகுத்திய ஆதாரங்களின் அடிப்படையில் புனையப்பட்டது என்பதைக் காட்டும் நம்பத் தகுந்த தடயவியல் ஆதாரங்கள் இருந்த போதிலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பதையும், பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் மரணத்தையும், சமீபத்தில் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மரணத்தையும் அனுமதித்தமைக்காக.
பணி ஓய்வு பெறும் நேரத்தில் இவைதான் அவர் விட்டுச் செல்லும் பாரம்பரியங்கள்.
ஆம், அவர் ஒரு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு கண்களைத் திறந்திருக்கும் நீதி தேவதையின் சிலையை இறுதியில் திறந்து வைத்திருக்கிறார்.
ஆயினும், ஆதாரத்தின் அடிப்படையில் நீதி வழங்காமல், தனக்கு சரியான பாதையைக் காட்டுவாரென அவர் நம்பிய கடவுளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் செய்த பிரார்த்தனையின் அடிப்படையில் நீதி வழங்கியதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் எழுத்துக்கள் மற்றும் உணர்விற்கு அவர் மரியாதை அளிக்கவில்லை.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அவர்களே, நீங்கள் இவை அனைத்திற்காகவும், ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டீர்கள் என்பதற்காகவும் நீங்கள் நினைக்கப் படுவீர்கள்!
மேற்கூறிய அனைத்தும் வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டன. அதை மாற்ற முடியாது. அது பாலத்தினடியில் ஓடிவிட்ட நீர் போலத்தான்.
பின் குறிப்பு: நீங்கள் ஒரு தனிப்பட்ட சடங்கில் புகைப்படக்காரர்கள் புடைசூழ பிரதமருடன் சேர்ந்து பூஜை செய்தீர்கள் என்பதற்காகவும் நினைக்கப் படுவீர்கள்.
நீங்கள் இன்னும்
எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் குடிதண்ணீரில் மலம் கலந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் மீது மூத்திரம் பெய்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்களை வன்புணர்ந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் சேரிகளை எரித்தபடியே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் பிணங்களை பொதுப் பாதையில் கொண்டு செல்ல விடாமல்
தடுத்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தபடியே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
உங்கள் குப்பைகளையும் கழிவுகளையும் அள்ள
எங்களை மட்டுமே கை காட்டுகிறீர்கள் …
நீங்கள் இன்னும் இன்னும்
இதுபோன்ற வன்முறைகளைச்
சளைக்காமலும் சலிக்காமலும் மகிழ்வோடோ அல்லது மறைமுகத்தோடோ
தொடரும் போது…
எங்களுக்கிழைத்த அநீதிகளை
அன்றாடம்
நாங்கள் பேசும்போது
மட்டும்
உங்களுக்கு ஏன் அத்தனை சலிப்பு..!
இன்னும் இன்னும் உரக்கப் பேசுவோம்
உலகின் மூலைமுடுக்கெல்லாம்
கேட்கும்படி உரக்கப் பேசுவோம்
உங்கள் மனசாட்சியை உலுக்கும்படி
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
உரக்கப் பேசுவோம்…